மீசை முருகேசன் இன்று மீசையை மழித்திருந்தான். ஐநூறு கி.மீ. தள்ளி வந்து இங்கு இப்படி உட்கார்ந்திருப்போம் என்று நினைக்கவேயில்லை. அன்றைய நிலவரப்படி அவன் எங்கிருக்கிறான் என்று யாருக்கும் தெரியாது.அப்படிப் பார்த்தால் அவன் ஊரை விட்டு வந்தே இரண்டு வாரத்திற்கு மேல் ஆகிப்போனது. எங்கெங்கோ சுற்றிவிட்டு அப்படி அப்படியே வந்து கொண்டிருக்கிறான் ஒரு நாடோடியைப்போல.
சொல்லப் போனால் இன்றைய தேதியில் அவன் ஒரு அசல் நாடோடிதான். அவனுக்கென்றுதான் யாருமேயில்லையே? இருக்கும் சொந்தங்களும் உதறிவிட்ட பின்பு அவர்களை எப்படி இன்னும் நெருக்கமாக நினைத்துக் கொண்டிருப்பது? ஏதோவோர் விரக்தியில் அவன் இப்படிக் கிளம்பியிருந்தான். விரக்தியென்ன? தான் இருந்தால் என்ன செத்தால்தான் என்ன? யார்தான் கண்டு கொள்ளப் போகிறார்கள்? செத்தால், தான் ஒரு அநாதைப் பிணம்தான். எனக்கென்றுதான் எந்தவொரு முகவரியும் இல்லையே? முகவரி இல்லாதவன் தன்னுடைய பயணத்தை மட்டும் எப்படி வரித்துக் கொள்ள முடியும்? அவன் எங்கு போனான், என்ன ஆனான் என்று யார் கவலைப் படப் போகிறார்கள்? இன்னைக்கு இங்கே போகிறேன், அப்டியே நாளைக்கு அந்த ஊருக்குப் போயிட்டு நாளைக் கழிச்சு ஊருக்கு வந்துடுவேன் என்பதுபோல் யாரிடம் அவன் சொல்ல வேண்டும்?
பாண்டிச்சேரி போய்விட்டு அந்த ரூட்டில் சென்னையை நோக்கி வருவோம் என்று எதிர்பார்க்கவில்லை. நீளநெடுஞ்சாலைல நெட்டுக்க அப்டியே போகவேண்டிதான் என்று சொன்னார்களே என்று அதையும்தான் பார்ப்போமே என ஏறி உட்கார்ந்து விட்டான். பிறகுதான் அவனுக்கே தெரிந்தது. எதுக்கு இறங்குவானேன் என்று ஒரு ஆயாசம். ஒரு மணி நேரப் பிரயாணத்திற்குப் பின் மனதில் அந்த எண்ணம் உதித்தது. வண்டியை ஒரு அத்வானக் காட்டில் நிறுத்தினார்கள். சுற்றிலும் வெறும் பொட்டல். கண்ணுக்கு எட்டிய வரை. சர் சர்ரென்று வண்டிகள் ஒன்று மாற்றி ஒன்று போகவும் வரவுமாய் இருந்தன. டிபன் சாப்பிடச் சென்றவன் வேண்டுமென்றே அப்படியே இருந்து விட்டான். கண்டக்டர் சுற்று முற்றும் அரக்கப் பரக்கப் பார்ப்பது சாப்பிடும் இடத்திலிருந்து தெரிந்தது. சார் போகலியா என்று யாரோ அவனைக் கேட்டது போல்தான் இருந்தது. வேறொரு ஆளை என்பது பிறகுதான் தெரிந்தது. அந்த ஆள் கிளம்பிப் போனதும் வண்டி புறப்பட்டு விட்டது. உள்ளே டிக்கெட்டுகளைக் கணக்கு வைத்திருந்தானானால் குறைந்திருப்பதைக் கண்டிருக்க முடியும். அப்படிச் செய்யவில்லை போலிருக்கிறது. அதுவும் நல்லதுக்குத்தான். காசைக் கொடுத்து விட்டு வெளியே வந்தவன் நகர்ப்புறம் எந்தப் பக்கம் என்று பார்த்தான். அதற்கு எதிர்த்திசையில் நடக்க ஆரம்பித்தான். வண்டி வந்து கொண்டிருக்கும்போதே ஒரு சின்ன ஊர் எதிர்ப்பட்டதுபோல் இருந்தது. அதை நினைவில் வைத்து இன்றைய பொழுது அங்கேதான் என்று முடிவு செய்து கொண்டான்.
பான்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். மீதிப் பணம் தட்டுப்பட்டது. இடுப்பைச் சுற்றிக் கையால் தடவினான். அரணாக்கயிறில் அந்தச் சங்கிலி வளையமாகச் சுற்றப்பட்டிருப்பது பாதுகாப்பாக இருக்கிறதா என்று நுனியைத் தடவினான். சற்றே தொங்கிக் கொண்டிருப்பதைச் சரி செய்து விட்டுக் கொண்டான். அப்படித் தான் செய்வதே யார் கண்ணிலேனும் படுகிறதா என்று பார்வை போனது. புது ஊரில் வேட்டைதான் அவனுக்கு. ஏதோ கூட்டம் முடிந்து வந்த சனக் கும்பலில் இருண்டு கிடந்த பவர் கட் கும்மிருட்டுத் தார் ரோட்டில் ஏற்கனவே பார்த்து வைத்திருந்த வழியில் பறித்த சங்கிலியோடு பதறப் பதற ஓடினான். இப்போது நினைத்தாலும் கொஞ்சம் உதறத்தான் செய்கிறது. இன்னும் பயமற்ற தன்மை வரவில்லை. தான் இந்தத் திருட்டுத் தொழிலுக்கு உகந்த ஆள்தானா என்ற சந்தேகம் இன்னும் தன்னிடமே இருந்து கொண்டிருக்கிறது. பிரியமில்லாமலதான், ஏதோ அசட்டுத் தைரியத்தில்தான் செய்துகொண்டிருக்கிறோமோ என்று அவனுக்கே அடிக்கடி தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது.
கொஞ்ச தூரத்தில், திருப்பத்தில் போலீஸ் ஸ்டேஷன். உதறலெடுத்து ஒன்றுக்கு நெருக்கியது. வெகு நிதானத்தோடு நடந்து கடந்த சாமர்த்தியத்தை நினைத்தால் ஆச்சரியம்தான். கையில் ஏற்கனவே வைத்திருந்த தினசரியோடு கவனமாகப் படிப்பதுபோலவே தலை குனிந்த மேனிக்கு எப்படி அத்தனை தூரம் கடந்து வந்தோம். சட்டென்று வந்த ஒரு நகரப் பேருந்தில் ஏறி அப்பாவியாய் அமர்ந்து அது நிலையத்தை அடைந்த போது எந்தவொரு முடிவுமில்லாமல் கிடைத்த வேறொரு பஸ்ஸில் மறுபடியும் ஏறி அமர அது அவனை இப்படிக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது…..கடவுளே உதவி செய்தது போல் புதிய நகரத்தில் லட்டு மாதிரி ஒரு பொருள் கிடைத்தது அதிர்ஷ்டம்தான்.
சங்கிலி நல்ல கனம். குறைந்தது ஏழு எட்டுப் பவுனாவது தேறும். ராமையாவிடம் சொல்லித்தான் விற்றுத் தரச் சொல்ல வேண்டும். அவர்தான் சரியான ஆள். உருக்கியோ, பெருக்கியோ விற்றுவிடும் சாமர்த்தியம் அவருக்கு மட்டும்தான் உண்டு. என்ன செய்தேன் என்று எதுவும் சொல்ல மாட்டார். அதெதுக்குடா உனக்கு? இந்தா பிடி காசை… என்பார். பட்டுப் பட்டென்று கைக்குக் காசு வருவது உறுதி. கையில காசு வாயில தோசை. அதனால்தான் திரும்பத் திரும்ப அவரிடமே போய் நிற்க வேண்டியிருக்கிறது. சொன்ன நேரத்துக்கு, நாளுக்கு, அவர் தப்பியதே இல்லை. தப்புச் செய்வதிலும், ஒரு நேரந் தவறாமையும், கடமையுணர்வும், காரியக் கெட்டியும் அவரிடம் இருப்பது கவனிக்கத் தக்கது. அதுதான் இவனை உறுத்துகிறது. தப்பென்ன தப்பு? யாரையும் காட்டிக் கொடுத்தால்தானே தப்பு சாதாரண ஜனங்கள் பழம் நகையைக் கொண்டு கொடுப்பதுபோல் நானும் கொடுக்கிறேன். வாங்கிக் கொள்கிறார். அவர்கள் புது நகையை வாங்குகிறார்கள். நான் துட்டு வாங்கிக் கொள்கிறேன் அவ்வளவுதானே…! நின்ற இடத்திலேயே இது சாத்தியமாகிறது அவருக்கு. தனக்கு அப்படியில்லை. அங்கங்கே கை வைத்துத்தான் வண்டி ஓடுகிறது.
அதென்னவோ இந்தத் தொழில் ஆரம்பித்த நாளிலிருந்து கையில் பணம் நன்றாய்த்தான் புரளுகிறது. பிக்கலில்லை…பிடுங்கலில்லை. இது நாலாவதோ, அஞ்சாவதோ….ஒரே ஊரில் இருந்தால்தானே சந்தேகம். நூறு கிலோ மீட்டர் தள்ளித் தள்ளிப் போய், தொழில் செய்தால் எவனுக்குத் தெரியப் போகிறது? இன்றுவரை தெரியவில்லை. அவ்வளவுதான். கொஞ்ச நாள்தான் ஆகிறதென்றாலும் செழிப்புதான். இன்றுவரை வண்டி ஜமாதான்.
அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சங்கிலி பறிப்பு என்கிற செய்தியைப் படிக்கத்தான் நேர்ந்தது. அதில் ஒன்றில் மட்டும்தான் தான் திருட்டு நடத்திய இடம்பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதையே, தான் மறுநாள் வெளியூரில் வைத்துத்தானே படித்தோம். ஆனால் அது தான் செய்த திருட்டு போல் இல்லை. தன் திருட்டுதானோ என்று சந்தேகமும் வரத்தான் செய்தது. செய்தியில் அத்தனை தெளிவில்லை. நல்லவேளை, படிப்பில்லாவிட்டாலும், இந்தமாதிரிச் செய்தி விஷயங்களையாவது மெது மெதுவாய்ப் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறதே என்று ஆறுதல் பட்டுக் கொண்டான். தான் கூகை இல்லை. அந்தவரைக்கும் சற்று திருப்தி. இவ்வளவு அருகில் அங்கிருக்க வேண்டாம் என்றுதானே உடனே பஸ் ஏறியது. இடம் மாறுவதில்தான் வசதி. எங்கிருக்கிறோம் என்றே யாருக்கும் தெரியாமல் போவது அதைவிட வசதி. தான் இருந்தால் என்ன, செத்தால் என்ன? எவனுக்குத் தெரிய வேண்டும்? யார் ஒரு சொட்டுக் கண்ணீர் விடப் போகிறார்கள்?
