20 அக்டோபர் 2011

ம்ம்ம்முடியல..! சிறுகதை

ந்தம்மா வந்தா இனிமே வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிடு... – அவ்வளவு நேரம் கொதித்துக்கொண்டிருந்த அவளின் மனசுக்கு என்னின் இந்த வார்த்தைகள் ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும்.

ம்ம்...பார்த்தீங்களா...இவ்வளவு நேரமாச்சு...இன்னும் வரலை...என்னன்னு நினைக்கிறது?- வருமா, வராதா? - சுசீலாவின் வார்த்தைகளில் கோபம் கனன்றது.

இதிலே நினைக்கிறதுக்கு என்ன இருக்கு? இன்னைக்கு அந்தம்மா வேலைக்கு வரலை...அவ்வளவுதான்...

ஆமாம், ரொம்ப ஈஸியாச் சொல்லியாச்சு...இது மத்தவாளுக்கும் புரியாதா? திடீர் திடீர்னு வராம இருந்தா எப்படி? அதுதானே கேள்வி. சொல்லிக்கொண்டே அவள் கைகள் அரக்க அரக்கப் பாத்திரத்தைத் தேய்த்தன. சுற்றிவர மலையாய்க் கிடக்கும் பற்றுப் பாத்திரங்கள். அவள் தேய்த்துத் தேய்த்து வைக்க நான் அலம்பி அலம்பி எடுத்து உள்ளே கொண்டு வந்து அடுக்கினேன்.

அடுத்து வர்ற போது கேளு....கேட்டாத்தானே அந்தம்மாவும் பயந்துக்கிட்டு ஒழுங்கா வர ஆரம்பிக்கும்...இல்லன்னா நா சொன்ன மாதிரி நிறுத்திப்புடு...

என்னத்தக் கேட்குறது...பேசாம நிப்பாட்டிட வேண்டிதான்....எதுக்கு இப்படிக் கஷ்டப்படணும்? ஐநூறு ரூபாயும் கொடுத்திட்டு இப்படி அடிக்கடி வராம இருந்தா? மாசத்துல பத்து நாள் நாமளே செய்துக்கிறதுக்கு எதுக்கு அந்தம்மாவுக்கு இப்படிக் கொடுக்கணும்? நம்மள விட்டா ஆளில்லன்னு நினைச்சிடுச்சி போலிருக்கு...

இப்பச் சொன்ன பார், அதுதான் கரெக்ட்...நிப்பாட்டிடு...ரூபா மிச்சம். உடனுக்குடனே தேய்ச்சிட்டோம்னு வச்சிக்க....மடைல பாத்திரமே விழாதே...? எதுவுமே பழக்கம்தான்...ஒரு சிஸ்டத்துக்குப் பழகிட்டோம்னா பிறகு சிரமமாத் தெரியாது. அந்தம்மா ஒண்ணு இருக்குன்னுதானே பேசாமப் போட்டு வைக்கிறோம்...அது நினைச்சா வருது...நினைச்சா இருந்துக்குது...இன்னைக்கு வரேன், வரல்லைன்னு ஒரு போன் பண்ணியாவது சொல்லலாம்ல...நாம போன் பண்ணினா எடுக்க மாட்டேங்குது...வெறுமே ரிங் போயிட்டே இருக்குது...என்ன எதுக்குன்னு நீயும் கேட்க மாட்டேங்குற...எதாச்சும் ரெண்டு வார்த்தை கேட்டாத்தானே அந்தம்மாவும் ஒழுங்கா வர ஆரம்பிக்கும்...வந்தியா, சரி...வரல்லியா அதுவும் சரின்னு இருந்தா? ஏத்தமாத்தானே போகும்...?

ஏன், நீங்க கேட்க வேண்டிதானே?

அதெப்படீடி...நான் கேட்குறது? பொம்பளப்பிள்ளைட்டப் போயி...?

ஏன், கேட்டா என்ன? கூச்சமா இருக்கா? இல்லை வெட்கமா?

உனக்குக் கேட்குறதுக்குத் தெம்பில்ல...என்னைத் தூண்டி விடுறயாக்கும்? நான் கேட்டுப்புடுவேன் ரெண்டே வார்த்தைல..எனக்கென்ன வெட்கம்? முப்பத்து மூணு வருஷம் ஆபீஸ்ல நிறையப்பேற மேய்ச்சிட்டுத்தான் வந்திருக்கேன்....அப்புறம் அந்தம்மா வேலையை விட்டு நின்னுடுச்சுன்னா? அதுக்குத்தான் யோசிக்கிறேன்...வேலைக்கு அங்கங்க விசாரிச்சு ஆளப் பிடிக்கிறது என்ன பாடா இருக்கு? முதல்ல யார் இருந்தாங்க? ஏன் நின்னாங்க? எவ்வளவு குடுத்தீங்க? அது இதுன்னு என்னெல்லாம் கேள்விக? இதுக்கெல்லாம் பதில் தயார் பண்ணிக்கிட்டுத்தான் தேடவே ஆரம்பிக்கணும். தயார் பண்ணி வச்சிருக்கிற பதில் கேட்குறவங்களைத் திருப்திப் படுத்தணும். அடுத்து யார் வேலைக்கு வரப்போறாங்களோ அவங்களே நம்மளை நேர்காணல் நடத்தினாலும் நடத்துவாங்க...அதுல நாம தேறினாத்தான் வேலைக்கு வர சம்மதிப்பாங்க...இது இப்போதைய காலம். அதுதான் பலமான யோசனையா இருக்கு. ஒரு ஆள நிறுத்துறது பெரிசில்ல. அடுத்து ஒருத்தரைப் பிடிக்கிறது இருக்கு பாரு அதுதான் மலை. ரெண்டே வார்த்தைல நான் பேசிப்புடுவேன்...அதுவா பெரிசு? காரியம்தான் முக்கியம். வீரியமில்லை.

அப்டி என்னதான் கேட்பீங்களாம்? அதத்தான் சொல்லுங்களேன் பார்ப்போம்...

பார்த்தியா, இதானே வேண்டாங்கிறது....என்ன கேட்கணும்னு எங்கிட்டக் கேட்டுக்கிட்டு நீ கேட்கப் போறியாக்கும்? உனக்கு அந்தம்மாட்ட நேரடியாக் கேட்குறதுக்குப் பயம்....வேலைக்காரிகிட்டப் பயந்து சாகுற ஆள இப்பத்தான் பார்க்கிறேன் நான்....

பயமென்ன பயம்...அதெல்லாம் ஒண்ணுமில்லே.....

ஒண்ணுமில்லேன்னா என்ன அர்த்தம்? அந்தம்மாவ இப்படி இஷ்டத்துக்கு வளர்த்து விட்டது நீதானே? நாந்தான் சொன்னேன்ல...கராறா ஆரம்பத்துலயே சொல்லிப்புடுன்னு...எதத்தான் சொன்ன நீ? இன்னின்ன வேலை செய்யணும்னு சொல்லியிருந்தேன்னா அத ஏன் செய்யலைன்னு கணக்கு வச்சிக் கேட்கலாமே? நூறு ரூபாய்க்கு வேலைக்கு வந்த அந்தம்மா இப்ப ஐநூறு வாங்குது...சம்பளம்தான் கூடியிருக்கு...வேலை அதேதான்....ஆனா ஒழுங்காச் செய்யுதா? கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதைதான். வாரம் ஒரு முறை வீடு துடைக்கணும்னு சொன்னே....செய்யுதா? நீ கிடந்து துடைச்சிட்டிருக்கே...இதுல அப்பப்போ என்னைவேறே போட்டு பாடாப் படுத்தறே...அன்னைக்கு நீ செய்திட்டிருந்தப்போ பாதில வந்த அந்தம்மாவ மீதியைத் துடைச்சு முடின்னு கூட உனக்குச் சொல்லத் தைரியமில்ல...வாய் வர மாட்டேங்குது...அந்தம்மாவும் கொண்டாங்க நான் துடைக்கிறேன்னு சொல்ல மாட்டேங்குது...கடைசியா நூறு ஏத்தினியே...அது வீடும் துடைச்சிக் கொடுத்திடுன்னு சொல்லித்தானே? அப்பச் சரின்னு தலையாட்டிப்புட்டு இப்படி மெத்தனமா இருந்தா எப்படி? தினசரி காலைல எட்டரைக்கு வந்திடு...அப்பத்தான் எனக்கு சரியா இருக்கும்னு சொன்ன...கேட்டுச்சா...பக்கத்துல, பாங்குல வேலை பார்க்குதே அந்த மேடம் வீட்டுக்குப் போயிட்டுத்தான் வருது...நம்ம வீட்டுக்கு வேலைக்கு வந்த பின்னாடிதானே அந்த வீட்டுக்கு வேலைக்குப் போச்சு....அப்போ முதல்ல நம்ம வீட்டுக்குத்தான கரெக்டா வரணும்...காலைல ஏழுக்கெல்லாம் அங்க நுழைஞ்சிடுது...நாந்தான் வாக்கிங் போயிட்டு வரச்சே பார்க்கிறேனே...

அதுக்கென்ன பண்றது? அந்த வீட்டுல டிபன், சாப்பாடு, அப்பப்போ மிஞ்சுற காய்கறி, தேங்கா, மாங்கா, துணிமணின்னு நிறையக் கொடுக்கிறாங்க... அங்கதான நோங்கும்...!

நீயே இப்படிச் சொன்னா? உனக்கு எங்கிட்டதான் வாய் கிழியுது..என்னை ஜெயிக்கணும்ங்கிற மாதிரிப் பேசுற....அந்தம்மா வந்திச்சுன்னா கப்சிப்னு ஆயிடுற...அதுவும் அத சாதகமா எடுத்துக்கிட்டு என்னவோ வந்தோம், செய்தோம்னு கழிச்சிக் கட்டிட்டுப் போயிடுது....ஒரு நாளைக்காச்சும் திருப்தியா வேலை செய்திருக்கா சொல்லு...மனசேயில்லாத மாதிரிச் செய்யும்.. எப்பப்பாரு, உடம்பு முடியலைங்கிற மாதிரி .முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு...அது எப்டியோ இருந்திட்டுப் போகட்டும்...நா அதுக்குச் சொல்லலை...அது சிரிச்சா என்ன அழுதா என்ன? நமக்கு வேலை நடந்தாச் சரி...ஆனா கொடுக்குற காசுக்கு ஒழுங்கா வேலை பார்க்கணுமில்ல...?

எத்தனையோ முறை நானும் சொல்லிட்டேன்...பீரோவுக்கு அடிலயும், கட்டிலுக்கு அடிலயும் விளக்குமாத்த விட்டுக் கூட்டுன்னு...என்னைக்காச்சும் கேட்டுறுக்கா? ஏழு ரூம் உள்ள இந்த வீட்டை ரெண்டு நிமிஷம் கூட ஆகாது....ஒரு இழுப்பு இழுத்திட்டுப் போயிடுது..விளக்குமாத்துக்கு வலிக்குமான்னு ஒரு நாளைக்குத்தான் கேளேன்....அடில கிடக்குற தூசி அப்டியேதான் தேங்கிக் கிடக்கு நாள்கணக்கா...கத்த கத்தயா, சுருட்டை சுருட்டையா... எல்லாம் உன் தலை முடிதான் வேறென்ன...?

உங்களுக்கு என் தலைய உருட்டலேன்னா ஆகாதே...?

உன் தலையை உருட்டலை, முடியத்தான்....உன் தலைய உருட்டி நா என்னடி செய்யப்போறேன்...இப்டி இருக்கியேன்னு சொல்ல வந்தேன்...உன்னப் பார்த்தா பாவமா இருக்கு எனக்கு. சரி சரி கிளம்பு...ஆபீசுக்கு நேரமாகல?

அப்பயே ஆயாச்சு..இன்னைக்கு லேட் அட்டென்டன்சுலதான் கையெழுத்துப் போடணும்...அநேகமா மூணு லேட் ஆகியிருக்கும்...அரை நாள் லீவு கட்.....இத சரி பண்ணுங்கோ.... – சொல்லிக்கொண்டே என் முன் வந்து நின்றாள் இடுப்பில் செருக வேண்டிய புடவை மடிப்பைப் பிடித்தவாறே...

அவள் பிடித்திருக்கும் முன்பகுதி மடிப்பின் கீழ் தொங்கும் நான்கு விசிறி மடிப்புகளை ஒன்றாகப் பிடித்து அயர்ன் பண்ணியதுபோல் செய்து இழுத்து விட்டேன். எடுத்துச் செருகிக் கொண்ட போது ஏதோ ஐ.ஏ.எஸ் ஆபீசர் போலத்தான் இருந்தாள். தோற்றத்தில் இருந்தால் போதுமா? நிர்வாகம் என்பது வெறும் தோரணையில் மட்டுமில்லையே? கமாண்டிங் கெபாசிட்டி என்று ஏன் சொல்லியிருக்கிறார்கள்? இங்கு வேலைக்காரியிடமே இப்படித் தயங்கித் தடுக்கிடுகிற இவள், அலுவலகத்தில் பதினைந்து பேர் கொண்ட பிரிவினை எப்படி மேய்க்கிறாள்?

எல்லாம் லீவு லீவுன்னு போயிடறதுகள் எனக்கென்னன்னு...எல்லாத்தையும் நாமளே கட்டிண்டு அழ வேண்டியிருக்கு...எதுகளுக்கும் ரெண்டு வரி ஒழுங்கா இங்கிலீஷ்ல எழுதத் தெரில..அதாச்சும் பரவால்ல...சமாளிச்சிக்கலாம்...சொல்றதச் செய்தாலே போதும்...ஏதாச்சும் சொன்னா படக்குன்னு ஃபைலை. நம்ம டேபிள்ல கொண்டு வச்சிடுறா...இந்த மட்டுக்கும் பொறுப்பு விட்டுதுன்னு...வேலை கத்துக்கணும்ங்கிற ஆர்வமே இல்லை யாருக்கும்...நம்ம செக்ஷன் வேலையை நாமதான் பார்க்கணும்ங்கிற கெத்து வேணாமோ...வெறுமே பைல்களை அடுக்கி அடுக்கி வச்சிண்டிருந்தாப் போதுமா...வேலை யார் பார்க்கிறது? சாயங்காலமாச்சின்னா டேபிளைத் துடைச்சி வச்சிட்டுப் போயிடுறா...ரொம்ப சின்சியர் மாதிரி... மாசக் கடைசியாச்சின்னா போய் ஏ.டி.எம்ல மட்டும் நீட்டி எடுக்கத் தெரியறதோல்லியோ? அத நாம சொல்லப்படாது. சொன்னாக் குத்தமாயிடும்...அது அவாளோட உரிமையாச்சே...! அப்படீன்னா கடமை? அதக் கேட்கப்படாது...

நன்னா லாங்க்வேஜ் எழுதறவாளும் இருக்கா...அவா வேலை செய்ய மாட்டா....என்னைக்கோ ஆரம்பத்துல சின்சியரா வேலை செய்து வாங்கி வச்சிருக்கிற பேரைக் கெட்டியாப் பிடிச்சிண்டு ஓட்டிண்டிருக்கா....வேலை செய்யாதவாளைப் பார்த்துப் பார்த்து நாமளும் ஏன் செய்யணும்ங்கிற அலட்சியம் வந்துடுத்து அவாளுக்கும்...ஒவ்வொரு ஆபீசிலயும் ஒவ்வொரு செக்ஷன்லயும் இன்னைக்கும் ஒத்தர் ரெண்டு பேர் அவாஉண்டு அவா வேலையுண்டுன்னு இருக்கிறவா இருக்கத்தான் இருக்கா...அப்படிப்பட்டவாளை வச்சித்தான் ஆபீஸ்களே ஓடிண்டிருக்குன்னு கூடச் சொல்லலாம்...எப்படி வேலையே செய்யாதவாளை மாத்த முடியாதோ அதுபோல வேலை மட்டுமே கதின்னு கிடக்கிற இவாளையும் யாராலேயும் மாத்த முடியாது...

இதுல வி.ஆர்.எஸ் வேறே கொடுக்கப் போறானாம்...இன்னும் பத்து வருஷம் சர்வீஸ் இருக்கிறவாளெல்லாம் சரி, ஓ.கே.ன்னுட்டு வீட்டுக்கு வர முடியுமா? நிறையப் பேரு தயாராத்தான் இருக்கா...ஏதாச்சும் வள்ளிசாக் கொடுத்தா வாங்கிண்டு கழன்டுக்கலாம்னு...வள்ளிசா எங்க கொடுக்கப் போறான்...கையை நீட்டச் சொல்லித் தடவித்தான் விடுவான்...நிறையப் பேரு மெயினா வேறே பிஸ்னஸ் அது இதுன்னு பார்த்துண்டு, இதைத்தானே சைடா வச்சிண்டிருக்கா...? நல்லா யோசிச்சுப் பாருங்கோ...ஒரு நாளைக்கு எழுநூறு, ஆயிரம்னு வாங்கறா எல்லாரும்...அதுக்கு மனசாட்சிக்கு விரோதமில்லாம நாம வேல செய்றோமா? வெளில ஒவ்வொருத்தர் எத்தனை கஷ்டப்படறா? கண்ணால பார்க்கத்தானே செய்றோம்? அப்புறம் ஏன் அவன் வி.ஆர்.எஸ் கொண்டுவர மாட்டான்? மூவாயிரம், ஐயாயிரம்னு செய்றதுக்கு எத்தனை பேர் காத்துண்டு க்யூவில நிக்கிறா? அவாளைக் கூட்டிண்டு வந்து வேலையை வாங்கிப்பிட்டு அத்தக் கூலி மாதிரிக் கொடுத்தனுப்பப் போறான்...எல்லாமும் நீங்களா வரவழைச்சிண்டதுதானே? நாம ஒரு ஸ்தாபனத்துல இருக்கோம்னா அதோட முன்னேற்றத்துக்கு உயிரக் கொடுத்துப் பாடு பட்டிருந்தோம்னா, அட அதுவே வேண்டாம் அவா அவா வேலையை ஒழுங்கா செய்திருந்தோம்னா, இன்னைக்கு இந்த நிலைமை வருமா? வேலை செய்யாம அதை நஷ்டத்துல கொண்டு போய் விட, நஷ்டத்த ஈடு கட்டுறதுக்கு ஆட்களை வெளியேத்தறான் அவன்...செய்யத்தானே செய்வான்...வெளியேற்றாதே...வெளியேற்றாதேன்னு வெளில நின்னுண்டு கோஷம் போட்டா நடக்குமா? அப்டியே வெளில அனுப்பிடுவான் போலிருக்கு...

