“விடியுமா?” - கு.ப.ராஜகோபாலன்
சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்
வெளியீடு:- அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம்,
திருச்சி மாவட்டம். தகவல் தொடர்பு நெருக்கமாகவும்,
விரைவாகவும் இல்லாத காலம். தந்தி கொடுக்கும் முறை நடைமுறையில். ஒரு ஊரிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு ரயில் மட்டும் என்றும். தந்தி என்று
வந்தாலே அது அவலச் செய்தியை, சோகச் செய்தியையே சுமந்து வரும் என்று கருதிப் பயம். .
தந்தியே நேரத்திற்குக் கிடைக்காத அவலம். தந்திச் சேவகன் எமன். நினைத்தால் சட்டென்று
கிளம்பி அடுத்த வண்டியைப் பிடித்து, சில மணி நேரங்களில் போய் நின்றுவிட முடியும் என்கிற
வசதி வாய்ப்பு இல்லாத காலம்.
வீட்டு ஆம்பளையை வெளியூரில் விட்டுவிட்டு, பெண்டுகள்
தனித்துக் கிடந்த பொழுதுகள். என்னாச்சோ, ஏதாச்சோ என்று எப்போதும் மனதில் ஒரு தவிப்போடு,
தவதாயத்தோடு, ஏதாவது அபசகுனமான செய்தி வந்து விடுமோ, ஏதேனும் கெடுதல் நிகழ்ந்து விடுமோ
என்று தேவையற்றும், ஊகத்தோடுமே நகர்ந்த நேரங்கள்.
ஏதோவொரு பொருத்தமற்ற பொழுதில் வந்து நிற்கும்
அந்தத் தந்தியைப் பற்றி என்னதான் நினைப்பது? அந்த என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே குலை
நடுங்கத்தான் செய்கிறது. நெஞ்சம் பதறுகிறது. மனசு என்னென்னவோ நினைக்கிறது.
கதையை இங்கே ஆரம்பித்து எடுத்த எடுப்பிலேயே ஒரு
பதை பதைப்பை நமக்கும் உண்டு பண்ணி விடுகிறார் கு.ப.ரா தெருவில் ஒரு போலீஸ்காரர் போனாலே
என்னவோ ஏதோ என்று பல தலைகள் எட்டிப் பார்க்கும். அந்தத் தெரு வழியாய்ப் போய் இன்னொரு தெருவுக்குள்
அல்லது பஜாருக்குள் நுழைவதற்கும் வாய்ப்புள்ளது என்றாலும் போலீஸ் என்னத்துக்கு இங்க
வர்றான்...? பலரின் பயம் இது. அவரவர் வாழ்க்கை அவரவருக்கு. யார் வம்புக்கும் தும்புக்கும் போகாமல் கடவுளை பிரார்த்தித்துக் கொண்டு நியமங்களை
ஒழுங்கே கடைப் பிடித்துக் கொண்டு சிவனே என்று வாழ்ந்த காலம்.
அப்படியாப்பட்ட ஒரு பொழுதில்தான் அந்தத் தந்தி
வந்து நிற்கிறது.
“சிவராமையர் டேஞ்சரஸ்” - தந்தி வந்திருந்தது
எங்கிருந்து? அது மேலும் பதைக்க வைக்கிறது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரி...!
குஞ்சம்மாள் பதறுகிறாள். பிரமை பிடித்து அமர்ந்து விடுகிறாள். உங்க அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார்
என்று ரெண்டு மாதத்திற்கு முன்பு பார்த்து வந்த இந்தத் தமக்கை சொன்னாளே...!
சாயந்தரம் ரயிலுக்குக் கிளம்பியாயிற்று. எல்லாம்
நல்லபடியாய் நடக்கும்...என்று பரஸ்தானம் இருந்தாயிற்று. சொன்னதையெல்லாம் குஞ்சம்மாள்
இயந்திரம்போல் செய்தாள்.
ஒருவேளை அக்கா...நோன்பிற்காக நீ இங்கே வந்துவிட்டது
அத்திம்பேருக்குக் கோபமோ? தந்தி ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்ததாய் இருக்கிறதே..!
அப்படிக் கொடுக்க முடியுமா? உன்னைப் பார்க்கணும்னு தோணியிருக்கும்...நீ வேணும்னா பாரேன்...எழும்பூர்
ஸ்டேஷனுக்கு வந்து நிக்கப் போறார்....