இதுவரை நடத்திய ஐந்து திருட்டுக்கும் பணம் கொடுத்தது ராமையாதான். அது ஒன்றுதான் தவறு போல் இன்றுவரை தோன்றி, உறுத்திக் கொண்டேயிருக்கிறது. அதென்னவோ வேறு யோசனை தோன்றவேயில்லை. இப்போதுதான் மனம் சுதாரிக்கிறது. ஆளை மாற்ற வேண்டும். ஒருவரையே நம்பி இருப்பது என்றைக்கானாலும் காட்டிக் கொடுத்துவிடும். பிறகு எல்லாத் திருட்டுக்களும் தெரிந்து போகும் வாய்ப்பு உண்டு. திருச்சி பெரிய கடை வீதியில் ஒருத்தர் இருப்பதாக மூளைச்சாமி சொன்னான் அன்று. தான் அதைச் சரியாகக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. உண்மையிலேயே அவன் மூளைச்சாமிதான். இல்லையென்றால் அவன் காரியங்களை அப்படிக் கவனமாய்ப் பார்ப்பானா? அதற்குப் பிறகு அவன் என்ன ஆனான்? ஆளையே பார்க்க முடியவில்லையே? எங்காவது வேலைக்குச் சேர்ந்து விட்டானோ?
களவாடிய வெள்ளிக் குத்துவிளக்குகளை அங்குதானே கொண்டு சென்று விற்றதாகச் சொன்னான். அங்கு தங்கமும் செல்லுபடியாகுமா என்று தான் கேட்டபோது அதற்கு என்னவோ சொல்லி மழுப்பிவிட்டான். தான் அந்த இடத்தைத் தெரிந்து கொள்வதில் அவனுக்கு விருப்பமில்லை என்பதுபோல.
இம்முறை அங்கு சென்றால்தான் என்ன? அவனுக்குத் தெரியாமல், அவன் பெயரைச் சொல்லாமல் நாமாகச் சென்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். அப்படியானால் இன்று இங்கு ஏன் இப்படி அலைய வேண்டும்? பேசாமல் கிளம்பிய திசையிலேயே சென்னைக்குச் செல்ல வேண்டியதுதானே? அங்கு போய் வழக்கமாய்த் தங்கும் மேன்ஷனில் ஒரு இரவைக் கழித்துவிட்டு, பிறகு ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான். அதுதான் சரி. ஆனால் அதுவரை இந்தச் சங்கிலி தன்னிடம் இருப்பதோ, தான் பாண்டிச்சேரியிலிருந்து வருவதோ, யாருக்கும் தெரியக் கூடாது.
குறிப்பாக சன்யாசிக்கு. அவன்தான் போலீஸ் இன்ஃபார்மர். எப்படியாவது போலீஸில் சேர்ந்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவன். மொத்த செலக் ஷனின்போது அப்படியே உள்ளே நுழைந்து விட வேண்டும் என்பது அவன் எண்ணம். தான் ஏதோ நகை செய்பவரிடம் வேலை பார்ப்பதாகவும், வாங்குவதும், விற்பதுமான வேலைகளில் கிடைக்கும் கமிஷனைக் கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிப்பதாகவும்தான் அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அந்த நினைப்புக்கு பங்கம் வந்து விடக் கூடாது. தன் அரையோடு ட்ரவுசரின் உள்ளே மறைந்திருக்கும் அது அப்படியே இருக்கட்டும். எந்த நிலையிலும் அதை அங்கிருந்து அகற்றக் கூடாது. ஊர் போய்ச் சேரும் வரை அதுதான் அதற்குப் பாதுகாப்பான இடம்.
இந்த எண்ணத்திற்கு முருகேசன் வந்தபோது மீண்டும் திரும்பி சட்டென்று சென்னைக்குச் சென்று விட்டால் என்ன என்று நினைத்தான். நினைப்பினூடே ஏதோவோர் ஊருக்குள் நுழைந்து விட்டது தெரிந்தது.. கலைந்திருந்த முடி பரட்டையாய் இருப்பதும், அந்த அழகோடு சன்யாசி முன் போய் நிற்பது ஆகாது என்றும் தோன்றியது அவனுக்கு. அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.
கட்டிங்கா…சேவிங்கா…என்று சலூன்காரன் கேட்டதற்கு ஏதோவோர் நினைப்பில் ரெண்டுந்தான் என்றான். பிறகுதான் மழித்த மீசையைக் கண்ணாடியில் பார்த்தவாறே இல்ல ப்ரதர்…கட்டிங் மட்டுந்தான் என்றான்.
வழக்கத்திற்கு மாறாகத் தன்னை ஒருவன், அதுவும் தன் ஊரில் ப்ரதர் என்று கூப்பிட்டது அவனை உறுத்தியதோ என்னவோ, கண்ணாடி வழியே முகத்தை அவன் பார்த்த விதம் இவனைத் துணுக்குறச் செய்தது. தலையைச் சற்றே குனிந்து கொண்டபோது சர்சர்ரென்று தலையில் தண்ணீர் அடிக்க, போனவாரம் எங்கெங்கோ சுற்றிவிட்டு, வீடு வந்து சேர்ந்தபோது பக்கத்து வீட்டு மல்லிகா அம்மாவோடு நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்தது அந்த நேரத்தில் அநாவசியமாய் முருகேசனுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
மல்லிகா அவனைக் குறி வைக்கிறாளோ என்று கொஞ்ச நாளாகவே தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது. எந்தத் தகுதியை வைத்து தான் அவளோடு பழகுவது? ஒரு உறுதியான வேலையில்லாமல், செய்யும் கமிஷன் நகை வேலையிலும் ஸ்திரப்பட முடியாமல்,(இது கமிஷன் நகை வேலையா? திருட்டல்லவா? தெரிந்தால் மூஞ்சி பார்க்க மாட்டாளே) மன உளைச்சலுக்கு ஆளாகி, இதுவரை யாரும் அறியாத, தன் மனசுக்கே இன்னும் பொருந்தி வராத, விளையாட்டுத் தனமாய் ஏதோ செய்து கொண்டிருக்கிறோமோ என்று அடிக்கடி இன்னும் தோன்றி உறுத்திக் கொண்டேயிருக்கிறது.
உனக்கு சேர்க்கை சரியில்லை நீ என்னோடு பேசாதே, என்னப் பார்க்க வராதே…என்றாள் ஒருநாள். அதிர்ந்து போனான். அப்படியே அவள் மடியில் விழுந்து அழ வேண்டும்போல் இருந்தது. அன்றே அதைச் செய்திருந்தால் ஒருவேளை மன்னித்திருப்பாளோ என்னவோ? தானும் கூட ஒழுங்காய் நகைக்கடை கமிஷன் வேலைக்குச் சென்றிருக்கலாம். எல்லாம் மாறி விட்டது. அவள் சொன்னது சரிதான். அந்தச் சடையாண்டி கண்ணில் பட்டதால் வந்த தோஷம். இப்டிக் கமிஷனுக்குக் கையக் கைய நீட்டிக்கிட்டு எத்தன காலத்துக்கு இருக்கப் போற…? என்னோட வா…சொல்றேன் என்றான்.
ஊருக்கு ஒதுக்குப்புறமான அந்தக் கோயில் உண்டியல் திருட்டு இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. என்ன பெரிய காசு சேர்ந்திருக்கப்போவுது என்று விட்டுவிட்டார்களோ என்னவோ? ஆனால் ஐயாயிரத்துக்குக் குறையவில்லை அன்று. இருவரும் பங்கு போட்டுக் கொண்டார்கள். படு ஜாலியாகச் சுற்றினார்கள். நாகர்கோயில் தாண்டி அந்தச் சிற்றூரில் அந்தத் தேதியில் அவன் இருப்பான் என்று எந்தக் கொம்பனாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் சடையாண்டி அங்கு நடந்துகொண்டதுதான் இவனுக்குப் பிடிக்கவில்லை.
யே…! கேரளாக் குட்டிகடா….ஒருவாட்டி வந்து பாரு… அப்டியே ஊருக்கு இழுத்திட்டுப் போயிடுவமான்னு இருக்கும்…என்று வம்படியாய்க் கூட்டிக் கொண்டு போனான். அவன் ஆசை காட்டியதில் இவனும் நுழைந்துதான் விட்டான். ஆனால் அந்தப் பெண்ணைப் பார்த்ததும்தான் மனசு விட்டுப் போனது. எனக்குப் படிக்கணும்…அதுக்குக் காசு வேணும்…அதனாலதான் வந்திருக்கேன்…என்று கண்ணை மூடிக்கொண்டு படுத்துக் கொண்டது அது. இவனுக்கு காமாட்சி ஞாபகம் வந்தது. அத்தை பெண் காமாட்சி படிக்கணும், படிக்கணும் என்று இப்படித்தான் அடம் பிடித்தது. நீ படிச்சி என்னாடி செய்யப்போற…இந்தா இருக்கான் பாரு, முருகேசன் அவன் கையப்பிடிச்சிக்க…எல்லாம் அவன் பார்த்துக்குவான்….என்று வெறும்பயலாய் நின்ற அப்போதே இவன் மீது அப்படி ஒரு நம்பிக்கை வைத்து சொன்னது அத்தை. ஆனால் அத்தைக்கு இருந்த நம்பிக்கை மாமாவுக்கு இல்லாமல் போனதுதான் துரதிருஷ்டம். இவனுக்குத்தான் துரதிருஷ்டம். காமாட்சிக்கல்ல.
போயும் போயும் இந்தக் காலிப்பயலுக்கா என் பொண்ணைக் கொடுப்பேன்….என்று அவர் அன்று சொன்ன அந்த வார்த்தை இன்றுவரை அவன் மனதை விட்டு அகலவேயில்லை. அது அவன் கேள்விப்படாத வார்த்தை. ஆனால் படு கேலியானது, கேவலமானது என்பது மட்டும் புரிந்தது. அவனைத் தெருவில் எதிர்கொள்ள நேரும்போதெல்லாம் கூட அந்த வார்த்தையை அவர் வாய்விட்டு முனகுவதை அவன் புரிந்திருக்கிறான். அவனுக்காக மட்டும்தான் அவர் அந்தத் திட்டுதலை உபயோகப்படுத்துகிறார் என்று தெரிந்தது. அது ஒருவகைக் கேவலமான, கேலியான இகழ்ச்சி என்று பிறகுதான் அவனுக்குப் புரிந்தது. அந்தப் புரிதலுக்கு ஆதாரமாய் ஒருவனைப் பார்த்து, அவன் நிலையையும், தன் நிலையையும் பொருத்திக் பார்த்துக் கொண்டுதான் அதன் வீர்யம் அறிந்து கொண்டான் முருகேசன். மனசை வதைத்தது அவனுக்கு. பேர் சொல்லும்படி தனக்கு வழிகாட்ட ஒருவரும் இல்லாமல் போனார்களே என்று சமயத்தில் வருந்துவது உண்டு. ஆனாலும் அந்தப் பழிச்சொல் அவன் மனதை விட்டு அழியவே மாட்டேன் என்கிறதே?காமாட்சிக்கு முன் சொல்லப்பட்ட வார்த்தையல்லவா அது? அதனால்தானோ தன்னை இந்தளவு தாக்குகிறது?
அவ வாழ வேண்டாமா? இவனோட சேர்த்துவிட்டா இவளையே ஊருக்கு வித்துட்டுப் போயிடுவான் அவன். இப்டி ஒரு நெனப்பு வச்சிருக்கியா நீ…நல்லவேள எங்காதுல விழுந்திச்சி…இல்லன்னா எம்பொண்ணையே பேசாம அவனோட ஓடிப்போன்னு அனுப்பிச்சிருப்ப போலிருக்கே…. என்று சொல்லி விஷயம் விபரீதம் ஆகிவிடும் போலிருக்கிறது என்று அவராகவே பயந்து கொண்டு காமாட்சியை அவசர அவசரமாக விழுப்புரத்திலிருந்து வந்த ஒரு வரனுக்கு முடித்து விட்டார். படிக்கணும், படிக்கணும் என்று சொன்ன காமாட்சியின் கனவில் மண் விழுந்தது.
உண்மையில் காமாட்சியைக் கல்யாணம் செய்து கொண்டு அவளை எப்பாடுபட்டாவது படிக்க வைக்க வேண்டும் என்றுதான் லட்சியமாய் நினைத்திருந்தான் முருகேசன். அவளை அடைந்திருந்தால் தன் வாழ்க்கை எத்தனை அழகாகத் திசை மாறியிருக்கும். அந்த விரக்திதான் தன்னை இப்படி மாற்றிவிட்டதோ என்று தன்னையே கேட்டுக் கொள்வான். காமாட்சியின் அழகில் முருகேசனுக்கு அப்படி ஒரு மயக்கம். ஒரு சின்ன வேலையில் இருந்திருந்தால் கூட மாமா நம்பி இருப்பார். எப்படியாவது ஏதாவது ஒரு நகைக்கடையில் உட்கார்ந்துவிட வேண்டும் என்றுதான் முயற்சி செய்தான் அவன். எட்டாம் வகுப்பு வரை படித்துத்தான் என்ன பயன்? ஒரு சின்னக் கூட்டல் கழித்தல் கணக்குக் கூடத் தெரியாமல் எல்லாமும் மறந்து மண்ணடித்தல்லவா போய்க்கிடக்கிறது? பிறகு எப்படி நகைக்கடையில் வேலை பார்ப்பதாம்?
இந்த ஆறு மாடிக்கும் இருக்கிற ஸ்டாஃப்களுக்கு காபி, டீ எடுத்திட்டுப் போகணும்…கஸ்டமர்ஸ்வந்தாஅவுங்களுக்கும்சப்ளைபண்ணனும்…யூனிஃபார்ம் தந்துருவோம்…அதைத்தான்போட்டுக்கணும்… .தலையெல்லாம் இப்டி இருக்கக் கூடாது. நல்லா ஒட்டக் கட் பண்ணி, படியச் சீவி, டீசன்டா இருக்கணும்…சம்மதமா, சம்மதம்னா இந்த வேலைதான் உனக்கு…நாளையிலேர்ந்து வா…என்றார் அந்தக் கண்டி ஜூவல்லரிக்காரர். சரி என்று அப்போதைக்கு அதையாவது ஒப்புக் கொள்ள மனம் வந்ததா? காபி, டீ சப்ளை பண்ணனுமாமுல்ல? நானா அதுக்கு ஆளு? எடுபிடி செய்றதுக்கா இருக்கேன்? நா நாலு ஆள வச்சி வேலை வாங்குவன்யா….என்னப்போயி எடுபிடி வேலைக்குக் கூப்பிடுற….? என்று வெளியில் வந்து தலையைச் சிலுப்பிக் கொண்டு கடையைப் பார்த்து நிமிர்ந்து கூறி விட்டு வந்து விட்டான். தன் தலை யாருக்கும் வணங்காது என்று அப்போதுதான் புரிந்து கொண்டான் முருகேசன்.
கல்யாணம் நிச்சயம் ஆனபின்னாடி ஒரு நாள் மாரியம்மன் கோயிலில் வைத்துத்தான் சொன்னாள் காமாட்சி. அந்த வேல அப்பா உனக்காகச் சொன்னதுதான். யாருக்கும் தெரிய வேண்டாம்னு கேட்டுக்கிட்டு, சொல்லி வச்சிருக்காரு…நீயானா முறைச்சிக்கிட்டு வந்திட்டே…அம்மா அழுத அழுகைல அப்பா இறங்கி வந்துதான் கெடந்தாரு…சரி போகட்டும், பொண்ணு உள்ளுரோட கெடக்கும்னு ஒரு இளகின நெனப்பு வந்திச்சி அவருக்கு…நீதான் அதைக் கெடுத்துக்கிட்டே…இதச் சொல்லலாம்னா நீதான் ஊருலயே இருக்கிறதில்லியே…! ஊர் சுத்திக் கழுத…..திட்டினாள் காமாட்சி. அது கூட அன்று அவனுக்கு இதமாகத்தான் இருந்தது. அவள் வேறோருவனுக்கு நிச்சயமாகிவிட்ட பின்பும் ஏனோ அன்று அவள் வார்த்தைக்கு இவனுக்குக் கோபம் வரவில்லை.
எந்தக் காமாட்சியைத் தான் மனதார விரும்பி, அவள் தனக்குக் கிடைக்காமல் போனாளோ அவளின் அந்தத் திருமண நாளன்று தான் அந்த முதல் திருட்டைச் செய்தது. அவள் கிடைக்காமல் போன விரக்தியில் அப்படியா தொழில் தேர்ந்தெடுக்கச் சொன்னது? எந்த மனசு அப்படி வக்கரித்துக் கொண்டது? போய் முட்ட முட்டக் குடிச்சிட்டுக் கிடந்திருந்தாக் கூடப் பரவால்லியே…அன்னியோட போகும்…ஆனால் அந்தப் பழக்கம் கூட இல்லாத தன்னிடம் இந்தத் திருட்டுத் தொழில் எப்படி ஒட்டிக் கொண்டது? அந்தச் சடையாண்டியோடு நடத்திய முதல் திருட்டுதான் அது. அதற்கு முன்பேதான் மல்லிகா அவனை வெறுத்துவிட்டாள். அவளாவது போகட்டும். ஏனோ அவளிடம் மனம் நோங்கவில்லை அவனுக்கு. அவளின் அதீதமான அழகு கூசச் செய்திருந்தது முருகேசனை. அவளாகத்தான் தன்னை விரும்புகிறாளோ என்று அவள் மீது ஆசை வைக்க முனைந்தான் இவன். ஆனால் பூத்தவுடனேயே கருகிப் போனது அது. ஆனால் காமாட்சி அப்படி அல்ல. அது அவன் விரும்பிய பெண். அவள் போதும் தனக்கு என்று நினைத்திருந்தான். தனக்கேற்ற கச்சிதமான அழகு அவள்தான் என்று சந்தோஷித்திருந்தான் முருகேசன். முறை வேறு. கொடுத்தால் தனக்குத்தான் அந்தச் சொத்து. வேறு யார் வந்து கொத்திக் கொண்டு போகப் போகிறார்கள் என்ற மெத்தனம் இருந்தது அவனிடம். ஆனால் அவனை ஒரு ஆளாகவே மதிக்காத மனம் அவள் தகப்பனிடம் இருந்தது என்பதைத் தாமதமாகத்தான் புரிந்து கொண்டான் அவன். அது காலந்தாழ்ந்து போன விஷயமாகிப் போனது. தனக்கான நல்வாய்ப்பு ஒன்று கைகூடி வருகிறது என்றுகூட அவனால் சுதாரிக்க முடியவில்லை. நேரில் சென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கூட அந்த நகைக் கடை வேலையை ஒப்புக் கொண்டிருக்கலாம். ஆனால் காமாட்சி அவனுக்கான வாய்ப்பை அவனிடம் சொன்னதும், அவன் அதுபற்றி முடிவெடுத்த காலமும் பொருந்தி வரவில்லை. அதற்குள் காலம் கனிந்து விட்டது. யாருக்கு? அவளுக்கு. எந்த ஒரு தாய் தந்தையர்தான் இப்படியான ஒரு இளகிய சிந்தனையை தன் மகளுக்காக அளிப்பர்? அப்படியும் அது கைகூடாததனால் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? தங்கள் பெண்ணின் வாழ்க்கை மீது அவர்களுக்கு எந்த அளவுக்கு ஒரு நேரிய அக்கறை இருந்ததோ அது போல் தன் மீது அக்கறை கொள்ள யாருமேயில்லாத அனாதையாகி விட்டோமே என்ற கழிவிரக்கம் முருகேசனை வதைத்தது. பலன்? அவனின் திசையைத் திருப்பியது.
நல்லவேளைடா, அந்தப் பொண்ணு பொழைச்சிச்சு. ஒரு பெரிய லேத்துப் பட்டறை வச்சிருக்கிற, மாசங்கூடி நல்லாக் காசு பார்க்கிற ஒரு செழிப்பான ஆளுக்குத்தான் உன்னோட காமாட்சியைக் கொடுத்திருக்காரு அவுரு அப்பாரு…அதுவும் சந்தோசமாத்தான் போச்சு…வேறென்ன பண்ண…ஒண்ணுமில்லாத ஓட்டாண்டி ஒன்னைக் கட்டிக்கிட்டு, வாழ்க்கை பூராவும் கண்ணைக் கசக்கிக்கிட்டு மூக்கைச்சிந்திக்கிட்டுக் கெடக்கவா….அதோட படிப்பு ஆசைதான் நிறைவேறல…வாழ்க்கையாச்சும் நல்லா அமைஞ்சிச்சேன்னு திருப்தியாயிடுச்சு அது….
நியாயமாய்த்தான் தோன்றியது முருகேசனுக்கு. நான் உன்னைப் படிக்க வைக்கிறேன் என்று கூறியிருந்தால் வெறுங்கையில் முழம் போட முடியுமா என்று சொல்லித்தான் சிரித்திருப்பார்கள். கல்யாணங் கட்டிக்கிட்டா என்ன புள்ள, நீபாட்டுக்குப் படி….உன்னை நா தொந்தரவே செய்யமாட்டேன்….நீ எனக்குக் கெடச்சதே போதும் புள்ள….இந்த முருகேசன் இனி எப்டி இருக்கப் போறாம்பாரு…..என்று என்னென்னவோ நினைத்து வைத்திருந்தான். எல்லாமும் பொய்யாகி விட்டது அவன் வாழ்க்கையில். தானே விரும்பிய அந்த மல்லிகாதான் விரட்டிவிட்டாள். அவளையாவது நான் விரும்பவில்லை. அதனால் அது வலிக்கவில்லை. இது நான் விரும்பி, நெருங்கியதாயிற்றே. விரும்பிப் போனால் விலகிப் போகும் என்பார்களே…அது என்னளவில் உண்மையாகிவிட்டதே…! மனிதன் வாழ்க்கையில் ஒரு பெண்ணால்தான் தலை நிமிர்கிறான். எத்தனையோ பேருக்கு அவன் வெற்றிக்குப் பின்னாலே ஒரு பெண்தான் இருக்கிறாள் என்பார்களே…! எனக்கு மட்டும் ஏன் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை? அந்த அளவுக்கா நான் துரதிருஷ்டக்காரன்? என் வாழ்க்கையில் பெண் யோகமேயில்லையா? அவளோடுடனான போகமே கிடையாதா? ஏனிப்படி துரதிருஷ்டக் கட்டையாய்ப் போனேன்.
என்னைக் கொண்டு வலிய விட்டானே அந்தச் சடையாண்டி. அப்போது கூட அந்த லாட்ஜ் பெண்ணிடம் நான் தவறாக நடந்து கொள்ளவில்லையே…அங்கும் காமாட்சியின் அந்த ஆசைகளைத்தானே நான் கனவுகளாய்க் கண்டேன். சே…! வாழ்க்கையில் விரும்பிய எதுவும் எனக்குக் கிடைக்காமல் போக வேண்டும் என்பதுதான் எனக்கான சாபக்கேடா? ஏனிப்படி என் வாழ்வு திசை தெரியாமல் போய்விட்டது? மாலுமியற்ற கப்பல் நோக்கமற்றுச் செல்வதுபோல் அல்லவா என் நாட்கள் கழிந்து கொண்டிருக்கின்றன?
இப்போது நான் இருக்கும் இருப்பு யாருக்காக? எந்தத் தாய் தந்தையரைக் காப்பாற்ற? எந்தச் சகோதரிகளைக் கரையேற்ற? எந்த மனைவி குழந்தைகளைக் காத்து நிற்க? எனக்கென்று யார் இருக்கிறார்கள்? என் மீது அன்பு கொண்ட உள்ளம் எது? என் வருகைக்காக யார் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? என் நலத்திற்காக யார் வேண்டி நிற்கிறார்கள்? எதுவுமே அற்ற வெற்று ஜீவனா நான்?
சென்னையில் காலடி வைத்தபோது முருகேசனின் மனம் கனத்துப் போய்க் கிடந்தது. இனி ஊருக்குப் போவதனால் எந்தப் பயனும் இல்லை. அங்கு தனக்காக யாரும் இல்லை. தன் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பவர் எவருமில்லை. இன்னும் சில நாட்களை இந்தச் சென்னையிலேயே கழித்து விட வேண்டியதுதான். தன்னைப்பற்றி, தன் தோற்றத்தில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வந்துவிடக் கூடாது. இப்போதைய தன்னுடைய தேவை அதுதான். இருக்கும் பணத்தை வைத்து நாட்களை நியாயமாகக் கழிப்போம். பிறகு பார்ப்போம் என்ன செய்யலாம் என்று. ஊருக்குப் போவது கூட அடுத்த யோசனைதான். அப்படியே போனாலும் அது திருச்சிதான். அங்கு போய்த்தான் அதை விற்க வேண்டும். மூளைச்சாமி சொன்ன பெரிய கடை வீதி நகைக் கடையைத்தான் தேர்ந்தெடுத்து மூளையோடு விற்றுக் காசு பார்க்க வேண்டும். அந்தக் காசை வைத்துக் கொண்டு ஏதேனும் ஒரு கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு, உண்டியலில் பணம் போட வேண்டும். பிறகு இந்தத் திருட்டுத் தொழிலுக்கு இத்தோடு ஒரு முழுக்குப் போட்டு விட்டு எங்காவது போய் யோக்கியமாய் வேலை பார்த்து சம்பாதிக்க வேண்டும். வாழ்க்கை சரியாய் அமையாதவனெல்லாம் கெட்டுச் சீரழிந்துதான் போக வேண்டுமா? திருந்தி மீளக் கூடாதா? மீண்டு, மீண்டும் எழும்வரை யார் கண்ணிலும் படக் கூடாது. குறிப்பாகக் காமாட்சியின் தந்தையின் கண்களில். அவர் முன்னால் போய் நானும் மனிதன்தான் என்று தலை நிமிர்ந்து நின்று அந்த அவரின் வார்த்தைகளைத் துடைத்தெறிய வேண்டும். உன்ன இப்டியெல்லாம் திட்டியிருக்கேன், என்னை மன்னிச்சிக்கப்பா…என்று அவர் சொல்லாவிட்டாலும், அரவணைத்து ஏற்றுக் கொண்டால் சரி. காமாட்சி கிடைக்காவிட்டாலும், அவள் அன்பு நிலைத்தால் போதும். அந்த வீட்டின் மரியாதைதான் எனக்கு முக்கியம்.
யோசித்தவாறே நடந்து கொண்டிருந்தான் முருகேசன். பொழுது மெல்ல இருட்டிக் கொண்டு வருவதை உணர்ந்தான். எப்பொழுது போனாலும் ஏதேனும் ஒரு மேன்ஷனில் தங்கிக் கொள்ளலாம் என்கிற தைரியம் இருந்தது. சும்மாவானும் நண்பர்களோடு அடிக்கடி வந்து போன பழக்கம்தான். அவர்கள் கூடத் தன்னை மதித்துத்தான் இருக்கிறார்கள். இன்றுவரை வந்தால் இடம் கொடுக்கிறார்கள். அந்த வார்த்தைக்குரியவனா என்று ஒரு முறை கூட அவர்கள் அறியத் துணிந்ததில்லை. மாமாவைத் தவிர வேறு யாரும் அவனை நோக்கி அந்த நெருப்பு வார்த்தைகளை வீசியதில்லை. அறிந்திருப்பார்களோ என்று கொண்டாலும், வாய்விட்டுச் சொன்னதில்லை. ஆனால் அந்தக் காமாட்சியின் தந்தை தன்னைப் பார்க்கும்போதெல்லாம் அப்படித்தான் எதிர்கொள்கிறார். அந்த வார்த்தைகளைத் தனக்காகப் பயன்படுத்துவதில் அவருக்கு ஒரு அதீத ருசி. தனக்கு மட்டுமே அது முழுமையாகப் பொருந்தும் என்பதான ஒரு தீர்மானம். அவென் ஒரு வெட்டி ஆபீசு……
அந்த வார்த்தைகள் இன்று வரை முள்ளாகத் தைத்து மனதை வதைக்கின்றன. காமாட்சிக்குக் கல்யாணம் ஆனபோது அந்தக் காயம் ரணமாகிவிட்டது.
இப்பொழுது அது ஏன் திடீரென்று மனதில் திரும்பத் திரும்பத் தோன்றுகிறது? தன்னை உறுதிப் படுத்தவா? தன் மனதில் இன்னும் வந்து வந்து போய்க் கொண்டிருக்கும் நல்லெண்ணங்களைச் ஸ்திரப்படுத்தவா? நானும் மனுஷனாகிக் காண்பிக்கிறேன் என்று வெறி கொள்ள வைக்கிறதே….!
உடலைத் தழுவிய கடற்கரைக் காற்றின் இதமான வருடலில் பயணச் சோர்வைப் போக்க, மணலில் கால் பதிய நடந்து, அப்படியே ஒரு ஓட்டைப் படகின் மறைவில் ஒதுங்கினான் முருகேசன்.
என்னவோ ஒரு இனம் புரியாத சோகம் மனதை வந்து அப்பிக் கொள்ள உடம்பே கனத்துப் போனது போல் உணர்ந்தான். போயும் போயும் இந்தத் திருட்டுத் தொழிலில் போய் மனது லயித்ததே….என்று ஒரு எண்ணம் மின்னலாய்த் தோன்றி ஒரு கணம் ஆழமாய் நிலைத்து நின்றது.
கைகள் அவனையறியாமல் அரணாக் கொடியில் சுற்றப்பட்டிருந்த சங்கிலியை உருவியது. எல்லாம் இந்தப் பழக்கம் செய்த வினை. அது கொடுத்த தற்காலிகச் சுகம். அதனால் நான் இழந்த வாழ்க்கையின் சொந்தம். சாகும் மட்டும் என் கூடவே கை கோர்த்து வர வேண்டியதைக் கோட்டை விட்டு விட்டு, இந்தத் தற்காலிகச் சுகத்திற்குப் பழகிக் கொண்டேனே?சேர்க்கை சரியில்லை. அதனால் வந்த வினை….ஆம் அன்று அந்த மல்லிகா சொன்னது சரிதான். ஒரு மூன்றாமவள் அவள். ஆனால் அப்படியான நெருப்பு வார்த்தைகள் என் காமாட்சியிடமிருந்து ஒரு நாள் கூட வரவில்லையே…! நான் திருந்தி நல்வாழ்வு வாழ வேண்டும் என்றுதானே அவள் விரும்பினாள். இன்னொருவனுக்குத் துணைவியாகிவிட்ட அவள், இப்போதும் கூட என் நலத்தைத் தானே விரும்புவாள். அந்தச் சொத்தை இழந்தேனே நான். அதைவிட வேறு எந்தச் சொத்து என் கைக்கு வந்து என்ன பயன்? கொத்தாகப் பிடித்துக் கொண்டு பரவிய இருட்டுக்குள் நடந்தான். சங்கிலி அவன் கைகளைப் பலமாகப் பிணைப்பதுபோல் இறுகியது. இதுதான் என் நல் வாழ்க்கைக்கான வேலி. முள்வேலி. தீண்டத்தகாத நெருப்பு வேலி. அலைகள் அவன் கால்களை முழங்கால் அளவுக்குத் தழுவ ஆரம்பித்த இடத்தில் உறுதியாய் நின்றான், இந்த நிமிடத்திலிருந்து என் வாழ்க்கை புதுப்பிக்கப்படுகிறது. பரந்த இந்தக் கடல் மாதாவின் முன் நான் எடுக்கும் உறுதிமொழி இது. என்னை ஈன்றெடுத்த தாயின் மீது ஆணை. இன்று முதல் நானும் ஒரு முழுமையான மனிதன். கையை ஒரு சுழற்றுச் சுழற்றி கடலின் வெகு தூரத்திற்கு சென்று விழுவது போல் அந்தத் திருட்டுச் சங்கிலியை வீசியெறிந்தான் முருகேசன். இப்போது அவன் மனம் மென்மையாய், எந்த அழுத்தமுமின்றி, காற்றாக இந்தப் பரந்த வெளியில் பறக்கத் தயார் நிலையில் இருந்தது. கால் பதியப் பதிய உறுதியாக, நிலையாக அடிகள் வைத்து நடக்க ஆரம்பித்தான்.
திரும்பிக் கரையேறி அவன் முன்னேறிக் கொண்டிருந்தபோது சுற்றிலும் முழுமையாகப் பரவியிருந்த அந்தக் கரும் இருட்டுக்குள் கடலுக்குள் சென்று நின்று அப்போது அவன் என்ன செய்தான் என்பது புரியாது அங்கே பரவலாய் அமர்ந்திருந்த பலருடைய கண்கள் அவனையே கூர்ந்து பார்த்தவண்ணமிருந்தன.
----------------------------------