கோஷம் போடுறதுலயும் இப்ப சந்தேகம்...ஏன்னா இவாளே நாலு அஞ்சுன்னு பிரிஞ்சி இருக்கா...எவன் எப்போ யார் கூடப் போய் என்ன பேசறான்னு அவுங்களுக்குள்ளயே தெரியாது..பக்கத்துல நிக்கிறவன் சரியான ஆள்தானாங்கிறதுலயே சந்தேகம்....உள்ளே என்ன நடக்குதுன்னு எதுவும் தெரியாம வெளில நம்பிக்கையோட நிறைய அப்பாவிகள் கூடித்தான் இருக்காங்க...இன்னமும் விகல்பமில்லாம கூடத்தான் செய்றாங்க...வெறுமே கூடிக் கலையற கும்பலாத்தானே எல்லாமும் இருக்கு....என்ன சாதிக்க முடிஞ்சிது...நடக்குறது நடந்துக்கிட்டுதான் இருக்கு...ரொம்பக் கொஞ்ச காலம் வேணும்னா தள்ளிப் போட்டிருக்கலாம்...இவுங்க ஸ்டிரைக்குனால உண்டான பலன் அவ்வளவுதான்...பெர்மனென்ட் சொல்யூஷன் என்ன? ஸ்தாபனம் என்ன நினைக்குதோ அதுதான் நடந்துக்கிட்டிருக்குது....

இதெல்லாம் கேட்கக் கிளம்பினா, கேட்டாக் குத்தம்....கருங்காலின்னுவா..கேட்கத்தான் நினைக்கிறது...எங்க கேட்க முடியறது? .உரிமையை உரிமையோட கேட்குற தகுதி எப்ப வருது? நம்ம கடமையைத் தவறாமச் செய்யறபோதுதானே? ஆனா ஒரு துரதிருஷ்டம். தன் கடமையை ஒழுங்காச் செய்றவாளுக்கே இதையெல்லாம் கேட்க முடியாமப் போயிட்டதுங்கிறதுதான்...இதல்லாம் சொல்ல முடியாது....அதான்...யார் சந்தாக் கேட்டாலும் தொலையறதுன்னு நானும் கொடுத்திடுறது...அவாளுக்கும் தெரியும்...காசு வந்தாச் சரின்னு அவாளும்தான் வாங்கிக்கிறா...அதையும் சொல்லியாகணுமே...எங்க பாலிஸிக்கு நீங்க எதிரான கருத்து உள்ளவங்க...ஆகையினால உங்ககிட்ட சந்தா வாங்க மாட்டோம்னு யாராவது சொல்றாளா என்ன? இல்ல, எல்லாத்துக்கும் சந்தாக் கொடுக்கிறீங்களே...எப்டி மேடம்?னு இதுவரைக்கும் யாராச்சும் கேட்டிருக்காளா?சந்தா இல்லாட்டா நன்கொடைன்னு போட்டுப்பாளோ என்னவோ... என்னைமாதிரியே நிறையப் பேரு இருப்பா போலிருக்கு..நாலு மாடியிருக்கே...அவாளும் கேட்கத்தான் நினைக்கிறா...ஆனா கேட்குறதில்லே...ஏன்னு அவாளுக்கே தெரியல போலிருக்கு...ஏதோஎல்லாமும் ஓடிண்டிருக்கு...அவ்வளவுதான்...ஆனா ஒண்ணு...எல்லாரும்வேணுங்கிறவாதான்...யாரையும் பகைச்சிக்கிறதுக்கில்லை...

பேச ஆரம்பித்தால் அத்தனை விஷயங்களைக் கோர்வையாகச் சொல்வாள்.கடைசியில் எவ்வளவு ஜாக்கிரதையாக ஒரு வார்த்தை சொன்னாள் பார்த்தீர்களா? எல்லாமும் அறிந்தவள். எதுவும் செய்ய ஏலாதவள். அதுதான் பாவம்.

சொன்னதெல்லாம் சரிதான். ஆனாலும் ஒன்று கேட்டேன் நான்.

உனக்குன்னு ஒரு அடையாளம் வேண்டாமா? அதென்ன எல்லா சங்கத்துக்கும் சந்தாக் கொடுக்கிறது? அசிங்கமாயில்லே? அதை வெட்கமில்லாம வேறே சொல்லிக்கிறே? இருக்கிறதிலயே எது பெட்டர்னு பார்க்கிறது. அதுக்கு மட்டும் கொடு. மத்தவாள்ட்ட நான் அந்தச் சங்கம்னு சொல்லிடு...அவ்வளவுதானே...?

நான் ஏன் அப்படி இருக்கணும். எனக்கென்ன வந்தது? வாயிழந்து அவங்களைக் கேட்காம இருக்கச் சொல்லுங்க....கேட்குறாங்க...பாவமா இருக்கு...அதனால கொடுக்கிறேன்...

அது பொய்யி...எந்தச் சங்கத்துக்காரனாலும் உனக்கு எந்தத் தொந்தரவும் வந்திடக் கூடாதுங்கிற சுயநலம்...அதுதான் உண்மை. நீ ஒரு பச்சோந்தி மாதிரி....எல்லா இடத்துக்குத் தகுந்த மாதிரியும் நிறம் மாறிப்பே...அவ்வளவுதான்...சரி இவ்வளவு பேசறியே...இந்தச் சங்கத்துக்காரங்களெல்லாம் ஸ்டிரைக்குன்னு இறங்கும்போது என்னைக்காவது அவுங்க கூடப் போய் நீ நின்னிருக்கியா? ஒரு நாளைக்காவது கோஷம் போட்டிருக்கியா?

அதுதான் நமக்கும் சேர்த்து அவுங்க போடறாங்களே...

இது தப்பிக்கிற வேலை...நான் இந்த மாதிரி பதிலை உன்கிட்ட எதிர்பார்க்கலை...ஆபீஸ் வேலைல ரொம்ப சின்சியர்னு உன்னைச் சொல்லிக்கிற நீ உன்னோட நியாயமான உரிமைகள் உனக்குக் கிடைக்காமப் போறபோது எப்படி மழுங்குணி மாதிரி உட்கார்ந்திருக்கே? உனக்கு சுய கௌரவம் உண்டுல்ல? எப்படி முடியுது உன்னால? அதையெல்லாம் வாங்கித் தரத்தான் அவுங்க இருக்காங்கல்லன்னு இருக்கே...அப்படித்தானே? அது சுயநலம்தானே? நாமதான் சந்தாக் கொடுக்கிறோமேன்னு உன்னைச் சமாதானப் படுத்திக்கிறே....? ஆனா இறங்கிப் போராடணும்னு உனக்குத் தோணலை....சந்தாக் கொடுத்தா மட்டும் எல்லாம் முடிஞ்சிதா அர்த்தமா? சந்தாங்கிறது மெம்பர்களோட எண்ணிக்கையை உறுதிப்படுத்திறதுக்கும், போராட்டம் தர்ணான்னு வர்றபோது நோட்டீஸ், போஸ்டர், பந்தல், மைக், இப்படியான செலவுகளை ஓரளவு ஈடுகட்டுறதுக்கும்தான்...எவ்வளவு கைக்காசு இழக்கிறாங்க தெரியுமா உனக்கு? சங்கம், போராட்டம்னு இறங்கிட்டவங்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல...

அதெல்லாம் பத்தி எனக்கென்ன வந்தது?..அதுல இருக்கிறவங்க கவலைப்பட வேண்டியது அது....நான் வாங்குற சம்பளத்துக்கு வஞ்சகமில்லாம வேலை பார்க்கிறேன்..அது எனக்கு திருப்தியைத் தருது...அவ்வளவுதான்....மத்தவங்க வேலையையெல்லாம் எடுத்து சுமக்கிறேன்...அவுங்க அப்படியில்லையே?

இதை இங்க உட்கார்ந்து ஏன் சொல்றே? அவுங்க கூடப் போயி நில்லு...நின்னுட்டு சொல்லு...உன்னை மதிக்கிறாங்களா இல்லையா பாரு...உனக்குன்னு ஒரு இடம் கிடைக்குதா இல்லையா பாரு? அவுங்களும் வேலையே செய்யாம வெட்டிக்கு அலையணும்னு நினைக்கிறவங்க இல்லையே? அவுங்க மத்தில போயிப் பேசு எந்த நியாயத்தையும்...இங்கயே உட்கார்ந்திட்டுக் குதிரை ஓட்டினேன்னா?

அப்பாடீ...! எனக்கு வேண்டாம்ப்பா...இன்னும் அதை வேறே கட்டிட்டு அழணுமா? என்னால ஆபீஸ் வேலைலருந்து டீவியேட் ஆக முடியாது...அத ஒழுங்காப் பார்க்கிறதுதான் எனக்கு, என் மனசுக்கு, உடலுக்கு ஆரோக்கியம்....மத்ததெல்லாம் எனக்கு செகண்ட்ரிதான்....

அவளைப் பார்க்க எனக்குப் பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் என்னாலும் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாதே. ஏனென்றால் அது அவள் வேலை. அவள் ஆபீஸ். நானா அவளுக்கு அந்த வேலையை வாங்கிக் கொடுத்தேன். அவளாக, அவள் திறமையின்பால் பெறப்பட்டது அது. திருமணத்திற்கு முன்பிருந்தே, பல ஆண்டுகளாக அந்த வேலையிலிருக்கிறாள். அவளை மணந்தவன் என்பதனாலேயே அதற்கு வற்புறுத்தவோ, நிர்பந்திக்கவோ, இயலாதே.

ஆனாலும் என் மனைவி அப்படியில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டுதான்.

பல சமயங்களில் அவளை அலுவலக வாசலில் இறக்கி விட்டு வரும்போது சாலையோரத்தில் பந்தலைப் போட்டுக் கொண்டு, கோரிக்கைகளைச் சுமந்து கொண்டு, மைக்கில் கத்திக் கொண்டிருக்கும் தோழர்களைப் பார்க்கும்போது என் மனதுக்கு வெட்கமாகத்தான் இருக்கும். நான் அவர்களை எப்படித் தாண்டிச் செல்கிறேன்? என்னை நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி இது.

ஸ்டிரைக்குங்கிறீங்க...எல்லாரும் உள்ளே போயிட்டிருக்காங்க...? கூப்பிட மாட்டீங்களா? – சிரித்துக் கொண்டே கேட்பேன். அவர்களிடம் ரெண்டு வார்த்தைகளேனும் பேசாமல் என்னால் அவ்விடம் விட்டு அகல முடியாது.

அதெல்லாம் அவுங்களா வரணும் தோழர்...நாம எத்தன தடவை கூப்பிட்டாலும் அப்டி இருக்கிறவங்க அப்டித்தான் இருப்பாங்க....சுயமா அந்த உணர்வு இல்லாதவங்கள என்ன சொன்னாலும் உசுப்ப முடியாது தோழர்...சரின்னு விட்ரவேண்டிதான்...

பல சமயங்களில் அனைத்துச் சங்கங்களும் சேர்ந்து வெளியேறும்போது படு முன்னெச்சரிக்கையாக இவள் மெடிக்கல் லீவு போட்டுவிட்டு வந்த வேகத்தைப் பார்க்க வேண்டுமே! அடடா...அடடா...அடடா...!!! என்னே அற்புதம்...என்னே அற்புதம்....

மருத்துவரிடம் சென்று அந்த மெடிக்கல் சர்டிபிகேட்டையும் வாங்கிக் கொடுத்த மாபாவி நான்தானய்யா...நான்தான்.

இதற்கென்றேதான் ஒருவர் இருக்கிறாரே...அவருக்கு வேலை மருத்துவம் பார்ப்பது இல்லை. இதுதான்..தனியாக ரகம் வாரியாகப் படிவம் பிரின்ட் செய்து வைத்துக் கொண்டு எங்கே எங்கே என்றுதான் உட்கார்ந்திருக்கிறாரே....அது சரி...பேஷன்ட் வந்தால்தானே...?

மாநிலம் முழுவதும் நடந்த ஒரு ஒட்டு மொத்தப் போராட்டத்தின் போது எங்கள் துறையில் உள்ள அலுவலகங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களை உள்ளே சென்று வலுக்கட்டாயமாக நாங்கள் வெளியேற்றியதும், பின்னர் அரசு ஊழியரை அவரது கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு நாங்கள் சிலபேர் தண்டிக்கப்பட்டதும், என் நினைவில் வந்து போனது.

அன்றாடம் அவள் அசந்து சளிந்து வரும்போது பார்க்கப் பரிதாபமாக இருக்கும்தான்....ஏதாச்சும் வீட்டுல வச்சுச் செய்ய முடியும்னா கொண்டாயேன்...நா வேணா செய்து தர்றேன்....சொல்லியிருக்கிறேன்...

அதெல்லாம் உங்களுக்குப் புரியாது....ஒரே வார்த்தையில் முடித்து விடுவாள். வீட்டில் கொண்டு வந்து செய்வதுபோலவும் இப்பொழுது இல்லையே...எல்லாமும் கணினியில்தானே ஓடுகிறது...அதைப்பற்றி அடேயப்பா எவ்வளவு புலம்பியிருக்கிறாள்?

சொல்லித் தர்றவாளுக்கே சரியாத் தெரியலை...ஆனா நம்மளைக் குத்தம் சொல்றா...அவா செய்த தப்பை மறைக்க, ஏன் மேடம் இப்டிச் செய்தீங்கன்னு ஏதோ நாம தப்பு செய்துட்ட மாதிரி முந்திண்டு நம்மகிட்டயே திருப்புறா...எவ்வளவு சாமர்த்தியம் பாருங்கோ...இன்னைக்கு ஆபீஸ் வேலைல திறமையெல்லாம் வேண்டாம்...இதெல்லாம்தான் தெரிஞ்சிருக்கணும்...மூணு நாள், ஒரு வாரம்னு டிரெயினிங் கொடுத்துப்பிட்டு, உடனே உட்கார்ந்து செய்யுன்னா யாருக்குத்தான் கை வரும்? எல்லாம் திணறின்டிருக்குகள்...ஒண்ணுக்கொண்ணப் பண்ணிப்பிட்டு முழிக்கிறதுகள்...அதுக்குன்னு டாட்டா ஆப்பரேட்டர் போஸ்ட் இருக்கு....அதை ஃபில் அப் பண்றதில்லை...ஒவ்வொரு செக்ஷனுக்கும் சாங்ஷன் இருக்கு...எதையும் இன்னைவரைக்கும் பூர்த்தி செய்யலை...எல்லாமும் காலியாத்தான் கெடக்கு...நம்ம உசிரை வாங்கறா..கம்ப்யூட்டர் முன்னாடி நாள் பூராம் கிடந்து கண்ணு பூத்துப் போறது....என்ன தலையெழுத்தோ....

பையன் எப்பப் படிச்சிட்டு வேலைக்குப் போவான்னு காத்திண்டிருக்கேன்...அவன் ஒரு இதுல உட்கார்ந்திட்டான், மறுநிமிஷம், அவன் என்ன என்னை வெளியேத்தறது...நானே குட்பை சொல்லிட்டு வந்திடுவேன்....இப்பொழுது சொல்கிறாள். உண்மையில் அது நடந்தபிறகு செய்வாளா என்று நினைப்பேன் நான். பெண்கள் அவர்களுக்கிருக்கும் வேலையை எத்தனை பிடிப்பாய் நினைக்கிறார்கள். வாழ்க்கையின் ஆதாரமே அதுதான். புருஷன் இரண்டாம் பட்சம்தான். அப்படித்தானே பல இடங்களில் நடக்கிறது? பிறகு சொல்வதில் என்ன தப்பு?

ஆபீஸ் வாசலில் அவளை இறக்கிவிட்டபோதுதான் வீட்டுச் சாவி ஞாபகம் வந்தது எனக்கு.

இந்தா...இந்தா உன் சாவியக் கொடு...என் சாவி வீட்டுக்குள்ள மாட்டிக்கிடுச்சி....

இது வேறயா? சலித்துக் கொண்டே கைப்பையில் போட்டுத் துழாவினாள். அநியாய டென்ஷன்....

நிறையப் பேர் இப்படித்தான் தனக்குத்தானே வலியப் பதறிக் கொள்கிறார்கள் என்று தோன்றியது. சாவியை எடுத்தபோது கூடவே ரெண்டு மூணு சில்லரைகள், ரூபாய் நோட்டு என்று கீழே விழுந்தன. அவளைப் பார்க்கவே இவனுக்குப் பரிதாபமாக இருந்தது.

சரி...சரி..போ...நா எடுத்துக்கிறேன்...

அது சரிதான்....எனக்கு டீ குடிக்கக் காசு வேண்டாமா? கொண்டாங்கோ...பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு ஓடினாள்.

பரபரவென்று உள்ளே நுழையும் பலருக்கு நடுவே இவள் கலந்தபோது உருவம் மறைந்து போனது.

எனக்கு வேறு வேலையில்லை. நானோ ஓய்வு பெற்றாயிற்று. அதிகபட்சம் லைப்ரரி செல்லும் வேலைதான். பிறகு பாங்க் வேலை, அவள் சொல்லியிருந்தால் சொன்ன வீட்டுச் சாமான்களை வாங்கிச் செல்வது இவைதான். குறைந்தது ஒரு மணி நேரத்தில் இவையெல்லாம் முடிந்து போகும். பிறகு வீடுதான். பேசாமல் நாமே வீட்டு வேலைகளையும் செய்து விட்டால் என்ன? சமையல் வேலையோ அவள் செய்கிறாள். என்ன பெரிய சமையல்? ரெண்டு பேருக்குச் சமைப்பது என்ன ஒரு பெரிய வேலையா? காய்கறி நறுக்கிக் கொடுத்தாகிறது...சாதமோ குக்கரில் வெந்து விடுகிறது. ஒரு கறி, ஒரு சாம்பார் அவ்வளவுதானே...இதைச் சொன்னால் பழியாய்க் கோபம் வரும். எங்கே, ஒரு நாளைக்கு நீங்க செய்ங்கோ பார்ப்போம்...சவால் விடுவாள். செய்யவும்தான் செய்தேன். எனக்குப் பிடித்தது. அவளுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு நான் என்ன செய்ய? அவள் சமையலை நான் சகித்துக் கொண்டு சாப்பிடவில்லையா? அவள் கைபாகம் எனக்கு அலுக்கவில்லையா? அதுபோல் என் கை ருசியையும் அவள் சகித்துக் கொள்ள வேண்

டியதுதானே? கொஞ்ச காலம் இப்படித்தான் ஓடட்டுமே? பிறகு எனக்கென்று ஒரு கை பாகம் வராதா? படியாதா? அது அலுக்கும்வரை நானே சமைக்கலாமே? அதுவரை என் நளபாகத்தை அவள் சுவைக்கலாமே? கேட்டால்தானே?

பெண்களுக்கு சமையல் இல்லையென்றால் எதுவோ கையைவிட்டுப் போனமாதிரி இருக்கும்போலும்? வீட்டு உரிமையில் ஏதோ கழன்று போயிற்று என்று மனதுக்குள் பயப்பட்டுக் கொள்வார்களோ என்னவோ? தன் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற நமது நிர்வாக அமைப்பு, இந்தக் குடும்ப அமைப்பிலிருந்துதான் கிளைத்து வியாபித்து இருக்குமோ? பலவாறு நினைத்தவாறே கிளம்பி வெளி வேலைகள் சிலவற்றைக் கவனித்து விட்டு வீடு வந்து சேருகிறேன் நான்.

அன்று மாநில அரசு விடுமுறை நாள். லைப்ரரி கிடையாது. எனவே அங்கு செல்ல வேண்டியதில்லை. ஒரு வேலை மிச்சம். சற்றுச் சீக்கிரமே வீடு வந்தாயிற்று. கொஞ்ச நேரத்தில் வாசலில் சத்தம்.

சார், ஸ்பீட் போஸ்ட்.....

கதவைத் திறந்து கொண்டு படியில் இறங்கினேன்.

நேத்து வந்தேன் சார்...கதவு பூட்டிருந்திச்சு....டோர் லாக்குடுன்னு போட்டுட்டு இன்னைக்கு எடுத்திட்டு வர்றேன்...பையன் பாஸ்போர்ட் போலிருக்கு சார்.....ஒரு ஆதரிசேஷன் லெட்டர் கொடுத்திட்டீங்கன்னா நல்லாயிருக்கும்...

ஓ! ரெடியா வாங்கி வச்சிருக்கேன்....இந்தாங்க பிடிங்க....எடுத்து வந்து கொடுத்தேன்.

பாஸ்போர்ட்டைக் கையில் வாங்கியதும், சுசீலா சொன்னது நினைவுக்கு வந்தது.

பையன் மட்டும் ஒரு வேலைல உட்கார்ந்திட்டான்னா........

என்னவோ அப்பொழுதே அவனுக்கு ஒரு வேலை கிடைத்து விட்டதைப் போன்றதொரு பிரமை ஏற்பட்டது எனக்கு.

சார்...நாளைக்கு சரஸ்வதி பூஜை லீவு சார்....போஸ்டல் உறாலிடே.... – சொல்லிக்கொண்டே போய்க் கொண்டிருந்தார் போஸ்ட்மேன்.

கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே வந்தேன். வாசல் திரையை இழுத்து விட்டேன். இனிமேல் எனக்கென்ன வேலை. ஏதாச்சும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார வேண்டியதுதான். இந்த வாரத்திற்கு மாவு அரைத்தாயிற்று. அது நான்கைந்து நாட்களுக்கு வரும்...ஆகையினால் அந்த வேலை இன்று இல்லை.

பீரோவைத் திறந்து ஒரு தடிப் புத்தகமாய் எடுத்தேன். நிறைய வாங்கி அடுக்கியாயிற்று. படித்துத்தான் தீர்க்க வேண்டும். ஆயுள் கிடைக்குமா?

மீண்டும் வாசலில் சத்தம்.

எழுந்து போய் எட்டிப் பார்த்தேன்.

வேலைக்காரம்மா....

என்னங்க இப்ப வர்றீங்க...?

ஏன்? இன்னைக்கு அம்மாவுக்கு லீவுதான...அதான் கொஞ்சம் லேட்டாப் போவோம்னு வந்தேன்.....

இன்னைக்கு லீவில்லீங்க...ஆபீஸ்....நாளைக்கு ஒருநாள்தான் லீவு.....

அப்டியா...காலண்டர்ல சிவப்பாப் போட்டிருந்திச்சு....நா ரெண்டு நா லீவுன்னு நினைச்சேன்....அதனாலென்ன பாத்திரம்லாம் வௌக்காமத்தான கெடக்கும்...நீங்க இருக்கீகள்ள....இப்ப வௌக்கிக் கவுத்திட்டுப் போயிடறேன்....

எல்லாம் தேய்ச்சாச்சு....நீங்க டயத்துக்கு வரல்லியேன்னு அவதி அவதியா எல்லாத்தையும் அவதான் மாங்கு மாங்குன்னு தேய்ச்சுக் கவுத்தினா...ஆபீசுக்கு வேறே லேட்டு இன்னைக்கு...ஒரு போன் பண்ணிச் சொல்ல மாட்டீங்களா...இப்டித்தான் நீங்கபாட்டுக்கு இருப்பீங்களா....? என் குரலில் சற்றே உஷ்ணம்.

லீவுன்னு நினைச்சிட்டேன்யா.... சொல்லிக்கொண்டே போய்விட்டது அந்தம்மா.

ரெண்டு வார்த்தை ஏன் கூடச் சொன்னோம் என்று இருந்தது எனக்கு. முணுக்கென்றால் கோபித்துக் கொள்ளும் குணம் கொண்ட பெண்மணி. காலண்டரில் அந்தம்மா பார்த்தது மாநில அரசு விடுமுறையை. இவள் எதில் வேலை பார்க்கிறாள் என்பது கூட அந்தம்மாவுக்குத் தெரியாதோ? திடீர்ச் சந்தேகம் வந்தது எனக்கு. எத்தனையோ முறை வீட்டு போன் டெட் என்று வந்து சொல்லியிருக்கிறதே?

அடுத்து அந்தம்மா வேலைக்கு வருமா, வராதா என்பது நாளைக் காலை வரை சஸ்பென்ஸ்.

நினைச்சா வேலைக்கு வருது...நினைச்சா இருந்துக்குது....

காலையில் அப்படி நினைத்தது இன்று தப்பாய்ப் போயிற்றுதான். யதார்த்தமாய் அது தாமதமாய் வரப்போக அது வேறு மாதிரி ஆகிவிட்டது இன்று.

மாலையில் சுசீலா வந்த போது சொன்னேன்.

ஆமாமா...சொல்லித்து....என்றாள் அவள். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

என்னது? சொல்லித்தா? ஆபீசுக்கு உன்னைத் தேடி வந்துடுத்தா? அதுக்குத் தெரியுமா உன் ஆபீஸ் எதுன்னு? - மடமடவென்று கேள்விகளை அடுக்கினேன்.

அன்னைக்கு ஒரு நாள் வீட்டு போன் டெட்டுன்னு கம்ப்ளெயின்ட் கொடுத்ததோல்லியோ...அதை உடனே சரி பண்ணச் சொல்லிட்டு, இப்ப சரியாயிடுத்தான்னு நான்தான் அதுகிட்டக் கேட்டிருந்தேன்...அதுதான் செல் வச்சிருக்கே...இப்போ செல் இல்லாதவாதான் யாரு? .அந்த நம்பரைக் குறிச்சு வச்சிண்டிருக்கும் போலிருக்கு....கரெக்டா ஆபீசுக்குப் பேசித்து பாருங்கோளேன்..யாரோ சுசீலாம்மா...சுசீலாம்மான்னு உங்களத்தான் கூப்பிடறாங்க மேடம்னு கொடுத்தாங்க...பார்த்தா இது...!.பாவம்...அதுக்கும் எவ்வளவு பிரச்னையோ? நாலஞ்சு வீட்டுல வேலை பார்த்துத்தானே பிழைக்கிறது...கஷ்டந்தானே...பாவமாத்தான் இருக்கு.... இன்னைக்கு விசேஷமோல்லியோ...நான் வீட்டுல இருப்பேன்னு நினைச்சிண்டு கொஞ்சம் லேட்டாத்தான் போவமேன்னு வந்திருக்கு....நீங்க ஏதாச்சும் தாறுமாறாச் சொன்னேளா அதை...?

அடியாத்தீ...நல்ல கதையாப் போச்சு....நா ஏன் சொல்றேன்....உன் பாடு அவ பாடு.......மனசுக்குள் திக்கென்றது எனக்கு. நல்லவேளை, வாயை அதிகம் திறக்கவில்லை. ஆனாலும் எனக்குள் ஒரு பயம் வதைக்கத்தான் செய்கிறது. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் சாமீ...!

சுசீலாவிடம் இப்படிச் சொல்லிவிட்டேனேயொழிய மனதென்னவோ அதை நினைத்து அடித்துக் கொள்ளத்தான் செய்கிறது. அதுதான் சொன்னேனே நாளை காலை வரை சஸ்பென்ஸ் என்று!!

----------------------------------------

19 அக்டோபர் 2011

பின் புத்தி சிறுகதை

ஆனாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன். அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம் ஆகும். அந்தக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிக்கு யார் பதில் சொல்வது? நான்தானே சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் பொழுது பொழுதாய் அறுத்துக் கொண்டிருக்குமே? ஏற்கனவே என்னைப் பாடாய்ப் படுத்தியது போதாதா?

அதற்காக இப்படியா வருவார்கள் என்று கேட்குமே?

காசு மிச்சம்னுட்டு வந்திட்ட! அதானே? சரியான ஆள்டா நீ? அன்னைக்கு உங்கப்பா நாள் பூராவும் நெருப்புல கிடந்து, அடுப்பு முன்னால நின்னு, வெந்து, உழைச்சு உழைச்சு ஓடாப் போயி அத்தக் கூலி மாதிரி என்னத்தையோ கொடுத்ததை வருஷக்கணக்கா கம்முன்னு வாங்கிட்டு வந்திட்டிருந்தாரே, ஞாபகமிருக்கா? ஞாபகமிருக்காங்கிறேன்? இல்ல, மறந்திட்டியா? அதுலயும் படு மோசமால்லடா இருக்கு இப்ப நீ செய்திட்டு வந்திருக்கிறது?

ஒரு தொழிலாளியைப் போய் ஏமாத்தலாமா? மனசறிஞ்சு ஏமாத்திட்டு வந்து நிக்கிறியே! இது நியாயமா? அவன் வயிறெறிஞ்சான்னா?

இல்ல அவன்தான் வேணான்னான்…

அவன் சொல்வாண்டா எதையாச்சும்...மனசாரச் சொன்னான்னு நீ கண்டியா? …உனக்கெங்கடா புத்தி போச்சு…எங்கயானும் அடகு வச்சிட்டயா…

இல்ல…அப்டியெல்லாம் இல்ல…

என்ன நொல்ல…? அப்புறம் எதுக்கு இப்டி வந்து நிக்கிறே…மனசு அரிக்குதுல்ல இப்ப…அத முதல்லயே செய்திருக்க வேண்டிதான…இனி அந்தப் பக்கம் போறபோதெல்லாம் அவன் மூஞ்சியை எப்படிப் பார்ப்பே….அப்படியே பார்த்தாலும் உன்னால சிநேக பாவமா சிரிக்க முடியுமா?பழைய பழக்கம் போல தொடர முடியுமா? நல்லாயிருக்கீங்களான்னு கேட்க முடியுமா? உனக்கு மனுஷங்க வேணாமா? காசுதான் பிரதானமா? நீ நலம் விசாரிச்சாலும் அவனால முழு மனசோட நல்லாயிருக்கேன் சார்னு சொல்ல முடியுமா? காசு தராமப் போனவன்ங்கிற எண்ணம்தானே அவனுக்கும் இருக்கும்…ஏமாத்தினவன்ங்கிற எண்ணம்தானே உனக்கும் இருக்கும்…இதுக்குத்தான் சொல்றது…நாம நம்மள முதல்ல புரிஞ்சிக்கணும்னு….புரிஞ்சிக்கிட்டிருக்கமா? இல்ல…ஆனா வயசாயிடுச்சி…வயசு மட்டும் ஆயிடுச்சி…அவ்வளவுதான்…

நீ என்ன சொல்ற…கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லேன்…

…வயசான அளவுக்கு உனக்கு அனுபவம் பத்தல…அவ்வளவுதான்..

என்ன அனுபவம்?

வாழ்க்கை அனுபவம்டா…மனுசங்களைப் புரிஞ்சிக்கிற அனுபவம்…புரிஞ்சி நடந்துக்கிற அனுபவம்…அதவிட…

அதவிட?

நம்ம இயல்பு என்னென்னு புரிஞ்சி நமக்கு எது பொருந்துமோ அப்டி நடந்துக்கணும்… அதத்தான் செய்யணும்…ஒரிஜினாலிட்டின்னு கேள்விப்பட்டிருக்கியா?

இல்ல…

அதுதான் அது…இப்ப நா சொன்னது...அதாவது அசலா இருக்கிறது...

சரி நா வர்றேன்…

எங்க கிளம்பிட்டே…?

இந்தா வந்திடறேன்…..சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு பட்டன்களைப் போட்டு இதயத்தை மூடினான்.

சார், வேணாம் …வைங்க சார்….இருக்கட்டும்….

இல்லப்பா… ….முதல்ல உன் காசப் பிடி…பிறகு பேசுவோம்….

ஊகும்….வேண்டாம் சார்…எனக்கு மனசே சரியில்ல சார்…இப்டி ஆயிப்போச்சேன்னு அரிக்குது…..காசு வாங்க மாட்டேன் சார்…

அதென்னவோ உண்மைதான்…கிளம்புற போதே என் பொண்டாட்டி வாய வச்சா…இன்னும் இதுக்கு வேறே அம்பது நூறு செலவான்னு….முதல் கோணல் முற்றும் கோணல்னு ஆயிப்போச்சு…அபசகுனமாப் பேசினா…? அத மாதிரியே ஆயிப் போச்சு…”

இல்ல சார்…இதுவரைக்கும் இப்படி ஆனதில்ல…இது நா பண்ணின தப்பு…இந்த வேலய நா செய்திருக்கணும்…என் தம்பிட்ட கொடுத்தது தப்பாப் போச்சு…

என்னங்க நீங்க? …நீங்க கடைல உட்கார்ந்திருக்கிறதப் பார்த்துட்டுத்தான நா கொடுத்திட்டுப் போனேன்…உங்க தம்பிட்டயா கொடுத்தேன்…நீங்க இப்டிச் சொல்றதுனால சரி பரவால்லன்னு வாங்கிக்கிடச் சொல்றீங்களா…உங்க தம்பிய இங்க கடை விளம்பரத்துக்காக வச்சிருக்கிற படங்களை லேமினேட் பண்ணச் சொல்லுங்க…தொழில் பழகிக்கட்டும்…வர்ற ஆர்டரை ஏன் அவன்ட்டக் கொடுக்கிறீங்க…? பலி கடாவா என் படம்தான் கிடைச்சிதா…

சே…சே…! அப்டியெல்லாம் இல்ல சார்..அதான் சொல்லிட்டேன்ல சார்…இது நா பண்ணின தப்புன்னு…

சரி, அதுக்காக…பேசாம வாங்கிட்டுப் போன்னு சொல்றீங்களா…?

சே…சே…அப்டி சொல்வனா சார்…இதமாதிரி இன்னொன்னு இருந்தாக் கொண்டுவாங்க…பைசா வாங்காம என் செலவுல போட்டுக் கொடுத்திடுறேன்னு சொன்னேன்..

இன்னொரு படத்துக்கு நா எங்கய்யா போவேன்…இல்ல இதமாதிரி போஸ் கொடுக்கத்தான் முடியுமா? நா என்ன சினிமா நடிகனா? அதென்னமோ அந்த விழாவுல எடுத்தாங்க…அது அம்சமா அமைஞ்சிருச்சு…ஏதோ புண்ணியத்துக்கு அவுங்க அனுப்பி வச்சிருக்காங்க…சரி, ஞாபகார்த்தமா இருக்கட்டுமேன்னு லேமினேட் பண்ணி வீட்டுல தொங்க விடலாம்னு பார்த்தா…இதெல்லாம் வேறே ஒண்ணுமில்ல…என் நேரம்யா…எந் நேரம்….தூக்கிட்டுக் கிளம்பேலயே அவ அழுதா…எதுக்கு வெட்டிச் செலவுன்னு வாய வச்சா…அது வௌங்காமப் போச்சு…வேறென்னத்தச் சொல்ல…

அப்டியெல்லாம் இல்ல சார்..நீங்களா எதையாச்சும் சொல்லிக்கிற வாணாம்...நா செய்து தர்றேன்கிறன்ல...

