25 ஜூலை 2023

 

பிறழ்வு”    சிறுகதை  பிரசுரம்-தினமணி கதிர்-16.07.2023    

--------------





  நான் வந்த பிறகு கடைசியாக என்னை ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் உயிரை விட வேண்டும் என்று அம்மா காத்துக் கொண்டிருந்தாளோ என்றுதான் தோன்றியது. வந்துட்டியா? என்ற தடுமாற்றம் மிகுந்த அந்த ஒரு வார்த்தை என்ன பாடு படுத்திவிட்டது?இனி என் மூச்சை நிறுத்திப்பேன் என்று சொல்லாமல் சொன்னாளோ? அம்மாவின் தோளில் அழுத்திக் கைகளைப் பதித்தபோது வழிந்த அந்த விழி நீர் எவ்வளவு துயரத்தை உள்ளடக்கி  வெளிப்பட்டது?  ஒரு வாரம் முன்பு அம்மாவைக் கொண்டுவிட்ட அந்த நேரம் அவளின் பார்வையும், சைகையும் என்னவெல்லாம் பேசின என்பது என் கண்முன்னே நிழலாடிக் கொண்டிருந்தது. இப்டி அநாதையா விட்டுட்டுப் போறியே? தன் பார்வையால் இப்படித்தான் சொன்னாள்.   அதில் இருந்த ஏக்கம், துக்கம், தன்னை அநாதை என்று உணர்ந்தாளோ என்று எனக்குத் தோன்றும் அளவுக்கு இருந்தது.

            காலம்பறதான் கொண்டு விட்டே…இன்னிக்கே கிளம்பணுமா? என்று அம்மா கேட்டாள். என்ன சொல்வது என்று அறியாமல் விழித்தேன் நான். அந்த ஒரு கணத்தில் மனதில் என்னென்னவோ வந்து போயின. அமர்ந்திருக்கும் அந்த இடமே எனக்குச் சொந்தமில்லை என்று தோன்றியது. மானமில்லை உனக்கு, உடனே வெளியேறு என்று விரட்டியது. ஏன் இந்த நிலை? அப்படி என்ன தவறு செய்தேன்? அடுத்த வேளைச் சோற்றுக்கு அங்கே கை நனைக்கக் கூடாதா? சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் ஆழ்தல் கண்டு…இங்கே இருவருக்கும் பொதுவோ இது?

அவளைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த நான் பின்னால் வந்து நிற்கும் அண்ணாவை உணர்ந்து, என் மார்புக்கு நேரே ஆள்காட்டி விரலை மறைவாகப் பின்னோக்கிக் காட்டி, அவன்ட்டச் சொல்லு…அவன்ட்டச் சொல்லு…என்று அம்மாவின் கேள்விக்குப் பதிலாகச் சைகை செய்து முனகினேன். எட்டிப் பார்த்தானா தெரியவில்லை. அசையாமல் ஆள் நிற்பது தெரிந்தது. அந்த நிற்றலில் ஒரு தீர்மானம்.  

என்ன… ரகசியம் பேசிட்டிருக்க?பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டா எல்லாம் ஆச்சா?  வந்தமா, விட்டமா, கிளம்பினமான்னு இருக்கணும்…! – ஆழமான அமைதி எவ்வளவு அ(ன) ர்த்தங்களைக் கற்பிக்கிறது? சொல்லத் தயங்கும் வார்த்தைகள் எடுக்கும் விஸ்வரூபம் அது. வேறு எப்படியும் நினைக்கும் வாய்ப்பே இல்லை எனும் இறுக்கமான சூழல்.

            ம்மா என்னையும் பின்னால் நிற்கும் அண்ணாவையும் மாறி மாறிப் பார்த்தது ஏதோ புரிந்து கொண்டதுபோல்தான் இருந்தது. அவ்வளவு நசிந்த நிலையிலும் அவள் மூளை தெளிவாகத்தானே இருந்தது. பார்வையையும் தீர்க்கமாகத்தான் உணர்ந்தேன். ஆனால் அவள் மனம் சுணங்கியிருப்பதை, சோர்ந்து கிடந்ததை உணர முடிந்தது. ஒருவேளை என்னிடம் சொல்லும்போது மட்டும் அந்த ஆசையினால் மிளிர்ந்த தெம்போ? அவ்வளவு இஷ்டமா அம்மாவுக்கு நான் உடனிருப்பதில்? பின் ஏன் அதை வெளிப்படையாக அண்ணாவிடமும் அவளால் சொல்ல முடியவில்லை?

            கூட ஒரு ஆள் வந்து இங்கே டேராப் போட்டா, எவ சமைச்சுக் கொட்டுறது? எல்லாத்துக்கும் எம்பொண்டாட்டிதான் கிடைச்சாளா? அவளுக்கு மட்டும்தான் விதிச்சிருக்கா?  அவுங்கவுங்க பெண்டாட்டிக மட்டும் சொகுசா ஊர்ல இருக்கணும். இங்க இவ மட்டும் கிடந்து சாகணுமா? ஏன் அவங்களுக்கும் கடமையில்லையா? இதோ…நா இருக்கேன்னு கிளம்பி வந்து செய்ய வேண்டிதானே? யாரு தடுத்தது? மனசில்ல…அதானே…? சுகவாசிகள்! சொன்னாப் பார்த்துப்போம்னு  சாமர்த்தியமா இருந்தா எப்படி? எல்லாத்தையும் வாய்விட்டுச் சொன்னாத்தான் புரியுமா? அப்பத்தான் மண்டைல ஏறுமா? இது ஒருவகை சாமர்த்தியமில்லே?  கடைசிவரைக்கும் சாபக்கேடு என்னோடவளுக்குத்தான்…அப்டித்தானே? – இவையெல்லாம் எத்தனையோ முறை  சொல்லி முடித்ததுதான். இன்னும் விடாமல் அவ்வப்போது  சொல்லிக்கொண்டிருப்பதுதான். குறைந்தபட்சம் வார்த்தைகளால் கொத்தியாவது எடுப்போமே…! ரணப் படுத்துவோமே…! எல்லாம் முடிந்து இப்போது கடைசிக் கட்டம் வந்திருக்கிறது. அதிலும் தணியாத வேட்கை!

 பழையபடி சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொண்டு, ஏதோ செய்யுங்கோ…உங்க இஷ்டம்…என்று சொன்னது போலிருந்தது. அப்படி அவள் திரும்புகையில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றதை நான் கண்டேன். நான் சொல்லி எங்க நடக்கப் போறது? என்ற விரக்தியாய் இருக்கலாம். இத்தனை நாள் நடக்காதது இனிமேலா?  எண்ணி இன்னும் சில நாட்கள்.முடிந்து விடும் கதை….அப்படியான அமைதிதான் அங்கே விரவி நிற்கிறது. ஆனாலும் அதிலும் ஒரு மனப்பதட்டம். கடைசி நேரப் பரிதவிப்பு. பொங்கித் தவிக்கும் மனசு. என்னமாவது சொல்லி மனசை ஆற்றிக் கொண்டே ஆக வேண்டும். இல்லையென்றால் அமைதியுறாது. அப்படியான ஒரு கதகதப்பு வீடு முழுவதும். பொய்யான அமைதியைக் கிழித்துக் கொண்டு எது யார் வாயில் இருந்து எப்போது புறப்படும் என்று தெரியாத ஒரு படபடப்பு. அந்த சூழலே என்னை அங்குவிட்டுத் துரத்துகிறதோ? துணிந்து…நான் இருந்து அம்மாவக் கவனிச்சிக்கிறேனே…! ஏன் சொல்ல முடியவில்லை? ஆளையே முகம் கொண்டு பார்க்க முடியவில்லையெனின், எப்படித் தங்கி சகஜம் பெறுவது?

சகஜமாவது ஒண்ணாவது…வெளிய போங்கிறேன்…-அந்த வார்த்தை வரும் முன் கண்ணில் இருந்து மறைந்து விட வேண்டும். காட்சிகள் மறைந்தால்…கவனமும் குறையும். கருத்தும் பலவீனம் கொள்ளும்.

            அந்த நேரத்தில்..சரி…நான் இருக்கேன்…இருந்துட்டுப் போறேன்…என்று சொல்ல எனக்குத் தைரியமில்லை. நீ ஒண்ணும் இருக்க வேணாம்..எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்…முதல்ல கிளம்புற வழியைப்பாரு….என்றுதான் வார்த்தைகள் வந்து விழும்.  அந்தக் கேவலத்தோடா வெளியேற வேண்டும்? என்றாலும் அதுதான் எனக்குக் கடைசியாகக் கிடைத்தது.

நான் இருக்கேன்….இருந்துட்டுப் போறேன்….. - அப்படிச் சொல்லியிருந்தால் அந்த நிம்மதியில் அம்மா இன்னும் சற்று உடல் தேறியிருப்பாளோ என்று இப்பொழுது தோன்றுகிறது. தன் அருகிலேயே அமர்ந்திருந்து, அந்த அமர்விலேயே ஆறுதல் கொள்ளும் உள்ளம் அம்மாவுடையது என்பதை நான் அறிவேன்.

அவளது ஒவ்வொரு சிணுங்கலுக்கும்…என்ன…என்ன பண்ணுது? உடம்பு வலிக்குதா…? தலை வலிக்குதா? பிடிச்சு விடட்டுமா? திரும்பிப் படுத்துக்கிறியா? தண்ணி குடிக்கிறியா? பாத்ரூம் போகணுமா? என்று கேட்டுக் கேட்டு அவளை ஆறுதல் படுத்த வேண்டும். அரவணைக்க வேண்டும். அந்தக் கேட்பில், தன்னை கவனிக்க ஒரு ஆள் கூடவே இருப்பதில் அந்த மனது கொள்ளும் ஆசுவாசம் சொல்லி மாளாதது. அதைச் செய்ய நான் தயார். ஆனால் அதுதான் அவனுக்குப் பிடிக்காதது. ஆளை முகம் கொண்டு காணவே பிடிக்காதவனிடம் எப்படி அருகில் நிற்பது?

            அம்மாதிரி ஒருத்தர்…அம்மாவுக்குத் தேவையாயிருந்தது. அது நானாகத்தான் இருக்க முடியும் என்பதையும்  உணர்ந்திருந்தேன். அதுவே அவள் விருப்பமாகவும் இருக்கிறது என்பதையும் என்னால் உணர முடிந்தது. மனிதர்களுக்கு சிகிச்சையைவிட…உடனிருந்து ஆதரவாய் கவனிப்பவர்களாலேயே..,அன்பாய்ப் பேசுபவர்களாலேயே …பாதி வியாதி குறைந்து விடும் என்பதுதான் உண்மை. அதிலேயே அவர்கள் மனது நிறைவடைந்து, இப்படியே படுத்துக் கொண்டிருந்தாலும் போதும், இந்த ஆதரவு தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தால் சரி என்று திருப்தி கொண்டு விடுவார்கள். இப்படி உடம்பு முடியாமல், இயக்கமில்லாமல்  படுத்துக் கிடக்கிறோமே என்கிற குறையே அவர்களுக்கு இருக்காது.

            அம்மாவுக்கு அப்போது அதுதான் தேவையாயிருந்தது. ஆனால் அதை தைரியமாக முன்னின்று நிறைவேற்ற எனக்கு சக்தியில்லை. உடன் பிறந்த சகோதரனிடமே வாய் விட்டுச் சொல்ல வழியில்லை. வக்கில்லை. அவன்தான் அம்மாவை என்னிடம் கூட்டிக் கொண்டுவந்து சேர்த்தான்.  அவனேதான் திரும்ப அழைத்துக் கொண்டான். எல்லாமும் எண்ணிச் சில நாட்களில் நடந்துவிட்டனதான். வந்ததை விரும்பி வரவேற்ற அளவுக்கு, போவதை வருந்தித் தடுக்க முடியவில்லை என்னால்.

            வேண்டாம்…நான் சின்னவன்ட்டயே இருந்துக்கிறேன்.  என்னை அவன் நல்லாப் பார்த்துக்கிறான்….என்று மறுத்துச் சொல்ல அம்மாவுக்கும் தைரியமில்லை. ஏன் அந்த உண்மையை அம்மா உரத்துக் கூறவில்லை? இன்னிக்கே கிளம்பி நாளைக்குக் காலைல அம்மா இங்கே வந்து சேரணும் என்று ஆணையிட்ட அண்ணாவின் பேச்சை மறுத்துச் சொல்ல எனக்கும் தெம்பில்லை. தைரியமுமில்லை.

            அதுநாள் வரையில் அவன் ஆளுமையில்தானே எல்லாமும் நடந்தேறியிருக்கிறது? வா…என்றால் வர வேண்டும். உட்கார் என்றால் உட்கார்ந்தாக வேண்டும். எழு என்றால் எழுந்து நின்றாக வேண்டும். போ என்றால் வெளியேறி ஆக வேண்டும். இதுவே விதி.   அந்த வீட்டைப் பொறுத்தவரை விதித்த விதி அதுதான். பெற்றோரை வைத்துப் பராமரிக்கும் அவனுக்கில்லாத அதிகாரமா? அதற்கு அடங்காத தன்மையா? யார்தான் எதிர்த்து நிற்க முடியும்? மதிப்பும் மரியாதையும்தான்…

            அவன் செயல்பாட்டுக்கு அம்மாவும் மறுப்புச் சொல்லவில்லையே! அதுதான் அதிசயம். அவளால் என்ன சொல்ல முடியும்? அதெல்லாம் முடியாது. நான் இங்கதான் இருப்பேன் என்றா நிற்க முடியும்? அங்கிருந்து அவளைக் கிளப்பிய போதே அவளால் மறுத்து நிற்க முடியவில்லையே…இப்போது மட்டும் என்ன செய்து விடுவாள்? வா என்றால் வா…போ என்றால் போ…அவ்வளவே…!

            சொல்லிட்டானா? திரும்ப அங்கேயே வரச் சொல்லிட்டானா? என்று கேட்ட அம்மாவின் முகத்திலான மகிழ்ச்சியை என்னவென்று சொல்வது? அவளுக்கு வேர் அங்கேதான் நிலைத்திருக்கிறதோ? மண் பிடித்து ஊன்றியிருப்பது அங்குதான்.  பாதி வியாதி அப்போதே தீர்ந்ததுதான்….மனசுதானே மாமருந்து!

            மாமி…எப்டியிருக்கேள்? உடம்பெல்லாம் சௌரியமா? மாத்திரை சாப்பிடறேளா? நன்னா நடமாடிண்டிருக்கேளா? பக்கத்துல கோயிலுக்குப் போயிட்டு வரேளா? தனியாப் போகாதீங்கோ…யாரையாச்சும் துணைக்கு அழைச்சிண்டு போங்கோ….வெள்ளி, செவ்வாய் மட்டும்போங்கோ…பிரதோஷம்னா போயிட்டு வாங்கோ…எல்லா நாளும் போக வேண்டாம்…உடம்புதான் முக்கியம்….இந்தாங்கோ…அகத்துல பண்ணினது…கை முறுக்கு கொண்டு வந்திருக்கேன்….விண்டு போட்டுண்டு ஊற வச்சு சாப்பிடு்கோ…உங்க ஞாபகம் வந்தது…மாமிக்கு எடுத்துண்டு வந்தேன்….வச்சிண்டு அப்பப்போ ஒண்ணு எடுத்து சாப்பிடுங்கோ…அப்போ என் ஞாபகம் வரணும் மாமிக்கு. நன்னா ருசியா பண்ணியிருக்கா என் மாட்டுப் பொண்ணு பாலா….அவள ஒரு நா கூட்டிண்டு வர்றேன்…நீங்க ஆசீர்வாதம் பண்ணனும்….சீக்கிரம் அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கணும்…தள்ளிண்டே போறது….பகவான்தான் அனுக்கிரஉறிக்கணும்…..பெரியவா ஆசீர்வாதம் கட்டாயம் வேணும்…

            அவ்வப்போது அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு வந்து செல்வோரின் அன்பான, ஆதரவான இந்த விசாரிப்புகளும்,  உபசரிப்புகளும்  அம்மாவை தூக்கி உட்கார்த்தி விடுமே…! அதற்கு மீறியா என் உபசாரங்கள்? அம்மாவுக்குச் செய்வது எப்படி உபசாரமாகும்? அது கடமையல்லவா? கடமையை உணர்ந்து செய்தாலும், வருடக் கணக்காய் பெரியவனே ஆதரவு என்று கிடந்த அந்த ஊரும், இடமும்தானே அம்மாவுக்குப் பெரிசாகத் தோன்றுகிறது? அதற்காக, நான் வேண்டாம் என்று அம்மா நினைக்கப் போகிறாளா என்ன? பெரியவனுக்கு ஆயிரம் வேலை. என்னானாலும் அவன் வீட்டுக்குப் பெரியவன், மூத்தவன். வீட்டிலுள்ள மூத்தவர்களுக்கெல்லாம் மூத்தவன். அவனைப் போய் இங்க பக்கத்துல வா…உட்காரு…எங்கூடக் கொஞ்சம் பேசிண்டிரு…ன்னு சொல்ல முடியுமா? அவன் வயதுக்கேற்ற மரியாதை அவனுக்கு உண்டுதானே? அந்த மதிப்பை அவனுக்குக் கொடுத்தாகணுமே!

            என்னதான் ஊருக்குத் திரும்ப வந்திடுன்னு சொன்னாலும், கட்டன்ரைட்டா நாளைக்குக் காலைல சென்னை வந்து சேர்ந்தாகணும்னு கட்டளை போட்டாலும், இங்க வந்து படுக்கைல கிடக்குற எனக்கு, மூச்சுக்கு மூச்சு  சிஸ்ருஷைக்கு ஒருத்தர் வேண்டியிருக்குதானே? அதுக்கு சின்னவனை நான் இருக்கச் சொன்னா என்ன தப்பு? அதிகாரமாச் சொல்ல அதிகாரமில்லையே? என்ன ஐவேஜ் இருக்கு என்னன்ட? கட்டுன பொடவையோட போகக் காத்துண்டிருக்கிறவளுக்கு அதிகாரம் ஒரு கேடா?

            எதுக்கு இத்தனை அவசரம்? பரபரப்பு…படபடப்பு….ஃபோன் பண்ணி, ஆம்புலன்சுக்கு ஏற்பாடு பண்ணி, அவன் வந்து ஸ்டெரெச்சர்ல தூக்கிப் போட்டு வேனுக்குள்ள தள்ளி, கூடவே ஒரு நர்சையும் அமர்த்தி, கடைசிக்காரனையும் கூடவே கிளப்பி….என்ன ஒரு அமர்க்களம்? தெருவே பார்க்கிறது…என்னவோ ஏதோன்னு…? உடம்பு முடிலயா…சீரியஸா…ன்னு கேட்டவாளுக்கு இல்லை…மெட்ராசுக்கு…பெரியவன்ட்டன்னு சொன்னபோது..எத்தனை பேர் வருத்தப்பட்டா? அதுக்குள்ளயுமா?ன்னு ஆயாசப்பட்டாளே? இப்டி வயசானவாளை அலைக்கழிக்கலாமான்னு யாரோ சொன்னாளே….அது என் காதுல விழுந்ததே…! வீட்டுக்கே டாக்டரைக் கூட்டிக் கொண்டாந்து காண்பிச்சாரே அந்தம்மா பையன்…பிறகென்னவாம்? நல்லாத்தானே பார்த்துக்கிடுறார்? பிறகு எதுக்கு கிழவிய அலைக்கழிக்கிறாங்க?

            மத்தவா புலம்பி என்ன செய்ய? வான்னா வரணும்…போன்னா போகணும். அதிகாரம் அப்டியின்னா இருக்கு…? போகச் சொன்னான். போனேன். வரச் சொன்னான், வந்தேன்.

            ஆச்சில்ல….நீ கிளம்பு…..!

            இதென்ன இப்படி ஒரு வார்த்தை? ஏதோ மூன்றாம் மனுஷனைச் சொல்வது போல?  கொண்டு வந்து சேர்த்தாச்சில்ல…கிளம்பு என்கிறானோ?

அந்தளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன்? எதை மறைக்க என்னைப் பழியாக்குகிறான்? இப்படி விரட்டுகிறானே? வேனில் வந்து இறங்கி…ஆசுவாசப்படுத்திக் கொண்டு…குளித்து…சாப்பிட்டு…பயண அசதிக்குக் கொஞ்சம் ஓய்வெடுத்து, நானாகவே மாலை கிளம்பி விட மாட்டேனா? இங்கேயேவா டேராப் போடப் போகிறேன்? சொந்தத் தம்பியை இந்த விரட்டு விரட்டுகிறானே? சொந்தத் தம்பிங்கிறதுனாலதான் இந்த விரட்டு? இல்லைன்னா முடியுமா? – சிரிப்பதா, அழுவதா?

