20 ஆகஸ்ட் 2019

அதுதான் அது…அறிவேன்…!”சுய புராணம் –கட்டுரை –
கட்டுரை
சுய புராணம் – (தம்பட்டம்) எப்படியும் சொல்லிக் கொள்ளலாம். ந்த முதல் கதையை என்னால் என்றும் மறக்கவே முடியாது. என்னாலென்ன, எந்தவொரு எழுத்தாளருக்கும் அப்படித்தான். 10.10.1982 ல் ஆனந்தவிகடனில்வெளிவந்த அந்த ஒரு பக்கச் சிறுகதைதான் அது. அந்தக் கதைதான் என் முதல் கதை. ஒரே ஒரு பக்கச் சிறுகதைதான். இரண்டு நண்பர்கள் கை கொடுத்துக் கொண்டு வாய் திறந்து குஷாலாகச் சிரித்தமேனிக்கு இருக்கும் கால் பக்கப் படத்துடன் மீதி முக்கால் பக்கமும் என்னுடைய படைப்போடு வெளிவந்த வறட்டுக் கௌரவம் என்ற முதல் சிறுகதை.
அது பிரசுரத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற கடிதம் வந்த அன்றைக்கே தலைகால் புரியவில்லை எனக்கு. அப்படியொரு கடிதத்தை ஆனந்தவிகடனிலிருந்து நானா பார்க்கிறேன் என்கிற அதிர்ச்சி. மகிழ்ச்சி. அடேயப்பாஅடாது மழை பெய்தாலும் விடாது என் பணி என்கிற கதையாக என்னுடைய தொடர்ந்த முயற்சியை எண்ணி எனக்கே அத்தனை வியப்பு.
அவன் ஆபீசிலிருந்து வந்தவுடனே அவன்ட்டக் காண்பிக்காதேவந்து, உட்கார்ந்து, காபி கீபி குடிச்சு ஆசுவாசப்பட்டவுடனே மெல்ல அவன் டேபிள்ல வை…” – என் தந்தை என் தாயிடம் சொல்லியிருக்கும் தாரக மந்திரம் இது. எத்தனை கதைகள் பந்தடித்தாற்போல் திரும்பி வந்திருக்கின்றன? இது பத்திரிகை அலுவலகம் வரை சென்றுதான் திரும்பியதா? அல்லது வழியிலேயே திரும்பி விட்டதா? என்பதுபோல் அனுப்பிய மூன்றாம் நாளே எத்தனை தபால்களை மீளப் பார்த்திருக்கிறேன்? ஆனால் ஒன்று மனம் அழுததில்லை. அதுதான் என்னிடமிருந்த பிடிவாதம்.
நீ திருப்பி அனுப்புஅனுப்புடி ராஜாஎத்தனை நாளைக்குத்தான் அப்டி செய்றேன்னு நானும் பார்க்கிறேன்என்று உடும்புப்பிடியாய்ப் பிடித்தவன் நான்.
இன்றைக்கும் கூட அது நடக்கத்தான் செய்கிறது. இல்லையென்று சொல்லவில்லை. இன்று அது என் எழுத்துவகைக்காக நான் எடுத்துக் கொண்ட பிடிவாதம். எழுத்தும் இலக்கியமும் இந்த சமுதாயத்திற்காக என்று தீர்க்கமாக உணர்ந்ததன் தெளிவான விளைவு. இதுதான் என் எழுத்து. இது இப்படித்தான் இருக்கும். நீ போடுவதானால் போடு. இல்லையென்றால் விடு. அவ்வளவுதான்.
நான் பார்த்த வாழ்க்கை, வாழும் சமூகம், அதன் மக்களின் அவலம், அவர்களின் உழைப்பு, அதில் தெறிக்கும் கருணை, நேயம், கண்ணீர், தியாகம் இவைகளைத்தான் நான் சொல்ல முடியும். இவைகளைச் சொன்னால்தான் படிக்கும் நாலு பேரில் இரண்டு பேர் மனதிலாவது தைக்கும். அவன் நெஞ்சில் உள்ள ஈரப் பகுதியில் இருந்து கருணை சுரக்கும். அதுதான் எனக்கு வேண்டும். இப்படியே எழுதிக் கொண்டிருந்தாயானால் உன்னை ஊர் போற்ற வேண்டாமா? நாலு பேருக்குத் தெரிந்தால் போதுமா? நாற்பது பேருக்கு, நாலாயிரம் பேருக்கு, நாலு லட்சம் பேருக்குஎன்று தெரிவது?
