26 நவம்பர் 2011

சந்தோஷத் தருணங்கள்
19-11-2011 சனிக்கிழமையன்று மதுரை ராகப்ரியா இசைக்குழுமமும் மதுரை கடவு இலக்கிய அமைப்பும் இணைந்து திரு சஞ்ஜய் சுப்பிரமணியன் அவர்களின் சங்கீதக் கச்சேரி ஒன்றினை மதுரை ஃபார்ட்ச்யூன் பாண்டியன் நட்சத்திர உணவு விடுதியில் நடத்தியது.

ராக்ப்ரியா இசைக் குழுமம் பல ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரு இசைக் குழும அமைப்பாகும். இதில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் பங்கு கொண்டிருக்கிறார்கள். வருடந்தோறும் தவறாமல் பல இளம் இசைக் கலைஞர்களையும், பிரபலமான இசை விற்பன்னர்களையும் அழைத்து வந்து பெருந்திரளான கூட்டத்தோடு சங்கீதக் கச்சேரிகளை நடாத்தி வரும ஒரு கட்டுப்பாடு மிக்க அமைப்பாகும்.

இந்த அமைப்போடு கடவு இலக்கிய அமைப்பும் சேர்ந்து கொண்டதுதான் இங்கே அதி முக்கியம் பெறுகிறது. கடவு இலக்கிய அமைப்பு 2003ம் ஆண்டு துவக்கப்பட்டது. இலக்கியம், இசை, கலாச்சாரம் இவைகளை வளர்த்தெடுத்தல் இதன் நோக்கமாகும். இந்த அமைப்பு இதுவரை எத்தனையோ இலக்கிய நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.

முதன் முறையாக திருநெல்வேலியில் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நெடுங்குருதி நாவலின் விமர்சனக் கூட்டத்தோடு ஆரம்பித்து அவரின் அரவான் நாடகம் முதன் முறையாக அரங்கேற்றி தன் இலக்கியப் பணியைத் துவக்கியது.

மதுரையில் மெய்ப்பொருளியல் கவிதை கருத்தரங்கம் மற்றும் தேவேந்திரபூபதியின் பெயற்சொல் கவிதை நூல் வெளியீட்டு விழாவை அடுத்தாற்போல் அரங்கேற்றியது.

திரு தேவேந்திர பூபதி அவர்கள்தான் இக் கடவு அமைப்பைத் தோற்றுவித்தவர். இவர் ஒரு வணிகவரித் துறை அதிகாரி. கவிஞரும் கூட. நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் கவனிக்கத் தக்க முக்கியமான பல கவிதைகளை முன் வைத்ததின் மூலம் தனிக் கவனம் பெற்றவர். இவரின் விடாத முயற்சியின்பாற்பட்டே இந்தக் கடவு அமைப்பு தொடர்ந்து தொய்வில்லாமல் இயங்கி வருகிறது. இதுவரை இந்த அமைப்பின் மூலமாய் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இலக்கிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

அப்படியான ஒரு நிகழ்வுதான் கடந்த 19.11.2011 அன்று நடந்த திரு சஞ்ஜய் சுப்பிரமணியன் அவர்களின் தமிழ் இசைக் கச்சேரி. இந்தக் கச்சேரி மும்மூர்த்திகளின் பாடல்களைக் கொண்டதல்ல. முழுக்க முழுக்க தேசீயக் கவி சுப்ரமண்யபாரதியின் செந்தமிழ்ப் பாடல்களைக் கொண்டது. பாரதியின் சிருஷ்டிகள் ஜீவன் நிறைந்தவை. அரண்மனையில முடங்கிக் கிடந்த தமிழை மக்கள் சபையிலே நடமாடச் செய்த்தன் மூலம் தமிழுக்கு விடுதலை பெற்றுத் தந்தவர். பாரதியின் உணர்ச்சி மிகு தேசீயப் பாடல்கள் தமிழ்நாட்டு மக்களிடம் நிலவிய தளர்ச்சியையும், தோல்வி மனப்பான்மையையும் விரட்டி உணர்ச்சி ஊட்டி ஊக்கப்படுத்தியவை. அவரது தேசீய கீதங்கள், தெய்வப் பாடல்கள், நீதி, சமூகம், தனிப்பாடல்கள், கண்ணம்மா பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்ற அளப்பரிய சாதனைகள் பாட்டுக்கொரு புலவன் பாரதி என்ற பெயரினை நிலை நிறுத்தின. அன்றைய சஞ்சய் அவர்களின் கச்சேரி இவையெல்லாவற்றையும் உள்ளடக்கி ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்கள் அனைவரையும் இருக்கையில் அசைய விடாமல் அப்படியே கட்டிப் போட்டு உட்கார வைத்து விட்டது.

ஆஉறா….ஆஉறா…என்று அசையாத தலைகள் இல்லை. கண்களை மூடித் தன்னை மறந்து ரசிக்காத உள்ளங்கள் இல்லை. கைகளைத் தாளம் போட்டு, இசை நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றாற்போல், ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றாற்போல் அவரவர் அறிந்த பாணியில், அவரவரின் ரசனை வளத்திற்கேற்றாற்போல் ரசித்து மகிழ்ந்தது பாரதியின் அந்த அற்புதமான பாடல்களினாலா அல்லது தேனொழுகும் இந்தப் பாடகராலா என்று வியக்குமளவு கச்சேரி முழுமை பெற்றது.

சஞ்ஜயின் குரல் வளம், அவர் ஆலாபனை செய்யும் பாணி, நீண்ட ராக ஆலாபனைக்குப் பின்னே பாடலுக்குள் அவர் நுழையும் விதம், அற்புதமான ஸ்வரஸ்தானங்களில் அவர் மிளிரும் பாங்கு, சிறிதும் தளர்வடையாது கடைசிவரை முதல் பாடலில் இருந்த உற்சாக மனநிலையிலேயே தன்னை நிலை நிறுத்திக் கொண்டு ரசிகர்களைக் கரம் பிடித்து சங்கீத சஞ்சாரத்திற்குள் மூழ்கி முக்குளிக்க வைத்த விதம், மன ஒருமைப்பாடும், கட்டுப்பாடும், தியான நிலையும் லௌகீக மனநிலையிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டு, ஏகாந்த நிலைக்குச் சென்று பயணித்து சாந்தியடைந்த பூஜ்ய நிலை என்று எதைச் சொல்வது? எதை விடுவது?

மனித மனம் பஞ்சாய்ப் பறந்து சஞ்சாரம் செய்து தன்னை எடைகளற்ற ஸ்தூலமாய் நிறுத்திக் கொண்டது அன்று.

இங்கே இன்னொன்றையும் மறக்காமல் சொல்லியே ஆக வேண்டும். கவிஞர் திரு தேவேந்திரபூபதி அவர்களின் இந்தப் பெரு முயற்சிக்கு உறுதுணையாய் எப்பொழுதும் நிற்பவர் நவீனத் தமிழ் இலக்கிய உலகின் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய திரு சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்கள். யாருடைய பாதிப்புகளும் இல்லாமல் அவருக்கென்று தனியே ஒரு சுயமான தடத்தில் இன்றுவரை பயணிப்பவர். அதில் பிரமிப்பூட்டும் பல சிறுகதைப் படைப்புக்களைத் தமிழ் வாசகர்களுக்குத் தந்தவர். கதைகளின் நிகழ்வுகள் புனைவுதான் என்று நாம் கண்டுபிடிக்க முனைந்தாலும், அந்த நிகழ்வுகளில் ஊடாடி நிற்கும் உள் மன ஓட்டங்கள் கதையை நகர்த்திச் செல்லும் விதமும், நம்மைக் கொண்டு நிறுத்தும் இடங்களும் நம்மைப் பிரமிக்க வைப்பவை. மிகக் குறைவாக எழுதியிருப்பவர்தான் என்றாலும், மிக நீண்ட காலம் ஆழமான வாசகர்கள் மனதில் நின்று நிலைக்கக் கூடிய எழுத்துக்களைப் படைத்துத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் என்கிற கம்பீரம் இவரைச் சாரும்.

இவர்கள் இருவரின் பெரு முயற்சியின்பாற்பட்டு நடந்த திரு சஞ்ஜய் அவர்களின் 19.11.2011 தேதிய கச்சேரி அன்று இவர்களோடு சேர்ந்து நானும் எனது தனித்திருப்பவனின் அறை சிறுகதைத் தொகுப்பை திரு சஞ்ஜய் அவர்களுக்கு வழங்கி எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். இங்கே கவனிக்க வேண்டிய இன்னொன்று திரு சஞ்ஜய் அவர்கள் மிகப் பெரிய இலக்கிய ரசிகர் என்பது. கணினியில் அவரது ப்ளாக்கைத் திறந்து பார்த்தீர்களென்றால் அவர் இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் பூமணியின் பிறகு என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் கையில் இப்போது என் புத்தகம்.

திரு தேவேந்திர பூபதி, நான், திரு சஞ்ஜய், கவிஞர் திரு கலாப்ரியா, திரு சுரேஷ்குமார் இந்திரஜித் (முதல் படம்) கீழே அவர்களோடு பேசி நிற்கும் காட்சி.

clip_image001

திரு சஞ்ஜய் அவர்களுக்கு என்னுடைய சிறுகதைத் தொகுப்பு தனித்திருப்பவனின் அறை புத்தகத்தை வழங்குதல் மற்றும் அவரோடு இணைந்து நின்று நால்வரும் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

clip_image002

25 நவம்பர் 2011

மனதுக்குள் அழும் மக்கள் கட்டுரைஞ்சு வருஷத்துக்கொருதரம் தேர்தல்ல ஒரு ஓட்டு போடுறதுக்குத்தான்யா நீ…ஆனா அதுக்கப்புறம் எனக்காக உழைக்கிறவங்க இவங்கதான்…” என்று தன்னைச் சுற்றி நின்றுள்ள ரௌடிக் கூட்டத்தைக் காண்பிப்பார்.

இப்படியான ஒரு வசனம் தூள் என்ற படத்தில் வரும். ஷாயாஜி ஷின்டே அமைச்சர் பாத்திரத்தில் ஆறுமுகமாய் நடிக்கின்ற விக்ரமைப் பார்த்துச் சொல்வார்.

கிடக்கட்டும். அது விஷயமில்லை இப்போது.

அந்த முதல் ஒரு வரி வசனம்தான் இங்கே முக்கியம். அதை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

நம் மக்களின் நிலைமையும் இப்படித்தான் இங்கே பரிதாபமாய் உள்ளது.

ஆளாளுக்கு ஒரு ஓட்டுப் போட்டாச்சுல்ல…போங்க…போங்க…இனி டிஸ்டர்ப் பண்ணாதீங்க…எனக்கு நிறைய வேலை இருக்கு….இதுதான் நடக்கிறது இப்போது.

து இல்லாட்டி அது….அது இல்லாட்டி இது…! இப்படித்தான் தமிழகத்தின் நிலைமை 1967 க்குப் பிறகு இன்றுவரை இருந்து தொடர்ந்து வருகிறது.

மூணாவது ஒண்ணுதான் கண்ணுக்கே தெரிலயே…தெரிஞ்சா நாங்க என்ன போடமாட்டம்னா சொல்றோம்…

காதில் விழத்தான் செய்கிறது.

படிப்படியாக எல்லாமும் கெட்டாயிற்று. கல்விக் கூடங்களில் அரசியல் புகுந்தது. மாணவ சமுதாயம் வீதிக்கு வந்தது.

படிக்கத்தானே பள்ளிக்குச் செல்கிறார்கள். இதெல்லாம் எங்கிருந்து முளைத்தது? என்னவோ மாதிரி ஆகிக்கொண்டிருக்கிறதே என்று அப்பாவிப் பெற்றோர் சமுதாயம் பிரமித்தது. கல்வி கற்பிக்கும் ஆசான்களே என்னவோ கை மீறிப் போய் கொண்டிருக்கிறதே என்று பயந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே எல்லாமும் கொஞ்சங்கொஞ்சமாய் சீரழிந்து போயிருப்பதை உணர ஆரம்பித்தார்கள். அடக்க ஒடுக்கமாய் அமைதியாய் வாழ்ந்த சமூகம்.

படிப்படியா எல்லாத்தியும் வீதிக்கு இழுத்திடுவாங்க போலிருக்குதே…!

மனதுக்குள்ளேயே வருந்தி, அழுது, புழுங்கி, இழந்தவர்கள் அநேகம். எதை? தன் ஆசைப் பிள்ளைகளின் அடிப்படை ஒழுக்கத்தை. அவர்களின் முன்னேற்றத்தை. அவர்களின் நல் வாழ்வினை.

இப்படி நம் உறவுகளிலேயே எத்தனையோ நிகழ்வுகளை நாம் பார்த்திருக்கிறோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இளைஞர்களில் பலர் பொழுது விடிந்தவுடனேயே….தவறு சில மணி நேரங்கள் கழித்து….ஏனெனில் முதல் நாள் போதை தெளிய வேண்டுமே! காலையும் மாலையும் இதென்ன இங்கே இவ்வளவு கூட்டம்? ஏதேனும் பிரச்னையா? ஏதாவது கலகமா? ஏதாகிலும் போராட்டமா?

ஊறீம்…நன்றாகப் பாருங்கள். தினமும் போகிற போக்கில் அப்பக்கம் திரும்பியே பார்க்காததினால் உங்களுக்குத் தெரியவில்லை. பதினெட்டு, இருபது, இருபத்திரெண்டு, இருபத்திநான்கு, இருபத்தியெட்டு, முப்பது….இன்னும் சொல்லவா…எதற்கு ரெண்டும் நான்குமாய்க் கூட்டிச் சொல்லிக் கொண்டு? பதினெட்டு முதல் முப்பது அல்லது முப்பத்தைந்து வரை என்று சொல்லி விடலாமே! அதற்கு மேல் வயசானவர்கள் கணக்கில்லை.

தப்புங்க நீங்க சொல்றது…பதினெட்டெல்லாம் இல்ல….

இல்லையா…? பின்ன…?

பதிமூணு…பதினைஞ்சு...ன்னேஆரம்பிக்கலாம்…அதாவது சொல்லலாம்…அந்த வயசுப் பசங்களே அங்கதான் கெடக்காங்க…..

காதில் நாராசமாய் விழுகிறது இந்தப் பேச்சு. மனசு துடிக்கவில்லையா உங்களுக்கு? பெருமூச்சு எழவில்லையா? வேதனையடைகிறதா உங்கள் உள்ளம்? முகம் தெரியாத அந்தப் பலருக்காக நீங்கள் மன வேதனை கொள்கிறீர்களா? கொள்ள வேண்டும். அதுதான் இந்தச் சமுதாயம் மேம்பட வேண்டும் என்று விரும்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய உண்மையான உணர்ச்சி. அப்படியான இந்த இளைஞர் கூட்டம் எங்கே கிடக்கிறது? இதை இத்தனைக்கும் பிறகு சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

உலகே மாயம்…வாழ்வே மாயம்…என்று பாடித் தள்ளாடிவிட்டு நிறுத்திக் கொள்ளலாமா? தொலையட்டும் என்று விட்டுவிடலாமா?

வாழ்வே மாயமா? எப்படி? இருக்கும்வரை நிஜம்தானே? நிஜமாய் வாழ வேண்டாமா? நிஜமாய் வாழ்வதென்றால் எப்படி? நம்மை நோக்கி வரும் எல்லாவற்றையும் கண்டு, கேட்டு, சகித்து, சுகித்து, முடிகிறதோ முடியவில்லையோ அப்படியே ஓய்ந்து ஒடுங்கிப் போவதா? அதுதான் நிஜமா?

ஆம்! ஒடுங்கித்தான் போகணும். வேறு வழி? அதுதான் ஒரு ஓட்டுப் போட்டாயிற்றே….முடிந்ததையா கடமை…இனி என்ன இருக்கிறது. வருவதை எதிர்கொள்ளுங்கள். முடிகிறதோ முடியவில்லையோ, சகித்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்ளுங்கள். சகிக்க முடியவில்லையா, மூலையில் உட்கார்ந்து அழுங்கள். ஜாக்கிரதை….அதையும் உங்கள் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து செய்யுங்கள். ரோட்டுக்கு வந்து அழுதாலும் கேட்பதற்கு நாதியில்லை. அதுதான் ஒரு ஓட்டுப் போட்டுட்டீங்கல்ல…இன்னும் என்ன?

நிறுத்துங்க…நீங்க என்ன சினிமா வசனம் மாதிரிப் பேசிட்டே போறீங்க…?

அப்பத்தான உங்களுக்குப் புரியும். நமக்குத்தான் சினிமாங்கிறது ரத்தத்தோட ஊறின விஷயமாச்சே…

சரி…விஷயத்துக்கு வாங்க…ஒட்டுப் போட்டோம்…இல்லைன்னு யார் சொன்னா? அதுக்காக எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு இருக்க முடியுமா?

சகிக்காம? பின்ன என்ன செய்யப் போறீகளாம்? போராடப் போறீகளோ? போராடிக் கிழிச்சிருவீங்க…தெரியாதா ஒங்களப்பத்தி? ஏன்யா வீணா எனர்ஜிய வேஸ்ட் பண்றீங்க….

என்னங்க இப்டிப் பேசுறீங்க? இதுநாள் வரையிலும் தலைமைச் செயலகம், அண்ணா நூலகம்னு என்னென்னவோ மாத்தம்லாம் செய்றாங்களேன்னு பார்த்திட்டிருந்தோம்…இப்ப அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசில நம்ம மடிலவேல்ல கை வைக்கிறாங்க….சாதாரண ஆளுங்கய்யா நாங்கள்லாம்…எங்களுக்கு இதெல்லாம் தாங்காதய்யா…..

எதைச் சொல்றீங்க…? பஸ் கட்டண உயர்வு….பால் விலை உயர்வுன்னு கூட்டியிருக்காங்களே….அதைத்தானே சொல்ல வர்றீங்க…?

ஆமாங்க சாமி…..தலைக்கு மேல வெள்ளம் போன கதையா இருக்குங்க…

அப்டியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க….அஞ்சு வருஷத்துக்குப் படிப்படியாக் கூட்டுறதை ஒரேயடியா இப்பவே கூட்டிட்டாங்க…அவ்வளவுதான்…

அப்டியா…நீங்க என்ன புதுக் கதை சொல்றீங்க…

இப்போதைக்கு அப்டித்தான்னு வச்சிக்குங்களேன்…நீங்கதான் இன்னும் நாலு நாலரை வருஷங்கழிஞ்சா எல்லாத்தையும் மறந்திடுவீங்களே…இது இல்லாட்டி அது…அது இல்லாட்டி இது….அவ்வளவுதானே…

அப்டியில்லீங்க…ரொம்ப ஓவருங்க…பஸ் சார்ஜ் எடுத்துக்குங்களேன்….இப்போ மதுரைலேர்ந்து சென்னைக்கு இருந்த கட்டணம் ரூ.255. இப்போ எவ்வளவு தெரியுமா? ரூ. 325. தாங்குமாங்க…? ஒரேயடியா எழுபது கூட்டுனா என்னாங்க அர்த்தம்?ஏதோ பத்து இருபது கூட்டினா சமாளிக்கலாம். சரி கெடக்கட்டும்னு விடலாம். இப்டியாங்க? எம்பையன் அங்கதான் இருக்கான்…எங்க அம்மா அங்கதான் இருக்குது…நா போய் பார்க்க வேணாமா?

உங்கள யாருங்க போக வேணாம்னு சொன்னா…நா ஒரு வழி சொல்றேன் கேளுங்க…ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டி போவீங்களா…? சொல்லுங்க…அப்டித்தானே…இனிமே அத நாலு மாசத்துக்கு ஒரு வாட்டின்னு மாத்திக்குங்க….பேசாம போன்ல பேசறதோட நிறுத்திக்குங்க….எதுதாங்க நிலையானது இந்த உலகத்துல…அதுனால மனச தாமரை இலைத் தண்ணி மாதிரி வச்சிக்குங்க…ஒட்டியும் ஒட்டாம……நம்ம ரஜினி கூட ஏதோ ஒரு படத்துல பாடுவாரே….கேட்டிருப்பீகளே….நமக்குத்தான் எல்லாத்துக்கும் சினிமா இருக்கே…அத விட வேறே என்ன வேணும்...

நா ஒண்ணக் கேட்டா நீங்க என்னென்னமோ சொல்றீகளே…?

இன்னொரு ஐடியா இருக்கு சொல்லட்டுமா….

சொல்லுங்கய்யா…எம்புத்திக்கு எதுவும் தோணல….

அதுக்குத்தான் என்ன மாதிரி ஆளக் கேட்கணும்ங்கிறது.

அம்மாவப் பார்க்கணும்ங்கிறீங்கல்ல…பேசாம ரெண்டு நாளைக்கு முன்னாடியே கிளம்பிடுங்க… இங்கருந்து கிளம்பி திருச்சி வரைக்கும் நடந்து போயிடுங்க…ரெண்டு நாள் போதாதா அதுக்கு. பிறகு பஸ்ல போங்க சென்னைக்கு….நீங்க நினைக்கிற பழைய கட்டணத்துல போய்ச் சேர்ந்துடலாமுல்ல…அதுபோல அங்கருந்து வரைல விழுப்புரம் வரைக்கும் நடந்து வந்திடுங்க…பெறவு பஸ்ஸைப் பிடிங்க….செலவு சுருக்கமாயிடும்ல…

அய்யா…நீங்க வெளையாடுறீங்க…

விளையாடலீங்க…அதுதான் உண்மை…இனிமே நமக்கு நாமளே யோசிச்சு இப்படியெல்லாம் செய்துக்கிட்டாத்தான் உண்டு…விலை வாசி தாறுமாறா ஏறிப் போச்சா… ஒரு வேளை விரதம் இருக்கிறதுங்கிற பழக்கத்தை ஏற்படுத்திக்கிங்க…ஏற்கனவே நிறையப் பேர் அப்டித்தான் இருக்காங்கன்னு நீங்க சொல்றது என் காதுல விழுகுது…இதுவரைக்கும் இல்லாதவங்களுக்கு நா சொல்றேன்….எப்டித் தாங்குறீங்கன்னு வேண்ணா விரதம் இருக்கிறவங்களைக் கேட்டுக்குங்க…இதமாதிரி எல்லா ஊருக்கும் நாற்பது ஐம்பது எழுபதுன்னு கட்டணமெல்லாம் கூடிப் போச்சு….ஒண்ணு தொலையுதுன்னு கொடுத்து அழுகணும்…முடியலயா…நா சொன்ன மாதிரிச் செய்யணும்….நவீன வழி ஒண்ணு இருக்கு….அது வசதியுள்ளவுகளுக்குத்தான் ஆகும். அத வேணா சொல்லட்டுங்களா…..

அதென்னங்க அது….?

நீங்க நியூஸ்லெல்லாம் ஏற்கனவே பார்த்திருப்பீங்களே…தெரியாதா?

கம்ப்யூட்டர் யுகமுங்க இது….வீடியோ கான்பிரன்சுன்னு ஒண்ணு இருக்குதே…அத மாதிரி வீட்டுல செட் பண்ணிக்குங்க…உங்க உறவுகள்லயும் அதமாதிரி ஏற்பாடு பண்ணிட்டாங்கன்னு வச்சிக்குங்க…உட்கார்ந்த எடத்துலயே எல்லாத்தையும் பார்த்துடலாம்…பேசிடலாம்…முடிஞ்சி போச்சு…..நிழலே நிஜமாயிடும்….

போங்க தம்பீ….நீங்க என்னென்னவோ சொல்றீங்க….காலைல எந்திருச்சி இன்னும் காபி கூடச் சாப்பிடாம இருந்திட்டிருக்கேன் நானு…..

அதான் பால் விலை ஏறிப்போச்சில்ல….காபியைக் குறைச்சிக்குங்க…இல்லையா கடுங்காப்பி சாப்பிடுங்க…. அதுவுமில்லையா பேசாம காபி, டீ சாப்பிடுறதையே நிறுத்திடுங்க…தொல்லையில்லாமப் போச்சு…மோருக்கு மட்டும் உறையிடுறதுக்கு கொஞ்சூண்டு பால் வாங்கினாப் போதும்ல…வீசம்படி…அதாங்க…நூறு மிலி…..செலவு மிச்சம்…நீங்க என்ன விலை உயர்த்துறது…நானென்ன சாப்பிடுறதுன்னு இருந்திடுங்க….அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்ட சிட்டிசன்ங்கதான் நாமன்னாலும், தப்பா சொல்றனோ, சட்டத்துக்குக் கட்டுப்பட்ட சனங்க நாம…அதான…? லா அபைடிங் சிட்டிசன்….ஓ.கே…அதுக்காக எல்லாத்தையும் கோயில்மாடு மாதிரி தலையாட்டிட்டே ஏத்துக்க முடியுமா? ஏதேனும் ஒரு வழில நம்ம எதிர்ப்பத் தெரிவிக்க வேணாமா? நம்மளால முடிஞ்சது எது? காபி, டீய நிறுத்துறதுதான். அது மூலமா பாலைப் புறக்கணிக்கிறோம்ல….நீங்க விலை கூட்டின பாலை நான் வாங்க முடியாது….வாங்குறதும், நிறுத்துறதும் என் இஷ்டம்…..தடுத்துப் பாரு பார்க்கலாம்….எப்டீ? அப்டீ நிறையப் பேரு நிறுத்திப்புட்டோம்னு வச்சிக்குங்க…ஆட்டமேடிக்கா விலை குறைஞ்சிடும்…ரொம்பக் கேட்டீங்கன்னா இன்னொரு பதில் இருக்கு எங்கிட்ட….

என்னா அது?

மத்த மாநிலத்தப் பாருங்கன்னுடுவேன்…அப்புறம் உங்க மூஞ்சிய எங்க கொண்டுபோய் வச்சிக்குவீங்க….ஆனாலும் பாவந்தாங்க நீங்க….ஒரு ஓட்டுக்கு மேல உங்ககிட்ட எந்தப் பவரும் இல்லியேங்க…அத நெனச்சத்தான் பரிதாபமா இருக்கு…

பவரு அவுங்ககிட்டத்தான் இருக்குது…தெரியுது…தெரியுது…அதுக்காக நம்மகிட்ட ஒண்ணொண்னையும் கேட்டுக் கேட்டுச் செய்ய முடியுமா…? அவுகளா நல்லது செய்வாங்கன்னுதான் கொண்டு வந்தோம்…இப்ப என்னடான்னா இருக்கிறதையும் புடுங்குறாங்க…விலையைத் தாறுமாறாக் கூட்டுறதும், நம்ம வாங்குற திறனைப் புடுங்குறதாத்தான அர்த்தம்…அதைச் சொன்னேன்…

கேட்டா எல்லாமும் நமக்காகத்தான்னு சொல்லுவாங்க…..

என்னா சொல்றாக இவுகன்னு…மிரண்டுபோய்ப் பார்ப்பீங்க…இல்லன்னா புரிஞ்சமாதிரி நடிப்பீங்க…இல்லன்னா மண்ணு மாதிரி இருப்பீங்க…வேறென்ன செய்ய முடியும் உங்களால…? பாவங்க நீங்க…..உயிரோட இருக்கிறவரைக்கும் ஒரு ஓட்டுத்தான உங்களுக்கு!

சும்மா அதையே சொல்லாதீங்க தம்பீ…வெட்கமா இருக்கு….

க்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். ஊருக்குள்ளேயே ஏறி இறங்கினால் குறைந்தது ஏழு ரூபாய். ரெண்டு ஸ்டாப் தாண்டினால் டபிள்….கடையில் நின்று டீ குடித்தால் பத்து. காபி என்று நாக்கு இழுத்தால் பன்னிரெண்டு. உருவி உருவிக் கொடுத்து ஊருக்குப் போகாட்டாத்தான் என்ன? இனிமே ரொம்ப கவனமா இருக்கணும்…நினைத்துக் கொள்கிறார்கள்.

ஒருவர் வேலை பார்க்கும் குடும்பங்களில் ஒரு சம்பாத்தியத்தை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாமல் போனது வெகு காலத்துக்கு முன்பே….இப்பொழுது இருவர் வேலை பார்க்கும் குடும்பங்களிலும் அவர்கள் கவனமாய் இருந்தால்தான் போயிற்று. கொஞ்சம் அகலக்கால் வைத்தால் அம்பேல்தான். அதுதான் அவுகள்லாம் டூ வீலர் வச்சிருக்காகல்ல….

அதுவும் பெட்ரோல் இப்போ ஏறிப்போய்த்தான கெடக்கு…

அதான் ரெண்டு ரூபா குறைச்சிட்டாங்கல்ல…பெறகென்ன…? எல்லாம் உங்களுக்காகத்தான்…அத நினைங்க…

அடுத்தாற்போல் மின் கட்டணம் உயரப் போகிறது. முன்னூறு வந்த இடத்தில் நானூற்று ஐம்பது வருகிறதோ இல்லை ஐநூறு வருமோ? இனிமேல் வீட்டில் உள்ள எல்லோரும் ஒரே ஒரு அறையில் அதாவது உறாலில் மொத்தமாய் மூலைக்கொருவராய் உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான். அம்மா படுத்திருக்கட்டும், இல்லையெனில் காய்கறி நறுக்கட்டும்….குழந்தைகள் படிக்கட்டும். அப்பா பேப்பர் படிக்கட்டும்…தாத்தாவும், பாட்டியும் படுத்து உறங்கட்டும். டி.வி.யும் ஓடட்டும்.

நீங்க என்ன? எந்த வீட்டுல பாட்டியும் தாத்தாவும் இருக்காக இப்ப? என்னத்தவோ உளறிட்டிருக்கீங்க…? அவுகல்லாம் முதியோர் இல்லத்துலல்லங்க இருக்காங்க…?

ஓ! ஸாரி…ஸாரி…மறந்தே போயிட்டேன்…..

எங்க அப்பாவுக்கு இந்த அக்டோபரோடதான் அறுபது முடிஞ்சிச்சி….சீனியர் சிடிசன் ஆயிட்டோம்…இனிமே குறைஞ்ச டிக்கெட்டுல சென்னைக்குப் போயிட்டு வரலாம்னு தீட்டிக்கிட்டிருந்தாரு….அவர் கையை நீட்டச் சொல்லி தடவி விட்டுட்டாங்க இப்போ…? வாயில மண்ணு…எப்டி…?

அவர் நெனச்சது ஏற்கனவே இருந்த ஒரிஜினல் ரேட்டுலேர்ந்து 40 சதவிகிதம் குறையுமேங்கிறதுதான். இப்போ விலையைக் கூட்டிட்டதுனால, 40 பர்ஸன்ட் கழிவு போக பழைய ஒரிஜினல் ரேட்டுக்கும் மேல வந்திடுவார் போலிருக்கு…அதுனாலதான் அவர் வாயுல மண்ணுன்னு சொல்றேன்……

தப்புங்க….

ஒ! ஸாரி…ஸாரி…வாயுல மண்ணுல்ல…நெனப்புல மண்ணு…..இப்போ கரெக்டா…?

நா ஒங்களத் தவிர யாருகிட்டப் போவேன்….மத்திய அரசு கைய விரிச்சிடுச்சி…..இப்போ அத நிரப்ப வேண்டியது நீங்கதான…தயவுசெஞ்சு பொறுத்துக்குங்க…..ஒத்துழைப்புக் கொடுங்க….

ஒத்துழைப்புக் கொடுக்கச் சொல்றாங்க…எப்டீ?

எப்பிடி? நா சொன்னேன்ல….அப்டித்தான்… …நடந்து போய் தூரத்த நாமளே குறைச்சிக்கிட்டு, பிறகு பஸ்ல போறது…..டீ…காபி குடிக்கிறத நிறுத்தறது….இல்லன்னா கடுங்காப்பி குடிக்கிறது…..வீட்டுல நாலஞ்சு ரூம் இருந்தாலும் ஒரே ரூம்ல அடையறது…

ஆமா…அதுதான்…இன்னும் நிறைய இலவசமெல்லாம் உங்களுக்குக் கொடுக்க வேண்டிர்க்கில்ல….அதுக்கெல்லாம் துட்டு வேண்டாமா? இலவசமெல்லாம் வேண்டாம்னு சொல்லுங்க…இந்தத் தொந்தரவெல்லாம் வராது.

நாங்களா கேட்டோம்…அவுகளாத்தானே தர்றோம்னு சொன்னாங்க…

அவுக தர்றோம்னு சொன்னதுனாலதான நீங்க ஓட்டுப் போட்டீங்க….? அதாங்க….ஒரு ஓட்டு…..அஞ்சாண்டுக்கு ஒரு ஓட்டு….

என்னங்க நீங்க…எங்ககிட்டயே வாங்கி எங்களுக்கே திருப்பிக் கொடுக்கிறீங்க…கேட்டா என்னென்னமோ சொல்றீங்க…எங்களையே திருப்புறீங்க…?

போங்க பேசாம…நா கொஞ்சம் தனியா உட்கார்ந்து அழணும்…போலிருக்கு…..என்னைக் கொஞ்சம் தனியா விடுறீங்களா…?

மக்கள் மனதுக்குள் அழுது கொண்டிருக்கிறார்கள்.

யார் வந்துதான் நமக்கு விடியும்?

---------------------------

23 நவம்பர் 2011

”யாருக்குச்சொந்தம்” சிறுகதை(உயிரோசை இணைய இதழ் - 09.07.2012 வெளியீடு)


