28 மார்ச் 2021

எழுத்து - சி.சு.செல்லப்பா - வல்லிக்கண்ணன் - வாசிப்பனுபவம்

எழுத்து - சி.சு.செல்லப்பா - வல்லிக்கண்ணன் - வாசிப்பனுபவம் - உஷாதீபன்        (வெளியிடு:- ஞானியாரடிகள் தமிழ் மன்றம், சிந்தாதிரிப் பேட்டை,சென்னை-2)



      சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம் - என்ற க.நா.சு.வின் கூற்றை ஏற்றுக் கொண்டுதான், அதனைக் குறிக்கோளாகக் கொண்டுதான் “எழுத்து” தொடங்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார் சி.சு.செ.

      இன்றைய புதுக்கவிதை வளமுற்று செழித்து விளங்குவதற்கு எழுத்துதான் அடிப்படையாகும். தான் எடுத்துக் கொண்ட கொள்கைக்கு ஏற்றவாறு “எழுத்து“ சாதனை புரிந்ததினால், நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஓர் மைல் கல்லாக அது இருக்கிறது - என்று இப்புத்தகத்திற்கான பதிப்புரையில் திரு அ.ந. பாலகிருஷ்ணன் பதிப்பாசிரியர் தெரிவிக்கிறார்.

      விமர்சனங்கள் - விமர்சிக்கின்றவரின் மீது விமர்சனங்கள் காணும் போக்கு விடுத்து, கதை மாந்தர்களின் மீது மட்டும் விமர்சனம் அமையுமானால் தமிழில் விமர்சனக் கலை மேலும் சிறக்கும் என்றும் குறிப்பிடுகிறார். இப்புத்தகம் வெளியிட்ட காலகட்டமான 2001 லேயே இம்மாதிரியான அபிப்பிராயங்கள் விரவி இருந்திருக்கின்றன என்பதை நாம் அறிய முடிகிறது.

      தமிழ் எழுத்துலகில் “மணிக்கொடி எழுத்தாளர்கள்“ என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்த படைப்பாளிகளில் சி.சு. செல்லப்பாவும் ஒருவர் என்று கூறித்தான், அவரைப்பற்றியும், அவரின் எழுத்து இதழ் பற்றியதான தகவல்களையும் ஆரம்பிக்கிறார் திரு வல்லிக்கண்ணன். 1930 களில் தமிழ் சிறுகதைக்கு இலக்கியத்தரம் சேர்க்கவும், தமி்ழ் சிறுகதையை உலக இலக்கியத் தரத்துக்கு உயர்த்தவும் இலட்சிய வேகத்தோடு செயல்பட்டவர்கள் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று புகழாரம் சூட்டுகிறார். வெறும் புகழ்ச்சியா இது? அன்றைய கால கட்ட எழுத்தாளர்களைத்தானே இன்றும் நாம் திரும்பத் திரும்பப் படித்து வழிகாட்டிகளாய்ப் பின்பற்றி வருகிறோம்?

      புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந.பிச்சமூர்த்தி, மௌனி, பி.எஸ்.ராமையா, பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) ந.சிதம்பர சுப்ரமணியம், சி.சு.செ., க.நா.சு., எம்.வி.வி., இவர்கள் அவரவர் ஆற்றலையும், தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் சிறுகதைகளை எழுதக்கண்டுதானே பிற்காலத்தில் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். பின்னர் கதைகள் எழுத முற்பட்ட இளைஞர்களை இவர்களது எழுத்துக்கள்தான் பாதித்தன என்பதுதானே மறுக்கமுடியாத உண்மை?

      தந்தை வழியில் சின்னமனூரும், தாய் வழியில் வத்தலக்குண்டுமாக நான் மதுரை ஜில்லாக்காரன் என்று கூறிப் பெருமை கொள்கிறார் சி.சு.செ. ஆனாலும் திருநெல்வேலியில் அவருக்கு ஒரு தனி அபிமானம் இருந்திருக்கிறது. அவரது தந்தை பொதுப்பணித்துறையில் ஓவர்சீயராக இருந்ததுவும், தாமிரபரணியிலிருந்து தூத்துக்குடிக்கு இருபத்திநாலு மைல் தூரம் குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லும் பணியை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.

      அத்தோடு தாய் வழி ஊரான வத்தலக்குண்டு பற்றி அறியச் செய்ய வேண்டும் என்று பி.ஆர். ராஜம் அய்யருக்கு (கமலாம்பாள் சரித்திரம்) நூற்றாண்டு விழா எடுக்கிறார். ஸ்ரீவைகுண்டம் ஊரில் வசித்தபோது எழுத்தாளன் ஆக வேண்டும் என்கிற உந்துதலில் கதை எழுதி அந்த முதல் கதை சங்கு இதழில் வெளி வருகிறது. என் வாழ்வில் சங்கு சுப்ரமணியன் அவர்களை என்னால் மறக்கவே முடியாது. என் கதையை வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்தி முதல் கடிதத்தை எழுதியவர் அவர்தான் என்று பெருமையோடு நினைவு கூறுகிறார் சி.சு.செ.

      வாடிவாசல் நெடுங்கதையை எழுதுவதற்காக மஞ்சிவிரட்டு நடக்கும் இடத்திற்குச் சென்று கையில் ஒரு காமிராவோடு அவரே பல கோணங்களில் அந்த ஜல்லிக்கட்டு நிகழ்வைப் படம் பிடித்து வந்ததும், வீட்டிலேயே ஒரு இருட்டறை அமைத்து, அந்த ஃபிலிம்களைக் கழுவி புகைப்படங்களை உயிர் பெறச் செய்ததும் அந்த சிறு நாவலை எழுதுவதில் அவர் எவ்வளவு ஆர்வமும், தன் முனைப்பும் காட்டியிருகி்கிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.  

      பிறகு இலக்கிய விமர்சனத்தில் அதிக நாட்டம் ஏற்பட்டு அமெரிக்கன் லைப்ரரி, பிரிட்டிஷ் லைப்ரரி என்று பெரிய பெரிய புத்தகங்களை எடுத்து வந்து விடா முயற்சியோடு படித்திருக்கிறார். அந்த சமயம் அவர் வசித்தது சென்னை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெரு. வத்தலக்குண்டில் போதிய இலக்கிய ஆர்வம் இல்லை என்று கூறி சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்து, பிறகு பையனுக்கு பெங்களூர் மாறுதலில் அங்கும் சென்று வசித்து, அந்தச் சூழலும் பிடிக்காமல் தனியே மனைவியோடு வந்து மீளவும் திருவல்லிக்கேணிக்கே வந்து சேர்கிறார்.

      இதழுக்கு “எழுத்து” என்று பெயர் வைத்தபோது கேலி செய்தவர்கள் அநேகம். இதிலென்ன தவறிருக்கிறது? இங்கிலீஷில் ரைட்டிங், நியூ ரைட்டிங் என்றெல்லாம் பெயர் வைத்து இதழ் நடத்தவில்லையா? அதே மாதிரிதான் இதுவும் என்று பதிலளிக்கிறார் சி.சு.செ. சந்தாதாரர்களுக்கு மட்டுமே இவ்விதழ், கடை விற்பனை கிடையாது என்று கண்டிப்பாகக் கூறிவிடுகிறார். இதழுக்கு சந்தா சேர்ப்பதற்காக ஊர் ஊராக அலைந்து பஸ்ஸிலும், ரயிலிலும் பயணம் செய்து, வாசிப்பில் ஆர்வமுள்ளவரிகளிடம் இதழ்பற்றி எடுத்துச் சொல்லி இதழை வளர்க்க அவர் பட்ட பாடு நம்மை நெகிழ வைக்கிறது.

      அதுபோல் சிறந்த புத்தகங்களை வெளியிட வேண்டும் என்கிற ஆர்வமும் அதிகரிக்க, வ.ரா., ந.பிச்சமூர்த்தி, சிட்டி ஆகியோரின் படைப்புக்களை எழுத்து பிரசுரமாகக் கொண்டு வருகிறார். வல்லிக்கண்ணன் எழுதி, தீபத்தில் வெளிவந்த ”புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற கட்டுரை நூலை நான்தான் கொண்டு வருவேன் என்று ஆர்வத்தோடு சொல்லி வெளியிட்டிருக்கிறார். அது முழுதும் விற்றுப் போகிறது. ஆனால் அந்தப் பணம் வெவ்வேறு வகையில் செலவாகிப்போக, மனசாட்சி உறுத்த, ஒரு கட்டத்தில் ஒரு ஆயிரம் ரூபாயைச் சேர்த்துக் கொண்டு வல்லிக்கண்ணனிடம் சென்று கொடுக்க, அவர் காசு வேண்டாமே என்று மறுக்க, நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது, இது முதல் தவணைதான் என்று சொல்லி வற்புறுத்திக் கொடுத்து வருகிறார். பிற்பாடு இன்னொரு சமயத்தில் இன்னொரு ஆயிரம் ரூபாயை வழங்கி இப்போதுதான் மனம் நிம்மதியாச்சு என்று கூறி மகிழ்கிறார். அந்த நேர்மை உள்ளமும், நாணயமும்...இன்று ஒவ்வொருவரும் கண்டிப்பாக நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.

      எழுத்து பிரசுரம் நூல்களைக் கடைக்காரர்கள் வாங்க மறுக்க, வற்புறுத்திக் கொடுக்க, விருப்பமின்றி வாங்கி மூலையில் போட்டு வைக்கிறார்கள். பார்வையாய் அடுக்காமல் மூலையில் அடுக்கினால் எப்படி விற்கும்? எவ்வளவு விற்றிருக்கிறது? என்று அடுத்து இவர் போய் ஆர்வமாய் நிற்க, ஒண்ணு கூடப் போகலீங்க...என்று திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். இந்தப் புத்தகங்களையும், எழுத்து இதழ்களையும் தரமான வாசகர்களிடம் கொண்டு சேர்க்கவும், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் நூலகங்கள் என்று சி.சு.செ.யோடு வல்லிக்கண்ணனும் சேர்ந்து அலைந்திருக்கிறார்கள். நெல்லை மாவட்டத்தில் சி.சு.செ.யோடு அலைந்ததோடு வல்லிக்கண்ணன் நின்று கொள்கிறார். புத்தக மூட்டைகளை, பைகளைச் சுமந்து சுமந்து தோள்பட்டை வலியெடுத்து, கால் மூட்டு வலி பெருகி, ஒரு கட்டத்தில் சி.சு.செ.யும் இனி அலைதல் ஆகாது என்று நிறுத்திக் கொள்கிறார்.

