29 டிசம்பர் 2018

அழகியசிங்கரின் நாவல்“ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்-வாசிப்பனுபவம்


                      





அழகியசிங்கரின் “ஞாயிற்றுக்கிழமை தோறும் தோன்றும் மனிதன்“-நாவல் வாசிப்பனுபவம்
                 (எளிய மனிதனின் அனுபவ சாரங்களின் அற்புதமான தொகுப்பு)
      இதைப் படித்தவர்கள் இது ஒரு நாவலா என்று கேள்வியை எழுப்புவார்கள். இந்தக் கருத்தை அழகியசிங்கரே முந்திக் கொண்டு சொல்லி விடுகிறார். நாவலில்லை என்றும் கொள்ளலாம்…ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் தொகுப்புதான் இது என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் முன்னுதாரணமாக நகுலனின் “நினைவுப்பாதை” அனுபவங்களின் திரட்சியாக வந்த நாவல் என்று கூறி அந்தவகையில் இதை ஒரு தன்புனைவு நாவல் என்று கொள்ள வேண்டும் என்று தன் நாவலுக்கு முத்திரை வழங்குகிறார்.
      சோதனை ரீதியாக நாவல்கள் எழுதுவதில் நகுலனுக்கு ஒரு இடம் உண்டு. அதே சோதனை முயற்சியில்தான் இந்நாவலும் அரங்கேறியுள்ளது என்பது எழுத்தாளர் அழகியசிங்கரின் வாதம். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் இப்படியான பலவற்றிலும் அது அதற்கான லட்சணங்கள் முற்றிலும் பொருந்தித்தான் வெளிப்படுகின்றனவா என்ன?
      ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் எழுதுகின்றனர். உருவம், உத்தி, உள்ளடக்கம் என்று சிறுகதைகளுக்கு இலக்கணம் சொல்லப்பட்டது ஒரு காலம். எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்று கட்டுரைகளுக்கும் இலக்கணம் சொல்லப்பட்டிருக்கிறதுதான். இலக்கணத்தை மீறுவதுதானே இப்பொழுது  வழக்கமாய் இருக்கிறது? மனித வாழ்க்கையின் அடிப்படை விழுமியங்கள் மீறப்படுவது இலக்கியத்தில் இல்லாமல் போகலாமா?  நவீனத் தமிழ் இலக்கியமாயிற்றே?
      அழகியசிங்கரின் நாவலில் அப்படியாக பண்பாட்டு மீறல் என்று எதுவும் கிடையாது. உருவம். உத்தி, உள்ளடக்கம் என்கிற வகை மாதிரியை மீறிய, (நாவலுக்கு இந்த வரைமுறை கிடையாது என்பதுதான் இன்றைய நியாயம்) மனித வாழ்க்கையின் நியாயங்களை உள்ளடக்கிய பண்பாட்டு வரையறைக்குட்பட்டுக் கதை சொல்லப்பட்ட நாவல்.
      லட்சியவாத எழுத்து என்பது காலாவதியான ஒன்று என்று சொல்லப்படுகிறது இப்போது. தீபம் நா.பார்த்தசாரதி அவர்களின் எழுத்து லட்சியவாத எழுத்து. ஒழுக்கம், நேர்மை, பண்பாடு என்று தலை நிமிர்ந்து பறைசாற்றிய அழுத்தமான அடையாளங்களைக் கொண்ட  இலக்கியங்கள் அவை. இன்றைய காலகட்டத்தில் அவற்றின் தேவை மிக அதிகம் என்றுதான் நான் சொல்வேன். எல்லா ஒழுக்க சீலங்களும் மீறப்படும் காலம் இது. அதுதான் பெருமை என்று தம்பட்டம் போடும் நாட்கள் இவை. விஞ்ஞான உலகில் எத்தனையோ மாற்றங்கள் வரலாம். ஆனால் அடிப்படையான சில விஷயங்களுக்கு என்றென்றைக்குமே மாற்றமில்லை என்பதுதான் உண்மை. அந்த அடிப்படையான விஷயங்களை கனமாக, அழுத்தமாகத்  தாங்கி வந்தவைதான் நா.பா.வின் எழுத்துக்கள். அந்த லட்சிய வாதங்களுக்கு என்றைக்கும் அழிவில்லை
.      அவை நம்மிடம் அதிகபட்சமாய்ப் படிந்திருந்தால்தான் நம் வாழ்க்கை செம்மையாய் அமையும் என்று ஓங்காரமிட்டுச் சொல்லுவேன். ஆனால் இன்றைய தமிழ் இலக்கிய உலகம் அப்படியில்லை. புதுமை என்கிற பெயரில், நவீனம் என்கிற நாமகரணத்தில் எப்படியெப்படியோ எழுதப்படுகின்றன, எழுதிக் குவிக்கப்படுகின்றன. எத்தனை புதுமைகள்  வந்தாலும் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்படுபவை நான் மேற்சொன்ன விழுமியங்களை உள்ளடக்கிய படைப்புக்கள்தான். அதற்கு உதாரணம் திரு எஸ்.ரா. வின் “சஞ்சாரம்” நாவல். என்றைக்கும் நின்று நிலைப்பது ஒழுக்கமும், நேர்மையும், பண்பாடும் சார்ந்த  அடிப்படைக் கலாச்சாரச் சீரழிவில்லாத விஷயங்கள் மட்டுமேதான். அவற்றிற்கு என்றைக்கும் அழிவேயில்லை. அதுவே சத்தியம்.
      இந்நாவல்,  நாவலின் வடிவத்தில் கச்சிதமாய் அமைந்து, பல்வேறு விதமான கதாபாத்திரங்களை உள்ளடக்கி, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் நிகழ்வுகளை, மனிதர்களின் வாழ்வியலை அழகுற ஆழமாக எடுத்துரைக்கிறது என்பதாகவெல்லாம் இலக்கண, இலக்கிய ரீதியாகப் பயணிக்க  முடியாமல், ஒரு தனி மனிதனின் அனுபவத் தொகுப்பாக, ஒரு சாதாரண மனிதனின் நிகழ்  உலகில் வளைய வரும் மனிதர்களை உள்ளடக்கி, அவர்களோடு யதார்த்த வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களையும், நெருங்கிய பழக்கத்தினால் உணர்ந்த மனோலயங்களையும், தொகுத்து ஒன்றுவிடாமல் பதிவு செய்துள்ள ஒரு படைப்பு என்று கூறலாம். இந்த அனுபவத் தொகுப்பில் இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது என்பது அவரின் முடிவுறாப் பயணமாக விரிகிறது. 2010 அக்டோபர் முதல் 2012 மே வரையில் அவர் எழுதிய அனுபவங்களின் பகிர்வே இவை  என்கிறார் ஆசிரியர்.
