29 ஆகஸ்ட் 2023


 

 

“யட்சன்“ -சிறுகதை – படையல் தொகுப்பு – ஜெயமோகன்- வாசிப்பு ரசனை அனுபவம் - உஷாதீபன் (ஆகஸ்ட் 28, 2023 ஜெ. தளத்தில்)

         


  
படையல் தொகுப்பின் இந்த இரண்டாவது சிறுகதை முதல் கதை “கந்தர்வனின்“ தொடர்ச்சியாக நிகழ்கிறது.  யட்சன் இரவில் கண்ணுடையவன் என்று பொருள் கொள்வோமானால்…

            திருக்கணங்குடி  கோயில் கோபுரத்திலே சிலையா நிக்கப்பட்ட யட்சனாக்கும்டே  நான்னு சொன்னாரு…- என்று அருணாச்சலம்பிள்ளை சொல்வதாக வரும் பிச்சைக்காரச் சித்தன் முருகப்பனின் வாக்கு எல்லோராலும் உண்மை அறியப்படாத சத்திய வாக்காகிறது.

            சத்தியவாக்குதான் என்றாலும் கேட்பவர்கள் அதை அப்படியிருக்குமோ இப்படியிருக்குமோ என்றுதான் தங்களுக்குள் முடிவு செய்து கொள்கிறார்கள்.

            அறுதலித் தேவ்டியாளுக்கு மாலையா?  கெட்டினவன் இருக்க கண்டவனுக்கு தீப்பாஞ்ச சிறுக்கிக்கு மாலையும் வேண்டாம்  ஒரு மயிரும் வேண்டாம்….

            உண்மையறிந்த சில பேரும் இங்கே வாயைத் திறக்க முடியவில்லை. வாயைத் திறந்தால் ஆரம்பித்த இடம் வரை போய் நின்று கழுவேற்றம்வரை சென்று முடியும் அபாயம்.

            ஒரு ஆரம்பப் பொய்யை மறைக்க அடுத்தடுத்த செயல்பாடுகள். எந்தவகையிலும் உண்மை வெளிவந்தால் ஆபத்து எனும் கொடூரத்தை உணர்ந்து தனக்குட்பட்ட அதிகார வளையத்திற்குள் நின்று செயல்பட்டு நிலை நிறுத்தப்படும் விழுமியங்கள் சார்ந்த நம்பிக்கைகளின் பலம்.

            பேசாம எடுத்து கிடத்துலே…ஒரு மாலையை அவன் மேலேயும் போடு…சித்தர் சமாதியாயிட்டார்னு சொல்லி வைப்போம்….-பொய்யின் ராஜ்யம் மேலோங்கி நிற்கிறது. ஒன்றை மறைக்க இன்னொன்று…இன்னொன்று என்று பொய்ச்சுவர் பலப்பட்டுக்கொண்டே போகிறது.

            ஒரு தள்ளுக்கு குஷ்டரோகிப் பிச்சைக்காரனான முருகப்பன்   ஆளே சாய்ந்து விட்டதுதான் எவ்வளவு வசதியாய்ப் போயிற்று? ஆனால் அதுதான் இங்கே ஒரு விநோதம்.

            ஊரை விட்டுப் போன வள்ளியம்மையின் புருஷன் முருகப்பன்தான் இந்த உருவில் சிதைந்து வந்து நிற்கிறான் என்பதை கடைசிவரை துல்லியமாய் யாரும் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை.  ஒரு ஊகத்தில் கூடப் புரிந்து கொள்ளும் வகையிலான அடையாள உருவில் அவன் இல்லை. எல்லாம் சிதைந்து போய் மரணத் தருவாயில் மிஞ்சி நிற்கும் அவன் மனதில் குறையாத வீரியமாய் நிற்பது அவனுக்குள் இருந்த அந்த உண்மைதான்.

            அறுதலித் தேவ்டியா…நாறத் தேவிடியா…என்று அவன் ஆத்திரம் பொங்கத் திட்டும் ஆக்ரோஷம் அவனுக்கு ஏன் வருகிறது. அவள் மேல் என்றோ கொண்ட ஒரு சந்தேகத்தின் நிழல் படிந்து கிடப்பதுதான் என்கிற உண்மையை முன்னமே ஒரு இடத்தில் உணர்த்தி விடுகிறார் ஜெ.

            உன்சோலி அந்தப் பண்டாரம் கூடத்தானேடி….தெரியும்..

            தெரியும்ல…போங்க…. என்று செருக்காய் பதிலிறுக்கிறாள் வள்ளியம்மை.

            தப்பு ஏதும் செய்யாமலேயே ஊரை விட்டு நீங்க நேரும் கொடுமை. ஆனாலும் அவனிடம் படிந்த வேலைத் திறன் அவனை வாழ வைக்கிறது. அரவணைத்தவர்கள் அருகில் அமர்த்திக் கொள்ள….வசதிகள் பெருகப் பெருக….மனதில் பொங்கிப் பொங்கி அடங்கிக்கிடந்த ஆத்திரம்…அவனை விட்டேற்றியாய்ப் பயணிக்க வைக்கிறது. ருசி காணாதது என்று ஏதும் இருக்கக் கூடாது என்கிற முனைப்பில் பணம் பஞ்சாய்ப் பறக்கிறது. கூடவே படிப்படியாக வியாதியும் வந்து ஒட்டிக் கொள்கிறது . தகாத செயல்களால் கிடைக்கும் பரிசுகள் அவன் வாழ்க்கையையே சிதைத்து அலைய விட்டு விடுகிறது.

            வாழ்ந்து கெட்டு வந்தடையும் இடம் ஆளையே அடையாளப்படுத்தவில்லையே…!

            ஆனால் அவன் யட்சனானது என்னவோ உண்மைதான். எரிந்த சாம்பலில் பொன் உருகிப் படர்ந்திருக்க – தூய பசும்பொன்…ஆடகப் பசும்பெொன்…யட்சகர்களுக்கு அந்த விளையாட்டு உண்டு. ஊர் அந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறது. இயக்கன் சாமியாகப் பிரதிஷ்டை நடக்கிறது. எப்படி? உடனுறை நங்கையையும், எறிமாடனையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இயக்கன்சாமியாய் நிற்கும் ஊரறியாத முருகப்பன் என்கிற பிச்சைக்காரச் சித்தன்.

            இந்தக் கதைகள் வரலாற்றுச் சூழலிலான மனித நிலைகளை ஆராய்கின்றன என்கிறார் ஜெ.   உண்மைதான். எல்லா நிலைகளிலும், எல்லாக் காலங்களிலும் மனிதர்கள் ஒரே மாதிரியாகவும், தந்திரம் மிக்கவர்களாகவும், வஞ்சம் கொண்டவர்களாகவும், அதிகார போதை சுமந்தவர்களாகவும், இளைத்தவர்களை ஒடுக்குபவர்களாகவும், தன் நிலையிலிருந்து கீழிறங்காத வகையில் சாமர்த்தியமான, துணிச்சலான, முறை தவறிய நிலையிலானாலும் கூட என்றுதான் செயல்பட்டு நின்றிருக்கிறார்கள் என்கிற தவிர்க்க முடியாத உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

            யட்சன் – அழுத்தமான நம் மனதில் நிற்கும் அழியாத படைப்பாகிறது.

 

                                                -----------------------------------

 

                                          

“கடவுளைக் கொன்றவன்“ – சிறுகதைத் தொகுப்பு – ஆசிரியர்-சித்ரூபன் – வாசிப்பு ரசனை அனுபவக் கட்டுரை-உஷாதீபன் (சுவாசம் பதிப்பகம், சென்னை-தொ.பே.எண்.8148066645 (10 சதவிகித தள்ளுபடி விலையில்)விலை ரூ.300

----------------------------------------------------------------------------------
-                 சிறுகதை என்கின்ற அமைப்பிலே சொல்ல வந்த கருத்துதான் முக்கியமேயொழிய பக்க அளவுகள் ஒரு பொருட்டல்ல என்றே நான் நினைக்கிறேன். ஒரு எழுத்தாளனுக்கு அவனது படைப்புக்கள் எல்லாம் சமமான அந்தஸ்து உடையதுதான். அதாவது சமூகச் சிந்தனையுள்ள, மனித நேயத்தை முன்னிருத்துகின்ற வாழ்க்கைச் சிக்கல்களில் தவறிப் போகும் பண்பாட்டு நெறிமுறைகளை அவிழ்க்க முனைகின்ற ஆதார நோக்கமுள்ள படைப்பாளிக்கு இது முற்றிலும் பொருந்தும். தமிழ்ப் படைப்பாளிகள் சிறுகதைகளில் அவரவர் அனுபவத்திற்கும் திறமைக்கும் ஏற்றவாறு பலவகைச் சோதனைகளையும் செய்து பார்த்திருக்கின்றனர். இந்த முயற்சிகளுக்கெல்லாம் தமிழ்நாட்டு வார, மாத இதழ்கள் களமாக அமைந்திருக்கின்றன.

                நான் எப்படி தரிசிக்கிறேனோ அதை அப்படியே எனது நோக்கில் உங்களுக்குக் காட்ட விரும்பும்  முயற்சியே எனது கதைகள் என்று திரு ஜெயகாந்தன் பகர்ந்துள்ளதுபோல சித்ரூபனின் கதைகளும் அவரது தரிசனமாகவே நமக்குக் கிட்டுகின்றன.

                   ஒரு எழுத்தாளனுக்கு கதை எப்போது எங்கிருந்து தோன்றும் என்பதை யாரும் ஊகிக்க முடியாது. வீட்டினுள், வெளியே. காணும் காட்சிகளில், இயற்கையிலிருந்து, பிற ஜீவன்களிடமிருந்து, பெறும் அனுபவத்திலிருந்து, பேசும் தன்மையிலிருந்து, உபயோகிக்கும் வார்த்தைகளிலிருந்து, நடந்து கொள்ளும் முறைகளிலிருந்து என்று பற்பல திசைகளிலிருந்து அவன் சிந்தனை கிளைக்கிறது. கற்பனை விரிவடைகிறது. முழுக்க முழுக்கத் தன் அனுபவத்தை மட்டுமே வைத்து கதை புனைந்தால் அது தட்டையாகத்தான் அமையும். அதோடு கற்பனைகளும் கலக்கும்போது, அழகியலும் சேர்ந்து கொள்ளும்போது அது இலக்கியத் தன்மையை அடைகிறது. மனித நேயமும், அன்பும், கருணையும் ஒருவனை எழுதத் தூண்டுகின்றன. ஒவ்வொரு மனிதரிடத்திலிருந்தும் அவர்கள் பேசும் முறையினின்றும், நடந்து கொள்ளும் தன்மையிலிருந்தும், ஒருவரின் முரணிலிருந்தும், கோபத்திலிருந்தும், அதன் உண்மைத் தன்மையிலிருந்தும், நியாயத்திலிருந்தும் இவ்வாறு பல்வேறு நிலைகளில் கதைகள் பிறக்கின்றன.

                    வெவ்வேறு களங்களில், வெவ்வேறு விதமான கதைக் கருவினில் சிறப்புற உருப்பெற்றிருக்கிறது சித்ரூபனின் கதைகள். ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது அடுத்தடுத்த கதைகள் எல்லாவற்றையும் படித்து முடித்து முறையே பயணிக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறதே தவிர தாண்டிச் சென்று தொகுதியை முடித்து விடுவோம் என்கிற உணர்வே ஏற்படவில்லை.

                   தையின் தலைப்பு “பெண்குரல் பெரியசாமி“ என்றுள்ளதேயென்று கதைக்குள் பெரியசாமியைத் தேடினீர்கள் என்றால் நீங்கள் ஏமாறுவீர்கள். தலைப்பே நகைச்சுவையை உணர்த்துகையில் உள்ளே அது இல்லாமல் போகுமா?  வரிக்கு வரி கிண்டலும் கேலியும்தான். உரையாடுபவர்கள் அப்படி நினைத்துப் பேசுவதில்லை. உணருபவர்கள்தான் அந்தச் சுவையை அறிய முடியும். வலியத் திணித்த நகைச்சுவையல்ல. இயல்பாக நனையும் நகைச்சுவை.

                   பெண் பெயர்களைக் கொண்டவர்கள் திண்டாடுவது உண்டு. ரமணி, ராஜாமணி என்று. மீனாட்சிசுந்தரத்தை “ஏ…மீனாட்சி…” என்று நண்பர்கள் அழைக்கையில் தெரியும் வலி. ரமணி என்று ஒரே அலுவலகத்தில் ஆணும் பெண்ணும் இருந்தால் புரியும் அவஸ்தை. சின்ன ரமணி, பெரிய ரமணி என்று அப்போதும் வித்தியாசம் தெரியாமல் தொடரும் துன்பம்.  ஜனரஞ்சகமாக இந்தக் கதை சொல்லப்பட்டிருப்பது சிறப்பு.

