“கட்டற்ற சுதந்திரம்” கட்டுரை - காற்றுவெளி பங்குனி 2023 இதழ்
ஒரு சமயம் நான் பார்த்த இந்த நிகழ்வோடு இந்தக் கட்டுரையைத்
துவங்குவது பொருத்தமென்று நினைக்கிறேன். அது இன்றைக்குச் சாதாரணமாய், மதிப்பற்றதாய்க்
கூடத் தோன்றலாம். இதென்ன பெரிசு? என்று. ஆனால் அன்றைக்கு அது பெரிசுதான். மதிப்பு மிக்கதுதான்.
காரணம் அந்த நிகழ்வின்போது அந்த மக்கள் காத்த அமைதி. அதைவிடக் கண்ணியமாக, எதிர்த்தரப்பினரும்
பொறுமையுடன் அமைதி காத்து, அதை அளித்தவருக்கு, சுற்றியிருந்த அந்தக் கூட்டத்திற்கு
மதிப்பளித்துக் கடந்து போன கண்கொள்ளாக் காட்சி. பண்பாட்டின் உச்சம்.
மக்களிடம்
அத்தனை மேன்மை படிந்திருந்த காலம். இன்னும் இங்கு நல்லவைகள், நன்மைகள் முற்றிலுமாக
அழிந்துபடவில்லை என்பதை உணர்த்திய காலம். அது இன்றைக்கும் இருக்கிறதா என்பதே கேள்வி.
இல்லாமல் போகுமா? என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நான் சொல்வது அதே நிகழ்வைச் சுட்டி
அல்ல. அந்த மேன்மையும் மதிப்பும் மிக்க நடப்பியல்களை.
அது
ஒரு அரசியல் பொதுக் கூட்டம். இரவு எட்டு மணி தாண்டி பெருந்திரளாகக் கூடியிருந்த மக்களின்
எதிரே மேடையிட்டிருந்த இடத்தில், அமர்ந்த நிலையில் ஓங்கிக் குரலெடுத்துப் பேசிக் கொண்டிருக்கிறார்
அவர். மொத்த ஜனமும் பேச்சை ஊன்றிக் கேட்டு லயித்திருக்கிறது. அவ்வப்போது நகைச்சுவை
வெடிகள் சரளமாக வந்து விழுகின்றன. அர்த்தமுள்ள, அசிங்கமில்லாத அந்த நகைச்சுவையை, அதில் பொதிந்துள்ள உண்மையை உணர்ந்து,
அடங்கிச் சிரிக்கிறது ஜனக் கூட்டம். வெறும் கூடிக் கலையும் கும்பலல்ல, கூடிச் சிந்திக்கும்
கூட்டம் என்பதாய் அந்த ஆற்றல் மிக்க சொற்பொழிவாளர் சொல்லும் தியாக நினைவுகளை தங்கள்
எண்ண அடுக்குகளிலிருந்து வெளியே எடுத்து, அவர்
சொன்ன உண்மைகளின் தாத்பர்யத்தை உணர்ந்து இறுக்கமான மனநிலையில் கட்டுக்கோப்பாகக் கருத்தூன்றி
நிற்கிறது ஜனம்.
அது
திரு நெல்லை ஜெபமணி அவர்களின் பொதுக் கூட்டம். இன்றைய இளைய தலைமுறைக்கு அவரைப் பற்றித்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏன், முதிய தலைமுறையிலேயே பலருக்கும் தெரிந்திருக்காதுதான்.
அவர் பேசியது பெருந்தலைவர் காமராஜர் காலத்து ஆட்சி பற்றி. அப்போதைய அரசியல் நிகழ்வுகள்பற்றி.
ஒரு நாட்டின் தலைவன் எப்படி சுயநலமற்று இருந்தான் என்பது பற்றி. எப்படியிருந்தால் இந்த
நாடு முன்னேறும் என்பது பற்றி.
அந்த
நீண்ட அகண்ட சாலையின் இரு மருங்கிலும் நெடுக ஒலி பெருக்கிக் குழாய்கள் கட்டப்பட்டுள்ளன.
