03 நவம்பர் 2013

“இருந்தாலும் அவர்தான் பெஸ்ட்”- கட்டுரை (காட்சிப் பிழை மாத இதழ் அக்டோபர் 2013)

(எஸ்.வி.சுப்பையா)

images (1)
---------------------------------images ---------kalaikoyil -----------------------------
வர் இந்த வேடத்தில் நடித்தபிறகு, வேறு எவருக்கும் அது எடுபடவில்லை. பொருந்தவுமில்லை. நடிகர்திலகம் உட்பட. எப்படிச் சொல்லப் போச்சு? கொச்சையாக, முணுக்கென்று அவரது ரசிகர்களுக்குக் கோபம் வருமா என்ன? கொதித்தெழுவார்களோ? அப்படியெல்லாம் இல்லை. காரணம் அவர்களும் அதை அறிவார்கள். திறமையை மதிக்கப் பழகியவர்கள். ஒவ்வொருவரிடமும் இருக்கும் அத்யந்த சிறப்புக்களை அறுதியிட்டுப் பிரித்து உணர்ந்து ரசிக்கக் கற்றவர்கள். அப்படியான எல்லோரையும் போற்றி மதிக்கவும் தெரிந்தவர்கள். அதனால் உண்மையான, தரமான பகிர்ந்துரையாடலை முறையாய் எதிர்நோக்குவார்கள். அவர்கள்தான் இன்று எல்லோரும் மூத்த தலைமுறையினராய் ஆகிவிட்டார்களே? இப்பொழுது பேசி என்ன செய்ய? கேள்வி விழுவது காதுக்குக் கேட்கிறது. அவர்களைச் சொல்வதன் மூலம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு, அந்தப் பழம் பெருமைகளை உணர்த்தியாக வேண்டியிருக்கிறது. காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து இதை இங்கே செய்தாக வேண்டிய அவசியம் இருப்பதாகவே தோன்றுகிறது.
நவீன இலக்கியத்தில், எப்படி சு.ரா. அவர்கள் வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதனின் சளசளப்பைப் போக்கி அவனைச் சிறந்த விவேகியாக மாற்றுகிறது என்று சொன்னாரோ, அதைப்போல பழைய திரைப்படங்கள் இன்றைய தலைமுறையினருக்குத் தரமான ரசனையையும், நல்ல திரைப்படங்களை அடையாளம் கண்டு கொள்ளும் திறமையையும், , கட்டுப்பாடான வாழ்க்கை முறையையும், ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், குடும்ப அமைப்பின் மேன்மைகளையும் போதிக்கும் தகுதி வாய்ந்தவை என்று சொல்ல வேண்டியதாகிறது.
ஒரு நிதானமான, சுபாவியான வாசகனாய் நின்று சற்றே உங்கள் சித்தத்தைக் கொஞ்சம் எனக்குக் கடன் கொடுங்கள். ஆர்வத்தோடு கடக்கும் வரிகளில் உங்கள் கண்களையும் சிந்தையையும் ஓட விடுங்கள். என்னதான் சொல்லுகிறான் பார்ப்போமே என்று கூடவேதான் வாருங்களேன்.
வைத்திருந்த தலைப்பாகை புஸ்ஸென்று உப்பியதுபோல் பெரிதாகத் தெரிந்தது. முறுக்கிய மீசை அளவில் சிறியதாக அமைந்து அதற்கான கம்பீரத்தைக் குறைத்தது. அதுவும் சேர்ந்து பேசினால்தான் அந்த மிடுக்கு. இதை அந்த வேஷத்தில் அவரிடம் உணர்ந்தவர்கள் இங்கே சற்றுச் சிணுங்கினார்கள். கற்பனை செய்து கோர்த்து, பாடலாய் எழுப்பும் வரிகள் லட்சியபாவத்தின் வீர்யத்தை விட, மென்மையையும், தன்மயமான நடிப்பின் அடையாளத்தையும் மட்டுமே முனைப்பாய்ப் பிரதிபலித்ததைச் சட்டென்று உணர்ந்து கொண்டார்கள். கண்களின் ஓரப் பார்வையும், பக்கவாட்டுத் திரும்புதலும், பாடலுக்கு ஏற்ற தலையசைப்பும், வைத்திருந்த மீசைக்கு உகந்த உதட்டோரச் சிரிப்பும், யாராக இருந்தாரோ அவரை முழுமையான, கம்பீரமான வீச்சோடு நூறு சதவிகிதம் முன் கொண்டு நிறுத்தாமல், அவரின் நடிப்புத் திறனை மட்டுமே முன்னிறுத்தி, பழகின ரசிகனுக்கு, அவராய்ப் பார்க்க வைத்து அந்தப் பாத்திரத்திற்கு ஒரு மெல்லிய புறக்கணிப்பை உண்டாக்கியது. இருந்தாலும் அவரது ரசிகர்கள் அதை வெளிப்படையாய்ச் சொல்லத் தயங்கினார்கள். நம்மவரை நாமளே விமர்சிப்பதா? என்று மனம் பொத்தி, கைதட்டி ஆரவாரித்து மேல் பூச்சுப் பூசினார்கள்.
