சிறுகதை “தேவைகள்”
நா வரலை
– என்றாள் மல்லிகா. அருகே
படுத்திருக்கும் மாமியாருக்கும், இரண்டு
மைத்துனிகளுக்கும் கேட்டு விடக்
கூடாது என்று கிசுகிசுப்பாய்ச் சொன்னாள். அடுத்த
அறையில் அவன் அப்பாவும்,
தம்பியும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
மனோகரன் அவள் கையைப்
பிடித்து இழுத்தான். வளையல்
சத்தம் கேட்டுவிடக் கூடாதே
என்று பயமாயிருந்தது அவளுக்கு.
அம்மா லேசாக அசைந்தது
போலிருந்தது. என்ன முரட்டுத்தனம்...!
விடுங்க...இப்டியா இழுக்கிறது?
அசிங்கமாயில்ல...?...-கையை உதறினாள்.
அவளுக்குத் துவண்டு வந்தது.
இருட்டிலும் அவன் கண்களின்
கோபம் தெரிந்தது. அந்த
இன்னொன்று....அதையும் பார்த்தாள்
அவள்.
! எதுவும் அந்தக் கணம்
பொருட்டில்லை அவனுக்கு.
கடுமையாகச் சிணுங்கினாள். அது
அவனுக்குப் புரிந்திருக்குமா தெரியவில்லை.
மாடி வீடு. தெருக்
கம்பத்தின் விளக்கு வெளிச்சம்
மாடிப் பகுதியில் விழாது.
சாம்பல் படர்ந்திருப்பது போல்
ஒரு மெல்லிய நிழல்
கலந்த ஒளி மேலே பரவி
வந்திருந்தது. வானத்தின் வெளிச்சமாகக்
கூட இருக்கலாம் என்று
தோன்றியது. ஆட்கள் படுத்திருப்பதை அந்த
ஒளியிலேயே உணர முடியும். அம்மா
புரண்டு மறுபுறமாய்த் திரும்பிக்
கொண்டாள். தெரிந்துதான் செய்கிறாளோ? அடுத்த
அறையில் உடம்பு வலி
தாளாமல் தூக்கத்தில் அப்பா
அரற்றினார். அவனுக்குள் பதற்றம் பற்றிக்
கொண்டது.
உள் பக்கமா
எதுக்குப் படுக்கிறே? நாலு
பேரைத்தாண்டி உன்னை நான்
கூப்பிடமாடேன்னு நினைச்சிட்டியா? எத்தனைவாட்டி
சொல்றது? அறிவில்ல...?-அவன்
கேட்டிருக்கிறான். .ஏற்கனவே சொன்னதுதான்.
இருக்கும் இட வசதி பொறுத்துதானே
படுக்க முடியும்? தனியே
இருக்கையில் நிச்சயம் எரிந்து விழுவான்.
எத்தனைவாட்டி சொன்னாலும் தெரியாதா?
பொட்டக் கழுத...!
கொஞ்சம் பெரிய
சமையலறை அது. அங்குதான்
பெண்கள் படுத்துக் கொள்வார்கள்.
அடுத்தாற்போல் ஒரு சின்ன அறை. அதற்கு
அடுத்து ஒரு சிறு பால்கனி.
அதில் ஒராள் நடக்கலாம்.ஒரடி
அகலம்தான். பேருக்கு அது. இவ்வளவுதான் வீடு.
சமையலறையை ஒட்டி மாடிப்படி.
கழிப்பறையெல்லாம் கீழேதான். மொத்தம்
ஏழு வீடுகளுக்கான கழிப்பறைகள்
மூன்று மட்டுமே. அதிலும்
பெண்களுக்கென்று ஒன்றுதான். அதில்தான்
நுழையணும். இன்னொன்றில் மாறி நுழைந்து
விடக் கூடாது. எழுதாத
சட்டமாய் இருந்தது. அவசரமாய்ப்
போகும்போது காலியாயிருக்கணும்...அது
வேறு...!
வாளியில் தண்ணீர்
எடுத்துக் கொண்டு கீழேயுள்ள
வீட்டு சொந்தக்காரர் மற்றும்
வாடகைக்கு இருப்போரின் ஐந்து
வீடுகளையும் கடந்துதான் அங்கு
செல்ல வேண்டும். ஒவ்வொரு
முறையும் அப்படிச் செல்லும்போது
சிலரின் பார்வை திரும்பிப்
கொண்டேயிருக்கும். எல்லாம் இரண்டிரண்டு
அறைகள் கொண்ட வீடுகள்தான்
என்பதால் பெரும்பாலும் வெளி
வராண்டாவில்தான் ஆட்கள் அமர்ந்திருப்பார்கள்.
இரவில் படுத்து உருளுவார்கள்.
ஒரு முறைக்கு இருமுறை
கக்கூஸ் போனால் கூச்சமாக
இருக்கும். அதுவே பெரிய தண்டனை..
அவர்கள் கால்களில் தடுக்கிக்
கொள்ளாமல் கடக்க வேண்டும். ஆள் வருவதைப்
பார்த்துக் கூட மடக்கிக் கொள்ள
மாட்டார்கள். திடீரென்று
புரண்டால் போச்சு...!