அப்டியில்லாமப் பின்ன எப்டி? இங்க தொங்குற படங்களயெல்லாம் பார்த்திட்டுத்தானய்யா லேமினேஷன் நல்லாயிருக்குன்னு நம்பிக் கொடுத்தேன்…கொடுக்கைலயே படம் கசங்கியிருந்திச்சா…நல்லா, நீட்டாத்தான இருந்திச்சு…நீ சொன்ன காசை ஏதாச்சும் குறைச்சனா? இல்லேல்ல...அப்புறம் இப்டி பண்ணினா? ஏகப்பட்ட சுருக்கத்தோட பார்க்கவே நல்லால்லாம லேமினேட் பண்ணியிருக்கீங்களே? புத்தகங்களுக்குத்தான்யா லேமினேஷன் சுருக்கம் சுருக்கமா இருக்கிறதை ஒரு ஃபாஷன் மாதிரி செய்யுறாங்க…படங்களுக்கில்ல…அதுவும் போட்டோ கொடுக்கிறவங்களுக்கு தப்பித் தவறிக் கூட அப்டிச் செய்திறக் கூடாது...என்னவோ 3டி படம்மாதிரி ஆக்கி வச்சிருக்கீங்க…?ஒவ்வொரு சைடுலேயும் ஒவ்வொரு மாதிரித் தெரியுது... லேமினேஷன் ஒர்க் பழகியிருக்கீங்களா, இல்லையா? அதுவே எனக்கு சந்தேகமாயிருக்கு...

அவன் தலை குனிந்து நின்றான். இப்பொழுது அவனிடம் பேச்சு முற்றிலுமாக நின்றிருந்தது. இனி எதுவும் பேசிப் பயனில்லை என்று நினைத்து விட்டானோ என்னவோ? என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான் என்று முடிவுக்கு வந்திருக்கலாம்.

என் மனது இன்னும் ஆறவில்லை. படத்தைப் பார்க்கப் பார்க்க வயிற்றெரிச்சலாய் இருந்தது. ஏதோ முக்கியமான விழாவாயிற்றே என்று தலைக்கு டையெல்லாம் அடித்து, சற்று சிறப்பு கவனத்தோடு இளமையாய்ச் சென்றிருந்தேன். என் தலையைப் பற்றி எனக்கே ஒரு பெருமை. டை அடிச்சாலும், நேச்சராத் தெரியுதே...எவனும் கண்டுபிடிக்க முடியாது.

இன்னும் முடியெல்லாம் நரைக்கவே இல்லையே சார்...எங்களப் பாருங்க...இப்பவே இப்டிக் கிழண்டு போயிட்டோம்...ஒங்களுக்கு முடி அடர்த்தி வேறே...ம்ம்...கூந்தலுள்ள சீமாட்டி...அள்ளி முடியிறீங்க...

அவர்கள் புகழ்ந்த பெருமை முகத்தில் தவழ்ந்ததோ என்னவோ...படமும் அழகாய் விழுந்து விட்டது. எனக்கே என்னை நம்ப முடியவில்லைதான்...அதைப்போய் இந்தப் படுபாவி இப்படி அசிங்கப்படுத்தி விட்டானே...இவனை இன்னும் நாலு வாங்கினால்தான் என்ன?

இந்த வீதில போற வர்றவங்களெல்லாம் உங்களப் பார்த்திட்டுக் கொடுக்கிறாங்களா? இல்ல எப்பயாச்சும் கண்ணுல பட்டு மறையுற உங்க தம்பிட்டக் கொடுக்கிறாங்களா?

இல்ல சார்…மத்தியானம் சாப்பிட வீட்டுக்குப் போவேன்…அந்நேரம் அவன் இருப்பான்….நல்லாத்தான் செய்வான்…இந்தா பாருங்க…அம்பது லேமினேஷன்…மொத்த ஆர்டர்…பூரா சாமி படம்….அவன்தான் செய்தான்…எந்தப் படமாவது கசங்கியிருக்குதா பாருங்க? ஒண்ணு சொத்தையா இருந்தாலும் எனக்குக் காசு வேணாம்…நா தொழில அப்டிச் சுத்தமா செய்றவன் சார்…

அப்போ சாமி படமாக் கொடுத்தாத்தான் நல்லா செய்வீங்களா…மனுஷங்க படம்னா இப்டித்தான் இருக்குமா…உங்களுக்கு மனுஷங்க வேணுமா…இல்ல சாமி வேணுமா…

என்ன சார் இப்டிக் கேட்குறீங்க…மனுஷங்கதான் சார் வேணும்…அவுங்கள வச்சிதான தொழில்….

அப்போ மூஞ்சில இப்டிக் கரியைப் பூசினமாதிரி ப்ரேம் பண்ணினீங்கன்னா? ஒரு வேளை ஒங்க தம்பிக்கு என் முகத்தைப் பார்த்ததும் பிடிக்கலையோ? அவனக் கடுப்படிச்ச வேறே யார் மாதிரியேனும் நான் இருந்திருப்பனோ…

பார்ட்டி பெரிய வில்லங்கம் என்று நினைத்திருப்பானோ என்னவோ அமுங்கியே போனான்.

நானே இருந்திருந்தும் ஆசப்பட்டு ஒண்ணைக் கொண்டாந்தேன். அதையும் நீங்க இப்டிச் செய்திட்டீங்க….என்னங்க தொழில் பண்றீங்க…தொழில்னா அர்ப்பணிப்பு உணர்வு வேணுங்க……கொடுக்கிறவங்க கிட்ட மரியாதை வேணும்...இல்லன்னா இப்டியெல்லாம்தான் ஆகும்...உங்களுக்கென்ன, நம்மள விட்டா இங்க யார் இருக்கான்னு நினைச்சிருப்பீங்க...எவன் இங்கேயிருந்து டவுனுக்குள்ள எடுத்துப் பிடிச்சிப் போகப்போறான்னு மெத்தனம்...அதான்...

அப்டியெல்லாம் இல்ல சார்...சொன்னா நம்புங்க...இந்த ஏரியாவுல நா ஒருத்தனா இத்தன வருஷம் தாக்குப் பிடிச்சி நிக்கிறேன்னா என் தொழில் சுத்தம்தான் சார் காரணம். எத்தனை பேர் படக்கடை வச்சிட்டு மூடிட்டுப் போயிட்டாங்க தெரியுமா…? இந்தப் படங்களயெல்லாம் எப்டி லேமினேட் பண்ணியிருக்கான் பாருங்க…எங்கயாச்சும் பசை தெரியுதா…எங்கயாச்சும் ஒட்டாம தூக்கிக்கிட்டு நிக்குதா? எந்த எடத்துலயாவது தீத்தியிருக்கானா…கறைபட்டமாதிரி…இருக்காது சார்...இருக்கவே இருக்காது...என்னவோ இதுல அப்டி ஆயிப்போச்சி….திட்டுத் திட்டா வேறே நிறையப் படிஞ்சி போச்சி…தாய்ளி…என் பொழப்பக் கெடுத்திட்டான் இன்னைக்கு…இத்தனை பேச்சு கேட்க வச்சிட்டானே....வரட்டும்…அவனச் சவட்டிடுறேன்…

முகத்தில் எரிச்சல் தெரிந்தது இப்போது. இவ்வளவு சொல்லியும் இந்த மனுஷன் கேட்கமாட்டேங்குறானே என்ற கடுப்பு ஏறியிருக்கலாம்.

அந்த சார் வந்தா கொடுத்திடுறான்னு சொல்லி பேசாம வீட்டுலயே ரெஸ்ட் எடுத்திருக்கலாம்…அவன்னா சாமர்த்தியமாப் பேசி கொடுத்தனுப்பிச்சிருப்பான்…அஞ்சு பத்தைக் குறைய வாங்கிக் கூட பேரத்தை முடிச்சிருப்பான்…மொத்தமா காசே வேணாங்கிறேன்…கேட்கமாட்டேங்கிறானே? நல்லதுக்குக் காலமில்ல…வேறேன்ன சொல்றது? இவனுக்கெல்லாம் இவ்வளவு தாழ்ந்து போறதே தப்புதான் போலிருக்கு...

சார்…அந்தப் படத்தைக் இப்டிக் கொடுங்க…எங்கிட்ட இருக்கட்டும்…இந்த லேமினேஷனப் பிரிச்சிட்டு, வேறே ஒண்ணு ஸ்கேன் பண்ணிப் போட்டுத் தரேன்…என் செலவுலயே செய்றேன் சார்…நீங்க ஒண்ணும் பைசா தர வேணாம்…நானே நீட்டா செய்து தரேன்…

அதெப்படிய்யா…ஒரிஜினல் போட்டோ மாதிரி வருமா ஸ்கேன்ங்கிறது? ஃபிலிமிலேர்ந்து எடுக்கிறதுக்கும் எடுத்த போட்டோவ காப்பி பண்றதுக்கும் வித்தியாசமில்லியா…போனது போனதுதான்….பாரு கரெக்டா மூஞ்சி மேல பசை….கரியப் பூசின மாதிரி….

போ…உனக்கு இந்தக் காசு வௌங்காது…அவ்வளவுதான்…..

அய்யய்யோ…எனக்கு துட்டே வாணாம் சார்…நீங்க படத்தக் கொண்டு போங்க… - கையெடுத்துக் கும்பிட்டான் அவன். வாழ்வில் இப்படி ஒரு நபரை இதற்கு முன் பார்த்திருக்க மாட்டான் போலும். கும்பிடுதலின் கோணம் அதை எனக்கு உணர்த்தியது.

சொன்னது எழுபது…கொடுத்தது ஐம்பது. அவன் செய்ததற்கு நான் பேசியதே போதும்.

மாலை அலுவலகம் விட்டு வந்த என் மனைவியிடம் கூறினேன்.

நல்லாக் குடுத்தனே காசு…நானா ஏமாறுவேன்…அவன் பண்ணின வேலைக்கு…முடியாதுய்யா…உன்னால ஆனதப் பார்த்துக்கன்னு வந்துட்டேன்…

போறுமே…இந்தப் படத்துக்கென்ன குறைச்சல்…கொஞ்சூண்டு பசை உங்க மூஞ்சில ஒட்டியிருக்கு…அவ்வளவுதானே… …இருந்திட்டுப் போகட்டும்…மூஞ்சியே அவ்வளவுதானே….காசு மிச்சம்…

என் மூஞ்சியை விட காசு எவ்வளவு பிரதானமாகிவிட்டது அவளுக்கு.

வீட்டில் யார் கண்ணிலும் சட்டென்று படாத ஒரு இடமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன் அந்தப் படத்தை மாட்ட…!!!.மாட்டத்தான் வேண்டுமா என்று ஒரு யோசனையும் உள்ளது.

ஆனாலும் மனசாட்சி இன்னொன்றை இப்பொழுது அழுத்தி உறுத்திக் கொண்டிருக்கிறது.

கொடுத்ததுதான் கொடுத்தே…அது ஏன் வௌங்காதுன்னு அழுகுணித்தனமா சபிச்சிட்டே கொடுத்தே…கிளம்பும்போது உன் மனசுல இருந்த நேர்மை கொடுக்கும்போது இல்லையே? இதுக்கு உன்னோட இத்தனை பேச்சையும் அமைதியாக் கேட்டுக்கிட்டு, துளிக் கூட டென்ஷனாகாம, காசே வாணாம்னு சொன்ன அவன் எவ்வளவோ பரவாயில்லையே… உண்மையைச் சொல்லி எவ்வளவு மன்றாடியிருக்கான் உன்கிட்டே...அதுவே அவன் தொழில் நேர்மைக்கு அப்பட்டமான சாட்சி...! சரியாச் சொல்லப் போனா உன்னை விட அவன் ஒரு படி மேல்தான்...

“டங் ஸ்லிப் “என்கிறார்களே, அந்தக் கண்றாவி இதுதானோ? என் மனதுக்குள் ஒரு ரம்பம் இன்னமும் அறுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

----------------------------------------------

18 அக்டோபர் 2011

சிறுகதை ”மாறிப் போன மாரி”

ங்களோடு படித்தவர்களில் மாரிச்சாமி இப்போது அமைச்சராக இருக்கிறான். படிக்கும் காலங்களில் ரொம்பவும் விளையாட்டுத்தனமாக இருந்தவன். படிப்பில் விளையாட்டுத்தனமாக இருந்த அவன் விளையாட்டில் படு விளையாட்டுத்தனமாக இருந்தான் என்பதையும் கவனிக்கத்தான் வேண்டும். அவன் இப்போது மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர்.

வெறுமே விளையாடிட்டிருந்தவன்ட விளையாட்டா சேர்ந்து போச்சுறா காசு...என்றான் மாஞ்சா. ஏதோ அவனுக்குக் கிடைத்த சொத்து போல் சொல்லிக் கொண்டான். சொந்த ஊர் வரும்போதெல்லாம் மாரிச்சாமி அவன் செலவுக்குக் காசு கொடுத்து விட்டுப் போனான். அதென்ன அப்படியொரு தனி கவனிப்பு? மனதில் என்ன திட்டமோ? பின்னாலேயே கொடுக்காய் அலைந்தான் மாஞ்சா. மினிஸ்ட்ரே இப்ப எங்கைல என்று சொல்லிக் கொள்வான் இவன். மாஞ்சா காலில் சக்கரம்தான் இப்போது. எங்கள் ஊரும் சுற்றுவட்டார கிராமங்களும் மாரியின் கவனத்தில் எப்போதும். ஊரில் இப்போது நிறைய இடங்களை வாங்கிப் போட்டு விட்டான் அவன். இடமென்றால் வெறும் ப்ளாட்கள் அல்ல. கட்டடங்கள், கடைகள். இந்தோ இது, அந்தா அது, அதுக்கப்புறம் இருக்கே அது என்று கை நீட்டிச் சொல்லும் அளவு அவனது எல்லைகள் விரிந்திருந்தன.

மாஞ்சாவுக்குத் தொழில் என்று எதுவும் இல்லை. அவன்தான் படிக்கவில்லையே! ஊரில் சமையல் வேலைக்குச் செல்வோரோடு அவனும் சென்று கொண்டிருந்தான் கொஞ்ச நாளைக்கு. அந்தச் சமையல் வேலையிலாவது ஏதாவது உருப்படியாக அவனுக்குத் தெரியுமா என்றால் இல்லைதான். இங்கிருப்பதை அங்கு கொண்டு வைப்பது அங்கிருப்பதை இங்கு எடுத்து வருவது, பாத்திரங்களைக் கழுவுவது, தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, குப்பை அள்ளிக் கொட்டுவது, பெருக்குவது என்பதாக எடுபிடி வேலைகள்தான். கிடந்துட்டுப் போகட்டும் என்று அவனை எல்லோரும் கைவிடாமல் வைத்துக் கொண்டிருந்தார்கள். அவன் ராசியோ என்னவோ! யாரோடும் பசையாய் ஒட்டிக் கொள்வான்.

வேலைக்குப் போகுமிடத்தில் எல்லாவற்றிற்கும் பழகியிருந்தான் மாஞ்சா.. பல் ஈறுக்கு அடியில் எப்படி கஞ்சாவை உருட்டி அதக்குவது என்பது அவனுக்கு அத்துபடி.. கூடவே போதைப் பாக்குகளையும் அடிக்கடி போட்டுக் கொள்வான். புளிச் புளிச்சென்று துப்பிக் கொள்வான். அவன் பக்கத்தில் நின்றாலே வாடை குப்பென்று நம்மைத் தூக்கும்.

ஒரு நாளைக்கு திடீர்னு வாயில ஓட்டை விழப் போகுது...இல்லன்னா வாயே திறக்க முடியாம ஆவப் போகுது...என்றார்கள். அவன் கேட்டால்தானே. அவன்தான் படு குஷியில் இருக்கிறானே!

ஆனால் மாரியிடம் போய் நிற்கும் அன்று சுத்தமாய்ப் போவான். மரியாதை நாடகம் அது. இன்னிக்குக் கச்சேரி என்று அவன் சொன்னால் புரிந்து கொள்ள வேண்டும். பணிவு பணிவு அப்படி ஒரு பணிவு. முதுகே கூன் விழுந்து போச்சோ என்று சந்தேகம் வரும் நமக்கு. சும்மாவாச்சும் ஒருத்தன் அப்படி ஒட்ட முடியுமா? அந்தப் பணிவு மாரிக்குத் தேவையாயிருந்தது. ஊர் ஜனத்தின் முன் அவனின் செல்வாக்கை உயர்த்தியது.

ஏதாச்சும் வீட்டில் சாவு என்றால் முதலில் போய் நிற்பவன் மாஞ்சா தான். எங்கள் ஊரில் இன்ன ஜாதி இன்ன எழவு என்றெல்லாம் கிடையாது. எல்லாரும் எல்லாத்துக்கும் போவார்கள் வருவார்கள். அப்படித்தான் போய் வந்து கொணடிருந்தான் அவனும். பிணத்தைக் கொண்டு போய் எரித்துக் குளித்து முடித்துத் திரும்பி, வயிற்றை நிரப்பிக் கொண்டுதான் வீடு வருவான். முழு போதையையும் ஏற்றிக்கொண்டு மொத்த ஆட்டமும் போட்டுவிட்டு, உள்ளே இம்புட்டு சோத்தையும் திணிச்சிட்டு எப்படி? என்றிருக்கும் எங்களுக்கு. இப்பொழுது அதெல்லாம் நிறையக் குறைந்து போயிற்று. ஆனால் எல்லா விசேடங்களுக்கும் ஆஜராகிக் கொண்டிருந்தான். யார் சார்பாக? அவன் யாருக்கு தாசானு தாசனோ அந்த மாரியண்ணனுக்காக. இது அவனது ரகசிய உத்தரவோ என்னவோ? அங்கெல்லாம் போய் நிற்கும்போது அவன் தோரணையே தனியாய்த்தான் இருக்கும். அவனுக்கென்று ஒன்றிரண்டு ஜால்ராக்களைத் தயார்படுத்தியிருந்தான். ஆனால் செல்லும் இடங்களில் படு கண்ணியமாய நடந்து கொள்வான். இதுவும் இவனுக்குத் தெரியுமா என்பது போல் இருக்கும் அவன் நடத்தை. நுழைந்த இடத்தில் ஆன் பிகாஃப் ஆஃப் உறானரபிள் மினிஸ்டர் என்பான். சொல்லிச் சொல்லி மனப்பாடம் ஆகி விட்டதுதான். பலர் அவன் காணாமல் சிரித்துக் கொள்வார்கள். ஆனாலும் இத்தனை எழுத்தை எப்படிப் படித்தான் எங்கு படித்தான் என்று வியக்கும் எங்களுக்கு. வெறும் கூகையா இப்படிக் கூவுகிறது?

நாங்களெல்லாம் ஒழுங்காய்த்தான் படித்தோம். வேலைதான் இல்லாமல் இருக்கிறோம். கல்லூரிப் படிப்புக்கு வக்கில்லை. இருக்கும் பள்ளியிறுதிப் படிப்பை வைத்துக் கொண்டு என்ன வேலைக்குப் போவது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தோம். உள்ளுரில் என்னத்தையோ அவ்வப்போது கிடைக்கும் சில சில்லுண்டி வேலைகளைச் செய்து செலவுக்கு ஈட்டுகிறோம்.

நாங்கள் என்றால் நான் சேது, இன்னொருவன் தெற்குத்தெருக்காரன் சோதமன், இன்னொருத்தன் கொட்டாரப் பொட்டலைச் சேர்ந்த பரிமேலழகன். என்னைச் சேது சேது என்று அழைப்பார்கள். சோதமனை சோது சோது என்பார்கள். பரிமேலழகனைப் பரி, பரி. எங்களோடு படிக்கச் சேர்ந்து ஆரம்பத்திலேயே விட்டுவிட்ட மாஞ்சாவிருகனை நாங்கள் மாஞ்சா, மாஞ்சா என்று அழைப்போம். அது அவர்கள் குல தெய்வப் பெயர் என்று சொல்வான்.

இப்படி ஊரில் வெட்டியாய்ச் சுற்றிக் கொண்டிருந்த எங்களோடு படித்தவன்தான் மாரிச்சாமி. படிக்கும் காலத்திலேயே அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன் அவன். ஒரு டீக்கடை விடாமல் நின்று கட்சி விவகாரங்களை சத்தமாய் அலசுவான். அப்போதே டீக்கடை பெஞ்சில் அவனைச் சேர்த்துக் கொள்வார்கள். நினைப்பதைத் தைரியமாகச் சொல்கிறானே!. கட்சி ஆபீஸ் தேடிச் சென்று கட்சிப் பத்திரிகை படிப்பான். அரசியல்வாதியாகிவிட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. படித்து வேலைக்குப் போகத்தான் பலரும் நினைப்பார்கள். ஆனால் இவன் இப்படி. படிப்பு வரணுமே! யாரிடமும் தன் பாலிட்டீஷியன் விருப்பத்தைச் சொல்ல மாட்டான். மேடையில் பேசுவது போல் நின்று கையையும் காலையும் ஆட்டி, எங்களிடம் பேசிக் காண்பிப்பான். அமைச்சராகக் கொஞ்சமாவது படிப்பு வேண்டும் என்று படிப்பில் அக்கறை காட்டியது என்னவோ உண்மை. உண்மையான அக்கறையா அல்லது வெறும் நடிப்பா? யார் கண்டது? . ஆனால் அதுதான் அவனை நெருங்கப் பயப்பட்டது.

பெரும்பாலும் பள்ளி நேரத்தில் அவன் சடுகுடு கிரவுன்ட்டில்தான் கிடப்பான். அந்தக் காலத்திலேயே அவனுக்குக் கபடி என்றால் உயிர். பி.டி. மாஸ்டர் பொம்மையன் அவனைப் பொட்டுப் பொட்டென்று புடணியில் ரெண்டு வைத்து தலைமையாசிரியரிடம் அழைத்து வந்து பள்ளிகளுக்கிடையிலான கபடிப் போட்டிக்கு அனுப்பலாம் என்று பரிந்துரை செய்தார். அதற்குத்தான் தேறுவான் என்பது அவரின் கணிப்போ என்னவோ! அன்றுதான் தெரிந்தது அவனுக்கே, சார் தன் மீது பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று. அந்த நிமிடத்திலிருந்து அவனுக்குப் படிப்பில் அக்கறை சுத்தமாய்ப் போயிற்று. விளையாட்டு, விளையாட்டு, விளையாட்டு.

ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கே ஆளைக் காணோம் என்றால் பள்ளி கபடி கிரவுன்டில் தனியாளாய் இருப்பான்.. அவனாகவே கபடிக் கபடி, கபடிக் கபடி என்று பாடிக் கொண்டு எதிர் வரிசையில் ஆட்கள் இருப்பதுபோல் கற்பனை செய்து கொண்டு, நன்றாகக் கோட்டுக்கு உள்ளே போயும், இடதும் வலதுமாகப் பாய்ந்தும், அவர்களின் பிடியிலிருந்து தப்பி வருவது போலவும், குப்புற விழுந்து இஞ்ச் பை இஞ்சாக நகர்ந்து கோட்டைத் தொடுவது போலவும் செய்து கொண்டிருப்பான். கேட்டால் அதுதாண்டா பயிற்சி என்பான். அசலாய் விளையாடுவது போலவே இருக்கும் அவனது முயற்சி. நாங்கள் அவனைத் தேடிக் கொண்டு போன வேளைகளில் எங்களை எதிர் வரிசையில் நிற்க வைத்து, கபடிக் கபடி என்று பாடிக் கொண்டு வந்து தன்னைப் பிடிக்கச் சொல்வான். விட்ராதீங்கடா என்று சொல்லிக் கொண்டே எங்களின் கடுமையான பிடியிலிருந்து நழுவி அவனாகவே கோட்டைத் தொடுவதற்கு முயற்சித்து முன்னேறுவான். இந்த அவனின் விடா முயற்சி அவனை உயர்த்தத்தான் செய்தது. முதலில் உள்ளுரில் பள்ளிக்குப் பள்ளி விளையாடியவன், பிறகு பக்கத்து ஊர் என்று போட்டிகளுக்கு விளையாட ஆரம்பித்தான். ஒரு முறை கோட்டைத் தொடுவதற்காக பேன்ட்டைக் கழற்றி விட்டு ஜட்டியோடு பாய்ந்து தொட்டு ஜெயித்து விட்டான்.

ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒரே சண்டை. பேன்ட்டோட சேர்த்து அவன் காலையும் கெட்டியா விடாமப் பிடிச்சிருக்க வேண்டியது நீங்கதானே...! ஏன் நழுவ விட்டீங்க...? என்று ரெஃப்ரி சொல்லி மறுத்து விட்டார். அந்தக் காலத்திலேயே பிளேடு போடும் பழக்கமெல்லாம் இருந்தது. அத்தனையையும் மீறித்தான் ஜெயித்திருக்கிறான் மாரி. பரிசைக் கையில் வாங்கிய பின்புதான் இம்மாதிரிக் கயவாளித்தனத்தையெல்லாம் வாய்விட்டுச் சொல்வான். காயங்கள் அவனுக்கு வீரத் தழும்புகள்.

ரெஜினா என்று ஒரு ஆசிரியை இருந்தார்கள் அப்போது. அந்த டீச்சர்தான் மாரிச்சாமி ஓரளவுக்குப் படிப்பில் தேறுவதற்கு உதவியவர்கள். விளையாட்டே கதியாய் அலைந்து கொண்டிருந்த அவனைப் பற்றிக் கவலைப்பட்ட அவனது பெற்றோர்கள் அதே தெருவில் குடியிருந்த அந்த டீச்சரிடம் சென்று முறையிட்டபோது, மாரிக்கு இலவசமாக டியூஷன் எடுத்து அவனைத் தேற்றி விட்டது அந்த டீச்சர்தான். ஆசிரியர்களுக்குத் தியாக உணர்வு இருந்த காலம் அது.

அடுத்தாற்போல் சூசை வாத்தியார். விளயாட்டில் ஆர்வம் அதிகமுள்ள ஆசிரியர். அவர்தான் ரயிலில் போகாதவரெல்லாம் யார் யாரென்று கேட்டு எங்களுக்கு முதல் ரயில் பயணத்தை அறிமுகப்படுத்தினார். இரக்க சிந்தை உள்ளவர். அவர் மாரிக்குப் பணம் கொடுத்து உதவினார். வெளியூர் பள்ளிகளில் நடக்கும் கபடிப் போட்டிகளுக்கு அவனைத் தவறாமல் அழைத்துச் சென்றவர் அவர்தான். அப்படியான சில போட்டிகளில் மாரியின் டீம் தோல்வியைத் தழுவியிருக்கிறது. அவன் சோர்ந்தாலும் சூசை சார் விடவில்லை அவனை. தோல்விதான் வெற்றிக்கு அறிகுறி என்று அவனிடம் சொல்லிச் சொல்லி ஊக்கப்படுத்துவார். உரமேற்றுவார். அவனுக்கென்று ஆட்கள் அமைந்தார்கள் பாருங்கள். அதுதான் அவனது அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும்.

போதுமான உடற்பயிற்சியின்மையே சில தோல்விகளுக்கும் காரணம் என்று உணர்த்தியவர் சூசை வாத்தியார்தான். பள்ளிக்கூடக் கிரவுன்டில் வேகு வேகு என்று வியர்வை கொப்பளிக்க, விடாமல் ஓட்டப் பயிற்சியும், உள்ளுர் சேத்தியாத்தோப்பு பீமா உடற்பயிற்சிக் கழகத்தில் கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டான் மாரிச்சாமி. மல்யுத்தம் கூடத் தெரியும் என்பார்கள்.

நாங்கள் அறிய அவன் சிலம்பம் கற்றுக் கொண்டதைப் பார்த்திருக்கிறோம். சிலம்பம்னா பயமுறுத்தல்னு அர்த்தம்டா...என்பான். . கழியின் உதவியால் எதிரியைப் பயமுறுத்துதல். . வேட்டியைத் தார்பாச்சி போட்டுக் கட்டிக் கொண்டு தலைப்பாகையோடு அவன் விளையாடுவதைப் பார்த்திருக்கிறோம். அழகுதான். எதிரியின் தலைப்பாகையைத் தட்டிவிட்டு அவன் பல முறை வெற்றி பெற்றிருக்கிறான். அதுதான் அதற்கான அடையாளம்.

அந்தக் காலத்துல காலுல சிலம்பு கட்டிக்கிட்டு விளையாடியிருக்காங்கடா...அதுனாலதான் இதுக்கு சிலம்பம்னு பேரு... என்று தகவல்களையும் அவ்வப்போது அவன் தருவதுண்டு.

இத்தனைக்கும் சூசை வாத்தியாரின் செல்வாக்குதான் அவனுக்கு உதவியது. அவர் சொல்லி யாரும் தட்டினார்கள் என்று கிடையாதாகையால் அவரின் பரிந்துரையில் மாரியின் புகழ் உள்ளுரில் பரவலாயிற்று. ஏதோ ஒரு வழில உருப்பட்டுருவான் போலிருக்கே என்றார்கள்.

சொந்த ஊரில் நிறைய விளையாடி அலுத்துப் போயாயிற்று என்ற ஒரு கட்டத்தில்தான் அவன் பார்வை விரிந்தது.

ஊருக்கு ஊர் பொங்கல் திருவிழா, மாரியம்மன் கோயில் திருவிழா என்று போட்டிகளுக்குச் செல்ல ஆரம்பித்த மாரி பரிசுகளை அள்ளிக் கொண்டு வருவான். ஆனால் ஒன்று. ஒரு போட்டிக்கும் அவன் தனியனாய்ச் சென்றதில்லை. எங்கள் நால்வரையும் அவன் செலவில் அழைத்துக் கொண்டுதான் செல்வான். அதற்கு மட்டும் என்னவோ எங்களைச் சேர்த்துக் கொண்டான். போட்டிகளுக்கு நடுவில் ஊய், ஊய் என்று கத்தியும், விசிலடித்தும், பலமாகக் கைதட்டியும் அவனை நாங்கள் உற்சாகப்படுத்துவோம். இடையிடையில் அவனுக்குத் தண்ணீர் கொடுப்பது நாங்கள்தான். வியர்வையைத் துடைத்துவிட்டு மீண்டும் களத்தில் இறக்கும் தோழமை எங்களுக்கு. ஸ்கோர் போர்டு ஏற ஏற எங்களை ஒரு முறை விழித்துப் பார்த்துக் கொள்வான் கம்பீரமாக. அவனுடன் போட்டிக்கு என்று போன நாட்களில் ராஜஉபசாரம்தான். படு குஷாலாகச் செலவழிப்பான் மாரி. நண்பர்களின் சந்தோஷம்தான் தன்னின் திருப்தி என்பான். அவன் உடமைகளைத் தூக்கிக்கொண்டு பின்னாடியே நடப்போம் நாங்கள். பரிவாரத்தோடதான்யா எப்பவும் வருவான் என்பர்.. டீம் ஆட்களைத் தனியே அனுப்பிவிட்டு அவன் எங்களோடு வருவதுதான் எங்களுக்குப் பிடிபடாத பெருமை.

அவனை மாவட்டம் விட்டு மாவட்டம் போட்டிகளுக்கு அனுப்பிய உந்துதல் பி.டி. மாஸ்டர் பொம்மையனைத்தான் சேரும். இவனுக்காக அவர் மேற்கொண்ட கடிதப் போக்குவரத்துக்கள் அநேகம். அது என்னவோ அவன் மீது அப்படி ஒரு பிரியம் அவருக்கு.

இவனத் தயார்படுத்தணும்னு நெனச்சேன். செய்திட்டுத்தான் ஓய்வேன்....என்பார்.

எங்கள் ஊரின் அந்தப் புகழ் மிகு பள்ளியை விளையாட்டில் முதலாவதாக நிறுத்திய பெருமை மாரிக்கு. பாஸ்கட் பாலிலும், வாலிபாலிலும் அவனைத் தேற்றினார் பொம்மையன். அதில்தான் அவர் சாம்பியன். அவர் சொன்னதற்கெல்லாம் உடன்பட்டான் மாரி. படிப்பு என்ற தொல்லையில்லையே! ஏதோ பாதகமில்லாமல் செய்தால் போதுமே!, அவன் கேட்காமலேயே வகுப்புக்கு வகுப்பு சுலபமாகத் தாவினான். ஓரளவுக்குப் படிக்கக் கூடியவன்தான் என்றாலும், ஐந்து மார்க், ஏழு மார்க் வரை, என்று எதிலும் நிறுத்தப்பட்டவன் அல்ல அவன். ஒன்றிரண்டு பாடங்களில் பார்டரில்தான் பாஸ் பண்ணியிருப்பான். அதெல்லாம் அவனுக்கான கிஃப்ட் என்று நாமாகப் புரிந்து கொள்ள வேண்டும். கலைகளிலும் அவனுக்கு ஈடுபாடிருந்தது. என்றுதான் சொல்ல வேண்டும். படிப்பைத் தவிர மற்றது என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

பள்ளி நாடகங்களில் நடிக்கும் பழக்கமும் அவனுக்கிருந்தது. மிக நீண்ட வசனங்களைத் தனக்குத் தரும்படி கேட்டுக் கொள்வான் மாரி. பெரும்பாலும் தனக்கு வில்லன் வேஷம்தான் பொருந்தும் என்று கெஞ்சிக் கேட்டு வாங்கிக் கொள்வான். ஒரு கருப்புக் கண்ணாடியையும் யாரிடமாவது கேட்டு வாங்கிப் போட்டுக் கொண்டு நடிப்பில் தூள் கிளப்புவான்.

அரசியல்வாதியாகவெல்லாம் கூட நடித்திருக்கிறான். அந்த வேஷம்தான் அவனுக்கு அப்பொழுதே அத்தனை பொருத்தமாய் இருந்தது.. அவனின் கறுப்பு நிறத்துக்கும் பளீர் வரிசைப் பற்களுக்கும், அந்த வெள்ளை வேட்டி, சட்டை பாந்தமாய்த்தான் இருந்தன. அசலாய் வாழ்ந்தான் அந்த வேடத்தில். அதனால்தானோ என்னவோ இப்பொழுது அமைச்சரும் ஆகி விட்டான். உயரே, உயரே என்று பிரதிக்ஞை செய்து கொண்டதுபோல் பணியாற்றுபவனுக்கு காலம் அங்கே கொண்டு சென்று உட்கார்த்திவிட்டுத்தான் ஓயும் போலும்.

பள்ளிப் படிப்பை முடித்த மாரிச்சாமி, உள்ளுர் அரசியல் கூட்டங்களில் பேச ஆரம்பித்தான். அதற்குப் பின் ஏனோ அவன் லைன் சுத்தமாய் மாறிப்போனது. ஒரு சிறந்த விளையாட்டு வீரனை நாடு இழந்து விட்டதோ என்று இப்பொழுதும் எங்களுக்குத் தோன்றிக்கொண்டுதான் இருக்கிறது. பொம்மையன் சாரும் ஓய்வு பெற்று விட்டார். திடீரென்று அரசியலில் ஆர்வம் காட்டக் காட்ட விளையாட்டுக்காரர்கள் அவனை விட்டு மெல்ல மெல்ல விலகிப் போக ஆரம்பித்தார்கள். இனி அவன் தேற மாட்டான்டா...அவனுக்கு துட்டு சம்பாதிக்கிற ஆசை வந்துடுச்சு...விட்ரு....என்று காணாமல் போய் விட்டார்கள். ஊரின் பெயர் சொல்லும் டீம்கள் மாறின. மாரிச்சாமியின் அடிமன ஆசையும் அதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

நாகரத்தினம்புதூர்தான் எங்கள் ஊர். பெரிய நகரமுமில்லை. ரொம்பச் சிறிய ஊரும் இல்லை. மிதமான டவுன்.. எங்கள் ஊரின் கருமேனி மேட்டில்தான் எப்பொழுதும் பொதுக் கூட்டங்கள் நடக்கும். சந்தைப் பக்கம்தான் பொதுக்கூட்டங்களுக்கான போஸ்டர்கள் தென்படும். அதைவிட்டால் மாரியம்மன் கோயில் லைட்டுக் கம்பம்தான். ஒரு தட்டி அங்கு வைக்கப்பட்டிருக்கும். வெளியூர் பஸ் ஸ்டாப்பும் அதுதான். இறங்கும் ஜனத்தின் பார்வை தவறாமல் அந்தப் போஸ்டரில் படும். சந்தைக்கு வரும் ஜனக் கூட்டம், சாயங்காலம் முதல் காட்சி சினிமாப் பார்க்கிறதோ இல்லையோ மாரியின் மேடைப் பேச்சைக் கேட்காமல் போகாது. கடைசி பஸ்ஸைத் தவறவிட்டு, பஸ் ஸ்டான்டில் முடங்கிக் கிடந்து, காலம்பற முதல் பஸ்ஸைப் பிடித்த ஜனக் கூட்டம் அநேகம்.

மாரியின் பொதுக் கூட்டம் இருக்கிறது என்று தெரிந்து அந்த வாரம் சோதாப் படம் போதும் என்று வெளியில் சொல்லாமல் ரெண்டு நாளைக்கு ஒரு பீத்தலை ஓட்டிவிட்டு படக்கென்று மறுநாள் படத்தை மாற்றி விடுவார்கள். மாரியின் கூட்டமிருப்பதாக ஜனங்கள் ஒருவருக்கொருவர் சந்தோஷமாகப் பகிர்ந்து கொண்டு திருவிழா போல் எதிர்கொள்வார்கள் அவன் பேசும் நாளை.

மழை மாரி என்றுதான் போடுவார்கள் அவன் பெயரை. பேச்சு மழையாய்த்தான் பொழியும் என்பது என்னவோ உண்மைதான். ஆனால் கெட்ட வார்த்தைகள் சரளமாய் இருக்கும். வேறே வழியில்லை, அப்படித்தான் பேசியாகணும்...தலைவர் கவனத்த அப்பத்தான் கவர முடியும் என்பான். எந்தத் தலைவர் அப்படிச் சொன்னாரோ? ஆனால் மறுக்கவில்லையே!

மழை பொழிந்து கொண்டிருப்பதுபோல் அவன் பெயரை அச்சடித்திருப்பார்கள். ஆனால் பெயர் சிவப்புக் கலரில் இருக்கும். மழைத்துளிகள் சிவப்பாய் விழும். பெய்யறது மழையில்லடா, நெருப்பாக்கும்....என்பான் மேடையில். மாதத்திற்கொருமுறையேனும் அந்த ஊரில் எங்காவது அவனுக்குக் கூட்டமிருக்கும்.

அவ்வப்போதைய அரசியல் நிகழ்வுகளுக்கு சாட்டையடி கொடுக்க அவன்தான் லாயக்கு. அது என்னவோ மாரியின் இடம் எப்பொழுதும் எதிர்க்கட்சி வரிசைதான். அவனுக்குத் தேவை மேடை. சாயங்காலம் ஆனால் ஏதாச்சும் ஒரு பொதுக்கூட்டம். தடாலடிப் பேச்சு. ரெண்டு மாலை.

தினசரி அவனுக்குக் கூட்டமிருந்தது. குறிப்பாக சனி, ஞாயிறுகளில் அவன் உள்ளுரில் இருப்பதில்லை. மறுநாள் அந்தக் கட்சிப் பத்திரிகையில் அவனின் வெளியூர்ப் பேச்சு பிரசுரமாகியிருக்கும். சூடாக ஏதாவது தலைப்பைப் போட்டு வெளியிட்டிருப்பார்கள். அதில் தவிர வேறு செய்திப் பத்திரிகைகளில் அவன் பேச்சு வெளி வந்ததாகச் சரித்திரமில்லை.

தரமில்லை என்பதுதான் அவைகளின் முடிவாக இருந்தது.

என் பேச்சையெல்லாம் போட மாட்டானுக...ஏன்னா நாந்தான் உண்மை பேசுறவன்...ஒருநாள் அவன் ஆபீஸ் வாசலிலேயே கூட்டம் போட்டுக் கத்துறனா இல்லையா பார் என்பான். தணிந்த பேச்சில்லை. தடாலடிதான். அதுவே அவன் ட்ரேட் மார்க். அதனாலேயே பேராகிப் போனான் மழை மாரி. கட்சிப் பேச்சாளர் தர வரிசையில் முதலிடத்தில் இருந்தான். . ம்ம்...நிறையக் கெட்ட வார்த்தை பேசக் கத்துக்கிட்டான்....மேலதான இருப்பான்...என்பார்கள் பலர்.

மக்களும் சாரி சாரியாய்த்தான் வந்தார்கள் அவன் கூட்டத்திற்கு. மாலை கூட்டமென்றால் காலையிலிருந்தே மைக் அலறும்.சைடு தெருக்கள் முழுக்க, கூட்டம் நடக்கும் வீதி முழுக்க என்று கணக்கு வழக்கில்லாமல் வொயரை இழுத்து குழாயைக் கட்டியிருப்பார்கள். போதாக்குறைக்கு அவனின் பழைய பேச்சு டேப் வேறு அலறும்.

மாரி எதில் வருவான் என்று யாராலும் சொல்லவே முடியாது. எப்பொழுது வருவான் என்றும் கணிக்க முடியாது. ஆனால் பெரும்பாலும் ஒன்பது மணிக்கு முதல் வரிசையில் டாண் என்று ஆஜராகிவிடுவான். பத்து மணிக்குத்தானே மைக்கை அவன் கையில் கொடுப்பார்கள். இடதும் வலதுமாக நின்ற வாக்கில் மைக்கை கையால் ஆட்டி ஆட்டிப் பேசுவான். அவன் திரும்பும் பக்கமெல்லாம் மாறிய கையோடு மைக்கும் திரும்பும்.

திடீரென்று ஆட்டோவில் வந்து இறங்குவான். யாரோட டூ வீலரிலாவது வரலாம். அந்த வழி டவுன் பஸ்ஸில் வந்து கூட இறங்குவான். தனக்கு அதிக ஆபத்து உண்டு என்பது அவனுக்குத் தெரியும்தான். ஆனாலும் எதற்கும் அஞ்சின ஆளில்லை நான் என்பதுபோல் இருக்கும் அவன் நடவடிக்கைகள்.

பள்ளியில் அவ்வளவு கட்டுப்பாட்டோடு ஜெயித்து வெற்றிகளைக் குவித்தவன் அடியோடு இப்படி மாறிப்போனானே என்று நாங்கள் வாய்பிளந்து நின்ற நாட்கள் எத்தனயோ! அத்தனைக்கும் காரணம் மாரியின் செல்வாக்கு. சொல்வாக்கு இருக்கு எனவே செல்வாக்கு தானா வருது என்பார்கள் அவன் கூட இருக்கும் ஜால்ராக்கள். அத்தனையும் அவனிடம் சேரும் காசுக்காகத் திரிபவர்கள். உண்மையான நண்பர்கள் வேண்டுமென்றால்தான் அவன் எங்களை அழைத்துக் கொண்டிருப்பானே...ஏன் இன்று வரை அவன் எங்களை நினைக்கவில்லை? நாங்கள் அடியோடு மறக்கப்பட்டவர்கள் ஆனோம். கடந்த தேர்தலில்தான் கட்சி மாறினான் அவன். வேண்டுமளவுக்கு இங்கே துட்டைச் சேர்த்துக் கொண்டு, தேர்தல் சமயத்தில் பதவி தருவதாகக் கூறி அவனை இழுத்து விட்டார்கள். அப்படி மாறுவதற்கே வாங்கிக் கொண்டுதான் போனான் என்றார்கள்.

அத்தனை ஆர்வமுள்ள விளையாட்டில் கில்லாடியாக இருந்த அவன் எப்படி இப்படி அரசியல் கில்லாடியானான்? எது அவனை இப்படி முற்றிலும் மாற்றியது? புரியாத புதிர்தான் எங்களுக்கு.

அவனின் அதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்வது? அபரிமிதமான வித்தியாசத்தில் ஜெயித்து, தன்னிச்சையாக ஆட்சி அமைத்தது அவன் சேர்ந்த கட்சி. அவன் யாரென்றே தெரியாத ஒரு தொகுதியில் முற்றிலும் புதிதாக மக்களைச் சந்தித்தான் அவன். காலில் விழுந்தானா, கீழே உருண்டானா தெரியாது. ஜெயித்து விட்டான். மற்ற பலரை ஒப்பிடும்போது அவனது ஓட்டு வித்தியாசம் சற்றுக் குறைவுதான். ஆனாலும் அவனுக்கு அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

யோகந்தான்யா மவனுக்கு என்றார்கள் உள்ளுர் பிரமுகர்கள். மாஞ்சாதான் அவனை மாறி மாறிப் புகழ்ந்தான். உடனே போய் ஒட்டியவன் அவன்தான். என்னாயிருந்தாலும் எங்கண்ணன் எங்கண்ணன்தான்யா....என்றான் வாயெல்லாம் பல்லாக. இப்பொழுதெல்லாம் அவன் சமையல் வேலைக்கே செல்வதில்லை. ஏற்கனவே அதில் கால் பதிக்காமல் இருந்தவன்தானே! கையில் இருக்கும் காசு செலவழியும்முன்தான் அவனைக் கூப்பிட்டு விடுகிறாரே விளையாட்டுத்துறை அமைச்சர். கல்யாணமோ, குடும்பமோ என்று எதுவுமேயில்லாத மாஞ்சாதான் உள்ளுரில் இப்போது ஆல் இன் ஆல் அந்த மாண்புமிகு அமைச்சருக்கு.

நன்றாகக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் இந்தச் செய்திகளை. சமீபத்தில் ரெஜினா டீச்சருக்கு புற்று நோய் மருத்துவத்திற்காக முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டவன் மாரிதான்.

அவனது ரெக்கமன்டேஷனில்தான் பொம்மையன் வாத்தியார் பையனுக்கு ஒரு நல்ல வேலை அமைந்திருப்பதாகவும் செய்தி வந்திருக்கிறது.

சூசை வாத்தியார் பெண்ணைக் கட்டியவன் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சித்ததாகவும், அந்தப் பெண் வீட்டுக்காரர்கள், மாரியின் மிரட்டிலில்தான் விலகிப் போனார்கள் என்று ஒரு செய்தியும் எங்களுரில் தற்போது பரவலாக நிலவுகிறது.

எல்லாம் சரி, அத்தனை பேரையும் வசமாய்க் கவனித்திருக்கும் அவன், எங்களை மட்டும் ஏன் இன்றுவரை கண்டு கொள்ளவேயில்லை? ஏனிப்படி எங்களைச் சுத்தமாய் மறந்து விட்டான்? என்ன தப்பு செய்தோம்? நாங்களென்ன அத்தனை கேவலமாகவா போய் விட்டோம்? உதவாக்கரைகள் என்று நினைத்து விட்டானோ எங்களை? வெறும் விசிலடிச்சான் குஞ்சுகள் என்று எண்ணி விட்டானோ? அட, இந்த மாஞ்சானை விடவா நாங்கள் மட்டமாய்ப் போனோம்? இதுதான் இன்றுவரை புரியாத புதிராய் எங்கள் மனதைப் போட்டு வாட்டும் கேள்விகள்.

யாராவது முடியுமானால் கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன் ப்ரதர்....

ஆனா ஒண்ணு, தயவுசெஞ்சு அந்த மாஞ்சாப்பய மூலமா மட்டும் போயிராதீக...அவன் பக்கத்துல இல்லாதபோது மினிஸ்டர்ட்டச் சொல்ல முயற்சி பண்ணினா ஏதாச்சும் பலிக்கலாம்...ஏன்னா இந்தளவுக்கு எங்கள ஒதுக்கிறதுக்கு எந்த முகாந்திரமும் இல்ல. ஏன்னா எங்களுக்கு இன்னும் அவன் மேலதான் ஒரு சந்தேகம்! அந்த மாஞ்சாப்பய பெரிய குள்ள நரி சார்..!!

--------------------------------------

“முனைப்பு”

(சிறுகதை)

“டேய், இதெல்லாம் ரொம்ப அநியாயம்டா…” – செந்திலைப் பார்த்து ஆவேசமாகக் கத்தியவாறே ஓடி வந்த மாரியப்பன், வந்த வேகத்தில் இவனருகில் இருந்த பசை வாளியைத் தூக்கிக் கொண்டு ஓடினான். துரத்தி வந்தால் உடனடியாகப் பிடிக்க முடியாத தூரத்திற்குச் சென்று விடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டதுபோல் இருந்தது அவன் ஓடிச்சென்று நின்ற இருட்டான பகுதி. அந்த நடுராத்திரியில் அவன் அங்கே வருவான் என்று கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை. எவனிடமும் சொல்லாமல்தான் அந்த ஆர்டரைப் பிடித்திருந்தான் அவன். அதை தனக்குள் அப்படித்தான் சொல்லிக் கொள்கிறான். மொத்த நகரத்திற்கும் அவன் ஒருவனே அந்த வேலையை ஏற்றுக் கொண்டிருக்கிறான் என்றால் அப்படித்தானே சொல்ல வேண்டும். எப்படித்தான் அவனுக்குக் கொடுத்தார்களோ! இன்னும் ஆச்சரியம் நீங்கியபாடில்லை. நல்ல எண்ணத்தோடு எல்லாவற்றையும் செய்ய முயன்றால், செய்தால், எல்லாமும் நல்லபடியாய் நடக்குமோ என்னவோ!

அப்படிச் சொல்லிக் கொள்வதில் அவனுக்கே ஒரு பெருமை இருக்கத்தான் செய்தது. யாரிடமும் அவன் அதைச் சொல்லவில்லைதான். சொல்லக் கூடாது என்பதுதானே அவன் எண்ணம். சொன்னால் நிச்சயம் பொறாமை வரும். போட்டி வரும். சண்டை வரும். . ஆனாலும் இந்த மாரிப் பயலுக்கு எப்படித் தெரிந்தது? திருகுதாளம் பிடிச்சவனாச்சே இவன்?

.

வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்தால்தான் மேலே போக முடியும். நியாயமான ரிஸ்க் எடுப்பதில் என்ன தவறு? மேலே போகிறோமோ இல்லையோ நம்மின் தேவைகளைத் தாராளமாக நிறைவு செய்து கொள்ள அப்பொழுதுதான் முடியும் என்கிற எண்ணம் ஆழமாகப் பதிந்திருந்தது அவனிடம். நம்மின் என்றால் அவன் மட்டுமா? அவனின் அன்புக் குடும்பத்திற்கும் சேர்த்துத்தானே அவன் யோசிக்கிறான். யாரும் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். ஆனால் செந்திலால் முடியும். காரணம் அவன் உழைப்பு அப்படி. அவனின் கடுமையான உழைப்பில் அவன் வைத்திருக்கும் நம்பிக்கை அப்படி. ஆரம்பத்தில் சிலருடன் சேர்ந்துதான் அவன் அந்த வேலையைத் துவக்கினான். அவர்களின் பழக்க வழக்கங்கள் பின்னால் இவனுக்கு ஒத்து வரவில்லை. மகாத்மாகாந்திக்குச் சொன்னதுபோல் இவனுக்கு இவன் தாய் சொல்லியிருந்தது மனதிலேயே பதிந்து போயிருந்தது.

”போதப் பழக்கம், பொம்பளப் பழக்கம் ரெண்டும் ஆகாதுய்யா…”

இன்றுவரை அவன் உறுதியாய்க் கடைப்பிடித்து வருபவை அவை. ஆத்தாள் தன் கணவன்பாலான அனுபவத்தில் கண்ட உண்மைகளை அவனுக்குச் சொல்லி வைத்தாள். தன்னை அத்தனை உறுதியாய் வளர்க்கவில்லையென்றால் தான் எங்கே தேறியிருக்கப் போகிறோம்? நேரத்திற்கு எழுந்திரிக்க, பல் விளக்க, குளிக்க, சாமி கும்பிட என்று ஒவ்வொன்றாய் ஆத்தா தனக்குச் சொல்லி வைத்ததுதானே தன்னை இன்றுவரை காப்பாற்றி வருகிறது. ஆத்தாவோடு சேர்ந்து மார்க்கெட்டிற்குப் போவதும், மொத்தக் கடையில் காய்களை வாங்கிக் கொண்டு வந்து தெருக்களிலும், வீதி ஓரங்களிலும் கால் கடுக்க நடந்தும், அமர்ந்தும் காய்கறிகளை முழுதுமாக விற்றுத் தீர்த்து சாயங்காலம் கமிஷன் காசைக் கண்ணாரக் கண்டபோது ஆத்தாவிற்கு இவனே யோசனை சொன்னானே!

“ஏன் ஆத்தா நம்ம வீட்டுக்குப் பின்னாடிதான் அம்புட்டு எடங்கெடக்குதே…நாம அதுல கீரை போட்டா என்ன?”

”போடா, போக்கத்தவனே…கீரயைப் போட்டு என்னாத்தக் காசு பார்க்கப் போற நீ…முடி முடியாப் போட்டு அஞ்சஞ்சு ரூபாய்க்கு வித்து லாபம் பார்த்து ஆகுமா?”

”என்னாத்தா இப்டிச் சொல்ற நீயே? அப்போ விக்குறவகளெல்லாம் கேனச் சிறுக்கிகளா?”

”அதுக்கில்லடா…எடம் எங்க கெடக்குன்னு கேட்குறேன்…”

”ஆத்தா, மத்தவுக எடத்த நாம ஆக்ரமிக்கவா ப்ளான் பண்றோம்…நல்லா சுத்தப்படுத்தி நல்லதுதான பண்றோம்…மண்ணக் கொத்தி விட்டு, கீரைய வெதப்போம்…வளர வளரப் பிடுங்கிப் பிடுங்கி வித்துக்கிட்டிருப்போம்…உடமப்பட்டவுக வந்து கேட்டாகன்னா எடுத்துக்குங்கய்யான்னு கும்பிட்டுட்டு விலகிக்கிடுவோம்….சும்மானாச்சுக்கும் கருவேல மண்டி, பாம்பு அடையறதுக்கு இது பரவால்லேல்ல…யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாக….கெட்ட எண்ணமுள்ளவுகளப் பார்த்தாலே தெரிஞ்சிடும் ஆத்தா…நமக்கு அப்படியெல்லாம் எந்த ஆபத்தும் வந்திடாது…”

சொன்னான். காரியத்திலும் இறங்கினான். பாலாக் கீரை, சக்கரவர்த்தினி, பருப்புக் கீரை என்று பலரும் பேர் அறியாத கீரைகளையெல்லாம் விதைத்து, அவை செழிப்பாக வளர்ந்து ஓங்கி நிற்பதைக் கண்டு உள்ளம் பூரித்து, பூமியோடு அவை பொருந்தி நிமிர்ந்து நிற்பதைப் பார்த்து ரசித்து இவைகளையா பிடுங்குவது என்று நினைத்து வருந்துமளவுக்கு மனம் தயங்கி, பிடுங்கப் பிடுங்க வளருவதுதானே என்று ஏதோஒருவகையில் சமாதானம் செய்து கொண்டு, சந்தையின் நுழைவாயிலில் அவன் கடை போட்ட போது பச்சைப் பசேல் என்று குளிரக் குளிர பசும் இளமையாய் அவை சிரித்து நின்றபோது, வியாபாரம் பிச்சுக்கொண்டுதான் போனது.

ஆனால் அவனது துரதிருஷ்டம். அத்தனை சீக்கிரத்திலா எதிர்கொள்ள வேண்டும். ஒரு ஆறு மாதப் பொழுதிலேயே அந்த இடத்தில் வீடு கட்டும் வேலை ஆரம்பமானது. மனிதர் ஒரு வார்த்தை தன்னைத் தப்பாய்ப் பேசவில்லை. அவனையே கட்டும் வீட்டிற்குக் காவலாளியாய் இருக்கக் கேட்டுக் கொண்டார். கொஞ்ச நாள் அந்தக் காசும் வரத்தானே செய்தது. இன்றும் கூட குடி வந்த அந்த வீட்டுக்காரர்களுக்கு இவன்தான் கீரை சப்ளை செய்கிறான். எங்கிருந்து? மொத்த வியாபாரத்திலிருந்து வாங்கி சில்லறை விற்பனையில்.

எந்த வேலையையும் செய்யத் தயங்காத தன்னின் ஈடுபாடுதான் தன்னை இத்தனை நாட்கள் நிலை நிறுத்தியிருக்கின்றன என்று நினைத்துக் கொள்வான். அப்பா தள்ளுவண்டியில் பழம் விற்றிருக்கிறார். ஐஸ் விற்றிருக்கிறார். தெருத் தெருவாகச் சென்று காய்கறி விற்றிருக்கிறார். டிரை சைக்கிளில் சிமின்ட் ஏற்றுவது, கட்டுக் கம்பி ஏற்றுவது, செங்கல், மணல் கொண்டு இறக்குவது, ஜல்லி அடிப்பது, என்று எந்த வேலை செய்யவில்லை அவர். ஒன்றையாவது கேவலமாக நினைத்திருப்பாரா? கௌரவம் பார்த்திருப்பாரா? நமக்கெதுக்குடா அதெல்லாம். உழைக்கணும், சாப்பிடணும் அவ்வளவுதான் என்பார். அவர் இருந்திருந்தால் இந்தக் குடும்பம் இன்று இப்படியா இருக்கும்? தங்கச்சிகளை வேலைக்கு அனுப்பியிருப்பாரா? எப்படியாப்பட்ட மனுஷன்? நாமதான் கொடுத்து வைக்கலை. அம்மா சொல்லிச் சொல்லி வருந்தும் அவற்றையே நினைத்துக் கொள்வான் இவன்.

பின் புது வீட்டுக்காரர் சொல்லித்தான் அந்த சினிமாத் தியேட்டர் வேலைக்குப் போனான் செந்தில். வேலையில் சேர்ந்த முதல்நாள்தான் அவரும் ஒரு பங்குதாரர் என்பதே அவனுக்குத் தெரியும்.

ந்தவிதப் பதட்டமும் இல்லாமல் மாரியைக் கூர்மையாகத் திரும்பிப் பார்த்த இவன், “ஒழுங்கா வச்சிரு…“ என்று மட்டும் இங்கிருந்தே கத்திச் சொல்லிவிட்டு கையிலெடுத்திருந்த பசையை சுவற்றில் திருப்பிப் போட்டிருந்த போஸ்டரில் தடவ ஆரம்பித்தான். மேலும் கீழுமாக, வலதும் இடதுமாகக் கையகலத்திற்குச் சமமாகத் தடவியிருக்கிறோமா என்று கொஞ்சம் பார்வையை ஓரப்படுத்திப் பார்த்துக் கொண்டான். நான்கு மூலைகளிலுமோ, அல்லது நட்ட நடுவிலோ எங்கும் பசை பரவாமல் துருத்திக் கொண்டு சுவற்றில் பொருந்தாமல் நிற்கக் கூடாது. அம்மாதிரி அரைகுறை வேலை செய்வது அவனுக்கு என்றுமே பிடிக்காது. எங்கேயாவது துருத்திக் கொண்டிருந்தால் மாடுகள் வாயை வைத்து பரக்கென்று ஒரு இழு இழுத்து விடும். பகலில் ”என்னடா போஸ்டர் ஒட்டியிருக்கே நீ? ஒரு நா கூட நிக்கலே..” என்று சம்பந்தப்பட்டவர் யாரும் அவனைக் கேட்டு விடக் கூடாது.

தொழில் சுத்தம் வேண்டாமா? செந்திலைப் போல் இந்த வேலையில் கஷ்டப்படுபவர் யாருமில்லை எனலாம். அதில் அவனுக்கு ஒரு தனிப் பெருமையே உண்டு. பெரும்பாலும் பலரும் சைக்கிளின் இருபுறமும் பசை வாளியும், போஸ்டருமாகத்தான் திரிவார்கள். எட்டும் உயரத்திற்கு ஒட்டி விட்டோ, அல்லது ஏதாவதொன்றைக் கிழித்து விட்டோ ஒட்டிவிட்டுப் போய்க் கொண்டேயிருப்பார்கள். ஆனால் செந்தில் அப்படியில்லை. கூடவே ஒரு ஏணியையும் எப்பொழுதும் கொண்டு செல்வான். அது அவன் சொந்த ஏணி. கட்டட வாட்ச்மேனாக இருந்தபோது கடைசியாக அவன் வேண்டிக் கேட்டு வாங்கிக் கொண்ட பொக்கிஷம் அது. சைக்கிளில் அதை இறுக்கமாகக் கட்டி வண்டி மிதிக்கும்போது டபுள் வெயிட்டாகத்தான் இருக்கும். அஞ்சமாட்டான் அந்த பாரத்திற்கு. அவன் சுமக்கும் குடும்ப பாரத்தை விடவா இதெல்லாம் பெரிது? ஏழு படி ஏறும் உயரம் இருக்கும் அது. எந்த இடமானாலும் சுவற்றில் அதை வாகாகச் சாய்த்துக் கொண்டு உயரத்தில் மற்ற விளம்பரங்களுக்குப் பாதிக்காத வகையில் தான் ஒட்டும் போஸ்டர்கள் பலரின் பார்வைக்கும் படுவதுபோல் பார்வையான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து கச்சிதமாக ஒட்டிவிட்டு வருவான். இந்த அக்கறையும், கவனமும், மற்றவரிடம் இருக்குமா என்பது சந்தேகமே. பெரும்பாலும் சக்குச் சக்கென்று ஒட்டித் தீர்த்துவிட்டு சடனாய் வேலையை முடிக்கத்தானே பார்க்கிறார்கள். செந்தில் என்றும் அப்படியிருந்ததில்லை. இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா ஆரம்பித்ததும் கணக்கு வழக்குகள் முடிந்த வேளையில் கொல்லைப்புறம் கக்கூசுக்குப் பக்கத்தில் தீவாளியில் வெது வெதுவெனக் கொட்டி வைத்திருக்கும் பசை வாளியைத் தூக்கிக் கொண்டு போஸ்டர்களை வாங்கத் தயாராக வந்து நிற்பான் இவன்.

”ஊர்க்கணக்கு பூராவும் தீர்த்தாச்சு…இனி இவன் கணக்குத்தான் பாக்கிய்யா…” – என்று சொல்லிக் கொண்டே மானேஜர் அவனுக்கான போஸ்டர்களை எடுத்துக் கொடுக்கப் பணிப்பார். சிறுசு, பெரிசு என்று அங்கேயே பிரித்து வைத்துக் கொண்டுதான் கிளம்புவான். பெரிய போஸ்டர்கள் நாலு பங்காக இருக்கும். அவைகளைக் கவனமாய் ஒட்ட வேண்டும். தூக்கக் கலக்கத்தில் மாற்றி எதுவும் ஒட்டி விடக் கூடாது. எழுத்துக்கள் மறைந்து விடக் கூடாது. உருவம் சுருங்கி, ஒச்சம் போல் ஆகிவிடக் கூடாது. அத்தனை கவனம் உண்டு அவனுக்கு.

“தங்கப்ப - தக்கம்னு ஏதோ ஒரு படத்துல காமெடி வருதுல்ல…அதமாதிரி அர்த்தக் கேடா ஒட்டிப்புடாதறா…வேலயப் பார்த்துச் செய்யி…” எதையாவது சொல்லிக் கொண்டுதான் அனுப்பி விடுவார் மானேஜர். அவர் குணம் அப்படி. ஆள் வித்தியாசமெல்லாம் அவருக்குக் கிடையாது. தன்னைப் பற்றி அறிந்திருந்தும், தன்னிடமும் அவர் அப்படிச் சொல்வது செந்திலுக்குப் பிடிக்காதுதான். ஆனாலும் என்ன செய்வது? பிழைப்பாயிற்றே? சரிங்கய்யா…என்றுவிட்டுத்தான் கிளம்புவான். ரெண்டு வார்த்தை அதிகம் பேசி கெட்டபெயர் வாங்கிக் கொள்வதற்கு, பணிந்து போய்விடுவது மேலாயிற்றே என்பது அவன் எண்ணமாக இருந்தது. பெரும்பாலும் எல்லோருக்கும் அதுதானே பிடித்தும் இருக்கிறது. சரி, இதனாலென்ன குறைந்தா போய் விடுகிறோம். இதுதான் செந்திலின் முடிவு. தங்கச்சிகளெல்லாம் வேலைக்குப் போய் முடிந்த அளவுக்குக் கொண்டு வந்து கொடுக்கும் நிலையில் அண்ணனாகிய தான் கொடுப்பது அதிகமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் அவன் மனது உறுதியாகத்தான் இருந்தது. மனசில் அது வைராக்கியமாகவே படிந்திருந்தது.

போஸ்டர்களைப் பெற்றுக் கொண்டு அவன் புறப்படும்பொழுது அப்படியிப்படி மணி பதினொன்றைத் தாண்டி விடும்… தியேட்டருக்கு அருகிலிருந்து வரிசையாக எந்தெந்தத் தெருவுக்குள் நுழைய வேண்டும்…எங்தெந்த சந்துகளைத் தவிர்க்க வேண்டும் அந்நேரத்தில், என்பதையெல்லாம் மனதிலேயே கணக்குப் பண்ணிக் கொண்டு வண்டியை மெதுவாக உருட்டுவான் செந்தில்.

எடுத்துக் கொண்ட வேலையை ஒழுங்காக, ஒழுக்கமாக, திருத்தமாக, சொன்ன நேரத்துக்குக் தாமதமில்லாமல் செய்து முடிக்க வேண்டும். நல்ல பெயர் வாங்க வேண்டும்.

இல்லையென்றால் டிக்கெட் கொடுக்கும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தவன் இந்த வேலையையும் நானே செய்கிறேன் என்று முனைவானா?

”உனக்கெதுக்குடா இதெல்லாம், வீட்டுல போய்த் தேமேன்னு படுக்கமாட்டாம?” என்பார் முதலாளி கூட.

”இல்லீங்க முதலாளி. எனக்கு மூணு தங்கச்சிங்க…அதுகள ஒழுங்காக் கட்டிக் கொடுக்கணும். எங்க அம்மா தனியாக் கெடந்து என்னதான் செய்யும்?”

அவனின் பொறுப்புணர்ச்சியைப் பார்த்து அவரே நெகிழ்ந்துதான் போனார். இப்படிப் பையன்களை வேலைக்குப் போட்டால்தான் தன் தியேட்டர் பிழைக்கும் என்று ஒரு எண்ணமிருந்தது அவருக்கு. இன்னும் ஒரு சில வேலையாட்களைக் கூட செந்திலை வைத்துத்தான் தேர்வு செய்தார். பொறுப்பாய் இருப்பவனுக்குத்தான் பொறுப்பானவர்களை அடையாளம் காண முடியும். சொல்லப்போனால் செந்தில்தான் ஆல் இன் ஆல் என்றே சொல்லலாம்.

நேத்து வேலைக்கு வந்திட்டு நம்மளயே எப்டி வேல வாங்குறாம் பார்த்தியா?” – முணு முணுப்புகள் செந்தில் காதில் விழாமலில்லை. டிக்கெட் கொடுப்பதற்கும், கடைசியாகக் கணக்கு ஒப்படைப்பதற்கும் மட்டும்தான் அவனுக்குச் சம்பளம். ஆனால் அவன் அந்த வேலை மட்டும்தானா செய்கிறான். அந்தத் தியேட்டரையே தான்தான் நிர்வகிப்பதைப்போலல்லவா கடமையாற்றுகிறான். கக்கூஸ் பக்கம் சென்று பினாயில் அடிச்சு ஊற்றுவது முதல் கிருமி நாசினிப் பவுடர் தூவுவது வரை செய்கிறானே? யார் செய்வார்கள் இதெல்லாம்? சொல்லாமலே அவனே எடுத்துச் செய்கிறானே? கௌரவம் பார்த்து ஒதுங்குகிறானா என்ன? வேலைகளை வித்தியாசம் பார்க்காமல் எடுத்து எடுத்துச் செய்யும்பொழுது மதிப்பு தானே உயர்ந்து போகிறதுதானே? எங்குமே தன்னலமற்ற உழைப்புக்கு உரிய மரியாதையே தனிதான்.

விடாப்பிடியாக இழுத்துக் கொண்டுதான் இருக்கிறார் முதலாளி. வாரத்தின் இரண்டு சந்தை நாட்களிலெல்லாம் கூட்டம்தான். கேட்கவே வேண்டாம். அன்றைக்கெல்லாம் பார்த்தால் புரட்சித்தலைவர் படம்தான். நகரில் பழைய படம் ஓடும் தியேட்டர் அது ஒன்றுதான். படப்பெட்டியை செந்தில்தான் போய் எடுத்து வருவான்.நேரடியாகப் போய்ப் பேசி இந்தப் படம்தான் வேண்டும் என்று தேர்வு செய்து, ஓட்டி, அதை வசூல் காண்பிப்பதில் கில்லாடி அவன்.

”எத்தனை தடவை டி.வி.ல போட்டாலும். சனத்துக்கு தியேட்டர்ல வந்து பார்க்குறதுல மோகம் குறையலேயப்பா…” என்று சந்தோஷப்படுவார் முதலாளி.

”அது பழைய படத்தோட மவுசு முதலாளி… நம்ம சனம் மனசுல நல்ல விஷயங்கள் ஆழமா அமுங்கிப் போய்க் கிடக்கு…அத ஒருத்தர் எடுத்துச் சொல்லும்போது, அதுக்காகப் போராடும்போது, மனசு மகிழ்ந்து போறாங்கல்ல… …அதோட நாம நார்மலாத்தான டிக்கெட்டும் வச்சிருக்கோம்…” என்பான் இவன்.

உள்ளே விசில் பறக்கும் வேகத்தைப் பார்த்து “இறந்து இத்தன வருஷங்களிச்சுமா ஒரு மனுஷம் மேல இம்புட்டுப் பாசம் இருக்கும்..” என்று வியந்து போவார்.

இவனுக்கோ சிவாஜி படம்தான் உயிர்.…நம்ம நடிகர் திலகம் படமே படம்ப்பா…என்னா ஒரு அநாயாசமான நடிப்பு?

செந்திலின் ரசனையே தனி. முதலாளியிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டு வீட்டிலுள்ள நாலு டிக்கெட்டுகளையும் தவறாமல் கொண்டு வந்து காண்பித்து விடுவான். ஒரு முறை கூட அவர் எதுவும் கேட்டதில்லை. போறான்யா நம்ம பய அவன்…. இதுதான் அவர் பதிலாயிருந்தது.

மீதிப் பசையை நடுவிலும் போஸ்டரின் முழுப் பகுதியிலும் தடவ ஆரம்பித்தபோது இன்னொரு கால் கை பசை வேண்டும்போல்தான் இருந்தது. இடது கையால் போஸ்டரைப் பிடித்தவாறே திரும்பிப் பார்த்து, “கொண்டாடா வெண்ணை…”என்று கத்தினான். அவன்தான் உட்கார்ந்திருக்கிறானா என்று சந்தேகம் வந்தது.

இருட்டுக்குள் ஒரு குத்துக்கல்லில் அமர்ந்து ஜாலியாகப் புகை விட்டுக் கொண்டிருந்தான் மாரி. இவன் பக்கம் திரும்பியதாகவே தெரியவில்லை.

என்ன ஒரு தைரியம்? தேவையில்லாம வந்து எதுக்கு இப்டி லொள்ளு பண்றான்?

”டேய் ஒழுங்காச் சொல்றேன்…இப்ப நீ அந்த வாளியை இங்க கொண்டாந்து வைக்கல, பெறவு என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது…பார்த்துக்க…” என்றான்.

அந்த நேரத்தில் அந்த சத்தம் போதும் என்பதுபோல் இருந்தது அவன் பேசியது. எதிர்த்தாற்போல் ஒரு பள்ளிக்கூடம். பிறகு சற்றுத் தள்ளி ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். அதற்கும் அடுத்தடுத்து இரண்டு மூன்று கடைகள். ஒரு ட்டு வீலர் ஒர்க் ஷாப் ஒரு பெட்டிக் கடை என்று இருந்தன. எல்லாவற்றின் வாசல் திண்டுகளிலும், கிடைத்த இடத்திலும், மறைவிலும், தங்களைத் தாங்களே முடிந்த அளவு மறைத்துக் கொண்டும், ஆட்கள் முடங்கியிருந்தார்கள். நிறையக் குறட்டை ஒலிகள். அவர்களையெல்லாம் எழுப்புவதுபோலக் கத்த முடியாது. கத்திப் பேசி ஓரிருவர் எழுந்து கொண்டாலும், கதை கந்தல்தான்.

“இங்க போஸ்டர் ஒட்டக் கூடாதுன்னு எத்தன வாட்டிடா உங்களுக்குச் சொல்றது…மசிருங்களா….கேட்க மாட்டீங்களா… …படிக்க வர்ற பிள்ளைக இதப் பார்த்திட்டு இளிச்சிட்டு நிக்கவா….போடா….இனி இங்க வந்தே காலெ ஒடச்சிப்போடுவேன்….”

எத்தனையோ முறை வாங்கிய திட்டுக்கள்தான். ஆனால் இன்று ஒரு சிறு மாற்றம். அதனால்தான் அவனே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தான். இப்பொழுது அவன் ஒட்டிக் கொண்டிருப்பது சினிமா போஸ்டர்கள் அல்ல. ஜவுளிக்கடை போஸ்டர்கள். அழகழகாய் தேவதைகளாய் நிற்கும் பெண்கள். புதிய புதிய கண்களைக் கவரும் டிசைன்களில். பளபளக்கும் சேலைகள். சுடிதார்கள். சல்வார்கமீசுகள், ஸ்கர்ட்கள், டவுசர் சட்டைகள், பேன்ட் சர்ட்கள், என்று பலவித வண்ணங்களில். ஒரு முறையேனும் திரும்பிப் பார்க்காமல் போகவே முடியாது நிச்சயம். அதை விளம்பரப்படுத்தும் வேலை இப்போது இவனுக்கு.

ஊருக்குப் புதிதாக ஒரு மிகப் பெரிய ஜவுளிக்கடை வந்திருந்தது. எங்கு பார்த்தாலும் விளம்பரம். ஃப்ளக்ஸ் போர்டுகள். பஸ்-ஸ்டான்டு, சிக்னல்கள், சாலைத் தடுப்புகள், உணவு விடுதிகளின் வாசல்கள், டீக் கடைகள், பெட்டிக் கடைகள் என்று எங்கு பார்த்தாலும் அவர்களின் கடை பெயரோடு…பெட்டி பெட்டியாய்த் தூக்கி நிறுத்தி உள்ளே விளக்குப் போட்டு, கடைக்கும் சேர்த்து வெளிச்சமாக விளம்பரத்தை அள்ளிக் கொட்டியிருந்தார்கள். ஒரு டீக்கடைக்குக் கூட இம்புட்டு மவுசா? அவன வச்சு இவனா இல்ல இவன வச்சு அவனா? ஒண்ணக் கொடுத்து ஒண்ண எப்டி ஈஸியா வாங்கிப்புடறானுங்க…! ரொம்பவே அதிகம்தான் என்றாலும் மற்ற எல்லா ஜவுளி ஸ்தாபனங்களையும் ஒரே அமுக்காய் அமுக்கி விட வேண்டும் என்று சவால் விட்டது போலிருந்தது அவர்களின் இந்தப் போஸ்டர் கலாச்சாரம்.

“என்னதான் விளம்பரம் வச்சாலும் செஞ்சாலும், போஸ்டர் ஒட்டுற மாதிரி ஆகாதுய்யா…அதான் நம்ம மக்கள் நல்லா அறிஞ்சது…அதுதான்யா அவுங்க பார்வைல பட்டுக்கிட்டே இருக்கும்….போற எடமெல்லாம் நம்ம கடை விளம்பரத்தப் பார்த்து அவனவன் அசந்து போய் ஓடியாந்துரணும்…வேறே எங்கயும் போப்பிடாது…ஊர் பூராவும் ஒரு எடம் விடப்படாது…வருஷக்கணக்கா சினிமாப் போஸ்டர் ஒட்டி அனுபவப்பட்டிருக்கிற உள்ளுர்காரன் ஒருத்தனப் புடி…அவன்ட்ட ஒப்படை இந்த வேலய…கச்சிதமா முடிஞ்சி போயிரும்….ரெண்டே நாள் ராத்திரில வேலை முடிஞ்சிரணும்னு கண்டிஷன் போடு….கேட்குற துட்டை விட்டெறி…தொலையட்டும்…வேலை சொன்ன டயத்துக்கு முடிஞ்சிறணும்னு கறாரா சொல்லிப்புடு…”

“”அய்யா நா இருக்கேன்யா…எங்கிட்டக் கொடுங்கய்யா…உங்க விருப்பப்பிரகாரம் நா முடிச்சிர்றேன்யா.”. கையைத் தலைக்கு மேலே தூக்கி பெரும் கும்பிடாகப் போட்டு நெடுஞ்சாண்கிடையாய் தடால் என்று விழுந்தான் செந்தில்.

அந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்தது அன்று அவனின் பாக்கியம். என்ன ஆச்சரியம். தியேட்டர் முதலாளி மகனுமல்லவா அங்கே நின்றிருந்தார். அந்தக் கட்டடத்தின் பொறியாளரே அவர்தான் என்று அன்றுதான் அவனுக்கே தெரியும். அவரது சிபாரிசில் மறு பேச்சில்லாமல் அது அவனுக்குப் படிந்து போனது அவன் அதிர்ஷ்டம்தான்.

ஒருத்தனிடமும் வாய் திறக்கவில்லை. திறந்தால் ஆளாளுக்குப் பங்குக்கு வந்து விடுவார்கள். பிச்சிப் பிச்சி குரங்கு அப்பத்தைப் பங்கு போட்ட கதையாகிவிடும். யாரையும் அவன் பங்கு சேர்த்துக் கொள்ளவும் முடியாது. அதற்கும் போய் பெரிய இடத்தில் பேசியாக வேண்டும். அதெல்லாம் சரிப்படாது. அடிக்கடி அப்படிப் போய் முன்னாடி நிற்க ஏலாது. எதையாவது செய்து காரியத்தைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது. வந்ததை விடக் கூடாது. அத்தோடு பொதுவாக அவர்களின் போக்கும்தான் சரியில்லையே! தானே அதற்காகத்தானே ஒதுங்கியிருக்கிறோம்!

மூன்று தங்கச்சிகளும். படித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவைகளை ஒழுங்காய் கொஞ்சமாவது படிக்க வைத்து கல்யாணம் கட்டிக் கொடுக்க வேண்டும். படிக்கும் இந்த வயதிலேயே ஒவ்வொன்றும் ஓரொரு வேலையைச் செய்யத்தான் செய்கின்றன. பெரிய தங்கச்சி மீனு, தையல் வேலைக்குப் போகிறது. அடுத்த தங்கச்சி அன்பு அருகிலுள்ள விருதூரில் தறியடிக்கப் போகிறது. கடைசிச் செல்லம் வள்ளி அன்றாடம் பூக்கட்டும் வேலைக்குச் சென்று ஏதோ அதால் முடிந்ததைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

சரியாய்ச் சொல்லப் போனால் இந்தத் தியேட்டர் வேலைக்கு முன் அவன் படாத பாடுபட்டிருக்கிறான்.. ஒரு நாள் நெல் மண்டியில், ஒரு நாள் வெங்காய மண்டியில், ஒரு நாள் உறார்ட் வேரில், ஒரு நாள் சிமிண்ட் கடையில், ஒரு நாள் பெயின்ட் கடையில் என்று அல்லாடியிருக்கிறான்.

அப்படியான நேரத்தில்தானே இந்தப் பின் வீட்டுப் புண்ணியவான் வந்து சேர்ந்தார். அவர் சொல்லித்தானே தியேட்டர் வேலைக்குச் சென்றது.

”எதுக்குண்ணே இந்தப் போஸ்டர் ஒட்டுற வேலையெல்லாம்…அசிங்கமா இருக்குது…”ஒரு நாள் தங்கச்சி அன்பு இப்படி அலுத்துக் கொண்டபோது இவன் சொன்னான்.

”தப்பும்மா…தப்பு…தப்பு…வேலைல எதுவும் கேவலமில்லேம்மா….பிச்சையெடுக்கிறது, திருடுறது…இது ரெண்டுதான் செய்யக் கூடாதும்மா…மத்த எதுவும் தப்பு இல்லே…தெரிஞ்சிக்கோ….”

அண்ணன் மதிப்பாய் இருக்க வேண்டும் என்கிற எண்ணமுள்ள தங்கைகள். சே! நான் ரொம்பக் கொடுத்து வைத்தவன்…என் வாழ்நாளை இதுகளுக்காகவே செருப்பாய்த் தச்சுப் போட்டாலும் தகும். இப்படி எண்ணி எண்ணித்தான் தன் மனதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறான் அவன்.

ருக்கும் பசையையே நன்றாக இழுத்துத் தேய்த்தான் செந்தில். நன்றாகப் பரவியிருக்கிறது என்று மனதுக்கு சமாதானம் ஆனது. அப்படியே சுவற்றில் இழுத்து ஒட்டினான். சுருக்கம் எதுவும் விழாமல், எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து விடாமல் நிரவலாக முழுப் போஸ்டரையும் இரு கைகளாலும், நன்றாக அழுத்தி ஒட்டிய போது பின்னால் மெல்லிய அரவம் கேட்டது. இருட்டின் அமைதியைக் குலைக்கும் சிறு சிறு அசைவுகள். அசப்பில் ஏதோ வித்தியாசமாய் உணர கலவரத்துடன் சுவற்றோடு சேர்ந்த ஏணியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு மெல்லத் திரும்பியபோது,

அங்கே தென்பட்ட அந்த நால்வரும் அவனைப் பூனையாய் நெருங்கினார்கள். இருட்டு விலகாத அந்த வேளையில், தெருக்கோடி விளக்கு வெளிச்சமும் சற்றும் பரவியிருக்காத அப் பகுதியில் எந்தச் சத்தமும் இல்லாமல் ஒரு முரட்டுக் கரம் மட்டும் மேல் எழுந்து அவன் வாயைச் சட்டென்று பொத்தி அழுத்தியது.

”ஏண்டா வௌக்கெண்ண, உன்னோட சினிமாக் கொட்டாய் வேலயப் பார்த்தமா செவனேன்னு இருந்தமான்னு நிக்காம, அடுத்தவன் பொழப்பக் கெடுக்கணும்னு எத்தன நாளாடா நினைச்சிட்டிருந்த…?”-மூஞ்சியைக் கடுவன் பூனையாக வைத்துக் கொண்டு கேட்டான் ஒருவன்.

”நாங்க நாலஞ்சு பேர் ஊர் பூராத்துக்கும் எப்பயும் செய்துக்கிட்டிருக்கிறதை நீ வந்து ஒருத்தனாப் புடுங்கிக்கிட்டு, எங்கள வாய்ல நொட்டிட்டுப் போலாம்னு நினைக்கிறியா…?”

கரகரத்த அடித்தொண்டையில் கடூரமாகக் கேட்டவாறே பக்கத்து இருட்டு மூத்திரச் சந்துக்குள் அவனைச் சரசரவென இழுத்துச் சென்ற அவர்களின் கரணை கரணையான முரட்டுக் கைகளும், கால்களும் ஒரு சேரச் சரமாரியாக அவன் மீது பாய்ந்த போது, அந்த திடீர்த் தாக்குதலைச் சமாளிக்கச் சிறிதும் திராணியின்றி, கொஞ்சங் கொஞ்சமாகத் தன் நினைவை இழக்க ஆரம்பித்தான் செந்தில்.

”தாய்ளி, இன்னிக்கு நீ செத்தடீ…வசமா மாட்டுன…”

மங்கி மயங்கிய அந்தக் கண்களின் வழியே அவர்களைப் பார்க்க முயன்ற அவன் சற்றுப் பின்னால் விலகி நிற்கும் அந்தச் சின்ன உருவத்தையும் கலக்கமாகப் பார்த்த அந்தக் கடைசி நிமிஷத்தில், அது மாரியப்பன்தான் என்பதை அவன் மனசு துல்லியமாகக் காட்டிக் கொடுத்தது.

என்னமோ தாங்க முடியாத விபரீதம் நடந்து போய் விடுமோ என்று அவன் மனம் அச்சப்பட்டுத் தடுமாறிய அந்தக் கணத்தில் மனக் கண்ணில் அம்மாவும் மூன்று தங்கச்சிகளும் சட்டென்று தோன்றி அவனை உலுப்ப, எங்கிருந்துதான் அந்தச் மா சக்தி வந்ததோ, அவனுக்கே தெரியாத போக்கின் ஒரே வீச்சில் கையையும் காலையும் உதறிக் கொண்டு துள்ளி எழுந்த செந்தில், ஓங்கி, பலம் கொண்ட மட்டும், அவர்களை மொத்தமாக ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு அங்கிருந்து விடுபட்டுத் தாறுமாறாக ஓட ஆரம்பித்தான். வேகமெடுக்கும் பாம்பு எப்படி விளு விளுவென்று வளைந்து நெளிந்து அசுரப் பாய்ச்சல் பாய்கிறதோ அதுபோல அடங்காத மின்னல் வேகத்தில் அவன் தன் வீடு வந்து மடாரென்று கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போய் விழுந்த போது தங்கச்சிகளும், அம்மாவும் பதறியடித்துக் கொண்டு எழ அப்படியே தன்னிலை இழந்து, கண்கள் செருகி மயக்கமானான் அவன்.

----------------------------------------------

06 அக்டோபர் 2011

மேகங்கள்
---------------------
ஏழைகள் விட்ட
ஏக்கப் பெருமூச்சின் திரட்சி
நிறைவேறாமற்போன
ஆசைகளின் அரூபம்
ஒன்றுபட்டால்தான்
உண்டுவாழ்வு என்பதை
அடிக்கடி மறந்துபோகும்
மட ஜென்மங்கள்
முன்பெல்லாம் இவை
காதலுக்குத்தான்
தூது போயின
இப்பொழுதோ
கண்ணீரையும் சுமந்து கொண்டு
அங்கங்கே
எங்கள் கிராமத்தின்
தோழர்களுக்குத் தூது போகின்றன
கோபம் வந்தால் முகம் கறுத்து
வெடித்துப் புடைக்கும் இவைகள்
முடிவில் உதிர்பபது
கண்ணீரையே!
ஆம்!
எங்கள் தோழர்களின் ஏக்கங்களும்
கண்ணீரில்தானே முடிகின்றன!

-----------------------------------------------
11.10.81 மயன் இதழ் பிரசுரம்
-----------------------------------------------

முடிவு
-------------
அப்பா பேச்சைக்
கேட்டுக் கேட்டு
அலுத்துப் போச்சு

அம்மா கையால்
சாப்பிட்டு சாப்பிட்டு
அயர்ந்து போச்சு

தங்கைமாரைத்
திட்டித் திட்டி
தளா்ந்து போச்சு

தம்பியை வாயால்
விரட்டியடித்து
வீணாய் ஆச்சு

எல்லாம் சலித்து
எதிலும் ஒன்றாமல்
புதிதாய் எதைச் செய்ய?

ஆம்!
அதுதான் சரி
சீக்கிரம் ஒரு
கல்யாணம் பண்ணனும்!

--------------------------------------------------------------

15.1.1984 ல் விகடனில் பிரசுரமான என் கவிதை

-------------------------------------------------------------

05 அக்டோபர் 2011

இலக்கியப் போர்
-------------------------
இங்கே
எழுத்துத் துச்சாதனர்கள்
பெருகி விட்டார்கள்
இந்தத் திருப்பணிக்கு
ஓவியத் துச்சாதனர்கள்
துணை போகின்றார்கள்
அந்தோ
வாசகக் கண்ணபிரான்களே
இலக்கியப் பாஞ்சாலியின்
மானம் பறிபோவதற்குள்
காப்பாற்றுங்கள் அவளை
வேண்டுமானால்
நல்லிலக்கியம் படைக்கிற
பாண்டவர்களோடு சேர்ந்து
ஆரம்பிப்போம் ஒரு
குருச்சேத்திரப்போரை...!

------------------------------------
இந்த என் கவிதை 10.1.1982 மயன் இதழில் பிரசுரமானது. இன்றும்
பொருந்துவது போலிருப்பதுதான் இதன் அழகு! பாரதி படத்தைச் சேர்த்தது பொருத்தம் தேடிய என் உரிமை

“காலச் சுமைதாங்கி“ - சிறுகதை - வாசகசாலை 100 வது இதழ் (06.10.2024)

                                                                   “காலச் சுமைதாங்கி“ அ றையின் மின் விசிறியை அணைத்து விட்டு ஜன்னலருகே உட...