30 நவம்பர் 2020

“ஒரு ஊழியனின் மனசாட்சி” பதாகை டிசம்பர் 2020

                “ஒரு ஊழியனின் மனசாட்சி”      பதாகை டிசம்பர் 2020                                                      ------------------------------------------


      மாறுதலில் உள்ளூருக்கு வந்த பின்புதான் தெரிந்தது, அந்த சங்கத்தின் முயற்சியினால்தான் இது நடந்திருக்கிறது என்று. இருந்த ஊரில் எந்த சங்கத்தைச் சார்ந்தவனாகவும் நான் இருந்ததில்லை. ஏதேனும் ஒன்றில் என்னைச் சேர்த்து விட வேண்டும் என்று முயன்றார்கள். நான் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டே வந்தேன். அது ஏதோ தப்பு செய்வதுபோலான உணர்வையே எனக்கு ஏற்படுத்திக் கொண்டிருந்தது.  சங்கத்திற்கு சந்தா கொடுங்கள் என்று மாறி மாறி வந்து நிற்பார்கள். எதற்கு இத்தனை சங்கங்கள், மொத்தம் எத்தனை சங்கங்கள்தான் இருக்கின்றன என்பதே அப்போது எனது கேள்வியாக இருந்தது.                                                     

முதலில் கிடைத்த வேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வரன்முறைக்கு ஒரு வருடம் முடிய வேண்டும். பிறகு தகுதிகாண் பருவம் நிறைவு செய்ய வேண்டும். அந்த இரண்டு ஆண்டுகளில் என் மேல் எந்தக் குற்றச் சாட்டும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். எல்லாரும் அப்படித்தானே இருந்தாக வேண்டும்?                                          

 பத்து மணிக்கான அலுவலகத்தில் ஒன்பதரைக்கே போனேன். மாலை ஐந்தே முக்காலுக்கு முடிந்த பின்பும் அரை மணி, ஒரு மணி  கூட இருந்து வேலை செய்துவிட்டுத்தான் கிளம்பினேன். அலுவலக நேரத்தில் டீ குடிக்க என்று  வளாகத்தை விட்டு வெளியே செல்வது எனக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தது. ஆபீஸ் பியூன் பாட்சா ஃபிளாஸ்க்கை எடுத்துக் கொண்டு போய் வாங்கி வந்ததை என் இருக்கையில் இருந்தமேனிக்கே குடித்துக் கொண்டேன். இன்னொரு பியூன் ரங்கசாமியும் போவது உண்டு. அவன் எட்டு டீக்கு ஆறுதான் வாங்குவான்...நிரவி எல்லோருக்கும் ஊற்றிக் கொடுத்து, தானும் குடித்து, அடுத்த ஒரு வேளைக்கும் அவனுக்கு டீ மிச்சம் வைத்துக் கொள்வான் என்று சொன்னார்கள். பாட்சாவிடம் அந்த வேலை இல்லை என்பது அவர் கொண்டு வந்து நீட்டிய டீயைப் பருகிய போதே தெரிந்தது. சமயத்தில் தண்ணீர் கலப்பதுண்டாம் ரங்கசாமி...பலே ஆள்தான் போலிருக்கிறது.!

      இப்படி  சின்னச் சின்னத் தப்புகளாய் பரவலாய், என் சிந்தைக்குப்  பலவும் பட்டுக் கொண்டேயிருந்தன. எல்லோரும் ஆபீசுக்குத் தாமதமாகவே வந்தார்கள். பத்து மணி டயத்துக்கு பத்து நிமிஷம் கிரேஸ் டைம் இருந்தும் அதையும் தாண்டித்தான் நுழைந்தார்கள். பயங்கர டிராஃபிக் என்றும், ஒன்பதே காலுக்கே கிளம்பிட்டேன்...இப்பத்தான் வர முடிஞ்சிது என்றும், பஸ்ஸே கிடைக்கல என்றும், வழில டயர் பஞ்சராயிடுச்சி என்றும், ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியிருந்திச்சு என்றும் தாமதத்திற்கு என்னென்னவோ காரணத்தைச் சொன்னார்கள். இவர் மட்டும் எப்டி வர்றாரு...என்று மேலாளர் என்னைக் காட்டி ஏன் கேட்கவில்லை என்று தோன்றியது. பலரும் அடிக்கடி பர்மிஷன் போட்டார்கள். ஒரு மணி நேரம் தாமதமாக பதினோரு மணிக்கு  வருவதற்குப் பதிலாக பன்னிரெண்டுக்கும், ஒன்றுக்கும், ஏன் மதியச் சாப்பாட்டை வீட்டிலேயே முடித்துக் கொண்டு கையை வீசியவாறே ஃப்ரீயாக ரெண்டு மணிக்கு மேலும் கூட வந்தார்கள். மேலாளர் சில நாட்கள் அவர்களிடம் பர்மிஷன் எழுதிக் கொடுங்க என்று கேட்டு வாங்கிக் கொண்டார். சில நாட்கள் முடிவு செய்யாது வைத்திருந்த வருகைப் பதிவேட்டை  எடுத்து நீட்டி, போடுங்க....என்று கருணை செய்தார். அலுவலர் தலைமையகத்தில் இருக்கும் நாட்களில் ஒழுங்காய் பத்தடித்துப் பத்து நிமிஷத்திற்கு அவர் பார்வைக்குப் போனது வருகைப் பதிவேடு. மற்ற நாட்களில் திறந்த வாய் மூடாமல் கிடந்தது. மாதத்திற்கு மூன்று அனுமதி தாண்டினால் அரை நாள் விடுப்பு கட் என்பது வெறும் விதியாக மட்டுமே இருந்தது.                                           

     இதுதான் இப்படி என்றால் கருவூலத்திற்குப் பட்டியல் சமர்ப்பிக்கப் போய்விட்டு வருவேன் என்று சொல்லிவிட்டுப் போன பியூன் மதியம் ரெண்டு மணிக்கு சாப்பாட்டு நேரத்திற்கு வருவதை யாரும் கேட்பதாய் இல்லை. பில் பிரசன்ட் பண்ணி, டோக்கன் வாங்குறதுக்கு எப்டியும் மணி ஒண்ணு, ஒன்றரை ஆயிடுது சார்...ரிஜிஸ்டர எடுத்துக் கொடுத்து நீயே பதிஞ்சிட்டு, டோக்கன் போட்டுக்கோங்கிறார் சார் அந்த அசிஸ்டென்ட்...பில் பாஸ் பண்ணத் தேடி வர்ற ஆளுகளப் பார்க்கிறதுக்கே அவருக்கு நேரம் சரியாயிருக்கு என்று மறுக்க முடியாத ஒரு  வரவு உண்மையைச்  சொல்லி, எல்லோர் வாயையும் அடைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது.                 அது கிடக்கட்டும், காலையில் அலுவலகம் வந்துதானே பட்டியலைக் கருவூலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும், ஏன் முதல் நாளே கொண்டு போய் வீட்டில் வைத்துக்கொள்கிறார்? பட்டியலும் பதிவேடும் ஏதேனும் டேமேஜ்  ஆனால் அல்லது தொலைந்தால்...யார் பொறுப்பாவது? இந்தக் கேள்விக்கும் அங்கு பதில் இல்லாமல்தான் இருந்தது. பியூன் மேலாளருக்குப் பயப்படுகிறாரா என்பதே சந்தேகமாயிருந்தது. யாருக்கு யார் பயப்பட வேண்டும் அவரவர் வேலைகளை ஒழுங்காய், முறைப்படி செய்தால்? ஒருவேளை மேலாளர் இந்த பியூனுக்குப் பயப்படுகிறாரோ? அப்படியும் இருப்பதற்கான காரணங்கள் அங்கே கொட்டிக் கிடப்பதாய்த் தோன்றியது. அவருக்கும் அலுவலருக்குமான ரகசியங்கள் அங்கே நிறைய இருந்தன. அதற்காக அவர் எல்லாவற்றையும் சற்று அடக்கி வாசிப்பதாகவே எனக்குத் தோன்றியது.                   

