09 பிப்ரவரி 2021

செய்யும் தொழிலே தெய்வம்-திறமைதான் நமது செல்வம்-நடிகர் கள்ளபார்ட் நடராஜன் -பேசும் புதிய சக்தி-பிப்.2021

செய்யும் தொழிலே தெய்வம்-திறமைதான் நமது செல்வம்-நடிகர் கள்ளபார்ட் நடராஜன்                                






                                                          திரும்பத் திரும்ப இதையேதான் சொல்லியாக வேண்டியிருக்கிறது. திறமைசாலிகளை, அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியவர்களை, செய்யும் தொழிலை தெய்வமாய் மதித்தவர்களை, என்னுடைய திறமைதான் எனக்கு சொத்து என்று தான் நடிக்கும் படங்களில் தன் முத்திரையை அழுத்தமாய்ப் பதித்தவர்களை, பயபக்தியோடு ஒழுக்கமும், மரியாதையுமாய் தொழில் செய்தவர்களை போதிய அளவு பயன்படுத்திக் கொள்ளாது தமிழ்த் திரையுலகம் விலக்கித்தான் வைத்திருந்திருக்கிறது. வேண்டுமென்றேவா அப்படி நடந்தது? நமக்குத் தெரியாது. ஆனால் நடந்தது பலருக்கும்.                                                             படமெடுத்த படாதிபதிகளின் விருப்பமோ அல்லது இயக்குநர்களின் விருப்பமோ அல்லது கதைக்கேற்ற பாத்திரங்களில் இவர் பொருந்த மாட்டார் என்கிற முரணான எண்ணமோ அல்லது கதாநாயகர்களின் சிபாரிசு இல்லாமல் போனதோ இவற்றில் எதுவோ ஒன்று அவர்களிடையே தோன்றி முக்கியமான நடிகர்களை கால நிர்ணயம் கருதாது ஒதுக்கியே வைத்திருக்கிறது தமிழ்த் திரையுலகம். கௌரவம் கருதி அவர்களும் வாய்ப்பு வரும்போது வரட்டும் என்று காத்திருந்திருக்கிறார்கள். தன் திறமை மீது கௌரவம் கொண்டவர்கள் வலியச் சென்று வாய்ப்புக்கு நிற்பதில்லை என்பதை வழக்கமாய்க் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேடி வரும் வேஷம் எத்தனை முக்கியமானதாய் இருந்தாலும் சரி அல்லது எத்தனை சாதாரணமாய் இருந்தாலும் சரி, மிகுந்த மரியாதையோடும், பொறுப்புணர்ச்சியோடும் ஏற்றுக் கொண்டு கடமையுணர்வோடு, விரும்பிச் செய்து நிறைவு கண்டிருக்கிறார்கள்.                                        இதனை அந்தத் தொழிலில் இருந்தவர்கள் உணர்ந்ததைவிட, தமிழ்நாட்டின் சினிமா ரசிகர்கள், அதுவும் அந்தக்கால மூத்த தலைமுறைப் பெரியவர்கள் மிகுதியாக உணர்ந்திருந்தார்கள் என்பதுதான் உண்மை. சினிமாவைப் பற்றிக் கூட்டம் கூட்டமாய் நின்று, வீட்டுத் திண்ணைகளிலும், குழாயடிகளிலும், ஆற்றுப் படுகைகளிலும், தெரு முக்குகளிலும், பொதுக்கூட்டங்கள் நடக்கும் மைதானப் பெருவழிகளிலும்  பேசிப் பேசிப் பொழுது கழித்த காலங்களில் அம்மாதிரி நடிகர்களை விடாது நினைவு கூர்ந்து அவர்களைத் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் காணமுடியவில்லையே என்று வேதனைப்பட்டவர்கள், ஆதங்கப்பட்டவர்கள்  அவர்கள்.                               அன்று அவர்களுக்கு சந்தோஷமான பொழுது போக்கு என்று இருந்தது சினிமா, நாடகம் போன்றவைதான். நாடகங்கள் எல்லா ஊர்களிலும் நடைபெற்றதில்லை. தொலை தூரத்தில் நடக்கும் நாடகங்களுக்குச் சென்று பார்க்கும் பழக்கம் மக்களிடத்தில் இல்லை. ஏன், உள்ளூரிலேயே என்றேனும் அபூர்வமாய் நடந்துவிடும் நாடகங்களுக்குக் கூட காசு கொடுத்துப் போய்ப் பார்க்கும் வழக்கம் நம் மக்களிடம் அதீதமாய் என்றுமே இருந்ததில்லை. அவர்களை ஈர்த்தது சினிமாதான். அதுவும் குறைந்த செலவில் நிறைந்த திருப்தியாய். வெறும் நாலணாக் காசு அவர்களுக்கு ஏக சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய மதிப்பு மிகுந்த துட்டு.. அதனால் திரைப்படங்களைத் தொடர்ந்து விடாது பார்க்கும் பழக்கம் நம் மக்களிடையே இருந்து வந்தது என்பதுதான் உண்மை.                                                                   வீட்டில் ஒரு விசேடம் என்றால் அந்த விசேடத்தைச் சிறப்புச் செய்யும் நிகழ்வாக எல்லோரும் சேர்ந்து ஒரு சினிமாவுக்குச் செல்வது என்பதுவே மிகுந்த சந்தோஷத்தையும், உறவு ஒற்றுமையையும் ஒங்கச் செய்யும் முக்கிய நிகழ்வாய்  இருந்தது. அதனால் திரையுலகில் இருந்தவர்களுக்குக் தெரிந்திருந்ததைவிட, ரசிகர்களாய் இருந்த தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழ்த் திரை நடிகர்களைப் பற்றிய அபிப்பிராயங்கள் அத்துபடி. மதிப்போடும், மரியாதையோடும், ஆசையோடும் அவர்களை நினைவு கூர்வதில் அந்த ரசிகர்களின் அன்பும், பாசமும், அரவணைப்பும் துல்லியமாய் வெளிப்படும்.                                                                                  இந்தப் படத்தில் இவருக்கு பதிலாக இவரைப் போட்டிருக்கலாமே, இன்னும் சிறப்பாகச் செய்திருப்பாரே, இந்த இடத்தில் ஒரு நடனக் காட்சி அமைத்திருக்கலாமே, இந்த நடனத்திற்கு அவரை  ஆட விட்டிருக்கலாமே, பிரமாதப்படுத்தியிருப்பாரே என்று பொருத்தமான நடிகர்களை மனதில் வைத்து அவரின் தொடர்ந்த வரவிற்காக, அவரின் படங்களுக்காக ஆசை ஆசையாய்க் காத்திருந்து தங்கள் ஆதரவினைத் தெரிவித்தவர்கள் தமிழ் சினிமா மூத்த தலைமுறை ரசிகர்கள்.          அவர்களின் தவிர்க்க முடியாத பார்வையில் பட்டு, கவனத்தில் நின்று போன பல முக்கிய நடிகர்கள் பட்டியலில் கள்ளபார்ட் நடராஜனுக்குக் கட்டாயம் இடம் உண்டு. கிடைக்கும் பாத்திரத்தை உற்சாகமாய்ச் செய்கிறார், ஊக்கமுடன் நடிக்கிறார், தன்னை ஞாபகப்படுத்துவது போல் நிலை நிறுத்திக் கொள்கிறார் என்றால் அந்தப் பாராட்டுக் குரியவராய் என்றும் விளங்கியவர் இவர். முதல் காட்சியில் தோன்றும்போதே அவரை நினைவு வைத்துக் கொள்வதுபோல் உற்சாகமாய்த் தன்னை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். குறிப்பாக இன்றைய மூத்த தலைமுறை சினிமா ரசிகர்கள் அவரை நன்கு அறிவார்கள்.                                     கதாநாயகக் கனவுகளோடுதான் திரையுலகில் பலரும் நுழைகிறார்கள். கிடைத்த பாத்திரத்தை ஏற்று நம் திறமையை நிரூபிப்போம், என்றேனும் ஒரு நாள் அது நம் கைக்கு வந்தே சேரும் என்கிற நம்பிக்கையோடு முன்னேறுகிறார்கள். காலத்தின்  கோலம் அவர்களை அவர்கள் ஏற்றுக் கொண்ட சின்னச் சின்னப் பாத்திரங்களிலேயே நிலை நிறுத்தி விடுகிறது. அடுத்தடுத்து அந்த மாதிரி வேஷங்களே கிடைக்கும் போது எப்படியாவது நடிப்புலகில் இருந்து கொண்டிருந்தால் சரி, மக்களின் மனங்களில் பவனி வந்து கொண்டிருந்தால் சரி என்று சமாதானப்படுத்திக் கொண்டு தொடர வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். போலீஸ் வேஷம் தரித்தால் பிறகு அடுத்தடுத்த படங்களில் போலீஸ்தான். இன்ஸ்பெக்டர் ஆவதற்கே வருடங்கள் பிடிக்கும். ப்ரமோஷனில்தானே அந்தப் பதவியும் வந்து சேரும். அதுபோலத்தான்.                     அபாரமான திறமையிருந்தும், எந்தப் பாத்திரத்திற்கும் பொருந்தும் முகவெட்டும், களையும், நடிப்புத் திறனும் இருந்தும் அந்தத் திறமைக்குத் தீனி போடுகிறார்போல வேஷங்கள் கிடைக்காமல், வரும் வேஷங்களைச் சலிக்காது திருப்தியோடு  செய்து செய்து நடிப்புலகில் விடாது தன்னை நிலை நிறுத்திக் கொண்ட அற்புதமான நடிகர் திரு.  கள்ளபார்ட் நடராஜன்.                                                                                       இவரை நினைக்கும்போது முதலில் நமக்கு ஞாபகம் வருவது இவரது நடனம்தான். டப்பாங்குத்து நடனம் என்பது கோஷ்டி டான்சாக இருக்கையில் அதில் கவனிக்கத்தக்க பங்காக இவரது நடனம் அமைந்திருக்கும். டப்பாங்குத்து என்பதை கேலிப்பேச்சாகப் பயன்படுத்துவது உண்டு. ஆனாலும் அப்படி ஒரு பாடல் போட, துள்ளலோடு இசையமைக்க, அந்தந்தப் படங்களின் இசையமைபபாளர்கள் நிறைய மெனக்கெட்டார்கள். கதையின் சோகத்தைக் கலைக்கவும், இறுக்கத்தைத் தளர்த்தவும் என்று பொருத்தமான இடத்தில் பார்வையாளர்கள், ரசிகர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக் கொள்ளட்டும் என்று சேர்த்தார்கள்.                                                      ஆனால் சில முக்கியமான இயக்குநர்கள் அந்தப் பாடல் காட்சியையும் கதைக்கு, அதன் நீட்சிக்கு உதவட்டும் என்று கதையின் முக்கியத் திருப்பமாய் ஏதோவொன்றை அதில் இடைச் செருகல் செய்து சுவை கூட்டினார்கள். டப்பாங்குத்துப் பாடல்முடிந்ததும் அடுத்து வரும் காட்சிக்கு அந்தப் பாடல் காட்சியின் நாயகன்-நாயகி வருகை, இருப்பு, காதல் அல்லது வில்லனின் சதிச் செயல் ஆகிய சின்னச் சின்னச் சேர்க்கை ரொம்பவும் பொருந்திப் போனதும், படம் பார்ப்பவர்களுக்கு அதுமேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாயும் அமைந்து போனது இயக்குநர்களின் திறமையைப் பறைசாற்றுவதாய் இருந்தது.                   உதாரணமாய் பாவ மன்னிப்புப் படத்தின் ஒரு கோஷ்டி டான்ஸ் பாடல் காட்சியை இங்கே எடுத்துரைப்பது பொருத்தமாய் இருக்கும். குப்பத்தில் நடக்கும் முதியோர் கல்வி மூன்றாவது ஆண்டு விழா. அங்கு ஆடலும் பாடலும். சாயவேட்டி தலையில கட்டி..