----------------------------------------------“தவறுகள் குற்றங்களல்ல..! நாவல் புஸ்தகா.கோ.இன் - வெளியீடு (09.12.2023) E.BOOK
-
நடைமுறை
உலகில் மக்கள் எத்தனையோ விலகலான விஷயங்களுக்கு..தெரிந்தோ…தெரியாமலோ பழக்கப்பட்டு விட்டார்கள்
அல்லது பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள். அரசியல் உலகில் இவை தவிர்க்க முடியாததாய், இயலாததாய்
நிகழ்ந்து போனது.
தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது
தெரிந்து செய்வது. ஆனால் தவறே இங்கு தெரிந்து செய்யும் ஒன்றாக விரவி நிற்கிறது. பழகி
விட்டதனால் தவறுகளின் மீதான லஜ்ஜை அற்றுப் போனது.
இதென்ன பெரிய குத்தமா? என்று அலட்சிய பாவமாய்
நினைத்து ஒதுக்கும் விஷயமாகிப் போனது.
இதனை யதார்த்த உலகின் நிகழ்வுகளோடு பொருத்தி
நடைபோடுகிறது இந்நாவல்.
உஷாதீபன்
“தவறுகள் குற்றங்களல்ல...!“
விருப்பமில்லாமல்தான் நடந்து
கொண்டிருந்தார் சந்திரசேகரன்.
அதனாலேயே அவரது கால்கள் மெதுவாக அடியெடுத்து வைத்தன. திரும்பி விடு…திரும்பி விடு என்று
சொல்வதுபோல் லேசாகக் கோணிக் கொண்டன. நரம்பு சொடுக்குவது போல் ஒரு உணர்வு. கொஞ்சம் பிசகினால் வலி
பின்னியெடுக்கிறது. எண்ணி அடியெடுத்து வைக்க வேண்டியிருக்கிறது. நடப்பதில் மட்டும்தானா?
பிற பலவற்றிலும்தான். சொல்ல நினைப்பது, பேசத் தோன்றுவது, விட்டு ஒதுக்குவது, இருப்பது,
விலகுவது என்று பலவும்தான். எல்லாவற்றிலும்தான் எண்ணியெண்ணி அடியெடுத்து வைத்தார்.
வயசானாலேயே அனைத்தை
யும் கவனமாகச் செய்ய வேண்டியிருக்கிறது. நிற்பது,
நடப்பது, திரும்புவது, உட்கார்வது, எழுவது ஏன் பலவற்றையும் பேசுவது என்றும் சொல்லலாம்தான்.
இப்போது அந்தப் பேசுவதிலும்
யோசித்துதான் வெளியே நடந்து கொண்டிருந்தார். யோசித்தென்ன, எதற்கு வெட்டியாய் வார்த்தைகளை
விட்டுக் கொண்டு என்று அலுத்துத்தான் கிளம்பியிருந்தார். என்ன சொன்னாலும் கேட்கப் போவதில்லைதான்.
தான் பிடித்த பிடியைத் துளியும் நழுவ விடமாட்டாள் ராஜலெட்சுமி. செய்து முடித்தால்தான்
ஆயிற்று. அப்படி ஒரு பிடிவாதம். ஓரளவுக்கு வசதி வாய்ப்புள்ள குடும்பத்திலிருந்து வந்தவளாயினும்
ஒவ்வொருவர் குணம் எதில் எப்படியிருக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லைதான். மலிவான விஷயங்களில் பரவலாக ஆர்வம்
இருக்கும்போலத்தான் தெரிகிறது. காலம் அப்படித்தான் ஓடிவிட்டது. அல்லது
சமரசம் செய்து கொண்டது.
கையில் அந்தக் கட்டைப் பை.
அதற்குள் இன்னும் ஓரிரண்டு துணிப் பைகள். அதை என்றோ எடுத்து வைத்து விட்டாள். பையனிடம்
சொல்லிச் சொல்லிப் பார்த்தாள். அவன் கிளம்புவதாயில்லை. என்னால முடியாதும்மா…என்று இறுதியாய்ச்
சொல்லி விட்டான். அதன் பின்தான் அவள் பார்வை இவர் பக்கம் திரும்பியது.
காலார வெளியே நடந்து கொண்டிருந்தது என்றோ முடங்கிப்
போனது. சாலைகள் குண்டும் குழியுமாய் இருப்பதும், அதனால் பின்னால் வரும் வாகனங்களுக்கு
சட்டென்றோ அல்லது நிதானமாகவோ ஒதுங்குவதும் மிகுந்த கஷ்டமாய் உணரப் போக…தினமும் காலையிலும்
மாலையிலும் ஒரு மணி நேரம் நடப்பது என்பது இனி சாத்தியப்படாது என்கிற முடிவுக்கு வந்தார்.
அதிலும் குறிப்பாக மாலை நடை கூடவே கூடாது என்று அவர் மனம் சொல்லியது. காலை நடையும்
ஏழரை எட்டுக்குள் வீடு திரும்பி விட வேண்டும் என்கிற உறுதி பூண்டு செயல்படுத்திக் கொண்டிருந்தார்.
இன்று இந்தப் பதினோரு மணி வெய்யிலில்
நடந்து கொண்டிருக்கிறார். யாருக்காக…அவர் மனைவிக்காக. அவள் வார்த்தைகளுக்காக. அந்த
வயதில், அந்தக் காரியத்திற்காக அவர்தான் போயாக வேண்டுமா என்கிற கேள்வி இருக்கிறதுதான்.
ஆனால் அந்தக் கேள்வி அவருக்கு மட்டும் மனதில் தோன்றி என்ன பயன்? அவனுக்கோ, அவளுக்கோ
தோன்றவில்லையே?
தான் மறுத்தால் அடுத்தது அப்பாதான்
என்பது பையனுக்குத் தெரியும். அவன் மறுத்தாலும் அடுத்து இவரிறுக்கிறார் என்பது இவளுக்கும்
தெரியும். தெரிந்துதான் இருவரும் நாடகமாடுகிறார்கள். இதை வாங்கலேன்னா இப்ப என்ன கெட்டுப்
போகுது? என்று அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் சொல்லி விலகிக் கொண்டுவிட்டான் மோகன்.
முழுப்பெயர் சந்திரமோகன். சந்திர…விடக்கூடாது என்று சேர்த்தது. சந்திர மௌலீஸ்வரனிலிருந்து
வருகிறது இது.
ஒரே ஒரு முறை, முதல்முறை
போய் வந்ததோடு சரி. அதன் பிறகு இப்போதுதான். இடையில் அதுபற்றிய நினைவே இல்லை. ஆனால்
இன்று, இப்போது அதற்கான அவசியம் வந்திருக்கிறது. விட மனசில்லை. இருந்தா என்ன கேவலமா?
யெலிஜிபிலிட்டி உள்ளதுதானே…வாங்கினா என்ன தப்பு? இதுதான் அவள் கேள்வியாயிருந்தது.
சென்னை வந்து, முகவரி மாற்றி, அந்த ரேஷன் அட்டையைப் பையன் பெயரில்
பெறுவதற்கு அவர்தான் அலைந்தார். இணைய தளம் மூலம் படிவங்களைப் பூர்த்தி செய்து உரிய
இணைப்புகளைக் கொடுத்து, படிவம் ஏற்கப்பட்டதற்கான எண்ணைப் பெற்று அந்த அலுவலகத்தின்
முகவரியைப் பெரு நகரில் தேடிப் பிடித்துச் சென்றடைந்து, நேரடியாய் அலுவலகத்திற்குள்
போய் அமர்ந்து, தனது முன்னாளைய வருவாய்த்துறைப் பணியின் அந்தஸ்தை விவரித்து, தன் வயது
காரணமாய் வரிசையில் நிற்க முடியாமையை உணர்த்தி, இரண்டு மூன்று தரம் அலைந்தபின் பையன்
பெயருக்கான அந்தப் புதிய குடும்ப ரேஷன் அட்டையைப் பெற்றிருந்தார்.
இந்த இடத்திலுள்ள கடைக்கு ஒதுக்கீடு
செய்து கொடுங்கள் என்ற அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. பதிலாக சாலையைக் குறுக்கே கடந்து
எதிர் வரிசை நகரிலுள்ள ஒரு ரேஷன் கடைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது கொஞ்சம் வருத்தம்தான்.
அதை அவரால் திருத்திப் பெற முடியவில்லை. முதல்முறையாக அந்தக் கடைக்குப் போய் அட்டையைப்
பதிவு செய்து, அதிருக்கு..இதிருக்கு என்று அவன் சொன்ன எதையெதையோ பொக்கிஷம் கிடைத்தாற்போல்
வாங்கி வந்து, இதெல்லாம் எதுக்கு? என்று ராஜலெட்சுமியிடம்
திட்டு வாங்கினார். எல்லாம் பழைய சரக்கா இருக்கும். நாத்தமடிக்கும்….பூச்சி வரும்….ஜீனி
மட்டும் வாங்கினாப் போதும்…என்று கடிந்து கொண்டாள். அதன் பிறகு பையன் ஒரு முறை போய்
வந்ததாக நினைவு.
இப்போது அந்தக் குடும்ப அட்டை
மீண்டும் வெளியே வந்திருக்கிறது அதன் அவசியம் கருதி. அவசியம் என்றால் அவளுக்கு அது
அவசியம். பையன் அதுபற்றிப் பேச்சே எடுக்கவில்லை. என்னவோ செய்து கொள்ளட்டும் என்று விட்டு
விட்டான். என்னால முடியாது என்று இவரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அவள் கேட்பதாயில்லை.
நம்ம கார்டுக்கும் கிடைக்கும்னா அதை வாங்கினா என்ன தப்பு? என்று பிடிவாதம் பிடித்தாள்.
கொடுக்க ஆரம்பித்த நாளிலிருந்து எண்ணிக் கொண்டிருந்தாள். முடிஞ்சிடப் போகுது…போயிட்டு
வாங்க…..என்று தினமும் ஒரு முறையேனும் நினைவுபடுத்திக் கொண்டிருந்தாள்.
இலவசம்…இலவசம்னு எப்படிப் பழக்கப்படுத்திட்டாங்க
பார்த்தியா? ஆசையில்லாதவங்களுக்கும் ஆசையை உண்டாக்கிட்டாங்க…! வாங்கினா என்ன தப்புங்கிற
எண்ணத்தை உண்டாக்கிட்டாங்க…அதைத் தப்பாவோ அல்லது கேவலமாவோ நினைக்க யாரும் தயாராயில்லை….படிச்சவன்,
படிக்காதவன், ஏழைபாழை, இந்த ஜாதி அந்த ஜாதின்னு எந்த வித்தியாசமும் கிடையாது…இந்த விஷயத்துல….!
எல்லாரும்தான் வரிசைல நிக்கிறான். கை நீட்டி வாங்குறான்…கையெழுத்தப் போடுறான்….அப்டி
வாங்கின பெறகுதான் மனசு நிம்மதி ஆகுது. இல்லன்னா எதையோ பறிகொடுத்த மாதிரி ஆகிப் போகுது…வாங்கலேன்னா
கேவலம்னு நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க…என்னங்க…சுத்த ஏமாளியா இருக்கீங்க….என்கிறார்கள்.
உங்களுக்கு வேணாம்னா. வாங்கி எங்களுக்காச்சும் கொடுங்க…என்று கையேந்துகிறார்கள். எந்தக்
கேவலத்திற்கும் மக்கள் தயார். கேவலம் என்று உணர்ந்தால்தானே? எது கேவலம்? யார் கேவலம்?
கொள்ளை கொள்ளையா அடிக்கிறான்கள். அவுனுங்க கேவலம்னு நினைச்சா காரியம் ஆகுமா? என்று
பதில் கேள்வி கேட்கிறார்கள். அப்படித்தானே? பெருத்த நஷ்டமா மனசு உணருது..இந்த நிலைமைக்கு மக்கள் ஆளாகிட்டாங்க…ஆளாக்கிட்டாங்கன்னுதான்
சொல்லணும்….அது
இப்போ பழகிப் போச்சு சனங்களுக்கு…!
ஆமா…அதுல என்ன தப்பு? வாங்கலேன்னா
நாம் வாங்கிட்டதா பதிவு பண்ணி கடைக்காரன் எடுத்துக்கப் போறான்…! கவர்ன்மென்டுக்கு அந்தக்
காசு மிச்சமாகவா திரும்பப் போகுது….இதிலென்ன கேவலம்னு கேட்கிறேன்…நம்ம பெயருக்கு, நம்ம
கார்டுக்கு உள்ளதத்தானே வாங்குறோம்..கொடுக்கட்டுமே….அரசாங்கத்துக்கு வரி கட்டுறோம்ல…அதிலேர்ந்துதானே
இந்த இலவசத்தைத் தர்றாங்க…அது தப்பில்லேன்னா…அதை நாம வாங்குறதும் தப்பில்லை…! எல்லா மாநிலத்துலயும்தான் இதை அறிவிக்கிறாங்க…தப்புன்னு நினைச்சா எல்லாரும்
அறிவிப்பாங்களா? இலவசத்துக்கு மக்கள் மயங்குறாங்கன்னுதானே அத விட்டுடக் கூடாதுன்னு
உடும்புப் பிடியா வச்சிட்டிருக்காங்க…? யாரு அதிகம் இலவசம் கொடுக்கிறாங்கன்னு கூர்மையா
மக்கள் கவனிக்க ஆரம்பிச்சிட்டாங்களே? ஆசையில்லாம கவனிப்பாங்களா? ஒரு ஆளுக்கா, ஒரு குடும்பத்துக்கான்னு
வேறே கேட்குறாங்க?
கேட்டது கேட்காதது என்று எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் பதில் சொன்னாள்
ராஜலெட்சுமி. திரும்பத் திரும்பச் சொல்லி அவள் மனதுக்கு அவளாகவே சமாதானம் செய்து கொள்வதுபோல்தான்
இருந்தது அது. வீட்டையே அடக்க முடியவில்லையே…அப்புறம் எங்கிருந்து நாட்டை அடக்க? அடக்குவதாவது,
அதென்ன நம் கையடக்கமாகவா இருக்கிறது? அதிகாரமா கையில் இருக்கிறது? வெறும் பயல்களாய்,
வெற்று ஜனங்களாய் இருந்து என்ன செய்ய முடியம்? கண்களை மூடிக்கொண்டுதான் இருக்க முடியும்…!
மக்களுக்கு குறைந்த செலவில்
பொருட்கள் கிடைக்க வேண்டும்…வசதியற்றவர்கள் பயனடைய வேண்டும் என்று தோன்றிய நியாயவிலைக்
கடைகளில் வேறு ஏதேதோ புகுந்து விட்டது. அவ்வப்போது அறிவிக்கப்படும் இலவசங்கள் மக்களை
ஆட்டிப் படைக்கிறது. இனி ஏதாவது அறிவிக்காமல் இருந்தால் அது அரசுக்குக் கேடு விளைவிக்கும்
என்கிற அளவுக்கு பிரபலமாகிவிட்டது இலவசங்கள். ஆளும் அரசாங்கத்தின் புகழை நிலை நிறுத்த
அது பெரும் உதவியாக இருப்பதாகக் கருதப்படுகிறது. எதுவும் அறிவிக்கவில்லையென்றால் மக்கள்
மறந்து விடுவார்களோ, ஆதரவு குலைந்து போகுமோ என்று ஆளும் அரசே நினைத்து பயப்படும் அளவுக்கு
இலவசங்கள் வளர்ந்து நிற்கின்றன.அதையேதான் எதிரணிகளும் செய்கின்றன. அந்தந்தக் குடும்பங்களின்
உழைப்பை மலினப் படுத்துகின்றன அவைகள் என்பதை மக்களும் உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.
ஆளும் அரசும் அது தவறு என்ற எண்ணத்திற்குள் புகத் தயாராக இல்லை என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.
எங்கும் நடைமுறையாகிவிட்டது எப்படித் தவறாகும்?
ஒரே குடும்பத்தில் ஒவ்வொருவர்
சிந்தனையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. விட்டுக் கொடுத்துப் போகுதல் என்பது குடும்ப
அமைப்பின் கோட்பாடு. அது ஒற்றுமைக்கு வழி வகுக்கும் என்பது தாத்பரியம். ஆனால் எது எதற்கு
விட்டுக் கொடுத்துப் போகுதல் என்பதும், யார் யாருக்கு விட்டுக் கொடுத்துப் போகுதல்
என்பதிலும் எவ்வளவு மாறுபாடுகள்? யார் யாருக்கு என்பது கூடப் பரவாயில்லை என்று ஒதுக்கி
விடலாம். ஆனால் எது எதற்கு? என்பதில்தான் பிரச்னை மிகவும் தலை தூக்கி நிற்கிறது. அதில்
ஒருவர் மற்றவரை சமாதானப்படுத்தவே முடிவதில்லை.
வாரா வாரம் சினிமா போாயாகணுமா?
என்று எரிந்து விழுந்தாள் ராஜலெட்சுமி. இவர் சிரித்தார். என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு?
என்று அதற்கும் கோபப்பட்டாள். சண்டைக்கோ, கோபத்திற்கோ ஒரு வலுவான காரணம் வேண்டாமா?
நானே முப்பது, முப்பத்தைந்து
வயது வரைக்கும் விடாம சினிமாப் பார்த்திட்டிருந்தவன்தான். ஏன், கல்யாணம் ஆன பெறவும்கூடப்
போயிட்டிருந்தேனே…? நீதான் வரமாட்டே என் கூட…உனக்கு சினிமா பிடிக்காது…உன்னை உங்க வீட்டுல
அப்டி வளர்த்திருக்காங்க…அதுக்காக நான் விட முடியமா? போயிட்டு வாங்க…ன்னு ஒரே வார்த்தைல
முடிச்சிக்குவே….இப்போ இவங்க போறதை நினைச்சு ஏன் பொறாமைப் படுறே…? சின்னஞ் சிறுசுகள்…ஆசை
இருக்கத்தானே செய்யும்…போயிட்டு வரட்டுமே…?
நீங்க சினிமாப் போன காலத்துல
வெறும் பத்து இருபதோட முடியும். இப்போ அப்டியா இருக்கு? ஒரு டிக்கெட்டே நூற்றி எழுபது,
இருநூறுன்னு கெடக்கு. ரெண்டு பேர் போனா என்னாகுறது செலவு? அதுபோக காப்பி, கூல் டிரிங்,
நொறுக்குத் தீனின்னு…எல்லாமும் நூறு இருநூறுன்னு…வெறும்
சினிமாப் பார்க்கன்னு ஆயிரம் ரெண்டாயிரமா செலவு பண்றது? விரயமில்ல அது? மாசங் கூடி
ஏதோ ஒண்ணு பார்த்தாப் போதாதா?
காசுக்கு ஏதுடீ மதிப்பு இன்னிக்கு?
ஒரு கடலமிட்டாய் அஞ்சு ரூபாய்ங்கிறான். பிச்சக்காரனுக்கு பத்து ரூபாய்க்குக் குறைச்சுப்
பிச்சை போட்டேன்னா நீயே வச்சுக்கோன்னுவான் போல்ருக்கு…முறைக்கிறான்….எவனுக்கு எதுல
நன்றியிருக்கு? லட்சக் கணக்குல சம்பளம் வாங்குறாங்க…கன்னா பின்னான்னு செலவு செய்றாங்க…கண்ட
பொருள வாங்கிப் போடுறாங்க…உபயோகமில்லாம எல்லாமும் வீணாக் கெடக்கு. அன்னைக்கு முன்னூறுக்கு
வாங்கின சட்டை இன்னைக்கு ரெண்டாயிரம்…? நம்ப முடியுதா? ஆறே மாசத்துல மங்கிப்போச்சுன்னு
தூக்கி மூலைல வீசிடுறாங்க…நீயும் நானும் அப்படிச் செய்வோமா? மனசு வருமா? காலம் மாறிப்
போச்சு…. எதுவும் நம்ம கன்ட்ரோல்ல இல்ல… அவ்வளவுதான் சொல்ல முடியும்….!
கன்ட்ரோல்ல இருக்கணும்னுதானே
நாம கூட இருக்கோம்…அது புரியலய்யா உங்களுக்கு?
அவளின் கேள்விக்கு சிரிப்புதான்
வந்தது இவருக்கு. அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவள். பாவம்…பையனை விட்டுப் பிரிய
முடியாமல் மடியில் கட்டிக் கொண்டு அவஸ்தைப் படுகிறாள். அதற்காக என்ன அவமானங்களையும்
தாங்குவாள் போலிருக்கிறது. அதற்கு, உடன் இருந்து முட்டுக் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய
நிலை தனக்கு. அவரைப் பொறுத்தவரை துர்ப்பாக்கிய நிலைதான். அவன் வெள்ளைக்காக்காய் பறக்கிறது
என்றால் அவள் ஆமாம் என்கிறாள். அவன் எது செய்தாலும் தலையாட்டுகிறாள் இணக்கமாக. எல்லாம்
அவனுக்குத் தெரியும் என்று தன்னை வேறு அடக்குகிறாள். அனுபவப்பட்ட பெரியவர்கள் கூட இருப்பது
வெறும் வயிற்றுச் சோறுக்கா….நல்லது கெட்டது சொல்லி வழி நடத்தவா?
அவர்களைத் தனியே விட வேண்டும்
என்பதுதான் அவரது நிலை. அப்பொழுதுதான் அவர்களுக்கு எல்லாமும் பழகும். குடும்பத்தைக்
கொண்டு செலுத்துவது எப்படி என்பது பிடிபடும். சின்ன வயசு…ஓடி ஆடி செய்யட்டுமே…அவர்கள்
குடும்பத்திற்கு அவர்கள் செய்து கொள்கிறார்கள்…நாம் ஏன் குறுக்கே நின்று கொண்டு? என்றால்
அந்த சித்தாந்தத்தை அவள் காதிலேயே வாங்குவதில்லை. நாள் பூராவும் மாடு மாதிரி உழைத்தாலும்
சரி…அங்கு விட்டு வர மாட்டேன் என்கிறாள்.
தன்னோடு வந்து இருப்பதில் அவளுக்கு
விருப்பமில்லை என்பதில் அவருக்கு வருத்தம்தான். ஆனாலும் என்ன செய்வது? கூடச் சேர்ந்து
கும்மியடித்துக் கொண்டிருந்தார் சந்திரசேகரன். அசட்டுத்தனமாய் இதை அவர் உணர்கிறார்.
இந்தக் கும்மியடிப்பது என்று அந்த இளசுகளுக்கு
அலுத்துப் போகப் போகிறதோ என்று அவர் மனதில் தோன்றிக்கொண்டேயிருந்தது. சண்டை போட்டு
வெளியேறும் நிலை வந்து விடக்கூடாதே…இறைவா…அதற்குள் அவள் மனதை மாற்றிவிடு என்று வேண்டிக்கொள்வதைத்
தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை.
தண்ணீர் லாரியின் உறாரன் ஒலி
காதைக் கிழிக்க பதறியடித்துப் போய் ஒதுங்கினார் சந்திரசேகரன். ஒதுங்கிய வேகத்தில் தோண்டிப்
போட்டிருந்த அந்தப் பள்ளத்தில் கால் இறங்க….விழப் போனவர் சட்டென்று தரையில் கையூன்றி
சமாளித்துக் கொண்டார். இன்னும் அதிகம் ஆட்டம் கண்டு போகவில்லை. கொஞ்சம் கொஞ்சம் சமாளிக்கும்
திறன் இருக்கத்தான் செய்கிறது.
இல்லையென்றால்தான் டூ வீலரை
எடுத்துக் கொண்டு கிளம்பியிருப்பாரே…! எதற்காக இப்படி நடந்து சாக வேண்டும்? சென்னைக்கு
வந்த முதல் ஐந்தாண்டுகள் டூ டூவீலரில்தான் பறந்து கொண்டிருந்தார். போஸ்டாபீஸ் என்ன,
வங்கி என்ன, காய்கறிக்கடை என்ன, பார்பர் ஷாப் என்ன என்று வெளியே கால் பதித்தால் வண்டிதான்.
பையனுக்குக் கல்யாணம் நிச்சயம் செய்து பத்திரிகை கொடுக்க என்று டூவீலரில் மனைவியோடு
போன ஒரு சமயம்…நாலு தெரு சந்திக்கும் அந்த இடத்தில் மோதலைத் தவிர்க்க வண்டியை பிரேக்
அடித்தபோது கீழே விழுந்ததும், அவளுக்கு இடுப்பில் பலமான அடி பட்டதும்…அதிலிருந்து மனதுக்கு
ஒரு பயம் வந்து விட்டது. பிறகு எங்கு போனாலும் ஆட்டோதான் என்று ஆகிப் போக….டாக்சி என்றும்
மாறிப் போக…கொடுத்து மாளவில்லைதான். இத்தனை உறவினர்களும் சென்னையில்தான் இருக்கிறார்களா
என்பதே அங்கு வந்தபின்னால்தான் தெரிந்தது. மாதத்திற்கு ஒன்றிரண்டு என ஏதாவது விசேடங்கள்
வந்து விடுவதும், ஓதி வைத்து மாளவில்லை என்பதும் வெளியே சொல்ல முடியாத உள் துக்கங்கள்.
காசு காற்றாய்ப் பறந்தது.
என் பென்ஷன் காசுல எனக்கே ஒரு
ஐயாயிரம் கூட நான் செலவு செய்துக்கிறதில்ல….மொய் எழுதியே ஓய்ஞ்சிடுவோம் போல்ருக்கு….என்றார்
துக்கம் தாளாமல்.
உறவெல்லாம் பார்க்கிறதுக்கும்,
பேசறதுக்கும் எவ்வளவு வாய்ப்பு? மதுரைல இருந்தோம்னா இப்டி எல்லாத்துக்கும் கிளம்புவோமா?
வாட்சப்ல வாழ்த்து சொல்லிட்டு எனக்கென்னன்னு உட்கார்ந்துக்குவீங்க…இப்போ கடவுளாப் பார்த்து
வயசான காலத்துல இந்த சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கார்…..சந்தோஷமா இருந்திட்டுப் போறதை
விட்டுட்டு…..
கடவுள் எங்கடீ வழங்கினார்.
நாமல்ல பிளான் பண்ணி இந்த சென்னைக்கு வந்து சேர்ந்தோம். ஓட்டல்ல சாப்பிட்டு வயித்தையும்
உடம்பையும் கெடுத்துக்கிறானே…ரெண்டு பேரும் ரிட்டயர்ட் ஆயிட்டமே…அவனோட போய் இருப்போம்னு
வந்து பையனுக்கு உதவியா இருந்தோம்….அதானே…
கடவுளோட அனுக்கிரகம் இல்லன்னா…இதெல்லாம்
நடக்குமா? உங்களுக்கு நம்பிக்கை இல்லை…அதுக்கென்ன பண்றது?
நம்ப சக்திக்கு மீறின விஷயத்துக்குதாண்டி
கடவுளை நம்பணும். மத்ததுக்கெல்லாம் நம்ம முயற்சிதான். நம்ப கடமையை உணர்ந்து செயல்பட்டோம்னா
அந்த நம்பிக்கைதான் கடவுள்…..
நினைவுகளில் மிதந்தவாறே சுய
உணர்வோடு நடந்து கொண்டிருந்த சந்திரசேகரன் ரேஷன் கடையை எட்டிய போது அங்கு நின்று கொண்டிருந்த
க்யூ வரிசை அவரை திடுக்கிட வைத்தது.
( 2 )
எப்படி நெரிசல் மிகுந்த சாலையைக் கடந்து வந்தோம் என்று சட்டென்று
நினைத்துக் கொண்டபோது மனதுக்கு திக்கென்றது. எத்தனையோ முறை பைக் ஓட்டிக் கொண்டு எதிர்சாரியில்
இருந்த காய்கறிக் கடைக்குச் சென்று வந்திருக்கிறார். இரு பகுதிகளான சாலையில் வலது புறம்
வரும் வாகனங்களைக் கடந்து எதிர்வரிசையில் இடது புறம் வரும் வாகனங்களைக் கருத்தில் கொண்டு
சட்டென்று நின்று பிறகு கடக்க வேண்டும். அப்படி நிற்கும் முன்பு வலது புறச் சாலை வண்டிகள்
தன் பைக்கின் பின்புறத்தை ஒரு தட்டுத் தட்டினால் போச்சு. அதே சமயம் எதிர்வரிசை இடது
புறம் பாய்ந்து வரும் வண்டிகள் முன் சக்கரத்தை முத்தமிட்டால் தானும் சேர்ந்து விழ வேண்டியதுதான். இந்த ஆபத்தை
அனுதினமும் உணர்ந்தே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார்தான். மனைவியோடு சேர்ந்து கீழே விழுந்த
மறுதினத்திலிருந்துதான் வண்டி ஓட்டுவதை அறவே நிறுத்தினார். பையன் கல்யாணத்தை சுமுகமாய்,
சிறப்பாய் முடித்தாக வேண்டும் என்கிற அக்கறை அவரை உந்தித் தள்ள, வயதுக்குப் பொருந்தாத
தடுமாற்றமான விஷயங்களையெல்லாம் மூட்டை கட்டி மூலையில் எறிந்தார். எங்கு போனாலும் ஒன்று
நடை..இல்லையென்றால் ஆட்டோ. அதுவும் இல்லையென்றால் டாக்சி.
கொடுத்து மாளவில்லைதான். ஆனால்
வயதுக்கும், தளர்ச்சிக்கும் அந்த வசதி வேண்டியிருந்தது. போனால் போகிறது. வசதிதான் முக்கியம்
என்று மனம் ஏற்றுக் கொண்டது. போய்ச் சேரும் இடங்களுக்கு அது கொஞ்சம் கௌரவமாகவும் இருந்தது.
போனால் போகிறது ஒரு பத்தாயிரம் என்று மனது சொன்னது.
என்னத்தைக் கண்டோம் இந்த வாழ்க்கையில்…காலம்
பூராவும் பஸ்ஸில் ஏறி இறங்கி, நடந்து, கடந்து செத்தது போதாதா…என்று மனம் ஆதங்கப்பட்டது.
இந்த வசதியைக் கொடுத்தது தன் பெற்றோர்களின் உழைப்பும், ஆளாக்கிய தியாகமும்தானே என்று
நன்றிக்கடன் பட்டது.
மனிதன் நினைவுகளில் வாழ்கிறான்.
அவைதான் அவனை இயக்கிக் கொண்டேயிருக்கிறது. அந்த சுகமும், சோகமும்தான் அவன் தடைபடாமல்
தொடர வழியைத் திறந்து விட்டுக்கொண்டேயிருக்கிறது.
ஐயா…நீங்க ஏன் வெயிலில் நின்னு
சாகுறீங்க…முன்னால போய் வாங்கிக்குங்க…என்று யாரேனும் சொல்ல மாட்டார்களா என்று மனம்
ஏங்கியது சந்திரசேகரனுக்கு.
தன்னை மட்டும் ஏன் அப்படி யாரேனும் சொல்ல வேண்டும் என்று
மனம் விழைகிறது? தனக்கு முன்னால் நிற்பவர்களெல்லாம் என்ன அத்தனை இளமையாகவும், உடல்
தெம்பு உள்ளவர்களாகவும், தெம்போடு நிற்பவர்களாகவுமா தெரிகிறார்கள்?அவர்களெல்லாம் மனிதர்களி்ல்லையா? எல்லாரும் ஏதோவொரு விதத்தில் நசிந்துதான் போயிருக்கிறார்கள். முடியாமல்தான்
நின்று கொண்டிருக்கிறார்கள். தனக்கு மட்டுமா உடல் நோவு?
தன்னைப்போலவே எப்படியும் அந்த
இலவசத் துட்டை வாங்கி விட வேண்டும் என்கிற ஆதங்கத்தில்தான் வந்திருக்கிறார்கள். கொடுக்கும்
அந்த ஆயிரமோ, ரெண்டாயிரமோ ஒன்றும் மாதங்கூடி அவர்களின் செலவுகளை நிறைவு செய்துவிடப்
போவதில்லைதான். சொல்லப்போனால் இன்றைய விலைவாசிக்கு ஒரு வாரச் செலவுக்குக் கூட அது ஆகாதுதான்.
ஏதோ நாலு நாளைக்கு குடும்பத்திற்கு அரிசி வாங்கிப்போட்டோம், பலசரக்கு வாங்கினோம் அல்லது
காய்கறி வாங்கி வைத்தோம் அல்லது ரெண்டு நாளைக்கு கறிச்சோறு சமைத்து உண்டு மகிழ்ந்தோம்
என்று வேண்டுமானால் இருக்கலாம். அந்தச் சின்ன மகிழ்ச்சியை ஏன் விட வேண்டும்.
ஏன்…வரும் இலவசக் காசை தின்றுதான்
தீர்க்க வேண்டுமா? எந்தக் குடும்பத்திற்கேனும் அவர்கள் மகனுக்கோ, மகளுக்கோ பள்ளிக்
கட்டணம் செலுத்த அது உதவாதா? யாரேனும் உடல் நோவாயிருந்தால் சிகிச்சை அளிக்க அந்தக்
காசு பயன்படாதா? ஏதேனும் கடன் வாங்கியிருந்தால் அந்தக் கடனைத் தீர்க்க அந்தக் காசால்
ஆகாதா? வரிசையில் நிற்கும் இதில் எந்த ஜீவனுக்கு என்ன தேவை இருக்கும் என்று யார் கண்டது?
இலவசமாய்ப் பெற்று வந்த காசை…கொண்டாடீ….என்று
மிரட்டி குடிக்க வாங்கிப் போகும் அதிரடிக் கணவன்மார்களைப் பற்றி அடிக்கடி செய்திகள்
வந்து கொண்டுதான் இருக்கின்றன. என்றைக்குமில்லாமல் அப்பொழுது மட்டும் ரேஷன் கார்டைப்
பிடுங்கிக்கொண்டு சென்று பணத்தைத் தானே பெற்றுக் கொண்டு குடித்துக் கும்மாளமிட்டு மயங்கிக்
கிடக்கும் நாதாரிகளை எண்ணி அவர் மனம் வேதனைப் பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. யாரிடம்
போய்ச் சொல்வது? தான் சொல்லி என்ன ஆகப் போகிறது? தான் ஒருவன் சொல்வதனால் இந்த இலவசப்
பண விநியோகம் நின்று விடப் போகிறதா? வாங்கும் இலவசம் திரும்பவும் குடி என்கிற பெயரில்
புறப்பட்ட இடத்திற்கே போய்ச் சேருவதில், ஒரு மறுசுழற்சி மாயம் நிகழ்ந்து விடுகிறது அப்படியான நோக்கத்தை நோக்கி விரல் நீட்டிச் சுட்டிச் சொல்லிவிட முடியுமா
என்ன? சட்டத்திற்கு உட்பட்ட ஒரு பிரஜைக்கு இந்த நாட்டில் அத்தனை பேச்சு சுதந்திரம்
இருக்கிறதா? வெவ்வேறு அபிப்பிராயங்களாக நண்பர்களுக்குள்,
வீட்டுக்குள் பேசிக்கொள்ள முடியுமே தவிர, பொது வெளியில் சத்தமிட்டு, மேடையிட்டுப் பேசிவிட
இயலுமா? குறித்து வைத்துக் கொண்டு கட்டம் கட்டி விட மாட்டார்களா?
அந்தப் பக்கம் இருந்த கிருஷ்ணன்
கோயிலுக்கு அவர் அனுதினமும் வந்து கொண்டுதான் இருந்தார். குறுக்கே சாலையைக் கடந்துதான்
எதிர் வரிசையில் இருக்கும் நகரில் அந்தக் கோயில் அமைந்திருந்தது. வண்டியில் வந்து கொண்டிருந்த
காலத்திலேயே அந்தக் கோயிலைப் பார்த்திருக்கிறார். என்றாலும் இறங்கி உள்ளே போய் வணங்கியதில்லை.