     பாஸ் ஸ்டேட் லெவல் மீட்டிங்  போறாருல்ல சார்...அதுக்கு டிக்கெட் போடப் போனேன் சார்...என்று சாவகாசமாய் வந்தவரை என்ன சொல்லிக் கண்டிப்பது? டிக்கெட் போட்டுட்டீங்களா? என்று சகஜமாய்த்தான் அவரால் கேட்க முடிந்தது. இம்மாதிரிப் பல வேடிக்கைகள் அங்கு உண்டு.

      பொதுவாய்ச் சொன்னால் கடமை என்பது ரெண்டாம்பட்சமாய்த்தான். அந்த ரீதியில் அதை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. எனவே அமைதி காக்க வேண்டியிருந்தது. ஆனால் மன ஒப்புதல் இல்லாமலேயே நாட்கள் இப்படி நகர்ந்து கொண்டேயிருக்கிறதே என்று தோன்றிக் கொண்டேயிருந்தது.

      அலுவலக மேலாளரின் எதிர்பார்ப்புக்கும் அதிகமாகத்தான் நான் என் கடமையைச் செய்தேன். காரணம் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக நான்கு முறை தற்காலிகமாய் ஆறு மாதம், ஒரு வருடம் என்று நான் பணியில் அனுபவமடைந்திருந்தேன். என்னை விடக் கூடாது என்று அலுவலகத்தில் ஒவ்வொருவராய் லீவு போடச் சொல்லி அந்த இடத்தில் என்னைப் போட்டு என் பணியை நீட்டித்துக் கொண்டேயிருந்தார் அந்த போர்டின் சேர்மன். காரணம் எழுத்தர் பணியோடு, சுருக்கெழுத்தும் தெரிந்தவனாக நான் இருந்ததே அதற்குக் காரணம். அந்தத் தற்காலிகப் பணியிலேயே பலரின் பொறாமைக்கும், கோபத்திற்கும் ஆளானவன் நான். என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? வீட்டுக்குப் போகச் சொன்னா போறேன்...என்று சொல்லியே அங்கு ஓட்டிக் கொண்டிருந்தேன். என் அதீதமான கடமையுணர்ச்சி என்னைக் காலத்துக்கும் காப்பாற்றியது என்றுதான் சொல்லியாக வேண்டும். அது என் தந்தையிடமிருந்து நான் கற்றுக் கொண்டது.                  கக்கூஸ் கழுவுறதானாலும் கூட அதுக்கு முன்னாடிவரைக்கும் செய்தவங்கள விட நான் நல்லாச் செய்வேன்னு செய்து காட்டணும்...என்பார் என் தந்தை. அந்த ஈடுபாடு, அர்ப்பணிப்பு என்னிடமும் அப்படியே படிந்திருந்தது.       எந்தவேலையையும் நான் கேவலமாக, கௌரவக் குறைவாக நினைத்ததில்லை. என் வேலையை மட்டும் சரியாய்ச் செய்தால் போதும் என்றும் இருந்ததில்லை. அலுவலகத்தில் எனக்குத் தெரியாத வேலை என்று எதுவும் இருக்கக் கூடாது என்றே இயங்கினேன்.                                                                

     என்னைப் பொறுத்தவரை வேலைதான் எனக்கு முதல். மற்றவை பிறகுதான் என்பதில் நான் பிடிவாதமாய் இருந்தேன். ஊதுற சங்கை ஊதிக்கிட்டே இருப்போம்...என்பதுபோல் விடாமல் என்னிடம் வந்து சந்தாவுக்கு நின்று கொண்டேயிருந்தார்கள் சங்கத்தார். கொஞ்சம் கோபமாகவும், சத்தமாகவும் ஊதினார்கள் என்னிடம்.                                                     

 