எல்லோரும் அந்தப் பகுதியில் இருந்த வெள்ளைக்காரன் காலத்து மில்லில் வேலை பார்ப்பவர்கள். பெரும்பாலான வீடுகள்
அந்தத் தொழிலாளர்களை உள்ளடக்கியதுதான்.
பல ஆண்டுகளாய்க் குடியிருப்பவர்கள். ஷிப்ட்
முறையில் பணிக்குச் சென்று
திரும்புபவர்கள். அதனால் அந்தப்
பகுதியே உறங்கா வீடுகளாய்த்
தென்படும். ஆள் நடமாட்டம் இருந்துகொண்டேயிருக்கும். எங்காவது பேச்சுச் சத்தம்
கேட்டுக் கொண்டேயிருக்கும்.
இரவு இரண்டு மணிக்குக்
கூட எழுந்து மில்
வெளிக்கு சென்று சூடாய்
சூப் குடிக்கலாம். வாழைப்பழம்
சாப்பிடலாம். பெரும்பாலும் பச்சைப்பழம்தான் இருக்கும். வாய்
வழியாயும், மூக்கு வழியாயும் உள்
செல்லும் பஞ்சுத் துகள்கள்
காலையில் வெளிக்கிருக்கையில் சிக்கலின்றி
வெளியேற வேண்டும். ஒரு
மில்லுக்கு ஐம்பது தள்ளுவண்டிகள்
நிற்கும். அத்தனையும் விற்றுப் போகும்தான்.
அதை நம்பியிருக்கும் சிறு
வியாபாரிகள்.
யாரும் எதுவும்
இன்றுவரை சொன்னதில்லைதான். இவளுக்குத்தான்
ஒருமாதிரியாய் இருந்தது. ஒருவேளை
ஆள் நகர்ந்த பின்னால் முனகிக்
கொள்வார்களோ என்னவோ? சதா
வாளியைத் தூக்கிக்கிட்டு வந்திருதுகளே...?
சாப்பிடுறதத்தனையும் வெளிக்கிருந்தே கழிச்சிடுவாக
போல்ருக்கு....- என்று சொல்லிச்
சிரித்துக் கொண்டது ஒரு
நாள் மாடியேறி வந்தபோது
லேசாகக் காதில் விழுந்தது.
ஒவ்வொரு வீட்டுக்குமான வாசல்
பகுதி மழை மறைப்பு
ஆஸ்பெஸ்டாஸ் கூரை
மாடியேறுகையில் அவர்களைக் காண்பிக்காது.
பேச்சு மட்டும் காதில்
விழும். தெருக் கம்பத்தின் விளக்கு
வெளிச்சம் லேசாக அங்கு
பரவியிருக்கும். அவரவர் வீட்டு
வாசல் லைட்டை எட்டரைக்கே
அணைத்து விடுவார்கள். ஒரு
பூரான், தேள் என்று நகர்ந்தாலும்
தெரியாது. அதில்தான் பயமின்றிப் படுத்து
உருளுகிறார்கள். காற்றோட்டம் அந்த
உழைப்பாளிகளை அடித்துப் போட்டதுபோல்
தூங்க வைத்து விடும்.
கூசிக் குறுகினாள்
மல்லிகா. பொழுது விடிந்தால் அதுவே
அவளுக்கு ஒரு பெரும் பிரச்னையாக
இருந்தது. காலையில் மட்டும் இரண்டு
மூன்று தரம் வெளியே
செல்ல வேண்டியிருந்தது. ஒரே
தடவையில் வயிற்றை சுத்தம்
செய்தோம் என்று இல்லை.
உடல் வாகு அப்படி.
நினைத்து நினைத்து வருகிறது. தூக்கத்திலிருந்து எழும்போதே
கலக்கி விடுகிறதுதான். அந்த
நேரம் பார்த்து வாளியில்
தண்ணீர் நிரப்பிக் கொண்டு
விடுவிடுவென்று அடக்க முடியாமல்
ஓடும்போது அங்கே கக்கூசில்
யாரேனும் போய் கதவை
அடைத்துக் கொண்டிருப்பார்கள். வெளியே
காத்து நிற்கப் படு
கூச்சமாயும், பயமாயும் இருக்கும்.
பொம்பிளை அப்படி நிற்பது
கேலிக்குரியதாகும். வாளியை அடையாளத்திற்கு
வைத்து விட்டும் வர
முடியாது. சமயங்களில் கால் தட்டி
தண்ணீர் கவிழ்ந்து வலி
தாள முடியாமல் கீழ்
வீட்டுப் பெரியம்மா...திட்டிக்
கொண்டே போனது இவளுக்கு
இன்னும் மறக்கவில்லைதான். எழுந்தவுடன்
ஒரு முறை என்றால்,
பிறகு காபி குடித்து
விட்டு இன்னொரு முறை.
காபி குடிக்கிறமட்டும் பொறுக்க
மாட்டியா? அதுக்குள்ளயும் வாளியத் தூக்கிட்டு
ஓடணுமா? மனோகரனின் அம்மாவே கேட்டிருக்கிறாள்.