ந்த நெனப்புலதான் அவ பார்க்குறாங்கிறது எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சிச்சு… எத்தனையோவாட்டி ராசுக்கட்டி சொல்லியிருக்கான்…போடா ஒனக்கு வேற வேலையில்லன்னு நானும் உதறியிருக்கேன்…ஏன்னா என்னவிட மூணு நாலு வயசு பெரியவ அந்த மீனாப்பொண்ணு. அவள நிமிந்துகூட நா பார்த்ததில்ல…என்னாத்துக்குங்கிற நெனப்புதான்….ஏற்கனவே படிக்காத கழுத, ஊரச் சுத்துற நாயின்னு அம்மா திட்டுது என்னை…எட்டு வரைக்கும்தான் நா படிச்சேன்…என்னத்தப் படிச்சேன்…அவுகளாத் தூக்கித் தூக்கிப் போட்டாக…அம்புடுதே…அதுனால என்னா பிரயோசனம்? எனக்குத்தான் படிப்பே செல்லலியே! சும்மா சினிமாவாப் பார்த்துப் பார்த்துக் கெட்டுப் போயிட்டேனாம்…அம்மாதான் வயித்தெறிச்சலாச் சொல்லும் தினப்படிக்கு. படிப்பு அப்போ செல்லலை, ஆனா பெறவு செல்லாமயா…தெனசரி பேப்பர் படிக்கிறேனே….அதென்னவோ சினிமா விளம்பரம் பார்க்கிற பழக்கத்துல அப்டியே தலப்புச் செய்தியா பாக்கிற பழக்கத்த உண்டாக்கிச்சி…எழுத்துக் கூட்டிக் கூட்டிப் படிச்சிப் படிச்சி இப்போ நல்லா வந்திடிச்சி….
தெரு முக்குல ஒரு கூரை செட்டுப் போட்டு கட்சி ஆபீசு ஒண்ணு இருக்குது…அங்கதான் கெடப்பேன்…நா முணுமுணுத்துக்கிட்டே படிக்கிறத பலபேரு பார்த்திருக்காக….ஆனா யாரும் ஒண்ணுஞ் சொன்னதில்ல…அதுனாலதான் நா அங்கயே போயிட்டிருக்கேன்…எங்க ஊர்ல வாசகசாலை ஒண்ணு இருக்குதுங்க…அதான் லைப்ரரி, லைப்ரரின்னுவாகளே….கேட்டுக் கேட்டு எனக்கும் அதுவே சொல்ல வந்திடுச்சி…ஆனா சுவத்துல வாசகசாலைன்னுதான் போட்டிருக்கும்…எப்பவோ எழுதினதுபோல…மங்கி தெரிஞ்சும் தெரியாமலும் இருக்கும்…அங்க நா போக மாட்டேன்…ஏன்னா நா எழுத்துக் கூட்டி முணு முணுக்கிற சத்தம் வருதுன்னு தொந்தரவா நினைச்சாங்க…கப்சிப்னு இருக்கும் அங்க…எதுக்கு சங்கடம்னுட்டு இந்த கட்சி ஆபீசுக்கே போயிடுறது…
அங்க எல்லாப் பேப்பரும் இருக்காது….கட்சிப் பேப்பர்னு சொல்லுவாகல்ல…அதுல ரெண்டு மூணு கெடக்கும்…அப்புறம் ஒரு இங்கிலீஷ் பேப்பர் பார்த்திருக்கேன்…இத எதுக்கு வாங்குறாகன்னு தோணும்…அத யாருமே தொட மாட்டாக…. ஆனா ஒண்ணு…சாயங்காலமா ஒருத்தர் தினப்படிக்கு வருவாரு…வந்தவுடனே அவுரு அந்த இங்கிலீஷ் பேப்பரத்தான் எடுப்பாரு….மனுஷன் மூலை முடுக்கு விடாமப் படிச்சித் தள்ளிடுவாரு…பல நாளு அவர வேடிக்கை பார்த்திட்டே எம்பொழுது போயிருக்கு….அவுருக்காகவே வாங்குறாக போலிருக்குன்னு நெனச்சுக்குவேன்…அவர் மூஞ்சி பளபளன்னு இருக்கும்…அறிவா இருப்பாரு மனுசன்…எனக்கு அவரோட பேசணும்னு ஒரே ஆச…ஆனா நிமிர்ந்து பார்த்தாருன்னா பயம்மா இருக்கும்…அவரு சாதாரணமாப் பார்க்குறதே அப்படியிருக்குதோ என்னவோ? எனக்கும் அவருக்கும் என்னா வந்திச்சி…நானா நெனச்சிக்கிடுறேன் போலதான் தெரியுது…சும்மாவாச்சும் ஒருத்தர் இன்னொருத்தர் மேல கோபப்படுறதுக்கு என்னா இருக்கு? நா படிக்காத ஆளா…அதுனாலயே இப்டியெல்லாம் நெனப்பு வருதோன்னு தோணுது எனக்கு…ஏன்னா படிச்ச ஆளுக பலபேரப் பார்த்திருக்கேன் நா…அவுக நிமிந்து பேசற அழகே தனியாத்தான் இருக்கும்…ஆனா அந்தப் பேச்சுலதான் என்ன ஒரு அடக்கம்…படிக்கப் படிக்கத்தான் அப்டி வரும் போலயிருக்கு…அர குறைகதான கத்திட்டுத் திரியுது…அதுக்குச் சொன்னேன்…
எனக்கு நியூசுலயே பிடிச்சது உள்ளுர்ச் செய்திதான். மூல முடுக்கு விடாம எங்கெங்க என்னென்ன நடந்திச்சுன்னு பாத்திடுவேன்…அப்பிடிப் பார்த்துப் பார்த்துத்தான் நானும் அந்த எண்ணத்துக்கு வந்தேன். சும்மா செய்தியா தெரிஞ்சிக்கிட்டு என்னா பிரயோசனம்? ஒரு செய்தியிலயாவது நாம இருந்திருக்கமா? நம்ம பேரு வந்திருக்குதான்னு தோண ஆரம்பிச்சிச்சு…பெறவுதான் அந்த வேலய ஆரம்பிச்சேன்…
எங்க ஏரியாவுல குழா போடறேன்…குழா போடறேன்னு சொல்லிக்கிட்டிருந்தாக பஞ்சாயத்துல… ஏரியா கவுன்சிலரு ஒருத்தன் எல்லார்ட்டயும் பரப்பி விட்டு காசப் புடுங்கிட்டான் பலபேர்ட்ட… அவம்பேரு பாரிவள்ளல். இத நம்பி எங்க தெரு வீட்டுக்காரவுகளெல்லாம் முந்திட்டுப் போயி நாலாயிரம், நாலாயிரம்னு பஞ்சாயத்துல பணத்தைக் கட்டிட்டு வந்திட்டாக…முதல்ல எத்தினி வீட்டுக்குக் கனெக் ஷன் கொடுக்கிறாகன்னு பார்ப்போம்னுட்டு நா விட்டுட்டேன்…அப்பா கூடச் சத்தம் போட்டாரு…அம்மாவும் திட்டிச்சி…உனக்கென்னடா நீ பாட்டுக்குப் போயிருவ…நானில்ல அலை அலைன்னு அலைஞ்சு தண்ணி எடுத்திட்டு வர வேண்டிர்க்குன்னு சொல்லிச்சி…நீ பேசாம இரு…உனக்குத் தெரியாதுன்னு சொன்னேன். என்னவோ எம்மனசுல உறுத்திட்டேயிருந்திச்சி…ஏன்னா நா பாரிவள்ளல பல எடத்துல பார்த்திருக்கேன்…அவென் போறது வர்றது எதுவுமே எனக்குச் சரியாப் பட்டதுல்ல…பஞ்சாயத்துல கட்டுன பணத்துக்குப் பில்லுக் கொடுத்திட்டாக…ஆனா தண்ணிதான் எப்ப வரும்னு யாருக்கும் தெரில…
திடீர்னு ஒரு நா ஊருக்கு ஒதுக்குப்புறமா இருந்த கண்மாய் பக்கத்துல ஒரு மேல் நிலைத் தொட்டிய கட்டினாக….போர்த்தொளை போட்டு ஆழ்குழாய்க் கிணறு இறக்கி கம்மாத் தண்ணியப் பூராவும் உறிஞ்சி ஏத்த ஆரம்பிச்சிட்டாக….சனமும் நம்பிடுச்சி…வீட்டுக் குழாய்லயே தண்ணி வந்திரும்னுட்டு…கம்மால தண்ணி நெறஞ்சு இருந்தப்ப எல்லா வீட்டுலயும் நெலத்தடி நீரு பக்கமா இருந்திச்சு…அத உறிஞ்சினாலும் உறிஞ்சினாக…எல்லா வீட்லயும் அடில போயிடுச்சு…முன்னூறு அடி, நானூறு அடின்னு. ஆளாளுக்குக் கொதிச்சுப் போயிட்டாக….ரெண்டே மாசத்துல நடந்ததுதான் இது…நம்ப முடியுதா? ஏரியாவுல பக்கத்துக்குப் பக்கம் போரிங் மிஷின் பல வீடுகளுக்கு ஓட ஆரம்பிச்சிடுச்சி….மூவாயிரம் வீடுவரைக்கும் காச வசூல் பண்ணிப்பிட்டு நூறு வீடுதான் இருக்கும்…தொட்டிய ஒட்டின ஏரியாவுல சில தெருக்கள்னு குழாயப் போட்டு கனெக்சனக் கொடுத்துப்பிட்டான்…அவுகளும் நல்ல தண்ணி வந்திடுச்சி…நல்ல தண்ணி வந்திடுச்சின்னு குதிக்க ஆரம்பிச்சிட்டாக…கனெக்சன் கொடுத்த ஏரியாவுலதான் பாரிவள்ளலோட வீடும் இருக்குது….கடசில பார்த்தா என்னா செய்தின்னா, சோறு வடிச்சா, சாதம் மஞ்சளா வருது, தண்ணி கடுக்குது…ருசியில்ல…வாடை வருது, அது இதுன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாக….ஒரு சாக்கடைத் தண்ணி கலந்திடுச்சின்னு பேச்சு வந்திச்சு…ஒரு நா புழுவா மெதக்குதுன்னு புலம்புறாங்க…அந்தத் தொட்டியவாவது சுத்தஞ் செய்தாத்தான…?அதுனால குளிக்கவும், தொவைக்கவும்தான் அந்தத் தண்ணி லாயக்குன்னும், யாரும் குடிச்சிற வேணாம்னும் தண்டோரா போட்டாங்க… நல்லவேள…சனம் பொழச்சிச்சு…இப்போ அந்தத் தண்ணியும் வரலன்னு பேசிக்கிறாக…கம்மாய்ல தண்ணி இருந்தாத்தான…அந்த நெலத்தடியும் வத்திப் போச்சு போலன்னு நாங்க நெனச்சிக்கிட்டோம் …
வேணும்…நல்லா வேணும்னு குழா போடாத வீட்டுக்காரவுக பழிக்க ஆரம்பிச்ச கத தனி….. இன்னைக்கு வரைக்கும் டாமுலேர்ந்து கொழா இழுத்து தண்ணிக்கு ஏற்பாடு பண்ணல பஞ்சாயத்துலர்ந்து….அது எம்பது நூறு கிலோ மீட்டர் வரணும்…ஆனா ஒண்ணு கொழா எல்லாம் அங்கங்க எறங்கிக் கெடக்குது…கேட்டா அதுக்குத்தான்னு சொல்றாக…பல மாசமா அப்டியே கெடக்குற அந்தக் கொழாய்ல பலபேரு குடியே இருக்காகன்னு பேசிக்கிறாக…வேறே என்னென்னவோ தப்பெல்லாம் நடக்குதாம்…ஒரு எடம் சீண்ட்ரமா கெடக்குன்னு வச்சிக்குங்க…அங்க பாம்பும் பல்லியும் தானா வந்து அடையும்னு சொல்வாக..அது போல ஆயிடுச்சி …வசூல் பண்ணுன காசை என்னா பண்ணினாகன்னு எதுவும் தெரில….ஏன்னா கொழா போடுறதுன்னா அதப்போல இன்னொரு பங்குக் காசு அவுக போட்டாகணும்ல…இவுக எப்பப் போட்டு எப்பத் தண்ணி வர்றது எங்க சனத்துக்கு…
இதுதான் சமயம்னு நா கூட்டத்தக் கூட்ட ஆரம்பிச்சேன்…எங்க ஏரியாவுல அரசு பஸ்ஸை நுழைய விடுறதில்லங்கிறது எங்களோட மொதப் போராட்டமா இருந்திச்சு….ரோட்டு நுனில போய் பிளாஸ்டிக் கொடமாக் கொண்டாந்து கலர் கலரா அடுக்கி வழிய மறிச்சு உட்கார்ந்துடிச்சிங்க எல்லாப் பொம்பளைகளும்…கூட்டமான கூட்டம்…இம்புட்டுச் சேரும்னு நானே எதிர்பார்க்கல….ஏற்கனவே சனம் துடிச்சிப் போயிருக்குன்னு தெரிஞ்சிச்சி…யாருடா பூனைக்கு மணி கட்டுறதுன்னு எதிர்பார்த்திட்டு இருந்தாப் போல அம்புட்டுப் பேரும் மொத்தமா வந்திட்டாக…
தண்ணி கொடு…தண்ணி கொடு….சுத்தமான தண்ணி கொடு….
ஏமாற்றாதே…ஏமாற்றாதே….ஏழை சனத்தை ஏமாற்றாதே….
காசு வாங்கின அண்ணாச்சி….. கொழா போடுறது என்னாச்சி…..
எங்க பணம் என்ன ஆச்சு…? யார் வயித்துல போயிருச்சு?
இன்னும் என்னென்னவோ கோஷங்களைப் போட்டுக்கிட்டு நாறடிச்சிட்டாக பகுதி சனங்க…மொதல்ல பயந்தவன்.பாரிவள்ளல்தான். இத எதிர்பார்க்கல போல….அவந்தான் சேர்மனோ இல்ல தலைவரோ என்னவோ பேர் சொல்றாக…அவரோடக் கூட்டுச் சேர்ந்துக்கிட்டு காசக் கொள்ளையடிச்சிட்டான்ங்கிறது ஏற்கனவே பேச்சு…அது இப்போ உறுதியாயிடிச்சு போல …ஏன்னா நாந்தான் சொன்னனே….வெறும் சைக்கிள்ல போயிட்டிருந்தவன் இப்போ ஒரு புது டூவிலர் வாங்கியிருந்தான்….வட்டிக்குப் பணம் கொடுக்கிறான்னு வேறே பேச்சு….திடீர்னு வெள்ளையும் சொள்ளையுமாத் திரிய ஆரம்பிச்சா…? யாருக்குத்தான் சந்தேகம் வராது…அந்தச் சேர்மன்காரரைப் பத்திக் கேட்கவே வேணாம்…..ஏற்கனவே அந்தாள் பெரிய ரௌடிங்கிறது நம்ம ஆளுகளுக்குத் தெரியும்…இப்பல்லாம் அப்டித்தான பதவில இருக்காக…இப்போ அவுருக்கு இவன் பாடிகாடு. கேட்கணுமா…? .
அப்பத்தான் மொத மொறையா எம்பேரு பேப்பர்ல வந்திச்சி…..ஏன்னா விசயத்த ஆரம்பிச்சவனே நாந்தானே….பிரச்னையே பெறவுதான் ஆரம்பமாச்சு…போலீஸ் வந்திச்சி…கலைஞ்சு போகச் சொன்னாக…யாரும் கேட்கல…ரொம்பப் பிஸியான எடம்…காரு, ஆட்டோ, ஸ்கூல் பஸ், டூ வீலர் இப்டி எதுவும் போக முடியல்ல…நானு,பாருங்க வெறுமனே நானு நானுக்கிட்டிருக்கேன்…எம்பேரு சேதுங்க…சரிங்களா…! நானு, மணிகண்டன், அமாவாசை, கோரி,சஞ்சீவி இன்னும் நாலஞ்சு பேரு…எங்களப் பிடிச்சி உள்ள போட்டா எல்லாம் சரியாப் போயிடும்னு யார் சொன்னாகளோ…விறு விறுன்னு வண்டில ஏத்திட்டாக எங்களை….நாங்களும் ஏறிட்டோம்….எங்க கூடவே பத்துப் பன்னிரண்டு பொம்பளைகளும் முண்டிக்கிட்டு ஏறிடிச்சி….எங்களையும் கூட்டிட்டுப் போய்யா…எங்களுக்குத்தான இந்தத் தம்பிக போராட்டம் பண்ணினாக…நாங்களும் வர்றோம்… அவுக மட்டும் கஸ்டப்படவான்னு ஏறிட்டாங்க. அந்த வேகத்துல புதுபுதுன்னு நிறையப் பேரு ஏறி வண்டியே நெறஞ்சு போச்சு…இன்னொரு வேனும் வந்திச்சி. அதுலயும் அம்புட்டுப் பேரும் உட்கார்ந்தாச்சு….பொட்டுத் தண்ணியில்ல…தெனம் சனம் பாடாப் படுது….எத்தினி மாசம் ஆச்சு…யாரும் கண்டுக்கல….என்னதான் செய்வாக….எதுவுமே ஒரு அளவுதான…கவனிக்கிலேன்னா கடாசிலே இப்டித்தான வரும்?
எங்க எல்லாத்தையும் கொண்டுபோய் ஒரு மூடிக் கெடந்த ஓடாத சினிமாத் கொட்டாய்ல கொண்டு அடச்சாக…வாசல்ல நாலு போலீஸ் நின்னிச்சு…சனம் அங்கங்க கூடிக் கூடிப் பேச உட்கார்ந்துட்டாக…பொழுது போகணும்ல…ஆளாளுக்கு வெளிய போகவும் உள்ள வரவும் டீயக் குடிக்கவும், வாங்கிட்டு வரவும்னு இருக்க ஆரம்பிச்சிட்டாங்க…போலீசும் கண்டுக்கல…போறவன் போறான்…இருக்கிறவன் இருக்கான்ன மாதிரி இருந்திச்சி…அவுக நோக்கம் கூட்டத்தக் கலைக்கணும்…ஏரியா டிராஃபிக்க ஓ.கே. பண்ணனும்…அவ்வளவுதான்…சாயங்காலம் எங்க எல்லாத்தையும் விட்டுட்டாகன்னு வச்சிக்குங்க….
ஒழுங்கா இருந்துக்குங்க…அடுத்தாப்புல ஏதாச்சும் மறியல் அது இதுன்னு பண்ணினா காப்புதான்…ஞாபகமிருக்கட்டும்….சப் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் வந்து கத்திட்டுப் போயிட்டாரு…
ரெண்டு ஆள அனுப்பிச்சி என்னக் கூப்பிட்டு விட்டான் பாரி…தான் கூப்பிட்டா வருவனோ மாட்டனோன்னு சேர்மன் அய்யா கூப்டாருன்னு வந்தவுக சொன்னாங்க….
இவன் என்ன கூப்டுறது…நானென்ன போறதுன்னு நினைச்சிட்டு, போங்க வர்றேன்னு சொல்லி அனுப்பிச்சிட்டேன்….அப்பருந்துதான் அவனுக்கும் எனக்கும் பகை ஆரம்பமாச்சு….
என் வேல, மனு எழுதறது…வீடு வீடாப் போயிக் கையெழுத்து வாங்குறது….கலெக்டர்ட்டப் போயிக் கொடுக்கிறது…இப்டி இருந்திச்சி….படிக்க ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன்…இப்போ மனுவெல்லாம் நல்லா எழுதக் கத்துக்கிட்டேன்னுதான் சொல்லணும்….
அம்மா கூடச் சொல்லிச்சி….இந்த வேலைய கலெக்டர் ஆபீஸ் வாசல்ல கைல பேப்பரோட போயி உட்கார்ந்தீன்னா நாலு காசாவது கெடைக்கும்டா…இப்டி வெட்டிக்கி ஊர்க் காரியத்தச் சொமந்துக்கிட்டுத் திரியுறியே…
எனக்கென்னவோ நல்லதான வேல செய்றதுல ஒரு சந்தோசம் இருந்திச்சு…எங்க கலெக்டரு நல்லவரு…நேர்மையானவரு…அவரு வந்தப்பிறவு கலெக்டர் ஆபீசுல லஞ்சம் படுவேகமாக் குறைஞ்சிடுச்சின்னு சொல்றாவ…யாராச்சும் வாங்கிப் பிடிபட்டா அவ்வளவுதான்….கதை முடிஞ்சிச்சு….அவுரு மேலயே என்னென்னவோ குறை சொல்லிப் பார்த்தாக…எதையும் சனம் நம்பல….ஏரியா ஏரியாவா மனுசன் என்னா அலைச்சல் அலையறாரு….கார்லதான வர்றாருன்னு சொல்றாக…கார்ல வந்து எறங்காம,ஒரு கலெக்டரு நடந்தா வருவாரு? கொஞ்சமாச்சும் நியாயம் வாணாம் பேச்சுல…என்னத்தையாவது வாய்புளிச்சதோ, மாங்கா புளிச்சதோன்னு பேசிப்புடறதா? தெருத் தெருவா, சந்து சந்தா என்னா அலைச்சல்….தண்ணி ஒழுங்கா வருதா? சாக்கடை சரியா ஓடுதா…கொசுத் தொல்லை இல்லாம இருக்கா…ரோடு போட்டிருக்கா…தெரு லைட் எரியுதா…ரேஷன் அரிசி கரெக்டாக் கிடைக்குதா….மண்ணென்ணெய் ஒழுங்கா ஊத்துறானா….பஸ்சு டயத்துக்கு வருதா? எல்லா ரூட்லயுமிருந்து இருக்குதா?தெனம் வீதிய சுத்தம் பண்றாகளா? எத விட்டாரு அவுரு? இப்டிச் சொல்லிக்கிட்டே போகலாம்….
இந்த மாதிரிச் சின்னச் சின்ன விஷயத்தக் கூடவா ஒரு கலெக்டர் பார்ப்பாரு? அப்டித்தான வச்சிருக்காக…மத்த பயலுவ எல்லாம் சொகுசுப் பயலுவ…எவன்டா என்னத்தத் தூக்கிக்கிட்டு நம்மகிட்ட வருவான்…எவன் தலைல மொளகாய் அரைக்கலாம்…எம்புட்டுக் காசத் தேத்தலாம்னுதான அலையுறானுங்க…எத்தன வாட்டி எங்க ஏரியா டீக்கடைல எங்க கலெக்டரப் பார்த்திருக்கேன் தெரியுமா? ஆளோட ஆளா நின்னு டீ குடிக்கிறத எங்கயாச்சும் பார்த்திருக்கீகளா? மழை தண்ணி ஊத்திச்சுன்னு வச்சிக்குங்க…மனுசன் பொத்திக்கிட்டு வீட்டுல மொடங்கிடுவாருன்னு நினைக்கிறீகளா…எந்தக் கலெக்டருதான் அப்டி இருப்பாக…? இருக்க முடியாதுல்ல… எங்க ஆளும் அப்டியில்லைதான்….ஆனா ஒண்ணு ரொம்ப வித்தியாசமா வருவாராக்கும்…வெள்ள நிவாரணத்தப் பார்வையிட ஆபீசர்கள முன்னாடி அனுப்பிச்சிட்டு, தலைல முண்டாசோட வேட்டிய மடிச்சிக் கட்டிக்கிட்டு யாருன்னே தெரியாம கூட்டத்தோடு கூட்டமா வந்து நின்னிருப்பாரு….அவுருக்கு எந்நேரமும் சனத்தோட சௌக்கியந்தான் முக்கியம்…
.மனுசன் யாருக்கும் வளைஞ்சு கொடுக்கமாட்டாராம்…அத வேறல்ல சொன்னாக…இப்டி இப்டித்தான் செய்வேன்….அநாவசியமா யாரும் குறுக்கிடக் கூடாதுன்னு கட்சி ஆளுக வந்தாக் கட்டன் ரைட்டா சொல்லிப்புடுவாராம்…எவனும் எதுவும் கெடைக்கும்னு அவருட்ட வந்து நிக்க முடியாது….அப்டி கண்டிஷனா இருந்துதான் பிடிக்காம இப்போ பதிமூணாவது எடமா எங்க ஊருக்கு வந்திருக்காரு…அவரு வர்றப்பவே எல்லாச் செய்தியும் முன்னாடி வந்திடுச்சி…அவரா…அவரா…ன்னு பேப்பர்லயும், டி.வி.லயும் அவரப் பத்திப் படிச்ச நம்ம ஆளுங்க மனுநீதி நாளின்போது குமிஞ்சி போய்ட்டாக…
என்னா ஒரு பொறுமை அவருக்குத்தான்…? கூட்டமான கூட்டம்…ரோட்டைத்தாண்டி நிக்குது…அந்தச் சிரிச்ச மொகம் மதியம் மூணுவரைக்கும் மாறவேயில்ல…எங்க எல்லார்ட்டயும் மனுவ வாங்கி என்ன ஏதுன்னு கேட்டு சம்பந்தப்பட்ட ஆபீசர்ட்டச் செய்யச் சொல்லி, நாளைக்கே எனக்கு பதில் வேணும்னுல்ல சொல்லிப்புட்டாரு….மூன்றரைக்கு மேலதான மதியச் சாப்பாடே சாப்பிடப் போனாரு….சனங்க சந்தோசந்தான் அவுரு சந்தோசம்…அவுக அம்மாச்சி அப்டித்தான் அவர வளர்த்ததா ஒரு மீட்டிங்ல சொன்னாரு…இப்டிப்பட்ட ஒருத்தரப் பார்த்தாவது நாம திருந்த வேணாமா?
எங்க அம்மா இருக்கே அது ரொம்பப் பாவம்…பெத்த வயிறு கலங்குற மாதிரி எப்பயாச்சும் புலம்பும்…அப்பா எதுவுமே சொல்லாது…அதுபாட்டுக்கு அது இருக்கும்…அம்மா ரொம்பச் சத்தம் போட்டா, நல்லதுதான செய்றான்…அப்டின்னும்….அது மில்லுல வேல பார்த்திச்சி…ஒரு கட்டத்துல நெறையப் பேர வெளில அனுப்ப ஆரம்பிச்சாக….அதுல அப்பாவும் வந்திட்டாரு…அதான் முப்பது வருசம் பார்த்தாச்சில்ல…கொஞ்ச நாளைக்காவது டென்சனில்லாம இருப்போம்னுக்குவாரு….பாவமாத்தான் இருந்திச்சி எங்களுக்கும்…நா நல்லா படிச்சி வேலைக்கிப் போயிருக்கணும்….அதுக்கு நமக்குக் கொடுப்பினை இல்லாமப் போச்சி….சின்ன வயசுல சேர்க்கை சரியில்ல…நா யார் யார்கூடச் சேர்ந்து வெட்டிக்கி அலஞ்சனோ அவனெல்லாம் இப்ப நல்லாயிருக்கானுக…எல்லாப் பசங்களும் எங்கூடச் சேர்ந்து சினிமாப் பார்த்திட்டே அலைஞ்சவுங்ஞதான்..
என்ன கலாட்டாவெல்லாம் பண்ணியிருக்கோம் சினிமாத் தியேட்டர்ல… எங்கூட இருந்தானே சஞ்சீவி அவென் பண்ணாத கூத்தா…படம் ஓடிட்டிருக்கைல ஒரு பொம்பளப் புள்ளைய இழுத்திட்டு கக்கூசுக்குள்ள ஓடிட்டான்னா…அது குய்யோ முறையோன்னு கத்த, சுத்தம் பண்ண வந்த தோட்டிச்சி பார்த்துப்பிட்டு கை வாளில இருந்த பினாயில் தண்ணிய அவன் மேல தூக்கியடிக்க, அப்டியே செவுறேறிக்குதிச்சு கரம்பக் காட்டுக்குள்ள விழுந்து ஓடிட்டான்ல…மறுநா பார்த்தா ஒடம்பு பூராக் காயம்…என்னாடான்னு கேட்டா காம்பவுன்ட் சொவுரு கண்ணாடி கிழிச்சிடுச்சின்னான். எங்க ஊரு சினிமாத் தியேட்டர் பின்னாடி காம்பவுன்ட் சொவுரு உயரம் கம்மி. எவனும் ஏறிக் குதிச்சு வந்து ஓசி சினிமாப் பார்த்துடக் கூடாதுன்னுட்டு கண்ணாடிச் சில்லுகளா காம்பவுன்ட் சுவத்து நெத்தில பதிச்சு வச்சிருப்பாக…பார்க்கவே பயங்கரமா இருக்கும்…அதுல போயி பயத்துலயும், பதட்டத்துலயும், கையை ஊண்டி, கால வச்சி எகிறி ஓடினான்னா? சொகுசாவா இருக்கும்…? ஆனா ஒண்ணுங்க…அவென் கூட இப்ப மிலிட்டரில இருக்கிறதாக் கேள்வி…வர்ற தைல அவனுக்குக் கலியாணமாம்….
நாந்தான் சுதாரிக்காமப் போயிட்டேன்….அப்பயே புத்தி இல்லாமப் போச்சி…..அப்பாவும்தான் எவ்வளவு சொல்வாரு…ஏதாச்சும் கேட்டாத்தான…எதச் சொன்னாலும் எதுத்துப் பேசினா….?சாப்பிடாமப் போறது…பாத்திரத்தை விட்டெறியறது… சாமான உடைக்கிறது…இப்டியே இருந்தா? யாருக்குத்தான் பிடிக்கும்? விட்டிட்டாரு…ஆனா ஒண்ணு சொல்லணும்…ஒரு நா கூடக் கை நீட்டினதுல்ல…அதுதான் எங்கப்பாட்ட எனக்குப் பிடிச்ச குணம்…அது ஒண்ணுக்காகவே அவருக்கு என் ஒடம்பச் செருப்பாத் தச்சுப் போடலாம்…இன்னைக்கு வரைக்கும் வெட்டியாத்தான் நா இருக்கேன்…அப்பாவோட சேமிப்பு, பிராவிடன்ட் பணம், இன்னும் என்னென்னவோ சொல்றாகளே…எல்லாமும் சேர்ந்துதான் பாங்குல போட்டு வச்சி, அந்த வட்டிலதான் குடும்பம் ஓடிக்கிட்டிருக்கு…
உடம்பு முடியாத ஆளுன்னு என்ன வெளில தள்ளிப்புட்டான்…நான் கொஞ்சம் முயற்சித்திருந்தா நீடிச்சிருக்கலாம். போதும்ங்கிற எண்ணம் எனக்கும் வந்திடுச்சி….முப்பது வருஷம் சர்வீஸ் போட்டாச்சுல்லங்கிற அலுப்பு வந்திடுச்சி…ஒருவேளை அந்த அலுப்புக்கு என் ஒடம்பும்தான் காரணமோன்னு இப்பத் தோணுது…இப்டியே இருந்தமா, போய்ச் சேர்ந்தமான்னு இருக்கணும்…படுக்கைல விழுந்துரக் கூடாது….அதான் நா சாமிட்ட வேண்டிக்கிறது…..எங்கய்யா பொலப்பம் இப்டி….அவுரு உட்கார்ந்து சாப்பிடுறதுக்காவது ஒரு அர்த்தம் இருக்கு…ஆனா என்னோட இருப்புக்கு ஏதாச்சும் அருத்தம் இருக்குதான்னு இப்பல்லாம் பல சமயம் மனசு அழுகுது. போற போக்கப் பார்த்தா ஏதாச்சும் தற்கொல கிற்கொல பண்ணிக்குவேனோன்னு எனக்கே பயமாயிருக்கு… …என்னவோ இருக்கேன்னு வையுங்களேன்…
இப்ப நா செய்ற முக்கியமான வேல பாதாளச் சாக்கடை போடுறது….அதாவது அதுக்கு மனு எழுதி எல்லார்ட்டயும் கையெழுத்து வாங்கணும்….ஒரு வீடு விடக் கூடாதுன்னு வச்சிருக்கேன்….அந்தப் பாரி இருக்கிற தெருக்காரவுகதான் என்ன செய்வாகளோ….அவனுக்குப் பயந்துக்கிட்டு மாட்டேன்னுட்டாகன்னா….வெறும் கவுன்சிலர் அவன். என்னமா பயமுறுத்தி வச்சிருக்கான்னு நினைக்கிறீக….அதுக்கெல்லாம் காரணம் ரௌடி ராஜ்யம்தான்….மக்கள பயத்துலயே வச்சிருக்கணும்ங்கிற தந்திரம். எவனையும் வாயத் திறக்க விடக் கூடாதுங்கிற சாதுர்யம்….
எல்லார்கிட்டயும் பணிவா இருக்கிற மாதிரியும், நம்பாளுக….நம்பாளுகன்னு சொல்லிக்கிட்டு நடிச்சிக்கிட்டே திரியறது…உண்மையான மனசுங்கிறதெல்லாம் கிடையவே கிடையாது….எத்தன நாளைக்குத்தான் செல்லுபடியாகுதுன்னு பார்ப்பம்னுட்டுதான் நானும் இருந்தேன். அடுத்த தேர்தல்ல இவனத் தூக்கியடிக்கணும்டா….ன்னு எங்கூட இருந்த சாமிக்கண்ணு சொன்னான்.
நாங்க கோஷ்டியா ஏழெட்டுப் பேரு சேர்ந்திருந்தோம்….எப்பவும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாத்தான் நிப்போம்…ஒண்ணாத்தான் போவோம்…வருவோம்….இதுவே அவனுக்குப் பிடிக்காமப் போயிடுச்சோ என்னவோ…..அவனோட மொறப்பொண்ணுதான் அந்த மீனாங்கிறவ…இப்பத்தான் அடிக்கடி எங்க வீட்டுக்கு வர ஆரம்பிச்சிருக்கா… அவனுக்குக் தெரியுமோ தெரியாதோ…தெரிஞ்சா விடுவானா…?
ஏ மீனாளு…ஏ மீனாளுன்னு அம்மாவும் ஏந்தான் இப்டி அவள இழுத்துக்கிட்டுத் திரியுதோ…ரெண்டு பேரும் சேர்ந்து தள்ளிப் போயி யானைக்குழாய்ல தண்ணி எடுத்திட்டு வர்றத நா பார்த்திருக்கேன்…அப்பல்லாம் நா அந்த கட்சி படிப்பகத்துல உட்கார்ந்திருப்பேன்…அத ஒட்டி வர்றப்ப அதும் பார்வை ஏன் அப்டித் திரும்புது…பேசாம எப்பயும் போல அம்மாச்சி கூடப் பேசிட்டே போக வேண்டிதான…அது பார்க்குறது அம்மாவுக்குத் தெரியாது போல…அந்த எடம் வர்ற போதுமட்டும் அது கொஞ்சமா பேக் அடிக்கிறத நா கவனிச்சிருக்கேன்…அது சரி அது அப்டிச் செய்றது எனக்கெப்படித் தெரிஞ்சிச்சு…நா பார்க்கக் கண்டுதான…ஆனாலும் வேணா…அது அவனோட மொறப் பொண்ணு…எதுக்கு வம்பு…? அத்தோட அதான் முன்னமயே சொன்னனே…வயசு பெரிசுன்னு….அதுக்காச்சும் தெரிய வேணாமா?
ஒரு வேள தம்பி மாதிரி நெனச்சுப் பார்க்குதோன்னு கூட யோசிச்சேன்….அப்டிப்பார்த்தா அந்த மாதிரி நாக்க உள்ளவிட்டு சுழட்டுமா…? என்னா உருட்டு உருட்டுது…ஆனாலும் தைரியந்தான் அதுக்கு… அந்த நேரம் பார்க்காமப் போனா நஷ்டந்தான் நமக்கு…ஏன்னா ஓரக் கண்ணுல அவ நாக்கு சொழட்டுற அழகு இருக்கே….அதுலதான் நா விழுந்துட்டனோ…பக்கத்து சாவடில ஆளுக எந்நேரமும் உட்கார்ந்திருப்பாக…அவுக கண்ணுல படாதா? யாராச்சும் நோட் பண்ணிற மாட்டாக…?இந்நேரம் நிச்சயம் கவனிச்சிருப்பாகதான்…என்னைக்கு வம்பு வரப்போவுதோன்னுதான் கெடக்கேன் நா…
அப்டி ஆளுக கவனிச்சிருந்தா அது பாரி காதுக்குப் போயிருக்கும்ல…ஏற்கனவே அவன் ஒரு பொறுக்கி…அத வெட்டிப் போட்டாலும் போட்ருவான்…ஆனா அந்த மாதிரிப் பயம் எதுவும் இதுகிட்டக் காணலியே…அதுதான எனக்கு ஆச்சரியமா இருக்குது…
ஒன்வயசுதாண்டா இருக்கும் அதுக்கும்…எப்டி வீட்டுக்குப் பொறுப்பா இருக்கு பார்த்தியா…?ன்னாரு அப்பா. எனக்கா ஒரே ஆச்சரியம். இத எதுக்கு எங்கிட்டச் சொல்றாருன்னு தோணிச்சு…
அன்னைக்குச் சந்தைக்குப் போனப்ப அப்பாரு, அது அய்யாகூடப் பேசிட்டிருந்ததப் பார்த்தேன்…அவுக ரெண்டு பேரும் ஒரே மில்லுல வேல பார்த்தவுகதான்…ஆனாலும் அய்யாவுக்கும் அவுருக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. எங்கப்பாரு போராட்டம், உண்ணாவிரதம்னு திரியறவரு…ஆனா அந்த மீனாப் பொண்ணு அப்பா அப்டியில்ல…அவுரு வேறே ஒரு யூனியன் ஆளுக… நிர்வாகத்தோட எப்பவும் ஒத்துப் போயிடுற கட்சி அது…அவுங்கெடக்கான்…நரிப்பயன்னு எத்தினியோ வாட்டி அப்பா வீட்ல கத்துனத நா கேட்டிருக்கேன்….ஒரு முறை அப்பா செயிலுக்குப் போறதுக்குக் கூட அவுருதான் காரணமா இருந்தாருன்னு தெரியும்…அந்த நேரம் அப்பா சஸ்பென்ஷன்ல இருந்தாரு…ஒரு ஒண்ணரை வருஷத்துக்கு மேல வேலயில்ல…தரித்திரத்துல எங்க வூடு திண்டாடித் தெருவுல நின்ன நேரம்….பெறவு எல்லாஞ் சரியாப் போச்சுன்னு வைங்க…ஆனா ஒண்ணு இப்போ ரெண்டு பேரும் ரிட்டையர்ட ஆயிட்டாக…அவுருக்கும் ஒடம்பு முடியாமப் போயி அவுகளே வெளியேத்தித்தான் வந்தாருன்னு தெரியும்…கடாசியா அவுகளுக்கு பிரிவுபசார விழா நடத்தின அன்னைக்கு எல்லார் முன்னாடியும் அப்பா கால்ல விழுந்தாரு அவுருன்னு கேள்விப்பட்டேன்…நா பார்க்கல…ஏன்னா நா அன்னைக்கு ஊர்ல இல்ல…அந்த ஒறவுதான் இப்பத் திரும்பவும் ஒட்டிக்கிச்சோன்னு தோணுது…
இது நடந்து ஒரு வாரம் இருக்கைல அந்தத் திங்கக் கெழைமை அந்தச் சேதி எங்க காதுக்கு வந்திச்சு…ஊரே பரபரப்பாக் கெடக்குதுன்னாக….மீனா அப்பாரு காத்தமுத்துவ யாரோ அவுரு நெல்லு மண்டில வச்சி வெட்டிப்புட்டாகங்கற சேதிதான் எங்களக் குலுக்கிப் போட்டிருச்சி…நெல்லு மண்டி அவுக பாட்டன் காலத்துலர்ந்து இருந்திட்டிருக்குது…ஆனா அங்க என்ன நடக்குது…ஏது நடக்குதுன்னு எனக்குத் தெரியாது இன்னை வரைக்கும்…வெளில போற போக்குல பார்த்தா நெல்லுப் பரத்தி சிமிண்ட் களத்துல காயப் போட்டிருக்கிறது மட்டும்தான் கண்ணுக்குப் படும்…எத்தினியோ குடும்பம் அதவச்சிப் பொழைக்கிறதாச் சொல்லுவாக…ஒடம்பு பூராம் வெட்டுக் காயங்களோட கையி துண்டாயிப் போச்சின்னு தெரிஞ்சி, அப்பா நாங்கள்லாம் அசுபத்திரிக்கு ஓடினோம்…அங்க போனப்பெறவுதான் தெரிஞ்சிச்சி, அவுர வெட்டுன ஆளு அங்க வேல பார்க்குற வாட்ச்மேன் செல்லையாதான்னு…
தூண்டித் தொளச்சுப் பார்த்தப்ப விஷயமே வேறவா இருந்திச்சி….நா ஒண்ணு மனசுல நினைக்க, அப்பா ஒண்ணு மனசுல வச்சிருக்க…எங்கம்மா, அப்பா நெனப்புல சந்தோசப்பட்டிட்டிருக்க நடந்ததென்னவோ சம்பந்தமில்லாமல்ல இருக்குன்னு நாங்கள்லாம் விக்கிச்சிப் போனோம்…நாங்கள்லாம்னா யாரு….எங்கப்பாரா? இல்ல எங்கம்மாரா…? ம்ம்ம்ம்….என் ஃப்ரென்ட்சுகதான்….டேய்….ஒன் வருங்கால மாமனாரு படா ஆள்டா…..எத்தினி வருஷமா மனுசன் என்னா வேலை பார்த்திருக்கார் பார்த்தியா…..ன்னு என் கொடுக்குகள்லாம் சிரிக்க ஆரம்பிச்சிட்டானுக…
நா ஒன் வீட்டுக்கு வரல்ல…இங்கதான் இருப்பேன்….இவுரு காலடிலதான் கெடப்பேன்…நீ என்ன வேணாப் பண்ணிக்கோ….ன்னிருச்சாம்…அந்த வாட்ச்மேன் சம்சாரம்….
.இத்தினி வருஷமா என்னை ஏமாத்திரிக்கியேடீ…..உன்னச் சும்மா விடுறதா….நா செயிலுக்குப் போனாலும் பரவால்ல…உன்ன உயிரோட விட மாட்டண்டீ….எங்கூடவும் படுத்திட்டு, ரெண்டு பிள்ளைகளையும் பெத்திட்டு, அவுரு கூடவும் பாய் விரிச்சிரிக்கியேன்னு பாய்ஞ்சிட்டானாம்….
என்னடா பொண்டாட்டிக்கும் மண்டில வேல போட்டு கைநிறையச் சம்பளத்தையும் கொடுத்து நம்மள இப்டி வாழ வைக்கிறானேன்னு நன்னியோட இருந்தவன ரெண்டு பேருமாச் சேர்ந்து இளிச்சவாயனாக்கிட்டீங்களேடி…..என்னால அவனக் கொல்ல முடியாது….ஆனா தொட்டுத் தாலிகட்டி இத்தினி வருஷம் எம்பொண்டாட்டிங்கிற பேர்ல உலாத்திக்கிட்டு எனக்கு நம்பிக்கைத் துரோகம் பண்ணியிருக்கியே….உன்னைக் கைவைக்க முடியும்ல…அத எவனாவது தடுத்துப் பார்க்கட்டும் பார்ப்போம்…ன்னு சொல்லி புலியாப் பாய்ஞ்சிருக்கான் செல்லையா.
நம்ம பசங்க எங்கிருந்துதான் முழுக்க இப்டி விசயத்தக் கலெக்ட் பண்ணுவானுங்களோ…வரி விடாமச் சொல்றானுக…..அவிஞ்ஞளுக்கு சினிமாப் பார்க்குறாப்ல இருக்கு….எனக்கு? என்ன ரோசனை போயிருக்கும் மனசுக்குள்ள? இப்ப அந்தப் பிள்ளையக் கட்றதா வாணாமா? இப்டி நினைச்சப்ப அவ நாக்கு சுழட்டுற சிரிப்புத்தான் என் மொகத்து மின்னாடி வந்திச்சு….அத விடுங்க விசயத்துக்கு வாங்க….
டே…டே…டே…ன்னு விரட்டிக்கிட்டே குறுக்கப் பாய்ஞ்சிருக்காரு காத்தமுத்து. எம்பொண்டாட்டியத் தடுக்கிறதுக்கு நீ யார்றா நாயேன்னு ஒர்ரே வீச்சு…. வீசின வேகத்துல கை துண்டாத் தெறிச்சி விழுந்திருச்சாம்….கோபம் தலைக்கேறிப் போயி வர்றது வரட்டும்னு தாறுமாறாப் பிடிச்சி வெட்ட ஆரம்பிச்சிட்டானாம்…அவம் பொண்டாட்டிக்கு பயங்கரமான காயமாம்….துடிச்சுக் கெடந்தாளாம் ரொம்ப நேரத்துக்கு ஆளுக யாரும் பக்கத்துலயே வரலையாம்…. பயந்துபோயி ஓடி ஒளிஞ்சிட்டாகளாம்….
யாராச்சும் பக்கத்துல வந்தீக ஒங்களுக்கும் இந்த கதிதான்டான்னு சந்நதம் வந்த ஆளு போல சிலிர்த்தானாம் செல்லையா. மண்டில வேல செய்ற ஆளுக யாரும் அசையவே இல்லையாம்….துடிக்கத் துடிக்க ரெண்டு பேரையும் போட்டுப்பிட்டு போலீஸ் ஸ்டேசனப் பார்த்து நடந்துட்டான் செல்லையா… பொண்டாட்டி செத்திட்டா….அவுரு ஒத்தக்கையோட குத்துயிரும் குலையுயிருமா கெடக்குறதாச் சொன்னாக…..
நாங்க காத்தமுத்துவப் பார்த்திட்டு வெளில வந்தப்ப இருட்டிப் போச்சி…அன்னிக்கு….பிரக்ஞை இருந்திச்சி அவுருக்கு….சுத்தியும் போலீசு நிக்குது…சீக்கிரம் சீக்கிரம்னு வெரட்டிக்கிட்டே இருந்தாக….அப்பாரு கையப் பிடிச்சிக்கிட்டே என்னவோ கண்ணால வேண்டுன மாதிரி இருந்திச்சு….அப்போ பக்கத்துல அந்த மீனாளும் அழுதுக்கிட்டே நின்னிச்சி…என்ன சொன்னாரோ அது அவுக ரெண்டு பேருக்கும்தான் தெரியும்…ரொம்ப வருசப் பழக்கமாச்சே…நமக்கென்னா புரியும்…என்னென்ன பேசி வச்சிருந்திருப்பாகளோ…போலீசு விரட்டிடிச்சு எங்கள…ஒரு இன்ஸ்பெக்டரும், ரெண்டு கான்ஸ்டபிளும் இருந்தாக அப்ப…அவுரு பக்கத்துல ஒக்காந்து அவர்ட்ட என்னவோ கேட்க ஆரம்பிச்சாக… நாங்க வெளிய வந்திட்டோம்….காத்த முத்து உயிரில்லாம என்னவோ சொல்றதும், அத பக்கத்துல இருந்த ஒரு போலீஸ்காரரு எழுதறதுமா ஆரம்பமாச்சு…எல்லாரையும் போகச் சொல்லிட்டாக…
ஆசுபத்திரி வாசலுக்கு வந்தப்பக் கூட அப்பா எதுவும் பேசல…டேய் சேதுன்னு கூப்பிட்டு ஏதாச்சும் சொல்லீற மாட்டாரான்னு தவிச்சேன் நானு…அப்டி எதுவும் நடக்கல… வீட்டுக்கு வந்துட்டோம்…
அந்த மீனாப் பொண்ணு மொகம் மட்டும் என் மனசுக்குள்ள இருந்திட்டே இருக்குது…அப்பாவும் ஒண்ணும் இதுவரைக்கும் சொல்லல…என்னா யோசிக்கிறாருன்னு புரிஞ்சிக்கவும் முடியல……என்ன முடிவு சொல்லப் போறாருன்னு தெரில….அதுதான்னு என்னால உறுதியா நெனைக்கவும் முடியல…ஏன்னா மீனாவ எனக்குக் குடுக்கணும்னு அவுரு சொன்னதா நானா நினைச்சிக்கிட்டிருந்தேன்னா…இத்தன நாள் தெளிவா இருந்திட்டு இப்பப் போயி நா ஏன் அநாவசியமாக் கொழம்பணும்? அதுக்குத்தான் ஒருத்தன் இருக்கான்ல…கேனத்தனமாப் போயிடாதா…அதான் சுதாரிப்பாவே இருக்கேன் நானு…
அப்பா இரக்கம் உள்ளவருதான். சிநேகிதத்துக்கு மதிப்புக் கொடுக்கிறவருதான். காத்தமுத்து சம்சாரம் நாமகிரி வந்து நின்னப்பக் கூட அப்பா எதுவும் சொல்லல…அவுக அம்மா கையப் பிடிச்சிக்கிட்டு அழுதிட்டிருந்ததை நா பார்த்தேன்…மனசுக்கு ரொம்பச் சங்கடமாயிடுச்சி…பேசாம நாமளே வாய் விட்டுச் சொல்லிப்புடலாமான்னு கூடத் தோணிச்சி…இத்தனைக்கும் நா மீனா கூட இன்னைக்கு வரைக்கும் ஒரு வார்த்தை கூடப் பேசினதுல்ல…பார்த்ததோட சரி…அதுவும் அதுவாப் பார்க்கிறத நா பார்த்தது…அவ்வளவுதான்….ஆனா ஒண்ணு அந்த நாக்கு சொழட்டுற சிரிப்பு இருக்கு பாருங்க…அதுக்குக் கோடி கொடுக்கலாம். அதான் என்ன மடக்கிடுச்சு…அதுலதான் நா விழுந்தேன்…என்னடா சும்மா இவன் இதையே சொல்றானேன்னு கூடத் தோணலாம்…அது ஒண்ணுதான் என்னை அவ விரும்புறாளோங்குறதுக்கு எனக்கு உள்ள ஆதாரம்…..
மனுசன் பொம்பளைய நினைக்கக் கூடாது….நினைச்சிட்டான் அது அவனக் கீழயும் வீசும்…மேலயும் தூக்கும்….இதுக்கெல்லாம் பக்குவமா வளர்ந்திருக்கணும்…நமக்குத்தான் அது இல்லையே….தாய் தகப்பன் நல்லதத்தான் சொன்னாக…இல்லேங்கல…ஆனா அத மீறின நம்ம நெனப்புன்னும், இருப்புன்னும் ஒண்ணு இருக்குல்ல…அதுதான பொழப்பக் கெடுக்குது…..என்னா நடக்கப் போவுதோ யாரு கண்டா….மீனா எனக்கோ அல்லது அந்தப் பிக்காலிப் பயலுக்கோ…
யாருக்காச்சும் தெரிஞ்சா தயவு செஞ்சு சொல்லுங்க…புண்ணியமாப் போகும்….ஆனா ஒண்ணுங்க…அவள மட்டும் நா கலியாணம் கட்டிட்டேன் பெறவு நிச்சயம் ஒழுங்கா பொறுப்பா இருப்பேனுங்க…இது சத்தியம்….சரி….சரி…நா புறப்படுறேன்…அந்தப் பாரிப்பய இங்க வர்றா மாதிரி இருக்குது….வந்துட்டான்…வந்துட்டான்….வந்துட்டானே….அச்சச்சோ…தப்ப முடியாது போலிருக்கே…
யே…பங்காளி….எங்கடா ஓடுற….நில்லு வாரேன்….நம்மாள்ரா நீ இப்ப…!
என்னது? நம்மாளா? என்னா சொல்றான்…
தூக்கி வாரிப் போடுது எனக்கு.
.என்னைத்தான் சொல்றானா…? பங்காளின்னு கூப்பிடுறான்…? என்னாச்சு அவனுக்கு….? அப்டீன்னா என்னா அர்த்தம்? -
ஏ….சேது…உன்னத்தான்…என்னா கூப்பிடக் கூப்பிட காதுல விழாத மாதிரிப் போற…? நில்லுப்பூ….அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில நம்மாள்ட்டயே கைவச்சிட்டேல்ல….சேதி வந்திடுச்சுடீ… கன்ஃபார்ம் பண்ணிட்டுத்தான் வர்றேன்…
சொல்லியவாறே தோளில் வந்து விழுந்த கையைப் பட்டுன்னு தட்டி விட்டேன். அவன் சேக்காளியா நானு…இப்டி வந்து கை போடுறான்…?
இதுவரைக்கும் பொம்பள விஷயத்துல எந்தத் தப்பும் எப்பவும் செய்ததுல்ல நா…எங்கம்மா என்ன அப்டி வளர்க்கல…இப்போ நீ சொல்ற இதயே தகவலா எடுத்துக்கிட்டு சொல்றேன்…மொத மொதலா இந்த விஷயத்த, நீ என்ன சொல்ல வர்றேங்கிறத உன் வாயால நா கேட்குறதுல எனக்குக் கொஞ்சம் வருத்தந்தான். ஆனாலும் ஒண்ணு….இது பெரியவங்களாச் செய்த முடிவு. நானா எதுவும் முனையல….அப்டி அலையுற ஆளும் கெடையாது நானு…உனக்கே தெரியும்….அவசரப்படாத…சொல்லிப்புட்டேன்…
நீ முனைஞ்சயோ முனையலயோ அதல்லாம் எனக்கெதுக்கு….ஆரம்பத்துலேர்ந்தே உனக்கும் எனக்கும் பிடிக்காமப் போயிடுச்சி…இப்போ எனக்குக் குறுக்கவே வந்திட்ட நீ… இது என் வாழ்க்கைப் பிரச்னை….இந்தக் கலியாணம் எப்டி நடக்குதுன்னு பார்க்குறேன்….மீனா என்னாளு…..அத யாரும் பங்கு போட விடமாட்டேன்… அப்டி மீறிப் போட்டே நா பங்காளியாயிடுவேன்…ஜாக்கிரத……புரியுதுல்ல நா சொல்றது? எதுவும் செய்வேண்டியோவ்….பாரு வேடிக்கைய…..
சொல்லிவிட்டு அசால்ட்டாய் போய்க்கொண்டிருந்தான் பாரி. அவன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டு விக்கித்து நின்றான் சேது.
பங்காளீ…! என்னா நின்னுட்டே திகைச்சு? போ பங்காளி…சும்மாப் போ…ஜாலியா போ…பார்த்துக்கிடுவோம்….அதான்.சொல்லிட்டேன்ல….பங்காளி…. தைரியமாப் போ…..இனி அவ நம்மாளு…எப்டீ…? நம்மாளுன்னேன்……சர்த்தானா…? ஆமடியோவ்வ்வ்……
மூச்சு நின்றுவிடும்போல் இருந்தது சேதுவுக்கு.
-------------------------------------------------

