26 பிப்ரவரி 2019




 

உஷாதீபன்-வாசிப்பனுபவம்
நாவல் என்பது ஒரு மிகப் பெரிய கலை உருவம். அது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தின் நிகழ்வுகளையும்மக்களின் வாழ்வியல் முறைமைகளையும்சமுதாய மாற்றங்களையும்பிரதி பலிக்கக்கூடியதாக அமைய வேண்டும். ஒரு நாவலைப் படைப்பது என்பதில் உள்ள சவால்கள் அநேகம். இன்றும் கூட வெறுமே கதை சொல்வதுதான் நாவல் என்பதாகக் கருதப்படு கிறது.அதையே சுருக்கிச் சொன்னால் அது விமர்சனமாகி முடிந்து போகிறது. ஒருகால கட்டத்தின் நிகழ்வுகளின் கண்ணாடியாகப் பிரதிபலிக்க ஆரம்பித்துவெறுமே கதைசொல்லி நகர்த்திக் கொண்டே சென்று எந்தவித அதிர்வுகளும் இன்றிபாதிப்புகளுமின்றிசலனமில்லா மல் வெறும் சம்பவங்களாக நகர்ந்துஒரு கட்டத்தில் அதுவாகவே நொண்டி அடித்து நின்று போய் நாவல் என்கிற பெயரோடு முடிந்து போன கதைகள் நிறைய உண்டு.

வாசிப்பு அனுபவத்தினாலும்எழுதும் ஆர்வத்தினாலும்எழும் உந்துதலும் வேகமும்ஒரு மிகப் பெரிய தளத்திற்கான வழி வகைகளை ஆராயாமல்வெறும் சம்பிரதாயக் கதை சொல்ல லாக நகர்ந்துபடைப்புச் சீர்குலைவை உண்டாக்கி விடுகின்றன என்பதுதான் உண்மை. இந்த விபத்துக்கள் நிறைய நடந்துள்ளன.
ஆனால் இம்மாதிரிக் குறைகளெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற அத்யந்த முயற்சி களும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. இயன்றவரை இவற்றையெ ல்லாம் தவிர்த்துஒரு நல்ல முயற்சியாகஇதுவரை எவராலும் சொல்லப்படாத பொருளாகஇந்தச் சமுதாயத்திற்குச் சொல்லியே தீர வேண்டும் என்கிற முனைப்பாகதார்மீக நெறியோடுதீப்பொறி பறப்பதுபோல் சில முயற்சிகளும்திடீரென்று தோன்றி நம்மைக் கலங்கடித்து விடுகின்றன என்பதை இலக்கிய உலகிலான தொடர்ந்த அவதானிப்புகளும்வாசிப்பனுபவமும் உள்ள முதிர்ந்தவாசகர்களும் அறிய நேர்ந்து விடுகிறது. அப்படி வந்திருப்பதுதான் எஸ்.அர்ஷியா எழுதிய பொய்கைக்கரைப்பட்டி என்னும் நாவல். இந்த நாவல் என் பார்வைக்கு உடனே படிக்கக் கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படிச் சொல்வதிலும் ஒரு இலக் கியவாதியை மனம் திறந்து வெளிப்படையாகசத்தமாகப் பாராட்டுவதிலும்தான் மனம் திருப்தி யடைகிறது.

இந்த நாவலின் ஆசிரியர் எஸ்.அர்ஷியா தனது முதல் நாவலான ஏழரைப் பங்காளி வகையறாஎன்கிற படைப்பிற்கே தமிழக அரசின் முதல் பரிசைத் தட்டிச் சென்றவர். நிறையச் சிறுகதைகளும்கட்டுரைகளும் எழுதியபத்திரிகை அனுபவமும் கொண்ட படைப்பாளி. வெகு காலமாக எழுதிக் கொண்டிருக்கக் கூடிய பலதேர்ந்த படைப்பாளிகள் இன்னும் இங்கே நிறையப் பேசப்படாமல் இருக்கிறார்கள். நல்ல ருசியுள்ள உணவு கிடைக்கும்பொழுது நம்மை யறியாமல் அதன் சுவையில் மயங்கி சற்று வயிறு முட்டவே உண்டு களிப்பதைப் போலநல்ல எழுத்துக் கள் அடையாளம் காணப்படும்போது வாய் நிறையமனம் நிறையச் சத்தமாகச் சொல்லிப் பாராட்டலாமே!

நாவலின் களம் மதுரைக்கு அருகேயுள்ள புறநகர்பகுதியான அழகர்கோயில். அழகர் மலை அடிவாரத்தின் இயற்கை சார்ந்த இதமான பசுமையான சூழல்நம்முன் விரிக்கப்பட்டு,பொய்கைக்கரைப்பட்டியாகநாவலின் களமாகஎடுத்த எடுப்பிலேயே தீர்மானமாக முன் வைக் கப்படுகிறது. ஒரு திரைப்படத்தின் முதல் காட்சியாகப் படம் இப்படித்தான் துவங்க வேண்டும் என்கிற முடிவில் கஜேந்திர குமாரின் இரு சக்கர வாகனம் (ஓட்டை ஸ்கூட்டர்தான்) அந்தப் பகுதியின் ஒரு டீக்கடைக்கருகே சென்று நிற்கும்போதுகண்முன்னே விரிந்த அடர்ந்து படர்ந்த அந்த வயதான வேப்பமரத்தோடு சேர்த்து காமிராவின் கோணங்களை மென்மையாக நகர்த்தி ஓடவிட்டால் அது `டுபு டுபு`வென்ற ஓசையோடு வந்து நிற்கும் அந்த வாகனத்தில்தான் போய் முடியும்.
