30 மே 2024

 

அவளுக்கென்றோர் மனம்  -சிறுகதை – சங்கு இதழ் – ஏப்-ஜூன் 2024


                ந்தம்மா வந்தா இனிமே வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிடு... – அவ்வளவு நேரம் கொதித்துக்கொண்டிருந்த அவளின் மனசுக்கு கணேசனின் இந்த வார்த்தைகள் ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும்.

      ம்ம்...பார்த்தீங்களா...இவ்வளவு நேரமாச்சு...இன்னும் வரலை...என்னன்னு நினைக்கிறது?- வருமா, வராதா? - சுசீலாவின் வார்த்தைகளில்  கோபம் கனன்றது.

      இதிலே நினைக்கிறதுக்கு என்ன இருக்கு? இன்னைக்கு அந்தம்மா வேலைக்கு வரலை...அவ்வளவுதான்...

      ஆமாம், ரொம்ப ஈஸியாச் சொல்லியாச்சு...இது மத்தவாளுக்கும் புரியாதா? திடீர் திடீர்னு வராம இருந்தா எப்படி? அதுதானே கேள்வி. சொல்லிக்கொண்டே அவள் கைகள் அரக்க அரக்கப் பாத்திரத்தைத் தேய்த்தன. சுற்றிவர மலையாய்க் கிடக்கும் பற்றுப் பாத்திரங்கள். அவள் தேய்த்துத் தேய்த்து வைக்க நான் அலம்பி அலம்பி எடுத்து உள்ளே கொண்டு வந்து அடுக்கினேன்.

      அடுத்து வர்ற போது கேளு....கேட்டாத்தானே அந்தம்மாவும் பயந்துக்கிட்டு ஒழுங்கா வர ஆரம்பிக்கும்...இல்லன்னா நா சொன்ன மாதிரி நிறுத்திப்புடு...

      என்னத்தக் கேட்குறது...பேசாம நிப்பாட்டிட வேண்டிதான்....எதுக்கு இப்படிக் கஷ்டப்படணும்?ஆயிரம் ரூபாயும் கொடுத்திட்டு இப்படி அடிக்கடி வராம இருந்தா? மாசத்துல பத்து நாள் நாமளே செய்துக்கிறதுக்கு எதுக்கு அந்தம்மாவுக்கு இப்படிக் கொடுக்கணும்? நம்மள விட்டா ஆளில்லன்னு நினைச்சிடுச்சி போலிருக்கு...

               இப்பச் சொன்ன பார், அதுதான் கரெக்ட்...நிப்பாட்டிடு...ரூபா மிச்சம். உடனுக்குடனே தேய்ச்சிட்டோம்னு வச்சிக்க....மடைல பாத்திரமே விழாதே...? எதுவுமே பழக்கம்தான்...ஒரு சிஸ்டத்துக்குப் பழகிட்டோம்னா பிறகு சிரமமாத் தெரியாது. அந்தம்மா ஒண்ணு இருக்குன்னுதானே பேசாமப் போட்டு வைக்கிறோம்...அது நினைச்சா வருது...நினைச்சா இருந்துக்குது...இன்னைக்கு வரேன், வரல்லைன்னு ஒரு போன் பண்ணியாவது சொல்லலாம்ல......என்ன எதுக்குன்னு நீயும் கேட்க மாட்டேங்குற...எதாச்சும் ரெண்டு வார்த்தை கேட்டாத்தானே அந்தம்மாவும் ஒழுங்கா வர ஆரம்பிக்கும்...வந்தியா, சரி...வரல்லியா அதுவும் சரின்னு இருந்தா? ஏத்தமாத்தானே போகும்...?

      ஏன், நீங்க கேட்க வேண்டிதானே?

      அதெப்படீடி...நான் கேட்குறது?  பொம்பளப்பிள்ளைட்டப் போயி...?

      ஏன், கேட்டா என்ன? கூச்சமா இருக்கா? இல்லை வெட்கமா?

      உனக்குக் கேட்குறதுக்குத் தெம்பில்ல...என்னைத் தூண்டி விடுறயாக்கும்? நான் கேட்டுப்புடுவேன் ரெண்டே வார்த்தைல..எனக்கென்ன வெட்கம்? முப்பத்து மூணு வருஷமா ஆபீஸ்ல நிறையப்பேற மேய்ச்சிட்டுத்தான் இருக்கேன்....அப்புறம் அந்தம்மா வேலையை விட்டு நின்னுடுச்சுன்னா? அதுக்குத்தான் யோசிக்கிறேன்...வேலைக்கு அங்கங்க விசாரிச்சு ஆளப் பிடிக்கிறது என்ன பாடா இருக்கு? முதல்ல யார் இருந்தாங்க? ஏன் நின்னாங்க? எவ்வளவு குடுத்தீங்க? அது இதுன்னு என்னெல்லாம் கேள்விக? இதுக்கெல்லாம் பதில் தயார் பண்ணிக்கிட்டுத்தான் தேடவே ஆரம்பிக்கணும். தயார் பண்ணி வச்சிருக்கிற பதில் கேட்குறவங்களைத் திருப்திப் படுத்தணும். அடுத்து யார் வேலைக்கு வரப்போறாங்களோ அவங்களே நம்மளை நேர்காணல் நடத்தினாலும் நடத்துவாங்க...அதுல நாம தேறினாத்தான் வேலைக்கு வர சம்மதிப்பாங்க...இது இப்போதைய காலம். அதுதான் பலமான யோசனையா இருக்கு. ஒரு ஆள நிறுத்துறது பெரிசில்ல. அடுத்து ஒருத்தரைப் பிடிக்கிறது இருக்கு பாரு அதுதான் மலை.  ரெண்டே வார்த்தைல நான் பேசிப்புடுவேன்...அதுவா பெரிசு? காரியம்தான் முக்கியம். வீரியமில்லை.      

அப்டி என்னதான் கேட்பீங்களாம்? அதத்தான் சொல்லுங்களேன் பார்ப்போம்...

      பார்த்தியா, இதானே வேண்டாங்கிறது....என்ன கேட்கணும்னு எங்கிட்டக் கேட்டுக்கிட்டு நீ கேட்கப் போறியாக்கும்? உனக்கு அந்தம்மாட்ட நேரடியாக் கேட்குறதுக்குப் பயம்....வேலைக்காரிகிட்டப் பயந்து சாகுற ஆள இப்பத்தான் பார்க்கிறேன் நான்....

      பயமென்ன பயம்...அதெல்லாம் ஒண்ணுமில்லே.....

      ஒண்ணுமில்லேன்னா என்ன அர்த்தம்? அந்தம்மாவ இப்படி இஷ்டத்துக்கு வளர்த்து விட்டது நீதானே? நாந்தான் சொன்னேன்ல...கராறா ஆரம்பத்துலயே சொல்லிப்புடுன்னு...எதத்தான் சொன்ன நீ? இன்னின்ன வேலை செய்யணும்னு  சொல்லியிருந்தேன்னா அத ஏன் செய்யலைன்னு கணக்கு வச்சிக் கேட்கலாமே?   ஐந்நூறு ரூபாய்க்கு வேலைக்கு வந்த அந்தம்மா இப்ப ஆயிரம் வாங்குது...சம்பளம்தான் கூடியிருக்கு...வேலை அதேதான்....ஆனா ஒழுங்காச் செய்யுதா? கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதைதான். வாரம் ஒரு முறை வீடு துடைக்கணும்னு சொன்னே....செய்யுதா? நீ கிடந்து துடைச்சிட்டிருக்கே...இதுல அப்பப்போ என்னைவேறே போட்டு பாடாப் படுத்தறே...அன்னைக்கு நீ செய்திட்டிருந்தப்போ பாதில வந்த அந்தம்மாவ மீதியைத் துடைச்சு முடின்னு கூட உனக்குச் சொல்லத் தைரியமில்ல...வாய் வர மாட்டேங்குது...அந்தம்மாவும் கொண்டாங்க நான் துடைக்கிறேன்னு சொல்ல மாட்டேங்குது...சம்பளம் ஏத்தினியே...அது வீடும் துடைச்சிக் கொடுத்திடுன்னு சொல்லித்தானே? அப்பச் சரின்னு தலையாட்டிப்புட்டு இப்படி மெத்தனமா இருந்தா எப்படி? தினசரி காலைல எட்டரைக்கு வந்திடு...அப்பத்தான் எனக்கு சரியா இருக்கும்னு சொன்ன...கேட்டுச்சா...பக்கத்துல,  பாங்குல வேலை பார்க்குதே அந்த மேடம்  வீட்டுக்குப் போயிட்டுத்தான் வருது...நம்ம வீட்டுக்கு வேலைக்கு வந்த பின்னாடிதானே அந்த வீட்டுக்கு வேலைக்குப் போச்சு....அப்போ முதல்ல நம்ம வீட்டுக்குத்தான கரெக்டா வரணும்...காலைல ஏழுக்கெல்லாம் அங்க நுழைஞ்சிடுது...நாந்தான் வாக்கிங் போயிட்டு வரச்சே பார்க்கிறேனே...

      அதுக்கென்ன பண்றது? அந்த வீட்டுல டிபன், சாப்பாடு, அப்பப்போ மிஞ்சுற காய்கறி, தேங்கா, மாங்கா, துணிமணின்னு நிறையக் கொடுக்கிறாங்க... அங்கதான நோங்கும்...!

      நீயே இப்படிச் சொன்னா? உனக்கு எங்கிட்டதான் வாய் கிழியுது..என்னை ஜெயிக்கணும்ங்கிற மாதிரிப் பேசுற....அந்தம்மா வந்திச்சுன்னா கப்சிப்னு ஆயிடுற...அதுவும் அத சாதகமா எடுத்துக்கிட்டு என்னவோ வந்தோம், செய்தோம்னு கழிச்சிக் கட்டிட்டுப் போயிடுது....ஒரு நாளைக்காச்சும் திருப்தியா வேலை செய்திருக்கா சொல்லு...மனசேயில்லாத மாதிரிச் செய்யும்.. எப்பப்பாரு, உடம்பு முடியலைங்கிற மாதிரி .முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு...அது எப்டியோ இருந்திட்டுப் போகட்டும்...நா அதுக்குச் சொல்லலை...அது சிரிச்சா என்ன அழுதா என்ன? நமக்கு வேலை நடந்தாச் சரி...ஆனா கொடுக்குற காசுக்கு ஒழுங்கா வேலை பார்க்கணுமில்ல...?

      எத்தனையோ முறை நானும் சொல்லிட்டேன்...பீரோவுக்கு அடிலயும், கட்டிலுக்கு அடிலயும் விளக்குமாத்த விட்டுக் கூட்டுன்னு...என்னைக்காச்சும் கேட்டுறுக்கா? ஏழு ரூம் உள்ள இந்த வீட்டை ரெண்டு நிமிஷம் கூட ஆகாது....ஒரு இழுப்பு இழுத்திட்டுப் போயிடுது..விளக்குமாத்துக்கு வலிக்குமான்னு ஒரு நாளைக்குத்தான் கேளேன்....அடில கிடக்குற தூசி அப்டியேதான் தேங்கிக் கிடக்கு நாள்கணக்கா...கத்த கத்தயா, சுருட்டை சுருட்டையா... எல்லாம் உன் தலை முடிதான் வேறென்ன...?

      உங்களுக்கு என் தலைய உருட்டலேன்னா ஆகாதே...?

      உன் தலையை உருட்டலை, முடியத்தான்....உன் தலைய உருட்டி நா என்னடி செய்யப்போறேன்...இப்டி இருக்கியேன்னு சொல்ல வந்தேன்...உன்னப் பார்த்தா பாவமா இருக்கு எனக்கு. சரி சரி கிளம்பு...ஆபீசுக்கு நேரமாகல?

      அப்பயே ஆயாச்சு..இன்னைக்கு லேட் அட்டென்டன்சுலதான் கையெழுத்துப் போடணும்...அநேகமா மூணு லேட் ஆகியிருக்கும்...அரை நாள் லீவு கட்.....இத சரி பண்ணுங்கோ.... – சொல்லிக்கொண்டே என் முன் வந்து நின்றாள் இடுப்பில் செருக வேண்டிய புடவை மடிப்பைப் பிடித்தவாறே...

      அவள் பிடித்திருக்கும் முன்பகுதி  மடிப்பின் கீழ் தொங்கும் நான்கு விசிறி மடிப்புகளை ஒன்றாகப் பிடித்து அயர்ன் பண்ணியதுபோல் செய்து இழுத்து விட்டேன். எடுத்துச் செருகிக் கொண்ட போது ஏதோ ஐ.ஏ.எஸ் ஆபீசர் போலத்தான் இருந்தாள். தோற்றத்தில் இருந்தால் போதுமா? நிர்வாகம் என்பது வெறும் தோரணையில் மட்டுமில்லையே? கமாண்டிங் கெபாசிட்டி என்று ஏன் சொல்லியிருக்கிறார்கள்? இங்கு வேலைக்காரியிடமே இப்படித் தயங்கித் தடுக்கிடுகிற இவள், அலுவலகத்தில் பதினைந்து பேர் கொண்ட பிரிவினை எப்படி மேய்க்கிறாள்?

      எல்லாம் லீவு லீவுன்னு போயிடறதுகள் எனக்கென்னன்னு...எல்லாத்தையும் நாமளே கட்டிண்டு அழ வேண்டியிருக்கு...எதுகளுக்கும் ரெண்டு வரி ஒழுங்கா இங்கிலீஷ்ல எழுதத் தெரில..அதாச்சும் பரவால்ல...சமாளிச்சிக்கலாம்...சொல்றதச் செய்தாலே போதும்...ஏதாச்சும் சொன்னா படக்குன்னு ஃபைலை. நம்ம டேபிள்ல கொண்டு வச்சிடுறா...இந்த மட்டுக்கும் பொறுப்பு விட்டுதுன்னு...வேலை கத்துக்கணும்ங்கிற ஆர்வமே இல்லை யாருக்கும்...நம்ம செக்ஷன் வேலையை நாமதான் பார்க்கணும்ங்கிற கெத்து வேணாமோ...வெறுமே பைல்களை அடுக்கி அடுக்கி வச்சிண்டிருந்தாப் போதுமா...வேலை யார் பார்க்கிறது? சாயங்காலமாச்சின்னா டேபிளைத் துடைச்சி வச்சிட்டுப் போயிடுறா...ரொம்ப சின்சியர் மாதிரி... மாசக் கடைசியாச்சின்னா போய் ஏ.டி.எம்ல மட்டும் நீட்டி எடுக்கத் தெரியறதோல்லியோ? அத நாம சொல்லப்படாது. சொன்னாக் குத்தமாயிடும்...அது அவாளோட உரிமையாச்சே...! அப்படீன்னா கடமை? அதக் கேட்கப்படாது...

நன்னா லாங்க்வேஜ் எழுதறவாளும் இருக்கா...அவா வேலை செய்ய மாட்டா....என்னைக்கோ ஆரம்பத்துல  சின்சியரா வேலை செய்து வாங்கி வச்சிருக்கிற பேரைக் கெட்டியாப் பிடிச்சிண்டு ஓட்டிண்டிருக்கா....வேலை செய்யாதவாளைப் பார்த்துப் பார்த்து நாமளும் ஏன் செய்யணும்ங்கிற அலட்சியம் வந்துடுத்து அவாளுக்கும்...ஒவ்வொரு ஆபீசிலயும் ஒவ்வொரு செக்ஷன்லயும் இன்னைக்கும் ஒத்தர் ரெண்டு பேர் அவாஉண்டு அவா வேலையுண்டுன்னு இருக்கிறவா இருக்கத்தான் இருக்கா...அப்படிப்பட்டவாளை வச்சித்தான் ஆபீஸ்களே ஓடிண்டிருக்குன்னு கூடச் சொல்லலாம்...எப்படி வேலையே செய்யாதவாளை மாத்த முடியாதோ அதுபோல வேலை மட்டுமே கதின்னு கிடக்கிற இவாளையும் யாராலேயும் மாத்த முடியாது...

