03 மார்ச் 2013

சுஜாதாவின் குறுநாவல் “குருப்ராசாத்தின் கடைசி தினம்”உயிர்மை குறுநாவல் வரிசை எண்.13

 2013-03-03 16.51.14

. கதைஆரம்பித்ததிலிருந்து முடியும்வரை ஒரே விறுவிறுப்பு. குருப்ரசாத் மயங்கி விழ அவனை ஆம்புலன்ஸில் ஏற்றுகையில் நாமும் கூடவே ஏறிக் கொள்கிறோம். தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி மயக்கமடைகையில் அவனுக்கு சிகிச்சையளிப்பது எவ்வளவு தாமதமாகிறது என்பதை இயல்பாக அவர் சொல்லிச் செல்வது ஒரு தொழிலகத்தில் நாமும் கூடவே பணியாற்றி இந்த நிகழ்வு பூராவும் கூடவே இருந்து இயங்குவது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. குருப்ரசாத்திற்கு என்ன உடம்புக்கு என்பதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, பெரும்பாலும் இந்த மாதிரி மயக்கமெல்லாம் ஃபுட் பாய்ஸனாகத்தான் இருக்கும் என்று நினைத்து முடிவு செய்வதும், கேன்டீனில் காபி சாப்பிடுகையில் எண்ணெய் மிதந்ததை நினைத்துக் கொள்வதும், அதுதான் வேறென்ன என்று முடிவுக்கு வருவதும், சர்வ சகஜமாக என்னவொரு அலட்சியம்? கூட இருக்கும் யூனியன் தொழிலாளரோடு சேர்ந்து நாமும் பதறுகிறோம். அங்கேயிருந்து இ.எஸ.ஐ.க்கு அலைக்கழிப்பதும், அங்கு சென்றதும், ஃபுட் பாய்ஸனெல்லாம் இங்கு பார்க்கிறதில்லை என்று திருப்புவதும், திரும்பவும் ஃபாக்டரி உறாஸ்பிடலுக்கு வண்டி எடுக்க எனக்கு ரூல் இல்லை என்று டிரைவர் சொல்வதும், இப்படியே நாலைந்து மணி நேரங்கள் கடந்து கடைசியில் குருப்ரசாத் இறந்தே போகிறான். மயக்கமடைந்தவுடனேயே ஒரு ஊசியைப் போட்டு நிறுத்தியிருக்க வேண்டிய விஷயம் இந்தத் தொழிற்சாலை மற்றும் அது சார்ந்த மருத்துவமனை அலைக்கழிப்பால் ஒரு உயிரையே சர்வ அலட்சியமாகக் குடித்து விடுகிறது. கூட இருக்கும் யூனியன் தலைவர்களாலும் எதுவும் செய்ய இயலவில்லை. எல்லா சத்தங்களையும் மீறி இது நடந்து விடுகிறது. தொழிற்சாலை அதிகாரிகள் சர்வ ஜாக்கிரதையாக ஆறு பஸ்களைத் தயாராய் நிறுத்தி வைத்து யார் வேண்டுமானாலும் ஏறிக் கொள்ளலாம் என்று சொல்லி குருவின் சடலைத்தைப் பார்க்க வசதி செய்கிறார்கள். எல்லோரும் ஏறிப் போகையில் பாதிப் பேர் அங்கே, இன்னும் பாதி வழியில் ஓரிடம், என்று இறங்கிக் கொள்ள கடைசியில் மிஞ்சுவது அஞ்சு பேர். ஒரு உயிரின் மதிப்பு ?யாரோ ராம்ப்ரசாத்தாம், இல்லையில்ல மோகன் ப்ரசாத், ஊகூம்...முரளிப்ரசாத்...கிடையாது, சத்தியமூர்த்தின்னு சொன்னாங்க...சரி விடு ஏதோ பேரு...நட சீக்கிரம்..... - துயரம் நெஞ்சைக் கவ்வுகிறது. - உஷாதீபன்

கருத்துகள் இல்லை: