30 செப்டம்பர் 2024

 

சிறுகதை                    தாய் வீடு மாத இதழ் (அக்டோபர் 2024)  பிரசுரம்

“மாற்றம் ஒன்றே மாறாதது …!”






ந்த மாதிரி ஒரு கேள்வியை எதிர்பார்த்துத்தான் இருந்தார் ஈஸ்வரன். அப்படியெல்லாம் கேள்வியும், பேச்சும் வரும் என்று தெரிந்துதானே அங்கே போனார். வேறு வழியும் இல்லை. அன்றாடம் ரயிலேறிப் போய்விட்டு இரவாவது வீடு திரும்ப முடிகிறதே என்கிற சமாதானம்தான். மனதை சமன் செய்து கொண்டு தயாராய்த்தான் இருந்தார்.

அந்த ரயிலின் எட்டுப் பெட்டிகளிலும் நிறைந்து வழிந்து ஊழியர்கள் பயணம் செய்கிறார்கள். அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் என்று பல்வேறு தரப்பினரும் அன்றாடம் போய் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆளோடு ஆளாகச் சேர்ந்து  தானும் போய் வருவதில் என்ன சிரமம்? தனக்கு மட்டும் அப்படியென்ன கஷ்டம் வந்தது? அவர்களெல்லாம் மனிதர்களில்லையா? அறிந்தோ அறியாமலோ உள்ளூரே அவருக்கு வாய்த்து விட்டது. காலமும் ஓடி விட்டது. அவரென்ன செய்வார்? யாரையும் தொந்தரவு செய்துவிட்டு, தூக்கி விட்டு விட்டு வந்து குந்தவில்லையே? ஆனாலும் பழி அவருக்குத்தான்.

அவரு உள்ளூர விட்டு நகர மாட்டாருங்க…இந்தக் காம்பவுன்ட்லயே நாலு ஆபீஸ் இருக்கு…இதுக்குள்ளயேதான் சுத்துவாரு…இல்லன்னா டவுனுக்குள்ள… ….சிட்டி பஸ் ஏறி போய்த் திரும்புறாங்களே…அதுபோலக் கூடப் போக மாட்டாரு…பத்திருபது கி.மீ.கூடப் போய் வரமாட்டாரு அய்யா…இங்கயே குப்ப கொட்டணும் அவருக்கு….மத்தவுகதான் அலையணும்…அவரு டிபார்ட்மென்டுக்கு செல்லப் பிள்ளை….அப்டித்தான சில பேரை வச்சிருக்காங்க…? அவுருதான் திறமையான வேலைக்காரராம்…நாமெல்லாம் சொங்கியாம்…

எவ்வளவோ வார்த்தைகளைக் கேட்டாயிற்று. நேரடியாகவும், மறைமுகமாகவும்….அந்த எல்லோருக்கும் இப்போது நிச்சயம் சந்தோஷமாகத்தான் இருக்கும். மனம் ஆறுதல் கொள்ளும். யப்பாடீ…தொலைஞ்சான்யா….!! இனி எப்டி உள்ளூருக்குள்ள நுழையறான் பார்ப்போம்…எங்கடா இந்தப் ப்ரமோஷன்லயும் உள்ளூர்லயே வந்து உட்கார்ந்துடுவானோன்னு நினைச்சது…நல்லவேளை…சாமர்த்தியம் பலிக்கலை…எல்லாக் காலத்துலயும் எல்லாமும் பலிதமாகிடுமா? ஒருவாட்டிதான் வெளியூர் போய்ப் பார்க்கட்டுமே?

எல்லோருடைய ஆசீர்வாதத்தோடும் உள்ளூரை விட்டுக் கிளம்பியாயிற்று. சந்தோஷமாப் போயிட்டு வாங்க…நீங்களும் வெளியூர் பார்க்கணும்ல…!!

கவனமாப் போயிட்டு வாங்க சார்…ரயில் ஏறி…இறங்கி…உடம்பப் பார்த்துக்குங்க…முடிலன்னா அங்கயே ஒரு ரூம் போட்டுத் தங்கிடுங்க…வாரா வாரம் வெள்ளிக் கிழமை ராத்திரி வீடு வந்தாப் போதும்…எதுக்கு வெட்டிக்கு அலையுறீங்க…

ரொம்பவும் வருத்தமான பாவத்தோடுதான் சொன்னார்கள். உள்ளூர எத்தனை மகிழ்ச்சி என்பது இவருக்குத்தானே தெரியும்! அங்கயே ரூம் போட்டுத் தங்கணுமாம்….காசு எவன் கொடுப்பான்…இவங்கப்பனா…? ரூம் போடணும்…அப்புறம் ஓட்டல்ல சாப்பிடணும்…அது உடம்புக்கு ஒத்துக்கணும்…

அங்க உங்களுக்கு நல்லா பைசா பார்க்கலாம் சார்…செழிப்பா இருக்கும்.. நீங்க வேணாம்னாலும் வந்து திணிப்பாங்க…நீங்க வாங்க மாட்டீங்க…அது வேறே…ஆனாலும் விட மாட்டாங்க…தெம்பாத் திரியலாம்….அங்க ஆபீஸ் குப்பையாக் கிடக்குன்னுதானே உங்களைப் போட்டது…நீங்க போய்த்தான் சரி பண்ணனும்…சரியான ஆளாப் பார்த்துத்தான் தள்ளி விடுறாங்க….இனி உங்க ராஜ்யம்தான்…குப்பையைக் கூட்டலாம். அள்ளவும் செய்யலாம்….

இருவேறு அர்த்தங்களில் புகழ்ந்தார்கள். வஞ்சப் புகழ்ச்சி. அடேங்கப்பா….இவர்களின் சிலேடைகளுக்குத் தனிப் புத்தகமே போடலாம். என்னவோ சொல்லி விட்டுப் போகட்டும். இந்த மட்டுக்கும் போய் வருவதுபோலான தூரத்தில் கிடைத்ததே என்று இவருக்கு சமாதானமாய் இருந்தது.

மனிதர்கள் என்றுமே சராசரியானவர்கள்தான். சந்தர்ப்பத்திற்கேற்றாற்போல்தான் பேசுவார்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்றுதான் பேசுவார்கள். எல்லோருக்கும் இரண்டு முகங்கள் உண்டுதான். அதில் ஒன்று வெளியில் சொல்ல முடியாதது. பழகும்போது நண்பர்கள்தான். ஆனால் பேசும்போது? அதாவது ஆளில்லாமல் பேசுகையில்!

என்னவோ இவர்களாய் முயற்சி செய்து அங்கே மாறுதல் வாங்கிக் கொடுத்ததுபோல் அளந்து கொள்கிறார்கள். இவரல்லவோ போய்ச் சொன்னார். கேட்டுக் கொண்டார். போயிட்டு வர்ற மாதிரியாவது போட்டுக் கொடுங்க…ரொம்ப தூரத்துக்குப் போட்டுடாதீங்க…ஒய்ஃப் தனியா இருக்காங்க…துணைக்கு யாருமில்லே…! இவ்வளவுதான் சொன்னார். அதுநாள் வரையிலான அவரது அடையாளம் அவரைக் காப்பாற்றியது என்று நினைத்துக் கொண்டார். மறுபேச்சிலாமல் ஆர்டர் கைக்குக் கிடைத்தது.

நேர்ல போயும் உள்ளூர் கிடைக்கலியா சார்…? யாரையாவது தூக்கி விட்டுட்டு வந்து உட்காருவீங்கன்னு எதிர்பார்த்தோம்…! அது வேணாம்னு நினைச்சிட்டீங்கபோல….! ரிடையர்ட்மென்ட் நெருங்கையில் எதுக்கு இந்தப் பாவத்தச் சுமந்திட்டுன்னு விட்டுட்டீங்களோ?  -  என்ன குரூரம்…?

முப்பது வருட சர்வீசில் முதல் ஏழு ஆண்டுகள் வெளியூரில் இருந்தாயிற்று. அது பேச்சலர் காலம்.  பிறகு உள்ளூர் வந்து மீதி இருபது ஆண்டுகள். இப்போது ஒரு பதவி உயர்வு இன்னும் ஆறரை ஆண்டுகள் மீதமுள்ளது. அதற்குள் இன்னும்  ஒரு பதவி உயர்வு வராதா? வரலாம்…

வெளியூர் வந்தாலும் வந்தார். பிறகு உள்ளூர் ஆபீசை எட்டியே பார்க்கவில்லை. எதற்கு? என்கிற விலகல் வந்து விட்டது. இப்பத்தான போனாரு? அதுக்குள்ளயும் எதுக்கு வந்து நிக்கிறாரு? டிரான்ஸ்பர் வேணுமாமா? போகச் சொல்லுங்க அந்தாளை…குத்துக்கல் மாதிரி இத்தன வருஷம் கிடந்தது பத்தாதா? பழைய வாசனை இன்னும் விடலையோ?

அவர்கள் சொல்வதை இவரே நினைத்துக் கொண்டார். மலிவான சிந்தனைகளில்தான் மனிதர்கள் வலம் வருவார்கள். அதனால்தான் அரசியல்வாதிகளின் பொய்கள் இங்கே எடுபடுகின்றன. திரித்து மறைத்துச் சொல்வதெல்லாம் இங்கே நன்றாய் விலைபோகும். நல்லவைகள் காற்றோடு போய் விடும். அறிவுக்கு எட்டாது. நிலைக்காது.

திரே அமர்ந்திருந்த மயில்வாகனத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கு சங்கடப்பட்டு ஏதோ யோசனையில் தலை குனிந்திருந்தார் ஈஸ்வரன்.

என்னா சார்…உடம்பு சரியில்லையா?.....ரொம்ப அமைதியாயிட்டீங்க…?

அதெல்லாம் ஒண்ணுமில்லே…ஏதோ யோசனை….என்றார் இவர்.

பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன் சார்…பத்திரிகை கொடுத்து உங்களை அழைச்சிட்டுப் போகலாம்னு வந்தேன்….-சொல்லியவாறே அழைப்பிதழை நீட்டினார் மயில்வாகனம். தேடி வந்து கொடுக்கும் விஸ்வாசம். வேலை கற்றுக் கொடுத்ததே அவர்தானே…அந்த நன்றி…!

கட்டாயம் வந்திருங்க சார்….ஞாயிற்றுக்கிழமை பார்த்துத்தான் வச்சிருக்கேன்…அன்னைக்கு ரிசப்ஷன்…மறுநாள் முகூர்த்தம்….ரெண்டு நாளுக்கும் நீங்க வரணும்…வந்து பொண்ணை ஆசீர்வாதம் பண்ணனும்…

அவசியம் வர்றேன்….ஆனா திங்கட்கிழமை வர முடியாது. ரிசப்ஷனுக்குக் கண்டிப்பா வந்திடுறேன்…திங்கள் லீவு போட முடியாது. ஆபீசே நான்தான் அங்கே. இல்லன்னா நாறிப் போகும்…அதனால…

தெரியும் சார்…கேள்விப்பட்டேன் எல்லாமும்…நீங்க ஆளே ரொம்ப மாறிட்டீங்களாமே…! அவரா இப்படிங்கிறாங்க… இங்க? நான்லாம் நம்பல சார்…நீங்களாவது மாறுவதாவது? ஆனா பாருங்க உங்களப்பத்திதான் ஒரே பேச்சு….நானே ஆடிப் போனேன்…விடாமச் சொல்லச் சொல்ல நம்பும்படியா ஆயிடிச்சு….நீங்களா சார் இப்டி…?-கையை ஆதுரமாய்ப் பிடித்துக் கொண்டார்.

சட்டென்று விடுவித்துக் கொண்ட இவர்…கேட்டார்.

என்ன சொல்றீங்க…? அப்டீன்னா…? – சற்றுக் கோபமாகவே குரல். எதுவோ சொல்ல எதையோ இழுக்கிறாரே இவர்? பத்திரிகை வச்சமா  போனமான்னு இல்லாம…?

காசுப் பொழக்கம் ரொம்ப அதிகம்னு சொன்னாங்க….நீங்கள்லாம் இப்டி ஆவீங்கன்னு நாங்கள்லாம் நினைச்சுக் கூடப் பார்க்கல சார்…குட்டைல விழுந்த மட்டை நாறித்தான் போகும்ங்கிற மாதிரி உங்களக் கொண்டு அங்க போட…போகைலயே நானெல்லாம் நினைச்சேன்…சாரு அங்க போறாரே…என்ன கதியாகப் போறாரோன்னு…!அது சரியாத்தான் போச்சு…!

என்ன தைரியம்? வீடு தேடி வந்து தன் கண் முன்னே…!  இதைக் கேட்டு விடுவதில் அப்படியொரு குரூர ஆறுதல்…அதுதானே?

நீங்க என்ன சொல்றீங்க மயில்வாகனம்…? வெளிப்படையாச் சொல்லுங்க…இப்டி மழுப்பிப் பேசாதீங்க…கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்த இடத்துல…எதுக்கு இதெல்லாம்…?

கரெக்ட் சார்…நீங்க சொல்றது சரிதான்.   அழைச்சமா…கிளம்பினமான்னு இல்லாம…ஸாரி சார்….எப்டியோ பேச்சு வந்திடுச்சி… மன்னிச்சிடுங்க….எல்லாரும் பேசிக்கிறாங்களேன்னு வயித்தெறிச்சல்ல சொல்லிப்புட்டேன்…நம்ப சாரா இப்டின்னு நினைச்சு அந்த வருத்தம்தான்…நான் வர்றேன் சார்…..

