சிறுகதை "நட்புக்காக"
இப்படி நடக்கும் என்று தேவராஜ் எதிர்பார்க்கவில்லை. நண்பர்களுக்கு உடனே இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது. சட்டுப் புட்டென்று ராகினிக்கு அவர்கள் வீட்டில் ஒரு கல்யாணத்தைப் பண்ணிவிடுவார்கள் என்றுதான் எதிர்பார்த்திருந்தான். ஆனால் கேள்விப்படுவதென்னவோ முற்றிலும் எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது. யாரை எப்பொழுது எப்படி மடக்குவாள் என்று யாராலுமே கூற முடியாது. மடக்குகிறாளா, மடங்குகிறார்களா தெரியவில்லைதான். இத்தனை நாள் இவளைப் பற்றியே நினைக்க வைத்துவிட்டாள்.
எந்த நேரமும் தன் நினைவில் இருந்திருக்கிறாள். படுக்கையில் கண்களை மூடியபோது கூட விட்டுவைக்கவில்லை. அவளால் என்றைக்கும் உபத்திரவம்தான். சொந்தக் காரியங்கள் எத்தனையோ தடைபட்டுப் போயின இவளால். செய்வதற்கு மறந்து போயின. எந்நேரமும் இந்த நினைப்பிலேயே இருந்தால்?
"என்னடா, நாலு சொன்னா ரெண்டு மறந்திட்டு வர்ற? என்னாச்சு உனக்கு?"
"என்னத்த ஆச்சு, கொண்டா மறுபடியும் போயிட்டு வர்றேன்..." - அம்மா இவனை அதிசயமாய்ப் பார்த்தாள்.
இந்த வயசிலேயே இப்படி மறதியா? அம்மா கேட்பது சரிதான்.
சதா சிந்தனையில் வந்து ராகினி தொந்தரவு செய்ததினால்தான் இந்தப் பிரச்னை. அப்பாகூட அறிவாரோ என்றுதான் தோன்றுகிறது. அம்மா சொல்லாமல் இருப்பாளா?
ஒரு மாதிரி இருக்காங்க அவன்...என்றாவது சொல்லியிருக்கக் கூடும்.
"அவன ஒழுங்காப் படிக்கச் சொல்லு..." இது போதாதா? அப்பாவின் அதிகபட்சக் கோபமே இவ்வளவுதான்.
படிக்கப் போகும் இடத்தில்தானே
தொந்தரவுகள். இது அப்பாவுக்கு எப்படித் தெரியும்?
இதையெல்லாம் நினையாமல் தான் கிடந்தது தப்புத்தான். அவளை நினைத்துக் கிடப்பதால் தனக்கு என்ன பயன்? நேரமும் காலமும் உழைப்பும் வீணானதுதான் மிச்சம். எதுக்குத் தேவையில்லாம மைன்ட் டிஸ்டர்ப் ஆகுது? எல்லாம் இவளால வந்தது. இவ கண்ணுலயே படக்- கூடாதுன்னுதான் எங்கெங்கயோ சுத்திச் சுத்தி
வீடு போயிட்டிருக்கேன் நான். அப்படியும் பட்டுடறா...! அவ எப்படிப் போனா எனக்கென்ன? அது அவ பாடு அவங்கப்பன் பாடு. எனக்கென்ன வந்தது? ஆங்...அப்படிச் சொல்லிட முடியுமா? அவங்கண்ணன் கோவிந்தன் இருக்கானே... அவன் எனக்கு நண்பனால்ல போயிட்டான்...அவன் ரொம்ப வருத்தப் படுவானே? வருத்தப்படுவான்னு எனக்கு எப்படித் தெரியும்? அவன்தான் இது சம்பந்தமா ஒரு தடவை கூட எங்ககூடக் கலந்துக்கலையே? சரியான அமுக்குளிப்பய...யாருக்கும் தெரியக்கூடாதுன்னு கூட இருந்திருக்கலாம். அது அவங்க குடும்ப விவகாரமாச்சே? கேவலம்னு எதுவும் வந்துடக் கூடாதே!
சென்றாய மலைப் பக்கம் கிறிஸ்டோபர், நான், பாலாமணி, சந்திரப் பிரகாஷ், தாமோதரன்...எல்லாரும் போன அன்னைக்கு
எங்க கூட வர்றதை கோவிந்தன் ஏன் தவிர்த்தான்? இதுதானே காரணமா இருக்கணும்? அன்னைக்குத்தானே அதப்பத்திப் பேசறதா இருந்தோம்!
டேய் உனக்குப் பாஸ்போர்ட் எடுக்கணும்னு சொன்னியே, அந்த வேலையைப் பார்த்திற வேண்டிதானே இன்னைக்கு...? வந்த
எடத்துல இந்த வேலயாவது முடியட்டுமே?
"நம்ப
ஊர்லயே எடுத்துக்கலாம்ப்பா..." -தப்பித்து
வெளியேறியாயிற்று.
கிறிஸ்டோபர் நடையில் வேகம் அதிகரித்திருந்தது. சென்னையின்
நெரிசல் அவனை பயமுறுத்திற்று.
அந்த அடர்ந்த கூட்டத்தில் கொஞ்ச துாரத்தில் போவது யார்? ராகினிதானா அது? கூடப் போவது? அடிப்பாவி...இப்படிச் சுதந்திரமாச் சுத்துறாளே? அதுயாரு? அந்தக் கந்தசாமியா? அவந்தானா அது?
ஐநுாறு கி.மீ துாரத்தில் யார் கண்ணிலும் பட மாட்டோம் என்கிற தைரியமா? சுதந்திரம்ங்கிறது இஷ்டப்படி இருக்கத்தானா? நெறிமுறைங்கிறதெல்லாம் கிடையாதா? இவ இப்படித் திரியறது அவுங்க வீட்டுக்குத் தெரிஞ்சா? என்ன சொல்லிட்டு
வந்திருப்பா? ஒரு வேளை பரீட்சை எழுத வந்திருப்பாளோ? அதுக்கு இங்க ஏன் சென்டர் போட்டா? ஊருக்குப் பக்கத்துலயே எக்ஸாம் சென்டர் இருக்கே? கோச்சிங் எடுக்கணும்னு சொல்லிட்டு வந்திருப்பாளோ? பொய் சொல்லணும்னு நினைச்சிட்டா தப்பிக்கவா வழியில்ல? அவுத்து விட்ட கழுத...
கிறிஸ்டோபர் நெருங்கினான். ராகினிதான் என்பது உறுதியாயிற்று. அது அந்தக் கந்தசாமிதான். கிராமத்து
இளைஞன் கந்தசாமி…நகரத்தில் வாத்தியாராகி இங்கு சென்னைக்கு இழுத்து வந்து படு
ஸ்டைலாகத் திரிகிறானே?
கைகளைக் கோர்த்துக்கொண்டு நடக்கிறான் பாவி! என்ன தைரியம்...கல்யாணம் ஆன பயல்.....இவ ஏன் எடம் கொடுக்கிறா? அதானே ஆம்பிளைக்கு தைரியம் வருது.. கொடுத்து வச்சவன்யா...இதுக்கெல்லாம் மச்சம் வேணும்...முகம் பூராவும் அம்மத் தழும்பு பிடிச்சிக் கிடக்கும்...அதெல்லாம் அவ கண்ணுக்குப் படல போலிருக்கு...காதலுக்குக் கண்ணில்லன்னு சொல்வாங்க...இங்க காமத்துக்குக் கண்ணுல்ல.விழுந்திருக்காளே..நா கூடத்தான் அலைஞ்சேன்...எத்தன நா லீவு போட்டுட்டு வந்திருக்கேன் இவ நினைப்புலயே...எங்களெல்லாம்
பார்த்தா இவளுக்கு வேர்க்காது போலிருக்கு? -
கோவிந்தனுக்கே தெரியாதே இதுக்காகத்தான் வர்றேன்னு... என் டேர்ம் டேஸே போச்சே...அப்பா வந்து சேர்மனப் பார்த்து, அப்புறம்ல ரீ அட்மிஷன் ஆச்சு...எங்கிட்டக்கூட ஆரம்பத்துல பேசத்தான் செய்தா சிரிக்கச் சிரிக்கப் பேசுவாளே...அந்தச் சிரிப்புத்தான என்ன மடக்கிச்சு...அந்தக் கவர்ச்சியும் அழகும் எவளுக்கு வரும்? அந்த வீட்டுல அவ பொறந்ததுதான் தப்பு. நா
கொஞ்சம் தீவிரமா முயற்சி செய்திருந்தா கந்தசாமிய ஒதுக்கியிருப்பாளோ? அநியாயமாத்
தட்டிட்டுப் போய்ட்டானே…பாவி…!
அவ அண்ணன் கோவிந்தனும்தான் இருக்கான்...எதுல சேர்த்தி அவன்...இதெல்லாம்
கவனிக்க வேண்டாமா?
அதுக்குள்ள அவன் தலை வழுக்க விழுந்திருச்சி...கண்ணுல கருவட்டம்போட்டு, குழி விழுந்து...அசமந்தம் பிடிச்ச பய...அர்த்தம் பொருத்தமில்லாம திடீர்னு சிரிக்கிறதும், கோபப்படுறதும், பொருத்தமில்லாமக் கத்துறதும்...ஒரு வகதொக இல்லாதவன்...அப்படிப் பார்த்தா அவுங்க வீட்டுலயே அநேகமா எல்லாருமே இப்டித்தான இருக்காங்க...ராகினிதான் தப்பிப் பொறந்தவ...அதான சந்தேகமாவே இருக்கு...அவுங்கப்பன் ஷோக்கப் பார்த்தா யாருக்கும் சந்தேகம் வரத்தான் செய்யும்...யாரத்தான் நம்ப முடியுது இந்தக் காலத்துல...இவள இத்தன சுதந்திரமா விட்டிருக்கிறதப் பார்த்தா தோணத்தான செய்யுது…
'அடடா...எங்க போனாங்க? விட்டுட்டனே...' - கிறிஸ்டோபர் ராகினியைத் தேடினான். இடைமறித்த ஆட்டோக்களும், கார்களும், ஐயப்பன் சாமிகள் கூட்டமும், அவளைக் காணாமல் போக்கி விட்டன.
பாலமீனா
தேவராஜை சந்தையில் பார்த்தாள். "தேவராஜ்...தேவராஜ்..." - விடாமல் விரட்டினாள்.
"என்ன வேணும் சொல்லு..." - அலுத்துக் கொண்டான்.
"கிறிஸ்டோபரைப் பார்த்தியா? அவன் ஏதாச்சும் சொன்னானா? என்னப்பத்தி ஏதாச்சும் கேட்டானா?"
"அவன நா பார்த்தே ஒரு வாரத்துக்கும் மேலாச்சு...போன ஞாயித்துக்கெழமைக்கு முன்ன பார்த்தது..."
"அன்னைக்குத்தான் சொல்றேன்...நீங்க ரெண்டு பேரும் நாலு
ரோடுல போயிட்டிருந்தீங்களே..."
"அப்போ எப்படிப் பேச முடியும்? கவனம் பிசகிச்சின்னா? ஆக்ஸிடென்ட் பண்ணச் சொல்றியா?"
நீ எப்பவும் இப்டித்தான்...ஏதாச்சும் மறுத்தே சொல்லுவ..."
"ஏனிப்படி அலையுற...?"
ஆமா...அலையத்தான் செய்றேன்...சின்ன வயசிலேர்ந்து அவனப் பிடிக்கும் எனக்கு...அவன் காலேஜ் போயிட்டான். அங்க யாராச்சும் முந்திக்கிறதுக்கு முன்னாடி நா சுதாரிக்கணும்...ஏமாந்துரக் கூடாது..."
"என்ன சொல்ற? ஏதாச்சும் தப்புப் பண்ணிட்டானா?"
"கிறிஸ் அப்படிப்பட்டவன் இல்ல...அதுக்குக்கூட எனக்கு ஆசதான்னு வேண்ணா சொல்லலாம்..."
"ச்சீ நீயும் ஒரு பொம்பளயா...என்ன இப்படியெல்லாம் பேசற?"
"ஏன் நீ பேசினதேயில்லையா? நினைச்சதேயில்லயா? என் நண்பன் நீ...உங்கிட்டச் சொல்றதில என்ன தப்பு? ஆமா தேவராஜ்... எனக்கு அவன் நெனப்பாவேயிருக்கு...நீங்களெல்லாம் வேறே ஸ்கூல்லேர்ந்து வந்தவங்க...நானும் அவனும் ஒண்ணாங்கிளாஸ்லேர்ந்து ஒண்ணாப் படிச்சவஙக...பக்கத்துப் பக்கத்து வீடு வேறே...அவ்வளவு பழக்கம் எங்க ரெண்டு வீட்டுக்கும்...எங்க அம்மா கையால அவன் எத்தனையோ முறை சாப்பிட்டிருக்கான்..."
அதுக்கு நன்றிக் கடன் படணும்ங்கிறியா...?"
"நன்றிக்கடனில்ல இதுக்குப் பேரு...அன்புக் கடன்...எங்க வீட்டுலயே எத்தனையோ முறை படுத்துத் துாங்கியெல்லாம் இருக்கான்.
"கூடவே படுத்திருக்கவேண்டிதான..."- சொல்லிவிட்டுப் படக்கென்று நாக்கைக் கடித்துக் கொண்டான்.
பாலமீனா அதிர்ந்ததாகவே தெரியவில்லை. பதிலாகச் சிரித்துக் கொண்டாள். சுகமாத்தான்
கேட்கிறே…நடக்கலியே…!
'பாலமீனா கிறிஸ்டோபர்...' சரிதானா? இல்ல 'பாலாகிறிஸ்டோபர்' நல்லாயிருக்கா...?' "அதுதான் எனக்கு வேணும்...'
இவ்வளவு உறுதியாச் சொல்றியே...அவன் வேறே யாரையாவது நினைச்சிட்டிருந்தான்னா...?"
"அதெல்லாம் அவனால முடியாது..."
அதெப்படி அத்தனை உறுதியாச் சொல்றே...?"
"ஏன்னா அவன ஒரு நா கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்திட்டேன்...அந்த நிமிஷத்த அவன் நிச்சயம் காலத்துக்கும் மறக்க முடியாது..
"அவ்வளவு எஃபெக்டா உன் முத்தத்துக்கு...?"
"உனக்கும் வேணுமா சொல்லு...தர்றேன்..."
அடச் சீ!
?"
"கோவிச்சுக்காதடா...சும்மா தமாஷூக்குச் சொன்னேன்..."
நீ பேசறதப் பார்த்தா உன் முத்தத்துல த்ரில் இல்லையோ என்னவோ அவனுக்கு?"
"த்ரில் இருந்தாலும் அடுத்தவங்ககிட்ட சொல்லணும்னு என்னயிருக்கு?"
"யாரு அடுத்தவங்க?"
"ஃப்ரன்ட்ஸ்தான்...நெருங்கின நண்பர்கள்னாலும் இதையெல்லாம் சொல்ல முடியுமா? சில பேர் மறைக்கத்தான் செய்வாங்க..என்னோட கிறிஸ் அந்த வகை..."
"எதுக்கும் இருக்கட்டும்னு வச்சிருப்பான் போலிருக்கு...!"
உனக்கு வாய் ஜாஸ்திதான்...ஒரு பொம்பள வலிய வந்து விழறது ஆம்பளைகளுக்கு கிஃப்ட்தான..."
அதுனாலயே அது மைனஸாயிடுச்சின்னா...?"