      அதனால் இந்த நாவலை எழுதிய ஆசிரியரே நாவலில் வருகிறார். இம்மாதிரி எழுதுவதற்கு ஆங்கிலத்தில் மெட்டா நாவல் என்று ஒரு பெயர் உண்டு என்பதையும் சொல்லி எவ்வகையிலும் இப் புத்தகத்தை  யாரும் புறக்கணித்து விட முடியாது என்று தன் அனுபவ சாரத்தின் மதிப்புமிக்க விழுமியங்களை மதித்துப் போற்றி வாசகர்களின் முன் மிகுந்த எதிர்பார்ப்போடு வைத்திருக்கிறார் திரு அழகியசிங்கர்.
      வெளிப்படையான மனசு, எதையும் மறைக்காமல் சொல்வது, யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவது என்பதெல்லாம் அவரின்  அனுபவ வெளியில்  பயணிக்கையில் நாம் மனதார உணர்வதாக அமைந்து, மெச்சத் தோன்றுகிறது.  
      என்ன தைரியம் பாருங்கள்…மனதில் தோன்றுவதையெல்லாம் அனுபவங்களினூடே எழுதிக் கட்டுரையாக்கிவிட்டு, அதற்கு “தன் புனைவு” என்று ஒரு புதிய பெயரிட்டு நாவல் என்கிறார் அழகியசிங்கர். நிகழ்வுகளை, சம்பவங்களை உள்ளடக்கி விரிந்து கிடக்கும் எழுத்தை எப்படி கட்டுரை என்று பெயரிட்டு அடைக்க முடியும்? மக்களின் அல்லது ஒரு குறிப்பிட்ட மனிதனின் அனுபவ வெளி என்பது கேட்பவர்களுக்குக் கதைதானே…? அந்த மாதிரிக் கதைகளின் தொகுப்பு என்பது ஒரு நாவலாகத்தானே இருக்க முடியும்? என்று சொல்லாமல் சொல்லி நிறுவுகிறார்.
      விற்கவில்லை…யாரும் வாங்கவில்லை என்று சொல்லிக் கொண்டே புத்தகங்கள் போடுகிறார். சிலரின் புத்தகங்களைக் கொண்டு வருகிறார் ஆர்வம் மிகுதியில். ஆனாலும் தைரியம் ஜாஸ்தி….தைரியமா, ஆர்வமா?
கவனிக்கப்படுகிறதா இல்லையா என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், எழுதிக்கொண்டே போகிறார். அப்படியாக எழுதிடவும் ஒரு அனுபவம் வேண்டும்தானே? எழுதுவது அவருக்குப் பிடித்திருக்கிறது. அதனால் எழுதிக்கொண்டேயிருக்கிறார். யார் தடுப்பது? எதற்காகத் தடுக்க வேண்டும்? அது அவரவர் விருப்பம்.
      டாய்லெட்டுக்காக ஒரு அத்தியாயம்…நடைப்பயிற்சி, சினிமாப்பாட்டு இவைகளுக்காக ஒரு அத்தியாயம்…புத்தகம் போடுதல், விற்காமல் கிடப்பது…பிரபல பத்திரிகைக்குஎழுதியது, கதைகள் போடாதது, சிறு பத்திரிகை கதை போடுவது, சீர்காழிக்கும் சென்னைக்கும் வங்கி வேலை நிமித்தம் மாறுதலில் அலைவது, பதவி உயர்வுக்கு ஆசைப்பட்டு, குடும்பத்தை விட்டுப் பிரிந்து துயருறுவது,  கூட்டம் நடத்துவது, வெறும் ஐந்து பேர் மட்டும் வருவது, க.நா.சு., சி.சு.செ., விமர்சகர்களாய் இருந்தது, இவர் பிரபல எழுத்தாளரை விமர்சித்து எழுதியது, அவருக்குப் பிடிக்காதது, டாக்டர் செல்வராஜின் மாரடைப்பு, ஆபீஸ் ஸ்டாஃப்பை அவரது திடீர் உடல் நலக் குறைவிலிருந்து காப்பாற்றுவது, விருட்சம் 75-76 இதழோடு சென்னை வந்து சேர்ந்தது, ஆக்ஸிடென்ட் நடந்தது, ஒரு பெண்ணின் சாவு, டிரைவர் அரெஸ்ட் ஆனது, வேறு பஸ் பிடித்து சென்னை வந்து சேர்ந்தது என்று வெவ்வேறு விதமான அவரது அனுபவங்கள் படிக்க மிக மிக ஸ்வாரஸ்யமாகவும், கீழே வைக்க முடியாததாயும் உள்ளன..  அதே சமயம் இந்த அனுபவத் தொகுப்பை நாவல் என்று பெயரிட்டு வெளியிட்டு விட்ட அவரது தைரியம், தன் புனைவு என்கிற அழுத்தமான பெயரினால் காப்பாற்றப்பட்டு விட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
      ATM, Core banking பணம் திருட்டு, வங்கியில் பணியாற்றும் பெண் பணம் திருடுவது, சீர்காழியிலிருந்து வீடு வருவதை அப்பா 89 மாமி 85, உதவிப் பணியாளர் 75 என்று முதியோர் இல்லம் என வீட்டுக்கு நாமகரணம் இட்டு விவரிப்பது, ஆத்மாநாம், ஞாநி திருமண நிகழ்ச்சியில் ஏற்படும் சந்திப்புகள், முத்தம் கவிதை, ஸ்டெல்லாப்ரூஸ் மரணம், மோசமான கனவுகள் காண்பது, மெட்ராஸ் ஐ வந்து லீவு கிடைக்காமல் அவதியுறுவது, நாரணோ ஜெயராமின் “வேலி மீறிய கிளை”  கவிதை புக் எழுதியது, நிறுத்தியது, க.நா.சு. நூற்றாண்டுபற்றி பேசுதல், நீட்டு என்ற பெண் பற்றி, புத்தகத் தலைப்பு கவிதைபற்றி, கோயில் கடவுள் நம்பிக்கைபற்றி, க.நா.சு.நூற்றாண்டை ஒட்டி க.நா.சு கவிதைகளைக் கொண்டுவந்து ஒரு இலக்கியக் கூட்டத்திற்குச் சென்று அப்புத்தகத்தை எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்தது, அரசியல் ஒரு பார்வை, அப்பாவுக்காக, கணையாழி கஸ்தூரிரங்கன், சு.ரா.வை வைத்து கூட்டம் நடத்தியது, அவருக்கு விருட்சம் அனுப்பியது, சு.ரா.விடம் சந்தா வாங்கியது…..என்று எதைச் சொல்வது, எதை விடுவது….? எண்ணற்ற அனுபவங்களின் சாரங்களை உள்ளடக்கி விறு விறுப்பாகப் பயணிக்கிறது அவரது “ஞாயிற்றுக் கிழமை தோறும் தோன்றும் மனிதன்”.   