            ம்மாவ உங்கிட்ட அனுப்பிச்சதிலிருந்து அவர் மனசே சரியில்லை. ஏதோ தப்புப் பண்ணிட்ட மாதிரி அவர் மனசுக்குத் தோணிடுத்து…ராத்திரியெல்லாம் தூக்கமேயில்லை அவருக்கு…அடுத்த வீடு, பக்கத்து வீடு, இந்தத் தெருக்காரான்னு போறவா வர்றவால்லாம் கேட்க ஆரம்பிச்சுட்டா…பாட்டியை அனுப்பிச்சிட்டேளா? அடப் பாவமே…இந்த வயசிலயா? இப்டி செய்யலாமா நீங்க? பாவமில்லையா? ஒரு  - நாள்,  கிழமை, விசேஷம்னா மறக்காம வந்து ஆசீர்வாதம் வாங்கிண்டு போவோமே…அதுக்கு இல்லாமப் பண்ணிட்டேளே…? பெரியவா நம்ப கூட இருக்கிறதே…பெரிய புண்ணியமில்லையா நமக்கு? அவாளுக்குச் செய்றது, பிரத்யட்ச தெய்வத்துக்கு செய்றதுக்கு சமானமில்லையா? இப்டியா யோசனை இல்லாமச் செய்வேள்? எவ்வளவோ புஸ்தகம் படிக்கிறேள், சொற்பொழிவு பண்றேள்…மத்தவாளுக்கு அறிவுரை, அறவுரை சொல்றேள்…ஆனா உங்களுக்கு நீங்களே இப்டியா பிசகி நடக்கிறது? யார் சொன்னா உங்களுக்கு இந்த அசட்டு யோசனையை? உங்க பாரியாளே  சொல்லியிருந்தாலும் இதைச் செய்யலாமா?  நீங்களா யோசிக்க வேண்டாமா? காலம் போன கடைசிலயா தப்புப் பண்றது? தப்புப் பண்றதுக்கு இந்த வயசு வரைக்குமா காத்திருந்து செய்யறது?  இருந்ததுதான் இருந்தா….இன்னும் கொஞ்ச காலம்….கொஞ்ச காலமென்ன…இன்னைக்கோ நாளைக்கோன்னுதானே எல்லார் பாடும் கழியறது? இந்தத் தெருவுல இருக்கிற பெரியவாளை, மூத்தவாளை, வயசாளிகளை நீங்க பார்க்காததா?

            நீங்க வாரா வாரம் நடத்துற பூஜைக்கு, ஆத்ம விசாரத்துக்குத்தான் எல்லாரும் வந்து போயிண்டிருக்காளே? அவாள்ல ஒருத்தர் கூடவா உங்களுக்கு இது ப்டாதுன்னு, தப்புன்னு சொல்லலை? சொல்லலையா அல்லது சொல்லியும் கேட்கலியா? என்னத்தன்னு சொல்றது?  மனசும், உடம்பும் முதிர்ந்த காலக் கடைசில இப்படி வக்கரிச்சிக்கலாமா?  என்ன காரியம் பண்ணிட்டேள்?—

மன்னியின் ஒப்புதல் வாக்குமூலம். சுய பச்சாதாபம்..….

            தெருவே கேட்டு விட்டதுதான். தெருவென்ன அந்த நகர்ப்பகுதியே என்றும் சொல்லலாம். வாழ்க்கையின் சில கணிப்புகள் எப்போதேனும் நம்மை மீறித் தவறி விடுகின்றனதான். கை மீறிப்போய் நழுவ விடும் விஷயமாகிப்போகிறதுதான். புத்தி அந்த நேரம் ஸ்தம்பித்துதான் போகிறது. ஒருவரின் தவறுக்கு இன்னொருவர் பலிகடா…!

            துதான் எல்லாம் முடிந்ததே..! அம்மா தெய்வமாகி புகைப்படமாய்க் காட்சியளிக்கிறாள்.    மானசீகமாய் வணங்கிக் கொள்கிறேன். உள்ளம் குலுங்கி அழுதுகொண்டுதான் இருக்கிறது. என்று ஆறுதல் படுமோ?

            எதையும் மனசுல வச்சிக்காதே….சரியா? -

அதான் அம்மாவே போயாச்சே…இனிமே என்ன?

            பதிமூணு நாள் காரியங்கள் நடந்தேறிவிட்டனதான். ஆனாலும் இன்னும் ஏன் இந்த இறுக்கம்?

            அன்றே கிளம்பி விடுவதுதான் அவனை ஆறுதல்படுத்தும் என்றால் வெளியேறி விடுவதுதான் சரி….!

பெட்டியோடு வாசல் கேட்டைக் கடக்கிறேன். பின்னாலே வந்த உருவம் கதவைப் படாரென்று சாத்தி கொண்டியைச் சத்தமாய் இறக்கி என் முதுகில் ஓங்கி அறைகிறது.

                                                            ---------------------------

04 ஜூலை 2023

 


                         நீள நாக்கு”  -சிறுகதை -பிரசுரம்-ஆரண்ய                             நிவாஸ் மாத இதழ் -ஆனி 2023              

              



      னாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன். அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம் ஆகும். அந்தக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிக்கு யார் பதில் சொல்வது? நான்தானே சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் பொழுது பொழுதாய் அறுத்துக் கொண்டிருக்குமே?  ஏற்கனவே என்னைப் பாடாய்ப் படுத்தியது போதாதா?

      அதற்காக இப்படியா வருவார்கள் என்று கேட்குமே?

காசு மிச்சம்னுட்டு வந்திட்ட! அதானே? சரியான ஆள்டா நீ? அன்னைக்கு உங்கப்பா நாள் பூராவும் நெருப்புல கிடந்து, அடுப்பு முன்னால நின்னு, வெந்து,  உழைச்சு உழைச்சு ஓடாப் போயி அத்தக் கூலி மாதிரி என்னத்தையோ கொடுத்ததை வருஷக்கணக்கா கம்முன்னு  வாங்கிட்டு வந்திட்டிருந்தாரே, ஞாபகமிருக்கா? ஞாபகமிருக்காங்கிறேன்?  இல்ல, மறந்திட்டியா? அதுலயும்  படு மோசமால்லடா இருக்கு இப்ப நீ செய்திட்டு வந்திருக்கிறது?

      ஒரு தொழிலாளியைப் போய் ஏமாத்தலாமா? மனசறிஞ்சு ஏமாத்திட்டு வந்து நிக்கிறியே! இது நியாயமா? அவன் வயிறெறிஞ்சான்னா?

இல்ல அவன்தான் வேணாம்னான்…

அவன் சொல்வாண்டா எதையாச்சும்...மனசாரச் சொன்னான்னு நீ கண்டியா? …உனக்கெங்கடா புத்தி போச்சு…எங்கயானும் அடகு வச்சிட்டயா…

      இல்ல…அப்டியெல்லாம் இல்ல…

      என்ன நொள்ள…? அப்புறம் எதுக்கு இப்டி வந்து நிக்கிறே…மனசு அரிக்குதுல்ல இப்ப…அத முதல்லயே செய்திருக்க வேண்டிதான…இனி அந்தப் பக்கம் போறபோதெல்லாம் அவன் மூஞ்சியை எப்படிப் பார்ப்பே….அப்படியே பார்த்தாலும் உன்னால சிநேக பாவமா சிரிக்க முடியுமா?பழைய பழக்கம் போல தொடர முடியுமா? நல்லாயிருக்கீங்களான்னு கேட்க முடியுமா? உனக்கு மனுஷங்க வேணாமா? காசுதான் பிரதானமா? நீ நலம் விசாரிச்சாலும் அவனால முழு மனசோட நல்லாயிருக்கேன் சார்னு சொல்ல முடியுமா? காசு தராமப் போனவன்ங்கிற எண்ணம்தானே அவனுக்கும் இருக்கும்…ஏமாத்தினவன்ங்கிற எண்ணம்தானே உனக்கும் இருக்கும்…இதுக்குத்தான் சொல்றது…நாம நம்மள முதல்ல புரிஞ்சிக்கணும்னு….புரிஞ்சிக்கிட்டிருக்கமா? இல்ல…ஆனா வயசாயிடுச்சி…வயசு மட்டும் ஆயிடுச்சி…அவ்வளவுதான்…

      நீ என்ன சொல்ற…புரியல… …

               வயசான அளவுக்கு உனக்கு அனுபவம் பத்தலஅவ்வளவுதான்..

என்ன அனுபவம்?

      வாழ்க்கை அனுபவம்டா…மனுசங்களைப் புரிஞ்சிக்கிற அனுபவம்…புரிஞ்சி நடந்துக்கிற அனுபவம்…அதவிட…

      அதவிட?

      நம்ம இயல்பு என்னென்னு புரிஞ்சி நமக்கு எது பொருந்துமோ அப்டி நடந்துக்கணும்… அதத்தான் செய்யணும்…ஒரிஜினாலிட்டின்னு கேள்விப்பட்டிருக்கியா?

      இல்ல…

      அதுதான் அது…இப்ப நா சொன்னது...அதாவது  அசலா இருக்கிறது...

      சரி நா வர்றேன்…

      எங்க கிளம்பிட்டே…?

      இந்தா வந்திடறேன்…..சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு பட்டன்களைப் போட்டு இதயத்தை மூடினான்.

 

      சார், வேணாம் …வைங்க சார்….இருக்கட்டும்….

      இல்லப்பா… ….முதல்ல உன் காசப் பிடி…பிறகு பேசுவோம்….

      ஊகும்….வேண்டாம் சார்…எனக்கு மனசே சரியில்ல சார்…இப்டி ஆயிப்போச்சேன்னு அரிக்குது…..காசு வாங்க மாட்டேன் சார்…

      அதென்னவோ உண்மைதான்…கிளம்புற போதே என் பொண்டாட்டி வாய வச்சா…இன்னும் இதுக்கு வேறே அம்பது நூறு செலவான்னு….முதல் கோணல் முற்றும் கோணல்னு ஆயிப்போச்சு…அபசகுனமாப் பேசினா…? அத மாதிரியே ஆயிப் போச்சு…”

      இல்ல சார்…இதுவரைக்கும் இப்படி ஆனதில்ல…இது நா பண்ணின தப்பு…இந்த வேலய நா செய்திருக்கணும்…என் தம்பிட்ட கொடுத்தது தப்பாப் போச்சு…

      என்னங்க நீங்க? …நீங்க கடைல உட்கார்ந்திருக்கிறதப் பார்த்துட்டுத்தான நா கொடுத்திட்டுப் போனேன்…உங்க தம்பிட்டயா கொடுத்தேன்…நீங்க இப்டிச் சொல்றதுனால சரி பரவால்லன்னு வாங்கிக்கிடச் சொல்றீங்களா…உங்க தம்பிய இங்க கடை விளம்பரத்துக்காக வச்சிருக்கிற படங்களை லேமினேட் பண்ணச் சொல்லுங்க…தொழில் பழகிக்கட்டும்…வர்ற ஆர்டரை ஏன் அவன்ட்டக் கொடுக்கிறீங்க…? பலி கடாவா என் படம்தான் கிடைச்சிதா…

      சே…சே…! அப்டியெல்லாம் இல்ல சார்..அதான் சொல்லிட்டேன்ல சார்…இது நா பண்ணின தப்புன்னு…

      சரி, அதுக்காக…பேசாம வாங்கிட்டுப் போன்னு சொல்றீங்களா…?

      சே…சே…அப்டி சொல்வனா சார்…இதமாதிரி இன்னொன்னு இருந்தாக் கொண்டுவாங்க…பைசா வாங்காம என் செலவுல ஃப்ரேம் போட்டுக் கொடுத்திடுறேன்னு சொன்னேன்..