என்ற பாடலுடன் கோஷ்டி டான்ஸ். அந்தக் காட்சியை ரசிப்பது போல் வந்து நிற்கும் ரஉறீம் (நடிகர்திலகம்) அப்போது அதைப் பார்க்க வரும் மேரி (தேவிகா) இஷ்டமாய் ரஉறீம் அருகில் வந்து நெருங்கி நின்று மெல்லக் கைத்தாளம் போட்டு பாடலையும், நடனத்தையும் ரசிக்கும் காட்சி. இதுதான் இடைச் செருகல் என்பது. அடுத்து மலரும் அவர்களின் காதலுக்கான உணர்வுபூர்வமான அந்தக் காட்சிக்கான ஜனரஞ்சகமான அடித்தளம் இது. இப்படியான காட்சியமைப்பதிலும், கதை நகர்த்தலையும் பொருத்தமாய் செய்வதில் வல்லவர் டைரக்டர் ஏ.பீம்சிங். அப்படித்தான் பழைய கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களில் கோஷ்டி நடனக் காட்சிகள் அமைந்தன. அந்த மூன்று நிமிடப் பாடலிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைத்திருப்பார்கள். கள்ளபார்ட் நடராஜனின் கோஷ்டி நடன டப்பாங்குத்துக் காட்சிகள் அப்படித்தான் அமைந்திருந்தன.                                              வண்ணக்கிளி படத்தில் “சித்தாடை கட்டிக்கிட்டு” என்ற நையாண்டி மேளம்-நாதஸ்வரத்தோடு கூடிய பாட்டிற்கு இவரது டான்சை ரசிக்காதவர்கள் கிடையாது. அந்தப் படத்திலேயே எந்தக் காட்சியையும் தவற விட்டாலும் விடுவார்கள், இந்தப் பாடலை யாரும் தவற விடமாட்டார்கள். அந்த அளவுக்கு துள்ளலும், துடிப்புமான பாடல் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாய் அமைந்தது என்பதுதான் உண்மை.                                                                  அதுபோல் குமுதம்  படத்தில் மாமா...மாமா...மாமா......ஏம்மா...ஏம்மா...ஏம்மா....என்ற பாடலும் மிகவும் பிரபலம். இந்தப் பாடலில் எம்.ஆர்.ராதாவும் ஆடுவார். இந்த இரண்டு பாடல்களுமே இம்மாதிரி ஆட்டத்துக்கு கள்ளபார்ட் நடராஜன்தான் என்று அவரை நிலை நிறுத்தியிருந்தது.       தெய்வப்பிறவி படத்தில் லட்சுமி ராஜம் என்ற நடிகையோடு சேர்ந்து “இவர் கானா...அவர் பானா...இவர் எல்லாந்தெரிஞ்ச சோனா....என்ற பாடலுக்கு ஸ்டெப் போட்டு  அழகாக ஆடியிருப்பார். பரத நாட்டியம் ஆடி நடன முத்திரை பதிப்பது ஒரு வகை. இவர் தனது டப்பாங்குத்து ஆட்டத்தினால் தனது முத்திரையை ரசிகர்கள் மனதில் பதித்தவர்.          தஞ்சாவூரைச் சொந்த ஊராகக் கொண்ட குடும்பம். இவரது தந்தை ராமலிங்கம்பிள்ளை நாடகங்களில்தான் நடித்து வந்தார். அதில் கள்ளபார்ட் வேஷத்தை அவர் தொடர்ந்து நடித்து வந்ததால், கள்ளபார்ட் ராமலிங்கம் என்ற பெயர் அவருக்கு வந்தது. அத்தோடு மட்டுமல்லாது சதாரம் படத்தில் திருடனாக வேறு நடித்து விட்டதால் அந்தப் பெயர் நிலைத்து விட்டது. கள்ளபார்ட் ராமலிங்கத்தின் பையன் திரையுலகில் தனது சிறந்த நடிப்பாலும், நடனத் திறமையாலும், குரல் வளத்தாலும் பெயர் பெற்றதால் டி.ஆர்.நடராஜன் அப்படியே கள்ளபார்ட் நடராஜன் ஆனார். புகழ்பெற்ற வெற்றித் திரைப்படமான வண்ணக்கிளியில் இவரது பெயர் “கழுகு”. இவரது தாயார் செங்கமலத்தம்மாளும் நடிகைதான்.                                                     கள்ளபார்ட் நடராஜனின் முக அழகிற்கு, ஒப்பனை செய்தால் கச்சிதமாய் கதாநாயக அந்தஸ்துப் பெறும் அவரின் பொருத்தமான நடிப்புத் திறமைக்கு ஏற்ற வேடங்கள் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லியாக வேண்டும். பெரிய கோயில் என்கிற படத்தில் கதாநாயகனாய் நின்றார். அத்தோடு மட்டுமல்லாமல் நாகமலை அழகியில்  இரட்டை வேடங்களையும் செய்தார். இவரது திறமை மீது நம்பிக்கை வைத்ததன் அடையாளம்தானே அது? அப்படத்தில் இவருக்கு வில்லனாய் நடித்தவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா என்ற சீனியர் நடிகர்.     திறமையிருந்தால் ஊக்குவிப்பவர் நடிகவேள்.              இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்றுதான். திரைப்படங்களில் தொடர்ந்து வலம் வருவதற்குத் திறமை மட்டும் இருந்தால் போதாது...அதிர்ஷ்டமும் கூடவே ஒத்துழைத்து கைகோர்த்து  வந்தால்தான் அழகாக இந்தக் கனவு உலகில் பவனி வர முடியும் என்பதற்கு இவரைப் போல் எத்தனையோ நடிகர்கள் முன்னுதாரணமாய் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் கள்ளபார்ட் நடராஜன் நடித்த திரைப்படங்கள் அத்தனை பாத்திரங்களுக்கு மத்தியிலும் அவரை ஞாபகப்படுத்துவதுபோல்தான் இருந்தன என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.                                                             தெய்வப்பிறவியில் நடிகர்திலகத்திற்குத் தம்பியாய் வருவார். கெட்ட பழக்கங்கள் கொண்ட பையனாய் பெரியவனான பின்பும் அந்த வீம்பும், வீராப்பும், தெறித்துப் பேசுதலும், தறுதலையாய்த் திரிதலும்-கோபம் கொள்ளுதலும் அசாத்தியமாய் மிளிரும் அவரது நடிப்பில். எஸ்.எஸ்.ஆர் இவரது அண்ணியின் (பத்மினி)  தம்பி., எம்.என்.ராஜத்தைக் காதலிக்க, அவள் தனக்கே உரியவள், அவளிடம் பேசுவதற்கு உனக்கு என்ன உரிமை என்று கேட்டு பட்டென்று அவரைக் கன்னத்தில் அறைந்து விடும் அந்தக் காட்சி மிகவும் உணர்ச்சிகரமான ஒரு கட்டம். இந்த சம்பவத்தை இத்தோடு விட்டு விட வேண்டியதுதான், அத்தானுக்கும், அக்காவுக்கும் தெரிந்தால் எங்கள் குடும்பமே பிரிந்து விடும் அபாயம் உண்டு என்று கூறி எம்.என்.ராஜத்திடம் யாருக்கும் தெரிய வேண்டாம் என்கிற உறுதிமொழியைப் பெற்றுக் கொண்டு கிளம்புவார் எஸ்.எஸ்.ஆர்.         ஆனால் அந்தப் படத்தின் கிளைமேக்ஸ்  காட்சியில் கள்ளபார்ட்டுக்குத்தான் முக்கியத்துவம். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, மனைவி மேல் சந்தேகம் கொள்ள வைத்து, தண்டச் சோறாய் இருந்து, நன்றி கெட்டவர்களாய் வஞ்சித்து,  சொத்துக்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் அபேஸ் செய்யத் திட்டமிட்டு செயல்பட்ட, அநாதையாய் அந்தக் குடும்பத்தில்  நுழைந்த சுந்தரிபாய் மற்றும் தாம்பரம் லலிதாவை அடித்து விரட்டி, தற்கொலை செய்து கொள்ளப்போன பத்மினியையும், எஸ்.எஸ்.ஆரையும் காப்பாற்றி மீண்டும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவச் செய்வார்.                                                     கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முத்து முத்தான வசனத்தில் அமைந்த அந்தப் படத்தின் மலையுச்சியில் அமைந்த இந்தக் காட்சியில் அண்ணி...அண்ணி..என்னை மன்னிச்சிடுங்க அண்ணி, தற்கொலை  வேண்டாம் அண்ணி....என்று அவர் பத்மினியை நோக்கிக் கத்திக் கொண்டே பாசத்தோடு அணுகுகையில், அது நேரம்வரை தன் கணவனின் தவறுகளை உணர்ந்து உளமார்ந்த மன்னிப்புக்குக் கூட இரங்காத பத்மினி,    கள்ளபார்ட் நடராஜன் மீது (மனோகர்)  தன் தம்பியை விட அதிக அன்பு வைத்திருந்த பத்மினி, அந்தக் குரலுக்குக் கட்டுப்பட்டு, தற்கொலை எண்ணத்தைத் தவிர்த்து, அவரை நோக்கிக் கையை நீட்டிக் கொண்டு ஓடி வரும் காட்சி காண்போர் உள்ளங்களையெல்லாம் நெகிழ்த்தி விடும்.                                  தெளிவான வசன உச்சரிப்பும், அதற்கேற்ற உணர்ச்சி பாவ வெளிப்பாடும் அந்தக் கால நடிகர்களுக்குப் பெரும் சொத்தாக இருந்தது என்பது மிக மிக உண்மை. கள்ளபார்ட்டுக்கு அதுதான் அவரை ஞாபகப்படுத்தும் அடையாளமாக இருந்தது. கர்ணன் திரைப்படத்தில் என்.டி.ஆருக்குக் கணீரென்று குரல் கொடுத்தவர் திரு ஸ்ரீநிவாசன் என்ற பழம்பெரும் நடிகர். இவரின் தமிழ் உச்சரிப்பும், குரல் வளமும் யாராலும் மறக்க முடியாதது. நடிகர்திலகத்தின் அன்னையின்  ஆணை திரைப்படத்தில் சாம்ராட் அசோகன் நாடகக் காட்சியில் புத்த பிட்சுவாக வந்து அன்பும், கனிவும் பொங்கும் அருமையான வசனங்களைப் பேசி நம் மனதில் அதை ஒரு மந்திர உச்சாடனமாகப் பதிக்கச் செய்தவர் இவர்.                                                                      அன்புதான் இன்ப ஊற்று, அன்புதான் உலக ஜோதி, அன்புதான் உலக மகா சக்தி.... புத்தம்...சரணம்...கச்சாமி...சங்கம்...சரணம்...கச்சாமி...தர்மம்...சரணம் கச்சாமி....என்று சொல்லிக் கொண்டு இவர் போர் நடந்து முடிந்த அந்தப் போர்க் களக் காட்சியில் சாம்ராட் அசோகனை நெருங்கும் கட்டம். இன்றும் யாராலும் மறக்க முடியாதது.            பூஜ்யரே...போதும் நிறுத்தும், தெளிந்த நீர்போல் இருந்த என் உள்ளத்தில்  அறிவுக் கல்லெறிந்து குழப்பி விட்டீர்...என்று அசோகர் கர்ஜிப்பார்.                                                                     இதை ஏன் இந்த இடத்தில் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் கர்ணன் படத்தில் அத்தனை கச்சிதமாய் என்.டி.ராமாராவுக்கு அமைந்த அந்தக் குரல் தவிர்த்து, என்.டி.ஆரின் ஆரம்ப காலப் படங்களிலும், தெலுங்கு டப்பிங் படங்களிலும் அவருக்குக் குரல் கொடுத்தவர் நமது கள்ளபார்ட் நடராஜன்தான் என்பதை அறியவேண்டும் என்பதற்காகவே. குரல் வளம் ஒரு நடிகரைத் தக்க இடத்தில் தக்க வைக்கும். பேசும் போது தெளிவாக இருக்கும் குரல், ஒலிபெருக்கியில், மைக்கில் வசன உச்சரிப்பின்போது கனத்து, கணீரென்று இருக்கிறதா என்பதைச் சோதனை செய்துதான் ஏற்பார்கள். அந்த வலிமை கள்ளபார்ட்டின் குரலுக்கு இருந்தது அவருக்கான சிறப்புப் பெருமை.                                                                            நாடகங்களில் சிறப்பாக வெளிப்படுத்தும் கூத்துக் காட்சிகளை சிறந்த நளின அசைவுகளோடு,குதூகலிக்கும் டப்பாங்குத்துக் கேளிக்கை நடனத்தோடு செய்யும் திறமை பெற்றவர் என்பதால்தான் நடிகர்திலகம் ஒன்பது வேடம் ஏற்ற நவராத்திரி படத்தின் தெருக்கூத்துக் காட்சியை முழுக்க அமைக்க கள்ளபார்ட்டைத் தேடினார்கள். ராஜ...ராஜமஉற...ராஜ வீரப் ப்ரதாபன்...என்று தொடங்கும் அந்தக் கூத்துக் காட்சியை இன்றும் நம்மால் மறக்க முடியாது என்பது உண்மைதானே? அந்தக் காட்சிக்கான பெருமை நடிகையர் திலகம் மற்றும் நடிகர்திலகத்தின் நடிப்போடு மட்டுமின்றி, அந்தக் கூத்திற்கான முழு வசனமும் சார்ந்ததுதானே...! அதைப் பேசிய முறைதானே?                                                           எம்.எஸ்.விஸ்வநாதன், எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எஸ்.சுவாமிநாதன் என்பதுபோல், எஸ்.வி.சுப்பையா, எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சகஸ்ரநாமம் என்பதுபோல் இவர்களெல்லாம் ஒரே குடும்பமா, உறவினர்களா என்று எப்படிக் கேட்கக் கூடாதோ...அதே போல் திரையுலகில் அவர்தானா இவர், இந்த நடிகர்தானா அதில் வந்தது, அவரா இதில் இப்படி நடிக்கிறார், இதில் எந்த நடராஜன்?  என்றெல்லாம் சந்தேகக் கேள்விகளையும் கேட்கக் கூடாதுதான் ஆனால் அப்படி வலிமையான சந்தேகக் கேள்விகளை வீசுகிறாற்போல் நம் தமிழ்த் திரையுலகில் மூன்று நடராஜன்கள் அந்தக் காலத்தில் ஒரே சமயத்தில்  இருந்திருக்கிறார்கள்.                                     மந்திரிகுமாரி படத்தில் “வாராய்...நீ வாராய்“““என்று பாடி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பிரபலமான அந்தக் கால வில்லன். மனோகராவில் இவரது நடிப்பு பார்க்க ரொம்பவும் கொடுமையாக இருக்கும். வில்லனாய் நடித்துப் புகழ்பெற்று, நம்பியாருக்குச் சரியான போட்டியாய், ஏன் நம்பியாரையே மிஞ்சியவராய்ப் பேசப் பட்டவர். எமக்குத் தொழில் “கற்பனை உலகில் நாட்டுக்கு உழைத்தல்” என்கிற அடையாளத்தோடு சொந்தப் படம் தயாரித்தவர் இவர்.                                                 அதுபோல் டி.எஸ்.நடராஜன் என்றொரு நடிகரும் இருந்தார். நடிகர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என்று பல திறமை படைத்தவர் இவர். எம்.ஜி.ஆர் நடித்த என் தங்கை படத்திற்கான மூலக் கதை இவர்தான். அது முதல் “என் தங்கை நடராஜன்” என்றே இவர் அழைக்கப்பட்டார். மேலும் புரட்சி நடிகரின் விக்ரமாதித்தன் படத்தின் வசனங்களை எழுதியவர் இவர்தான். அத்தோடு சுமங்கலி என்ற படத்தின் பாடல்கள் முழுவதையும் எழுதிய பெருமை இந்த டி.எஸ்.நடராஜனுக்கு உண்டு.                                                                                           இந்த மூன்று நடராஜன்களிலும் அதிகப்படங்களில் நடித்தவர் கள்ளபார்ட் நடராஜன்தான். தில்லானா மோகனாம்பாள் படத்தில் கோயில் பேஷ்காராக அவர் வரும் ஒரே ஒரு காட்சி ரொம்பவும் ரசிக்கத்தக்கது. கோயிலில் வைத்து போட்டி நடத்துவது கூடாது அதற்கு இது இடமில்லை என்று நாகேஷ் போங்காணும்....சொல்லுங்காணும்....என்று இவரைத் தூண்டிவிட்டு, இழுத்து வந்து நிறுத்தி சொல்ல வைக்கும்போது இவர் பேசும் அழுத்தமான வசனம் நம்மால் மறக்க முடியாதது. ஆனால் அந்தக் காட்சியில் இவர்தான் கள்ளபார்ட் நடராஜன் என்பதை எத்தனைபேர் உணர்ந்தார்கள் என்கிற சந்தேகம் இன்றும் நமக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. பழைய கருப்பு வெள்ளைப் படங்களிலிருந்து அவரை அறிந்தவர்களால் மட்டுமே சட்டென அவர்தான் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். மற்றவர்களுக்கு சொன்னால்தான் புரியும்.                                          ரேவதியின் அப்பாவாக கமலின் தேவர் மகன் படத்தில் இவர் நடித்ததை யாராலும் மறக்க முடியாதுதான். ஒரு பாடல் காட்சியிலும் முழுக்க வருவார். அங்கங்கே சின்னச் சின்ன வேடங்களாய்த்தான் இவருக்குத் தொடர்ந்து கிடைத்தது என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக இருக்கும் ஒருவர் அம்மாதிரி சிறிய வேடங்களில் வருவதை அந்தக் கால சினிமா ரசிகர்கள் மன வருத்தத்தோடேயே எதிர்கொண்டார்கள் என்பதுதான் உண்மை. அது அந்த நடிகர்கள் மேல் அவர்கள் வைத்திருந்த மதிப்பின், அன்பின் அடையாளம்.                                     மதுரை வீரன், சபாஷ் மீனா, ஒளி விளக்கு, குலதெய்வம், அஜித் நடித்த அமராவதி, விஜயகாந்தின் பெரிய மருது, தமிழச்சி, கைதி கண்ணாயிரம், குமுதம், வண்ணக்கிளி என்று வெற்றிப் படங்களிலெல்லாம் இருந்திருக்கிறார் கள்ளபார்ட் நடராஜன். தொடர்ந்து நடித்துத்தான் வந்திருக்கிறார் என்றாலும் ஒரு கட்டத்தில் நின்று போனதுதான் துயரம். 1990 ல் கலைமாமணி பட்டம் தமிழக அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. பிறகு 1991 ல் தென்னிந்திய நடிகர் சங்கத்தால் கலைச்செல்வம் என்ற பட்டம் வழங்கிக் கௌரவப்படுத்தப்பட்டிருக்கிறார்.                             செங்கமலத் தீவு என்ற படத்தில் நாயகனாய் நடித்த இவருக்கு இன்றும் காதில் தேனாய் ஒலிக்கும் ஒரு பாடல் உண்டு. மலரைப் பறித்தாய்...தலையில் வைத்தாய்...மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்....என்ற வரிகளை நினைத்துப் பாருங்கள்...உடனேயே ப்பி.பி.ஸ்ரீநிவாஸின் குரல் நம் ஞாபகத்திற்கு வந்து விடும். வில்லனாகவும் சிற்சில படங்களில் வலம் வந்தார் இவர் அது மதராஸ் டூ பாண்டிச்சேரி மற்றும் ஏ.பி.நாகராஜனின் கண்காட்சி....ஒளிவிளக்கு படத்தில் சௌகாரை கற்பழிக்கும் காட்சி கூட உண்டு இவருக்கு. நடிப்பு என்று வந்து விட்டால் எல்லாம் செய்துதானே ஆக வேண்டும்? அதுவும் நடிப்புத்தானே!  உயிர்மூச்சு இருக்கும்வரை நடித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிற வேட்கை இல்லாத நடிகர் என்று ஒருவரையேனும் சொல்ல முடியுமா? வலியச் சென்று வாய்ப்புக் கேட்கும் பழக்கமில்லாதவராக வேண்டுமானால் இருக்கலாம். நடிப்பு என்கிற திறமையைத் தன்னம்பிக்கையோடு தன்னகத்தே கொண்டிருக்கும் எந்த நடிகரும், வாய்ப்புக்காகத் தேடி அலைந்ததாகச் சரித்திரமில்லை. அதுதான் அவர்களின் கௌரவம். அதே சமயம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு வரும் வாய்ப்புக்களையும் அவர்கள் கௌரவம் பார்த்துத் தவிர்த்ததில்லை. காரணம் நடிப்பு என்கிற அவர்களின் தொழில் வெறும் பணத்துக்காகச் செய்யும் தொழிலாக இருந்ததில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. அதை ஆத்மார்த்தமான ஒன்றாக அவர்கள் மதித்தார்கள். உடல், பொருள், ஆவி என்று  தங்கள் உயிர் மூச்சோடு கலந்து வைத்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.                                                                  அப்படியில்லையென்றால் திரு.கள்ளபார்ட் நடராஜன் அவர்களுக்கு அம்மாதிரியான ஒரு தருணத்தில் சாவு வருமா? நீங்கள் அவர் நடித்த படங்களின் எந்த ஸ்டில்களை வேண்டுமானாலும் எடுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்...அவருக்கு நடிப்பின் மீது இருந்த ஆசையையும், துடிப்பையும், அக்கறையையும், அர்ப்பணிப்பையும் அது உணர்த்திக் கொண்டேயிருக்கும். செய்த தொழிலே தெய்வம், அதில் திறமைதான் அவரின் செல்வம்..!                                                                                               அப்படித்தான் 1996 மே 27 ல் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியின்போது, தனது திரையுலக அனுபவங்களை அவர் விளக்கிக்கொண்டிருந்தபோது அவருக்கு மரணம் சம்பவித்தது. அப்போது அவருக்கு வயது 70. அவர் ஆத்மார்த்தமாக, உயிர் மூச்சாக நடிப்பை நேசித்து கடைசி வரை அப்படியே  வாழ்ந்து வந்தார் என்பதற்கு அதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்? எல்லோருக்குமா அந்த பாக்கியம் கிடைக்கிறது?                                                                              -------------------------------------------