கேள்விப்படுறதெல்லாம் உண்மையாயிடாது…புரியுதா? கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்யுன்னு உங்களுக்குத் தெரியாது? தெரியாதவங்களுக்கு நீங்கதான் சொல்லணும்…சாரு இப்படிச் சொன்னாருன்னு…புரியுதா? போய்ட்டு வாங்க…

நா வர்றன் சார்….விசேடத்துக்குக் கட்டாயம் வந்திடுங்க…எதுவும் மனசுல வச்சுக்க வாணாம்…மாமியையும் கூட்டிட்டு வந்திருங்க…

மயில்வாகனம் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரன். தெருத் திரும்புகையில் திரும்பிப் பார்த்துக் கையசைத்தார் அவர். பதிலுக்கு அசைக்க இவருக்குக் கையெழவில்லை. இவன்லாம் ஒரு ஆளு?

யிலிலிருந்து இறங்கி ஆபீஸ் வந்தடைந்தபோது இவருக்கு வியர்த்திருந்தது. காற்றாடியைச் சுற்றவிட்டு  கண்ணை மூடி அமர்ந்திருந்தார். முதல் நாள் மயில்வாகனத்தோடு நடந்த பேச்சு இன்னும் அவர் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதற்குள் மாவட்டம் பூராவுமா பரவி விட்டது? வதந்தி…தந்தியை விட வேகம்தான்…மக்களுக்கு அதில் ஒரு கொண்டாட்டம்…

ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள். மணியைப் பார்த்தார். வெளியூரான இவர் சரியான நேரத்துக்கு வந்து விடுகிறார். உள்ளூர்காரர்களான பணியாளர்கள் தாமதமாக வருகிறார்கள். ஆடி அசைந்து பத்தரை மணியைப் போலத்தான் ஆபீஸ் நிறைகிறது. தான் வந்து அமர்ந்திருப்பதுபற்றி ஒரு பதட்டமேயில்லை. தனக்குப் பயப்பட வேண்டாம். நேரத்துக்கு பயம் வேண்டாமா?

இவரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டா்ா. சத்தம் போட்டும், கோபப்பட்டுப் பேசியும், இணக்கமாய்ச் சொல்லியும்…..ஊகும்….யாரும் அசைவதாய் இல்லை. இங்கெல்லாம் அப்டித்தான் சார்…நீங்க பெரியாபீசையே மனசுல வச்சிட்டுப் பேசறீங்க…

பணியாளர்கள் நேரத்துக்கு வருவதையே தன்னால் சரி செய்ய முடியவில்லை. மற்றவற்றையெல்லாம் என்னென்பது? எதையும் மாற்றுவது போலவா அங்கு நிலைமை இருக்கிறது? எல்லாம் ஊறித் திளைத்த கடல் நண்டுகள்! குப்பையைக் கூட்டுவதா, குப்பையில் மூழ்குவதா?

சார்…ஒரு வருஷத்துக்கு என்னை எதுவும் கேட்கக் கூடாது. பிறகு பாருங்க…மேலதிகாரியிடம் உரிமையோடு சவால் விட்டதுபோல்தான் சொல்லி வந்தார்.  ஆனால் இங்கு வந்து பார்த்தால்? எந்த எம்டனும் ஜெயிக்க முடியாது போலிருக்கிறதே…?

சார்…உங்ககிட்டே நாங்கள்லாம் ஒரு விஷயம் பேசணும்…

காலை ஆபீஸ் வந்ததும் வராததுமாக அத்தனை பேரும் தன்னைச் சுற்றி வந்து நிற்பதைப் பார்த்து என்னவோ ஏதோ என்று சற்றே கலவரமடைந்தார் ஈஸ்வரன்.

தான் கண்டிப்பாக இருப்பதை ஒன்றுகூடி எதிர்க்கிறார்களோ? புதிதாக வந்திருப்பவரிடம் முதலிலேயே சொல்லி விடுவது நல்லது என்று  முடிவு செய்து வந்து ஆஜராகியிருக்கிறார்களோ?

கண்டிப்பான ஆள் என்பதுதான் அடையாளமாகியிருக்கிறதேயொழிய எதுவும் மாறவில்லையே? மாற்றவும் இல்லையே?  கடலில் கரைந்த பெருங்காயமா நான்? இங்கு வந்து ஜோதியில் ஐக்கியமாகிவிட்டேனா? தன்னால் எந்த மாற்றம்தான் நிகழ்ந்திருக்கிறது இங்கே? இன்னும் முழு நடப்பியலையும் ஸ்டடி பண்ணவேயில்லையே? பலதும் பூடகமாகவே இருக்கிறதே? தப்பு நடக்கும் இடங்களெல்லாம் அப்படித்தான் ரகசியமாகச் செயல்படுமோ? எவனும் மனம்விட்டுப் பேசமாட்டேனென்கிறானே?

பியூன் கூட நேரத்துக்கு வருவதில்லை. சாயங்காலம் ஸ்டாஃப் எல்லாரும் போன பிறகு வாட்ச்மேனுக்குக் காத்திருந்து அவன் வந்த பிறகல்லவா, தான் கிளம்பிப் போக வேண்டியிருக்கிறது? சொல்லிச் சொல்லி  அலுத்ததுதான் மிச்சம்.  நாலு நாளைக்குப் புலம்புவாரு…பிறகு புரிஞ்சிக்கிடுவாரு…!

மார்ச் பொறந்திடுச்சு சார்…இந்த மாதம் பூராவும் டைட்டா இருக்கும் வேலை. ராத்திரி கூட உட்கார்ந்து செய்து முடிக்க வேண்டியிருக்கும்…அது எங்களுக்குப் பழகிப் போனதுதான். ஃபுல் நைட்டும் உட்கார்ந்திடுவோம். நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் செய்து அன்யூவல் டார்கெட்டை அச்சீவ் பண்ணிடுவோம். பாஸ்கிட்டே சொல்லிடுங்க…பில்லு போடுறது…டிரஷரிக்கு அனுப்புறது…பாஸ் பண்றது…செக் வாங்குறது…எல்லாமும் எங்க பொறுப்பு…எதுவும் மிஸ் ஆகாது…டிலேயும் ஆகாது…ஆனா…..

ஆனா…? என்ன ஆனா…சொல்லுங்க…ஏன் நிறுத்திட்டீங்க…? எதைச் சொல்ல வருகிறார்கள்? மொத்தமாய் வந்து கெரோ பண்ணுகிறார்களோ?

எங்களுக்கு வர்ற கமிஷன்  பர்சன்டேஜ் கண்டிப்பா வந்திரணும்…அதுக்கு நீங்கதான் பொறுப்பு…

அப்டீன்னா…?

என்ன சார்…தெரியாதமாதிரிக் கேட்கறீங்க…? வருஷம் பொறந்ததும் இங்க வந்து ஜாய்ன் பண்ணினீங்க…நீங்க வந்து ரெண்டு மாசத்துல மார்ச் வந்திடுச்சு…இயர் என்டிங் திருவிழாதான் உங்களுக்குத் தெரியுமில்ல சார்…சொல்லி அனுப்பியிருப்பாங்களே…சப்-டிவிஷன் பூராவும் வழக்கமா உள்ள கத தானசார்….புதுசா என்ன?

அதுதான் தானா உங்களுக்கு வந்து சேர்ந்திடும்ல…? நானென்ன அதுக்கு ஜவாப்தாரி…? புரியல….? நீங்க வேலை செய்றீங்க…வாங்கிக்கிறீங்க…அதானே?

சார் இப்பத்தான் முதல் முறையா சப் டிவிஷன் வர்றீங்க போல….இத்தன வருஷமா பெரிய ஆபீஸ்லயே இருந்து பழகிட்டீங்க…அங்க இதெல்லம் பார்த்திருக்க மாட்டீங்க…நீங்க உண்டு  உங்க வேலை உண்டுன்னு…இருந்திருப்பீங்க…

சரி…அதுக்கென்ன இப்ப…? அதுக்கும் நீங்க கேட்குறதுக்கும் என்ன சம்பந்தம்? நான் எதுக்கு நீங்க சொல்ற வட்டத்துக்குள்ள வரணும்னு யோசிக்கிறேன்…?

என்ன சார்….இந்த ஆபீஸ் சூப்பிரன்ட் நீங்க…உங்ககிட்டதான் ஒவ்வொரு ஸ்கீமுக்குமான பாஸ் பண்ணின பில்களோட செக் வந்து சேரும். அந்தந்தக் கான்ட்ராக்டர்களுக்கு நீங்கதான் டிஸ்டிரிபியூட் பண்ணப் போறீங்க…அவ்வளவு பெரிய பொறுப்புல இருக்கிற நீங்க…எங்க சம்பந்தப்பட்ட சின்ன விஷயத்தை தெரியாத மாதிரிக் கேட்டா என்ன சார் அர்த்தம்? உண்மைலயே உங்களுக்குத் தெரியாதா? இல்ல நமக்கெதுக்கடா வம்புன்னு ஒதுங்கப் பார்க்கிறீங்களா? – அவர்களுக்குத் தலைமை போல் அறியப்பட்ட துரைராசன் இப்படிக் கேட்டதும்…துணுக்குற்றார் ஈஸ்வரன்.

சீனியர் மோஸ்ட் அசிஸ்டன்ட்….தைரியமாய்க் கேட்கிறார்…நாளைக்கே நான் உங்க சீட்டுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல சார்…! சொல்லாமல் சொல்கிறாரோ? யார் கண்டது? வந்தாலும் வரலாம். காலியிடத்தைப் பிடிப்பதை விட இருக்கும் ஒருவனைத் தூக்கி எறிவதுதான் இங்கே கைவந்த கலை. அதில் பெருமையும் கூட. அப்பத்தானே அடுத்தவன் தன்னைத் தொடமாட்டான் என்கிற திண்ணக்கம். தான் வந்தது காலியிடம் என்று சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறாரோ?

சர்க்கிள் ஆபீஸ்ல இருந்திருக்கீங்க…சப்டிவிஷன் நடைமுறையெல்லாம் தெரியாதுன்னா எப்டி சார்…? அங்கேயிருந்து நீங்க வர்றதை சந்தோஷமா நாங்க எதிர்நோக்கினோம்…நீங்க நழுவப் பார்க்கறீங்க…! நீங்கதான் எங்களுக்குப் பாதுகாப்பு…! உங்கள வச்சுத்தான் நாங்க…

அடேயப்பா…கொக்கியைப் பலமாய்த்தான் போடுகிறார்கள். நாளைக்கு ஏதேனும் வில்லங்கம் என்றால் எல்லாம் உங்கள் தலையில்தான் என்று மறைபொருளாய் உணர்த்துகிறார்கள். மீதிக் காலத்தைக் கழிப்பதுதான் இனி பிரம்மப் பிரயத்தனம் போலும்…!

வெறுமே அன்றாட வேலைகளைப் பார்ப்போம், கிளம்புவோம்…எதிலும் தலையைக் கொடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பார்த்தால் விட மாட்டார்கள் போலிருக்கிறதே…? எங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்றல்லவா வந்து நிற்கிறார்கள்? தரகு வேலை பார்க்கச் சொல்கிறார்களோ? மாமா?

இதுநாள் வரை வண்டியை ஓட்டியது பெரிதில்லை. இனி மீதிக் காலத்தைக் கவனமாகக் கழிப்பதுதான் துர்லபம் …! உஷாரானார் ஈஸ்வரன்.

இங்க என்ன வழக்கமோ அது,  தானா நடக்குமுல்லங்க…அதுக்கு நான் என்ன பொறுப்பு? அதெல்லாம் கூடாதுன்னு நான் நிறுத்தக் கிளம்பினேன்னா நீங்க என்கிட்டே வந்து நிற்கணும்…உங்களுக்கு வழக்கமா உள்ளது வரத்தான போகுது…என்னை விட்ருங்க…அவ்வளவுதானே?

கொஞ்ச நேரம் எந்த சலசலப்பும் இல்லாமல் அமைதி தவழுவதைக் கண்ணுற்றார் ஈஸ்வரன். அவருக்கு அந்த நடைமுறைகளே பிடிக்காமலிருந்தது. சரியாக வந்து சிக்கிக் கொண்டோம் என்று நினைக்க ஆரம்பித்திருந்தார். வசமாக எதிலேனும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதிலேயே அவர் கவனம் பதிந்திருந்தது.

சார்…மன்னிக்கணும்….கொஞ்சம் உட்கார்ந்து பேசலா மா….?

என்ன துரைராசன்…இப்டியெல்லாம் கேட்கறீங்க…? உங்க யாரையும் என்னைக்கும் நான் நிற்க வச்சுப் பேசினதில்லையே? என் எதிரே வந்ததும் முதல்ல உட்காருங்கன்னுதானே சொல்லுவேன்…

துரைராசன் உட்கார்ந்தார். மற்றவர்கள் அவரைச் சுற்றி நெருங்கி வந்தார்கள்.  இது ஒரு தனிக் கும்பல். தொழில் நுட்பம் என்பது தனி. ஆபீஸர் குழு என்பது சிறப்புத் தனி. அது மாவட்டம் வளைத்தது. பெரிய இடம்…

சார்…தப்பா நினைச்சிக்கிடாதீங்க…கொஞ்சம் இந்த லிஸ்டை நீங்க பார்க்கணும்….இதான் இங்க உள்ள நடைமுறை. இத நீங்க ஓகே பண்ணிட்டீங்கன்னா நாங்கபாட்டுக்கு வேலையைப் பார்க்கப் போயிடுவோம். நீங்க எதுவும் சொல்லணும்னோ, கேட்கணும்னோ வச்சிக்க மாட்டோம். எல்லாம் தானா, பம்பரமா நடக்கும். எங்கள நம்பி நீங்க தைரியமா வலம் வரலாம்….என்றவாறே ஒரு சின்னத் தாளை நீட்டினார் துரைராசன்.

அதைக் கையில் வாங்கிய ஈஸ்வரன் ஒன்றின் கீழ் ஒன்றாக வரிசையாக எழுதியிருந்ததைக் கண்ணுற்றார். நிரந்தர ஆவணக் குறிப்பு போல ஒவ்வொருவர் பையிலும் இருக்குமோ? என்று நினைத்துக் கொண்டார்.

அதில் அவர் பெயரும் இருந்தது அவரை ஆச்சரியப்படுத்தியது.  அவரில் ஆரம்பித்து காவலர் வரை சென்று முடிந்திருந்தது. அந்த ஆண்டின் மொத்த ஒதுக்கீட்டுத் தொகை என்ன என்று குறிப்பிட்டு, ஒவ்வொரு தனித் தனிப் பணிக்குமான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும் குறித்து, அந்தந்தப் பணிகள் முடிந்த பிறகு அப்பணிகளை வெற்றிகரமாக முடித்த நிலையில், அதில் பங்கு பெற்ற பணியாளர்களுக்குச் சேர வேண்டிய அவரவர் பணி அளவிலான சதவீதக் கமிஷன் தொகை கணக்கிடப்பட்டு மொத்தமிடப்பட்டிருந்தது.

கில்லாடிகள்தான். மாதா மாதம் ஆய்வுக் கூட்டத்திற்கு அட்டவணை போடும் இவர்களுக்கு இதுவா தெரியாது? வெறும் பிசாத்து…!

மொத்தம் இவ்வளவா? தருவாங்களா? தர மனசு வருமா? இதென்ன அநியாயமாயிருக்கு? இத எப்படிக் கேட்கறது? என்ன பேர் சொல்லி?

இதுதான் இங்க வழக்கமா? என்று அதிராததுபோல் கேட்டார் ஈஸ்வரன்.

இந்த சப் டிவிஷன் ஆரம்பிச்சதிலிருந்து இதான் சார் வழக்கம். ஆனா பதினஞ்சு இருபது வருஷத்துக்கு முன்னாடி திட்ட ஒதுக்கீடுத் தொகை எவ்வளவு இன்னைக்கு எவ்வளவுங்கிறதை நீங்க கொஞ்சம் நினைச்சுப் பார்க்கணும்…அதப்போல் பத்து மடங்கு இருபது மடங்கு இன்னைக்கு வரவு உயர்ந்திருக்கு. நிதி ஒதுக்கீடு அதிகமாயிருக்கு.  ஆனா எங்க பாக்கெட் வரவு அதே இடத்துலதான் நிக்குது….இதுக்கெல்லாம் போராட முடியுமா சார்…மனமுவந்து செய்றது…பிரியப்பட்டுக் கொடுக்கிறது…அன்னைப்போல பல மடங்கு வேலை கூடியிருக்கு…ஆனா யாரும் கண்டுக்கிறதில்லை….இப்ப நீங்க வந்திருக்கீங்க…நீங்களாவது இந்த வேறுபாட்டை எடுத்துச் சொல்லி எங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வாங்கித் தரணும்…சர்க்கிளாபீஸ்லருந்து வந்திருக்கிறதால உங்க வார்த்தைதான் எடுபடும்…ராப்பகலா வேலை பார்த்து நாங்கள்லாம் ரொம்பக் கஷ்டப்படுறோம் சார்…அலுங்காமக் குலுங்காம பெரிசுக தட்டிட்டுப் போயிடுதுங்க…பிள்ளைங்களுக்கு ஒரு டேர்ம் ஃபீசுக்கு ஆகாது சார் இந்தத் துட்டு…!

இந்தப் பாவக் காசுலயா பையன்களைப் படிக்க வைக்கிறீங்க…? கேட்கத் தோன்றியது ஈஸ்வரனுக்கு. நாக்கை உள்ளே இழுத்துக் கொண்டார் வறுமையில் வாடுவதுபோல் பேசுகிறா்ாகள். ஊமை அழுகை அழுகிறார்கள்.

நானே ஏண்டா இங்க வந்தோம்னு நினைச்சு இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கேன்…நீங்க என்னடான்னா? எதெதுலயோ கொண்டு என்னை மாட்டிவிடப் பார்க்கிறீங்க?

நீங்கதான சார் மானேஜர்…சூப்பிரண்ட்…எல்லாமும்…உங்ககிட்டதான நாங்க சொல்ல முடியும்.சார் அப்டிச் சொல்லக் கூடாது….பல வருஷமா இருக்கிற வழக்கத்த மாத்தறதுக்கு நாம யாரு? ஊரோட ஒத்து வாழ்…அதான் நம்ம பாலிசி…எல்லாருக்கும் உள்ளது நமக்கும்….இந்த சர்க்கிள்ல மத்த சப்-டிவிஷன்லெல்லாம் என்னைக்கோ நிலமை மாறிடிச்சி…ஆனா இங்கதான் எதுவும் நடக்கலை…..பழசுலயே இழுத்திட்டிருக்கு…எங்களுக்கு சப்போர்ட் பண்ண இப்ப நீங்க இல்லேன்னா, பின்ன எப்பவும் இல்ல சார்…

கிணறு தோண்ட பூதம் கிளம்பிய நிலையாய் உணர்ந்தார் ஈஸ்வரன். எதையும் தன்னால் நிச்சயம் மாற்ற முடியப் போவதில்லை. ஆபீஸ் நிர்வாகத்தைச் சீரமைக்கலாம் என்று வந்தால் இங்கே கதை கந்தலாய்க் கிடக்கிறதே! ஒரே வழி…வேண்டுமானால் இந்த இடத்தை விட்டு அகலலாம். அதுவும் இப்போதைக்கு முடியாது. குறைந்தது ஒரு வருஷமாவது ஆக வேண்டும். மெடிக்கல் லீவு போடலாமென்றால் அடுத்து ப்ரமோஷன் எதிர்நோக்கும் நிலையில் வீட்டில் உட்கார்ந்திருந்தால் துறை நடப்பியல் எதுவும் தெரியாது போய்விடும் அபாயம் உண்டு. என்ன செய்யலாம்? ஈஸ்வரனின் மூளை வேகமாக வேலை செய்ய ஆரம்பித்த போது சட்டென்று அவருக்கு யோசனை தோன்றியது. சொன்னால் சந்தோஷப் படுவார்களா?

ஒண்ணு செய்யுங்களேன்….இந்த லிஸ்ட்ல எனக்குன்னு…அதாவது மானேஜருக்குன்னு ஒரு பங்குத் தொகை வருதுல்ல…அதை நீங்க எல்லாரும் பிரிச்சு எடுத்துக்கங்களேன்.    என்னை ஆள விட்ருங்க….எப்டி யோசனை….?-உற்சாகமாய்த்தான் கூறினார் ஈஸ்வரன். அந்தப் பாபக் காசு தனக்கு வேண்டாம்…என்பதே அவர் எண்ணமாயிருந்தது. இந்தக் கடைசி மூணு வருஷத்தில் இந்தச் சாக்கடையில் வீழ வேண்டுமா என்பதே அவர் எண்ணமாயிருந்தது. இத்தனை ஆண்டுகள் கஜகர்ண வித்தை பயின்றாயிற்று. இனிமேலா தடம் புரள வேண்டும்?

சொன்ன மறு நிமிடம் ஒருசேரக் குரல் உயர்ந்தது.

ஐயையோ…அதெல்லாம் வேண்டாம் சார்…உங்க காசு எங்களுக்கு வேண்டாம்…இன்னும் அந்தப் பாவம் வேறே சேரணுமா? என்றனர் எல்லோரும். எப்படி எல்லோரும் ஒரே மாதிரியான வார்த்தைகளில் கோரஸாய் மறுப்பைத் தெரிவிக்கிறார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது ஈஸ்வரனுக்கு.

அப்போதைக்கு என்ன தீர்வு என்கிற ரீதியில் யோசிக்க ஆரம்பித்திருந்தார். அப்போ பாவக் காசு என்று ஒப்புக் கொள்கிறார்கள்! அப்படித்தானே? ஆனால் விட முடியவில்லை. மனசில்லை. பழகிப் போச்சு…அதுதானே? கோபப்படுவதா? பரிதாபப்படுவதா? எங்கிருந்து மாற்றத்தை நிகழ்த்துவது? எவ்வழி அவ்வழி?

சரி….முயற்சி செய்றேன். நீங்க சொல்றதை பாஸ்கிட்டப் பேசிப் பார்க்கிறேன். …சந்தோஷம்தானே? சீட்ல போய் அவுங்கவுங்க வேலையைப் பாருங்க…ஆபீஸ் வேலைல எந்தத் தாமதமும் கூடாது…அதுதான் எனக்கு வேணும்…

வாங்கிக் கொடுக்கிறேன்னு சொல்லுங்க சார்…நாங்க எல்லாரும் எப்பவும் உங்க பக்கம்தான் நிற்போம்…அதுல உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம்….கன் மாதிரி வச்சிருப்போம் அவுங்கவுங்க சீட் வேலயை…யாரும் எப்பவும் வந்து இன்ஸ்பெக்ட் பண்ணிக்கலாம்…எந்த நிமிஷமும் ஆடிட் வரலாம்….அரைநாள்ல தயாராயிடுவோம்….உங்க பேருக்கு எந்த பங்கமும் வராது…அதுக்கு நாங்க கியாரண்டி…..

அப்படீன்னா நான் சொல்றதை நீங்களும் கேட்டுத்தான் ஆகணும்…! என் பங்குத் துட்டை நீங்க எல்லாரும் பிரிச்சு எடுத்துக்குங்க…எனக்கு வேண்டாம்…அதுக்கு சம்மதம்னாத்தான் என்னால நீங்க சொல்றதைச் செய்ய முடியும்…என்ன சொல்றீங்க…? என் பேரே இந்தப் பேச்சுல அடிபடக் கூடாது…ஓகேயா…?

பதில் சொல்லாமல் அகன்றனர் எல்லோரும்.  நகரும் அவர்களையே ஒவ்வொருவராய்ப் பார்த்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரன்.

பாவம் இவர்கள்…பரிதாபத்துக்குரியவர்கள். அவர் மனதுக்கு             என்னவோ இப்படித்தான் தோன்றியது.

நிதியாண்டு வெற்றிகரமாக முடிந்த முதல் வாரத்தின் கடைசி நாள்…. வளாகத்தினுள்ளே உள்ள கோயிலில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். ஒரு வரிசையில் ஆண்களும்…எதிர் வரிசையில் பெண் பணியாளர்களுமாய்…

ஒலி பெருக்கி பக்திப் பாடல்களை அலற விட்டுக் கொண்டிருந்தது. வண்ணக் காகிதங்கள் தோரணங்களாய்க் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. சீரியல் பல்புகள் விதவிதமான வண்ணங்களை உமிழ்ந்து கொண்டிருந்தன. குப்பையும் கூளமுமாய் இருக்கும் அலுவலகத்திற்கு, அந்த வளாகத்திற்கு  இப்படியொரு அழகு எங்கிருந்து வந்தது. கொண்டாட்ட மனநிலையில் அனைத்து ஊழியர்களும்….

அழைத்து வரப்பட்டிருந்த அர்ச்சகர் மந்திரங்களைப் பக்தி பூர்வமாய் உரக்கச் சொல்லி,  ராகமாய் உச்சரித்து, கற்பூரம் காண்பித்துப் பூஜையை ஜோதி மயமாய் நிறைவேற்றிய அந்தத் தருணம்…..

எல்லோரும் பார்க்க வரிசையிலிருந்து நிதானமாய்  அகன்ற ஈஸ்வரன் இரு பக்கம் நின்றிருந்தவர்களையும்  கைகளால் சைகை காண்பித்து நடுவே வழி உண்டாக்கி விலக்கிக் கொண்டு நடந்து, எல்லோரும் திடுக்கிட்டுப் நோக்க, தன் இடக் கையிலிருந்த அந்தக் காகித உறையிலிருந்து பணத்தை அப்படியே உருவி எடுத்து, எல்லோரும் ஆச்சர்யமாய்ப் பார்க்க  சந்நிதி வாயிலுக்கு முன்பு தரையில் பதிக்கப்பட்டிருந்த அந்தப் பெரிய உண்டியலில் அதைச் சேர்ப்பித்தார்.  நன்றாய் உள்ளே போய் விட்டதா என்று அங்கு கிடந்த ஒரு சிறு குச்சியை எடுத்து உண்டியலின் குறுகிய நீண்ட வாய்ப் பகுதியைக் குத்தி விட்டார்.  பிறகு ஒரு திருப்தி வந்த நிறைவோடு….திரும்பி….வரிசையின் கடைசியில் வந்து அமைதியாய் நின்று கொண்ட போது, எதிர்கொண்ட கற்பூர ஆரத்தியை  இருகரம் குவித்து அப்படியே அணைத்து வாங்கி முகத்தில் கண்மூடி ஒத்திக் கொண்டார். அந்தக் கணம் மனதில் ஏதோவொரு நிறைவு வந்திருப்பது போல் அவரால் உணர முடிந்தது.

பூஜை முடிந்த கையோடு எல்லோரும் அவரவர் இருப்பிடம் நோக்கி கலைந்து செல்ல….சார்…சார்…என்று பின்னால் எழுந்த குரல்களைப் பொருட்படுத்தாது வேகமாய் நடந்தார் ஈஸ்வரன்.

என்ன சார் இப்டிச் செய்திட்டீங்க….? எங்களுக்கு வேண்டாம்னு நாங்க சொன்னதுக்கா இந்த தண்டனை…! நீங்க இப்டிச் செய்யப் போறீங்கன்னு தெரிஞ்சிருந்தா சரின்னு வாங்கிட்டிருப்போமே சார்…உங்க மனசைப் புண்படுத்திட்டமா சார்…? எங்களை மன்னிச்சிடுங்க...சார்…கொஞ்சம் முன்னாடியாவது நீங்க எங்ககிட்டே சொல்லியிருக்கலாமில்ல சார்…! உங்களை மாதிரி எங்களாலெல்லாம் இருக்க முடியாது சார்… நாங்க அப்பாவிங்க…சராசரிங்க…-புலம்பிக்கொண்டே நெருக்கமாய்ப் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.

எதுவுமே பதில் பேசாமல் தன் இருக்கையை நோக்கி நடந்து கொண்டிருந்தார் ஈஸ்வரன். கோயிலிலிருந்து தன் அலுவலக இருக்கை கொஞ்சம் அதிக தூரம்போல் தோன்றியது அன்று..!

காசுப் பொழக்கம் ரொம்ப அதிகம்னு சொன்னாங்க…நீங்கள்லாம் இப்டி மாறுவீங்கன்னு நாங்கள்லாம் நினைச்சுக் கூடப் பார்க்கல சார்…எல்லாரும் உங்களப் பத்திதான் பேசிக்கிறாங்க…-அன்று மயில்வாகனம் சொன்ன வார்த்தைகள் ஈஸ்வரனின் காதுகளில் அறைந்து கொண்டிருந்தன.

வதந்தியான, வம்பு நிறைந்த மனிதாத்மாக்களின் தங்கு தடையற்ற  விட்டேற்றியான எண்ணங்களை, பேச்சை எதைக் கொண்டுதான் தடை போடுவது? எதைச் சொல்லிப் புரிய வைப்பது? எப்படிச் சொல்லி விளங்க வைப்பது?

இப்டின்னு தெரிஞ்சிருந்தா சரி கொடுங்கன்னு வாங்கிட்டிருப்பமே சார்….அவ்வளவு வேதனையிலும் அவர்களின் இந்த வார்த்தைகளை நினைத்து வேதனையோடு சிரித்துக் கொண்டார் ஈஸ்வரன். அவர்களைப் பொறுத்தவரை  அந்த விஷயத்தில் திடமாய்த்தான் நிற்கிறார்கள். திண்டாட்டமும் தவிப்புமெல்லாம, சரியாயிருக்கணும் என்று உறுதியாய் நின்று  செயல்படுபவனுக்குத்தான். உலகம் இன்றுவரை இந்த ரீதியில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நினைத்துக் கொண்டார்.  

மாற்றம் என்ற சொல் ஒன்றே மாறாதது. மற்ற அனைத்தும் மாறக்கூடியதுதான்.  ஏற்கனவே மாறி, ஊறித் திளைத்துக் கிடப்பவர்கள் மத்தியில் எந்தப் புதிய  மாற்றத்தையும் கொண்டு வர வாய்ப்பேயில்லை என்பதுவே நிதர்சனம்.

                                                ----------------------------

 

 

 

 

 

25 செப்டம்பர் 2024

 

             

“மனசில் இருக்கு மத்தாப்பு…!” சிறுகதை-குங்குமம் வார இதழ்-4.10.24



வன் அறைக்கு டிபன் கொடுத்து விட்டதே முதலில் பிடிக்கவில்லை சுந்தரத்திற்கு. வாஷ் பேசினில் கையைக் கழுவி விட்டு வந்து தட்டின் முன்  உட்கார்ந்தான் அமாவாசை.

ஒரு நிமிஷம் இரு வந்திடறேன்…..என்று அறையை விட்டு வெளியேறினான் சுந்தரம்.   அவனின் வேகம் அமாவாசையை உலுக்கியது.

எங்கடா போற…சூடு ஆறிடப் போகுது… திரும்பவும் சுட வைக்கவா முடியும்? அம்மாவ சிரமப்படுத்தாத… - என்றான்.

காதில் வாங்காது அடுப்படியை நோக்கி விரைந்தான் சுந்தரம்.

சாம்பார், சட்னி எல்லாம்தான் இருக்கே…இன்னும் எதுக்குப் போறே? என்று மேலும் கத்தினான் அமாவாசை. நண்பனின் மனசு அறிந்து பேசுவது போலிருந்தது.

எதுவுமே சுந்தரம் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.

அம்மா….இது உனக்கே நல்லாயிருக்கா…? – அடுப்படிக்குள் நுழைந்ததும் முதல் கேள்வியாக இதைக் கேட்டான் சுந்தரம். முகத்தில் கோபம் கொப்பளித்தது.

எது? என்று புரியாதது போல் கேட்டாள் சாவித்திரி. முகத்தைப் பார்த்து…என்னடா ஆச்சு? என்றாள் சற்றே கோபமாக.  

தெரியாத மாதிரி எப்படிம்மா உன்னால பேச முடியுது? என்றான் மீண்டும் சுந்தரம்.

டேய்…! எதானாலும் வெளிப்படையாப் பேசு…! இப்ப எதுக்கு  இங்க சண்டைக்கு வந்து நிற்கிறே? – போய் முதல்ல சாப்பிடு…டிபன் ஆறிடும் ….

மனசு சூடாயிடுச்சே…அத ஆத்திட்டுத்தான் தோசையைத் தொடணும். அதுக்காகத்தான் வந்தேன்…!

என்ன பெரிசா சூடாயிடுத்து…என்ன பண்ணிட்டாங்க இங்க…எல்லாம் எங்களுக்குத் தெரியும்…போய் சாப்டுட்டு வெளில கிளம்புற வழியைப் பாரு….

நேரடியாவே கேட்கிறேன்…ஏம்மா…உறாலுக்கு வந்து டைனிங் டேபிள்ல டிபன் வைப்பேன்னு பார்த்தா…ரூமுக்குக் கொடுத்தனுப்பறே….? நீ சொல்றதையெல்லாம் மண்டையாட்டிட்டுச் செய்றதுக்கு உனக்கொரு அப்பா கிடைச்சாரு….இந்தா டிபன் ரெடி…சாப்பிடுங்க ரெண்டு பேரும்னு வச்சிட்டுப் போயிட்டாரு ….இங்க  வச்சிட்டுக் கூப்டா வரமாட்டமா..?  அங்கயே சாப்பிடுங்கன்னு சொல்றது நல்லாயிருக்கா? அது அவன அவமானப்படுத்தின மாதிரி இல்லையா? வந்த விருந்தாளிகிட்டே இப்டி நடந்துக்கிறது தப்பும்மா….! அது என்னையே நீ அவமானப்படுத்துற மாதிரி….

இத்தனையையும் வரிசையாகக் கோர்த்ததுபோல் கிடு கிடுவென்று சொன்னான் சுந்தரம். கொஞ்சம் சத்தம் குறைவாகப் பேசினான். நண்பன் அமாவாசைக்குக் கேட்டு விடக் கூடாதே என்று மெதுவாய்ப் பேசியது அவனுக்கே என்னவோபோல் இருந்தது. இப்டியெல்லாம் செய்ய வேண்டிர்க்கே என்று தோன்றியது….!

இதுல என்னடா அவமானம் இருக்கு…அங்கன்னா உங்க இஷ்டம்போல பேசிச் சிரிச்சிட்டு சாப்பிடுவீங்க…உறால்லன்னா அந்த சுதந்திரம் கிடைக்காது. அவனும் கூச்சப்படுவான்…அது உனக்கும் சங்கடமாயிருக்கும்…அதுனாலதான் அங்க கொடுத்தனுப்பினேன்…

இல்லம்மா….நீ செய்தது தப்பு…..அத உடனே சொல்லணும்னு எனக்குத் தோணித்து…அதான் சட்னு இங்க ஓடி வந்தேன்…என் மனசுக்கு எது பிடிக்குமோ அது மாதிரிச் செய்றது உனக்குப் பிடிக்கும்தானே…அப்படியே செய்….இல்லன்னா அப்புறம் நான் ஊர்லயே இருந்திடுவேன்…வர மாட்டேன்….

அப்போ ஒவ்வொருவாட்டியும் யாரயாச்சும் கூட்டிட்டு ரெட்டையாத்தான் வீட்டுக்கு வருவியா? ஒத்தையா வரமாட்டியா? ரெட்டைன்னுட்டு வேறொண்ணை இழுத்திட்டு வந்து நின்னுடாதே…! அது ரொம்ப விபரீதமாப் போயிடும்…புரிஞ்சிதா…?

வேறொண்ணைன்னா…? – நின்று திரும்பிப் பார்த்தான் சுந்தரம். அம்மாவின் கேள்விகள் எப்போதுமே உள்ளர்த்தம் பொதிந்தவைதான். மனதுக்குள் தானாகவே பயந்து கொண்டு, வெளியே அதைக் கோபமாக வெளிப்படுத்துவாள்.

வேறொண்ணைன்னா வேறொண்ணுதான்…புரியும் உனக்கு….புரிஞ்சிட்டே எதுக்குக் கேட்கிறே….? பேசாமப் போ…..

கொஞ்சம் எரிச்சல்பட்டதுபோல் இதைச் சொன்னாள் சாவித்திரி. அவள் மனதுக்குள் என்னென்னவோ பயம் ஓடிக் கொண்டிருந்தது. இந்தக் காலத்தில் யாரைத்தான் நம்ப முடிகிறது? இது இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிற நியதிகளெல்லாம் உடைந்து கொண்டே வருகிறதே…? கூட வந்திருக்கும் அவன் நண்பனைப் பார்த்தபோதே இப்படியெல்லாம் மனதில் கற்பனை ஓட ஆரம்பித்து விட்டது அவளுக்கு.

பால்ய கால நண்பன்னா அங்கயே பேசிட்டு, அங்கயே கட் பண்ணிட்டு வர வேண்டிதானே? அதென்ன கூடவே இழுத்திட்டு வர்றது? யார் யாரக் கூட்டிட்டு வர்றதுன்னு ஒரு விவஸ்தையில்லையா? மனதுக்குள் அவளுக்கு இந்தக் கோபம்தான். வெளிச்சமாய்க் கேட்க முடியாத நிலை. கோபத்தை முழுதாயும் மறைக்க முடியவில்லை…

எதையாவது அர்த்தமில்லாம நீயாக் கற்பனை பண்ணிட்டு பயந்திட்டிருக்கிறதே உனக்கு வேலையாப் போச்சு…நம்ம பய அப்டியெல்லாம் பண்ண மாட்டான்…அவனை நாம அப்டியா வளர்த்திருக்கோம். பூஜை, புனஸ்காரம், ஸ்லோகம், கோயில்னுதானே நல்வழிப்படுத்தியிருக்கோம்? நம்ம எண்ணங்களுக்கு முரணா எதுவும் செய்ய அவனுக்கு மனசு வருமா? அதெல்லாம் ஒண்ணும் நினைக்க வேண்டாம்….எல்லாம் நல்லபடியாவே நடக்கும்…..-சிவானந்தம் சாதாரணமாய்ச் சொன்னார்.

பையனுக்குக் கல்யாணத்திற்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்கும் வேளை…ஏதாவது வேறு விதமாய் ஆகி விடுமோ என்று பதறுகிறாள். கூட வந்திருக்கும் நண்பன் உடன் படித்தவன். அவனுக்கான சலுகைகளைப் பெற்று கிடுகிடுவென்று உயர்ந்து இன்று மருத்துவராகி நிற்கிறான்.  தன் பையன் தன் வசதிக்கேற்பப் படித்து பரீட்சை எழுதி அரசு வேலைக்குப் போய், அஞ்சல் துறையில் வேலை பார்க்கிறான். அவரவர் வசதி…அவரவர் வாய்ப்பு. அதற்கென்ன செய்ய முடியும்? அதற்காக நட்பை விட்டுக் கொடுக்க முடியுமா? இளம் பிராய நட்பு அத்தனை சுலபமாய் முறிந்து கொள்ளுமா? இப்படித்தான் நினைக்க முடிந்தது சிவானந்தத்தினால். அதுக்காக நட்பில் விளைந்த நண்பன் போல, மனதில் பிறந்த முதிர்ந்த காதல் என்று சொல்லிக்கொண்டு  ஏதாச்சும் ஒரு வேற்றுப் பெண்ணையும் இழுத்துக் கொண்டு வந்து நிற்பான் என்று அவளாகவே கற்பனை செய்து கொண்டு பயந்தால்? விபரீதக் கற்பனைக்கும்  ஒரு அளவில்லையா?

அவருக்கு வெளுத்ததெல்லாம் பால்.  யாரையும் தவறாய் நினைக்க மாட்டார். பழகியவர்கள், பழகாதவர்கள் எல்லோரும் ஒன்றுதான் அவருக்கு. விகல்பமில்லாமல் பேசுவார். எதிராளியின் பேச்சு தன் பேச்சுக்குப் பொருந்தாமல் திசை மாறுகிறது என்று புரிந்தால், தன் பேச்சைக் குறைத்துக் கொண்டு அவர்கள் பேச்சுக்குத் தலையாட்ட ஆரம்பித்து விடுவார். அதில் இவர் கருத்தென்ன என்று எதிராளி அறியவே முடியாது.

