30 செப்டம்பர் 2021

“நின்று ஒளிரும் சுடர்கள்” - என்னுரை

 

நின்று ஒளிரும் சுடர்கள்” - என்னுரை       


                                                          ------------------------

     “தமிழ்த் திரையுலகக் குணச்சித்திரங்களின் நடைச் சித்திரம்” என்கிற சிறு விளக்கக் குறிப்போடு இப்புத்தகத்திற்கு “நின்று ஒளிரும் சுடர்கள்” என்று நான் தலைப்பிட்டிருக்கிறேன்.

     “கருப்பு-வெள்ளைக் காலங்கள்” என்ற தலைப்புத்தான் முதலில் மனதில் தோன்றியது. அது ஏதோ சரி்த்திரப் பின்னணியைக் கொண்டதான ஒன்றை உணர்த்தி விடுமோ என்கிற ஐயப்பாட்டிலும், கவிதைத் தொகுப்பிற்கான தலைப்பாக உணரக் கூடும் என்ற நினைப்பிலும், மக்களுக்குப் பழகிய மொழியில் இருத்தல் அவசியம் என்கிற உணர்தலிலும் மேற்கண்ட தலைப்பும், அதன் குறிப்பும் மனதுக்குள் உருவாகி நிலைத்திட அதையே வைக்க முடிவு செய்தேன். 

     எழுபதுகள் வரையிலான கால கட்டத்தின் தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் பலர். ஏறக்குறைய அவர்கள் எல்லோருமே நாடகப் பின்னணியிலிருந்து திரையுலகுக்குள் வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இளம் பிராயத்திலேயே நாடகக் கம்பெனிக்குள் நுழைந்து, அங்குள்ள எல்லா வேலைகளையும் ஒரு எடுபிடியாய் இருந்து செய்து கற்று, பின்பு சின்னச் சின்ன வேஷங்களாய்த் தரப்பட்டு அதனிலும் தேர்ந்து முன்னணிக்கு வந்து,  ஒரு கைதேர்ந்த கலைஞனாய்த் திரையுலகுக்குள் அரிதான, அதிர்ஷ்டமான, பரிந்துரையுடனான  வாய்ப்புக் கிடைக்கப் பெற்று அதன் மூலம் படிப்படியாகத் தங்களை நிலை நிறுத்திக் கொள்ளப் பாடுபட்டு, காலம் கனிந்த பொழுதுகளில்  தமிழ் மக்களின் நெஞ்சங்களிலெல்லாம் நீங்கா இடம் பெற்றவர்களாய் வலம் வந்து வெற்றி கண்டவர்கள் இவர்கள்.

     மிகச் சிறந்த குணச்சித்திரங்களாகவும், தேர்ந்த நகைச்சுவை நாயகர்களாயும், எந்தவிதக் கதாபாத்திரத்திற்குள்ளும் தங்களைக் கச்சிதமாய்ப் பொருத்திக் கொள்பவர்களாயும், பல பரிமாணங்களில், தங்களை ஒதுக்க முடியாத ஒரு நிலைத்த ஸ்தானத்தில் நிறுத்திக் கொண்டு ஸ்திரம் பெற்றார்கள் இவர்கள்.

     எழுபதுகள் வரையிலான கருப்பு வெள்ளைப் படங்கள் பலவும் வெறும் படங்களாக இல்லாமல், வாழ்க்கைப் பாடங்களாக அமைந்தவை எனலாம். மனித மேன்மைகளை, வாழ்க்கையின் சீர்மைகளைத் தூக்கிப் பிடித்தவை என்றும் நிறுவலாம். அப்படியான திரைப்படங்களின் தொடர்ந்த வெற்றிக்கு தங்கள் நடிப்பாற்றலினால் உத்தரவாதம் வழங்கியவர்கள் பலர். எந்தக் கதாபாத்திரம் ஆனாலும் இவரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஸ்தாபித்தவர்கள். சின்ன வேஷம், பெரிய வேஷம் என்ற வித்தியாசம் பார்க்காதவர்கள். பரஸ்பரத் திறமைகளை மதிக்கத் தெரிந்தவர்கள்.

     அன்றைய காலகட்டத்தில் குடும்பப் படங்களே மேலோங்கி நின்றன. உறவுகளின் மேன்மையும், ஊடாடும் வாழ்க்கைச் சிக்கல்களும், சீர் குலைந்துவிடக் கூடாத குடும்ப அமைப்பின் கட்டுக் கோப்பினை விவரிப்பவையாக அமைந்து, அன்பு, கருணை, பாசம், நேசம், ஒற்றுமை, சந்தோஷம் இவைகளை முன்னிறுத்தி ஒழுக்கமும் பண்பாடும் மிக்க வாழ்க்கையினை வலியுறுத்தி, திரைப்படங்கள் என்பதே சமுதாயத்தின் மேன்மைகளுக்கும், மேம்பாடுகளுக்கும்தான் என்று சீராக வலம் வந்தன.

     அப்படியான மிகச் சிறந்த திரைப்படங்களில் தங்களைக் கச்சிதமாகப் பொருத்திக் கொண்டு அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டிய தமிழ் நடிகர்கள் பலர். அவர்கள் பல படங்களில் குணச் சித்திரங்களாகவும், நகைச்சுவை நாயகர்களாகவும், வில்லன்களாகவும், கதாநாயகர்களாகவும் இன்னும் பல்வேறுவிதமான சின்னச் சின்ன வேஷங்களிலும், தங்களின் திறமையைத் திறம்பட நிரூபித்திருக்கிறார்கள். ஏற்காத வேடமில்லை என்ற ஏற்புடையவர்கள்.

அப்படியானவர்களில் முக்கியமான நடிகர்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் குறிப்பிட்ட தாங்கள் நடித்த அந்தப்  படங்களின் வெற்றிக்கு எவ்வகையில் உதவியிருக்கிறார்கள் என்பதையும், இயக்குநரின் காட்சிப்படுத்தலில் எவ்வாறு பொருத்தமாய்த் தங்களை இருத்திக் கொண்டு, தங்களின் பல பரிமாணத்   திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் இப்புத்தகத்தின் காட்சி ரூபத்திலான வசன நடைச்சித்திரங்கள் மூலம் உணர்ச்சி பூர்வமாயும், நெகிழ வைக்கும் தன்மையிலும், விளக்கியிருக்கிறேன்.

நடைச்சித்திரங்கள் என்று சொல்லும்போது குறிப்பிட்ட காட்சிகளின் வீரியத்திற்குக் காரணமான வசனகர்த்தாக்களையும் நினைவு கூறுவது கடமையாகிறது. சத்தான காய்கறிகள் இல்லையெனில் தேர்ந்த சமையல் அமைவது எப்படி? அவர்களுக்கெல்லாம் இந்தத் தொகுப்பின் மூலம் நன்றி பாராட்டுகிறேன்.

சிறந்த நடிப்பு, அழுத்தமான வசனங்கள், செழுமையான  கதாபாத்திரங்கள் என்கிற வட்டத்திற்குள் நின்று எனக்குள் தோன்றிய பல நடிப்பு வேந்தர்களுள் சிலர் வருமாறு – நடிகர்திலகம், எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி. சுப்பையா, வி. நாகையா, டி.எஸ். பாலையா, எம்.ஆர். ராதா, வி.கே.ராமசாமி,  எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.எஸ்.துரைராஜ், ஏ.கருணாநிதி, நாகேஷ் ஆகியோர்.

இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்தான். அவர்கள் நடித்த மிகச் சிறந்த திரைப்படங்களும் இருக்கிறதுதான். அவர்களையெல்லாம், அவைகளையெல்லாம் விடுபடாமல் சொல்ல  வேண்டும்  என்கிற தீராத அவா உண்டுதான். ஆனால் இந்த என்னுடைய முதல் முயற்சியில் இதில் உள்ளது மட்டுமே இப்போதைக்கு சாத்தியப்பட்டிருக்கிறது.

ஒரு மிகப் பெரிய வேள்வியை நடத்துவது போன்றதான முயற்சி இது என்பதைத் தமிழ்த் திரை ரசிகர்கள், வாசகர்கள் கண்டிப்பாக உணர முடியும். குறிப்பிட்ட அந்த நடிகர்களின் படங்களைக் கைக் கொள்ளுதலும், தொடர்ந்து அவைகளைக் காட்சிப்படுத்தி, கவனம் விடாமல்  பார்த்துப் பார்த்து உள் வாங்கி உருப்படுத்துதலும், உணர்ச்சிகரமான காட்சிகளைத் தேர்வு செய்தலும், அதற்கான வசனங்களை விடுபடாமல் வரி வரியாகப் பதிவு செய்து கொள்ளுதலுமாகிய பல் நோக்குப் பணிகள் என்பது அத்தனை எளிதான ஒன்றல்ல என்பதை வாசக நண்பர்கள் உணர்வீர்களாக.  அப்படியான சிரமத்தில்தான் இந்தப் புத்தகத்திலுள்ள நடைச் சித்திரங்களை, காட்சி ரூபங்களை நான் தொடர்ந்து தெரிவு செய்தேன். இவைகளை வெளியிட்டு தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திய ”காட்சிப்பிழை” இதழுக்கு நான் நன்றி கூறித்தான் ஆக வேண்டும். தேர்ந்த ரசனை உள்ளவர்கள் இப்புத்தகத்தை ஆழ்ந்து அனுபவித்துப் படித்துப் பாராட்டுவார்கள் என்பது நிச்சயம்.

இந்தக் கட்டுரைகளை தமிழ் சினிமா ஆய்விதழான “காட்சிப்பிழையில்” நான் தொடர்ந்து எழுதுகையிலேயே எனது இந்த முயற்சியை, அதன் சிரமங்களை ஆய்ந்துணர்ந்து என்னோடு இணக்கமாகப் பகிர்ந்து கொண்டு, பாராட்டிய, பிரமித்த அன்பர்கள்  அநேகம். அவர்களுக்கு என் நன்றிகள். அவர்கள் மூலம்தான் இன்னும் இன்னும் என்று தொடர்ந்து எழுத முற்பட்டேன் நான்.

கடைசியாக ஒன்று. குணச்சித்திரங்களின் நடைச்சித்திரங்கள் என்று கூறிவிட்டு நடிகர்திலகத்தையும், நகைச்சுவை நடிகர்களையும் எப்படிச் சேர்த்தீர்கள் என்ற கேள்வி வாசகர்கள் மனதில் எழலாம். நடிப்பு என்கிற உலகிற்குள் நுழையும்போதே பல்கலைக்கழகமாக நுழைந்தவர் நடிகர்திலகம் என்பார் அய்யா நெல்லைக் கண்ணன். அந்தப் பிறவி நடிகனின் பெரும்பாலான திரைப்படங்களில் அவரோடு விடாது கைகோர்த்து, தங்களை அவர்களின் திறமையால் குணச்சித்திரங்களாக நிலை நிறுத்திக் கொண்டவர்கள் இத்தொகுப்பில் உள்ள மேன்மை மிக்க பெரியவர்கள். எவரில் எவர் விஞ்சி நிற்கிறார் என்கிற கேள்வியை எழுப்பி நடிகர்திலகத்தையே அயர வைத்தவர்கள். அவரே அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளச் செய்தவர்கள்.  இவர்களை, அவரை விட்டு ஒதுக்கி, ஒதுங்கிப் பார்க்க முடியாது என்பதால்தான் அவரோடு இணைந்த வெற்றியாளர்களாக இவர்களும் வலம் வந்ததை, அப்படியான குறிப்பிட்ட வெற்றிப் படங்களின் திறம்பட்ட காட்சிகள் மூலம்  இந்தப் புத்தகத்தில் உணர்த்தும் கடமையானது எனக்கு. அதனால்தான் இவர்கள் என்றும் ”நின்று ஒளிரும் சுடா்களாகிறார்கள். காலத்தால் அழியாதவர்கள். என்றென்றும் தமிழ்த் திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற ஜாம்பவான்கள்.

எப்படி எழுத்துத் துறைக்கு வருபவர்கள் 1930 களிலிருந்து 1960கள் வரையிலான மணிக்கொடிக் காலப் படைப்பாளிகள் முதல் ஜெயகாந்தன் வரையிலான மூத்த இலக்கியவாதிகளைக் கற்காமல் எழுத்துப் பணிக்குள் நுழைய முடியாதோ அப்படித்தான் நடிப்புத் துறைக்கு வருபவர்களும் மேற்கூறிய அழியாச்சுடர்களை அறியாமல் உள்ளே அடியெடுத்து வைக்க முடியாது.

மிகச் சிறந்த திரைப்படங்களின், தரம் மிகுந்த காட்சிகளைத் தொகுத்துரைத்து, அதன் மூலம் தமிழ்த் திரையுலகின் வெற்றிப் பவனி எவ்வாறு இந்தக் கலைஞர்களால் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது  என்பதை விவரிக்கும் இந்த நடைச் சித்திரத் தொகுப்பை எழுதியதில் நான் பெருமையடைகிறேன். காலமும், நேரமும் ஒத்துழைத்தால் இது மேற்கொண்டும் தொடரலாம். இன்னும் பல சிறப்புக்களை எய்தலாம்.

மனமுவந்து இத்தொகுப்பைக் கொண்டு வர விழைந்த கவிதா பப்ளிகேஷன் நிறுவனத்தாருக்கு என் பணிவான நன்றி. அவர்கள் என் மீது கொண்ட மானசீகமான நம்பிக்கையில்தான் இது சாத்தியமாகியிருக்கிறது.

                                           அன்பன்,

8-10-6 “ஸ்ருதி” இல்லம்,                          உஷாதீபன்                      சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர்.                                       மதுரை – 625 014. (செல்-94426 84188)                                               (ushaadeepan@gmail.com) 

                           ------------------------------------                                                        

27 செப்டம்பர் 2021

அசோகமித்திரனின் ஆகாயத்தாமரை- உஷாதீபன்(27.09.2021 ஜெயமோகன் இணைய தளத்தில் பிரசுரமானது)

 

அசோகமித்திரனின் ஆகாயத்தாமரை- உஷாதீபன்

(27.09.2021 ஜெயமோகன் இணைய தளத்தில் பிரசுரமானது)ந்தவிதத் திட்டமும் இல்லாமல் எழுதப்பட்டது இந்த நாவல் என்கிறார் அசோகமித்திரன். முழுக்க முழுக்க மனோதத்துவ ரீதியிலான எண்ண ஓட்டங்களும், உரையாடல்களும் கலந்து ஒரு பூடகமான மனநிலையிலேயே நாவல் நம்மை நகர்த்திச் செல்கிறது. அசோகமித்திரனின் எழுத்து மனதுக்குள் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தி விடும் பலம் கொண்டது. நம் குடும்பங்களில் ஒருவரைப்பற்றி இவர் சொல்லியிருக்கிறார் என்று எண்ண வைக்கும். இம்மாதிரிச் சிலரும் நம் வீட்டிலும் உண்டே என்று தோன்றும். அவர்கள் படும் துயரங்கள் எல்லாம் இந்த மனிதருக்கு எப்படித் தெரிந்த்து என்று வியக்க வைக்கும்.

சாதாரண, எளிய மக்களின், அன்றாடங்காய்ச்சிகளின் துயரங்களும், கஷ்டங்களும் இவரை ஏன் இப்படி வதைக்கின்றன என்று எண்ணி, நம்மையும் சங்கடம் கொள்ள வைக்கும்.இவற்றையெல்லாம் நாமும் கவனித்திருக்கிறோம், ஆனால் மனதில் இருத்தியதில்லை என்பது புரியும். அதை ஒருவர் அவருக்கேயுரிய தனி மொழி நடையில் அமைதியாக, அழுத்தமாகச் சொல்லும்போது எப்படி உறைக்கிறது? என்ற எண்ணம் வரும். உலக நடப்புகளின் பல விஷயங்களுக்காக தன் மனதுக்குள் இவர் எவ்வளவு துயருறுகிறார், வேதனைப்படுகிறார் என்பதை நாவலின் ஏதேனும் ஒரு கதாபாத்திரமாவது வெளிப்படுத்தும்போது, அந்த எழுத்தின், விவரிப்பின் ஆழமான துயரம் நம்மையும் பற்றிக்கொள்ளும்.