மனசு வெட்கப்பட்டு மறுகும். அடக்க
முடியாமல் ஓடுவாள். பிறகு
வேலைக்குப் புறப்படும் முன்
ஒரு முறை. அது
சந்தேகத்துக்கு.
அவள் வேலை
பார்க்கும் இடத்தில் கழிப்பறையில்
கால் வைக்க முடியாது.
தண்ணீர் பஞ்சத்தில் நாறித்
தொலையும். தவிர்க்க முடியாமல் போய்
வந்தால் கால் கழுவத்
தண்ணீர் இருக்காது. பாட்டிலில்
கொண்டு வந்த தண்ணீரில்
ஒரு வாய் கொப்பளித்து
விட்டு, அப்படியே போய் உட்கார்ந்து
கொள்வாள். என்ன வியாதி தொத்தப்
போகுதோ? என்று மனசு பதறும்.
கூட வேலை பார்க்கும்
பெண்கள் சர்வ சகஜமாக
இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றுக்கு
நெருக்காதா? என்று நினைப்பாள் இவள்.
அருகிலுள்ள செப்டிக் டாங்க்
மாசத்துக்கு ஒரு முறை என்று
நிரம்பிப் போகும். இதுக்கு
எம்புட்டுத்தான் தண்டம் அழுகிறது?
என்று லாரிக்குச் சொல்லி முதலாளி கத்துவார்.
எல்லார் வீடும் ரெண்டு
கி.மீ.க்கு
உட்பட்டுத்தான் இருக்கும். ஆனால்
வீட்டுக்குச் சென்று இருந்துவிட்டு
வர அனுமதிக்க மாட்டார். வாசலில்
செக்யூரிட்டி முறுக்கிய மீசையோடு
கர்ண கடூரமாக நிற்பான்.
அவன் கவனத்தை எவ்விதத்திலும்
சிதைக்க முடியாது. ஆள்
நகர்ந்தால் சொல்லி விடுவான்.
கொத்தடிமை நிலைதான்.
பின்னலாடை நிறுவனம் ஒன்றில்
வேலை செய்கிறாள் அவள்.
சிறிய நிறுவனம்தான். ரொம்பவும்
இடுக்குப் பிடித்த இடத்தில்
முப்பது நாற்பது பேர்
உட்கார்ந்து இடைவிடாது துணி
தைத்துக் கொண்டிருப்பார்கள். அத்தனையும்
பெண்கள். அவர்களை நிர்வகிப்பதுவும் இரண்டு
வயதான பெண்மணிகள். அருகில்
வந்து விரட்டிக் கொண்டேயிருப்பார்கள்.
எத்தனை முடிச்சிருக்கே? என்று
கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். கத்திரி
ஓடும் லாவகம் வித்தியாகமாய்
இருந்தால் காதுக்கு எட்டிவிடும்.
சட்டென்று போய் நின்று
எச்சரிப்பார்கள். ஏதோ நினைப்பில் துணியை
வெட்டி கோணல் மாணலாகிவிட்டால் அந்தத் துணிக்காசு பிடித்தமாகிப்
போகும். நகரிலுள்ள
எந்தெந்தக் கடைகளுக்கு சரக்கு
சென்றாக வேண்டும் என்பதை
முடிவு செய்து ஒவ்வொரு
கடைக்குமான எண்ணிக்கையை இவர்கள்
தலையில் வம்படியாகக் கட்டி
சக்கையாய்ப் பிழிந்துதான்
வீட்டுக்கு அனுப்புவார்கள்.. பணியாட்களுக்குப் போதிய அவகாசம் அளித்து
வேலை வாங்குதல் என்பது கிடையாது. தலையை அப்படி இப்படித் திருப்ப
இயலாது. ரெண்டு வார்த்தை பொழுது போக்காய்ப்
பேசி விட முடியாது. தலையில் குட்டு விழும். அத்தனையும் பொறுத்துக் கொண்டு தையல் வேலைக்கு வர பெண்கள் இருந்துகொண்டேதான்
இருந்தார்கள். இரண்டு பக்கமும் தேவை இருந்தது.
தையல் பயிற்சி தர என்று ஒரு வீடு அமர்ந்தியிருந்தார் முதலாளி.
அதைக் கற்றுக் கொள்ள ஆட்கள் வரிசையில் நின்றார்கள். அப்ரென்டிஸ்
என்று மிகக் குறைந்த தொகையே கொடுக்கப்பட்டது. அங்கு ஒரு நாளுக்கு இத்தனை துணி என்று
தைத்துக் காண்பித்தால்தான் நிறுவனத்திற்கே அனுப்புவார்கள். அந்தக் கஷ்டமெல்லாம் முடித்துதான்
வேலையை ஸ்திரமாக்கிக் கொண்டிருந்தாள் மல்லிகா. மற்றவர்கள் செய்து முடிப்பதைவிட சற்று
எண்ணிக்கை கூடவே இருக்கும் இவள் கணக்கில். அதனால் நிலைத்தாள். ஆள விடுங்கடா சாமிகளா...என்று
சொல்லாமல் கொள்ளாமல் ஓடினவர்கள்தான் அதிகம். வீட்டுக்கு
வந்து நிம்மதியாய்ச் சாப்பிடக்
கூடப் பொறுமை இருக்காது.
