30 ஜனவரி 2014

“விவஸ்தை”-சிறுகதை (செம்மலர் மாதஇதழ்-பிப்ரவரி 2014)

2014-01-30 14.30.50 2014-01-30 14.31.52

”உள்ளே வாங்க, சட்னு…” – பல்லைக் கடித்தவாறேதான் திண்ணை வாயிலில் நின்று கூப்பிட்டாள் சௌம்யா.

கையில் எடுத்திருந்த உலர்ந்த துணிகளைப் பக்கத்து வீட்டு காம்பவுன்ட் உட்பகுதிக்குள் போட்டு விட்டு விருட்டென்று வீட்டுக்குள் நுழைந்தேன்.

என்ன? என்ன? எதுக்கு இப்டி அவசரமாக் கூப்பிட்டே?

ம்ம்ம்….பொங்கல் திங்கறதுக்கு…!

போச்சு, அதுக்குள்ளே கோபம் வந்திருச்சா…? விஷயத்தைச் சொல்லு…

நீங்க என்னா, பக்கத்து வீட்டுத் துணியையெல்லாம் தொட்டு எடுத்திட்டிருக்கீங்க…? அசடு மாதிரி…?

எடுத்திட்டிருக்கீங்க…என்பதோடு நிறுத்தியிருக்கலாம். அசடு, சற்று அதிகம்தான். போகட்டும், கட்டின பெண்டாட்டிதானே…ஒரு வார்த்தை சொல்ல உரிமையில்லையா? சொல்லப் போனால் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளாமலேயே அசடான தருணங்கள் எத்தனையோ? இதிலென்ன பிரித்துப் பார்க்கக் கிடக்கிறது?

மாடில உலர்த்தப் போட்டிருக்காங்க…அது பறந்து நம்ம வீட்டுப் பக்கம் விழுந்திருக்கு…எடுத்துப் போட்டேன்…இதிலென்ன தப்பு?

மாடில அப்டி கல்லைப் பாரமா வச்சு உலர்த்தாதீங்க…இந்தப் பக்கம் பெருக்கி சுத்தம் செய்ய வர்றப்போ காத்தடிச்சு தலைல விழுந்திடுச்சின்னா சங்கடம்னு எத்தனையோவாட்டி அவுங்ககிட்டே சொல்லிட்டேன்… கேட்குறாப்புல இல்லை….கொடில உலர்த்துற துணிகளுக்குக் கிளிப்பும் போட மாட்டேங்குறாங்க…இதுல நீங்க வேறே வசதியா துணிகளை எடுத்துப் போடுறீங்க…ரொம்ப நல்லதாப் போச்சுன்னு விட்ருவாங்க….வேணும்னா வந்து எடுத்துக்கட்டுமே…

வந்து எடுக்கணும்னா, ரோட்டுப் பக்கமா வந்து, நம்ம வீட்டு கேட்டைத் திறந்து, பர்மிஷன் கேட்டு, உள்ளே வந்து எடுக்கணும்…எதுக்கு இவ்வளவு சிரமம்…போகுது விடு….

அப்போ தினமும் எடுத்துப் போடறேங்கிறீங்களா?

போட்டா போச்சு….ஒரு உதவிதானே…கல்லு வைக்காத துணிக காத்துல பறந்து விழுகுது…அப்டி விழுந்திருக்கோன்னு அவுங்க தெரிஞ்சிக்கிறதுக்கு முன்னாடி நாம எடுத்துப் போட்டுட்டா பிரச்னை முடிஞ்சிது பாரு…

ரொம்ப சமத்து…உங்களுக்குக் கொஞ்சங் கூட விவஸ்தையே கிடையாது…அவ்வளவுதான்…

இதிலென்ன விவஸ்தை கெட்டுப் போச்சு…? உதவி செய்றது தப்பா?

உதவிங்கிறது கேட்டு செய்றது…இது நல்லால்லியே….

உனக்கு நல்லால்லே…எனக்கு அப்டி ஒண்ணும் தோணலை…அவுங்கவுங்க மனசைப் பொறுத்த விஷயம்…

அந்தம்மா பாவாடை, ரவிக்கைன்னு வித்தியாசம் பார்க்காம எடுத்துப் போடுவீங்களாக்கும்….போதாக்குறைக்கு நம்ம வீட்டுக்கு வர்ற கேபிள் வயர்லயும் உலர்த்துறாங்க…மாடில கைக்கு வாகா எதெது தெரியுதோ அங்கெல்லாம் துணிகளைப் போட்டுடுவாங்க போலிருக்கு…உள்ளாடைகளெல்லாம் வீட்டுக்குள்ளே உலர்த்தணும்னு தெரிய வேண்டாம்? இப்டியா ஊர் பார்க்கிறமாதிரிப் போடுறது? அவுங்க மனசுக்கு அசிங்கமாத் தெரிலன்னு அர்த்தம்…

நீயே நா சமீபத்துல சொன்ன பின்னாடிதானே அப்டிச் செய்ய ஆரம்பிச்சே…? ராத்திரி பாரா போகுற போலீஸ் லட்டியால கேட்டுக்கு மேலே கொடியைத் தூக்கிப் பார்த்திட்டுப் போறான்னு அவன் சந்தேகத்தைச் சொன்ன பின்னாடிதானே உனக்கே பயம் வந்தது?

அவன் செய்திட்டா? அது சரியா? வீட்டுக்குள்ளதானே காம்பவுன்ட் உட்பக்கமா உலர்த்தப் போட்டிருக்கோம்? தெருவுலயா துணி உலருது சந்தேகப்படுறதுக்கு?

போலீஸ்காரங்களே அப்டித்தான். அவனுக்கு சந்தேகமாத் தோணினா நோண்டாம விடமாட்டான்….

போதும் அபத்தப் பேச்சு…இனிமே துணி எடுத்துப் போடுறதெல்லாம் நீங்க செய்யாதீங்க…பக்கத்து வீடு, எதிர் வீடுன்னு பார்த்தாங்கன்னா அசிங்கம்…என்னமாவது தப்பா தோணும்…இந்தாளுக்கு வேறே வேலையே இல்லையான்னு நினைப்பாங்க…சிவனேன்னு வீட்டுக்குள்ள கிடக்க மாட்டீங்களா?

சிவனேன்னு நான் எங்க கெடக்குறது…அந்த செவன்தான நம்மள இந்தப் பாடுபடுத்திறான்….

போச்சு…சினிமா வசனம் பேச ஆரம்பிச்சாச்சா….அதான் உங்களுக்கு எதுக்கும் விவஸ்தையே கிடையாதுன்னு முதல்லவே சொன்னேன்…யாரு என்ன நினைச்சா உங்களுக்கென்ன? பொழுது போகணும் உங்களுக்கு…அதுக்கு எதையாச்சும் செய்திட்டே இருக்கணும்…அவ்வளவுதான்…எதைச் செய்யணும், எதைச் செய்யக் கூடாதுங்கிறதெல்லாம்தான் கிடையாதே….

யாரு என்ன நினைச்சா என்ன? அடுத்தவன் இதை நினைப்பானோ, அதை நினைப்பானோன்னு எல்லாம் நாம தயங்கிட்டேயிருந்தா இந்த உலகத்துல எதையுமே செய்ய முடியாது…எதுத்தாப்ல அப்டி நினைக்கிறதா நீ சொல்றவங்களுக்குக் கூடத்தான் நான் உதவுறேன்…வித்தியாசமா பார்க்கிறேன்…எதோ என்னாலான உபகாரம்…அவ்வளவுதான்…

உபகாரம் செய்றதையும் சந்தேகப்படுறமாதிரி செய்யக் கூடாது….தெளிவாச் செய்யணுமாக்கும்…

நீ எதைச் சொல்றே? புரியல எனக்கு…

எதிர் வீட்டுல அவர் ஊர்லர்ந்து வந்தவுடனே தபால்களைக் கொண்டு கொடுத்தீங்களே….அப்போ நா சொன்ன மாதிரிச் செய்தீங்களா? செய்யலியே?

இதிலென்னடி இருக்கு…அவர் என்ன நம்மளைச் சந்தேகமா படப்போறார்? அதான் தபாலோட தபாலாக் கொடுத்திட்டு வந்திட்டனே…!

கொடுத்திட்டீங்க சரி, அதுல அந்த ஒரு கவரை அட்ரசைப் பார்க்காமக் கட் பண்ணிட்டேன்னு சொல்லி ஸாரி கேட்டீங்களா? இல்லியே…? நான் சொல்லித் தந்தேன்ல…ஏன் கேட்கலை?

ஸாரி சொல்லாட்டி என்ன? அவர்தான் ஒண்ணும் கேட்கலியே…அது சாதாத் தபால்தாண்டி….எங்கயோ ம்யூட்சுவல் ஃபன்ட் போட்டிருப்பார் போலிருக்கு…அதுக்கு அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் வந்திருக்கு…அவ்வளவுதான்…நமக்கு வந்த தபால்களோட அது இருந்ததுனால வரிசையா நுனியைக் கட் பண்ணும்போது, அதையும் சேர்த்துக் கட் பண்ணிட்டேன்…இதிலென்ன தப்பிருக்கு…

தப்புக்கு நா சொல்லலை…அந்த விபரத்தை அவர்ட்டச் சொல்லிக் கொடுத்திருக்கலாமே…வேணும்னே அவா தபாலைப் பிரிச்சுப் படிச்சதா ஆகாதா?

அம்மா தாயே…ஆள விடு….கொடுத்தாச்சு…முடிஞ்சு போச்சு….ஒரு மாசம் ஓடிப்போச்சு…இப்பப் போய் இத நீ நோண்டாத…அவரே ஒண்ணும் கேட்கலை…நீ இப்பப் பேசறதப் பார்த்தா, அவர் ஊர்லருந்து வந்தவுடனே போயி, அந்தப் பழைய விஷயத்தைச் சொல்லி ஸாரி கேட்டுட்டு வாங்கன்னுவ போலிருக்கு…நல்லாருக்கு உன் கத…

இதத்தான் நான் அப்பவே சொன்னேன்….எதுக்கும் உங்களுக்கு விவஸ்தையே கிடையாதுன்னு….விவஸ்தைன்னா என்னன்னு முதல்ல புரிஞ்சிக்குங்க…தோணினபடியெல்லாம் இருக்கிறதுங்கிறது அழகில்ல…

ஆரம்பிச்சிட்டியா பழையபடி….இல்லாட்டிப் போகட்டும்…நீ நிறைய விவஸ்தையோட இருக்கேல்ல…அது போதும்….

சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டார் நாராயணன்.

என்ன வாங்கு வாங்குகிறாள்? ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் கதையால்ல இருக்கு? அத்தனை நேரம் பேசியதில் ஏற்பட்ட அயர்ச்சி, கண்மூடி ஆசுவாசப்பட வைத்தது. கண்களை மூடினாரோ இல்லியோ அந்த இன்னொரு விஷயம் உடனே விழித்துக் கொண்டது. இப்படி தூபம் போட்டால்?

அவர் பார்வை மேஜையின் மேல் சென்றது. எதிர்வீட்டுக்காரருக்கு என்று வந்த தபால்கள். வாங்கிச் சேர்த்து ஒரு ரப்பர் பேன்ட் போட்டு பத்திரமாய் வைத்திருந்தார்.

ஸார்…நாராயணன் ஸார்….

யாரு, ஓ…ராஜாராமா…வாங்க…வாங்க…..உள்ளே வாங்க….

இல்ல இருக்கட்டும்…ஊருக்குப் போயிட்டிருக்கேன்…இப்ப ஆட்டோ வந்திடும்…கொஞ்சம் வீட்டைப் பார்த்துக்குங்க…சாயங்காலம் மட்டும் வாசல் லைட்டைப் போட்டு, பத்து மணிக்கு அணைச்சிடுங்க….

ஓயெஸ்…வழக்கமாச் செய்றதுதானே…நான் பார்த்துக்கிறேன்…நீங்க கவலைப்படாமப் போயிட்டு வாங்க….பாருங்க…இந்த டார்ச் லைட்டை…நாலு பேட்டரியாக்கும்…ராத்திரி உங்க வீட்டுப் பக்கம் மொட்டை மாடிக்குப் போயி ஒரு சுத்து சுத்திட்டுத்தான் வருவேன்…நீங்க கிளம்புங்க….

அப்டியே தபாலும்….

அதான் வாங்கி வச்சிடுவேனே…நா போஸ்ட்மேன்கிட்டயே சொல்லிடுவேன்….எதுத்த வீட்டுத் தபாலை எங்கிட்டக் கொடுத்திடுங்கன்னு…பத்திரமா வச்சிருக்கேன்….

அதுக்கில்லைசார்…பையனோட பாஸ்போர்ட் வரும் ரிஜிஸ்டர்ல…அத உங்ககிட்டே தரமாட்டேன்னுவான்…அதுக்காகத்தான் இந்த ஆதரிசேஷன் லெட்டர்…என் கையெழுத்துக்கு மேலே உங்க கையெழுத்தைக் கொஞ்சம் போட்டுக்கிடுங்க…அப்பத்தான் அட்டெஸ்ட் பண்ணினதா ஆகும்…இதப் போஸ்ட்மேன்கிட்டக் கொடுத்தீங்கன்னா பாஸ்போர்ட் ரிஜிஸ்டர் தபாலை உங்ககிட்டேக் கொடுத்திடுவான்…ஆளில்லாம ரிடர்ன் ஆயிடுச்சின்னா அப்புறம் சங்கடம்… திரும்ப வாங்குறது கஷ்டம்…அதுக்காகத்தான்…

ட்டென்று எழுந்து அந்தப் பாஸ்போர்ட் தபால் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டார். கொஞ்சம் சங்கடப்பட்டுக்கொண்டே போஸ்ட்மேன் வாங்கிக் கொண்டதை நினைத்துக் கொண்டார்.

போஸ்ட் மாஸ்டர் என்ன சொல்லுவாரோ, தெரிலயே ஸார்…கொடுத்துப் பார்க்கிறேன்…..நாங்க பாஸ்போர்ட்டையெல்லாம் வேறே யார்ட்டயும் கொடுக்கிறதில்லை…ஆதரிசேஷன் இருந்தாலும்….எங்களுக்கு உத்தரவு அப்டி…!

சொல்லிக் கொண்டேதான் கொடுத்துப் போனார். நல்லவேளை…இன்றுவரை ஒன்றுமில்லை. ஏற்றுக்கொண்டது போல்தான் தோன்றுகிறது.

வந்திருந்த தபால்களை மீண்டும் ஒரு முறை அடுக்கி சரி பார்த்துக் கொண்டார். மேலே ஒரு ஒன்சைடு பேப்பரைச் செருகி, ”டூ, மிஸ்டர் ராஜாராம்” என்று எழுதி வைத்து விடுவார். மேஜையில் குவிந்துள்ள தன் தபால்களோடு கலந்து தொலைந்து போய்விடக் கூடாது. பயம். நாராயணனுக்கு எதுவும் துல்லியமாகத் தெரிய வேண்டும். எதிலும் குழப்பம் என்பது கூடாது.

உங்களை மாதிரி ஒருத்தர் அவருக்கு கிடைக்கணுமே? என்றாள் சௌம்யா.

உதவி செய்றதுன்னு ஏத்துண்டுட்டோம்னா பர்ஃபெக்டா செய்துடணும்…இல்லன்னா ஏத்துக்கப்படாது….

நல்லா செய்யுங்கோ…யார் வேண்டான்னா? அகஸ்மாத்தா ஏற்பட்ட அந்தத் தவறைச் சொல்லிட்டுக் கொடுத்துடலாமேன்னுதான் சொன்னேன்…

சௌம்யா அன்று சொன்னது உறுத்திக்கொண்டேதான் இருக்கிறது. இப்பொழுதும் அப்படியே ஒரு தவறு மீண்டும் நடந்து விட்டது. தபால்களைப் பிரிக்கும் பொழுதே எதிர் வீட்டுத் தபால்களையும் தன் தபால்களோடு சேர்த்து வைத்து விடுவான் போலிருக்கிறது. கத்தையாக அப்படியே நீட்டிவிட்டுப் போய்விடுகிறார் போஸ்ட்மேன். அதில் ஒன்று ஒட்டிக்கொண்டிருக்க, கத்தரி போடும் போது நுனி சேர்ந்து கட்டாக விட்டது. பிரிக்கும் போது இரண்டு தபால்கள் வாயைப் பிளக்கின்றன. என்னடாவென்று பார்த்தால் ஒன்று அவருடையது. என்ன செய்வார் நாராயணன். அடக் கடவுளே…! என்று அலுத்துக் கொள்ளத்தான் முடிந்தது. சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தார். அதை மனைவியிடம் சொல்வதில்லையென்று. சர்வ ஜாக்கிரதையான முடிவுதான். ஆனால் ராஜாராமிடம் சொல்லியே கொடுத்துவிடுவதென்று. நல்ல முடிவு என்றுதான் தோன்றியது. அதனால் மனதுக்கு நிம்மதியாகிப் போனது.

குறிப்பாக அந்தத் தபாலை இப்போது கவனமாகப் பார்த்துக் கொண்டார். எதிர்வீட்டில் சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தார். நல்ல இருட்டு. மணியைப் பார்த்தார். ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. வைகைல வந்திருப்பாரோ என்று நினைத்துக் கொண்டே வாசலுக்கு வந்தார்.

ராஜாராம்தான் கதவைத் திறந்து கொண்டிருந்தார். உடனேயே கொண்டு நீட்ட வேண்டாம். டூ மச் ஆஃப் சின்சியாரிட்டி லீட்ஸ் டு கேயாஸ்….தேவையில்லாமல் மனதில் இப்படித் தோன்றியது. மனிதனுக்கு சிந்தனையே கூடாது. சிந்திக்காத வாழ்க்கைதான் சுகம்.

உள்ளே போய் சற்று ஆசுவாசப் படுத்திக் கொள்ளட்டும். பிறகு போகலாம். பத்து மணி நேரப் பயண அசதி இருக்கும்…எண்ணிக் கொண்டே மீண்டும் அறைக்குள் வந்தார். பேசாமல் காலையில் கொடுத்தால் என்ன என்று ஒரு எண்ணமும் வந்தது.

அவர் வந்துட்டார் போலிருக்கு. போங்கோ…போய் தபால்களைக் கொடுத்திட்டு வந்திடுங்கோ…. – மூக்கில் வியர்த்ததுபோல் வந்து நின்றாள் சௌம்யா.

பொறுப்புக்களிலிருந்து விலகுவதற்கு, விஸ்ராந்தியாய் இருப்பதற்குத்தான் எத்தனை மனித யத்தனம். கொடுத்தால்தான் அவளுக்கு நிம்மதி. இல்லையென்றால் ராத்திரி தூங்க மாட்டாள் போலும். கிளம்பினார் நாராயணன்.

கேட்டைத் திறக்கும்போதே தலையை நீட்டிவிட்டார் ராஜாராம். வாங்க…வாங்க….

