27 மே 2012

”பாலு மீண்டும் உள்ளுர் வருவான்” சிறுகதை

 

 பாலு தினமும் ஏழரைக்கே ஆபீஸ் வந்து விடுகிறான். அவ்வளவு சீக்கிரம் வரணும் என்கிற அவசியமில்லை. வழக்கமாய் பத்தே முக்கால் பதினொன்றுக்கு நுழைபவன்தான் அவன். கேட்டால், தபால் வாங்கிட்டு வாறேன் சார் என்பான். எங்க தபால்களை? என்றால் ஒண்ணும் இல்லை சார் இன்றைக்கு என்று கூறுவான். பன்னிரெண்டு மணியைப்போல் ஒரு கத்தைத் தபால் வரும். பாலு வந்தாப்ல சார்…அப்ப நான் பிரிச்சிட்டிருந்தேன்…போ…கொண்டாரேன்னு நாந்தான் அனுப்பிச்சேன் என்பார் போஸ்ட்மேன். அவரைச் சரி பண்ணி வைத்திருந்தான் பாலு. இப்பொழுது அவன் டைம் மாறியிருக்கிறது. கொஞ்ச நாளாய்த்தான் இந்த மாற்றம். அவனாகவே அப்படி மாற்றிக் கொண்டான். அது என்ன ஏழரை கணக்கு என்றால் அதற்கும் காரணமில்லாமலில்லை. எட்டு மணிக்கு அந்தப் பெண் கிளம்பிவிடுகிறது என்பது தெரிந்தது. எந்தப் பெண்? அந்த எதிர் வீட்டு மாடிப் பெண். அது அங்கிருந்து இவனைப் பார்த்தது. இவனும் அதைப் பார்த்தான். பார்த்துக் கொண்டேயிருந்தது பிறகு ஒரு நாள் சிரித்தது. இவனும் சிரித்து வைத்தான். அப்படியே ஒட்டிக் கொண்டது. இப்பொழுதுதான் மாறுதலில் வந்திருக்கிறான். அதற்குள் ஆரம்பித்து விட்டானா என்றிருந்தது எனக்கு.

தபால் வாங்க சதாம் போகிறார். தபாலையும் வாங்கிக் கொண்டு பத்தரைக்குள் வந்து விடுவார். அவருக்கு மட்டும் எப்படி முடிகிறது. அவர் போகும்போது மட்டும் போஸ்ட்மேன் தபால் பிரிக்கிறேன் என்று சொல்ல மாட்டாரா என்றால் மாட்டார். பாலுவுக்கு மட்டும்தான் அந்தச் சலுகை. அது அவன் முக ராசி. உடனே அடுக்கி வைத்திருப்பவைகளைக் கொடுத்து அனுப்பி விடுவார் போஸ்ட்மேன். பாய் விருட்டென்று நுழைந்து, விருட்டென்று வெளியேறி விடுவார். அவர் பாணி தனி. காக்கவைத்தாலும் அவருக்குப் பிடிக்காதுதான்.

அடுத்த வாரம் பூராவும் கூட்டற அம்மா வராது. பாலு, நீதான் டர்ன். தினமும் காலைல ஏழுக்கெல்லாம் வந்து ஆபீசக் கூட்டி, தண்ணி எடுத்து வச்சிரு.

நிர்வாக அலுவலர் ஆணையிட்டார். அதன் தொடர்ச்சியான திங்கட்கிழமைதான் இவன் சீக்கிரம் வரவேண்டியிருந்தது. மாடிக்கும் கீழுக்கும் கூட்டிச் சுத்தம் செய்ய குறுக்குப் போய் விட்டது இவனுக்கு. மாடியில் கூட்டிக் கொண்டிருந்த போதுதான் அதைப் பார்த்தான். அப்படி ஒன்றும் பெரிய அழகெல்லாம் இல்லை. சுமாராய்த்தான் இருந்தது. இருந்தாலும் அந்தச் சிரிப்பில் விழுந்தான். இவன் ஆபீசைப் பெருக்கிக் கொண்டிருந்த போதுதான் பார்த்தது அது. ஆகையினால் பெருக்கிச் சுத்தம் செய்யும் பணியாளனாய் இருப்பதில் அதற்கொன்றும் ஆட்சேபணை இல்லை என்பது இவனுக்கு உறுதியானது. அது என்ன செய்கிறது என்று யோசனை போனது. எதுவாயிருந்தால் என்ன என்று கூடவே மெத்தனமாய்த் தோன்றவும் செய்தது. எப்படி அந்தப் பெண்ணுடன் பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தான். யோசனையிலேயே நாட்கள் போய்விட்டன.

யேய், பாலு…என்ன பானையைக் கழுவித் தண்ணி பிடிச்சியா அப்டியே பழைய தண்ணியோட ஊத்தினியா? உள்ளல்லாம் ஒரே அழுக்கா இருக்கு? என்று மாடியில் உள்ள பணியாளர்கள் கேட்டபோதுதான் அவனுக்கே தெரிந்தது. காலையில் எட்டு மணிக்கு தண்ணி பிடித்தால்தான் ஆயிற்று. பிறகு வராது. ஸாரி சார்….கழுவித்தான் பிடிச்சேன்…அப்டியும்…என்று இழுத்தான். அவர்கள் இவனை ஒரு மாதிரியாய்ப் பார்த்தார்கள்.

