18 ஜூலை 2021

“அசடு” - நாவல் - காசியபன் - வாசிப்பனுபவம் - உஷாதீபன்

 

அசடு” - நாவல் - காசியபன் - வாசிப்பனுபவம் - உஷாதீபன்              (வெளியீடு:-விருட்சம், போஸ்டல் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை-33)                         ------------------------------------     நேகமாக இந்த நாவலில் வருபவரைப் போன்றதான மனிதர்களை நாம் நம் வாழ்க்கையில் சந்தித்திருக்கக் கூடும். இளம் பிராயத்தில், நமது குடியிருப்புப் பகுதிகளில், நம் ஊரில் அங்கங்கே ஓரிருவராவது இப்படியிருந்திருப்பார்கள் என்பது நிச்சயம். அவர்களின் இருப்பு அந்தப் பகுதியில் அல்லது அந்தத் தெருவில் உடன் வாழ்வோரால் அங்கீகரிக்கப்பட்டதாக, ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அல்லது ஐயோ பாவம்...என்று ஆதரிக்கப்பட்டதாக இருந்திருப்பதைப் பார்த்திருக்கலாம். கேலிக்குள்ளானதாயும் கண்டிருக்கலாம். ற

     மனிதர்கள் அடிப்படையில் அன்பும், இரக்கமும், கருணையும் கொண்டவர்கள். அது அவர்களது வாழ்வியலின் வறுமையை மீறிய, துன்பங்களைத் தாண்டிய, போராட்டங்களை எதிர்கொண்டு முன்னேறிய செயல்பாடுகளுக்கு நடுவேயான அரவணைப்பின் அடையாளங்களாய்த் திகழ்பவை.

     பிறக்கும் மனிதரெல்லாம் மேன்மையடைந்து விடுவதில்லை. உச்சங்களைத் தொட்டுவிடுவதில்லை. வசதி வாய்ப்பில் நிலை கொண்டு விடுவதில்லை. வெற்றிகளைத் தனதாக்கிக் கொள்வதில்லை. தோல்விகளைப் புறந்தள்ளி முன்னேறுவதில்லை.

     எல்லா மனிதர்க்கும் எல்லா அனுபவங்களும் கைகூடி வந்ததாய்த்தான் விளங்கி அவர்களைப் பதப்படுத்தியிருக்கின்றன. பக்குவமாக்கியிருக்கின்றன. சிறந்த விவேகிகளாகிப் பரிணமித்து, பக்குவமாய், பொறுப்பாய் வாழ்க்கைப் படகினை ஓட்டிச் சென்று நிம்மதி காணுபவர்கள் அநேகம்.

     எந்த நிலையினையும் நின்று எதிர் கொள்ளாமல், தட்டுத் தடுமாறி அலைந்து, பறந்து அலைக்கழிக்கப்படும் காகிதம் போல் சிதைந்து, தான் ஏன் இப்படியிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்த்தும் அதற்குத் தீர்வு செய்து கொள்ள ஏலாமல் மீண்டும் மீண்டும் அந்தப் படுகுழியிலேயே  போய் விழுந்து, மீள முடியாமல், அதுவே தனது இயல்பு போலவும், தன் வாழ்க்கையே இவ்வளவுதான் என்று தீர்மானித்து உணர்ந்தது போலவும், தனக்கு விதித்த விதி இவ்வளவுதான் என்று அதனையே சகஜமாக்கிக் கொண்டும், காலம் பூராவும் இப்படியே இருந்து விடுவோமோ என்கிற அச்சம் துளியுமின்றி, அந்த அச்சத்தின் பாதிப்பு இம்மியும் இன்றி, அதற்கு மேலான எந்த யோசனைக்கும் செல்லாமல் இதுதான் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை என்பதாய்த் தனக்குத்தானே வரித்துக் கொண்டு, அந்தத் தற்போதைய இருப்பினால் ஏற்படும் கேவலங்களைப் பொருட்படுத்தாமல், அவமானங்களைப் புறந்தள்ளி எது என்ன ஆனாலும் சரி, எவர் எத்திசை சென்றாலும் சரி, எந்த வாய் என்ன பேசினாலும் சரி...எதுவும் பாதகமில்லை, எந்த பாதிப்புமில்லை என்று முடிவு செய்து கொண்டு, அன்றாடம் வயிறு நிறைந்தால் போதும் எனக் காலத்தை ஓட்டச் சம்மதித்த மனநிலைக்கு, வாழ்க்கை நிகழ்வுக்கு வந்துவிட்ட ஒருவனை என்னதான் செய்ய முடியும்? அப்படியான ஒருவன் என்னதான சாதித்து விட முடியும்?