இதுல வி.ஆர்.எஸ் வேறே கொடுக்கப் போறானாம்...இன்னும் பத்து வருஷம் சர்வீஸ் இருக்கிறவாளெல்லாம் சரி, ஓ.கே.ன்னுட்டு வீட்டுக்கு வர முடியுமா? நிறையப் பேரு தயாராத்தான் இருக்கா...ஏதாச்சும் வள்ளிசாக் கொடுத்தா வாங்கிண்டு கழன்டுக்கலாம்னு...வள்ளிசா எங்க கொடுக்கப் போறான்...கையை நீட்டச் சொல்லித் தடவித்தான் விடுவான்...நிறையப் பேரு மெயினா வேறே பிஸ்னஸ் அது இதுன்னு பார்த்துண்டு, இதைத்தானே சைடா வச்சிண்டிருக்கா...? நல்லா யோசிச்சுப் பாருங்கோ...ஒரு நாளைக்கு எழுநூறு, ஆயிரம்னு வாங்கறா எல்லாரும்...அதுக்கு மனசாட்சிக்கு விரோதமில்லாம நாம வேல செய்றோமா? வெளில ஒவ்வொருத்தர் எத்தனை கஷ்டப்படறா? கண்ணால பார்க்கத்தானே செய்றோம்? அப்புறம் ஏன் அவன் வி.ஆர்.எஸ் கொண்டுவர மாட்டான்? மூவாயிரம், ஐயாயிரம்னு செய்றதுக்கு எத்தனை பேர் காத்துண்டு க்யூவில நிக்கிறா?  அவாளைக் கூட்டிண்டு வந்து வேலையை வாங்கிப்பிட்டு அத்தக் கூலி மாதிரிக் கொடுத்தனுப்பப் போறான்...எல்லாமும் நீங்களா வரவழைச்சிண்டதுதானே? நாம ஒரு ஸ்தாபனத்துல இருக்கோம்னா அதோட முன்னேற்றத்துக்கு உயிரக் கொடுத்துப் பாடு பட்டிருந்தோம்னா, அட அதுவே வேண்டாம் அவா அவா வேலையை ஒழுங்கா செய்திருந்தோம்னா,  இன்னைக்கு இந்த நிலைமை வருமா? வேலை செய்யாம அதை நஷ்டத்துல கொண்டு போய் விட, நஷ்டத்த ஈடு கட்டுறதுக்கு ஆட்களை வெளியேத்தறான் அவன்...செய்யத்தானே செய்வான்...வெளியேற்றாதே...வெளியேற்றாதேன்னு வெளில நின்னுண்டு கோஷம் போட்டா நடக்குமா? அப்டியே வெளில அனுப்பிடுவான் போலிருக்கு...

      கோஷம் போடுறதுலயும் இப்ப சந்தேகம்...ஏன்னா இவாளே நாலு அஞ்சுன்னு பிரிஞ்சி இருக்கா...எவன் எப்போ யார் கூடப் போய் என்ன பேசறான்னு அவுங்களுக்குள்ளயே தெரியாது..பக்கத்துல நிக்கிறவன் சரியான ஆள்தானாங்கிறதுலயே சந்தேகம்....உள்ளே என்ன நடக்குதுன்னு எதுவும் தெரியாம வெளில நம்பிக்கையோட நிறைய அப்பாவிகள் கூடித்தான் இருக்காங்க...இன்னமும் விகல்பமில்லாம கூடத்தான் செய்றாங்க...வெறுமே கூடிக் கலையற கும்பலாத்தானே எல்லாமும் இருக்கு....என்ன சாதிக்க முடிஞ்சிது...நடக்குறது நடந்துக்கிட்டுதான் இருக்கு...ரொம்பக் கொஞ்ச காலம் வேணும்னா தள்ளிப் போட்டிருக்கலாம்...இவுங்க ஸ்டிரைக்குனால உண்டான பலன் அவ்வளவுதான்...பெர்மனென்ட் சொல்யூஷன் என்ன? ஸ்தாபனம் என்ன நினைக்குதோ அதுதான் நடந்துக்கிட்டிருக்குது....

 இதெல்லாம் கேட்கக் கிளம்பினா,  கேட்டாக் குத்தம்....கருங்காலின்னுவா..கேட்கத்தான் நினைக்கிறது...எங்க கேட்க முடியறது? .உரிமையை உரிமையோட கேட்குற தகுதி எப்ப வருது? நம்ம கடமையைத் தவறாமச் செய்யறபோதுதானே? ஆனா ஒரு துரதிருஷ்டம். தன் கடமையை ஒழுங்காச் செய்றவாளுக்கே இதையெல்லாம் கேட்க முடியாமப் போயிட்டதுங்கிறதுதான்...இதல்லாம் சொல்ல முடியாது....அதான்...யார் சந்தாக் கேட்டாலும் தொலையறதுன்னு நானும் கொடுத்திடுறது...அவாளுக்கும் தெரியும்...காசு வந்தாச் சரின்னு அவாளும்தான் வாங்கிக்கிறா...அதையும் சொல்லியாகணுமே...எங்க பாலிஸிக்கு நீங்க எதிரான கருத்து உள்ளவங்க...ஆகையினால உங்ககிட்ட சந்தா வாங்க மாட்டோம்னு யாராவது சொல்றாளா என்ன? இல்ல, எல்லாத்துக்கும் சந்தாக் கொடுக்கிறீங்களே...எப்டி மேடம்?னு இதுவரைக்கும் யாராச்சும் கேட்டிருக்காளா?சந்தா இல்லாட்டா நன்கொடைன்னு போட்டுப்பாளோ என்னவோ... என்னைமாதிரியே நிறையப் பேரு இருப்பா போலிருக்கு..நாலு மாடியிருக்கே...அவாளும் கேட்கத்தான் நினைக்கிறா...ஆனா கேட்குறதில்லே...ஏன்னு அவாளுக்கே தெரியல போலிருக்கு...ஏதோஎல்லாமும் ஓடிண்டிருக்கு...அவ்வளவுதான்...ஆனா ஒண்ணு...எல்லாரும்வேணுங்கிறவாதான்...யாரையும் பகைச்சிக்கிறதுக்கில்லை...

பேச ஆரம்பித்தால் அத்தனை விஷயங்களைக் கோர்வையாகச் சொல்வாள்.கடைசியில் எவ்வளவு ஜாக்கிரதையாக ஒரு வார்த்தை சொன்னாள் பார்த்தீர்களா?  எல்லாமும் அறிந்தவள். எதுவும் செய்ய ஏலாதவள். அதுதான் பாவம்.

சொன்னதெல்லாம் சரிதான். ஆனாலும் ஒன்று கேட்டேன் நான்.

உனக்குன்னு ஒரு அடையாளம் வேண்டாமா? அதென்ன எல்லா சங்கத்துக்கும் சந்தாக் கொடுக்கிறது? அசிங்கமாயில்லே?  அதை வெட்கமில்லாம வேறே சொல்லிக்கிறே? இருக்கிறதிலயே எது பெட்டர்னு பார்க்கிறது. அதுக்கு மட்டும் கொடு. மத்தவாள்ட்ட நான் அந்தச் சங்கம்னு சொல்லிடு...அவ்வளவுதானே...?

நான் ஏன் அப்படி இருக்கணும். எனக்கென்ன வந்தது? வாயிழந்து அவங்களைக் கேட்காம இருக்கச் சொல்லுங்க....கேட்குறாங்க...பாவமா இருக்கு...அதனால கொடுக்கிறேன்...

அது பொய்யி...எந்தச் சங்கத்துக்காரனாலும் உனக்கு எந்தத் தொந்தரவும் வந்திடக் கூடாதுங்கிற சுயநலம்...அதுதான் உண்மை. நீ ஒரு பச்சோந்தி மாதிரி....எல்லா இடத்துக்குத் தகுந்த மாதிரியும் நிறம் மாறிப்பே...அவ்வளவுதான்...சரி இவ்வளவு பேசறியே...இந்தச் சங்கத்துக்காரங்களெல்லாம் ஸ்டிரைக்குன்னு இறங்கும்போது என்னைக்காவது அவுங்க கூடப் போய் நீ நின்னிருக்கியா? ஒரு நாளைக்காவது கோஷம் போட்டிருக்கியா?

அதுதான் நமக்கும் சேர்த்து அவுங்க போடறாங்களே...

இது தப்பிக்கிற வேலை...நான் இந்த மாதிரி பதிலை உன்கிட்ட எதிர்பார்க்கலை...ஆபீஸ் வேலைல ரொம்ப சின்சியர்னு உன்னைச் சொல்லிக்கிற நீ உன்னோட நியாயமான உரிமைகள் உனக்குக் கிடைக்காமப் போறபோது எப்படி மழுங்குணி மாதிரி உட்கார்ந்திருக்கே? உனக்கு சுய கௌரவம் உண்டுல்ல?  எப்படி முடியுது உன்னால? அதையெல்லாம் வாங்கித் தரத்தான் அவுங்க இருக்காங்கல்லன்னு இருக்கே...அப்படித்தானே? அது சுயநலம்தானே? நாமதான் சந்தாக் கொடுக்கிறோமேன்னு உன்னைச் சமாதானப் படுத்திக்கிறே....? ஆனா இறங்கிப் போராடணும்னு உனக்குத் தோணலை....சந்தாக் கொடுத்தா மட்டும் எல்லாம் முடிஞ்சிதா அர்த்தமா? சந்தாங்கிறது மெம்பர்களோட எண்ணிக்கையை உறுதிப்படுத்திறதுக்கும், போராட்டம் தர்ணான்னு வர்றபோது நோட்டீஸ், போஸ்டர், பந்தல், மைக், இப்படியான செலவுகளை ஓரளவு ஈடுகட்டுறதுக்கும்தான்...எவ்வளவு கைக்காசு இழக்கிறாங்க தெரியுமா உனக்கு? சங்கம், போராட்டம்னு இறங்கிட்டவங்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல...

அதெல்லாம் பத்தி எனக்கென்ன வந்தது?..அதுல இருக்கிறவங்க கவலைப்பட வேண்டியது அது....நான் வாங்குற சம்பளத்துக்கு வஞ்சகமில்லாம வேலை பார்க்கிறேன்..அது எனக்கு திருப்தியைத் தருது...அவ்வளவுதான்....மத்தவங்க வேலையையெல்லாம் எடுத்து சுமக்கிறேன்...அவுங்க அப்படியில்லையே?

இதை இங்க உட்கார்ந்து ஏன் சொல்றே? அவுங்க கூடப் போயி நில்லு...நின்னுட்டு சொல்லு...உன்னை மதிக்கிறாங்களா இல்லையா பாரு...உனக்குன்னு ஒரு இடம் கிடைக்குதா இல்லையா பாரு? அவுங்களும் வேலையே செய்யாம வெட்டிக்கு அலையணும்னு நினைக்கிறவங்க இல்லையே? அவுங்க மத்தில போயிப் பேசு எந்த நியாயத்தையும்...இங்கயே உட்கார்ந்திட்டுக் குதிரை ஓட்டினேன்னா?

அப்பாடீ...! எனக்கு வேண்டாம்ப்பா...இன்னும் அதை வேறே கட்டிட்டு அழணுமா? என்னால ஆபீஸ் வேலைலருந்து டீவியேட் ஆக முடியாது...அத ஒழுங்காப் பார்க்கிறதுதான் எனக்கு, என் மனசுக்கு, உடலுக்கு ஆரோக்கியம்....மத்ததெல்லாம் எனக்கு செகண்ட்ரிதான்....

அவளைப் பார்க்க எனக்குப் பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் என்னாலும் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாதே. ஏனென்றால் அது அவள் வேலை. அவள் ஆபீஸ். நானா அவளுக்கு அந்த வேலையை வாங்கிக் கொடுத்தேன். அவளாக, அவள் திறமையின்பால் பெறப்பட்டது அது. திருமணத்திற்கு முன்பிருந்தே, பல ஆண்டுகளாக அந்த வேலையிலிருக்கிறாள். அவளை மணந்தவன் என்பதனாலேயே அதற்கு வற்புறுத்தவோ, நிர்பந்திக்கவோ, இயலாதே.

ஆனாலும் என் மனைவி அப்படியில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டுதான்.

பல சமயங்களில் அவளை அலுவலக வாசலில் இறக்கி விட்டு வரும்போது சாலையோரத்தில் பந்தலைப் போட்டுக் கொண்டு, கோரிக்கைகளைச் சுமந்து கொண்டு,  மைக்கில் கத்திக் கொண்டிருக்கும் தோழர்களைப் பார்க்கும்போது என் மனதுக்கு வெட்கமாகத்தான் இருக்கும். நான் அவர்களை எப்படித் தாண்டிச் செல்கிறேன்? என்னை நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி இது.

ஸ்டிரைக்குங்கிறீங்க...எல்லாரும் உள்ளே போயிட்டிருக்காங்க...? கூப்பிட மாட்டீங்களா? – சிரித்துக் கொண்டே கேட்பேன். அவர்களிடம் ரெண்டு வார்த்தைகளேனும் பேசாமல் என்னால் அவ்விடம் விட்டு அகல முடியாது.

அதெல்லாம் அவுங்களா வரணும் தோழர்...நாம எத்தன தடவை கூப்பிட்டாலும் அப்டி இருக்கிறவங்க அப்டித்தான் இருப்பாங்க....சுயமா அந்த உணர்வு இல்லாதவங்கள என்ன சொன்னாலும் உசுப்ப முடியாது தோழர்...சரின்னு விட்ரவேண்டிதான்...

பல சமயங்களில் அனைத்துச் சங்கங்களும் சேர்ந்து வெளியேறும்போது படு முன்னெச்சரிக்கையாக இவள் மெடிக்கல் லீவு போட்டுவிட்டு வந்த வேகத்தைப் பார்க்க வேண்டுமே! அடடா...அடடா...அடடா...!!! என்னே அற்புதம்...என்னே அற்புதம்....

மருத்துவரிடம் சென்று அந்த மெடிக்கல் சர்டிபிகேட்டையும் வாங்கிக் கொடுத்த மாபாவி நான்தானய்யா...நான்தான்.

இதற்கென்றேதான் ஒருவர் இருக்கிறாரே...அவருக்கு வேலை மருத்துவம் பார்ப்பது இல்லை. இதுதான்..தனியாக ரகம் வாரியாகப் படிவம் பிரின்ட் செய்து வைத்துக் கொண்டு எங்கே எங்கே என்றுதான் உட்கார்ந்திருக்கிறாரே....அது சரி...பேஷன்ட் வந்தால்தானே...?

மாநிலம் முழுவதும் நடந்த ஒரு ஒட்டு மொத்தப் போராட்டத்தின் போது எங்கள் துறையில் உள்ள அலுவலகங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களை உள்ளே சென்று வலுக்கட்டாயமாக நாங்கள் வெளியேற்றியதும், பின்னர் அரசு ஊழியரை அவரது கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு நாங்கள் சிலபேர் தண்டிக்கப்பட்டதும், என் நினைவில் வந்து போனது.

 

      அன்றாடம் அவள் அசந்து சளிந்து வரும்போது பார்க்கப் பரிதாபமாக இருக்கும்தான்....ஏதாச்சும் வீட்டுல வச்சுச் செய்ய முடியும்னா கொண்டாயேன்...நா வேணா செய்து தர்றேன்....சொல்லியிருக்கிறேன்...

      அதெல்லாம் உங்களுக்குப் புரியாது....ஒரே வார்த்தையில் முடித்து விடுவாள். வீட்டில் கொண்டு வந்து செய்வதுபோலவும் இப்பொழுது இல்லையே...எல்லாமும் கணினியில்தானே ஓடுகிறது...அதைப்பற்றி அடேயப்பா எவ்வளவு புலம்பியிருக்கிறாள்?