20 நவம்பர் 2011

”வாசிப்பும் வாசகனும் கட்டுரை


வாசிப்பு என்பது வெறுமே புத்தகங்களை வாசிப்பது என்பது மட்டுமல்ல. இந்த மனிதர்களை, மரம் செடி கொடிகளை, இந்த வானத்தை, பறவைகளை, இதர ஜீவ ராசிகளை, இயற்கையை இப்படி அனைத்தையும் வாசிக்கக் கற்றுக் கொண்டவன்தான் ஒரு தேர்ந்த வாசகனாக முடியும் என்று சு.ரா. அவர்கள் அவரது கட்டுரை ஒன்றில் சொல்லியிருப்பார். வாசிக்கக் கற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் இதை நீக்கமற உணர்ந்திருக்க வேண்டும்.

வாசிப்பினால் மனிதன் தேர்ந்த விவேகமுள்ளவனாக மாறுகிறான். வாசிப்பு மனிதனின் சளசளப்பைப் போக்கி அமைதியை உண்டாக்குகிறது என்றும், கதைகள் எழுதுபவர்கள், கவிதைகள் எழுதுபவர்கள், கதைகளாய் மட்டும் படித்தால் போதாது, கவிதைகளாய் மட்டும் படித்தால் போதாது, கதை, கவிதை, கட்டுரை, நாடகங்கள், சமகால நிகழ்வுகளின் தொகுப்புகள், ஆய்வு நூல்கள், மொழி பெயர்ப்புகள் இப்படி எல்லாவற்றையும் படித்தாக வேண்டும் என்பதும் அவரின் அறிவுரையாக இருக்கும்.

இதை அவரென்ன சொல்வது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதானே என்று இதைப் படிக்கும்போது நினைக்கும் பலர், இப்படிப் பகுத்து உணர்ந்து மனதுக்குள் வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. அல்லது மேற்கண்ட கூற்றுப்படி தொடர்கிறார்களா என்பதும் சந்தேகமே. பலவற்றையும் படிப்பவர்களை விட படித்ததாகக் காட்டிக் கொள்பவர்கள்தான் இங்கே அதிகம். அது என்னவோ எழுத்துலகத்தில் இம்மாதிரியான யதார்த்தமில்லாத நிலைமை எல்லாக் காலத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. படித்தவர்களிடமிருந்து அடக்க ஒடுக்கமாகக் கேட்டுக் கொள்ளுதல், அவற்றைக் கூடியவரை பின்பற்ற முயலுதல், இயன்றவரை தேடித் தேடிப் படிக்கும் முயற்சியில் இறங்கி, நமது வாசிப்பு அனுபவத்தைப் பிறரோடு தனக்குத் தெரிந்தவரை பகிர்ந்துகொள்ள முயலுதல் என்பதான முனைப்புகள் பெருவாரியாக இல்லையென்றுதான் தோன்றுகிறது.

