29 அக்டோபர் 2019
24 அக்டோபர் 2019
திரு.டி.ஆர்.ராமச்சந்திரன் - கட்டுரை
நகைச்சுவை நடிகர் கட்டுரை
திரு.டி.ஆர்.ராமச்சந்திரன் ---------------------------------------- “இயல்பையே நடிப்பாக்கி வெற்றி கண்டவர்“
இவர் திரையில் தோன்றும்போதே குதூகலித்துக் கை தட்டி ரசிக்கப்
பழகிக் கொண்டார்கள். இவரின் முட்டைக்கண் பார்வையையும், அது பண்ணும் சேட்டைகளையும் ரசித்தார்கள்.
அந்தக் கண்ணோடு சேர்ந்த முகத்தையும், அதில் தோன்றும் அசட்டுச் சிரிப்பையும், அந்தச்
சிரி்ப்போடு கலந்த பாவங்களையும், அப்போது தோன்றும் உடல் மொழிகளையும் அவை அனைத்தும்
கதையோட்டத்தோடு மிகப் பொருத்தமாய் நடைபோடும் அழகையும் வியந்து ரசித்து மகிழ்ந்தார்கள்.
அவரின் அப்பாவித்தனமான தோற்றமே அவருக்கு ப்ளஸ் பாய்ன்ட். இப்படி மைனஸ்ஸாக இருந்ததைப்
ப்ளஸ்ஸாக மாற்றியவர்கள் பலர். அதில் திரு.டி.ஆர்.ராமச்சந்திரன் மிக முக்கியமானவர்.
காரணம் இயல்பிலேயே, உடம்போடு ஒட்டியிருந்த
அந்த அப்பாவித்தனம்.
படத்தில் இவர் இருக்கிறாரா என்று அறிந்து சந்தோஷப்பட்டார்கள்.
வரும் படங்களிலெல்லாம் நகைச்சுவைப் பாத்திரம்தான் என்றாலும், ஒவ்வொன்றும் அந்தந்தப்
படத்தின் கதைக்கேற்றாற்போல் வெடிச் சிரிப்பாய் அமைந்து, பார்வையாளர்களைக் குலுங்கச்
சிரிக்க வைத்ததை மீண்டும் மீண்டும் அலுக்காமல் பார்த்து அந்த இயல்பு நடிப்பில் தங்களை இழந்தார்கள். கதை ஓட்டமும், நாயகன்
நாயகியின் முக்கியத்துவமும் விஞ்சி நின்றாலும், அவ்வப்போதைய திடீர்த் திருப்பங்களுக்கும்,
விலகாத குழப்பங்களுக்கும் காரணமாய் இருக்கும் கதாபாத்திரத்தில் இவர் இருந்ததால், அவரின்
வருகையைத் திரையில் எதிர்பார்த்தே காத்துக் கிடந்து ரசித்தார்கள்.,
1940 முதல்
1960 காலம்வரை தன்னைத் தமிழ்த் திரையில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு தொடர்ந்து அடுத்தடுத்த
படங்களில் ரசிகர்களுக்கு அலுக்காமல், தோன்றி அவர்களின் மனதில் முக்கிய இடம் பிடித்தவர்தான்
நகைச்சுவை நடிகர் திரு.டி.ஆர்.ராமச்சந்திரன்.
வெறும் நகைச்சுவை
நடிகர் என்று மட்டும் கூறிவிடுவது நன்றன்று. ஆரம்ப காலங்களில் நாயகனாய்ச் சில படங்களில்
வைஜயந்திமாலா போன்ற முக்கிய நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்துப் புகழ் பெற்றவர். இளம்
பிராயம் முதல் நடிக்க வந்துவிட்ட இவர் அறுபதுகள் வரை தொடர்ந்து திரையில் தோன்றிக்கொண்டே
இருந்தவர்தான். பின்னர்தான் ஒரு இடை-வெளி விழுந்தது. எண்பதுகள் வரை தமிழ்த் திரையுலகில்
விட்டு விட்டு வலம் வந்தார். ஒரு கட்டத்தில் போதும்…இனி தொடருவதற்கில்லை என்று முடிவெடுத்து
குடும்பத்தோடு அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.
திருக்காம்புலியூர்
ரங்க ராமச்சந்திரன் என்பதுதான் இவரது முழுப் பெயர். 1917ல் பிறந்த இவர் 1990 ல் மறைந்தார்.
லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் தனது 73 வது வயதில் காலமானார்.
ஒரு நடிகனுக்கு
அவனது உடல் மொழியும், கண்களும், முக பாவங்களும் நடிப்பிற்கான ஆதாரங்கள். டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு
அவரது கண்களைத்தான் முக்கியப்படுத்திச் சொல்ல வேண்டும். அதுவே மக்களை அத்தனை சிரிப்புக்குள்ளாக்கியது.
Saucer eyes என்று இவரது விழிகளின் சேஷ்டை மக்களிடையே அத்தனை பிரபலமாய் விளங்கியது.
கண்கள் காதலுக்கு மட்டும்தான் பேசுமா? எல்லாவித உணர்ச்சிகளையும் காட்டும் வல்லமை பெற்றது
அது. எண்ணம், மனது, பேசும் வார்த்தைகள் இவற்றோடு சேர்ந்து பயணிப்பது. அதனை எத்தனை திறமையாகப்
பயன்படுத்துகிறோம் என்பதே ஒரு நடிகனுக்கான பயன்பாடு. நவரசங்களை வெளிப்படுத்த விழிகளின்
பங்கு அதி முக்கியம். நாட்டியப் பேரொளி பத்மினியை ஒரு கணம் நினைத்துக் கொள்ளுங்கள்.
நடிகர்திலகத்தின் திறமையை நினைத்துப் பாருங்கள்.
ஒரு நடிகன்
முதலில் தனக்குத்தானே ஒரு பெரும் ரசிகனாய் இருக்க வேண்டும். கற்பனை கலந்தவனாய், அதை
அணு அணுவாக உணருபவனாய், நல்ல ரசனை உள்ளவனாய் இருத்தல் அவசியம். அப்பொழுதுதான் ஏற்றுக்
கொள்ளும் கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்குள் தன்னை இணைத்துக் கொள்ள முடியும். உள்ளே
புகுந்து பயணிக்க முடியும்.ஒரு படம் முடியும்வரை அந்தப் பாத்திரமாகவே வலம் வர முடியும்.
வலம் வர வேண்டும். அதுதான் அவன் கடமை. அதுவே தொழில் சுத்தம். அப்பொழுதுதான் மற்றவர்களை அந்தப் பாத்திரமாகவே உணர
வைக்க முடியும். இது இயற்கையாகவே பலருக்கும் பொருந்தி வந்தது. ஒரே முகம்தான். ஆனாலும்
நடிக்கும் படத்திற்கேற்றாற்போல உடனடியாக அந்தக் கதைக்கு ஏற்ற நடிகனாய் தன்னை இருத்திக்
கொள்ள முடிந்தது. அதில் ஒருவர்தான் டி.ஆர்.ஆர். தொழில் பக்தி மிகுந்த காலம் அது. பக்தி
சிரத்தையோடு, பயந்து பயந்து நடித்தார்கள். தங்கள் பெயரை நிலைநாட்டிக் கொண்டார்கள்.
பிரபலமான நடிகர்கள் அத்தனை பேரோடையும் நடித்துப் புகழ்
பெற்றவர் இவர். கூட நடிக்கும் அந்தக் கதாநாயக நடிகரை விட தன் மீது அதிகக் கவனம் விழும்படி
இருக்கும் இவர் பங்கேற்றிருக்கும் காட்சிகள். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என்று அந்தக்
காலத்தில் மிகவும் பிஸியாக இருந்த நடிகர்களின் படங்களில் இவரும் கட்டாயமாய் இருந்தார்.
இவரும் இருக்கிறார் என்று மகிழ்ந்தே இவரது நகைச்சுவைக்காக அந்தப் படங்களைத் திரும்பத்
திரும்பப் பார்த்து ரசித்தார்கள் நம் தமிழ் மக்கள். நாயகனோடு சேர்ந்து ஏற்றுக் கொண்டார்கள்.
1938 ல்
வெளிவந்த நந்தகுமார்தான் இவரது முதல்படம். அது வெற்றியில்லை என்கிற நிலையில் 1941 ல்
வெளிவந்த சபாபதி- AVM தயாரிப்பிலான திரைப்படம் இவரை உயரத்துக்குக் கொண்டு போனது. பிறகு
வரிசையாக கண்ணகி, நாம் இருவர், ஞான சௌந்தரி, வைஜயந்திமாலாவுடன் ஜோடி சேர்ந்த வாழ்க்கை
என்று படங்கள் வர ஆரம்பித்தன.
கல்யாணம்
பண்ணியும் பிரம்மச்சாரி படத்தில் நடிகர்திலகத்துடன் சேர்ந்து அடிக்கும் கொட்டம் சொல்லி
மாளாது. அந்தப் படம் இன்றும் புதிய தலைமுறை இளைஞர்கள் பார்த்து ரசிக்கும் வண்ணம் அமைந்திருக்கும்
சிறந்த நகைச்சுவைத் திரைப்படம். பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் தயாரிப்பில் வந்தது. ப.நீலகண்டன் அதன் இயக்குநர்.
ஒரு நடிகனுக்குக்
குரல் என்பது மிக முக்கியம். அது கட்டைக் குரலாக இருந்தாலும் சரி, வெண்கலப்பாத்திரத்தில்
அடித்த கணீர்க் குரலாக இருந்தாலும் சரி, அல்லது மென்மையான இனிமைக் குரலாக இருந்தாலும்
சரி….உச்சரிப்பு என்பது எடுத்து வைத்தது போல் பிசிறின்றி இருத்தல் வேண்டும். வசனங்களை
உச்சரிக்கும்போது அது, என்ன சொன்னார்…? என்கிற
சந்தேகத்தை எழுப்பாமல், திரும்ப ஒரு தரம்...சொல்லுங்க….என்று கேளாமல், பளிச்சென்று புரிவதுபோல், அந்த வரிகளுக்கான பாவங்களை
உள்ளடக்கியும், பொருத்தமான நடிப்போடு கலந்தும் மிளிர வேண்டும். அந்தத் தெளிவு இவரின்
நடிப்பில் இருந்தது.
முகமும்,
கண்களும், கன்னக் கதுப்புகளும், தாடையும் வாயும், ஏன் மூக்கும் காதுகளும் கூடச் சேர்ந்து நடிக்க வேண்டும்.
அத்தோடு கைகளும், கால்களும் இவற்றோடு ஒன்றிக் கொண்டாக வேண்டும். இதெல்லாம் அந்தக்கால
நகைச்சுவை நடிகர்களின் பிறவியோடு ஒட்டியதாக இருந்தது என்பதுதான் உண்மை.காரணம் நாடக
அனுபவம் அவர்களைப் புடம் போட்டிருந்தது. டி.ஆர்.ஆர்.க்கு நாடக அனுபவம் இருந்ததாகத்
தகவல் இல்லை.. ஏ.கருணாநிதி, டி.எஸ்.துரைராஜ்,
டணால் தங்கவேலு, நாகேஷ் போன்றவர்களை நான் சொல்லும் இந்த லட்சணங்களோடு சேர்த்து நினைத்துப்
பாருங்கள்….அப்போது புரியும் தாத்பர்யமும்,
நடிப்பின் இலக்கணமும்.
டி.ஆர்.ராமச்சந்திரனைப்
பார்த்தாலே சிரிப்பு வந்து விடும். காரணம் அவரின் அப்பாவித்தனமான முகமும், மேடுதட்டிய
அசடு வழியும் சிரிப்பும், முட்டைக் கண்களும், காதில் விழும் வார்த்தைக்கெல்லாம் உடம்போடு
ஒரு உதறு உதறிக்கொண்டு பதறியது போலும், நிறையப் புரிந்தது போலும் அவர் பேசும் பேச்சும்,
நமக்கு விடாத சிரிப்பை வரவழைக்கும் என்றாலும், இந்த அப்பாவி எங்கே போய் ஏமாறப் போகிறானோ,
யார் இவனை ஏமாற்றப் போகிறார்களோ என்று அவர் மீது கரிசனம் கொண்டு பயந்தவாறே படம் பார்க்கும்
அந்தக் கால ரசிகர்கள்….அவருக்காகப் பரிதாபப் படவும் செய்து, கடைசியில் அது சினிமாதானே
என்று உணர்ந்து தங்களைத் தேற்றிக் கொண்டார்கள். தொள தொளா பேன்ட் போட்டுக் கொண்டு நிற்பதும்,
கால்கள் நடுங்கும்போது பேன்ட்டோடு சேர்ந்து வெளிப்படும் அந்த நடுக்கம் நமக்கு அத்தனை
சிரிப்பை வரவழைக்கும். நடிகனுக்கு காஸ்ட்யூம்ஸ்
மிக முக்கியமல்லவா? பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்த அதுதானே முக்கியப் பங்கு வகிக்கிறது!
தன் காதலியிடமே,
தான் மிகவும் புத்திசாலி என்று சொல்லாமல் சொல்லி, விவரமாகப் பேசுவதுபோல் பேசி, கடைசியில்
ஏமாந்து வேறு வழியில்லாமல் போயும் போயும் வீட்டு வேலை செய்யும் ஒரு வேலைக்காரப் பெண்ணையா
தான் காதலித்துக் கல்யாணம் செய்து ஏமாந்தோம்
என்று அவர் நொந்து போய், தன் வீட்டிற்கு
வந்து தாறுமாறாய் நடந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் காட்சி ரொம்பவும் நகைச்சுவையானதும்,
படத்திற்கே அதி முக்கியமானதும் ஆகும்.
