01 நவம்பர் 2020

தி.ஜா.நூற்றாண்டு - “கடன் தீர்ந்தது”- சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்

 

தி.ஜா.நூற்றாண்டு - “கடன் தீர்ந்தது”- சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்



       - பகைவனுக்கும் அருள்வாய் - நம்பிக்கை மோசம் செய்தவனுக்கும் அருள்புரி - அவன் பாபத்தைப் போக்கு.

       இந்த வாழ்க்கையில் அநேகமாகப் பலருக்கும் இப்படி ஒரு  அனுபவம் ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனால் எத்தனை பேர் தன்மையோடு நடந்து கொண்டிருப்போம் என்பது கேள்வி. அதற்கு மிகுந்த மனப் பக்குவம் வேண்டும். ஒழுக்கம், நேர்மை, நியாயம், இறைபக்தி, நியமங்கள் இவைகளை இளம் பிராயம் முதல் விடாது கடைப்பிடித்து வருபவர்க்கே இது சாத்தியம் என்றே தோன்றுகிறது. தன்மையோடு என்பது போனால் போகிறது என்று விடுவதல்ல...எதிராளியை மன்னித்து விடுவது. அவனுடைய பாபத்தைப் போக்குவது. அதற்கு எவ்வளவு பெரிய மனம் வேண்டும். எந்த அளவுக்கான முதிர்ச்சி இருந்தால் இது சாத்தியம்? அனுபவத்திற்குப் பின், மிகுந்த நஷ்டத்திற்குப் பின் அந்தப் பக்குவம் நிற்பது என்பது எளிய மனிதனுக்கு சாத்தியமா? சிறந்த ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த இறைபக்தி கொண்ட மனிதர்களுக்கே சாத்தியம்.

       தேசிகர் எளிய மனிதராய், ஏமாளியாய் இருக்கிறார். அவர் மனது எதை எதையோவெல்லாம் விறுவிறுவென்று கற்பனை பண்ணிக் கொண்டு, அவரை நிதானிக்க விடாமல் காரியத்தில் இறங்க வைத்து விடுகிறது. உறவினர்களையே நம்ப முடியாத காலத்தில், வேற்றாளைப் பழியாய் நம்பி விடுகிறார். மோசம் போகிறார். தான் ஏமாற்றப்படுகிறோம் என்று அவருக்குத் தோன்றவேயில்லை.

       எதிராளி விஷயத்தை எடுத்து வைக்கும் பாங்கில் அந்த நம்பிக்கை வந்து விடுகிறது இவருக்கு. ஒரு தேர்ந்த கதை சொல்லியைப் போல் ராமதாஸ் அவரிடம் பொய்யுரைக்கிறான். தி.ஜா.தானே அந்தக் கதைசொல்லி.  ஏமாற்றுபவன் கதை சொல்வதும், ஏமாளியாய் ஒருவர் இருப்பதும் இரண்டுமே அவர் படைத்த கதாபாத்திரங்கள்தானே? ஆனாலும் அனுபவச் செழுமையில்லாமல், கூரிய அவதானிப்பில்லாமல் இது சாத்தியமா? உலக நடப்பியல் அறியாமல் இப்படி ஒரு கதையைப் பொருத்தமாக முன் வைக்க முடியுமா? அதன் மூலம் ஒரு நீதியை உணர்த்த முடியுமா? இப்படியெல்லாமும் உலக நிகழ்வுகள் இருக்கின்றன...மனிதர்கள் இப்படி நடமாடுகிறார்கள் ஜாக்கிரதை என்று படிக்கும் வாசகனுக்கு உணர்த்துகிறார் அவர் என்றும்தான் நினைக்க வேண்டியிருக்கிறது.

       அயோக்கியன் ராமதாசுக்கு அவரை ஏமாற்றத் தோன்றியதே...! அதை என்னென்பது? தான் சொல்வதையெல்லாம் பழியாய் இந்த மனுஷன் இப்படி நம்புகிறானே...? என்று ஒரு சமயம் அவனுக்கு அவர் மேல் இரக்கம் தோன்றத்தான் செய்கிறது. இப்படி இவரை ஏமாற்றுகிறோமே, இது சரியாய் வருமா? என்றும் தோன்றத்தான்  செய்கிறது.  அந்த எண்ணத்தை உடனே விலக்கி, காலில் போட்டு மிதித்து விடுகிறான். தொடர்ந்து ஏமாற்ற முயல்கிறான். அவன் வலையில் சுலபமாக விழுகிறார் தேசிகர். இப்போது கூடப் பாதகமில்லை...இத்தோடு நிறுத்திக் கொள்வோம் என்ற கூட ஒரு நினைப்பு இடையில்  ராமதாசுக்கு வருகிறது. அதையும் துடைத்தெறிந்து விடுகிறான்.