படிக்காதவர்கள் படித்ததுபோல் காட்டிக்கொள்ளுதலும், படித்தவர்கள் நீயெல்லாம் என்னய்யா படிச்சிருக்கே? என்பதுபோல் மெத்தனமாகத் திரிதலும் இங்கே சர்வசாதாரணமான காட்சியாகப் பரிமளிக்கிறது.

யாரும் எளிமையாக இருக்கத் தயாரில்லை என்பதுதான் உண்மை. போகட்டும். விட்டு விடுவோம். காலம் இதை மாற்றிக் காட்டினால் மகிழ்வோம். ஆனால் ஒன்று. வித்தியாசமான புத்தகங்களை எடுத்துப் படிக்கும்பொழுதுதான் தெரியும் ஆஉறா! இந்த மனிதர்களுக்கு எப்படியான அனுபவங்களெல்லாம் கிட்டியிருக்கின்றன. இவற்றையெல்லாம் இத்தனை காலம் தெரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே! இன்னும் என்னென்னவைதான் இங்கே கொட்டிக் கிடக்கின்றன? இவற்றையெல்லாம் படித்து அனுபவிக்க நமக்கு ஆயுள் இருக்குமா? இறைவா! அதற்கான உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும், வாழ்நிலை சூழலையும் எனக்கு ஏற்படுத்திக் கொடுப்பாயாக….என்று மனம் ஏங்கிக் தவிக்கும்.

படிப்பு அனுபவத்திலிருந்துதான் படைப்பு அனுபவம் கிடைக்கிறது. எனவே இரண்டையும் பிரிக்க முடியும் என்று தோன்றவில்லை. தொடர்ந்த வாசிப்பு அனுபவம் படைப்பு அனுபவத்திற்கு ஊக்கமளிக்கிறது.

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் இரண்டு விதமான அனுபவங்கள. ஒன்று அவனது சொந்த வாழ்க்கையில் அவன் எதிர்கொள்ளக் கூடியவை. இன்னொன்று அனுபவப்பட்டு முதிர்ந்து அதனை எழுத்தில் வடித்து வைத்திருக்கும் பெரியோர்களின் எழுத்துக்களை, அவர்களது அனுபவங்களைப் படித்தறிதல்.

இந்தப் பயிற்சயை நாம் தொடர்ந்து மேற்கொண்டோமானால்தான் விஷய ஞானம் என்பது நமக்குக் கைகூடும்.

அது எப்படிக் கிடைக்கும்? இந்த உலகத்தில் எதுவுமே சும்மாக் கிடைக்காது. ஒன்று கொடுத்தால்தான் ஒன்று கிடைக்கும். நிறையப் படிக்க வேண்டும் என்றால் நம் நேரத்தை அதற்குக் கொடுக்க வேண்டும். மூளையைச் செலுத்திப் படிக்கும் உழைப்பை அதற்கு வழங்க வேண்டும்.

நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்து அதனைக் காசு கொடுத்துத் தயங்காமல் வாங்கிப் படிக்க வேண்டும். பொருளாதாரச் சூழல் என்று ஒன்று இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லைதான்.

ஒரு நல்ல எழுத்தாளனாக இருப்பதைவிட, ஒரு நல்ல வாசகனாக இருப்பது மிகவும் கடினம். அது மிகப் பெரிய விஷயமும் கூட.

தேர்ந்த வாசகர்கள் மிகப் பெரிய அரிதான விஷயங்களை உள்ளடக்கியவர்களாக இருப்பார்கள். அவர்களை நமக்கு மட்டும்தான் தெரியும் என்கிற நோக்கில் எளிதாக அணுகிவிட முடியாது.

தனது ஒரு கட்டுரையில் திரு ஜெயமோகன் அவர்கள் இப்படிக் கூறுகிறார்.

”நான் இலக்கிய வாசகன் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவது ஒரு முக்கியமான தன்னுணர்வு. நான் பொழுது போக்கிற்காகப் படிப்பவனல்ல. வாழ்க்கையை அறிவதற்காகப் படிப்பவன். நான் வாசிப்பை உழைப்பாக எடுத்துக் கொள்ள அஞ்சாதவன் என்ற எண்ணம் வேண்டும். இலக்கியம் எந்த மொழியிலும் வாசகனின் ஊக்கத்தாலேயே அடையக் கூடியதாக உள்ளது. நம் மக்களுக்கு தெம்மாங்குப் பாட்டையும் தெருக் கூத்தையும் ரசிக்கும் பயிற்சி கிராம வாழ்க்கை மூலம் இயல்பாகச் சிறு வயதிலேயே கிடைக்கிறது. சினிமாப் பார்க்கும் பயிற்சியும் அப்படித்தான். இதே பயிற்சி இலக்கியம் முதலிய நுண் கலைகளுக்குக் கிடைப்பதில்லை. மார்க்ஸ், ஏங்கல்ஸ், எழுதிய தத்துவ நூல்களை எத்தனை மக்கள் படித்திருக்கிறார்கள்? மக்கள் படிக்கவில்லை என்பதால் அவை மக்கள் விரோத எழுத்து என்று ஆகி விடுமா? மருத்துவம் மக்களுக்காக. ஆகவே அனைத்து மருத்துவக் கட்டுரைகளும் மக்களுக்குப் புரிந்தாக வேண்டம் என்று சொல்ல முடியுமா?”

இசையை, ஓவியத்தை, இலக்கியத்தை எவ்விதத் தயாரிப்பும் இன்றி அணுக முடியாது. இலக்கிய வாசிப்பு என்பது ஒரு இலக்கியப் படைப்பானது மொழியின் வழியாக வாசகனின் ஆழ் மனதுடன் தொடர்பு கொள்ளும் முறையாகும். இது அக மனத்தை முன்னிறுத்தி நடத்தப்படுவது. வாசிப்புப் பயிற்சி என்பது அக மனத்தை வாசிப்புக்குப் பழக்கப்படுத்துவதுதான். அதாவது எப்படி தமிழ் போன்ற ஒரு மொழியைக் கற்கிறோமோ அதேபோல் மொழிக்குள் செயல்படும் படைப்பு மொழி என்ற தனி மொழியைக் கற்பதுதான் இலக்கியக் கல்வி.”

இதற்கு மேல் இன்னும் என்ன அழகாகச் சொல்ல வேண்டும்?

இந்தப் படிப்பனுபவத்திலிருந்துதான் படைப்பனுபவம் கிடைக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. மிகச் சிறந்த படைப்புக்களைப் படிக்கும்போது இதுபோல நம்மாலும் எழுத முடியுமா? என்ற ஆதங்கம் தோன்றுகிறது. இந்த ஆதங்கம்தான் படைப்பை உருவாக்கும் சக்தியாகப் பரிணமிக்கிறது.

மேலான வாசகனாக இருத்தல் மேன்மையான படைப்புகளுக்கு வழி வகுக்கும். வாழ்க்கைச் சூழல்கள் எல்லோருக்கும் மிதமான முறையில் அமைந்தால்தானே இது சாத்தியம்?

படிக்க வேண்டும் என்றால் நல்ல குடும்பச் சூழல் அமைய வேண்டும். மன அமைதி, இட அமைதி, சுமுக நிலை இருந்தால்தானே இது சாத்தியம். இவை எல்லாவற்றிற்கும் மேலாகப் பொருளாதார நிலை என்ற ஒன்றும் வெகு முக்கியமான ஒன்றாக அமைந்து விடுகிறதல்லவா?

எழுத்தாளர்களும் சராசரி நடப்பியல்களுக்கு உட்பட்டவர்கள்தான். ஆனாலும் சற்றே வித்தியாசப்பட்டுத்தான் ஆக வேண்டும். அதுதானே நியாயம்?

இந்தச் சமுதாயத்திற்குச் செய்தி தரக்கூடியவன், மனித மனங்களை ஆட்டிப் படைக்கக் கூடியவன், மனிதச் சிந்தனைகளை மேம்படச் செய்யக் கூடியவன், சக மனிதனை, அவனது மென்மையான உணர்வுகளை, அவன் நெஞ்சின் ஈரப் பகுதியை, ஆழப் புதைந்திருக்கும் நன்னெறிகளை, சிறிதளவேனும் தட்டி எழுப்பிட வேண்டும்தானே? ஒரு படைப்பின் நோக்கம் அதுவாகத்தானே இருக்க முடியும்? இருக்க வேண்டும்? அதுதானே ஒரு படைப்பாளியின் அடையாளமாக இருக்க முடியும்? இலக்கியம் என்பது இலக்கினை இயம்புதல். அந்த இலக்கு மனித வாழ்க்கைக்கு பயன் தரத்தக்கதாக அமைய வேண்டும்.

வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம். வாழ்க்கையைச் சொல்லுவது அதன் இரசனையைச் சொல்லுவது இலக்கியம். இது புதுமைப்பித்தன் கூற்று.

ரசனையைச் சொல்லுவது என்பது இலக்கியத்திற்கு மிகவும் அவசியம்தான். ரசனை இல்லையென்றால் ஒருவன் எழுத்தாளனாக முடியாது. ஆழ்ந்த ரசனைதான் ஒரு படைப்பாளியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

ஒரு சாமான்யர் ஒரு விஷயத்தைப் பார்ப்பதற்கும், அதையே ஒரு படைப்பாளி பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

ஒரு பூவைப் பார்த்ததும் அதைப் பறிக்க நினைப்பவன், பறிப்பவன், சாமான்யன். ஆனால் அதைச் செடியிலேயே வைத்து, பச்சைப் பசுந்தளிர்களுக்கு நடுவே பட்டுப்போன்ற பளபளப்புடன் மலர்ந்து சிரிப்பதைக் கண்டு மயங்கி நிற்பவன் படைப்பாளி.

சாலையில் நடந்து செல்கிறோம். இரு புறமும் வானளாவிய மரங்கள். அந்த மரங்களைப் பார்க்கும்போது இவனுக்கு இவன் மூதாதையர்களைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது என்னும் பொழுது அங்கே படைப்பாளி நிற்கிறான்.

இதைத்தான் கலைத்தன்மை என்கிறார்கள் என்பதாகத்தான் நான் புரிந்து கொள்கிறேன். ஆழ்ந்த ரசனையின்பாற்பட்ட விஷயம் இது.

கதைகளின் உள்ளடக்கம் முற்போக்காக இருந்தாலும் அவற்றின் கலைத் தன்மை வலுவாக இருந்தால்தான் அவை வாசகனைச் சென்றடையும்.

வயலிலே இறங்கி கூலிக்கு வேலை செய்யும் ஒரு பெண் நாற்று நடும் அழகைப் பார்த்து அவள் மீது அன்பு கொள்வார் ஒருவர். அந்தக் காட்சியை மேலாண்மை தனது ஒரு படைப்பில் விவரிப்பார். அங்கே கலைத்தன்மை பளிச்சிடும்.

இந்தக் கலைத் தன்மை, படைப்பின் நேர்த்திக்கு, வாசிப்பு அனுபவத்துக்கு, அதன் கட்டுக் கோப்புக்கு உதவும் என்கிற நிலையில் எழுத்தின் பயன் என்ன, எழுத்தாளனின் திறமை வெளிப்பட்டால் போதுமா? எழுத்தின் பயன்பாடு? அங்கேதான் எழுத்துக்கான அவசியம் அதிகமாகிறது என்று தோன்றுகிறது. இலக்கியம் மனிதனை நெறிப்படுத்துவதாக அமைய வேண்டும் என்பது மிக அவசியமாகிறது.

எந்தவொரு நிகழ்வையும் அன்பு, கருணை, உண்மை, நேர்மை, நியாயம் என்ற வட்டத்திற்குள் இருந்து பார்க்கப் பழகிக்கொண்டால், மனிதர்கள் அதிலிருந்து பிறழும்போது மனம் புழுங்கும். உள்ளுக்குள் கோபம் கனன்று நிற்கும். மனம் அழும். அவற்றின் வடிகாலாகப் படைப்புக்கள் உருவாகும். இந்த அனுபவங்கள் நம் அன்றாட வாழ்வில் சக மனிதர்களிடமிருந்து நமக்குக் கிடைக்கும். மன உலகம் கதையுலகமாக விரியும். பாவனையின்றி, பகட்டு இன்றி, ஆடம்பரமின்றி, படாடோபமில்லாமல் மனமொழி நடை, எவ்வித ஒப்பனையுமின்றி நேர்மையுடன் வெளிப்படும். இந்த மன உண்மையும், நேர்மையும் வாசகனுக்கு மரியாதையை ஏற்படுத்தும்.

வாசிப்பும், வாசகனும், படைப்புக்களும் எப்படியெல்லாம் விரிந்திருக்கின்றன? நன்றி.

--------------------------------------

16 நவம்பர் 2011

கதையல்ல நிஜம் சிறுகதை


மீபகாலமாய்த்தான் அந்த வழியைத் தவிர்த்திருந்தார் சுப்புரத்தினம். ஆனால் தற்பொழுது அவர் தேர்ந்தெடுத்திருக்கும் வழி இன்னும் பயமூட்டுவதாகத்தான் இருந்தது. கொஞ்ச நாளைக்குப் போய்த்தான் பார்க்கலாமே என்று நினைத்துக் கொண்டார். பழைய வழியிலாவது ஒரே ஒரு நீளத் தெருவோடு முடிந்து போகும். ஆனால் தற்போதைய வழியில் வளைந்து வளைந்து சின்னச் சின்னதாக நாலைந்து தெருக்களைக் கடக்க வேண்டியிருந்தது. அத்தனையையும் தாண்டி ஒரு பலசரக்குக் கடைக்கு முன்னேயுள்ள லைட் கம்ப வெளிச்சத்தை அடைய குறைந்தது ஐந்து நிமிடங்கள் ஆகிவிடும். பிறகு வழியெங்கும் அங்கங்கே விளக்குகள் உண்டு. ஜெயமுண்டு பயமில்லை மனமே!

அவனெல்லாம் நாலு நாலரைக்கே கடை திறந்து விடுவான் போலிருக்கிறது. அதிகாலையில் டீ பொட்டணம், காபிப் பொடி, பால்பாக்கெட், உப்பு, புளி, மிளகாய் என்று சில்லரைக்கு வருபவர்களின் வியாபாரத்தை நழுவ விட்டு விடக் கூடாது அவனுக்கு. குறைந்தது ஐநூறு ரூபாய் வியாபாரம் பார்த்து விடுவான் அந்தக் காலை நேரத்தில்.

அவருக்கு அவனை நன்றாகத் தெரியும். அவர் அந்த ஏரியாவுக்குக் குடி வந்த புதிதில் பஸ் ஸ்டான்ட்டில் கடை திறந்திருந்தான். பஸ் நிறுத்தத்தில் பலசரக்குக் கடை திறந்து அப்பொழுதுதான் முதன்முறையாக அவர் பார்த்தார். கேட்கக் கூடச் செய்தார்.

முதல்ல கிடைக்கிற எடத்தைப் பிடிச்சிக்கிறுவோம்னு வந்திட்டேன் சார்…என்றான்.

பெரிய திட்டத்தோடுதான் அந்தப் பகுதிக்குள் நுழைந்திருப்பான் போலும் என்று நினைத்துக் கொண்டார். பகுதி ஜனங்களும் ஒன்றிரண்டு அவனிடம் வாங்கித்தான் பார்த்தார்கள்.

அதென்னங்க அந்தாளு யானை விலை குதிரை விலை சொல்றாரு… என்றார்கள் பிற்பாடு.

அங்கிருந்து மூணு கிலோமீட்டர் போனால்தான் மொத்த விலைக் கடைகளெல்லாம் வரும். எப்பொழுது உள் தள்ளி இடம் கிடைத்தாலும் சரி, வீடு கட்டிக் குடி வந்தால் போதும் என்று முனைந்து விட்டார்களோ அப்பொழுதே தள்ளித் தள்ளிப் போய் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் ஜனங்களும் தயார் ஆகி விடுகிறார்கள்தானே! வண்டியை எடுத்துக்கொண்டு சிட்டாய்ப் பறக்கிறார்கள்.

அவசரத்துக்கு வேண்டுமானால் ஒன்றிரண்டு போனால் போகிறது என்று இங்கே வாங்குவார்கள். அதுவும் தூரத்திற்கேற்ற நியாயமான விலையேற்றலாக இருந்தால் தொலைகிறது என்று ஏற்றுக் கொள்வார்கள். அந்த ரீதியில்கூட ஏற்க முடியாததாய் இருந்தால்?

அவன் அப்படித்தான் விலை சொன்னான். வியாபாரம் பண்ணத் தெரியவில்லையோ என்று தோன்றியது இவருக்கு. அவர் நினைத்தது சரிதான். கொஞ்ச நாளில் இடத்தைக் காலிசெய்து விட்டானே! ஆனால் ஒன்று அந்தப் பகுதியிலேயே வெவ்வேறு இடமாகத்தான் மாற்றிக் கொண்டிருந்தான். அவர் பார்க்கும் இந்த இடம் நாலாவதோ ஐந்தாவதோ!

அவனைப் பார்த்துப் பரிதாபப் பட்டிருக்கிறார் இவர். இந்தக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவன் முடிகளெல்லாம் நரைத்திருந்தன. மீசை அட்டர் வெளுப்பாய் பளீரென்றது. அவன் தலை சீவப்பட்டு என்றுமே இவர் பார்த்ததில்லை. இருந்தமேனிக்கே அதன் போக்கில் அது வெளுத்துப் பறந்து விட்டதோ என்று தோன்றும். உழைப்புக்கேற்ற பலனை அடைய முடியாமல் திண்டாடுகிறானே என்று தோன்றும்.

எத்தனை இளமையாய் இருந்தான் வந்த புதிதில். பஸ் ஸ்டான்டில் கடை வைத்தாலும், எவனும் அவனிடம் வாலாட்ட முடியாது என்பது போலிருக்கும் அவன் தோற்றம். வெறும் தோற்றம்தான் அது என்று ஒருநாள் தெரிந்தது. முறுக்கு மீசைக்குள் கனிந்த மனம்.

எதிரே ஒரு சுடுகாடு. அடிக்கடி அங்கே பிணங்கள் வந்து விடும். ஆட்டமும் பாட்டமும் அமர்க்களப்படும். சாராய சாம்ராஜ்யம்தான். சலம்பல் அதிகமாக இருக்கும். மடேர் மடேரென்று கடைகளின் ஷட்டர்கள் இறங்கும். களேபரம் ஓயட்டும் பிறகு வியாபாரம் பார்த்தால் போதும் என்பதாக. இவன் கடை மட்டும் திறந்திருக்கும். அவன்பாட்டுக்குத் தன் வேலைகளில் ஈடுபட்டிருப்பான். ஒரு முறை கல் வந்து விழுந்தது.

அண்ணே…! கொஞ்ச நேரத்துக்கு அடச்சிருங்கண்ணே…நாங்க முடிச்சிட்டுப் போயிக்கிறோம்….இதைக் கல்லெறிந்து சொன்னார்கள்.

சாவுக்குத் துக்கம் கொண்டாடுவதுபோல் சுற்றுப் பகுதி கடைகளையெல்லாம் அடைக்கச் சொன்னார்கள் அவர்கள். மரியாதை பண்ண வேண்டுமாம். சொல்லாமலே அடைத்தவர்கள் பலர். எதற்கு வம்பு என்று. சொல்லி அடைத்தவர் சிலர். பிடிக்காமல் அடைக்காதவன் இவன் ஒருவனே…!

என்னை எதுக்கண்ணே அடைக்கச் சொல்றீங்க…நீங்கபாட்டுக்கு ஒங்க வேலயப் பார்த்திட்டுப் போங்க…நா என் வியாபாரத்தப் பார்க்கிறேன்…..அத விட்டிட்டு…? என்னமோ கடைய அடைக்கணுமாமுல்ல…? – முனகியது கேட்டுவிட்டது அவர்களுக்கு.

அவன் சொன்னது சரிதான். ஆனால் அவர்கள் கேட்க வேண்டுமே…?

அடுத்த நிமிஷம் அரிசி மூட்டை ரோட்டில் பறந்தது. உப்பு மூடை சாக்கடையில் விழுந்தது. செய்த தப்பிலும் ஏதோ கரிசனம் இருப்பதுபோல் தோன்றியது.

டே…டேய்…விடுறா…விடுறா…போதுண்டா….

இது சாம்பிள் போலிருக்கிறது. ரௌடித் தனத்தை முதலில் அப்படித்தானே காட்ட வேண்டும்.

காலையில் நடைப் பயிற்சி முடித்து வந்திருந்த இவர் ஓரமாய் ஒதுங்கி நின்று இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த நகரின் குடியிருப்போர் சங்கத்திற்கு இவர் செயலராய் இருந்தார். முதலில் வந்தவரே அவர்தானே….வயல்காடுகளில் நடந்துதான் அவர் வீட்டைப் பல நாட்களுக்கு அடைந்து கொண்டிருந்தார்.

கிரஉறப் பிரவேசத்திற்கு அழைப்பிதழில் மேப் வரைந்து காண்பித்து ஆட்களை வருவித்தார். அப்படியும் திண்டாடியவர்கள் பலர். சகதியிலும் வரப்பிலும், தண்ணிரிலும் விழுந்து எழுந்து பல வேஷங்களில் வந்தார்கள் நண்பர்கள்.

நல்லாக் கட்டினீங்க சார் வீடு….! இந்த வார்த்தையிலேயே செத்துப் போனார் அன்று.

எவன் சார் தர்றான் சென்டு ஐயாயிரத்துக்கு…? என்றார் இவர். இன்றோ பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன. மூணு சென்டு, மூணு சென்டு என்று ப்ளாட் போட்டுப் போட்டு எல்லாம் நிறைந்து வழிந்து இன்று நிலத்தடி நீர் நானூறுக்குப் போயாயிற்று. ஆனாலும் சென்ட் மூணு லட்சம் சொல்கிறார்களே! அதெப்படி? அதுதான் ஆச்சர்யம்.!

சங்கம் ஆரம்பித்து ரோடு போட்டு, லைட் போட்டு, பஸ் கொண்டு வந்து, தண்ணி லாரிக்கு ஏற்பாடு செய்து (போர் தண்ணிதான் குடிக்க முடியாமல் ஆகிவிட்டதே!) நிறைய வீடுகள் நெருக்க நெருக்கமாயும், அளவிலடங்கா கடை கண்ணிகளும் எல்லாமும் வந்தாயிற்று. கசகசவென்று. இன்றுவரை அவனும் இருந்துகொண்டுதான் இருக்கிறான். அதுக்காக விரட்ட முடியுமா என்ன? சரியான உழைப்பாளியாயிற்றே! என்றாவது முன்னேறித் தலை நிமிர்ந்து நிற்க வேண்டாமா?

