27 பிப்ரவரி 2012

க.நா.சுவின் “அசுர கணம்” (நாவல் வாசிப்பனுபவம்)கட்டுரை


 

நாவல் என்றால் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களோடு அறிமுகமாகி அந்தக் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களின் வழி சிறு சிறு நிகழ்வுகளோடு நகர்ந்து அங்கங்கே கதையின் சம்பவங்களுக்கேற்ப வெவ்வேறு அறிமுகமும், முக்கியத் திருப்பங்களுமாக மாறி, ஒரு காலகட்டத்தின் தவிர்க்க இயலா சம்பவங்களையும், அதனால் உண்டாகும் படிப்படியான மாற்றங்களையும் அவற்றின் வழி ஆழமாகவும், அழுத்தமாகவும் விரிந்து குறிப்பிட்ட காலத்தின் ஒதுக்க முடியாத சாட்சியாய் தவிர்க்க இயலாத புரிதலின் முழுப் பரிமாணமாய் விகசித்து, ஒரு இடத்தில் முடிவுக்கு வரும் ஒரு அர்த்தபூர்வமான ஆவணம் போல் என்று கொள்ளலாம். நாவலுக்கான படிமங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது ஒரு வகையிலான புரிதல்.

இம்மாதிரியான இலக்கணங்களோடு வெளிவந்திருக்கும் நாவல்கள் இருக்கின்றனவா? அல்லது வெவ்வேறு அமைப்புக் கொண்டனவாய் விரிந்து காணப்படுகின்றனவா? எனில் அப்படித்தான் என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். காலத்தின் தேவைக்கேற்றாற்போல் ஒவ்வொன்றும் வேறு வேறு மாற்றங்களைக் கண்டுதான் வந்திருக்கின்றன. பல்வேறு விதமான சிந்தனைகளின்பாற்பட்டு வடிவமாற்றங்களைப் பெற்றிருக்கின்றன. வாசக மனத்தைக் கொள்ளை கொண்டு புதிய முயற்சிகளாய் பிரமிக்க வைத்திருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் தன் பார்வையிலேயே கதையைச் சொல்லிக் கொண்டு போவதாய் நாவல் விரிந்திருக்கிறது. ஒரே ஒரு கதாபாத்திரமும் அதைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளுமாய் நாவல்கள் வெளி வந்திருக்கின்றன. மிக நீண்ட சிறுகதைகளாய்த் தோற்றமளித்து, நாவல் என்கின்ற பெயரினைத் தாங்கி அதன் சம்பவங்களாலும், சம்பாஷனைகளாலும் பரிமளித்து தன்னை நிமிர்த்திக் கொண்ட படைப்புக்களும் உண்டு.

வெவ்வேறு காலகட்டங்களின் பல்வேறு வித முயற்சிகளிலும், வெளிக்கொணர்வுகளிலும், நாவல்களின் தளங்கள் இயங்கிக் கொண்டிருந்தாலும், ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து, அந்தக் கதாபாத்திரத்தின் மன உளைச்சல்களை, எண்ண ஓட்டங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு நாவலைப் படைக்க முடியுமா என்று யோசிக்கும்போது அழுத்தமாக, ஆழமாகப் படைக்கப்பட்டிருக்கிறதே என்பதைக் கண்கூடாகக் காண, அந்தப் படைப்பும் நம் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய படைப்பாளியின், விமர்சகரின், வித்தகரின் வழி வெளிப்போந்திருக்கும் அதிசயத்தை உணர நம்மை அப்படியே பிரமிப்பில் நிலை நிறுத்தி விடுகிறது.

அவரின் இலக்கிய ஞானம் பற்றிப் பேசுவதற்கே தகுதியில்லை (நான் என்னைச் சொல்லிக் கொள்கிறேன் என்று தயவுசெய்து கொள்க…!) என்கிற நிலையில் அவரின் ஒரு நாவலைப்பற்றி விமர்சிக்க எங்ஙனம் நீ துணிந்தாய்? என்ற மனக் கேள்வியின் ஊடே விமர்சிக்கவில்லை அய்யா, இந்த நவீனத் தமிழ் இலக்கிய உலகத்திற்கு, அதில் அறியப்படாதவர்களுக்கு வாசக அனுபவத்தை எடுத்து வைக்கலாம், என்கிற நல்லெண்ணமே என்று என்னை நானே இங்கே நிலை நிறுத்திக் கொள்ள விழைகிறேன்.

இருக்கும் நல்ல விஷயங்களையெல்லாம் உன் மனதிற்குள் போட்டு நிரப்பிவிடு. பிறகு தீயவை, தீய எண்ணங்கள் உன்னை அண்டாது என்றார் சுவாமி விவேகானந்தர். மனித மனத்தின் எண்ண ஓட்டங்கள், அதனால் உண்டாகும் நிகழ்வுகள் அத்தனை சீக்கிரத்தில் கட்டுக்குள் வந்து விடுகின்றனவா? இந்த மனம் பெரும்பாலும் நல்லவைகளைவிட தீய விஷயங்களை நாடுபவைகளாகவும், அறிதலில் ஆர்வமுள்ளதாகவும், நாட்டம் செலுத்துவதாகவும்தானே இருந்து கொண்டிருக்கின்றன? செயல் வடிவம் பெறும் முன் நாம் அதைப் பகுத்து நோக்குகிறோம் என்றாலும், வேண்டாத்தை ஒதுக்க முனைகிறோம் என்றாலும், ஒரு நல்ல விஷயத்திற்காக நாம் எடுக்கும் முயற்சிகள் நம்மை நெருங்கும் முன் அதன் எதிர்வினையான தீயது நம்மை எத்தனை சீக்கிரமாக அண்டி நம் தலை மேல் உட்கார்ந்து கொண்டு நம்மை ஆட்டுவிக்கிறது?

மனிதனின் குணாதிசயங்கள் எத்தனையோ வகையானவை. அதற்குத் தகுந்தாற்போல் செயல்கள் மாறுபடுகின்றன. எத்தனையோ நல்லவையும் நடக்கின்றன. தீயவையும் நடந்து போகின்றன.

ஆனால் பாவம் இந்த மனிதனால் அந்தத் தீய எண்ண ஓட்டங்களைத் தவிர்க்க முடிகின்றனவா? எதை நினைக்கிறோமோ அப்படியே ஆகிறோம் என்பதைப்போல மனித மனத்தின் அவல எண்ணங்கள், அபத்தச் சிந்தனைகள், சுற்றிச் சுற்றி வந்து அலைக்கழித்து என்னமாய்ப் பாடாய்ப் படுத்துகின்றன? ஆனாலும், அது வேண்டாம் என்று முற்றாக வெறுத்தொதுக்கி அதிலிருந்து விடுபட்டு விட முடிகின்றதா? அப்படி விடுபட்டவர் எத்தனை பேர்? படுகுழியிலிருந்து மீண்டவர் எவரெவர்?

இந்த மனப் போராட்டத்தின், அதனால் உண்டாகும் எண்ண அலைகளின் படிமங்களாய் விரிந்து கிடக்கிறது இந்த நாவல்.

