11 மார்ச் 2020

பாட்டையாவின் பழங்கதைகள்-பாரதிமணி-வாசிப்பனுபவம்

பாட்டை
யாவின் பழங்கதைகள் - பாரதி மணி-வாசிப்பனுபவம் 
------------------------------------------------------                         பாட்டையா என்று சொல்லி திரு பாரதி மணி அவர்களை அவரை நெருக்கமாய் அறிந்தவர்கள் அழைத்து சந்தோஷம் கொள்கிறார்கள். திருப்தியுறுகிறார்கள். எனக்கு என்னவோ அந்த பாரதி மணி என்கிற பெயரில் இருக்கும் கம்பீரம், அழகு அதைத் தவிர வேறு எதிலும் இருப்பதாகத் தோன்றவில்லை.

 பெரியவர் திரு.பாரதி மணி அவர்கள் என்று விளிப்பதிலே அவரின் உண்மையான மதிப்பு மிளிர்கிறது. அவரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற உந்துதல் ஏற்படுகிறது. அவரை மேலும் அறிய வேண்டும் என்கிற ஆவல் ஏற்படுகிறது. அப்படி அறிவதனால் அவர் மீது இருக்கும் மதிப்பு பன்மடங்கு உயர்ந்து கொண்டே போகிறது.       

    இவர் எதிர்கொண்ட  அனுபவங்கள் நிச்சயமாகப் பலருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றி, அவற்றை எந்தவித கர்வமோ, மனக் கசப்போ, வருத்தமோ, விலகலோ இன்றி சமநிலையில் நின்று எடுத்துரைக்கும் தன்மை இவரை நம்மில் ஒருவராக நெருக்கிப்  பிணைத்து விடுகிறது.

 வெளிநாடு போய் வந்து பயணக் கட்டுரைகள் எழுதிய பெரும்பாலோர் அங்கே இட்லியும் போண்டாவும் நல்ல காபியும் கிடைப்பதைப் பற்றிச் சொல்லியே அதிசயித்திருக்கிறார்கள் . இவரின் உள் நாட்டு அனுபவங்கள் அந்த ரீதியிலானது இல்லை. கலை, இலக்கியம், பண்பாடு, வாழ்வியல் சார்ந்து அதில் தோய்ந்த அனுபவங்களை ரொம்பவும் அநாயாசமாக எடுத்துரைக்கும்போது, அவை எல்லாமும் பலருக்கும் ஏற்படாத, இவருக்கு மட்டுமே என்று சிறப்பாய்க் கிடைத்த அனுபவங்களாய் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. 

தி.ஜா.வின் புன்னகை ரொம்பவும் பக்குவப்பட்டது என்றுதான் தோன்றுகிறது. இல்லையெனில் அப்படி எளிதில் கடந்து போகுதல் ஆகாது. எழுதறதோட முடிஞ்சது வேலை...பாத்ரூம் போயிட்டு வர்ற மாதிரி என்று எத்தனை இலகுவாகச் சொல்லி விடுகிறார்?

 மரப்பசு நாவலை விரும்பிப்படித்த கட்டுரை ஆசிரியரும், முகத்தைச் சுருக்கிய விமர்சகர்களான பிரபல எழுத்தாளர்களும், ஒரு கவிஞர் மரப்பசு அம்மணியை மனதில் வைத்து டெல்லியில் ஒரு பெண் எழுத்தாளரை எதிர்கொண்டு அடி வாங்கியதையும் அறியும்போது ஸ்வாரஸ்யத்திற்கு நடுவிலும் ஒரு சின்ன சோகம் தலையெடுக்கிறது.  நாவலின் தாக்கம் எந்த அளவுக்கு என்று  தோன்றி தி.ஜா.வின் எழுத்து அப்படியெல்லாம் கூட  நம்ப வைத்திருக்கிறதே...இதை அவர் கேள்விப்பட்டால் என்ன சொல்லியிருப்பார் என்று எண்ண வைக்கிறது.

அதான் சொல்லிட்டனே...எழுதறதோட என் வேலை முடிஞ்சு போச்சுன்னு...இந்த மாதிரிக் கிறுக்குத்தனத்துக்கெல்லாம் நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? என்று கேள்வி விழுந்திருக்கலாம். படிக்க ஆரம்பிக்கும்போதே புதிதாக சமையல் ஐட்டம் என்ன சொல்லப் போகிறார் பார்ப்போம் என்கிற எதிர்பார்ப்பு வந்து விடுகிறது. அது இவரிடம் மட்டும்தான். முகநூலில் போட்டிருந்த இவரது கைபாகத்திலான அவியலை மறக்க முடியுமா? சுவைபடச் சொல்லப்படும் சமையல் குறிப்புகள் நமக்கு இந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகின்றன.

 தி.ஜா.வுக்குப் பிடித்த எள்ளு மிளகாய்ப்பொடிபற்றிச் சொல்கையில் வறுத்த எள்ளின் வாசனையும், வாயில் கடிபடும் பருப்பும் நமக்கு நாக்கில் துறு துறு பண்ணுகிறது. 

கர்நாடக சங்கீதம் கலந்த கதையமைப்புக் கொண்ட திரைப்படங்களில் வித்வானாய் நடிப்பவர்கள் இதுவரை சரியாய்த் தாளம் போட்டதில்லை என்பதுதான். இதை நானும் உன்னிப்பாய்க் கவனித்திருக்கிறேன்.

 ஜகதலப்பிரதாபன் படத்தில் பி.யு.சின்னப்பா அவர்கள் நான்கு பேராய் உட்கார்ந்து கொண்டு அவரே பாட, மிருதங்கம் வாசிக்க, வயலின் இழுக்க கொன்னக்கோல் சொல்ல என்று “நமக்கினி பயமேது...தில்லை நடராஜன்...ராஜன்...இருக்கும்போது....நமக்கினி பயமேது....என்று சுக சங்கீதமாய்ப் கச்சேரி பண்ணுகையில் போட்ட தாளத்திலும் எனக்கு அத்தனை திருப்தியில்லைதான். நடிப்புக்காக என்பது வெளிப்பட்டுக்  கொண்டேயிருக்கும். But Classical based songs என்று கலவையாகக் கொடுக்கையில் நடிகர்கள் தப்பிப்பார்கள். அசல் சாஸ்திரீய சங்கீதப் பாட்டுக்கு, அசல் வித்வானாய் என்றால் கதை சற்றுக் கந்தல்தான்.  அம்மாதிரி ஒரு வித்வான் வேஷத்தில் அந்தக் குறையைத் தீர்க்க வேண்டுமென்பதற்காகவே நடிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை இவர் தெரிவிக்கிறார். யாராவது நடிக்க வைத்து விடுங்களேன்...அவர் ஆசை தீரட்டும். நன்றாகச் செய்வாரய்யா எங்கள் பெரியவர் பாரதி மணி ஐயா..!  நடிக்கத் தெரிந்தவர்கள்...நடிக்க நினைக்கிறார்கள்...வேறென்ன? அவரது நாடக அனுபவமும், திரையனுபவமும் கணக்கிடக் கூடியதா என்ன? ஆசைப்படுவதெல்லாம் நடக்கிறதோ இல்லையோ...எதிராளிக்குச் சொல்லியாவது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொள்ளலாமே...! என்ற மனக்குறை சற்றே தென்பட்டாலும் அவர்பால் பலரும் செலுத்தும் அன்பும், ஆதரவும் அவரை அங்கே கொண்டு நிறுத்தும் என்றே நாமும் நினைப்போமாக.

 ஜெயகாந்தனின் பாரிசுக்குப் போ சாரங்கனும், ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம் உறன்றியும், சுஜாதாவின் ஊஞ்சல் வரதராஜன், காலயந்திரம் மஉறாதேவன் போன்ற கதா பாத்திரங்களையும் நடித்து விட வேண்டும் என்கிற இவரது தணியாத ஆசை இந்த வயதிலும் அவருக்கிருக்கும் உத்வேகத்தை நமக்குப் புலப்படுத்துகிறது.

 நடிகர்திலகம் சிவாஜிக்கு  பெரியாராய் ஒரு படத்திலேனும் நடித்துவிட வேண்டும் என்கிற அவரது தணியாத ஆசை கடைசிவரை நிறைவேறாமலே போய்விட்டதை இங்கே எண்ணத் தோன்றுகிறது. 

ஒரு படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரம் கிடைக்கப் போக, தட்ட முடியாமல் அடுத்தடுத்த படங்களில் அதே வேஷத்தை ஏற்க, பாட்டையா போகும் காரில் சிவப்பு விளக்கு எரிகிறதா என்று அவரே பார்க்க ஆரம்பித்துவிட்டார் என்று ஜெயமோகன் நகைச்சுவையாய்ச் சொல்லப் போக.....போதும் முதலமைச்சர் ஆனது என்று இவருக்குத் தோன்றி விடுகிறது.

இன்ஸ்பெக்டர் வேஷம் போட்ட சிலரை அவர்கள் அதே வேடத்தில் தொடர்ந்து வருவதை நாம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே...! ஆனால் அது வேறு. இவர் அனுபவம் என்பது வேறு. பல ஆண்டுகளாய் நாடகங்களில் காலூன்றித் தழைத்து நின்ற பெருமகன் இவர். திரைப்படங்கள் இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றேதான் நமக்குத் தோன்றுகிறது. 

அந்த வேஷத்தை எவ்வளவு கச்சிதமாய், கம்பீரமாய் ஒத்த குரலோடு அவர் செய்திருந்தால் அது திரும்பத் திரும்ப அவருக்குக் கிடைத்திருக்கும் என்று எண்ண வைக்கிறதுதானே!   குரல் வளம் என்பது முக்கியமான ஒன்று. அது இவருக்கு செழுமையாக அமைந்திருப்பது மிகப்பெரிய கிஃப்ட். அந்தக் குரலின் ஏற்ற இறக்கங்களும், அதில் வெளிப்படும்  பாவங்களும் சரளமாய் வந்து விழும் அழகு காண்போரை மன நெருக்கம் கொள்ளச் செய்யும். இல்லையென்றால் சின்னச் சின்ன வேடங்கள் செய்த இவருக்கு, திரையுலகில் ஏன் இத்தனை மௌசு? ஏன் இந்த மரியாதை? அவர் அருமை தெரிந்துதானே அது தானே கிடைக்கிறது?

 நாகையா மிகப் பெரிய நடிகர். ஆனால் சிறு வேஷம் ஏற்றாலும், அதற்கு அவருக்கான சம்பளம் நிச்சயம்.  அந்தச் சிறு வேஷத்தை அவர்தான் செய்ய வேணும் என்கிற தீர்மானம் இருந்திருக்கிறதே இயக்குநர்களுக்கு. அதல்லவா அங்கே நினைக்கப்பட வேண்டும்?

 பிரண்டையைப்பற்றி இந்தத் தலைமுறைக்குத் தெரியுமா? அட, மூத்த தலைமுறைக்குத்தான் என்ன தெரியும்? அக்ரஉறார வீடுகளில் அப்பளம், வடகம் தயாரிக்கையில் பிரண்டை சேர்ப்பார்கள். பிரண்டைத் தொக்கு,ஊறுகாய் செய்வதுண்டு. என்னதான் கைப்பக்குவம் காண்பித்தாலும் அந்த நாக்கரிப்பு லேசாய்த் தலையை நீட்டும். கரட்டுப்பகுதிகளில் கள்ளிச் செடிகளோடு தழுவி பிரண்டை தன்னிச்சையாய் வளர்ந்து நீண்டிருப்பதை சற்றே உன்னிப்பாய்க் கவனித்தால் கண்டு கொள்ளலாம். ஒரு பார்வையில் பச்சைப் பாம்பு சுற்றியிருக்கிறதோ என்று கூடத் தோன்றும். 