உடம்பு அப்படியொரு தவிப்பில்
உருகும். என்னைப் படுக்கையில் கிடத்து என்று மனசு கெஞ்சும்.
மனோகரனின் தாய் நல்லவள்.
நீ கண்டிப்பா வேலைக்குப் போகத்தான்
வேணுமா? என்றுதான் கேட்டாள். ஏம்மா...அந்தக்
காசு வந்தா வீட்டுக்கு
ஆகும்ல...போகட்டும்மா....வீட்டுல
உட்கார்ந்து என்ன செய்யப்
போறா?
என்று விட்டான் மனோகரன்.
தையல் மிஷினை விட்டு
இப்படி அப்படி அசையாத
அந்த வேலை அவள்
உடம்பைச் சிதிலமாக்கிக் கொண்டிருந்தது.
இளம் வயசிற்கான எந்த
உற்சாகமோ, துடிப்போ அவளிடம் காணப்படவில்லை.
கசங்கிய துணியாய் வந்து
விழுந்து அடுத்த கணம்
கண் செருகி விடும். அவள் ஸ்திதி
அறியாதவன் மனோகரன். அவனுக்கு
அவன் எண்ணம்தான்...நோக்கம்தான்.
அதில் அவளுக்கு மிகுந்த
ஆதங்கம். தன் சங்கடங்களை அறியாதவனாய்,
ஆறுதலாய்க் கேட்கக் கூடத்
தெரியாதவனாய் இருக்கிறானே என்று
மனதுக்குள் புழுங்குவாள்.
எப்பப் பார்த்தாலும் கக்கூஸ்தானா?
எதுக்கு இப்டி அடிக்கடி
போயிட்டிருக்கே? இந்தத் தீனிக்கே
இப்டிப் போனீன்னா...இன்னும்
வசதி வாய்ப்போட இருந்திட்டாலும்...?
– வீட்டில் எல்லோர் முன்னிலையிலும்தான் மனோகரன் சத்தம் போட்டான்
அவளை.
தனியாகச் சொல்ல வேண்டியவைகளைத்
தனியாகத்தான் சொல்ல வேண்டும்...இப்படித்
தம்பி தங்கைகள் முன்
கேலி செய்வது போல் கண்டிப்பது போல் சொன்னால் அவர்களுக்கு
அண்ணியின் மேல் மதிப்பு
மரியாதை எப்படி வரும் என்கிற சூட்சுமமெல்லாம் அவனுக்குத் தெரியாது. தெரியாதா
அல்லது அவனது அதிகாரத்தை
எல்லோர் முன்னிலும் காண்பிக்க
வேண்டுமென்று தன்னைத் திட்டித் தீர்க்கிறானா என்று சந்தேகமாகத்தான் இருந்தது
மல்லிகாவிற்கு. செய்யும் அதிகாரத்தை,
அவனோடு தனியே இருக்கும்போது
காட்டினால் போதாதா? என்று
நினைத்தாள் அவள்.
வீட்டிலிருப்பவர்கள் முன் எப்போதும்
அவன் அவளிடம் சுமுகமாகப்
பேசியதேயில்லை. ஏன் அப்படி என்று
நினைத்தாள். பெண்டாட்டிதாசன் என்று நினைத்து
விடுவார்களோ என்று கூச்சம்
கொள்கிறானோ? என்று தோன்றியது. பல
முறை கவனித்து விட்டாள்தான்.
அவன் அம்மாவிடமோ அல்லது
தம்பி, தங்கைகளிடமோ சகஜமாகப் பேசுவதுபோல்
அவளிடம் என்றுமே பேசியதில்லை.
தனியாக இருக்கும்போதாவது அப்படிப்
பேசி நடந்து கொண்டிருக்கிறானா என்று யோசித்தும், இல்லை
என்கிற பதில்தான் கிடைத்தது.
தன்னைப் பிடிக்கவில்லையோ என்றும் அடிக்கடி சந்தேகம் வந்தது.
இரவில் அவன் நடந்து
கொள்ளுகிற முறை? அதுவும்
கொடூரம்தான். இரையைக் கவ்விக்
குதற நினைக்கும் கொடிய
மிருகம் எப்படி இயங்குமோ
அப்படி ஆக்ரோஷமாக இருந்தது அவனது
அணுகுமுறை. ஒரு பூவைப் போல்
ரசித்து, முகர்ந்து மென்மையாய் ருசிக்க
வேண்டும்...அதில் அவள்பாலான
தன் பேரன்பை அவளுக்கு
உணர்த்த வேண்டும், நானே
உனக்கு என்றுமான காவலன்
என்று அந்த நெருக்கத்தில்
நிலை நிறுத்த வேண்டும்
என்பதான மென்மைப் போக்கெல்லாம்
அவனிடம் இல்லை. அதை எதிர்பார்த்தாள் அவள்.
விநோதமாய்ச் சில சமயம் பேசுவான்.
அவளோடு சேர்ந்திருக்கும்போது ஏதேனும்
ஒரு நடிகையைச் சொல்லுவான்.
அவளை மாதிரி ஒருவாட்டி
சிரியேன் என்பான். என்னானாலும்
அவ தொடை மாதிரி வராதுடீ....! என்று சொல்லிக்கொண்டே
அவள் காலைத் தூக்கித்
தன் மேல் போட்டு
இறுக்குவான். தனியாய்த் தூங்குகையில் நடிகைகளைக் கனவு கண்டு
கொண்டிருப்பானோ என்று தோன்றும். அவன் குப்புறக் கிடக்கும் கிடப்பு அந்த மாதிரி எண்ணங்களைத்
தோற்றுவிக்கும்.
கூட மில்லில் வேலை
பார்க்கும் செவ்வந்தியை அடிக்கடி
சொல்லுவான். அவ ஸ்டெரச்சரப் பார்த்திட்டே
இருக்கலாம்...என்று மயக்கமாய்
ஏங்குவான்.
அந்த வார்த்தையைக் எங்கிருந்து
கண்டு பிடித்தான் தெரியாது.
தன்னை அணுகும்போது வேறு
எவளையாவதுபற்றி அவன் என்றும்
பேசாமல் இருந்ததில்லை என்பதே
அவளுக்குப் பெரிய ஆதங்கமாய்
இருந்தது. போதுமான கவர்ச்சி தன்னிடம் இல்லையோ என்று மறுகினாள். அவன்
அணைப்பிற்கும், புரட்டலுக்கும், இறுக்கலுக்கும் திருப்தியான பெண்ணாய்த் தான் இல்லையே
என்று வருந்தினாள். உடம்பத் தொடைச்சிட்டு வந்து படு...நாறித் தொலையுது...என்று கறுவுவான்.
துணி மாற்றிக் கொண்டுதான் அவனோடு போய்ப் படுப்பாள்.
மனோ அப்பாதான் அவனுக்கும்
மில்லில் வேலை வாங்கிக்
கொடுத்தார். ஆரம்பத்தில் பஞ்சுத் துகள்களுக்கு
நடுவே வேலை செய்வது
அவனுக்கு ஒத்துக் கொள்ளவில்லை.
மூச்சிழுப்பு வந்தது. சரியாக
வேலைக்குப் போகாமல் இருத்தல்,
சுருட்டி மடக்கிப் படுத்துக்
கொள்ளல், சொல்லாமல் கொள்ளாமல் எங்காவது வெளியூர்
போய், நண்பர்களோடு சுற்றிவிட்டு சாவகாசமாய் வருதல் என்று அடம்
பிடித்தவன்தான். ஒரு வட்டத்துக்குள் அவனைச் சிக்க வைக்க அவன் தந்தை
பெரும்பாடு பட்டார். ஒரு கட்டத்தில் தாயார்
சொல்லுக்குத்தான் அடங்கினான். குடும்பத்தின் நிலைமையை
எடுத்துச் சொல்லிப் பணிய
வைத்தது அவன் அம்மாதான்.
அவன் சொல்லித்தான் அவளை
அவன் அப்பா போய்ப்
பார்த்து முடிவு செய்தார்.
கல்யாணத்தின்போதெல்லாம் கொஞ்சம் பூசினாற்போலத்தான் இருந்தாள் மல்லிகா. அடியே...உன் சிரிப்புலதாண்டி
விழுந்தேன்... என்று சொன்னான் மனோகரன். என்ன
காரணம் என்றே தெரியவில்லை
அவள் உடம்பு அதற்குப்பின்
ஏறவேயில்லை. சரியாவே சாப்பிடமாட்டா...வேல...வேலன்னு
ஓடிடுவா...கொஞ்சம் பார்த்துக்குங்க...என்று
மல்லிகாவின் தாய் கண்
கலங்கியபோது....மனோகரனின் அம்மா...நானும்
ரெண்டு பெண்டுகள வச்சிருக்கிறவதான்...ஒண்ணும்
கவலைப்படாதீங்க...என் மக
மாதிரிப் பார்த்துக்கிடுறேன்....என்று
சமாதானம் சொன்னாள். வாயால்தான்
வழிய விட முடிந்தது. வீட்டில்
வசதி வாய்ப்பா பெருகிக்
கிடக்கிறது? இருக்கும் குச்சிலுக்குள் ஏழு பேர் கும்மியடிக்க வேண்டியிருந்தது.
கால் வீசி நடந்தோம் என்பதில்லை. எதிலாவது இடித்துக் கொண்டேயிருந்தது. ஒதுக்கி வைக்க
இடமில்லை என்று பிளாஸ்டிக் தண்ணீர் குடங்கள் நடைபாதை ஓரமாய் வரிசை கட்டியிருந்தன. கவனிக்காமல்
நுழைந்தால் இடிதான். அப்படி எத்தனையோ முறை தடுக்கிக் கொண்டிருக்கிறாள் மல்லிகா. அந்த
வீட்டில் பாதகமின்றி நடப்பதற்கே தனிப் பயிற்சி தேவையாயிருந்தது.
உங்க ரெண்டுபேர்
சம்பளத்துலதாம்மா இந்தக் குடும்பத்துல உள்ள ஏழுபேரும் சாப்பிடணும்...என்று சொன்னாள்
மல்லிகாவிடம். மனோகரனின் அப்பா ஓய்வு பெற்றபோது வந்த சேமநலநிதிப் பணம், சம்பள சேமிப்புப்
பணிக்கொடைப் பணம் என்று ஏதோ கொஞ்சத்தை வங்கியில்
டெபாசிட் பண்ணியிருந்தார்கள். அதிலிருந்து வட்டி வந்து கொண்டிருந்தது. ஆனால் அடிக்கடி
நெஞ்சு வலி, முழங்கால் மூட்டு வலி என்று ஆஸ்பத்திரிக்குக் கொடுக்கவும் சரியாய் இருந்தது.
நான் கருத்தா சேர்த்த பணமெல்லாம் இப்டிக் கரியாப் போகுதே என்று புலம்பினார். இதுக்குத்தான்
வீட்டுல முடங்கமாட்டேன்னு சொன்னேன்...நெல்பேட்ட கோடவுனுக்கு வேலைக்குப் போறேன்னு சொன்னேன்.
வேண்டாம்னுட்டீங்க....இப்ப தண்டமா உட்கார்ந்து செறிக்கமாட்டாமத் தின்னுட்டு வெட்டிக்கு
உட்கார்ந்திட்டிருக்கேன்.....என்று கண்ணீர் விட்டார்..
பலவற்றையும் போட்டு மனதில்
புழுங்கிக் கொண்டிருந்தாள் மல்லிகா.
வெளியில் சொல்ல முடியாததும்,
ஆதரவற்ற நிலையும், அப்படிச்
சொல்லப் புகுந்தால் என்ன
நடக்குமோ என்கிற பயமும்,
அவளுக்கு பலவிதமான உடல்
உபாதைகளை விடாது ஏற்படுத்திக்
கொண்டிருந்தன. எண்ணமும் மனசும்
நடுங்கிக் கொண்டேயிருந்தால் எப்படித்தான்
சுதந்திரமாய் இயங்குவது? நம்பிக்
கை பிடித்த நாயகனே நழுவி
நழுவி நிற்கும்போது எந்த
ஆதரவை எதிர்நோக்கி அவள்
தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்வாள்?
வீட்டுக்கு
வீடு அம்மிக்கல் போட்டு
டங்கு டங்கென்று இடித்து
அரைக்கக் கூடாது என்று
பொதுவாக இரண்டே இரண்டு
அம்மிகள் மட்டும் கிடந்தன அங்கே. ஓரமாய் நீளவாக்கில்
வாய்க்கால் போல் கோடிழுத்து இருபக்க சரிவாகக் கட்டிவிடப்பட்டுள்ள இடத்தில் பாலம்
போல் சுவற்றோடு சுவராக
அந்த அம்மிக்கல்கள் பதிக்கப்பட்டுக் குந்தியிருக்கும். அழுக்குத்
தண்ணீரும் எச்சிலும் துப்பலும்
வாய்க்கால் வழி ஓடிக் கொண்டிருக்கையில்தான் குழம்புக்கோ, சட்டினிக்கோ
அரைக்க வேண்டியிருக்கும். அந்த
அசிங்கமெல்லாம் பார்க்க முடியாது
அங்கே. அதுபாட்டுக்கு அது...இதுபாட்டுக்கு
இது...!
கீழ் வீட்டிலிருப்போர் அனைவரும்
பல் விளக்குவது, கார் கார்
என்று உமிழ்வது, முகம்
கைகால் கழுவுவது, ஏன்
அவசரத்துக்கு வெட்ட வெளியில் குளிப்பது என்று
கூட அனைத்தும் அங்கேதான்
நடந்தது. ஆண்கள்
குளிக்கையில் வாளித் தண்ணீரோடு கடப்பது இவளைக் கூனிக் குறுக்கி விடும். வந்து தொலைக்கிறதே..சனியன்...!
மூன்று கழிவறைகளையொட்டி இரண்டே இரண்டு
குளியலறைகள்..! அதில் பெண்கள்தான் போய்க்
குளிப்பார்கள். கீழ் வீட்டு ஆண்கள் பூராவும் வெட்ட வெளிதான். பொந்தாம் பொசுக்கென்று
துண்டைக் கட்டிக் கொண்டு குளித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி இப்படித் திரும்பும்போது
ஈரத் துண்டோடு தெரியத்தான் செய்யும். பொருட்படுத்தமாட்டார்கள். அன்ட்ராயர், ஜட்டியோடு
ஆனந்தமாய்ப் போடும் குளியல் வெயில் சூட்டோடு இதமாய்ப் பரிமளிக்கும். அந்தப் பகுதியிலேயே
இதெல்லாம் சகஜம். வீட்டிற்குள் துளியும் இடம் இல்லாதவர்கள், வாசலில் ஒரு கல்லைப் போட்டு,
அதன் மீது அமர்ந்து எனக்கென்ன என்று ஜலக்கரீடை செய்வார்கள். பொம்பிளைகள் வெட்ட வெளியில்
தங்கள் புருஷனுக்கு முதுகு தேய்த்து விடும்
காட்சி அன்றாடம் அந்தப் பகுதியில் சர்வ சகஜம்.