கதையோடு சேர்த்து நம்மையும் கூடவே வழி நெடுக அழைத்துச் செல்ல ஆசிரியர் அங்கேயே முடிவு செய்து விட்டது புலனாகிறது. சொல்லப் போகும் விஷயம் ரியல் எஸ்டேட் பிஸினஸ் என்பதாக மனத்தினில் நமக்கு உதிக்கும்போதே அதன் தப்புத் தாளங்களும்தகிடுதத் தங்களும் புகுந்து புறப்பட்டால்தானே இந்த நாவல் சிறக்கும் என்பதான ஒரு எதிர்பார்ப்பும்தவிப்பும் எழ, ‘அதைப் பற்றியெல்லாம் நீங்க ஏன் கவலைப் படுறீங்கபேசாம என் கூட வாங்கஉங்கள எல்லா எடத்துக்கும் நானில்ல கூட்டிட்டுப் போறேன்’ என்று தைரியமாக நம்மை அழைத்துச் செல்கிறார் படைப்பாளி. அவருக்கு இருக்கும் தைரியம் படிக்கும் வாசகனுக்கும் கண்டிப்பாக இருக்குமேயானால் இந்தச் சமுதாயக் கேடுகளுக்குகேள்வி கேட்கப்படாத அவலங் களுக்கு,சரியான சவுக்குய்யா இது” என்று சத்தமிட்டு ஆரவாரம் செய்யத்தான் தோன்றும்.
சமுத்திரக்கனி என்கிற ஒரு கையாள் கஜேந்திர குமாருக்கு புரோக்கராக அமைவதும்அவர் மூலம் அவரின் வீட்டு மனை விற்பனைத் தொழில் வெகு சீக்கிரம் பெருகுவதும்பல இடங்களில் பலரும் இப்படித்தான் பெருகிக் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக் கும் முன்பே திடுமென சமுத்திரக்கனியை முதல் அத்தியாயத்திலேயே வெட்டிச் சாய்த்திடுகை யில் நாவலின் முதல் அத்தியாயத்திலேயே ஒருவனைக் கொன்று போடுவதற்குத் தீர்மானித்து விட்ட ஆசிரியரை நினைத்து நமக்கே சற்று பயமாகத்தான் இருக்கிறது.
இப்படியான வில்லங்கங்களெல்லாம் உள்ள ஒரு தொழிலுக்கு ஏன் மெனக்கெட வேண்டும் என்பதான ஒரு எண்ணமும் மெலிதாக நமக்குத் தலையெடுக்கிறது. ஆரம்பமே சிக்கலானாலும்ஒருவன் அசராமல் எப்படித் தன்னை மென்மேலும் காலூன்றி வளர்த்துக் கொள்கிறான் என்பதற்கு கஜேந்திரகுமார் ரியல் எஸ்டேட் அதிபர் ஒரு தொழில் நேர்த்தியான முன்னுதாரண மாகத் திகழ்கிறார்.

அவரின் எல்லைகள் விரிவதும்புதிதாக ஒருவர் அவருக்கு மீடியேட்டராக அமைவதும்லெவின்ஸ்கி கார்டன் என்கிற ஒரு மிகப் பெரிய திட்டம் அவரின் மனதில் உருவாகி வளர் வதும்அதனை முழுமையான ஒன்றாக உருவாக்க அவர் பழக்கம் கொள்ளும் பெரிய மனிதர் களும்முக்கியப் புள்ளிகளும்எல்லோருமாகச் சேர்ந்து அவரின் வாழ்வை வளமாக்கி நிற்பது மாக நாவல் படிப்படியாக நம் கண்முன்னே விரியும் போது நமக்குத் தெரியாதநம்மால் அறியப் படாத வெவ்வேறு தளங்கள் எப்படியெல்லாம் தன்னின் ஆக்டோபஸ் கரங்களை விரித்துப் பரந்து கொழித்து விஸ்வரூபமாக நிற்கிறது என்கிற உண்மை நம்மைப் பிரமிக்கத்தான் வைக் கிறது.
எடுத்துக் கொண்ட களம்சமுதாயத்திற்குச் சொல்லியாக வேண்டும் என்று நினைத்த முனைப்பான விஷயம்அதுபற்றி அவர் அறிந்து சேகரித்தவை அவற்றில் தவறு நேர்ந்து விடக்கூடாது என்று கருத்தாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுசொல்ல நினைத்தசொல்ல வேண்டிய நிகழ்வுகளை எந்தவித செயற்கைப் பின்னணியும் இல்லாமல் யதார்த்த தளத்தில் நிறுத்தி மக்களின் வாழ்வியலோடு பொருத்தி மிக லாவகமாகசெயல் இயல்பாக அமைய அந்தக் கதாபாத்திரங்களோடு தானும் கூடவே நகர்ந்து வாழ்ந்து கழித்ததுபோன்ற அனுபவப பகிர்வைத் தனக்கும் ஏற்படுத்திக் கொண்டு படிக்கின்ற வாசகர்களுக்கும் ஏற்படுத்தி ஒரு புதிய வாழ்வனுபவத்தை நமக்குப் புகட்டுகிறார் நாவலாசிரியர்.

முழு நாவலையும் சொல்வது என்பது ஒரு நீண்ட கதைச் சுருக்கத்தை முன்வைத்தது போலவே ஆகிவிடும் அபாயம் உண்டு. நாவல் என்பது கதை சொல்வது அல்லவே. கதையை லாவகமாகக் கையாண்டுஒரு நீண்ட வாழ்வியலின் படிப்படியான மாற்றங்களைசமுதாய நிகழ்வுகளை அதன் போக்கில் அறிந்துணரச் செய்வதுதானே! அப்பொழுதுதானே காலத்தால் ஒரு படைப்பு நிற்கும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் போய்ச் சேரும் திறன் வேண்டுமே ஒரு படைப்பிற்கு. நாவல் என்பதன் உட் பொருள் அங்கேதானே முழுமை பெறுகிறது.
வேளாண்மையோடு காலம் காலமாய் ஒன்றிப்போய்விவசாயமே கதி என்று முன்னோர்கள் விட்டுப் போன கண்கூடான சொத்தான நிலங்களை அதுவே தங்கள் வாழ்வின் ஆதாரம் என்று வைத்துக் கொண்டு பிழைத்து வரும் அப்பாவி மக்களை அவர்களோடு கூடிக் குலவி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டுறவான மனிதர்களையே காய்களாகப் பயன்படுத்திப் பறிக்க முயல்வதும்படியவில்லை என்றால் தொடர்ந்து முயன்று கொஞ்சங் கொஞ்சமாகக் கரைக்க முயல்வதும்,எதுவுமே ஆகவில்லையென்றால் தான்தோன்றித்தனமாக வளர்த்துக் கொண்ட அடாவடித்தனத்தைப் பயன்படுத்தி பயமுறுத்துவதும்உயிருக்கே உலைவைத்து விடும் அளவுக்கான தந்திரோபாயங்களை முன்னிறுத்துவதும்நம் கையைக் கொண்டு நம் கண்ணையே குத்தப் பார்க்கிறார்களே என்று எதற்கு வில்லங்கம் என நினைத்து காலத்தின் கட்டாயத்தில் அமிழ்ந்துபோய் ஒதுங்கி ஓடுவதுமாக ரியல் எஸ்டேட் என்கிற ஏகபோகத்தில் சாதாரண அப்பாவி மக்களின் வாழ்க்கை நசிந்து போவதையும்தொழில் செய்வோரைத் தாறுமாறாக உச்சத்திற்குக் கொண்டு நிறுத்துவதையும்அந்த எதிர்பாராத உச்சமே அவர்களுக்கு அச்சங்களை விளைவித்து நிம்மதியைக் கெடுப்பதையும்ஒரு அளவுக்கு மேல் பணம் நிலை தடுமாறி வந்து கொட்டிக் கிடக்கும்போது கூடவே அபாயமும் சேர்ந்துதான் வரும் என்கிற உண்மையும் கதையின் சம்பவங்களாய்படிப்படியாய் விரிந்து ஒரு தேர்ந்த எழுத்தனுபவமுள்ள முதிர்ச்சியான நாவலாய் நம் முன்னே படர்கிறது இந்தப் பொய்கைக்கரைப்பட்டி.

இந்த வாழ்க்கையை மிக ஆழமாக அறிந்துணர்ந்துஅதனோடு சகஜமாக நெருங்கிய உறவு வைத்துக் கொள்வதுதான் நேசம் என்று கருதப்படுகிறது. இந்த நேசத்தை உருவாக்குவதே இலக்கியம். இந்த வாழ்க்கையைஇந்த மனிதர்களைஅவர்களின் அபிலாஷைகளைஅவர்களின் நெஞ்சின் ஈரத்தைஆழப் படிந்திருக்கும் நன்னெறிகளை நேசிப்பதாக இருக்க வேண்டியது இலக்கியத்திற்கான இலக்கணமாகக் கொள்ளலாம்.
மனிதர்கள் ரொம்பவும் யதார்த்தமாகவெகு சகஜ மனோபாவம் கொண்டவர்களாகக் காட்சியளிக்கிறார்கள். இலக்கியம் என்கிற புனைவின் ஊடாக வாழ்க்கையைப் பிரதிபலிக்க முனையும்போது நம்மையறியாமல் ஒரு இயல்பை மீறிய தன்மையும்தவிர்க்க முடியாத சிலதிரைகளும் விழுந்துவிடத்தான் செய்கின்றன. ஆனால் தவிர்க்க முடியாத அவற்றோடுதான் இலக்கியத்தை நாம் நேசித்தாக வேண்டியிருக்கிறது. யதார்த்த வாழ்க்கைக்கு இல்லாத ஒரு மேல் பூச்சை இலக்கியத்திற்குத் தந்து அதை நேசிப்பது வாழ்க்கையை நேசிப்பதற்குச் சமமா கிறது. நல்லவைகளும்கெட்டவைகளும் ஏராளமாக விரவிக் கிடக்கின்றன இங்கே. குணங் களும்குறைகளுமாகஉயர்வும் தாழ்வுமாக பிரிக்க முடியாத அங்கங்களாகக் காட்சியளிக் கின்றன. அதனால்தான் வாழ்க்கையை ஆழ அறிந்து அதனோடு நேசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது இன்றியமையாததாகிறது. அம்மாதிரியான நேச பாவங்களை மிகப் பெரிய வீச்சோடு முனைப்பாக முன்வைப்பதே இலக்கியம். அதை இந்தநாவல் மிகச் சரியாகவே செய் திருக்கிறது என்று சொல்லலாம்.

ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்பில் எந்தப் பொருளை மையப்படுத்த வேண்டும் என்பது முக்கியமாகிறது. காலங் காலமாக இந்த மண்ணில் வாழ்ந்து வரும் மக்களுடைய மரபு சார்ந்த நடைமுறைகள்அவர்களின் நம்பிக்கைகள்அன்றாட வாழ்க்கையில் அவர்களின் பழக்க வழக்கங்கள்அவர்கள் இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள்இவற்றையெல்லாம் தழுவி ஒரு படைப்பு இருக்க வேண்டும் என்பதுதானே உண்மை.
மக்கள் பல்வேறு தளங்களில் ஏழ்மைப்பட்டுக் கிடக்கிறார்கள். பொருள் சார்ந்த ஏழ்மைகலாச்சாரம் சார்ந்த ஏழ்மைஇப்படிப் பலவும் அவர்களை வாட்டி எடுக்கின்றன. பணத்தை மையப்புள்ளியாகக் கொண்ட வாழ்வின் பொது வெளிகளில் ஒழுக்கம் என்பது தேட வேண்டிய ஒன்றாகிக் கிடக்கிறது.பணம் என்கிற ஒரு காரணி வாழ்க்கையின் சகலவிதமான நன்னிலை களையும் சாகடித்து விட்டது என்பதுதான் சத்தியம். ஓங்கிக் குரலெடுத்துப் பேசும் பேச்சுக் களிலும்வீரியக் கட்டோடு எழுதும் எழுத்துக்களிலும் தடையின்றி வெளிப்படும் மனித நேயம் யதார்த்த வாழ்க்கையில் தேடியடையும் ஒன்றாகவும்அபூர்வமானதாகவும்தானே காணக் கிடைக்கிறது.

இவையெல்லாம் நம் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாமாநம் சிந்தனைகளில் பெருத்த மாற்றங்கள் நிகழாத வரையிலும் சமூக மாற்றத்தை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்சிந்தனைகள் கூர்மைப்பட்ட ஒரு சமூகத்தில்தான் ஒவ்வொருவரின் உணர்வுகளும் கூர்மையடைந்துபெருத்த விவாதங்களும் அதன் தொடர்ச்சியாக செயல்களும் நல்வடிவம் பெறுகின்றன. அப்படியான கூர்மைப்பட்ட ஒரு எழுத்தைத்தான் நாவலாக வடிவமைத்திருக்கிறார் அர்ஷியா. அது பொய்கைக்கரைப்பட்டி என்கிற கவிநயம்மிக்க பெயரோடு தலைநிமிர்ந்து நிற்கிறது.
நாவல் என்பது ஒரு சமூகச் செயல்பாடாகப் பரிணமிக்க வேண்டும். காலத்தைத் தாண்டி நிற்க வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்தின் பல்வேறு மட்டத்தினருக்கும் அது பயன்படக் கூடியதாக இருக்கும். இந்தச்சமூகத்தின் ஒருகுறிப்பிட்ட தளத்தில் பதுங்கிக் கிடக்கும் பொய்மை களைக் கட்டவிழ்த்து அம்பலப்படுத்துகிறது இந்த நாவல். மனிதர்களின் பொய்முகங்களைக் கிழித்தெறிவதோடுஒவ்வொரு மனிதருக்குமிடையேயான மாயத்திரைகளையும் அறுத்தெறி கிறது. மிருகங்கள் தாங்கள் வாழ்வதற்காக ஒன்றையொன்று அடித்துத் தின்று ஜீவிக்கின்றன. ஏறக்குறைய மனிதர்களும் அப்படித்தானோ என்று நினைக்க வைக்கிறது. உயர்ந்தவன் இளைத் தவனை வளைத்துப் போட முயல்கிறான். படியவில்லை என்றால் அதற்கான மறைமுக அஸ்திரங்களைப் பிரயோகிக்கிறான். அந்த அஸ்திரங்களும் பலனளிக்கவில்லை யென்றால் மேலே ஒருபடிசென்று மிரட்டிபயமுறுத்தி அடிபணிய வைக்கத் தேவையான வித்தைகளைக் கையாள்கிறான். அதனிலும் அகப்படாதவர்களை இல்லாமல் செய்துவிடுவது என்கிற அளவுக்கான உச்சநிலை அக்கிரமங்களும் ஒருவனால் கையாளப்படுகின்றன. தனி மனிதச் செயல்பாட்டின் முரணான நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக நின்று காப்பது பணம் என்கிற மோசமான வஸ்து. அந்தக்காரணி அது வந்தவழி சரியில்லையென்றால் அதனுடைய செயல் பாடுகளும் சரியில்லாத வழிமுறைகளுக்குத்தான் ஒருவனை இட்டுச்செல்ல முடியும் என்பது இங்கே நிரூபிக்கப்பட்ட உண்மைகள். இதை இந்தநாவல் அதன் யதார்த்த வழியில் சர்வ சகஜமாகச் சொல்லிச் செல்கிறது.