நேர் எதிர்ச்சாரியிலிருந்த பகுதியிலும் அவரது குரல் கம்பீரமாய் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
அப்போது அந்தச் சாலையின் நுனிப் பகுதியில் ஒரு சவ ஊர்வலம். இறந்தவரின் சடலம் பாடையில்
ஏந்தி வர முன்னும் பின்னுமாகப் பெருந்திரளான ஆட்கள் சாலையில் மலர் தூவியவாறே பட்டாசு வெடித்துக் கொண்டும், கோவிந்தா…கோவிந்தா என்று கோஷமிட்டுக்
கொண்டும் அந்தப் பகுதியை மெல்லக் கடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
ரொம்பவும்
ஆழ்ந்தும், ஸ்வாரஸ்யமாயும், மொத்தக் கூட்டத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையிலும்
வசீகரமாய்ச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த பெருந்தகை திரு ஜெபமணி அவர்கள், அவரது பேச்சை
அந்தக் கணமே நிறுத்திக் கொள்கிறார். சொல்ல வந்த விஷயம் முழுமையடையாமல் ஏன் திடீரென்று
பேச்சு நின்று போனது என்று கூட்டம் ஒரு கணம் திகைக்கிறது. சொற்பொழிவாளரின் பார்வை பக்கவாட்டில்
சற்று தூரத்தில் வந்து கொண்டிருக்கும் இறுதி ஊர்வலத்தை நோக்கி அமைதியோடு பதிந்திருப்பதைப்
பார்த்துப் புரிந்து கொள்கிறது. நிசப்தம்….நிசப்தம்…சுற்றிலும் மயான அமைதி. மொத்தக்
கூட்டமும் கப்சிப் என்று கிடக்கிறது. அந்த
ஊர்வலத்திற்கான அமைதி அஞ்சலி இங்கே.
இதை விடவா வானுலகம் செல்லும் அந்த மனிதனுக்கு
ஒரு மா மரியாதை வேண்டும்? சுற்றமும் சுழலும், அங்கே கூடியிருந்த கூட்டமும் சற்றும் நினைத்துப் பார்த்திராத அந்தப் பொன்னான நிமிஷங்கள். அந்தப் பெயர் தெரியாத மனிதனுக்கு அன்று அங்கே கிடைத்த
மரியாதையும் மௌனாஞ்சலியும்….நான் கால காலத்திற்கும் கண்டறியாத காட்சி. அது அந்த மனிதர்களுக்கான
சாட்சி.
முன்னும்
பின்னும் திரளாக, வரிசையாக நடந்து கொண்டிருந்த அந்தக் கூட்டமும், தாங்கள் கோஷமிடுவதையும்,
மலர் தூவுவதையும், பட்டாசு வெடிப்பதையும் அந்தக் கணமே நிறுத்திக் கொண்டு அமைதியாகத்
தங்கள் ஊர்வலத்தைத் தொடர்ந்து, அந்த மேடைப் பகுதியையும், சுற்றியுள்ள, அதைத் தாண்டிய
ஜனத் திரளையும், நடுவே விரிந்திருந்த பாதை நெடுகக் கடந்து, சற்று தூரத்தில் தொடங்கும்
வேறொரு சாலையில் திரும்பி தங்கள் கோவிந்தா கோஷத்தையும், பட்டாசுக் குதூகலத்தையும் தொடர
ஆரம்பிக்கிறது.
அய்யா ஜெபமணி அவர்கள், பார்வையிலிருந்து
ஊர்வலம் மறைந்ததைக் கண்டு விட்டு, எங்க விட்டேன்…..ஊம்……சரி…
….என்று நினைவுபடுத்திக் கொண்டு தனது பேச்சைத் தொடர்கிறார்.
நமக்கான
சுதந்திரம் என்பது இப்படியான கட்டுப்பாடான, அதன் முழுத் தாத்பர்யத்தை உணர்ந்த ஒன்றாகத்
திகழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த உண்மை நிகழ்வோடு துவங்கினேன். சுதந்திரம் என்பது
அதற்காகப் பாடுபட்ட தியாகிகள், பெரியவர்கள் நமக்காகப் பெற்றுத் தந்த உரிமைகளை சுய கட்டுப்பாட்டோடும், ஒழுக்க நெறியோடும்,
கண்டிப்பாக வரையறுத்துக் கொண்டு அனுபவிப்பதற்காகத்தானேயொழிய இஷ்டம்போல் விட்டேற்றியாக,
எப்படி வேண்டுமானாலும் என்கிற ரீதியில், அவிழ்த்து விட்ட காளையைப் போல் இருப்பதற்காக
அல்ல. எப்படியும் இருக்கலாம், எம்மாதிரியும் வாழலாம் என்பதாக நினைத்துக் கொண்டு, கட்டறுத்துத்
திரிவதற்காக அல்ல. சுதந்திரம் என்ற புனிதமான வார்த்தைக்கு நாம் செலுத்தும் மரியாதை
என்பது அதுதான்.
இன்னொரு சம்பவம் சொல்கிறேன். அது புற நகர்ப்
பகுதி. நகரத்தோடு ஒட்டி படிப்படியாக வளர்ந்து வரும் இடம். நாளொரு மேனியும், பொழுதொரு
வண்ணமுமாக வீடுகளும், கடைகளும், தோன்றியவண்ணம் இருந்தன. குடியிருப்போர் அதிகரிக்க அதிகரிக்க,
அது நகர்ப்புறத்தின் தவிர்க்க முடியாத பகுதியாய் மெல்ல மெல்லத் தன்னை உறுமாற்றிக் கொண்டிருக்கிறது.
அந்தப் பகுதிக்கென்று குடியிருப்போர் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்து, போக்குவரத்து,
சாலை வசதி, தண்ணீர் வசதி, சாக்கடை வசதி, சுகாதார வசதி, பேருந்து நிலையம் என்று ஒவ்வொன்றாக
முயன்று ஒற்றுமையாக அதனை மேலெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஓரளவு
நல்ல நிலைக்கு வந்து விட்ட வேளையில் பேருந்துகள் தங்கு தடையின்றி வந்து செல்ல ஆரம்பிக்கின்றன.
ஒரே சமயத்தில் வெவ்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அங்கே அடுத்தடுத்து வந்து
நிற்கும்போது இட நெருக்கடி ஏற்பட்டு பேருந்து நிலையத்தை விரிவாக்க வேண்டும் என்ற கட்டாயம்
ஏற்படுகிறது.
எதிரே
ஒரு சுடுகாடு. வெட்டவெளிப் பகுதி. ஒரு சிறு தகரக் கொட்டகை மட்டும். ஒரு காலத்தில் அதிகக் குடியிருப்புகள் இல்லாத காலத்தில்,
இரவு நேரங்களில் கூட என்றும் பாராமல், தப தபவென எரியும் பிணங்களைக் கடந்து பயந்தும்,
நடுங்கியும், பலரும் போய் வந்து கொண்டிருந்தார்கள். பஸ்ஸை விட்டு இறங்கியதுமே கண்ணில்
படும் இந்தக் காட்சியை மனதில் கொள்ளாமல் ஆண்களும், பெண்களும், சிறுவர் சிறுமியரும்,
விடுவிடுவென நடந்து தங்கள் இல்லங்களை அடைவது ஒரு தந்திரோபாயக் காட்சியாக இருக்கும்.
சுற்றிலும் இருக்கும் வீடுகளின் ஜன்னல்கள் எந்நேரமும் அடைபட்டிருக்கும். திறந்து வைத்தால்
வீட்டிற்குள் புகை மண்டும். எதிரே சுடுகாடு என்று தெரிந்தேதான் இடம் வாங்கி, வீடு கட்டினார்கள்,
மறுப்பதற்கில்லை. நாளாவட்டத்தில் போய்விடும் என்ற நம்பிக்கையோடு. அதுவரையிலான சங்கடங்களைப்
பொறுத்துக் கொள்ளலாம் என்கிற பொறுமையோடு.
ஆனால் இன்றைய அப்பகுதியின் முன்னேறிய
நிலையில் அந்த சுடுகாட்டுப் பகுதியும் பேருந்து நிலையத்திற்கென்று கிடைக்குமாயின் நகரின்
அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் பஸ்களின் விரிவாக்கம் என்பது எளிதாகும் என்பதும்,
வந்து, நின்று, பயணிகள் அனைவரும் அருகருகேயுள்ள சிறு சிறு காலனிகளிலிருந்து வந்து வசதியாகத்
தங்களின் நகர்ப்புறப் பயணங்களை மேற் கொள்ள ரொம்பவும் ஏதுவாக அமையும் என்கிற நன்நோக்கில்
புறநகர்ப் பகுதியின் தவிர்க்க இயலாத வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு அந்தச் சுடுகாட்டை அங்கிருந்து எடுப்பதுதான் சிறந்தது
என்ற முடிவில் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தார்கள். மனுவுக்கான நடவடிக்கையில்
-
நாட்கள் கடந்தன. மாதங்கள் கடந்தன. வருஷங்களும்
கடந்து விட்டன. இன்றுவரை அந்த மயானம் அங்கேயேதான் இருக்கிறது. நம் இன மக்களின் ஒரு
பகுதியினருக்கான சுடுகாடு அது என்று அறிந்து, அதன் அவசியம் உணர்ந்து, மாற்று இடம் தரப்படும்
என்று ஆட்சியரலுவலகத்தால் சொல்லப்பட்டும், இடம் சுட்டப்பட்டும், அந்த மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. விஷயம் கிடப்பில்
போய் விட்டது. இன்று அது ஆறின கஞ்சி. பழங்கஞ்சி.