 முதல்ல சந்தா கொடுத்து, மெம்பர் ஆகுங்க தோழர்...பிறகு கூட்டத்துக்கெல்லாம் வரலாம் என்றார்கள். அந்தத் தோழர் என்ற வார்த்தை என்னவோ செய்தது என்னை.  அவர்கள் என்னதான் பேசுகிறார்கள், செய்கிறார்கள் என்று அறிய ஆவலாய் இருந்தேன். அது மனதுக்கு ஒப்புதலாய் இருந்தால்தான் சந்தா கொடுப்பது என்பது என் எண்ணமாய் இருந்தது.                                சந்தாவக் கட்டி மெம்பர் ஆகிக்குங்க...அப்புறம் உங்களத் தொந்தரவு செய்ய மாட்டோம்...மாதாந்திரக் கூட்டங்களுக்கு நீங்க இஷ்டப்பட்டா வந்தாப் போதும் - இப்படி ஒரு சங்க நண்பர்கள் வந்து சொன்னார்கள். அவர்களுக்குத் தேவை போதுமான எண்ணிக்கையும், பணமும்.          நிர்வாகத்துக்கு எதிராகவே இரண்டு மூன்று சங்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது தெரிய வந்தது. ஆதரவாய் ஒன்று கூடக் கிடையாதா? என்கிற கேள்வியும் தோன்றியது. ஏன் இல்ல என்று ஒரு சங்கம் இயங்குவதையும் (அப்படித்தான் சொன்னார்கள்) தெரிவித்தார்கள். அரசாங்கம் தன் வழக்கமாய்ப் போட்ட உத்தரவுகளையெல்லாம் இவர்கள் சாதித்தது போல் சொல்லிக் கொண்டார்கள். ஏதோ இங்கிருந்தே விரலசைத்தால் அங்கு நடந்துவிடும் என்று காட்டிக் கொண்டார்கள். பொய்மைக்கு அஞ்சாத சமூகமாய் இருந்தது.                                 இவர்களுக்குச் சரி என்று தோன்றும் சில அவர்களுக்கு ஏன் தப்பாய்த் தோன்றியது. அவர்களுக்குத் தப்பாய்த் தோன்றும் சில இவர்களுக்கு ஏன் சரி என்று தோன்றுகிறது? பணியாளர் நலன் என்று பொதுவாய் எதிர் கொண்டால் எதிர்த்துத்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் என்ன? தேவையைக் கேட்டு, தொடர்ந்து வற்புறுத்தி படிப்படியாகப் பெற்றுக் கொள்ள வேண்டியதுதானே? எதற்காக நிர்வாகத்தை எதிர்க்க வேண்டும்? பணியாளராய் இருந்து கொண்டு, அது தரும் சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு, அதையே எதிர்ப்பது என்பது சரியா? நிர்வாகம் திறம்படச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இவர்களெல்லாம் தங்கள் கடமையைச் செவ்வனே விடாது செய்து கொண்டிருப்பதுதானே நன்று? ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? வெகு காலமாக இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறதா? அரசு ஒரு பக்கம் இயங்கிக் கொண்டிருப்பதுபோல், இவையும் தொடர்ந்து இவ்வழியில் இயங்கிக் கொண்டிருக்கின்றனவா? வேலை செய்ய வந்தோமா, போராட வந்தோமா? - எத்தனையோ கேள்விகள் வட்டமிட்டுக் கொண்டேதான் இருந்தன. சிலவற்றிற்கு நேரடியாகவும், சிலவற்றிற்கு மழுப்பியும் சிலர் பதிலளித்துக் கொண்டுதான் இருந்தார்கள். எனக்குத்தான் சமாதானம் ஆகவில்லை. நோக்கம் ஒன்றாய் இருக்குமானால் எதற்கு இத்தனை பிரிவு? ஒன்றுமில்லாத ஓட்டைப் பதவிகளுக்கு எதற்கு இத்தனை போட்டி?                                                                     வேலைக்கு வருவதற்கு முன் வேலை...வேலை என்று நாயாய் அலைகிறோம். கிடைத்த பின்னால் மெத்தனமா? பொத்திக் கொண்டு வேலை பார்க்க வேண்டாமா?  இப்படியெல்லாம் இருக்கும் என்று நினைக்கவேயில்லை. தெரியவே தெரியாதே...? தற்காலிகப் பணியில் இருந்தபோது இதிலெல்லாம் கவனம் செலுத்தியதேயில்லை...யாரும் தொந்தரவும் செய்ததில்லை. வேலை...வேலை...வேலை....! அப்படியாகவே இப்போதும் ஏன் இருக்க முடியவில்லை? நிரந்தர வேலை கிடைத்திருக்கையில், குடியும் குடித்தனமுமாய் இருப்பதுபோல் பொறுப்பாய், நல்ல பிள்ளையாய் இயங்க வேண்டாமா? என்னெல்லாம் தொல்லை? எனக்குச் சள்ளையாய்த்தான் இருந்தது. சிவனே என்று வேலையைப் பார்த்தமா,போனமா என்று இல்லையே?                        அறுபது வயதுவரை இருக்கப் போகிறோம். இன்னும் என்னெல்லாம் விதிமுறைகளையும், வேலைகளையும் கற்க வேண்டும்...எந்தெந்தத் தேர்வு பாஸ் பண்ண வேண்டும்...அடுத்தடுத்து என்னென்ன பணி உயர்வு கிடைக்கும்...இவைகளில்தானே கவனமாய் இருத்தல் வேண்டும். இவர்கள் ஏன் இப்படி எதையெதையோ பிடித்துத் தொங்கிக் கொண்டு அலைகிறார்கள்? அதெல்லாம் தானே கிடைத்து விடும்...இவையெல்லாம்தான் போராடிப் பெற வேண்டியவை...கேட்கத் தவறினால் கை நழுவிப் போகக் கூடியவை என்று நினைக்கிறார்களோ? அதற்கும் போதிய முயற்சி இல்லையென்றால் இருக்குமிடத்தில் பசை ஒட்டியதுபோல் இருந்தாக வேண்டுமே...!                         எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் தொலைகிறது என்று எல்லாச் சங்கத்துக்கும் அவர்கள் கேட்கும் காசைக் கொடுத்துத் தொலைத்தேன் நான். நீங்க அதுல மெம்பரா இருக்கீங்களா? என்று கேட்டபோது ஆமாம் என்று தலையாட்ட அப்ப நன்கொடைன்னு போட்டுக்கிறோம் என்று சொன்னார்கள் ஒவ்வொருவரும். கடைசியில் பார்த்தால் அத்தனை ரசீதுகளிலும் நன்கொடை என்றே குறிப்பிட்டிருந்ததுதான் தமாஷ். பரவாயில்லை...ரசீதாவது கொடுக்கிறார்களே என்றிருந்தது. அடுத்தாற்போல் வந்து நின்றால்...இப்பத்தானே கொடுத்தேன் என்று சொல்லி எடுத்து நீட்டலாமே...!   அது மெம்பர்ஷிப்புங்க...இது நடக்கப்போற மாநாட்டுக்கான நன்கொடைங்க...என்றார்கள். அதுலயும் நன்கொடைன்னுதானே டிக் பண்ணினீங்க...என்றேன். ஒரு கோடு போட்டு சந்தான்னு இருக்கும் பாருங்க...என்று எனக்கு விளக்கம் சொன்னார்கள். இவர்கள் காரியம் இவர்களுக்குத்தான் புரியும் என்றிருந்தது எனக்கு.                                                                ஆபீஸ் நேரத்தில் இப்படி வந்து நிற்பதற்கு யார் இவர்களுக்கு அனுமதி கொடுத்தது?. அவரவர் இருக்கை வேலைகளைச் செய்யாமல், சங்கம், வசூல் என்று கிளம்பி நகரத்தின் பல்வேறு அலுவலகங்களுக்கும் ஊர்வலம் வந்து கொண்டிருந்தார்கள் இவர்கள்.                         என்னங்க...இப்ப வந்திருக்கீங்க...இன்னிக்கு ஒர்க்கிங் டேல்ல...?                                    எங்களுக்கு ஸ்பெஷல் பர்மிஷன் உண்டுங்க தம்பி...அதெல்லாம் எதுக்குக் கேட்குறீங்க? சந்தாவ எடுங்க....என்றார்கள். அந்த பதிலே அது தப்பு என்று உணர்த்தியது எனக்கு. ஒன்றுமில்லாத, இவர்களாகவே அமைத்துக் கொண்ட, சங்கம் என்கிற அமைப்பிலுள்ள இவர்களுக்கே       இவ்வளவு எடுத்தெறிந்த பேச்சு இருக்குமேயானால், அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள அலுவலர்களுக்கு எவ்வளவு இருக்கும்? ஆனால் அவர்கள் இவர்களை எதுவுமே கண்டு கொள்வதில்லையே, ஏன்? அங்கேதானே இருக்கிறது கோளாறு? அவர்களும் ஏதோவொரு விதத்தில் இவர்களுக்குப் பயப்படுகிறார்கள், அப்படித்தானே?                                                                 சங்க வேலை பார்க்கன்னா லீவு போட்டுட்டுப் போங்க...பர்மிஷன்லாம் தர முடியாது... - ஒரு அதிகாரியும் சொல்லவில்லையே...!                                                                 கோரிக்கைகளையும், போராட்டத்தையும் உங்களுக்கும் சேர்த்துத்தானே சார் செய்றோம்...பணபலன் கிடைச்சா எங்களுக்கு மட்டுமா? எங்களவிட டபுள் ட்ரிபுளா உங்களுக்குத்தானே உயருது....                                                                      சரி...சரி...காலா காலத்துல முடிச்சிட்டு வந்து சீட் வேலையைப் பாருங்க...                     என்னவோ இவர் சொன்னபடி அவர்கள் சீக்கிரம் வந்து ஆபீஸ் வேலையைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துவிடுவதைப் போல...அது அவருக்கும் தெரியாதா என்ன? அந்த அளவுக்குச் சொல்லி, தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வது அவர் வேலை.                         அட...போய்யா... என்று இவர்கள்  தங்கள் இஷ்டத்துக்கு ஊர் சுற்றிவிட்டு மறுநாளைக்கு ஆபீஸ் வருவது இவர்கள் வேலை...இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தபோது வயிற்றெரிச்சலாய் இருந்தது எனக்கு. இவங்களையெல்லாம் யார்தான் கேட்பது?       உனக்கேன்யா வயிற்றெரிச்சல்...நீதான் எல்லாத்தையும் தூக்கி நட்டமா நிறுத்தப் போறியா?-இந்தக் குரல் ஏதோவோர் மூலையிலிருந்து எனக்குக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.              ஆனாலும் எல்லோரும் தங்கள் கடமையைச் சரியாய்ச் செய்த நேரம் போக இதையெல்லாம் பார்க்கலாமே...! என்றும் தோன்றிக் கொண்டேதானே இருக்கிறது?                                          மதியம் இடைவேளை நேரத்தில் ஊழியர்களை அழைத்து, காம்பவுன்ட் வாசலுக்குக் கூட்டிச்   சென்று கூடி நின்று கோஷம் போட்டார்கள். சாப்பாட்டுக்கான நேரம் அது. அவர்களை வலிய அப்படி அழைப்பது பலருக்கும் பிடிக்கவில்லைதான் எனினும், மறுக்க முடியாமல், வேறு வழியில்லையே என்று கடனுக்கு வந்து நின்றார்கள். பெண் பணியாளர்கள் எவருக்குமே இந்த நடவடிக்கை பிடிக்கவில்லைதான். ஆண் பணியாளர்கள் சிலரும் எதுக்கு வம்பு? என்று முனகிக் கொண்டேதான் வந்தார்கள். நகருக்கே பத்துப் பேர் இருந்து கொண்டு அத்தனை அலுவலகங்களையும் ஆட்டுவித்தார்கள்.                                                                                இப்படியாக ஒரு வாயில் கோஷத்தை நிறைவேற்றித்தான் ஆக  வேண்டுமா? உங்களுக்காகத்தானே செய்றோம்...வாங்க...வாங்க...என்ற அதிகாரம் வேறு. விருப்பமில்லாமல் இப்படிப் பலரையும் வம்புக்கு அழைத்து நிறுத்தி, மனசில்லாமல் கோஷம் போட வைத்து, ஏதோ அவர்களுக்குப் பாடம் நடத்துவது போலவும், தங்கள் தியாகங்களைப் பறைசாற்றுவதுபோலவும், பணியாளர்களின் பசியறியாமல், மனசறியாமல், சுய விருப்பத்திற்கு மாறாக ஒருவகை மறைமுகமான  வன்முறையைப் பிரயோகித்து அப்படி அழைத்து வந்து வேளை கெட்ட வேளையில் நிற்க வைப்பது கொஞ்சங்கூட நியாயமானதாக எனக்குத் தோன்றவில்லை.               என் மாறுதல் விண்ணப்பம் பலமுறை நிராகரிக்கப்பட்டிருப்பதும், முதுநிலை வரிசைப்படி அடுத்தடுத்து வருவதற்காக, உரிய பதிவேட்டில் பதிவு செய்யப்படாமல் போனதிலேயும் மனசு உறுத்திக் கொண்டேயிருந்தது எனக்கு. இங்குள்ளோருக்கும் சென்னைத் தலைமையக அலுவலகத்தில் உள்ளோருக்கும் மிகவும் நெருக்கமான நடைமுறைகள் இருப்பதும், இவர்கள் சொல்வதை அவர்கள் அப்படியே நம்பி விடுவதும், அலுவலக நடைமுறைகளில் அதன் பாதிப்பு நிகழ்வதும்...தொடர்ந்து நடந்து கொண்டே வந்திருக்கிறது என்பதை நான் அறிந்து கொள்ளவே எனக்கு நான்கு வருடம் பிடித்தது.                                                                                           எனக்கு வேகம் பிறந்ததே ஐந்தாவது ஆண்டில்தான் என்பதை இங்கு நான் சொல்லித்தான் ஆக வேண்டும். அப்போதும் நான் எந்த சங்கத்தையும் சேராதவனாகவே இருந்தேன். அதுவே ஒரு பெரிய சாதனை என்றும் கொள்ளலாம். ஆனால் இதிலும் ஒரு தப்பு இருக்கத்தானே செய்கிறது என்பதை இங்கே நீங்கள் உணரக் கூடும். இருக்கும் சங்கமெல்லாம் வந்து வந்து காசு கேட்கும்போது, உறுப்பினர் என்ற பெயரிலல்லாமல், நன்கொடை என்கிற பெயரில் நானும் பணம் கொடுத்துக் கொண்டுதானே இருந்தேன். அவர்கள் யாரிடமிருந்தும் எந்த வம்பும் எனக்கு வேண்டாம் என்கிற சுயநலம்தானே அதுவும்?                                                                                   என் மனநிலைக்கும், நடவடிக்கைகளுக்கும்...நான் யாருக்கும் எந்தப் பைசாவும் தரணும்ங்கிற அவசியமில்லை...இந்த சங்கம் கிங்கம் என்பதெல்லாம் வெறும் அசிங்கம்.....என்றுதானே நான் கூறியிருக்க வேண்டும்? என்னால் முடியவில்லையே...! அப்படியிருந்தும் இந்த மாறுதல் விஷயத்தில் இவ்வளவு விளையாடியிருக்கிறார்களே...! பணிப்பொறுப்பு ஏற்று இரண்டாண்டுகளுக்குப் பின் மாறுதல் விண்ணப்பம் கொடுக்கலாம் என்று விதிமுறை இருக்கையில் (இதையும் மீறி வந்த ஆறு மாதத்திலேயே விண்ணப்பம் அளித்து, தங்கள் அரசியல் செல்வாக்கால் சொந்த ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டுபோன பிரகிருதிகள் அநேகம்) அதை முறைப்படி செய்திருந்த என் கேட்பு விண்ணப்பம் தக்க பதிவேட்டில் வரிசைக்கிரம முதுநிலை கருதிப் பதியப்படாமல், காணாமல் போக்கடிக்கப்பட்டிருக்கிறதே...! இந்த உள்குத்து வேலைகள் ஒரு வேளை தலைமைக்குத் தெரியாமலே போயிருந்தால்? மாநிலம் தழுவிய அவருக்கிருக்கும் தலைபோகும் பொறுப்பில் இப்படி சின்னச் சின்ன விஷயங்களையெல்லாமுமா பார்த்துக் கொண்டிருக்க முடியும்? பின் எதற்காக இத்தனை அதிகாரிகள், பணியாளர்கள்?  அரசின் திட்டப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றுவதில் அவர் கவனமாய் இருப்பாரா...அல்லது இந்தச் சாதாரண விஷயத்திற்குப் போய் அலைக்கழிவாரா?                                                                                                ஆனாலும் இது சரியில்லை....நேரில் புறப்பட்டுப் போய் அவரைப் பார்த்து என் நிலையை எடுத்துச் சொன்னபிறகுதானே இது நடந்திருக்கிறது? என் அடுத்தடுத்த விண்ணப்பங்கள் வந்திருப்பதும், அலுவலக முத்திரை அதில் பதிக்கப்பட்டிருப்பதும், எண்ணிடப்பட்டிருப்பதும் எல்லாவற்றிற்கும் மீறி எந்த நடவடிக்கையும் இல்லாமல் முறையே  பதிவேட்டில் பதியப்படாமல் விடுபட்டிருப்பதும், அவர் ஆய்வில்  விரியும் என்று துளியும் நான் எதிர்பார்க்கவில்லைதான். மறைக்கத் தெரிந்த அவர்களுக்கு, அதிகாரம் கேட்டவுடன் டக்கென்று எடுத்துக் கொடுக்கவும் தெரிந்திருக்கிறதே...! கில்லாடிகள்தான்...!!!                                                                அப்பாடி...! அந்த ஒருவருக்காவது மனசாட்சி இருந்திருக்கிறதே...?                                 நீ போங்க...இன்னும் ஒரு மாசத்துல உங்களுக்கு டிரான்ஸ்பர் வந்திடும்.... - இதுதான் அவர் என்னிடம் கடைசியாகச் சொன்னது. நிர்வாக நடைமுறைகள் எல்லாம் துல்லியமாகத்தான் வகுக்கப் பட்டிருக்கின்றன. இடையில் உள்ள எலிகளும், பெருச்சாளிகளும்தான் அதைக் கடித்துக் குதறி விடுகின்றன என்று புரிந்து கொண்டேன்.                                                                              இதோ..சொந்த ஊர் வந்துவிட்டேன்...ஆனால் இது என்ன? புதுத் தகவல்...!? வியப்பும் கேள்வியும்                                                                             என்னைச் சுற்றி...!                                                                     உங்களுக்கு முன்னாடி இருந்த நாகரத்தினம்ங்கிறவருக்குக் கொடுக்கப் போனபோதுதான், உங்க அப்ளிகேஷன் சென்னைலருந்து ரெக்கமன்ட் ஆகி வந்திச்சு...சீஃப் இன்ஜினியரே தன் கைப்பட எழுதிப் பரிந்துரை பண்ணியிருந்தாரு....அலாட்மென்ட் வந்த பெறவு என்ன செய்றது? அதுவும் பெரிசு கையெழுத்துப் போட்டிருக்கு? சிரித்துக் கொண்டே தொடர்ந்தார் அவர்.                       