இப்பத்தான் வந்தீங்க போலிருக்கு…இருங்க…இருங்க…டயர்டா இருப்பீங்க….- சொல்லிக்கொண்டே கையிலிருந்த தபால்களை நீட்டினார்.

அதெல்லாம் ஒண்ணுமில்ல…ஏ.ஸி.லதான் வந்தேன். இந்த வெயில்ல எங்க செகன்ட் ஸ்லீப்பர்ல வர்றது…? வெந்து போகும்…..

ஆமாமா…சரி…பாருங்க…நா வர்றேன்…. திரும்பினார் நாராயணன்.

ஒண்ணுமில்ல, சும்மா வாங்க ஸார்…நீங்க என்ன…? வந்தவுடனே கிளம்புறீங்க? உட்கார்ந்திட்டுப் போங்க…..

தவிர்க்கமுடியாமல் உள்ளே நுழைந்து அமர்ந்தார் இவர்.

என்ன, போன காரியமெல்லாம் முடிஞ்சிதா? ஏதாவது பேச வேண்டுமே என்று ஆரம்பித்தார்.

முடிஞ்ச மாதிரித்தான். அஸ்தினாபுரத்துல ஒரு அபார்ட்மென்ட்….அட்வான்ஸ் பண்ணியிருக்கு…..அவ்வளவுதான்….

அஸ்தினாபுரமா? பெயரே வித்தியாசமாயிருக்கு? புராணப் பெயர் போல… அது எங்க இருக்கு மெட்ராசுல?

குரோம்பேட்டைக்குப் பின்னால வருது ஸார்…எனக்கே இப்பத்தான் தெரியும்….என் பையன் அங்கதான் வாங்கணும்னுட்டான்….நமக்கென்ன…அவன்தான இருக்கப்போறான்னுட்டு நானும் ஓ.கே. ன்னுட்டேன். ஆபீசுக்கு வசதியா, கிட்டக்க இருக்கட்டும்ங்கிறதாச் சொல்றான்…

அது சரி….அவுனோட வசதிதானே முக்கியம். நாம இங்கே இருக்கப் போறோம். எப்பவாச்சும் போயிட்டு வரப் போறோம்…அவ்வளவுதானே…சரி…ரெஸ்ட் எடுங்கோ…நான் போயிட்டு வர்றேன்…. – கிளம்பினார் நாராயணன்.

இருங்க ஸார்…பால் காயுது…ஒரு வாய் காபி சாப்டுட்டுப் போங்க….எனக்கு வந்தவுடனே ஒரு காபி சாப்பிடணும்…அப்பத்தான் மத்த காரியமே ஓடும்….என் ஒய்ஃப் இன்னும் பத்து நாள் கழிச்சிதான் வருவா…பாருங்க டிபன் வாங்கிட்டு வந்திட்டேன்….பத்து மணிக்கு மேலேதான் சாப்பிடுவேன்…..

ஓ.கே…ஓ.கே….நா இப்பக் காபியெல்லாம் சாப்பிடுறதில்லே. சாயங்காலம் ஒரு காபி. அத்தோட சரி….வரட்டா…பார்க்கலாம்…

கிளம்பி வாசல் வரை வந்தவருக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது வந்த காரியம்.

அடடே….எதுக்கு வந்தனோ அதைச் சொல்ல மறந்திட்டேன் பாருங்கோ…அந்தத் தபால்ல ஒண்ணை, தெரியாம என் தபால்களோட சேர்த்துக் கட் பண்ணிட்டேன்….பிறகுதான் தெரிஞ்சிது…ஒட்டிண்டிருந்திருக்கு…கட் ஆனவுடனே பிரிஞ்சி விழறது….ஸாரி…கொஞ்சம் பார்த்துக்குங்கோ….

சொன்னார். பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினார். அப்படிக் கிளம்பியதே என்னவோ தவறு போல் இருந்தது. பதில் இல்லையே? கொஞ்சம் வந்தவர், திரும்பி நோக்கினார். ராஜாராம் அந்தக் குறிப்பிட்ட தபாலை உருவி எடுத்திருந்தார்.

அதான்…அதேதான்…கவனிக்கலை….பார்த்துக்கறேளா…..இவரையறியாமல் வாய் குழறுவது போல் பிரமை.

அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் திரும்பி நடந்தார். ஒன்றுமே சொல்லவில்லையே? தலை அவரையறியாமல் மீண்டும் திரும்பியது.

போனவாட்டி கூட இதே போல ஒரு தபால் திறந்துதான் இருந்திச்சி…..

ராஜாராம் சொன்னார்.

தலையைக் குனிந்தபடியே சொல்லிவிட்டார்.

கவனித்த இவருக்கு சுருக்கென்றது. யதார்த்தமாய், சகஜமாய் வந்த வார்த்தைகளா…இல்லை, எப்படி?

வீட்டைப் பார்த்து நடந்து கொண்டிருந்தார். சௌம்யா சொல்லும் அந்த விவஸ்தை இருந்திருந்தால் ஒருவேளை புரிந்திருக்குமோ? சுருக்கென்று சற்று முன் எதுவோ தைத்ததே…ஒரு வேளை அதுதானோ இது? அவருக்கு அவர் மீதே கழிவிரக்கம் பிறந்தது இப்போது.

----------------------------------

14 ஜனவரி 2014

“மானசீகத் தந்தை”(சித்தூர்வி.நாகையா)கட்டுரை (காட்சிப்பிழை – சினிமா மாத ஆய்விதழ்) ஜூலை 2013 இதழில் வெளிவந்த கட்டுரை)

நாகையா-படம் images

-----------------------------------------

மிழ்த் திரையுலகம் தவறவிட்ட குணச்சித்திர நடிகர்கள் எத்தனையோ…! தவறவிட்ட என்றால் தொடர்ந்து வாய்ப்புக்கள் அளிக்கப்படாமல் போனது என்றும், வாய்ப்பே அளிக்காமல் போனது என்றும் கொள்ளலாம். ஆனால் அளிக்கக் கூடாது என்று இருந்தவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் அல்ல இவர்கள். அத்தனை மதிப்புக்குரியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அதீதத் திறமைசாலிகளாக வலம் வந்திருக்கிறார்கள். இதைச் சொல்லித்தான், இப்படியான உண்மையை நிறுவித்தான், இந்தத் துயரத்தை ஆற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. துயரம்தான். ஆற்றொணாத் துயரம். தன்னையே அர்ப்பணித்த சிகரங்களைத் தொட்ட தமிழ் சினிமா ரசிகனுக்கு இது தாளமுடியாத துயரம்தான்.

தொடர்ந்த வாய்ப்பில்லாமல் போன திறமைசாலிகள் என்றுதான் இவர்களை நினைக்க வேண்டியிருக்கிறது. அதனால் ரசிகர்களான நமக்கு நஷ்டம். தமிழ்த் திரையுலகத்திற்கு நஷ்டம். இந்த உலகம் என்று நல்ல படைப்பாளிகளையும், நல்ல கலைஞர்களையும் விடாமல் அரவணைத்துப் பாதுகாத்திருக்கிறது. அவரவர் பாடு அவரவருக்கு. இருக்கும் காலத்தில் இருக்கிறாரா என்று கண்டு கொள்ளாது. போற்றிப் பாதுகாக்காது. போன காலத்தில், அப்படியா? என்ற கேள்வியோடு நின்று கொள்ளும். இல்லாத காலத்தில், விடுங்கள் என்று ஒதுங்கிக் கொள்ளும். மறைந்த பின்னாலும் கூட அவர்களின் பெருமை பாடத் தெரியாதவர்கள்.

திரையுலகமும், திரை வடிவங்களும் எத்தனை மாறினாலும், அத்தனைக்கும் பொருந்தி வந்த நடிகர்கள் இவர்கள். கால மாற்றத்தால் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்லர். அடுத்தடுத்துத் தோன்றிக்கொண்டேயிருந்தாலும், ரசிகர்களுக்கு அலுக்காமல், சலிக்காமல், இவரைக் காண்பதே பெரும் பேறு என்பதுபோல் நின்று நிலைக்கக் கூடியவர்கள். அடுத்தடுத்த படங்களில் விடாமல் தோன்றியிருந்தாலும், அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறி, ஒன்றிலிருந்து ஒன்றை முற்றிலுமாக வேறுபடுத்திக் காட்டி, தங்களின் அனுபவம் மிக்க நடிப்பினாலும், அர்த்தமும், உணர்வுச் செறிவும் பொருந்திய வசன உச்சரிப்பினாலும், அந்த ஆழமான வசன உச்சரிப்புகளுக்கேற்ப தங்களின் பாந்தமான உடல் மொழியினாலும், தங்களைக் கம்பீரமாக நிலை நிறுத்தி, வெறும் பார்வையாளர்கள் அல்லாத, ஆன்ம பூர்வமான, ஆழமான, உணர்ச்சியும், பொறுப்பும் மிகுந்த ஆழ்ந்த ரசனைமிக்க பண்பட்ட ரசிகப் பெருமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவர்கள் இந்தக் குணச்சித்திர நடிகர்கள். தாங்கள் இன்ன பெயருள்ள நடிகர்கள் என்பதை மறக்கடிக்கச் செய்து, இந்தந்தப் பெயரில் உலாவிய கதா பாத்திரங்கள் என்று தங்களை உலவ விட்டவர்கள். அப்பாவா வருவாரு, அண்ணனா வருவாரு, என்று வெறும் பார்வையாளனாய் இருந்த சாதாரணச் சராசரி ரசிகனின் மனதில் கூட ஒதுக்கப்படாத மதிப்பு மிக்க இடத்தைப் பிடித்திருந்தார்கள் இவர்கள்.

இவர்களின் விழிகள் நடித்தன. முகங்களில் உள்ள சதைகள் நடித்தன. உதடுகள் நடித்தன. உள்ளே சிரித்த பற்கள் நடித்தன. இந்த உதட்டுக்கும், இந்தப் பல் வரிசைக்கும், இந்த அமைப்புக் கொண்ட வாய்க்கும் இப்படித்தான் பார்க்க வேண்டும், சிரிக்க வேண்டும் என்ற அர்த்தத்தை ஆழமாய்ப் புரிந்தவர்கள். இவர்களின் புருவங்கள் நடித்தன. உடலோடு ஒட்டிய கைகளும்,விரல்களும், கால்களும் நடித்தன. மென்மையான புன்னகையும், உதட்டோரப் புன் சிரிப்பும், வாய் திறந்த மகிழ்ச்சியும், வாய்மூடிய மௌனமும், அந்த மௌனம் தந்த பார்வைகளும், அவைகள் வெளிப்படுத்திய அர்த்தம் பொதிந்த பாவங்களும் நடித்தன. சொல்லப்படும் கதைக்கு இவர்கள் பொருந்தினார்களா அல்லது இவர்களுக்காகக் கதை உருவாக்கப்பட்டதா என்ற கேள்விகள் நம் மனதில் எழ, உருவான கதைக்கும், உருவாக்கப்படும் கதைக்கும் எக்காலத்திலும் பொருந்தி வந்த ஜாம்பவான்கள். இப்படிப்பட்டவர்கள் இருக்கையில் நமக்கென்ன பயம் என்று திருப்தியோடும், நிறைவோடும், நம்பிக்கையோடும் வடிவமெடுத்த திரைப்படங்கள் எத்தனையோ. களம் கண்டு வெற்றிக் கொடியை நாட்டின. அந்த வெற்றி அந்தத் திரைப்படத்தின் நாயகனுக்கு மட்டுமே ஆன வெற்றி அல்ல. அல்லது இயக்குநருக்கு மட்டுமே உரியதான வெற்றியும் அல்ல. மொத்தக் கதைக்கும், காட்சிகளுக்கும், அவை சொல்லிச் சென்ற அறநெறிகளுக்கும், அர்த்தபூர்வமான வாழ்க்கை நிகழ்வுகளுக்கும், என எல்லோரும் சேர்ந்து கை கோர்த்து சேர்த்துத் தூக்கி நிறுத்திய வெற்றி என்பதைப் பறைசாற்றின.

ஆத்மார்த்தமாகச் சினிமாவை நெருங்கிய ரசிகர்கள் தங்களை அந்தக் குணச்சித்திர நடிகர்களின் இடங்களில் பொருத்திப் பார்த்துத் திருப்தி கொண்டார்கள். தனக்கு, தன் குடும்பத்தில் இப்படியொரு அப்பா இருக்கக் கூடாதா, இப்படியொரு அண்ணன் இருக்கக் கூடாதா? என்று ஏங்கி நின்றார்கள். அந்தக் குண விசாலமுள்ள பாத்திரங்களைத் தங்கள் கண் முன் நிறுத்திய அந்தப் பண்பட்ட நடிகர்களை மனதிற்குள் மதித்துப் போற்றினார்கள். திரையில் அவர்கள் சிரித்தால் இவர்கள் மகிழ்ந்தார்கள். அவர்கள் அழுதால் கூடவே இவர்களும் கண் கலங்கினார்கள். அந்தக் கதாபாத்திரங்களின் வழி சொல்லப்பட்ட செறிவான வாழ்க்கை நெறிகளைத் தங்கள் மனதிலும் நிறுத்திக் கொண்டார்கள். சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை, தாங்கள் கண்டு உள் வாங்கிய கதாபாத்திரங்களின் குணாதிசயங்களின் வழி உணர்ந்து, சுமுகமாகத் தீர்த்துக் கொண்டார்கள். ஒருவரை மிஞ்சி ஒருவர் எப்படி நல்லவர்களாய் இருக்க முயல்வது, இருந்து காண்பிப்பது என்கிற பாடம் இவர்கள் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்கள் வழி பார்வையாளனின் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்து போனது. நடைமுறையில் தடம் புரள இருந்த பலரும், இம்மாதிரியான நேர்மையும், ஒழுக்கமும், கடமையும், கட்டுப்பாடும் உள்ள கதா பாத்திரங்களைக் கண்டு, தங்கள் வாழ்க்கை நெறிகளையும், நிகழ்வுகளையும் திருத்திக் கொண்டார்கள். ஏதோவொரு வகையில் அவர்கள் கண்ட குடும்ப அமைப்பின் செம்மை இம்மாதிரிச் செழுமை வாய்ந்த திரைப்படங்களின் வழி, அதில் வாழ்ந்த பாத்திரங்களின் வழி பொருத்திப் பார்த்து உணர்ந்து செல்லும் வழியை மென்மையாக்கி, தூய்மைப் படுத்திக் கொண்டார்கள்.

கதாநாயகன், நாயகிகள் தவிர்த்து, இப்படியாய்த் தூண்களாய் நின்ற எத்தனையோ அற்புதமான குணச்சித்திர நடிகர்களைக் காலம் புறம் தள்ளி, கண்டு கொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது தமிழ்த் திரையுலகம். அது வேண்டுமென்றே செய்தது என்றெல்லாம் சொல்வதற்கில்லை என்றாலும், இவர் உயிரோடு இருக்கிறாரா இல்லை காலமாகி விட்டாரா என்று பல்லாயிரக் கணக்கான ரசிக நெஞ்சங்கள் தவிக்குமளவிற்கு மறந்திருக்கிறது. ஏன் இப்பொழுதெல்லாம் இவர்களைப் பார்க்க முடிவதில்லை என்று மனதிற்குள் புழுங்கியிருக்கிறான் தமிழ் சினிமாவின் தரமான ரசிகன். இதிலெல்லாம் இவரைப் போடலாமே, இந்தக் கதாபாத்திரத்திற்கு இவர்தானே கச்சிதமான பொருத்தம், இன்னும் நன்றாய் மெருகேற்றித் தூக்கி நிறுத்தியிருப்பாரே, கற்பனை வளமே இல்லாமல் ஏன் இப்படித் தேர்வு செய்கிறார்கள், இதற்கெல்லாம் அவர்தான் லாயக்கு என்று தங்களுக்குள்ளேயே துல்லியமாய் வரையறுத்துக் கொள்ளும் திறனோடு, அவர்களைக் காணாத ஏக்கத்தில் மனம் சலித்து நின்றார்கள். காலப் போக்கில் விலகி விலகி, படிப்படியாக ஒதுங்கி, இனி ஒன்றுமில்லை என்று எத்தனையோ ஆயிரம் ரசிகர்கள் தங்களை அந்தத் திரைப்பட மகானுபாவர்களிடமிருந்து ஆத்மார்த்தமாய்ப் பிரித்துக் கொள்ள முடியாமல், அமைதியாய் ஒதுங்கி காணாமல் போயிருக்கிறார்கள்.

காலத்தின் மாற்றத்தில் அடிப்படை ஆழமான ரசனை என்பதிலும் மாற்றங்கள் ஏற்பட்டு விடுமா என்ன? எல்லாவற்றிற்கும் மூலம் என்கிற விதிகளில் என்றுமே எந்த மாற்றமும் ஏற்படுவதில்லையே…! அவற்றிலிருந்து பிரிந்த கிளைகளில் சுற்றுப் புற சூழல்களினால் நீர்த்துப் போனவைதானே அநேகம்…! அப்படி மாற்றம் ஏற்பட்டிருக்குமாயின், அவற்றிற்கும் மேன்மையாய் ஒன்று தோன்றியிருக்குமாயின், இன்று இதை எழுத வேண்டிய அவசியமே வந்திருக்காதே…!அப்படித்தான் தமிழ்த் திரைப்படங்கள் படிப்படியாய் நீர்த்துப் போய் விஷயகனமும், ஆழமும் அற்றுப் போயின. அந்தத் திறமைசாலிகளும் கௌரவமாய், மதிப்பாய் ஒதுங்கியிருந்தார்கள். காணாமல் போனவர்களாய், சாதாரணர்களால் கருதப்பட்டார்கள். ஆனால் அவர்கள் எத்தனை ஆயிரம் ரசிகர்களின் மனதில் நீங்காது வாழ்ந்து கொண்டிருந்தார்கள்?.

எத்தனை கால மாற்றங்கள் ஏற்பட்டால்தான் என்ன…

என்றைக்கும் ஒன்று நிச்சயம். ஒரு நாகையாதான். ஒரு எஸ்.வி சுப்பையாதான். ஒரு ரங்காராவ்தான். ஒரு எஸ்.வி.சகஸ்ரநாமம்தான். ஒரு பாலையாதான். ஒரு எம்.ஆர். ராதாதான். இவர்களை மாற்றி, வேறு ஒருவரை இவர்கள் இடத்தில் என்றென்றைக்கும் தமிழ்த் திரையுலகம் நினைத்துப் பார்க்கவே முடியாது. ரசிகப் பெருமக்களும் வைத்துப் பார்க்க மாட்டார்கள். அப்படியான ராஜ முத்திரையை ஆழமாகப் பதித்தவர்கள். அப்படி முரணாக நினைத்துப் பார்த்தால், பார்க்க முனைந்தால் அவன் ஆழ்ந்த ரசனை இல்லாத சராசரி ரசிகனாகத்தான் இருக்க முடியும். காலம் அப்படித்தான் நிர்ணயித்திருக்கிறது. காலத்தை இவர்கள் இப்படித்தான் நிர்ணயித்து ஸ்தாபித்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

தோ போறாரே…. யாரு அது? பாலையா அண்ணன் மாதிரி இல்ல…? மனசு பதறிக் கேட்கிறார் அவர். கண்ணுக்குப் புலப்படாத தூரத்தில் காவி வேட்டியில் தாடியும், மீசையுமடங்கிய சன்னியாசிக் கோலத்தில் அமைதியே உருவாய், ஆண்டவனின் நாமத்தோடு அடியெடுத்துப் போய்க் கொண்டிருக்கிறார் அவர்.