                                                 

                                                                               

                                     

                                                                                                 

பேசும் புதிய சக்தி மாத இதழ்-பிப்ரவரி 2021- ”முழு மனிதன்” சிறுகதைத் தொகுப்பு புத்தக அறிமுகம்

 பேசும் புதிய சக்தி  மாத இதழ்-பிப்ரவரி 2021-  ”முழு மனிதன்” சிறுகதைத் தொகுப்பு புத்தக அறிமுகம்






01 பிப்ரவரி 2021

சிறுகதை “மனிதர்கள் சராசரிதான்“ -கணையாழி 2021 - பிப்ரவரி

 

சிறுகதை                                                                                              “மனிதர்கள் சராசரிதான்“     -கணையாழி 2021 - பிப்ரவரி   




              
 

       வர் சாலையிலிருந்து ஒதுங்கி ஆபீசுக்குள் நுழைவது தெரிந்தது. தற்செயலாக ஜன்னல் வழி பார்வை கீழே போக உள்ளே அடியெடுத்து வைத்தார். இடது தோளில் தாங்கியிருக்கம் வட்டப் பிரம்புக் கூடை, வலது கையில் ஒரு உயரமான எவர்சில்வர் தூக்கு. படியேறும்போது மேல்படியில் அந்தத் தூக்கை இறக்கி வைத்து உன்னி ஏறலாம் என்று கூட அவருக்குத் தெரியவில்லை. தெரியவில்லையா அல்லது கண்ட இடத்திலெல்லாம் தூக்குச் சட்டியை இறக்கக் கூடாது என்கிற தீர்மானமா? தடுமாறி விழுந்தால், அதுவும் அந்தத் தோள் கூடை சரிந்தால் கொண்டு வந்திருக்கும் பண்டங்கள் அத்தனையும் வீணாகி விடுமே...? இது ஏன் தெரியவில்லை அந்தப் பெரியவருக்கு? இந்தத் தள்ளாத வயதில் வியாபாரம் என்று வருவதே பெரிது...!

       அந்த அளவுக்கு ஒண்ணும் இன்னும் மோசமாகலை...இந்த ரெண்டு படி கூடவா ஏற முடியாது என்று நினைக்கிறாரோ? காம்பவுன்ட்டுக்கு உட்பக்கமாய் வந்தவர் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டது போலிருந்தது. வலது கையில் அந்தத் தூக்கு இருந்தமேனிக்கே முதுகைச் சற்றுப்  பின்னால் வளைத்துக் கொண்டார். உள்ளே பார்வை நீள, நுழையலாமா என்று தயங்கியது போலிருந்தது. ஐயர் வந்தாலே ஆபீசில் இருப்பவர்களுக்கு வேலை ஓடாது. ஒரு ப்ரேக்  நேரம் அது.

       சாமி...என்ன இன்னிக்கு கொஞ்சம் லேட் போல்ருக்கு.....கேட்டுக் கொண்டே ஒருவர் வெளியிலிருந்து உள்ளே வர அவரைத் தொடர்ந்து நான்கைந்து பேர் நுழைந்தனர். சாமி என்கிற அந்த விளிப்பு இன்னும் சில இடங்களில் சகஜ பாவத்தில் உள்ளதுதான்...

       டீ சாப்டுட்டு வர்றீங்களா....அட...ராமா....கொஞ்சம் லேட்டாயிடுத்து...வண்டி கிடைக்கல்லே....-வருத்தப்பட்டதுபோல் சொன்னார். முகம் சற்றே வாடிப் போனது.நெற்றி வியர்வை வழிந்து, போட்டிருக்கும் விபூதிப்பட்டையின் குறுக்கே இறங்கி, குங்குமத்தைத் தொட்டிருந்தது.  

       பத்தரைக்கெல்லாம் வந்திரணுங்கய்யா....அப்பத்தான் வெளில கிளம்புற ஆட்களை பிடிக்க முடியும்...நீங்க ஒவ்வொரு நாளைக்கு லேட் பண்ணிர்றீங்களே...? எங்களுக்குல்ல கஷ்டமாயிருக்கு...?

       தினம் வந்திடுறேனே...இன்னைக்குத்தான் பஸ் கிடைக்கல்லே....ரெண்டு பஸ் மாறி வர வேண்டியதாப் போச்சு....போதாக் குறைக்கு ஆஸ்பத்திரி ஸ்டாப்ல இறக்கிவிட்டுட்டான். அடுத்த ஸ்டாப்புல நிக்காதாம்....

       கொஞ்சம் இறங்கிக்கிறேன்னு சொல்லி இறங்கிட வேண்டிதானே...! சொன்னா இரக்கப்பட்டு நிறுத்துவாங்களே....

       நல்லாயிருக்கே....ஸ்டாப் இல்லாத எடத்துல எப்டி இறங்கறது..? நமக்காகவா கவர்ன்மென்ட் பஸ் ஓடுது...அதெல்லாம் ப்டாது.....

       சரி...சரி...வாங்க....உள்ளே.!..ஏன் தயங்கி நிற்கிறீங்க....? - அவர்கள் கொடுத்த தைரியத்தில் முகம் மலர்ந்தவராய் அலுவலகத்திற்குள் நுழைந்தார் அவர். அந்தப் பகுதியின்,அந்தமாதிரி ஆதரவில்தானே இத்தனை வருஷமாய் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

        இப்போது சமீப நாட்களாய்த்தான் கொஞ்சம் டல். என்னவோ ஒரு தயக்கம் எல்லோரிடத்திலும் பரவியிருக்கிறது. அதை எப்படிக் கேட்பது? சரக்குல ஏதும் குறைபாடோ...? இருக்க வாய்ப்பில்லையே...? முன்னைவிட க்வாலிட்டியாத்தானே இப்பவும் தயார் பண்றேன்? கஸ்தூரி எதையேனும் பழசைச் சேர்த்திடுவா, கோளாறு பண்ணிடுவாளோன்னு கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுண்டுல்ல பார்க்கிறேன்...அப்படி எதுவும் செய்துடக்கூடாதுன்னு அவளைக் கண்டிச்சில்ல வச்சிருக்கேன்...கொஞ்சம் நப்பாசை உண்டுதான்..அதுக்கு விலங்கு போட்டுல்ல நிறுத்தியிருக்கேன்....தரம் நிரந்தரம்ங்கிறதுதானே டிரேட் மார்க்கா இத்தனை வருஷம் காண்பிச்சிருக்கிற பாடம்...! அதைப் பொய்யாக்க முடியுமா?

       என்னா சாமி.! .சொல்றது காதுல விழலியா...உள்ளே வாங்க.....

       சட்டென்று ஏதோ நினைவுக்குப் போய்விட்டவரை இந்த அழைப்பு தடுத்து நிறுத்தியது. உள்ளே அடியெடுத்து வைத்தார்.

       காலை பதினோரு மணிக்கு வெளியே டீ சாப்பிடப்போகும் பணியாளர்கள் அதற்குள் வந்துவிட்டாரென்றால்....அவரிடம் சூடாக ஒரு வடையை வாங்கிக் கொறிப்பார்கள். மொறு மொறுவென்றிருக்கும் அவர் சரக்கு துளித் துளியாய்க் கொறிப்பதுதான். அய்யோ...தீருதே...தீருதே...என்றிருக்கும். நெடுநேரம் அதை வைத்துக் கடிப்பதே தனி சுகம். அந்த ருசிக்கு அவர்கள் அடிமை.  உள்ளங்கை அளவுக்குப் பெரியதாய் மாவை மெத்தையாய்ப் பரத்தி, நடுவில் ஒரு சிறு ஓட்டையோடு, பம்மென்று உப்பியிருக்கும் வடையை அவர் தரும் சிறு கட்டிங் பேப்பரோடு சேர்த்துப் பிடித்து அப்படியே கடித்துத் தின்பதில் அலாதி சுகம். என்ன ஒரு மணம்? மூக்குக்கே அந்த வாடை சுகந்தம்.  

       தாமதமின்றி நேரத்துக்கு வந்துவிட்டாரென்றால் அத்தோடு சரி. எழுந்து வெளியே செல்ல மாட்டார்கள். பியூன் சிவசாமியிடம் ஃப்ளாஸ்கைக் கொடுத்து டீ வாங்கிவரச் சொல்லிக் குடித்து விடுவார்கள். சாமி...டீ சாப்பிடுறீகளா....? உபசரிப்பார்கள். வேண்டாம்...வேண்டாம்... வயித்தைக் கலக்கிடும்...அப்புறம் வியாபாரம் பார்க்க முடியாது..... மறுத்து விடுவார்.

       தினசரி காலையில் வடை, பஜ்ஜி, போளி, மிக்சர், சேவு, ஓமப்பொடி என்று அவரிடம் வாங்கி வாங்கி அந்த அலுவலகமே அவர் கைபாக ருசியில் மயங்கிக் கிடந்தது. போதாக் குறைக்கு இட்லி மிளகாய்ப்பொடி, கருவேப்பிலைப் பொடி, புளியோதரைப் பொடி, மிளகுப் பொடி, சீரகப் பொடி என்று பாக்கெட்டுகள் வேறு. குறிப்பாக அந்த போளிக்கு. தேங்காய் போளி, பருப்பு போளி என்று ரெண்டு விதம் கொண்டு வருவார். இது டேஸ்ட் ஜாஸ்தியா, இல்ல அதுவா... எத சொல்றது...அசத்துறீங்களே  சாமி...என்று மயங்கிப் போவார்கள். மிளகாய்ப் பொடில இன்னும் கொஞ்சம் காரம் சேர்க்கணும் சாமி....என்பார்கள். காமன் டேஸ்டோல்லியோ...உப்பு, காரம் பொதுவாத்தான் இருக்கணும்...என்று சமாளிப்பார். அய்யர் சரக்கு என்னைக்குமே அசத்தல்தாங்க.....என்று சொல்லி வாய் கொள்ளாமல் செலுத்திச் சுவைப்பார்கள்.  

       இன்னொண்ணு தரவா...நன்னாயிருக்கும் சாப்டுங்கோ...நாளைக்குக் காசு தரலாம்....உங்க திருப்திதான் முக்கியம்....! அவர் சொல்கிறாரே என்று நாலைந்தைப் பார்சல் பண்ணி வீட்டுக்கு வாங்கிக் கொண்டு போனார்கள் சிலர். காலையில் நுழைந்தார் என்றால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அவர் ராஜ்யந்தான். கீழேயும், மாடியிலும் அவர் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கும். மாடியில் வேறு ஆபீஸ். அங்கும் பழக்கம்தான். இன்னும் வெளில  நிறைய ஆபீஸ் இருக்கே...ஈஸ்வரா..எப்டி அவாளத் திருப்தி பண்ணப் போறேன்...? சாமி...சீக்கிரம் வாங்க...பக்கத்து ஆபீசிலிருந்து குரல் கேட்கும். நெஞ்சு படபடக்கும் இவருக்கு.

       இந்தப் பகுதியிலயே பேசாம ஒரு கடை போட்ருங்களேன்யா...-ஒரு நாள் சொன்னார்கள்.

       அதுக்கு நான் எங்க போவேன் பணத்துக்கு? ஊருக்குத் தள்ளியிருக்கிற இடத்துக்கே வாடகை கொடுத்து முடியல...கடை போடுறதாவது...? - சிரித்துக் கொள்வார். மனதுக்குள் துள்ளாட்டம் போடுவார்...எவ்வளவு அன்பு இவர்களுக்குத்தான்...! நல்லதை, தரத்தை விரும்பும் ஆட்கள் இன்னும் உலகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் நம் தரத்தை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்....

       வீட்டை மாத்திருங்க சாமி...அவ்வளவுதானே...பட்சணக் கடைங்கிற அடையாளமா திண்ணைல ஓப்பன் பண்ணுங்க...ஒரு சின்ன போர்டைத் தொங்க விடுங்க...வீட்டுக்குள்ள சரக்கை பூராவும் வச்சிக்குங்க...அட...அய்யர் இங்கயே வந்திட்டாரான்னு...கொத்திட்டுப் போயிட மாட்டாங்க....?

       அந்தப் பகுதி முழுவதற்கும் அவரால் சரக்குக் கொடுத்து முடியவில்லை. ஒராள் எவ்வளவுதான் சுமந்து வருவது. இருக்கும் ஒரே பையன் உபயோகமில்லை. எதற்கும் லாயக்கற்றவன். அவனுக்குத் தீனி போட்டே மாளாது.

       அய்யர் போய்ட்டாரா...இருக்காரா பாருங்க....வீட்ல வாங்கிட்டு வரச்சொன்னாங்க...மறந்திட்டேன்...என்று ஞாபகமாய் வாங்கிப் பைக்குள் பத்திரப்படுத்துவார்கள்.

       காலைல போட்டது...ராத்திரி ஏழாகுமே சாமி...வீடு போய்ச் சேர...அதுவரை நல்லாயிருக்குமா..இல்ல...ஊசிருமா....?

       போளிக்கு என்ன வந்தது? அதெல்லாம் ஊசவே ஊசாது....அப்டி ஊசித்தின்னா நீங்க காசு தர வேண்டாம்....அப்டியிருந்தா நானே உங்களுக்குத் தர மாட்டேனாக்கும்...! அப்போது சாப்பிடுவது மட்டுமல்லாமல் மதியம் சாப்பாட்டிற்கு என்றும் வாங்கி வைத்துக் கொள்வார்கள். வெறும் வடையை மட்டும் நீட்டினால் கதையாகாது என்று ஒரு பாத்திரத்தில் சட்னி வேறு செய்து கொண்டு வருவார் அவர். பெரும்பாலும் வடை அத்தனையும் தீருவதற்கு முன்பே சட்னி தீர்ந்து விடும். இன்னும் கொஞ்சம் போடுங்க சாமி...என்று விரும்பிக் கேட்பவருக்கு இல்லை என்று எப்படிச் சொல்வது?

       அய்யரின் அந்தப் பேச்சு வெறும் பேச்சல்ல. அத்தனையும் சத்தியம். ஒரு நாள் கூட அவர் கொண்டு வந்து கொடுக்கும் சரக்கில் யாரும் குறை கண்டதில்லை.