      சென்னைக்கும் பணியாற்றிய சீர்காழிக்கும் இடையே வங்கிப் பணி நிமித்தம்  அலைகிறார். சனிக்கிழமை கிளம்பி வீடு வந்து, ஞாயிற்றுக் கிழமை மீண்டும் கிளம்பி சீர்காழிக்கு போய்ச் சேருகிறார். அதுதான் இநத நாவலின் தலைப்பு. நாவலின் தலைப்பில் ஒரு கவிதைதான் எழுதுகிறார் முதலில். இப்போது அது நாவலாக விரிந்திருக்கிறது. அந்தக் கவிதையை அவரே சொல்லவில்லை. சொன்னால் எங்கே அதுவே போதும் என்று நாவலைப் படிக்காமல் விட்டு விடும் அபாயம் உண்டு என்று நகைச்சுவை மிளிர வெளிப்படுத்துகிறார்.
      இந்த நாவலின் உச்சபட்ச சம்பவங்களாக நான் கருதுவது இரண்டு நிகழ்வுகள். ஒன்று 80 ஆண்டுகள் முடித்த மணிக்கொடி பத்திரிகைக்கு ஒரு கூட்டம் நடத்துவது. இன்னொன்று முக்கிய மூன்று இலக்கியக் கூட்டங்கள். அதில் ஒன்று அசோகமித்திரனை வாசித்தல்..
மணிக்கொடிக்கான விழா அரங்கில் மணிக்கொடி எழுத்தாளர்களின் வாரிசுகள் கலந்து கொள்ளல்…அதாவது சிதம்பர சுப்ரமணியத்தின் புதல்வர்கள், இராமையாவின் புதல்விகள், சிட்டியின் புதல்வர்கள், சி.சு.செல்லப்பாவின் புதல்வர் என்று பலரும் கலந்து கொள்கிறார்கள். கி.அ.சச்சிதானந்தன், ம.ராஜேந்திரன், மூத்த எழுத்தாளர் நரசய்யா, பேராசிரியை செந்தமிழ்ச்செல்வி என்று பலர் கலந்து கொண்டு மணிக்கொடி பத்திரிகையின் சிறப்பைப் பற்றிப் பேசியுள்ளதைப் பதிவு செய்கிறார் ஆசிரியர். பத்திரிகையை ஆரம்பிக்கக் காரணமாக இருந்த ஸ்டாலின் சீனிவாசன், பின்பு வ.ரா.ஆசிரியர் பொறுப்பை ஏற்றது, பத்திரிகையை நடத்திய டி.எஸ்.சொக்கலிங்கத்திற்கும் வ.ராவிற்கும் ஏற்பட்ட கருத்து மோதல், அதனால் வ.ரா. ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகியது,  பின் இலங்கையில் வந்து கொண்டிருந்த வீரகேசரி இதழுக்கு வ.ரா. ஆசிரியரானது, பி.எஸ்.ராமையா மணிக்கொடிக் காலம் எழுதியது…என்று பற்பல விபரங்கள் குறிப்பிட்ட இந்த அத்தியாயத்தின் மூலமாக நமக்குத் தெரிய வருகிறது.
அடுத்ததாக ஆசிரியர் கலந்து கொண்ட மூன்று முக்கிய இலக்கியக் கூட்டங்கள் பற்றியதானது. அசோகமித்திரனை வாசித்தல் கூட்டம் கவிஞர் மற்றும் கட்டுரையாளர் பெருந்தேவி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. ராமானுஜம் என்பவர் அ.மி.யின் 18-வது அட்சக்கோடு பற்றியும், அடுத்துப் பேசிய ராஜன் குறை அ.மி.யின் “இன்று” பற்றி வாசித்த கட்டுரை, மூன்றாவதாகப் பேசிய பெருந்தேவி அ.மி.யின் மானசரோவர் நாவல் பற்றி விரிவாக எடுத்துரைத்தது இக்கூட்டத்தின் சிறப்பு. இரண்டாவது கூட்டம் மலாய் கவிஞர்களுடன், தமிழ் கவிஞர்கள் கவிதை வாசிப்பது மற்றும் மூன்றாவதாக கவிஞர் பயணியின் இரண்டு கவிதைத் தொகுப்புகள்பற்றிய கூட்டம்.
இவ்வளவு பணிகளுக்கிடையே மகன் அழைத்தான் என்று மனைவியோடு அமெரிக்காவுக்கும் பயணம் சென்று வருகிறார் ஆசிரியர். அங்கே ப்ளோரிடா மாகாணத்தில் இருந்த நூலகம்’Broward country library’  என்றொரு நூலகத்தை அண்ணா நூற்றாண்டு நூலகம் போல் பெரியளவில் கண்டு களித்ததுபற்றியும் வாஷிங்டன் சென்று வந்த அனுபவம் பற்றியும் விரித்துரைக்கிறார்.
கடைசியாக சீர்காழியிலிருந்து சென்னைக்கு மாறுதலில் வந்து சேர்வதோடு நாவல் நிறைவு பெறுகிறது. அற்புதமான அனுபவங்களின் தொகுப்பாக இந்த நாவல் மலர்ந்து விரிந்து மணம் பரப்பி “தன் புனைவு நாவல்” என்கின்ற பெயரினை கம்பீரமாகத் தன்னகத்தே தக்க வைத்துக் கொள்கிறது. ஸ்வாரஸ்யமான அனுபவ சாரங்களை உள்வாங்கி மகிழவும், எளிய மனிதனின் பாடுகள் இம்மாதிரி அன்பும், கருணையும், இரக்கமும், நெகிழ்வும்  நிறைந்ததாகத்தான் இருக்கும் என்பதற்கு அத்தாட்சியாக, மனிதாபிமானச் சிந்தனையின் சாட்சியாக  இந்நாவல் தன் பயணத்தை வெற்றிகரமாகக் நடத்திச் செல்கிறது என்பதை ஆழ்ந்து அனுபவித்துப் படிக்கும் வாசகனின் மனதில் நிலைக்க வைக்கும் என்பது உண்மை.
                  -----------------------------------------------


