21 அக்டோபர் 2018

தினமணி கதிர் (21.10.2018) ல் என் சிறுகதை "என்ன பயன்?"

சிறுகதை                                                  “என்ன பயன்?”                                                                                                      
      வீடு நெருங்க நெருங்க பயமாயிருந்தது கைலாசத்திற்கு. திரும்பவும் வந்த வழியே இன்னும் கொஞ்ச தூரம் போய் வருவோமா என்று நினைத்தார். மேகங்கள் கருகருவென்று திரண்டு நின்று பயமுறுத்தின. எந்த நிமிடமும் மழை இறங்கி விடலாம். இருக்கும் நிலையைப் பார்த்தால் குறைந்தது ஒரு மணி நேரமாவது விட்டு அடித்துத்தான் ஓயும்போல் தெரிகிறது. ஒழுங்கா வீடு போய்ச் சேர்றியா…இல்ல ஆளைத் தூக்கட்டுமா…? என்று மிரட்டுவதுபோலிருந்தது. சிலுசிலுவென்ற காற்றுக்கு நடுவே மழைத் துளிகள் புள்ளிகளாய் உடம்பில் தெறித்தன. என்ன செய்வதென்று தெரியாமல் நிலை கொள்ளாமல் ஒரு நிமிடம் அப்படியே நின்றார் கைலாசம். சாலைக்கு ஓரமாயும் இல்லாமல், நடுவிலும் இல்லாமல் ரெண்டும் கெட்டானாய்த் தான் நிற்பது தெரிந்துதான் இருந்தது. ஓரிரு சைக்கிளும், பைக்குகளும், ஸ்கூட்டர்களும் அடுத்தடுத்து வந்து தடுமாற வைத்தன. கடந்து செல்பவர்கள் முறைத்தவண்ணம் விலகிப் போனார்கள். மழை இறங்குவதற்குள் வீட்டை அடைய வேண்டும் என்கிற பரபரப்பும் பதட்டமும் எல்லோருக்கும் இருப்பதாய்த் தெரிந்தது. காது கிழிய ஒலிக்கும் உறாரன் ஒலிகள் அதை உணர்த்தின.
      ஓரமா நில்லுய்யா…செத்துத் தொலையப்போறே….. – எவனோ இவரை நோக்கிக் கையை நீட்டிக் கோபமாய்ச் சொல்லிக் கொண்டே பைக்கில் கடந்து போனான். அதன் வேகச் சத்தம் இவரைப் பதறடித்தது.
      அவன் சொன்ன வார்த்தையில் இவருக்குக் கோபம் வரவில்லை. மாறாக இன்னும் யாரேனும் சிலர் தன்னை ஓங்கிக் குரலெடுத்துத் திட்ட மாட்டார்களா என்று இருந்தது. உடல் முழுக்க ஒரு பலஉறீனம் பரவியிருப்பதை நன்றாய் உணர்ந்தார். கால்கள்கூட லேசாய் அவரையறியாமல் ஆடின.  பூமியில் பாதம் பதித்து நிற்பதற்குரிய தெம்பு இல்லைதான். எதிரே தெரியும் மனிதர்கள் தெளிவான உருவமற்றவர்களாய்க் கடந்து செல்வதைப் பார்வை அறிய கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டார். அப்போதும் கலங்கிய நிலையே தொடர்வது மனதுக்குள் பயத்தை உண்டு பண்ணியது.
      ரெண்டு நாளாய்ச் சரியான தூக்கம்  இல்லாதது காரணமாய் இருக்கலாம் என்று மனதிற்குள் சமாதானம் செய்து கொள்ள முயன்றார். ரெண்டு மாசமான்னே சொல்லலாம்…மனசு எரிச்சல்பட்டது அப்போதும்.  போகிற போக்கில் இடக்கையால் ஒருவன் அவரை ஓரமாய்த் தள்ளிவிட்டுப் போக….அய்யோ….என்றவாறே பின்புறம் சாய்ந்து தேங்கியிருந்த தண்ணீர் குட்டைக்குள் கால்களைப் பதிக்க, பரவியிருந்த சகதி நளுக்கென்று இழுத்துவிட….தடுமாறி விழப்போனவரை ஓடி வந்து ஒருவர்  தாங்கிப் பிடித்தார். பார்த்து…பார்த்து….
      ஊர் உலகத்தில் இன்னும் நல்லவர்கள், இரக்க சிந்தை உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். முகம் தெரியாதவனுக்கு உதவ அவர்கள் தயங்குவதில்லை. யாரும் யோசித்துச் செய்வதில்லை. தன்னை மீறிய அநிச்சைச் செயலாய்த்தான் சட்டென்று முனைந்து உதவுகிறார்கள்.  ஆனால் முகம் அறிந்த, உடலறிந்த, நாற்பது ஆண்டுகள் தன் கூட வாழ்ந்து கழித்த ஒரு ஜீவனைக் கடைசி காலத்தில், கடைசி நேரத்தில்  தான் துன்புறுத்தி விட்டோம். செய்ய வேண்டிய கடமையை சலித்துக் கொண்டே, கோபத்தின் உச்சியில் நின்று, எதற்காக இந்தக் கோபம் என்ற புரிதல் இன்றி, அல்லது புரிந்தும் எரிச்சல் பட்டு, படுக்கையில் கிடப்பவளை மேலும் மேலும் வார்த்தைகளால் துன்புறுத்தி, மனம் விடுபடத் தூண்டி….இன்னும் என்னவெல்லாம்தான் சொல்வது? எதற்காக இப்படிச் செய்தேன்? இப்போதுதான் மனம் வாட்டுகிறது. இத்தனை நாளாய் கோபம்தான் தளும்பி நின்றது. ஓங்கி உதைக்கக் கூட கால் போனது. போதுமான தெம்பில்லை. இல்லையானால் அதுவும் நடந்திருக்கும். பாவம் செய்ய மனசு அஞ்சுவதில்லையோ…! கோபம் கண்ணை மறைக்கும்தான். அறிவையும் அல்லவா சுத்தமாக மறைத்து விடுகிறது. இப்படிப் படுக்கையில் விழுந்து நம்மைப் பாடாய்ப் படுத்துகிறாளே பாவி….!
செத்துத் தொலையப்போறய்யா…… - கொஞ்ச நேரத்துக்கு முன் தன்னைப் பார்த்து ஒருவன் சொல்லிவிட்டுப் போன அந்த வார்த்தைகள்… !!
“செத்துத் தொலை….” – தானும்தானே சொன்னோம்….- சொல்லக் கூடாது என்று தெரிந்தும்தானே சொன்னோம்….கையை முகத்துக்கு நேரே நீட்டி…எரிச்சலுடன்….பல்லைக் கடித்து….சொல்லியிருக்க வேண்டாமோ? இப்போது நினைத்து என்ன பயன்? சிதறிய சொற்களை அள்ள முடியுமா?
போ…என்னை விட்டுப் போ…நானாவது நிம்மதியாயிருக்கேன்… - நிறையச் சொல்லியாயிற்று. வார்த்தைகளுக்குப் பஞ்சமேயில்லை. எதற்குப் பயன்படுத்துகிறோம், ஏன் பயன்படுத்துகிறோம் என்கிற விவஸ்தைதான் கிடையாது. முடியுமானால் எல்லாவற்றையும் பேசி விடுவதுதான் மனித இயல்போ…? இயல்பா அல்லது சிலருக்கான முத்திரையா?
உனக்கு எண்பது…எனக்கு…? எண்பத்தஞ்சு…ஞாபகமிருக்கட்டும்…நானும் கொஞ்சமேனும் தூங்க வேண்டாமா? ராத்திரிப் பூராவும் இப்படி அனத்திட்டேயிருந்தியானா…யாருக்குத் தெம்பு இருக்கு…எழுந்திரிச்சுப் பார்க்கிறதுக்கு? எனக்கென்ன சின்ன வயசா? உன் முன்னாடியே உட்கார்ந்து தவம் கெடக்கிறதுக்கு? இந்த மூத்திர நாத்தத்தோட எவன் இருப்பான்…? உனக்காக என்னெல்லாம்தான் படறது? வீடே கக்கூஸ் மாதிரி ஆகிப்போச்சு….எங்க பார்த்தாலும் பீ நாத்தம்….எவ்வளவு ஃபினாயில் அடிச்சாலும் போவேனாங்குது…கருமம்…கருமம்…எல்லாம் என் தலையெழுத்து…..சாப்பிட உட்கார்ந்தா வாமிட் வருது….சோறு இறங்கினாத்தானே…?
கண்களின் இருபுறமும் வழிந்தோடும் கண்ணீர்….! உணர்கிறாள். சொல்வது புரிகிறது. அல்லது திட்டுகிறோம் என்று தெரிகிறது. மனசு அழாவிட்டால் கண்ணீர் பெருகுமா?
அழு…நல்லா அழு….அதுக்காவது தெம்பிருக்கே….நான் சொல்றது புரியக்கண்டுதானே அழறே….அப்போ… காது நல்லாக் கேட்குது…அதானே அர்த்தம்…பேச மட்டும் முடிஞ்சா…என்ன பேச்சுப் பேசுவே….? பதிலுக்குப் பதில் சொல்லாமயிருப்பியா? அதான் ஆண்டவன் இப்டிப் படுக்கப் போட்டிருக்கான். கொடுத்தான் தண்டனை…எனக்கென்ன வந்தது? என்னையும் போட்டுப் படுத்தறானே…? நானும்தான் பலிகிடா…! விட்டுட்டா ஓட முடியும்? அதான் சீரழியறேன்…
என்னவெல்லாம் சொல்லி விட்டேன்? இத்தனை சீக்கிரம் போகும் என்று தெரிந்திருந்தால் பேசியிருக்க மாட்டேனோ…? ஒரு ரெண்டு மாதம் கழிவதற்குள் என்னவெல்லாம்  ஆர்ப்பாட்டம்? அடங்கியிருக்க முடியவில்லையே…! வயசானா கூர் கெட்டுப் போகும்ங்கிறது சரிதான்…ஆனாலும் நாப்பது வருஷம் வாழ்ந்தவளோட இப்டியிருக்கலாமா? பேசினது பேசினதுதானே..வார்த்தையைச் சிதற விட்டா திரும்பப் பொறுக்க முடியுமா? போயிட்டா…ஆளில்லை…ஆனா நான் சொன்ன வார்த்தைகள்? பேசின பேச்சுக்கள்…? கடவுளே…இப்பத்தான் என் அறிவு தெளிஞ்சிதா? இவ்வளவும் நடந்தாத்தான் ஞானம் பொறக்குமா? இப்பயும் ஞானம் பொறந்துடுத்தா? இல்ல இதுவும் பிரமையா? அவ்வளவு ஈஸியாவா ஞானம் வந்துடும்…ஒரு நிகழ்வுக்கே சந்நியாசியா…? எப்டி சாத்தியம்? சந்நியாசின்னா எல்லாத்தையும் விட்டவன்னு அர்த்தமாயிடுமா? எவன் சொன்னான்?
தேசம்…ஞானம்..கல்வி…..ஈசன் பூசையெல்லாம்…காசு முன் செல்லாதடீ….குதம்பாய் காசு முன் செல்லாதடி…..-அடச் சீ…எந்நேரமும் சினிமாப் பாட்டுத்தானா…? காதுல விழுந்து தொலைக்குதே…!
எந்தச் காசு? ஆள் போனாலும் அவ பென்ஷன் பணம் பாதிக்கு மேலே கிடைக்குமே? அந்தத் தெம்பா? அத வச்சிண்டு ஃப்ரியா தின்னுட்டுத் திரியலாமே…அந்தத் திமிரா? அதுவா கண்ணை மறைச்சிது? நாளைக்கு எனக்கு உடம்புக்கு வராதுன்னு என்ன உத்தரவாதம்? வந்தா பார்க்கிறதுக்கு ஆள் கிடைப்பாளா? இதோ நானிருக்கேன்னு யார் வந்து நிப்பா? பெத்தது இதோ இருக்கேன்னு ஒண்ணு கூடக் கிடையாதே….! அடக் கடவுளே…அம்புட்டு யோசனையும் இப்பத்தான் தோணணுமா? புத்தி கெட்டுப் போயி…சித்தம் தெளிஞ்சு என்ன பயன்? அவ இல்லையே…! படுக்கைலயாச்சும் படுத்திண்டிருக்கலாமோ? இப்டிப் போயிருக்க வேண்டாமோ? கிடந்த கோலத்துல அவ சொல்லச் சொல்ல வீட்டுக் காரியம் பார்த்திருக்கலாமோ? ஏன் அதுக்கான பொறுமை இல்லாமப் போச்சு? வயசு மட்டும்தான் ஆகியிருக்கா தனக்கு? எண்பத்தஞ்சுக்கான எந்த மெச்சூரிட்டியும் இல்லையோ? சராசரிக்கும் கீழால்ல இருக்கேன்….!
ழைத்துளி பலமாய் விழுவதை உணர்ந்தார். உடனடியாக எங்காவது ஒதுங்க வேண்டும். நடையைக் கவனமாய் எட்டிப்போட்டு மூடியிருந்த ஒரு கடை மறைப்பில் நின்று கொண்டார். நாலைந்துபேர் சட்டுச் சட்டென்று வந்து நெருக்க ஆரம்பித்தார்கள்.