                   நாம் தமிழ்நாட்டுல இருந்துட்டு இந்தி மேலே வெறுப்பை உமிழ்கிறோம். அரசியல்வாதிகள் மூலம் தொற்றிக்கொண்ட இந்த நெருப்பு அணையாமல் இருக்க அவர்கள் தூபம் போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கிற வேற்று மொழிக்காரர்கள், குறிப்பாகக் இந்தி பேசுபவர்கள் அழகாக, சமர்த்தாக தமிழ் கற்றுக் கொண்டு நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இந்த அறிவு நமக்கேன் இல்லை? இதுதான் மெல்லத் தமிழ் இனி வாழும்….ஒரு விஷயத்தைக் கொள்கை கோட்பாடு என்று வாய்கிழியக் கத்துவதைவிட, இம்மாதிரிச் சுலபமாய் உணர்த்த முடியும் என்பதை இக்கதை நமக்கு உணர்த்துகிறது.  ஒரு புது மொழியைக் கற்றுக் கொள்ளுதல் என்பது அவரவர் விருப்பம். அறிவுள்ளவர்கள் அதை உணர்கிறார்கள். இந்தக் கருத்து நேரிடையாகச் சொல்லப்படாமல், அழகாக, நாசூக்காக இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு ஒரு சபாஷ்…!

                   மேற்படிப்பை இந்தியாவிலேயே பண்ணு…என்கிற தந்தை சொல்  மந்திரமாய்ப் பலிக்கிறது இக்கதையில். மந்திர உச்சாடனத்துக்கு ஒரு மறை சக்தி உண்டு. அது தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை ருசுப்படுத்துகிறது. எளிமையான வாசிப்புக்கதைதான் ஆனாலும் ஸ்வாரஸ்யம் குன்றாமல் சொல்லத் தெரிய வேண்டுமே…! எழுத்து கைவந்தால்தான் அது சாத்தியம்.

                   முதல் மூன்று கதைகள் வணிக ரீதியிலான இதழ்களுக்குள்ள ஜனரஞ்சக வாசிப்பிலான கதைகள். ஆனால் விறுவிறுப்பானவை என்பதை மறுப்பதற்கில்லை.நினைத்து வைத்துக் கொண்டு பேனாவை ஓட்டுவதில்லை எழுதும்போதே பேனா சரசரக்கிறது. நகர்ந்து நகர்ந்து தன் முடிவைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. சரளமான நடையும். சென்று சேரும் இடமும் கச்சிதமான வடிவில் அமைந்து வாசகனைப் பரவசப் படுத்துகிறது.

                   னவு நிறைவேறும் என்று நினைத்து காசோலையில் காதலைத் தெ ரிவித்த அந்தத் தருணம் கனவாகவே நின்று விடுமோ என்பதுபோல் அவள் வேலைக்கு ஆபத்து ஏற்படுமோ என்கிற நிலை வருகிறது. வேலை பார்க்கும் பெண்தான் வேண்டும் என்கிற முடிவில் உள்ள விகாசுக்கு பிரகதியின் காதல் கைகூடும் வேளையில்  வேலை போய்விடும் அபாயம். கதை கூடி வந்திருக்கிறது.  வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்து விடுமோ என்கிற நிலை. ஸ்ட்ரெஸ் எல்லா மனிதர்களிடத்தும், எல்லா நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் இருக்கிறதுதான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஆனால் இந்த ஸ்ட்ரெஸ் வங்கிப் பணியாளர்களிடத்தே இருக்கும் வகை வேதனைக்குரியது. பல பணியிடங்கள் ஒரே கிளையில் காலியாய்க் கிடக்க ஒருவரே மூன்று நான்கு பேரின் பணியைச் சுமந்தால், எவன் மாய்கிறானோ அவன் தலையில் மிளகாய் அரைக்கும் இழி  நிலை. அதனை நடைமுறை யதார்த்தங்களோடு அழுத்தமாய்ச் சொல்லியிருக்கும் கதைதான் “கனவும் காசோலையும்…“

                   தையின் முடிவுக்கு வரும்போது அது சொல்லப்படும் விதத்தில் இதுதான் முடிவு என்பதை ஊகித்து விட முடிகிறதுதான். தொடர்ந்த வாசிப்புப் பழக்கத்தில் உள்ளவர்களுக்கு இது சுலபம்தான்.  ஆனாலும் ஒன்று. இறைவன் நல்ல ஜீவன்களை தன்னுள் சீக்கிரமே அழைத்துக் கொள்கிறான். அவனால் விரும்பப் படாதவர்களை வெகுகாலம் விட்டு வைக்கிறான். அப்படியானால் மாதங்கியின் மாமனார், சதா இறைத்துதியில் இருந்தவர்க்கு ஏன் இத்தனை அவஸ்தை? அதைக் கர்மவினை என்று கூறலாமா? வாழ்க்கையில் அனுபவ யோகம் என்று ஒன்று உண்டு. அது நன்மைக்கும் தீமைக்கும் பொது. பட்டுச் சீரழிந்துதான் ஒரு ஜீவன் போகும் என்றால் அது ச்சீ…ச்ச்சீ…என்றுதான் போகும். அது லிபி. உயிர்ப்பிடிப்பு அந்த ஜீவனுள்ளே துடிக்குமாயின் அது எப்படி மாயும்?  உருக்கமான கதை. சரளமான நடை. அனுபவபூர்வமான எழுத்து. சொல்ல வந்ததை முழுமையாகத் தகவலறிந்து, உண்மையறிந்து விளம்பும் எழுத்து வன்மை. இவர் ஏன் இத்தனை காலம் தொடர்ந்து எழுதாமல்  இருந்தார்?

                   ன்னிருவர் உற்சவம்“ நடைபெறுவதாக ஆத்மார்த்த  பக்தியில் திளைக்கும் காட்சிகளை விவரிக்கும் கதை. பயபக்தியோடு சொல்லப்பட்டிருப்பதே புண்ணியம் என்று நினைக்க வைக்கிறது.

                   ங்கவினை“ சிறுகதை தங்கத்தால் வந்த வினை. ஒரு புதிய தகவல் கிடைக்கிறது. வங்கியில் நகைகள் அடகு வைப்பதுபற்றியும், ஏலம் போவது பற்றியும், அதனால் எழும் பிரச்னைகள்பற்றியும்…

                   னிதம் வெளிப்படும் இடம் கொஞ்சம் செயற்கைத்தன்மை வாய்ந்ததாகத்தான் தோன்றுகிறது. ஆனாலும் ஒரு எளிய மனிதனிடமிருந்து அது வெளிப்படும்போது அதற்கான நியாயம் பிறக்கிறது.  தன்னை வலிய ஒரு கேஸில் மாட்டிவிடத் துடிக்கும் போலீசுக்கே உதவும் மனப்பான்மை கொஞ்சம் அதீதம்தான். இன்னொருவனுக்கு இக்கட்டான காலகட்டத்தில் தன்னை மீறி வெளிப்படுவது மனிதம். இங்கே தனக்கு இக்கட்டான காலகட்டத்தில், அதுவும் அநியாயக் கொலைப்பழி தலையில் விழும் அபாயக் காலகட்டத்தில் வெளிப்படும் உதவும் நோக்கு – கொஞ்சம் யோசிக்கத்தான் வைக்கிறது. அது எதிராளிக்குக் கூடத் தெரியாத நிலையில் ஆசிரியருக்குத் தோன்றியிருக்கிறது இப்படி. மனிதம் புனிதமாகட்டும்…

                   கேங்ரேப் – ஒரு விளையாட்டு என்று சின்னப் பையன்கள் சொல்வது அதிர்ச்சியளிக்கிறது. இது இப்படி எங்கோ நடந்ததா அல்லது படைப்பாளியே உருவாக்கியதா என்று ஐயுறுகிறது மனம். எவ்வளவு நேரம் அவ தாங்காறான்னு பார்க்கிறோம் என்று தீர்வு சொல்வது வியப்பளிக்கிறது. இன்னும் என்னவெல்லாம்தான் மூத்த தலைமுறைக்குத் தெரியாமல் இங்கே விபரீதமாய் உருவாக்கப்பட்டிருக்கிறது? என்று மனம் அச்சம் கொள்கிறது.  பலாத்காரமே ஒரு விளையாட்டு என்றால் அதைச் செய்திகளும் சானல்களும், வயசும் காட்டிக் கொடுக்காதா? இதைக் கதையாய்ச் சொல்லவும் மனம் எப்படித் துணிந்தது? விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் இருந்திருக்கலாம்.

                   கோயில்ல இருந்தா விக்ரகம்ங்கிறோம். திருடு போனா சிலைங்கிறோம் என்று நடிகர் கமலஉறாசன் ஒரு முறை கூறினார். வராஉறமூர்த்தி சந்நிதியானாலும் அசல் பன்றி நுழைஞ்சா – அட…வேறே எதுவோ ஒண்ணுன்னு கூட வச்சிக்குங்களேன்…சந்நிதியை…கர்ப்பகிரஉறத்தைச் சுத்தம் பண்ணுவது இயல்புதானே? எல்லா ஜீவனாயும் நான் இருக்கிறேன்…படைக்கப்பட்ட எல்லாமும் மதிப்புக்குரியதே….இறைவனே வாகனமாய், அவ்வுருவாய் நின்று ஒளிர்கையில் வணங்கிக் சேவை செய் என்பதே தத்துவம். குறைகள் காண்பது எளிது. நல்லதை உணர்வதே கடினம்.

                   ப்படியும் நடக்கும், அந்த நாளும் வந்தது….என்று மறைமுகமாகப் பெயர் வைப்பார்கள் கதைக்கு. அதுபோல் வாங்காத வீட்டிற்கு, வாங்கப் போகும் வீட்டிற்கு “மிதிலா“ என்று பெயர் வைத்து மனதிற்குள் இருத்திக் கொண்ட அடுக்கக வீடு இல்லாமல் போகிறது.  சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட அடுக்ககம் மாநகராட்சியால் தடைசெய்யப்பட, கனவு கலைந்து போகிறது.  பதிவுச் செலவு வீண். மன உளைச்சல்.  தவணை முறையில் எப்படியோ தப்பிக் கிடைத்த மீதிப் பணம்.இதெல்லாம் பணம் பறிக்கங்க…எல்லாத்தையும் சரி பண்ணிடுவோம்….என்ற வார்த்தைகளை நம்பாததுதான் தவறாகப் போயிற்று. கைவிட்டுப் போன அடுக்ககம் ஒளிமயமாய் ஜொலிப்பதை எட்டிப் பார்த்தால், வாங்க நினைத்த அதே வீடு, மனதில் நினைத்த அதே பெயரில்…என்னே துரதிருஷ்டம்?

                   நடுத்தர மக்களின் கனவுகள் கடனிலும், அடகிலும், ஆசையிலும், உருவாகி எதிர்பாராமல் கலைந்து போனால்? இதெல்லாம் சகஜம் என்கிறார் ஆசிரியர். எது? விதியை மீறுவதும், பின் அதைப் பணத்தால் சரி செய்வதுமா? என்று மறையும் இந்தத் தவறுகள்? விதிகளும் சட்டங்களும் புத்தகத்தில் இருக்கின்றன. நடைமுறை வேறாயிருக்கிறது. தப்பித்தால் தம்புரான் புண்ணியம். ஆசையே துன்பத்திற்குக் காரணம். அறிவையும், கண்களையும் மறைப்பது எது?

                   தாயின் பாசத்தை உருக்கமாக விவரிக்கும் கதை. சில தாய்மார்கள் உணவுப் பற்றாளர்களாக இருப்பார்கள். அறுபத்தைந்து வயதிலும் அளவு குறையாது விதவிதமாய்ச் சாப்பிட ஆசைப்படுவார்கள். இந்தக் கதையில் வரும் தாயும் அப்படியே! மனிதர்கள் தூங்கும்போதும், சாப்பிடும்போதும் பார்க்கக் கூடாது என்பது ஐதீகம் போல். ஒருவரை வெறுக்க ஆரம்பித்தால் அவரி்டமுள்ள தப்புகளாய்த்தான் கண்ணுக்குத் தெரியும். அவைகளை ஒதுக்கிவிட்டு, நல்லதை மட்டும் நினைக்க முற்பட்டால் நல்லதாகவே கண்ணுக்குப் படும். நம்மிடம் உள்ள தவறுகளை நாமே உணருவதைவிட மற்றவர் சுட்டிக்காட்டினால் உறைக்கிறது.

