27 அக்டோபர் 2021

ஆகாயத் தாமரை“-நாவல்-அசோகமித்திரன்-வாசிப்பு ரசனைக் கட்டுரை-உஷாதீபன்

 

“ஆகாயத் தாமரை“-நாவல்-அசோகமித்திரன்-வாசிப்பு ரசனைக் கட்டுரை-உஷாதீபன்       (நற்றிணை பதிப்பகம்-திருவல்லிக்கேணி, சென்னை-5)மற்றும் (கிழக்கு பதிப்பகம்,சென்னை)




     ந்தவிதத் திட்டமும் இல்லாமல் எழுதப்பட்டது இந்த நாவல் என்கிறார் அசோகமித்திரன். முழுக்க முழுக்க மனோதத்துவ ரீதியிலான எண்ண ஓட்டங்களும், உரையாடல்களும் கலந்து ஒரு பூடகமான மனநிலையிலேயே நாவல் நம்மை நகர்த்திச் செல்கிறது. அசோகமித்திரனின் எழுத்து மனதுக்குள் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்தி விடும் பலம் கொண்டது. நம் குடும்பங்களில் ஒருவரைப்பற்றி இவர் சொல்லியிருக்கிறார் என்று எண்ண வைக்கும். இம்மாதிரிச் சிலரும் நம் வீட்டிலும் உண்டே என்று தோன்றும். அவர்கள் படும் துயரங்கள் எல்லாம் இந்த மனிதருக்கு எப்படித் தெரிந்த்து என்று வியக்க வைக்கும். சாதாரண, எளிய மக்களின், அன்றாடங்காய்ச்சிகளின் துயரங்களும், கஷ்டங்களும் இவரை ஏன் இப்படி வதைக்கின்றன என்று எண்ணி, நம்மையும் சங்கடம் கொள்ள வைக்கும்.இவற்றையெல்லாம் நாமும் கவனித்திருக்கிறோம், ஆனால் மனதில் இருத்தியதில்லை என்பது புரியும். அதை ஒருவர் அவருக்கேயுரிய தனி மொழி நடையில் அமைதியாக, அழுத்தமாகச் சொல்லும்போது எப்படி உறைக்கிறது? என்ற எண்ணம் வரும். உலக நடப்புகளின் பல விஷயங்களுக்காக தன் மனதுக்குள் இவர் எவ்வளவு துயருறுகிறார், வேதனைப்படுகிறார் என்பதை நாவலின் ஏதேனும் ஒரு கதாபாத்திரமாவது வெளிப்படுத்தும்போது, அந்த எழுத்தின், விவரிப்பின் ஆழமான துயரம் நம்மையும் பற்றிக்கொள்ளும்.

     வெறும் கதை சொல்லல் என் வேலையல்ல. பொழுது போக்காய்ப் பக்கங்களை நகர்த்த வைத்தல் என் நோக்கமல்ல. ஒரு குறிப்பிட்ட நபரின், அவன் குடும்பத்தின் வாழ்க்கைப் பாடுகளை – அந்தந்தக் காலகட்ட சமுதாய நடைமுறைகளை , இயற்கை நிகழ்வுகளை, மாற்றங்களை, உறவுகளின், வெளி மனிதர்களின், வேலை செய்யும் நிறுவனத்தின் இப்படிப் பலரின் தொடர்புகளால் ஏற்படும் நன்மை, தீமை, லாபம், நஷ்டம், மகிழ்ச்சி, சோகம் ஆகிய பல்வேறு நிலைகளின் ஏற்ற இறக்கங்களை, பாதிப்புகளை உள்ளடக்கி, ஒருவனின் சிந்தனையைத் தூண்டுவதும், அவனை பொறுப்புள்ள மனிதனாக மாற்றுவதும், அவனால் சமுதாயத்திற்கு எந்தவிதக் கேடும் ஏற்படாவண்ணம் பக்குவப் படுத்துவதும், தீமைகளிலிருந்து விலகியிருக்கச் செய்தலுமான பற்பல அனுபவங்களை உள்ளடங்கிய மாற்றங்களை ஏற்படுத்துதலே என் எழுத்தின் தலையாய நோக்கம் என்பதை நமக்குள் ஆணித்தரமாய்ப் பதிய வைக்கிறார் அசோகமித்திரன்.

     ஒரு கதையை உண்டாக்கவில்லை, அது தானாய் இயல்பாய் நடந்த்து என்பதாகச் சொல்லி இந்நாவல் பயணிக்கிறது. நாயகன் வேலைக்காக அலைகிறான். யாராவது வாங்கித் தரமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பும் உள்ளது. அதுவும் அவர்கள் இஷ்டமாய், அதுவாக, தானாய் நடந்ததாய் இருக்க வேண்டும் என்பதுவும் அவனது விருப்பமாய் உள்ளது. தனக்கென்று உள்ள சிற கௌரவத்தை விட்டுக் கொடுக்க ஏலாமல் அதற்கு எந்தவகையிலும் பங்கம் வந்துவிடாமல் அதுவாக நடந்தால் நடக்கட்டும் என்று விலகி இருக்கிறான்.

     ஓவியக் கண்காட்சி ஒன்ற நடத்துகிறான் நாயகன். அதற்கு ஒரு வெளி உதவித் தூதுவர் ஏற்பாடு செய்கிறார். சிறப்பாகக் கண்காட்சி நடந்தேறுகிறது.  அக மகிழ்ந்து ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார் தூதுவர். அந்த விருந்து நடைபெறும் பிரம்மாண்டமான இடம், அந்த வளாகம், பெருத்த, படாடோபமான செலவினை உள்ளடக்கிய ஏற்பாடுகள், பல முக்கியப் பிரமுகர்கள் பங்கு கொள்ளும் நிகழ்வு மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தி நாயகனைப் பயமுறுத்துகிறது.

     உள்ளே செல்லவே அஞ்சி, தயங்கி, செக்யூரிட்டியால் தடுக்கப்பட்டு, பின் வேறு வழி ஏதேனும் உண்டோ என்று மானசீகமாய்த் தேடி, திரும்பி விடலாமா என்று யோசிக்கையில்  கடைசியில் அந்தத் தூதுவரின் பார்வைக்கே பட்டு, கைபிடித்து அழைத்துச் செல்லப்படுகிறான். வாழ்க்கையில் முதன் முறையாய் முற்றிலும் அவனுக்குப் பொருந்தாத அந்த இடம் அவனைக் கூச வைத்து, ஒதுங்கச் செய்து, பேச நா எழவிடாமல் ஊமையாக்கி, அந்தப் பெரியதனக்காரர்களின் சூழலிலிருந்து எப்படியாவது விலகி ஓடினால் சரி என்று அவன் மனம் பதைத்துக் கொண்டேயிருக்கிறது.

     சொல்லிக் கொள்ளாமல் வெளியேறி, அந்த வளாகத்தின் இன்னொரு விருந்து நடக்கும் பகுதியில் சென்று ஒன்றும் புலப்படாமல் மாட்டிக் கொள்கிறான். அங்குதான் அந்த தனவந்தரைச் சந்திக்கிறான். அவரோடு பேச  விருப்பமின்றி நழுவ நினைக்கையில் இழுத்து வைத்து அவனை வலியப் பேசப் பண்ணுகிறார் அவர். சூழலுக்கு ஏற்ப அவனை நடந்து கொள்ளச் செய்ய யத்தனிக்கிறார். நாயகன் ரகுராமன் தனக்குப் பொருந்தாத இடத்தில் வந்து சிக்கிக் கொண்டதாய் நினைத்து, அங்கிருந்து எந்தக் கணமும் வெளியேறத் துடிக்கிறான். அவனை அவரோடு சேர்த்து மது அருந்த வைக்க முயற்சிக்கிறார் அந்த செல்வந்தர் ராஜப்பா. மறுத்து விடுகிறான் ரகுராமன். எவ்வளவோ முயற்சித்தும் அவனைத் தன் வழிக்குக் கொண்டு வர முடியாத நிலையில் ரகுராமனை அவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.  அங்கிருந்தும் வெளியேறுகிறான் நாயகன். எப்பொழுது வேண்டுமானாலும், எதற்காகவேனும் நீ என்னை நாடி வரலாம் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறார் அவர்.

     நாயகன் வாழ்வில் அடுத்தாற்போல் மாலதி குறுக்கிடுகிறாள். அவள் தனக்கு உதவக்கூடும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறான் ரகுராமன். ஆனால் அவனைப் பலமுறை கேலிக்குள்ளாக்கும், விமர்சிக்கும் அவள், அவனுக்காக எதுவும் செய்யாமலேயே விலகிச் சென்று விடுகிறாள்.

     ஆரம்பத்தில் தன் சொந்த முயற்சியில் கிடைத்த சொற்ப சம்பளத்திலான வேலையில் அவனையறியாமல் நடந்தேறிவிட்ட ஒரு தவறுக்காக சஸ்பென்ட் பண்ணப்பட்ட நிலையில், மறுபடியும் ஒரு நல்ல வேலையில் அமருவதற்காக நாயகன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போகின்றன. வேலை எதுவுமற்ற நாயகனின் மன ஓட்டங்களை, அன்றாட வாழ்க்கையின் கஷ்டங்களை, அவன் தாயுடன் கூடிய வருத்தங்களை, மனமுருகி நினைத்துப் பார்ப்பதும், புழுங்குவதுமாய், வேதனையோடு கழிப்பதும், விரக்தியினால் தோன்றும் மன வெறுப்பும், யாரையும் நம்பத் தகாத தன்மையும், ஏமாற்றமும், தத்துவ ரீதியிலான சிந்தனையைக் கிளறி விடுகிறது நாயகன் ரகுராமனுக்கு.

