25 ஏப்ரல் 2013

க.நா.சு. வின் “அவரவர் பாடு” நாவல் வாசிப்பனுபவம்

 
----------------------------------------------------------------------------------------------
,படிப்பதும், படிக்காததும் அவரவர் பாடு.

---------------------------------------------------------------------
சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து “அவரவர் பாடு” என்கிற இந்நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு என்கிறார் க.நா.சு.
க.நா.சு. நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக நற்றிணை பதிப்பகம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள நாவல் இது.
இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை என்று சொல்கிறார். எழுதிப் பார்க்கிறேன். அது நன்றாய் வருவதும், வராததும் சொல்வதற்கில்லை என்பதாயும், படிப்பதும், படிக்காததும் உங்கள் பாடு என்பதாயும் க.நா.சு. பாணியிலேயே இதைக் கொள்ளலாம். அப்படி சாதித்து விட்டேன், இப்படி எழுதித்தீர்த்தேன் என்பதெல்லாம் கிடையாது. கடை விரித்திருக்கிறேன், கொள்வதும், கொள்ளாததும் உங்களின் விருப்பம், அது தன் தரத்தைப் பொறுத்துத் தானே நிற்கும் அல்லது காணாமல் போகும் என்பதே அது.
அவர் உயிரோடிருந்தால் நிச்சயம் இப்படித்தான் சொல்வார். ஏனென்றால் எழுதியது யார் என்று பார்க்காது, எழுத்து என்ன சொல்கிறது, அந்தப் படைப்பு நன்றாக வந்திருக்கிறதா, தரமானதா, இல்லையா என்று தாமரை இலைத் தண்ணீராய் விலகி நின்று, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று விமர்சனம் செய்தவர் அவர். விமர்சனம் என்பது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நின்றவர். அது தன் படைப்போ, பிறர் படைப்போ அதுபற்றிக் கேள்வி இல்லை. எழுத்து என்ன சொல்கிறது என்பதே விடை.
அம்மாதிரியான நிலைப்பாடே அவர்கள் மீது நாம் மதிப்புக் கொள்ளச் செய்யும் விஷயமாக இருக்கிறது. இங்கே நாம் என்று சொல்வது இப்படிப் பலரும் அவரது கருத்துக்கு ஒப்புமை உடையவர்களாகவே இருப்பார்கள் என்கிற நம்பிக்கையில்தான். ஒரு நல்ல புத்தகத்தை அப்படித்தான் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அந்த மதிப்பு மரியாதையின்பாற்பட்டே என்னதான், எப்படித்தான் எழுதியிருக்கிறார் பார்ப்போமே என்று வாங்கிப் படிக்கத் தோன்றுகிறது. அப்படி வாங்கி, ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டதுதான் இந்த ”அவரவர் பாடு”.
பின்னோக்கு (ஃப்ளாஷ் பேக்) உத்தியில் தீவிரமாக யோசித்து, படிப்படியாக வடிவமைத்து, முதலில் உதிக்கும் கதையின் ஆரம்ப மர்மம் விலகாதபடிக்கு, அடுத்தடுத்து தவிர்க்க இயலாமல் உருவாகும் மர்மங்கள் சேர்ந்து கொண்டே போவது போல் காட்சிகளை உருவாக்கி, பார்வையாளனை இருக்கையின் நுனியிலேயே வைத்திருப்பதுபோல் திரைக் கதையை அமைத்து, முழுத் திரைக்கதையும், அடுத்தடுத்த காட்சிகளும், வசனங்களும் மனதிற்குள்ளேயே மொத்தத் திரைப்படமாகப் பதிய வைத்துக் கொண்டு, படப்பிடிப்பு செய்தால், ஒரு சிறந்த மர்மக் கதையாக அந்த நாளில் வந்த ”அந்த நாள்” போல் ஒரு அழுத்தமான திரைப்படமாக உருவாகும் நல் வாய்ப்பு இந்நாவலுக்கு உண்டு.
ஒரு எழுத்தாளன் கதை கேட்பது போலவும், கதையின் எல்லா நிகழ்வுகளையும் அறிந்தவனும், அவற்றின் பலவற்றிற்கும் காரணமாக இருந்தவனும், மொத்தக் கதையையும் அவரிடம் மனமுவந்து சொல்பவனுமாகிய சம்பந்தம் என்கிற கதாபாத்திரம் வழியாக இந்த மர்ம நாவலை முன் வைக்கிறார் க.நா.சு.
அத்தனை நிகழ்வுகளையும் அடுத்தடுத்த காட்சிகளாய், படம் பிடித்ததுபோல் தெளிவாகச் சொல்லிச் செல்லும் சம்பந்தத்தின் கூடவே அந்த எழுத்தாளரோடு சேர்ந்து நாமும் பயணிக்கிறோம்.
மனிதனுடைய எல்லாத் தவறுகளுக்கும் ஆசைதான் பிரதானம். ஆசையின்பாற்பட்டு செய்யத் துணியும் முதல் தவறு, பின் அதனால் ஏற்படும் மோசமான விளைவு, அடுத்தடுத்த தவறுகளுக்கு வழி வகுக்கிறது. ஒன்றை மறைக்க ஒன்று, அந்த இன்னொன்றை மறைக்க வேறொன்று என்று ஆசை துன்பமாய் உருவெடுத்து ஆடுவதைக் கண்டு வெதும்பி, இந்த எல்லாத் துன்பங்களிலிருந்தும் எப்படியாவது விடுபட்டால் போதும் என்கிற முடிவில், இதுதான் கடைசி, இதற்குப்பின் எல்லாக் கஷ்டங்களும் விலகி விடும் என்கிற நம்பிக்கையில்,இறுதி என்று நினைத்துக் கொண்டு செய்யும் காரியங்களைத் தவறாகவே செய்து, பின் அதற்கும் ஏற்படும் மோசமான விளைவுகள், ஒருவன் வாழ்க்கையை எப்படியெல்லாம் இந்த உலகின் வெளிச்சத்திலிருந்து பிரித்து வைத்து ரகசியமான குகைக்குள்ளேயே நகர்த்திக் கொண்டு போகிறது என்பதை அருமையாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கும் நாவல் இது.
கதை மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும்போது, நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் எல்லாவற்றையும் அந்த எழுத்தாளன் வழி விடுவித்துக் கொள்ள நாம் முயல்கின்றோம். இது இப்படித்தானே இருக்க வேண்டும், இருக்க முடியும் என்றும், அவர் இவர்தான் என்றும் நாம் ஊகிக்க முயலும் நேரங்களில் அது அந்த எழுத்தாளர் வழி நமக்குப் புலப்படுகிறது.
தெளிவான கதை சொல்லல். வார்த்தை ஜாலங்கள் இல்லாத யதார்த்தமான நடை. செய்திருக்கும் முயற்சியில் கடைசி வரையிலுமான ஆழ்ந்த ஈடுபாடு இதுவே இந்த நாவல்.
தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்துக்க நிகராக நிற்க வேண்டும் என்று கவலைப்பட்டு, பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்து தந்த பெருமகனார் திரு க.நா.சு.
அவரது இந்த அவரவர் பாடு நாவலைப் படிப்பதும், படிக்காததும், அவரவர்பாடு.
------------------------------------
















17 மார்ச் 2013

இந்திய ஞானம்–தேடல்கள், புரிதல்கள்–by ஜெயமோகன்

Jeyamohan Nagercoil's profile photo

மதிப்பிற்குரிய திரு ஜெ. , வணக்கம். தங்களின் இந்திய ஞானம் தேடல்கள், புரிதல்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் அறிமுகத்திலேயே ஒரு சந்தேகம் வந்து விட்டது. சிவனை வழிபடுவது சைவம். அதற்குள் பல வழிபாடுகள் சேர்க்கப்பட்டன. அதேபோல் விஷ்ணுவை வழிபடுவது வைணவம். சக்தியை வழிபடுவது சாக்தேயம். முருகனை வழிபடுவது கௌமாரம். கணபதியை வழிபடுவது காணபத்யம். சூரியனை வழிபடுவது சௌரம். இவற்றில் சைவமும், வைணவமும் பெருமதங்களாக வளர்ந்தன. சாக்தம் கேரளத்திலும் வங்காளத்திலும் மட்டும் நீடித்தது. மற்ற மதங்களில் காணபத்யமும் கௌமாரமும் சைவத்தில் இணைந்தன. சௌரம் வைணவத்தில் கலந்தது என்றுள்ளீர்கள்.சூரியனை வழிபடுவது சௌரம் என்றால் அதனை சிவனை வழிபடும் சைவர்களும் அனுதினமும் செய்யத்தானே செய்கிறார்கள். சூரிய வழிபாடு சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் பொதுவான ஒன்றாக இருப்பதை நாம் காண்கிறோமே...! இதுபற்றி சற்று விளக்க முடியுமா?     - உஷாதீபன்

அன்புள்ளஉஷாதீபன்,

உங்கள் கேள்வி முக்கியமானது. ஏனென்றால் அதிலுள்ள சிக்கலுக்கு சரியாகப்பதில் சொல்லமுடியாது
தொல்பழங்காலத்தில் அறுவகை சமயங்கள் இருந்துள்ளன என்று நூல்கள் சொல்கின்றன. அந்த அறுவகை சமயங்களின் பட்டியலிலேயே சின்னச்சின்ன வேறுபாடுகள் உள்ளன
நாம் ஆறாம்நூற்றாண்டுமுதல்தான் ஓரளவேனும் தெளிவாக வரலாற்றை எழுதமுடிகிறது. பத்தாம்நூற்றாண்டுக்குப்பின்னர்தான் முக்கியமான கோயில்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றை வைத்து நம் வரலாற்றை எழுதும்போது மூன்று பெருமதங்களையே காண்கிறோம். மற்ற மூன்று மதங்களும் இவற்றுக்குள் கலந்துவிட்டன. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் சாக்தமும் சைவமும் ஒன்றாயின
நாம் நமக்குக்கிடைக்கும் ஆதாரங்களைக்கொண்டு பல ஊகங்களைச் செய்கிறோம். அதில் ஒன்றே சௌரம் வைணவத்தில் இணைந்திருக்கலாம் என்பது. காரணம் நடு இந்தியா முழுக்க பிரபலமாக இருக்கும் சூரியநாராயணர் ஆலயங்கள். தென்னிந்தியாவிலுள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடு.
ஆனால் சௌரத்தின் சில அம்சங்கள் சைவத்திலும் உள்ளன. உதாரணம் நவக்கிரக வழிபாடு. இதேபோல சௌரத்தின் பிற கூறுகள் எங்கெங்கே உள்ளன என ஆராய்வது பெரிய வேலை. அதிகம்பேர் செய்யாத பணி
அதேபோல சாக்தத்தின் செல்வாக்கு வைணவத்திலும் உண்டு என்பவர்கள் இருக்கிறார்கள். அதாவது ஸ்ரீதேவி பற்றிய வைணவ நம்பிக்கைகள் எல்லாம் சாக்த்ததில் இருந்து வந்தவை எனு சொல்கிறார்கள்
ஆனால் இவையெல்லாம் வரலாற்று ஊகங்களே. படிமங்களைக்கொண்டும் நூல்களைக்கொண்டும் இவை நடத்தப்படுகின்றன. திட்டவட்டமான முடிவுகள் அல்ல இவை
ஜெ

07 மார்ச் 2013

“நெஞ்சு பொறுக்குதிலையே…!”“அனுபவம்”

 images

 

“எனக்கு…எனக்கு…எனக்குக் குடுங்க…சார்…எனக்குத் தரல…எனக்குத் தாங்க…எனக்குத் தாங்க….”

எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற பரபரப்போடும் பயத்தோடும் நீளும் கைகள். ஒருவர் தோள் மேல் ஒருவர் இடித்தும்…முன்னிற்பவரை அமுக்கியும், லேசாகத் தள்ளியும், கிடைக்கும் இடுக்கில் நுழைத்து விரல்களை உதறிக் கொண்டே நீளும் கைகள்.

எல்லாருக்கும் உண்டு…எல்லாருக்கும் உண்டு…தர்றேன்…தர்றேன்… அத்தனபேருக்கும் தந்துட்டுதான் போவேன்….

சார்…எனக்குத் தரலை…எனக்குத் தரவேல்ல…இந்தக் கைக்கு ஒண்ணு குடுங்க சார்…

சார்…சார்…என்ற அந்தத் தெளிவான அழைப்பு என்னை அதிசயப்படுத்தியது.

எல்லோரையும் முந்திக் கொண்டு முகத்துக்கு முன்னால் தெரிந்த அந்தக் கையைப் பார்த்தபோது சிரிப்புத்தான் வந்தது. இன்னும் கொஞ்சம் போனால் தாடையைப் பிடித்து நிமிர்த்திக் கேட்டு விடலாம். அத்தனை நெருக்கமாக நீண்ட தடியைப் போல் விரைப்பாக நீளும் கை. அணிந்திருந்த முழுக்கை உல்லன் பனியன் அப்படி முரட்டுத் தோற்றத்தைத் தந்ததோ என்னவோ…அது இதற்கு முன்னேயே ஒன்று வாங்கிக் கொண்டு விட்ட கை. இப்பொழுது இன்னொன்றிற்காக மீண்டும் நீண்டிருக்கிறது. அந்தக் கை மட்டுமல்ல. வேறு சிலவும்தான்.