                   தாயாரைப்பற்றி உணர வைக்க நண்பன் வேண்டியிருக்கிறது. அவனும் வேற்று மதத்து நண்பனாயிருந்தால் இன்னும் பலம். யார் மூலமேனும் நல்லதை உணர்ந்தால் சரி என்று வாசக மனம் எண்ண முற்படுகிறது. முதியோர்களை வயிறு நிரப்புவதும், தேவைகளைப் பூர்த்தி செய்வதும் மட்டுமே திருப்தி செய்வதாகாது. அருகில் அமர்ந்து ஆதரவாய் நாலு வார்த்தை பேசுவதுபோல் வருமா? அது கடைசியில் உணரப்படுகிறது. கதை சற்று நீளம். அதனால் அலுப்பூட்டும் நிலையில் முடிந்து போவது விசேஷம். நல்லதை உணர்த்தும் கதை புனரபி ஜனனம்….

                   பெண்மனம்தான் பெண் முகம். கட்டின புருஷனின் தவறுகளையே ஏற்றுக் கொண்டு  குடும்பம் நடத்தும் பெண்கள் நம்மில் பலர். கழுத்தில் கிடக்கும் தாலிதான் அவள் அடையாளம். அதற்காக ஒரு ஆணின் தவறுகளை வெளிப் பெண்கள் ஏற்றுக் கொள்வார்களா? அவர்களுக்கு என்ன தலையெழுத்து? ஆனால் அதிகாரப் பதவியில் இருக்கும் ஆண், தன் பதவியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி தனக்குக் கீழ் பணிபுரியும் பெண்களை வசப்படுத்த நினைக்கிறான். இது பல அலுவலகங்களில் உள்ள பலவீனமே…! சொந்த நலனுக்காக இணங்கும் பெண்களும் உண்டுதான். குடும்பச் சூழல்….வேற வழியின்றி இணங்குபவர்களும் உண்டு. எதிர்க்க முடியாமல் இணங்கி, மனதுக்குள் புழுங்குபவர்களும் உண்டு. இந்தக் கதையில் ஒரு பெண் எல்லோர் சார்பிலும் பழி வாங்க நினைக்கிறாள். ஆனால் இறைவனே ஒரு தண்டனையைத் தந்து விடும்போது, அவன் குடும்பத்தின், மகளின் நிர்க்கதி கண்டு மனமிரங்கி உதவும் மனப்பாங்கு வந்து விடுகிறது. ரத்தம் கொடுத்துக் காப்பாற்ற முனைகிறாள். இந்தப் பெண்மனம்தான் சமுதாயத்தின் பெண் முகம்.   சிறப்பான கதை.

                   சிவனுக்கு உபதேசம் செய்தவர் முருகன். தகப்பனுக்கு சாமியானார் கந்தவேள். இந்தக் கதையில் வரும் பிள்ளைகள் அப்பா – அம்மாவுக்கு நேரடி உபதேசம் செய்யவில்லை. பதிலாக வக்கீலிடம் வந்து முறையிடுகின்றன. நல்லபுத்தி சொல்லி அப்பாம்மாவை சேர்த்து வைங்க என்கின்றன. பிரிஞ்சா யார்ட்ட இருக்கிறதுங்கிற கேள்வியும்,  அவரவர் விருப்பப்படிங்கிற பதிலும் அதிர்ச்சியூட்ட ரெண்டு பேரும் வேணும்னு வக்கீலிடம் சொல்கின்றன.

                   டைவர்ஸ் கிடையாது. சேர்ந்து இருந்துதான் வாழ்ந்தாகணும். அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழக் கத்துக்குங்க…இதுதான் தீர்ப்பு என்று கோர்ட் தீர்ப்பு சொல்லுமா? தெரியவில்லை. அப்படிச் சொன்னால் எத்தனையோ குழந்தைகள் பிழைக்கும். உப்புச் சப்பில்லாத சண்டையும், சச்சரவும்,  பின் கூடுதலும்,குடிசைப் பகுதிகளில் சர்வ சகஜம். மேல்தட்டு வர்க்கம்தான் – நடுத்தட்டு – நடுமேல்தட்டு – இவைகளில்தான் இப்பிரச்னை. இதைத் தொட்டுக் காட்டும் கதை இது.

                   பத்திரிகைக்கேற்ற கதை எழுதுதல் என்பதும் ஒரு திறமைதான். எதற்கு அனுப்பினால் க்ளிக் ஆகும்  என்பதும் படைப்பாளிக்குத் தெரிந்தாக வேண்டியிருக்கிறது. அது இவருக்குத் துல்லியமாகத் தெரிந்திருக்கிறது.

                   வர்களாக முடிவு செய்யலாம். ஆனால் வெளிப்படையாகக் கேட்டு விடக் கூடாது. அது கேவலம். யாரும் பார்க்காமல் கொண்டு விட்டு விடலாம். கேட்டால் அவராகத்தான் சொன்னார்…என்னை முதியோர் இல்லத்தில் விட்டு விடு என்று எனலாம்.  தங்களுக்கும் வயசாகும் என்று யாருமே யோசிப்பதில்லை. முதியோர் இல்லத்தில் வந்து அக்கடா என்று இருந்து விடுவதை பல பெரியோர்கள் விரும்புகிறார்கள். நாலு வார்த்தை நறுக்கென்று அவ்வப்போது கேட்டாலும் மகள்…பேரன்…இவர்களுக்கு நடுவே இருப்பதைச் சிலரே விரும்புகிறார்கள்.

                   வரும் பென்ஷன் காசு போய் விடுமே…இருக்கும் சேமிப்பு அப்படியே கைக்கு வந்து சேர வேண்டுமே…அப்பா கட்டிய வீடு அப்படியே முழுசாய்ச் சொந்தமாக வேண்டுமே…என்று  பெற்றோரைப் பாதுகாக்கிறார்கள். எதுவானாலும் இன்று முதியோர் பிரச்னை சிக்கல்தான். முதியோர் இல்லங்கள் இன்று ஏன் அதிகமானது? எண்பது, தொண்ணூறு என்று சாகாமல் கிடக்கிறார்கள். பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.   உள்நாட்டில் என்ன வாழ்கிறதாம்? எல்லாம் ஏதோவொரு வகையில் சீரழிவுதான்.

                   ஆன்லைனில் பணம் அனுப்பிடுறேன். எல்லாக் கடைசிக் காரியத்தையும்  நீங்களே செய்திடுங்க….எங்களால வர முடியாது….என்று சொல்லும் காலம் இது. முதியோர் இல்லங்களில்…எல்லாக் கிரியைகளுக்கும் எல்லாமும் தயார்தான் இன்று.

                   முதியோர் இல்லமே சிறந்தது. இல்லத்தில் இருப்பவர்கள் கைதிகள்தான். ஆசிரியர் கூற்று சரியே…!

                   தைக்கான ட்விஸ்ட் முதலிலேயே மனதில் தோன்றிவிட்டால் பிறகு எழுதுவது சுலபம். ஸ்வாரஸ்யம் குன்றாமல் உரையாடல்களைப் புகுத்தி, கடைசியில் அந்த ட்விஸ்டில் கொண்டு நிறுத்தி விட்டால் சூப்பர் என்றாகி விடும்.  மண முறிவுக்காக ஆண் வக்கீலை மனைவி அணுக அதே மண முறிவுக்கு பெண் வக்கீலைக் கணவன் அணுக நோட்டீசும் அனுப்பி விடுகிறான். அந்தப் பெண் வக்கீல் அவள் அணுகிய ஆண் வக்கீலின் மனைவி.  ஆண் வக்கீல் ரீதிங்கிங் பண்ணுங்கோ என்கிறார். பெண் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விடுகிறார். இவங்க யாரு நம்ம லைஃப்பைப் பிரிக்கிறதுக்கு? என்கிற அறிவு வேண்டும் இவர்களுக்கு. பிரி, பிரி, பிரி…என்று போய் நின்றால் பிரித்து மேயத்தான் செய்வார்கள். அங்கே அது ஒரு தொழிலாகிப் போகிறது. அதுபற்றிய பிரக்ஞை இவர்களுக்கு வேணும். மனப்பாங்கு இருந்தால் அது மனப் பக்குவமாக மாறும். இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது ஆசிரியரின் எழுத்து வண்ணம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

                   தேருங்கால் தேவன் ஒருவனே…என்று தொடங்கி எல்லாருக்கள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவனே என்று முடிகிறது கதை. கருத்து ஒன்றுதான் எனினும் மதம் மாறுவதற்கு அங்கு என்ன தேவை இருக்கிறது என்பதுதான் புரியவில்லை. அப்பம்தான் தனக்கு ரொம்பவும் பிடிக்கும் என்று சொல்லும் முகுந்தன் அந்த அப்பம் கிடைக்கும் இடத்தில் அடைக்கலமாவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. இதைச் சொல்லவா இவ்வளவு பெரிய கதை?அப்படியானால் நோக்கம் வலிதாகிறதே…மனசு ஏற்க மறுக்கிறது.

                   ந்தத் தொகுதியிலேயே எனக்குப் பிடித்த கதை இதுதான். சுக்லபட்சத் திதியைக் கிருஷ்ணபட்சத்தில் பண்ணி வைக்கிறார் வாத்தியார். சுக்லபட்சத்தில் நடந்த கல்யாண வரும்படியும், இந்தத் திவச வரும்படியும் அவரின் அத்தியாவசியத் தேவையாகிறது. பெண் கல்யாணச் செலவுக்கு வேண்டுமே. உதவுமே என்கிற ஆதங்கத்தில் இந்தத் தவறைத் தெரிந்தே செய்து விடுகிறார்.  ஆனால் ஒன்று…குட்டு வெளிப்பட்டபோது, வெளிப்படையாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்கிறார். அப்போது நம் மனம் இறங்கி விடுகிறது. மேலும் அந்தத் திதி செய்து வைத்ததற்கான தட்சிணையையும் வாங்க மறுத்து விடுகிறார். மனசாட்சி அங்கே ஸ்தாபிதமாகிவிடுகிறது. பொருளாதாரத் தேவைகள் மனிதர்களைச் சமயங்களில் தடம் புரளச் செய்து விடுகின்றன. தவறு செய்யாத மனிதன்தான் யார்? பெரும் பணக்காரர்கள் தவறு செய்வதில்லையா? தவறுகளாய்ச் செய்து செய்துதானே அந்த செல்வத்தைப் பெருக்குகிறார்கள்? ஆனால் அதை யார் ஒப்புக் கொள்கிறார்கள்? அது திறமை என்றல்லவா கணிக்கப்படுகிறது? இந்த ஏழை பிராமணன்  வறுமையின் பொருட்டு தவிர்க்க முடியாமல் தடுமாறிச் செய்து விடும் இந்தத் தவறை கடவுளே மன்னித்து விடுவாரே? என்றுதான் நம் மனம் கணக்குப் போடுகிறது. வரும்படிக்கேற்றாற்போல் முகூர்த்த நேரம் நிர்ணயிப்பதில்லையா? ஏற்றுக் கொண்டிருக்கும் விசேடங்களைத் தவறாமல் நடத்தி வைப்பதற்காக – காலநேரம் கருதி மந்திரங்களை முழுங்குவதில்லையா? நாலு வாத்தியார் சொல்லி, ரெண்டு வாத்தியார் அனுப்பி, மீதி ரெண்டின் தட்சிணையை, தான் வாங்கிப் போட்டுக் கொள்வதில்லையா? எல்லாமும் அந்த வேதவித்தின் முன்னால் விழுந்து வணங்கி ஏற்றுக்கொள்வதாகிறது. ஈஸ்வர சம்பத்து, சேம லாபம் என்பதே அங்கே முன் வைக்கப்படுகிறது. அந்த ஐஸ்வர்யங்களுக்கு முன்னால் மற்ற சின்னஞ் சிறு நஷ்டங்கள் பெரிதுபடுத்தப்படுவதில்லை. பெரிதாய்த் தோன்றுவதில்லை.

                   எதில்தான் தவறில்லை. எதில்தான் சமரசம் இல்லை? எல்லாமும் தெரிந்து பாதி, தெரியாமல் பாதி என்றுதான் இங்கே இயங்கிக் கொண்டிருக்கிறது. குறை, நிறை என்பவை அவரவர் மனதைப் பொறுத்துத்தான். இந்த நோக்கில் “திதி“ சிறுகதை மனதை நிறைவு செய்கிறது.