படிக்காத மேதை படம். அது வெறும் படமல்ல, பாடம் என்று மூத்த தமிழ் சினிமா
ரசிகர்கள் அறிவார்கள். டி.ஆர்.ராமச்சந்திரன் அந்தப் படத்தில் ராவ்பகதூர் எஸ்.வி.ரங்காராவின்
மகனாவார். பெயர் ரகு. ரிடையர்டு மிலிட்டரி ஆபீசர் ஒருவரின் வீட்டில் வேலை செய்து விட்டுத்
திரும்பும் நடிகை சகுந்தலா (சி..ஐ.டி. சகுந்தலா-பின்னாளில்) வைப் பார்த்து அவள் அந்த
மிலிட்ரி ஆபீசரின் மகள் என்று நினைத்துக் கொண்டு காதலிக்க ஆரம்பித்து விடுவார். எங்கப்பா
யார்னு உங்களுக்குத் தெரியுமா? என சகுந்தலா வாயைத் திறக்கும்போதெல்லாம் அவர் வாயை அடைத்து,
இத்தனை நாளா உன்னோட பழகறேன்…இது கூடவா தெரியாது…அதுதான் உங்க வீட்டு வாசல்லயே பெரிய
பெரிய எழுத்துல போட்டு போர்டு வச்சிருக்கே…ரிடையர்டு மிலிட்டரி ஆபீசர் தாமோதரன்னு….அதக்
கூடவா படிக்காம இருந்திருப்பேன்…என்ன நீ இப்டி கேட்கிறே என்னப் பார்த்து….என்பார்…..
விவரமாய் இருப்பதாய் நினைத்துக் கொண்டு தானே வலிய ஏமாந்து
வலையில் போய் மாட்டும் இந்தக் காட்சிகளும், பின்னணியும் மிகவும் நகைச்சுவையானதும்,
சீரியஸ் ஆனதும் ஆகும்.
பக்கத்துலே கன்னிப் பெண் இருக்கு…..கண் பார்வை போடுதே
சுருக்கு….. – என்ற ஏ.எல்.ராகவனின் குரல் (நடிகை எம்.என்.ராஜத்தின் கணவர்) ராமச்சந்திரனுக்கு
அத்தனை பொருத்தமாய் இருக்கும்….ஒஉற்.Nஉறா…(ஓகோ….!)
.என்று அவர் அப்பாவியாய் வெட்கப்பட்டுக் கொள்வதைக்
கூடப் பாட்டிற்கிடையில் ராமச்சந்திரனாகவே பாடிக் காண்பித்திருப்பார் ஏ.எல்.ராகவன்.
இந்த பாரு…நான் அந்தஸ்து தெரியாம அடியெடுத்து வைக்கமாட்டேன்…நல்லா
கேட்டுக்கோ…நானோ ராவ்பகதூர் சன்…..
(இடைமறித்து) நான் வந்து…..
ரிடையர்ட் மிலிட்ரி ஆபீசர் டாட்டர் தாரணி……ஒண்ணுக்கொண்ணு
மேட்சிங் கரெக்டா இருக்கே…ஏன் பயப்படுறே…வா போவோம்….என்பார்.
சரி…சரி…எங்கப்பாகிட்டே நானே சொல்லி அனுமதி வாங்கறேன்…அதுவரை
நீங்க பொறுமையா இருங்க…என்று சகுந்தலா சொல்ல…
ம்….ம்….ம்…இன்னுமா பொறுமையா இருக்கச் சொல்றே…சரி..உனக்காக
இருக்கேன்……. ஆனா ஒண்ணு…கன்ட்ரோல் அவுட்டாச்சு…அப்புறம் எம்மேல வருத்தப்படக் கூடாது…என்ன…?
கல்யாணம் நடந்து விடும். கொட்டாப்புளி ஜெயராமன்தான் ரிடையர்ட்
மிலிட்ரி ஆபீசர்…அவர் தலைமையில் திருமணம் நடக்க…அவரே இவளின் அப்பா என்று நினைக்க, காரில்
ஏறப் போகும்போது…அங்க எங்க போறே….ஏறு இந்த மாட்டு வண்டில…..என்பார் துரைராஜ். அவர்தான்
தாரணியின் தகப்பன் என்று தெரிய பதறுவார் ராமச்சந்திரன். ஐயையோ…நான் ராவ்பகதூர் மகனாச்சே…என்
அந்தஸ்து என்னாறது? என்பார்.
இதையெல்லாம் காதலிக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்….காதலிச்சிட்டு
கைவிட்டுட்டுப் போகலாம்னு நினைச்சியா…? என்று உருண்டு உருண்டு வந்து நின்று கேட்பார்
துரைராஜின் மனைவியான டி..பி.முத்துலட்சுமி. ஆளும் உருண்டை…விழிகளும், முகமும், குரலும்
பேசும் பேச்சும்….ரசிகர்களை அப்படி ஈர்க்கும். முத்துலெட்சுமி தங்கவேலுவோடு சேர்ந்து
செய்த அறிவாளி பட நகைச்சுவை யாராலும் மறக்க முடியாதது. அதான் எனக்குத் தெரியுமே….என்று
சொன்னாலே புரிந்து கொண்டு சிரிப்பார்கள்.
அம்மா கண்ணாம்பாவிடம் சென்று தன் காதலைப் பற்றிச் சொல்ல
நிற்க, கண்ணாம்பா சௌகாரை மனதில் நினைத்துப் பேச….ஓல்டன் ம்மி ஓல்டன்…..மம்மி…நீங்க
எந்தப் பெண்ணைப் பத்திப் பேசறீங்க…? என்று விளித்து, கிரேட் ப்ளென்டர் மம்மி…கிரேட்
ப்ளென்டர்….நான் சொல்றது… ரிடையர்டு மிலிட்டரி ஆபீசர் டாட்டர் தாரணியைப் பத்தி என்று
சொல்லி கண்ணாம்பாவைப் பதற வைப்பார். தாரணியாவது….ஊரணியாவது….அவன்
கெடக்கான் அத்தை….குண்டுக்கட்டா தூக்கி மணவறைல உட்காத்தி …தாலியக் கட்டுறான்னா கட்டிட்டுப்
போறான்….என்பார் ரங்கன். சிவாஜி.
அந்தத் தாலியை எடுத்திட்டுப் போயி என் காதலி தாரணி கழுத்துல
கட்டுவேன்….தண்டால் எடுக்கிற உனக்கு..என் தாரணியைப்பத்தி என்னடா தெரியும்…. என்று எதிர்த்துப்பேசி
அந்த இடம் விட்டு அகலுவார்.
ராவ்பகதூர் குடும்பத்தில் இப்படி ஒரு கோமாளியா? என்று
படம் பார்ப்போரை சங்கடப்படுத்தும் அந்தக் கதாபாத்திரத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனைப்
பொறுக்கிப் போட்டதும், அதைத் தன் அப்பாவித்தனமான நடிப்பாற்றலால் (நடிப்பாற்றல் என்று
சொல்வதை விட அதுதான் அவரது இயல்போ என்கிற அளவுக்குப் பொருந்திப் போனவர்) சிறப்புச்
செய்த டி.ஆர்.ஆரும் ஆகிய எல்லாமும் இயக்குநர்
திரு ஏ.பீம்சிங் அவர்களின் திறமை என்றுதான்
சொல்வேன். எந்தக் கதாபாத்திரத்திற்கு யார் பொருந்துவார்கள் என்கிற டைரக்டரின் கணிப்பு
கவனிக்கத்தக்கது.. படிக்காத மேதை படத்தின் வெற்றிக்கு டி.ஆர்..ராமச்சந்திரனின் கதாபாத்திரம்
மிக முக்கியமான ஒரு அங்கம் என்று கூடச் சொல்லலாம்.
டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த எத்தனையோ படங்கள் நம் நினைவில்
நிற்கக் கூடியவை. அறிவாளி, இருவர் உள்ளம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. தில்லானா மோகனாம்பாள்
திரைப்படத்தில் கூட வரதன் என்கிற பாத்திரம் ஏற்றிருப்பார். மோகனா சொல்வதைத் தட்டாமல் கேட்பது அவர் வேலை. பத்மினி சொன்னதுபோல் நாகப்பட்டிணம்
சென்று அங்கு மனோரமா நடத்தும் நாடக நிகழ்ச்சிக் கொட்டகைக்கு நாதஸ்வர வித்வான் சண்முகசுந்தரத்தைப்
பார்க்கச் செல்வார். வெளியே நிற்கும் காவல்காரர்
அவரை உள்ளே விடமாட்டார். தடுத்து நிறுத்துவார். சாயங்காலம்தான் ஆட்டம். அப்போ டிக்கெட்
வாங்கிட்டு வாங்க…உள்ளே விடுவாங்க…என்பார்.
நாதஸ்வரம் வாசிப்பார்ல, அவர் இங்க இருக்கிறதா சிக்கல்ல
சொன்னாங்க…அவரைப் பார்க்கணும் என்று சொல்ல,
காவல்காரர், அவருக்கு நீங்க என்ன வேணும்? என்று கேட்பார். இவரோ அந்தக் கேள்வியில் எரிச்சலடைந்து,
“ம்ம்ம்…..மச்சான் வேணும்…என்று அவர் மூஞ்சிக்கு முன்னாடி கையை நீட்டித் திட்டுவதுபோல்
சொல்லி வைக்க, ஓ…மச்சானா….சரி…சரி…போங்க உள்ளே….என்று விட்டு விடுவார். ஒரு வசனத்தை
எந்த இடத்தில் எப்படிச் சொன்னால் எடுபடும் என்கிற பாவம் கனகச்சிதமாய் இருக்கும் அவரிடத்தில்.
மனோரமா தன்னை மலேயாவுக்கு கான்ட்ராக்ட் போட்டு நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பதாய் சண்முகசுந்தரத்திடம்
சொல்ல…நானும் வரேன் என்று மனோரமாவின் கையைப் பிடித்துக் கொண்டு சிவாஜி உருகுவார். இந்தக்
காட்சியைத் தவறாகப் புரிந்து கொண்டு, அவர் மேல் கோபம் கொண்டு, விலக்கிய திரையை விசுக்கென்று
மூடுவார் டி.ஆர்.ஆர். வெளியே வந்து இடுப்புத் துண்டை கோபத்தில் படக்கென்று கக்கத்தில்
இடுக்கிக்கொண்டு கோபமாய் கொட்டகைப் பக்கம் ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு நடையைக்
கட்டுவார். பத்மினியிடம்போய், அந்த நாடகக்காரி கையைப் பிடிச்சிக்கிட்டுத் தன்னை மறந்து
பேசிட்டிருக்கிறதை என் ரெண்டு கண்ணால பார்த்தேன்…என்று சொல்லி விடுவார். பிறகுதான்
பத்மினி, தானே நேரில் சென்று சண்முகசுந்தரம் மலேயா செல்வதைத் தடுத்தாக வேண்டும் என்று
புறப்படுவார். சிறு பாத்திரமானாலும் அவரின் நடிப்பு நினைவில் நிற்கும். ரசிக்கும்படியும்
இருக்கும்.
திரைப்படங்களின் காட்சிகளைப் படம் பிடிக்கும்போது கைகளைத்
தொங்கவிட்டு நிற்கக் கூடாது என்று ஒரு மரபு உண்டு. நான்கு பேர் நின்று பேசும்போதோ அல்லது
ரெண்டு பேரோ பேசும்போது என்றே வைத்துக் கொள்ளுங்களேன்… பேசுபவர் உரிய பாவங்களோடு, கைகளைத்
தக்க அர்த்தங்கள் புலப்படுமாறு அசைத்து ஆட்டிப் பேச வேண்டும். அதுபோல் எதிராளி தன் கைகளை முழங் கையோடு
மடக்கி விரல்களைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டு
அல்லது கையை ஒன்றின் மேல் ஒன்று வைத்துக் கொண்டு மற்றவர் பேச்சைக் கவனித்து ரீயாக்ட்
செய்ய வேண்டும். இதையெல்லாம் கவனித்து கவனித்தே கற்றுக் கொள்பவர்கள் உண்டு. நாடக அனுபவத்தில்
புரிந்து பக்குவப்பட்டவர்கள் உண்டு. நடிப்புக் கற்றுக் கொடுத்துத் தெரிந்து கொள்பவர்களும்
உண்டு. டி.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் ஏற்றுக்
கொள்ளும் காரக்டர்கள் பெரும்பாலும் காமெடி டிராக் என்பதால் இந்தக் கைகளின் விளையாட்டு
என்பது சற்று மாறி மாறி இருக்கும். கீழே தொங்கிய நிலையிலும், ரொம்ப முக்கியமான கட்டங்களில்
கோர்த்துக்கொண்டும் நடுங்கும். அவரின் கைகளும், கால்களும் நடுங்கும் நடிப்பைப் பார்த்தால்….என்னா
பயம் …என்று நமக்குச் சிரிப்பை வரவழைக்கும். வெகு இயல்பாய் அமைந்திருக்கும் அவரது நடிப்பு,
சொல்லிக்கொடுத்துச் செய்வதுபோலவோ, காட்சிக்கென்று அமைந்ததுபோலவோ இருக்கவே இருக்காது.
இயல்பாகவே அவரது உடல் மொழிகள் அப்படி ஆகியிருக்கிறதோ என்றும் , அது நடிக்கும் படத்திற்கு
அத்தனை பொருத்தமாய் அமைந்து சிறப்புச் செய்கிறதோ என்றும் நம்மை எண்ண வைக்கும்.