அதனால எங்க சங்கத்தச் சேர்ந்த அவரை சமாதானம் பண்ணி நிறுத்தி வச்சிட்டு உங்களுக்குப் போட்டிருக்கோம். இந்த தடவை...! ..நாங்க நினைச்சிருந்தா அடுத்த லிஸ்ட்லதான் உங்களுக்கு டிரான்ஸ்பர் கிடைச்சிருக்கும். எங்க தோழர் பொறுத்துக்கிட்டாரு...உங்களுக்காக இப்பவும் அவர் தினமும் பஸ்ல இருநூறு கிலோமீட்டர் வெளியூர்  போயிட்டு வந்திட்டிருக்காரு....அத மனசுல நினைங்க....அது போதும்....                                     ஆபீஸ் வேறு...சங்கம் வேறில்லையா? இவர், சங்கம்தான் ஆபீஸ் என்பதுபோல் பேசுகிறாரே...! தலைமைப் பொறியாளரின் உத்தரவையும் மீறி, உங்கள் டிரான்ஸ்பரை எங்களால் நிறுத்தியிருக்க முடியும் என்று மறைமுகமாய் மிரட்டுகிறாரோ? அவரின் பேச்சு அப்படித்தானே நினைக்க வைக்கும்?  ஆழ வேரோடிப் போயிருக்கிறதே இந்த ஊடுருவல்?   மூன்று வருடமாய்க் காணாமல் போயிருந்த என் விண்ணப்பத்தைப் பற்றிச் சொன்னால் ஏற்றுக் கொள்வாரா? அதிலும் ஒரு நியாயம் உண்டுதானே?  இவரென்ன ஏற்றுக் கொள்வது, துறைத் தலைமையே ஒத்துக் கொண்டுதானே இது நடந்தேறியிருக்கிறது? பிறகென்ன அதை மீறிய நியாயம்?                                            ஷ

