அப்படி இப்படியென்று கடைசியில் ஒரு நாள் அதற்கு சண்டையே வந்து விட்டது. என்னைக்கு வெச்சு வாங்குறது என்று காத்துக் கொண்டிருந்தாளோ என்னவோ? ஆரம்பித்து விட்டாள். வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அன்று ஸ்பெஷல்.. அதற்காகப் பழக்கத்தை விட முடியுமா? ஒரு உடை எப்படி ஒருத்தனின் அடையாளமாக மாற முடியும்? இது ஒருவனின் கௌரவம் என்ற பொருளில். குணாதிசயங்கள், அதை ஒட்டிய நடத்தைகள்தானே ஒருத்தனை அடையாளப் படுத்த முடியும்…! வெறும் உடை அப்படித் தூக்கி நிறுத்துமா என்ன?
காந்திஜி, வெற்றுடம்போடு, இடுப்பு வேட்டியோடு நடந்தார் என்றால் அது அவரது ஆன்மபலமும், அதை மற்றவர்கள் உணர்ந்திருந்ததுமே! அப்படி மதித்து, மரியாதை செய்யத்தக்க இடத்தில் அவர் நின்றார். ஆனால் சாமான்யனான எனக்கு என்ன வந்தது? உடைக்காக நான் எதற்கு மெனக்கெட வேண்டும்? என்னைப் பொறுத்தவரை புதுசு போடுவது என்றாலே மெனக்கெடல்தான். அது என்னவோ சின்ன வயசிலிருந்தே அப்படி ஆகிப் போனது. ஒன்றையே போட்டுக் கொண்டு அலைவது…! அதுவும் பழசையே…!
எப்பப்பார்த்தாலும் இந்த சிமின்ட் கலர்ச் சட்டைதானா? அட்டப் பழசு…அரதப் பழசு. என்னைக்கோ ஃபேட் ஆயிடுச்சு…மங்கிக் கிடக்கு. இன்னம் இதைப் போட்டு அடிக்கிறீங்களே…ஒரு கல்யாணம் காட்சி, விசேஷம்னாலும் இத மாட்டிட்டு ரெடியா நிக்கிறீங்க…வேறே சட்டையே இல்லையா உங்ககிட்டே? எதுக்கு இந்தத் தரித்திரக் கோலம்? எல்லாப் பழசையும் தூக்கி எறிங்க தலையைச் சுத்தி…!
இந்த வார்த்தைகளுக்காக எத்தனை காலம் காத்துக் கொண்டிருந்தாளோ? நாக்கு அழுந்தக் கேட்கணும் இவனை! கேட்டே விட்டாள். அணிந்திருந்த சட்டையை ஒரு முறை குனிந்து நன்றாய்ப் பார்த்துக் கொண்டேன். கச்சிதமாய் உடம்போடு பொருந்தியிருந்தது. எந்தவொரு இடத்திலும் சிறு புள்ளி, கறை, அழுக்கு என்று எதுவுமில்லை. அயர்ன் பண்ணித்தான் போட்டிருக்கிறேன். பார்க்கவும் நன்றாய்த்தான் இருக்கிறது. இதை ஏன் வேண்டாம் என்கிறாள்? அணிவது நான்தானே? அவளையா அழுக்குப் புடவையை, பழம் புடவையைச் சுற்றிக் கொள்ளச் சொன்னேன்? எனக்குப் பிடித்ததை நான் போட்டுக் கொண்டேன். அவரவர்க்குப் பிடித்த உடை என்று இருக்கும்தானே? பிடித்தவற்றையே அடிக்கடி அணிவது வழக்கம்தானே? இதனால் இவளுக்கு என்ன கேடு வந்தது?
இந்தச் சட்டைக்கென்னடீ குறைச்சல்… நல்லாத்தானே இருக்கு?, கிளம்பு…போகலாம்…என்றேன்.