      சொல்லித் தர்றவாளுக்கே சரியாத் தெரியலை...ஆனா நம்மளைக் குத்தம் சொல்றா...அவா செய்த தப்பை மறைக்க, ஏன் மேடம் இப்டிச் செய்தீங்கன்னு ஏதோ நாம தப்பு செய்துட்ட மாதிரி முந்திண்டு நம்மகிட்டயே திருப்புறா...எவ்வளவு சாமர்த்தியம் பாருங்கோ...இன்னைக்கு ஆபீஸ் வேலைல திறமையெல்லாம் வேண்டாம்...இதெல்லாம்தான் தெரிஞ்சிருக்கணும்...மூணு நாள், ஒரு வாரம்னு டிரெயினிங் கொடுத்துப்பிட்டு, உடனே உட்கார்ந்து செய்யுன்னா யாருக்குத்தான் கை வரும்? எல்லாம் திணறின்டிருக்குகள்...ஒண்ணுக்கொண்ணப் பண்ணிப்பிட்டு முழிக்கிறதுகள்...அதுக்குன்னு டாட்டா ஆப்பரேட்டர் போஸ்ட் இருக்கு....அதை ஃபில் அப் பண்றதில்லை...ஒவ்வொரு செக்ஷனுக்கும் சாங்ஷன் இருக்கு...எதையும் இன்னைவரைக்கும் பூர்த்தி செய்யலை...எல்லாமும் காலியாத்தான் கெடக்கு...நம்ம உசிரை வாங்கறா..கம்ப்யூட்டர் முன்னாடி நாள் பூராம் கிடந்து கண்ணு பூத்துப் போறது....என்ன தலையெழுத்தோ....

      பையன் எப்பப் படிச்சிட்டு வேலைக்குப் போவான்னு காத்திண்டிருக்கேன்...அவன் ஒரு இதுல உட்கார்ந்திட்டான், மறுநிமிஷம், அவன் என்ன என்னை வெளியேத்தறது...நானே குட்பை சொல்லிட்டு வந்திடுவேன்....இப்பொழுது சொல்கிறாள். உண்மையில் அது நடந்தபிறகு செய்வாளா என்று நினைப்பேன் நான். பெண்கள் அவர்களுக்கிருக்கும் வேலையை எத்தனை பிடிப்பாய் நினைக்கிறார்கள். வாழ்க்கையின் ஆதாரமே அதுதான். புருஷன் இரண்டாம் பட்சம்தான். அப்படித்தானே பல இடங்களில் நடக்கிறது? பிறகு சொல்வதில் என்ன தப்பு?

      ஆபீஸ் வாசலில் அவளை இறக்கிவிட்டபோதுதான் வீட்டுச் சாவி ஞாபகம் வந்தது எனக்கு.

      இந்தா...இந்தா உன் சாவியக் கொடு...என் சாவி வீட்டுக்குள்ள மாட்டிக்கிடுச்சி....

      இது வேறயா? சலித்துக் கொண்டே கைப்பையில் போட்டுத் துழாவினாள். அநியாய டென்ஷன்....

      நிறையப் பேர் இப்படித்தான் தனக்குத்தானே வலியப் பதறிக் கொள்கிறார்கள் என்று தோன்றியது. சாவியை எடுத்தபோது கூடவே ரெண்டு மூணு சில்லரைகள், ரூபாய் நோட்டு என்று கீழே விழுந்தன. அவளைப் பார்க்கவே இவனுக்குப் பரிதாபமாக இருந்தது.

      சரி...சரி..போ...நா எடுத்துக்கிறேன்...

      அது சரிதான்....எனக்கு டீ குடிக்கக் காசு வேண்டாமா? கொண்டாங்கோ...பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு ஓடினாள்.

      பரபரவென்று உள்ளே நுழையும் பலருக்கு நடுவே இவள் கலந்தபோது உருவம் மறைந்து போனது.

      எனக்கு வேறு வேலையில்லை.. அதிகபட்சம் லைப்ரரி செல்லும் வேலைதான். பிறகு பாங்க் வேலை, அவள் சொல்லியிருந்தால் சொன்ன வீட்டுச் சாமான்களை வாங்கிச் செல்வது இவைதான். குறைந்தது ஒரு மணி நேரத்தில் இவையெல்லாம் முடிந்து போகும். பிறகு வீடுதான். பேசாமல் நாமே வீட்டு வேலைகளையும் செய்து விட்டால் என்ன? சமையல் வேலையோ அவள் செய்கிறாள். என்ன பெரிய சமையல்? ரெண்டு பேருக்குச் சமைப்பது என்ன ஒரு பெரிய வேலையா? காய்கறி நறுக்கிக் கொடுத்தாகிறது...சாதமோ குக்கரில் வெந்து விடுகிறது. ஒரு கறி, ஒரு சாம்பார் அவ்வளவுதானே...இதைச் சொன்னால் பழியாய்க் கோபம் வரும். எங்கே,  ஒரு நாளைக்கு நீங்க செய்ங்கோ பார்ப்போம்...சவால் விடுவாள். செய்யவும்தான் செய்தேன். எனக்குப் பிடித்தது. அவளுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு நான் என்ன செய்ய? அவள் சமையலை நான் சகித்துக் கொண்டு சாப்பிடவில்லையா? அவள் கைபாகம் எனக்கு அலுக்கவில்லையா? அதுபோல் என் கை ருசியையும் அவள் சகித்துக் கொள்ள வேண்டியதுதானே? கொஞ்ச காலம் இப்படித்தான் ஓடட்டுமே? பிறகு எனக்கென்று ஒரு கை பாகம் வராதா? படியாதா? அது அலுக்கும்வரை நானே சமைக்கலாமே? அதுவரை என் நளபாகத்தை அவள் சுவைக்கலாமே? கேட்டால்தானே?

      பெண்களுக்கு சமையல் இல்லையென்றால் எதுவோ கையைவிட்டுப் போனமாதிரி இருக்கும்போலும்? வீட்டு உரிமையில் ஏதோ கழன்று போயிற்று என்று மனதுக்குள் பயப்பட்டுக் கொள்வார்களோ என்னவோ? தன் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற நமது நிர்வாக அமைப்பு, இந்தக் குடும்ப அமைப்பிலிருந்துதான் கிளைத்து வியாபித்து இருக்குமோ?  பலவாறு நினைத்தவாறே கிளம்பி வெளி வேலைகள் சிலவற்றைக்  கவனித்து விட்டு வீடு வந்து சேருகிறேன் நான்.

      அன்று மாநில அரசு விடுமுறை நாள். லைப்ரரி கிடையாது. எனவே அங்கு செல்ல வேண்டியதில்லை. ஒரு வேலை மிச்சம். சற்றுச் சீக்கிரமே வீடு வந்தாயிற்று. கொஞ்ச நேரத்தில் வாசலில் சத்தம்.

      சார், ஸ்பீட் போஸ்ட்.....

      கதவைத் திறந்து கொண்டு படியில் இறங்கினேன்.

நேத்து வந்தேன் சார்...கதவு பூட்டிருந்திச்சு....டோர் லாக்குடுன்னு போட்டுட்டு இன்னைக்கு எடுத்திட்டு வர்றேன்...பையன் பாஸ்போர்ட் போலிருக்கு சார்.....ஒரு ஆதரிசேஷன் லெட்டர் கொடுத்திட்டீங்கன்னா நல்லாயிருக்கும்...

ஓ! ரெடியா வாங்கி வச்சிருக்கேன்....இந்தாங்க பிடிங்க....எடுத்து வந்து கொடுத்தேன்.

பாஸ்போர்ட்டைக் கையில் வாங்கியதும், சுசீலா சொன்னது நினைவுக்கு வந்தது.

பையன் மட்டும் ஒரு வேலைல உட்கார்ந்திட்டான்னா........

என்னவோ அப்பொழுதே அவனுக்கு ஒரு வேலை கிடைத்து விட்டதைப் போன்றதொரு பிரமை ஏற்பட்டது எனக்கு.

சார்...நாளைக்கு சரஸ்வதி பூஜை லீவு சார்....போஸ்டல் உறாலிடே.... – சொல்லிக்கொண்டே போய்க் கொண்டிருந்தார் போஸ்ட்மேன்.

கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே வந்தேன். வாசல் திரையை இழுத்து விட்டேன். இனிமேல் எனக்கென்ன வேலை. ஏதாச்சும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார வேண்டியதுதான். இந்த வாரத்திற்கு மாவு அரைத்தாயிற்று. அது நான்கைந்து நாட்களுக்கு வரும்...ஆகையினால் அந்த வேலை இன்று இல்லை.

பீரோவைத் திறந்து ஒரு தடிப் புத்தகமாய் எடுத்தேன். நிறைய வாங்கி அடுக்கியாயிற்று. படித்துத்தான் தீர்க்க வேண்டும். ஆயுள் கிடைக்குமா?

மீண்டும் வாசலில் சத்தம்.

எழுந்து போய் எட்டிப் பார்த்தேன்.

வேலைக்காரம்மா....

என்னங்க இப்ப வர்றீங்க...?

ஏன்? இன்னைக்கு அம்மாவுக்கு லீவுதான...அதான் கொஞ்சம் லேட்டாப் போவோம்னு வந்தேன்.....

இன்னைக்கு லீவில்லீங்க...ஆபீஸ்....நாளைக்கு ஒருநாள்தான் லீவு.....

அப்டியா...காலண்டர்ல சிவப்பாப் போட்டிருந்திச்சு....நா ரெண்டு நா லீவுன்னு நினைச்சேன்....அதனாலென்ன பாத்திரம்லாம் வௌக்காமத்தான கெடக்கும்...நீங்க இருக்கீகள்ள....இப்ப வௌக்கிக் கவுத்திட்டுப் போயிடறேன்....

எல்லாம் தேய்ச்சாச்சு....நீங்க டயத்துக்கு வரல்லியேன்னு அவதி அவதியா எல்லாத்தையும் அவதான் மாங்கு மாங்குன்னு தேய்ச்சுக் கவுத்தினா...ஆபீசுக்கு வேறே லேட்டு இன்னைக்கு...ஒரு போன் பண்ணிச் சொல்ல மாட்டீங்களா...இப்டித்தான் நீங்கபாட்டுக்கு இருப்பீங்களா....? என் குரலில் சற்றே உஷ்ணம்.

லீவுன்னு நினைச்சிட்டேன்யா.... சொல்லிக்கொண்டே போய்விட்டது அந்தம்மா.

ரெண்டு வார்த்தை ஏன் கூடச் சொன்னோம் என்று இருந்தது எனக்கு. முணுக்கென்றால் கோபித்துக் கொள்ளும் குணம் கொண்ட பெண்மணி. காலண்டரில் அந்தம்மா பார்த்தது மாநில அரசு விடுமுறையை. இவள் எதில் வேலை பார்க்கிறாள் என்பது கூட அந்தம்மாவுக்குத் தெரியாதோ? திடீர்ச் சந்தேகம் வந்தது எனக்கு.  எத்தனையோ முறை வீட்டு போன் டெட் என்று வந்து சொல்லியிருக்கிறதே?

அடுத்து அந்தம்மா வேலைக்கு வருமா, வராதா என்பது நாளைக் காலை வரை சஸ்பென்ஸ்.

நினைச்சா வேலைக்கு வருது...நினைச்சா இருந்துக்குது....

காலையில் அப்படி நினைத்தது இன்று தப்பாய்ப் போயிற்றுதான். யதார்த்தமாய் அது தாமதமாய் வரப்போக அது வேறு மாதிரி ஆகிவிட்டது இன்று.

மாலையில் சுசீலா வந்த போது சொன்னேன்.

ஆமாமா...சொல்லித்து....என்றாள் அவள். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.

என்னது? சொல்லித்தா? ஆபீசுக்கு உன்னைத் தேடி வந்துடுத்தா? அதுக்குத் தெரியுமா உன் ஆபீஸ் எதுன்னு?  - மடமடவென்று கேள்விகளை அடுக்கினேன்.

அன்னைக்கு ஒரு நாள் வீட்டு போன் டெட்டுன்னு கம்ப்ளெயின்ட் கொடுத்ததோல்லியோ...அதை உடனே சரி பண்ணச் சொல்லிட்டு, இப்ப சரியாயிடுத்தான்னு நான்தான் அதுகிட்டக் கேட்டிருந்தேன்...அதுதான் செல் வச்சிருக்கே...இப்போ செல் இல்லாதவாதான் யாரு? .அந்த நம்பரைக் குறிச்சு வச்சிண்டிருக்கும் போலிருக்கு....கரெக்டா ஆபீசுக்குப் பேசித்து பாருங்கோளேன்..யாரோ சுசீலாம்மா...சுசீலாம்மான்னு உங்களத்தான் கூப்பிடறாங்க மேடம்னு கொடுத்தாங்க...பார்த்தா இது...!.பாவம்...அதுக்கும் எவ்வளவு பிரச்னையோ? நாலஞ்சு வீட்டுல வேலை பார்த்துத்தானே பிழைக்கிறது...கஷ்டந்தானே...பாவமாத்தான் இருக்கு.... இன்னைக்கு விசேஷமோல்லியோ...நான் வீட்டுல இருப்பேன்னு நினைச்சிண்டு கொஞ்சம் லேட்டாத்தான் போவமேன்னு வந்திருக்கு....நீங்க ஏதாச்சும் தாறுமாறாச் சொன்னேளா அதை...?

 

அடியாத்தீ...நல்ல கதையாப் போச்சு....நா ஏன் சொல்றேன்....உன் பாடு அவ பாடு.......மனசுக்குள் திக்கென்றது எனக்கு. நல்லவேளை, வாயை அதிகம் திறக்கவில்லை. ஆனாலும் எனக்குள் ஒரு பயம் வதைக்கத்தான் செய்கிறது. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் சாமீ...!

சுசீலாவிடம் இப்படிச் சொல்லிவிட்டேனேயொழிய மனதென்னவோ அதை நினைத்து  அடித்துக் கொள்ளத்தான் செய்கிறது. அதுதான் சொன்னேனே நாளை காலை வரை சஸ்பென்ஸ் என்று!!

 

                        ----------------------------------------

 

                                   

     

     

     


            “…என்றாலும் என் நண்பன்…!”

தமிழ்ப்பல்லவி காலாண்டு இதழ்-ஏப்-ஜூன் 2024   பிரசுரம்




            ன்னடா ரொம்ப வெட்கப்படுற…கூச்சமில்லாமச் சாப்பிடு…. – என்றேன் கமலபாலனைப் பார்த்து. அம்மா அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள்.  ஒருவேளை அதுவே அவனைக் கூச்சப்படுத்தியதோ? எதற்காக அப்படிப் பார்க்கிறாள்?

            என்னைப் போலவே அவனும் ஒரு பிள்ளைதான். ஒத்த வயசுள்ளவர்களெல்லாம் ஒரு தாய்க்குப் பெற்ற பிள்ளைகள் மாதிரிதானே? மாறாத அன்பு செலுத்த ஒரு தாயினால் மட்டுமே முடியும்…

            இப்பல்லாம் நீ ரொம்ப அமைதியாயிட்டே….இப்டியே  இருந்தீன்னா நாளடைவில் உனக்கு பேச்சு மொழி மறந்து போக வாய்ப்பிருக்கு….-சொல்லிவிட்டுச் சிரித்தேன் நான். லேசாகப்  புன்னகைத்துக் கொண்டது போலிருந்தது. அம்மா உற்றுப் பார்ப்பதையே நினைத்துக் கொண்டிருப்பானோ? அதுதான் பதில் வரவில்லை.

