27 பிப்ரவரி 2013

“தோற்றப் பிழை” (சிறுகதைத் தொகுதி) -------------------------------------------------------------------------கட்டுரை--- ( ”படைப்பிலக்கியத்தின் கச்சிதமான காட்சிப் பதிவுகள்

 

clip_image001clip_image002


எழுத்தாளர் தி.தா.நாராயணன் அவர்களைத் தமிழ் எழுத்துலகு அறியும். சிறந்த சிறுகதைகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பவர் அவர். எந்தப் பரிசுத் திட்டம் அறிவித்திருந்தாலும், அதற்கு இவர் தன் கதையை அனுப்பியிருந்தார் என்றால், நிச்சயம் ஒரு பரிசு அவருக்கு உண்டு. இப்படிப் பல முதற் பரிசுகளைத் தன் கதைகளுக்காகப் பெற்றவர். மனித நேயம் மிக்க கதைகள், சமுதாயப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அலசி ஆராய்ந்து, நியாயமாக, உருக்கமாகத் தன் படைப்பின் வழி வைக்கும் திறன் கொண்டவர். எந்தவொரு கதையும் ஒதுக்கப்படத்தக்கதாக, வெறும் பொழுது போக்கிற்காக, இவர் எழுதி நான் பார்த்ததேயில்லை. அப்படிப்பட்டவருக்கு தொகுதி அளிப்பதில் பதிப்பகங்களுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்? NCBH நிறுவனம் இப்போது அவரது சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. நல்ல படைப்பாளிகளை அடையாளம் கண்டு கொள்வதுதானே ஒரு நல்ல, உயர்ந்த பதிப்பகத்தின் கடமையாக இருக்க முடியும்.

தோற்றப் பிழைஎன்பது ந்தச் சிறுகதைத் தொகுதியின் பெயர். ஒரு வயதான முதியவரின் படத்தைப் பொருத்தமான அட்டைப்படமாகப் போட்டு, கீழே தோற்றப்பிழை என்று புத்தகத்தின் பெயரையும் அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால் அது தோற்றப்பிழை அல்ல. தோற்றத்தில் மரியாதையையும், மதிப்பையும் தரும் களை. களை என்றால் களையாக, அழகாக, திருத்தமாக இருத்தல் என்று பொருள். அந்தப் பரிபூர்ண லட்சணம் இந்தத் தொகுதிக்கு உண்டு. தோற்றப்பிழை என்ற அந்தத் தலைப்பில்தான் முதல் கதையோடு இத்தொகுப்பு ஆரம்பிக்கிறது. முதுமை எத்தனை அழகு? அதன் முதிர்ச்சியும், பக்குவமும் பார்த்துப் பார்த்து பணிந்து, மரியாதை செய்யக் கூடியதல்லவா? அப்படியான முதியோர்களின் பிரச்னைகளை உள்ளடக்கிய பல சிறுகதைகளைக் கொண்டுள்ளது இத்தொகுதி. அதுவே இத்தொகுதியின் சிறப்பு என்று ஆரம்பத்திலேயே கூறிவிடலாம். ஏனென்றால் இப்பிரச்னை மூலமாக இந்தச் சமுதாயத்திற்குச் சொல்ல வேண்டிய செய்திகள் நிறைய விரவிக் கிடக்கின்றன என்பதுதான் சத்தியமான உண்மை.

13 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. இதன் பல சிறுகதைகள் பரிசுகளை வென்ற கதைகள். பொதுவாக ஒரு தொகுதிக்கு நான்கு அல்லது ஐந்து கதைகள்தான் சிறப்பான படைப்புக்களாக இருப்பது வழக்கம். அப்படியானால்தான் இன்னொரு தொகுதிக்கும் சிறந்த நான்கைந்து கதைகளைக் கொடுத்து அந்தத் தொகுதியையும், சிறப்பிக்க முடியும் என்று மடியில் பொதிந்து வைத்திருப்பார்கள் எழுத்தாளர்கள். ஆனால் இவர் அப்படியில்லை. காரணம் கொஞ்சமாக எழுதுபவர் இவர்..ஆனால் நிறைவாகத் தன் படைப்புக்களைக் கொடுப்பவர். எழுதி எழுதித் தள்ளுபவர்களை விட எழுத்தைத் தவமாகக் கொள்பவர்களின் படைப்புக்கள் என்றும் சிறக்கத்தானே செய்யும்? அப்படித் தவமாக இயற்றி இந்தத் தொகுதியை நமக்கு வழங்கியிருக்கிறார் செய்யாறு தி.தா.நாராயணன்.

தோற்றப்பிழை நம் மனதைக் கனக்கச் செய்யும் அற்புதமான படைப்புக்களைக் கொண்டது. அதை ரசிப்பதும், சுவைப்பதும், அனுபவிப்பதும், கரைந்து சஞ்சரிப்பதும், காசு கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பதில்தான் இருக்கிறது. நல்ல ஆக்கங்களை ஊக்கப்படுத்துங்கள். அப்படியானால்தான் படைப்பாளி மேலும் மேலும் இந்தச் சமுதாயத்தின் மேன்மைக்குப் பாடுபட்டுத் தன்னைக் கரைத்துக் கொள்வான். என்னதான் ஆனாலும் அவனும் கைதட்டலுக்குக் காத்திருப்பவன்தான். அதுதானே யதார்த்தம்.

இந்த முன்னுரையோடுதான் இந்தத் தொகுதிகளின் கதைகள் பற்றி ஆரம்பிக்க வேண்டும் என்று இப்புத்தகத்தைப் படித்து முடித்தவுடனேயே முடிவு செய்து விட்டேன். வெறும் புகழ்ச்சியாக இவை சொல்லப்படவில்லை. உள்ளே விரிந்துள்ள படைப்புக்கள் அப்படிச் சொல்ல வைக்கின்றன. விழுமியங்கள் மறைந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. அப்படியென்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் இளைய சமுதாயம் இம்மாதிரிப் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். புத்தகங்கள் மனிதர்களைச் செம்மைப் படுத்துகின்றன. வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கின்றன. ஒருவனுக்கு இந்த வாழ்வில் எல்லாவிதமான அனுபவங்களும் கிடைத்து விடுவதில்லை. காரணம் வாழ்க்கையின் எல்கை மிகக் குறைவு. தினமும் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் செயல்கள் ரொம்பவும் சாதாரணமானவை. குறிப்பிட்ட தூரமும், வீடுமாய் இருக்கும் நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனை வித விதமான அனுபவங்களை நாம் பெற்று விட முடியும்? அப்படியானால் மனிதர்கள் மன முதிர்ச்சி அடைவது எப்படி? அனுபவங்களைப் பெறுவது எங்ஙனம்? பக்குவமடைவது எப்போது? வாழ்ந்து முதிர்ந்த, சலித்த பெரியோர்களின் அனுபவங்களைப் பெறுவதுதான், அறிவதுதான் இதற்கு ஒரே வழி. அவற்றை எது தரும்? சந்தேகமில்லாமல் புத்தகங்கள்தானே அவற்றைத் தர முடியும்? சுந்தர ராமசாமி சொல்லுவார் – புத்தகங்கள் மனிதனின் சளசளப்பைப் போக்கி அவனை அமைதி கொள்ளச் செய்கின்றன. அவனை விவேகமுள்ளவனாக ஆக்குகின்றன. வாசிப்புப் பழக்கத்தினால் ஒருவன் மிகுந்த விவேகமுள்ள பண்பாளனாக மாறுகிறான். வாசிப்பு என்பது வெறும் புத்தகங்களை மட்டும் வாசிப்பதல்ல. இந்த மனிதர்களை, மரம் செடி கொடிகளை, இயற்கையை, பிற ஜீவராசிகளை இப்படி எல்லாவற்றையும் வாசிக்கக் கற்றவன்தான் ஒரு சிறந்த வாசகனாக இருக்க முடியும்.

அப்படியான ஒரு பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய படைப்புக்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன. மனித மனங்களை மேன்மைப்படுத்தும் புத்தகங்கள் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டுகின்றன. தன்னைப் புடம் போட்டுக் கொள்ள அவை தூண்டிக் கொண்டேயிருக்கின்றன. அப்படி ஒரு புத்தகம்தான் இந்தத் தோற்றப்பிழை சிறுகதைத் தொகுப்பு.

தோற்றப்பிழை – புத்தகத்தின் தலைப்புக் கதை இது.

எல்லாச் சாதிக் கட்சிகளையும் ஒழிக்கணும்யா…

ஒழிக்கலாம்தான். ஆனால் சாதி பெயரில்லாமல், கட்சி வைத்து வளர்த்துக் கொண்டு, சாதியை மறைமுகமாக ஆதரித்து, வளர்த்து, ஓட்டு வங்கியை நிலைக்கப் பாடுபட்டு. மக்களிடையே வேற்றுமைகளை, பகைமையை அதிகரிக்கிறார்களே? அதை என்ன செய்வது?.

ஒண்டி ஆளாய் நின்று நாலு ஏக்கர் எழுபது சென்ட் எழுதிக் கேட்க முனைந்த பொழுதில், அங்கே அவனின் தைரியமும், திமிரும் பெருமையாகப் பேசப்பட்டு, தவறு பின்னுக்குப் போய்விடுகிறது. ஆனால் நம்ம சாதிக்காரன்டா, அதான் இத்தனை தில்லா நிக்கிறான் என்று தன்னை மறந்து அடிமனசில் ஊறிப்போய்க் கிடக்கும் சாதிப் பெருமை தளிர்விடத்தானே செய்கிறது. ஆயினும் எவனுடைய தோற்றத்தை வைத்தும் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. ஏனெனில் உள்ளே ஊடுருவி நுழைந்து பார்க்கையில்தான் தெரியும் எல்லோர் மனதிலும் சாதி உண்டு என்கிற உண்மை. தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்ற எளிமையான பழகிய மொழியின் நூறு சத யதார்த்தம்தான் உண்மை. அப்படிப்பார்த்தால் தோற்றப்பிழை என்பது சரிதான். எல்லோரிடமும் சாதி உள்ளது என்பதை வலியுறுத்த வந்த கவனமான கதை இது. கொஞ்சம் அவசரம் தெரிகிறது படைப்பின் உருவாக்கத்தில். கதையாடலை இன்னும் கொஞ்சம் யதார்த்தப்படுத்தியிருந்தால், கருத்துக்காகவே கதை சொல்ல வந்த தன்மை தானாகவே மறைந்து போயிருக்கும் என்று தோன்றுகிறது.