                   புர்ட்சி….புர்ட்சி…என்று சொல்லிக் கொண்டு அலைபவர்கள் பலரும் பொறுப்பற்றவர்கள். அதிலும் கதை, கவிதை என்று சொல்லிக்கொண்டு திரிபவர்களிடம் கேரக்டர் இருப்பதில்லை என்பதான கருத்தைப் போகிற போக்கில் அநாயாசமாகச் சொல்லிச் செல்லும் கதை. பல இடங்களில் அப்படித்தானே இருக்கிறது என்பதை நாமும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. சுளீர்னு சூடு வாங்கினால்தான் சில பேருக்கு  உறைக்கும்.அது சுந்தரியின் தம்பிக்கு நடக்கிறது. கிறுக்கன்கள் என்று ஒரு வார்த்தையை என்னையறியாமல் என்  வாய் உச்சரித்தது இக்கதையைப் படித்து முடித்தபோது….

                   ண்பால் ஆண்பாலோடு சேரும் கதை. மனசு ஏற்க மறுக்கிறது. கதைதானே என்றாலும் எங்கோ நடந்த, நடக்கும் உண்மையாக இருக்கிறது. கலாச்சாரச் சீரழிவு என்று மனம் புண்படுகிறது. இப்படியிருந்தால் இப்படித்தான் ஆகும் என்பதைவிட, இப்படியும் ஆகும் என்று முடித்திருக்கிறார் ஆசிரியர். எழுத்துத் திறமை சுவையாகச் சொல்ல வைத்து கடைசியில் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்து முடித்து வைக்கிறது. அதிர்ச்சிதான். யாருக்கும் எவருக்கும் இப்படியெல்லாம் நடக்கவே வேண்டாம் என்கிற அதிர்ச்சி.

                   சூரியன் என்கிற ஒரு கதை மனதை திடுக்கிட வைக்கிறது. இப்படியொரு செய்தியை இக்கதையின் மூலமே உணர்கிறேன். பட்டாசுப் பொறி பட்டு வேட்டி, சட்டை ஓட்டையாகும். உடம்பில் பட்டு சுர்ர்…சுர்ர்….என்று அதிர வைக்கும். கேள்விப்பட்டிருக்கிறோம்….அனுபவித்திருக்கிறோம். ஆனால் அந்தப் பொறி கண்ணில் பட்டு கண் பாழாகும் அவலம்…எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய விஷயம். இதைச் சொல்வதற்கு சூரியனைத் தினமும் பார்க்க ஆவல் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி, சொந்தக் கண் ஒளி பறிபோகும் துயரம்…..சிகிச்சை முறைகள் இருக்கிறதா, இல்லையா…..சரி செய்து மறுபடியும் அந்தக் கண்ணிற்கு ஒளி கூட்ட முடியுமா? முடிய வேண்டுமே என்று மனது வேண்டிக் கொள்கிறது. யாருக்கும் இம்மாதிரி ஒரு விபத்து ஏற்பட்டு விடக் கூடாது என்று மனசு பிரார்த்திக்கிறது.

       றைவன் இருக்கிறான் என்கிற நம்பிக்கையில் அவனைத் தொழுகிறோம். நம்பினாற் கெடுவதில்லை…இது நான்கு மறைத் தீர்ப்பு என்கிற அழுத்தமான நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு….என்று ஆன்மீகம் தழைத்து நிற்கும் பூமியாக இது இருக்கிறது. உண்டென்றால் அது உண்டு…இல்லையென்றால் அது இல்லை. இங்கேதான் இறைவன் இருக்கின்றானா…..மனிதன் கேட்கிறான்…என்று கேள்விகளும் காலம் காலமாய் விழுந்து கொண்டிருக்கின்றன. இருக்கிறான் என்றால் ஏன் இத்தனை அக்கிரமங்கள் நடக்கின்றன? ஏன் இத்தனை கொலைகள் நடக்கின்றன? ஏன் இத்தனை பலிகள் நடக்கின்றன?இத்தனை பாவங்கள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன… ஒரு பாவமும் அறியாத பிஞ்சு உயிர்கள் பலியாகின்றனவே….நீ இருக்கிறாய் என்றால் இந்த அக்கிரமங்களை, அநியாயங்களை நீ தட்டிக் கேட்க வேண்டாமா? தடுத்து நிறுத்த வேண்டாமா? என்ற கல்கி அவதாரம் உதித்து இந்தத் தீமைகள் அழிந்தொழியும்…என்று இந்த உலகம் சுபிட்சம் பெறும் என்ற கேள்விகளும் காலம் காலமாய்க் கூடவே வந்து கொண்டிருக்கின்றனதான்.

                   மனிதனின் துன்பங்களுக்கெல்லாம் காரணம் ஆசைதான் என்பதை மனித மனம் உணரத்தான் செய்கிறது. உணர்ந்தும் தொடர்ந்து தவறுகள் செய்து கொண்டேதான் இருக்கிறது. உடலாசை, பணத்தாசை மனிதர்களை வாட்டி வதைக்கிறது. அதனால் தொடர்ந்து தவறுகள் செய்து கொண்டேயிருக்கிறார்கள். அவ்வாறு தவறுகள் செய்து கொண்டேயிருப்பதன் மூலம் இறைவன் என்று ஒருவன் இல்லவேயில்லை, எல்லாமும் நாமே கற்பித்துக் கொள்வது, இந்த உலகத்தில் தோன்றியவையெல்லாம் நாம் அனுபவிப்பதற்கே…இருக்கும் மட்டும் அனுபவித்துத் தீர்த்து மறைந்து போவதே இந்தப் பிறவியெடுத்ததன் நோக்கம், பலன் இங்கே முற்பிறவிப் பலன், முற்பிறவிக் கேடு, முன்னோர் செய்த பாவங்களின் தொடர்ச்சியான துன்பங்கள், நமக்கு நாமே முற்பகலில் செய்து கொள்ளும் தவறுகளும், பாவங்களும் பிற்பகலில் நமக்கு வந்து சேருகின்றன….எந்தவொருவனும் எந்தத் தவறுகளிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தப்பித்து விட முடியாது….எல்லாவற்றையும் இன்றோ, நாளையோ அனுபவித்து முடித்துத்தான் தன் இறுதி மூச்சை விட முடியும்…இதுவே இறைவனின் சித்தம். எழுதி வைத்த விதி, எழுதாத தத்துவம்…தன் தொடர்ந்த தடையில்லாத தவறுகளின் மூலம், பாவங்களின் மூலம் கடவுளை எதிர்த்தவன், கடவுளை ஒதுக்கியவன், கடவுளை நிராகரித்தவன், கடவுளை மிதித்தவன், கடவுளைக் கொன்றவன் என்று எதுவுமில்லை…எவருமில்லை…. இந்தத் தத்துவத்தின் மூல விசாரமே ஒரு கொலைக்கான விசாரணையாய், தத்துவார்த்த விளக்கங்களாய், கேள்விகளாய், பதில்களாய் இந்தக் கதையில் விரிகிறது என்கிற அளவில் “கடவுளைக் கொன்றவன்” என்ற புத்தகத் தலைப்பிலான கதையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

                   இச்சிறுகதைத் தொகுப்பின் கடினமான கதையாய் உணர வைத்தது இந்தக் கதைதான் என்று சொல்லுவேன்.  புரிந்தும் புரியாமலும் நகர்ந்து செல்வது ஒரு படைப்பிற்கான வெற்றியாய் எப்போதும் அமையாது. வாசகனைக் குழப்பத்திற்கு ஆளாக்கி, இதுவாய்த்தான் இருக்கும் என்ற ஊகங்களின் அடிப்படையில் நகர்த்துவது என்பது திருப்தியளிக்காது. இந்த ஒரு படைப்பு எனக்கு இம்மாதிரித்தான் உணர்த்தி அலுப்பினை ஏற்படுத்தியது என்று கூடக் கூறலாம். ஆனாலும் இதை இறைவனை நோக்கிக் கேள்விகளை எழுப்பும் விதமாயும், நடைமுறை யதார்த்த நிகழ்வுகளாயும் பிணைத்துப் பிணைத்து இந்தக் கதையை ஆசிரியர் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியதாகவே எண்ண வைக்கிறது.

                   ஒரு தொகுதிக்கு 22 கதைகள் என்பது மிக அதிகம். அதிகபட்சம் 18 கதைகள் என்பதே ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கான உள்ளடக்கம் என்று கொள்ளலாம்.  கீதையின் 18 அத்தியாயங்களைப் போல. ஒரு முறை படித்து ஒதுக்கி வைக்கும் புனைவு ரீதியிலான  சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள்…என்பவை வேறு. தொடர்ந்து நம்மோடு வாழ்வு பூராவும் பயணிக்க வேண்டிய இதிகாசங்கள், புராணங்கள் என்பவை வேறு.        ஆனாலும் இலக்கியங்கள் நம்மை, நம் வாழ்வைப் பக்குவப்படுத்துகின்றன என்கிற உண்மைகளை மறைக்க முடியாது. ஒரு சிறந்த விவேகியாக மாற்றும் திறன் இலக்கியங்களுக்கு உண்டு என்பது சத்தியமான விஷயம்.

                   ஒரு தொகுதியில் 15 கதைகள் இருப்பின் அதில் ஐந்து கதைகள் சிறப்பாக இருந்தால் அத்தொகுதி வெற்றி என்று பொருள் கொள்ளப்படும். இருபத்தியிரண்டு கதைகளை உள்ளடக்கிய சித்ரூபனின் இந்தக் “கடவுளைக் கொன்றவன்” தொகுதியில் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன என்பதை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. இது ஆசிரியருக்குக் கிடைத்த பெருமை என்றே கொள்ளலாம்.

                   சித்ரூபன் எழுபது எண்பதுகளிலான கணையாழி, தீபம் போன்ற இலக்கிய இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்.  மிகச் சிறந்த தரமான, உயர்ந்த படைப்பாளிகளால் அவரது படைப்புக்கள் படித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது கண்டு நம் மனம் பெருமிதம் கொள்கிறது. அன்றே நிலைத்தவர் பின் ஏன் தொடராமல் விட்டார் என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயமாகிறது.  இத்தொகுதியில் உள்ள கணையாழி கதைகளைப் படிக்கையிலேயே தெரிகிறது…அவைகளை மட்டுமே தொகுத்து இவர் அன்றே ஒரு தொகுதி கொண்டு வந்திருக்கலாமே என்று. அன்று எழுதி நின்று போன படைப்பாளிகள் அநேகம் பேர் நம்மிடையே உள்ளனர். அவர்கள் இன்று மீண்டும் எழுதினாலும் அவர்களின் தரம் குன்றாது என்பதற்கு சித்ரூபனின் இத் தொகுதிக் கதைகளே சான்று. இவர் எழுத்தின் அஸ்திவாரம் மிகவும் பலமானது.

                   இப்பொழுதாவது தொடர்ந்து எழுத வந்திருக்கிறாரே என்ற நினைக்கையில் அவரின் அறிமுகம் கிடைத்ததும், அவரின் படைப்புகள் குறித்து அறிய நேர்ந்ததுமான நிகழ்வுகள் நம் மனதுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், திருப்தியையும் அளிக்கிறது. 

                   சித்ரூபன் தொடர்ந்து எழுத வேண்டும். சிறுகதைப் பரப்பிலும், நாவல் உலகிலும் தனிக்கொடி நாட்ட வேண்டும் என்பதே எம் விருப்பம். தமிழ் நவீன இலக்கிய உலகில் அவருக்கென்று ஒரு சிறப்பான இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அவருக்கு நினைவு படுத்துவோம்.

                                                       ----------------------------------

26 ஆகஸ்ட் 2023

 ஜெயமோகன் வலைத்தளம்-27.08.2023-ல் கீழ்க்கண்ட எனது கட்டுரை
“கந்தர்வன்“ – சிறுகதை – ரசனை சார்ந்த வாசிப்பனுபவம் – படையல்-சிறுகதைத் தொகுதி - ஜெயமோகன்

            ய்யய்யோ…அய்யய்யோ…“ – நல்லசிவம் செட்டியார் கூச்சலிட்ட  அந்தக் கணம் அது நடந்து விடுகிறது. நமக்கும் எதிர்பாராத அந்த க்ஷணம் அது. மனது திடுக்கிட்டுப்போகிறது. ஐயோ…இதென்ன விபரீதம்…? என்று.

            ஆம். வள்ளியம்மை எழுந்து கை கூப்பியவண்ணம் பாய்ந்து சிதைத்தீயில் புகுந்த  நிமிடம் அது…!

