சிறுகதை தினமணி கதிர் 29.12.2024 பிரசுரம்
“நெத்தியடி”
எதையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? –
எதிர்பாராத இந்தக் கேள்வியால் துணுக்குற்றுப் போனார் நித்யானந்தம். இதுவரை அவனிடமிருந்து
இப்படி ஒரு கேள்வி வந்ததில்லை.
கேள்வியே வந்ததில்லை. அதுதான் உண்மை. தன்னிடம் உள்ள மரியாதை என்று நினைத்துக் கொண்டார்.
தன் வயதுக்கு உரிய கௌரவம் கொடுத்து அவன் அமைதி காக்கிறான் என்று மனதுக்குள் பெருமைப்
பட்டுக் கொண்டிருந்தார் நித்யா. இதுதான் முதல் முறை.ரொம்பவும் சலித்துப் போய்க் கூறியது
போலிருந்தது.
எப்பொழுதும் அவர் லிமிட் தாண்டிப் போனதில்லை.
அபூர்வமாய்த்தான் ஏதாவது சொல்வார். அவன் லிமிட்
இதுதானோ? இப்போது இந்தக் கேள்வி வந்து விழுந்து
விட்டது. பொறுமை இழந்துதான் கேட்கிறான் போலும். உறாலிலிருந்து கேட்கும் கேள்வி. சத்தமாக, அறைக்குள் இருக்கும் தனக்குக் கேட்பதுபோல்.
முகத்துக்கு முகம் வந்து நின்று கேட்கத் தயக்கம்.
கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வருவானோ என்னவோ?
அவன் பெண்டாட்டிக்கும் காதில் விழட்டும்
என்றா? அட…அவன் அம்மாவும் அங்கேதானே இருக்கிறாள்? சுபாவுக்கும் இதில் ஒப்புதல் இருக்கலாம்.
சந்தேகம் வந்தது இவருக்கு.
என்னடா இப்டிக் கேட்கிறே? உங்கப்பாவையே
எதிர்த்துப் பேச ஆரம்பிச்சிட்டியா? – இதெல்லாம் சினிமாவில்தான் வரும். அதுவும் பழைய
சினிமாவில். இன்றைய சினிமா என்ன அப்படியா இருக்கிறது? அதன் அங்க லட்சணமே வேறு.
என்னப்பா சொல்றே? – அறையில் அமர்ந்தமேனிக்கே
கேள்வியை வீசினார். வந்து பதில் சொல்லட்டுமே…நானென்ன
எழுந்து அங்கு போவது?
எந்த எதிர்வினையும் இல்லை. காதில் விழுந்ததா
இல்லையா? அவளுக்குமா விழவில்லை? உங்கப்பா என்னமோ கேட்கிறார் பாரு? என்று உசுப்பி விட
மாட்டாளா? பதிலாக அவள் வந்து நின்றாள்.
எதையாவது சொல்லி வைக்காதீங்க…நம்மளை மாதிரியே
இருப்பாங்களா அவங்களும்? …எல்லாம் நாளடைவுல சரியாப் போகும்….! – என்றாள் சுபா. அதையும் சத்தமில்லாமல் பதவாகமாகத்தான் பகன்றாள்.
அப்படி அட்ஜஸ்ட் ஆகிறாளாம்! ரெண்டு பக்கமும் சமன் செய்கிறாளாம்…!
அவளும் அவன் பெண்டாட்டிக்குப் பயப்படுகிறாளா
அல்லது எதற்கு அநாவசியச் சண்டை என்று நினைக்கிறாளா?
நான் சுபாவின் முகத்தையே பார்த்தேன். எனக்கு
நீ சொல்லித் தர்றியா? என்பதுபோல. பிறகு கேட்டேன்.
போன இ.பி. பில் எவ்வளவு தெரியும்ல? பதிமூணாயிரம்…அதுவும்
ஒன்றரை மாசக் கணக்குக்குத்தான் எடுத்திருக்கான். ஏண்டீ…ராத்திரிதான் ஏ.சி. ஃபுல்லா
ஓடுதுன்னா பகல்லயுமா போட்டுக்குவாங்க…? நீயும் நானும் இந்த அறைல ஒரு மணி நேரத்துக்கு
மேலே போட்டதில்லையே…அணைச்சிடுவமே…? பிறகு ஃபேன்தானே ஓடும்? இப்படிப் பகல்லயும் போட்டு எரிச்சா… கட்டுபடியாகுமா?
கொஞ்சமாச்சும் சிக்கனம் வேண்டாம்? இதச் சொன்னா தப்பா?