அதில் தோன்றிய குழந்தைத்தனம்தான் மனதுக்குள் கசிவை உண்டாக்கியது. அதே சமயம் ஒரு பரிதாபத்தையும் ஏற்படுத்தியது. வாங்கிய கைகளே பல திரும்பத் திரும்ப நீளுகின்றன. தெரிகிறதுதான். வாங்கியாச்சுல்ல…எடுங்க…எடுங்க…சொல்ல ஏனோ மனம் வரவில்லை…

சட்டுச் சட்டென்று மனசு எப்படிக் கலங்கிப்போகிறது? இது எத்தனையாவது முறை? சொல்லத் தெரியவில்லை.

நோ சார்…எனக்கு ஷீகர்….வேண்டாம்……நீட்டிய கையால் மறுத்தார். எனக்குந்தான் சார்…எனக்குந்தான்….இன்னொருவர். எங்கே கொடுத்து விடுவாரோ என்று பயந்ததுபோல் ஒதுங்கி நின்றார் ஒருவர். பின்னுக்கு ஒருக்களித்துக் கொண்டார்.

அந்தக் கேக் எடுங்க… மைசூர்பாகு எல்லாருக்கும் கொடுத்தாச்சு…. –இங்கிருந்தே திரும்பி மேடைக்கருகே நின்ற நண்பரைப் பார்த்துச் சொன்னேன்.

எனக்குக் கேக்கு…எனக்குக் கேக்கு….திரும்பவும் பலவும் நீண்டன. பாக்ஸைப் பிரித்து ஒவ்வொரு கேக்காக எடுத்து நீட்டினேன். அவசரத்தில் அங்கேயும் இங்கேயுமாக நீண்ட கைகள் என் கையில் இருந்த கேக்கினைத் தானாகவே பறித்துக் கொண்டன. ஒருவர் பிடுங்கிக் கொண்டதும் அதுபோலவே செய்ய முயற்சித்த வேறு சிலர். விட்டால் பெட்டியில் உள்ள அத்தனை கேக்குகளும் கீழே விழுந்து சிதறினாலும் போயிற்று. பெட்டியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முயன்றேன். அதற்குள் நாலைந்து கைகள் பெட்டிக்குள் போய்விட்டன.

ஊறீம்…ஊறீம்…எல்லாரும் போய் அவுங்கவுங்க இடத்தில உட்காருங்க…அப்பத்தான்….இல்லன்னா எடுத்திட்டுப் போயிடுவேன்…

யாரும் என் குரலைக் கேட்பதாயில்லை. கையிலிருந்த பெட்டியை அப்படியே கீழே வைத்தேன். மேலும் இரண்டு மூன்று கைகள் இப்போது அதற்குள் நுழைந்தன. கேக்கை எடுத்து மீண்ட கைகளில் க்ரீம் தீற்றியும், சிவப்புப் ப்ளம் பழம் உதிர்ந்தும் காணப்பட பழத்தைத் தேடி மீண்டும் உள்ளே நுழையும் கைகள்.

என்ன செய்வதென்று தெரியாமல் நின்றேன்.

பாலா…நீங்க வாங்க இங்க…விட்ருங்க…அவுங்களே எடுத்துக்குவாங்க….

மேடையில் அமர்ந்திருந்த குருஜி என்னைப் பார்த்துச் சொல்ல…மனமில்லாதவனாய் அங்கிருந்து அகன்றேன்.

குருஜி, இன்னும் இருவர்…எல்லோரும் அங்கே இருந்த பரபரப்பைப் பார்த்த வண்ணமிருந்தனர். ஜி முகத்தில் சாந்தமான புன்னகை.

என்ன இப்படி?- இருபது வயதிலிருந்து அறுபது வயதுவரை உள்ளவர்களாகத் தெரிந்தனர் அங்குள்ளோர். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள்?

இருக்கட்டும்… இருக்கட்டும்…சந்தோஷமாஇருக்காங்க…சுதந்திரமா இருக்காங்க…

சொல்லிவிட்டு என் கைகளை மெல்லப் பற்றி அழுத்தினார்.

அங்க பாருங்க…அவுங்க கோலத்த… என்றவாறே வாயைப் பொத்திக் கொண்டு மெல்லச் சிரித்தார். கையில் இருந்த கேக்கின் க்ரீம்கள் அனைத்தும் இப்பொழுது அவர்களின் மூக்கிலும், முகங்களிலுமாகத் தீற்றியிருந்தன. ஒருவருக்கு மூக்கிலே வளைவாக கிளி மூக்குபோல் க்ரீம் தொங்கிக் கொண்டிருந்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.

ஆச்சு…எல்லாரும் எடுத்துக்கிட்டாச்சா….

ஆச்சு சார்…..

ஆச்சுங்கய்யா…..

கீழ மேல சிந்தாமச் சாப்பிடுங்க பார்ப்போம்….யாரு கைல முகத்துல ஒட்டாமச் சாப்டுரீங்களோ அவுங்களுக்கு நா ஒரு பரிசு தரப்போறேன்…

சரி சார்…சரி சார்… ஒட்டாமச் சாப்டுறோம் சார்….

என்னா பரிசுங்கய்யா…?

அதச் சொல்ல மாட்டேன்….நீங்க வேஸ்ட் பண்ணாம, கீழே சிந்தாமச் சாப்பிட்டு முடிங்க பார்ப்போம்…அப்பத்தான்…

சார்…சார்…பேனாத் தருவீங்களா….பேனா…?

ஓ! தருவேனே….உங்களுக்கு அதுதான் வேணுமா? தர்றேன்….

நல்லா எழுதற பேனாவாத் தரணும்…..

குருஜி மெல்லச் சிரித்தார்.

ஆமா சார்….நா எங்கம்மாவுக்கு லெட்டர் எழுதணும்….

சொல்லிக்கொண்டே அந்தக் கேக்கை வாயை அகலத் திறந்து லபக்கென்று உள்ளே திணித்தார் அவர்.

ஏய்…பார்த்து…பார்த்து….இப்டியா ஒரே வாய்ல அமுக்கிறது….? நெஞ்ச அடைச்சிக்கப் போவுது…

அவ்ளவ்தான் சார்…ஒரே வாய்தான்…இங்க பாருங்க…..? சொல்லிக் கொண்டே வாயை ஆவெனத் திறந்தார். இடது வாய் ஓரம் உமிழ் நீரோடு க்ரீம் வழிந்தோட குழந்தையாய் அவர் வாயை அகலத் திறந்த காட்சி என்னைச் சங்கடப்படுத்தியது.

சரி…எல்லாரும் சாப்டாச்சா…நல்லா இருந்திச்சா?

ஸ்வீட்டா இருந்திச்சு சார்….

ஸ்வீட்டா இருந்தாத்தானே சந்தோஷமா இருக்கும்…அதுனாலதான்…உங்க எல்லாருக்கும் இப்போ சந்தோஷந்தானே?

சந்தோசம்…சந்தோசம்….

சரி….இப்போ நா உங்ககிட்ட ஒண்ணு கேட்கப்போறேன்…இன்னைக்கு என்ன நாள்…?

தீபாவளி சார்……

வெர்ரிகுட்…கரெக்டா சொல்றீங்களே? தீபாவளின்னா என்ன? யாராவது சொல்லுங்க பார்ப்போம்…

நா சொல்றேன் சார்…நிறையக் கைகள் உயர்ந்தன.

பெரியவர், சிறியவர் வித்தியாசமில்லாமல் உயர்ந்த அந்தக் கைகளுக்குச் சொந்தக்காரர்களை நேருக்கு நேர் பார்த்தபோது மனது கலங்கியது.

.தீபாவளின்னா நரகாசுரனக் கொன்ன நாள் சார்….

நரகாசுரன்னா யாரு?

அவன் ராட்சசன் சார்…பெரிய்ய்ய்ய்ய்ய முரடன்….

அப்புறம்?

அவனக் கொன்ன நாள்தான் தீபாவளி….

ஓ! அப்டியா? அப்போ…?

அதத்தான் சார் நாம இன்னைக்குக் கொண்டாடுறோம்…

தீமையை அழிச்ச நாள் சார்…தீபம் ஏத்தி வெளிச்சத்தை உண்டாக்கி இருளைப் போக்கறோம் சார்…..- ஓரத்தில் இருந்த ஒரு இளைஞனின் அமைதியான பதில்.

பலே…பலே…பலே…. – எல்லோரும் பலத்துக் கை தட்டினர்.

இவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.

ஜி…இவ்வளவு தெளிவாப் பேசறாங்களே…?

அப்டித்தான்…பெரும்பாலும் அப்டித்தான்னு வச்சிக்குங்களேன்…ஆனா சில சமயம் இவங்களோட ஆர்ப்பாட்டம்….நீங்க பார்த்ததில்லியே…?

இன்னைக்குத்தானே வர்றேன்…

தாங்க முடியாதாக்கும்….அப்பல்லாம் நாம இங்க நிக்கவே முடியாது…

ஏன்? ஏன் அப்டிச் சொல்றீங்க…?

பூசைதான்…அன்னைக்கெல்லாம்…இல்லன்னா அடங்கமாட்டாங்களாக்கும்…

பூசைன்னா…? சாமி பூஜையா….? அமைதியா அப்டியே தியானத்துல உட்கார்த்திடுவாங்களா?

நோ…நோ…அதில்ல…நா சொல்றது…இதை….. – கையால் சைகை செய்து காண்பித்ததைப் பார்த்துக் கேட்டேன்.

அடியா? அடிக்கவா செய்வாங்க…?

அடின்னா நீங்க நினைக்கிறமாதிரி கொடூரமால்லாம் இல்லே…ரொம்பவும் கற்பனை பண்ணிக்காதீங்க…லிமிட்டா…அவுங்கள அடக்குறதுக்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு…..

எனக்கு என் தந்தையின் மூத்த சம்சாரத்தின் ஒரே பிள்ளையின் ஞாபகம் வந்தது. மூத்த அண்ணா அவர். அப்பப்பா…!!! அவரோடு என்ன பாடு பட்டது குடும்பம்? ஏற்கனவே வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்க, இந்தக் கொடூரம் தாங்கவே முடியாததாகி விட்டது. குறைந்தது இருபது ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்ததற்குப் பின்னால்தான் ஓய்ந்தது. ஆடிப் போனது மொத்தக்குடும்பமும். . அவருடைய சாவோடுதான் எல்லாம் முடிந்தது. விளக்கிச் சொல்ல ஆரம்பித்தால் அது நீளும் அனுமார் வால் போல். அந்த வேதனைகளைத் திரும்பவும் நினைவில் கொண்டு வந்து எல்லோரையும் சங்கடத்துக்குள்ளாக்க வேண்டுமா என்ன? குடும்பமே இப்பொழுதுதான் எல்லாம் தீர்ந்து மூச்சு விடுகிறது. விடுவது நம் மூச்சுதானா என்பது கூட இன்னும் உறுதிப்படாத நிலை.

வரிசைக் கடைசியில் உட்கார்ந்திருந்த அந்த மனநல மையத்தின் நிர்வாகியைக் கவனித்தேன். அவரின் பார்வை அவர்களின் மேல் கூர்மையாய்க் குவிந்திருந்தது. வந்ததிலிருந்து இதைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நல்ல நாளும் அதுவுமாய் ஏதாவது ஏடாகூடமாய் ஆகிவிடக் கூடாதே என்று நினைக்கிறாரோ என்று தோன்றியது. இடது கோடியில் இருந்த ஒருவர் தனக்கு முன்னால் அமர்ந்திருந்தவரின் முதுகுப் பக்கம் தன்னை வெகுவாய் மறைத்துக் கொண்டு லேசாகத் தலையைப் பக்கவாட்டில் நீட்டி நீட்டி அந்த நிர்வாகியையே கவனித்துக் கொண்டிருந்தார். அவரின் பார்வையில் அப்படி ஒரு மிரட்சி. இமைக்காத பார்வை.

இவர் அவரையே கவனிக்கிறாரா தெரியவில்லை. குறிப்பாகச் சிலரை மாறி மாறி அவர் நோக்குவதாகவே பட்டது.

இன்னைக்கு தீபாவளின்னு சொன்னீங்கல்லியா….ஆகையினால உங்களோட இருக்கணும்னு நாங்களெல்லாம் டவுன்லேர்ந்து வந்திருக்கோம்…எங்களோட இருக்க உங்களுக்கு விருப்பமா?

விருப்பம் சார்…விருப்பம் சார்….விருப்பம் சார்…. –

ஓ.கே. சார்…ஓ.கே. சார்….பல குரல்கள் ஒரு சேர எழுந்தன. சிலர் எழுந்து நின்று சந்தோஷத்தின் அடையாளமாக ஜிங்கு ஜிங்கென்று குதித்தனர். சிலர் கையைக் கையை உயர்த்திக் காண்பித்தனர். உறா…உறா…உறா…என்று உற்சாகக் குரல் எழுப்பினர் சிலர்.

இன்னைக்கு உங்களையெல்லாம் பார்க்கிறதுக்கு ஒரு ப்ரொபஸர் வந்திருக்காரு….ஒரு தமிழ் அறிஞர் வந்திருக்காரு….ஒரு வியாபாரி வந்திருக்காரு…ஒரு ஆசிரியர் வந்திருக்காரு…ஒரு யோகா மாஸ்டர் வந்திருக்காரு…..அவுங்களுக்கு உங்களோடெல்லாம் பேசணுமாம்….உங்களப் பார்க்கிறதுலதான் சந்தோஷமாம்…உங்களுக்கெல்லாம் எப்டீ……?

