30 ஜூன் 2019


“நட்பு”-சிறுகதை - இந்திரா பார்த்தசாரதி                                                                
வாசிப்பனுபவம் - உஷாதீபன்                                         வெளியீடு – இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள்-தொகுதி-2                                               கிழக்கு பதிப்பகம், சென்னை – 
      ]குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கான உலகம் தனி. அவர்கள் மனதில் எது நன்மையை உண்டாக்கும். எது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைத் துல்லியமாக அறிதல் என்பது சற்றே கடினமான விஷயம்தான். நல்லதை மட்டுமே சொல்லிக் கொடுத்து வந்தால், வளரும் பருவத்தில்  அவை மனதில் படியும். அல்லாதவைகள் பின்னர் அறியப்படும்போது நாட்டமின்றி மனது ஒதுங்கி விடும் வாய்ப்பு பெருமளவு உண்டு.
        ஆனாலும் குழந்தைகளின் குடும்ப சூழல், மிக இளம் வயதிலேயே ஏற்பட்டுவிடும் இழப்புகள் ஆகியவை அவர்களின் மனங்களில் ஓரளவு ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றனதான்.. அந்த பாதிப்பின் அடையாளங்கள் அவர்களின் வாழ்வினில் தவிர்க்க முடியாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
        இரண்டு சிறுவர்களுக்கான நட்பின்பாற்பட்ட இந்தச் சிறுகதையில் அப்படியொன்றை அழுத்தமாய்ப் பதிவு செய்கிறார் இந்திரா பார்த்தசாரதி. சிறார்களுக்கான இந்தக் கதையில் இளம் பிராயத்தில் மனதில் என்ன படிந்து போகிறதோ அது இருவருக்குமே தொடர்கிறது. வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இரு சிறுவர்கள் நட்புக் கொள்ளும்போது, அது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட நட்புதான் என்கிற ரீதியில் ஒருவன் மனதை லேசாக சந்தேகிக்க வைத்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
        இளம் பிராயம் முதலான கூச்ச சுவாபம் என்பது ஒருவகையில் பார்த்தால் ஒழுக்கத்தின அடையாளம் அது. தவறுகள் செய்வதிலிருந்து தடுக்கும் மனநிலையை அது ஏற்படுத்தும் என்று சொல்லலாம். அதே கூச்ச சுபாவம், தங்கு தடங்கலின்றி எல்லோரோடும் பழகுவதற்கும், சந்தோஷித்து இருப்பதற்கும் தடையின்றி ஒரு விஷயத்தை அணுகுவதற்கும், தைரியமாக ஒன்றை எதிர்நோக்குவதற்கும்,  தடங்கலாக இருக்கிறது என்ற உண்மையையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
        விவரம் தெரியாத இரண்டு வயதிலேயே பெற்றோரை விபத்தில் இழந்தவன் செந்தில். இயல்பாகவே கூச்ச சுபாவம் உடையவன். யாருடனும் தானாகவே போய்ப் பேச, பழக மாட்டான். கூச்ச சுபாவமுடைய பையன்களைச் சீண்டுவதில் முரட்டுப் பையன்களுக்கு ஒரு அலாதி இஷ்டம்.
        எட்டாவது வகுப்பில் தொடர்ந்து ரெண்டு வருஷங்களாகப் படித்துக் கொண்டிருக்கும் மணி என்கிற பையன் செந்திலைச் சீண்டுகிறான். அப்போது பள்ளிக்குப் புதிதாக வந்த பாலு அவனைத் தடுக்கிறான். இருவருக்கும் நடக்கும் சண்டையில் மணி மண்ணைக் கவ்வுகிறான். பாலு அந்தக் கோஷ்டிக்குப் புதிய தலைவனாகிறான்.
        பாலு படிப்பிலும் கெட்டிக்காரன். விளையாட்டில் சூரன். அவன் தன்னுடைய நெருங்கிய நண்பன் என்று சொல்லிக் கொள்வதில் செந்திலுக்குப் பெருமை.
        கதை ஆரம்பிக்கும்போதே செந்திலுக்கு ஏதோ கெட்ட கனவு வருவதுபோல் திடுக்கிட்டு எழுந்து, பாலு அன்று ஊரைவிட்டுப் போகப்போவதை நினைத்து வருந்தி, பாட்டியிடம் வருத்தத்தோடு சொல்கிறான். பாலுவின் தந்தைக்கு திருச்சிக்கு மாற்றலாகிவிடுகிறது.
        அவனோட அப்பாவுக்கு மாத்தலாயிடுச்சி. போறான். இதிலென்ன அதிசயம்…? என்கிறாள் பாட்டி. செந்திலுக்கு எரிச்சல் வருகிறது. அவனது மனதை, மன வருத்தத்தைப் புரிந்து பேச அவனுக்குப் பெற்றோர் இல்லை. பாட்டி யதார்த்தமாய்ப் பேசுவது அவனுக்குப் பிடிக்கவில்லை.
        பெரியவங்க எல்லாருமே உணர்ச்சியே இல்லாத மரக்கட்டைங்க….என்று பாட்டியிடம் எரிந்து விழுகிறான்.
        அவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே சரி…நான் மரக்கட்டைதான்….என்கிறாள் பாட்டி.
        பெரியவர்களுக்கு சிநேகிதர்களே இருப்பதில்லை. சிநேகிதர்கள் என்றால் உண்மையான சிநேகிதர்கள். பாலுவைப் போல…வயதானால் எல்லோரும் தனியாளாய் ஆகி விடுகிறார்கள். பலவாறு நினைத்தக் கொள்கிறான் செந்தில்.
        பாலுவும் அவனும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் பரிசுப்பொருட்களை மாற்றிக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்டதில் அவர்களின் நட்பு மேலும் நெருங்கியது. செந்திலுக்கு இதில் பெரும் மகிழ்ச்சி.
        அவன் தான் சிறுவயது முதல் சேர்த்த ஸ்டாம்ப் ஆல்பத்தை பாலுவுக்குப் பரிசாக அளிக்கிறான். பாலுவோ அமெரிக்காவிலிருந்து வாங்கி வந்திருந்த பேனாவை அவனுக்குக் கொடுக்கிறான். அந்தப் பேனாவில் எழுதி எழுதித்தான் அவன் வகுப்பில் முதல் மார்க் வாங்குகிறான். செந்திலுக்கு அந்தப் பரிசு ரொம்பவும் பிடித்திருந்தது.
        இப்போது அவர்கள் குடும்பம் மாறுதலில் செல்கிறது. செந்திலுக்கு மிகுந்த வருத்தம். பள்ளியில் பிற மாணவர்கள் தன்னைக் கேலி செய்வதைத் தடுத்தவன் பாலு. அவன் போய்விட்டால் அம்மாதிரி மீண்டும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று நினைத்துப் பயம் கொள்கிறான்.
        அவர்கள் ஊருக்குக் கிளம்பும் முன் ஒரு முறை பாலுவைக் கடைசியாகச் சந்தித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறான்.
        திருச்சிக்குப் போனா என்னை மறந்துடுவேல்ல……
        நான்சென்ஸ்….நீ என்னுடைய பெஸ்ட் ஃப்ரென்ட்….எப்படி மறக்க முடியும்…நீ மறந்துடுவியா…?