26 டிசம்பர் 2018

இந்த ரெண்டுல எது நல்லாயிருக்கு?


குர்தாவில் உஷாதீபன்

Image may contain: 2 people, indoor and closeup

ஜனவரி 2019 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு எனது “சபாஷ் பூக்குட்டி” - சிறார்களுக்கான சிறுகதை, நாடகங்கள் தொகுப்பு-நிவேதிதா பதிப்பகம், சென்னை

Image may contain: 1 person, text

ஜனவரி 2019 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு எனது கட்டுரைத் தொகுப்பு-படித்தேன்-எழுதுகிறேன்-விமர்சனம், வாசிப்பனுபவக் கட்டுரைகள்-இளவேனில் பதிப்பகம், விருத்தாசலம்

Image may contain: 9 people, including Imayam Annamalai and Shanmugam Perumal, people smiling

ஜனவரி 2019 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு எனது மூன்று நெடுந்தொடர் தொகுப்பு ”கால் விலங்கு” - ஜீவா படைப்பகம் , சென்னை

Image may contain: text

ஜனவரி 2019 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு எனது சிறுகதைத் தொகுப்பு “நிலைத்தல்” -காவ்யா வெளியீடு

21.12.2018 - எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவு

பிரபஞ்சன் இல்லை. உடல் நலமாகி வந்திருந்த பொழுதே பார்க்க ரொம்பவும் சங்கடமாய்த்தான் இருந்தது. ஓய்விலேயே இருக்க வேண்டியதுதான் என்று நினைத்திருக்க, போதும் என்று காலன் அழைத்துக் கொண்டிருக்கிறான். வேதனைதான். ஆழந்த இரங்கல்கள்....