எங்களுக்கும் சந்தோஷம்…எங்களுக்கும் சந்தோஷம்…. – சொல்லிக்கொண்டே ஒவ்வொருவராக எழுந்து வர…..

நீங்களெல்லாம் அப்டியே இருங்க….நாங்க வர்றோம்…உங்ககிட்டே….. – உற்சாகமாக எழுந்த அவர்களை ஜி சைகை மூலம் தடுத்தார்.

அதற்குள் பலரும் ஓடி வந்து கையைப் பிடித்துக் குலுக்க ஆரம்பிக்க,

உறாப்பி தீவாளி….உறாப்பி தீவாளி…உறாப்பி தீவாளி… - அவர்களின் சந்தோஷப் பிடியில் கையின் பயங்கரமான இறுக்கத்தை உணர்ந்தேன்

அந்த முகங்களில் ஒரு தீராத சோகம்…

சிரிக்கும் சிரிப்பில் ஒரு முழுமையற்ற தன்மை.

கொஞ்சங்கூட இமைக்காத கண்கள்.

உதட்டில் மென்மையான புன்னகைதான். ஆனாலும் அந்த வெறிக்கும் கண்களை ஏன் சந்திக்க முடியவில்லை?

உங்கள்ல யாருக்காவது பாடத் தெரியுமா?

நா பாடறேன் சார்…..

வாங்க…

எம்.ஜி.ஆர். பாட்டு சார்….

ஓ! அப்டியா…வாத்தியார் ரசிகரா?

குருஜியே இப்படிக் கேட்டது என்னவோபோல் இருந்தது.

அவருன்னா உசிரு சார் எனக்கு…

சரி…பாடுங்க….

உலகம் பிறந்தது எனக்காக…ஓடும் நதிகளும் எனக்காக…மலர்கள் மலர்வதும் எனக்காக….அன்னை மடியைப் பிரிந்தேன் எனக்காக….அன்னை மடியைப் பிரிந்தேன் எனக்காக….எனக்காக…எனக்காக….

அந்த வார்த்தையையே திரும்பத் திரும்பச் சோகமாகச் சொல்லும் அந்த முகம். மனதை என்னவோ செய்த்து.

பளீரென்று ஒரே சிரிப்பலைகள். என்ன எதிர்வினை இது?

என்ன சார்….என்னோட பாட்டு நல்லா இருந்திச்சா……

ஏன் அப்டிப் பாடறீங்க…? – ஜி கேட்டார்.

அது நானா எழுதினது சார்….உறாஸ்டல்ல இருக்கிறபோதே அப்டித்தான் பாடுவேன்….அப்புறம் டீச்சர் ஆனப்பெறவு கூடப் பாடியிருக்கேன்… ஒரு நா எங்கம்மா அந்த பி.டி. மாஸ்டரோட ஓடிப் போனாங்கல்ல…அன்னைக்குக் கூட இப்டித்தான் பாடினேன்….. சொல்லிவிட்டுக் உறா உறா வென்று அவர் சிரித்தபோது அந்த உறாலே அமைதி பூண்டிருந்தது.

சார்…சார்….வரிசைக் கடைசியில் இருந்து நிர்வாகி அழைப்பது கேட்டது. அங்கிருந்த மேனிக்கே வாயை மூடி அவர் சைகை செய்தார்.

சரி…நீங்க போய் உட்காருங்க…..எல்லாரும் பாட்டுப் பாடுனவருக்கு ஜோரா ஒரு தரம் கை தட்டுங்க…

பட்…பட்…பட்…என்று கோரஸாகக் கை ஒலி.

நா பாடறேன்…நா பாடறேன்…வேறு சிலர் எழுந்து வந்தனர்.

ஒருவர் வேகமாய் வந்து பராசக்தி படத்தில சிவாஜி கோர்ட் சீன் பேசுவாருல்ல…அத அப்டியே எங்க கெமிஸ்ட்ரி லேப் மாஸ்டர் பேசினா எப்டியிருக்கும்னு பேசிக்காட்டவா? என்று பேச ஆரம்பித்தார்.

அடுத்தாற்கோல் ஒருவர் எழுந்து பாட ஆரம்பித்தார்.

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே…

குழந்தைக் குரலைக் கொண்டு வருவதற்கு அவர் வாயை ஒரு மாதிரிக் கோணலாய் வைத்துக் கொண்டது பார்க்க வேடிக்கையாய் இருந்தது.

ஒருவர் எழுந்து திருக்குறள் ஒன்றைச் சொன்னார். இன்னொருவர் ஓடி வந்து மிமிக்ரி செய்து காண்பித்தார்.

மிமிக்ரி செய்பவர்களெல்லாம் சிவாஜி குரலைக் கொண்டுவந்ததை இவன் பார்த்ததேயில்லை. அன்று அங்குதான் கேட்டான். கட்டபொம்மன் வசனத்தையும், கர்ணனில் குந்தி தேவி இரண்டு வரம் கேட்கும்போது கர்ணன் மழையாகப் பொழியும் சிவாஜியின் அந்த உணர்ச்சி மிகு காட்சியை துண்டைத் தோளின் முன்னே போட்டுக் கொண்டு கையை அகல விரித்து அங்கும் இங்குமாய் நடந்து இடையில் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அவர் பேசிய விதம், அவர் ஒரு சிறந்த நடிகர்திலகத்தின் ரசிகர் என்பதாக இவனை நினைக்க வைத்தது.

சரி…போதும் என்று ஜி சொன்னபோது அவர் மேலும் ஆர்வத்தில்…

சார்…இன்னொரு ஸீன்….இன்னும் ஒரே ஒரு ஸீன்…என்று கெஞ்ச, சரி…சரி…என்று தலையாட்டினார் ஜி.

இந்திரன் மாறு வேஷத்துல கிழவனா வந்து கர்ணனோட கவச குண்டலத்தை தானமா வாங்க வந்திருப்பார் சார்…வந்திருக்கிறது இந்திரன்தான்னு சூரியபகவான் சந்நிதில கர்ணனுக்கு அசரீரி கேட்டிடும்…அப்போ அந்தக் கிழவர்ட்ட வந்து அவரை ரெண்டு கையால பிடிச்சு உட்கார வைப்பாரு கர்ணன்…அதுக்கு முன்னாடி இடுப்புல கையை வச்சிக்கிட்டு அவரைச் சுத்திச் சுத்தி வந்து வசனம் பேசுவாரு…அந்த ஸீன்…அந்த ஸீன்…என்று விட்டு உட்கார்ந்திருந்த ஒருவரை எழுப்பி அவரை மாறுவேஷத்தில் வந்த இந்திரனாகப் பாவித்து,

தள்ளாத வயசு……

தளராத நோக்கம்….

என்று வசனத்தை அப்படியே ஒன்று விடாது அவர் சொல்லித் தீர்த்தபோது….இவன் அப்படியே தன்னை மறந்து அமர்ந்திருந்தான். அவனையறியாமல் கண்கள் கலங்கியிருப்பதை உணர்ந்தான்.

எது எதை இவர்கள் சார்ந்து இருந்தார்களோ

அதன்பாற்பட்டே மனப்பிறழ்வுக்கு ஆளாகிவிட்டார்களோ?

இத்தனை ஞாபகசக்தியா? உண்மையிலேயே மனநிலை சரியில்லாதவர்கள்தானா அல்லது எப்பொழுதாவதா? அப்படியென்றால் நிரந்தரமாக இவர்கள் இங்கேதான் இருந்தாக வேண்டுமா? என்றேனும் ஏற்படும் நினைவுப் பிசகல்களுக்குக் கூட உடனிருந்து அரவணைக்க உறவுகள் தயாரில்லையா? என்ன கொடுமை இது?

மாதத்துக்கு மினிமம் அமௌன்ட் ஐயாயிரம் ரூபா…ஆளுக்கு ஏத்தமாதிரிக் கூடும் குறையும்…

எல்லாம் வசதியானவங்கதான்…அதத்தான் இங்க நீங்க கவனிக்கணும்…எவ்வளவு பைசா ஆனாலும் கொடுக்கத் தயாரா இருக்காங்க எல்லாரும்…ஆனா யாரும் கூட வச்சுப் பராமரிக்கத் தயாரில்லை….பணத்தை முதலா வச்சு நடக்கிற சமூகம் எப்டியிருக்கும்ங்கிறதுக்கு இது ஒரு உதாரணம்… கிளம்பலாமா…?

மீண்டும் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டு, கை குலுக்கி, பிரியாவிடை பெற்றுக் கொண்டு, அந்த மலையடிவாரத்தையும், பசுமையான மலையையும், சுற்றுப் புறச் சூழலையும், மூலிகைகளோடு கலந்து வரும் மருத்துவக் காற்றினையும் சுவாசித்தவாறே நாங்கள் வாயிலை எட்டியபோது, அதுவரை நாங்கள் கவனிக்காது எங்கள் பின்னாடியே வந்த ஒருவர் கடைசியாகக் கேட்டார்.

சார்…எங்கப்பாம்மாவைக் கூட்டிட்டு வர்றேன்னு சொன்னீங்களே….அவுங்க வரல்லியா….?

திரும்பிப் பார்த்தார் ஜி. என்ன பதில் சொல்லலாம் என்று நேரம் எடுத்துக் கொண்டதுபோல் இருந்தது அவரின் அமைதி.

வருவாங்க…வருவாங்க…கண்டிப்பா வருவாங்க….வர்றேன்னு சொல்லியிருக்காங்க... ஜி தயக்கமின்றிக் கூறியவாறே இவன் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டே வெளியேறினார். கூடவே மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.

அடுத்த முறை வர்றபோது கண்டிப்பாக் கூட்டிட்டு வாங்க சார்….நா பார்க்கணும்னு சொல்லுங்க….கட்டாயம் வருவாங்க….நாலு வருஷம் ஆச்சு எங்கப்பாம்மாவப் பார்த்து…..ஃபோர் இயர்ஸ்….ஃபோர் இயர்ஸ்….முனகிக்கொண்டே எங்களுக்குக் கையைக் காண்பித்துக் கொண்டு நின்றார் அவர்.

ஆகட்டும்….ஓ.கே…..ஓ.கே….

திரும்பிப் பார்த்துக் கையசைத்துக் கொண்டே வெளியேறினார் குருஜி.

என்னவோ மனதில் விபரீதமாய்த் தோன்ற இவன் கேட்டான்.

ஜி…அவுங்க ஃபாதர் மதர் எங்கிருக்காங்க…?

குருஜி முகத்தில் எந்த உணர்ச்சியும் இன்றி அமைதியாகக் கூறினார்.

யு.எஸ்ல….!!!

-------------------------------------------

06 மார்ச் 2013

எழுத வைத்த எழுதுகோல்–பத்தி எழுத்து

 

 

download

 

 

 

 

என்னிடம் தான் பலரும் பேனா கேட்கிறார்கள். எத்தனை கூட்டம் இருந்தாலும் சரி. இந்த மூஞ்சியில் அப்படி என்னதான் இருக்குமோ அறியேன். மனிதர்கள் தங்களின் எல்லாச் செயல்களுக்கும் ஒரு கணிப்பு வைத்திருக்கிறார்கள். பஸ் ஸ்டாப் கேட்பது, தெரு கேட்பது, வங்கி உண்டுதானே?, போஸ்ட் ஆபீஸ் ஒர்க்கிங்க டே தானே? என்று பலவாறாக. நானும் கொடுத்து, மறந்து, இப்படியாக சுமார் இருபது பேனாக்கள் வரை விட்டிருக்கிறேன். அது ஒரு பெரிதல்ல. ஆனாலும் தொடர்ந்து கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுத்திருக்கிறேன் பாருங்கள். அதுதான் அங்கே முக்கியம். சார், பேனா வேணாமா? என்று கேட்டவர் சிலர். சார், பேனா வாங்காமப் போறீங்க? என்று சொன்னவர் சிலர். கொஞ்சம் இருங்க சார்... என்று காக்க வைத்தவர் சிலர். பார்த்துக்கொண்டே போனாப் போகட்டும் என்று விட்டவர் சிலர். எங்கும் எல்லாவிதமாகவும் மனிதர்கள் இருக்கிறார்கள். இரண்டு ரூபாய்ப் பேனா விற்பது எத்தனை வசதியாய் இருக்கிறது? - உஷாதீபன்

05 மார்ச் 2013

“கை”–குறுநாவல் by சுஜாதா–உயிர்மை குறுநாவல் வெளியீடு-16–ஒரு உணர்ச்சி மிகு வாசிப்பனுபவம்

 

2013-03-05 16.31.27

 

