26 மார்ச் 2012

,”கீரை வாங்கலியோ…கீராய்…!” சிறுகதை


 

நீங்களே சொல்லிடுங்கோ… என்றாள் சாந்தி.

சொல்லிவிட்டு வாசலுக்கு மறைவாக அந்த நாற்காலியை உள் பக்கமாய் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.

அவருக்கு ரெகுலர் கஸ்டமர் நீ….இப்போ தீடீர்னு என்னை சொல்லச் சொன்னா எப்டி? நீயே சொல்லிடு….அதுதான் சரி…. – நாதன் அவன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

சும்மாச் சொல்லுங்க ஒரு நாளைக்கு…பரவாயில்லே…

உறாங்…அதெப்படீ? நா அவர்ட்ட இதுநாள் வரை பேசினது கூட இல்லை…முத முதல்ல போய் அவர்ட்ட இதைச் சொல்லச் சொல்றியா? என்னால முடியாது…

தெரு ஆரம்பத்தில் அந்தக் கீரைக்காரர் நுழையும் சத்தம். சரியாகக் காலை ஏழு இருபதுக்கு கன கச்சிதமாக அந்தக் குரல்.

கீரை….கீராய்….அரைக்கீரை, தண்டாங்கீரை, முருங்கை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, பாலாக்கீரை, மணத்தக்காளீ… …சத்தம் தெருவைக் கலக்குகிறது.

வலது புறம் நான்காவது வீடாக இருக்கும் எங்களுக்கு உடனே மனம் பரபரக்கும்.

ஏய், அவர் வந்தாச்சு…ஃபிரிட்ஜ்ல கீரை இருக்கா இல்ல வாங்கணுமா? பழசு இருந்தால் அதுபோக எவ்வளவு வேண்டும் என்றோ அல்லது புதிதாக இவ்வளவு என்றோ வாங்கும் நேரம் அந்தச் சில கணங்கள்.

இன்ன கீரை என்பதை முடிவு செய்வது அவள்தான். வழக்கமாய் வாங்குவதும் அவளேதான். நான் ஒரு நாள் கூடப் போனதில்லை. ஞாபகப்படுத்துவேன். அத்தோடு சரி. தவறாமல் சமையலைக் கவனிக்கும் அவளுக்குத்தானே உரிமை எது வேண்டும், வேண்டாம் என்பதை முடிவு செய்ய?

கடமையை ஒழுங்காக நிறைவேற்றுவோருக்குத்தான் உரிமையும் தானாகவே வந்து விடுகிறது. மற்றவர் அத்தனை சுலபமாக அந்த வட்டத்துக்குள் நுழைந்து விட முடியுமா?

அந்தச் சில நிமிடங்கள் சற்றுப் பதட்டம்தான். ஆனாலும் அவள் போய் வாங்கினால்தான் திருப்தி. பார்த்துப் பார்த்து, திருப்பித் திருப்பி, இலை இலையாகப் பிரித்துப் பிரித்து, புழு, பூச்சி….அப்படி என்னதான் பாதகம் இருக்குமோ அந்த வஸ்துவில். அவரும்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறாரே? இவளின் அலசலை ஒருநாளும் அவர் குறை சொன்னதில்லை.

எப்டி வேணாலும் பார்த்துக்குங்க….கட்டப் பிரிச்சுக் கூடப் பாருங்க மாமி….அதெல்லாம் நம்ம சரக்கு படு சுத்தமாக்கும்….தோட்டத்துல பறிச்ச மேனிக்கு அப்டியே கழுவிக் கொண்டாரேன்….பார்த்தீங்கள்ல பளபளப்பை…..? நீங்க எதுவும் நினைக்க வேணாம்…நா குடுக்கிறத அப்டியே எடுத்திட்டுப் போங்க….. –சொல்லத்தான் செய்கிறார். இவள் கேட்டால்தானே?

நீங்க, உங்கபாட்டுக்குச் சொல்றதச் சொல்லுங்க…நான் எம்பாட்டுக்குப் பார்க்கிறதப் பார்க்கிறேன்….எதுல பூச்சியிருக்கும், பொட்டிருக்கும்னு எனக்குத்தானே தெரியும்….என்று வாயால் சொல்லாவிட்டாலும் செயலால் காண்பித்து விடுவாள்.

இவள் புரட்டும் புரட்டலில் இன்னும் ரெண்டு வீட்டுக்குப் போட்டு விட்டு வந்துவிடலாம் என்றுதான் அவருக்குத் தோன்றும். அந்த இடைவெளியில் வேறு ஏதாகிலும் ஆகிவிட்டால்? மாமியின் வாடிக்கையை விட மனசில்லைதான். சற்றுக் கோபப்பட்டு விட்டாலும், அது விட்டுப் போக வாய்ப்புள்ளதே…!

இப்படி விடிகாலையில் பால்காரரின் குரலையும், கீரைக்காரரின் சத்தத்தையும், பேப்பர் போடும் பையனின் லாவகத்தையும், பூ கொண்டு போகும் பெண்ணின் மென் குரலையும், கேட்கவும், காணவும் கோடி கொடுத்திருக்க வேண்டுமய்யா…. இப்படியான சூழல்களெல்லாம் மெல்ல மெல்ல மறைந்து வரும் காலமாயிற்றே. மனசு ஏங்கவில்லையா?

அதோ வருகிறதே ஒரு பசு மாடு…அது எதற்கு இத்தனை கருத்தாய் நடைபோட்டு வருகிறது என்று நினைக்கிறீர்கள்? குறிப்பாய் அந்த இடத்தை மட்டும் ஒரே பார்வையாய்ப் பார்த்துக் கொண்டு நடக்கிறது பாருங்கள்….என்னவாய் இருக்கும்? அட, நேரே அந்த எதிர்வீட்டிற்குச் சென்று அங்கு வாசலில் வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் வாயை நுழைக்கிறதே…?

அது என்னங்கம்மா….?

சாதம் வடிப்போமுல்ல…அந்தக் கஞ்சி…...

அது அப்படிக் குடிக்கையில் அந்த அம்மாள் அதன் நெற்றியைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் காட்சி. ஆஉறா…..என்ன அற்புதமான தருணம்…! மனிதர்களின் கலாச்சார ரீதியான நம்பிக்கைகள்தான் எத்தனை அழகானவை…! ஒழுக்கம், கட்டுப்பாட்டின் அடிப்படையிலான அவைகள் இந்த வாழ்வின் எத்தனை ஆதார சுருதியாகத் திகழ்கின்றன?

பார்த்தீர்களா…கீரைக்காரரைப் பற்றிச் சொல்ல வந்த இடத்தில் கவனம் அதற்குள் இடம் மாறிவிட்டது. அன்றாடப் பொழுதுகளை இம்மாதிரியான காட்சிகள் இதமாக்குகின்றன அல்லவா? பிறகு எப்படி அவைகளைப் புறக்கணிக்க முடியும்? இருக்கும் பரபரப்பில் யார் இதையெல்லாம் கவனிக்கிறார்கள்? பொழுது விடிந்ததும் பாடு ஆரம்பித்து விடுகிறதே…! சாவகாசமாக இதை ரசிக்க யாருக்கு நேரம்?

தெருவுக்குள் நுழைந்ததும், பக்கத்து வீடுதான் என்றாலும், எடுத்த எடுப்பிலேயே மாமீஈஈஈஈஈஈ…கீரை….என்று சத்தம் கொடுத்து விடுகிறாரோ என்றுதான் தோன்றும். மாமியை அழைக்கும் அழைப்பிலே மற்ற வீட்டுக்காரர்கள் எல்லாம் விழித்துக் கொண்டு ஓடி வந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையாய் இருக்கலாம்.

அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. இவள் தேடித் தேடி வாங்கும் கீரைகளை மற்ற யாரும் வாங்குவதாகவே இல்லை. வாங்குவதென்ன…கேட்பதாகவே தெரியவில்லையே…?

சக்ரவர்த்தினி கொண்டு வாங்களேன்….

அதென்ன மாமி…? – அவருக்கே தெரியவில்லை. அவர் வியாபாரத்தில் அதுநாள் வரை அவர் கண்டதில்லை போலும்….

முகத்தில் அத்தனை தாழ்வுணர்ச்சி. சே…! மாமி சொல்ற கீரை நமக்குத் தெரியாமப் போயிடிச்சே…! என்னா பொழப்புப் பார்த்தோம் இத்தனை நாளா? வாடிக்கையின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற உத்வேகம்….

ஊசி ஊசியா பெரிய பெரிய இலையா இருக்கும்…சென்ட்ரல் மார்க்கெட்டுக்கு வரும்….வாங்கிட்டு வர்றீங்களா? பணம் தரட்டுமா?

பணம் கெடக்கட்டும் மாமி…. காசென்ன ஓடியா போகுது…நாளைக்குக் கொண்டாரேன் பாருங்க… - சவாலாய் ஏற்றுக்கொண்டுதான் சென்றார் கீரைக்காரர்.

அட, கர்ம சிரத்தையாய் வாங்கி வந்து விட்டாரய்யா…..!

மாமீ….இந்தாங்க பிடிங்க…நீங்க கேட்ட சக்ரவர்த்தி…..

சக்ரவர்த்தியில்லே….சக்ரவர்த்தினின்னு சொல்லுங்கோ…..

அது ஏதோ ஒரு தீனி..…இந்தாங்க…இதானா பாருங்க….தேடிக் களைச்சிட்டேன் போங்க….

சாந்தியின் முகத்தில் பரவிய சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அடடா…! இப்படியுமா சொத்து கைக்கு வந்து சேரும்…? பூஜா ரூமில் வைத்து பூஜையே செய்தாலும் போயிற்று…

கையில் இருந்த நோட்டை அவரிடம் கொடுக்க….

மாமி…பாக்கீ….

இருக்கட்டும் வச்சிக்குங்கோ….அலைஞ்சு வாங்கிண்டு வந்திருக்கேள்…! காசா பெரிசு….மனுஷாதான் முக்கியம்…..ஷீகர் இருக்கிறவாளுக்கு அத்தனை நல்லதாக்கும்….தெரிஞ்சிக்குங்கோ….

.சக்கரை வியாதியா மாமீ….அது நமக்கும் இருக்குதாம்…டாக்டரு சொல்றாரு…..

ஓடி ஓடி உழைக்கிறேள்….உங்களுக்கெதுக்கு அது வருது….அண்டாதாக்கும்….நன்னா பார்த்துக்குங்கோ….

அவரின் வாடிக்கை மற்றவர்களுக்கு எப்படியோ…சாந்திக்குப் பெரிய ஆதரவு. நாளை வரச்சே இதக் கொண்டு வாங்கோ…அதக் கொண்டு வாங்கோ என்றெல்லாம் அவள் விடாமல் சொல்கையில் அவரும் அசந்ததேயில்லை. சலித்ததேயில்லை. ஒரு நாளும் முகம் சுண்டி நான் பார்த்ததில்லை. அட்டா…மனிதர்கள்தான் எத்தனை நல்லவர்கள்? அவர்கள் மனதில் ஆழப் பதிந்திருக்கும் நன்னெறிகள்தான் எத்தனையெத்தனை?

பொன்னாங்கண்ணிலயே ரெண்டு வகை இருக்கு….அதுல பச்சைப் பொன்னாங்கண்ணிதான் நல்லது…கண்ணுக்கு அம்புட்டு நல்லதாக்கும்...அது கிடைக்காதா…?

கொண்டாரேன்….உங்களுக்கில்லாததா…? நாளைக்குக் கொண்டாரட்டுமா?

நாளைக்கு வேண்டாம்…அமாவாசை……நாளைக்கழிச்சி ஞாயிறும் போகட்டும்….அப்புறம் கொண்டு வாங்கோ….

மனசுக்குள் முழுக்க முழுக்க மாமிதான் அவருக்கு…அத்தனை மரியாதையோ….கரிசனையோ….சொன்னதெல்லாம் கொண்டு வந்து கொடுத்துத்தான் இருக்கிறார்.

ஆனால் ஒன்று….என்றைக்கும் பேரமே பேசியதில்லை சாந்தி. கீரையில் என்ன பேரம் வேண்டிக் கிடக்கிறது?

பாவம்…தவறாம வந்து கொடுக்கிறார்….விடாம வர்றார். இல்லன்னா தேடித் தேடிப் போயி எத்தனை பேர் வாங்கப் போறா கீரையை…? எல்லாருக்கும் வீட்டு வாசல்லயே கிடைக்கிறது…

எவ்வளவு?

பதினைஞ்சு மாமி…..பன்னெண்டு மாமி…..எட்டு மாமி….

கட்டுக்குத் தகுந்தாற்போல் அவர் சொல்லும் காசை மறு பேச்சில்லாமல் நீட்டி விடுவாள் சாந்தி.

இப்டிக் கொண்டு வர்றதே பெரிசு…இதுல பேரம் வேறையாக்கும்….

நீ இப்டிச் சொல்றே….எதிர் வீடு…பக்கத்து வீடெல்லாம் பார்த்திருக்கியோ…? ஒரு நாளாவது ஒண்ணு சொல்லாமக் காசு கொடுத்ததில்லே யாரும்… கீரை ரொம்பக் கம்மிம்பாங்க….இல்ல விலை ஜாஸ்திம்பாங்க…

நமக்கென்ன வந்துது….நா அதெல்லாம் பேச மாட்டேன்….பாவம் அவர்…வயசான மனுஷன்….அலைஞ்சு திரிஞ்சு விக்கிறார்…..இந்த வயசுல இப்டி விடாம உழைக்கிறாரே….

சாந்தியின் கணிப்பு ரொம்பவும் நியாயமானதுதான். இதே கீரையை தண்ணீரில் அலம்பி, பிளாஸ்டிக் பைக்குள் போட்டு, ஏ.ஸி. ரூமில் பளீர் வெளிச்சத்தில் வைத்திருக்கிறானே….அங்கே போய் வாயைத் திறந்து விலை கேட்டுப் பார்க்க வேண்டியதுதானே….முதலில் விலை கேட்க வாய் வருமா? .அங்கே உள்ளே நுழைந்து ஒரே ஒரு பொருளையேனும் வாங்கிக் கொண்டு, அப்படி எல்லோரும் பார்க்க அந்த விற்பனைக் காட்சிக் கூடத்திற்குள்ளிருந்து வெளியே வருவதுவே பெருமையாயிற்றே என்று எத்தனை பேர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்?

அப்படி ஓர் உலகம் அங்கே சுழல்கிறதென்றால் இங்கே இந்த உலகத்தைக் கட்டிக் காப்பது யார்? நம்மை மாதிரி மத்திய தரத்து ஆட்களே கை விட்டால் அப்புறம் இவர்கள் எங்குதான் போவார்கள்? எப்படித்தான் பிழைப்பு நடத்துவார்கள்? வாழ்க்கை எனும் ஓடம் பிறகு இவர்களை எங்கு கொண்டு போய் நிறுத்தும்? யோசிக்க வேண்டாமா?

மாமீ…கீரை…..

வாசலில் அந்தச் சத்தம். பின்னால் கேரியரில் சாக்கில் கட்டிய கீரையுடன் தொப்பென்று கீழே குதிப்பார். குதித்த வேகத்தில் வண்டி சாய்ந்து விடக் கூடாதே என்று தாங்கிப் பிடிப்பார்.

வண்டி சாய்ந்தாலும் பரவாயில்லை. கீரைக் கட்டுகள் மண்ணில் விழுந்து விடக் கூடாது.

யே…யே…யே….பார்த்து…பார்த்து….பார்த்து… எத்தனையோ நாள் இவன் கத்தியிருக்கிறான். கேட்டைத் திறந்து கொண்டு தாங்கிப் பிடிக்க ஓடியிருக்கிறான்….

ஆனால் அதற்குள் அவர் சமாளித்து நின்று விடுவார். அது தெரியவில்லையென்றால் பிறகு என்னதான் பயன்? மொத்தக் கீரையும் விற்றுத் தீர்க்க, எத்தனையிடத்தில் ஏறி இறங்க வேண்டும்? சைக்கிளில் மூட்டையை ஏற்றி அலைந்து திரிந்துதான் விற்றாக வேண்டும் எனும்போதே மனதாலும், உடலாலும் தயாராகித்தானே கிளம்புவார். உழைப்பு என்பதின் உன்னதமான தத்துவம் அதுதானே?

கீரை….கீராய்….

வாசலில் மீண்டும் சத்தம்……

போங்க…போங்க…போய் சொல்லிடுங்க….. – மறைவிலிருந்தவாறே சைகை காண்பிக்கிறாள் சாந்தி.

இதென்ன, என்றைக்குமில்லாத சங்கடம்…? இவள் போய்ச் சொல்ல வேண்டியதுதானே…?

காதில் விழவில்லையோ என்று மணிச் சத்தம் வேறு.

இன்று திண்ணைத் திரைச் சீலையை வேறு போட்டிருக்கிறாள்…..அதில் மகாத்மாகாந்தி சிரித்தவாறே கம்பூன்றி வேகமாய் நடந்து கொண்டிருக்கிறார். இடுப்பில் கட்டிய வேட்டியுடன் ஒல்லியான அந்த வெற்றுடம்போடு அந்த நடையில்தான் என்ன ஒரு வேகம்? காந்தி படத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு இதென்ன விளையாட்டு?

என்றைக்கும் இவள்தானே போய் வாங்குவாள். இவள்தானே பதில் சொல்வாள். இன்று மட்டும் என்ன என்னை விரட்டுகிறாள்?

போங்க…பாவம்…நிக்கிறாருல்ல….ரெண்டு நாளைக்கு வேண்டாம்னு சொல்லிடுங்க….அப்புறம் ப்ரெஷ்ஷா வாங்கிக்கலாம்.

ஏன், நீதான் போய்ச் சொல்லேன். இதயேன் என்னைச் சொல்லச் சொல்றே?