       இல்லையென்றால் குழி பதினைந்து ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, நாலரை ரூபாய்க்கு வாங்கித் தருகிறேன் என்று ஆசை காட்டும்போது அந்த மனுஷன் அப்படி நம்பி விடுவாரா? கையிலிருந்த பணத்தைக் கொடுத்து, நகைகளை விற்று, கொஞ்சம் கொஞ்சமாகத் தன் சொத்தையெல்லாம் இழக்கிறார் தேசிகர். இருக்கும் பணம், நகை நட்டு,  என்று எல்லாமும் இழந்த பிறகு, இன்னும் நிலம் கைக்கு வந்து சேரவில்லையே? என்று நினைக்கிறார். திகைக்கிறார். கந்தசாமி...கந்தசாமி என்று போட்டு வரும் மொட்டைக் கடுதாசியை அப்படி நம்பி விடுகிறார். அவன் யார்? உண்மையில் அப்படி ஒருத்தன் உண்டா? மொட்டையாய் பணம் பெற்றுக் கொண்டேன்...என்று இருக்கிறதே...இவ்வளவு பெற்றுக் கொண்டேன்...இன்னாரிடமிருந்து...என்று எந்த விபரமும் இல்லையே...?எதுவும் தோன்றவில்லை அவருக்கு. ராமதாஸ் மேல் அப்படியொரு குருட்டாம் போக்கு நம்பிக்கை.

       யாரை மோசம் என்று விளித்து,  தப்பித் தவறிக் கூட இந்த விஷயத்தை அவரிடம் சொல்லி விடாதீர்கள் என்று ஜாக்கிரதையாய்  ராமதாஸ் சொன்னானோ, யாரை முழுவதும் நம்புவதற்கில்லை என்று அவன் எடுத்துரைத்து இவரும் ஆமோதித்து வைத்திருந்தாரோ அந்த ரத்ன தேசிகரிடம் ஒரு நாள் தாங்கமாட்டாமல்....இவனைப் பற்றித் தெரியுமா என்று கேட்டு விடுகிறார். இந்த ராமதாசை உனக்குத் தெரியுமா? சாதாரணமாய் வாயில் வந்து விடுகிறது அவருக்கு. பிறகுதான் விஷயம் தெரிய வருகிறது. ரத்ன தேசிகர் மூலம் இது கோர்ட் கேசாகிறது. ராமதாசைப் பிடித்து மொத்தி விடுகிறார்கள். அப்போதும் ஊமையாய் இருந்து விடுகிறான் அவன்.

       தேசிகர் கிட்டயா? பணமாவது...வாங்கிக்கிறதாவது...? இதென்னய்யா புதிரா இருக்கு? என்று சாதிக்கிறான். வழக்கு முடியும் தருவாயில் ராமதாஸ் எல்லாப் பணத்தையும் இழந்து நிற்கிறான். நோய் வந்து பற்றிக் கொள்கிறது. எழ முடியாமல் படு்த்த படுக்கையாய் ஆகி விடுகிறான். உடம்பு சிதிலமாகிப் பெயர்ந்து கிடக்கிறது.

       கதையின் உச்ச கட்டமே இனிதான். இப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா? பகைவனுக்கும் அருள்வாய். ஏமாற்றியவனுக்கும், நம்பிக்கைத் துரோகம் செய்தவனுக்கும் கருணை செய். அவனையும் பாவத்திலிருந்து விடுவி. சுந்தர தேசிகரின் மனம் இப்படித்தான் எண்ணமுறுகிறது. அவனைப் பார்க்க குடியிருக்கும் வீட்டைத் தேடிப் போகிறார். ஆறுதல் சொல்கிறார்.

       தெய்வ நம்பிக்கை உள்ளவனுக்கும், சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டவனுக்கும், வேதங்களை உணர்ந்தவனுக்கும் தோன்றும் இந்தக் கருணைச் சமநிலை எந்த எளிய மனிதனுக்கு சாத்தியமில்லை.

       ராமதாஸ், உன்னைப் போல் ஒரு கெட்டிக்காரனை நான் பார்த்ததேயில்லை. இந்த உலகத்திலே சுகம் அடையறதுக்காகப் பாடுபடுறாங்க, உழைக்கிறாங்க...ஆனா உன்னைப்போல் இவ்வளவு சுலபமா அதை அடைஞ்சவங்க ரொம்ப ரொம்பக் கொஞ்சம்....ஆனா என்ன...கடைசியிலே மாட்டிக்கிட்டே....கேசு எனக்கு சார்பா ஜெயிச்சிதுன்னா எனக்கு லாபம்தான். ஆனா ஜெயிக்கும்ங்கிற நம்பிக்கை எனக்கில்லை....சாட்சியே இல்லாமப் பண்ணிட்டியே....எத்தனை சாமர்த்தியம் உனக்கு? ஆனா ஒண்ணு...கேசு உனக்கு சாதகமா ஜெயிச்சிதுன்னா உன்னைப்  போல துர்பாக்கியசாலி எவனும் இருக்க முடியாது. என்று சொல்லி இன்னொன்றைச் சொல்கிறார். அதுதான் முத்தாய்ப்பு....