இந்த டிரஸ்ஸோடதான் வருவேன்னா…..முதல்ல இது டிரஸ்ஸே இல்லை… நான் இந்த ஃபங்ஷனுக்கு வரலை….நீங்க மட்டும் போயிட்டு வாங்க…
இதென்ன வம்பாப் போச்சு….வரலேன்னா அங்க உன்னைத்தான் குறை சொல்வாங்க…பார்த்துக்கோ….
அதெல்லாம் இருக்கட்டும், நீங்க முதல்ல வேறே சட்டை, பேன்ட் போட்டுட்டு வந்து நில்லுங்க….பிறகு கிளம்புறதப்பத்திப் பார்க்கலாம்… -சொன்னால் சொன்னதுதான். அந்தப் பிடிவாதம் வேறு யாருக்கும் வராது. இந்த வயசிலுமா இப்படி? என்று எத்தனையோ முறை நினைத்திருக்கிறேன். எனக்கு நாலஞ்சு வயசு சின்னவள். அவ்வளவுதான்…
என்னுடைய முப்பத்தி ரெண்டாவது வயசிலேர்ந்து இப்டி ஒருத்திகிட்ட மாட்டிட்டு லோல் படணும்னு என் தலைல எழுதியிருக்கு போலிருக்கு…. – நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்து விட்டேன்…அவள் மாறுவதாயில்லை. பிறவிக் குணத்தை மட்டையை வச்சுக் கட்டினாலும் மாறாது என்பார்கள்.
இந்த பார்…என்னோட சுதந்திரத்துல யார் தலையிட்டாலும் எனக்குப் பிடிக்காது. அதேபோல நானும் மத்தவங்க விஷயத்துல தலையிட மாட்டேன்…
யாரும் எதுலயும் தலையிடல…பளிச்சினு ஒரு சட்டையை டீசன்டா மாட்டிட்டு வாங்கன்னுதான் சொல்றது….
ஏன், இதப் பார்த்த டீசன்டா தெரிலயாக்கும் அம்மையாருக்கு….? இதப் போட்டுட்டு கூட வந்தா இளப்பமா இருக்குதா….?
ஆம்மா…அப்டித்தான் …எத்தனை புதுசு இருக்கு…அதெல்லாம் அப்டியே உள்ளயே பூட்டிப் பூட்டிக் கிடக்கணுமா? ஒண்ணு மாத்தி ஒண்ணு எடுத்துப் போட்டு அனுபவிக்க வேண்டிதானே? சரியான பிசிநாறி……
சிரிப்பதா, அழுவதா? படுத்துகிறாள். போறது என் நண்பனோட ஃபங்ஷன்தான்…அவன் ஒண்ணும் நினைச்சிக்க மாட்டான்…நீ கிளம்பு…..
ஒரு விசேஷம், கொண்டாட்டம்னு போறபோது, புதுசு போட்டுக்க மாட்டாங்களா? அங்க போய் பழைய பஞ்சாங்கம் மாதிரி நிப்பீங்களா?
என்னைப்பத்தி அங்க வர்றவங்களுக்குத் தெரியும்டீ…நீ ஏண்டீ போட்டு அலட்டிக்கிறே? எடுத்த எடுப்புல கலகலன்னு ஆரம்பிச்சிடுவேன்….எல்லாரும் என் பேச்சைத்தான் கவனிப்பாங்களே தவிர, ஆளைப் பார்க்கமாட்டாங்க…மனுஷங்கள அப்பப்ப சந்திக்கிறப்போ….என்னா…நல்லாயிருக்கீங்களான்னு சாதாரணமாக் கேட்டுட்டு, சிரிச்சுப் பேசிட்டு, நகர்றவன் நான்….அவுங்க உருவம், உத்தி, உள்ளடக்கம்னு எதையும் நோண்டிப் பார்க்க மாட்டேன்….பொதுவாவே எல்லா மனுஷங்களையும் அவுங்க எப்டியிருக்காங்களோ அப்டியே ஏத்துக்கிறதுதான் என் குணம்…அதுதான் உசிதம்… என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துல வெறுக்கிறதுக்குன்னு வேண்டாம்னு ஒதுக்கிறதுக்குன்னு எவனுமில்லை…எந்த உயிருமில்லை….அதுனால என்னைப்பத்தி எல்லாருக்கும் தெரியும்…யாரும் இளப்பமா நினைக்க மாட்டாங்க…நீ ஒண்ணும் கவலைப்படாதே….புறப்படு….