எனக்குக் கஷ்டமாயிருக்கு…அவர் முகத்தைப் பார்த்துச் சொல்ல…ஒரு நாள் விடாமத் தெனம் வாங்குறது…இன்னைக்கு வேண்டாம்னா?….நா மாட்டேன்…. அடுப்படில வேலையாயிருக்கேன்….நீங்களே சொல்லிடுங்க….

சரிதான்…இதுக்கு நாந்தான் கிடைச்சனா…? வேண்டிதான்…

இதுலென்ன கஷ்டம் உங்களுக்கு…நீங்க சொன்னா ஒண்ணும் நினைச்சுக்க மாட்டார் அவர்…..போயிடுவார்….போய்ச் சொல்லுங்க….போங்க….

மாமீஈஈஈஈஈஈஈஈஈ……..

திரையை விலக்கிக் கொண்டு வெளிப் போந்தேன்.

…..இன்னும் ரெண்டு நாளைக்கு வேண்டாங்க…..பிறகு வாங்கிக்கிடுவோம்……

வேணாமா….? மாமி கேட்டாங்களேன்னு முடக்காத்தான் கீரை கொண்டு வந்திருக்கேன் சார்……

என்னது முடக்காத்தானா? அப்டி ஒரு கீரையா இருக்கு?

இருக்குல்ல…..கீரையை நல்லா ஆய்ஞ்சு, மிக்சில போட்டு அரைச்சு, மாவோட கலந்து தோசை சுட்டுச் சாப்பிட்டுப் பாருங்க…..அப்பத் தெரியும்….

அப்டியா? எதுவானாலும் சரி…ரெண்டு நாளைக்குக் கிடையாது….வீட்டுல விசேஷம்….பிறகு வாங்க…..

கீரைக்காரர் இவனையே பார்த்தார். முகத்தில் இன்னும் முழு நம்பிக்கை வந்தமாதிரித் தெரியவில்லை. இத்தனை கட்டன்ரைட்டாகப் பேசுறாரே சாரு…?

மாமி இல்லீங்களா……?

என்னய்யா அநியாயம்? மாமி சொன்னாத்தான் நகருவையா? அதென்ன இத்தனை தெளிவான கேள்வி…?

. லேசான கோபம் மனதில்.

என் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். நம்பிக்கை இல்லை போலும்.

என்ன நினைத்தாரோ…..சரி….வாரன் சார்……

கீரையைக் கொடுத்து விட்டு வழக்கமாய்க் குதித்து வண்டியில் ஏறும் உற்சாகமில்லை. மெல்ல உருட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார். கொஞ்ச தூரம் கடப்பதற்குள் மாமி கூப்பிட்டாலும் கூப்பிடலாம் என்கிற எதிர்பார்ப்போ என்னவோ….அவர்களுக்குள் அப்படி ஒரு அன்டர்ஸ்டான்டிங்….வியாபாரிக்கும் நுகர்வோருக்குமான புரிதல்.

சே…! அந்த முகம்தான் ஏன் இப்படிச் சுண்டிச் சுருங்கிப் போய்விட்டது அவருக்கு? இந்த “வேண்டாம்“ பதிலை அவளே வந்து சொல்லியிருக்கக் கூடாதா? இந்தப் பாவத்தை வேறு நான் கட்டிக் கொள்ள வேண்டுமா?

காரணத்தைச் சொல்லிச் சொல்ல வேண்டியதுதானே? அதற்கு ஏன் தயக்கம்? கேட்டு விட்டிருந்த கீரையை ஒருவேளை கொண்டுவந்து நின்றாலும் போயிற்று என்கிற சங்கடம்தானா அவளை இப்படி உள்ளே தள்ளிற்று? ஃப்ரெஷ்ஷா வாங்கிப்போம்…ஃப்ரெஷ்ஷா வாங்கிப்போம் என்பாளே அதன் எதிரொலியா? என்னய்யா தர்ம சங்கடம் இது? முடக்காத்தானை வாங்காமல் முடங்கி விட்டாளே உள்ளேயே?

சே…பாழாய்ப் போன இந்தத் தாத்தா பாட்டி திவசம் இன்னும் நாலு நாள் கழித்து வந்திருக்கக் கூடாதா?

(ஏண்டா, நீங்க கீரை சாப்பிடணும்ங்கிறதுக்காக நாங்க செத்த நாளைத் தள்ளிப் போட முடியுமா? முட்டாப் பயலே…!}

வேண்டாத மனச் சங்கடத்தோடே உள்ளே நுழைகிறேன்.

அடுப்படியிலிருந்து ஜன்னல் வழியே சற்றே மறைந்து நின்ற போக்கில், அந்தக் கீரைக்காரர் செல்வதையே வைத்த கண் வாங்காமல், சோபையின்றி, அசையாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் சாந்தி….!

-----------------------------------------------(திண்ணை இணைய இதழ்-25.03.2012)

“தருணம்” சிறுகதை


 

தற்கும் இருக்கட்டுமென்று அந்த சூரிக் கத்தியை உள் டவுசருக்குள் ஒளித்து வைத்துக் கொண்டான் திப்பிலி. வேட்டி டப்பாக்கட்டுக்கும் மீறி மேலே அது துருத்திக் கொண்டு தெரிகிறதா என்று கவனமாய்ப் பார்த்தான்.

மெயின் ரோடிலிருந்து விலகிச் செல்லும் மண் சாலையிலிருந்து குறைந்தது ஐநூறடி தூரத்தில் உள் வாங்கி இருந்தது அந்த மயானம். அடிக்கும் காற்றில் புகை பூராவும் மேலும் உள் வாங்கிப் பறந்து சற்றுத் தள்ளியிருந்த புது நகர் வீடுகளை நோக்கி வேகமாய்ச் சென்று கொண்டிருந்தது. நுழை வாயில் மெயின் ரோடுப் பகுதியில் பொட்டுப் புகை போகாது. நிமிடத்திற்கு நிமிடம் இடை விடாது சரேல் சரேல் எனப் பறந்து கொண்டிருக்கும் பல ரக வாகனங்கள் இந்த மயானத்தினால் எந்த இடையூறுக்கும் ஆளானதாகத் தெரியவில்லை. சதா நெருப்புக் கோளங்களாய் தபதபவென எரிந்து கொண்டிருக்கும் பிணங்கள், வண்டியில் செல்வோரின் கவனத்தைக் ஈர்க்காது தப்பியதில்லை. ஒரு முறையேனும் தலை இப்படித் திரும்பித்தான் மீளும். வேறு வழியில்லை. உயிருள்ள மனிதனுக்கு எரியும் பிணத்தைப் பார்ப்பதில் ஒரு ஆறுதல். அந்த ஒரு கணம் விபத்திற்கு வாய்ப்பானது என்பதில் சந்தேகமேயில்லை.

இருக்கும் ஏழெட்டுக் கொட்டகைக்கு, நாளைக்குக் குறைந்தது இருபது சடலங்களாவது வந்து கொண்டிருந்தன. கிழக் கோடியில் இருந்த கடைசிக் கொட்டகைக்குதான் திப்பிலி பொறுப்பு. வந்த கொஞ்ச நாளிலேயே அந்த இடம் அவனுக்குக் கிடைத்தது. பிரச்னையானத நமக்குத் தள்ளிட்டாங்ஞப்பா…என்றுதான் எண்ணினான் ஆரம்பத்தில். அதுவே அவனின் நிரந்தரக் குத்தகையாகிப் போனது. போஸ்ட்மார்ட்டம் ஆன பாடிகள்தான் வரும் அங்கே. எல்லா ஒப்பாரியும் மார்ச்சுவரியிலேயே ஓய்ந்த நிலையில், அதற்கு மேல் பொறுமை இல்லாமல் மனம் விடுபட்ட நிலையில் கொண்டு வந்து கிடத்தி விட்டுப் போய் விடுவார்கள். உடனே வெளியேறி விட வேண்டும் என்ற அவசரத்தில் பறப்பார்கள். பாடியை எரிச்சிக்கப்பா…இந்தா பிடி என்று விட்டெறிந்து விட்டுப் போனவர்கள்தான் அதிகம். அந்த அளவுக்கு வெறுப்பாகி விலகியவர்களும் சில நாள் இடைவெளியில் வந்து படுத்திருப்பதைக் கண்டிருக்கிறான். காணும் காட்சியெல்லாம் கோரம்தான். மனசு மரத்துப் போயாயிற்று. ஆடி அடங்கும் வாழ்க்கை.

பீஸ் பீஸாக்கிப் பேருக்குத் தைத்து ஒன்றாகச் சேர்த்து வைத்துக் கட்டி, குப்பலாய்ப் போட்டுவிட்டுப் போகும் பிணங்களை அப்படியே தூக்கி சிதைக்குக் கிடாசுவதுதான். அதிலென்ன விரலிலும், கழுத்திலும், காதிலும் ஏதாச்சும் தேறுமா என்ன? பழக்க தோஷம் விடாதுதான். கையை உள்ளே விட்டு ஒரு தடவு தடவாமல் விட்டதில்லை. அறுத்த இடத்தைத் தாண்டியா இங்கு தப்பி வரும்? உருவும் காடாத் துணி கூட ஒரே துணியாய்க் கிடைக்காது. “ச்சீ…! இந்தச் சீண்ட்ரத்த நா வீட்டுக்குக் கொண்டு போனேன்னா வீடு வௌங்கினாப்லதான்…“ குச்சியால் தூக்கி நெருப்புக்குள் வீசி விடுவான் உடனே.

பிடிக்கலேன்னா சொல்லு மாப்ள… கொட்டாய் மாறிக்கிடுவோம்…என்றான் பிச்சாண்டி. அவனுக்கு எப்பொழுதுமே இங்கே ஒரு கண்.

திப்பிலிக்கு இதில் நிறைய வருவாய் இருப்பதாக நினைப்பு. எப்படியாவது தான் அதைக் கைப்பற்றி விட வேண்டும். அதற்காக அவனோடு சண்டை போடத் தயாரில்லைதான். காலத்துக்கும் இருக்க வேண்டிய இடம். அவன் தயவு என்றைக்கானாலும் வேண்டும். தன்னை அவன் எதற்கும் நாடியதில்லை. பிச்சாண்டியின் மனதில் அந்தப் புள்ளி விழுந்துதான் இருந்தது. திப்பிலியை நகர்த்த என்ன வழி? சதா அவன் சிந்தனை இதுதான். சமயங்களில் உள்ளே நுழையும் போலீஸ் வேனை ஓடிப் போய் வரவேற்றான் பிச்சாண்டி. எதுக்கும் தேவைப்பட்டுச்சுன்னா? என்று அவன் மனசு சொல்லியது. போலீஸ், எஸ்.ஐ.களை வலியப் பழகி வைத்துக் கொண்டான். அவ்வப்போது அவன் கையில் அவர்களும் ஏதோ திணிப்பதாய்த் தோன்றியது. மிரட்டல்தான போடுவாங்ஞ…எதுக்கு இப்டி? போவட்டும் நம்மை நச்சரிக்காமல் இருந்தால் சரி என்று விட்டு விடுவான் திப்பிலி. போலீஸ் சகவாசம் அவனைப் பொறுத்தவரை போலி சகவாசம்.

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.. அதான் எல்லாக் காசையும் பாடி மார்ச்சுவரிக்குப் போகைலயே பிடுங்கிடுறானுங்களே…இங்க வந்து சும்மா கழுகுக்குப் போடுற மாதிரி நெருப்புக்கு எறிஞ்சிட்டுப் போற வேல தான…உள்ள காசத் தர்றதுக்கே அழறானுங்க…ஒருத்தனாச்சும் என்னைக்காவது மனசாரக் கொடுத்திருப்பானா? என்று சொல்லிக் கொண்டான். அவன் பேச்சில் நிறைய உண்மையும் இருந்தது. வாசலிலேயே எல்லாமும் முடிந்து போகும்தான். அடையாளமற்றுப் போக வேண்டும் என்றே இவனிடம் வருவார்கள். பார்த்துக்க…என்று மிரட்டல் கலந்து சொல்லிவிட்டுக் கலைவார்கள்.

எத்தனையோ கொலைக் கேசுகள் சூசைட் கேசுகளாக வந்திருக்கின்றன அங்கே. குய்யோ முறையோ என, அடிப் பாவி மவளே இப்டிப் பண்ணிட்டியேடீ…என்று நெஞ்சிலடித்துக் கதறிக் கொண்டு ஓடி வருவார்கள். வாசலோடு தள்ளி நிறுத்தப் படுவார்கள். தத்ரூபமாக இருக்கும் நடிப்பு. செட்டப் ஆள்கள்தான் அதில். வந்தவுடனேயே தெரிந்து போகும். அன்றைக்கெல்லாம் இயல்பாய் சற்றுத் தாமதப் படுத்துவான். சட்டுப்புட்டுன்னு தீய மூட்டிட்டு பெறவு தோண்டு தோண்டுங்கிறதுக்கா…? அவன் அனுபவத்தில் வில்லங்கங்கள் நிறையப் பார்த்திருக்கிறான். அதற்கான நிதானமே படிப்படியாகத்தான் அவனுக்கே வந்தது. இந்த பாடி போய் அடுத்த பாடிக்கு உடனே வருவார்கள்.

அடங் ஙோத்தா…என்னா ஆட்டம் போடுறா பாருய்யா….இப்பத்தானடி இங்க ஒண்ணுக்குப் பொளந்திட்டு உடியாந்த…அதுக்குள்ளேயும் இன்னொண்ணா…ஏண்டீ…காசுக்காக நாள் பூராவும் நெஞ்சிலடிச்சிக்கிட்டு ஓலமிட்டுத் திரிவியா? பன்னாரிக் கழுத….மோரையப் பாரு…..- பச்சையாய்க் கேட்பான் திப்பிலி. எதுக்கும் அசராது அந்தக் கூட்டம்.

நீ எரிச்சிப் பொழக்கிற…நா அழுது பொழைக்கிறேன்…? படுத்துப் பொழைக்கிறதுக்கு இது எம்புட்டோ பரவால்ல போடா….

அட்டீ கழுத….செருப்பால அடி…..ஏன் அதையும்தான் செய்து பார்க்கிறது? யாரு தடுக்கப் போறா…? பிடிச்சா வச்சிக்கிட்டிருக்காக உன்ன…?

….ஆளக் காமி…பெறவு பார்ப்போம்…..

ஏண்டீ உனக்கு ரோசனை சொன்னா நீ என்னை மாமாப்பய ஆக்குறியா? சிர்ர்றுக்கி மவளே….இரு உன்ன வசமா ஒரு நாளைக்கு வச்சிக்கிறேன்…நானே வந்து படுத்தாலும் படுப்பேன்டியோவ்…தயாரா இரு….சுத்தமா வச்சிக்க… நாத்தம் பிடிச்சித் திரிஞ்சே….கத்திய செருகிட்டுப் போயிடுவேன் ஆம்மா…..

நீ வா முதல்ல…அப்புறம் பார்ப்போம் எதச் செருகறேன்னு…?

வக்காள்ளி, பேச்சப்பாரு…தூஊஊஊஊ….பொளந்த கட்டைங்ஞ….

எல்லா ஆட்டமும் ஓய்ந்த இடத்தில் இந்த ஆட்டம் என்று வாய் பொத்திக் கிடப்பான். எதையும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டான். பேசும் ஜாடையில் தனக்கு எல்லாம் தெரியும் என்பதாக வந்திருப்பவர்களுக்குக் காட்டிக் கொடுத்து விடுவான். பெரிய எம்டனா இருப்பான் போலிருக்கே …எதுக்கு வம்பு? என்று படு ரகசியமாய்ப் பணத்தைத் திணித்து விட்டுப் போய்விடுவார்கள்.

நமக்கு என்னாங்க வந்திச்சு? பாடி வந்திச்சா, கட்டையக் கிடாசினமா? களிமண்ணப் பூசினமான்னு போயிட்டேயிருப்பன் ….வர்றதக் கவனிக்கவே எனக்கு நேரம் பத்தல…நாள் பூரா நெருப்புல கெடந்து சாகுறோம். இதுல நா என்னாத்தங்க பார்க்கப் போறேன்…ஆம்பளையா, பொம்பளையாங்கிறது கூட எனக்குத் தெரியாதுங்க சாமி…வெறும் பொணம்…அம்புடுதேன்….சொல்லிவிட்டு அவன்பாட்டுக்கு வேலையில் கருத்தாய் இருப்பான். என்னதான் கவனமாய் இருந்தாலும், ஒரு கண் மற்ற எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டேயிருக்கும். மிஞ்சும் ரகசியங்கள் அங்கே வேகமாய்ப் பரவும் காட்சி அவனுக்குத்தான் தெரியும்.

னதில் அந்தப்படம் வெகு நாளாய் ஓடிக் கொண்டிருந்தது. நிர்வாணமாய் நிற்கும் அவளோடு சம்போகம் நடத்தும் அந்த அவன் யார்?

போலீஸ் டிரஸ் தெரிகிறது. சட்டையை இன் பண்ணியிருக்கும் இறுக்கத்தைப் பார்த்தால், அவனோ? என்னவோ விடாமல் உறுத்திக் கொண்டேயிருக்கிறதே? மூளையை எவ்வளவுதான் கசக்கிப் பார்த்தாலும் துல்லியமாய்ப் புரிந்து கொள்ள முடியவில்லை. இன் பண்ணியிருக்கும் சட்டையை இடது கையால் அப்படியே அரைச் சுற்றாக உள்ளே இழுத்து விட்டுக் கொள்வானே அவனேதானோ? எந்நேரமும் போதையில் இருந்தால் எதுதான் மண்டையில் நிற்கிறது? அந்தச் சின்னஞ்சிறு வீட்டில் அதை அவனுக்குத் தெரியாமல் யார் படமெடுத்திருப்பார்கள்? தெரியாமலா அல்லது தெரிந்தா? தெரிந்து என்றால் அது அவனுக்குத்தானே அசிங்கம்? அப்படியானால் அந்த அவளோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுதானே அதைச் செய்திருக்க முடியும்? அவள் எப்படி அதற்குச் சம்மதித்தாள்? என்னதான் தொழில் செய்தாலும் இப்படியா வெட்ட வெளிச்சமாய்? சம்மதித்தாளா? அல்லது சம்மதிக்க வைக்கப்பட்டாளா? ஈஈஈஈஎன்று இளிக்கிறாள் தேவடியா மவ… மனமுவந்து சிரிக்கிறாளே பாவி? இவ்வளவு கேவலமாகவா போவது? அந்த மோகனச் சிரிப்பில்தானே மயங்கினேன். கருப்பியின் பளீர்ச் சிரிப்பு. கோதுமைப் பளபளப்பு. எனக்குப் பொருந்தாதவள்தான். அதனால்தான் என்னை விலக்கி விட்டாள். அவளைக் கட்டியதே தவறு. அத்தனை கௌரவம் அவளுக்கு. என் மாசற்ற அன்பைப் புரிந்து கொள்ளவில்லையே? நாளடைவில் எல்லாம் சரியாகும் என்று நினைத்தது தவறா? இப்போது சகதியில் கிடப்பது மட்டும் சரியா? அது ஒப்புதலா? என்னவிட்டுப் பிரிஞ்சா…பாவி… நா இங்க வந்தேன்…பொணத்தோடு பொணமா செத்த பொணமாக் கெடக்கேன்…நடமாடுற பொணம் நா….

நாம்பாட்டுக்குத்தான கெடந்தேன். இவ ஏன் மறுபடியும் என் கண்ணுல பட்டா? எப்டியோ ஒழிஞ்சு போன்னு ரத்தக்கண்ணீர் விட்டுத்தான உதறினேன். நா எங்க அனுப்பினேன். அவளாத்தான போயிட்டா…

ச்ச்சீ…! வராத எங்கிட்ட…உன்னப் பார்த்தாலே பிடிக்கலை எனக்கு. உன் ஒடம்பே நாறுது…ஒம் பல்லும், நீயும், ஆளும்….நீ எனக்குப் புருஷனா? எல்லாரும் சேர்ந்து கூட்டமா நின்னுட்டா நா சம்மதிச்சிடுவனா? மனசு வேணும்யா எல்லாத்துக்கும்…பார்த்தவுடனே பிடிக்கணும்…இல்லன்னா அவ்ளவுதான். உன்ன போட்டோவுல பார்த்தபோதே பிடிக்கலை. வம்பா இழுத்து வந்திட்டாக…நேர்லயா பிடிக்கப்போவுது…அதவிடக் கண்றாவியா இருக்க கண்ணு முன்னால…எம் மூஞ்சிலயே முழிக்காத….மீறி வந்தே எல்லாரையும் சேர்த்துக்கிட்டு நீ கட்டுன கட்டாயத் தாலிய உன் கண்ணு முன்னாலயே அறுத்து எறிஞ்சிடுவேன்…என் அழகுக்கு நீயெல்லாம் ஒரு ஆளா? என்ன மாதிரி ஒருத்தியக் கேட்குதா ஒனக்கு? காலடில கெடக்கக் கூட தகுதி உண்டாய்யா ஒன் மொகறைக்கு…

அப்படிப் பேசியவளா இன்று இப்படி? என் உடம்பு நாறுமென்றால் இன்று வருபவன் உடம்பெல்லாம்? என் லட்சணத்தைப் பற்றிப் பேசிவிட்டு, அவளின் லட்சணம் அறிந்தாளா? மனசு வேணும் என்றாளே…இன்று மனசோடுதான் இதைச் செய்கிறாளா? பார்த்தவுடனே பிடிக்கணும் என்றாளே…இன்று பிடித்துத்தான் மற்றவர்களைத் தொடுகிறாளா? அவள் தொடுகிறாளா? அவர்கள் தொடுகிறார்களா? இப்படி அவளைக் கசக்கி எறிந்தவன் யார்? என்னோடு இருப்பதை விட இப்படிக் கசங்குவது சம்மதமா?

கேமரா அப்படியும் இப்படியும் அலைவதைப் பார்த்தால் ஒரு ஆளை இதற்கென்றே ஏற்பாடு பண்ணிச் செய்தது போல் இருக்கிறது? தொழில் முறை ஆள் இதற்கு வரமாட்டானே? பின் யார் செய்தது? சிரித்துக் கொண்டே அவிழ்க்கிறாளே பாவி! என்னமா இருக்கா? கல்லு கணக்கா? அந்த மூஞ்சிதான் பார்க்கணும்னு எத்தன வாட்டி கவனிச்சாலும் தெரிய மாட்டேங்குதே…அதென்ன பாதி இருட்டுலயே காட்டுறானுங்க…முழுசாத் தெரிஞ்சா விபரீதம்னு நெனக்கிறாங்களோ…? அவன் மூஞ்சியக் காட்டாம ஏன் மறைக்கணும்? அவளக் காண்பிச்சா அத வச்சு அது எந்த எடம்னு கண்டுபிடிச்சிடுவாங்கன்னு கணக்குப் பண்ணுவாங்களோ…? அவள ஏற்கனவே தெரிஞ்சவன்தான அவ எடத்தையும் கண்டு பிடிக்க முடியும்?

இப்டி திண்ணுன்னு இருந்துக்கிட்டு அவன் முன்னாடி போய் நிக்கிற அவளத் தான மண்டி போட வக்கிறான் அவன்…மண்டி போட்டு கரெக்டா இடுப்புக்கு இருக்காளே அவ…அது எதுக்கு? ….அம்புட்டு அவசரமா அவுனுக்கு?

அப்டித்தான் படிய வப்பாங்க மாப்ள மொதல்ல…

ஒனக்கெப்டிறா தெரியும்…?

போலீஸ்காரனுக்குப் படிஞ்சாத்தான் அங்கன தொழிலே நடத்த முடியுமாக்கும்…

அதத்தாண்டா கேட்குறேன்…அங்ஙனன்னா எங்ஙன…?

அது தெரிஞ்சா நா ஏன் இங்கருக்கேன்….?

அடி செருப்பால….போ நாயி…போயி வியாதிய வாங்கிட்டுவா…போ…போயி நக்கிட்டு வா…..

ஒரு தமாசுக்குச் சொன்னா நீ ஏன் மாப்ள இவ்வளவு சீரியசா எடுத்துக்கிற?

அது அவள்தான் என்று தெரிந்ததை அவன் அறிய மாட்டான். காட்டிக் கொள்ளக் கூடாது. அது அவளேதான். சந்தேகமேயில்லை. ஒரே ஒரு நாள் கட்டாயமாய்ப் பார்த்த அந்த உடம்பு நன்றாய் ஞாபகமிருக்கிறது. ஆளின் உயரமும் அந்த குண்டு உடம்பும்…

பின்ன என்னடா….அவன் யாருன்னு தேடிட்டிருக்கேன்…அதச் சொல்லுடான்னா…?

யாராயிருந்தா நமக்கென்ன? அந்த எடம் மட்டும் எதுன்னு கண்டுபிடி…?

கண்டுபிடிச்சா?

போயிட்டு வந்திரலாமேன்னுதான்…

ஓங்கிக் கூதில ஒரு மித்தி….உயிர் போயிரும் சாக்கிரத….

அத்தப் பார்த்தா லாட்ஜ் மாதிரித் தெரிலடா…ஏதோ வீடு கணக்கா இருக்கு…அப்போ?

ஏதோ தெருவுலதான் அது நடக்குதுங்கிற…அதானே….?

அதேதாண்டா…அத எப்டியாச்சும் கண்டுபிடிக்கணுமே…?

ரொம்பச் சுலபம்….நம்ப அரசமரத்து திம்மராசு இருக்கான்ல….அவன்ட்டச் சொல்லு…ரெண்டே நாள்ல காட்டிக் கொடுத்திடுவான்…

அவன் எந்நேரமும் போதைலல்லடா கெடப்பான்…அவுனுக்குப் பொட்டணம் வாங்கிக் கொடுத்தே முடியாதே….

அதுக்கென்னா பண்றது…இப்போ நீ எனக்குச் செய்யலியா? அதுபோல அவுனுக்கும் செய்யி…..

என்னானாலும் நீ என் ஃப்ரென்டு…..எங்கூடவே கெடக்குறவன்…அவென் அப்டியா? ஆத்துக்கு நடுவுல திருட்டுத்தனமா தண்ணித் தொட்டியக் கட்டிக்கிட்டுப் பொழப்பு நடத்திக்கிட்டுக் கெடக்கான்…சாவுக்கு வாறவுகளும் வேற வழியில்லாம அங்க முங்கு போட்டுட்டுப் போறாக…ஏதோ அவன் காலமும் ஓடுது…என்னைக்கு நகராட்சில கவனிச்சி வெறட்டுறாகளோ…? திடீர்னு பொறப்டு வந்து தொட்டிய இடிச்சிப் போட்டாலும் போச்சு…அப்போ ஆளே இல்லாமப் போயிடுவான்…நம்மள மாதிரியா பர்மனன்டா ஒரு தொழில் இருக்கு அவுனுக்கு….?

அதல்லாம் செய்ய மாட்டாக…அதுக்கெல்லாம் ஆளுகளச் சரி பண்ணித்தான் வச்சிருக்கான்…போலீசும் அவன் கைல…அதுனாலதான் சொன்னேன். காரியம் சுளுவா முடியும்னு…நீ என்னடான்னா நம்ப மாட்டங்கிற….

ம்பாமல் இல்லை திப்பிலி. நம்பித்தான் இந்த விவகாரத்தை ஏற்கனவே திம்மராசுவிடம் சொல்லியிருந்தான். அது இந்த மாக்கானுக்குத் தெரியாது.தெரிந்தாலும் இவனைச் சமாளிப்பது ஒன்றும் பெரிதில்லை. தன்னை அண்டிக் கிடப்பவன். சொன்னால் கேட்டுக் கொள்வான். போலீசோடு கனெக் ஷன் அவனுக்கு உண்டு என்பது இப்போது உறுதியாகிப் போனது. இதுதான் அவன் எதிர்பார்த்தது. தான் ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று பிச்சாண்டிக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் அங்கே தொடர்பு உள்ள அவன் தன்னை மடக்குவதற்காக அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே தன் இடத்தில் கண் வைத்திருக்கும் அவனுக்கு விஷயம் லகுவாக முடிந்து போகும் வாய்ப்புண்டு.

ன்று சனிக் கிழமை. சனிப் பொணம் தனிப்போகாது. கூடவே பாடையில் கோழி ஒன்றை அடித்துத் தொங்கவிட்டுக் கொண்டு வந்தது ரெண்டு மூன்று அயிட்டங்கள். அமைதியை வலியத் தொலைத்த கூட்டம்.

எங்க வெக்காள்ளி சொன்னா கேட்குறாங்ஞ……சும்ம்ம்ம்மா அதவே நெனச்சிக்கிட்டுக் கெடந்தா….இப்டி அலைஞ்சு அலைஞ்சுதான ஏரியாவையே கெடுத்துப்புட்டானுக….ராத்திரியுமில்ல…பகலுமில்லன்னு ஆயிப்போச்சு….இது தெரிஞ்சு இப்போ அப்பப்போ தொப்பிக்காரங்ஞ வேறே வர ஆரம்பிச்சிட்டானுக….இனி வௌங்குனாப்லதான்….இதுக்கு ஒர்ரே வழிதான் இருக்கு…நாம பேசாம எடத்த மாத்திட வேண்டிதான்…சரி…ஒழிஞ்சு போயிடுவோம்னு பார்த்தா வழி வழியா இருந்து வந்த எடத்த எப்டிச் சட்டுன்னு மாத்துறது? எப்டி திடு திப்னு ஓடுறது? அவிஞ்ஞளுக்கு வேணா அந்த எடம் புதுசா இருக்கலாம். நமக்கு? அதுக்கு நாம என்னா தப்பு செஞ்சோம்? தப்பு செய்றவன வெரட்ட மாட்டாம நல்லவுகளெல்லாம் தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடிப்போயிட்டா அப்புறம் யாருதான் ஊரத் திருத்துறது? இது இப்டியெல்லாம் ஆகும்னு கண்டமா? தொழிலு நசிஞ்சி போச்சுதான்….நெறையப் பேரு ஆந்திரா கர்நாடகான்னு போயிட்டாகதான்…அங்க முறுக்குப் போட்டு விக்கிறாகளாமுல்ல…நல்லா ஓஉறான்னு இருக்குதாமே…அப்பவே நாமளும் போயிருக்கணும்தான்…விட்டாச்சு….ஏதோ கூலி வேலைக்குப் போக வரன்னு இருந்தா அதுக்கும் விடமாட்டாக போலிருக்கே….வீட்டுப் பொம்பளைங்களத் தனியா விட்டுட்டுப் போறதேல்ல பயமாப் போச்சு…ஒண்ணொன்னும் கிலியடிச்சிப் போயில்ல கெடக்கு….எப்டி நுழைஞ்சானுங்கன்னே தெரிலயே…

அந்தப் பளீர்ச் சிரிப்புக்காரிதாண்டா மொத மொதோ வந்தா…என்னடா விடிகாலைல ரெண்டு மூணு மணியப்போல வர்றாகளேன்னு பார்த்தேன்…அன்னைக்கே எனக்கு ஒரு சந்தேகம்….ஆனாப் பாரு….காலைல ஆளுக வாறதும் போறதும்…சாயங்காலமானா மாடி பால்கனில பல்பு ஒண்ணத் தொங்கவிட்டு அதுல ஒருத்தன் சிவப்புப் பேப்பர சுத்துறான்….சரி நைட் லாம்பு போல்ருக்குன்னு பார்த்தா இதுக்கு அடையாளமாவுல்ல சுத்தியிருக்கானுக….? தெனசரி ஆட்டோல ஆளுக வாறதும் இறங்குறதும், நடுச்சாமத்துல கௌம்புறதும், தாய்ளி, ஒரே திருவிழாக் கூட்டமாவுல்ல இருக்குது…

அது சரி மச்சான்…அந்தக் கம்மாய ஒட்டித் தள்ளின வீடாப் பார்த்திருக்கிற வழியப் பார்த்தீகளா…அதுக்கு தெக்காலருந்தும் ஆளுக வருது போவுது…சொல்லப்போனா அந்தப் பக்கந்தான் ஒரே வயக்காடு….எல்லாம் பொட்டலாக் கெடக்குதுல்ல….வண்டிய விட்டிட்டு வந்துர்றானுக….ஒரு காலத்துல ராவுல அந்தக் கம்மாப் பக்கம் போகவே பயப்படுவானுக….நாலஞ்சு பேராப் போயி வெளிக்கிருந்திட்டு, குண்டி கழுவுனமா இல்லையான்னு சந்தேகத்துலயே வந்துருவானுக….எத்தன பேரை அமுக்கியிருக்குது தெரிமா அது? கரைல ஒரு சாமி உண்டு… அங்க குளிச்சவுக அத நாலு சுத்து சுத்திட்டுத்தான் போவாக…செல மண்ண விரல்ல இழுத்து பயபக்தியா நெத்தில இட்டிட்டுப் போவலே அடுத்தாப்புல எவனும் அங்க காலடி வக்க முடியாதாக்கும்…அத்தனை துடி அது….இப்ப என்னடான்னா என்னென்னமோ நடக்குது…அந்தச் செல கூட இப்ப இருக்குதான்னு சந்தேகமால்ல இருக்கு….

இருக்கு…இருக்கு….இல்லாம என்ன? மரத்துக்கு அந்தால பேத்து வச்சிப்புட்டான் எவனோ….ஏரியாவுக்குத் தண்ணி வேணும்னு போரு போட வந்தாகள்ள….அப்பவே நகத்திட்டானுவ…..

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடீ…குதம்பாய் காசு முன் செல்லாதடீ….

அந்தச் சோகத்திலும் பாட்டுக் கிளம்பியது அங்கே…..

எல்லாம் அந்தச் செவலப்பய செய்றது மாமா…..அவென் வேல பார்க்குறது வேற எங்கியோ சொன்னானுங்க…ஆனா அடிக்கடி இங்க வந்திட்டுப் போவானாமுல்ல…அவந்தான் அவள இங்க கொண்டாந்து விட்டிருக்கானாம்…..இன்னும் நாலஞ்சு கெடக்கு அங்க…இவன் வந்தாத்தான் அவளாம்…வேற யாருக்கும் தெறக்க மாட்டாளாமுல்ல….ஏகக் கத சொல்றானுங்க மாமா….அது ஏதோ ஆபீசரு தெரியாம அந்த வீட்ட விட்டிட்டு முழிக்கிறாராமுல்ல… நாலஞ்சு பேர ஏற்பாடு பண்ணியிருப்பாரு போல…அவுங்க என்னா சொல்லியிருக்காங்கன்னா, சாமாஞ்செட்டுகளத் தூக்கி வீதில எறிஞ்சிட்டு ஆளுகளயும் வெளியேத்திப்பிட்டு, அரை மணி நேரத்துல சாவி உங்க கைக்கு வந்திடும் சார்…ஆனா போலீசு கீலீசுன்னு போனா நீங்கதான் பார்த்துக்கிடணும்….அந்த ரப்சர் எதுவும் இருக்கப்படாதுன்னாங்களாம்…அவுரு யோசிக்கிறாராம்….பாவம்…யாரு சொன்னாகளோ….எனக்கு என்னா சந்தேகம்னா எல்லா அந்த மைனர்ப்பயதான் செய்திருப்பானோன்னு ஒரு சந்தேகம்…ஏன்னா இங்க நம்ம ஸ்டேஷன்ல இருக்கப்பவே அடிக்கடி நைட் ரௌன்ட் அப் வருவான்….ஏண்டா இந்த ஏரியாவாப் பார்த்து அலையுறான்னு நா அப்பவே யோசிச்சிருக்கேன்….அவ மேல அவுனுக்கு அம்புட்டு சீக்குண்ணே….நாய் மாதிரி பின்னாடியே அலைவானாமுல்ல…..இவன நம்பித்தான அவளே…..மதத்துப் போயில்ல திரிவாளாம்…

திரிய வச்சிப்புட்டாண்டா அவென்….ஒழுங்காக் கெடந்திருப்பா…..இவந்தான்டா சீரழிச்சது….

வந்திருக்கும் கூட்டம் புரிந்தது திப்பிலிக்கு. எல்லாம் அந்தச் செவலப் பய….என்ற அந்த வார்த்தைதான் இன்று உசுப்பி விட்டு விட்டது. ஊர்ஜிதப்படுத்தியும் விட்டது. நகரின் எந்தப் பகுதி என்பதும் புலப்பட்டது. இடுப்புக்குக் கீழே பேன்ட்டைக் காட்டி எதிரே அவளை மண்டி போட வைத்தவன் அவனாகத்தான் இருக்க வேண்டும். அந்த அங்க அடையாளம். உச்சி முதல் பாதம் வரை காட்சியை ஒரு ஓட்டு ஓட்டிய அந்தச் சில கணத்தில் மனதில் உறுதிப்பட்ட ஒன்று. இந்தச் சில கணத்திற்காகத்தான் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தான். அது அவன்தான். அவனேதான். நிச்சயமாக அவன்தான். தன்னை அவளிடமிருந்து பிரித்தவன். ஆசை காட்டிச் சீரழித்தவன். நகரின் புதிய பகுதி ஒன்றில் என்னமோ நடக்கிறது என்று கேள்விப்பட்டிருந்தது இன்று காது வழிச் செய்தியாய் தன் இடத்திலேயே வந்து வலிய ஒலிக்கிறது.

பொக்கிஷமாகத் தனக்குக் கிடைத்த பேரழகியைத் தன்னிடமிருந்து களவாடிய கயவன். அவன் வந்து போவது இன்று உறுதியானது. முதன் முதலாய் இருளில் அவனோடு கட்டி உருண்டதும், அவன் கருத்த உருட்டு உடம்பும், பின் கழுத்தில் துருத்திக் கொண்டிருந்த அந்த மொக்கைச் சதைக் கோளமும் மனதில் நிறுத்திய அடையாளங்கள். அப்படியே மனத் திரைக்குள். தன்னோடு சரிக்குச் சரியாய் நிற்க முடியாமல் இருளோடு விலகிய அவன். துணியைப் பூராவும் உருவி அம்மணமாய் ஓட… இந்தாடா நாயே….என்று ஜட்டியை வீசியதும், இருளில் மானத்தை மறைத்துக் கொண்டு அவன் எடுத்த ஓட்டம். அவனிடம் அன்று அவன் விட்டுச் சென்ற அந்தக் காக்கி டிரஸ் இதோ இந்தக் கொட்டகையின் ஒதுக்குப் புறமான மேல் பொந்துக்குள். அதற்கு வேலை வந்தாகி விட்ட வேளை இது.

காக்கி உடைக்குள் கற்பனையாய்த் தன்னை ஒரு முறை பொருத்திப் பார்த்துக் கொண்டான் திப்பிலி.. கூடவே அந்தச் சூரிக்கத்தியின் இருப்பை உறுதி செய்யும் விதமாய் கை வேகமாய் நகர்ந்து அதை அழுத்திப் பிடித்து ஆவேசமாய் வெளியே உறுவியது. (உயிரோசை இணைய இதழ் வெளியீடு – 26.03.2012) --------------------------------------------------

17 மார்ச் 2012

“நிலைத்தல்“ சிறுகதை

--------------------------

“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிங்கிற பழமொழி. எல்லாருக்கும் பொருந்துமாங்கிறதை யோசிக்க வேண்டிர்க்கு… - இப்படிச் சொல்லிவிட்டு சந்திரன் அவளையே உற்றுப் பார்த்தான். அதைச் சொல்லி நீ தப்பிக்க முடியாது என்பதை அவள் உணர வேண்டும். அதுதான் அவனின் இப்போதைய தேவை.

மாதுரி தலை குனிந்திருந்தாள். அவனை நிமிர்ந்து நோக்குவதா வேண்டாமா என்றிருந்தது. தான் மௌனமாய் இருந்தது உண்மைதான். அந்த மௌனத்தை இப்படி அர்த்தப்படுத்துவான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை.

மௌனம்ங்கிறது இரட்டை மன நிலையோட சாட்சி. மனசு ஒரு விஷயத்தை விரும்பலை. ஆனாலும் அதை வெளிப்படையா சொல்ல விருப்பமில்லை. அதே சமயம் குறிப்பிட்ட விஷயத்தோட நியாயம் அதை எதிர்க்க முடியாத நிலையை ஏற்படுத்துது. அங்கே மௌனம் உதவுது. அப்படி இருக்கிறது மூலமா எதிராளியைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். தன் முடிவைத் தெரிவிக்காததன் மூலமா ஒத்துப் போகாத நிலையை ஏற்படுத்தலாம். பின்னால் விஷயம் பெரிசானா, நான்தான் ஒண்ணுமே சொல்லலையே என்று கூறி எதிர்க்கவில்லை என்பதான தோற்றத்தை ஏற்படுத்தித் தப்பிக்கலாம்.

வாழ்க்கையில் பல சமயங்களில் மௌனம் தப்பிப்பதற்கு ஏதுவான ஒரு சாதனமாய், சாதகமாய் அமைகிறது. மௌனம் சண்டைகளைத் தவிர்க்கிறது. பரஸ்பரக் கோபங்களை ஆற்றுகிறது. பிரச்னையை ஆறப்போடுவதற்கு உதவுகிறது. ஒத்திப்போட்டு ஒன்றுமில்லாமல் செய்வதற்கு வழி வகுக்கிறது. மறதிக்கு ஏதுவாக்குகிறது. யார் ஜெயித்தது என்ற தேடுதலில் நீ தோற்றாய் என்று மனதுக்குள் நினைத்து ஆறுதல்பட்டுக்கொள்ள உதவுகிறது. இந்த முறையும் என்னை நீ வெல்லவில்லை என்று சொல்லாமல் சொல்லத் தோதளிக்கிறது. இதெல்லாவற்றையும் யார் பக்கம் நியாயம் என்பதைத் தீர்க்கவொண்ணாமல் அந்தரத்தில் தொங்கப் போடுவது அதீத வசதியாய் இருக்கிறது.

இம்மாதிரி ஒரு வழிமுறை மூலம் அவனை அடிக்கடி பழி வாங்கியிருக்கிறாள் அவள். இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் இத்தனை காலம் ஓடிப்போனதே அவளின் இந்த சாமர்த்தியத்தினால்தான். அதுவே அவளின் வெற்றி. முக்கியமான பிரச்னைகளைப் பேசும்போதெல்லாம், அவன் தன்னுடன் விவாதிக்க விஷயத்தை முன் வைக்கும் போதெல்லாம் அவனின் அபிப்பிராயங்களுக்கு பதில் சொல்லாமல், அல்லது மறுத்துப் பேசாமல், தன் கருத்து எதுவாயினும் எல்லாவற்றிற்கும் மிஞ்சியவளாய் “சரி, வேண்டாம்“ என்ற ஒற்றைச் சொற்களிலோ, “வேறே பேசலாமே“ என்று சொல்லியோ அவள் தப்பித்திருக்கிறாள். அதன் மூலம் அவன் சொல்லிய விஷயம் அல்லது சொல்ல வந்த விஷயம் தன்னால் கணத்தில் புரிந்து கொள்ளப்பட்டு அது தனக்குப் பிடிக்காதது என்பதாகவோ, இந்த மாதிரிப் பேச்சுக்களைப் பேசிக்கொண்டு என்னிடம் வராதீர்கள் என்கிற ரீதியிலேயோ அந்தக் கணத்திலேயே அவள் ஸ்தாபித்ததன் மூலம் அவனை வெற்றி கொண்டதாகவும், தன் கண்ணெதிரிலேயே அவனை உடனுக்குடன் அவமானப்படுத்தியதாகவும், எண்ணி இறுமாந்திருக்கிறாள்.

இதையெல்லாம் மாரடிப்பதற்கா நான் உனக்கு வாழ்க்கைப் பட்டேன் என்பதாகவும், இந்தச் அல்பங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை என்ற பொருளிலும் அவனை, அவன் பேச்சை உடனடியாகப் புறக்கணிப்பது என்பது அவளுக்குப் பெருத்த ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தது. இருந்து கொண்டுமிருக்கிறது.

ஆனால் ஒன்று. எத்தனை முறை இப்படி நடந்தாலும் அவன் அயரவில்லை என்பதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. அதுதான் அவளை இன்றுவரை அவன் சார்பில் யோசிக்க வைக்கும் விஷயமாக முடிவுறாமல் இருந்து கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் அவன் தன் மேல் தீர்க்க முடியாத மையல் கொண்ட ஆடவனாகவும் தெரியவில்லை. வயதுக்கேற்ற வேகமும், சில்மிஷங்களும், நேரம் காலமறியாத தொந்தரவுகளும், சீண்டல்களும், அவனிடம் என்றுமே இருந்ததில்லை.

அவனைப் பொறுத்தவரை குறிப்பிட்ட விஷயங்களில் காண்பிக்கும் நிதானமும், பொறுமையும், ஆணித்தரமான அடியெடுப்பும், அவளை பிரமிக்கத்தான் வைக்கிறது. இதில் நீ மறுப்புச் சொல்லியும் பயனில்லை, நடக்க வேண்டியது நடந்தே தீரும் என்கிற அவனது தீர்மானம் அதுநாள் வரையிலான மௌனங்களின் மூலமான தப்பித்தல்களை சுக்கு நூறாக உடைத்துச் சிதறடித்திருக்கிறது.

எந்த மௌனத்தின் மூலமாக அவனிடமிருந்து தன்னை உயர்த்திக் கொண்டாளோ அல்லது அப்படி நினைத்துக் கொண்டாளோ அந்த மௌனங்களின் ஒட்டு மொத்தமான யதார்த்தத்தையே தன்னின் முழுப் பலமாகக் கொண்டு அவன் இப்போது உயர்ந்து நிற்பதை அவள் உணர்ந்தாள்.

அதுநாள் வரையிலான அவனின் கருத்தான சேமிப்பாகத் தோன்றியது அது. இன்னும் எத்தனை காலங்களானாலும், இந்த மதிப்பான ஒன்றை மட்டும் நீ உடைத்தெறியவே முடியாது, அது நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நடந்தே தீரும் என்பதாக அவன் தீர்மானமாய் இருப்பது அவளுக்குள் மெல்லிய நடுக்கத்தைப் பரவவிட்டு, இந்த விஷயத்தில் தான் தோற்றுத்தான் போய்விட்டோமோ என்பதாக அவளின் எண்ணங்களை மெல்ல மெல்லச் சிதறடித்துக் கொண்டிருந்ததை அந்தக் கணத்தில் அவள் உணரத் தலைப்பட்டாள்.

மௌனம்ங்கிறது பல சமயங்கள்ல ஒத்திப் போடலுக்கு வேணும்னா வழி வகுக்கலாம். ஆனா அதுவே தீர்வா என்றுமே இருந்ததில்லை. அதை பலவீனம்னு புரிஞ்சிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கு. …

நான் பேசினா அனாவசியமா சண்டைதான் வரும்…? உங்க இஷ்டப்படி செய்யுங்கோ…

இப்படிச் சொல்வதன் மூலம் தான் சதா சண்டை போடுபவன் என்பதை அவள் நிர்மாணிக்க முயல்கிறாளா? அப்படிச் சொல்லி தன்னை இதிலிருந்து விடுவித்துக் கொள்ள வழி வகுக்கிறாளா? அல்லது தானே நிதானமாக விஷயத்தை நோக்குபவள் என்று சொல்லாமல் சொல்லி தன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறாளா?

என் இஷ்டப்படி செய்றதுங்கிறது அடாவடியில்லை. அதிலிருக்கிற நியாயம். அதுக்கு மறுப்பு வரும்னா அதை அடாவடியாத்தான் செய்தாகணும்…

நியாயம்ங்கிறது ஒரு சார்பானதில்லையே…ஒருத்தருக்கு நியாயமா இருக்கிறது இன்னொருத்தருக்குத் தப்பா தோணலாம். வேறொரு பார்வை இருக்கலாம். அதை நீங்க ஒத்துக்கப் போறீங்களா? நிச்சயமா இல்லை. எதுக்கு வீண் பேச்சு?

ஒவ்வொரு முறையும் இப்படிச் சொல்லித்தான் தன்னிடமிருந்து விலகியிருக்கிறாள். ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. எப்படிப் போராடியேனும் தன் கருத்தை நிலை நிறுத்தியே ஆக வேண்டும் என்கிற பிடிவாதம் இல்லை. ஆனால் அதே சமயத்தில் நீ சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்ட நான் தயாரில்லை என்ற கருத்து மட்டும் ஆணித்தரமாக இருக்கிறது.

அவளைப் பொறுத்தவரை தனது கருத்துக்கள் எல்லாவற்றிற்குமே ஏறக்குறைய மறுப்பு இருந்துதான் வந்திருக்கிறது. எதில் ஒத்துக் போகிறாள் என்பதாக நினைத்து நினைத்துப் பல சமயங்களில் இவன் குழம்பிப் போயிருக்கிறான். தன்னை அவ்வாறு குழப்பத்தில் ஆழ்த்திவிட்டுத் தள்ளியிருந்து அதை ரசிப்பதே அவள் வேலையாய்ப் போய்விட்டது.

தலை குனிந்து தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருப்பது போலவும், அதன் மூலமே தன்னை முன்னகர்த்தி மேலே சென்று விட்டது போலவும் கருதிக் கொள்கிறாளோ?. இடையிடையில் தன்னை நோக்குகிறாளோ என்றும் நினைத்திருக்கிறான். ஒரு பார்வை தற்செயலாய் இவன் அவளை நோக்கிய அதே கணத்தில் அவளிடமிருந்தும் வந்தது. லேசாய்ச் சிரித்துக் கொண்டதுபோலவும் இருந்தது. அது என்ன அலட்சியச் சிரிப்பா? கேலிச் சிரிப்பா? அல்லது நீ இப்படி அலைவாய் என்பது எனக்குத் தெரியும் என்பதான கெக்கலியா?

இப்போதும் அவளின் மௌனம் அவனுக்கு இப்படியான அர்த்தங்களைக் கற்பிக்கத்தான் செய்தது. ஒன்று மட்டும் உண்மை. தன்னை மீறி எதுவும் நடந்து விடுவதற்கில்லை. அதுதான் தன்னின் ஒழுக்கமும், நேர்மையும்பாற்பட்ட விஷயம்.

நீ சொல்வது நியாயமாய் இருந்தால் தண்டனிட்டுக் கேட்பேன். அல்லாமல் வெறுமே கண்ணை மூடிக் கொண்டு எதையும் ஏற்க முடியாது. என் செயலில் அப்படியான முரண்களை நீ கண்டறிந்தாலும் அதை நீ தாராளமாக வெளிப்படுத்தலாம். தவறிருந்தால் களையப்படும்.

எல்லா விஷயங்களுக்கும் அடிப்படையான நியாயம் என்று ஒன்று உண்டு. அது என்றைக்குமே மாறாத ஒன்று. மனிதனுக்கு மனிதன் நியாயங்கள் மாறி விடுவதில்லை. சிலசூழல்களால் அது தடுமாறுவது உண்டு. அங்கேயும் இறுதியாக நிலைப்பது ஒரு செயலின் நேர்மையே. ஒரு விஷயத்தின் நியாயமே. நீ என் மனைவி என்பதற்காக உன் குணக்கேடு சார்ந்து கெடுக்க முடியாது. அதை நீ உணர்ந்துதான் ஆக வேண்டும். உன்னை மாற்றிக் கொண்டுதான் ஆக வேண்டும். பதிலாக உன் மன வக்கிரங்களை இதில் பாய்ச்ச முடியாது. கண்களை மூடிக் கொண்டு நானும் அதற்கு உடன்பட முடியாது. எந்த அம்பினையும் பயன்படுத்தி நீ என்னை வீழ்த்தி விட முடியாது. அது நாகாஸ்திரமாக இருந்தாலும் சரி.

சூழலைப் புரிந்து கொள். தேவையை உணர்ந்து கொள். காலத்தின் கட்டாயத்தை அறி. உன்னை மாற்றிக் கொள்ள முயல். இல்லையேல் நஷ்டம் உனக்குத்தான். நான் உன்னை வீழ்த்த வேண்டியதில்லை. காலம் அந்தப் பணியைச் செய்யும். வீழ்ந்துபட்ட வேதனையை நீயே அனுபவித்து முடிப்பதுதான் உன் மனசாட்சிக்கான தண்டனை.

காலம் எல்லா மனிதர்களையும் நோக்கிக் கேள்விகளை வீசும். எவனும் அவனவன் செயல்களுக்கு, தவறுகளுக்கு, பதில் அளிக்காமல் விடை பெற முடியாது. குறைந்தபட்சம் அதற்கான தண்டனையையாவது அனுபவித்துத்தான் அவன் மரித்தாக வேண்டும். பாபங்களைச் சேர்க்காதே. பண்புகளைச் சேர்….. அதனால் கிடைக்கும் நற்செயல்களை நிறைவேற்று. குறைந்தபட்சம் அதற்கு முயலவாவது செய். முரணாக நிற்காதே.….

கையில் பிடித்திருந்த அந்தக் காகிதம் மெலிதாக நடுங்குவதைக் கண்ட அவள் தன் கைதான் அப்படி நடுங்குகிறது என்பதை உணர்ந்து அடக்கிக் கொள்ள முயன்றாள்.

மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதி வைத்து விடுபவன் அவன். வாய் விட்டுப் படபடத்துத்தான் மன வேகத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. எழுத்து அவனுக்கு ஒரு வடிகால். அவனிடமிருந்து தப்பிக்க முடியாது. இரும்பு மனிதன் அவன். நினைத்ததை நிறைவேற்றியே தீருவான். அது உலக நியாயம் என்று கருதுபவன். கடவுளே முன்னால் உதித்து கொஞ்ச காலம் தள்ளிப்போடு என்றாலும் அவனிடம் ஆகாது.