            தப்புக்கு மேல் தப்பு. அடுத்தடுத்து….ராஜாவையே ஏமாற்றிய தப்பு.

            மன்னர் விஜயரெங்கச் சொக்கநாதரின் கண்களையும் கருத்தையும் மறைத்துச் செய்யப்பட்ட  தந்திரம்.

            மதுரை ராசாவே அநியாய வரிகெட்டி சீரளியுதோம் – என்று சொல்லி வரிவிலக்குப் பெற உண்டாக்கிய ராஜகைங்கரிய தந்திரம். வெறும் யுக்தியா அது?  ஒரு ராஜ்யத்தையே ஏமாற்றிய மாதந்திரமல்லவா அது!

            நினைத்தது நடந்து போகிறதுதான்.

            ஸ்ரீமீனாள் துணையால் வேண்டியவை செய்யப்படும்…இது அரசரின் அறிவிப்பு.

            ஆனால் நடந்தது என்றேனும் தெரியாமல் போகுமா? சரித்திரத்தில் உண்மை வெளிவராமலேயே போயிருக்குமா? அது அறியப்படாமலேயே அரசரின், மக்களின் காலம் கழிந்திருக்குமா? கேள்வி தொக்கி நிற்கிறது நம் மனதில்.

            சரித்திரங்கள் இப்படி எத்தனையோ கதைகளைத் துணிந்து  பேசுகின்றன. எல்லாக் காலங்களிலும் எல்லாத் தந்திரங்களும் அங்கங்கே நிலவும் மேல் கீழ் அதிகார நிலைகளுக்கேற்ப சாமர்த்தியமாக நிகழ்த்தப்பட்டடிருக்கின்றன திறமையாகக் கையாளப் பட்டிருக்கின்றன என்பதை மறைமுகமாக, ஆணித்தரமாகச் சொல்கிறது இப்படைப்பு.

            மாரய்யாக் குட்டி பிள்ளை, நம்பியா பிள்ளை, சண்முகம் பிள்ளை திருவடியா பிள்ளை இப்படிப் பலருக்கும் நடுக்கம்தான்.  ஆனால் ஏற்பாடு செய்து நியமிக்கப்பட்ட அந்த ஆளுக்கு கிஞ்சித்தும் பயமில்லை. அவன் ஊருக்காக, ஊர் மக்களுக்காகத் தன்னைப் பலி கொடுக்கத் தயாராகிவிட்டவன். என் சாவினால்தான் இந்த நல்லது நடக்குமானால் களபலி ஆவதில் என்ன தவறு? என்கிற முனைப்பை மட்டுமே மனதில் நிறுத்திய தியாக ஜீவன்.  இத்தனைக்கு வரி விதிப்புக்கே விதி விலக்கானவன்.  தன்னை முன்னிறுத்தும் தந்திரம் அறியாதவன்.

            அந்தச் சந்தேகத்தை அவர்களே தங்களுக்குள் கிளப்பித் தெளிகிறார்கள். பண்டாரமாக்குமே இவன்….சாடிசாவணுமானா இவனுக்கு ஒரு பாதிப்பு வேணாமா? யோசிக்கத்தான் செய்கிறார்கள்.  ஆனாலும் காரியம் நிகழ்ந்ததும் ஆளை மாற்றிப் போட்டு அறிவித்து விடலாம் என்கிற துணிபு. மன்னரின் மனதை மாற்ற காரியம் கை கூட, அங்கங்கே இருக்கும் அதிகார மையங்களின் அதிதீவிர ஆலோசனை, கண்காணிப்பு.

            தந்திர வாக்கியம்  கை கூடுகிறது அங்கே.

            எலே முருகப்பா…உனக்க களுத்திலே கிடக்குத அந்த வெள்ளிக்  கண்டிகையைக் களட்டிக் கொடு….

            அது எங்க குலச்சின்னமாக்குமே பண்ணையாரே….

            எலே…சொன்னதச் செய்டே…! – அதிகாரம் அங்கே மையம் கொள்கிறது. தந்திரம் தலை தூக்கி, மக்களையும், மன்னனையும் ஏமாற்றத் துணிகிறது.

            இந்தக் கண்டிகையை அணைஞ்ச பெருமாள் களுத்திலே மாட்டு…கோபுரத்திலேருந்து அவன் விளுந்ததும், அடையாளம் காட்டணும்லா… செத்தவன் மாயாண்டி  மகன் முருகப்பன்னு சாட்சி சொல்லிடுவோம்…சாவுதது வரிகெட்டி, வரிகெட்டி நொடிச்சுப் போன முருகப்பனாக்கும்…தெரியுதுல்ல…எல்லாரும் கேட்டாச்சுல்ல…

            முதல்ல இது நடக்கட்டும்.  சிக்கல் வந்தா பிறகு இந்த  முருகப்பன் வேற ஆளுன்னு சொல்லிப்போடுவோம்…ஊரிலே நாம சொல்லுததுதானே?

            ராஜ காரியம்…ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா யாரு பிணை? நாயக்கன் நம்மள குடும்பத்தோடக் களுவுல ஏத்திப்புடுவானே…

            நினைத்து அஞ்சியது போல் தவறாக ஏதும் நடவாமல், எல்லாமும் முறையாகவே நடந்தேறியதில் திட்டம் தீட்டியவர்கள் ஆறுதல் கொள்கிறார்கள்.

            ஆனால் மனிதர்களின் எல்லாச் செயல்பாடுகளுமா வெற்றி கண்டு விடுகின்றன? யாரை யார் முந்துவது? யாரை யார் வெற்றி கொள்ள தந்திரம் கைக்கொள்வது? தந்திரம் மேற்கொள்வது என்று திட்டமிடுகையிலேயே அதில் தவறுகளும் புகுந்து விடுகிறதுதானே? தெய்வ சாந்நித்யம் என்று ஒன்று யாருமறியாமல் நுழைந்து விடுமல்லவா? மனித மனம் அதை உணரத் தவறி விடுவது என்பதுதான் இன்றைய வரையிலான  இயல்பு.

            ஒரு நன்மை கருதி ஒரு தவறு நிகழ்தல், அல்லது நிகழ்த்துதல் எனும்போது அதற்கு பலியாடுகளாவது எளிய மக்களில் ஒருவன்தானா? கால காலமாய்த் தொண்டூழியம் செய்யும் விளிம்பு நிலை மனிதனே  களபலிகொள்ளப்படுகிறான். அணைஞ்ச பெருமாள் சாவை விரும்பி அணைத்துக் கொள்கிறான். ஊருக்காக…மக்களுக்காக…அவன் மேற்கொள்ளும் ஈடு செய்ய முடியாத தியாகம்.

            நாமொன்று நினைக்க தெய்வம் வேறு ஒன்று நினைத்து விடுகிறது.

            முருகப்பனின் மனைவி அப்படியா வந்து தீக்கிரையாவாள்? யார்தான் எதிர்பார்த்தது இதை?

            தெய்வம் இங்கே நின்று கொல்லவில்லை. அன்றே கொன்று விடுகிறது. யாரை? சதி செய்தவர்களை!

            சதி மாதாவுக்கு மங்களம், எறிமாடனுக்கு ஜெயமங்களம்…உடன் நின்ற நங்கைக்கு சுபமங்களம்…என்று வெறிகொண்டு கோஷமிட்ட  அந்த நேரம்  எந்த உண்மை மறைக்கப்பட்டதோ, அந்தப் பொய்மைக்கு மாறான இன்னொரு உண்மை அங்கே பலியாகிப் போகிறது.

            வாசித்து முடித்ததும் மனம் அதிர்ந்து போகிறது. அதிர்ச்சியிலிருந்து வெளிவர புத்தகத்தை மூடி வைப்பதுதான் சாத்தியமாகிறது. கந்தர்வனின் நினைவுகள் நம்மை சுற்றிச் சுற்றியடிக்கின்றன. அணைஞ்ச பெருமாள்….அவனைத் தந்திரத்தால் சாகடித்த அதிகார மையம்…

            பாபகாரியங்கள் என்றேனும் எப்படியும் வெளி வந்துவிடும் என்பதுதான் நீதி. இது அன்றே நிகழ்ந்து விடுகிறது.

            கந்தர்வன் என்பவன் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் தொடர்பாக இருப்பவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இங்கே தேவனாகிய  அரசனையும், கீழ் அதிகார மையத்திலிருக்கும் மாமனிதர்களையும் தொடர்பு படுத்துபவனாய் அணைஞ்ச பெருமாள் திகழ்கிறான். பறக்கும் திறன் கொண்டவர்கள் கந்தர்வர்கள். அந்த மக்களுக்காக அவனின் உயிர்ப் பறவை பறந்து மேலே மேலே சென்று தேவர்களை மகிழ்விக்கும் இடத்தை அடைந்து விடுகிறது.

            எண்ணிலடங்கா கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஜெயமோகனின் இந்தப் படைப்பு  நம்மை வியக்க வைக்கிறது. மனதில் அங்கங்கே கட்டமிட்டு நிறுத்தி வைத்திருந்தால் தவிர இம்மாதிரிப் படைப்புக்களை நினைத்ததும் இத்தனை தெளிவாய்க் கொடுத்துவிடல் சாத்தியமாகாது என்று அவரது படைப்புத் திறன் குறித்து  மனம் பெருமிதம் கொள்கிறது.

            மதுரை பெரியநாயக்கர் விஜயரெங்க சொக்கநாதர் தன் படைகளுடன் திருக்கணங்குடிக்கு வருகை தரும் அந்தப் பயணத்தில் என்னை நான் முழுமையாகக் கரைத்துக் கொண்டு கூடவே பயணித்து, எல்லாம் முடிந்த பின்னும் இன்னும் வெளியே வராமல் அடுத்து நிகழவிருக்கும் உண்மை தெரியவந்த ஊழ்வினைக்காகப் பயத்தோடு  காத்திருக்கிறேன்.

                                    ----------------------------------------------------

 

           

           

12 ஆகஸ்ட் 2023

 

சிறுகதை                     உயிர் எழுத்து மாத இதழ்  ஆகஸ்ட் 2023 

“அன்பின் வழியது


               பால்கனியில் வந்து உட்கார்ந்து கொண்டுதான் தன்னை மறைத்துக் கொள்கிறார் நாகநாதன். அவரால் சகஜமாக அந்த வீட்டுக்குள் சென்று புழங்க முடியவில்லை. புழங்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார். என்னவோ தடுக்கிறது. இனம் புரியவில்லை.  தன்னுடைய கூச்ச சுபாவம் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் நினைத்துக் கொண்டார். சாதாரணமாக உறாலின் நடுவே சென்று சோபாவில் உட்கார்ந்து கொண்டு டி.வி.யைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தால் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லைதான். ஆனாலும் விருந்தாளிதானே என்ற உணர்வு போகமாட்டேனென்கிறது. விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பார்கள். அப்படி சர்வ சுதந்திர பாத்தியதையாய் டி.வி.யை உபயோகிக்க முடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை. அது ஒருவேளை அவர்களுக்கு இ்டைஞ்சலாக இருந்து விட்டால்? வயசான மனுஷனுக்குப் பக்குவமில்லையே என்று ஆகிவிடும்.  விருந்தாளி என்று வெறுமே சொல்லி நகர்ந்து விட முடியுமா? உறவு முறையும் வந்தாயிற்றே? அதான்… சம்பந்தி முறை…அதுவாகவே வந்து உட்கார்ந்து கொண்டது. தானா அழைத்தோம்? மகள் கொடுத்த பரிசு.  அதுவே இன்னும் மனதி்ல் திடமாய்ப் படியவில்லை. அதையும்தான் எதுவோ தடுக்கிறது. யதார்த்த நிலை இப்போதைக்கு வராது என்றுதான் தோன்றியது.

            அப்படித்தான் இரண்டொரு நாள் டி.வி. முன் இருந்தார். சகஜ நிலை ஒட்டவில்லை. வந்தே நாலு நாள்தானே ஆகிறது. இருந்து பார்த்தார் என்பதுதான் சரி. மனதில் எந்த வேற்றுமையான எண்ணமும் இல்லைதான். இருந்து என்ன பயன்?  ஆனால் தயக்கமிருந்தது. செய்யலாமா வேண்டாமா என்றும் கேட்போமா வேண்டாமா என்றும் யோசிக்க வேண்டியிருந்தது. அப்படியான நினைப்பு தீவிரப்பட்டிருந்தால் வந்தே இருக்க முடியாதே?  பரப்பிரம்மம் ஜெகந்நாதம் என்றுதான் அமர்ந்திருந்தார். ஏதாவது அவர்களாகக் கேட்டால் பதில் சொன்னார். அதையும் ஓரிரு வார்த்தைகளில். சுமுகமாய்ச் சொல்லுகிறோமா? அவருக்கே சந்தேகமாயிருந்தது.