ஆமா…அவரேதான்….என்று ஒருவர் உறுதி செய்ய…அடடே…என்ன இப்படி? என்று பதறிப்போய், ஓடிப் போய் உடனே இங்க அழைச்சிட்டு வாங்க… என்று மதிப்போடும், மரியாதையோடும் கூட்டிவரச் செய்து, அவரைத் தேற்றி, உடனே அடுத்த படத்தில் வாய்ப்பளித்து, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னான காலகட்டத்தை முறியடித்து, அவரை மீண்டும் திரையுலகத்துக்கு இழுத்து வந்து நிறுத்திய பெருமை ஏ.வி.எம். நிறுவன அதிபர்களில் ஒருவருக்கு உண்டு என்ற உருக்கமான செய்தியை எத்தனைபேர் அறிந்திருப்போம்?

அப்படிக் காணாமல் போன, ஒதுங்கிக் கொண்ட, ஒதுக்கப்பட்ட, எத்தனையோ குணச்சித்திர நடிகர்களில் ஒருவர்தான் திரு சித்தூர் வி..நாகையா அவர்கள். இவரைப் போல் இன்னொருவரை இன்றுவரை தமிழ்த் திரையுலகம் காணவில்லை. இது சத்தியம். இத்தனைக்கும் தெலுங்கு, தமிழ் என்று 200க்கும், 160 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்தான். ஆனாலும் பார்த்துப் பார்த்து ரசித்து, உள்வாங்கிய பண்பட்ட நடிகரைப் படிப்படியாகக் காணவே முடியவில்லையே என்ற நிலை வந்தபோது வேதனைப்பட்டுப் புழுங்கிப் போன மூத்த தலைமுறை ரசிகர்கள் அநேகம்.

நாகையாவின் வாழ்க்கை வரலாற்றையோ, அவரின் சாதனைகளையோ விவரிக்க வரவில்லை இந்தக் கட்டுரை. கணினியைத் திறந்தால் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன அவைகள். 1938 லேயே நடிக்க வந்துள்ள நாகையா அவர்கள் அந்தக் காலத்திலேயே இருப்பவர்களில் அதிகமாகச் சம்பளம் வழங்கப்பட்ட நடிகராக இருந்திருக்கிறார். நடிப்பு, இயக்கம், கதை வசனம், பாட்டு, இசை என்று பல்துறை விற்பன்னராக விளங்கியிருக்கிறார். இந்தத் திறமைகளெல்லாம் உள்ளடக்கி அவருக்கு 1965 லேயே பத்மஸ்ரீ வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறது. திரையுலகில் தனது திறமையை முன்னிறுத்தியே வளர்ந்து வந்துள்ள நாகையா அவர்கள் நடித்த எத்தனையோ திரைப்படங்களைத் தமிழ் ரசிகர்கள் அத்தனை சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. மூத்த தலைமுறை ரசிகன் தனது மகன் மகள்களுக்கு எடுத்துச் சொல்லி அறிய வைக்க வேண்டிய முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் நாகையா மிக முக்கியமானவர். ஸ்வர்க்கசீமா, தியாகய்யா, மீரா, சக்ரதாரி, ஏழை படும் பாடு, குமாஸ்தா, பக்த மார்க்கண்டேயா, பாவ மன்னிப்பு, கப்பலோட்டிய தமிழன், உயர்ந்த மனிதன், தில்லானா மோகனாம்பாள், இரு மலர்கள், பச்சை விளக்கு, பாலும் பழமும், நம்நாடு….என்று இன்னும் எத்தனை எத்தனை முத்திரைகளைப் பதித்துக் கொண்டே போவது? ஒவ்வொன்றிலும், வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களில் வித்தியாசமான பாவங்களையும், உணர்ச்சிகளையும், சோகங்களையும், கோபங்களையும், வீரத்தையும், விரக்தியையும், விதவிதமாக வெளிப்படுத்தியவர் .நாகையா.

இவரின் வசன உச்சரிப்பும், அதிலுள்ள ஏற்ற இறக்கங்களும், அந்தந்த வார்த்தைகளுக்கான பொருள் தெறிக்கும்படியான அழுத்தங்களும் ஏற்றுக் கொண்டுள்ள கதாபாத்திரங்களைத் தூக்கி நிறுத்திய அழகும் சொல்லி மாளாதது.. சீனியர் நடிகர், ஜூனியர் நடிகர் என்ற ஏற்ற இறக்கங்களையெல்லாம் இவர்கள் பார்த்ததில்லை. ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரம் மட்டுமே இவர்களுக்கு முக்கியமாய் இருந்தது. மொத்தப் படத்தில் வெறும் நான்கு அல்லது ஐந்து காட்சிகளில் மட்டும் தோன்றக்கூடிய வேஷமாய் இருந்தாலும், பாருங்க…பாருங்க…இப்ப நாகையா வருவார்…அருமையான ஸீன்… என்று உணர்ச்சி பொங்கக் காத்துக் கொண்டு இருப்பார்கள் தமிழ் ரசிகர்கள்.

பாவ மன்னிப்பு திரைப்படத்தில் இஸ்மாயில் அண்ணனாகத் தோன்றி முதல் காட்சியிலேயே ரயில் தண்டவாளத்தில் கிடக்கும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நிழலாய் அவர் நடந்து அகலும் காட்சி பார்ப்பவர் மனதை அப்படிக் கொள்ளை கொள்ளும். தெய்வமே வந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றியது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். மறைந்து நின்று அந்தத் தவறைச் செய்து விட்ட குற்ற உணர்வோடு, இருக்கும் மனவேதனை மொத்தத்தையும், முகத்தில் காட்டிக் கொண்டு, குழந்தை காப்பாற்றப்பட்டுவிட்ட நிம்மதியில் நெஞ்சில் கையை வைத்து ஒரு கணம் கண்ணை மூடும் பாலையாவின் நடிப்பு பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும்.

இந்தக் குப்பத்துல எங்க எல்லாருக்கும் தெய்வம் எங்க இஸ்மாயில் அண்ணன்தான். அவர்தான் எங்க தலைவர் என்று கொத்தமங்கலம் சுப்பு கூற, என்னாய்யா அய்யரே, கதையவே மாத்துற… என்று எம்.ஆர்.ராதா கேலி செய்கையில், யார் தலைவரா இருந்தா என்ன, எங்களுக்குள்ள அந்த பேதமெல்லாம் இல்லே….இங்க …எந்தக் காரியத்தையும் யார் செய்றாங்கங்கிறது முக்கியமில்லே…செய்ற காரியந்தான் முக்கியம் என்று அழுத்தம் திருத்தமாக நாகையா நிதானமாய் எடுத்து வைக்கும் காட்சி, அங்கே, அந்தக் குப்பத்தில் இருக்கும் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் அற்புதமான காட்சியாக அமையும். இப்படி ஒரு மனிதரும், இத்தனை ஒற்றுமையான மக்களுமாக நம் நாடு மொத்தமும் இருந்துவிடக் கூடாதா என்று மனது ஏங்கும். இந்த தேசத்தின் மீது பற்று உள்ள ஒவ்வொரு உண்மையான மனிதனும் இந்தக் காட்சியில் அப்படித்தான் நினைப்பான். திரைப்படங்கள் அத்தனை நல்லவைகளை நமக்குள் விதைத்த புனிதமான கால கட்டம் அது.

கப்பலோட்டிய தமிழனில் சிதம்பரம் பிள்ளைக்குத் தந்தையாக வருவார் நாகையா. பெயர் உலகநாதம் பிள்ளை. மாடசாமியின் (ஜெமினி கணேசன்) வழக்கினை எடுத்து வாதாடுபவர் சிதம்பரம் பிள்ளை (நடிகர் திலகம்). எதிர்த்தரப்பு வக்கீல் நாகையா அவர்கள்.

கட்சிக்காரருக்கு மாடசாமி இடத்தை விற்பதாக எழுதிக் கொடுத்து 200 ரூபாய் முன்பணமும் வாங்கியிருக்கிறார் என்ற விபரத்தைக் கோர்ட்டிலே சொல்லி, அதற்கு சாட்சி இருக்கிறதா என்று சிதம்பரம் பிள்ளை கேட்க, ஓ.யெஸ்…என்று ஆணித்தரமாகத் தலையாட்டிக் கூறுவார். மிகுந்த நம்பிக்கையுடனான திறமையான வக்கீல் என்ற தோற்றம் அந்த ஒரு வார்த்தையின் அவரது உச்சரிப்பால் அங்கே ஸ்தாபிக்கப்பட்டு விடும். கூறிவிட்டு எழுதிக் கொடுத்துள்ள பத்திரத்தின், வரிகளின் மேல் விரலை வைத்து, ஆன் டிமான்ட், ஐ ப்ராமிஸ் டு பே…எ சம் ஆஃப் ருபீஸ், டூ உறன்ட்ரட் இன் கேஷ்…. என்று அவர் வாசிக்கும் காட்சியும், அதை மறுத்து நடிகர்திலகம் (சிதம்பரம் பிள்ளை) அவர்கள் வெறும் பணம் மட்டுமே தருவதாகத்தான் எழுதிக் கொடுத்திருக்கிறாரே தவிர, நிலத்தை விற்பதாக எழுதிக் கொடுக்கவில்லை, இதை ஏன் அப்பா…ஸாரி…எதிர்த்தரப்பு வக்கீல் கவனிக்கவில்லை….என்று மறுதலிக்கும் காட்சி, படத்தின் ஆரம்பத்தையே களை கட்டித் தூக்கி நிறுத்தி விடும்.

அந்த இடத்தில் நடிகர் திலகம் இருந்தாலும், பார்வையாளர்களால் அவர் மட்டுமே கவனிக்கப்படுவார் என்கிற நிலையில், அவருக்கு இணையாக ஒரு திறமையான, பழுத்த அனுபவமிக்க நடிகர் இருந்தால்தான் இந்தக் காட்சி சிறக்கும் என்று நாகையாவைத் தேர்வு செய்த பி.ஆர். பந்துலு அவர்களை நாம் எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்?

மொத்தப் படத்திற்குமே ஆரம்பத்தில் வரும் அந்த ஒரு சில காட்சிகள்தான் நாகையா தோன்றுவது என்றாலும், அப்படியெல்லாம் நடிக்க முடியாது என்று யாரும் அந்தக் காலத்தில் மறுக்கவில்லை என்பதும், நான் எத்தனை சீனியர், இத்தனை சின்ன வேஷத்தில் நடிப்பதா என்று ஒதுங்காதிருந்ததும், தோன்றக் கூடிய ஒரு சில காட்சிகளேயாயினும் அதனை மனப்பூர்வமாக, அர்ப்பணிப்பு உணர்வோடு, இயக்குநருக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் முழுத் திருப்தியும், நிறைவும் ஏற்படும் வகையில் செய்து முடித்ததும், எத்தனை பண்பட்ட மனதும், தன்னம்பிக்கையும், உழைப்பும் அர்ப்பணிப்பு உணர்வும் இருந்திருக்கும் என்று நினைக்க வைத்து நம்மைப் பிரமிக்க வைக்கிறதல்லவா?

பாலும் பழமும் படத்தில் அவர் அந்த மருத்துவமனையின் பெரிய டாக்டராக வருவதும், புதிதாகப் பணியேற்க வரும் டாக்டர் ரவிக்கு (நடிகர்திலகம்) பிற டாக்டர்களை அவர் அறிமுகம் செய்து வைக்கும் காட்சியும், புதிதாகத் திருமணம் முடித்திருக்கும் டாக்டர் ரவி தன் ஆராய்ச்சியை மறந்து விட்டுக் காலம் கடந்து கொண்டிருப்பதை அவரது மனைவி சாந்தியின் வீட்டிற்கு சென்று சாந்தியிடம் பக்குவமாக விஷயத்தை எடுத்துக் கூறுவதும், மனைவிக்குப் புற்று நோய் என்பது அறிந்து வேதனை கொள்ளும் இடத்தில் அன்போடும், அரவணைப்போடும் டாக்டர் ரவிக்கு ஆறுதல் சொல்லும் பொறுப்புணர்வு மிக்க அந்த நடிப்பும், அந்தக் கதாபாத்திரத்தை நாகையாவைத் தவிர வேறு யார் அத்தனை துல்லியமாகச் செய்திருக்க முடியும்?

தில்லானா மோகனாம்பாளில் சண்முக சுந்தரம் தன் குருவான நாகையாவிடம் மோகனாவை எதிர்த்துப் போட்டியிடுவது குறித்து விபரம் தெரிவித்து ஆசி பெற வரும் காட்சி அது. மூங்கில் தட்டிகளால் தடுக்கப்பட்டிருக்கும் அந்தப் பூஜை அறையில் சண்முகசுந்தரம் பக்தியோடு நுழைந்து தன் குருவின் முன், குறிப்பிட்ட ஒரு இடைவெளியில் பணிவோடு நிற்கும் காட்சி. தன்னை மறந்து வாசிப்பில் ஈடுபட்டிருக்கும் குருவின் ஆழ்ந்த, அற்புதமான, அனுபவித்த, துல்லியமான வாசிப்பை பக்தியோடு கைகளைக் கோர்த்துக் கொண்டு ரசித்து நிற்கையில் காமிரா ஒரு முறை சிவாஜியின் முகத்துக்கு நேரே வந்து மெல்ல விலகிச் செல்லும். குருவின் வாசிப்பை அத்தனை பக்தியோடு அவர் ரசிக்கும் அழகை காமிரா அங்கே கவிதையாய்ச் சொல்லும்.

கலைஞர்களுக்கிடையே போட்டி இருக்க வேண்டிதான்….ஆனா அது பொறாமையா மாறிடாமப் பார்த்துக்கணும்…..என்று நாகையா கூறுகையில் அந்தப் “பொறாமை“ என்கிற வார்த்தையை அவர் அழுத்தமாய் உச்சரிக்கும் விதம். அதன் முழுப் பொருளை அப்படியே அர்த்தப்படுத்தி நிற்கும். மிகுந்த திறமைசாலியான நாதஸ்வர வித்வான் என்று சண்முகசுந்தரத்தை முன்னிறுத்துகையில் அப்படியானால் அவருக்கு குருவானவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை மனதுக்குள் கற்பனை செய்து, அதற்குப் பொருத்தமான நடிகர் இவரைத் தவிர வேறு யாருமில்லை என்று நாகையாவைத் தேர்வு செய்த ஏ.பி.நாகராஜன் அவர்களை இங்கே பாராட்டாமல் இருக்க முடியுமா? சொல்லப் போனால் ஓரிரு காட்சிகள்தான் அந்தத் திரைப்படத்தில். ஆனாலும் எத்தனை அழுத்தமாகத் தங்கள் முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள் அந்தக் கால நடிகர்கள்? இன்ன கதாபாத்திரம் என்று சொன்னால் இவர்கள் எப்படி அப்படியே மாறி விடுகிறார்கள்? அந்தக் கதாபாத்திரமாகவே எப்படி வாழ்ந்து விடுகிறார்கள்? இந்த அளவுக்கா ஒரு அனுபவமான நடிப்பு மிளிரும்? இவர்களால் நடிப்பில் தவறே செய்ய முடியாதா? தன் பாத்திரத்தையே உணராத எத்தனை நடிகர்களைப் பார்த்திருக்கிறோம்? பார்த்துக் கொண்டிருக்கிறோம்? தங்களுக்குக் கிடைக்கும் கதா பாத்திரங்களை இந்த மூத்த கலைஞர்கள் எப்படித் தங்கள் மனத் திரையில் கற்பனை செய்து கொள்கிறார்கள்? அப்படியான எல்லாவிதமான மனிதர்களையும் இவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார்களா? அது சாத்தியமில்லையே? அப்படியே சந்தித்திருந்தாலும் அவர்களை, அவர்களது செயல்களை மனதில் பதித்து, எப்படி இத்தனை துல்லியமாக இவர்களால் கண் முன் அந்த நடிப்பைக் கொண்டு வந்து நிறுத்த முடிகிறது? நடித்து நடித்து அனுபவ மெருகேறியிருந்தாலும் கூட, இயக்குநர்களின் கற்பனையை, எதிர்பார்ப்பை விட இவர்களால் எப்படி இத்தனை அழகியலாகச் செய்து முன்னிறுத்த முடிகிறது? கேள்விகள் தோன்றவில்லையா உங்கள் நெஞ்சில்? நீங்கள் ஒரு ஆழமான, அனுபவமான, தேர்ந்த ரசிகராக இருந்தால் நிச்சயம் இந்தக் கேள்விகளெல்லாம் உங்கள் மனதிலும் தோன்றித்தான் இருக்க முடியும்.

இதற்காகத்தான் சொன்னேன் ஆரம்பத்திலேயே…இது வெறும் நாகையாவின் வாழ்க்கை பற்றிய குறிப்புகளைக் கொடுக்க வேண்டி முன் வைக்கும் கட்டுரை அல்ல என்று.

நாகையா சின்னசின்னக் கதாபாத்திரங்கள் ஏற்றுத்தான் பெரும்பாலான படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் பத்தோடு பதினொன்று என்று என்றும் அவர் வெறுமே வந்து விட்டுப் போனவராக இருந்தவரில்லை. இவர்தானே இருக்கிறார் என்றும் அவருக்கு வாய்ப்பளித்தவர்களில்லை இயக்குநர்கள். மதிப்போடும், மரியாதையோடும்தான் வைத்திருந்தார்கள் அவரை.

உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் அந்தப் பங்களாவில் வேலை செய்யும் சாதாரணத் தொழிலாளியாகத்தான் நடித்தார் நாகையா. தொழிலாளி ராமையா. காலில் செருப்புப் போட்டுக் கொண்டு தெரியாமல் ஜமீன்தார் முன் நின்று விட்ட அவரை, கோபம் பொங்க ராமதாஸ் பட்டுப் பட்டென்று அறையும் காட்சி பார்ப்பவர் மனதைப் புரட்டிப் போட்டு விடும். ராமதாஸ் வில்லன் நடிகர். அதுவும் பல படங்களில் வில்லனுக்கு உதவியாளராக வந்து கொண்டிருந்தவர். அந்தப் படத்தில் சிவாஜிக்குத் தந்தையாக வருவார். ஜமீன்தார் வேஷப் பொருத்தம் அத்தனை துல்லியமாய் இருக்கும். பட்லருக்கான யூனிஃபார்ம் போட்டுக் கொண்டு, இடது தோளில் ஒரு சிறு கைத்துண்டோடு நாகையா நிற்கும் காட்சியும், அடிபடும் காட்சியும் அவர் மீது மிகுந்த பச்சாதாபத்தை ஏற்படுத்தும் நமக்கு. மனது பதறிப் போகும். இப்படி ஒரு காட்சி தேவைதானா என்று வேதனைப்படும். எவ்வளவு பெரிய நடிகர்? இப்படி அடி வாங்கும் சின்னப் பாத்திரத்தில் நடிக்கத்தான் வேண்டுமா? என்று கூட ஒரு கணம் தோன்றும்தான். அது ரசிகர்களாகிய பார்வையாளர்கள் அவர் மீது வைத்திருந்த பெரு மதிப்பு. மாறாத அன்பு.