அன்பினாலும், தியாகத்தாலும்தான் வசப்படுத்த முடியும். வெறும் உடம்பைக் காட்டியோ, சரிநிகர் சமானத்தைக் காட்டியோ அடி பணிய வைக்க முடியாது. சரி என்றால்தான் சிரமேற்கொண்டு ஏற்றுப் பாதுகாப்பான். முரண்டினால் முறுக்கிப் பிழிந்து விடுவான்.

உலகம் அன்பு வலையினால் பின்னப்பட்டிருக்கிறது என்று அடிக்கடி சொல்பவன். அதற்குக் கட்டுப்படாத ஜீவராசிகளே கிடையாது என்பான். அது ஒன்றினால்தான் இவனை அசைக்க முடியும். மற்றவை இவனிடம் செல்லாது. உணர்ந்தாள் மாதுரி.

சரி, உங்க இஷ்டப்படி செய்ங்கோ…என்றாள்.

இது என் ஒருவனோட இஷ்டம் மட்டும் இல்லை….உலக இஷ்டம்….காலகாலமான கலாச்சார இஷ்டம்….குடும்பங்கிற கட்டமைப்புக்கான இஷ்டம்….காலச் சக்கரம் சுழலும்ங்கிற வாழ்க்கை நியாயத்துக்கான இஷ்டம்…எல்லாருக்கும் பொதுவான இஷ்டம். வாழ்க்கைத் தத்துவத்தை வரையறுத்த இஷ்டம்…இன்று எனக்கு நாளை உனக்கு என்று சக்கரம் சுற்றும்.இன்று போய் நாளை வரும். கண்டிப்பாய் வரும். யாரும் தப்பிக்க முடியாது. எழுதித்தான் வைத்திருந்தான் இதையும்.

இதுதான் முடிவு என்று அவன் வரையறுத்து எழுதியது பிரம்மனின் எழுத்து. அதை மாற்ற இயலாது.

அவன் கிளம்பினான். எதற்காக? எந்த நல்லது நடந்தாக வேண்டுமோ அதற்காக. எந்தக் கடமையை நிறைவேற்றியாக வேண்டுமோ அந்த நற்செயலுக்காக. அவரவர் மனதில் எது தோன்றுகிறதோ அந்த நல்லவைகளுக்காக.

சம்மதித்துத்தானே ஆக வேண்டும். வேறு வழியில்லையே. இது அவனுக்கு முன்பே தெரியும். இருந்தாலும் அதை அவள் உணர வேண்டும் என்பதிலும் அவனுக்கு ஒரு நியாயம் இருந்தது.

அவள் என்னவள். அதனால் விட்டுவிட முடியாது. அம்மாவும் அதைத்தானே சொன்னாள் இது நாள்வரை.

அவளுக்கு எல்லாமே நீதானே…உன்னை விட்டு அவ எங்க போவா…அன்பா, அனுசரணையா வச்சிக்கோ….

அன்பின் திருவுருவம். அறநெறியின் இருப்பிடம். மாசற்ற மாணிக்கம். கண்களில் நீர் பனிக்கிறது இவனுக்கு.

இந்த உலகம் அன்பு வலையினால் பின்னப்பட்டிருக்கிறது. அம்மாவின் வார்த்தைகள் மீண்டும் இவன் மனதில்.

--------------------------------------------

10 மார்ச் 2012

“அவர் அப்படித்தான்…” சிறுகதை


 

ன்றுவரை அந்த வாசப்படி மிதிக்கவில்லை கிருஷ்ணமூர்த்தி. மிதிக்கக் கூடாது என்பது அல்ல. என்னவோ ஒரு வெறுப்பு. அது இனம் புரியாதது என்று சொல்வதற்கில்லை. புரிந்ததுதான். மனதளவில் ரொம்ப காலத்திற்கு முன்னமே விலகிப் போனார் என்பது உண்மை. உடலளவிலும் சேர்த்து முற்றிலுமாக விலகியது அந்த 31.12.க்குப் பிறகுதான். சரியாக வருஷம் முடிந்தபோது அவரது சர்வீசும் முடிந்து போனது.

புத்தாண்டு பிறந்த அன்று இவர் வேலையில்லாதவராக நின்றார். அப்படித்தானே சொல்லியாக வேண்டும். அதுதானே சரியும் கூட. வேலைதானே ஆணுக்கு அழகு. ரெண்டு வருஷம் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதோ வருது, அதோ வருது என்றார்கள். ஒன்றையும் காணோம். சர்தான் கழுதைய விடு…என்று வெளியேறியாயிற்று. இல்லாவிட்டால் யார் உட்கார்த்தி வைக்கப் போகிறார்கள்? தன் இருக்கைக்கு எதிர்ப்பக்கமாக வேணுமானால் உட்காரலாம். அதுவும் ரெண்டொரு நாளைக்கு. பிறகு அதுவும் போரடித்து விடும். அவருக்கும் இருப்பவர்களுக்கும்.

இந்த மனுஷன் எதுக்கு தெனம் இங்க வந்து உட்கார்றான்…போவேண்டிதானே…அதான் ரிடையர்ட் ஆயாச்சுல்ல…இந்தக் கெழடுகளே இப்டித்தான்….

ரெண்டே நாளில் தன்னை முக்கால் கெழடு, முழுக் கெழடு ஆக்கி விடுவார்கள். இந்தப் பக்கம் தலை வச்சுக் கூடப் படுக்கக் கூடாது. அதான் கௌரவம்.

ஏதோ நாலைந்து பேர் போன் பண்ணினார்கள். துக்கம் விசாரித்தார்கள். என்னங்க, அதுக்குள்ள அம்பத்தெட்டாயிடுச்சா….? என்றார்கள். சார், நீங்கள்லாம் இல்லன்னா நாங்கள்லாம் என்ன சார் வேலை பார்க்கப் போறோம்? என்று துக்கப்பட்டார்கள். நல்ல வேளை நாங்கள்லாம் இல்லன்னா நீங்கள்லாம் என்று சொல்லவில்லை. என்ன தலைவா, ஓய்வு பெற்றுட்டீங்களாமுல்ல? உங்களுக்குமா? நம்ப முடில தலைவரே…! என்று வெடிச் சிரிப்புச் சிரித்தார்கள். பொருந்தாமல் எதையாவது செய்வதுதானே வழக்கம். எல்லார் உளறலையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். ஆத்மார்த்தமாய் கேட்ட சிலரும் உண்டு.அது தவிர்க்க முடியாததுதானே, எல்லார்க்கும் பொதுவானதுதானே என்பதான தொனியில் அடங்கியது. எப்பொழுதுமே ஓய்வு பெற்றவர்களைப் பார்த்து சர்வீசில் உள்ளவர்கள், என்ன அதுக்குள்ளேன் செத்துட்டீங்க? என்பதுபோலத்தான் கேட்பார்கள். செத்த பிணத்தைப் பார்த்து எங்களுக்கெல்லாம் சாவு கிடையாதாக்கும் என்கிற பாவனையில் எழவு வீட்டில் துக்கப்படும் மனிதர்களைப் போல..

ஒரு காலத்தில் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு சமதையாய் அந்நாளைய நடிகர்களை நினைத்துக்கொண்டிருக்கவில்லையா? ஸ்டார்ஸ் என்கிற வார்த்தை உண்மையிலேயே அவர்களுக்குத்தான் நூறு சதவிதம் பொருந்தும். அவர்களெல்லாம் அபூர்வப் பிறவிகள். எட்டிப் பிடிக்க முடியாத நட்சத்திரங்கள். அவர்களுக்கு முதுமை என்பதே கிடையாது, இறைவனால் ஸ்பெஷலாக இதற்கென்றே பிடித்துப் பிடித்து அழகு பார்த்துப் படைத்து அனுப்பப்பட்டவர்கள், என்று கனவுகளில் மிதந்த காலம். இப்படி ஒரு தலைமுறையே கற்பனைகளில் மிதந்ததும், காலத்தை வீணாக்கியதும், தங்கள் சொந்த வாழ்க்கைபற்றிய பிரக்ஞையே இல்லாமல் திரிந்ததும், நாசமாய்ப் போனதும், பிற்பாடு அ(இ)வர்களுக்கெல்லாம் வயதாகி, கிழமாகி, மரித்துப் போனபோதே மேற்படியார்கள் தங்கள் கா(நா)லாந்திர இழப்பை உணர்ந்ததும், காலம் எல்லாமும் கடந்து போய் செத்த சவமாய் நின்றதும், இன்றும் நினைத்துப் பார்த்து புத்தியில் நிறுத்த வேண்டிய கதை. உண்மையிலேயே நடப்புத் தலைமுறைகளுக்குச் சொல்ல வேண்டிய விழுமியங்கள் இவை. அது போல எல்லாருக்கும் ஓய்வு உண்டு, அனைவருக்கும் சாவு உண்டு. இப்டியெல்லாம் அசடு மாதிரிச் சொல்லித்தானே ஆக வேண்டிர்க்கு…?

மனதில் தோன்றிய வெறுப்புணர்வில் என்னென்னவோ தோன்றியது கிருஷ்ணமூர்த்திக்கு. எதற்கு இதையெல்லாம் அனாவசியமாய் நினைத்துக் கொண்டு? நம்மளவில் வேலை பார்த்த காலத்தில் சரியாய் இருந்தோமா, வெளியே வந்தோமா…அவ்வளவுதானே…?

நம்ம இல்லன்னா என்ன, ஆபீசே ஸ்தம்பிச்சிடவா போகுது…என்கின்ற தெளிவு எப்பவுமே உண்டு கிருஷ்ணமூர்த்திக்கு. இந்தக் குப்பன் இல்லன்னா இன்னொரு சுப்பன்…! அவ்வளவுதான். ஒரு வழியாய் விட்டது சனி…காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் போனது என்று நினைத்து ஆறுதல் பட்டுக் கொண்டார். மாதா மாதம் சம்பளம் தந்த இடத்தை அப்படி நினைக்கலாமா என்று இன்னொரு மனசு கேட்டது. கோயிலாக நினைத்துக் கும்பிட வேண்டாமா? அதைத்தான் இருந்தவரை செய்து தீர்த்தாயிற்றே? கடமைதான் தெய்வம், கூலி தரும், வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்ட உறுதுணையாய் நிற்கும் வேலையை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்று பாடாய்ப் பட்டு பம்பரமாய்ச் சுழன்றாயிற்றே? ஓடாய்த் தேய்ந்து ஒன்றுமில்லாமல் ஆனது போதாதா?

என்னளவுக்கு எவன் இருந்தான்? இருக்கான்? உழவு மாடு மாதிரி இதுகாறும் வேலை பார்த்தாச்சு…சம்பளம் தவிர வேறே அது இதுன்னு இம்மியும் எதிர்பார்க்காம உண்மையா உழைச்சாச்சு…மொத்த சர்வீசுல ஒரு தடவை கூட மனசு சபலப்படலை…எவனும் கையை நேருக்கு நேரா நீட்டி, பல்லு மேலே நாக்குப் போட்டு….ச்ச்சீ…தப்பா வருது….நாக்கு மேல பல்லுப் போட்டு ஒரு வார்த்தை பேச முடியாது…சொன்னதுமில்ல…சொல்ற தெம்பும் இருந்ததில்ல எவனுக்கும்… ஏதாச்சும் தப்பு செய்திருந்தாத்தானே? மடில கனமிருந்தாத்தானே வழில பயமிருக்கணும்? பழைய பழமொழிதான்…இருந்தாலும் அவசரத்துக்கு இதுதான் வருது…

என்ன வேலை பார்த்து என்ன செய்ய? எப்படி இருந்து என்ன ஆக? எல்லாம் பொய். வீண். பெருமைப் பட்டுக்கொள்ள ஒன்றுமேயில்லை. விதி, விதி என்று விதியோடு மாரடித்ததுதான் பாக்கி. எது நடந்தது விதிப்படி? எல்லாமும் அதனதன் தலைவிதிப்படி ஆனது. அவ்வளவுதான். பத்துக்கு நாலு ஆச்சா? அட, ரெண்டு? அட வேணாம், ஒண்ணு? போளும்யா பெருமை…! நெனச்சது ஒண்ணு, நடந்தது ஒண்ணு, அதனால முழிக்குதே அம்மாக் கண்ணு…! பழைய பாட்டு ஒன்று ஞாபகம் வந்தது. இங்கே அம்மாக்கண்ணு இல்லை…அய்யாக் கண்ணு…அது ஒன்றுதான் மாற்றம்.

சார்…கரெக்டா போட்டிருக்கீங்க ஸார் லிஸ்ட்….இது பிரகாரம் போஸ்டிங் போட்டுட்டீங்க….சூப்பர் ஸார்…எங்க எல்லாருக்கும் சம்மதம் ஸார்….நீங்க இருக்கீங்கங்கிற நம்பிக்கைலதான் வந்தோம்…சாரு செய்து கொடுப்பாருன்னு…இத மட்டும் எங்களுக்குப் பண்ணிக் கொடுத்துட்டீங்க நாங்க உங்கள மறக்கவே மாட்டோம் சார்….

நா என்னத்தைய்யா பண்றது…உள்ளத்தச் சொல்றேன்…எது சரியோ அதச் சொல்றேன்….உள்ளே அனுப்பறேன்….அப்டியே கையெழுத்தாகி வந்தா உங்க யோகம்…

நீங்க அப்டிச் சொல்லப் படாது சார்…சீஃப்டச் சொல்லி எங்களுக்கு வாங்கிக் கொடுக்கணும்….

சரி, சொல்றேன்….இதுனால என்ன குறைஞ்சா போறேன்…தாராளமாச் சொல்றேன்….

தான் போட்ட மூதுரிமைப் பட்டியலை தன் முன்னே விவாதிக்கும்போது அப்படியே ஏற்றுக் கொண்ட அதிகாரி, தான் வெளியே வந்த கொஞ்ச நேரத்தில் எப்படித் தலை கீழாக மாற்றி விட்டார்? தன்னை ஒரு வார்த்தை கேட்டாரா? பின், தான் மணிக்கணக்காய் மெனக்கெட்டது எதற்கு? பார்த்துக் கொண்டேகை சூம்பவா? எது வேலை செய்தது அங்கே? லிஸ்ட் போடுங்கிறது, நேர்ல பேசும்போது ஓ.கே. குட்… ங்கிறது… பெறவு இஷ்டம்போல மாத்தறது…என்ன கண்றாவி இது? அப்போ நா எதுக்கு? இது இத இப்டிச் செய்யணும்னு சொல்றதுக்குத்தானே என்னை வச்சிருக்கா? உங்க இஷ்டப்படி செய்துக்கிறதுன்னா கையொடிய நா ஏன் எழுதணும்? மண்டையப் போட்டுப் பிச்சுக்கணும்? நா என்ன கிறுக்கனா?

கிறுக்கன்தான். பின்ன? உங்கைலயா அதிகாரம் இருக்கு? பவர் அங்கல்லய்யா இருக்கு? நீ சொல்லத்தான் முடியும். செய்றது அவுங்கதான்…நீ பார்த்திட்டு பெப் பெப் பேன்னு நிக்க வேண்டிதான்…போவியா? பொத்திட்டுப் போய்யா…சும்மா வாய் பேசாத…..

அப்படியெல்லாம் நின்றதில்லை. அதற்கான அவசியமும் இல்லை தனக்கு என்று நினைத்தவர் இவர். சரியைச் சொல்வது என் வேலை. அதற்குத்தான் எனக்குச் சம்பளம். நான் சொல்லியாயிற்று. என்னை நோக்கிக் கேள்வி வந்தால் அதற்கு எப்படிப் பதிலளிப்பது என்பது எனக்குத் தெரியும்.

இன்றுவரை அதே நினைப்புத்தான் கிருஷ்ணமூர்த்திக்கு. அவர் தலை எப்பொழுதும் நிமிர்ந்தேதான் இருக்கும். பார்வை தெளிவாய் நீண்டிருக்கும். அதை நேருக்கு நேர் அணுக முடியாதவர்கள்தான் அதிகம். அவரை டிஸ்கஷனுக்கு அழைக்கும் அலுவலர்கள் கூட அவர் கண்களை நேரடியாய் நோக்க மாட்டார்கள். நோக்க முடியாது அவர்களால். ஏனென்றால் அவர்கள் தப்பு செய்பவர்கள். அதை இவர் அறிவார். ஆனாலும் வேறு வழியில்லை என்று இருப்பவர்கள். கூட்டத்தோடு சேர்ந்து கோவிந்தா போட்டுத்தான் ஆகணும் என்பவர்கள்.

கிருஷ்ணமூர்த்தி தினமும் சந்தித்த பிரச்னை இது. விதி முறைப்படி என்ன உண்டோ அதை அச்சுப் பொறித்தாற்போல் எழுதி அமைதியாய் உள்ளே தள்ளி விட்டு விடுவார். இது எப்படி? அது எப்படி? என்று யாரும் ஒரு வார்த்தை கேட்க முடியாது. தேவையான விதிமுறைப் புத்தகங்களும், அந்தந்தப் பக்கங்களில் தக்க குறிகளிடப்பட்டு கொடி மாட்டப்பட்டு கோப்புகளுக்குக் கீழே தலை நிமிர்ந்து நீட்டிக் கொண்டிருக்கும். வாய் பேசாது அதைத் திறந்து பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். அவை சொல்லும் தேவையான விடைகளை. அவை தரும் தக்க விளக்கங்களை.

அவற்றைக் கூடப் பொறுமையாய்ப் படித்து அறிய முடியாத ஜென்மங்கள் அநேகரைப் பார்த்துத்தான் இருக்கிறார் இவர். “இவங்கள்லாம் எதுக்கு ஆபீசர்னு வந்து நம்ம கழுத்த அறுக்கிறாங்க…“ என்று தனக்குத்தானே நினைத்துக் கொள்வார். அல்லது முனகிக் கொள்வார்.

சார், உங்கள சீஃப் கூப்பிடுறார்… - பியூன் வந்து தயங்கித் தயங்கி இப்படி நிற்கும்போதே சங்கடத்தோடுதான் எழுவார்.

அதான் எல்லாந்தானய்யா வச்சு அனுப்பியிருக்கேன்…இன்னும் என்னத்துக்குக் கூப்பிடுறாரு…? என்பதும் உண்டு சில சமயம். பழத்த உரிச்சு நீட்டியாச்சு…இன்னும் வாயில வேறே ஊட்டி விடணுமா? போகச் சொல்லுய்யா அந்தாளை…

எதையும் படிக்கிறதுக்கு எவனுக்கும் பொறுமை கிடையாது. பிட்டுப் பிட்டு வாய்ல திணிக்கணும்…மென்னு…மென்னு….மென்னு முழுங்கு….என்று சொல்லித் தரணும். அது நாலு வரியோ, நாலு பக்கமோ… படிக்கும், அறிந்து கொள்ளும் ஆர்வம் கிடையாது. ஏதோ பரீட்சை எழுதியாச்சு, வந்தாச்சு வேலைக்கு…கிராஜூவேஷன் இருக்கு…பணம் இருக்கு….கையில காசு வாயிலதோச…ஆப்பீசர்…..நாஆப்பீசராக்கும்…ஞாபகமிருக்கட்டும்…..உங்களுக்கெல்லாம் பாஸ்…..முதல்ல இந்த எண்ணம் வந்தா எங்கிருந்து உருப்படும்…சட்டிய முதல்ல நிரப்பணும்…அப்பத்தான் அகப்பைல வரும்ங்கிற எண்ணத்துல இருக்கிற ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸை முதல்ல தரவ் பண்ணுவோம்ங்கிற நினைப்பு எவனுக்காச்சும் இருக்கா? எவனும் நம்மளக் கேள்வி கேட்கக் கூடாது…எந்தக் கேள்வியும் வராத எடத்துல நாம நிக்கணும்ங்கிற நெனப்பு வேண்டாமா?

மொத்த சர்வீசில் அப்படி ஒரு சிலரைத்தான், தான் பார்த்திருப்பதாக அடிக்கடி தனக்குத்தானே நினைத்துக் கொள்வார் கிருஷ். அவர்களிடமெல்லாம் வேலை பார்க்க சந்தோஷமாய் இருக்கும். எல்லாம் தெரியும் என்கிற கர்வம் துளிக்கூட அவர்களிடம் தென்படாது. எதிராளியை, அவனது திறமையை மதிக்கத் தெரியும். ஊக்கப்படுத்தத் தெரியும். பலே என்று வாய் திறந்து பாராட்டத் தெரியும். ஒரு நல்ல அலுவலரிடத்தில் பணியாற்றுகிறோம் என்கிற பெருமை நமக்கு இருக்கும். அலுவலகத்தின் மதிப்பும் கூடும்.

ஆனால் ஒன்று அந்தக் காலத்திலேயே இந்தத் திறமையெல்லாம் இருந்தும் ஓடிச் சென்று காரின் கதவைத் திறந்து விடுபவர்களும் இருக்கத்தானே செய்தார்கள்?

உறலோ மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி, குட் மார்னிங்…. என்று வாயிலில் நின்று, உள்ளே உறாலில் உட்கார்ந்து சிவனே என்று தன் வேலையில் ஈடுபட்டிருக்கும் இவரை வம்படியாய் அழைத்து வணக்கம் சொன்ன அலுவலர்களையும் பார்த்திருக்கிறார் இவர்.

எதிர்ப்பட்டால் வணக்கம். இல்லையென்றால் அவருண்டு அவர் வேலையுண்டு. அவ்வளவுதான். வலிய அவர் அறைக்குச் சென்று, அவர் தலை நிமிரும் வரை காத்திருந்து, சலாம் போட்டுவிட்டு வரும் வேலையெல்லாம் என்றுமே இருந்ததில்லை இவரிடம்?

நம்ம வேலையைக் கவனிக்கத்தானே இங்க அனுப்பியிருக்காங்க…தெனம் இப்டி சலாம் அடிக்கிறதுக்கா? எதுக்கு? நாளுக்கு எத்தனை சலாம் அடிச்சேன்ங்கிறதுக்கு முக்கியமா? அல்லது எத்தனை ஃபைலை டிஸ்போஸ் பண்ணினேன்ங்கிறது முக்கியமா? போய்யா…அதுக்கெல்லாம் வேற ஆளப் பாரு….இவ்வளவுதான் கிருஷ்ணமூர்த்தி. இவை அலுவலர்கள் காதுக்கெல்லாம் போனதுமுண்டு. ஆனால் எவரும் எதுவும் கேட்டதில்லை. அவர்களுக்கே இவர் பேரில் கொஞ்சம் பயம் இருக்கும் போலத்தான். தங்கள் கேபினுக்குப் போக இவர் அறையைத் தாண்டும்போது விருட்டென்று கடப்பார்கள்.

எதுக்கு இந்த மனுஷன் மூஞ்சில முழிச்சிட்டு? என்று இருக்கலாம். வரும்போதே ஏதோ தப்பு செய்துவிட்டு வருபவர்கள் போலத்தான் இருக்கும். இவர் கண்களை அவர் நேருக்கு நேர் சந்தித்ததே இல்லையே?

இதற்குப் பேர் என்ன? ஞானத் திமிரா? அதெல்லாம் இல்லை. அப்படி ஒன்றும் அவர் தன்னை என்றுமே நினைத்துக் கொண்டதில்லை.எல்லாரும் முன்னேறணும், நல்லாயிருக்கணும் என்று எல்லோரையும்போல நினைப்பவர்தான். அப்படியெல்லாம் பிசகாய் இருந்தால், வெறுமே, கட்டணம் எதுவுமில்லாமல் எல்லாருக்கும் அவர் வகுப்பு எடுப்பாரா? எத்தனை பேரைத் தேற்றி விட்டிருக்கிறார்? அவரால் பயனடைந்தோர் எவ்வளவு நூறு பேர்? எனக்கென்ன தலைவிதியா? படிச்சாப் படி…இல்லன்னா போ…என்று இருந்திருக்கத் தெரியாதா?

வலிய ஒரு பள்ளிக்குப் போய் காலை எட்டரை வரை தனக்கு ஒரு இடம் வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டு, பணியாளர்களுக்கான வகுப்பை அங்கே நடத்தினாரே!

மனுஷன் க்ளாஸ் எடுத்தார்னா அப்டியிருக்கும்யா….அவர்ட்டப் போயிட்டு நீ ஆபீஸ் சீட்ல ஒக்கார்ந்தேன்னு வச்சிக்க…தானா எல்லா வேலையையும் பார்த்திடுவ…யார் உதவியும் உனக்குத் தேவைப்படாது….ப்ரமோஷனுக்கான டெஸ்ட்டையெல்லாம் தூசு மாதிரித் தட்டி விட்டிடலாம்….அவரெல்லாம் நம்ம டிபார்ட்மென்டுக்குப் பொக்கிஷம் மாதிரிய்யா….

பொக்கிஷந்தான்…யாரு இல்லன்னா..? ஓசில சொல்லித்தந்தா பின்ன பொக்கிஷமில்லாம வேறென்ன? காசுக்கு எல்லாத்தையும் விக்கிறவன்தானே இங்க கெட்டிக்காரன்…பொய்யான உலகம்…

எல்லாருமே நன்னா பண்றேள். நம்பிக்கையாப் பண்ணுங்கோ…எல்லாரும் கெட்டிக்காராள்தான்….சொல்லிச் சொல்லி எத்தனையோ பேரை மேலே கொண்டு சென்றிருக்கிறார்.

அவருக்கே அதிகாரியாய் இருந்து கொண்டு, அவரிடமே படித்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். டேரெக்ட் ரெக்ரூட்மென்ட் ஆசாமிகள். மேலிடத்தின் ஆமாசாமிகள். என்னதான் நேரடியாய் நுழைந்து தலையாய் உட்கார்ந்திருந்தாலும், ஒரு இன்க்ரிமென்டுக்குப் பிறகு அடுத்தடுத்த ஊதிய உயர்வுகளுக்கு இந்த இந்த டெஸ்ட்டுகளெல்லாம் பாஸ் பண்ணினாத்தான் ஆச்சு என்று ஆப்பு வச்சிருக்கானே….அப்போ அதுகளையும் காசு குடுத்தா விலைக்கு வாங்க முடியும்? மண்டைல மூளைன்னு ஒண்ணு இருக்கே அதைக் கொஞ்சமாச்சும் தேய்ச்சு விட்டுத்தானே ஆகணும்…

வகுப்பில் உட்கார்ந்திருக்கும்போதே நான் உனக்கெல்லாம் அதிகாரியாய் இருப்பதற்குத் தகுதியற்றவன்தான் என்று நிரூபித்தவர்கள்தான் அநேகம். என்ன செய்ய? மண்டைக்காய்ச்சல்தான் கிருஷ்ணமூர்த்திக்கு. எல்லாரோடும் போராடித்தான் இருக்கிறார். அப்படி அவர் தேற்றிவிட்டவர்களிடமெல்லாம் கணக்குப் பண்ணி ஒரு அமௌன்ட்டை ஃபீசாகத் தேற்றியிருந்தால் கூட இன்னும் சற்று முன்னே, அதாவது சர்வீசில் இருக்கும் காலத்திலேயே தன் ஒரே பெண்ணுக்கு அவர் கல்யாணம் செய்திருக்க முடியும். அதற்கான சமத்து அவரிடமில்லாமல் போனது ஒன்றும் அதிசயமில்லை. துட்டு மீது என்றுமே அக்கறை இருந்ததில்லை அவருக்கு. வாழ்க்கையின் ஒரு காரணி அது. அவ்வளவே…! அது என் பின்னால்தான் வர வேண்டும். நான் அதைத் துரத்திக் கொண்டு செல்ல முடியாது. அது என்னை ஆள முடியாது.

ன்னத்தக் கூப்பிடச் சொல்ற? ரிடையர்ட் ஆகி வருஷம் ரெண்டு முடியப் போவுது…இப்பப் போய் அவனவன்ட்ட பத்திரிகையை நீட்டினா மொய்க்காகத்தான் இந்த ஆள் வந்திருக்கான்னு நினைப்பான்….நீங்கள்லாம் வந்து ஆசீர்வாதம் பண்ணனும்னு பொத்தாம் பொதுவாச் சொல்லச் சொல்றியா? இந்த ஊழல் ஆசாமிகளெல்லாம் வந்தா என்ன வராட்டா என்ன? இவங்க வந்து ஆசீர்வாதம் பண்றதுக்குப் பண்ணாமயே இருக்கலாம்…

அப்டிச் சொல்லலாமா? மனுஷா வேறே…ஆபீஸ் வேறே…அதையும் இதையும் மிங்கிள் பண்ணாதீங்க….

என்னடீ, மிங்கிள் தங்கிள்ங்கிற? மனுஷன் மனுஷனா இருந்தாத்தான் எல்லாம் நல்லாயிருந்திருக்குமே…! அவன் மிருகம் மாதிரி ஆகுறதுதானே கோளாறு…! தன்னோட சொந்த வக்கிரங்களையெல்லாம் வேலைல புகுத்தினதுனாலதானே நிர்வாகம் கெட்டுப் போச்சு….ஒழுக்கம் அதுனாலதானே சீர் கெட்டுது...அப்டித்தானே ஊழல் புகுந்தது…நிர்வாகத்துக்குன்னு என்னதான் விதிமுறைகளை வகுத்து வச்சிருந்தாலும், மனுஷாளோட சொந்தக் குணம் எல்லாத்தையும் கெடுத்துடுத்துங்கிறதுதானே உண்மை…அப்டிப்பட்டவாகிட்ட இப்பப் போயி இன்விடேஷனை நீட்டினா என்ன நினைப்பான்? வந்திட்டாருய்யா அங்கேருந்து நீஈஈஈஈஈட்டிக்கிட்டு….ன்னு மனசுக்குள்ள கருவுவான். இல்லன்னா கட்டாயம் வந்திருவோம் சார்னு பொய்யாச் சிரிப்பான்…எதுக்கு அவுங்களுக்கு தர்ம சங்கடத்த உண்டு பண்ணிட்டு…எத்தனையோ பேர் மாறிப் போயிருப்பா…இருக்கிற ஒரு சில பழையவா பேரும் எனக்கு மறந்து போயாச்சு…ஸ்டில் சம் குட் பர்சன்ஸ் ஆர் தேர்… சில நல்லவா இன்னைக்கும் இருக்கத்தான் செய்றா…இல்லைன்னு சொல்லலை…அவாளெல்லாம் மனசுலயும் இருக்கா…இவாளோட சேர்த்து அவாளையும் விட்டுட வேண்டிதான்….அநியாயமும் அக்ரமமும் பொறுக்க மாட்டாம இந்த லோகம் அழிஞ்சா எப்டி எல்லாக் கெட்டவாளோட சேர்ந்து நிறைய நல்லவாளும் அழிஞ்சு போவாளோ அத மாதிரி நினைச்சிக்க வேண்டிதான் இதையும்…

போறுமே உங்க வியாக்யானம்…அப்ப்ப்ப்பா…கேட்டுக் கேட்டு காது புளிச்சுப் போச்சு….பத்திரிகையை கொடுத்திட்டு வாங்கோன்னா அதுக்கு இதெல்லாமா பேச்சு?

பார்த்தியா, உனக்கே இம்புட்டு அலுப்பிருக்கு…ரெண்டு வருஷமா அந்தத் திசைப்பக்கமே திரும்பாத நா இப்பப் போய் அங்க நின்னா என்ன நினைப்பாங்க என்னப்பத்தி?

சரி விடுங்கோ, உங்க இஷ்டம்போல செய்ங்கோ…

அப்டிச் சொல்லு…அதுதான் என்னோட சகதர்மிணிக்குப் பொருத்தம்….

ப்படியும் ஒரு சிலரைப் பார்க்கத்தான் செய்தார் கிருஷ்ணமூர்த்தி. கடை, கண்ணி, மார்க்கெட், சபா என்று கண்ணில் பட்டு விடுகிறார்களே….

சாஆஆஆஆஆஆஆர்…….எங்களெல்லாம் மறந்திட்டீங்கல்ல….நல்லாருக்கீங்களா சார்……? ஆளே மாறிட்டீங்களே சார்…

நல்ல்ல்ல்லா….இருக்கேன்…நீங்களெல்லாம் எப்டியிருக்கேள்? யாரெல்லாம் ப்ரமோஷன்ல போனா? யாரெல்லாம் டிரான்ஸ்பர் ஆனா? இப்ப யாரெல்லாம் இங்க இருக்கேள்? சொல்லுங்கோ… - அவரையறியாமல் ஆர்வமாய்த்தான் கேட்டார். தினமும் அவர்களோடெல்லாம் கலகலப்பாய்ப் பேசிச் சென்று வடையும் டீயும் சாப்பிடும் அந்த நேசமான நேரங்களை மறக்க முடியுமா? பணியை அவ்வளவு நேசித்தவராயிற்றே…கூடஇருந்தவர்களையெல்லாம் கொண்டாடியவராயிற்றே…

நன்னா வருவேள் எல்லாரும். கொஞ்சம் அக்கறைதான் வேணும்…கருத்தா, கவனமா வேலை பார்த்தா எல்லாமும் மனசுல பச்சுன்னு உட்கார்ந்துக்கும்….அப்புறம் நீங்க மத்தவாளக் கேள்வி கேட்கலாம்….நமக்குக் கூலி தர்ற வேலையாச்சே….அம்பத்தெட்டு வரைக்கும் இதுலதானே கழிச்சாகணும்…அப்போ? சும்மா ஓட்ட முடியுமா? அதெல்லாம் செல்லுபடியாகாது. என்னைக்கும் வேலைதான் நிக்கும்….உங்களப்பத்தி மத்தவா சொல்லணும்னா உங்க திறமைதான் பேசணும்….

சாமர்த்தியமா இருக்கிறதுங்கிறது வேறே…அது இப்போ இங்கே தப்புத் தப்பா அர்த்தப்பட்டு நிக்கிறது…சம்பளம் தவிர மேல் வரும்படின்னு வருதே பல பேருக்கு….அதை சாமர்த்தியம்னு சொல்றா…சொல்ல ஆரம்பிச்சுப் பல காலம் ஆயாச்சு…அன்பளிப்புங்கிறமாதிரி….உங்க குடும்பம் நன்னாயிருக்க வேண்டாமா? குழந்தைகுட்டிகள்நன்னாயிருக்கணுமோல்லியோ?அதை நீங்கபார்க்கணுமோல்லியோ…கண்ணாரக்கண்டுசந்தோஷப்படணுமோல்லியோ…அப்போ அந்தத் தப்பை நாம பண்ணக் கூடாது. அவ்வளவுதான்…இதெல்லாம் உங்களுக்குத் தெரியாததுல்ல…என்னமோ பெரிசா நான்போய் உளறிண்டிருக்கேன்….என்னைவிட உங்களுக்குத்தான் இந்த லோகத்துல நடக்குற நல்லது கெட்டது எல்லாம் நன்னாத் தெரியும்…ஏதோ தோணித்து சொன்னேன். கொஞ்சம் ஆசுவாசப் பட்டுண்ட மாதிரின்னு வச்சிக்குங்கோளேன்…

இம்புட்டுப் பேசுறாருல்ல…இவர் பையன் ஏன் அப்டிப் போனானாம்? கேளுங்களேன்யா யாராச்சும்? யாரோ கேட்பது போலத்தான் இருக்கிறது.