எப்படியாவது முன்னேறி விடுவது என்று தன் முனைப்பைக் கைவிடாது அவன் உழைப்பது போலிருந்தது. எந்தச் சூழ்நிலையிலும் அவன் சிறிதும் அசந்த மாதிரி இவர் கண்டதில்லை. இவர் வண்டியில் சென்று கொண்டிருக்கும்காலையில் பலமுறை அவனை எதிர்கொண்டிருக்கிறார். ஒரு சதவிகிதம் கூட அவனது வேகம் குறைந்து இவர் பார்த்ததில்லை. அவனது உழைப்பு வீண் போகக் கூடாது என்று இவர் மனம் அவாவியது. தனது வியாபார அனுபவத்தில் அவன் எல்லாவற்றையும் புரிந்து தன்னை மாற்றிக் கொள்ளக் கூடும். அப்பொழுது தான்யலட்சுமி அவனுக்கு அள்ளிக் கொட்டுவாள். வாழ்க அவன் உழைப்பு. வளர்க அவன் செல்வம் என்று எல்லாம் வல்ல சக்தியை வேண்டிக் கொள்வார்.

ரொம்பவும் ஆக்ஸிலேட்டர் கொடுத்து விரட்ட முடியாது. சத்தமும் வேகமும் அதிகமாகும். இரு பக்க வீடுகளில் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பவர்களின் தூக்கம் பாழாகும். வண்டியை விரட்டினால் அவை துரத்த ஆரம்பித்து விடும். எவை?

அதுதானய்யா…அதுதான். எதற்காக இந்த வயதுவரை அவர் பயந்து சாகிறாரோ அந்த நாய்ச்சனியன்தான். ரூட்டை மாற்றியதே அதற்காகத்தானே!

அதென்னவோ தெரியவில்லை நாய்களுக்கு அவரைக் கண்டால் மட்டும் ஒரு தனிப் பிரியம். நன்றாகச் சத்தமெடுத்துக் குலைக்கின்றன.வள் வள்ளென்று விழுகின்றன. கூர்மையாகப் பார்த்து வாயை அகலமாகத் திறந்து பற்களைக் கோரமாகக் காட்டுகின்றன. முன்னால் வளைந்திருக்கும் இருபக்க நீளப் பற்களை அப்படியே பதித்தால் குறைந்தது அரைக் கிலோ கறி நிச்சயம். காட்டிலுள்ள புலிகளுக்குத்தான் அப்படிச் சொல்வார்கள். இந்த நாட்டிலுள்ள தெரு நாய்களுமா அந்த வீரியத்தில் இருக்கும்.

எப்படி இத்தனை நாய்கள் சேர்ந்தன. பல தெரு நாய்களும் ஒன்றுகூடி விட்டனவோ…ஏழெட்டுப் பத்து ஓடுகின்றனவே! பலரும் ஓடி ஒளிகின்றனர். பெண்கள் பயந்து சாகிறார்கள். குழந்தைகள் குரலெடுத்து அழுகின்றன. யாருக்காவது அக்கறையிருக்கிறதா? இவருக்கும் பயம்தான். எல்லாவற்றையும் தானே கவனித்துச் செய்ய வேண்டியிருக்கிறது! செயலர் என்றால் எல்லாமுமா இப்படித் தலையில் விடியும்? சங்கக்காரர்கள் பத்துப்பேர் சேர்ந்துகொண்டு கையில் ஆளுக்கொரு கல்லுடன் கோஷ்டியாக விரட்டினால் என்ன? நினைக்கும்போதே கூடவே சிரிப்பும் கிளர்ந்தது. நமக்கென்ன வந்தது? பேசாமல் அடுத்த மீட்டிங்கில் ராஜினாமாவை நீட்ட வேண்டியதுதான். நாயடிப்பானே, பீயச் சுமப்பானே…!!

இருந்த பன்னியைப் பூராவும் விரட்டியாச்சு…தெருவுக்கு வந்த.பாம்புகளை நிறைய அடிச்சிப் போட்டாச்சு….இப்போ நாய் கிளம்பிருக்கு போலிருக்கு…?

பன்னி என்றதும், அந்தக் குட்டிகள் வாலை வளைத்து வளைத்து ஆட்டிக் கொண்டு ஒன்றை ஒன்று தொடர்ந்து தாயைப் பின்னோக்கி ஓடும் அழகு அவர் கண்ணுக்குள் வந்தது. ஆனாலும் இம்புட்டு எப்படிச் சேர்ந்தது. பன்னிப் பண்ணை ஏதாச்சும் இங்கிருக்கிறதா? இன்னும் கொஞ்சம் முன்னாடி இடத்தில் ப்ளாட்டை வாங்கிக் கட்டியிருக்கலாமோ? இங்கேயே மாடியில் நின்றால் பிணப்புகை மூக்கை வந்து அடைக்கிறது. சராசரியாக வாரத்திற்கு ரெண்டாவது வந்து விடுகிறது. நாகரீகம் மிஞ்சிய இந்தக் காலத்தில் இந்த இடத்தில் சுடுகாடா? கலெக்டரிடம் மனுக் கொடுத்து முயன்றபோது…

அந்த எடத்திலேர்ந்து எடுத்திருவியோ…அது எங்க பாட்டன் முப்பாட்டன் வந்து படுத்த எடமாக்கும்…எடுத்துப்பாரு பார்ப்போம்….கொல விழும் ரோட்டுல….ஏதோ போனாப் போவுதுன்னு பஸ்சு நிக்க எடம் விட்டா, அடி மடில கை வைக்கிறீகளோ…?

வேண்டாம் விட்ருங்க…பிறகு பார்த்துக்கலாம்…கலவரமான சூழ்நிலை இருக்கு….மேட்டர் ட்ராப்புடு….

கலெக்டரின் பதில் இப்படி வந்தது.

முன்னாடி என்றால் சுடுகாடே கண்ணுக்குப் பட்டுக் கொண்டேயிருக்கும் என்றுதான் சற்று உள்ளே தள்ளி வாங்கியது. ஆனாலும் என்றைக்கானாலும் அதுதான் கடைசிப் புகலிடம் என்பதுபோல் தினமும் புகை தழுவி ஞாபகப் படுத்திக் கொண்டேயிருக்கிறது.

கொல்லைப் புறத்தில் கதவைத் திறக்கும் முன் எப்போதும் காதில் விழும் அந்தச் சத்தம்.

சளப்….சளப்….என்று சாக்கடையில் மேயும் பன்றிக் கூட்டம். விரட்டி விரட்டி என்ன பாடு தினமும்…

அப்பப்பா…ஒரே களேபரம்தான்…கையில் கம்பிச் சுருக்கை வைத்துக் கொண்டு தெருக் கோடியில் ஒருவன். நுனியில் ஒருவன் என்று நின்று கொண்டு அந்தப் பெரிசை விரட்ட, அது தலைதெறிக்க அலறி ஓட, சற்றும் எதிர்பாராது தெரு நடுவில் மறைவிலிருந்து வெளிப்பட்ட ஆள் வதக் கென்று தடித்த கம்பால் ஓங்கி ஒரு அடி போட்டு அடுத்த கணமே கச்சிதமாய் கழுத்தில் கம்பிச் சுருக்கைப் விட்டு ஒரு இழு இழுக்க, அதற்குள் ஓடி வந்த ஆள் அதன் கால்களை அழுத்தி மிதித்துக் கட்ட, அப்பாடீ….என்ன ஓலம்…மரண ஓலமய்யா அது….காதில் அந்த அலறலை எவனாலும் கேட்கவே முடியாது. அன்று பூராவும் நினைவிலிருந்து அகலவே அகலாது அந்தச் சத்தம்! ஆனாலும் அந்தப் பன்றியை என்னமாய் அடக்கிப் பிடிக்கிறார்கள்? ஏதேனும் பயிற்சி கொடுத்திருப்பார்களோ! முரட்டுப் பசங்களய்யா….!!

ஒரு வழியாய் பன்றி புராணம் ஓய்ந்தது என்றால் இந்தப் பாம்புச் சனியன் எங்கிருந்து கிளம்பியது? அய்யோடா…! குலை நடுங்கி விட்டது இவருக்கு. அதுவும் கக்கூசில் மலஜலம் கழித்துக் கொண்டிருக்கும்போதா இப்படி எட்டிப் பார்க்கும்? தண்ணீர் இறங்கும் பேசினின் அந்தச் சிறு வட்டக் குழிக்குள் தேங்கி நிற்கும் தண்ணீரைச் சிலிர்த்துக் கொண்டு எங்கிருந்து வந்தது? ஆஉறா…! இப்படியுமா நடக்கும்? நடந்திருக்கிறதே!!

எக்ஸெஸ் வாட்டர் இறங்குறதுக்கு லூசுக்குழி போட்டு வெளில கனெக்க்ஷன் கொடுத்திருக்கீங்கல்ல சார்….அது வழியா வந்திருக்கும்…..

என்னெல்லாம் கஷ்டம் மனுசனுக்கு? அட, ராமச்சந்திரா…. வீட்டைப் பூட்டிவிட்டு தங்கையின் வீட்டுக்கு ஓடினார்கள் இருவரும். எதற்கு? அட, இதை வேறு சொல்லணுமா? காலைக்கடனுக்காகத்தானய்யா…

அன்று ஆபீசுக்கு லீவு போட்டார் இவர். பின்னே? அங்கே வேலை ஓட வேண்டாமா? ஃபைலுக்கு முன்னால் இதுவே ஞாபகம் வராதா? கூடவே கக்கூசும் அல்லவா ஞாபகத்துக்கு வரும்?

வீரன்….அதெல்லாம் எனக்குத் தெரியாது…இப்ப உடனே நீ இங்க வந்தாகணும்….என்றார் ஆபீஸ் வாட்ச்மேனுக்கு. செல்லக் கோபம். காரியம் ஆக வேண்டுமே?

ஒம்பது மணிக்கு ஷிப்ட் மாறுது சார்….லட்சுமணன வச்சிட்டு வந்திடறேன்…..

ப்பாடீ….எத்தந்தண்டீஈஈஈஈஈ…..? அவனே அதிர்ந்து போனான். முதல் பார்வையில் அவனுக்கே உடம்பு நடுங்கியது. செப்டிக் டாங்க்கின் ஒரு ஸ்லாப்பைப் பெயர்த்து ஜாக்கிரதையாய் விலக்கியபோது உள்ளே சுருண்டு படுத்துக் கிடந்தது மஞ்சச்சாரை. திறந்த சப்த அதிர்வில் உடம்பை நீட்டி அங்கும் இங்குமாய் அல்லாடியது. மூக்கைப் பொத்திக் கொண்டு வேடிக்கை பார்க்க எப்படி இத்தனை ஜனம் கூடியது கணத்தில்? செய்தி எப்படி அதற்குள் பரவியது? எதெதற்கு வேடிக்கை என்கிற விவஸ்தையே கிடையாதா? குறைந்தது ஏழடி எட்டடி இருக்கும். தடித்து உருண்ட செழிப்பான உடம்பு. வெளியேற வழி தெரியாமல் உள்ளுக்கும் குழாய் வழிக்குமாய் அல்லாடியிருக்கிறது. கக்கூசிலிருந்து செப்டிக் டாங்க் வரையிலுமான நீண்ட பைப் லைனில் இந்த நுனிக்கும் அந்த நுனிக்குமாய் எத்தனை நாள் வாசமோ? ஏற்கனவே கக்கூஸில் அமர்ந்திருந்த வேளைகளில் எட்டி எட்டிப் பார்த்திருக்குமோ? அடப் பாவமே! ராஜமும்தானே போய்ப் போய் வந்தாள்? ஈஸ்வரா! என்ன போறாத வேளை இது? அவள் பார்த்ததாகச் சொல்லவே இல்லையே? கவனித்திருக்க மாட்டாளோ? அப்படியா இருப்பது?

கவட்டை போலிருந்த தடித்த கம்பின் நுனியைக் கொண்டு தலையைப் பார்த்துக் குறி வைத்து ஒர்ர்ரே அமுக்கு. அப்படியே வாயைப் பிளந்து விட்டது பாம்பு. என்ன ஒரு அனுபவம்? பின்னே, அதை மேலே வரவிட்டா அடிக்க முடியும்? பாதி மலைப் பாம்பாய் நிற்கும் அதை மனிதன் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியுமா?

வாலை மட்டும் தரைல வச்சிட்டு அப்டியே உடம்பத் தூக்கிப் பாய்ஞ்சிரும்யா…….ஒத்தாளால முடியவே முடியாது…இப்டித்தான் போடணும்…நல்லவேளை டாங்கில தண்ணி அதிகமில்லே…இருந்திச்சின்னா சிக்கல்…அடி விழாதுல்ல…இப்ப எப்டீ? ஒட்ரே அடில சாய்ஞ்சிருச்சில்ல…? – பெருமை பிடிபடவில்லை அவனுக்கு. உண்மைதான். அதற்கும் ஒரு சாதுர்யம் வேண்டும்தான். உடம்பு வியர்த்துவிட்டது இவருக்கு. காய்ச்சல் இறங்கினாற்போல….

கோடிக் கும்பிடு என்றார் வீரனுக்கு.

பொண்ணுக்கு சடங்கு வச்சிருக்கேன்யா…பணமிருந்தாக் கொடுங்க…என்றான் சமயம் பார்த்து. எத்தனை உரிமை?

அந்த நேரத்தில் பணமா பெரிசு? கேட்டதைக் கொடுத்தனுப்பினார்..

எல்லாக் களேபரமும் முடிந்து இப்போது நாயில் வந்து நிற்கிறது. பாடு, பாடு, ஒரே பாடுதான்.

வழக்கமான பாதையை இவர் தற்போது மாற்றியதே அதற்காகத்தான். நடைப் பயிற்சி போதாதென்று விடிகாலையில் உடற்பயிற்சி வகுப்பிற்குப் போகிறார். அதாவது யோகாசனம். வயதானவர்களும் செய்யலாமே! பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், இவர் தன்னை வயதானவனாக எப்போதும் நினைத்துக் கொள்வதில்லை. இயற்கையாகவே அப்படி ஆகி விடக் கூடாது என்றுதான் இந்தப் பயிற்சிக்குச் செல்லலானார். டிராக் சூட் போட்டுக் கொண்டு, ஒரு டீ சர்ட்டையும் அணிந்து கொள்வார். தன்னைத்தானே கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும்போது சற்றுப் பெருமையாய்த்தான் இருக்கிறது. இன்னும் அத்தனை கிழடு தட்டவில்லை. ஓய்வு பெற்று விட்டால் அடுத்து சாகக் கிடப்பவன் என்றல்லவா நினைக்கிறார்கள்?

ஓய்வு பெற்ற மறுமாதமே ங்ஙேஏஏஏ…என்று ஆன பலரையும் இவர் பார்த்திருக்கிறார். அவரவருக்கு அவரவர் வாழ்க்கைப் பிரச்னைகள். பொருளாதாரப் பிரச்னைகள், பொறுப்புக்கள் என்று எத்தனையோ இருக்கும். அதைக் குறை சொல்லக் கூடாது. ஆனாலும் சர்வீசில் இருக்கும் கடைசி மாசம் வரை வீரியமாய்ப் பேசியவர்கள் எல்லாம் அதற்குநேர் மாறாய் மறுமாதமே இப்படி ஆக வேண்டாமே! என்று தோன்றும்.

இந்த யோகாசனப் பயிற்சிக்கு இவர் செல்வது சமீபமாய்த்தான். அதற்கு முன் மனைவியோடு நடைப்பயிற்சிதான் போய்க்கொண்டிருந்தார். ஒரு அமைதியான சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது சும்மாப் போன நாய் ஒன்றை விரட்டும் அடையாளமாய் இவர் ச்ச்சூ….என்க அது தானாகவே பயந்து ராஜத்தின் மேல் பாய்ந்து கையைப் பிறாண்டி விட்டது. நல்லவேளை ரவிக்கை கிழிந்ததோடு சரி. ஆனாலும் லேசான பிறாண்டல் ரெண்டு மூணு கோடாய் ரத்தச் சிவப்பாய்த் தெரியத்தான் செய்தது.

வாய வச்சிருச்சி….டாக்டர்ட்டப் போயி ஊசியப் போட்ருங்க….யாரோ ஒரு பெண்மணி அந்த அரையிருட்டில் சொல்லிக் கொண்டு போக பயந்து போனாள் ராஜம். அப்பொழுதே அழ ஆரம்பித்தாயிற்று. சில ஆண்டுகளில் வெறி நாய் போல மாறி வாயில் எச்சில் ஒழுக குலைக்க ஆரம்பித்து விடுவோமோ என்கிற அளவுக்கான கற்பனை கிளர்ந்திருக்கும் போலிருக்கிறது. இவரும் அரண்டுதான் போனார். சும்மாக் கிடந்தவளை வலிய இழுத்துக் கொண்டுவர அது இப்படியாகிப் போனதே! அன்றோடு சரி…இவர் மட்டும்தான் தனியாய் நடக்க ஆரம்பித்தார் பிறகு. ஆயிரத்து இருநூறோ, நானூறோ, அந்த ரேட்டு அந்த இஞ்ச்செக்க்ஷனுக்கு. அப்படியாக நாலு போட வேண்டியதாகி விட்டது.

பல்லு படலேன்னாலும் போட்ருவோம்…. – இவர்களை விட டாக்டர்தான் ரொம்பப் பயந்தது போலிருந்தது.

மனுஷனுக்குச் செலவு எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள்! பெரிய வயிற்றெரிச்சல். அன்றிலிருந்து அந்த ரோட்டிற்கு அவர் போவதில்லை. ஆனால் பலரும் போய்க் கொண்டுதான் இருந்தார்கள்.

நடந்து செல்கையில் ஓரத்துக் குடிசைகளில் ஆடு, கோழி என்று எது எது தென்பட்டாலும், அந்த அரையிருட்டில் எல்லாமும் நாயாகவே தெரிந்தது இவர் கண்ணுக்கு. அப்பொழுதிருந்துதான் நாய்கள் மீது ஒரு வெறுப்பு விழுந்தது. எங்கு நாய்களைக் கண்டாலும், வயதைப் பார்க்காமல் அதைக் கல்லெடுத்து அடிக்க வேண்டும் என்று தோன்றியது. ராஜத்தைக் கடித்த நாய்தானோ இது என்று சந்தேகத்தோடு பார்க்க நேரிட்டது. ஆங்காரம் பற்றிக் கொண்டு வந்தது.

வெறி நாய்னா அது சாகாம இருக்குதான்னு பார்க்கணும்… யாரோ சொல்லியிருந்தது தேவையில்லாமல் இப்போது ஞாபகம் வந்தது. அதுதான் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ஊசி இறக்கியாயிற்றே! பிறகென்ன பயம்…

இத்தனைக்கும் சில வருடங்களுக்கு முன் ஒரு நாய் வளர்த்தவர்தான் இவர். அப்படிப்பட்ட தானா இப்படியிருக்கிறோம் என்றும் தோன்றியதுதான். அது பெரிய கதை.

எந்தக் குட்டிக்காவது கரெக்டா இருபது நகம் இருக்குதா பாருங்க சார்…அப்டின்னா அதை என்கிட்டே கொடுத்திருங்க…

இப்படிக் கூறித்தான் அதை வீட்டுக்குத் தூக்கி வந்தார். பணிமனையின் ஒரு மூலையில் நான்கைந்து குட்டிகள் தென்பட்டன ஒரு நாள். தாயைக் காணவில்லை. சங்கடம் கொண்டோ அல்லது அருவருப்படைந்தோ அதை அங்கிருந்து அகற்ற முயன்றனர். அப்போதுதான் இவர் தன் நாயை அடையாளம் காண்பித்தார்.

இருபது நகம் இருந்திச்சின்னா நாய் சாத்வீகமா இருக்கும்…அனாவசியமா கடிக்காது…குலைக்காது…விரட்டாது…முரட்டுத்தனமும் இருக்காது…என்று தான் கேள்விப்பட்டிருந்த விஷயத்தை எல்லோருக்கும் எடுத்துச் சொன்னார். ஆங்கிலப் படம் பார்த்து வந்த ஒரு நாள் அதற்கு டோரி என்று பெயர் வைத்தார். அந்தப் பெயருக்கு ஏற்றாற்போல் என்ன ஒரு கம்பீரம் அதனிடத்தில். நிறம், உயரம், பருமன் என்ற சகல அம்சங்களும் கூடியிருந்தன அதற்கு. அது ஒரு நாள் காணாமல் போயிற்று. அப்பொழுது இவரிடம் சைக்கிள்தான் இருந்தது. இங்கு வீடு கட்டிக் குடி வராத நேரம் அது. சைக்கிளில் ஊர் பூராவும் அலசி விட்டார்…ஊறீம்…தட்டுப்படவேயில்லை.

நீங்க வருத்தப்படாமப் போங்க சார்…நாலஞ்சு நாள் கழிச்சு தானே வந்திரும்…ஐப்பசியிலேயிருந்து தை வரைக்கும் அப்டித்தான் இருக்கும்… அந்தக் கறிக்கடைக்காரர்தான்சொன்னார்.

இவருக்குப் புரியவில்லை. நாய் வளர்ப்பவர் எல்லாமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அப்போதுதான் புரிந்தது இவருக்கு.

ஏதாச்சும் பொட்டையப் பார்த்திருக்கும் சார்…விரட்டிக்கிட்டுத் திரியும்…மசியறவரைக்கும்விடாது…அதுனால வரும்…பேசாமப் போங்க…..

என் நாய் கூடவா அப்படி? என்று தோன்றியது இவருக்கு. குடியிருக்கும் சந்தைவிட்டு என்றுமே அது தாண்டியதில்லையே! அந்த மாதிரிக் கெட்ட எண்ணங்கள் அதற்கு வர வாய்ப்பேயில்லையே! இல்லையென்றால் அன்று அப்படிச் செய்யுமா?

என்ன ராஜம், இப்டிக் கத்துது? என்றார் மனைவியிடம். வெளிக்கிருக்கணுமோ என்னவோ? என்றவாறே தூக்கக் கலக்கத்தோடு எழுந்து வந்து சங்கிலியை அவிழ்த்து விட்டார். அவ்வளவுதான். ஓரே பாய்ச்சலில் வெளியில் ஓடி விரட்டியது அவர்களை. தப்புச் செய்ய வந்தவர்கள் என்று எப்படித்தான் புரிந்து கொண்டதோ? அத்தனை நேரம் ஏன் அந்தக் கத்துக் கத்தியது என்று அப்பொழுதுதான் தெரிந்தது. விரட்டிய விரட்டலில் கூட வந்தவளையும் இழுத்துக் கொண்டு வேட்டி அவிழ அந்த ஆள் ஓடிய ஓட்டம் இன்றைக்கும் மறக்க முடியாது. சந்து காலியாக, அமைதியாய் வந்து தன்னிடத்தில் படுத்துக் கொண்டது.