பல்வேறு குண விசேஷங்களைக் கொண்ட கதாபாத்திரங்களா? அடுக்கடுக்கான வித்தியாசமான சம்பவ நிகழ்வுகளா? எதிர்பாராத திருப்பங்களா? அதனால் உண்டாகும் அதிசய மாற்றங்களா? எதுவுமில்லை. கதைக்கான புற நிகழ்வுகள் என்று பார்த்தால் அது மிகச் சாதாரணம்தான். ஆனால் அந்த ஒரு சில நிகழ்வுகளின் ஊடே எழும் மனப் போராட்டங்களும், முரணான எண்ண ஓட்டங்களும், அம்மாதிரி நினைத்து நினைத்தே தன்னை விரித்துக் கொள்ளும் அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரமும், தன்னை உணர்ந்தே தன்னை நகர்த்திக் கொள்ள முயலும் முயற்சிகளும், தன் சுய எண்ண ஓட்டங்களின்பாற்பட்ட அறிவு பூர்வமான விமர்சனமும், ஆனால் அதிலிருந்து விடுபட முடியாத, அதன் மீதான தீராத பிரேமையில் தன்னைத் உயரே நிறுத்திக் கொள்ளும் தன்மையும், இந்த நாவலின் தலையாய வெற்றி என்றுதான் கொள்ள வேண்டும்.

இப்படியெல்லாமும் எழுதலாம் என்கிற மனத் துணிவை, ஊக்கத்தை, ஒரு படைப்பாளிக்கு வழங்கக் கூடிய தன்மையில் தலை நிமிர்ந்து நிற்கிறது இந்த நாவல்.

ஒரு அசாதாரணமான, விசித்திரமான, உங்களுக்குள்ளேயே நீங்கள் பல சமயங்களில் இருந்த, இருக்கிற, ஒரு வித்தியாசமான இளைஞனைக் கதாபாத்திரமாக்கி அவன் மூலமாக ஆழமாக, அழுத்தமாக நாவலை நகர்த்திக் கொண்டு போகும் புதுவித முயற்சியிலான இந்தப் படைப்பு ஒரு தேர்ந்த இலக்கிய இயக்கமாகத் திகழ்ந்த அவருக்கே சாத்தியம்.

அவர் திரு க.நா.சு. அந்த நாவல் அசுர கணம்.

படித்து முடித்த கணத்தில் இதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்ற ஆவல் எழுந்த போது தவறாக, எதுவும் உளறி விடக் கூடாதே என்ற பயம்தான் ஏற்பட்டது. எழுதும் இந்த வேளையிலும் அது கூடவே வந்து கொண்டிருக்கிறது என்பதுதான் மனதுக்கு துரோகம் செய்யாத அசல் சிந்தனை. முதலில் அவரைப் படிப்பதற்கே, இப்படி அடையாளம் கண்டுகொள்வதற்கேனும் நமக்கு வழி வகுத்தானே அந்தப் பரம்பொருள் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. மனதில் தோன்றும் இந்த மதிப்பு மிக்க எண்ணங்களை எப்படி மறைப்பது? ஏன் மறைக்க வேண்டும்? சரியான நோக்கில் எடுத்துக் கொள்பவர்கள் இல்லாமலா போகிறார்கள்? மாறாக நினைப்பவர்கள் நினைத்துக் கொள்ளட்டுமே! இந்த உலகத்தில் எல்லா விஷயங்களுக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரே மாதிரியாகவா விமர்சனங்கள் இருந்திருக்கின்றன? இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று வரையறுத்தது யார்? இப்படிச் சொல்லக் கூடாது என்று தடுத்தது யார்? ஒரே மாதிரியான எதிர்வினைகளா விழுந்திருக்கின்றன? இதுதான் சரி என்று முற்றுப்புள்ளி வைப்பவன் எவன்? எனக்குத் தோன்றுகிறது, நான் எழுதுகிறேன். இப்படி ஒன்றை அடையாளம் காட்டினானே என்று தேடுபவர்கள் தேடட்டும். பயனடையட்டும். இதையெல்லாம் வெளிக்கொணர்ந்து சொல்வதற்கு ஆள் வந்து விட்டதே என்று நினைத்துப் புழுங்குபவர்கள் புழுங்கட்டும். இப்படி ஒரு படைப்பு இருக்கிறது. இது எல்லோராலும் அறியப்பட வேண்டியது. இந்த எழுத்து இதைச் சொல்கிறது. அறியுங்கள். அவ்வளவே…! பூக்கள் மலர்வதைப்போன்ற மெல்லிய அணுகுமுறைகளும், அசுர கணங்களான தொடர் முரண்களும் மாறி மாறித்தானே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன?

நாவலின் மெய்ப்பொருள் குறித்து திரு சி.மோகன் அவர்கள் அழகாக இவ்வாறு விவரிக்கிறார்

அசுர கணங்களின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல். படைப்பில் புற நிகழ்வுகள் வெகு சொற்பம். மன நிகழ்வுகளால் கட்டமைக்கப் பட்டிருக்கும் நாவல். அசாதாரணமானவன், விசித்திரமானவன், சிந்தனையாளன் என்றெல்லாம் தன்னைக் கருதிக் கொள்ளும் ஒரு இளைஞனிடம் சுழித்துச் சுழன்றோடும் சுபாவமான எண்ண ஓட்டங்களில் இப்படைப்பு உருப்பெற்றிருக்கிறது. ஒரு நிகழ்வின் அடியாக ஓர் எண்ணம் எழுந்து, அது அதன் எல்லாப் பக்கங்களிலும் விரிந்து பரவி வியாபிக்கிறது. தமிழின் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்று அசுரகணம்.

நாவல் முழுவதும் அசுரகணமான நினைவுகளே நாயகன் வழி நிரம்பிக் கிடக்கின்றன. அவன் சிந்தனை பரந்துபடும் இடமெல்லாம் நேருக்கு முரணான எண்ணங்கள் விரிகின்றன. அதை அவனால் தவிர்க்க முடியவில்லை. ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது என்று அவன் தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறான். ஆனாலும் அவனால் இதைத் தவிர்க்க முடியவில்லை. ஒன்றோடு ஒன்றைத் தொடர்பு படுத்தி தனது சிறு சிறு செய்கைகளையெல்லாம் வேறொன்றோடு கோர்த்துக் கோர்த்து எண்ணிக் கொண்டே, வலை பின்னிக் கொண்டே செல்கிறான். இப்படியான விபரீத எண்ண ஓட்டங்களும், அதன் பாதிப்பினால் இயல்பான மனித நடைமுறையும் தவறிப் போய், மற்றவர் பார்வைக்கு ஸெமி என்றும், கிராக்கு என்றும், அரைக் கிறுக்கு என்றும் எண்ணப்படுபவனாய், தன்னை இவ்வாறுதான் பிறர் நினைக்கக் கூடும் என்று உணர்ந்தவனாய், அப்படி உணரும் திறனிருந்தும், அதைத் தவிர்க்க முடியாதவனாய் கதாநாயகன் தன் எண்ணச் சுழற்சியினால் படும் பாடு படிக்கும் வாசகனை அப்படி அப்படியே கடைசி வரை இழுத்துக் கொண்டு போய் கூடவே பயணப்பட வைத்து விடுகிறது. இதுவே இந்த நாவலின் வெற்றி என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

நாதசுர சப்தம் கேட்டால் யாருக்காவது சாவு நினைவுகளாக வருமா? எனக்கு வருகிறதே? நான் என்ன செய்ய? என்றுதான் நாயகனின் சுய விமர்சனம் ஆரம்பிக்கிறது இந்த நாவலில். நம்முடைய அனுபவத்திலேயே பலதையும் நாமும் இப்படிக் கண்டிருக்க முடியும்தான். பலரும் தங்களது அனுபவங்களாக இப்படியெல்லாம் உணர்ந்திருக்க முடியும். திருமண வீட்டில் இருக்கும்போது மனதுக்கு அமங்கலமாகத் தோன்றுவது, உறக்கத்தில் மயானத்தில் படுத்துக் கிடப்பது, கல்லறைகளைக் கட்டிக் கொண்டு அழுவது, பேரலை பெருக்கெடுத்து நகருக்குள் அதிலும் குறிப்பாக நாம் குடியிருக்கும் தெருவுக்குள் நுழைந்து நம்மை அமுக்குவது, கழிவறையில் அமர்ந்திருக்கையில் சுவற்றில் படிந்திருக்கும் அழுக்குகள் அல்லது நீர்ச் சிதறல்கள் வெவ்வேறு தோற்றங்கள் கொண்ட சித்திரங்களாய் மனிதர்களாகவும், மிருகங்களாகவும், பறவைகளாகவும், மரங்களாகவும், இயற்கை வனாந்திரங்களாகவும் கண்ணுக்குத் தெரிவது, இப்படியெல்லாம் பலரும் உணர்ந்திருக்க்க் கூடும். அம்மாதிரி ஒரு விசித்திர மன நிலையில்தான் இந்தக் கதையின் நாயகன் நாவல் முழுவதும் பயணிக்கிறான்.தவறுதான் என்றும் அங்கங்கே உணருகிறான். ஆனால் அந்த எண்ண அலைகளை அவனால் தடுத்தாட்கொள்ள இயலவில்லை. எந்தெந்தப் பிரத்யட்சமான காட்சிகளையெல்லாம் அவன் கண்கள் காணுகின்றனவோ அவைபற்றியெல்லாம் விபரீதக் கற்பனை கொள்கின்றது. சித்தமும், போக்கும் விசித்திரங்களாய் விரிய, அசுர கணங்களாய் உணருகிறான் அவைகளை.

ராமன் என்ற அந்த இளைஞனை அவன் தந்தை தன் நண்பரின் வீட்டுக்கு அனுப்புகிறார். அங்கே அந்தப் பெண்ணை அவன் சந்திக்கிறான். கூடவே அந்தப் பெண்ணின் தாயையும் பார்க்கும்போது பின்னர் ஒரு கட்டத்தில் கூடவே அந்தத் தாயின் நிழலும் ராட்சசிபோல் பேருருக் கொள்கிறது அவன் மனத்தில். அவள் தாயின் உருவம் அவனுக்கு வெவ்வேறு வடிவங்களை மனதுக்குள் தகவமைக்கிறது.

அவள் வீட்டுக்குள் இருக்கும் பொழுதுகளில் இவ்வாறு உணர்கிறான் நாயகன் ராமன்.

அறை கதகதப்பான இருந்தது. நான் உட்கார்ந்திருந்த ஆசனமோ மெத்தென்று எனக்குப் பிடிப்பாகவே இருந்தது. என்று சொல்லிவிட்டு ஃப்ராய்ட் என்ற மனோதத்துவ நிபுணர் கற்பனையால் கண்டு சொன்ன ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது என்று விவரிக்கிறார்.

மனிதர்களாய்ப் பிறந்து விட்டவர்கள் எல்லாருக்குமே கவலையற்ற, மெத்தென்ற, சுகமான, தாய் வயிற்றுக் கர்ப்பப்பை நினைவு அற்றுப் போவதேயில்லை. அந்த சுகத்தை நாடியே மனிதர்கள் செயல்படுகிறார்கள், ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறார்கள். கதகதப்பும் மிருதுத் தன்மையும், அவள் தாயின் அந்த நிமிஷத்து சொர்க்கமாகவே எனக்குத் தோன்றின.

அந்தப் பெண்ணைச் சந்திக்கும் அந்த வேளையிலிருந்துதான் தன் மனதில் நரக வேதனை ஒட்டிக் கொண்டது என்று நினைத்து தன் எண்ணங்களை வளர்த்துக் கொண்டே போகிறான் நாயகன்.

இப்படியான தனது சிந்தனைகள் மற்றவர்களுக்கு ரொம்பவும் வித்தியாசமாய்த் தோற்றமளிப்பதையெல்லாம் உணரும் அவன், இவற்றையெல்லாம் தவிர்க்க முடியாமல் திணறுகிறான்.

பழக்கப்பட்ட சுவட்டிலே, தேய்ந்துபோன தடத்திலே, மனித மந்தையிலே, நானும் ஒரு மந்தை ஆடாக யார் கண்ணிலும் தனியாகப் படாமல் எப்படியும் எந்தக் கவனத்தையும் கவராமல் இருந்த சோடு தெரியாமல் போய் விடுவது நல்லது. அது தெரியாமல் மனிதர்கள் நினைவுச் சின்னங்களை நிர்மாணிக்கிறார்கள்.

கறையெல்லாம் அழுக்குத்தான். நினைவுச் சின்னங்கள் எல்லாம் மறதியையே சுட்டிக் காட்டுகின்றன. நேர் நின்று நோக்கத்தான் யாருக்கும் தெம்பில்லை.

எத்தனை அருமையான கவிதை வரிகள் பாருங்கள்.

சுலபமாக, சிரமப்படாமல், யாரையும் சிரம்படுத்தாமல் வாழ்ந்துவிட்டு இறப்பவனே சிறந்த மனிதன். மற்றவர்களைப் போல இருக்கவும், சிந்திக்கவும், அறியாதவன் தனிமையை நாடி, காட்டிலே விலங்குகளுக்கிடையே ஒரு விலங்காக அல்லது ரிஷிகளுக்கிடையே ஒரு ரிஷியாக உருமாறி வாழ்ந்து விடுவது நல்லது. உலகில் நடமாடுவது பிசகு என்றுதான் தோன்றுகிறது.

புத்தனுக்குப் பிறகும், ஸாக்ரடீசுக்குப் பிறகும்,ஒருகுங்கிற்குப் பிறகும், ஜராதுஷ்டிரனுக்குப் பிறகும் சங்கரனுக்குப் பிறகும் சிந்தனை தேவையாகத்தான் இருக்கிறது. லோக குருமார் எத்தனை பேரோ வந்து போனது உண்மைதான் எனினும் உலகம் இன்னமும் லோகமாகத்தான் இருக்கிறது. கடைசி லோக குருவாக இருக்க முடியுமானால் அது மிகவும் நல்ல காரியம். ஆனால் எனக்குப் பிறகும் லோக குருமாருக்கும் அவசியம் ஏற்படும்தானே?