உன்னைப் பெத்த வயித்துல பெரண்டயத்தான் வச்சுக் கட்டிக்கணும்....தாய் தன் செல்வங்களைப் பார்த்துச் சொல்லும் இவ்வார்த்தைகளை அநேகமாய் நாமெல்லோருமே கேட்டிருக்கக் கூடும். அரி...அரியென்று அரிக்கும் பிள்ளைகள் வீட்டிலிருந்தால் அப்படிச் சொல்வதுண்டு. பெற்றோர்கள் தாங்கள் நினைத்ததுபோல், குறிப்பாய் தாய், தான் நினைத்ததுபோல் பிள்ளை உயர்நிலைக்கு வராமல் தத்தாரியாய்த் திரிந்தானென்றால், வயிற்றெரிச்சலில் அப்படிச் சொல்வதுண்டு. ஆனாலும் அப்போதைக்கான கோபத்தின் அடையாளம் மட்டுமே அது.

 அம்மா வாயெடுத்தால் பிரண்டை...பிரண்டைங்கிறாளே என்று அந்த நிஜமான பிரண்டையோடு போய் அவள் முன் நிற்க, ஆசிர்வாதத்தோடு.... பிரண்டைத் துவையலும் கிடைத்துப் போகிறது. சமத்து...கட்டித் தங்கம்...என் செல்லம்...வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியும்...இது அந்த யுக்தி. அடுமாண்டு போவானே...என்ற ஆசீர்வாதத்தோடு கலத்தில் விழும் துவையல்....! ஆஉறா...அந்தக் காலம் அது...அது...அது...வசந்த் & கோ காலம்...இந்தக் காலம்...இது...இது...இது...எல்லாம் போன காலம்..

.. வஜ்ரவல்லி என்னும் பிரண்டை நம் புராணங்களிலும் இடம் பெற்ற கதையைக் கூறி, விஸ்வாமித்திரருக்குச் சாப்பாடு போட்ட வசிஷ்டரை நினைவுபடுத்தி பிரண்டையைச் சேர்த்தால் 300 கறிவகைக்குச் சமானம் என்கிற கதையை சுவைபடச் சொல்லிச் செல்லும்போது...இன்னும் என்னவெல்லாம்தான் இவர் நினைவில் தங்கியிருக்கும் என்று பிரமிக்க வைக்கிறது. 

நேற்று சாப்பிட்ட காலம்பற டிபன் மறந்து போகுது நமக்கு. பெரியவர் பாரதிமணிக்கு, கற்ற கல்வியும், படித்த படிப்பும், கிடைத்த அனுபவங்களும்  உடம்பெல்லாம் நினைவலைகளாய்  ஓடிக் கொண்டேயிருக்கிறது.  அப்பாவுக்கு உடம்பு முடியவில்லை என்று நாகர்கோயில் பார்வதிபுரம் வந்து சேரும் அவர், தந்தைக்கு செய்த சிஸ்ரூஷைகளையும், தாயாரின் கவனிப்பும், அப்பாவின் சாஸ்திரீய சங்கீத ரசனையும், நாகர்கோயிலில் வெளியான தில்லானா மோகனாம்பாள்  படத்தின் கதை வசனத்தை ஊரே பார்த்திராத டேப்ரிக்கார்டரில் பதிவு செய்து கொண்டு வந்து அப்பாவுக்குப் போட்டுக் காண்பித்ததும், இந்தியாவின் முதல் திரைப்படத் திருட்டு இதுதான் என்று தலைப்பிட்டுச் சொல்லிச் செல்லும் அழகு மிகவும் ருசிக்கும்படியாகவும், மனசை இழக்கும்படியாகவும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

 ஜோஸ்யத்தில் ஒருவனின் சாவு தெரியும். ஆனால் அதை ஜோஸ்யர்கள் சொல்வதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். நன்கு ஜோஸ்யம் கற்றுத் தெளிந்தவர்கள், தங்கள் சாவையே அறிந்தவர்கள் எவ்வளவு நிதானத்தோடும் முனைப்போடும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய முற்படும்போது அந்தப் பெரியவர்களின் முதிர்ச்சியை நினைத்து வியப்பாகிறது நமக்கு. கட்டுரை ஆசிரியரின் தகப்பானருக்கு அது கொடுப்பினை.

 கத்திக்கு ஒரு கட்டுரையா? பின்னே...? பதம் என்கிற ஒரு சொல் அங்கே வருகிறதே...! வெறும் கத்தியின் பதமா அது? மனிதர்களின் பதத்தை அறியும் செயலல்லவா? எந்த வேலையில் ஒருவன் தேர்ந்தவனாய் இருக்கிறானோ அந்தப் பணிக்கான கருவியின் தேர்வு அவனிடம்தான் இருக்கிறது. அது பதம். அதை அவன் மட்டுமே அறிவான். முடி வெட்டுபவனுக்கு முடி சிக்கும் அந்தக் கணம் அந்தப் பதத்தை உணர்கிறான் அவன். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். நல்ல பீலா அமைவதெல்லாம்...அவனவன் வரம்! பீலா என்கிற பதத்தின் பொருள் ஊர்க்காவலன்...என்றால் அவன் சிறந்த வீட்டுக் காவலனும்தான். A Good peeler shapes India.

இன்றைய அரசியல் சூழலில் இந்தப் பதத்தின் உண்மைப் பொருளை உணர்வது அவசியம்.  சமையலில் நளனான இவருக்கு காய்கறி நறுக்க மொண்ணைக் கத்தி வைத்திருப்பவர்களைக் கண்டால் அப்படிக் கோபம். அடிப்படையில் நான் ஒரு நாடக நடிகனோ, திரைக் கலைஞனோ இல்லை...ஒரு நல்ல சமையல்காரன் என்று பெருமையோடு யார்தான் கூறுவார்கள்? சவால்யா...போய் நின்னு பாரு தெரியும்....! I am a born chef...! என்று தலை நிமிர்கிறார்.

 பால்ராஜ் மதோக்கைத் தெரியுமா? அரசியலில் ராஜ தந்திரம் தெரியாமல் உதிர்ந்து போன ஒரு மாமனிதர் என்று அறிமுகப்படுத்துகிறார். சொல்லிக் கொண்டு போகும் விஷயங்களைப் படிக்கும்போது நியாயம்தான் என்றே நமக்குத் தோன்றுகிறது. வாஜ்பாய்க்கும், அத்வானிக்கும் முன்னத்தி ஏர். பாரதீய ஜனதாவைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து அடுத்தவர் கையில் அப்படியே அலேக்காகத் தூக்கிக் கொடுத்த, தாரை வார்த்த அப்பாவி. பட்டவன் ஒருத்தன். அனுபவிக்கிறவன் இன்னொருத்தன். இந்திராகாந்தியின் எமர்ஜென்சியில் 18 மாத சிறைவாசம் காஷ்மீருக்குத் தனி அந்தஸ்துக் கொடுத்தது மகா தவறு, அது பிற்காலத்தில் இந்தியாவுக்குப் பெருத்த தலைவலியாய் இருக்கும் என்று ஒத்தைக்கு நின்றவர். யார் கேட்டார்கள்? அத்வானிக்கும் அவருக்கும் பிடிக்காதது, பிறகு அவராலேயே அவர் ஒதுக்கி வைக்கப்பட்டது....ஒரு அசட்டுக் குழந்தையின் பொம்மையைப் பிடுங்கி வைத்துக் கொண்டு அதை வீட்டுக் அனுப்புவது..மதோக்கின் கதை அவரை அறியாத நமக்கே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எங்குமே உழைத்து ஓடாய்ப் போனவன் ஒரு கட்டத்தில் ஒதுக்கத்தான் பட்டிருப்பானோ? என்னவெல்லாமோ நடந்தேறியிருக்கிறதே...நமக்குக் கால்வாசி கூடத் தெரியாதே என்று எண்ணி வெட்கப்பட வேண்டியிருக்கிறது. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவனுக்கு என்ன பெரிய அனுபவங்கள் ஏற்பட்டு விடப் போகிறது?

 உலகம் மிகவும் பெரியது. அதில் சிறு துளி நாம். திரு.பாரதிமணி அவர்களின் அனுபவங்கள் முன் நாம் ஒன்றுமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. 

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். கடுகுக்குக் கூடக் கட்டுரை உண்டா எனில் இவரிடம் உண்டுதான். நாம் உபயோகிக்கிறோமே  தாளிப்பதற்காக...அது கடுகே இல்லை என்கிறார். ஆனால் காரம் போகவில்லையே என்றால்  அதற்குப் பெயர் ராய். (Rai) என்று திரும்பவும் அழுத்திச் சொல்கிறார்.  மஞ்சள் பூவோடு, பஞ்சாப் உறரியானா மாநிலங்களில் விளைவது Sarson எனப்படும் கடுகாம். இந்த ராய் முக்கியமாக ஊறுகாய்களுக்குப் பயன்படுவது. ஆவக்காய் ஊறுகாயா

எங்க சார்...அதெல்லாம் பார்த்து ரொம்ப வருஷமாச்சு.... இப்பல்லாம் Buy one get one ஊறுகாய்தான் சார். வீட்டுல யார் சார் போடுறாங்க ஊறுகாய்..பேர்.சொன்னாலே மாமி அடிக்க வருவாங்க...

பாட்டி காலத்தோட போச்சு. எல்லாமும் ..கச்சிட்டில மாவடு ஊறுகாய் போட்டது....சாதீர்த்தத்துக்கு கொஞ்சம் மாவடு கடிச்சிண்டு....ஒரு டம்ளர் உள்ள விட்டாப் போதும். ஒரு வேளை சாப்பாட்டுக்குச் சமானம். காயும் கனியும் கட்டி அளக்கணும்...என்று சொல்லி பாட்டி அழகர்கோயில் மாவடுக்காரியை இழுத்துத் திண்ணையில் உட்கார்த்தி, பிச்சு...அந்தப் படியைக் கொண்டா சொல்றேன்...என்று குரல் கொடுத்து,  இருக்கும் காம்பைப் பூராவும் படக் படக்கென்று கிள்ளியெறிய....ஏ...பாட்டி....நீ என்ன...அம்புட்டையும் உடைச்சிக்கிட்டிருக்கே..காம்போடதான் அளக்க முடியும்...அதெல்லாம் பிய்க்கக் கூடாதாக்கும்....என்று கத்த....

ஏண்டீ...அதுக்காக இம்புட்டு நீளக் காம்போடவா அளப்பாங்க..இதென்ன அநியாயம்....பாதிக்குப் பாதி காம்பு தாண்டி நிக்கும் படில...என்று சொல்லிச் சொல்லியே இடது கையைப் படியோடு சேர்த்து வளைத்து அணைத்து,...ஒரு படிக்கு ஒன்றரைப் படி மாவடு அளந்த ஆம்பூர் பாட்டி இருந்த காலம் எங்கே...இன்று எங்கே...?

மெய்க் கடுகு என்று நினைக்க அது பொய்க்கடுகாய்ப் போன கதையே எங்களுக்கு இப்போதுதானே தெரிகிறது? இப்படி இன்னும் என்னென்ன  தெரியாது என்று எங்களைத் தாளிப்பீர்களோ...வெட்கமாய் இருக்கிறதய்யா...எங்கள் விஷய ஞானம் பற்றி...! 

மாங்கல்யம் தந்துனானே...மமஜீவன...என்று நீங்கள் வாங்கிய கடன்களை அடைத்த அந்த நேர்மையும்...நாணயமும் வாழ்க்கைப் பாடமாகவல்லவா நிற்கிறது? வட்டியும் முதலுமாகச் சேர்த்து வாங்கிக்கோ என்று பத்திரம் எழுதிக் கொடுத்த அந்தக் கைகளை நீட்டுங்கள்....முத்தம் சொரிய...உன் பெற்றோரைக் கும்பிடுகிறேன்...உன்னை வளர்த்த விதத்துக்காக....என்று சொல்லிய அந்த வார்த்தைகள் எத்தனை ஆத்மார்த்தமானவை? அவரை அப்படி வரவழைத்தது எது? உலகம் எவ்வளவு வேண்டுமானாலும் மாறலாம். தலைகீழாக நிற்கலாம். தனி மனிதனின் நேர்மை, நாணயம், ஒழுக்கம்  இவைகளுக்குப் பங்கம் செய்து கொள்ளாமல் இருந்தோமானால் அதற்கு ஈடு இணை இல்லைதான். அவன்தான் உயர்ந்த மனிதன். 