            அவன் கவனம்  சாப்பாட்டில் இருந்தது. அன்று என் பிறந்த நாள். காலையில் எழுந்து குளித்து சாமி கும்பிட்டு விட்டு, கோயிலுக்குச் சென்று வந்து இப்போது சாப்பிட    அமர்ந்திருக்கிறோம். நீயும் கோயிலுக்கு வர வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டபோது சரி என்று ஒப்புக் கொண்டவன், அப்படியே சாப்பிட்டுப் போகலாம் என்று வீட்டுக்கு இழுத்து வந்து விட்டேன்.

            எங்க வீட்ல எங்கம்மா சமைச்சிருப்பாங்கல்ல…அது மிஞ்சித்தானே போகும்…வேண்டாம்டா…என்றுதான் மறுத்தான். அத்தோடு அன்று கறிச்சோறு என்று வேறு சொன்னான். அவன் நாக்கில் ஜலம் ஊறியது போலிருந்தது.

அப்பா வாரத்துல ஒரு நாள் கறி,  மீன்  வாங்கிட்டு வருவாரு. எங்கள மனசுல வச்சிதான் ஆசையாக் கொண்டு  வந்து…பொங்கிப் போடுன்னு அம்மாட்டக் கொடுப்பாரு….அது வீணாகுறது அவருக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது….அதனால…இன்னொரு நாளைக்குப் பார்ப்போம்டா….என்று உறுதியாக மறுத்தான் கமலபாலன்.

அவன் சொல்வதில் நியாயமிருந்ததுதான். என் விருப்பத்தை விட, அவன் அப்பாவின் விருப்பமும் வழக்கமும் முக்கியம்தானே? அதற்குத்தானே முன்னுரிமை!

அதனாலென்னப்பா…பிறந்த நாளும் அதுவுமா தம்பி கூப்பிடுது…போயிட்டு வா….இந்த ஒரு வாட்டி கவுச்சி வாங்க வேணாம்னு உங்கப்பாவுக்கு நா போன் பண்ணிச்  சொல்லிப்புடறேன்…சரிதானா? – கமலபாலனின் அம்மா இப்படிச் சொன்னபோது சம்மதம் தெரிவித்தான். நம் விருப்பத்தை விட மற்றவரின் விருப்பம்தான் முக்கியம் என்கிற ரீதியில் அவர்கள் பதில் சொன்னது கார்த்திகேயனுக்குப் பிடித்திருந்தது.

பழக்கத்தில் கொஞ்சம் கூச்ச சுபாவம்…கொஞ்சமென்ன…நிறையவே உடையவன் அவன். பள்ளியில் படிக்கையில் கூட பெண் பிள்ளைகளிடம் தலை நிமிர்ந்து. நின்று பேச மாட்டான் கமலபாலன். அது அவன் ஒழுக்கத்தின் அடையாளம். வளர்ப்பின் சான்று.

நான்கூடக் கேட்டிருக்கிறேன். கமலபாலன்ங்கிற பேருக்குத் தகுந்தமாதிரி உன் முகம் எப்பத்தான் மலர்ந்து இருக்கும்? எப்பப் பார்த்தாலும் ஏதாச்சும் சீரியஸா திங்க் பண்ணிட்டேயிருப்பியா? அப்டி என்னதான்டா யோசிக்கிறே…? அதையாச்சும் சொல்லேன்…என்று அவனைத் தொணத்தி எடுத்திருக்கிறேன் நான்.

அவனிடமுள்ள அந்த அமைதியும், அடக்கமும்,பணிவும், வெட்கமும், கூச்ச சுபாவமுமே எனக்கு வெகுவாகப் பிடித்துப் போய் அவனோடு என்னை நெருங்கியவனாக நிற்க வைத்திருந்தது. எங்கள் நட்பு மானசீகமானது. வெறுமே ஊர் சுற்றவும். சினிமாப் பார்ப்பதற்குமானதல்ல.

அவன் வீட்டிற்கு வந்தாலே அப்பாவும் படு உற்சாகமாகிவிடுவார். பெரிய ப்ளே போர்டு-கேரம் இருந்தது எங்கள் வீட்டில். நானும் அம்மாவும் எதிரெதிர் செட் என்றால் அப்பாவும், கமலபாலனும் ஒரு செட். அநியாயத்துக்கு விளையாடுவான். காய்களைச் சட்டுச் சட்டென்று  குழிக்குள் இறக்கும் லாவகம் பிரமிக்க வைக்கும். அவன் புத்தி அத்தனை ஷார்ப்பாக வேலை செய்யும். ஆடும் வரை ஆட்டம் என்பதற்கடையாளமாய் அந்த ஒரு மணி நேரம் வேறெதிலும் அவன் கவனம் செல்லாது. ஒரே குறியில் நிற்பான்.

 எங்க கொண்டு வச்சாலும் உள்ளே தள்ளிப்புடறானே என்று வயிறெரியும். ஒரு முறை கூட நானும் அம்மாவும் அவர்களிடம் ஜெயித்ததில்லை. அவனிடம் ஜெயிக்க வேண்டும் என்றே வீட்டில் தனியே இருக்கையில் நான் ப்ராக்டீஸ் பண்ணிக் கொண்டிருப்பேன். கேரம் போர்டின் நான்கு பக்கங்களில் எந்தத் திசையில் காய் நின்றாலும் எங்கு ஸ்டைகரை நிறுத்தி எப்படி அடித்தால் போய் விழும் என்று விழுந்து விழுந்து பயிற்சி செய்தேன். ரெட்டும் ஃபாலோ காயினும் போட்டுப் போட்டுப் பழகியிருந்தேன். மதியம் சாப்பாட்டிற்கு மேல் உட்கார்ந்தால் ராத்திரி ஆகி விடும் நாங்கள் அதை விட்டு எழுந்திரிக்க. போர்டில் நிறையக் காய்கள் இருக்கும்போது, ரெட் காயினையே குறி வைப்பான் கமலபாலன். முதலில் அதை உள்ளே தள்ள வேண்டும் அவனுக்கு. பிறகு மற்றவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

நாங்கள் இரண்டு பேர் மட்டும் விளையாடும்போது, என்னடா உங்களோட பெரிய ரோதனையாப் போச்சு…மனுஷன் கொஞ்ச நேரம் நிம்மதியாத் தூங்குவோம்னா விடுறீங்களா? மொட்ட மாடிக்குத் தூக்கிட்டுப் போய் விளையாடுங்கடா…என்று அப்பா எத்தனையோ முறை சத்தம் போட்டிருக்கிறார். அங்க வெயில் கொளுத்துதுப்பா…என்று சொல்லி விடுவேன் நான். கொஞ்சம் நிழலிடம் உண்டுதான் என்றாலும், அனல் காற்று அடிக்கும். அந்த உஷ்ணக் காத்துக்குத் தூக்கம்தான் வரும். விளையாட்டு ஓடாது.

நாங்கள் இருவரும் ப்ளஸ் டூ  முடித்து விட்டு சும்மாயிருந்தோம். கல்லூரி சேர வசதியில்லை. கம்ப்யூட்டர் கோர்ஸ் படி என்றார் அப்பா. அவன் வீட்டிலும் என்னைப்போலவே அதற்கு அனுப்பிவிட்டார்கள். இருவரும் சேர்ந்துதான் சென்டருக்குப் போவோம்.

பெண்கள் இல்லாத நேரம் பார்த்து நாம டைம் ஃபிக்ஸ் பண்ணிக்கிடுவோம்டா என்றான் கமலன்.  அநியாயக் கூச்சம் அவனுக்கு. இந்த வயசுக்கு பொம்பளப் பிள்ளைகளப் பார்க்கத் தவம் கிடப்பான் அவனவன். நீ என்னடான்னா தலைதெறிச்சு ஓடுற? என்று நானே அவனிடம் சொல்லியிருக்கிறேன்.

அவங்க இருந்தா என்னடா? அதான் பெட்டி பெட்டியாத் தடுத்துத்தானே வச்சிருக்காங்க…ஒருத்தரையொருத்தர் பார்க்க முடியாதே…பிறகென்ன? நமக்கு அலாட் பண்ணின சிஸ்டத்துல நாமபாட்டுக்கு உட்கார்ந்து பிராக்டிஸ் பண்ணிட்டு வருவோம்…என்றேன் நான்.

நேரம் ஒதுக்குவது சென்டரின் பொறுப்பாளர் வசமாயிற்றே? இ்ந்த நேரம்தான் வேண்டும் என்று கேட்டு அது கிடைக்காவிட்டால்? அடுத்த சென்டர், அடுத்த சென்டர் என்று தாண்டித் தாண்டிப் போய்க் கொண்டிருப்பதா? வீட்டின் அருகே இருந்தால்தான் போய் வர வசதி என்று கிடைத்த நேரத்தைப் பிடித்துக் கொண்டோம்.

மலன்…ஏண்டா இன்னைக்குக் கிளாசுக்கு வரலை…? – ஒரு வாரம் சரியாக ஓடிய வண்டி…திடீரென்று பிரேக் அடித்தது. அரசமர ஸ்டாப்பில் வழக்கமாய் நிற்கும் கமலன் அன்று காணவில்லை…ரெகுலராய் வகுப்புக்கு வந்துகொண்டிருந்தானேயொழிய முழு ஈடுபாட்டோடு பயிற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அவன் கவனம் சிதறிக்கொண்டேயிருந்தது. யாரேனும் தன்னைப் பார்க்கிறார்களா என்று அவனே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏண்டா…ஜென்ட்ஸ் டைம் வேணும்னு கேட்டுட்டு, இப்போ லேடீஸைத் திரும்பித் திரும்பி நீயே பார்த்திட்டிருந்தேன்னா அவுங்க தப்பா நினைக்கப் போறாங்கடா… - என்றேன்.

நான் அவங்களைப் பார்க்கிறேன்ங்கிறது உனக்கு எப்படித் தெரியும்? அப்போநீ என்னையே கவனிச்சிட்டிருக்கே…அதானே…நீ  நீபாட்டுக்கு உன் வேலையைப் பார்க்க வேண்டிதானே…உனக்கென்ன என் மேலே அவ்வளவு கவனம்? நான் பார்த்தா உனக்கென்னடா? என்றான்.

அன்று அவன் பேச்சு மிகவும் வித்தியாசமாய் இருந்தது. அது ஏன் என்று அடுத்த ஒரு வாரத்தில்தான் தெரிய வந்தது. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு கமலபாலன் கணினி வகுப்பிற்கு வராததும், அவனைப் போய்ப் பார்க்க முடியாமல் எனக்கு வேறு வேலைகள் இருந்ததும், அம்மா உடம்பு முடியாமல் போனதில் நான் சமைக்கிறேன் என்று கிளம்பி, அவள் சொல்லச் சொல்லப் பொறுமையாக சமையல் வேலைகளைக் கவனித்ததும், சாம்பார் ரசமாகி, காய் சட்டி அடி பிடித்துக் கருகிப் போனதும் தனிக்கதை.

கமலபாலன் பெண் மாணவிகள் பயிற்சி பெறும் நேரத்துக்குத் தன் நேரத்தை மாற்றிக் கொண்டு விட்டான் என்பது பிறகுதான் தெரியவந்தது.  அருகிலேயே கூட நிற்கக் கூச்சப்படுபவன், ரெண்டு வார்த்தை நேருக்கு நேர் பார்த்துப் பேசப் பயப்படுபவன், பெண்கள் நிற்கும் இடத்தையே வலியத் தவிர்ப்பவன் எப்படி அவர்கள் நேரத்திற்கு மாறிக் கொண்டான் என்பதும், எதற்காக அப்படிச் செய்தான் என்பதும்தான் எனக்குத் தீராத வியப்பாயிருந்தது.

என்னடாது…ஆளையே காணலையேன்னு நினைச்சா டயத்தையே மாத்திக்கிட்ட போல…..எங்கிட்டக் கூட ஒரு வார்த்தை சொல்லலை….

நாம  வழக்கமாப் போற நேரத்துக்கு என்னால வர முடிலடா…! உன்கிட்டே சொன்னா நீ சங்கடப்படுவே…எப்டிச் சொல்றதுன்னு யோசிச்சிக்கிட்டேயிருந்தேன்….உனக்கு இப்போ நான் போகுற டைம் நிச்சயம் ஒத்து வராதுன்னு எனக்குத் தெரியும். உன்கிட்டே சொன்னா என்னையும் போக விடமாட்டே…எதையாவது சொல்லி என்னை நிப்பாட்டிடுவே…அதுக்கு பயந்துதான் உன்கிட்டே சொல்லாம இதைச் செய்தேன்….நாம என்ன சின்னப் பிள்ளைகளா…எல்லாத்துலயும் ஒண்ணுகூடி அலையுறதுக்கு? இந்தக் கம்ப்யூட்டர் கோர்ஸையும் முடிச்சிட்டு. எங்கயாச்சும் வேலை கிடைச்சிச்சின்னா அவரவர் திசைல ஆளுக்கொரு பக்கமாப் போகப்போறோம்…எதுக்கு அநாவசியமா அதுக்குள்ளயும் ஒருத்தருக்கொருத்தர் மனஸ்தாபம்? அதான் உன்கிட்டே சொல்லாமயே இதைச் செய்துக்கிட்டேன்…..இதென்னடா பெரிய குத்தமா? – உன்கிட்டே…உன்கிட்டே என்று  அவன்பாட்டுக்குப் பேசிக் கொண்டே போனான். எதற்கு இல்லாததையும், பொல்லாததையும் அவனாகவே கற்பனை செய்து கொண்டு இப்படி விபரீதமாய்ப் பேசுகிறான்? அப்படியென்ன அவனுக்கு வெறுப்பு? திடீரென்று இதென்ன விலகிய மனநிலை? ரொம்பவும் பொறுப்பாகச் சிந்திப்பதாக அவனாகவே நினைத்துக் கொண்டு தன்னைத் தானே ஏன் இப்படி விலக்கிக் கொள்ள வேண்டும்? வீணாய்க் கஷ்டப்படுத்திக் கொள்கிறானே…என்றிருந்தது எனக்கு.

நான்தான் சொன்னனேடா…அவன் ஆளே புரியலைன்னு…என்றாள் அம்மா.

என்னம்மா சொல்றே…? அப்படீன்னா? …ஏதோ  சொல்கிறாளே அம்மா….?

அப்படீன்னா…அப்டித்தான்…அதெல்லாம்கேட்காதே….அவன் விலகிடுவான் பாரு உன்னை விட்டு……அவனே நம்ம வீடு வர்றதை நிறுத்திடுவான் …அப்டித்தான் தோணுது எனக்கு…

அம்மா என்ன சொல்கிறாள்? கமலபாலனை ஏதேனும்  தப்பான முறையில் பார்த்திருப்பாளோ? ஏதேனும் மதுபானக் கடையில் வைத்துப் பார்க்க நேர்ந்திருக்குமோ? நானும் கொஞ்சம் நடந்திட்டு வர்றேன் என்று மெயின்ரோட்டில் இருக்கும் காய்கனி அங்காடிகளுக்குக் கால் வீசிக் கிளம்பி விடுகிறாளே? அப்போது ஏதேனும் பார்வையில் பட்டிருக்குமோ? -வெளிப்படையாய்ச் சொல்லாமல் ஏன் அம்மாவும் இப்படிப் பூடகமாய்ச் சொல்லி வதைக்கிறாள்?

அவன் என்னடாவென்றால் திடீரென்று என்னிடமிருந்து விலகியது போல் பேசுகிறான். என்னிடம் எதுவும் சொல்லாமல்  தனித்து இயங்கத் தலைப்பட்டிருக்கிறான்? வீட்டுக்குப் பார்க்க வருவதையே தவிர்த்திருக்கிறான். என் கண்ணில் படாமல் ஒளிந்து ஒளிந்து ஓடுவதுபோல் மறைந்து திரிகிறான். இந்நிலையில் அம்மாவும் இப்படிப் பேசுகிறாளே? எங்கள் நட்பு அவ்வளவுதானா? நான் ஒன்றும் தப்பு செய்யவில்லையே?