அது கர்ம வினை….உதவாக்கரையாப் போகணும்னு இருக்கு….அனுபவிக்க வேண்டியதை அனுபவிச்சாத்தான் முடியும். சில ஜென்மாந்திரக் கடனை அந்த ஜென்மத்துலயே அடைச்சாகணும்னு இருக்கும்…அனுபவிக்கிறேன். இதையும் மத்தவா சொல்றதுக்கு என்ன இருக்கு…எனக்கு நானே உணர்ந்துதானே இருக்கேன்…நமக்குப் பையன் விளங்காமப் போயிட்டானேன்னு நானும் தப்பாவே நடக்க முடியுமா? அது இன்னுமில்ல மனசையும் உடம்பையும் கெடுத்துண்டதாகும்….இந்த சரீரமும், மனசும் அதுக்காகவா இருக்கு? பஞ்ச பூதங்களும் ஆட்டிப் படைக்கிற இந்த உடம்புலேர்ந்து இந்த மனசைப் பிரிக்கிறது எவ்வளவு கஷ்டமாயிருக்கு? சாதாரண மனுஷனுக்கு அதென்ன அவ்வளவு சாத்தியமா? நான் யாரு, நான் யாருன்னு கேள்வி கேட்டுண்டேயிருன்னு மகான்களெல்லாம் சொல்றா? யாரு விடை கண்டு பிடிச்சிருக்கா? ஆதிப் பெரியவா தவிர்த்து? முயற்சி பண்ண வேண்டிதான்….இந்த ஸ்தூல சரீரத்துலர்ந்து ஆன்மாவப் பிரிச்சு உணர முயற்சிச்சுண்டேயிருக்க வேண்டிதான்….உடம்பு வேறே, ஆன்மா வேறேன்னு உணர்ந்ததுனாலதானே “என்ன, ஆயிடுத்தா?“ ன்னு கேட்டார் ரமணர். முதுகுல வளர்ந்திருந்த கட்டிய ஆபரேட் பண்ணி எடுத்தபோது அது அவரை ஒண்ணுமே பண்ணலியே? அவாளெல்லாம் மகான்கள். நாம சாதாரண மனுஷா…அவ்வளவுதான்….

இன்று என்ன, எண்ண அலைகள் போட்டு இந்தப் பாடு படுத்துகிறது? நினைத்துக்கொண்டே அந்த வடையைப் பிய்த்து வாய்க்குள் தள்ளினார் கிருஷ்ணமூர்த்தி. பேருந்தை விட்டிறங்கித் தன்னை அறியாமல் அங்கு வந்து விட்டோமோ? அந்த முக்குக் கடையில் வடை சாப்பிட்டு எவ்வளவு நாளாயிற்று? அந்தப் பகுதிக்கே வருவதில்லையே? கடைக்காரனுக்கே தன் முகம் மறந்து போயாச்சு….அதோ அந்தப் பாலத்தை ஒட்டின ஆபீசுல இருந்தீகளே…அந்த சார்தானா? என்று கேட்பான் என்று எதிர்பார்த்தால்… அதற்குள்ளேயுமா அடையாளம் தெரியாமல் போய் விட்டது? அவன் கேட்காட்டா என்ன? நா கேட்டுட்டுப் போறேன்…நன்னாயிருக்கேளா…? வேலை மும்முரத்தில் தலையாட்டி வைத்தான் அவன்.

தன்னை விட்டு விடுவோம்…சாதாரண மனுஷப் பிறவி. அடையாளப் படுத்தப் பட வேண்டிய பல புனிதர்கள் இந்த உலகத்தில் இப்படித்தானே அடையாளமில்லாமல் போயிருக்கிறார்கள்? எல்லாம் காலத்தின் கோலம்….

இடது கையில் அந்த மஞ்சள் பையில் அடுக்கியிருந்த கல்யாணப் பத்திரிகைகளோடு அப்படியே நின்று கொண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

நீங்களே சொல்லுங்களேன்…அதோ அந்தப் பாலத்தின் அருகிலிருக்கும் அவரின் அந்தப் பழைய ஆபீசுக்கு அவர் போவதா வேண்டாமா என்று? அவர் அதுக்காகத்தான் கிளம்பி வந்தாரா தெரியாது! இருந்தாலும் ஒரு யோசனைதான்…இப்டியாப்பட்ட காரெக்டர் உள்ள மனுஷன் என்ன செய்வார்?

நானும் யோசிச்சித்தான் பார்க்கிறேன்…ஒண்ணும் புலப்படலை….

உறலோ….! என்னங்க நீங்க…நீங்களும் இப்டி ஒரேயடியா தலையைச் சொறிஞ்சிட்டு நின்னீங்கன்னா…? எதாச்சும் சொல்லுங்க…? யாருமே ஒண்ணும் சொல்ல மாட்டீங்கிறீங்களே…? சரியாப் போச்சு…அங்க பாருங்க…..?

எல்லோரும் அவசரமாய்த் திரும்பி நோக்குகிறார்கள்.

சுருட்டி மடக்கிக் கட்கத்தில் இடுக்கிய மஞ்சள் பையோடு எந்த நிறுத்தத்தில் வீட்டிலிருந்து கிளம்பி வந்து இறங்கினாரோ, அதே இடத்தின் எதிர் முனைப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.(புதிய திண்ணை-இணைய இதழ் 11.3.2012 வெளியீடு)

---------------------------------------------

03 மார்ச் 2012

”சா (கா) யமே இது பொய்யடா…!” சிறுகதை

 

ஞானசுந்தரம் தன் எல்கையைச் சுருக்கிக் கொண்டு வெகு காலமாயிற்று. எல்கையை என்றால் எதுவென்று நினைக்கிறீர்கள்? அவர் உறவுகளுடனான எல்கையையா அல்லது அவரது வாழ்விட எல்கையையா? இரண்டையுமே என்பதுதான் சரி. தன்னுடைய இயல்பே தன்னை இப்படி மாற்றி விட்டதோ என்பதாக அவர் நினைப்பதுண்டு. அதுவாகவே சுருங்கிப் போயிற்றா அல்லது அவராகச் சுருக்கிக் கொண்டாரா?

தானேதான் சுருக்கிக் கொண்டோம் என்பதே விடையாக இருந்தது. அதில் ஏதோ பெரிய நிம்மதி இருப்பதாக அவர் உணர்ந்தார்.

இருக்குமிடமே சொர்க்கம். அதிலும் சும்மா இருப்பதே சுகம். சொல்லிக் கொண்டாரேயொழிய அவரொன்றும் சும்மா இருக்கும் ஆசாமியல்ல. விழித்திருக்கும் நேரம் எல்லாமும் ஏதாவது செய்து கொண்டுதான் இருப்பார். ஆனாலும் அப்படி நினைத்துக்கொள்வதில் ஒரு சுகம்.

மனிதனே எண்ணங்களுக்காக வாழ்பவன்தானே! தன் மீதான நம்பிக்கையின்பாற்பட்ட எண்ணங்கள்தானே ஒருவனை வழி நடத்திச் செல்கின்றன? அவனவன் அவனவனின் இயல்புக்கேற்றாற்போல் நினைத்துக் கொள்வதாலும், செயலாற்றுவதாலும்தானே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறான். அப்படித்தான் தன்னை இயக்கிக் கொள்வதற்கு தனக்குத்தானே சில வழிமுறைகளை வகுத்துக் கொண்டிருந்தார் அவர்.

அதிலும் அவரது வாழ்விட எல்கை சுருங்கிப் போனது ரொம்பவும் காரண காரியமாய்த்தான்.

காலைல வீட்டை விட்டுக் கிளம்பினா பத்து இடத்துக்குப் போயிட்டு வர வேண்டிர்க்கு…ஒவ்வொரு எடத்துலயும் இதைக் கழட்டவும், மாட்டவும்னு செய்திட்டே இருக்க முடியுமா? சரி, கழட்ட வேணாம், தலையோட அப்டியே இருக்கட்டும்னு போய் நின்னா யாருன்னே தெரியாம சந்தேகத்தோட பார்க்கிறாங்க எல்லாரும். நம்ப குரலையோ அல்லது பேச்சையோ வச்சித்தான் கண்டு பிடிச்சாகணும். ஒவ்வொரு எடத்துலயும் எவன்யா இதைக் கழட்டுறதுன்னு அப்டியே சந்திரமண்டலத்துக்குப் போற ஆள் மாதிரி போய் நின்னா பயப்படுறாங்க…எங்கே? பாங்க்லதான். கண்ணுமட்டும்தானே வெளில தெரியுது…யாருன்னு கண்டுபிடிக்க முடிலயே? அதுலயும் சமீபத்துல பாங்க் கொள்ளை அதிகமாப் போச்சா…வர்றவன் போறவன் எல்லாரையும் ரொம்பவும் உன்னிப்பாக் கவனிக்க ஆரம்பிச்சிட்டாங்க… தலைக்கவசத்தைக் கழட்டிட்டுப் பேசுங்க சார்…அப்டின்னு தெளிவாச் சொல்லுது அந்த அம்மா…அந்த முகத்துலதான் என்ன ஒரு மிரட்சி…கேஷ் கவுன்டராச்சே…அவுங்க பயப்படுறது நியாயம்தானே…

அவுங்களுக்கு அது நியாயமா இருக்கலாம். ஆனா எங்களுக்கு? பக்கத்துல பக்கத்துல எத்தன எடத்துக்குப் போக வேண்டிர்க்கு? ஒவ்வொரு வாட்டியும் கழட்டிக் கழட்டி மாட்ட முடியுமா? கையில உள்ள மத்தது மறந்து போகுது…அன்னைக்கு ஒரு நா பேனாவ யார்ட்டயோ செலான் ஃபில்அப் பண்ணக் கொடுத்தேன். மறந்துட்டேன். இல்ல அவன் தர மறந்துட்டான். ஏன்னா அவனும் தலைல மாட்டியிருக்கிறதக் கழட்டி கைல வச்சிருக்கானே…கவசம் கைவசமே இருக்கிறதுனால ஏதாச்சும் வேறொண்ணு விட்டுப் போகுது. ஒரு நா மேஜைலயே வச்சிட்டு வந்துட்டேன்…பிறகு திரும்பவும் நூறு படி ஏறிப் போய் எடுத்திட்டு வந்தேன். சரி, எனக்குத்தான் இந்த மறதின்னு யோசிச்சா, எத்தனை பேர் என்னமாதிரியே கிறுக்காட்டம் மாடிக்கும் கீழைக்கும் அலைஞ்சாங்க தெரியுமா? எல்லாம் நம்மளமாதிரி வயசான கேசுங்கன்னு நினைச்சா, வயசுப் பசங்களும் அப்டித்தான் அலையுறானுங்க…ஒருத்தன் இதக் கைல வச்சிட்டு வண்டிச் சாவியத் தேடுறான்…ஒருத்தன் கை பேக்கைத் தேடுறான்…எத்தனையோ விதமான தேடல்…! இதெல்லாம் யாருக்குத் தெரியுது…அரசாங்கத்துல இதையெல்லாம் சொல்ல முடியுமா? பிராக்டிக்கலா கஷ்டப்பட்டுப் பார்த்தாத்தான் புரியும்…அடிக்கிற வெயிலுக்கு வியர்த்து ஊத்துது…தலை பூராவும் வியர்வை மழைல நனைஞ்சா மாதிரி. அப்டியே உள்ளே இறங்குது…சளி பிடிக்குது…இதெல்லாம் வண்டியப் பிடிக்கிற சார்ஜன்ட்கிட்டச் சொல்ல முடியுமா? அப்போ உயிர் முக்கியமில்லியா?ன்னு திருப்புறார்.

இந்தக் காயத்துக்குக் காயம் எதுவும் படக்கூடாதுல்ல. காயம் பட்டாலும் பொறுத்துக்கலாம். உயிர் முக்கியமாச்சே…அதத்தான் திருப்பித் திருப்பிச் சொல்றார். அகராதி பிடிச்சவன் கண்ணு மண்ணு தெரியாமப் பறக்குறான்…மோதுறான், சாகுறான்…எவன் சொன்னாக் கேட்குறான்? இந்தா பெரிசு, ய்ய்ய்யெங்களுக்குத் தெரியும்…நீ பொத்திட்டுப் போ…ங்கிறான் விரலை ஒரு மாதிரி அசிங்கமா வளைச்சு…? ஒரு மரியாதை அது இதுன்னு எதாச்சும் அவிஞ்ஞகிட்ட இருந்தாத்தானே? சிட்டிக்குள்ள இருபது இருபத்தஞ்சுலதான் வண்டியே ஓட்ட முடியுது….முப்பதத் தாண்டினாத்தான…? எந்நேரமும் டிராஃபிக் ஜாமாத்தானே இருக்கு? எங்க வேகமாப் போக முடியுது…வெய்யிலா கொளுத்துது…ஆளாளுக்கு தலைக் கவசத்தை மாட்டிக்கிட்டு, கழட்டினாங்கன்னா பேயறஞ்ச மாதிரி இருக்கானுங்க ஒவ்வொருத்தனும்…

பேயறஞ்சென்ன….பேயாவே இருந்தாலும் உறல்மெட் போட்டுத்தான் ஆவணும்…அதான் ரூலு…பேயென்ன வண்டி ஓட்டப் போவுதான்னு பார்க்குறீங்களா? பேய் மாதிரி ஓட்டிட்டுப் போகுறானுங்களே, அவுங்களச் சொன்னேன்…

அதெல்லாம் சும்மா சார்…ஒரு வாரத்துக்கு இப்டி டார்ச்சர் பண்ணுவானுங்க…பிறகு விட்ருவானுங்க…இதுக்கெல்லாம் வேறே நிறையக் காரணம் இருக்கு….நீங்கென்ன இன்னும் சின்னப் பிள்ளையாவே இருக்கீங்க…? இவிஞ்ளப்பத்தி நம்ம சனத்துக்குத் தெரியாதா என்ன? நம்ம உயிர் மேல நமக்கு இல்லாத அக்கறையா இவிஞ்ஞளுக்கு வந்திருச்சி திடீர்னு? காயத்துலேர்ந்து காப்பாத்துறதா சாயம் போடுறாங்க…

என்னென்னவோ சொல்கிறார்கள். எல்லாவற்றிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஜனங்கள் பாவம்தான். பாடாய்ப் படுகிறார்கள். அபராதமாய் ஐநூறைக் கொடுப்பதற்கு அந்தக் காசிற்குத் தலைக் கவசத்தை வாங்கி விடுவோமே என்று ஓடுகிறார்கள். கூட்டமான கூட்டம். ஒரே விற்பனைத் திருவிழாதான். ஜனங்களை எந்த ரூட்டில் மடக்கி வரவழைப்பது என்பது தொழில் செய்பவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

ஏ…ஓடியா…ஓடியா…ஓடியா…போனா வராது…பொழுது விடிஞ்சாக் கிடைக்காது….என்று தட்டிப் பறிக்கிறார்கள். எல்லாம் காலத்தின் கோலம்…

அவனவன் அவனவன் நிலைல என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ…சாமர்த்தியமிருந்தா உயிரோட உலாவு….இல்ல செத்துப் போ…யார் கேட்கப் போறா….ஒருத்தன் ஒருத்தனை மிதித்து, உருட்டி மேலே மேலே முன்னேறும் உலகம். மேலே போவதுதான் முக்கியம். எப்படிப் போகிறோம் என்பதல்ல.

யோசித்தார் ஞான சுந்தரம்…இனி வீட்டைச் சுற்றி இரண்டு கி.மீ. தூரத்தில் இருக்கும் பணிகளுக்கு தலைக் கவசம் அணிவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். இந்தத் தைரியமான முடிவுக்கு அவர் வருவதற்குக் காரணம் குறிப்பிட்ட அந்தச் சுற்றளவில் எங்கும் போலீஸ் நிற்பதில்லை என்பதுதான். எதற்குப் போட்டுப் போட்டுக் கழற்றிக்கொண்டு? மகா அவஸ்தை. எவனுக்குத் தெரிகிறது இந்தக் கஷ்டமெல்லாம்? சாதாரண மக்களைப் பாடாய்ப் படுத்துவதே இந்த அரசாங்கத்துக்கு வேலையாய்ப் போயிற்று. கிள்ளுக் கீரை இவர்கள்தான். சட்டத்துக்குக் கட்டுப் பட்டவர்கள். காரில் செல்பவர்களுக்கு அதெல்லாம் இல்லை. எதுவும் அவர்களைக் கட்டுப்படுத்தாது. அப்பாவிப் பொது ஜனம்தான் லா அபைடிங் சிட்டிசன்ஸ். பயந்து பயந்து வாழ்பவர்கள். தப்புச் செய்யாமலே. ஏதாவது தப்பாகி விடுமோ என்று. ஆட்டி வைப்பது சுலபம். சொன்னால் கேட்டுக் கொள்வார்கள். மாட்டு என்றால் மாட்டுவார்கள். கழட்டு என்றால் கழட்டுவார்கள். ஆஉறா…! நம் அதிகாரம்தான் எப்படிச் செல்லுபடியாகிறது?

உங்களுக்கு உயிர் முக்கியமா இல்லையா? உடம்பு முழுசா இருக்கிறது பிடிக்கலை போலிருக்கு அய்யாவுக்கு…ஜென்ரல் உறாஸ்பிடல்ல ஆக்ஸிடென்ட் செக் ஷனுக்குப் போய்ப் பாருங்க தெரியும். காலையும் கையையும் தூக்கி அந்தரத்துல மாட்டியிருக்கிறதைப் பாருங்க… அப்பத்தான் புத்தி வரும் உங்களுக்கெல்லாம்…

அன்று ஒரு நாள் எச்சரிக்கையோடு விட்டார் ஒரு சார்ஜன்ட். தனது பெரிய மனிதத் தோரணைதான் அவரை அப்படி இரக்கப்படுத்தி விட்டது அல்லது மதிப்பாக்கிவிட்டது என்று கொண்டார் இவர். வீடு திரும்பியவுடனே கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டார் ஞானசுந்தரம். முக முதிர்ச்சிக்கேற்றாற்போல் தலையும் வெளுத்திருந்தால் அதுவும் ஒரு பர்சனாலிட்டிதான். மசியடித்து மாசம் ரெண்டு தாண்டியிருக்குமே…! பின்னே வெளுக்காதா? ஈஈஈஈஈஈ…..அதுதான் இளிக்கிறது. என்னதான் தலையைக் கருப்பாக்கினாலும், முகம் காட்டிக் கொடுத்துவிடுகிறதே…பேசாமல் இப்படியே விட்டுவிட்டால் என்ன?

பலமுறை இந்த யோசனை வந்திருக்கிறதுதான். என்னவோ ஒரு தயக்கம். பையன் கல்யாணம் முடியட்டுமே…அதுவரை இப்படியே ஓடட்டும்…பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார். ஒரு முறை மசியடித்தால் குறைந்தது இரண்டு மாதத்திற்குத் தாங்குகிறதுதான். ஒரு மாதம் கழிந்த பொழுதில் மெல்ல இளிக்க ஆரம்பிக்கிறது. குளித்து முடித்த தலையை நன்றாகத் துவட்டிப் பரத்திக் கண்ணாடியில் பார்த்தால் நிறையத்தான் வெளுத்திருக்கிறது. அதுவும் வயதான, செல்வந்தர் சிவாஜிகணேசனுக்குப் போல் டிசைனாக வெளுத்திருந்தால் பரவாயில்லை. பர்சனாலிட்டி தூள் கிளப்பும். இது கண்டா முண்டா என்றல்லவா வெளுத்துக் கிடக்கிறது? பார்த்தால் அசடு போலல்லவா தெரிகிறது. நம் மீது பிரியம் உள்ளவர்கள் கூட சீ இவனென்ன இப்டியாயிட்டான் என்று ஒதுங்கி விடுவார்கள் போலிருக்கிறதே? கொஞ்சம் எண்ணெய்யைத் தடவி வாரிவிட்டால் சுமாராய் மறைந்து போகிறதுதான். என்ன ஒரு அதிசயம்?

எண்ணெய் தடவும்முன் முன்பக்கமாக வெளுத்திருப்பவற்றில் லேசாகச் சாயத்தைத் தடவி விட்டால் முகப்பார்வையின் முன்பகுதி கருப்பாகிவிடுவதால் இளமை கூடிவிடுகிறது. மேல் தலையில், பின்பக்கம், பக்கவாட்டு என்று வெளுத்திருந்தால் யார் கண்டு கொள்ளப்போகிறார்கள்? முன்னும் பின்னுமாகச் சுற்றி வந்து என்ன இப்டியாயிடுச்சு என்றா கேட்கப் போகிறார்கள்? ரொம்பக் கிழண்டு போயிட்டீங்களே…? என்று வருத்தப் படப் போகிறார்களா? இப்டி நினைப்பாங்களோ, அப்டி நினைப்பாங்களோ என்று எல்லாமே நாமே நினைத்துக் கொள்வதுதான். அவனவனுக்கு ஆயிரம் வேலை. நாம சாயம் அடிக்கிறோமா இல்லையான்னு கவனிச்சிட்டிருக்கிறதா பாடு!

ஆனாலும் இந்தச் சாயம் அடிக்கும் வேலை கொஞ்சம் கஷ்டம்தான். கொஞ்சமென்ன ரொம்பவும் கஷ்டம். சரி தொலைகிறது பார்பர் ஷாப்பிலேயே முடித்துக் கொண்டு வந்து விடுவோம் என்று பார்த்தால் எம்பதக் கொண்டா, நூறக் கொண்டாங்கிறான் அவன். கட்டிங்க பண்ணின கையோட தலையை உலுப்பி விட்டுட்டு சாயத்தப் பூச ஆரம்பிச்சிடறான். எண்ணெய்ப் பசை உள்ள தலைல கொண்டுபோய் சாயத்தப் பூசினா அந்தத் தலை என்னத்துக்காரது? அதுதான் நிறையப் பேறு சிவப்புத் தலையோட அலையுறாங்க….ஷாம்பூ போட்டு அலசி, காயவிட்டு, சுண்டக் காய்ஞ்ச பிறகு பூசினா கறுப்பும் நிக்கும், வெளுத்தா வெளுப்பும் நிக்கும். எண்ணெய்த்தலைல பூசினா அப்புறம் காலத்துக்கும் சிவப்புத் தலையோட செவ்விந்தியரா அலைய வேண்டிதான். நாமதான் வாயத் திறந்து சொல்லணும்…இப்ப வேணாங்க…போய் குளிச்சி, தலையை அலசிக் காய வச்சிட்டு வர்றேன்…பிறகு பார்த்துக்கலாம்னு…டை போடணுமேன்னு சொன்னாத்தான் அடுத்த நிமிஷமே அவன் பூச ஆரம்பிச்சிடுவானே…பார்பர் ஷாப்புல. அவனுக்குத் தேவை பைசா. லேசா இளநாக்கு அடிச்சாப் போதாதா? கட்டிங் பண்ற வேளைல தூங்குறதுதானே நமக்குப் பழக்கம். தூக்கக் கலக்கத்துல உளறிப்புட்டு, அப்புறம் முழிச்சா? நீங்கதான சார் சொன்னீங்க….ங்கிறான் அவன்.

வசுமதி, கொஞ்சம் இங்க வாயேன்……

என்னா, அங்கிருந்தே சொல்லுங்க….எனக்கு வேலையிருக்கு…

அட வான்னா….ரொம்பத் தேவைன்னாத்தானே கூப்பிடுவேன்….சொன்னாக் கேளு வா…

வேற வேலையில்ல உங்களுக்கு…நேரம் காலமில்லாம….இன்னும் பத்து வயசு போகணும்….

அடச் சீ! நீ என்னடீ…எதையாச்சும் நீயா நெனச்சிக்குவ போலிருக்கு….உன் மனசுலதான் அந்த நெனப்பு இருக்குன்னு தோணுது….நீதான் எனக்கு ஞாபகப்படுத்துற…

எத…?

எதயா? அதத்தான்….!

ஐயோ கடவுளே….அறுபது முடிஞ்சாச்சு….நீங்க இப்ப சீனியர் சிட்டிசன்….ஞாபகம் இருக்கட்டும்…உங்க பேர்ல இருந்த ஒரு எஃப்.டியை முந்தா நாள்தான் போய் சீனியர் சிட்டிசன் இன்ட்ரஸ்ட்டுக்கு மாத்திட்டு வந்தீங்க….நினைவு இருக்கா இல்ல மறந்து போச்சா…..?

அட, ராமா…ராமா…நீயா அடுப்படில இருந்தமேனிக்கே எதையாச்சும் பேசுவ போலிருக்கு…இந்த வயசுல அதுக்கு எவனாச்சும் கூப்பிடுவானா? அதுவும் இந்தப் பட்டப் பகல்ல….?

அப்போ ராத்திரின்னாப் பரவால்ல போலிருக்கு…?

சரியாச் சொல்லப் போனா பொம்பளைங்களுக்குத்தான் இதுல அதிகமாக ஆசை இருக்குன்னு தெரியுது…நீங்கதான் நாங்க மறந்திருக்கிற சமயமெல்லாம் எதையாச்சும் சாக்கு வச்சு அத ஞாபகப்படுத்திட்டிருக்கீங்க…ஆள விடு…நா அதையெல்லாம் விட்டு பத்துப் பன்னெண்டு வருஷத்துக்கு மேல ஆகுது…உனக்கே தெரியும்…ஒரு வேளை அதுனாலதான் உனக்கே இன்னமும் ஆசையிருக்கோ என்னவோ…ஐம்பதிலும் ஆசை வரும்னு பாட்டுக் கூட இருக்கு….அது சினிமாவுக்குச் சரி…நிஜ வாழ்க்கைல அந்த ஆசை கூடாதாக்கும்…உடம்பு பாழாப் போயிடும்….

அப்போ இதுக்கெல்லாமும் சினிமாவுல சொல்லித் தர வேண்டிர்க்கு…நம்ம ஜனங்களுக்கு எல்லாமும் சினிமாதான். அது வழி வந்தா மனசுல பச்சுன்னு உட்கார்ந்துக்கும்….அதுலயும் மனசுக்குப் பிடிச்ச கதாநாயகன் சொல்லிட்டா அது வேத வாக்கு மாதிரி…எனக்குத் தெரிய அம்பது வருஷமா நானும் பார்க்கிறேன்…இப்டித்தான் போயிண்டிருக்கு…சினிமாக்காராதான் எல்லாத்தையும் சாதிக்கிறா….

அவாளப் பார்த்துப் பார்த்துப் பொழுதக் கழிச்ச ஜனம் அப்டியேதான் இருக்கு…அதையும் சொல்லு…சொல்லப் போன நானெல்லாம் கூட அப்டிக் கெட்டுப் போனவன்தான்…என்ன, கெட்ட பழக்க வழக்கங்கள் எதுவும் படியல…அந்தமட்டுக்கும் தப்பிச்சது…அதுக்குக் காரணம் அந்தக் காலத்து சினிமா நல்லதக் கத்துக் கொடுத்தது..ஆனாலும் சினிமாப் பார்க்கிறதுலயே பெரும்பாலான காலமும் நேரமும் வீணாயிடுச்சே…அதை இப்போ திரும்பவும் சம்பாதிக்க முடியுமா? தூக்கம் முழிச்சு, தூக்கம் முழிச்சு ரெண்டாம் ஆட்டமாப் பார்த்துப் பார்த்துத்தானே உடம்பு இன்னைக்கு இப்டிக் கெட்டுக் கெடக்கு…சினிமாப் பார்க்கிறதுக்கான அந்த சக்தியை வேற நல்ல வழில திருப்பி விட்டிருந்தம்னா? வயசான காலத்துல அப்பத்தான் தெம்பா நடமாட முடியும்…குழந்தைகளுக்கான காரியங்களைத் தடையில்லாமச் செய்ய முடியும்னு யாரும் அறிவுறுத்தலயே…அதுக்காகத் தாய் தந்தையரைக் குறை சொல்ல முடியுமா? குறைஞ்ச வருவாய்ல குடும்பத்தை நடத்துற போராட்டமே அவுங்களுக்குப் பெரிசா இருந்தது அந்தக் காலத்துல…அங்க இங்கன்னு எங்கயும் வெளில கூட்டிட்டுப் போக முடியலே…நாலணா சினிமாக்குத்தானே போறான்னு விட்டுட்டாங்க….ஃபெயிலாகாமப் படிக்கிறான்தானேன்னு விட்டுட்டாங்க…அந்த இலவசக் கல்வியையும் அரசாங்கம் அன்னைக்குக் கொண்டு வரலேன்னா பாடு தாளமால்ல போயிருக்கும்…முத முதல்ல வெள்ளச் சட்டையும், ப்ளு ட்ரவுசருமா சீருடை போட்டுட்டு வந்தது இன்னமும் என் கண்ணுக்குள்ள அப்டியே இருக்கு…அறுபது ஆரம்ப காலம் அது….இந்த அறுபதுலயும் அதை நினைக்காம இருக்க முடியுதா? அந்த இலவசக் கல்வி இல்லன்னா நானெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி.யே கூடப் படிச்சி இருக்க முடியாது…அதுனாலதானே ஒரு வேலைக்கே போக முடிஞ்சிது…சர்வீஸ் கமிஷன்தானே அன்னைக்குக் காப்பாத்தினது…இல்லன்னா வாழ்க்கையே திசை மாறிப் போயிருக்குமே? மாடு மேய்க்கிற பையனும் பள்ளிக்கூடத்துக்குப் போயிப் படிச்சாகணும்ங்கிற உயர்ந்த எண்ணம். அந்த மஉறானுபாவனுக்குப் பின்னாடி காலம் எப்டியெல்லாம் ஆயிப் போச்சு…எதையும் வாயத் திறந்து சொல்ற மாதிரியா இருக்கு…

அன்னைக்கு அந்தச் சினிமாக் கிறுக்கை உதறிட்டு முழுக்க முழுக்கப் படிப்புல கவனத்தைச் செலுத்தியிருந்தா, இன்னும் பெரிய பெரிய உத்தியோகம், பதவி உயர்வுன்னு மேலே போயிருக்கலாம்…இப்பவும் ஒண்ணும் குறைஞ்சு போயிடலை…வாழ்வாதாரம் பாதிக்கப்படலைன்னு வச்சிக்கோ…பெற்றோர் செய்த புண்ணியம்…நாம தப்பிச்சோம்….அவ்வளவுதான்…

எம்புட்டோ பெரிவா எவ்வளவோ நல்லதச் சொல்லி வச்சிட்டுப் போயிருக்கா…அதல்லாம் கண்ணுக்குப் படாது…தேடி எடுத்துப் படிக்க ஏலாது…இப்டிப் போனவா வந்தவான்னு சினிமாக் கதாநாயகன் சொல்றதுதான் மண்டைல ஏறும்…என்னிக்கு இந்த லோகம் உருப்படுறது? இப்டித்தான் கழியும் எல்லாமும்…..சரி விடுங்கோ…ரொம்பவும் யோசிச்சா அப்புறம் மனசுக்குப் பெருத்த கஷ்டமாப் போயிடும்…சொல்லுங்கோ, என்ன வேணும்? எதுக்குக் கூப்டேள்?

யோசிக்கணும்டி…யோசிக்கத்தான் வேணும்…நம்மளமாதிரி யோசிக்கிறவா, பழசை மறக்காதவா இன்னும் நிறையப் பேர் இருக்கிறதுனாலதான் லோகத்துல இன்னமும் நல்லது நடந்திண்டிருக்கு…தெய்வ பக்தியும், தேச பக்தியும் மனுஷாளுக்கு முக்கியம்….அதை இந்தத் தலைமுறைக்கு நாம சொல்லத் தவறிட்டோம்….அதுனாலதான் என்னென்னவோ கஷ்டங்களை அனுபவிக்கிறோம்….நாளைக்கு நமக்குப் பின்னாடி இந்தத் தலைமுறையும் அந்தக் கஷ்டங்களை அனுபவிக்கும்….அப்போ உணருவா…அன்னைக்காவது மாற்றங்கள் வராதா? ஆனா அப்போ அதையெல்லாம் பார்க்குறதுக்கு நாம இருக்க மாட்டோம்…

சரி, போரும் வியாக்யானம்…எதுக்குக் கூப்டேள், சீக்கிரம் சொல்லுங்கோ…

உனக்கும் போரடிச்சிடுத்தா? போகட்டும்…. இங்க வா…இப்டி உட்காரு…நா திரும்பிக்கிறேன்…பின்னாடி கைபடாத எடத்துல கொஞ்சம் பூசி விடு….திட்டுத் திட்டா இருந்தா அசிங்கமா இருக்கும்….

இருந்தா இருந்திட்டுப் போறது…என்ன வேண்டிர்க்கு டையி கிய்யீன்னு….இந்த வயசுல….

செய்வன திருந்தச் செய்னு சொல்வாடி….அத எப்போ விடணும்னு மனசு சொல்லுதோ அப்போ விட்டுடறேன்…அது தானா ஒரு நாளைக்கு என்னை விட்டுப் போயிடும்….இப்போ பூசு…இந்தச் சீப்பால முடியை விலக்கி விலக்கி எங்கெல்லாம் வெள்ளையாத் துருத்திண்டு இருக்கோ அங்கெல்லாம் கருப்பாக்கு….மனுஷனுக்கு .மனசு வெள்ளையா இருக்கணும்டி, அதுதான் முக்கியம். இதெல்லாம் உலகத்துக்கு…உலகத்தோடு ஒட்ட ஒழுகல்….அந்தக் காலத்துல நல்லவைகளுக்குன்னு இதச் சொல்லி வச்சான்…இப்போ இதுமாதிரிப் பலதுக்கும் அர்த்தங்களே மாறிப் போச்சு இன்னைக்கு. ஒண்ணு தெரிஞ்சிக்கோ…மனுஷன் மனசுக்காக வாழ்றவன். எப்போ மனசு ஒண்ணை வேண்டாங்குதோ அப்போ அது தானா அவனை விட்டுப் போயிடும்…அதுவரைக்கும் எது தடுத்தாலும் நிக்காது…ஆக மனசைக் கன்ட்ரோல்ல வச்சிக்கணும்…..அதான் முக்கியம்….

அப்போ உங்களுக்குக் கன்ட்ரோல் இல்லன்னுதானே அர்த்தம்…?

இது அந்த வகையைச் சாராதுடி….இயங்கு சக்தி இது….அறுபதுலயும் சுறுசுறுப்பா வச்சிக்கிறதுக்கு உதவுற நிஜம்…சென்ட்ரல் மினிஸ்டர்லேர்ந்து, சாதாரணப் பொது ஜனம் வரைக்கும் யார் பூசல…சொல்லு….? எல்லாருக்கும் சாயம் ஒரு நாளைக்கு வெளுக்குமாக்கும்… அதுவரை பொறுத்தான் ஆகணும்…..

ஆனா ஒண்ணுன்னா….உங்களுக்கு முடி ரொம்ப அடர்த்தி….அப்டியே காடு மாதிரி இருக்கு இன்னமும்….எனக்கே பொறாமையா இருக்காக்கும்…

கூந்தலுள்ள சீமாட்டிதானே அள்ளி முடிய முடியும்…உனக்கு இப்போ முடியுமா? சொல்லு…ஒண்ணு செய்யலாம்…பேசாம நீ பாப் வெட்டிக்கலாம்….

நீங்க முதல்ல பூசறத நிறுத்துங்கோ…நா அதப்பத்திப் பிறகு யோசிக்கிறேன்…பாப் வெட்டிக்கணுமாம்ல பாப்பு….க்க்கும்…

நொடித்துக்கொண்டே மீதமிருந்த கொஞ்சூண்டை சுட்டு விரலில் எடுத்து என் மூக்கில் கீற்றாகத் தீற்றி விட்டு எழுந்தாள் வசுமதி.

இதென்னது…? கேட்டுக் கொண்டே மூக்கை நோக்கி என் கை அவசரமாய்ப் போனது.

திருஷ்டி…திருஷ்டி… - சொல்லியவாறே கொல்லைப்புறம் நோக்கி விருட்டென்று நகர்ந்தாள் அவள்.

திருஷ்டியா அது! இல்லை…இல்லை… சந்தோஷமான தருணங்களின் தெறிப்பு அது…!

அது அவளின் அன்பின் அடையாளம்…! (வெளியீடு - திண்ணை இணைய இதழ் 04.03.2012)

-----------------------------

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...