ச்சே….ரோட்டுலதான் இடிபிடின்னா இங்கயுமா? மனுஷன் ஒதுங்கி நிக்கக் கூட உரிமையில்லயா? வந்து இடிக்கிறதப்பாரு….காட்டான் மாதிரி….
இங்க பார்றா….அய்யா சலிச்சிக்கிற்ராரு…ஏன்யா…நீ மட்டுந்தான் நனையாம நிக்கணுமா? ஒதுங்குய்யா…..ஆளும்…மண்டையும்….
நன்னா நில்லுங்கோ…யாரு வேண்டான்னா….நா அப்டிப் போய்க்கிறேன்….-சொல்லிவிட்டு அகன்று பக்கத்துக் கடை வாசலில் போய் ஒண்டிக் கொண்டார் கைலாசம். உடனே பேசிப்புடறாங்களே…! வாயுல வந்தபடி..…என்ன திமிர்…?
நீ பேசலியா…? நீ உன் பெண்டாட்டியப் பேசலியாங்கிறேன்…தான் வேலைக்குப் போயி உனக்கு ஆக்கிப் போட்டாளே…! அடங்கிக் கிடந்தியா நீ? என்ன துள்ளுத் துள்ளினே? என்னெல்லாம் நாக்கு மேல பல்லுப் போட்டுப் பேசினே? நாக்குல நரம்பு உண்டா உனக்கு? கட்டின பொண்டாட்டிய எவனாவது அப்டிப் பேசுவானா? கடவுளுக்கே அடுக்குமா? செத்துப் போ…செத்துப்போன்னு எத்தனை வாட்டி சொல்லி துன்புறுத்தியிருப்பே…? அந்த வார்த்தையோட உஷ்ணம் அறியுமா உன் உடம்பு? நாளைக்கு நீ படுக்கைல விழமாட்டேங்கிறது என்ன நிச்சயம்? அப்போ? சீந்துவாரில்லாமச் சீரழியப் போறே….ஞாபகமிருக்கட்டும்….
யப்பா…சாமி…என்னெல்லாம் மனசுல உதிக்குது? இப்பத்தான் அறிவே வேலை செய்யுதோ? கடவுளே…என்ன மட்டும் ஏன் வச்சிருக்கே…கூப்டுக்கோயேன்…நானும் அவளோடயே போய்ச் சேர்ந்திருப்பேனே…? இன்னும் என்னெல்லாம் சீரழிவு? தனியா…அநாதையாக் கிடந்து சாகணுமா? அதான் வீடுன்னாலே பயமாயிருக்கோ…?
போகாமல் இருப்பதற்கு மழை ஒரு சாக்கு. வீட்டில் என்னவோ பயமுறுத்துகிறது. பகலிலேயே அந்தத் தனிமை ஆகவில்லை. இரவை எப்படிக் கழிப்பது? அதிலும் அவள் படுத்திருந்த அந்த அறைப்பக்கம் அவர் செல்வதேயில்லை. இந்தப் பக்கம் உறாலில்தான் படுத்துக் கொள்கிறார். அறைக்கதவைச் சாத்தி விடுகிறார். அது என்ன இழவோ…! கதவு லேசாய் அடிக்கடி அடித்துக் கொள்கிறது. யாரோ தட்டுவது போல….மேல், நடு, கீழே என்று மூன்று தாழ்ப்பாள்களையும்தான் போட்டிருக்கிறார். ஆனாலும் கேட்கிறது. ஒரு வேளை மனப் பிராந்தியோ….? இத்தனை நாள் இந்தச் சத்தமில்லையே…! மடையா…மடையா…இத்தனை நாள் எங்க சாத்தினே கதவை…மூளை கெட்டவனே…!
த….ண்…ணீ…..தண்ணீ…..ம்….ம்….ம்…..!!! சொட்டு ஜலம் விடறேளா தொண்டைல….
எப்பப் பார்த்தாலும் என்ன தண்ணீ? கொண்டு வந்து  கொடுத்தாலும் நிறையக் குடிக்கிறியா? ஒரு வாய்….ஒரே ஒரு வாய்…அதுலயும் பாதி வழிஞ்சிடுது…முழுங்கக் கூடச் சக்தியில்ல….அப்றம் என்ன தண்ணி வேண்டிக்கிடக்கு….என் பிராணனை வாங்குறதே உனக்கு வேலயாப் போச்சு….ஒரு மணி நேரம் தொடர்ச்சியாத் தூங்க முடியுதா…? ராத்திரி…பகல் இப்டியே கழிஞ்சா…அப்புறம் நாந்தான் என்ன செய்ய முடியும்….? அநியாயம்…அநியாயம்…நல்லா மாட்டிண்டேன்…இருக்கவுமில்லாம, போகவும் ஏலாமே…
போய் விட்டாள். மூன்று நாளாயிற்று. தொலை…போய்த் தொலை…என்று சொல்லி கடைசியில் தொலைந்தே விட்டாள். உங்களுக்கு என்னால சிரமம் வேண்டாம்…நன்னா இருங்கோ…. – கண்ணீரால் கதை பேசி, காணாமலே போய்  விட்டாள்.
என்னைத் தனியனாக்கிட்டுப் போறதுல அம்புட்டு சந்தோஷம்…இல்ல….? கெடந்து திண்டாடட்டும்….அப்பத்தான் புத்தி வரும்….இதானே உன் நெனப்பு….? நான் வருத்தப்படுவேன்னு நினைச்சியோ? அதான் நடக்காது….பாரு….நாம்பாட்டுக்கு ஜாலியா இருப்பேன்…வீட்டுல சமைக்க மாட்டேன்…வெளிலதான் திம்பேன்….கோயில், சினிமான்னு போவேன்…..என் இஷ்டத்துக்குச் சுத்துவேன்…யாரும் என்னைக் கேட்க முடியாது…ஏன் இப்டித் தண்டச் செலவு பண்றேள்னு நீயும் கேட்க முடியாது….எல்லாம் என் இஷ்டம்…..உன்னோட கஷ்டப்பட்டேனோன்னோ…அதுக்குப் பலன்…பாரு…செய்றேனா .இல்லையா பாரு….ஒத்தையா இருந்து கழிச்சுக் காட்டுறேனா இல்லையா பாரு…என் உயிரை அத்தனை சீக்கிரத்துல எமன் கொண்டு போக மாட்டான்…ஏன்னா அவனுக்கு என்னைப் பிடிக்காதாக்கும்…..அதுனாலதான் விட்டு வச்சிருக்கான்…ஒத்த மரத்துக் கொரங்காட்டம் அலையப் போறேன்…மரத்துக்கு மரம் தாவிண்டு கெடப்பேன்…மேலேருந்து பாரு…பார்த்து ரசி….ரசிச்சுச் சிரி….அப்டியாச்சும் உன் ஆத்மா சாந்தியாகட்டும்….உன்னைப் படுத்தினதுக்கு எனக்கு இதுவும் வேணும்…இன்னமும் வேணும்….
எல்லாம் நினைத்துப் பார்த்தாயிற்று. சொல்லிக் கொண்டாயிற்று. புலம்பித் தள்ளியாயிற்று.  போன பின்னால்தான் தெரிகிறது அந்தத் தனிமை.   அதன் தாக்கம்….அரூப நிழலாய் வலம் வருகிறாள் வீட்டில்…எங்கு திரும்பினாலும் நோக்குகிறாள். என்ன என்று கேட்கிறாள். சாப்பிடறேளா…? என்று உபசரிக்கிறாள். தண்ணி வேணுமா என்கிறாள். கடைக்குப் போய்ட்டு வர்றேன் என்கிறாள். போய்த் திரும்ப வந்து கதவைத் தட்டுகிறாள். காலிங் பெல்லை அமுத்துகிறாள். பாத்ரூமில் குளிக்கும் ஓசை. துணி கசக்கும் சத்தம். ஈரப் புடவையோடு வெளித்தோன்றும் காட்சி. சாமி படத்தின் முன்னால் நின்று உச்சரிக்கும் ஸ்லோகம்…மணியடித்து சூடம் ஏற்றி தீபாராதனை செய்யும் நளினம். மாறாத அந்த வளையல் ஓசை….! வீடு முழுக்க நிறைந்திருக்கும் அந்த மங்கல ஒலி…. அடடா...எத்தனை மங்களகரமான நிகழ்வுகள்…! எத்தனை மறக்க முடியாத காட்சிகள்…‘! வீடே கோயில்…கோயிலுக்குள் அவள் தெய்வம்….!
ஐயோ…! அநியாயமாய் எல்லாமும் தவற விட்டேனே…? இப்போது நினைத்து என்ன பயன்? ஒருவர் உயிரோடு இருக்கையிலேயே அவரின் பெருமைகள் உணரப்பட வேண்டாமா? ஒருவர் ஜீவிக்கையிலேயே அவரை மதித்துப் போற்ற வேண்டாமா? இப்படியா போன பின்பு புலம்புவது? கிடந்து அழுவது?  இப்படியா இழந்ததை நினைத்து ஏங்குவது? மனிதர்களின் பெருமைகள் அவர்கள் வாழும் காலத்திலேயே உணரப்படுவதில்லையா? உணர்ந்து போற்றப் படுவதுதானே நியாயம்?
எல்லா மனிதர்களும் இப்படித்தான்…ஏன் உலகமே இந்த ரீதியில்தான் இயங்குகிறது என்று கொள்ளலாமா? அதில் நானும் ஒரு அங்கமா? என்னை சமாதானப் படுத்திக் கொள்ள உலகை இழுக்கிறேனா? உலகம் என்ன செய்யும்? உன் புத்தி எங்கே போயிற்று?
கடவுளே…என்ன இப்படி நடந்து கொண்டு விட்டேன்….என் அறிவு ஏனிப்படி மழுங்கியது? புத்தி ஏனிப்படிப் பிசகியது? எனக்கு மன்னிப்பு உண்டா? என் பாவத்துக்கு நானும் வேண்டியதை அனுபவித்துத்தான் கரை சேர வேண்டுமா? கரை சேருவேனா? அதுவாவது கிடைக்குமா எனக்கு?
ஜானகீ….ஜானகி…..வந்து சீக்கிரம் கதவைத் திற…..மழை கொட்டறது.. சொட்டச் சொட்ட நனைஞ்சிண்டு வந்திருக்கேம் பாரு…குளிரு நடுக்கிறது…சீக்கிரம் வா… – தட…தட..வென்று தன்னை மறந்து தட்டித் தீர்த்தபோதுதான்….அவள் இல்லை என்ற பிரக்ஞை வந்தது கைலாசத்திற்கு. எதிர் வீட்டில் ஆளில்லை என்பதை உணர்ந்தபோது…நல்லவேளை…என்று மனசு சமாதானப்பட….என்னவோ ஒரு பயத்தோடேயே கதவைச் சத்தமின்றித் திறந்து, கணத்தில்  வீட்டிற்குள் புகுந்தபோது யாரோ கையைப் பிடித்து உள்ளே இழுத்துப் போட்டது போலிருந்தது.  பயத்தில் வெளிறிப் போய் சட்டென்று வாயிற்கதவைச் சாத்திப்  பூட்டித் தன்னையும் அந்தக் குடிலுக்குள்  அடைத்துக் கொண்டார் கைலாசம்.
                        -------------------------------------------------
                        உஷாதீபன்,                                                                               எஸ்.2 – இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171, 172)                                        மேத்தா’ஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்),                                           ராம் நகர் (தெற்கு)12-வது தெரு,                                                        ஸ்ருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில்,‘ மடிப்பாக்கம்                                     சென்னை – 600 091. (செல்-94426 84188)









வண்ணநிலவனின் ”எம்.எல்.“ நாவல் வாசிப்பனுபவம்



வண்ணநிலவனின் ”எம்.எல்.“

      நாவல் வாசிப்பனுபவம்                             
      ண்ணநிலவன் எழுதிய “எம்.எல்” என்ற இந்த நாவலை வெளியிட்ட நற்றிணை பதிப்பகத்தாரின் வாசிப்பிற்குப் பிறகு இரண்டாவதாக வாசித்து முடித்த பெருந்தகை அநேகமாக நானாகத்தான் இருக்க வேண்டும். திரு வண்ணதாசன் அவர்கள் சொல்வனம் இணைய இதழில் தொடர்ச்சியாகப் படிக்காமல் சற்றே விட்டு விட்டுப் படித்ததாகச் சொல்லியிருந்தார். உடனடியாக நான் உட்கார்ந்து படித்து முடித்ததற்குக் காரணம் முதலில் அந்தத் தலைப்பில் ஏற்பட்ட ஈர்ப்பு. அடுத்ததாக அறுபது எழுபதுகளில் தமிழ்நாட்டில் சாரு மஜூம்தாரின் மார்க்ஸிய – லெனினியக் கட்சி பரவிக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படும் கால கட்டத்தைச் சித்தரிப்பதாக அமைந்த இந்த நாவலின் கதைப்போக்கு.
      அவரது தவறான வழிகாட்டுதலில் இழுத்துச் செல்லப்பட்ட பலரை, நான் சென்னைக்கு வந்த பிறகு சந்திக்க முடிந்தது என்று வண்ணநிலவன் தனது குறிப்பில் சொல்லுகிறார். பெரு நகரமான சென்னையில் அது பரவலாய் இருந்திருக்கலாம். அதே சமயம் அவர்களின் கொள்கைகள் துண்டுப் பிரசுரங்களாக தமிழகத்தின் சின்னஞ்சிறு நகரங்களில் கூட அங்கங்கே தூவி விடப்பட்டுக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை.
