02 அக்டோபர் 2026



“கடலில் தவழும் அலைகள்” - குமுதம் மாலைமதி அக்டோபர் 15-31 இதழில் என் நாவல்




 

 

                                                     சிறுகதை           கணையாழி அக்டோபர் 2026  பிரசுரம்  

             “உள் மன ஓலம்”





      ஆட்டோவில் வந்து இறங்கியவுடனேயே சேதுவின் மனதிற்குள் அவனையறியாமல் ஒரு பயம் புகுந்து கொண்டது. சத்தம் கேட்டு யாரேனும் வீடுகளிலிருந்து எட்டிப் பார்ப்பார்களோ என்று தோன்ற பார்வையை எங்கும் செலுத்தக் கூடாது என்று அறிவு எச்சரித்தது. வீதியை நீள நெடுகப் பார்க்க வேண்டுமென்றுதான் ஆசை. அகன்று, நீண்டு கிடக்கும் தெரு அப்படியேதான் இருக்கிறதா அல்லது ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றனவா என்று அறிய விழைந்தது. தலை நிமிர்ந்தால் பார்வை விழும்.. எதிர்ப்படும் முகங்களுக்கு செயற்கையாகப் புன்னகைக்க வேண்டியிருக்கும். ஒரு வார்த்தை, ரெண்டு வார்த்தையேனும் எண்ணிப் பேச வேண்டியிருக்கும். பிறகு அது வளர்ந்துவிடவும் கூடும். அதன் திசைகள் மாறக் கூடும். விரும்பாதனவற்றை வலிய உள்ளே இழுத்து வந்து நிறுத்தி அதற்காகச் சிந்தித்து வார்த்தைகளை எண்ணி வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

      அதற்கு இது நேரமில்லை…முதலில் உள்ளே போகும் வழியைப் பார்…என்று எச்சரிக்கையுணர்வு எழும்பியது. வெறுமே கொண்டி போட்டுச் சாத்தியிருக்கும் இரும்புக் கதவைச் சத்தமின்றித் திறந்தான். எதற்காகத் தன் வீட்டிலேயே இப்படித் திருடன்போல் நுழைய வேண்டும்? எந்தக் குற்ற உணர்வு வந்து உறுத்துகிறது? தன் மனதிற்குத் தானே பயப்படுகிறோமா அல்லது ஊருக்கா? செய்யும் செயலில் எப்படி இந்த செயற்கைத் தன்மை வந்து புகுந்து கொள்கிறது? குற்றமுள்ள நெஞ்சு…சுலபமாய்ச் சொல்லப்போனால் அதுதானே?

       அந்தச் சத்தம் கேட்டுக் கூட யாரேனும் வந்து எட்டிப் பார்க்கக் கூடும். ஒவ்வொரு வீட்டின் வாசல் கதவுகளுக்கென்று ஒரு ஓசை உண்டு. பழகிப் போன அந்தச் சத்தம் அந்தத் தெருவின் வீடுகளில் உள்ளவர்களுக்கும் பழக்கமானதாகவே இருக்கக் கூடும். ஆனால் மூன்று நான்கு மாதங்கள் ஆன பொழுதில் அது மறந்திருக்கவும் கூடும். நினைவில் பதிந்திருந்தால்  இந்தச் சத்தம் இந்த வீட்டின் வாசல் கதவிலிருந்துதான் என்று காதில் கேட்ட மாத்திரத்திலேயே மனதில் தோன்றி விடலாம். சொல்லிவிடலாம். யார் வந்திருப்பது என்று எட்டிப் பார்க்கும் உந்துதலை ஏற்படுத்தலாம். அது விரும்பத்தகாத வரவேற்பை உண்டுபண்ணவும் செய்யலாம்.