மனத்தின் ஆழத்தில் பீதி. புழுப் போலத் துளைத்தெடுக்கிறது.
குஞ்சம்மாளின் பதற்றம் படிக்கும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. என்னென்னவோ நினைக்க வைக்கிறது. ஏதாவது
ஆகிவிடுமோ? போய் நிற்பதற்குள் ஏதேனும் விபரீதம் நிகழ்ந்து விடுமோ? ஆளைக் கண்கொண்டு
பார்க்க முடியாதோ? ரெண்டு வார்த்தை பேச முடியாதோ? ச்சே...ச்சே...ஏன் வீணாய் அப்படியெல்லாம்
நினைத்துக் கொள்ள வேண்டும்? ரயிலென்ன இத்தனை மெதுவாய்ப் போகிறது? ஏன் இப்படி எல்லா
இடத்திலும் நின்று நின்று...? பொழுது நகரவே மாட்டேனென்கிறதே...! கண்ணயர்ந்து விட்டால்
விடிந்து விடுமோ? அங்கு அவர் அப்படிக் கிடக்கும்போது இங்கே நாம் நிம்மதியாய்த் தூங்குவது
சரியா? என்ன வேதனைப் படுகிறாரோ? என்ன உடல் நோவோ? எப்படித் தவிக்கிறாரோ?
மனசு கலங்குகிறது. துடிக்கிறது. பிறகு சமாதானமாகிறது.
தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறது. மூலையில் பதுங்கிய பயம் திடீரென்று மேலெழும்புகிறது.
விஸ்வரூபம் எடுக்கிறது. என்னென்னவோ நினைக்க வைக்கிறது. எதற்கு அநாவசியமாய் கண்டதையும்
நினைத்துக் கொண்டு? கலங்கிக் கொண்டு? இந்த மனசை அடக்கவே முடியாதா? நல்லதை நினைப்பதைவிட
ஏன் இப்படி வேண்டாததையெல்லாம் தானாகவே கற்பனை செய்து கொண்டு துடிக்கிறது? தப்பாய்த்தான்
நடந்து விடுமோ என்று உறுதி செய்ய முனைகிறது? இந்த விபரீத எண்ணங்களுக்கு வேலி போடவே
முடியாதா?
வெறி பிடித்தது போல் ஓடுகிறதே இந்த ரயில்? விடியப்
போகும் ஒரு காலையை மனதில் வைத்து இந்த வேகமா? சென்னை போய்ச் சேரும்போது எங்கள் கவலையும்
மறையும் இருளைப்போல் பின்தங்கி விடாதா?
குஞ்சம்மாள் மூட்டையிலிருந்து வெற்றிலையை எடுத்து
எனக்கும் கொடுத்து தானும் போட்டுக் கொள்கிறாள். வாய் அதை மெல்லும்போது, அந்த ருசியில்
எண்ணங்கள் பின்னோக்கி...சற்றே தங்களை மறைத்துக் கொள்கின்றனவே...! இருக்கும் படபடப்பைத்
தணித்துக் கொள்வதற்கான இயல்பான உத்தியா இது? மனசை சாதாரணமாய் ஆக்கிக் கொள்ளும் காரியமோ?
குஞ்சம்மாள்...என் தமக்கை என்றுமே அழகுதான்....எங்கள்
குடும்பத்திலேயே அவள்தான் அழகு. படியத் தலைவாரி, பூச்சூட்டிக் கொண்டால் எங்கிருந்துதான்
வரும் அந்த லாவண்யம்? இவ்வளவு சோர்விலும் என்ன ஒரு அழகு அவள்? என்றுமில்லாத பொலிவில்அழகாய்
இந்தக் கணத்தில்! ஒரு வேளை...அணையப் போகும் விளக்கு சுடர் விடுமே...அது போலவா? ச்சே...!
ஏன் இப்படித் தோன்றுகிறது. இந்த மனதுக்கு அணை போடவே முடியாதா? எண்ணங்களை சிறை வைக்க
ஏலாதா?
அம்பி...!உங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு
நான் என்ன சுகத்தைக் கண்டேன்...? - கண்களில் ஜலம். அடக்க முடியாமல் கணத்தில் பெருக்கெடுக்கிறது. இத்தனை
ஆதங்கமா? இவ்வளவு துக்கமா? அடக்கி வைத்திருந்தது பீறிடுகிறதா? யாரிடமேனும் சொல்லியே
ஆக வேண்டும் என்கிற உந்துதல் இந்த சமய சந்தர்ப்பத்தைக் கண்டதா?