 நினைத்துக் கொண்டே உள்ளூரில் என் அலுவலகப் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் நான். ஒரு வித்தியாசம் மட்டும் அங்கு என்னால் சமீபமாக கண்டுபிடிக்க முடிந்தது. அதுதான் அங்கு எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது.                                       

 அந்த அலுவலகம் எண்ணிக்கையில் அதிகமான பணியாளர்களுடன்,  மிகுந்த கட்டுப்பாட்டோடு நாள்தோறும் இயங்கியது. அமைதியாக இயங்கும் நூலகம் போல் இருந்தது. குனிந்த தலை நிமிராமல் வேலையில் கண்ணாய் இருந்தார்கள் எல்லோரும். அருகிருக்கையுடன் கூடப் பேச்சுக் கிடையாது. ராணுவக் கன்ட்ரோல் போல் உணர்ந்தேன்.  இத்தனை கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் நான் முன்பிருந்த வெளியூர் அலுவலகத்தில் கண்டதில்லை. என்னிடம் பேசிய அந்த சங்கத் தலைவர்தான் அந்த அத்தனை பெரிய அலுவலகத்திற்கும் மேலாளராக இயங்கினார். இருக்கையை விட்டு எழாமல் ஆணியடித்தாற்போல் எல்லோரும் இயங்கினார்கள். பத்து மணிக்கு முன்பாக அலுவலகமே நிரம்பி வழிந்தது. இரவிலும் கூடப் பலர் கணி விழித்து வேலை செய்தார்கள். கன்னியாகுமரி வரை ஜூரிக்ஸ்டிக் ஷன் அதற்கு இருந்தது.  ஒரு நாள் கூட அலுவலக நேரத்தில் அங்கு யாரும் சங்கப் பணியை மேற்கொள்ளவில்லை. பணி என்ன, அந்தப் பேச்சே எழவில்லை.  மாலை அலுவலக நேரத்திற்குப் பின்பே அருகிலுள்ள பூங்கா ஒன்றில் அந்தப் பணியாளர்கள் கூடினார்கள். பேசினார்கள். அலுவலக நிர்வாகம் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு அடையாளமாய்    துறைத் தலைமையின் நற்சான்றிதழ் அந்த அலுவலகத்திற்கு வருடந் தவறாமல் வழங்கப்பட்டிருந்ததும், மாநிலத்திற்கே எடுத்துக்காட்டாய் அந்த அலுவலகம் திறம்பட இயங்கி வந்தது என்பதையும்  கேள்விப்பட்டபோது, அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு ஏற்பட்டது.                                                                     சர்வீசுக்கு வந்து சில வருடங்கள் ஆகியிருந்தும், முதன் முதலாக முழுக்க முழுக்கக் கடமையும், கட்டுப்பாடும் உள்ள ஒரு அலுவலகத்தில் மன நிறைவோடு பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்ற உணர்வினை  இப்பொழுதுதான் உணர ஆரம்பித்திருந்தேன் நான்.      