ஷைலஜா என்னையே உற்றுப் பார்த்தாள். எதையெடுத்தாலும் நீட்டி முழக்கி, சம்பந்தா சம்பந்தம் இல்லாம ஒரு லெக்சர்…கேட்டது ஒண்ணு…சொல்றது ஒண்ணு…அப்ப….அப்ப….அப்ப்ப்ப்பா….எங்கேருந்துதான் வருமோ? சரியான ஓட்ட வாய்…
நான் ஒண்ணு சொன்னா, நீங்க வேறே எதையாச்சும் சொல்லி டைவர்ட் பண்ணி விட்டுடறீங்க…இதே வழக்கமாப் போச்சு….பிறகு என்ன கேட்டோம்ங்கிறதையே மறந்து போயிடுறேன்….கிளம்பின காரியமும் முடிஞ்சு போயிடும்…இப்டித்தான் வழக்கமா நடந்திட்டிருக்கு…..இன்னைக்கு நீங்க சொல்ற எதையும் காதுல வாங்குறாப்ல இல்லை…வேறே டிரஸ்ஸை மாட்டிட்டு வரப்போறீங்களா இல்லையா? – கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்ட பேக்கை கீழே வைத்து விட்டு உட்கார்ந்து விட்டாள் ஷைலஜா. கையில் பிரம்பு துடித்துக் கொண்டிருந்தது.
எனக்குப் பிடித்த அந்தச் சட்டையைக் கூட விரும்பினபோதெல்லாம் போட்டுக் கொள்ள எனக்கு உரிமை கிடையாதா? அது கொஞ்சம் பழசுதான்.அவள் சொல்வதுபோல் அரதப் பழசு இல்லை. இன்னும் பளபளப்பு குறையவில்லைதான். ஏறக்குறைய எட்டு வருஷத்திற்கும் மேல் அது என்னிடம் இருக்கிறது…அல்ல, கிடக்கிறது. இப்படி இன்னும் பல உண்டு. வாஷ் பண்ணி அப்படியே போட்டுக் கொண்டால் சற்று மங்கலடிக்கும். அயர்ன் பண்ணி அணிந்தால், பளபளப்பாய் கம்பீரமாய்க் காட்சியளிக்கும். அந்தச் சட்டையோடு கூடிய என் தோற்றத்தை நான் விரும்பினேன். ஒரு கம்பீரம் தானாய் வரும். கண்ணாடி முன் போய் நிற்பேன். எனக்கென்று இயல்பாய் உள்ள ஒரு நிமிர்வு களைகட்டி நிற்கும்.. ஆணுக்கு அழகு அவனிடம் உள்ள ஆண்மை…! கொஞ்சம் முரட்டுத்தனம் பாவித்த பொருத்தமான அழகு. பார்ப்பவர்கள், பவ்யத்தோடு வணக்கம் சார்…என்று அவர்களையறியாமல் கையெடுக்க வேண்டும்…எடுக்கிறார்கள்…அதில் எனக்கு ஒரு பெருமிதம். (வாயைத் திறந்தால் தராதரம் தெரிந்து போகும், அது வேறு விஷயம்! சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்!) அதற்கு நமக்கென்று அமைந்த ஒன்றிரண்டு உதவத்தான் செய்கின்றன. அதில் ஒன்று இந்தச் சட்டை…மறுப்பதற்கில்லை….ஒருவனின் கௌரவத்தை அடையாளப்படுத்துவது என்று சொன்னேனே…என்னைப் பொறுத்தவரை இந்தச் சட்டைக்கும் அதில் பங்கு உண்டுதான்…! வேறு சட்டை மாற்றினால் நிச்சயம் இந்த கம்பீரம் குலைந்து போகும்…அதில் சந்தேகமேயில்லை. என்ன செய்ய? மனசில்லாமல்தான் அணியப் போகிறேன். பாவி, படுத்துகிறாளே…!