கறிக்கடைக்காரரிடம் கேட்டே இருக்கக் கூடாது என்று நினைத்தார். தன் நாய்க்கு இவர் கறி போடுவதில்லை. சுத்த சைவம்தான். டோரியின் மிதமான குணமே அதற்கு சாட்சி. மட்டன் வாசனை காட்டினால் முரட்டுத்தனம் அதிகமாகும் என்று கேள்விப்பட்டிருந்தார். ஒரே ஒரு முறை ரெண்டு எலும்புகள் வாங்கிப் போட அன்று டோரி குதித்த குதியும், குலைத்த குலைப்பும் சொல்லி மாளாது. ஒரு வேளை புதிய ருசிக்கு அந்தக் குதியோ என்னவோ? நாம் நாக்கு ருசிக்கு அலைவதில்லையா? அன்றோடு நிறுத்தி விட்டார். .

அங்கே இங்கே பார்த்ததாகப் பலரும் சொன்னார்கள். ஆனால் இவர் கண்ணுக்கு மட்டும் தட்டுப்படவேயில்லை. என்ன ஆச்சரியம்!

அதான் சார் நாய்கிட்டே ஒரு குணம்…போயிருவோம்னு நினைச்சிருச்சி, வளர்த்தவங்க கண்ணுல மட்டும் படவே படாது.

எம்பிள்ளை மாதிரி வளர்த்தேன் நாயுடு…ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னார்.

ஒண்ணு சொல்றேன் தெரிஞ்சிக்குங்க…நாய்க்கு மொத்தமே பதினாறு பதினேழு வருஷந்தான் கணக்கு…பதினஞ்சு கழிஞ்சாலே அந்திம காலம்னு அர்த்தம். வெறி பிடிக்கிறதுங்கிறதும் அப்பத்தான்…எப்டியாவது வளர்த்தவங்ககிட்டேயிருந்து பிரிஞ்சிடும்…அதுக்குத் தெரியும்…தன்னை ஆளாக்கினவங்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாதுன்னு…கண்ணுலயே படாம, கால் போன போக்குல போய்க்கிட்டே இருக்கும்….

நாயுடு சொன்ன இந்தச் சேதியே இவர் எண்ண ஓட்டங்களில் சுற்றிச் சுற்றி வந்தது. சந்து சந்தாகப் புகுந்து முகத்தை யாருக்கும் காட்டாமல் அடையாளம் மறைத்துக் கொண்டு டோரி போய்க் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. கைவிடப்பட்ட முதியோர்களின் நிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது போல பிறருக்கு பாரமாக இருக்க விரும்பாமல் கால்போன போக்கில் போய்க் கொண்டிருக்கும் அநாதை ஜீவன்களைப் போல, டோரியைப் பற்றிய நினைவுகளே இவரைப் பெருமூச்சடையச் செய்தன.

இன்றும் கூட வாட்டத்தான் செய்கின்றன அந்த நீங்காத நினைவுகள். என்றாவது கண்ணில் பட்டுவிடாதா என்று அவ்வப்போது அந்த எண்ணம் எழுந்து இவர் கண்கள் பரபரக்கும். அலுவலகப் பணியாக பக்கத்து பக்கத்து ஊர்களுக்குச் செல்லும்போதெல்லாம் மானசீகமாக, யாரிடமும் சொல்லாமல் எவ்வளவு தேடியிருக்கிறார்? நாய்களைப் பற்றி நாயுடு சொன்னவை பொய்யாகிவிடாதா என்று அவர் மனம் எவ்வளவு ஏங்கியிருக்கிறது? எங்கே சோறு தண்ணியில்லாமல் சுருண்டு கிடக்கிறதோ என்று எண்ணி மனதுக்குள் எவ்வளவு அழுதிருக்கிறார். கழுத்தில் கம்பிச் சுருக்குப் போட்டு வண்டியில் தூக்கி எறிவது போலவும், தலையில் கட்டையால் அடித்துக் கொன்று ஊருக்கு வெளியே உள்ள குப்பை மேட்டில் கொண்டு வீசுவதுபோலவும் கனவு கண்டு அலறியிருக்கிறாரே! அவர் டேபிளில் அதோடு நிற்கும் போட்டோ கண்ணில் தினமும் பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அந்த ஒரு நாய்தான் அவர் தன் வாழ்க்கையில் நேசித்த நாய். மற்றதெல்லாம் அவருக்கு எமனாய்த்தான் தெரிகின்றன இன்றுவரை. அன்று ஏற்பட்ட மனக்கஷ்டம் வெகு நாளைக்கு விலகாமல் இருந்து, நிரந்தரமாகி, நாளடைவில் அது பிறவற்றிடம் வெறுப்பாக மாறிவிட்டது.

இதோ இப்போது புதிய பாதையில் அவர் போய்க் கொண்டிருக்கிறார். இது அவரே விரும்பித் தேர்ந்தெடுத்த பாதை. இதுநாள்வரை சென்று கொண்டிருந்த வழியில் கூட்டமாய் நின்று குலைத்துத் தள்ளிய அவைகளிடமிருந்து தன்னை நீக்கிக் கொள்ள இப்பொழுது இந்தப் பாதையில் போய்க் கொண்டிக்கிறார். இனிமேலாவது இந்தத் தொல்லை இருக்கக் கூடாது என்றுதான் இப்பொழுது இந்த வழியை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனாலும் என்ன அது? என்னவோ உறுமல் மாதிரிக் கேட்கிறதே! கொஞ்ச நாள் கழித்தாவது இந்தச் சங்கடம் தொடரக் கூடாதா? அதற்குள்ளேயுமா? இன்னும் தனக்கே சரியாகப் பிடிபடாத வழியில் அதற்குள்ளேயும் இப்படியா? பின்னால் அந்தக் காருக்கு அடியில் இருந்துதான் அந்தச் சத்தம் வருகிறது.கரெக்ட்…அங்கிருந்துதான். இதென்னடா புதுத் தொல்லை…?

இவர் அந்த இடத்தை நெருங்க நெருங்க சத்தம் அதிகரிக்கிறது. அப்பாடீ…என்ன கடூரமான உறுமல் இது…புலி கணக்காய்….விக்கித்துப் போனவராய் வண்டியின் ஆக்ஸிலேட்டரைத் தன்னையறியாமல் அதிகப்படுத்துகிறார்.

ஸ்ஸ்ஸ்சனியன்…..பல்லைக் கடித்துக் கொண்டு அவர் வாய் அழுத்தி உச்சரிக்கிறது. உடம்பில் எப்பொழுதுமில்லாத ஒரு நடுக்கம். திரும்பவும் பயம்.

எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு கல், கணக்காய் அடியில் இருட்டுக்குள் படுத்திருந்த அதன் மேல் சென்று விழ…வள்ள்ள்ளென்று சத்தமெடுத்துக் குலைக்கிறது அது….வெளிப்போந்ததா இல்லையா? சத்தம் மட்டும்தான் கேட்கிறது?

.ஏய்…மணீ…. சும்மா இருக்க மாட்டே…..அட்டீ…கேக்குதா…..? ஏ…ஏ…ஏ….ச்சீ…!

இரண்டாவது கல்லை எடுத்து ஓங்கியவாறே…

நீங்கபாட்டுக்குப் போங்க சார்…அது ஒண்ணும் செய்யாது…நம்ம நாய்தான்…..

கடைக்குப் பக்கத்தில் மின் கம்ப விளக்கு எரியாத கும்மிருட்டுக்குள் நின்று சொல்லிய அந்த முறுக்கு மீசைப் பலசரக்குக் கடைக்காரனை நன்றியோடு கூர்ந்து பார்த்தவாறே வண்டியை வேகமெடுத்தார் சுப்புரத்தினம். என்ன கிரகம் இது?

ச்சே…! அநியாயமா என் டோரி காணாமப் போயிடுச்சே…!! அது மட்டும் இப்போது இருந்தால்?

ஏனோ அந்த நேரத்தில் அப்படித் தோன்றி அவர் மனசைச் சங்கடப்படுத்த ஆரம்பித்தது. தான் இப்போது குடியிருக்கும் அப்பகுதிக்குக் கட்டாயம் டோரிபோல் ஒன்று தேவையோ என்பதாய்த் தோன்றி, அந்தச் சங்கடம் திடீரென அவரிடம் விஸ்வரூபமெடுத்த போது, தன் டோரியைப்போல் ஒன்றை மீண்டும் தேடிப் பிடித்து வளர்த்தால் என்ன? என்ற புதிய யோசனை விரைவாய் அவர் மனதை ஆக்ரமித்துக் கொண்டது.

கிடைக்குமா? என் அன்பு டோரி…நீ எங்கடா இருக்கே…? நீண்ட யோசனையோடு பெருமூச்சும், ஏக்கமும் கூடவே வந்து ஒட்டிக் கொண்டது அவரிடம்.

----------------------------------------------------------------------------

12 நவம்பர் 2011

மேய்ச்சல் சிறுகதை


அலுவலகத்திற்குள் நுழையும்போதே முதல் பார்வை அங்குதான் சென்றது. அது என்னவோ தவிர்க்கவே முடியவில்லை. நான் வருவதைப் பார்க்கிறார்களா அல்லது நான் எங்கு நோக்குகிறேன் (நோங்குகிறேன்) எனப் பார்க்கிறார்களா என்று தோன்றியது. அவர்களெல்லோருமே அப்படித்தான் இருந்தார்கள்.. யாரும் விதி விலக்கல்லதான். என் உட்பட. இதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கொன்றும் வெட்கமில்லைதான். நானும் மனிதன்தானே! ஆனால் வெறும் பார்வைதான் என் பார்வை. மற்றதற்கெல்லாம் பயம். அந்த அலுவலகத்தில் எல்லாருக்கும் அது ஒரு வேலை. அந்த தரிசனம் பெறவில்லையெனில் அந்த நாள் சாபல்யம் ஆகாது. தினசரி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவதைப் போல. அந்த முகத்தைப் பார்த்தால்தான் மனசு ஆறும்.

எல்லாருக்கும் நந்தினி மேல் ஒரு கண். தனக்குக் கிடைக்க மாட்டாளா என்கிற ஏக்கம். அடிக்கடி அவளை ஒரு முறை பார்த்துக் கொள்வதில் ஒரு திருப்தி. அந்த அழகு அப்படித்தான் ஈர்த்தது. அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் ரசித்தார்கள். நாற்காலிக்குக் கீழே தெரியும் அவள் கால்களை ஏக்கத்தோடு பார்த்தார்கள் கொலுசு மாட்டியிருப்பதால் அந்தக் கால்களுக்கு அழகா அல்லது அந்தக் கால்களினால் அந்தக் கொலுசுக்கு அழகு வந்ததா? பதிலைக் கண்டு பிடிப்பது கஷ்டம்தான். ஆனால் அந்தக் கால்களினால்தான் அந்தக் கொலுசுக்கு அழகு. பட்டிமன்றம் அவர்களின் மனதுக்குள். தான் பார்க்கிறோம் என்பதை ஒருவர் மற்றவருக்குத் தெரியாமல்தான் செய்தார்கள். என்றாவது தனக்குப் படிந்தால் போட்டியிருக்கக் கூடாதே என்கிற தாபம். அதனால் அவர்கள் ஒன்று சேரும்போது அவளைப் பற்றிப் பேசிக் கொள்வதில்லை.

கண்ணு, காது, மூக்கு, கன்னம், வாயின்னு பிடிச்சுப் பிடிச்சு வச்சிருக்கேய்யா அவளுக்கு….எல்லாமும் இத்தனை எடுப்பா இருந்து நா இதுவரை எவளையும் பார்க்கலைய்யா…

அய்யோ…போறாளே…போறாளே….என்று அவள் பின்புறம் பார்த்து ஏங்கினார்கள். ஆபீசே மயக்கத்தில் கிடந்தது.

கேஷ் பிரிவுக் குமரேசன் எப்பொழுதுமே பத்து நிமிஷம் லேட்டாகத்தான் வருவான். பணப்பொறுப்பாளி என்பதனாலேயே அது அவனாக எடுத்துக் கொண்ட சலுகை. தினமும் ராத்திரி எட்டு மணிக்குத்தான் வீட்டுக்குக் கிளம்புவான். நீங்கள்லாம் அப்டியா? ஏதாச்சும் கேட்டால் முதல் கேள்வி அப்டித்தான் விழும். அநேகமாக, அநேகமாக என்ன பெரும்பாலுமே ஆபீசைப் பூட்டி சீல் வைப்பது அவனாகத்தான் இருக்கும். காவலாளி வைத்திருக்கும் பதிவேட்டில் பூட்டிய நேரம், கையெழுத்து எல்லாமும் அவனுடையதுதான்.

அதென்னய்யா தெனம் ஒரே கவரைப் போடுற…அதெல்லாம் ஆகாது…கவரை மாத்து…என்று பூட்டிய சாவியைப் போட தினமும் ஒரு புதுக் கவர் மாற்றி விடுவான். சாவியை உள்ளே போட்டு சாவி அளவுக்கு அடுக்கடுக்காக மடித்து, கவரின் நுனியில் ஒட்டப்பட்டிருக்கும் வெள்ளைப் பேப்பரையும் மடித்து அதன் நுனியை நன்றாக இழுத்து ஒட்டி மேலும் கீழும் கோடு போட்டு, குறுக்கே தன் கையெழுத்தை அழுத்தமாக இட்டு நேரமும் பதிவு செய்திருப்பான். எவனும் இடைப்பட்ட நேரத்தில் அதைக் கிழித்து சாவியை எடுக்க முடியாது. ஆபீசைத் திறக்க முடியாது.

மறுநாளைக்கு வங்கியில் சேர்ப்பிக்க இருக்கும் வசூல் பணத்தை அங்கு கேஷ் செஸ்டில்தான் வைத்துவிட்டுப் போவான் என்றாலும் அதற்கும் சில அடையாளங்களை உண்டாக்கி விட்டுத்தான் போவான் குமரேசன். அவனது அக்கறை மதிக்கப்பட்டது ஆபீசில். பண விவகாரம் நமக்கெதுக்கய்யா என்று ஒதுங்கினார்கள். அந்த பயம் இருக்கட்டும்….

காலையில் வந்து கேஷ்செஸ்டைத் திறக்கும் முன் உத்து உத்து அவன் பார்ப்பதை ரசிப்பார் மேலாளர் மயிலேறி. தான் கேஷியராகத் தேர்வு செய்த நபர் மீது அவருக்கு அத்தனை பெருமை. எல்லாம் சரியாயிருக்
குல்ல என்று வேறு கேட்டுக் கொள்வார்.

சரியா இல்லாம என்ன சார் ஆகப் போவுது… - கடுப்பாகக் கேட்டார் மதிவாணன் ஒரு நாள். யாரைச் சந்தேகப்படுகிறார் என்ற கோபம்!

நாமெல்லாம் சாயங்காலம் கிளம்பிடுறோம்…இப்பக் காலைலதான வர்றோம்… இடைப்பட்ட பொறுப்பு அவரோடதுதான…அதுனாலதான் கேட்டு வைக்கிறேன்….

அவரும் அப்டிதான சார்…அப்போ ராத்திரி பணம் திருடு போச்சின்னா அவரா பொறுப்பு…?

மறந்துபோய் பூட்டாமக் கூடப் போயிருக்கலாம்ல….?

மேலாளரின் கேள்வியில் அதிர்ந்து போனான் குமரேசன் அன்று. பிறகுதான் அவன் அந்த வழியைக் கடைப்பிடித்தான்.

மேலாளரும் வேறு சில பணியாளர்களும் இருக்கும்போதே கேஷ்செஸ்ட்டைப் பூட்டி விடுவான். இரண்டு முறை அவனே இழுத்துப் பார்த்துவிட்டு மேலாளரையும் ஒரு முறை இழுக்கச் சொன்னான்.

இதென்னய்யா வம்பாப் போச்சு…எங்களையும் சேர்த்துப் பொறுப்பாக்குறியாக்கும்….என்று சொல்லிக் கொண்டே வந்து ஒரு இழு இழுத்தார்.

இப்போ இப்டியே போனா என் ரேகை அதில பதிஞ்சிருக்கும்ல…கடைசியா இழுத்தது நாந்தான? என்றார். அத்தோடு இப்டியே நீ வீட்டுக்குக் கிளம்பிட்டேன்னா…? என்று வேறு கேட்டார். நொந்து போனான் குமரேசன். தினம் ஒருவர் இழுக்க வேண்டும் என்றார். மாட்டேன் என்றுவிட்டார்கள் பலரும்.

கேஷியர்தான் சார் பொறுப்பு…எங்களுக்கென்ன வந்திச்சு…? என்று விலகிக் கொண்டார்கள். காரியம் என்று வந்தால் எல்லோரும் கவனமாக விலகிக் கொள்ளும்போது என்னை எவன் கேள்வி கேட்பது? இதுதான் குமரேசனின் தரப்பு.

அலுவலகத்தில் இருக்கும் நேரங்களில் பெரும்பாலும் மேலாளர் எச்சரிப்பது குமரேசனைத்தான். பல வெளி வேலைகளில் திரிவார் மேலாளர் மயிலேறி. அது பெரும்பாலும் அலுவலரின் சொந்தப் பணிகளாக இருக்கும். அந்த வேலைக்கே அவருக்கு நேரம் சரியாக இருக்கும் என்று வையுங்களேன்.

இதையெல்லாம் இவர் செய்துக்கிட்டிருக்கார் பாரு….கஷ்டம்டா சாமி…

கேலி செய்தார்கள் மறைவாய். அவரைக் கேட்டால்தானே தெரியும் எதற்கு என்று? சும்மா முழம் போடுவாரா…? என்றனர் சிலர்.

மற்ற நேரங்களில் அந்த ஃபைல் என்னாச்சு? இந்த ஃபைல் என்னாச்சு? என்று யாரையேனும் விரட்டிக் கொண்டிருப்பார்.

அந்த ஃபைல் என்னம்மா ஆச்சு? அத என் டேபிள்ல வைக்கிறீங்களா? – இது மட்டும் நந்தினியை நோக்கி அவர் பேசும் பேச்சு.

நாமெல்லாம் நடவடிக்கை எடுத்து வைக்கணுமாம்…அவ ஃபைல மட்டும் அவரு பார்ப்பாராம்…ஏன்? நம்மது சிலதுக்காக அவர் மெனக்கெட்டா என்ன? குறைஞ்சு போயிடுவாராமா? ஆளாளுக்கு வழியிறாங்கன்னா, இவருமா? குசு குசுவென்று நிறையப் பேசிக்கொண்டார்கள்.

தெனமும் எட்டு மணிக்கு மேலதான் நான் கிளம்பறேன்…கடைசியாப் போறது நாந்தான். சீல் வைக்கிறதும் நாந்தான். போதுமா? என்றான் குமரேசன் எரிச்சலுடன். மனிதர்கள் எத்தனை சுயநலம் மிக்கவர்கள்? என்று தோன்றியிருக்கலாம்.

சரி, அதை விடுங்கள். சொல்ல வந்தது வேறு. கதை எங்கெங்கோ நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் தேவையானதுதான். இந்த உலகத்தில் எல்லாமும் காரண காரியத்தோடுதான் நடைபெறுகின்றன. ஒருவரின் எல்லாச் செயல்களுக்கும் பின்னால் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. பொறுத்திருந்துதான் பார்ப்போமே…!

பத்து நிமிடம் லேட்டாக வருவான் குமரேசன் என்றேனல்லவா! வந்தவன் பரபரவென்று தேடுவான். என்றாவது ஒருநாள் என்றால் பரவாயில்லை. தினமுமா? சட்டென்று பாக்கெட்டில் தேடுவது போல் பாவலா செய்து விட்டு மேலாளர் பேனா டேபிளில் இருப்பதை மரியாதை நிமித்தம் எடுக்கத் தயங்கியவனாய், சடாரென்று பின்னால் திரும்பி அவளின் பேனாவை எடுப்பான். எடுத்ததுதான் எடுத்தான். அந்த மூடியை அப்படியா வாயில் வைத்துத் திருகிக் கழற்ற வேண்டும். இடது கை டேபிளில் ஊன்றியமேனிக்குதானே இருக்கிறது? அதென்னவோ அவள் பேனாவை அப்படி வாயில் வைத்துக் கழற்றுவதில் ஒரு மானசீக திருப்தி போலிருக்கிறது. ஒரு நாள் கூட எதுவும் சொன்னதில்லை அவள். அதுதான் இங்கே அதிசயம். அவன் பேனா எடுத்ததைப் பார்த்ததுபோலவே அவள் காட்டிக் கொள்வதில்லையே! தொலையட்டும்! என்று இருக்கிறாளோ? எல்லோரும் கவனிப்பதுதான். ஆனாலும் கேஷியர் குமரேசனுக்குத் தனிச் சலுகைதான்.

தாடிக்குள் புதைந்திருந்த சுப்பிரமணியின் முகத்தில் கூட அது தெரியத்தான் செய்தது. எது? வேறென்ன, ஏக்கம்தான். என்ன பாதுகாப்பிற்கு அவன் இந்த வேஷம் போடுகிறான் என்று தெரியவில்லை. தாடி ஒன்றும் அவன் அடையாளத்தை மறைத்துவிட்ட மாதிரியாகவும் இல்லை. ஒரு வேளை தினமும் பார்ப்பதால் எனக்கு அப்படி இருக்குமோ என்னவோ? கல்யாணம் பண்ணிக் கொள்ளாத அவனுக்கு நிச்சயம் அவள் மேல் ஒரு கண் இருந்தாகத்தான் வேண்டும். நாற்பதைத் தாண்டியவன் அவன். அவன்தான் அவர் அல்ல. ஏனென்றால் அத்தனை காலப் பழக்கம் எங்கள் இருவருக்கும். அந்த அலுவலகத்திலேயே அவனைப் பற்றி அதிகம் அறிந்தவன் நான்தான்.

முதன் முதலில் திருச்சியில் நான் அப்பாய்ன்மென்ட் ஆகிச் சென்று ஜாய்ன் பண்ணியது முதல் எனக்கு அவனைத் தெரியும். ஒரு சிகரெட் தீர்ந்து கொண்டிருக்கும்போதே அந்த நெருப்பிலேயே இன்னொன்றைப் பற்ற வைப்பான். சதா இழுத்துக் கொண்டிருப்பதுதான் அவன் வேலை. ஆபீசுக்கு வேலைக்கு வருகிறானா அல்லது சிகரெட் குடிக்க வருகிறானா என்று தோன்றும். கருத்த பெரிய உதடுகள் அவனுக்கு. நான் அவனைப் பார்த்த கோலம் அதுதான். அதுவே அவனின் அடையாளமாயப் போயிற்று.

