31 அக்டோபர் 2020

தி.ஜா.நூற்றாண்டு - “சிலிர்ப்பு” - சிறுகதை - வாசிப்பனுபவம் -

   தி.ஜா.நூற்றாண்டு - “சிலிர்ப்பு” - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்


கடவுள் இதையுந்தான் காப்பாத்தப் போறான்...இல்லாவிட்டால் மனிதர்களை நம்பியா பெத்தவர்கள் இதை விட்டு விட்டிருக்கிறார்கள்? இப்படி அனுப்பும்படியான ஒரு நிலைக்கு ஒரு குடும்பம் வந்துடுத்தே...அது எப்படி ஏற்பட்டதுன்னு யார் யோசிக்கிறா? அதுக்கு என்ன பரிகாரம் தேடறது? இப்படிக் கண்காணாத தேசத்துக்குப் போகும்படி ஆகுமா?

       குழந்தைத் தொழிலாளர் பிரச்னையை அப்பொழுதே சுட்டிக் காட்டியிருக்கிறது இந்தக்கதை. நவம்பர் 1953 ல் கலைமகளில் வெளிவந்திருக்கிறது. செவ்வியல் வரிசையில் (classics) இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தும் நிற்கும் சிறுகதை. தி.ஜா.வின் படைப்புகளைப் பற்றிப் பேசுபவர்கள் கண்டிப்பாக இந்தக் கதையைச் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.                                          

       முன்னும் பின்னுமாகப் பின்னப்பட்டிருக்கும் இச்சிறுகதை  சற்று ஊன்றிப் படிக்க வேண்டியது. அவரது உரையாடல்களையே நாம் அப்படிப் படித்துத்தான் புரிந்து கொண்டாக வேண்டும். ஒரே ஒரு முறை வாசிப்பில் மனதில் முழுமையாக உள் வாங்க முடியாது. எடுத்துக் கொண்ட கருவை நிலை நிறுத்துவதற்காக சுற்றிலும் அவர் கட்டும் கற்சுவர்  மிகப் பலம் வாய்ந்தது. ஒரு வார்த்தை வீணாகாது.

       திருச்சியில் ஒரு ஜட்ஜ் வீட்டில் வேலை பார்த்த பத்து வயது எட்டும் ஒரு பெண் குழந்தையை, கல்கத்தாவில்  அந்த ஜட்ஜூக்குத் தெரிந்த பெரிய வேலையிலிருக்கும் ஒருவரின் வீட்டில் வேலை செய்ய அனுப்புகிறார்கள்.

       திருச்சிராப்பள்ளி ஜங்ஷனில் இருந்து கிளம்பும் அந்த ஷட்டில் ட்ரெய்ன் மாயவரம்  வரை போகிறது. இன்றைய மயிலாடுதுறை. மாயவரம் சென்று அங்கிருந்து சென்னை, பிறகு கல்கத்தா  என்று பயணிக்க வேண்டும். மாயவரத்திலிருந்து கல்கத்தா செல்லும் ஒரு முக்கியஸ்தரிடம் அந்தக் குழந்தையை ஒப்படைக்க வேண்டும். அவர்கள் அந்தப் பெண் குழைந்தையை கல்கத்தாவிலிருக்கும் அந்தக் குடும்பத்தில் சேர்த்து விடுவார்கள்.

       இதற்காக அந்த ஷட்டில் ரயிலில் ஒரு பெண் குழந்தையோடு பயணிக்கும் அம்மாளும், அதே ரயிலில் அதே பெட்டியில் இவர்களோடு பயணிக்கும் பெங்களூரிலிருந்து வந்து திருச்சியில் இறங்கி, அந்த ஷட்டிலில் ஏறி கும்பகோணம் போகும் அப்பாவும் பையனும். திருச்சியிலிருந்து ரயில் புறப்படுகிறது.. கதை துவங்குகிறது.

       வெறும் கதையைச் சொல்லவா இந்தப் படைப்பு எழுதப்பட்டிருக்கிறது? குழந்தைகளின் மனநிலை, அவர்களின் கபடமில்லாத பேச்சு, அதை உணர்ந்து வருந்தும், சிலிர்க்கும்  பெரியவர்கள், அந்தச் சிறுவனிடம் பொறுப்போடு நடந்து கொள்ளும்  அந்தச் சிறுமி, சிறு வயதிலேயே அந்த இளம் கன்றுக்கு ஏற்பட்டுள்ள மனப்பக்குவம், அதை வீட்டு வேலைக்கு அனுப்பும் கொடுமை, அறியாப் பருவத்தில் சரி என்று கிளம்பிச் செல்லும் அதன் பொறுப்பு,  இது எல்லாவற்றையும், வார்த்தை வார்த்தையாய்த் தன் உரையாடல் மூலம் விளையாட விடும் தி.ஜா.வின் எழுத்து வன்மை நம்மை பிரமிக்க வைக்கிறது.