       அய்யர் பண்டம் என்னைக்கும் சுத்தம்யா. டீக்கடைகள்லாம்...அன்றாடம் எண்ணெய் மாத்தவே மாட்டான்.. மொதநாள் சுட்ட எண்ணையோட, புது எண்ணையைக் கலந்து கொதிக்க விடுவான். சோடாப்பூவப்போட்டு புஸ்ஸூன்னு வடையை உப்ப விடுவான். பழைய எண்ணெயை ஒதுக்கவே மாட்டானுங்களே...? கட்டுபடியாகாதுன்னு நம்ம தலைலல்ல கட்டுறாய்ங்க...ஜான்டிஸ் வர்றதுக்கு வேறே வினையே வேண்டாம். ஒரு மாசம் தொடர்ந்து சாப்டோம்....நிச்சயம் படுக்கைதான்....மஞ்சக் காமாலையோட நிலைக்களனே அதுதான்யா....

       பரமேஸ்வர அய்யர் என்றுமே தன் வியாபாரப் பண்டங்களின் தரத்தைக் குறைத்ததில்லை. வீட்டுக்கு என்று செய்யும் பொருட்களில் வேண்டுமானால் சற்று முன்னே பின்னே இருக்கும்... கடந்த முப்பது வருஷமாய் இந்த வேலையைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். இந்த வரும்படியில்தான் ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறார். எல்லாம் அவர் மனைவியின் சாமர்த்தியம். தோளில் அந்தக் கூடையைச் சுமந்து சுமந்து இடது பக்கத் தோள் நிரந்தரமாய் இறங்கிப்போனது போலவே இருக்கும் அவருக்கு. அலைந்து அலைந்தே ஆள் தளர்ந்து போனார். அவரை இளமையாய்ப் பார்த்த பல பணியாளர்கள், பத்து வருஷம் முன்னே ஆள் எப்டி இருப்பாப்ல...? அப்பல்லாம் சைக்கிள்ல வந்திட்டிருந்தாரு....இப்போ முடியல...பாவம்...என்று பரிதாபப்படுவார்கள்.

       பரமேஸ்வரன் அந்தக் கருணாநகர் பகுதிக்கு வியாபாரத்திற்கு என்று நுழைந்த நாளிலிருந்து நன்றாய்த்தான் போய்க் கொண்டிருக்கிறது. பத்துப் பதினைந்து அலுவலகங்களுக்கு மேல் இருக்கும் அப்பகுதியில் அவர் வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. அதற்கு இன்னொரு முக்கிய காரணம்....அரசு ஆஸ்பத்திரி மார்ச்சுவரி அந்தப் பக்கம் இருந்ததுதான்.

       பிணப் பரிசோதனை முடிந்து உடலை வாங்குவதற்காக அனுதினமும் கூடியிருக்கும் கூட்டம். தினமுமா ஏதாவது அநாச்சாரம்  நடக்கும்? தினசரி எந்த மூலைலயாவது தற்கொலை, கொலை, ஆக்ஸிடென்டுன்னு நடந்திட்டேயிருக்கே....பகவானே....இந்த ஜனங்களை ஏன் இப்படி அல்லாட விடுறே...உனக்கு இரக்கமேயில்லையா...? என்று மனதுக்குள் புலம்பியிருக்கிறார் அவர். அங்கு கூடியிருக்கும் சனக்கூட்டத்தைப் பார்க்கும்போது மனசு கனத்துப் போகும். அவர்களே சோகத்தில், அழுது புலம்பி சோர்ந்து போய்க் கிடக்கையில் அவர்கள் நடுவே சென்று வியாபாரத்தை எப்படிச் செய்வது? உங்களுக்குத்தானே சோகமும், துக்கமும்...எனக்கென்ன வந்தது? என்று எப்படிப் போய் வடை வேணுமா...பஜ்ஜி வேணுமா...போளி இருக்கு தரவா...? என்று சகஜமாய் வாய் திறந்து கேட்பது? ஒரு தன்மை வேண்டாமா? வியாபாரத்திற்கும் ஒரு நியாயம் இருக்கிறதுதானே?

       ஆனாலும் அந்தக் கூட்டத்தைத் தவற விட மனதில்லை அவருக்கு. காலையிலிருந்து பழியாய்க் காத்துக் கிடந்து, பாடி எப்போது கிடைக்கும் என்று தெரியாத நிலையில், வயிற்றில் பச்சைத் தண்ணீர் கூட ஊற்றாமல், போன உயிரை நினைத்து அழுது மாய்ந்து, காய்ந்து  சோர்ந்து நிற்கும் அவர்களிடம் இவராய்ப் போய்க் கேட்காமல், ஒரு மரத்தடி பார்த்து அமைதியாய் அமர்வது என்று முடிவு செய்து கொண்டார். என்னதான் ஆனாலும் மனித உயிர்தானே...? எவ்வளவு நேரம்தான் தாங்கும். போன உயிர் போக, இருப்பவர் தெம்போடு நடமாடினால்தானே அடுத்துச் செய்ய வேண்டிய காரியங்களை ஆற்ற முடியும்? என்று அவர்களாகவேதான் வந்தார்கள். வாங்கினார்கள். பல நாட்கள் அங்கேயே கொண்டு வந்த சரக்கு அத்தனையும் தீர்ந்து போக, திரும்ப விடுவிடுவென்று வீடு நோக்கி ஓடியிருக்கிறார் அய்யர்.

       வேகு வேகுவென்று அடுத்த செட் பண்டங்களைப் போட்டு எடுத்துக் கொண்டு திரும்பவும் வேகாத வெயிலில் வந்து விடுவார். அந்த அய்யர நம்பிப் புண்ணியமில்லைய்யா...ஒரு ரெகுலாரிட்டி இல்ல....என்ற சொல் ஒரு நாள் அவர் காதில் விழ, அன்று முதல் பையனையும்கூட அழைத்துக் கொண்டு வர ஆரம்பித்தார். படிப்பு ஏறாத பையனை வீட்டில் வைத்துக் கொண்டு தண்டச் சாப்பாடு போட்டு வளர்ப்பதற்கு, இப்படியாவது உதவட்டும் என்று கூட்டிக் கொண்டு வந்தார். ஒரு வேலைக்கும் ஆக மாட்டான் என்று பிறகுதான் தெரிந்தது.

       போற எடத்துல யார்ட்டயும் உன் திருவாயைத் திறந்துறாதே...புரியுதா...நீ பேச வேண்டாம்...நானே பேசிக்கிறேன்....அவா கேட்கிறதை மட்டும் கொடு....எத்தனை கொடுத்தேன்னு மட்டும் சொல்லு...துட்டை நான் வாங்கிக்கிறேன்....தெரிஞ்சிதா....? - பையனின் சமத்து தெரிந்து அவனை எச்சரித்தே உடன் கூட்டி வருவார். படிப்புத்தான் வரவில்லையென்றால் பழக்க வழக்கம் கூடவா பதப்படாது? அவனுக்கு யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்று கூடத் தெரியவில்லை. தத்துப் பித்தென்று என்னவோ உளறினான். பெண் பணியாளர்கள் இருக்கும் பக்கம் வெறித்துப் பார்த்தான். அவர்களிடம் சென்று நின்று உறி...உறி...உறி...என்று சிரித்தான். அப்டிப் போய் உட்காருங்க தம்பி...என்றார்கள் அவர்கள். வியாபாரத்தக் கவனிக்காம இங்க என்ன பண்ணின்டிருக்கே...போடா கீழே....என்று விரட்டினார் அய்யர். நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துண்டுடாதீங்கோ...அவனுக்குக் கொஞ்சம் போறாது....! என்று சமாளித்தார்.

       சகஜமாய் ஒரு நாள் ஒரு லேடி இந்தப் பேனாவுக்கு இங்க் போடு என்று கொடுக்க....லெட்டர் பேடு இங்க்கை பேனாவில் ஊற்றிவிட்டான்.....என்னா பண்ணி வச்சிருக்கே....இது கூடவா தெரியாது லூஸா நீ...என்றார்கள். பரமேஸ்வரய்யருக்கு படு அவமானமாய்ப் போய்விட்டது. சொல்லாமல் கொள்ளாமல் அலுவலர் சேம்பருக்குள் ஒரு நாள் நுழைந்து விட்டான். அய்யர் பையனா நீ....என்று கேட்டு...குடிக்கத் தண்ணி எடுத்திட்டு வா பார்ப்போம்...என்று சகஜமாய் அவர் கூற, இவன் அவர் டேபிளில் இருந்த க்ளாஸையே எடுத்துக் கொண்டு கிளம்ப, டே...டேய்.....என்று கத்தினார். அதற்குள் கையைவிட்டு அலசித் தூரக் கொட்ட ஒரு கிளாஸ் லெமன் ஜூஸ் வேஸ்ட்.

       ஏன்டா...தண்ணி எடுத்திட்டுவான்னா...டேபிள்ல ஜூஸோட இருக்கிற கிளாசையே தூக்குவியா....? அதுல என்ன இருக்குன்னு கூடப் பார்க்க மாட்டியா....? அவர் கேட்டார்.

       அழுக்குத் தண்ணி மாதிரி இருந்திச்சு...உள்ளே தூசி மிதந்திச்சு...அதான் கழுவிக் கொட்டிட்டு புதுசாக் கொண்டு வரலாமேன்னு.....

       அது லெமன் ஜூஸ்ப்பா...அப்டித்தான் இருக்கும்...தெரியாதா உனக்கு....என்னைச் சொல்லணும்...பியூனைக் கூப்பிட்டுச் சொல்லாம அவசரத்துக்குன்னு உன்கிட்டே சொன்னேம்பாரு.....மிஸ்டர் பரமேஸ்வரன்...உங்க பையனை வீட்டோடவே வச்சிக்குங்கோ....கூடக் கூட்டிட்டு வராதீங்கோ...உங்க பேர் கெட்டுடும்...வியாபாரம் படுத்திரும்....என்று எச்சரித்தார். 

       அன்றோடு நின்று போனது அவன் வருகை. இப்படி அசட்டுப் பிள்ளையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? எப்படிக் கரையேற்றுவது? தனக்குப் பின் என்னவாகும் அவன் நிலைமை? பெரும் கவலை வாட்டியெடுத்தது அவரை.

        அவனுக்குன்னு ஒருத்தியக் கட்டி வச்சா எல்லாம் சரியாகும்...இப்ப நீங்க இல்லையா...? உங்களோட நான் இத்தனை வருஷம் குப்பை கொட்டியிருக்கேனே...எப்டி சாத்தியமாச்சு? அது போலதான்... எல்லாம் பகவான் செயல்....இது கஸ்தூரி.     

       ந்தப் பகுதியிலிருந்து பரமேஸ்வரன் வெளியேறியபோது மணி ஒன்றைத் தாண்டியிருந்தது. ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்தான் கலெக்டர் ஆபீஸ். அடுத்தாற்போல் அங்கு போயாக வேண்டும் அவர். முன்னைப்போல் சடசடவென்று தீருவதில்லை இப்போது. சொல்லி வைத்தாற்போல் எல்லா ஆபீஸ்களிலும் ஒரே மாதிரி இருக்கிறார்கள். இது எப்படி? மார்ச்சுவரி கிரவுண்டையும் போட்டு மூடி விட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை...முன்னைப்போல் ஆட் புழக்கம் அங்கே அதிகம் இருப்பதில்லை. கேட்டுக்கு வெளியே நின்று கூவிக் கூவி அழைத்தால் செக்யூரிட்டி வந்து விரட்டுகிறான். என்ன கொள்ளை வந்ததோ? கொள்ளை போன இடத்தில் நம் பிழைப்புக்குக் கொள்ளை வந்து விட்டதே இப்படி?

       இத்தனைக்கும் விலையையும் கூட்டவில்லையே? அளவையும் குறைக்கவில்லையே? பின் என்ன வந்தது இவர்களுக்கு? வேறு யாரேனும் வியாபாரத்துக்குப் போட்டியாக வந்து விட்டார்களோ என்னவோ? இவர் பார்த்ததில்லை. வீட்டிலிருந்தே கொண்டு வந்து விடுகிறார்களோ? அல்லது செலவைச் சுருக்கி விட்டார்களா? சம்பளக் கமிஷன் உத்தரவு போட்டு சமீபத்தில்தானே எல்லோருக்கும் கணிசமாய்க் கூடியிருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள்? நிலுவைத் தொகைகள் இன்னும் கைக்கு வந்து சேரவில்லையோ என்னவோ? அவர்களுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி, அவர்கள் வார்த்தைகளே இவருக்குள்ளேயும் புழங்குவதை உணர்ந்து கொண்டார்.  எண்ணியவாறே நடந்து கொண்டிருந்தார். மனசிலிருந்த பாரம் கைபாரத்தை அதிகப்படுத்தியது. இரண்டு மணிக்குள் சென்றால்தான் கொஞ்சமாவது விற்பனை பார்க்க முடியும்.

       கருணா நகருக்குப் போகாமல் நேரே கலெக்டர்  ஆபீஸ் போக முடியாது. ஆபீஸ் ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் அங்கு போய் நிற்பதும், அலுவலகம் அலுவலகமாய் நுழைவதையும் அங்கே யாரும் விரும்ப மாட்டார்கள். கலெக்டர் ஆபீஸ் சூழல் என்பதே தனி. அந்தப் பரபரப்பு மிகுந்த பதட்டமானது. பொது மக்கள், விவசாயிகள் என்று கூடி  வாராந்திர ஆய்வுக் கூட்டம் நடக்கும் இடம் அதிகாரிகள் போவதும் வருவதுமாய் மனசைப் பதற வைக்கும். குறை தீர்க்கும் நாள்  மனுக்கள் கொடுக்க நிற்கும் நீண்ட க்யூ அந்த அறையிலிருந்து தொடங்கி, வளாகத்தைத் தாண்டி, சாலையைத் தொட்டிருக்கும். இருபத்திநாலு மணி நேரத்தில் முடிக்கச் சொல்லியிருந்த பணிகள், நாற்பத்தெட்டு மணி நேரப் பணி, மூன்று தினங்களில் முடித்தாக வேண்டியவை என்று கால நிர்ணயம் தாண்டி தொங்கலில் இருப்பவற்றிற்கு ஆட்சியரிடம் திட்டு வாங்கும் அதிகாரிகளை வராண்டாவிலிருந்து ஒரு நாள் கவனித்த பரமேஸ்வரன் நடு நடுங்கிப் போனார்.சாமி...இங்கெல்லாம் நின்னு வேடிக்கை பார்க்காதீங்க...கலெக்டர் சத்தம் போடுவாரு...அப்புறம் நாங்க பதில் சொல்ல முடியாது...அப்டிப் போங்க...என்று பியூன்கள் தள்ளித் தள்ளி விடுவார்கள்.  

       அதிகாரிகள் கண்ணில் படாமல் வியாபாரத்தைக் கவனிப்பதுதான் தன் சாமர்த்தியம் என்று அன்று முடிவு செய்து கொண்டவர்தான். எல்லாம் ஓய்ந்து மணி ஒன்றரை ரெண்டு என்று ஆகும் வேளையில்தான் உள்ளே நுழைவார். பதற்றம் ஓய்ந்த அந்த நேரம்தான் கொஞ்சமாவது சிரிப்பை அந்தப் பணியாளர்கள் முகத்தில் பார்க்க முடியும். வாய்விட்டு இது இருக்கு, அது இருக்கு என்று உரிமையோடு சொல்லவும் முடியும். சமீபகாலமாய் அதற்குமல்லவோ நோக்காடு வந்து விட்டது.

       இருக்கு சாமி....ஆச்சு சாமி....சாப்டு முடிச்சாச்சு...நாளைக்குப் பார்க்கலாம்..வயிறு சரியில்ல சாமி...எண்ணெய் பலகாரம் வேணாம்னு பார்க்கிறேன்...இனிப்பு கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு....என்று பலவகையான பதில்களை இப்போது கேட்கிறார் அவர். என்ன வந்தது இவங்களுக்கு? எதுக்கு இப்டி கைச்சுருக்கம்? ஆளாளுக்கு விலகி விலகிப் போறாங்களே? காரணம் புரியாமல் தவித்தார்.

       செக்ரட்டேரியட்டிலிருந்து இன்ஸ்பெக் ஷன் வர்றதா பேசிக்கிட்டாங்களே...ஒருவேளை அதுவா இருக்குமோ...? எல்லா மாடிலயும் பரபரப்பா இருக்காங்க...? போறதுக்கே பயமால்ல இருக்கு....எண்ணிக்கொண்டே வெளியேறி வழக்கமான அந்த வேப்பமரத்தடிக்கு வந்தார்.

       அடிக்கும் வெயிலுக்கு கஸ்தூரி கொடுத்து விட்டிருந்த தயிர் சாதம் தேவாம்ருதமாய் இருந்தது. நேற்றுவரை மாவடு ஊறுகாய் மணத்தது. தீர்ந்து போயிற்று போலும். ஜாடியைக் கழுவி வைத்திருந்தது மனதில் வந்தது. போகும் வழிக்கு ஜம்புரோபுரம் மார்க்கெட்டில் இருந்தால் வாங்கிக் கொண்டு போக வேண்டும். தனியாக இரண்டு ஊறுகாய்ப் பாக்கெட் வைத்து விட்டிருந்தாள். ஏதோ சாமான்கள் வாங்கிய போது அது இலவசமாய் வந்தது என்று சொன்னாள். எதுவானாலும் இந்தப் பசுவனுக்குத்தான்.

       கோலாட்ட ஜோத்திரை நடக்கும்போது ஆடி பதினெட்டன்று, ஆற்றோரத்தில் உள்ள அரச மரத்தடியில்,  மிஞ்சும் கலந்த சாதமெல்லாம் பசுவனாய்ப் பொதுவில் உட்கார்ந்திருக்கும் நபருக்குப் போய்ச் சேரும். சாப்பிட்டு முடியாது அவனால். வீட்டுக்குக் கொண்டு போனால் மூணு நாளைக்கு வரும் அந்தச் சாப்பாடு. மூன்று நாள் தாங்குமா? போதும்...போதும்...போதும்...என்று கையைக் குறுக்கே நீட்டி  வேண்டாம் என்று மறுக்கும்போது அவர்கள் மனம் வருந்திப் போவார்கள். விசேட நாள் பிரசாதத்தை  இப்டியா வேண்டாம்னு சொல்றது? வாங்கிக்குங்கோ....வச்சு சாப்பிடுங்கோ....ஆத்துல போய் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுங்கோ...என்று சொல்லிப் பாத்திரத்தில் போட்டுவிட்டுப் போய் விடுவார்கள். நானென்ன பகாசுரனா...இம்புட்டையும் திங்குறதுக்கு...? என்று அலுத்துக் கொண்டே பொய்ச்சிரிப்புச் சிரித்து அத்தனையையும் வாங்கிக் கொண்டாக வேண்டும். இல்லையென்றால் அடுத்த வருஷம் பசுவன் இடம் கைமாறி விடும் அபாயம்.