      பணத்தின் தேவை அவருக்கு எப்போதும் இருந்து கொண்டேயிருந்திருக்கிறது. அத்தனையும் எழுத்து இதழுக்காகவும், புத்தகங்கள் போடுவதற்காகவும் என்று கரைந்திருக்கிறது. கோவை ஞானி அவர்கள் ஒரு முறை ஆயிரம் ரூபாய் அனுப்புகிறார். அதைக்கூட மறுத்து விடுகிறார் சி.சு.செ. அது உடல் நலமின்றி அவர் இருந்த நேரம். இருந்தாலும் அன்பளிப்புப் பெறுவதில்லை என்பதில் கண்டிப்பாக இருந்திருக்கிறார். என் விஷயத்திலும் இப்படி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவேயில்லை என்று வருந்துகிறார் ஞானி அவர்கள். அமெரிக்காவின் குத்துவிளக்கு அமைப்பு புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு வழங்கியபோதும் அதை மறுத்துவிடுகிறார். அந்தப் பணத்தைப் பெற்று புத்தகங்கள் வெளியிடப் பயன்படுத்தலாமே என்று நண்பர்கள் கூற, அதை நீங்களே செய்யுங்கள் என்று இவர் கூறிவிட, பிறகுதான் சி.சு.செல்லப்பாவின் என் சிறுகதை பாணி என்ற நூல் வெளி வருகிறது.

      பிறகு பி.எஸ்.ராமையாவின் கதைக்களம் என்ற புத்தகத்தைக் கொண்டுவருகிறார். பிறகுதான் மகத்தான நாவலாக “சுதந்திர தாகம்” வெளி வருகிறது. பி.எஸ்.ராமையாவின் மீது அவ்வளவு அன்பு அவருக்கு. படைப்புக்களத்தில் ராமையாதான் பெஸ்ட். வேர்ல்ட் ஃபிகர் என்று புகழ்கிறார். ராமையா அவர்களின் எழுத்துபற்றி வேறு விதமாய்க் கருத்துக்களை வெளியிடுபவரை அவர் விரோதியாய் மதித்திருக்கிறார். அப்படியான ஒரு கருத்தை திரு சி.கனகசபாபதி அவர்கள் கூறிவிட ரெண்டு பேருக்கும் சண்டை வந்துவிடுகிறது. பேச்சு நின்று போகிறது. கடைசிவரை இருவரும் பேசவேயில்லை என்பதுதான் துயரம்.

      குங்குமப்பொட்டுக் குமாரசாமி போன்ற கதைகளெல்லாம் சுமார் ரகம்தானே என்று ஒரு முறை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் கூறிவிட உடனே சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொள்கிறார் சி.சு.செ. உங்களோடு பேசுவதைவிட சுவரோடு பேசுவதே மேல் என்கிறார்.

      திருப்பூரார் அவர்கள் அதை தமாஷாக இப்படிக் கூறுகிறார். அறையில் ஏற்கனவே இரண்டு பேர் இருந்தோம். இப்போது மூவராகிவிட்டோம்.  நான், அவர், சுவர்....

      ராமையாவை விமர்சிக்கும் நபரோடு எனக்கு பேச்சு வார்த்தை கிடையாது என்று சொல்ல, சரி...நாம் அவரை விட்டுவிட்டு வேறு பேசுவோம் என்று கூற சரி என்று அவர் பக்கம் திரும்பிக் கொள்கிறார். குழந்தை மனம் கொண்ட கோபம். அந்த உதட்டில் ஒளிந்து கொண்டிருந்த சிரிப்பு...என்னடா பண்ணுவேன்...என்னால உன்னோட பேசாம இருக்க முடியாதே....!!! - மனம் நெகிழ்கிறது இவருக்கு. நமக்கும்தான்.

      நான் தேர்ந்து கொண்ட கொள்கைகளிலிருந்து வழுவாமல் கடைசிவரை நேர்மையாக வாழ்ந்து கழித்து விட்டேன். அந்த திருப்தி எனக்குக் கிடைத்துவிட்டது. என்று பெருமையுறும் சி.சு.செ.1998 டிசம்பர் 18ல் அந்தத் திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் வீட்டில் காலமாகிறார்.

      சி.சு.செ.யைப்பற்றி இப்படிப் பல நினைவலைகளைப் பெருமையாய்ப் பகிர்ந்து கொள்ளும் வல்லிக்கண்ணன் அவரின் இலக்கிய சாதனைகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவருக்கு சிறப்பான இடத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை என்று நிறுவுகிறார்.

      இத்தொகுப்பில் காந்தியவாதி செல்லப்பா  என்று ஏ.என்.எஸ். மணியன் என்பவர் எழுதிய கட்டுரை மிகவும் மன நெருக்கமானதாகவும், ஆழ்ந்த நட்பு கொண்டதாகவும், மிகுந்த நேசத்தோடு விளங்குவதாகவும் அமைந்துள்ளது. சி.சு.செ., க.நா.சு. பற்றிய  சில குறிப்புகள் என்ற தலைப்பில் திரு தி.க.சிவசங்கரன் அவர்கள் (தி.க.சி) எழுதிய அற்புதமான கட்டுரையும் இந்நூலுக்கு பெருமை சேர்க்கிறது. எழுத்து இதழை மதிப்பீடு செய்து சின்னக்குத்தூசி அவர்கள் எழுதிய சில அத்தியாயங்கள் கொண்ட நீண்ட கட்டுரையும் இப்புத்தகத்திற்கு அழகு செய்கிறது. ஒரு சிறந்த ஆவணமாய்ப் பாதுகாக்கப்பட வேண்டிய வல்லிக்கண்ணனின் இந்நூல் இலக்கிய ஆர்வலர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம்.

                              ---------------------------------------------------

 

27 மார்ச் 2021

“இறும்பூது”-சிறுகதைத் தொகுதி - சத்யா G.P. -வாசிப்பனுபவம் - உஷாதீபன்

 

இறும்பூது”-சிறுகதைத் தொகுதி - சத்யா G.P. -வாசிப்பனுபவம் - உஷாதீபன்           (வெளியீடு- ஃபுட்பிரின்ட்ஸ் பப்ளிகேஷன்ஸ் பேரூர், கோவை641010)


 

      புத்தகத்தின் தலைப்பே நமக்கு உற்சாகமூட்டுகிறது. இறும்பூது. என்றால் பெருமைகொள்ளுதல் - அதுவும் நெஞ்சு நிமிர்த்தி சாதனை என்று எண்ணி சந்தோஷமும் பெருமையும் அடைதல். அதைத்தான் திரு.சத்யா இந்தத் தொகுதியில் நிரூபித்திருக்கிறார்.