வழக்கமாய் நிகழ்ச்சி பார்க்கையில் எதற்காவது சத்தமாகச் சிரிப்பார். அது அவரை மீறிச் சிரிக்கும் சிரிப்பு. சுற்றிலும் மறந்து வெளிப்படுவது. அது அவர் வீட்டில். இங்கு அது முடியுமா? அடக்கிச் சிரித்துக் கொண்டார். அது அத்தனை திருப்தி இல்லைதான். அப்போது அவர் உடல் மட்டும் அவரை மீறிக் குலுங்கியது.  கூடவே வந்து வசுமதியும் அமர்வாள் என்று எதிர்பார்த்தார். அவளைக் காணவில்லை. புது இடம்….அவருக்குக் கொஞ்சம் துணையாய் இருப்போம் என்கிற எண்ணமில்லை அவளுக்கு. அப்படி வந்து அவளும் குந்தியிருந்தால் அதை அவர்கள் விரும்புவார்களோ என்னவோ? புருஷம்பொண்டாட்டி பசையால்ல ஒட்டிட்டிருக்காங்க…என்று எண்ணமிட்டால்? அவர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ, தோன்றுகிறதே?

            கொஞ்சம் கூச்ச சுபாவியாயிற்றே…திணறுவானே…!  என்று ஒரு ஒத்துழைப்பு உண்டா அவளிடம்? எனக்கென்ன என்று இருக்கிறாள். உங்களுக்கென்ன நான் கொடுக்கா?

அதற்குள்ளுமா அவர்களோடு ஒன்றி விட்டாள்? அடுப்படியில் ஒத்தாசை செய்கிறாளோ? அது முடியாதே? இவ்வளவு சீக்கிரம் அடுப்படிவரை போய்விட்டாளா என்ன?  அவர்கள் அசைவம் சமைத்தால்? சே…சே…! நாங்கள் இருவரும் வந்திருக்கும் இந்த நாளிலுமா அதைச் செய்வார்கள்? எங்களுக்காக விடவேண்டாம்தான். ஆனாலும் ஒரு பத்து நாளைக்கு அதைத் தவிர்க்க முடியாதா என்ன? அத்தனை பக்குவமில்லாமலா இருக்கிறார்கள்? தினசரி புழங்கும் அதே பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவித்தானே பயன்படுத்துவார்கள். நேற்று மீன் குழம்பு வைத்த சட்டியைத் தேய்த்துக் கவிழ்த்து பின்பு எடுத்து உபயோகித்தால் தெரியவா போகிறது? இல்லை குழம்பும் சேர்ந்து நாறப் போகிறதா? நமக்கு நாற்றம். அவர்களுக்கு அது பழகிய வாசனை.  அப்படி நாறினால்…என்னமோ ஒரு வாடை வருதே? என்று சொல்ல முடியுமா? ஒரு வேளை எதுக்களித்து விட்டால்? வாந்தி வந்து விட்டால்? சங்கடம்தான்.  புழங்கும் பாத்திரங்கள் முழுவதும்  புதியதாக ஒரு செட் வாங்கியா  அடுக்க முடியும்? அதை அவர்களாக உணர்ந்து செய்திருந்தால் ஓ.கே. கேட்கவா முடியும்?

இல்லல்ல…பரவால்ல…விட்ருங்க…ஒண்ணும் பிரச்னையில்ல…சாதம் போட்டு மோர் விடுங்க….ஊறுகாய் இருக்குங்களா…அது போதும்….என்றுதான் சொல்ல வேண்டும். மனதளவில் தன்னைத் தயார் படுத்திக் கொண்டுதான் அவரைப் பொறுத்தவரை கிளம்பி வந்திருந்தார். வசுமதிக்கு இந்த யோசனையெல்லாம் கண்டிப்பாய் வந்திருக்காது. சித்தம் போக்கு, சிவன் போக்கு என்றுதான் இருப்பாள். சோறு தட்டில் விழும்போதுதான் தெரியும் சேதி…! ஊறுகாய் ஆகாது அவளுக்கு. என்ன பாடு படப் போகிறாளோ?

டி.வி. பார்த்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில்…சட்டென்று கொல்லைப் புறம் பார்வையை வீசினார். அங்கு மாமரம், முருங்கை, மாதுளை, கொய்யா…என்று நிறைய மரங்கள் இருந்தன. காய்களும், பழங்களுமாய்க் காய்த்துக் குலுங்கின. வீட்டைப் போல இரண்டு பங்கு இருக்கும் போல்ருக்கே பின் புறத் தோட்டம் என்று தோன்றியது.

பெருங்கைதான் என்று நினைத்துக் கொண்டார்.  வசதியான இடம்தான். தன் பெண் வசதி வாய்ப்போடுதான் வாழும். அதில் சந்தேகமில்லை. ஆனாலும் பசையுள்ள இடம்…அவளை அதிகாரம் செய்து மிரட்டாமல் இருக்க வேண்டும். அங்கும் இங்கும் என்று வீட்டு வேலைகளில் அலைக்கழிக்காமல் நாளும் பொழுதும் கழிய வேண்டும். முதலில் கொஞ்ச நாளைக்கு மருமகளைத் தாங்குவார்கள்…பிறகு? ஆறின கஞ்சி பழங்கஞ்சி  என்கிற கதைதானே? விரட்ட ஆரம்பித்தால் தன் பெண் தாங்குமா? நினைக்கும்போதே கண் கலங்கியது நாகநாதனுக்கு. தொண்டை அடைத்தது துக்கத்தில். மணையில், மடியில் அமர்ந்து ஊரறியத் தாரை வார்க்க இயலாமல் போன துக்கம். எப்படியெல்லாம் நினைத்து வைத்திருந்தேன்? சீரும் சிறப்புமாய் அனுப்ப வேண்டுமென்று? எல்லாமும் காற்றுப் போன பலூன் போல் ஆகிப் போனது.

வேலை பார்க்கும் பெண்கள் வீட்டு வேலை செய்துதான் ஆக வேண்டும் என்று பெரும்பாலும் எதிர்பார்ப்பதில்லைதான். ஆனாலும் வீட்டில் இருக்கும் பொழுதுகளில் கொஞ்சமாவது உடம்பு அசைகிறதா என்று கவனிக்கத்தானே செய்வார்கள். துரும்பையாவது நகர்த்துகிறாளா என்று யாரேனும் ஒருவர் கவனிக்கக் கூடுமே…!  பொறுக்க முடியாமல் ஏதேனும் சொல்லி வைத்தால்? திட்டி விட்டால்? வலியப் போய் நான் செய்றேன் என்று  நிற்கும் ஜோவியல் டைப்பும் இல்லையே தன் பெண்? ஒதுங்கித்தானே இருப்பாள். சொன்னால் செய்வாள். அது நல்ல குணம் இல்லையா?

இதென்ன இப்டி ஒண்ணொண்ணையும் சொல்லிச் சொல்லிச் செய்யுது இந்தப்புள்ள…?

பேச்சு வித்தியாசமாயிருந்தால் பதிலுக்குச் சட்டென்று  கொடுத்து விடுவாளே காஞ்சனா. வாங்கிக் கட்டிக் கொண்டு இனி இவளிடம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஒதுங்கலாம். இல்லையென்றால், என்ன எல்லாத்துக்கும் எதிர்த்து எதிர்த்துப் பேசுறே? அடக்க ஒடுக்கமா இருக்கமாட்டியா? வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசுவியா?  என்று எகிறி சண்டையும் களேபரமும் ஆகலாம். இந்த இரண்டுமே இல்லாமல் புகுந்த இடம், இனி இங்குதான் நம் வாழ்க்கை, அதுவும் காதல் திருமணம், ஜாதி விட்டு ஜாதித் திருமணம்….சற்று அடங்கியே போவோம்….எல்லாம் கொஞ்ச நாளில் சரியாய்ப் போகும் என்று தன்னையே மாற்றிக் கொள்ளவும் எண்ணமிட்டிருக்கலாம். தோன்றியதே தவிர அப்படித் தன்னை மாற்றிக் கொள்ளும் குணவதியாகக் காஞ்சனாவை இவரால் நினைக்க முடியவில்லை. எதுவுமே தாங்கள் அந்த வீட்டில் இருக்கும்வரை தலையெடுக்கப் போவதில்லை…அடக்கித்தான் வாசிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டார்.

எதற்காக இப்படியெல்லாம் நினைத்து மறுக வேண்டும்? இனி அவள் பாடு…அவர்கள் பாடு…ஏதோ வந்தமா…ஒரு கௌரவத்துக்கு, சுமுக நிலைக்கு, நாலு நாள் இருந்தமா என்று போகப் போகிறோம். அநாவசிய டென்ஷன் வேண்டாமே…?. எண்ண அலைகளில் அவர் உடம்பு தளர்வதாய் உணர்ந்தார். எதையும் போட்டு மனதில் உழப்பிப் பிசைந்து கொள்ள தெம்புமில்லை. பெண் திருமணம் முடிந்த கையோடு அவர் உடம்பும் மனசும் அவரிடத்தில் இல்லை. என்னவோ நடமாடிக் கொண்டிருக்கிறார்…அவ்வளவே…!

ஆனால் ஒன்று. இவை எல்லாமும் மாப்பிள்ளை  திலகனின் இருப்பைப் பொறுத்த விஷயம். வேற்று ஜாதி ஆளானாலும், கல்யாணம் என்று ஆகிப் போனது. இனி மாப்பிள்ளை மாப்பிள்ளைதானே…? மாறவா போகிறது? காஞ்சனா திலகன்…சொல்லிப் பார்த்துக் கொண்டார். திலகனா? திலகரா? எது பொருந்துகிறது?

அவன் அவளின்பால் காட்டும் அன்பையும், அக்கறையையும் பொறுத்த விஷயம். பெண்டாட்டி மேல் ரொம்பத்தான் அக்கறை என்று மற்றவர்கள் அறிவதற்கு ஏதுவாக வெளிப்படையாக அவன் நடந்து கொண்டால், மற்றவர்கள் வாய் அடங்கும். அல்லாமல் ஏன்…பெரியவங்க ஏதாச்சும் சொன்னா செய்தா என்ன? குறைஞ்சு போவியா? சின்னச் சின்ன வேலைதானே? உங்க வீட்டுல செய்து பழகியிருப்பேல்ல…அத இங்க செய்…அவ்வளவுதானே….சும்மா மகாராணியாட்டம் மினுக்கிட்டுத் திரியணும்னு மட்டும் நினைக்காதே…அது நடவாது…இங்க இருக்கிறவங்களோட அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருக்கப்பாரு…!.-சொல்ல மாட்டான் என்பது என்ன நிச்சயம்?

என்னதான் காதல் என்றாலும், அன்பு என்றாலும், பாசம் என்றாலும் – காரியம் என்று வரும்போது குரல் மாறத்தானே செய்யும்? குடும்பத்துக்கு ஏத்தவளா தன் பெண்டாட்டி இருக்கணும்னு ஒரு கணவன் நினைக்கிறதுல என்ன தப்பு? என்றுதான் சொல்வார்கள். காதல் என்பது கண்களை மறைத்த விஷயம். கருத்தையும் மறைத்த விஷயம்தான். காரியார்த்தமாய் இறங்கும்போதுதான் மனிதர்களின் சுயரூபம் வெளிப்படும். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது. இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு, ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து அட்ஜஸ்ட்  ஆக வேண்டும். அதற்குக் குறிப்பிட்ட கால அவகாசம் வேண்டும். அதை இருவருமே உணர வேண்டும். அதுவரை பொறுமையும் வேண்டும்.

அதையெல்லாம் உணரும் முன்தான் குடுமிப்பிடி சண்டை போட்டு, கோர்ட்டு முன் போய் நிற்கிறார்களே? விவாகரத்து என்பது எத்தனை சர்வ சாதாரணமாகி விட்டது இந்நாளில்? கோர்ட் வாசல் படிகளில் கூட்டம் கூட்டமாய் அல்லவா காத்துக் கிடக்கிறார்கள் மன முறிவு ஏற்பட்டு மண முறிவுக்கு வரிசையில் நிற்கிறார்கள். தன் முனைப்பான விஷயமாய்த் தலையெடுத்து, பேயாட்டம் போடுகிறது.  பெத்து, வளர்த்து, ஆளாக்கிக் கட்டிக் கொடுத்த அப்பன், ஆத்தாவை யார் நினைக்கிறார்கள் இன்றைய நாளில்? யார் மதிக்கிறார்கள்?  என் வாழ்க்கை என் முடிவு…என்று முந்திக்கொண்டு போய், எத்தனை திருமணங்கள் நிலைத்திருக்கின்றன?