                              ------------------------------------------------------                                 -

 

                                               

 

 

 

 

29 நவம்பர் 2020

“நலமறிதல்” - அவதானிப்புகளும் விவாதங்களும் - ஜெயமோகன் -வாசிப்பனுபவம்-உஷாதீபன்

நலமறிதல்” - அவதானிப்புகளும் விவாதங்களும் - ஜெயமோகன் -வாசிப்பனுபவம்-உஷாதீபன்

      வாதம், பித்தம், கபம் என்ற மூன்று கூறுகள் நம் உடலில் சம நிலையில் இருக்க வேண்டும். இந்தச் சமநிலை குலையும்போது நோய் வருகிறது. ஆயுர்வேதம்,  சித்த மருத்துவம் போன்ற இந்திய மருத்துவ முறைகள் இதைத்தான் வலியுறுத்துகின்றன. தத்துவ சிந்தனையான சாங்கிய யோக தரிசனத்திலும் இது கூறப்பட்டிருக்கிறது.

      சத்வ குணம். தமோ குணம், ரஜோ குணம் என்னும் மூன்று குணங்களின் சமநிலை குலையும்போது பிரபஞ்ச இயக்கம் நடைபெறுகிறது என்கிறது  சாங்கிய தரிசனம். பிரபஞ்சத்தை-இயற்கையை-மனித உடலை இந்தக் கோணத்தில் அணுகும் ஆயுர்வேதம் மிகச் சிறந்த வழிமுறைகளை உருவாக்கியிருக்கிறது.

      இப்படியாக மாற்று மருத்துவம் குறித்த  அவதானிப்புகளும், விவாதங்களுமாக உடல் நலம் பேணுதல் பற்றி இப்புத்தகத்தில்  விரிவாகச் சொல்லிச் செல்கிறார் ஜெயமோகன்.

      ஸெலின் என்ற சாதாரண விட்டமின் C மாத்திரைகளுக்கு  ஒரு கட்டத்தில் இங்கு ஏற்பட்ட பஞ்சம், விலை குறைந்த அந்த மாத்திரைகளை வெளி நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரும் நிலையில் இருந்ததும், கீழை நாடுகளிலும், சீனாவிலும் கடுமையாகப் பரவிய ஃப்ளூ காய்ச்சலுக்கு என்று அவை மொத்தக் கொள்முதலாக நகர்ந்து விட்ட கொடுமையினையும் விளக்குகிறார்.

      வாசனையை வைத்தே நோயை அடையாளம் காண்பது  என்று கற்பித்த டாக்டர் கெ.வி.திருவேங்கடம் அவர்களின் கூற்று இங்கே கவனிக்கப்படத்தக்கதாகிறது. முற்றிய நீரிழிவு நோயாளியின் மூச்சில் எழும் இனிப்பு கலந்த நகப்பாலீஷ்  வாசனை, டைபாய்ட் நோயாளியில் இருந்து வரும் புதிய ரொட்டியின் வாசனை ஆகியவற்றைச் சொல்ல  அறியும்போது நவீன மருத்துவ இயந்திரங்கள்பால் அவநம்பிக்கை எழுகிறது என்கிறார் ஜெ. இந்தத் தகவல்கள் நமக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன.

      தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த மருத்துவநூல் என்றால் க்ரியா வெளியீடாக வந்த “டாக்டர் இல்லாத இடத்தில்“ என்ற மொழி பெயர்ப்பு நூல் என்று பரிந்துரைக்கிறார். அலர்ஜி போன்ற நெடுநாள் சிக்கல்கள்,உடல்நிலை மாற்றங்களால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றுக்கு  ஓமியோபதி சிறந்த மருந்தை அளிக்கிறதென்று தன் அனுபவங்கள் காட்டுவதாகத் தெரிவிக்கிறார்.

      குடியின் சீர்கேடுகள் பற்றி ஒரு கட்டுரையில் விளக்கப்படுகிறது சிகிச்சை பெறுபவர்களில் மீண்டும் குடிக்குத் திரும்பாமல் இருப்பவர்கள் கால்வாசிப்பேர்கள்தான். குடி சார்ந்து உருவாக்கி வைத்திருக்கும் உலகை விட்டு வெளியே வர அவர்கள் விரும்புவதில்லை. கள்ளுண்டு பிதற்றும் குடிமகன்களை மணிமேகலையில் காண்கிறோம். கள்ளுக்கடை தலித் வாழ்விடங்களில்தான் அதிகமிருக்கிறது என்றும் அதை விற்றுக் கொழிப்பவர்கள் வேற்று ஜாதியினர் என்றும் தலித் சிந்தனையாளரான ரவிக்குமார் தெரிவிக்கும் கருத்து இங்கே சுட்டப்படுகிறது. தமிழக மீனவர்கள் குடியால் விலங்கிடப்பட்டவர்கள் என்றும், சுனாமிக்குப் பிறகு குடி உச்சத்திற்குச் சென்றதுதான் உண்மை...என்றும் எடுத்துரைக்கிறார்.. கடற்கரை சமூகத்தில் 65 சதவிகிதம் ஆண்கள் குடிகாரர்கள், அவர்களில் 40 சதவிகிதம் பேர் குடியடிமைகள்....பிற நோய்களைப் போல் அதற்கும் மருத்துவ உதவி தேவை...என்று தெரிவிக்கிறார். குடி நோயின் விளைவுகளுக்கு மட்டுமே மருந்து உண்டு, குடி நோய்க்கு அல்ல...குடிபோதை-புனைவுகள்.தெளிவுகள்-அ.கா.பெருமாளின் தமிழினி வெளியீடான புத்தகம் மிகவும் முக்கியமான ஒன்று. என்று பரிந்துரைக்கிறார்.