        நான்சென்ஸ்…எனக்குத்தான் நீ வேணுமேயொழிய உனக்கு நான் வேண்டாம். நீ இல்லாட்டி அந்த மணி ராஸ்கலும் அவன் ஃப்ரென்ட்சும் என்னை டீஸ் பண்ணிட்டே இருப்பாங்க… நீ வந்தது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா? ஏன் உங்கப்பாவுக்கு மாத்தலாயிடிச்சி. ?
        திருச்சியிலே ஒருத்தன் இங்கே வரணும்னு பாக்கறான். பெரிய இடத்து சிபாரிசு. எங்கப்பாவுக்கு இஷ்டமில்லதான். வேறே வழி…
        செந்திலுக்கு அழுகை வந்துவிடும் போலிருக்கிறது. பாலு சமாதானம் சொல்கிறான்.
        நீ இப்டியெல்லாம் அழக்கூடாது. எல்லாரோடையும் சகஜமா பழகணும்…ப்ரென்ட்ஸ் ஆக்கிக்கணும்…அப்பத்தான் உன்னை யாரும் டீஸ் பண்ண மாட்டாங்க…
        உனக்கு மட்டும் ஏன் என்னை டீஸ் பண்ணனும்னு தோணலை…? சட்டென்று இந்தக் கேள்வியைக் கேட்கிறான்.
        நானும் பண்ணியிருப்பேன்… ஆனா இன்னொருத்தன் ஒரு பு்ல்லி கணக்கா உன்னை டீஸ் பண்றச்சே… அவனை சாலெஞ்ச் பண்ணனும்னு எனக்குத் தோணிச்சு…அதனால் மத்தவங்க சேர்ந்து எனக்குப் பட்டாபிஷேகம் கட்டிட்டாங்க….
        செந்திலுக்கு  இந்த பதில் ஏமாற்றமாய் இருக்கிறது. அப்படியானால் அவனுக்கு இவன் மேல் உண்மையான பரிவு இல்லையா? 
        பாலு சொல்கிறான்.என்னவோ தெரில…உன்னைப் பார்த்ததும் எனக்கு அப்படி ஒரு அட்டாச்மென்ட்…
        செந்தில் சொல்கிறான்…..“எனக்கும் அப்படித்தான்“…. – இரண்டு தினங்களுக்கு முன் அவர்களுக்குள் நடந்த உரையாடல் இது.   பாலு கொடுத்த பேனாவை பாட்டியிடம் காண்பிக்கிறான்.
        சின்ன வயசிலேயிருந்து ஆசையா சேர்த்தியே…அந்த ஸ்டாம்ப் ஆல்பத்தையா கொடுத்திட்டே….?
        என்ன பாட்டி…இப்டிக் கேட்கிறே…அவன் முதல் மார்க் எடுக்கிற அமெரிக்காவுல வாங்கின பேனாவையே எனக்குக் கொடுத்திருக்கான்…ஆசையோட ….அதுதானே முக்கியம்…. என்கிறான் பாட்டியிடம்
பதிலுக்குப் பாட்டி….முதல் மார்க் முக்கியம்…ஆசை…கீசையெல்லாம் அப்புறம்தான்….என்கிறாள்.
        இதுதான் சுயநலம்கிறது….
        யார்தான் சுயநலமில்லே…?வாழ்க்கைல பொழைக்கணும்னா சுயநலமா இருக்கக் கத்துக்க….பாட்டியின் பதில் விநோதமாயிருக்கிறது செந்திலுக்கு.   மறுநாள் காலையில் பாலு வீடு பூட்டியிருப்பதைப் பார்க்கிறான்.
        போயிட்டாங்களா…?சொல்லிக்கவேயில்லை என்று வருத்தமுறுகிறான்.   திரைச் சீலைகள் தொங்குகின்றன. சொந்தக்காரங்ககிட்ட சொல்லிக்கப் போயிருப்பாங்க… -கீழ் வீட்டு மாமி சொல்கிறாள்.
        சாமான்களை ஏத்த லாரியே வந்த மாதிரித் தெரில…
        ரா்திரியே ஏத்தி அனுப்பிச்சிருப்பாங்க…  - என்னவோ பதில் கிடைக்கிறது. செந்திலுக்கு அழுகையே வந்துவிடும் போலிருக்கிறது. பாட்டி சொல்வதுபோல் எல்லோருமே இந்த உலகில் சுயநலம்தானோ,..?
        பள்ளிக்கூடம் போய்விட்டு வந்த மாலைதான் செந்திலுக்குத் தெரிகிறது. பாலுவின் அப்பாவின் அம்மா திடீரென்று காலமாகிவிட்டார் என்று. திருநெல்வேலிக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.
        பதினைந்து நாட்கள் கழிந்து பாலு திரும்ப வருகிறான்.
        பார்க்க ஓடுகிறான் செந்தில்.   பாட்டி இப்போ போகக் கூடாது என்கிறாள். சனிக்கிழமை ஆகாது…என்கிறாள். பார்க்கத்தான் செய்வேன் என்று அடம் பிடிக்கிறான் செந்தில். பிறகு உன் இஷ்டம் என்று விட்டு விடுகிறாள்.
இதற்குள் பாலுவே பார்க்க வந்து விடுகிறான். எங்கப்பா மாத்தலை கான்சல் பண்ணிட்டாங்க…தாத்தாவைக் கூட்டிக் கொண்டுவந்து வச்சிட்டு, வைத்தியம் பார்க்கணும்னு ரெக்வெஸ்ட் கொடுத்து கான்சல் பண்ணிட்டாங்க….என்கிறான்.
        அப்போ இங்கேதான் இருக்கப்போறே…என்று மகிழ்ச்சியில் அவனைக் கட்டிக் கொள்கிறான் செந்தில்.
        சட்டென்று பாலு கூறுகிறான்…..
        ஆமாம்….சரி, என் பேனாவைத் திருப்பிக் கொடுத்திரு…என்கிட்டே…நான் உன் ஆல்பத்தைத் தந்திடுறேன்….ஓ.கே…?
        அவனை மகிழ்ச்சியோடு கட்டிக் கொண்டிருந்த செந்தில் சரேலென்று விலகி…அவனை ஏற இறங்கப் பார்க்கிறான்..மனதுக்குள் துக்கம் பொத்துக் கொண்டு வருகிறது.
        செந்திலுக்கு மட்டுமென்ன…நமக்கும்தான்….குழந்தைகளின் மனது எப்போது…எப்படியிருக்கும்…என்று யார் கண்டது? இந்த உலகத்தில் எல்லாருமே சுயநலம்தான்….வாழ்க்கையில பொழைக்கணும்னா சுயநலமா இருக்கக் கத்துக்கோ என்று செந்திலின் பாட்டி சொன்னது இங்கே ஏன் நமக்கு ஞாபகம் வர வேண்டும்? இது எதன் அடையாளம்? பாலுவின் நடவடிக்கை…அந்த முதல் மார்க் வாங்கும் பேனாவைத் திருப்பிக் கேட்டது கூட ஒருவகையில் அந்த மாதிரிதானோ…என்றும் நம்மை நினைக்க வைக்கிறது.
பார்த்துப் பார்த்தும், கேட்டுக் கேட்டும்….அறிந்து்ம் அறியாலும் சில பழக்கங்கள் இளம் பிராயம் முதல் படிந்து போகின்றதுதானே…!
        குழந்தைகளுக்கிடையே நடக்கும் சம்பாஷனையானாலும்…பெரியவர்களாகிய நம் மனதையும் அது திடுக்கிடத்தான் வைக்கிறது. செந்திலின் ஆழமான அன்பும், இளகிய மனதும், கூச்ச சுபாவமுள்ள பையனின் மென்மையான பேச்சும் நடவடிக்கைகளும் நம்மை செந்திலின்பால் பரிதாபம் கொள்ள வைக்கிறது.
        நட்பு என்கிற பதத்தை இந்தக் கதை எப்படி அர்த்தப்படுத்துகிறது? ஒரு சார்பில் மட்டுமா அல்லது இரு தரப்பிலுமா? இரு தரப்பிலுமென்றால் என்ன அளவினில்……? எந்த விகிதாச்சாரத்தில்?  பரஸ்பரம் சம அளவில் நிரம்பி வழிகிறதா? அல்லது அளந்து நகர்கிறதா? – கேள்விகள் முளைத்துக் கொண்டேதான் இருக்கின்றன. இந்திரா பாரத்தசாரதியின் இந்தச் சிறுவர் கதை மிகப் பெரிய தத்துவங்கள் பலவற்றை அவரது தேர்ந்த உரையாடல்கள் மூலம் நமக்கு உணர்த்துகிறது.
                                ----------------------------------------------------------------------


                    

29 ஜூன் 2019

“ஒரு காதல் கதை” வண்ணநிலவன் சிறுகதை வாசிப்பனுபவம்


             “ஒரு காதல் கதை”                                 


                
வண்ணநிலவன் சிறுகதை                                     
                                                                      
வாசிப்பனுபவம்                         ,                      
காலச்சுவடு-ஜூலை 2019 இதழ்                                                                                         
மீப காலமாக மீண்டும் எழுத ஆரம்பித்திருக்கிறார் வண்ணநிலவன். அதுவரையில் மகிழ்ச்சி. அவர் எழுதி வெளிவந்த எம்.எல்.நாவலுக்குப்பின் தொடர்ந்து சில கதைகள் வந்து கொண்டிருக்கின்றன. இது காலச்சுவடில் வந்த இரண்டாவது கதை. “ஒரு காதல் கதை”.
        அதே பழைய இதமான நடை எடுத்த எடுப்பில் நம் மனதைப் பரவசப்படுத்துகிறது. அதிர்வில்லாமல் போகிற போக்கில் இதமாய்க் கதை சொல்லும் பாங்கு. ஒரு வலிந்த காதல் நிகழ்வை, ஒரு சார்புக் காதல் நடைமுறையை அதன் முகம் அழியாமல் அப்படியே சொல்லியிருக்கிறார்.
        இன்று இப்படித்தான் நடக்கிறது. நடந்து கொண்டிருக்கிறது. வெளியே சந்திக்கும், எதிர்ப்படும் பெண்களோடு பேசவே கூச்சப்படும் காலம் ஒன்று இருந்தது. அப்படி வலியப் பேசினால் அது தவறு என்கிற நடைமுறையும் இருந்தது. தெரிந்த பெண்களோடு வீதிகளில், கோயில்களில், கடை கண்ணிகளில் பேசினாலும் ஓரிரு வார்த்தைகளோடு சரி என்கிற அடக்கமான, அமுத்தலான, மரியாதையான, ஒழுக்கம் விஞ்சிய செயல்பாடுகள் இருந்தது ஒரு காலம்.
        இன்று எல்லாமும் தலைகீழாய் மாறிக் கிடக்கிறது. எதிர்ப்பட்டுப் பேசாவிட்டால்தான் கேவலம் என்று ஆகிப் போனது. சுற்றிலும் யார் இருக்கிறார்கள், செய்வது, செய்யப்போவது சரியா, தவறா என்கிற கேள்விகளுக்கே இடமில்லை. நினைத்தவுடனே, மனதில் தோன்றியவுடனே அல்லது தான் மட்டும் ஒரு தலையாக மனதில் நினைத்துவிட்டாலும், எதிர்த்தரப்புக்குத் தெரிந்திருந்தாலும், தெரியாவிட்டாலும், விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாவிடினும் ஒரு பெண்ணைப் பார்ப்பதுவும், தொடர்ந்து பார்ப்பதுவும், பேச முனைவதுவும், தெரிந்தும் தெரியாமலும் விரட்டுவதும், நெருக்குவதும், விரும்பியதாகக் கருதுவதும், தானே அப்படிக் கருதிக்கொண்டு தொடர்ந்து வற்புறுத்துவதும், ஏற்பு உண்டா இல்லையா என்பதையெல்லாம் பற்றிக் கவலை கொள்ளாமல், பொது இடம் என்று எதையும்  நினையாமல், பெற்றோர் சம்மதம் என்கிற கேள்விகளெல்லாம் எழாமல், தன் பெற்றோர், அப்பெண்ணின் பெற்றோர், உற்றார், சுற்றத்தார் என்று எதையும் மதியாமல், இது தவறு, அடாவடி, இப்படியான நடவடிக்கைகள் இரு தரப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும், எதிர்காலத்தைப் பெரிதும் பாதிக்கும் வாய்ப்பு உண்டு, ஒழுங்கற்ற செயல் இது என்று எதையும் நினையாமல், தான் நினைத்ததைத் தொடர்ந்து செய்து கொண்டே போவதுமான நடவடிக்கைகள் இன்று சர்வசாதாரணமாய் விரவிக் கிடக்கும் சமுதாய நடைமுறைகளாய் உள்ளன.
        அப்படி ஒரு பையனான இந்தக் கதையின் நாயகன் (அவனுக்கு நாயகன் என்கிற அந்தஸ்தைக் கூடக் கொடுக்க வேண்டுமா என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது ஆரம்பத்தில்) மாரிச் செல்வி என்ற பெண்ணை விடாது துரத்துகிறான். தினம் அவள் ஏறும் பஸ்ஸில் ஏறுகிறான். பக்கத்தில் உட்காருகிறான். அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான். அவளோடு பயணம் செய்கிறான். அவள் இறங்கும் இடத்தில் இறங்குகிறான். அவளைப் பின் தொடர்கிறான். அவள் கோயிலுக்குச் செல்வதைப் புரிந்து கொண்டு அங்கும் சென்று அவளுக்காகக் காத்திருக்கிறான். அவள் உட்காரும் இடம் இதுதான் என்று அதற்கு எதிர்த்தாற்போல் அமர்ந்து அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான்….விடாது அவளையே வட்டமிடுகிறான். என்று கொத்திக் கொண்டு செல்வது என்று கழுகாகக் காத்துக் கொண்டிருக்கிறான்.
        வலிய அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான். தினமும் அந்தக் குறிப்பிட்ட பஸ்ஸூக்கு வந்து அவள் அருகே அவளைக்  கேட்காமலே, அவள் விருப்பம் அறியாமலே அருகில் நெருங்கி உட்காருகிறான். கையைச் சுற்றிப் போடுகிறான். நெருக்குகிறான். அத்தனையையும் வேதனையோடு பொறுத்துக் கொண்டிருக்கிறாள் மாரிச் செல்வி. தினமும் மனதை திக்…திக்…என்றே வைத்துக் கொண்டு அவனோடு பழகவும் முடியாமல், விலகவும் இயலாமல் நாலைந்து மாதங்கள் ஓடிவிடுகின்றன அவளுக்கு. அவன் உடம்பிலிருந்து வீசுகின்ற வியர்வை வாடை, அவன் வாயிலிருந்து வீசுகின்ற நாற்றம் இதெல்லாம் கூட அவளுக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் எதையும் அவன் பொருட்படுத்துவதாக இல்லை. ஓரிரண்டு முறை இதுபற்றியெல்லாம் அவள் கூறியும் சட்டை செய்யாதவனாய் இருந்து அவளே குறி என்று அலைகிறான்.
        கோயிலுக்குப் போனால் எப்படியோ தெரிந்து கொண்டு அங்கேயும் வந்து விடுகிறான் என்று ஒரு வாரம்போல் கோயிலுக்கும் போகாமல் இருக்கிறாள். பிறகு ஒருநாள் போகையில் அங்கே அவன் உட்கார்ந்து காத்துக் கொண்டு இருக்கிறான்.ஏன் ஒருவாரமாய்க் காணலை என்று கேட்கிறான்.  அவனைத் தவிர்ப்பதற்காக பஸ் ஏறும் இடத்தை மாற்றுகிறாள். அங்கும் வந்து விடுகிறான். கூட இருக்கும் தோழி ஜெயராணியிடம் ஒரு நாள் இந்த விஷயத்தை அவள் எடுத்து வைக்க…அவனின் நடவடிக்கைகளை அறிந்த அந்தப் பெண்….யே.ய்…அவன் உன்னை லவ் பண்றான்டி…என்று இவளுக்குப் புரிய வைக்க…அப்டீன்னா என்ன என்று மாரிச்செல்வி கேட்க… உன்னைக் காதலிக்கிறான்….கல்யாணம் பண்ணிக்க விரும்புறான் போல…என்று கூற…அப்டீன்னா அப்புறம் பிள்ளையெல்லாம் பெத்துக்க வேண்டியிருக்குமே….என்று இவள் விகல்பமில்லாமல் கேட்கிறாள்.
        பெறகு எதுக்குடி கல்யாணம் பண்ணுவாங்க…ஆம்பளப் பசங்க டாவ் அடிக்கிறதே அதுக்குத்தாண்டீ….என்று விளக்குகிறாள் தோழி. ஜெயராணி சொன்ன பிறகு மாரிச் செல்விக்கு இன்னும் பயமாகிப் போகிறது. தன்னை அவன் கடித்துத் தின்பதுபோல் உணர ஆரம்பிக்கிறாள். மனதுக்குள் தினமும் பயந்து பயந்து சாகிறாள். வீட்டில் பெற்றோரிடம் சொல்லவும் பயம். பெரிய கலகம் ஆகிவிடுமோ என்கிற நடுக்கம்.
        இப்படியே நாட்கள் கழிய ஒரு நாள் அவளைத் தனியே சந்தித்த அவன்…திடீரென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறான்…மாரிச்செல்வி…நீ இல்லன்னா நா செத்துப் போயிடுவேன்…நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். சர்வீஸ் கமிஷன் எழுதினது பாஸாயிட்டேன்…கொஞ்ச நாள்ல வேலைக்கு ஆர்டர் வந்துடும். நாம சந்தோஷமா இருக்கலாம்…என்கிறான்.
        இதில் வண்ணநிலவன் செய்திருக்கும் ஒரே புதுமை இதுதான். பொதுவாய் நடைமுறையிலும், சினிமாவிலும் இம்மாதிரி முறையற்ற செயல்களைச் செய்பவர்கள் பொறுக்கிகளாய்த்தான் இருப்பார்கள். ஒன்றுக்கும் உதவாக காலிகளாய்த்தான் வெட்டியாய், வீட்டுக்கும் நாட்டுக்கும் பாரமாய்த் திரிபவர்களாய்த்தான் இருப்பார்கள். இந்தக் கதாநாயகனோ காதல் என்கிற காரியத்தை மட்டும் அடாவடித்தனமாய்ச் செய்துவிட்டு, தனது ஸ்திரநிலையை அவளிடம் விளக்கி நாம் இருவரும் ஒன்று சேரலாம் என்று வற்புறுத்துகிறான். கொஞ்சம்  தோசையை இப்படி மாற்றிப் போடுவோமே என்று நினைத்துச் செய்திருப்பதுபோலவே தோன்றுகிறது. இதேபோல்தான் கதையின் முடிவிலும் ஒரு மாற்றத்தைப் புகுத்தியிருக்கிறார்.
     இந்தக் காலத்தில் அடாவடியாய் எல்லாமும் நடக்குமென்றால் ஏன் இப்படி ஒன்று நடக்கக் கூடாது என்று அவர் சிந்தித்ததுபோல் நமக்குத் தோன்றுகிறது. ஏதேனும் ஒன்றிரண்டு இப்படியும் நடக்க வாய்ப்பிருக்கிறதுதானே? என்று நினைத்திருக்கலாம். அல்லது ஒரு மாற்றத்திற்கு இப்படி ஒன்றை எழுதித்தான் வைப்போமே…இம்மாதிரியும் ஒரு கதை சொல்லலாம்தானே…! என்று தோன்றியிருக்கலாம் அது படைப்பாளியின் சுதந்திரம் என்று நாமும் கருதத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் அதை ஏற்றுக்கொள்வதுபோல் சொல்லும் முறை வண்ணநிலவனின் திறமை. அதை நாம் பாராட்டியாக வேண்டும்.
       திட்டமிட்டு படிப்படியாக அவன் நகர்கிறான் என்பது இக்கதையில் துல்லியமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. நமக்கு என்ன தோன்றுகிறது என்றால் இப்படி சர்வீஸ் கமிஷன் எழுதி, பாஸாகி, வேலைக்குக் காத்துக் கொண்டிருக்கும் ஒரு பிள்ளைக்கு, நல்ல ஒரு பெண்ணாகப் பார்த்து சிறப்பாக ஒரு கல்யாணம் பண்ணி, அவனைக் குடியும் குடித்தனமுமாக  வைக்க அந்தப் பெற்றோருக்குத் தெரியாதா என்ன என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அது ஏன் அந்தப் பிள்ளைக்குத் தெரியாமல் போயிற்று? அப்போ வளர்ப்பு சரியில்லை என்று எண்ணத்தானே வேண்டியிருக்கிறது?  காலம் கலிகாலம்…எப்படியும் எதுவும் நடக்கலாம் இங்கே…என்று இருக்கும் இக்காலத்தில் இப்படியும் ஒன்று நடந்துவிட்டுப் போகட்டுமே என்று படைப்பாளிக்கு தோன்றும் சுதந்திரம் ஒன்று இருக்கிறதல்லவா? எவனாவது ஒருத்தன் எங்கயாவது இப்படியான கேரக்டர்ல இல்லாமலா போவான்?
       அவளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட படத்தைத் தன் பெற்றோரிடம் காண்பித்து சம்மதமும் பெற்றாயிற்று என்று ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போடுகிறான் ஒரு நாள். இந்தப் பெண் பயந்து சாகிறது மனதுக்குள். ஐயோ…வீட்டுக்கு வந்து நின்று விடுவானோ…வீட்டில் தெரிந்தால் கொன்று போட்டு விடுவார்களே…பெரிய கலவரம் வெடிக்குமே…என்ன ஆகுமோ…ஏதாகுமோ என்று நாளும் பொழுதும் உறக்கமின்றி பயந்து கழிக்கும் அந்தப் பெண் சற்றும் எதிர்பாரா வகையில் ஒரு நாள் அவன் தன் பெற்றோர்களுடன் வீட்டுக்கே பெண் கேட்க வந்து நிற்பதைக் கண்டு அதிர்ந்து போகிறாள்.
       ஒரு புதுமையாய் இதையும்தான் செய்து வைப்போமே…இப்படியும் ஒரு திருமணம் நடந்ததாக இருக்கட்டுமே என்று ஒரு முடிவைத் திணித்திருக்கிறார் வண்ணநிலவன். திணித்ததாக இல்லாமல் அவரின் இயல்பான எழுத்துத் திறனில்  அது கௌரவமாக நடை பயில்கிறது என்பதுதான் இந்தக் கதையின் வரைவுக்குக் காரணமாகிறது இங்கே. 
       பெற்றோர் நிச்சயம் சம்மதிக்கப்போவதில்லை, கலகம்தான் வரப்போகிறது இந்த நிகழ்வில், இன்றுவரை தான் அவனைப் பற்றி ஒரு வார்த்தை அந்த வீட்டில் சொல்லாதிருக்கையில் அது வேறு பழியாகப் போகிறது என்று பலவாறு வருந்தி, பயந்து, நடுங்கிக்கொண்டிருக்கும் வேளையில், மிகுந்த சந்தோஷத்தோடு அந்தக் கல்யாணத்திற்கு சம்மதித்து விடுகிறார் மாரிச் செல்வியின் தந்தை.
       அந்த ஞாயிற்றுக் கிழமை அவ்வாறு விடிகிறது அவளுக்கு. ஆச்சரியப்படும்படியாக எல்லாவற்றிற்கும் அப்பா சம்மதித்ததுதான் அவளுக்குப் பிடிக்கவில்லை. தன் விருப்பம் துளிக் கூடக் கேட்கப்படவில்லை. போலீஸ்ல போய் கம்ப்ளெயின்ட் எழுதிக் கொடுப்போம்டீ என்று ஜெயராணி சொன்னதைக் கேட்டிருந்தால் அவன் இந்த அளவுக்கு வந்திருக்க மாட்டானோ என்று நினைக்கிறாள். போதாக்குறைக்கு “சொல்லவேயில்லையேடி” என்று சித்தி மல்லிகா வேறு கன்னத்தைக் கிள்ளுகிறாள்.
       அவர்களெல்லாம் போன பிறகு அப்பா சொல்கிறார். பையன் கவர்ன்மெண்டு வேலையிலிருக்கான். என்ன சாதியா இருந்தா என்ன? வேலையில்லா பெருசு…சீரு ஒண்ணுமே வேண்டாம்…பொண்ணை வீட்டுக்குக் கூட்டி விட்டாப் போதும்ங்கிறாங்க…நம்ம மாரி செஞ்ச அதிர்ஷ்டம்…இப்பேர்ப்பட்ட எடங் கெடச்சிருக்கு… என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்.
       மாரிச் செல்விக்கு அவனுடைய வாய் நாற்றம்  நினைவுக்கு வந்து குமட்டுகிறது.
       ஒரு காதல் கதை இப்படியும் இருந்தால் என்ன? …எல்லாவற்றையும் வெட்டுக் குத்தில்தான் கொண்டு செல்ல வேண்டுமா…கொலைப் பழியில்தான் முடிக்க வேண்டுமா….? அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திருமணங்கள் இப்படியும் நடந்துதானே போகின்றன. ஒழுங்காய்ப் படித்து வேலைக்குப் போனவனுக்குக் காதல் வரக் கூடாதா? அப்படியாப்பட்ட ஒருவன் ஒரு பெண்ணை விரட்டி விரட்டிக் காதலிக்கக் கூடாதா? அவள் விரும்பியோ விரும்பாமலோ அதுபற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தன் காதலை அவளிடம் தன்னிச்சையாகப் ப்ரபோஸ் (இப்போது இப்படித்தானே இதைச் சொல்கிறார்கள்!) பண்ணக் கூடாதா? கவர்ன்மென்ட் பரீட்சை எழுதியிருக்கேன். பாஸ் பண்ணிட்டேன்…வேலைக்குப் போகப் போறேன்…என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு உனக்கு என்ன கொள்ளை? என்று கேட்கக் கூடாதா? சாதியாவது மதமாவது…நல்ல சம்பாத்தியமா…கால் காசானாலும் கவர்ன்மென்ட் காசு….இதவிட நம்ம பொண்ணுக்கு வேறே எந்த நல்ல இடம் கெடைக்கப்  போவுது…? என்று நினைக்கக் கூடாதா? பொண்ணோட சம்மதம்லாம் கேட்கணும்ங்கிற அவசியமில்லை….பெத்தவங்களுக்குத் தெரியாதா? அந்தப் பய எப்படி நம்ம பொண்ணை செல்பி எடுத்து அவங்க அப்பன் ஆத்தாட்டக் காண்பிச்சு, சம்மதிக்க வச்சுக் கூட்டியாந்திருக்கான்? அதுக்கு நாம மட்டமாவா போயிட்டோம்…? கதைய முடி சொல்றேன்….
       இதுவும் சற்று வித்தியாசமான கதைதான். வண்ணநிலவனுக்குப் பாராட்டுக்கள். மனதளவில் ஏற்க முடியாதவர்கள் வெறும் கதைதானே என்று ஒதுக்கி விடலாம். இன்றைய யதார்த்தத்திற்குப் பொருந்தாதது என்று நினைப்பவர்கள் இப்படியொன்று எழுத முடியுமென்றால் எங்களால் ஒதுக்கவும் முடியுமே என்று தாராளமாய் ஒதுக்கி விடலாம். ஒதுங்கியும் செல்லலாம். 
                           --------------------------------------------------------------------“சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்“ தி.ஜானகிராமன் சிறுகதை வாசிப்பனுபவம்


“சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்“                                                       தி.ஜானகிராமன் சிறுகதை                                            வாசிப்பனுபவம்                                                                         

வெளியீடு:- காலச்சுவடு பதிப்பகம்> நாகர்கோயில்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
            
        இந்தக் கதை முழுக்க அன்பும், மனிதாபிமானமும் வழிந்தோடுகிறது. நீண்ட நெடிய கதையின் எழுத்ததிகாரம் எப்படிச் சொல்வது என்கிற பெருவியப்பை நமக்கு ஏற்படுத்துகிறது. நான் சொல்லியிருப்பது அதன் சாரத்தை மட்டுமே.        
உத்ராபதி…உனக்கு வயசு நாப்பதாயிருக்கும்…சாளேசரம் போட்டுக்கிற வயசு…நல்லா பார்த்துச் சொல்லு….எனக்கா மணியார்டர்…? – என்று முத்து ஐயர் கேட்பதிலிருந்து ஆரம்பிக்கிறது இது.
       
எம்.சாம்பமூர்த்தியாரு?                                                                                     நம்ப அக்கணாக் குட்டிதான்…
        அக்கணாக்குட்டியா? நம்ப புள்ளையா? இப்ப மெட்ராஸிலயா இருக்கு அது? – தபால்காரரின் வார்த்தைகளில் வழியும் அன்பும் அக்கறையும். தி.ஜா. எழுதும் காலத்தில் அப்படியெல்லாம் மனிதர்கள் இருந்தார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.  
        வந்திருக்கும் மணியார்டர் தொகை நாற்பதில் முப்பத்தொன்பது ரூபாய்க்கு நோட்டும், ஒரு ரூபாய்க்குச் சில்லரையும் எடுத்து வைக்கிறார் போஸ்ட்மேன் உத்ராபதி.
        சில்லரையும் மாத்திப்புட்டு, நாற்பது ரூபாயும் கொடுப்பானேன்? அரை ரூபாய் குறைச்சுண்டுதான் கொடுக்கிறது?
        முழுப்பணத்தையும் கொடுத்து, தருவதை வாங்குவதுதானே முறை. அன்பை உணர்தலும் அதன்  அடையாளமும் அது. அந்தக் காலத்திலேயே வழக்கம்  இருந்ததுதான். கொடுப்பதை மறுக்காமல் மரியாதையோடு பணிந்து வாங்கிக் கொள்வது. அது மனிதனை மனிதன் மதித்த காலம். ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாத காலம். ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் சமமாகப் பேசிப் பழகிய காலம்.
        அசடு, ஒன்றும் தெரியாத பிள்ளை, எதற்கும் லாயக்கில்லை என்று கருதிய தன் பிள்ளை ஊரிலிருந்து பணம் அனுப்பியிருப்பதைக் கண்டு பூரித்துப் போகிறார் தந்தை. பெயரையும், எங்கிருந்து வந்திருக்கிறது என்பதையும், தன் பிள்ளைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் பரபரவென்று மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொள்ளும் முத்து அய்யர் இடது காதுக்கு நூலைச் சுற்றிக் கொள்கிறார். இதில் ஆரம்பிக்கும் கதை இதிலேயே முடிகிறது.
        நம்ம எம்.கே.ஆர்.கிட்டப் போய்ப் புலம்பினேன். நம்ம பையனுக்கு ஒரு ஒரு வழி பண்ணப்படாதா செட்டியார்வாள்...இப்டி உதவாக்கரையாத் திரியறானே....என்று புலம்பப் போக...அன்பும் ஆதரவும் செழித்திருந்த அந்த நாட்களில்....அக்கணாக்குட்டிக்கும் ஒரு இடம் கிடைக்கிறது. உதவி செய்வதற்கும் ஒரு மனம் வேண்டுமே...! தெரிந்தவர்கள், நமக்கு வேண்டியவர்கள் என்று எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் தர்மம் ஓங்கியிருந்த காலம்.
        ஒரு பெரிய மனுஷன் வீட்டுல கூடமாட ஒத்தாசையா இருக்கணுமாம்...அனுப்புறீரா...? புள்ளைங்கள பள்ளிக்கூடத்துல கொண்டு விட, கூட்டிவர, கடை கண்ணிக்குப் போக...ன்னு...சாப்பாடு போட்டு நல்லாப் பார்த்துப்பாங்க....சம்மதமா...? – அப்படிப்போனவன்தான் அக்கணாக்குட்டி. தன் அசட்டுப் பிள்ளைக்கும் ஒரு காலம் வந்து விட்டதே...! அவனாலும் நாலு துட்டு சம்பாதிக்க முடியும் என்று உலகம் காட்டிவிட்டதே...! எல்லாம் பகவான் செயல்...
. கால் ரூபாய் போதும் சாமி...எதுக்கு அரை....அதெல்லாம் வேண்டாம் என்று தன்மையோடு மறுக்கும் உத்ராபதி. இந்தப் பண்பாடு ஒரு எளிய மனிதனிடம் படிந்திருந்த ஒழுக்கத்தின் அடையாளம்.
        முதல் சம்பளம் வாங்கியிருக்கான் எம் பையன்...எட்டணாவாத்தான் வாங்கிக்கயேன்....என்று முத்து அய்யர் சொல்வதை மறுத்து இப்படிச் சொல்கிறார் போஸ்ட்மேன். ஊரும் உலகமும் கூடியானவரை உத்தமமாய்க் கழிந்த காலங்கள் அவை. பரஸ்பரம் மனிதரை மனிதர் மதித்த காலம்.
        முதல் தடவை பணம் வந்து ஆச்சரியத்தில் கழிந்தது. இரண்டாம் தடவையும் கூட அது நீடிக்கிறது.  மூன்றாம் தடவை மூன்று நாள் தாமதமாகிறது. அது சற்று வேதனையளிக்கிறது. ஐந்தாம் தடவை ஒரு வாரம் தாமதம். கோபம் வருகிறது. என்ன கஷ்டமோ என்னவோ என்கிற பரிவுச் சிந்தனையில் மனம் சமாதானமாக, பணம் வந்து குதித்து விடுகிறது.
        இது சம்பாதிச்சு நான் சாப்பிடணும்ங்கிறதில்லை...என்னவோ...முன்ன மாதிரிக் கண் செரியாத் தெரியறதில்லை.கை நடுங்கறது...இனம் புரியாத ஒரு மனக் குழப்பம்...எத்தனை கல்யாணத்துக்கு டின்னரும், டிபனுமாப் பண்ணிப் போட்டிருக்கேன். இந்தப் பய இப்படிப் பிள்ளையாப் பிறந்து  நிக்கறதேங்கிற கவலை...என் தைரியமே ஆடிப்போச்சு ஸ்வாமி...இப்ப அது நிமிந்துட்டது. ஆனா குழப்பம் தீரலே.....
        புரியாத குழப்பத்தோடுதான் அண்ணாவையரோடு மெட்ராஸ் கிளம்புகிறார்.
        ஒரு வாரமா ஜூரம்...முந்தாநாள்தான் ஜலம் விட்டுண்டேன்...ராத்திரி மெட்ராஸ் போகணும்...யாராச்சும் இந்தத் தடவை கூட இருந்தாத் தேவலைன்னு தோண்றது. நாளைக்கு அர்ஜண்டா கேஸூ...உறக்கோர்ட்ல....நீ கூட வந்து ஒரு ரசம் சாதமோ...தொகையலோ பண்ணிப் போட்டாத் தேவலை...
        அதுக்கெண்ணன்னா செஞ்சுப்புடறது.... – கிளம்பி விடுகிறார் முத்து அய்யர்.   போறது போறோம்...அங்கதானே பிள்ளை அக்கணாக்குட்டி இருக்கான்.. அவனையும் இது சாக்குல பார்த்துட்டு வரலாமே...மனது குதி போடுகிறது. அப்படியாவது உள்ளே அடங்கிக் கிடக்கும் குழப்பம் தீராதா....என்னவோ போட்டுப் படுத்துகிறதே...! அக்கணாக்குட்டியின் மீது கொண்ட அன்பும் பாசமும் அவரை அலைக்கழிக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது அவனைப் பார்த்துவிட்டு வந்து விட வேண்டும். என்ன வேலைதான் பார்க்கிறான் என்று தெரிய வேண்டாமா?
        பட்டணத்துக்கு வந்த நாலாம் நாள்தான் ஒழிகிறது  அவருக்கு. அண்ணாவையருக்கு சமைத்துப் போட்டு அவரோடு சுற்றவே நேரம் போதவில்லை.
        நான் சாப்பிட்டுக் கோர்ட்டுக்குப் போறேன். நீ அக்கணாக்குட்டியப் பார்த்திட்டு வந்துடு...சாயங்காலம் நாம ரயிலுக்குக் கிளம்பணும்...முடிஞ்சா அந்தப் பயலையும் அழைச்சிண்டு வா...நானும் ஒரு பார்வை பார்த்துக்கிறேன்....
        சொன்னதும், முத்துவுக்கு அவிழ்த்துவிட்ட கழுதையாட்டம் மனது குதி போடுகிறது. புறப்பட்டு விடுகிறார். வீடு கண்டு பிடிப்பது என்பது ஒன்றும் அத்தனை சிரமமாய் இருக்கவில்லை. அது பங்களா. பங்களா கூட இல்லை. சின்ன அரண்மனை. நிறைய மரங்கள் அடர்ந்து, கார் நிற்கும் முகப்போடு, சிமின்ட் சோபா இரண்டு திண்ணை போல் கட்டியிருக்க அங்கே நான்கு பையன்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
        அம்பி....! - அழைக்கிறார் முத்து.   ஒரு முறைக்கு இருமுறை....குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு விடும் வேலை அன்று இல்லை. சனிக்கிழமை. குழந்தைகள் சில விளையாடிக்கொண்டிருந்தன. ஒன்றுக்கொன்று பந்தயம் சொல்லி பெட்டுக் கட்டிக் கொண்டிருக்க....நான் சைக்கிள்ல டபிள்ஸ் போறேன்...எந்தப் போலீஸ் பிடிக்கிறான் பார்ப்போம்....என்ற பேச்சுக் கிடையே பையிலிருந்து ஐந்து ரூபாய்ப் பணத்தை எடுத்து வைக்கும் ஒரு பையன்.
        அதிர்ந்து போகிறார் முத்துவைய்யர். பன்னிரெண்டு வயதுக் குழந்தை கையில் பெட்டுக் கட்ட ஐந்து ரூபாய் பணம்.!
        சாம்பமூர்த்தின்னு ஒரு பையன்...கும்மோணத்திலேர்ந்து...இங்கதானே வேலையாயிருக்கான்....
        கும்பகோணத்துப் பையனா...இப்படி இறங்கி அதோ அங்கே போங்கோ....ஒரு கிழவர் பதில் சொல்கிறார்.
         நீங்க யாரு...?
        நான் அந்தப் பையனோட தோப்பனார்....
        பெரியய்யா இருக்கிற இடம் இதுதான்....அவங்க கூடத்தான் அந்தப் பையன் இருக்கான்....உள்ளே போங்கோ....
        தாழ்வாரத்தில் வந்து சார்....என்று சத்தம் கொடுக்க....யாரு? என்று உள்ளேயிருந்து ஒரு குரல். பிறகு அது புரிந்து யாரு அப்பாவா...? என்ற அக்கணாக்குட்டியின் கேட்பு.
        படிந்திருக்கும்  சற்றே வெளிச்சம் கலந்த இருளில் அமர்ந்திருக்கும் பெரிய உருவத்தையும், அதனோடு நெருங்கி நின்று அதன் தலையைப் பதமாய்ச்  சொரிந்து விட்டுக் கொண்டிருக்கும் சிறிய உருவத்தையும் இருளோடு இருளாகக் காண்கிறார் முத்து. மேஜை மீதிருக்கும் மங்கிய விளக்கொளியில் அக்கணாக்குட்டியின் முகம் தெரிகிறது.
        நீங்கதான் அக்கணாக்குட்டியோட தோப்பனாரா...வாங்கோ...உட்காருங்கோ.....-கறுப்புக் கண்ணாடி. உதடு அறுந்து தொங்குகிறது. துவண்ட சரீரம். பெரியவர் கன்னத்தைச் சொரிந்து கொள்கிறார். மடங்கிய விரல்கள்.
        எல்லோரும் நகத்தால்தான் முகத்தைச் சொரிவார்கள். இவரென்ன...மடங்கிய விரல்களின் பின் பக்க நடுப்பகுதி கொண்டு.....? – அதிர்ந்து போகிறது மனசு. முத்துவுக்கு உட்கார முடியவில்லை. மேலெல்லாம் அரிப்பது போலிருக்கிறது. புரிந்து கொள்கிறார். போயும் போயும் இந்தவேலைக்கா பையனை அனுப்பினேன்.
        பையனோட அம்மாவுக்கு உடம்புக்குமுடியலை. அவனை சித்த அனுப்பிச்சு வைக்கணும்...
        பாதகமில்லை....போயிட்டு வா...போய் லெட்டர் போடு...எப்ப வர்றேன்னு...எழுதணும்.....
        எப்படியோ அழைத்து வந்து விடுகிறார். மனசு மட்டும் விடாது அலைபாய்கிறது முத்துவுக்கு.
        ஏண்டா...மக்கு...இந்த மாதிரி உடம்பு அந்த மாமாவுக்குன்னு சொல்லவே இல்லியே...! என்கிறார். உன்னை ஏமாத்தியிருக்காடா...அசட்டுப் பொணமே....!
        அதெல்லாம் இல்லேப்பா....அது ஒண்ணும்  தொத்து வியாதி இல்லையாம். இந்தோ போட்டிருக்கா பாரு பேப்பர்லே.... – ஒரு புத்தகத்தைப் பிரித்துஅதிலிருந்து ஒரு தினசரித்தாள் ஒன்றை எடுத்து...அதில் ஒரு வெள்ளைக்காரப் பெண்....யாரோ ஒரு ஆணின் கையைப் பிடித்துத் தடவிக் கொண்டு நிற்கிறாள்..
        இது யாரு தெரியுமா...ராணி...மகாராணி....வெள்ளைக்கார தேசத்துலே... ஒரு கிராமத்துக்குப் போயி அங்க இதமாதிரி இருக்கிறவாளை கவனிக்கிறாளாம். மருந்து சாப்பிட வைக்கிறாளாம். அவாள் எல்லாரையும் பார்த்து கையைத் தடவிக் கொடுக்கிறா வெள்ளைக்கார ராணி.....ஒட்டிக்கும்னா செய்வாளா....பேத்தியம் மாதிரிப் பேசிறியே...! –
        பேத்யம்...மாதிரி நானா...?
        படத்தை மட்டும் பார்க்கிறியே....கீழே என்ன எழுதியிருக்கு பாரு....அக்கணாக்குட்டி காண்பிக்கிறான்.
        பாலாம்பிகே வைத்யோ...-சுலோகம் வாயில் முணுமுணுக்க மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு இடது காதுக்கு தொங்கும் நூலைச் சுற்றிக்கொண்டு அந்தச் செய்தியைப் படிக்கத் தலைப்படுகிறார் முத்துவைய்யர்.
        கதை முழுக்க ஒருவருக்கொருவர் செய்யும் உதவியும், அதில் ஒட்டி உறவாடும் மனிதாபிமானமும், அன்பும் இருக்கும் குறைபாடுகளை மீறி நல்லதே  என்று நம்மை உணர வைக்கிறது.
        சொற்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, உணர்வுகளை அப்பட்டமாய் உணர வைக்கும் தி.ஜா.வின் எழுத்து வன்மை நம்மை வியக்க வைக்கிறது. சின்னச் சின்னக் கதா பாத்திரங்கள்தான். ஆனால் அத்தனையும் நம் மனதில் நிலைத்திருப்பதுபோல், அவை பேசும் பாங்கும், எடுத்து வைக்கும் வியாக்கியானங்களும் அதிரச் செய்கின்றன. அப்படியென்ன....எளிய உரையாடல்கள்தானே....என்று ஒரு புதிய வாசகனுக்குக் கூடத் தோன்றக் கூடும். ஆனால் மிகுந்த சொற்சிக்கனத்தோடு அதை எழுதிப் பார்த்தால்தான் தெரியும்....ஏழ்மையிலும், இயலாமையிலும், அடுத்தவரை நாடி நிற்கும் நிச்சயமற்ற இயங்குதள வாழ்க்கை நிலையிலும்....மனம் தடுமாறி...நிலையற்ற குழப்பமான சூழலில் சாதாரண மனிதனின் மனோ நிலை எவ்வகையிலெல்லாம் தடுமாறி அலைபாயக் கூடும் என்பதை இப்படைப்பில் மிகுந்த ஆழத்தோடு நமக்குச் சொல்கிறார். இந்த வாழ்க்கையின் அனுபவம், தன் அசட்டுப் பையனைக் கூட  எப்படி மாற்றியிருக்கிறது, என்ன மாதிரி ஒரு பக்குவம் கொள்ள வைத்திருக்கிறது  என்று வியக்கும் தந்தையின் மன நிலையை வெகு அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் தி.ஜானகிராமன்.
                                -----------------------------------------------------------------------------