       உனக்கு என்ன வேலை தெரியும் என்று கேட்க, பத்துப் பாத்திரம் தேய்ப்பேன், காபி, டீ போடுவேன், இட்லி தோசைக்கு  அரைப்பேன். குழம்பு, ரசம் வைப்பேன். குழந்தைகளைப் பாதுகாப்பேன், கோலம் போடுவேன், அடுப்பு மெழுகுவேன், வேஷ்டி, புடவை தோய்ப்பேன்....

       எப்படிப் பழக்கியிருக்கிறார்கள் அந்தச் சிசுவை...? கல்வி கற்க வேண்டிய வயதில், ஓடியாடி விளையாட வேண்டிய பருவத்தில், சோற்றுக்கே வழியில்லாமல் அதுபாட்டை அது பார்த்துக் கொண்டால் போதும் என்று விற்று விட்டாற்போல அனுப்பி விட்டார்களே...? படிக்கும் மனது இவற்றையெல்லாம் நினைத்துப் பார்த்துத்தான் ஆக  வேண்டும். அப்போதுதான் நாம் மனிதன் என்பதற்கு அர்த்தமாகும்.

       இவ்வளவெல்லாம் செய்வியா? யப்பாடீ....உனக்குச் சம்பளம் எவ்வளவு? - அவர் கேட்கிறார். அது சொல்கிறது. 

       சம்பளம்னு கிடையாது...ரெண்டு வேளை சாப்பாடு போடுவா...தீபாவளிக்கு ஒரு ஜோடி பாவாடை சட்டை எடுத்துக் கொடுப்பா...

       கோலம் போட்டு, அடுப்பு மெழுகி, புடவை தோய்ச்சு, குழந்தையைப் பார்த்துண்டு, தோசைக்கு அரைச்சு, எல்லாம் பண்ணினதுக்கு இந்த ஆறணாச் சீட்டிப் பாவாடைதான் கிடைச்சுதா அவாளுக்கு? கழிசலாப் பார்த்துப் பொறுக்கி எடுத்துக் கொடுத்தாப்ல.... - கூட்டி வந்த அந்தம்மாளின் பொறுமல்.

       ஜட்ஜ் வீட்டில் வேலை பார்த்த அந்தக் குழந்தைக்கு சூடாய் ஒரு சாப்பாடு கிடையாது. தினசரி பழம் சோறுதான்.. பஞ்சத்தில் அடிபட்டாற்போல, கண்கள் உள்ளேபோய், ஒட்டி உலர்ந்து பார்க்கவே பரிதாபமாய் இருக்கும் அந்தக் குழந்தையைப் பார்க்க இவருக்கு மனம் வெதும்பிப் போகிறது.

       ஊருக்குப் போற குழந்தைக்கு மூணு வருஷம் வீட்டோட கிடந்து உழைச்ச குழந்தைக்கு ஒரு நல்ல சாப்பாடாப்போட்டு தீர்க்கமா நாலு துணிமணி எடுத்துக் கொடுத்து, ரெண்டு நாள் பயணம் பண்ணி போய் இறங்குறதுக்கு ஏத்தாப்ல, ஜீவனோட அனுப்பப்படாதோ....ஜட்ஜ் வீடுன்னு பேரு...குளிர்ந்த மனசு....இப்டியா பழையது போட்டு அனுப்புவா...” - அந்தம்மாளின் வயிற்றெரிச்சல் தாளாது பொங்குகிறது.               பெங்களூருக்கு அனுப்பின பையன், பிச்சி மாமாவுக்கு தொள்ளாயிரம் ரூபா சம்பளம் உனக்கு நூறுதானே சம்பளம்...என்று மாமா பேசிக் கேலி செய்வதைக் கேட்டுப் புரிந்து கொண்டு, நான் ஒரு மூணு சக்கர சைக்கிள் கேட்டேம்ப்பா...வாங்கித்தரேன்னு சொல்லிச் சொல்லி ஏமாத்திட்டார் மாமா...என்று சொல்ல, எனக்கு ஒரு சின்னூண்டு கீ கொடுக்கிற மோட்டார் பொம்மை வாங்கிக் கொடுப்பா என்று அப்பாவுக்கு ஏற்றாற்போல் கேட்பதும், இந்த அக்காவுக்குப் பத்து வயசுன்னா அஞ்சாங்கிளாஸ் படிக்குதான்னு சிறுவன் கேட்பதும், இல்ல நான் படிக்கல...வேலைக்குப் போறேன் என்று அந்தச் சிறுமி சொல்வதும், குழந்தைகளுக்கான உரையாடல்களில் நம் மனதை உருக்கித்தான் விடுகிறது.