இவ்வளவு விஷயங்களை கையில் ஒரு குறிப்புமில்லாமல் இந்த மனுஷன் எப்டி எழுதறாரு? இப்படியா துல்லியமா அத்தனையும் ஒத்தருக்கு ஞாபகத்தில் இருக்கும்? டைரியில் குறித்து வைத்தாலும் தேடிப் பிடித்து எழுத சோம்பேறித்தனம். எழுதலேன்னா இப்போ என்ன கெட்டுப் போகுது? என்கிற அலுப்பு. அசராமல் இந்த மனுஷன் இப்படி எழுதித் தள்ளுகிறாரே? கோடவுனா...? மனுஷனுக்கு ஆனாலும் இவ்வளவு ஞாபக சக்தி ஆகாது...! என்னதான் புத்திசாலியா இருக்கட்டுமே...அதுக்கும் ஒரு அளவில்லையா? உலகளாவும் விஷயங்கள் அத்தனையுமா இப்படி அத்துபடி? ஒரு மனுஷனுக்கு அனுபவங்கள் சேரவும் ஒரு தனிக் கொடுப்பினை வேண்டுமோ?
உங்களின் இந்த ஆழமான அனுபவங்கள் இப் பூவுலகில் யாருக்கும் கிட்டாதது. வெறும்பழங்கதைகள் அல்ல அவை.   விழுமியங்களை, மகத்துவங்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள். வழிகாட்டியிருக்கிறீர்கள்.

 அனுபவங்கள்தான் மனிதனைச் செழுமைப் படுத்துகின்றன. இந்த வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமும் கிட்டி விடுவதில்லை. அனுபவச் செழுமை கொண்ட படைப்பாளிகளின் எழுத்தைத் தேடிக் கண்டடைந்து அறிந்து பயனுறுவதே நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ளும் வழிமுறை. அதை உங்களின் இந்தப் புத்தகம் நிறையத் தந்திருக்கிறது. இன்னும் நீங்கள் எழுத வேண்டும். வானளாவிய உங்கள் வாழ்க்கை அனுபவங்களின் ஒரு சிறு பகுதிதான் இதுவரை வெளி வந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. முழுமையாக அத்தனையையும் நீங்கள் எங்களுக்காக இறக்கி வைக்க வேண்டும் என்பதே எங்களின் அன்பான வேண்டுகோள்.  இளைய தலைமுறைக்குப் பாட்டையாவின் படைப்புக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள். அதில் எள்ளளவும்  சந்தேகமில்லை. அதை இந்தப் புத்தகம் நீக்கமற நிரூபிக்கிறது.
 -------------------------

09 மார்ச் 2020

 “பிரதீபன்எழுதிய

ண்மறை துணி” - கவிதைகள்-குறுங்காவியங்களின் தொகுப்பு-                  தொடர்ந்து எழுதுவதும் எழுதாமல் இருப்பதும், வாசிப்போடு நிறுத்திக் கொள்வதும் அவரவர் விருப்பம். இம்மாதிரி நிகழ்வதற்கு இங்கே ஏராளமான காரணிகள் இருக்கின்றனதான். எழுதப் புகுந்ததே அவரவர் விருப்பத்தின்பாற்பட்டதுதான் எனும்போது நிறுத்திக் கொள்வதைப் பற்றிக் கேள்வி கேட்பதற்கில்லை.                                           தீவிர இலக்கிய வாசிப்பிற்கு ஆட்பட்டு அதனால் ஏற்பட்ட உந்துதலில் எழுத வந்தவர்கள் உண்டு. எழுத வேண்டும் என்கிற ஆர்வத்தில் தீவிர வாசிப்பைக் கைக்கொண்டு எழுத்தைக் கையிலெடுத்துக் கொண்டவர்கள் உண்டு. ஒரு கட்டத்தில் இரண்டுமே சலித்துப் போய் போதும் என்று விட்டவர்களும் உண்டு. மனம் அதற்கு மேலும் ஒன்றை நாடுவதுதான் காரணம். அதுதான் வாசிப்பினால் ஏற்பட்ட உண்மையான பலன்.                                                                                       ஆனால் அந்தத் தீவிர வாசிப்பிற்கு ஆட்பட்டு ஆர்வத்தோடும் தீவிரத்தோடும் எழுத ஆரம்பித்தவர்கள் அவர்களது ஆரம்ப காலங்களில் எழுதிய  பல்வேறு படைப்புக்கள் மிகத் தரமுள்ளதாக, அந்தந்தக் காலங்களிலேயே புத்தக வடிவம் பெற்றவைகளாக, இலக்கியச் சிறு பத்திரிகைளால் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளாக,  பிறகு காலப் போக்கில் அவர்கள் மறக்கப்பட்டு அந்தப் புத்தகங்கள் இப்போது கிடைக்காதா என்று ஏங்கும் வண்ணமாக, தேடித் திரியும் பணியாக எத்தனையோ தரமான எழுத்தாளர்களுக்கு அப்படியான துரதிருஷ்டம் அமைந்திருக்கிறது.                                                  அது அந்த எழுத்தாளரைப் பொறுத்தவரை துரதிருஷ்டமாய் இருந்திருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் ஒரு உத்வேகத்தில் எழுத வந்து, கொஞ்சம் எழுதி, பிறகு போதும் என்று எப்படி திடீரென்று வந்தார்களோ அப்படியே திடீரென்று நிறுத்திவிட்டவர்களுக்கு அது என்றுமே ஒரு பொருட்டாய் இருந்ததில்லை.            அந்த நேரத்துல, அந்த வயசுல ஏதோ ஒரு இன்ட்ரஸ்ட்...ஏதோ கொஞ்சம் எழுதினோம்...அவ்வளவுதான்...அதுக்கு மேல அதுல ஒண்ணுமில்ல....-என்று சொன்னவர்களைப் பலரும் அறிந்திருக்கக் கூடும்.                                              சிற்சில இலக்கிய, வணிகப்  பத்திரிகைகளில் வந்திருந்து பிறகு எழுதி எழுதித் தனக்குத்தானே வைத்துக் கொண்டு கடத்தி விட்டவர்களும் நிறைய இருக்கிறார்கள்தான்.                                                                            இவை எல்லாமும் ஒரு தனி மனிதனின் மனம் சார்ந்த விஷயம். எது பெரிது, எது சிறிது என்கிற கேள்விகளுக்கு அங்கே இடமில்லை. பிரபலம், பிரபலமல்லாதது அங்கே விலையற்றுப் போகின்றன. அவர்களைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையோடு விலகிப் போகும், யாரும் அறிந்திராத ஒரு முதிர்ந்த பக்குவ நிலை அது. பார்வையை மறைக்கும் படலத்தை விலக்கி விட்டுப் போகும் எளிய செயல்.                                      தீவிர வாசிப்பு மனிதனைச் செதுக்குகிறது. காலமும் அனுபவங்களும் அவனைப் பக்குவப்படுத்துகிறது. பக்குவமடைய அடைய   அவன் சிறந்த விவேகியாகிறான். அமைதியானவனாக மாறி விடுகிறான். மற்றவர்களிடமிருந்து மிகுந்த வித்தியாசப்பட்டவனாய்க் காட்சியளிக்கிறான். எல்லோரையும் தள்ளி நின்று பார்க்கும் சமநிலையை எய்துகிறான்.                                                                   பிரதீபன் இப்படியெல்லாம்தான் மாறி உருப்பெற்றிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது அவரது “கண்மறை துணி”  கவிதைத் தொகுப்பினைப் படிக்கும்பொழுது.            தொடர்ந்து படிக்கப் படிக்க எப்படி இராமாயணம், மகாபாரதம் என்கிற இரண்டு இதிகாசங்களை மீறிய ஒன்று எதுவுமில்லை என்று எப்படித் தோன்றிக்கொண்டேயிருக்கிறதோ அது போல...மரமாய்க் கிளர்ந்து தழைத்துதவக் கனவுகள் கண்ட இவர்....தனது நாற்பதாண்டு காலக் கவிதை வெளியை அலசி முத்தெடுத்தாற்போல ஒரு கனமான தொகுதியைக் கொண்டு வந்து, அத்தோடு போதும் என்று நிறுத்திக் கொண்டு விட்டாரோ என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. அவரது விடாத வாசிப்புப் பழக்கத்தினால் இந்த “பிரேக்” ஏற்பட்டுப் போனதோ என்று தோன்றி நம்மை வருந்த வைக்கிறது.  அவரது மனம் எப்படிச் சொல்கிறது பாருங்கள்:-   அழுகித் தோல் கிழிந்து - அசிங்கமாய்ச் -  சிதைந்து நாறுவது - வெளியே சதைப்பற்றுதான் - உள்ளே கொட்டை - திடமானது - மண்ணில் விழுந்து - மரமாய்க் கிளர்ந்து தழைத்துதவக் - கனவுகள் காண்பது - அது!      கனவுகள் கண்டு கொஞ்சத்தை நனவாக்கி அத்தோடு போதும் என்று நிறுத்திக் கொண்டு விட்டாரோ என்று எண்ண வைக்கிறது.                                                                                                பொழுது விடிவது மலர்கள் மலர்வதும், இளஞ்சூரியன் தன் கதிர்களைப் பரப்புவதும், குளிர் காலை சில் காற்றும் என அழகியலாய் ரசிக்கும் மனங்களிடையே பெற்றோர் வழி வந்த தன் வாழ்வியலின் பிரதிபலிப்பாய் காணும் கண்கள் எதையெல்லாம் காட்சிப்படுத்துகின்றன? மனிதன் ஈரமுள்ள நெஞ்சு கொண்டவனாய், இரக்க சிந்தை உள்ளவனாய், நேயமுள்ளவனாய்த் தன்னை முன்னிறுத்தி கொள்பவனுக்கு இவையெல்லாம்தானே காட்சிகளாய்க் கண்ணில் பட்டு மனதை உறையச் செய்யும்? கடை வாசலெல்லாம் - ஈரம் கண்டது - நீர் தெளித்துவிட்டாள் - தன் பழைய இருமலோடு - தேய்ந்த செருப்புக்கள் - காலுக்கு ஒரு கலர் - வீடு வீடாய்ப் -  பால் கறக்க ஓடினார் - ஆசனத்தில் - ஒட்டுப் போட்ட டவுசர் - பனியனின் கீழே - முக்கால் பெடலில் பையன் - நியூஸ் பேப்பரோடு விரைந்தான் - ஒருவர் சத்தம் ஒருவருக்குக் கேட்டுப் போனது .                                                                                   ளிய மக்களை நெஞ்சில் இருத்தி இருப்பவன்   கவிதைகள் இதைத்தானே இப்படித்தானே சொல்லும்?                                                               மனிதர்களின் இயல்பு உதவி செய்தவர்களிடம்தான் மேலும் மேலும் உதவிகளை எதிர்பார்க்கும். ஒருவன் செய்வான் என்பது தெரிந்து விட்டால் அவனிடமே போய் நின்றால் என்ன என்றுதான் தோன்றும். அவனிடம் போனால் கிடைக்கும் என்கிற நம்பிக்கைதான் துளிர்க்கும் இது இயல்பு. ஆனால் அவனால் அந்த உதவி மறுக்கப்படும்பொழுது, அதாவது அவனிடமிருந்து நாம் எதிர்பார்த்த உதவி கிடைக்காத போது அது நாள்வரை அவன் செய்தவைகளெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு நம் மனது இப்படி மறுத்துவிட்டானே என்று முரணாய் எண்ண வைக்கும். இது மனித இயல்பு. அது ஒரு வயசான கிழவிக்கும் வாய்க்கக் கூடாதா என்ன?                                 வாசலில் போய் நின்றபோதே - அடிக்காத குறையாய்-விரட்டிய அவர்கள் எல்லாம்-நல்லவர்களாய்ப் போய் விட்டார்கள்-அந்தக் கிழவிக்கு-திண்ணையில் இருக்கச் சொல்லி-நீரும் உணவும் தந்து போஷித்த அவன்-இரவில் அங்கே படுக்க அனுமதிக்கவில்லை என்ற போது-சாப்பாடும் தந்து விரட்டுகிறாயே என்று பழித்துக் கொண்டே போகிறாள். உலக இயல்பு என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை இந்தச் சின்னக் கவிதை மூலம் நமக்கு வெளிப்படுத்துகிறார் கவிஞர்.                                        வாழ்வெனும் மாயப் பேராற்றில் நீந்தியும், அலைப்புண்டும், மூழ்கியும் மீண்டுயிர்த்தும் நான் கண்ட தரிசனங்களே இக்கவிதைகள் என்று தனது நாற்பதாண்டு கால எழுத்தியக்கத்திலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளையும், பத்துக் குறுங்காவியங்களையும் சேர்த்து முழுத் தொகுதியாகக் கொண்டு வந்துள்ள கவிஞர் பிரதீபன் அவர்களை நாம் மனதாரப் பாராட்டலாம்.                                        கண்மறை துணி என்கிற தலைப்பிலே இவர் எழுதியுள்ள குறுங்காவியங்கள் பெரும் புலவரோ இவர் என்று நம்மைப் பிரமிக்கச் செய்கிறது. எங்கோ ஒரு தவறு, அக்கொடை,கேள்வி முனை, மரப்பாச்சி, அந்த ஒரு பார்வை, சட்டகம், பிரியா விடை,செழுமலர், குரலின் திசை என்று வெவ்வேறு வித்திசாயமான தலைப்புகளில் இவர் படைத்திருக்கும் குறுங்காவியங்கள் வெள்ளமெனப் பெருகியிருக்கும் கவிதை மனதை நமக்குப் புலப்படுகின்றன. நவீன மனிதனின் தேடல்கள்,வேட்கைகள் ஆகியவற்றை வெளிப்படுத்த காவிய, புராண, வரலாற்று மாந்தர்களின் கதைகளைத் தன்னின் மனோதர்மத்திற்கு ஏற்றவாறு குறுங்காவியங்களாக்கி, மிகுந்த நம்பிக்கையோடும், தைரியத்தோடும் முன் வைக்கிறார் இந்தப் படைப்பாளி.                                                         நீலக்குயில், ழ, மையம், விருட்சம், பாலம், கல்கி, ஜன்னல், தீராநதி என்று கவிதைகளைப் பரவலாக உலாவிட்டிருக்கிறார். தூத்துக்குடி வானொலி நிலையத்திலும் நிறையக் கவிதைகளைப் பவனி வரச் செய்திருக்கும் இவர் தொடர்ந்து எழுதியிருக்க வேண்டும் என்பதுதான் நமது விருப்பமாய் இருக்கிறது.                                                      --------------------                               