காட்சியையா பார்த்தார்கள் அன்று? ரொம்பச் சின்னப் பாத்திரம் என்றா ஒதுங்கினார்கள்? அடி வாங்கிற மாதிரியெல்லாம் நடிக்க முடியாது என்றா முரண்டினார்கள்? அங்கே நான் நாகையா இல்லை அய்யா…..வேலைக்காரன் ராமையா. அவர் ராமதாஸ் இல்லை….ஜமீன்தார்….அது அந்தக் கதையில் அவரது பரம்பரைக் கௌரவத்தை, அதற்கான திமிரை வெளிப்படுத்தும் ஒரு காட்சி. அவ்வளவே…

அங்கே நாகையா நின்றாரா? அல்லது வேலைக்காரத் தொழிலாளி ராமையா நின்றாரா? நினைத்துப் பாருங்கள்?

இதே திரைப்படத்தில் தொழிலாளி ராமையா பணியிலிருந்து ஓய்வு பெறும் ஒரு காட்சி. முதலாளி சிவாஜியிடம் (தொழிலதிபர் ராஜூ) வந்து சொல்லி விடை பெற்றுக் கொள்கையில் அந்தக் காட்சியின் உருக்கம் வேறு எந்தப் படத்திலாவது இத்தனை சோகமாய் அமைந்திருக்கிறதா? நடிகர்திலகமும், நாகையாவும் தவிர வேறு யார் இருந்து இந்தக் காட்சியை இத்தனை அழகாகச் சிறப்பிக்க முடியும்?

ஒரு முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இடையே இத்தனை நெருக்கம் ஏற்பட முடியுமா? என்று நம்மை பிரமிக்க வைக்கும் இந்த இடம். உங்களுக்குச் சேர வேண்டியதெல்லாம் மாசம் முடிஞ்சவுடனே கரெக்டா வந்து சேர்ந்துடும் என்று சிவாஜி சொல்ல, ஐயா, எனக்குத் தெரியாதுங்களா இங்க எல்லாமே கரெக்டா நடக்கும்னு என்று சொல்லி அவர் கையைப் பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழும் காட்சி பார்வையாளர்களைப் பிழிந்து எடுத்து விடும். இந்த வரிகளை இங்கே நான் கோர்க்கக் கூடிய இந்த நேரத்தில் கூட என் கண்கள் கலங்கித்தான் போகின்றன.

எதிர்பாராதது திரைப்படத்தில் தன் மகனின் காதலியைத்தான் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளோம் என்று அவர் அறிய நேரும் காட்சியிலும், அதற்குப்பின் அவர் படும் வேதனையிலும், தான் செய்த பாவத்திற்கு எங்கே சென்று கழுவாய் தேடுவது என்று தெரியாமல் அவர் தவித்து நின்று, வெளியேறி விடுவதும், கண் பார்வை போன நிலையில் தான் மகனைச் சந்திப்பதும், அவனோடு கிடந்து அல்லற்படுவதும், முதலிரவில் மனைவி தன்னை அப்பா என்று அழைத்த கணத்தில் துடிதுடித்துப் போவதுமான பல்வேறு உருக்கமான காட்சிகளை இன்றும் மறந்துவிட முடியுமா தமிழ் சினிமா ரசிகர்கள்?

இரு மலர்கள் என்று ஒரு படம். இந்தப் படத்தின் சிறந்த நடிகர் என்று விருது வழங்க வேண்டுமாயின் நான் திரு சித்தூர் வி. நாகையா அவர்களுக்குத்தான் அதை வழங்குவேன். நடிகர்திலகம் இருந்தால் கூட அவரும் நிச்சயமாக அதைத்தான் ஏற்றுக் கொள்வார். அந்த அளவுக்கு உருக்கமான அவரின் தந்தைக் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பார் நாகையா.

சின்ன வயசிலேர்ந்து உனக்காகவே பொத்திப் பொத்தி வளர்த்த இவளைவிட வேறு யார் உனக்குச் சரியான வாழ்க்கைத் துணை ஆக முடியும் என்று கே.ஆர்.விஜயாவை ஒரு கையால் அணைத்து நிறுத்திக் கொண்டு, என்னடா நாபாட்டுக்கு பேசிட்டேன் இருக்கேன், பதில் சொல்லாமயே மேலே போயிட்டிருக்கியே என்று சிவாஜியிடம் கண்டிக்கும் கட்டமும், நா சாந்தியை அப்படி நினைச்சுப் பார்த்ததேயில்லைப்பா என்று அவர் கூற, இவன் கிடக்காம்மா, இவனுக்கு உன்னோட வாழக் குடுத்து வைக்கலை அவ்வளவுதான், இவனை விட படிப்புலயும், அந்தஸ்துலயும் உயர்ந்த ஒருத்தனை உனக்குப் பார்த்து, ஜாம், ஜாம்னு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேம்மா…என்று அவர் மகன் மறுத்துவிட்ட வயிற்றெரிச்சலோடும், விரக்தியோடும் கூறும் காட்சி பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுத்து விடும். நாமும் நாலு பேர் சென்று நல்ல புத்தி சொல்லுவோமே என்று தோன்றும் அளவுக்கு ஒன்றிப் போவோம் அந்தக் காட்சியில்.

மாடியில் சிவாஜி நிற்க, கீழே உறாலில் நாகையா உட்கார்ந்து தினசரி படித்துக் கொண்டிருப்பார். வாசல் கதவை ஒட்டி கே.ஆர்.விஜயா நிற்பார். தபாலை எதிர்பார்த்து கதவு தட்டப்படுவதை எதிர்நோக்கி, என்னாச்சு இன்னும் காணலை என்று சிவாஜி விஜயாவைப் பார்த்து சைகை செய்ய, தெரில என்று குழந்தைபோல் விஜயா பதில் சொல்ல, இந்த சைகைகளையெல்லாம் ஜாடையாய் கவனிக்கும் நாகையாவின் நடிப்பும், அந்தக் காட்சியின் உண்மையான வீர்யமும், இப்படி ஒரு காட்சியை எடுத்த இயக்குநர் திரு திரிலோகசந்தரைப் பாராட்டுவதா, எதிர்பார்ப்புக்கும் மேல் நடித்த நாகையாவைப் பாராட்டுவதா, மதிப்பும் பண்பும் மிக்க அந்தத் தந்தை கதாபாத்திரத்திற்கு வேறு எவரை நினைத்துப் பார்க்க முடியும்?

ஒவ்வொரு படத்திலும் எப்படியெல்லாம் நம்மை உருக வைத்திருக்கிறார்கள். பார்க்கும் ரசிகனைப் பைத்தியமாய் அடித்திருக்கிறார்கள்? அவையெல்லாம் வெறும் திரைப்படங்களா அல்லது உண்மையான வாழ்க்கையா? நடித்தவர்களா அல்லது வாழ்ந்தவர்களா?

நாகையாவைப் போன்ற பண்பட்ட நடிகர்கள் வலம் வந்த ஐம்பது, அறுபது காலகட்டங்கள் தமிழ்த் திரையுலகின் பொற்காலம்.. அந்தத் திரைப்படங்களையெல்லாம் பொறுக்கி எடுத்து இன்றைய இளம் தலைமுறையினருக்குப் போட்டுக் காண்பித்து, விவரித்துச் சொன்னால் நமது பண்பாட்டு விழுமியங்களின் பெருமை அறிவார்கள் அவர்கள். தங்கள் வாழ்க்கையும் இப்படி அர்த்தபூர்வமானதாக அமைய வேண்டும் என்று மனதிற்குள் உறுதி கொள்வார்கள். குறைந்தபட்சம் வாழ்க்கையில் எவ்வகையிலும் கெட்டுப் போய்விடக் கூடாது என்றாவது பிரதிக்ஞை செய்து கொள்வார்கள். எப்படி நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு வரக் கூடிய வாசகர்கள் பழந்தமிழ் சங்க இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்றும், நாற்பது, ஐம்பது, அறுபது கால கட்டப் படைப்பாளிகளின் எழுத்துக்களை ஒன்று விடாமல் தேடித் தேடிப் படித்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோமோ அது போல் ஒரு தேர்ந்த, ஆழமான, பண்பட்ட சினிமா ரசிகனாக ஒருவன் விளங்க வேண்டுமாயின், நல்ல திரைப்படங்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டுமாயின், நடிப்பின் வெவ்வேறு விதமான பரிமாணங்களை உணர வேண்டுமாயின், பல்வேறுபட்ட திறமையான நடிகர்களின் பழுத்த நடிப்புத் திறனை ஆய்ந்து அறிய வேண்டுமாயின், உலக சினிமாக்களை உய்த்துணர வேண்டுமாயின், இவையெல்லாவற்றிற்கும் அடிப்படையான இந்தப் பழம் பெரும் ஜாம்பவான்களின் படங்களை ஒன்று விடாமல் பார்த்து ரசிக்கவும், ஆத்மார்த்தமாய் மனதிற்குள் வாங்கவும், எத்தனை திறமைசாலியான நடிகர்களெல்லாம் இருந்திருக்கிறார்கள் தமிழ்த் திரையுலகில் என்பதைப் புரிந்து கொள்ளவும் வேண்டும் என்ற உறுதியான இறுதி வரிகளோடு சித்தூர் வி.நாகையா என்ற தமிழ் சினிமா மூத்த தலைமுறை ரசிகனின் மானசீகத் தந்தையின் கட்டுரையை இங்கே முழு திருப்தியோடு நிறைவு செய்து கொள்கிறேன்.

---------------------------------------------------

“அடே லேக்கா, போடாதே காக்கா…” ”சொல்லிப்புட்டேன் அம்புடுதேன்…” (மறக்க முடியாத ஏ.கருணாநிதி) ---------கட்டுரை-----------------------------------------------------------(காட்சிப்பிழை – சினிமா மாத ஆய்விதழ் – செப்டம்பர் 2013 ல் வெளிவந்த என் கட்டுரை)

மன்னார்சாமி மன்னார்சாமி போலீஸ்-கப்பலோட்டிய தமிழன்

ஏ.கருணாநிதி-பார்மகளேபார் படத்தில் ஏ.கருணாநிதி ஜெமினியுடன் ஏ.கருணாநிதி-மாறுவேடத்தில்

மிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை என்பது எல்லாக் கால கட்டங்களிலும் முக்கிய இடம் வகித்திருக்கிறது. திரைக்கதையோடு ஒட்டிய நகைச்சுவைக் காட்சிகளை அமைத்தல், கதையோடு ஒட்டாமல் தனி வழியாக நகைச்சுவைக் காட்சிகளைச் சுவைபடப் பயணிக்க வைத்தல், ஏதேனும் ஒரு கட்டத்தில் கதையின் மையப்பகுதியில், அல்லது முக்கிய இறுதிக் கட்டத்தில் பொருத்தமாக இணைந்து கொள்ளச் செய்தல் என்பதாக வெவ்வேறு வகைமைகளில், கதையின் மைய ஓட்டம் சிதைந்து விடாமல் நகைச்சுவைக் காட்சிகள், அதன் முக்கிய நடிக, நடிகையர்கள், என்று தவிர்க்க முடியாத ஒன்றாகவே நம் தமிழ்த் திரைப்படங்களில் இருந்து வந்திருக்கின்றன. அந்தந்தக் கால கட்டத்திற்குத் தகுந்தாற்போல் வசன மொழியினாலும், உடல் மொழியினாலும் நின்று நிதானித்து யோசித்துப் புரிந்து, சிரித்து ரசிக்கும் வகையிலும், உடனுக்குடனே, காட்சிகளின் வழியே கூடவே பயணித்து விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்து தன்னை மறக்கும் வகையிலும், மொத்தத் திரைப்படத்திலும் நகைச் சுவைக் காட்சிகளே விஞ்சி நிற்கும் ஆளுமையாகவும் கூட, அவையே படத்தின் வெற்றி இலக்கிற்குக் காரணமாயும் ஆகிப் போன வழியிலும், திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகள் என்பது முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன.

ஒட்டுமொத்தத் திரைக்கதையின் காட்சிரூபக் கதைசொல்லலின் வேகமின்மையைச் சரிக்கட்டி, படத்தைத் தூக்கி நிறுத்தும்விதமாகவும், பிழியப் பிழிய வடித்தெடுக்கப்பட்ட சோகத்தின் உச்சத்தை வருடிக் கொடுத்துப் பார்வையாளர்களைப் பதப்படுத்தும் மாமருந்தாகவும், நகைச்சுவைக் காட்சிகள் ஒரு திரைப்படத்திற்கு ஆணிவேராக நின்று விளங்கியிருக்கின்றன.

ஒரு நல்ல கதையை அழுத்தமான காட்சி அமைப்பின் வழி திறமையாகச் சொல்லிக் கொண்டே சென்று கடைசிவரை ரசிகர்களை அசையாமல் நெளியாமல் அமர வைத்து, சிறந்த முடிவைக் கடைசியில் சொல்லி, இதற்குமேல் ஒரு அற்புதமான முடிவை இக்கதைக்குத் தர முடியுமா? என்று சவால் விடுவது போல் படம் பார்த்தவர்களை அதே திருப்தியில் எழுப்பி அனுப்பும் திறமை எத்தனையோ திரைப்படங்களுக்கு இருந்திருக்கிறதுதான். அம்மாதிரியான கடுமையான உழைப்பைத் தாங்கி வந்த படங்களுக்குக் கூட நகைச்சுவைக் காட்சிகள் என்பது தவிர்க்க முடியாததாகவே இருந்து வந்திருக்கிறது என்பதுதான் இன்றுவரையிலான உண்மை.

தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் கதாநாயக, நாயகிகளைச் சுற்றித்தான் கதைகள் பின்னப்பட்டிருக்கின்றன. குறிப்பாக நாயகன்தான் பிரதானமாக இருந்திருக்கிறான். இதர கதாபாத்திரங்கள் அப்படிச் சொல்ல வந்த கதையைப் பலமாக நகர்த்த உதவும் சக பயணிகளாகவே கொள்ளப்பட்டிருக்கின்றன. அவைகளின் முக்கியத்துவம் அந்தந்த உப பாத்திரங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்ட சிறந்த பக்குவமிக்க, பழுத்த அனுபவமுள்ள நடிகர்களாலேயே மிளிர்ந்து நினைவில் நிற்கும்படி ஆகியிருக்கிறது. மிகத் திறமை வாய்ந்த அனுபவஸ்தர்களாக மதிப்பு மிக்கவர்களாகவே ரசிகர்களின் மனதில் அவர்கள் இருந்திருக்கிறார்கள். பல்லாண்டு கால நாடக மேடை நடிப்பு அனுபவங்கள் அவர்களுக்குக் கை கொடுத்து உதவியிருக்கின்றன. ஒரு சிறு கதாபாத்திரமானாலும், ஓரிரு காட்சிகளேயாயினும், பெருமையோடும், சந்தோஷத்தோடும், அதை ஏற்று, நிறைவோடு செய்து தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சியில், இப்போ இவர் வருவாரு பாருங்க…என்ற அதீத எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனது இத்தனை ஆண்டு காலப் பழுத்த நாடக அனுபவத்திற்கு, இந்த மாதிரியான சின்னச் சின்ன வேஷமெல்லாம் ஏற்பதற்கில்லை, அது எனது கௌரவத்தைப் பெரிதும் பாதிக்கும் விஷயம் என்று யாரும் எப்போதும் ஒதுங்கியதேயில்லை. காரணம் அவர்களின் நாடக மேடை அனுபவங்களில் பல பெரிய நடிகர்கள் வெவ்வேறு சமயங்களில் சிறு சிறு வேடங்களை ஏற்று ஏற்று மேலே வந்திருப்பதும், தவிர்க்க முடியாத ஆள் பற்றாக் குறையும், அவசியமும் தோன்றிய நெருக்கடியான காலகட்டங்களில் ஒருவரே தன் நடிப்புத் திறமையைப் பகுத்துக் காட்டும் விதமாய், ஒரே நாடகத்தில், அடுத்தடுத்த காட்சிகளில், வெவ்வேறு கதாபாத்திரங்களில் சோபித்ததும் (பெண் வேடமிட்டு நடித்தது உட்பட) யாரும் எப்போதும் எதற்கும் தயாராய் இருக்க வேண்டும் என்கிற கடினமான பயிற்சியின் கீழ் தொழில் பக்தியின்பாலான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு தங்களை மிகச் சிறந்த பழுத்த அனுபவசாலிகளாக எப்போதும், எந்நிலையிலும், நிலை நிறுத்திக் கொண்டதும்தான் நடிப்பை உயிர்மூச்சாகக் கொண்ட பலரின் நிகரில்லாத அடையாளங்கள்.

மொத்தத் திரைப்படத்தின் உயிர்நாடியாக கதாநாயக, நாயகி நடிக நடிகையர்கள் மட்டும்தான் நினைவில் நின்றார்களா? தந்தையாகவும், தாயாகவும், அண்ணனாகவும், தம்பியாகவும், தங்கையாகவும், அத்தானாகவும், சித்தப்பனாகவும், பெரியப்பனாகவம், தாத்தாவாகவும், பாட்டியாகவும், திரைக்கதைக்கு ஏற்ற இன்னும் பல மாறுபட்ட வேடங்களிலும் இருந்த எவரும் சோபிக்கவில்லையா என்ன? அவர்களையும், அவர்களின் மறக்க முடியாத நடிப்பினையும் மக்கள் ரசிக்காமலா இருந்தார்கள்? அவர்களுக்காகவே வந்து திரும்பப் பார்க்காமலா இருந்தார்கள்? அந்தந்தப் பாத்திரங்களைத் தங்கள் குடும்ப உறுப்பினர்களாகவல்லவா கண்டார்கள்? தங்களின் சொந்தங்களாகவல்லவா கற்பனை செய்து கொண்டார்கள்? தங்கள் உறவுகளில் பலரிடம் அந்த நடிகர்களின் அடையாளங்களைக் கண்டு மகிழ்ந்தார்களே? அந்தப் பாத்திரங்கள் பேசிய வசனங்களை மனதில் நிறுத்திக் கொண்டு, அதன் பெருமைகளைத் தாங்களும் உணர்ந்து, வாழ்வில் அடிபெயர்த்துச் செல்லும் ஒவ்வொரு கால கட்டங்களிலும் அந்த நல்லவைகளை நினைத்துப் பார்த்துப் பின்பற்றுபவர்களாகவல்லவா வாழ்ந்தார்கள்? ஒரு திரைப்படத்தின் ஒட்டு மொத்தக் கதா பாத்திரங்களின் நல்லவைகள் அனைத்தையும் மனதில் நிறுத்திக் கொண்டதனால்தானே மீண்டும் மீண்டும் வந்து வந்து பார்த்து ரசிக்கும், அதனை ஒப்புதல் செய்யும் மனோபாவம் கொண்டார்கள்? மூத்த தலைமுறையினரின் இந்த வழி முறைகளை யாரேனும் மறுக்க முடியுமா?