திடீரென்று ஒரு மௌனம். வண்டிகிடு கிடுத்துக் கொண்டிருக்க...மனசு மௌனமாகிவிட்டதா
என்ன?
விழுப்புரம் ஸ்டேஷனில் ஏறிய அந்த அம்மாள்.
என் தமக்கை...அம்பியின் சின்ன அறிமுகம். எங்கிட்டுப் போறீக...?- அன்பான விசாரிப்பு. கொஞ்சம் மல்லிகைப் பூ தருகிறாள். நல்ல சகுனம். நாளைய நன்மைக்கு ஒரு அச்சாரம் நல்லதே நடக்கும்...சகுனம்
நிர்ணயிக்கிறாள்.
எவ்வளவுதான் கவலைப்பட முடியும்? கண்ணயர்ந்து...கண்ணயர்ந்து...திடுக்கென
விழித்து, பதைத்து, வந்தாச்சா...என்று பரபரத்து.....ஐயோ...விடிகிறதே...இன்னிக்கு
என்ன வச்சிருக்கோ? என்று தவித்து.....
எழும்பூர் ஸ்டேஷன் வந்தாயிற்று. அத்திம்பேர் வரலியே...! ஸ்டேஷனில் யாருமில்லை.
எதற்காக அங்கு வரவேண்டும்? என்ன அர்த்தமற்ற எதிர்பார்ப்பு? வீட்டுக்குப் போயாயிற்று. வீடு பூட்டிக்கிடக்கிறதே...!
சரிதான்...உடம்பு சௌகரியமில்லை என்பதுதான் உண்மை போலும்!.
ஜெனரல் ஆஸ்பத்திரி....யாரைப் பார்ப்பது? யாரிடம்
கேட்பது? இவ்வளவு பெரிய இடத்தில் எப்படிக் கண்டு பிடிப்பது?
நீங்க கும்பகோணமா? - ஆமாம்.... நோயாளி நேற்றிரவு இறந்து போய்விட்டார்.... -
அந்த குமாஸ்தாவின் பதில். எப்படி? இறந்து....இறந்து போய்விட்டாரா? அதற்குள்ளா?
சிவராமைய்யர்....? ஆமாம் ஸார்....
கொஞ்சம் இருங்கள்...பிரேதத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.....
பிரேதத்தைப் பார்த்தாயிற்று. நிச்சயமாயிற்று. ஒரு வழியாக பயம் தீர்ந்தது. திகில் விலகியது. பிறகு...?
விடிந்து விட்டது...!
கதை முடிந்ததும் நமக்கே பெருத்த நிம்மதி.. அதுவரையிலான
தவிப்பு குஞ்சம்மாளோடு சேர்ந்து நமக்கும்.
நாமும் குஞ்சம்மாளின் சகோதரனோடு சேர்ந்து, தாங்க முடியாத துக்கத்தை, துயரத்தை,
தவிப்பைச் சுமந்து கொண்டு விதுக் விதுக்கென்று இருக்கவும் முடியாமல், உறங்கவும் முடியாமல்...மன
அமைதியின்றிப் பயணிக்கிறோம்.
பொழுது விடிந்தபோது அதுவும் விடிந்து விட்டது.
எல்லாம் முடிந்தும் விட்டது.
தி.ஜானகிராமன் சொல்கிறார்...எழுதினால் கு.ப.ரா
போல் ரெண்டு வரியாவது எழுதத் தெரிய வேண்டும்.அதுதான் எழுத்து....!
எல்லாம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய விஷயங்களென்றாலும்,
எளிய கவர்ச்சியுள்ள தம் நடையால் அவற்றை அற்புதமான சிருஷ்டியென்று கூற வைத்து விடுகிறார்.
இது கு.ப.ரா படைப்புக்களுக்குக் கிடைத்த விமர்சனம். சம்பாஷனை உருவில் கதை சொல்லும்
பாணி வெகுவாகப் பாராட்டத்தக்கது. இது அவருக்கான புகழுரை. தொகுப்பை முழுவதும் படித்து முடித்தே ஆக வேண்டும்
என்கிற உத்வேகத்திற்கு ஆளாக்கும் மிகச் சிறந்த
ஆய்வுத் தொகுப்பு கு.ப.ரா.வின் சிறுகதைகள் என்ற அனைத்துக் கதைகளும் அடங்கியது இந்த ஆய்வுப் பதிப்பு.
---------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக