மறக்க முடியாத மனிதர்கள்-வண்ணநிலவன்-வாசிப்பனுபவம்-உஷாதீபன் வெளியீடு:- காலச்சுவடு, நாகர்கோயில்.
எழுத்தாளர்களின் படைப்புக்களை விரும்பிப் படிப்பதும், அந்த எழுத்து பற்றி நண்பர்களிடம், வாசகர்களிடம் சிலாகிப்பதும் வாசிப்பு ரசனையின்பாற்பட்ட, இலக்கிய ஆர்வம் சார்ந்த விஷயம். ஆனால் அந்தப் படைப்பாளியை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்று ஆர்வம் கொள்வதும், அவரோடு உரையாட வேண்டும் என்று விரும்புவதும், அடிக்கடி போய்ப் பார்த்து நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுவும் எல்லாருக்கும் உகந்ததாகவும், சாத்தியமானதாகவும் என்றும் இருந்ததில்லை. அவரவர் விருப்பப்படி அது மாறுபடும் தன்மையுடையது.
படைப்பு என்ன சொல்கிறது என்று மட்டுமே அறிந்து கொள்வதுவும், படைப்பாளியைப் போய்ப் பார்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை எனவும், பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். இப்போதும் அப்படிச் சொல்லும், இருக்கும் நடைமுறை இருந்துதான் வருகிறது.
ஆனால் அறுபது எழுபதுகளில் வார இதழ், மாத இதழ், சிற்றிதழ்களில் வந்த படைப்புக்கள் படிக்கப்பட்ட காலத்தில் அந்தப் படைப்பாளியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்றும் அவரோடு பேசி விட வேண்டும் எனவும், நட்பை ஏற்படுத்திக் கொண்டு தொடர்ந்து கடிதப் போக்குவரத்து கொள்ள வேண்டும் என்றும் பலர் இருந்திருக்கின்றனர்.
ஒரு வேளை அப்போது படைப்பாளிகள் என்பவர்கள் குறைவாக இருந்ததுவும், பத்திரிகைகளும், சிற்றிதழ்களும் எண்ணிக் குறிப்பிடும்படியாக சில என்று வந்து கொண்டிருந்ததுவும் காரணமாய் இருந்திருக்கலாம். அத்தோடு மேன்மையான சிந்தனைகளை உள்ளடக்கி மிகத் தரமான இலக்கியப் படைப்புக்கள் உருவாகிக் கொண்டிருந்த பொற்காலம் அது என்றும் அறுதியிட்டுச் சொல்லலாம். வாழ்க்கையே அதுதான் என்று பலர் இருந்த காலம் என்பதால் மிகுந்த ஊக்கத்தோடு, அர்ப்பணிப்பும் ஆத்ம சுத்தியும், கொண்ட எழுத்துக்கள் உருவாயின என்று உறுதி செய்து கொள்ளலாம்.
அப்படியான ஒரு கால கட்டத்தில், தான் சந்தித்த அதி முக்கியமான சில எழுத்தாளர்களையும், அவர்களோடு பழக நேர்ந்த அனுபவங்களையும், கடிதப் போக்குவரத்து கொண்ட காலங்களில் கிடைத்த மகிழ்ச்சியையும், மயக்கத்தையும், திருப்தியையும், அவர்கள் தன் வாழ்க்கைக்கு எந்தெந்த வகையிலெல்லாம் சமயங்களில் உதவி செய்திருக்கிறார்கள் என்கிற நன்றியோடு கூடிய நினைவு கூர்தலையும், விரும்பிப் படித்த பல அருமையான எழுத்தாளர்களின் படைப்புத் தன்மைபற்றியும், சிறந்த படைப்புக்கள் பற்றியும் தன்னுடைய அனுபவங்களின், வாசிப்பின் அடையாளமாக, இந்தத் தொகுப்பில் விரிவாக முன் வைக்கிறார் எழுத்தாளர் திரு. வண்ணநிலவன் அவர்கள்.
பல எழுத்தாளர்களின் கூடப் பிறந்தது வறுமை. வேலையில்லாத் திண்டாட்டம். இந்த மனச் சுமைகளோடு அல்லாடிய காலங்களில்தான் சிறந்த படைப்புக்கள் அவர்களிடமிருந்து உருவாகியிருக்கிறது. அதுவே அவர்களின் பசியைத் தணித்திருக்கிறது. அல்லது மனதை நிறைவடையச் செய்து, பசியை மறக்கச் செய்திருக்கிறது.