இன்று படித்தது கை. ஆம். சுஜாதாவின் ”கை” குறுநாவல்தான். வரிசை எண்.16. உயிர்மை வெளியீடு.இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோவொரு திறமை ஒளிந்து கொண்டுதான் இருக்கும். அதைக் குறிப்பாக அவனே உணர்ந்து கொள்வதும், அதற்காகத் தன்னை அர்ப்பணிப்பதும்தான் எல்லோருக்கும் நிகழாத ஒன்றாகிப் போகிறது. இந்தக் கை-யின் சிவத்தம்பி தன் கையின் திறத்தை நன்கு உணர்ந்தவனாக இருக்கிறான். அதன் மேல் அப்படியொரு நம்பிக்கை அவனுக்கு. தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை. அத்தனை உற்சாகமான, மனச்சோர்வே இல்லாத ஒரு கதாபாத்திரம்.அவனுக்கான முயற்சிகளை விறுவிறுவென்று சொல்லிச் செல்லும் பாங்கில், ஐயோ, கடவுளே அவனுக்கு ஒரு வேலையைத்தான் கொடுத்துவிடேன் என்று நம் மனமும் வேண்டுகிறது. எந்தக் கையின் மீது அவன் அத்தனை நம்பிக்கை வைத்திருந்தானோ, அந்தக் கையினால் ஆன ஓவியத் திறமையே சம்பந்தமில்லாத ஒரு இடத்தில் வலிய அதைச் சம்பந்தப்படுத்தி வேலையைப் பெற்றுத்தர யத்தனிக்கிறது. முன் பணத்திற்காக ஓவியம் வரைந்து, வரைந்து, விற்றுத் தள்ளுகிறான். அஞ்சு, அஞ்சாகச் சேர்த்த துட்டை எடுத்துக் கொண்டு பறக்கையில்தான் விதி அவனை அடித்துப் போட்டு விடுகிறது. விபத்தில் சிக்கி கையை இழக்கிறான். அவனோடு சேர்ந்து நம் வாசகமனமும் சோர்கிறது. இரு கையுமில்லாமல் எப்படி வாழ்வது? தற்கொலைக்கு முயல்கிறான். மனைவியும், பெண் குழந்தையும் தடுத்து விடுகிறார்கள். கையில்லையே, எப்படி வாழ, உங்களை வாழ்விக்கவியலாத நான் இருந்தென்ன பயன் என்று புலம்பித் தவிக்கிறான். என் கையை எடுத்துக்கோப்பா என்று அந்தச் சிறு குழந்தை கைகளை நீட்டும் இடம் நம்மை உலுக்கி எடுத்து விடுகிறது.மீண்டும் பிறக்கும் நம்பிக்கையோடு வாழ்க்கை துவங்குகிறது. இப்போது சிவத்தம்பி பல்லில் கடித்த பென்சிலோடு தன் ஓவியத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான். கதை சாதாரணந்தான் என்று கொண்டால், அதைச் சொல்லிய விதத்தை அத்தனை எளிதாக விமர்சித்து விட முடியாது. அது சுஜாதாவுக்கு மட்டுமே கைவந்த கலை. வரிவரியாய்ச் சொல்லிவிடலாம்தான். படித்து உணருவது போல் வராது. வேக நடையில் எல்லாமும் தானே வந்து விழ வேண்டும். செயற்கையாய்ப் புகுத்தியது போல் எங்கும் தோன்றினால் அங்கு படைப்பாளி தோற்கிறான். அந்த நடை, அந்த நகைச்சுவை, அந்தக் கேலி, கிண்டல், நையாண்டி, ஊடே ஊடாடி நிற்கும் மெல்லிய தவிர்க்க முடியாத சோகம், என்னதான் ஆகும் பார்ப்போமே என்று கைவிட முடியாத நகர்வு, இப்படிப் பலவும் நம்மைப் பாடாய்ப் படுத்தித்தான் விடுகிறது. ரசித்ததை, வாயார, மனதார, சொல்லவாவது செய்வோமே...!!!

03 மார்ச் 2013

சுஜாதாவின் குறுநாவல் “குருப்ராசாத்தின் கடைசி தினம்”உயிர்மை குறுநாவல் வரிசை எண்.13

 2013-03-03 16.51.14

. கதைஆரம்பித்ததிலிருந்து முடியும்வரை ஒரே விறுவிறுப்பு. குருப்ரசாத் மயங்கி விழ அவனை ஆம்புலன்ஸில் ஏற்றுகையில் நாமும் கூடவே ஏறிக் கொள்கிறோம். தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி மயக்கமடைகையில் அவனுக்கு சிகிச்சையளிப்பது எவ்வளவு தாமதமாகிறது என்பதை இயல்பாக அவர் சொல்லிச் செல்வது ஒரு தொழிலகத்தில் நாமும் கூடவே பணியாற்றி இந்த நிகழ்வு பூராவும் கூடவே இருந்து இயங்குவது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. குருப்ரசாத்திற்கு என்ன உடம்புக்கு என்பதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, பெரும்பாலும் இந்த மாதிரி மயக்கமெல்லாம் ஃபுட் பாய்ஸனாகத்தான் இருக்கும் என்று நினைத்து முடிவு செய்வதும், கேன்டீனில் காபி சாப்பிடுகையில் எண்ணெய் மிதந்ததை நினைத்துக் கொள்வதும், அதுதான் வேறென்ன என்று முடிவுக்கு வருவதும், சர்வ சகஜமாக என்னவொரு அலட்சியம்? கூட இருக்கும் யூனியன் தொழிலாளரோடு சேர்ந்து நாமும் பதறுகிறோம். அங்கேயிருந்து இ.எஸ.ஐ.க்கு அலைக்கழிப்பதும், அங்கு சென்றதும், ஃபுட் பாய்ஸனெல்லாம் இங்கு பார்க்கிறதில்லை என்று திருப்புவதும், திரும்பவும் ஃபாக்டரி உறாஸ்பிடலுக்கு வண்டி எடுக்க எனக்கு ரூல் இல்லை என்று டிரைவர் சொல்வதும், இப்படியே நாலைந்து மணி நேரங்கள் கடந்து கடைசியில் குருப்ரசாத் இறந்தே போகிறான். மயக்கமடைந்தவுடனேயே ஒரு ஊசியைப் போட்டு நிறுத்தியிருக்க வேண்டிய விஷயம் இந்தத் தொழிற்சாலை மற்றும் அது சார்ந்த மருத்துவமனை அலைக்கழிப்பால் ஒரு உயிரையே சர்வ அலட்சியமாகக் குடித்து விடுகிறது. கூட இருக்கும் யூனியன் தலைவர்களாலும் எதுவும் செய்ய இயலவில்லை. எல்லா சத்தங்களையும் மீறி இது நடந்து விடுகிறது. தொழிற்சாலை அதிகாரிகள் சர்வ ஜாக்கிரதையாக ஆறு பஸ்களைத் தயாராய் நிறுத்தி வைத்து யார் வேண்டுமானாலும் ஏறிக் கொள்ளலாம் என்று சொல்லி குருவின் சடலைத்தைப் பார்க்க வசதி செய்கிறார்கள். எல்லோரும் ஏறிப் போகையில் பாதிப் பேர் அங்கே, இன்னும் பாதி வழியில் ஓரிடம், என்று இறங்கிக் கொள்ள கடைசியில் மிஞ்சுவது அஞ்சு பேர். ஒரு உயிரின் மதிப்பு ?யாரோ ராம்ப்ரசாத்தாம், இல்லையில்ல மோகன் ப்ரசாத், ஊகூம்...முரளிப்ரசாத்...கிடையாது, சத்தியமூர்த்தின்னு சொன்னாங்க...சரி விடு ஏதோ பேரு...நட சீக்கிரம்..... - துயரம் நெஞ்சைக் கவ்வுகிறது. - உஷாதீபன்

01 மார்ச் 2013

நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)

 

காலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறது, காகிதம் போன்ற கவிதைகளைக் காணோம். இருப்பதற்கென்றுதான் வருகிறோம்,
இல்லாமலே போய் விடுகிறோம்.
ராமச்சந்திரனா என்று கேட்டேன்,
ராமச்சந்திரன் என்றார்.
எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவில்லை,
அவர் சொல்லவுமில்லை. இப்படிச் சில கவிதைகள் யோசிக்க வைத்தன. இவையெல்லாம் ஏற்கனவே படித்ததுதான் என்றாலும், திரும்பத் திரும்பப் படிக்கையில் என்னவோ ஒன்று புதிதாக மனதுக்குள் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது. என்ன என்பதை உருவகப்படுத்த வேண்டும். அதில்தான் சிக்கல்..
இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?
என்று கேட்டார்
எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்
என்றேன். என்று ஒரு கவிதை. இந்தக் கவிதைகளை அச்சாகியிருப்பதுபோல் கொடுக்க வேண்டும். வரிகளை நகுலன் எப்படி எழுதியிருந்தாரோ அப்படி...! இல்லையென்றால் முழுப் பொருளும் வராமல் போகும் அபாயம் உண்டு. பொருள் பிசகும் வழியும் உண்டு. இதைத்தான் structuring the poem என்கிறார் அவர். யுவனின் ஒரு கவிதையின் ரெண்டு வரியை அவர் திருத்தியிருப்பதைப் பாருங்கள்.
எனக்கு யாருமில்லை
நான் கூட - இது யுவன் சந்திரசேகர் எழுதியது. நகுலன் பிரித்தது
எனக்கு யாருமில்லை
நான்
கூட
கூடுதலான வேறொரு பொருள் வருவதைக் கவனிக்கிறீர்களா? இதே போல் எழுத வேண்டும் என்று பலரும் முயன்று வெறுமே சொற்களை உடைத்துப் போட்டது பற்றியும் யுவன் தெரிவிக்கிறார். அம்மாதிரிக் கவிதைகள் இளிப்பதை உன்னிப்பாகப் படித்தால் புரிபடும்.-உஷாதீபன்

காலச்சுவடு க்ளாசிக்  கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறது, காகிதம் போன்ற கவிதைகளைக் காணோம். இருப்பதற்கென்றுதான் வருகிறோம்,<br /> இல்லாமலே போய் விடுகிறோம்.<br /> ராமச்சந்திரனா என்று கேட்டேன்,<br /> ராமச்சந்திரன் என்றார்.<br /> எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவில்லை, <br />அவர் சொல்லவுமில்லை.  இப்படிச் சில கவிதைகள் யோசிக்க வைத்தன. இவையெல்லாம் ஏற்கனவே படித்ததுதான் என்றாலும், திரும்பத் திரும்பப் படிக்கையில் என்னவோ ஒன்று புதிதாக மனதுக்குள் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது. என்ன என்பதை உருவகப்படுத்த வேண்டும். அதில்தான் சிக்கல்..<br />இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?<br />என்று கேட்டார்<br />எப்பொழுதும் அங்குதான் இருப்பேன் <br />என்றேன். என்று ஒரு கவிதை. இந்தக் கவிதைகளை அச்சாகியிருப்பதுபோல் கொடுக்க வேண்டும். வரிகளை நகுலன் எப்படி எழுதியிருந்தாரோ அப்படி...! இல்லையென்றால் முழுப் பொருளும் வராமல் போகும் அபாயம் உண்டு. பொருள் பிசகும் வழியும் உண்டு.  இதைத்தான் structuring the poem என்கிறார் அவர். யுவனின் ஒரு கவிதையின் ரெண்டு வரியை அவர் திருத்தியிருப்பதைப் பாருங்கள். <br />எனக்கு யாருமில்லை<br />நான் கூட            - இது யுவன் சந்திரசேகர் எழுதியது. நகுலன் பிரித்தது<br />எனக்கு யாருமில்லை<br />நான்<br />கூட <br />கூடுதலான வேறொரு பொருள் வருவதைக் கவனிக்கிறீர்களா?  இதே போல் எழுத வேண்டும் என்று பலரும் முயன்று வெறுமே சொற்களை உடைத்துப் போட்டது பற்றியும் யுவன் தெரிவிக்கிறார். அம்மாதிரிக் கவிதைகள் இளிப்பதை உன்னிப்பாகப் படித்தால் புரிபடும்.-உஷாதீபன்

28 பிப்ரவரி 2013

சுஜாதாவின் குறுநாவல் வரிசை-20. உயிர்மை வெளியீடு ”ஓரிரவு ஒரு ரயிலில்...”

.