ஷைலஜாவின் எதிர்பார்ப்பிற்கேற்றாற்போல் உடம்போடு ஒட்டி இன்றைய மாடல் சட்டை ஒன்றை அணிந்து கொண்டு வந்து நின்றேன். பின்பக்க பிருஷ்டம் தெரிந்தது. பேன்ட்டும் மாத்தினீங்களா?- கேட்டுக் கொண்டே நான் அணிந்திருந்ததை நோட்டம் விட்டாள். ஓ.கே. என்று எழுந்தாள். பத்து வயசு குறைஞ்சிட்டேனாம்….கஷ்டம்….!
இப்போ எவ்வளவு நல்லாயிருக்கு….இதவிட்டிட்டு, என்னத்தையோ போட்டுட்டு, கிறுக்கு மாதிரி வர்றீங்களே…?
அடா…அடா…அடா…! என்னா பேச்சு…? இன்ன வார்த்தைதான் பேசுவது என்ற கணக்கே இல்லை…நாக்குல நரம்பில்லையோ?….சற்றேறக்குறைய என் தலைமுறையைச் சேர்ந்தவள்தானே இவளும். நான்கு வயது வித்தியாசம் அப்படியென்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடப் போகிறது? பேச்சில் ஒரு பாந்தமில்லை. கிராமத்தில் வளர்ந்தவனுக்கும், நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குமோ? என்னவோ கிரகச்சாரம்….
போவது என் நண்பன் வீட்டு விசேடத்திற்கு. அவனுக்கு அறுபதாம் கல்யாணம்.
பையன்தான் வற்புறுத்தினான். சொன்னாக் கேட்கமாட்டேங்கிறான்…சரி, அவன் விருப்பத்துக்குச் செய்திட்டுப் போகட்டும்னு விட்டுட்டேன்….பலரும் இப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள். பெற்ற பிள்ளை எடுத்து செய்வதில் மறைமுகமான ஒரு சந்தோஷம். அதைப் பிறரிடம் பிரலாபிப்பதில் ஒரு கிக்கு. இருக்கத்தானே செய்யும். மூன்று நான்கு சகோதரர்கள் இருக்கும் வீட்டில் கூட சேர்ந்து செய்து கொள்கிறார்கள். ரெண்டு பேர் மட்டும். மீதி ரெண்டு பேரை விட்டு விடுகிறார்கள். அல்லது ஒருத்தனை. அதென்ன சகோதரத்துவமோ? அவ்வளவுதான் ஒற்றுமை. அதுதான் ஏதோவொருவிதத்தில் குடும்பங்களில் வெளிப்பட்டு விடுகிறதே…! கல்யாணம் ஆகி குழந்தை குட்டி என்று குடும்பம் பெருகிவிட்டால், கூடவே பிரிவினையும் வந்து ஒட்டிக் கொள்கிறது. அவரவர் தன்னிறைவு பெற்றுள்ள நிலையில், …யாரால் வருகிறது இந்த மாற்றம்? என்ன அவசியம் என்று அந்த இருப்பு நிலைதான் அதற்குத் தள்ளுகிறது எனலாமா? குறிப்பாகக் குடும்பத்துக்குள் நுழைந்த பெண்டுகளால் எனலாமே! நேரில் சந்தித்துக் கொள்கையில் என்னமாய் வாயால் வழிய விடுகிறார்கள்? அன்பை வார்த்தைகளால் மழையாய்ச் சொரிகிறார்களே? அத்தனையும் வேஷமா? உள்ளே நுழையும்போதே பெரிய குடும்பம் என்று தெரிந்துதானே தலையைக் கொடுக்கிறார்கள்…! அதைக் கடைசிவரை நிலை நிறுத்துவது அவர்கள் பொறுப்புதானே? பிறகு எதற்குக் கலைத்துப் பிரித்துப் போட முனைகிறார்கள்? தனியே கொண்டு போகத் துடிக்கிறார்கள்? யார் சொத்தை யார் பறிக்கப் போகிறார்கள்? எல்லாம் காலத்தின் கோலம். பெண்கள், குடும்பத்தில் ஆண்களுக்கிடையே ஏற்படும் உஷ்ணத்தை உரசல்களைத் தணிப்பவர்கள், குடும்பங்களில் ஒற்றுமையை நிலைத்திருக்கச் செய்பவர்கள் என்று படித்திருக்கிறேன். எவனோ நல்ல மனசுக்காரன் எழுதியிருக்கிறான். குடும்ப அமைப்புகள் சிதறாமலா இருக்கின்றன?. பல குடும்பங்களில் இந்த நிலை இல்லை. அதுதான் நிதர்சனம்.
அறுபதுக்குப் போய்த் திரும்பியாயிற்று. யாரும் யாரையும் கவனித்ததாய்த் தெரியவில்லை. எல்லோரும் குடுகுடுவென்று அங்கே இங்கே என்று ஓடிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ரெண்டு குட்டிப் பாப்பாக்கள் வாசலில் பன்னீர் தெளித்து வரவேற்றன. நாம என்ன டிரஸ் போட்டிருக்கோம்னு எவன் கவனிக்கப் போறான்? அதெல்லாம் சும்மா….!…எல்லாம் நாமளா படுத்திக்கிறது….!
என்னப்பா…வா…வா…ரொம்ப சந்தோஷம்… கடைசிவரைக்கும் இருந்து சாப்பிட்டு, தாம்பூலம் வாங்கிண்டு போ….நண்பனின் அன்பான உபசரிப்பு…
இவர் டிரஸ் எப்டியிருக்கு? – நல்லவேளை கேட்கலை எம் பொண்டாட்டி. தப்பிச்சேன். .
எல்லாம் முடிந்து வீடு வந்தாயிற்று. வந்ததும் வராததுமாக முதலில் அந்தச் சட்டையைக் கழற்றி உறாங்கரில் மாட்டினேன். இறுக்கிக்கிடந்த பேன்ட்டைப் பிய்த்து எறிந்தேன். பிருஷ்டத்தில் தோல் உறிந்ததோ என்னவோ…தடவிப் பார்த்துக் கொண்டேன். அக்கடா என்று கைலிக்குள் நுழைந்தேன்
அதுக்குள்ள அவுத்து எறிஞ்சாச்சா? அங்கயே ஒரு ஸ்நாப் எடுக்கச் சொல்லலாமான்னு நினைச்சேன். நீங்கவேறே எதாச்சும் சொல்வீங்களோன்னு பயம். கொஞ்சம் இருங்கோ…இந்த செல்ஃபில ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிறேன்…திரும்ப எடுத்து மாட்டிக்கிங்கோ…
அடக் கடவுளே, இவளோட எம்புட்டு அவஸ்தை…ஏற்கனவே ரொம்ப அழகு. இதில் செல்ஃபியில் ஃபோட்டோ.வேறா? ஸ்டுடியோவில் அவன் சொல்கிறபடி சிலையாய் அமர்ந்து,ஸ்மைலாய் ப்ளீஸினாலுமே சரியாய் விழாது. இந்த லட்சணத்தில் இதிலெடுத்தால்? எதைச் சொல்லி எதைக் கேட்கப் போகிறாள்? இப்படியெல்லாம் அந்தக் காலத்தில் நம் பெற்றோர்கள் ஏதாச்சும் ஒன்றை நினைத்திருப்பார்களா? எந்த சந்தோஷத்தையாவது அனுபவித்திருப்பார்களா? ஃபோட்டோவுக்கு உட்கார்ந்தால் ஆயுசு குறைச்சல் என்று பயந்து ஓடியவர்களாயிற்றே!
யாராவது ரொம்ப அலட்டினால், எனக்கு எண்ணங்கள் பின்னோக்கிப் போய்விடும். இதைச் செய்யாதே என்பதற்கடையாளமாய். நான் அஞ்சில் விளைந்தவன். சொல்லப்போனால் அவைதான் என்னை இந்த நிமிடம்வரை காப்பாற்றி வருகின்றன.
ரஉறீம் பாய், இந்தாங்க…நூறு ரூபாதான் தேறித்து. இதுக்கே படாத பாடு பட்டுப் போனேன். பையன்கள் மூணு பேருக்கும் சட்டை, ட்ரவுசர், நீங்களே பார்த்து, எடுத்து தைச்சுக் கொடுத்திடுங்க…பாக்கியைக் கொஞ்சம் கொஞ்சமாத் தர்றேன்….வாங்கிக்குங்க….
அந்தத் தையல்காரரோடு சென்றுதான் தீபாவளித் துணி எடுத்த நினைவு. எல்லா தீபாவளிக்கும் அவர்தான். அவராக என்ன விலைக்கு எந்தத் துணியை எடுத்துக் கொடுக்கிறாரோ அதுதான் எங்கள் விருப்பம். இருக்கும் காசுக்கு எப்படிமுழம் போடுவது என்று அப்பாவை அறிந்த அவருக்கு அத்துபடி.
தைச்சுட்டீங்களா…தைச்சுட்டீங்களா…என்று அவர் குடிசை வாசலில் ஆசை ஆசையாய்த் தவம் கிடந்த நாட்கள். ஒரு கிழிசல், தையல், விரிசல் என்றாலும் அவரிடம்தான் போய் நிற்போம். காசே வாங்கிக் கொள்ள மாட்டார். அவரின் பிள்ளைகள் மாதிரி, அப்படி ஒரு பிரியம் எங்கள் மேல்.
மாஸ்டர், உங்களுக்கு எப்ப முடியுதோ, அப்பக் கொடுங்க போதும்… பசங்களுக்கு தீபாவளி டிரஸ் ரெடி….. – அப்பாவின் மேல் அத்தனை நம்பிக்கை. Nஉறாட்டலில் சரக்கு மாஸ்டராக இருந்த அப்பாவுக்கு இப்படி எத்தனை பேர் ஆதரவாக இருந்தார்கள்? எல்லாமே மனிதனை மனிதன் நம்பிய நாட்கள் அவை. அந்தக் கடைவீதியில் அப்பாவுக்குக் கடன் கொடுக்காத கடைகள்தான் எது? அரிசிக்கடை, பலசரக்குக் கடை, காய்கறிக்கடை, வெல்லக்கடை, எண்ணெய்க்கடை, தையல்கடை, கதர்க்கடை, பெட்டிக்கடை என்று ஒன்று விட்டதில்லையே…! எங்கெங்கு காணினும் கடன் கடன் என்று நிரம்பி வழிந்த வாழ்க்கை. இந்த அவலங்களுக்கிடையே மனிதர்கள் என்னமாய் ஒருவருக்கொருவர் ஒன்றியிருந்தார்கள்? பரஸ்பரம் எத்தனை நம்பிக்கை வைத்து இயங்கினார்கள்? அவரவர் கௌரவத்தையும், நேர்மையையும், எப்படி மதித்தார்கள்?