வீட்டு வேலைகளில் தன் பெண்- என்பது பற்றிச் சிந்திக்கப் போக…எங்கெங்கோ போய் தன் எண்ணங்கள் நிற்பதை உணர்ந்து இயல்புக்கு வந்தார்.

துவே வேலை பார்த்திட்டு, ஆபீஸ்லருந்து அசந்து தளர்ந்து வருது…அதப் போய் வீட்டு வேலை செய்னா எப்படிப்பா  செய்யும்….? ஏதோ லீவு நாள்ல அதுவாப் பிரியப்பட்டு, இன்னைக்கு நா சமைக்கிறேன்  அத்தே….! என்று வந்து நின்னுச்சின்னா சரின்னு விட வேண்டிதான்….கூழுக்கும் ஆசை…மீசைக்கும் ஆசைன்னா எப்டி…? சின்னப் பொண்ணுதான…சந்தோஷமா இருந்திட்டுப் போவுது….! – சொல்வார்களா? சொல்ல வேண்டும் என்று அவர் மனம் அவாவிற்று. யாராவது ஒருத்தரேனும்  இரக்கம் கொள்ள மாட்டார்களா?

எல்லாவிதமான கருத்துக்களையும் மண்டையில் ஊறப்போட்டு ஊறப்போட்டுத்தான் புறப்பட்டு வந்திருந்தார் நாகநாதன். எதாச்சும் பிரச்னை என்று ஆரம்பத்திலேயே வந்து விட்டால்? ஓரளவு தொகுப்பாகப் பேசியாக வேண்டுமே…? அதற்கு மனசுக்குள் அசைபோட்டு வைத்துக் கொண்டால்தானே ஆகும்? சம்பந்தியென்ன விவரமில்லாத ஆளா, இப்டியிருக்காரு என்று யாரும் தன்னை மட்டமாக நினைத்துக் விடக் கூடாதே…!  ஆள் வளர்ந்தால் மட்டும் போதுமா? அறிவும் சேர்ந்துதான் வளர்ந்திருக்கிறது என்பதை எப்படி நிரூபிப்பது? விவரமாயும், விளக்கமாயும் தெளிவாய்ப் பேசுவதிலும்தானே இருக்கிறது பெருமை?

வசுமதி பாடு தேவலை. இந்தப் பெண்கள் எப்படியோ ஒன்றோடொன்று சுலபமாகக் கலந்து விடுகிறார்கள்? சமையல், சாப்பாடு, கோயில், குளமென்று அவர்களுக்குப் பேசுவதற்கும் செல்வதற்கும்  நிறைய இடமும் இருக்கிறது, விஷயங்களும் கொட்டிக் கிடக்கின்றன. ஆண்களுக்குத்தான் கொஞ்ச நேரம் பேசி விட்டால் போதும் என்று அலுத்துப் போகிறது. பிறகு அவர்களாகவே கவனத்தைத் திருப்பி விடுகிறார்கள். அல்லது அமைதியாகி விடுகிறார்கள். டி.வி., நியூஸ் பேப்பர், மொபைல் என்று சுலபமாக இடம் மாறிக் கொள்கிறார்கள். அது சகஜமாகவும் போய்விடுகிறது அவர்களுக்குள். அதுதான் நாள் பூராவும் மொபைலை இணுக்குவதற்கு மனசு துள்ளிக்கொண்டேயிருக்கிறதே…!

அது என்ன இளைஞர்கள், இளைஞிகளுக்கு மட்டும்தானா? எத்தனை வயசான பெரிசுகள்  அதை நோண்டிக் கொண்டே அலைகின்றன? பலிகடா ஆன கதைதான். உலகளாவிய விஷயங்களை உடனுக்குடன் அறிவதற்குத் தங்களுக்கு அந்த ஃபோனைச் சுலபமாக ஆபரேட் பண்ணத் தெரிகிறதாம். சர்வ சாதாரணமாய்க் கற்றுக் கொண்டு விட்டார்களாம். அதில் ஒரு தனிப் பெருமை…! வங்கி கேட்கும் விபரம் என்று வேண்டாததைக் க்ளிக் பண்ணி – பணத்தை இழந்த சீனியர் சிட்டிசன்ஸ் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அந்த வயிற்றெரிச்சலை எங்கே கொண்டு போய்க் கொட்டுவது?

காஞ்சனாவும், திலகனும் திருமணத்திற்கு முன்பு சதா பேசிக்கொண்டேயிருந்ததும்…வாட்சப்பில் செய்தி பறிமாறிக்கொண்டதும், உரையாடல் நடத்தியதும் – தன் பெண்ணின் ஃபோனை ஒரு நாள் வலியப் பிடுங்கிப் பார்த்து அதிர்ந்து  அன்று வீடே கலகக் கூடமானதும், அன்று மாலையே அவள் வீட்டிற்கு வராமலும், எங்கே போனாள் என்று தெரியாமலும் அலறிப் புடைத்து, அழுது புரண்டு-கதறக் கதற அடித்து மறுநாள் காலை வந்து கதவைத் தட்டியபோது – திரும்பக் கிடைத்தாளே என்கிற மகிழ்ச்சியைவிட நேற்று இரவு எங்கிருந்தாய்? என்று கேட்டு நிற்க….இன்றுவரை அந்தக் கேள்விக்கு விடை கிடைத்தபாடில்லையே? அதுதான் விரும்பியவனையே திருமணம் செய்தாயிற்று. எல்லாம் முடிந்தது. இனி அதைக் கேட்டுதான் என்ன புண்ணியம்?அந்தக் கேவலத்தை வேறு தெரிந்து கொள்ள வேண்டுமா? சொல்ல முடியவில்லை என்றால் கேவலம்தானே? பிறருக்குத் தெரியாமல் நடக்கும் விஷயம் என்றாலே தப்புதானே அது?  காற்றோடு கரைந்ததாக அது இருக்கட்டும்…!  வாழ்க்கையில் அங்கங்கே சிற்சில விஷயங்களை நோண்டாமல் விட்டாலே நிம்மதிதான் போலும்…! இன்று இப்படித்தான் தோன்றுகிறது அவர் மனதுக்கு.

அவனோடதான் போய் இருந்திருக்கா அவ…! அரத முண்ட… - என்னா தைரியம் பார்த்தீங்களா? என்ன விபரீதம் நடந்திச்சோ…? இன்னும் என்னெல்லாம் சிரிப்பாச் சிரிக்கப் போகுதோ? – புலம்பிக்கொண்டே ஒரு வாரம் படுக்கையில் விழுந்து  விட்டாள் வசுமதி. அதை நம்பத் தயாரில்லை நாகநாதன். என்னவோ ஒரு நம்பிக்கை அவர் பெண் மேல் அவருக்கிருந்தது. அதனால் அதுபற்றி அவளிடம் அவர் கேட்கவேயில்லை. இன்றுவரை…!! காதுக்கு வரும் விஷயங்களைக் கேட்டே மனசு அல்லல்பட்டு வாழ் நாட்கள் பூராவும் மன உளைச்சலில் கடந்து வந்தாயிற்று. இன்னும் நாமாக வேறு அள்ளி அபிஷேகம் பண்ணிக் கொள்ள வேண்டுமா?

அப்பா ஏன் தன்னிடம் இதுபற்றிக் கேட்கவில்லை? என்று ஒரு பெண்ணுக்குத் தோன்றாதா? கேட்கவில்லையே? தனக்குத் துணையாக சரியான ஒரு ஆண் மகனைத் தேர்ந்தெடுத்து விட்டோம்…இனிமேல் என்ன…என்கிற தைரியம்…திண்ணக்கம் வந்து விட்டதோ? அதுவே, அப்பாட்ட இதைப் போய்ச் சொல்லாட்டா என்ன? என்கிற அலட்சியத்தை வழங்கி விட்டதோ? யப்பாடீ…! பெற்று வளர்த்து வெளி உலகத்தில் சஞ்சரிக்க விடுவதோடு கடமை முடிந்ததா? மற்றதெல்லாம் அவர்கள் பாடா? பிறகு அவர்கள் சொல்வதற்கெல்லாம், செய்வதற்கெல்லாம்…சரி…சரி…சம்மதம் என்று தலையாட்டி ஒப்புதல் வழங்க வேண்டுமா? காலம் இப்படியா மாறிப் போகும்? காலம் மாறினால் சொல்லி வைத்தாற்போல் பலரும் அதன் பின்னால் வரிசை கட்டி நிற்கணுமா? அத்தனை நன்மையளிக்கும் மாற்றங்களாகவா  இருக்கிறது இன்றைய நடைமுறை? எவ்வளவோ யோசித்து எல்லாமும்  அடங்கிப் போனது. உடம்பிலுள்ள முக்கிய செல்களெல்லாம் அழிந்து விட்டன. அல்லது குறைந்து விட்டன. நரம்புகள் தளர்ந்து விட்டன. எதுவும் இனி முறுக்கேற வழியில்லை. இன்றைய இருப்பு நிலைதான் அவரால் சாத்தியமானது.

சரி…அது விரும்பியவனுக்கே அவளைக் கொடுத்தாயிற்று….அவ்வளவுதான்…நாம் எங்கே கொடுத்தோம்? அவனாகவல்லவோ எடுத்துக் கொண்டான்? அதுவாகவல்லவோ போய்ச் சேர்ந்து கொண்டது? – சிரிப்பவர் சிலபேர், அழுபவர் பலபேர்…இருக்கும் நிலை என்று மாறுமோ?  

சுமதியைப் பார்க்கக் கொல்லைப் புறம் திரும்பிய தலை அப்படியே நின்று விட்டது நாகநாதனுக்கு. மாமரத்தைப் பார்த்ததும் சடை சடையாய்த் தொங்கும் பாம்புகள்தான் இவர் நினைவுக்கு வந்தன. சர்வீசில் இருந்த காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பயிற்சி மையத்திற்கு இவரை ஆய்வுக்காக அனுப்பிவிட்டார்கள். அங்கேயே இரவும் பகலும் தங்க வேண்டி வந்து விட்டது.பக்கத்திலேயே இருக்கும் நகரத்தில் ரூம் போடவில்லை.  வராண்டாவில் காற்றாடப் படுப்போம் என்று கிளம்பியபோது  ஐயய்யோ…டேஞ்சர்….என்று அலறினார்கள். என்ன என்று கேட்டபோது வெராண்டாவுக்கு வெளியே அடர்த்தியாய், ஆஜானுபாகுவாய் நின்ற மாமரங்களைக் காட்டினார்கள். மரத்தில் தலைகீழாய்த் தொங்கும் பாம்புப் படைகள் அங்கங்கே ஊர்வலம் வரும். வராண்டாவில் படுத்திருக்கும் நம்மை விசாரித்து விட்டுப் போய்விடும் என்று பயமுறுத்தினார்கள். அதனால் அறைக்குள்ளேயே கதவுகளை கிச்சென்று மூடிவிட்டு ஜாக்கிரதையாய்ப் படுத்துறங்க நேர்ந்து விட்டது. அடைத்திருக்கும் கண்ணாடி ஜன்னல்கள் வழி  அந்தப் பக்கம் பாம்பு ஊர்கிறதா என்று கண்காணிப்பதிலேயே தூக்கம் பாழாகி விட்டது. காலையில் எழுந்ததும் மரத்தைச் சுட்டிக் காட்டியபோதுதான் பார்த்து  அதிர்ந்தார். சடை சடையாய்ப் பாம்புகள். தலை கீழாய்த் தொங்கின. அவற்றிற்கு நடுவே மாங்காய்களும், பழங்களும்.  பார்க்கவே குலை நடுங்கியது. நல்ல எடத்துல வந்து மாட்டினோம்யா…என்று நடு நடுங்கிப் போனார். சீக்கிரம் ஆய்வை முடித்துக் கொண்டு வண்டியைக் கிளப்பியதும், அதற்குப் பின் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்காததும்…தனிக்கதை.

அந்தக் காட்சிகளெல்லாம் இப்போது ஏன் நினைவுக்கு வருகின்றன? மனிதனின் மன சஞ்சலங்கள் இம்மாதிரி வக்கிரத்தை ஏற்படுத்துகின்றன. அல்லது தூண்டி விடுகின்றன. இதற்குத்தான் ஏதேனும் சுலோகங்களை வாய் உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிறார்கள். சிந்தனையை ஒருமைப் படுத்தும் பயிற்சி. செய்து பார்த்தால்தானே பலன் தெரியும்? பயிற்சிதானே ஸ்திரப்படுத்தும்.

வசுமதி கொல்லைப்புறம் புதிய உறவுகளுடனும், தோட்ட மரங்களுடனும் உறவாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. எங்கு சென்றாலும் சட்டென்று கலந்து விடுகிறாள். தலைமை ஆசிரியையாய் இருப்பவள் அப்படி இருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை என்றுதான் தோன்றியது. பூந்தோட்டமான பள்ளியில் பூத்திருக்கும் எத்தனை ஆயிரம் மாணவ மாணவிகளோடு பழகிக் கலந்திருப்பாள்? அந்த சந்தோஷத்திற்கு ஈடு உண்டா?  இன்னும் மூன்று வருஷம் சர்வீஸ் உள்ளது அவளுக்கு. அதற்குள் அடுத்த ப்ரமோஷனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள். திறமையான பெண்மணி. ஆனால் தன் பெண் விஷயத்தில் கவனம் தப்பி விட்டாள். கதி கலங்கி விட்டாள். எல்லாம் காலத்தின் கோலம்.

ஓய்வு பெறுவதற்குள் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணி விட வேண்டும் என்று ஆன மட்டும் முயற்சி செய்தார் நாகநாதன். நடக்கவில்லை. எல்லாருக்குமா அந்த யோகம் கிடைக்கிறது. வந்த ஓய்வூதியப் பலன்களை வைத்துப் பெண் கல்யாணத்தைப் பண்ணிவிட்டு ஓட்டாண்டி ஆனவர்களெல்லாம் எத்தனை பேர்? கொஞ்சமான ஒற்றைப் பென்ஷன் காசை வைத்துக் கொண்டு, வீட்டுச் செலவு, வைத்தியச் செலவு என்று பற்றாக்குறையாகவேதான் பலரின் வாழ்க்கையும் அமைந்திருந்ததைப் பார்த்து வேதனைப் பட்டிருக்கிறார் நாகநாதன். தான் பிழைக்க மாட்டோம் என்று தெரிந்து, எதற்கு அநாவசிய வைத்தியச் செலவு என்று வெறுத்து, ராவோடு ராவாகத் தூக்க மாத்திரை அடித்துவிட்டு, நீட்டி நிமிர்ந்து விட்ட ஓய்வு பெற்ற ஊழியரையெல்லாம் கண்டிருக்கிறார். இருக்கும் சேமிப்பும், ஓய்வுகாலப் பணப்பலனும் ரெண்டு பெண்களின் கல்யாணத்திற்கு என்று மனைவிக்குக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு, போய் வருகிறேன் என்று முடித்திருந்த அந்தக் கடிதம் கண் முன்னே இப்பொழுதும் நிழலாடிக் கொண்டிருக்கிறது இவருக்கு. எப்படிப்பட்ட தியாகம்? என்னவொரு தீர்க்கமான கடமையுணர்வு?

இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம், வேண்டாம் என்று ஏன் சொல்கிறாள் என்கிற யோசனை போகாமல் நாட்கள் நகர்ந்து விட கடைசியாய்த்தான் தெரிந்தது “காஞ்சனாவின் காதல்“. எந்த வீட்டிலும் அப்படி உடனே சரி என்று ஒத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஆனாலும் பெண்ணின் விருப்பத்தை மீறி எப்படிச் செய்வது? என்று அதிர்ந்தார் நாகநாதன். ஏதேனும் தற்கொலை, அது இது என்று போய்விட்டதென்றால்? அதையெல்லாம் எதிர்நோக்க இவருக்கு தைரியமில்லை. காலத்திற்கும் துக்கமாகி விடுமே? மடியில் படுத்துக் குலுங்கிக் குலுங்கி அழும் பெண்ணைக் கண்டு மனம் சட்டென்று இரங்கிப் போனது. தலையைத் தடவிக் கொடுத்துக் கொண்டே அனுபூதியாகிப் போனார்.

 ஆயிற்று. சண்டை சச்சரவில்லாமல் அமைதியாய் நடந்தேறிவிட்டது பெண்ணின் கல்யாணம். நினைத்த அளவு சேமிப்புகள் கரையவில்லை. முடிஞ்சதைச் செய்யுங்க…எங்க பையன் சந்தோஷம்தான் முக்கியம் எங்களுக்கு என்றார்கள். இங்கே என்ன நாங்க வேறே மாதிரியா அலையுறோம்…என்று நினைத்துக் கொண்டார் இவர். ஜாதி வித்தியாசம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இவருக்குக் கொஞ்சம் தயக்கம் இருந்ததுதான். ….என்ன சொல்வாகளோ…ஏது நடக்குமோ என்று பயந்தது என்னவோ உண்மைதான். அங்க ஏற்கனவே இது மாதிரி ஏதேனும் இருக்குமோ? என்றும் சந்தேகித்தார்.

அந்த விபரமெல்லாம் இனி மெல்ல மெல்லத்தானே அறிய முடியும். வாய்விட்டுக் கேட்க முடியாத, நாமாய் உணர வேண்டிய பின் புலங்கள் என்று இந்த உலகத்தில்தான் எத்தனையோ இருக்கின்றனவே! குடும்பத்திற்குக் குடும்பம், மனிதர்களுக்கு மனிதர் திரையில்லை என்று சொல்லிவிட  முடியுமா?

            ன்ன…ரெகுலரா டி.வி. சீரியல் பார்ப்பீங்களோ? என்றார் சம்பந்தி நமச்சிவாயம். முணுக்கென்று தன் நினைவுக்கு வந்தார். எப்போது தான் பால்கனியிலிருந்து வெளியேறினோம் என்பதே அவருக்கு மாயமாய் இருந்தது. நினைவுகள் போட்டு அப்படி அமுக்குகிறது அவரை. தன்னிடம் உள்ள பெரிய பலவீனமே அதுதான் என்று தோன்றியது.

            முந்தி பார்த்துக்கிட்டிருந்தேன். வேறே பொழுதுபோக்கு? இப்போ விடுபட்டுப் போச்சு… என்றார். அந்த விடுபட்டுப் போச்சில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. அது அவர்களுக்குப் புரியுமோ என்னவோ? புரிந்தால்தான் என்னவாகிவிடப் போகிறது இனிமேல்? ஆனது ஆனதுதான்.

            நிச்சலனமில்லாத, நிம்மதியான அந்த நாட்கள் பறிபோய்விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்பவர் நாகநாதன்.  வருவாய்க்கேற்ற சிக்கனமாக செலவு, அளவான அக்கறையான சேமிப்பு…கடன் வாங்காமல் கழியும் வாழ் நாட்கள் என்று இருப்பவர்.

 மனிதன் நிம்மதியைத் தேடிக் கொள்வது அவன் கையில்தானே இருக்கிறது? இப்படி இப்படித்தான் இருந்தாக வேண்டும் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவன், தனக்கு மட்டுமா அந்த இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்கிறான்? தன் மூலம் தன் சார்பான குடும்பத்திற்கும்தானே கற்றுக் கொடுக்கிறான்? கூட இருப்பவர்களுக்கும்தானே உணர்த்துகிறான்.   அவனின் அடக்கமான, ஒழுங்கான இருப்பைப் பார்த்து, அதையே பாடமாகக் கொண்டு அந்தக் குடும்பத்தின் இருப்பும், நடப்பும் நடந்தேறுகின்றன.  ஒரு குடும்பம், வழி நடப்பது தலைவனின் இருப்பை வைத்துத்தானே?

அப்படித்தான் நிம்மதியாக ஓடிக் கொண்டிருந்த அவர் வாழ்வில் அந்த நிம்மதியைக் குலைக்கும் வண்ணம்தான் மகளின் திருமணம் நடந்தது. மனிதனின் துன்பங்களுக்கெல்லாம் காரணம் ஆசை. ஆசைகளைத் துறந்தவன் நிம்மதியாக இருக்க முடியும். தனக்குத்தானே ஒருவன் அப்படியிருந்தாலும், தன்னைச் சுற்றியுள்ளவர்களும் அப்படியே இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தான் நம்புபவர்கள் எல்லோரும், தன் நம்பிக்கைப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா என்ன? அதே சமயம் பெற்ற மகளின் ஆசை நிராசையாக விட முடியுமா? இதுவே பையனாக இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்? கத்திக் குடியைக் கெடுத்திருக்க மாட்டோமா? பையனுக்கு ஒரு விதி, பெண்ணிற்கு ஒரு விதியா? அதென்ன பெண் என்றால் மட்டும் ஒரு மென்மையான அணுகுமுறை? பெற்றோர்களே அப்படித்தான் இருப்பார்களோ? தன் மனைவி அப்படியில்லையே? ஆர்ப்பாட்டம் செய்தாளே? ஆனால் கடைசியில் அடங்கித்தானே போனாள்?

            ஒற்றுமையான நினைப்பு இன்னும் கூடி வரவில்லையே! ஒற்றுமை என்ற வார்த்தை அத்தனை பொருந்தாதுதான். அந்நியோன்யம்…அதுதான் சரி. அது வரக் கொஞ்ச நாள் ஆகும். பிறகுதான் அது சாத்தியப்படும். முதல் முதலாக அப்போதுதான் அந்த வீட்டிற்கு வந்திருக்கிறார். அந்த வீட்டிற்கென்ன, அந்த ஊருக்கே என்பதுதான் சரி. 

 பேருந்தில் அந்த வழி போக நேர்ந்த போதெல்லாம் கோயில் கோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டதோடு சரி. வானுயர்ந்த கோபுரமாக இருக்கிறதே…பிரபலமான கோயில் போலிருக்கிறது….சுற்று மதில் சுவர்கள் பிரம்மாண்டமாய் இருந்தன. எவனும் அதில் கால் வைத்து ஏறவே முடியாது.  கோயிலின் பழமை தெரிந்தது. உண்மையே உயர்ந்து நிற்கும் நிமிர்ந்த கோபுரங்கள. எத்தனை காலப் பழம் பெருமை?

            மனிதர்களும் இந்தப் பழமைக்குப் பழகிப் போனவர்கள்தான். பழமையில்தான் சீர்மை ஆழப் பதிந்திருக்கிறது. வந்த இடம் நல்ல இடம் என்றே நினைப்போமே…! எதற்கு அதையும் இதையும் அநாவசியமாய் நினைத்து அலட்டிக் கொண்டு மனதைக் குழப்பிப் கொள்ள வேண்டும்?

 நல்லதே நினைப்போம்…நல்லதே நடக்கும்… - என்று நினைத்த கணம்….வாங்க சம்பந்தி சாப்பிடுவோம்…இலை போட்டாச்சு….என்று மாசிலாமணி வந்து  அழைத்ததோடில்லாமல் அருகே நின்று தன்னைக் கைதூக்கி விட்டு எழுப்பியது இவரைச் சிலிர்க்க வைத்தது.

மனைப்பலகை போட்டு அதன் எதிரே  அகண்ட வாழை இலை விரித்து, தண்ணீர் தெளித்துச் சுத்தமாய்ப் பளபளவென்றிருந்த காட்சி இவர் மனதை திருப்திப் படுத்தியது.   சுத்தம் சோறு போடும்…. பதம் மனதில் ஓடியது.

என்ன பார்க்கிறீங்க….நூறு சதவிகிதம் படு சுத்தமான சைவம்தான் நம்ம வீட்ல….உங்க பெண்ணுக்காக எங்க பையன் கோரிக்கைப்படி  நாங்க எல்லாரும் விட்டுக் கொடுத்தாச்சு…..இனிமே யாருக்கும் என்னைக்காச்சும் நாக்கு இழுத்திச்சின்னா எல்லாமும் வீட்டுக் வெளிலதானேயொழிய, எங்க வீட்டு மகாலெட்சுமி வந்திருக்கிற இந்த கிரஉறத்துல சத்தியமா இல்லை….இதை நீங்க நூற்றியோரு சதவிகிதம் நம்பலாம்….

மாசிலாமணி அழுத்தம் திருத்தமாக இதைச் சொன்னபோது கூடியிருந்த எல்லோரும் திருப்தியோடு ஆமாம் என்று ஆமோதித்துத் தலையாட்ட,  நாகநாதனுக்கும், வசுமதிக்கும் மனசு நிறைந்து வழிந்தது அப்போது.

                                                ------------------------------------

     

           

 

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...