இன்று வெளிவரக்கூடிய நாவல்கள் தொட்டுப் பேசாத விஷயங்களே இல்லை என்று கூறலாம். முன்னைக்கு இப்போது எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது இன்று பேசும் நாவல்கள். யதார்த்த வெளிதனில் தமிழ்ச் சமூகத்தின் முரண்பாடுகளையும்சாதிகள் சார்ந்த முரண்பாடுகளையும்படைப்பாளிகள் நாவலில் கொண்டுவர ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியான பரந்த வெளியைத் துணிச்சலோடு பேசும் நாவல்தான் பொய்கைக்கரைப்பட்டி.
நாவல் விமர்சனம் என்பது முழுக்க முழுக்க அந்தக் கதையைப் பற்றிப் பேசுவது என்பதாகக் கொள்கிறார்கள் பலர். ஒரு நாவலை அதன் தத்துவார்த்த தளத்திலிருந்து அமைதி யாக உள்வாங்கி அது ஏற்படுத்தும் விகசிப்பைப் பூடகமாக வெளிப்படுத்துவதும்அதன் பயன் பாட்டை வெளிச்சமாக்குவதும்தான் ஒருநல்ல நூலுக்கு நாம்தரும் உண்மையான மரியாதை யாக இருக்கமுடியும். அந்த நோக்கில்தான் இந்த நாவல் விமர்சனம் இந்த வடிவில் இங்கே முன் வைக்கப்படுகிறது. ஒரு நல்ல நாவலை எழுத ஒரு படைப்பாளிக்கு உரிமை என்றால் அதற்கான ஒரு சிறந்தகண்ணியமான விமர்சனத்தையும்ஒரு தேர்ந்த வாசகனால் முன் கொணர முடியும்தானேஅப்படியான வெளிப்பாடுதான் பரந்த மனத்தோடு முன்வைக்கப்படு கிறது.

நல்ல எழுத்துக்களைக் கண்டு கொள்ளுங்கள். மனதாரப் பாராட்டுங்கள். எடுத்துக் கொண்ட பொருள்அதில் தென்படும் அனுபவம்அந்தப் படைப்பிற்காக படைப்பாளியின் உண்மையான முயற்சிஅதில் உரத்துப் பேசப்படும் உண்மைகள்அதன் தேவைகள்இவை எல்லாமும் உணரப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். மனம் திறந்து ஒப்புக் கொடுங்கள் உங்களை. நிறைய விவாதங்களை உள் வாங்கிக் கொள்வதாக இருக்கிறது இந்தப் பொய்கைக் கரைப்பட்டி. வெவ்வேறு விதமான பார்வைகளை ஏற்படுத்துவதாக அமைகிறது. எல்லாவித மான விவாதங்களையும் விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொண்டுஅவற்றின் ஜனநாயகப் பண்புகளைத் தன்னகத்தே ஏற்றுக் கொண்டு நிமிர்ந்து நிற்பது ஒருநல்ல நாவலின் லட்சணமாக இருக்க முடியும். அப்படியான ஒரு பரிபூர்ண ஆனந்தத்தைதிருப்தியை இந்த நாவல் நமக்கு அளிக்கிறது.
யதார்த்தம் என்கிற தளத்திலேயே விடாது இயங்கும் இந்த நாவல் முழுக்க முழுக்க நல்உருப்பெற்ற முழுமையான ஒரு கலைவடிவம் என்பது உறுதி. அனைவராலும் படித்து அனுபவிக்க வேண்டிய ஒரு முக்கியமான நாவல்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

(அசோகமித்திரனின் “புண் உமிழ் குருதி“-சிறுகதை) ரசானுபவம்



நேசிப்பவர்களாலும் தீங்கு வரும்
---------------------------------------------------
(
அசோகமித்திரனின்புண் உமிழ் குருதி“-சிறுகதை) ரசானுபவம்
-------------------------------------------------------------------------
-------------
வாழ்க்கையில் உறவுகளால் நமக்குச் சங்கடங்கள் ஏற்படுவதுண்டு. கெடுதல்கள் நிகழ்வதுண்டு. அவுங்க நமக்குத் தீங்கு செய்வாங்களா? அப்புறம் உறவுங்கிறதுக்கு என்னதான் அர்த்தம்? என்று நம்பிக்கையோடு இருக்கும் நிலையில் எதிர்பாராவிதமாகச் சில நஷ்டங்கள் ஏற்பட்டு விடுவதுண்டு. போகட்டும்என்று விடுபவர் சிலர். அதையே மனதில் பகையாய்க் கொண்டு பழி தீர்க்கச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருப்போர் சிலர். பழிக்குப் பழி வாங்கினால்தான் மனசு ஆறும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். விடுபோனாப் போகுது….என்று உதறி, மறக்க முனைவோரும் உண்டு. மறந்து கைகோர்ப்போரும் இருக்கிறார்கள். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை. முதுமொழி நமக்கு இதை உணர்த்துகிறது.
உறவு அல்லாத வெளியிலும் இருந்து தீங்குகள் நேர்ந்து விடுவதுண்டு. நண்பர்களினாலும், நட்பு என்று அல்லாது வெறுமே பழக்கமுடையோராலும், என்றைக்கோ ஓரிரு முறை சந்தித்து மீளுவோராலும்….எதிர்பாராவிதமாய் நஷ்டங்கள் நம்மை வந்து அடையும் போது, விதி என்று நொந்து கொள்பவர்கள் உண்டு….யாருக்கோ, எப்பொழுதோ செய்த கெடுதலுக்கு இப்போது ஏற்பட்ட நஷ்டம் என்று உணர்பவர்கள் உண்டு.