இப்போதும் அங்கே பிணங்கள் எரிகின்றன.
புகை மண்டலம் சுற்றிலும் உள்ள வீடுகளில் பரவிக் கொண்டிருக்கின்றன. மொட்டை மாடியில்
இதற்காகவே எவரும் எட்டிப் பார்ப்பதில்லை. வளர்ந்துவிட்ட நகரின் நடுவே ஒரு மயானம். எல்லோரும் ஒரு நாள் போவதுதான். எனினும் இந்த வருத்திக்
கூட்டி அனுபவிக்கும் சங்கடம் எதற்கு என்று மக்கள் பெருத்த சகிப்போடுதான் இன்று வரை
இருந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை சரி.
ஆனாலும் அங்கே அடிக்கடி வரும் பிணங்களின் ஊர்வலத்தின்
போதும், எரியூட்டின்போதும், கூடியிருக்கும் கூட்டமும், அந்தக் கூட்டத்திற்கு நடுவேயான
ஒருவகைக் கலவரமான சூழலும், சுற்றிலும் குடியிருக்கும் ஜனங்களைப் பயப்படுத்துவது போலான
தடாலடி நடவடிக்கைகளும் என்னென்று சொல்வது? இன்றுவரை அந்தப் பகுதி மக்கள் அனுபவித்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள். என்ன தலையெழுத்து?
சாவு என்பது இயற்கை. அவரவர் உறவினர்களின்
மறைவு என்பது வருத்தமளிக்கக் கூடியதுதான். மறுப்பதற்கில்லை. அதை எந்த மனிதனும் மதிப்பதுதான்.
நமக்குச் சொந்தமில்லை என்பதற்காக அதை யாரும் இழிவாய் நினைப்பதில்லை, அம்மாதிரி நடந்து
கொள்வதுமில்லை. அதுதான் நமது நேர்த்தியான பண்பாடும் கூட. அவர்கள் அவ்வகையினர்தான்.
எந்த உயிர் போனாலுமே, அடப் பாவமே…! என்கின்ற மனப்பான்மை உள்ள பண்பாளர்கள்தான்.
அப்படியிருக்கையில் சம்பந்தமில்லாது,
வரைமுறையற்ற வகையில் அந்தப் பகுதியையே பயப்பிராந்திக்கு
ஆளாக்கினால்…? கேட்பதற்கு ஆளே இல்லை என்பதுபோல் நடந்து கொண்டால்? எவன் வர்றான் பார்க்கிறேன்
என்றும் என்ன செய்திடுவான் பார்ப்போம் என்கிற ரீதியிலும் அச்சமூட்டினால்?
நாலாபுறமும் இருக்கும் கடைகளுக்கு முன்
சென்று, சத்தமிட்டு பயமுறுத்தி அடைக்கச் சொல்வது, கல்லை விட்டு எறிவது, தடியால் அடிப்பது,
அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளைத் திசை திருப்பி விடுவது, நின்று முகத்துக்கு
முகம் பார்ப்பவர்களை, என்ன முறைக்கிறே? என்று கேட்டு விரட்டுவது, மோட்டார் பைக்குகளில் வந்து நின்று கொண்டு அவைகளை விர்ர்ர்ர்ர்ர்……விர்ர்ர்ர்ர்ர்
என்று ரேசுக்குச் செல்வதுபோல் சத்தமாய்க் கிளப்பிக் கொண்டு புயலாய்ப் பாய்ந்து பறந்து
முன்னும் பின்னுமாக மின்னலாய் ஓட்டிச் சென்று குறிப்பிட்ட நேரத்திற்கு அந்தப் பகுதியையே
கலங்கடிப்பது, ஸ்தம்பிக்கச் செய்வது…. இப்படியெல்லாம் செய்தால்? இதிலென்ன வீரமிருக்கிறது?