     எந்த நிறுவனத்திலிருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டானோ அந்த நிறுவனமே அவனை மறுபடி அழைத்துத் தாங்குகிறது. முன்பிருந்த பணிக்கு வேறு ஒருவரை நியமனம் செய்து விட்டதாய்ச் சொல்லி, அதனிலும் மூன்று படி நிலைகள் உயர்ந்த ஸ்தானத்திலான ஒரு பதவியில் இவனை அமர்த்துகிறது. யாருக்கு இவனைப் பிடித்துப் போனதாய் – எந்த நேரமும் என்னை நீ அணுகலாம் என்று தன் கௌரவம் பார்க்காமல் – அந்த ஒரு விருந்து நாளில் பல பேர் முன்னால் சத்தமிட்டு, உரக்கச் சொன்னாரோ அந்தச் செல்வந்தரே திரு ராஜப்பா அவர்களின் சிபாரிசினால்தான் தனக்கு இந்த உயர்ந்த ஸ்தானத்திலான வேலையும், அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது என்பதை உணர்கிறான் நாயகன் ரகுராமன். அவர்களின் எதிர்பார்ப்புக்கும் மேலாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு அந்த நிறுவனத்தின் வெற்றிக்காக உழைக்கத் தன்னை முனைப்பாக நிறுத்திக் கொண்டு உழைக்க ஆரம்பிக்கிறான்.

     வேலை கிடைக்காத நாட்களில், தற்காலிகப் பணி நிறுத்தத்தில் இருக்கையில் ஏற்படும் மன உளைச்சல்களும், வெறுப்பும், ஏமாற்றமும், அதனால் விளையும் முரணான செயல்பாடுகளும், வீட்டில் அம்மாவுடன் ஒத்துழைக்காத, உதவாத போக்கும், வெளி நபர்களிடம் தோன்றும் அர்த்தமற்ற கோபங்களும், தடித்த வார்த்தைகளும் என ரகுராமன் அல்லாடுவது நாமும் இப்படியெல்லாமும் இருந்திருக்கிறோம்தானே என்பதாய்ப் பல இளைஞர்களின் அனுபவ எண்ணங்களைக் கிளறி விடக் கூடும். அதே சமயம் சுயமாய் நல்ல வளர்ப்பால் படிந்திருக்கும் இரக்கம், கருணை, நேயம் இவைகளும் அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கின்றன.

     வசதியற்ற, அன்றாட வாழ்க்கைக்கே ஆதாரமின்றித் தவிக்கும் மக்களைப் பார்க்கையிலும், அவர்கள் படும் அல்லல்களை நோக்குகையிலும், ஐயோ, இந்த மனிதர்கள் தங்கள் உடன் பிறப்புகளைக் கரையேற்ற, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள்....துயருறுகிறார்கள் என்று நாயகனின் மனம் படும் வேதனை நம்மையும் மிகுந்த சோகத்திற்குள்ளாக்குகிறது. ஒரு மனிதன் தன் சொந்த வாழ்க்கையில் இல்லாமையையும், வறுமையையும், பற்றாக்குறையையும் கண்ணுறும்போதுதான், அனுபவிக்கும்போதுதான், அடுத்தவர்களின் பசியும் பட்டினியும் அவலமும் அவன் சிந்தைக்குள் வருகிறது, உறுத்துகிறது என்பதைச் சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் அசோகமித்திரன்.

     ஆகாயத்தாமரை என்பது இல்லாத ஒன்று. இல்லாத ஒன்றைக் கூடப் பெயரிட்டு அழைத்துத்தான் சுட்ட வேண்டியிருக்கிறது. மனம் எவ்வளவோ கற்பனை செய்து கொள்ளலாம். விண்ணில் பறக்கலாம்...ஆகாயத்தை முட்டலாம்....நடப்பதுதான் நடக்கும், நடக்கும்போதுதான் நடக்கும்...ஆகாயத்தாமரை ஏதோ நிஜமானது போல...இருக்கு. ஆனால் அதற்கு ஆதாரம் கிடையாது. அது சாத்தியமானதும் கிடையாது....என்று வாழ்க்கையின் நிதர்சனத்தை நாவல் முழுக்கப் பரவ விட்டிருக்கிறார் அசோகமித்திரன்.

     இதையெல்லாம் சொல்லலாமா, அப்படிச் சொன்னால் நாவல் ஸ்வாரஸ்யப்படுமா?  என்று சந்தேகிக்கும், தயங்கும்விதமான மிக மிகச் சாதாரண விஷயங்களைக் கூட மனதில் வைத்திருந்து அவர் சொல்லிச் செல்லும் முறை...இவற்றையெல்லாம் அசோக மித்திரன் சொன்னால்தான் நன்றாக இருக்கும் என்று எண்ணிப் பெருமைப்பட வைக்கிறது.

                சைதாப்பேட்டை பாலத்தினடியில் இரவில் சலவையாளர்கள் துணி துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரவில்தான் துணி துவைப்பார்கள் என்று சொல்லக் கேள்விப்பட்டிருந்த ரகுராமன், பகலிலும் துணி துவைப்பதைப் பார்த்ததை நினைத்துக் கொள்கிறான். அத்தோடு போகவில்லை. அவர் துவைக்கும் துணிகளில் என் சட்டையும் பேன்ட்டும் இருக்கலாம். ஐயா...சற்று மெதுவாக அந்தக் கல்லில் தோயுங்கள். பலமாக அறையாதீர்கள். ஒவ்வொரு முறையும் நான் உடையுடுத்தும்போது ஒரு பொத்தானாவது இல்லாமல் இருப்பதைச் சங்கடமாக உணர்கிறேன் நான். சற்று தயவு செய்யுங்கள். பட்டன்கள் உதிராமல் துவைக்கப் பாருங்கள் என்று மானசீகமாய் வேண்டிக் கொள்கிறான். எவ்வளவு பண்பான எழுத்து என்று அசோகமித்திரன் மீது நம் மதிப்பு உயர்கிறது.

     ஒரு பெரிய தலைவரின் இறப்பின்போது ஊர் எப்படியெல்லாம் கொந்தளித்துப் போகிறது? பெரும் கூட்டம் கூடி கடைசியில் அது எப்படி ஒரு திருவிழா மாதிரித் தோற்றம் கொண்டு விடுகிறது? பெரும் கூட்டம் கூடும்போது தனி மனிதத் துக்கம் கூட உருமாறி விடுகிறதே...! என்கிறார்.

     அன்றாடச் செயல்களில் நமது சின்னச் சின்னத் தடுமாற்றங்களைக் கூடச் சுட்டிச் செல்கிறார். இவற்றையெல்லாம் எழுதலாமா என்று தயக்கம் கொள்ளும் பலவற்றை அவர் சொல்லிச் செல்லும் விதத்தால் அந்தச் சாதாரண விஷயம் கூட, போகிற போக்கிலான காட்சிகள் கூடப் பெருமை பெற்று விடுகிறது.

     1973 காலகட்டம் இந்நாவலில் பயணிக்கிறது. 1980-ல் முதல் பதிப்பு கண்டிருக்கிறது. இப்பொழுது படிக்கும்போதும் இந்நாவலுக்கான தேவை இருக்கிறது என்ற எண்ணம் எழுகிறது நமக்கு. இதில் வரும் நாயகன் ரகுராமன் போல் இங்கே பலர் இருக்கிறார்கள். வேலையில்லாமல் வீட்டிலும் வெளியிலும் அவமானத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். கூச்ச சுபாவம் உள்ளவர்களாக, தங்களைத் தாங்களே சுருக்கிக் கொண்டு, வார்த்தைகளை அளந்து அளந்து பேசிக் கொண்டு, பேசாமல் முழுங்கிக் கொண்டு பல கேவலங்களை, அவமானங்களை, எந்த எதிர்வினையும் காட்டாமல் தாங்கிக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

     ரகுராமன் வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவதும், மனிதர்களிடம் நடந்து கொள்ளும் விதமும், அவனை மற்றவர்கள் நடத்தும் முறையும், மனோதத்துவ முறையில் சொல்லப்பட்ட இந்த நாவல் வாழ்க்கையில் யாரும் யாருக்காகவும் எதுவும் செய்து விட முடியாது?, அவரவருக்கு அமைந்த வாழ்க்கையை அவரவர் வாழ்ந்தே கழித்தாக வேண்டும் என்கிற பொது விதியை முன்னெடுத்துச் செல்கிறது என்கிற எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்களின் கூற்று...அசோகமித்திரனின் இந்நாவலுக்கு முற்றிலும் பொருந்தி வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

                           ---------------------------------------------

 

 

 

25 அக்டோபர் 2021

சிறுகதை “நீக்(ங்)குதல்” சொல்வனம் இணைய இதழ். 24.10.2021 தீபாவளிச் சிறப்பிதழ் பிரசுரம்

 

சிறுகதை                                                                                          “நீக்(ங்)குதல்”       24.10.2021 சொல்வனம் இணைய இதழ் 




     

தியாகராஜன் அவர் கைபேசியை அணைத்து வைத்திருந்தார். யாருடனும் பேசப் பிடிக்கவில்லை அவருக்கு. என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது? என்றிருந்தது. வேண்டாத அழைப்புகள் நிறைய வருகின்றன என்று எரிச்சல்பட்டு  அணைத்து வைக்க ஆரம்பித்தவர் இப்பொழுது வேணும் அழைப்புகளும் தேவையில்லை என்று தோன்ற அது அணைந்தே கிடந்தது. உலகமே அதை அணைத்துக்கொண்டு திரிகையில் இவர் அதை விலக்கி கிடப்பில் போட்டிருந்தார்.