அறிவாளி படத்தில் “ஏக் லவ்” என்ற பெயரில் நடிகர்திலகத்திற்கு
நண்பனாய் வருவார். முரட்டு பானுமதியை அடக்கிக் கல்யாணம் பண்ண சிபாரிசு செய்து, அவரது
தங்கையான சரோஜாவைத் தான் திருமணம் செய்து கொள்ள ஐடியா பண்ணுவார். தன் விவசாயத் தொழிலுக்கும்,
கைத்தறி விசை உற்பத்திக்கும் உதவிகரமாய் இருக்கும் அளவுக்குப் பணம் கிடைக்குமா என்று
மட்டுமே பார்க்கும் சிவாஜி, பானுமதியின் கொட்டத்தை அடக்கித் திருமணம் செய்து கொள்ளத்
தயார் என்று முன் வருவார். அவர் கல்யாணம் நடந்தால்தான் தன் காதலும் நிறைவேறும் என்று
சாரங்கபாணியின் இரண்டாவது மகளான சரோஜாவை இவர் காதலிப்பார். கவலைப்படாம இரு…உன் கல்யாணத்துக்கு
நான் பொறுப்பு…என்று சிவாஜி தைரியம் கொடுக்க…ஓ…இன்டியா….என்று காதலியின் புகைப்படத்தை
நெஞ்சில் அணைத்துக்கொண்டு சந்தோஷப்படுவார்.
இதுபோல்தான் இதற்கு முன்பே வந்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
படத்திலும் ரெண்டு பேரும் அடிக்கும் கூத்து சொல்லி மாளாது. அதில் அமெரிக்கா ரிடர்ன்
பெண்ணைக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஃபாரின் மோகத்தில் இருக்கும் டி.ஆர்.ஆருக்கு,
பத்மினியின் தங்கை (படத்திலும்) ராகினிக்கு ஃபாரின் ரிடர்ன் பொய்யைச் சொல்லி, நாகரீக
உடையை அணிவித்து,பேசச் செய்து மயங்க வைத்து
என்று கதை நீண்டு கொண்டே போகும். ராகினியைக் கண்டு இவர் இளிக்கும் இளிப்பும், படும்
வெட்கமும், கூச்சமும்….அவர் மீது கொள்ளும் தீராக் காதலும் அள்ளிக்கொண்டு போகும் நகைச்சுவையை.
பத்மினி காரோட்டி வரும்போது டி.ஆர்.ஆரின் அப்பா மேல் இடித்துவிட
குய்யோ முறையோ என்று அவரை வீட்டில் கொண்டு வந்து போட, இனிமே பெண்கள்லாம் காரோட்டக்
கூடாதுன்னு இந்தியாவுல ஒரு சட்டம் கொண்டு வரணும்… என்பார். இம்மாதிரி பல இடங்களில்
தொட்டதெற்கெல்லாம் இந்தியாவுல ஒரு சட்டம் கொண்டு வரணும், சட்டம் கொண்டு வரணும் என்று
அவர் பேசும் வசனம்…படு சிரிப்பாய் இருக்கும். படம் பார்ப்பவர்களே அவரை முந்திக்கொண்டு
இதைச் சொல்லிவிட்டுச் சிரிப்பார்கள்.
சார்…நான் அஞ்சு வருஷமா கார் ஓட்டறேன்….ஒரு ஆக்ஸிடென்ட்
கூட நடந்ததில்லே….என்று பத்மினி சொல்ல…எங்கப்பாவும் அம்பது வருஷமா ரோட்டுல நடந்து போய்ட்டு
வந்திட்டுத்தான் இருக்காரு….அவருக்கும் ஒரு விபத்துக் கூட நடந்ததில்லே….என்பார் இவர்.
பட்டுப் பட்டென்று அவர் பேசும் வசனமும், துடிப்பும்….நம்மை அப்படி ரசிக்க வைக்கும்.
சொல்வதானால் டி.ஆர்.ராமச்சந்திரன் அவர்களைப்பற்றி நிறையச்
சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு அவர் நகைச்சுவை நடிப்பின்
காட்சிகள் ஏராளமாய் உள்ளன.
இருவர் உள்ளம் திரைப்படம் நாம் அனைவரும் அறிந்து, ஒரு முறைக்குப் பலமுறை பார்த்து
ரசித்ததே. எல்.வி.பிரசாத் இயக்கத்தில், கலைஞர் வசனத்தில், கே.வி.மகாதேவன் இசையில் வெளிவந்த
வெற்றிப்படம் அது. எழுத்தாளர் லட்சுமியின் பெண் மனம் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.
சிவாஜி வேலை விஷயமாக டெல்லி செல்வார். அவரின் வருகைக்காக
சரோஜாதேவி காத்திருப்பார். டி..ஆர்.ஆர்.ரும் வெளியூர் செல்வார். மனைவி வசந்தியைப் பத்திரமாக
இருக்கச் சொல்லிவிட்டு. மனைவியாக நடிப்பவர் பத்மினி ப்ரியதர்சினி. மைனர் மாணிக்கம்
பாலாஜி உன் புருஷன் எப்போ வெளியூர் போவாருன்னுதான் காத்திட்டிருக்கேன் என்று சொல்ல,
அது அறிந்த டி.ஆர்.ஆர். வெளியூர் செல்லாமல் உள்ளூரிலேயே வெளியிடத்தில் தங்கி கவனிப்பார்.
பாலாஜியின் வீட்டில் சிவாஜியோடு இருக்கும் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து
சிவாஜிக்கு ஃபோன் செய்து வேலைக்காரி போல் பேசி, பாலாஜி ஆபத்தான நிலையில் இருப்பதாகப்
பொய் சொல்லி சிவாஜியை வரவழைப்பார் பிரியதர்சினி. நண்பனைக் காப்பாற்ற வேண்டி அங்கு சென்று
மாட்டிக் கொள்வார். வசந்தி சிவாஜியை வரவழைக்க, தன் மனைவியின் தவறான நடத்தையைக் கண்டு அவளை மறைந்திருந்து
கொலை செய்துவிட்டுத் தப்பி விடுவார் டி.ஆர்.ராமச்சந்திரன். வசந்தியின் தவறான அழைப்பு அறிந்த சிவாஜி அங்கிருந்து வெளியேறுவார். மேலே மாடியில்
ஆ……..! வென்று சத்தம் கேட்கும். வேலைக்காரி வெளியேறும் சிவாஜியைக் கீழே பார்த்து விடுவார்.
கொலைப்பழி சிவாஜி மேல் விழுந்து விடும்.
இதன்பின் நடக்கும் கோர்ட் விசாரணையும் அதில் இன்ஷ்யூரன்ஸ்
ஏஜென்ட் பரமாத்மாவாக நடிக்கும் டி.ஆர்.ராமச்சந்திரன் மீதான விசாரணையில் அவரின் தடுமாற்றமான
பதில்களும், அதன்பின் குடித்துவிட்டு லாட்ஜில் கிடக்க அங்கு சரோஜாதேவி போய் மறைந்து
நின்று பார்க்க, யார் உள்ளே என்று எழுந்து வந்து, சரோஜாதேவியைக் கண்டு மிரள, நீங்கதானே
வசந்தியைக் கொலைசெய்தது….உண்மையை ஒப்புத்துக்கிட்டு என் கணவரைக் காப்பாற்றுங்க என்று
மன்றாட, குடிபோதையில் அவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டி வசந்தியைக் கொலை செய்ததுபோல்
இன்னொரு கொலை செய்ய என்னைத் தூண்டாதே….என்று உளற, இருவருக்கும் நடக்கும் போராட்டத்தில்
வெளி வந்த உண்மையை வைத்து போலீசார் அவரைக் கைது செய்வார்கள். இந்தக் கடைசிக் கிளைமாக்ஸ்
காட்சியில் டி.ஆர்.ராமச்சந்திரனின் அபாரமான நடிப்பு பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கும்.
ஒரு அசடு, ஒரு கொலையையும் பண்ணிட்டு என்ன பாடு படுத்துது எல்லோரையும் என்று வியந்த
காலம் அது.
தனக்கு அமைந்த உடலமைப்பு, குரல் வளம், உருவ அமைப்பு, இவற்றையே
மூலதனமாக்கிக்கொண்டு ஏற்றுக்கொண்ட எல்லாப் படங்களிலும் சிறப்புறத் தன் திறமையைக் காட்டிய
அற்புதமான நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்.
தமிழ்த் திரையுலகம் திறமையானவர்கள் பலரைத் தவற விட்டிருக்கிறது.
காலப் போக்கில் காணாமலே அடித்திருக்கிறது. அப்படி அறுபதுகளுக்குப் பிறகு காணாமல் போனவர்
இவர். எப்பொழுதாவது ஒரு படம் என்று திருமால் பெருமை, தில்லானா மோகனாம்பாள் என்று தலை
காட்டியவர் பிறகு போதும் என்று மனம் வெறுத்ததுபோல் அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரத்தில்
சென்று செட்டிலாகிவிட்டார்.
அவர் நடித்த சாது மிரண்டால், அன்பே வா, ஆலயமணி, புனர்ஜென்மம்,
அடுத்த வீட்டுப் பெண், வண்ணக்கிளி, யார் பையன், மணமகன் தேவை, பாக்தாத் திருடன் , கோமதியின்
காதலன், கள்வனின் காதலி என்று சொல்வதற்கு இன்னும் பல படங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக
அடுத்த வீட்டுப் பெண் படத்தில் தங்கவேலு கோஷ்டியோடு சேர்ந்து அஞ்சலிதேவியைக் காதலிக்க
அவர் அடிக்கும் கூத்து சொல்லி மாளாது. அந்தக் காலத்திலேயே வந்த மிகச் சிறந்த நகைச்சுவைத்
திரைப்படம் அடுத்த வீட்டுப் பெண் இந்தக் கால இளைஞர்கள் அறிந்திருப்பதற்கில்லை.
டி.ஆர்.ராமச்சந்திரன் என்ற அருமையான நடிகரின் வயதான தோற்றத்தை
நீங்கள் யாரேனும் கண்டிருக்கிறீர்களா? இத்தோடு இணைக்கப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள்.
அந்த கண்ணியமான பெரிய மனிதரின் அந்தத் தோற்றம் அவரின் மீது நமக்கு மிகுந்த மதிப்பையும்
மரியாதையையும் ஏற்படுத்தும். அது அவரின் அதுகாலம்வரையிலான நடிப்புத் திறமைக்கு சான்றாக
அமையும். தமிழ்த் திரையுலகம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய அழியா நட்சத்திரம்
திரு.டி.ஆர்.ராமச்சந்திரன் என்றால் அது மிகையாகாது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கட்டுரை
எஸ்.எஸ்.ஆர்
-------------------------------------------------------------
இவர் எந்த அரசியல் கட்சியில் இருந்தாரோ அந்தக்
கட்சிக்காரர்கள் இவரது நடிப்பை ரசித்தார்கள். கட்சிக்காரர்களாயும், ரசிகர்களாயும்.
ஆனால் இவர் எந்த அரசியல் கட்சியில் இருக்கிறார் என்பது பிரச்னையில்லை, நடிப்புதான்
எங்களுக்கு முக்கியம் என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களைத் தரமான ரசிகர்களாய்ப்
பாவித்து, அந்த இடத்தில் தங்களை நிறுத்திக்
கொண்டு எந்தவித வேற்றுமையுமின்றி இவரது தமிழை, அழகான அழுத்தமான உச்சரிப்பை, உணர்ச்சிகரமான
நடிப்பை, உணர்வு பூர்வமாய், ஆழமாய் ரசித்தார்கள்.
கை தட்டினார்கள். பாராட்டினார்கள், தொடர்ந்து வரவேற்றார்கள்.
அந்தப் பல்லாயிரக்கணக்கான வெகு ஜன ரசிகர்களுக்கு
அவர் சிறந்த நடிகனாகத்தான் தெரிந்தார். அழகான தமிழ் பேசும் பச்சைத் தமிழனாகத்தான் தெரிந்தார்.
ஒரு நடிகர்திலகத்திற்குச் சரிக்கு சமமாக கணீரென்று வசனம் பேச இவர்தான் என்று சொன்னார்கள்.
நடிகர்திலகமே அதை வரவேற்றார். குறிப்பாக அவர்களுக்கு
ஒன்று இவரிடம் மிகவும் பிடித்திருந்தது.
மிகையில்லாத, இயல்பான, எந்தவித சிறப்பான பிரயத்தனங்களும்
இல்லாத, அவரது உடலமைப்பு என்ன சொல்கிறதோ அந்த அசைவுகளுடனான, அசலான நடிப்புதான் அது. அதற்காக அவர், தான் ஏற்றுக்
கொண்ட பாத்திரத்திற்கென, அதை நிலை நிறுத்துவதற்கென பிரத்தியேக முயற்சிகளே ஏதும் செய்யவில்லையா?
என்று கேட்பதற்கில்லை.எழுதப்பட்ட வசனங்களுக்கேற்ப
அவரது பாவங்கள், தேக நளினங்கள் தானாகவே வந்து கச்சிதமாய் உட்கார்ந்து கொண்டு
அவருக்குப் பெருமை சேர்த்தன என்பதுதான் சரி.