வாசலில் இருந்தமேனிக்கே ஒரு கும்பிடைப்போட்டு விட்டு நகர்ந்ததுதான். எல்லாவற்றிற்கும்
நடைதான் என்று நடராஜா சர்வீசில் புகுந்த பிறகு அந்தக் கோயிலுக்கு குறைந்தது வாரத்தில்
மூன்று நான்கு நாட்களுக்கேனும் வந்து செல்வது அவரின் வழக்கமாய் இருந்தது.
சொல்லப்போனால் அந்த ரேஷன் கடைக்கு
எது சுருக்கு வழி என்பதைக் கண்டுபிடித்ததே அந்தக் கோயிலை வைத்துத்தான். கோயில்…அதற்கு அடுத்த தெருவுக்குக் கடைசி என்று மனதில் நிர்ணயித்துக் கொண்டார். எல்லாம் சின்னச்
சின்னத் தெருக்கள்தான். முப்பது நாற்பது வீடுகள் கொண்ட அடுத்தடுத்த சாலையை இணைக்கும்
குறுக்குத் தெருக்கள் அவை. நடைப் பயிற்சி நல்லதுதானே என்று ரேஷன் கடையைச் சுற்றிக்
கொண்டு போவது அவரது வழக்கமாய் இருந்தது. அதன் மூலம் எந்தெந்த நாட்களில் அங்கு கூட்டம்
அதிகமாய் இருக்கிறது, எந்தப் பொழுதில் வரிசையின்றிக் காணப்படுகிறது என்பதையெல்லாம்
கணக்கிட்டு வைத்திருந்தார்தான். என்னென்ன பொருட்கள் அன்றன்று விநியோகம் என்பதையும்
அறிய முடிந்தது.
மேலும் கிரஸின் டின்கள் வந்து
இறங்கியிருக்கும் தகவலும் அறிய முடிந்தது. அந்தக் கார்டைக் கொடுத்து விட்டால் வேலைக்காரப்
பெண் பரிமளத்திற்கு அது உதவும்தானே…! அப்டியே
அந்த இலவசப் பணத்தையும் அதே வாங்கிக்கட்டுமே என்று ஒருநாள் லேசாக வார்த்தையை விட்டார்
சந்திரசேகரன்.
ஏன் அந்தக் காசை வாங்கி அந்தம்மாவுக்கு
சம்பளத்தைக் கொடுத்தா ஆகாதா? என்று கேட்டு விட்டாள் பதிலுக்கு. கூட ஆயிரம் சேர்த்து
ரெண்டாயிரமாக் கொடுக்கணும். அதுவும் வருஷத்துல ஏதோ ஒரு மாசம்….அதுல நிறைஞ்சிடப்போகுதா
உன் மனசு? என்று பதிலுக்குக் கேட்டார் இவர். எவ்வளவோ அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கத்தான்
செய்கிறாள் ராஜலெட்சுமி. துணிமணி, சாப்பாடு, காய்கறிகள், வீட்டில் செய்யும் பண்டங்கள்,
விசேட நாட்களின் சிறப்பு பட்சணங்கள் என்று. மனதில்லை என்று சொல்ல முடியாதுதான். ஆளையும்
விடாமல் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே…! ஆனாலும் காசு என்று வரும்பொழுது… கறார்தான்.
போய் வரிசையில் நின்றேனும் அந்த இலவசப் பணத்தை வாங்கிவருவதில் இருக்கும் பிடிவாதம்
இதிலும் இருக்கத்தானே செய்யும்?
வேண்டாம் என்று ஒதுக்க யாருமே
தயாராயில்லை. எதுக்கு அந்தப் பணத்தை விடணும் என்கிற மனநிலை வந்து விடுகிறது. இலவசங்களை
நான் பெற மாட்டேன் என்று சபதம் செய்து கொண்டவர்கள் சிலரேனும் இருக்கிறார்களா? என்று
சந்தேகம்தான் வந்தது. அன்றாடக் கூலி வேலை செய்பவர்கள் முதற்கொண்டு, அரசுப் பணியிலிருந்து
ஓய்வு பெற்றவர்கள் வரை…ஏன் அட்டை உள்ளவர்கள் அனைவருக்கும் என்று அறிவித்திருக்கையில்
படித்தவன், படிக்காதவன், வசதியுள்ளவன், வசதியில்லாதவன் என்ற வித்தியாசங்கள் இருக்கிறதா
என்ன? நிற்கும் வரிசையைப் பார்த்தாலே தெரிந்து போகும்.
என்ன சார்…வாங்க…வாங்க…நீங்க
இன்னும் வாங்கலியா? வீடு பக்கத்துலதானே இருக்கு…வாங்கியிருப்பீங்கன்னு நினைச்சேன்…!
என்று வரிசையில் நிற்கும் தன்னுடைய லஜ்ஜையை மறைத்தவர்போல் சகஜமாகப் பேசிக் கொள்வது,
கார்டுக்குன்னு கொடுக்கிறதை ஏன் விடணும்….அதுவும் ஏதாச்சும் ஒரு செலவுக்காச்சு….என்றும்…நாம
வாங்கலேன்னா அந்தப் பணம் அப்டியே அரசாங்கத்துக்குத் திரும்பப் போகுதா…வாங்கிட்டதா பதிவு
பண்ணி அவன் எடுத்துக்குவான்….எதுக்காக விடணும்? என்றும் தங்கள் காரியத்திற்கு தங்கள்
மனதிற்கு தாங்களே சமாதானம் சொல்லிக் கொள்பவர்களாய்ப் பலரும்…!இவர்களே அரசாங்கத்தின்
இந்தச் செயலை விமர்சிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதுதான் விநோதம். எதிராளிக்கு
என்ன தெரிந்திருக்கவா போகிறது என்று நியாயமும் நேர்மையும் பேசுபவர்கள் கமுக்கமாய் வந்து
வரிசையில் நிற்பது அதிசயத்திலும் அதிசயம். கேவலத்திலும் கேவலம்.
தான் மட்டும் தனியாய் இருந்தால் நிச்சயம் இங்கு வந்து நிற்கப்
போவதில்லைதான். அந்தப் பணத்தை வாங்குவதில் துளியும் இ்ஷ்டமில்லை சந்திரசேகரனுக்கு.
நானென்ன பிச்சைக்காரனா…? என்று தனக்குத்தானே திட்டிக் கொண்டார் அவர். முப்பத்து மூணு
வருஷம் சர்வீஸ் போட்டு பென்ஷன் வாங்கறேனாக்கும்…நான் கொடுப்பேன் நாலு பேருக்கு…என்று
எண்ணினார். அநாதைக் குழந்தைகளின் கல்விக்கென்று மாதா மாதம் மூவாயிரம் ரூபாய் ஒரு நிறுவனத்திற்கு
அனுப்பிக் கொண்டிருக்கிறார் என்கிற உண்மை அவருக்கு மட்டுமேதான் தெரியும். யாரிடமும் சொல்வதில்லை. நடைப்பயிற்சிக்குச் செல்லும்போதெல்லாம் கை நீட்டுபவர்களிடம்
பத்துப் பத்தாகக் கொடுத்து விடுவார். இதற்காகவே பத்து ரூபாய்நோட்டுக்களை சேகரிப்பது
அவர் வழக்கம். பத்து ரூபாய் நாணயமும் சேர்த்து வைத்திருந்தார்தான். ஆனால் அதை பிச்சை
வாங்குபவர்கள் கூட வாங்க மறுக்கிறார்கள் என்பதுதான் அதிசயமான உண்மை. ஒரு ஊரில் செல்லுபடியாகும்
நாணயம் வேறொரு ஊரில் செல்லுவதில்லை. அரசாங்கம் அச்சடித்த காசு அவர்களே அறிவிக்காமல்
எப்படிச் செல்லாக்காசாகும்? இதற்குமா கோர்ட் உத்தரவு போடும்? வாங்க மறுத்தால் தண்டனை
என்று அறிவிக்க வேண்டும் போலிருக்கிறது.
இது வேணாம் சார்…நோட்டா இருந்தாக்
கொடுங்க… என்றான் ஒருவன். ஏம்ப்பா…எல்லா எடத்துலயும் வாங்குறாங்களே…நீ மட்டும் வேணாம்னா
எப்படி? என்றார்.
இல்ல சார்…இந்தச் சென்னைல இது போகாது
சார்….என்றான் பதிலுக்கு.
இந்த ஏரியாவுல போகாதுங்கிறியா அல்லது
சென்னை முழுக்கவே அப்படித்தான்ங்கிறியா?
நான் இந்த ஏரியாவுலதான சார் திரியறேன்…இங்க
போகாது சார்….வேணும்னா ஜி.பே பண்ணிடுங்க சார்…என்றானே பார்க்கலாம். அதிசயித்துப் போனார்.
அதன்பின்தான் தெரிந்தது பிச்சைக்காரர்களில் பலர் ஆன்ட்ராய்டு ஃபோன் வைத்திருப்பதும்,
ஜி.பே…ஃபோன்பே…என்று தெரிவிப்பதும்….இவருக்கோ தூக்கி வாரிப் போட்டது. அட…நாம கூட வச்சிக்கல…இவன்
ஜி.பேல பிச்சை கேட்கிறானே…? சோத்துக்கில்லாதவன் பிச்சை கேட்கிறதைப் பார்த்திருக்கோம்…இவன்
துட்டுச் சேர்க்கப் பார்க்கும் நாகரீகப் பிச்சைக்காரனாயிருக்கானே? அவ்வளவு கௌரவமான
தொழிலாக ஆகிவிட்டதோ? மனதுக்குள் சிரிப்பதா, அழுவதா? அவன்ட்ட ஐநூறைக் கொடுத்து சேஞ்ச்
எதுவும் வாங்கலியே நீங்க…அந்த மட்டும் பாதகமில்லை. இன்னும் கொரோனா பயம் முழுதுமா நீங்கலியாக்கும்…எதுக்கும்
ஜாக்கிரதையாவே இருங்க…என்றாள் ராஜலெட்சுமி.
அவர் பென்ஷன் கணக்கை யாரும் பார்ப்பதில்லை…என்ன வரவு…என்ன
செலவு என்று. அதுபோல் ராஜலெட்சுமியின் பென்ஷன் கணக்கையும் அவர் என்ன ஏது என்று கேட்டுக்
கொள்வதில்லை. ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும் இருவருக்கும் சேர்த்து அவரவர் பெயரில்
போஸ்டாபீஸ் சேமிப்பில் போட்டு வந்தார்கள். அந்த வேலைகளையெல்லாம் அவர்தான் செய்வார்.
படிவத்தை சீராகப் பூர்த்தி செய்து அவளிடம் கையொப்பம் மட்டும் வாங்கிக் கொள்வார். சரியாகக்
காலை ஒன்பது மணிக்கு முதல் ஆளாய் போஸ்டாபீஸ் திறந்ததும் வரிசையில் நின்று விடுவார்.
அவரைப் போல் அந்தப் புரியாத படிவத்தை சரியாகப் பூர்த்தி செய்து நீட்டுபவர் எவருமில்லை
என்றே சொல்லலாம். அதில் ஒரு தனிப் பெருமை அவருக்கு. எந்தெந்த இடத்தில் என்னென்னவற்றை
எம்மாதிரிக் குறிப்பிட வேண்டும் என்பதையெல்லாம் டைரியில் குறித்து வைத்திருந்தார் சந்திரசேகரன்.
ஆகையால் தவறே வருவதில்லை. கை நடுங்கி எங்கேனும் ஓவர் ரைட்டிங் விழுந்தால்தான் உண்டு. அங்கும் எதற்குக் கேள்வி
என்று ஜாக்கிரதையாக அருகே தன் கையொப்பத்தை இட்டிருப்பார். இருவருக்கும் எவ்வளவு தொகைக்கு
சேமிப்பு வைக்கலாம் என்பதை அவரவர் கணக்கிற்கு சரியாகக் குறித்து வைத்து பராமரித்து
வந்தார். கடைசிக்காலத்தில் தங்களுக்குப் பின் பையனுக்குத்தானே போய்ச் சேர வேண்டும்
என்று ஒவ்வொரு சேமிப்பிற்கும் மறக்காமல் நாமினி (வாரிசு) இடத்தில் பையன் பெயரைக் குறிப்பிட
அவர் என்றும் மறந்ததேயில்லை. சேமிப்பிற்கான பாஸ் புத்தகம் கைக்கு வந்ததும் முதலில்
அதைத்தான் பார்ப்பார். வாரிசு குறிப்பிட்டிருக்கிறதா என்று.
நாமினி நோட்டட்…என்றும் நாமினி
கொடுத்ததற்கு அடையாளமாய் ஒரு எண்ணும் குறிப்பிடுவது அவருக்குக் கோபத்தைக் கிளப்பியது.
இதுக்கு நாமினிங்கிற இடத்துல பெயரைப் போட்டுட வேண்டிதானே….? எதுக்கு நோட்டட்ன்னும்,
நம்பரும்….? நாளைக்கு யார் பெயரைக் குறிப்பிட்டோம்னு சேவிங்க்ஸ் போட்டவனுக்கே சந்தேகம்
வரும்….என்று ஒரு நாள் கத்தினார். அவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்று வரிசையில்
நின்ற பலரும் அவரை ஆமோதித்தார்கள்.
இன்று போஸ்டாபீசுக்கும், வங்கிக்கும்
வருபவர்கள் எல்லோரும் வயதான சீனியர் சிட்டிசன்கள்தான். இளைஞர்கள் யாரும் வருவதில்லை.
எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே முடித்து விடுகிறார்கள். அதிலேயே சேமித்தும் வைத்துக் கொள்கிறார்கள்.
ஏண்டா…இவ்வளவு பணத்தை ஆன்லைனிலேயே
டெபாசிட் பண்றியே…அதுக்கு ஆன் லைனிலேயே சர்டிபிகேட்டும் வாங்கி வச்சுக்கிறே…அது அதுல
பத்திரமா இருக்குமா? என்னைக்காச்சும் கம்ப்யூட்டருக்கு நோக்காடு வந்ததுன்னா.. அத்தனையும்
அழிஞ்சி போயிடாதா? இல்ல…ஃபிசிகலா ஒரு டைரிலயாவது டெபாசிட் நம்பர், ஐ.டி. நம்பர்ன்னு
தொகையை நோட் பண்ணி வைக்கணும்….பேனாவையே கைல எடுக்க மாட்டேங்கிறீங்களே? அட…கம்ப்யூட்டரே
திருடு போயிடுத்துன்னு வச்சிக்கோ….எங்க போய் நிப்பே….? அவருக்கு இன்றைய நவீன நடைமுறைகளெல்லாம்
வியப்பாகவும், பயமாகவும்தான் இருந்தது. ஆனால் வேறு வழியில்லை. யார் சொன்னாலும் நிற்கப்
போவதில்லை. இப்போதைய நடைமுறைகளுக்கேற்றாற்போல் லாபங்களையும், நஷ்டங்களையும் எதிர்கொள்ள
வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டார். இம்மாதிரி முரண்பாடுகளையெல்லாம் அள்ளிக்
கொட்ட ஒரு இடம் கிடைக்காதா என்று காத்துக் கொண்டிருந்ததுபோல் அன்றொரு நாள் தன் வயிற்றெரிச்சலைத்
தீர்த்துக் கொண்டது அவருக்கு உடனுக்குடன் ஞாபகம் வந்தது.
கோயில் வாசலில் வைத்து
அந்த நிருபர் அவரைப் பிடித்துக் கொள்வார் என்று சந்திரசேகரன் நினைக்கவேயில்லை. சமூக
ஊடகங்கள்தான் இன்று பெருகி நிற்கின்றனவே? அங்குதான்
கூட்டம் என்று எண்ணி வந்து நின்றிருப்பாரோ என்னவோ…அல்லது அருகிலிருக்கும் ரேஷன் கடையின்
முன் வைத்து அவர்கள் வியாபாரத்தைக் கெடுக்கும் வண்ணம் பொது மக்களிடம் மைக்கை நீட்ட
முடியாது என்று கருதினாரோ…அது அவர் அந்த இலவசத் துட்டைப் பெறாத நேரம்.
ஆயிரம் ரூபாய் இலவசம் கொடுக்கிறாங்களே…வாங்கிட்டீங்களா…?
என்று முதல் கேள்வி போட்டபோது….நீங்க எந்த டி.வி…? என்று பதில் கேள்வி எறிந்தார் இவர்.
பெயரைச் சொன்னபோது பதில் எப்படிச் சொன்னால்
இவர்களுக்கு திருப்தியாகும் என்று நினைத்தார். இலவசமே தப்புங்க… என்று பதில் சொன்னபோது
அதிர்ந்தார் மைக்காளி. மக்களைச் சோம்பேறியாக்குற திட்டமுங்க இது….என்று மேலும் சொன்னார்.
இதுனால என்னவெல்லாம் விபரீதமாகுது தெரியுங்களா….சொன்னா நா சொல்ற மொத்தத்தையும் நீங்க
உங்க டி.வி.ல போடுவீங்களா? ஒரு நாலஞ்சுபேத்தயாச்சும் காண்பிக்கணும்னு கட் பண்ணி, கட்பண்ணிப்
போடுவீங்க…அதுலயும் உங்களுக்கு சார்பா யாரு சொல்றாங்களோ அத மட்டும் காண்பிப்பீங்க…எதிர்க்
கருத்துச் சொன்னவங்களை ஒதுக்கிடுவீங்க….வாங்குறதுல சம்மதம் இருக்கிறவங்களப்போல, எதிர்க்கிறவங்களும்
இருக்கத்தான செய்வாங்க…அவங்களும் மக்கள்ல ஒரு அங்கம்தானே…அந்தக் கருத்தும் பரவலா இருக்குன்னு
அதிகாரத்துக்குத் தெரிய வேண்டாமா? அரசாங்கம் ஒதுக்கீடு செய்ற பணம் முழுவதும் விநியோகம்
ஆகிடுதா? இல்லைதானே? மிச்சமெல்லாம் எங்க போகுது? யாருக்குத் தெரியும்? வாங்காதவங்க
வாங்கினதாப் பதிவு செய்தா தெரியவா போகுது?வாங்குறது அவுங்கவுங்க இஷ்டம்.
அதனால ஏதேனும் பலன் இல்லாமப் போகுமா? பாவம் நம்ம மக்கள். அதிகமா ஏழைகளும், நடுத்தர
மக்களும்தானே அதிகம். அதை நாம குறை சொல்லகி கூடாது…
ஏதோ கொஞ்சப் பேர் சொல்றதுனால
இலவசத்த எடுத்துடுவாங்கன்னு நீங்க நினைக்கிறீங்களா? எந்த அரசு வந்தாலும் இதைச் செய்தேயாகணும்னு
கட்டாயமாயிடுச்சே இன்னிக்கு…! அப்புறம் எப்படி நிறுத்துவாங்க….இதை தேர்தல் அறிக்கைல
அறிவிச்சாத்தானே ஜெயிக்கவே முடியும்ங்கிற நிலைமை வந்திடுச்சு….! ஆளுங்கட்சி அறிவிக்கிறதுனால,
எதிர்க்கட்சியும் பயந்து போய் ஒண்ணுக்கு ரெண்டா அள்ளி விடுறாங்க…இதெல்லாம் சாத்தியமான்னு
யாரும் யோசிக்கிறதில்லே. ஆட்சியைப் பிடிச்சாப் போதும்ங்கிற வெறி. நம்ம மக்கள்தானே…ஏதாச்சும்
சொல்லிச் சமாளிச்சிக்கலாம்ங்கிற அசாத்திய தைரியம். மக்களும் அப்டி ஏமாளியாத்தானே இருக்காங்க….!
சீட்டுக் கம்பெனிகள் எத்தனையோ புதுசு புதுசாத் தோன்றி மக்களைத் தொடர்ந்து ஏமாத்திட்டுத்தானே
இருக்காங்க…வசூல் பண்ணி கோடி கோடியாக் கொள்ளையடிச்சிட்டு ஓடிட்டாலும், திரும்பவும்
ஒரு சீட்டுக் கம்பெனியை நம்பி பணம் போட்டு ஏமாறத்தானே செய்றாங்க…? அரசாங்கம் தர்ற இலவசத்தை
நம்புறது எப்படித் தப்புன்னு சொல்ல முடியும்? அது கண்கூடான விஷயமாச்சே…!
மக்கள இதுக்குப் பழக்கப்படுத்தினதே அரசாங்கம்தானேங்க… இலவசம் கொடுத்தா
அரசாங்கத்தோட நிதி நிலைமை இன்னின்னமாதிரி பாதிக்கப்படும், நிரந்தரமான பலனளிக்கும் எதிர்காலத்
திட்டங்கள செயல்படுத்தவே முடியாது….எதிர்காலத்துக்குப் பயன்படும் திட்டங்களத்தான் ஒரு
அரசாங்கம் யோசிக்கணும், அப்பப்போ மீனுக்குப் பொரி போடுறமாதிரி இந்த சில்லரை இலவசங்களை
மக்களுக்கு அளிச்சு, அதில் அவர்கள் தற்காலிகத் திருப்திப்பட்டு, இன்னொரு பக்கம் விலைவாசி
ஏற்றம், பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை உயர்வுன்னு ஏத்திட்டே போறதுல என்னங்க
இருக்கு?
மைக்கைப் பிடித்த டிவிக்காரர்….தீவிரமாய்
இவரை நோக்கினார். எதிரால்ல பேசுறாருன்னு நினைச்சிருப்பாரோ? ஒரேயடியா ஜால்ராப் போடுற
ஆளை எதிர்பார்த்திருப்பாரோ? உண்மையைத்தானே சொல்ல முடியும். பொது ஜனம்ங்கிறது யதார்த்தம்
பேசுற கூட்டம்தானே? அவருக்கு இவரின் கருத்துக்கள்
பிடித்திருந்ததோ என்னவோ? ஆனாலும் பிழைப்புக்காக அவர் வெளியில் காண்பித்துக் கொள்ள முடியுமா?
முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. ஒண்ணாம் தேதி வரும் சம்பளம்தான் மனதில் நின்றது
போலும்…
எதிர்க்கட்சிங்கன்னு எதுவும் எதையும் கேட்கிறதில்ல. ஏன்னா
அவங்களும் ஆட்சில இருந்தபோது இதையேதான் செய்தாங்க…பேருக்கு கூட்டம் கூட்டி ஒரு கோஷத்தப்
போட்டுட்டு கலைஞ்சு போயிடுறாங்க….அப்டியே பிடிச்சிட்டுப் போனாலும்..ஒரு கல்யாண மண்டபத்துல
வச்சிருந்து சாயங்காலமா திறந்து விட்டிடுவாங்க…இதானே நடைமுறையா இருக்கு…மக்கள எப்படியெல்லாம்
ஏமாத்துறாங்க…மக்களுக்கென்ன இதெல்லாம் தெரியாமயா இருக்கு…எத்தனை வருஷமாப் பார்த்திட்டிருக்காங்க…?
அவங்களுக்கும் பழகிடுச்சு….வேறே கதி? ன்னு கம்முனு கிடக்காங்க….பேச ஆரம்பிச்சா எல்லாம்
வெட்கக் கேடு….யாருக்கு? மக்களுக்கு….அரசியல் கட்சிகளுக்கா? அவங்களுக்குத்தான் எதுவுமே
கிடையாதே? அரசியல சாக்கடைங்கிறாங்க…அப்படி ஆக்கினது யாரு? இவங்கதானே? அந்தச் சாக்கடையைப்
பன்னீரா நினைச்சு நீந்துறாங்க அரசியல்வாதிங்களும் ஆட்சியாளர்களும். மக்கள்தான் நாத்தம்
பொறுக்க முடியாம மூக்கைப் பொத்திக்கிட்டு, பொறுத்துக்கிட்டுக் கிடக்காங்க….எதைச் சொல்றது.
எதை விடுறது…எல்லாம் தலைவிதி…ஒரே ஒரு ஓட்டை யோசிக்காமப் போட்டுட்டு அஞ்சு வருஷத்துக்கு
திண்டாடுறாங்க….அடுத்தாப்லயும் யோசிக்காமப் போடுறாங்க…மறுபடியும் கஷ்டப்படுறாங்க…இது
நம்ம தலவிதின்னு தன்னைத்தானே நொந்துக்கிறாங்க…
நிருபர் அடுத்த ஆளுக்கு நகர்ந்தார். அங்கே ரேஷன் கடையில் வரிசையில் நின்று கொண்டிருந்தவன் மோகன். அதுதான் அவன் முதலும் கடைசியுமாக நியாயவிலைக்
கடைக்கு வந்தது. அதற்குப் பிறகு இவர்தான் மாதா மாதம் விடாது வந்து கொண்டிருக்கிறார்.
வீட்டில் சும்மா இருப்பதற்கு இதையாவது செய்வோமே என்று கடமையாய்ச் செய்து கொண்டிருந்தார்.
கையில் அந்த ஆயிரம் ரூபாயைக் கடைக்காரன் திணித்தபோது நிமிர்ந்து இவரைப் பார்த்துக் கேட்டான். ஏன் சார்…நீங்கள்லாமா….?
அந்த வார்த்தையில் நொறுங்கிப் போனார் சந்திரசேகரன். வீடு
நோக்கித் திரும்பி வருகையில் அவர் மனது கடந்த கால நினைவொன்றில் பதிந்தது….தீபாவளி நெருங்கும் சமயத்தில் அதன் நினைவாகவே அந்த நிகழ்வு அவரை வந்தடைந்தது.
டிராஃபிக் அதிகமாய் இருந்ததால் ஒரு ஓரமாய்க் கொஞ்சம் நின்றார். அந்த வேளை அந்தப் பழைய
நினைவு தொற்றிக் கொண்டது. எந்தப் பழைய எண்ணங்களும் தத்துவார்த்த ரீதியாய்த்தான் மனதில்
வரிசை கட்டுகிறது. கதை போலல்லாமல் கட்டுரை போல என்று கூடச் சொல்லலாம். ஆபீசிலேயே அப்படி
வசனம் பேசித்தானே பழக்கம். அடுத்தவன் தன் பேச்சில் பயப்பட வேண்டும் என்று எண்ணி எண்ணியே
அவர் தனிப்பாணி ஆகிப் போனது அது. ஒரு தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பு நடந்தது
அது. வருடா வருடம் உள்ள நிகழ்வுதான் அது. ஆனாலும் தவிர்க்க நினைத்தும் முடி வதில்லையே?
(
3 )
கடந்த
ஒரு வருஷத்துக்கும் மேல நான் இந்தத் தெருவுல போயிட்டு வந்திட்டு இருக்கேன்...எனக்கு
தீபாவளிக் காசு கொடுங்க... – என்று மட்டும்தான் இதுவரை வந்து நிற்கவில்லை. அதுவும்
அநேகமாக சீக்கிரம் நேர்ந்துவிடக் கூடும். அந்த அளவுக்கு மனம் நொந்து போகிறது. ஏண்டா
இந்த தீபாவளி வருதுன்னு இருக்கு...! நோகாதவர்கள் யாரேனும் உண்டு என்று சொல்ல முடியுமா?
ஏனென்றால் இங்கேதான்
எல்லாவிதமான ஒழுக்கக் கேடுகளும் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றனவே...?
ஏரியா தாதாக்கள் மாமூல்
வசூல் பண்ணுவதில்லையா கடை கடையாக...? அவர்கள்
தீபாவளி வசூல் நடத்தமாட்டார்களா? அதுபோல் இதுவும் ஒன்று இருந்துவிட்டுப் போகிறது? தெருவில்
ஒருவன் அல்லது தெருவுக்குத் தெரு ஒரு சிலர் இப்படிக் கேட்கிறார்கள் என்றால் அதையும்தான்
யார் கண்டு கொள்ளப் போகிறார்கள்.
வருஷத்துக்கு ஒரு தரந்தானங்க...பேசாமக்
கொடுத்துட்டுப் போவீங்களா...இதப் போய்ச் சொல்ல வந்திட்டிருக்கீங்க....என்று சொன்னாலும்
போயிற்று. இன்று இதுதான் நிலைமை….-மனைவி ராஜலெட்சுமியிடம் புலம்பிக் கொண்டிருந்தார்
சந்திரசேகரன்.
போஸ்ட்மேன் மணியார்டர்
கொண்டு வருகிறார். மாதா மாதம் தபால் அலுவலகத்தில் கூடியிருக்கும் தாத்தா, பாட்டி, வயதான
பெண்கள் ஆண்கள். இப்படி எல்லோருக்கும் வந்திருக்கும் முதியோர் உதவித் தொகைகள், பையன்
அனுப்பியிருக்கும் பணம், இவற்றை அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்குகிறார். அவர்களும்
பணம் வந்த மகிழ்ச்சியில், பிரியப்பட்டதைக் கொடுக்கிறார்கள். மகிழ்ச்சியைப் பகிர்ந்து
கொள்கிறார்கள். .
அதே போல் வீடுகளில்
வழங்கப்படும் மணியார்டர்களுக்கும்,அவரவர் விருப்பப்படி ஏதோ கொடுக்கிறார்கள், வாங்கிக்
கொள்கிறார்கள். விடுங்கள். இப்படியான எல்லாமும் பரஸ்பரப் புரிதலினாலும், பழக்கத்தினாலும்,
நட்புணர்வுடனும், ஒரு சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதாகவும் நிகழ்ந்து போகிறது. டீ சாப்பிடுவோமா...
என்பதைப் போல.
அலுவலகங்களில் நமக்கு
ஒரு அரியர்ஸ் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிலுவைத் தொகையும் உரிய காலத்தில்
நமக்குக் கிடைத்திருக்காதுதான். அதற்குப் பாடாய்ப் பட்டு, பம்பரமாய்ச் சுழன்றுதான்
ஒருவகையாய் அது ஆகியிருக்கும். ஆனால் அந்தத் தொகை வந்ததும் குறைந்தபட்சம் ஒரு எஸ்.கே.சி.யாவது
வைக்காமல் நீங்கள் தப்பிக்க முடியாது. நான் சொல்வது மிகப் பழசு. இப்போதெல்லாம் சாப்பாடே
வாங்கிப் போட வேண்டியிருக்கிறது. வாங்கிப்போட்டு எல்லோரின் வயிற்றுத் தீயை அணைத்தால்தான்
நீங்கள் வாங்கிய காசு உங்களுக்கு விளங்கும். என்னய்யா பழக்கம் இது? இதெல்லாம் நிறுத்தங்கய்யா…என்று
எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். நடந்தால்தானே? எல்லோரும் விரும்புகிறார்களே?
மாறுதலில் சென்றால், செல்பவர் ஆபீசுக்கு விருந்து
வைத்துவிட்டுத்தான் நகர முடியும். அவர்கள் பதிலுக்கு ஒரு சின்ன மீட்டிங் வைத்து எஸ்.கே.சி.
கொடுத்து அனுப்புவார்கள். ஓய்வு பெறுகிறீர்களா? சும்மா நகர்ந்து விட முடியாது. உங்கள்
ஓய்வுப் பலன்களையெல்லாம் நீங்கள் உரிய காலத்தில் இல்லாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட
கால இடைவெளியிலாவது பெற வேண்டுமா வேண்டாமா?
அப்படியானால் நீங்கள் படையல் போடாமல் நகரவே முடியாது. இன்று அதுதான் கலாச்சாரம். பெரும்பாலான
ஆபீஸ்களில் வாரத்துக்கு ஒன்று என்றேனும் ஏதாவது பார்ட்டி என்று ஒன்று நடந்து கொண்டுதான்
இருக்கிறது. இந்த வாரம் யாரு? இன்னைக்கு யாரு? என்கிற அநியாய எதிர்பார்ப்பு வந்தாயிற்று.விளங்குமா?
ஆபீஸ் வேலை பார்க்கும் இடமா? சாப்பிடும் கான்டீனா?
மொத்தமாக சாப்பாட்டுக்கு
ஆர்டர் பண்ணி, வரவழைத்து, வேலை பார்க்கும் மேஜையில் கோப்புகளை எல்லாம் அள்ளி ஓரங்கட்டி
விட்டு, இலை போட்டுப் பரிமாறி சவரணையாய் சாப்பாடு நடந்து கொண்டிருக்கிறது. அப்டீன்னா
வேலை? அதெங்க போகுது...அதத்தான் செய்திட்டிருக்கோம்ல....! என்று நீட்டுவார்கள். இல்லையென்று சொல்ல முடியுமா? உயர் அலுவலருக்குத்
தெரிந்தால்? அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. அவரையும் விருந்துக்குக் கூப்பிட்டாப் போச்சு?
அலுவலர் அறைக்குள் நுழைந்து பாருங்கள்...அந்த அலுவலகத்தின் அலுவலர் இருக்கையில் உயர்
அலுவலர் அமர்ந்திருக்க, எதிரே அவரும்
அமர்ந்து, பியூன் பயபக்தியோடு பரிமாற, அய்யா, அப்பளம் போடட்டுங்களா? பாயசம் விட்டுக்குங்க...இன்னும்
கொஞ்சம் கறி...? பொடிமாஸ் இருக்குங்கைய்யா....கணேஷ் மெஸ்ல சூப்பராயிருக்கும்...கொஞ்சம்
வைக்கிறேன்.....!!! எங்கிருந்து
வந்தது இந்தப் பழக்கம்? ஏன் இந்த அவலம்? எல்லாம் லஞ்சம் கொண்டுவந்த பழக்கம்தான். இந்த
அரசியல்வாதிகள் ஏற்படுத்திய பழக்கங்கள் என்று சொல்லலாமா? எல்லாத்துக்கும் அவுங்க மேல
பழியா? ஆமாம்…பின்ன…அவுங்க கொண்டு வந்து நிறுத்தின கான்டிராக்டர்கள் ஏற்படுத்தின பழக்கம்தானே?
வாயடைத்துப் போகிறது.
நீங்கள் வாங்காதவராய்
இருக்கலாம். ஆனாலும் நைவேத்தியம் வைத்தால்தான் நகர முடியும். உங்கள் கைக்காசு போட்டு,
செய்ய வேண்டிய நியமங்களைச் செய்துவிட்டுத்தான் வெளியே வர முடியும். பின்னால் ஒரு சுமுக
நிலையோடு நீங்கள் போய் வர வேண்டாமா? என்ன சார், சௌக்கியமா இருக்கீங்களா? என்று ஒரு
சிலராவது உங்களைக் கேட்க வேண்டாமா? இவங்க கேட்டா என்ன கேட்காட்டா என்ன என்று உங்கள்
உள் மனது நினைப்பது என்பது வேறு. ஒரு முப்பது முப்பத்தைந்து வருடங்கள் இப்படியான எல்லோருடனும்தானே
குப்பை கொட்டியிருக்கிறோம். இப்படியான சூழ்நிலையில் என்னால் வேலை பார்க்க முடியாது என்றால், அன்றே அல்லவா ரிசைன் செய்துவிட்டு
வந்திருக்க வேண்டும்? அது செய்யவில்லையே? மாதச் சம்பளம் என்கிற வட்டத்துக்கள் இருந்ததால்
அது சாத்தியமாகவில்லையல்லவா? இதுதான் இன்றைய அவலநிலை.
எதற்கோ ஆரம்பித்து
எங்கோ சென்றுவிட்டதைப் பார்த்தீர்களா? இது இப்படித்தான் விரிந்து கொண்டே போகும். புற்று
வைப்பது வேகமாகத்தானே நடக்கும்.
வீட்டு வேலைக்காரம்மாவுக்கு
தீபாவளி போனஸ். சேலை, ரவிக்கைத்துணி, பழம்,
வெற்றிலை பாக்கு தாம்பூலம் சரி. நியாயம்.