       திருச்சியில் ஆரஞ்சு ஒன்று வாங்கி அந்தச் சிறுவனுக்குக் கொடுக்க, இதை ஊருக்குப் போய்த் திங்கறேம்ப்பா...அம்மா உரிச்சுக் கொடுப்பா....என்று அவன் சொல்வதும்...குழந்தைகளின் மனதைப் படம் பிடித்துக் காட்டி, அந்தப் பெண் குழந்தைக்கு உரிமையோடு சாப்பாடு வாங்கிக் கொடுத்து, ரயில்வே சாப்பாடை சிறுவன் சாப்பிடத் தெரியாமல் திணற, கட்டி கட்டியாய் இருக்கும் சோற்றை, நெகிழப் பிரித்துப் பிசைந்து அந்தச் சிறுமி ஊட்டும் காட்சி...அந்த இளம் வயதிலேயே எப்படியான பக்குவத்திற்கு அது ஆளாகியிருக்கிறது? என்பதை நாம் அறிய மனசு நெகிழ்ந்து  விடுகிறது.

       இரண்டு அநாதைகள். அதாவது தாயை விட்டுப் பிரிந்த அநாதைகள். ஒரு அநாதை இன்னும் இரண்டு மணி நேரத்தில் தாயின் மடியில் துள்ளப் போகிறது. இன்னொன்று தாயிடமிருந்து தூர தூரப் போய்க் கொண்டிருக்கிறது.

       பசிக்கிறதா என்று நாமாய்க் கேட்கிறவரையில் வாயைத் திறந்ததோ? என்னமோ பகவான்தான் காப்பாத்தணும்....என்று ஆதங்கமாய் துயரம் எழ அந்த அம்மாள் சொல்லும்போது....எத்தனை நுணுகி நுணுகி இந்தக் கருவைக் கையாண்டிருக்கிறார் தி.ஜா. என்று நாம் வியந்து போகிறோம்..

       இப்படி அனுப்பும் நிலை ஒரு குடும்பத்துக்கு வந்து விட்டதே? அதை யார் நினைப்பார்கள்? அதற்கு என்னதான் பரிகாரம்? அந்த வாத்தியாரோட குழந்தைகளுக்கெல்லாம் பள்ளிக்கூடம்னு இருக்கைல, இது மட்டும் இப்படி தேசம் விட்டுப் போகுமா? குழந்தையைப் பார்த்து எல்லா நெஞ்சமும் இளகுகிறது. உடன் பயணிப்போருக்கும் மனம் வேதனை கொள்கிறது.

       குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. அந்தச் சிறுவன் தன் கையிலிருக்கும் ஆரஞ்சுப் பழத்தை அந்தச் சிறுமியிடம் வழங்குகிறான்.

       வாண்டாண்டா கண்ணு..அம்மா உரிச்சுக்கொடுத்து சாப்பிடணும்னு சொன்னியே....என்று அந்த அம்மாள் சொல்ல....

       அப்பா...வாங்கிக்கச் சொல்லுப்பா.... - வாங்கிக்கோம்மா....என்று சொல்ல வாங்கிக்  கொள்கிறது அந்தச் சிறுமி.

       ஸ்வாமி... நல்ல உத்தமமான பிள்ளையைப் பெத்துருக்கேள்...என்று வாடா கண்ணு என்று வாரியணைத்து முத்தமழை பொழிகிறாள் அந்த அம்மாள்.

       கும்பகோணம் வந்து வி்டுகிறது. பையனை அழைத்துக் கொண்டு நடக்கிறார் அவர். நன்றாய் நடக்கத் தெரிந்த அவனை அள்ளித் தூக்கிக் கொள்கிறார். வாரியணைத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்வு பரபரக்கிறது. தழுவிக் கொண்டே போகிறார். உள்ளம் பொங்கி வழிகிறது. அந்தச் சிவனையே, சச்சிதானந்தத்தையே கட்டித் தழுவிக்கொண்ட ஆனந்தம் பிறக்கிறது அவருக்கு.