     இந்த சமூகத்துக்கும், பூமிக்கும் பாரமாய் இருக்கிறோம் என்பதை உணராத ஒரு மனிதன் இருந்தென்ன போயென்ன?

     ஆனாலும் அப்படியான ஒருவனும் இங்கே வாழ்ந்துதான் ஆக வேண்டும், அவனை நாம் அரவணைத்துத்தான் ஆக வேண்டும், இயன்றவரை நம்மோடு கை கோர்த்து அழைத்துச் சென்றுதான் ஆக வேண்டும் என்று உற்றாரும் உறவினரும் அள்ளித் தரும் ஆதரவும் அன்பும் ஒருவனுக்குக் கிடைக்கப் பெற்றால் அவனை மாதிரி ஒரு பாக்கியவான் இந்த லோகத்தில் எவனாவது இருக்கக் கூடுமா?

     ஒரு அதிருஷ்டசாலியாய்த்தான் உணரப்படுகிறான் இந்தக் கதையில் வரும் நாயகன் கணேசன். துக்கிரி, உதவாக்கரை, தண்டம் என்று ஏசப்படுபவர்களாலேயே ஆதரிக்கவும் படுகிறான். உற்றாரும், உறவினரும், சுற்றத்தாரும் அவனை அரவணைத்துத்தான் செல்கிறார்கள். அவனுக்கு ஆதரவு தரத்தான் செய்கிறார்கள். அவனும் ஒரு மனிதன், ஒரு தாய்க்குப் பிறந்தவன், நம்மோடு வாழ்பவன், நம் உறவில் கலந்தவன், நம் அன்றாட வாழ்வாதாரத்தில், வாழ்க்கைப் பாடுகளில் கலந்து நிற்பவன் என்று உணர்ந்து வலிய அவனுக்கு உதவுகிறார்கள். அவன் வயிற்றை நிரப்புகிறார்கள். அன்போடு உதவுகிறார்கள். ஆதரிக்கிறார்கள்.

     ஆனாலும் கணேசன் எதை உணர்ந்தான்? எதில் நினைத்தான்? காற்றடித்த போக்கில் வாழ்க்கை அவனை எங்கெங்கோ கொண்டு செல்கிறது. படிக்காத, எந்த வேலையும் தெரியாத, தெரிந்தாலும் செய்யப் படியாத, தன் வயிற்றுப் பாட்டுக்கேனும் தான் உழைத்துத்தான் சாப்பிட்டாக வேணும் என்பதை உணராத, அவ்வப்போது உணர்ந்தாலும் அந்த மெய்மை கருதி தன்னை மாற்றிக் கொள்ள முடியாத, தற்காலிகமாய் மாற்றிக் கொண்டும் நிலைத்திருக்க இயலாத, உறவினரை நாடியே இந்த வயிறு வளர்க்க வேண்டியிருக்கிறதே என்பதை எண்ணி மருகாத, இப்படிப் போய் சோற்றுக்கு நிற்கிறோமே என்கிற கூச்சமில்லாத, அது குறித்த குற்றவுணர்வில்லாத, தெரு நாயினும் கேடு கெட்ட நிலையில் கழிகின்றதே இந்த வாழ்க்கை என்ற சத்தியத்தைக் கிஞ்சித்தும்  அறியாத ஜென்மமாய்க் கழியும் தன் வாழ்க்கையை  ஒரு நாளேனும், ஒரு பொழுதேனும் உளமார உணர்ந்து உருகாத கதாபாத்திரமாய்...நாவல் முழுக்க வலம் வரும் கணேசன் மேல் நமக்கே அதீதமான பரிதாபம் ஏற்பட்டுப் போகிறது என்பதுதான் தவிர்க்க முடியாத உண்மையாய் நிலைக்கிறது.

