எப்படித் தேடிக் கண்டு பிடித்து வந்தாள் என்று தெரியவில்லை. கோயிலில் வைத்துப் பார்த்தபோது இருப்பிடத்தைச் சொன்னோமோ? என்று தோன்றியது. வெறுமே ஓரமாய் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிவிட்டு, வச்சுக்கோங்க என்று பணம் கொடுத்துத் திரும்பியதுதான். பெயர் மட்டும் சொன்னதாக ஞாபகம்.
என் பேரனின் பேரும் சுந்தர்தான்… பாட்டியின் முகத்தில் பூரிப்பு. அதே பெயர் கொண்ட எவனோ ஒருவனைப் பார்த்ததற்கா இவ்வளவு மகிழ்ச்சி? கன்னத்தை வழித்துச் சொடுக்கிக் கொண்டாள். உடனேவா ஒருத்தரோடு இப்படி ஈஷ முடியும்?
ஒரு வேளை அந்தப் பெயரே அவளை ஈர்த்து, இங்கு அழைத்து வந்து விட்டதோ என்னவோ? ஏதோவோர் சக்தி என்று சொல்வார்களே, அப்படியிருக்கலாம்.
அந்தப் பாட்டியைப் பார்த்தபோது இவனுக்கு அப்பாவைப் பெற்ற மரகதம் பாட்டியைத்தான் ஞாபகம் வந்தது. அச்சு அசலாக அப்படியேவா…? ஆனால் இந்தப் பாட்டி சற்றுக் கறுப்பு. வயசு கூடக் காரணமாய் இருக்கலாம். அந்த முகத்தின் வாட்டத்தைக் கண்டு மனசே அதிர்ந்து போனது. வெளியே கூட்டிப் போய் டிபன் வாங்கிச் சாப்பிட வைத்து, மீண்டும் கோயிலுக்குள் வந்து அந்த மண்டப நிழலில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தது. விட்டு வரவே மனசில்லை. அய்யோ, அந்தப் பாட்டி இனிமேல் எங்கு போவாள்? எங்கு படுப்பாள்? எது அவள் இடம்? ஒரு இடம் என்று இல்லையென்றாளே? கடவுளே…! எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, பிறகு எப்படிப் புறப்பட்டு வந்தோம்? இந்த நிமிஷம் வரை அதே நினைவுதான். ஆனால் இதோ பாட்டி தன் முன்னால்…! எந்த சக்தி இழுத்து வந்தது அவளை? என்னவொரு ஆச்சரியம்…?
எங்கெங்கிருந்தோ புறப்பட்டு, நாலைந்து பேராகச் சேர்ந்து, ஏற்கனவே பழகிய இடம் போல் வீடு வீடாக ஏறி இறங்கி கோயில் கொடை பெற்றுச் செல்லும் தீட்சிதர்களை அடிக்கடி எங்கள் தெருவில் நான் சமீபமாய்ப் பார்க்கிறேன். அதுபோலவே இந்தப் பாட்டியும் அறிந்த, பழகிய வீதி போல, வீடு போல வந்துவிட்டாளே?
சீதா, பாட்டிக்குக் கொஞ்சம் சாம்பார் விடேன்….வெறும் தோசையைச் சாப்பிடுறா பாரு.. – தயங்கியவாறே சொன்னான் சுந்தர்.
இருக்கட்டும், போறும்…… - அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே மறுத்தாள் பாட்டி.
கையைத் தள்ளிக்கிங்கோ…. –படக்கென்று பாத்திரத்தினை அப்படியே கவிழ்த்தாள். இவ்வளவுதான்…இதுக்கு மேலே இல்லை….என்பதான அடையாளம் அது. அப்பொழுதுதான் கவனித்தேன் நான்.
ச்சே….! என்ன சீத்தா இது….? –கைப் பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டேன்.
ஏன்? என்ன? ஃபிரிட்ஜ்ல வச்ச நேத்திக்கு சாம்பாரை நாம சுட வச்சு விட்டுக்கிறதில்லையா? தூரவா கொட்டறோம்…? பருப்பு சாம்பாராக்கும்….கிலோ தொண்ணூத்தெட்டு ரூபா…..ஞாபகமிருக்கட்டும்……
புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, அறிந்தது, அறியாதது அனைத்துமறிவோம் என்பதுபோல் கேட்டது, கேட்காதது எல்லாவற்றுக்கும் சேர்த்து பதில் சொல்லி விடுவாள். சுருக்கமாய்ச் சொன்னால் சற்று வாய் ஜாஸ்தி.
சரி, அதை நாம விட்டுக்கலாமே…..ஒரு வயசான பாட்டி….வீடு தேடி வந்திருக்கா….இருக்கிற இருப்புக்கு ஆச்சார அனுஷ்டானமெல்லாம் கிடையாதுன்னாலும், வயசை மதிச்சாவது புதுசா வச்சதை விடலாம்தானே…பழசைக் கொட்டணுமா? புண்ணியமுண்டு….. –
சீதா என்று பெயர் கொண்டவர்களெல்லாம் கருணைக் கடலாய் இருக்க வேண்டுமென்று கட்டாயமா என்ன…? என்னவள் நல்லவள்தான்…ஆனால் மனக் கோணல். காலத்தின் கோலம் இது…!