      இவரது மூன்றாவது நூலான இந்தச் சிறுகதைத் தொகுதியில் பல நல்ல கதைகள் இருக்கின்றன. ஒரு தொகுதிக்கு மூன்று நான்கு கதைகள் தேறினாலே ஆஉறா, ஓகோ...என்று புகழக் கூடிய காலம் இது. பரிசுக்கதைகளாகத் தேர்வு செய்து தொகுப்பில் சேர்த்தால் அதன் சிறப்பு உச்சத்திற்குச் சென்றுவிடும்.  அந்தப் பணியை இத்தொகுதிக்காக எழுத்தாளர் சத்யா கவனமாய்ச் செய்திருக்கிறார். அதனால்தான் “இறும்பூது” என்று பொருத்தமான தலைப்பையும் கொடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

      ஓரிரு கதைகளைப் படிக்கும்போதே படைப்பாளியின் கதை சொல்லும் திறன் புலப்பட்டு விடும். அதுவே அடுத்தடுத்து என்று அந்தத் தொகுதியின் எல்லாப் படைப்புக்களையும் படித்து முடிக்கும்படி செய்து விடும். அம்மாதிரியான ஒரு பெருமையை இந்தத் தொகுதிக்கு தாராளமாய் வழங்கலாம்.

      மெத்தை வீடு....மெத்தை வீடு என்று காலம் பூராவும் ஊராரால் அடையாளப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் ஸ்வாமி மலை ஸ்ரீநிவாச சர்மாவின் வீட்டுக்கு உண்மையிலேயே அப்படியான ஒரு தேவை ஏற்படும்போது அந்த மெத்தை வீட்டின் மேற்கூரையை நிமிர்ந்து நோக்கும் ஸ்ரீநிவாச சர்மாவின் மனம் அப்போதுதான் நிறைவு பெறுகிறது. காரணம் தகப்பனார் மஉறாதேவ சர்மாவின் வீடாக இருந்து பெயர் பெற்ற  அந்த ஸ்தலம் அத்தனை காலம் கழித்து அப்போதுதான் உண்மையிலேயே ஸ்ரீநிவாச சர்மாவின் மெத்தை வீடு என்று அடையாளப்படுத்தப் படுகிறது. அதற்கான நியாயமான ஒரு தேவை ஏற்படும்போது மனம் பெருமையடைகிறது.

      அந்தக் காலத்தில் அம்மாதிரி இடங்களைச் சொந்தமாகக் கொண்ட நபர்களைப் பட்டப் பெயர் வைத்து அழைத்தலும் சட்டுச் சட்டென்று ஒருவரை உணர்ந்து கொள்ளவும், அவரின் பெருமை மிகு பரம்பரை வழி அவரை அறிந்து கொள்ளுதலுமான ஒரு வழக்கம் முன்னோர்களின் வழி வந்த ஒரு நியதியாக இருந்தது.

      தொழில் முறையில் அவர்கள் கடைப்பிடித்த ஒழுக்கமும், தர்மமும் அவர்களையும் அவர்கள் பரம்பரையையும் நேர்மையாய் முன்னிறுத்தின. அதனால் வாரிசுகள் அந்த நற்பெயரின் வழி நின்று முன்னோர்களின் பெருமைகளைத் தோள் ஏற்றிச் சுமந்து தங்களையும் பெருமைப் படுத்திக் கொண்டார்கள்.

      எந்தத் தொழில் செய்தாலென்ன-தொழில் சுத்தம் என்பதை மனதினில் வைத்து இயங்கினார்கள். ஒரு சின்ன சாப்பாட்டு மெஸ்தான். ஸ்வாமி மலை கோயிலுக்கு தரிசனத்திற்கு வருவோர்க்கு  தேடி வரும் இடமாக நிலைத்து விடுகிறது. வயிறு நிரம்பினால் மனது நிரம்புகிறது. நாக்கு ருசி எண்ணங்களை நிறைத்து அவர்களாலேயே அது பிரபலமடைகிறது. இடத்தின் முகவரி ஒவ்வொருவராக அப்படியே நகர்ந்து நகர்ந்து ஒரு குடும்பம் தரிசனத்திற்கென்று வரும்போது வசதியாய்த் தங்கி ஓய்வெடுத்து, ஸ்வாமி தரிசனம் செய்து கொள்ளவும், வயிற்றையும் மனத்தையும் ஆரோக்யமாய் நிரப்பிக் கொள்ளவுமான இடமாக ஸ்ரீநிவாச சர்மாவின் மெத்தை வீடு முன்னிற்கும்போது நமக்கே மனதுக்குள் ஒரு சந்தோஷம் புகுந்து கொள்கிறது. ஒழுக்க சீலமான ஒரு சிறுகதை. கல்கி சிறுகதைப் போட்டியில் இது தேர்வாகிப் பரிசு பெற்றதே இதற்கான பெருமை.

      உப்பு மாமா - என்றொரு கதை.  கடைசியில்தான் உறைக்கிறது அவர் பெயரும் சர்வேஷ் என்று. உப்பு மாமா பெயருக்கேற்றாற்போல் மிகுந்த சுரணையோடுதான் வாழ்ந்து கழிக்கிறார். அன்னபூரணி மெஸ்ஸில் சாப்பிடும் அவர் ஏன் தனியாக இருந்து காலம் கழித்தார் என்பது கடைசியில்தான் தெரிகிறது. மகனுக்காக இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளாமல் தியாக வாழ்க்கை வாழ்ந்தவர், தன் மகன் இரண்டாம் கல்யாணம் செய்து கொண்ட போது பிணக்கிக் கொண்டு தனியனாகிறார். அன்னபூரணி மெஸ்ஸின் ஓனர் சிவராமனின் பிள்ளை சர்வேஷ் சி.ஏ. படிப்பதற்காக மொத்தச் செலவையும் தான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தாராளமாய்ச் சொல்லும் அவர், மெஸ் செயல்படும் திட்டை ஊரிலுள்ள வீடு வெளியூரிலிருந்து வரும் பக்தர்கள் தங்க வசதியாய் விளங்கட்டும் என்று உயில் எழுதுகிறார்.

      மகனுக்குப் பாதி, தன்னை முழுக்க பாத்தியதைப் படுத்தி கடைசிவரை கவனித்துக் கொண்ட மெஸ் சிவராமனுக்கும் அவர் மகன் சர்வேஷூக்கும் பாதி என்று தாராள மனம் கொண்டு எழுதி வைத்துவிட்டுச் சாகிறார். ஆனாலும் இது அதிகம் என்று நேர்மையுள்ளத்தோடு உணரும் சிவராமன் மூணு நாள் துக்கம் கொண்டாடும் தாயாதிக்காரன் கூட நான் கிடையாதே என்கிற உறுத்தலில் ஏதோ எழுதிட்டார், நான் வேணும்னா வேண்டாம்னு மறு உயில் போட்டுடறேன் என்று உப்பு மாமாவின் மகன் ஸ்ரீநியிடம் சொல்ல....மகன் மறுத்துவிடுகிறார். அதுதான் அவரது ஆத்மா சாந்தியடையச் சிறந்த வழி...சரியாய்த்தான் செய்திருக்கிறார் என்று பெருந்தன்மையுடன் ஒப்புக் கொடுக்கிறார்.

      எங்கோ சில இடங்களில்தான் இம்மாதிரி நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அங்கங்கே நல்ல ஆத்மாக்கள் இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றை நாம் கேள்விப்படும்போது நெக்குறுகுகிறோம். உப்பு மாமா போன்ற நல் மனம் படைத்தவர்களை சொந்தங்களாகக் நாம் கொண்டிருந்தால் நாம் பேரதிருஷ்டம் செய்தவர்கள். நல்ல மனம் வாழ்க....என்று நம் நெஞ்சம் வாழ்த்துகிறது. சிறந்த கருத்தோட்டமுள்ள இச்சிறுகதை நேதாஜி-பேஸ்புக் குழு நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றிருப்பது சிறப்பு.

      வீட்டுக்கொரு கதை என்றொரு சிறுகதை.   வாழ்க்கைப் பயணம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வழியில் இழுத்துக் கொண்டு போய் விடுகிறது. அவரவர் குடும்ப வசதி வாய்ப்புகளுக்கேற்ப அது அமைகிறது. எம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையிலும், பெற்றோர்கள் குழந்தைகளை எத்தனை அக்கறை செலுத்தி வளர்க்கிறார்கள், அந்தக் குழந்தைகள் பெற்றோர்களின் வாழ்க்கைப் பாடுகளைப் பார்த்துப் பார்த்து எப்படிப் பொறுப்பாக வளர்கின்றன என்பதைப் பொறுத்து நம் வாழ்க்கைப் பயணங்கள் பிற்காலத்தில் அமைந்து விடுகின்றன.

      திரும்பிப் பார்ப்பதற்குள் காலங்கள் ஓடி விடுகின்றன. என்ன சாதித்தோம் என்று யோசிக்கையில் ஓடி ஓடி உழைத்ததும், குடும்ப வண்டியை ஓட்டுவதற்காகக் கழிந்த காலங்களும்தான் மிச்சமாகி நிற்கின்றன. அதுவே நிறைவையும் தந்து விடுகின்றனதான்.

      சர்வேஷ் என்ற பெயரில் எழுத்தாளர் சத்யாவிற்கு ஒரு ஈர்ப்பு உண்டு போலிருக்கிறது. இவரது தொகுதியில் சில கதைகளுக்கு அந்தப் பெயரில் ஒரு கதாபாத்திரம். ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு கதை. அதுபோல் சா்வேஷூக்கும் ஒரு கதை. வசதிக்கேற்ற வாடகையில் வீடு மாற்றுவதில் ஆரம்பிக்கிறது.  அவர் சந்திக்கும் சின்ன ஓட்டல் நடத்தும் பாய் - அவருக்கும் ஒரு கதை.....மியூச்சுவல் ஃபன்ட், சிப், டிமேட் அக்கெளன்ட் என்று வாடிக்கையாளர்களைத் தேடி அலையும் பணி, அன்றாடம் வெவ்வேறு மனிதர்களைச் சந்தித்தலும் உரையாடுதலும், தன் உற்சாகமான பேச்சினால் அவர்களை சேமிக்கத் தூண்டுதலும், அதுவே அன்றாடம் தன் வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொள்வதான காரணியாக அமைந்திருப்பதில் திருப்தி கொள்தலும்....