      இன்னொரு படத்துக்கு நா எங்கய்யா போவேன்…இல்ல இதமாதிரி போஸ் கொடுக்கத்தான் முடியுமா? நா என்ன சினிமா நடிகனா? அதென்னமோ அந்த விழாவுல எடுத்தாங்க…அது தற்செயலா அம்சமா அமைஞ்சிருச்சு…ஏதோ புண்ணியத்துக்கு அவுங்க அனுப்பி வச்சிருக்காங்க…சரி, ஞாபகார்த்தமா இருக்கட்டுமேன்னு லேமினேட் பண்ணி வீட்டுல தொங்க விடலாம்னு பார்த்தா…இதெல்லாம் வேறே ஒண்ணுமில்ல…என் நேரம்யா…எந் நேரம்….தூக்கிட்டுக் கிளம்பேலயே அவ அழுதா…எதுக்கு வெட்டிச் செலவுன்னு வாய வச்சா…அது வௌங்காமப் போச்சு…வேறென்னத்தச் சொல்ல…

      அப்டியெல்லாம் இல்ல சார்..நீங்களா எதையாச்சும் சொல்லிக்கிற வாணாம்...நா செய்து தர்றேன்கிறன்ல...

      அப்டியில்லாமப் பின்ன எப்டி? இங்க தொங்குற படங்களயெல்லாம் பார்த்திட்டுத்தானய்யா லேமினேஷன் நல்லாயிருக்குன்னு நம்பிக் கொடுத்தேன்…கொடுக்கைலயே படம் கசங்கியிருந்திச்சா…நல்லா, நீட்டாத்தான இருந்திச்சு…நீ சொன்ன காசை ஏதாச்சும் குறைச்சனா? இல்லேல்ல...அப்புறம் இப்டி பண்ணினா?  ஏகப்பட்ட சுருக்கத்தோட பார்க்கவே நல்லால்லாம லேமினேட் பண்ணியிருக்கீங்களே?  புத்தகங்களுக்குத்தான்யா லேமினேஷன் சுருக்கம் சுருக்கமா இருக்கிறதை ஒரு ஃபாஷன் மாதிரி செய்யுறாங்க…படங்களுக்கில்ல…அதுவும் போட்டோ கொடுக்கிறவங்களுக்கு தப்பித் தவறிக் கூட அப்டிச் செய்திறக் கூடாது...என்னவோ 3டி படம்மாதிரி ஆக்கி வச்சிருக்கீங்க…?ஒவ்வொரு சைடுலேயும் ஒவ்வொரு மாதிரித் தெரியுது... லேமினேஷன் ஒர்க் பழகியிருக்கீங்களா, இல்லையா? அதுவே எனக்கு சந்தேகமாயிருக்கு...

      அவன் தலை குனிந்து நின்றான். இப்பொழுது அவனிடம் பேச்சு முற்றிலுமாக நின்றிருந்தது. இனி எதுவும் பேசிப் பயனில்லை  என்று நினைத்து விட்டானோ என்னவோ?  என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான் என்று முடிவுக்கு வந்திருக்கலாம்.  

என் மனது இன்னும் ஆறவில்லை. படத்தைப் பார்க்கப் பார்க்க வயிற்றெரிச்சலாய் இருந்தது. ஏதோ முக்கியமான விழாவாயிற்றே என்று தலைக்கு டையெல்லாம் அடித்து, சற்று சிறப்பு கவனத்தோடு இளமையாய்ச் சென்றிருந்தேன். என் தலையைப் பற்றி எனக்கே ஒரு பெருமை. டை அடிச்சாலும், நேச்சராத் தெரியுதே...எவனும் கண்டுபிடிக்க முடியாது.

இன்னும் முடியெல்லாம் நரைக்கவே இல்லையே சார்...எங்களப் பாருங்க...இப்பவே இப்டிக் கிழண்டு போயிட்டோம்...ஒங்களுக்கு முடி அடர்த்தி வேறே...ம்ம்...கூந்தலுள்ள சீமாட்டி...அள்ளி முடியிறீங்க...

அவர்கள் புகழ்ந்த பெருமை முகத்தில் தவழ்ந்ததோ என்னவோ...படமும் அழகாய் விழுந்து விட்டது. எனக்கே என்னை நம்ப முடியவில்லைதான்...அதைப்போய் இந்தப் படுபாவி இப்படி அசிங்கப்படுத்தி விட்டானே..லேமினேஷனுக்குப் பதிலாகக் கண்ணாடி போடக் கொடுத்திருக்கணுமோ? இப்டிக் கெடுத்து வச்சிருக்கானே? .இவனை இன்னும் நாலு வாங்கினால்தான் என்ன?

 

இந்த வீதில போற வர்றவங்களெல்லாம் உங்களப் பார்த்திட்டுக் கொடுக்கிறாங்களா? இல்ல எப்பயாச்சும் கண்ணுல பட்டு மறையுற உங்க தம்பிட்டக் கொடுக்கிறாங்களா?

               இல்ல சார்மத்தியானம் சாப்பிட வீட்டுக்குப் போவேன்அந்நேரம் அவன் இருப்பான்….நல்லாத்தான் செய்வான்இந்தா பாருங்கஅம்பது லேமினேஷன்மொத்த ஆர்டர்பூரா சாமி படம்….அவன்தான் செய்தான்எந்தப் படமாவது கசங்கியிருக்குதா பாருங்க? ஒண்ணு சொத்தையா இருந்தாலும் எனக்குக் காசு வேணாம்நா தொழில அப்டிச் சுத்தமா செய்றவன் சார்

               அப்போ சாமி படமாக் கொடுத்தாத்தான் நல்லா செய்வீங்களா…மனுஷங்க படம்னா இப்டித்தான் இருக்குமா…உங்களுக்கு மனுஷங்க வேணுமா…இல்ல சாமி வேணுமா…?

      என்ன சார் இப்டிக் கேட்குறீங்க…மனுஷங்கதான் சார் வேணும்…அவுங்கள வச்சிதான தொழில்….

      அப்போ மூஞ்சில இப்டிக் கரியைப் பூசினமாதிரி ஃப்ரேம் பண்ணினீங்கன்னா? ஒரு வேளை ஒங்க தம்பிக்கு என் முகத்தைப் பார்த்ததும் பிடிக்கலையோ? அவனக் கடுப்படிச்ச வேறே யார் மாதிரியேனும் நான் இருந்திருப்பனோ…

      பார்ட்டி பெரிய வில்லங்கம் என்று நினைத்திருப்பானோ என்னவோ அமுங்கியே போனான்.  மூஞ்சி இறுகி, செத்துப் போனது.

      நானே இருந்திருந்தும் ஆசப்பட்டு ஒண்ணைக் கொண்டாந்தேன். அதையும் நீங்க இப்டிச் செய்திட்டீங்க….என்னங்க தொழில் பண்றீங்க…தொழில்னா அர்ப்பணிப்பு உணர்வு வேணுங்க……கொடுக்கிறவங்க கிட்ட மரியாதை வேணும்...இல்லன்னா இப்டியெல்லாம்தான் ஆகும்...உங்களுக்கென்ன, நம்மள விட்டா இந்த ஏரியாவுக்கு வேறே யார் இருக்கான்னு நினைச்சிருப்பீங்க...எவன் இங்கேயிருந்து டவுனுக்குள்ள எடுத்துப் பிடிச்சிப்  போகப்போறான்னு மெத்தனம்...அதான்...

அப்டியெல்லாம் இல்ல சார்...சொன்னா நம்புங்க...இந்த ஏரியாவுல நா ஒருத்தனா இத்தன வருஷம் தாக்குப் பிடிச்சி நிக்கிறேன்னா என் தொழில் சுத்தம்தான் சார் காரணம். எத்தனை பேர் படக்கடை வச்சிட்டு மூடிட்டுப் போயிட்டாங்க தெரியுமா…? இந்தப் படங்களயெல்லாம் எப்டி லேமினேட் பண்ணியிருக்கான் பாருங்கஎங்கயாச்சும் பசை தெரியுதாஎங்கயாச்சும் ஒட்டாம தூக்கிக்கிட்டு நிக்குதா? எந்த எடத்துலயாவது தீற்றியிருக்கானா…கறைபட்டமாதிரிஇருக்காது சார்...இருக்கவே இருக்காது...என்னவோ இதுல அப்டி ஆயிப்போச்சிஎன் கெட்ட நேரம்….திட்டுத் திட்டா வேறே நிறையப் படிஞ்சி போச்சிதாய்ளிஎன் பொழப்பக் கெடுத்திட்டான் இன்னைக்குஇத்தனை பேச்சு கேட்க வச்சிட்டானே....வரட்டும்…அவனச் சவட்டிடுறேன்…

வருத்தத்தோடு முகத்தில் எரிச்சல் தெரிந்தது இப்போது.  இவ்வளவு சொல்லியும் இந்த மனுஷன் கேட்கமாட்டேங்குறானே என்ற கடுப்பும் ஏறியிருக்கலாம்.

அந்த சார் வந்தா கொடுத்திடுறான்னு சொல்லி பேசாம வீட்டுலயே நான் ரெஸ்ட் எடுத்திருக்கலாம்…அவன்னா சாமர்த்தியமாப் பேசி கொடுத்தனுப்பிச்சிருப்பான்…அஞ்சு பத்தைக் குறைய வாங்கிக் கூட பேரத்தை முடிச்சிருப்பான்…மொத்தமா காசே வேணாங்கிறேன்…கேட்கமாட்டேங்கிறானே ராட்சசன்… நல்லதுக்குக் காலமில்ல…வேறேன்ன சொல்றது? இவனுக்கெல்லாம் இவ்வளவு தாழ்ந்து போறதே தப்புதான் போலிருக்கு...

சார்…அந்தப் படத்தைக் இப்டிக் கொடுங்க…எங்கிட்ட இருக்கட்டும்…இந்த லேமினேஷனப் பிரிச்சிட்டு, வேறே ஒண்ணு ஸ்கேன் பண்ணிப் போட்டுத் தரேன்…என் செலவுலயே செய்றேன் சார்…நீங்க ஒண்ணும் பைசா தர வேணாம்…நானே நீட்டா செய்து தரேன்…

அதெப்படிய்யா…ஒரிஜினல் போட்டோ மாதிரி வருமா ஸ்கேன்ங்கிறது? ஃபிலிமிலேர்ந்து எடுக்கிறதுக்கும் எடுத்த போட்டோவ காப்பி பண்றதுக்கும் வித்தியாசமில்லியா…போனது போனதுதான்….பாரு கரெக்டா மூஞ்சி மேல பசை….கரியப் பூசின மாதிரி….

போ…உனக்கு இந்தக் காசு வௌங்காது…அவ்வளவுதான்…..

அய்யய்யோ…எனக்கு துட்டே வாணாம் சார்…நீங்க படத்தக் கொண்டு போங்க… - கையெடுத்துக் கும்பிட்டான் அவன். வாழ்வில் இப்படி ஒரு நபரை இதற்கு முன் பார்த்திருக்க மாட்டான் போலும். கும்பிடுதலின் கோணம் அதை எனக்கு உணர்த்தியது.

சொன்னது நூறு…கொடுத்ததும் நூறு. அவன் செய்த தப்புக்கு  நான் பேசியதே போதும்…

மாலை அலுவலகம் விட்டு வந்த என் மனைவியிடம் கூறினேன்.