எந்தப் பெருமை நிலைநாட்டப்படுகிறது? அந்த மக்கள் இப்பொழுதெல்லாம் பழகி விட்டார்கள்.
அங்கு சடலம் வந்தவுடனேயே கடைகளை அடைத்து விடுகிறார்கள். துஷ்டனைக் கண்டால் தூர விலகு…!
ஆனாலும் இது சரியா? அஞ்சலி செலுத்துவவதற்கு வந்து நிற்கும் அன்பான கூட்டமாயிற்றே அய்யா…!
அவர்களை இப்படிக் கலவரப்படுத்தலாமா? எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் நிறை. எதற்கு
இந்த அவலம்?
இதுதான் சுதந்திரமா? இது விட்டேற்றியான
சுதந்திரமல்லவா? கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பது எவ்வளவு அநாகரீகமாய்ப் போகிறது? நமக்கான
சுதந்திரம் என்பது யாரையும் துன்புறுத்தாததாய் இருக்க வேண்டாமா? நமக்குப் பயனளிக்கிறதோ
இல்லையோ, அடுத்தவனைப் பயப்படுத்துவதுபோல் இருக்கலாமா? நமக்கான சுதந்திரத்தை நாம் இப்படியெல்லாம்தான்
பயன்படுத்துகிறோம் என்றால் அது எத்தனை வெட்கக்கேடு? இன்றுவரை யாரும் தட்டிக் கேட்கவில்லை.
ஒரு நாள் இரண்டு நாள் கூத்துதானே என்று எத்தனை விஷயங்களை அவிழ்த்து விட்டாயிற்று இந்த
நாட்டில்? ஒவ்வொன்றாய்க் கெட்டுச் சீரழிந்து…..முடிவுதான் என்ன? அழிந்துபடுதல் தானா?
சற்றே உங்கள் சிந்தனையைக் கடன் கொடுங்கள் இதற்காக.
பேருந்தில் வெளியூருக்குச் செல்கிறோம்.
சந்தோஷமான நிகழ்ச்சிக்குச் செல்பவர்கள் இருப்பார்கள். வருத்தமான நிகழ்வுகளுக்குச் செல்வோரும்
இருப்பார்கள். உடம்பு முடியாதவர்கள் இருப்பார்கள். வயதானவர்கள் இருப்பார்கள். அமைதியாகத்
தூங்கிப் போவோமே என்று புறப்பட்டு வந்து அயர்ச்சியில்
பயணிப்பார்கள். குழந்தைகள் இருக்கும். சிறுவர் சிறுமியர்கள் இருப்பார்கள். பஸ்ஸின்
கொஞ்ச தூர ஓட்டத்தில் அவை அயர்ந்து தாயின் மடியில் உறங்கக் கூடும். இம்மாதிரி எதையுமே
மனதில் கொள்ளாமல், எதைப்பற்றியும் சிந்திக்காமல், சினிமாப் பாட்டை அலற விட்டுக் கொண்டு
செல்கிறார்களே…அது எந்தவகையிலான சுதந்திரம்? என்ன நல்ல யோசனையின்பாற்பட்டு இது நடைமுறைக்கு
வந்தது? பாட்டுக் கேட்டுக் கொண்டே சந்தோஷமாய்ப்
பயணிக்கட்டும் என்று நீங்களே மொட்டையாய் முடிவு செய்து கொள்வீர்களா? அப்படியானால்தான்
ஓட்டுநர் உறங்காமல், அயர்ச்சி தெரியாமல் நேரத்திற்கு வண்டியைக் கொண்டு செல்வார் என்றால்,
அந்தக் காலத்தில் இப்படித்தான் நடந்ததா? பஸ்கள் அப்படியா ஓடிக் கொண்டிருந்தன? சொல்லப் போனால் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பை
விட இந்தக் காலத்தில்தானே போக்குவரத்தும், ஜன நெருக்கடியும், ஆபத்துக்களும் அதிகம்? இந்தக் கால கட்டத்தில்தானே கவனமாய், கருத்தாய்,
வண்டியை இயக்க வேண்டும்? அதை விட்டு விட்டு உங்களுக்காக இல்லை, இது எனக்காக என்ற கணக்காயும்,
உங்களுக்காகவும்தான் என்ற பொருளிலும், தொலைக்காட்சியையும் சேர்த்து அலற விட்டுக் கொண்டு
விரும்பியும், விரும்பாமலும் பயணிக்கச் செய்வது
விபத்துக்கு வழி வகுக்குமா அல்லது நிம்மதியான பயணத்தைத் தருமா? பஸ்னா அப்டித்தான்…என்று
சகிக்கப் பழகிக்கொண்டுவிட்ட பாவப்பட்ட ஜனங்கள்…..வீட்டை விட்டு வெளியில் இறங்கினால்,
அவர்கள் முதுகில் இந்தமாதிரி என்னவெல்லாம் சுமைகள்?
நம் நாட்டில் அவிழ்த்து விட்ட கழுதையாய்,
சுதந்திரம் எவ்வளவு அலங்கோலமாய் பாழ்பட்டுக் கிடக்கிறது? எதையுமே கன்ட்ரோல் பண்ண முடியாது,
எதையும் கட்டுப்படுத்துவதற்கில்லை, எல்லாமும் அப்படி அப்படியே தறிகெட்டுப் போய் எங்கே,
எந்த இடத்தில் சென்று முட்டி மோதி நிற்கட்டுமோ நிற்கட்டும் என்று கட்டவிழ்த்து விட்ட
அவல நிலையைத்தானே இன்றுவரை பலவற்றிலும் நாம்
காண்கிறோம்?
ஒரு தலைவனின் பிறந்த நாளுக்கோ, நினைவு நாளுக்கு மாலை போட்டு மரியாதை செய்வதானாலுமோ
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏதேனும் ஒன்று குறைகிறதா சொல்லுங்கள்? மக்களைப் பயப்பிராந்திக்குள்ளாக்குவதில்
அப்படி என்ன சந்தோஷம்? யாருக்கு யார் பயப்பட வேண்டும்? ஏன் பயப்பட வேண்டும்? அப்பொழுதுதான்
தலைவனின் பெருமை தெரியும் என்று இவர்களுக்கு யார் சொன்னது? அந்தத் தலைவர்களே விரும்பினதாகத்
தெரியவில்லையே…! மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல. எல்லாத் தலைவர்களின் அருமை பெருமைகளையும்
அறிந்தவர்கள்தான்…! அவர்களுக்கு நல்லதும் தெரியும், கெட்டதும் தெரியும். எதைச் செய்ய
வேண்டும் என்றும் தெரியும், செய்யக் கூடாது என்றும் தெரியும்தான். எந்த வேண்டாததையெல்லாம்
செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியும். அதையெல்லாம் இம்மாதிரிச் செய்கைகளால் யாராலும் இம்மியும்
மாற்ற முடியாது.
கோயிலில் சாமி கும்பிடுவதானாலும் நாலு
தெருவுக்கு ஒலி பெருக்கி கட்டுதல், ராத்திரி பகலாய் அலற விடுதல், பிடித்த நடிகரின்
பிறந்த நாளுக்கென்று ஊரையே ரெண்டு பண்ணுதல், எந்தப் போராட்டமானாலும் கற்களை வீசுவது,
பஸ்களை எரிப்பது, பொது இடங்களில் தயக்கமின்றி எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது,
புகைபிடிப்பது, கண்ட இடங்களில் குப்பைகளை வீசுவது என்று எத்தனையெத்தனை ஒழுங்கீனங்கள்
இந்த நாட்டில்?
இதுவா சுதந்திரம்? இதுவா மானம்? இதுவா
கௌரவம்? இதுவா விவேகம்? இல்லை இது அவமானம்…பெருத்த அவமானம்…..!!
சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்து
தேச பக்தியும், தெய்வ பக்தியும் மிகுந்த இந்த தேசத்து மக்களை நினைந்து நினைந்து என்னவெல்லாம்
எண்ணியெண்ணிப் பெருமிதம் கொண்டோமோ, அதெல்லாவற்றிற்கும் நேர்மாறாய் நாம் வருத்தம் கொண்டு
நொந்து வேதனையடையும் நிலையில்தான் பாடுபட்டுத் தேடிச் சேர்த்த இந்த சுதந்திரத்தை இன்று
நாம் கட்டறுத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
சற்றே சிந்தியுங்கள். மேலே சொன்னவற்றில் உண்மைக்குப் புறம்பானவை ஏதேனும் உண்டா? உங்கள் மனசாட்சியே
உங்களுக்கு சாட்சி…!!!
-----------------------------------------------