சிலிண்டர் போடுபவர்,
பேப்பர் போடுபவர், பால் பாக்கெட் போடுபவர், அயர்ன்காரர், குப்பை வண்டிக்காரர், கூர்க்கா,
கூரியர்காரர் என்றால் கச்சேரி தபால் கொடுப்பவர், இசைச் சங்கத் தபால் கொடுப்பவர், எல்.ஐ.சி.,
எப்.டி. என்று எப்போதாவது வரும் தபால் கொண்டு வருபவர், மாத இதழ் போடுபவர், குடியிருப்போர்
நலச்சங்க கூர்க்கா, எனக் கொடுத்தால் போதாது என்று அந்தப் பகுதி பஞ்சாயத்து ஆட்கள் வேறு
ஒரு பெரிய பட்டாளமே படையெடுத்து விடுகிறது. அதுவும் தீபாவளி நெருங்குகிறது என்றால்
குப்பை அள்ளும் டிராக்டர் ரொம்ப சின்சியராகத் தெருவுக்குள் நுழைவதைப் பார்க்கலாம்.
ஒரு ஏழெட்டுப் பேர்கள் படையெடுத்தாற்போல் வீட்டு வாசலில் வந்து, சா....ஆஆஆஆஆஆஆர்ர்ர்ர்.........யம்மாஆஆஆஆஆஆஆ...
என்று கத்தி நீங்கள் தலையைக் காட்டாமல் விடவே மாட்டார்கள். கடந்த ஒரு வாரமாய் இந்த
ஜோலிதானே நடக்கிறது.
நாங்கதான் குடியிருப்போர்
அசோசியேஷன் குப்பை வண்டிக்கும், கூர்க்காவுக்கும் கொடுத்துடுறோம்ல....உங்களுக்கு எதுக்கு?
நீங்க எங்க ரெகுலரா வர்றீங்க? இப்போ திடீர்னு தீபாவளிக்குன்னு வந்திட்டு, காசுன்னா
யாரு தருவாங்க...?
நகர்ந்தால்தானே..!!..கொடுங்க
தாயீ, எப்பவோ ஒரு வாட்டீ....நல்லாயிருப்பீக...நாங்க இத்தனபேர் இருக்கோம், ஆளுக்குக்
கொஞ்சமாப் பிரிச்சிக்கிருவோம்....
இளகிவிட்டீர்களா? சரி,
போகிறது என்று ஒரு தொகையை எழுதிக் கொடுத்து அனுப்பிவிடுவீர்கள்.
என் நண்பர் ஒருவர்
இருந்தார். இப்பொழுதும் இருக்கிறார். தீபாவளி வசூல் என்று நோட்டுப் போட்டு பிரிவு பிரிவாக வந்து நிற்கும் பியூன்களிடம்,
எதுக்குய்யா தீபாவளிக் காசு? நீயும் வேலை செய்ற...நானும் வேலை செய்றேன்...நீயும் சம்பாதிக்கிற...நானும்
சம்பாதிக்கிறேன். நான் எதுக்கு உங்களுக்குத் தரணும்?அதெல்லாம் தர முடியாது...என்று
மறுத்து விடுவார். கடைசி வரை அப்படியேதான் இருந்தார். தன்னை மாற்றிக் கொள்ளவேயில்லை.
அவர் இருந்த இருப்பு தவறு என்று சொல்ல முடியுமா? தொலையுது…என்று விட்டு விட்டார்களே?
சரி, கேட்பதோ கேட்கிறோம்.
அதைக் கொஞ்சம் பணிவாய்க் கேட்போம் என்று இருக்கிறதா எவரிடமும்?
தீவாளிக் காசு வசூல் பண்ணிக்கிட்டிருக்கோம்..... என்பார்கள். தகவல் எப்படி
வருகிறது பாருங்கள். அதிகார லஞ்சம் என்று இதற்குத்தான் பெயர்.
வீட்டுவரியெல்லாம்
வசூல் பண்ணிட்டிருக்கோம் சார்...ஏதாச்சும் ஒண்ணுன்னா அப்புறம் ஜப்திக்கு வந்திருவோம்
ஆம்மா...என்பதைப்போல பந்தாவாய்க் கேட்கிறார்கள். காலம் எப்படி மாறிப்போய்விட்டது பாருங்கள்?
சார், தீவாளிக்காசு கொடுங்க சார்....ஒருத்தராவது இப்படிப் பணிவாய், அட அதுகூட வேண்டாம்...குரல்
தாழ்த்தி சற்று மென்மையாகவாவது கேட்கலாம் அல்லவா?
அனுபவப்படாதவர் யாரேனும் உண்டா? சொல்லுங்கள்.
வருஷத்துக்கு ஒரு தடவைதானங்க....கொடுக்கட்டுமே...!
வருஷத்துக்கு ஒருவாட்டி
கொடுத்தா என்ன குறைஞ்சா போவாங்க....?
சும்மா கேளுங்க...கொடுப்பாங்க.....-
நமது தயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு தடையின்றி விழும் கேள்விகள்.
கேட்டு, யாருக்கேனும்
மறுக்க முடிகிறதா? இதுவரை மறுக்க முடிந்திருக்கிறதா?
என்னா சார்...அம்பது
கொடுக்கிறீங்க...? போனவாட்டியும் இம்புட்டுத்தான் கொடுத்திங்க...கொஞ்சம் கூட்டிக் கொடுங்க
சார்...
பிரியப்பட்டுக் கொடுக்கிறதை
வாங்கிக்கப்பா.....
நூறு கொடுங்க சார்...நாங்க
ரெண்டு பேரு இருக்கம்ல.....
ஆளாளுக்கு இப்டி வந்தீங்கன்னா,
நாங்க எங்க போறது? நாங்களும் ஒரு நோட்டைத் தூக்கிட்டு அலைய வேண்டிதான்.....இன்னும்
அது ஒண்ணுதான் நடக்கல...அதுவும் கூடிய சீக்கிரம் நடந்துடும்....
தொலையட்டும் என்று
அழுதிருக்கிறீர்களா இல்லையா? நான் அழுதிருக்கிறேன்.
தயவுசெய்து கொடுப்பவைகளை
எழுதி மட்டும் வைத்து விடாதீர்கள். பிறகு கூட்டிப் பார்த்தால் நீங்கள் மயக்கமானாலும்
போயிற்று. நான் ஜவாப்தாரியில்லை.
ச்ச்சே...!! வாங்கின
ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் பூராவும் இதுக்கே சரியாப் போச்சுய்யா...ஆளாளுக்கு வந்து பிச்சுப்
பிடுங்கிட்டுப் போய்ட்டானுங்க....ஒத்தக் காசு மிச்சமில்லே....அந்தக் காசுல ஒரு டிபன்
கூடச் சாப்பிடலய்யா....வீட்டுல கூட அந்தப் பணத்தைக் கண்ணால பார்க்கலய்யா...
மனசுக்குள் புழுங்கும்
உள்ளங்கள் எத்தனை? – மறுக்க முடியுமா? வீட்டில் பிரளயமே வெடித்திருக்கிறது சந்திரசேகரனுக்கு.
மனித நேயம், கருணை,
அன்பு எல்லாமும் இருக்க வேண்டியதுதான். எல்லாருக்கும் இருக்குதான். யாரு இல்லேன்னா?
ஆனால் அவை ஒரு நியாயமான, நேர்மையான திசையில் பயணிக்க வேண்டாமா?
ஏன் சார், எப்பவோ ஒருவாட்டி
வந்து நிக்கிறாங்க...இதுக்குப்போயி இப்டி டென்ஷனாகுறீங்க...? விடுங்க சார்.... – நான்கு
திசைகளிலிருந்தும் குரல்கள் எதிரொலிக்கின்றன. ஆனாலும் மேலே கேட்கப்பட்டுள்ள கேள்விகள்
இங்கே பல உள்ளங்களிலும், தொடர்ந்து ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்கள் எல்லோரும்
வாய் மூடியிருக்கிறார்கள். அல்லது மனதுக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். எதுக்குடா
இந்த தீபாவளி வருது ? என்று புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர் வசதியற்றோர்,
நடுத்தர வர்க்கம், மேல் நடுத்தர வர்க்கம் என்று பரவிக் கிடக்கிறார்கள். மனதுக்குள்
வேதனைப் பட்டுக்கொண்டே வீட்டை நோக்கிக் கிளம்பினார் சந்திரசேகரன்.
( 4 )
ஏண்டா மோகன்….உங்கப்பா போயி
ரொம்ப நேரம் ஆச்சே….? மணி ரெண்டாகப் போகுது…என்னாச்சுன்னு தெரிலயே….?
என்று சங்கடத்தோடு வந்து பையன் முன் நின்றாள் ராஜலெட்சுமி. மோகன் அமைதியாய் கணினியில் ஆழ்ந்திருந்தான். காதில்
இயர்ஃபோனை மாட்டிக் கொண்டு எதிர்த்தரப்பு ஆளோடு பேசிக்கொண்டே அம்மாவை நோக்கி அமைதியாயிரு
என்பதுபோல் சைகை செய்தான். முக்கியமானது பேசிக் கொண்டிருக்கையில் இப்டிக் குறுக்கே
வந்து கத்தினா எப்படி? என்பதான கோபம் அவன் முகத்தில் தெரிந்தது.
எந்நேரமும் டென்ஷன்தான். ஓய்வாய் இருந்தான் என்பதே இல்லை.
ஆபீசுக்குப் போனாலும் டென்ஷன். வீட்டில் இருந்து வேலை செய்தாலும் டென்ஷன். ப்ராஜெக்ட்
ஒர்க்கை சொன்ன தேதிக்குள் முடிக்க வேண்டும். சதா மண்டைக்குள் அதுதான் ஓடிக் கொண்டிருந்தது.
அதற்கு நடுவேதான் பல வீட்டு வேலைகளையும் அவன் பார்த்துக் கொள்கிறான்.
குழந்தையைக் காலையில் பள்ளிக்குக் கொண்டு விடுவது, பிறகு
ஒரு மணியைப் போல் போய்க் கூட்டி வருவது, சாப்பிட வைப்பது, மாலையில் கோயிலுக்குக் கூட்டிக்
கொண்டு போவது என்று ஆபீஸ் வேலைகளுக்கு நடுவே இதையெல்லாம் செய்வது அவன்தான். மருமகப்
பெண் மாலா…மணிமாலா…தான் உண்டு தன் வேலையுண்டு என்று அதுவும் எதிர் அறையில் கணினிக்கு
முன் அடைந்து கிடக்கிறது. இரண்டு அறைக்குள் ஆளுக்கொன்றாக அடைபட்டுக் கிடக்க, உறாலில்
அமர்ந்திருக்கும் ராஜலெட்சுமி தினசரியில் ஆழ்ந்திருப்பாள். அவளுக்காகத்தான் ஒரு பேப்பருக்கு
ரெண்டு பேப்பர் என தமிழ் ஒன்றும் ஆங்கிலம் ஒன்றுமாக இரண்டு தினசரிகளை வாங்கிப் போட்டிருந்தார்
சந்திரசேகரன். வருடாந்திர சந்தா என்பதால் தொகையும் குறைந்தது ஒரு வசதிதான். இவருக்கு
தமிழ் தினசரி. அவளுக்கு ஆங்கில தினசரி. அதென்னவோ செய்திகளை ஒரு புரட்டுப் புரட்டுவதோடு
சரி. அதற்கு மேல் அதில் ஆழமாக என்றுமே சந்திரசேகரன் வேரூன்றியதில்லை. அது அவருக்குப்
பிடிப்பதுமில்லை. தேவையில்லாமல் ஏன் மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டும் என்கிற
எண்ணம் சிறு வயது முதல் படிந்து விட்டது. அத்தோடு அரசியல்வாதிகள் மீதும், ஆட்சியாளர்கள்
மீதும் ஒரு தீராத வெறுப்பு படிந்து போயிருந்தது அவரிடம்.
எல்லாமும் மோசம் என்ற பொதுவான எண்ணம்.. எந்தத் திட்டம் அறிவித்தாலும்,
செயல்படுத்தினாலும் அதில் கமிஷன் இருக்கும் என்பது அவரது அசைக்க முடியாத எண்ணம். அதனாலேயே
எந்தத் திட்டங்களும் விளங்குவதில்லை…மக்களின் வரிப்பணம் பூராவும் பாழ்தான்….அவர்கள்
மட்டும்தான் பணத்தை அளவில்லாமல் சேர்த்து வைத்துக் கொண்டு கும்மாளம் போடுகிறார்கள்.
மக்களுக்கு அரிசிப் பொறி போடுவது போல் இலவசங்களை அறிவித்து விட்டு, கொள்ளை கொள்ளையாய்,
மூட்டை மூட்டையாய்ப் பணத்தைப் பதுக்குகிறார்கள்….வெவ்வேறு தொழில்களில் பினாமி பெயர்களில்
முதலீடு செய்கிறார்கள், வெளிநாட்டில் தொழில் தொடங்கி நடத்துகிறார்கள்…எங்கே, எதில்
எவ்வளவு இருக்கிறது என்பது அவர்களுக்கே தெரியாது. .சிகிச்சை, ஓய்வு என்று காரணம் சொல்லிக்
கொண்டு வெளிநாட்டுக்கு அடிக்கடி பறந்து தங்கள் பணத்தின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ந்து,
மேலும் மேலும் முடக்கி….பரம்பரை பரம்பரையாய் தங்கள் வம்சம் செழித்திருக்க வசதி செய்து
கொண்டு- அரசியல், ஆட்சி என்று தொடர்ந்து காலம்
காலமாய் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்..படு பாவிகள் என்பதான அடியொட்டிய வெறுப்பு.
இவ்வளவு பணத்தைச் சேர்த்து என்ன பண்ணப் போகிறார்கள் என்று நினைத்து சிரித்துக் கொள்வார்.
எவ்வளவு பெரிய பங்களாவில் குடியிருந்தாலும் ஒரு மனிதன் ஒரே
நேரத்தில் ஒரு அறைக்குள் ஒரு இடத்தில்தான் இருக்க முடியம். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு
மேல் ரெண்டு இட்லிக்கு மேல் சாப்பிட முடியாது. இந்த மண்ணில் இருந்து எடுத்ததெல்லாம்
இந்த மண்ணுக்கே. ஒரு பிட் கூட உடன் எடுத்துச் செல்ல முடியாது. இவ்வளவு சொத்திருக்கிறதே
என்று தங்கத்தில் இட்லி செய்து சாப்பிட முடியாது. பாழாய்ப்போன இந்தப் பணம் மூடத்தனமாய்
எங்கெங்கெல்லாம் போய் பொருத்தமில்லாமல் சேர்ந்து கொள்கிறது? பயனேயில்லாமல் கண்மூடித்தனமாய்
எப்படியெல்லாம் முடங்கிக் கிடக்கிறது? என்று பலவாறாகத் தோன்றும் அவருக்கு.
காலையில் குழந்தையை எழுப்பி பல் விளக்கிவிட்டு, குளிப்பாட்டிக்
கொண்டு அவன் முன் நிறுத்துவதோடு சரி. பிறகு
உள்ளவற்றையெல்லாம் அவன்தான் செய்தாக வேண்டும். யூனிஃபார்ம் மாட்டி, ஊட்டச் சத்து பானம்
கொடுத்து, பள்ளியில் கொண்டு விடுவதோடு சரி.
டிபன் பாக்சில் வைத்து அனுப்பும் பழத்துண்டுகளை, அல்லது வெந்து உப்புப் போட்டு அனுப்பும்
காரட்…காய்த் துண்டுகளை அதுதான் பள்ளி இடைவேளையில் தானே சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
பலநாள் டிபன் பாக்ஸ் அப்படியே திரும்பியிருக்கும். ஒரு குழந்தை காலையில் ஏழு மணிக்கு
சாப்பிட்ட ஒரு டம்ளர் பானம் அதற்கு எத்தனை மணி நேரத்துக்குத் தாங்கும்? வாடி வதங்கி
அது வீடு திரும்பும்போது பார்க்கப் பரிதாபமாய் இருக்கும். சொல்லிச் சொல்லி குழந்தை
க்ருத்திக் இப்போது கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட ஆரம்பித்திருந்தான்.
மதியம் அவனுக்குக் கதை சொல்லித் தூங்க வைப்பது சந்திரசேகரன்தான்.
அந்த நேரம்தான் அவரது சொர்க்கம். நாளும் பொழுதும் அப்படித்தான் போய்க் கொண்டிருந்தது.
ஒன்றை மட்டும் அவர் மனது விடாது சொல்லிக் கொண்டிருந்தது. பணி ஓய்விற்குப் பிறகான காலங்களில்
அத்தனை நிம்மதியில்லை என்று. அவரது சுதந்திரம் பறிபோனதாய் உணர்ந்தார். அவருக்கு அவர்
ஊரான மதுரையில் இருப்பதில்தான் சந்தோஷம். நிறைவு. இந்தச் சென்னை இன்னும் அவருக்கு ஒட்டவில்லை.
ஒவ்வொன்றுக்கும் தூர தூரமாய்ப் போய் ஆக வேண்டியிருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு காரியம்தான்
பார்க்க முடிகிறது. மதுரை என்றால் வண்டியில் கிளம்பி மதியம் இரண்டு மணிக்கள் எழெட்டுக்
காரியங்களை முடித்து விட்டு வந்து விடுவார். இங்கென்றால் நடப்பதும், பஸ்ஸில் ஏறுவதும்.
பின்பு இறங்கி மீண்டும் நடப்பதும்…போதுண்டாப்பா….என்று வருகிறது. தனக்கு வயதாகிவிட்டதை
இங்கு வந்துதான் நன்றாய் உணர்கிறார். தன் ஊரான மதுரையில் இன்னும் சிட்டாய்த்தான் பறப்பார்.
மதுரையைச் சுற்றிய கழுதையும் அதை விட்டுப் போகாது என்பது எத்தனை உண்மை?
நடந்துதானம்மா போயிருக்கார்….வரிசைல நின்னு வாங்கிட்டு திரும்ப
அதே தூரம் கடந்து வரணுமில்ல…அவசரப்படாதே…வந்திடுவார்…. – பையனின் சாவகாசமான பதிலில் பதற்றமடைந்தாள் ராஜலெட்சுமி. வாகனத்தில் போயிருந்தால்
பயப்படுவது நியாயம். கால்நடையாகத்தானே என்கிறான் மோகன். இந்தப் பெரு நகர் அவளுக்கு
வேண்டுமானால் பழகியதாய் இருக்கலாம். ஆனால் அவருக்கு அப்படியில்லையே? அதனால்தானே திரும்பவும்
சொந்த ஊருக்கே போய் விடுவோம் என்று சொல்லியும் கிளம்ப மனசு வராமல் இவள் ஒட்டிக் கொண்டிருக்கிறாள்?
பிறந்து வளர்ந்து, படித்து வேலைக்குப் போனதும் இங்குதானே? தேடி எடுத்தேனே திருவாழி
மோதிரத்தை என்று இந்த மெட்ரோபாலிட்டன் நகரிலல்லவா அவருக்குப் பெண் அமைந்தது?
ஐயோப்பா…நான் வரலை அந்த கந்தக பூமிக்கு…அதே அளவுக்கு இங்கேயும்
வெய்யில் அடிச்சாலும் ஒரு காத்து இருக்கும். சாயங்காலம் ஆனா வெக்கையைக் கொண்டு போயிடும்…நம்மூர்ல
தகிக்குமே….ராத்திரி தூங்க முடியாமே ஃபேன் வெப்பக் காத்தல்ல வீட்டுக்குள்ளே இறக்கும்.
இதுநாள் வரைக்கும் கஷ்டப்பட்டது போதாதா? இன்னமும் அங்க திரும்பப் போய் புழுங்கிச் சாகணுமா?-இதே
பாட்டைத்தான் பாடுகிறாள். விடாமல் பாடுகிறாள். அவள் பாட்டில் வாயடைத்துப் போய்க் கிடக்கிறார்
சந்திரசேகரன்.
கல்யாணம் ஆனவுடனே மதுரையில் தனிக்குடித்தனம் என்றபோது வாய்
பொத்திக் கிளம்பி வந்தவள், மாறுதலும் வாங்கிக் கொண்டு வந்து அடைந்தவள், இன்று இந்த
சென்னைக்கு வந்து, பையனோடுதான் இருப்பேன் என்று அடம் பிடிக்கிறாள். அன்று தனியாய் இருக்கணும்,
சுதந்திரமாய்த் திரியணும் என்று தோன்றிய மனசு இன்று பையனோடுதான் சேர்ந்து இருப்பேன்,
மருமகளோடு என்ன உரசல் வந்தாலும் சரி, விட்டுப் பிரிவதாய் இல்லை என்று தீர்மானமாய் இருக்கிறாள்.
இங்க அடிமையாய் இருந்தாலும் இருப்பேன்…அங்க வர மாட்டேன்ங்கிறே…அதானே…?
உன் தலைவிதி…யார் மாற்ற முடியும்? என்றார் சந்திரசேகரன். மருமகளுக்கும் மாமியாருக்கும்
எந்த வீட்டில்தான் ஒத்துப் போயிருக்கிறது? பொருளாதார நிலை மேம்பட்டு? வசதி வாய்ப்போடு இருக்கும் குடும்பங்களில் வேண்டுமானால் அது இருக்கலாம்.
அதுவும் அவரவருக்கான வருவாய், வசதி வாய்ப்போடு, தனித் தனி அறைகளில், தனித்தனி உறவாடல்களில்,
ஒன்றாய் இருப்பதுபோன்றதான ஒரு நாடகத்தில் மிளிரலாம். ஆனால் நடுத்தர, மேல் நடுத்தரக்
குடும்பங்களில் அப்படி ஒன்றும் உறவுகள் சுமுக நிலையில் இல்லை என்பதுதானே யதார்த்தம்?
அது எனக்கென்ன என்று விடிந்ததும் விடியாததுமாய்க் கிளம்பி
கம்பெனி பஸ்ஸைப் பிடிக்க ஓடி விடுகிறது. குளிப்பது கூட இல்லை. எழுந்தோமா, பல் தேய்த்தோமா,
காபியை உறிஞ்சினோமா, டிரஸ்ஸை மாட்டினோமா – ஆள விடுங்கடா சாமி என்று கண்ணிலிருந்து மறைந்தாகிறது.
வீட்டு வேலைகளையெல்லாம் யார் செய்வது? அதுக்குத்தான் நான் இருக்கனே? என்று மனப்பூர்வமாய்ச்
செய்வது போல், சமயங்களில் அநாயாசமாய்ச் சலித்துக் கொண்டு மாங்கு மாங்கு என்று அனுதினமும்
வேலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கிறாள் ராஜலெட்சுமி. பெயர்தான் ராஆஆஆஆ ஜலெட்சுமி…..ஆள்
ராஜாவாக இருந்து கொண்டு உட்கார்ந்து சாப்பிட முடியவில்லையே? அதற்குக் கொடுத்து வைக்கவில்லையே?
அப்படீன்னா வேலை பார்க்காத பொண்ணாப் பார்த்திருக்கணும்.
அதுவும் வீட்டு வேலைகளைச் செய்யும், பொறுப்பெடுத்துக்கும்னு என்ன நிச்சயம்? அப்பயும்
நீ கூட இருந்து உதவினாத்தான் ஆச்சுங்கிற நிலைமை வந்தால்? அதுவே முழுசுமாப் அடுப்படிப்
பொறுப்பை எடுத்துக்கொண்டு வேலை செய்தாலும், அந்தச் சமையல் உனக்கு, உன் பையனுக்குப்
பிடித்திருக்க வேண்டுமே? என்னை விடு…எனக்கு இதுதான் வேணும், அதுதான் வேணும்ங்கிற கட்டாயம்
கிடையாது. இருக்கிறதை, தட்டுல போடுறதைக் கண்ணை மூடிட்டு சாப்பிட்டுப் போகுறவன் நான்…ஆனா
உன்னாலயும், உன் பையனாலயும் அது முடியாதே…? உன் பையன வாயை அப்டீல்ல நீ வளர்த்து வச்சிருக்கே…நாக்கு
நீளம் ஜாஸ்தியே….!
போதும் உங்க பேச்சு….எப்பப் பார்த்தாலும் குறை சொல்லிட்டு….எங்க
பாட்டை நாங்க பார்த்துக்கிறோம்…உங்களுக்கென்ன வந்தது? பேசாம இருங்க…. –
அதான் சொன்னனே…எனக்கு ஒண்ணுமில்ல….ஒண்ணுமேயில்ல….! நான்
வறுமைல அடிபட்டு, குடும்பக் கஷ்டத்தப் பார்த்து வளர்ந்தவன்…பற்றாக்குறையே வாழ்க்கையா
அமைஞ்ச இளம்பிராயம். இது வேணும், அது வேணும்னு எதுக்கும் ஆசைப்பட்டதே கிடையாது. ஆசைப்படவும்
முடியாது. ஆசைன்னா என்னன்னே தெரியாது. ஆகையினாலே என்னைப் பொறுத்தவரை இருந்தா நாலணா…இல்லாட்டி
காலணா…எந்தச் சூழ்நிலைலயும் என்னால வாழ முடியும்…என் வாழ்க்கை என்னோட மனசு சார்ந்தது.
திருப்தி சார்ந்தது….ஆசை இருந்தாத்தானே ஏக்கம், மனக்குறை வர்றதுக்கு? ஆசைகளே துன்பத்துக்குக்
காரணம். ஆசைப்படுற மாதிரி வசதியான வாழ்க்கை சிறு வயசு முதலே அமையலை. வறுமைதான் வாழ்க்கையாயிருந்தது.
அதுவே நல்லொழுக்கங்களைப் பதிய வச்சிடுச்சு.
எல்லாருக்கும் அப்படித்தான்…உங்களுக்கு மட்டுமென்ன ஸ்பெஷல்….அவுங்கவுங்களுக்கு
அவுங்க அவுங்க விருப்பப்படி இருந்துக்கத் தெரியும்…நீங்க ஒண்ணும் அட்வைஸ் பண்ண வேணாம்….
அவளின் பளீரென்ற பேச்சு…அதுவும் மருமகப் பெண் இருக்கையில்
தெறிந்து விழும் அந்தச் சொற்கள் இவருக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். ரெண்டு
பேர் மட்டும் இருக்கிறபோதுதான் இதெல்லாம் பேச வேண்டும், அந்தப் பெண் முன்னால் இப்படியெல்லாம்
பேசுவது, அவர் மேல் ஒரு அவமரியாதையை, மதிப்பின்மையை ஏற்படுத்தி விடும் என்பதெல்லாம்
அவளுக்குத் தெரிவதில்லை. எல்லா விஷயமும் தெரிந்த அனுபவப்பட்டவளாய்த் தன்னை மருமகள்
முன் காட்டிக் கொள்ள வேண்டும் என்கிற முனைப்பான எண்ணம் மட்டும் உள்ளது. அதில் ஒரு இங்கிதம்
இல்லை. விவேகம் இல்லை. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ…என்று எடுத்து வீச வேண்டியது.
நான் இங்கேதான் இருப்பேன்…நீங்கள் என் கூட இருந்தாலும் சரி,
இல்லாவிட்டாலும் சரி, அது பற்றி எனக்குக் கவலையில்லை என்கிற ரீதியில் அவளது பேச்சு
அமைந்திருப்பதை தீவிரமாய் உணர முடிந்தது சந்திரசேகரனால். ஊரிலிருந்து கிளம்பும்போது
பேசிக்கொண்ட ப்ரபோஸல் என்ன? சென்னையில் ஒரு வீடு வாங்கி, அவனுக்கும் மண முடித்து, தனிக்
குடித்தனம் வைத்துவிட்டு, நாம் நம் ஊருக்குத் திரும்பி விடுவது…இதுதானே? கணவன் மனைவிக்குள்
அக்ரிமென்ட் பாண்டா எழுதிக் கையெழுத்திட முடியும்? அப்போது இந்தப் பிரேரணைக்கு வாயை
மூடிக் கொண்டிருந்தவள், இன்று கல்யாணம் ஆகி ஒரு பேரக் குழந்தையைப் பார்த்தவுடன் ஆளே
மாறிவிட்டாளே? தன்னை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையே? நீ போய்த் தனியாக் கிடந்து சீரழிஞ்சாலும்
எனக்குக் கவலையில்லை…நான் இங்கதான் இருப்பேன்…பையனை விட்டு வர மாட்டேன்…என்றுதானே இன்று
நிலைத்த தேராய் நின்று விட்டாள்?
இதை அனுதினமும் நினைத்து நினைத்து தனக்குள் மறுகிக் கொண்டுதான்
இருக்கிறார் சந்திரசேகரன். அவருக்கும் பேரனோடு விளையாடிக்கொண்டு அவனுக்குக் கதை சொல்லிக்கொண்டு,
அவனை வெளியே கூட்டிக் கொண்டு போய்…என்று பொழுது
போய்க்கொண்டுதான் இருந்தது. ஆனாலும் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும், நம் மீதி
வாழ்க்கையை நாம் வாழுவோம் என்றுதான் அவர் மனம் தொடர்ந்து தீவிரமாய் நினைத்துக் கொண்டிருந்தது.
அதற்காகப் பேரனோடு ரொம்பவும் சுதந்திரமாயும் இந்தக் காலத்தில்
இருந்து விட முடிவதில்லையே? வெளியே கூட்டிப் போவதென்றால் பயப்பட வேண்டியிருக்கிறதே?
ஏதேனும் தின்பண்டம் வாங்கிக் கொடுப்போமென்றாலும் என்ன சொல்வார்களோ, ஏது சொல்வார்களோ
என்று தயங்க வேண்டியிருக்கிறதே? நாம் ஏதோவொன்றை (தரமாய்த்தான்) வாங்கிக் கொடுத்து அதனால்
ஏதேனும் குழந்தைக்கு காய்ச்சல், கரப்பு என்று வந்துவிட்டால் பழி வந்து சேருமே? கவனமாய்
இருந்தார் சந்திரசேகரன்.
நீ அவுங்க அனுபவத்தைக் கெடுக்கிறே…! ஒரு குடும்பத்தை எப்படி
நடத்துறது, அதனோட தேவைகளையெல்லாம் எப்படி உணர்றது, எது அவசியம், எவ்வளவு அவசியம்ன்னு
அவுங்க என்னிக்குத் தெரிஞ்சிக்கிறது? காலை டிபன், மதியச் சாப்பாடு, ராத்திரி டிபன்னு
செய்து செய்து அவுங்களும் பழக வேண்டாமா? ஒவ்வொருநாளைக்கு ஒண்ணொண்ணுன்னு வித விதமா செய்து
பழகி ஒரு வரைமுறைக்கு வர வேண்டாமா? ரெண்டு பேரும் ஆபீசுக்குக் கிளம்புறதுக்குள்ள எப்போ
எந்த நேரத்துக்கு எழுந்திரிக்கணும், சமையலை எப்போ ஆரம்பிச்சா எந்த டயத்துக்குள்ள முடியும்,
ரெண்டு பேரும் எடுத்து வச்சிட்டுக் கிளம்ப, குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பன்னு இந்தக்
காரியங்களெல்லாம் அவுங்களுக்கு என்னைக்குத்தான் பழகறது?ஊடல் கூடல்னு அவங்களும் பழக
வேண்டாமா? அவங்களுக்குள்ளே அட்ஜஸ்ட்மென்ட்ங்கிறது பதிய வேண்டாமா? விட்டுக் கொடுத்தல்
வழக்கமாக வேண்டாமா? நந்தி மாதிரி நீ நின்னேன்னா? எல்லாத்தையும் செய்யறதுக்குத்தான் நீ இருக்கியேன்னு
சாவகாசமா அவுங்க இருந்தாங்கன்னா என்னைக்குத்தான் அவங்களுக்கும் பொறுப்பு வர்றது? வளரும்
மரம் மேலும் உரம் அடையுமே தவிர அசந்து போக மாட்டாங்க…அம்பது வயசுக்கு மேலேதான் அசதி,
சடவுங்கிறதெல்லாம். அதுவரைக்கும் கடினமா உழைக்கணும். இப்படி அவங்களை இந்த இளம் வயசுலயே
சோம்பேறி ஆக்கினீன்னா, நாளைக்கு நீயும் நானும் மண்டையப் போட்ட பிறகு நாற்பது வயசை அவங்களும்
தொடுற நிலைல, குடும்பக் காரியங்களை அவுங்க தனியா, புதுசாத் துவக்கணும்னு வர்ற போது, எதுவுமே அவுங்களுக்குப் பழகி இருக்காது. திண்டாடித்
தெருவுல நிக்கப் போறாங்க…அவுங்க அனுபவத்தை நீ இப்போ கூட இருந்து கெடுக்கிறே…அவ்வளவுதான்
நான் சொல்லிப்புட்டேன்….-இவரும் எத்தனையோ முறை சொல்லிவிட்டார். அவள் கேட்பதாயில்லை.
கூடத்தான் இருப்பேன் என்று அடம் பிடிக்கிறாள். அதனால் தானும் ஒரு தொடுப்பு போல் தொற்றிக்கொண்டு
சிவனேயென்று கிடக்க வேண்டியிருக்கிறது. மனதுக்குள் குமுறிக்கொண்டுதான் இருந்தார் சந்திரசேகரன்.
இப்படி இவள் பிடிவாதம் பிடிப்பதாலேயே அவருக்குள் ஒரு வீம்பு பிறந்தது. நீயே இல்லாமல்
நான் தனியே இருந்து காண்பிக்கிறேனா இல்லையா
பார்…என்று மனதுக்குள் ஒரு வன்மம் வைத்துக் கொண்டார். அதை நிறைவேற்றும் முகமாக மாதா
மாதமோ அல்லது ரெண்டு மாசத்துக்கொரு தடவையோ….நா ஊருக்குப் போறேன்….ஊருக்க்குப் போறேன்
என்று கிளம்பிப் போய்க் கொண்டிருந்தார் சந்திரசேகரன். ஒரு தடவையாவது நானும் வர்றேன்
என்று அவள் சொல்லவேயில்லையே? படு பாவி…தான் செத்தால் கூடக் கவலைப்பட மாட்டாளோ? ஊருக்குப்
போறேன்…திடீர்னு உறார்ட் அட்டாக் வந்து அங்கயே மண்டையைப் போட்டுடறேன்னு வச்சிக்கோ….இங்கயே
ஒரு முழுக்குப் போட்டுட்டு சும்மா இருந்திடுவியோ? என்று வயிற்றெரிச்சல் தாளாமல் ஒரு
நாள் கேட்டார்.
அப்டியிருக்க முடியுமா? கிளம்பிப் போய், முறைப்பிரகாரம்
செய்ய வேண்டியதைச் செய்திட்டுத்தான் வரணும்….யார் முந்தின்னு யார் கண்டா? ஏன் நீங்க
ஊருக்குத் தனியாக் கிளம்பிப் போன நேரத்துல நான் இங்க வாயைப் பிளக்கக் கூடாதா? எது நடக்கும்னு
யார் கண்டது? அது அது நடக்குற போது நடக்கட்டும்….அதுவரை நல்லதையே பேசுவோம், நல்லதையே
செய்வோம்…எதுக்கு அநாவசியமாக் கண்டதையும் கற்பனை பண்ணிப் பேசிண்டு, மனசையும் கெடுத்துண்டு?
என்று அவள் சொன்ன பதில் அப்போதைக்கு இவருக்கு ஆறுதலாயத்தான் இருந்தது. ஆனாலும் தன்
ஊரில் போய், தன் மக்கள் முன்னால் கண்பார்க்கத் திரிய வேண்டும் என்கிற அவரது தீராத ஆசை
தணிவதாக இல்லையே?
யம்மா…அப்பா வந்தாச்சு பார்….என்றவாறே மோகன் தன் தோல் பையை
முதுகில் மாட்டிக் கொண்டு ஆபீஸ் கிளம்புவதைப் பொறி கலங்கிப் போய் நின்று கவனிக்க ஆரம்பித்தார்
சந்திரசேகரன். நல்லவேளை…லிஃப்ட் வேலை செய்கிறது. பல சமயங்களில் அது இருண்டு கிடக்கும். உள்ளே
லைட் எரியாது. உள் நுழைந்து இரண்டாவது மாடிக்கான எண்ணை அழுத்தியதும்தான் தெரியும்…அது
வேலை செய்யவில்லை என்று. பொறியும் வெயிலில் நடந்து வந்ததில் அவர் பார்வை மங்கிக் கலங்கி, வீட்டுக்குள்
ஒன்றுமே கண்ணுக்குப் புலப்படாமல், ஒரே இருளாய் இருப்பதுபோல் உணர்ந்த அந்தக் கணத்தில்
அருகிலிருந்த மாடிப்படியில் தடால் என்று அமர்ந்தார்.