      இராப் பொழுது முச்சூடும் தூங்காமல் கழிக்கும் சின்ன ஓட்டல் நடத்தும் பாய் - இருக்கிறாரே, அவருக்கும் மட்டும் என்ன....எந்தெந்த நேரத்தில் என்னென்ன வாடிக்கையாளர்கள் வருவார்கள், அவர்கள் எதிர்பார்த்து வரும் உணவு வகை என்ன...என்று அறுதியிட்டு உணர்ந்து அந்தச் சில நபர்களுக்காக நேரம் காலம் பார்க்காமல் கடையைத் திறந்து வைத்திருந்து காத்திருத்தலில் கிடைக்கும் சுகம், பிறகு காலந்தாழ்த்திக் கடையை அடைத்தாலும், அருகிலுள்ள நண்பர்களை மனதில் வைத்து 24 மணி நேர மெடிக்கல்ஸ் நண்பர்களிடம் சென்று விடிய விடியப் பேசிக் கொண்டிருத்தலும், பிறகு மணி மூன்றரைக்கு மேல் எதிர் டீக்கடை திறந்து பாட்டுப் போட்டு, அந்தக் கடையில் சென்று சூடாகத் தேநீர் அருந்துதலுமாக பொழுதுகளை நகர்த்திவிட, நாம் நினைத்தால் நம் வாழ்க்கையை எப்படியும் இனிமையாக்கிக் கொள்ளலாம் என்று விளக்கமளிப்பதில் ஒரு முக்கியமான சூட்சுமம் அடங்கிக் கிடக்கிறது. அதை உணர வேண்டியது எத்தனை முக்கியமானது?  -     

      குடும்பத்தை ஒரு ஊரில் விட்டு விட்டு, தனியாய் வேறொரு இடத்தில் வியாபாரம் செய்யும் மனுஷனுக்கு குருட்டு யோசனை செய்யவும், தப்புச் செய்யவும், தடம் புரளவும், பிறகு அது மனுஷனை முழுங்கவும் தயாராய்க் காத்துக் கொண்டிருக்கும் என்று அதிலிருந்து விடுபடத்தான் இம்மாதிரி வெவ்வேறு நடவடிக்கைகள் என்று விளக்கமளிக்கும் பாயின் ஸ்வாரஸ்யமான கருத்தான பேச்சு எளிய மனிதன் எப்படித் தன் வாழ்க்கையின் அபாயகரமான கட்டங்களை உணர்ந்து  கடக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்திச் செல்லும் நயம் இக்கதையின் முக்கியக் கருத்தாக அமைகிறது.

      எதுக்குப் பிறந்தோம், எதுக்கு சம்பாதிக்கிறோம்,என்னத்தச் சாதிச்சோம், எதுக்கு மனுஷப் பிறவி ...ஒன்றும் புரியல பாய்....என்று நிற்கும் சர்வேஷின் கேள்விகளுக்கு அனுபவம்தான் மனிதனை உருவாக்குகிறது, அதுதான் செம்மைப்படுத்துகிறது, இறைவனின் துணை மட்டும் இருக்குமேயானால் கடுமையான உழைப்பின்பாற்பட்ட வாழ்க்கைப் பயணத்தில் நாம் வெற்றியே காணலாம் என்கிற பல்வேறு சிந்தனைகளைக் கிளறி விடும் படைப்பாளியின் கதை நம்மை திருப்தியுற வைக்கிறது.

      பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்                                    பிறந்து பாரென இறைவன் பணித்தான் ........                                    இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்                                       இறந்து பாரென இறைவன் சொன்னான்........   

            அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்                               ஆண்டவனே நீ ஏன் எனக் கேட்டேன்                                       ஆண்டவன் சற்றே அருகே நெருங்கி - அந்த                                அனுபவம் என்பதே நான்தான் என்றான்.....    -

      கவியரசர் கண்ணதாசன் அவர்களின் இந்தப் பாடலின் எடுப்பும் முடிப்புமான இந்தச் சில வரிகளே இந்த வாழ்க்கையை நமக்குத் துல்லியமாக உணர்த்தும்.

      இதனை எளிய மனிதனின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டி, உரை நடையில் ஒரு சிறந்த கதையாக வடிவமைத்திருக்கிறார் சத்யா G.P.

      மொத்தம் 20 கதைகள் அடங்கிய அவரது இந்தத் தொகுதியில் கருத்துள்ள கதைகள்  பல இடம்பெற்று இத்தொகுதிக்குப் பெருமை சேர்க்கின்றன.

                              ----------------------------------

                             

 

     

     

25 மார்ச் 2021

“ரப்பர் வளையல்கள்“- சிவஷங்கர் ஜெகதீசன் சிறுகதைகள்-

 

“ரப்பர் வளையல்கள்“- சிவஷங்கர் ஜெகதீசன் சிறுகதைகள்-வாசிப்பனுபவம்-உஷாதீபன் (வெளியீடு-சிவஷங்கர் ஜெகதீசன், சாலிக்கிராமம், சென்னை-93)



      தைகள் எழுதுவதென்ன அவ்வளவு பெரிய விஷயமா? என்று நினைத்து ஆரம்பித்திருப்பாரோ என்று தோன்றுகிறது. அத்தனை துறுதுறுப்பு. விறுவிறுப்பு. காணும் காட்சிகள், படித்த செய்திகள், கிடைத்த அனுபவங்கள் இப்படிப் பலவற்றையும் வைத்து எழுத ஆரம்பித்தால் அவைகள்தான் கதைகள் என்று சுலபமாக உணர்ந்து ஒவ்வொரு கதையும் வெவ்வேறு விஷயங்களைத் தாங்கி வரும் வகையில் ஒரு தொகுதிக்கான கதைகளை போகிற போக்கில் எளிமையாக வழங்கிச் செல்கிறார் சிவஷங்கர் ஜெகதீசன்.