புதுசுதான்….இப்பத்தானே உங்க முன்னாடி தோசை வார்த்தேன். ….நீங்க பார்க்கலியா? மத்தியானம் நீங்க சாப்பிடுற போது அந்தப் பழைய குழம்பை சுட வச்சு விட்டுக்கத்தானே செய்வேள்…. அதை விட்டதுல என்ன தப்பு? என்னமோ கேட்டுண்டு வறேளே…..
நாம, ஆறின கஞ்சி, பழங்கஞ்சி…நம்மள விடு…நமக்குள்ளே எப்டியோ செய்துக்கலாம், அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்…!.வந்தவாளுக்கு……? - சொல்லிக் கொண்டே இழுத்தேன்….
வந்தவாளுக்கென்ன, நொந்தவாளுக்கு? பாட்டி என்ன விருந்தாளியா? இப்டீ போறவா வர்றவாளெல்லாம் நீங்க இழுத்துண்டு வந்து நில்லுங்கோ….நான் வடிச்சுக் கொட்டிண்டிருக்கேன்…..ச்சே….என்ன வீடுறா இது….? – கையிலிருந்த பாத்திரத்தை ணங்கென்று கீழே வைத்து விட்டு வாசலை நோக்கி நகர்ந்து விட்டாள். என் தலையிலேயே நறுக்கியதுபோலிருந்தது எனக்கு.
அவள் சொன்னதற்கும் அர்த்தம் உண்டு என்று வையுங்கள். போன வாரம் என் கூடப் படித்தவன் என்று சொல்லிக் கொண்டு ஒருவன் திடீரென்று வந்துவிட்டான். எனக்கா ஞாபகமே வரவில்லை என்ன சொல்லியும். ஆனால் அவன் அப்பா, அம்மாவைத் தெரிந்திருந்தது. அவன் இருந்து பேசிய குறிப்பிட்ட நேரத்தில் சகஜ நிலை என்பது எழவேயில்லை. கூடப் படித்தேன் என்பது பொய்யென்றே தோன்றியது. ஊரும் பேரும் ஒத்திருந்தால் போதுமா? சோத்தைப் போட்டு ஆளைக் கிளப்பப் பெரும்பாடாகி விட்டது. அந்த பாதிப்பு இன்னும் நீங்கவில்லை. எனக்கென்று எப்படித்தான் ஆட்கள் அமையுமோ? ஆனால் பாட்டியை அப்படி நினைக்க முடியவில்லை. மனதுக்குள் அவ்வளவு இரக்கம் சுரந்தது. ஒரே ஒரு முறை பார்த்ததுதான். இப்படித் தேடி வந்து விட்டாளே? படு பாவமாயிருந்தது.
முதலில் அந்த இடத்தில் உட்கார்த்தி வைத்துப் போட்டதிலேயே எனக்கு உடன்பாடில்லை. கொல்லைப் புறம் துணி துவைக்கும் சிமின்ட் தளம் அது. நிழலான இடம்தான்…ஆனாலும்…? .வீட்டு வேலை செய்பவர்களுக்குக் கூட இன்று இப்படியெல்லாம் செய்துவிட முடியாது. கவனமாய் இருந்தாக வேண்டும். இவ்வளவு ஏன்? வேலைக்காரி என்று சொல்லிப் பாருங்கள் தெரியும் சேதி…!
அதுக்காக நடுவூட்டுக்குள்ள கொண்டு அமர்த்த முடியுமா? உங்களுக்குத்தான் எதுக்கும் விவஸ்தையே இல்லைன்னா, எனக்குமா? – நிச்சயம் கேட்பாள். கேட்காமலேயே செவியில் அறைவது போலிருந்தது. பல சமயங்களில் அவள் பேச்சுக்குக் காது செவிடானாலும் பரவாயில்லை.. அத்தனை நாராசம்.
சதா சர்வகாலமும் மனதில் என்னவோ ஒரு எரிச்சல் அவளுக்கு. எதைப் பார்த்தாலும், எதைக் கண்டாலும் தீராத அலுப்பு, கோபம்….. எந்தவகையிலும் அவளை சமாதானம் பண்ண முடியவில்லைதான். எனக்குச் சொல்லத் தெரியவில்லையா, அல்லது அவளுக்குக் கேட்கப் பிடிக்கவில்லையா? என்னவோ ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. இதெல்லாம் முன் ஜென்ம வினை….இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. வேறென்ன சொல்வது? தெளிந்த நீரோடையாய் இருக்க வேண்டிய வாழ்க்கையை நாமே கலக்கிக் கசடாக்கினால் எப்படி?
வருஷங்கள் பத்து தாண்டியாயிற்று. எங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர் இல்லையா? அதுபோல் ஒரு குழந்தை வந்துவிட வாய்ப்பில்லாமலா போகும்? எத்தனையோ பேருக்கு தாமத ஜனனம் இருந்திருக்கிறதே? ஏன் நம்பிக்கையை இழக்க வேண்டும்? இன்றும் அவளிடம் நான் இதைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். எதையும் நேர் கோணத்தில் பார்த்தே பழக்கப்பட்டவன் நான். அது என் சுபாவமா என்ன என்பதெல்லாம் தெரியாது. யாரிடமிருந்து அது எனக்குப் படிந்தது என்பதும் தெரியாதுதான். வலிய நினைப்பதுதான் என்றாலும் கோணித் திரிவதற்கு இது பரவாயில்லையல்லவா?
ஓட்டை ரெக்கார்டு மாதிரி இதை இன்னும் எத்தனை வருஷத்துக்குத்தான் சொல்வீங்க…..கேட்கவே எரிச்சலா இருக்கு…என் கூட நீங்க பேச வேண்டாம்… உங்க மூஞ்சியைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலே- எதிர்பாராத பலதையும் சொல்லி, முறித்துக் கொண்டு போய் தலைகுப்புறப் படுத்துக் கொள்வாள். அவ்வளவுதான். அத்தோடு கதை முடிந்தது அன்று.
பிறகு சமையல், பெருக்கல், கூட்டல் கழித்தல் எல்லாமும் அன்று நான்தான். நானேதான் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். எடுத்துக் கழுவி வைத்தாக வேண்டும். அதே போல் அவளும்…சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டதாய் சரித்திரமில்லை. எல்லாமும் தனியாகவே. அவளாகவே…தனித் தனியாகவே. நெருங்க விட மாட்டாள். என்னே விநோதம் என்கிறீர்கள்? இந்த மாதிரிக் கொடுமையெல்லாம் யாரும் அனுபவிக்கவே கூடாது. நம் எதிரிக்குக் கூட இதுபோல் வந்துவிடக் கூடாது என்பேன் நான்.
தனிமை அவளுக்கு ரொம்பவும் பிடித்துத்தான் இருக்கிறது. மொத்தமே நாங்கள் ரெண்டு பேர்தான் வீட்டில். அதிலும் அவள் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்கிறாள். எங்கள் வீட்டில் உள்ள அறைகளெல்லாம் தனிமையில்தான் இருக்கின்றன. அவை எல்லாமும் தங்களைத் தனிமையாய்த்தான் உணர்கின்றன. ஒவ்வொரு அறையிலும் ஓடியாடிப் போய் இருந்து, பேசிக் கழித்தால்தானே அவை தங்களையும் மகிழ்ச்சியாய் உணரும்? நமக்கும் ஆள் இருக்கிறது என்று நினைக்கும்?
தனிமையில் இருக்கத் தெரியாதவன், தனிமையை விரும்பாதவன் ஒரு எழுத்தாளனாக முடியாது என்று நகுலன் என்ற திருவனந்தபுரம் பெரியவர் சொல்லப் படித்திருக்கிறேன் நான். அப்படிப்பட்டவர்கள் இவளிடம் வந்துதான் அல்லது இவளைப் பார்த்துத்தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அத்தனை தனிமை விரும்பி இவள். அனுதினமும் எப்பொழுதடா நான் அலுவலகம் கிளம்புவேன் என்று காத்துக் கொண்டிருப்பாள். வண்டியோடு அப்படி நகர்ந்திருக்க மாட்டேன். பட்டாரென்று கதவைச் சாத்துவாள். ரோஷமுள்ள ஆம்பிளை மறுபடி வீடு திரும்ப மாட்டான். நான் ஒரு மழுமட்டை. என்னைக் கணக்கிலெடுக்காதீர்கள். என்னை மாதிரிச் சிலபேர் அபூர்வமாய்த்தான் இருப்பார்கள்.
. தன்னந் தனிமையில் என்னதான் செய்வாளோ? டி.வி. சீரியலாய்ப் பார்த்துத் தள்ளுவாளோ? சினிமாப் பார்ப்பாளோ? வாய்விட்டுப் பாடிக் கொண்டிருப்பாளோ? புத்தகமாய்ப் படித்துத் தள்ளுவாளோ? வீடு துடைப்பாளோ? ஒட்டடை, தூசி, தும்பு அகற்றுவாளோ? அல்லது ஒன்றும் வேண்டாம் என்று அக்கடா எனச் சாய்ந்து கிடப்பாளோ?
நான் போன பிறகு என்னதான் செய்வே…? சகஜமாய்க் கேட்கவா முடிகிறது அவளிடம்? எதைக் கேட்டாலும் சண்டைதான். எகனைக்கு முகனை…குண்டக்க மண்டக்க இதெல்லாம் அவள் பதிலுக்குக் கச்சிதமாய்ப் பொருந்தும். ….எதற்கு எப்படி பதில் வரும் என்று எவனாலும் சொல்ல முடியாது. ஏண்டா கேட்டோம் என்று ஆகிப் போகும்…. பேசாமல் இருப்பதே மேல்…! அவரவர் அமைதி அவரவருக்கு…அத்தோடு போனது பொழுது. எதாச்சும் மனோ வியாதியிருக்குமோ? தைரியமாய் அதையும் ஒரு நாள் கேட்டுப் பார்த்து விட்டேன். தலைவிரி கோலம்….
என்னை என்ன கிறுக்குன்னு நினைச்சீங்களா? என்றாள். இப்படிச் சொல்லி எங்காச்சும் தள்ளிவிடப் பார்க்கிறீங்களா? பைத்தியம்னு நினைச்சீங்களா? என்னை நீங்க எப்டி நினைக்கிறீங்களோ அப்டித்தான் உங்களைப் பார்த்தா எனக்கு இருக்கு…போதுமா? நீங்கதான் பைத்தியம்….உங்க அம்மா பைத்தியம்…அப்பா பைத்தியம்…அண்ணன், தம்பி, அக்கா, தங்கை எல்லாரும் பைத்தியம். உங்க குடும்பமே பைத்தியம்….போங்க அந்தப்பக்கம்…. – என்னைக் கை நீட்டி அடிக்காத குறைதான். அவ்வளவு பேசி விட்டாள். என்ன கேரக்டர் இவள்? இன்றுவரை புரியாத புதிர்தான். தனிமை, தனிமை என்கிறாளே பாவி, ஏதாச்சும் தனிமையில் செய்து கொண்டு விடுவாளோ என்றெல்லாம் பயந்து செத்திருக்கிறேன் நான். ஆபீசில் வேலையே ஓடாமல் குழம்பித் தவித்திருக்கிறேன். திடீர் திடீரென்று ஓடி வந்திருக்கிறேன். நல்ல காலம் இன்றுவரை அப்படி எதுவுமில்லை.
மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் வீடே வெறிச்சோடிக் கிடக்கும் பல சமயங்களில். நடு உறாலில் ஒரு விளக்குக் கூட எரியாது. நமக்கே நம் வீட்டின் இடங்கள் தெரியாது.எங்கே அவள் என்று கொல்லைப்புறம் வரை தேடிப் போனால் யாரும் எதிர்பாராத ஒரு ஈசான மூலையில் முடங்கி, எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பாள். அல்லது பிழியப் பிழிய அழுது கொண்டிருப்பாள்.
என்ன சீதா….என்னாச்சு? ஏன் இப்படி? என்று அவள் அருகில் போய் அமர்ந்து சமாதானப்படுத்துவோம் என்றால் கேட்டால்தானே? ஆரம்பத்தில் எனது இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் குழந்தையாய் மடிந்தவள், போகப் போக வெறுக்க ஆரம்பித்து விட்டாள். நெருங்கவே விடுவதில்லை.
“பக்கத்துல வராதீங்க…உங்ககிட்டே என்னவோ ஸ்மெல் அடிக்குது…அது எனக்குப் பிடிக்கலே…போய்க் குளிங்க..நீங்க தொட்டாலே பிடிக்கலை எனக்கு…என்ன சொல்கிறாள் இவள்? -
நீங்க ஒண்ணும் என்னைச் சமாதானப் படுத்த வேண்டாம்…போங்க உங்க ஜோலியப் பார்த்துட்டு…உங்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்கல்லே… எங்கயாவது கண்காணாமப் போங்க….உங்களை யாரு அதுக்குள்ளேயும் வீட்டுக்கு வரச்சொன்னா? – நெஞ்சில் ஆணியை நேரடியாய் வைத்து இறக்குவது போலிருக்கும் எனக்கு.
தேடி எடுத்தேனே திருவாழி மோதிரத்தை….பாடி எடுத்தேனே……. – என்னவோ வரும் வரிகள்….அம்மா பாடக் கேட்டது சிறுவயதில். அது இன்று எனக்கு வந்து வாய்த்திருக்கிறது.
எதுக்காக இப்டி உன்னையே நீ வருத்திக்கிறே…? நமக்குக் குழந்தையில்லேன்னு நான் இப்போ ஏதாச்சும் சொன்னேனா? என்னைக்காவது உன்னைக் கோபமாப் பேசியிருக்கேனா? அப்புறம் ஏன்? இந்த பார் சீதா, நம்ம வாழ்க்கை நம்மளோட கையில்தான்…எனக்கு நீ குழந்தை…உனக்கு நான் குழந்தை….காசு பணம் இருக்கு…வா கோயிலுக்குப் போவோம்…வெளியே சுற்றுலா போவோம்….ஜாலியா இருப்போம்…சந்தோஷமாச் சுத்துவோம்…எத்தனை நாள் லீவு போடணும் சொல்லு…உனக்காகப் போட்டுட்டு வரத் தயாராயிருக்கேன்…இந்த ஊரை விட்டு மாத்தினாலும் பரவாயில்லை…போடுற ஊருக்குப் போயிட்டுப் போறோம்…நமக்கென்ன வீடா, சொத்தா? ஒரு புண்ணாக்கும் கிடையாது….கடவுளாப் பார்த்துக் குழந்தையைக் என்னைக்குக் கொடுக்கிறானோ கொடுக்கட்டும். கிடைக்கிற அன்னைக்கு ஏத்துப்போம்…இல்லையா இப்டியே இருந்திட்டுப் போவோம்..என்ன குறைஞ்சு போச்சு? எல்லாம் மனசுதான். நாம சந்தோஷமாயிருக்கோம்னா சந்தோஷம்தான். .எதுக்கு அநாவசியமா நம்ம பொழுதை நாமளே கெடுத்துக்கணும்….? நான் சொல்றதைத் தயவுசெய்து யோசி….நீ படிச்ச பொண்ணு….., எனக்கு ஒரு மாற்றம் வேணும் அப்டீன்னு நினைச்சீன்னா எங்கயாவது வேலைக்குப் போறியா சொல்லு…முயற்சி பண்ணுவோம்…பொழுது போறதுக்காகவாவது ஒரு சேஞ்சா இருக்கட்டும்….எத்தனையோ மெட்ரிகுலேஷன் ஸ்கூல் இருக்கு….கிடைக்காமயா போயிடும்…சம்பளத்த விடு…உன் வயதொத்த டீச்சர்களோட இருக்கைல, அந்தக் குழந்தைகளோடப் பொழுதைக் கழிக்கைல எவ்வளவு மாறுதலா இருக்கும்…சந்தோஷமாயிருக்கும்…நான் சொல்றதை யோசியேன்…..
ஆம்மா…என்னத்தை யோசிக்கிறது….? அவுங்க எல்லாருக்கும் குழந்தை குட்டிங்க இருக்கும்….நம்மளை அனுதாபத்தோட விசாரிப்பாங்க… நாலு பேருக்கு பதிலா, இன்னும் நாப்பது பேருக்குத் தெரிஞ்சா மாதிரி ஆகும்..தேவையா இது? எனக்கு யாரையும் பார்க்கப் பிடிக்கலே….நான் இப்டியே இருக்கேன்……ஒத்தக் கல்லு மோதிரம் மாதிரி….
என்ன உதாரணமோ? சொன்னாள். அதனாலென்ன…ஒற்றைக்கல் மோதிரம் விரலுக்கு அழகாத்தானே இருக்கு…! எந்த விரல்ல அது இருக்குங்கிறதைப் பொறுத்து அந்தக் கைக்கே ஒரு அழகு வருது… உன் விரலுக்கு வந்த பின்னாடிதான் இந்த மோதிரத்துக்கே பெருமை….! – சற்று அதிகம்தான். ஆனாலும் சொன்னேன். படக்கென்று விரல்களை மடித்து ஒரு குத்து விட்டுவிடுவாளோ என்று பயமும் இருந்தது. என் சுபாவம் அப்படி….! சொல்லிச் சொல்லிப் பாருங்கள்…பிறகு பாசிட்டிவ்வாகவே பேச ஆரம்பித்து விடுவீர்கள். இந்த வாய் நாலு நல்ல வார்த்தைகளைப் பேசுவதற்காகத்தானே இருக்கிறது? நாற வார்த்தைகளை ஏன் உதிர்க்க வேண்டும்? நம்மையும் கெடுத்துக் கொண்டு, எதிராளியையும் சங்கடப்படுத்தி……
இருந்து கொண்டிருக்கிறாள் சீதா. சதா சர்வ காலமும் என்னிடம் எரிந்து எரிந்து விழுந்து கொண்டு. அவளுக்கும் குறையில்லை. எனக்கும் எந்தக் குறையுமில்லை. பிறகு ஏன் குழந்தை வரவில்லை? ஏன் அந்த ஜனன பாக்யம் இல்லை. அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். எங்களைப் போல் நிறைய தம்பதிகள் இருக்கிறார்கள் இந்த உலகத்தில். காரணம் தெரியவில்லைதான். ஆனால் அவர்களெல்லாம் எங்களைமாதிரி இப்படிப் பொழுதை நரகமாக்கிக் கொண்டா திரிகிறார்கள்? ஏன் இது தெரியமாட்டேன் என்கிறது சீதாவுக்கு?
பாட்டி சாப்பிட்டு முடித்துவிட்டாள். தட்டைக் கழுவி ஓரமாய் வைத்தாள். அதிலேயே அவள் வேலை சுத்தம் தெரிந்தது. ஒரு நல்ல இடத்தில் வாழ்ந்தவள் என்பதை உணர முடிந்தது. தண்ணீர் குடித்தாள். முகத்தில் தெளிர்ச்சி வந்திருந்தது. ஆசுவாசமாய் அமர்ந்து எதிரே இருக்கும் மரங்களை நோட்டமிட்டாள் பாட்டி. காப்பி சாப்பிடச் சொன்னேன். நானே போட்டுக் கொண்டு வைத்தேன். ஆற்றிக்கொண்டே, கள்ளிச் சொட்டா இருக்கே…! என்று சொல்லிக் கொண்டாள். பழைய வார்த்தை. ஆனாலும் கச்சிதமான சொல்.
எனக்கு என் பாட்டி ஞாபகம் பிடுங்கித் தின்றது. எத்தனை நாட்கள் பாட்டியின் மடியிலேயே படுத்துத் தூங்கியிருக்கிறேன்? நான் தூங்குவதற்காகவே தன்னை அமர்ந்தமேனிக்கு சுவற்றில் சாய்த்துக் கொண்டிருக்கிறாள் பாட்டி. தலையை மெல்ல வருடிக் கொடுப்பாளே…அந்த ஆசுவாசத்தில் எப்படியொரு தூக்கம் கண்ணைச் சுழற்றும்? அந்த மென்மையான அவள் மடியின் வெதுவெதுப்பு எழுந்திரிக்கவே விடாதே…! விரல் தலையில் அலையும். நிமிண்டி, நிமிண்டி பொடுகு, பேனைத் தேடும் சுகமே தனி.
மொட்ட…ஏ மொட்ட…என்ன பண்ணி விட்டிருக்கே எம் பேரனுக்கு? நன்னா முடிய ஒட்ட வெட்டி விடுன்னுதானே சொன்னேன் …துளிக் கூட குறைக்காம அப்டியே அனுப்பிச்சிருக்கியே….?
பாட்டீ…போதும் பாட்டி…நிறைய வெட்டியாச்சு…வா போலாம்…
சும்மா இரு…உனக்குத் தெரியாது…நாலணா சுளையா கொடுக்கறோம் அவனுக்கு…என்ன வேல பண்ணியிருக்கான் …..போ…போய் அவன்ட்ட உட்காரு….ஒட்ட வெட்டி கிராப்பு வையி… புரிஞ்சிதா…? அப்பத்தான் காசு தருவேன்….
நீங்க கவலப்படாமப் போங்க பாட்டி…நா அனுப்பிச்சு வைக்கிறேன்…
ஐயோ பாட்டீ…உன்னோட பெரிய தொல்லை….இன்னமே எனக்கு மொட்டைதான் அடிக்கணும்….
அடிச்சிக்கோ…பரவாயில்ல…பொடுகு வராது…
அந்தக் கல் பாவிய இடத்தில் மொட்டை என்று பெயர் கொண்ட நாவிதர் (அப்போதைய பெயர்) முன்னே சம்மணமிட்டு நான். எதிரே சலசலத்து ஓடும் ஆறு. காலைக் கதிரவனின் ஒளி வீச்சு அரச மர இலைகளுக்கு நடுவே பளபளக்கிறது. கதிரவனின் ஒளிக்கதிர்களால் புத்துணர்ச்சியடைந்து குளிருக்கு விதிர்ப்பு அடைந்ததுபோல் தன்னைச் சிலிர்த்துக் கொள்கின்றன.
அந்தக் கண்ணாடியத் தாங்களேன்…. பெட்டியில் இருக்கும் முகம் பார்க்கும் கையகலக் கண்ணாடியே என் கவனமாய் இருக்கிறது. முடி வெட்டும்போது அது வழியாப் பார்க்கணும்னு ஆசை.
அதெல்லாம் பெரியவங்களுக்குத்தான்….சொல்லியவாறே தலையைப் பிடித்து அவன் பக்கமாக வெடுக்கென்று சாய்த்துக் கொள்கிறான்.
நாலணாவுக்கு இம்புட்டு வேல வாங்குறாகளே…என்ற ஆதங்கமோ என்னவோ. அன்று என் கதை அவ்வளவுதான்.
என்னடா இப்டி வெட்டியிருக்கே….? படு அசிங்கமா இருக்கு…
பையன்களோடு விளையாடுவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டு நான்கைந்து நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன்.
வட்ருபி அடிச்சு விட்டிட்டாங்கடா இவனுக்கு….சிரிக்கிறார்கள் பசங்கள்.
பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு சொல்லவொண்ணாத் துயரத்துடன். அவளின் கைகள் என் தலையை அளைகின்றன. இவ்வளவு குறைத்தும், பாட்டிக்கு திருப்தியில்லைதான்.
அவா சொன்னா சொல்லிட்டுப் போறா…இதுதான் கோந்தே ஆரோக்யம்…
குழந்தைகளுக்குக் காய்ச்சல் என்றால் விபூதி எடுத்து, கண்களை மூடி, என்னவோ ஒரு மந்திரத்தை முனகி நெற்றியில் இட்டு, உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை நீளக்க அந்த விபூதியைத் தேய்த்துத் தரையில் அந்த வியாதியை இறக்கும் பாட்டி. மூன்று தட்டுத் தட்டுவாள். அவளின் கை வைத்தியத்திற்கு எந்த டாக்டரை ஈடு சொல்ல முடியும்? என்னவொரு நம்பிக்கை அந்த மனிதர்களுக்குத்தான்?
பாட்டி, கொழந்தை ரெண்டு நாளா கண்ணே முழிக்கலை…என்னாச்சோ ஏதாச்சோ தெரிலயே… - அழுது அரற்றிக்கொண்டு வந்து நிற்போருக்கு ஆறுதல் சொல்லியனுப்பும் பாட்டி.
ஒண்ணும் கவலைப்படாதே…நா இருக்கேன்…நாளைக்குக் காலைல உன் பிள்ளை எழுந்திருச்சி ஓடறானா இல்லையா பார்…போ…பின்னாடியே வர்றேன்….
என்னவொரு தன்னம்பிக்கை? எந்த நோயையும் கண்டு பயப்படாத பாட்டி அப்படி என்ன கை வைத்தியம் வைத்திருந்தாள்? எனக்குத் தெரிய எல்லா வியாதிக்கும் ஒரே மந்திரம்தான். ஆனால் அந்த உச்சாடனத்திற்கு சக்தி அதிகம்.
பாட்டி…பாட்டி…உங்கிட்ட ஒண்ணு கேட்கணும்…காய்ச்சல்னு வந்தா அதுக்கும், காமாலைன்னு வந்தா அதுக்கும்னு எல்லாத்துக்கும் ஒரே மந்திரத்தைத்தான் சொல்றே…அப்டித்தானே? விபூதியத் தேய்ச்சு விடறே? இல்லன்னா வேப்பெண்ணையைக் பாதத்துல தேய்க்கிற…நெத்திக்குப் பத்துப் போடறே…இல்லன்னா தொப்புள்ள வௌக்கெண்ணையைத் தடவுறே…வேறென்ன செய்திருக்கே…நீ…? எல்லா வியாதியும் எப்டி பாட்டீ பறந்தோடிப் போறது? உன்னக் கண்டா ஏம்பாட்டீ இந்த வியாதிக்கெல்லாம் இம்புட்டு பயம்?
போடா கோட்டிப் பயலே…நீ கண்டியா? நா என்ன பண்றேன்னு? அப்டியெல்லாம் பேசப்படாது..போ…போ…
அதெல்லாம் கேட்கப்படாது…பாட்டி ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்க்கிறால்ல…அப்புறம் சாமி கோவிச்சுக்கும்…ஏற்கனவே பாட்டிக்கு உடம்பை எவ்வளவு படுத்தறது பார்த்தியோ? காமாலைக்கு மந்திரிச்சு, மந்திரிச்சு, அம்புட்டும் அவா உடம்புல இறங்கியிருக்காக்கும்….அது யாருக்காச்சும் தெரியுமா…? பேசாமப் போ…போய் விளையாடு….- அம்மா சொல்வது எதுவுமே புரியாது. தன் வைத்தியம் மூலம் பாட்டி ஏதோவோர் உபாதையைத் தனக்குள் வாங்கிக் கொள்கிறாள் என்று அம்மா சொல்கிறாளா?
இதுதான் அமானுஷ்ய விஞ்ஞானமோ? ஏதோ ஒரு கோயிலின் புற்று மண் வியாதியைப் போக்குமாமே! …அதுபோல்தானோ இது?
பாட்டீ…பாட்டீ…ஊருக்கெல்லாம் வியாதியைப் போக்கி அத்தனையையும் உன் உடம்பில் வாங்கிக் கொண்டாயே நீ…! உன்னைப் போல் இனி யார் கிடைப்பார்?
அந்த நன்றி அந்த மக்களிடம் பரிணமித்ததே…
ஆம்பூர் பாட்டி பேரன்தானடா நீ….உங்கப்பாம்மால்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கா தெரியுமோ? உங்களுக்காக உசிரயே பணயம் வச்சு உழைச்சா…..அவாளை சந்தோஷமா வச்சிக்குங்கோடா……அதுதான் புண்ணியம்….
மூன்று மாதம் ஒருமுறை பேதிக்கு விளக்கெண்ணெய் கொடுக்கும்போது என்ன பாடு…என்ன ஆர்ப்பாட்டம்.
அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அந்த ராத்திரி ரெண்டு மணிக்கு அடித்து எழுப்பி….மடியில் கிடத்திக் கொண்டு ஒருவர் காலை அழுத்திப் பிடித்துக் கொள்ள கோவர்ணத்தில் இருக்கும் சுட்ட விளக்கெண்ணெயை மூக்கை அழுத்தி இடக் கையால் பிடித்துக் கொண்டு, வாயை கோவர்ணத்தின் நுனியால் அழுத்தித் திறக்க வைத்து உள்ளே விளுக்கென்று விடும் பாட்டி. ஒரே குமட்டலாகக் குமட்டி அப்படியே வெளியே பீச்சியடித்த நாட்கள் எத்தனை?
சனியன்…சனியன்…வானரம்…வானரம்….என்ன பாடு படுத்தறதுகள்….கொஞ்சம் சக்கரையைக் கொண்டா…வாயில திணிப்போம்….
மேற்கொண்டு குமட்டாமல் இருக்க நாட்டுச் சர்க்கரை கொஞ்சம் வாயில் போடப்படும் அந்தக் கணம் அப்பாடா….!
முடிஞ்சிதுடி…இனிமே உன் பிள்ளேள் பாடு…உன் பாடு…பாட்டி எழுந்து போய்விடுவாள். மறுநாள்….
கேட்க வேண்டுமா? கக்கூஸே கதிதான். அன்று பூராவும் சுட்ட அப்பளமும், நார்த்தங்காயும், ரசமும்தான் சாப்பாடு. அடித்துக் கலக்கி அந்த வயிறுதான் என்னமாய் சுத்தமாகிப் போகும்? அதற்கு ஈடு உண்டா இன்று? வயிற்றுக் கோளாறுகளினால் எத்தனை வியாதிகளைச் சந்திக்கிறோம்?
பிரதி வாரமும் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் விட்டாளா பாட்டி? உருவி உருவி அந்த உடம்பைத் தேய்த்த விதமும், வெந்நீரில் குளித்த சுகமும் இன்று எங்கே போயிற்று?
இன்று யார் வாரம்தோறும் எண்ணெய்க்குளி குளிக்கிறார்கள்? அத்தனை பேரும் மறந்தாயிற்றே? அனைத்தையும் மறந்தோம். அத்தனை கேடுகளையும் வரித்துக்கொண்டோம். அதுதானே உண்மை?
பாட்டீ…பாட்டீ….நீ ஏன் தலையை மொட்டை போட்டுக்கிறே? – ரொம்ப நாளாய் மனதில் வைத்து, புரியாமல் கேட்ட கேள்விக்கு அப்பாதான் தடுத்தார் ஒரு நாள்.
அது, தாத்தா உங்க பாட்டிக்குத் தந்த பரிசு…..
குழந்தே….நீ சும்மாயிருக்க மாட்டியா? அதுகள்ட்டப் போய் இதெல்லாம் சொல்லிண்டு…?
நான் ஒண்ணும் சொல்லிடலியே….. பரிசுன்னுதானே சொன்னேன்…..நாங்கள்லாம் வேண்டாம்னோம்….அப்பா கேட்கலியே…? சத்தியம் வாங்கின்னா வச்சார்….நீ எங்க பேச்சைக் கேட்காமே சரின்னுதானே போய் மழிச்சிக்க உட்கார்ந்தே….?
….ஊர்ல இருந்தவாளோட ஒத்துத்தானே போக முடியும்? விட்டுத்தள்ளு, அதுனால இப்ப என்ன குறைஞ்சு போச்சு?
உனக்கு ஒண்ணுமில்லைன்னே வச்சுப்போம் …லட்சுமிகடாட்சமான எங்கம்மா முகத்தை நாங்க நாலு பிள்ளேள் இப்டிப் பார்க்கணும்னு என்ன தலையெழுத்து? அதான் இருக்கிறபோதே அந்த மனுஷனைப் பக்கவாதம் பிடுங்கித் தின்னுது…அதுக்கும் நீதான் பீ மூத்திரம் அள்ளினே…..?
அத்தனை சோகங்களும் அச்சடித்த புத்தகமாய் நினைவுகளில்… ஐந்தில் பதிந்தது, ஐம்பதில் மறையுமா?
பாட்டி போய்விட்டாள். இந்தாம்மா…மீனாட்சி புஷ்பம்…காலம்பற பூஜை….தலைல வச்சிக்கோ….சீக்கிரம் நல்லது நடக்கும்….. – என்ன ஆச்சரியம்….நமஸ்கரித்து வாங்கிக் கொண்டாளே சீதா…..இந்த நிமிடம்வரை என்னால் நம்ப முடியவில்லை. சீதாவா செய்தாள் அப்படி?
அலுவலக வேலைக்கிடையில் திடீரென்று ஒன்று ஞாபகம் வந்தது எனக்கு.
உறலோ…கேட்டரிங் ஸ்ரீதர் இருக்காரா?
ஆம்மா…நாந்தான் பேசறேன்….
சார், நான் காந்தி நகர், சுந்தர் பேசறேன்…ஒரு சமையல் மாமி வேணும்னு சொல்லியிருந்தீங்களே…. கிடைச்சுட்டாங்களா…?
இல்ல சார்….அது கிடைக்காமத்தான் அவஸ்தைப் பட்டுண்டிருக்கேன்….என்னால சமாளிக்க முடியலை…..
நான் ஒரு பாட்டியைக் கூட்டிண்டு வர்றேன்….பாட்டின்னு சொல்றேனேன்னு நினைச்சுக்காதீங்கோ….பேருதான் பாட்டி…..மாமி மாதிரிதான். நன்னா வேலை செய்வா…..ஆதரவில்லாம இருக்கா…..உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்…வச்சுக்குங்கோ…..சரியா…?
சார், நீங்க சொன்னா அதுக்கு ஆட்சேபணை உண்டா? எனக்கு உடனடியா ஒருத்தர் கண்டிப்பா வேணும்….இன்னைக்கே அழைச்சிண்டு வாங்கோ…..எனக்குப் பூரண சம்மதம்…..வர்ற ஆஃபர் என்னால மீட் அவுட் பண்ண முடிலை….திணறின்டிருக்கேன்…
நீங்க கவலையே படாதீங்கோ….பம்பரமா சுழலுவா….. – மதியம் லீவு போட்டுவிட்டு பிரதோஷத்திற்குக் காத்திருக்கும் பாட்டியைக் குறி வைத்துச் சந்தித்து, கேட்டரிங் ஸ்ரீதரிடம் கொண்டு நிறுத்தி விட்டேன்.
இன்று ஞாயிற்றுக் கிழமை. நான் இப்போது எங்கே போகிறேன் என்று நினைக்கிறீர்கள்? கிருஷ்ணா கேட்டரிங்கிற்குத்தான்.
ரொம்ப நன்னாயிருக்கு சாப்பாடு. பேசாம அங்கயே சொல்லிடுங்கோ….என்னால முடிஞ்ச அன்னைக்குத்தான் சமைப்பேன்….தெரிஞ்சிதா…என்னைப் போட்டுப் பிராணனை வாங்கப்பிடாது…பாட்டி சமையல் படு ஜோர்….!
ஃபோனிலேயே சொல்லிவிடலாம்தான். இருந்தாலும் ஒரு நடை அப்படிப் போய் வருவதில் ஒரு திருப்தி. பாட்டியைப் பார்க்கலாம்…நலம் விசாரிக்கலாம்….ஏதானும் செலவுக்குக் கொடுத்து வரலாம்…..
இனிமே பாட்டி என் பொறுப்பு….நீங்க கவலையை விடுங்கோ…. ஸ்ரீதர் சொல்லத்தான் செய்கிறார். ஆனாலும் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி.
சீத்தா குளிக்கிறாளா? சீக்கிரமே நல்ல சேதி வரும்பார்…..என் சாப்பாட்டைச் சாப்பிடுறாளோல்லியோ? கிடைக்கும்….கிடைக்கும்……முழுகாம இருக்காளோன்னோ…?ன்னு கேட்கத்தான் போறேன்….ஆமாம்ன்னு நீயும் சொல்லத்தான் போறே…..! பாரேன்….!!!– எழுபது தாண்டியவளின் எவ்வளவு அழுத்தமான வார்த்தைகள்? வாழ்க்கையை பிறர்பால் எத்தனை ஆழப்படுத்துகிறார்கள் இவர்கள்?
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்…!
கண்களில் நீர் பனிக்க நம்பிக்கையோடு திரும்பிக் கொண்டிருக்கிறேன் நான்.
------------------------------------------------------------------------