அலுவலக நேரங்களில் மாடிப் பக்கமே வராதவன் இப்பொழுது இங்கேயே திரிகிறானே? என்று சந்தேகப்பட்டார்கள்.

மாடியிலுள்ள திட்டப் பிரிவு பியூன் சதாமிடம் நீ கீழ போய்க்கிறியா? என்று வேறு கேட்டிருக்கிறான். கீழே நிர்வாகப் பிரிவு கண்காணிப்பாளரிடம் என்னை மேல போட்ருங்க ஸார் என்றிருக்கிறான். அவர் திடுக்கிட்டுப் போனார்.

அதெல்லாம் முடியாது. டிரஷரிக்கு போறதுக்கு எனக்கு வேற நல்ல ஆள் இல்லை. சதாமெல்லாம் அனுப்பினா கதையாகாது. பேசாம இரு என்றிருக்கிறார் சாமுவேல். அதனால்தான் சதாமிடம் போட்டு நச்சரிக்கிறான் என்பதாகப் பேச்சு. இருவரும் மனமுவந்து ஒப்பமிட்டு எழுதிக் கொடுத்தால் போட்டுத்தானே ஆக வேண்டும் என்கிற எண்ணம்.

மாடிக்கும் கீழுக்கும் இவுருக்கு டிரான்ஸ்பர் வேணுமாமா? அய்யா சும்மா பொத்திட்டு இருக்க மாட்டார் போலிருக்கு… என்றிருக்கிறார் அட்மோ குமாரசாமி. திகிடு முகடாய்ப் பேச்சு வரும் அவரிடம். அதை வைத்து ஆள் எப்படி என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். அவரையும் டபாய்க்கும் வேலை பாலுவுக்குத் தெரியும். எதிரில் நிற்கையில் பூனையாய் பம்மிக் கிடப்பான். இந்தப் பக்கம் வந்து உறாலில் எல்லோரும் பார்ப்பதுபோலவே கையைக் காட்டி சத்தமில்லாமல் திட்டுவான். கமுக்கமாய் மற்றவர்கள் சிரித்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களுக்கும் குமாரசாமியைப் பிடிக்காது. யாருக்குமே பிடிக்காமல் இருந்த ஒருத்தர் என்றால் அது அவர்தான். ஆனால் அது அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்க நியாயமில்லை. எல்லோருக்கும் பிடித்த அதிகாரியாய் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவர் நினைத்ததில்லை. எல்லோரும் தனக்குப் பணிந்து போக வேண்டும். பயந்து நடுங்க வேண்டும். அப்படியே மற்றவரை வைத்திருந்து தான் செய்யும் தப்புகள் தெரியாமல் ஓட்ட வேண்டும். அலுவலகத் தலைமையிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். முடிந்தால் அவரையும் பயப்படுத்தி வைத்திருக்க வேண்டும். எதுவானாலும் அட்மோ என்ன சொன்னாரு? என்று கேட்பது போல் வைத்துக் கொள்ள வேண்டும். தன் ஆலோசனை இல்லாமல் அங்கே ஒரு துரும்பு கூட நகர்ந்து விடக் கூடாது. இதுதான் அவர் ராஜ்ஜியம்.

பாலு சதாமிடமும் பேசி வைத்திருந்தான். சதாம் பியூன் படு அப்பாவி. பாலு ஏதாச்சும் செய்து விடுவான் என்று பயந்தே சரி என்று தலையாட்டியிருப்பார். வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. அவரை மாதிரி டயத்துக்கு ஃப்ளாஸ்க்கை எடுத்துக் கொண்டு போய் யாராலும் அத்தனை கரெக்டாகக் காபி வாங்கி வர முடியாது. கூப்பிட்டால் எழுந்து ஓடோடி வருவார். அடுத்த குரல் கொடுக்க விடமாட்டார். அவருக்கென்று கொடுத்துள்ள ஸ்டூலில்தான் உட்கார்ந்திருப்பார். மாறி யார் பார்க்கப் போகிறார்கள் என்று ஒரு நாற்காலியில் அவர் உட்கார்ந்து இவன் பார்த்ததில்லை.

பாலு அப்படியில்லை. உள்ளே கேபினில் ஆபீசர் இருக்கையிலேயே போய் அமர்ந்து அந்த சுழல் நாற்காலியில் சுற்றுவான். சாய்ந்தமேனிக்கு டெலிபோனை எடுத்துக் காதில் வைப்பான். அவ்வாறான சமயத்தில் கிளார்க்குகள் யார் வந்தாலும் அலட்டிக் கொள்ள மாட்டான். ஒரு தரம் கண்காணிப்பாளர் மயிலேறி வந்தபோதே அவன் சாவகாசமாகத்தான் எழுந்தான். என்னய்யா என்ன? இதெல்லாம் நல்லால்லே…பார்த்துக்க…என்றார் அவர். உடனே ஒழுங்கீனம் என்று மெமோ கொடுத்தார். இனி செய்ய மாட்டேன், மன்னிக்கவும் என்று பதிலிறுத்தான் பாலு. அதெல்லாம் சாதாரணம் அவனுக்கு. நெருப்புன்னா வாய் வெந்தா போகும் என்கிற வகை சார்ந்தவன்.