தலை சுவரில் ணங்கென்று இடித்துக் கொண்டது. அது வழக்கமாய் அப்பா அமர்வதுதான் என்று உணர்ந்தவனாய்
தடதடவென்று மாடிப்படிகளில் இறங்கி தன் பைக்கை உயிர்ப்பித்துக் கிளம்பி மறைந்து போனான்
அவன். முதல் மாடி ஜன்னலிலிருந்து தெரிகிறதா என்று பார்த்தார். சாலையும் அவர்களுக்கு
இருண்டு கிடந்தது. இதென்ன இப்படிக் கண்ணைக் கட்டிக் கொண்டு வருகிறது என்று அவருக்கே
பயமானது.
என்னாச்சு….எதுக்கு இப்டி இங்கயே சாய்ஞ்சிட்டீங்க…? முடிலயா….?
உள்ளே வாங்கோ…காப்பி கலந்து தர்றேன்….என்றவாறே ஓடி வந்த அவளிடம்….ரேஷன் கார்டையும்,
இலவசத் துட்டு ஆயிரம் ரூபாயையும் அவர் நீட்டிய போது ராஜலெட்சுமியின் முகம் சட்டென்று
மலர்ந்தது. சார்…நீங்களுமா…? என்று ரேஷன் கடைக்காரன் கேட்ட அந்தக் கேள்வி அந்த மயங்கிய
நிலையிலும், சந்திரசேகரனுக்கு நினைவில் வந்து தட்ட, அவளின் அந்த மகிழ்ச்சியில் மன அழுத்தம் குறைந்ததுபோல்
அந்தக் கணத்தில் உணர்ந்தார் சந்திரசேகரன். வரையறை இல்லாமல் கார்டு உள்ளவர்களுக்கெல்லாம்
இலவசம் என்று கொடுக்கப் போய்த்தானே இந்த அலைச்சல்? ஏதேனும் இதற்கு வரம்பு நிர்ணயிக்கக்
கூடாதா? என்று அந்தக் கணத்தில் அவர் மனது எண்ணமி்ட்டது.
(
5 )
மனசுக்குள் தப்பாகத்தான் தோன்றியது சந்திரசேகரனுக்கு. அந்தளவுக்கு எரிச்சல் வந்தது
என்பதுதான் உண்மை. தன் வயதுக்கு இப்படியெல்லாம் தோன்றலாமா என்றால் தோன்றத்தான் வேண்டும்...ஒரு
விஷயத்தின் எல்லாக் கூறுகளையும் நினைத்து ஆராயத்தான் வேண்டும் என்றே எண்ணினார். நடந்தாலும் நடக்கும்...யார் கண்டது? என்று தனக்குத்தானே
சொல்லிக் கொண்டார். இப்டிக் கேட்பாரில்லாமக் கிடந்தா?எதுவும் நடக்கலாமே! என்ன...ஏது என்று யாரேனும் கண்டு கொண்டால்தானே...?
அன்று அவர் குடியிருக்கும் அபார்ட்மென்ட் பிரச்னை அவர் மண்டையைப் போட்டுக் குடைந்து
கொண்டிருந்தது. நகர்ப்புறத்தில் ஒரு அடுக்ககக் குடியிருப்பு வாங்குவதே ஒரு பெரிய சாதனை
என்று நினைத்திருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பொய்யாகிப் போய்க் கொண்டிருப்பதாய்
அவர் உணர ஆரம்பித்திருந்தார். சின்னச் சின்னதாய் எவ்வளவு பிரச்னைகள்? தீராத நோவாய்
உணர்ந்தார். ஒரு வேளை தன் வயதுக்குத்துான் இப்படியெல்லாம் தோன்றுகிறதோ என்றும் நினைத்தார்.
பையன் மோகன் இதுபற்றியெல்லாம் அலட்டிக் கொள்வதேயில்லையே? அப்பாதான் இருக்கிறாரே, பார்த்துக்
கொள்வார் என்றிருக்கலாம். அவனுக்கிருக்கும் அலுவலகத் தலைவலிக்கு இதுவும் வேண்டுமா?
நாமே கவனித்துக் கொள்வோம் என்றும் இவர் நினைத்தார்.
அதான் ஒரு பெரிசு இருக்கே...எல்லாத்தையும் கண்காணிக்கிறதுக்கு...! -அப்படித்தானே
கிடக்கானுங்க எல்லாரும்...? சரி...சரின்னு இருந்ததுதான் தப்பாப் போச்சு இப்ப...! எல்லாம்
அவர் பார்த்துப்பாரு...என்கிற மெத்தனம்…என்று மற்றையோர் மீதும் அவருக்குக் கோபம் வரத்தான்
செய்தது.
தினமும் என்னவெல்லாம் நடக்கிறதோ...யார் கண்டது? நடு ராத்திரிக்கு எழுந்து
கீழே வந்து நோட்டம் பார்க்க முடியுமா என்ன? யாருக்கும் இல்லாத அக்கறை தனக்கு மட்டும்
என்ன வந்தது? கொஞ்ச வயசா எனக்கு? சின்னப் பசங்களே அடிச்சுப் போட்ட மாதிரித் தூங்குறானுங்க...
தான் மட்டும் பிசாசு மாதிரி அலைய முடியுமா? அது ஒண்ணுதான் பாக்கி இன்னும்...!
அலையத்தான் வேணும். கண்டு பிடிக்கணும்னா அலைஞ்சிதான் ஆகணும். மனசுதான்
தவிக்குதே...! எனக்கு மட்டும் என்ன வந்தது ஆத்திரம்? எல்லாருக்கும்தானே பொறுப்பு இருக்கு?
ஏழெட்டு டூ வீலர் நிக்குது. மூணு நாலு கார் நிக்குது...எவனாச்சும், எதையாச்சும் தள்ளிட்டுப்
போயிட்டான்னா...? யார் கவலைப்படுறா அதைப்பத்தி? ஒருத்தனும் கண்டுக்கிறதில்லையே..!
அதெல்லாம் ஒண்ணும் போகாது....இவளே
சொல்றா...! இத்தனை லைட்டுப் போட்டு வச்சிருக்கு....இம்புட்டு வெளிச்சத்துல வந்து திருடுவானாக்கும்...?
அப்படியும் அங்கங்கே இருட்டு ஒளியத்தானே செய்கிறது?சுவர் மறைக்கும் பகுதிக்குள் நின்று
செய்தால் எவனுக்குத் தெரியப் போகிறது? அந்த சந்துக்குள் ஆயிரம் தப்புப் பண்ணலாமே? ஃபியூஸான பல்பு மாத்த ஒரு மாமாங்கமா?
யாருக்குமே அக்கறையில்லையா? உயரமான ஏணிக்கு எங்க போறது? இருந்தா நானே ஏறி மாட்டிப்புடுவேன்...! வாயெடுத்தா ஒண்ணும் ஆகாதுங்கிறாளே இவ... பிறகு அன்னைக்கு
எப்டி ரெண்டு மூணு வண்டில பெட்ரோல் திருடினான்?
அது எதோ நடந்து போச்சு. அதுக்கப்புறம்
ஒண்ணுமில்லயே...! அதனால? விட்டுடலாமா? ஒரு சி.சி.டி.வி. காமிரா வைக்கலாம்னு
சொன்னேன்...யாராவது கேட்டாங்களா? ஆள் நடமாட்டம் இருக்கான்னு தெரிஞ்சி போயிடும்ல...
ஒரு அறிவிப்பு வச்சா கொஞ்சம் பயம் இருக்குமே!...யாருமே ஒத்துக்கலை...எதுக்குத்தான்
யாருதான் வந்து நிக்குறாங்க...? எல்லாரும் எனக்கென்னன்னு இருக்காங்க...அவனவன் சொந்த
வேலையைக் கரெக்டாப் பார்க்குறான். நாமதான் மத்த எல்லாத்தையும் கண்காணிக்க வேண்டிர்க்கு...நல்ல தண்ணி, போர் வாட்டர்
மோட்டார் போடுறதிலேயிருந்து, தொட்டி நிரம்பிடுச்சான்னு சின்னப்பிள்ளை மாதிரி மேலே மேலேன்னு
போய் ஏறி ஏறிப் பார்க்கிறதுவரை...அத்தனையும் நான்தான் செய்திட்டிருக்கேன். மாடிப்படி
பெருக்குறது, கார் பார்க்கிங் சுத்தம் பண்றது, ஒட்டடை அடிக்கிறது இப்டி எல்லாமும் வாரா
வாரம் நடக்குதான்னு எனக்கு மட்டும்தானா ஆத்திரம்?
சரியான கெழட்டு முண்டம்...! கண்
கொத்திப் பாம்பா கவனிச்சிட்டிருக்கு...! அன்னைக்குக் கூட அந்தக் கூட்டுற பொம்பள முனகின
மாதிரித்தான் இருந்திச்சு...! தண்ணி லாரிக்குச்
சொல்லி சம்ப் நிரப்பர வேலை உட்பட. எவனாச்சும் கண்டுக்கிறானா? எப்டியோ வேலை நடக்குதுல்லங்கிற
திண்ணக்கம்....இந்த அபார்ட்மென்ட்டுக்கு நான்தான் உறானரரி வாட்ச்மேன்....தானாக் கிடைச்ச
பெருமை...!
நீங்களா எதுக்கு செய்றீங்க... எதுக்கு
கண்காணிக்கிறீங்க...? வலியச் செய்தா மதிப்பிருக்குமா? சிவனேன்னு இருக்க வேண்டிதானே..? .உங்களை யாரு என்ன
சொன்னாங்க? திருட்டுப் போனாப் போகட்டும்...அப்புறம் வருவாங்கல்ல ஐயோ...ஐயோன்னு...பேசாம
விடுங்க...-ராஜலெட்சுமி தில்லாகத்தான் பேசுகிறாள். அப்படி இருக்க முடியுமா? என்று இவருக்குத்தான்
தோன்றிக்கொண்டேயிருக்கிறது. மனசு கேட்டால்தானே? அப்புறம் ஏன் இந்தப் புலப்பம்? அதையும்
இந்த மனசுதான் சொல்கிறது.
அப்பார்ட்மென்ட்டில் வீடு வாங்கினால்
இப்படியெல்லாம் பிரச்னை வரும் என்று போகப் போகத்தானே தெரிகிறது? நகரத்துக்குத் தள்ளி
மூணு சென்டு இடத்தை வாங்கிப்போட்டு, அதே செலவுக்கு வீட்டையும் கட்டி, சிவனேன்னு இருந்திருக்கலாம்!
எவனாச்சும் ஐடியா குடுத்தாத்தானே? எல்லாப் பயல்களும் சுயநலம் பிடிச்சவனுங்க...! வாங்கிட்டு,
எப்டித் தவிக்கிறான்னு வேடிக்கை பார்ப்போம்ங்கிற குரூரம்...! தெனம்...முப்பதும் முப்பதும் அறுபது
கி.மீ.என்னை டூ வீலர்ல்ல போகச் சொல்றியா? என்னா டிராஃபிக் தெரியுமா? ஒரு நா என் கூட
வந்து பாரு...உயிரக் கைல பிடிச்சிக்கிட்டு அவனவன் போறதையும் வர்றதையும்...சிட்டின்னா
அப்டித்தான் இருக்கும்ப்பா...சமாளிச்சிக்க வேண்டிதான்....-மோகனின் சமாதானம் இது. தினம்
அறுபது கி.மீ.இப்போது மட்டும் போகாமலா இருக்கிறான்…? கொஞ்சம் கூடக் குறைய இருக்கும்.
ஆனாலும் கார் வாங்கணும்…டூ வீலர்ல போனா உயிருக்கு உத்தரவாதமில்லை….என்று இன்னும் ஆரம்பிக்கவில்லை. அபார்ட்மென்டில் அத்தனை கார்கள் நிற்கின்றனவே.
அவனுக்கும் கனவு வராதா?
அன்றாடம் இந்தப் பிரச்னைகளோட கிடந்து
படுறது நானில்லப்பா? ...உங்கம்மா அடுப்படியே சதம்னு கிடப்பா...மத்ததெல்லாம் நானில்ல
பார்க்க வேண்டிர்க்கு....எனக்கு ஓட்டுறதுக்கு நான் வாங்கின டூ வீலர் சீந்துறதுக்கு
ஆளில்லாம அநாதையா நிக்குது...என்னைக்கு எவன் தூக்கறானோ...சென்னை டிராஃபிக்ல போகவே பயமாயிருக்கு...வயசான
காலத்துல கை கால ஒடைச்சிக்கிட்டு...நொண்டியாத் திரியச் சொல்றியா? எலும்பு சேராதுப்பா....போனா
ஒரேயடியாப் போயிடணும்...ஊனமாச்சு....பொழப்பு நாறிப் போயிரும்......அந்த வண்டியையும்
நீயே ஓட்டிக்க...கடை கண்ணிக்குப் போகணுமா...நடந்தே போயிட்டு வர்றேன்...காலுக்குப் பயிற்சியும்
ஆச்சு...அதத்தான் என்னால செய்ய முடியும்....-அப்படித்தானே இன்றுவரை செய்து கொண்டிருக்கிறார்..
பையன் விருப்பத்துக்கு நகர்ப்பகுதிக்குள்
அடுக்கக வீடு வாங்கினால்...அதில்தான் எத்தனை பிரச்னைகள்? வாடகைக்குக் குடியிருப்போர்
எவரும் வாட்ச்மேன் போட சம்மதிக்கவில்லை. இந்தச் சின்ன அபார்ட்மென்ட்டுக்கு எவ்வளவுதான்
மெயின்டனென்ஸ் கொடுக்க முடியும்? இது கேள்வி.
ஏறக்குறைய மீதி ஏழு வீட்டிலும்
இருப்பவர்கள் சின்னஞ் சிறிசுகள். ஒரு வீட்டில் மட்டும் ஒரு அம்மாள் தனியே இருக்கிறார்கள்.
பையன் வெளிநாட்டில் கிடக்க, நான் அங்க வரலை என்கிற பிடிவாதம். வேறு எந்த வீட்டிலும்
பெரியவர்கள் என்று ஒருத்தரும் இல்லை. அடுக்ககத்தை விலைக்கு வாங்கியவர்கள் எல்லோரும்
வாடகைக்கு விட்டு விட்டு எங்கெங்கோ உட்கார்ந்திருக்கிறார்கள். அவரவர்களே குடியிருந்தால்தானே
அக்கறை வரும்? இவரும் அந்தம்மாளும்தான் ஓனர்கள். மற்ற ஆறும் வாடகைதான்.
எல்லாம் ஐ.டி. பீப்பிள்ஸ். எப்பொழுது
போகிறார்கள், வருகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது நல்லவேளை மருமகளுக்குப் பகலோடு
முடிந்து போகிறது வேலை. இல்லையென்றால் அதற்கும் சேர்ந்து பதற வேண்டும். பதற்றம்தான்...வேறென்ன...இரவு
ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் வேலை முடித்து அயர்ந்து வருகையில் அங்கங்கே போலீஸ் செக்கிங்..ஐ.டி.
கார்டைக் காண்பித்தாலும்...எங்கே...வாயை ஊது...! என்கிற சோதிப்பு. பைசாத் தேத்தும்
இராக் கொள்ளை. திருட்டு பயம், சங்கிலி அறுப்பு....மனிதர்கள் தூங்குவார்களா, மாட்டார்களா
என்பதுபோல் அந்த நேரத்திலும் ஓயாத போக்குவரத்து. அதுதான் வசதி என்பதுபோல் நடக்கும்
தவறுகள்.
ஊரில் இரண்டாம் ஆட்டம் சினிமாப் பார்த்து விட்டு
அடங்கியிருக்கும் ஊரை அமைதியாய் நோட்டமிட்டவாறே வீடு வந்து சேர்ந்த காலங்களை நினைத்துக்
கொள்வார் சந்திரசேகரன். இப்போது அப்படி முடியுமா? சினிமா டிக்கெட் ஆதாரத்திற்கு வைத்திருந்தாலும்,
பொய் கேஸ் போட என்று இழுத்துக் கொண்டு போய்விடுகிறார்களாமே? நம்ம மூஞ்சியைப் பார்த்து
நல்ல ஆள்தான் என்று விடப் போகிறானா என்ன? இல்லையா, பணம் பிடுங்குவான்….பயமுறுத்துவான்.
மோதிரம், சங்கிலி என்று இருந்தால், கொடுத்துட்டு வாய மூடிட்டுப் போ என்பான். அதுதானே
நடக்கிறது? சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது. அது இருக்க வேண்டியவர்களிடமே அல்லவா பாழ்பட்டு
நிற்கிறது?
தண்ணியப் போட்டுட்டு, கண்டமேனிக்கு ஓட்டிட்டு வருவானுங்கப்பா..ஊரே கெட்டுக்
கெடக்கு...ஒழுக்கமில்லாத ஜனங்களாப் போனாங்க...! .பார்த்து கவனமா வந்து சேரு....-தினமும்தான்
சொல்லியனுப்புகிறார். சரிப்பா...சரிப்பா...என்கிறான் அவனும் தன் சமாதானத்துக்கு. எவ்வளவு
சொல்லியும் கேட்காமல் அன்றொரு நாள் வண்டியைப் பிடித்து வைத்துக் கொண்டானே...! ராத்திரி
ரெண்டு மணிக்கு எழுந்து பதறி ஓடி...தான் போய்ச் சொன்னதும் எப்படி விட்டான்? தன் முகத்தில்
அப்படி என்ன கண்டான்? அப்பாவ பத்திரமாக் கூட்டிப் போப்பா...! என்ற கரிசனம் வேறு...!!
ஒருத்தன் ரெண்டுபேர் நல்லவனும் இருப்பான் போலும்?
பேய் அலையுற நேரத்துல வீட்டுக்கு
வர....வயித்துல சோத்தைக் கொட்ட, படுக்கைல சுருண்டு விழ....காலையில் சூரியன் உதித்ததை
ஒரு நாளும் எவனும் பார்த்ததாகச் சரித்திரமில்லை. பதினொன்ணு இல்லன்னா பன்னெண்டு.....அதுக்குக்
குறைஞ்சு எவனும் படுக்கையைச் சுருட்டுறதேயில்லை. தூங்குமுஞ்சி மடமா ஆகிப் போச்சு வீடு.
இப்படியெல்லாம் இருந்து பார்த்ததே இல்லை. சகிக்க முடியவில்லை அவரால். சுமையாய் வந்து
மாட்டிக் கொண்டோமே என்று மனதுக்குள் குமுறிக்கொண்டுதான் இருக்கிறார். பிரம்ம முகூர்த்த
நேரத்தில் எழுந்து பழக்கப் பட்டவர் அவர். அப்டீன்னா? என்று கேட்கிறான் மோகன். அவனைக்
கோவித்து என்ன செய்ய? கல்யாணம் ஆன பிள்ளை. ஓரளவுதான் சொல்ல முடியும். அவனிடமும் அதிகம்
பேசி மரியாதை கெடவா?
சின்னஞ்சிறிசுகள்...ரெண்டு பேரும்
வேலைக்குப் போறா...எங்களுக்கென்னன்னு விட்டிட்டுப் போகச் சொல்றேளா...? உங்களை இங்க
யாரு என்ன பண்றாங்க...? சிவனேன்னு சாப்டுட்டு...சாப்டுட்டு புஸ்தகம் படிச்சி்ட்டு இருக்க
வேண்டிதானே...?... அப்டிப் பிடிச்ச
பிடியா இருந்தம்னா ஒரு நாளைக்கு நாமளே அவங்களுக்கு அலுத்துப் போவம்டீ...! அவங்களா விலக்குறதுக்கு
முன்னாடி நாமளா கழண்டுக்கணும்...அதுதான் புத்திசாலித்தனம்...! இப்போதைக்கு இவளை ஊருக்கு நகர்த்த முடியாது என்று
இவரும் அமுங்கிக் கிடக்கலானார். அறுபது தாண்டிய பொழுதிலும் அடுப்படி வேலையில் சளைத்தாளில்லை.
அதுதான் தனக்கான பிடி என்று நினைத்தாளோ என்னவோ? பையனுக்கு அக்கறையாய்ச் செய்து போட்டு,
இன்னும் கொஞ்சம்...இன்னும் கொஞ்சம்...என்று எதிரே உட்கார்ந்து கொண்டு அள்ளி அள்ளித்
தட்டை நிரப்பி,...காய் நிறைய சாப்பிடு...அதுதான் சத்து...வெறும் அரிசிச் சோற்றில் ஒண்ணுமில்ல...பத்துப்
பன்னெண்டு மணி நேரம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்க எனர்ஜி வேண்டாமா? மருமகளுக்கும்
சேர்த்துத்தான் சமைத்துக் கொட்டுகிறாள். அன்னலட்சுமி...! அதுதான் எதையுமே கண்டுக்கிறதில்லையே! நம்மளச் சீண்டாம இருந்தாச் சரிங்கிற போக்கு...!
அடிப் பாவி...! இந்த அக்கறையை என்னோட காலந்தள்றச்சே...ஒரு
நாளைக்காவது காட்டியிருப்பியா? அநியாயம்டீ.....-இவர் வயிரெறிய...உங்களுக்கு நான் செய்து
போட்டதேயில்ல...வெறுஞ்சட்டியத் தூக்கி வச்சனா...இப்டியெல்லாம் பேசாதீங்க...எல்லாத்தையும் கடவுள் பார்த்துண்டிருக்காராக்கும்... என்று சபிப்பாள்.
பொத்துக்கொண்டு வரும் கோபம். மருமகள் முன்னால்
சொல்லிக் காண்பித்தால் மதிப்பென்னாவது?
லீவு நாளா...கேட்கவே வேண்டாம்...பகல்
ஒண்ணு...ரெண்டுன்னு அடைச்ச கதவு எப்பத் திறக்கும்னு வெளிலயே கெடக்க வேண்டிதான். ஒர்க்கிங்
டேஸ்ல எதையுமே திட்டமாச் சொல்றதுக்கில்லே.
டிபன் சாப்பிடுவானா....டேரக்டா சாப்பாடா...? இங்கயே சாப்டுட்டுப் போவானா இல்ல
ஆபீசுக்குக் கொண்டு போவானா...அதுவும் இல்ல...ஆபீஸ்லயே சாப்டுப்பானா? அந்தத் தாயார்
பாடு பெரும் திண்டாட்டம்....! ப்ராஜெக்ட் முடிக்கணும்...டயத்துக்கு முடிச்சாகணும்..இல்லன்னா
பிரச்னை...!.எப்பப் பார்த்தாலும் இந்த நாம ஜெபம்...
இதுல மருமக வேறு வந்துட்டாளா கேட்கவே
வேண்டாம்...ரெண்டு பேருக்கும் சமைச்சுக் கொட்டுற கடமை அவளுக்குத்தான். ஜென்மாந்திரக்
கடன். அது துரும்ப நகத்தாது...ஏன்னா வேலை பார்க்குதாம்...சமையல் கலை தெரிஞ்சாத்தானே...!
அப்பன்காரன் ஓட்டலுக்கா கூட்டிப் போய் பழக்கியிருந்தான்னா? ஒரு ரசம், குழம்பு கூட வைக்கத்
தெரியாதுய்யா...! நாளைக்கு இன்னொரு வீட்டுக்குப்
போயி வாழப் போற பொண்ணுன்னு எந்தத் தகப்பன் தம் பொண்ணைப் பொறுப்பா வளர்த்திருக்கான்?
பொம்பளப் பிள்ளைங்க இத்தனை சோம்பேறியாவா இருக்கும்? தடி முண்டம் மாதிரி...? இதுகளுக்கெல்லாம் எவன் வேலை கொடுத்தான்? தின்னுப்புட்டு,
தின்னுப்புட்டு அததுங்க இஷ்டத்துக்கு அலையுதுங்க...படிச்சிருக்கு...வேலை
பார்க்குதுங்க...கைல காசு...வாயில தோசைன்னு வீட்டுல இருந்தமேனிக்கே...டிபனுக்கு ஆர்டர்
பண்ணுதுங்க... கன்னா பின்னான்னு சார்ஜ் பண்றான்...அதப்பத்தி யாருக்கு என்ன கவலை...?வீட்டு
வாசல்ல பெல் அடிச்சுத் திறந்து தீனி வாங்கறதுல அப்படியொரு அசட்டுப் பெருமை...! அதான் துட்டு வருதுல்ல.... மத்ததெல்லாம் பெறகு பார்த்துக்குவோம்ங்கிற
திமிரு.... முன்ன மாதிரியா ஐ.டி.ல
இப்பவும் சம்பளம் தர்றான்? அவனும் அளந்து கொடுக்கப் பழகியாச்சு....இதுக அத உணர்ந்து
அளந்து செலவு செய்துகளா? கிடையாது. என்னவோ கனவு உலகத்துல சஞ்சரிக்கிற மாதிரி நெனப்பு...எல்லாம்
இந்தச் சினிமாவும், டி.வி.யும் பண்ற வேல....தலைமுறையவேல்ல கெடுக்கிறாங்க...வேணுங்கிறது...வேண்டாததுன்னு
கண்டது கழியத வாங்கிப் போட வேண்டியது...அத்தனையும் உபயோகமில்லாம இடத்த நிறைச்சிக்கிட்டு
சும்மாக் கிடக்கும். காசுக்குப் பிடிச்ச கேடு.....எவன் சொல்லிக் கேட்குறான்? எல்லாம்
பட்டுத் திருந்துற கேசுக...! இப்பத்
தெரியாதப்பூ......நாற்பதுக்குமேலே முதுகு வலியெடுக்க ஆரம்பிக்கும்போதுதான் புத்தி வேலை
செய்யும்....பென்ஷனா கொடுக்கிறான்...நாளைக்கு உட்கார்ந்து சாப்பிடுறதுக்கு....வேலையே
நிரந்தரமில்ல....பதினைஞ்சு வருஷம் சர்வீஸ் போட்ட மானேஜர் ரேங்க்ல இருக்கிறவனையே சர்வ
சாதாரணமா வெளியேத்தறான்...காலைல ஆபீஸ் போனா காரிடார்ல ஒக்காருங்கிறான்....அப்டியே ஒரு
பேப்பரக் கைல கொடுத்து வெளில அனுப்பிச்சிடறான்....கேவலப்பட்ட பொழப்பு.... காசைச் சேமிங்கடான்னா எரிச்சல்ல படுறாங்ஞ...இந்தாளுக்கு
வேறே வேலையில்லேன்னு நம்மளக் கிண்டலடிக்கிறாங்ஞ.....சேமிப்புன்னா என்னன்னு தெரியுமா
முதல்ல...? நீதான் சொல்லேம்ப்பா....ங்கிறான் அலட்சியமா. செலவழிச்சது போக மிஞ்சிறதை
சேமிக்கிறதில்லப்பூ... மாசா மாசம் சேமிப்புக்குன்னு முதல் வேலையா தனியா எடுத்து வச்சிட்டு, மீதியைச்
செலவழிக்கிறதுக்குப் பேருதான் சேமிப்பாக்கும்....இதப் புரிஞ்சி நடந்துக்கிட்டா பின்னாடி
சௌகரியமா, சந்தோஷமா இருக்கலாம். இல்லன்னா...பீட்ஸாவையும், பர்க்கரையும் கடிச்சு இழுத்து
தின்னு முழுங்கிட்டு, வயித்தையும், உடம்பையும் கெடுத்துக்கிட்டு...பின்னாடி இடுப்பு
வலி, முதுகு வலி இன்டைஜஷன்னு அவஸ்தைப்பட வேண்டிதான்....அப்பன்
ஆத்தா போயாச்சுன்னா ஒரு ஆறுதலுக்குக் கூடக் கேட்க ஆளில்லாம...நாதியில்லாம, தொட்டதுக்கெல்லாம்
ஆஸ்பத்திரி தாண்டியோவ்....உருவி உருவிக் கொடுத்திட்டு கடைசில நொட்டா போட வேண்டிதான்...
என்ன பொழைப்பு இது? அலுத்துப் போய்
எத்தனையோ முறை டென்ஷன் ஆகி ஓய்ந்து விட்டார் சந்திரசேகரும்.
என்னடா....நீங்களும் உங்க உத்தியோகமும்...?
தூங்குறதுக்காகத் திங்கிறீங்க.... திங்கறதுக்காக எழுந்திரிக்கிறீங்க..திரும்பத்திங்கிறீங்க....திங்க...தூங்க...பேள.....வேறென்ன
செய்றீங்க...? எரிச்சலில் ஒரு நாள் அசிங்க அசிங்கமாய்
வந்து விட்டது வாயில். மருமகளும்தான் கேட்டுத் தொலைத்தது. அதைச் சொன்ன பிறகுதான் மனசு அடங்கியது. அப்பாடீ...ரொம்ப
நாளா தவதாயப் பட்டுட்டிருந்த மனசு...இப்பத்தான் ஆறிச்சு....!! வயசானாலே கொஞ்சம் ஒரு
மாதிரிதான் வருமோ? அதுதான் அவங்களுக்கான சுதந்திரமா? பேசறதையும் பேசிப்புட்டு இந்த
நெனப்பு வேறையா? தற்செயலாய்க் கீழே வர.... குழாயில் தண்ணீர் விழும் சத்தம். யார் பிடிக்கிறார்கள்
என்று பார்க்கப் போக அந்த அதிர்ச்சி...!
ஏன்யா...என்னா நினைச்சிட்டிருக்கீங்க...இதென்ன
சத்திரமா...சாவடியா...? ஆளாளுக்கு வர்றதும், கை..கால் கழுவுறதும், மூஞ்சி அலம்புறதும்....ஏன்
உங்க பில்டர் உங்களுக்குத் தண்ணீர் வாங்கி வைக்க மாட்டாரா...? அதெப்படி எதிர் அபார்ட்மென்ட்ல
வந்து, யார்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்காம, நீங்கபாட்டுக்கு தண்ணீர யூஸ் பண்றீங்க...?
காசுய்யா...அத்தனையும் காசு...பார்க்குறீங்கல்ல...மெட்ரோ லாரி வந்து இறக்கிட்டுப் போறத?
அவன் என்ன ஓசிலயா கொண்டு வந்து கொட்டுறான்?
அப்புறம் யாரக் கேட்டு இப்டிச் செய்றீங்க...? - வந்த கோபத்தில் படபடவென்று பொரிய
ஆரம்பித்து விட்டார் சந்திரசேகரன். அதே சமயம்
ஓரத்தில் இருந்த கக்கூஸிலிருந்து ஒரு ஆள் வெளிப்பட்டான். கோபம் கனலாய்த் தெறிக்க ஆரம்பித்து
விட்டது இவருக்கு. அடப் பாவிங்களா...!...இதென்ன
பப்ளிக் லெட்ரீன்னு நினைச்சீங்களா? என்ன தைரியம்யா உங்களுக்கு?
எதிர்த்தாற்போல் நடக்கும் கட்டிட வேலைத் தொழிலாளர்கள்
இங்கு வந்து கழுவுவதாவது? யார் கொடுத்தார்கள் இந்த அனுமதியை? இதென்ன அநியாயமாயிருக்கு.....கட்டு
மீறிப் போய் நடக்கிறதே...!
ஸாரி சார்...ஸாரி சார்...இனிமே
வரமாட்டோம்....சொல்லிட்டீங்கல்ல.....இனி ஆள் வராது ஸார்....
என்னத்தைய்யா ஸாரி....ஸாரியாவது
பூரியாவது? அப்போ...இத்தனை நாள் இங்கதான் எல்லாமும் நடந்திட்டிருந்துதா? மனசாட்சி இருக்காய்யா
உங்களுக்கு? உங்க பில்டிங்ல நாலு பேர் வந்து இப்டிச் செய்தா அலவ் பண்ணுவீங்களா? ஏதோ
மத்தியானம் கார் பார்க்கிங்ல உட்கார்ந்து சாப்பிடுறீங்களே... போகட்டும்னு விட்டா. அந்த
எடத்தையாவது சுத்தம் பண்றீங்களா? ஒண்ணும் சொல்லலீன்னா எதுவேணாலும் செய்வீங்களா? எடத்தக் குடுத்தா .மடத்தப் பிடிக்கிறீங்களே...இது
நியாயமா? லாரி ஒரு லோடு ஆயிரத்தி எழுநூறு ரூபா...தெரியுமா? நாலு நாளைக்குத்தான் வரும்...கொஞ்சம்
நினைச்சுப் பாருங்க....கவனிக்க ஆளில்லேன்னா என்ன வேணாலும் செய்வீங்களா....? உங்களுக்கு
வெளிக்கிருக்கிறதுக்கு இந்த அபார்ட்மென்ட் கக்கூஸ்தான் கிடைச்சிதா? யாரும் கவனிக்கலேன்னா
பொண்டாட்டியயும் கொண்டாந்து ராத்திரி படுக்க வச்சிருவீங்க போல்ருக்கு? இனி ஒரு பய இந்தப் பக்கம் வரக்கூடாதாக்கும். மத்தியானம் சாப்பிட எவனும்
நுழையக் கூடாது...? யாராச்சும் நுழைஞ்சீங்க...அப்புறம் போலீசுக்குப் போயிடுவேன் நான்...ஞாபகமிருக்கட்டும்.
கோபம் தலைக்கேறிவிட்டது. ஏக வசனத்தில்
பொரிந்து தள்ளினார் சந்திரசேகரன். அவர் வயசு எல்லாவற்றையும் அனுமதித்தது. எதிராளி வாயை
அடைத்தது. இனிப் பொறுப்பதற்கில்லை என்ற
முடிவுக்கு வந்திருந்தார். வீட்டுக்குள் போய் ஃபோனை எடுத்தார். வாட்ஸ்அப் குரூப்பில்
தட்டத் தொடங்கினார். நடந்தவைகளையெல்லாம் விலாவாரியாகத் தெரிவித்தும், வாட்ச்மேனின்
உடனடி அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
ஒரு ரெஸ்பான்ஸ் இல்லை. ..யாரும்
அசைவதாய்க் காணோம்.. பன்னென்டாயிரம், பதினைஞ்சாயிரம் என்று சம்பளம் கொடுத்து ஆள் போட
ஒருத்தனும் தயாராயில்லை. ஏற்கனவே மெயின்டனன்ஸ் சார்ஜ் ஜாஸ்தி...இதுல இதுவும் சேர்ந்திச்சின்னா
தாங்க முடியாது எங்களால. இதென்ன அம்பது நூறு
வீடு இருக்கிற பெரிய அபார்ட்மென்டா? வெறும் எட்டே எட்டு வீடு. இதுக்கு செக்யூரிட்டி
ஒரு கேடு...!. ஒரே குரலாய் ஒலித்தது எதிர்ப்பு. வெட்டிச் செலவு ஆயிரம் பண்ணுவோம். ஆனா
இதுக்குத் தர மாட்டோம்...!
அடடா...என்னே உறுதி?
இன்னும் அவன் வந்து என்ன கொட்டமடிப்பானோ?
வரும் ஆள் நல்ல ஆளாய் இருந்தால்தான் போச்சு...தண்ணி பார்ட்டியா இருந்தா பிரச்னை...விபரீதங்கள்
வந்த பிறகுதான் தெரியுது...முன்னாலயே புரிஞ்சிக்க முடியலை...ஆகையினால யோசிச்சு நிதானமா
செய்யலாம்.... - பதில் வந்தது இப்படி...
வாரா வாரம் சினிமா, ஓட்டல்னு எம்புட்டு
வேணாலும் வாரி இறைப்போம்...அது எங்க உரிமை...ஆனா இப்டியெல்லாம் காச வேஸ்ட் பண்ண முடியாது...!
எத்தனை தெளிவு...! மெச்சத்தான் வேணும் இவங்களை...! எட்டு கிரகங்களும் எப்போ ஒண்ணா சேர்றது...என்னிக்குப் பேசறது...?
இது நடக்கிற காரியமில்லே....என்று தோன்றியது. ஆளில்லேன்னா எதுவும் நடக்கும் என்று அசிங்கமாய்
நினைத்ததையும் சொல்லித்தான் பார்த்தார். யாரும் மசியவில்லை.
அப்டியெல்லாம் நடக்காதுங்க...சார்...நீங்க
ரொம்பத்தான் கற்பனை பண்ணிக்கிறீங்க...அடுத்தடுத்து நாங்கதான் ட்யூட்டி முடிச்சு வரிசையா
வந்திட்டேயிருக்கமே...அப்டி எதுவும் நடந்தா எங்க கண்ணுல படாமயா போயிடும்...பட்னு போலீஸ்ல
பிடிச்சுக் கொடுத்திட மாட்டோம்? வார்த்தைகளெல்லாம் வீச்சும் விறைப்புமாகத்தான் வந்தது.
சின்னச் சின்னக் கண்காணிப்பு வேலைகளையே கவனிக்கத் தவறும் இவர்கள் இப்படி வாய் கிழியப்
பேசுவது வெற்று ஜாலம் இல்லாமல் வேறென்ன?
தாக்காட்டி எதுவும் நடக்கவிடாமல்
பண்ணுவதிலேயே குறியாய் இருப்பதை உணர்ந்து கொண்டார். அவர் மனம் ஒரு முடிவுக்கு வந்திருந்தது. ரெண்டு நாள் பொறுத்து தீர்மானமாய் ஒன்று பண்ணினார். எத்தனையோ செய்றேன்.
இதையும் சேர்த்துப் பார்த்திட்டுப் போறேன். குறைஞ்சா போறேன். எல்லாம் நம்ம பிள்ளைங்கதானே...!
அவர் பரந்த மனம் இப்படிச் சொல்லியது. அதாவது திடீரென்று மனது விரிந்து கொண்டது.
வீட்டு வேலைக்கு வரும் வேலைக்காரம்மாளைக்
கீழே அழைத்து வந்து வாட்ச்மேனுக்கு என்று கட்டியிருந்த அந்த அறையைத் திறந்து விட்டு, கூட்டிப் பெருக்கி, மெழுகிச் சுத்தம் செய்யச் சொன்னார்.
சுற்றிலும் மாக்கோலம் இடச் செய்தார். ரெண்டு
சாமி படங்களை அங்கு கொண்டு வந்து மாட்டி மாலை போட்டு, சாம்பிராணி போட்டு, தேங்காய் பழம் பத்தி ஏற்றி வைத்துக் கும்பிட்டார்.
ஒரு எலெக்ட்ரீஷியனை வரச் சொல்லி...வீட்டில் எக்ஸ்ட்ராவாக இருந்த ஃபேனைக் கொண்டு வந்து
மேலே மாட்டச் செய்தார். ராஜலெட்சுமியைக் கொண்டு அறை வாசலில் கோலமிடச் செய்தார். மாலை இருள் கவிந்த பொழுதினில் பளிச்சென்று விளக்கை
எரியப் பண்ணினார். திறப்பு விழாப் செய்ததில் ஜெகச்ஜோதியாய்ப் பளீரிட்டது அந்த இடம்.
அறைக்குள் வெளிச்சம்...ஆள் இருக்கு கவனிக்க...!
ராத்திரி பத்து மணிக்கு மேல் விடு
விடுவென்று கீழே இறங்கியவர், அந்த அறைக்குள் நுழைந்து நடு நாயகமாய்ப் படுக்கையை விரித்தார்.
ஈஸ்வரா....என்று ஜபித்துக்
கொண்டே நீட்டி நிமிர்ந்து விட்டார். ஏஸி போட்டது போல் என்னமா ஒரு குளிர்ச்சி...அபாரம்...! இரவு பன்னிரெண்டு, ஒண்ணு என்று அடுத்தடுத்து
ஆபீஸ் வேலை முடித்து வீடு திரும்பிய ஐ.டி. கனவான்களான இளைஞர்கள், ரூம் திறந்திருக்கே...?
புதுசா யாரு படுத்திருக்கிறது? என்று ஐயத்தோடு நெருங்கி ஊன்றிப் பார்த்து, எவரென்று
கண்டு கொண்ட பாவனையில் தயக்கத்தோடு படியேறினார்கள். இதென்ன திடீர்னு இப்டி? மேலேறிச் செல்லும் அவர்களை விழி திறந்து கண்காணித்துக் கொண்டுதான்
இருந்தார் சந்திரசேகரன். காவலன் காவான் எனின் என்னாவது? மனசாட்சி உண்டே இந்த மானிடனுக்கு...!
மறுநாள் அந்த ஞாயிற்றுக் கிழமை
காலையில் அவர்கள் சொன்னார்கள். .... சார்...ஒரு வாட்ச்மேனை உடனடியா அப்பாய்ன்ட்
பண்ணிருவோம்....உங்களுக்கு ஏன் சார் இந்த வேலையெல்லாம்...? கொல்றீங்களே சார் எங்கள....!
பரிதாபமாய்க் கேட்டார்கள். இப்பத்தான் புத்தி
வந்திச்சா? தன் மீது இத்தனை மதிப்பா? ஒருத்தர்
மூஞ்சியிலும் களையில்லையே!. பெருமையாய் நினைக்கத்
தலைப்பட்டார். கண்கள் கலங்கிப் போனது அவருக்கு.
ம்ம்...அதுதான் சரி....இல்லன்னா...கேட்பாரில்லாத
இந்த இடத்துல.. எதுவும் நடக்குமாக்கும்.....ராத்திரில...அந்தத் தப்பும்கூட நடந்து போகும். நான் சொல்றது புரியுதா? இந்த அபார்ட்மென்ட்டோட
பெயர் கெட்டுடும்.. நம்ப எல்லாரோட கௌரவம் பாதிக்கப்படும்....நான் சொன்னதோட தாத்பர்யம்
புரிஞ்சிதா இப்போ....? என்றார் மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் சந்திரசேகரன்.
ஓ.கே...ஓ.கே.. நீங்க சொன்னாச் சரிதான்
சார்.. நோ .அப்ஜெக் ஷன்.... ஒரு சேர ஆமோதித்தார்கள் எல்லோரும். ! அவர் மனம் நிம்மதிப் பட்டது.
( 6
)
ஒரு
தூக்கம் போட்டு எழுந்ததில் உடம்பு கலகலவென இருந்தது சந்திரசேகரனுக்கு. வேலைக்காரப் பெண் பரிமளம் பாத்திரம் துலக்கும் சத்தம் கேட்டது. இவர் அறையின்
கதவு மூடியிருந்தாலும் வெளியே உண்டாக்கும் சத்தங்கள் கேட்டுக் கொண்டேதான் இருக்கும்.
மணி ஐந்தாகி விட்டதை உணர்ந்தார். டாண் என்று ஐந்து மணிக்கு வந்து பெல் அடிக்கும் அந்தப்
பெண். ஆள் இல்லையென்றால் அவ்வளவுதான். அடுத்தாற்போல் போக வேண்டிய வீட்டிற்குக் கிளம்பி
விடும். காலை ஐந்து வீடு மாலை ஐந்து வீடு. வீட்டுக்கு ரெண்டாயிரம்மேனிக்கு மாதம் இருபதாயிரம்.
இன்றைக்கு புதிதாய் வேலைக்குச் சேரும் பி.இ. படித்த இளைஞர்கள் கூட மாதம் இருபத்தஞ்சு,
முப்பதுதான் வாங்குகிறார்கள். இந்தப் பெண் இன்னும் கொஞ்சம் தம் பிடித்தால் முப்பதாயிரத்தை
எட்டி விடும் என்று நினைத்துக் கொண்டார். அது ஏன், அதான் வருடா வருடம் சம்பளம் கூட்டியாகிறதே…லேபருக்குத்தான்
கிராக்கி இன்றைய நாளில். அந்தப் பகுதியில் காலையில் ஆறு மணியிலிருந்து இது ஆரம்பமாகிறது.
அங்கங்கே வீடுகளில் வாசல் தெளித்து கோலம் போடுபவர்களே அவர்கள்தான். ஒவ்வொரு வீட்டையும்
அவர்கள்தான் விழிக்க வைக்கிறார்கள் என்றே சொல்லலாம். இருபது, இருபத்தைந்து ஏன் முப்பது
வயது கல்யாணமாகாத வேலை பார்க்கும் பெண்கள் எல்லாமே எந்த வீட்டில் காலை ஆறு மணிக்கு
உறக்கமெழுகிறார்கள்? அது அந்தக் காலம். எழுந்து குளித்து ஈரத்தலையைக் கட்டி, கௌசல்யா…சுப்ரஜா…ராமபூர்வா…ப்ரபத்யதே…!
இதுவும் அந்தக் காலம்தான். .இதையெல்லாம் வாய்விட்டுச் சொல்ல முடியமா? சொன்னால் சண்டைதான்.
உங்கப்பாவ முதல்ல வீட்டை விட்டு அனுப்புங்க….என்றுதான் பேச்சு ஆரம்பிக்கும். அந்தக்
கேவலம் எதற்கு? என்று அடங்கிக் கிடந்தார் சந்திரசேகரன்.
முப்பது நாற்பது பேரை ஆபீசில் அடக்கியவர் அவர். சொன்ன நேரத்துக்கு ஃபைல்
வர வேண்டும் அவருக்கு. இல்லயென்றால் அதகளம்தான். முன் அனுமதியில்லாமல் எவரும் லீவில்
செல்ல முடியாது. தாமதமாக ஆபீஸ் வந்து காரணம் சொல்ல ஏலாது. நீங்க அப்ரூவ் பண்ணலேன்னா
ரிப்போர்ட் அனுப்ப முடியாது…அப்புறம் என்னைக் கேட்காதீங்க…என்று ஆபீசரையே மிரட்டுவார்.
இன்று அடங்கி ஒடுங்கி, இருக்குமிடம் தெரியாமல் குன்றிக் கிடக்கிறார். வீட்ல எலி, வெளில
புலி என்று…
மனுஷன் கொஞ்ச நேரம் அமைதியாத் தூங்குவோம்னா முடியுதா? என்னமாவது பாத்திரத்தை
உருட்டிட்டே இருக்கீங்களே…? வீடுன்னா ஏதாச்சும் சத்தம் கேட்டுட்டே இருக்கணுமா? – எத்தனையோ
முறை சொல்லிச் சொல்லி அலுத்து விட்டார். அந்தக் களேபரங்களையும் மீறித் தூங்கினால்தான்
உண்டு.
முன்பு டி.வி.யை அலற விட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது அதை நிறுத்தியாயிற்று.
பேரன் டி.வி. பார்த்துப் பார்த்துக் கெட்டுப் போவானாம். படிக்க மாட்டானாம். நல்லது.
செய்யட்டும் என்று விட்டு விட்டார் இவரும். இல்லல்ல…எனக்கு வேணுமே…என்று கேட்டால் நடக்கவா
போகிறது? அங்கு வந்த பின்னால் அவர்கள் அதிகாரத்தின் கீழ்தான் இவர் இருக்கிறார். அவர்கள்
என்ன போடுகிறார்களோ அதைத் தின்கிறார். அது இவரது உடம்புக்கு ஒத்து வருகிறதோ இல்லையோ?
ஒத்து வரவில்லைதான். எப்பொழுது பார்த்தாலும் ஃப்ரைய்டு ரைஸ், பிரியாணி, குருமா. சப்பாத்தி
என்று உருளைக்கிழங்கும், வாழைக்காய் வறுவலும் அமர்க்களப்படுகிறது. அந்தப் பட்ட சோம்பு வாடையே இவருக்கு ஆகாது. ஆனாலும்
சகித்துக் கொண்டுதான் காலத்தைக் கழிக்கிறார். உருளைக் கிழங்கைப் பதவாகமாகத் தனியே எடுத்து
வைத்து விடுகிறார். வாழைக்காயைத் தொட்டுக் கூடப் பார்ப்பதில்லை. இருப்பதிலேயே கொடூரமான
வாய்வுத் தொந்தரவைத் தரும் காய்….தடி தடியாய் வந்து நிற்கும் வாழைக்காய்தான். பேச்லராய்த் திருச்சியில் அறை எடுத்துத் தங்கி
வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்திலேயே இவருக்கு அது ஆகாது. ஜீரண சக்திக்கு, வாய்வுக்
கோளாறு ஏற்படாமல் கலைப்பதற்கு என்று ஆயுர்வேத சூரணம் ஒன்று வாங்கி அறையில் வைத்திருப்பார்.
அறை நண்பர்கள், பக்கத்து அறை ராமமூர்த்தி, சுந்தரமூர்த்தி என்று ஆளுக்கொரு உருண்டை
எடுத்து வாயில் போட்டுக் கொண்டு போய் விடுவார்கள். ஒரு மாதம் வரும் அந்தச் சூரணம் பதினைந்து
நாளிலேயே டப்பா காலியாகிவிடும். நண்பர்களாயிற்றே…ஒன்றும் சொல்லவும் முடியாது. கோபம்
கொள்ளவும் முடியாது. அந்த இளைய வயதிலே ஆரம்பித்தது வாயுத் தொல்லை. இன்றும் அவரை விட்டபாடில்லை.
அவருக்கேற்றாற்போல் பரிபக்குவமாய்ச் சமைத்து பாங்காய் சாப்பிட வைக்க யார் இருக்கிறார்கள்?
ராஜலெட்சுமியிடம் அதெல்லாம் எதிர்பார்க்க முடியாது. பிடிக்கலேன்னா எடுத்துத் தனியா
வச்சிடுங்க…அவ்வளவுதான்…என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவாள். இன்றைய தேதிக்கு இவருக்கு உகந்ததாய் வெறும் மோர் சாதம்தான்
இருந்தது. உடம்பு பலமற்றுப் போகுமே…காய்கறிகள் சேர வேண்டாமா? அதுபற்றியெல்லாம் இவருக்குக்
கவலையில்லை. என்னவோ வண்டி ஓடினால் சரி….
உள்ளேதான் சத்தம் என்றால் வெளியே வீதியிலும் ஒரே
இரைச்சல். என்னவாயிருக்கும் என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். வீடு வீடாய் ஒரு
கூட்டம் புகுந்து வெளியே வந்து கொண்டிருந்தது. ஓட்டுக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
அந்தத் தொகுதி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வருவதாயிருந்தது. உடல் நலக் கோளாறால்
நெடுநாள் மருத்துவமனையில் கிடப்பாய்க் கிடந்து சிகிச்சை பெற்ற எம்.எல்.ஏ., ஒன்றும்
பலனளிக்காமல் மூச்சை நிறுத்திக் கொள்ள, காலமாகி,
மூன்று மாதங்கள் முடிந்த தருவாயில் இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. நகரில்
பல இடங்களில் சுவற்றை நிரப்ப ஆரம்பித்திருந்தார்கள். விளம்பரத்திற்கு சுவர் பிடிப்பதில்
போட்டி. போஸ்டர் ஒட்டுவதில், தட்டி வைப்பதில் கடும் போட்டி. அடிதடி சண்டை. சாலைகளை
அவர்கள் இஷ்டத்திற்குத் தோண்டினார்கள். கொடியை நட்டார்கள். பந்தல் போட்டார்கள். மைக்கை
அலற விட்டார்கள். அரசு என்று ஒன்று இருக்கிறதா என்று எளிய மக்கள் வாய்மூடி மெளனியாய்ப்
பார்த்தார்கள். தண்ணீர் பந்தல் அமைத்திருந்தார்கள். மோர் கொடுத்தார்கள். அடிக்கும்
வெயிலுக்கு கொடுக்கும் மோர் தேவாமிர்தமாய் இருந்தது. ஓசியில் கிடைக்கிறதே என்று எல்லோரும்தான்
குடித்தார்கள். எல்லோருக்கும்தான் தாகம். அதில் படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன்
என்று வித்தியாசமா என்ன? காரைத் தள்ளி நிறுத்தி, டிரைவரை வாங்கி வரச்சொல்லி சிலர் குடித்து
மகிழ்ந்தார்கள். ஆளும் கட்சியின் பிரமுகர் அப்படி வாங்கிக் குடித்ததில் பந்தல்காரருக்கு
அசாத்தியப் பெருமை. அவரிடம் போய் நன்கொடைக்கு நிற்கலாமே! மாட்டேன் என்றா சொல்லப் போகிறார்?
லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து அக்கறையாக மக்களுக்கு வழங்கினார்கள்.
அந்தந்தப் பகுதியின் கட்சிக்காரர்கள்
களத்தில் இறங்கிப் பணியாற்ற ஆரம்பித்திருந்தார்கள். இப்போது வாக்காளர் பட்டியலின்படி
ஆட்கள் இருக்கிறார்களா என்பதை வீடு வீடாகப் புகுந்து சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
எதிரணியில் நின்று கடந்த தேர்தலில் சில ஆயிரம் ஓட்டுக்களையே தவறவிட்ட அதே வேட்பாளர்
இப்போது முன்னிலும் வேகமாய் தன் பணியைத் துவக்கியிருந்தார். எத்தனை பேர வேணாலும் களத்துல
இறக்கட்டும், என்ன செலவானாலும் பரவால்ல…இந்த முறையும் நாமதான் வின் பண்றோம்… என்று
தொகுதியில் இப்போதே பணம் விளையாட ஆரம்பித்திருந்தது. வீடு வீடாகச் சென்று பட்டியலைச்
சரி பார்க்கும் சாக்கில் ஸ்வீட் பாக்சோடு அந்தந்த வீட்டுப் பெண்மணிகளை எதிர்கொள்வதாய்ப்
பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது.
எங்களுக்கு ஓட்டு எங்க சொந்த ஊர்லதான்…இங்க இல்ல….இன்னும்
மாத்திக்கல…என்று வேலைக்காரப் பரிமளத்திடம் மிகுந்த கவனத்தோடு ராஜலெட்சுமி சொல்லிக்
கொண்டிருப்பதைக் கண்ணுற்றார் சந்திரசேகரன்.
அதனாலென்னம்மா…ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தா
வாய் பேசாம வாங்கிக்கிட வேண்டிதானே….வேணாம்னா எனக்குக் கொடுத்திருக்கலாம்ல….என்று சொல்லிச்
சிரித்தது பரிமளம். வீட்டுக்கு வீடு இடைத் தேர்தல் ஒலிக்க ஆரம்பித்திருந்தது.
ச்சீ…சீ…கேவலமில்லே…ஒரு ஸ்வீட்
பாக்சுக்காகப் பொய் சொல்ல முடியுமா? அல்லது சொல்லாமத்தான் கை நீட்டி வாங்கிக்க முடியுமா?
பட்டியலைச் சரிபார்க்கணும்னு வந்திருக்கிற அவன் அதை மட்டும் வெரிஃபை பண்ணிட்டுப் போக
வேண்டிதானே…அதென்ன வீட்டுக்கு வீடு ஸ்வீட் பாக்ஸ் கொடுக்கிறது? அதுவே தப்பில்ல? – என்று
பதிலுக்கு உரைத்தாள் ராஜலெட்சுமி. வந்தது கட்சிக்காரன். அரசுத் தேர்தல் பணியாளர் அல்ல
என்று தெரிந்தது.
எங்க பக்கமெல்லாம் காசு கொடுக்க
ஆரம்பிச்சிட்டாங்கம்மா…எனக்கெல்லாம் இப்பவே ஐநூறு வந்திடுச்சு….என்றது பரிமளம்.
ஆளுங்கட்சியா, எதிர்க்கட்சியா….?
என்று ராஜலெட்சுமி கேட்டாள்.
இப்போதைக்கு ஆளுங்கட்சிக்காரவுகதானம்மா
கொடுப்பாக…அவுககிட்டதான காசு பொரளும்….ஒரு வீட்டுக்கு எத்தன ஓட்டுங்கிறதைப் பார்த்து
இவ்வளவு காசு கொடுக்கணும்னு நிர்ணயிக்கிறாங்க….இல்லன்னா குடியிருக்கிறவுகளே கணக்குப்பண்ணிக்
கேட்டுர்றாங்கல்ல? யாரையும் ஏமாத்த முடியாதாக்கும். …வீட்டுக்கு வீடு, ஸ்டோருக்கு ஸ்டோரு
ஆளுகள நியமிச்ச மாதிரி எங்க காம்பவுன்டுக்கு நானு….எல்லாம் ஒரு நம்பிக்கதான்….ரெண்டு
வருஷங்கூட முடியலேல்லலம்மா…அதுக்குள்ளெயும் அந்தாளு மண்டையப் போட்டுட்டாரு…யாரு எதிர்பார்த்தாக….நல்லாத்தான்
இருந்தாரு….ஆனா பாருங்க…ஏதோ மூளைல கட்டியாமுல்ல…கோமா ஸ்டேஜூக்குப் போய்ட்டாராம்….ஒரு
மாசமா தன்ன மறந்துதான் கெடந்தாராமே…செயற்கை சுவாசமுன்னு சொல்றாகளே…அதுலதான் நிப்பாட்டி
வச்சிருந்தாகளாம்….மனுசங்க என்னென்னவோ நினைக்கிறாக…ஆனா தெய்வம் வேறொண்ணை நெனைக்குது….எம்புட்டுச்
சொத்து சேர்த்து என்னா செய்ய…?இப்போ அத யார் யார்ட்டக் கொடுத்து வச்சிருக்காகன்னு கூட
அவுக வீட்டுக்காரவுகளுக்குத் தெரியாதாம்…குய்யோ முறையோன்னு அடிச்சிக்கிறாக….எங்கிட்ட
எதுவுமில்லன்னு எல்லாரும் கையை விரிக்கிறாகளாம்…வந்தா ஒட்டிக்குமோன்னு நிறையப் பேரு
பொணத்தப் பார்க்கக் கூட வர்லயாம்…! பினாமி…பினாமியாவே இருந்து மறைஞ்சிடுவோம்னு ஆளுக
கம்பி நீட்டிட்டாங்களாம்.
இந்த ரெண்டு வருஷத்துல அவ்வளவு
சொத்தா சேர்த்துட்டாராம்? பேச்சு ஸ்வாரஸ்யத்தில் ராஜலெட்சுமியும் கேட்டு வைத்தாள்.
அவுரு இந்தவாட்டிதானம்மா வெறும் எம்.எல்.ஏ. போனவாட்டி வரைக்கும் அமைச்சரா
இருந்தாருதானே? அப்போல்லாம் என்னா காசுங்கிறீங்க…? வெறுமே டாக்சி ஓட்டிட்டிருந்த ஆளுங்கம்மா…எங்களுக்கெல்லாம்
நல்லாத் தெரியும்…ஆளுங்கட்சில சேர்ந்து அங்கங்க செகனாண்டு காரா வாங்க ஆரம்பிச்சாரு….ஒரு
டாக்சி நாலு டாக்சி ஆச்சு….நாலு எட்டாச்சு….சிட்டி பூராவும் இந்த ஏரியாவுல அவரு காருதாங்க
ஓடிச்சி….போலீஸ்காரவுக ஆட்டோவா வாங்கி விடுவாகன்னு சொல்வாகள்ல…அது மாதிரி இந்தாளு டாக்சியா
வாங்கி ஓட்டிட்டே இருந்தவருதான்….கட்சித் தலைவருக்கு ரொம்ப நெருக்கமாகி, அப்புறம் எம்.எல்.ஏ.வுக்கு
நிறுத்திட்டாக….மேல வந்திட்டாரு….எல்லாருக்குமா அப்டி ராசி அமையுது…? அவுரு அதிர்ஷ்டம்….ஜிகு…ஜிகுன்னு
உசந்திட்டாரு….வீட்டுலயே நாலஞ்சு காருக நிக்கும்மா…வருமானவரி ஆபீஸ்லர்ந்து ரெய்டு வந்திட்டாகளாமுல்ல…என்ன
எடுத்தாகளோ…எதைப் பிடிச்சாகளோ…இதெல்லாம் யாருக்குத் தெரியுது…ஆளாளுக்குப் பேசிக்கிறதுதான்…எது
உண்மை…எது பொய்யின்னு நம்ப முடியுது…?
வந்து என்ன புண்ணியம்…இப்பப் போயிட்டாரே….கேட்டுக்
கொண்டே உள்ளே புகுந்தார் சந்திரசேகரன்.
சிரித்துக் கொண்டே பதில் சொன்னது
பரிமளம். அதுக்கென்னங்கய்யா பண்றது? அதான் தலைவிதி. எம்.எல்.ஏ.வாகி மினிஸ்டரும் ஆகி…வலம் வந்தவரு…ஒடம்பக்
கவனிக்காம போயிட்டாரே….? சேர்த்து வச்ச பணம் அநியாயமா சிகிச்சைன்னு பறக்குது….
எத்தனபேர் உசிர வாங்கியிருப்பாரு….சாவு
வாங்கினவுக உறவு சாபமெல்லாம் ஒண்ணுமில்லாமப்
போயிருமா….? பதிலுக்கு காவு வாங்காமப் விட்ருமா?
அவுரு இல்லாட்டி என்னங்கம்மா? குடும்பத்துக்கு
ஏராளமாச் சேர்த்து வச்சிட்டுப் போயிட்டாரு….அதுகளே நாலு தலமொறைக்கு நிக்குமே……
எதாச்சும் லோக்கல் விஷயம்னா உங்ககிட்டே
கேட்டுக்கிடலாம் போல்ருக்கு…அவ்வளவு தெரிஞ்சி வச்சிருக்கீங்க….! இல்லே பிரமீளா…? சந்திரசேகரனுக்கு
பரிமளம் என்ற பெயரே நினைவில் நிற்பதில்லை. பிரமீளா…பிரமீளா…என்றுதான் சொல்வார். அவரது
இளமைக்காலத்தில் அந்தப் பெயரில் நடித்த ஒரு நடிகை அவர் மனதில் நின்று போனதின் பலவீனம்
இது.
நீங்கதான் அன்றாடம் பேப்பர் படிப்பீங்கல்லய்யா…உங்களுக்கும்
என்ன தெரியாமயா போகும்….?
அது வேறே….அதுல உள்ளடி விஷயமெல்லாம்
எதுவும் வராதே…செய்தி வேறே…நடைமுறை வேறே…செய்தியா வர்றதெல்லாம் உண்மையில்லையே….என்ன
மாதிரி தகவல் கொடுக்கிறாங்களோ அதத்தானே போடுவாங்க செய்தியா? நடைமுறைங்கிறதே வேறேயாச்சே…?
அது எப்படியோ போகட்டும்…நமக்கென்ன வந்தது?
ஆனா இன்னும் பல வீடுகளுக்குக் கொடுக்கலிங்கய்யா…பார்த்துப்
பார்த்துத்தான் கொடுக்கிறாங்க இந்த வாட்டி….போன முறை வார்டு கவுன்சில் எலெக் ஷன் வந்திச்சில்ல….அதுல
இந்தாளு நிப்பாட்டின ஆளு ஜெயிக்கலேல்ல…யாரு? இறந்து போனாரே…அவரோட ஆளு….பயங்கரமாத் தோத்துட்டாருல்ல….அதுல
எக்கச்சக்கக் காசை விட்டுட்டாராம்…காசு வாங்கினவுக, வாங்கிட்டு ஏமாத்துனவுங்க…வாங்கிட்டு
ஓட்டுப் போடப் போகாம இருந்தவுக, எதிராளிக்கு ஓட்டுப் போட்டுட்டு உங்களுக்குத்தான் போட்டேன்னு
சொன்னவுக, காசையும் வாங்கிக்கிட்டு சொல்லாமக் கொள்ளாம வெளியூர் போனவுக…ன்னு பலவகையிலும்
பணம் பறி போயிடுச்சி….வீடு வீடாப் புகுந்து யாருக்குப் போட்டே…என் ஆளுக்கா போட்டே…பொய்யா
சொல்றே அது இதுன்னு காசப் பறிகொடுத்த வயித்தெறிச்சல்ல…ஆளுகள அடிக்கப் போயி பெரிய களேபரம்
ஆயிடுச்சி. .தெருத் தெருவா, வீடு வீடா சண்டை போட்டுட்டாரு….அவர் நிறுத்தின ஆளும்…நிறையப்
பணத்தை அவனே ஆட்டையப் போட்டுட்டானாம்…இவரு கேட்டப்போ எல்லாம் செலவழிஞ்சிடுச்சின்னு
பொய் சொல்லியிருக்கான்.
அந்த
ஆளு இப்போ எங்க போனான்னே தெரியாம, தேடிக்கிட்டுத் திரியறாங்க…கண்ணுக்குப்பட்டா வெட்டிக்
கொன்னுபுடுவாங்கன்னு எங்கயோ ஓடிட்டானாம். அந்த வேட்பாளர் குடும்பம் இப்போ நடுத்தெருவுல
நிக்குது…வருமானமில்லாம…கூலி வேலைக்குப் போயிட்டிருக்கு அந்த வீட்டம்மா…ரெண்டு பிள்ளைகள
வச்சிக்கிட்டு அதுகளையும் இப்போ நூறு நாள் வேலைக்கு கூடவே சுமந்திட்டுத் திரியது.
கேட்கக்
கேட்க ஸ்வாரஸ்யமாயும், அதே சமயம் வயிற்றெரிச்சலாயும் இருந்தது சந்திரசேகரனுக்கு. ஏதாச்சும்
தேர்தல் என்று வந்தால் இன்று எவ்வளவு பணம் விளையாட ஆரம்பித்து விட்டது? இனிமேல் பணமில்லாமைல்
எந்தத் தேர்தலும் நடக்காது என்றாகி விட்டதே…? சாதாரண எளிய மனிதன் நல்லெண்ணத்தோடு, தொண்டுள்ளத்தோடு
இனி தேர்தலில் நிற்கவே முடியாது போலிருக்கிறதே? வேட்பாளர் கட்டணம் செலுத்துவதற்கே சொந்தச்
சேகரிப்பை இழந்தால்தான் முடியும் போலிருக்கிறதே? ஊழலைச் செய்து பணம் சேகரித்து வைத்திருக்கும்
பகாசூரன்களோடு சாதாரண மனிதன் போட்டி போட்டு ஜெயிப்பது என்பது இந்த ஜனநாயகத்தில் இனி
சாத்தியமேயில்லையோ? எல்லாம் பணநாயகம்தான். பணத்தைப் போட்டு, பணத்தை அள்ளுவது. கணக்கிலடங்கா பணத்தை அள்ளி வீசினால் ஜெயித்த பிறகு
எங்கிருந்து தொண்டுள்ளம் துளிர்க்கும்? போட்ட பணத்தை மீட்பதுதானே முதல் பணியாய் அமையும்?
மக்கள் சேவை மகேசன் சேவை என்பதெல்லாம் வெற்று வாக்கியங்களாய்ப் போய்விட்டது இன்று.
அரசியல் ஊழைலையும், பண நாயகத்தையும் ஒழித்துக் கட்டினால்தான் இந்த நாடு உருப்படும்.
அது அத்தனை எளிதான, சாத்தியமான செயலா இன்றைய நிலையில்? – எண்ணிப் பார்த்தபோது நீண்ட
பெருமூச்சொன்று எழுந்து அடங்கியது சந்திரசேகரனுக்கு.
கடந்த
முறையிலான வார்டு எலெக் ஷன் போது சொந்த ஊர் போயிருந்ததும், அங்கே தெருவில் பணவிநியோகம்
அமர்க்களமாக நடந்து கொண்டிருந்ததையும் நினைத்துப் பார்த்துக் கொண்டார். ஒரு குறிப்பிட்ட
விஷயம் அவர் மனதை அப்போது நெருடியது. இரவு கழிந்து நாளை காலையில் ஊர் கிளம்ப வேண்டும் என்று டிக்கெட் ரிசர்வ்
செய்து வைத்திருந்த அந்த வேளையில், எல்லாம் சூட்கேஸில் எடுத்து வைத்துக் கொண்டுவிட்ட
நிலையில், ஊர் தொடர்பான அந்த நிகழ்வு அவருக்கு ஞாபகத்தில் அல்லாடியதில் அநாவசியமாய்
அன்றைய இரவுத் தூக்கம் பாழாகிவிடுமோ என்கிற ஐயம் ஏற்பட்டது.
இப்போ என்ன திடீர்னு ஊருக்கு? என்று வருத்தப்பட்டாள் ராஜலெட்சுமி. ஆனாலும் ரெண்டு மாசத்துக்கொருதரம்
தன் சொந்த மண்ணை மிதிக்காவிட்டால் அவருக்கு தான் உயிரோடிருப்பதே வீண் என்பதாகத் தோன்றி
அவரை அலைக்கழிக்கிறது. அங்கு போய் தான் லோன் போட்டு வாங்கிய வீட்டில் நாலு நாளைக்காவது
இருந்தால்தான் அவர் மனசு ஆறும். ஆனாலும் தேவையில்லாமல் ஒரு விஷயத்தில் தலையைக் கொடுத்து
அதுநாள்வரை தனக்கிருந்த குறைந்தபட்சம் அந்தத் தெருவிலான நல்ல பெயரைக் கெடுத்துக் கொண்டது
போலான அந்த நிகழ்வை அவரால் இன்றுவரை மறக்க முடியவில்லைதான். அன்றைய இரவு உறக்கம் கலைந்தது
அதனால்….தவறுகள் குற்றங்களல்லவே என்று மனம் சமாதானமும் சொல்லிக் கொண்டது.
( 7 )
ஊர்
வந்ததும் முதலில் முகத்துக்கு முன்னால் முதலில் நின்றது தண்ணீர் பிரச்னைதான். வீட்டு
வாசலில் வரும் ஒரு குடம் பதினைந்து
ரூபாய் வேன் தண்ணீர் வாங்க இஷ்டமில்லை சந்திரசேகரனுக்கு. பத்து ரூபாய்தான் விற்றுக்
கொண்டிருந்தது...இப்போது கூட்டியிருக்கிறார்கள். அப்போது சில சமயம் வாங்கியிருக்கிறார்
மனசில்லாமல். இந்த முறை பதினைந்து என்றவுடன் மனசு விட்டுப் போனது. பெரிய வித்தியாசமில்லைதான்.
ரெகுலராக அந்தத் தெருவில் வேனில் தண்ணீர் வாங்குபவர்கள் யாரும் இப்பொழுதும் நிறுத்தியதாகத்
தெரியவில்லை. மூன்று நான்கு வேன்கள் வருகின்றனதான். ஒவ்வொரு ரூபாய் வித்தியாசப்படும்.
அது அதில் வழக்கமாக வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். சுத்தப்படுத்திய
தண்ணீர் என்கிற நினைப்பு. இவருக்கொன்றும் அவ்வளவு நம்பிக்கையில்லை.
எப்பொழுதுமே வேனில் வாங்காதவரான நாலு வீடு தள்ளியுள்ள பிரபாகரன் இப்பொழுதும்
வாங்குவதில்லை. பதிலாக அவர் ஒன்று செய்கிறார்...சைக்கிளோடு வரும் ஒரு ஆளிடம் இரண்டு
ப்ளாஸ்டிக் குடங்களைக் கொடுத்து பின் சீட்டில் கட்டித் தொங்கவிட்டு அவரை அருகிலுள்ள
காலனியிலிருந்து எடுத்து வரச் செய்கிறார்.
ஒரு குடத்திற்கு இவ்வளவு என்று கொடுப்பார் போலும். கேட்டுக் கொள்வதில்லை. சமயங்களில்
அவரின் அந்த சைக்கிளுக்கு டயர், செயின், ரிப்பேர் என்று வேறு உதவிகளும் செய்கிறார்.
அவருக்கு அது திருப்தியாக இருக்கிறது. மனசும் இருக்கிறது.
சந்திரசேகரன் ஆரம்ப காலத்திலிருந்தே அவரது மொபெட்டில் போய்த்தான் தண்ணீர்
எடுத்து வந்து கொண்டிருந்தார். என்றுமே வேன் தண்ணீர் அவர் வாங்கியதில்லை. தினமும் பத்து
ரூபாய் என்றால் மாதத்துக்கு முன்னூறா...என்ன அநியாயம்? என்று அவர் மனது சொல்லியது.
அப்படியொன்றும் அது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராயும் தோன்றவில்லை. சுட
வைத்துக் குடிக்க இறக்கியபோது மேலாகப் படர்ந்திருந்த
பவுடர் போன்ற படலமும், அசாத்தியக் க்ளோரின் வாடையும் பிடிக்கவில்லை. மேலும் ஒரு மாதிரிக்
கடுத்தது அந்தத் தண்ணீர். வாங்குவதை நிறுத்திவிட்டார். காசையும் கொடுத்து வியாதியையும்
வாங்கிக்கவா?
இரண்டு
கி.மீ. தூரத்தில் உள்ள நெசவாளர் காலனியின் ஓரிடத்தில் நாள் முழுவதும் விடாமல் தண்ணீர்
வந்து கொண்டிருந்தது. பள்ளமான பகுதி அது. அங்கு எப்போதும் கூட்டம்தான். கார்ப்பரேஷன்காரர்களை
அவ்வப்போது கவனித்து, அந்த லாபத்தை அந்தப் பகுதி வீட்டுக்காரர்கள் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.
மூன்று நான்கு வீடுகளில் விடாது அடி குழாயில் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கும். ராத்திரி
பதினோரு மணிக்குக் கூட அங்கு ஓய்வில்லை. ஒழிச்சலில்லை.
குடத்திற்கு ஒரு ரூபாய் என்று வசூலித்தார்கள். அது ஐம்பது பைசாவிலிருந்து
முக்கால் ரூபாயாகி பின்பு ஒரு ரூபாயில் வந்து நிற்கிறது. ஒரு ரூபாய்க்கு மேல் ஏற்றமில்லை.
சில வருடங்களாகவே அந்த ரேட்தான் நிலைத்திருக்கிறது. சில்லரைக்கும், கொடுக்கல் வாங்கலுக்கும்
வசதி. தொலை தூரத்திலிருந்து கூட ட்ரை சைக்கிள் போட்டுக் கொண்டு பத்துக் குடங்களை வண்டியில்
அடுக்கி வந்து பிடித்துச் செல்பவர் உண்டு. அந்த நேரம்தான் அங்கே சண்டை வரும்....சலுப்பக்குடிச்
சண்டை. ஆனாலும் அந்த பாஷை கேட்க இதம்...! நியாயம் தலை தூக்கி நிற்கும்.
நீங்க ஒரு குடம் பிடிச்சவுடனே எங்களுக்கு விட்ரணும்...தொடர்ந்து பத்தையும்
பிடிக்க முடியாதாக்கும்...அப்புறம் நாங்க என்ன பொழுதுக்கும் நின்னுக்கிட்டே இருக்கிறதா?
பிள்ளைகள பள்ளிக்கோடத்துக்கு அனுப்ப வேணாமா? சமையல் பண்ண வேணாமா? நாங்க குளிச்சு, குளிக்கப்
பண்ணி...எம்புட்டு வேல கெடக்கு... நாலஞ்சு கி.மீ. தள்ளியிருந்து வர்றீக...ஒங்க பக்கமெல்லாம்
குழாயே இல்லாமப் போச்சா...? இம்புட்டுத் தொலை வந்து எங்க கழுத்த அறுக்கிறீங்க?
அந்தச் சண்டையில் குழாய் வீட்டுக்காரர்கள் தலையிடுவதேயில்லை. எதையோ
பேசி, என்னவோ செய்து கொள்ளட்டும்...நமக்கென்ன...! எப்படியும் நாளுக்கு நூறு தேறும்.
வண்டிக்காரன் நின்னால்...அது குறையும். ரெண்டு டிரிப் அடிக்கிறானே? அங்குதான் சந்திரசேகரன்
சென்று கொண்டிருந்தார். மற்றவர் போல் சைக்கிளில் குடத்தின் கழுத்தில் கயிற்றைக் கட்டி
பின் சீட்டில் இருபக்கமும் சமமாகத் தொங்கவிட்டுத் தண்ணீர் கொண்டு வரும் சாமர்த்தியமெல்லாம்
அவருக்கில்லை. அப்படி முயற்சித்தபோது பாதி வழியில் குடம் கீழே விழுந்து நசுங்கி, வண்டி
சாய்ந்து,..இவரும் விழுந்து, சாலையில் செல்வோர் தூக்கி நிறுத்தி...அமர்க்களமாகிப் போனது.
அந்தச் சமயம் இவர் புது மொபெட் ஒன்று வாங்கியிருந்ததால் அதில் ஒவ்வொரு
குடமாய் ரெண்டு நடை கொண்டு வருவதெனப் பழக்கப்படுத்தியிருந்தார். பெட்ரோல் காசைக் கணக்குப்
பண்ணினால் கூட வாசலில் வரும் தண்ணீர் விலை அதிகம்தான் என்றுதான் தோன்றியது. தண்ணீரோடு
திரும்பும்போது மிக மெதுவாய்த்தான் வருவார். 150 லிட்டர் கேன் ஒன்று வாங்கினார். சைடு
கொக்கியில் தொங்கவிட்டுக் கொண்டு பறந்தார். குழாயடிக்குச் சென்ற போது வண்டி மட்டும்தான்
இருந்தது. மேடு பள்ளத்தில் ஜம்ப் ஆகி அது எங்கோ விழுந்து விட, வண்டியைத் திருப்பி வழியெல்லாம்
அதைத் தேடிக் கொண்டே வந்தார். என்னா கெரகம் இது...நமக்குன்னு அமையுதே...என்று ஒரே வேதனை
அவருக்கு.
ஐயா…என்னா கூப்பிடக் கூப்பிடத் திரும்பிப் பார்க்காமப் போயிட்டே இருக்கீகளே...கேன்
வாணாமா...? என்றுகொண்டே ஒரு கடை வாசலிலிருந்து பாய்ந்து வந்தார் ஒருவர். இத்தனைக்கும்
அவரை அந்த வழியில் செல்கையில் போகிற போக்கில் ஒரு பார்வை பார்த்திருப்பார். அவ்வளவுதான்.
அந்த மனுஷாளின் ஈடுபாடே தனி...!
சந்திரசேகரனுக்குப் பிடித்ததே இந்த மாதிரியான மனித உறவுகள்தான். அவர்
குடியிருக்கும் பகுதியில், காலையில் உழவர் சந்தைக்குப் போய் வரும் வேளையில், உழவர்
சந்தையில், ஏன் ஐந்து கி.மீ.க்கு உட்பட்ட பகுதிகளில் அன்றாடம் பார்க்கும், பழகும் முகங்களை
அவருக்கு தினமும் பார்த்தாக வேண்டும். அவர்களோடு பேசுகிறாரோ இல்லையோ, அவர்கள் இவரிடம்
பேச்சுக் கொடுக்கிறார்களோ இல்லையோ, அந்தத் தெரிந்த, அறிந்த முகங்களை அன்றாடம் பார்த்து
ரசிப்பது அவருக்கு மன சாந்தி. கை கொடுப்பதற்கு நிறைய உறவுகள் இருப்பதுபோல என்றே சொல்லலாம்.
வாங்கய்யா...என்னா ரொம்ப நாளாக் காணலை...என்று சொல்லிக் கொண்டே நிறுவைக்கு மேல் ஒரு
கை வெண்டைக்காயை அள்ளிப் போடும் பெண்மணி. அய்யா...வாங்க...தோட்டத்துக் காயி...காலைல
பறிச்சதாக்கும்...வாங்கிட்டுப் போங்க.....என்ற அன்பு குழைந்த வரவேற்புகள். நாலு காய்தான்
வாங்குகிறோம் என்றாலும் நாற்பது கடைகளையும் ஒரு சுற்றுச் சுற்றி வருவதில் கிடைக்கும்
திருப்தி...மன நிறைவு...! இதையெல்லாம் நினைத்துத்தானே
ஊருக்கு ஓடி ஓடி வருகிறார்.
ரெண்டு மாசத்துக்கொருதரம்
ஊர் வருவதே ராஜலெட்சுமிக்குப் பிடிக்கவில்லை.எதுக்கு சும்மா போயிட்டு? காசுக்குப் பிடிச்ச
கேடு? வீட்டை யாராச்சும் தூக்கிட்டுப் போயிடுவாங்களா? – என்று அலுத்துக் கொள்வாள்.
இவர் கேட்பதில்லை. நீபாட்டுக்குச் சொல்லிட்டிரு…என்று கிளம்பி விடுவார். அப்படி வந்துபோவதுதான்
தன்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது என்று நினைத்து மகிழ்ந்தார் அவர்.
வழக்கமாய்ப் பார்க்கும்
போஸ்ட்மேன்..மனோகரன் ....வழக்கமாய் தெருவில் பழைய பேப்பர் எடுக்க வரும் சிவசாமி...அன்றாடம்
கீரை கொடுக்கும் முனித்தாய்...உப்பு...உப்போய்....என்று சைக்கிளில் ஒரு மூடை உப்பை
வைத்து ஓட்டிக் கொண்டு வரும் சம்புகன்...தெருக் கடைசியில் தோசை மாவு விற்கும் மரியக்கா...இங்க
வண்டிய நிறுத்திக்கிறட்டா சார்...என்று கேட்டு புதிதாய்த் தான் வளர்த்திருந்த வேப்பமரத்தடி
நிழலைப் பிடித்த அயர்ன்காரர் அந்தோணிசாமி...வாரம்
தவறாமல் சாக்கடை தோண்டிவிட்டு காசுக்கு வந்து நிற்கும் பஞ்சாயத்துப் பேச்சி...இன்னும்
எத்தனையெத்தனை பேர்...யாரை நினைப்பது...யாரை மறப்பது? என்னவோ ஒரு ஒட்டுதல்...எதனாலோ ஒரு பிடிப்பு...இனம்
புரியவில்லைதான். ஆனாலும் மனதுக்கு சுகம். உடம்புக்கு எவ்வளவு ஆரோக்யம்? பழகிய அந்த
எளிய மக்களைப் பார்க்காததே பெரிய வியாதியாகிவிடும் போலிருக்கிறதே...!
ஒரிஜினல் உறவுகளெல்லாம் இருக்கிறோமா இல்லையா என்று சந்தேகப்படுவது
போலல்லவா சத்தமின்றி இருக்கிறார்கள். எப்பொழுதும், ஏதாச்சும், கூட ரெண்டு வார்த்தை
பேசி விட்டால் எங்கே ஒட்டிக் கொண்டு விடுவார்களோ என்று தந்தி வாக்கியமாய்ப் பேசுகிறார்கள்.
பொய்யாய்ச் சிரிக்கிறார்கள். ரொம்பவும் சுமுகமாய் இருப்பதுபோல் யதார்த்தம் பண்ணுகிறார்கள்.
அதிலெல்லாம் இப்போது பிடிப்பு இல்லை இவருக்கு. அவங்கவங்க அங்கங்கே இருந்துக்க வேண்டிதான்..அப்டி
அப்டியே செத்துப் போய்க்க வேண்டிதான்...! யாரு யாரை நினைச்சு உருகப் போறாங்க...? எல்லாம்
வெறும் மாயை...! அடுத்தடுத்த தெருவில் இருந்தாலும் தனித் தனிதான்.
பிடித்த மனிதர்கள் அவர் வாழ்ந்த ஊரின், குடியிருக்கும் பகுதி மக்கள்தான்.
அதிலும் பலருக்கு அவரைத் தெரியாது. அவருக்கும் பலரைத் தெரியாதுதான். ஆனால் அன்றாடம்
முகம் பார்க்கிறார்களே...! அது ஒன்று போதாதா?
பார்த்துப் பார்த்துப் பழகினவர்களாகி விட்டார்களே...! ஒரு வார்த்தை பரஸ்பரம்
பேசியதில்லைதான். பேசினால்தான் ஒட்டுதலா? பார்வையிலேயே
எத்தனை நேசம் வழிகிறது அங்கே?
இல்லையென்றால் அன்று குடத்தோடு கீழே விழுந்தபோது, ஓடி வந்து தூக்குவார்களா?
மனிதனின் இயல்பே உதவுவதுதான். அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்கள். சூழ்நிலைதான், வாழ்வியலின்
கஷ்டங்கள்தான் அவர்களைத் திருப்பிப் போட்டு விடுகின்றன. ஆனாலும் விழுமியங்களாய் ஆழ்
மனதில் படிந்து போன நன்னெறிகள் அவர்களை விட்டு என்றும் விலகுவதில்லை.
மாநகரத்தின் மெட்ரோ தண்ணீர்
லாரிகள் அவரின் நினைவுக்கு வந்தன. எந்தச் சந்திலிருந்து எந்த பூதம் பாயும் என்பதாய்
குறுகிய வீதிகளில் அதைப் பொருட்படுத்தாமல் கீங்...கீங்...கீங்....என்று காது கிழிய
உறாரன் அடித்துக் கொண்டு, ஒதுங்க வில்லையென்றால் சமாதிதான் என்று அலறவிட்டபடி கிடுகிடுத்துக்
கொண்டிருக்கின்றன அவைகள். அடுக்ககங்களின் தேவைகளை அவைதான் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன.
அது சுத்தமான தண்ணீரா, சுத்திகரிக்கப்பட்டதுதானா என்பதையெல்லாம் பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ
அங்கே யாருக்கும் நேரமில்லை. கிடைத்தால் போதும். வந்து சேர்ந்தால் போதும் என்று சம்ப்பைத்
திறந்து வைத்துக் கொண்டு கையில் காசோடு காத்திருக்கிறார்கள் மக்கள். கிளம்பும் சர்க்கிளில்
கூட்டம் கூட்டமாக லாரிகள். அடுத்து அடுத்து என பொத பொதவென்று லாரிக்குள் தண்ணீரை இறக்கி
நிரப்பி, ஒரு பொட்டலம் குளோரின் பாக்கெட்டைத்
தூக்கி வீசுகிறார்கள். வாயை இழுத்து மூடிக் கிளம்ப வேண்டியதுதான். நகரின் கேடுகெட்ட
சாலைகளின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி உள்ளே வீசப்பட்ட அந்த ஒரு பாக்கெட் குளோரின்
பவுடர் லாரித் தண்ணீரோடு கலந்து..கலங்கி.....அவ்வளவுதான் நீர்ச் சுத்திகரிப்பு முடிந்தது.
பார்த்துப் பழகி மனம் நொந்துதான்
போனார் சந்திரசேகரன். வந்து சில வருடங்களுக்கு மேல் ஆகியும் அந்தப் பெரு நகரம் ஏனோ
அவருக்கு ஒட்டவில்லை. ஒட்டவேயில்லை. வெளியே கோயில் குளம் என்று கிளம்பினால் டாக்சிக்குக்
காசு கொடுத்து மாளவில்லை. அதென்னவோ அந்த நகரத்திற்கு வந்தபின்னால்தான் உறவுகளெல்லாமும்
அங்கேதான் பல்வேறு இடங்களில் நிரந்தர வாசம் செய்கிறார்கள் என்பதே அவருக்குப் புலப்பட்டது.
அநியாயத்திற்கு இப்படியா விசேடங்கள் வரும்? மாற்றி மாற்றி....மாற்றி மாற்றி....கல்யாணம்,
காட்சி, வளைகாப்பு, ஜனனம், மரணம்....என்று எல்லாத்துக்கும் தகவல் வந்து கொண்டேயிருக்க....போகாமல்
முடியவில்லையே? மொய் எழுதியும், டாக்சிக்குக் கொடுத்துமே காசு பூராவும் கரைந்து போகும்
போலிருக்கிறதே...! என்னடா இது அநியாயம்? ஓய்வூதியத்தில் ஒரு ஆயிரம் கூட நான் எனக்கென்று
செலவு செய்து கொள்வதில்லையே? அத்தனையும் அநாமதேயமாய்ப் போய் கண்ணுக்குத் தெரியாமல்
என்ன மாயா ஜாலம் இது?...! நல்ல கதையப்பா...நல்ல கதை...! வெறுத்தே போனார் சந்திரசேகரன்.....
சொர்க்கமே என்றாலும்.....அது நம்மூரப் போல வருமா? அது எந்நாடு என்றாலும்
நம் நாட்டுக்கீடாகுமா?
ஆள விடு..சாமி...! என்று சொல்லிக் கிளம்பியே வந்து விட்டார். தனியாப்
போயி இருக்க முடியாதுப்பா....என்று பையன் சொல்ல....என் மக்கள் முகங்களை அன்றாடம் பார்த்தாலே
போதும். எனக்கு.....அதுவே பெரிய ஆரோக்கியமாக்கும்...என்று மறுத்து மாநகரத்துக்கு ஒரு
முழுக்குப் போட்டு விட்டார். ராஜலெட்சுமி பம்மியதை அவர் கவனிக்காமலில்லை. நீ இல்லேன்னா
என்ன...என்னால வாழ முடியாதா? இருந்து காட்டறேன் பார்....என்று நினைத்துக் கொண்டார்.
நீயும் வர்றியா? என்று கூட
ஒரு வார்த்தை அவளிடம் கேட்கவில்லை. கிட....அவ்வளவுதான்...!. நான் தனியா இருந்தா நிம்மதியாத்தான்
இருப்பேன் என்று இவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். இப்போது தேவை தனிமை. யாரும்
குறுக்கிடாத தனிமை. அமைதி. நிச்சலனமான அமைதி. அது அவர் வாழ்ந்த அந்த வீட்டில்தான் கிடைக்கும்.
அது அவருக்கு ஒரு கோயில். அவர் தாய் தந்தையரோடு வாழ்ந்து கழித்த சொர்க்கம். அங்கே அவர்
பிராணன் போனால்தான் நிம்மதி.
இதோ....அவருக்கென்று உள்ள சேடக் ஸ்கூட்டரில் இரண்டு கால்களுக்கு நடுவே
அந்தத் தண்ணீர்க் கேன். வண்டியைக் கிளப்பி விட்டார் சந்திரசேகரன். மொபெட்டும் உள்ளதுதான்.
ஆனால் காலுக்கடியில் குடம் வைக்க, கேன் வைக்க இது வசதி். இன்னும் அந்தப் பகுதியில்
தண்ணீர் தந்து கொண்டுதான் இருக்கிறார்களா தெரியாது. குடம் ஒரு ரூபாய்தானா, அதுவும்
தெரியாது. அந்த ட்ரை சைக்கிள்காரன் வந்து நின்றிருப்பானோ? அதுவும் தெரியாது. ஆனாலும்
அந்த ஜனங்களைப் பார்த்தாக வேண்டும் அவருக்கு. அவர்கள் பேசும் பாஷையைக் காது குளிரக்
கேட்டாக வேண்டும். அதில் ரெண்டு கெட்ட வார்த்தைகள்
தொற்றிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை...! அவர்களின் அந்த வெள்ளை மனசு...அன்றாடப் பாடுகளில்
உழன்றிடினும் அதனையே கருமமாய் ஏற்றுக் கொண்டு பயணப்படும் அவர்களின் வாழ்க்கை....கரித்துக்
கொண்டும், கலகலப்பாயும் நகர்த்தும் அவர்களின் அன்றாடப் பொழுதுகள்....அவைதான் எத்தனை
ரசனைக்குரியவை...எவ்வளவு மதிப்பிற்குரியவை...!!
அடடே...வாங்க சாரே....என்னா ரொம்ப நாளா ஆளைக் காணலை.....- என்றவாறே
ஒட்டு மொத்தக் குரலெடுத்து வரவேற்ற அவர்களின் அந்த அன்பில் திளைத்து கண்கள் கணத்தில்
கலங்கிப் போக, வந்தாச்சு...வந்தாச்சு...ஒரு மாசம் இங்கதான்...!”.என்று சிறு குழந்தைபோல்
உற்சாகமாய்க் கூறிக் கொண்டே வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு அவர்களை நோக்கி ஆதுரத்தோடு
நகரலானார் சந்திரசேகரன். அவரின் அந்த நாள் இனிமையாய்த் தொடங்கியிருந்தது. கொண்டாங்க
கேனை...முதல்ல பிடிங்க...என்றவாறே எட்டி வாங்கினது ஒரு பெண்.
மகளே....! என்று மனதுக்குள் ஈரம் கசிய அழைத்துக் கொண்டார் சந்திரசேகரன்.
அன்றைய
பொழுது அவருக்கு இனிமையாகத்தான் இருந்தது. தான் லோன் போட்டு, பார்த்துப் பார்த்துக்
கட்டிய வீட்டில் அன்றிரவு அத்தனை அமைதியாகத் தூங்கினார். தனிமையிலே இனிமை காண முடியாது
என்று யார் சொன்னது? அன்றைய அவரது தனிமை அவருக்கு அத்தனை இன்பம் அளித்தது. அதைத் துடைப்பதுபோல்
மறுநாள் காலை அந்தச் செய்தி அவரை வந்து தாக்கியது.
( 8 )
பிரகதீஸ்வரன் இறந்து விட்டதாக அவர்
பையன் வந்து சொல்லிப் போனான். ஊரிலிருந்து வந்ததும் முதல் அதிர்ச்சிச் செய்தியை எதிர்கொண்டார் சந்திரசேகரன். தற்செயலாகக் கிளம்பி வந்திருந்தவர், இப்போது அதற்கென்றே வந்ததுபோல் ஆகிவிட்டது. மனசு
மிகவும் பாரமாகிப் போனது. எப்படியானாலும் வந்துதான் ஆக வேண்டும். அத்தனை பழகியவர்.
நண்பர். பண்பாளர்.
எப்போ? என்று கேட்கும் முன் நகர்ந்து விட்டான். எப்பொழுதுமே ஓரிரு வார்த்தைகள் பேசக் கூடியவன்தான். அதையும் தலையைக் குனிந்து கொண்டு மெல்லிய குரலில்தான் வெளிப்படுத்துவான். என்ன? என்று நாம் திரும்பக் கேட்க வேண்டி வரும். அது போலவேதான் இப்போதும். தோன்றுவதும் மறைவதும்...!
தினமும்
இவர் வீட்டு வாசல் வழியாகப் போவார் அவர். யாரிடமேனும் காசு கேட்கப் போய்க் கொண்டிருப்பார். தான் குடும்பத்தோடு சென்னைக்கு
நகர்ந்து வருடங்கள் ஆகிவிட்ட பின்பும் அவரது நிலை மாறவில்லை என்பது சந்திரசேகரனுக்கு
மிகுந்த வருத்தத்தை அளித்தது. அவரின்
செயல் அதுவாகத்தான் இருக்கும் என்று உறுதியாகச்
சொல்ல முடியும்.சில்லரை சில்லரையாக அவருக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறார். கணக்கு வைத்துக்
கொண்டதில்லை. காரணம் திரும்பி வராது என்பதல்ல. தர வேண்டாம் என்பதே. ஆனால் கணக்கு வச்சிக்குங்கோ
என்று அவர் சொல்லத் தவறியதேயில்லை.
நீதித்
துறையில் கணக்காளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றிருந்தார். வரும் பென்ஷன் போதுமானதாக இல்லை. மூன்று பெண்கள். இரண்டு பையன்கள். எதுவும் உருப்படியில்லை. எல்லாம் வீட்டில் ஒவ்வொரு தூணாக
நின்று கொண்டிருந்தன. அதனால்
பணத்தின் தேவை அவருக்கு இருந்துகொண்டேயிருந்தது. எப்பொழுது அதுகளுக்குக் கல்யாணம்
பண்ணி, பேரன் பேத்தி எடுத்து. கண்ணால் பார்த்து, .பசங்கள் தேறி, வேலைக்குப் போயி...அவர்களுக்குக்
கல்யாணம் பண்ணி....? நாமே உதட்டைப் பிதுக்குவோம். முழி பிதுங்கிக் கொண்டிருந்தது அவருக்கு.
கணக்காளராய் வேலை பார்த்தவர் வாழ்க்கையைக் கணக்குப் பண்ணவில்லை .
நான்கு
மாடுகள் வேறு. அது பரம்பரைப் பழக்கமாம். விட
முடியாது என்றார். அவைதான் எனக்குத் துணை என்று சொன்னதுதான் மிகுதியாக யோசிக்க வைத்தது. எங்கிருந்து
தீனி போட்டுப் பராமரிக்கிறார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கும். பல சமயங்களில் என் வீட்டு வாசலில்
இருக்கும் முருங்கைக் கீரையைப் பறித்துக் கொண்டிருப்பார். என் வீடு,எதிர் வீடு என்று
கொல்லைப்புறம் சென்று புற்களைப் பிடுங்கி சேகரித்துக் கொண்டு செல்வார். காய்கறித் துகள்கள்
எதையும் குப்பைக்குப் போட்டு விட வேண்டாம் என்றும் ஒரு பையில் போட்டு வையுங்கள், வந்து
வாங்கிக் கொள்கிறேன் என்றும் சொல்வார். பழகிய சில வீடுகளில் இப்படிச் சொல்லி வைத்து
ரெகுலராக வாங்கிக் கொண்டுமிருந்தார். ஒவ்வொரு முறையும் கேட்டுக் கொண்டு வாசலில் நிற்க
வேண்டாம் என்று அவர்களாகவே பையில் போட்டதைக் கட்டி எடுத்து வாசலில் வைத்து விடுகிறார்கள்.
அமைதியாய் வந்து எடுத்துக் கொண்டு போவது அவர் வேலையாயிருந்தது. வாடகை வீடுதான். சர்வீசில் இருந்த காலங்களில் ஒரு சொந்த வீடு கூடக் கட்டிக் கொள்ளவில்லை. ஐந்து பேரையும் கொஞ்சமாவது படிக்க வைக்க வேண்டுமே என்ற எண்ணம் இருந்திருக்கலாம். அதற்கே சரியாய்ப் போயிருக்கும் இவர் ஒருவரின் வருமானம். மூச்சு விடுவதே குடும்பத்திற்காகத்தான்.
பக்கத்துக்
காலி மனையில்தான் கொட்டகை போட்டிருப்பார். யார் ஓனர் என்று தெரியாது. கேள்வியுமில்லை. அங்கே மாடுகள் கட்டப்பட்டிருக்கும். எப்பொழுது அந்தப் பக்கம் போனாலும் கொட்டடியைச் சுத்தம் செய்வதோ, சாணி அள்ளுவதோ, மாடுகளைக் குளிப்பாட்டுவதோ என்று ஏதேனும் செய்து கொண்டேயிருப்பார். வீட்டுக்குள் இருப்பதற்கு இதுவே மேல் என்பதுபோல் அந்த மாடுகளோடுதான் பொழுதைக்
கழித்தார். அங்கேதான் குடியிருக்கிறார் என்றே சொல்லலாம். சில சமயங்களில் அங்கே ஒரு கயிற்றுக் கட்டிலைப் போட்டு பட்டப் பகலில் வாயைத் திறந்து கொண்டு ஆவென்று தூங்குவதைக் கண்டிருக்கிறார். அது உடல் மீறிய அசதி. அந்தக் காட்சி மனதை மிகவும் சங்கடப்படுத்தும்.
மாடுகளைக் குளிப்பாட்டுகையில், ஒரு முறை ஒரு நீண்ட நாகம் வந்து சாணிக் கூடைக்குள் சுருண்டு
கிடந்தது. பதற்றமே இல்லை. தெருக்காரர்கள் அடிக்கக் கிளம்பிய போது, எதுக்கு...அதுவே
போயிடும் என்று சொல்லித் தடுத்து விட்டார். நான் அடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
அது இடத்துல நாம வந்து குடியிருக்கோம். அது வராம என்ன செய்யும்? என்று கேட்டார். நாம
தொந்தரவு செய்யாதவரைக்கும் அதுவும் நம்மை ஏதும் செய்யாது என்றார்.
இத்தனைக்கும் பக்கத்தில் ஒரு கண்மாய் இருக்கிறதுதான். அருகிலுள்ள ஒட்டுக்
கிராமத்தில் இருந்து மாடு வைத்திருப்பவர்கள்
குளிப்பாட்ட தினமும் எங்கள் தெரு வழியாகத்தான் ஓட்டிக் கொண்டு போவார்கள். ஒன்று ரெண்டு
என்று கிடையாது. நாலு அஞ்சு என்று படையாய்ப் போய்க் கொண்டிருக்கும். அந்தக் கண்மாயில்
தண்ணீர் தேங்கி நிற்கும்வரையில்தான் எங்களுக்கு ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர். அங்கு
வற்றினால் இங்கும் கீழே போய்விடும்.
என்றுமே சாணிக்குப்
பஞ்சம் வந்ததில்லை. அது என்ன கணக்கோ...கண்மாய்க்குச் செல்லும் மாடுகள் சரியாக எங்கள்
வீட்டு வாசல் வரும்போதுதான் பொத்தென்று சாணி போடும். சாணி கலக்கி யார் இன்று வாசல்
தெளிக்கிறார்கள்? என்று கேட்காதீர்கள். என்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள் என்று ஒரு
கேள்வி வந்து விழும். ராஜலெட்சுமி இருக்கிறாளே? வீதியில் கேட்பாரின்றிக் கிடக்கும்
அதை வீணாக்க அவளுக்கு மனசே வராது. ஆனால் அதை அள்ள வேண்டியவன் நானாயிற்றே? அதுபற்றி
அவளுக்கு என்ன கவலை? எல்லாம் Do what I say...தான். அந்தத் தெரு முழுவதும் சாணி
அள்ளியிருக்கிறேன் நான். என்ன சார்...எதுக்கு சார்...? என்று கேட்டவர்கள் இருக்கிறார்கள்.
சாணியின் உபயோகமே அறியாத தலைமுறை கடந்த சமூகம்.
சப்புச் சப்பென்று வட்டமாய்த் தட்டிக் கையில் லாவகமாய் எடுத்து சுவற்றை நோக்கி
எறிந்தால், வரிசை மாறாமல் போய் பச்சென்று ஒட்டிக் கொள்ளுமே...அந்த எருவாட்டியை அறிவார்களா
இவர்கள்?
சாணியை மாட்டின் கழிவு
என்று நினைத்து அருவறுக்கும் தலைமுறை. அதை மருந்தாய் நாம் பார்த்தோம். இறைவனுக்கான
ஓமகுண்டப் பூஜா வஸ்து. கடைசிக் காரியங்களுக்கு கண்யமாய்ப் பயன்படும் அதி முக்கியப்
பொருள். அதை வைத்துத்தான் ஒரு முறை முகத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி
கடைசி எருவை முகத்தின் மேல் வைப்பார்கள். எதைச்
சொன்னாலும் பெரிதாய் எடுத்துக் கொள்ளாத இளைய தலைமுறை. காசு கொடுத்தாக் கிடைக்கப் போவுது
அதானே...என்ன பெரிய்ய்ய.....? முடிஞ்சு போச்சு...!! காசால் உலகத்தையே வாங்க முடியும்
அவர்களால்...!.
இதைச் சொல்லும்போது
கிராமத்தில் தினசரி அக்ரஉறாரத்தையும், பிற தெருக்களையும் தவறாது சுற்றி வந்து கூடையில்
சாணி பொறுக்கிப் போகும் செவ்வந்தி ஞாபகம் வருகிறது இவருக்கு. அவள் மாட்டுக் கொட்டகையில்
கிடைக்காத சாணியா, எருவா? அதுதான் அவள் பிழைப்பே எனும்போது அந்த மூலப் பொருள் எங்கு
கிடைத்தாலும், வீணாகாமல் காப்பதுதானே முறை. அது அவளுக்கு வயிற்றுப் பாடு சம்பந்தப்பட்டது.
பத்துப் பன்னெண்டு மாடுகளை வைத்து மேய்த்துக் கொண்டிருந்தாள்
செவ்வந்தி. எந்நேரமும் மாட்டோடுதான் அவள் வாசம். அந்தப் பக்கம் போனாலே அந்த மாட்டுக்
கொட்டகை வாடை நம் மூக்கைத் துளைக்கும். உள்ளே தலையைக் காட்டினால் ஏதேனும் மாடு சாணி
போட்டுக் கொண்டிருக்கும்...ஏதேனும் ரெண்டு சொட சொடவென்று மூத்திரம் பெய்து கொண்டிருக்கும்.
கன்றுக் குட்டிகள் துள்ளித் துள்ளி உள்ளுக்குள்ளேயே அதகளம் பண்ணிக் கொண்டிருக்கும்.
ம்மா...ஆஆஆ.....ம்மா...ஆஆஆ என்று சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். எல்லாவற்றையும்
ஏய்...ஏய்...என்று சும்மா அதட்டிக் கொண்டே ஒரே ஒரு அறையும், திண்ணையும் அமைந்த ரொம்ப
சுமாரான இடத்தில் நேர்த்தியாய் ஒரு பழைய பாயை விரித்து அமர்ந்து, சுவாரஸ்யமாய் வெற்றிலை
போட்டுக் கொண்டிருப்பாள் செவ்வந்தி. அல்லது படுத்து உறங்கிக் கொண்டிருப்பாள். அவளுக்கு
மாடுகள் காவலா அல்லது மாடுகளுக்கு அவள் காவலா? கொட்டகை வாசல் கதவு எந்நேரமும் திறந்துதானே
கிடக்கிறது! என்ன பயம்...? நம்ம ஊரு...! எல்லாம் நம் சனம்...!
ரெண்டே ரெண்டு வெற்றிலை,
பாக்கு, ரெண்டு பழம்...அத்தோடு ரெண்டு ரூபாய்...இதுதான் அவள் பிரசவக் கூலி. எல்லாம்
ரெண்டு ரெண்டுதான் கணக்கு. எங்கள் வீட்டில் நாங்கள் அறுவரும் அவள் பிரசவம் பார்த்துத்தான்
பிறந்தோம். சொல்லிவிட்டவுடன் ஓடோடி வந்து விடுவாள் செவ்வந்தி. தான் பெற்றெடுத்த பெண்ணுக்குப்
பிரசவம் பார்ப்பதுபோல் கண்ணும் கருத்துமாய்ப் பார்ப்பாள். நாங்கள் அவள் கைகளில்தான்
முதலில் தவழ்ந்தோம். குழந்தையைக் குளிப்பாட்டி தாயின் கையில் ஒப்புவித்து விட்டுக்
கிளம்புவாள். அப்போது கண் மூடி தன் குலதெய்வத்தை வேண்டிக் கொள்வாள். அந்த மனமுவந்த
வேண்டுதலுக்கு உலகத்தில் வேறு ஈடு இணையே இல்லை. எங்கள் பெரியம்மா செவ்வந்திதான். என்
ராசா....இங்க வாடே...என்று அவள் தன் கைகளை விரித்து எங்களை வாரி அணைத்துக் கொஞ்சிய
நாட்கள் எங்கள் நெஞ்சில் பதிந்த சுவடுகள். மனித்தப் பிறவிகள் தெய்வமாய் வலம் வந்த நாட்கள்
அவை.
பிரகதீஸ்வரனுக்கு மானசீகமான
அஞ்சலியாக எவ்வளவு சொல்ல வேண்டியிருக்கிறது? எவ்வளவு நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது?
எத்தனையோ மனிதர்கள் நம்மோடு வாழ்ந்து மறைந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒருவர் முன்னே…ஒருவர்
பின்னே. நாமும் ஒரு நாள் காணாமல் போவோம். நம்மைப் பற்றியும் நினைவு கூறுவார்களா? அதற்கு
ஆத்மார்த்தமான நண்பர்கள் நமக்கு இருக்கிறார்களா? ஒரு கணமேனும் நம்மை எண்ணி மறுகுவதுபோல்
ஏதேனும் நற்காரியம் செய்திருக்கிறோமா? மற்றவர்களுக்கு உதவியாய் இருந்திருக்கிறோமா?
இக்கட்டான காலங்களில் உறுதுணையாய் நின்றிருக்கிறோமா? – என்னவெல்லாம் நினைத்துப் பார்க்கிறது
இந்த மனது? பிரகதீஸ்வரனையே சுற்றி வருகிறது இன்றைய மனநிலை.