அவர் நடித்த அந்தந்தத் திரைப்படங்களும் அவரது
கதா பாத்திரங்களும் முழுமையான புரிதலின் அடிப்படையிலேயே அர்ப்பணிப்பு உணர்வோடு அவரால்
அணுகப்பட்டதால், அவை தன்னகத்தே கொண்டுள்ள சிறந்த கதையமைப்பினாலும், அழுத்தமான காட்சிகளாலும்,
அந்தக் காட்சிகளின்பால் இவருக்கு ஏற்பட்ட அதீத ஈடுபாட்டினாலும், அவர் தன்னை ஈடுபடுத்திக்
கொண்ட அனைத்துத் திரைப்படங்களும் அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும்
திருப்திகரமாகவே அமைந்தன. காதல் காட்சிகளுக்கும், நகைச்சுவைக் காட்சிகளுக்கும், உணர்ச்சிகரமான
கட்டங்களுக்கும் என அவருக்கு இயல்பாக எது அமைந்திருந்ததோ அதுவே பார்த்து ரசிக்கும்படி
இருந்ததுதான் இவரது சிறப்பு. அதனால் தொடர்ந்து வரவேற்றார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொன்று. அந்த வெள்ளைப்
பளீர்ச் சிரிப்பு. அப்போது அவரது இடது கன்னத்தில் விழும் குழி. அந்த அழகு தனி. அதை
மட்டும் எதிர்பார்த்து ரசித்தவர்கள் அநேகம். அது பார்வையாளர்களுக்குத் தந்த மகிழ்ச்சி. அவர் திரையில்
சிரிக்கையில் இவர்களின் முகம் தானாகவே மலர்ந்தது. அதனாலேயே அவர் மேல் ஏற்பட்ட பிரியம் அவர்களுக்கு
அதிகரித்தது. நிலைத்தது.
தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் விருப்பத்திற்குகந்தவராக
இவர் இருக்கிறார், இவர்பாலான வரவேற்பு சற்றும் குறையாமல், குன்றாமல் நிலையாகச் செழித்து
நிற்கிறது என்பதை இவரது அர்ப்பணிப்பு உணர்வோடான நடிப்பின் ஆழத்தோடு சேர்த்து உணர்ந்து
கொண்ட இயக்குநர்கள் தங்கள் படத்தில் இவர் நடிப்பதை, அதன் மூலம் தாங்கள் எழுதிய தமிழ்
வசனங்களுக்குப் பெருமை சேர்த்துக் கொள்வதை, யார் எழுதிய வசனம் என்று இவரது கணீரென்ற
உச்சரிப்பின் மூலமாகத் தாங்கள் அறியப்படுவதை உணர்ந்து பெருமை கொண்டார்கள். மதிப்பு
மிக்க இடத்தில் இவரைக் கடைசிவரை வைத்திருந்தார்கள். இது என்னால் உச்சரிக்கப்படும்போது
அது தனக்கான பெருமையைத் தேடிக் கொள்கிறது என்று நிரூபித்தார் இவர்.
தமிழ்த் திரையுலகின் மிகப் புகழ் பெற்ற இரண்டு
ஜாம்பவான்களின் கடுமையான போட்டிக்கு நடுவே தனக்கென்று உள்ள இடத்தைத் தீர்மானமாகத் தக்க
வைத்துக் கொண்டு, தன் இடமும் அதற்குச் சமானமான இடமே என்று தன் திறமையின்பால் ஒரு தீர்மானத்தைக்
கொண்டு வந்து, நிலைநிறுத்தி, அந்த இருவருக்குச் சரிநிகராகத் தன்னைத் தேடி இயக்குநர்களையும்,
படாதிபதிகளையும் வரவழைத்தவர். அவர்களை நஷ்டமின்றி வாழ வைத்தவர்.
கருப்பு வெள்ளைப் பட காலத்தில் தொடர்ந்து நல்ல
நல்ல திரைப்படங்களைக் கொடுத்து, திறமையான இயக்குநர்கள், தரமான படத்தயாரிப்பாளர்கள்,
நல்ல திரைக்கதை, சிறந்த நடிப்பு, அருமையான பாடல்கள், அற்புதமான காட்சிகள் என்று தன்
பெயருக்கான வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு சுமார் 200 க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்து, என்றும் தன்னை நினைக்கும்படியான இடத்தில் இருத்திக் கொண்டு, இன்றும்
மதிப்பு மிக்க ஓரிடத்தில் தன்னை அழுத்தமாக வைத்துக் கொண்டு, நம்மிடையே வாழ்ந்து சமீபத்தில்
மறைந்தவர்தான் அவர்.
அவர் நமக்கெல்லாம் தெரிந்த, நாம் இன்றும் நினைத்துப்
பார்க்க வேண்டிய, தொலைக்காட்சிகளில் பழைய படங்கள் ஓடும்போதெல்லாம் மகிழ்ச்சியோடு ரசித்துப்
பார்க்கக் கூடிய, எல்லோராலும் சுருக்கமாக, அன்பாக அழைக்கப்பட்ட இலட்சிய நடிகர் திரு
எஸ்.எஸ்.ஆர். அவர்கள்.
எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்று உச்சரிக்கவே கம்பீரமான
பெயர் கொண்ட இலட்சிய நடிகர் அவர். நம் மக்களுக்கு அவர் எஸ்.எஸ்.ஆர். நடிப்புத்தானே, வேஷம் கட்டுவதுதானே, பிழைப்புத்தானே,
சம்பாத்தியம்தானே, அரிதாரம் பூசியாச்சு, அது என்ன வேஷமாயிருந்தாத்தான் என்ன என்று வெறுமே
நினைத்து விடாமல், தான் கொண்ட கொள்கைக்கு மனமுவந்து, அதற்கு நியாயம் சேர்ப்பவராய்,
மனசாட்சிக்குப் பொய்யாகாதவராய், புராணக் கதாபாத்திரங்களை ஏற்பதில்லை என்று இலட்சியப்
பிடிப்போடு கடைசிவரை இருந்தவர், என்பதால் இலட்சிய நடிகர் என்ற பட்டத்துக்கு உண்மையிலேயே
உகந்தவரானார்.
ஐம்பதுகள், அறுபதுகள், எழுபதுகள் ஆரம்பம்வரை
வெளிவந்த திரைப்படங்கள் வாழ்க்கையை, அதன் உன்னதங்களை, அதன் மேன்மைகளை உயரே தூக்கிப்
பிடிக்கும் அம்சங்களாய் விளங்கிய கால கட்டம் அது. அந்த நாட்களில் அத் திரைப்படங்களில்
நடித்த நடிகர்களும் அந்தந்த உயர் லட்சியங்கள் கொண்ட கதாபாத்திரங்களில் தங்களை இணைத்துக்
கொண்டதால், அவர்களின் முகமும், பாவனைகளும், பேச்சும், நடிப்பும், சொல்லும் செயலும்,
இவர்கள் இதற்காகவே பிறவியெடுத்திருக்கிறார்களோ என்று நினைத்து வியக்கும்படியான தோற்றத்தை
ரசிக மனங்களிடையே ஆழமாய் ஏற்படுத்தி, இவர்களை நேரில் பார்க்க மாட்டோமா, பேச மாட்டோமா,
இவர்களோடெல்லாம் பழகும் சந்தர்ப்பம் நமக்கும் கிடைக்காதா என்று ஏங்கிய நாட்கள்
அவை. அந்த அளவுக்கான தாக்கத்தை, கனவுகளை ரசிக மனங்களில் தோற்றுவிக்கும் ஆன்ம பலம் பெற்றிருந்தன
அந்நாளைய திரைப்படங்கள். அப்படியான பல படங்களில்
நடித்திருப்பவர் எஸ்.எஸ்.ஆர் அவர்கள்.
மனைவியை விபசாரி என்று சொன்ன வாயைக் கிழித்து
எறிகிறேன் என்று, மாசு மருவற்ற அக்காளை எப்படி நீ அவ்வாறு சொல்லலாம் என்று அத்தான்
ஸ்தானத்திலான சிவாஜியின் சட்டையைப் பிடித்து, சுற்றி இறுக்கி அக்காளின் ஒழுக்கத்தைப்பற்றிப்
பிரலாபித்து, அவரை வார்த்தைகளால் பிளந்தெடுத்து,
எஸ்.எஸ்.ஆர் கொதித்து நிற்கும் அந்தக் காட்சியை
யாரேனும் மறக்க முடியுமா? எஸ்.எஸ்.ஆரின் மனக்கொதிப்பு
பார்வையாளர்களின் நெஞ்சிலும் பரவிக் கிடந்த காட்சி அது. மிகவும் உன்னதமானதும், காட்சியை உயர்த்திப் பிடிக்கும்
லாவகமானதுமான அந்தக் காட்சி, அவர் மழையாய்க் கொட்டித் தீர்த்ததும்தான் எல்லோருக்கும்
அடங்கும். சொல்லணும், சொன்னாத்தான் தெரியும்…என்றார்கள் பலர். ஒருவன் மனசுபூர்வமாகவும்,
அறிவுபூர்வமாகவும் கெட்டுப் போவதை மக்கள் மனதார மறுதலித்த காட்சி அது. உணர்ச்சிப் பிழம்பான அந்தக் காட்சியைப் போல் இன்றுவரை
அப்படி ஒன்று எந்தத் திரைப்படத்திலும் அமையவில்லை என்று சொல்வேன் நான். ஆனால் அந்த இடத்தில் கூட ஓரிரு சொல் வசனத்தினால்,
அதை உச்சரிக்கும் முறையினால், தன்னை முன்னிறுத்திக் கொண்டவர் சிவாஜி.அது அவரின் திறமை.
பிறரை மிஞ்ச, தனக்கு முக்கியத்துவம் இல்லாத காட்சிகளில் இப்படியான யுக்திகளைக் கையாள்வது
அவரது வழக்கம். ஆனால் அங்கே ரசிக மனங்கள் எஸ்.எஸ்.ஆருக்கு ஆதரவாகவே நின்றன.. அவரோடு
சேர்ந்து கண்கலங்கின.அந்த அளவுக்கு மக்களிடம் நேர்மையும், நல்லுணர்வும், வாழ்க்கையின் உன்னதங்களில் இருந்த அக்கறையும் இருந்த காலகட்டம்
அது. அதை உணர்ந்து அக்கறையோடு உருக்கமாகப் படம் எடுத்தார்கள் அந்தக்
காலத்தில். தெய்வப்பிறவி படத்தின் இந்தக் காட்சியை
யாரேனும் அவ்வளவு எளிதாக, சினிமாதானே என்று மறந்து விட முடியுமா என்ன? எஸ்.எஸ்.ஆருக்கு
அண்ணியாக பத்மினி. சிவாஜியின் மனைவி. தங்கம்…அடித் தங்கம்….என்று மன ஆழத்தில் சிவாஜி சொல்லிப் பெருமைப்படுவார். அப்படியான ஒரு
காரெக்டர் அவராலேயே சிதைக்கப்படும் மேற்கண்ட காட்சியில்.அது பொய் என்று கொதித்தெழுவார்
எஸ்.எஸ்.ஆர்.அப்படி அன்பால் கட்டுண்ட குடும்பம்.
எப்படியய்யா இப்படி வார்த்தெடுத்ததுபோல் கச்சிதமாய் அமைந்தார்கள்? இன்றும் நினைத்து
வியக்கத்தானே வைக்கிறது.
தெய்வப்பிறவி படத்தில் ஒரு காட்சியை மட்டும்
சொன்னால் போதாது. உணர்ச்சிகரமாய் வசனம் பேசி, கோபம் கொப்பளிக்க தத்ரூபமாய் நடிப்பை
வெளிப்படுத்தும் லட்சிய நடிகருக்குள்ளே ஒரு பெண்மையும் ஒளிந்திருந்தது. அது அவரை வெட்கப்பட
வைத்தது. நாணமடைய வைத்தது. உடம்போடு ஒன்றிப்போன அந்த நாணத்தினாலும், வெட்கத்தினாலும்,
வார்த்தைகள் வராமல் அவர் தடுமாறினார். வளைந்து நெளிந்தார். அசடாய் கூனிக் குறுகினார்.
அந்தத் தடுமாற்றத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல்
உளறினார். ஒரு பெண்ணின் நெருக்கம் அவரை மிகவும் கூச்சமடைய வைத்தது. நாணிக் கோண வைத்தது.
அங்கிருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்ற பதற்றத்தை ஏற்படுத்தியது. அது எத்தனை
இயல்பாய் அவருக்கு அமைந்து ரசிக மனங்களை நிறைவு செய்தது?
நீங்க…!...நீங்க எங்க இங்க….? – எம்.என்.ராஜத்தின்
வீட்டு வாசலில் இந்தக் காட்சி. அதிசயமாய், எதிர்பாராது, ராமு என்ற எஸ்.எஸ்.ஆரைப் பார்த்த
மென்மையான அதிர்ச்சியில் கேட்கிறார்.
நா….நா வந்து….நந்தியாவட்டப் பூ இல்ல…நந்தியாவட்டப்பூ...அத
ரெண்டு...பறிச்சிட்டுப் போலாம்னு வந்தேன்….
எதுக்கு…?
ம்…..கண்ணு வலிக்கு….ம்…!
உங்களுக்கா….? – சிரித்துக்கொண்டே…
கல்லூரில படிக்கும்போது…உங்களப் பார்க்கணும்னு
காத்துக்கிட்டிருந்த எனக்குல்ல கண்ணு வலி எடுத்திருச்சு…..
ம்ம்….!!!
உங்ககிட்டப் பேச முடியலையேன்னு சித்தம் கலங்கி
நொந்தில்ல போயிருந்தேன்….
உனக்காவது சித்தம் கலங்கிப் போச்சு….உன்னக்
கண்ட ரெண்டு கணத்துக்குள்ளாகவே, எனக்குப் பைத்தியமே பிடிச்சுப் போச்சு…..