வெறும் கதை சொல்லல் என் வேலையல்ல. பொழுது போக்காய்ப் பக்கங்களை நகர்த்த வைத்தல் என் நோக்கமல்ல. ஒரு குறிப்பிட்ட நபரின், அவன் குடும்பத்தின் வாழ்க்கைப் பாடுகளை – அந்தந்தக் காலகட்ட சமுதாய நடைமுறைகளை , இயற்கை நிகழ்வுகளை, மாற்றங்களை, உறவுகளின், வெளி மனிதர்களின், வேலை செய்யும் நிறுவனத்தின் இப்படிப் பலரின் தொடர்புகளால் ஏற்படும் நன்மை, தீமை, லாபம், நஷ்டம், மகிழ்ச்சி, சோகம் ஆகிய பல்வேறு நிலைகளின் ஏற்ற இறக்கங்களை, பாதிப்புகளை உள்ளடக்கி, ஒருவனின் சிந்தனையைத் தூண்டுவதும், அவனை பொறுப்புள்ள மனிதனாக மாற்றுவதும், அவனால் சமுதாயத்திற்கு எந்தவிதக் கேடும் ஏற்படாவண்ணம் பக்குவப் படுத்துவதும், தீமைகளிலிருந்து விலகியிருக்கச் செய்தலுமான பற்பல அனுபவங்களை உள்ளடங்கிய மாற்றங்களை ஏற்படுத்துதலே என் எழுத்தின் தலையாய நோக்கம் என்பதை நமக்குள் ஆணித்தரமாய்ப் பதிய வைக்கிறார் அசோகமித்திரன்.

ஒரு கதையை உண்டாக்கவில்லை, அது தானாய் இயல்பாய் நடந்த்து என்பதாகச் சொல்லி இந்நாவல் பயணிக்கிறது. நாயகன் வேலைக்காக அலைகிறான். யாராவது வாங்கித் தரமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது. அதுவும் அவர்கள் இஷ்டமாய், அதுவாக, தானாய் நடந்ததாய் இருக்க வேண்டும் என்பதுவும் அவனது விருப்பமாய் உள்ளது. தனக்கென்று உள்ள சிற கௌரவத்தை விட்டுக் கொடுக்க ஏலாமல் அதற்கு எந்தவகையிலும் பங்கம் வந்துவிடாமல் அதுவாக நடந்தால் நடக்கட்டும் என்று விலகி இருக்கிறான்.

ஓவியக் கண்காட்சி ஒன்ற நடத்துகிறான் நாயகன். அதற்கு ஒரு வெளி உதவித் தூதுவர் ஏற்பாடு செய்கிறார். சிறப்பாகக் கண்காட்சி நடந்தேறுகிறது.  அக மகிழ்ந்து ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார் தூதுவர். அந்த விருந்து நடைபெறும் பிரம்மாண்டமான இடம், அந்த வளாகம், பெருத்த, படாடோபமான செலவினை உள்ளடக்கிய ஏற்பாடுகள், பல முக்கியப் பிரமுகர்கள் பங்கு கொள்ளும் நிகழ்வு மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தி நாயகனைப் பயமுறுத்துகிறது.

உள்ளே செல்லவே அஞ்சி, தயங்கி, செக்யூரிட்டியால் தடுக்கப்பட்டு, பின் வேறு வழி ஏதேனும் உண்டோ என்று மானசீகமாய்த் தேடி, திரும்பி விடலாமா என்று யோசிக்கையில்  கடைசியில் அந்தத் தூதுவரின் பார்வைக்கே பட்டு, கைபிடித்து அழைத்துச் செல்லப்படுகிறான். வாழ்க்கையில் முதன் முறையாய் முற்றிலும் அவனுக்குப் பொருந்தாத அந்த இடம் அவனைக் கூச வைத்து, ஒதுங்கச் செய்து, பேச நா எழவிடாமல் ஊமையாக்கி, அந்தப் பெரியதனக்காரர்களின் சூழலிலிருந்து எப்படியாவது விலகி ஓடினால் சரி என்று அவன் மனம் பதைத்துக் கொண்டேயிருக்கிறது.

சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி, அந்த வளாகத்தின் இன்னொரு விருந்து நடக்கும் பகுதியில் சென்று ஒன்றும் புலப்படாமல் மாட்டிக் கொள்கிறான். அங்குதான் அந்த தனவந்தரைச் சந்திக்கிறான். அவரோடு பேச  விருப்பமின்றி நழுவ நினைக்கையில் இழுத்து வைத்து அவனை வலியப் பேசப் பண்ணுகிறார் அவர். சூழலுக்கு ஏற்ப அவனை நடந்து கொள்ளச் செய்ய யத்தனிக்கிறார். நாயகன் ரகுராமன் தனக்குப் பொருந்தாத இடத்தில் வந்து சிக்கிக் கொண்டதாய் நினைத்து, அங்கிருந்து எந்தக் கணமும் வெளியேறத் துடிக்கிறான். அவனை அவரோடு சேர்த்து மது அருந்த வைக்க முயற்சிக்கிறார் அந்த செல்வந்தர் ராஜப்பா. மறுத்து விடுகிறான் ரகுராமன். எவ்வளவோ முயற்சித்தும் அவனைத் தன் வழிக்குக் கொண்டு வர முடியாத நிலையில் ரகுராமனை அவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.  அங்கிருந்தும் வெளியேறுகிறான் நாயகன். எப்பொழுது வேண்டுமானாலும், எதற்காகவேனும் நீ என்னை நாடி வரலாம் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறார் அவர்.

நாயகன் வாழ்வில் அடுத்தாற்போல் மாலதி குறுக்கிடுகிறாள். அவள் தனக்கு உதவக்கூடும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறான் ரகுராமன். ஆனால் அவனைப் பலமுறை கேலிக்குள்ளாக்கும், விமர்சிக்கும் அவள், அவனுக்காக எதுவும் செய்யாமலேயே விலகிச் சென்று விடுகிறாள்.

ஆரம்பத்தில் தன் சொந்த முயற்சியில் கிடைத்த சொற்ப சம்பளத்திலான வேலையில் அவனையறியாமல் நடந்தேறிவிட்ட ஒரு தவறுக்காக சஸ்பென்ட் பண்ணப்பட்ட நிலையில், மறுபடியும் ஒரு நல்ல வேலையில் அமருவதற்காக நாயகன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போகின்றன. வேலை எதுவுமற்ற நாயகனின் மன ஓட்டங்களை, அன்றாட வாழ்க்கையின் கஷ்டங்களை, அவன் தாயுடன் கூடிய வருத்தங்களை, மனமுருகி நினைத்துப் பார்ப்பதும், புழுங்குவதுமாய், வேதனையோடு கழிப்பதும், விரக்தியினால் தோன்றும் மன வெறுப்பும், யாரையும் நம்பத் தகாத தன்மையும், ஏமாற்றமும், தத்துவ ரீதியிலான சிந்தனையைக் கிளறி விடுகிறது நாயகன் ரகுராமனுக்கு.

எந்த நிறுவனத்திலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டானோ அந்த நிறுவனமே அவனை மறுபடி அழைத்துத் தாங்குகிறது. முன்பிருந்த பணிக்கு வேறு ஒருவரை நியமனம் செய்து விட்டதாய்ச் சொல்லி, அதனிலும் மூன்று படி நிலைகள் உயர்ந்த ஸ்தானத்திலான ஒரு பதவியில் இவனை அமர்த்துகிறது. யாருக்கு இவனைப் பிடித்துப் போனதாய் – எந்த நேரமும் என்னை நீ அணுகலாம் என்று தன் கௌரவம் பார்க்காமல் – அந்த ஒரு விருந்து நாளில் பல பேர் முன்னால் சத்தமிட்டு, உரக்கச் சொன்னாரோ அந்தச் செல்வந்தரே திரு ராஜப்பா அவர்களின் சிபாரிசினால்தான் தனக்கு இந்த உயர்ந்த ஸ்தானத்திலான வேலையும், அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது என்பதை உணர்கிறான் நாயகன் ரகுராமன். அவர்களின் எதிர்பார்ப்புக்கும் மேலாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு அந்த நிறுவனத்தின் வெற்றிக்காக உழைக்கத் தன்னை முனைப்பாக நிறுத்திக் கொண்டு உழைக்க ஆரம்பிக்கிறான்.

வேலை கிடைக்காத நாட்களில், தற்காலிகப் பணி நிறுத்தத்தில் இருக்கையில் ஏற்படும் மன உளைச்சல்களும், வெறுப்பும், ஏமாற்றமும், அதனால் விளையும் முரணான செயல்பாடுகளும், வீட்டில் அம்மாவுடன் ஒத்துழைக்காத, உதவாத போக்கும், வெளி நபர்களிடம் தோன்றும் அர்த்தமற்ற கோபங்களும், தடித்த வார்த்தைகளும் என ரகுராமன் அல்லாடுவது நாமும் இப்படியெல்லாமும் இருந்திருக்கிறோம்தானே என்பதாய்ப் பல இளைஞர்களின் அனுபவ எண்ணங்களைக் கிளறி விடக் கூடும். அதே சமயம் சுயமாய் நல்ல வளர்ப்பால் படிந்திருக்கும் இரக்கம், கருணை, நேயம் இவைகளும் அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கின்றன.

வசதியற்ற, அன்றாட வாழ்க்கைக்கே ஆதாரமின்றித் தவிக்கும் மக்களைப் பார்க்கையிலும், அவர்கள் படும் அல்லல்களை நோக்குகையிலும், ஐயோ, இந்த மனிதர்கள் தங்கள் உடன் பிறப்புகளைக் கரையேற்ற, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள்….துயருறுகிறார்கள் என்று நாயகனின் மனம் படும் வேதனை நம்மையும் மிகுந்த சோகத்திற்குள்ளாக்குகிறது. ஒரு மனிதன் தன் சொந்த வாழ்க்கையில் இல்லாமையையும், வறுமையையும், பற்றாக்குறையையும் கண்ணுறும்போதுதான், அனுபவிக்கும்போதுதான், அடுத்தவர்களின் பசியும் பட்டினியும் அவலமும் அவன் சிந்தைக்குள் வருகிறது, உறுத்துகிறது என்பதைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் அசோகமித்திரன்.

ஆகாயத்தாமரை என்பது இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றைக் கூடப் பெயரிட்டு அழைத்துத்தான் சுட்ட வேண்டியிருக்கிறது. மனம் எவ்வளவோ கற்பனை செய்து கொள்ளலாம். விண்ணில் பறக்கலாம்…ஆகாயத்தை முட்டலாம்….நடப்பதுதான் நடக்கும், நடக்கும்போதுதான் நடக்கும்…ஆகாயத்தாமரை ஏதோ நிஜமானது போல…இருக்கு. ஆனால் அதற்கு ஆதாரம் கிடையாது. அது சாத்தியமானதும் கிடையாது….என்று வாழ்க்கையின் நிதர்சனத்தை நாவல் முழுக்கப் பரவ விட்டிருக்கிறார் அசோகமித்திரன்.

இதையெல்லாம் சொல்லலாமா, அப்படிச் சொன்னால் நாவல் ஸ்வாரஸ்யப்படுமா?  என்று சந்தேகிக்கும், தயங்கும்விதமான மிக மிகச் சாதாரண விஷயங்களைக் கூட மனதில் வைத்திருந்து அவர் சொல்லிச் செல்லும் முறை…இவற்றையெல்லாம் அசோக மித்திரன் சொன்னால்தான் நன்றாக இருக்கும் என்று எண்ணிப் பெருமைப்பட வைக்கிறது.

சைதாப்பேட்டை பாலத்தினடியில் இரவில் சலவையாளர்கள் துணி துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரவில்தான் துணி துவைப்பார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருந்த ரகுராமன், பகலிலும் துணி துவைப்பதைப் பார்த்ததை நினைத்துக் கொள்கிறான். அத்தோடு போகவில்லை. அவர் துவைக்கும் துணிகளில் என் சட்டையும் பேன்ட்டும் இருக்கலாம். ஐயா…சற்று மெதுவாக அந்தக் கல்லில் தோயுங்கள். பலமாக அறையாதீர்கள். ஒவ்வொரு முறையும் நான் உடையுடுத்தும்போது ஒரு பொத்தானாவது இல்லாமல் இருப்பதைச் சங்கடமாக உணர்கிறேன் நான். சற்று தயவு செய்யுங்கள். பட்டன்கள் உதிராமல் துவைக்கப் பாருங்கள் என்று மானசீகமாய் வேண்டிக் கொள்கிறான். எவ்வளவு பண்பான எழுத்து என்று அசோகமித்திரன் மீது நம் மதிப்பு உயர்கிறது.

ஒரு பெரிய தலைவரின் இறப்பின்போது ஊர் எப்படியெல்லாம் கொந்தளித்துப் போகிறது? பெரும் கூட்டம் கூடி கடைசியில் அது எப்படி ஒரு திருவிழா மாதிரித் தோற்றம் கொண்டு விடுகிறது? பெரும் கூட்டம் கூடும்போது தனி மனிதத் துக்கம் கூட உருமாறி விடுகிறதே…! என்கிறார்.

அன்றாடச் செயல்களில் நமது சின்னச் சின்னத் தடுமாற்றங்களைக் கூடச் சுட்டிச் செல்கிறார். இவற்றையெல்லாம் எழுதலாமா என்று தயக்கம் கொள்ளும் பலவற்றை அவர் சொல்லிச் செல்லும் விதத்தால் அந்தச் சாதாரண விஷயம் கூட, போகிற போக்கிலான காட்சிகள் கூடப் பெருமை பெற்று விடுகிறது.

1973 காலகட்டம் இந்நாவலில் பயணிக்கிறது. 1980-ல் முதல் பதிப்பு கண்டிருக்கிறது. இப்பொழுது படிக்கும்போதும் இந்நாவலுக்கான தேவை இருக்கிறது என்ற எண்ணம் எழுகிறது நமக்கு. இதில் வரும் நாயகன் ரகுராமன் போல் இங்கே பலர் இருக்கிறார்கள். வேலையில்லாமல் வீட்டிலும் வெளியிலும் அவமானத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். கூச்ச சுபாவம் உள்ளவர்களாக, தங்களைத் தாங்களே சுருக்கிக் கொண்டு, வார்த்தைகளை அளந்து அளந்து பேசிக் கொண்டு, பேசாமல் முழுங்கிக் கொண்டு பல கேவலங்களை, அவமானங்களை, எந்த எதிர்வினையும் காட்டாமல் தாங்கிக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.


ரகுராமன் வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவதும், மனிதர்களிடம் நடந்து கொள்ளும் விதமும், அவனை மற்றவர்கள் நடத்தும் முறையும், மனோதத்துவ முறையில் சொல்லப்பட்ட இந்த நாவல் வாழ்க்கையில் யாரும் யாருக்காகவும் எதுவும் செய்து விட முடியாது?, அவரவருக்கு அமைந்த வாழ்க்கையை அவரவர் வாழ்ந்தே கழித்தாக வேண்டும் என்கிற பொது விதியை முன்னெடுத்துச் செல்கிறது என்கிற எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் கூற்று…அசோகமித்திரனின் இந்நாவலுக்கு முற்றிலும் பொருந்தி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

உஷாதீபன்

***


மு

“ஆதங்கம்“ சிறுகதை -திண்ணை இணைய இதழ் 27.09.2021 ல் பிரசுரமானது

 


                               


ஆதங்கம்“                                                                       சிறுகதை                                      --------------------

அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன்.   இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் போக முடியவில்லை. ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருக்கிறது. வேலைகளோடு வேலையாய், அதையும் ஒரு வேலையாய்க் கருதித்தானே சென்றாக வேண்டும்.  அப்படி ஒரு வேலையாய் நினைத்துச் செய்வதானால், போக, பார்க்க என்று வருவதுதானே அது. அதில் விருப்பமில்லை இவனுக்கு. போனால் அம்மா கூட ஒரு நாள் முழுக்க இருந்தாக வேண்டும். இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மனம் நிறையும்.

மனம் நிறையும் என்பதைவிட அன்று ஒரு நாள் இவளைத் தனியே விட வேண்டும். அதில்தான் மனம் திருப்தியுறும். நிச்சயம் தான் அம்மாவுடன் இருக்கும் பொழுதுகளில் இவள் தொலைபேசியில் கூடத் தொடர்பு கொள்ளப் போவதில்லை. தொடர்பு கொண்டால்; அம்மாவுடன் பேச வேண்டி வரும். அதில் அவளுக்கு இஷ்டமில்லை. அதனால் அந்த ஒரு நாளின் பொழுதுகளில் அவளின் தொல்லையில்லை.

மாலை வீடு திரும்பியபின்தானே பிரச்னை. அதை அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம். மனசாட்சி எங்கோ ஒரு மூலையில் உறுத்திக் கொண்டிருக்கக் கண்டுதானே தொலைபேசியில் பேசுவதைத் தவிர்க்கிறாள்.

எந்த ஒரு விஷயத்திற்கும் சரி, தவறு என்று இரண்டுதானே இருக்க முடியும்? மனிதர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப நியாயங்கள் மாறிவிடக் கூடுமா என்ன? அல்லது சூழல்களுக்கு ஏற்ப ஒன்றை ஏற்க முடியாமல் போய் விடுமா? உலகத்தில் மாற்ற முடியாத சில நல்லவைகளுக்கு என்றுமே அழிவில்லையே? அவை உடன் வந்துகொண்டே இருந்தால்தானே வாழ்க்கையின் செம்மை என்பதற்கான அர்த்தம் முழுமைப்படும்? மொழியின் அடிப்படையான இலக்கணங்கள் மாறுபடும்போது மொழி சிதைந்து போகிறதல்லவா? அதுபோல் வாழ்க்கையின் அடிப்படையான, ஆழமான, சில நல்லியல்புகள், மதிப்புமிக்க விழுமியங்களுக்கு  என்றுமே அழிவு என்பது கிடையாதல்லவா?

தெரிகிறது. ஆனால் மனது ஏற்க மறுக்கிறது. என்னவோ ஒரு பிடிவாதம். இவளுக்கு மட்டும் என்ன, வயது இப்படியே இருந்து கொண்டிருக்குமா? வருடா வருடம் ஒரு வயது கூடாதா? அப்பொழுது இவளும் அம்பது, அறுபது, எழுபது என்று எட்ட மாட்டாளா? அப்படி எட்டும்போது அதற்கேற்றாற்போல் இவளும் தளர மாட்டாளா? இதே இளமை என்றும் நிலைத்திருக்குமா இவளுக்கு மட்டும்?

கண்ணாடியில் நின்று எங்கோ முளைத்ததுபோல் தெரியும் ஒரே ஒரு நரைத்த முடி எது என்று மட்டும் உன்னிப்பாகத் தேடத் தோன்றுகிறது? அது எதன் அடையாளம்? முதுமை பயமுறுத்துவதன் அடையாளம்தானே அதைத் தேடிப் பிடுங்கி எறியத் தோன்றுகிறது? எத்தனை நாளைக்கு இப்படிப் பிடுங்குவாய் நீ? ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி, பிறகு அங்கங்கே என்று பரவும்போது உன் உடம்புத் தோலையும் சேர்த்துப் பார்க்க வேண்டுமே? அன்று கண்ட மேனி அழியாமல் அப்படியேவா இருக்கும்? என்னதான் எண்ணெயைத் தேய்த்துத் தேய்த்துப் பளபளப்பாக்கினாலும், காய்ந்து போய் ஒரு வறட்சியைக் காண்பித்து உன்னைப் பார்த்து இளிக்குமே? அப்பொழுது  என்ன செய்வாய்? உனக்கும் முதுமை என்ற ஒன்று உண்டல்லவா? பிறகு ஏன் அதை நீ மதிக்க மறுக்கிறாய்? எப்படிச் சாவு என்ற ஒன்று நிச்சயமாகத் தெரிந்த ஒன்றாக விளங்குகிறதோ, அதைப் போல் இந்த முதுமை என்பதும் எல்லோருக்கும் பொதுவான ஒன்றுதானே? நீ வேண்டாம் என்றால் சரி வரவில்லை என்று நின்றுவிடப் போகிறதா?

குழந்தைப் பருவத்தில் இருந்து உன் உருவம் என்னவெல்லாம் மாற்றங்கள் அடைந்து வந்திருக்கின்றன என்பதைப் படிப்படியாக அறிந்துதானே வந்திருக்கிறாய்? அதைத் தவிர்க்க முடிந்ததா உன்னால்? உனதும் உன் கண்களின் முன்னால் காணும் உருவங்களும் மாற்றங்கள் கொள்வது தவிர்க்க முடியாதவை தானே? பின் ஏன் அதை ஏற்க மறுக்கிறாய்? என் தாயை மறுதலிக்கும் நீ, நாளை அதே நிலையை எட்ட  மாட்டாய் என்பது என்ன நிச்சயம்? அப்படி நின்றாலும் பரவாயில்லை,  இன்று இப்படித்தான் என்பது மூடத்தனமாகத் தோன்றவில்லையா உனக்கு? உன் பெற்றோர்கள் உன்னை இப்படிச் சொல்லியா வளர்த்திருக்கிறார்கள்? உனக்கு ஏராளமான நல்லவைகளைப் போதித்த அவர்கள், அந்த நல்லவைகளிலிருந்து நீ இவற்றையெல்லாம் பிரித்திருப்பாய் என்று அறிய வந்தால் எத்தனை சோகம் கொள்வார்கள்? காலமும் நிகழ்வுகளும் எல்லோருக்கும் பொதுதானே? உனக்கு மட்டும் என்று தனி நியதியா என்ன?                                                                                                                                                                                                              

கண்களைத் திறக்க மனமில்லாமல் படுத்திருந்தான் கணேசன். பக்கத்தில் மாலினி தூக்கக் கலக்கத்தில் என்னவோ உளறினாள். அவளை உலுக்கி அதைச் சரிசெய்யக் கூட இவனுக்கு மனமில்லை. உளறட்டும். நன்றாக உளறட்டும். மனதையும், எண்ணங்களையும் விகல்பமின்றி, நிச்சலனமாய் வைத்துக் கொண்டால்தானே உறக்கம் நிம்மதியாக வரும்? அதில் ஏராளமான கசடுகளை வைத்திருந்தால்? உளறு, நன்றாக உளறு. உனக்கு நீயே அதிர்ச்சி கொண்டு எழு. உடம்பில் பொங்கும் வியர்வையை, நடுக்கத்தை நீயே உணர். எதற்காக இது? என்று யோசிக்க முடிந்தால் யோசி. அதில் ஏதேனும் நல்லது தோன்றினால் அதை தரிசிக்க முயல். இல்லையேல் இப்படியே கிடந்து உழலு. காலம் உன்னைப் புரட்டிப் போடுகிறதா பார்ப்போம். நடக்கவில்லையென்றால் அப்படியே அழிந்து படு.

எந்த மனிதனின் தவறுகளும் அவனோடு மட்டுமே அழிந்து பட்டதில்லை. அவை ஏதேனும் ஒருவரால் சத்தியமாய் உணரப்பட்டிருக்கும். அந்த ஒருவர் உன் மகனாய் இருப்பான் நிச்சயம். அவன் உன்னை உணருவான். உன் காலம் முடிவதற்குள் உன் செயல்களுக்கான எதிர்வினைகளை நீ எதிர்கொள்வாய். அதனை உணர்ந்து வருந்துவது ஒரு வகை. உணராமலே மரிப்பது இன்னொரு வகை. ஆனால் உன் தவறுகள் மற்றவர்களால் உணரப்படுவதுதான் உனக்கான தண்டனை. அவர்களின் நினைவுகளிலிருந்து நீ அழிந்து படுவாய். காலம் உன்னை மதிப்பிழக்கச் செய்யும். மனிதர்களின் வரலாறுகள் இப்படித்தான் பேசுகின்றன.

இத்தனை நினைக்கிறாய், இத்தனை பேசுகிறாய்? உன் ஆண்மை எங்கே போயிற்று இவ்விஷயத்தில்? உனக்கு நீயே புலம்பிக் கொண்டிருப்பதுதான் ஆண்மையா? எது ஆண்மை என்று நீ கருதுகிறாய்? உனக்கு நீயே யோசித்து நல்லவன்போல் உன்னை நீயே கருதிக் கொண்டு அமைதி காப்பதுதான் ஆண்மையா? ஆண்மை என்பது நியாயத்தை எடுத்து வைத்து, வாதாடி, அதன் உண்மையை நிலை நிறுத்துவதுதானே? அந்தத் தாத்பர்யத்தை நல்லபடி உணரச் செய்வதுதானே? அதை முழுமையாக நீ செய்து விட்டாயா? அதை எந்த அளவுக்கு அவள் உணர்ந்திருக்கிறாள் என்பது உனக்குத் தெரியுமா? ஒரு வேளை எந்த நல்லவைகளும் அவளால் நேர் கோணத்தில் உணரப் படாமல் இருந்தால்?

அது எப்படி? கழுதை வயதாயிற்று. இவளுக்கு நான் பாடம் நடத்த வேண்டுமா? அவசியமில்லை. அப்படிச் சொல்லி ஒதுங்கி விட்டால்? அவள் சொல்வதுதானே நிறைவேறிக் கொண்டிருக்கிறது? அதைத் தவறு என என்று நீ அவளை உணரச் செய்வாய்?