      தன்னோடு பேசுவது, பழகுவது யார் என்று தெரியாமலேயே பல இளைஞர்கள் அந்தப் புதிய நபர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, வேலை வெட்டி இல்லாத கால கட்டத்தில் வெட்டியாய்ப் பொழுது போவதற்கு இதையாவது கேட்போமே என்று நேரம் காலம் பார்க்காமல் இந்தக் கட்சி ஆட்களின் பேச்சிலே மயங்கிக் கிடந்தார்கள். பின்னால் ஆபத்து காத்திருக்கிறது என்பதை அறியாத அப்பாவிகளாய்…!
      அப்படி மயங்கிக் கிடந்து,  வீட்டுக்கு வந்த விருந்தினர் என்று மட்டுமே அறிந்து கொண்டு அவரது பின்புலம் தெரியாமல் பழகி, காவல் துறையின் சந்தேகத்திற்கு ஆளாகி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, குடும்பத்தோடு குய்யோ முறையோ என்று அழுது புலம்பி, பல நாட்களுக்கு எங்கு கூட்டிச் சென்றிருக்கிறார்கள் என்பதே கூடத் தெரியாமல், என்ன ஆனான் என்பதும் புரியாமல் உற்றார் உறவினர் அலமந்து கிடக்க, திடீரென்று ஒரு நாள் ஆளை விடுங்கடா சாமி….என்று வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் அந்த  இளைஞர்கள். மனதில் பட்டதை எழுதிக் கொடுங்கள் என்று கையெழுத்திட்டு வாங்கி ஆளை விட்டனர்.  
      இந்த பாருங்க…உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீங்க சார்ந்திருக்கிற கட்சி, அமைப்புகளோட கொள்கைகளைப் பரப்பணும்னா அதுக்கு எங்கயாச்சும் லாட்ஜ்ல ரூம் எடுத்திட்டு ஆளுகளக் கூட்டிச்  செய்ய வேண்டிதானங்க…? எதுக்குங்க எங்கள மாதிரி அப்பாவிகளோட வீடுகளத் தேர்ந்தெடுக்கிறீங்க…? எங்க அப்பா உங்களுக்கு என்ன துரோகம் பண்ணினாரு? அவருண்டு, அவர் வேலையுண்டுன்னு கஷ்டப்பட்டு உழைச்சி, குடும்பத்தக் காப்பாத்திட்டிருக்காரு….அவரோட நீங்க வந்து பேசப் போக, நீங்க இன்ன மாதிரி ஆளுன்னு அவருக்குத் தெரியாமப் போக….அப்பாவோட ஃபிரண்டுன்னு நாங்களும் உங்களோட பழகப்போக கடைசில எங்களச் சந்தி சிரிக்க வச்சிட்டீங்க…இதுதான் உங்க பாலிஸியோட லட்சணமா? ஊருல எம்புட்டுப் பேரு வெட்டியாத் திரியறான்….அவிங்களாப் பார்த்துப் பிடிக்க வேண்டிதானங்க…நாங்கள்லாம், படிச்சமா, வேலைக்குப் போனமா, குடும்பத்தக் காப்பாத்தினமான்னு இருக்கிற சராசரியான ஆளுங்க….எங்களோட தொடர்பு வச்சு, வாழ்க்கையைக் கெடுக்கப் பார்க்கிறீங்க….? நான் சுத்தமா துடைச்சு எழுதிக் கொடுத்திடுவேங்க…எங்க அப்பா அம்பது வருஷமா இந்த ஊர்ல நல்ல பேரோட இருக்கிறவரு…அவர் பேரெல்லாம் அவ்வளவு சாதாரணமா நீங்க கெடுத்திட முடியாது…போலீசுக்கே தெரியும்….சாமி எப்படிப்பட்டவருன்னு…அவரு பிள்ளைங்க நாங்க…எங்களப்பத்தியும் இந்த ஊர் அறியும்…..தெளிவ்வா….எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திட்டேன்….எப்படா கவர்ன்மென்ட் வேல கிடைக்கும்….வண்டியக் கட்டலாம்னு காத்துக்கிட்டுக் கெடக்கேன்….சகுனி மாதிரிப் பூரப் பார்க்கிறீங்களே……
      என்று சொல்லி காவல் துறையிடம் உண்மை உரைத்து, சரண்டராகி,  வெளியே வந்த இளைஞர்கள் அப்போது பலர். இது சின்னச் சின்ன ஊர்களிலும் நடந்தது. ஆனாலும் அந்த இளைஞர்களை வைத்து அந்தப் போராளிகளைப் பிடித்தார்கள் போலீஸார். இவர்கள் ஆழம் தெரியாமல் காலை விட்ட இடங்கள் இம்மாதிரிச் சில. இவர்கள் கணக்கு என்றுமே சரியாய் இருந்ததில்லை. முன் பின் தெரியாத ஊர்களில் மூக்கை நுழைத்தால்…இடிதானே கிடைக்கும்?
      ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாமல் ஆயுதப் போராட்டத்தின் மூலமே அரசியல் தீர்வு என்று நம்பிய சாரு மஜூம்தாரும் அவரை நம்பிய கூட்டமும் பலம் பெற முடியாமல் படிப்படியாக நைந்து போனதும், குறி வைத்து ஒடுக்கப்பட்டதும் தமிழகத்தின் வெற்றிகரமான வரலாறு.
      தீவிரவாதம்  என்பது எப்போதும் சாத்தியமில்லை என்பதை அறுபது எழுபதுகளின் தமிழகத்தின் இந்தச் சூழ்நிலையை முன் வைத்து ஒரு நாவலின் வழி சொல்ல வேண்டும் என்கிற வண்ணநிலவனின் ஆவல் இந்தப் புத்தகத்தின் மூலம் ஓரளவு நிறைவேறியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
      மொத்தமுள்ள 23 அத்தியாயங்களில் பதினேழு அத்தியாயங்களுக்குப் பிறகுதான் ஓரளவு இந்தப் பிரச்னை நாவலில் சூடு பிடிக்கிறது என்று சொல்லலாம். அதுவரை குடும்பம், வியாபாரம், தொழில், விருத்தி என்றே கழிகிறது.   அப்பு என்று ஒரு பாத்திரம் வருகிறது நாவலில். அநேகமாக தமிழகத்தில் இவரை அந்தக் கால கட்டத்தில் பலர் அறிந்திருக்கலாம். உண்மையான கதாபாத்திரமே நாவலிலும் சொல்லப்பட்டிருக்கிறது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. பின்னாளில் என்கவுன்டரில் அவர் கொல்லப்பட்டதாக முடிவு தெரியவருகிறது. தமிழகத்தில் ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருந்தவர் அவர் எனலாம். இவர்களது கொள்கைகளுக்கு ஆட்களைத் திரட்டுகிற வேலையைச் செய்தவர் அவரும் அவரால் ஈர்க்கப்பட்ட சிலரும்.
      ஆனால் ஜனங்கள் காலங்காலமாக வாழ்க்கை நடத்தி வருவது போலவே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குடும்பம், வேலை அல்லது தொழில், உறவுகள், நண்பர்கள் என்று தங்களைப் பிணைத்துக் கொண்டிருந்தார்கள். தங்களுடைய வாழ்க்கை முறையில் எந்தத் தவறும் இருப்பதாக யாரும் நினைக்கவில்லை. ஜனங்களுடைய மனோபாவம் சாருமஜூம்தார், கனுஸன்யால், அப்புவுக்கும் கூடத் தெரியும். ஆனாலும் சீனப்புரட்சி, மாசேதுங், மார்க்ஸ், லெனின் இவர்களுடைய கொள்கைகள் வழிமுறைகளில் இருந்த அவர்களுடைய கண்மூடித்தனமான பற்றுதலும், நம்பிக்கையும் அவர்களை வழி நடத்தியது.தாங்கள் வித்தியாச மானவர்கள் என்று அவர்கள் தங்களை நினைத்துக் கொண்டார்கள். ஆனால் உலகிலுள்ள எல்லா மக்களையும்போல, அவர்களும் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொண்டு அதுவே சதம் என்றுதான் வாழ்ந்தார்கள்….. – வண்ணநிலவனின் இந்த வரிகளில்தான் எத்தனை யதார்த்தம்….?
      மதுரை நகரைக் களமாகக் கொண்டு இந்த நாவல் நடை பயி்ல்கிறது. ஸ்டடி சர்க்கிள் என்பதாக சிறு சிறு அமைப்பை அங்கங்கே ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து யாரும் அறியாவண்ணம் சின்னச் சின்னக் குழுக்களாகக் கூடிக் கூடிப் பேசுதல், கொள்கைகளை விரித்துரைத்தல் என்பதாகத் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. கோபால் பிள்ளை என்கிற கம்யூனிஸ்ட் கட்சியில் 1953 முதல் பிரபலமாயிருந்த பிரமுகரை முதலில் சந்தித்து, அவர் மூலம் ஆயுதப்புரட்சிக்கான கருத்துக்களை வித்திட்டு மெல்ல மெல்லப் பரப்ப வேண்டும் என்கிற திட்டத்துடன் மஜூம்தார் மதுரையில் காலடி வைக்கும் விதமாக நாவல் துவங்கி படிப்படியாக நகர்ந்து செல்கிறது.
      மஜூம்தார் கோபால் பிள்ளையை முதலில் சந்திக்கும் கட்டம். எய்ட் டாக்குமென்ட்ஸ் என்கிற சிறு சிறு பிரசுரங்களை அவரிடம் கொடுக்கிறார். அதைப் பார்த்து விட்டு கோபால் பிள்ளை  கேட்கிறார். நீங்க எதுக்கு சைனா லைன் எடுத்தீங்க? அது நம்ம நாட்டு மேல படை எடுத்த நாடு. அதனுடைய நடைமுறை எல்லாம் நம்ம நாட்டுக்கு ஒத்து வராது… என்கிறார்.
      ஆயுதப் புரட்சி ஒண்ணுதான் ஜனங்களோட கஷ்டங்களுக்குத் தீர்வு. சைனா நமக்கு இதிலே நிச்சயம் உதவி செய்யும்…என்கிறார் அவர்.
      மன்னிக்கணும் மஜூம்தார்…எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை….தெலுங்கானாவுல என்ன நடந்தது? நம்ம ஜனங்களை வீணா பிரச்னைல மாட்டி விடாதீங்க….
ஏன் இப்போ எங்க நக்ஸல்பாரியிலே நடந்திருக்கே….
அது ஆயுதப் புரட்சியா? நான் ஏத்துக்கலை….நிலச் சீர்திருத்தம் நடந்தா அங்கே பிரச்னை சரியாகிடும். அங்கே நடந்தது குத்தகைத் தகராறு….. என்று ஆரம்பத்திலேயே மறுத்து விடுகிறார் கோபால் பிள்ளை. இருந்தாலும் ஸ்டடி சர்க்கிள் எப்படியும் ஆரம்பித்தாக வேண்டும் என்கிற முனைப்பில் பாலகிருஷ்ணன் மற்றும் துரைப்பாண்டி ஆகியோருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. பின்னாளில் இந்த இக்கட்டுகளிலிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள். இந்த ஆரம்பகட்டப் பேச்சு வார்த்தையிலிருந்து ஒவ்வொரு நகர்வும் பீட்டர் என்கிற இன்ஃபார்மர் மூலமாகப் போலீசுக்குத் தகவல் போய்க்கொண்டேயிருக்கிறது….நாவல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிக் கொள்கைகளுக்கும், ஆயுதப்புரட்சிக்கும் உள்ள ஒட்டாத வேறுபாடுகளை அங்கங்கே தொட்டுக் காட்டிக் கொண்டே ஸ்வாரஸ்யமாக நகர்ந்து செல்கிறது.
கோபால்பிள்ளையின் உறவினர் சுப்பிரமண்யபிள்ளையின் மகன் சோமு தெரிந்தும் தெரியாமலும் ஈடுபடுகிறான். படிப்படியாக ஈர்க்கப்படுகிறான். கூடவே துரைப்பாண்டி,  பிச்சாண்டி, வெள்ளையப்பன் என்று சேர்ந்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் போலீஸ் என்கொயரி என்று வந்துவிட சோமு அதிர்ந்து போகிறான். பிறகு நிலமையை உணர்ந்து பயந்து சுப்ரமணிய பிள்ளையின் ஜவுளிக்கடைக்கு ஒழுங்காக வேலைக்கு வர ஆரம்பிக்கிறான். தகவல் அறிந்து மருமகன் சோமுவிடம் லெட்சுமணபிள்ளை ஆதரவோடு பேசுகிறார். தன் பெண்ணின் வாழ்க்கை பாழ்பட்டுப் போகுமோ என்று பயந்திருந்தவருக்கு வெளிச்சம் கிட்டுகிறது.
ஆயுதப்புரட்சி என்பது நமக்கு சரிவராது என்கிற கருத்தினை முன்வைக்கும் வாதம் –
“நம்ம நாட்டிலே பிரச்சனைகள், கஷ்டங்கள் இல்லைன்னு சொல்லலை. ஆனா என்ன நடந்துக்கிட்டு இருக்குன்னு அத்தனை பேருக்கும் தெரியும். தங்களுடைய பிரச்னைகளுக்காக ஜனங்கள் போராடலாம். பத்திரிகையிலே எழுதலாம். மேடை போட்டு பிரச்னைகளைப் பற்றிப் பேசலாம். நமக்குப் பிடிச்ச மாதிரி வாழலாம். பிடிச்ச வேலையைச் செய்யலாம். சைனாவிலே இதெல்லாம் நடக்குமா? ரஷ்யாவிலே நடக்குமா? அங்கிருக்கிற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்ன சொல்றாங்களோ அதுதான் வேத வாக்கு. மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. இங்க இந்த சாரு மஜூம்தார் நிலப்பிரபுக்களை ஒழிக்கணும்ங்கிறார்ஆயுதப்புரட்சி வரணும்னு சொல்கிற அளவுக்கு அவருக்கு சுதந்திரம் தரப்பட்டிருக்கு. சைனாவிலே இந்த மாதிரி மாசேதுங்கை எதிர்த்துப் பேச முடியுமா? அந்தக் கவர்ன்மென்டை எதிர்த்து புரட்சி நடத்தப் போறேன்னு சொல்ல முடியுமா?
அப்போ மார்க்ஸிஸம், லெனினிஸம், மாவோயிஸம் எல்லாம் தப்பா?
மார்க்ஸ் ஏழைகள் கஷ்டப்படுகிறதைப் பார்த்து ஒரு கொள்கையை உருவாக்கினார். மூலதனம் எப்படி உருவாகிறதுன்னு ஆராய்ந்தார். அப்போ அவர் வாழ்ந்த ஜெர்மனி, பிரிட்டனிலே எல்லாம் தொழில்கள் எல்லாம் தனியார் கிட்டேதான் இருந்தது. தனியாரோட பங்களிப்புதான் அதிகம். தொழிலாளிகள், சாதாரண மக்களோட நிலமை ரொம்ப மோசமா இருந்தது. முதலாளிகளுக்குக் கடிவாளம் போட மார்க்ஸ் நினைச்சார். அவருடைய தத்துவம் எல்லாமே ஒரு சிலரிடமே செல்வம் குவிகிறது என்பதற்கு எதிரானதுதான். பிறகு வந்த லெனின் மார்க்ஸ் கொள்கைகளை விரிவுபடுத்தினார்.சோஷலிஸத்தை முன் வைத்தார். மக்களைத் திரட்டினார்…ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு அங்கே எல்லாம் அரசுடமை ஆகிவிட்டன. தனியுடமை ஒழிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிதான் உற்பத்தியைத் தீர்மானித்தது. ஆனால் ரஷ்ய மக்கள் அனைவரும் சுதந்திரமற்றவர்களாகிவிட்டார்கள். கம்யூனிஸ்ட் சர்வாதிகாரம் வந்து விட்டது. சைனாவிலும் இதுதான் நடந்தது. ரஷ்ய சீன அரசுகள் மனிதனின் சுதந்திரத்தையும் அவனது பேச்சுரிமைகளையும் சேர்த்தே ஒழித்து விட்டன. கலாச்சாரப் பண்பாட்டு சுதந்திரம்ங்கிறது இல்லாமலே போயிடுச்சு. நம்ம நாட்டுலே எல்லா மதத்துக்காரங்களும் அவங்களோட கடவுளைக் கும்பிடலாம். விழாக்கள் நடத்தலாம்…எல்லா மதத்துலயும் ஏராளமான சடங்குகள் இருக்கு. இதையெல்லாம் செய்யலாம். இதுதான் சுதந்திரம்ங்கிறது. வெறும் சாப்பாடு வேலை மட்டுமே மனிதனுக்குப் போதாது. சாமி கும்பிட, சடங்குகள் செய்ய வழி இருக்கணும்….
நாம யாரையும் சாதாரணமா காயப்படுத்தக் கூட முடியாது. ஆயுதம் வன்முறை எல்லாம் ஒத்து வருமா? யாரோ ஒருத்தர் வந்தாரு, ஏதோ ஒரு கட்டுரையைக் கொடுத்தாருன்னு அவர் புறத்தாலே போக முடியுமா? கட்சியிலே இருந்துதான் ஜனங்களுக்கு நல்லது செய்யணும்ங்கிறதுல்ல….நம்மளவுல யாருக்காவது உபகாரம் செய்தாக்கூட அது நல்ல விஷயம்தான்….- இப்படியான அறிவுரைகளில் தெளிகிறான் சோமு. துரைப்பாண்டி மட்டும் கடைசிவரை சாரு மஜூம்தார்தான் தன் தலைவன் என்று அலைந்து கைதாகிறான்.
இறுதியாக இவ்வாறு முடிக்கிறார் நாவலை.
இந்த 2018லும் எத்தனையோ கட்சிகள், கருத்துகள் மனிதர்களைப் பிடித்துள்ளன. அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம் , கல்வி என்று பல கருத்துகள். தங்களுக்குப் பிடித்தமான கருத்துகளே சதமென்று நம்பி மனிதர்கள் மோதிக் கொள்கிறார்கள். இப்படித்தான் உலகம் தன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது. என்று முடித்து தனது யதார்த்தமான, எளிய நடையினால் ஆயுதப்புரட்சியை மையப்படுத்திய அறுபது எழுபதுகள் காலகட்டத்தின் அந்தக் கொள்கைகள் நம் நாட்டுக்கு என்றும் பொருத்தமானவையல்ல என்பதை அழுத்தமாய் அழகான விவாதங்கள் மூலம் நிறுவுகிறார் வண்ணநிலவன்.நடந்ததும் அதுதானே…! அதைத் தெளிவுபடச் சொல்லியிருக்கிறார்.  இதுவரை தவறான கருத்துக் கொண்டவர்கள் கூட இந்த எளிய நாவலின் வழி தெளிவடைந்து தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளக் கூடும் என்கிற நம்பிக்கை நமக்கு இந்த நாவலை வாசித்து முடிக்கிறது போது எழுகிறது. தீவிரவாதம் என்பது எப்போதும் சாத்தியமில்லை என்கிற கருத்தை இந்நாவலின் வழி வலியுறுத்திய வண்ணநிலவன் 2018 ல் ஒரு சிறந்த மையக் கருத்தை முன் வைத்து நாவல் களமாகக் கொண்டு தன் முத்திரையை மீண்டும் பதித்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
/-----------------------------/





வண்ணநிலவன் சிறுகதைகள் , நயவுரை-2 இலக்கிய வேல்-2018


வண்ணநிலவன்               சிறுகதைகள்                      ,                நயவுரை-2                                    இலக்கிய வேல்-2018                    


வாசிக்க வேண்டும் என்ற மாளாத ஆசை என்னை சதா இயக்கியது. கதைகளின் மீது இருந்த தீராத கவர்ச்சி என்னை இழுத்துச் சென்றது. வாசித்துக் கொண்டிருப்பதே போதும் என்று தோன்றவில்லை. நாமும் எழுதிப் பார்த்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் இது என்கிறார் வண்ணநிலவன். எழுதிப் பார்க்க ஆரம்பித்த கதைகள் எழுதி எழுதி மேற்சென்று எப்படி ஆழமாய்த் தன் வேர்களை நிலத்தில்  ஓடவிட்டிருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். கதைகளைப் பெரும்பாலும் திட்டமிடுவதில்லை. மனதில் சிறு பொறி தட்டும். எழுத உட்கார்ந்தால்…எழுத எழுதக் கதை தானே வளரும் என்றும் பல சிறுகதைகளைப்  பற்றி வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே தெரியவில்லை என்றும் துக்கப்படுகிறார். அதற்காக வருத்தமும் இல்லை என்று உடனே சொல்லி, எல்லாம் உலகின் இயல்பு என்று சமாதானம் கொள்கிறார்.
இந்தப் பதமான மன இயல்புதான், பக்குவம்தான் மனிதர்களை ஊடுருவிப் பார்க்க வைத்து, வாழ்க்கையில் ஊடாடிக் கிடக்கும் இன்பங்களையும், துன்பங்களையும், சோகங்களையும், சந்தோஷங்களையும் அந்தந்தக் கால கட்டங்களில் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள், அதில் ஊறித் திளைத்துத் தங்களை எவ்வாறு மீட்டெடுத்துக் கொள்கிறார்கள் என்பதை சாதாரண, நடுத்தர வர்க்க வாழ்க்கையில் கிடந்து உழலும் ஆண்களை, பெண்களைப் பாத்திரமாகக் கொண்டு அவர்களின் இயல்பான சித்திரங்களை மனிதாபிமானத்தோடும், நேயத்தோடும்  தீட்டிக் கொண்டே போகிறார் வண்ணநிலவன்.
தைக்குப் பெயர்தான்பலாப்பழம்”. முக்கனிகளில் ஒன்று. அப்படியானால் எவ்வளவு சுவை மிக்கது. அது போல் இந்த வாழ்க்கையும் நாம் வாழும் முறைமையிலேயே சுவை மிக்கதாகிறது. சந்தோஷத்தைத் தக்க வைப்பதாக மாறுகிறது. அன்பு குடி கொண்டிருக்கும் இடம் இன்ப மயமாகிறது. அங்கே குறைகளும் நிறைகளாய்த் தெரிகின்றன. இல்லாமை என்பதும், இருப்பு என்பதும் மனதைப் பொறுத்த விஷயங்களாக மாறிவிடுகையில் புறச் சூழ்நிலைகள் எதுவும் அவர்களைச் சலனப்படுத்துவதில்லை. மனதுதான் நிறைந்து கிடக்கிறதே…! பிறகு மற்றவை எப்படி அவர்களை அசைத்துப் பார்க்க முடியும்?
பலாப்பழம் ஒரு குறியீடாகக் கதை முழுவதும் ஊடாடுகிறது. ஆனால் அது எங்கு புழங்குகிறதோ அந்த இடத்தில், அந்த வீட்டில் அது தன் மதிப்பை இழந்து நிற்கிறது. பலாப்பழத்தின் அதீத சுவையை ரசிப்பதற்கும் ஒரு இனிமையான சூழல், சந்தோஷமான தருணம், இணக்கமான அன்பின் ஊடாட்டம், அந்தக் கணத்தின் குறைந்தபட்ச மகிழ்ச்சி இவை இல்லாத சூழலில் எது வந்துமே, என்ன இருந்துமே  நிறையாது என்பது நிரூபணமாகிறது. உறவுகளுக்கிடையிலான அன்பு ஊடாடும் இடத்தில் எல்லாமும் இன்பமயமாகிறது.
ஒண்டுக் குடித்தனத்திலே நடுவிலே இருக்கும் தடுப்புப் பலகையைத் தாண்டிக் கொண்டு  வந்து சேரும் பலாப்பழத்தின் மணம்…..அங்கே அதைச் சுவைப்பவர்களின் சூழலில் இல்லை. ஆனால் அந்த மணத்தின் இனிமையை, அதன் சுவையை இல்லாமையில் தவித்துக் கிடக்கும் இப்பகுதி வீட்டில் இருப்போரின் நிறைந்த மனதின் அன்பான தருணங்கள் அழகாய் நிறைவு செய்து விடுகின்றன. முக்கனிகளில் ஒன்று பலாப்பழம். தனிச்சுவை. ஈடுசெய்ய முடியாதது. அந்த முக்கனிச் சுவை, எதுவுமேயில்லாத ஆனால் எல்லாம் நிறைந்திருக்கிற இவர்கள் வாழ்க்கையின் அந்நியோன்யத்தில் திளைக்கிறது. அன்பெனும் வலையினால் பின்னப்பட்டு சுவை மிக்கதாக மிளிர்கிறது.  
எளிமையே மனித வாழ்க்கைக்கு நிம்மதியைத் தரும் மாமருந்து. அந்த மனநிலை, பிறவியிலிருந்தே வாய்க்க வேண்டும். வாய்க்கப் பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். செல்லப்பாப்பா புரண்டு படுத்து கனமான அடி வயிறு சிமிண்டுத் தரையின் குளுமையை உணரத் தலைப்படும்போது அந்த சுகானுபவத்தை நாமும் உணருகிறோம். அடுப்படி மூலையில் சத்தத்தோடு எரியும் ஸ்டவ்வின் திரிகள் கட்டையாகி, சிலது எரியாத நிலையில் எதை வைத்தாலும் இறக்குவதற்கு நேரமாகிவிடும் தாமதத்தில், அதைப் பொருட்படுத்தாது தரையில் ஒன்றையும் விரிக்காமல் குளிர்ச்சியாய் உருளும் மனசை லேசாக்கிவிடுகிறது. வீட்டிலுள்ள எந்த பாட்டில்களிலும், டப்பாக்களிலும் எந்தப் பொருளும், பண்டங்களும் இல்லைதான். ஆனால் அவர்களுக்குள்ளே மனசு நிறைந்து கிடக்கிறது. அவளுக்கும் சீனிவாசனுக்குமான அன்பான புரிதல் அந்த இல்லாமையைத் தாண்டிய நிறைவை அவர்களுக்கு அளிக்கிறது.
பலாப்பழத்தை வைத்துக் கொண்டு அமளி துமளிப்படும் பக்கத்துக் குடித்தனத்திலிருந்து நழுவி ஓடி வந்து விடும் மணம், இல்லாமையில் கிடந்து உழன்றாலும் நிறைந்து கிடக்கும் அவர்களின் மனசை ஆவலோடு வந்து தழுவிக் கொள்கிறது. ஒங்களுக்கு இன்னும் சம்பளம் போடல? என்று கேட்கிறாள் அவள். அவன் முகம் அந்தக் கேள்வியில் மாறிப் போகிறது. கேட்டிருக்க வேண்டாமோ என்று நினைக்கிறாள். அவன் சொல்கிறான். பேச்சு வார்த்தை முடியற வரைக்கும் சம்பளம் வாங்குறதில்லன்னு முடிவு செஞ்சிருக்கோம்….