      வெறுமே திரும்பிப் பார்ப்பதே விபரீதமாய் அமைந்து விட்டால்? எதிராளியின் கண்கள் பேசுகின்றன. உதட்டசைவுகள் ஒன்றை உணர்த்துகின்றன…முகபாவங்கள் விரும்பத்தக்க, விரும்பத்தகாத ஏதோவொன்றை முன் வைக்கின்றன. வந்ததும் வராததுமாக எதற்கு இந்தப் பிரச்னை? தான் எந்நேரமும் வரக்கூடும் என்று காத்திருந்தார்களா அவர்கள்? அல்லது பூட்டிக் கிடக்கும் அந்த வீட்டிற்குத் தாங்கள்தான் பாதுகாப்பு என்கிற உதவும் நோக்கில் எட்டிப் பார்ப்பார்களா? ஏதேனும் ஒன்று அந்நியமாய் நடந்தேறினால் அதைக் கண்ணுறும் வகையில் பொழுதாவது போகுமே என்று எதிர்நோக்குகிறார்களா? தவறுகள் செய்து தப்பித்தவனுக்கு அல்லது மனசாட்சி அற்றவனுக்கு நாமென்ன பாதுகாப்பளிப்பது?

      அமைதியும் இறுக்கமும் கொண்ட மனிதன் தவறு செய்ய மாட்டான் என்று எங்கேனும் எழுதி வைத்திருக்கிறதா என்ன? அதுவே அவன் நேர்மையானவன், ஒழுக்கமானவன், கண்டிப்பானவன் என்பனவற்றிற்கான போர்வையாக அமைகிறதோ? செயற்கையாய் முகமூடி அணியாத இயற்கை தந்த உருவவெளியிலேயே தன்னை வேஷதாரியாக்கிக் கொள்பவர்கள்! உங்களையெல்லாம் கணிப்பதும், பொருட்படுத்தாமல் இருப்பதும், உங்களைத் தாண்டிச் செல்வதும் எனக்கு ஒரு வஷயமேயில்லை என்கிற மாதிரியான கடந்து போகுதல்!

      மனித மனம் எதை எப்போது, எவ்விடம், எங்ஙனம் எதிர்நோக்கும் என்று யார் கண்டது? அவரவர் வாழ்க்கை அவரவருக்கு. ஆனாலும் அடுத்தவனின் பிரச்னைகளில் தலையை நுழைப்பதில் ஒரு இனம்புரியா இன்பம். அதனால் எதிராளியின் மனம் நோகுமே, புண்படுமே, நம்பியிருப்பவர்கள் அற்றவர்களாகிவிடக் கூடுமே என்று எந்த மனமாவது பிரித்து நோக்குமா எனில் அது தீவிரமாய் யோசிக்க வேண்டிய விஷயமாகத்தான் இருக்கும்.

      தான் அங்கு வந்திருப்பதே மன அமைதியைத் தேடி. தனிமையைத் நாடி….மனிதன் தனியாளாக இருந்தால் மட்டும் இது சாத்தியமாவதில்லை. அவன் மனம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இணக்கமான சிந்தனைகள் தலையெடுக்க வேண்டும். தனிமையில் இருக்கத் தெரியாதவன் ஒரு மனிதனாய் இருக்க முடியாது என்பது சித்தாந்தம். அதுபோல் தனிமையை விரும்பாதவனும் மனித ஜாதியிலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டியவன்தான். ஒருவன் தனிமையில் இருக்க அவன் தன்னந்தனியனாய் இருக்கத்தான் வேண்டுமா? மனிதச் சூழல் நிறைந்த இடத்தில் ஒருவனால் தனிமையி்ல் இருக்க முடியாதா என்ன? அது மனம் சார்ந்த பக்குவமாயிற்றே?