உணரச் செய்வது என்ன? இதுதான் நியாயம் என்பது அவளுக்குச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

அப்படியென்றால் ஏன் செய்யவில்லை? அதை நிலை நாட்டுவதில் என்ன தயக்கம்? ஒரு பண்பாட்டு அடிப்படையில் சுமுகமாக எல்லாமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உன் மனம் விரும்புகிறது. அதுதானே? அதற்கு ஒரே வழி என்ன? நீ அவளிடம் வெளிப்படையாகப் பேசுவதுதான். இதுதான் நியாயம் என்பதைச் சரியாக அவளை உணரச் செய்வதுதான். நீ எதிர்பார்ப்பதை அவளே தன் வாய் வாய்விட்டுச் சொல்ல வேண்டும் என்று உன் எதிர்பார்ப்பு இருக்குமானால், அது நடக்காது போனால், ஒன்று அவளுக்குத் தெரிந்தும் அமைதி காக்கிறாள், தன்னையறியாமல் தவறு செய்கிறாள் என்று பொருள். அல்லது அவள் அப்படி இருப்பதன் மூலம் உனக்கும் அதில் என்னவோ உன்னையறியாத ஒப்புதல் இருக்கிறது என்று பொருள். நீ அவளைக் கை நீட்டிக் குற்றம் காண்பித்து நீ தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறாய்? அதுதானே? நீ தெளிவாக அவளிடம் பேசினாயா? இதுதானே கேள்வி?

நானென்ன அவளிடம் போய்க் கெஞ்ச வேண்டுமா? நான் சொல்வது சரிதான் (சொல்ல நினைப்பது) என்று அவளுக்குத் தெரியாதா? என் அமைதியைப் பயன்படுத்திக் கொண்டு அவள் நன்மை அடையப் பார்க்கிறாளா? நன்மை அடைந்து கொண்டிருக்கிறாள்! அதுதானே!! நா எங்கே சொன்னேன்நீங்கதானே கொண்டுபோய் வெச்சீங்க? நாளைக்கு உன்னையே திருப்பலாமே அவள்?

எங்கம்மா என்கூடதாண்டீ இருப்பா! அத யாரும் தடுக்க முடியாதுஇஷ்டம்னா இருஇல்லன்னாப் போஅதப்பத்தி எனக்குக் கவலையில்ல…”

போய்விட்டாளே பாவி! எனக்கென்ன என்று போய்விட்டாளே?

கணேசா! நீ இருக்கிறது சரியில்லைஎன்னைக் கொண்டு பேசாம அந்த முதியோர் இல்லத்துல விடுபோய் அவளை அழைச்சிண்டு வாநா வாழ்ந்து முடிச்சவநா இருந்துக்கிறேன்உங்கப்பாவோட வாழ்ந்த காலத்துலயே நா திருப்திப் பட்டுட்டேன்அவருக்கு மேல எனக்கு ஒண்ணுமேயில்ல..நீங்க வாழ வேண்டியவா..உங்களுக்கு இன்னும் நிறையக் காலமிருக்குஅவுங்க வீட்ல கேள்விப்பட்டாங்கன்னா என்னைத்தான் குத்தம் சொல்வாங்கஇந்தக் கிழவி ஏன் அங்க போய் ஒண்டின்டிருக்கான்னுஅந்தக் கெட்ட பேர் எனக்கு வேணாம்…”

செய்தி எப்படித் தெரிந்தது. எப்படிப் புறப்பட்டு வந்தாள்? பாவி! அதுவாகவே நடக்கட்டும் என்று காத்திருந்தாளோ? இன்று வரை அம்மாவப் போய் ஒரு தரம் பார்த்திட்டு வருவோம் என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே? என்ன மனுஷி இவள்?

எழுந்தான். காலைக் கடன்களை முடித்தான். கிளம்பி விட்டான்.

டிபன் சாப்பிடலையா? தோசை வார்க்கிறேன்சட்னி அரைச்சிருக்கேன்சாப்டுட்டுப் போங்க…..”

உன் டிபன் எவனுக்கு வேணும்? எங்கம்மா மேல அன்பில்லாத உன்  கரிசனை எனக்குத் தேவையில்லைஉன் டிபனை நீயே சாப்பிடு...நீயே நல்லாக் கொட்டிக்கோ…”

சொன்னானா? இல்லையே!  அவன்பாட்டுக்கு இறங்கிப் போய்க் கொண்டிருந்தான்.

இது இப்பிடித்தான் என்பதுபோல் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கணேசா, நீ செய்யுறது சரியில்லை…’ அம்மாவின் குரல் இவனைத் தடுத்தது.

இருக்கட்டும்மா, இதுலதான் எனக்கு ஒரு ஆறுதல் கிடைக்குது…” பதிலுக்கு இவன் சொன்னான்.

அவனைப் பார்க்க அவனுக்கே பரிதாபமாயிருந்தது.

                                                                                -------------------------------------------

26 செப்டம்பர் 2021

“திசைகாட்டி” – எஸ்.வைத்தீஸ்வரன் – கட்டுரைகள்- வாசிப்பனுபவம் – உஷாதீபன்

  

திசைகாட்டி” – எஸ்.வைத்தீஸ்வரன் – கட்டுரைகள்- வாசிப்பனுபவம் – உஷாதீபன்     (வெளியீடு – நிவேதிதா புத்தகப் பூங்கா, இராயப்பேட்டை, சென்னை-14)-

       மூத்த எழுத்தாளர் திரு.எஸ்.வைத்தீஸ்வரன் அவர்களைப் பிரபலமான, தரமான  கவிஞராக அறிந்திருக்கிறோம். சிறுகதை ஆசிரியராக அவரது தொகுதியைப் படித்திருக்கிறோம். ஆனால் கட்டுரைகளிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் என்பதை இப்புத்தகத்தைப் படித்தறிகையில் உணர முடிகிறது. சிறிய பத்தி எழுத்துக்களாக அவரது கட்டுரைகளை முடிய விடாமல், அந்த விஷயம் தனக்கு ஏற்படுத்திய தாக்கத்தைப் பொறுத்தமான அவரது கவிதைகளால் நிரப்பி அதன் மூலமும் நம் மனதில் ஒரு இறுக்கத்தை  ஒரு சிறப்பான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்திவிடுகிறார். கதை, கவிதை மற்றும் கட்டுரை கலந்த ஒரு புத்தகமாகப் பல்சுவையோடு இந்த “திசைகாட்டி” வெளிவந்திருப்பது தமிழ் இலக்கிய வாசகர்களுக்கு ஒரு புதிய  இனிய அனுபவத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

      Bonga நாடு என்பது  Terra Incognitia / Blest தீவுகள் இவற்றின் இடையில் உள்ள ஒரு சிறிய பிரதேசம். இங்குள்ள மக்களின் கலாச்சாரம் வியப்பானது. இறப்பிற்கு  சடலத்தின் முன் அமைதி காப்பது என்பது நமது பண்பாடு. ஆனால் போங்கா மக்களின் கலாச்சாரம் என்பதே கரகோஷங்கள்தான். இழவு வீட்டில் கூடி இதை அவர்கள் வெளிப்படுத்தத் தவறுவதில்லை. இறந்தவனின் உடலைச்சுற்றி நின்று கை தட்டி ஆரவாரித்தல் என்பதன் மூலம் அவனுக்கும் தங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுதல் என்பதை அடையாளமாகக் கொண்டு வருகிறார்கள்.

புகழ் பெற்ற இத்தாலிய எழுத்தாளர் umberto eco என்பவரின் ஒரு கட்டுரையைத் தழுவி எழுதப்பட்ட தகவல் பத்தி இது என்று ஆசிரியர் சொல்கிறார். இந்தச் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக அதிக வித்தியாசமில்லாமல் ஆரவாரித்தல் என்பதை அடையாளமாகக் கொண்டு நமது அரசியல் கூட்டங்களையும், மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் விளம்பர நிகழ்ச்சிகளையும் அதீதமாய் வரவேற்கும் நமது மக்களின் கலாச்சாரம், மிகுந்த கரகோஷ ஒப்புமையுடையது, அதிக வேறுபாடு இல்லாதது என்று எடுத்துரைக்கிறார். நாம் அறியாத தகவலைகளை உள்ளடக்கியது இந்தக் கட்டுரை.