அப்படியான பங்களிப்பு நகைச்சுவைக் காட்சிகளுக்கும், நகைச்சுவை நடிகர்களுக்கும் தவிர்க்க முடியாத இருப்பாகவே இருந்ததுதானே. கிடைக்கும் எளிய சந்தர்ப்பங்களில் பார்வையாளர்களை, (இந்த இடத்தில் சினிமா ரசிகர்களை என்று சொல்வதே சாலப் பொருந்தும்) பலபடி சிந்திக்கத் தூண்டும் கருத்துக்களைச் சொல்லி, கேள்விகளை முன் வைத்து, உலக நிகழ்வுகளை, நடப்புக்களை நகைச்சுவையாய்ப் பகடி செய்யும் வித்தையைக் கற்றிருந்தார்கள்தானே…! தங்கள் உடல் மொழியினாலும், கொனஷ்டைகளினாலும், வெவ்வேறுவிதமான பாவங்களினாலும், சொந்தக் கற்பனை சார்ந்த வசனங்களினாலும், அவற்றைக் கொச்சையாகவும், நீட்டிச் சுருக்கிப் பேசும் ரசனையினாலும், அசட்டுப் பார்வை, அட்டகாசச் சிரிப்பு, கோணங்கித் தனத்தினாலும், விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார்கள்தானே? அப்பாடா…! என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு, கதையின் சோகத்திலிருந்து, அது எழுப்பிய மன பாரத்திலிருந்து, நெஞ்சத் தாக்கத்திலிருந்து கொஞ்சம் மீள்வதற்காக அடுத்தடுத்த காட்சிகளில் இவர்களின் வருகையை ரசிகர்கள் எத்தனை உற்சாகமாய் எதிர்கொண்டார்கள்? அப்படி எத்தனையெத்தனை காமெடி நடிகர்களை இந்தத் தமிழ்த் திரையுலகம் கண்டிருக்கிறது? அப்படியான எல்லோரின் திறமைகளை, நம் இயக்குநர்கள் கூடியவரை (அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது) விடாமல் பயன்படுத்திக் கொண்டது எத்தனை முக்கியமான விஷயம்.

காளி என்.ரத்தினம், ஃபிரன்ட் ராமசாமி, கொட்டாப்புளி ஜெயராமன், சாய்ராம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், காகா ராதாகிருஷ்ணன், டிஆர்.ராமச்சந்திரன், கே.ஏ.தங்கவேலு, ஏ.கருணாநிதி, புளிமூட்டை ராமசாமி, டி.எஸ்.துரைராஜ், சாரங்கபாணி, ராமாராவ், சந்திரபாபு, குலதெய்வம் ராஜகோபால், என்னத்தே கன்னையா, பாலையா, எம்.ஆர்..ராதா, வி.கே.ராமசாமி, நாகேஷ், சோ என்று அறுபதுகளின் இறுதிவரையிலான காலகட்ட நகைச்சுவை நடிகர்களை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா? இதில் பலரும், குறிப்பாக பாலையா, எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, நாகேஷ் போன்றவர்கள் ஆல்ரவுண்டர்களாக அல்லவா வலம் வந்தார்கள்.

இந்த நகைச்சுவை நடிகர்கள் நம் தமிழ்த் திரைப்படங்களில் நமக்கு அளித்த சந்தோஷங்கள்தான் எத்தனையெத்தனை? நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்து, மகிழ்வித்த காலங்கள்தான் எத்தனை? இவர்களின் கண்களும், காதுகளும், வாயும், மூக்கும், பல்லும், சிரிப்பும், கைகளும், கால்களும், நடையும் உடையும், எல்லாமும் நடித்து, நம்மை ரசிக்க வைத்து, விழுந்து விழுந்து சிரிக்க வைத்து எப்படியெல்லாம் நம்மைப் பரவசப்படுத்தியிருக்கின்றன. அப்படிக் கிடைத்த சந்தோஷங்களில் ரசிகர்கள் தங்களின் சொந்தத் துயரங்களை, சோகங்களை கொஞ்சமேனும் மறந்தார்களே? இல்லையென மறுக்க முடியுமா? வாழ்க்கையின் நெருக்கடிகளைத் தளர்த்திக் கொண்டார்களே…! கட்டுப்பாடுகளின் அடர்த்தியை நெகிழ்த்திக் கொண்டார்களே…! மனதை இலகுவாக்கிக் கொண்டு, உறவுகளோடு சகஜபாவம் கொண்டார்களே…! வாழ்க்கை என்பது எல்லாவிதமானதும்தான் என்கிற திரை வடிவங்களின் இதய நாதங்களை உள் வாங்கி, அவை தந்த தெளிர்ச்சியில், எதையும் யதார்த்தமாய் எதிர்கொள்ளும் மனோபாவங்களைப் போகிற போக்கில் அடைந்து, இருக்கும் காலங்களை எதற்காகக் கெடுபிடியாக்கிக்கொண்டு, நம்மையும், சுற்றத்தையும் பிணக்கிக் கொண்டு திரிய வேண்டும் என்கிற பக்குவ மனநிலையை வந்தடைந்தார்களே….இப்படியான பங்களிப்புக்கு திரைப்படங்கள் செயல்படவேயில்லை, இதெல்லாம் நாமே கற்பனைத்துக் கொள்வது, வெறும் கதையாடல் இது என்று சற்றேனும் உண்மைதான் என்று இணங்கி வராமல் முற்றிலுமாக யாரேனும் மறுதலிக்க முடியுமா?

தவிர்க்க இயலாத முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு என்பது நமது தமிழ்த் திரைப்படங்களின் சிறந்த நகைச்சுவைக் காட்சிகள் என்கிற பரிமாணத்தின் வகைப்பாடுகள் ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்திருக்கிறது என்பது உண்மைதானே…!

ஆமாம்யா, ஆமாம்….ஒத்துக்கிறோம் …அதுக்கு இப்போ என்ன செய்யச் சொல்றீங்க? என்று ஓங்கிய குரல்கள் பலவும் காதுக்குள் வந்து ங்ங்ஙொய்ய்ய்ய்………. என்று ரீங்கரிக்கின்றனதான். காலம் போன போக்கில் நாமும் வேகமாய் புற வெளிகளுக்கு இழுக்கப்பட்டு, இவற்றையெல்லாம் மறந்துதான் போனோம். நம்மை ஆற்றிக் கொள்வதற்கு எதுவுமே துணையில்லாமல் போனதே என்று நொந்து கொள்ளும் நிலைக்கு ஆளாகினோம்.

இன்று நகைச்சுவை என்பது அந்தளவில்தான் இருக்கிறதோ என்ற சந்தேகம்தான் நம்முள்ளே ஜனிக்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாய்க் கண்டு கொண்டிருப்பதே, பேசிக் கொண்டிருப்பதே, செய்து கொண்டிருப்பதே நகைச்சுவை என்பதாய்ப் படங்களில் ஏதோ சிறப்புப்போல் எடுத்துக் காண்பிக்கப்படுகிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது. அதனால்தான் யோசித்து, யோசித்து, சரி போகட்டும், தொலைந்து போகிறது என்பதுபோல் கூட்டத்தோடு கூட்டமாய் சிரித்து வைக்கிறோம். எதற்காகச் சிரித்தோம் என்று சற்றே யோசித்துப் பார்த்தோமானால் அது புலப்படாமல் போய் ரகசியமாய் நிற்பதுவும், அப்படியே புலப்பட்டாலும் இதற்கா சிரித்துத் தொலைத்தோம் என்று நமக்கு நாமே வெட்கமுறுவதுபோல் சுயமாய் நாணிக் கொள்வதும் வழக்கமாய் போய்விட்டது.

இருந்து சாதித்த நகைச்சுவை நடிகர்களையெல்லாம் பற்றிச் சொல்வதென்றால் அதற்கு ஒரு நீண்ட தொடர்தான் எழுதியாக வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொருவரும் படத்துக்குப் படம் தங்கள் முத்திரையை ஆழமாய்ப் பதித்திருக்கிறார்கள். எங்களைத் தவிர்த்து விட்டு நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்க முடியாது என்று சவால் விட்டிருக்கிறார்கள். என்ன பெயருள்ள நடிகர் என்பதாக ரசிகர்களின் மனதில் நின்றார்களோ அதே சுய உருவத்தில், வெவ்வேறு திரைப்படங்களில், வெவ்வேறு பெயர் கொண்ட கதாபாத்திரங்களில் அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே மணமாய் சோபித்திருக்கிறார்கள்.

இவர்களை, இவர்களின் திறமையை, உடல்மொழிகளை, வசனம் பேசும் தன்மையை, முகத்தில் சட்டுச் சட்டென்று மின்னல் வேகத்தில் பிரதிபலிக்கும் பாவங்களை, ஆழ்ந்த ரசனையின்பாற்பட்டு உய்த்துணர்ந்த இயக்குநர்களை இங்கே பாராட்டாமல் இருக்கவே முடியாது.

அப்படியான, திறமையான இயக்குநர்களால் தவறாமல், தவிர்க்க முடியாமல் பயன்படுத்தப்பட்ட, ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர்தான் திரு ஏ.கருணாநிதி அவர்கள். அவரை, அவர் பெயரை நினைவு கூறும்போதே நமக்கு மனதில் வருவது அவரது கொனஷ்டை நிறைந்த பெருத்த முகம்தான். அந்த உப்பிய முகமும், அகன்ற கண்களும், சுருண்ட முடிகளும், விடைத்துப் பெருத்த மூக்கும், கோணிக் கோணித் திரும்பும் வாயும், அந்த ஜாலங்களுக்கேற்றாற்போல் அபிநயிக்கும் அவரது கைகளும் கால்களும்….தமிழ் சினிமா ரசிகனை எவ்வளவோ சந்தோஷப்படுத்தியிருக்கிறது.

இங்கே இந்தளவுக்கு அவற்றைப் பகுத்துச் சொல்வதற்குக் காரணம், அதே பார்வையில், அதே ரசனையில்தான் பழம்பெரும் இயக்குநர்கள் அவரை ஆசையாய்த் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை வலியுறுத்தத்தான். ஒரு கதாபாத்திரத்திற்கு இவர்தான் பொருத்தம், இந்தக் கதையின், இந்தக் குறிப்பிட்ட நகைச்சுவைப் பாத்திரத்திற்கு இவரைப் போட்டால்தான் சோபிக்கும், தியேட்டர் கலகலக்கும் என்று மிகத் துல்லியமாகத் தேர்ந்தெடுத்த திறமையை நாம் எப்படி மறந்து விட முடியும்?

ஒன்றிரண்டைச் சொல்லித்தான் பார்ப்போமே…பொருந்துகிறதா என்றுதான் பாருங்களேன்…சரியான தேர்வுதான் என்று நீங்கள் நிச்சயமாக அந்த இயக்குநரை நினைக்காமல் இருக்கவே முடியாது.

தில்லானா மோகனாம்பாளில் ஒத்து ஊதுபவராக ஏ.கருணாநிதி வருவார். கட்டுக்குடுமியும், கைகளில் பட்டையாய்ப் பூசிய அரைத்த சந்தனமும், முகத்தின் இரு கன்னங்களிலும் அப்பிக் கொண்ட சந்தனக் கோடுகளும், நெற்றியில் பெரிய ஒரு ரூபாய் நாணயம் அளவுக்குப் பதித்த சந்தனக் குங்குமப் பொட்டும், காடாத்துணியிலான பனியன் போன்ற சட்டையும், கீழே கெண்டைக் காலுக்குக் கொஞ்சம் ஒரு பக்கம் ஏறியிருப்பது போன்று உயர்த்திக் கட்டிய வேட்டியுமாய் கையில் உறையிட்ட ஒத்து வாத்தியத்தோடு அவர் நிற்கும் காட்சியும், கச்சேரி நடக்கையில் துணியோடு போர்த்தி வாயில் அழுத்திய ஒத்து வாத்தியத்தோடு கன்னம் உப்பி அவர் வாசிக்கும் ரம்மியமும் அசல் ஒத்து வாத்தியக்காரன் தோற்றான் போங்கள்.இதென்ன பெரியஇதா? என்று தோன்றலாம். அப்படி நினைக்கையில் நீங்கள் உங்களை அந்த இடத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் அல்லது வேறு நடிகர்களைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்…கருணாநிதிக்குக் கொஞ்சம் கீழேதான் என்று தோன்றவில்லையானால் கேளுங்கள்…! அதென்ன சார், அந்த வேஷமிட்டவுடன் அப்படி அப்படியே இவர்களால் மறுஉருக் கொள்ள முடிகிறது? எங்கே வாங்கி வந்த வரம் இது? எந்த ஜென்மத்து ஆசையை இப்படிப் பூரணமாய் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்? என்ன தவம் செய்து இந்த அளவுக்கான ஒரு அர்ப்பணிப்பு இவர்களுக்குக் கை வந்தது?

இத்தனைக்கும் பெருத்த வசதிகளற்ற, சுமாரான, மிதமான வாழ்க்கை வாழ்ந்த கலைஞர்கள்தான். ஆஉறா, ஓகோ, என்று சந்தோஷத்திலேயே மிதந்தவர்களும் அல்லவே…! பொருளாதாரத் தேக்க நிலையைக் கண்டவர்கள்தானே…! ஏற்ற இறக்கங்களைத் தொடர்ந்து சந்தித்தவர்கள்தானே…! எல்லா இக்கட்டுகளுக்கும் நடுவே எப்படி இவர்களால் இத்தனை தொழில் பக்தியோடு உண்மையாய் வாழ முடிகிறது? ஏற்றுக் கொண்ட தொழிலுக்கு நேர்மையாய் இருத்தல், சத்தியமாய் வாழ்தல் என்கிற ஸ்வரூபம் இத்தனை சக்தி வாய்ந்ததா?

அதே தில்லானா மோகனாம்பாளில் சிவாஜியின் கச்சேரி கோஷ்டி ரயிலில் பயணம் செய்யும் காட்சி. எல்லோரும் கீழே அமர்ந்து, கச்சேரி முடித்த களைப்பில் கண்ணயர்வோம் என்று சோர்ந்திருக்க, மேலே அப்பர் பெர்த்தில் கருணாநிதி படுத்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருப்பார். கீழே இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், இடையில் உறாங்ங்ங்ங்…..
ஊங்ங்ங்….ஓஓஓஓஓ……ஊஊஊஊஊ….மேஏஏஏஏஏஏஏஏஏ….என்று ராத்திரி வயிறு முட்டத் தின்ன அசதியிலும், கச்சேரி அலைச்சலூடான தாளமுடியாத உடல் சோர்விலும், காலையும், கையையும் உதைத்துக் கொண்டு வேகமாய்ப் புரண்டு சோம்பல் முறிப்பார். ஊளையிடுவதுபோலான அவர் குரலுக்கேயுரிய இயல்பான நடிப்பு அவ்வளவு அபாரமாய் இருக்கும். நான் இதைச் சொல்லும்போது, சற்றே கற்பனையை ஓடவிட்டு அந்தக் காட்சியை ஒரு முறை மனக்கண் முன்னால் கொண்டு வந்து பாருங்கள். நினைக்கும்போதே சிரிப்புப் பொத்துக் கொண்டு வரவில்லையானால் நீங்கள் எந்த ரசனைக்கும் லாயக்கற்றவர் என்றுதான் பொருள். உங்களிடம் ரசனை என்பது மருந்துக்குக் கூட இல்லை என்று சொல்வேன் நான். இத்தனை ஆழமான ரசனையை ஆண்டவன் எனக்குக் கொடுத்திருக்கிறானே என்று அந்த குணமுள்ளவர்கள் தங்களை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். அதுதான் உண்மை. இதை ஏன் இத்தனை வலியுறுத்திச் சொல்கிறேன் என்றால் கருணாநிதியின் தனித்தன்மையை உணர்ந்த ரசிகனால்தான் இதை அனுபவித்து ரசிக்க முடியும் என்பதால்தான். பொத்தாம் பொதுவாக, கூட்டத்தோடு கூட்டமாகச் சிரித்து வைக்கும் சராசரி ரசிகனுக்கு இந்தத் தனித்துவமெல்லாம் புலப்படாது. இம்மாதிரி ஒவ்வொருவரையும் பகுத்து உணர்ந்திருந்ததனால்தான் அந்தக்கால இயக்குநர்களும் அவர்களுக்கேற்ற காட்சிகளை ரசித்துப் புகுத்தினார்கள். தங்களின் எதிர்பார்ப்புக்கும் மேலே செய்தபோது அகமகிழ்ந்தார்கள்.

படம் வந்த காலத்தில் கோஷ்டி கோஷ்டியாக வந்து அமர்ந்து கொண்டு, ஒருவரை ஒருவர் முதுகிலும் தொடையிலும் தட்டிக் கொண்டு சினிமா ரசிகர்கள் அமர்ந்தவாக்கில் எவ்வி எவ்விக் குதித்து நெளிந்து ரசித்த காட்சி இது. இதுபோல் இன்னும் பல காட்சிகள் உண்டு இப்படத்தில். உறை போட்ட மேளத்தை ஒரு பக்கமாய்த் தோளில் தொங்க விட்டுக் கொண்டு, இன்னொரு கையில் தன்னுடைய ஒத்து வாத்தியத்தோடு சற்றே முதுகு வளைத்து அவர் நடக்கும் காட்சியும், முன்னே நடிகர் திலகமும், பாலையா, சாரங்கபாணி செல்ல, இவர்கள் பின்தொடரும் காட்சிகள் அசல் நாகஸ்வரப் பார்ட்டி பிச்சை வாங்கணும் அத்தனை கனப் பொருத்தமாய் அமைந்திருக்கும் எல்லாருக்கும். வெறுமே கடுமையான உடல் அசதியில் புரளுவதான இந்தக் காட்சியில் பார்வையாளருக்கு இந்த அளவுக்கு ஒரு சிரிப்பை அள்ளிக் கொடுக்க முடியுமா என்று யோசியுங்கள். இந்தக் காட்சிக்கு இதுவரை நீங்கள் சிரிக்காமல் இருந்திருந்தால் உங்கள் வாழ்க்கை வீண். என்னடா இவன் மட்டையடியாய் அடிக்கிறானே என்றுகூட நீங்கள் நினைக்கலாம். அந்த அளவுக்கான புரிதலுடன் கூடிய ரசிகர்கள் இருந்த காலகட்டம் அது. அதை உணர்ந்து அனுபவப்பட்ட இயக்குநர்கள், தங்கள் திறமையை, ரசனையை, இந்தப் பிறவி நடிகர்களைக் கொண்டு பூர்த்தி செய்து கொண்டார்கள். அவர்களிடமிருந்த பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்ந்தார்கள். அவர்களும் மனமுவந்து அதற்கு உடன்பட்டார்கள்.