               
       
       
       
       26 ஜூன் 2019

உஷாதீபன் கதைகள் - பாவண்ணன்


அன்றாடங்களின் சித்திரங்கள்
பாவண்ணன்

உஷாதீபன் கடந்த இருபத்தைந்து  ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக எழுதிவரும் எழுத்தாளர். அடிப்படையில் நல்ல வாசகர்.  வாசிப்பையும் எழுத்தையும் தம் வாழ்க்கையைப் பொருளுள்ளதாக தகவமைக்கும் விசைகளாக நினைப்பவர்.
உஷாதீபனின் கதையுலகத்தை ஒருவகையில் அன்றாடங்களின் சித்திரங்கள் என்று வகுத்துக்கொள்ள முடியும். ஒரு கடைவாசல், வாகன நெரிசலுள்ள ஒரு தெரு, ஒரு தோட்டம், வாடகை வீடு, ஒரு மரத்தடி என நாம் ஒவ்வொரு கணமும் கடந்துசெல்லும் இடங்களில் கண்டெடுக்கச் சாத்தியமுள்ள கருக்களையே பெரிதும் அவர் கலைமனம் கண்டடைகிறது. நம்பமுடியாதபடி மனிதர்கள் கொஞ்சம்கொஞ்சமாக மாறி வருவதைப்பற்றி அவருக்குள்ள வருத்தத்தை அவருடைய படைப்புகள் உணர்த்துகின்றன. வாழ்க்கைவிதிகளில் ஒன்றான தவிர்க்கமுடியாமை என்கிற அம்சத்தை அவர் மனம் ஒருசில தருணங்களில் ஏற்று அமைதியடைகிறது. இன்னும் சில தருணங்களில் ஒவ்வாமை கொண்டு புலம்பத் தொடங்குகிறது. பிரம்மநாயகம், ராமனாதன், சீனிவாசன், ராமமூர்த்தி, ராஜாராமன், பத்மனாபன், விஸ்வம், சுப்பிரமணி, விஸ்வேஸ்வரன், மாயவன், அனந்தராமன், வாசுகி, மயில்சாமி, ராமசாமி என பெயர்கொண்ட பலவிதமான மனிதர்களை உஷாதீபனின் சிறுகதைகளில் அறிமுகம் செய்துகொள்ள முடிகிறது. பல தோற்றங்களில் அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். கண்ணைமூடிக்கொண்டு அவர்களுடைய உரையாடல்களை அல்லது அவர்களுடைய கருத்தோட்டங்களை அசைபோடும்போது இதை உணரமுடிகிறது.
இதெல்லாம் போகாதுஇத்தொகுப்பில் நல்ல கதைகளில் ஒன்று. நான் மிகவும் விரும்பிப் படித்தேன். வீடுகளில் பயன்படுத்தி ஓய்ந்துவிட்ட அல்லது இனிமேல் பயன்படுத்தமுடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்ட பழைய பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்துவிட்டுச் செல்லும் மயில்சாமியின் வருகையோடு தொடங்குகிறது சிறுகதை. கதைசொல்லிக்கு அவரோடு உரையாடுவதில் ஆர்வம் அதிகம். அவன் சொல்லும் ஊர்க்கதைகளை ரசித்துக் கேட்பவர். அவனைக் கண்டதும்  அவன் சார்ந்த நினைவுகளையெல்லாம் தொகுத்து அசைபோட்டு மகிழ்கிறது அவர் மனம். தெருக்களிலெல்லாம் அலைந்து சேகரித்துச் செல்லும் பழைய பொருட்களையெல்லாம் அவன் எப்படி விற்றுப் பணமாக்குகிறான் என்கிற தகவல்களைக்கூட போகிறபோக்கில் தெரிந்துகொள்கிறார்.
எடுத்துக்கொண்டு செல்லும் எல்லாப் பொருட்களையும் ஒரு விலை சொல்லி விற்றுவிடும் மயில்சாமியால் பழைய புடவைகளை விற்கமுடியாமல் போய்விடுகிறது. அவை விற்பனை மதிப்பை இழந்து விடுகின்றன. சந்தையில் விற்பனை மதிப்பை இழந்து போய்விட்ட புடவைகளை அவனும் பழைய சாமான்கள் போடும் வீடுகளில் வாங்கிக்கொள்வதில்லை. இதெல்லாம் போகாதுஎன்று சொல்லி தள்ளிவைத்து விடுகிறான். பழைய செய்தித்தாள்கள் முதல் நசுங்கிய அலுமினியப்பாத்திரம் வரைக்கும் ஏதேனும் பணம் கொடுத்துப் பெற்றுச்செல்லும் மயில்சாமி புடவைகளை நிராகரிக்கிறான். கதைசொல்லியின் மனைவிக்கு தையொட்டி வருத்தம் உண்டு. ஆனால் மயில்சாமியோ சொன்ன சொல்லில் உறுதியாக நிற்கிறான். கதைசொல்லிக்கு இதைப்பற்றியெல்லாம் பெரிதாக அக்கறையோ கவனமோ இல்லை. அவருக்கு அவனோடு ஊர்க்கதை பேசி மகிழவேண்டும். அதில்மட்டுமே அவருக்கு ஆர்வம். அவன் வழியாக இரண்டு பழங்கதைகளை அவர் தெரிந்துகொண்டால், அவரும் தன் பங்குக்கு இரு பழைய கதைகளைப் பேசி அவனை மகிழ்ச்சியுற வைக்கிறார். மொத்தக் கதையும் பழங்கதைகளின் பரிமாற்றமாக மாறிவிடுகிறது.
பழைமை மீது மானுடனுக்குள்ள தீராத மோகம் அபூர்வமானதொரு கரு.  எங்கள் தாத்தாவுக்கு யானை இருந்ததுபஷீரின் காவியப்படைப்புகளில் ஒன்று. அப்படி ஒரு படைப்பாக மாறும் சாத்தியப்பாடு மயில்சாமியின் கதையில் எங்கோ ஒரு புள்ளியில் உள்ளது...
இன்னொரு நல்ல கதை ‘முழுமனிதன்’. இது வயதில் முதிர்ந்த ஒரு வாசகரின் கதை. வாசிப்பின் வழியாகக் கிடைக்கும் மகிழ்ச்சியை முக்கியமானதாக நினைப்பவர் அவர். அவர் பெயர் விஸ்வம். வீடு முழுதும் புத்தகங்களாக வாங்கி அடுக்கிவைத்துக்கொண்டு படிக்கும் மனிதர் அவர். இடைவிடாத வாசிப்பின் வழியாக தனக்கென ஒரு ரசனைமுறையை வகுத்துக்கொண்டவர். தான் வாங்கிவைத்திருக்கும் புத்தகங்களை சில தாங்கிகளில் அடுக்கி, தேவைப்படும் புத்தகத்தைத் தேவைப்படும் நேரத்தில் எடுத்துப் படிக்கும் சூழலை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பது அவருடைய கனவு.
நகரில் குடியிருக்கும் அவருடைய மகன் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தன் அடுக்கத்தில் சில மாற்றங்கள் செய்து அவருக்கென ஒரு படிப்பறையை உருவாக்கித் தருகிறான். காலமெல்லாம் தான்  விரும்பிய வாழ்க்கை கிடைத்ததையொட்டி தொடக்கத்தில் மகிழ்ச்சிடைகிறார் விஸ்வம். அவருடைய மனைவிக்கும் அங்கே தங்கியிருப்பதில் மகிழ்ச்சியே ஏற்படுகிறது. கிராமத்தில் தனித்து வாழ்ந்ததைவிட நகரவாழ்க்கை பலமடங்கு பிடித்திருக்கிறது அவருக்கு. எல்லாம் சில காலம்தான். பெரியவரின் மனத்தில் கிராமத்துவீட்டில் வைத்திருக்கும் புத்தகங்களை வகைபிரித்து வைத்துக்கொண்டு பிடித்த புத்தகத்தை பிடித்த நேரத்தில் எடுத்துப் படிக்கும் கனவு மெல்ல மெல்ல அவரை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது. அவர் கனவை அவருடைய மனைவி ஆதரிப்பதில்லை. நடைமுறைச்சாத்தியமற்ற கனவில் மிதந்தபடியே விஸ்வம் அடுக்ககத்தின் அறைவாழ்க்கையின் மகிழ்ச்சியிலும் காலத்தைக் கழிக்கிறார்.
இரு கனவுகளிடையே மாறிமாறி ஊடாடும் நிலைசார்ந்து  இக்கரைக்கு அக்கரை பச்சையென அலைபாயும் மானுட மனத்தின் இயக்கத்தைச் சென்று தொடக்கூடிய சாத்தியப்பாடு உண்டு. உரையாடல்களை வகுப்பதிலேயே உஷாதீபனின் ஆழ்மனம் திட்டமிட்டு நகர்ந்துசெல்கிறது.  
இப்படியான பல  சிறுகதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. நடந்துமுடிந்த இறந்தகால அனுபவங்களை அசைபோடுவதாக, ஒரு சந்திப்பு தூண்டிவிடும் நினைவுகளாக, ஆற்றாமையோ வருத்தமோ தூண்டும் குமுறல்களாக, குற்ற உணர்ச்சியின் வடிகாலாக ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் அமைந்துள்ளன. அந்தக் கோணத்தில் அவை முக்கியத்துவம் கொள்கின்றன என்பது உண்மை. ஆர்வத்தைத் தூண்டி வாசிக்கவும் வைக்கின்றன.
சிறுகதை என்னும் கலைவடிவம் அன்றாடத்தின் ஆச்சரியங்களையும் புதிர்களையும் பயன்படுத்திக்கொள்ளும்போதே, அவற்றையே துணையாகக் கொண்டு மானுடத்தின் ஆச்சரியத்தையும் மானுட வாழ்க்கையின் புதிரையும் நோக்கி விரிந்துசெல்லும் தன்மை கொண்டதாகும்.
முக்கியமான எடுத்துக்காட்டு புதுமைப்பித்தனின்மகாமசானம்’. எந்த நகரத்திலும் நடப்பதற்குச் சாத்தியமான ஒரு சாதாரணக் காட்சியே இக்கதையின் களம். அதே சமயத்தில் மானுட வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் காணக்கூடிய அவலம், இரக்கம், கருணை, பித்தலாட்டம், துரோகம், மெத்தனம் அனைத்தையும் உணர்த்தும் ஆற்றல் கொண்டதாக புதுமைப்பித்தனின் கலை மாற்றிவிடுகிறது. கலை வாழ்வில் நாம் செல்லவேண்டிய பயணத்தின் தொலைவை அது ஒவ்வொருவருக்கும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. எனக்குள் நான் பலமுறை சொல்லிக்கொள்ளும் வாக்கியம் இது. நண்பர் உஷாதீபனுக்காக இன்னொருமுறை சொல்கிறேன்.
உஷாதீபனுக்கு என் வாழ்த்துகள்.
                ---------------------------------------------

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...