வண்ணநிலவனுக்கும் இம்மாதிரியான அனுபவங்கள் கிட்டியிருக்கின்றன. வல்லிக்கண்ணன், வண்ணதாசன், விக்ரமாதித்யன், கலாப்ரியா, பா.செயப்பிரகாசம், கி.ராஜநாராயணன் என்று ஒவ்வொருவராக அவர் சந்திக்க ஆரம்பித்த பின்புதான் நிறையப் புத்தகங்களும் அவருக்குப் படிப்படியாக அறிமுகமாகி, வாசிப்புப் பழக்கம் அவரிடம் தீயாய்ப் பற்றிக் கொள்ள, அவர்கள் அறிமுகப்படுத்திய ஏராளமான புத்தகங்களைப் படித்துத் தள்ளியதன் விளைவாக எழுதும் ஆர்வம் அதிகரிக்க, பிறகு எழுத ஆரம்பித்து, அவையும் ஒவ்வொன்றாகப் பிரசுரமாக ஆரம்பித்த வேளையில் அவரின் சந்தோஷத்திற்கும், திருப்திக்கும், இலக்கிய ஆர்வத்திற்கும் ஒரு எல்லையே இல்லாமல் விரிந்து, கடல்புரத்தில், ரெயினீஸ் ஐயர் தெரு, கம்பா நதி போன்ற சிறந்த நாவல்களும், பல அற்புதமான சிறுகதைகளும் அவரிடமிருந்து உதித்து அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.
இலக்கியச் சிந்தனை அமைப்பின் அத்தனை கதைகளும் மிகத் தரமானதாய் இருந்த கால கட்டம் அது. எழுபதுகளிலிருந்து அத் தொகுதிகளைக் கண்ணும் கருத்துமாய்ச் சேகரித்துப் படித்தவர்களுக்குத் தெரியும்...எப்படிப்பட்ட முத்து முத்தான கதைகளெல்லாம் அப்போது வந்திருக்கின்றன என்று. எழுத ஆரம்பித்த காலத்தில், தன்னுடைய சிறுகதை மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சி இன்னும் மேலே என்று தன்னை ஊக்கப்படுத்தியது எனக் கூறும் வண்ணநிலவன், தனக்குப் பிறகே இலக்கியச் சிந்தனையின் தேர்வு வண்ணதாசனுக்குக் கிடைத்தது என்றும், ஆனால் அடுத்தடுத்து ஆண்டின் சிறந்த சிறுகதைகளாக அவை தேர்ந்தெடுக்கப்பட்டன என்று கூறி, வண்ணதாசனின் எழுத்துக்களை அத்தனை ஆர்வத்தோடு விழுந்து விழுந்து படித்தவன் நான் என்றும் அவரின் மென்மையான எழுத்து நடையும் கதை சொல்லும் நயமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன என்றும் அவருடைய படைப்புக்களுக்கான ஆழமான ரசிகன் நான் என்றும் பெருமையோடு அவர் எடுத்துரைக்கும்போது, வண்ணநிலவனின் தன்னடக்கமான, ஆத்மார்த்தமான கருத்துக்களை எண்ணி நம் மனது பூரிப்படைகிறது.
திடீரென்று நினைத்த போதெல்லாம் அவர் வீட்டுக்குச் சென்று விடுவேன். சட்டையில்லாமல் வெற்றுடம்புடனே வந்து அமர்ந்து “மெதுவாகப் பேசுவோம்” என்ற சைகையோடு முகம் சுளிக்காமல் பேசிக் கொண்டிருப்பார். அது தாமோதர ரெட்டி தெரு வீடு. என்று அசோகமித்திரனைச் சந்தித்ததை நினைவு கூர்கிறார்.
அவரின் பெரும்பாலான படைப்புகளில் அடிநாதமாக ஒலிப்பது வாழ்வின் மாளாத சோகமே. பழைய கருப்பு-வெள்ளைப் புகைப்படங்களைப் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது அவரது கதைகளைப் படிக்கும்போது.... என்று ரசைனையோடு எடுத்துரைக்கிறார்.
சென்னையில் கண்ணதாசனில் சேர்ந்த பிறகு, நாகர்கோயிலில் இருந்த சுந்தர ராமசாமி அவர்கள் தேர்ந்தெடுத்த இலக்கியச் சிந்தனை சிறுகதையான சார்வாகனின் “கனவுக் கதை“.படித்து பிரமித்துப் போனேன். சு.ரா. அவர்களைப் பார்க்காமலேயே அவர் மீது ஒரு வாஞ்சை ஏற்பட்டது எனக்கு என்கிறார். அவருடைய படைப்புக்களைப் படித்த பிறகு தோன்றியது இது-அதாவது புதுமைப்பித்தனின் மிகப் பண்பட்ட, மெருகூட்டப்பட்ட வாரிசு சுந்தரராமசாமி என்று விவரிக்கிறார்.
தி.க.சி. அவர்கள் தாமரையின் ஆசிரியப் பொறுப்பில் இருந்தபோது பல நல்ல கதைகள் வந்திருக்கின்றன. பெரும்பாலான சிறுகதைகள் வறுமையையே சித்தரித்தன என்றாலும் அவை அந்தந்தப் படைப்பாளிகளுக்கே உரிய அழகுணர்ச்சிகளுடன் சித்தரிக்கப்பட்டிருந்தன. பல சிறுகதைகள் கலாபூர்வமாகவும் வெற்றி பெற்ற யதார்த்தச் சிறுகதைகளாக இருந்தன என்று புகழ்ந்துரைக்கிறார்.
அம்பையின் முதல் சிறுகதைத் தொகுதி “சிறகுகள் முறியும்” . பிறகு வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. பல்வேறு வடிவ உத்தி சோதனைகளில் ஈடுபட்டுள்ளார் அம்பை இயற்கை மீதான ஈர்ப்பு அம்பையிடம் மிகுதியாக உண்டு. எல்லாவற்றிலும் ஆண்களால் உறிம்சிக்கப்படும் பெண்கள் பற்றிய கதைகளால் அவரது தொகுதிகள் நிரம்பி வழிகிறது என்று தெரிவிக்கிறார்.
1973 ல் முதன் முதலாக சென்னைக்கு வேலை தேடி வந்து, கண்ணதாசனில் சேர்ந்து பிறகு அது நின்றதும் 1976 ல் துக்ளக் பத்திரிகையில் வேலை கிடைத்தது. உடல் நலமின்மையினாலும், மனநலமின்றியும் துக்ளக்கை விட்டு விலகிய காலங்களில் என் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாமல், வெறுமே வந்து போய்க் கொண்டிருங்கள் என்று கருணையோடு கூறி எனக்கு ஆதரவளித்தவர் திரு சோ. அவர்கள். மூன்று நான்கு முறை வேலையை விட்டு நிற்கவும் பிறகு சேரவும் என்று மாறி மாறிச் செய்து கொண்டிருந்தேன். எந்த முறையும் என்னை எதுவும் சொன்னவரில்லை அவர். திடீர் திடீரென்று வேலையை விட்டு நிற்பதும், பிறகு போய் நிற்கையில ஏற்றுக் கொள்வதும் என்று என்னை அன்பால் அரவணைத்த பெருந்தகை. அவர் ஒரு அறிவுஜீவி மட்டுமல்ல. அபூர்வமான மனிதரும் கூட....என்று நெக்குருக தன் துக்ளக் பணி அனுபவங்களை எடுத்துரைக்கிறார். கடைசியாக 2007 முதல் இன்றுவரை தொடர்ந்து பணியாற்றி வருவதைச் சொல்லி அது ஆத்மார்த்தமாய் எனக்கு ஏற்பட்ட பிணைப்பு என்று முடிக்கிறார்.
ஒரு படைப்பின் சகல குணாம்சங்களையும் அலசிப் பார்ப்பதுதான் நுணுகி நுணுகிப் பார்ப்பதுதான் விமர்சனம். ஆனால் க.நா.சு.வின் பார்வை ரசனையின்பாற்பட்டதாகும். அவரது கட்டுரைகள் ரசனை அடிப்படையில் அமைந்தவை. விமர்சனங்களல்ல...என்று எல்லோரும் இலக்கிய விமர்சகர் என்று க.நா.சு.வை விளித்துரைக்கையில் அதை மறுதலிக்கிறார் வண்ணநிலவன்.
வல்லிக்கண்ணனைத் தேடிச் சென்று சந்தித்தது, அவரோடு ஏற்பட்ட கடிதத் தொடர்புகள், கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், க.நா.சு., தி.ஜானகிராமன், கண்ணதாசனைச் சந்தித்தது, கவிஞர் வேலை கொடுத்தது, எல்லாவற்றிற்கும் மேலாக துக்ளக் சோ அவர்கள்பற்றிய வண்ணநிலவனின் நினைவுகள் அவருக்கே உரிய உள்ளன்போடு கூடிய நடையில், எளிமையான சொல்முறையில், மிகையின்றி யதார்த்தமாக வெளிப்படுகின்றன.
மறக்க முடியாத மனிதர்கள் என்ற தலைப்பில் தொகுதி 2, 3 என்று இணையத்தில் மேலும் காணப்படுகின்றன. ஆனால் அவைகளின் அட்டைப் படங்களை நோக்குகையில் முதல் தொகுதியின் படைப்பாளிகள் படங்களே காணப்படுகின்றன. இன்னும் எந்தெந்த எழுத்தாளர்களின் நினைவுகள் பகிரப்பட்டிருக்கின்றன என்று உள்ளிருப்பதை அறிய முடியவில்லை.
வண்ணநிலவனின் இந்த ஸ்வாரஸ்யமான அனுபவப் பகிர்வுகள் இன்னும் பல படைப்பாளிகளைப் பற்றிய தகவல்களையும், அவர்களுடனான அனுபவங்களையும் அறிய மிகந்த ஆவலை ஏற்படுத்துகின்றன என்பதே இந்த நூலுக்கான சிறப்பு.
--------------------------------------