       மனிதப் பிறவியைக் கொண்டாடியவர் தி.ஜா. மனிதராக வாழ்வதனால் அல்லவா தப்புகள் செய்ய முடிகிறது என்று மகிழ்ந்து களிகூர்ந்தவர். அவர் கலை உலகம் மாய லோகம்....அது ரத்தத்தாலும், சதையாலும், நுண்உணர்வாலும், ஓசை தவிர்த்த ஓசையாலும் உருவாக்கப்பட்ட உலகம் என்கிறார் பிரபஞ்சன்.  நாம் நமது உழைப்பைச் செலுத்திப் படிக்கும் “நமது இந்த இலக்கிய  வாசிப்பில் இதைத் துல்லியமாக உணரலாம்.

                                          --------------------------------

 

      

 

30 அக்டோபர் 2020

அரங்க நாடகம் - “சரக்கு-பல சரக்கு” தினமணி சிறுவர் மணி 30.10.2020

 

 

அரங்க நாடகம்                                                                “சரக்கு-பல சரக்கு”                                    

காட்சி-1 - இடம் - வீடு - மாந்தர் - விஜயலட்சுமி-அம்மா, சதாசிவம்-அப்பா மற்றும் சீனு, ரமேஷ், கார்த்திக்-மூன்று மகன்கள் மற்றும் இவர்களது நண்பன் வினய்.

விஜயலட்சுமி - பைகள் எடுத்திட்டீங்களா...

ஆச்சும்மா - மூவரின் ஒருமித்த குரல்.

விஜயலட்சுமி - வினய்...நீ இவங்களோட போறியா...இல்ல இங்க உட்கார்ந்து பாடம் எழுதப் போறியா?

வினய் - ஆன்ட்டி...நானும் போறேன்...இவங்களோட சேர்ந்து நானும் தெரிஞ்சிக்கிறேன்.

விஜயலட்சுமி - குட் பாய்...அப்போ உங்கம்மாட்ட நான் சொல்லிடுறேன்.. வினய் கொஞ்சம் லேட்டா வருவான்னு....இங்கயே டிபன் சாப்டிட்டுப் போகலாம்...சரியா...?

வினய் - ஓ.கே. ஆன்ட்டி..... - நால்வரும் இறங்கி நடக்கிறார்கள்.                           

விஜயலட்சுமி - வீதில போகும்போது இடது ஓரமாப் போகணும்....பின்னாடி வர்ற வண்டி, முன்னாடி வர்ற வண்டி இரண்டுக்கும் அதுதான் வசதி....நமக்கும் பாதுகாப்பு... 

சதாசிவம் - இந்த நாலு சாமான்கள வாங்குறதுக்கு இந்தப் பொடிப் பசங்களப் போய் அனுப்புறியே...நான் போக மாட்டனா...? இதுக்கு நாலு பேரா?

விஜயலட்சுமி - வயசு பதினஞ்சு, பதிமூணு,  பன்னெண்டுன்னு  ஆச்சு...இன்னும் என்ன பொடிப் பசங்க....உலகத்தையே அளந்துட்டு வருவாங்க.... பக்கத்துலதானே இருக்கு ஸ்டோர்...பழகட்டும்.....    

காட்சி-2 - இடம் - நீண்ட வீதி - மாந்தர் - சீனு, ரமேஷ், கார்த்தி, வினய்....                 சீனு - டேய்...அம்மா கொடுத்திருக்கிற லிஸ்டை நீங்க ரெண்டு பேரும் படிச்சீங்களா....? 

ரமேஷ் - கடைல லிஸ்ட்டைக் காண்பிச்சு எடுத்துக்குடுன்னா குடுக்கறான்...அவ்வளவுதானே?

கார்த்திக் - டே...டேய்...அம்மா அதுக்காகவா நம்பளை அனுப்பிச்சிருக்காங்க...நாமளே பார்த்து கரெக்டா எடுத்திட்டு வரணும்னுதான்...

மந்த்ரா டிபார்ட்மென்டல்  ஸ்டோர்ஸ்...- கடையின் பெயரைப் படித்துவிட்டு    உள்ளே நுழைந்தார்கள்.

சீனு - டேய்...கொண்டு வந்த பைகளை வாசல் கவுன்டர்ல கொடுத்து டோக்கன் வாங்குங்க..

ரமேஷ் - ஏற்கனவே தெரியுமா இதெல்லாம் உனக்கு...?

சீனு - அம்மா கூட வந்திருக்கேன்ல...அப்ப கவனிச்சது.

பைகளைக்  கொடுத்து டோக்கன் பெறுகிறான் ரமேஷ்.

சீனு - டே...டேய்..அதோ ப்ளாஸ்டிக் பக்கெட் இருக்கு ரெண்டு எடுத்துக்குங்க...அதுலதான் சாமான்களைப் போடணும்....( எடுத்துக் கொள்கிறார்கள்)

சீனு - முதல்ல அரிசி....இதோ இருக்கு பார்...ponni rice 1 Kg. ன்னு....அதுல நாலு பாக்கெட்  எடு...அதாவது 4 கிலோ....

ரமேஷ் - சாதம் வடிக்கிற  அரிசிதானடா....அம்மா தோசை பண்ணுவாங்களே....டிபன்...?       

கார்த்திக் - கரெக்டா கேட்ட...சாப்பாட்டு அரிசிதான் இது. தோசை அரிசின்னா...அது புழுங்கல் அரிசி...இதோ இப்டி இருக்கும்....பார்த்தியா....idly rice ன்னு போட்டிருக்கு...-

 ரமேஷ் - உனக்கெப்டிடா தெரியும்...?

கார்த்திக் - வீட்டுல பார்த்திருக்கேன். அம்மா சொல்லியிருக்காங்க... சரி....ஜீனி பாக்கெட் எடு.....கவனம்...அதுல பொடி ஜீனி, பெருஞ் ஜீனின்னு இருக்கு....நல்லா குரு குரு குருன்னு பொடிய்யா இருக்கும்...அந்தப் பாக்கெட்டைப் பார்த்து எடு...ரெண்டுக்கும் விலையே கொஞ்சம் வித்தியாசப்படும்...

சீனு - பார்றா...என்னா போடு போடறான்னு....? எப்டித் தெரிஞ்சி வச்சிருக்கான் பார்த்தியா?

கார்த்திக் -சரி விடு...இப்ப எல்லாரும் தெரிஞ்சிக்கத்தானே போறோம்...புளி எழுதியிருக்காங்கல்ல அம்மா....அதோ இருக்கு பார்....அந்தப் பாக்கெட்டை எடு....

ரமேஷ் - இதோ இங்கயே இருக்கே....

சீனு - அதான் கவனமாயிருக்கணும்...இது புதுப் புளி.....அம்மா பழம்புளிதான் வாங்கணும்னுவாங்க...அதுதான் குழம்புக்கு நல்லாயிருக்கும்...அரை கிலோதான் போட்டிருக்காங்க.....பாக்கெட்டைக் கவனிச்சு எடு......அடுத்து....சொல்லுடா....ஓ...!லிஸ்டே எங்கிட்டதான் இருக்கோ...நான்தானே சொல்லணும்...? வெல்லம்...எங்கேயிருக்கு பாரு.....

ரமேஷ் - அது எதுக்குடா...?

சீனு - பாயசம் வைப்பாங்க...இது ஒரு கேள்வியா? டே...டேய்...அது அச்சு வெல்லம்...அம்மா சொல்லியிருக்கிறது மண்டை வெல்லம்....பெரிய பெரிய உருண்டையா அதோ இருக்கு பாரு...அதுல ஒண்ணு எடு....அரைக் கிலோன்னு போட்டிருக்கா பாரு....

கார்த்தி - ஆமடா.....உறாஃப் கேஜின்னு இருக்கு....

சீனு - அதே தான். இந்தப் பக்கெட்ல போடு.....அடுத்து.... மிளகாய் வற்றல் ....இந்த வரிசைல கடைசில அடுக்கியிருக்காங்க பார்.. - ஓடுகிறான் கார்த்தி...

ரமேஷ் - இர்றா...நான் எடுக்கிறேன்... என்று பாய்ந்து ஒரு பாக்கெட்டை எடுத்து வருகிறான்.

சீனு - டே..டேய்...இது குட்டை மிளகா...அம்மா எழுதியிருக்கிறது நீட்ட மிளகா...அடுத்த வரிசைல இருக்கு பாரு.....

ரமேஷ் - அது வேறேயா...என்னெல்லாம்தாண்டா வித்தியாசம் இருக்கு...? ஏன்...இந்த மிளகாய் உரைக்காதா?                                          

சீனு- அது சாம்பார் பொடி அரைக்கிறபோது வாங்குவாங்க...சமையலுக்கு இதுதான்.....எனக்கு நல்லாத் தெரியும்.....

கார்த்தி - உனக்குத்தான் எல்லாம் தெரிஞ்சிருக்கே...அப்புறம் நாங்க எதுக்கு? நாங்கபாட்டுக்கு விளையாடுவோம்ல.....?

ரமேஷ் - ஏண்டா....நாமளும் தெரிஞ்சிப்போம்டா...சீனு அண்ணாவுக்குத் தெரிஞ்ச மாதிரி நாளைக்கு நம்மள மட்டும் அம்மா கடைக்குப் போகச் சொன்னாங்கன்னா? தப்பில்லாம வாங்க வேணாமா?

சீனு - சரி...சரி...அடுத்த சாமான்.....கடுகு...கடுகு......அப்புறம் பாசிப்பருப்பு......   - சொல்லிக் கொண்டே போய் எடுக்கிறான். கார்த்தியும் ஒன்று எடுத்து வருகிறான்.

சீனு - கார்த்தி...அதை அங்க வச்சிடு...அது பொடிக் கடுகு....இதைப் பாரு...இதுதான் நம்ம அம்மா வழக்கமா பயன்படுத்துற சமையலுக்குத் தாளிக்கிற பெருங்கடுகு....வித்தியாசம் தெரியுதா?....இதத்தான் நிறைய வீடுகள்ல  பயன்படுத்துவாங்க.....

கார்த்தி - அப்போ அது...?

சீனு  - அதுவும் சமையலுக்குத்தான்.....விருப்பம் போல எடுப்பாங்க... நம்ம அம்மா யூஸ் பண்றதத்தானே நாம வாங்கணும்...இல்லன்னா போய் திருப்பிக் கொடுத்திட்டு பெருங்கடுகு வாங்கிட்டு வான்னு அனுப்புவாங்கல்ல...?     

கார்த்தி - சரிடா.....நீதான் கரெக்டா சொல்றியே...! அப்புறம் எதுக்கு மாத்திக்கிட்டு.....இந்தா பாசிப்பருப்பு....

சீனு - வெரி குட்...எங்க பாசிப்பயறுன்னு போட்டிருக்கிறத எடுத்திருவியோன்னு நினைச்சேன்...பயறு வேறே...பருப்பு வேறே.... சன் ஃப்ளவர் ஆயில்னு போட்டிருக்கும் பாரு...அந்தப் பாக்கெட்டுல ஒரு கிலோ ஒண்ணு எடு....

ரமேஷ் - நான் எடுக்கிறேன்டா....வேகமாய்ப் போய் எடுத்தான்.   சரசரவென்று அடுக்குகள் குலைந்தன.  

சீனு - மெதுவாடா...திட்டப் போறாங்க....என்ன அவசரம்...? பார்த்து நிதானமா எடுக்க மாட்டியா? பாக்கெட் பிரிஞ்சு எண்ணெய் வழிஞ்சிடுச்சின்னா?  

ரமேஷ் - ஸாரிடா...... கலர்ஃபுல்லா இருந்திச்சா... அதான் ஒடிப் போய் டக்குன்னு எடுத்திட்டேன்.

சீனு - ஓ.கே....ஓ.கே.....அவ்வளவுதான் லிஸ்ட் முடிஞ்சிச்சு......வாங்க போவோம்....

கார்த்தி - டே...டேய்...முறுக்கு பாக்கெட் ஒண்ணு எடுத்துக்குவோம்டா....

 சீனு - அம்மாதான் வீட்ல செய்து தர்றாங்கல்ல....அது போதாதா? இதை ஏன் வாங்கினேன்னு என்னத்தான் திட்டுவாங்க...நோ...நோ...... (கார்த்தி முகம் சுருங்கிப் போகிறது-அதை வினய் கவனிக்கிறான்)

வினய் - அம்மாட்ட நான் சொல்றேன்டா...ஒண்ணும் சொல்ல மாட்டாங்க...முறுக்கு மட்டும் எடுத்துக்கோ.....

சாமான்களோடு வீடு வந்து சேருகிறார்கள் நால்வரும்

வினய் - ஆன்ட்டி...ஆசையா ஒரு முறுக்கு பாக்கெட் மட்டும் எடுத்தோம்...திட்ட மாட்டீங்களே...?