அவரை விட நாம் இதை நன்றாகச் செய்திருக்கிறோமா, இல்லையா என்கிற சந்தேகத்தை, மனதுக்குள் அவருக்கே இவைகள் தோற்றுவித்தன. அவருக்குமே அப்படித் தோன்றி உறுத்தியிருக்கும்போது, காலகாலமான அவரது ரசிகர்களுக்கு நெருடாமல் இருக்குமா? சமைப்பவர்களைவிட, கைபாகத்தை உண்டு ரசித்தவர்களுக்குத்தானே தெரியும் சமையலின் வாய் ருசி? திறமையை மதிக்கப் பழக்கப்பட்டவர்களாயிற்றே அவர்கள்? அப்படிப்பட்டவர்கள், எல்லாமும் எங்களவரிடம் மட்டுமே சர்வானுபவ அடக்கம் என்பதாகக் கொள்வது கண்மூடித்தனமாகாதா? அறிவீலித்தனமாகி விடாதா? அதனால் அவர்கள் சொன்னார்கள் ஒன்று கூடி.
“இருந்தாலும் இதுல அவர்தான் பெஸ்ட்…ஒத்துக்கிறோம்…”
வெளிப்படையாய்ச் சொல்லித்தான் விட்டார்கள். பெருந்தன்மையாய் ஏற்றுக் கொள்வதுதான் திறமைசாலிக்கு அழகு. அவரது படையினருக்கும் பெருமை. பேச்சு முடிந்ததய்யா அத்தோடு…!
இதே நிலை அவருக்கு இன்னொன்றிலும் ஏற்பட்டது. அது தொழுநோயாளி முதியவராக, ஒன்பதில் ஒன்றாக அவர் பாத்திரமேற்றது. உடம்பு முழுக்க மறைத்துப் போர்த்திய போர்வையோடு, எழுந்து நடக்க இயலாமல், மெல்ல மெல்ல நோவோடும் வேதனையோடும் நகர்ந்து செல்லும் காட்சி. பார்க்கவே பரிதாபமாய்த்தான் இருந்தது. எந்த மனிதனுக்கும் இம்மாதிரியான கேடு வரக்கூடாது என்று மனசு ஆதங்கப்பட்டதுதான். நல்ல வித்தியாசம் காட்டினார். மறுப்பதற்கில்லை. நடிப்பு உயிர்மூச்சாயிற்றே…! இருந்தாலும் ரத்தக் கண்ணீரை அடிச்சிக்க முடியாதுப்பா….என்றார்கள் இங்கேயும்.
முதல் போட்டியில் முதலாமவரே முந்தி நின்றார். இரண்டாவதிலும், அந்த வேறொருவரே முன்னிலை வகித்தார். . அது நியாயம்தான் என்று இவரும்தான் புரிந்து கொண்டார். அதுதான் பெருந்தன்மை. தன் திறமைமேல் நம்பிக்கை கொண்ட ஒருவனின் தர்க்க நியாயம். காரணம் அவர்களின் ஒன்று கூடிய நாடகப் பயிற்சி. தொழில் தர்மம். ஒருவரை ஒருவர் மிஞ்சும் திறமை, முனைப்பு. அதில் அவர்களுக்கு ஏற்பட்ட பிரிக்க முடியாத நட்பும் அன்பும்.
அந்தவகையில் எல்லோராலும் ஒரு மனதாக, ஒன்று கூடிப் புரிந்து கொள்ளப்பட்டவர் திரு எஸ்.வி.சுப்பையா அவர்கள். அந்த இன்னொருவர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, நடிகர்திலகம் அவர்கள். முன்னவர் இட்ட அந்த வேடம் தான் சுப்ரமண்யபாரதியார். பெயரை உச்சரிக்கும்போதே நமக்குள் ஒரு கம்பீரம் தொனிக்கிறதா? அதை அப்படியே கொண்டு வந்து கண் முன் நிறுத்தியவர் அவர். அந்தப் பளீரென்ற சிரிப்பை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? தீட்சண்யமான பார்வையைக் கணக்கிட்டிருக்கிறீர்களா? கண்டு அனுபவித்திருக்கிறீர்களா? நடிப்பிற்கு இலக்கணம் வகுப்பதற்காகவே இவர்களுக்கெல்லாம், இம்மாதிரியான சிரிப்பும், புன்னகையும், மென்னகையும், பார்வையும், நடப்பும், இருப்பும் கை வந்ததோ? வியந்துதான் போவீர்கள்.
