31 ஆகஸ்ட் 2020

“பெத்தவன்“ – இமையம் – நெடுங்கதை – க்ரியா வெளியீடு - வாசிப்பனுபவம் - உஷாதீபன்


  

“பெத்தவன்“ – இமையம் – நெடுங்கதை – க்ரியா வெளியீடு -  வாசிப்பனுபவம் - உஷாதீபன்

மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது மனிதம் எப்படித் தன்னைத் தக்க வைத்துக் கொள்கிறது என்பதை எடுத்துச் சொல்லும் நெடுங்கதை –இதுதான் இக்கதையைப் பற்றி ரத்தினச் சுருக்கமாகச் சொல்லப்படும் கருத்து.

மனிதத்தை மறுக்க முயலும்போது – என்று சொல்கையில் அந்த மனிதம் எந்த இடத்திலேனும், யாராலேனும் உணரப்படுகிறதா என்றால் –ஒரேயொரு ஜீவனால் மட்டும். அந்த ஒரு ஜீவன் பெண்ணைப் பெற்ற தந்தை. தந்தையாலும் அது உணரப்படாவிட்டால் அப்புறம் இந்த உலகத்தில் மனிதம் என்கிற வார்த்தைக்கான அர்த்தம்தான் ஏது? “பெத்தவன்” என்ற வார்த்தைக்கான பொருள்தான் ஏது?

பழனியை செக்கில் போட்டு ஆட்டுவதுபோல் ஊர் கூடிக் கேள்விக் கணைகளைத் தொடுக்கிறது. பெற்றெடுத்தவன் முழுசாக நின்று கொண்டிருக்க……உன் பெண்ணை எப்படிக் கொல்லப் போற….? என்று ஊர் அவனிடமே கேள்வி கேட்கிறது. அந்த அளவுக்கு ஊர்க் கட்டுப்பாடும், சாதி வெறியும் அந்த மக்களை ஆட்டிப் படைக்கிறது. உன் பெண்ணை எப்படிச் சாகடிக்கப் போற என்று நீயே முடிவு பண்ணிக்கோ என்ற ஒரு சலுகை வேறு….உன்னால முடியாதுன்னா சொல்லு…நாங்க பார்த்துக்கிறோம்….என்கிற துல்லியமான பதில்.

என்னடா…ஆளாளுக்கு இஷ்டத்துக்குப்  பேசிக்கிட்டிருக்கீங்க….என் பொண்ணை என்ன செய்யணும்னு எனக்குத் தெரியாதா? அத ஊர்ப் பயல்களான நீங்களா முடிவு செய்வீங்க….? என்ன அநியாயமா இருக்கு….? என்று பழனியால் சொல்ல முடியவில்லை. எதிர்த்து நிற்க இயலவில்லை.

இது என் குடி தெய்வத்து மேல ஆண. சொல் மாறாது. நாளக்கி இந்த நேரத்துக்கு ஊருக்குச் சேதி தெரிஞ்சிடும்…- என்று பழனி சொல்ல….

சரி…ஏத்துக்குறோம்…எப்படிக் செய்யப்போற….அதச் சொல்லு….? என்று மறுபடியும் வழி முறை உறுதி கேட்கிறது ஊர்.

பூச்சி மருந்த வாயில ஊத்தி…அறயில போட்டுப் பூட்டிப்புடணும்…செத்த நேரத்துல முடிஞ்சிரும்…

பாலிடால கொடுத்திடுறன்…அதுன்னா நேரமாவாது…..

மாமன் சொன்னது காதுல விழுந்திச்சா அத்த….?

செய்யப் போவது கொலை….யாரைக் கொலை செய்யச் சொல்கிறார்களோ அந்த வீட்டுப் பெரிய பெண்மணியிடம் கேட்டு ஒப்புதல் பெறுதல்  வேறு.

இப்படியெல்லாமுமா இன்னும் கிராமங்கள் இருக்கின்றன…? இந்த அளவுக்கா சாதி வெறி பரவிக் கிடக்கிறது? - மனசு அதிர்ந்து போகிறது நமக்கு.

செய்ய நினைப்பது, செய்யப்  போவதாகப் பேசுவது சட்டப்படி  குற்றம் என்று உணர்ந்தும் கிராமத்துக் கட்டுப்பாடு, ஊர்க் கட்டுப்பாடு, ஆயிரம் தலக்கட்டுக்காரர்கள் என்கிற பெருமை….இதெல்லாமும் சேர்ந்து அவர்களைப் பேச வைக்கிறது.

ஆனாலும் அந்தக் கூட்டத்திலும் நியாயம்தானா இது என்று கேட்க ஒரு ஜீவன் இல்லாமலா போகும்? ஒருவர் முன் வரத்தான் செய்கிறார்.

ஊருக்காரப் பயலுவோ எல்லாம் ஒண்ணாக் கூடிக்கிட்டு நம்ப ஊட்டுப் புள்ளய வெட்டணும் குத்தணும் கொல்லணுமின்னு சொல்றீங்களே…சாமிக்கு இது  அடுக்குமாடா….? என்று கேட்கிறான் மண்டையன் கிழவன்….  அந்தப் பயலக் கூப்பிட்டு ரெண்டு தட்டுத் தட்டி அனுப்புங்கடா என்கிறான்.

மொத்தக் கூட்டமும் கிழவனிடம் பாய்கிறது. அவனைப் பல வழிகளில் தண்டிச்சாச்சு…அடங்குறாப்புல இல்ல என்கிறார்கள். போதாக் குறைக்கு அவன் போலீசு வேற….

யாரா இருந்தா என்ன…போலீசா இருந்தா மேங்குலத்துப் பொண்ணு கேட்குதோ….? அவனுக்கும் சேத்துப் பாட கட்ட வேண்டிதான்…..

ஒங்க பொட்டப்பய பஞ்சாயத்து எனக்குப் புடிக்கல… -மண்டையன் கிழவன்  காறித் துப்புகிறான்.

ஒரு பொட்டச்சி ஊரயே தலகுனிய வச்சிருக்கா…ஆத்திரப்படாம என்ன பண்றது…?

நீ நாளக்கி காரியத்த முடிக்கிற….

பாலிடால யாரு வாங்குறது….?

ஊருக்குச் செலவு வேணாம்….பழனி சொல்கிறார்.

பொணத்த ஊருதான் எடுக்கும்….

கன்னி கழியாத பொண்ணு பொணத்த எப்பிடி எடுக்கிறது

செய்ய வேண்டிய மொறயெல்லாம் செஞ்சிதான் எடுக்கணும்….

பேச்சைப் பாருங்கள். இதற்கெல்லாம் முறையைத் தேடும் மக்கள் செய்யப்போவது தவறு என்பதை உணருகிறார்களா என்ன? அதற்கு மட்டும் ஊர்க் கட்டுப்பாடு என்கிறார்கள். ஆயிரம் தலக் கட்டு என்று பெருமைப் படுகிறார்கள். சட்ட விரோதம் என்பதை உணரத் தயாரில்லை. அந்தளவுக்கு அவர்களிடம் இந்தக் கசடு படிந்து போயிருக்கிறது. கதை இதைத்தான் வெளிக்காட்டுகிறது. கூட்டத்திற்குப் பின் –

      பழனியின் அம்மா துளசி…. “பழிகார ஊருடாப்பா…எரிஞ்சி சாம்பலாவ மாட்டங்குது…பொட்டச்சிவுளா சேந்து எம்புள்ளையத் தலகுனிய வச்சிட்டாளுவ……ஒரு விசயம் சொல்லணும் சாமி”  என்று மகனிடம் கெஞ்சுகிறாள்.

      பழனியின் கையைப் பிடித்துக் கொண்டு கற்பூரத்தை அணைத்து….“இது சத்தியம்.. நம்ப ஊட்டு வாய மரத்த வெட்டாத சாமி…ஒண்ணு நூறாவும்.. நூறு ஆயிரமாவும்…எம் பேச்சக் கேளு…நீ மகராசனா இருப்ப….நான் ஒங்கப்பனுக்கே முந்தாணி போட்டிருந்தா, நீ ஒங்கப்பன் ஒருத்தனுக்கே பொறந்திருந்தா அவமேல ஒங் கை படக்கூடாது….இது ஒங்கப்பன் மேல சத்தியம்…”

      தவியாய்த் தவிக்கிறார் பழனி.   துளசியோடு சேர்ந்து அவரும் அழ ஆரம்பிக்கிறார்.

      பாக்கியத்தின் முன் உட்காருகிறார். “அழுவாத…சோறு திங்கும்போது கண்ணுத் தண்ணி வுடாத….எல்லாம் நீயா தேடிக்கிட்டது. நான் ஒரு பாவத்தயும் அறியன். இதான் ஒனக்கு இந்த ஊட்டுல கடசிச் சோறு…..

      அந்தக் குடிசைக்குள் நகரும் காட்சிகள் நம் நெஞ்சை உருக்குகின்றன.

பழனி இரக்கமுள்ள தகப்பன்.  மாடுகள் கத்தும் சத்தம். தண்ணி காட்டுனீங்களா…? கூளம் போட்டீங்களா…?

துளசி, இல்லே என்கிறாள்.

      அது என்னப்பா பண்ணிச்சு….அது ஒழப்பிலதான நாம திங்கிறோம்…அதெப் புடிச்சாந்த நாள்லருந்து இன்னொருத்தன் வீட்டுக் கட்டுத்தறிக்குப் போனதில்ல….மனுசங்க மாறியா? நில்லுன்னா நிக்கும்…போன்னா போவும்…பசிக்குதுன்னு சொல்றதுக்கு அதுக்கு வாய் இருக்கா? – அவர் பின்னால் நாய் போய்க்கொண்டேயிருந்தது. அவருடைய முகத்தைச் செவலைக் காளை நக்கியது. குறுகுறுத்தது. ஆனாலும் முகத்தை வாகாகக் காட்டினார். மாடு நக்க நக்க…உடம்பில் இருந்த நடுக்கம் குறைந்தது பழனிக்கு. வெளியே வந்தார். குளித்துவிட்டு வந்தமாதிரி இருந்தது. பழனியின் இரக்கப்பட்ட மனசின் விஷூவல் காட்சிகள் இவை.

      வாக்குத் தவறாத சாமி….துளசி சொல்கிறாள். பெத்தவன் மனசு அல்லாடுகிறது. பாக்கியத்தையும், பெரியசாமியையும் சினிமாத் தியேட்டரில் பார்த்துவிட்டு வந்து, உள்ளூர் பையன் பழனியிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது. பாக்கியம் மழுப்புகிறாள். அதுவே உண்மை என்று உணர வைக்கிறது. ஊனமுற்ற ரெண்டாவது பெண் செல்வராணியிடம் “நான் உசுரோட இருக்கணுமா வாணாமான்னு அவகிட்ட கேட்டுச் சொல்லு…

      இன்னியோட எல்லாச் சனியனும் முடிஞ்சிபோச்சி…இனிமேலாச்சும் ஊரு தூங்கட்டும். இந்த ஊரு கண்ண மூடி எம்மாம் காலமாச்சு….- பாக்கியத்தின் தாய் புலம்புகிறாள்.

      பழனி உள்வீட்டுக்குள் சென்று மரப்பெட்டியைத் திறக்கிறார். ஒரு பையில் வைத்திருந்த அறுபதாயிரம் பணத்தை எடுக்கிறார். பாக்கியத்தின் முன் வைக்கிறார். சேமித்து வைத்திருந்த நகைகளையும் எடுத்து வைக்கிறார். மனைவி சாமியம்மா பக்கம் திரும்பி ஒன் சங்கிலி மூக்குத்தி, தோடு வளைய எல்லாத்தையும் கழட்டிக் கொடு என்கிறார்.

      யாரும் எதுவும் பேசத் திறனின்றி அமைதி காக்கிறார்கள்.

அரி ஓம்னு நீ பொறந்த….. இருவது வருசமா நானும் ஒங்கம்மாவும் போவாத கோவிலில்லே…. கும்பிடாத சாமியில்ல….ஒங்கம்மாவ எங்கம்மாக்காரி பேசுன பேச்சுக்கு அளவில்ல… பாக்கியம்னு ஊருல இல்லாத பேரு வச்சன் ஒனக்கு….ஆனாலும் இந்த ஊரு பேசாத பேச்சில்ல இப்ப….மூணு வருசமா கேட்காத வார்த்தயில்ல….சோறத் தின்னு உசுரோட இருக்கல…பீயத் தின்னுதான் உசுரோட இருந்தன்….எல்லாம் முடிஞ்சி போச்சு….மூக்க அறுத்துப்புட்ட….

அந்த இரவுப் பொழுதில் அந்த வீடு மட்டும் உறக்கமின்றித் தவிக்கிறது. நீதாம்ப்பா வேணும் எனக்கு…வேறே யாரும் வேண்டாம்…எல்லாம் சரியாப் போச்சுப்பா…இப்ப என் மனசுல எதுவுமில்ல…இப்டியே வீட்டோட இருந்திடுறேன்… - கதறுகிறாள் பாக்கியம். நீ சொல்றபடி கேக்குறம்பா…நீ சொல்ற ஆளயே கட்டிக்கிறேன்…நம்ப ஆயாமேல சத்தியம். பாக்கியத்தின் அழுகை அவருக்குப் பொய் மாதிரித் தெரியவில்லை. ஜோசியக்காரன் சொன்னது உண்மையோ என்று சாமியம்மாவுக்குத் தோன்றுகிறது. கலங்கித் தெளியும்னானே….

நீ சொல்றது இனிமே நடக்காது தாயி….அஞ்சாறு வருசமா ஊரு ஒலகமே சிரிச்சுப் போச்சி. ஒருத்தனும் கட்ட மாட்டான். இது வீம்புக்குச் சூரிக்கத்திய முழுங்கிற சாதி. கட்டுறதுக்குக் கோமணம் இல்லன்னாலும் சாதிய வுட மாட்டானுக….இதிலியாச்சும் எம்பேச்சக் கேளு….விடிஞ்சா  ஊரு முகத்துல முழிக்கணும்…அந்தப் பயலுக்குத் தகவல் சொல்ல வழியிருக்கான்னு பாரு….

டே…அவ சொல்றதக் கேளு சாமி….இப்ப அவ பேசுறது நெசம்னு எம் மனசுல படுது. ஊரக் கூட்டிச் சொல்லிப்புடலாம். அபராதம் போட்டா கட்டிப்புடலாம். மூணு நாலு வருசம் போவட்டும். மத்தத அப்புறமா யோசிக்கலாம்….பிதற்றுகிறாள் தாய்.

நம்பப் பேச்சு ஊருல மேவாது… 

நீ உசுரோட இருக்கணுமின்னுதான் நான் நெருப்புல குதிக்கப் போறன். திரும்பியுமா நீ எனக்குப் புள்ளையா பொறக்கப்போற? நாளக்கி ஒனக்கொரு புள்ளே பொறந்தா அதெ நீ பத்தரமா வச்சிக்க. எங்கள மாதிரி நூறு ஆயிரம்பேர் மின்னாடி கையக் கட்டிட்டு நிக்கக் கூடாது….ஒரு சத்தியம்…நீயும் சாவக்கூடாது…நாங்களும் சாவ மாட்டோம்…இதான் சத்தியம்….

பழனியும் பாக்கியமும் ஒவ்வொரு அடியையும் நெருப்பிற்குள் வைத்து நடப்பதுபோல் பயத்துடனும், பதட்டத்துடனும் நடக்கிறார்கள். முந்திரிக்காட்டு வழியாகவே ஒரு மணிநேரத்துக்கும்மேல் அந்தக் குருட்டு இரவில் கடக்கிறார்கள். மங்கலம் பேட்டை ஏரிக்கரைக்கு வந்து மோட்டார் பைக்கோடு நின்ற பையனிடம் பழனி கேட்கிறார்.

பெரியசாமியோட பெரியப்பன் மவன் கனகராஜ். வவுத்தானோட அண்ணன் மவன். தொப்புளான்.

தொப்புளான் மவன் பெரிய பயகிட்ட புள்ளய ஒப்படைச்சிருக்கேன்.

இப்ப மணி நாலு. வண்டியிலியே நேராப் போயி விழுப்புரத்தில பஸ்ஸப் புடிச்சி ஏத்தி விட்டுடுவன்…அங்கயிருந்து மெட்ராசி  போவ மூணு மணி நேரம். ஏயி எட்டு மணிக்கெல்லாம் ஊட்டுக்குப போயிடலாம்….

சரிவண்டிய எடு…நீ ஏறு…பதனமா போவணும்… சட்டென்று இடுப்பில் கட்டியிருந்த அரைஞாண்  கொடியை அவிழ்த்துக் கொடுக்கிறார். பெத்தவன் மனசைப் பாருங்கள். அவருடைய மார்பில் சாய்ந்து குழந்தையாய் அழுகிறாள் பாக்கியம்.

வண்டியின் வெளிச்சம் மறையும்வரை அசையாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறார் பழனி.

காலையில் காட்டுக்குப் போனவர்கள் அவரின் சாவுச் செய்தி அறிகிறார்கள். மகளுக்குச் சொன்ன பாலிடால் மருந்து அவரைக் காவு வாங்குகிறது. நாய் சுற்றிச் சுற்றி வந்து காடே அதிரும்படி குரைத்துக் கொண்டிருக்கிறது.

என் குடி முழுவிப் போச்சே…. – கத்திக்கொண்டே காட்டுப் பக்கம் ஓட ஆரம்பிக்கிறாள் துளசி.

கனத்த மனசோடு இதை ஏன் படித்தோம் என்று வேதனை கொள்கிறது நம் மனம். சாதி வெறி ஆட்டிப் படைக்கும் சமூகத்தில் இப்படி எத்தனை எத்தனை விதமான நிகழ்வுகள்…?

பெத்த மனம் பித்து.   பழனி கதாபாத்திரம் மனிதத்தை உயர்த்திப் பிடிக்கிறது.  நம் அனைவரையும் ஏற்க வைக்கிறது.. ஐம்பது பக்கங்களே கொண்ட எழுத்தாளர் இமையத்தின் இந் நெடுங்கதை அவரது எழுத்துப் பயணத்தில் இன்னொரு முக்கிய  மைல்கல்.

                  ------------------------------------------------------------

 

     

 

                          

 

27 ஆகஸ்ட் 2020

கொக்குக்கு ஒண்ணே மதி...! - குறுங்கதைகள் - 6

    

     கொக்குக்கு ஒண்ணே மதி...!    -  குறுங்கதைகள் - 6


     அவர்கள் அவனை ஒதுக்கினார்கள். அமைதியாக விலகிக் கொண்டான் இவன். உங்களுக்குக் காரணம் தேவையில்லையா என்றார்கள். வேண்டாம் என்றான். ஏன்? என்று மறுகேள்வி போட்டார்கள். ஏற்கனவே நான் அதில் இல்லையே....என்றான்.                                                 பொய் சொல்லத் துணிந்து விட்டீர்கள்...                                  இல்லை...நிஜத்தைத்தான் சொல்கிறேன்...                                  கண்கூடாக வருடா வருடம் சந்தாக் கொடுத்தீர்களே..ரசீது இருக்கிறதே....அது சாட்சியில்லையா?                                        மறுக்கவில்லை. அது அமைப்பிற்குத்தானே...! இன்னொன்றுக்கல்லவே?     இரண்டும் ஒன்றுதான்....                                                  அது உங்களுக்கு....                                                    இல்லை...உங்களுக்கும்தான்....                                             நீங்களாக அப்படி நினைத்துக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய?    அமைதி காத்தால் என்ன பொருள்? சம்மதம் என்றுதானே...?                 அமைதியாக விலகியிருப்பதும் சம்மதமின்மையைக் காட்டும்.              அப்படியென்றால்?                                                     நான் ஆத்மார்த்தமாய் அதில் இல்லை என்று பொருள்.                  உங்களுக்கு சமூகப் பார்வை அற்று விட்டது..                            எது சமூகப் பார்வை?                                                  இதில் இருந்தால்தான் அது....                                             அமைப்பில் இருந்தாலோ அல்லது இஸத்தைப் பற்றிக் கொண்டிருந்தாலோதானா? மற்றவர்களுக்கெல்லாம் அது இல்லையா? என்ன அபத்தம் இது...!                                                         அவர்கள் அவனை முறைத்தார்கள்...!

                           ---------------------------------

 

குறுங்கதைகள் - 5 “முதுகு”

குறுங்கதைகள் - 5   “முதுகு”                                                     ---------------------

      ஸார்....லேசா கொஞ்சம் பென்ட் பண்ணி உட்காருங்க... மறைக்குது.....- சொன்னான் சரவணன்.                         

     படம் ஓடும் சத்தத்தில் காதில் விழுந்ததா தெரியவில்லை. வந்தது முதல் முன்னால் உட்கார்ந்திருக்கும் அவர் அப்படித்தான் இருக்கிறார். முதுகில் தப்பை வச்சுக் கட்டிய மாதிரி நிமிர்ந்து. இப்டி வளர்த்தியான ஆளுகல்லாம் ஒண்ணு கடைசி வரிசைல உட்காரணும்...இல்ல இடது ஓரம், வலது ஓரம்னு போயிடணும்...அப்பத்தான் பின்னால உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு மறைக்காது. இவரு இருக்கிற வளர்த்திக்கு நாலு வரிசைக்கு மறைப்பார் போல்ருக்கே? எரிச்சலாக இருந்தது இவனுக்கு.

     போதாக்குறைக்கு தலை “பம்“மென்றிருந்தது. முடி வெட்டி வருஷக் கணக்காகும் போல....- நினைத்துக் கொண்டான். தன்னை அட்ஜஸ்ட் செய்து கொண்டு படம் பார்க்க முனைந்தான். ஆனாலும் திரை முழுக்க பார்வையில் விழவில்லை. வசனங்களை வைத்து படத்தை அறிய முயற்சித்தான். இடது புறம் கொஞ்சம், அந்தாள் தலைக்கு மேலே கொஞ்சம், வலது புறம் கொஞ்சம்...இதுதான் தெரிந்தது. பல சமயங்களில் அது  வெட்ட வெளியாய் இருந்தது. மரமும், வானமும், வீடு உத்திரமும் காட்சிகளாய்ப்  பட்டன.

     படம் போட்டதிலிருந்து ரெண்டு மூணு முறை சொல்லி விட்டான். ஒரு தடவை மட்டும் லேசாய் அசைந்தது போலிருந்தது. அவ்வளவுதான். ஆஜானுபாகுவான ஆள். எந்திரிச்சு சண்டைக்கு வந்தான்னா? பொழுது போக்க ஒரு சினிமாவுக்கு வந்துட்டு இதெல்லாம் தேவையா?                                                   அப்படி இப்படி அசைந்து அசைந்தே நேரம் பூராவும் போனதுதான் மிச்சம். வேறு எங்கும் போய் உட்கார வழியில்லை. உறவுஸ் ஃபுல். வேண்டுமானால் வெளியேறும் கதவு பக்கத்தில் போய் நின்று கொண்டு பார்க்கலாம்...தியேட்டர் ஊழியன் போல...அது சாத்தியமா? எவ்வளவு நேரம் அப்படி நிற்பது? காசையும் கொடுத்துவிட்டு அப்படிப் போய் நிற்க என்ன தலைவிதியா?                                                    இந்த நினைப்பிலேயே படம் முடிந்து விட்டது. கதவு திறக்க கூட்டம் வெளியேற ஆரம்பித்தது.                                         வயிற்றெரிச்சலில் முன்னே போகும் அந்தாளை வெறித்தபடியே நடந்தான். ஆளும் மூஞ்சியும்....! கொஞ்சமாச்சும் அறிவு வேணாம்....பின்னாடி உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு மறைக்குமேன்னு...அறிவு கெட்ட முண்டம்....!                              முனகிக் கொண்டே வந்த இவனை பின்னால் கேட்ட அந்தக் குரல் தடுத்தது.                                                              தலையத் தலைய ஆட்டி ஆட்டியே படம் பார்க்க விடாமப் பண்ணிட்டான்யா இந்தாளு.....ஒரு நிலைல சீட்ல உட்காருராங்கிற?ஆட்டிக்கிட்டே இருக்கான்யா.... போறாம்பாரு....தட்டக்குச்சி கணக்கா.....? “பூ”ன்னு ஊதி விட்ரலாம் போல்ருக்கு....

     அவன் தன்னைத்தான் சொல்கிறான் என்பதை தட்டக்குச்சி சரவணன் உணர்ந்தான்.  

                           ---------------------------------

 

குறுங்கதைகள் - 4 = சட்டி சுட்டது

    

     சட்டி சுட்டது             


         
குறுங்கதைகள் - 4                       ------------------------

     ரஸ்வதி மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்தாள். அருகே சோகமே உருவாய் மாசிலாமணி அமர்ந்திருந்தார். இப்படிக் கண்ணே திறக்காமல் கிடக்கிறாளே என்றிருந்தது..  கொஞ்சம் நினைவு வரும் வேளையில் அதைச் சொல்லிவிட வேண்டும் என்று அவர் மனம் துடித்தது.

     சொல்லுவோமா அல்லது வி்ட்டுவிடுவோமா என்று இன்னொரு மனசு கேட்டது. கடைசி நேரத்தில் சொல்லி  மூச்சு சட்டென்று நின்று போனால்?  பிழைத்து எழுந்தால்தான் தேவலை என்று இப்போது அவர் மனசு சொல்லியது.  இன்னும் கொஞ்ச காலம் அவள் இருந்தால், என்றாவது ஒரு நாள் சாவகாசமாய்ச் சொல்லிக் கொள்ளலாமே.....! என்று நினைத்தார். கிளு கிளுப்பு இன்னும் அடங்கல உனக்கு, அதானே! தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்.            

     பையனும் மருமகப் பெண்ணும் ஊரிலிருந்து வந்து விட்டார்கள். வந்து ஒரு வாரம் ஆன பொழுதில் இன்னும் இழுத்துக் கொண்டிருக்கிறது இவளுக்கு.                                                   உங்கப்பாவுக்கு என்னதான் தெரியும்? சீரியஸ்னு சொல்லி இப்டி நம்மளையும் வரவழைச்சு உயிர வாங்குறாரே...? என்று அவள் கணவனிடம் பொறுமுவது கேட்டது. நீ வேணும்னா கிளம்பிப் போ...காரியம் முடிஞ்சிடுச்சின்னா திரும்ப வந்துக்கிடலாம்...என்று சமாதானம் சொன்னான் அவன்.

     பிறகு எங்க வர்றது....எல்லாத்தையும் நீங்களே இருந்துமுடிச்சிட்டு வர வேண்டிதான்....என்னாலெல்லாம்  முடியாது....என்றாள் அவள்.

     காதலித்தவள் வேறொருவனைக் கட்டிக் கொண்டாள் என்று மனமுடைந்திருந்த பையனுக்கு, இவர்தான் இந்தப் பெண்ணைப் பார்த்து முடித்து வைத்தார். அதுவும் இப்படிக் கிடந்து படுத்துகிறதே...!    

     இதெல்லாம் சரஸ்வதி காதில் விழாமல் இருப்பதே மேல். விழுந்தால் அவள் உயிர் உடனே போய் விடும், சத்தியம். மகன் மீது அவ்வளவு பாசம் அவளுக்கு. அவன் மனைவி இப்படிக் கோணலாய் இருக்கிறாளே என்று தாங்கமாட்டாமல் மூச்சை நிச்சயம் நிறுத்திக் கொள்வாள்.

     சரசு...சரசு.....அவள் கண்கள் மெல்ல விலகுவதைக் கண்டார் இவர். என்னை மன்னிச்சிடு சரசு.....மன்னிச்சிடு....என்று அவள் முகத்துக்கருகில் சென்று அழுதார். தெ...தெ.....தெ.......என்று ஏதோ சொல்வது போல் உதடுகள் துடித்தன. அப்போதும் அதைச் சத்தமாய்ச் சொல்லக் கூச்சமாய் இருந்தது மாசிலாமணிக்கு. வீட்டில் வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாதே என்று பயந்தார். தெ...தெ.....தெழியும் எனக்கு.......என்று குழன்றாள் சரஸ்வதி. கண்களில் கடைசியாய் நீர் வழிந்து உலர்ந்தது. மூச்சு நின்று போனது.                 சரசூ...சரசூ...போயிட்டியா சரசூ.....இந்தப் பாவி கூட இருக்கப் பிடிக்காமப் போயிட்டியா.....? உடலை அணைத்துக் கதறினார் மாசிலாமணி.                      பையனும், மருமகளும் பதறியடித்து வந்து நின்றனர். கூடவே அந்த இன்னொருத்தியும் அங்கிருந்தாள்.

     வெளியே போடீ முண்ட...  - வெறி பிடித்தவர் போல் கத்தினார் மாசிலாமணி. நின்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். வேலைக்காரி ரஞ்சிதம் வாசலை நோக்கி நகர்ந்தாள்.

                     --------------------------------------

 

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...