புழக்கம் யார்
கண்ணிலும் படாத மாடி
வீடு என்பது ஒன்றுதான்
அங்கு உள்ள ஒரே வசதி. அத்தோடு
இட நெருக்கடி ஏற்படுகையில் சட்டென்று
மொட்டை மாடிக்குச் சென்று
உட்கார்ந்து கொள்ளலாம். சுள்ளென்று
வெயில் தகிக்கும் காலங்களில்
அதுவும் நடவாது. இரவில்தான்
வசதி.
அந்த மொட்டை மாடிக்கு
யாரும் வரமாட்டார்கள். காரணம்
மாடிவீட்டின் அடுப்படி வழியாக
அந்தப் படிக்கட்டு செல்வதுதான்.
அதன்படி பார்த்தால் மாடியில்
குடியிருப்பவர்களுக்குத்தான் மொட்டை மாடியும்
என்றாகிவிடுகிறதே...! படியை வெளியே
விட்டிருந்தால் அடுப்படி சுருங்கிப்
போயிருக்கும். அதனாலேயே நூறு
ரூபாய் வாடகை அதிகம்.
ஆனால் எப்போதேனும் மாடிக்கு
வரும் கீழ் வீட்டுக்காரர்களிடம் அதைச் சொல்ல முடியாது.
அப்படிச் சொல்லி, சண்டை
வந்து, அதனாலேயே வீட்டைக் காலி
செய்து கொண்டு போனவர்கள்தான்
இதற்கு முன்பு இருந்தவர்கள்.
கீழ் வீட்டுக்காரர்களுக்கும் மாடியில்
உரிமையுண்டு என்ற விபரம்
முன்பு காலி செய்து
கொண்டு போனவர்கள் வழி
தெரிய வந்தது.
அங்க ஏன்
போறீங்க...? அந்தம்மா பெரிய
அடாவடியாச்சே...! என்றுதான் முதல்
தகவல் அறிக்கை. ஆனாலும்
கட்டுபடியாகும் வாடகை என்று
தேடும்போது சில பிரச்னைகள் பெரிதாய்த்
தோன்றுவதில்லை! அதென்னவோ இவர்கள் குடி வந்ததிலிருந்து யாரும்
மாடிப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை.
நா போறேன்....வந்திரணும்.....
–குரலில் ஒரு கடூரம். சத்தமின்றி
அவன் மாடி ஏறுவது
அந்த இருட்டுக்குள் தெரிந்தது.
இவள் எழுந்திரிக்க மனமின்றிப்
படுத்திருந்தாள். அந்த இடத்தில்
அவர்களோடு படுத்திருக்கும் கதகதப்பு
மேலே போனால் அவளுக்குக்
கிடைக்காது. கோடைகாலம்தான் என்றாலும், பாதி
இரவுக்கு மேல் ஒரு
குளிர் காற்று வீச
ஆரம்பிக்கும். அந்தக் காற்று
இவளுக்கு ஒத்துக் கொள்வதில்லை.
மூக்குக்குள் நெரு நெருவென்று
நிமிண்டிக் கொண்டேயிருக்கும். மறுநாள்
அது தும்மலாக மாறும்
அபாயமுண்டு. தடுமம் வந்து விடக் கூடாதே என்று பயந்து சாவாள் மல்லிகா. காட்டுக்
கத்துக் கத்துவான்..
நச்சு நச்சென்று தும்மல்
போட்டால் அவனுக்குப் பிடிக்காது.
ஒரு கர்சீப்பை வச்சிக்கிட்டுத் தும்மித் தொலைய
வேண்டிதானே?
இப்டியா வீடு பூராவும்
சாரலடிக்கிற மாதிரிப்
பொழிவே? வாய்
நாத்தம் பரவலா அடிக்குது...என்று
ஒரு நாள் அவன்
சொல்லி வைக்க தங்கைகள்
இருவரும் பொத்திக் கொண்டு
சிரித்தார்கள். அதற்குப் பிறகாவது
அவனின் அம்மாதிரியான பேச்சுக்களை
நிறுத்திக் கொண்டிருக்கலாம். வீட்டிலிருப்பவர்கள் முன் தன் மனைவியைக்
கண்டிப்பதோ, கேலி செய்வதோ கூடாது,
அப்படியிருந்தால் அவர்களுக்கு அவள்
மீது மதிப்பு
மரியாதை இருக்காது என்பதை அவன்
உணர வேண்டும். ஆனால் அவனுக்கு அது தெரிவதில்லை.
அவன் எதிர்பார்க்கும்போதெல்லாம் அலங்காரப் பதுமையாய் அவன் முன் நின்றாக வேண்டும். உடலுறவுக்கு
என்று தவிர வேறு எவ்வகையிலும் அவன் அவளை அணுகியதில்லை. பெண்டாட்டி அதற்கு மட்டும்தான்
என்பதில் தீர்மானமாய் இருந்தான். மற்றப்படி அவளது தேவைகளை அவளே உணர்ந்து சொல்லி, அதற்கு
நாலு முறை சலித்து, கோவித்து ஒதுங்கி, பிறகுதான் சரி வா...போவோம் என்பான்.அப்படியாவது
செய்கிறானே என்றுதான் இருந்தது இவளுக்கு.