நல்லாக் குடுத்தனே காசு…நானா ஏமாறுவேன்…அவன் பண்ணின வேலைக்கு…முடியாதுய்யா…உன்னால ஆனதப் பார்த்துக்கன்னு வந்துட்டேன்…

போறுமே…இந்தப் படத்துக்கென்ன குறைச்சல்…கொஞ்சூண்டு பசை உங்க மூஞ்சில ஒட்டியிருக்கு…அவ்வளவுதானே… …இருந்திட்டுப் போகட்டும்…மூஞ்சியே அவ்வளவுதானே….காசு மிச்சம்…

என் மூஞ்சியை விட காசு எவ்வளவு பிரதானமாகிவிட்டது அவளுக்கு.

வீட்டில் யார் கண்ணிலும் சட்டென்று படாத ஒரு இடமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன் அந்தப் படத்தை மாட்ட…!!!.மாட்டத்தான் வேண்டுமா என்று ஒரு யோசனையும் உள்ளது.

ஆனாலும் மனசாட்சி இன்னொன்றை இப்பொழுது அழுத்தி உறுத்திக் கொண்டிருக்கிறது.

கொடுத்ததுதான் கொடுத்தே…அது ஏன் வௌங்காதுன்னு அழுகுணித்தனமா சபிச்சிட்டே கொடுத்தே…கிளம்பும்போது உன் மனசுல இருந்த நேர்மை கொடுக்கும்போது இல்லையே? இதுக்கு உன்னோட இத்தனை பேச்சையும் அமைதியாக் கேட்டுக்கிட்டு, துளிக் கூட டென்ஷனாகாம,  காசே வாணாம்னு சொன்ன அவன் எவ்வளவோ பரவாயில்லையே… உண்மையைச் சொல்லி எவ்வளவு மன்றாடியிருக்கான் உன்கிட்டே...அதுவே அவன் தொழில் நேர்மைக்கு அப்பட்டமான சாட்சி...! சரியாச் சொல்லப் போனா உன்னை விட அவன் ஒரு படி மேல்தான்...

“டங் ஸ்லிப் “என்கிறார்களே, அந்தக் கண்றாவி இதுதானோ? இது “டங் ரன்னிங் ஸ்லிப்..”  என் மனதுக்குள் ஒரு ரம்பம் இன்னமும் அறுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

இனிமேல் வெளியில் கணிசமாப் பேச்சைக் குறைக்கணும்…இல்லன்னா எங்கயேனும் நிச்சயம் மாட்டுவோம்… - நினைத்துக் கொண்டு உஷாரானேன்.

 

                  ----------------------------------------------

 

                                                                                               


03 ஜூலை 2023

 

       வேதனை --  சிறுகதை - பிரசுரம்-03.07.2023திண்ணை இதழ்



                  

            சார்…சார்…விட்ருங்க…. – சத்தமாகவே சொன்னார் அவர். பதறிப் போய் ஓடி அந்தப் பையனைத் தூக்கப் போனதைத்தான் அப்படித் தடுத்தார். அதற்குள் அந்தப் பையனாகவே எழுந்து, வண்டியையும் தூக்கி நிறுத்தி, சட்டென்று கையிலும், காலிலும் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டு,  திரும்பவும்  வண்டியை உயிர்ப்பித்து, டுர்ர்ர்….என்று சீறிக்கொண்டு கிளம்பி விட்டான். அப்போதும் இடது கையில் அவனது கைபேசி இருந்தது. இப்பயும் என்ன வேகம்?  எப்படிக் க்ளட்ச்சைப் பிடிப்பான் எப்படிப் பாதுகாப்பாய் ஓட்டுவான் என்று தோன்றியது எனக்கு. இனி மனிதர்களை எங்கு ஓவியமாக்கினாலோ அல்லது சிற்பமாக்கினாலோ, இடது கையில் ஒரு மொபைல் இருப்பதுபோல்தான் உருவகிக்க வேண்டியிருக்குமோ என்று தோன்றியது. குறிப்பாக இளைய சமுதாயத்தை.

            எதிரே எந்த வண்டியில் மோதாமல் தவிர்த்தானோ அவர் அவனை ஒரு முறை முறைத்துவிட்டு, வந்த அதே நிதானத்தில் வண்டியை விட்டுக் கொண்டு போய் தெருக்கோடியில் மறைந்து விட்டார். தவறு அவர் மீதில்லை. அந்தப் பையன் ஃபோன் பேசிக் கொண்டே வந்ததுதான். சாலையில் டயர் அகலத்திற்கு மணல் சரசரவெனப் பட்டைக் கோடாய்ப் பரவியிருந்தது. பிரேக் அடித்த வேகத்தை  அது உணர்த்தியது

            என்ன வேடியப்பன்…இப்டிச் சொல்லிட்டீங்க…? என்றேன் நான். எடுத்த எடுப்பிலேயே இப்படிப் பெயரைச் சொல்லி அழைத்துவிட்டோமே என்று நினைத்துக் கொண்டேன். அதை ஒன்றும் அவர் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. நிமிர்ந்து ஒரு முறை தீர்க்கமாய்ப் பார்த்துவிட்டுச் சொன்னார்….

            ஆமா சார்….இந்த மாதிரிப் பசங்களெல்லாம் கீழ விழுந்தா ஓடிப் போய்த் தூக்கக் கூடாது சார்….போகட்டும்…அடிபட்டுச் சாகட்டும்னு விட்டுடணும்…என்றார் கோபத்தோடு. வார்த்தைகளில்தான் கோபமிருந்ததேயொழிய தையல் மிஷின் ஓடுவதிலும், துணியை நகர்த்துவதிலும் அந்த நிதானம் இம்மியும் தவறவில்லை. அது அவர் தொழில் அனுபவம்.

            அருகே சாலை ஓரத்தில் விரித்திருந்த தார்ப்பாயில் பை பையாய்த் துணி மூட்டைகள் நிறைந்து கிடந்தன. கொஞ்சம் உற்றுப் பார்த்தால்தான் அத்தனையும் கிழிசல் தைக்க வந்த துணிகள் என்று தெரிய வரும். சட்டென்று கடந்து செல்லும் ஒரு மேலோட்டப் பார்வையில் குப்பை மூட்டைகள் குவிஞ்சு கிடக்கோ என்று கூடத் தோன்றும்.

            எனக்கு சிரிப்புதான் வந்தது. அதென்ன இவ்வளவு கோபம்?

என்னங்க சொல்றீங்க நீங்க…ஒருத்தன் கீழே சறுக்கி விழுந்தான்னா…சட்டுன்னு போய்த் தூக்க வேண்டாமா? எனக்கென்னன்னா இருக்க முடியும்…? என்றேன்.

தூக்கக் கூடாது சார்…! இவங்ஞெல்லாம் எத்தனைவாட்டி சொன்னாலும் திருந்த மாட்டாங்ஞெ சார்…நம்ம பேச்செல்லாம் கேட்க மாட்டானுங்க…நம்மள ஒரு ஆளாவே மதிக்க மாட்டானுங்க…கோட்டி பிடிச்சவனுக…நல்லா அடிபடட்டும்ங்கிறேன்.- அவன் பதிலில் இருந்த அழுத்தமும் வேகமும் கண்களில் தெரிந்தது. நீங்க சட்டுன்னு ஓடினீங்க….நா எழுந்திரிச்சனா? மாட்டேன்….மாட்டவே மாட்டேன்…! என் மனசு இறுகிப் போச்சு. ஏன்னா இது மாதிரி எத்தனையோ வாட்டி இதே எடத்துல அடிச்சுப் புரண்டு விழுந்தவங்ஞள நான் தூக்கி விட்டிருக்கேன்…என்ன சொன்னாலும் எவன் கேட்கிறான்? தல தெறிக்கல்ல பறக்குறானுங்க…? எவனுக்காச்சும் பின் விளைவு தெரியுதா? கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்க்கிறானா எவனாச்சும்?

மூன்று ரோடு சந்திக்கும் அந்த இடத்தை நோட்டம் விட்டேன். விபத்து நடக்க வாய்ப்பே இல்லாத இடம்தான். வேகம்தான் கெடுக்கிறது. சந்தேகமில்லை.

நீங்க மதுரையா…? என்றேன் சட்டென்று. ஆமா சார்…..பக்கத்துல திருமோகூர்…என்றார் வேடியப்பன். எப்டிக் கண்டு பிடிச்சீங்க…? அப்போ நீங்களும் மதுரையா? என்றார் பதிலுக்கு. தெரிந்து கொள்வதில் ஒரு நெருக்கம்.

எப்டிக் கண்டு பிடிச்சீங்க என்ற கேள்வியை விட நீங்களும் மதுரையா? என்று எப்படிக் கேட்டார்? அதுதான் ஆச்சர்யம். வந்தது முதல் நான் ஏதும் கோடி காட்டவில்லையே? என் பேச்சு அதன் அடையாளமாய் இருக்கவே இருக்காது. அங்கிட்டு, இங்கிட்டு, அவிங்ஞ, இவிங்ஞ… ம்க்கும்….எதற்கும் பழகவில்லை…. இனிமேலா வரப் போகிறது?

நானும்  மதுரதான்….அதான் வந்தாங்ஞ…போனாங்ஞ-ன்னு பேசுறீங்களே…அது ஒண்ணு போதாதா? என்றேன்.

சற்றுத் தள்ளி நின்றிருந்த ரெண்டு பேர் அவரை நெருங்கி வந்தார்கள்.

இந்தக் காரை எடுக்கணுங்களே…டாக்டரம்மா கௌம்புறாங்க….வண்டி வெளில வரணும்….கேட் திறக்கணும்…..

அப்டீங்களா…கொஞ்சம் இருங்க…என்று விட்டு தையல் மிஷினை விட்டு எழுந்தார். பக்கவாட்டில் இருந்த ஒரு வீட்டை நோக்கிப் போய் மாடியைப் பார்த்துக் கத்தினார்.  இதோ வந்திட்டேன்  என்றவாறே ஒரு தலை தெரிந்தது பால்கனியில். கையில் வைத்திருந்த சாவிக் கொத்தை அங்கிருந்தவர் தூக்கி எறிய…சக்கென்று பிடித்துக் கொண்டார் வேடியப்பன். சாவியைக் கொண்டு வந்து  நீட்டியவாறே…சார்…அ ந்த மாருதியைத் திருப்பி இதோ…இந்த கேப்ல…தயவுசெய்து நிறுத்திடுறீங்களா….? என்றார்.

இது வழக்கந்தானே என்பதுபோல் டாக்டர் வீட்டு வாட்ச்மேன் சாவியை வாங்கி அவர்கள் டிரைவரிடம் கொடுத்து, அதோ அந்த எடத்துல நிறுத்திடுங்க….என்றார். காட்டிய இடத்தில்  ஒரு கார் அளவுக்குக் கொஞ்சம் இடம் இருந்தது. அப்படி நிறுத்துவதும் வெளியே எடுப்பதுமே ரொம்பவும் கவனமாய்ச் செய்ய வேண்டிய வேலை. முன்பக்க, பின் பக்கக் கார்களில் இடித்து விடாதபடி நிறுத்துதல் ஒரு தனிக்கலை. அதுபோல் எடுப்பதுவும்….