விஜயலெட்சுமி - உங்கள நான் திட்டுவேனாடா கண்ணுகளா...நீங்க தெரிஞ்சிக்கணும்னுதான் கடைக்கே அனுப்பிச்சேன்.... முறுக்குக்கு பதிலா ஒரு கடலை மிட்டாய் பாக்கெட் எடுத்திருக்கலாமே...!உடம்புக்கும் நல்லது....- என்றவாறே அனைவரையும் டிபன் சாப்பிட அழைக்கிறாள்.

சதாசிவம் - நல்ல ப்ராக்டிஸ் பசங்களுக்கு.... ஒண்ணொண்னா தெரிஞ்சிக்கதானே வேணும்...அன்றாட நடைமுறை அவசியங்களாச்சே இது....! டேய் பசங்களா...சுக்குமி - லகுதி - இப்பிலி-ன்னா என்னன்னு தெரியுமாடா உங்களுக்கு? - சொல்லிவிட்டுச் சத்தமாய்ச் சிரிக்கிறார்.....

திரை

-------------

 

 

 

29 அக்டோபர் 2020

தி.ஜா.நூற்றாண்டு - “செய்தி“ - சிறுகதை - வாசிப்பனுபவம் -

தி.ஜா.நூற்றாண்டு - “செய்தி“ - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன்

      இசையின் மூலமாக இறைவனை அடைதல் என்றொரு வழிமுறை உண்டு. தியாகப் பிரம்மம் எனப்படும் சங்கீத மும்மூர்த்திகள் அதைத்தான் பின்பற்றினார்கள். நம் இசையின் மகிமை அறிந்த ஒரு வௌ்ளைக்காரன் அதை உணர்த்துகிறான் இந்தக் கதையில்.

      செய்தி என்றதும் உலக நடப்பியல் சார்ந்த விமர்சனங்களடங்கிய கதையாகத்தான் இருக்கும் என்று உள்ளே புகுந்தால், இந்தச் செய்தி வேறு தகவலை நமக்குத் தருகிறது. இசையில் லயித்துக் போகும் ஒருவன், பேரிரைச்சலான இந்த உலக நிகழ்வின் நடுவே அமைதியைத் தேடி வேண்டும் ஒரு குரலை, ,அதன் மகிமையை, அதைத் திறம்படக் கையாளும் பிள்ளையின் நாத மேன்மையில் உணர்கிறான். அந்த அமைதி என்கின்ற செய்தி அவரின் இசையின் மூலமாக பரிபூர்ணமாக அவனால் உணரப்படுகிறது.

       தெற்கத்திய சங்கீதத்தில் திளைத்து, அதன் மகிமையை அனுபவித்து உணர வேண்டும் என்று வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறது  வெள்ளைக்காரன்  பிலிப் போல்ஸ்காவும் அவனது கோஷ்டியும்

       உங்க இஷ்டம்...வந்திருக்கிறவன் நிறை குடமாத் தெரியறான்...எந்தச் சங்கீதம் கேட்டு வெகு காலத்திற்குப் பிறகும் கண்டா நாதத்தின் ஊசலைப்போல  உற்ருதயத்தில் ஒலிக்குமோ, அந்த மாதிரி ஒரு சங்கீதத்தைக் கேட்க வேண்டுமாம் என்று சொல்கிறார் வக்கீல் மணி ஐயர்.

       நாட்டையைக் கம்பீரமாக ஆலாபனம் செய்து கீர்த்தனத்தைத் தொடங்குகிறார் பிள்ளை. போல்ஸ்காவிடம் புன் முறுவல் பிறக்கிறது. விழி மேலே செருகிக் கொள்கிறது. அமிர்தத் தாரையாகப் பெருக்கெடுக்கும்  நாதப் பொழிவில் அவன் தன்னை இழக்கிறான். நாதம் அவன் ஆத்மாவைச் சுண்டி இழுக்கிறது. அதுவரை காணாத லோகங்களுக்கும், அநுபவங்களுக்கும் கொண்டு செல்கிறது. ஆற்றோடு போகிறவனை இஷ்டப்படி வெள்ளம் அடித்து இழுத்துக் கொண்டு செல்வதுபோல் அந்த இசையோடேயே பயணம் செய்து, தன்னை நாத வெள்ளம் அடித்துக் கொண்டு போகும்படி விட்டுவிடுகிறான் அவன்.