நல்லா, பிரமாதமாப் பண்ணியிருக்காரேப்பா…இவர் படமெல்லாம் பார்க்கணுமே… ஆர்வம் துள்ளுகிறது என் மகனுக்கு. இதே எதிர்பார்ப்பு இன்றைய இளைய தலைமுறையினர் பலரிடமும் உள்ளதுதான். சகித்து, அமிழ்த்தி, உட்கார்த்தி வைத்துவிட்டால், பார்க்க ஆரம்பித்துவிட்டால், புரிந்து உணர்ந்து கொள்கிறார்களே…! நாம்தான் சொல்லியாக வேண்டும். வேறு யார் சொல்வது? உணரவைப்பது? தவறவிட்டவர்களுக்கு கண்டிப்பாக இது நஷ்டம்தான்.
ர்வ வல்லமையுள்ள, தெய்வத்தின் சாட்சியாக, நான் சொல்வதெல்லாம் உண்மை…. என்று சொல்லித்தான் ஆரம்பிக்கும் அந்த நீதிமன்றக் காட்சி. அந்தக் காலத்தில் இதைக் கோர்ட் சீன், கோர்ட் சீன் என்று கொண்டாடுவார்கள்.
உமது பெயர்?
தமிழ்க்கவிஞன் சுப்ரமண்யபாரதி…
உமக்குத் தொழில்?
எமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்…
சிதம்பரம்பிள்ளை, சுப்ரமண்யசிவா இருவரையும் உமக்குத் தெரியுமா?
சூரியனையும், சந்திரனையும் தெரியுமா என்று கேட்கிறீரே? இருவரும் எனது இரண்டு கண்மணிகள். இவர்களை இழந்தால் பாரதி பார்வையற்ற குருடனாவான்…
இவர்கள் பிரசங்கங்களை நீர் கேட்டிருக்கிறீரா?
நான் மட்டுமென்ன, நாடே கேட்டது, நல்லுணர்வு பெற்றது…
நீர் உமது இந்தியா பத்திரிகையில் அவற்றினை வெளியிட்டதுண்டா?
ஓ! அதைவிட வேறு வேலையென்ன இருக்கிறது எனக்கு? என்னுடைய பத்திரிகை மட்டுமல்ல. இந்தியாவிலுள்ள தலைசிறந்த பத்திரிகைகளெல்லாம் அதை வெளியிட்டன…
அது அரச நிந்தனையான பேச்சென்று இந்தக் கோர்ட் கருதுகிறது..
அவர்கள் அரசரைப் பற்றிப் பேசவேயில்லை. எங்கள் நாட்டைப்பற்றியும், அதன் வருங்கால மகத்தான எதிர்காலத்தைப்பற்றியும்தான் பேசினார்கள்..
அப்போது தடை உத்தரவு அமுலில் இருந்தது..அதை நீங்கள் அறிவீர்கள் இல்லையா?
ம்…பேசிக் கொண்டார்கள்…
அதை மீறுவது குற்றம். அதனால் ஆபத்து வரும் என்று நீர் உமது நண்பர்களுக்குச் சொன்னீரா?
சத்தியப் போர் செய்யும் சுதந்திர வீரர்கள் ஆபத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. நாமார்க்கும் குடியல்லோம்…நமலையஞ்சோம்…
உமது பத்திரிகையில் நீர் அரசாங்கத்தைத் தாக்கி எழுதியதால் உம்மை ஓர் ராஜத் துவேஷி என்று நான் குற்றம் சாட்டுகிறேன்…
கூறிக் கொள்ளும்…நன்றாக நானூறு முறை கூறிக்கொள்ளும்…அதைப்பற்றி எமக்குக் கவலையில்லை…
சரி…நீர் போகலாம்…
போகிறோம்…..!!!
போகிறோம் என்று கூறிக்கொண்டு கைத்தடியை ஒரு முறை உயர்த்தி மீண்டும் சத்தமெழ ஊன்றி கம்பீரமாய்ச் சிரித்துக் கொண்டே பாரதியார் வெளியேறும் காட்சி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்து விடும். கை தட்டல் பறக்கும் இந்தக் காட்சியில். ஒரே ஒரு காட்சியில் தோன்றினாலும் கூட படம் முழுக்க நினைக்க வைத்து விடுவார் தன் ஆழமான நடிப்பின் மூலம். பாரதியாராகவே வாழ்ந்திருப்பார் எஸ்.வி.சுப்பையா. அந்தப்படத்தில் இதைப்போல இன்னும் பல காட்சிகள் உண்டு அவருக்கு. அழுத்தம் திருத்தமாக மேற்கண்ட வசனங்களை அவர் பேசும் காட்சியும், அதற்கு அவர் காண்பிக்கும் முகபாவங்களும், கையசைவுகளும், உடல் மொழியும், இனித் தமிழ்த் திரைப்படக் காலத்தின் கடைசி நாள் வரைக்கும் இவர்தான்யா பாரதியார் என்று ஸ்தாபித்து, நினைக்க வைத்துவிட்டது எல்லோரையும். யாரேனும் மறுக்க முடியுமா இந்த உண்மையை?
கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்திற்கு சித்ரா கிருஷ்ணசாமி திரைக்கதை எழுதியிருந்தார். எஸ்.டி. சுந்தரம் வசனம் எழுதியிருந்தார். இன்னின்ன நடிகர்கள் இந்த இந்தப் பாத்திரமேற்கப் போகிறார்கள் என்று முடிவு செய்த பின்னால் அவர்களுக்கேற்ப எழுதப்பட்ட வசனமா? அல்லது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளின் போராட்ட குணமும், செயல் வீரமும் இவ்வாறிருந்தன என்று பறைசாற்றவென்றே அமைக்கப்பட்ட காட்சிகளுக்கு ஏற்ப எழுதப்பட்ட வசனங்களா என்று நம்மை வியக்க வைக்கும். இரண்டில் எது முந்தியது என்று ஆராய்ந்தோமானால், நல்ல காய்கறிகளை, சுவையாய்ச் சமைத்துப் போட்டவர்கள் இவர்கள் என்றுதான் நாம் நினைப்போம். சுதந்திர எழுச்சியும், தேசப்பற்றும் அழியாமல் இருக்க வேண்டுமானால் இந்தப் படத்தை எல்லாப் பள்ளிகளிலும் தவறாமல் மாதம் ஒருமுறையாவது போட்டுக் காட்ட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்வேன் நான். வெறும் வியாபாரத்திற்காக எடுக்கப்பட்ட படமல்ல இது. உண்மையான தேசப்பற்றின் மீது எழுந்த அழியாத சித்திரம். பி.ஆர். பந்துலு அந்த வழி வந்த அற்புதமான இயக்குநர்.
ய்யா பாரதி, போய்விட்டாயா? சுதந்திரம் வாங்காமல் சாக மாட்டேன், சுதந்திரம் வாங்காமல் சாக மாட்டேன் என்று அடிக்கடி கூறுவாயே அய்யா…எப்படியய்யா அதை மறந்தாய்? எப்படி மறந்தாய்? நீர்தான் கம்பன், நான்தான் சோழன் என்று அடிக்கடி என்னைக் கேலி செய்வாயே அய்யா. திலகர் மறைந்தார், அரவிந்தர் துறவியானார், நீ அமரனாகிவிட்டாயா? ஐயோ…எல்லோரும் என்னை இப்படித் தனி மரமாக்கித் தவிக்க விட்டுப் போய்விட்டீர்களே…” என்று முதுமையில் சிதம்பரம்பிள்ளை தன் வீட்டில் அமர்ந்து புலம்பும் இந்த உருக்கமான காட்சியில் சுவற்றில் மாட்டியுள்ள பாரதியின் படம் உயிர்பெற்று பிள்ளையைப் பார்த்துக் கண்ணீர்விடுவதுபோலவும், இடது தோள் தலைப்பாகைத் துணியால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் படமாய்க் காட்சி ரூபமாவது போலவும் வரும் இக்காட்சியில் கரையாதவர் மனம் உண்டா? தியேட்டரில் கண்ணீர் விட்டு அழுகாதவர்தான் யார்?
கப்பலோட்டிய தமிழன் வெளிவந்த புதிதில் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை அப்படம். பெரிய ஏமாற்றமாய் முடிந்தது. சிவாஜிக்கே அதை அவர் பலரிடத்திலும் சொல்லி வாழ்நாளெல்லாம் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு மனத்தாங்கலாகிப் போனது. நியூஸ் ரீல் போலிருக்கிறது என்றெல்லாம் விமர்சனங்கள். ஆனால் ஒன்று. அத்தனை கடுமையான உழைப்பில் அப்படி ஒரு படத்தை எடுப்பது என்பது யாராலும் இயலாது. உண்மையான தேசப்பற்று இருந்தாலொழிய அது சாத்தியமில்லை. வெறும் வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட படமல்ல அது. காலத்துக்கும் காக்கப்பட வேண்டிய ஆவணப் பெட்டகம்.
இப்பொழுது இப்படத்தைப் பார்ப்பவர்கள் அப்படித்தான் உருகிப் போகிறார்கள். எப்படியெல்லாம் அச்சு அசலாக, வாழ்ந்திருக்கிறார்கள் என்று பிரமிக்கிறார்கள். இன்றும் இப்படம் பற்றி அறியாத இளைய தலைமுறையினர் பலர் உண்டு. எப்படி ஒரு கர்ணன் வந்து மீண்டும் வெற்றிக்கொடி நாட்டியதோ, அதேபோல் இந்தப்படமும் தற்போது வெளியிடப்பட்டால் அதே அளவுக்கான வெற்றியை ஒரு வேளை சந்திக்கத் தவறினாலும், நஷ்டம் ஏற்படுத்தாமல், ஒரு நல்ல காரியத்தை இந்த நாட்டிற்குச் செய்தோம் என்கிற திருப்தியையும், நிறைவையுமாவது நிச்சயம் ஏற்படுத்திக் கொடுக்கும்.