முதல் கதை ஜாதிப் பிரச்னை என்றால் இது மதப் பிரச்னை. எழுத்தாளனின் பணி சமூக அவலங்களைத் தட்டிக் கேட்பதுதான் மறுப்பதற்கில்லை. இலக்கியம் சமுதாயத்திற்காக என்கிற கூற்று இங்கே நிஜப்படுகிறது. ஆனால் இலக்கியம் என்பது வெறும் கலை, இலக்கியம் இலக்கியத்திற்காக என்கிற கூற்றும் காலந்தோறும் கூடவே இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஜாதி மறுப்பு, மத மறுப்பு என்று புரட்சிகரமான எண்ணங்களைக் கொண்டு முற்போக்குச் சிந்தனைகளை விதைக்கலாம்தான். எழுத்து அப்பொழுதுதான் நிறைவடையும் ஒரு படைப்பாளிக்கு. ஆனால் இதைவிடவெல்லாம் இந்தப் புரட்சிகரச் சிந்தனைகளுக்காகக் களத்தில் இறங்கி உண்மையிலேயே பாடுபடுகிறானே,அவன் இந்த எல்லாரையும் விட உயர்ந்தவனல்லவா? மனம் இப்படி நினைக்கத்தான் செய்கிறது. ஆனாலும் எத்தனை வீடுகளில் வறுமையினாலும், வரதட்சணைக் கொடுமையினாலும் பெண்ணைக் கட்டிக் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்? காதல் திருமணங்களும், வீட்டை மீறி ஓடிப் போய்த் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகளும் பெரும்பாலும் இதனால்தானே நடைபெறுகின்றன? பெற்றோர் சம்மதத்தோடும், சம்மதமின்றியும் காணத்தானே செய்கிறோம்? ஆனால் இந்தக் கதையின் சாந்தி தாயின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, தேவதையாய் நிற்கிறாள். கதை லட்சுமணக் கோடு. சமுதாயம் கட்டிக் காக்கும் பண்பாட்டின், விழுமியங்களின் தேர்ந்த அடையாளமாய், வறுமையிற் செம்மையாய், தன் தாயின் உழைப்பின்மீது கொண்ட முழு மரியாதை நிமித்தம், தன்னை அவள் இட்ட கோட்டுக்கு உட்பட்டு நிறுத்திக் கொள்கிறாள். அதன் பலன்? இந்தக் கடைசிப் பத்தியைப் படியுங்கள். உங்கள் மனசு இளகி அழவில்லையானால், நீங்கள் மனிதரேயில்லை…!

என்னடீ அதிசயம்…? காலங்கார்த்தால குளிச்சிட்ட?

மறந்துட்டியா? என்னை ஆசீர்வாதம் பண்ணும்மா…! இன்னிக்கு என் பிறந்தநாள்மா…!

காலில் விழுந்தவளைத் தூக்கி நிறுத்தினாள். கண்கள் ததும்புகின்றன. முப்பத்திமூணு வயசு முடிஞ்சு போச்சி. அம்மாவே எல்லாமென்று போட்ட கோட்டைத் தாண்டமாட்டாமல், தன் உணர்வுகளைப் புதைத்து விட்டு நிற்கும் தன் குலக்கொழுந்தை தலை முதல் கால்வரை பார்க்கிறாள். துக்கம் அடைக்கிறது. இளமை கலைய ஆரம்பித்துவிட்டிருந்தது. முகத்தில் லேசாய் முற்றல் வந்துவிட்டது. காதோரங்களில் ஒன்றிரண்டு நரை முடிகள். ஐயோ கண்ணே…! என் செல்லமே…!! நீயாவது துணிஞ்சி அந்தப் பையனோட ஓடிப் போயிருக்கக் கூடாதா?

கதையின் உச்சம் இது. நம்மைப் பிழிந்தெடுக்கும் இடம். அதுவே இக்கதையின் வெற்றி.

கிருஷ்ணராஜசாகரின் வடிகாலாகத்தான் தமிழகத்திற்குக் காவிரி பயன்படுகிறது என்பதாக ஒரு கருத்து உண்டு. இது மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் பிரச்னை. இதுவே இரு கிராமங்களுக்குட்பட்ட பிரச்னையாக இருந்தால்? மொத்தமுள்ள 13 ஏரிகளுக்கும் பொதுவாக மக்கள் திரண்டால்? பலகை போட்டு மடை கட்டி ஒரு ஊர்க்காரர்களே பயன்படுத்த முடியுமா? எந்த மடையைக் கட்டி தண்ணீர் எங்களுக்கு நிரம்பியது போகத்தான் மீதி உங்களுக்கு என்றார்களோ, அதுவே வெள்ளம் வரும்போது? அப்போது மட்டும் மடையை எடுத்துவிடுவது எப்படி நியாயமாகும்? வெள்ளம் வரும்போது அதன் அழிவுகளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனும்போது தீர்வு வருகிறது அங்கே. தண்ணீர் எல்லார்க்கும் பொது என்பதும், மக்களின் ஒற்றுமையும் வலியுறுத்தப்படும் கதை இது என்பதே இதன் சிறப்பு. கதையின் தலைப்பு மடை.. அடுத்ததாக புதிய ஏற்பாடு.

இன்றைய பெற்றோர்களின் நிலைமை, தந்தை மகனுக்கு எழுதும் கடித வடிவாக வரையப்பட்டு மனம் சோரும் அவருக்கு. வயதொத்த நண்பர் சூழ்நிலையின் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக இருக்கப் பழகிக் கொள்ளத்தான் வேண்டும் என்று போதிக்கும் கதை. முதியோர் இல்லத்தில் சென்று இருத்தலும், சந்தோஷத்தையும், திருப்தியையும் வரவழைத்துக் கொள்ளுதலும்தான் புதிய ஏற்பாடு என்கிற கருத்தில் மனதை உருக வைக்கும் கதை. இம்மாதிரிக் கதைகளையே கூட அந்த வயதொத்த மனிதர்கள் படித்து உணருவதைப் போல, மன முருகுவதைப்போல், இன்றைய இளைஞர்கள். இளைய வாசகர்கள் உணருவார்களா என்பது சந்தேகம்தான். காலம் அப்படித்தான் அவர்களைப் பழக்கியிருக்கிறது. நீ பங்களா வாங்கியதை உன் மாமனார்தான் எனக்குச் சொன்னார். இந்தத் தற்குறி அப்பனுக்குச் சொல்வது முக்கியமில்லை என்று விட்டுவிட்டாய் போலும். ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்த்தால்தான் இந்த வேதனை புரியும்.

பொதுவாகப் பையன்களுக்கு அப்பாவை விட அம்மாமேல்தான் இஷ்டம் அதிகம். அதற்கு வெவ்வேறு பாலினம் என்பது கூட ஒரு காரணமாயிருக்கலாம். வெளியூரிலிருந்து தொலைபேசியில் அவர்கள் அடிக்கடி அதிகமாய்ப் பேசுவது அப்பாவைவிட அம்மாவிடம்தான். அம்மாவே, இந்தா அப்பாட்டப் பேசு, என்று ரீசீவரைக் கொடுத்தால், போகிறது என்று தர்மத்திற்கு ரெண்டு வார்த்தை பேசுவார்கள். அப்படியென்ன அம்மா பிரியம்? அந்த அளவுக்கா இஷ்டமாய் அவனுக்கு அவள் உபதேசம் செய்கிறாள்? அட்வைஸ் என்பதுதான் இந்தக் காலத்துப் பசங்களுக்குப் பிடிக்காதே? இஷ்டமான அம்மாவே அட்வைஸ் என்று ஆரம்பித்தால் பட்டென்று ஃபோனைத் துண்டித்து விடுவார்களே? நறுக்கென்று மூஞ்சியிலடித்தாற்போல் மரியாதை கெடுமே அங்கே? அதுதானே யதார்த்தம். ஆனாலும் அம்மாவிடம் மட்டும்தான் பையன்களுக்குப் பேசப் பிடிக்கிறது. அப்படி என்ன ஒன்று கூட அப்பாவிடம் பேச இல்லாமல் போயிற்று? அது அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். மனைவியைப் பிரிந்து தனியாய் இருக்கும் அவர், தானே முதியோர் இல்லத்தைத் தேடிக் கொள்கிறார். இதையே யதார்த்தமாய், சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ளும் நண்பர் ஒருவர், “கோழை மாதிரி அழாதீருமய்யா…” என்கிறார். வாழ்க்கைல தேடித் தேடிக் குற்றங்களைக் கண்டுபிடிக்காதீரும்…சந்தோஷமாப் போயிரும்…என்று தேற்றி, சமனுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனாலும் வயதானவர்களுக்குக் கிடைப்பது தனிமைதான் என்று உணர்கிறார். யாரும் யாரையும் சார்ந்திருப்பதற்கில்லை. எல்லோரும் சுதந்திரமாய் இருங்கள் என்கிறார்கள் இளைஞர்கள். ஆரோக்யமான புதிய ஏற்பாடு இது. ஏற்றுக் கொள்ள முடிகிறதா? ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். காலத்தின் கட்டாயம் இது. விடுங்கள். அடுத்ததாய்ப் பரிணாமத்தைப் பார்ப்போம்.

மனித குலத்தின் அடுத்த பரிணாமமாகப் பிறக்கும் செயற்கைக் கருவூட்டலில் ஒரு வேற்றுக் கிரகவாசிக்குப் பிறந்த குழந்தைதான் அது. பிறந்தவுடனேயே கூடவே மதமும் பிறந்து விடுகிறது. என்பதுதான் விந்தை. குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றும்போது அதன் தொடர்ச்சியாக வெறியும், போரும், அழிவும் தவிர்க்க முடியாதது என்பதாகச் சொல்லி முடிகிறது இக்கதை. ஆக எத்தனை விஞ்ஞான முன்னேற்றமானாலும், கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும், ஒற்றுமை என்பது அழிந்துபடும் என்பதான கருத்து யோசிக்க வேண்டிய ஒன்றாகிறது. அறிவியல் புனைகதையாக இத்தொகுதியில் விரிந்திருக்கும் இரண்டில் ஒன்று.

துரைசாமி தன் பணியில் நேர்மையாக வாழ்ந்து முடித்தவர். ஆனால் முப்பத்திஎட்டு வருஷ நீண்ட சர்வீஸ், யாரைப்பிடித்து எவ்வளவு லஞ்சம் கொடுத்தாரோ அல்லது அந்தக் காலத்தில் வலிந்து கூப்பிட்டுக் கொடுத்தார்களோ, மொத்த சர்வீசும் இந்த ஒரே ஆபீசில், ஒரே ஊரில் கழிந்தாயிற்று. நேர்மையாக சர்வீஸ் போட்டவர் என்பதால் வலிந்து கூப்பிட்டு வேலை பெற்றவர் என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. லஞ்சம் கொடுத்து சேர்ந்திருந்தால் சர்வீசில் நேர்மையாக இருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் நேர்மையாக சர்வீசுக்குள் நுழைந்தவர்கள் கூடக் , கண்டபடி சீரழிந்து விட்ட காலம் இது. லஞ்சமும், ஊழலும், மேலேயிருந்துதான் தலையெடுக்கின்றன. தலையைப் பார்த்துத்தான் இங்கே வால் ஆடுகிறது. அதுதான் யதார்த்தம். இணை இயக்குநர் வருகிறார். சொந்த ஊர் பார்க்க, அப்படியே முகாம் என்று காண்பிக்க, சம்பந்தப்பட்ட பதிவேடுகளில் இரண்டொரு கையெழுத்து என்கிற பதிவுடன் பாதுகாப்பாகப் பயணப்படி பெறும் ஊழல். காலம் காலமாய் நடக்கிற ஒன்று. இதெல்லாமா ஒரு ஊழல்? என்று கேட்கிற காலமிது. அன்றுமுதல் இன்றுவரை என்றும் சொல்லலாம்தான்.

இந்தக் கதையை அப்படியே விட்டிருந்தால்தான் அழகு. எப்படி? இப்பத்தான் ஆபீஸ் பார்ட்டியில் சாப்பிட்டோம், மறுபடியும் துரைசாமி வீட்டில் சாப்பிடணும் என்றால் வயிறு கொள்ளாதுன்னு அவாயிட் பண்ணியிருக்கலாம். சொன்னபதில் துரைசாமிக்கு திருப்தி தரவில்லை. எப்படித் திருப்தி தரும்? அது அவர் எதிர்பார்க்காத ஒன்றாயிற்றே? எதிர்பார்த்ததுதான் தவறா? மனப்பூர்வமாய் அழைத்தாயிற்றே? எவரும் வரவில்லையென்றால்? அவ்வளவுதான். வேறு என்ன செய்யமுடியும்? சட்டென்று மனதில் ஒரு விலகல் துரைசாமிக்கு. அது விலகலா? விரிசலா? அந்த வெறும் நால்வரை வரவேற்கத் தயாரானது அவரின் வீடு. இப்படித்தான் நானாயிருந்தால் முடித்திருப்பேன். நீ என்ன சாதிய்யா? என்கிற கடைசிக் கேள்வி ஏனோ வலியத் திணிக்கப்பட்டதுபோல் தோன்றுகிறது. இந்த முடிவுக்காகவே எழுதப்பட்ட கதையோ என்று ஒட்டாமல் நிற்கிறது. அதுவரை சொல்லப்பட்ட விஷயங்கள்தான் உண்மையான யதார்த்தம். பணியிலிருந்து ஓய்வு பெறுவோர் ரொம்பவும் முன்னதாகவே தங்களைப் பதப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படியும் கூட நடக்கலாம் என்பதாகப் பல முடிவுகளுக்கு வந்திருக்க வேண்டும். அதுதான் முதிர்ச்சி. பாவம் துரைசாமி. ஆனாலும் அந்தக் கடைசிக் கேள்வி ரொம்பக் கொடுமை. நேரடியாக நெஞ்சில் இறக்கியதுபோல். விருந்துக்கு அழைக்கும் ஒருத்தருக்கு இறங்கும் இடி மனித சமுதாயத்தின் தலைகுனிவு.

ஏழாவதாக நிற்பது சிகிச்சை. அரசு மருத்துவ மனைகளின் அக்கறையற்ற கவனிப்பையும், ஏழை பாழைகளின் உயிர்த் தவிப்பையும், தனியார் மருத்துவ மனைகளின் பணம் பிடுங்கும் போக்கையும், தோலுரித்துக் காட்டும் கதை. குழந்தை இறந்துவிட்டதைப் பார்க்கும் தனியார் மருத்துவமனை டாக்டர் ரங்கசாமி சொல்கிறார் – கவர்ன்மென்ட் ஆஸ்பிடல்ல பார்த்துக்கிறேன்னு இந்த ஆள் சொல்லிட்டானாம். ஒரு உயிர் அநியாயமாப் போயிட்டது. ஜனங்க பணத்துக்குத் தர்ற முக்கியத்துவத்த உயிருக்குக் கொடுக்கிறதில்லை…ச்சு….நாம என்னா பண்ண முடியும்? நான்கு குழந்தையைப் பறிகொடுத்த அவர்கள், பாவாடைக்காரி தெய்வத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு, நிச்சயம் அவ நமக்கு இன்னொண்ணு தருவா என்று அடுத்ததற்குத் தயாராகிறார்கள்.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் எப்படிக் கதை சொல்ல வேண்டும் என்று இக்கதாசிரியருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. கல்கி தீபாவளி மலருக்கென்று இவர் சொன்ன கதைதான் நட்பு. ராமநாதன் தொலைந்து போகிறார். மற்றவர்களுக்கு அப்படித்தானே…? ஒரு மனிதன் தன்னைத்தானே தொலைத்துக் கொள்கிறான் என்றால் அதற்கு வலுவான காரணங்கள் நிறைய இருக்க வேண்டும் என்பதுதான் உண்மை. அதிலும் மனைவி இல்லாத ஒருவன், பிள்ளைகளிடம் மாட்டிக் கொண்டு தன்னந்தனியே காலந்தள்ளுவது எத்தனை கஷ்டம்? ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்கள். மனிதர்கள் எத்தனை மலிவானவர்கள். சட்டென்று ஒன்றைப் பேசி விடுவதில்தான் எத்தனை அவசரம் அவர்களுக்கு? ஏன் தொலைந்து போக வேண்டும்? இதன் பின்னணி என்ன? அப்படியென்ன வந்தது இந்த மனுஷனுக்கு? யாராவது யோசித்தால்தானே…!

போதாக்குறைக்கு ஒருவர் அவரைப் பம்பாயில் ஒரு பெண்ணோடு பார்த்ததாக வேறு. அவர், தான் ராமநாதன் இல்லை, கோபால் ஷர்மா என்று உறிந்தியில் பகன்று நகர்ந்து விடுகிறார். எனக்கு நல்லாத் தெரியும், அவர்தான். அவரேதான். காலை சாய்ச்சி, சாய்ச்சி நடந்தாரே…அவர் ராமநாதனேதான்…

இந்த வயசுல இந்தாளுக்கு இது தேவையா? மனசு நினைத்து விடுகிறது இப்படி.. யோவ் ராமநாதா…ரெண்டு நாள் நாம சேர்ந்தாற்போல சந்திக்கலேன்னா என்னவோ மாதிரி ஆகிடுதய்யா…

என்னய்யா, சினிமா டயலாக்கா? நாம ரெண்டு பெரும் செல்லு போன பாண்டுகள்யா…விடலைங்க இல்ல. இந்த வயசுல தோழமைங்கிறது…மனப் புழுக்கங்களைக் கொட்டி ஆற்றத்தான்…பொழுதை ஓட்ட…அவ்வளவுதான்…பீ ப்ராக்டிகல் மேன்…மூணு நாள் தொடர்ச்சியா காபிக்கு நான் காசு கொடுத்தேன்னு வச்சிக்கோ…இல்ல நீ கொடுக்கிறே…அம்புட்டுதான் நம்ம நட்பு புட்டுக்கும்…நான் யதார்த்தவாதி…இதான் நிஜம்…

அந்த ராமநாதனைத்தான் காணவில்லை.

என்ன சின்ன புத்தி இந்தாளுக்கு? கர்மம்…கர்மம்…செக்ஸ் பற்றிய விஷயத்தில் மட்டும் எவனும் உண்மையே பேசுவதில்லையா? - யாரோ சொன்னதை வைத்து மனது என்னவெல்லாம் நினைத்து விடுகிறது சட்டென்று?

கடைசிப் பெண் மாயா, கடைசியாய்ச் சொல்கிறாள். இந்த சம்பவத்தால் நாம ராமநாதன் சாரைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டமோ இல்லியோ…நம்ம ஒவ்வொருத்தர்பற்றியும்தெளிவாவெளிப்படுத்திட்டோம்…தெரிஞ்சிக்கிட்டோம்….பார்வைக் கோளாறு உள்ள சுந்தரசாமி பார்த்தது உண்மையிலேயே ராமநாதன்தானான்னு உறுதிப்படுத்திக்கணும்னு நாம யாருக்குமே தோணலியே? அவரே அப்படிக் கல்யாணம் பண்ணிட்டிருந்தாலும், அதுக்கு உயரிய நோக்கம் இருந்திருக்கணும்னு ஏன் மாமா உங்களால நினைக்க முடியல? அதுதானே நல்ல நட்புக்கு அடையாளம்? மனுஷாள்ட்டக் குறைகளைப் பார்க்கத் தலைப்பட்டா, ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டாங்க மாமா…

தலைகுனிகிறார் இவர். மானசீகமாய், ஓடிப்போன, தவறு தவறு தொலைந்து போன தன் நண்பனிடம் மன்னிப்பும் கோருகிறார் இவர். வெறும் இவர்தான். கடைசிவரை இவர் பெயரைத் தேடினேன். கிடைக்கவில்லை.எங்காவது ஓரிடத்தில் சொல்லியிருக்க வேண்டும்.. இவரையும், ராமநாதனையும் பற்றிய இந்தக் கதை இந்த சமூகத்தின் இன்றைய நிகழ்வுகளின் துல்லியமான படப்பிடிப்பு. அதனூடேதான் இந்த நட்பு.

மங்கா கிழவி பற்றியும் இதில் ஒரு கதை உண்டு. முதியோர் என்றால் இரு பாலினமும்தானே…! படுக்கையில் கிடக்கும் மங்கா கிழவிக்கு பீ, மூத்திரம் எடுத்து, எடுத்து நொந்து போன மருமகள் அவளுக்கு மூன்று எண்ணெய் கலக்கி குளிப்பாட்டி விடுகிறாள். கிராமங்களில் உள்ள இந்த வழக்கங்கள் நமக்கே இதைப் படித்த பின்னால்தான் தெரிகின்றது. இழுத்துப் பறித்து அவஸ்தையிலிருப்பவர்களுக்கு செய்வது வழக்கந்தான் என்று பக்கத்து வீட்டுக் கண்ணம்மா பேச்சைக் கேட்டு செய்து விடுகிறாள் லட்சுமி. ஆனாலும் மனது கிடந்து அடித்துக் கொள்கிறது. தவறு செய்து விட்டோமோ என்று பழி பாவத்திற்கு அஞ்சி பயப்படுகிறாள். ஆனால் இழுபறி உயிர்நிலையில் இதைப் புரிந்து கொண்ட கிழவி நீ செய்ததுதான் சரி என்ற கூறி என் குடிகாரப் பிள்ளையை வச்சி நீ என்னதான் செய்வே? ரெண்டு பெண்டுகளை எப்படிக் கரையேத்துவே என்று பதுக்கி வைத்திருக்கும் 12 பவுன் நகையின் இருப்பிட ரகசியம் கூறி மாய்கிறாள். காலத்திற்கும் என்னை ஓட ஓடவிரட்ன உன் நெஞ்சக் கூட்ல என்னைப் பத்தியும் எம்புள்ளைங்களைப் பத்தியுமான கவலைகளத்தான் வச்சிருந்தியா அத்தே? என்று தன் தவறை நினைத்து உருகுகிறாள், கதறுகிறாள் மருமகள் லட்சுமி. எனக்கு ஏதாவது இன்ஜெக் ஷனைப் போட்டு, என்னை முடிச்சிருங்க டாக்டர் என்று வேண்டிக் கொண்ட உறவினர்களை நம்மில் சிலரேனும் பார்த்திருக்கக் கூடும். ஆனால் அருகில் நின்று காப்பவர் எவரும் ரகசிய வழிகளை மேற்கொண்டதில்லை எனலாம். ஆனால் அப்படியும் சில உண்டுதான் என்பதாய் அறிய நேரும் இந்த மூணு எண்ணெய் கூட்டும் அதீத யதார்த்தம் இந்தக் கதையில் மனதைத் திடுக்கிட வைக்கும் நிகழ்வு. செய்தவர்கள் காலம் பூராவும் உயிரோடு சாக வேண்டுமே? அந்தப் பழியை எப்படித் தீர்ப்பது? தான் செத்துதான் தீர்க்க வேண்டும். மனசு ஏற்காத, நெஞ்சை உருக்கும் கதை.

கீதாச்செடி என்ற புதுமையான பெயரோடு ஒரு அற்புதமான கதை இந்தத் தொகுதியில் உள்ளது. மொத்தத் தொகுதியின் அத்தனை கதைகளிலும் எந்தக் கதையை மிகச் சிறந்த கதை என்று முதலிடத்திற்கு நிறுத்துவது என்கிற போட்டியில் இந்தக் கதை முந்துகிறது. மஞ்சுதான் கீதாச்செடி. அவள்தான் கீதாக்குட்டி, கீதாச்செடி என்று கடைசியில்தான் தெரிகிறது. ஏன்தான் இத்தனை சோகமோ? மனசு பொறுக்கவில்லை அய்யா. தாங்க முடியாத சோகத்தை ஏற்க மறுக்கிறது உடலும் உள்ளமும். பதறிப் போனது மனசு. கதை முடிந்த பிறகும் உடல் நடுக்கம் குறையவில்லை. அப்படியான நேரத்தில் சுணக்கம்தானே ஏற்படும். அதுதான் அடுத்த கதையாக இங்கே மலர்ந்திருக்கிறது. லஞ்சம் வாங்காமல் நேர்மையாய் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு வேலையே சரியாய்ச் செய்யாமல் வாங்கும் சம்பளம் கூட ஒருவகையில் லஞ்சம்தான் என்ற மனசாட்சியுள்ள கருத்தை பலமாக நிறுவும் உண்மையான கதை இது. அவசியம் எல்லோரும் உணர வேண்டிய ஒன்று. நாத்திக ஆத்திக வாதம் பேசும் கதையாக அடுத்தது மலர்கிறது. கடவுள் இல்லை என்பதும், இருக்கு என்பதும் கவைக்கு உதவாத வெறும் பேச்சு. உண்டென்றால் அது உண்டு. இல்லையென்றால் அது இல்லை. இவை எல்லாவற்றையும் மீறியது லௌகீக விஷயங்கள். கடமையை, கர்மத்தை செவ்வனே ஆற்றிவிட்டுத்தானே அடுத்த படியாகக் கடவுளைத்தேட வேண்டும். லௌகீகத்தில் இருக்கையில் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம், தவறில்லை. தேடலே இல்லாதவர்கள்? மிகப்பெரிய நாத்திகவாதியாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலர் தங்கள் வீட்டைப் பொறுத்தவரை எப்படி இருக்கிறார்கள்? என்பது நாமறிந்ததே…! தெருக்கோடி சாமிக்கு மறக்காமல் தினசரி பூஜை செய்யும் குடும்பத்தாரைப் பார்க்கத்தானே செய்கிறோம்? இந்தக் கதையில் பெற்றோருக்கான மரியாதையும், குடும்ப ஒற்றுமையும், பொது நலனும் வலியுறுத்தப்படுகிறது. அதுதான் யாத்திரை.