      அப்புறம் எதுக்குப்பா உனக்கு ஃபோன்...? என்றான் பையன்.

வேண்டாம்தான்... இல்லாமயே ஆக்கிடறேன் பார்...! இப்டி ஆஃப் பண்ணியே வச்சு, ஆள் இருக்கானா இல்லையாங்கிற அளவுக்கு சந்தேகத்த உண்டு பண்ணி, கடைசில ஃபோனே இல்லாம ஆக்கிடுறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்...அது ஒரு நாள் கிட்டும்...

பையன் ஒரு மாதிரியாய்ப் பார்த்தான் இவரை. இதென்ன சபதம்? ஏன் இப்படி ஆகிவிட்டார்?

உனக்குன்னு ஃப்ரென்ட்ஸ்கள் இல்லையா? அவங்களோட பேச வேண்டாமா? இல்ல-அவங்கதான் பேச மாட்டாங்களா? அதுக்காகவானும் ஃபோன் வேணும்தானே?

என்ன ஃப்ரென்ட்ஸ் வேண்டிக் கிடக்குங்கிறேன்...? அம்புட்டுப் பயலுங்களும் ஊழல் பிடிச்சவங்க...எல்லாம் லஞ்ச லாவண்யத்துல திளைச்சவங்க...? இவங்களோட என்ன நட்பு வேண்டிக் கிடக்கு? நல்லாளா நாலு பேர் இருந்தாப் போறும்....- வெறுத்துத்தான் பேசினார்.

நாலு பேருக்கு நன்றி...அந்த நாலு பேருக்கு நன்றி...பாட ஆரம்பித்தவன்... யாருப்பா அவங்க? என்றான்.

என்னோட படிச்சவங்க...சின்ன வயசு நண்பர்கள். ஒண்ணா வளர்ந்தவங்க...கவர்ன்மென்ட் சர்வீசுக்கு வராதவங்க...!

அப்போ கவர்ன்மென்ட் சர்வீஸ்லதான் இந்த  லஞ்ச லாவண்யமெல்லாம்ங்கிறத ஒத்துக்கிறே...? அப்டித்தானே? –

அவன் வங்கியில் வேலை பார்க்கிறான். இப்போதுதானே உள்ளே நுழைந்திருக்கிறான். அங்கே என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன என்பது இனிமேல்தானே தெரிய வரும்...! நல்லவேளை...என்னை மாதிரிக் குழில விழாமே...தப்பிச்சானே? அதுவே பெரிசு...

நான் என்னடா ஒத்துக்கிறது? அதான் ஊரெல்லாம் தெரிஞ்ச விஷயமாச்சே...!

அதற்கு மேல் பாலன் பேச்சை வளர்க்கவில்லை. அவரிஷ்டப்படி இருந்துவிட்டுப் போகட்டும்... என்று விட்டு விட்டான்.

தியாகராஜன் சர்வீசிலிருந்து ரிடையர்ட் ஆகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஒரு நிதானத்திற்கு வந்திருந்தார். அப்படி இப்படியென்று அவருக்கான சிக்கல்களெல்லாம் தீர்ந்து, ஓய்வு காலப் பணப் பலன்கள் ஒவ்வொன்றாய் வர ஆரம்பித்திருந்தன.

ஆக்கப் பொறுத்து ஆறப் பொறுக்காத கதையாகிவிட்டது அவர் சம்பந்தப்பட்ட விஷயங்கள். பைசாப் பெறாத விஷயம் என்று சொல்லக் கூடாது. பைசாப் பெறும் விஷயம்தான். கடைசி வரை அப்பழுக்கில்லாது இருந்து வந்த தியாகராஜனுக்கு எந்தச் சனியன் வந்து தலையில் உட்கார்ந்து கொண்டதோ, கெட்ட புத்தி வேலை செய்து விட்டது கடைசியில். அலுவலகத் தலைமைக்குத் தான் கொடுத்த கடனான கைக்காசு இனி வரவே வராது என்ற நிலையில் சொந்தமாய் உழைத்துச் சம்பாதித்த பணத்தை அப்படிப் போனால் போகிறது என்று விட முடியுமா? என மனம் கொந்தளித்துப் போய் அதை நிரவல் செய்வதற்காக ஒரு ஒப்பந்ததாரரிடம் டிமான்ட் பண்ண, அது வினையில் போய் முடிந்தது.

பழக்கப்பட்ட, அனுபவப்பட்ட ஒப்பந்ததாரர் என்றாலும் தொலையுது என்று எடுத்து வீசியிருப்பான். அதை எப்படி எங்கு மீண்ட வருவாயாய் மாற்றிக் கொள்வது என்கிற சூட்சுமம் அவனுக்குத் தெரியும்.. புதிதாய், நேற்றுத்தான் களத்துக்குள் குதித்த ஒருவனிடம், அவனைப் பக்குவப்படுத்தாமல் மிரட்டிக் கை நீட்டினால்? அதையும் இதையும் சொல்லி பயமுறுத்தினால்? ஒப்பந்தமே கிடைக்காவிட்டாலும் போகிறது என்று விஜிலென்சில் சொல்லி வைத்து, தான் கேட்ட பணத்தைக் கொடுப்பது போல் கொடுத்து, கையும் களவுமாகப் பிடிபட வைத்து விட்டானே பாவி? முப்பத்தி மூணு வருடத் தூய்மையான பணிக்கு பங்கம் வந்து விட்டதே? அத்தனை நற்பெயரும் பாழாய்ப் போனதே? நியாயமாய்ப் பார்த்தால், தான் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். அந்த எண்ணமும் உந்தத்தான் செய்தது. குடும்பம் கண் முன்னே வந்து நிர்க்கதியாய் நின்று அதைத் துடைத்தெறிந்தது.

ஒரு வார்த்தை எங்கிட்ட யோசனை கேட்க மாட்டீங்களா? எந்த விஷயத்தைத்தான் நீங்க என்னோட கலந்து பேசியிருக்கீங்க...எல்லாத்தையும் உங்க இஷ்டத்துக்குத்தான் செய்வீங்க... ரிடையர்ட் ஆகக் கூடிய சமயத்துல இப்டியா அசட்டுத்தனம் பண்ணுவாங்க...?-மனைவி விசாலி வயிரெறிந்தாள். எல்லாரும் சேர்ந்து உங்களை லூஸாக்கிட்டாங்க....! அவளே திட்டும் அளவுக்குத் தாழ்ந்து போனார்.

என்ன தியாகராஜன், இதுக்கா இப்படிச் செய்தீங்க? பணமுடைன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தாக் கூட எங்கயாச்சும் வாங்கிக் கொடுத்திருப்பனே? இந்த ஆபீஸ்லதானே இருக்கீங்க...மெதுவாக் கொடுப்பமேன்னு இருந்தேன்...அதுக்குள்ளேயும் அவசரப்பட்டுட்டீங்களே...? வெறும் ஐயாயிரம்...அதுக்காகத் தப்புப் பண்ணப் போய் மொத்தப் பேரும் அநியாயமாக் கெட்டுப் போச்சே...?  என்றார் அலுவலர். ஆபீஸ் பேரு உங்களால ரிப்பேர் ஆயிடுச்சே...! என்ன ஒரு சாமர்த்தியமான பேச்சு? தன் கடன் காசுக்காகத்தான் இந்தாள் இப்படிப் பண்ணியிருக்கிறான் என்று எப்படிப் புரிந்து கொண்டார்? அத்தனை பேர் முன்பும் வைத்து இப்படி உடைக்கிறார்? பழி பாவத்துக்கு அஞ்சாத ஆள்தான் இப்படியெல்லாம் பேச முடியும்...!

தப்புப் பண்ணுவதைப்பற்றி இவர் பேசுகிறார். வசூல் மன்னன். என்னால் பேர் கெட்டுதாம்? என்ன ஒரு மனசாட்சியற்ற பேச்சு?  மாதா மாதம் ரெவ்யூ மீட்டிங் வைப்பதே இதற்காகத்தானே? இலக்கை எய்தாதவர்கள் சூட்கேஸ் கொடுத்து வாயை அடைத்தார்களே? அதிலிருந்து ஒரு துளியை எடுத்து என்னிடம் வீசியிருந்தால் நான்பாட்டுக்கு சிவனே என்று  இருந்திருப்பேனே? அதிலென்ன லஞ்சப் பணம் என்றா எழுதி ஒட்டியிருக்கிறது? என் கடன் எனக்குத் திருப்பி வந்தது என்று என்னால் சமாதானப்பட்டிருக்க முடியாதா? அதைச் செய்தானா இந்தக் கள்ளப்பயல்? நான் வாங்க மாட்டேன் என்று தெரிந்தும் என்னை ஏமாற்றுவதற்கென்றே என் சம்பளப் பணத்திலிருந்து கடன் வாங்கிய பலே திருடனாயிற்றே இவன்? தான் அத்தனை பண முடையில் இருப்பதாக ஆபீசுக்கே, பணியாளர்களுக்கெல்லாம் காட்டிக் கொள்ள வேண்டுமாம்....என்ன ஒரு கபட நாடகம்? உன் பெயர்தான் ஊரெல்லாம் சிரிப்பாச் சிரிக்குதே...! அது தெரியாதா உனக்கு? நயவஞ்சகம்....!

பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டியும் பீயைத் தின்னும் என்று சொல்வார்கள். கடைசி நேரத்தில் அந்தப் பாவத்திற்கு நானும் ஆளாகி விட்டேனா? இந்த வயிற்றெரிச்சல் இன்று வரை தீரவில்லையே? சாகும்வரை இந்தக் காயம் ஆறவே ஆறாது போலிருக்கிறதே? நினைத்து நினைத்து மனம் மறுகிக் கொண்டுதான் இருக்கிறார் தியாகராஜன். அணையாத தீயாய் அது கனன்று கொண்டேயிருக்கிறது.

இப்போதும் அவருக்கான கடைசிப் பணப் பலன் காசோலை பெறுவதற்கு கைப்பேசி மூலம்தான் எல்லாத் தொடர்புகளையும் மேற்கொண்டார். தன் பணப்பலனை இவரே கணக்கிட்டு, அதை அலுவலகத்திலும் சரியாகப் பட்டியலிட்டிருக்கிறார்களா என்று வீட்டிலிருந்தே சோதனை செய்து உறுதி பண்ணினார்.  நேரில் சென்று யாரையும் கண்கொண்டு பார்ப்பதற்கு அவர் மனம் இசையவில்லை. வங்கிக் கணக்கைக் கொடுத்து அதில் நேரடியாகக் கிரடிட் பண்ணுவதற்கான வழிமுறைகளைச் செய்தார். ஸ்டாம்ப் ஒட்டிக் கையெழுத்திட்ட ரசீதை பாலன்தான் கொண்டு போய்க் கொடுத்து வந்தான். அப்பா நல்லாயிருக்காரான்னு ஒருத்தர் கூடக் கேட்கலப்பா...! என்றான். இவங்க கேட்கலேன்னுதான் அழுதேனா? கிடக்கானுங்க...பேடிப் பயலுங்க....! வாயைத் திறந்தால் அழுகல் வார்த்தையாய்த்தான் வந்தது அவருக்கு. மனசு ஆறவே மாட்டேனென்கிறது. தனக்கேற்பட்ட அவமானம்...சாகும்வரை மனசிலிருந்து அகலாது.

அங்க யாரும் உங்களப் பத்தி நினைக்கவேயில்லை...நீங்களா ஏன் வீணா கவலைப் பட்டுக்கிறீங்க...? ஸ்டாஃப் எல்லாருமே மாறியிருப்பாங்க போல்ருக்கு....என்றான் பாலன். ஆனாலும் நேரில் போக வேண்டும் என்கிற எண்ணமே எழவில்லை தியாகராஜனுக்கு. அந்த வாசலை மிதிப்பதே பாவம் என்று நினைத்தார். உள்ளே காலடி வைத்தாலே பணத்தைத் தாண்டித் தாண்டித்தான் போக வேண்டும் போல்  உணர்ந்தார்.. அந்த காம்பவுன்ட் பூராவும் ரூபாய் நோட்டுக்கள் காற்றில் சுற்றிச் சுற்றிப்  பறந்து கொண்டேயிருப்பதுபோல் இவர் மனம் நினைக்கும். அவைகள் மூஞ்சியிலும், உடம்பிலும் ஒட்டாமல், கடந்து வெளியேறுவதே பிரம்மப் பிரயத்தனம்.  பணம்...பணம்...என்று வாயைப் பிளந்து கொண்டு நிற்கும் காட்டேரிகள் அங்கு நிரம்ப உலவுவதாய் அவருக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது.

அதே அளவு வெறுப்பு இப்போது அவர் வைத்திருக்கும் கைபேசியிலும் வந்து விட்டது அவருக்கு. யாருடனும் தொடர்பு கொண்டு பேசுவதற்குப் பிடிக்கவில்லை. என்ன குசலம் வேண்டிக் கிடக்கிறது? எவன் நம்மை ஞாபகம் வைத்துக் கொண்டு என்ன ஆகப் போகிறது? இருந்தாலென்ன, செத்தாலென்ன? நாமுண்டு, நம் வேலையுண்டு என்று இருந்தால் போதாதா? வெட்டிப் பயல்கள். காசுக்கு அலையும் காட்டான்கள். மனசுக்குள் பொரிந்து கொட்டினார்.

சார்...சும்மா நழுவிடலாம்னு பார்க்கிறீங்களா...விடமாட்டோமாக்கும்....! எங்க எல்லாருக்கும் ஒரு பெரிய பார்ட்டி வச்சிட்டுத்தான் நீங்க போக முடியும்...ரிடையர்ட்மென்ட்ன்னா சும்மாவா?

பார்ட்டின்னா.... எஸ்.கே.சி.தானே....? தாராளமா வச்சிட்டாப் போச்சு....என்றார் இவர். மனதோடுதான் சொன்னார். அது கூடச் செய்யாமல் வெளியேறுவது நன்றாயிருக்காது...!

வெறும் எஸ்.கே.சி.யோட தப்பிச்சிரலாம்னு பார்த்தீங்களா? அதான் நடக்காது. எல்லாருக்கும் சாப்பாடு போட்டாகணும்.....எங்களுக்கு பிரியாணி வேணும்..எலும்பு கடிக்கணும் நாங்க....வெறும் வெஜ் சாப்பாடோட கழண்டுக்க முடியாது....சாயங்காலத்துக்கு மேலே தீர்த்தமாடணும்...சும்மா இல்ல...? – பகிரங்கமாய்க் கேட்டார்கள். அம்மணமாய் நின்று ஆடுவது போலிருந்தது. தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜாண் என்ன முழம் என்ன?  

உண்மையிலேயே பயந்துதான் போனார் தியாகராஜன். இந்தக் கலாச்சாரம் எங்கிருந்து வந்தது? எவன் முதலில் ஆரம்பித்து வைத்தது? ஒன்றிலிருந்து ஒன்று எப்படிக் கிளைத்தது? ஆபீசில், அலுவலக வேலை நேரத்தில், கோப்புகளை அடுக்கியிருக்கும் மேஜையில் அதையெல்லாம் மூலையில் தூக்கிக்  கடாசிவிட்டு டேபிளுக்கு டேபிள்  வாழை இலை பரப்பி தரைத்தளம், முதல் மாடி, இரண்டாம் தளம் என்றும், அந்த வளாகத்திலுள்ள பிற அலுவலகங்கள் என்றும் தடபுடலாய்ச் சாப்பாடு பறிமாறுவதும், சவரணையாய் உட்கார்ந்து மணிக்கணக்காய்ச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதும்.....எங்கிருந்து முளைத்தது இந்த அநாச்சாரம்? எப்படிப் பரவியது? அதென்ன ஆபீஸா, ஓட்டலா? பொது ஜனம் திடீரென்று உள்ளே நுழைந்து பார்த்தால் எவ்வளவு கேவலமாய் நினைப்பார்கள்? நமக்கான அலுவலகங்கள் இந்த லட்சணத்தில் கிடக்கிறதே என்று வயிறெரிய மாட்டார்களா?

 தலைமை அலுவலகக் கண்காணிப்பாளர் பணி ஓய்வு பெறுகிறார் என்றால் கிளை அலுவலகங்களிலிருந்தெல்லாம் வந்து கூடி விடுவார்களே...? அழைக்காமல் முடியாதே? பிரிவுபசார விழாவன்று கட்டாயம் வந்துதானே ஆக வேண்டும்? அப்படியானால் அதற்கு ரெண்டு நாள் முன்னம் நடக்கும் சாப்பாட்டுப் பந்திக்கு அழைக்காமல் முடியுமா? திருவிழாக் கோலம்தான். கொண்டாட்டம்தான். ஆபீஸ்களில் வேலை நடக்கிறதோ இல்லையோ இதெல்லாம் கன கச்சிதமாய் நடந்து கொண்டிருக்கின்றன.

மலைத்துப் போனார் தியாகராஜன். குறைஞ்சது முப்பதாயிரமாவது வேணும். என்ன அநியாயம்? எவனோ உழைத்து சம்பாதித்த காசை எவர்களோ தட்டிப் பறித்துக் கொண்டு போவதா? இந்தப் பழக்க வழக்கங்களெல்லாம் ஒழுக்கத்தின் அடையாளங்களா என்ன? ஊழல் மலிந்து கிடக்கும் அலுவலகங்களில் இப்படியல்லாமல் வேறு எப்படியிருக்கும்? அவிழ்த்துப் போட்டு ஆடுவது போலல்லவா இருக்கிறது? வெறுத்துத்தான் போனார்.

ஆனால் அதற்கான அவசியம்தான் இல்லாமல் போய்விட்டதே? ஓய்வு பெறும் நாளன்றைக்கு முன்னமேயே அவர்தான் சஸ்பென்ட் பண்ணப்பட்டு விட்டாரே? கெட்ட நேரம் என்று ஒன்று வந்தால் எதுதான் குறுக்கே நின்று தடுக்க முடியும்? தன் புத்தியை ஜோட்டால் அடிக்கணும். விசாலி சொன்னதுபோல் அவளிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். அறிவு வேலை செய்யவில்லை. கெட்ட நேரம்-கெட்ட புத்தி. அநியாயமாய் ஏமாற்றி விட்டானே இந்த ஆள்? பணப் பேயான அந்த ஆபீசர் எங்கே திருப்பித் தரப் போகிறான்? என்கிற எண்ணம் வலுவாய், திடமாய் மனதில் பதிந்து விட்டது. அந்த வேகம், விவேகத்தை மறைத்து, தன்னை மூர்க்கமாய் இயங்கச் செய்து விட்டது. வேறு எதையும் யோசிக்க விடவில்லை. அதையும் பண்ணி. என் துட்டை எனக்கு மீட்டுக்கத் தெரியாதா? நானென்ன சும்பனா? துணிந்துதான் இறங்கினார். நானா இப்படி? என்று அவருக்கே நிரம்ப சந்தேகம்தான்.

அந்தப் புதிய கான்ட்ராக்டர் இப்படி ஒரு முடிவு எடுப்பான் என்று துளியும் நினைத்துப் பார்க்கவில்லையே?  காலம் காலமாய்க் ஒப்பந்ததாரராய் இருக்கும் முகம் தெரிந்தவர்கள் எவரிடமுமேனும் கேட்டிருந்தால் கூடச் சத்தமின்றிக் கொடுத்திருப்பார்கள். பரவாயில்ல...நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்...என்று கமுக்கமாய் முடித்திருப்பார்கள். என் பாழாய்ப் போன கோணல் புத்தி ஒரு புதிய ஒப்பந்ததாரனிடம் போய் மாட்ட வைத்து விட்டது. இதை விதி என்று நோகாமல் வேறு என்னதான் சொல்வது? ஊழலில் திளைத்தவர்களிடம் யோசனை கேட்டிருக்க வேண்டுமோ? இதற்கும் ப்ரோக்ரேஜ் பேசியிருந்தால் காரியம் கச்சிதமாய் முடிந்திருக்கும்.

தப்பு செய்வதற்கும் ஒரு சாமர்த்தியம் வேணும்.. தனித் திறமை வேணும். .இவருக்கெல்லாம் எதுக்கு இது? – தன் காதுபடவே பேசினார்களே....!

ரு வழியாய் எல்லாக் களேபரமும் முடிந்தது. மனதில் வெறுப்பு படிந்து போனது. எவரையும் பார்க்க வேண்டும் என்றே தோன்றவில்லை. அலுவலகம் சார்ந்த எவரேனும் கண்ணில் பட்டு விடுவார்களோ என்றிருந்தது. எதிரே தென்பட்டாலும் காணாதது போல் தலையைத் திருப்பிக் கொண்டு வந்தாகிறது. நடக்கும் ஜனங்களுக்கெல்லாம் கூடத் தெரிந்திருக்குமோ என்று மனம் கூச்சப்படுகிறது. லஞ்சம் வாங்கினவன்தான நீ? என்று கேட்பது போலிருக்கிறது. அவர்களே கூட அப்படியிருக்கலாம்தான். ஒதுங்கிப் போனால் நிம்மதியாய்ப் போச்சுதானே? துஷ்டனைக் கண்டால் தூர விலகு....அவர்களுக்கு நானும் துஷ்டனாகத் தெரியலாமே...! வாங்காதவன் துஷ்டந்தான். வாங்கிப் பிரித்துக் கொடுக்காதவன் அதைவிடத் துஷ்டன். நான் எனக்கே எனக்கு என்று கை நீட்டியவன்தானே?

இந்தாளோடு என்ன பேச்சு வேண்டியிருக்கிறது? ரொம்பவும் கண்டிப்பாக இருந்தவனின் நிலைமையெல்லாம் இதுதான். எப்படியிருந்தால் என்ன? தானே வேண்டாம் என்று ஒதுங்கி யிருக்கும்போது, அவர்களின் இருப்பைப் பற்றிய நினைப்பு தனக்கு எதற்கு?

பஸ்ஸில் கோயிலுக்குச் செல்லும்போது ஆபீஸ் கட்டடத்தைக் கடக்கையில் தலையைத் திருப்பிக் கூடப் பார்ப்பதில்லை அவர். அது இருந்தாலென்ன? பாழாய்ப் போனால்தான் என்ன? என்று நினைத்துக் கொள்வார். வாழ்வுக்கே படியளந்த இடத்தை அப்படி நினைக்கலாமா? என்று தோன்றும்தான். தனக்கு ஏற்பட்ட இழிவு அதை மறைத்து விடும் அவருக்கு. எவனாவது சொல்லிக் கொடுக்காமல் அந்தப் புதிய கான்ட்ராக்டர் அப்படிச் செய்திருப்பானா? அந்தக் கறுப்புப் பூனை யாரென்று தெரியவில்லை. சதி வேலை...! தெரிந்து என்ன ஆகப் போகிறது? ஆனது ஆயிப் போச்சு...! இழி பெயர் மறைந்து விடுமா? ஆனால் வெறுப்பு மண்டிப் போனதே...!

 நீ பார்க்கலேன்னா என்ன, ஆபீசை இழுத்து முடிடவா போறாங்க...? பூனை கண்ணை மூடிட்டா, உலகம் இருண்டு போயிடுமா? கொழிக்கிற இடம் என்னிக்கும் கொழிச்சிட்டுத்தான் இருக்கும். நீ வேணும்னா ஒதுங்கியிருக்கலாமே தவிர அங்க நடக்குற எதுவும் என்றைக்கும் மாறிடப் போறதில்லை. அந்த சாம்ராஜ்யம் என்னைக்கும் சரிஞ்சிடாது. அது வெறும் மண் கோட்டையல்ல. மலைக்கோட்டை.  அது சிரஞ்சீவித் தன்மை கொண்டது.

அதற்குப்பின்தான் கைப்பேசியில் உள்ள தொடர்பு எண்களையெல்லாம் ஒரு வெறியோடு அழிக்க ஆரம்பித்தார் தியாகராஜன்.  யாரும் பேச வேண்டாம்...யாருடனும் பேச வேண்டாம். யாரையும் பார்க்கவும் வேண்டாம். ஒரு கனமான வெறுப்பு படிந்து போனது மனதில்.

என்னைக்காவது தேவைப் பட்டுச்சின்னா என்னப்பா பண்ணுவே...ஒரு டைரிலயாவது குறிச்சு வச்சிட்டு அழிச்சிடுப்பா...மகனின் ஆதங்கம்தான் அதிகம்.

அவங்க சங்காத்தமே வேண்டாம்ங்கிறேன் நான்...நீ என்னவோ பேசறியே...? அப்படி ஆரம்பித்தவர் இன்று உறவினர்கள் நம்பர்களைக் கூட அழிக்கும் நிலைக்கு வந்து விட்டார். தொட்டதெல்லாம் வெறுப்பாகிப் போனது இப்போது.

ன்ன தியாகு....பேசறதேயில்ல....இந்த ஊர்லதான் இருக்கியா?

ஃபோனுக்கு ரெண்டு வழி உண்டுப்பா....நான் பேசலேன்னா என்ன...நீ பேசறது...? அதென்ன என்னை மட்டும் பின்பாய்ன்ட் பண்றே...? என்பார்.

யாரும் இவரிடம் வாயைக் கொடுப்பதில்லை. மனசு வக்கரிச்சுப் போச்சுய்யா அந்தாளுக்கு...!

வயசானவங்கள நாமதானே நலம் விசாரிக்கணும்...ரெண்டு வார்த்தை பேசினாத்தான் என்ன குறைஞ்சு போயிடுவீங்களா....? – விசாலி அடிக்கடி நிமிண்ட ஆரம்பித்தாள். தான் எதிலாவது மாட்ட மாட்டமா என்று காத்திருந்தது போல். ஏதோவொரு வகையில் தன்னை அவளுக்கு சீண்டனும்...அதில் ஒரு சின்ன ஆறுதல். வாங்கிக் குவிக்கத் தெரியவில்லையே என்கிற ஆதங்கம் அவளுக்கும் கூட இருக்கலாம்தான். யார் கண்டது?  தன்னை வழிப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை.

பொத்திட்டு இருடி....எனக்கும்தான் வயசாச்சு....ஒருத்தருக்கொருத்தர் ரெண்டு, மூணு வயசுங்கிறது ஒரு பெரிய வித்தியாசமா? ஏன் அவங்கதான் விசாரிக்கட்டுமே...ஆகாதா? அவனவனுக்கு கௌரவம்....வேண்டாத ஈகோ....அவன்தான் என்னைக் கேட்கணும்...நான் எப்படிக் கேட்குறதுங்கிற திமிர்....அவன நிறுத்தச் சொல்லு...நா நிறுத்தறேன்ங்கிற கதைதான்...அப்டின்னா இருந்துக்கட்டும்....என் இயல்பு இது..! .எது? யாரோடயும் பேசாம இருக்கிறது....நான் உண்டு...என் வேலையுண்டுன்னு கிடக்கிறது...அத அவங்களால ஏன் ஏத்துக்க முடில...? Accept people as they are – ன்னு ஒரு சொலவடை உண்டு...உனக்குத் தெரியுமோ...? மனுஷங்கள அவங்க இயல்போட ஏத்துக்கிற தன்மை வேணும். அதுதான் பக்குவம். அவன் யார்ட்டயும் பேச மாட்டாம்ப்பா...நாம பேசினாத்தான் உண்டு-ன்னு இருக்க ஏன் எவனுக்கும் தெரில....? எதுக்கு அநாவசியமா எங்கிட்டர்ந்து எதிர்பார்க்கிறாங்க....? நாந்தான் இப்டியாப்பட்ட ஆளுன்னு தெரியும்ல? ஃபோன் பேசிட்டா எல்லாம் ஆச்சா? ஒருத்தரை ஒருத்தர் மனசளவுல டிலீட் பண்ணிட்டுத்தானே நிக்கிறோம்.. எவனுக்கு நினைக்க நேரம்? .இந்த ஃபோன் நம்பர் டிலீஷன்லதான் கெட்டுப் போச்சாக்கும் எல்லாம்?

அதுக்காகத் தெனமும் பேசிட்டிருக்க முடியுமா? மாசங் கூடி ஒருவாட்டி, ரெண்டு வாட்டி பேசலாம்தானே? ரெண்டு வாட்டிகூட வேண்டாம்...அட...ஒருவாட்டி பேசக் கூடாதா? தல கிரீடம் தாழ்ந்து போகுமா? திடீர்னு யாராச்சும் மூச்சை நிறுத்திக்கிறான்னு வச்சுப்போம்...அப்பத் தோணும்...ஐய்யய்யோ...ஒரு முறையாச்சும் பேசியிருக்கலாமேன்னு...என்னத்தக் கொண்டு போகப் போறோம்...? நேர்லதான் போறதில்ல...ஃபோன்ல கூடப் பேசப்படாதா?