மனதைச் சமன் செய்து கொள்வதற்கு மனிதர்களுக்குப் பக்குவம் வேண்டும். அதை எய்துவதற்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான அனுபவங்கள் வேண்டும். கிட்டிய அனுபவங்களிலிருந்து கிடைத்த உண்மைகளை உணர்ந்து மனதில் இருத்திக் கொள்ளும் நிதானம் வேண்டும். அது, கொஞ்சம் கொஞ்சமாய் சேகரம் ஆகி, பக்குவப்படுத்தி புடம் போட்ட தங்கமாய் மாற்றும் போது, மீதமுள்ள நாட்களில் ஒருவன் தனக்கு நேரும் துன்பங்களை, சங்கடங்களை, தீமைகளை தைரியமாய் மனத் துணிவோடு எதிர்கொள்ளும் பரிபக்குவத்தைப் பெறுகிறான். அந்த நிலையில் உலகம் இப்படித்தான் இருக்கும், மனிதர்கள் இவ்வாறுதான் இருப்பார்கள் இந்த மாதிரியெல்லாமும் நடக்கும் வாய்ப்புக்கள் உண்டுதான், இது நடந்தால் அது நடக்கும், அதை இவ்வாறுதான் எதிர்கொள்ள வேண்டும் என்கிற மெய்ஞான நிலையில் எல்லாம் கடந்தவனாக ஒரு மென்மையான புன்னகையோடு இந்த வாழ்க்கையை நகர்த்தும் இறைச் சிந்தையை அடைகிறான்.
அசோகமித்திரனின்புண் உமிழ் குருதிசிறுகதையைப் படித்தபோது இப்படி என்னென்னவோ நினைக்கத் தோன்றிவிட்டது. அசோகமித்திரனைப் படிக்கும்போதெல்லாம் முதலில் அவர் முகம் மனதில் தோன்றுகிறது எனக்கு. அது ஆயிரம் விஷயங்களைப் பேசுகிறது. சக மனிதர்கள் மேல் கொள்ளும் கருணை, பரிதாபம், இரக்கம், வருத்தம், எப்போதும் மனதில் படிந்திருக்கும் ஒரு சோகம் இதெல்லாமும் அவர் மனதில் எந்நிலையிலும் ஓடிக் கொண்டே இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
மேலே நான் சொன்ன உறவுகள், நட்புகள் அல்லாத வெளி மனிதர்களிடமிருந்தும்கூட நமக்குச் சங்கடங்கள், துன்பங்கள் வர வாய்ப்பு இருக்கிறதுதான். ஆத்மார்த்தமாய் நேசிப்பவர்களிடமிருந்தும், பிற உயிரினங்களிடத்தில் காட்டும் கருணை, அன்பு இவைகளுக்குப் பின்னாலும் நமக்கு ஏதேனும் நிகழ்ந்துவிடக் கூடும்தான்.
அப்போதும் அதனை ஜீரணித்து உலகம் இப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்து, எந்த வெறுப்பும் இல்லாமல் விலகும் தன்மை எத்தனை மனிதர்களுக்கு சாத்தியம்?
இந்தக் கதையில் வரும் பெரியவருக்கு அது சாத்தியமாகிறது. கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அவர் தனது கருணை நிலையிலிருந்து மாறவேயில்லை. முதலில் நமக்கு எப்படி அறிமுகமாகிறாரோ அதே நிதானத்தில், அன்பில் கடைசிவரை இருக்கவே செய்கிறார். இதை ஆழமாய் உணர்த்துவதற்கு அசோகமித்திரனின் அப்பழுக்கில்லாத யதார்த்தமான நடையழகு உதவுகிறது. ஒரு மனிதன் தானே அப்படி இருந்தால்தான் இந்த மன எழுச்சி உண்டாகும். அல்லாமல் அது சாத்தியமேயில்லை. எந்தவோரிடத்திலும் இம்மியும் அந்த யதார்த்தம் பிசகுவதில்லை அவருக்கு. அப்படி எழுதுவதற்கு மிகுந்த முதிர்ச்சி வேண்டும். அது ஆரம்ப காலத்திலிருந்தே அசோகமித்திரன் அவர்களிடம் இருந்து வந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது நமக்கு பிரமிப்பாகத்தான் இருக்கிறது. நுழையும்பொழுதே பல்கலைக்கழகமாய் உள்ளே வந்தார் என்று எப்படி நடிகர்திலகத்தைச் சொல்கிறோமோ அதுபோலவேதான் அசோகமித்திரனின் யதார்த்தப் பின்னணியும் மிகுந்த அனுபவம் செறிந்தது என்று உறுதியாய் எண்ண வேண்டியிருக்கிறது.
அவரது நடையைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அதை வார்த்தை வார்த்தையாக, வரி வரியாக அனுபவித்து வாசித்துத்தான் உணர வேண்டும். வீதியில் சென்று கொண்டிருக்கும் பற்பல மனிதர்களுக்கிடையே கலந்து அசோகமித்திரனும் நடந்து சென்று கொண்டிருந்தால் எப்படியிருக்குமோ அதுபோலவே அவரது படைப்பு மொழியும் மிக எளிதாக ஆனால் ஆழமாகப் படிந்து நம்மை கைகோர்த்து இழுத்துச் செல்கிறது.