சினிமா என்கிற கலைரூபத்தை எந்த அளவுக்குக் காட்சி ரூபமாய் மனதில் கணித்து வைத்திருந்தால் இப்படி ஒரு காட்சியை இங்கே வைக்க வேண்டும், அதுவும் கருணாநிதி மூலம்தான் இதைக் காட்சிப்படுத்தியாக வேண்டும் என்று அந்த இயக்குநருக்குத் தோன்றும்? திரு. ஏ.பி. நாகராஜன் அவர்கள் கொத்தமங்கலம் சுப்புவின் நாவலைத் திரை வடிவமாக்கி, அணு அணுவாகச் செதுக்கி, சித்திரமாய் வடிவமைத்து, ஒரு கலை நயமிக்க, ஆழ்ந்த ரசனைக்குட்பட்ட முழுத் திரைப்படமாக்கி நமக்கு அள்ளி வழங்கிய தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை யாரேனும் அத்தனை எளிதில் மறந்து விட முடியுமா? அது வெளி வந்த காலத்தில் ஒரே ஒரு முறை மட்டும்தான் அதைப் பார்த்திருக்கிறேன் என்று யாரேனும் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? குறைந்தது பத்துப் பன்னிரெண்டு முறையேனும் அதைப் பார்த்துப் பார்த்து தன்னை மறந்து ரசித்தவர்கள்தான் நம் தமிழ்நாட்டுத் திரைப்பட ரசிக சிகாமணிகள். காரணம் அந்தப் படத்தில் பாலையாவும், சாரங்கபாணியும், தங்கவேலுவும், டி.ஆர்.ராமச்சந்திரனும், சிவாஜியின் நாடக கோஷ்டியும், எல்லாவற்றிற்கும் தலையாயதாய் வைத்தி கதாபாத்திரத்தில் வெளுத்துக் கட்டிய நாகேஷ் அவர்களும், அவரவர் பாத்திரத்தில் எப்படி வாழ்ந்திருந்தார்கள்? யாரைத்தான் ஒதுக்க முடியும், மறக்க முடியும்? ஏ.கருணாநிதியின் அந்த மிகச் சிறிய ஒத்து ஊதுபவன் கதாபாத்திரம் அத்தனை முக்கியமில்லையாயினும், கிடைத்த ஓரிரண்டு காட்சிகளில் தனது முத்திரையை அழுத்தமாய்ப் பதித்த அவரது நடிப்புத்திறனை நாம் எளிதாக மறந்து விட முடியுமா?

சிறிய வயதில் தந்தையாகவும், பாட்டனாகவும், முதிர்ந்து கிழடுதட்டின வேடங்களையும், சர்வ சுலபமாய் இவர்கள் ஏற்றுக் கொண்டு ஜமாய்த்ததற்கு இவர்களின் நாடக அனுபவங்கள்தானே பெரிதும் கைகொடுத்திருக்கின்றன?

இருவர் உள்ளம் படத்தில் சோடா சுப்பையாவாக வருவாரே, ஞாபகமிருக்கிறதா? சமீபத்தில் கூடக் கலைஞர் டி.வி.யில் இந்தப் படத்தை ஒளிபரப்பினார்கள்…! அட, ஓன் வீட்ல பொன்னா வெளைய….என்று காட்சிக்குள் வரும்போதெல்லாம் சொல்லிக் கொண்டே நுழைந்து சல்ல்ல்ல்……என்று சோடா பாட்டிலை உடைப்பார். எப்போதும் சோடா குடித்துக் கொண்டே சதா எதையாவது மொச்சு மொச்சென்று வாயில் அரைத்துக் கொண்டேயிருக்கும் தின்னிப் பண்டாரமாய்த் தோன்றுவார். இதுதான் இந்தப் படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்று சொன்னபோது, என்ன சார் இப்படிக் கேவலப்படுத்தறீங்க? என்றா சொன்னார்கள். அது ஒரு காரெக்டர். அப்படியும் ஒரு மனுஷன் எங்காவது இருக்கத்தானே செய்வான், அதை நான் செய்து காண்பிக்கிறேன் என்று களம் இறங்கினார்கள் பலர். தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்.

எந்நேரமும், அரவமிஷின் மாதிரி எதையாவது அரைச்சுக்கிட்டேயிருக்க வேண்டிது…அது செமிக்கிறதுக்கு சோடாவக் குடிச்சிக்கிட்டேயிருக்க வேண்டிது… க்கும்….எல்லாம் என் தலையெழுத்து என்று ஐயா தெரியாதய்யா ராமாராவ் தலையிலடித்துக் கொள்வார். என்ன மாப்புள பெரிசா அலுத்துக்கிறே…இதுக்குத்தான் என் பொண்ணை உனக்கு ரெண்டாந்தாரமாக் கொடுத்தனா….என்று பதிலுக்கு கையில் சோடா புட்டியோடு இவர் எகிறுவார். ஆசையோடு மனைவியிடம் சென்ற ராமாராவ், செண்பகம், செண்பகம் என்று குழைவார். செண்பகத்துக்கு இப்ப என்ன வச்சிருக்கீங்க? என்று வெடுக்கென்று கழுத்தை ஒடித்துக் கொண்டு சிரிக்காதீங்க, போய்த் தூங்குங்க…என்று விலக்கி விடுவார் அவர் மனைவி.

தன் ஒருவனின் உழைப்பில் உட்கார்ந்து தின்றே கழிக்கும் தன் மனைவிக்கும், மாமனாருக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று, இரவல் வாங்கி வந்த வைர நெக்லஸ் தொலைந்து போய்விட்டதென்று பொய் சொல்லி, அந்தப் பழியைத் தூங்கிக் கொண்டிருந்த கருணாநிதி மேல் முகத்தோடு போர்வையைப் போட்டுக் கட்டிப் பிடித்து முதுகில் தொங்கி திருடன் திருடன் என்று கத்திக் குடியைக் கெடுத்து, அவரைக் கதறி அழவும், பயப்படவும் வைத்து, போலீசுக்குப் போக வேண்டிதான் என்று அலற வைத்து, இந்தக் கடனத் தீர்க்க ஒரே வழி சொந்தமாத் தொழில் செய்றதுதான் என்று மனைவியை அப்பளம் போடவும், கருணாநிதியை தேனீ வளர்க்கச்செய்து தேன் தயாரிக்கவுமான குடிசைத் தொழில் வேலையைச் சுமத்தி விடுவார் ராமாராவ். சேகரித்த தேனை வியாபாரத்துக்காகப் பாட்டில் பாட்டிலாய்ப் பெற்றுக் கொள்ளும் போது திருட்டுத் தனமாக ஒரு பாட்டிலை மறைத்திருப்பார் கருணாநிதி. விடாத தீனிப் பழக்கமுள்ள இந்த ஆள், நப்பாசையில், நிச்சயம் ஒன்றை மறைத்திருப்பான் என்கிற ஊகத்தில், மறைந்து நின்று பார்ப்பார் ராமாராவ். அவர் நினைத்ததுபோலவே ஆசையாய் கூட்டுக்குள் கை விட்டு தேன் நிரப்பிய மீதி ஒரு பாட்டிலை எடுத்துத் திறந்து, ரெண்டு விரலை உள்ளே விட்டு, கைநிறைய வழியும் தேனை எடுத்து வாய் நிறைய நக்குவார் கருணாநிதி. அப்படி அவர் ஆசையாய், திருட்டுத்தனமாய் எடுத்துத் தேனை நக்கும் அந்தக் காட்சியைப் பார்க்க வேண்டுமே….ஐயோ பாவம்…தின்னா தின்னுட்டுப் போகட்டுமே…என்று தோன்றும் நமக்கு. எம்புட்டு நப்பாசை இந்த மனுஷனுக்கு…விடுங்கய்யா…போனாப் போகட்டும் என்று நம் மனசு பரிதாபப்படும். அத்தனை பரிதாபத்தையும், நமுட்டு ஆசையையும் மனதுக்குள் தேக்கி, அடக்கமுடியாத அந்த நப்பாசையை அவர் தீர்த்துக் கொள்ளும் அந்தக் காட்சியை லேசில் மறந்து விட முடியுமா நாம்…!

அப்டியா சேதி…நா நினைச்சது சரியாப் போச்சு…இதோ வர்றேன்…என்று ஒரு கல்லைத் தூக்கிக் கரெக்டாக அந்தத் தேன் கூட்டை நோக்கி வீசுவார் ராமாராவ். கூடியிருந்த தேனீக்கள் அத்தனையும் சிதறிப் பறக்க ஆரம்பிக்க, தேனீக்கள் உடம்பை மொய்த்து, கருணாநிதியைக் கொட்டித் தீர்ப்பது போலான அந்தக் காட்சியில், கடி தாங்க முடியாமல் அவர் முன்னும், பின்னும், மேலும் கீழுமாக தத்தக்கா, பித்தக்கா என்று குதி குதியென்று குதித்து அலறிக் கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்து தேனீக்கள் ஒன்று கூடிப் போர்க்களமாய்க் கடித்துக் குதறிவிட்ட வேதனையை முகத்தில் பரிதாபமாக வெளிப்படுத்துவார். உண்மையிலேயே தேனீக்கள் கொட்டியதுபோன்றதான அப்படி அவர் குதித்துத் துள்ளும் அந்த தத்ரூப நடிப்பை இன்று வேறு எவரையேனும் செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்….நான் எழுதித் தருகிறேன்……

கானகத்துல குரலெழுப்பிக் கதியக் கலக்காதடா…என்று போலீஸ் வேடத்தில் வந்து மன்னார்சாமியாகப் பட்டையைக் கிளப்புவார் கப்பலோட்டிய தமிழனில். மாடசாமியைப் பிடிக்கப் போன இடத்தில் ராவு நேரத்தில் சுடுகாட்டில் அவர் பயந்து நெளியும் காட்சிகள்… யாரும் எதுவும் பேசப்படாது…அம்புடுதேன்…கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவுக அம்மாகிட்ட உட்கார்ந்து பேசிட்டிருந்தான் சார் என் ரெண்டு கண்ணால பார்த்தேன்…வர்றதுக்குள்ள தப்பிச்சிட்டான் சார்….இவுங்கள்லாம் பொய் சொல்றாங்க சார்…அம்புடுதேன்…என்று தடியைத் தரையில் தட்டிக் கொண்டு அவர் ஜபர்தஸ் செய்யும் காட்சிகளும், இடது கையில் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு சட் பட் என்று சல்யூட் அடிக்கும் வேகமும், இயக்குநர்கள் தங்கள் நிலையை மறந்து விட்டு சிரித்து நின்ற காலங்கள் அவை.

வீரபாண்டியக் கட்டபொம்மனில் பெண் வேடமிட்டு, சிவாஜியோடு மாட்டு வண்டி பூட்டிக் கிட்டு…பாடல் காட்சியில் அவர் பின்னால் அமர்ந்து கொண்டு வாயில் வெற்றிலைக் குதப்பலோடு இவர் பண்ணும் சேட்டைகள்…பின் திருடர்கள் எதிர்ப்பட, அவர்களோடு பொம்பளைக்கே உண்டான அஷ்ட கோணல்களோடு குலவிக் கொஞ்சி, நெளிந்து வளைந்து தடியால் அவர்களைப் பதம் பார்க்கும் காட்சிகளும், உளவு பார்ப்பதற்காக யாரை அனுப்பலாம் என்று யோசிக்கும்போது…“ந்ந்நான் போகிறேன் அரசே…”என்று ஆர்வமாய் அவர் முன் வரும் காட்சியில் அவரின் நாட்டுப்பற்றுக் காட்சியும், கடமையுணர்ச்சியை வெளிப்படுத்தும் அந்த வசன உச்சரிப்புகளும், அதே வேகத்தில் கண்ணம்மா…கண்ணம்மா…என்று வீட்டுக்குள் புகுந்து மாவுப் பாத்திரத்தை உருட்டி, உடம்பு முகமெல்லாம் மாவு பூசிக் கொண்டு பெண்டாட்டி முன் நிற்கும் பரிதாபமும், அதிலும் தனக்குக் கிடைத்திருக்கும் பொறுப்பான வேலையைப் பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளும் நடிப்பும் மறக்க முடியுமா இன்றும்…?

ஏற்றுக் கொண்டவைகள் சின்னச் சின்ன வேடங்கள்தான் என்றாலும், அவற்றை மனமுவந்து செய்த விதமும், தன்னைத் தவிர வேறு யாரும் அந்தக் குறிப்பிட்ட வேடத்திற்குப் பொருந்தாது என்பது போன்றதான அழுத்தமான முத்திரையும், தன் நடிப்பிலேயே ரசிகன் நூறு சதவிகித திருப்தியை அடைந்து விட வேண்டும் என்கிற அர்ப்பணிப்பு உணர்வும் இந்தச் சினிமாத் தொழிலில் இப்படி எத்தனை அற்புதமான நடிகர்களுக்கு இருந்திருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்கும் போது வியக்காமல் முடியாது. இத்தனைக்கும் ஏ.கருணாநிதி அவர்கள் அந்தக் காலத்தில் காளி என்.ரத்தினம், டி.எஸ்.துரைராஜ், வி.எம்.ஏழுமலை ஆகியோரோடு மாதச் சம்பளத்தில் சேலம் மாடர்ன் தியேட்டர்சில் வேலை பார்த்தவர் என்பதாக நாம் தகவல் அறிகிறோம். நடிகனாக வேண்டும் என்கிற அவாவும், வெறியும், அவர்களின் ரத்தத்தோடு ஊறிய ஒன்றாகப் பரிணமித்திருக்கிறது. அதற்காகவே பிறந்து, வாழ்ந்து, இருந்து, கழித்து உயிரை விட்டிருக்கிறார்கள் என்பதுதான் சத்தியம்.

நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்றுக் கொண்ட இவர்கள் வேறு வேடங்களே செய்யவில்லையா என்ன? எதற்கும் தயார் என்கிற நிலையிலேதானே பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். தெய்வப்பிறவி படத்தின் அந்த சமையல்கார நாயர் வேடத்தை யாரேனும் மறக்க முடியுமா? கருணாநிதி எத்தனை சோகம் பிழிய அதற்கு வடிவம் கொடுத்திருப்பார்? அதீத சோகமும், வேதனையும், அமைதியும், தன்மையும் மிளிரும் காட்சிகளில் அவரின் விடைத்த மூக்கு அவருக்கு எத்தனை உதவியாய் இருந்து தக்க பாவங்களை அவருக்குப் பொருத்தமாய் வழங்கியிருக்கிறது?

பாலும் பழமும் படத்தில் சஞ்சீவி காரெக்டரில் பாலையாவோடு இருந்து, பின்பு எம்.ஆர்.ராதாவோடு போய்ச் சேர்ந்து எத்தனை லூட்டி அடிப்பார். குரங்கு புத்தி போக்க தேவாங்கு ராக்கெட் லேகியம் தயாரிக்கிறேன் என்று சாய்ராமிடம் பணம் பிடுங்கிப் பிடுங்கி ஏமாற்றிப் பிழைப்பு ஒட்டும் எம்.ஆர்.ராதாவுக்கே மாமனார் வசிய லேகியத்தைக் கொடுத்து அவரை வழிக்குக் கொண்டு வருவாரே கருணாநிதி. அந்தக் காமெடி டிராக்கை யாரேனும் அத்தனை எளிதில் மறந்து விட முடியுமா? உறாலில் அமர்ந்திருக்கும் ராதாவுக்குத் தெரியாமல், அவருக்கு டிபன் எடுத்துவரச் செல்லும் கருணாநிதி ஒரு ஐடியா பண்ணுவார். இட்லியில் அந்த மாமனார் வசிய லேகியத்தை அவருக்குத் தெரியாமல் எடுத்துப் பதமாய் அதில் தடவிக்கொண்டே, “மாமா, இனிமே நீ எனக்கு ஆமா…”.என்று சொல்லிக் கொண்டே கழுத்தில் தொங்கும் வல்லவெட்டுத் துண்டு நுனியை அந்த லேகிய டப்பாவுக்குள் விட்டு, கொட கொடவென்று ஒரு சுழற்றுச் சுழற்றி ஒத்திக் கொண்டு, போதாக் குறைக்கு கையில் அங்கங்கே தீற்றியுள்ளதை உடம்பெல்லாம் தடவிக் கொண்டு, ஒரு நெளி நெளிந்து கொண்டே நயனமாய் வந்து ராதாவுக்கு அந்த லேகியத்தைப் பவ்யமாய் வழங்குவாரே. இந்த முழுக் காட்சியிலும் தியேட்டரில் என்னவொரு அதிரடிச் சிரிப்பு? இட்லியைச் சாப்பிட்டுவிட்டு, உடனே கணப்போதில் ஆளே மாறி கருணாநிதியை மாப்ளேய்ய்ய்ய்….என்று உரக்க சிநேகமாய் அழைத்து அசட்டுச் சிரிப்போடு அப்படியே மண்டியிடுவார் ராதா. இந்தக் காட்சியை ரசிக்காதவர் உண்டா, குதித்துச் சிரிக்காதவர்தான் உண்டா? சாய்ராம் முழி முழி என்று முழிக்க, அடே லேக்கா…போடாதே காக்கா…மாமா இனிமே எனக்கு அடிமை….பேசாதே…என்று விரலை நீட்டுவார் கருணாநிதி. ஏறக்குறைய குரங்கு போலவே ஒரு மேக்கப் செய்யப்பட்டிருக்கும் அவருக்கு. அத்தோடு அவர் பேசும் பேச்சுக்களும், இடையில் கையை மடித்து, மடித்து பக்கவாட்டு இடுப்பில் சரு சருவென்று அவர் சொறிந்து கொள்ளும்போது அசல் வானரம் போலவே இருக்கும். பார்ப்போர் அப்படி ரசிப்பார்கள். அர்த்தமில்லாததானாலும், பாலும் பழமும் படக் காமெடி காலத்திற்கும் மறக்காதது.