எல்லாரும் ஒரு நாளைக்கு மண்டையப் போடத்தான்டி போறோம்..யார் முதல்ல...யார் பின்னாடின்னு யாருக்காச்சும் தெரியுமா? ஒரு பயலுக்கும் தெரியாது....பெரிஸ்ஸா பேசிட்டாப் போறுமா? நீ நல்லாயிருக்கியா? நான் நல்லாயிருக்கேன்...இவ்வளவுதானே? எல்லாரும் ஒண்ணாக் கூடி ஒரு நாலு நாளைக்கு சேர்ந்து இருக்கச் சொல்லு பார்ப்போம்....அப்பத் தெரியும் வண்டவாளம்...! சனீஸ்வரன் சந்நிதி போல ரெண்டாம் நாளே ஆளுக்கொரு திசைல திரும்பிண்டு நிற்பா...இதெல்லாம் சும்மாடீ....ஃபோன்ல பேசிட்டா மட்டும் பாசம் பொங்கிட்டிருக்குன்னு அர்த்தமாயிடுமா? அதெல்லாம் பொய்யி.....அவனவனுக்கு அவனவன் குடும்பம், குட்டிங்கதான் பெரிசு.....என்னைக்கோ எல்லாரும் பிரிஞ்சி பிரிஞ்சி, தனித் தனி தீவுகளா மாறியாச்சு...இப்போ இந்தக் கலாச்சாரம்தான் நடைமுறை....இனிமேல்லாம் எங்கயும், எதுவும் ஒண்ணு சேராதாக்கும்....வெளில தெரியுற மாதிரி சும்மா மெப்பனையா, வக்கணையா வேணா ஆளாளுக்குப் பேசிக்கலாம். அதுவும் பேசாம கம்முனு இருக்கிறவன் குத்தம் செஞ்சவன் ஆயிடறான்...இவ்வளவுதான் விஷயம்.....என்னடீ வாழ்க்கை இது...போலியான வாழ்க்கை...அர்த்தமில்லாத இந்த வாழ்க்கைக்கு அர்த்தத்தக் கற்பிச்சிண்டு வாழ்றதுதான் விவேகம்னு நினைக்கிறா எல்லாரும்...அது அப்டியும் இல்லன்னு நான் கிடக்கேன்....நான் ஒருத்தன் அப்டி இருந்துட்டுப் போறேனே...என்ன கெட்டுப் போறது?

புலம்பிக்கொண்டே, சந்நதம் வந்தவர் போல, கைபேசி எண்களை விடாமல், தேடித் தேடி மேலும்  நீக்கிக் கொண்டேயிருக்கிறார் தியாகராஜன். மொத்தமா ஃபோனையே ஆஃப் பண்ணிட்டா கதை முடிஞ்சிது...இதுக்கு எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும்...? என்று தோன்ற ஆரம்பித்திருந்தது அவருக்கு.

                        ----------------------------------------------------------

 

 

 

 

24 அக்டோபர் 2021

சிறுகதை “காவல்“ பிரசுரம் - அந்தி மழை

 

சிறுகதை                    “காவல்“                                                          ----------------               





     

கதவைத் திறந்தபோது அது உட்கார்ந்து கொண்டிருந்தது. 'க்சோ' என்று புது விதமான ஒலியில்  அதைச் சத்தமாக விரட்டினாள் திவ்யா.                        "எல்லாரும் 'ச்சூ... ன்னுதானே விரட்டுவாங்க...இதென்ன்ன க்சோ ? " என்றேன்நான்     மிரண்டு பயந்து ஏற்பட்ட பதட்டமாய் அவள் குரல்.                               அது ஒன்ன்றும் அலட்டிக்கொண்ட மாதிரித் தெரியவில்லை. தினமும் பார்க்கும் முகம்தானே என்பதுபோல் மெதுவே எழுந்து உடலை நீட்டி அருகே பள்ளத்திற்குள் குதித்து அடர்ந்த பூச்செடிகளின் மறுபுறம் உள்ள காம்பவுன்ட்  சுவரின் மேல் போய் அமர்ந்து கொண்டு சாவகாசமாய்த் திரும்பிப் பார்த்தது.                                பூனைகளுக்கு என்றுமே மனிதர்கள் முக்கியமில்லை.  வீடுகள்தான் முக்கியம்.     "முழியப்  பாரு...சரியான திருட்டுப் பூனை..." என்றவாறே கையில் பெருக்குமாரோடு வாசல் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் திவ்யா.                          கடந்த சில நாட்களாக இந்தப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பூனையை விரட்டுவதற்கென்று சற்றுச் சீக்கிரமே எழுந்து விடுகிறாள் அவள்.              "நா பார்த்துக்கிறேன்...இன்னும் கொஞ்ச நேரம் நீ படுத்துக்கோ..." சொல்லிப் பார்த்தேன்.  கேட்பதாய் இல்லை. அவளுக்கு என் மீது நம்பிக்கை போய்விட்டது.           'வேண்டாம்' என்ன்று சொல்வதோடு சரி. ஏன் வேண்டாம் என்று சொன்னால் மனதுக்குச் சற்று சமாதானமாய் இருக்கும். அதுதான் எப்பொழுதுமே அவளிடம் கிடையாதே! எல்லாச் சிரமத்தையும் தானே பட்டுக் கொள்வோம் என்பது போல் இயங்குவாள்.                                                                     "கூட ரெண்டு தரம் விரட்டினா போயிட்டுப் போறது..அதுக்காக அங்கேயே பழி கிடக்கணுமா?"                                                                     "அது போகாது...மீறினா நம்ம மேலேயே பாய்ஞ்சுடுமாக்கும். அந்த அளவுவுக்கு மோசமான பூனை அது...அந்த மரத்தடிலயே கிடக்குமேயொழிய அங்கவிட்டுப் போகவே போகாது.." - சொல்லிவிட்டுக் காத்திருக்கலானாள்.                                    இவளாகவே கற்பனை செய்து அதைப் பயங்கரப் புலியைப் போல் பாவித்துக் கொண்டு  அதன் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறாள். இந்த அளவுக்குப் பிரயத்தனப்படுவது அநாவசியமாய்ப் பட்டது எனக்கு.                                     "அவன்தான் வந்தா சத்தம் கொடுப்பானே...இதுக்காக வாசல்ல காவல் காக்கணுமா?" - மீண்டும் சொல்லிப் பார்த்தேன்.                                       நீங்கதான் சொல்லிக்கணும் சத்தம் கொடுப்பான்னு...அவன்பாட்டுக்கு வச்சிட்டுப் போறான். எப்போ வந்தான் எப்போ வச்சான்னு யாருக்குத் தெரியறது...?"                     "ஆறரை டூ ஏழுதான் கணக்கு. பேப்பர்காரன் ஆறு இருபது...சொத்துன்னு விழும்...அது சத்தம் கேட்கும்...இதுவும் கேட்கும். கொஞ்சம் கூர்ந்து கேட்கணும் வண்டிச் சத்தத்தை...முன்னெல்லாம் கேட் கொண்டியை அடிச்சு சத்தம் கொடுப்பான். அவனுக்கும் இப்போ அலுப்பு வந்திடுத்து போலிருக்கு. வாயால சொல்றதுக்குக் கூட வலிக்கிறது...சார் பால்னு ஒரு குரல் கொடுக்கிறதுல  என்ன்ன சிரமமோ தெரில..."                          நான் சொல்வது அவள் காதில் விழுந்ததா தெரியவில்லை. வீதியில் கவனமாக இருந்தாள். கடந்து போகும் சைக்கிள்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். வெவ்வேறு பேப்பர் போடும் பையன்கள். கிணி கிணியென்ன்று மணியடித்துக் கொண்டு செல்லும் பால் வண்டிகள்.                                                        "பசும்பாலானாலும் ரொம்பத் தண்ணியாயிருக்கு...வீதில வாங்கிப் பிரயோஜனமில்ல...பேசாமப் பாக்கெட்டே வாங்கிடுவோம்..." - அவள்தான் மாற்றினாள்.      என்னம்மா இப்டி திடீர்னு நிறுத்திப்புட்டீங்க...உங்களமாதிரி நாலு வீட்ல நிப்பாட்டினா அப்புறம் நாங்கள்லாம் எப்டிப் பொழக்கிறது?"                             "இல்லேப்பா...எனக்கு சரிப்படலே...நீ  நாலரைக்கும்  அஞ்சுக்கும் வந்து மணியடிக்கிறே...என் தூக்கம் கெடறது...எனக்கு ஒடம்புக்கு முடில..."                  "எம்பொண்ணக் கூட விடிஞ்ச பெறவு கொண்டாரச் சொல்றம்மா..."               "இல்ல...பரவால்ல...நான் அப்புறம் சொல்றேன் வேணுமுன்னா...."- நிறுத்தியே விட்டாள். நான் கூடச் சொல்லிப் பார்த்தேன்.                                       "தெரியாதா உங்க கும்பகர்ணத் தூக்கம்? விடி காலம்பறத்தான் அசந்து தூங்கறேள்...நீங்களாவது எழுந்து வாங்கறதாவது..."