தெரிந்து கொள்ள வேண்டியது அவர்கள் கடமை. படிக்க வேண்டியது அவர்கள் பழக்கம். உணர வேண்டியது அவர்கள் அறிவு. அவ்வளவுதான். எனக்கு வருவதைத்தானே நான் எழுத முடியும்.
என் பணி எழுதிக் கொண்டிருப்பதே. இமைப் பொழுதும் சோராதிருப்பதே! என்னை அறிந்தவன் தொடர்ந்து என்னைப் படிக்கிறான். படிப்பான். அவ்வளவே!
வறட்டுக் கௌரவம் என்று தலைப்பிட்டுக் கதை எழுதினேனேயொழிய கதை வந்ததற்காக அந்த வறட்டுக் கௌரவம் வந்து என்னைத் தொற்றிக் கொள்ளவில்லை. அப்படித் தொற்றிக் கொண்டால் பிறகு நான் எங்கிருந்து விளங்கினேன்?.
ஒரே கடிதத்தில் நான்கு கதைகள் தேர்வாகின தகவல் வந்தது ஆனந்தவிகடனிலிருந்து. நம்புவீர்களா? இவன் டூப் விடுகிறானோ? தோன்றுகிறதல்லவா? சத்தியமய்யா, சத்தியம். நிறையக் கதைகள் விகடனில் வந்தன. விட்டேனா பார் என்ற முயற்சிதான். 1983 ல் மார்ச்சில் நடந்தது அந்த அதிசயம். என்ன இவன், தன்னையே பெருமைப்படுத்திப் பீத்திக் கொள்கிறான் என்று நீங்கள் முனகுவது கேட்கிறது. என் விடாமுயற்சியை தயவுசெய்து பாருங்கள். நான் ஒரு பெரிய அறிஞனெல்லாம் இல்லை. தமிழை முற்றும் கற்றவனுமில்லை. தமிழில் எல்லா பழந்தமிழ் இலக்கியங்களையெல்லாம் படித்தவனுமல்ல.
சாதாரணமாக எழுத வந்தவன்தான். ஒன்று சொல்லலாம். ஆழ்ந்த ரசனை உள்ளவன். வாசிப்பு அனுபவம் உள்ளவன்.
எங்கள் ஊரான வத்தலக்குண்டில் என்னிடமும், என் நண்பனிடமும், தெருவில் உள்ள நாலைந்து வீட்டின் லைப்ரரி டோக்கன்கள் எங்களிடம்தான் இருக்கும். கல்கியாவரிசையாக அவர் புத்தகங்கள் பூராவும் எடுத்து, படித்து, முடிப்போம். ஜெயகாந்தனாஅடுத்தடுத்து எத்தனை புத்தகங்கள் இருந்தாலும் சரி….எல்லாமும் படிக்கப்படும்இப்படித்தான் அலசினோம் மொத்த லைப்ரரியை. ஆனால் ஒன்றுகூடவே ஆண்டிப் பண்டாரமும், சிந்துபாத்தும் உண்டு. அது அந்த வயசுக்கேற்ற உற்சாகம். வாசிப்புப் பழக்கம் மட்டுமே எழுதத் தூண்டியது என்று சத்தியமாகச் சொல்வேன்.
1983 லிருந்து விடாது கருப்பு என்ற கதைதான். சுட்டி என்று ஒரு கையகல மாத இதழ் வந்தது. அதன் சமுதாயப் பணி அளப்பரியது. ஒவ்வொரு பக்கமும் பயனுள்ள எழுத்தாகத்தான் இருக்கும். அதற்கு வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியையெல்லாம் நடத்தியிருக்கிறேன் நான். அதில் மதுரை மேற்குத் தொகுதியின் பாழ் நிலையை விமர்சித்து எழுதியதற்கு போலீஸ் என்கொயரி வந்தால் தெரிவியுங்கள் என்று தகவல் வந்தது எனக்கு. சென்னை சுட்டி ஆபீசில் விசாரணை நடந்தது. அப்படியென்ன விசேஷம்? மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் தொகுதியாக அது அப்போது இருந்ததுதான்.