இன்று படித்தது இது. கதையின் ஆரம்பத்திலேயே நாமும் ரயிலில் ஏறி விடுகிறோம். பயத்துடனேயே பயணிக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்துவிடுகிறது. காரணம் ரயிலில் உடன் வந்து கொண்டிருக்கும் பயணியான சாமியார். என்னை அவன் பார்த்துப்பான்...என்கிறார்“. உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது எங்க கடமை என்கிறார் காவல் துறை அதிகாரி. சாமியாரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகத் தகவல் வந்துதான் இந்தப் பாதுகாப்பு. போதாக்குறைக்கு நடுவழியில் வண்டி நிறுத்தப்படுகிறது. பயணிகள் இறக்கப்படுகிறார்கள். இதான்யா இவங்ககிட்ட...எதையுமே முதல்லவே பார்க்க மாட்டாங்க. வண்டில குண்டு இருக்காம்...உயிர் போனாப் பரவால்லயா... வாய் மூடிக் கொள்கிறது எல்லோருக்கும். ஒரே பரபரப்பு. தேடு தேடு என்று தேடுகிறார்கள். ஒரு பை அகப்படுகிறது. உள்ளே டிக் டிக் சத்தம் வேறு. எங்கேயாவது நீளக் கம்பு கிடைக்குமா? கம்பால நுனில தூக்கித் தள்ளி வச்சிட்டு ஓடிப்போயிடலாமே.. வெடிச்சாலும் பாதிப்பில்லாம...சார்...சார்...அது என் பேக். இதத்தான் காணலன்னு இம்மாம் நேரம் தேடிட்டிருந்தேன்...உள்ள என்னய்யா டிக் டிக் சத்தம்? கடிகாரம் சார்....புதுசா வாங்கிட்டுப் போறேன்...என் மச்சினிக்குப் படிக்கிறதுக்கு சார்...பயங்கரமான ஸ்வாரஸ்யம்...அது சுஜாதாவால மட்டும்தான் கொடுக்க முடியும்...கடைசியில் உடன் பயணித்த கதாநாயகியே சாமியாருக்கு அருகில் இருந்து அவரைச் சுட்டு வீழ்த்துகிறாள். சாமியாரின் பொதுக் கூட்டமொன்றில் இவள் அண்ணன் கமல்நாத்தை கமால்கான் என்று புரிந்துகொண்டு சொல்லச் சொல்லக் கேட்காமல் உயிரோடு கொளுத்தி விடுகிறார்கள். அதற்குப் பழிக்குப் பழி வாங்குகிறாள் இவள். மிகச் சரியான இடத்தில் முடிந்து போகிறது குறுநாவல். அதுதானே படைப்பாளிக்கு அழகு. ஒரு வரி நீண்டாலும் மதிப்புப் போய்விடுமய்யா...சுஜாதாவுக்குச் சொல்லியா தர வேண்டும். எம்.ஜ.ஆர். காலமாகி இருபத்தைந்தாண்டு கடந்தும் அவர் புகழ் நிலைத்து நிற்பதுபோல, சுஜாதாவின் எழுத்தும் இன்னும் பல்லாண்டிற்கு நிற்கும். -உஷாதிபன்

சுஜாதாவின் குறுநாவல் வரிசை-20. உயிர்மை வெளியீடு ”ஓரிரவு ஒரு ரயிலில்...” . இன்று படித்தது இது. கதையின் ஆரம்பத்திலேயே நாமும் ரயிலில் ஏறி விடுகிறோம். பயத்துடனேயே பயணிக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்துவிடுகிறது. காரணம் ரயிலில் உடன் வந்து கொண்டிருக்கும் பயணியான சாமியார். என்னை அவன் பார்த்துப்பான்...என்கிறார்“.  உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது எங்க கடமை என்கிறார் காவல் துறை அதிகாரி. சாமியாரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகத் தகவல் வந்துதான் இந்தப் பாதுகாப்பு. போதாக்குறைக்கு நடுவழியில் வண்டி நிறுத்தப்படுகிறது. பயணிகள் இறக்கப்படுகிறார்கள். இதான்யா இவங்ககிட்ட...எதையுமே முதல்லவே பார்க்க மாட்டாங்க. வண்டில குண்டு இருக்காம்...உயிர் போனாப் பரவால்லயா... வாய் மூடிக் கொள்கிறது எல்லோருக்கும். ஒரே பரபரப்பு. தேடு தேடு என்று தேடுகிறார்கள். ஒரு பை அகப்படுகிறது. உள்ளே டிக் டிக் சத்தம் வேறு. எங்கேயாவது நீளக் கம்பு கிடைக்குமா?  கம்பால நுனில தூக்கித் தள்ளி வச்சிட்டு ஓடிப்போயிடலாமே.. வெடிச்சாலும் பாதிப்பில்லாம...சார்...சார்...அது என் பேக். இதத்தான் காணலன்னு இம்மாம் நேரம் தேடிட்டிருந்தேன்...உள்ள என்னய்யா டிக் டிக் சத்தம்? கடிகாரம் சார்....புதுசா வாங்கிட்டுப் போறேன்...என் மச்சினிக்குப் படிக்கிறதுக்கு சார்...பயங்கரமான ஸ்வாரஸ்யம்...அது சுஜாதாவால மட்டும்தான் கொடுக்க முடியும்...கடைசியில் உடன் பயணித்த கதாநாயகியே சாமியாருக்கு அருகில் இருந்து அவரைச் சுட்டு வீழ்த்துகிறாள். சாமியாரின் பொதுக் கூட்டமொன்றில் இவள் அண்ணன் கமல்நாத்தை கமால்கான் என்று புரிந்துகொண்டு சொல்லச் சொல்லக் கேட்காமல் உயிரோடு கொளுத்தி விடுகிறார்கள். அதற்குப் பழிக்குப் பழி வாங்குகிறாள் இவள். மிகச் சரியான இடத்தில் முடிந்து போகிறது குறுநாவல். அதுதானே படைப்பாளிக்கு அழகு. ஒரு வரி நீண்டாலும் மதிப்புப் போய்விடுமய்யா...சுஜாதாவுக்குச் சொல்லியா தர வேண்டும். எம்.ஜ.ஆர். காலமாகி இருபத்தைந்தாண்டு கடந்தும் அவர் புகழ் நிலைத்து நிற்பதுபோல, சுஜாதாவின் எழுத்தும் இன்னும் பல்லாண்டிற்கு நிற்கும். -உஷாதிபன்

27 பிப்ரவரி 2013

சுஜாதாவின் குறுநாவல் வரிசை-14.“ இப்படி ஒரு மாறுதல்”. உயிர்மை வெளியீடு.

இதுதான் நான் இப்போது படித்த புத்தகம். மிகச் சிறிய குறுநாவல்தான். ஆனாலும் எத்தனை துடிப்போடும், துள்ளலோடும். முடிவை மட்டும் முதலிலேயே தீர்மானித்துக் கொண்டால் போதும் அவருக்கு. உள்ளே நாவலை நீட்டிக்க, சம்பவங்களைக் கோர்க்க, சந்தேகங்களை வலுக்கச் செய்ய, அடுத்தடுத்துத் தாண்டிக் கொண்டே போக, கடைசியில் யாரும் எதிர்பாரா ஒரு முடிவைக் கொடுக்க, அது அவரால் மட்டுமே முடியும். உயிர்மையின் குறுநாவல் வரிசையில், எதைப் படிப்பது, எதை விடுவது என்று எதையும் விடமுடியாமல், வரிசையாகப் போய்க்கொண்டே இருக்கிறது. சுஜாதா ஒரு எழுத்துப் புயல். அதனால்தான் இன்னும் அவரது எழுத்து அழியாமல் விலை போய்க் கொண்டிருக்கிறது. - உஷாதீபன்
சுஜாதாவின் குறுநாவல் வரிசை-14.“ இப்படி ஒரு மாறுதல்”. இதுதான் நான் இப்போது படித்த புத்தகம். மிகச் சிறிய குறுநாவல்தான். ஆனாலும் எத்தனை துடிப்போடும், துள்ளலோடும். முடிவை மட்டும் முதலிலேயே தீர்மானித்துக் கொண்டால் போதும் அவருக்கு. உள்ளே நாவலை நீட்டிக்க, சம்பவங்களைக் கோர்க்க, சந்தேகங்களை வலுக்கச் செய்ய, அடுத்தடுத்துத் தாண்டிக் கொண்டே போக, கடைசியில் யாரும் எதிர்பாரா ஒரு முடிவைக் கொடுக்க, அது அவரால் மட்டுமே முடியும். உயிர்மையின் குறுநாவல் வரிசையில், எதைப் படிப்பது, எதை விடுவது என்று எதையும் விடமுடியாமல், வரிசையாகப் போய்க்கொண்டே இருக்கிறது. சுஜாதா ஒரு எழுத்துப் புயல். அதனால்தான் இன்னும் அவரது எழுத்து அழியாமல் விலை போய்க் கொண்டிருக்கிறது. - உஷாதீபன்

“தோற்றப் பிழை” (சிறுகதைத் தொகுதி) -------------------------------------------------------------------------கட்டுரை--- ( ”படைப்பிலக்கியத்தின் கச்சிதமான காட்சிப் பதிவுகள்

 

clip_image001clip_image002


எழுத்தாளர் தி.தா.நாராயணன் அவர்களைத் தமிழ் எழுத்துலகு அறியும். சிறந்த சிறுகதைகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பவர் அவர். எந்தப் பரிசுத் திட்டம் அறிவித்திருந்தாலும், அதற்கு இவர் தன் கதையை அனுப்பியிருந்தார் என்றால், நிச்சயம் ஒரு பரிசு அவருக்கு உண்டு. இப்படிப் பல முதற் பரிசுகளைத் தன் கதைகளுக்காகப் பெற்றவர். மனித நேயம் மிக்க கதைகள், சமுதாயப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அலசி ஆராய்ந்து, நியாயமாக, உருக்கமாகத் தன் படைப்பின் வழி வைக்கும் திறன் கொண்டவர். எந்தவொரு கதையும் ஒதுக்கப்படத்தக்கதாக, வெறும் பொழுது போக்கிற்காக, இவர் எழுதி நான் பார்த்ததேயில்லை. அப்படிப்பட்டவருக்கு தொகுதி அளிப்பதில் பதிப்பகங்களுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்? NCBH நிறுவனம் இப்போது அவரது சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. நல்ல படைப்பாளிகளை அடையாளம் கண்டு கொள்வதுதானே ஒரு நல்ல, உயர்ந்த பதிப்பகத்தின் கடமையாக இருக்க முடியும்.

”தோற்றப் பிழை” என்பது இந்தச் சிறுகதைத் தொகுதியின் பெயர். ஒரு வயதான முதியவரின் படத்தைப் பொருத்தமான அட்டைப்படமாகப் போட்டு, கீழே தோற்றப்பிழை என்று புத்தகத்தின் பெயரையும் அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால் அது தோற்றப்பிழை அல்ல. தோற்றத்தில் மரியாதையையும், மதிப்பையும் தரும் களை. களை என்றால் களையாக, அழகாக, திருத்தமாக இருத்தல் என்று பொருள். அந்தப் பரிபூர்ண லட்சணம் இந்தத் தொகுதிக்கு உண்டு. தோற்றப்பிழை என்ற அந்தத் தலைப்பில்தான் முதல் கதையோடு இத்தொகுப்பு ஆரம்பிக்கிறது. முதுமை எத்தனை அழகு? அதன் முதிர்ச்சியும், பக்குவமும் பார்த்துப் பார்த்து பணிந்து, மரியாதை செய்யக் கூடியதல்லவா? அப்படியான முதியோர்களின் பிரச்னைகளை உள்ளடக்கிய பல சிறுகதைகளைக் கொண்டுள்ளது இத்தொகுதி. அதுவே இத்தொகுதியின் சிறப்பு என்று ஆரம்பத்திலேயே கூறிவிடலாம். ஏனென்றால் இப்பிரச்னை மூலமாக இந்தச் சமுதாயத்திற்குச் சொல்ல வேண்டிய செய்திகள் நிறைய விரவிக் கிடக்கின்றன என்பதுதான் சத்தியமான உண்மை.

13 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. இதன் பல சிறுகதைகள் பரிசுகளை வென்ற கதைகள். பொதுவாக ஒரு தொகுதிக்கு நான்கு அல்லது ஐந்து கதைகள்தான் சிறப்பான படைப்புக்களாக இருப்பது வழக்கம். அப்படியானால்தான் இன்னொரு தொகுதிக்கும் சிறந்த நான்கைந்து கதைகளைக் கொடுத்து அந்தத் தொகுதியையும், சிறப்பிக்க முடியும் என்று மடியில் பொதிந்து வைத்திருப்பார்கள் எழுத்தாளர்கள். ஆனால் இவர் அப்படியில்லை. காரணம் கொஞ்சமாக எழுதுபவர் இவர்..ஆனால் நிறைவாகத் தன் படைப்புக்களைக் கொடுப்பவர். எழுதி எழுதித் தள்ளுபவர்களை விட எழுத்தைத் தவமாகக் கொள்பவர்களின் படைப்புக்கள் என்றும் சிறக்கத்தானே செய்யும்? அப்படித் தவமாக இயற்றி இந்தத் தொகுதியை நமக்கு வழங்கியிருக்கிறார் செய்யாறு தி.தா.நாராயணன்.

தோற்றப்பிழை நம் மனதைக் கனக்கச் செய்யும் அற்புதமான படைப்புக்களைக் கொண்டது. அதை ரசிப்பதும், சுவைப்பதும், அனுபவிப்பதும், கரைந்து சஞ்சரிப்பதும், காசு கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பதில்தான் இருக்கிறது. நல்ல ஆக்கங்களை ஊக்கப்படுத்துங்கள். அப்படியானால்தான் படைப்பாளி மேலும் மேலும் இந்தச் சமுதாயத்தின் மேன்மைக்குப் பாடுபட்டுத் தன்னைக் கரைத்துக் கொள்வான். என்னதான் ஆனாலும் அவனும் கைதட்டலுக்குக் காத்திருப்பவன்தான். அதுதானே யதார்த்தம்.