பேசும் புதிய சக்தி-மார்ச் 2020-எம்.என்.ராஜம் கட்டுரை


  நடிகை எம்.என்.ராஜம் என்கிற வேம்ப் காரெக்டர் (Vamp Character)  ஆல் ரௌன்டர்.                                                                                                        தாநாயகி வில்லியாகி இருக்கிறாரா? ஆகியிருக்கிறார். எப்போது? வயசானபோது...! சரி, வில்லி கதாநாயகி ஆகியிருக்கிறாரா? ம்ம்...ஆகியிருக்கிறார்.   அது...எப்போது...? அப்போதே....! போகட்டும்....ரெண்டும் இல்லாமல் நகைச்சுவைப் பாத்திரமேற்றிருக்கிறாரா? ம்ம்...அதுவும்தான்.....எப்போது? இதற்கும் என்ன எப்போது? எல்லாமும் அப்போதேதான்...!                  ஒரே சமயத்தில் வில்லியாய் தூள் கிளப்ப, கதாநாயகி என்று இனிமையாய் பவனி வர, நகைச்சுவையையும் விட்டு வைப்பானேன் என்று விடாமல் வலம் வந்து கொண்டிருந்தவர் ஒருவர் உண்டு என்றால் அது நடிகை எம்.என்.ராஜம்தான். ஆல் ரௌன்டர் மதுரை நரசிம்ம ஆச்சாரி ராஜம்.       ஏழாவது வயதிலேயே நடிப்பு மேடை ஏறியிருந்ததால், இந்த அனுபவங்கள் எல்லாம் கிட்டாமலா போய்விடும்?      முதன்மை கதாநாயகி, எதிர்மறை வில்லி மற்றும் நகைச்சுவை என்று எதுவானாலும் - எதுக்கு யோசனை...அதான் ராஜம் இருக்காங்களே...! என்று மனதில் முந்திக்கொண்டு  வந்து நின்றவர். யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகப் பட்டறையும், டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக மன்றமும் செதுக்கிக் கற்றுக் கொடுக்காததையா திரையுலகம் புதிதாய்ச் சொல்லிவிடப் போகிறது? அடிப்படை அங்குதானே ஜனிக்கிறது? திரைக்கேற்றாற்போல் திருத்தங்கள் நிகழ்ந்து இங்கே வெளிச்சமாய் மிளிர்கிறது என்பதுதானே...யதார்த்தம்?!                    ஆனால் ஒன்று....வில்லி பாத்திரம் என்றால் அந்த எம்.என்.ராஜத்தின் மீது மக்களுக்கு அப்படியொரு பழி கோபம் இருந்தது என்னவோ உண்மை.  இந்தக் கடங்காரி வந்து என்ன பாடு படுத்தறா? என்ன ஆட்டம் போடுறா? இப்டி எல்லாரையும் ஆட்டி வைக்கிறாளே?  என்று தியேட்டரில் படம் பார்க்கும்போதே வாய்விட்டுக் கத்தினார்கள். சபித்தார்கள். அதுதான் அவர் நடிப்பிற்குக் கிடைத்த பாராட்டும் விருதும்.   நாயகி பாத்திரம் என்றால்...நல்லாயிருக்கே...அவளா இது? ..என்று மனதில் இனிமை பொங்கும் சந்தோஷத்தில் பார்த்துக் கொண்டிருக்கும்போதே..இது வேறையா...? என்று வியக்கும் வண்ணம் நகைச்சுவைப் பாத்திரங்களிலும் வந்து நிற்க...இதுவும் பொருத்தமாத்தான் இருக்கு நம்ப ராஜத்துக்கு........என்று நம் தமிழ்த் திரை ரசிகர்களான பெண்களும், ஆண்களும் சொந்தம் கொண்டாடி முழு மனதோடு ஏற்றுக் கொண்டார்கள்.                         கதையும், காட்சிகளும் என்ன சொல்கின்றன...அதை ரசித்தார்கள்... அதிலிருக்கும் அர்த்தமும், அழுத்தமும்  அவர்களை திருப்திப்படுத்தியது.                                           1949 ல் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அடியெடுத்து வைத்த எம்.என்.ராஜம், தனது 14-வது வயதில் ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் தன் கால்களை அழுத்தமாக ஊன்றினார்.       அதெல்லாம் முடியாதுண்ணே...அது மட்டும் என்னால செய்ய முடியாது....வேறே எந்த மாதிரி வேணாலும்  காட்சி எடுத்துக்குங்க...எட்டி உதைக்கல்லாம் முடியாது.....என்று அடம் பிடித்த ராஜத்தை, அந்தக் காரெக்டரின், அந்தக் காட்சியின் அவசியத்தை வலியுறுத்தி, அப்பொழுதுதான் மக்கள் மனதில் அந்த நல்ல விஷயம் படியும் என்று எடுத்துச் சொல்லி சம்மதிக்க வைத்தவர் நடிகவேள்  எம்.ஆர்.ராதாதான்.  ரத்தக்கண்ணீர் என்ன சாதாரணப் படமா? அது ஒவ்வொருவனின் வாழ்க்கைக்கான பாடமாயிற்றே?                                                                வெளிநாட்டில் படித்துத் திரும்பிய மோகன் படாடோபமான வாழ்க்கை நடத்துகிறான். தவறான வழியில் தயக்கமின்றிச் செல்கிறான். தறி கெட்டு அலைகிறான். பரத்தையரின் பழக்கம் ஏற்படுகிறது. பணத்தையும் ஆரோக்யத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழக்கிறான். வியாதிக்காளாகிறான். பிறர் அருகே நெருங்க அஞ்சும் தொழுநோய் அவனைத் தொற்றிக் கொள்கிறது. அவனிடமிருந்து ஏராளமான பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, காம வலையில் வீழ்த்தி, அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய் ஏமாற்றி உருக் குலைத்த  காந்தா அவனை விரட்டியடிக்கிறாள். அவளுக்காகக் கொட்டிக் கொடுத்த செல்வத்தோடு கூடிய அந்த மாளிகையிலிருந்து அவனை விரட்டியடிக்கிறாள். அந்த பங்களாவின் ஓரமாய் ஓர்  இடத்தில் தான்  தங்கிக் கொள்ள அனுமதியளிக்கும்படியும், வெளியே விரட்டியடிக்காதே என்றும்  கெஞ்சிக் கதறுகிறான் மோகன்.  நீ இங்கிருந்தால் அந்த வியாதி என் நாய்க்குக் கூடத் தொற்றிக் கொள்ளும் அபாயம் உண்டு என்று சொல்லி, அவனை வெளியே போ...என்று விரட்டி, காலால் எட்டி உதைக்கிறாள். மாடிப்படிகளில் உருண்டு, கீழே விழுந்து புரண்டு கதறுகிறான் மோகன்.                                            தன் வாழ்க்கையில் அவன் செய்த தவறுகளையெல்லாம் உணரும் தருணமாகிறது அது. குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதியடைவதில்லை என்கிற மெய்மையையும், தாயை எட்டி உதைத்த தன் கால்கள் இப்போது நடக்கத் தெம்பின்றி ஊனமான நிலையையும் நினைத்து நினைத்து, சீந்துவாரின்றி தன் தவறுகளுக்காக வருந்துகிறான்.                              மோகன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் தத்ரூபமான  நடிப்பு, பார்ப்போர் உள்ளத்தை உருக வைக்கும். நெஞ்சம் பதற வைக்கும். அவரவர்களின் வாழ்க்கைத் தவறுகளை நினைத்து நடுங்க வைக்கும்.  தமிழ்த் திரையுலகமும் நம் மக்களும் அதுநாள்வரை காணாத  வெறும் படமல்ல, பாடம் அது.  .. நடிகர்திலகம் கூடத் தன்  நடிப்பில் அதற்குப்பின்தான் என்று சொல்ல வேண்டும். நவராத்திரி படத்தில் அதே தொழுநோயாளியாக அவர் நடித்தது சிறப்புதான் என்றாலும், இந்த ரத்தக் கண்ணீர் மோகன் கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கத்தை இதுநாள்வரை வேறு எதுவும் விஞ்சியதில்லை. கதையமைப்பு அப்படி. அதற்கான காட்சிகளில் அவ்வளவு வீர்யம். அந்த வீர்யத்தைக் கண் முன்னே கொண்டு வந்த நடிகர்கள். அதில் சக்ரவர்த்தியாய்த் திகழ்ந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா.                                                இந்தக் காட்சிக்கான படப்பிடிப்பின்போதுதான் எட்டி உதைக்கும் அந்தக் காட்சியில் எம்.என்.ராஜம் என்னால் முடியாது என்று மறுத்தது. ராதாதான் வற்புறுத்தி நடிக்கச் செய்து அந்தக் காட்சியின் அவசியத்தை, அழுத்தத்தை, தாக்கத்தை பார்வையாளர்களுக்குள் நிலை நிறுத்தினார்.          நீ உதைக்கிறமாதிரி உதை, நான் படில உருண்டு புரண்டு விழுந்து கொள்கிறேன் என்று சொன்ன எம்.ஆர். ராதா, காட்சியின் தத்ரூப உணர்ச்சிகர நடிப்பில் தன்னை மறந்து உண்மையாகவே சற்று வேகமாக ராதா அண்ணனை உதைத்துத் தள்ளியதையும், மிக அருமையாக அமைந்துவிட்ட அந்தக் காட்சிக்காகவும், வாயாரப் பாராட்டி மகிழ்ந்தார் நடிகவேள் என்பதை இன்றும் மகிழ்ச்சியோடு  நினைவு கூர்கிறார் எம்.என்.ராஜம்.  ரத்தக் கண்ணீர் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் அறிந்துணர வேண்டிய பாடமாக அமைந்த சிறப்பான திரைப்படம்.                                                                                  அது எம்.என்.ராஜத்திற்குப் பெயர் சொல்லும் படமாக அமைந்து விடுகிறது.   அங்கிருந்துதான் வேகமெடுக்கிறது அவரது திரைப்பயணம்.  அடுத்தடுத்து வில்லி கதாபாத்திரமா...கொண்டு வா ராஜத்தை...என்று தயாரிப்பாளர்கள் முதல் இயக்குநர்கள்வரை முந்திக் கொண்டு சொல்லும் நிலைக்கு அவரைக் கொண்டு நிறுத்துகிறது. வேம்ப் (வில்லி) காரெக்டரில் ஆரம்பித்த அவரது திரைப்பயணம் எல்லா வேடங்களையும் என்னால் செய்ய முடியும் என்று அவரை ஒரு ஆல் ரவுண்டராக ஆக்குகிறது..                                                           மதுரை சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த பலர் திரைப்பட உலகில் பரிமளித்திருக்கிறார்கள். இப்படிச் சொன்னவுடனேயே நம் நினைவுக்கு உடனடியாக வருபவர் புகழ் பெற்ற பாடகர் நம் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள்தான்.  திருமதி எம்.என்.ராஜம் அவர்களும் இந்த சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த மதுரைக்காரர்தான். வெண்ணிற ஆடை நிர்மலா அவர்களும் இந்த சமூகம்தான். எல்லோருமே புகழ்பெற்றவர்களாகத்தான் விளங்கியிருக்கிறார்கள். 25.05.1940ல் பிறந்த எம்.என்.ராஜம் பின்னணிப் பாடகர் திரு ஏ.எல்.ராகவனை 02.05.1960 ல் திருமணம் செய்து  மிகச் சிறந்த மனமொத்த தம்பதிகளாக, இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோராக, இன்றும் நம் கண்முன்னே சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.                                       திருமதி எம்.என்.ராஜத்தின் வயது இப்போது 79 முடிந்து எண்பது. ஆயிரம் பிறை கண்ட அபூர்வப் பெண்மணி. இன்றும் அவ்வப்போது டி.வி. சீரியல்களில் தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கிறார். 2014 வரை நடித்திருக்கிறார். ஆடின கால் நிற்காது என்பதுபோல் நடிப்புலகில் பவனி வந்தவர்களுக்கு, கடைசி வரை நடித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிற தீராத ஆசை என்பது உள்ளார்ந்த லட்சியமாகவும் கனவாகவுமே இருக்கும். அதுதான் அவர்களுக்கு ஆத்ம சாந்தி.      சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி, எம்.ஆர்.ராதா., எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.நம்பியார், என்.எஸ்.கிருஷ்ணன் என்று பிரபலமானவர்கள் அத்தனைபேரோடும் நடித்திருக்கும் பெருமை பெற்ற இவரின் புகழ் பெற்ற படங்கள் அநேகம்.                                                   ரத்தக் கண்ணீர், புதையல், தங்கப்பதுமை, நாடோடிமன்னன், பாசமலர், தாலிபாக்யம், அரங்கேற்றம், பாவை விளக்கு, பதிபக்தி, தெய்வப்பிறவி, நல்ல இடத்து சம்பந்தம், நல்ல தம்பி, நான் பெற்ற செல்வம், நானே ராஜா,  பாக்தாத் திருடன், பாசவலை,  என்று சிறந்த திரைப்படங்களின்  இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அத்தனையும் முத்தான திரைப்படங்களாய் அமைந்து இவரது பெயரையும் புகழையும் நிலைநாட்டி, அடுத்தடுத்து என்று இவர் பயணித்துக் கொண்டேயிருப்பதற்கு பலமான  காரணமாய் அமைந்தன.                             1949 ல் நல்ல தம்பி படத்தில் அநாதைக் குழந்தையாகக் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 1949 ல் பி.யு.சின்னப்பாவோடு மங்கையர்க்கரசியில் நடிக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றார். 1950 களில் ஏராளமான படங்களில் நடித்த ஒரே நடிகை இவர்தான். நாடோடி மன்னனில் இளவரசி மனோகரி பாத்திரத்திலும், பதிபக்தி என்கிற சமூகப் படத்தில் மருக்கொழுந்து கதா பாத்திரத்தை ஏற்றுச் சிறப்புச் செய்ததையும் சம்பூர்ண ராமாயணத்தில் சூர்ப்பனகையாய் வந்ததையும் யாரால் மறக்க முடியும்?                                                                          தொடர்ந்த இந்த வெற்றிப் பயணத்தைக் கணக்கில் கொண்ட அரசு, இவரது அசாத்தியத் திறமையை மனதில் வைத்து, அதை உலகுக்கு அறிவிக்கும் வண்ணம் 1962-ல் இவருக்குக் கலைமாமணி விருது கொடுத்துக் கௌரவித்தது. சென்னை திருவல்லிக்கேணி உற்யூமர் க்ளப் 2015ல் இவரை அழைத்து, தலைமை விருந்தினராக அமர்த்தி சிறப்புச் செய்து கௌரவித்திருக்கிறது என்பதும் இங்கே நாம் அறிந்தாக வேண்டிய முக்கியச் செய்தியாகிறது.                         வில்லி வேடத்தில் திரைத்துறைக்குள் நுழைந்த எம்.என்.ராஜம், வேம்ப் வில்லி என்று பெயரெடுத்து, கொடுமைக்காரச் சித்தி, இரண்டாந்தார மனைவி என்று வெவ்வேறு விதமான ரோல்களில் வலம் வந்து கொண்டிருக்கையில், மென்மையான கதாபாத்திரங்களிலும் இவர் பொருந்தி வருவார் என்பதையும், படித்த கண்ணியமான, கௌரவமான பாத்திரங்களுக்கும் இவரால் திறமை காட்ட முடியும் என்றும் முடிவு செய்த இயக்குநர்கள் இவருக்கு வித விதமான வேஷங்களைக் கொடுத்து  நடிக்க வைத்து இவரை மேலும் வெளிக் கொண்டு வந்தார்கள். அதில் குறிப்பிடத் தக்கது என்று  சிலவற்றை நாம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டியிருக்கிறது. அதன் மூலம் இவரது திறமையை மென்மேலும் உணர நம் தமிழ் ரசிகர்களுக்கு இது அரிய வாய்ப்பு.   அப்படியொரு திரைப்படம்தான் தெய்வப் பிறவியும், பாசமலர் திரைப்படமும்.       தெய்வப்பிறவி படத்தில் இவரது காதலராக வருபவர் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராகவும், அக்கா பத்மினி சொல்லியனுப்பியதாலேயே வந்ததாகவும்...கூறி  மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் தவிப்பார்.                                                                            நீங்க…!...நீங்க எங்க இங்க….? – எம்.என்.ராஜத்தின் வீட்டு வாசலில் இந்தக் காட்சி. அதிசயமாய், எதிர்பாராது, ராமு என்ற எஸ்.எஸ்.ஆரைப் பார்த்த மென்மையான அதிர்ச்சியில் கேட்கிறார்               நா….நா வந்து….நந்தியாவட்டப் பூ இல்ல…நந்தியாவட்டப்பூ...அத ரெண்டு...பறிச்சிட்டுப் போலாம்னு வந்தேன்….                                                                     எதுக்கு…?                                                                            ம்…..கண்ணு வலிக்கு….ம்…!                                                       உங்களுக்கா….? – சிரித்துக்கொண்டே…                                                 கல்லூரில படிக்கும்போது…உங்களப் பார்க்கணும்னு காத்துக்கிட்டிருந்த எனக்குல்ல கண்ணு வலி எடுத்திருச்சு…..                                                                          ம்ம்….!!!                                                                        உங்ககிட்டப் பேச முடியலையேன்னு சித்தம் கலங்கி நொந்தில்ல போயிருந்தேன்….         உனக்காவது சித்தம் கலங்கிப் போச்சு….உன்னக் கண்ட ரெண்டு கணத்துக்குள்ளாகவே, எனக்குப் பைத்தியமே பிடிச்சுப் போச்சு…..                                                  நான் உண்மையாச் சொல்றேன்…எனக்கு எப்பவுமே உன்னுடைய நினைவுதான்…கண்ண மூடினா, உன்னப்பத்திக் கவலைதான்…..                                                      இந்த இடத்தில் கள்ளபார்ட் நடராஜன் கோபமாய் உள்ளே நுழைவார். வேகமாய் வந்து பளாரென்று எஸ்.எஸ்.ஆரின் கன்னத்தில் அறைந்து விட்டுச் சொல்லுவார்…                        திலகத்தப் பத்திப் பேச உனக்கு என்னடா உரிமையிருக்கு? –                               கன்னத்தில் பதிந்த விரல்களோடு பொறுக்க முடியாமல் வெலவெலத்து நிற்கிறான் ராமு.           மனோகர்….நீ செய்தது உனக்கே நல்லாயிருக்கா? அறிவுள்ளவன் செய்ற காரியமா இது? – திலகத்தின் ஆக்ரோஷமான கேள்வி.                                                          அது எங்க அண்ணனுக்கே கிடையாதே….! .இருந்திருந்தா இவனுக்கு இப்டி ஒரு உரிமை கிடைச்சிருக்குமா?                                                                    மனோகர், இப்ப நீ இவரை அடிச்ச பாரு…                                             தப்புங்கிறியா? நான் ரொம்ப இளகின மனசு படைச்சவன் திலகம்…உங்கிட்ட எனக்கு என்னடா பேச்சு…? பேச வேண்டிய எடத்துல நான் பேசிக்கிறேன்….- கோபமாய் மனோகர் வெளியேறுகிறான்.         என்ன இது…? இந்த சம்பவத்த….                                                  இதோட மறந்துற வேண்டிதான்…..
என்ன சொல்றீங்க….?                                                                  இந்த விஷயம் மட்டும் எங்க அத்தானுக்குத் தெரிஞ்சா, எங்க குடும்பமே கலைஞ்சு போயிடும்…..                                                                                    அதுக்காக…?                                                                                    நீ என்னை நேசிக்கிறது உண்மையாயிருந்தா, இதப்பத்தி எங்கயும், யாருகிட்டயுமே பேசக் கூடாது….- திலகத்திடம் சத்தியம் வாங்கிக் கொண்டு புறப்படுகிறான் ராமு.                      சிறு காட்சிதான். ஆனாலும் அடி வாங்கிய அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பாக சட்டென்று ஒரு முடிவு எடுத்து, இந்த நிகழ்வு என் அத்தானுக்குத் தெரியக் கூடாது, ஏன் யாருக்குமே தெரியக் கூடாது என்று தீர்மானிக்கும் எஸ்.எஸ்.ஆரின் ராமு என்கிற கதாபாத்திரமும் அன்பின் வயப்பட்டு அதற்கு சம்மதிக்கும் திலகம் என்ற எம்.என்.ராஜத்தின் அடங்கிய, காதல் வயப்பட்ட நடிப்பும்  இந்த இடத்தில் வானளவு உயர்ந்து நிற்கும். குடும்பம் என்கிற அமைப்பு எந்தக் காரணங்களுக்காகவும் சிதைந்து விடக் கூடாது என்கிற தத்துவம் பலமாய் பொருந்திப் பிரகாசிக்கும்.                                                                                    இதில் காதலியாக என்றால் பாசமலர் படத்தில் நடிகர்திலகத்தின் டாக்டர் மனைவியாக மிகுந்த கௌரவம் வாய்ந்த ஒரு பாத்திரத்தில் நடித்திருப்பார். படித்த மனைவி என்கிற அந்தஸ்தோடு அவர் செய்திருக்கும் அந்தப் பாத்திரம் வெறும் ஏற்றுக் கொண்ட வேஷமல்ல. வாழ்ந்த கதாபாத்திரம். மாலதி என்ற அந்த டாக்டர்  வேஷத்தில் நடிகர்திலகத்திற்கு மனைவியாக வந்து ஒட்டியும் ஒட்டாமலும் அவர் தன் அதிருப்தியை வெளிப்படுத்தும் சில காட்சிகளும், மனைவி தன் சொல்லை, விருப்பத்தைப்  புறக்கணிக்கும் கணத்தில் நடிகர்திலகத்தின் உணர்ச்சி பாவங்களும், நம் மனதைப் பிழிந்தெடுக்கும். இப்படியெல்லாமும் திரைப்படங்கள் வந்து மனித வாழ்வை மேன்மைப் படுத்திய நம்  தமிழ்த் திரையுலகம்  இன்று வெறும் வன்முறையின் பிறப்பிடமாகக் காட்சியளிக்கிறதே என்கிற வேதனை அந்த மூத்த தலைமுறையினருக்கு இன்று இருந்துகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை                                              எம்.என்.ராஜத்தின் தமிழ் வசன உச்சரிப்பு மறக்க முடியாத ஒன்று. அரசியாய் அமர்ந்தால் அங்கே வெளிப்படும் கம்பீரமும், அதே பாத்திரம் வில்லியாய் இருந்தால் அங்கே தெறித்தெழும் ஆணவமும், கோபமும், திமிர்த்தெழும் நடிப்பும் என்றும் தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாதவை. நடிக்கும் படங்களிலெல்லாம் கதாநாயகியாய் வந்தால்தான் பெருமையா? வில்லி கதாபாத்திரத்திலும் சோபிக்க முடியும்...அதே நேரத்தில் மற்றவர்களை ஒதுக்கி நிறுத்தி, தன்னை நினைவில் வைத்துக் கொள்ளவும்  செய்ய முடியும்...எல்லாமும் நம் திறமையின்பாற்பட்ட விஷயம் என்கிற தன்னம்பிக்கையும், அனுபவமும் அவரை உச்சத்தில் வைத்திருந்தன.                தங்கப்பதுமையில் அவர் ஏற்றிருக்கும் அரசி கதாபாத்திரமும், அவருக்குப் படைத்தளபதியாய் நிற்கும் எம்.என். நம்பியாரின் கம்பீரமும் என்ன கொடுமையான அரசு? என்று இவர்கள் அநியாயத்தை யார்தான் தட்டிக் கேட்பது என்று நம்மைக் கொதிக்க வைக்கும் நடிப்பும் அது ஒரு கதையைச் சொல்லும் திரைப்படம் என்பதை மறக்கப் பண்ணி, நம்மின் வெறுப்பை உமிழ வைக்கும். கண்ணிழந்த குற்றவாளியாய் நடிகர்திலகம் வந்து நிற்க....அவர் மீது சாட்டப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் தலையெடுக்க....கொற்றவனைத்தான் கொன்றுவிட்டோமே என்கிற ஆணவமா...கொடுந்தண்டனை கிடைக்கும்? என்று கடுங்கோபமாய் அரசியாய் நின்று ஆணவமாய்ப் பேசும்  எம்.என்.ராஜத்தின் நடிப்பு நம்மைப் பதற வைக்கும்.                                           அரசனுக்கு வைத்தியம் செய்கிறேன் என்று அவரைக் கொன்று விட்டதாக நடிகர்திலகத்தின் மீது குற்றச் சாட்டு. உண்மையில் அவரைக் கொன்றது அரசியாரின் சதியும், அதற்குத் துணை நின்ற தளபதி நம்பியாரின்  துரோகமும்தான்.                                                         அறங் கூறும் இந்த அவைக் களத்தையும் அரசியாரையும் அவமதிக்கின்றான். அதற்கும் சேர்த்து தண்டனை கொடுக்க வேண்டும்..என்று தளபதி கர்ஜிக்க...                                       குற்றவாளிக்கு இந்த நீதி சபையில் வழக்காட உரிமை உண்டு....மக்களின் மதிப்பிற்குரிய வைத்தியனாக விளங்கியவன் என்பதால் இறுதியாகக் கேட்கிறேன்..இங்கு எவரேனும் இவனுக்காக வாதாட முன் வருவார் உண்டா? - இப்படிக் கேட்கும்போது பத்மினி காவலர்களின் தடுப்புக்களை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைவார்....இந்த இறுதிக் கட்டக் காட்சியில் தன் கணவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்க முயலும் பத்மினியும், உண்மை வெளியே வந்துவிடுமோ என்கிற பதற்றத்தைக் காண்பிக்காமல் திரும்பத் திரும்பப் பொய்யாய்ப் பேசி, சபையோருக்கு அந்த வைத்தியன் குற்றவாளியே என்பதை வலியுறுத்தும் அரசியாரும் என அடுக்கடுக்காய், வீர்யமாய் நகரும்  காட்சிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். படபடக்கச் செய்யும். அரசியாய் அமர்ந்து அந்த வில்லி கதாபாத்திரத்தை எம்.என்.ராஜத்தைத் தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது         இத்தனை கொடூரமான பாத்திரங்களை ஏற்ற அவர் எப்படி மும்தாஜாக பாவை விளக்கில் வலம் வந்தார்? காவியமா நெஞ்சில் ஓவியமா? என்ற அந்தப் பாடலில் உறீ”மாயூனாக நடிகர்திலகமும், மும்தாஜாக எம்.என்.ராஜமும் எப்படிப் பொருந்தி நின்றார்கள்? இன்றும் அந்தப் பாடல் காட்சியைக் காண நினைக்கும்போது மனம் எப்படி மகிழ்ந்து போகிறது?                   விடிவெள்ளி படத்தில் நடிகர்திலகத்திற்குத் தங்கையாகவும், பாலாஜிக்கு மனைவியாகவும் வந்து அற்புதமாய்த் தன் நடிப்பை வெளிப்படுத்தினாரே? எத்தனை குடும்பப் பாங்கான பாத்திரம் அது? ஸ்ரீதரின் அருமையான  தேர்வாய் எம்.என்.ராஜம் என்ற அந்த  நடிகையால் அந்தத் தங்கை கதாபாத்திரம் எவ்வளவு புகழ் பெற்றது?                                                             இன்றைய இளைய தலைமுறையினரும், ஏன் இன்றைய திரைப்பட நட்சத்திரங்களுமே கூட பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய, ரசிக்க வேண்டிய அற்புதமான நடிகர்களும், நடிகைகளும் வியாபித்திருந்த காலம் அது. ஐம்பதுகள், அறுபதுகளில் வந்த திரைப்படங்களில் வரிசையாகப் பல படங்களில் தொடர்ந்து தன் திறமையை நிரூபித்துக் கொண்டேயிருந்தார் எம்.என் ராஜம்.                                                                                மங்கையர் திலகம் படத்தில் அடங்காப்பிடாரிப் பெண்ணாகவும், ரங்கோன்ராதா திரைப்படத்தில் சிவாஜிக்கு இரண்டாந்தாரமாக வந்து பானுமதிக்குப் பேய் பிடித்திருப்பதாக அளந்து, பைத்தியக்காரப் பட்டம் கட்டி, வீட்டை விட்டுத் துரத்த யத்தனிக்கும் வேஷத்திலும், பாக்கியவதியில் மயக்கும் மோகினியாகவும், பதிபக்தியில் நடிகர்திலகத்தின் நேரடி ஜோடியாக மருக்கொழுந்து என்ற கதாபாத்திரத்திலும், பாவை விளக்கில் ஒரு ஜோடியாகவும், நானேராஜாவில் தங்கை ரோலில் சூர்ப்பனகை மாதிரியும், புதையல், காத்தவராயன் படங்களில் காமெடி ஜோடியாகவும்,என்.எஸ்.கிருஷ்ணன் படங்களில் சிறு சிறு வேடங்களில் ஆரம்ப நாட்களிலும் எல்லாவற்றிற்கும் மேலாக நாடோடி மன்னன் படத்தில் கணவனின் அன்பிற்காக ஏங்கும் மனோகரி பாத்திரத்தில் எத்தனை அழகாக, அழுத்தமாக வசனம் பேசி தன் திறமையை நிலைநாட்டியிருந்தார்?  இன்னும் எத்தனையெத்தனை வேஷங்களிலெல்லாமோ வந்து தன் நடிப்பு அனுபவத்தைத்  தொடர்ந்து நிரூபித்து ரசிகர்களுக்கு அலுப்பூட்டாத நடிகையாக வலம் வந்து கொண்டேயிருந்தார் எம்.என்.ராஜம்.?      இன்றும் நினைத்து நினைத்துப் பெருமை கொள்ளலாம் அவர் தன் திரையுலக அனுபவத்திற்காக. தமிழ் ரசிகர்களின் ரசனை அறியாமலா அந்தப் பயணம் நிகழ்ந்தது?                                                                                    அந்தக் காலகட்டத்திலான படங்கள் மீண்டும் வராதா என்று ஏங்கும் அளவுக்கு சிறப்பான திரைப்படங்களும், திறமைமிக்க நடிக நடிகையர்களும், சிறந்த கதையமைப்பும், காட்சியமைப்பும், பொருத்தமான இசைச் சேர்க்கையும், தேனினும் இனிய பாடல்களும் இன்றும் நாம் எதிர்பார்த்து ஏங்கி நிற்கும் நினைவுகளாகிவிட்டன என்பதுதான் இன்றுள்ள யதார்த்தமான உண்மை. வெறும் கறுப்பு வெள்ளைப் படங்களே வந்தால்கூடப் போதும் என்று எண்ணி மனத்தில் அந்தப் பழைய படக் காட்சிகள்  தோன்றித் தோன்றி இன்றும் மூத்த தலைமுறையினரை நிறைவாக  வைத்துள்ளன. இளைய தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையை செப்பனிட்டுக்கொள்ள, மேன்மைப்படுத்திக் கொள்ள  ஐம்பது அறுபதுகளில் வந்த அந்தத் திரைப்படங்கள் காவலாய் நின்று உதவும் என்பதை யாரும் மறுக்க இயலாது.                                                   நடிகை திருமதி எம்.என்.ராஜம் அவர்கள் திரைத் துறையில் பரிணமித்த நாற்பதுகள் தொட்ட அறுபதுகள் வரையிலான கால கட்டங்கள் திறமையுள்ள ஒரு கலைஞரை என்றும் திரைத்துறை புறக்கணிக்காது என்பதற்கடையாளமாய் அவரை மிகுந்த அக்கறையோடு பயன்படுத்திக் கொண்டது. திருமதி எம்.என்.ராஜம் அவர்கள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 1953ம் ஆண்டு  முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமைக்குரியவர். சத்யபாமா பல்கலையின் கௌரவ முனைவர் பட்டம் பெற்றவர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராய் இருந்தபோது தமிழ்நாடு செய்தித் திரைப்பட நிறுவனங்களின் செய்திப் படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுப்பராக இவரை நியமித்தார்.                                                                         இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் அரங்கேற்றம் திரைப்படத்தில் எஸ்.வி.சுப்பையாவுக்கு மனைவியாக,  அந்தண மாமியாக வந்து இவர் கலக்கிய நடிப்பை யாரும் இன்றளவும் மறந்து விட முடியுமா?
                              ------------------------------------           
 

்புஸ்தகா நாவல்கள்


எளியோரைத் தாழ்த்தி-சிறுகதை-தினமணி கதிர்-1.3.2020

சிறுகதை                                                                                                               

  எளியோரைத் தாழ்த்தி.. '                                                                                             


                                    ன்னங்க...எடத்த மாத்திட்டீங்க....தேடு...தேடுன்னு தேடிட்டேங்க..இன்னைக்கு.. - என்றவாறே போய் நின்றேன் நான். மனம் சலித்துப் போன நிலையில் அவனைக் கண்டுவிட்டதில் ஒரு மகிழ்ச்சி. மெல்லிய குளிர் காற்று வீசிக் கொண்டிருப்பது எங்கோ மழை பெய்கிறது என்று உணர வைத்தது.                                                  ஒரு மெல்லிய புன்னகையோடு வரவேற்றான் அவன். கவனம் முழுவதும் வறுந்து கொண்டிருக்கும் கடலையின் மீதிருந்தது. வேப்பெண்ணெய் மணம் அந்தப் பகுதி முழுவதும். மழைக் குளிர்ச்சிக்கு சூடாய் கடலை சாப்பிட்டால்...அடடா என்ன சுகம்? மணத்தை மோப்பம் பிடித்துத்தான் நானே அவனைக் கண்டு பிடித்தேன். தெரு மாற்றி  நின்றிருந்தான் அன்று.                                                                                              

 கொஞ்சம் காது கொடுத்துத் தொடர்ந்து என்னோடு பேசிவிட்டால் வறுந்த கடலையைப் பதமாய் எடுத்துப் பாத்திரத்தில் சேர்க்க முடியாது. நிமிஷமாய்க் கருகி விடும். அந்தக் கணத்தில் கடலை வறுபடும் மணம் எனக்கு அதை உணர்த்தியது. இது அவனுக்கும் தெரியாமலா போகும்?                                                                                

அதிலும் ஒன்றிரண்டு கருகி விடுகிறதே...!                                                                                                                                                                அது தவிர்க்க முடியாது சார்....எப்டியும் சிலது வந்திரும்...நம்ம உறவுகள்ல சிலபேர் இப்டி நெருடுறதில்லையா? அதப்போலதான்....என்றானே பார்க்கலாம்...- எனக்கானால் ஆச்சர்யம்.        எத்தனை பொருத்தமான உவமை?  ரசனையான ஆள் போல் தெரிகிறது.                                   பத்து ரூபாய்க்குக் கடல மடிச்சிக் கொடுக்கிறோம்னா அதுல ஒண்ணாவது கருகினது இருந்தாத்தான் அந்தப் பொட்டலத்துக்குப் பெருமை....வேணும்னேவா செய்றேன்...அது தானா வந்திடுது....எப்டி ஒழக்குல பூரும்னு எனக்கே தெரியாது...ரசிச்சு அதை மொதக் கடலையா எடுத்து சாப்பிடுறவங்க இருக்காங்க....இதென்னங்க இப்டி...ன்னு கைல எடுத்துக் காட்டி என் மூஞ்சிக்கு முன்னாடியே கீழ வீசுனவங்களப் பார்த்திருக்கேன்....பாருங்க எப்டியிருக்குன்னு சொல்லி வேறே பொட்டலம் கேட்குற ஆளுகளும் இருக்குதான்....அத்தனையும் சூத்தைன்னு திட்டி காசை வாங்கிட்டுப் போனவங்களும் உண்டு. இவ்வளவு ஏன்....அஞ்சு ரூபாதான ஒரு பொட்டலம்...அதென்ன இப்போ பத்துங்கிறீங்க...ன்னு சடைக்கிற, சண்டைக்கு வர்ற ஆசாமிகளும்தான் வராங்க..உலகம் பலவிதம்... சார்...இந்தக் காலத்துல இப்டிக் கடல வண்டியத் தள்ளிட்டிருக்கீங்களே...இது ஒரு பொழப்பான்னுட்டான் சார் ஒராளு...நொந்து போனேன்....திருடக் கூடாது, பொய் சொல்லக் கூடாது, பிச்சை எடுக்கக் கூடாது...வேறே எந்தத்தொழில் செய்தா என்ன சார்...? இப்டி இழிவாப் பேசினா? இதப் பேசுவமா, வேணாமான்னு எவனும் யோசிக்கிறதில்ல சார்...                                                                       வீட்டுக்குச் சாமாஞ்செட்டு வாங்கைல இஷ்டத்துக்கு விலை ஏறிக் கெடக்கேன்னு யாராச்சும் கேள்வி கேட்குறாங்களா....? நீட்டுற பில்லுக்கு கார்டு தேய்க்கன்னு ஸ்டைலா எடுத்து நீட்டுறாங்க...அதே ஆளுங்க   எங்கிட்ட வரைல, என்னங்க...இதுக்கு பத்து ரூபாயா?ன்னு வாயைப் பிளக்குறாங்க...இன்னும் ரெண்டு கடலை போடுங்கன்னு ஓசி கேட்குறாங்க....மனுஷங்களே பலதரப்பட்டவங்கதான்.......நம்ப நடிகர்திலகம் இருக்காருங்கல்ல சார்...அவரு கடலை சாப்பிடைல கடைசியா ஒரு ஊத்தக்கடலை வரும்...அப்பத்தான்யா டேஸ்டுன்னுட்டு அப்டியும் ஒருத்தன் இருக்கத்தான்யா செய்வான்ம்பாரு... ஒரு படத்துல...கேள்விப்பட்டிருக்கீங்களா....என்ன படம்னு ஞாபகமில்ல.....-                                                                                                                                                         அவ்வளவு சங்கடத்திலும் அவனது விஷய தானம் என்னை ரசிக்க வைத்தது.                                                             பெயரைச் சொல்லாமல் நடிகர்திலகம் என்று அவன் குறிப்பிட்டது அவரது ரசிகன் என்பதை எனக்கு உணர்த்தியது. அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். விற்கும் கடலைப் பருப்பைப் போலவே அந்தப் பேச்சும் படு ருசி...ஸ்வாரஸ்யம். சொல்லப் போனால் கடலை சாப்பிடலாம் என்கிற ஆர்வத்தைவிட அவன் பேச்சைக் கேட்கலாம் என்கிற உந்துதலில்தான் நானே தினமும் அவனை நாடிப் போய்க் கொண்டிருக்கிறேன். மாலை நேர நடைப் பயிற்சியில் கடைசியாய்க் கடலை தின்னும் பழக்கம் என்னிடம் ஒட்டிக் கொண்டிருந்தது. அது அவனைக் கண்ட பிறகுதான்.                                                               மெயின் ரோட்டுக்கு அடுத்த உள் ரோடுலதான வழக்கமா நிப்பீங்க...அங்கதான உங்களுக்கு ஆட்புழக்கம் அதிகம். ஏன் இடத்த மாத்திட்டீங்க? சேல்ஸ் பாதிக்குமே...?                                                                                                                                                                                                 கடலை வறுக்கிறேன்ல சார்...சட்டுவத்தால இரும்புச் சட்டியத் தட்டிட்டே இருப்பேன். கடல வண்டின்னு அப்பத்தான தெரியும்... அது தொந்தரவா இருக்காம்...தள்ளிப்போன்னுட்டாரு பக்கத்து அபார்ட்மென்ட்காரரு.....நான் வீதில            உருட்டைல தட்டிட்டேதான் வருவேன்.....அப்பக்கூட யாரும் எதுவும் சொன்னதில்ல...இது மெயின் ரோடு..அந்த எடம் சித்த ஓரமா இருக்குதேன்னு நிக்க ஆரம்பிச்சேன்...வார போற ஆளுகளும் போக்குவரத்துக்குன்னு ஒதுங்காம வசதியா ஓரமா நின்னு வேடிக்கை பார்த்திட்டே கடலையை மெல்லுவாங்க...அது பொறுக்கல அந்த சாருக்கு...வெரட்டிப்புட்டாரு...ரோட்டுலதான சார் நிக்குறேன்னு சொல்லிப் பார்த்தேன்....காட்டுக் கத்து கத்துறாரு..போலீஸ்ல சொல்லவாங்கிறாரு...!  சித்த நேரம் நின்னுட்டுப் போகப் போறான்ங்கிற இரக்கமில்ல பாருங்க....குப்பை விழுகுதாம்......அம்புட்டுப் பேரா வந்து அடையுறாங்க....? மனசில்ல சார்....                                                                                                                                                                                                                                                        இங்க நின்னு சளசளன்னு பேசிக்கிட்டு, கெக்க பிக்கேன்னு சிரிச்சிக்கிட்டு. என்னய்யா இது கூத்து.....போங்கய்யா அந்தப் பக்கம்னு எல்லாரையும் சேர்த்து சகட்டுமேனிக்கு சத்தம் போடுறாரு....எப்டியெல்லாம் ஆளுக இருக்குது பாருங்க....?                                                                                                                                                                                                                         அவன் சங்கடம் அவனுக்கு. குறிப்பிட்ட இடத்தில் நின்றால் வழக்கமாய் வருபவர்கள் வரலாம். ஆட்புழக்கம் உள்ள இடம் போவோர் வருவோரை கடலை வாங்கத் தூண்டலாம். வறுத்த, எண்ணெய் மணக்கும் கடலை வாடைக்கு யாருக்குத்தான் ஆசை வராது? அவன் இடம் வியாபாரத்தை மனதில் வைத்துதானே இயங்கும்?                                                                                                                                                                                                                                                                ரோட்டுல போனா பிரச்னைன்னு இப்டி ஒதுங்கி வந்தேன்...இங்கயும் விரட்டினா?-அவன் குரலில் துக்கம் அதிகம் தென்பட்டது. அலையாய் அலைந்து இந்தக் கடலையை விற்று என்ன பெரிய லாபம் பார்த்து விடப் போகிறான்? இது அவன் குடும்பச் சாப்பாட்டுக்குப் போதுமானதாய் இருக்குமா?                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     டிராஃபிப் அதிகமா இருக்குதே...அதச் சொல்றீங்களா...? என்றேன். என் கை அவனிடம் வாங்கிய கடலையை ஒன்வொன்றாய் வாய்க்குள் தள்ளிக் கொண்டிருந்தது.                                                                                                                                                                                                                             அது பரவால்ல சார்...அதோட அதாத்தான் நம்ம சோலியப் பார்த்தாகணும்...ஒதுங்கிப் போக முடியுமா? ஆனா ஒதுங்க வச்சிருவாங்க போல்ருக்கு...இப்டி ஆளாளுக்கு என்னமாச்சும் சொன்னா அப்புறம் எங்கள மாதிரி அன்றாடங்காய்ச்சிங்க எங்கதான் சார் போறது...?    முந்தா நா ரோட்டுல ஒருத்தர் அப்டித்தான் சார்                பேசிப்புட்டாரு... அதிர்ச்சியாப் போச்சு சார்...அதத்தான் சொல்ல வந்தேன்....                                                 என்னா சொன்னாரு....?               - சங்கடத்தோடு கேட்டேன்.                                                                                                                                                                                   நா வழக்கமா வண்டியக் கொண்டு கோயில் வாசல்ல நிப்பாட்டி சாமி கும்பிட்டிட்டுத்தான் வியாபாரத்த துவக்குவேன்...எத்தனையோ வருசமா இப்டித்தான் செய்திட்டிருக்கேன். என் வண்டியக் கவனிச்சிப் பாருங்க...பட்டையா சந்தனம் குங்குமம் இட்டிருப்பேன்..பழைய வண்டிதான். டயர் கூட மாத்த முடில என்னால...தேய்ஞ்ச டயர்லதான் ஓட்டிட்டிருக்கேன்...அந்தாள் சொல்றாரு.... ப்ளெயினா வெறும் வண்டியா வந்தாத்தான் நாளைலேர்ந்து உங்ககிட்டே கடலை வாங்குவேன்ங்கிறார் சார்....அவனவன் சாமியக் கும்பிட்டிட்டு பக்தில பூசுறதுல என்ன சார் தப்பு..? வியாபாரம் நல்லா நடக்கனும்னுட்டு நம்பிக்கைல நா அதைச் செய்யுறேன்..? அந்தாளு அப்டிச் சொல்றாரு.. ..என்னெல்லாம் ஆயிப்போச்சு பாருங்க நம்மூர்ல....?  எச்சவன், எளைச்சவன்னா என்னமும் பேசலாமா?          போற வழிக்குக் கடல வாங்குற அவுரு...என்னை எப்டி மிரட்டுறாரு பாருங்க சார்...                                                                                                  அப்டியா...எந்த ஏரியா ஆளு?                                                                                                                                அதெல்லாம் தெரியாது சார்...நமக்கெதுக்கு அது?                                                                     அதுக்கில்லே...இது புதுசால்ல இருக்கு...? அப்புறம் என்ன பண்ணினீங்க...? - பதற்றத்தோடு  கேட்டேன்.                                                                                                                                                        