17 டிசம்பர் 2018


அசோகமித்திரனின்




 “அப்பாவின் சிநேகிதர்“                             வாசிப்பனுபவம்                                                                  


தையின் முதல் வரியிலேயே ஆத்மார்த்தமான நெருக்கத்தையும் உறவையும் உண்ர்த்தி விடுகிறார். சக மனிதர்களை, இயற்கையை, பிற உயிர்களை என்று எல்லாவற்றையும்  நேசிக்கும் மனப் பக்குவம் கொண்டவர்களாலேயே இது சாத்தியம்
ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. ஒரு காலத்தில்….வார்த்தையைக் கவனித்தீர்களா?  இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இன்று மக்களிடையே, ஒரே தெருக்காரர்களிடையேயும், பக்கத்து வீட்டுக்காரரிடமும் என்று ஏன் இந்தப் பிரிவு மனப்பான்மை, பொறாமை, துவேஷம் வந்தது என்று யோசித்து, வேதனை கொள்ள வைக்கிறது. கதையின் முதல் வரி இப்படிப் பல எண்ணங்களைத் தூண்டி விடுகிறது. படைப்பின் ஆன்ம பலம் அது. இலக்கிய அனுபவங்களைத் தருவது என்பது வேறு. நான் தருவது ஆழ்ந்த ரசனையின்பாற்பட்ட உள்ளுணர்வின் வியாபகங்களை. எழுத்தாளன் அதை உள்வாங்கித்தானே முதலில் பேனா பிடிக்கத் துணிகிறான்.
மூத்த தலைமுறை அப்படித்தான் இருந்தது. இன்றும் மீதமிருப்பவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் கதையின் முதல் வரி.
சங்கரனோட பிள்ளையா? இங்கே மெட்ராசுக்கு எப்போ வந்தே?
சையது மாமா….. –
ஜாதியோ, மதமோ எதுவும் குறுக்கே நிற்கவில்லை. சங்கரனுக்கு சையது…..என்பவர் மாமா. மனசு விட்டுப் பழகியாச்சு என்றால் அப்படித்தான். வீட்டிற்கு வந்து மாமி எப்டியிருக்கீங்க…என்று கேட்டு ஒரு வாய் தண்ணீர் குடித்தால், கையை நனைத்தால்….உறவாய் மனதுக்குள் நிலைத்துப் போவதுதான். நேசிப்பது, அன்பு செலுத்துவது, கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்பது, காலத்துக்கும் கூட நிற்பது  எல்லாமும் அங்கே ஸ்தாபிதம்.
இன்று இந்த மாமா என்ற வார்த்தைக்கு எத்தனையோ அர்த்தங்கள். எதிர்ப்படும் வயதில் பெரியவரெல்லாம் “அங்கிள்“.   உதட்டோடு நின்று விடும் வெறும் வார்த்தை. தமிழில் சொன்னால் மதிப்பில்லை. மாமா என்கிற மதிப்பு மிகுந்த உறவுமுறை கிடையாது. காலம் அப்படித்தான் ஆகிப்போய்க் கிடக்கிறது.
“அங்கிள்“ – வந்தவன் போனவனெல்லாம் இன்று அங்கிள்தான். கேட்பவன் சந்தோஷிக்கிறானா, மதிப்பாய் உணர்கிறானா என்பது பொருட்டில்லை. அப்படிச் சொல்லிச்  சொல்லியே ஒதுங்கி, ஒதுக்கி நிற்க வைத்து விடும் நடைமுறை. பாழாய்ப் போன பலவற்றுள் இதுவும் ஒன்று.
சையது மாமா…..!  -  இந்தப் பெயரும், அந்தக்  கனிவும் ஆச்சரியமும் கொண்ட கேட்பும் நமக்கு எவ்வளவு விஷயங்களை உணர்த்துகின்றன? அந்தப் படைப்பாளி எவ்வளவு மன முதிர்ச்சியடைந்த, பரிபக்குவமான மனிதராக இருக்க வேண்டும்? அப்படியான ஒருவரிடமிருந்துதானே இந்த வரிகள் வெளிப்படும்? மனிதர்கள் தெய்வ நிலையில் நின்றால் மட்டுமே இது சாத்தியம். மிகை அல்ல…சத்தியம்.
      அது அசோகமித்திரன்…இப்போது யோசியுங்கள். நான் மேற்சொன்னவை அவருக்கு அப்படியே பொருந்துகிறதா என்று.
      என்ன ஒரு எழுத்து?
      சங்கரன் நான்கு மாதங்களுக்கு முன்பு சையது மாமாவிடம் பேசியபேச்சு :-                  ”நீங்க எங்களை மோசம் பண்ணிட்டீங்க மாமா….நாங்க வீட்டைக் காலி செய்ய உங்க பேச்சைக் கேட்டு உங்களையே நம்பி வேறே எங்கேயும் தேடலை….இப்போ தெரிஞ்சிடுத்து…நீங்க பொய்யா அளந்திருக்கீங்கன்னு…நீங்க நன்னா இருக்க மாட்டீங்க மாமா…..”
      மோசம் பண்ணிட்டீங்க…. – என்ற இந்த வார்த்தைக்குரிய நிகழ்வு என்பது மிகச் சாதாரணமானதுதான். ஆனால் இந்தக் கதை எழுதப்பட்ட காலகட்டத்தை எண்ண வேண்டும். அந்தக் காலகட்டத்தில் அதற்கு முந்தைய எந்தக் காலகட்டத்தைச் சுட்டி அசோகமித்திரன் கதை சொல்கிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். 1990-கள். அப்போதும் அதற்கு முந்தைய கால வெளிகளிலும் மக்களிடையே நேர்மையும், நாணயமும், ஒழுக்கமும், பண்பும் பெருவாரியாகப் படிந்துக் கிடந்தது. அந்தக் குறிப்பிட்ட காலத்திய ஒரு நிகழ்வினைச் சொல்கையில் அப்போதைய மக்களின் பண்பாட்டு வெளி எந்நிலையில் வியாபித்திருந்தது என்பதை மனதில் வைத்து படைப்பாளி ஒரு படைப்பினைத் தர வேண்டும். அப்படித்தான் தர முடியும்.
      அப்பா செத்த ஊரே வேண்டாம் என்று ஐந்நூறு மைல் தள்ளியிருந்த இந்த இடத்தில் (மெட்ராஸ்) மீண்டும் அப்பாவின் ஒரு சிநேகிதர் சையது மாமா.       
      சொன்னவன் சின்னப் பையன்.  கேட்டவர் பெரிய மனிதன். வயதிலும், முதிர்ச்சியிலும். .நாராயணனை அப்படியே வாரிக் கட்டிக் கொள்கிறார் சையது. நீ அன்னைக்கு என்னை மோசக்காரன்னு சொல்லிட்டுப் போனப்புறம் எவ்வளவு தடவை உன்னை நினைச்சுண்டு அழுதேன் தெரியுமா? நான் ஏண்டா இந்த வயசிலே உன்னை மோசம் பண்ணப் போறேன்…? நானும் உங்கப்பனும் பள்ளிக்கூடத்திலே வெறும் சிநேகிதங்களாகவாடா இருந்தோம்? எங்களுக்கு உடம்புதான் ரெண்டே தவிர உயிரு ஒண்ணுதாண்டா….அவன் பெண்டாட்டி பிள்ளைகளுக்கு ஏதும் செய்ய முடியலையேன்னு எவ்வளவு தவிச்சிருப்பேன் தெரியுமா?
      வயது முதிர்ந்த இந்தப் பெரியவரின் சொற்கள் எனக்கு “புண் உமிழ் குருதி”யில் வரும் அந்தக் கிழவரையும் நினைவுபடுத்துகிறது. பஸ்ல அன்னைக்கு உன்னோட பேசினப்புறம் எவ்வளவு தடவை உன்னை நினைச்சுப் பார்த்திருக்கேன் தெரியுமா? உன்னையே நினைச்சிண்டிருந்த என்னை இப்படித் திருடன்னு சொல்லிக் கேவலப்படுத்திட்டியே….நான் உன் பணத்தை எடுக்கலைப்பா…. என்று சொல்லி வந்தவழியே  திரும்பியிருப்பார் அந்தப் பெரியவர். பண்பில் சிறந்த பெரியோர்கள்…எந்த நிலையிலும் அதிலிருந்து தவறுவதில்லை என்பதை அந்தக் காட்சி நமக்குப் புரிய வைக்கும்.
      ஆருயிர் நட்பாக இருந்த ஒருவர் துரோகம் செய்ய மாட்டார் என்பதற்கு இங்கே சையது மாமா சொல்லும் பதில்களே சான்று. சின்னப் பையன் என்னவோ பேசிட்டான் என்றுதான் நினைக்கிறார். அந்த வாஞ்சையிலேதான் சங்கரனோட பிள்ளையா…? என்ற அந்த முதல் கேள்வி. எவ்வளவு மன நெருக்கம் பாருங்கள். வளவளவென்று வார்த்தைகளைக் கோர்க்காமல், நறுக்குத் தெறித்தாற்போல் கேட்பதில் அத்தனை உள்ளர்த்தங்களும் படிந்து விடுகின்றனதானே…!
      “அம்மா, தம்பி, தங்கையெல்லாம் சௌக்கியமா? எங்கேடா இருக்கீங்க இப்போ? வாடா…என்னை உடனே வீட்டுக்கு அழைச்சிண்டு போடா….”
      இல்லே மாமா…நான் உங்களைப்பத்தி ரொம்ப மோசமா அம்மாகிட்டே சொல்லியிருக்கேன் மாமா….இப்போ வேணாம்…
      நீ சொன்னா என்னடா…நீ நேத்திப் பையன்…உனக்கு நல்லது எது, மோசம் எதுன்னு என்ன தெரியும்? சரி, போடா…உனக்கு இந்த சையது இனிமே எதுக்கு? எல்லாம் உங்க அப்பாவோட போச்சு…-திடீரென்று நடுரோடில் சையது தன் மார்பில் அடித்துக் கொள்கிறார். நான் அவ்வளவு இளப்பமாயிட்டேண்டா….நான் அவ்வளவு கிள்ளுக் கீரையாயிட்டேண்டா….
      அவருக்கு அந்தக் குடும்பத்துடனான மனநெருக்கம் இந்தச் செயலில் வெளிப்படுகிறது. நாராயணன் அவர் கைகளைப் பிடித்துக் கொள்கிறான்.
      வாங்க மாமா…வீட்டுக்குப் போவோம்…. – நாராயணன்.