"இப்டியே பேசு நீ...உனக்கே பொறாமையா இருக்கோ என்னவோ..."
"சரி...சரி...அடுத்தவாட்டி பார்த்தா பேசுறேன் இதுபத்தி...சரிதானா...?"
போய் விட்டாள் பாலமீனா.
யார் மனது எப்படியிருக்கும் என்று நிச்சயிக்கவே முடியவில்லை. ஆளாளுக்கு எப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு அலைகிறார்கள்? மனசுக்கு மனசு எப்படியெல்லாம் அலை பாய்ந்து கொண்டிருக்கிறது ? ஆணுக்கும்
பெண்ணுக்கும் இந்த விஷயத்தில் ஒரே மனசுதானா? முதலில் அவசரப்படுபவர்கள் யார்?
சந்திரப்பிரகாஷூம், தாமோதரனும் மது அருந்திக் கொண்டிருந்தார்கள்.
ஊருக்கு வெளியே இருபத்தைந்து கி.மீ துாரம் இருக்கும் அந்த இடம்.
என்னடா இது இப்படி ஒண்ணு நடக்குது? "
எதச் சொல்ற?"
"எதயா? ராகினி ஓடிட்டாளாமேடா?"
"விடுறா...அதப்போய்ப் பேசிக்கிட்டு...அதுக்கு இதுவா நேரம்...?"
"என்னடா இப்டிச் சொல்ற? இதுதாண்டா நேரம்...அதுக்குத்தான இம்புட்டுத் துாரம் வந்திருக்கோம்...?"
"அது நாம யாருக்கும் தெரியாமக் குடிக்கிறதுக்கு...அவளுக்காக இல்ல..."
"அந்த வாத்தியான் இருக்கான்ல...அதாண்டா கந்தசாமிப்பய..."
"ஆமா...அம்மத்தளும்பு விழுந்தவன்தான...?"
"அவனுக்கே தெரியுமாம் விஷயம்...அவன் இவள ரெண்டாந்தாரமாக் கட்டிக்கிறதா இருந்திருக்கான்...வீட்டுல
பெரிய கலகமாம்…பொண்ணு வீட்டுலர்ந்து அரிவாளத் தூக்கிட்டு வந்துட்டாங்களாம்…கதி
கலங்கிப் போனானாம்…! நாலு தட்டுத் தட்டி படுக்கப் போட்டிருக்கலாமுல்ல…அவன் ஒய்ஃப்
தடுத்துட்டாங்களாம்…இதுவே போதும் அவருக்குன்னாங்களாம்….
இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும்...என்னடா...புதுசு புதுசாச் சொல்ற?" எங்கிருந்துடா
சேமிக்கிறீங்க இந்த நியூசையெல்லாம்….?
"நீங்க போகாத எடத்துக்கெல்லாம் நா போயிட்டு வந்திடுவேன்...அதான் நம்ம ஸ்பெஷாலிட்டி..."
ராகினியப் பார்த்தா யாருக்குத்தாண்டா ஆச வராது...? உனக்கும் எனக்கும் கூடத்தான் ஆச உண்டு. நாமளும்தான் அவளப்பத்தி கண்டபடி பேசியிருக்கோம்...! பார்த்துப் பார்த்து
ஏங்கியிருக்கோம்…! அக்கௌன்டன்சி கிளாஸ்ல நாம் இருக்கைலயே டேபிளுக்கு அடில கால
விட்டு நோண்டுவானடா….
அதுக்கு அவ அலவ் பண்ணினா
பாரு….நாமளும் கிறுக்குத்தனமாப் பார்த்திட்டுத்தான இருந்தோம்…
நம்ப கோவிந்தனுக்காக விட்டுக் கொடுத்திட்டோம்...அதானே...அப்புறம் ஃப்ரெண்ட்ஷிப்புக்கு அர்த்தமில்லாமப் போகுமே..."
"நமக்கே அந்தப் புத்தி வந்திடுச்சின்னா, கத்துக்கொடுக்கிற வாத்தியாருக்கு எவ்வளவு உசத்தியாயிருக்கணும்...கோவிந்தங்கூட அவன்ட்ட ட்யூஷன் எடுத்தவந்தானே..."
"அதெல்லாம் அந்தக் காலம்டா...இப்ப அப்டியெல்லாம் இல்ல...மாட்டிச்சா பார்த்திடவேண்டிதான்னு அலையுற பயலுக..."
"நம்ப கிறிஸ்டோபர் சொன்னான்டா நாலு நாளைக்கு முன்னாடி அவள சிட்டில பார்த்தேன்னுட்டு..."
அப்டியா?"
"என்ன நொப்புடியா? அந்தக் கந்தசாமிகூடத்தான் பார்த்திருக்கான்னா....?"
"என்னடா சொல்ற? கடைசியா ஒரு தடவ பார்த்திடுவோம்னு இழுத்திட்டு அலைஞ்சிருக்கானா?"
"அவளும் போயிருக்காளே...அதயும் சொல்லு...ஆனா இப்பப் புடிச்சிருக்கிறது ஒரு மலையாளியாம்..."
"அது எவனாயிருந்தா என்ன? இழுத்துட்டு ஓடுறதுக்கு அடையாளம் வேற வேணுமா?"
"இல்லடா...இவ கொஞ்ச நாளா எங்கயோ வேலைக்குப் போறதாக்கூடச் சொன்னான்ல கோவிந்தன்..."
"ஆமா, அவுளுக்குக் கல்யாணம் பண்ணப் போறதாக் கூடச் சொன்ன
மாதிரி ஞாபகம். அப்டியான்னு கேட்டதுக்கு சட்டுன்னு எந்திரிச்சிப் போகலை? அதப்பத்தி
பேச விரும்பலடா அவன். குடும்பமே மெட்ராசுக்கு ஷிப்ட் ஆகும்னு அதிர்ச்சியக் கொடுத்தான்...."
அந்த அவசரத்துலதாண்டா இது நடந்திருக்கு...கடைசியா கந்தசாமி ஒரு தரம்னு போயிருப்பாளோ...?"
இந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கெதுக்கு? தெரிஞ்சிதாண்டா கல்யாணத்துக்கே ஏற்பாடு செய்திருக்காங்க...சொந்தத்துலயே ஒருத்தன தேடிப் பிடிச்சிட்டாங்க போலிருக்கு...புனேல இருக்கானாம் அவன்...அதுதான சரியா வரும்...ரொம்ப நாள் விலகலப் புதுப்பிச்சிருப்பாங்க போலிருக்கு. கோவிந்தன்
ஒத்த வரில சொன்னதப் பார்த்தா அப்படித்தான் தோணிச்சு...பாவம்டா அவன்..."
"ஏண்டா அப்டிச் சொல்ற?"
இதுநா
வரைக்கும் அவன் எதையுமே நம்பகிட்டச் சொன்னதேயில்லை...வீட்டு விஷயம் எதையுமே பேசமாட்டான்ல...என்னைக்குப் பேசியிருக்கான்...நாம கூட சரியான அமுக்குளின்னு சொல்வோம்ல அவன...அத நெனச்சேன்...பாவமாயிருக்கு..."
"இதிலென்னடா பாவம்....?" "எதையெல்லாம் கேவலம்னு நினைச்சு அவன் இத்தன நாள் அமைதி காத்தானோ அதப்போலவே இந்தக் கல்யாண விஷயத்தச் சொல்றதுலயும் இருந்திருக்கலாம்...பாவம்...அவன் ரொம்ப நல்லவன்டா....
அவனாச் சொல்லாம, இன்விடேஷன் தராம, நாமளா ராகினி கல்யாணத்தைப்பத்தி ஒரு
வார்த்தை கேட்கக் கூடாது கோவிந்தன்ட…தெரிஞ்சிதா?
ஓ.கே…!.- சியர்ஸ்….!- ----------------------------