எந்தப் படத்திலுமே, எந்த வேடத்திலுமே சோடை போனவரில்லை ஏ.கருணாநிதி. பார் மகளே பார் படத்தில் வேலைக்காரன் மாணிக்கமாக வருவார். விஜயகுமாரியும், புஷ்பலதாவும் நாட்டியம் ஆடுகையில் நட்டுவனாராக எம்.ஆர்..ராதா ஜதி சொல்லுவார். அவர்களோடு சேர்ந்து பின்னால் சற்றுத் தள்ளி நின்று கருணாநிதி பிடிக்கும் நாட்டிய பாவங்கள் இருக்கிறதே, படு காமெடியாக, அதே சமயம் சிரித்து ரசிக்கும்படியாக இருக்கும். நல்ல பாடலைக் கொண்ட இந்த நாட்டியக் காட்சியின் போது, இப்படி இவரை உள்ளே சேர்த்து ஆட விட வேண்டும் என்று எப்படி பீம்சிங் அவர்களுக்குத் தோன்றியது என்று வியந்து போகும் நமக்கு. அதனால்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன். இயக்குநர்கள் இவர்களின் திறமைகளை உணர்ந்து, காட்சிகளை வழங்கி, அதன் மூலம் அவர்களை ரசித்தார்கள், நம்மையும் ரசிக்க வைத்தார்கள் என்று. மதிப்புமிக்க இடத்தில்தான் வைத்திருந்தார்கள் என்பதற்கு இதற்கு மேல் என்ன அத்தாட்சி வேண்டும். சந்திரா, காந்தா என்ற இரு மகள்களில் சந்திரா (விஜயகுமாரி) காணாமல் போய்விட்ட வேதனையில் சிவாஜி அழுது துடிக்கும் அந்த சோகக் காட்சியில், “மாணிக்கம், சந்திரா ஃபோட்டோவ அன்னைக்குத் தூக்கி எறிஞ்சிடுன்னு சொன்னேனே…எறிஞ்சிட்டியா? என்று வேதனையோடு சிவாஜி கேட்க, வேலைக்காரர் ஏ.கருணாநிதி, எஜமான், நீங்க சந்தோஷமாச் சொன்ன காரியத்ததான் நான் செய்திருக்கனே தவிர, கோபத்துல சொன்னது எதையும் இன்னைக்கு வரைக்கும் செய்ததுல்ல எஜமான்…” என்று அவரிடம் அழுது கொண்டே கூறும் காட்சி நம்மையெல்லாம் உலுக்கி எடுத்து விடும்…நீங்கள் நன்றாக ஆழ்ந்து ரசிக்கக் கூடிய ரசனை உள்ளவராய் இருந்தால் ஒன்றை நீங்கள் துல்லியமாகக் கண்டு கொள்ள முடியும். நகைச்சுவை நடிகர்களோடு கூடிய பற்பல படங்களின் சோகக் காட்சிகள் கம்பீரமாகத் திரையில் மிளிர்ந்திருக்கின்றன என்பதுதான் அது. எந்த அளவுக்கு ரசிகர்களை சிரிப்பூட்டி மகிழ்விக்கிறார்களோ, அதே அளவுக்கும் மேலே பிழியப் பிழிய சோகத்தில் அழவும் வைத்திருக்கிறார்கள்.

படித்தால் மட்டும் போதுமா படத்தில் ரங்காராவ் வீட்டு வேலைக்காரனாகத் தோன்றுவார். அவருடைய படத்திலெல்லாம் ஏ.கருணாநிதியைப் பெரும்பாலும் தவற விட்டதேயில்லை டைரக்டர் பீம்சிங் அவர்கள். அந்த அளவுக்கு அவரின் நடிப்பின் மீதும், அவரின் நகைச்சுவை விருந்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்த இயக்குநர்கள் ஏராளம். மெட்ராஸ் டு பாண்டிச்சேரி படத்தில் இவரும் நாகேசும் படம் முழுக்க அடிக்கும் கூத்தும் கும்மாளமும் மறக்க முடியுமா என்ன?

ஆனால் இந்த இயக்குநர்களுக்குப் பிறகு காலம் அவர்களைத் தக்க முறையில் பயன்படுத்திக் கொண்டதா? என்ற கேள்வி விழுகிறது நம்மிடையே. இல்லை என்ற பதில்தான் மிஞ்சுகிறது.

மாமியா ஓட்டல் என்கிற பெயரில் சென்னையில் உணவகம் நடத்தி வந்த ஏ. கருணாநிதி கடைசி காலத்தில் எலும்புறுக்கி நோயால் மரணமடைந்தார் என்பதாகத்தான் செய்தி தெரிய வருகிறது நமக்கு.

காலப்போக்கில் இம்மாதிரி எத்தனையோ அற்புதமான நகைச்சுவை நடிகர்களைப் பின்னுக்குத் தள்ளி, நம் தமிழ்த் திரையுலகம் மறந்துபோனது. காலம் அவர்களைப் பின்னுக்குத் தள்ளியதா, அல்லது தள்ளப்பட்டார்களா என்று நினைத்து வேதனை கொள்கிறது மனம். ஆனால் மூத்த தலைமுறை ரசிகர்கள் மனதில் அவர்கள் இன்றும் அழியாது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களின் ஆழ்ந்த அர்த்தமுள்ள ரசனையை தங்களின் இளவல்களோடு, வாரிசுகளோடு பகிர்ந்து கொண்டு புரிந்து கொள்ள வைக்க யத்தனிக்கிறார்கள். அடிப்படையான, அர்த்தமுள்ள அந்த ரசனையை ஆழமாக வளர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். ஆனாலும் இன்றைய இளைய தலைமுறையின் சினிமா ரசனை என்பது புரிந்து கொள்ள முடியாத கேள்விக்குறியாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

 

--------------------------------------------------

“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது

----2013-10-27 08.19.01 ------------------2013-10-27 08.25.49 --------------------2013-10-27 08.55.28 ---------------------------------

ல்லோருக்கும் பிடித்தமான, யாராலும் வெறுக்க முடியாத ஒரு நடிகர் இருக்க முடியும் என்றால் அவர் திரு வி.கே.ராமசாமி. இதில் வெறுப்பதற்கு இருக்கிறது? என்று கேள்வி விழலாம். எப்படிப் பலரையும் விழுந்து ரசித்தார்களோ, அப்படியே சிலரை ஒதுக்கவும் செய்தார்கள் முந்தைய தமிழ் சினிமா ரசிகர்கள்.

வந்துட்டான்யா...பெரிய்ய்ய போரு....என்று சொல்லிக் கொண்டே வெளியே கொரிக்கப் போய் விடுவார்கள். அக்கடா என்று காற்று வாங்க வந்து நிற்பார்கள். அல்லது இதுதான் சமயம் என்று கழிவறை நோக்கிச் செல்வார்கள். அப்படி ஒரு சிலர் இருந்தார்கள். அல்லது அவர்கள் நடித்த காட்சி அப்படி இருந்தது. ஆனால் யாராலும் அம்மாதிரி ஒதுக்கப்படாத, ஒதுக்க முடியாத, விரும்பத்தக்க, கலகலப்பான, சீரியஸான நடிகர் வி.கே.ஆர்.

இத்தனைக்கும் ஏற்றுக் கொண்டிருக்கும் வேஷத்திற்குத் தகுந்தமாதிரிக் குரலை மாற்றிப் பேசுவதோ, நடையை, உடல் மொழியை நெளித்துக் கொள்வதோ, வசனங்களை வழக்கமான போக்குக்கு மாறாக வலியக் கோணல்படுத்தி உச்சரிப்பதோ என்கிற சில்மிஷங்களெல்லாம் கிடையாது. அம்மாதிரியான முயற்சிகள் எல்லோருக்கும் படம் முழுக்கக் கூட வந்து ஒத்துழைத்ததில்லை. நடிகர் திலகம் போன்று ஓரிருவரைத் தவிர. உதாரணம் பலே பாண்டியாவில் வரும் மூன்றில் ஒன்றான விஞ்ஞானி கதாபாத்திரம்.அதில் அவர் மாறுபட்ட குரல் நடையில் பேசும் முறை. நடிகர்திலகத்திற்கு அது சில்மிஷமெல்லாம் இல்லை. கல்மிஷம் இல்லாமல் உடலோடு, மனதோடு, ஒன்றியிருந்த திறமை.

என்ன இவன் சொல்ல வருகிறான் என்று உங்களுக்குத் தோன்றக் கூடும். வில்லனாகவே நடித்து, பின்னால் நகைச்சுவை என்று தன்னை ஸ்தாபித்துக் கொள்ள முயன்ற அசோகனின் நடிப்பையும், உடல் கோணல் மொழியையும், வசனம் பேசிய தன்மைகளையும், ஓNஉறா இந்தப் படத்துல அவர் காமெடில்ல பண்றாரு என்று பார்ப்பவர் புரிந்தும் புரியாமலும் சிரிப்பதா, அழுவதா என்று தடுமாறியதையும், வி.கே.ஆரோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் சொன்னது நன்றாகப் புரியும்.

ஏற்காத வேஷமில்லை. பேசாத வசனமில்லை. முதலாளி, தொழிலாளி, அப்பா, தாத்தா, அண்ணன், தம்பி, கணக்கப்பிள்ளை, வேலைக்காரன், கூலிக்காரன், கடத்தல்காரன், காவல்காரன், போலீஸ், இன்ஸ்பெக்டர், அதிகாரி, தொழிலதிபர், டாக்டர், வக்கீல், குமாஸ்தா, ராஜா, மந்திரி, புலவன், சேவகன், தூதுவன், அடப்பக்காரன், நாயகனுக்கு நண்பன், விதூஷகன், நல்லவன், கெட்டவன், பைத்தியம், கோமாளி, இன்னும் என்னென்ன உங்களுக்குத் தோன்றுகிறதோ அத்தனையையும் சேர்த்துக் கொள்ளுங்கள் அப்படி எல்லா விதமான வேஷங்களையும் செய்து முடித்து விட்டவர் இவர். ஆனாலும் ஒரு ரசிகனுக்கும் இவர் அலுக்கவில்லை. வி.கே.ஆரா...? என்று அவர் வந்தால் நெருக்கமாகத்தான் உணர்ந்தார்கள்.

ஏற்றுக் கொண்டிருக்கும் எந்தக் கதாபாத்திரத்திற்குள்ளும், வேஷத்திற்குள்ளும் சென்று “பச்“சென்று பசை ஒட்டிய மாதிரி உட்கார்ந்து கொள்ளும் திறமை இவருக்கு உண்டு. இத்தனைக்கும் நாம் அடிக்கடி கேட்டுக் கேட்டு மகி்ழ்ந்த அதே வெண்கலக் கணீர்க் குரல்தான் எல்லாப் படத்திலும் ஒலிக்கும். ஆனால் பேசும் வசனங்கள் பளீரென்று ஸ்ருதி சுத்தமாக டிஜிட்டலைஸ் பண்ணியது போல் கேட்கும். ஏற்ற இறக்கத்தோடு காதுக்கு வந்து சேர்ந்து அதன் பொருளை, அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கும். முதல் அறிமுகக் காட்சியிலேயே, கதைக்கு ஏற்றாற்போல், அந்தப் பாத்திரமாகவே ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர் வருவதுபோல்தான் இருக்கும் அவர் அவரும் முதல் காட்சி. வில்லன் பாத்திரம் ஏற்றிருந்தார் என்றால், அவர் மேல் நமக்குக் கோபம் வரும். எரிச்சல் வரும்.. இவன் ஒழிய மாட்டானா என்று இருக்கும். ஏன் வி.கே.ஆர் இதெல்லாம் செய்றாரு? என்று தோன்றும். நகைச்சுவைப் பாத்திரமென்றால் அவரோடு சேர்ந்து நாமும் நம்மை மறந்து சிரித்துக் கும்மாளமிட வேண்டியிருக்கும். அல்லது அவர் சொல்லி முடித்தபிறகு, நினைத்து நினைத்துச் சிரிக்க வேண்டியிருக்கும்.

எதற்கும் சிரித்து வைப்போம் என்பதுபோல்தான் இன்று காட்சிகள் வருகின்றன. அல்லது நம்மை உம்மணா மூஞ்சியாக்கி வெளியேற்றுகின்றன. யப்ப்பாஆஆஆஆஆஆஆஆஆ...கொல்றாங்ஞளே......! என்று. நகைச்சுவை என்பது அத்தனை கடினமான ஒன்றாகத்தான் என்றும் இருந்து வந்திருக்கிறது. கதாநாயகன் நாயகிகள் கதையின் ஓட்டத்திற்கு உதவி, கொடுத்த பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் செய்து கொண்டே படத்தை நகர்த்திக் கொண்டு போய் விடுவார்கள். ஆனால் நகைச்சுவை என்பது கதையோடு ஒட்டியதாக இருந்தால், பொருத்தமான வசனங்களைக் கொண்டு, அல்லது அந்தக் கதைக்கு ஏற்றாற்போல் அமைந்த நகைச்சுவைப் பாத்திரத்தைக் கொண்டு படம் நகர்ந்தால்தான் நகைச்சுவைப் பாத்திரம் எடுபடும். கதைக்கு இந்தக் கதாபாத்திரமும் தேவைதான் என்பது உறுதிப்படும். நகைச்சுவைப் பாத்திரம் ஏற்கப் பயப்பட்ட நடிகர்கள் உண்டு. அதுதான் அதன் தனித் திறமை.

இது ஒருவகை உத்தி என்றால், கதைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் தனி டிராக்காக நகைச்சுவைப் பாத்திரம் என்பது ஒரு குறுங்கதையை மையமாகக் கொண்டு, காட்சிகளை நகைச்சுவை ததும்ப அமைத்து, அதற்கேற்றாற்போல் உப பாத்திரங்களை உலவவிட்டு, அந்தக் காட்சிகள் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, படத்தின் வேகமான நகர்வுக்கும், அந்த நடிகரின் வருகைக்கான எதிர்பார்ப்பையும் ஆர்வத்தோடு ஏற்படுத்தி, வெற்றி காணும் உத்தி இன்னொரு வகை. இந்த இரண்டு வகையான உத்திகளிலும், நிறையப் பாத்திரங்களை ஏற்று, தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் வி.கே.ராமசாமி அவர்கள்.

சோகக் காட்சிகளில் முகத்தைச் சற்றே இருட்டாக்கி, நாலுநாள் தாடியோடு, தலையைச் சற்றே கலைத்து விட்டு, வறுமைக்கு அடையாளமாய் சட்டையை அங்கங்கே ஒட்டுப் போட வைத்து, அல்லது ரெண்டு கிழிசல்களைக் காண்பித்து, கழுத்தில் ஒரு கருப்புக் கயிறைத் தொங்கவிட்டு, அல்லது வெற்று மார்பை முதல் பட்டன் போடாமல் திறந்து விட்டு, காலில் செருப்பில்லாமல், அல்லது தேய்ந்து போன ரப்பர் செருப்போடு நடக்கவிட்டு, நடிகரைத் தயார்படுத்திவிட முடியும்தான். ஆனால் பேசும் வசனங்களின் மூலமாயும், முகத்தின் பாவங்களின் வாயிலாகவும் அந்தப் பாத்திரம் வெளிப்பட வேண்டுமே...? அப்பொழுதுதானே கதையோடு பொருந்தியதாகும், காட்சியோடு ஒன்றியதாகும்? இதைக் கனகச்சிதமாகச் செய்யும் திறமை, வரம், அல்லது கிடைத்த நாடக அனுபவ முதிர்ச்சி வி.கே.ஆர். அவர்களுக்கு சாலப் பொருத்தமாக அமைந்தது.

வி.கே.ராமசாமி தனது 18 வது வயதிலேயே அறுபது வயது முதியவர் வேடத்தை ஏற்று நடித்தவர். எத்தகைய ஒரு திறமை உண்டு என்று உணர்ந்திருந்தால் அவர் மேல் இந்த வயதைத் திணித்திருப்பார்கள்? கிழவனாய் ஆக்கியிருப்பார்கள்? எல்லாம் நாடக அனுபவம் என்று சாதாரணமாகச் சொல்லிவிடலாம்தான். அந்த நாடக அனுபவம் அவர்களுக்குத் தந்த கடுமையான பயிற்சியும், அதைப் பயிற்றுவித்தவர்களும், அந்தப் பயிற்சிகளுக்காக அன்றாடம் அங்கே கடைப் பிடிக்கப்பட்ட ஒழுங்கும், கட்டுப்பாடும் இவர்களின் திரைப்பட வெளிப்பாட்டின் மூலமாய் பின்னோக்கி நினைத்துப் பார்த்து பிரமிக்க வைக்கிறதல்லவா?

எதுக்குய்யா யார் யாரையோ யோசிச்சிக்கிட்டு? நம்ப வி.கே.ஆர் அண்ணன்தான் இருக்காருல்ல...பேசாம அவரைப் போட்டுட்டுப் போங்க...சரியா வரும்...என்று தடையின்றி நம்பிக்கை அளிக்கக் கூடிய நட்சத்திரமாய் நின்று ஒளிர்ந்தவர் வி.கே.ஆர்.

அவரின் திறமைக்கு இரண்டே இரண்டு காட்சிகள். ஒன்று நகைச் சுவை இன்னொன்று சோகம்.

நகைச்சுவையில் வசனங்கள் மூலமாக, சட்டென்று புரியாமல், நினைத்துப் பார்த்துப் புரிந்து கொள்ள வைத்து சிரிக்க வைப்பது ஒரு வகை. என்றால் அப்படியான வசனத்தை அதன் குணாம்சத்திற்கேற்றாற்போல் தன்னைத் தயார்படுத்திக் கொண்டு நடிகர் வெளிப்படுத்த வேண்டுமே...அப்படியான ஒரு காட்சிதான் இது.

த்னம், அய்யா சாப்டாரா...? – எஜமானியம்மாளின் கேள்வி. அது சௌகாரின் கம்பீரம், மிடுக்கு.

எஜமான் சாப்டலம்மா...பசியில்லேன்னு சாப்பாட்டையே திருப்பி அனுப்பிச்சிட்டாரு... – பட்லர் ரத்னமாக யூனிஃபார்மில் பணிவாய் நிற்கும் வி.கே.ஆரின் பதில்.

சாப்பிடலியா..?.இப்போ எங்கிட்டே சாப்டேன்னு ஃபோன்ல சொன்னாரே...?

அப்போ, வேறே யார்ட்டயாச்சும் இன்னொரு சாப்பாடு கொடுத்து விட்டீங்களா...? – அப்பாவித்தனமாகக் கேட்கும் பட்லரின் கேள்வி.

ஷட்அப்.....

-இந்தக் காட்சியை நினைவிருக்கிறதா? நீங்கள் அபாரமான, ஆழமான, தரமான, ரசிகராக இருந்தால் இந்தக் காட்சி கண்டிப்பாக உங்களுக்கு நினைவு இருக்க வேண்டும். படம் உயர்ந்த மனிதன். படமா அது? காவியம்! இந்தப்படத்தில் நடிகர் திலகம் ஏற்றதுபோலான ஒரு காரெக்டரை வேறு எந்தக் கொம்பனாலும் ஆயுசுக்கும் செய்ய முடியாது. தமிழ்த்திரைப்பட வரலாற்றைப் பேசும்போது இந்தத் திரைப்படத்தின் நடிகர் திலகத்தின் தொழிலதிபர் ராஜூ காரெக்டரை, அத்தனை அழகியலாக, கம்பீரமாக வெளிப்படுத்தி ஸ்தாபித்த நடிப்பின் உயிரோட்டத்தைப் பேசாமல் விட்டால் அது அவருக்கு நஷ்டமில்லை. அந்த விழுமியம் ஆயுளுக்கும் திரை உலகிற்குத்தான் நஷ்டமாக அமையும்.