      எதற்கு அவர்களுக்கு இத்தனை கோபம்?. ரொம்பச் சாதாரண விஷயம்தான். எங்கோ இருந்த ஒரு வீட்டைக் காண்பித்து, இது காலியாகப் போறதுடா… இந்த வீட்டையெல்லாம் பார்த்துக்கிற முன்ஷிகிட்டே சொல்லியிருக்கேன்…நீங்க கவலையே படவேண்டாம். அடுத்த மாசம் இங்கேயே வந்திடலாம்… என்று சொல்கிறார் சையது மாமா. அவர்கள் இருந்த வீட்டைக் காலி பண்ணும் நெருக்கடியால் இந்தத் தேவை. ஆனால் சையது மாமா சொன்ன மேற்சொன்னது நடக்காமல் போகிறது.
அப்படியெல்லாம் வீடு ஒண்ணும் காலியாகலை…தவறான தகவல்…சையது யாருன்னே தெரியாது என்கிறான் முன்ஷி. அவரையே நம்பியிருந்த இவர்களுக்கு அது அதிர்ச்சியாகிவிடுகிறது. வெட்டியாய் வாயளந்து கெடுத்து விட்டார் என்பதாய் நினைக்க வைத்து விடுகிறது. இதுதான் மோசம் பண்ணியதாகச் சொல்வது. அந்தக் கால கட்டத்தில் இம்மாதிரி ஒரு தவறுதலே மோசம் பண்ணியதாக நினைக்க வைக்கும் பண்பாட்டுச் சூழல். காரணம் மனிதர்கள் அத்தனைக்கத்தனை நேர்மையாளர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக வாழ்ந்து கழித்த நாட்கள் அவை.
      நாராயணன் சையது மாமாவை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறானேயொழிய, அவன் மனதில் கேள்வி இருந்து கொண்டேயிருக்கிறது. ஏன் இந்த மனிதன் கண்ணில் விழுந்தோம்? நாம் போகும் ஊரிலெல்லாம் இந்த மனிதனுக்கு என்ன வேலை? எல்லாவற்றையும் விட்டொழித்துவிட்டு நிம்மதியாக இருக்கும்போது திடீரென்று இவன் எங்கே முளைத்தான்?
நாராயணனின் வயதையொத்த சிந்தனையை அங்கே படர விடுகிறார் அசோகமித்திரன். அம்மாவும் ஏமாற்றம் தாங்காமல் சையதை நிறைய வைதவள்தான். ஆனால் அன்று…..
      நம் குடும்பங்களில் ஆண்களுக்கு மத்தியில் ஏற்படும் உரசல்களை, அதன்  வெப்பத்தைத் தணித்து, ஒற்றுமையை மேம்படச் செய்பவர்கள் பெண்கள்தான். அதனால்தான் குடும்ப அமைப்புகள் சீரழியாமல் இன்னும் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.     
அம்மா சமையலறையிலே இருக்கா போலிருக்கு….என்கிறான் நாராயணன்.
நான் உள்ளே வரலாமாடா? என்று தழைந்த குரலில் கேட்கிறார் சையது.
ஆபீசுக்குப் போகாமல் திரும்பியிருக்கும் மகனைப் பார்த்து “இன்னிலேருந்தே வேலையிலிருந்து நின்னுட்டியா? என்று அம்மா கேட்கிறாள். சையது நின்ற இடம் பகலிலும் இருட்டாக இருக்கிறது. யாரு? அம்மா கேட்க…
நான்தாம்மா….சையதும்மா…. – சையதே பேசுகிறார்.
அம்மா ஒரு கணம் திகைத்து நிற்கிறாள். அவள் வையப் போகிறாள் என்று நாராயணன் பதறிக் காத்திருக்க…..வருகிறது அந்தக் கேள்வி.
“உங்களையெல்லாம் விட்டுட்டு இவ்வளவு சீக்கிரம் போக உங்க சிநேகிதருக்கு எப்படி மனசு வந்தது?” – காலம் காயங்களை எப்படி ஆற்றி விடுகிறது பாருங்கள்.
துளியும் பகை என்று காட்டிக் கொள்ளாத இந்தக் கேள்வியைக் கவனித்தீர்களா? பக்குவப்பட்ட பெரியவர்கள்…என்றும் பெரியவர்கள்தான்….அதிலும் பெண்களின் முதிர்ச்சி சொல்லில் அடங்காதது.
நீ நேத்திப் பையன்…உனக்கு நல்லது எது, மோசம் எதுன்னு எப்படித் தெரியும்? என்று கொஞ்சம் முன்னால் நாராயணனிடம் சையது சொன்னாரே…அதைச் சற்று இங்கே நினைத்துப் பாருங்கள்.   அப்பாவின் சிநேகிதம் பற்றியும், சிநேகிதரைப் பற்றியும் அதனை மதிக்கத் தெரிந்த நாராயணன் அம்மாவின் மேற்கண்ட கேள்விபற்றியும் நாம் புரிந்து கொள்ள முடியுமே?.
முதிர்ந்த, பக்குவமான எழுத்து என்பது அசோகமித்திரனைப்போல் வேறு எவரிடமிருந்தேனும் இத்தனை துல்லியமாய் வெளிப்பட்டிருக்கிறதா? என் வாசிப்பு அனுபவத்தில்  எழுத்தாளர் ஆர்.சூடாமணியை நான் அவ்வாறு உணர்ந்திருக்கிறேன்.
                  ----------------------------------------------------------------------
     