அதற்குப் பின் எத்தனை இதழ்கள்? அடேயப்பாதமிழில் இத்தனை வார மாத இதழ்கள் இருந்திருக்கின்றனவா? என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? என் எழுத்து எதிலெதில் பிரசுரமாகியிருக்கிறது என்று பாருங்கள். தெரிந்து விடும். வெறும் வெற்றுப் பெருமையல்ல இது. தகவலுக்காகச் சொல்கிறேன்.
சுட்டி, சுனிதா, சுதந்திரம், புதிய பார்வை (பழையது இது) தினமலர்-வாரமலர், கமலம், , பம்பாய், தாய், பூவாளி, கணையாழி (இலக்கிய இதழ்) மயன், இதயம் பேசுகிறது, சிறுகதைக் கதிர், குங்குமம், நவீனம், சாவி, கல்கி, குமுதம், நறுமணம், செம்மலர், தீபம், மங்கை, ராணி, கண்மணி, மின்மினி, ஜனரஞ்சனி, தினமணிகதிர், இன்று, அரும்பு, கடிதம், தமிழ் அரசி, மனோரஞ்சிதம், ஓசை, …, பாக்யா, அமுத சுரபி, கலைமகள், ஜெமினி மலர், நிஜம், எதைச் சொல்ல எதை விட?
அதற்குப் பிறகு எத்தனை கதைகள் விகடனிலும், தாயிலும், இதயம் பேசுகிறதிலும், குங்குமத்திலும், கல்கியிலும், கணையாழியிலும்செம்மலரிலும், தாமரையிலும்.., .வண்ணக்கதிர், .நீ போடும்வரை விடமாட்டேன் என்கிற கதைதான் என் கதை.
இன்றுவரை என் எழுத்துத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. உயிரெழுத்து, உயிரோசை, திண்ணை, சொல்வனம், நிலாச்சாரல், வார்த்தை, கணையாழி, கதிர், செம்மலர், இன்னும் சில இதழ்கள் என்று விடாது நான் எழுதிக்கொண்டேதான் இருக்கிறேன். ஒன்று தெரியுமா? புத்தக வாசிப்பனுபவம் கூட இப்போது எழுதிப் பார்க்கிறேன். அரசியல் கட்டுரைகள் கூட எழுதிப் பழகுகிறேன். அடேயப்பா எவ்வளவு தன்னடக்கம் இவனுக்கு? என்று தோன்றுகிறதல்லவா உங்களுக்கு! அதுதான் எனக்கு வேண்டும்.
ஆனாலும் அந்த முதல் புத்தகம் வந்த நாளை மறக்க முடியுமா? 2000 மாவது ஆண்டில் என் முதல் சிறுகதைத் தொகுதி வந்தது. அது சாதாரண வெளியீட்டகம் அல்ல. அத்தனை மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பதிப்பகம். எழுத்துச் சிற்பி ஜெயகாந்தன் அவர்களின் புத்தகங்கள் அனைத்தையும் தொடர்ந்து வெளியிட்டுப் பெருமை பெற்ற பதிப்பகம். அங்கேதான் எனக்கும் ஒரு சான்ஸ் கிடைத்தது. மதுரையில் காலடி வைத்த நாள் முதல் அங்கேதான் புத்தகங்களை மாதா மாதம் வாங்குவேன் நான். அந்த இரக்கமோ என்னவோ? கொண்டுவாங்க பார்ப்போம்இதுதான் பதில்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு சு. வெங்கட்ராமன் அவர்கள் படித்து, ஒப்புதலளித்து, ஓ.கே. என்றார்கள். அந்தப் பெருமை மிகும் ஸ்ரீமீனாட்சி புத்தக நிலையம் மூலம் என் முதல் தொகுதி வந்தது எனக்கு அளவிட முடியாத பெருமையாக இன்றுவரை விளங்குகிறது.