 
ஒண்ணும்  பண்ணல சார்....நாம்பாட்டுக்கு வண்டிய ஓட்டிட்டு வந்திட்டேன்..எதுக்கு சார் தகராறு? வர வரத் தேவையில்லாம பயமாயிருக்கு சார்....என்னமாவது ஆயிப்போச்சின்னா என்ன பண்றதுன்னு தோணுது.....ஆளுக அங்கங்க ரொம்ப மாறிப் போயிட்டாங்க சார்....முன்னமாதிரியெல்லாம் இல்ல இப்ப...!-அவன் குரலில் துக்கம் அதிகமாயிருந்தது. உண்மையான, மெய்மையான வருத்தம் அது.                                            உண்மைதான் நீங்க சொல்றது.....எதுத்த வீடு...பக்கத்து வீடுன்னு தாயா புள்ளையாத்தான் பழகியிருக்கோம்...வளர்ந்திருக்கோம்...வாழ்ந்திட்டிருக்கோம்...இப்ப எப்டி மனசுல பிரிவினை வந்திச்சின்னுதான் புரியல....சகஜமாப் பேசிட்டிருந்தவங்க...பழகிட்டிருந்தவங்க...ஒதுங்குறாங்க...ஒரு வார்த்த ரெண்டு வார்த்தயோட நிறுத்திக்கிறாங்க...கண்டும் காணாம விலகிப் போறாங்க..முகம் கொடுத்துப் பேச மாட்டேங்கிறாங்க.....இந்தக் கொடுமையை எங்க போய்ச் சொல்றது....? - நானும் என் பங்குக்கு மனசில் அழுத்திக் கொண்டிருந்த ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டேன்.                                                             பள்ளியில் படிக்கையில், இதுவரைக்கும் நம்ப வகுப்புல ரயிலில் போகாதவங்க யார்...யாரு...? என்று கேட்டு கொடைக்கானல் ரோடு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மதுரை வரை தன் சொந்தச் செலவில் மாணவர்களை  கூட்டிக் கொண்டு போய்த் திரும்பக் கூட்டி வந்து விட்ட சூசை வாத்தியாரை நினைத்துக் கொள்கிறேன்.                                                                                                                                                                                            ரஉறீம் பாய்....எங்கிட்ட இவ்வளவுதான் பைசா இருக்கு...இத வச்சிக்கிங்க...பசங்க மூணு பேருக்கும் துணிமணி எடுத்து ட்ரவுசர் சட்டை தச்சுக் கொடுத்திடுங்க தீபாவளிக்கு....உங்க தையக்கூலி என்ன உண்டோ அதை  அப்புறம் தர்றேன்...சரியா.....?                                                                                                                                 அதுக்கென்ன...அது அப்புறம் வாங்கிட்டாப் போச்சு.....குழந்தைங்களா...வாங்க என்னோட....என்று எங்களை அழைத்துப் போய் அப்பா கொடுத்த பணத்திற்குள் அடங்குவது போல் எங்களுக்குப் பிடித்த துணிகளை எடுத்துத் தைத்து, அந்தந்தத் தீபாவளியைக் குதூகலமாக்கிய பஜார் தெரு முட்டுச் சந்து தையற்காரரை இன்றும் நான் மறக்கவில்லைதான். தூக்கித் தூக்கி என்னமாய்க் கொஞ்சுவார்? தலைக்குப்பின் தோளில் இருத்திக் கொண்டு சுற்றிச் சுற்றி ஆட்டம் போடுவாரே...? மறக்க முடியுமா?                                                                                                           உங்கப்பாவோட உழைப்புக்காகத்தான் உனக்கு ஃப்ரீ ட்யூஷன்....கஷ்டப் படுற குடும்பம்...நன்னாப் படிக்க வேண்டாமா? பெரியவனாகி வேலைக்கிப் போயி உங்கப்பாம்மாவ உட்கார வச்சு சாப்பாடு போட்டுக் காப்பாத்த வேண்டாமா? இப்டியா கணக்குல மக்கா இருக்கிறது...? கஷ்டப்பட்டுப்  படிக்கணும்...இல்லன்னா எஸ்.எஸ்.எல்.சி. மார்க் குறைஞ்சு போயிடும்...உன்னால காலேஜெல்லாம் போக முடியாது...அப்டியே டைப்ரைட்டிங் படிச்சு, ஷார்ட்உறான்ட் படிச்சு சர்வீஸ் கமிஷன் எழுதி வேலையைக் கைப்பத்தியாகணும்....புரிஞ்சிதா...! வயசு போயிடுத்துன்னா அப்புறம் ஒண்ணும் செய்ய முடியாதாக்கும். நாளைலேர்ந்து டியூஷனுக்கு வந்திடு....- மேத்ஸ் டீச்சர் கிருஷ்ணசாமியை மறக்க முடியுமா? மறந்தால் நான் மனிதனா? அந்தக் கடவுளுக்குத்தான் அடுக்குமா? எல்லாம் முடித்து வேலை வாங்கி, பின்னர் கரெஸ்பான்டென்ஸ் கோர்சில் பி.காம் முடித்து.....அடேயப்பா...நானும் கொஞ்சம் சாதித்திருக்கிறேன்தான்.                                                                                                               எப்படியிருந்தது ஊரும் உலகமும்? கையெடுத்துக் கும்பிட வேண்டியவர்கள் கணக்கிலடங்காதவர்களாய் இருந்தார்களே? மனசு எந்த வித்தியாசத்தை உணர்ந்தது?  ஏழை பணக்காரன் என்கிற ஏற்றத் தாழ்வில்லாமல் ஜாதி பேதமில்லாமல் சமமாய்ப் பழகினார்களே? பொறுப்பான குடும்பஸ்தன் என்கிற ஒரே புள்ளியில் ஒருவனை மதித்துப் போற்றினார்களே? நாணயஸ்தன் என்கிற நம்பிக்கையில் என்னைக்கானாலும் காசுக்கு மோசமில்லை என்று விடாமல் கடன் கொடுத்து உதவி கைதூக்கி விட்டார்களே...! ஊரெல்லாம் கடன் இருந்தும்...அவர் பிள்ளைகளா நீங்க? என்று மதித்தார்களே...! - இந்த எல்லா அறநெறிகளும் எங்கே போயிற்று? எப்படி அழிந்துபட்டது?                            நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முகத்தில் கவலை ரேகைகள் கனமாய்ப் படிந்திருப்பதை உணர முடிந்தது.                                                                                                                                            

             
சீசனுக்கு சீசன்தான் சார் இதச் செய்ய முடியும்....கடல என்னா வெல விக்குதீங்கிறீங்க...? கிலோ அறுபது ரூபா வித்திட்டிருந்தது இப்போ ஏறிப் போயிடுச்சி சார்...வரத்து குறைஞ்சு போச்சி.. வாங்கிக் கட்டுபடியாகல சார்...இதவிட்டன்னா காய்கறி விக்கப் போயிருவேன் சார்...எம்பொண்டாட்டி எனக்கு ரொம்ப உதவி சார்...அப்டித்தான் சார் எம்பொழப்பு ஓடிட்டிருக்கு...சொல்லியவாறே சரக்...சரக்..சரக்...என்று மணலில் வறுபடும் கடலையைக் கிண்டினான்.                 பெரிய சல்லடைக் கரண்டியை எடுத்து அள்ளிச் சலித்து வறுந்த கடலையைப் பிரித்தான்.                                                                                                                                          வண்டி நான்கு டயர்களும் அமுங்கிப் போய் தரையோடு தரையாக இருந்தன. பாரம் தாங்காமல் உருட்டும் வழியில் ஏதேனும் ஒரு பக்கம் சடக்கென்று அமுங்கினாலும் போச்சு. எவனாவது கோபத்தில் ஓங்கி ஒரு எத்து விட்டால் கூட அம்புட்டுதான்...அவ்வளவு எதுக்கு...பலமாய்த் தள்ளிவிட்டால்...அப்படி இப்படி வளைந்து நெளிந்து மடங்கி  நசுங்கி அடங்கி விடும். அந்த வண்டியே அவன் நிலைக்கு சாட்சி.                             ராத்திரி  எங்க நிப்பாட்டுறீங்க....?                                                                                                                                                         எங்க சார்....இடம் இருக்கு.?...தெருவுல எங்கயாச்சும் ஒரு மூலைல தள்ளிட்டுப் போறதுதான்                        சரி...ஒண்ணு செய்யுங்க....எங்க வீடு தெரியும்ல...?                                                                                                                 தெரியும் சார்....வாசுகி தெரு நுழைஞ்சவுடனே வலது பக்கம் நாலாவது வீடு....பச்சைக் கலர் பெயின்ட் அடிச்சிருப்பீங்க...அதானே...அந்தத் தெருவழியா எத்தனையோ வாட்டி வந்திருக்கனே சார்......ஒரு அயர்ன்காரர் கூட உங்க வீட்டு வேப்பமரத்தடில வச்சு துணி தேய்ச்சிக்கிட்டு இருப்பாரே சார்.....                                                                                 அதான்...அதே வீடுதான்...அங்க கொண்டு வந்து ஓரமா நிறுத்திக்குங்க...சரியா.?..கேட்டைப் பூட்டுறதுக்குள்ள வாங்க....சீக்கிரத்துல ஒரு புது வண்டி வாங்கிருவோம்...நான் ஏற்பாடு பண்றேன்....ஓ.கே.யா...?வர்றேன்... - சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்...                                      .அவனுக்கு காய்கறிக் கடை வைக்க நான் வேலை பார்க்கும் வங்கியில் கூட ஒரு லோனுக்கு ஆவன செய்வோமா என்று யோசனை ஓடிக் கொண்டிருந்தது எனக்கு. எத்தனையோ வாராக் கடன்கள்  கிடப்பில் கிடக்கையில் உத்தரவாதத்தோடு நாமே ஜாமின் போட்டு அவன் பிழைப்புக்கான ஒரு நிரந்தர ஏற்பாட்டைச் செய்து கொடுத்தால் என்ன?  என் மனம் அப்பொழுதே தீர்மானித்துக் கொண்டது. யோசனையில் மெதுவாய் நடந்து கொண்டிருந்தேன்.              தெருத் திரும்பும் இடத்தின் டூ வீலர் ஒர்க் ஷாப்பிலிருந்து ஒரு பழைய அர்த்தமுள்ள பாடல் காற்றில் மிதந்து வந்து...மனதை இதமாக்கியது...                                                      எளியோரைத் தாழ்த்தி /  வலியோரை வாழ்த்தும் / உலகே உன் செயல்தான் மாறாதா?           வீட்டுக்குள் காலடி வைத்ததும் சொன்னேன்.                                          முதல்ல அயர்ன்காரர் வந்தார்...இப்போ கடலை வண்டிக்காரனா? எதிர்த்த வீட்டுக்காரர் இந்தக் கார் ஷெட்டுக்கு ஆயிரம் ரூபா மாத வாடகை தர்றேன்...காரை நிறுத்திக்கிறேன்னார்...மாட்டேன்னுட்டீங்க.. அவர் வேண்டாம்...இவாள்லாம் வேணுமா? .உங்க இஷ்டம்...என்னவோ பண்ணுங்க...உங்களை யார் என்ன கேட்க முடியும்?-                          என் பத்னி திருமதி லீலா-கிருஷ்ணனின் புலம்பல் என்னை ஆக்ரோஷமாய் எதிர்கொண்டது.                                                                                                                     -----------------------------------------------------------

                                                                     
                                                                                                                                                                                                                   

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...