     அப்பொழுது இந்தப் பூனைத் தொல்லையில்லை. அதாவது பால் திருடும் வேலையில்லை. அதுபாட்டுக்கு காம்பவுன்ட் சுவற்றில் எங்கேயாவது உட்கார்ந்து கொண்டிருந்தது அல்லது போய்க் கொண்டிருந்தது.பெரும்பாலும் மரத்தடிதான் அதற்கு யதாஸ்தானம். இப்படிப் பால் பாக்கெட் மேல் குறி வைக்கும் என்று யார் கண்டது?                                                                                     எப்படி அதற்கு இந்தச் சரியான நேரம் தெரிந்தது. "சார் பால்..." என்று அந்தச் சிறுவன் சத்தம் கொடுப்பது இதற்குப் புரியுமோ?                                  தெருவில் ஆட்கள் போக வர இருக்கிறார்கள்.  காம்பவுன்ட் சுவரில் வைத்திருக்கும் பால் பாக்கெட் நிச்சயம் எல்லார் கண்ணிலும் கண்டிப்பாகப் படும்தான். ஆனால் யாரும் தொடுவதில்லையே! பாலைத் திருடினால் பாவம் என்று ஐதீகமிருக்கலாம். பயமிருக்கலாம். அது பூனைக்குத் தெரிந்திருக்க வேண்டாமா?        முன்பு குடியிருந்த வீட்டில் தினசரி நான் சாப்பிடும் பொழுது பத்தடி தள்ளி மூன்று குட்டிப் பூனைகள் சொல்லி வைத்தாற்போல் வந்து உட்கார்ந்து கொள்ளும். "எம்புட்டு அழகு பாருங்களேன்..." என்று ரசிப்பாள் திவ்யா. ஒரு கிண்ணத்தில் பால் ஊற்றி வைப்பாள். தயிர் சாதம் வைப்பாள். சாம்பார் ஊற்றிப் பிசைந்து வைத்திருக்கிறாள். எல்லாத்தையும்தான் சாப்பிட்டிருக்கிறது அவைகள். ஒரு நாள் கூட அவைகளை விரட்டியதில்லை. அப்பொழுது இல்லாத வெறுப்பு இப்பொழுது எங்கேயிருந்து வந்தது? ஏன் வந்தது? ஒரு வேளை  இது பெரிதாகவுவும் கருப்பாகவும் இருப்பது இவளைப் பயமுறுத்துகிறதோ? புலி போல மனதில் கற்பனை செய்து கொண்டு பயப்படுகிறாளோ? பயப்படுவது வேறு. வெறுப்பது வேறு. இவள் வெறுக்க அல்லவா செய்கிறாள்.                                                                                 "அப்பா திவசத்தன்ன்னிக்கு  காக்கைக்கு பிண்டம் வைக்கிறமே...அதத்          தின்னுண்டிருக்கு இந்தத் திருட்டுப் பூனை? ஒரு கல்ல எடுத்து வீசினேன் பாருங்கோ...அது பட்டுடுத்து போலிருக்கு...கத்திண்டே ஓடித்து...அதுக்கப்புறம் வராதுன்னு நினைச்சா இப்டி வந்த காத்துக் கிடக்கே?"                                          "காக்கை ரூபத்துல அப்பா வருவார்னு பார்த்தா வரலே...முன்னமாதிரி காக்கையே இல்லையே...இருந்தாத்தானே வரும்...செல் போன் டவர் நிறைய வந்துட்டதுலேர்ந்து எப்படிச் சிட்டுக் குருவிகள் காணாமப் போயிடுத்தோ அது போலக் காக்கைகளும் இப்போ அதிகம் தென்ன்படுறதில்லே...கா...கா...ன்னு நாம  காழ் காழ்ன்னு  கத்தினதுதான் மிச்சம். காக்கா வரலேன்னா அப்பாவுக்கு  வைக்கிற சாப்பாட வந்து சாப்பிடப் பிரியமில்லேன்னு வேறே மனசப் போட்டு அறுக்கிறது...இப்டி எத்தனையோ இதுகளுக்குப் பழகி வச்சிருக்கோம்...எதையும் விடவும் முடில.அதுதான் அங்க விசேஷம்.."                                                                                                "தினமும் மிஞ்சிற சாதத்தை அணில் சாப்பிடட்டும்னு எடுத்து வச்சா இது வந்து நன்னா வழிச்சித் தின்ன்னுட்டுப் போறது. ரெண்டு பருக்கை கூட அதுக்கு வைக்கிறதில்லை..."                                                           "இதப் போல மரத்துல காத்துண்டிருந்து உடனே அதுக்கு வரத் தெரில போலிருக்கு...?"                                                               "அப்டியில்லன்னா...வரத்தான் செய்றது...இது வந்து விரட்டிடறதாக்கும்...அதையும்தான் நான் பார்த்தனே.ஒரு மாதிரி தூக்கணாங் குருவி போல    ஒண்ணு உட்கார்ந்திண்டிருக்குமே...அது வந்து சாப்பிடறச்சே இது விரட்டிறதாக்கும்...அதான் எனக்குப் பிடிக்கலை..."                                 "சரி விடு...எதோ ஒரு ஜீவன் சாப்பிடறதோல்லியோ..."                                                                                                     "பாருங்கோ..இன்னிப் பார்த்து பால்காரனை இன்னும் காணலை...இவனை நம்பி எம்புட்டு நேரம் நான் உட்கார்ந்திண்டிருக்கிறது? எனக்கு உள்ளே காரியம் இல்லையா? "                                                                            "சரி சரி நீ போ  நான் பார்த்துக்கறேன்..."                                                                                                           "பார்த்துக்கறேன்னு உள்ளே உட்கார்ந்திண்டு சொன்னாப் போறாது. அங்க உட்கார்ந்து படிக்கிற பேப்பரை இங்க உட்கார்ந்து படிச்சிண்டே பார்த்திண்டிருங்கோ...அந்தப் பையன் வந்தவுடனே பக்கத்துல போய் நின்னுடணும்...பால் பாக்கெட்டை சுவத்துல வைக்க விடக்கூடாதாக்கும்...தட்டிப் பறிச்சிண்டு போயிடும் அந்த ராட்சசப் பூனை...கைக்குக் கை மாத்தி வாங்கிண்டு வந்துடணும்...தெரிஞ்சிதா..."                                                                                சொல்லிவிட்டு நான் வந்து காத்திருக்க அவள் உள்ளே போனாள். அந்தப் பூனை அவள் சொன்ன்னது போலவே செடிக்கு அந்தப்புறம் குத்திட்டு உட்கார்ந்து கவனமாகக் காத்துக் கொண்டிருந்தது. வெளிர் நீல நிறத்தில் கோலிக்குண்டு போல் பளபளக்கும் அதன் உருட்டு விழிகள். கருகும்மென்று தடிமனான உடம்பு! விசு விசுவென்று மூச்சு வாங்கும்போது அந்தப் பஞ்சு உடல் ஏறி ஏறித் தணிந்தது. உண்மையிலேயே பார்த்தால் கொஞ்சம் பயமாய்த்தான்ன் இருக்கிறது.                     