சத்தமின்றி எழுந்தாள். யார்
மீதும் கால் பட்டு விடாமல் புடவையை இழுத்துக் கொண்டு தாண்டினாள். மேலே போவதற்கு முன்
ஒரு முறை பாத்ரூம் போய்விட்டு வந்து விடுவோம் என்று தயாராயிருந்த வாளித் தண்ணீரை எடுத்துக்
கொண்டு இறங்கினாள். சிறுநீர் கழிக்க என்றாலும் தண்ணீரை அடித்து ஊற்றாமல் வர முடியாதே...!
நாற்றம் வாசல் வரை அடிக்குமே...! வழியெல்லாம் படுத்திருக்கிறார்களே? அந்த நடு இரவு நெருங்கும் நேரத்தில் அப்படி கக்கூஸ்
நோக்கிப் போவது ரொம்பவும் சங்கடமாயிருந்தது. அமைதியைக் கிழித்துக் கொண்டு சத்தம் வந்தால்
கோபப்படுவார்கள். தூக்கத்தில் உளறுவதுபோல் என்னவாவது கெட்ட வார்த்தையைப் பேசித் திட்டுவார்கள்.
பதிலுக்குக் கோபித்துக் கொள்ள முடியாது. வழியில் கால்மாடு, தலைமாடாக ஆட்கள் படுத்திருந்தார்கள்.
எப்போது தூக்கத்தில் புரளுவார்கள் என்று சொல்ல முடியாது என்கிற ஜாக்கிரதையில், யார்
மீதும் கால் பட்டு விடக் கூடாதே என்கிற பயத்தில் தாண்டித் தாண்டிப் போய் கழிவறையை அடைந்தபோது,
அவளுக்கு திடீரென்று வயிற்றைக் கலக்கியது. ஒன்றுக்கு வந்த இடத்தில் ரெண்டுக்குப் போகணும்
போல உறுத்தியது. கதவைச் சாத்தியபோது அந்தத் தகரக் கதவு கரகரவென்று சத்தமிட்டது. அழுத்தி
உள் கொக்கியைப் போட்டாள். அதற்குக் கூட சக்தியில்லை அவளிடம். கையும் காலும் வெலெ வெலவென்று
வந்தது.
சனியம்பிடிச்ச
வயிறு....வெறுமே பட்டினி போட்டாத்தான் சரிப்படும் போல்ருக்கு...- என்னவோ சுருட்டிக்
கொண்டதுபோல் வயிற்றைப் பிசைந்தது. சூடு பிடித்துக் கொண்டதுபோல் ஒன்றுக்கு வர மறுத்தது.
மாத ஒதுக்கலுக்கு நாளாகி விட்டதோ என்று அப்போதுதான் நினைப்பு வந்தது அவளுக்கு. வந்த
நேரம் உடம்பில் இருந்த பதட்டத்தில் அது நடந்தே விட்டது. அதற்கென்ன நேரம் காலமா குறித்து
வைத்திருக்கிறது?
எப்பச் சொன்னேன்...எப்ப வர்ற
நீ...? என்றான் அவன். உனக்காக முழிச்சிக்கிட்டு தவங்கிடக்கணுமா நான்..? .என்று தொடர்ந்து.
சொல்லிக்கொண்டே அவள் கையைப் பிடித்துச் சடாரென்று இழுத்துக் கீழே சாய்த்தான். மாத விலக்குப்
பெற்று, மாடி வந்து இருட்டோடு இருட்டாக அதற்கான
பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டு அவள் மொட்டை மாடியை அடைய, உடலும் மனசும் தளர்ந்து கிடந்த
அந்தக் கணத்தில் அதை அறியாத அவனின் செய்கை அவளுக்கு அசாத்திய எரிச்சலையும், கோபத்தையும்
கிளர்த்தியது. அவளை இழுத்து இறுக்கி அவன் அணைத்த அந்தக் கணத்தில், தன்னைக் கட்டுப்படுத்திக்
கொண்டு இதுவே நல்ல சந்தர்ப்பம் என்று முடிவுசெய்து அவள் சொன்னாள்..
”ஏங்க....நாம
ஒரு தனி வீடு பார்த்திட்டுப் போயிடலாமே....இங்க எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்குது தெனமும்....”
அவள் சொன்னதைக்
காதில் வாங்கியதாகவே தெரியாமல், களவி மயக்கத்தில் கண்கள் செருக... அவன் அவளை மேலும்
இறுக்கி நெருக்கினான்...! ...அதையும் பொறுத்துக் கொண்டு, அவன் மூச்சுக் காற்று அவள்
மேல் படர அனிச்சமாய் அவள் குழைந்து தழையும் முன் மேலும் உண்டான தன்னுணர்வில் மீண்டும்
அவன் காதுக்கு நெருங்கி அதைத் துல்லியமாய்ச் சொன்னாள்.
“இன்னைக்கு
எதுவும் வேண்டாங்க....!” -----------------------------------------------
.