ஒரு சிறுவன். தனபால் என்பது அவன் பெயர். பஸ்ஸில் கூட்டத்திற்கு நடுவே நின்று பயணம் செய்து கொண்டிருக்கிறான். முன்னால போமுன்னால போ என்று கண்டக்டர் கூச்சலிட இடைவெளி சற்றுமில்லாது, சிறு சிறு அசைவுகளோடு நிற்பவர்கள் நகர்கிறார்கள். நகர்கிறார்கள் என்று கூட அவர் சொல்லவில்லை. நிற்பவர் மத்தியில் சிறு சிறு அசைவுகள் உண்டாயின என்றுதான் சொல்கிறார். முன்னால் நகர இடமேயில்லை என்பதை அவர் அப்படிச் சொல்லும் பாங்கே அழகுதான்.
கையில் ஒரு சின்ன பெயின்ட் டப்பா வைத்திருக்கிறான் தனபால்.அது யார் மீதும் பட்டுவிடக் கூடாது என்று கவனமாகத்தான் நிற்கிறான். ஒரு நிறுத்தத்தில் ஏழெட்டுப் பேர் ஏறிவிட முன்னே நின்றவரின் வேட்டியில் பெயின்ட் தீற்றி விடுகிறது. அவர் சத்தம் போடுகிறார். அறிவிருக்கா? என்று கேட்கிறார். கூட்டத்துல இப்டி இடிச்சிக்கிட்டு, பெயின்ட்டோட நிற்கிறியோ? என்று கத்துகிறார். தனபாலை அருகே வந்து அமரச் சொல்கிறார் ஒரு பெரியவர். அந்த பெயின்ட் டப்பாவை என்னிடம் கொடு என்று வாங்கி காலடியில் வைத்துக் கொள்கிறார். அவனை அருகே அமரச் சொல்கிறார். இருவர் அமரும் இருக்கையில் மூவர் எப்படி? என்று சங்கடப்படுகையில் அந்த இன்னொருவர்நான் அடுத்த ஸ்டாப்புல இறங்கிடுவேன்நீ உட்காரு என்று எழுகிறார். தனபால் அமருகிறான். பேச்சு ஆரம்பிக்கிறது. கிழவர் அவனை விசாரிக்கிறார்.
எங்க போகணும்….பெயின்ட் பண்ணப் போறியா….பெயின்ட் உன்னோடதா…? என்று ஒன்றொன்றாகக் கேட்கிறார். தனபால் பதில் சொல்கிறான். பதினைஞ்சு ரூபாய் கூலி என்கிறான். மீதி பெயின்ட் இருந்தா தந்திடுவாங்கஅதை வித்திக்கிடுவேன்என்று விபரங்களைச் சொல்கிறான். தினமும் வேலை கிடைக்குமா, கிடைக்காதா? கான்ட்ராக்ட் ஆளுகளோட சேர்ந்துக்க வேண்டிதானே? என்று சொல்கிறார் பெரியவர். அது முடியாது என்கிறான். படிச்சிட்டே வேலைக்கும் போகிறேன். பாலிடெக்னிக்குல படிக்கிறேன்என்கிறபோது கிழவருக்கு அவன் மீது பரிவு அதிகமாகிறது. படிச்சிண்டே வேலையும் பார்க்கிறியா? என்று பாராட்டுகிறார்.
வைத்திருக்கும் பதினைஞ்சு ரூபாயில் பதிமூணை தங்கியிருக்கும் வீட்டோட சொந்தக் காரங்ககிட்டே கொடுத்திடுவேன்பணம் மிச்சமாச்சுன்னா ஊருக்கு அனுப்புவேன்தங்குறதுக்கு மட்டும்தான் பதிமூணு ரூபா….சாப்பாடெல்லாம் வெளில தான்….என்று பேசிக் கொண்டே வருகிறான்.
அவன் இறங்க வேண்டிய சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட் வருகிறது. இறங்கிக் கொள்கி றான். பஸ் கிளம்பிய பிறகு அவனது டிரவுசர் பையைத் துழாவுகிறான். வைத்திருந்த பதினைந்து ரூபாயைக் காணவில்லை. பஸ் பின்னால் ஓடுகிறான். அது வேகமாய்க் கடந்து விடுகிறது.
பசி கிள்ளுகிறது. எதிர் பஸ் ஸ்டாப்பில் போய் நின்று கொள்கிறான். அந்த பஸ் திரும்பி வந்து கொண்டிருக்கிறது. ஏறி கண்டக்டரிடம் ரூபாய் தொலைந்து போனதைச் சொல்லிக் கேட்கிறான். பஸ்ஸில்தான் விட்டேன் என்று தேடுகிறான். கண்டக்டரும் பஸ்ஸில் இருப்போர் சிலரும் தேடுகிறார்கள். பணமில்லை. பிக்பாக்கெட் கொடுத்திருப்பே….என்கிறான் கண்டக்டர். நான் பர்சுல வைக்கலியேஎன்று தனபால் கூறுகிறான். ஒரு கிழவர்ட்டப் பேசிட்டிருந்தியே அவர்தான் எடுத்திருப்பாருஎன்கிறான். இவனுக்கு அதிர்ச்சியாகிறது. இந்தக் காலத்துல யாரத்தான் நம்ப முடியுது….கிழவனாவதுகுமரனாவதுஎல்லாரும்தான் திருடுறாங்கஎன்கிறான் கண்டக்டர். இவன் சோர்வோடு கீழே இறங்கி விடுகிறான்.