இப்படியான தத்துவ விசாரங்கள் நாவல் முழுதும் விரிந்து கொண்டே செல்கிறது. எல்லாமும் நாயகனின் எண்ண ஓட்டங்கள்தான். காணும் காட்சிகளுக்கெல்லாம் முரணாகவும், எதிராகவும், விரக்தி கலந்த சந்நியாச மனநிலையிலும் அவன் எண்ணங்களின் விரிந்து பரந்த வியாபகம் படிக்கும் வாசகனையும் ஒரு முதிர்ந்த மனநிலைக்குக் கொண்டு செல்கிறது, கொண்டு செல்லும் என்பதுதான் இந்நாவலின் அடிநாதமாய் நிற்கும் சக்தி.

என்னைப் பற்றியோ, என் உள்ளத்தை, ஆன்மாவை என் சிந்தனைகளைப் பற்றியோ என் சிந்தனைகளின் தனிப் போக்கைப் பற்றியோ எனக்கு என்னதான் நிச்சயமாகத் தெரியும்? நிச்சயமாக ஒன்றுமே தெரியாது என்பதுதான் நிச்சயம். ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு ஒன்றும் தெரியாது என்கிற முடிவுக்கு வர இவ்வளவு சிந்தனை எதற்கு? சாதாரண மக்கள் மாதிரி லட்சத்தில் ஒருவனாக, கோடியில் ஒருவனாக ஏன் இருக்க முடியவில்லை? என்று அவன் தனக்குத் தானே கேட்டுக் கொள்ளும் கேள்விகள் நாமும் நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டியவைகள்.

அந்தப் பெண்ணின் வீட்டிற்குப் போய்விட்டு தன் வீடு திரும்புகையில் நடந்து கொண்டிருக்கும்போது அவனின் சிந்தனைகள் பலபடி விரிகின்றன. நாவலின் ஓட்டம் முழுவதும் இம்மாதிரியான பரந்துபட்ட எண்ண விரிசல்களிலேயே தொடர்ந்து பயணிக்கிறது. ஒரு இடத்தில் கதை நாயகன் வழி சொல்கிறார்.

உலகத்துச் சிறந்த மனிதர்களின் சிறந்த சிந்தனைகள் எல்லாம் அவர்கள் நடந்து கொண்டிருக்கும்போதுதான் உதிக்கின்றன. ஸாக்ரடீஸ் முதல் இன்றைய நாள் வரையில், உபநிஷத்துப் பெரியவர்கள் முதல் இன்றைய ழாக் மாரி டெய்ன் வரையில் எல்லாச் சிந்தனையாளர்களுமே நடப்பதில் பிரியமுள்ளவர்களாகவேதான் இருந்திருக்க வேண்டும். நடையின் சரித்திரத்தை யாரேனும் ஒரு தீர்க்க தரிசனம் வாய்ந்த ஞானி எழுதிப் பார்த்தால் அதுவே உலகத்தின் சிறந்த நூலாக விளங்கும்.

ராமன் என்ற தன் பெயரைப் பற்றி நாயகனின் சிந்தனை போகிறது. எவ்வளவு பெரிய வார்த்தை அது! எத்தனை உள்ள அர்த்தங்களை அடக்கிய மகத்தான வார்த்தை. பல காவியங்களுக்கு அடிப்படையான வார்த்தையாயிற்றே! அந்த வார்த்தைக்கே அர்த்தம் “நான்” தான் என்று எண்ணிச் சில சமயம் நான் ஏமாந்து விடுகிறேன். அன்று ராவணனின் அசுரத்தனம் சீதையைத்தான் நாடியது. ராமன், சீதை தன்னுடையவள் என்று எண்ணி வலியத் தேடிப்போய் ராவணனுடன் யுத்தம் செய்தான். ராவணனையும் அவன் குடும்பத்தையும் நிர்மூலமாக்கினான்.

அதனால் அசுர கணமே அற்றுப் போய்விட்டது உலகத்திலே என்று கொள்ள முடியுமா?

பாண்டியன் பைலட் என்கிற ராஜ்யப் பிரதிநிதி முன் சக்தி வாய்ந்த ரோம சாம்ராஜ்யத்தின் பிரதிநிதி முன் கொணர்ந்து நிறுத்தப்பட்ட ஏசு கிறிஸ்துவை பாண்டியன் பைலட், உண்மை என்றால் என்ன? என்று கேட்டானாம். ஏசுவுக்கா தெரியாது? தெரிந்திருந்தும் வாய் மூடி மௌனியாக நின்றாராம் அவர். நாயகியின் தாயார் நாயகனை ரொம்பவும் கெட்டிக்காரர் என்று அறியப்பெற்று தன் வயதிற்குப் பொருத்தமில்லாமல், அதே சமயம் இவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் தவறில்லை என்கிற நினைப்பில், காதல் என்பதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று வீசும் கேள்விக்கு படிப்படியாகப் எழும் பல்வேறு சிந்தனை மோதல்களில் மேலே குறிப்பிட்டுள்ள கேள்வியும் ஒன்றாக அமைகிறது.

இப்படியாகப் பக்கத்திற்குப் பக்கம் க.நா.சு வின் பாண்டித்யம் நாவல் முழுவதும் விரிந்து கிடக்கிறது. எண்ண ஓட்டங்களினூடே என்ன கதையைச் சொல்லி என்ன செய்யப் போகிறோம் என்று வெறும் கதையையும் சம்பவங்களையும் மனதில் கொள்ளாமல் அவர் மனதிலே இடைவிடாது வந்து மோதிக் கொண்டிருக்கும் தத்துவ நெறிகளையும், காலங்காலமான ஆழ்ந்த வாசிப்பு அனுபவங்களையும் அங்கங்கே நாவல் முழுமைக்கும் விரவிக் கொண்டே செல்கிறார்.

நாவல் என்றால் கதை என்ன, எதைப்பற்றி, எந்தக் காலகட்டத்தைப் பற்றி அது விவரிக்கிறது என்கிற எதிர்பார்ப்பில் வாசிக்க ஆரம்பிப்பவர்களுக்கு இது ஏமாற்றமாகத்தான் இருக்கும். நாயகன் நாயகியைப் போய்ப் பார்ப்பதும், பிறகு அவர்கள் பற்றித் தனக்குத் தானே நினைத்துக் கொள்வதும், பிறகு மீண்டும் சந்திப்பதும், கடைசியில் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடிவாவதும் என்கிற ஒரு வரிக் கதையைத் தவிர வேறொன்றுமேயில்லையே என்று தோன்றும்.

மதிப்பிற்குரிய திரு சி.மோகன் அவர்கள் அவரின் முன்னுரையில் சொல்லியிருப்பதுபோல் முழுக்க முழுக்க மன நிகழ்வுகளால் கட்டமைக்கப்பட்டு உருப்பெற்றிருப்பது இந் நாவல். உயர் தரத்தில் எழுதப்பட்டிருக்கும் க.நா.சு. அவர்களின் குறிப்பிடத்தக்க இலக்கியப் பங்களிப்பு.

அவசியம் எல்லோரும் படித்து அனுபவிக்க வேண்டிய இந்த நாவலை நற்றிணைப் பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை – 5 வெளியிட்டிருக்கிறார்கள்.(பிரசுரம் - உயிரோசை இணைய வார இதழ் - 27.02.2012)

------------------------------------------------------

25 பிப்ரவரி 2012

“மௌனப்புறா”


சிறுகதை

ருவகைல பார்த்தா நாமளும்தான் காரணம் – அத்தனை நேரம் அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தவர், கடைசியாக இப்படிச் சொன்னது சுசீலாவைத் திடுக்கிட வைத்தது.