உங்களுக்கு எல்லாத்தையும் நான் கவனிச்சுச் சொன்னாத்தான் ஆச்சு. உங்களுக்கா எதுவும் தெரியாது. அதனாலதான் அநாவசியமா எனக்குக் கெட்ட பேரு….

இப்ப யாரு உன்னை என்ன சொன்னாங்க…? எதுக்கு இப்டி அலுத்துக்கிறே? -அப்டியென்ன கெட்ட பேரு வந்து போச்சு உனக்கு? உன்னை யாரும் தப்பா நினைக்கல….ஒவ்வொருத்தர் குணம் ஒவ்வொரு மாதிரி…அதுல நீ ஒரு மாதிரி…மனுஷங்க எல்லாரும் ஒரே மாதிரியா இருப்பாங்க…மாறத் தானே செய்யும்…

அதத்தான் சொல்லிப் புலம்பறேன் நானும்…அத மாதிரி நம்ம பையனும் ஏதும் மாறிச் செய்திடக் கூடாதேன்னு…அதுக்குத்தான் அடிச்சிக்கிறேன்…

அடிக்கவும் வேண்டாம் பிடிக்கவும் வேண்டாம்…எல்லாம் நல்லபடியா நடக்கும்…நல்லதே நினை….அதுதான் உடம்புக்கும் மனசுக்கும் நல்லது….

டிபன் முடித்து தட்டுக்களை எடுத்து வந்து கொண்டிருந்தான் சுந்தரம். ரெண்டு பேர் தட்டுகளும் இருப்பதைப் பார்த்து, நேரா ஸிங்க்ல கொண்டு போட்டுடு..மத்தியானம் வேலைக்காரம்மா வந்து தேய்ச்சி அடுக்கிடும்…சொல்லிவிட்டு அவர்கள் அறையில் வைத்திருந்த சாம்பார், சட்னி பாத்திரங்களை எடுக்கப் போனாள் சாவித்திரி.

ஆன்ட்டி….டிபன் பிரமாதம்…சாம்பார்…மணக்க மணக்க…ரொம்ப ருசி…லேசா வெல்லம் போடுவீங்களோ ஆன்ட்டி….?

ஆஉறா…தன் கைபாகத்தைக் கண்டு பிடித்து விட்டானே இந்தப் பயல்? இத்தனை நாள் இவர்களுக்குத் தெரியாத ரகசியத்தைச் சுடிதமாக இவன் சொல்லி விட்டானே…? ஒரே சந்தோஷம் சாவித்திரிக்கு.

எப்டிக் கண்டு பிடிச்சே…? டக்குன்னு சொல்லிப்புட்டே? -மகிழ்ச்சியில் ஒருமையில் கேட்டு விட்டதை நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டாள். தன் பையன் வயசுதானே அவனுக்கும்..மனசு சமாதானப்பட்டது.

இல்ல ஆன்ட்டி….எங்கம்மாவும் இப்டித்தான் சாம்பார் செய்வாங்க…அதான் கேட்டேன்…..

ஓ…! அங்க வரைக்கும் போயிருச்சா நளபாகம்…? இந்தக் காலத்துலதான் எல்லாமே யூ.ட்யூப்புல ஓடுதே…யார்தான் சொல்லித் தரணும்? – நினைத்துக் கொண்டாள்.

தன் கைபாகத்தைப் பெருமையாய் நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு சப்பென்று போய் விட்டது. நாம செய்றதெல்லாம் நம்ம வீட்டு ஆம்பளைங்களுக்குத்தான் பெரிசு…புதுசு….! வெளில எல்லாம் அரதப் பழசுதான்  போல்ருக்கு….! எந்த மதிப்புமில்ல…

ஆனாலும் உங்க டேஸ்ட் வரல்ல ஆன்ட்டி எங்க வீட்ல…..! – அந்தக் கடைசிப் பாராட்டில் அக மகிழ்ந்து போனாள் சாவித்திரி. இது கல்யாண சாம்பாராக்கும்…பேரு…! என்றாள் பெருமையோடு.

மனதாரச் சொல்கிறானா அல்லது பொய்ப் பாராட்டா? ஏதோ ஒன்று….வந்த இடத்தில் பொருத்தமாய்ப் பேசத் தெரிந்திருக்கிறதே…! – அந்த மட்டும் சமத்துதான் இந்தப் பிள்ளை. நினைத்துக் கொண்டாள்.

அம்மா…ரெண்டு பேருக்கும் காப்பி வேணும்…. – சுந்தரம் வந்து நின்றான்.  போடறேன்….என்றாள் சாவித்திரி.  கூடவே காபிக்குன்னு உங்க ரூமுக்குப் போக வேண்டாம்…இங்கயே இருந்து குடிச்சிட்டுப் போங்க ரெண்டு பேரும்…என்றாள்.

இல்லம்மா…..நாங்க ரூமுலயே இருந்து குடிச்சிக்கிறோம்….என்ற சுந்தரத்தை அர்த்தத்தோடு திரும்பிப் பார்த்தாள் சாவித்திரி.

இந்தக் காப்பியக் கொண்டு அவங்ககிட்டே கொடுங்க….! – என்றாள் என்றாள் சற்றே சிணுங்கியவளாய்.

அங்க என்னத்துக்கு…? என்றவாறே உறாலில் டைனிங் டேபிளில் கொண்டு வைத்து விட்டு….சுந்தரம்….அமா….ரெண்டு பேரும் வாங்க…காப்பி ரெடி….என்று சத்தமாய் அவர்கள் அறையைப் பார்த்துக் குரல் கொடுத்தார் சிவானந்தம்.

இதோ வந்துட்டோம்ப்பா….! – இரண்டு குரல்களும் சேர்ந்து ஒரு சேர வெளிவந்ததைப் பார்த்த சாவித்திரி அதிசயமாய்த் தன் கணவரை வியப்போடு நோக்கினாள்.

பெருமையோடு நோக்கிய சிவானந்தம் “மனசில் இருக்கு மத்தாப்பு” என்றார் சாவித்திரியைப் பார்த்து.

                        -----------------------------------------------

 

 

 

17 செப்டம்பர் 2024



மதுரை புத்தகக் கண்காட்சி வெளியீடு (06.09.2024 முதல் 17.09.2024) பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை-17 

“எதிர் நீச்சல்”  சமூக நாவல்



 

04 செப்டம்பர் 2024

 எதிர் நீச்சல்  - நாவல்  -பாரதி புத்தகாலயம், தேனாம்பேட்டை, சென்னை  மதுரை புத்தகக் கண்காட்சி செப்.2024 வெளியீடு








 

சிறுகதை    


“  முடியாத கேள்விகள் ”   - பேசும் புதிய சக்தி -செப்.2024 பிரசுரம்






 

 ன்னய்யா பொண்ணு வளர்த்திருக்க நீ? – கோபத்தில், எரிச்சலில் தாங்கமாட்டாமல் கேட்டே விட்டார் திருஞானம். ஒரு கணம் அவர் உடம்பு ஆடி ஓய்ந்தது. சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரம், முகம் பார்க்கும் கண்ணாடி, காலண்டர் எல்லாமும் சற்று நடுங்கி அடங்கியது போலிருந்தது. வீ்டே அதிர்ந்திருக்குமோ? என்றுகூடச் சந்தேகம் எழுந்தது. ஃபோனில் பேச எதற்கு இவ்வளவு கத்த வேண்டும் என்று அவரே நினைத்துக் கொண்டார். இன்று பொழுது இப்படி விடிந்ததே என்று வருத்தம் கொண்டது மனம்.

            எதிர்த்தரப்பில் சத்தமேயில்லை. லைனில் ஆள் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை. ஒருவேளை கேட்கவில்லையோ? தொடர்பே கிடைக்கவில்லையோ? உறலோ என்ற பிறகுதானே பேசினோம்?

            அடுப்படியிலிருந்து எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் திரிவேணி. கடுகு வெடிக்கும் சத்தம் காட்சிக்கு மிகப் பொருத்தம். என்ன பேசினோம் என்று கேட்கவில்லையோ? கேட்டிருந்தால் அருகில் வந்து நின்றிருப்பாளே?

தன்னை விட அவள்தான் வயிற்றெரிச்சலில் தாள மாட்டாமல் அலைகிறாள். நாம சரியாப் பார்க்கல…இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்னு கூட விட்டிருக்கலாம். அவன்பாட்டுக்கு நிம்மதியா இருந்திருப்பான். இப்போ அவன் நிம்மதியும் போச்சு….!! அவள் அடிக்கடி புலம்பும் வார்த்தைகள் இவை. அவன் காது கேட்கத்தான் சொல்லுகிறாள். அவனும் மறுப்புச் சொல்வதில்லையே?  அந்தப் பெண்ணும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஒருவேளை புரியவில்லையோ? அல்லது புரிந்தும் திமிரா? அதுதான் எடுத்தெறிந்து பேசுகிறதே…!இப்போது பேச வேண்டியதுதானே? நன்றாக வயிறு எரியட்டும் என்று மனதுக்குள் குதூகலிக்கிறதோ?நீங்க என்னமோ புலம்பிட்டுப் போங்க…நான் இருக்கிறபடிதான் இருப்பேன்…என்ன ஒரு திண்ணக்கம்?

இதுக்கெல்லாம் எதற்குக் கல்யாணம்? தனியே அலைய வேண்டிதானே? எவன்ட்டயாவது எக்குத் தப்பா மாட்டினா தெரியும் சேதி? இந்த மட்டும் ஒரு நல்ல எடமா அமைஞ்சிதேன்னு அடங்கிக் கிடக்கத் தெரியுதா? வீட்டுல இருக்கிற மற்றவங்க மாதிரி சாதாரணமா இருந்திட்டுப் போக வேண்டிதானே? அதென்ன…பொட்டக் கழுதைக்கு அத்தனை திமிர்? அது எங்கயாச்சும் கொண்டு விபரீதமா மாட்டில்ல விட்ரும்? ஒரு வேளை வீட்லதான் அப்டியோ? வெளில எலியோ? -கடுமையான அதிருப்தியில் மிதந்தார் திருஞானம்.

அந்தப் பெண் தன் வீட்டிற்கு மருமகளாய் வந்த நாள் முதல் யாருக்கும் மன நிம்மதியில்லை என்பதை உணர்ந்தார். அம்மா…அப்பா…என்று அன்பொழுகக் கூப்பிட்டுக் கொண்டு எத்தனை சந்தோஷமாய் இருக்கலாம்? சொல்ல முடியாமல் தவிக்கிறான் பையன் என்பது தெரிந்தது. அதை அடங்கிப் போவதாக அந்தப் பெண் தப்புக் கணக்குப் போடுகிறது. யாருக்கு யார் அடங்குவது? சகஜமாய் இருந்தால் எல்லோரும் சமம்தானே? இந்த சூட்சுமம் ஏன் அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை? சொல்லிக் கொடுத்து வளர்த்திருந்தால்தானே எதுவும் படியும்? ஊர் சுற்றவும், ஓட்டலில் திங்கவும், சினிமா போகவும், கண்ட பொருட்களை வாங்கவும், வீட்டுக்கு வந்து மணிக் கணக்கில்லாமல் தூங்கி வழியவும்…எல்லாமும் வியாதிக்குத்தான் வழி வகுக்கும். பெற்றோரே அப்படியிருந்தால், பெற்ற பெண் எப்படி உருப்படும்? இதுவா வளர்ப்பு முறை? பெத்த வயித்துல பெரண்டையத்தான் வச்சுக் கட்டிக்கணும்…!

ன் அம்மாவின் பேச்சுக்கு என்றுதான் மறுப்புச் சொல்லியிருக்கிறான் அவன்? அம்மா சொல்வது சரியா, தவறா…என்னதான் நினைக்கிறான்? யாருக்கும் தெரியாது. அவனுக்கே தெரியாதோ என்று கூடச் சந்தேகம் வந்தது திருஞானத்திற்கு. இப்படிக் குழந்தை மனம் கொண்டவனாய் இருக்கிறானே? இவன் எப்படித் தேறப் போகிறான்? ஆண் என்றால் ஒரு ஆளுமை வேண்டாமா? அது இருந்தால்தான் இந்நேரம் சொல்லித் திருத்தியிருப்பானே? பார்த்துக்கொண்டு தவதாயப்பட்டவனாய் அல்லவா அமர்ந்திருக்கிறான்?அந்தப் பொண்ணு ஏதாச்சும் பேசினால் பதிலே சொல்ல மாட்டேனென்கிறானே? தக்க பதில் கொடுத்தால்தானே அடங்கும்? அடுத்தாற்போல் வாய் வராது? அமைதியாயிருந்தால் அது சொன்னதுதான் சரி என்று ஆகிப் போகுமே? சரியானதைச் சொன்னால் சரி. விபரீதமாகவே பேசும் பெண் ஏன் மௌனிக்கிறது?  எப்படி ஒத்துக் கொள்வது? அமைதியாயிருந்தால் ஒத்துக்கொண்டதாகிவிடாதா? மஷனையா?

 எதிலுமே திருந்தின பார்வையே இல்லையே? ஏதோ திண்டுக்கும் முண்டுக்கும் பேசுவதாகத்தானே இருக்கிறது. எதைச் சொன்னாலும் அதெப்படி? இதெப்படி? என்னால முடியாது. நீங்க மட்டும் ஒழுங்கா? நா செய்ய மாட்டேன்…நீங்க பேசுறது தப்பு…நா சொல்றத கேளுங்க…அதுதான் சரி…இதுதான் சரி…உறா…உறீ…என்று திகிடு முகிடாய்த்தானே பேசுகிறது? இப்படியெல்லாம் பேசினால்தான் சமத்து என்று நினைத்துக் கொண்டிருக்கிறதோ? அல்லது அப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? எதையும் எதற்காக. ஏன். எப்படி என்று கேள்? என்று சினிமா வசனம் போல் புகட்டியிருப்பார்களோ?

 நல்லது சொன்னால் எடுத்துக் கொள்ள வேண்டாமா? இந்த மட்டும் நல்வழி காட்ட ஆள் இருக்கிறேதே என்றல்லவா நினைக்க வேண்டும்? எதைச் சொன்னாலும் எதிர்த்து எதிர்த்துப் பேசினால்? அவன் சொல்வதையும் கேட்பதில்லை. நாம் சொல்வதையும் கேட்பதில்லையே?சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. இன்னொரு வீட்டிற்குப் போகும் பெண்ணை இப்படியா வளர்ப்பது? பாங்காய் எல்லாமும் சொல்லிக் கொடுத்துப் பழக்கி பக்குவமாய் அனுப்பினால்தானே பெருமை? கெட்ட பெயர் பெற்றோர்களுக்குத்தானே?

ஐ.டி. வேலைக்குப் போனால் எல்லாம் தெரிந்ததாக நினைத்துக் கொள்வார்களோ? எதிர்த்துப் பேசுதல், எடுத்தெறிந்து பேசுதல், சட்டுச் சட்டென்று கோபப்படுதல், முகத்தை முறித்து வெடுக்கென்று வார்த்தையாடுதல், பெரியவர்களுக்கு ஒரு மரியாதையில்லை…அடக்கமான பேச்சில்லை…சுமுகமான நடப்பு இல்லை….இந்த வீட்டுக்கு என்று வந்தாயிற்று…இனி இதுதான் நம் வீடு…இவர்தான் என் கணவர்…இவர்கள்தான் என் தாய் தந்தையர்…இனி காலத்துக்கும் நான் வாழப் போகும் இடம் இதுதான் என்ற பொறுப்பான சிந்தனையே இல்லையே?

ஒவ்வொன்றுக்கும் மாமனார், மாமியாரா எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்? பிடுங்கி எடுக்கிறார்கள் என்கிற கெட்ட பெயர் வராதா? தாராளமாய் வந்து அமர்ந்து கொள்ளுமே? உலகம் பெண்ணைத்தானே கருணையோடு நோக்கும்! நியாயம் எந்தப் பக்கம் என்று யோசிக்காதே? இவன்தானே அவளுக்குப் பாந்தமாய். பரிவாய், பக்குவமாய் ஒவ்வொன்றையும் எடுத்துச் சொல்லித் தெரிய வைக்க வேண்டும்? இவனே அது பேசும் பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டு வாய் மூடி மௌனியாய் இருந்தால், வாய் அதற்கு இன்னுமல்லவா நீளும்? தேவையானதைக் கருத்தாய், அக்கறையாய், பொறுப்பாய் எடுத்துச் சொன்னால் சரி என்றுதான் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். புத்திசாலிப் பொண்ணு என்று பெருமைப் படுவார்கள். அந்த அடையாளமே இல்லையே இந்தப் பெண்ணிடம். வெறும் அரைகுறையாய் இருந்து கொண்டு என்ன ஆட்டம் போடுகிறது.

போகுது போகுது என்று பார்த்தால் தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளும் போலிருக்கிறதே? வேண்டாம் என்று பார்த்தால் விடாது கறுப்பு என்கிற கதையாயல்லவா இருக்கிறது. நறுக்கென்று குட்டு வைத்துத்தான் ஆக வேண்டுமோ?

பெண்ணுரிமை என்கிற பெயரில் இன்று பலதும் மாறிச் சிதைந்திருக்கின்றன என்று யாருக்குத் தெரியும். அந்தந்தக் குடும்பங்களில் அனுபவிப்பவர்களுக்கல்லவா அந்த வேதனை புரியும்? குடும்பங்கள் படும் பாடுகள் அவர்களுக்குத் தெரியவா போகிறது? எதையும் அனுபவித்துப் பார்த்தால்தானே புரியும்? என்னய்யா பெரிய கொடுமை? தாள வேண்டாமா?

                உறலோ….-குரல் கேட்டு உஷாரானார்.  அந்த உறலோவென்ற குரலைச் சட்டென்று புரிந்து கொண்டார்அவர்தான் என்று.

               சார்…எதோ கூப்டீங்க போல்ருக்கே…? – குரல் தணிந்து வந்ததை உணர்ந்த திருஞானத்திற்கு இன்னும் எகிறியது. மனதுக்குள் இருக்கும் நாடகம். உண்மையான வெளிப்பாடு இல்லை.

            ஏதோ கூப்பிடல….காரணமாத்தான் கூப்டேன்…ஏன்யா…கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு அனுப்புற பொண்ணை இப்டியா தத்தியா வளர்த்து வச்சிருப்பீங்க? உங்க வீட்டுல யாருக்குமே அறிவில்லையா? ஊரச் சுத்த, சினிமாப் பார்க்க, ஓட்டலுக்குப் போக, இஷ்டத்துக்குத் திங்க,  வீட்டுக்கு வந்து பொத்துன்னு படுக்கைல விழ இது மட்டும்தான் தெரியுமா? வீட்டு வேலையெல்லாம் ஜீரோவா? இதுதான் வாழ்க்கைன்னு சொல்லிக் கொடுத்திருக்கீங்களா? அ்ட…வேலை கூடச் செய்ய வேண்டாம்யா…பணிவா, அடக்க ஒடுக்கமா இருக்கலாமில்ல…உம்ம பொண்ணுக்கு மரியாதைங்கிறதே தெரியாதோ? மரியாதைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்கும் போல்ருக்கே?

            சார்…கொஞ்சம் மரியாதையாப் பேசினா நல்லாயிருக்கும். நான் வேணும்னா நேர்ல வரட்டுமா?

            என்னத்தைய்யா மரியாதையாப் பேசுறது? மதிச்சு மரியாதை குடுக்குற அளவுக்கா பொண்ணை வளர்த்து வச்சிருக்கீங்க…? உங்க பொண்ணு புகுந்த வீட்டுல எப்டியிருக்குங்கிறதப் பொருத்துத்தான்யா உங்களுக்கு மரியாத….! உங்க பேரைக் காப்பாத்தற மாதிரி இருக்க வேண்டாமா? உம்ம லட்சணம் உங்க பொண்ணு மூலமாத் தெரியுது!

            அதுக்காக வாய்யா, போய்யான்னு பேசுறது நல்லாவாயிருக்கு…சம்பந்திங்க ஒருத்தருக்கொருத்தர் அப்டியெல்லாம்  ஏசிக்கிறது கேட்கறவங்களுக்கு சரியாத் தோணுமா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…..-அங்கிருந்து குரல் தணிந்தே வந்தாலும் கோபம் தணியவில்லை திருஞானத்திற்கு. இன்று ஒரு பிடி பிடித்துவிட வேண்டியதுதான் என்று உக்கிரமாய் நின்றார். இத்தனை நாள் பொறுத்ததே அதிகம் என்று தோன்றியது. தினசரி பார்த்துப் பார்த்து, கேட்டுக் கேட்டுப் புழுங்கிக் கொண்டிருக்க முடியுமா? மனசுக்கு ஒரு ஆறுதல் என்பதே இல்லாமல் போனதே?

            சதா வீட்டில் கலகமென்றால்? சாதாரணமாய் இருந்து தொலைக்க வேண்டிதானே? எதுக்கு மனசுல இத்தனை கோபமும், தாபமும்?

            யோசிச்சுப் பார்த்துத்தான்யா மண்ட காய்ஞ்சு போய்க் கத்துறேன்…இன்னும் என்னத்த யோசிக்கிறதுக்கு இருக்கு? ஏன்யா…உங்க பொண்ணுக்கு என்னதான் சொல்லிக் கொடுத்திருக்கீங்க…முதல்ல அதச் சொல்லுங்க…அப்டி ஏதாச்சும் இருக்கான்னு நாங்க தெரிஞ்சிக்கிறோம்…

            எதிர்த் தரப்பில் அமைதி நிலவியது. பக்கத்தில் யாரோ பேசுவது மெல்லியதாகக் கேட்டது.

            யாரு? யாரோ பேசுற சத்தம் கேட்குதே…? அருகில் வந்த திரிவேணி கவனமாய்க் கேட்டாள். பெண் குரல் போல் இருக்கவே அவளுக்கு சந்தேகம். பெண்ணின் அம்மாவோ என்று…!

            என் பொண்ணைக் குத்தம் சொல்றவங்க…நல்லாவேயிருக்க மாட்டாங்க…! வௌங்கவே மாட்டாங்க….-அந்தம்மாவுக்கு இந்த ரெண்டைத் தவிர வேறேதும் தெரியாது.

            இந்தாள் ஒரு லூசு…அவர் பொண்ணு ஒரு அரை லூசு…அந்தம்மா ஒரு தத்தி.   இதான் இவங்க ஃபேமிலி…இங்க போய்ப் பொண்ணு எடுத்த மாதிரி ஒரு முட்டாத்தனம் வேறேதுமில்ல….சபிக்காத குறையாய்க் கத்தினார் திருஞானம்.

            அவுங்கம்மாவேதான்….வேறே யாராயிருக்கும்?அது ஒரு ஜடம். அந்த வீட்டுக்கு வேறே யார்தான் வர்றாங்க? இந்தாள் குணம் தெரிஞ்சிதான் அவனவன் அத்துக்கிட்டுப் போயிட்டானே? எதுக்கெடுத்தாலும் எல்லாமும் தனக்கே தெரிஞ்சமாதிரி பேசிக்கிட்டிருந்தா? அடுத்தவன் சொல்றதைக் காது கொடுத்தே கேட்காம மறிச்சு மறிச்சுப் பேசினா? நீங்க எல்லாரும் மடையனுங்க…நா ஒருத்தன்தான் புத்திசாலி…எனக்குத் தெரியாத விஷயமே கெடையாதுன்னு கரைஞ்சா?

            அது எப்படியோ இருந்திட்டுப் போறாரு…நமக்கென்ன வந்தது? நம்ப வீட்டுல அவுங்க பொண்ணு எப்படியிருக்கணும்…அத மட்டும் பேசுங்க…மத்ததெல்லாம் அநாவசியம்….

            அது அந்தாளுக்குப் புரிஞ்சாத்தானடீ…ஏதோ தேவதையைக் கொண்டாந்து  இறக்கி விட்டிருக்கிறாப்லல்ல நினைச்சிட்டிருக்கான்…! நம்ம அதிர்ஷ்டம்னுல்ல நினைக்கிறான்.  அது ஒரு ரெண்டுங்கெட்டானாக் கெடக்குன்னு அந்தக் கிறுக்கனுக்குத் தெரியுமா? பொண்ணப் பொண்ணா வளர்த்திருந்தால்ல…? எதுவும் பாந்தமாச் சொல்லிக் கொடுக்காம…காட்டுச் செடி மாதிரி வளர விட்டிருக்கான்…அத அங்கங்க வெட்டி வெட்டி ஷேப் பண்ணியிருந்தாத்தானே ஒரு வடிவமா வந்திருக்கும்…வளர்ந்திருக்கும்…-புலம்பித் தள்ளினார் திருஞானம். கோபத்தில்தான் தனக்கு நன்றாகப் பேச வருகிறது என்று தோன்றியது அவருக்கு. போனில் பேச்சைத் தொடர்ந்தார்.

            ஏன்யா…ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்குப் போனா அங்க எப்படியிருக்கணும், என்ன மாதிரி நடந்துக்கணும், பெரியவங்ககிட்ட எப்படிப் பேசணும். எந்த மாதிரி இயங்கணும்…இப்டி ஏதாச்சும் உங்க பொண்ணுக்கு சொல்லிக் கொடுத்திருக்கீங்களா இல்லையா?  சொல்லிக் குடுத்து வளர்த்தீங்களா இல்ல அதுபாட்டுக்குத் தன் போக்குல வளர்ந்திச்சா?  உம்ம வீட்ல என்னென்ன வேண்டாததையெல்லாம் பழக்கி விட்டிருக்கீங்களோ அதையே இங்க செய்யவா, அதுபோலவே இங்க வெறுமே வெட்டியா  வளைய வரவா அனுப்பி வச்சிருக்கீங்க…? எங்க புத்திய செருப்பால அடிக்கணும்யா…செருப்பால அடிக்கணும்…அட்டச் சோம்பேறி…ஆகாசச் சோம்பேறிய்யா உங்க பொண்ணு….கவைக்கு உதவாது போலிருக்கே…?-பொரிந்து தள்ளினார். ஆரம்பிச்சாச்சு…எங்க போய் முடியுமோ? அவருக்கே தெரியவில்லை. எப்படி வாழ்நாளெல்லாம் இந்தப்( பேயை) பெண்ணை வைத்துக் கொண்டு வாழப் போகிறான்? மயக்கம் வரும்போலிருந்தது அவருக்கு.  கட்டிலில் நிதானமாய் உட்கார்ந்து கொண்டார். எதிர் வரிசையில் கத்துவது காதில் கேட்டது.

            சார்…சார்…எதுக்கு அநாவசியமாப் பேசறீங்க…நீங்க ரொம்பக் கோபமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன்…கொஞ்சம் பொறுமையா இருங்க…எல்லாமும் போகப் போகச் சரியாப் போகும்…பெரியவங்களான நாமளே பொறுமை காக்கலேன்னா எப்டி? எங்களுக்காகக் கொஞ்சம் பொறுத்துப் போகக் கூடாதா? யோசிங்க சார்…-குரல் தணிவாகவே வந்தது. லட்சணம் தெரியும்போல்தான் இருந்தது. வசமாய்த் தள்ளி விட்டுவிட்டார்களே? நாம்தான் புரிந்து கொள்ளாமல் சம்பந்தம் செய்தாயிற்று. மிகுந்த வருத்தமாய் இருந்தது திருஞானத்திற்கு. குமுறலையெல்லாம் கொட்டிக் கவிழ்த்தால்தான் ஆறும் போலிருக்கிறது.

            என்னத்தைய்யா பொறுமை காக்குறது? அதான் உம்ம பொண்ணு லட்சணம் பளீர்னு தெரியுதே…அப்புறம் எங்கேருந்து வரும் பொறுமை…? உமக்கென்ன வசதியாத் தள்ளி விட்டுட்டீரு…ஒரு பெரிய்ய்ய பொறுப்பு தீர்ந்திச்சு…நாங்கதான் எதுவும் விசாரிக்காம. நேர்ல இருந்து பார்க்காம ஏமாந்துட்டு நிக்கிறோம்…! உம்ம பொண்ணு நான் வந்தபோதெல்லாம் தூங்கிட்டே இருந்திச்சே…அப்பயே சந்தேகப்பட்டேன்யா நானு…இதென்ன பொழுது விடிஞ்சு மணி பதினொண்ணு தாண்டியாச்சே…இப்டித் தூங்கி வழியுதுன்னு…அப்பவே நான் சுதாரிச்சிருக்கணும்…என் கண்ணை எதுவோ மறைச்சிருச்சு…அதான் விதி….வச்சி அனுபவிக்கணும்னு இருக்கு…கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொண்ணை இப்படி ஒண்ணுந்தெரியாம வளர்த்திருக்கமேன்னு உமக்கு வெட்கமாயில்லையாய்யா? அசிங்கமாயில்ல? சோம்பேறிய்யா…உங்க பொண்ணு….அட்டச் சோம்பேறி…! களிமண்ணு….!! சண்டி மாடு…!!!

            சார்…இப்டிப் பொத்தாம் பொதுவாப் பேசிட்டே போனா எப்படி? நேர்ல உட்கார்ந்து பேசுவமே…! நான் வேண்டியதைச் சொல்றேன். பொறுமையாக் கேளுங்க….எனக்கும் எங்க பொண்ணைப் பத்தி கொஞ்சமாவது தெரியுமில்ல. அதை உங்ககிட்டே சொல்றேன்….எவ்வளவோ சொல்லித்தான் கொடுத்து அனுப்பிச்சோம்…பிறவிப் புத்தி…என்ன செய்யச் சொல்றீங்க…?

            நீரே ஒத்துக்கிறீரா? யாரோட பிறவிப் புத்தி? உங்களோடதா? அதுதானே உங்க பொண்ணுக்கும் இருக்கும்? இத உட்கார்ந்து வேறே பேசணுமாக்கும்? டைம் வேஸ்ட்…எனர்ஜி வேஸ்ட்…ஏன்யா…கல்யாணம் ஆன ஒரு பொண்ணு தினசரி காலைல பதினோரு மணிக்கா படுக்கைலர்ந்து எழுந்திருக்கும்? என்னய்யா இது ஒலகத்துல இல்லாத வழக்கமாயிருக்கு….? ஊரு ஒலகமே விழிச்சிக் கெடக்கு…பரபரன்னு அத்தனை உயிரும் வெளில கௌம்பிப் பறந்திட்டிருக்கு…உம்ம பொண்ணு என்னடான்னா படுக்கைய விட்டே எழலைய்யா….இந்த அசிங்கத்த எங்க போய்ச் சொல்ல….? எனக்கு மனசே ஆறலைய்யா….? மனசே ஆறலை….கண்ண மூடிட்டுக் கல்யாணத்தப்பண்ணி கூட்டிட்டு வந்திட்ட மாதிரி இருக்குய்யா…இருக்கு…எங்க பையன் வாழ்க்கை போச்சு…! அவன் கிடந்து அவஸ்தை அனுபவிக்கிறான் இப்போ…! எல்லாக் கஷ்டமும் இப்போ அவனுக்குத்தான்…எப்பப் பார்த்தாலும் சண்டையா போட முடியும்னு தளர்ந்திட்டான்யா…! உம்ம பொண்ணால வந்த வினை இது…! ஒரு நல்ல பையனோட வாழ்க்கை போச்சுய்யா…போச்சு…!!! உம்ம பொண்ணு இந்த வீட்டுல ஒரு துரும்பை நகர்த்துறதில்ல… வாயாடாமயாச்சும் இருக்கலாமில்லே…! பெரிய மகாராணின்னு நெனப்பு போல்ருக்கு…அசடு…சரியான அப்புண்டு…!

            இந்தாள்ட்டப் போய் தான் ஏன் இத்தனை புலம்பணும்…? என்று திடீரென்று தோன்றியது திருஞானத்திற்கு. ஆத்தமாட்டாமல்  அழுது புலம்பிக் கொண்டிருக்கிறோமோ என்று நினைத்தார். ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அந்தப் பொண்ணை, அவர் மருமகளைப் பார்க்க நேரும்போதெல்லாம் அநியாயத்துக்குக் கோபம் வந்தது. என்னமாவது தப்புத் தண்டாவாய்ப் பேசி விடுவோமோ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார். இடம் அகன்றார். சரிக்குச் சமமாய் அசட்டுப் பிசட்டு என்று பேச இவருக்கு விருப்பமில்லை. காரியமாய்  ஒரு வார்த்தை பேச அந்தப் பெண்ணுக்கும் தெரியவில்லை. அது வாயைத் திறந்தாலே எதுவும் பொருத்தமாயில்லை. பாந்தமாயில்லை. சரி…போகப் போகச் சரியாகும் என்று பார்த்தால், எகிறி எகிறிப் பேசுவதும், அநாவசியமாய் வார்த்தையை விடுவதும், பெரியவர்களை மதிக்காத போக்கும், எதைச் சொன்னாலும் தப்பர்த்தம் பண்ணிக் கொள்வதும், தூக்கியெறிஞ்சு பேசுவதும், நா எங்க வீட்டுக்குப் போறேன் என்று சூட்கேஸை எடுத்துக் கொண்டு கிளம்புவதும், சொல்லாமல் கொள்ளாமல் படியிறங்குவதும்….அப்பப்பா….அது இந்த வீட்டில் காலடி வைத்த நாள் முதலாய் நிம்மதி என்பது அறவே இல்லாமல் போனது என்பதுதான் சத்தியம்.

            தொட்டதற்கெல்லாம் என்ன அப்பன்கூட ஃபோன்? அந்தாள்தான் இந்தப் பெண்ணைக் கெடுக்கிறான். அதுதான் நிஜம்.  நீ அப்டி செய்…இப்டி செய்….என்ன சாப்பிட்ட…எங்க உட்கார்ந்த…எப்ப எழுந்திரிச்ச…எப்ப வெளிக்குப் போன…என்பது முதற்கொண்டு கேட்கிறான் அந்த திராவை. இன்னொரு வீட்டுக்கு என்று அனுப்பியாயிற்றே…பொத்திக் கொண்டு கிடப்போம் என்கிற முதிர்ச்சி வேண்டாமா? தினசரி என்ன பேச்சு மணிக்கணக்காய்? -ஆத்திரம் தீரமாட்டேனென்கிறது இவருக்கு. இப்படித் தப்புப் பண்ணிட்டமேன்னு மனசு குமுறுகிறது.

            உம்ம பொண்ணு இன்னைவரைக்கும் எங்க வீட்டுப் பொண்ணா இல்லய்யா….உம்ம பொண்ணாத்தான் இங்க வளைய வந்திட்டிருக்கு. நீர்தான் ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை பேசுறீரே? கட்டிக் கொடுத்த பொண்ணுகிட்ட என்ன தெனமும் பேச்சு? அது எங்க வீட்ல கலக்க வேண்டாமா? எங்க வீட்டுக்குப் பொருந்தின பொண்ணா மாற வேண்டாமா? கோத்திரமே மாறிப் போச்சேய்யா…அப்புறம் நொய் நொய்னு தெனமும் பேசிட்டேயிருந்தீர்னா?  அது உம்ம பொண்ணுக்கு வேணும்னா ஆனந்தமா இருக்கலாம். எங்களுக்கு நொய் நொய்தான். நீர் உம்ம பொண்ணைக் கெடுக்கிறீர்…அத முதல்ல புரிஞ்சுக்கும்…சொல்லிப்புட்டேன்….- பொளந்து கட்டினார் திருஞானம்.  இத்தனையையும் நேரில் பேச முடியுமா? முகத்துக்கு முகம் பார்த்துப் பேசி ஆகுமா? பொழிந்து தள்ள ஃபோன்தான் எவ்வளவு வசதி?

            போதும் விடுங்க….இன்னொரு நாளைக்குப் பேசிக்கலாம். ஃபோனை வைங்க…. – திரிவேணி வந்து பிடுங்கினாள். அவளுக்கு பயம். ஏதேனும் தாறுமாறாய்ச் சண்டை வந்து விடுமோவென்று. பையன் வாழ்க்கை கெட்டுப் போகுமோ என்று அஞ்சுகிறாள். அந்தப் பெண் இதையெல்லாம் எதையும் உணர்ந்ததாய்த் தெரியவில்லை.  தன் வாழ்க்கை போய்விடுமோ என்று அதுவல்லவோ பயம் கொள்ள வேண்டும்?

            அது சித்தம் போக்கு…சிவன் போக்கு என்று இருந்தது. ஆபீஸ் இருக்கும் நாட்களில் ஏழுவரை தூங்கி, பரபரவென்று அடித்துப் பிடித்து எழுந்து குளிக்காமலே ஆபீஸ் கிளம்பியது. சரி…சாயங்காலம் வந்தாவது குளிக்கிறதா என்று பார்த்தால்…ஊகும்….ஆடு, மாடு, காக்கா, குருவியெல்லாம் தெனமும் குளிச்சிட்டா இருக்கு? என்று சொல்லும் ஏதாச்சும் கேட்டால். அத்தனை புத்திசாலி. தினமும் சூரியோதயம் முன்பே எழுந்து காலைக் கடன்களை முடித்து, குளித்துப் புதுத் துணி அணிந்து, தலைசீவிப் பொட்டிட்டு…பூ வைத்து…ஊகும்…ஒரு எழவும் கிடையாது. அழுக்கு மூட்டை…சண்டி மாடு…மண் குதிரை….இன்னும் என்னதான் சொல்வது? வீட்டுக்கு வந்த மருமகளை, பையன் பெண்டாட்டியை இப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறதே என்று ஆதங்கமாய்த்தான் இருக்கிறது. சொல்லாமலும் முடியவில்லை. குறைந்தபட்சம் நானும் என் பொண்டாட்டியுமாவது இப்படிப் பறிமாறிக்கொள்ளாவிட்டால் எங்களுக்கே பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயப்படுகிறோம்.

            பையனுக்கு எங்கள் நிலைமை தெரியும். வேறு வழி? என்னை என்ன பண்ணச் சொல்றே? வச்சு ஓட்டித்தான் ஆகணும்…காலப் போக்குல சரியாகாதாங்கிற நம்பிக்கைதான்…. அவன் பொறுமை யாருக்கும் வராது. அவன் குணத்துக்கு நிச்சயம் எல்லாம் சரியாகும் என்றுதான் எங்களுக்குத் தோன்றியது. காலம் எல்லா ஏற்ற இறக்கங்களுக்கும் பதில் தருமே…! ஈஸ்வரா…அவனைக் காப்பாற்று….என்று மானசீகமாய் அழுதோம். ஆனாலும் ஆதங்கம் தீரவா செய்கிறது? அவ்வப்போது வெடிக்கிறதே…! அடக்க முடியவில்லையே…! அந்தப் பெண் என்ன திருந்தியா விட்டது? இன்னும் அதே லட்சணம்தானே? கொஞ்சமாச்சும் ஒரு மாற்றம்? ஊகும்….நாமதான் மாறணும்…இல்லன்னா மண்டையப் போடணும்…அப்பத்தான் இதுக்குத் தீர்வு…!

            எங்களுக்கும் உடம்பில் தெம்பில்லை. கோபப்படவும், வருத்தப்படவும் கூட மனுஷனுக்கு உடற்தெம்பு வேண்டும். அப்பொழுதுதான் படுக்கையில் விழாமல் நடமாடிக்கொண்டு அவ்வப்போது இப்படி வயிறெரிய முடியும். நாங்கள் நாளுக்கு நாள் நறுங்கிக் கொண்டிருந்தோம். எங்களுக்கே தெரியத்தான் செய்கிறது. காலம் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வரும் என்று பார்த்தால் அது என்று வருவது? நாங்கள் என்று பார்ப்பது?