                சின்ன வயசிலே அம்மா கொல்லைப்புறம் இட்ட பயிரில் செழிப்புற, பளபளவென வளர்ந்து நிற்கும் பாகற்காயைப் பறித்து வந்து, தேங்காய்த் துறுவல் கலந்து நாவில் ஜலம் ஊறக் கறி வைத்துப்  பறிமாறும் அம்மாவின் கைபாகம் அடங்கிய பகட்டான ருசி ஒரு பிள்ளைத்தாய்ச்சியின் மனதில் ஏக்கமாய்த் தோன்றினால் எப்படியிருக்கும்? வயிற்றில் குழந்தையைச் சுமந்திருக்கும் கர்ப்பிணிக்குத் தோன்றும் விபரீத ஆசைகள் நிறைவேறாமற் போகக் கூடாது என்பது நமது மரபு. அது நிறைவேற்றப்படுகிறது ஒரு தாய்மை கொண்ட பெண்மணிக்கு. பிரசவம் பார்க்க அந்தக் காலத்தில் என்ன செலவு? தட்டில் ஒரு நூல் புடவை. அஞ்சு ரூபாய்க் காசு. வெற்றிலை..பாக்கு...ரெண்டு பழம்....வசதியில்லாதவர்கள் வெறும் ரவிக்கைத் துணி கூட வைத்துக் கொடுத்த நிகழ்வுகள் உண்டு. அதுவும் இல்லாமல் வெற்றிலை பாக்கோடு இரண்டு ரூபாய்த் துட்டுப் பெற்றுக் கொண்டு மன நிறைவோடு வாழ்த்திவிட்டுப் போன புண்ணியத் தாய்மார்கள்   வாழ்ந்த காலம் அது. கிராமங்களின் மருத்துவச்சி முத்துப் பேச்சி, சம்பங்கி அல்லது செவ்வந்தி. அவளுக்கு ஈடான ஒரு தெய்வம் உண்டா?

அம்மா ஞாபகமாய் அந்தப் பாகற்காய்க் கறி தின்று ஆசையை நிவர்த்தி செய்து கொண்டு அழகான குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள் அந்தத் தாய். அந்த நாள் -  அந்த வீட்டிற்கும், இந்த உலகிற்கும் முக்கியமான நாளாயிற்று. அந்தக் குழந்தை பிற்காலத்தில் சீரும் சிறப்போடும் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாய் வாழ்ந்ததோடு, ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராகவும் மாறி இலக்கிய உலகிற்கு வளம் சேர்த்தது. செய்தியை அறிய நமக்கு நெஞ்சமெல்லாம் பூரிக்கிறது. அவர் யாரென்று பெயரிட்டு இன்னமும் சொல்லித்தான் ஆக வேண்டுமா? வாசக உள்ளம் இதற்குள்ளும் அதனை யூகித்தறிந்திருக்கத்தானே வேண்டும்? வாழ்க வளமுடன்....

 

      திசைகாட்டிகள் எப்போதுமே தனியாய்த்தான் நிற்கின்றன. ஆனால் அவை எத்தனை ஆயிரம் பேருக்கு வழிகாட்டிக் கொண்டே தன்னை ஒற்றையாய் நிலை நிறுத்திக் கொள்கிறது. வழி மாறிப் போகும் இடங்களில் வந்து உதவுவது இவைதான். வழி தெரியாத இடங்களிலும் நம் கண்கள் தேடுவது இவைகளைத்தான். அவை என்றுமே தவறான வழிகளைக் காட்டியதில்லை. ஆனால் அவைகளைத் தேடிக் கண்டடையும் முன்  நம் மனம் கொள்ளும் பரிதவிப்பு?

      திருமுல்லை வாயிலுக்கு மாறிக் குடி போன ஆப்த நண்பனைச் சந்திக்கச் சென்று  திரும்புகையில் பெருத்த காற்றிலும் மழையிலும் வழி மாறிப் போய்த் தடுமாறுகையில் வழிகாட்டியாய் வந்தவனின் உதவும் நோக்கில் ஊடாடியிருந்த லாப நோக்கம்தான் எத்தனை சாமர்த்தியமானது. இப்படியெல்லாமும் செய்தால் அது அநாகரீகமாகாதா என்றால் அப்படியும் தங்கள் காரியத்தை சாதுர்யமாய்  நிறைவேற்றிக் கொள்பவர்கள் இந்த லோகத்தில் சிலர் இருக்கத்தானே கூடும்? உனக்கு உதவும் அதே வேளையில் என்னுடைய தேவையையும் உனக்குப் பாதகமில்லாமல் நிறைவேற்றிக் கொண்டேன். இதில் என்ன தவறு? என்று இந்த திசைகாட்டி இந்தக் கட்டுரையில் கேட்கிறார். நாமும் சரி...விடுங்கள்...ஒரு வழியாய்ப் போய்ச் சேர்ந்தால் சரி என்று ஒதுங்கிக் கொள்கிறோம். எல்லாவிதமான மனிதர்களும்தானே இந்த உலகத்தில் இருப்பார்கள்? அத்தனை பேருக்குமான உலகம்தானே இது? அப்படிச் சிலரைச் சந்திப்பதும் ஸ்வாரஸ்யமானதுதானே?

 

      நாக்குத் தூண்டில்தான் எப்படி வேலை செய்கிறது? அதன் சாமர்த்தியம், சாதுர்யம்தான் என்ன? அது எப்படியெல்லாம் பேசி, இந்த உலகத்தின் நிகழ்வுகளைப் புரட்டிப் போட்டு விடுகிறது? உயிரினங்களின் இயல்பான வாழ்க்கையை அழித்து மனிதன் எப்படியெல்லாம் தன்னை முன்னிறுத்தி வாழத் துடிக்கிறான்? குறியீட்டுக் கவிதையாய் அமைந்த “கால்-மனிதன்” மிகவும் ஆழ்ந்து படித்து மனதில் வாங்கிக் கொள்ள வைக்கும் உன்னதமான கவிதை.

     

      உறஸ்ரநாமம்...சபாஷ்...ரொம்ப நன்னாயிருந்தது. இதோட பத்தாவது நாளா  இந்த நாடகத்தைப் பார்க்கிறேன். நெகிழ்ச்சி குறையவேயில்லை....ஒரு நாடகம் சமூகத்துக்கு இப்படித்தான் செய்தி சொல்லணும்...இந்த வகைலதான் நம்ம மக்களைத் தட்டி எழுப்பணும்...கலையும் இலக்கியமும் இப்படித்தான் சமுதாயத்துக்குப் பயன்படணும்....ஆனாலும் ஒரு குறை...இதெல்லாமும் நம்ம மக்கள் மண்டைல உறைக்குமா? தெரில...ஆனா முயற்சியை விடப்படாது.. தெரிஞ்சிதா?..-சொன்னவர் வ.ரா.

      வ.ராமசாமி ஐயங்கார் என்னும் அந்த நாளின் தீவிர லட்சிய எழுத்தாளர். காந்தீயவாதி, தேசீயவாதி....மணிக்கொடி இதழின் ஆசிரியராய் இருந்தவர்.

 

      பொட்டு வைத்து, பூ வைத்து அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையைப் பார்த்து ஒரு பைத்தியக்காரன் கூறுகிறான்....“இப்படியெல்லாம் பண்ணிக்காதே...அப்புறம் உங்க அப்பா, அம்மா உன்னை யாராச்சும் ஒரு கிழவனுக்குக் கட்டி வச்சிடுவாங்க...அப்புறம் வாழ வேண்டிய வயசுல நீ விதவையா நிற்க வேண்டியிருக்கும். ஒன்னோட பூவை இப்படிப் புடிச்சு இழுத்துக் கழட்டுவாங்க...பொட்டை இப்படி அழிச்சி விட்டுடுவாங்க...அப்புறம் உன்னோட பட்டுச் சட்டையை இப்படிக் கிழிச்செறிவாங்க...உன்னைச் சுத்தி உட்கார்ந்து எல்லாரும் சந்தோஷப்படுவாங்க...அப்புறம் நீ இந்தப் பார்க்குக்கு வரவே முடியாது...விளையாட முடியாது...சிரிக்க முடியாது...நீ வாழவே முடியாது...முடிஞ்சிது...உன் வாழ்க்கை...அத்தோட....உன்னை மாதிரித்தான் என் தங்கை இருந்து பாழாப்போனா....அவ வாழ்க்கை அஸ்தமிச்சுப் போச்சு...அதுல இந்தப் பெரியவங்க எல்லாருக்கும் அத்தனை சந்தோஷம்....பூ, பொட்டு....ன்னு எந்த மங்கலப் பொருளும் சூட்டாம, நார்ப்பட்டுச் சேலையோட அப்புறம் நீ மூலைல, இருட்டுல ஒடுங்க வேண்டிதான்......