அவ்வளவுதான் விட்டுவிட்டார் மயிலேறி. . அதற்கு மேல் ஃபைல் பார்க்கப் போய் விடுவார். அவருக்கு கோப்புகளைத் தவிர ஒன்றும் தெரியாது. துறைக்கு வந்த புதிதில் நன்றாக வேலையைப் பழக்கி விட்டிருக்கிறார்கள். இவரும் செக்கு மாடு மாதிரி செய்து தரவ் ஆகியிருக்கிறார். இன்றுவரை அதையே செய்து கொண்டிருக்கிறார். அவ்வளவே. புதிதாக எதையும் சிந்திக்கத் தெரியாது. ஏற்கனவே முன்னோர்கள் செய்தபடிதான் செய்வார். அதற்கு இப்படிச் செய்தால் என்ன என்று யோசித்து, செயல்பட்டு, ஒன்றை காலாகாலத்தில் முடிப்போம் என்று முனைய மாட்டார்.. ஏதாச்சும் தப்பு வந்திச்சின்னா? கோடு தாண்டாத கோமகன் அவர்.

சதாம் பாய் காபி வாங்கி வரும் விஷயம் சொல்லும்போது குறுக்கே இது வந்து விட்டது பாருங்கள். இதில் என்ன விசேஷம் என்றால் தன் கைக்காசு போட்டு வாங்கிவந்து விடுவார் பாய். அவருக்குக் காரியம் ஆக வேண்டும். ஒவ்வொருவராகக் காபியைக் கொடுக்கும் போது காசு வாங்கிக் கொள்வார். இதைச் சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு அவரிடம் கடன் சொன்னவர் பலர். பியூனிடம் போய் கடன் சொல்கிறோமே என்பதெல்லாம் எங்கள் குழாத்திற்குக் கிடையாது. மாட்டினால் மாட்டியதுதான். அதற்காக சதாம் அசந்தவர் அல்ல. நச்சரிக்கவும் மாட்டார். கொடுக்கும்போது வாங்கிக் கொள்வார். கொடுக்காவிட்டால் வாய் திறந்து கேட்கமாட்டார். அதுதான் அவரின் பலவீனம்.

ஏன் பாய் உங்களுக்கென்ன காசு அவ்வளவு லேசாப் போச்சா…ஒரு காபிக் காசு இருந்தா சாயங்காலம் பஸ்ஸுக்கு ஆகுமுல்ல என்பேன் நான். இருக்கட்டும் சார்… எங்க போகுது…? என்பார் சர்வ சாதாரணமாக. அவரை விட ஐயாயிரம் கூட வாங்கும் பல எழுத்தர்கள் அவரை ஏமாற்றியிருக்கிறார்கள். அதில் அவர்களுக்கு வெட்கமில்லை. நம்ம பேரச் சொல்லி வாங்குறாருல்ல…என்பார்கள் மனசாட்சியில்லாமல். சதாம் வாங்க மாட்டார். தெரியும்தான். இவர்களின் தவறுக்கு நாக்கு மேல் பல்லுப்போட்டுப் பேசுவார்கள். நரம்பில்லாத நாக்கு ஏதும் பேசும்தான்.

பாலு அப்படியில்லை. அவன் கை நீட்டுவான். கிடைத்தவரை சுருட்டுவான். எவ்வளவு வந்தாலும் பத்தாது. இரு பக்க அன்ட்ராயர் பை, சட்டை உள் பை. பேன்ட்டின் டிக்கெட் பாக்கெட், அதன் இருபக்கப் பைகள், பனியனுக்குள் என்று வெவ்வேறு இடத்தில் செருகியிருப்பான். எவ்வளவோ ஆள் மாறித்தான் போய்விட்டான். ஆனாலும் அவன் மீது ஏதோ ஒரு பிரியம். இது நம்ம ஆளு.

இத்தனைக்கும் பாலு கல்யாணமாவன். அதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். இத்தனை நாள் அவன் தேனியிலிருந்தான். இத்தனை வருடங்கள் என்பதுதான் சரி. நான்தான் முயற்சி செய்து அவனை மதுரைக்குக் கொண்டு வந்தேன். அவனும் என்னிடம்தான் கேட்பான். மதுரைக்கு வாங்கிக் கொடுங்க…கொடுங்க…என்று அரிப்பான்.

நம்மள ரொம்ப நம்புறான் போல்ருக்கே…? என்று எனக்கே ஒரு மாதிரியாகி விட்டது. என் வார்த்தைக்கு அலுவலர்களிடத்தில் கொஞ்சம் மதிப்பிருந்ததுதான்.நான் காசு வாங்காதவன். வேலையில் சின்சியரானவன். வம்பு தும்பு இல்லாதவன். விதி முறைகள் முழுக்க அறிந்தவன். அலுவலர்களின் ஆலோசனைக்கு உகந்தவன். போதாதா? அவனுக்கு முதன்முதல் அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் அடித்தவனே நான்தான். செக் ஷன் கிளார்க்கும் நான்தான். நானேதான் டைப்பிஸ்டும். படு சுறுசுறுப்பாக வேலை பார்ப்பான். சொல்வதையெல்லாம் சட்டுச் சட்டென்று புரிந்து கொள்வான். நீ பியூனா இருக்க லாயக்கில்லை என்று சொன்னேன். தலைக்கேறி விட்டதோ என்னவோ? அநேகமாய் அப்பொழுதுதான் மனதளவில் அவன் கெட ஆரம்பித்திருப்பான். சாயங்காலம் தபால் அனுப்ப டெஸ்பாட்ச் பிரிவில் அவனைப் போட்டேன். அப்பொழுது அந்த அலுவலகத்திற்கே நான்தான் சீஃப். என் தலைமையில்தான் நான்கைந்து இளநிலைக் கிளார்க்குகள் வேலை பார்த்தார்கள். அப்படியான ஒரு அந்தஸ்து எனக்குக் கிடைத்திருந்தது. அந்த செல்வாக்கில்தான் பாலுவை மதுரைக்குக் கொண்டு வந்தது. இனிமே குடிக்கிற ஜோலியெல்லாம் ஆகாது என்று சொன்னேன். பாலு கேட்கவில்லை. ஏனென்றால் தேனியிலேயே நன்றாகப் பழகி மொடாக் குடியன் ஆகியிருந்தான். சாயங்காலம் ஆனால் திடீரென்று தலை மறைவாகிவிடுவான். இதற்காகவே டெஸ்பாட்ச் தபால்களை எடுத்துக் கொண்டு ஆர்.எம்.எஸ்ஸில் போடுகிறேன் என்று ஓடுவான். அப்படி ஓடுவது தண்ணியில் நீந்த என்பது பிறகுதான் தெரிந்தது. தபாலைப் பெட்டியில் சேர்த்துவிட்டு நீந்து என்றேன்.

எதிராய் குடிசை போட்டிருந்த நரிக்குறவர் சமுதாயப் பெண் ஒருவரைக் கை வைத்திருக்கிறான். அவர்கள் பிடித்துக் கட்டிப் போட்டு விட்டார்கள். அடி பின்னி விட்டார்கள். கேட்டால் அதெல்லாம் இல்லை என்பான். நிறையக் காயங்களோடே அவன் பட்ஜெட் கோப்புகளைத் தூக்கி வந்தது எனக்குக் கண் முன்னால் நிற்கிறது. என்னய்யா இது? என்ற போது ஆக்ஸிடென்ட் என்றான். எல்லோரும் நம்பினார்கள். தண்ணியப் போட்டுட்டு வண்டில பறந்திருப்பான். நிதானம் இருந்தாத்தான? என்றார்கள். இந்த உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்களுக்கும் தெரிந்திருக்கலாம். யாரும் வாய்விட்டுச் சொன்னதில்லை. அவனை அந்த நரிக் குறவர்களிடத்திலிருந்து விடுவித்ததில் எனக்கும் பங்குண்டு. போலீஸ் ஸ்டேஷனில் தெரிந்தவர் மூலம் சொல்லி அவர்களின் கூடாரங்களையே அங்கிருந்து அப்புறப்படுத்தி ஊருக்கு வெளியே கிளப்பியதோடு கதை முடிந்தது.ஒன்றுக்கொன்று தொடர்பாக எல்லாமும் சட்டுச் சட்டென்று நடந்துவிட்டது. சூட்டோடு சூடாக அவனைக் கிளப்பி மதுரைக்கும் கூட்டிக் கொண்டு வந்து விட்டேன். உடல் காயங்களே இங்கு வந்துதான் ஆறியது அவனுக்கு. அவன் பெண்டாட்டிக்கு இன்றுவரை தெரியாது. அது பொம்பளை அடி என்று.

அந்த நேரம் போடிக்காரன் ஒருத்தன் அமைந்தான். அவன் தேனிக்குப் போறேன் என்று சொல்ல மனமொத்த மாறுதலில் பாலுவை மதுரைக்கு இழுத்துக் கொண்டு வந்து விட்டேன். உங்களுக்காகத்தான் போடறேன் என்று சொல்லிக் கொண்டேதான் ஆணையில் கையொப்பமிட்டார் அலுவலர். இங்கே என்னடாவென்றால் மாடிக்கும் கீழுக்கும் மனமொத்த மாறுதல் விண்ணப்பம் கொடுக்கிறான் அவன். எப்படியிருக்கிறது பாருங்கள்.

அவன் என்ன லூஸா? என்றார் அட்மோ. இல்ல ஸார் நாந்தான் என்று சொல்லத்தான் யத்தனித்தேன். வாய் அடங்கிக் கொண்டது. என்னவோ நல்லா வேலை பார்ப்பான்னு சொன்னீங்களேன்னு போட்டேன்…ஆனா ஆள் சரியில்லையே…என்றார்.

ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தான் பாலு. ஃபைல்களில் ரிமைன்டரெல்லாம் எழுதுவான். பி.ஆர். பதிவான். டி.ஆர். சுற்றுவான். முடிவுற்ற கோப்புகளைத் தைப்பான். ஓராண்டு, மூவாண்டு, பத்தாண்டு, நிலை என்று பிரித்து, தைத்து, மேலே அழகாக எழுதி பதிவறைக்கு அனுப்புவதில் கில்லாடி. நூறு கோப்புகளானாலும் அலுக்காமல் சலிக்காமல் கிச்சென்று தைத்து, தைத்த மூலை “ட“ வடிவத்தில் ஒரே சீராக பைன்ட் செய்தது போல் நிற்பதைக் காட்டி ஆபீசையே அசத்துவான். வேலை அத்தனை சுத்தம்.

இத்தனைக்கும் எஸ்.எஸ்.எல்.சி. கம்ப்ளீட் பண்ணியிருந்தான். அப்படியே அவனைப் பதிவறை எழுத்தராக்கி, பிறகு இளநிலை எழுத்தராகவும் கொண்டுவந்து விடலாம். இடையில்தான் அவனுக்கு கொனஷ்டை வந்து விட்டதே…டிரைவிங் லைசன்ஸ் எடுக்கப் போகிறேன் என்று சொல்லி ஒரு நாள் அதோடு வந்து நின்றான்.

என்ன பாலு , நேத்தைக்குத்தான் சொன்னே…இன்னைக்கு கையோட வந்து நிக்கறே…

ஏற்கனவே வேலை நடந்திட்டிருந்திச்சி…என்றான். யாரைப் பிடித்தானோ, என்ன செய்தானோ…?

எட்டுப் போட்டியா? என்றேன்.

காருக்கு எட்டெல்லாம் தேவையில்லை சார்…ரிவர்ஸ், லெஃப்ட், ரைட்டு, கியர் சேஞ்சிங், நியூட்ரல் இவ்வளவுதான் என்று என்னென்னவோ சொன்னான். எப்படியோ அவனை அடிச்சிக்க ஆளில்லை என்றுதான் எனக்குத் தோன்றியது. ஏனென்றால் எதிலும் இறங்கி முடியலை என்று அவன் வந்து நின்று நான் பார்த்ததில்லை.

ஆபீசில் டிரைவர் தேர்வு நடந்த போது பாஸ்தான் ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு எங்கே எடு? என்றார். முன்னாடி போ, பின்னாடி வா, சைடுல போ…லெஃப்ட் ஒடி, ரைட் கட் பண்ணு…என்று அவனைப் பென்ட் எடுத்தார். பாலு முடிந்த மட்டும் செய்தான். அவருக்குத் திருப்தி இல்லைதான். ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார். கவலைப்படாம இரு, எல்லாம் நா பார்த்துக்கிறேன்…என்று சொன்னேன். என் வார்த்தைக்காகத்தான் அவனை டிரைவராக்கினார்.. ஒரு கண்டிஷன் போட்டார். உள்ளுர் இல்லை தேனியில்தான் போடுவேன் என்றார். அவருக்கு ஐந்து மாவட்டம் கன்ட்ரோல். இங்கு போட்டால் அவனைத்தான் வண்டியை எடுக்கச் சொல்ல வேண்டும். ஒரு சர்வீஸ் போட்ட ஆளாய் இருந்தால் தேவலாம் என்கிற எண்ணமிருந்தது. அத்தோடு அவருக்குக் காரும் இருந்தது. கார் டிரைவர் விடுப்பன்றைக்கு ஜீப் டிரைவரை ஓட்டச் சொல்லலாம். புது ஆள் பாலுவை எப்படிக் கார் ஓட்டச் சொல்வது? அதற்கு தனி எக்ஸ்பீரியன்ஸ் வேண்டுமே…!

ச்சீ…ச்சீ…இந்த மனுஷன்ட்ட எவன்யா கார் ஓட்டுவான். பார்த்துப் போ…பார்த்துப்போன்னு சொல்லியே நம்மள மோத வச்சிருவாருய்யா….ஏறி உட்கார்ந்தமா, கம்முன்னு வந்தமான்னு வரமாட்டாரு….ஆக்ஸிடென்ட் ப்ரோன் டிரைவர்னு சொல்வாங்க…அத மாதிரி நம்ம பெயரை ரிப்பேர் ஆக்கிடுவாரு போலிருக்கு…என்பார் சுப்பிரமணியன். அவர்தான் அம்பாஸிடர் இன்சார்ஜ். இன்றைக்கும் அவர்தான். ஆனால் ஒரு மாற்றம்.

பாலு டிரைவராய்ப் போனவன் இன்று பியூனாய்த் திரும்பி வந்திருக்கிறான். பார்வை குன்றி விட்டது அவனுக்கு. இனி ஜீப் ஓட்டக் கூடாது என்று டாக்டர் சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்து திரும்பப் பியூன் ஆகி விட்டான். ஆனால் கவனமாய் ஒன்று செய்தான். டிரைவர் சம்பளம்தான் வேண்டும் என்று. அதுவும் ஓ.கே. ஆனது. அது ஒன்றும் அவனுக்காகச் செய்த சலுகை அல்ல. விதி அப்படி. அவன் தலைவிதி. பியூனாய் இருந்து கொண்டு டிரைவர் சம்பளம் வாங்குறான் பாருய்யா….என்றார்கள். வயிறெரிந்தார்கள்.

வந்த இடத்திலாவது சும்மா இருக்கிறானா? எதிர் வீட்டுப் பெண்ணை சைட் அடிக்கிறான். அதற்கு மட்டும் பார்வை நன்றாக இருக்கிறது போலும்…! கல்யாணமாகி அழகான மனைவியுடன் சமத்தாக இருக்க மாட்டானோ? இல்லையே…அந்த நாளும் வந்தது.