நான் உண்மையாச் சொல்றேன்…எனக்கு எப்பவுமே உன்னுடைய
நினைவுதான்…கண்ண மூடினா, உன்னப்பத்திக் கவலைதான்…..
இந்த இடத்தில் கள்ளபார்ட் நடராஜன் கோபமாய் உள்ளே
நுழைவார். வேகமாய் வந்து பளாரென்று எஸ்.எஸ்.ஆரின் கன்னத்தில் அறைந்து விட்டுச் சொல்லுவார்…
திலகத்தப் பத்திப் பேச உனக்கு என்னடா உரிமையிருக்கு?
–
கன்னத்தில் பதிந்த விரல்களோடு பொறுக்க முடியாமல்
வெலவெலத்து நிற்கிறான் ராமு.
மனோகர்….நீ செய்தது உனக்கே நல்லாயிருக்கா?
அறிவுள்ளவன் செய்ற காரியமா இது? – திலகத்தின் ஆக்ரோஷமான கேள்வி.
அது எங்க அண்ணனுக்கே கிடையாதே….! .இருந்திருந்தா
இவனுக்கு இப்டி ஒரு உரிமை கிடைச்சிருக்குமா?
மனோகர், இப்ப நீ இவரை அடிச்ச பாரு…
தப்புங்கிறியா? நான் ரொம்ப இளகின மனசு படைச்சவன்
திலகம்…உங்கிட்ட எனக்கு என்னடா பேச்சு…? பேச வேண்டிய எடத்துல நான் பேசிக்கிறேன்….-
கோபமாய் மனோகர் வெளியேறுகிறான்.
என்ன இது…? இந்த சம்பவத்த….
இதோட மறந்துற வேண்டிதான்…..
என்ன சொல்றீங்க….?
இந்த விஷயம் மட்டும் எங்க அத்தானுக்குத் தெரிஞ்சா,
எங்க குடும்பமே கலைஞ்சு போயிடும்…..
அதுக்காக…?
நீ என்னை நேசிக்கிறது உண்மையாயிருந்தா, இதப்பத்தி
எங்கயும், யாருகிட்டயுமே பேசக் கூடாது….- திலகத்திடம் சத்தியம் வாங்கிக் கொண்டு புறப்படுகிறான்
ராமு.
சிறு காட்சிதான். ஆனாலும் அடி வாங்கிய அதிர்ச்சியில்
இருந்து மீளும் முன்பாக சட்டென்று ஒரு முடிவு எடுத்து, இந்த நிகழ்வு என் அத்தானுக்குத்
தெரியக் கூடாது, ஏன் யாருக்குமே தெரியக் கூடாது என்று தீர்மானிக்கும் எஸ்.எஸ்.ஆரின்
ராமு என்கிற கதாபாத்திரம் இந்த இடத்தில் வானளவு உயர்ந்து நிற்கும். குடும்பம் என்கிற
அமைப்பு எந்தக் காரணங்களுக்காகவும் சிதைந்து விடக் கூடாது என்கிற தத்துவம் பலமாய் பொருந்திப்
பிரகாசிக்கும். எஸ்.எஸ்.ஆரின் இந்தக் காட்சியிலான நடிப்பு பற்றி விவரிக்கும் இந்த வேளையில்
அவரின் அதிர்ச்சியும், வருத்தமும், சகிப்புத்தன்மையும் கலந்த அந்த முகம் எனக்கு ஞாபகத்திற்கு
வருகிறது. காட்சியின் வீர்யத்தில் அவர் நின்றாரா அல்லது அவரது உணர்ச்சிகரமான நடிப்பால்
அந்தக் காட்சி நின்றதா என்றால், காட்சியும் இருந்தது, அதற்கேற்ற பொருத்தமான, திறமையான
நடிகர்களும் அமைந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த தெய்வப்பிறவி படத்தில் ராமு
கதாபாத்திரத்திற்கு எஸ்.எஸ்.ஆரைத் தவிர வேறு எவர் ஒருவரையும் நினைத்தே பார்க்க முடியாது
என்கிற அளவில் தன் நடிப்பை ஸ்தாபித்திருப்பார் லட்சிய நடிகர்.
எப்படி நடிகர்திலகத்திற்கு சிறந்த கதையமைப்புள்ள,
காட்சியமைப்பு வடிவமைக்கப்பட்ட, திறமையான இயக்குநர்கள் அமைந்தார்களோ அதுபோலவே எஸ்.எஸ்.ஆருக்கும்
அமைந்தது அவரது அதிர்ஷ்டம். இந்தக் கதைக்கு இவர்தான் பொருந்துவார் என்று கன கச்சிதமாகத்
தேர்வு செய்து அவரை நடிக்க வைத்தார்கள். அவரும் தன் கதாபாத்திரத்தை ஆழமாய் உணர்ந்து
ஒன்றி நடித்து, தனக்கும், தன்னைச் சார்ந்த இயக்குநர்களுக்கும் பெருமை சேர்த்தார். அப்படி
எஸ்.எஸ்.ஆர் அவர்களுக்கு அமைந்த இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர்கள் திரு கே.எஸ்,கோபாலகிருஷ்ணன்
அவர்களும், திரு ஏ.சி.திருலோகசந்தர் அவர்களும் ஆகும்.
இது கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வந்ததாயிற்றே
என்று நினைக்கும்படியான, அப்படியான ஒரு படம்தான் நானும் ஒரு பெண். ஆனால் இந்தப் படத்தை
இயக்கியது திருலோகசந்தர். குடும்பப்படம், குடும்பப்படம் என்கிறோமே…இதெல்லாம்தான் அந்த
வகை. இந்தக் குடும்ப அமைப்பை ஆத்ம பூர்வமாய் உணர்ந்தவனும், அனுபவித்தவனும், பழுத்த
அனுபவமிக்க பல பெரியோர்களின் எழுத்துக்களைப் படித்து ஆழமாய் உள்வாங்கியவனும்தான் இம்மாதிரியான
நூறு சதவிகிதக் குடும்பத் திரைப்படங்களை எடுத்து கம்பீரமாய் முன் வைக்க முடியும். இந்தா
பார்த்துக்கோ….இதுக்குமேலே இதுல எதாச்சும் செய்ய முடியுமா சொல்லு? என்று சவால் விடுவதுபோல்
இருக்கும். அப்படியான இயக்குநரின் கைவண்ணத்தில் பரிமளித்ததுதான் நானும் ஒரு பெண்.
கறுப்பு நிறம் என்றைக்குமே பலராலும் விரும்பப்படாததாகத்தான்
இருந்திருக்கிறது. இன்றும் இருந்து வருகிறது. அதிலும் பருவத்தே கல்யாணம் செய்து கொடுக்க
வேண்டிய, பெற்றோரின் கடமையாய் நிற்கக் கூடிய குடும்பப் பெண் கருப்பு என்றால் அது பலராலும்
விரும்பத்தகாததாயும், ஒதுக்கப்படத்தக்கதாயும்தான் இருந்திருக்கிறது.
கருப்பிலும் அம்சமான அழகு உண்டுதான். பளீரென்ற
வெள்ளைப் பல்வரிசைச் சிரிப்போடு, அகன்ற நெற்றியோடு, உப்பிய கன்னங்களோடு, எடுத்துப்
படிய வாரிய நீண்ட கூந்தலோடு, கச்சிதமான உடலமைப்போடு, குங்குமச் சொப்பு போல் இருக்கும்
பெண்களைக் கண்டு மயங்காத ஆண்களும் உண்டா என்ன? அப்படியான கருப்பழகிகள் விலை போகாமலா
போய்விட்டார்கள். ஆனால் இத்தனையும் இருந்தும், திருமணச் சந்தையில் விலை போகாமல் கிடக்கும்
ஒரு பெண்ணை (விஜயகுமாரி) என்னென்னவோ சொல்லிக் குழப்பி, இரண்டு குடும்பமும் நிதானத்திற்கு
வரும்முன் திருமணத்தை நடத்தி முடித்து, சொத்தை அடைவதற்காகத் தன் திட்டத்தை கச்சிதமாய்
நிறைவேற்றி, தான் நினைத்தவாறே அந்த மாளிகைக்குக் கொண்டு வந்து விடுகிறார் எம்.ஆர்.ராதா.
பிறகுதான் ஆரம்பிக்கிறது பிரச்னை. நிறத்திற்காக எவராலும் விரும்பப்படாமல் அந்தக் குடும்பத்தில் கரித்துக் கொட்டப்படுகிறார் அவர். படிப்படியாகத்
தன்னுடைய நல்ல தன்மையினால் மாமனாரின், கணவனின் அன்பைப் பெற முயற்சிக்கிறாள் அவள்.
சற்றே அவனின் அன்பைப் பெற்ற வேளையில் அவளது
படிப்பறிவு இல்லாத பூஜ்ய நிலை மீண்டும் அவளைச்
சிக்கலாக்குகிறது. அப்படி ஒரு காட்சி எத்தனை ஆழமாய், உணர்ச்சிகரமாய், மனக்கொதிப்போடு,
பெரும் துயரத்தோடு இங்கே அரங்கேறியிருக்கிறது பாருங்கள். போகட்டும் பரவாயில்லை என்ற
சமாதானத்தில் நிறத்தில் கருப்பான தன் மனைவி படிப்பறிவும் இல்லாதவள் என்பதை அறிய நேரும்
அந்தக் காட்சியில் எஸ்.எஸ்.ஆரின் உணர்ச்சிப் பிழம்பான நடிப்பு இன்றும் தொலைக்காட்சிகளில்
இந்தப் படம் பார்க்க நேர்கையில் நம்மை நடுங்க வைக்கிறது. அந்தப் பெண் மேல் ஆயாசம் கொள்ள
வைக்கிறது. ஐயோ பாவமே…! என்று கல்யாணி கதாபாத்திரத்தில் வாழ்ந்த விஜயகுமாரி மீது பரிதாபம்
கொள்ளாதவர் எவர்?
டெல்லியில் நடைபெறும் ஓவியப்போட்டிக்கான கண்காட்சியில்
கலந்து கொள்ளும் முன் தன் நண்பர்களுக்கு ஒரு விருந்து கொடுத்துவிட நினைக்கும் பாஸ்கர்
(எஸ்.எஸ்.ஆர்) விருந்து தயாராய் பண்ணி வைக்கும்படி க்ளப்பிலிருந்து மனைவிக்கு ஒரு கடிதம்
கொடுத்தனுப்புகிறான். கடிதத்தைப் படிக்கத் தெரியாத கல்யாணி பணியாள், ஒரு சிறுவன், கணவனின் தம்பி என்று கேட்டுக்
கேட்டு ஒவ்வொருவரும் ஏதோவொரு காரணத்தைச் சொல்லிச்
சென்று விடுகையில் கடிதத்தில் இருக்கும் விபரங்களை அறிய முடியாமல் மனமுடைந்து பயந்து
போய்க் கிடக்கிறாள் கல்யாணி. தான் படிக்கத் தெரியாதவள் என்று அறிந்தால், மறுபடியும்
தன்னை எல்லோரும் வெறுப்பார்களே என்று கலங்கிக் கிடக்கிறாள். அந்நேரம் பாஸ்கர், நண்பர்கள்
குடும்பத்தோடு வீடு வந்து சேர்கிறான். விருந்து தயார் செய்து வை என்று அவன் மனைவிக்கு
எழுதியிருந்த கடிதம் அவளால் படிக்கப்படவில்லை. அதாவது படிக்க முடியாததால் விபரம் அறியப்படவில்லை.
பதற்றமாய் சமையலில் ஈடுபட்டதில் முகத்தில் தீற்றிய கரியோடு டீ எடுத்து வருகிறாள். ராதா
மூலம் அவள்தான் பாஸ்கரின் மனைவி என்பதை நண்பர்கள் அறிகிறார்கள்.
என்ன மிஸ்டர் பாஸ்கர், உங்க மனைவியைப் பார்க்கணும்னு
துடிச்சிக்கிட்டிருக்கோம்…இன்னும் காணமே…டீயை வேலைக்காரிகிட்டக் கொடுத்தனுப்பிச்சிருக்காங்களே…?
என்னாது…? இதுதான் சம்சாரம் கல்யாணி……! – போட்டு
உடைக்கிறார் ராதா.
என்ன? இதுவா பாஸ்கர் ஒய்ஃப்பு?
சரோ, நம்மளையெல்லாம் கேலி பண்ணினாரே…அவருக்கு
வாச்சதைப் பார்த்தியா? ரோஸ் ஏஞ்சலையே கொண்டுவரப் போறேன்னு சொன்னாரு…கடைசில அவருக்கு
வாச்சதைப் பார்த்தியா? ப்ளாக்…..
கீப் கொய்ட்…..
என்னா எல்லாரும் குசுகுசுன்னு பேசிக்கிட்டே
இருக்குறீங்க…வாத்தியார் சம்சாரம் கருப்புன்னுதானே….இப்போ நீங்கள்லாம் பொருத்தமாவா
இருக்குறீங்க…எல்லாம் அப்டித்தான் என்று ராதா ஏற்றி விடுகிறார். கோபத்தில் கத்துகிறார்
பாஸ்கர். சும்மாருக்கப் போறீங்களா இல்லியா? என்கிறார் ராதாவைப் பார்த்து.
சாரி…மிஸ்டர் பாஸ்கர்…நாங்க புறப்படுறோம்….உங்கள
வழியனுப்ப நாளைக்கு ஏர்போர்ட்டுக்கு வந்திர்றோம்…. என்று எழுந்து புறப்பட்டு விடுகிறார்கள்
அவர்கள். ச்சே….இன்சல்ட்….என்று சலித்து, கோபத்தோடே
உள்ளே வருகிறார் பாஸ்கர்.