      சராசரிகளின் நடுவே நான் சாமான்யனில்லை என்று எத்தனையோ முறை தான் இருந்திருக்கிறோமே? குடும்ப உறவுகளின் மத்தியிலேயே தனக்கு அதுதானே பெயர்? அது ஒரு உம்மணாம்மூஞ்சி…! பாமரர்களின் பாராட்டு அது. அவர்களால் அந்தளவுக்குத்தான் நினைத்துப் பார்க்க ஏலும். ஆனால் அவர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு உலகம் உள்ளது என்பதை அவர்கள் அறிய வாய்ப்பில்லை. அதற்கு அவர்கள் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளவில்லை. தன் எண்ண அலைகளின் ஓட்டத்தை அவர்களால் எட்ட முடியாது. எட்டிக் கூடப் பார்க்க ஏலாது.

      ஏன் இப்படி எதையோ பறிகொடுத்தவன் போலக் கிடக்கே? எங்கயாவது எழுந்திரிச்சுப் போயிட்டு வா…நாலு மனுஷங்களப் பாரு….ஊரும் உலகமும் எப்படி இயங்குதுன்னு உத்து நோக்கு. முனை மழுங்கிப் போயிடும் இப்படி இருந்தேன்னா?

      அப்பா கூடத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறார். காலங்கள் எவ்வளவோ ஓடிப் போயின. ஆனால் கருத்துக்களில் மாற்றமில்லை. தனி மனிதனின் ஜீவித சிந்தனைகளைக் கலைக்க எந்த ஜீவனாலும் முடியாது. அவன் அவனாக இருக்கிறான். அவளோடு அவன் அந்த வீட்டில்தான் இருந்தான். அவள் இன்னும் இருக்கிறாள். அவள் ஓடியாடித் திரிந்த வீடு அது. அதை அந்தத் தெரு பார்த்திருக்கிறது. பொறாமை கொண்டிருக்கிறது. திட்டியிருக்கிறது. குடும்பம் நடத்துற லட்சணமா இது? என்று காது கேட்கக் கேலி செய்திருக்கிறது. பொறாமை கொண்டிருக்கிறது. புழுங்கியிருக்கிறது. என்னமோ ஊரிலில்லாத அப்சரசக் கொண்டாந்த மாதிரிதான். எப்பப்பாரு கெக்கே…பிக்கே…கெக்கே…பிக்கே..என்று ஒரு கூத்தும் கும்மாளமும்…பக்கத்து வீடுகள்ல இருக்கிறவுகளெல்லாம் மனுஷாளாத் தெரில போல்ருக்கு…? அவுகளெல்லாம் கண்ணியமா…கட்டுப்பாடா…சத்தமில்லாம இருக்கிறதெல்லாம் இவுக காதுக்கு எட்டாதோ? பார்வைக்குப் படாதோ? சின்னப் பிள்ளைங்கல்லாம் என்னா இப்டி?ன்னு அண்ணாந்து பார்க்குது…வெட்கங்கெட்டவுக…!

      வலது பக்க வீட்டின் மீது பார்வை போனது. அவர்கள்தான் இன்னமும் இருக்கிறார்களா? சத்தமேயில்லையே? ஒருவேளை தான் வந்திருப்பது தெரிந்து தன்னை ஒளித்துக் கொண்டார்களோ? இவனப் பார்த்தா இன்னிக்குப் பூராவும் வௌங்காது…! சனிப்பய…!! வெளியூருக்குப் போனவன் அப்டியே ஒரே போக்காப் போக வேண்டிதானே…இந்த வீட்டையும் வித்துத் தொலைய வேண்டிதானே? இவன யாரு இங்க அழைச்சாங்க…?-அவர்கள் இவனைத் திட்டுகிறார்கள். சபிக்கிறார்கள். விரலைச் சொடுக்கித் தன் உயிரின் துடிப்பை நிறுத்த வேண்டுகிறார்கள். காலங்கள் மாறலாம். மனிதர்கள் மாறுவதில்லை. இயற்கைகள் மாறி விடுகின்றன. மனித மனங்கள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுழல்கின்றன.

      யாரேனும் அறிந்திருப்பார்களோ? என்றேனும் அந்தக் காட்சிகளைக் கண்ணுற்றிருப்பார்களோ? மதி மயங்கிப் பேசிய அந்த வார்த்தைகள், உளறல்கள் அவர்கள் காதிலும் விழுந்திருக்குமோ? அதைக் கொண்டு அது இப்படித்தான், இம்மாதிரித்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்திருப்பார்களோ?

      அதான் அந்தப் போலீஸ் அந்த அர்த்த ராத்திரில வந்து கதவத் தட்டினானா? அவன்பாட்டுக்கு உள்ளே நுழைஞ்சு ஆளுக உறங்குதா…இல்ல என்ன பண்ணுதுன்னு பார்வையை வீசிட்டு வெளியேறினானே…அது சரியா? சரிதானா? அப்படி முகாந்திரமுமில்லாம நடு ராத்திரில ஒரு போலீஸ் அப்படி ஒரு வீட்டுக்குள்ள தலை நுழைக்க முடியுமா? என்ன அநியாயம்னு அன்னைக்குத் தெரு சொல்லிச்சே…! இன்னிக்கு உங்களுக்கு…நாளைக்கு எங்களுக்குமில்ல? என்று பதை பதைத்ததே!

      விரலில் சிக்கிய கொண்டியை விடுவித்து கைகளை உதறிக் கொண்டான். கதவைத் திறந்து வராண்டாவிற்குள் நுழைந்ததும் அரண்டு  போய் ஓடிய அந்த முரட்டுப் பூனையைக் கண்டு ஒரு கணம் விதிர்த்துப் போய் நின்றான். அது ஓடிய ஓட்டமும் கணத்தில் மறைந்த தன்மையும் ஏதோ தவறிலிருந்து தப்பிப்பதற்கான செயலாய்த் தோன்றி இவனைச் சுற்று முற்றும் நோக்க வைத்த போது குறுகிய திண்ணையில் அந்த அசிங்கம் கண்ணில் பட்டது. செத்த எலி. காய்ந்து கருகி…தூசி ஏறி….ஒருவித துர் நாற்றத்தை இவன் மூக்கிற்குள் செலுத்தியது. அந்த திண்ணையே  கடுமையான துர்நாற்றத்தில் ஊறித் திளைத்திருப்பதாய்த் தோன்றியது. இவ்வளவு நேரம் இந்த நாற்றம் ஏன் உணரப்படவில்லை? புலன்களின் உணர்வை மீறிய சிந்தனை ஏன் என்னை அப்படிக் கொண்டு தள்ளுகிறது?

      நல்ல வரவேற்பு…! சட்டென்று மனசு வெறுத்துப் போனது. இன்னின்ன இடங்களுக்கு இவையிவைதான் அடையாளங்கள் என்று எங்கோ, எதுவோ…எதனாலோ நிர்ணயிக்கப்பட்டு அவற்றிற்கான காரியங்கள் தடையின்றி நிறைவேற்றப்பட்டு விடுகின்றனவா? வீட்டுப் பிராணிகள் களங்கங்களை எளிதாய்ப் புரிந்து கொண்டு மண்டையில் ஏற்றிக் கொள்ளும் திறன் படைத்தவையோ? ஊர் நாறாமல் போனாலும், தெரு சிரிக்காமல் போனாலும் இந்தத் திண்ணையாவது, வீடாவது நாற்றமெடுத்துத் தொலையட்டும் என்று கொண்டு வந்து போட்டுள்ளதோ? உன் செயலுக்கு இந்த வரவேற்புப் போதும்…இடமும் மனமும் சுத்தமில்லையானால் இம்மாதிிரித்தான் எவரும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உன் மனசாட்சியின் அடையாளங்கள் அவை. உன்னை உன் தவற்றிலிருந்து விடுவிப்பதற்காக அல்ல. உன்னைக் குத்திக் கிழிப்பதற்காக. அதில் சிதைந்துதான் அடுத்த தவற்றிற்கு நீ அடியெடுத்து வைக்காமல் இருந்தாக வேண்டும்.