நாட்கள் கழிகின்றன. ஒருநாள் பீச்சில் கண்ணகி சிலையருகே அந்தக் கிழவரைச் சந்திக்க நேரிடுகிறது. ஏய் கிழவாஅன்னிக்கு என் பணத்தை நீதானே திருடினேஎன்று கேட்டுவிட்டு அவர் எதிர்பார்க்கும்முன் ஓங்கி அடித்து விடுகிறான். அவர் கீழே விழ, சிலர் சேர்ந்து கொண்டு விபரம் கேட்டுஅவரை மொத்துகிறார்கள்.வேட்டி கிழிந்து, முகத்தில் காயம் பட்டுப் போகிறது கிழவருக்கு.
நான் எடுக்கலப்பாஉன் பணத்தை நான் எடுக்கலைஎன்று மட்டும் சொல்கிறார். எப்ப எடுத்தாருபர்சே போச்சாஎன்று ஆட்கள் கேட்கஇப்ப இல்லைமூணு மாசத்துக்கு முன்னாடிஎன்றவுடன் கூட்டம் மெல்ல விலகுகிறது. ஒரு போலீஸ் அந்த வழியே வர, என்ன கலாட்டா? என்று கேட்க, “நாங்க ஏதோ பேசிக்கிட்டு இருக்கோம் என்று அந்தப் பெரியவர் பதில் சொல்கிறார். போலீஸ் போய்விடுகிறான்.
கிழவருக்கு அடிபட்ட இடத்தில், முகத்தில் ரத்தம் கசிகிறது. வேட்டி கிழிந்திருக்கிறது. என்ன திடீர்னு இப்படி அடிச்சிட்டியே….நீ யாரு…? என்று கேட்டுவிட்டு, நினைவு வந்ததுபோல் பெயின்ட் அடிக்கிற பையன்தானே நீ? என்கிறார்.
தனபால் பேச விருப்பமில்லாமல் அமைதி காக்கிறான். அன்னைக்கு ரொம்ப அக்கறையா விசாரிக்கிற மாதிரி என் பணத்தை அடிச்சிட்டு போயிட்டேஎன்று பொருமுகிறான் தனபால்.
.
கிழவர் தன்னை வெளிச்சத்தில் நிறுத்திக் கொண்டு, “நான் அப்டியெல்லாம் செய்றவன் இல்லேப்பா….உன் பணத்தைத் தூக்கிண்டு போயிட்டேன்னா இப்டி ஊரைக் கூட்டி உதைக்க வச்சே…? எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா…. என்று நிதானமாய்ச் சொல்கிறார்.
தனபால் ஒன்றும் சொல்லாமல் நிற்கிறான்.
உன்னைப் பத்தி அப்புறம் நிறையத் தடவை நினைச்சுப் பார்த்திருக்கேன்என்னைத் திருடன்னு சொல்லி அடிச்சுப் போடுவேன்னு நான் நினைக்கலை… - என்கிறார்.
யார் என்ன கண்டாங்கஎன் பணம் போச்சு? என்று மட்டும் பதில் வருகிறது இவனிடம்.
நான் எடுக்கலைஎனக்குத் தெரியாதுஎன்று மறுபடியும் சொல்லும் அவரை உற்றுப் பார்க்கிறான் தனபால். அவர் கோபமில்லாதவராக இருந்தார் என்று எழுதுகிறார்.
என்னை நம்புப்பாஉன் பணத்தை நான் எடுத்திட்டுப் போகலை….எனக்கு ஒண்ணும் தெரியாதுஎன்று சொல்லிவிட்டு கிழவர் அங்கிருந்து மெல்ல விலகிப் போனார்என்று முடிக்கிறார் அசோகமித்திரன்.
அந்நிலையிலும் அவன் மீது கோபம் கொள்ளாத நிதானமும், கருணையும், உன்னைப் பத்தியே பல நாள் அதுக்குப் பிறகு யோசிச்சிட்டேயிருந்தனேஇப்படி ஆளைக் கூட்டி அடிச்சிட்டியே…? என்று வேதனை கொள்வதும்….என்னைத் திருடன்னு சொல்லி இப்டி அடிச்சிப்பிடுவேன்னு நான் நினைக்கவேயில்லை என்று வருத்தம் கொள்வதும்…..ஒரு மகானின் மனநிலையில் அந்தப் பெரியவர் நின்று பேசும் அந்தக் காட்சி நம்மை மனதை உருக்கி விடுகிறது. போலீஸ் வரும்போது, அடிபட்ட அந்த நிலையிலும், நாங்க ஏதோ பேசிட்டிருக்கோம் என்று சொல்வதற்கு எத்தனை முதிர்ச்சியான அனுபவம் வேண்டும் ஒரு மனிதனுக்கு. அந்த வார்த்தைகள் நம்மைச் சட்டென்று கலங்க வைத்து விடுகின்றன.
நாம் நேசிப்பவர்களாலும் நமக்குக் கேடு வந்து விடக் கூடும் என்பதை அசோகமித்திரன் தனது எளிய யதார்த்த நடையில் அழுத்தமாய் உணர்த்தி நிலை நிறுத்தும்புண் உமிழ் குருதிஎன்ற தலைப்பிலான இச்சிறுகதை…..அவரின் சிறந்த படைப்புக்களில் ஒன்று என்று உறுதியாகச் சொல்லலாம். .
-------------------
----------



  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...