கேரம்போர்டின் காய்கள் நகர மறுத்தன. சிவப்பும் அதனுடைய ஃபாலோ அப்…ஆன கறுப்புக் காயும்….வீழ்த்த மனமின்றி கவனிப்பாரற்று ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்தன. மற்ற கறுப்பு. வெள்ளைக் காய்களை மனமின்றி வெவ்வேறு  போக்கில் தட்டி நகர்த்திக் கொண்டிருந்தேன் நான். எதையும் குழிக்குள் வீழ்த்தும் மனநிலையில் அப்போது இல்லை. எதிரில் அம்மாவும், பக்கவாட்டில் அப்பாவும், அவருக்கு இணையாக கமலபாலனும் அமர்ந்து ஆடிய நாட்கள் நினைவுக்கு வந்தன. அப்போதெல்லாம் அவனோடு இஷ்டமாக இருந்த அப்பா…இப்போது ஏன் அவனைப்பற்றிப் பேசுவதேயில்லை? என்ற கேள்வி என்னை அரித்தது.

நட்பு…நட்பு என்று சொல்லி என்ன பயன்? கூடச் சேர்ந்து ஊர் சுற்றுவதற்கும், தின்பதற்கும், சினிமாப் பார்ப்பதற்கும்தானா சிநேகிதன்? அவனே ஆளைக் கண்டுகொள்ள மாட்டேனென்கிறானே? அவன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அம்மா அவனோடு சரியாகப் பேசாததும், சிரித்துப் பேசி சந்தோஷிக்காததும், ஏதாச்சும் சாப்பிடு என்று  எப்போதும் உபசரிக்காததும்தான் இன்றைய நிலையின் அடையாளமோ?

சும்மாவானும் அதைப் போட்டு நொட்டு…நொட்டுன்னு ஏன்டா தட்டிக்கிட்டிருக்கே…ஏதாச்சும் உபயோகமா புத்தகம் இருந்தா எடுத்துப் படி…அநாவசியமா டயத்தை வேஸ்ட் பண்ணாதே…! கேரம் போர்டைத் தூக்கி மூலைல கிடாசு…தலவேதனையா இருக்கு…

அப்பா பொத்தாம் பொதுவாய்க் கண்டிக்க ஆரம்பித்தார்.

கம்ப்யூட்டர் கோர்சுக்கு என்னென்னவோ புத்தகமெல்லாம் வாங்கினியே…அதெல்லாம் எடுத்து வச்சிக்கிட்டு என்ன ஏதுன்னு பார்க்க வேண்டிதானே…சாயங்காலம் இன்ஸ்டிட்யூட் போய் பிராக்டீஸ் பண்றதுக்குச் சுலபமா இருக்குமில்ல….? எதுக்கு நேரத்தையம், காலத்தையும் வீணடிக்கிறே…? கரெஸ்பான்டென்ஸ் கோர்சுல ஏதேனும் படிக்க முடியுமா பாரு…உங்கப்பாட்டச் சொல்லி பணம் புரட்டிக் கட்டச் சொல்றேன்…வீட்டுல இருந்தமேனிக்கே படிக்கலாம்ல…பிஎஸ்ஸி…கம்ப்யூட்டர் சயின்ஸ்…பி.காம் கம்ப்யூட்டர் சயின்ஸ்ன்னு ஏதேதோ சொல்றாங்களே…அதுல ஏதாச்சும் ஒண்ணைப் படிக்கிறதுக்குக் டிரை பண்ணு..அம்மா அனத்தி எடுத்தாள்.

கமலபாலன் நட்பு விலகிப் போனதே என்று நான் சோர்ந்து போய்விடக் கூடாது என்பதில் அப்பா, அம்மா இருவரும் மிகக் கவனமாய் இருப்பதாய் எனக்குத் தோன்றியது.

எங்கயாச்சும் செகன்ட்உறான்ட் கம்ப்யூட்டர் கிடைக்குமா ராஜா…? அப்டீன்னா பாரேன்…யாராச்சும் தெரிஞ்சவங்க இருக்காங்களா? உங்க ஸ்கூல்ல கூட பிரின்ஸிபால்ட்டக் கேட்டுப் பாரு…ஏதாச்சும் வழி பிறக்கும்…வீட்டுல வீணாப் பொழுதைக் கழிக்காம உபயோகமா நீயே பிராக்டீஸ் பண்ணலாமில்லியா? வாங்கி வச்சிருக்கிற இந்தப் புத்தகங்கள் வழி பயிற்சி பண்ண முடியுமா முடியாதா? அப்டி ஏதாச்சும் முயற்சி பண்ணிப் பாரேன்…உபயோகமா இருக்கும்னா சொல்லு….பணத்துக்கு வழி பண்றேன். கடன்தான் வாங்கணும்…..படிப்புக்குத்தானே செலவு பண்றோம்…பரவால்ல…

ஒரு வாரம் கழிந்தது. கமலபாலன் நினைப்பே இல்லாமல் கணினி வகுப்பிற்குச் சென்று வந்து கொண்டிருந்தேன் நான். அப்பா தன் நண்பர் ஒருவர் மூலமாய் ஒரு கணினியை வீட்டில் கொண்டு வந்து இறக்கியிருந்தார். அதற்கென்று உள்ள மேஜையையும் வாங்கி தனி அறையில் அதற்கான ப்ளக் பாயின்ட்களை ஒரு எலெக்ட்ரீஷியனை வைத்து பொருத்தச் செய்து கணினியை ஜன்னலுக்குச் சற்று ஓரமாய் காற்று வருவதுபோலான ஒரு ஓரத்தில் இருத்தி, இனிமே உன் வேலையை நீ வீட்டுலயும் தொடரலாம். பணம் கட்டிப் படிக்கிற ஸ்கூல்ல ஒரு மணி நேரம்தான் அலவ் பண்ணுவான். இங்க உன்னைக் கேள்வி கேட்க யாரும் கிடையாது. அங்க படிச்சதை இங்க பயிற்சி செய்யவும், புதிசு புதிசாக் கண்டு பிடிக்கவும், உன் கம்ப்யூட்டர் நாலெஜ்ஜை சுதந்திரமா வளர்த்துக்கவும்  இனி எந்தத் தடையுமில்லை. இன்னிக்கு இதுதான் கை ஓங்கியிருக்கு. இதுல நீ நல்லபடியா மேல வரணும்ங்கிறது என் எண்ணம். ஆசை. அதனாலதான் இதைச் செய்திருக்கேன்…வேறே எதைப்பத்தியும் நினைக்காம, படிப்புல கவனம் செலுத்து….நீ ஒருத்தன்தான் எங்களுக்கு. உன்னோட நல் வாழ்க்கைதான் எங்க குறிக்கோள்….எங்க எண்ணத்துல மண் விழாம நீ அதைப் புரிஞ்சு நடந்துக்குவேன்னு நினைக்கிறேன்….சொல்லிவிட்டு என் தலையில் கை வைத்து அப்பா ஆசீர்வாதம் செய்தார். எதற்கு இவ்வளவு பேச்சு? என்னவோ பயந்து போய்ச் சொல்வதாகத் தோன்றியது எனக்கு. என் மீது அவர்களின் நம்பிக்கை இவ்வளவுதானா என்று தோன்றியது.

அவர் கடைசியாய்ச் சொன்ன அந்த வார்த்தைதான் என் மனசை உறுத்திக் கொண்டேயிருந்தது. எங்க எண்ணத்துல மண் விழாம…..எதற்காக அப்பா இப்படிக் குறிப்பிட்டுச் சொல்கிறார்? எதை மனதில் வைத்து அவர் இவ்வளவு பயந்ததுபோல் பேசுகிறார்? அம்மாவும் அப்பாவின் வார்த்தைகளை ஆமோதிப்பது போல் ஆமாண்டா ராஜா…என்று சொல்லி  நெற்றியை வழித்து ஆசீர்வதித்தாளே? அப்போது அவள் கண்கள் ஏன் அப்படிக் கலங்கியிருந்தது?

பெற்றோரின் நம்பிக்கைகள் சிதறாது நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் அடுத்தடுத்த நாட்களில் இயங்கிக் கொண்டிருந்த நான்…அன்று கேள்விப்பட்ட, அதுவாக நேருக்கு நேர் காதுக்கு வந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

டேய் ராஜா சேதி தெரியுமா? நம்ப கமலபாலன்…அதாண்டா உன்னோட டியரஸ்ட்…டியர்மோஸ்ட் .ப்ரெண்டு…ஒரு வாரமா ஆளக் காணலன்னு சொன்னீல்ல….அவன் எங்க போயிட்டு வந்திருக்கான் தெரியுமா?  நாங்க கண்டுபிடிச்சிட்டமே?

கேட்டுவிட்டு கிருஷ்ணராஜூ சிரித்தபோது அவன் கூட நின்ற இன்னும் ரெண்டு மூன்று நண்பர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.  சொல்லலாமான்னு கேட்டுட்டுச் சொல்லுடா…என்றான் ஒருவன். அதிலேயே ஏதோ கேலி படிந்திருப்பதை உணர்ந்தான் ராஜா.

என்னன்னு விஷயத்தச் சொல்லாம நீங்களா சிரிச்சா எப்படிடா? என் நண்பனைப் பத்தி எதுக்கு அநாவசியமா கேலி பண்றீங்க?  என்று எரிச்சலோடு கேட்டான் ராஜா. எவர்களையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று ஒதுங்கியிருந்தானோ அவர்கள் இன்று வலிய வந்து பேசுகிறார்கள். எதையோ சொல்ல முற்பட்டு தன்னைக் கேலி செய்ய முனைகிறார்கள்? பொழுது போகாதவர்களின் செய்கை இப்படித்தானே இருக்கும்?

விழுப்புரம் பக்கத்துல ஒரு ஊர்ல  திருவிழாவாம் – ஒருவன் புதிர் போடுவதுபோல் சொன்னான்.

அதை ஏண்டா அப்படிச் சொல்றே? அந்த ஊருக்குன்னு ஒரு பேர் உண்டுதானே…அதச் சொல்லிச் சொல்ல வேண்டிதானே…? என்றான் இன்னொருவன்.

சரி…நீங்க யாரும் சொல்ல வேண்டாம்….நானும் கேட்க வேண்டாம்…நீங்க போகலாம்….என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாய் அகன்றான் ராஜா.

இன்னும் சொல்லவே இல்ல…அதுக்குள்ள பயந்திட்டு ஓடுறாம்பாரு….என்று கைகொட்டிச் சிரித்தான் அதுவரை பேசாமலிருந்த இன்னொருவன்.

வேலையற்றவர்கள், வெட்டியாய்ப் பொழுது போக்குபவர்கள்…தாங்கள் என்ன செய்வது என்று யோசிப்பதை விட அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலேயே கவனமாய் இருப்பவர்கள்…அவர்களை மன ரீதியில் தொந்தரவு செய்பவர்கள். கெடுக்க நினைப்பவர்கள். அடுத்தவன் மேலேறி முன்னேறி விடாமல் இருப்பதற்குண்டான வழிகளைச் சதா சிந்தித்துக் கொண்டிருப்பவர்கள்….இம்மாதிரி நாலு பேர் இருந்தால் போதும் ஊரே கெட்டுடும்….- நினைத்தவாறே வேக வேகமாய் நடந்து கொண்டிருந்த ராஜாவின் மனதில் அந்த விழுப்புரம் பக்கத்து ஊர் என்று சொன்ன அந்த ஊரின் பெயர் மனதில் ஓடியது..

கமலபாலன் கமலியாயிட்டாண்டோய்…. என்று அவர்கள் இவனைப் பார்த்துக் கத்தியது சன்னமாய்த் தன் காதில் விழுந்ததும் அதை உறுதி செய்தது.

அடப்பாவமே…! என்று அவன் வாய் அவனையறியாமல் முனகியது. அடுத்த நொடி இருந்தால் என்ன…அதென்ன பாவமா…அவர்களும் நம் சமூகத்தில் ஒரு அங்கம்தானே…நம்மோடு சேர்ந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தானே…? ஒவ்வொருவரும் அவரவர் குல தெய்வ வழிபாடு செய்வதைப்போல் அவர்களும் அவர்களின் தெய்வங்களை வழிபடுகிறார்கள். இதிலென்ன தவறு இருக்க முடியும்? முடியுமானால் அவர்களோடு சேர்ந்து நாமும் கும்பிட வேண்டும். குதூகலிக்க வேண்டும். இல்லையென்றால் வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒதுங்கியிருக்க வேண்டும். அதுதான் மரியாதை.முறைமை. அதை விடுத்து வேறு மாதிரி அநாகரீகமாய் நினைப்பதும், நடந்து கொள்வது எப்படிச் சரியாகும்? ஓட்டுரிமையே வழங்கப்பட்டிருக்கிறது அவர்களுக்கு. இன்னும் என்னென்னவோ சலுகைகளையெல்லாம் அரசே வழங்கியிருக்கிறது.  ரயிலில் ஒரு முறை சென்னை சென்றபோது வந்த அவர்களை அமர்த்திஅவர்களோடு தான் பேசியதும், அவர்களுக்கான அரசு சலுகைகளை அவர்களுக்கு உணர்த்தியதும், நன்றி சொல்லி அவர்கள் வணங்கிவிட்டுப் போனதும்…

ராஜாவின் மனசு கமலபாலனை விட்டு இம்மியும் பிரளவில்லை. என்றானாலும் அவன் என் இனிய நண்பன். இதயத்தோடு ஒன்றி விட்டவன். கமலபாலன் கமலி ஆகிவிட்டால் என்ன?  என்றும் அவன் என் நண்பன்தான்! அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ராஜா தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

.

                                    --------------------------------------

 

             

           

04 மே 2024

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும்

---------------------------------------------------------------------------------------------------------------------

மதிப்பிற்குரிய பெரியவர் திரு.விட்டல்ராவ் அவர்களின் இந்த நூல் இப்போது என் கையில். உடனே வாசித்து விட வேண்டும் என்கிற ஆவலைத்தூண்டுகிற அற்புதமான வடிவமைப்பு.வழு வழுவென்ற தாளில் உயர்தரத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூல் விட்டல்ராவ் அவர்களின் எழுத்தின் மீது கொண்ட மரியாதையையும் மதிப்பையும் உணர்த்துகிறது. உயரத்தில் நிறுத்தி உலகுக்கு உணர்த்த எழுந்துள்ள இந்த எழுச்சி...சாய் அசோக்கின் பரந்த / பறந்த மனதின் அடையாளம். அவரின் புத்தக வெளியீட்டு முயற்சிகள் வெற்றிப் படிக்கட்டுகளாய் அமைந்து...அவரைக் கை பிடித்து உச்சிக்கு அழைத்துச் சென்று நிறுத்தும் என்பது திண்ணம். அவருக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகள்...!

புதிய சீரிய முயற்சிக்கு ஆதரவளியுங்கள் வாசக அன்பர்களே...புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்க:- 9482791983//8643842772 Jairigi publications 
See less



01 மே 2024



 

சிறுகதை    “வேணாம்ப்பா…” தாய் வீடு இணைய இதழ் மே 2024

-----------------------------------------


                                                

னக்கு எங்கப்பா மேலே  ஒரு சந்தேகம் உண்டு.என்னமோ அவர்ட்ட ஒரு வித்தியாசம் இருக்குன்னு தோணுது.  ஆனா அது என்னன்னுதான் என்னால கண்டு பிடிக்க முடில.  கண்டு பிடிக்கிறதென்ன…துல்லியமா மனசுக்குத் தெரில. அப்படித் தெரிஞ்சாத்தான, எனக்கு நானே உறுதி செய்துக்கிட்டாத்தானே நேரடியாக் கேட்க முடியும், அல்லது அம்மாட்டச் சொல்ல முடியும்? யாரையும் அவர் நிமிர்ந்து பார்க்கிறதில்லை. குனிஞ்சமேனிக்கே பேசுறாரு. பதில் சொல்றாரு. அதான் பெரிய சந்தேகம்.