ஆபீஸ் காம்பவுன்ட்டுக்குள்ளேயே ஊதுவான். அலுவலர் வந்தால் கையைப் பின்னால் மறைத்துக் கொள்வான். அவருக்கும் தெரியும்தான். சமயத்தில் அவன் நிற்கும் இடத்திற்கு அவரே போவது உண்டு. எதற்கு? நெருப்புக்குத்தான். தீப்பெட்டி இல்லாத சமயம் அவன்தான் ஆபத்பாந்தவன். அலுவலர்தான் இருக்கையிலேயே உட்கார்ந்து புகைக்கலாமே? கூடாது என்பதுதான் விதி. யார் கேட்கிறார்கள்? அதுதான் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல். இரண்டு பேரும் சேர்ந்து நின்று கொண்டு புகைத்துக் கொண்டிருப்பார்கள். பிறகு அவர் மேல் இவனுக்கு எங்கிருந்து மரியாதை வரும்? அது நடத்தையின் அடையாளங்களில்தானே இருக்கிறது? காலம் அன்றைக்கே மாறிவிட்டது.

இவன் சிகரெட் குடிப்பதற்கு இத்தனை விமர்சனமா? என்று கேட்கலாம். சொல்லித்தானே ஆக வேண்டியிருக்கிறது. வெளியில் சென்று குடித்துவிட்டு வருகிறேன் என்று ரொம்பவும் ஒழுங்குபோல் ஆள் நகர்ந்து விடுவான். எதற்கு? கூர்ந்து பார்த்தால்தானே தெரியும். அலுவலகத்திற்கு எதிர்த்தாற்போல் உள்ள கருவேலங்காட்டு மறைப்பிற்கு அப்பால் ஒரு பஸ் ஸ்டாப் உண்டு. அங்கு போய் நின்று கொள்வான். பக்கத்தில் ஒரு த்ரீ ஸ்டார் உணவகம். பலவிதமான கார்கள் உள்ளே போவதும் வருவதுமாக இருக்கும். அங்கு நின்று போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அவன் வழக்கம். நிறைய நடிகைகளையெல்லாம் பார்த்திருக்கேன் என்று அடிக்கடி பெருமையாய்க் கூறிக் கொண்டிருப்பான். வேறு நிறையப் பழக்கங்களும் அவனுக்கு உண்டு என்பதாகத்தான் தெரிந்தது.. படு குஷால் பேர்வழி.

இந்த உதட்டுல முத்தம் கொடுத்தேன்னா அழண்டு போயிடுவாளேடா அவ…என்பேன்.

பிறவியிலேயே அவன் உதடு பெரிது. போதாக்குறைக்கு சிகரெட் ஊதி ஊதி அது கறுத்துக் கிடக்கிறது.

அழண்டுன்னா…?

கசங்கி, துவண்டுன்னு அர்த்தம்…..

கசக்கணும்னுதான ஆச….என்றான்.

இது நடந்தது 1990 ல். அப்போ அவன் வயசு இருபத்திரெண்டோ, மூணோ…. பிஞ்சிலேயே பழுத்து விட்டான்.

டிபார்ட்மென்டுக்கு இப்போதான் வந்திருக்கே…நல்லா வேல கத்துக்கணும்…ப்ரமோஷனுக்கான டெஸ்ட்களப் பாஸ் பண்ணனும்ங்கிற எண்ணமெல்லாம் கிடையாது போலிருக்கு என்றேன் நான்.

….கொஞ்ச நாளைக்கு ஜாலியா இருப்போம்… என்றான்.

அவன்தான் எனக்கு ரூம் பார்த்துக் கொடுத்தான். அந்த லாட்ஜில் அவன் அறைக்கு அடுத்த அறை என்னுடையது. நல்லவேளை. சிகரெட் நாத்தம் மிச்சம். சிகரெட் சாம்பலை ஒரு பான்ட்ஸ் பவுடர் வேஸ்ட் டப்பாவின் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு அதில் தட்டுவான். அப்படியும் அங்கேயும் இங்கேயுமாக சாம்பல் சிதறிக் கிடக்கும் அவன் அறையில்.ஒரே வாடை பிடுங்கும். சுற்றிவர தூசிகளும், முடிக் கற்றைகளுமாகக் கிடக்கும். நிரம்பிய டப்பாவை வெளியில் கொண்டு கொட்ட மாட்டான். அப்படியே இருக்கும். என்றைக்காவது அந்த லாட்ஜின் வேலையாள் மொத்தமாகப் பெருக்க வரும்போது அதை எடுத்துப் போடச் சொல்லுவான். அந்தப் பொம்பளையிடம் கூட ஏதோ சில்மிஷம் பண்ணினான் என்று தெரியும். எல்லா அறைகளுக்கும் மூன்று பேர்கள் உண்டு. அவன் அறையில் அவன் மட்டும்தான். ஓரிருவர் சேர்ந்து கொண்டு பிற்பாடு மாறிக் கொண்டார்கள். ஏனென்று தெரியவில்லை.

ஏண்டா இப்டி? என்று கேட்டதற்கு ஏங்கிட்டக் கேட்டா? மாறினவன்ட்டக் கேளு…என்றான் சுப்பிரமணி.

அவர்களிடம் கேட்டபோது பதில் தாறுமாறாய் வந்தது. கை போடுறான்யா அவன்….என்றார்கள்.

எவனெவனுக்கு என்னென்ன பழக்கம் இருக்கும் என்று எவனாலும் சொல்ல முடியாது. அது அவனவனுக்குத் தெரிந்த ரகஸ்யங்கள். எல்லா மனுஷனும் ரெண்டு மனுஷர்கள் இந்த உலகத்தில்.

மாறிய நபர்கள் சிலர் அந்த லாட்ஜ்ஜை விட்டே கூடப் போயிருக்கிறார்கள். சிலர் அறை மாறியதோடு சரி. பின்னர் அவன் இருக்கும் பக்கம் திரும்பிப் பார்த்ததுகூட இல்லை. ஒருத்தரிடம் கை நீட்டியபோது அடிவிழுந்தது என்று கூடக் கேள்விப்பட நேர்ந்தது. கிணற்றடியில் அவனை அப்படியே தொங்கும் வாளியோடு அழுத்தி உயிர் போய் உயிர் வந்தது அவனுக்கு.

இன்னும் ஒருத்தரோ ரெண்டு பேரோ போடுங்க…நானா வேண்டாம்ங்கிறேன்…என்னால மொத்த வாடகையும் தர முடியாது… என்று அடம் பிடித்தானாம். பின்னர் வாகாக ஒருத்தன் கிடைத்தான் சுப்பிரமணிக்கு. அவனோடுதான் மேற்படி சண்டை.. அவனே எதிர்பார்க்கவில்லை. தப்புக் கணக்கு.

முத்தம் கொடுத்தா அழண்டு போயிடுவாடா அவ என்று சொன்னேனல்லவா…அது யாமினி. என்ன ஒரு பொருத்தம் பாருங்கள். இப்போ அவன் கண் வச்சிருக்கிறது பேரு நந்தினில்ல…! அதுக்கு சொன்னேன்.

அவ பேரே எனக்குப் பிடிக்கும்டா….நா பேசாம அவ ஆபீசுக்கு மாறப் போறேன்…என்றான் சுப்பிரமணி. மூணு வருஷத்துக்கு ஒரு முறைதான் மாறுதல். இடையில் மாறுதல் என்றால் அது அலுவலருக்குப் பிடிக்காமல் இருக்க வேண்டும். அதாவது வேலைத் தரம் மிகக் குன்றி இருந்தால் அது நடக்கும். ஆனால் சுப்பி எப்படியோ மாறுதல் வாங்கி விட்டான். கில்லாடி அவன். ஒரு விஷயத்தைக் கையில் எடுத்தால் முடிக்காமல் விடமாட்டான். அவள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்குப் போய் அங்கு உள்ள ஒருவரிடம் பேசி, அவருக்கு தன் ஆபீசுதான் வீட்டிற்குப் பக்கம், ஒரே பஸ்ஸோடு முடியும், வேலை கம்மி, முக்கியமில்லாத சீட், என்று எதை எதையோ சொல்லி, இருவரும் சேர்ந்து ஒரே விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட்டு மனமொத்த மாறுதல் என்று பெயர் பண்ணி, சென்னையிலிருந்து ஒருவர் மூலமாய் வேறு ரெக்கமன்ட்டேஷனாக ஃபோன் பண்ணச் சொல்லி, காரியத்தை முடித்தே விட்டான்.

அதற்கு அடுத்த காட்சியாய் அவனை யாமினியோடு முக்கொம்பில்தான் நான் பார்த்தேன். என்னைத் தேடி வந்திருந்த என் நண்பர்களோடு நான் ஊர் சுற்றக் கிளம்பியபோது, எங்கெங்கே சென்றேனோ அங்கெல்லாம் அவனை யாமினியோடு பார்க்க நேரிட்டது. யாரும் பார்க்காத, யார் கண்ணிலும் படாத, பாலத்துக்கு அடியில், ஓரத் திட்டில் அவன் மடியில் அவள்.

பொதுவாகத் திருச்சியில் ஊர் சுற்றுபவர்களை ஸ்ரீரங்கம், திருவானைக்கா, வயலூர், மலைக்கோட்டை, சமயபுரம், முக்கொம்பு அணை, என்று தாராளமாய்ப் பார்க்கலாம். அப்படித்தான் அவனும் கூட்டிக் கொண்டு அலைந்து கொண்டிருந்தான். ஒரே ஒரு வித்தியாசம். அலைபவர்கள் பஸ்ஸில்தான் சென்று சென்று வருவார்கள். சுப்பி அவளை ஒரு டாக்ஸி அமர்த்திக்கொண்டு ஜாலி பண்ணிக் கொண்டிருந்தான். காசைப் பஞ்சாய்ப் பரத்துவான்.

யாமினிக்கு அதுதான் ஊரா அல்லது வெளியூரா என்கிற கேள்வியே அப்போதுதான் பலருக்கும் மனசுக்குள் எழுந்தது. அவள் உறையூரில் ஒரு பெண்கள் உறாஸ்டலில்தான் இருக்கிறாள் என்பதும் அது ரொம்பவும் கெடுபிடியான இடம் என்பதும், எங்கு சுற்றினாலும், எப்படி அலைந்தாலும், ராத்திரி ஒன்பதுக்கு வந்து அடைந்து விட வேண்டும் என்பதும், யாமினி அதில் மட்டும் யாருக்கும் சந்தேகம் எழாமல் மெயின்டெய்ன் பண்ணி வந்தாள் என்பதும்தான் உண்மையாயிருந்தது.

கல்யாணம் பண்ணிக் கொள்வது என்பது ஆரம்பத்திலிருந்தே சுப்பிரமணியின் கொள்கையாக இல்லை என்பதால் நன்றாய் சலிக்கும்வரை அவளோடு அலைந்து விட்டு ஒன் ஃபைன் மார்னிங் மதுரைக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வந்து விட்டான்.

அவன் அப்பா போலீஸ் அதிகாரி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. எதற்கும் அடங்காத அவுத்துவிட்ட காளைமாடு என்று தண்ணி தெளித்து விட்டார்களோ என்னவோ உள்ளுரிலேயே இருக்க வேண்டும் என்கிற நியதியெல்லாம் அவனுக்கு என்றும் இருந்ததில்லை. திருச்சியில் இருக்கையிலேயே பக்கத்தில் லால்குடி, பெரம்பலூர் என்று போய்விட்டு வருவான். ஒழுங்காய் வேலை பார்த்தால்தானே யாரும் அவனை வேண்டும் என்று சொல்வார்கள். வேண்டாம் என்ற லிஸ்டில்தான் அவன் என்றும் இருந்தான். அவனாகவே விரும்பித் தன்னை அங்கே நிறுத்திக் கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும். அதுபற்றியதான கவலையெல்லாம் அவனுக்கு என்றுமே இருந்ததில்லை. இல்லையென்றால் இப்படி நாலுங்கிடக்க நடுவில் மதுரைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு வருவானா?

அந்த யாமினி இருக்குதா?

இருப்பா, இல்ல இல்லாமப் போறா…எவனுக்கென்ன? அந்த நாயைப்பத்தி ஏண்டா ஏங்கிட்டக் கேட்குற? –

அதிர்ந்து போனேன் நான்.

புதிய அலுவலகத்தில் தனக்கு நெருக்கமானவனாக என்னைக் காண்பித்துக் கொண்டான். இவனுக்கு இப்படி ஒரு நண்பரா? என்றுதான் எல்லோரும் என்னை நினைத்திருப்பார்கள். சிவனே என்று நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பவன் நான்.

இப்படித் தடாலடியாய் ஒருவரை தூக்கிவிட்டு விட்டு வந்து உட்கார்ந்திருக்கும் சுப்பியை எல்லாரும் சற்று பயத்தோடுதான் பார்த்தார்கள். தயங்கி ஒதுங்கினார்கள். அவன் தூக்கிவிட்ட நபர் தற்போது திருச்சியில் இருக்கிறார். தலைவிதி என்று போனவர்தான்.

அவர் மூலமாகத்தான் தெரியவந்தது யாமினிக்குக் கல்யாணம் ஆகி திருச்சி சுப்பிரமணியபுரத்தில் செட்டில் ஆகி விட்டாள் என்று. சுப்பிரமணி கை விட்டாலும் சுப்பிரமணியபுரம் கிடைத்திருந்தது அவளுக்கு. அதற்குப் பின்னும் அவளோடு சுற்றுவதற்கு முயற்சித்த வேளையில்தான் அடியும் உதையும். யார் கொடுத்திருப்பார்கள்? நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இந்தக் கண்றாவியை வேறு வாய்விட்டுச் சொல்ல வேண்டுமா?

ரொம்ப ஓவர் என்று அவன் பெரியப்பா இருக்கும் ஊரான இந்த மதுரைக்கு அவனைக் கொண்டுவந்து தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொள்ளுவதாக பேச்சு ஆகியிருப்பது தெரியவந்தது. திருச்சிக்கு மாறுதலில் சென்ற காசிநாதன் மூலம்தான் எல்லா விபரமும். படு லொக்காலிட்டி என்றார் அவர்.

அங்கே யாமினி. இங்கே நந்தினி. என்ன ஒரு பொருத்தம் பாருங்கள். அவன் கதை என் ஒருவனுக்குத்தான் தெரியும்.

யப்பா சாமி…உன் ஆட்டத்தையெல்லாம் இங்க வச்சிக்காத…டின் கட்டி அனுப்பிடுவானுங்க….

அவன் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.

அதென்னடா அப்டி நோங்குறாங்க எல்லாரும்….பிள்ளை….சரியான பார்ட்டிடா அது….என்றான். பிள்ளை பிள்ளை என்பது திருச்சியில் அழைக்கும் பாங்கு என்பதால் அதெல்லாம் நிறுத்து என்றேன். என் ஒருவனைத்தானே அவன் அப்படி அழைத்தான். எதற்கு அந்த நெருக்கம் என்றிருந்தது எனக்கு. சொல்லப் போனால் சற்று பயமாய்த்தான் இருந்தது. இவன் அடிக்கப்போகும் லூட்டியில் என்னை எதிலாவது இழுத்து விட்டு விடக் கூடாதே என்று பயந்தேன்.

என்னா சுந்தரு….ஒன் ஆளு படு சல்லியா இருப்பான் போல…என்றார்கள் அலுவலக நண்பர்கள் சிலர்.

என்ன? என்றேன் நான்.

ரயிலடி பக்கத்து லாட்ஜ்லேர்ந்து வர்றாம்ப்பா அவன்….அதுக்குள்ளேயும் எந்தெந்த எடம்னு தெரிஞ்சிட்டாம்போல……

அதுக்கு நா என்னங்க பண்றது…? எங்கிட்டக் கேட்டா? என்றேன் அப்பாவியாய்.

அது சரி…ஆளப் பார்த்து இருக்கச் சொல்லு…நீயும் பார்த்து இருந்துக்கப்பூ……

அவர்கள் சொல்லி நாலு நாள்தான் ஆகியிருக்கும். அன்று கந்த சஷ்டி என்று திருப்பரங்குன்றம் போயிருந்த நான் அங்கே சுப்பிரமணியைக் கூட்டத்தோடு கூட்டமாகக் கண்டேன்.

என்னாச்சு ஆள் மாறிட்டானா? என்றிருந்தது எனக்கு. தன்னந்தனியாய்? அதுவும் நெற்றியில் விபூதி, குங்குமம் திகழ கையில் அர்ச்சனைத் தட்டோடு…யாரைப் பின்தொடர்கிறான். ஏன் இத்தனை வேகமாய்ப் பாய்கிறான். கூட்டத்தை விலக்கிக் கொண்டு நானும் முன்னேறினேன். எங்கே தலையாய்த் தென்படும் இடத்தில் ஆள் மறைந்து விடுவானோ என்று அவனின் மஞ்சள் கலர் சட்டையை அடையாளம் வைத்துக் கொண்டு பின் தொடர்ந்தேன்.

பாய்ந்து, பாய்ந்து, ஆட்கள் சங்கடமாய்த் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு விலக்கிக் கொண்டு இடது புறம் தெப்பக் குளம் இருக்கும் பகுதியில் இறங்கி, ஒரு பாக்கெட் பொரியை வாங்கிக் கொண்டு மீன்களுக்குப் போடுவதற்காகக் காத்து, ஒதுங்கி, முடிந்தவரை கூட்டத்தில் என்னை மறைத்துக் கொண்டு நின்றிருந்த வேளையில் குளக்கரையிலிருந்து மேலேறி வந்தவர்களை வியப்பாய்ப் பார்த்தவாறே நெருங்குவதற்குத் தயங்கியவனாய் தன்னை மனிதத் தலைகளுக்குள் மறைத்துக் கொண்டு அவர்கள் பின்னாலேயே தொடர்வதற்குத் தயங்கியவனாய் நின்றிருந்த சுப்பிரமணியைத் தவிர்த்துவிட்டு, யார் அவர்கள் என்று கூர்ந்து நான் நோக்க முற்பட்டபோது, அது அந்த இருவராக இருப்பார்கள் என்று நானும் ஏன் நீங்களும் கூட எதிர்பார்த்திருக்க முடியாது.

என்ன செய்வது? நாம் எதிர்பார்ப்பதெல்லாமா நடக்கிறது இந்த உலகத்தில்? எல்லாமும்தான் நடக்கிறது. எது எதுவெல்லாமோதான் நடக்கிறது. எல்லாவிதமாகவும்தான் இந்த உலகம் இருக்கிறது. எதையும்பற்றி எந்த அதிர்ச்சியும் கொள்ளத் தேவையில்லைதான். ஏனென்றால் எதுவும்தான் நடக்குமே இங்கே!

அங்கே போய்க் கொண்டிந்தது யார் என்று நினைக்கிறீர்கள்? இந்தக் கேள்வியோடு இந்தக் கதையை முடித்து வாசகர்களுக்கு ஒரு போட்டி என்று அறிவித்து விடலாமா?

அடுத்த பத்தாவது நாள் எங்கள் அலுவலகத்திற்கு ஆடிட்டிங் வந்திருந்த தணிக்கையாளர்கள் முதல் அப்ஜெக்சனாக எழுதியது இதுதான்-

தனியாரிடமிருந்து வசூலிக்கப்பட்ட இயந்திரங்களுக்கான வாடகைப் பணம் மறுநாளே வங்கியில் உரிய கணக்குத் தலைப்பில் செலானிட்டுச் செலுத்தப் பட வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாமல் பதினைந்து நாட்கள், ஒரு மாதம் என தாமதமாகச் செலுத்தப்பட்டுள்ளது. அனுதினமும் வசூலிக்கப்படும் தொகை ரொக்கப் பதிவேட்டில் வரவு வைக்கப்பட்டு, மறுநாள் செலவு காண்பித்து நேர் செய்யப்பட வேண்டும். வரவு காண்பிப்பதிலும் தவறுகள், தாமதங்கள் நிகழ்ந்துள்ளன. இயந்திர வாடகைக்கென தனியாருக்கு வழங்கப்படும் ரசீதுகள் எந்தத் தேதியிடப்பட்டதோ அதே தேதியிலேயே வரவுக்குக் கொண்டு வரப்படாமல் இஷ்டம்போல் தாமதமாக வரவு வைக்கப்பட்டு, தாமதமாக வங்கியில் செலுத்தப்பட்டு நடைமுறைப் பிறழ்வு நிகழ்ந்துள்ளது. தணிக்கைக் காலத்திலிருந்து முதல் பனிரெண்டு மாதங்களில் கீழ்க்கண்ட தேதிகளில் வசூலிக்கப்பட்ட தொகை இதுவரை வங்கியில் செலானிட்டு செலுத்தப்படவில்லை. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, தணிக்கைக் குழுவுக்குத் தெரிவிக்கவும். கீழ்க்கண்ட தொகை சம்பந்தப்பட்ட பணியாளரிடமிருந்து ஒரே தவணையில் பிடித்தம் செய்யப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டு அசல் சலானை தணிக்கைக் குழுவின் பார்வைக்கு சமர்ப்பிக்கவும்..”

இது நடந்து இரண்டாவது நாள் கேஷியர் குமரேசன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். அலுவலரின் நெருக்கத்தில் மேலாளர் மயிலேறி தப்பினார். அன்றாடம் ரொக்கப் பணப் பதிவேட்டை அவர் ஆய்வு செய்திருக்க வேண்டுமல்லவா? அப்படிச் செய்திருந்தால் வரவும், செலவும் சரிசெய்யப்பட்டிருக்குமல்லவா? அவருக்குத்தான் பாஸ் வேலையே சரியாக இருக்கிறதே! இதைவிடவா ஒரு சலுகை வேண்டும்? அத்தோடு கொடுக்கல், வாங்கல் வேறு…யாரோடு?…யாரோடு என்ன யாரோடு…இதையெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? புரிஞ்சிக்குங்க…

அந்த வாரக் கடைசியில் உடல் நலமில்லை என்று நீண்ட மருத்துவ விடுப்பு விண்ணப்பத்தை நந்தினியின் தகப்பனார் வந்து கொடுத்து விட்டுப் போனார். நிச்சயம் பிறகு அவள் அந்த அலுவலகத்திற்கு மீண்டும் வரமாட்டாள் என்று எங்களுக்குப் புரிந்தது.

நம்ம கைக்கு அகப்படாம கிளி பறந்தது இதுதான் லைஃப்லயே மொத வாட்டி பிள்ளை….என்றான் சுப்பிரமணி!!! அடுத்தாற்போல் அவள் மாறுதல் எங்கே என்று காத்திருந்தான்.

------------------------------

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...