      1992 ல் மலையாள மனோரமாவில் வந்த “எரியும் சிறுவர்கள்” என்ற தலைப்பிலான செய்தி பற்றி எடுத்துரைக்கையில், அந்தச் சிறுவர்களுக்கு வியர்வைச் சுரப்பியே தோலில் ஏற்படாததும், அவர்களால் உடலின் வெப்பத்தை ஆற்ற முடியாது என்பதும், தவழ்ந்து போய் தண்ணீரிலேயே கிடப்பார்கள் என்பதும் அதிர வைக்கும் செய்தியாகிறது. தோல் வளர்ச்சியடையாமல் இருந்தமையால் வியர்வைச் சுரப்பிகளும், துளைகளும்,  ஏற்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. ஆயுர்வேத முறைப்படி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதும், வயிற்றை முதலில் சுத்தம் செய்யும் சிகிச்சை முதலில் துவங்கி, விடங்கரஜனி என்ற கிருமி நீக்கி மருந்து், கசப்பு மருந்துகளும் வழங்கப்பட்டதும், உடம்பில் சுரப்பிகள் ஏற்படாததற்கு ஒருவகை எண்ணெய் தொடர்ந்து தேய்க்கப்பட்டதும்...அவர்கள் குணமடைந்ததும் கேள்விப்படுகையில் ஆயுர்வேத சிகிச்சையில் நமக்கு மிகுந்த நம்பிக்கை வருகிறது.

      அலோபதி உடலைப் பழுது பார்க்கிறது. ஆயுர்வேதம் உடலைத் தன் இயல்பான நிலைக்கு கொண்டு செல்ல முயல்கிறது. அலோபதி நோயாளியின் வாழ்க்கைக்குள் நுழைகிறது. ஆயுர்வேதம் நோயாளியை தன் வாழ்க்கை நோக்குக்குள் கொண்டுவர முயல்கிறது.

      காஞ்சிரக் கட்டையால் செய்யப்பட்ட கட்டில்கள் வாதத்திற்கு சிறந்த மருந்து என்று ஒரு தகவல் தரப்படுகிறது. மரங்களை லக்கினங்களுடன் இணைப்பது ஆயுர்வேத மரபு என்றும் காஞ்சிரம் அஸ்வதி லக்கினத்தைச் சேர்ந்தது என்றும் அந்த லக்கினத்தில் பிறந்தவர்களின் மரம் இது என்றும் ஒரு தகவல் கிடைக்கிறது.

      காஞ்சிரம் வேர் முதல் அனைத்துமே சிறந்த மருந்து என்றும், அதன் கொட்டை ஆளைக் கொல்லும் விஷம் என்றும், வேரும், பட்டையும், காயும் ஆயுர்வேதம் என்றும் ஓமியோபதி, சீன மருத்துவம் இரண்டிலும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது என்றும் கபத்தைக் கட்டுவதும், வாதத்தை இல்லாமல் செய்வதும் இவற்றின் பலாபலன்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

      கொட்டம் சுக்காதி எண்ணெய் பற்றிச் சொல்கிறார். உடல் உளைச்சல், தலைவலி, தூக்கமின்மை போன்றவற்றுக்குப் பயன்படும் இது என்ற தகவல் கிடைக்கிறது. வர்ம மருத்துவம் பற்றித் தெரிவிக்கையில் கை சுட்டி ஒருவரைக் கொல்ல முடியும் என்று அதிர்ச்சித் தகவல் அளிக்கிறார். அப்படியான ஆசான்கள் இருந்தார்கள் என்றும் மண்ணில் விண்ணில்  மனித உடலில் உள்ள பல நூறு ரகசியங்களை அறிந்த மூதாதையர் அவர்கள் என்றும் ஒரு யுகமே முழுமையாக அழிந்து வருவதாக  உணர்வதாகவும் தெரிவிக்கிறார்.

      மாக்ரோபயாடிக்ஸ் -முழுமை வாழ்க்கை பற்றி ஆராய்கையில் பல தகவல்கள் கிடைக்கின்றன. காய்கறிகளை எந்தப் போக்கில் நறுக்க வேண்டும், நாராயண குருகுலத்து சமையல் என்னவெல்லாம் போதிக்கின்றன எப்படி நறுக்கினால் உயிர்ச்சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும் என்பதும், மூன்று வெள்ளைப் பிசாசுகளை நாம் தவிர்க்க வேண்டும்..எனவும் அவை ஜீனி, உப்பு, பால்...நவீன மனிதனின் பெரும்பான்மையான நோய்களுக்கு இவையே காரணம் என்றும் தெரிவிக்கிறார்.

      மூச்சுத் திணறல் பிரச்னைக்கு கொல்லைப்புறத்தில் தூதுவளைச் செடியை வளர்த்து தினமும் சில இலைகளைத் தின்று வந்தாலே இந்நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்து காணாமல் போகும் என்றும் இது அவர் அனுபவத்தில் கண்டது என்றும், சித்த மருந்துகளில் சிலவற்றில் ரசாயனம் கலக்கப்படுகிறதென்றும் டாபர் போன்ற கம்பெனிகளின் டப்பாவில் அடைக்கப்பட்ட மருந்துகள் (ஸ்யவனப்பிராசம்) தவிர்க்கப்பட வேண்டியவை என்றும் தெரிவிக்கிறார். உணவைக் கட்டுப்படுத்துதலும், தேவையான அளவு நீர் அருந்துதலும், லேசான சூடான நீர் எப்போதும் நல்லது என்றும், இரவு பழங்கள் மட்டுமே உண்டு படுக்கைக்குச் செல்லும் பழக்கமும் நன்று என்றும் நடைமுறையில் கண்ட உண்மைகளை எடுத்துரைக்கிறார். மலச்சிக்கல், செரிமானமின்மை, தூக்கம் குறைவு மூச்சுச் சிக்கல்கள் இப்படியான உபாதைகளுக்கு சிறந்த உடற்பயிற்சியே இயற்கையாக நம்மை நாம் சரியாகப் பேணுவதற்கு பெரும் உதவியாய் இருக்கின்றன என்கிறார்.

      மண்ணில் வாழப்படும் வாழ்க்கையைவிட பெரிய அக வாழ்க்கை நம்முள்ளே நடந்து கொண்டிருக்கிறது. இந்து ஞான மரபின்படி எல்லா ஆற்றலும் ஒன்றே. காமமும், வன்முறையும், ஞானமும், மோனமும் எல்லா ஆற்றலும் ஒரே ஆற்றலின் வெளிப்பாடுகளே...ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குச் செல்ல முடியும். ஒன்றை இன்னொன்றாக ஆக்கிக் கொள்ளவும் முடியும்.இந்து யோக முறையில் காமம் மூலாதார சக்தி. அங்கிருந்துதான் பிற அனைத்து ஆற்றல்களும் தொடங்கப்பட வேண்டும் அதுவே பிற அனைத்தையும் பற்ற வைக்கும் முதல் பொறி.ஆற்றும் தொழிலே ஆற்றல். செயல் வடிவே சக்தி. நம் சொற்களில் சக்தி எழுக.....-என்று படிக்கையில் நாம் எழுச்சியுறுகிறோம்

      சிந்திக்கும் ஒரு மனிதன் தன் உடலை அவதானித்து அடைந்த சில சிந்தனைகளை முன் வைக்கும் பயனுள்ள நூலாக இந்த உடலறிதல் விளங்குகிறது. மாற்று மருத்துவம் அறிய விரும்பும் நண்பர்கள் இந்நூலைப் படித்தல் அவசியம்.

                                    --------------------------

 

 

 

26 நவம்பர் 2020

பின்னோக்கி எழும் அதிர்வுகள் - சிறுகதைத் தொகுப்பு - உஷாதீபன்

 பின்னோக்கி எழும் அதிர்வுகள் - சிறுகதைத் தொகுப்பு - உஷாதீபன்

------------------------------------------------------------------------------------------------------------
22 நவம்பர் 2020

“நெருப்பு தெய்வம்-நீரே வாழ்வு”- வாசிப்பனுபவம் - உஷாதீபன்

                 நெருப்பு தெய்வம்-நீரே வாழ்வு”- வாசிப்பனுபவம் - உஷாதீபன்        


                (வெளியீடு:- தன்னறம் - குக்கூ காட்டுப்பள்ளி, புளியனூர், சி்ங்காரப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம்)

        கங்கை நதியைப் பாதுகாப்பதற்காக 2011 ம் ஆண்டில் தொடர் உண்ணாவிரதம் இருந்து 114 நாட்கள்  கடந்த போராட்டத்தில் ஈடுபட்ட துறவிகளைப் பற்றி விவரிக்கிறது இப்புத்தகம்.

      சுவாமி நகமானந்தா, ஜி.டி.அகர்வால், சிவானந்த சரஸ்வதி, ஆத்ம போனந்த் இவர்கள்தான் அவர்கள். உண்ணாவிரதம், தியாகம் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் ஏதேனும் அர்த்தம் உண்டா? என்கிற கேள்வி எழும் அளவுக்கு இவர்களின் போராட்டங்கள் கவனிக்கப்படாமல் இருந்திருப்பது தெரிய வருகிறது.

      கங்கையைக் காப்பாற்ற மத்ரி சதன் ஆசிரமம் (சாதுக்களின் அமைப்பு) 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வந்திருக்கிறது என்று அறியப்படுகிறது. கங்கையைப் பாதுகாப்பதை மட்டுமே தங்களின் முழுக் கடமையாகக் கொண்டு செயல்பட்டிருக்கிறது இந்த அமைப்பு. குறிப்பிட்ட 100 கி.மீ. பகுதியினை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை. அத்தோடு கங்கையின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பவர்களுக்கு எதிரான சட்டபூர்வ நடவடிக்கைகளையும் எடுத்து வந்திருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு நிறைய அச்சுறுத்தல்களும், கொலை முயற்சிகளும் நடந்திருக்கின்றன. அரசு இயந்திரம், கார்ப்பொரேட்கள் என்று பலதரப்பிலிருந்தும் பிரச்னைகளை எதிர்நோக்கியிருக்கிறார்கள். தொடர் உண்ணாவிரதம் என்று 60 முறைக்கும் மேலாக அடுத்தடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆசிரமத்தின் மதிப்பு மிகு மூன்று உயிர்களை இழந்தும், சோர்வின்றி அடுத்தவர், அடுத்தவர் என்று உண்ணாவிரதம் தொடர்ந்திருக்கிறது. ஒரு சாது கடத்தப்பட்டதாகவும், இன்றுவரை அவரின் இருப்பிடம் அறியப்படாமலும் இருப்பதாக அறிய முடிகிறது.

      ஆஸ்ரமத்தின் சாதுக்களின் குருவாக விளங்கிய சிவானந்த சரஸ்வதி அவர்கள் பலமுறை கொலை முயற்சிக்கு உள்ளாகியுள்ளதாகவும், பலமுறை ஆஸ்ரமம் சூறையாடப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது இப்புத்தகம். பிரபலமான துறவி நிகமானந்தா மரணத்திற்குப் பிறகுதான் மத்ரி சதன் ஆஸ்ரமம் குறித்து வெளியுலகிற்குத் தெரிகிறது. உலக நன்மைக்காகவும், பூமி அமைதிக்காகவும் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

      ஊழலுக்கு எதிராகச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாபாராம்தேவ் 9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபொது அங்கு கேட்பாரற்றுப் பிணமாகக்  கிடந்த சுவாமி நிகமானந்தாவைக் கண்டு பத்திரிகையாளருக்குத் தெரிவித்திருக்கிறார்.  மரணம் இயற்கையானது அல்ல என்று உறரித்துவாரில் உள்ள மத்ரி சதன் ஆஸ்ரமம் தொடர்ந்து போராடி வருகிறது என்று தெரிகிறது. நிகமானந்தா இறப்புக்குப் பிறகு குரு சிவானந்த் 11 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார். அதன்பின்பே உத்தரகண்ட் அரசாங்கம் இறங்கி வருகிறது. கனிம வளங்கள் சூறையாடப்படும் சுரங்கங்களுக்குத் தடை விதிக்கிறது.

      இதைத் தொடர்ந்து ஜி.டி.அகர்வால் சுற்றுச்சூழல் ஆய்வாளர், கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் சாதுவாக மாறி போராட்டம் தொடர்ந்திருக்கிறார். கங்கையில் கழிவுகள் தொடர்ச்சியாகக் கலப்பதை எதிர்த்தும், அது அத்தனை நீர்நிலைகளையும் சீரழித்துவிடும் என்றும் கடுமையான போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார்.

      கங்கை அதிலிருக்கும் படிவுகளையும் நுண்ணுயிர்களையும் தன்னைச் சுத்திகரித்துக் கொள்ளப் பயன்படுத்துகிறது. அது வெறும் தண்ணீருக்கான நதியல்ல என்பது இவர்கள் கருத்து. சூழலையும் தூய்மைப் படுத்தும் திறன் கொண்டது கங்கை நதி என்பது இவர்களின் பலமான வாதம். தொடர்ந்து 109 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 87 வது வயதில் மரணித்திருக்கிறார் திரு.அகர்வால்.கலிபோர்னியா பல்கலைக் கழகம் தனது மாணவரின் மரணத்திற்காக அஞ்சலி செலுத்தியிருக்கிறது. ஆஸ்ரமத்தில் அடுத்தடுத்த சாதுக்கள் விரதத்தின் வழியே நாங்களும் உயிர்துறப்போம் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். நிகமானந்தா, ஜி.டி.அகர்வால் இவர்களின் ஆத்மா சொல்ல நினைத்த கடைசி வார்த்தைகள் என்னவாக இருக்கும் என்று முடிகிறது இந்நூல்.  “நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு.....“

      ஆன்மீக அனுபவம் என்பது மக்களின் நன்மைக்கானது. இயற்கையின் வளங்களைப் பாதுகாப்பதற்கானது. பூமியின் தீங்கற்ற சூழ்நிலைக்கானது. இது இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படை. அந்தக் கலாச்சாரம் வீழ்ச்சியடையாமல் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும் என்கிற பலமான கருத்தை முன் வைக்கிறது இப்புத்தகம்.

                                    --------------------------

     

       

 

 

 

 

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...