            சமா ஒரு கிறுக்கன் மாட்டினான்…இதுதான் சந்தர்ப்பம்னு ஒரே அமுத்தா அமுத்தி ஆளத் தள்ளி விட்டாச்சு…நல்ல எடமாவும் போச்சு…பிக்கல் பிடுங்கல் இல்ல…சொந்த வீடு…இங்க ஒண்ணு…ஊர்ல ஒண்ணு…அது போக வளமான சேமிப்பு….சொந்தத்துலர்ந்து இன்னும் ரெண்டு வீடுக வந்து சேரும்னு வேறே சொல்றாங்க…முடியுமானா நாம கூட நாளைக்கு அந்த வீடுகள்ல ஒண்ணப் பிடிச்சுப் போய் குடியிருந்துக்கலாம். வாடகை மிச்சம்…தட்சிணா….நீ அதிர்ஷ்டக்காரன்டா…கொடுத்து வச்சவன்டா…உன் பொண்ணை விட நீதான்டா அதிர்ஷ்டசாலி….-சம்பந்தி தட்சிணாமூர்த்தி நிச்சயம் இப்படியெல்லாம் நினைத்துத் தனக்குத்தானே மகிழ்ந்து கொள்வார்.அதிலொன்றும் சந்தேகமில்லைதான். அவர் பாடு கொண்டாட்டம்தான். தராதரம் அவ்வளவுதான். தரம் கெட்டவனின் சிந்தனை வேறு எப்படியிருக்கும்?

            தங்களுக்குத்தான் ஏமாற்றமாய்ப் போயிற்று. நாங்க வரதட்சிணைன்னு எதுவும் கேட்க மாட்டோம். நீங்க விருப்பப்பட்டதைச் செய்யுங்க…நீங்க உங்க பொண்ணுக்குச் செய்யப் போறீங்க…நாங்க என்ன சொல்றது…கேட்குறது…மத்தப்படி கல்யாணத்த மதிப்பா, மரியாதையா. கௌரவமா நடத்திக் கொடுங்க…அது போதும்….- இப்படி விட்டுக் கொடுத்துப் பேசியதுதான் அந்தாளுக்கு ஏத்தமாப் போச்சு போல்ருக்கு…எவர்சில்வர் பாத்திரமா செய்முறைகள அடுக்குவாங்கன்னு பார்த்தா, அத்தனையையும் பிளாஸ்டிக்குலல்ல அடுக்கிப்புட்டான்…எவனாச்சும் அப்டி செய்வானா? பிளாஸ்டிக்கையே ஒழிக்கணும்னு அரசாங்கம் சொல்லிட்டிருக்கிற இந்தக் காலத்துல, ஒழிக்க வேண்டாம்…எங்கிட்டக் கொடுங்கன்னு போய் அள்ளிட்டு வந்த மாதிரில்ல செய்துப்புட்டான்….இந்த லட்சணத்துல அட்வைஸ் வேறே…

            உங்க ஒய்ஃப்புக்கு நீங்க ஃபினான்சியல் ஃப்ரீடம் கொடுக்கணும்…இது அந்தக் காலமில்லே….ஐ.டி. பீரியட் இது….உலகமயமாக்கல்னு எல்லாமும் வளர்ந்து வளர்ந்து வானத்த எட்டிக் கிடக்கு…இப்போ பெண்களோட இயக்கம்கிறதே வேறெ லெவல்….அத நீங்கதான் புரிஞ்சிக்கணும்…..-ஏண்டா மடையா…எங்கிட்டப் பேசுடா…! என் பையனுக்கு நீ அட்வைஸ் பண்ற அளவுக்கு அவனை நான் வளர்க்கலே…! அவனுக்கு இருக்கிற பொறுப்பான சிந்தனைல பத்து பர்ஸன்ட் கூட உன்கிட்டே கிடையாது. அது புரியுமா உனக்கு? சம்பந்தியாரே…வாயை அடக்கும்…! – குமுறினார்.

            ஃபினான்சியல் ஃப்ரீடம்…மண்ணாங்கட்டி….அதான்யா உன் பொண்ணு இப்படித் திரியது…..பியூட்டி பார்லர் போயி மூவாயிரம், நாலாயிரம்னு செலவு பண்ணிட்டுத் தலையைக் குறைச்சு விரிச்சிப்போட்டுட்டு திரியுது…உதட்டுக்கு லிப்ஸ்டிக் இல்லாம அம்மா இருக்க மாட்டாக போல்ருக்கு…எந்தக் கலாச்சாரத்தய்யா வீட்டுக்குள்ள கொண்டு வந்து புகுத்துறது? அறிவு வேண்டாம்? இஷ்டத்துக்குப் டைட் பேன்ட், பனியன்னு போட்டுக்கிட்டு, பிதுக்கிட்டுத் திரியுதுங்க…ஏன்யா பின்னால வந்து ஆம்பள தட்ட மாட்டான்? நீ ஒழுங்காப் போனா அவனும் போவான்…வா…வந்து தட்டுன்னு நீயே கூப்பிட்டேன்னா…? டெம்ப்டேஷனக் கௌப்புறதே இவங்கதானே? யாராச்சும் ஒரு ஆம்பள இவங்களப் பார்த்து தெனமும் உறாய் சொல்லணும்…இளிச்சு…இளிச்சுப் பேசணும்….இவ பல்லக் காட்டுறதப் பார்த்து அவன் தவிக்கணும்…பின்னாடியே வாடை பிடிக்கிறவன் மாதிரி தொரத்தணும்…ஓட்டல்ல போயி அவன் கணக்குல கண்டதையும் திங்கணும்…அப்புறம் நெஞ்சு கரிக்குதேன்னு அப்பன் ஆத்தாட்ட வந்து பொலம்பணும்…தொண்ட சரியில்ல…வகுறு வலிக்குது…ன்னு படுத்து உருளணும்….வீடே தூங்குதேய்யா இந்த மாதிரிப் பொம்பளைங்கனால…இன்னைவரைக்கும் நீ என்ன சம்பாதிக்கிற? எவ்வளவு வாங்குற? ஏதாச்சும் சேமிக்கிறியா…? மாசங்கூடி உனக்கு என்ன செலவாகுது? ஏதாச்சும் ஒரு வார்த்தை கேட்டிருப்போமா …? மகனே உன் சமத்து, மகளே உன் சமத்து, தம்பதிகளே உங்கள் சமத்து…ன்னுதானே இருக்கோம். எங்களுக்குத்தான் எங்க பென்ஷனுக்கே செலவில்லையே…அதையும் உங்ககிட்டத்தானே கொடுத்துட்டுப் போகப் போறோம்…? வேறே எங்கயும்  தான தர்மம் பண்ண நிச்சயம் மனசு வராது. பிள்ளைகிட்டயே…இந்தா பிடின்னு கொடுக்கப் போறோம்…அதுக்காகவாச்சும் நாங்க சொல்ற நல்லதக் கேளுங்கடா..? உங்க எதிர்காலத்துக்காக எங்களோட வழி முறைகளைக் காது கொடுத்து வாங்குங்கடா…இல்லன்னா இப்ப நீங்க இருக்கிற நடைமுறைக்கு எதிர்காலத்துல பிச்சதான் எடுப்பீங்க…நிச்சயமாச் சொல்லிப்புட்டேன்….பாவிங்களா…என்னடா வாழ்க்கை வாழ்றீங்க…? நினைச்சபடியெல்லாம் வாழ்றதாடா வாழ்க்கை? கட்டுப்பாடுக் கோடுன்னு ஒண்ணு உங்க மத்தில கிடையவே கிடையாதா? வேண்டாத பொருளயெல்லாம் வாங்கிக் குவிக்க வேண்டியது…பிறகு அதுகளெல்லாம் பழசாப்போச்சுன்னு தூக்கி எறிய வேண்டியது….சமைக்க சங்கடப்பட்டுக்கிட்டு, சோம்பேறியா வெளில ஆர்டர் பண்ணித் திங்க வேண்டியது…பிறகு வயிறு சரியில்லன்னு சுருட்டி மடக்கிப் படுத்துக்க வேண்டிது…வீட்டுச் சமையல்ங்கிறதே உங்க வாழ்க்கைல கெடையவே கெடையாதா? எல்லா நாளும் வெளிலதானா? உடம்பு என்னத்துக்குடா ஆகும்? அடி முட்டாப் பசங்களா? பொம்பள  ஆம்பள வித்தியாசமில்லாம இப்படி தூமரதண்டியாத் திரியிறீங்களேடா…வயித்தெறிச்சல் தாளலடா…தாளல…..!!!

            மனது இன்னும் ஆறமாட்டேன் என்கிறது. அந்தப் பொண்ணு அடுப்படிப் பக்கம் எட்டியே பார்ப்பதில்லை. இவள்தான் மாங்கு மாங்கு என்றும் வேகு வேகுவென்றும் இன்னும் அடுப்பு வெக்கையில் வெந்து மாய்கிறாள். இருமிக்கொண்டே கொத்தடிமையாய்க் கிடக்கிறாள்.

            நான் பண்றேம்மா…இன்னைக்கு சமையல் நான் பார்த்துக்கிறேன்…கொஞ்சம் வித்தியாசமாச் சமைப்போம்…காலைல பூரி மசால் பண்ணுவோம். மத்தியானம் வெஜிடபிள் ரைஸ் வைக்கிறேன்…வற்றல் பொரிக்கிறேன். ஏதாச்சும் ஒரு காய் பண்றேன்….-சனி, ஞாயிறாவது அப்படி வந்து நிற்கும் என்று ஆன மட்டும் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் திரிவேணி. ஊகும்…அது வாயே திறக்கவில்லை. எல்லாமும் கற்பனையில்தான் இருக்கிறது.  ஒரு பேச்சுக்கேனும் காய் நறுக்கிறேம்மா நானு..என்ன காய் வைக்கப் போறீங்க…சொல்லுங்க…எடுத்து நறுக்கிறேன்…என்று ஒரு வார்த்தை இல்லை. எங்கே வந்து நின்றால் ஒட்டிக் கொள்ளுமோ…அப்படியே தொடர்ந்து விடுமோ….என்று பயப்படுகிறதோ என்னவோ…? அலுங்காமல் குலுங்காமல்…அப்டியே உடம்பை அசைத்து அசைத்து (அசைக்கவாவது செய்கிறதே…அசைக்கிறதா அல்லது அதுவாக அசைகிறதா?) தேர் மாதிரி உருண்டால் போதுமா? என்ன திமிர்? நூறு நூத்தம்பது பவுனோட வந்து இறங்கியிருக்கிறதா? அல்லது தங்கத்தாரகையா? சாதாரண அறிவு கூட இல்லாத சராசரிக்கும் கீழான ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணுக்கு என்ன இவ்வளவு நிமிர்வு? சகஜமாய் இருந்துவிட்டுப் போக வேண்டிதானே? குடும்பத்தில் நிம்மதிதானே முக்கியம்? அது இது வந்த நாள் முதல் கெட்டுப் போனதே?

            என்னதான் முடிவு? இப்படியே போய்க்கொண்டிருந்தால்…இதற்கு முடிவுதான் என்ன? பெற்றோர் செய்த பாவம் பிள்ளையின் தலையில் என்பார்களே? என்ன பாவம் செய்தேன் நான் என் பையன் இப்படி அனுபவிப்பதற்கு? எந்த விதி இந்தச் சதியைச் செய்தது?என் பையன் சதீஷூக்கு நானே இந்தச் சதியைச் செய்து விட்டேனா? புத்தி பிரண்டு விட்டதா எனக்கு?  நெஞ்சம் விம்மியது திருஞானத்திற்கு.

            அப்பப்போ இப்படி வயித்தெரிச்சலக் கொட்டினா…அதுவும் நாளடைவுல அந்தாளுக்குப் பழகிப் போயிடும். வழுக்கு மரம் மாதிரி ஏற வேண்டியது…இறங்க வேண்டியது…இதான் பொழப்பா…? முடிவேயில்லையா? காலம் கருணை செய்யாதா? -ஃபோனைக் கட் பண்ணியவர் இதுகூட இன்று பேசியிருக்க வேண்டாமோ? என்று எண்ண ஆரம்பித்தார். தன் மீதே பரிதாபம் ஏற்பட்டது அவருக்கு. உலகம் அவரைப் பார்த்து எள்ளி நகையாடிச்  சிரிப்பது போலிருந்தது.  ஒரு நல்ல  சாதுவான பையனின் வாழ்க்கையைக் கெடுத்து விட்டோம்…என்று மனம் குமுறியது. அவன் கூடவே இருந்த அவன் பாரத்தைக் குறைப்பதே இனி மீதி வாழ்க்கையின் லட்சியம் என்று எண்ணலானார் திருஞானம்.

            மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் வாசலில் வந்து தோள்துண்டால் தரையை ரெண்டு தட்டுத் தட்டி சாலையைப் பார்த்தவாறே அமர்ந்து கொண்டார்.  ஒரு தெரு நாய் அருகில் வந்து கொஞ்ச நேரம் அவரையே பார்த்துக் கொண்டு நின்று விட்டுக் கிளம்பிச் சென்றது. நிற்க நேரமில்லாத அந்த நாயையே வைத்த கண் வாங்காமல் பரிதாபமாய்ப்  பார்த்துக் கொண்டிருந்தார் திருஞானம்.    அதைவிடக் கேவலமானதாய்த் தன் பிழைப்பு ஆகிப் போனது என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.

                                                ---------------------------------

                                                ----------------------------------          

           

           

 

              

 

  சிறுகதை           ஆவநாழி -ஜனவரி-பிப்ரவரி 2025 இதழ் பிரசுரம் “காளான்கள்…!”             ஆ ளாளுக்கு வந்து நின்றார்கள். எங்கிருந்துதான் ஃப...