      குழந்தைகளைப் பாத்திரமாக்கி இந்த நோக்கில் விரியும் அந்த  விழிப்புணர்வு நாடகம்...அதைக் கண்ணுற்றுத்தான் பாராட்டுகிறார் வ.ரா. பெண்களின் அவல நிலையை மையப்படுத்தி நாவல் எழுதியவர். மூட நம்பிக்கைகளின் காரணமாய் தன் ஜாதியைப் புறக்கணித்தவர். அதன் அடையாளமாய் இலங்கையிலே இருந்தபோது ஒரு பெண்ணை நேசித்துக் கலப்பு மணம் செய்து கொண்டவர்....அவரின் நினைவுகளைப் போற்றும் இந்த வ.ரா. கட்டுரை இத்தொகுப்பின் மகுடம். என் தாய் மாமாவாக அமைந்த யதேச்சையான ஒரு குடும்ப உறவு வ.ராவுடனான எனது இளமைக் காலங்கள் என்று நினைவு கூர்கிறார் சகஸ்ரநாமம்.

 

      1644 ல் பிறந்த zen தத்துவ ஞானி பாஷோ இந்தத் துறையின் சிறந்த செறிவான கவிஞர். சகஜமான உரைநடையின் நறுக்குகளாய் senriyu என்றொரு கிளை பிரிகிறது பின்னால். Blyth என்ற ஆங்கில இலக்கிய ஆய்வாளர் ஒரு புத்தகம் எழுதுகிறார். 1964 ல் அது உலகக் கவிதை ஆர்வலர்களுக்கு ஆவணமாக விளங்கத் தொடங்குகிறது. நாளடைவில் மரபு சார்ந்தும் சாராமலும் HAIKKU POEMS பிறக்கின்றன. இயற்கையின், புற இயக்கங்களின் நுணுக்கமான அசைவுகளை, ஊடாட்டங்களை, சமிக்ஞைகளை, அர்த்தமுள்ள வாழ்வுக் குறிப்புகளை மௌனமாக மென்மையாக, உணர்த்தும் Haikku  கவிதைகள் வெளிச்சமான நெகிழ்ச்சியாகப் பரிணமிக்கின்றன. பேரனுபவத்தை வெளிப்படுத்தும் ஆதார நோக்கம் கொண்ட சின்னஞ்சிறு, நறுக்குக் கவிதைகள் வினோதமான ஸ்வாரஸ்யம்.

      1) ஆற்றுப் பாலம் அடியில் /  ஊதாப்பூ கொடிகள் / உயிர் வாழத் தொங்குகின்றன= BAASHO

2) மலரென்று நினைத்தேன்  / பறந்து போயிற்று = எஸ். வைத்தீஸ்வரன்

3) ஏரியின் அந்தம ஒளி / கிளறிப் பார்க்கின்றன / வாத்துக் கால்கள் = Jeff Witkin

4) தூரிகையில் / பட்டுப் பூச்சிகளை / வரைந்து கொண்டிருந்தேன் / ஒன்று பறந்து             போயிற்று=எஸ்.வைத்தீஸ்வரன்

மூன்று அடிகள் – என்ற தலைப்பிலான இக் கட்டுரை HAIKKU கவிதைகளைப் பற்றி அழகாக முன் வைக்கிறது.

 

      கல்லை எறிந்தவன் – என்றொரு கட்டுரை. நாடு சுதந்திரம் அடைந்த அறிவிப்புக்குப் பின்னும் வெள்ளைக்காரர்கள் இன்னும் முற்றாக இந்தியாவை விட்டு வெளியேறாத நேரம். அருகருகான பிரிட்டீஷார் குடும்பத்தாரின் வீடுகள். இந்தியர்களைக் கண்டால் அவர்களுக்குள் படிந்து போன இளப்பம். அது குறித்து அந்தக் குடும்பத்தில் நிலவும் கருத்துகள். அவர்களின் குழந்தைகளுக்குக் கூட மனதில் படிந்து போயிருக்கும் கேலியான மனச் சித்திரங்கள். அந்த வெள்ளைக்காரச் சிறுவன் அம்பியின் மீது கல்லெறிந்து விட, அவனுக்குக் காயம்பட்டுப் போகிறது. வில்லியம்ஸ் பிள்ளைதானே...துஷ்டனாச்சே.... பாட்டி திட்டுகிறாள். லீவுக்கு வந்திருந்த சிறுவன் ஊர் திரும்புகிறான். காயம் பட்ட கட்டு அவிழ்க்கப்பட்டு ஆறியிருக்கிறது. ஆனால் காலில் வேறொரு காயம் தெரிகிறது. அதென்ன என்று கேட்க, ஸ்கூலில் ஒரு பையன் தள்ளிவிட்டுத் தடுக்கி விழுந்து ஏற்பட்ட பெரும் காயம்...ஆனால் இப்பொழுது ஆறி விட்டது என்கிறான். சிறுவன்...பேரென்ன என்று மாமா கேட்க...கதிர்வேலு...என்கிறான்.

      கதிர்வேலுவும் வெள்ளைக்காரப் பையனோ? என்று மாமியையும், பாட்டியையும் பார்த்து விஷமமாகக் கேட்கிறார் மாமா.

      குழந்தைகள் என்பது எல்லாமும் ஒன்றுதான். ஆனால் வெள்ளைக்காரனின் மேல் நமக்குப் படிந்து விட்ட வன்மம். துஷ்டன் என்று அந்தப் பிள்ளையையும் கணிக்கத் தோன்றுகிறது. இம்மாதிரியான மனநிலை இருந்த காலம் அது.

      மகாத்மா அதனால்தான் சொன்னார்.  நாட்டின் சுதந்திரம் என்பது வேறு.   அவர்கள் மீது நமக்கு என்றும் வெறுப்பில்லை. என்றும் அவர்கள் நம்மின் மதிப்பிற்குரியவர்கள். அன்பான நட்புக்குரியவர்கள். நண்பர்களே....!  - அண்ணலின்-மனதைத் தூய்மையாக்கும் நிஷ்காம்ய கர்மம் எத்தனை துல்லியமானது.

     

      மரத்திலேயே சதா சர்வ காலமும் அமர்ந்திருக்கும் பையன்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு பையன் இந்தப் புத்தகத்தின் கட்டுரை ஒன்றில் வருகிறான். அது வேறு யாருமல்ல...சாட்சாத் நம் எழுத்தாளர் பெருமகன்தான். பையனுக்குப் பதிமூண்றாவது வயதில் ஒரு கண்டம் என்று ஆயுஷ்உறாமம் செய்கிறார்கள் வீட்டில். அவனா வழக்கம் போல் தன் சிம்மாசனமான மரத்தில் போய்  ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அவனைத் தேடி வந்த பெரியப்பா அப்டியே அசையாமல் இரு என்று அவனைப் பார்த்துச் சொல்லி, ஒரு நீண்ட கழியை எடுத்து பின்னால் நெளிந்து கொண்டிருந்த பாம்பை இழுத்து வெளியேற்றுகிறார். கண்டம் தப்பித்தது என்கிறார். உண்டென்றால் அது உண்டு, இல்லையென்றால் அது இல்லை... செந்தணலும் நீர் போல் குளிரும்...இதெல்லாம் அவரவர் நம்பிக்கையையும், கால காலமான சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் உள்ளடக்கிய விஷயங்கள் என்பதை மரத்தில் வாழ்ந்தவன் என்ற இக்கட்டுரை நமக்குத் துல்லியமாய் உணர்த்துகிறது.

 

      ஏறக்குறைய இப்புத்தகத்தின் அனைத்துப் பகுதிகளையும் சொல்லி விட்டேன் என்றே கூறலாம். இன்னும் ஓரிரு கட்டுரைகள்தான் மீதம். ஆனாலும் நான் அவற்றின் பிழிந்த சாற்றினை மட்டும்  ருசி பார்க்கவென்று எடுத்தியம்பியிருக்கிறேன்.

      தன் வயப்பார்வையான எஸ்.வைத்தீஸ்வரன் அவர்களின் இந்த விமர்சனக் கட்டுரைகளை அவரது வாழ்க்கைக் குறிப்புகளாக மட்டும் அடையாளம் கொள்ள முடியாது என்றும் நிகழ் காலக் கண்ணோட்டத்தில் ஒரு சமுதாயத்தின் கரைந்து போன பொற் கணங்கள் பற்றிய வரலாறு இவைகள் என்று வியந்தோதுகிறார் முதுபெரும் படைப்பாளி இந்திரா பார்த்தசாரதி அவர்கள்.   

 

      இலக்கிய வாசகர்கள் இந்த நூலை அவசியம் விலை கொடுத்து வாங்கிப் படித்துப் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்.

                        -------------------------------------------------------------------------

 

 

     

     

 

     

 

       

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...