என்னங்க….டிஃபன்….. – கேட்டுக் கொண்டே பயந்து
நடுங்கி எடுத்து வருகிறார் விஜயகுமாரி.
படாரென்று தட்டி விடுகிறார் பாஸ்கர்.
டிஃபன்….! என்னை அவமானப்படுத்தணும்னு எத்தனை
நாளாக் காத்துக்கிட்டிருந்த….?
இல்லைங்க….
என்ன இல்லைங்க…? கொஞ்சமாவது அறிவு இருக்குதா?
இயற்கையான அழகுதான் இல்ல…செயற்கையா சிங்காரிச்சுட்டு வரக்கூடவா தெரியாது?
இல்லைங்க….வந்து….
என்ன வந்து, போயி….? ஏற்கனவே பெரிய்ய்ய ரத்தி….இந்த
அழகுல மூஞ்சில கரியவேறே பூசிட்டு மூதேவி மாதிரி அவ்வளவு பேருக்கும் முன்னால வந்து நிக்க
உனக்கு வெக்கமா இல்லே? வேலைக்காரின்னு சொல்லக் கூடிய அளவுக்கு வேஷங்கட்டிட்டு வந்து
நின்னியே…,ஏன்? நீ ரொம்பக் கஷ்டப்பட்டு வேலை செய்றேன்னு நான் தெரிஞ்சிக்கணும்னா?
கோவிச்சுக்காதீங்க….திடீர்னு நீங்க வந்து சொன்னதுனால
ஏற்பட்ட அவசரத்துலயும், பதட்டத்துலயும்…..
ஏன் அவசரப்படணும்? ஏன் பதட்டப்படணும்? சாயங்காலமே
உனக்கு லெட்டர் எழுதி அனுப்பிச்சன்ல….?
ஆமங்க….
அது உன் கைக்குக் கிடைச்சதுல்ல…..?
கிடைச்சதுங்க….
படிச்சிருக்க மாட்ட, படிக்க உனக்கு நேரம் இருந்திருக்காது…ஏன்னா
பெரிய ஜமீன்தார் நீ….இந்த வீட்டையே தூக்கி உன் தலைல வச்சிட்டிருக்க பாரு…அதுல ஏற்பட்ட
திமிரு…அலட்சியம்….
சத்தியமா அப்டியெல்லாம் இல்லைங்க….
பின்ன? படிச்சிட்டுப் பேசாம இருந்திட்டியா?
என் லெட்டருக்கு மதிப்பில்லையா? படிச்சிட்டுத்
தூக்கி எறிஞ்சிட்டுப் பேசாம இருந்திட்டியா? நான் டெல்லிக்குப் போறத முன்னிட்டு, என்
நண்பர்களுக்கெல்லாம் ஒரு விருந்து வைக்கணும், அதுக்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்னு நான்
எழுதியிருந்ததை நீ கவனிக்கலையா? அதை நீ படிக்கவே இல்லையா?
இல்லிங்க…நான் படிக்கலைங்க…
ஏன் படிக்கலை…?சொல்லு…ஏன் படிக்கலை…?ஏன் பேசாமயிருக்க…சொல்லு
ஏன் படிக்கல…? சொல்லு…..
ஆ…..என்ன அடிச்சிராதீங்க….
அடிக்கல…அடிக்கல…கேட்குற கேள்விக்கு மட்டும்
பதில் சொல்லு….
எனக்கு…….
சொல்லு…..
எனக்கு….
படிக்கத் தெரியாதுங்க…….
என்ன சொன்னே….? படிக்கத் தெரியாதா? உனக்குப்
படிக்கத் தெரியாதா? என் மனைவிக்குப் படிக்கத் தெரியாதா? கல்யாணி உனக்குப் படிக்கத்
தெரியாதா?
ஆமங்க…நான் சின்னப்பொண்ணா இருக்கும்போதே எங்க
அம்மா, அப்பா செத்துப் போயிட்டாங்க…அப்போ மாலதி கைக்குழந்த….எங்க அண்ணனுக்கு சமைச்சுப்
போடுறதுக்கும், மாலதியக் கவனிக்கிறதுக்குமே நேரம் சரியா இருந்தது….என் தங்கச்சிய வளர்த்து.
நல்லா படிக்க வச்சு ஆளாக்கணும்னு ஆசப்பட்டனே
தவிர, நான் படிக்கணும் சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சதேயில்லைங்க…..
அப்டீன்னா இத்தன நாளா என்னை நல்லா ஏமாத்தியிருக்கே…நான்
புஸ்தகத்தக் கொடுத்துப் படிக்கச் சொன்ன போதெல்லாம், படிக்கத் தெரிஞ்ச மாதிரி நடிச்சு,
மாமா கூப்பிடுறாங்க…அடுப்புல பால வச்சிட்டு
வந்திருக்கேன்…இப்டியெல்லாம் சொல்லி என்ன ஏமாத்தி முட்டாளாக்கியிருக்கே…இல்லையா?
அய்யோ…தயவுசெய்து அப்டியெல்லாம் நினைக்காதீங்க….
பின்ன ஏன் இந்த விஷயத்த முதல்லயே சொல்லலை….ஏன்
சொல்லலை? – கைகளைப் பிடித்து உலுக்குகிறார்.
நான் படிக்காதவள்னு உங்ககிட்ட சொல்ல வேண்டியது
அவசியம்னு நினைக்கல்லீங்க….ஏதோ ஒரு முக்கியமான விஷயத்த கணவர்கிட்டே மறைக்கிறோம்ங்கிற
எண்ணமும் எனக்கு ஏற்பட்டதே இல்லைங்க…இது ஒரு பெரிய விஷயமா என் மனசுக்குப் படலீங்க….அதுனாலதான்….
நிறுத்து….என்னப் பொறுத்தவரைக்கும் இது ஒரு
பெரிய்ய்ய விஷயம்தான்….மனிதனாப் பிறந்தவங்களுக்கு, கண்ணை விடக் கல்விதான் முக்கியம்…..
ஆமாங்க….எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுங்க…ஏன்
நீங்களே சொல்லிக் கொடுங்க….சீக்கிரமா நான் படிச்சிக்கிறேங்க….
போதும்….உனக்குப் பொறக்கப்போற பிள்ளைங்க படிக்கிற
காலத்துல நீ படிக்கிறேன்னு சொல்றியே…உனக்கு வெக்கமா இல்ல? உன்னச் சொல்லிக் குத்தமில்ல…எடுபடாமப்
போயிடுவாளேன்னு நினைச்சு இரக்கப்பட்டு, என்னுடைய
கற்பனைகளையும், லட்சியங்களையும் தியாகம் பண்ணிட்டு, உன் கழுத்துல தாலிகட்டி, தகப்பனையே
எதிர்த்துப் பேசி, இந்த மாளிகைல எடமும் கொடுத்து மதிப்பும் கொடுத்தன் பாரு…, ….எனக்கு
வேணும்…நல்லா வேணும்…பாஸ்கரோட மனைவி அழகில்லாத, கல்வி அறிவில்லாதவன்னு எல்லாரும் என்
முகத்துல காறித் துப்பணும், உன்னைக் கட்டிக்கிட்ட பாவத்துக்காக அப்பவே நான் தூக்குப்
போட்டுக்கிட்டுத் தொங்கணும்…இது என் விதி….விதி…அய்யோ…நான்
என்ன பாவம் பண்ணினனோ….என் வாழ்க்கை பாழாப் போயிடுச்சி…அநியாயமாப் பாழாப் போயிடுச்சி….
அயர்ந்து விடுகிறாள் கல்யாணி.ஆமாங்க…..உங்க
வாழ்க்கை பாழாத்தான் போயிடுச்சி…..அதுக்குக் காரணம் நான்தான்….உங்க அறிவுக்கும், அழகுக்கும்…நான்
பொருத்தமான மனைவி இல்லேங்கிறது எனக்கே தெரியுது…..நான் செத்ததுக்கப்புறமாவது, அறிவும்
அழகும் நிறைஞ்ச மனைவி ஒருத்தி உங்களுக்குக் கிடைப்பான்னா…நான் இந்த நிமிஷமே சாகுறதுக்கும்
தயாரா இருக்கேன்…எனக்கு ஒரு நல்ல கணவர் கிடைச்சார்ங்கிற திருப்தியோட, பூவும் பொட்டுமாப்
போறமேங்கிற பெருமையோட,சந்தோஷமா சாவேன்….எப்பவோ செத்திருக்க வேண்டிய எனக்கு, நீங்க எங்கிருந்தோ
வந்து உயிர் கொடுத்தீங்க….வாழ்வு குடுத்தீங்க….என்னோட வாழ்ந்த காலத்த, ஏதோ கெட்ட கனவுல
நடந்த சம்பவமா நினைச்சு மறந்திடுங்க….என்னை மன்னிச்சிடுங்க….எனக்கு வாழ்வு வேண்டாம்…நான்
சாகப் பிறந்தவ…நான் சாகத்தான் வேணும்….சாகத்தான் வேணும்….மயங்கி விழுகிறார்.
இந்த உணர்ச்சிமயமான அழுகை கொப்பளிக்கும் காட்சியைப்
போல் ஒரு படத்திலும் இப்படி ஒரு அற்புதமான காட்சி வந்ததில்லை என்பேன் நான். எஸ்.எஸ்.ஆரின்
நடிப்பு நம்மை இந்த அரை மணி நேரத்தில் பதறியடிக்க வைக்கும்….என்ன ஆகப் போகிறதோ என்று
துடிக்க வைக்கும். விஜயகுமாரி அவருக்குச் சமமாக வெளுத்து வாங்குவார்….
இப்படியாகப் பல படங்களில் தன் தனித்துவமான
நடிப்பை நிலை நிறுத்தியவர் லட்சிய நடிகர்.நானும் ஒரு பெண் என்ற இந்தப் படத்தில் கடைசியான
கிளைமாக்ஸ் காட்சி ஒன்றும் இதே போன்று வீரியமாய்ப் பட்டுத் தெறிக்கும். அப்படிக் காட்சி
அமைத்த இயக்குநரைச் சொல்வதா, அருமையாய் வசனம் எழுதிய வசனகர்த்தாவைச் சொல்வதா, அல்லது
இரண்டையும் பெருமைப்பட வைத்த நடிகரைச் சொல்வதா? தனக்குக் கிடைத்த அத்தனை வாய்ப்புக்களையும்
இம்மாதிரித் தன்னுடைய அர்ப்பணிப்பான நடிப்பை வெளிப்படுத்துவதற்கும், கற்கண்டுத் தீந்தமிழை
களிப்புறப் பேசுவதற்கும் சவாலாகப் பயன்படுத்திக் கொண்டவர் எஸ்.எஸ்.ஆர் அவர்கள்.
அவர் நடிகர்திலகத்துடன் சேர்ந்து நடித்த பல
படங்கள் அவருக்கு இணையாக இவரையும் தூக்கி நிறுத்தி, ரசிகர்களைப் பேச வைத்தன.
கை கொடுத்த தெய்வம் படத்தில் தன் தங்கைதான்
சிவாஜிக்குப் பார்த்திருக்கும் பெண் என்பது தெரிந்து, ஊராரின் அவச் சொல்லுக்கு ஆளான
அவள் தன் நண்பனுக்கு வேண்டாம் என்ற மறைமுகமாய் அவர் மறுத்து நிற்கும் காட்சியும், அதனால்தான்
இவன் இதை மறுக்கிறான் என்று பிறகு தெரிந்து அந்தப் புதிரை விடுவிக்கும் சிவாஜியும்,
நீயெல்லாம் ஒரு அண்ணனா என்று குற்றம் சாட்டி நிற்கையில், ஏன் அவ்வாறு செய்தேன் என்று
தன் பக்க நியாயத்தை எஸ்.எஸ்.ஆர் எடுத்து வைக்கும் அழகும்….வெறும் சினிமாக் காட்சிகளா
அவை? பார்த்துவிட்டுத் தியேட்டரைவிட்டு வெளியே வந்ததும் மறந்து விடும்படியாகவா இருந்தன?
பாடமல்லவா சொல்லிக் கொடுத்தார்கள் அன்று. யாரேனும் மறுக்க முடியுமா?
பச்சை விளக்கில் வெள்ளந்தியான விவசாயி பசுபதியாக
வருவாரே…அந்தக் காரெக்டருக்கு அவரைத் தவிர வேறு யார் பொருத்தம்? அந்த முகமும், மலர்ந்த
சிரிப்பும், ஒரு கிராமத்து விவசாயிக்கே உரிய பொறுப்பான பேச்சும், தன்மையும் கொண்ட அந்தக்
கதா பாத்திரத்தை அவரைத் தவிர வேறு யார் செய்திருக்க முடியும்?
கட்டபொம்மன் வந்த காலத்தில் அதற்குப் போட்டியாக
வந்த சிவகங்கைச் சீமையில் முத்தழகு பாத்திரத்தில் கண்ணதாசனின் பக்கம் பக்கமான வசனத்தை அவரைத் தவிர
வேறு யார் அத்தனை திருத்தமாக அப்படிப் பேசியிருக்க முடியும்?
சாரதா படத்தில் தமிழாசானாக வந்து முருகனின்
வேலுக்கு விளக்கம் சொல்வாரே…பார்வையாளர்களின் மனத்தில் அந்தக் கருத்து பச்சென்று பதியாதா?
முதலாளியில் ஆரம்பித்து, ஏரிக்கரையின் மேலே…போறவளே
பெண்மயிலே…என்று பாடி….பராசக்தி, ரத்தக் கண்ணீர், மனோகரா, குலதெய்வம், தை பிறந்தால்
வழி பிறக்கும், பிள்ளைக் கனியமுது, அல்லி பெற்ற பிள்ளை, சிவகங்கைச் சீமை, தெய்வப்பிறவி,
குமுதம், மணப்பந்தல், ஆலயமணி, சாரதா, வானம்பாடி, பூம்புகார், சாந்தி, காக்கும் கரங்கள்,
மறக்க முடியுமா, மணி மகுடம்….என்ற எத்தனை எத்தனை படங்களில் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார்?
எண்பத்தியாறு வயது ஆன பொழுதிலும் கூட அவரைப்
பேட்டி கண்ட போது, நினைவு தப்பாமல், அந்தக் கால வசனங்கள் சிலவற்றை அவர் சொல்லிக் காட்டிய
அழகு, அந்தத் தமிழ் இன்றும் தடுமாறாத சித்தம், தனக்கென்று பெருமையான ஒரு இடத்தைத் தக்க
வைத்தவராகவே கடைசிவரை இருந்து, நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் பரிமளித்து,
அக்டோபர் 24, 2014 ல் தன் இன்னுயிரை நீத்த
திரு எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் தமிழ் ரசிக நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்து
நிலைத்திருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மை.
--------------------------------------------------------
20 அக்டோபர் 2019
;சிறுகதை உஷாதீபன், “கனல்”
;சிறுகதை உஷாதீபன், “கனல்”
கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டதுமே வீட்டுக்குள்
மன்னியின் தலை தெரிந்தது. உள்ளே நுழைந்து ஞாபகமாய்க்
கதவைச் சாத்தினேன். வீதியில் திரியும் நாய்கள் அதுபாட்டுக்கு நுழைந்து வராண்டாவில்
அசிங்கம் பண்ணிவிட்டுப் போய் விடுகின்றன.
எப்பவும்
கதவைச் சாத்தியே வை....– ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் தவறாமல் அண்ணா சொல்லும் வார்த்தைகள்.
வா......சிவமணி.. வா.....என்றவாறே திண்ணையின் கதவைத் திறந்தாள் மன்னி.
உள்ளே நுழைந்து பையை ஓரமாய் வைத்தேன். அதிலிருந்த அல்வா..மிக்சரை எடுத்து நீட்டினேன்.
தரட்டுமா? என்றாள் மன்னி அண்ணாவைப் பார்த்து. அண்ணா முறைத்தது போலிருந்தது.
மன்னி உள்ளே போய்விட்டாள்.
இதெல்லாம்
சாப்பிடுமாதிரியா இருக்கு நிலமை....இப்ப ஆஸ்பத்திரிக்கு ஓடணும்...கேட்குறா பாரு கேள்வி? – அறைக்குள்ளிருந்து அண்ணாவின் குரல்.
இதோ... குளிச்சிட்டுக்
கிளம்பிடுறேன்...நான் போய் துணைக்கு இருந்துக்கிறேன்-
அடுத்து என்ன சொல்வானோ என்கிற எதிர்பார்ப்பில் அவன் முகத்தையே
பார்த்தேன். பேன்ட்டை மாட்டிக் கொண்டே திரும்பியவன்,
நான் கிளம்பிட்டேன்....டிபன்
கொண்டு போறேன்...நீ குளிச்சு, டிபன் சாப்டுட்டு, சாப்பாடு எடுத்திண்டு வந்துடு. நீ வந்தப்புறம் நான் புறப்படுறேன்....ராத்திரி அங்கயே படுக்கிற மாதிரி
வா….
சரி....என்றேன்.
மறுப்பு சொல்ல ஏதுமில்லை. அவன் சொன்னதுதான். வந்து போகும் எனக்கு சொன்னதைச் செய்வதுதான்
வேலை...
நான் வரேன்...
– மன்னியைப் பார்த்தவாறே சொல்லி விட்டு அண்ணா செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றேன்.
வாசல் கேட்டை உள்ளே கைவிட்டு கொக்கி போடும்போது கூட என்னை நிமிர்ந்து பார்க்கவில்லை.
காபி குடிக்கிறியா....?
என்றாள் மன்னி.
இல்ல டிபன்
சாப்டுட்டு காபி சாப்டுறேன்.....
வெளியில்
வந்தால் என் வழக்கமான பழக்கங்களில் சில மாற்றங்களைத் தயங்காமல் செய்து விடுவது உண்டு.
காலை ரெண்டு காபியை ஒன்றாகக் குறைத்து விடுவேன். நம் வீட்டில் நமக்கிருக்கும் சுதந்திரம்
வேறு. வெளியிடத்தில் அதையே எதிர்பார்க்க முடியுமா? கூடியானவரை பிறருக்கு சிரமம் கூடாது.
வாயைக் கட்ட இப்பொழுதே பழகினால்தானே பின்னால் உதவும்?
காலைக் கடன்களை
முடித்துக் கொண்டு குளித்து விட்டு டிபனுக்கு உட்கார்ந்தேன். இட்டிலி தயாராயிருந்தது.
நாலே நாலு....போடுங்கோ...போதும்.....
எப்பயுமே
அந்த நாலுதானா...? – என்றவாறே இட்லியை வைத்து, சாம்பாரை ஊற்றினாள் மன்னி-.
அதுதான்
என் அளவு.... என்றவாறே லபக் லபக் என்று விழுங்கி விட்டு எழுந்தேன். போதுமா என்ற மன்னியின்
குரல் காதில் விழாததுபோல் இருந்து விட்டேன். என்னைப் பொறுத்தவரை வேணுமா...வேணுமா என்று
கேட்பவரை விட...போதுமா...போதுமா என்று சொல்பவரை விட, எதுவும் பேசாமல் தட்டில் போடுபவரையே
விரும்புவேன் நான். உபசரிப்பு என்பது அதுதான். என் மனையாள் சுமதியையே நான் அப்படித்தான்
பழக்கியிருக்கிறேன்.
காபியை வாங்கி
உறிஞ்சினேன். கொஞ்சம் சூடு பத்தாதுதான். எது குடிக்க முடியாததோ அதுவே சூடு. அப்படி
வெளியிடத்தில் எதிர்பார்க்க முடியுமா? சூடு பண்ணித்தான் கொடுக்கிறார்கள். ரெண்டு ஆற்று
ஆற்றிக் கொடுக்கையில் அது குடிக்கும் சூடாகிவிடுகிறது. குடிக்க முடியாத சூடுதான் நான்
விரும்புவது.
நெருப்புக்
கோழி அவன்...ஆத்தாதே...அப்டியே கொடு என்பாள் அம்மா சுமதியிடம்.
ராஜாஜி இப்டித்தான்
சூடாக் குடிப்பாராம்....தெரியுமா?
அதனால...நீங்களும்
குடிக்கிறேளா...?இதுல ஒரு பெருமையா? நாக்கு
பொத்துப் போயிடப் போறது....!
அதெல்லாம்
இல்லை....பழகியாச்சு....குடு...
அதான் ஆள்
எப்பவும் சூடாவே இருக்கேள்...என்னமா கோவம் வருது...? அம்மா காது கேட்கவே இப்படிச் சொல்வாள்.
பயமெல்லாம் கிடையாது. சம்பாதிக்கிறாளே...!
நல்ல விஷயமெல்லாம்
வேகமாத்தாண்டி வரும்....சொல்றதுக்கு ஆள் இல்லேன்னாத்தான் தெரியும் அருமை....
உலகத்துலயே
உங்களுக்கு மட்டும்தான் நல்லது தெரியுமா? மத்தவாளெல்லாம் வெறும் மண்ணா...?
மண்ணா இருந்தாப்
பரவால்லியே...பிடிச்சு வச்ச மண்ணால்ல இருக்கா சில பேர்...
யாரச் சொல்றேள்....?
என்னையா....?
உன்னைச்
சொல்ல முடியுமா? ஜோதிட பூஷணம்...ராமண்ணா வீட்டுப் பரம்பரையாச்சே நீ....அறிவு ஜீவிகளாச்சே...!
அவள் அப்பாவைப்
புகழ்ந்து சொன்னால் பெருமை தாங்காது.
வழியில் அவரைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. கோயிலைப்
பூட்டிக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தார். தற்செயலாய்த் திரும்பியவர்...என்னைப் பார்த்து
விட்டார்.
வந்திருக்கேளா....?
எப்போ வந்தேள்...காலைலயா...? கேள்விப்பட்டேன்...அப்பா ரொம்ப முடியாம இருக்கார்னு...நல்லதுதான்...துணைக்கு
ஆள் இருந்தாத்தான் முடியும்....ஆஸ்பத்திரிக்குதானே....நா அப்புறமா வந்து பார்க்கிறேன்.....
– என்னை வாயைத் திறக்க விடாமல் எல்லாவற்றையும் அவரே சொல்லிக் கொண்டார்.
ஒரு புன்னகையோடு
அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன். ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் அவரைச் சந்திப்பது
உண்டு. மாலை வேளைகளில் அருகிலுள்ள கோயில்களுக்குச் செல்கையில் அவர் பூஜை செய்யும் அந்த
முருகன் கோயிலுக்கும் செல்வேன். அர்ச்சனை என்று இல்லாவிட்டாலும், தட்டில் காசைப் போட்டு
விடுவேன். உண்டியலில் போடுவதை விட அர்ச்சகர் தட்டில் பணம் போட்டால் அது அவருக்குப்
பயன்படுமே...!. குறைந்த வருமானம் இழுத்துக்கோ, பறிச்சிக்கோ என்று ஜீவனம். எந்தக் கோயிலுக்குச்
சென்றாலும் என் வழக்கம் அது. ஐம்பதோ நூறோ சுளையாய்க் கண்ணில் பார்க்கையில் அவர் முகம்
மலருமே...அந்தக் காட்சி வேண்டும் எனக்கு. நிறைவு அதில்தான்.
உங்க அண்ணா
ரொம்பக் கஷ்டப்படுறார்...தனியாக் கெடந்து....வாரத்துக்கொரு வாட்டி அப்பாவுக்கு ட்யூப்
மாற்ற வேண்டியிருக்கோன்னோ...அரை நாள்...லீவு போட்டுட்டு, டாக்டர வரச் சொல்லிட்டு, முன்னதா
அவர் வந்து நின்னிடுவார். அப்பாடீ...என்ன சத்தம்...அலறல் இந்த வேதனை வேணுமா....? தங்கமான
மனுஷன்...காலம் பூராவும் உழைச்சு உழைச்சு ஓடாப் போயி, உங்களையெல்லாம் ஆளாக்கினாரே...அதுக்கு
பகவான் கொடுத்திருக்கிற பரிசு இதுதானா?
-சொல்லும்போதே
அவருக்குக் கண்கள் கலங்கிவிடும்.
உங்கப்பாட்ட
எப்பயாவது பேசிண்டிருக்கிறபோது என்ன சொல்லுவார் தெரியுமோ...அது முன் ஜென்ம வினைம்பார்....அனுபவிச்சித்தான்
தீரணும்...இல்லேன்னா இன்னொரு ஜென்மாவுக்கு அது தொடரும்பார்....பாவம் பகவான் அவரைச்
சீக்கிரம் கூப்பிட்டுக்கணும்...அதுதான் நான் தெனமும் என் முருகன்ட்ட வேண்டிக்கிறது....என்ன
இப்டிச் சொல்றேனேன்னு நினைக்காதீங்கோ....அவர் அனுபவிக்கிற வேதனை தாங்க முடியலை....அடுத்தாத்துல
இருக்கிற எங்களுக்கு.., அந்த அலறல் சத்தம் கேட்க முடிலை. நெஞ்சு வெடிச்சிரும் போல்ருக்கு.....
அவரின் வார்த்தைகளை
நினைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன். அப்பாவையும், அம்மாவையும் கூட்டிக் கொண்டுபோய்
வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் எனக்கு உண்டுதான். ஆனால் என் மனையாளின் ஒத்துழைப்பு
எவ்வாறிருக்கும் என்கிற சம்சயம் உண்டு.
அங்கன்னா
மன்னி அன்-எம்ப்ளாய்டு...ஆத்துல இருந்து பார்த்துக்கிறதுக்கு சௌகரியம். இங்க அப்படியா?
நாம ரெண்டு பேரும் வேலைக்குப் போயிட்டா...உங்க அப்பாவை யார் பார்த்துக்கிறது? ஆள் போட்டா
சரி வருமா? நம்பிக்கையா யார் கிடைப்பா? அது உங்கப்பாவுக்குப் பிடிக்குமா? அம்மாவுக்கும்
வயசாச்சு...இருட்டுறபோது நாம வீடு வந்து சேர்ற வரைக்கும்...உங்கம்மாவால தனியா இருக்க
முடியுமா? அப்பாவப் பார்த்துக்க முடியுமா? திடீர்னு என்னமாவது ஆச்சுன்னா? யோசிச்சுக்குங்கோ
எல்லாத்தையும்....
முதல் எடுப்பிலேயே
என்னைப் பயமுறுத்தி விட்டாள். அத்தோடு ஓய்ந்து போனேன். அப்படிப் பார்த்தால் அதேதானே
இங்கே. மன்னியால் மட்டும் அப்படி என்ன பெரிதாய்ச் செய்து விட முடியும்? பக்கத்து வீட்டுக்குச்
சென்று யாரையேனும் துணைக்கு வரவழைக்கலாம்.. அண்ணாவுக்கு ஃபோன் பண்ணிச் வரச்செய்யலாம்.