                      


13 டிசம்பர் 2018

இரவும் இருளும் (இரவு நாவல் வாசிப்பனுபவம்)


இரவும் இருளும்  (இரவு நாவல் வாசிப்பனுபவம்)      உஷாதீபன்                --

 இரவு நாவல் இப்பொழுதுதான் முடித்தேன். யட்சினி என்ற தலைப்பும் பொருந்தும் என்று தோன்றியது.இரவில் விழித்திருப்பவர்கள் என்ற காரெக்டர்களே புதிதாய்த் தோன்றி விடாமல் படிக்க வைத்து விட்டது.


இருட்டில் நடக்கும் எல்லாமும் தவறுகளாய்த்தான் இருக்கும் என்று மகாத்மா சொல்லிப் படித்ததாக நினைவு. கடைசி இரண்டு அத்தியாயங்களில் மனசு அதிர்ந்து போனது. மேனன் கமலாவோடு வாழ்ந்த நாட்களை சிலிர்ப்போடு நினைவு கூறுவதும், அது நானில்லை வேறு என்று கனவில் இருவருக்கும் வந்து சொல்வதும், அங்கே இன்னொரு கதாபாத்திரமாய் நானும் நின்று கொண்டிருந்தேன்.

நீலிமாவைத் திருமணம் செய்து கொள்ளாமல் திரும்பியதில் மனது திருப்தி கொண்டது. ஆனாலும் அவர்களின் காதல் வகைமாதிரியை அந்த ரீதியில் கொள்ள வேண்டியதில்லை என்று உணரவைத்திருப்பது ஆறுதல்.

யட்சினி என்ற வகைப் பெண்ணை நானும் சந்தித்திருக்கிறேன். செய்வினை, செயப்பாட்டுவினை என்ற தலைப்பில் ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறேன். எனது ஆப்த நண்பர் ஒருவரையும் இழந்திருக்கிறேன். அந்தக் கதை அவரின் சாவோடு ஆரம்பிக்கும். எனக்கு அது நினைவுக்கு வந்து விட்டது.

இரவு படித்து முடித்ததில் மனசு நிறைந்தது.
 திரு. ஜெயமோகன் : -
யட்சி, யட்சிணி என்பவை இரவின் மீதான அச்சத்தின் பருவடிவங்கள் அல்லவா? யட்சி என்றால் கண்ணுடையவள் என்று பொருள் என்பார்கள். இரவில் நம் கண்கள் அழியும்போது தான் கண்பெறும் தெய்வ வடிவங்கள். இரவில் நம் கண்கள் அழிகின்றன என்பதனாலேயே கண்கள் உருவாக்கும் உலகமும் மறைந்துவிடுகிறது. நாம் வாழும் புழக்க உலகம் என்பது கண்களால் உருவாக்கப்படுவது அல்லவா? ஆகவேதான் துயத்தில் கண்களை மூடிக்கொள்கிறோம். பிரார்த்திக்கையிலும் தியானிக்கையிலும் கண்களை மூடிக்கொள்கிறோம். அப்படி மூடிக்கொண்டபின் உருவாகும் உலகமே அகம். அதுவே நம் ஆழம். அந்த ஆழமே இரவாகவும் உள்ளது. இரவில் வாழ்வதென்பது அந்த ஆழத்தில் வாழ்வது மட்டுமே. அது அபாயகரமான ஓர் விளையாட்டு. அதைவிளையாடி நிறைவுடன் மீள்வது எளியதல்ல.
யோகி இரவில் விழித்திருக்கிறான் என்று சொல்லப்படுவதுண்டு. யோகியின் இரவு என்று சொல்லப்படுவது நாம் நம் உலகியல் தேவைகளுக்காக உருவாக்கியிருக்கும் அனைத்தும் மறைந்து போய் எஞ்சும் இருள்வெளியைத்தான் என்பார்கள். அந்த இரவை நோக்கித்தான் இரவில் விழித்திருக்கும் ஒவ்வொருவரும் சென்றுசேர்கிறார்கள். கமலா பலியாகிறார். மேனன் தப்பி ஓடுகிறார். கதாநாயகனைப்போல சிலர் அதை உதறமுடியாது மேலும் நீந்துகிறார்கள்

------------------




  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...