உலகம் அழியப்போகிறது என்ற சமீபத்திய பேச்சுகளுக்கு நடுவே பிரளய காலம் என்கிற சொற்றொடர் சமீப நாட்களாய் நம்மிடையே மூத்த குடிமக்களிடையே புழக்கத்தில் இருப்பதை அநேகர் கண்டிருக்கலாம். மின்னணு இயந்திரங்கள் கி.பி. 2030 லேயே புழக்கத்திற்கு வந்து விட்டன என்று சொல்கிறார். அப்படியானால் கதை அதைத் தாண்டிய காலம்தானே? அதில் இன்னொன்று. மக்கள் அப்பொழுது சுத்தமாய் தமிழே பேசவில்லை. வீட்டின் தேவைகளை உணர்த்தும் மின்னணு இயந்திரத்திற்கு சரியான தமிழ் வார்த்தையில் புரோக்ராம் பண்ணி வைத்து, அந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொல்வதன் மூலமே (அதாவது சுத்தத் தமிழில்) அது தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று சொல்லி அப்படியாவது மக்களிடம் தமிழைப் பரப்ப வேண்டும் என்னும் முயற்சி 2030க்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆறுதல். அந்த மட்டுமாவது அதாவது மின்னணு இயந்திரத்தில் சுத்தத் தமிழை ஏற்றுமளவுக்காவது 2030 க்குப் பிறகும் தமிழ் அழியாமல் நீடிக்கிறதே என்று ஆறுதல் கொள்ள வேண்டியிருக்கிறது. 2040ல் பசுமைப் புரட்சி ஏற்பட்டு உலகை, மக்களைக் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. கதை 2050 ல் நடக்கிறது. அப்போதும் சாதிக் கலவரம், மதக் கலவரம், இதைப் பயன்படுத்தும் ஆள்பவர்கள் மட்டும் மாறவேயில்லை.பெட்ரோல் முற்றிலும் தீர்ந்துவிட அதனால் உண்டாகும் பெரிய கலவரம். கடைசியில் மூலிகைப் பெட்ரோலில் வந்து முடிகிறது கதை. தகந 853 அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அறிவியல் புனைகதை எழுத ஆர்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்படியானால்தான் அதற்கான முயற்சியே எழும். இந்த வகை எழுத்தில் இந்தப் புத்தகத்தின் படைப்பாளிக்கு ஒரு தனி ருசி இருப்பது தெள்ளெனவே விளங்குகிறது. கதையைப் புனைந்திருக்கும் விதத்திலேயே அவரது ஆர்வமும், அதனால், தானே எழுந்த சொல்லாடலும், மொத்தக் கதையையும் ஸ்வாரஸ்யப்படுத்தியிருக்கிறது.

இந்தத் தொகுதியின் ஒவ்வொரு கதையும் வெவ்வேறுவிதமான தாக்கங்களை படிக்கும் வாசகர்களின் மனதில் நிச்சயம் ஏற்படுத்தும். வயதானவர்களைப் பற்றியும், முதியோர்களைப்பற்றியும் கருத்தார்ந்த அக்கறை கொண்டு வடித்தெடுக்கப்பட்ட உணர்வு பூர்வமான கதைகள் இத்தொகுதியில் அதிகமாய் விரவிக் கிடக்கின்றன. அதேபோல் எழுத்து இந்த சமூகத்திற்காக, குடும்பம் என்கிற அமைப்பிலே இந்த சமூகத்திற்கு சொல்லப்படவேண்டிய செய்திகள் ஏராளமாய் உள்ளன என்பதைத் தெள்ளத் தெளிவாய் நிரூபித்திருக்கும் தலை சிறந்த கதைத் தொகுதியாய் விளங்குகிறது தி.தா.நாராயணன் அவர்களின் இந்தத் தோற்றப்பிழை சிறுகதைத் தொகுதி. ஆசிரியரே சொல்கிறார். சாதிகளாலும், மதங்களாலும் நாம் வெகு காலமாய்ப் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறோம். சுதந்திரமடைந்து அறுபது வருஷங்களுக்கு மேலாகியும், அந்தப் பிரிவினைகளைக் களைய போராடித் தோற்றிருக்கிறோம். யார் காரணம்? சாதிகளின், மதங்களின் பெயரால் நாம் வெறியூட்டப்படுகிறோமே, அதுதான் பிரச்னை. உசுப்பி விடுவதும், அவை நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்வதும் யார்? அரசியல்வாதிகள்தானே…? அவர்கள் பிழைக்க நாம் சிலுவையைச் சுமக்கிறோம். அதுதானே உண்மை. ஆசிரியரின் இந்தக் கேள்விகளை நிரூபிக்கும், உள் மன ஓட்டங்களை உசுப்பி எடுக்கும் ஆழமான படைப்புக்களை ஏந்தி இந்தத் தொகுதி தலை நிமிர்ந்து நிற்கிறது. இலக்கிய வாசகர்கள், நடுநிலை வாசகர்கள், வாசிப்பு ஆர்வம் உள்ள படைப்பாளிகள் அனைவரும் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் இது என்று சொல்வதில் எந்த மிகையுமில்லை. NCBH நிறுவனம் இத்தொகுதியை மிகச் சிறப்பான வடிவமைப்பில் வெளியிட்டிருக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் அய்யா பொன்னீலன் அவர்களும், சமூக ஆர்வலர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும், தமுஎகச் தலைவர் திரு ச. தமிழ்ச்செல்வன் அவர்களும் மிகுந்த கவனத்தோடும், கருத்தோடும், மகிழ்வோடும், இந்தத் தொகுதிக்குத் தங்கள் அணிந்துரையை வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள். தமிழ் வாசகர்கள் மனதில் இந்தச் சிறுகதைதொகுதி வெகு காலத்திற்கு நின்று நிலைக்கும்.

-----------------------------------------

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...