ஐயோ பாலு…என்னைக் காப்பாத்து…என்னை எல்லாரும் அடிக்கிறாங்களே….என்னைக் காப்பாத்து…காப்பாத்து…பாலு…பாலு… - குய்யோ முறையோ என்று அலுவலகத்திற்குள் ஓடி வந்தது அந்தப் பெண்.

உறாய்…யாரும்மா அது, ஆபீசுக்குள்ள வந்திட்டு…? என்றவாறே அட்மோ அவர் அறைக்குள்ளிருந்து வெளியே ஓடி வந்தார். கொல்லைப்புறம் இருக்கும் ஒவ்வொரு அறையுனுள்ளிருந்தும் அந்தந்தப் பணியாளர்கள் அனைவரும் வெளிப்பட்டனர். மாடியிலிருந்து நாங்கள் கீழே ஓடி வந்தோம்.

கையில் விளக்குமாரோடு ஒரு வயதான அம்மாள் புடவையை ஏற்றிச் செருகிக் கொண்டு அவள் கையை ராட்சதத் தனமாக இழுத்து முதுகில் சொத்துச் சொத்து என்று நாலு வைத்தது.. நிறுத்தாமல் வைத்துக்கொண்டே இருந்தது.

இதற்குள் அட்மோவுக்கு என்ன தோன்றியதோ…நீ என்னம்மா வயசுக்கு வந்த பிள்ளையப் போட்டு இந்தச் சாத்துச் சாத்துற….இழுத்திட்டு வெளில போம்மா…இதெல்லாம் உங்க வீட்டுல வச்சிக்குங்க….என்றார்.

ஆபீஸ் அப்பொழுதுதான் ஆரம்பித்த நேரம். எல்லோரும் சுறுசுறுப்பாக இருந்தார்கள். அந்தச் சுறுசுறுப்பு இதை வேடிக்கை பார்க்க உதவியது. மூலையை விட்டு நகர்த்த முடியவில்லை அதை. அப்படி ஒடுங்கியிருந்தது. ஒரு ஆம்பிளை வந்தார் தடியாய். அந்தப் பெண்ணின் முடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கினார். அது அலறியது. அப்படியே தரதரவென இழுத்துப் போனார்.

ஆபீசாய்யா நடத்துறீங்க….ஆபீஸ்…..இன்னும் ரெண்டே நாள்ல காலி பண்ண வக்கிறேனா இல்லையா பாரு…என்று விட்டு வெளியேறினார்.

அலுவலகம் ஸ்தம்பித்திருந்தது. அத்தனை திடுக்கிடலிலும் சிலர் கவனமாய் பாலுவைத் தேடினார்கள். எங்கய்யா அவன? ஆளக் காணல…?

அவனெங்க இருந்தான். அவன் போயி எவ்வளவோ நேரமாச்சு….என்று கல்யாணப் பரிசு தங்கவேல் போல் பேசினார்கள். சிரித்தார்கள். அன்றைக்கு ஆபீஸ் வேலை அவ்வளவுதான். ஏதாச்சும் ஒன்று கிடைத்தால் போதாதா? அதை வைத்தே அன்றைய பொழுதை ஓட்டி விடலாமே. ஊழியர்களுக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்?

கொல்லைப்புறம் கதவு திறந்திருந்தது. அதற்குப் பிறகு பெரும் பொட்டல். சற்றுத் தள்ளி மாட்டுத் தாவணி. எப்படிப் போனாலும் யார் கண்ணிலாவது பட்டுத்தான் ஆக வேண்டும். ஆனால் பாலு மாயமாகி விட்டானே…அதுதான் பாலு…!

ஒரு வாரம் கடந்து விட்டது. பாலு வரவேயில்லை. லீவு லெட்டர் மட்டும் வந்தது. தபாலில். கவனமாய் ரிஜிஸ்டர் தபாலில் அனுப்பியிருந்தான். அக்னாலெட்ஜ்மென்ட்டும் வைத்திருந்தான். எவ்வளவு விவரம் பாருங்கள். ஒரு மாதம் மெடிக்கல் லீவு வேண்டுமாம். நல்லதுக்குக் காலமில்லை. சிரித்தார்கள் எல்லோரும். அங்கங்கே யாரோ பார்த்ததாக வேறு சொல்லிக் கொண்டார்கள். ஊகமாய் பேசுவதில்தான் என்னவொரு திருப்தி? சென்சேஷனல் நியூஸ் கொடுத்தார்கள்.

அட்மோ தீவிரமாய் வேலையில் இறங்கினார். பாலுவுக்கு உடனே ஒரு வெளியூர் மாறுதல் வழங்கி பிரச்னையை அப்போதைக்கு முடிவுக்குக் கொண்டு வந்தார். சீஃப் கேம்ப் முடித்து வந்த அன்றைக்கு போஸ்ட் அப்ரூவலுக்கு தன் கைப்பட எழுதி அனுப்பி வைத்தார். கமுக்கமாய் ஒப்புதலாகி வந்தது. நிர்வாக அலுவலர் என்றால் சும்மாவா?

இனி அவன் இந்த வாசப்படி மிதிக்கக் கூடாது என்றார். அவர் சொன்னது அவருக்கே செயற்கையாக இருந்ததோ என்னவோ? யாருமே அதை ரசித்ததாகத் தெரியவில்லை. எங்கோ நின்று கொண்டு சிரித்தபடியே பாலு இதை ரசிப்பதாய்த் தோன்றியது எனக்கு.

இந்நேரம் மயிலேறியை விட்டிருக்க வேண்டும். அவர்தான் சரியான ஆள். பாலு தப்பிக்க முடியுமா? ஒழுங்கீனம், வேலையில் கவனமின்மை, கடமை தவறுதல், அது இது என்று இன்னும் ஏதாச்சும் இரண்டொன்றைச் சேர்த்து, அதற்கு என்னென்ன விதிமுறைகள் உண்டோ அதையும் போட்டுப் போட்டு அவனை குற்ற வளையத்திற்குள் நிறுத்தி விட மாட்டாரா?

அதெல்லாம் எதுவும் தேவையில்லை என்பது போலல்லவா இவர் காரியத்தை முடித்து முற்றுப்புள்ளி வைத்து விட்டார்…! ஆபீசும் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுத்தான் போனது.

அதைவிட இன்னொரு ஆச்சரியம். ரெண்டு நாள்ல கிளப்புறேனா இல்லையா பார் என்று சவால் விட்டுப் போன அவர்கள் வீடு மாறிக் கொண்டு போய் விட்டார்கள். வெளியூரே போயாச்சு என்றும் சிலர் சொன்னார்கள். (பாலுதான் பாவம், காதலியை விட்டுவிட்டு என்ன செய்யப் போகிறானோ…!!)

அந்த நாட்கள் ரொம்பவும் பிஸியானவை. நான் வேலை பார்த்த அந்த அலுவலகமே அப்படித்தான். எல்லோரும் காலிலே வெந்நீரைக் கொட்டிக் கொண்டது போல் அலைவார்கள். ஒருத்தராவது நிம்மதியாய் இருந்தார் என்று கிடையாது. தலைக்கு மேல் எப்போதும் கத்திதான். பொழுது விடிந்து ஆபீசிற்குள் நுழைந்தால் போதும், செக்ரட்டேரியட்டிலிருந்து ஃபோனுக்கு மேல் ஃபோன் வந்து கொண்டே இருக்கும். அப்பொழுது இந்த ஃபேக்ஸ் வசதியெல்லாம் கிடையாது. கேட்கும் அறிக்கையைத் தயார் செய்து சாயந்தரம் யாராவது ஒருத்தர் (கேட்கப்படும் குறுக்குக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லத் தகுதி படைத்தவர் அல்லது சமாளிக்கத் தெரிந்தவர்) எடுத்துக் கொண்டு அந்த ராத்திரி ஏதாவது ஒரு வண்டியைப் பிடித்து மறுநாள் காலையில் பத்து மணிக்கு சென்னை கோட்டையில் அறிக்கையோடு இருக்க வேண்டும்.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. நாளைக்குக் காலைல ரிப்போர்ட் இங்க இருக்கணும். டொக் என்று ஃபோன் வைக்கப்பட்டு விடும். வயிற்றில் புளியைக் கரைக்கும். ஒரு சிலருக்கு உடனே ரெண்டுக்கு வந்து விடும். சத்தமில்லாமல், இந்த வந்திடறேன் சார்…என்று கக்கூசைப் பார்த்து ஓடுவார்கள். நித்திய கண்டம் பூர்ண ஆய்சு என்பது போல்தான்.

இருக்கும் சபார்டினேட் அலுவலகத்திற்கெல்லாம் உடனே ஃபோன் போட்டு, அவர்களைப் பிடுங்கி எடுத்து அல்லது கறாராய்ப் பேசி அதாவது வைது, திட்டி, நொறுக்கி தேவையான புள்ளி விபரங்களை இப்பவே சொல்லு என்று ஃபோனிலேயே கேட்டு வாங்கி விடுவோம்.

நீங்கதான் இதுக்கு சரியான ஆளு…என்று இம்மாதிரி சமயங்களிலெல்லாம் என்னிடமதான் ஃபோனைக் கொடுத்து விடுவார்கள். எல்லாமே அள்ளுப் பிள்ளு ஃபிகர்கள்தான். எதுவுமே உண்மையில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். பேப்பரில் ஒன்று. நடப்பில் வேறொன்று. அதுதான் உண்மை. காலம் காலமாய் இதைப் பழகியவர்கள் அதிரவே மாட்டார்கள்.

.இப்டீச் சொல்லியே உளப்புங்கய்யா….இந்த ஃபிகர்சையெல்லாம் கன்ஃபார்ம் பண்ணி நாளைக்குக் காலைல ரிப்போர்ட் இன் டூப்ளிகேட் இங்க இருக்கணும். ஸ்பீட் போஸ்டெல்லாம் ஆகாது. ஒரு ஆள்ட்டக் கொடுத்தனுப்புங்க…..(அவனுக்காவது பயணப்படி கிடைக்குமே…!) இப்படித்தான் நிர்வாகம் ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றும்…!!