எஸ்.வி.சுப்பையாவைப்பற்றியதான இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே அவரது இந்தப் பாரதியார் நடிப்பைப்பற்றிப் பேசித் துவக்கியதற்குக் காரணம் அவரைப் நினைப்போர் எவராயிருந்தாலும், முதலில் அவர்களுக்கு நினைவுக்கு வருவது அவரது இந்தப் பாரதியார் வேடமும், நடிப்பும், அதன் அருமையான சித்தரிப்பும்தான். அதற்குப் பின் எல்லோருக்கும் பாரதியார் என்றால் சுப்பையாதான் நினைவுக்கு வந்தார். இன்றைக்கும் அது தொடரத்தான் செய்கிறது. அத்தனை ஆழமான அழியா முத்திரை அது. இதேபோல் அவருடைய அத்தனை படங்களிலும் தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரம் அனைத்திற்கும் உயிர் கொடுத்து உலவ விட்டிருப்பவர் அவர். நடிப்பைப் பிழைப்பாகச் செய்தவர்கள் அல்லர் அந்தக் கால நடிகர்கள். அதை ஆத்ம நிவேதனமாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். உயிருக்கு இணையாகப் போற்றிப் பாதுகாத்துப் பொக்கிஷமாய் நின்றார்கள்.
1946 லேயே விஜயகுமாரி என்ற திரைப்படத்தின் மூலமாய் நடிக்க வந்து விட்டவர் என்று ஒரு செய்தி காணக் கிடைக்கிறது. சக்தி நாடக சபா, டி.கே.எஸ். நாடகசபா என்று நாடகங்களில் நடித்து, 1950 க்குப் பிறகு சிறு சிறு வேடங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர்களான எம்.ஆர்.ராதா, பாலையா, நாகையா, எஸ்.வி.ரங்காராவ் இவர்களின் வரிசையில் மிக முக்கியமானவராய்த் திகழ்ந்தவர் எஸ்.வி.சுப்பையா அவர்கள். அப்படியான திறமையான நடிப்பை வெளிப்படுத்திய படம்தான் பாதகாணிக்கை. நமச்சிவாயம்பிள்ளை என்கிற அந்தக் கதாபாத்திரத்தில் வந்து பெரியமனுஷத் தன்மையோடு கம்பீரமான ஆகிருதியாய், நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையுமாய், நரைத்து முறுக்கிய மீசை, பெரிய குங்கும சந்தனப்பொட்டு, காதில் கடுக்கன், முழுக்கைச் சட்டை, பஞ்சகச்சம் என்று படுபொருத்தமாய், தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி, வெளுத்து வாங்கியிருப்பார் சுப்பையா. அவரது கம்பீரமான தோற்றமும் அந்த அனுபவமான நடிப்பும் யாராலும் மறக்க இயலாதது. எல்லோராலும் ஏறக்குறைய மறக்கப்பட்டுவிட்ட அந்தப் படம் தமிழ்த் திரைப்படங்களில் முக்கியமான ஒன்று. அதிலுள்ள வீடுவரை உறவு, வீதிவரை மனைவி…என்ற பாடல் மட்டுமே இன்றுவரை நினைவில் உள்ளது. அந்தக் காட்சியில் நொண்டியாய் நடிக்கும் அசோகனைக் கூட ஏறக்குறைய எல்லோரும் மறந்துதான் விட்டார்கள். இம்மாதிரிப் பல முக்கியமான படங்கள் மூத்த தலைமுறை ரசிகர்களாலேயே மறக்கப்பட்டும், திரையரங்குகள், தொலைக்காட்சிகள் இவைகளும் மறந்து போய், அப்படங்களுக்கான படச்சுருள்கள் இருக்கின்றனவா இல்லையா என்கிற ஏக்கத்தை எப்பொழுதும் மூத்த ரசிகனின் மனதில் இன்றும் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.
நடிகர்திலகம் சிவாஜிகணேசனுடன் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாகப் பாகப்பிரிவினை, பாலும் பழமும், பாவ மன்னிப்பு, இரும்புத் திரை, மங்கையர் திலகம், கப்பலோட்டிய தமிழன், பொன்னூஞ்சல், நீதி போன்ற படங்கள். ஜெமினிகணேசனுடன் நடித்த “காலம் மாறிப் போச்சு” திரைப்படம்தான் இவருக்குத் திருப்பு முனையாக அமைந்திருக்கிறது.