            எனக்கே உறுதியில்லாம மொட்டையா அம்மாட்டச் சொன்னா…அப்டியெல்லாம் பேசப்படாது…ன்னு அம்மா நிச்சயமா என்னைக் கண்டிப்பாங்க……ஒருத்தருக்கொருத்தர் வைக்கிற நம்பிக்கைதான் வாழ்க்கை.!. அதை அநாவசியமா அவங்களுக்கு நடுவுல புகுந்து நான் கெடுத்துடக் கூடாது. அதனாலதான் இவ்வளவு எச்சரிக்கையா இருக்கேன். ஏன்னா என் சந்தேகம் அப்படி….ஒரு வேளை அம்மாவே இதை உணர்ந்து வச்சிருந்தா? நேத்து முளைச்சவன், இவனுக்கென்ன வந்ததுன்னு நினைச்சா? அதான் ஜாக்கிரதையா இருக்கேன். அத்தோட இன்னொண்ணு…நாம்பாட்டுக்கு அநாவசியமா சந்தேகப்பட்டதாகவும் ஆயிடக் கூடாதுதானே…அது அப்பாவுக்குச் செய்ற அவமரியாதை ஆயிடுச்சின்னா? அவசரப்பட வேண்டாம்னு தோணுது….

            எங்கம்மா ரொம்ப அழகானவங்க. அஞ்சரை அடி உயரத்துல கச்சிதமா இருப்பாங்க…எந்தப் புடவையைக் கட்டிக்கிட்டாலும் பளிச்சினு இருப்பாங்க…முகத்துல அப்டி ஒரு ஃபேமிலி லுக். நடு வகிடு எடுத்து வாரின தலைல  வகிடு ஆரம்பிக்கிற இடத்துல வச்சிருக்கிற குங்குமப் பொட்டு அம்மாவுக்கு அத்தனை எடுப்பா இருக்கும்.  அங்க அசல் குங்குமத்த வச்சிக்கிடுற அம்மா, நெற்றில ஸ்டிக்கர் பொட்டுதான் அழுத்திப்பாங்க…எப்பயாச்சும் அது கீழ விழுந்திடுச்சின்னு வச்சிக்குங்க…அம்மா முகத்தைப் பார்க்கவே சங்கடமாயிருக்கும். சகிக்காது.

            நெத்தில பொட்டு இருக்கா இல்லையான்னு கூடக் கவனிக்க மாட்டியா? நீபாட்டுக்கு இருக்க? சகிக்கல…தாலியறுத்த மாதிரி இருக்கு. முதல்ல பொட்ட வை….என்று ஆக்ரோஷமாக் கத்தியிருக்கேன். அந்த வார்த்த சொல்லக் கூடாதுதான். அப்பா சொன்னாக் கூடப் பொருந்தும். பொறுத்துக்கலாம்.  ஆனா நா சொல்லக்கூடாது.  கோபத்துல வந்திடுதே…! மன்னிச்சிக்கம்மான்னுட்டேன்.  அழுகை வந்திடுச்சு…சட்டுன்னு மனசு வருந்திடுச்சு. அந்த  முறைதான் நான் அப்படிப் பேசினது. அதுக்குப் பிறகு எதையும் கவனிக்க ஆரம்பிச்சேன். வாய் நுனி வரை வந்ததை முழுங்கினேன். எதுவும் பேசறதில்லன்னு முடிவுக்கு வந்தேன். அப்டித்தான் அப்பாவும்  என் கவனத்துல வந்தார்.  

அம்மாவோட நரைச்ச முடிக்கும் அதுக்கும்…பொட்டு இல்லன்னா…ஏதோ துக்கத்துக்குப் போயிட்டு வந்த மாதிரியிருக்கும். எழவு விழுந்த வீட்ல இருப்பாங்களே அதுபோல….அது என்னவோ…அம்மாவோட அந்தப் பொட்டில்லாத முகத்த என்னால பார்க்கவே முடியறதில்ல….எல்லாப் பொம்பளைகளுக்கும் அப்டியிருக்கிறதில்ல. ஒரு சிலருக்குத்தான் அது சகிக்காது. அதுல அம்மாவும் ஒண்ணு. பொம்பளைங்க பீரியட்ஸ் டயத்துல பொட்டில்லாமப் போறதப் பார்த்திருக்கேன்…அதைப் புரிஞ்சிக்கிறதுக்கு அதுன்னு தெரியும். லைட்டா மஞ்சப் பொட்டு வெளிறி வச்சிருப்பாங்க…அதான் அடையாளம். அன்னைக்குப் பார்த்து நிமிர்ந்து பேசமாட்டாங்க பெரும்பாலும். இதெல்லாம் கூர்ந்து கவனிச்சிருந்தாத்தான் தெரியும். நான் தட்டச்சுப் பள்ளில வேலை பார்க்கைல பொம்பளப் பிள்ளைங்க பயிற்சிக்கு வருவாங்க…டைப் அடிச்சிக்கிட்டு இருக்கைலயே வயித்தப் பிடிச்சிட்டு உட்கார்ந்திடுவாங்க…சில பிள்ளைங்க நான் வர்றேன் சார்னு சொல்லிட்டுக் கிளம்பிடுங்க…எனக்கா புரியாது. எதுக்கு இப்படி தூரம் தூரமா வரணும்…உடனே எந்திரிச்சுப் போகணும்?னு கோபம் வரும்.பக்கத்துல ரெண்டு மூணு தியேட்டர் உண்டு. டவுனுக்கு வந்து ஸ்கூலுக்கு டிமிக்கி கொடுத்திட்டு. படம் பார்க்கப் போகுதுங்களோன்னு நினைப்பேன். கிராமத்துப் பிள்ளைங்களுக்கு எங்க தட்டச்சுப் பள்ளில பாதி ஃபீஸ்தான். கூட்டமான கூட்டம் எகிறிடுச்சு. நாப்பது மிஷின் வச்சிருந்தும் பத்தல. ரெயில் தடதடக்கிறமாதிரி சத்தம் இடைவிடாம வந்திட்டேயிருக்கும். ரோட்டோட போறவங்க…நின்னு ஒரு நிமிஷம் திரும்பிப் பார்த்துட்டுத்தான் நகருவாங்க. எங்க பிரின்ஸிபால் ரொம்ப இரக்க குணம் படைச்சவரு. கிராமத்துப் பிள்ளைங்கள்லாம் நல்லா படிச்சு வேலைக்குப் போகணும்னு விரும்புறவரு. அதனாலதான் அந்தக் கன்செஷன் கொடுத்தாரு…புண்ணியவான்….

லேடீ ஸ்டூடன்ஸ் டயத்துக்குள்ள  கிளம்பிட்டாங்கன்னா பேசாம விட்டிடுங்க கோபால்……எதுவும் சொல்லாதீங்க…ன்னு பிரின்ஸிபால் ஜஸ்டின் எங்கிட்ட ஒருநாள் சொன்னாரு…எதுக்கு இப்டி சொல்றாரு? அப்புறம் ஸ்கூல் டிஸிப்ளின் என்னாகுறதுன்னு யோசிச்சிருக்கேன். ரொம்ப நாள் கழிச்சிதான் எனக்குக் காரணம் புரிஞ்சிது. நா ஒரு மரமண்ட….புரிஞ்சபோது  அடப் பாவமே..!ன்னு இருந்தது.  போயிட்டறேன் சார்…ன்னா…பவ்யமா சரிங்கம்மான்னுடுவேன்.  அதுகளுக்கு உடம்புல என்ன வாதையோன்னு தோணி மனசு இரக்கப்பட்டுடும்…

அந்த டயத்துல அம்மா, என் தங்கச்சிங்கல்லாம் வயித்து வலின்னு துடிச்சதெல்லாம் எனக்கு ஞாபகம் வந்தது. அதென்ன எப்பப் பார்த்தாலும் வயித்து வலி வயித்து வலின்னுட்டு…நான் திங்கிறதத்தான நீயும் திங்கிற…உனக்கு மட்டும் என்ன நோக்காடு…?ன்னு வீட்டுல கத்தியிருக்கேன். அம்மா அப்டி உட்கார்ந்தபோதுதான் பரிதாபம் வந்திச்சு. அந்த டயத்துல அப்பா எது சொன்னாலும் அவரு மேலதான் என் கோபம். இந்த மனுஷன் புரிஞ்சு கத்துறாரா…புரியாம அலர்றாரா?ன்னு நினைப்பேன்.

அதுக்குள்ளயும் உட்கார்ந்திட்டியா? இப்பத்தான ஆன…! இருபத்தஞ்சு நாள் ஆயிப்போச்சா…இல்ல பத்துப் பதினஞ்சு நாள்லயே வந்திடுதா…? என்ன கண்றாவியோ…? எனக்கு வேல வைக்கணும் உனக்கு…கங்கணம் கட்டிட்டிருக்கே…! நான் கொஞ்சம் சுதந்திரமா இருந்திட்டா உனக்குப் பொறுக்காதே…? போ…போ…போய் கொல்லைல உட்காரு…அதுதான் உனக்கு சாஸ்வதமான எடம்….- வாயில் கன்னா பின்னா என்ற வரும். எவ்வளவோ புத்தகங்களெல்லாம் படிக்கிறார். அதெல்லாம் இவருக்கு எதுவும் சொல்லித் தருவதில்லையா என்று நினைப்பேன். இல்ல அதெல்லாம் படிச்சிட்டுத்தான் மனசு இப்படி வக்கரிச்சுப் போய்க் கிடக்கா? என்று எண்ணுவேன்.

ஆனால் சமையல் என்று புகுந்து விட்டால் சின்சியர் ஆகி விடுவார். ஒரு டைரியில் அம்மா சொல்லியிருப்பவற்றை எழுதி வைத்துக் கொண்டுள்ளார். அதன்படி செய்து செய்து பழகி விட்டார். அப்பா கைபாகம் கச்சிதமாய் இருக்கும் உப்பு, உரைப்பு, புளிப்பு என்று சரிவிகிதம்தான். அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் சமையலை முடித்து விடுவார்தான். அதுக்கு முன்தான் தினமும் இந்த ஆர்ப்பாட்டம். கொஞ்சம் திட்டாமத்தான் செய்தா என்ன? தினசரி அம்மாவுக்கான பூஜை அது.

எதுத்த வீட்டு புவனேஸ்வரி  அக்கா எப்பயாச்சும் வீட்டுக்கு வரச்சே,..ஒரு மாதிரி வாடையடிக்கும். அன்னைக்குன்னு பார்த்து எதையாச்சும் திங்குறதுக்குக் கொண்டு வந்து கொடுப்பாங்க…எனக்கு அத வாங்கவே பிடிக்காது. அம்மாதான் வாங்கி வச்சிக்கிடுவாங்க…அன்பாக் கொண்டு வந்து தர்றத வேண்டாம்னு சொல்லக்கூடாதுப்பா…என்பாள் அம்மா. விசேடங்களுக்கு பண்டம் மாத்திக்கிடுவாங்க…அது அவுங்களுக்குள்ளே….இது யார் வீட்டுது…எதிர் வீடா…எனக்கு வேண்டாம்னுடுவேன் நான். அந்தப் பொருளப் பார்த்தாலே அந்த வாடைதான் மனசுல  வரும் எனக்கு. அந்த மூணு நாளைக்கு வீட்டோட வீடா அடங்கிக் கிடக்க மாட்டாங்களா? இல்ல அதுக்கான பாதுகாப்ப செய்துக்க மாட்டாங்களா? என்ன அநித்யம் இது…வீட்டையே நாறடிச்சிக்கிட்டு…?ன்னு எரிச்சலா இருக்கும். இந்த நாட்கள்ல ஏன் இங்க வர்றாங்கன்னு நினைப்பேன். தலைல வச்சிருக்கிற பூவையும் மீறி வாடை எதிரடிக்கும். இந்த மூணு நாள்ல பூவேறேயா? ன்னு தோணும். எல்லாம் வாடையைப் போக்கத்தான். ஆபீசுக்குப் போறவங்க வச்சிக்கிறதில்லயா? சென்ட் போடுறதில்லையா? அதப்போலத்தான்.

பொம்பளைங்களே பாவம்தான். உடல் ரீதியா அவுங்களுக்கு நிறையக் கஷ்டங்கள் இருக்கு. இயற்கையாவே அப்படி அமைஞ்சிருக்கிறதுக்கு நாம என்ன செய்ய முடியும்னு அலட்சியப்படுத்த முடியல. சகிக்க முடியாத விஷயங்கள்ல உள்ளார்ந்து இருக்கிற கஷ்டங்கள உணராத மனுஷன் என்ன ஆளு? அந்தப் பொம்பளைங்க வயித்துலேர்ந்து வந்தவங்கதானே இந்த ஆம்பளைங்க…கொஞ்சமேனும் இரக்கம் வேணாம்? என்னா அதிகாரம்?

எங்கம்மா இப்டியெல்லாம் கிடையாது. படு சுத்தம். ரொம்ப சேஃப்டியா டிரெஸ்ஸிங் பண்ணிக்குவாங்க…அந்த மூணு நாளும் பூஜா ரூம் பக்கம் போகமாட்டாங்க…பால்கனில நின்னமேனிக்கே சூரிய நமஸ்காரம்தான்….வழக்கம்போல அப்பாதான் சமைப்பாரு….ஏதோ அவருக்குத் தெரிஞ்சதை வைப்பாரு.. அவர் இஷ்டத்துக்கு வச்சதுதான்…சாப்டதுதான்…ஒரு சாம்பார், ஒரு கறி, மோரு…இதான் அப்பாவோட சமையல். அவரே மாவு கிரைன்டர்ல அரைச்சிடுவாரு…சமயங்கள்ல சப்பாத்தி போடுவாரு நைட் டிபனா…சப்பாத்தி வட்டமாவே இருக்காது. கோணக் கொக்கர இருக்கும். வயித்துக்குள்ளதான போகுது….பிச்சுப் பிச்சித்தானே திங்கறோம்…போதும் இது…என்பார்.

 புவனேஸ்வரி அக்கா  அசல் குங்குமத்ததான் நெத்தில பதிச்சிருப்பாங்க…மாரியாத்தா…காளியாத்தா, பகவதி அம்மேங்கிற மாதிரி…நெத்தி பெரிசுன்னா…அதுல பாதி பொட்டுக்கா…? இப்ப பத்து ரூபாக் காசு வருதே…அந்த சைஸ்….இவ்வளவு பெரிய வட்டமா? அதுலென்ன அப்படியொரு பெருமை? இவங்களப் பார்த்தாலே மத்தவங்களுக்கு ஒரு பயம் வரணும்னா? போதாக் குறைக்கு வகிடு நுனில.  நெத்திலயும், மூஞ்சிலயும் வழியுற வியர்வை.   குங்குமம் மூக்குல கோடா ஒழுகுதே…அதக்கூடத் துடைச்சிக்க மாட்டாங்க? என்ன அழகோ…என்ன ரசனையோ? மூணு பையனப் பெத்தவங்க அவுங்க…ஆனா தளர்ச்சி பார்க்க முடியாது. கிண்ணுன்னு இருப்பாங்க….அம்மாதான் பாவம்…என் ஒருத்தனப் பெத்துட்டு…டொய்ங்ங்னு போயிட்டாங்க…ஆனா லட்சணம் அந்த முகத்துல. லட்சுமி கடாட்சம். அம்மாவத் தவிர வேறே யாருக்கும் வராது.