       பஸ் ஸ்டாப்புக்கு வந்திருந்தார் பரமேஸ்வரன். அவர் குடியிருக்கும் பகுதிக்கு அரசு பஸ் நேரடியாகக் கிடையாது. இரண்டு பஸ் மாறியாக வேண்டும். இருக்கும் அசதியில் மார்க்கெட் எங்கே போவது? என்று அலுப்புத் தோன்றியது. சரக்கு முழுமையாக விற்காததில் சோர்வு ஏற்பட்டது. பாதிக்கு மேலாவது போயிருக்குமா? என்று சந்தேகம் வந்தது. மிஞ்சிப்போனால் அதை உடனே பக்குவப்படுத்தி மறுநாள்  பகோடா போட்டுத் தருவாள் கஸ்தூரி. தூள் பகோடாவிற்கு ஆலாய்ப் பறந்தவர்கள்தான் இந்தக் கலெக்டர் ஆபீஸ் ஆசாமிகள். அது இருக்கா? என்று கூடக் கேட்கவில்லையே? சாயங்காலம் டீக்குமுன்னால் நொறுக்குத் தீனி அது. முடிந்தால் நாளை அதைத்தான் கொண்டு வந்து இவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். பழையபடி முடுக்கி விட வேண்டும். ஏதோ கொஞ்சம் அசந்தாற்போல் தோன்றுகிறது. அயர விடக் கூடாது. வாழ்க்கையின் ஜீவநாடியான இது கைவிட்டுப் போனால் தன் பாடு தாளம்தான். குடும்பம் நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான்.

       தற்போது வீட்டு வாசலில் போட்டிருக்கும் கடையில் விற்பனை அவ்வளவு போதாதே....? அங்காவது ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் இருக்கிறது. இங்கு இவர்களுக்கு என்ன வந்தது? நேரத்துக்கு வாங்க...நேரத்துக்கு வாங்க என்று அனத்தியவர்கள் இன்று அப்படி வந்தாலும் கண்டு கொள்வதில்லையே...! இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்ல...?

       எதிர்பார்த்துக் கொண்டிருந்த மினி பஸ் வந்து நின்றது. நல்லவேளை. ஒரே பஸ்ஸில் போய் இறங்கி விடலாம். ஆலமரம் ஸ்டாப்பிலிருந்து  பக்கம்தான் வீடு. ஒரு டீயைக் குடித்துவிட்டு வந்த ஓட்டுநர் உடனே பஸ்ஸை எடுத்தது ஆச்சரியமாயிருந்தது. தகிக்கும் வெயிலில் காயக் காயப் பத்து நிமிஷம் போட்டு விடுவார்கள். உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு வியர்த்து ஊத்தும். இன்று என்ன வந்ததோ? கூடையையும், கூடைக்குள் வைத்த தூக்கினையும் அடுத்தவர்களுக்கு இடிக்காமல் அருகில் நகர்த்திக் கொண்டார் பரமேஸ்வரன். கண்டக்டர் கூடையையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, சட்டென்று ஒரு பேப்பர் துண்டை எடுத்து ஒரு வடையை வைத்து நீட்டினார்.  எவ்வளவு சாமி..? அவன் கேட்க....இருக்கட்டும் சாப்பிடுங்கோ....என்றார் இவர்.

       அந்த மதிய வேளையில் கூட்டம் சற்றுக் குறைவாய் இருக்க, இருப்போருக்கு டிக்கெட் போட்டுவிட்ட அவன் தன் இருக்கையில் ஆற அமர உட்கார்ந்து  வடையை ரசித்துச் சாப்பிடுவதைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்து கொண்டார் பரமேஸ்வரன்.

       ருசிக்கு ஒன்றும் குறைவில்லைதான். தன் கைபாகம் மாறிவிடவில்லை. அதே பக்குவம்தான். அதே அளவுதான். அதே தரம்தான். தரம் என்றும் நிரந்தரம்.

       நினைத்தவாறே ஸ்டாப் வந்து விட்டதை உணர்ந்து கீழே இறங்கினார். கண்டக்டர் கூடையை எடுத்துக் கொடுத்து உதவினார். இடது தோளில் கூடையும், வலது கையில் அந்தத் தூக்குமாய் நடையைக் கட்டினார் பரமேஸ்வரன். என்றுமே வீடு திரும்புகையில் இந்த வெயிட்டை அவர் உணர்ந்ததில்லை. சமீபமாய்த்தான் இது அவரால் உணரப்படுகிறது. இனி தயாரிப்பைக் கொஞ்சம் குறைக்க வேண்டும். எண்ணிக்கையை மட்டுப்படுத்த வேண்டும். ரெண்டு பேருக்காவது தீர்ந்துடுத்தே...என்று சொன்னால்தான் வியாபாரத்துக்கு மதிப்பு.

       துவாயிருக்கும்...புரியலியே...? மனசு போட்டு அரித்தது. என்னென்னவோ நினைத்து பயந்தது.

       ன்ன யோசிச்சிண்டிருக்கேள்...புரியலியா? உங்களுக்கு ஒண்ணும் புரியாது...பரப்பிரும்மம்...ஜெகந்நாதம்னு பொம்மைக்குக் கீ கொடுத்த மாதிரிப் போயிண்டு வந்திண்டிருக்கேள்..அதுக்கும் கடவுளோட ஆசீர்வாதம் வேணுமே...! .நான் சொல்லட்டுமா...? அப்புறம் என்னை நீங்க கோவிச்சிக்கக் கூடாது.....

       வியாபாரம் படுத்த இந்த வேளையில் கஸ்தூரியின் கை ஓங்குகிறது. குரலும்தான். அவளுக்கில்லாத உரிமையா?

       இதிலென்னடி கோவிக்கிறதுக்கு இருக்கு? குறைபாடைத் தெரிஞ்சிண்டா மாத்திக்கிறதுக்குத்தானே...? சகஜமாய்க் கேட்டார். ஆனாலும் உள்ளுக்குள் வதக்...வதக்... என்று என்னவோ...? எதையும் துல்லியமாய்ப் புரிந்து கொள்ளும் சக்தி என்றோ பறிபோய் விட்டது. எல்லாம் கஸ்தூரி பார்த்துப்பான்னுதான் விட்டாச்சே...!  கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பதாய் காலம் போய்விட்டது.....ஆனால் அந்தச் சூட்டிகை அவளிடம் சாகாமல் உள்ளது.

       மாத்திக்கிறதாவது...இதெல்லாம் மாத்திக்க முடியாது...அவ்வளவுதான்...கிடக்கட்டும்னு விட வேண்டிதான்.....நீங்க மீதம் கொண்டு வர ஆரம்பிச்ச நாள்லேர்ந்தே தெரியும் எனக்கு....காரணம் .இதாத்தான் இருக்கும்னு....யூகிச்சிட்டேன்...யாரையும் குத்தம் சொல்றதுக்கில்லே...!.

       அப்டீன்னா....? -

       அப்டீன்னா அப்டித்தான்....

       என்ன சொல்றே நீ...ஒரேயடியாப் புதிர் போடுறே....? கொஞ்சம் புரியும்படியாத்தான் சொல்லேன்...--அப்பாவியாய்க் கேட்டார்.

       கஸ்தூரிக்கு அவரை நினைக்கப் பரிதாபமாயிருந்தது.

       புதிருமில்லே...குதிருமில்லே....இதுதான் அதோட காரணம்...உங்களோட வெளில எங்கயும் வராமலே எனக்குத் தெரிஞ்சு போச்சு..பார்த்தேளா? ...இன்னுமா உங்களுக்குப் புரியல்லே...? உடையவாளுக்குப் பரவாயில்லே...மத்தவாளுக்கு?

       -சொல்லியவாறே அவரருகில் வந்து கையைப் பிடித்துத் தூக்கி தோலை லேசாகக் கிள்ளி, சுரணை வேண்டாமா...அதுக்காகத்தான்...என்று நெடுகச் சுட்டிக் காட்டினாள் கஸ்தூரி.

       ஒரு கணம் அதிர்ந்து போனார் பரமேஸ்வரன். இது மண்டைல உதிக்கவேயில்லையே நேக்கு? இதுவா....? இது கூடவா...? இதுன்னா சொல்றே....? இதுதான் காரணம்னு சொல்றியா? - பதறிப் போய் திரும்பத் திரும்ப அதையே  கேட்டார். பளீரென்று எதுவோ மின்னலடித்தது போலிருந்தது.

       அன்றொரு நாள்....அங்கே....கருணா நகர் ஆபீஸ் வெளியில்...

       அய்யர் ரொம்பப் பாவம்டா....ரெண்டு நாளா காணல பார்த்தியா...? பரவிடுச்சிடா நல்லா.....புரிஞ்சிக்கிட்டார் போல்ருக்கு....- ரெண்டு பியூன்கள் பேசிக் கொண்டது மனதில் இப்போது சுருக்கென்றது.

       அது வியாதி இல்லதான்டா.. தொத்துமில்லே....வெறும் தோல் நிற மாற்றம்தான்.. .இருந்தாலும்.....!?-

       -அவர்களின் அந்தப் பேச்சு மனதுக்குள் ஓலமிட்டு எதிரொலிக்க, சடாரென்று எழுந்து வேட்டியை இறுக்கி மடித்துக் கட்டிக் கொண்டு கண்ணாடியின் முன் போய் நின்றார் பரமேஸ்வரன். நெருங்கி, தன் வெற்றுடம்பை மேலிருந்து கீழ் ஊன்றி ஆழமாய், கண்ணீ்ர் ததும்பப்  பார்க்க லானார்.                                                                                                            -------------------------------------------------

                                 

                           உஷாதீபன், (ushaadeepan@gmail.com) ( செல்-94426 84188)                                               சிருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில், மடிப்பாக்கம்,                                                     எஸ்2- இரண்டாம் தளம், ப்ளாட் எண்.171,172                                                  மேத்தாஸ் அக்சயம் (மெஜஸ்டிக்  Nஉறாம்ஸ்)                                                  ராம் நகர் (தெற்கு) 12-வது பிரதான சாலை,      சென்னை-600091.

                                               

 

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...