நடிப்பை விடத் தன்னை ஒரு தேர்ந்த விவசாயியாகப் பிறர் அறிவதைத்தான் பெருமையாகக் கருதியிருக்கிறார் என்று அறிகிறோம். சென்னைக்குச் சற்றுத் தள்ளியிருக்கிற காரனோடை என்கிற சொந்தப் பண்ணை இடத்தில் உள்ள அவரது நிலத்தில்தான் உழுது விவசாயம் செய்திருக்கிறார். தன்னை ஒரு நடிகன் என்று பார்ப்பதை விட விவசாயி என்று கொள்வதையே பெரிதும் விரும்பியிருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அங்குதான் இருந்து கழித்திருக்கிறார். பௌர்ணமி, அமாவாசை, கிருத்திகை, சஷ்டி நாட்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், விரதம் இருப்பார் என்றும், காபி, டீ அருந்துவதில்லை என்றும் கூழ் மட்டுமே கொண்டு வந்து குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றும் அறிகிறோம். சிவாஜியோடு சேர்ந்து நடித்த நானே ராஜா என்ற திரைப்படத்தைப் பழைய தலைமுறையினரே பார்த்திருக்க வாய்ப்பில்லைதான். அதிலே சுப்பையாதான் வில்லன். முகத்திலுள்ள கள்ளமும், கோபமும், வன்மமும், ரகசியமான பழிச்சிரிப்பும் கலந்த அவரது முரணான நடிப்பு நம்மை அவர் மீது அப்படி வெறுப்பு கொள்ளச் செய்யும். அந்த அளவுக்கு சின்சியராக அந்தப் பாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கூடவும் சில படங்களில் நடித்திருக்கிறார். பணத்தோட்டம், இதயக்கனி, தாலி பாக்கியம் என்று. கண்கண்ட தெய்வம், ஆதிபராசக்தி, சொல்லத்தான் நினைக்கிறேன், அரங்கேற்றம், இன்னும் பல படங்கள் உண்டு., அரங்கேற்றத்தின் அய்யர் கதாபாத்திரத்தை யாரேனும் மறக்க முடியுமா? இல்லை நத்தையில் முத்து வரதாச்சாரி காரெக்டரைத்தான் விட்டு விட முடியுமா?
ஆதிபராசக்தியில் அபிராமிப் பட்டராக எத்தனை அழுத்தமான நடிப்பைக் கொடுத்தார். இவர் பாடினா அமாவாசை அன்னைக்கு என்ன, எந்த நாளிலும் நிலவு வரத்தான்யா செய்யும் என்பதுபோலல்லவா இருந்தது அந்த நடிப்பு. சொல்லடி அபிராமி பாடலை யாராலேனும் மறக்க முடியுமா? டி.எம்.எஸ். தன் கணீர்க் குரலை இவருக்குக் கொடுத்திருந்தாலும், அந்த இடத்தில் அந்தப் பாத்திரம்தானே நின்றது…! ஏதோவொருவகையில் மீண்டும் மீண்டும் அந்தக் காட்சிகளுக்காக, அந்தக் கதாபாத்திரத்திற்காக, அந்தத் திரைப்படத்தைத் திரும்பவும் பார்க்கத் தூண்டும் எழுச்சியை ஏற்படுத்தினார்கள் அந்தக் கால நடிகர்கள். அதில் சுப்பையா மிக முக்கியமானவர் என்றால் மிகையாகாது.
ஜெமினிகணேசனுடன் நடித்த மணாளனே மங்கையின் பாக்கியம், பார்த்திபன் கனவு, அதில் ஓடக்காரப் பொன்னனாக வரும் அவரது நடிப்பு, ஏ.வி.எம்.மின் ராமு திரைப்படத்தில், புத்தி பேதலித்தவராகக் காட்டில் திரிந்து கொண்டிருக்கும் பைத்தியமாக வரும் அவரது நடிப்பு, இதையெல்லாம் நம்மால் அத்தனை எளிதில் மறந்துவிட முடியுமா?
பாவ மன்னிப்புப் படத்தில் ஃபாதர் ஜேம்ஸ் கேரக்டரில் எத்தனை கச்சிதம்? அண்ணா, அண்ணா என்று எம்.வி.ராஜம்மா அவரிடம் வந்து பாசத்துடன் பேசும் காட்சிகளும், அதற்கு சற்றும் குறையாத நேசத்துடன் அவர் பதிலுரைக்கும் தன்மையும், மறந்துவிடக் கூடிய காட்சிகளா அவைகள்? ஃபாதர் ஜேம்ஸ் அவர்களிடம் டிரைவராக பாலையா போய்ச் சேர்வார். இதையே பாகப்பிரிவினை படத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அந்தப் பெரிய குடும்பத்தின் தலைவனாக இருப்பார் பாலையா. அருகில் மரியாதையான தம்பியாய் சுப்பையா நிற்பார். மனைவியாக எம்.வி.ராஜம்மா நடிப்பார். ஒரு குறிப்பிட்ட நடிகர்களையே அடுத்தடுத்த படங்களில் பார்த்திருந்த போதும், அந்தந்தக் கதாபாத்திரங்களாகவேதானே பார்த்தோம். இது பொருத்தமாயில்லையே என்று ஏதாவது ஒன்றில் தோன்றியிருக்கிறதா? எப்படிப் படத்துக்குப் படம் அப்படி உரு மாறினார்கள்? எந்த வாழ்க்கை அனுபவம் அவர்களுக்குக் கை கொடுத்தது? எது அவர்களது உடல்மொழியை மாற்றியது? என்னதான் இயக்குநர் கதை சொல்லி, காட்சிகளை விவரித்தாலும், இயக்கினாலும், இந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு அவற்றை முழுமையாக உள்வாங்கி, இப்படியா அதாகவே வாழ முடியும்? வாழ்ந்தார்களே…!