 உர்ர்ர்...என்று வாயைத் திறந்து பல்லைக்  காண்பித்து உறுமியது . மெகா சைஸால்ல இருக்கு! ஒரு வேளை பாய்ஞ்சுடுமோ?                                 பாதுகாப்புக்கு ஆள் வந்த பின்பும் அது அங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறதென்றால் விவகாரமான பூனைதானே?                                                                                                       "தம்பி வெறுமனே வச்சிட்டுப் போகாதீங்க...பூனை வந்து தூக்கிட்டுப் போயிடுது...ஒரு சத்தம் கொடுத்து ஆள் வந்து எடுத்தபிறகு போங்க."                                                                                            "அது எப்டி சார்...நா இன்னும் நிறைய வீட்டுக்குப் போடறவன்...இங்கயே நீங்க வர்ற வரைக்கும் நின்னுக்கிட்டிருக்க முடியுமா? சத்தம் கொடுத்திட்டு நகர்ந்திடுவேன்...நீங்கதான் வந்து எடுத்துக்கணும்..."                                     என்ன ஒரு கறாரான பேச்சு? இந்தக் காலத்தில் யார்தான் பொறுப்போடும் மரியாதையோடும் பேசுகிறார்கள்? வேணும்னா பால் வாங்கு...இல்லன்னா சொல்லிடு...போயிட்டேயிருக்கேன் அவ்வளவுதான்.                                  ஆம்மா, அவன் சொல்றதுல என்ன தப்பு? நீங்க கேட்டதுதான் தப்பு. அவன் பல வீடுகளுக்குப்  போறவன். அவன இதுக்காக நிறுத்தி வைக்க முடியுமா? " - திவ்யாவும் ஆதரித்துப் பேசினாள்.                                                            அன்று ஒரு நிமிடம் பாத்ரூம் போய் வருவோம் என்று உள்ளே போனவன்தான்.. அதற்குள் அவன் வந்து பால் பாக்கெட்டை வைத்துவிட்டுப் போக இது வந்து அதைக் கடித்துத் துளை போட்டு சாவகாசமாய் உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தது.                                                                                           அதை விரட்ட வேண்டும் என்றே தோன்றவில்லை எனக்கு. என்ன ஒரு அழகான காட்சி! ஆள் விரட்ட வருமே என்பதெல்லாம் எதுவும் இல்லாமல் ரொம்ப லாவகமாகத் துளை போட்ட இடத்தில் வாயை வைத்து ஒரு காலால் எதிர்ப்புறம் அமுக்கி பாலை துளைப் பக்கம் வரவைத்து அது உறிஞ்சும் காட்சி.....                                "போனாப் போகுது திவ்யா...அது சாப்பிடுற அழகப் பாரேன். ஒரு நாளைக்கு வயிறு நிறையக் குடிச்சிட்டுப் போகட்டுமேன். விடு விடு..." என்றேன் நான். "இன்னிக்கு உங்களுக்குக் காபி கட்..." பதிலடி கொடுத்தாள் அவள். அன்றோடு போனால் சரி மறுநாளும் இதேமாதிரித் தவறத்தான் செய்தது.                                    அன்று சின்னப் பாக்கெட்டைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது. முதல் நாள்தான் பெரிசு சாப்டாச்சுல்ல...பொழைச்சிப் போகட்டும்...இன்னைக்கு சிறிசுல கையை வைப்போம் என்று பதம் பார்த்துக் கொண்டிருந்ததோ என்னவோ...கால் லிட்டர் அளவு கொண்ட சிறிய பாக்கெட் வெயிட் கம்மி என்பதால் வாயில் கவ்வி கீழே குதித்து மரத்தடியில் வைத்து பாக்கெட்டைப் பிய்த்துக் கொண்டிருந்தது. "                    "எப்பப்பாரு, அந்த மரத்தடிதான் அதுக்கு! வேறே போக்கிடமே கிடையாது போலிருக்கு...பேசாம அத வெட்டி எறிங்க...அதுலேயும் வாயை வச்சதோ என்னவோ...வேண்டாம்...வேண்டாம்...." என்று பெரிய அரை லிட்டர் பாக்கெட்டைத் தொடவே மாட்டேன் என்று விட்டாள் திவ்யா. அது கிழியவில்லை என்று எவ்வளவோ சொல்லியும் கேட்டால்தானே!                                               "பூனையோட முடி ஒட்டிண்டிருந்ததுன்னா கூட ஆகாதாக்கும்....எதுக்கு?  பன்னிரெண்டு ரூபாயப் பார்த்தா அப்புறம் பெரிசா எதாச்சும் வியாதி வந்திடுத்துன்னா...வேண்டாம்... வேலைக்காரம்மாவுக்கு வேணும்னாக் கொடுத்திடலாம்." அவளுக்கு மட்டும் ஏதாச்சும் வரலாமா? மனதிற்குள்தான் இது. ஆனால் ஒன்று. அதிலும் ஒரு நேர்மை இருந்தது திவ்யாவிடம்.முழு விபரத்தையும் சொல்லித்தான் "வேணும்னா எடுத்துண்டு போ..." என்றாள்.     s                                                                                                                "இதிலென்ன்னம்மா இருக்கு...பாக்கெட்டைக் கழுவிட்டாப் போச்சு..." - சொல்லிவிட்டு எடுத்துக் கொண்டு போய்விட்டாள் அவள்.                                                                                                            நான் காத்துக் கொண்டிருந்தேன். இன்னும் பால் வரவில்லை. அந்தப் பூனையும் நகரவில்லை. என்ன ஒரு திண்ணக்கம்? திவ்யா சொன்னதில் என்ன தப்பு? ஆள் இருக்கிறது என்று தெரிந்தும் நம்பிக்கையோடு காத்திருக்கிறதெனில் அடித்துக் பிடுங்கலாம் என்ற எண்ணம்தானே? ஒரு வேளை திவ்யா பயப்படுவதுபோல் பாய்ந்து வந்து ஆளைக் குதறி பாக்கெட்டைப் பிடுங்கிச் சென்ன்று விடுமோ?             மணி ஏழரை தாண்டிச் சென்று கொண்டிருந்தது. திவ்யா உள்ளே போன் பண்ணிக் கொண்டிருந்தாள்.                                                                "ஏங்க பால் வேன் வரல்லியாமே? இன்னிக்கு ஒரு நாள் வெளில வாங்கிக்குங்கங்கிறான்...ஏதாச்சும் பசும்பால் வண்டிக்காரன்  போனாக் கூப்பிடுங்க..." - திவ்யா சொன்ன சமயம் அந்தச் சைக்கிள் வண்டிப் பால்காரன் போவதைப் பார்த்து "ஏப்பா...பால்..." என்று கத்தினேன்ன்.                                               "நீங்கள்ளாம் நம்மகிட்டே வாங்குவீங்களா ஸார்.....!" - சொல்லிக் கொண்டே திரும்பாமல்  போய்க் கொண்டிருந்தான் அவன்.                                    "ஏய்....ஏய்....உன்ன்னைத்தாம்ப்பா கூப்பிடுறேன்...வா." - கையைத் தட்டி மேலும் சத்தமாய்க் கத்தினேன்.                                                                "என்னா ஸார்....நெசமாத்தான் கூப்பிட்டீங்களா.... பால் வேணுங்களா.....?"                                                                                   "ஆமாம்ப்பா....நீயும் தவிக்க விட்டுட்டுப் போயிடாத...அப்புறம் எனக்குக் காலம்பறக் காப்பி கட் ஆயிடும்...." - சொல்லிக் கொண்டே அவனை அழைத்து நிறுத்தினேன்.                                                                                      இதற்குள் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்தாள் திவ்யா.                                                                                         "மாமிதான் நம்மகிட்ட பால் வாங்க மாட்டேன்னுட்டாங்க....நம்ம பால்தான் பிடிக்கலியே மாமிக்கு...அப்புறம் என்னா ஸார் இன்னிக்கு? ஏதாச்சும் விசேஷமா? என்னைக்குமில்லாம அதிசயமாக் கூப்டுட்டீங்க..."                                  "உங்கிட்ட வாங்கக்கூடாதுன்னெல்லாம் இல்லப்பா...பசும்பால் காபிக்குத்தான் ஆகும்...எனக்கு நிறைய உறை குத்தணும்...தயிர் வேணும்...வெண்ணெய் எடுக்கணும்...அதுக்கெல்லாம் இத வாங்கிக் கட்டுப்படியாகாதே...அதான்...வேறென்ன உங்கூட சண்டை போடறதுக்கு எனக்கென்ன வந்தது?"                              "அதுக்கில்ல மாமி வாங்கிட்டேயிருந்தவுக  திடீர்னு நிறுத்திப்புட்டீகளேன்னுதான்...சங்கடமாயிடுச்சி...சரி விடுங்க...எப்பவானாலும் கேளுங்க...நா இருக்கேன் எம்புட்டு வேணாலும்  தர்றதுக்கு...ஏதாச்சும் விசேஷம்னாலும் நம்மள மறந்துடாதீங்க மாமி..".பாலை ஊற்றிவிட்டுக் காசை வாங்கிக்கொண்ட அவன் "ஸார், அங்க பார்த்தீங்களா  மரத்தடில..." என்றான் கூர்மையாய் கவனித்தவாறே.           "அந்தப் பூனையத்தானேப்பா சொல்ற...அதனாலதாம்ப்பா இப்பப் பிரச்னையே....காலைலேர்ந்து இங்கயே ஏன் பழிகிடக்கிறேன்?..அதுக்காகத்தான்....டபால்னு வந்து பாலைத் து¡க்கிட்டு ஓடிடுதுப்பா....தொல்லை தாங்க முடியல...விரட்டியும் பார்த்தாச்சு...போகமாட்டேங்குது..."                                                 "அய்யய்ய...வெரட்டாதீங்க ஸார்...பாவம்...இந்த நேரத்துல அப்டிச் செய்யாதீங்க...."                                                                            "காலைலதானப்பா இப்டி வந்து பழி கெடக்குது....ராத்திரியே வந்து இந்த மரத்தடில படுத்துக்கும் போலிருக்கு...இதுட்டேயிருந்து இந்தப் பாலைக் காப்பாத்துறது பெரிய பாடா இருக்குப்பா...."                                                                                                                                              "நா அந்த நேரத்தைச் சொல்லல ஸார்...அதுக்கான நேரத்தச் சொன்னேன்...அது உடம்பு முடியாம இருக்கு ஸார்...நீங்க கவனிக்கலை போல்ருக்கு...அது சென ஸார்...பாவம்..நல்லா கவனிச்சிப் பாருங்க..."                                                                                                                 "என்னது?  என்னப்பா சொல்ற நீ...?!" -திடீரென்ற இந்த எதிர்பாராத செய்தியில் மனசை என்னவோ செய்ய ஆரம்பித்தது எனக்கு.                                                                                                              "அது அமுந்து அமுந்து அந்தப் பள்ளத்துக்குள்ளயே பதுங்குது பார்த்தீங்களா? அந்த மண்ணும் அதோட பதமான  ஈரமும் அத்தன எதம் அதுக்கு...அதான் அங்கயே சுத்திச் சுத்தி வருது....அநேகமா இன்னும் ஒண்ணு ரெண்டு நாள்ல ஆயிடும்...".                                                                                            "அப்டியா சொல்ற? நாங்க கவனிக்கவேயில்லையே?"                                                                                                   "அப்டித்தான்...அத வெரட்டாதீங்க ஸார்....தானாவே அதாவே போயிடும்...விட்டுடுங்க...." சொல்லிவிட்டு அவன் போய்க் கொண்டிருந்தான்.                                                                                           "அட, ஆண்டவனே! நல்லவேளை...இன்று இவன் மூலமாகவாவது இது விபரம் தெரிய வந்ததே..ஈஸ்வரா...!" -                                                                                                                                    என்னையறியாமல் முனகியவாறே திரும்பியபோது கண்கள் கலங்க உதடுகள் மெலிதாகத் துடிக்க அந்தப் பூனையையே  வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு  கலக்கத்தோடு நின்றிருந்தாள் திவ்யா!                                                ஒரு கணம் தடுமாறினேன் நானும்! அது ஏன் அப்படி என்று எனக்குத்தானே தெரியும்!!                                                                                                                                                                    ---------------                                                                                                                                                                                                                 

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...