இப்பல்லாம் வசதிதான் முக்கியம். சிக்கனம்
ரெண்டாம் பட்சம்தான்… அவுங்க சம்பாதிக்கிறாங்க குடுக்கறாங்க…நமக்கென்ன…வந்தது? கண்டுக்காம
இருக்கப் பழகுங்க….அதத்தான் அவன் இப்படிச் சொல்றான்…எதாச்சும் சொல்லிட்டேயிருப்பியான்னா
என்னா அர்த்தம்? எரிச்சல் பட்டுட்டான்னு அர்த்தம். ஏற்கனவே நீங்க சொன்னதெல்லாம் நினைச்சித்தான்
இப்ப இப்படிச் சொல்றான். அடுத்தாப்ல சண்டைதான். அதுக்கு இடம் கொடுக்காதீங்க…புரிஞ்சிதா?
இதுவரைக்கும் அவன் இப்படிக் கேட்டதில்லை…இப்பத்தான்
வாயைத் திறந்திருக்கான்…-இதை அவர் சொன்னதும் அறைக் கதவைச் சாத்தினாள் சுபா.
எதுக்குச் சாத்துறே? அவனுக்கென்ன பயமா?
நீ வேணா உன் பையனுக்குப் பயப்படு….உன் மருமகளுக்குப் பயப்படு…நான் ஏன் பயப்படணும்?
திற கதவை…-சற்றுச் சத்தமாகவே சொன்னார் நித்யானந்தம்.
வாயப் பொத்துங்க…பண்ணின ராஜ்ஜியமெல்லாம்
போதும்…சிவனேன்னு இருக்க மாட்டாம….எதையாச்சும் தொண தொணன்னு….
நித்யா டென்ஷனானார். நீ முதல்ல வெளிய போ…நான் பேசிக்கிறேன். அவன்ட்ட…! சொல்ல வேண்டியதைச் சொன்னாத்தானே அவங்களுக்குத் தெரியும்?
அனுபவப்பட்டவங்களா? புதுசுதானே…நாமதானே சொல்லிக் கொடுக்கணும்…நல்லது சொன்னாத் தப்பா?
தடுக்க வர்றே? கதவைச் சாத்துறே? என்னைத் தனிமைப்படுத்துறியா? நான் என்ன இந்த வீட்டுல தண்டத்துக்கா உட்கார்ந்திருக்கேன்…?
என் பென்ஷன் காசைக் கொடுத்துட்டுத்தாண்டி சோத்துல கை வைக்கிறேன். வெட்டின்னு நினைச்சியா?கூட
இருக்கிறது நல்லது கெட்டது சொல்றதுக்குத்தான்…அதுவும் கூடாதுன்னா அப்ப எதுக்கு சேர்ந்து
இருக்கணும்…?
கதவு தட்டும் சத்தம் கேட்டது. பேச்சு நின்றது.
தலையைக் குனிந்தவாறே வெளியேறினாள் சுபா.
என்னப்பா பிரச்னை? – அலுத்துக்கொண்டே கேட்டான்
கண்ணன்.
ஒரு பிரச்னையுமில்ல…போய் உன் வேலையைப்
பாரு….-கோபமாய்ச் சொன்னார் நித்யானந்தம்.
செலவெல்லாம் நான் பார்த்துக்கிறேம்ப்பா…நீ
எதுக்குத் தலையைக் குடுக்கறே? சொல்றேன் கேளு…அவளும் நானும் சேர்ந்து பொதுவா ஒரு எஸ்.பி.
அக்கவுன்ட் ஓப்பன் பண்ணியிருக்கோம்…அதுலர்ந்துதான் வீட்டுச் செலவுக்குக் கொடுக்கிறேன்.
இ.பி.கட்டுறேன். சிலது கொஞ்சம் முன்னப் பின்ன
ஆகத்தான் செய்யும்…வீட்டுலர்ந்து வேல பார்க்கிறோமில்லியா? ஆன் லைன் மீட்டிங்னா கதவச்
சாத்திக்க வேண்டிர்க்கு…அப்போ வியர்த்து வடியுது…ஏ.சி.போட்டுத்தான் ஆகணும். இல்லன்னா
பீஸ்ஃபுல்லா வேல பார்க்க முடியாது. நானும் அங்கதான உட்கார்ந்து என் வேலையைப் பார்க்கிறேன்…ஆகையினால…
போதும்…இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டாம்.
– சட்டென்று தடுத்தார் நித்யா. கண்ணனின் முகம்
சுருங்கியது. வெளியேறினான். நல்லவேளை கதவை டம்-மென்று சாத்தவில்லை. அடுத்தடுத்து அது
வரும் போலிருக்கிறது. வெள்ளம் படிப்படியாத்தானே மேலேறும்?