பாலும் பழமும் திரைப்படத்தில் சிவாஜியை வளர்த்த தந்தையாக வருவாரே?
ஊரிலிருந்த வந்த டாக்டர் ரவி, அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து, ஆதுரமாகக் கையைப் பிடித்துக் கொண்டு, முகத்தில் மகிழ்ச்சியும் மரியாதையும் பொங்க, அய்யா….நல்லாயிருக்கீங்களா? என்று ஆவலாய்க் கேட்க, அந்த மரியாதையையும், அன்பையும், பாசத்தையும் புரிந்து கொண்ட பெரியவராய்….அவர் தலையைத் தடவியவாறே….பாசம் பொங்கச் சிரித்துக் கொண்டே, “நல்ல்ல்லா இருக்கேன்….”என்று அழுத்தமாக அவர் சொல்லும் அந்த ஒரு காட்சி போதுமே…மொத்தப் படத்திற்கும்…..
பாகப்பிரிவினை படத்தில் பாலையாவுக்குத் தம்பியாய் வரும் பாத்திரம் என்ன சோடை போனதா? கிராமத்தான் என்றால் அசல் கிராமத்தான் தோற்றான் போங்கள்….அந்தப்படத்தில் எவரையேனும் அப்படி நாக்கு மேல் பல்லுப்போட்டு ஒரு குறை சொல்லி விட முடியுமா? அவருக்குப்பின் அந்தப் பாத்திரத்தில் நாம் வேறு யாரையேனும் நினைத்துப் பார்க்க முடியுமா? அது அவரது உண்மையான நடிப்பிற்குச் செய்யும் துரோகமாகாதா?
இரும்புத் திரை படத்தில் சிவாஜிக்கு அண்ணன் சரவணனாக வந்து, விளாசுவாரே நடிப்பில். அப்பா, சித்தப்பா வந்திருக்காங்க….என்று பையன் மில் வாசலுக்கு வந்து சொல்ல, அப்டியா….? என்று சந்தோஷம் பொங்க அந்தச் சின்னப் பையன் கன்னத்தில் தட்டிக் கொண்டே ஆவலாய் வீடு வரும் காட்சியும், பாசம் பொங்க இருவரும் கட்டிக் கொள்ளும் காட்சியும் கண்ணில் நீர் வராதவர் யார்? ஒரு சினிமாப்படத்தில் இத்தனை தத்ரூபமா? சொந்த வாழ்க்கையின் ஒரு குடும்பம் போல், அண்ணன் தம்பிகள் போல்….எப்படி இவர்களால் இப்படி வாழ முடிகிறது. வெவ்வேறு நாட்களில், மாதக் கணக்கில் படப்பிடிப்பு செய்யப்பட்ட ஒரு கதையில், மொத்தப் படத்திற்கும் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல், வித்தியாசம் தெரியாமல், தொடர்ச்சி குன்றி விடாமல், அந்தக் கதாபாத்திரமாகவே எப்படி வாழ்ந்தார்கள்?
இத்தனை வருஷமா உன் காலடியிலேயே நாயாட்டமா கெடந்தனேய்யா…எந்தம்பி உன்னைப் பத்திச் சொன்னதெல்லாம் சரியாத்தான்யா போச்சு..எந்தம்பியப் பத்தி எதாச்சும் பேசினே….என்றவாறே ரங்காராவின் கோட்டை இழுத்துப் பிடித்துத் தொங்குவாரே…அந்தக் காட்சி ஞாபகமிருக்கிறதா?
எல்லாக்குழப்பமும் தீர்ந்து, முதலாளி ரங்காராவ் கடைசியில் திருந்தி, தன் மகள் வைஜயந்திமாலாவை சிவாஜிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கையில், அந்தக் கல்யாண ஊர்வலத்தில் இரு குடும்பத்தாரும் எதிரெதிரே வந்து நின்று மணமக்கள் இவர்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பிறகு, முதலாளியை நோக்கி ஒரு பணிவான சிரிப்போடு பவ்யமாய் அடியெடுத்து வந்து, ரங்காராவைப் பதமாய்க் கட்டிக் கொள்வாரே, அந்தக் காட்சியை மறந்து விடுவீர்களா யாரும்?
சின்னச் சின்னக் காட்சிகள்தான் எனினும், அதனை எடுத்த விதமும், அதற்கென அமைந்த நடிகர்களும், இயக்குநர்கள் நினைத்து, கற்பனை செய்த அளவுக்கு மேலும் அல்லவா உயர்த்திக் காட்டினார்கள்?
தன் வாழ்நாளில் மதிப்பு மிக்க ஒரு நடிகராகவே இருந்து பிரிந்த எஸ்.வி.சுப்பையா அவர்கள் கடைசியாக ஒரு சொந்தப் படம் எடுத்தார். அதற்குக் கூட நட்பின் காரணமாக சிவாஜி அவர்கள் ஊதியம் பெற்றுக் கொள்ளவில்லை என்ற நல்ல செய்தி நமக்குக் கிடைக்கிறது. இன்னொரு பிறவியில்தான் அவருக்கு என் கடனை அடைக்க வேண்டும் என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறினாராம் சுப்பையா அவர்கள்.
அது ஒரு வெற்றிப்படம். அமைதியான, அழகான, அடக்கமான படம். அந்தப் படத்தில் பனைமரமேறும் சாமுண்டியாக நடிகர்திலகம் நடித்திருப்பார். சுப்பையா அண்ணன் மேல் கொண்ட மதிப்பின் காரணமாக, உயர்ந்த மனிதன் படத்தில் அப்போது நடித்துக் கொண்டிருந்த நடிகர்திலகம் அவர்கள், ஏ.வி.எம். நிறுவனத்தில் பர்மிஷன் வாங்கிக் கொண்டு இடையிடையில் வந்து தாமதமின்றி முடித்துக் கொடுத்தாராம். அவ்வளவு மதிப்பு, மரியாதை.
காவல்தெய்வம் என்ற அந்தப்படத்தை மூத்த தலைமுறையினரே பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. சிவகுமார், லட்சுமி நடித்தது. இப்போது எங்கேனும் வந்தால், கிடைத்தால் தவறாது பார்த்து விடுங்கள். ராகவன் என்கிற ஜெயிலர் காரெக்டர் சுப்பையாவுக்கு.
எப்படி அந்தப் படத்தின் வித்தியாசமான நடிகர்திலகத்தின் சாமுண்டி வேடத்தை நீங்கள் மறக்க முடியாதோ, அதேபோல் எஸ்.வி.சுப்பையா அவர்கள் ஏற்றுக் கொண்ட ஜெயிலர் வேடத்தையும் கண்டிப்பாக நீங்கள் மறக்கவே முடியாது. அத்தனை நிதானமான, மனிதத் தன்மையுடன் கூடிய, அன்பும், கண்டிப்பும் பொழியும் ஒரு காவல்துறை அதிகாரி வேடத்தை மிகுந்த தன்னம்பிக்கையோடு ஏற்று, மிடுக்காக, பாந்தமாக, நிறைவாகச் செய்து முடித்திருப்பார். ஜெயிலர் என்றவுடன் கைதி கண்ணாயிரம் படத்தில் வந்த ஜாவர் சீத்தாராமனை உங்களுக்கு ஞாபகம் வரக்கூடும். அது, அவர் பாணியில் ஒருவகையான நடிப்பை அதில் வெளிப்படுத்தியிருப்பாரென்றால், இது என்னுடைய தனிப்பட்ட வகை நடிப்பு, எதனோடும் சேராதது, ஒப்பிட்டுப் பார்க்க முடியாதது, என் வழி தனி வழி என்று தன்னைக் கம்பீரமாக முன்னிறுத்திக் கொண்டிருப்பார் எஸ்.வி.சுப்பையா. அவரது இந்தப் படத்திற்கு எழுத்துலகச் சிற்பி ஜெயகாந்தன் அவர்கள்தான் கதை வசனம் என்பதை எல்லோரும் அறிவர். அவரது கைவிலங்கு நாவல்தான் காவல்தெய்வமானது என்பதும் அறியப்பட்ட ஒன்று.
மனதிற்குப் பிடிக்காத வசனங்களை, நீக்கி விடுங்கள் என்று சொல்லும் திடம் எஸ்.வி.சுப்பையாவிடம் இருந்திருக்கிறது. அது எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய நடிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கான தரமான உயரத்தில்தான் தன்னை வைத்துக் கொண்டு இந்தத் தமிழ்த் திரைப்பட உலகில் வலம் வந்திருக்கிறார் திரு எஸ்.வி.சுப்பையா அவர்கள் என்பதை அறிய முற்படும்போது நமக்கு முன்னோடியான அந்த அற்புத நடிகரின் விசேஷமான குணாதிசயங்களை நாமும் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு பின்பற்ற முயற்சிக்க வேண்டும் என்கிற வகையிலான முனைப்புத் தோன்றுவதுகூட நியாயம்தானே…! ----------------------------------ushaadeepan@gmail.com

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...