இன்றுவரை  24 தொகுதிகள் குறுநாவலும், சிறுகதைகளுமாக வெளிவந்துள்ளன. கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி, இலக்கியச்சிந்தனைப் பரிசு, அமுதசுரபி பொன்விழாச் சிறுகதைப் போட்டி, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, குங்குமம் இளைய தலைமுறைச் சிறுகதைப் போட்டி, என்று பரிசுகளைப் பெற்றுள்ளேன். எனது வாழ்க்கை ஒரு ஜீவநதி என்கிற சிறுகதைத் தொகுப்பு (என்சிபிஎச் வெளியீடு) 2008ம் ஆண்டின் திருப்பூர் இலக்கியப் பேரவை மற்றும் அமர்ர் ஜீவா பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழாக் குழு இணைந்து நடத்திய விழாவில் பரிசு பெற்றது. அப்புத்தகம் மதுரை லேடி பெருமாட்டி கல்லூரியில் இலக்கிய மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் எம்.ஃபில் மற்றும் பி.எச்டி., ஆய்வுகளுக்கு எனது நான்கைந்து தொகுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இலக்கியப்போட்டி 2011 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய போட்டியில் எனது நினைவுத் தடங்கள் சிறுகதைத் தொகுதி பரிசு பெற்றது.
என் எழுத்து தொடர்கிறது என் முயற்சியினால். எழுத்து எப்படிப்பட்டது? அதன் வகைமாதிரி என்ன? நான் எங்கே நிற்கிறேன்.,? இதை அறிவேன் நான். ஆனாலும் அந்த முதல் பிரவேசம் தந்த மகிழ்ச்சியும் நிறைவும் இன்றுவரை இல்லை. அதுதான் இன்றுவரையிலான ஊக்கத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. இது சத்தியம்…!
படிப்பனுபவத்திலிருந்து படைப்பனுபவம் கிடைத்தது எனக்கு. தொடர்ந்த வாசிப்பனுபவம் படைப்பனுபவத்திற்கு ஊக்கமளிக்கிறது. நான் வளர்ந்த சூழ்நிலை, பார்த்த, பழகிய மனிதர்கள், அவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அனுபவங்கள், இவைதான் எனக்குக் கதைகளைத் தருகின்றன. என் படைப்புகளில் பாவனை இல்லை. பகட்டு இல்லை. ஆடம்பரமில்லை. படாடோபமில்லை. என் மனமொழி நடையே எவ்வித ஒப்பனையுமில்லாமல் நேர்மையுடன் வெளிப்படுகிறது. மன உலகம் கதையுலகமாக விரிகிறது. அன்றாட அனுபவ எல்லைக்குள், மனசுக்குள், பதிவாகிற நிகழ்வுகளே கதைகளாயிருப்பவை. அதனாலேயே நேர்மையும், மன உண்மையும் வாசகனுக்கு மரியாதையை ஏற்படுத்தும்.
எனது அனுபவ எல்லைக்குட்பட்ட ஒரு சம்பவத்தை, சம்பவத் துளியை மட்டுமே சிறுகதையாக்குவது, உலுத்தாத மொழி நடை, வாசக மனதில் சிந்தனைப் பொறியைத் தெறிக்கச் செய்தல், சிறிய அழுக்கைத் துடைத்தல், சிறிய சோகம் கவிழச் செய்தல், வெளிச்ச நினைவு மின்னி மறைதல், என எல்லாச் சிறுகதைகளும் மனித நேயம் என்கிற உயர் பண்பை உயிர் வடிவமாகக் கொண்டிருத்தல், மத்திய தர வர்க்க மனிதரின் மனித நேயம், அதிலிருந்து பிறக்கிற கருணை, பரிவு இவையே என் கதைகளின் வழித்தடம்.
நிறையச் சொல்லியாச்சு. நிறைய எழுதியாச்சுன்னு சொல்லலாமா? கூடாது. சாகறவரைக்கும் எழுதித்தானே ஆகணும்.
பிரபலமான பலர் எழுதிக் குவித்திருப்பதை நோக்கும்போது இது ஒன்றுமேயில்லை. நானும் எழுதறேன். அவ்வளவுதான். இன்று வரை நிறைவில்லை. நிறைய பாக்கியிருக்கு, இன்னும் மேலே உயரமிருக்குமனது சொல்கிறது.
எதை நீங்கள் சொல்கிறீர்களோ, சொல்ல நினைக்கிறீர்களோ அதுதான் அது…! நான் எங்கே நிற்கிறேன். அறிவேன் நான்…! நன்றி. -------------------------------------


  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...