 அம்மாவோட ஸ்டிக்கர் பொட்டு, பழக்கத்துல…அடிக்கடி கீழே விழுந்திடுது . அடுப்படில வியர்க்க வியர்க்க வேலை செஞ்சிட்டு யப்பாடி…ன்னு  வந்து உட்கார்றப்போ சேலைத் தலப்பை வச்சு மூஞ்சியையும், கழுத்தையும் அழுந்தத் துடைச்சி விட்டுக்கிறபோது…கவனமில்லாம .இது நடந்து போகும். பாத்ரூம்ல குழாய் பூராவும், கண்ணாடிலன்னு பொட்டாப் பதிச்சிருக்கும். அதுல ஒண்ணை எடுத்து நெத்தில வச்சிட்டு வருவாங்க…பழைய பொட்டு அது…நிக்காம உதிர்ந்து போகும். எத்தனவாட்டியானாலும் அம்மாவுக்கு அந்தப் பிரக்ஞை இருக்கிறதேயில்ல. ஒரு வேளை உடம்ப மீறின அலுப்போ என்னவோ? நம்ப வீடுதான…நம்ப பையன்தான…நம்ப வீட்டுக்காரர்தான…ங்கிற எண்ணமாக் கூட இருக்கலாம். ஆனா அந்தப் பொட்டில்லாத மொகத்தப் பார்க்கவே முடியறதில்லையே…?

திடீர்னு நா போயிட்டேன்னு வச்சிக்கோ…அப்புறம் பொட்டு வச்சிக்கிறத மட்டும் விட்டுடாதே…ன்னு அப்பா அடிக்கடி சொல்றதக் கேட்டிருக்கேன்…அப்பாவுக்கே அம்மாவோட பாழ் நெற்றி மேல அப்படியொரு வெறுப்பு…என்னைக்கும் சுமங்கலி மாதிரியே பூவோடும் பொட்டோடும் காட்சியளிக்கணும்…புரிஞ்சிதா? நா பித்ருவாயிருந்து  கவனிச்சிட்டேயிருப்பேன். தெனமும் பொட்டு பதிச்சிட்டு என் ஃபோட்டோ முன்னாடி வந்து நின்னு எனக்கு முகத்தக் காண்பிக்கணுமாக்கும்…

போதும்…உங்க நாற வாயை வச்சிட்டு கொஞ்சம் சும்மா இருங்க…என்பாள் அம்மா. வாயத் தொறந்தா அபத்தப் பேச்சுதான்…நல்லதாப் பேசுங்களேன்…என்று சொல்வாள். அப்பா பேச்சு மாறவே மாறாது.

அன்னைக்கு என் ஆபீஸ்மேட் வைகுண்டம் வந்தாரே…எங்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? உங்க ஒய்ஃப்கிட்ட ஒரு ஃபேமிலி லுக் இருக்குன்னு பெருமையாச் சொன்னார். அந்த உன்னோட முகம் அவருக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சுன்னு புரிஞ்சிக்கிட்டேன். அவர் கதை தனி. அதச் சொல்ல ஆரம்பிச்சா ஒரு நாளாகும்…ஒரே வீட்டுல மாடில இவரும் கீழ அந்தம்மாவும் இருப்பாங்க…சமையல் முடிச்சு டேபிள்ல எல்லாமும் எடுத்து வச்சிருப்பாங்க…இவரு ரோபோட் மாதிரி வந்து உட்கார்ந்து தின்னுட்டு திரும்ப மாடிக்குப் போயிடுவாரு…ஒருத்தருக்கொருத்தர் அன்றாடம் மூஞ்சியவாவது பார்த்துக்கிறாங்களான்னு கூட எதிராளிக்குத் தெரியாது. விரிவாச் சொல்ல ஆரம்பிச்சா நம்ம வீடு தங்கம்….! .அதனாலதான் இத மட்டும் சொன்னேன்….மறந்துடாதே….பொட்டு உனக்கு ரொம்ப ரொம்ப முக்கியமாக்கும்…..என்றாவது ஒரு நாள் வெள்ளம் பெருக்கெடுத்ததுபோல் அப்பா நிறையப் பேசி விடுவார்.  நல்லதும், கெட்டதும் கலந்து கட்டி பிரளயமாய் வெடிக்கும்.

             பெரும்பாலும்  இதெல்லாம் அலட்டிக்கிட்டதேயில்ல. அவர்பாட்டுக்கு இருக்கிறவர்தான். அம்மாவ அவர் நிமிர்ந்து பார்க்கிறதே அபூர்வம். பிடிக்காத மாதிரியே வளைய வருவாரு…அவுங்க ரெண்டு பேரும் எப்போ சிநேகமா இருப்பாங்கன்னு தேட வேண்டிர்க்கும். தொட்டதுக்கெல்லாம் சண்டதான். அநாவசியமான பேச்சுதான்.  அன்னைக்கொருநாள் அவர் இப்படி அதிசயமாப் பேசிப்புட்டதுதான் எங்களுக்கெல்லாம் பேரதிசயமாப் போச்சு.

            அப்பா தன் மூஞ்சிய ரசிச்சிருக்கார்ங்கிறதும், அவர் ஃப்ரென்ட் வைகுண்டம் ரசிச்சு அப்படிச் சொன்னதும் அம்மாவுக்குப் பெருமை தாங்கலை.  அதுக்காக அம்மாவும்  அப்பாவும் சமாதானமாயிட்டாங்கன்னு நினைச்சிடாதீங்க…

என்ன சமைச்சிருக்கே…ஒண்ணுத்துலயும் உப்பக் காணோம்…உனக்கு உப்பு வேண்டாம்னா ஊரு உலகத்துல இருக்கிற எவனுக்கும் வேண்டாம்னு அர்த்தமா? ஒரு ரசனையே இல்லாம சமைச்சா இப்டித்தான். எந்நேரமும் ஊர்ல இருக்கிற உங்க அம்மாவையும், அக்காவையும் நினைச்சிட்டேயிருக்கிறது…எப்படா அவுங்ககூடப் பேசுவோம்னு நேரம் பார்த்திட்டே வேல செஞ்சா…எங்கேயிருந்து ருசி வரும்? ருசின்னு ஒரு பேப்பர்ல எழுதிப் பார்த்துக்க வேண்டிதான்.

படிய வாரி, கொண்டை முடிஞ்சு, அழகாப் பொட்டு வச்சி தங்க ஃபிரேம் போட்ட கண்ணாடி போட்டு அம்மா செய்தித்தாள் படிக்கிற  அழகே தனி.  அந்த இங்கிலீஷ் பேப்பர்ல அப்படி என்னதான் இருக்கோ….தலையங்கம், கட்டுரைகள்னு ஒண்ணு விடமாட்டாங்க…! எல்லாம் முடிஞ்சிதுன்னா, சுடுகு போட ஆரம்பிச்சிடுவாங்க. மைன்ட எப்பயும் ஷார்ப்பா வச்சிக்கணுமாம். வேலை செய்ற போது அம்மாட்ட இருக்கிற அலுப்பும் சலிப்பும், நியூஸ் பேப்பர் படிக்கிறபோது இருக்கவே இருக்காது. அது என்ன அதிசயமோ?

 ஆனா அப்பாட்ட அந்த வேலயே கெடையாது. அவருக்குத் தமிழ் பேப்பர்தான். அதையும் கூட ஒரு புரட்டு. தலைப்புச் செய்தியாப் பார்த்திட்டு தூக்கிப் போட்டுடுவாரு. எங்க பார்த்தாலும் கொல, கொள்ளை, திருட்டு. கற்பழிப்பு, விபத்து, லஞ்சம் அடிதடின்னு….இதுதான் நாட்டு நடப்பா….? அரசாங்கம் எப்டி இயங்குதுன்னு தெரிஞ்சிக்கத்தான பேப்பரு….முக்கால்வாசிப் பேப்பர இதுவே ஆக்ரமிச்சா….? என்ன எழவோ…நாடு போற போக்கே சரியில்ல…. என்று அலுத்துக் கொள்வார். புரட்டின அந்தப் பேப்பரை அவர் தூக்கி எறியும் தன்மையில் அது தெரியும். டி.வி. தலைப்புச் செய்திகள் கேட்டவுடன் அணைத்து விடுவார். விரிவான செய்திகளைக் கேட்க, காட்சிகளைப் பார்க்க அவருக்குப் பொறுமை கிடையாது. இவன் சொன்னதை யே அவன் திருப்பிச் சொல்லுவான்…இதுக்கெதுக்குப் பார்க்கணும்? என்பார்.

            அப்பா தனியாத்தான் தன் ரூம்ல உட்கார்ந்திருப்பாரு. எதாச்சும் எப்பயும் படிச்சிட்டிருக்கிறதே அவரோட வேல. கண்ட புஸ்தகமெல்லாம் வாங்கி வச்சிருப்பாரு. அத்தனையும் படிக்கிறாரா தெரியாது. வாங்கிக் குமிச்சு, தூசி தட்டுறதும், இறக்கி ஏத்தி திரும்ப அடுக்கிறதும் அடிக்கடி அவர் செய்ற வேல. எப்படிப்பட்ட எழுத்தாளர்கள் புக்ஸ் எல்லாம் வச்சிருக்கேன் தெரியுமா? என்று பெருமையாகக் கூறுவார்.

            ஆத்தர்வைஸ் அடுக்கிறேன்…எப்டியோ மாறி மாறிப் போயிடுது…-என்று அவரே சொல்லிக் கொள்வார். மண்ட மண்டையா எத்தனையோ புஸ்தகங்கள். ஆனா அப்பா கைல வச்சிருக்கிறதப் பார்த்தா நூறு இருநூறு பக்க அளவுள்ளதா இருக்கும். அப்பாடா…முடிஞ்சிது….என்று படித்து முடித்து, முடித்த புத்தகங்களுக்கென உள்ள வரிசையில் வச்சிடுவார். மொத்தமே இவ்வளவுதான் படிச்சிருக்கீங்களாப்பா…ன்னா…கோபம் வந்துடும்.

            திடீர் திடீர்னு நினைப்பு வர்றப்போ இங்க இருக்கிற எல்லாப் புத்தகங்களையும்தான் அப்பப்போ  உருவி எடுத்துப் புரட்டியிருக்கேன். அதுக்காக தொடவேயில்லைன்னு அர்த்தமா? நினைச்ச நேரம், நினைச்ச புத்தகம் கைக்குக் கிடைக்கணும்னுதானடா வாங்கி வைக்கிறது? அதெல்லாம் தனி ரசனை….உனக்குத் தெரியாது அதோட மகிமை….என்பார். அவங்கல்லாம் என் கூடவே இருக்கிறமாதிரியாக்கும்…என்று பெருமைப்படுவார்.

            அப்புறம் செவுத்தப் பார்த்து உட்கார்ந்துக்கிட்டு என்னத்தையோ யோசிச்சிக்கிட்டேயிருப்பாரு. படிச்ச புஸ்தகத்தை அசை போடுறார் போல்ருக்குன்னு நான் நினைச்சுக்குவேன். திடீர்னு கம்ப்யூட்டரத் திறந்து டைப் அடிக்க ஆரம்பிச்சிடுவாரு. பக்கமானா சரசரன்னு ஓடும். அந்த நேரம் அம்மாட்ட ஒரு டீ குடுன்னு கேட்பாரு. கொதிக்கக் கொதிக்கக் குடிக்கிறது அப்பாவோட வழக்கம். எதுக்கு இப்டி தீயை உள்ளே அனுப்புறாருன்னு பார்க்கிறவங்களுக்குத் தோணும். சூடு இம்மி குறையக் கூடாது. குறைஞ்சா காட்டுக் கத்து கத்துவாரு.  ஒரே மூச்சுல நினைச்சதை அடிச்சு முடிச்சி சேகரிச்சுட்டு, சட்டுன்னு கம்ப்யூட்டர ஆஃப் பண்ணிடுவாரு.  அப்புறம் அடிச்சதையெல்லாம் அசை போடுவாரு. இப்டியே ஒரு நாள் ஓடிடும். வெளில போவாரு, வருவாரு…கம்ப்யூட்டரத் திறந்து, திருத்திக்கிட்டேயிருப்பாரு….சில சமயம் ம்க்கும்….வேண்டாம்னு தனக்குத்தானே சொல்லிக்கிட்டு, எழுதின மொத்தத்தையும் டிலீட் பண்ணிடுவாரு…?

எதுக்கு இப்டி மாங்கு மாங்குனு உட்கார்ந்து கையொடிய டைப் அடிக்கணும், பிறகு அழிக்கணும்? வச்சாக் குடுமி, அடிச்சா மொட்டைன்னு என்னத்துக்கு இப்டிப் பிராணனை விடணும்? அதுக்கு எனக்காச்சும் ஏதாச்சும் உதவி பண்ணலாம்ல…? என்று அம்மா புலம்புவாள்.

            கம்ப்யூட்டர்ல உட்கார்ந்தாச்சா…போச்சு…காய்கறி நறுக்கித் தருவீங்கன்னு பார்த்தேன். இன்னைக்கு அவ்வளவுதானா? ன்னு அம்மா குறை பட்டுக்குவாங்க….அதெல்லாம் அப்பாவ யாரும் எதுவும் சொல்லவும் முடியாது. எதுக்கும் இழுக்கவும் முடியாது. அவருக்கா இஷ்டம் இருந்தாத்தான். அம்மா சொல்லி அவர் சரின்னு செய்திருக்கிறதவிட, முறுக்கிட்டுப் போனதுதான் ஜாஸ்தி. இதால ஒண்ணும் ஆகாதுன்னு அம்மா ஒருமைல அலுத்துகிறது இருக்கே…சிரிப்புத்தான் வரும். அப்பாவும் அப்போ லேசாச் சிரிச்சிக்கத்தான் செய்வாரு. சொன்னாச் சொல்லிட்டுப் போறா…அவளுக்கு அந்தச் சுதந்திரம்கூட இல்லையா என்னன்னு அப்பா இருக்கிறதாத் தோணும். அம்மா கோபப்பட்டு அப்பா ஒதுக்கிட்டுப் போனதுதான் ஜாஸ்தி.  ஒரு வேளை அதுவே அவுங்க ரெண்டு பேரையும் நெருக்கமா வச்சிருக்கோ என்னவோ?

            அவர்பாட்டுக்கு தானுண்டு, தன் டைப் வேல உண்டு, தன் புஸ்தகங்கள் உண்டுன்னு இருக்கிற ஆள்தான். ஆனா சமீபமா அவர்ட்ட என்னவோ ஒரு வித்தியாசம் இருக்கிறதா தோணுதே….? அதை எப்படிக் கண்டு பிடிக்கிறது?ன்னு என் மனசுல ஓடிக்கிட்டேயிருக்கு. தப்புச் செய்றவன அவன் முகமே காட்டிக் கொடுத்திடும். ஒரு சிறு அசைவு போதும்…கண்ணு காமிச்சிடும் எதையும். அப்பாவோட பளீர் கண்ணு ஏன் இப்போல்லாம் சுருங்கிக் கிடக்குது? உடல் ரீதியா அவருக்கு என்ன பிரச்னை? என்ன நோவு? அப்படி எதுவும் இருக்குமோ? பணம், செலவுன்னு நினைச்சிக்கிட்டு வாதையை அனுபவிச்சிக்கிட்டு, தனக்குத்தானே மனசுக்குள்ள புழுங்கிக்கிட்டுக் கிடக்கிறாரோ? 