     எழுதிய கதைகளைப் புத்தகமாக்கி அவரேதான் வெளியிட்டிருக்கிறார். எந்தக் கதைக்காகவும் அதிகமாக மெனக்கெடவில்லை. காரணம் காணும் அத்தனை காட்சிகளையும், தனக்குக் கிடைத்த அத்தனை அனுபவங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்கிற துடிப்பே கதை வடிவில் அவற்றைக் கொடுத்தால் சுவையாகப் படிக்கப்படலாம் என்கிற நம்பிக்கையை அவருக்கு அளித்திருக்கிறது.  விறு விறுவென்று எழுதித் தள்ளி விட்டார். முடிவுக்காகவோ, கடைசியில் ஒரு திருப்பம் வேணும் என்பதற்காகவோ எதுவும் வலிந்து அமைக்கப்படவில்லை, மெனக்கெடவில்லை. எதுவரை சொல்ல நினைத்தாரோ அதுவரை கதையைக் கொண்டு சென்று நிறுத்தி விடுகிறார் அல்லது அந்தக் கதை தானே அங்கேயே முடிந்து போகிறது.  கதைக்குக் கதை மாறுபாடான விஷயங்களை அவர் சொல்லியிருப்பதே பாராட்டத்தக்க விஷயமாய்ப் படுகிறது.

     எந்தவித ஜோடனையுமில்லாமல் பளிச்சென்று சுருக்கமான வார்த்தைகளில் பட்பட்டென்று சொல்லி கதையை நகர்த்திச் செல்கிறார்.

     தாரா என்று ஒரு கதை. முழுக்கதையும் நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சுஜாதாவின் விறுவிறுப்பு. கொஞ்சம் வார்த்தைகளில் விளையாடித் தேர்ந்தெடுத்துப் போட்டிருந்தால் அசல் சுஜாதாதான்.

     பஞ்சம் என்று தலைப்பிட்டிருக்கலாம். 2300 ம் ஆண்டில் தண்ணீர் பஞ்சம் எப்படியிருக்கும் என்று ஒரு கற்பனை. அவ்வளவு போவானேன். 2100லேயே ஏன் அதற்குள்ளாகவே தண்ணீருக்காக ஒருத்தருக்கொருத்தர் அடித்துக்கொண்டு சாகாமல் இருந்தால் சரி. இவரின் கதையில் அது நடக்கிறது.

     ஆன் லைன் ரம்மி எப்படி ஆசையைக் கிளப்பி, ஆளை உள்ளே இழுத்து அமுக்குகிறது என்பதற்கு அந்தத் தலைப்பிலேயே ஒரு கதை.

     கிணத்துக்கடவு என்று ஒரு கதை. பால் உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களில் போதுமான கொள்முதலுக்கு வழியின்றி, உற்பத்தியாளர்கள் அதனை சாலையில் ஊற்றுவதும் அதனை ஊடகங்கள் படம் பிடித்துப் போடுவதும் கண்டிருக்கிறோம். அதுபோல் தக்காளி சீசனில் ஒரு கூடைத் தக்காளி பத்து ரூபாய் என்று சல்லிசாக விலை வைத்தும் விற்பனையில்லாமல் அழுகிப் போக, அது குப்பையில் கொட்டப் படும் விஷயமும் நாமறிந்ததே. கிணத்துக்கடவு விவசாயியின் இந்தப் பரிதாப நிலை கதையில் சொல்லப்படுகிறது.

     இ.எம்.ஐ கட்டுவதற்கு இப்படி ஒரு யோசனையா இருக்கிறது? என்று சற்று சந்தேகம் எழத்தான் செய்கிறது.  ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்தபோது வேலை போய், வீட்டுக்கு வாங்கிய கடனுக்கு வங்கிக்கு இ.எம்..ஐ. கட்ட முடியாமல் இருக்கும் நிலையில் கதை நாயகன் யோசிக்கிறான். தன் கிரடிட் கார்டினைப் பயன்படுத்தி ஒரு டி.வி ஐம்பதாயிரம் உட்பட்ட விலையில் வாங்க, அது குறிப்பிட்ட இடைவெளி நாட்களில் டெலிவரி என்று தேதி குறிக்க, அந்தத் தேதியும், இ.எம்.ஐ கட்டும் தேதியும் ஒன்றி வர, குறிப்பிட்ட தேதியன்று டி.வி. பர்சேஸை கான்சல் செய்து, தன் வங்கிக் கணக்கைக் கொடுத்து ரீஃபன்ட் கேட்க, அவன் கணக்கில் பணம் சேர்ந்து விடுகிறது. இ.எம்.ஐ.க்கு வழி பிறக்கிறது. 2.5.% சர்வீஸ் சார்ஜ் லாபம் என்று நண்பன் பாராட்டுகிறான்.

     பயன்படுத்தியது கிரடிட் கார்டு. இவ்வளவு தொகைக்கு பொருள் வாங்கிக் கொள்ளலாம் என்று அதில் ஒரு நிர்ணயம் உண்டு. அந்தத் தொகைக்கு டி.வி.வாங்கி, பின் கான்சல் செய்தாலும், அந்தத் தொகை வங்கிக் கணக்கில்தானே போய்ச் சேர வேண்டும்? அது எப்படி அந்த நபரின் சேமிப்பு வங்கிக் கணக்கில் போய்ச் சேருகிறது? அந்தக் கணக்கு எண்ணை கடையில் கொடுத்தால் அதில் சேர்த்து விடுவார்கள் என்பதை நம்ப முடியவில்லை. இப்படியிருந்தால் பலரும் இம்மாதிரிச் செய்யக் கூடுமே? என்று தோன்றுகிறது. இதை ஜெகதீசன் சற்று விளக்கினால் நன்றாய் இருக்கும்.

     குமுதத்துக்குக் கதை எழுதுவதுபோல் எழுதிப் பார்த்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. போகிற போக்கில் கதை சொல்வது, பொழுது போகவில்லை என்று கதை சொல்வது, ஜாலியாய்க் கதை சொல்வது என்று விளையாடியிருக்கிறார். எதையும் குறை என்று சொல்வதற்கில்லை. துள்ளிச் செல்லும் புள்ளி மான் போல் கதைகள் பாய்ந்து பாய்ந்து பறக்கின்றன என்று பாராட்டலாம்.

     கொரோனா கதையும் உள்ளது. வீட்டுப் பெரியவர் கொரோனா நெகடிவ் ரிசல்ட்டிற்காகக் காத்திருக்கிறார். அது போலவே கிடைக்கிறது. பாசிடிவ் என்று வந்தால் பையன் சின்னவனிடம் அனுப்பி விடுவானோ, இருப்பவர்களுக்கு சிரமமாய் அமைந்து விடுமோ என்று தனக்குள்ள ஜூரம், தொண்டைக் கரகரப்பு, வயிற்றுப் பிரச்னை என்று மகனிடம் சொல்லாமலே கழிக்கிறார். ஆனால் அது அவரையும் மீறி காட்டிக் கொடுத்து விடுகிறது. மருமகளும், மகனும் சேர்ந்து பொறுப்பாய் மருத்துவமனையில் சேர்க்கத்தான் செய்கிறார்கள். மருந்தெல்லாம் சாப்பிட்டு நினைத்ததுபோல் கொரோனாவிலிருந்தும் விடுபடுகிறார். பலரின் பெயர் சொல்லி நெகடிவ், பாசிடிவ் என்று படித்து வர, இவர் பெயர் வரும்போது ஒரு சின்ன அதிர்ச்சி...பாசிடிவ் என்று சொல்லி ஸாரி...ஸாரி என்று பிறகு நெகடிவ் என்று கூற பெரியவரின் மனம் மகிழ்ச்சியில் திருப்தி கொள்கிறது.

     பரஸ்பரம் சகஜமாகப் பழகுவதை காதல் என்று நினைத்துக் கொண்டு பழக, மனசை இழக்க, கடைசியில் காதலன் அப்படியெல்லாம் இல்லை என்று முறித்துக் கொண்டு செல்ல, ஏற்படும் துன்பவியலை விவரிக்கிறது உணர்வுகள் என்ற கதை.

     அழகைவிட குணம்தான் முக்கியம் என்று இறந்த மனைவி சொன்னதை மனதில் வைத்து வீட்டு வேலைக்காரியின் மகளிடம் மனதை இழக்கிறான் கதாநாயகன். இதைத் தொட்டுச் செல்கிறது செம்மலர் என்கிற கதை.

     குற்றத்தைச் செய்தவரை விட செய்வதற்குப் பெருந்துணையாய் இருந்தவருக்கும் தண்டனை உண்டு என்பதற்கடையாளமாய், அதற்குப் பெரும் தூண்டுதலாய் இருந்தவர் கொலை செய்யப்படுகிறார். இதை மாற்றுக் கொலை கதை சிறப்பாகச் சொல்கிறது.

     வங்கிக் கடன் வாங்கிய எளிய மக்கள் பற்பல சங்கடங்களுக்கு ஆளாகிறார்கள். அவர்களிடம்தான் வசூல் வேட்டை நடைபெறுகிறது. வீட்டில் இருந்த மிச்சத் தங்கத்தை வைத்து, தவணையைக் கட்ட முனைகிறார்கள். ரப்பர் வளையல்கள் சத்தம் எழுப்புவதில்லை. ஏழைகளின் சொல்லுக்கு மதிப்பும் இல்லை. ஆனால் விஜய் மல்லையா போன்ற பெரும் பணக்காரர்கள் கோடிகளில் கடன்களைப் பெற்று உல்லாசமாய் வாழ்க்கை நடத்திக் கொண்டு தப்பித்து வாழ்கிறார்கள். இந்தக் கருத்தை முன் வைக்கும் ரப்பர் வளையல்கள் என்ற தலைப்புக் கொண்ட கதை மனதை நெருடுகிறது.

     ஜெகதீஷின் வேகம் இன்னும் பற்பல சிறப்பான படைப்புக்களை எதிர்காலத்தில் நிச்சயம் வழங்கும் என்ற நம்பிக்கை நமக்கு இந்தத் தொகுதியின் மூலம் அளிக்கப்படுகிறது. அவரது உற்சாகம், உலகாயத நிகழ்வுகளின் மீதான் கவனம்,சாதாரண மக்களின் பாடுகள், அரசாங்கம் மேற்கொள்ளும் வெவ்வேறு நடவடிக்கைகளின் மீதான கருத்தான கவனம், மனதில் நெருடும் விஷயங்களை எப்படிச் சொல்ல வேண்டும், எதுவரை சொல்ல வேண்டும் என்கிற தீர்மானம்,  ஒரே மாதிரி விஷயங்களில் கதை சொல்லாமல், கதைக்குக் கதை வெவ்வேறு களங்களில் பயணிக்க வேண்டும் என்கிற அவரது நம்பிக்கையே நம்மை அவரை நோக்கி நிற்க வைக்கிறது. மொத்தம் 19 கதைகள் கொண்ட அவரது இந்தத் தொகுதியில் கதைக்குக் கதை படங்களையும் கொடுத்துள்ள இன்னொரு சிறப்பு எனலாம்.  அவரது அடுத்தடுத்த தொகுதிகள் அந்த வெற்றியை சுலபமாய் எட்டும் என்பதற்கான அச்சாரமாய் இந்த ரப்பர் வளையல்கள் தொகுதி விளங்குவது ஒன்றே இந்தச் சிறுகதைத் தொகுதியின் சிறப்பு.

                                --------------------------------

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...