அடுத்த ஒரு மாதத்திற்குள் எங்கள் அலுவலகத்தின் கன்ட்ரோலில் இருக்கும் கிளை அலுவலகங்களின் வருடாந்திர அலுவலக ஆய்வை முடித்து அறிக்கை தயாரித்து சென்னைக்கு அனுப்பியாக வேண்டும். அதில் எந்தக் குறையும் வைக்கக் கூடாது. அட்மோ எங்கெங்கோ தொலைபேசி, ஆய்விற்கு வரும் தகவலை உறுதி செய்து கொண்டிருந்தார். தங்குமிடங்கள், சாப்பாடு, இன்னபிற வசதிகள் இப்படி எல்லாமுமாக…

நாங்கள் அந்த வாரம் இராமநாதபுரம் போனோம். என்னையும் இன்னொரு பக்திமான் எழுத்தரையும் கோயிலுக்கு அனுப்பினார் அட்மோ. தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்து கொண்டார்.

மறுநாள் காலை அலுவலரின் கார் வந்தது. அந்த மாத ஆய்வுக் கூட்டம் அங்குதான். நாள் முழுக்க ஓரே பரபரப்பு, படபடப்பு. கத்தல். கனைத்தல். இடி, மின்னல் மழை. மாலை ஒரு சின்ன டிபனோடு ஆய்வுக் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது. அது நேரம் வரை இருந்த டென்ஷன் எல்லாம் எங்கே மறைந்தது, எல்லோரும் அதிசயித்தார்கள். மாலை அலுவலர் கையில் ஒரு சூட்கேஸோடு தனியே எங்கோ புறப்பட்டுப் போனார். மறுநாள் அவர் சென்னை போக இருப்பதாகச் சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் அந்தக் கார் மீண்டும் அங்கே வந்தது. வந்த அடுத்த நிமிடம் அந்தப் பொம்பளை ஸ்டெனோ அதில் ஏறிக் கொள்ள கார் பறந்தது.

அந்த அலுவலகத்தில் ஒரு வாரம் இருந்து ஆண்டு ஆய்வு அறிக்கை தயாரிக்கப் போகும் எங்களது இருக்கை நல்ல வசதியான இடத்தில்தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆய்வுக் குழுவுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்ற கவனம் தெரிந்தது அதில். தினசரி மாலை ஒவ்வொரு இடங்களென சுற்றுலாத் தலங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன எங்களுக்காய். கடைசி நாள் பார்ட்டி என்றார்கள். அதற்குள் அறிக்கையையும் முடித்தாக வேண்டும். ஒரு புக்லெட் நூறு பக்கத்திற்குள் தயாரித்தாக வேண்டும். எங்களுக்கா தெரியாது. இதில்தானே ஊறிப்போய்க் கிடக்கிறோம் நாங்கள். இத்தனை வருஷ சர்வீஸ் என்பது என்ன சும்மாவா? ஆனாலும் முதல் மூன்று நாட்கள் நாங்கள் வேலையில் கவனமாய்த்தான் இருந்தோம். பூசி மெழுகினாலும் அதையும் பளிச்சென்று வெளிச்சம் போடாமல் செய்தாக வேண்டுமே?

நீங்க இங்க உட்காருங்க என்று எனக்கென ஒரு தனி இருக்கையைக் காண்பித்திருந்தார் கண்காணிப்பாளர் முருகேசன். அவருக்கு என்னைத் தெரியும். எனக்கு அவரைத் தெரியும். எங்களின் புரிதல் அப்படி.

அதில் உட்கார்ந்ததும், தெரியுதா…? என்றார் என்னைப் பார்த்து.

எதண்ணே? என்றேன் நான்.

உன்ன எதுக்கு இங்க உட்கார்த்தினேன்…? நேரா ஜன்னல் வழியாப் பாருய்யான்னா…? அடுத்தாப்ல….தெரியுதா?

நான் பார்த்தேன். பார்த்தேன். பார்த்தேன். பார்த்துக்கொண்டே இருந்தேன். என்னால் பார்வையைச் சிறிது கூட விலக்கவே முடியவில்லைதான்.

எப்டீ…ஆளு? என்றார் நமுட்டுச் சிரிப்போடு.

நான் கிறங்கிப் போய் உட்கார்ந்திருந்தேன். என்னை உலுப்பினார். என்ன, இங்கயே மயங்கிட்டியா? வாயில ஈ போயிரப் போவுது…மூடு…..என்றார்.

து, இப்பொழுது அந்தக் காரில் ஏறிப் போய்க் கொண்டிருந்தது.

என்னண்ணே….? என்றேன்.

அப்டித்தேன்…! நம்ம டிரைவர் சுப்ரமணிட்டக் கேட்டுப்பாரு…இன்னும் கத கதையாச் சொல்வான்….அவரோட பெங்களுர் போயி மணிக் கணக்கா வாசல்ல காவக் காத்த கண்றாவியெல்லாம் ஏராளமா இருக்கப்பூ…..தெரிஞ்சிக்க…..

எங்கயோ மச்சம் உள்ள ஆளும்பாங்களே….அது உண்மதான் போல்ருக்கு …என்றேன். ஏன் உனக்கில்லையேன்னு ஏக்கமா இருக்குதா…? என்று முதுகில் பட்டென்று தட்டினார் முருகேசன்.

எனக்கு ஒன்று மட்டும் அப்போது சட்டென்று மனதுக்குள் உறுதியானது.

பாலு இன்னும் கொஞ்ச நாளில் நிச்சயம் உள்ளுருக்குத் திரும்ப வந்து விடுவான் என்பதுதான் அது.(உயிரோசை இணைய இதழ் - 28.5.2012)

-----------------------------------------------------------

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...