அந்த அப்பாவின் ஒரே சட்டை இன்னும் என்னிடம் இருக்கிறது. அது காமராசர் சட்டை. எங்கேனும் வெளியூர் பயணம் என்றால் மட்டும் அப்பாவின் தகரப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே வரும். பிறகு மௌனமாய் மீண்டும் அந்தப் பெட்டிக்குள் சென்று படுத்துக் கொள்ளும். அதை வெளியே எடுக்கும்போதே ஒரு மணம் மூக்கை நெருடும். அந்த மணம் இன்றும் உண்டு. அது அப்பாவின் வாசனை. அதைப் போட்டுக் கொண்டு கை நீளமாய் தொள தொளவென்று, வெள்ளை வெளேரென்று அப்பா நடந்த நாட்களில் இவரின் பிள்ளை நான் என்று கத்திச் சொல்லத் தோன்றும். அப்பா கையைப் பிடித்துக் கொண்டு கூடவே கன்றுக்குட்டியாய் ஓடிய அந்தக் காலங்கள் இன்றும் பசுமையாய். சீனு,, கூட்டத்துலே எங்கேயும் ஓடிடாதே…என் கூடவே இரு….
கடைசிவரை வெற்றுடம்போடுதான் அப்பாவைப் பார்த்திருக்கிறேன். Nஉறாட்டலில் நெருப்பின் முன்னே நின்று நாள் பூராவும் காய்ந்துவிட்டு, வியர்க்க விறுவிறுக்க வீட்டிற்கு வந்து, கைத்துண்டால் மார்பிலும், முதுகிலும் வீசி வீசி அந்த உஷ்ணத்தை ஆற்றிக் கொள்ளும் நேரங்கள் அந்தக் குடும்பத்திற்கான அயராத உழைப்பின் சாட்சி. என்ன சுகத்தைக் கண்டார் கடைசிவரையில்? ஓடி ஓடி உழைத்து, ஓடாய்த் தேய்ந்து, கடைசியில் பிள்ளைகள் வேலைக்குப் போன காலங்களில் பக்கவாதம் வந்து படுத்ததுதான் மிச்சம். அவருக்கெல்லாம் அப்படி வரலாமா? தினமும் குளித்து முடித்த மடியுடனே நெற்றியிலும், உடம்பிலும் விபூதிப் பட்டைகள் பளபளக்க, சூரியனைப் பார்த்து அமர்ந்து குறைந்தது மூன்று நான்கு மணி நேரங்கள் ஜபம் செய்வாரே…! அந்தக் கடவுள் வந்து அவரைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா? இத்தனை காலம் நீ என்னை வேண்டி நின்றதற்கு இந்தா உனக்குப் பரிசு என்று படுக்கையிலா போடுவது? எல்லாம் முன் ஜென்ம வினை….சாமி என்ன செய்வார் அதுக்கு?- அப்போதும் அந்த நம்பிக்கை பிறழாத தடம். இடுப்பில் துண்டு சுற்றியிருந்தால் கொடியில் வேட்டி உலருகிறது என்று அர்த்தம். அதிகபட்சம் அப்பாவிடம் ரெண்டு வேட்டிக்கு மேல் பார்த்ததில்லை. ஆயுள்முழுக்க அ.ப்படித்தான். மனக் குறையோடேயா அலைந்தார்? அவரின் கௌரவம் அதிலா இருந்தது?
ஊரம்புட்டும் கடன். அவர்களுக்கு நடுவேதான் தினசரி அப்பா போய் வந்து கொண்டிருந்தார். நம்பினார்களே…ரெண்டும், அஞ்சுமாய்க் கொடுத்தும் வாங்கிக் கொண்டார்களே…! ஒரு சுடு சொல் உண்டா? பணம் பெரிசா, மனுஷனின் நடத்தை பெரிசா? பொற்காலமில்லையா அது?
எதற்கு ஆசைப்பட்டார் அந்த மனிதன்? வேண்டி, விரும்பி ஒரு சினிமாக் கூடப் பார்த்ததில்லை. அப்பப்பா, அந்த திருவிளையாடல் படம் கூட்டிப் போவதற்குத்தான் என்ன ஒரு பிரயத்தனம்? வெறும் நாலணா டிக்கெட். வரிசையில் நிற்கமாட்டேன் என்று விட்டாரே! அந்த நாலணா இருந்தால் வீட்டிற்குக் காலம்பரத்திற்கு காபிப்பொடியும், பாலும் வாங்கலாம் என்றார். வீடு வீடு என்று தன் மூக்குப் பொடிச் செலவைக் கூடக் குறைத்துக் கொண்ட மாமனிதன். இந்தக் கெட்ட பழக்கம் என்னவோ சின்ன வயசுலேர்ந்து வந்திடுத்து….சனியனை விட்டொழிக்கணும்….அறுபது வயது தாண்டிய பொழுதில், காலம் பூராவும் உடம்போடு, உணர்வுகளோடு ஒட்டிக் கொண்டிருந்த ஒரு பழக்கத்தைச் சட்டென்று கைவிட்ட மன உறுதி. அப்படி ஒரு திண்மை.
அவர் எடுத்தது ஒரு சட்டை. போட்டது ஒரே சட்டை. வாழ்ந்து முடித்ததும் அந்த ஒன்றிலேயேதான்.. எந்த ஆசை அவரைச் சபலப்படுத்தியது? என்ன சுயநலம் அவரைத் தடுமாற வைத்தது? எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் வாழ்ந்து மறைந்த பூமி இது? அப்பாவை நினைத்தால் இது பழைய சட்டை, இது கலர் மங்கிய சட்டை, இது ஓல்டு ஃபேஷன் என்று எதையேனும் தூக்கி எறியத் தோன்றுமா? இன்று இவள் சொல்கிறாள். எல்லாப் பழசையும் தூக்கி எறியுங்கள், மூலையில் கிடாசுங்கள் என்று. நாளைக்கு என்னையும் சொல்வாளோ?
. ஏன்னா நானும் பழசுதானே? நீ நாகரீகமானவ….நான் அப்டியில்லையே…! உனக்கு நான் பழசாத் தெரியறது ஒண்ணும் அதிசயமில்லையே…! எனக்கு இந்த இருப்பு போதும்…இதுலதான் என் மனசு சமாதானமாயிருக்கு….கிழியாத துணிகளை, வீணாத் தூர எறியறதுக்கு முடியாது. நான் அப்டி வளரல…இத்தன பேன்ட், சட்டை எங்கிட்ட இருக்குங்கிறதே அதிசயம். தூக்கி எறிய எனக்கு மனசு ஆகாது. கடைல ஒரு ரூபாய்க்கும், ரெண்டு ரூபாய்க்கும் போட முடியாது. இணங்கி மனசு வர்ற போது ஒண்ணு செய்வேன்…வாசல்ல வர்ற வண்டிக்காரனுக்குக் கொடுத்திடுவேன்…இல்லன்னா எதாச்சும் ஆஸ்ரமத்துக்குத் தள்ளிடுவேன்…விற்கிற சோலியெல்லாம் கிடையாது….
என்னவோ ஒரு அரதப் பழசான சட்டை….அதையே திருப்பித் திருப்பிப் போட்டுண்டு அலைஞ்சிண்டிருக்கும் அது….கிறுக்கு மாதிரி….அய்யோடா…அந்தப் பழக்கமும் அவரும்….வெளில சொன்னா வெட்கக் கேடு…மானம் போறது….எல்லாம் என் தலையெழுத்து….அனுபவிக்க வேண்டிர்க்கு…..
இப்போதும் இந்த வார்த்தைகள் என் காதுகளில் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் தொனிக்கும் மரியாதை கழன்ற நிலையையும் உணர்ந்தேதான் இருக்கின்றேன். ஒரு கட்டத்தில் இப்படிப் பேசுவதும் கூட அவளுக்கு அலுத்துப் போகக் கூடும். அதற்காகக் காத்திருக்கிறேன் என் சுயத்தோடு. -----------------------------------------------------------