       தொடர்ந்து தஸரிமா...மா....என்று ஸாமா ராகத்தில் தொடங்கி ஆலாபனம் செய்து, சாந்தமுலேகா...சௌக்கியமுலேது...நாட்டைக் குறிஞ்சி ராகப் பாடலை பிள்ளையவர்கள் தன் நாதத்தில் இழைக்க, சாந்தமில்லாமல் சுகமுண்டோ என்கிற தொனியில் தோட்டத்தில் மலர்ந்து மணத்தைப் பெருக்கும், அமைதியான மணத்தை வீசும், பவழமல்லியின் நினைவு வக்கீலின் மனத்தில் தவழ, அந்த லயிப்போடு போல்ஸ்காவைப் பார்க்கிறார் அவர். அவன் எந்த உலகத்தில் இருக்கிறானோ....எந்த வானில் பறக்கிறானோ? சத்யத்தைக் கண்டு இறைஞ்சுவதுபோல்...சாந்தமுலேகா...என்ற அந்த வரி கொஞ்சும் சுகம் குழந்தையைக் கொஞ்சுகிறாற்போல....போல்ஸ்காவிற்கு மெய் சிலிர்த்துப் போகிறது.

       மிஸ்டர் பிள்ளை...இதிலிருந்து, இந்த லயிப்பிலிருந்து, இந்த உலகத்திலிருந்து நான் விடுபட விரும்பவில்லை....இதிலேயே தொடர விரும்புகிறேன்...என்று திரும்பத் திரும்பச் சொல்லி, சாந்தமுலேகாவையே...மறுபடி...மறுபடி பாடச் சொல்லி, வாசிக்கச் சொல்லிக் கேட்கிறான். வாசியுங்கள்...வாசியுங்கள.....இல்லையென்றால் என் உயிர் போய்விடும்....என்று சொல்ல, அவன் நிசப்தத்தை, அங்கு தவழும் அமைதியான லயிப்பை, அவனறிந்த அந்தச் செய்தியைக் கலைக்கத் துணிவில்லாமல், வக்கீலும் மெல்லப் பிள்ளையிடம் வற்புறுத்துகிறார்.

       ஐந்தாறு தடவை திருப்பித் திருப்பிக் கீர்த்தனத்தை வாசித்து, கடைசியில் நாதம் மௌனத்தில் போய் லயித்ததுபோல் இசை நிற்கிறது.  போல்ஸ்கா அப்படியே தலையை அசைத்துக் கொண்டேயிருக்கிறான். கோயில் மணியின் கார்வையைப்போல் அவன் சிரமும் உள்ளமும் ஆத்மாவும்  அந்த நிசப்தத்தில் அசைந்து ஊசலாடிக் கொண்டேயிருக்கிறது.

       இந்தக் கையைக் கொடுங்கள்... வாசித்த இந்தக் கையைக் கொடுங்கள்...கடவுள் நர்த்தனமாடுகிற இந்த விரலைக் கொடுங்கள்...நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன்....என்று அவரது கரத்தை வாங்கிக் கொள்கிறான். பிள்ளைக்கு அமைதியும் சாந்தமும் நிறைந்த அந்தச் செய்தி கிடைத்து விடுகிறது.

       இசையும், காட்சிகளும் நம்மை எங்கோ இழுத்துச் செல்கிறது. ஒரு அருமையான அழகியல் அனுபவத்தை நமக்குத் தருகிறது. தி.ஜா.வின் தங்கு தடையில்லாத, ஆற்றொழுக்கான நடை நம்மை லயிக்க வைத்து இழுத்துச் செல்கிறது. நாதஸ்வரக் கீர்த்தனைகளில் நம்மூர் சினிமாப்பாடல்களைக் கலந்து வாசித்து, வெளிநாட்டவனை ஈர்க்க வேண்டும் என்று, மகன் தங்கவேலு இங்கே தயாராகிக் கொண்டிருக்கையில், மொழி அறியாத அந்த வெள்ளைக்காரன், பிள்ளை அவர்களின் இசையின் மகத்துவத்தில், அந்த நாதத்தின் சுகானுபவத்தில்,  அதன் ஈடுபாட்டில், ஆழ்ந்த ரசனையில், முழுப் பொருளையும் உணர்ந்து கொள்கிறான். மெய் சிலிர்த்து நிற்கிறான். இதுவே இந்தக் கதையின் சாரம். இசையின் அனுபவத்தை தி.ஜா. விவரிக்கும் போக்கில் அவர் சொல்ல வந்த செய்தி நமக்குக் கிடைத்துப் போகிறது.

                                  -----------------------------------------------

 

 

 

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...