இப்போது பழ வாசனை ரொம்பவும் காரமாக ஒரு நெடி பரவுவது போல் அந்த அறை முழுதும் விரவிக் கிடக்கிறது. கௌப்புல போயி இட்லி ஏதாவது வாங்கிட்டு வாரேன்…என்று புறப்படுகிறான் அவன். துட்டு? என்கிறாள் அவள். அரிகிருஷ்ணன்ட்ட வாங்கினேன் என்கிறான். எந்த அரிகிருஷ்ணன் என்று அவள் கேட்க…கல்யாணம் ஆன புதுசுல வந்தானே அவன்தான் என்று சொல்ல…மேலும் தகவலாய் இன்னைக்கு சாயந்தரம் மேகநாதன் இருபது ரூவா தாரேன்னு சொல்லியிருக்கான்  என்கிறான். சாயந்தரம் ரெடியா இரு…டாக்டர்ட்டப் போவோம்  என்று அவன் சொல்லும்போது…எதுக்குப்பா…சம்பளம் வாங்கிப் போயிக்கிடலாமே என்க, அவன் கோபமுறுகிறான். இப்டி மறுத்துப் பேசினா எப்டி? என்று செல்லமாய்க் கண்டிக்க…அவர்கள் இருவர் இடையிலான அன்பின் பரிமாணம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. இல்லாமை இருக்கும் இடத்தில் மனசு நிறைந்து கிடக்கும்போது வீடே செல்வச் செழிப்புள்ள இடமாக மாறி விடுகிறது. சுற்றி இருப்பவர்கள் உதவி செய்பவர்களாக இருந்து விடுகையில் வாழ்க்கை பலப்பட்டு விடுகிறது. வாழ்க்கை நிறைந்தே கிடக்கிறது. சீனிவாசன் நேரம் கழித்து வெறும் கையோடு வீடு திரும்புகிறான். அவனுக்கென்று எடுத்து வைத்திருந்த உணவை அவன் முன்னே கொண்டு வந்து வைத்து பசியாறட்டும் முதலில் என்று படுத்திருக்கிறாள் செல்லப்பாப்பா. திடீரென்று அந்தப் பழ வாசனை அங்கே அடிக்க, ஆச்சரியத்துடன் எழுந்து உட்கார்ந்து கொள்கிறாள். அவன் குனிந்து மெதுவாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் என்று முடிகிறது கதை. நிதானத்தோடும், அன்பு மனத்தோடும் சிந்தித்துச் செயல்படுபவர்கள் துன்பமான விளைவுகளிலிருந்து தங்களைத் தாங்களே சுலபமாய் விடுவித்துக் கொள்கிறார்கள்.  என்னவொரு முதிரிச்சியான செயல்பாடு என்று வியந்து போகிறோம். ஆழ்ந்த ரசனையும், மனங்களை அளவிடும் தன்மையும், அதனால் விளையும் ஆழமான எழுத்து வன்மையும் வண்ணநிலவனின் இந்தக் கதையின் வாசிப்பு அனுபவத்தில் நம்மை வியக்க வைக்கிறது. கதை முடிந்த பின்பும் பலாப்பழம் மணத்துக் கொண்டேயிருக்கிறது.
      நான் சாதாரண வாசகனாய்த்தான் இருந்தேன். ஜனரஞ்சகமான எழுத்துக்க ளில்தான் என் வாசிப்பைத் துவக்கினேன். பொழுது போனதுதான் மிச்சம். ஆனால் மனதை ஒன்றும் செய்யவில்லை. படித்து விட்டு நான்கு நாட்களுக்கேனும் அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்க வாய்க்கவேயில்லை. வழிகாட்டுபவர் எவருமில்லை. எல்லாமும் நம்முடைய சொந்தத் தேடலில்தான் நிகழ்ந்தாக வேண்டும். தீபம் பத்திரிகையிலிருந்துதான் வாசிப்பு மாறுபாடு என்பது ஆரம்பித்தது. சகோதரரின் உபயத்தில் மதுரையிலிருந்து ஊர் திரும்பும்போது வாங்கி வந்து படிக்கக் கிடைத்தது. அதன்பின்தான் உள்ளூர் நூலகத்தில் வாசிப்பின் திசை மாற ஆரம்பித்தது. மணிக்கொடிக் கால எழுத்தாளர்கள் என்று ஒரு வகை இருப்பதும், 1930 களிலிருந்து ஜெயகாந்தன் வரையிலான படைப்பாளிகளைத் தேடி அணுக வேண்டிய அவசியமும் வாசிப்பின் சுவாரஸ்யத்தை, அவசியத்தை, ஆழத்தை உணர்த்தியது. பிறகுதான் இப்படியான படைப்புக்களை மட்டுமே படிப்பது என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னுள்ளிருந்த ஆழ்ந்த ரசனை எனக்கே தெரிய ஆரம்பித்தது அந்தக் கால கட்டம்தான். இப்படியெல்லாமும் எழுத முடியுமா என்று வியப்பு மேலிட்ட அந்தப் பொழுதுகளில் கொஞ்சம் எழுதவும் கற்றது அப்போதுதான். வார மாத இதழ்கள் படிப்படியாக என் எழுத்துக்களை ஏற்றுக் கொண்ட போது மன ஊக்கம் பெற்று இன்றுவரை எனக்கென்று படிந்து போன ஒரு எழுத்துவகைமையில் படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கிறேன் நான். ஆனாலும் இன்னும் எட்டப்படாத ஒன்று இருந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அதுவும் நானாக உணர்ந்து கொண்டதுதான். எவரும் சொல்லி அறிந்ததில்லை. வந்த வழியும் அப்படித்தானே…செல்லும் வழியையும் நாம்தானே நிர்ணயிக்க வேண்டும்.   எப்போதோ எழுதப்பட்டுவிட்ட  விழுமியங்களான அப்படைப்புக்கள் இன்றுவரை நிற்பது கண்டு வியந்து ஏங்குகிறது மனம். இன்றாவது சில  அப்படி எழுதி விட மாட்டோமா என்று தொடர்ந்து முயலுகிறது மனம்.
அப்படி ஒன்றுதான் இது. வண்ணநிலவனின் “மிருகம்“ . இக்கதையைப் படிக்கும்போது கலைக் கண்களோடு காமிரா வழியாகப் பயணித்துப் படித்தால்  வாசிப்பிலும் சிறப்பாக விளங்கும் என்று உணர்த்தியது எனக்கு. எதைச் சொல்ல வந்தாரோ அதை வாசகர்களுக்கு உணர்த்துவதுபோல் கதையின் தலைப்பை வெளிப்படையாய்த்  தேர்ந்தெடுத்திருந்தார் என்றால் சாதாரண வாசகன் எளிமையாகப் புரிந்து கொண்டு …இவ்வளவுதானா?  என்று நகர்ந்து விடக் கூடும். அம்மாதிரித் தலைப்பு வைக்காததே படைப்பாளியின் மேன்மை.  சாதாரண வாசகனுக்கான ஸ்வாரஸ்யம் எதுவும் இப் படைப்புக்களில் தரப்படுவதில்லை. எல்லாவற்றையும் நானே சொல்வதானால்? விரக்திதான் எழுதுபவனுக்கு வரும். படைப்பாளியின் வேலை அதுவல்ல. வாசகனால் அறியப்படாத ஒன்றை, அவனால் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றை, தான் கற்பனையில் அனுபவித்து, உணர்ந்து, தானும் அனுபவிக்காத ஒன்றை மனக் கண்ணில் கொண்டு வந்து அதை எழுத்தில் சூட்சுமமாக வடிக்கும்போது, இதுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஒரு தீவிர வாசிப்பாளனால் கண்டடையப்படுமானால் அதுதான் அந்தப் படைப்பாளிக்கும் வெற்றி. அதைப் படித்து உணர்ந்த வாசகனுக்கும் பெருமை. உணர்த்த  நினைத்ததை உரையாடல்கள் மூலம் நிகழ்த்தாமல், மன உணர்வுகள் மூலம் பிணைத்துப் பிணைத்து காட்சிகளைக் கலைப் படமாக்கி, என்ன நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதைப் படிக்கும் வாசகன் படைப்பாளியின் அந்த உலகைக் கண்டடையும் முயற்சி வாசிப்பின் உச்சமாக அமைந்து வெற்றி கொள்கிறது.
இந்தக் கதையில் ஒரு காகம், ஒரு நாய், ஒரு மனிதன், பாழடைந்த வீடு, இதுதான் பாத்திரங்கள். என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதை வாசகன்தான் படைப்பாளியின் வரிக்கு வரியான எழுத்தைப் பின்தொடர்ந்து கண்டடைய வேண்டும். முதல் வாசிப்பில் எனக்கும் பிடிபடவில்லைதான். எதற்காக இப்டிச் சொல்கிறார்…என்று மீண்டும் மீண்டும் படித்த போது, நான் சொந்த ஊருக்குப் போயிருந்தநாட்களில் குடியிருந்த தெருவின் பல வீடுகள் சிதிலமடைந்திருந்ததும், குடியிருந்த வீடே பகுதி பகுதியாக இடிந்து கிடந்ததும், இடிந்த வீட்டின் நடுவில் நின்று அம்மாவோடும், அப்பாவோடும் கழித்த காலங்களை மனக் கண்ணில் கொண்டு வந்து உணர்ச்சி மேலிட்டதும், அறிந்தும் அறியப்படாமல் போன பல நிகழ்வுகள் வழி நடத்திச் சென்ற காலகட்டங்களும் அழியாது மனக்கண்ணில்  நின்று அவை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதும்….ஆகிய அழியாக் காட்சிகள், இந்தப் படைப்பினை உய்த்துணரப் பெரிதும் உதவின என்று புரிந்து கொண்டேன். பஞ்சம் என்ற ஒரு வார்த்தையைச் சொல்லாமல் காட்சிகளின் மூலமாய், அதனை விவரித்துக் கொண்டே செல்வதன் வழி, பாழடைந்த வீடும், குட்டிச் சுவரில் அமர்ந்திருக்கும் ஒற்றைக் காகமும் தத்தித் தத்தி அருகருகே அமர்ந்து ஏதேனும் இரை கிடைத்து விடாதா என்ற எதிர்பார்ப்பும்,  அபூர்வமாய் அந்தத் தெருவுக்குள் நுழையும் ஒற்றை மனிதனின் தடங்களைப் பின்பற்றி வரும் ஒரு நாயும்….குடியிருந்த வீட்டின் அழிந்து பட்ட தற்போதைய சூழலும்….இப்படி எல்லாமாகச் சேர்ந்து நமக்கு ஒரு சோகமான, அடர்த்தியான மன உணர்வைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.
அந்தத் தெருவிலிருந்து நாம் வெளியேறும்போது பாதிப்புக்குள்ளானவர்களில் ஒருவனாய் நம்மையே நாம் உணர்கின்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இலக்கியம் இப்படிக் காணாததைக் கண்டடையும்போது மெய் சிலிர்க்க வைத்து விடுகிறது. இந்த மொத்தக் கதைகளின் தொகுதியில் தலைசிறந்த படைப்பில் ஒன்றாக “மிருகம்” என்ற இச்சிறுகதையை நான் உணர்கிறேன்.
னிதனுடைய மனநிலை அடிக்கடி மாறக் கூடியது. சூழலுக்கேற்றாற்போல் மாறும் மனநிலையில் அவனுடைய செயல்பாடுகளும் மாறுபடுகின்றன. அதிலும் வாழ்க்கைப் படகைச் சீராக ஓட்டிச் செல்ல முடியாத காரணிகளினால் துன்பத்திற்கும், மனச் சங்கடத்திற்கும் ஆளாகி அடிக்கடி வெவ்வேறு மனநிலைகளுக்கு ஆட்பட்டுச் சிதைந்து போகிறான். அம்மாதிரிச் சந்தர்ப்பங்களில் பார்க்கும் பொருட்களிலெல்லாம் பேசும் இடங்களிலிலெல்லாம் அல்லது பேச முற்படும் நபர்களிடமெல்லாம் காரணமில்லாமல் எரிந்து விழுவதும், தேவையில்லாமல் கோபப் படுவதும், அர்த்தமேயில்லாமல் பேசுவதும், வீட்டில் நெருக்கமான உறவுகளிடம் சட்டுச் சட்டென்று கடுமையான வார்த்தைகளில் கொந்தளிப்பதும் அவனது நடப்பாக மாறிப் போகிறது. தான் செய்வது தேவையில்லாதது, அர்த்தமற்றது, காரணமேயில்லாதது என்று உணர்ந்தும் அவனால் அவனது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.
மன நல ரீதியாக இதற்கான காரணங்களை ஆராய முற்பட்டால் இளம் வயதிலிருந்து பாதிக்கப்பட்ட எத்தனையோ விஷயங்கள் உள்ளத்தின் ஆழத்திற்குள் படிந்து போய், அதே சமயத்தில் அவை இன்னதென்று இனம் புரியாத நிலையில், அது தன்னுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறது என்பதை அறுதியிட்டு உணர முடியாமல், அதற்கான திராணியின்றி அல்லது எதற்காக அதனை ஆராய வேண்டும் என்கிற மன வீம்பில் மேலும் மேலும் தவறுகளைச் செய்து கொண்டே செல்பவர்கள் அநேகர்.