     இப்படிப்பட்ட ஒருவனுக்கு ஒரு கல்யாணமும் ஆகிவிட்டால்? அதுவும் நடக்கத்தான் செய்கிறது. சக்தியுள்ளவனோ, அற்றவனோ, அவனும் ஒரு ஆண்பிள்ளையாயிற்றே? கௌரவமாய் வாழ்கிறானோ இல்லை சீரழிகிறானோ நம்மோடு பயணிக்கும் அந்த உறவைத் தள்ளி வைத்துவிட முடியுமா? இருப்பவர் பாடே தாளம்...இதில் இவனை எங்கே கரையேற்றுவது என்று விட்டு விட்டா போக முடியும்? பிறகாவது நிலைக்க மாட்டானா? என்று பரிதாபம் கொள்கிறது.

     உறவும் சுற்றமும் அவனுக்கான வாழ்க்கையையும் அமைத்துத்தான் கொடுக்கிறது. அவனும் வாழத்தான் செய்கிறான். இருந்தும், இல்லாமலும், வருந்தியும் வருந்தாமலும், கேவலமும், கேலியுமாய், வயிற்றைப் பிரதானமாய்க் கொண்டு அவனுடைய வாழ்வும் நகரத்தான் செய்கிறது.

     சக்கரம் கட்டிக் கொண்ட கால்கள் என்றேனும் நின்றிருக்கிறதா? காணாமல் போனவர்கள் வாழ்வின் பல சமயங்களில் அப்படியேதான் தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இளம் பிராயத்திலிருந்தே அப்படி பழகியவர்கள், அப்போதே அப்படி ஊர் சுற்றிப் புராணம் கண்டவர்கள், தன்னை நம்பி ஒருத்தி வந்து விட்டாள், அவளைக் கட்டிக் காப்பாற்றுவது தன் வாழ்நாள் கடமை என்ற உணரவா போகிறார்கள்?

     இவனுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா? எந்தச் சம்பாத்தியத்தை வச்சு, எந்த வருமானத்தைக் கொண்டு இவன் தூக்கி நிறுத்தப் போகிறான்? என்று உணர்ந்தவர்கள், பேசியவர்கள், சொன்னவர்கள், கண்டித்தவர்கள் என்று எவரையும் பொருட்படுத்தாது, அவன் கால்கள் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. நிலை கொள்ளாத வாழ்க்கை நிலை பெற வேண்டும் என்று கால்கட்டுப் போடப்பட்டாலும், அதையும் அறுத்துக் கொண்டு அவன் கண்காணாது போகும் பாதகத்தை எவர்தான் பொறுப்பர்....?

     ஒரு ஓட்டல் வேலைக்குக் கூட லாயக்கில்லாத அவன், ஒருவரின் அரவணைப்பில் எடுபிடியாகக் கூட இருக்க வாய்க்காத ஒருவன் எப்படிக் குடும்பத்தை வழி நடத்தப் போகிறான் என்கிற கேள்வி எல்லோரிடமும் எழும் சமயம் ஒரு பெண்ணின் வாழ்க்கை போச்சே...என்ற நிலையில்,  அவன் மனைவி அவனைப் பிரிந்து போகிறாள்.

     கணேசன் அசடோ, சமத்தோ அவனைப் போலப் பாக்கியசாலி கிடையாது. ஜன்மாந்திரத்தில்  அவன் ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்கணும், இல்லையானால் இப்படி காசி, இராமேஸ்வரம்  என்று புண்ணிய தீர்த்தங்களுக்கு அவனுக்கு பாக்கியம் கிடைக்குமா? - ஊர் இப்படியும் அவனை மெச்சத்தான் செய்கிறது.

     ஞானப்பானை என்கிற புத்தகம் வழிநடத்தி இந்த லௌகீக வாழ்க்கையிலிருந்து அவனைப் பிரித்தே நிறத்தி விடுகிறது. வேதாந்தத் தத்துவத்தை பக்தியால் விளங்கச் செய்து எளிய பாமர மொழியில் பாடப்பட்ட பக்தி காவியங்களுள் ஒன்றான அந்த நூல் அவனை எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கச் செய்து, மௌனியாக்கிப் பிரித்தே நிறுத்தி விடுகிறது.

     நல்ல நாமங்கள் எப்போதும் நம் நாவில் பிரியாமல் இருக்க வேண்டும். இந்த நரஜென்மம் பயனுடையதாவதற்கு.....நேற்றளவும் நிகழ்ந்தவை யாதென அறியோம், நாளை வருவது என்ன என்றும் அறியோம்....இப்போது காணும் இந்தக் கட்டைக்கு நாசம் எப்போது வருமென அறியமாட்டோம்....என்று உணரத் தலைப்படும் கணேசனின் முடிவு நம்மை உலுக்கி விடுகிறது.

     இப்படியொரு ஜென்மம் உதித்து, வாழ்ந்து, மரித்துப் போன கதையை இதை எழுதும் தருணத்தில் கண்ணாரக் கண்ட அனுபவம் என் நெஞ்சக் கூட்டில் பதிந்திருப்பதை இந்தக் கணத்தில் என்னால் பரிபூரணமாய் உணர முடிகிறது. காசியபனின் “அசடு” நாவல் தந்த இந்தச் சோக அனுபவம் இன்னும் சில நாட்களுக்கு நினைவுகளில் மிதந்து கொண்டேயிருக்கும்.

     தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று என்று சுந்தர ராமசாமி, வெங்கட்சாமிநாதன், நகுலன் போன்றவர்கள் பாராட்டியிருக்கிறார்கள்.

     எந்தச் சமூகம் தொடர்ந்து கணேசனை வெளியே தள்ளுகிறதோ அந்தச் சமூகத்தின் மதிப்புக்கும் மதிப்பின்மைக்குமான உரைகல் இந்தப் படைப்பு என்கிறார் நகுலன்.

                ------------------------------------------------------------

08 ஜூலை 2021

கலிஃபோர்னியா திராட்சை"-வாதூலன் = சிறுகதைத் தொகுப்பு = வாசிப்பனுபவம் 

கலிஃபோர்னியா திராட்சை"-வாதூலன் = சிறுகதைத் தொகுப்பு = வாசிப்பனுபவம்

--------------------------------------------------------------------

வெளியீடு :- விபோ புக்ஸ் (அல்லயன்ஸ்) மயிலாப்பூர்,சென்னை-4.

---------------------------------------------------------------------

"கலிஃபோர்னியா திராட்சை..."-எழுத்தாளர் வாதூலன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு. ஒரு தொகுப்பில் சில கதைகள் படித்தவுடன் மனசு நின்று போகும். ஏதோவோர் குற்றவுணராச்சி நம்மை ஆட்கொண்டு விடும். கதையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள விஷயத்தால் நாம் பாதிக்கப்படுவோம். நாமும் இந்தத் தவறைச் செய்திருக்கிறோமே என்று வருந்துவோம். ஆனால் மனிதனுடைய எல்லாச் செயல்களிலும் அவனிருக்கும் சூழலின் பாதிப்பு கட்டாயம் இருக்கும். அதன் ஒத்துழைப்பின்றி ஒருவன் தனித்து இயங்க முடியாது. ஒரு குறிப்பிட்ட செயலுக்காக, என்றும் கூடவே வந்து கொண்டிருக்கும் ஒன்றை ஒதுக்க முடியாது. அதைத் தவிர்த்து விட்டும் இயங்க முடியாது. அப்படி உணர்த்தும் அல்லது உறுத்தும் ஒரு கதைதான் "அப்பாவுக்காக..."

 

.தெளிந்த எளிமையான நடையில் கதை சொன்ன விதம் ஈர்த்தது. சம்பாஷனைகள் சரளம். போகிறபோக்கில் மறைந்திருக்கிற உண்மையை வாசகன் எளிதாய்ப் புரிந்து கொள்ளும் வண்ணம் இதை சொல்ல முதலில் நல்ல அனுபவம் வேண்டும்.அது வாழ்க்கை அனுபவமாய் இருப்பின் முதிர்ச்சியாய் வெளிப்படும். அங்கே ஆத்மார்த்தம் பலப்படும். வாதூலன் அவர்களின் கதையில் அவரது வாழ்க்கை அனுபவங்களும் முதிர்ச்சியும் பரிணமிக்கிறது.

 

பலரும் கூட இன்றும் சில தர்ப்பணங்களையும், சில சிரார்த்தங்களையும் ஹிரண்ய சிரார்த்தமாகவும் செய்து விடும் சூழல்தான் நிலவுகிறது...யாரும் யாருக்காகவும் சிரமப்படத் தயாரில்லை இன்று...இதுவே நிலைமை...குடும்பத்தில் சண்டையில்லாமல் கழிந்தால் சரி என்கிற நிலைதான்.

 

திருஷ்டிக் கயிறு..வண்டி ஒட்ட நிதானம் வந்த விதம் சிறப்பு...தன்னை நம்புவதே...தன்னம்பிக்கை...நிறைவான கதை.

மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருக்கிறது நிரஞ்சனின் இறப்பு. மரம் தானே உதிர்க்கும் எவ்வெவ் இலைகளை...

ஞானம்...

நான் மரம்...நீ இலை...அற்புதமான கதை.

 

இப்படி இன்னும் 15 கதைகள் உள்ளன இத் தொகுப்பில்...எல்லாம் குறைந்த அளவிலான பக்கக் கதைகள்.வாசிக்கக் கஷ்டமில்லாதவை. கீதைக்குப் பதினெட்டு அத்தியாயம்போல் இத்தொகுப்பிற்கும் 18. வாழ்க்கை அனுபவங்களை, அறத்தை, நன்னெறியைச் சுட்டிக் காட்டும் இக்கதைகளும் கற்றுணரும் தகுதியுடையவைதான். மனிதன் மிகச் சிறந்த விவேகியாக மாறுவதும், முதிர்ச்சியடைவதும், தன் சொந்த அனுபவத்தினால் மட்டும் அல்லவே...? அந்தப் பணியை நல்லிலக்கியங்களும் செய்கின்றனவே...வாசிப்பு மனிதனை மேம்படுத்துவது திண்ணம். அது தேர்வு செய்யும் புத்தகங்களிலிருக்கிறது....

 

இது இவருடைய முதல் சிறுகதைத் தொகுதியாம்.நம்பத்தான் முடியவில்லை. தனி மரம், புழுதி மண், ஸ்வஸ்திக் சாமியார் என்ற மூன்று பரிசு பெற்ற சிறுகதைகள் இத்தொகுதியை அலங்கரிக்கின்றன. வாதூலனின் தினமணிக் கட்டுரைகள் அவரது முதிர்ந்த சிந்தனைக்கு அடையாளம். அதற்கு முன்னோடி இக்கதைகள்...

                                                            ---------------------------

 

 

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...