அவ்வளவுதானே...! முடியுமென்றால் முடியும்...முடியாதென்றால் முடியாதுதான். எல்லாவற்றிற்கும்
பரந்த மனசு வேண்டும். ஐம்பது வயது தாண்டிய அண்ணா திடீர் திடீரென்று இப்படி ஓடிக் கொண்டிருக்கிறான்.
ஒரு நாள் ஒரு வார்த்தை சொல்லியதில்லை. எங்கிருந்துதான் அவனுக்கு இப்படியொரு பொறுமை
வந்ததோ...! உதவிக்கு வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மன நிறைவில்லை.
அப்பா அம்மாவுக்கு
மூத்தவனிடம்தான் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை, ஆசையை மதித்து, தன்னோடேயே இருந்து விட்டுப் போகட்டும் என்று
விட்டு விட்டான்.
முடியுதோ,
முடியலையோ...கடைசிவரை நான் பார்த்துக்கிறேன். அவ்வளவுதான். அதுக்கு மேலே சொல்றதுக்கு
எதுவுமில்லை... – எப்போதோ ஒரு முறை இப்படிச்
சொன்னான். மேற்கொண்டு எதுவும் பேசாததே பெரிய பெருந்தன்மை. . குழந்தை இல்லாத அவனுக்கு
இந்தளவு சகிப்புத் தன்மையும், பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் இருப்பது எங்களுக்கெல்லாம்
பெரு வியப்பு. எனக்கு மூத்தவன் காமேஸ்வரன். எங்க ரெண்டு பேருக்கும் மூத்தவன்தான் ராஜாமணி
அண்ணா.
அவனும் அழைத்தால்
வருவான். அப்பாவுக்கு உடம்பு முடில...புறப்பட்டு வா...ன்னு சொன்னாத்தானே சேதி தெரியும்.
சொல்லலைன்னா...? நாமென்ன வரமாட்டோம்னா சொல்றோம்? – சொல்லிக் கொண்டு அவனும் வந்திருக்கிறான்.
சென்ற முறை அப்பா படுக்கையில் விழுந்தபோது அவன்தான் வந்து இருந்தான். தன்னால் யாருக்கும்
சிரமம் வேண்டாம் என்று ஆஸ்பத்திரியிலேயே படுத்து, குளித்து, உண்டு, உறங்கி, ஊர் திரும்பும்
வரை வெளியே இருந்தே கழித்து விட்டான். இங்கயே கான்டீன்ல டிபனை வாங்கி அப்பாவுக்கும்
கொடுத்துக்கிறேன்...முழுக்க நான் பார்த்துக்கிறேன்...என்றுதான் சொன்னான். உடம்பு சரியில்லாமல்
இருக்கும்போது ஓட்டல் உணவு வேண்டாம் என்று அண்ணா சொல்லி விட்டான். சாப்பாடு டிபன் வாங்கி
வர என்று மட்டும் அண்ணா வீட்டுக்குப் போனான்-வந்தான். அந்த முறை தன் வயிற்றுப்பாட்டை
ஓட்டலோடேயே வைத்துக் கொண்டு அப்பா டிஸ்சார்ஜ் ஆனதும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்து
விட்டு வண்டியேறி விட்டான்.
ராஜாமணி
அண்ணாவும் ஒன்றும் கேட்டுக் கொள்ளவில்லை. நானும் அப்போது கூட இருக்கத்தான் செய்தேன்.
நான் கடைசி. சின்னவன். அப்படியிருக்கக் கூடாது என்று என் மனசு சொல்லிற்று. அத்தோடு
நடக்க முடியாத அம்மாவை தினமும் பார்க்கவும், அருகில் அமர்ந்து பேசவும் வீட்டில் இருந்தால்தானே
வாய்ப்பு என்கிற ஆசை இருந்தது. ஊரிலிருந்து வந்து, அம்மா அருகில் ஆசையாய் அமர்ந்து
பேசும்போது லேசு பாசாக அண்ணா சொல்லியிருக்கிறான்….
பக்கத்துல
உட்கார்ந்து பேசிட்டாப்ல ஆச்சா….!.
இதற்கு முன்
அம்மாவுக்குப் பல் எடுக்க என்று ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்திருந்தபோது முழுக்க முழுக்க
நான்தான் வந்து கூட இருந்தேன். ஃபோனில் சொன்ன மறு நிமி்டமே ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு
ஏதாவது ஒரு பஸ் பிடித்து மறுநாள் காலை சென்னை
வந்து சேர்ந்து விடுவேன். அண்ணா வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை. ஆனால் அப்படி ஒவ்வொரு
முறையும் அழைப்பதும், நாங்கள் வந்து போவதிலுமே ஏதோ நெருடல் இருந்து கொண்டேயிருந்தது.
நல்ல சம்பளத்தில்தான் அண்ணா பணியாற்றுகிறான் என்றாலும், எங்கள் கடமை என்று ஒன்று இருக்கிறதே
என்று மாதா மாதம் நாங்கள் பணம் அனுப்பத் தவறுவதில்லைதான். எங்களுக்கு மனஆறுதல் என்று
வேண்டுமே...! ரெண்டாம் தேதி டாண் என்று என் பணம் போய்ச் சேர்ந்து விடும். என்ன, ஏது
என்று என்றும் ஒரு வார்த்தை கேட்டதில்லை. அப்பா அம்மாவை உடன் வைத்துப் பார்த்துக் கொள்வதே
பெரிது. இதில் அனுப்பும் பணத்திற்குக் கணக்குக் கேட்டால் அது பண்பாடாகுமா? அப்படியென்ன
அது பெரிய தொகையா? நினைத்தே பார்க்கக் கூடாது
என்பதுதான் என் குணம். காமேஸ்வரன் அண்ணாவும்
என்னைப் போலத்தான். டக்கு...டக்கென்று பணத்தை அனுப்பிவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பான்.
மருந்து, மாத்திரை என்று ஆயிரம் செலவிருக்கும். எதுவும் எதனாலும் தடைபடக் கூடாது என்பான்.
நடந்தா வந்தே.....அதான் இவ்வளவு நேரமாச்சேன்னு பார்த்தேன். பஸ் பிடிச்சேன்னா இங்கே அனுமார் கோயில்
ஸ்டாப்புல இறங்கியிருக்கலாமோல்லியோ....? – தான் கிளம்புவதற்குத் தயாராகிக் கொண்டே கேட்டான்
அண்ணா.
நின்னு பார்த்தேன்.
ஒரு பஸ்ஸையும் காணோம். சரி நடப்பமேன்னு வந்துட்டேன்... வழியையும் தெரிஞ்சிண்டாப்ல இருக்கும்தானே....
அது சரி...அதுக்காக
வேகாத வெயில்ல இப்டியா வருவாங்க...ஒரு ஆட்டோ பிடிச்சிதான் வர்றது. அம்பது ரூபா கேட்பான்....போனாப்
போறது....
நான் அமைதியாயிருந்தேன்.
தப்பித் தவறிக்கூட ஆட்டோவில் ஏறாத அவன் எனக்கு இப்படிச் சொல்கிறானே என்றிருந்தது. கதியாய்க்
காத்திருந்து பஸ்ஸில் வருவானேயொழிய ஒரு நாளும் ஆட்டோவில் கால் வைத்து நான் பார்த்ததில்லை.
மத்தவன் காசுன்னா பரவால்ல போல்ருக்கு....என்னவோ எனக்கு இப்படித் தோன்றியது.
வாங்கோ....வாங்கோ....என்ன
இவ்வளவு தூரம்....? – கதவருகில் திடீரென்று முளைத்த அவரைப் பார்த்து அண்ணா வாய்நிறைய
அழைத்தான். வழக்கமாய் அண்ணா வீட்டுக்கு வரும் ஆப்த நண்பர் அவர்.
இந்தப் பக்கமா
வர வேண்டியிருந்தது. சரி...அப்டியே உங்கப்பாவப் பார்த்திட்டுப் போயிடலாமேன்னு நுழைஞ்சேன்....எப்டியிருக்கார்....?
தம்பி வந்துட்டார் போல்ருக்கு...? அதான் அம்பாப் பறந்து வந்து குதிச்சிடுவாளே…!
இதை அண்ணா
ரசித்ததாய்த் தெரியவில்லை.
இருக்கார்....ஒரு
வாரம் ஆகும்னு சொல்லியிருக்கார் டாக்டர்....இடது
கை அத்தனை ஸ்வாதீனமில்லாம இருக்கு...பேச்சும் வரலை….போகப் போகத்தான் பார்க்கணும்.....
அடப்பாவமே...!
இது வேறையா...? ஏற்கனவே அவர் படுற அவஸ்தை போறாதா...? பகவான் நல்லவாளை எப்டியெல்லாம்
கஷ்டப்படுத்தறார் பாருங்கோ...?
இப்டியெல்லாம்
அவஸ்தைப் படுறதுக்குப் பேசாமப் போயிடலாம்...? அது உத்தமம்….
அண்ணாவின்
இந்த வார்த்தைகள் அவரைத் துணுக்குறச் செய்ததோ என்னவோ...தீவிரமாகப் பார்த்தார். எனக்கும்
என்னவோ போலிருந்தது..
அது நம்ம
கையிலயா இருக்கு...அவனில்ல நேரம் குறிச்சிருக்கான்...படுறதெல்லாம் பட்டாத்தானே ஓயும்....மனசைத்
தேத்திக்குங்கோ....உங்களுக்குத்தான் தம்பிமார்கள் இருக்காளே....தம்பியுடையான் படைக்கஞ்சான்ங்கிற
மாதிரி....ஒரு வார்த்தை சொன்னேள்னா மறு நிமிஷம் கிளம்பி வந்துடப்போறா....இவனுக்குப்
பெரியவர் ஒருத்தர் இருக்காரே....திருச்சிலயோ எங்கயோ...அவருக்குத் தகவல் சொல்லிட்டேளா...வந்துண்டிருக்காரா....?
சொல்லியிருக்கேன்......
–ஒற்றை வார்த்தையில் வந்தது பதில். நான் அமைதியாய்த்
தலை குனிந்து அமர்ந்திருந்தேன்.
நீங்க ஒண்ணுத்துக்கும்
கவலைப் படாதீங்கோ...அவாகிட்டே பொறுப்பை ஒப்படைச்சிடுங்கோ...நீங்கபாட்டுக்கு ஆபீசுக்குக்
கிளம்புங்கோ...எல்லாத்தையும் அவா பார்த்துப்பா....உங்கப்பாவ நேர் பண்ணி சுபமா வீட்டுக்குக்
கொண்டு வந்து சேர்ப்பா.... தங்கமா ரெண்டு தம்பிமார்களை வச்சிண்டு எதுக்கு வருத்தப்படறேள்....எல்லாம்
நல்லபடியா நடக்கும்....நான் சொல்றேனே பாருங்கோ....அடுத்த வாரம் சுபிட்சமா அகத்துக்கு
வந்து சேருவார் நான் வரட்டுமா....பெரியவர் தூங்கறார்...எழுந்ததும் நான் வந்துட்டுப்
போனேன்னு சொல்லுங்கோ...சந்தோஷப் பட்டுக்குவார்....நாளைக்கு மறுபடியும் வந்து பார்க்கிறேன்....
சொல்லிவிட்டு
அறையை விட்டு வெளியேறினார் அவர். கூடவே அண்ணாவும் வழியனுப்பக் கிளம்பினான்.
ஒரு காப்பி சாப்டுட்டுப் போகலாம்...இருங்கோ.....என்றவாறே
செருப்பைக் மாட்டிக் கொண்டான். இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள்.
நீங்க சொல்றதெல்லாம் சரிதான். இருந்தாலும் நான் ஒருத்தனே
கஷ்டப்படணும்னு விதியா இருக்கு? அவாளுக்கும் கடமை இருக்கில்லியா...? எல்லாத்தையும்
வாய்விட்டுச் சொன்னாத்தான் தெரியுமா? அவாளுக்காத் தெரிய வேண்டாம்? வச்சிக்கப் பிடிக்காம
வம்படியா வெளியேத்திட்டான்னு கடைசில எம்மேல பழி போடுறதுக்கா…? மாத்தி மாத்தி அவாளும் அப்பாம்மாவைக் கொண்டு வச்சிக்கலாமில்லியா?
அப்பத்தானே கஷ்டம் தெரியும்...? மூத்தவன்னாலும், என் ஒருத்தன் தலைலயேவா எழுதியிருக்கு...?
சற்றுச் சத்தமாகவே சொல்லிக் கொண்டு அவரோடு நடந்த அவன்
லேசாகத் திரும்பிப் பார்த்தது போல் இருந்தது. அந்த வார்த்தைகள் என் காதுகளில் விழாமலில்லை.
பொது வெளியில் அவன் அப்படிச் சத்தமாகப் பேசியது அதுவே முதல் முறை…!
------------------------------------------------------------------------
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
“காலச் சுமைதாங்கி“ - சிறுகதை - வாசகசாலை 100 வது இதழ் (06.10.2024)
“காலச் சுமைதாங்கி“ அ றையின் மின் விசிறியை அணைத்து விட்டு ஜன்னலருகே உட...
-
“விடியுமா?” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு:- அடையாளம் பதிப்பக...
-
அசோகமித்திரனின் “விமோசனம்” - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில். ...
-
தி.ஜா.நூற்றாண்டு - “முள்முடி” சிறுகதை -வாசிப்பனுபவம் - உஷாதீபன் க தை எழுதப்பட்டது 1958-ல். மதமாச்சர்யங்கள் அற்ற காலம். ஒழுக்கமும்...