இம்மாதிரி இந்த வாழ்க்கையில் ஏதேனும் ஒரு விஷயமோ அல்லது பல விஷயங்களோ நம்மை விடாது தொந்தரவு செய்து கொண்டே இருக்கின்றன என்பது நாம் உணர்ந்தோ அல்லது உணராமலோ உண்மையாக இருந்து கொண்டிருக்கிறது. இப்படியாகத்தான் இந்தக் கதை நாயகனின் நடவடிக்கைகள் அவனையறியாதும், அவனை மீறியும் நடந்து போகின்றன. ஒரு குறிப்பிட்ட விஷயம் அவனைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறது. ஏற்கனவே இயலாமையில் இருந்து கொண்டிருக்கும் சுய பச்சாதாபம் உள்ள அவனுக்கு, வாழ்க்கையின் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதையும் வெற்றி கொள்ள முடியாத நிலையில் தவிக்கும் அவனுக்கு….இவைதான் காரணங்கள் என்று அறிந்தும் அறியா நிலையில் தொட்டதற்கெல்லாம் கோபமும் எரிச்சலும் ஏற்பட அவனைத் தொடர்ந்து தொந்தரவு செய்யும் அந்த ஒரு விஷயத்தின் மீது தீராப் பழி படிந்து போகிறது.
கதையின் பெயர் “வெளிச்சம்“ .  நியாயமாகப் பார்த்தால் வெளிச்சம் ஒரு நாளின் பகல் பொழுதிலும், குறிப்பாக இரவுப் பொழுதுகளிலும் மனிதனுக்குத் தேவையான, தவிர்க்க முடியாமல் இருக்கும் ஒன்று. ஆனால் அதுவே அளவிட முடியாமல் போகும்போதோ அல்லது தேவையில்லாமல் தேவையில்லாத இடத்தில், நேரத்தில் படரும்போதோ அதன் மீது எரிச்சலும் கோபமும் ஏற்பட அதுவே வேண்டாததாக அமைகிறது. அதற்கான மனக் காரணங்கள் அந்தச் செயலைத் தூண்டுகின்றன என்பது மனோதத்துவ ரீதியாக உணரப்பட வேண்டியது.
மெர்க்குரி விளக்கின் தீமைகளைப்பற்றி  உலகம் பூராவும் போய்ப் பிரசங்கம் செய்யத் தேவையான அளவுக்கு அவனுக்கும் அந்த மெர்க்குரி விளக்குக்கும் இடையே பெரிய விரோதம் வளர்ந்து போயிருந்தது. இந்தப் பூமியில் இப்போது அவனுக்குள்ள ஒரே எதிரி இந்த மெர்க்குரி விளக்குதான்….என்று கதையையே இந்த மையத்தை வைத்துத்தான் ஆரம்பிக்கிறார் வண்ணநிலவன்.
விளக்கு வெளிச்சம் கொடுக்கப் போகுது….அது நல்லதுதானே….அது மேலே ஏன் கோபம் வரணும்? அதுவும் வீட்டு வாசல்ல தெருக் கம்பத்துலர்ந்து வர்ற அந்த வெளிச்சம் இலவசமாக் கிடைக்கிற வசதிதானே….என்று படிப்பவர்கள் மனதில் சட்டென்று அந்த மேலோட்டமான உணர்வுதான் தோன்றும்.
ஆனால் சற்றே ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால்தான் அதற்கான காரணங்கள் நமக்குப் புலப்படத் துவங்கும். வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியா நிலையில் இருக்கும் ஒருவன், பொருளாதார ரீதியாகப் பற்றாக் குறையில் கழிக்கும் ஒருவன், இந்த இயலாமைகளின் வெளிப்பாடாக அவனைத் தொந்தரவு செய்யும் விஷயமாக அந்த மெர்க்குரி வெளிச்சத்தை வெறுக்கிறான். வீட்டிற்கு வரும்போதெல்லாம், வீட்டில் இருக்கும் போதெல்லாம் தன்னை அது மிகவும் துன்புறுத்துகிறது என்று நினைத்துக் கோபமுறுகிறான். முதலில் எடுத்ததற்கெல்லாம், தொட்டதற்கெல்லாம் அர்த்தமில்லாமலும், அர்த்தத்தோடும் கோபம் கொள்ளும் அவன், பிற்பாடு நேரடியாக அந்த விளக்கு வெளிச்சத்தின் மீது தன் வெறுப்பைப் பாய்ச்சுகிறான். வீட்டிற்குள் நுழையும் அந்த வெளிச்சத்தை மறைக்க ஒரு திரைச்சீலை கூட  வாங்க முடியாத இழி நிலையில் இருக்கும் தன் இருப்பை நினைத்து நொந்து போகிறான். அறை நெடுகிலும் ஓடி ஓடிக் காலால் மிதித்து, கைகளால் அடித்து அந்த ஒளியை விரட்ட வேண்டும்…வெளிச்சத்துக்கு…வெறும் விளக்கு வெளிச்சத்துக்கு இத்தனை வல்லமையா? அந்த விளக்கினால் அந்த வீடே நிர்மூலமாகிக் கொண்டிருக்கிறதாய்த் தோன்றுகிறது அவனுக்கு. அவர்கள் இருவருக்குள்ளும் வீணாய்ச் சண்டை வருகிறது இதனால்…வெளிச்சம் இத்தனை இடர்பாடுகளையா உண்டு பண்ணும்? அப்படியானால் அது எத்தனை கொடுமையானது? என்று அவனின் எண்ணங்கள் உச்சத்திற்குச் செல்கின்றன.
திடீரென்று எழுந்து கதவைத் திறந்து கொண்டு வெளியோ போய்…தெருவின் இரண்டு பக்கமும் பார்வையை வீசுகிறான். கீழே கிடந்த கற்களைப் பொறுக்கி அந்த மெர்க்குரி பல்பை நோக்கிக் குறிபார்த்து வீச  நான்காவது கல் பல்பில் பட்டு உடைந்து கண்ணாடிச் சில்லுகள் தெறித்து விழுகின்றன. படிக்கும் நமக்கும் அப்பாடா….என்றிருக்கிறது. ஒரு வழியாய் அவனின் மன உளைச்சலுக்குத் தீர்வு வந்ததே  என்று நிம்மதிப்படுகிறது நம் மனசு.
சிகரங்களைத் தொட்ட சிறுகதைகள் என்று வண்ணநிலவனின் பல கதைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ரெண்டு பக்கங்கள், மூணு பக்கங்கள்தானே என்று நினைத்து விட முடியாது. அது எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது, எதை மைய ஓட்டமாக உணர்த்துகிறது என்பதைப் புரிந்து கொள்வோமானால் படைப்பாளியின் மேன்மை புரியும்.  வெறும் பக்கங்கள் அளவிடுவதில்லை படைப்பின் மதிப்பை. இன்று எழுதப்படுவதாகச் சொல்லப்படும் எத்தனையோ வகைமையான படைப்புக்களை அன்றே அந்த மூத்த தலைமுறை எழுத்தாளர்களே என்றோ எழுதி முடித்து விட்டார்கள் என்றுதான் நான் சொல்லுவேன். அவைகளைத் திரும்பத் திரும்ப மறு வாசிப்பு செய்வதன் மூலமாகத்தான் நாம் நம்மை ஓரளவு தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற உண்மையை ஒரு தீவிர வாசகன் என்றும் மறுத்து விட முடியாது. வண்ணநிலவனின் படைப்புக்கள் காலத்தால் அழியாதவையாய் நிலை பெற்றுள்ளன.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------










வண்ணநிலவன் சிறுகதைகள்-வாசிப்பு அனுபவம்-இலக்கியவேல் மாத இதழ் 2018


வண்ணநிலவன் சிறுகதைகள்                                     வாசிப்பு அனுபவம்           (இலக்கிய வேல்-இதழில் வெளி வந்தது-2018)                                                          
      
       மிகுந்த கௌரவம் பார்க்கும் ஒருவர், அதற்கு எந்தவிதமான பங்கமும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாய், அதே சமயம் தன் சபலத்தை விட முடியாதவராய், யாருக்கும் தெரிந்துவிடலாகாதே  என்பதில் மிகுந்த ஜாக்கிரதை உணர்வு கொண்டவராய் நின்று அலைக்கழியும் ஒரு பெரிய மனிதனின் கதை இது.
     நூல் மேல் நடப்பது போலான எழுத்து. கொஞ்சம் அப்படி  இப்படி நகர்ந்தால் கூட விரசம் தட்டிவிடும். …இவ்வளவு ஆபாசமா…? என்று எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொள்ளக் கூடும். அதற்கெல்லாம் இடம் கொடுக்காது, தன் ஆழ்ந்த ரசனையின்பாற்பட்டு, பல்லாண்டு கால வாசிப்பு அனுபவத்தின்பாற்பட்டு, ரொம்பவும் அநாயாசமாய் இக்கதையின் கருவைக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார் வண்ணநிலவன். வாசிக்க வேண்டும் என்ற மாளாத ஆசை என்னை சதா இயக்கியது, கதைகளின் மீது இருந்த தீராத கவர்ச்சி என்னை இழுத்துச் சென்றது என்கிறார். எழுதிப் பார்த்தால் என்ன என்று ஆரம்பித்து அவரது எழுத்து பல படைப்புகளில் நம்மை பிரமிக்க வைப்பதாக அமைந்து விடுகிறது என்பதுதான் சத்தியமான உண்மை.
     “சிகரங்களைத் தொட்ட சிறுகதைகள்” என்ற தலைப்பில் அந்நாளைய தாய் வார இதழில் கவிஞர் பழனிபாரதி  அவர்கள் தொகுத்தளித்த பல அற்புதமான சிறுகதைகளில் வண்ணநிலவனின் இந்த “மனைவியின் நண்பர்“ என்ற சிறுகதை முக்கிய இடம் பெறுகிறது.
     வரிக்கு வரி தன் எழுத்துத் திறமையால் விளையாடியிருக்கிறார் ஆசிரியர்.. கதையின் ஆரம்பம் முதல் கடைசி வரி வரை அந்த ரங்கராஜூவின் நடவடிக்கைகளில் ஒளிந்திருக்கும் சபலம்,  திருட்டுத்தனம், போலித்தனம், அதை மறைக்க முயலும் பெரியமனிதத் தனம், அதைப் பறைசாற்றிக் கொண்டேயிருக்கும். அவர்தான் அந்தக் கடைக்காரனின் மனையாள் மேல் தவிர்க்க முடியாத மோகம் கொண்டு தனக்குள் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறாரே…! அவளைப் பார்ப்பதற்காகத் தினமும் வந்து வந்து அவர் தனக்குள் அவமானப்படும்  அந்தச் சுய பச்சாதாபம் நம்மையே சங்கடப் படுத்த வைக்கும். எதுக்கு இந்த மனுஷன் இப்டி அலையறாரு? என்று தோன்றும். ஆனாலும் என்னதான் செய்றார் பார்ப்போம் … என்று நகர வைக்கும். ஒரு பெண்ணை ரசிப்பதிலும், அவளுக்காக ஏங்குவதிலும்தான் வரிக்கு வரி எத்தனை விதமான நுட்பங்களை  நுழைத்திருக்கிறார் ஆசிரியர். முறையற்ற செயலில் என்னதான் ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்தாலும் அது தன்னை மீறி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தும்  என்பதை எத்தனை சூட்சுமமாக வெளிப்படுத்துகிறார்.
அவரின் தேவை அவர்களுக்கு இருந்தது. பொருளாதாரத் தேவை. கொடுக்கல் வாங்கல்.  குறிப்பாக அவளின் கணவனுக்கு. ஈடு செய்து வியாபாரத்தை மேலெடுத்துச் செல்ல. தேவைப்படும் நிலையில், மனைவியின் அவர்பாலான நெருக்கத்தையும், அது வரம்பு மீறிப் போகாமல் கழிகிறதா என்கிற கவனத்தையும் கொள்கிறது.  குறிப்பிட்ட அளவிலான பழக்கமானால் இருந்து தொலைத்துவிட்டுப் போகட்டும் என்கிற தவிர்க்க முடியா நிலையில் அவரின் சுதந்திரமான வரவு அவர்கள் இருவரையுமே தடுக்க விடாமல் செய்து விடுகிறது. அது அவருக்குப் பயனளிக்கும் விதமாய், லாபகரமானதாய், அதிக சுதந்திரம் எடுத்துக் கொள்ளும் அதிகாரமாய் நாளுக்கு நாள் மாறி விடுகிறது. சிவகாமி, சிவகாமி என்று மனதுக்குள் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கத்தை நேரில் சென்று அனுதினமும் கண்டு, களித்து,  அடைய தவியாய்த் தவிக்கும் அந்தப் பொழுதுகள் வயதுக்கு மீறிய வெட்கங்கெட்ட செயலாயினும், விட முடியாமல் மையலில் கொள்ளும் தவிப்பு, விடாத  பதற்றத்தை அவருக்குள் ஏற்படுத்தும் தருணங்கள் நம்மையே அவருக்கு நிழலாய் மாற்றிக் கொண்டு உருமாறி நின்று கதை முழுக்க அவரோடு வலம் வரச்செய்கிறது.
     அவளைப் பார்ப்பதும், கிளம்பி வருவதும்தான் கதை என்று கொண்டாலும், அந்த அரிய  சந்திப்பிற்காக ஒருவன் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு எச்சில் வழிய வழிய அலைந்து எடுத்துக் கொள்ளும் எத்தனங்கள் இந்தப் பித்துப் பிடித்தவனுக்கு எதுவுமே வெட்கமாய்த் தோன்றாது என்கின்ற முனை மழுங்கிய உண்மையை  நம் முன்னே உரித்துப் போட்டு விடுகிறது. அடப் பாவமே என்று பரிதாபம் கொள்ளும் நிலைக்குக் கூட வாசகனைத் தள்ளும் இரக்கச் சிந்தையை மனதில் ஊட்டி விடுகிறது.
ஆழ்ந்த ரசனையோடு படிப்பது என்பது வேறு. படிப்பவர்களின் ரசனையைத் தன் எழுத்துத் திறத்தின் மூலம் வளர்ப்பது என்பது வேறு. வண்ணநிலவனின் எழுத்து இரண்டாம் வகையினைச் சேர்ந்ததாக இருக்கிறது.
     .பச்சை வண்ண ராலே வண்டியில் வந்து இறங்குகிறார் ரங்கராஜூ. புத்தம் புதியதாய்த் துடைத்துப் பராமரிக்கும் அதை  அவரின் கௌரவத்தின் அடையாளமாய்க் கொண்டு கடைக்கு முன்னே நிறுத்துகிறார். அந்தக் காலத்தில் சைக்கிள் வைத்திருப்பவர்கள் அதிலும் அதிக விலையுள்ள ராலே வண்டி வைத்திருப்பவர்கள் பெருமைக்குரியவர்கள்…வசதியானவர்கள்….அது அவரின் அடையாளமாய்க் காட்டப்படுகிறது.. அவர் அவனைக் (அந்தக் கடைக்காரனை…அதாவது சிவகாமியின் கணவனை) கண்டுகொண்ட மாதிரியே தெரியவில்லை. அதுதானே எடுத்துக் கொண்ட  உரிமை. அவசரத்துக்கு செய்யும் பண உதவி, இந்த உரிமையைத் தந்து விடுகிறது.அவனை மீறி அவன் மனைவியோடு பழகும் உரிமையையும் தருகிறது. அடிக்கடி வந்தாலும், தற்செயலாய் வந்ததுபோல் வருவதும், நிதானமாய் வண்டியை நிறுத்துவதும், தெருக்கோடி வரை பார்வையை ஓட விடுவதும், அவசரமோ, பதட்டமோ  இல்லாதது போலத்  தன்னைக் காட்டிக் கொள்வதும், அவரின் கௌரவத்தின் அடையாளமாய் நாடகமாடினாலும்,  விசேஷ அர்த்தம் என்று அவனுக்கும், ஏன் அவருக்குமே ஏதுமில்லாவிடினும், கடையில் உட்கார்ந்திருக்கும் அந்த அவனுக்கு அவரது செய்கைகள் அருவருப்பூட்டுவதாகவே அமைகிறது.. எதிர்க்க முடியாத நிலையில், வாய் விட்டுச் சொல்ல முடியாத இயலாமையில், மனதுக்குள் நினைத்துக் கொள்ளத் தடையில்லையே…! இவனெல்லாம் ஒரு பெரிய மனுஷன்….! வெட்கங்கெட்ட ஆளு….
     கடைக்கு வெளியே கிடக்கும் ஸ்டூலில், கழுத்திலிருந்து கைக்குட்டையை உருவி அலட்சியமாய்த் தூசி தட்டிவிட்டு  உட்கார்ந்த பிறகும் அவனைப் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளாதது….தவறேயாயினும் அதையும் கௌரவமுள்ளவனாய் நின்றுதான் செய்ய முடியும்  என்கிற அவரது மிதப்பான போக்கு….இத்தனையும் சேர்ந்து அந்த இடத்திலான சகஜத் தன்மையைப் போக்கி விடுவதானது….அவர்களுக்குள்ளே நிகழும் உள்ளார்ந்த நாடகமாகப் பரிணமிக்கிறது. அங்கு வருவதும், அப்படி சுதந்திரமாய்த் தன் இடத்தைப் பிடித்துக் கொண்டு இருப்பதுவும் தன் உரிமை என்று சொல்லாமல் சொல்லப்படுகிறது.
     தடுக்க முடியாத நிலையில் அவரின் அவ்வப்போதைய உதவியை வேண்டி நிற்கும் அவன், அதற்காக இந்த அளவிலான உரிமையை ஒருவர் தானே எடுத்துக் கொள்வது எப்படிச் சரி என்று தட்டிக் கேட்க முடியாதவனாய் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் அவன், அவரின் ஒவ்வொரு செய்கைகளையும் கண்டு கண்டு வெறுக்கிறான்.  விட்டு உதற முடியாமல் தவிக்கிறான். உதவி என்ற ஒன்று தேவைப்படுகிறதே…!
எட்டு முழு வேட்டியின் ஒரு தட்டை மட்டும் மடித்துக் கட்டிக் கொண்டிருப்போரைப் பார்த்தால் முன்பெல்லாம் பிடிக்கும்தான் அவனுக்கு, ஆனால் அவர் அவ்வாறு கட்டிக் கொண்டு அநாயாசமய் நிற்பது பார்க்கப் பிடிக்காமல் போகிறது.  அது போக்கிரிப் பயல்களின் செயலாய்த் தோன்றுகிறது.  மனதுக்குள் வெறுப்பை ஏற்படுத்த, அதை உணர்ந்து தன்னை மீறிய சிந்தனையில் “போக்கிரி” என்று சொல்லி விடுகிறான். காதில் விழுந்து விடுகிறது அவருக்கு. இரண்டு குழந்தைகளோடு ஒரு குடும்பம்  என்று உள்ள அவர், கொடுக்கல் வாங்கல் வசதி படைத்த அவர், ஒரு நாணயச் சங்கத்தின் தலைவராக இருந்து அதன் மூலம் தன் கௌரவத்தை உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கும்  அவர், கழுத்தில் சட்டைக் காலர் அழுக்காகி விடக் கூடாது என்று மட்டுமே கைக்குட்டை செருகி வைத்திருப்பது என்பதான அடையாளங்களை வைத்து அவரை அப்படி அழைத்து விட முடியுமாயின் அவர் அப்படித்தான் என்று ஒரு நீண்ட சிந்தனைச் சரத்தில் அவன் மூழ்கியிருக்கும்போது “போக்கிரிதான்” என்று தன்னை மீறி உளறிவிடுகிறான். தீர்மானமாய் விழுகிறது அந்த வார்த்தை.  சந்தேகத்தோடும் புதிரோடும் அவர் அவனையே உற்றுப் பார்ப்பதும்….அவரை சற்றே அதிர வைக்கும் அற்புதமான இடங்கள். கௌரவத்தைப் பாதுகாக்கும் இவர், அந்த வார்த்தையை அவன் வாயால் கேட்டால், கேட்க நேர்ந்தால் என்னாவது? என்னது… என்று கேட்பதோடு நிறுத்திக் கொள்கிறார். அதற்குமேல் போனால் அவருக்குத்தானே அசிங்கம்…என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
     இது வெளி நடவடிக்கைகள். ஆனால் வந்த காரியம் அதுவல்லவே. அவளையல்லவா பார்க்க வேண்டி அப்படி வந்து காத்திருக்கிறார்! இந்தச் சத்தத்திற்கு அவள் இந்நேரம் வெளிப்பட்டிருக்க வேண்டும்….அப்படி அவள் வந்து நிற்பதுதானே அவருக்குக் கௌரவம். வந்து  அவரை வரவேற்றால்தானே கௌரவமாய் உள்ளே நுழைய முடியும்?  தடம் மாறாமல் நிலைத்து நிற்கும் கௌரவ நிலை அதுதானே….! ஆட்டுவிக்கும் சபலம்…தன் தடத்தை உணர்ந்து தடுமாறுகிறதுதான்…நேரம் வீணாகிறதே…!
     தன்னியல்பாக வந்ததுபோல் “இப்பத்தான் வந்தீகளா…” என்றவள்…தான் ரொம்பவும் இயல்பாக இருப்பதுபோல் காண்பித்துக் கொள்ள கடையிலிருந்த ஒன்றிரண்டு பொருட்களைச் சரி செய்து வைப்பதுபோல் இடம்  மாற்றி வைத்து பாவனை செய்கிறாள். அவளால் அவரை அழைக்காமல் இருக்க முடியாது. அவனும் அதற்கு மறுப்பு சொல்ல ஏலாது. ஏதோவொரு வகையிலான தேவையும் இருக்கிறது…தவிர்க்க முடியாமலும் நிற்கிறது.  இது அவளின் வழக்கமான வெளிப்பாடு. அன்று ரங்கராஜூ வந்து காத்திருப்பதில் குட்டிகூரா பவுடர் மணம் அவரை வரவேற்று அவளின் வெளி வரவை அறிவிக்கிறது. தொடர்ந்து கொலுசுச் சத்தமும் கேட்கிறது. காதில் விழுகிறதுதான். ஆனால் அவரால் அந்த மகிழ்ச்சியைப் பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்திவிட முடியாது. அந்த நாசிச் சுகத்தைக் கண்மூடி வெளிப்படையாய் அனுபவித்து விட முடியாது, உடையவன் ஒருவன் முன்னே அத்தனை சாத்தியமல்ல. அது அத்தனை கௌரவமாயும் அமையாது. காட்டிக் கொள்ளாமல் யதார்த்தமாய் இருப்பதுதான், இருந்து தொலைப்பதுதான் ரங்கராஜூவின் அவஸ்தை. இத்தனை உதவிகள் செய்தும் வர போக என்று ஒரு சுதந்திரமில்லையே…! அவளின் அந்த வருகை மனதுக்குள் குதூகலம் என்றாலும் வெளியில் காட்டிக் கொள்ள முடியாத தர்ம சங்கடம். அது வேறு இடம் என்பதில் அவருக்கிருக்கும் லஜ்ஜை, அதை மறைக்க அவரின் தவிர்க்க முடியாத கள்ளத்தனத்தை மீறிய கௌரவத்தின் திரை..அநியாயம்…இவனுக்கெல்லாம் இப்டி ஒரு அழகியா? கடவுள் ரொம்பவும் இரக்கமற்றவன். எங்கு கொண்டு எதை வைத்திருக்கிறான்?
அவள் கண்ணெதிரே வந்துவிட்ட பிறகு அவனோடு பேசுவது என்பது சாத்தியமில்லாமலும், ,அத்தனை அவசியமில்லாததும்தான் எனினும் அவனை வைத்துதான் அவள் என்கிற தவிர்க்க முடியாத உண்மையின் வெளிப்பாடாய், அவனையும் மதித்தது போலாகட்டும் என்று “மணி நாலு ஆவப் போவுது…இன்னும் வெயில் இறங்கலியே…” என்று அவர் கேட்க…“வந்து ரொம்ப நேரமாச்சுதா…?” என்று அவளும் அதே சமயம் வினவ….அவர்  அவனிடம் கேட்ட கேள்விக்கு அங்கே பதில் இனித் தேவையில்லை என்று ஆகிப் போகிறது., …இப்பத்தான் வந்தேன்…என்று சிரிப்புடன் அவர் சொல்வதும்…அவள் பளிச்சென்று வந்து நிற்பதைப் பார்த்து…இப்பத்தான் குளிச்சீங்களா? என்று கேட்டுவிட்டு பவுடர் எல்லாம் ரொம்பப் பெலமா இருக்கே….? என்று அவர் வழிவதை எழுதுகிறார் வண்ணநிலவன். பலமா இருக்கே…இல்லை “பெலமா“….அந்த வார்த்தையைப் போடும் அழகைப் பாருங்கள்…. அதுவே நாக்கு வெளித் தெரியும் ஆசையின் அடையாளம். ஒரு அழகியிடம் தன் கௌரவத்தைப் பொருட்படுத்தாது வலியச் சென்று இளித்து நிற்பதான துர்லபம். சபலம் படுத்தும்பாடு
நீ என்று ஒருமையில்தான் அழைக்க அவருக்கு ஆசை என்றாலும் என்னவோ ஒரு கௌரவம் தடுக்கிறது. ஒரு சகஜ பாவத்தை, அந்நியோன்யத்தை, நெருக்கத்தை பின் எப்படித்தான் ஏற்படுத்திக் கொள்வது? இவ்வளவு தூரம் ஒருத்தன் வந்து உட்கார்ந்திருக்கானே…ஒரு வாய் காப்பித் தண்ணி கொடுப்போம்னு தோணுதா உங்களுக்கு? என்று கேட்கிறார். அப்படிக் கேட்பதன் மூலம் தன் சகஜபாவத்தையும், நெருக்கத்தையும் உணர்த்தும் கட்டம் அது. தன்னை அந்த வீட்டுக்கு ரொம்பவும் பழகியவனாய்க் காட்டிக் கொள்வதன் மூலம் மறை முகமாய் அந்த ஆசையை வெளிப்படுத்திக் கொள்வது.
அவரின் செல்லப் பேச்சுக்கள் அவளுக்கு அலுத்துவிட்டனதான். என்றாலும் என்ன அப்படி யாரோ எவரோ மாதிரிப் பேசுறீங்க…உள்ளே வாங்களேன்…” என்று கண்களை ஒரு வெட்டு வெட்டி அழைக்கிறாள். அதுவே போதும்  அவர் கிறங்கிப் போயிருப்பார் என்று தோன்றுகிறது அவளுக்கு. மையல் கொண்ட ஒருவன் எதில் விழுவான் என்று யார் கண்டது? அது அவருக்கே தெரியாதே. அவர் வயதுக்கு சொல்லவும் வேண்டுமா?
