21 பிப்ரவரி 2013

“தோற்றப்பிழை”–சிறுகதைத் தொகுதி–தி.தா.நாராயணன்

எழுத்தாளர் தி.தா.நாராயணன் அவர்களைத் தமிழ் எழுத்துலகு அறியும். சிறந்த சிறுகதைகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பவர் அவர். எந்தப் பரிசுத் திட்டம் அறிவித்திருந்தாலும், அதற்கு இவர் தன் கதையை அனுப்பியிருந்தார் என்றால், நிச்சயம் ஒரு பரிசு அவருக்கு உண்டு. இப்படிப் பல முதற் பரிசுகளைத் தன் கதைகளுக்காகப் பெற்றவர் அவர். மனித நேயம் மிக்க கதைகள், சமுதாயப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அலசி ஆராய்ந்து, உருக்கமாகத் தன் படைப்பின் வழி வைக்கும் திறன் கொண்டவர். எந்தவொரு கதையும் ஒதுக்கப்படத்தக்கதாக இவர் எழுதி நான் பார்த்ததேயில்லை. அப்படிப்பட்டவருக்கு தொகுதி அளிப்பதில் பதிப்பகங்களுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்? அதனால்தான் முந்திக் கொண்டு NCBH நிறுவனம் இப்போது அவரது சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ”தோற்றப் பிழை” என்பது அந்தச் சிறுகதைத் தொகுதியின் பெயர். ஒரு வயதான முதியவரின் படத்தைப் பொருத்தமான அட்டைப்படமாகப் போட்டு, கீழே தோற்றப்பிழை என்று புத்தகத்தின் பெயரையும் அச்சிட்டிருக்கிறார்கள். முதுமை எத்தனை அழகு? அதன் முதிர்ச்சி பார்த்துப் பார்த்து மரியாதை செய்யக் கூடியதல்லவா? 13 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பாக இது இருக்கிறது. இதன் பல சிறுகதைகள் பரிசுகளை வென்ற கதைகள். பொதுவாக ஒரு தொகுதிக்கு நான்கு அல்லது ஐந்து கதைகள்தான் சிறப்பான படைப்புக்களாக இருப்பது வழக்கம். அப்படியானால்தான் இன்னொரு தொகுதிக்கும் சிறந்த நான்கைந்து கதைகளைக் கொடுத்து அந்தத் தொகுதியையும், சிறப்பிக்க முடியும் என்று மடியில் பொதிந்து வைத்திருப்பார்கள் எழுத்தாளர்கள். ஆனால் இவர் அப்படியில்லை. காரணம் இவர் கொஞ்சமாக எழுதுபவர்.ஆனால் நிறைவாகத் தன் படைப்புக்களைக் கொடுப்பவர். எழுதி எழுதித் தள்ளுபவர்களை விட எழுத்தைத் தவமாகக் கொள்பவர்களின் படைப்புக்கள் என்றும் சிறக்கத்தானே செய்யும்? அப்படித் தவமாக இயற்றி இந்தத் தொகுதியை நமக்கு வழங்கியிருக்கிறார் திரு தி.தா.நாராயணன் அவர்கள். தோற்றப்பிழை நம் மனதைக் கனக்கச் செய்யும் அற்புதமான படைப்புக்களைக் கொண்டது. அதை ரசிப்பதும், சுவைப்பதும், அனுபவிப்பதும், கரைந்து சஞ்சரிப்பதும், காசு கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பதில்தான் இருக்கிறது. நல்ல ஆக்கங்களை ஊக்கப்படுத்துங்கள். அப்படியானால்தான் படைப்பாளி மேலும் மேலும் இந்தச் சமுதாயத்தின் மேன்மைக்குப் பாடுபட்டுத் தன்னைக் கரைத்துக் கொள்வான். என்னதான் ஆனாலும் அவனும் கைதட்டலுக்குக் காத்திருப்பவன்தான். - உஷாதீபன்

clip_image001

கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...