இந்த முன்னுரையோடுதான் இந்தத் தொகுதிகளின் கதைகள் பற்றி ஆரம்பிக்க வேண்டும் என்று இப்புத்தகத்தைப் படித்து முடித்தவுடனேயே முடிவு செய்து விட்டேன். வெறும் புகழ்ச்சியாக இவை சொல்லப்படவில்லை. உள்ளே விரிந்துள்ள படைப்புக்கள் அப்படிச் சொல்ல வைக்கின்றன. விழுமியங்கள் மறைந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. அப்படியென்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் இளைய சமுதாயம் இம்மாதிரிப் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். புத்தகங்கள் மனிதர்களைச் செம்மைப் படுத்துகின்றன. வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கின்றன. ஒருவனுக்கு இந்த வாழ்வில் எல்லாவிதமான அனுபவங்களும் கிடைத்து விடுவதில்லை. காரணம் வாழ்க்கையின் எல்கை மிகக் குறைவு. தினமும் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் செயல்கள் ரொம்பவும் சாதாரணமானவை. குறிப்பிட்ட தூரமும், வீடுமாய் இருக்கும் நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனை வித விதமான அனுபவங்களை நாம் பெற்று விட முடியும்? அப்படியானால் மனிதர்கள் மன முதிர்ச்சி அடைவது எப்படி? அனுபவங்களைப் பெறுவது எங்ஙனம்? பக்குவமடைவது எப்போது? வாழ்ந்து முதிர்ந்த, சலித்த பெரியோர்களின் அனுபவங்களைப் பெறுவதுதான், அறிவதுதான் இதற்கு ஒரே வழி. அவற்றை எது தரும்? சந்தேகமில்லாமல் புத்தகங்கள்தானே அவற்றைத் தர முடியும்? சுந்தர ராமசாமி சொல்லுவார் – புத்தகங்கள் மனிதனின் சளசளப்பைப் போக்கி அவனை அமைதி கொள்ளச் செய்கின்றன. அவனை விவேகமுள்ளவனாக ஆக்குகின்றன. வாசிப்புப் பழக்கத்தினால் ஒருவன் மிகுந்த விவேகமுள்ள பண்பாளனாக மாறுகிறான். வாசிப்பு என்பது வெறும் புத்தகங்களை மட்டும் வாசிப்பதல்ல. இந்த மனிதர்களை, மரம் செடி கொடிகளை, இயற்கையை, பிற ஜீவராசிகளை இப்படி எல்லாவற்றையும் வாசிக்கக் கற்றவன்தான் ஒரு சிறந்த வாசகனாக இருக்க முடியும்.

அப்படியான ஒரு பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய படைப்புக்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன. மனித மனங்களை மேன்மைப்படுத்தும் புத்தகங்கள் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டுகின்றன. தன்னைப் புடம் போட்டுக் கொள்ள அவை தூண்டிக் கொண்டேயிருக்கின்றன. அப்படி ஒரு புத்தகம்தான் இந்தத் தோற்றப்பிழை சிறுகதைத் தொகுப்பு.

தோற்றப்பிழை – புத்தகத்தின் தலைப்புக் கதை இது.

எல்லாச் சாதிக் கட்சிகளையும் ஒழிக்கணும்யா…

ஒழிக்கலாம்தான். ஆனால் சாதி பெயரில்லாமல், கட்சி வைத்து வளர்த்துக் கொண்டு, சாதியை மறைமுகமாக ஆதரித்து, வளர்த்து, ஓட்டு வங்கியை நிலைக்கப் பாடுபட்டு. மக்களிடையே வேற்றுமைகளை, பகைமையை அதிகரிக்கிறார்களே? அதை என்ன செய்வது?.

ஒண்டி ஆளாய் நின்று நாலு ஏக்கர் எழுபது சென்ட் எழுதிக் கேட்க முனைந்த பொழுதில், அங்கே அவனின் தைரியமும், திமிரும் பெருமையாகப் பேசப்பட்டு, தவறு பின்னுக்குப் போய்விடுகிறது. ஆனால் நம்ம சாதிக்காரன்டா, அதான் இத்தனை தில்லா நிக்கிறான் என்று தன்னை மறந்து அடிமனசில் ஊறிப்போய்க் கிடக்கும் சாதிப் பெருமை தளிர்விடத்தானே செய்கிறது. ஆயினும் எவனுடைய தோற்றத்தை வைத்தும் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. ஏனெனில் உள்ளே ஊடுருவி நுழைந்து பார்க்கையில்தான் தெரியும் எல்லோர் மனதிலும் சாதி உண்டு என்கிற உண்மை. தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்ற எளிமையான பழகிய மொழியின் நூறு சத யதார்த்தம்தான் உண்மை. அப்படிப்பார்த்தால் தோற்றப்பிழை என்பது சரிதான். எல்லோரிடமும் சாதி உள்ளது என்பதை வலியுறுத்த வந்த கவனமான கதை இது. கொஞ்சம் அவசரம் தெரிகிறது படைப்பின் உருவாக்கத்தில். கதையாடலை இன்னும் கொஞ்சம் யதார்த்தப்படுத்தியிருந்தால், கருத்துக்காகவே கதை சொல்ல வந்த தன்மை தானாகவே மறைந்து போயிருக்கும் என்று தோன்றுகிறது.

முதல் கதை ஜாதிப் பிரச்னை என்றால் இது மதப் பிரச்னை. எழுத்தாளனின் பணி சமூக அவலங்களைத் தட்டிக் கேட்பதுதான் மறுப்பதற்கில்லை. இலக்கியம் சமுதாயத்திற்காக என்கிற கூற்று இங்கே நிஜப்படுகிறது. ஆனால் இலக்கியம் என்பது வெறும் கலை, இலக்கியம் இலக்கியத்திற்காக என்கிற கூற்றும் காலந்தோறும் கூடவே இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஜாதி மறுப்பு, மத மறுப்பு என்று புரட்சிகரமான எண்ணங்களைக் கொண்டு முற்போக்குச் சிந்தனைகளை விதைக்கலாம்தான். எழுத்து அப்பொழுதுதான் நிறைவடையும் ஒரு படைப்பாளிக்கு. ஆனால் இதைவிடவெல்லாம் இந்தப் புரட்சிகரச் சிந்தனைகளுக்காகக் களத்தில் இறங்கி உண்மையிலேயே பாடுபடுகிறானே,அவன் இந்த எல்லாரையும் விட உயர்ந்தவனல்லவா? மனம் இப்படி நினைக்கத்தான் செய்கிறது. ஆனாலும் எத்தனை வீடுகளில் வறுமையினாலும், வரதட்சணைக் கொடுமையினாலும் பெண்ணைக் கட்டிக் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்? காதல் திருமணங்களும், வீட்டை மீறி ஓடிப் போய்த் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகளும் பெரும்பாலும் இதனால்தானே நடைபெறுகின்றன? பெற்றோர் சம்மதத்தோடும், சம்மதமின்றியும் காணத்தானே செய்கிறோம்? ஆனால் இந்தக் கதையின் சாந்தி தாயின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, தேவதையாய் நிற்கிறாள். கதை லட்சுமணக் கோடு. சமுதாயம் கட்டிக் காக்கும் பண்பாட்டின், விழுமியங்களின் தேர்ந்த அடையாளமாய், வறுமையிற் செம்மையாய், தன் தாயின் உழைப்பின்மீது கொண்ட முழு மரியாதை நிமித்தம், தன்னை அவள் இட்ட கோட்டுக்கு உட்பட்டு நிறுத்திக் கொள்கிறாள். அதன் பலன்? இந்தக் கடைசிப் பத்தியைப் படியுங்கள். உங்கள் மனசு இளகி அழவில்லையானால், நீங்கள் மனிதரேயில்லை…!

என்னடீ அதிசயம்…? காலங்கார்த்தால குளிச்சிட்ட?

மறந்துட்டியா? என்னை ஆசீர்வாதம் பண்ணும்மா…! இன்னிக்கு என் பிறந்தநாள்மா…!

காலில் விழுந்தவளைத் தூக்கி நிறுத்தினாள். கண்கள் ததும்புகின்றன. முப்பத்திமூணு வயசு முடிஞ்சு போச்சி. அம்மாவே எல்லாமென்று போட்ட கோட்டைத் தாண்டமாட்டாமல், தன் உணர்வுகளைப் புதைத்து விட்டு நிற்கும் தன் குலக்கொழுந்தை தலை முதல் கால்வரை பார்க்கிறாள். துக்கம் அடைக்கிறது. இளமை கலைய ஆரம்பித்துவிட்டிருந்தது. முகத்தில் லேசாய் முற்றல் வந்துவிட்டது. காதோரங்களில் ஒன்றிரண்டு நரை முடிகள். ஐயோ கண்ணே…! என் செல்லமே…!! நீயாவது துணிஞ்சி அந்தப் பையனோட ஓடிப் போயிருக்கக் கூடாதா?

கதையின் உச்சம் இது. நம்மைப் பிழிந்தெடுக்கும் இடம். அதுவே இக்கதையின் வெற்றி.

கிருஷ்ணராஜசாகரின் வடிகாலாகத்தான் தமிழகத்திற்குக் காவிரி பயன்படுகிறது என்பதாக ஒரு கருத்து உண்டு. இது மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் பிரச்னை. இதுவே இரு கிராமங்களுக்குட்பட்ட பிரச்னையாக இருந்தால்? மொத்தமுள்ள 13 ஏரிகளுக்கும் பொதுவாக மக்கள் திரண்டால்? பலகை போட்டு மடை கட்டி ஒரு ஊர்க்காரர்களே பயன்படுத்த முடியுமா? எந்த மடையைக் கட்டி தண்ணீர் எங்களுக்கு நிரம்பியது போகத்தான் மீதி உங்களுக்கு என்றார்களோ, அதுவே வெள்ளம் வரும்போது? அப்போது மட்டும் மடையை எடுத்துவிடுவது எப்படி நியாயமாகும்? வெள்ளம் வரும்போது அதன் அழிவுகளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனும்போது தீர்வு வருகிறது அங்கே. தண்ணீர் எல்லார்க்கும் பொது என்பதும், மக்களின் ஒற்றுமையும் வலியுறுத்தப்படும் கதை இது என்பதே இதன் சிறப்பு. கதையின் தலைப்பு மடை.. அடுத்ததாக புதிய ஏற்பாடு.

இன்றைய பெற்றோர்களின் நிலைமை, தந்தை மகனுக்கு எழுதும் கடித வடிவாக வரையப்பட்டு மனம் சோரும் அவருக்கு. வயதொத்த நண்பர் சூழ்நிலையின் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக இருக்கப் பழகிக் கொள்ளத்தான் வேண்டும் என்று போதிக்கும் கதை. முதியோர் இல்லத்தில் சென்று இருத்தலும், சந்தோஷத்தையும், திருப்தியையும் வரவழைத்துக் கொள்ளுதலும்தான் புதிய ஏற்பாடு என்கிற கருத்தில் மனதை உருக வைக்கும் கதை. இம்மாதிரிக் கதைகளையே கூட அந்த வயதொத்த மனிதர்கள் படித்து உணருவதைப் போல, மன முருகுவதைப்போல், இன்றைய இளைஞர்கள். இளைய வாசகர்கள் உணருவார்களா என்பது சந்தேகம்தான். காலம் அப்படித்தான் அவர்களைப் பழக்கியிருக்கிறது. நீ பங்களா வாங்கியதை உன் மாமனார்தான் எனக்குச் சொன்னார். இந்தத் தற்குறி அப்பனுக்குச் சொல்வது முக்கியமில்லை என்று விட்டுவிட்டாய் போலும். ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்த்தால்தான் இந்த வேதனை புரியும்.

பொதுவாகப் பையன்களுக்கு அப்பாவை விட அம்மாமேல்தான் இஷ்டம் அதிகம். அதற்கு வெவ்வேறு பாலினம் என்பது கூட ஒரு காரணமாயிருக்கலாம். வெளியூரிலிருந்து தொலைபேசியில் அவர்கள் அடிக்கடி அதிகமாய்ப் பேசுவது அப்பாவைவிட அம்மாவிடம்தான். அம்மாவே, இந்தா அப்பாட்டப் பேசு, என்று ரீசீவரைக் கொடுத்தால், போகிறது என்று தர்மத்திற்கு ரெண்டு வார்த்தை பேசுவார்கள். அப்படியென்ன அம்மா பிரியம்? அந்த அளவுக்கா இஷ்டமாய் அவனுக்கு அவள் உபதேசம் செய்கிறாள்? அட்வைஸ் என்பதுதான் இந்தக் காலத்துப் பசங்களுக்குப் பிடிக்காதே? இஷ்டமான அம்மாவே அட்வைஸ் என்று ஆரம்பித்தால் பட்டென்று ஃபோனைத் துண்டித்து விடுவார்களே? நறுக்கென்று மூஞ்சியிலடித்தாற்போல் மரியாதை கெடுமே அங்கே? அதுதானே யதார்த்தம். ஆனாலும் அம்மாவிடம் மட்டும்தான் பையன்களுக்குப் பேசப் பிடிக்கிறது. அப்படி என்ன ஒன்று கூட அப்பாவிடம் பேச இல்லாமல் போயிற்று? அது அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். மனைவியைப் பிரிந்து தனியாய் இருக்கும் அவர், தானே முதியோர் இல்லத்தைத் தேடிக் கொள்கிறார். இதையே யதார்த்தமாய், சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ளும் நண்பர் ஒருவர், “கோழை மாதிரி அழாதீருமய்யா…” என்கிறார். வாழ்க்கைல தேடித் தேடிக் குற்றங்களைக் கண்டுபிடிக்காதீரும்…சந்தோஷமாப் போயிரும்…என்று தேற்றி, சமனுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனாலும் வயதானவர்களுக்குக் கிடைப்பது தனிமைதான் என்று உணர்கிறார். யாரும் யாரையும் சார்ந்திருப்பதற்கில்லை. எல்லோரும் சுதந்திரமாய் இருங்கள் என்கிறார்கள் இளைஞர்கள். ஆரோக்யமான புதிய ஏற்பாடு இது. ஏற்றுக் கொள்ள முடிகிறதா? ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். காலத்தின் கட்டாயம் இது. விடுங்கள். அடுத்ததாய்ப் பரிணாமத்தைப் பார்ப்போம்.

மனித குலத்தின் அடுத்த பரிணாமமாகப் பிறக்கும் செயற்கைக் கருவூட்டலில் ஒரு வேற்றுக் கிரகவாசிக்குப் பிறந்த குழந்தைதான் அது. பிறந்தவுடனேயே கூடவே மதமும் பிறந்து விடுகிறது. என்பதுதான் விந்தை. குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றும்போது அதன் தொடர்ச்சியாக வெறியும், போரும், அழிவும் தவிர்க்க முடியாதது என்பதாகச் சொல்லி முடிகிறது இக்கதை. ஆக எத்தனை விஞ்ஞான முன்னேற்றமானாலும், கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும், ஒற்றுமை என்பது அழிந்துபடும் என்பதான கருத்து யோசிக்க வேண்டிய ஒன்றாகிறது. அறிவியல் புனைகதையாக இத்தொகுதியில் விரிந்திருக்கும் இரண்டில் ஒன்று.

துரைசாமி தன் பணியில் நேர்மையாக வாழ்ந்து முடித்தவர். ஆனால் முப்பத்திஎட்டு வருஷ நீண்ட சர்வீஸ், யாரைப்பிடித்து எவ்வளவு லஞ்சம் கொடுத்தாரோ அல்லது அந்தக் காலத்தில் வலிந்து கூப்பிட்டுக் கொடுத்தார்களோ, மொத்த சர்வீசும் இந்த ஒரே ஆபீசில், ஒரே ஊரில் கழிந்தாயிற்று. நேர்மையாக சர்வீஸ் போட்டவர் என்பதால் வலிந்து கூப்பிட்டு வேலை பெற்றவர் என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. லஞ்சம் கொடுத்து சேர்ந்திருந்தால் சர்வீசில் நேர்மையாக இருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் நேர்மையாக சர்வீசுக்குள் நுழைந்தவர்கள் கூடக் , கண்டபடி சீரழிந்து விட்ட காலம் இது. லஞ்சமும், ஊழலும், மேலேயிருந்துதான் தலையெடுக்கின்றன. தலையைப் பார்த்துத்தான் இங்கே வால் ஆடுகிறது. அதுதான் யதார்த்தம். இணை இயக்குநர் வருகிறார். சொந்த ஊர் பார்க்க, அப்படியே முகாம் என்று காண்பிக்க, சம்பந்தப்பட்ட பதிவேடுகளில் இரண்டொரு கையெழுத்து என்கிற பதிவுடன் பாதுகாப்பாகப் பயணப்படி பெறும் ஊழல். காலம் காலமாய் நடக்கிற ஒன்று. இதெல்லாமா ஒரு ஊழல்? என்று கேட்கிற காலமிது. அன்றுமுதல் இன்றுவரை என்றும் சொல்லலாம்தான்.

இந்தக் கதையை அப்படியே விட்டிருந்தால்தான் அழகு. எப்படி? இப்பத்தான் ஆபீஸ் பார்ட்டியில் சாப்பிட்டோம், மறுபடியும் துரைசாமி வீட்டில் சாப்பிடணும் என்றால் வயிறு கொள்ளாதுன்னு அவாயிட் பண்ணியிருக்கலாம். சொன்னபதில் துரைசாமிக்கு திருப்தி தரவில்லை. எப்படித் திருப்தி தரும்? அது அவர் எதிர்பார்க்காத ஒன்றாயிற்றே? எதிர்பார்த்ததுதான் தவறா? மனப்பூர்வமாய் அழைத்தாயிற்றே? எவரும் வரவில்லையென்றால்? அவ்வளவுதான். வேறு என்ன செய்யமுடியும்? சட்டென்று மனதில் ஒரு விலகல் துரைசாமிக்கு. அது விலகலா? விரிசலா? அந்த வெறும் நால்வரை வரவேற்கத் தயாரானது அவரின் வீடு. இப்படித்தான் நானாயிருந்தால் முடித்திருப்பேன். நீ என்ன சாதிய்யா? என்கிற கடைசிக் கேள்வி ஏனோ வலியத் திணிக்கப்பட்டதுபோல் தோன்றுகிறது. இந்த முடிவுக்காகவே எழுதப்பட்ட கதையோ என்று ஒட்டாமல் நிற்கிறது. அதுவரை சொல்லப்பட்ட விஷயங்கள்தான் உண்மையான யதார்த்தம். பணியிலிருந்து ஓய்வு பெறுவோர் ரொம்பவும் முன்னதாகவே தங்களைப் பதப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படியும் கூட நடக்கலாம் என்பதாகப் பல முடிவுகளுக்கு வந்திருக்க வேண்டும். அதுதான் முதிர்ச்சி. பாவம் துரைசாமி. ஆனாலும் அந்தக் கடைசிக் கேள்வி ரொம்பக் கொடுமை. நேரடியாக நெஞ்சில் இறக்கியதுபோல். விருந்துக்கு அழைக்கும் ஒருத்தருக்கு இறங்கும் இடி மனித சமுதாயத்தின் தலைகுனிவு.

ஏழாவதாக நிற்பது சிகிச்சை. அரசு மருத்துவ மனைகளின் அக்கறையற்ற கவனிப்பையும், ஏழை பாழைகளின் உயிர்த் தவிப்பையும், தனியார் மருத்துவ மனைகளின் பணம் பிடுங்கும் போக்கையும், தோலுரித்துக் காட்டும் கதை. குழந்தை இறந்துவிட்டதைப் பார்க்கும் தனியார் மருத்துவமனை டாக்டர் ரங்கசாமி சொல்கிறார் – கவர்ன்மென்ட் ஆஸ்பிடல்ல பார்த்துக்கிறேன்னு இந்த ஆள் சொல்லிட்டானாம். ஒரு உயிர் அநியாயமாப் போயிட்டது. ஜனங்க பணத்துக்குத் தர்ற முக்கியத்துவத்த உயிருக்குக் கொடுக்கிறதில்லை…ச்சு….நாம என்னா பண்ண முடியும்? நான்கு குழந்தையைப் பறிகொடுத்த அவர்கள், பாவாடைக்காரி தெய்வத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு, நிச்சயம் அவ நமக்கு இன்னொண்ணு தருவா என்று அடுத்ததற்குத் தயாராகிறார்கள்.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் எப்படிக் கதை சொல்ல வேண்டும் என்று இக்கதாசிரியருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. கல்கி தீபாவளி மலருக்கென்று இவர் சொன்ன கதைதான் நட்பு. ராமநாதன் தொலைந்து போகிறார். மற்றவர்களுக்கு அப்படித்தானே…? ஒரு மனிதன் தன்னைத்தானே தொலைத்துக் கொள்கிறான் என்றால் அதற்கு வலுவான காரணங்கள் நிறைய இருக்க வேண்டும் என்பதுதான் உண்மை. அதிலும் மனைவி இல்லாத ஒருவன், பிள்ளைகளிடம் மாட்டிக் கொண்டு தன்னந்தனியே காலந்தள்ளுவது எத்தனை கஷ்டம்? ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்கள். மனிதர்கள் எத்தனை மலிவானவர்கள். சட்டென்று ஒன்றைப் பேசி விடுவதில்தான் எத்தனை அவசரம் அவர்களுக்கு? ஏன் தொலைந்து போக வேண்டும்? இதன் பின்னணி என்ன? அப்படியென்ன வந்தது இந்த மனுஷனுக்கு? யாராவது யோசித்தால்தானே…!

போதாக்குறைக்கு ஒருவர் அவரைப் பம்பாயில் ஒரு பெண்ணோடு பார்த்ததாக வேறு. அவர், தான் ராமநாதன் இல்லை, கோபால் ஷர்மா என்று உறிந்தியில் பகன்று நகர்ந்து விடுகிறார். எனக்கு நல்லாத் தெரியும், அவர்தான். அவரேதான். காலை சாய்ச்சி, சாய்ச்சி நடந்தாரே…அவர் ராமநாதனேதான்…

இந்த வயசுல இந்தாளுக்கு இது தேவையா? மனசு நினைத்து விடுகிறது இப்படி.. யோவ் ராமநாதா…ரெண்டு நாள் நாம சேர்ந்தாற்போல சந்திக்கலேன்னா என்னவோ மாதிரி ஆகிடுதய்யா…

என்னய்யா, சினிமா டயலாக்கா? நாம ரெண்டு பெரும் செல்லு போன பாண்டுகள்யா…விடலைங்க இல்ல. இந்த வயசுல தோழமைங்கிறது…மனப் புழுக்கங்களைக் கொட்டி ஆற்றத்தான்…பொழுதை ஓட்ட…அவ்வளவுதான்…பீ ப்ராக்டிகல் மேன்…மூணு நாள் தொடர்ச்சியா காபிக்கு நான் காசு கொடுத்தேன்னு வச்சிக்கோ…இல்ல நீ கொடுக்கிறே…அம்புட்டுதான் நம்ம நட்பு புட்டுக்கும்…நான் யதார்த்தவாதி…இதான் நிஜம்…

அந்த ராமநாதனைத்தான் காணவில்லை.

என்ன சின்ன புத்தி இந்தாளுக்கு? கர்மம்…கர்மம்…செக்ஸ் பற்றிய விஷயத்தில் மட்டும் எவனும் உண்மையே பேசுவதில்லையா? - யாரோ சொன்னதை வைத்து மனது என்னவெல்லாம் நினைத்து விடுகிறது சட்டென்று?

கடைசிப் பெண் மாயா, கடைசியாய்ச் சொல்கிறாள். இந்த சம்பவத்தால் நாம ராமநாதன் சாரைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டமோ இல்லியோ…நம்ம ஒவ்வொருத்தர்பற்றியும்தெளிவாவெளிப்படுத்திட்டோம்…தெரிஞ்சிக்கிட்டோம்….பார்வைக் கோளாறு உள்ள சுந்தரசாமி பார்த்தது உண்மையிலேயே ராமநாதன்தானான்னு உறுதிப்படுத்திக்கணும்னு நாம யாருக்குமே தோணலியே? அவரே அப்படிக் கல்யாணம் பண்ணிட்டிருந்தாலும், அதுக்கு உயரிய நோக்கம் இருந்திருக்கணும்னு ஏன் மாமா உங்களால நினைக்க முடியல? அதுதானே நல்ல நட்புக்கு அடையாளம்? மனுஷாள்ட்டக் குறைகளைப் பார்க்கத் தலைப்பட்டா, ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டாங்க மாமா…

தலைகுனிகிறார் இவர். மானசீகமாய், ஓடிப்போன, தவறு தவறு தொலைந்து போன தன் நண்பனிடம் மன்னிப்பும் கோருகிறார் இவர். வெறும் இவர்தான். கடைசிவரை இவர் பெயரைத் தேடினேன். கிடைக்கவில்லை.எங்காவது ஓரிடத்தில் சொல்லியிருக்க வேண்டும்.. இவரையும், ராமநாதனையும் பற்றிய இந்தக் கதை இந்த சமூகத்தின் இன்றைய நிகழ்வுகளின் துல்லியமான படப்பிடிப்பு. அதனூடேதான் இந்த நட்பு.

மங்கா கிழவி பற்றியும் இதில் ஒரு கதை உண்டு. முதியோர் என்றால் இரு பாலினமும்தானே…! படுக்கையில் கிடக்கும் மங்கா கிழவிக்கு பீ, மூத்திரம் எடுத்து, எடுத்து நொந்து போன மருமகள் அவளுக்கு மூன்று எண்ணெய் கலக்கி குளிப்பாட்டி விடுகிறாள். கிராமங்களில் உள்ள இந்த வழக்கங்கள் நமக்கே இதைப் படித்த பின்னால்தான் தெரிகின்றது. இழுத்துப் பறித்து அவஸ்தையிலிருப்பவர்களுக்கு செய்வது வழக்கந்தான் என்று பக்கத்து வீட்டுக் கண்ணம்மா பேச்சைக் கேட்டு செய்து விடுகிறாள் லட்சுமி. ஆனாலும் மனது கிடந்து அடித்துக் கொள்கிறது. தவறு செய்து விட்டோமோ என்று பழி பாவத்திற்கு அஞ்சி பயப்படுகிறாள். ஆனால் இழுபறி உயிர்நிலையில் இதைப் புரிந்து கொண்ட கிழவி நீ செய்ததுதான் சரி என்ற கூறி என் குடிகாரப் பிள்ளையை வச்சி நீ என்னதான் செய்வே? ரெண்டு பெண்டுகளை எப்படிக் கரையேத்துவே என்று பதுக்கி வைத்திருக்கும் 12 பவுன் நகையின் இருப்பிட ரகசியம் கூறி மாய்கிறாள். காலத்திற்கும் என்னை ஓட ஓடவிரட்ன உன் நெஞ்சக் கூட்ல என்னைப் பத்தியும் எம்புள்ளைங்களைப் பத்தியுமான கவலைகளத்தான் வச்சிருந்தியா அத்தே? என்று தன் தவறை நினைத்து உருகுகிறாள், கதறுகிறாள் மருமகள் லட்சுமி. எனக்கு ஏதாவது இன்ஜெக் ஷனைப் போட்டு, என்னை முடிச்சிருங்க டாக்டர் என்று வேண்டிக் கொண்ட உறவினர்களை நம்மில் சிலரேனும் பார்த்திருக்கக் கூடும். ஆனால் அருகில் நின்று காப்பவர் எவரும் ரகசிய வழிகளை மேற்கொண்டதில்லை எனலாம். ஆனால் அப்படியும் சில உண்டுதான் என்பதாய் அறிய நேரும் இந்த மூணு எண்ணெய் கூட்டும் அதீத யதார்த்தம் இந்தக் கதையில் மனதைத் திடுக்கிட வைக்கும் நிகழ்வு. செய்தவர்கள் காலம் பூராவும் உயிரோடு சாக வேண்டுமே? அந்தப் பழியை எப்படித் தீர்ப்பது? தான் செத்துதான் தீர்க்க வேண்டும். மனசு ஏற்காத, நெஞ்சை உருக்கும் கதை.