            தெனமும் எங்க வீட்டு வாசல் வழியா ஒருத்தர் போவாரு.. குனிஞ்ச தல நிமிராம…! வச்ச அடி தப்பாம….எந்தக் காரியத்துக்குன்னு சென்றாலும் எங்க தெரு வழியாத்தான் போவாரு. தெருக்காரங்களுக்கெல்லாம் அவரத் தெரியும். அப்டியொரு ஒல்லியான, நாலு முழ வேட்டி கட்டின, தலை வழுக்கை ஆசாமி, தினசரி போறார், வர்றார்ங்கிற அளவிலே அதுக்குமேலே அவரைப்பத்தித் தெரிஞ்சிக்கணும்னு  யாரும் அக்கறை காட்டினதில்லை. அந்தத் தெரு வழியே நடந்து நடந்து பாதச் சுவடுகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட நேர் வரிசையில் தடம் பதிச்சுக் கிடந்திச்சு எங்க தெருவுல. அந்தச் சுவடுகள்ல அவரோட மன அழுத்தம் தெரியும். யோசனை விரியும். காலம் இப்டியே போயிடுச்சேங்கிற இயலாமை நிற்கும். அதிசயமா அவர் தலை திரும்புறதும், எங்கப்பாவைப் பார்க்கிறதும், ஒரு சின்னப் புன்னகை உதட்டோரத்துல தெறிக்கிறதும் பேசா நட்பு ரெண்டு பேருக்கும் இடைல மலர்ந்திருக்கோன்னு நினைக்க வைக்கும்.

            அப்பாவே அமைதியான ஆள்தானே? தனிமையை அதிகம் விரும்புறவர்தானே? தனிமைல தனக்குத்தானே பேசிட்டிருக்கிறவர்தானே? நாள் முழுக்க ஒரு ரூமுக்குள்ள கதவ அடைச்சிட்டு இருன்னா அப்பாவால சர்வ சாதாரணமா இருந்திட முடியும்தான்.  யார்ட்டயும் பேசணும், சிரிக்கணும், விசாரிக்கணும்னு அப்பாவுக்கு எப்பவும் எந்த விஷயமும் இருந்ததில்லதான். அபூர்வமா வீட்டுக்கு யாரும் வந்துட்டாலும்…வாங்க…உட்காருங்கன்னு சொல்றதோட அவரோட வரவேற்பு முடிஞ்சு போயிடும். அதுக்கு மேலான உபசரிப்பெல்லாம் அம்மாதான். வந்தவங்களும் அந்தாளு ஒரு அப்புண்டுன்னு கேர் பண்ணாமப் புறப்பட்டுப் போயிடுவாங்க….அதப்பத்தி அப்பாவும் அலட்டிக்க மாட்டாருன்னு வைங்க…

            எனக்குத் தெரிய பொதுவா சதா புத்தகம் படிச்சிட்டிருக்கிறவங்களே இப்படித்தான்னு சொல்லுவேன். அவுங்களுக்கு சமத்தா பேச வராது. கச்சிதமா உபசரிக்கத் தெரியாது. யார்ட்டப் பேசினாலும் படிச்ச புத்தகத்தப் பத்திச் சொல்லலாமான்னு யோசிப்பாங்க…அல்லது அவுங்க ஏதேனும் படிச்சதப் பத்தி சொல்வாங்களான்னு எதிர்பார்ப்பாங்க….ரெண்டும் இல்லன்னா இது வேலைக்காகாதுன்னு ஆளக் கிளப்பிவிடப் பார்ப்பாங்க….பேச்சச் சுருக்கிட்டா ஆள் கிளம்பிடும்ல…அந்த உத்திதான்….!  அப்பாவ ஒரு முசுடுன்னு கூடச் சொல்லலாம்தான். பார்த்தீ்ங்களா…தெருவுல போற ஒருத்தரப் பத்திச் சொல்ல ஆரம்பிச்சு எங்கப்பாவுக்குள்ள புகுந்துட்டேன்….இவங்கள மாதிரிச் சில பேர் ஊர் உலகத்துல எப்பவும் இருக்கத்தான செய்றாங்க…

நீண்டு கிடக்குற நேர் தெருவில் நெடுகப் போயி  ஒரு காலியிட வளைவிலான பொட்டல் வெளியைக் கடந்து பேருந்து நிலையத்தை எட்டுவாரு அந்த ஆளு.  அந்தப் பொட்டல் வெளியின் தனிமையையும், சூன்யத்தையும், படர்ந்து, உள்வாங்கிக்கிட்டே நடப்பார் போல.  சிற்சில சமயங்களில் தன்னை யாரோ பின்தொடருவது போல் தனக்குத்தானே உணர்ந்து வேக வேகமாய் நடக்க முனைவாரு. ஒரு பயத்தோடயே கடந்தாலும் வழிய மாத்துனதில்ல. நானே அந்த வழி ஓரொரு சமயம் அவர் பின்னாடி போயிருக்கேன். அவர்தான் எனக்குப் பாதுகாப்பு மாதிரி.  நட்ட நடுப் பொட்டல்ல, எரியிற வெயில்ல ஜடமா நிப்பார். எதுக்கு இங்க நிக்கிறாருன்னா கேட்க முடியும்? ஏதேனும் பித்துப் பிடிச்சிடுச்சா?ன்னு பார்க்கிறவங்களுக்குத் தோணும். பிளாட் போட்டிருக்கிற குத்துக் கல்லுல உட்கார்ந்து கெடப்பாரு…வானத்தப் பார்த்தமேனிக்கே வாய் என்னத்தையோ முனகிட்டே கிடக்கும். ஏதேனும் மந்திரம் சொல்வாரோ? அல்லது பாட்டுப் படிப்பாரோ?  அப்பா ரூம்ல ஏகாங்கியாக் கிடக்கார். இவர் இந்தப் பொட்ட வெளிலன்னு… நினைச்சுக்குவேன் நான்.

அப்பல்லாம் எங்கூர்ல வீட்டுக்கு வீடு பால் ஊத்தும் பெண்டுகளுக்கு பிரசவம் பார்க்கும் மருதாயி ஞாபகம் வரும் எனக்கு. வெத்தல, பாக்கு, பழம் ரெண்டு ரூபாக் காசுக்குப் பிரசவம் பார்த்த புண்ணியவதி அவங்க. கடைசி வரை அந்தம்மா வாழ்க்கை ஒத்தையா இருந்தே கழிஞ்சு போச்சு. எங்க ஊர் தெரு மக்களோட மக்களா இருந்தே மறைஞ்சு போனாலும் எவ்வளவு அர்த்தம் பொதிஞ்ச வாழ்க்கைன்னு எனக்குத் தோணிக்கிட்டேயிருக்கும்.

அத மாதிரி எதுவும் அர்த்தம் பொருத்தமேயில்லையேன்னு தோணும். இவரு வாழ்க்கை வீணாத்தான்  கழிஞ்சிடுமோன்னு நினைக்கிறேன். எதோ ஒரு துறைல கொஞ்ச காலம் வேல பார்த்திருப்பார் போல…அந்தப் பென்ஷன் காசு வருது அவருக்கு. அத அவர் தங்கியிருக்கிற தன்னோட தங்கை வீட்ல கொடுத்திட்டு  நாட்கள ஓட்டிக்கிட்டிருக்கார்னு கேள்விப்பட்டேன். நாலு தங்கச்சிக உண்டாம் அவருக்கு. ஒவ்வொருத்தர்ட்டயும் மும்மூணு மாசம் நாலு மாசம்னு இருப்பார் போல…அங்கங்க இருக்கைல அந்தந்த மாசக் காச அவுங்ககிட்டக் கொடுத்திடுவாராம். அவரு தின்னு தீர்க்குறத விட பணம் அதிகமா வர்றதால யாரும் அவர எதுவும் சொல்றதில்ல. இதெல்லாம் கேள்விப்பட்டதுதான். பராபரியாக் காதுக்கு வந்தவை.

சமயங்கள்ல தன்னோட தங்கச்சியைக் கூட்டிட்டு அபூர்வமா அவர் நடந்து போறதப் பார்க்கலாம். அப்பயும், நேரம் காலம் பார்க்காம அந்தப் பொட்டல் வழியாத்தான் போவாரு, வருவாரு….அத ஒரு நா சாயங்காலம் மேல இருட்டுற நேரம் கூட்டிட்டுப் போகைல ஏதோ சலங்கச் சத்தம் கேட்குதுன்னு அது பயந்து போயி…நாலஞ்சு நாள் காய்ச்சல்ல கெடந்து மீண்டுச்சுன்னு ஒரு கத சொன்னாங்க…ஆனாலும் இன்னைவரைக்கும் அந்த ரூட்ட அவர் மாத்துனதில்ல. எந்தப் பிசாசு தன்னப் பிடிக்கப் போவுதுன்னு நினைச்சிட்டார் போல. அது எப்டியிருக்குன்னு பார்ப்போம்னும் கூட நினைச்சிருக்கலாம்.

பேய் இருக்கோ இல்லையோ…பயமிருக்கு நமக்கெல்லாம்…அவருக்கு அதுவும் இல்லன்னுதான் சொல்லணும்…

தெரு வழியாவே போங்க…அந்தப் பொட்டல் வெளில ஏன் கடக்குறீங்க? காக்காயும், நாயும், பூனையும் அடிச்சிக்கிட்டு இருக்கிற அந்த வழி சீண்ட்ரம் பிடிச்ச எடமாச்சே…பாம்பு பல்லி ஓடுமேங்க…ஏன் அப்டிப்  போறீங்க…? ன்னு யார் யாரோ எத்தனையோ தடவை சொல்லுறத நானே கேட்டிருக்கேன். கொக்குக்கு ஒண்ணே மதின்னு அவரு அப்டித்தான் இன்னைவரைக்கும் போயிட்டிருக்காரு…தானே ஒரு பேய்தானேன்னு நினைச்சுக்குவாரோ என்னவோ?

அப்பா எப்படி அவர ஃப்ரென்ட் பிடிச்சாரு? அதான் என் கேள்வி?

என்னவோ கொஞ்சம் அப்பாட்ட வித்தியாசமாத் தோணுதேன்னு சொன்னனே….அது இதுதானா? அவருக்காக அப்பா துணை போறாரா அல்லது இவருக்குமே நோங்கிருச்சா? இந்த வயசுல எதுக்கு இப்படி? அந்தத் தனியா அலைஞ்சிக்கிட்டிருந்த மனுஷனுக்கு (ஆங்ங்….. இப்பத்தான் ஞாபகம் வருது…அந்தாள் பேரு…சிகாமணி….சிகாமணி….ஞானசிகாமணி…) அம்மாட்டக் கூட அப்பா என்னவோ சொல்லிட்டிருந்தபோது இந்தப் பேரு அடிபட்டுச்சே…  அவுரு பேருக்கேத்தமாதிரி அந்தாளுக்கு இப்பத்தான்  ஞானம் வந்திருக்கு போல்ருக்கு….! இனி திரிகால ஞானியாயிடுவாரோ? சிரிப்புத்தான் வருது…காலம்போன கடைசில…இதென்ன கண்றாவி…? –புத்தி இப்டியா கெட்டுப் போகணும்? இந்தச் சந்தேகத்த உறுதி செய்தாகணுமே…! அப்பாவையும் சேர்த்து பலிகடா ஆக்குறானோ இந்த ஆளு…? சரியான அமுக்குளிப் பய…..எவன் அமைதியா…அப்பாவி மாதிரி இருக்கானோ அவனெல்லாம் நம்பக் கூடாது போலிருக்கே? அவன் மனசுலதான் எல்லாத் தப்பும் ஓடும் போலிருக்கே?

மைதியாகித் திகைத்தேன்  நான். கூர்ந்து அந்த இடத்தைக் கவனிக்க ஆரம்பித்தேன். நான் நின்ற இடம் இருளில் மூழ்கிக் கிடக்க, எவரும் அறிவதற்கில்லை. அந்த நாள் இரவும் அந்த இடமும் எனக்குப் புதிசு. அது அந்தப் பொட்டல் முடிந்து ஒரு மேடு தாண்டி  சந்திற்குள் நுழையும் குறுகிய வீதி. வீதி கூட இல்லை…முடுக்கு…!  இரு பக்கங்களும் தள்ளித் தள்ளி மினுக்கென்று மங்கலாக அழுது வழிந்து கொண்டிருந்த வீதிக் கம்பங்கள். வெளிச்சம் என்று ஒன்று வருகிறதா என்ன? பல்பைச் சுற்றி கொசுக்களின் பெருங் கூட்டம் மொய்த்தது. வண்டுகளின் ரீங்காரம். குப்பை மேடு எதுவும் உள்ளதோ? இந்தப் பாழ்வெளியில் எதற்கு இந்தக் கட்டிடம்? பூட் பங்களா போல்? .

அந்த  வாசலில் ஆட்டோக்கள் சர்ரு…சர்ரு…. என்று வந்து நிற்பதும், பெண்கள் இறங்கி உள்ளே கணத்தில் ஓடி மறைந்து இருளோடு இருளாக ஒன்றுவதும் உடனே எதிர்த் திசையில் வண்டிகள் சட்டென மறைவதும்,….அந்தப் பகுதி எதையோ உணர்த்திக் கொண்டேயிருக்கிறதே…! அது சரி… ஏன் முன் விளக்குப் போடாமல் வருகிறார்கள்? எரியலையா அல்லது எரியவிடலையா? எங்க சவாரியே இத வச்சித்தான் …என்பதுபோல்  வருவதும் போவதுமாய்….மின்னல் தோன்றி மறையும் லாவகம்….! யாரும் எதையும் சுற்றி முற்றி நோக்குவதேயில்லை.  எல்லாமும் நிழலுருவ அசைவுகள்.

இத்தனை நாள் என் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாத இந்த ஈசான மூலை இப்போது மட்டும் ஏன் ஈர்க்கிறது? இருளில் நன்றாய் என்னை மறைத்துக் கொள்கிறேன். போக்குவரத்து அதிகமில்லாத அப்பகுதியில் அந்தக் கணம் மயான அமைதி. திடீரென்று ஒரு ஐந்து நிமிஷத்திற்கு கொஞ்சம் சத்தம்…பரபரப்பு. பிறகு வழக்கமான அமைதி. இப்படியே மாறி மாறி ஏதோ மர்மப் பிரதேசம் போல. அங்கேதான் நிற்கின்றன அந்த இரண்டு உருவங்கள். எதற்காக? எதோ பேச்சுச் சத்தம் கேட்கிறதே…அந்தாள் அவர்களிடம் என்னவோ கேட்கிறான்?

என்னா சாரே…ஆள் வேணுமா?   சைலன்டா  நின்னா எப்டி? தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா…

 உள்ளே போறீங்களா? அவன் கேட்டு முடிக்கவில்லை. சுற்று முற்றும் பார்த்துவிட்டு சட்டென்று நுழைந்து விடுகிறார்அவர். அட…அப்பாவும் கூடவே போகிறாரே?

அங்க என்ன அப்படி அதிசயம்? யாராச்சும் தெரிஞ்சவங்க வீடோ?  அந்த ஆள் என்னமோ கேட்டானே? அதுக்கு என்ன அர்த்தம்?

பைசா….இருக்கா…சாரே…?பணம்…பணம்……துட்டு….….விரலைச் சுண்டி ராகமாய்க்  கேட்கிறான் வாயில்காரன். அவர் கோலம் அவனை அப்படிக் கேட்க வைத்ததோ?

யாரப் பார்த்து என்ன கேட்கிற? திமிரா?  இந்தா பிடி…..-பாக்கெட்டுக்குள்ளிருந்து எடுத்து அவன் கையில் திணிக்கிறார்.  வாங்க போவோம்…அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே பாய்கிறார்.  

உடம்பு நடுங்க அந்தக் காட்சியைப்  பார்க்கிறேன். அசைவில்லை என்னிடம்.   மீண்டும் அந்த வாசலில் இருள்.  வராண்டா லைட் அணைகிறது. மீண்டும் இருள்.   என்னவோ புரிந்த மாதிரி….?!

அப்பா…! வேணாம்ப்பா……!!  - என் வாய் என்னையறியாமல் பதற்றத்தோடு முணுமுணுக்கிறது..

                                                ------------------------

          ”சிவாஜி ஒரு சகாப்தம்”     (17.07.2024 நடிகர்திலகம் நினைவு நாள்)       ----------------------------------------       நீ ங்கள் ...