     ரங்கராஜூவை வீட்டுக்குள் வரச்சொல்லிவிட்டு உள்ளே போகும் அவள் கடையிலிருக்கும் அவன் மூக்கைச் செல்லமாக நிமிண்டிவிட்டுப் போகிறாள். வலிய அவன்பால் ஒரு நெருக்கத்தை அப்படி ஏன் அவள் காட்டிக் கொள்ள வேண்டும்? அவளின் அந்தச் செயலுக்கு, அவன் கொடுத்த சுதந்திரத்தின் அடையாளமா அது? அந்தச் செயல் அவனுக்கு சற்று சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அவர் முன்னால் தனக்கும், தன் மனைவிக்கும் இருக்கும் நெருக்கத்தை வெளிப்படையாய் எப்படிச் சுட்டி விட்டாள் என்று அவன் உணர்ந்து மகிழ்ந்தாலும்,  வீட்டிற்குள் அவரிடமும் அவள் இப்படித்தான் நடந்து கொள்வாளோ என்று அவனுக்குத்  தோன்றுகிறது. பாவம் அவன் நிலை அப்படி.நோய் நாடி…நோய் முதல் நாடி…என்பது போல்…பணம் நாடி…பணத்தால் உந்திய மனம் நாடி….. ஆனால் அவர் ஒருபோதும் சிவகாமியிடம் ரசாபாசமாக நடந்து கொள்பவரல்ல என்று நம்புகிறான் அவன்.  அது அவருக்கு அவள் கொடுத்த சமிக்ஞை. நிமிண்டும்போதான பார்வை இவர் மீது இருந்திருக்கிறதே…! பெண்கள் வசீகரம் பண்ண என்னவெல்லாம் முறையைக் கையாள்வார்கள் என்பதற்கு ஒரு பொருத்தமான இடமாக இது அமைவதும், ரங்கராஜூ அவளின் அந்தச் செய்கையில் தன்னை மறந்து ஏக்கப் பெருமூச்சு விடுவதும்….நம்மைத் தவிக்க வைக்கிறது. போயேன்யா உள்ளே…அதான் கூப்பிட்டாச்சுல்ல….!
     சிவகாமி அத்தனை அழகாய் இல்லாவிட்டால் ரங்கராஜூ அவளைப் பார்க்க இப்படி அடிக்கடி வரமாட்டார்தான். அவரை மீறிய ஒரு சபலம் அப்படி ஆட்டிப் படைக்கிறது. அவர் லேவாதேவி செய்யும் பிற இடங்களில் இம்மாதிரி அவர் நடந்து கொள்வதில்லை. சிரித்துச் சிரித்துப் பேசும் சிவகாமியை அவரால் தவிர்க்க முடியவில்லை.  நாலு முறை முகத்தை முறித்துக் கொண்டால் இப்படி அவர் நாய்போல் வருவாரா? வாலை ஆட்டிக் கொண்டு அலைவாரா? நாற்பது வயதிலும் அவளின் அழகும், வனப்பும் அவரைக் கிறங்கடிக்கிறது.
     கடையைச் சுற்றிக் கொண்டு வீட்டுக்குள் செல்கிறார். உள்ளே போய் காபியை ஒரு கை பார்த்திட்டு வாரேன் என்று சிரிக்கிறார். உள்ளே போவதற்கு ஏதாவது காரணம் வேண்டுமே? வெறுமே எழுந்து திறந்த வீட்டுக்குள் ஏதோ போல் நுழைந்து விட முடியாதே? அவனுக்கு அவர் இளித்தது போலிருக்கிறது. இப்டியே போக வேண்டிதானே என்று கடைவழியாக உள்ளே நுழையச் சொல்லியிருக்கிறான் அவன். அது அவரது வருகை எரிச்சல் தராத காலம். அவரால் கிடைத்த ஆரம்ப கால உதவிகள் மகிழ்ச்சி தந்த காலம்.  சீதேவியை, கல்லாப் பெட்டியைத்  தாண்டக் கூடாது….என்று சொல்லி விடுகிறார். தனது செய்கைகளில் அவ்வப்போது ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்துக் கொண்டேயிருப்பது, அதை மற்றவர்களுக்கு, குறிப்பாக அவர்களுக்குப் பரைசாற்றிக் கொண்டேயிருப்பது அவசியமாகிறது அவருக்கு. அவரின் தவிர்க்க முடியாத அடையாளமாய், அந்த சபலப் புத்திக்குப் போடும் பலமான திரையாக அமைந்து விடுகிறது. ஒன்றைப் பலமாக ஸ்தாபித்துக் கொண்டால்தான் இன்னொன்றை அறியாமல் செய்ய முடியும்…என்பது அவரின் கணிப்பாக இருக்கிறது. எனக்கான கௌரவத்தை அத்தனை எளிதில் யாரும் நெருங்கி விட முடியாது, கூடாது என்பதற்கு அவரின் எச்சரிக்கைகளே பொருத்தமான சமிக்ஞைகளாக நிற்கிறது.
     உள்ளே இடப் பக்க அறையில் ஃபேன் ஓடும் சத்தம். சரோஜா…படிக்கிறியாம்மா….என்று கேட்கிறார். யார் உள்ளே என்று அதன் மூலம் உறுதிப் படுத்திக் கொள்கிறார். ஒருவரா, பலரா என்ற கேள்வியும் அங்கே மறைந்து நிற்கிறது.  சற்றுப் பொறுத்து பதில் வருகிறது. யாரு மாமாவா…? நான் ஜாக்கெட்டுக்கு துணி வெட்டிக்கிட்டிருக்கேன்..என்று. அப்படியாம்மா…நடக்கட்டும்…நடக்கட்டும் என்ற அவரது கண்கள் சிவகாமியைத் தேடுகிறது. பதில் சொல்வதில் இருக்கும் பெரிய மனுஷத் தன்மை செய்யும் செயலில் ஒளிந்து கொள்கிறது. ஒப்புக்குக் கேட்ட கேள்விதான் அது. அவரின் தேவை சிவகாமி மட்டும்தான்.  நடு வீட்டுக்குள் வந்து அமர்ந்து விட்டதனால் ஏற்பட்ட பாதுகாப்பில், சிவகாமி என்று ஆசையாய் அழைக்க மனம் விழைகிறது. அடுப்படியில் இருக்கும் சிவகாமிக்கு அவர் உள்ளே வந்திருப்பது தெரிகிறதாயினும் சற்றுத் தாமதித்தே வெளிப்படுகிறாள்.  மகள் பக்கத்து அறையில் இருப்பதிலே, அவளின் அந்தத் தாமதம் அர்த்தபூர்வமாகிறது. அதே சமயம் அவளுக்கும் ஒரு கௌரவம் இருக்கிறதுதானே? அத்தனை சுலபமாய் விலையில்லாமல் போய் விட முடியுமா?  
 அங்கே சற்று நேரம் அமைதி உலாவுகிறது. என்ன பேசாம இருக்கீங்க? என்று முகத்துக்கு நெருக்கமாக வந்து கேட்கிறாள் அவள். அந்த அந்நியோன்யம் தந்த மதுரம் அவரைக் கிறங்கடிக்கிறது. குனிந்தவாறே இருக்கும் அவரின் பார்வை அவளின் அர்த்த சந்திர வடிவில் சதைக்குள் பொருந்தி இருக்கும் அவள் பாத விரல் நகங்களையே நோக்குகிறது. 
     வேற ஒண்ணுமில்லே…உங்க வீட்லயும் சமைஞ்ச பொண்ணு இருக்குது…என் வீட்லயும் கல்யாணத்துக்கு ஒண்ணு நிக்குது…நான் அடிக்கடி இங்க வந்து போறதுனால ரெண்டு வீடுகளுக்கும் அகௌரவம் வந்திருமோன்னு…..என்று இழுக்கிறார். பதிலுக்கு அவள் தன் சதைப்பற்றான கைகளால் முடிகள் நிறைந்த அவர் கைகளைப் பற்றிக் கொள்கிறாள். அந்த நெருக்கம் தந்த மதுரத்தில் தன்னை இழக்கிறார் அவர்.
ஆனாலும், தன்னைப் புனிதனாய்க் காட்டிக் கொள்வதிலும், கௌரவத்தை நாட்டிக் கொள்வதிலும், அப்போதும் அவரது கவனம்….சரியான கள்ளன்யா….என்றுதான் நினைக்க வைக்கிறது.
ஏது சாமியாராப் போறாப்பலே இருக்கு..? என்று  அவள் கேட்க…ஏதோ தோணிச்சு…அதே நேரம் உங்களைப் பார்க்காமலும் இருக்க முடில…என்று பரிதாபமாய் ஏக்கத்துடன் கூறுகிறார்….உங்களுக்கே உங்க மேலே நம்பிக்கை இல்ல போலிருக்கு…என்று ஒரு போடு போடுகிறாள் அவள். நா ஏதாச்சும் தப்பா சொல்லிட்டனா? என்க…இதிலே தப்பு எங்கிருந்து வந்தது…என்னானாலும் நாம அன்னிய ஆட்கள்தானே…என்று சொல்லிவிடுகிறாள். இருவருமே பயந்ததுபோல் பேசிக் கொள்ளும் இக்கணமே இக்கதைக்கான முடிவான தருணமாக அமைகிறது. சற்று நேரத்தில்….
பூனை போல் கிளம்பி வெளியே வந்து விடுகிறார் ரங்கராஜூ. வெறுமே பார்த்துப் பேசுறதே தப்பாயிடுமோன்னு…என்று நினைக்க…அதுவும் தங்கள் செயலுக்குப் போட்டுக் கொள்ளும் திரையாக நிற்க…ஏதாச்சும் தப்பு நடந்திடுச்சின்னா….? என்று தொடர்ந்து நினைக்க வைக்க….
 என்ன எந்திரிச்சு வந்திட்டீங்க…? என்று அவள் கேட்கிறாள். உள்ளே ஒரே புழுக்கமா இருந்திச்சு…அதான் என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுக்கிறார் அவர். அவன் ஒன்றும் புரியாமல் அவள் முகத்தைப் பார்க்க, கண்கள் கலங்கியிருக்கிறது அவளுக்கு. ஏதோ கோபமாப் போறார் போல்ருக்கே? என்ற அவன் கேட்க…அதுக்கு நா என்ன பண்ண முடியும்? இனி வரமாட்டார்…என்றுவிட்டு விருட்டென்று உள்ளே போய் விடுகிறாள். இனியும் அங்கிருந்தால் அழுதுவிடுவோமோ என்று தோன்றிவிடுகிறது அவளுக்கு.
     தான் காணாத ஒரு உலகத்தைக் கண்டடைந்ததை வாசகனுக்கு படைப்பாளி சொல்லும்போது, தனது தேர்ந்த வாசிப்பு அனுபவத்தினால், தீவிர ஆழமான மெனக்கெடலினால், வாசிப்பை ஒரு உழைப்பாய்க் கருதி தன்னை மேம்படுத்திக் கொண்ட வாசகனால் படைப்பாளி தனக்குத் தெரிவிக்க முனைந்த சொல்லப்படாத புதிய உலகத்தைப் உய்த்துணர முடியுமாயின்  அது அந்தப் படைப்பிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று கொள்ளலாம். வாசிப்பிற்கான கௌரவம் என்று அடையாளப்படுத்தலாம். அந்தப் புதிய உலகத்தை சிருஷ்டித்திருக்கிறார் வண்ணநிலவன்.
     கதாபாத்திரங்களின் விவரணைகள்,  எழுத்தாளன் சுவைபடக் கோர்த்துக் கோர்த்துச் சொல்லும் சம்பவங்கள், அவற்றின் நுட்பங்கள் அதன் மூலமாக வாசகன் படைப்பினை உணர்ந்து உள்வாங்கும் பயிற்சி….சொல்லப்பட்டிருப்பவைகளை வைத்து சொல்லப்படாதவைகளை ஆய்ந்து உணரும் தன்மை….இவையெல்லாம் ஒரு நவீனத் தமிழ்  இலக்கிய வாசகனின் தீவிர லட்சணமாக அமைகிறது. கலை கலைக்காகவே என்கிற கோட்பாட்டின் கீழ் அடங்குகிறது. படைப்பினைப் பொறுத்து அந்த இலக்கணம் பூரணத்துவம் பெறுகிறது.
     அப்படியான பல கதைகள் வண்ணநிலவனின் இந்த முழுத் தொகுப்பில் விரவிக் கிடக்கின்றன. ஒரு சோறு பதம் போதும் என்று மிகச் சிறப்பான சிகரங்களைத் தொட்ட சிறுகதை ஒன்றினைத் தேர்வு செய்து இங்கே விவரித்திருப்பதே இத்தொகுதிக்கு  நாம் அளிக்கும் கௌரவம் மிகுந்த மதிப்பீடாக அமையும் என்பது திண்ணம்.
                     -------------------------------------------------
    

“காலச் சுமைதாங்கி“ - சிறுகதை - வாசகசாலை 100 வது இதழ் (06.10.2024)

                                                                   “காலச் சுமைதாங்கி“ அ றையின் மின் விசிறியை அணைத்து விட்டு ஜன்னலருகே உட...