அந்த அகலத்  தெருவிலும், பக்கவாட்டு மெயின் ரோடைப் பார்த்திருந்த வீடுகளிலும் வீட்டுக்கு ஒன்று இரண்டு என்று கார்கள் இருந்தன. உள்ளே காம்பவுண்டுக்குள் நின்றது போக எல்லா வீட்டு வாசல்களிலும் கார்கள் நின்றன. மெயின் ரோடு பார்த்து வாசல் இருந்த வீடுகளின் கார்களும் இந்தப் பக்கவாட்டு அகலத் தெருவில்தான் நின்றன. அவர்களுக்குள் ஒரு மன ஒப்புமை இருப்பதாகத் தெரிந்தது. கார்கள் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். கார் இல்லன்னா அது வீடே இல்ல…என்ற கதைதான்.இவை போக டூ வீலர்களும் எல்லா வீடுகளிலும் காட்சியளித்தன.  தெரு ஆரம்பத்தில் ஒரு பெரிய டிரான்ஸ்ஃபார்மர். அதனடியில் மட்டும்தான் எந்த வாகனமும் இல்லை.

இந்தாங்க சாவி…. அதோ…அங்க பாருங்க….அங்கதான் வண்டி நிக்குது….என்றார் டாக்டர் வீட்டு டிரைவர். சரிங் சார்…சொல்லிடறேன்…நன்றி….என்றவாறே சாவியை வாங்கிக் கொண்ட மாரியப்பன்…அந்த மாடி வீட்டிற்கு அருகில் சென்று மீண்டும் குரல் கொடுத்தார். பால்கனியில் ஒருவர் தோன்ற, இங்கிருந்து சாவியை அவரை நோக்கி வீசியெறிய, பிடித்துக் கொண்டார் அவர். வேடியப்பன் எறிவதும், அவர் பிடித்துக் கொள்வதும், வெகு நாள் பழக்கம் போல் தோன்றியது. சாவி மிகச் சரியாக மந்திரம் போல்  அவர் கையை நோக்கிப் போய் உட்கார்ந்து கொண்டது.

நமக்கு இதான் சார் தெரு, கடை எல்லாம். இந்த வெட்ட வெளிதான்.  இங்கதான் நம்ம தொழில்.  காலைல ஒம்பதுக்கு வந்தன்னா இருட்டும் மட்டும் இருப்பேன். இந்த லைட்டுக் கம்பம்  அடிலதான்…இந்த வீடுகள்ல இருக்கிற துணிகள்லாம் எங்கிட்டதான் வரும். பார்த்தீங்கல்ல…இந்தப் பை மூட்டைகள…அத்தனையும் தைக்க வந்தது. …சாயங்காலத்துக்குள்ள எல்லாத்தையும் தைச்சு…கொண்டு கொடுத்திடுவேன்….இடைல உங்கள மாதிரி யாராச்சும் வந்தா அதையும் கவனிச்சிக்கிடுறது….

கொரோனா காலத்துல என்ன பண்ணுனீங்க…? ரொம்பப் பாதிச்சிருக்குமே…என்றேன். அவர் முகம் இறுகியது போல் ஆனது.

அந்த சமயம் அதோ அந்த வீட்டுக்காரரு…காம்பவுன்டுக்குள்ள எடம் கொடுத்தாரு…அப்போ அவர்ட்டக் கார் இல்ல….அப்புறம்தான் புதுசா வாங்கினாரு…அங்க வச்சு ஓட்டிக்கிட்டிருந்தேன்….அப்பத்தான் ரொம்பவும் போலீஸ் கெடுபிடியாச்சே…வெளிலயே வர முடியாதே… எப்டியோ ஒளிஞ்சு மறைஞ்சு சந்து பொந்துன்னு நுழைஞ்சு இங்க வந்து சேர்ந்திடுவேன்….துணி குடுக்கப் பயந்தாக எல்லாரும். எதுக்கு வர்றே? ன்னு கூடக் கேட்டாங்க.  சில பேர் மாஸ்க் போட்டுக்கிட்டு வந்து கொடுத்து வாங்கிக்கிட்டாங்க…அந்தப் பீரிட்தான் பொழப்பு ரொம்ப நாறிப் போச்சு. தற்கொல பண்ணிக்கிடலாமான்னு கூட நெனச்சேன். ரெண்டு பொட்டப் புள்ளைக, ஒரு பையன் மூத்தவன், எம்பொஞ்சாதி….மனசு வரல்ல…  எப்டியோ சமாளிச்சேன்னு வச்சிக்குங்க….ஆனா ஒண்ணு…அப்பயும் இந்த ஏரியா மட்டும் இல்லாமப் போயிருந்திச்சின்னா, ரொம்ப நாறிப் போயிருக்கும்….இந்தத் தெருவுல இருக்கிற எல்லா வீட்டுக்காரவுகளும் கடனாவும், இனாமாவும் பணம் கொடுத்து ஒதவுனாக…. மறக்கவே முடியாது….அதான் இந்த எடமே கெதின்னு கெடக்கேன்..இதான் என்னோட கோயில்… ஒரு நா வராட்டியும்…என்ன, ஏதுன்னு ஃபோன் பண்ணிடுவாங்க…

நான் வேடியப்பனையும், அவர் தைக்கும் வேகத்தையுமே கவனித்துக் கொண்டிருந்தேன். பேசிக் கொண்டேயிருப்பதனால் அவர் வேலை ஒன்றும் வேகம் குறையவில்லை. தடைபடவில்லை. தொழிலில் தெளிவிருந்தது. கையும் காலும் போட்டி போட்டுக் கொண்டு பேசின. அந்தந்தத் துணிகளுக்குத் தகுந்த மாதிரி கலர் நூல்கள் மாற்றும்போதும் அதை ஊசியில் கோற்கும்போதும் அவரின் கூரிய பார்வை என்னை வியக்க வைத்தது. அந்த சிறு ஊசித் துவாரத்தில் ஒரே முறையில் நூலை அவர் கோர்த்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. நூலின் நுனியை உதட்டு விளிம்பில்   ஈரப்படுத்திக் கொண்டு பிசிறை நீக்கி  கண் இமைக்கும் நேரத்தில் ஊசியின் துளைக்குள் அனுப்பிட வலக்கை கட்டை விரலும், ஆட்காட்டி விரலும்  அதைப் பதமாய் மறுபுறம் இழுத்துக் கொண்டது. அவ்வளவு பெரிய கத்தரிக்கோல் எப்படி அந்த கண்ணுக்குத் தெரியாத பொடி நூலிழையின் நுனியை “கருக்“கென்று வெட்டுகிறது என்பது இன்றுவரை ஆச்சரியம்தான் எனக்கு.

கால் பெடல் போடாத மிஷினெல்லாம் எப்பயோ நிறைய வந்திடுச்சே….இன்னும் இதையே வச்சிருக்கீங்க…சிரமமா  இல்லையா? என்றேன்.  மெஷின் பழசாய்த்தான் இருந்தது. மேல் பலகை செதில் செதிலாய் விட்டிருந்தது. கொஞ்சம் கவனக் குறைவாய் இருந்தால் சிராம்பு விரலில் ஏறி விடும்.  தைக்க வேண்டிய இடத்தில் துணியை மடிப்பதும், அந்த மடிப்பு அயர்ன் பண்ணியதுபோல் நிற்க கட்டை விரல் நகத்தால் கரக்கென்று ஒரு கோடு இழுத்து நிறுத்துவதையும், அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்காகவே கட்டை விரல் நகம் நீளமாய் வளர்க்கப்பட்டிருந்தது.

எங்கிட்ட இதான் சார் இருக்கு….இங்க ஒண்ணு…வீட்ல ஒண்ணு…அதுல என் சம்சாரம் தைக்கும். பக்கத்து வீடுகள்லாம் ரவிக்கைத் துணி தைக்கக் கொடுப்பாக….சின்னப் பிள்ளைங்களுக்கு டவுசர் சட்டை தைக்கும்…பாவாடை தைக்கும்…ரெண்டு பேத்துக்கும் சரியான ஒழைப்புதான் சார்….இந்த மிஷினே புதுசு வாங்கணும்னா பன்னெண்டாயிரம், பதினைஞ்சாயிரம்னு ஆகும்…அதுலயும் மார்டனா வாங்கணும்னா நா எங்க சார் போறது? இந்தப் பொழப்புக்கு பாதகம் இல்லாம ஓடுனாப் போதும்னு நெனச்சிட்டிருக்கேன்…அதப்பத்தியெல்லாம் யோசிச்சதேயில்லை.

குட் மார்னிங் வேடியப்பன்….யாரோ ஒருவர்  சொல்லிக் கொண்டே மகிழ்ச்சியாய்க் கையசைத்து விட்டுப் போனார். பதிலுக்கு வணக்கம் சொன்ன வேடியப்பன்…இந்த ஐயாவெல்லாம் நமக்கு ரொம்ப ஒதவி….கொரோனா பீரியட்ல…ஐயாயிரம்…பத்தாயிரம்னு… கொடுத்திருக்காக….இன்னைவரைக்கும் திருப்பிக் கேட்டதில்ல…எனக்குத்தான் மனசாட்சி போட்டு உறுத்திக்கிட்டே கெடக்கு… ….என்றவாறே …சார்…கொஞ்சம் பக்கத்துல வாங்க…டேப்புல அளந்துக்கிறேன். கீழ எத்தனை இஞ்ச்சு வெட்டி மடிச்சு அடிக்கணும்னு தெரியணும்….என்றார்.

சும்மா ரெண்டு மடிப்பு மடிங்க…சரியா வரும்….என்றேன். ரெடிமேட் பான்ட் வேண்டாம் என்றாலும்…கேட்டால்தானே….? என்னதான் தனி அறைக்குள் சென்று போட்டுப் போட்டுப் பார்த்தாலும்…அந்தக் கண்ணாடி செய்யும் மாயமா அல்லது நம் கண்கள்தான் அங்கே மயங்கிப் போகிறதா…தெரியவில்லை. சரியான அளவில் என்றும் எடுத்ததில்லை. எட்டு மாடி, பத்து மாடி என்று அவ்வளவு பெரிய ஜவுளிக் கடைகளிலெல்லாம் போய் நிற்பதும், பார்ப்பதுமே ஒருவிதமான பதட்டத்தை உண்டு பண்ணுவதாக இருந்தது. ஒரு பான்ட்டுக்கு ரெண்டாயிரத்து ஐநூறு, மூவாயிரமா?  அநியாயமில்லை…..கொள்ளை…கொள்ளை…அநியாயக் கொள்ளை…பகல் கொள்ளை…புலம்பினேன் என் பையனிடம். ரெண்டு கால்களுக்கும் நடுவே பிடிக்கத்தான் செய்கிறது. ஒரு ரெடிமேட் பான்ட் கூட ஜட்டியோடு சேர்ந்து வசதியாய் நெகிழ்ந்ததில்லை. நான்தான் நெளிந்து கொண்டிருந்தேன். முழுக் கையும் உள்ளே போகாமல் பக்கவாட்டில் எதற்கு ரெண்டு பைகள்? கர்சீப்தான் நுழைக்க முடியும்!  டிக்கெட் பாக்கெட் என்று ஒன்று பேருக்கு. அதில் வெறும் பஸ் டிக்கெட் மட்டும்தான் செருக முடியும். அவ்வளவு சிறிசு.   

காலம் எவ்வளவுதான் மாறினாலும் தைத்துப் போட்டால்தான் வசதி. துணி வாங்கி வைத்துக் கொண்டு, ஊர் செல்லும்போது வழக்கமான தையல் கடையில் கொடுத்து, நம் அளவுக்கு வசதியாய் தைக்கச் சொல்லி போடுவதுதான் இன்றுவரை என் வழக்கம். டிக்கெட் பாக்கெட் கொஞ்சம் ஆழமாய் இருக்கணும் என்றாலும், பொந்து போல் இறக்கமாய் துணி சேர்த்து தைத்துக் கொடுப்பான் அங்கே. நகரில் பர்ஸ் பணம் திருட்டுக் கொடுக்காமல் இருப்பதற்கு அந்த முன்புற  டிக்கெட் பாக்கெட்தான் வசதி.  கொரோனா காலங்களில் ஊர் செல்ல முடியாமல் போனதில்  பயணம்  நின்று போய்  எப்போதேனும் வெளியே செல்கையில் இந்த ரெடிமேட் பான்ட்களைப் போட்டுக் கொண்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தேன். பெறகு பார்த்துக்கலாம் என்று கீழே மடித்து அடிப்பதைத் தவிர்க்க, அதில் ரெண்டு மூன்று நின்று போய்…இப்போது வேடியப்பனிடம் வந்து நிற்க வேண்டியதாய்ப் போச்சு. அடிக்கடி அருகிலிருக்கும் போஸ்டாபீஸ் போகையில் அந்த வழியில் இவரைப் பார்த்திருந்ததால், ரோட்டுக் கடைத் தையல்காரர்…இவர்தான் லாயக்கு நமக்கு என்று கணித்திருந்தேன்.

சார்…கொஞ்சம் எடுத்துக்குங்க… - என்றவாறே அந்தப் பிளாஸ்டிக் டப்பாவை நீட்டினார் வேடியப்பன்.   என்ன? என்று பார்த்தேன்.

அட…கேசரி….ஏது.. இந்தக் காலைல…?

அந்த வீட்டு மாமி கொடுத்தாங்க சார் என்று பக்கவாட்டில் கையைக் காண்பித்தார்.….இன்னைக்கு ஏதோ பூஜையாம்….என்ன விசேசம்னாலும் பலகாரம்  நமக்கு வந்திடும் தவறாம….மாமி வீட்டு கேசரிதான் சார்…சாப்பிடுங்க….

அவரின் வற்புறுத்தலுக்காக ஒரு வாய் எடுத்துப் போட்டுக் கொண்டேன். நீங்க சாப்பிடுங்க….போதும்…..

வேடீ….சித்த வர்றீங்களா…..? யாரோ கூப்பிடும் குரல் கேட்டது.

இதோ வந்திட்டம்மா….என்று எழுந்து ஓடினார் வேடியப்பன். வாசலில் ஆட்டோ ஒன்று நின்றிருக்க….வாங்க….ஒரு கை கொடுங்க…அய்யாவை கொண்டாந்து உட்கார்த்திடலாம்….என்றது அந்த மாமி.

ஆகட்டுங்கம்மா…என்றவாறே வீட்டுக்குள் நுழைந்த வேடியப்பன்….நீங்க  விடுங்க…நீங்க விட்ருங்க….நா பார்த்துக்கிறேன்….என்று கூறியவாறே….அந்தப் பெரியவரை இரு கைகளாலும் அணைத்து அலேக்காகத் தூக்கி…கிடு கிடுவென்று வாயிலை நோக்கி வந்து கடந்து, ஆட்டோவில் பதவாகமாய் அமர்த்தினார். ஒரே மூச்சில் தூக்கி வந்தது மூச்சு இழைத்தது.   அந்தப் பெரியவர் முக்கி முனகிக் கொண்டிருந்தார். ஐயா…பின்னாடி சாய்ஞ்சுக்குங்க…என்றவாறே அவரைச் சாய்த்து வைத்தார் வேடியப்பன்.

நாந்தான் சொன்னேன்ல….ரெண்டு பேருமா மெல்ல நடத்திக் கூட்டிட்டு வருவோம்னு…அதுக்குள்ளே என்ன அவசரம்….?  அந்த மாமி வேடியப்பன் இழைப்பதைப் பார்த்துப் பரிதாபப்பட்டு இப்படிச் சொல்ல….மேல் துண்டால் வியர்வையை அழுந்தத் துடைத்து விட்டுக் கொண்டார்.. இடுப்பில் கை வைத்து, முடியாமல் சற்றே கூனி நின்றார்

ஆஸ்பத்திரில ஒத்தையா என்ன பண்ணுவீங்க மாமி…? நா வரட்டா….நீங்க போங்க…என் சைக்கிள்ல பின்னாடியே  வந்துடறேன்…என்றார்.

அதெல்லாம் வாண்டாம்…போய் உன் பொழப்பைப் பாரு….அங்க யாரயாச்சும் வச்சு உள்ளே கூட்டிப் போய்க்கிறேன்….வண்டித் துணி கெடக்கு…தைச்சு முடிக்க வேண்டாமா? பேச்சப் பாரு…வா்றானாம்…?   – சொல்லியவாறே மாமியும் உள்ளே அமர, ஆட்டோ நகர்ந்ததைப் பார்த்தவாறே திரும்ப வந்தார் வேடியப்பன். பேச்சப் பாரு…என்று அந்த மாமி சொன்னதில் மிளிர்ந்த உரிமை….எனக்குப் புரிந்தது. அந்தத் தெருக்காரர்களுக்கு வேடியப்பன் ஒரு காவல்.  ஆபத்பாந்தவன்.

இவுக ரெண்டே பேர்தான்யா….பையன் வெளிநாட்டுல இருக்கான்… பணம் அனுப்புறதோட சரி….எனக்குத் தெரிய மூணு வருஷமாச்சு அந்தப் பையன் வந்து அப்பாம்மாவப் பார்த்து….அதுவும் கொரோனா சமயத்துல தலையே காட்டல…இந்த மாமிதான் ஒத்தையா இருந்துக்கிட்டு, உடம்பு முடியாத அந்த அய்யாவையும் வச்சு  கஷ்டப்பட்டு சமாளிச்சிக்கிட்டுக் கெடக்கு….ஆனாலும் மன தைரியம் ஜாஸ்தி அவுகளுக்கு. நல்ல வேளை…பார்க்க வராட்டாலும் பணமாச்சும் அனுப்புறானேன்னு நெனச்சிக்கிட்டேன். இல்லன்னா சோத்துக்கே திண்டாட்டமாயிடும் அவுகளுக்கு. அந்த அய்யாவுக்கு பென்ஷன் கின்ஷன் ஒண்ணும் கிடையாது. ஏதோ சொற்பமா தனியார் கம்பெனில வேல பார்த்து ரிடையர்ட் ஆனவரு. சேமிப்பும் எதுவும் இருக்கிறாப்ல தெரில….இந்த ஒரு வீடுதான் சொந்தம்…பையன வச்சு ஓடிக்கிட்டிருக்கு…அவனும் கைவிட்டான்…கத அம்பேல்தான்…

பேச்சினூடாக…தடங்கலின்றி பேன்ட் கீழ்த் துணியைக் கட் பண்ணியதுபோக, எடுத்த அளவுக்கு வாகாக மடித்துத் தைக்க ஆரம்பித்தார் வேடியப்பன். ரெண்டு பான்ட்களையும் தைத்து முடிக்கும் முன் இன்னும் எத்தனை அழைப்புகள் வருமோ என்று தோன்றியது எனக்கு.

அந்தப் பக்கம் வருவோர், போவோர் சிலர் வேடியப்பனிடம்தான் வழி கேட்டனர். குறிப்பாக தெருக் கடைசியில் இருந்த பள்ளிக்குத்தான் அடிக்கடி ஆள் போய்க் கொண்டிருந்தது. அட்மிஷன் நடக்குது என்றார்கள். பொறுமை ஜாஸ்திதான் வேடியப்பனுக்கு. குறி சொல்பவர் போல் அந்தத் தெரு முக்கில் அவர்.

பக்கத்தில் பாயில் கிடக்கும் துணி மூட்டைப் பைகளைப் பார்த்தபோது இத்தனையையும் இவர் எப்போது தைத்து முடிக்கப் போகிறார்? என்று எண்ணியது மனம்.

மணி பகல் பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. வெய்யில் உஷ்ணம் கடுமையாய் இருந்தது. அந்தத் தெருவே வீட்டுக்கு வீடு சாலை  மரங்கள் வரிசையாய் அடர்ந்து காணப்பட்டதால் மொத்தமாய் நிழல் படர்ந்திருந்தது. எல்லா வீடுகளும் பழமை போர்த்தியிருந்தன அந்த மரங்களைப் போல்.  குறைந்தது முப்பது ஆண்டுகளாவது ஆன வீடுகள்தான் பலதும் என்று எண்ண வைத்தது.

ஆம்மா….வேடியப்பன்…இம்புட்டுத் துணிகளை வாங்கி வச்சிருக்கீங்களே…இதுல எங்கங்க கிழிசல்கள்னு பார்த்துப் பார்த்துத் தைச்சிடுவீங்களோ…? இருந்து தைக்காம, குடுத்துட்டுப் போயிடறாங்களேன்னு கேட்டேன்….

அப்டித்தான் சார்…சொன்னது…சொல்லாததுன்னு எல்லாந்தான். சிலதுக்கு “டக்“ பிடிக்க வேண்டிர்க்கும். சொல்லுவாக… அத மட்டும் மார்க் பண்ணியிருப்பேன். மத்ததெல்லாம் கிடுகிடுன்னு வளைச்சுப் பிடிச்சிடுவேன் சார்… எதுவும் விடுபடாது …பொழுது இருட்டுறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிடும்….ஒரு மனக் கணக்கு தான்…அதுக்கு மேல வந்திச்சின்னா…நாளைக்குன்னு அனுப்பிடுவேன். புரிஞ்சிக்கிடுவாங்க… கோவிக்க மாட்டாங்க….அப்டிப் பழக்கம் நம்மளுது…

ன் இரண்டு பான்ட்களையும் வாங்கிக் கொண்டு நான் வீடு வந்து சேர்ந்தபோது எனக்கு அன்று பூராவும் வேடியப்பன் நினைவாகவே இருந்தது. வாழ்க்கையை எப்படி எப்படியெல்லாமோ சமன் செய்து கொள்ளும் வேடியப்பன் போன்றவர்களுக்கு  மொத்த வாழ்க்கையும் தீராத உழைப்பாகவே அமைந்து முடிந்து விடுகிறது…விடிவு என்பதே கிடையாதா? இந்த நித்திய உழைப்பிலிருந்து என்று அவர்கள் ஓய்வு பெறுவது? கொஞ்சமேனும் மூச்சு வாங்க வேண்டாமா? என்று அவர்கள் அக்கடா என்று அமர்ந்து நிம்மதியாய் சாப்பிட…தூங்க..என்று ஆசுவாசமாய் இருந்து கழிப்பது? அட கடவுளே…!உலகத்தின் முக்கால்வாசி மனிதர்கள் இப்படித்தானே…? கீழ் நடுத்தரமும், ஏழைகளுமாய் நிறைந்த உலகம் ஓய்வு ஒழிச்சலில்லாமல்…..இப்படிக் கிடந்து சீரழிகிறதே! சாகும்வரை இப்படி உழைத்து உழைத்தே நசிந்து இறுதி மூச்சை விட வேண்டியதுதானா?

எண்ணிக் கொண்டே உறங்கிப்போனேன் அன்று. நாலைந்து நாட்கள் ஒடிப் போயின. புயல் மழை என்ற அறிவிப்புகள். இம்மாதிரி நேரத்திலெல்லாம் வேடியப்பன் என்ன செய்வார்…எங்கு உட்காருவார்…எந்த மறைப்பில் புகுந்து கொள்வார்? எப்படித் தன் வேலையைச் செய்வார்? இயற்கையால் அவர் தொழிலுக்குத் தடையாகும் போது அவர்  என்னாவது?  பலவாறு  எண்ணிக் மாய்ந்து கொண்டிருந்தேன்.

 பொழுது விடிந்த வேளையில் கைலிகள், பேன்ட்கள் என்று தூக்கி வந்து என் முன் போட்டான் பையன். அப்பா முன் இப்படிப் பொத்தென்று போடுகிறோமே என்கிற லஜ்ஜையெல்லாம் கிடையாது. அது சற்று மரியாதைக் குறைவான செயல் என்று கூட அவர்களுக்குத் தோன்றாது. அந்த மாதிரிச் சின்னச் சின்ன உணர்வுகளுக்கெல்லாம் அங்கே இடமில்லை. நமக்கு நேரே காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், நாம்தான் தள்ளி உட்கார்ந்து கொள்ள வேண்டும். காலை மடக்கு…இல்லன்னா அந்தப் பக்கமா நீட்டிக்கோ…என்றால் அந்த ஒரு தடவை மட்டும் செய்வார்கள். மறுபடி பழைய கதைதான். அப்படி மாறி நீட்டும்போதும் கால்களுக்கு நேரே பூஜை அறை இருக்கும். அந்தத் தப்பும் புரியாது. நச்சு நச்சென்று சொல்வதாய் எரிச்சல் படுவார்கள்.பெரிசுகள் அவர்கள் மரியாதையை அவர்கள்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதுதான் யதார்த்தம்.

அப்பா…எனக்கும் இதையெல்லாம் தைக்கணும் …. இந்தக் கைலியையெல்லாம் ரௌன்ட் அடிக்கணும். இந்த நாலு பேன்ட்லயும் கீழே கட் பண்ணி மடிச்சு அடிக்கணும்…உனக்கு செய்திட்ட மாதிரி…..

என்னவோ மனதில் உறுத்தியது எனக்கு.  தயக்கம் எழுந்தது.

இந்த பார் சந்தர்…அவன் ரோட்டோரத்துல உட்கார்ந்து தைக்கிற சாதாரணத் தையல்காரன்…அவன்டெல்லாம் கொடுத்து தைச்சா உனக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ…நல்லா யோசிச்சு சொல்லு….அப்புறம் என்னை எதுவும் குறை சொல்லக் கூடாது….என்றேன்.  ஏதோ அவசரத்துல இங்க கொடுத்திட்டு பிறகு தைய்யா…தக்கா என்று குதித்தால்? அதனால்தான் முதலிலேயே கேட்டுக் கொண்டேன். இந்தக் காலத்துப் பசங்களுக்கு எதுலயுமே பைசா கூடக் கொடுக்கிறதுலதான் நம்பிக்கை….அவிங்ஞ செலவு செய்றதில்ல…விரயம் பண்றானுங்க…அப்போ கேட்குறதுல என்ன தப்பு?

அதனாலென்னப்பா…? நீ அங்கதான தைச்சிட்டு வந்தே…எனக்கும் அவனே தைக்கட்டும்….ஏன்ப்பா இப்டியெல்லாம் கேட்கிறே? என்றான். ஏதோ சங்கடப்பட்டது போல.

இல்லப்பா…இருந்தாலும் கேட்டுக்கணும்ல….என்றேன் நான்.  விரும்பித்தான் கொடுக்கிறான் போலும்! நம்ம பையனுக்கு நம்மளோட சிக்கன புத்தில கொஞ்சமாவது இல்லாமலா போயிடும்? .  

ரெண்டு ஜீன்ஸ் பேன்ட் இருக்கு…இதையெல்லாம் அடிப்பானா…? ஊசி உடைஞ்சிடாது? இத மட்டும் வேணும்னா வேறே எங்கேயாவது கொடேன்….

அதெல்லாம் ஒண்ணும் உடையாது…..கீழ்ப் பகுதிதானே….இங்கயே தைக்கலாம்… சும்மாக் கொடு….நானும் கூட வரட்டா…?-

 வேண்டாம். நானே எடுத்திட்டுப் போறேன். அளவு பேன்ட் இருந்தாக் கொடுத்திடு….அப்பத்தான் உயரம் கரெக்டா இருக்கும்….என்றேன். மறுபடியும் வேடியப்பனைப் பார்க்கும், பார்த்துப் பேசும் சந்தோஷம் மனதுக்குள் புகுந்து கொள்ள, பையன் கொடுத்த துணியையெல்லாம் ஒரு தோல் பைக்குள் மடித்து  எடுத்து  வைத்துக் கொண்டு புறப்பட்டேன். நடைக்கு நடையாச்சு…வேலைக்கு வேலையாச்சு…..

வண்டில கொண்டு விடட்டாப்பா….என்றான்.

வேண்டாம்…நடந்தே போய்க்கிறேன். அதான் எனக்கு வசதி…என்று கிளம்பினேன்.அங்கெல்லாம் வந்து வெட்ட வெளியில் பொறுமையாய் நிற்க அவனுக்கு ஏது பெருமை? அந்தப் பெருமையெல்லாம் மூத்த தலைமுறைக்குத்தான்….! எல்லாவற்றிற்கும் மெனக்கெட்டு, கருத்தூன்றி, கஷ்டப்பட்டு குடும்பத்தைக் கொண்டு செலுத்தியது.

வேடியப்பன் இருக்கும் கார்த்திகேயபுரம்  பகுதிக்குச் சென்று சேர்ந்தபோது அந்த மரத்தடியில் அவர் இல்லை. என்னடாது? ஆளக் காணல….?  -மனசு சுணங்கியது எனக்கு.

பதிலாக வேறொரு ஆள் அங்கே தையல் மிஷினைத் தரை விரிப்பில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து தைத்துக் கொண்டிருந்தான். இது யாரு? புதுசா ?

…இங்க வழக்கமா ஒருத்தர் இருப்பாரே….வேடியப்பன்னு…அவர் எங்கே? என்றேன்.

 வாடிக்கையா சார்?…அவர் நாளைக்கு வருவார் ….அதுக்குத்தான் நான் வந்திருக்கேன்….என்றான் அவன்.

அவனிடம் தைக்கக் கொடுப்பதா வேண்டாமா என்ற தயக்கம் வந்தது. என் துணியானாலும் பரவாயில்லை. சற்று முன்னப் பின்னே இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம். பையனுடையதாச்சே…? கத்துவானே…? கத்திக் குடியைக் கெடுப்பானே!-யோசித்து நின்ற வேளையில்….

தைக்கணுமா சார்…கொண்டாங்க….என்றான் அவன்.

இல்லப்பா…நான் அவரத் தேடித்தான் வந்தேன்.   நாளைக்கு வந்திடுவாருல்ல….? என்றேன்.

கண்டிப்பா சார்….ஆசுபத்திரிக்குப் போயிருக்கார்….சாயங்காலம் ஆகும்…திரும்ப….அதனால இன்னைக்கு வரமாட்டாரு…..

ஆஸ்பத்திரிக்கா? என்னாச்சு அவருக்கு….? உடம்பு சரியில்லையா?  -சற்றே பதற்றத்தோடு கேட்டேன்.

அவருக்கொண்ணும் இல்ல சார்…அவர் பையன்தான் வண்டில இருந்து கீழ விழுந்து கால ஒடிச்சிக்கிட்டான்…அது ஒரு மாசமாகப் போகுதே….தெரியாதுங்களா விசயம்…?

அடப் பாவமே…! ஒரு மாசமா?  சொல்லவேயில்லையே…? –  நெஞ்சுக்குள்  ஏதோ பாரம் அழுத்தியது.  ஒவ்வொருவர் உள்ளத்துள்ளும் அடைபட்டுக் கிடக்கும் துயரமும், துன்பமும், தீராத நோவும்….?  எப்படித்தான் பிறர் உணர முடியும்?

வண்டில போகைல ஃபோன் பேசிட்டே போயிருக்கான்….ஒரு வேன்காரன் இடிச்சித் தள்ளிட்டுப் போயிட்டான்…பாவம் சார் அவுரு…. ….எலும்பு மூட்டு ஆசுபத்திரில கெடக்கான் பையன்….செலவான செலவு….

எனக்குள் அதிர்ந்தது இந்தத் தகவல். ஐயோ பாவமே….இவருக்கா இந்த  நிலமை…? ஏதாவது உதவி செய்யலாமே…! – அடக் கடவுளே…இப்படியெல்லாமா சங்கடங்கள் வரணும்? அதான் ஆள் கலகலப்பில்லாம இருந்தாரா? ஏனோ அப்போது தோன்றியது இப்படி…!

சட்டென்று மனம்  ஒன்றை  ஞாபகப்படுத்தியது.

விட்ருங்க சார்….விட்ருங்க….தூக்காதீங்க…இவங்ஞெல்லாம் என்ன சொன்னாலும் கேட்க மாட்டானுங்க…அகராதி பிடிச்சவனுங்க….நம்மளெல்லாம் மதிக்கவே மாட்டானுங்க!! விரக்தி கோபமாய் வெளிப்பட்டது அங்கே…! மனக் குமுறலாய் எனக்குத் தோன்றியது.

அவரின் அன்றைய வீரியமான வார்த்தைகள்…..அதற்குள் பொதிந்திருந்த ஆழமான சோகம்…!  வேதனை! மனப் புழுக்கம்…? எதையென்று சொல்வது?

வேடியப்பனை எண்ணி என் ஆழ்  மனம்  கசிந்து உருக,  மிகுந்த சோர்வோடு வீடு திரும்பினேன்.

                                                -----------------------------------

 

                                                           

 

 

 

 

           

“காலச் சுமைதாங்கி“ - சிறுகதை - வாசகசாலை 100 வது இதழ் (06.10.2024)

                                                                   “காலச் சுமைதாங்கி“ அ றையின் மின் விசிறியை அணைத்து விட்டு ஜன்னலருகே உட...