      அரண்டவன் கண்ணுக்கு…..முதுமொழி மனதில் தோன்றி சலிப்புற வைத்தது. மனசாட்சியே போதும் ஒருவனுக்கான தண்டனையாய். ஆனால் அதை உணராமல் திரிபவனுக்குத்தான் உலகத்து நிர்ணயங்கள். காலம் எத்தனை கடந்தாலும் அது ககன வெளியில் கரைந்து விடவா போகிறது? அது நிகழ்ந்த இடம், பொழுது, அதற்கான சூழல், அது தந்த தைரியம், அதனிலும் துடிப்பான முனைப்பு, அடக்க முடியாக் கனல்,…அந்தக் கணத்தில் மனதில் புகைந்து கொண்டிருந்த பழிவாங்கும் கொதிப்பு, வன்மம், அதை நிறைவேற்றி எதிராளியை வெற்றி கொள்ளும் பழி…மனிதனின் அறிவு எப்பொழுது வெறி கொள்ளும், எப்பொழுது எங்ஙனம் குழம்பித் தவிக்கும்…எவ்வகையில் தன் வன்மத்தைத் தீர்த்துக் கொள்ளும் என்று எதுவும் நிர்ணயிக்க இயலாது. சூழலின் அடிமை அவன். அதற்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவன்.

      கிரில் கேட்டைத் திறந்தான். மாதங்களாக மூடிக் கிடந்த அவை சிக்கிக்கொண்டு திறக்க மறுத்தன. இடது புறம் பிடித்துக் கொண்டு வலது கதவைக் காலால் ஒரு நெம்பு நெம்பினான். சடசடவென்று ஆடிக்கொண்டே அது திறந்து நகர்ந்தது. அந்தச் சத்தம் இவன் விரும்பத் தகாததாக இருந்தது. கோபத்தில், எரிச்சலில் உதைத்தது போலிருந்தது. எங்கேனும் எதிர்ப்புறத்தில் தலைகள் எட்டிப் பார்க்கலாம். நோக்கி விட்டு உள்ளே இழுத்துக் கொள்ளலாம். தன் செயலை அறிந்து எக்காளமிட்டுச் சிரித்து வரவேற்கிறதோ? திரும்பவும் வந்திட்டியா?

      ஆம்மா…வந்துதான் இருக்கேன்… என்ன இப்ப? என்று கேட்க வேண்டும்போல் தோன்றியது. சொந்த வீட்டிற்குள் அந்நியனைப் போல நுழைய வேண்டியிருக்கிறது. சகஜ பாவம் எங்கும் வியாபித்திரா நிலை. எட்டிப் பார்க்கும் தலைகளெல்லாம் வாழ்க்கையில் தவறு செய்யாதவைகளா? புனிதர்களா? அல்லது தங்களது தவறுகளை இந்த உலகிற்குக் காட்டிக் கொள்ளாதவர்களா? ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கதை நிச்சயமாய் உண்டுதான். ஒவ்வொரு ஜீவனுக்கும் இரண்டு முகங்கள் இருக்கும்தான். ஒன்று இந்த உலகம் அறிந்தது. இன்னொன்று அது அதற்கு மட்டுமே தெரிந்தது. மற்றவர் அறியாதது.

      மறைத்துத்தான் பார்க்கிறது உயிர்கள். மறைத்துத்தான் பேசுகிறது மற்றோரிடம். மறைத்துத்தான் செயல்படுகிறது. மறைத்துத்தான் நடமாடுகின்றன. ஒவ்வொரு ஜீவனும் அவற்றோடுதான் வாழ்ந்து கழித்துக் கொண்டிருக்கின்றன.

      கதவைத் திறந்து உறாலுக்குள் நுழைந்தான். அதென்ன வாசனை? மூக்கு அதிர வைத்தது. வாசம் பிடித்து வாசம் பிடித்துதானே மூளை கெட்டது. கருத்துக் குருடானது அந்தக் கணம்தானே? புதிய வாசனைகளை நுகர, அல்லது சுவைக்க, பரவி அனுபவிக்க அறிவும் செயலும் துடித்துத் துடித்துத்தானே கெட்டுச் சீரழிந்தது. அதை உதறித் தள்ள அல்லது விட்டு விலக அல்லது புறக்கணிக்க ஏன் மனம் வரவில்லை? திட்டமிட்டு வீசிய வலையில் சுலபமாக விழுந்து விட்டேனா? ப்பூ…நீ இவ்வளவுதானா? என்று மனதுக்குள் சிரித்துக் கெக்கலியிட்டிருப்பாளோ? கொண்டாட்ட மனநிலையில் இருந்த அந்தப் பொழுது எதையும் துணிந்து ஏற்கும் தைரியத்தை வழங்கியிருந்ததா? எதைத் தன் மனது எதிர்பார்த்திருந்ததோ அல்லது எது தன்  மனையாளிடம் வளமாய்த் தென்படவில்லையோ அதை உணர்ந்து அவள் வைத்த குறியா அது?

      மூன்றாவது நபர் முன்னால் முதல் நபரைப் பழித்துப் பேசாதே? அது கேட்போரை இழி குணத்திற்கு, இழிச் செயல்பாட்டிற்கு அணைத்துச் செல்லும். காய் நகர்த்த வைக்கும். களி கொள்ளச் செய்யும். அது ஏன் தோன்றவில்லை அன்று? நாற்பது வயதில் நாய்க்குணம்! அது படுத்திய பாடு!  எதையும் மனதில் கொள்ளாமல் அகலக் கால் வைக்க இழுத்துச் சென்று விட்டது. அதை அனுபவிக்க மனம் அவாவி நின்றது. அங்கே அசிங்கமோ, அழுக்கோ கண்ணுக்கும் மனதுக்கும் ஏன் அறிவுக்குமே தென்படவில்லை. உறுத்தவுமில்லை. பயப்படவும் வைக்கவில்லை. அது அவளுக்கும் வேண்டியிருந்ததே! வலையை வீசிச் சுறாவைச் சுலபமாய் இழுத்து விட்டாள்.

      அந்த இடத்தில் கால்கள் சென்று நின்றன. அவளை முகர்ந்த மூலை ஸ்தலம் அது. மூல ஸ்தலம். அங்கு நின்றுதான் அவள் அவனை பக்கவாட்டில் நோக்கினாள். அந்தச் செய்தியைச் சொன்னாள். காத்திருக்கும்போது கடந்து போகலாமா? அது பாபமி்ல்லையா? என்றாள். வாய் திறந்தா சொன்னாள். தன் போதைப் பார்வையால் உணர்த்தினாள். அந்த விழி தந்த மயக்கம். தக்க ஏற்பாடுகளோடு நின்றாளே? இரு பக்க ஜன்னல்களையும் மூடி விட்டால் அது போன்ற பாதுகாப்பான இடம் வேறு இருக்க முடியாது என்று அவள் சிற்றறிவு அல்ல…அல்ல…பேரறிவு சொல்லியிருக்கிறது.

               அப்படியானால் திட்டத்தோடுதான் வந்தாளா? வாழ்ந்த வாழ்க்கை, வாழும் வாழ்க்கை அவளுக்குப் போதுமானதாக இல்லையா? வறுமை அவளை அப்படிப் பிடித்துத் தள்ளிவிட்டதோ? அப்படியும் அந்த தேகம் அதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லையே? தள தளத்து நின்ற ஒருத்தியின் மதர்ப்பான எண்ணங்களின் அதீதமான வெளிப்பாடாகத்தானே அன்று அவள் தன் அம்பினை எய்தாள். ஒரே வீச்சில் தான் அப்படி விழுவோம் என்று எதிர்பார்த்திருக்க மாட்டாள்.

      இந்த விஷயத்தில் நான் மிகவும் பலவீனன். எண்ணச் சுழல்களில் சிக்கித் தவிப்பவன். ஏங்கிக் கிடந்து வீங்கித் திரிபவன். ஏன் அப்படி இருந்தேன்? எந்த அலட்சியம் தன்னை அப்படித் தாண்ட வைத்தது? எந்த வன்மம எல்லைக் கோட்டைக் கடந்து நின்றது?யாரைப் பழிவாங்க? யாரை வெற்றி கொள்ள? எதை அறிந்து தெளிய?

      கோடு தாண்டியவன்!    தன் அசுரத் தன்மைக்குப் படியாத கொண்டவளைப் பழிவாங்கத் துணிந்து கை நீட்டியவன். நரம்புகளின் நர்த்தனம் நாளை நடப்பதைக் கண்கொள்ளாமல் கருத்திலிருந்து தூக்கி வீசி, காதறுந்த ஊசியாய்க் ககனத்தில் பறக்கத் துடித்தவன், பறந்தவன். யாரும் அறியவில்லை என்கிற மமதையில் தவறுக்கு மேல் தவறுகள் செய்து தன்னைத் தானே வெற்றி கொண்டதாய் முனை மழுங்கிய ஊசியை முதுகில் ஏற்றிக் கொண்டவன். இன்றும் அந்த ஊசி இவனை உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. எண்ணங்கள் தடம் மாறும்போது கீறிக் கீறி அவனை எச்சரிக்கைப் படுத்துகிறது.

      போதும் விட்டு விடு…! காலத்தால் மறைந்தது அப்படியே காணாமல் போகட்டும். மீண்டும் அதைக் கீறிக் கிளறி நீயே ககனத்தில் தெறிக்க விடாதே…! உனக்கு நீயே சாட்சி…உனக்கு நீயேதான் நீதிபதி. உன்னை மீறி இங்கே எதுவும் எழுவதற்கில்லை. உன் மனச் சுடுகாட்டில் அதைப் போட்டுப் புதைத்து விடு..அல்லது எரித்து விடு.! மீண்டும் எழாது அந்த மண் மேட்டில் ஒரு தீபத்தை ஏற்று. செய்தவை எல்லாம் தங்கிவிட்டால் இந்த தேகம் ஒரு நாளும் தாங்காது.

      உறால் கதவைப் படாரென்று அடைத்தான். வெளியே நோக்கினான். எந்தச் சலனமும் இல்லை என்கிற உணர்வு மனதுக்குள் ஒரு நிம்மதியைத் தோற்றுவித்தது. கண்கள் குளமாகி நெஞ்சம் அடைத்து சித்தம் தடுமாற விரித்துக் கிடந்த படுக்கையில் வீழ்ந்தான். படிந்திருந்த தூசி பறந்துபட்டுப் புகை மண்டலமாய்க் கிளம்பி மேலெழும்ப…அழுக்கும் கசடும் நிறைந்த வாழ்க்கையின் மாறாத் தடம் மாறிய தடங்கள் விடாது துரத்தி விரட்டியடிக்கின்றனவே என்கிற எண்ணம் விஸ்வரூபிக்க ஊரும் வீதியும் தான் உள்ளே கிடப்பதை உணராது கொள்ளும் இயல்பான  இயக்கத்தை  எண்ணி அவன் மனம் ஏங்கித் தவித்து விம்ம ஆரம்பித்தது.

                               ------------------------------------

 


தாய்வீடு இதழின் கதைகள் பிரதி மாதமும் 15-ம் தேதிக்குப் பின் யூ.ட்யூப்பில்



 

 



ஆர்.சூடாமணியின் சிறுகதைகள் மற்றும் சார்வாகனின் கவிதைகள்
--------------------------------