       எந்தத் தப்பு, குத்தம் பண்ணினாலும் அதுக்குப் பிராயச்சித்தம் பண்ணி, இந்த உடம்பையும்,நெஞ்சையும் வருத்தித்தான் ஆகணும் மனுஷன்...இல்லாட்டா அந்தப் பாவம் பின்னாலே துரத்தித் துரத்தி வந்து வருத்தும். கேசு யாருக்கு ஜெயிச்சா என்ன? இப்ப உன் பிராணன் போயிட்டிருக்கு. நீ நல்ல வழி தேடிக்காமப் போயிடப் போறியேன்னுதான் நான் ஓடி வந்தேன். நம்ம சாஸ்திரங்களிலே வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்காமே போயிடக் கூடாதுன்னு சொல்லப்பட்டிருக்கு. இப்போ நீ உன் கடனைத் தீர்த்துப்புடணும்...வாங்கின கடன் தீர்ந்ததுன்னு நானும் மனசாரச் சொல்லிப்புடணும்...அப்பத்தான் உனக்கு நல்ல சாவு. நீ என் பணத்தை ஏமாத்தி சுகமா வாழ்ந்தே...உன் கடனையெல்லாம் அடைச்சே...சந்தோஷமாயிருந்தே...அதுல எனக்குப் பரம திருப்தி. ஆனா ஒண்ணு...வாங்கின கடனை அடைக்காமப் போகக் கூடாது. அது பாபம். இப்போ உன் கி்ட்டே பணமில்லேன்னு எனக்கும் தெரியும். உனக்கு உடம்பு முடிலங்கிறதும் தெரியும். ஆகையினால உன்னால முடிஞ்சதை எனக்குத் திருப்பிக் கொடு..அஞ்சு ரூபாயோ...ஒரு ரூபாயோ...நானும் சந்தோஷமா வாங்கிக்கிறேன்...உன் கடன் தீர்ந்து போச்சன்னு லோகமாதா ஆணையா சொல்லிப்புடறேன்...அதுக்குத்தான் நான் வந்தது....என்கிறார் தேசிகர்.

       அவன் மனனைவி அழுது கொண்டே இரண்டணாவை ராமதாசின் கையில் வைத்து, அவன் கையைத் தூக்கி இவரிடம் நீட்டுகிறாள். வாங்கிக்கொள்கிறார் தேசிகர். அழாதேம்மா...உன் கடன் தீர்ந்து போச்சு...நானும் திருப்தியாயிட்டேன்...அவனும் கவலைப்படவேண்டாம்...நான் போயிட்டு வரேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார்.

       நெஞ்சை உருக்கும் இப்படி ஒரு நிகழ்வு சாத்தியமா? சாத்தியமாகியிருக்கிறது என்று நம்ப வைக்கிறார் தி.ஜா. அப்படியான தெய்வத்திற்கிணையான மனிதர்கள் இருந்தார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்..தனது அனுபவத்தை முன்வைக்க, பொருத்தமான வடிவத்தைத் தேர்ந்தெடுத்துக் கதை சொல்வதில் வல்லவராய் தி.ஜா. விளங்கியிருக்கிறார். உரையாடல்களின் கச்சிதமான வார்த்தைப் பிரயோகங்களின் வழி கதாபாத்திரங்களை அழுத்தமாய் முன்னிறுத்துகிறார். கடன் தீர்ந்தது என்ற இக்கதையில் ராமதாஸ் சுந்தர தேசிகரை ஏமாற்றி நிலம் வாங்க வைக்கும் உரையாடல்களும், கடனைத் தீர்க்காமல் இந்த உலகத்தை விட்டுப் போகக் கூடாது, பாவம் தொடரும்...என்பதை வலியுறுத்தி தேசிகர் அவனிடம் எடுத்து வைக்கும் உண்மைகளும் கல் நெஞ்சையும் கரைக்கும். ஐயோ...அநியாயமாய் ஏமாறுகிறாரே....என்றும், ஆஉறா...தெய்வமே உதித்து வந்ததுபோல் இப்படி ஒரு உபதேசம் செய்து அவன் பாவத்தைப் போக்குகிறாரே....எப்படி ஒரு பிறவி இவர் என்றும் நினைத்து நினைத்து நம் மனம் உருகித்தான் போகிறது.

       தமிழில் இதுவரை வெளிவந்த கலைத்தன்மை மிகுந்த கதைகளின் வரிசையில் சந்தேகமின்றி இடம் பெறும் கதைகள் இவை என்று “சிவப்பு ரிக் ஷா...”என்ற தொகுதியில் இக்கதை இடம்பெற்றுள்ளது சிறப்பு.

                                  ----------------------------------------------------

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...