வீடு தனது நிர்வாகத்தில் இருந்தபோது
இப்படி இல்லை. இப்போது எவ்வளவோ மாறிவிட்டது. படிப்படியாக எல்லாமும் கைநழுவி அல்லது
கை கழுவிப் போயிற்று அவன் கல்யாணத்திற்குப்
பிறகு. இவரும் சுமைகள் குறைந்தால் பரவாயில்லை என்றுதானே நினைத்தார். உடம்பும் மனசும் தளர்ந்தால் செயலும் தளர்ந்துதானே
போகும்?
முன்பெல்லாம் இவர்தான் போய் காய்கறிகள்
வாங்கி வருவார். டூ வீலரில்தான் போவார். வருவார். ஒரு கடையில் விலை ஜாஸ்தி என்று உணர்ந்தால்
அடுத்த கடைக்குச் சலிக்காமல் போய் விசாரிப்பார்.
பொருட்காட்சி மாதிரிப் பெரிய பெரிய கடைகளாகத் திறந்திருக்கிறார்கள். எரிய விட்டிருக்கும்
பலபடியான கலர் கலர் விளக்குகள், ஃபேன்கள், காய் எடுக்கக் கூடைகள், பைகள், அங்கங்கே
கண்காணிக்க அல்லது எடுத்துத்தர நிற்கும் வேலையாட்கள் என்று எல்லாத்துக்கும் சேர்த்துதானே விலை வைப்பான்?
ஆனாலும் பெரிய எடுப்புதான் என்று நினைத்துக் கொள்வார். தன் வசதிக்கெல்லாம் இம்புட்டுப் பெரிய இடம் ஆகுமா
என்று மலைப்பாய் இருக்கும். கடையின் அளவே விலையின்
அளவையும் நிர்ணயிக்கும். நடுவே நிற்கவே கூச்சமாயிருக்கும்.
நீயெல்லாம் இங்க எதுக்குய்யா இங்க வர்ற?
போய் ரோட்டோரமா கூர் கட்டி வித்திட்டிருப்பான்…அங்க போய் நில்லு…பொருத்தமாயிருக்கும்…-யாரோ
சொல்லி விரட்டுவதுபோல் உணர்ந்தார்.
அதென்னவோ இந்தச் சென்னைக்கு வந்த பிறகு
குடும்பச் செலவுகள் எல்லாமே தாறுமாறாய்ப் பிய்த்துக் கொண்டு போவதாய்த்தான் இவருக்குத்
தோன்றியது. ஒவ்வொன்றுக்கும் தூர தூரமாய்ப் போய் வருவது பெரும் மாய்ச்சலாய் இருந்தது.
போகாமலும் முடியவில்லை. போக வரச் செலவு, அங்கு ஒரு காபி, டீ குடித்தால் வீண் செலவு
(அதென்ன டீ தானா? ஊளத்தண்ணி), பிறகு சுமையைச் சுமந்துகொண்டு வருகையில் மீதிப் பணத்தைத்
திருடு கொடுக்காமல் இருக்க வேண்டிய கவனம் என்று பலமாதிரி இவருக்கு யோசனைகள். ஆனாலும்
வீட்டிற்கு அருகில் அநியாய விலை கொடுத்து வாங்க மனசு வரவில்லையே! முடியுமட்டும் அலைந்து
பார்ப்போம்…என்று கிளம்பியிருந்தார்.
தன் ஊரில் உழவர் சந்தையில் வாங்கி வரும்
பொருட்களின் அதே அளவு இங்கு டபிள் பங்கு என்று நினைத்தார். தாறுமாறான விலை வாங்கக்
கைவரவில்லை. வேடிக்கை பார்க்கத்தான் தோன்றியது. காய்கறிக் கண்காட்சி.
அங்கெல்லாம் தோட்டக் காய்கள் கிடைக்கும். விலை குறைவாய்
இருக்கும். காலைல பறிச்சதுங்கய்யா…வாங்கிட்டுப் போங்க…கல்கண்டு மாதிரி இருக்கும் என்று
அன்பொழுகச் சொல்லி தராசில் நன்றாய் விட்டு அளந்து போடுவார்கள். போதாக் குறைக்கு ஒரு
கை அள்ளி வேறு பையில் போட்டு விடுவார்கள். எலெக்ட்ரானிக் தராசில் வரும் ஸீரோவே தப்பு
என்று பிறகுதான் தெரிந்தது. கள்ளமில்லா மக்களிடம் எப்படி இந்தக் கள்ளம் புகுந்தது?
சொல்லிக் கொடுத்து மாற்றி விடுகிறார்களே? நடப்பு உலகம் காலத்தின் தேவை கருதி அவர்களையும்
நிறம் மாற்றி விட்டதோ என்று நினைத்து வருந்துவார். வெள்ளந்தி மக்கள் கள்ளந்தி ஆகிப்
போனார்கள்.
இங்குதான் எல்லாத்தையும் பரத்தி வைத்திருக்கிறார்களே…எத
வேணாலும் பார்த்துக்கோ, எடுத்துக்கோ…என்று. திசைக்கொன்றாக மூலையில் சிசிடிவி காமிராக்கள்
கவனித்துக் கொண்டிருந்தன. அட, காய்கறிக் கடைக்குக் கூடவா இது? ஒரு கடையில் பார்த்தாரே?
அப்படித் திருடி என்ன கோட்டையா கட்டப் போறாங்க?
ஆனால் ஒன்று இங்கு காய்கறிகள் எல்லாமும் செழிப்பாய்த்
தெரிகின்றன. பளபளவென்று மின்னுகின்றன. ஒரு செய்தி கேள்விப்பட்டிருந்தார். அதை நினைத்து
பயமாகவும் இருந்தது. இதென்னடா வம்பாப் போச்சு…வாங்குறதா வேண்டாமா? உடம்பக் கெடுக்கிறதுக்குன்னு
சென்னைக்கு வந்திருக்கமா? காசு கொடுத்து விஷத்த வாங்குறதா?
காய்களெல்லாம் ஆந்திரா சைடுலர்ந்துதான்
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும்…அங்க என்னைக்குப் பறிச்சது, எப்போ அவுங்க ஊர் சந்தைக்கு
வந்திச்சு, இங்கே எப்போ வருது, வந்து எவ்வளவு நாளாச்சுன்னு எவனுக்கும் தெரியாது…அதெல்லாம்
கேட்கப்படாது. உண்மையெல்லாம் சொல்ல மாட்டாங்க…மருந்தடிச்சு, மருந்தடிச்சு, காய்கள எப்பவும்
புதிசாவே வச்சிருப்பாங்க…வாடவே வாடாது. நீங்க வாங்கிட்டுப் போனீங்கன்னா அன்னிக்கு வந்த
காய்கதான்னு நினைப்பீங்க…ஆனா அது வந்து பத்து இருபது நாளுக்கு மேலாகியிருக்கும்.
கீரைகளைக் கட்டுக் கட்டா ஒரு டிரம் தண்ணில
முக்கி முக்கி எடுப்பான். கலகலன்னு பளபளன்னு மலர்ந்து சிரிக்கும். அது வெறும் தண்ணிதானான்னு
கேட்கப்படாது. கெமிக்கல் கலந்த தண்ணி. முக்கி எடுத்தா அன்னிக்குப் பூராவும் கீரை வாடவே
வாடாது. அதை வெந்து தின்னா நம்ம வயிறுதான் வாடும். வேன் வேனா நகரத்துல பல எடத்துக்கும் எக்கச் சக்கமான
கடைகளுக்கு இங்கிருந்துதான் சப்ளை…இவன் விக்கிற விலை, அவனோட டிரான்ஸ்போர்ட், ஏத்து
எறக்குக் கூலி இப்டி எல்லாமும் சேர்த்து வச்சு இன்னொரு புது விலை போட்டுத்தான் உங்க
கைக்கு வந்து சேரும். நீங்களும் தெனமும் கோயம்பேடு போய் வர முடியுமா? எவன் அலையுறதுன்னுட்டு
அங்கயேதான் வாங்கிடுவீங்க…இது எல்லாமும் போக அந்தக் காய்கறிகளைச் சமைச்சு உங்க வயித்துக்கு
எந்த பாதகமும் இல்லாமச் செமிக்கணும்…நீங்க வாழணும்….நானும் வாழணும்..எல்லா மக்களும்
வாழணும். அது தனிக் கணக்கு….!
இப்படித் தன்னோடு கூட எலெக்ட்ரிக் டிரெயினில்
காய் வாங்க வந்த தன் வயதொத்த ஒருவர் சொல்லக் கேட்டபோதுதான் இனிமேல் இப்படி எடுத்துப்
பிடித்து கோயம்பேடுக்கு அலைவதில்லை என்கிற முடிவுக்கு வந்தார் நித்யானந்தம்.
என்னவோ பெரிய சொத்தைக் கட்டிக் காப்பதுபோல்
ஆரம்பத்தில் வீராவேசமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தவர் நாளடைவில் அடங்கியே போனார். காய்கறிகள், பலசரக்கு சாமான்கள், மருந்து மாத்திரைகள்
என்று எல்லாவற்றுக்கும் இவரேதான் அலைகிறார். சில சமயங்களில் காலுக்குப் பயிற்சியாக
இருக்கட்டும் என்று நடந்தே போகிறார். ஆனால்
திரும்பி வருவதற்குள் மூத்திரம் நெருக்கி விடுகிறது. சந்து பொந்துகளில் ஒதுங்குவதற்கு
எங்கும் இடம் இல்லை. எந்தச் சந்தில் ஒதுங்கினாலும் வானுயர்ந்த அடுக்ககங்களிலிருந்து
ஒரு கண் பார்க்கிறது. செத்தேன், பிழைச்சேன்
என்று வீடு வந்து சேர வேண்டியிருக்கிறது. வேட்டியில் கசிந்து விட்டதோ என்று கூடப் பல
சமயங்களில் சந்தேகம் .. மனசு வெட்கிப் போகிறது.
பெரும் வேதனை. மனுஷனுக்கு வயசாகக் கூடாது.
ஆனால் பொட்டென்று போய்விட வேண்டும். அநாவசியமாய் இருந்து தொலைத்து கழுத்தறுக்கக் கூடாது.
அது அவரவருக்கும், கூட இருப்பவர்க்கும் வேண்டாத சிரமம். என்றாவது ஒரு நாள் நேரடியாகவோ
மறைமுகமாகவோ வார்த்தை கேட்க வேண்டி வரும். எல்லாப் பயலுகளும் பேசத்தான் செய்வான்கள்.
அப்பன், ஆத்தா ஆச்சேன்னு பார்க்க மாட்டான்கள். அவிங்ஞ வயசு அப்படி! வேலை அப்படி…! பொண்டாட்டி
முறுக்கு வேறே…!
பாரு இப்போ…! அவனே வாயத் திறக்க ஆரம்பிச்சிட்டான்.
இத்தன நாள் கமுக்கமா இருந்தவன் இப்போ மெல்ல நூல் விட்டுப் பார்க்கிறான்.
இதுக்குத்தான் அப்பவே சொல்லித் தொலைச்சேன்.
நாம போய்ச் சேருவம்டின்னு. கேட்டாளா? பொறுங்க…இப்பத்தான கல்யாணம் ஆகியிருக்கு. அவுங்களுக்கும்
ஒரு பொறுப்பு வரட்டும்…கூட இருந்து சொல்லிக் கொடுத்தாத்தான ஆச்சுன்னா…! சொல்லிக் கொடுத்ததா,
சொல்லிக் கெட்டதா?
அவுங்க உனக்கும் எனக்கும் சேர்த்துச் சொல்லிக்
கொடுப்பாங்க…நீ நினைக்கிற அந்தக் காலமில்லே இது! 21ம் நூற்றாண்டாக்கும். எதுவானாலும்
அவுங்க இஷ்டப்படிதான் செய்வாங்க…நீ இப்டிச் செய்…அப்டிச் செய்னு சொன்னேன்னா ரொம்ப ஒபீடியன்டா
தலையைத் தலைய ஆட்டுவானுங்க உன் முன்னாடி…ஆனா வெளில போனா அவுங்க நினைக்கிறதத்தான் செய்துட்டு
வருவாங்க…! நீ கிறுக்கச்சி மாதிரி பேந்தப் பேந்த முழிச்சிட்டு நிக்க வேண்டிதான். இப்போ கூட ஒருத்தி வந்திட்டால்ல…அப்போ நீ சொல்றதா
நடக்கப் போவுது…அந்தம்மா சொல்றதுதான் கப்பலேறும்….எதுக்கு அநாவசியமா வார்த்தையை விட்டு
ஏமாந்திட்டு? என்னத்தவோ செய்திட்டுப் போகட்டும்…கண்ணையும் காதையும் பொத்திட்டு இருங்கிறேன்……ஆனா
ஒண்ணு…எதுக்கும் ஒரு லிமிட் இருக்கு….அது தாண்டுதான்னு கண்காணிக்கணும்…அது மட்டும்தான்
முக்கியம். நான் சொல்றது புரியுதா உனக்கு? நம்ம மரியாதையைக் காப்பாத்திக்கிறதுதான்
அது…-சொல்லிவிட்டு நித்யானந்தம் மனைவியை நோக்கினார்.
சுபா அமைதியாய் நின்றாள். எதுவும் பதில்
சொல்லாதது அவளுக்குப் புரியவில்லையோ என்று தோன்றியது. அம்மாவே சதம் என்று கிடந்தவன்
பையன். தொட்டதுக்கெல்லாம் அம்மா…அம்மான்னு
கொடுக்கு மாதிரித் திரிவான்….முந்தானைல முடிஞ்சு வச்சிருந்தா…இப்போ அவிழ்ந்து
போச்சோ…அவிழ்த்து விட்டுட்டாளோ?
கல்யாணம் ஆன பிறகு பாரு…இந்த மாதிரிப்
பசங்களெல்லாம் தலைகீழா மாறிப் போவானுங்க…எத்தன பேரப் பார்த்திருக்கோம்….?
எம் பையன் அப்டியெல்லாம் இருக்க மாட்டான்….என்னிக்கும்
அவன் அம்மா பிள்ளைதான்…!
இந்த மாதிரியான உன் நெனப்பே தப்புங்கிறேன்..…ஒரு
நாளைக்கு மொத்தமா ஏமாறப் போறே…அப்போ எங்கிட்டதான் வந்து நிக்கணும்…கடைசிப் புகலிடம்
உனக்கு நான்தான். அத மனசில வச்சிக்கோ…
அப்போதும் அவள் ஒத்துக்கொள்ளவில்லை. இப்படியா
மகன் மீது ப்ரீதியாய் இருப்பாள்? ஒரு பிள்ளை பெற்றவர்களெல்லாம் இப்படித்தான் இருப்பார்களோ
என்னவோ? முப்பத்தி ஒன்பதில் பிள்ளை பெற்றால்? ஓ! அது என் வயசாயிற்றே…அவள் முப்பத்தி
அஞ்சு…! போதுமே ஒன்று என்று தோன்றிப் போனது நியாயம்தானே? இந்த மனசை
மாறும் நிலைகளுக்கேற்பப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டாமா? வயசானதற்கு அப்புறம் என்னதான்
அர்த்தம்….மதிப்பு?
இப்போ சிம்பிளா உனக்கு சுலபமாப்
புரியறமாதிரி ஒண்ணு சொல்றேன்… சினிமாவுக்குக்
கிளம்புறாங்கன்னு வையி…நீங்களும் வாங்கன்னுதான் கூப்பிடுவாங்க…ஆனா போகப்படாது. ஏன்னா
அது சம்பிரதாயத்துக்குக் கூப்பிடுறது. ஆத்மார்த்தமா நிச்சயமா கிடையாது. அந்த இங்கிதம் வேணும் உனக்கு. நம்ம பையன் நம்மளக்
கூப்பிடுறான்…போறதுல என்ன தப்புன்னு புடவையைச் சுத்திண்டு கிளம்பறது மடத்தனம்! மொட்டையா
எதையும் நினைக்கக் கூடாது..அவன் பொண்டாட்டிக்கு முன்னாடி முந்திட்டு நீ ரெடியாகக் கூடாது…அது மாதிரி அசட்டுத்தனம் உலகத்துல
வேறேதுவுமில்ல. ஏன்னா இப்போ கூட ஒருத்தி பக்கத்துலயே
நிக்கிறா…அவளுக்கு அப்புறம்தான் நீ…புரிஞ்சிதா?
அந்தப் பொண்ணு அவன் சொல்றதை மறுத்துச்
சொல்லாட்டா அதுக்கு சம்மதம்னு அர்த்தமில்லே…! ஆரம்பத்துலயே எதிர்த்துப் பேச வேணாம்னு
இருப்பா. கண்டுக்காம நீ விலகிட்டா மனசுக்குள்ள சந்தோஷப்பட்டுக்கிடும்…அதுதான் சூட்சுமம்.
நீ பசை மாதிரி ஒட்டிட்டே திரிஞ்சேன்னு வச்சிக்கோ…கூடிய சீக்கிரமே நீ பிரிச்சி விடப்படுவே…!
அந்தக் காரியத்தை உன் பையனே வெற்றிகரமாச் செய்வான்…பிறகு
வருத்தப்பட்டுப் பிரயோஜனமில்லே... இப்போ அவன் என்னையும் சேர்த்துக் கூப்பிடுறான்னு
வச்சிக்கோ…நான் எடுத்த எடுப்புல வரலைன்னு சொல்லிடுவேன்…அதுதான் நம்ம பாணி…! அது அவனுக்கும்
தெரியும்தான். உன்னைப் புரிஞ்சிண்டிருக்கானோ இல்லியோ என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டிருப்பான்.
ஆனா நீயும் போகாதேன்னு உன்னை நான் சொல்ல முடியாது…ஏன்னா
நீ உன் பையனோட போறதை நான் தடுக்கிறேன்னு குதர்க்கமா
நினைப்பே…குட்டுப்பட்டாத்தான் உனக்கெல்லாம் புரியும். நீ அந்த டைப். …விவேகம்ங்கிறது இதுதான்….எதுல ஒட்டணும், எதுவரைக்கும்
ஒட்டணும், எதுல ஒதுங்கணும்னு எல்லாத்துக்கும் ஒரு கணக்கிருக்கு…காலத்துக்குக் காலம்
அது மாறும். அதைப் புரிஞ்சிக்கிட்டு நாம நடந்துக்கணும். அப்பத்தான் நமக்கு மதிப்பு…மரியாதை….புரிஞ்சிதா…?
இப்போதும் சுபா எதுவும் சொல்லவில்லை.
அவள் மனசு எதையும் ஏற்கவில்லை என்பதுதான் அதன் பொருள். தாயின் மனசு வேறு. தந்தையின்
மனசு என்பது வேறு. இது அவரவர் தனியாய் இருக்கும் காலம். கூட்டுக் குடும்பம் என்பது
என்றோ அழிந்து போன விஷயம். ஒரே வீட்டில் இருபது பேர் வரை இருந்து பொங்கித் தின்னு பொழுதைக்
கழித்தது அந்தக் காலம். இப்போது விருந்தும்
மருந்தும் மூன்று நாள் என்கிற காலம். மூன்று நாள் கூடக் கிடையாது. ஒரு நாள் எனலாம்.
அது கூடச் சில இடங்களில் இல்லை. ஒரே வேளை. வண்டியக் கட்டிரணும்…அதுதான் மரியாதை!
பெண்கள் வேலைக்குப் போவது என்றாகிப் போன
பின்னால், பொருளாதாரச் சுதந்திரம் வந்துவிட்ட நிலையில் படிப்படியாக எல்லாமும் தனித்
தனியே பிரிந்துதான் போனது. குழந்தை பிறந்தால் கூடப்போய் நான்கைந்து மாதங்கள் சம்ரட்சணைக்காய்
இருந்து வரலாம். அதுவும் கசக்கும் முன் வெளியேறிவிடுவதே நன்று. பிறகு ஏண்டா போனோம்
என்று நினைத்து மறுகிப் புண்ணியமில்லை.
தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும்
இருந்து கொள்ளப் பழகிக் கொள்வது மிக மிக முக்கியம். வேறு எந்தத் தத்துவம் பேசியும்
கதையாகாது. எல்லாமும் தோற்றுத்தான் போகும்.
போவோம்…அவனுக்கு ஒரு வீடு வாங்குவோம்…ஒரு
கல்யாணத்தைப் பண்ணுவோம்…தனிக் குடி த்தனம் வைப்போம்…கிளம்பி வந்திடுவோம்…என்று சொல்லித்தான்
கிளம்பியது. எல்லாத்துக்கும் தலையாட்டினாளே? மனசுக்குள் வேறு இருந்திருக்குமோ?
இப்போதென்னடாவென்றால் பிசினாய் ஒட்டிக்
கொண்டு நிற்கிறாள். அவனுக்காவது தெரிய வேண்டாம்? தனியாய்ப் பிரிந்து ஜாலியாய் இருப்பானா?
இப்படியா அப்பா அம்மாவைக் கூட வைத்துக் கொண்டு அவஸ்தைப் படுவான்? எப்படி அனுபவம் சேகரமாகும்? காரியங்களைச் சுயமாய்ச்
செய்து பழகினால்தானே தனித்து இயங்கும் தைரியம் வரும்?
இன்றும் கூட அவனுக்கு ஒரு பால் பாக்கெட்
என்ன விலை என்பது தெரியாது. அது பச்சை, நீலம், ஆரஞ்சு என்ற வகை மாதிரிகளை அவன் அறிய
மாட்டான். ஒரு கிலோ அரிசி எவ்வளவு தெரியாது.
சாப்பாட்டு அரிசி எது, மாவுக்கான அரிசி எது? பச்சரிசியா, புழுங்கலா எது எதற்குப் பயன்படும்?
எது எது என்ன அளவில் வாங்கியாக வேண்டும்? எதுவும் தெரியாது.
ஒரு கிலோ வெண்டைக்காய் என்ன விலை சொல்லு?
என்றால் முழிப்பான். ஒரு கிலோ பெல்லாரி வெங்காயம் வாங்கி வா என்றால் சிறிசா, பெரிசா…என்று கேட்பான்.
இந்த அளவில்தான் இருக்கிறான். ஊரிலுள்ள மற்ற பசங்களெல்லாம் எப்படியென்று தெரியாது.
கண்ணன் இப்படித்தான். இதை வாய்விட்டுச் சொன்னால் அவள் ஒத்துக் கொள்வாளா? பழி சண்டைக்கு
வருவாள். பொத்திப் பொத்தி வளர்த்தால் இப்படித்தான். உலக நடப்பு ஒன்றும் தெரியாமல்தான்
போகும். இவளே ஓட்டைக் காயைத்தான் வாங்குவாள்.
வெண்டிக்காயை ஒடித்து வாங்காமல் அள்ளியா போடுவே? எத்தனையோ முறை கேட்டிருக்கிறான். சுண்டிப்
பார்த்துத் தேங்காய் வாங்கத் தெரியாது. தேங்காயை எந்த இடத்தில் அடித்தால் நடுவில் சரி
சமமாய் உடையும் தெரியாது. அனுபவம் என்றால் சும்மாவா? ஆயிரம் புஸ்தகத்தப் படிச்சவன விட
ஆயிரம் நிலத்தை உழுதவன் பெரியவன்…அதுதான் சத்தியம்.
அந்தப் பெண் என்ன லட்சணமோ? அடுப்படிப்
பக்கம் எட்டிப் பார்த்திருக்குமோ என்னவோ? அணியும் உடைகளே அவைகளைப் பறைசாற்றுகின்றனவே?
நமக்கே கூச்சமாய் இருக்கிறது பார்க்க! மருமகளைத் தலை நிமிர்ந்து கண்கொண்டு பார்க்க
வேண்டாமோ? சுலபமாகக் குனிஞ்சு நிமிர முடியுமா
அதுகளால்? எதாச்சும் சொல்ல வாய் வந்தால்தானே? சொல்வதை விட வாய்மூடி இருப்பதே மேல்!(நீயும்
மேல்…நானும் மேல்…!) வாங்கிக் கட்டிக்கொள்ள
வேண்டியிருக்குமோ என்று தோன்றுகிறதே?
தெரிந்ததெல்லாம் கணினி ஒன்றுதான். அது
முன்னால் பிள்ளையார் போல் வயிற்றைக் குழைத்துக் கொண்டு உட்கார்ந்து தட்டிக் கொண்டே
இருக்கிறார்கள். காதில் வேறு மாட்டிக் கொண்டு இருப்பதால் வெளிச் சத்தம் எதுவும் கேட்காது.
அதுதான் அறைக்கதவையே சாத்திக்கொண்டுதானே கிடக்கிறார்கள்?
இந்தப் பக்கம் எவனாச்சும் நுழைஞ்சு கழுத்தைத்
திருகிப் போட்டுத் திருடிட்டுப் போனாலும் போச்சு…கதவைத் திறக்கும் போதுதான் பார்ப்பார்கள்….அசந்து தூங்குறாங்க போல……!
ஊரில் ஒரு பயல் இப்படியில்லை. இவன்தான்
கூட வைத்துக் கொண்டு கும்மியடிக்கிறான். அட…அண்ணன் பையன், பொண்ணுன்னு எல்லாமும் இந்தச்
சென்னையில்தானே கிடக்கிறார்கள்? அவர்களைப் பார்த்தாவது புரிந்து கொள்ள வேண்டாமா? உரைக்கலியே?
அவ்வளவு எதற்கு? இவன் கூடப் படித்தவன் ஒத்தன் ரெண்டு பேர் இந்தச் சென்னையில்தானே குப்பை
கொட்டுகிறார்கள். அவர்களெல்லாம் தனிக்குடித்தனம் தானே நடாத்துகிறார்கள்? அந்த கனவான்களெல்லாம்
கண்ணில் படவில்லையா?
எதுவுமே உரைக்கலியே? ரெண்டு பேரும் வேலைக்குப்
போறதுனால வேளா வேளைக்கு நிம்மதியாச் சாப்பிட தூங்க எழுந்திரிக்க, அக்கடான்னு ஆபீஸ்
வேலையைப் பார்க்க, சனி ஞாயிறானா ஊரச் சுத்த, ஓட்டல்ல மூக்குப் பிடிக்கத் திங்கன்னு
ஜாலியாத்தான் கழிப்பமேன்னு பேசி வச்சு முடிவு பண்ணிட்டாங்களா?
அதுதான் சமைச்சுக் கொட்டுறதுக்கு ஒருத்தி
இருக்காளே?
சமயா சமயங்களில் சார்…டிபன்…சார் மீல்ஸ்….-வாசலில்
ஸ்விகி.
இவரும் பொறுத்துப் பொறுத்துத்தான் பார்த்தார்.
அவள் கிளம்புவதாய் இல்லை. ஆணியடித்தாற்போல் கிடந்தாள்.
வந்த வேலை முடிஞ்சது. நாம கிளம்புவோம்…அவுங்க
வாழ்க்கையை அவங்க வாழட்டும்..நம்ம மீதி வாழ்க்கையை நாம வாழ்ந்து கழிப்போம்.. தேவைப்
படுறபோது வருவோம்….யாரும் யாரையும் விட்டு உதறல…அப்படி உதறவும் முடியாது…புரிஞ்சிதா?
கிளம்பு…வண்டியைக் கட்டு…
உத்வேகமாய்த்தான் சொன்னார் நித்யானந்தம்.
மலையைக் கூட அசைச்சிடலாம்…ஆனா இந்த மடுவைக் காலத்துக்கும் அசைக்கவே முடியாது. கண்ணன்
பார்த்துக் கொண்டேயிருந்தான். சுபா சொன்னாள்.
நான் வரலை. இங்கதான் இருப்பேன்…நீங்க
வேணும்னா போயிட்டு வாங்க….!!
--------------------------