எதையாவது உளறாதீங்க…என்றாள் அவள் பட்டென்று.

பயந்திட்டியா….? என்னடா இவன் இப்டிச் சொல்றானே…யாராவது தப்பாப் புரிஞ்சிக்கிட்டு, அது வினையாகிடப் போவுதுன்னு, பதறிட்டியோ…?

அதேதான்…உங்க திருவாய மூடுங்க முதல்ல….

அடி இவளே…நா அந்த அர்த்தத்துல சொல்லல…நா சொன்னதோட அர்த்தமே வேறே…

எந்த அர்த்தமானா என்ன? இந்தப் பேச்சை விட்ருங்க இதோட…

என்னடி இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டே…அப்போ இது வெறும் செய்திதானா உனக்கு…? அடுத்தாப்ல பரபரப்பா ஒண்ணு வந்தா அதுக்குத் தாவிடுவ…இத மறந்திடுவ…அப்டித்தானே…?

அப்டியில்லே….மனசுக்குப் பெரிய கஷ்டமாத்தான் இருக்கு…அந்தப் பொண்ணு இப்டிச் செய்திடுத்தேன்னு…

அதத்தாண்டி நானும் சொல்ல வர்றேன்…இத்தனை வருஷமா நம்ம வீட்ல வேலை பார்த்த பொண்ணோட உள்ளார்ந்த பிரச்னை என்னன்னு நாம கேட்கத் தவறிட்டோமில்லியா?அது நம்ம தப்புதானே?

ஆமா…பெரிய பிரச்னை? நமக்கே இங்க தலைக்கு மேல இருக்கு…இதுல ஊருல உள்ளதையெல்லாம் இழுத்துப் போட்டுக்க முடியுமா? ஏதோ வருதா, வேலையைச் செய்யுதா, போகுதான்னுதான் இருக்க முடியும்…அவாளோட சொந்த விவகாரத்துல எல்லாம் தலையிட முடியுமா? அதுவா வாயத் திறந்து ஏதாச்சும் சொல்லித்துன்னா, கேட்டுதுன்னா உதவலாம்…இல்லன்னா நமக்கு எப்படித் தெரியும்? நமக்கு என்ன பிரச்னைன்னு யாராச்சும் கேட்கறாளா? அவா அவா அவாளோட காரியங்களைப் பார்த்திண்டிருக்கா…மனுஷாளே அப்டித்தானே இருப்பா…அதுதானே இயற்கை…அதுதான் இத்தனை வருஷமா இருந்தும் நம்மளோட ஒட்டவே இல்லையே…?

எப்போ அது இத்தனை வருஷமா நம்ம வீட்டுல வேலை பார்த்திடுத்தோ, அப்போ அதோட சொந்த நலன்கள்லயும் நமக்கு அக்கறை இருந்துதாண்டி ஆகணும்…அதுதான் சரி…அதத்தான் நாம கேட்கத் தவறிட்டோம்ங்கிறேன் நான்…

இது கொஞ்சம் அதிகமாத் தெரிலயா உங்களுக்கு? அதுவாச் சொன்னாத்தானே தெரியும்…நாமளா எப்படி இதையெல்லாம் கேட்குறது? ஏதாச்சும் முகத்துல அடிச்ச மாதிரிக் கேட்டிடுத்துன்னா? ஒருத்தரோட பர்ஸனல் விஷயமில்லியா?

நீ ஒரு மூணாவது மனுஷியா அதை நினைச்சிண்டு பேசற…. அதுனாலதான் அப்படி ஒரு விலகல் தோணறது உனக்கு…நா அதை என் பொண்ணா நினைச்சிண்டு பேசறேன்…இங்க அதுதான் உதைக்குது விஷயம்…

போச்சு…இத ஒண்ணு சொல்லிடுங்க…யாரப் பார்த்தாலும் என் பொண்ணு போல இருக்கு, என் பொண்ணு போல இருக்குன்னு…அப்டீன்னா பேசாம ஒரு பெண்ணைப் பெத்துண்டிருக்க வேண்டிதானே…ஏன் விட்டேள்?

அதுதான் விட்டாச்சே…அத இப்பச் சொல்லி என்ன பண்ண? நாந்தான் விட்டேன்…நீ என்ன பண்ணினே…எனக்கு ஒரு பொண்ணு வேணும்னு பிடிவாதமா நின்னிருக்க வேண்டிதானே…

போறும்…நிறுத்துங்கோ…இன்னும் பத்து வருஷம் கழிச்சு சொல்லுங்கோ…முகத்துல நன்னா வழியறது…முதல்ல துடைங்கோ…

பசுபதி சிரித்துக் கொண்டார்.

மனிதனுக்கு அந்தந்த வயதுக்கு மனம் என்ன பேச வேண்டுமோ அதைப் பேசினால்தானே அவன் மனிதன். மாறாக வேண்டாத நினைப்பெல்லாம் இருந்தால் அது அவனை உயர்த்துமா? இது சும்மா சுசீலாவைத் தமாஷ் பண்ணியது. அவ்வளவே…!

அந்தப் பெண் மஞ்சரி வேலைக்கு வந்த நாள் முதலே அதன் மீது ஒரு ஆழ்ந்த இரக்கமும் கருணையும் தன்னிடம் சுரந்து அது நிலை பெற்றுவிட்டதை நினைத்துக் கொண்டார் பசுபதி.

இத்தனை சின்ன வயதில் திருமணமும் முடித்து, ஒரு குழந்தைக்கும் தாயாகி அதைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் இதன் தலையில் விடிந்திருக்கிறதே என்று மனம் பாரமாய் உணர்ந்திருக்கிறார். நிரம்ப இரக்கப்பட்டிருக்கிறார். அதுவே அந்தப் பெண்ணின் மீதான கருணையாய் நாளடைவில் மாறிப் போயிற்று.

ஐயா, சின்னப்புள்ளைங்கய்யா…என் பேத்தி மாதிரி…நீங்கதான் பார்த்துக்கிடணும்… - வீடு கட்டும்போது வாட்ச்மேனாய் இருந்த பக்கிரி கொண்டு வந்து விட்டபோது அந்த முதல் பார்வையிலேயே தனக்குப் பெண் இல்லாத குறை தீர்ந்தது என்றுதான் நினைத்தார்.

சுசீலாவும் சரி, இவரும் சரி அதை ஒரு வார்த்தை சொன்னதில்லை. தன் சொந்த வீட்டில் கூட அது இத்தனை சுதந்திரமாக இருக்குமா என்பது சந்தேகம்தான். இன்ன நேரத்துக்குதான் வரும் என்று சொல்லவே முடியாது. இஷ்டத்துக்கு வரும். இஷ்டத்துக்குப் போகும். நீங்க போட்டு வச்சிருங்கக்கா…நா வந்து தேய்ச்சிடுறேன்…சொன்னபடி அதற்குத் தோதுப் படும் நேரத்தில் வந்து வேலையை முடித்து விட்டுப் போய்விடும். ஆனால் அதுவேதானே ஒரு கட்டத்தில் சங்கடமாய்ப் போனது…? இரண்டு பேரும் வேலை பார்க்கும் இடத்தில் எல்லாமும் நேரப்படி நடந்தாக வேண்டியிருக்கிறது. அந்த நேரம் தவிர்த்த சுதந்திரம் அந்தப் பெண்ணுக்கு மட்டும் எப்படிப் பொருந்தும் இந்த வீட்டில்?

காலைல வந்தாத்தான் எனக்கு வசதியா இருக்கு…ஏழரைக்கெல்லாம்தானே வந்திண்டிருந்தீங்க…அப்பத்தானே எனக்கு சமையலுக்கு வேண்டியிருக்கிற பாத்திரமெல்லாம் கிடைக்கும்…நீங்க இப்டி லேட்டா வந்தா எல்லாத்தையும் நானே தேய்ச்சிக்க வேண்டிர்க்கு…அப்புறம் நீங்க எதுக்கு? எனக்கு எட்டரைக்குள்ள சமையல் முடிஞ்சாகணும்…அப்பத்தான் நானும் குளிச்சிட்டு, அவருக்கும் எடுத்து வச்சிட்டு, நானும் எடுத்து வச்சிண்டு கிளம்ப முடியும்…

சரிக்கா இனிமே டயத்துக்கு வந்திடறேன்….சொல்லும்…ஆனால் வராது. நேரத்துக்கு வந்த நாட்களைவிட வராத நாட்கள்தான் அதிகம். என்றோ ஒரு நாள் சுசீலா சொன்னாள் இப்படி. அப்புறம் அவளும் விட்டு விட்டாள். வாயே திறப்பதில்லை. ஏதோ வந்தாச் சரி என்றாகிப் போனது.

குழந்தையையும் கொண்டு வந்து நடுக்கூடத்தில் விரிப்பை விரித்துப் போட்டு விட்டு அதுபாட்டுக்குத் தன் வேலையைத் தொடரும். சமயங்களில் அது அழும்போது கொல்லைப் புறத்திற்கு எடுத்துச் சென்று பால் கொடுக்கும். சின்னூண்டு பெண்ணாக இருந்து கொண்டு, மார்பில் குழந்தையை அணைத்து அது பால் கொடுத்துக் கொண்டிருக்கும் காட்சி இவரைச் சிலிர்க்க வைக்கும். தாயே…ஈஸ்வரி….!

ஏன் அங்கே போய் உட்கார்ந்துக்கிறே…கொசுக் கடிக்குமே அங்கே…இதோ இந்த ரூம்ல உட்கார்ந்துக்கோ…யாரும் வரமாட்டா….

இருக்கட்டுங்கய்யா….

எந்தச் சந்தர்ப்பத்திலும் கடுமையாக எதுவும் சொன்னதில்லை சுசீலா. நேராகச் சொல்ல வேண்டியவைகளையே அவள் சொல்வதில்லையே…பிறகு எங்கிருந்து கடுமையாகச் சொல்வது?

பல சமயங்கள்ல பார்த்தா நீ அந்தப் பொண்ணுக்கு பயப்படுற மாதிரித் தோணறது எனக்கு என்பார் இவர்.

இப்படிக் கூட ஒருத்திக்குக் கோபம் வராமல் இருக்குமா என்றிருக்கும் சுசீலாவின் இருப்பு. எப்பொழுதுமே அவள் அந்தப் பெண்ணை ‘ங்க…’ போட்டுத்தான் அழைப்பாள். நீ, வா, போ என்று ஒருமையில் என்றுமே விளித்ததில்லை. இவரும் அப்படித்தான். ஐம்பது தாண்டிய இந்தப் பொழுதிலும் பெண்களுடன் பேசுவதென்றால் இன்னும் கூச்சம்தான் அவருக்கு. அது உடன் பிறந்தது ஒழியாது. ஆபீஸில் கூடப் பெண் பணியாளர்களிடம் நிமிர்ந்து, நேருக்கு நேர் முகம் பார்த்துப் பேசியதில்லை இவர். அதென்னவோ அப்படி ஒரு பழக்கம். சார் ரொம்பக் கூச்சப்படுறாரு…என்று அதுகளே சொல்லிச் சிரித்துக் கொள்வதைக் கேட்டிருக்கிறார்.

நீங்கதான் ரொம்ப சேஃப்டியாச்சே…பொம்பளைங்களை முகத்தைப் பார்த்துப் பேசினாத்தானே பிரச்னை…அந்தச் சோலியே கிடையாது உங்ககிட்டே…இப்டியிருந்தீங்கன்னா நம்ம ஆபீசுல ஆள் மாறாட்டம் நடந்தாலும் உங்களுக்குத் தெரியாமப் போயிடும் சார்…ஏன்னா நிறையப் பேரு ஆபீசுக்கு வந்து கையெழுத்துப் போட்டுட்டு சொந்த வேலையைப் பார்க்கக் கிளம்பிடுறாங்க…இன்க்ளுடிங் லேடீஸ்….மானேஜரோ நிமிர்ந்தே பார்க்கிறதில்லே…எனக்கு பதிலா ஒரு அரை நாள் என் சீட்ல உட்கார்ந்திருன்னு யாரையாச்சும் உட்கார்த்தி வச்சிட்டுப் போனாக் கூட உங்களுக்குத் தெரியாதாக்கும்…ஆள் இருக்கிறதாத்தான் நினைச்சிட்டிருப்பீங்க…நீங்க இப்படி இருந்தீங்கன்னா கதையாகாது சார்…

டீ சாப்பிடப்போகும்போது சக பணியாளர்கள் கிண்டலடிப்பதைக் கேட்டு இவரும் சிரித்துக் கொள்வார். ஆனாலும் இந்த வயசுக்கு மேல் என்னத்தை மாற்றிக் கொள்வது? அது கட்டையோடுதான் கழியும்.

பல சமயங்களில் மஞ்சும்மா…மஞ்சும்மா…என்று கூப்பிட இவர் மனம் அவாவும். ஆனால் வார்த்தை வராது. அதுவும் என்னங்கய்யா என்று எதுவும் கேட்காது. இவரை அது ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லையோ என்று தோன்றியிருக்கிறது இவருக்கு. லேசான கோபம் கூடத் துளிர்த்ததுண்டு. இவர் கோபம் இவரையே மதித்ததில்லை.. பிறகு அதைப்பற்றி என்ன சொல்ல?

ஏதாச்சும் பேசினால்தானே தெரியும். அறவே பேச்சில்லையென்றால் எதைத்தான் புரிந்து கொள்வது? இத்தனை வருஷம் அது வேலை பார்த்ததற்கு மொத்தமே இத்தனை வார்த்தைகள்தான் பேசியிருக்கிறது என்று கணக்கிட்டிருந்தால் கரெக்டாகச் சொல்லி விடலாம். இப்பொழுதும் கூடப் பாதகமில்லை. அது பேசியது என்றென்று என்று கணக்கிடுவது ஒன்றும் அத்தனை கஷ்டமில்லை. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டியதுதான். அதற்காக இப்படியா? சண்டை போட்டவர்கள் கூட இப்படி மௌனம் அனுஷ்டிப்பார்களா என்பது சந்தேகமே!

ஆனால் அதுதான் பிடித்துமிருந்தது சுசீலாவுக்கு. அவளுக்கு ஊர் வம்பு பேசுவது அறவே பிடிக்காது. ஊர் வம்பென்ன, உறவு வம்பே பிடிக்காது. யாரைப் பற்றியும் எதுவும் சொல்ல மாட்டாள் அவள். யாரையுமே இவளுக்குப் பிடிக்காதோ என்று சந்தேகம் வரும் நமக்கு. அப்படி ஒரு விலகல். அதை அப்படி ஒரேயடியாக விலகல் என்றும் சொல்லிவிட முடியாது. வீட்டுக்கு உறவுகள் வந்தால் நன்றாகக் கவனித்துத்தானே அனுப்புகிறாள்.

வள்ளிசா நன்னா திருப்தியா செய்து போட்டிடுறியே…கூட நாலு வார்த்தையும் மனம் விட்டுப் பேசினாத்தான் என்ன? என்பார் இவர்.

அது அவளோட இயல்பு…அது ஒரு குத்தமா? என்று தன் உறவுகள் சொல்லக் கேட்டிருக்கிறார்.

ஆக, உறவுகள் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறதால உன் வண்டி ஓடுதுன்னு சொல்லு…இல்லன்னா பெரிய கர்வின்னு எடுத்திண்டான்னு வச்சிக்கோ….அப்புறம் களேபரம்தான்…ஆளாளுக்கு சண்டை பிடிச்சிண்டு திரிய வேண்டிதான்…

நீங்க வேணும்னா போய் சண்டைய இழுத்து விட்டிட்டு வாங்கோ…நன்னாயிருக்கிறதக் கெடுத்த புண்ணியமாவது கிடைக்கட்டும் உங்களுக்கு…

நா ஏன் அதைச் செய்றேன்…சகஜமா இருக்கலாமேன்னு சொன்னேன்…என்னத்த வாரிக் கட்டிண்டு போகப் போறோம்…இந்த உறவுகளோட நாம இருந்த இருப்பாவது நாளைக்கு நினைக்கப்படுமில்லையா….?

என் இயல்புப் பிரகாரம் நா இருக்கேன். இதுலென்ன தப்பு? இத மத்தவாள்லாம் புரிஞ்சிண்டுதான் இருக்கா….நீங்கதான் ஒத்தைக்கு நிக்கறேள்…!

எங்கோ ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருக்கும் தன் மனதின் ஆதங்கம் அவளுக்குப் புரியவில்லையே என்றிருக்கும் இவருக்கு. மனிதனுக்கு வாழ்க்கையில் எல்லாமுமா ஒருவனுக்குப் பூர்த்தியாகி விடுகிறது? அங்கங்கே தொட்டுக்கோ துடைச்சிக்கோ என்று நிறைய விஷயங்கள் அந்தரத்தில் நிற்கத்தானே செய்கின்றன? அப்படியான ஒன்றுதான் இந்தப் பெண்ணும் வாய் திறக்காமல் இருப்பது என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான். அது ஒரு ஆதங்கமாகவே படிந்து போனதுதான். சொந்தமே மௌட்டீகமாய் நிற்கும்போது மூன்றாவதைச் சொல்லி என்ன பயன்?

இப்டி எந்த வம்பு தும்பும் இல்லாம ஒருத்தர் வந்து போறதே பெரிசு! இதுல நீங்க வேறே? எதுக்குடான்னு அலையுதாக்கும் மனசு….ஆபீசுல வேலையில்லாம தினமும் வெறுமே பெஞ்சைத் தேய்ச்சா இப்படித்தான்….மனசை எதுடா சிக்கும்னு அலைய விடாதீங்கோ…ராம…ராமா சொல்லுங்கோ… சுசீலா போடும்போட்டில் கப்சிப் ஆகி விடுவார் இவர். அந்த சுகானுபவம் தனி. இந்த உலகத்தில் ரசிப்பதற்குத்தான் எத்தனை கோடி விஷயங்கள் இருக்கின்றன? எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…!

இப்படி ஏதேனும் அந்தப் பெண் இருக்கும்போது கூடச் சமயங்களில் பேச்சு வந்து விடும். ஆனால் எதையும் காதிலேயே போட்டுக் கொள்ளாது. அது அதன் இயல்போ அல்லது நாசூக்கோ…அதெல்லாம் சுசீலாவுக்குப் பிடித்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சும்மா இருக்கிறதை நாமளா எதாச்சும் சொல்லிக் கெடுக்கப் படாது. வம்பு பேசு வம்பு பேசுன்னா இழுக்குறது?

யாருடி வம்பு பேசச் சொன்னா? நீ என்ன காது காதுன்னா வேது வேதுங்கிறே? இப்டி மௌன சாமியாரா வந்துட்டுப் போறதே…ஏதாச்சும் பேசித்துன்னா, அதுக்கு வேணுங்கிறதை நாமும் முடியுமானா உதவலாமேன்னு சொல்ல வந்தேன்…

இவர் சொல்லும் கச்சிதமான பதில் சுசீலாவுக்குப் பிடிக்கும். எனவே மறு பேச்சுப் பேச மாட்டாள். இவரளவுக்கு அவளுக்கும் அந்தப் பெண்ணிடம் ஈடுபாடு இருக்கத்தான் செய்தது. அதையும் மறுப்பதற்கில்லைதான்.

வேலையை முடித்து அவள் கொடுக்கும் பண்டங்களை என்ன பாத்திரத்தில் எடுத்துப் போகிறது? எதைக் கொண்டு வருகிறது? எதுவும் தெரியாது. அதையெல்லாம் எதுவும் கண்டு கொள்ள மாட்டாள். அவ்வளவு சுதந்திரம் அந்தப் பெண்ணுக்கு…

இந்தத் தயிர் வைக்கிற அளவுக் கிண்ணம் ஒண்ணு இருக்குமே அது நீங்க கொண்டு போயிருக்கீங்களா… என்று என்றாவது அவள் கேட்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன் நான். ஆமாக்கா, நாளைக்குக் கொண்டாறேன்…என்கும் அது.

இந்தா மஞ்சரி, இத நீ கட்டிக்கோ….

மஞ்சு….இத உன் குழந்தைக்குப் போட்டு விடு….இன்னிக்கு ஆபீஸ்ல ஒருத்தன் கொண்டு வந்தான்…உன் பொண்ணு ஞாபகம் வந்தது…வாங்கினேன்…

மஞ்சு…இன்னைக்கு சுமங்கலிப் பிரார்த்தனை வச்சிருக்கேன்…சாயங்காலமா வா…இன்னும் நிறையப் பொம்மனாட்டிகள் வருவா…அவாளோட நீயும் வந்து புடவையும் ரவிக்கையும் வாங்கிண்டு போ…சரியா…? நீபாட்டுக்கு வராம இருந்துடாதே…எல்லாரோடயும் வந்து இருந்துதான் வாங்கிண்டு போகணும்…தனியால்லாம் வரப்படாது…நாளைக்குன்னு வச்சிடாதே…..பிரார்த்தனையாக்கும்…

நானும் அவரும் ரெண்டு நாளைக்கு ஊருக்குப் போறோம்…நீதான் படுத்துக்கணும்…வீட்டைப் பார்த்துக்கணும்…இந்தா சாவி…எங்ககிட்ட ஒண்ணு இருக்கு…நாங்க பூட்டிண்டு போய்க்கிறோம்…நீ ராத்திரி வந்து படுத்துக்கோ….போரச்சே…வரச்சே பார்வை இங்க இருக்கட்டும்…சரியா….