தினமும் காலையில் நடைப் பயிற்சிக்குக்
கிளம்பி விடுவார் பிரகதீஸ்வரன். என் வீட்டு வழியாகத்தான் போவார். போகும்போது விட்டு
விடுவேன். திரும்புகையில் கண்டிப்பாகக் கண்ணில் பட்டுவிடுவார். அந்த நேரம் தற்செயலாய்
நான் அறையிலிருந்து வெளியே வருவதும், அவர் திரும்பிப் பார்ப்பதும் நிகழ்ந்து விடும்.
வாய் திறந்து எதுவும் கேட்டதில்லை. ஆனால் பார்வை
கேட்கும். அந்தப் புன்னகை அர்த்தப்படுத்தும். அதற்கு மேலும் கண்டு கொள்ளாமல் இருந்தால்
அது தன்மை ஆகாது என்று தலையை ஆட்டி வாங்க...என்று சொல்லி விடுவேன். அந்த வார்த்தையை
அவர் மனம் எதிர்பார்க்கும்.
ரொம்பவும் உரிமை எடுத்துக்
கொண்டு அவராகவே உள்ளே நுழைந்து விடுபவர் அல்ல. அதுதானே கௌரவமும் கூட. ஆனாலும் தன்னைப்
பொறுத்தவரை அவர் தயங்க வேண்டியதில்லை என்பது இவர் எண்ணம். ராஜலெட்சுமிக்காக ஒரு தயக்கம் அவர் மனதில் இருக்குமோ என்னவோ?. அந்தத்
தயக்கம் இவருக்கும் உண்டுதான். ஏனெனில் வழக்கமாய் வருபவர்தானே என்று அவள்பாட்டுக்கு
உள்ளே வேலையாய் இருப்பாள். அதைப்போய் குத்தமாய் எடுத்துக் கொள்ள முடியுமா? அப்படியே
வந்தாலும்…
சில சமயங்களில் பேசத்
தெரியாமல் பேசி விடுவாள். ஒன்றைச் சொல்வதற்கு முன் ஒரு நிமிஷம் சொல்லப்போறதை நினைச்சுப்
பாரு...சொல்லலாமா வேண்டாமான்னு அப்பத் தோணும்...அப்டி கட் ஷார்ட் பண்ணினா நிறைய மனத்
தாங்கல்களைத் தவிர்க்கலாம் என்று எத்தனையோ முறை அவளிடம் சொல்லியிருக்கிறார். காதில் வாங்கினால்தானே? பெண்கள்
அவர்கள் கருத்தைத்தான் முதன்மையாக நினைப்பார்கள் எப்போதும்.
ஆமாம்...ரொம்ப அனுபவப்பட்ட
மாதிரிதான்...என்று மோவாயில் இடித்துக் கொள்வாள். நீயும் சராசரிதான் என்று சொல்லிவிட்டால்
கோபம் பொத்துக் கொண்டு வந்து விடும். பேப்பரை தினசரி வரி விடாமப் படிச்சிட்டா எல்லாம்
தெரிஞ்சவன்னு அர்த்தமாயிடுமா? உலக அனுபவம்ங்கிறது வேறே...மனிதர்களைப் படிக்கிறதுங்கிறது
ஒரு தனி பயிற்சியாக்கும் என்பேன். நீங்க படிச்சிருக்கேளோல்லியோ...அது போறும்...என்று
அப்போதும் கிண்டலடிப்பாள்.
சிலரை சிலவற்றில்,
சிலவற்றால் எப்போதும் எக்காலத்தும் மாற்றவே
முடியாது. சாகும்வரை அப்படியேதான் இருப்பார்கள். அதைத்தான் காரெக்டர் என்கிறார்கள்..
மிஞ்சிப் போனால் ஒரு
வாய் காப்பி சாப்பிடுவார். உங்க வீட்டுக் காப்பி ரொம்ப நன்னாயிருக்கும்...என்று தன்னை
மறந்து சொல்லியிருக்கிறார். வீட்டுக்குள் வந்து விட்டால் அந்த எண்ணம் முட்டத்தானே செய்யும்?
அன்று தனது செகன்ட் காஃபியைக் கட் பண்ணிக் கொள்வார்.
இப்டி ஆளாளுக்கு போட்டு
நீட்டிண்டிருந்தா உறை குத்தறதுக்குப் பால் வேண்டாமா? என்று ஒரு முறை சொல்லியிருக்கிறாள்.
அவ ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி...!
நீங்க...! என்று கேட்டுக்
கொண்டே காப்பியை ருசிப்பார். இவருக்கு வராது என்று அவருக்குத் தெரியும். கண்டு கொள்ள
மாட்டார்.
மனுஷன் சாகும்வரை இந்த
நாக்கு ருசி போகாது. உப்பு, புளிப்பு, இனிப்பு, காரம்- கூடுதல் குறைச்சல் இவைகளைத்
துல்லியமாய்க் கண்டு பிடித்து விடும். தின்னு தின்னு தீர்க்கிறார்கள் மனிதர்கள். வாழ்நாள்
பூராவும் ஒரு மனிதன் சாப்பிட்டது மொத்தம் எவ்வளவு இருக்கும்? என்று அகலக் கையை விரித்து மலைபோல் காண்பிப்பேன். எழுபது எண்பது வயதுவரை தின்ன
வேண்டுமே...! உலகமே ஒரு உணவுக் கூடம். எங்கு பார்த்தாலும் உணவு தயாராகிக் கொண்டேயிருக்கிறது.
இராப் பகலாய். வித விதமான உணவுகள். மனிதர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்து
ஆளாளுக்கு, மாறி மாறி வேண்டும் அளவுக்குச்
சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அப்போதைக்கு திருப்தி கொள்கிறார்கள். அவ்வளவே...! போதும் என்று சொல்லக் கூடிய ஒன்று உணவு
மட்டும்தான். வேறு எதையும் இந்த உலகில் மனிதர்கள் போதும் என்றே சொல்வதில்லை.
ஒரு அக்கௌன்டண்ட் போன்றே
இருக்க மாட்டார். ரிடையர்ட் ஆயாச்சு...அப்புறம் என்ன வேண்டிக்கிடக்கு? என்பதே அவர்
சித்தாந்தம். சர்வீஸ்ல இருந்த காலத்துலயே அதுக்குப் பொருந்தாமத்தான் நான் உட்கார்ந்திருந்தேன்...வயித்துப்
பாட்டுக்காக..! இப்பயும் அப்டியே விறைப்பா இருன்னா எவனால முடியும்...என்பார். பென்ஷனர்னா
ரிடையர்ட் ஆன ஆபீசரும், பியூனும், ஏன் வாட்ச்மேனுமே ஒண்ணுதான்...இதிலே மேலென்ன கீழென்ன....?
அம்புட்டுப் பேரும் ஓய்வூதியதாரர்தானே? பியூனுக்கும் பென்ஷன் எனக்கும் பென்ஷனா? ன்னு
எவனாச்சும் கௌரவமா முறுக்கிக்க முடியுமா? எனக்குக் கொடுக்கிற பென்ஷனுக்கு வேறே பெயர்
வையுங்க என்று கேட்க முடியுமா? எங்க வேண்டாம்னு
சொல்லச் சொல்லு பார்ப்போம் யாரையாச்சும்...!..சர்வீஸ்ல இருக்கிற போது என்னா ஆட்டம்
ஆடுறாங்க...? இப்பச் சொல்லட்டுமே...? என்று தன் எளிமைக்கு விரிவான விளக்கம் கொடுப்பார்.
.பஸ்-ஸ்டான்டில் உள்ள
டீக்கடையில் அவரைப் பார்க்கலாம். ஓரமாய் இருக்கும் குத்துக்கல்லில் அமர்ந்திருப்பார்.
அது அவருக்கென்றே அமைந்த கல். அதில் வேறு யாரும் உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. யாராச்சும்
டீ வாங்கித் தர மாட்டார்களா? என்பது போன்று இருக்கும் அவர் பார்வை. காலையும் மாலையும் பேப்பர் படித்தாக வேண்டுமே...!
ஓசில பேப்பர் மட்டும் படிக்க வந்திடுறாரு அய்யரு....ஒரு நாளைக்காச்சும் துட்டு கொடுத்து
டீ வாங்கி சாப்டிருக்காரா...? சிலர் சொல்வதுண்டுதான். அதெல்லாம் அவர் காதில் விழுந்திருக்கலாம்.
விழாமலும் போயிருக்கலாம். ஆனால் யாரேனும் அவருக்கு டீ வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.
அது அவர் அதிர்ஷ்டம். அவ்வளவு நேரம் அவர் படிக்கும் படிப்பைப் பார்த்தால் கடைக்காரனுக்கே
இரக்கம் மேலிட்டு, இந்தாங்க...எம்புட்டு நேரம் வறட்டு வறட்டுன்னு இந்தப் பாழாப்போன
பேப்பரப் படிப்பீங்க. நீங்க படிச்சு முடிக்கிறதுக்குள்ள ஆயிரம் விஷயம் மாறிப் போயிடும்...பிடிங்க...தொண்டையை
நனைச்சிக்கிங்க....என்று ஒரு கிளாஸ் தேநீரை நீட்டி அவரை ஆற்றி விட்டாலும் போச்சு...!
அதெல்லாம் மனுசனோட ராசி....! பிரகதீஸ்வரனைத் தெரியாத ஆள் கிடையாது அந்த வட்டாரத்தில்.
சாமீ...! என்று குரல் கொடுத்துக்கொண்டே ஆட்கள் நகர்ந்து கொண்டேயிருக்கும். இன்னும்
அந்தப் பழமை மாறாத தன்மைதான் அந்த மக்களின் பெருமை...! ஊருக்கு வந்தால்தான் இந்த நினைவுகளெல்லாம்
பெருக்கெடுக்கிறது.
வீட்டில் இருந்தால்
தாங்க முடியாத பிக்கல் பிடுங்கல்...அதற்கு “வெளி“யே மேல்..(நானும் மேல்...நீயும் மேல்...!)
..நாலு மனுஷாளைப் பார்த்த திருப்தியாவது மிஞ்சும்....என்றுதான் மனுஷன் டேக்கா கொடுத்து
விடுகிறாரோ என்று தோன்றும்.மாடுகளுக்கு வேண்டியவைகளை எல்லாம் செய்து விட்டுத்தான் புறப்படுவார்.
அவைபாட்டுக்கு அசைபோட்டுக் கொண்டு படுத்திருக்கும். வீட்டுக்குள் இருந்து எட்டிக்கூடப்
பார்க்க மாட்டார்கள். அவர் பசங்கள் ஒரு நாளும் அந்த மாடுகளுக்குப் பக்கத்தில் நின்று
நான் பார்த்ததில்லை. அந்த மாமி சாணி எடுக்க மட்டும் தலையைக் காட்டுவார்கள். மாடுகள்
இருக்கும் வீட்டில் வீட்டுப் பெண்மணிகள் தங்கள் பசுக்களை அக்கறையாய்ப் பராமரிப்பதையும்,
தெய்வமாய் வணங்குவதையும், தீனி வைப்பதையும், மாட்டுக் கொட்டகையைச் சுத்தம் செய்ய வைத்து
கார்வார் பண்ணுவதையும் பார்த்திருக்கலாம். அப்படியான எந்த அடையாளமும் பிரகதீஸ்வரனின்
மனைவியிடம் பார்த்ததில்லை.
உடம்பு முடியாதவராகவே
அவர் மனைவியை நினைக்கத் தோன்றும். அதுபோல் முகமலர்ந்து பேசியும் காண முடியாது. என்றாவது
வீட்டுக்குள் தலை நுழைக்கும் சமயம் வாய்த்தால், உறாலின் இருட்டான பகுதியில் உட்கார்ந்திருப்பது
தெரியும். நிழலாய்த்தான் தோன்றுவார்கள். அந்தப் பெண்களும் ஆளுக்கொரு மூலையில் தென்படுவார்கள்.
ஏனிப்படி வீடு சூமடைந்து கிடக்கிறது என்ற எண்ணம் வரும். ஒரு சுமுக நிலையிருந்து என்றும்
அவர் வீட்டைக் காண முடிந்ததில்லை. இயல்பான இருப்பே அப்படித்தானோ என்று நினைக்க வேண்டி
வரும். ஒருவருக்கொருவர் பேசப் பிடிக்காமல் உம்மணாம்மூஞ்சியாய் இருந்து கழிக்கிறார்களோ?
எங்கள் பகுதி குட்டி
பஸ்-ஸ்டான்டில் புதிதாகத் தனியார் பால் டெப்போ
ஒன்று வந்திருந்தது. அதில் எப்படி இடம் பிடித்தாரோ தெரியாது. அங்கு உட்கார்ந்து பால்
விற்க ஆரம்பித்திருந்தார் பிரகதீஸ்வரன். அந்தக் கடைப் பையன் அவரை வைத்து விட்டு அங்கே
இங்கே என்று வெளியே பால் போடப் போய் விடுவான். ஏஜென்ஸி எடுத்திருந்தவனுக்கு இப்படி
ஒருத்தர் உபகாரமாய் அமைவார் என்று எதிர்பார்த்திருக்கவே மாட்டான். அவனுக்குப் பல ஜோலி.
இவரை உபயோகப்படுத்தி, தன் வியாபாரத்தின் கிளைகளை விரித்துக் கொண்டிருந்தான் அவன். ஒரு
வேளை அதிலேயே அவர் திருப்தியடைந்தாரோ என்னவோ...! தன் பசங்களின் உபயோகமின்மை குறித்த
தாக்கம் இருக்கலாம். பொறுப்பாய் செயல்படுபவனைக் கண்ட திருப்தி.
மூணு பாக்கெட்டுக்கு
மேலதான் பை கொடுக்க முடியும். ஒரு பாக்கெட்டுக்கெல்லாம் கிடையாது...என்று யாரிடமோ சொல்லிக்
கொண்டிருந்தார். அப்படிச் சொல்லி சொல்லி நிறையப் பைகளை மிச்சம் பண்ணிக் கொடுத்திருந்தார்
கடைக்கு. அதுபோல் கரெக்டாகச் சில்லரை கொண்டு வரணும்...என்றும் கண்டிஷன் போட்டிருந்தார்.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவருக்கு ஒத்துழைத்தார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த
அளவுடைய பால் பாக்கெட் அதிகமாகப் போகிறது என்று கணித்து அதை எண்ணிக்கையைக் கூட்டி இறக்குமதி
செய்ய வைத்தார். மற்றதை அதனதன் அளவுப்படி குறைத்தார். பையனும் அவரிஷ்டப்படி விட்டு
விட்டதாகத்தான் தோன்றியது. மதிய இடைவேளை உண்டு...அதைக் கூட அந்தப் பையனின் முன்னேற்றத்திற்காகத்
தத்தம் செய்திருந்தார் பிரகதீஸ்வரன். உழைப்பே உயர்வு என்று போட்டு, பக்கத்தில் கடன் இல்லை என்றும் சுவற்றில் எழுதி
வைத்தார்.
டிபன் பாக்ஸில் கொண்டு
வந்து அங்கேயே சாப்பிட்டுக் கொண்டார். அந்த நேரம் ஷட்டரைப் பாதி இறக்கி விட்டிருப்பார். உட்காருவதும் தெரியாது....கை கழுவுவதும் தெரியாது.....அப்டிங்கிறதுக்குள்
அள்ளிப் போட்டுக் கொண்டு எழுந்து விடுவார். வெறும் தயிர் சாதம்தான். ஒரு பச்ச மிளகாய்.
மதியத்திற்கு மேல் மறுநாளுக்கான தேதி போட்டு பால் டப்புகள் வந்து இறங்க ஆரம்பிக்கும்.
அத்தனையையும் பொறுமையாய் வாங்கி எண்ணி, ஒழுகும்
பாக்கெட்டுகளைத் திருப்பி, பதிலுக்கு வேறு வாங்கி கணக்கைத் துல்லியமாய் வைத்து விடுவார்.
அந்தப் பையன் வந்ததும் இந்தா பிடி என ஒப்புவித்துவிட்டு வீடு திரும்புவார். போகும்போது
ஒரு பால் பாக்கெட் எப்போதும் அவர் கையில் இருக்கும். அது ஓசியோ பாஸியோ தெரியாது. அது
விலையில்லா பால்...!
சும்மாத் தருவானா..நல்லாத்
தந்தானே....! .துட்டு சார்...துட்டு....-என்று
யாரிடமோ வீச்சும் விறைப்புமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார். எதுவானால் நமக்கென்ன?
என்று நினைப்பதற்குள் பிரகதீஸ்வரனின் பிழைப்பு மாறிப் போயிருந்தது.
இந்த மனுஷன் எதுக்கு
இப்டி நாயா பேயா அலையறார்? ஒரு எடத்துல அமுந்து இருக்க மாட்டார் போல்ருக்கே? என்று
தோன்றியது எனக்கு. மாடுகளைக் கவனிப்பது குறைஞ்சு போச்சா? என்றும் தோன்றியது. வீட்டு
வரி கட்டுவதற்கு பஞ்சாயத்து ஆபீஸ் போயிருந்தபோது அங்கே இவரைக் கண்டார். கையில் ஏதோ
பில்டிங் வரைபடத்தை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தார். கூடவே ஒருவர் இருந்தார்.
தவறு தவறு...அவர் கூடத்தான் இவர் இருந்தார். அதுதான் சரி. என்னென்ன நடைமுறைகள் என்பதைத்
துல்லியமாய்த் தெரிந்து கொண்டு விட வேணும் என்கிற துடிப்பில் இருந்தது போலிருந்தது
அவரது சுறுசுறுப்பு. கேட்பவர்களுக்கு விளக்கிச் சொன்னவர் இவர்தான். அதற்காகத்தான் அவர்
இவரை வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.
ஆர்வ மிகுதியில், என்ன
சார் இந்தப் பக்கம்? என்றபோது....சொல்றேன்...சொல்றேன்...என்று கையமர்த்தினார். சாருக்கு
ப்ளாட் எதுவும் வேணுமான்னு கேளுங்க சாமி....ஆளுகளப் பிடிங்க...என்றார் அந்த இன்னொருவர்.
அவரு சொந்த வீடு கட்டில்ல
நம்ம ஏரியாவுல குடியிருக்காரு....அவருக்கு எதுக்கு...? என்றார் இவர்.
அவருக்கில்லாட்டி என்ன...அண்ணன்
தங்கச்சி, மாப்ளன்னு யாருக்காச்சும் வாங்கிக் கொடுப்பாருல்ல....கேட்டாத்தான தெரியும்...விடப்படாது....யார்ட்ட
என்ன யோசனை இருக்கும்னு நமக்குத் தெரியாதுல்ல....கேன்வாஸ்ங்கிறது பிறகு எப்டி? என்று
அவர் சொல்லவும்....சாயங்காலமா வீட்டுக்கு வர்றேன். என்றார் பிரகதீஸ்வரன். அது அவரின்
வாயை அடைப்பதற்காக என்று புரிந்தது. இவரே அந்த நேரத்தில் சென்னைக்கு இடம்பெயர யோசித்துக்
கொண்டிருந்த பொழுது அது. இம்புட்டு சாமான்களையும் என்ன செய்வது? வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்,
டி.வி., உறீட்டர் என்று அப்படியே…வீட்டுக் கதவைத் திறந்தால் உடனடியாகப் புழங்குவதற்கு
ஏதுவாகத்தான் இன்றுவரை வீட்டை வைத்துக் கொண்டிருக்கிறார். ராஜலெட்சுமி வருகிறாளோ இல்லையோ…இவர்
ஷன்டிங் அடிக்கிறாரே….?
சற்று தீவிரமாகச் சொல்லப்போனால்
ஏதேனும் இடம் வாங்கும் யோசனையில் இருந்தார்
என்றுதான் சொல்ல வேண்டும். தங்கச்சி மாப்பிள்ளை வேறு எனக்கும் வேணும் என்று சொல்லியிருந்தார்.
இவர் குடியிருந்த அந்தப் பகுதியில் இப்போதெல்லாம் வாங்க முடியாது. விலை தாறுமாறாய்
ஏறியாகி விட்டது. பக்கத்தில் கலை நகர் என்று ஒரு பகுதி உருவாகிக் கொண்டிருந்தது. விறு
விறு என்று அங்கு ப்ளாட்டுகள் விற்றுத் தீர்ந்து கொண்டிருந்தன. அந்தப் பகுதியில்தான்
இவர்களும் ப்ளாட்டுகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதற்குத்தான் பிளானை வைத்துக்
கொண்டு அலைகிறார்கள் என்றும் பிறகுதான் தெரிய வந்தது.
போய்ப் பார்த்தபோது சீட்டுக் கட்டுபோல் வெறும் மூணு மூணு சென்ட்களாகத்தான்
இருந்தன. வெறுமே வாங்கிப்போட்டு நாளை விலை ஏறிய பின்னால் விற்கத்தான் உதவும் அது. வீடு
கட்டுவதென்றால் சுற்றிலும் செடி கொடி மரங்களுக்கு இடம் விட்டு, முன் பக்கம் கார் பார்க்கிங்
இடம் செய்து, கொஞ்சம் பார்வையாய்க் கட்ட வேண்டும் என்கிற எண்ணமிருந்தது . இந்த வீட்டில்
செய்யாது விட்டவற்றை, நிறைவேறாத கனவுகளை, புதிய வீட்டில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்
என்ற ஆசையிருந்தது. யாருமே தான் நினைத்தபடிக்கு, தன் ஆசைக்கு வீடு கட்டியிருக்க முடியாதுதான். எப்படியும் கட்ட
ஆரம்பித்த பின்பு சில மாற்றங்கள் வந்து போகும். பில்டரோடு சண்டை போட முடியாது. வேலை
நின்று போகும். மனத் தாங்கல் வந்து விடும். அது தனது கனவு வீட்டில் நிகழக் கூடாது என்பதில்
தீர்மானமாய் இருந்தார்.
நாம் ஒன்று நினைக்கிறோம்.
தெய்வம் ஒன்று நினைக்கிறது. எடம் கிடைக்காது உங்களுக்கு. முதல்ல இடத்தைக் கேட்ச் பண்ணப்
பாருங்க...அப்புறம் இந்தச் சுற்று வட்டாரத்துல எங்கயுமே இன்னை தேதிக்கு ப்ளாட் கிடையாதாக்கும்
என்று நெருக்கினார் பிரகதீஸ்வரன். அந்த முயற்சியின்போதுதான் ராஜலெட்சுமி அவரோடு கொஞ்சம்
பேச ஆரம்பித்தாள்.
மும்மூணு சென்ட் டோக்
டோக்கா இருக்கு...நமக்கு ஏத்தாப்ல....அஞ்சரை சென்டா தேடினா பைசாவுக்கு எங்க போறது?
இருக்கிற சேவிங்ஸ்ல வாங்கப் பாருங்க...பாங்க்ல டெபாசிட்டுக்கு வட்டி கம்மியாப் போச்சு.
அதுக்கு இடத்தையாச்சும் வாங்கிப் போடலாம். இன்னும் எத்தனை வீடு கட்டியாகணும்? இந்த
ஒண்ணு போறாதா? நம்மகிட்டே இருக்கிற சேமிப்புக்கு மூணு சென்ட்தான் சரி வரும். அகலக்கால்
வச்சு எதிலயாச்சும் மாட்டிக்காதீங்க உங்க தங்கை மாப்பிள்ளையும் அப்டித்தான் விரும்புவார்.
வேணும்னா பாருங்க...சரின்னு சொல்றாரா இல்லையான்னு.....! என்று பொழிந்து தள்ளினாள்.
என் வார்த்தையை மீறினா அப்புறம் நான் நானில்லை....அதுதான்...அவள் நிலை.
அதற்கு மேல் அப்பீல்
ஏது? பிரகதீஸ்வரனும், அவரது ஏஜென்டும் வந்து நிற்க ஆரம்பித்து விட்டார்கள். சத்தமில்லாமல்
செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியத்தை ஊரைக் கூட்டித் தேர் இழுத்தாற்போல் ஆக்கியாச்சு.
என்ன விஷயம் சார்...? என்று எதிர்வீட்டு சாம்பசிவம் வேறு முகத்தை நீட்டினார். விஷயம்
அவருக்கும் தெரியவர, உடனே கிளம்பிப் போனவர் அவர்தான். போய்விட்டு வந்து, அதென்ன சார்...ரோட்டுலேர்ந்து
உள்ளே போய்க்கிட்டேயிருக்கு...! ரெண்டு மூணு
பர்லாங் போகுது சார்..டூ வீலர் இல்லாமப் போறது வர்றது ஆகாது....எனக்குத்தான் வண்டியே
ஓட்டத் தெரியாதே...! பஸ்லேர்ந்து இறங்கி எம்புட்டுத் தூரம் நடக்குறது? நமக்காகாது......ஆனா
ஒண்ணு பின் பக்கமா மெயின்ரோடு வந்தீங்கன்னா
அப்டியே நம்ம வீட்டுக்கு வந்திடலாம். அது ஒண்ணுதான் இன்னைக்குத் தேதிக்கு வசதி என்றார்.
தங்கை மாப்பிள்ளை வந்தார்...போய்ப் பார்த்தார்...சரி என்று ஒப்புக் கொடுத்து விட்டார்.
எதிரெதிர் ப்ளாட்டுகள் மூன்று சென்டுகளாக அமைந்தன. வாங்கிப் பணம் கொடுத்து பத்திரம்
பதிந்து எல்லாம் ஆயிற்று. அதை அவள் பேருக்குத்தான் பதிந்தார். அதில் அவளுக்கு ரொம்ப
மகிழ்ச்சி. ஒரு இடத்தின் அதிபதி அவள்.
மனிதனுக்குத் தேவை
ஆறடி. இந்த மண்ணிலிருந்து எடுத்ததெல்லாம் இந்த மண்ணுக்கே...இன்று உனது நாளை வேறொருவருடையது.
நாளை மறுநாள் இன்னொருவருடையது.....மனதுக்குள்
இந்த நினைப்பு வந்தவனுக்கு எதுவுமே பெரிசில்லை..
இதோ பிரகதீஸ்வரன் போய் விட்டார்.
நாளை என்பது நமக்கு ஏது? இன்றிருப்பார் நாளையில்லை. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமையுடைத்து இவ்வுலகு....! தலைமாட்டில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. நிச்சலனமாய்
இருந்தது அவர் முகம். தப்பித்து விட்டேன் பார்த்தீர்களா? என்று கண்களை மூடிக் கொண்டிருக்கிறாரோ?
சுற்றிலும் மூன்று பெண்கள் மூலைக்கு ஒருவராய்.
அருகிலே சோகமே உருவாய் அவரின் இரண்டு மகன்கள். இனி அந்தக் குடும்பம் எப்படி
நிமிரப் போகிறது? –
மூத்த பையனை வெளியே
அழைத்து வந்து அவன் கையில் அந்தப் பணத்தை திணித்தார். இது உங்க அப்பாவுக்கு நான் கொடுக்க
வேண்டிய கமிஷன் தொகை. ரெண்டு ப்ளாட் வாங்கினதுக்கு.தெரிஞ்சிதா? அதோட ஒரு மூவாயிரம் சேர்த்து வச்சிருக்கேன்....கடைசிக்
காரியங்களைச் சுருக்கமா முடிக்கப் பார்...பெரிய எடுப்பு வேண்டாம்...தெரிஞ்சிதா? நான் ஒருத்தரைச் சொல்லி வரச் சொல்றேன்...அவர் கொஞ்சமாத்தான்
கேட்பார் காரியங்களுக்கு. குறைச்சு முடிச்சுக் கொடுப்பார்....சரியா?
சரி என்று தலையாட்டியது
போல்தான் இருந்தது. அதுநாள் வரை அவர்களோடு
அதிகம் பேசியதில்லை. ஆதலால் அவர்களின் போக்கு எப்படி என்பதையும் அறிவதற்கில்லை.
ஆனாலும் கடைசிக் காரியங்களுக்கு காசு பஞ்சாய்ப் பறக்கும். அதனால்தான் எச்சரித்தார்.
கமிஷன் கொடுக்காமலேயே விட்டுப்போனதில் ராஜலெட்சுமிக்கு
சந்தோஷம். ஆனால் இப்போது அவளுக்கு நான் கணக்குச் சொல்லியாக வேண்டும். இந்த நேரத்திலும்
உதவி செய்யாவிட்டால் எப்படி?
அப்படிச் சொல்ல முடியாது.
என் மனதை அலைக்கழித்த விஷயம் என்று ஒன்று சொன்னேனே? அதற்கான பணம் அவருக்குத்தானே போய்ச்
சேர்ந்தது? அது நானாக இழுத்து விட்டுக் கொண்டது. வேலியோடு போன ஓணான். மடியில் கட்டிக்
கொண்டது நான்.
இங்க பாருங்க…கருப்பணன்….வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு வீட்டுக்கு வீடு இவ்வளவு பணம்னு வாங்கி நீங்கதானே விநியோகம் பண்ணிட்டு வர்றீங்க…அந்த விஷயம் எனக்கும் தெரியும். நான் வாங்க மாட்டேன்தான். எங்க வீட்லயும் அப்படித்தான். ஆனா அந்தக் காசை நீங்க
எடுத்துக்க முடியாது. அந்த விஷயத்துல நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும். உதவிதான் அது….எங்க
வீட்டுக்கான காசை நம்ப ஐயர்…பிரகதீஸ்வரனுக்குக் கொடுத்திடணும்…..இது என்னோட அன்பான
வேண்டுகோள்….ரொம்பக் கஷ்டப்படுற மனுஷன்….கொடுத்து உதவுங்க…
சரி என்றுதான்
ஒப்புக் கொண்டான் கருப்பணன். ப்ளஸ் டூ வரை படித்துவிட்டு ஆளுங்கட்சி ஆட்களோடு சேர்ந்து
கொண்டு இப்படி ஓட்டிக் கொண்டிருந்தான் அவன். வேலை கீலை என்றெல்லாம் முயற்சி செய்ததாகவும்
தெரியவில்லை. ஓரளவு வசதியும் இருந்தது அவர்களுக்கு. வேலைக்குப் போய்த்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயமில்லை.
அப்புறம் எதற்கு இந்த வேலை? அதானே ஆசைங்கிறது. அரசியல் ஆசை. எப்படியாவது பெரியாளாகிவிட
வேண்டும் என்கிற வெறி மனசில் புகுந்து கொண்டு மனிதனை ஆட்டிப் படைக்கிறது. அதற்கான லட்சணங்களும்
இருந்தனவே!
சொன்னபடி எங்கள்
வீட்டுப் பங்குப் பணத்தை பிரகதீஸ்வரனுக்கு அவன் கொடுக்கவில்லை. நீங்க என்கிட்டே சொல்லியிருக்கலாமே…நான் அடிச்சிப்
பிடிச்சியாவது வாங்கியிருப்பேனே என்றார் பிரகதீஸ். அந்தக் காசெல்லாம் வேண்டாம் என்று
அவர் சொல்லவில்லை. அவரும் அவர் குடும்பத்திற்காக வாங்கியிருக்கிறாரே?
அப்டியெல்லாம்
செய்யக் கூடாதுன்னு எங்க தலைவர் சொல்லிட்டார் சார்…யாரும் பிரிச்சி எடுத்துக்கக் கூடாது…மிச்சப்
பணம் அப்டியே திரும்ப வந்திரணுமாக்கும்னு கண்டிசன் போட்டுட்டாரு…அடிதடிக்குத் தயங்காதவரு
சார் அவரு…அவர்ட்டப் போய் பொய் சொல்ல முடியுமா? என்று நடித்தான் அவன்.
நான் அவன் சொல்லும்
தலைவரிடமே போய் நின்றேன். நீங்க போங்க சார்..நான் கொடுக்கச் சொல்லிர்றேன்…ஆனா
ஒண்ணு மறந்திராதீக. அந்த வீட்டுல ஏழு ஓட்டு இருக்குது. அதுபோக உங்க வீட்டு ஓட்டு வேறே….தவறாம எங்க சின்னத்துல விழுந்திரணும்….ஏரியா
வோட்டு எவ்வளவு விழுந்திருக்குன்னு எங்களால கணக்குப் பண்ணி சரி பார்க்க முடியும்…அது
குறைஞ்சிருச்சின்னா நான் கேப்பேன்…எதை…? கொடுத்த காசை….சம்மதமா? என்றான்.
அதெல்லாம்
வாக்குத் தவறாது…என்று ஒரே வரியில் சொன்னேன்.
ஏமாற்றியது பிரகதீஸ்வரன் வீட்டுப் பெண்கள்தான். அதெல்லாம் நான் சமாளிச்சிக்கிறேன்….என்றார்
பிரகதீஸ்வரன். தெருச் சண்டை சிரித்துப் போனது அப்போது. நீங்கள்லாம் இப்படிச் செய்யலாமா
சார்? என்று கடைசியாக அவன் என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டான். செத்துப் போனேன்
நான். அதோடு விட்டானே என்றிருந்தது எனக்கு. எப்படி சந்திக்கு இழுக்காமல் போனான் என்பது
இன்றுவரை தீராத மர்மம் எனக்கு.
துக்க வீட்டில் சொல்லிக்
கொள்ளக் கூடாது. செருப்பை மாட்டிக் கொண்டு சாலையில் இறங்கியபோது, மாட்டுக் கொட்டகையில்
இருந்த பசுக்கள் மிகுந்த சோர்வாய்த் தென்பட்டன இவர் கண்களுக்கு. அடங்கிப் படுத்திருந்தன.
மனிதர்களை விட அவை மிகுந்த வாஞ்சை மிக்கவை என்று தோன்றியது..
வீட்டுக்கு வந்தபோது
எதிர்வீட்டம்மாள் கேட்டார்கள்.......எப்போ எடுக்கப் போறாங்களாம்....?
அவரோட ப்ரதர்ஸ் ரெண்டு
பேர் பெங்களூர்ல....அவங்க வந்தாகணுமே...! மத்தியானம் ரெண்டுக்கு மேலே ஆயிடும்....
பாவந்தான் ஆனாலும்...திடீர்னு
இப்டிப் போயிட்டாரே...! அந்தக் குடும்பம் என்ன செய்யும் இனிமே? கலங்கித்தான் நின்றது
அந்த அம்மாள். இவருக்கும் மனசு ஆடித்தான் போனது.
அந்தக் கமிஷன் தொகையைக் குடுத்தாச்சுதானே? அவங்க துட்டு நமக்கெதுக்கு?- ராஜலெட்சுமி இப்படிக் கேட்பது போலிருந்தது எனக்கு. என் கூட ஊர்
வந்திருந்தால் நிச்சயம் சொல்லித்தான் இருப்பாள். அல்ப ஆசை உண்டுதான். ஆனாலும் இம்மாதிரி
நேரத்திலெல்லாம் மனசு இளகி விடும் அவளுக்கு. பாவக் காசு நம்மைப் படுத்தி விடும் என்கிற
பயம் உண்டு. கடவுளுக்குப் பயப்படுவதே உடல் உபாதைகளோ கேடுகளோ எதுவும் வந்துவிடக் கூடாது
என்பதற்காகத்தானே…!
அந்த முறை ஊர் வந்தது
அதற்கு மேல் ஸ்வாரஸ்யப்படவில்லை இவருக்கு. பிரகதீஸ்வரனின் மறைவும் தினமும் காலையில்
வீட்டு வழியே அவர் போவதும் நினைவில் வந்து வதைத்தது. உள்ளூர் வேலைகளைச் சுருக்க முடித்துக்
கொண்டு அன்றே சென்னைக்குத் திரும்பியாயிற்று.
பெரு நகரத்துக்குச் சென்றது முதல் இன்றுவரை பஸ்காரனுக்கும், ரயிலுக்கும் கொடுத்து
மாளவில்லை என்று மனசு சொல்லியது. விரைவிலேயே
உள்ளூர் வங்கி நடவடிக்கைகளையெல்லாம் முடிவுக்குக் கொண்டு வந்து, வீட்டை விற்றுவிட்டால்
என்ன என்கிற யோசனைக்குப் போயிருந்தார் சந்திரசேகரன். தண்ணீர் கஷ்டம் தாங்காமல் பலரும் அவ்வப்போது வீடுகளை
விற்று வெளியூர் நகர்ந்து கொண்டிருந்தார்கள். இல்லையெனில் நகரின் தண்ணீர் வசதியான பகுதிகளில்
கட்டிய வீடுகளை வாங்கிக் குடியேறிக்கொண்டிருந்தார்கள். வண்டியில் போய் ஒரு சுற்று சுற்றி வரும்போது பல
வீடுகள் பூட்டிக் கிடப்பதையும், சில வீடுகள் விற்று விட்ட விபரமும் அவருக்குத் தெரிய
வந்தன. அவ்வளவு ஒன்றும் பிரமாதமாக வீடுகள் விலை போயிருப்பதாகத் தோன்றவில்லை. என்னசார்…இவ்வளவு
பெரிய வீட்டுக்கு மாடியும் சேர்த்து நாற்பத்தஞ்சுக்குக் கேட்கிறாங்க…அநியாயமா இருக்கு?
என்று ஒருவர் வயிறெரிந்தது இவருக்குப் பலத்த யோசனையைக் கிளப்பியது. மாடி வீடே அவ்வளவுதான்
என்றால் தன் வீடு? வருடந்தான் ஓடியிருந்ததே தவிர, தான் மாடியே எடுக்கவில்லையே? இதுவே
போதும் என்று விட்டாயிற்றே? அப்படியானால் இது வெறும் முப்பதுக்குத்தான் போகுமா? முப்பதாவது
போகுமா? மாடியில்லையே? என்று பலத்த யோசனை கிளம்ப, பேசாமல் நாம் உயிரோடு இருப்பதுவரை
வைத்திருப்போம்…மண்டையைப் போட்ட பிறகு பையன் என்னவோ செய்து கொண்டு போகிறான்…நமக்கென்ன
தெரியவா போகிறது என்கிற முடிவுக்கு வந்திருந்தார் சந்திரசேகரன். அடியாழத்தில் அந்தத்
தான் கட்டிய வீட்டை விற்கும் மனநிலையே அவருக்கு இல்லை என்பதுதான் உண்மை… இன்னும் சொல்லப்போனால்,
தன் உயிர் அந்த கிரஉறத்தில்தான் போக வேண்டும் என்பதே அவரது அவாவாயிருந்தது. இதை நினைத்தபோது
எதிர் வீட்டு பிரபாகரன் கேட்டது அவர் மனதிற்கு வந்தது.
எப்படி சார் தனியாத்
தூங்குறீங்க….?
ஏன்? என்னாயிடப் போகுது…?
நெஞ்சு வலி கிஞ்சு வலி வந்திடுச்சின்னா என்னாகிறதுன்னு பயப்படுறீங்களா? போனாப் போகுது….கஷ்டப்பட்டாவது
எழுந்து வந்து பூட்டியிருக்கிற கதவைத் திறந்திட மாட்டேன்? காலைல நீங்க லேட்டாப் பார்த்து,
கதவை உடைக்கிற மாதிரியெல்லாம் சிரமம் வைக்க மாட்டேன். பயப்படாதீங்க…? என்றார் சந்திரசேகரன்.
அப்படியே யாரும் கவனிக்காமல் போய் உள்ளே பிணம் அழுகிப் போனால்தான் என்ன? என்கிற அளவிற்கான
விரக்தி அவர் மனதில் குடி கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. பிரம்மச்சர்யம், கிரஉறஸ்தாஸ்ரமம்,
வானப்ரஸ்தம், சன்யாசம்….என்கிற நான்கு நிலைகளில் இப்போது அவர் தான் வானப்ரஸ்தத்தைக்
கடந்து சன்யாச நிலையில் இருப்பதாகவே தன்னை வரித்துக் கொண்டிருந்தார். வீட்டில் இருந்தாலும்
கடைப்பிடிக்கும் முறைதானே முக்கியம்…இதற்காகக் காட்டிற்குச் சென்று குடியேற வேண்டுமா
என்ன? அப்படி எதிலும் சொல்லவில்லையே? என்பதுவே அவரது மனநிலையாயிருந்தது.
என்ன…ஊர் போயிட்டு
வந்ததிலேயிருந்து ஒரே யோசனையாயிருக்கீங்க…? என்று கேட்டுக் கொண்டேயிருந்தாள் ராஜலெட்சுமி.
உங்ககிட்டே
ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னா முடியாது போல்ருக்கே…! என்று வேறு அவள் ஸ்பெஷலாய்ச்
சொன்னதுவும் அவர் காதில் விழவில்லைதான்.
( 9 )
எப்படி அந்த மனநிலைக்குத் தான் ஆளானோம்
என்பதே இன்னும் புரியாத புதிராய் இருந்தது சந்திரசேகரனுக்கு. அரசுப் பணியில் இருந்த
காலத்திலிருந்தே தான் அப்படித்தான் இருந்திருக்கிறோம் என்பதை எண்ணியபோது அவருக்கு வெட்கமாகக்
கூட இருந்தது. சூழ்நிலையினால் உந்தப்பட்டு,
இங்கே குறைந்தபட்சம் தான் இப்படியிருந்தால்தான் காலத்தை நிம்மதியாக ஓட்ட முடியும் என்கிற
முடிவில், அப்படியே இருந்து கழித்துவிட்டதை
நினைத்துக் கொண்டார்.
இதற்காகத் தான் ரொம்பவும்
ஒன்றும் கவலைப்பட்டு மருக வேண்டியதில்லை என்றும் அவர் மனது சொல்லியது. இது தன் மனசுக்குத்
தானே செய்து கொள்ளும் சமாதானம்தானோ என்றும் ஒரு பகுதி கேள்வி கேட்டது. உன் தவறை நீயே
மறைத்துக் கொள்கிறாய்…என்று மனசாட்சி குத்திக் கிழித்தது.
ஒன்று மட்டும் உண்மை.
கடைசி வரையில் சர்வீசில் முழு நேர்மையாக, நூறு சதவிகிதம் நேர்மையாளனாக இருக்க முடியவில்லை
என்பதே மறைக்க முடியாத, மறக்க முடியாத உண்மை. அதுவே சர்வ நிச்சயம் என்று நினைத்துக்
கொண்டார்.
எனக்கு வேண்டாம் என்றுதான்
ஆரம்பத்தில் சொல்ல ஆரம்பித்தார். அதனால் ஆபீசில் மற்றவர்க்குப் போய்ச் சேர வேண்டிய
தொகைகள் தடைபட்டன. இவரே வேண்டாம் என்று சொல்லும்போது மற்றவர்கள் ஒரு பொருட்டாக மதிக்கப்படாமல்,
ஏதோ கொடுப்பதற்குத் தலையாட்டிப் பெற்றுக் கொள்ளும் பிரகிருதிகளாக மதிக்கப்பட்டனர்.
அதுவாக வந்தாலே கூட வரும். இவர் வேறு குறுக்கே வந்து கெடுக்கிறார் என்று முனக ஆரம்பித்தனர்.
பிறகு மறைபொருளாகப் பேச ஆரம்பித்தனர். அதன் பிறகு சில நாட்களில் வாய்விட்டே சொல்ல ஆரம்பித்தனர்.
பெரிய
யோக்ய மயிரு இவரு…என்று கெட்ட வார்த்தை பேசினர். மனசு விட்டுப் போனது சந்திரசேகரனுக்கு.
வேலையையே ராஜினாமா செய்து விடலாமா என்கிற அளவுக்கு சிந்திக்கலானார். குடும்பம் என்னாவது?
பிறகு இந்த வருமானத்திற்கு எங்கு போவது? வெளியே யார் வேலை தருவார்கள்? கால் காசானாலும்
கவர்ன்மென்ட் காசு என்றுதானே பிடிவாதமாய் முயற்சித்து வேலைக்கு வந்தது? இங்கு இந்த
லட்சணமாய் இருக்கும் என்று யார் கண்டது?
அப்போதுதான் இவரிடம்
வெவ்வேறு யோசனைகள் உதிக்க ஆரம்பித்தன.
இந்த பாருங்க சந்திரசேகரன்….இது
எல்லாரும் குதிச்சுக் குளிக்கிற சாக்கடை. புனிதமான கங்கைன்னு நினைச்சுக்காதீங்க…சந்தனமா
நினைச்சு உடம்புல பூசிக்கிற இடம். நாத்தம் அடிக்கிறதா நினைக்கவே கூடாது. அது பாவம்.
இங்கே நீங்க மட்டும் தனியா பக்கெட்டுல சுத்தமான
தண்ணியை எடுத்து வந்து முன்னே வச்சு, குளிக்க முடியாது. அவுங்கல்லாம் எந்தத் தண்ணில
குளிக்கிறாங்களோ அதுலதான் நீங்களும் குளிச்சாகணும். இல்லன்னா இந்த எடமே வேண்டாம்னு
விட்டுட்டுப் ஓடணும். வேறே எங்கே போனாலும் அங்கேயும் இதுதான் நிலைமை. இதவிடத் தீவிரமா
இருக்குமேயொழியக் குறையவே குறையாது. உள்ளூர்ல இருக்கீங்க….பதினாறு வருஷம் கழிச்சி உள்ளூருக்கு
மாறுதல்ல வந்திருக்கீங்க…இனி மீதியிருக்கிற சர்வீசை உள்ளூர்லயே ஓட்டணும்னா இங்க இருக்கிறவங்களோட
அட்ஜஸ்ட் பண்ணிட்டுத்தான் இருந்தாகணும். அப்பத்தான் வண்டி ஓடும். மனசு நிம்மதியா இருக்குதோ
இல்லையோ, பிரச்னை இல்லாம இருக்கலாம். நம்மள நாம பாதுகாத்துக்கலாம். அதுக்கு உத்தரவாதம் உண்டு.
உள்ளூர்லயே மாறுதலில்
வெவ்வேறு ஆபீஸ்களுக்கு வேணும்னா மாறிக்கலாம். வெளியூர் போகுறதத் தடுக்கிற வழி இது ஒண்ணுதான்.
அதுக்கு நல்லா வேலை பார்த்தா மட்டும் போதும். நீங்களோ வேலைல கிங்கு. ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்சுல
தரவ்வா இருப்பீங்க…திறமையான வேலைக்காரரு….சந்திரசேகரன எனக்குத் தாங்க….எனக்குத்தாங்கன்னு
உங்களைத் தாங்குவாங்க…கேட்டு வாங்கிக்குவாங்க…அது ஒண்ணுதான் நமக்குக் கிடைக்கிற மதிப்பு…மரியாதை….அதைக்
காப்பாத்திட்டு, பீஸ்ஃபுல்லா ரிடையர்ட் ஆகிட வேண்டிதான்-..அதுதான் சமத்துப் பிள்ளைக்கு
அடையாளம். அத விட்டுட்டு நேர்மை, நாணயம், கண்ணியம், கட்டுப்பாடுன்னு பேசிட்டிருந்தீங்கன்னா
அது வேஸ்ட்….உங்களை நீங்களே காப்பாத்திக்க முடியாமப் போயிரும்…பார்த்து சுதாரிங்க….அதான்
திறமை….நம்மள மாதிரி ஆளுக்கான திறமை. உங்களை மாதிரிதான் நானும் ஆரம்பத்துல இருந்தேன்.
போகப் போக இப்படியாயிட்டேன்.அம்மணமா நிக்குறதா பலதடவை நினைச்சு வெட்கப்பட்டிருக்கேன்.
ஒரு கோமணத்தைக் கட்டிக்கிட்டா எல்லாம் சரியாயிடும். அதுக்குப் பேர்தான் சின்ன அட்ஜஸ்ட்மென்ட்.
என்னைப் பொறுத்தவரைக்கும் எதுவும் அண்ட விட
மாட்டேன். மத்தவங்களைக் கண்டுக்க மாட்டேன். இது இங்கே பெரிய ராஜ தந்திரம்.
தன் மீது மிகுந்த அன்பும்
நட்பும் கொண்ட கஜேந்திரன் ஆட்சி அலுவலர் தனக்கு அளித்த ஆலோசனை அவரை எப்படிப் பற்றிக்
கொண்டது.? அதைத்தான் கடைசி வரை கடைப்பிடித்தார்.
ஒப்பந்ததாரர்களிடமிருந்து
அலுவலகப் பணியாளர்களுக்கு வந்து சேர வேண்டிய பர்சன்டேஜ் தொகையைக் கரெக்டாக வாங்கிக்
கொடுத்தார். இன்னிக்கே முடிக்கணும், நாளைக்கே முடிச்சாகணும் என்றபோது ஓகே…ஓகே என்று
தலையாட்டிவிட்டு, பணியாளர்கள் சளைக்காமல் வேலை செய்ய அவர்களுக்கு வேளா வேளைக்கு டிபன்
காப்பி தவறாமல் சப்ளை செய்யச் செய்தார். விடிய விடிய இருந்து வேலை செய்தாகணும் என்ற
நிலை வந்தபோது, நிதியாண்டு இறுதிக் காலங்களில் பணியாளர்கள் வீட்டிற்கே செல்லாமல் வேலை
செய்தனர். ஒன்பது மணி, பன்னிரெண்டு மணி, இரண்டு மணி என்று காப்பியும் டீயும் தொடர்ந்து
வந்து கொண்டேயிருந்தன. டிபனும் சளைக்காமல் சப்ளை ஆகிக் கொண்டேயிருந்தது. வேலை ஜிகு
ஜிகுவென்று நடந்தது.
தனக்கான பங்கை காம்பவுன்டில்
உள்ள பிள்ளையார் கோயில் உண்டியலில் செலுத்தினார் சந்திரசேகரன். கடவுளையும் பங்குக்கு
அழைக்கிறோமோ என்றிருந்தது. மனசு ஒப்பவில்லைதான். வேறு வழி?
இதெல்லாம் வெறும் டிராமாய்யா.
எவ்வளவு வந்திச்சு…எவ்வளவு போட்டாருன்னு எவனுக்குத் தெரியும்? வேண்டாம்னு கண்டிஷனாச்
சொல்லிட்டுப் போக வேண்டிதானே? மனுஷனுக்கு நப்பாசை….அடேங்கப்பா…ஃபினான்ஷியல் இயர் என்டிங்ல
இம்புட்டுக் காசு பார்க்கலாம் போல்ருக்கே…! மொத்தத்துக்கு ஒரு பிளாட்டு வாங்கிப் போட்டா
வேணாம்னா இருக்கு…ன்னு தோணியிருக்கும் அய்யாவுக்கு. எவன் கண்டது? இதுல, தான் பண்ற திருட்டுத்தனத்துக்கு
சாமிக்கும் பங்கு போடுறாரு….வேறென்ன? எனக்கு வேண்டாம்னு துடைச்சு சொல்ல வாய் வரல்லியே?
அப்போ மனசுக்குள்ள ஆசையிருக்குன்னுதானே அர்த்தம்? யாருக்கும் தெரியாம வந்திச்சின்னா
அப்ப ஓ.கேயா? அப்டித்தான் எதிர்பார்க்கிறார் போல்ருக்கு? அப்டி எப்டி நடக்கும் இங்கே?
எல்லாருக்கும் தெரியத்தானேய்யா எல்லாமும் நடக்குது….எவன் பயப்படுறான்? இவ்வளவு இவ்வளவுன்னு
ஒவ்வொருத்தனுக்கும் நிர்ணயிச்ச பிறகு எதுக்கு சண்டை வருதுங்கிறேன்? அதுபாட்டுக்கு வேலை
நடக்குற மாதிரி பங்கும் பிரிஞ்சி அங்கங்க போயிட்டு இருக்கு….எவன் வாயைத் திறக்கப் போறான்?
திறந்தாத்தான் நீ மட்டும் என்ன யோக்கியனாங்கிற கேள்வி வந்திடுமே?
வழக்கத்துக்கு மாறா,
எனக்கு இவ்வளவு பர்சன்டேஜ் கொடுத்தாத்தான் இந்த வேலையை முடிப்பேன்னு எகத்தாளமா கேட்குற
எவனாச்சும்தானே விஜிலென்சுல மாட்டிக்கிறான்?
சம்பிரதாயமாக் கொடுக்கிறத வாங்கிட்டு கம்னு வேலை செய்றவன் எவன் மாட்டியிருக்கான்
இதுவரைக்கும்..ஒருத்தன விரல் நீட்டிக் காண்பி? அவனவன் போஸ்டுக்கு ஏத்தா மாதிரிதான்
ரேட் ஃபிக்ஸ் பண்ணி வச்சிருக்காங்களே? அதுபோக அதிகமாப் பார்க்கிறது அவனவன் சாமர்த்தியமால்ல
இருக்கு?
அப்பப்பா…அந்தப் பேச்சைத்
தாங்கவே முடியாது. ஒன்று ஆளை விடுங்க சாமி…என்று தலை தெறிக்க விட்டு ஓட வேண்டும். அல்லது
ஜோதியில் ஐக்கியமாகி விட வேண்டும். சந்திரசேகரன் வேறு ஒன்றைச் செய்தார். அது யாரும்
எதிர்பார்க்காத தந்திரம். யாருக்கும் மனசு வராத தந்திரம். தலையில் தூக்கி வைத்துக்
கொண்டு கொண்டாடினார்கள் அனைவரும்.
தன் பங்குக் காசை அலுவலகத்தில்
உள்ள எல்லோருக்கும் மனசோடு பிரித்துக் கொடுத்தார். வர வரப் பிரித்துக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.
எவ்வளவு வந்தாலும்….பைசா மறைக்காமல்…ஒரு மடக்கு அந்தக் காசில் டீ குடித்துத் தொண்டைக்
குழிக்குள் இறக்காமல் அத்தனையையும் சரி சமமாக, சரி பங்காக அவரவர் தகுதிக்கேற்றாற்போல்,
மனம் கோணாமல், மகிழ்ச்சி குன்றாமல் பிரித்துக் கொடுத்து அவர்கள் முகத்திலான திருப்தியைக்
கண்டு ஆனந்தப்பட்டார். ஐயா…ஐயா…ஐயா….என்று காலில் விழாத குறையாக அவர்கள் இவருக்கு மரியாதை
செய்தார்கள். நில் என்றால் நின்றார்கள். உட்கார் என்றால் சொன்ன இடத்தில் உட்கார்ந்தார்கள்.
அந்த சர்க்கிளில்,
டிவிஷன் டிவிஷனாக, சப் டிவிஷன் சப் டிவிஷனாக அவரது பெயரும் புகழும் பரவிற்று. விதி
முறைப்படி ஜரூராக வேலை நடக்கும், நிதியாண்டிற்குள் திட்டவட்டமாக வேலையை முடிக்கும்
ஒரே மாவட்டம் என்கிற நற்பெயரை ஈட்டித் தந்தது அவரது செயல் மேலாண்மை.
அதே நற்பெயரோடு அந்தக்
கடைசி ஆண்டில் தன் அரசுப் பணியை மாநிலத் துறையின் தலைமையிலான பிரிவுபசார விழாவோடு வெற்றிகரமாக
முடித்துக் கொண்டு வெளியேறினார் சந்திரசேகரன்.
அவரது ஆளுமைத்திறன்
இன்றும் விடாது பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்று கேள்விப்படுகிறார். ஆனாலும்
அவர் உள் மனது தானும் அந்த லஞ்சப் பிணைகளில் ஒருவன்தானே என்று இன்றும் உறுத்திக் கொண்டுதான்
இருக்கிறது.
என்னங்க…ஒரே யோசனை?
என்று சமையலை முடித்துவிட்டு வந்து நின்ற ராஜலெட்சுமி மீண்டும் கேட்டபோதுதான் முழு
பிரக்ஞைக்கு வந்தார் சந்திரசேகரன். பிரகதீஸ்வரன் முடிந்த கதையை அப்படியே ஒப்பித்த அவர்,
தன் உள் மன ஓட்டங்களை மறைத்து விட்டார். அது எப்போதும் உள்ளதுதானே? சொன்னால் அவளுக்கு
ரசிக்காது. அவ்வளவாக அதில் ஒப்புதலும் இல்லைதான். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்கிற தியரியை
ஏற்றுக் கொள்பவள் அவள். தனது பேச்சிலான நியாயங்களை மனது உணர்ந்தாலும், அதற்கு ஒப்புதல்
அளிக்காதவள். பல குடும்பங்களில் பெண்கள் இப்படித்தான் தவறுக்கு ஆளாகிறார்கள்…பிறகு
துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வார் இவர். வாழ்நாள் பூராவும் வாங்காமல்
கழித்த ஒருவர் கடைசி நேரத்தில் தன் அலுவலருக்குக் கொடுத்த மூவாயிரம் கடனை, அவரிடமிருந்து
திரும்பப் பெற முடியாத நிலையில் அதற்காகக் கான்ட்ராக்டரிடம் கையை நீட்டி, விஜிலென்சில்
அகப்பட்டுக்கொண்ட அவலமெல்லாம் அறிவார் இவர். ஏன்யா…இதே ஆபீசிலதான ரெண்டு பேரும் இருக்கோம்…மெதுவாத்
தரலாமேன்னு இருந்தேன்…அதுக்குள்ளேயும் உனக்குப் பொறுக்கலியா? என்ற கேட்டார் அந்த அலுவலர்.அந்தக்
கதையெல்லாம் அவளுக்கு ரசிக்கப் போகிறதா என்ன? போனாப் போகுதுன்னு விட வேண்டிதானே? எதுக்காக
வாங்காத மனுஷன் வாங்கக் கையை நீட்டுறார்? அசடு…என்று ஒரு போடு போட்டாளே…? சிரிப்பதா,
அழுவதா? வீட்டிலுள்ள பெண்களே இப்படியிருந்தால் அப்புறம் நாடு எப்படி விளங்கும்? ஆபீசர் பணியாளிடம் கடன் வாங்கும் அளவுக்கா இருக்கிறார்?
அவர்தான் காசில் கொழிக்கிறாரே? பின் ஏன் இந்த நாடகம்? ஒரு அவசரத்துக்கு வாங்கியிருந்தால்
உடன் திருப்பியளிப்பதுதானே முறை? மறந்தால் மறக்கட்டுமே என்றும், மறந்ததுபோல் இருப்போம்
என்பதும்தானே? லஞ்சம் வாங்கும் புத்தி அந்த ரீதியில்தானே சிந்திக்கும்? இதைச் சுளீரென்று
அவள் சொல்லியிருந்தால் நியாயம்…போனாப் போகுது என்று எப்படி விட முடியும்? ஒரு சம்பளத்தில்
எட்டுப் பேரை வைத்து குடும்பம் நடத்தும் ஒருவர் மனம் கொதிக்கத்தானே செய்வார்? அவரி்டமே
வாய்விட்டுக் கேட்டிருக்கலாம். தரப் போறீங்களா இல்லையா என்று கூட வார்த்தை விட்டிருக்கலாம்.
அதைச் செய்யவும் பயந்து கொண்டு நீளாத கையை நீட்டியதுதான் அவர் செய்த தவறு. அவர் விதி
அப்படி! வேறென்ன சொல்வது?
மத்தத
விடுங்க…என் கதையைக் கேளுங்க என்று அவள் விவரித்தபோது திடுக்கிட்டார் சந்திரசேகரன். . என்ன சொல்றே…அதுக்குள்ளேயுமா?
என்று வியந்துபோய் அவளைப் பார்த்தார்.
தொடர்ந்து
உங்க பையன் ஃபாலோஅப் பண்ணிட்டுத்தானே இருந்தான். ஆன் லைன்லயே ஆதார் கார்டு அட்ரஸ் மாத்துறதுக்கு
என்னைக்கோ அப்ளை பண்ணிட்டானே? நீங்க கம்ப்யூட்டர நோண்டி நோண்டி சாமர்த்தியமா அப்ளை
பண்ணி, ரேஷன் கார்டு வாங்கலியா? உங்களாலேயே முடியும்னா, அதுவே தொழிலா இருக்கிற உங்க
பையனால முடியாதா? நீங்க மறந்துட்டீங்க…ஆபீஸ் போற போதெல்லாம் போய்ப் போய் பார்த்திட்டேதான்
இருந்தான். ஆதார் கார்டுல முகவரி மாத்தியாகி, புது கார்டும் வந்தாச்சே….இந்தாங்க பிடிங்க…பாருங்க….என்று
அவள் நீட்டியபோது ஒருவகையில் அவருக்கு அதீத மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ….பெருநகரில் நாமும் ஒரு அங்கம்..சொந்தமாய் ஒரு
அபார்ட்மென்ட் வேறு வைத்திருக்கிறோமே…பிறகு பெருமையில்லையா? என்று வாய்விட்டுச் சொல்லிக்
கொண்டார்.
அதனாலதான்
வோட்டர் லிஸ்ட்லயும் இந்த அட்ரசே மாத்தி உங்க பெயரும், என் பெயரும் சேர்த்தாச்சு…!
வீடு வீடா வந்து லிஸ்ட் வெரிஃபை பண்ணிட்டுப் போனாங்களே…பாரம் பூர்த்தி செய்து கையெழுத்தும்
வாங்கிட்டுப் போனாங்களே. பையன்தான் போட்டுக் கொடுத்தான். நம்ப ரெண்டு பேர் லேட்டஸ்ட்
ஃபோட்டோ காப்பியும் கொடுத்தாச்சு….வர்ற தேர்தல்லா
நாமளும் இங்கே ஓட்டுப் போடுறோம்….புரிஞ்சிதா?
எதற்காக
இத்தனை நீட்டி முழக்குகிறாள்? என்றிருந்தது எனக்கு. இதென்ன எண்ணி எண்ணிச் சந்தோஷப்படக்கூடிய
விஷயமா என்ன? சொந்த ஊரில் ஓட்டு இருந்தாலும் இங்கிருந்து எடுத்துப் பிடித்து இதற்கென்று
அங்கு சென்று ஓட்டுப் போடப் போவதில்லைதான். இப்போது இங்கு மாற்றியாயிற்று. அலைச்சல்
மிச்சம். அவ்வளவே!. இனி எப்போதும் சென்னைதான் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.
பையன் பெயருக்கு ரேஷன் கார்டு வாங்கியபோதே அப்படி சந்தோஷப்பட்டவள், சென்னை உறுதியானதில்
அவளுக்கு அம்புட்டு திருப்தி. நிறைவு.
ஒரு வாரம்
கழிந்த பொழுதில் திருவல்லிக்கேணியில் உள்ள வயதான என் மூத்த சகோதரரையும், அண்ணியையும்,
பார்த்துவிட்டு ஒரு இரவு தங்கி அவர்களோடு இருந்து திருப்தி பண்ணித் திரும்பியிருந்த நான் வீட்டில் ராஜலெட்சுமி இல்லாததைக்
கண்டு என்னாச்சு? என்று அரக்கப் பரக்க நின்று கொண்டிருந்தபோது அந்த எதிர்வீட்டுக்காரர்
வந்து சாவியைக் கொடுத்துவிட்டுச் சொன்னார்.
உங்க
பையனும், மாட்டுப் பொண்ணும் வழக்கம்போல ஆபீஸ்
போயாச்சு…குழந்தை ஸ்கூல் போயிருக்கு. உங்க ஒய்ஃ.ப்பும், என் ஒய்ஃப்பும் பக்கத்துல இருக்கிற
கல்யாண மண்டபத்துக்குப் போயிருக்காங்க…ஓட்டர் லிஸ்ட் ஃபைனலைஸ் பண்ணி சீட்டு தரப்போறாங்களாமே….ஓட்டுப்
போடுறது விட்டுப் போயிடக் கூடாதுன்னு ரெண்டு பேரும் ஓடியிருக்கா அங்கே…அதுவும் இனிமே
இங்கே நடக்குற எலெக் ஷன்ல ஓட்டுப் போட்டே ஆகணும்னு
உங்க மாமிக்கு அசாத்திய உற்சாகம், சந்தோஷம்…பெயர் சேர்ந்திருக்கான்னு உறுதி பண்றதுல
அவ்வளவு ஆர்வம். .நீங்க அகத்துக்குள்ளே வெயிட் பண்ணுங்கோ…இப்ப வந்திடுவாங்க…..
சொல்லிவிட்டு
மறுமொழிக்கு நிற்காமல் அவர் அவருடைய வீட்டுக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டார்.
அவரும் இவரைப் போல் வந்தேறிதான் என்பது சந்திரசேகரனுக்குத் தெரியும். தஞ்சாவூர் மாவட்டம்
என்று கேள்விப்பட்டிருந்தார்.
இப்படியே
ஒவ்வொரு குடும்பமாக இடம் பெயர்ந்து பல இடங்களுக்கும் போயாயிற்று. சென்னை, பெங்களூர்,
பம்பாய், புனே…டில்லி என்று. அந்தந்த கிராமங்களில் அல்லது சிறு நகரங்களில் வீடுகள்
பூட் பங்களாக்கள் போல் பூட்டியே கிடக்கின்றன. முடிந்த போது போகிறார்கள் வருகிறார்கள்.
வாடகைக்குப் பலரும் விடுவதில்லை. காரணம் வாடகைக்கு விட்டால் பிறகு வீடு தனதில்லை என்கிற
தீர்மானம். சந்திரசேகரனும் எத்தனையோ பார்த்துவிட்டார். எதிர் வீட்டு ஆள் மாடியை வாடகைக்கு
விட்டுவிட்டு காலி பண்ண வைக்க என்ன பாடு பட்டார்? தான் குடியிருந்த தெருவிலேயே மைத்துனனின்
வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, அங்கு பிராத்தல் நடக்கிறதைத் தடுக்க முடியாமல் என்ன
தவிப்புத் தவித்தார் அவனது தெருவிலேயே குடியிருந்த அவனின் துறை அலுவலர். ஆபீசர் என்கிற
முறையில் என்ன அதிகாரத்தைப் பயன்படுத்த முடிந்தது அவரால்? அதைவிட அரசியல் அதிகாரம்தான்
கொடிகட்டிப் பறந்ததே? எதிர்வீட்டு பிரபாகரன் சென்னையில் எஸ்.பியாகப் பணிபுரியும் தன் சித்தப்பா பையனை முடுக்கிவிட்டு
அங்கிருந்து ஃபோன் செய்து இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனை அலெர்ட் பண்ணி, ராவோடு ராவாகவல்லவா
அவர்களை விரட்டியடித்தது? அவர் குடியிருந்த தெரு ஆயிரம் கதை சொல்லுமே? இங்கே என்ன தப்புதான் நடக்கவில்லை? எல்லாம் பார்த்துப்
பார்த்து மனம் நொந்துதான் போயிருந்தார் சந்திரசேகரன். எந்தப் பிக்கல் பிடுங்கலும் இல்லாமல்
மீதி வாழ்க்கையை ஓட்டினால் போதும் என்கிற மனநிலைக்கு அவர் என்றோ வந்துவிட்டார். ஆனாலும்
விட்ட கதை தொட்ட கதையாக சிலவற்றிற்கு ராஜலெட்சுமி இன்னும் அல்லாடிக் கொண்டிருப்பதை
அவர் கண்ணுற்ற போது அவள் மேல் பரிதாபம்தான் எழுந்தது இவருக்கு.
எதுக்காக
இப்டி இதுக்கெல்லாம் ஓடுறா? எப்டியும் இந்தக் கட்சி இல்லன்னா, இன்னொருத்தன் வந்து வாக்காளர்
சீட்டு, பூத் நம்பர் இதெல்லாம் அச்சடிச்ச காகிதத்தை அந்த சமயத்துல கொடுக்கப் போறான்…இல்லன்னா
தேர்தல் நேரம் …ஓட்டுப் போடுற அன்றைக்கு போற வழில நாற்காலியைப் போட்டு உட்கார்ந்திட்டிருக்கப்
போறாங்க….இதுக்குப் போய் இந்த வேகாத வெயில்ல…லொங்கு லொங்குன்னு இப்பவே போய் நிக்கணுமா?
இதையெல்லாம் யார் சொல்றது இவங்களுக்கு…? சொல்லப் போனா வாய்ச் சண்டைதான் மிச்சம். அக்கம்
பக்கம் வேடிக்கை பார்க்கும்…கேலியாச் சிரிக்கும்….பெரு நகரத்துக்கு வந்து என்ன புண்ணியம்?
நாகரீகமா இருக்கத் தெரிலயே? ஒரு வேளை மக்கள் எல்லாருமே மாநிலம் பூராவும் ஒரே மாதிரித்தான்
இருப்பாங்களோ? மனுஷாளுக்கு மனுஷாள் எதுவும் மாறுபடாதோ? எல்லாரும் சராசரிகள்தானோ? எதுவுமே
தவறில்லை என்கிற மனநிலைக்கு வந்து விட்டார்களோ? எது ஒண்ணுன்னாலும் ஆட்டு மந்தை மாதிரிப் போய் அடைஞ்சிடுவாங்க
போலிருக்கு?
ஆமாம்…சராசரிகள்தான்
என்பதற்கடையாளமாய் அந்தச் செய்தியைச் சொன்னது அன்றைய மாலைப் பத்திரிகை….எளிய மக்களின்பால்
அவருக்கு இரக்கமும் பரிதாபமும்தான் ஏற்பட்டது. அலைபாயும் ஓடம் போல் அலையும் மக்கள்…!
பொதுவில் வைக்கப்படும் தவறுகள் என்றுமே குற்றமாவதில்லையோ! இது நடைமுறை என்பதுபோல் வைரஸாகப்
பரவிக்கிடக்கிறதே!
அந்தந்தப்
பகுதி கல்யாண மண்டபங்களில் வாக்காளர்கள் அடைப்பு. காபி, டீ தடையின்றி சப்ளை. பிரியாணி,
உப்புமா, வடை, பஜ்ஜி என தாராள விநியோகம். ஒவ்வொரு வாக்காளருக்கும் ஐநூறு, ஆயிரம் என்று
பணப் பட்டுவாடா நடைபெறுவதாகப் புகார். கையில்
மைக்கை வைத்துக் கொண்டு பணம் தந்தாங்களா? என்று கேட்டுக் கொண்டிருந்த பத்திரிகை நிருபர்
ஒருவர் அடித்து விரட்டப்பட்டார். வேறெங்கோ நடக்கும் இடைத் தேர்தல் செய்தியாயிருந்தது
அது.
நாலு
நாளா வந்திட்டிருக்கோம்…தினசரி ஐநூறு மேனிக்கு இன்னைவரைக்கும் ரெண்டாயிரம் கொடுத்தாக…..-ஒரு
பாட்டி விகல்பமில்லாமல் வாய்விட்டுச் சத்தமாய்ச் சொல்ல, ஏ…சும்மாயிரு…சொல்லாத…என்று
அருகிலுள்ள பெண்கள் கிசு கிசுத்து தடுத்தார்கள். அவரவர் மொபைல்களிலும், யூ.ட்யூப்களிலும், வீட்டு டி.விக்கள் சிலவற்றிலும்
இந்தக் காட்சிகள் ஓட, சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் வேதனையோடு பார்த்துக் கொண்டே
ராஜலெட்சுமியின் வருகைக்காகக் காத்திருந்தார். சந்திரசேகர மகாத்மியம் என்று தன் வாழ்க்கைக்குப்
பெயர் வைத்துவிடலாம் என்று தோன்றியது அவருக்கு.. ராஜலெட்சுமி என்று கம்பீரமாய், அழகு
மிளிரப் பெயரை வேறு வைத்துக் கொண்டு இப்படித் தன் மதிப்பில்லாமல் தொட்டதுக்கெல்லாம் அலைகிறாளே என்று வேதனையாயிருந்தது
அவருக்கு…!! இது தவறு என்று ஏன் யாருக்கும் தோன்றவில்லை? தவறுதானே என்று விட்டு விட்டார்களோ? நெனப்புதான பொழப்பக் கெடுக்குது என்று உதறி விட்டார்களோ?
சொல்ல முடியாதவையும், சொல்லி முடியாதவையும் கலந்துதான் இந்த வாழ்க்கையும் சமுதாயமும்
இயங்கிக் கொண்டிருக்கும் போலும்…! ! !
------------------------------------------------------------------