கீதாச்செடி என்ற புதுமையான பெயரோடு ஒரு அற்புதமான கதை இந்தத் தொகுதியில் உள்ளது. மொத்தத் தொகுதியின் அத்தனை கதைகளிலும் எந்தக் கதையை மிகச் சிறந்த கதை என்று முதலிடத்திற்கு நிறுத்துவது என்கிற போட்டியில் இந்தக் கதை முந்துகிறது. மஞ்சுதான் கீதாச்செடி. அவள்தான் கீதாக்குட்டி, கீதாச்செடி என்று கடைசியில்தான் தெரிகிறது. ஏன்தான் இத்தனை சோகமோ? மனசு பொறுக்கவில்லை அய்யா. தாங்க முடியாத சோகத்தை ஏற்க மறுக்கிறது உடலும் உள்ளமும். பதறிப் போனது மனசு. கதை முடிந்த பிறகும் உடல் நடுக்கம் குறையவில்லை. அப்படியான நேரத்தில் சுணக்கம்தானே ஏற்படும். அதுதான் அடுத்த கதையாக இங்கே மலர்ந்திருக்கிறது. லஞ்சம் வாங்காமல் நேர்மையாய் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு வேலையே சரியாய்ச் செய்யாமல் வாங்கும் சம்பளம் கூட ஒருவகையில் லஞ்சம்தான் என்ற மனசாட்சியுள்ள கருத்தை பலமாக நிறுவும் உண்மையான கதை இது. அவசியம் எல்லோரும் உணர வேண்டிய ஒன்று. நாத்திக ஆத்திக வாதம் பேசும் கதையாக அடுத்தது மலர்கிறது. கடவுள் இல்லை என்பதும், இருக்கு என்பதும் கவைக்கு உதவாத வெறும் பேச்சு. உண்டென்றால் அது உண்டு. இல்லையென்றால் அது இல்லை. இவை எல்லாவற்றையும் மீறியது லௌகீக விஷயங்கள். கடமையை, கர்மத்தை செவ்வனே ஆற்றிவிட்டுத்தானே அடுத்த படியாகக் கடவுளைத்தேட வேண்டும். லௌகீகத்தில் இருக்கையில் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம், தவறில்லை. தேடலே இல்லாதவர்கள்? மிகப்பெரிய நாத்திகவாதியாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலர் தங்கள் வீட்டைப் பொறுத்தவரை எப்படி இருக்கிறார்கள்? என்பது நாமறிந்ததே…! தெருக்கோடி சாமிக்கு மறக்காமல் தினசரி பூஜை செய்யும் குடும்பத்தாரைப் பார்க்கத்தானே செய்கிறோம்? இந்தக் கதையில் பெற்றோருக்கான மரியாதையும், குடும்ப ஒற்றுமையும், பொது நலனும் வலியுறுத்தப்படுகிறது. அதுதான் யாத்திரை.

உலகம் அழியப்போகிறது என்ற சமீபத்திய பேச்சுகளுக்கு நடுவே பிரளய காலம் என்கிற சொற்றொடர் சமீப நாட்களாய் நம்மிடையே மூத்த குடிமக்களிடையே புழக்கத்தில் இருப்பதை அநேகர் கண்டிருக்கலாம். மின்னணு இயந்திரங்கள் கி.பி. 2030 லேயே புழக்கத்திற்கு வந்து விட்டன என்று சொல்கிறார். அப்படியானால் கதை அதைத் தாண்டிய காலம்தானே? அதில் இன்னொன்று. மக்கள் அப்பொழுது சுத்தமாய் தமிழே பேசவில்லை. வீட்டின் தேவைகளை உணர்த்தும் மின்னணு இயந்திரத்திற்கு சரியான தமிழ் வார்த்தையில் புரோக்ராம் பண்ணி வைத்து, அந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொல்வதன் மூலமே (அதாவது சுத்தத் தமிழில்) அது தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று சொல்லி அப்படியாவது மக்களிடம் தமிழைப் பரப்ப வேண்டும் என்னும் முயற்சி 2030க்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆறுதல். அந்த மட்டுமாவது அதாவது மின்னணு இயந்திரத்தில் சுத்தத் தமிழை ஏற்றுமளவுக்காவது 2030 க்குப் பிறகும் தமிழ் அழியாமல் நீடிக்கிறதே என்று ஆறுதல் கொள்ள வேண்டியிருக்கிறது. 2040ல் பசுமைப் புரட்சி ஏற்பட்டு உலகை, மக்களைக் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. கதை 2050 ல் நடக்கிறது. அப்போதும் சாதிக் கலவரம், மதக் கலவரம், இதைப் பயன்படுத்தும் ஆள்பவர்கள் மட்டும் மாறவேயில்லை.பெட்ரோல் முற்றிலும் தீர்ந்துவிட அதனால் உண்டாகும் பெரிய கலவரம். கடைசியில் மூலிகைப் பெட்ரோலில் வந்து முடிகிறது கதை. தகந 853 அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அறிவியல் புனைகதை எழுத ஆர்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்படியானால்தான் அதற்கான முயற்சியே எழும். இந்த வகை எழுத்தில் இந்தப் புத்தகத்தின் படைப்பாளிக்கு ஒரு தனி ருசி இருப்பது தெள்ளெனவே விளங்குகிறது. கதையைப் புனைந்திருக்கும் விதத்திலேயே அவரது ஆர்வமும், அதனால், தானே எழுந்த சொல்லாடலும், மொத்தக் கதையையும் ஸ்வாரஸ்யப்படுத்தியிருக்கிறது.

இந்தத் தொகுதியின் ஒவ்வொரு கதையும் வெவ்வேறுவிதமான தாக்கங்களை படிக்கும் வாசகர்களின் மனதில் நிச்சயம் ஏற்படுத்தும். வயதானவர்களைப் பற்றியும், முதியோர்களைப்பற்றியும் கருத்தார்ந்த அக்கறை கொண்டு வடித்தெடுக்கப்பட்ட உணர்வு பூர்வமான கதைகள் இத்தொகுதியில் அதிகமாய் விரவிக் கிடக்கின்றன. அதேபோல் எழுத்து இந்த சமூகத்திற்காக, குடும்பம் என்கிற அமைப்பிலே இந்த சமூகத்திற்கு சொல்லப்படவேண்டிய செய்திகள் ஏராளமாய் உள்ளன என்பதைத் தெள்ளத் தெளிவாய் நிரூபித்திருக்கும் தலை சிறந்த கதைத் தொகுதியாய் விளங்குகிறது தி.தா.நாராயணன் அவர்களின் இந்தத் தோற்றப்பிழை சிறுகதைத் தொகுதி. ஆசிரியரே சொல்கிறார். சாதிகளாலும், மதங்களாலும் நாம் வெகு காலமாய்ப் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறோம். சுதந்திரமடைந்து அறுபது வருஷங்களுக்கு மேலாகியும், அந்தப் பிரிவினைகளைக் களைய போராடித் தோற்றிருக்கிறோம். யார் காரணம்? சாதிகளின், மதங்களின் பெயரால் நாம் வெறியூட்டப்படுகிறோமே, அதுதான் பிரச்னை. உசுப்பி விடுவதும், அவை நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்வதும் யார்? அரசியல்வாதிகள்தானே…? அவர்கள் பிழைக்க நாம் சிலுவையைச் சுமக்கிறோம். அதுதானே உண்மை. ஆசிரியரின் இந்தக் கேள்விகளை நிரூபிக்கும், உள் மன ஓட்டங்களை உசுப்பி எடுக்கும் ஆழமான படைப்புக்களை ஏந்தி இந்தத் தொகுதி தலை நிமிர்ந்து நிற்கிறது. இலக்கிய வாசகர்கள், நடுநிலை வாசகர்கள், வாசிப்பு ஆர்வம் உள்ள படைப்பாளிகள் அனைவரும் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் இது என்று சொல்வதில் எந்த மிகையுமில்லை. NCBH நிறுவனம் இத்தொகுதியை மிகச் சிறப்பான வடிவமைப்பில் வெளியிட்டிருக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் அய்யா பொன்னீலன் அவர்களும், சமூக ஆர்வலர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும், தமுஎகச் தலைவர் திரு ச. தமிழ்ச்செல்வன் அவர்களும் மிகுந்த கவனத்தோடும், கருத்தோடும், மகிழ்வோடும், இந்தத் தொகுதிக்குத் தங்கள் அணிந்துரையை வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள். தமிழ் வாசகர்கள் மனதில் இந்தச் சிறுகதைதொகுதி வெகு காலத்திற்கு நின்று நிலைக்கும்.

-----------------------------------------

21 பிப்ரவரி 2013

“தோற்றப்பிழை”–சிறுகதைத் தொகுதி–தி.தா.நாராயணன்

எழுத்தாளர் தி.தா.நாராயணன் அவர்களைத் தமிழ் எழுத்துலகு அறியும். சிறந்த சிறுகதைகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பவர் அவர். எந்தப் பரிசுத் திட்டம் அறிவித்திருந்தாலும், அதற்கு இவர் தன் கதையை அனுப்பியிருந்தார் என்றால், நிச்சயம் ஒரு பரிசு அவருக்கு உண்டு. இப்படிப் பல முதற் பரிசுகளைத் தன் கதைகளுக்காகப் பெற்றவர் அவர். மனித நேயம் மிக்க கதைகள், சமுதாயப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அலசி ஆராய்ந்து, உருக்கமாகத் தன் படைப்பின் வழி வைக்கும் திறன் கொண்டவர். எந்தவொரு கதையும் ஒதுக்கப்படத்தக்கதாக இவர் எழுதி நான் பார்த்ததேயில்லை. அப்படிப்பட்டவருக்கு தொகுதி அளிப்பதில் பதிப்பகங்களுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்? அதனால்தான் முந்திக் கொண்டு NCBH நிறுவனம் இப்போது அவரது சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ”தோற்றப் பிழை” என்பது அந்தச் சிறுகதைத் தொகுதியின் பெயர். ஒரு வயதான முதியவரின் படத்தைப் பொருத்தமான அட்டைப்படமாகப் போட்டு, கீழே தோற்றப்பிழை என்று புத்தகத்தின் பெயரையும் அச்சிட்டிருக்கிறார்கள். முதுமை எத்தனை அழகு? அதன் முதிர்ச்சி பார்த்துப் பார்த்து மரியாதை செய்யக் கூடியதல்லவா? 13 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பாக இது இருக்கிறது. இதன் பல சிறுகதைகள் பரிசுகளை வென்ற கதைகள். பொதுவாக ஒரு தொகுதிக்கு நான்கு அல்லது ஐந்து கதைகள்தான் சிறப்பான படைப்புக்களாக இருப்பது வழக்கம். அப்படியானால்தான் இன்னொரு தொகுதிக்கும் சிறந்த நான்கைந்து கதைகளைக் கொடுத்து அந்தத் தொகுதியையும், சிறப்பிக்க முடியும் என்று மடியில் பொதிந்து வைத்திருப்பார்கள் எழுத்தாளர்கள். ஆனால் இவர் அப்படியில்லை. காரணம் இவர் கொஞ்சமாக எழுதுபவர்.ஆனால் நிறைவாகத் தன் படைப்புக்களைக் கொடுப்பவர். எழுதி எழுதித் தள்ளுபவர்களை விட எழுத்தைத் தவமாகக் கொள்பவர்களின் படைப்புக்கள் என்றும் சிறக்கத்தானே செய்யும்? அப்படித் தவமாக இயற்றி இந்தத் தொகுதியை நமக்கு வழங்கியிருக்கிறார் திரு தி.தா.நாராயணன் அவர்கள். தோற்றப்பிழை நம் மனதைக் கனக்கச் செய்யும் அற்புதமான படைப்புக்களைக் கொண்டது. அதை ரசிப்பதும், சுவைப்பதும், அனுபவிப்பதும், கரைந்து சஞ்சரிப்பதும், காசு கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பதில்தான் இருக்கிறது. நல்ல ஆக்கங்களை ஊக்கப்படுத்துங்கள். அப்படியானால்தான் படைப்பாளி மேலும் மேலும் இந்தச் சமுதாயத்தின் மேன்மைக்குப் பாடுபட்டுத் தன்னைக் கரைத்துக் கொள்வான். என்னதான் ஆனாலும் அவனும் கைதட்டலுக்குக் காத்திருப்பவன்தான். - உஷாதீபன்

clip_image001