தலையாட்டும் மஞ்சரி. இதுக்கும் பதில் கிடையாதா? சரின்னுதான் சொல்லேன் என்று செல்லமாய் அவள் தலையைத் தட்டுவாள் சுசீலா. உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடு சமயங்களில் அபூர்வமாய் இப்படித் தெறிக்கும்போது அதை அப்படி ரசிப்பார் இவர். இந்த மாதிரியான நேரங்களில் தன்னையும் நெருக்கமாக உணர்ந்து கொள்வார் இவர். அப்படி அப்படியே நினைத்து நினைத்துத்தான் தான் பெறாத பெண்ணாகத் தோன்றுகிறது இந்த மஞ்சரி.

பாவி…! படு பாவி…!! அமைதியாய் இருந்தே தன் காரியத்தை முடித்துக் கொண்டதே..? என்ன அநியாயம்? நெஞ்சு பொறுக்குதிலையே…இறைவா…இப்படியும் நடக்குமா?

ஏன் இப்டிப் பேசாம இருக்கே…? உனக்கு ஏதாச்சும் பிரச்னையா? எதுவானாலும் எங்ககிட்டச் சொல்லு…தயங்காதே….அப்டீன்னு என்னிக்காச்சும் நாம கேட்டிருக்கமா அதை? கேட்டதில்லை….ஏன்? அது நம்மகிட்ட வேலை பார்க்கிற பொண்ணு….நாம சம்பளம் கொடுக்கிற வேலைக்காரிங்கிற முதலாளி மனப்பான்மை நமக்கு…மனசுல கொஞ்சமாச்சும் அந்த ஏத்தமான நெனப்பு இருந்ததுனாலதான் நாம அதைக் கேட்கலை….நாமளா அதைக் கேட்கணும்ங்கிறதைவிட, அதுவா நம்மகிட்டச் சொல்லணும்ங்கிற மேல்தட்டு மனப்பான்மை நம்மள அறியாமப் படிஞ்சு போயிருக்கிறதுதான் காரணம்…நமக்கு உயரத்துல இருக்கிறதுலயும், முதலாளிங்கிற ஸ்தானத்துல நிக்கிறதுலயும் எப்பயுமே ஒரு மயக்கம். வெளில அப்டிச் சொல்லிக்கிறதில்லை…அவ்வளவுதான். இரக்கம், கருணை, கரிசனம்ங்கிறதெல்லாம் வெறும் நினைப்புனால பூர்த்தியாயிடற விஷயமில்லயே…செயல்னாலதானே அதையெல்லாம் நிரூபிக்கணும்…நாம அதைச் சரியாச் செய்தமாங்கிறதுதான் இங்க பிரச்னை…

.இன்னும் நல்லா சொல்லப் போனா இந்தச் சமுதாயம்தான் இதுக்கெல்லாம் காரணம்னு நா சொல்லுவேன்…நாமெல்லாம் அங்கம் வகிக்கிறதுனாலதான் ஒட்டு மொத்தமா இந்தச் சமுதாயம்னு நா சுட்டுறேன்…நம்ம வீடு தவிர்த்து இன்னும் நாலஞ்சு வீடுகள்ல அந்தப் பொண்ணு வேலை பார்த்ததுல்ல…? அப்போ எந்த வீட்டுலயும், யாரும் அதோட உள் வேதனைகளைக் கேட்டு வாங்கலை….அதை நெருக்கமா உணர்ந்தாங்களே தவிர, அதை ஒரு குறிப்பிட்ட டிஸ்டன்சுலதான் நிறுத்தியிருந்தாங்கன்னுதானே அர்த்தம்? நம்மளை விட மற்றவங்க அதிகமா அதுக்கு உதவியிருக்கலாம்…கொடுத்திருக்கலாம், வாங்கியிருக்கலாம்…ஆனா அதோட வாழ்க்கையின் ஆணிவேரையே ஆட்டிப் பார்க்கிறமாதிரி அதுக்குப் பிரச்னை வந்தபோது, பிரச்னையைச் சுமந்திட்டு அலைஞ்சபோது, ஒண்ணு அது சொல்லாம இருந்தது தப்பா இருக்கணும்…அல்லது அதோட விலகின இருப்பைப் புரிஞ்சிக்கிட்டு நாம கேட்டு செய்யாம இருந்தது தப்பாப் போயிருக்கணும்…அது சொல்லலைங்கிறதைவிட நாம கேட்காததுதான் தப்புன்னு எனக்குத் தோணுது…மனசாட்சியுள்ளவன் அப்படித்தான் நினைக்க முடியும். ஏன்னா பல வருஷமா அது நம்ம வீட்டுல வேலை பார்க்குது…எப்படி நம்முடைய இயல்பையும், இருப்பையும் நமக்கு நாமே நியாயப் படுத்திக்கிறோமோ அது போல அதோட இருப்பையும் நாம நல்லா உணருவோம்….அங்கீகரிச்சும் இருக்கோம்…ஆனா நாம நம்மளோட வாழ்க்கை நலன்கள்ல செலுத்தின அக்கறையை அதோட பிரச்னைல செலுத்தினோமா? ஏன்? அங்கதான் நம்மளோட தலையாய தப்பு இருக்கு….தலையாய தப்புதான் அது…! இல்லைன்னு சொல்ல, சொல்லித் தப்பிக்க முடியாது…ஏறக்குறைய நாமளே சதம்னுதானே அது இருந்தது…இதை நாம உணராட்டாலும், அது வேலை பார்த்த நாலஞ்சு வீடுகள்ல யாராவது ஒருத்தர் உணர்ந்திருந்தாலும் கூட இந்த அபாயத்துலர்ந்து அதைத் தடுத்திருக்கலாமே…யாருமே செய்யத் தவறிட்டோம்தானே….வாழ்க்கைங்கிறது எவ்வளவு போராட்டம் நிறைஞ்சதுங்கிறதை இப்போ அது மூலமா உணர்ந்து என்ன பயன்? ரெண்டு குழந்தைகளை வச்சிண்டு, வேலை வெட்டிக்குப் போகாத கணவனையும் இழுத்திண்டு எத்தனை நாளைக்குத்தான் அது போராடும்?

சுசீலாவின் கண்கள் குளமாய் நின்றன. மார்பைக் கைகளால் பிடித்துக் கொண்டு அப்படியே சுவற்றில் சாய்ந்தாள் அவள். எனக்கு என் உடம்பிலுள்ள சக்தியெல்லாம் வடிந்து வெளியேறிவிட்டது போல ஒரு பலவீனம்.

போஸ்ட்மார்ட்டம் முடிந்து மஞ்சரியின் உடல் அவளின் கிராமத்துக்குக் கொண்டு போகப்பட்டது என்று சற்று நேரத்தில் செய்தி வந்தது எங்களுக்கு. ------------------------------

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...