மேலே நான் சொன்ன அந்தக் காட்சியைக் கண்ணுறுங்கள். தனக்குச் சம்பளம் தரும் ஒரு எஜமானியிடம், எத்தனை பணிவாகவும், பயத்தோடும் அளவோடும் பேச வேண்டும்? அதை விட்டு விட்டு, ஏதேனும் தப்பாய்ச் சற்றுக் கூடுதலாய்ப் பேசப் போக, வேலை போய்விட்டால் சோற்றுக்குத் தாளம் போட வேண்டுமே என்கிற நிலையில், இப்படி அறியாக் குசும்பு போல் கேட்கலாமா? அத்தனை கண்டிப்பு மிக்க எஜமானியிடம் நினைத்ததை, மனதில் தோன்றியதைப் பேசிவிட முடியுமா? மனதில் தோன்றினாலும் வாயில் வரலாமா? பணிவு, பயம் அத்தனையையும் பவ்யமாக வெளிப்படுத்திக் கொண்டு, படித்த, நிர்வாகத் திறனுள்ள புத்திசாலியான ஒரு எஜமானியம்மாளிடம், ”வேறே யார்ட்டயாவது இன்னொரு சாப்பாடு கொடுத்து விட்டீங்களா?” என்று அறியாத்தனம் போல் ஊமைக்குசும்பாய்க் கேட்டால் என்னாவது? முதலில் கேட்கலாமா இப்படி?

அந்த அளவுக்குக் கூடவா ஒரு எஜமானிக்கு புத்தி இருக்காது,? அதுவும் யாரைப் பொறுப்பாய் நினைத்து, அக்கறையாய் சாப்பாடு கொடுத்து விட்டோரோ அவனிடமே, எஜமான் சாப்டாரா? என்று கேட்கும்போது, எப்படி வேறு ஒருத்தரிடம் இன்னொரு சாப்பாட்டைக் கொடுத்து விட்டிருக்க முடியும்? யாராவது அப்படிச் செய்வார்களா? எத்தனை பெரிய கேலியான கேள்வி இது? இந்தக் கேள்வியை படு அப்பாவித்தனமாக, குசும்பையும், கேலியையும் உள்ளே பொதிந்து கொண்டு, ஒன்றுமே அறியாத பாவம் போல், அடக்க ஒடுக்கமான பணியாளனைப் போல், வி.கே.ஆர். சற்றே குனிந்து நின்று பவ்யமாய்க் கேட்கும் போது, தியேட்டரிலே பொத்திக் கொண்டு சிரித்தவர்கள் அநேகம் ஏன் பொத்திக் கொண்டு சிரித்தார்கள்?. தாங்கள் அப்படிக் கமுக்கமாய்ச் சிரிப்பதுகூட எஜமானி சௌகார்ஜானகி அவர்களுக்குக் கேட்டுவிடக் கூடாதே என்றுபயந்துதான். அப்படிக் காட்சியோடு ஒன்றியவர்கள் நம் ரசிகர்கள். என்ன ஒரு அபாரமான நகைச்சுவை? இந்த நகைச்சுவை முதல் முறை பார்க்கும்போது சட்டென்று உடனே புரியாமல், இதை அதன் சரியான விகிதத்தில் புரிந்து கொள்ளவும், சிரித்து சிரித்து மாளவும், இந்த மொத்தத் திரைக் காவியத்தையும் திரும்பத் திரும்பப் பார்த்தவர்கள் ஏராளமானோர். குண்டு மூஞ்சி, குண்டு மூஞ்சி என்று தன்னை அன்பாய்க் கொஞ்சும் ராணி மனோரமா பின்னாலேயே சுற்றுவார் இப்படத்தில்.

ஷட்அப்...என்கிற சௌகாரின் ஒரு சத்தத்தில் நடுங்குவார் பாருங்கள்.....அங்கே நாமும் ஒடுங்கிப் போவோம். ஜானகியம்மாளின் குரலுக்கும், அந்த மிடுக்குக்கும் அத்தனை மவுசு. அவரை மாதிரி ஒரு பழுத்த அனுபவமிக்க முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகையைப் பார்க்க முடியுமா இன்று? எத்தனை படங்களில் சிவாஜிக்குப் பொருத்தமான ஜோடியாய் வாழ்ந்தார்.

இத்தனை நாள் ரசிக்காமல் இருந்தீர்கள் என்றால், நான் சொன்னபிறகு இப்போது உயர்ந்த மனிதன் படத்தைத் திரும்பப் போட்டுப் பாருங்கள். இந்த நகைச்சுவைக் காட்சிக்கு உங்களுக்குச் சிரிப்பே வரவில்லையென்றால் உங்களுக்கு உடல், மனக் கோளாறு இருக்கிறது என்று பொருள்.

நகைச்சுவைக்கு இந்த ஒன்று என்றால், சோகத்தையும், அதைத் தன்னோடு சேர்ந்து அனுபவிக்க வைத்த அந்த இன்னொரு காரெக்டரை ஏற்ற வி.கே.ஆரின் பிறவி நடிப்பையும் இந்த இன்னொரு உருக்கமான காட்சியில் காணுங்கள்.

இதை திரையில் வந்த அளவுக்கு, காட்சிப்படுத்திய அளவுக்கு அத்தனை துல்லியமாக என்னால் எழுத்தில் வெளிப்படுத்த முடியுமா தெரியவில்லை. இந்த இடத்தில் இந்தக் காட்சிக்கு யு.ட்யூப் போட்டுக் காட்டுவதுதான் பொருத்தமாக இருக்கும். அது ஓட ஓடக் காட்சியின் வீர்யத்தை விளக்க வேண்டும். அப்படி ஓடி, காட்சியின் வீர்யத் தன்மையில் நானே ஒரு வேளை திரும்பவும் லயித்து விட்டேனென்றால்? எங்கே விளக்குவது? பார்வையாளர்களும் தங்களை நிச்சயம் மறந்து போகக் கூடும். அப்படி நம்மை மறந்து, நம் அருகே இருப்பவரை மறந்து, லயித்து ஒன்றி, உருகிப் போகும் காட்சி இது.

அது, பார் மகளே பார் திரைப்படம். உங்களுக்குத் தெரியாததல்ல. பட்டு என்பவர் எழுதிய பெற்றால்தான் பிள்ளையா என்கிற நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம். திரைக்கதை வலம்புரி சோமநாதன். வசனம் வழக்கம்போல் ஆரூர்தாஸ். பீம்சிங்கின் எத்தனையோ திரைக்காவியங்களில் அதுவும் ஒன்று. நடிகர்திலகத்தை வைத்து, அவர் திறமையை மதித்து, அவருக்குப் பொருத்தமாகக் கதையமைத்து, காட்சிகளைச் செதுக்கி வெற்றி கண்டார்கள் பலர். அவர்களில் டைரக்டர் ஏ.பீம்சிங் மிக முக்கியமானவர். அந்தப் படத்தில் தொழிலதிபர் சிவலிங்கம் பாத்திரம் நடிகர்திலகத்திற்கு. அவரது கம்பீரம் போலவே படத்தையும் தன் நடிப்பால் தூக்கி நிறுத்தியிருப்பார். அவரது ஆப்த நண்பராக ராமசாமிப் பிள்ளை (ராமு) என்கிற கதாபாத்திரம் திரு. வி.கே.ஆர் அவர்களுக்கு.

தன் தொழிலில் மிகவும் நொடித்துப் போய் ஏழ்மை நிலையில் இருப்பார் ராமு. இந்நிலையில் தொழிலதிபர் சிவாவின் இரண்டு பெண்களான சந்திரா, காந்தா இருவரில், சந்திராவுக்குத் திருமண நிச்சயதார்த்த விழா வரும். அதற்கு, தன் பால்ய நண்பன்தானே என்ற ஆசையில், நெருக்கத்தில், அழைப்பில்லாமல் மனைவியோடு வந்து விடுவார் ராமசாமிப்பிள்ளை. அய்யா, வாங்க....எஜமான், அய்யா, என்று ஆவலோடு சிவாஜியை நோக்கிக் கூவிக் கொண்டே வேலைக்காரர் ஏ.கருணாநிதி, வி.கே.ஆர்.ஐயும் அவரது மனைவியையும், சிவாஜியிடம் அழைத்து வருவார்.

சிவா...சிவா... – கூறிக்கொண்டே தன் ஆப்த நண்பனை நோக்கி ஆவலோடு நெருங்கி, இரு கைகளையும் பற்றுவார் ராமு.

தன் இருப்பில் மிகவும் கௌரவம் பார்க்கும் தொழிலதிபர் சிவா, வாழ்க்கையில் நொடித்துப் போன ராமு இப்படி வறுமைக் கோலத்தோடு வந்து எல்லோர் முன்னிலையிலும் தன்னை நெருக்கமாகத் தொட்டு வாய்விட்டுச் சத்தமாக அழைப்பது பொறுக்காது, அவரி்டமிருந்து சட்டென்று விலகி, ஆவ்...ஏன் இங்க நிக்கிறீங்க...எல்லாரும் உள்ளே போய் உட்காருங்க...உட்காருங்க.. .என்று சுற்றியிருப்பவர்களைப் பார்த்துக் கூறி, கூட்டத்தை அங்கிருந்து விலக்குவார். மானேஜர் எல்லாரையும் உட்கார வைங்க.என்று தொடர்ந்து கூறிக் கொண்டே .உறலோ டாக்டர்...வாங்க...வாங்க....என்று ஒருவரோடு அவ்விடத்தை விட்டுச் சட்டென்ற அகன்று விடுவார்.

தன்னை வரவேற்காது, கண்டு கொள்ளாது சிவா சட்டென்று அவ்விடம் விட்டு அகன்றது ராமுவின் மனத்தைக் காயப்படுத்தும். அலட்சியப் படுத்துவது புரியும். இதற்குள் சௌகார் அங்கே வந்து இவர்களைப் பார்த்து அண்ணா...வாங்க...வாங்க...பார்வதி..!!.என்று பாசத்தோடும், ஆவலோடும் வரவேற்க, லட்சுமி, எங்களையெல்லாம் மறந்திட்டியா? என்று ராமுவின் மனைவி கேட்டுக்கொண்டே நெருங்குவார். அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம், முதல்ல உள்ள வாங்க..வாங்கண்ணா என்று சௌகார் கூப்பிட, மனவருத்தத்தை வெளிக் காண்பிக்காமல், பரவால்லம்மா, நாங்க இங்கயே இருக்கோம் என்பார் ராமு. என்னண்ணா இது, உள்ளே வந்து சந்திராவை ஆசீர்வாதம் பண்ணுங்கண்ணா... பாருங்க...அங்கே நிக்கிறாரே அவர்தான் மாப்பிள்ளை...ரொம்பப் படிச்சவரு.. என்று கூறும்பொழுது, சிவா அங்கு வேகமாய் வந்து தன் மனைவியைக் கண்டிப்பார். லட்சுமி, என்ன இங்க வந்து பினாத்திக்கிட்டிருக்கே...போய் வேலையைப் பார்...என்று கோபப்படுவார். இது மிகவும் அவமானமாகப் படும் ராமுவுக்கு. சிவாவைப் பார்த்துச் சொல்வார்.

சிவா, உனக்கு விருப்பம் இல்லைன்னா என்னை வெளில போன்னு சொல்லிடு...இப்படி ஒரேயடியா உதாசீனமா நடந்துக்காதே...அழைப்பில்லாம வந்தது தப்புத்தான். அதுக்காக, உன் பழைய சிநேகிதன்ங்கிற முறைல தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிரு...என்பார்.

இப்படி சத்தமாய் என்னென்னவோ பேசி, மானத்தை வாங்கப் பார்க்கிறானே, என்று பல்லைக் கடித்துக் கொண்டே, யாருக்கும் கேட்காமல் மெதுவாக, டேய், நில்றா...என்று தடுப்பார் சிவா. நான் இப்போ என்ன சொல்லிட்டேன்...ஏன் இப்படியெல்லாம் பேசறே...என்பார். ராமு வேதனையோடு பதிலுரைப்பார்.

எல்லாம் எனக்கும் புரியும்ப்பா...நான் ஒண்ணும் முட்டாளல்ல. இந்த பார் சிவா, ஓடம் வண்டில ஏறும், ஒரு நாளைக்கு வண்டியும் ஓடத்துல ஏறும்.

எல்லாரும் இப்படிப் பார்க்குறாங்களே...இப்படி வழிய மறிச்சுப் பேசிக்கிட்டிருக்கியே...என் கௌரவம் என்னடா ஆகுறது....

அப்டீன்னா நீ எங்கிட்டப் பேசறதே, உனக்குக் கௌரவக் குறைச்சல்னு சொல்றியா?

என்னடா ஃபூல் மாதிரிப் பேசறே...பேசாம உட்காரு....எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்...மானம் போகுது.... – இந்தப் பதிலைக் கேட்டு, தன் கட்டுப்பாட்டை இழந்து விடுவார் ராமு.

டேய், நிறுத்துறா...என்னடா பெரிய மானத்தை கண்டவன் நீ...?

ராமூஊஊஊஊஊ.....!!!

பேசாதே...!!..நன்றி கெட்டவனே...உன் குடும்பத்துக்கு நான் எவ்வளவு நன்மைகளைச் செய்திருக்கேன்....அதையெல்லாம் மறந்திட்டு, என்னை எவ்வளவு கேவலமா நினைச்சிட்டே...எவ்வளவு கௌரவக் குறைச்சலாப் பேசறே...கௌரவமாம் கௌரவம்...டேய்...உன் குடும்ப கௌரவம் எந்த லட்சணத்துல இருக்குன்னு உனக்குத் தெரியாதுடா...எனக்குத்தான் தெரியும்...அதோ பார்..!!. என்று மாடிப் படியில் நின்று கொண்டிருக்கும் சந்திரா (விஜயகுமாரி) காந்தா (புஷ்பலதா) இவர்களைக் காண்பித்துத் தொடருவார்.

உணர்ச்சி மயமான இந்தக் கட்டத்தில் தியேட்டரே கப்சிப் என்று கிடக்கும். பார்வையாளர்களே பதறுவர். மனம் கிடந்து அப்படி அடித்துக்கொள்ளும். ஆனால் ஒன்று. இந்தக் காட்சியிலே எல்லோரும் ராமுவின் (வி.கே.ஆா்) பக்கம்தான். ஒவ்வொரு காரெக்டர்களை வடித்ததுவும், அதற்கேற்றாற்போன்று காட்சிகளை அமைத்ததுவும், அதற்கொப்ப உணர்ச்சிகரமாக வசனங்களைத் தீட்டியதுவும், அந்தந்தப் பாத்திரங்களாகவே எல்லோரும் வாழ்ந்ததுவும், இதென்ன படமா? வாழ்க்கையா? உண்மையிலேயே நடந்ததுவோ? என்று எண்ண வைத்து விடும். தொடரும் உணர்ச்சிப் பிழம்பான காட்சியைப் பாருங்கள்....

ந்த ரெண்டு பொண்ல உன் சொந்த மகள் யாருன்னு உனக்குத் தெரியுமா...? தெரியாது...உனக்கென்ன, உன் மனைவிக்குக் கூடத் தெரியாது....உன் மனைவிக்கென்னடா இந்த உலகத்துக்கே தெரியாது...

.ராமு என்ன பேசறே..?.கேர்ஃபுல்.... ஷூட் பண்ணிடுவேன்.... லட்சுமீஈஈஈஈ....!!!

அங்க என்னடா கேட்கறே...நான் சொல்றேன்...உனக்குப் பிறந்தது ஒரே ஒரு பெண் குழந்தைதான்...நர்சிங்உறாம்ல நாட்டியக்காரி சுலோச்சனாவுக்குப் பிறந்த பெண் குழந்தையும், உன் பெண் குழந்தையும் ஒண்ணாச் சேர்ந்து, அடையாளம் தெரியாமப் போச்சு...அதோ பார், அதோ நிக்கிறானே நட்டுவன் நடராஜன், இவனோட தங்கைதான் சுலோச்சனா, இவன் மருமகதான் இந்த ரெண்டு பேர்ல ஒண்ணு....

பொய்ய்ய்ய்ய்...உற..உற.உறஉறஉறாாா...பொய் சொல்றான்...உங்க எல்லாருக்கும் முன்னாலயும் என்னை அவமானப்படுத்தறதுக்காக இவன் பொய் சொல்றான்...எனக்குத் தெரியும் எப்பவுமே இப்படித்தான் பொய் சொல்லுவான்....யாரும் நம்பாதீங்க...யாரும் நம்பாதீங்க...

நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கை இல்லேன்னா, உன் மனைவிக்குப் பிரசவம் பார்த்த டாக்டரம்மாவையே கேட்டுப் பார்....

டாக்டர்...டாக்டர்...இவன் சொல்றதெல்லாம் உண்மைதானா டாக்டர்....டாக்டர்...சொல்லுங்க டாக்டர்....அவன் சொல்றது உண்மைதானா...?

டாக்டர் பதில் சொல்லாமல் தலை குனிந்தவாறே படி இறங்கிப் போய்க்கொண்டேயிருப்பார். டாக்டர்.....!!!

எங்கே சொல்லச் சொல்லு...உண்மையை மறைக்கச் சொல்லு பார்ப்போம்... – தன்னை மீறிக் கத்துவார் ராமு.

இப்படிப்பட்ட ஒரு மர்மத்தை என் மனைவிக்குக் கூடத் தெரியாம இத்தனை வருஷ காலமா மறைச்சு வச்சிருந்தனே, எதுக்காக? உன் குடும்பக் கௌரவத்தைக் காப்பாத்தறதுக்காக....இப்போ நீ சொல்றே..நான் இங்க வந்ததுனால உன் கௌரவம் கெட்டுப் போச்சுன்னு டேய் சிவா...சாது மிரண்டா காடு கொள்ளாதுறா...

அண்ணா...இப்டிச் செஞ்சிட்டீங்களே அண்ணா...சௌகார் கதறுவார்.

லட்சுமி...என்னை மன்னிச்சிடும்மா...எனக்கிருந்த ஒரே ஒரு கட்டுப்பாட்டையும் மீறி இதனால விளையப்போற விபரீதங்களைப்பத்திக் கூடக் கவலைப்படாம எதுக்காக இந்த உண்மையைச் சொன்னேன். உன் பொண்ணை என் பையனுக்குக் கொடுக்கலைங்கிறதுக்காக அல்ல...உன் புருஷனைப் பிடிச்சு ஆட்டுதே அந்தஸ்துங்கிற பேய்...அது அவனவிட்டு ஒழியணும்ங்கிறதுக்காகத்தான்...டேய் சிவா...இனிமேலாவது திருந்து...பார்வதி...வா...போகலாம்.....

அம்மா...சேகர்....! – கிளம்பிவிட்ட மாப்பிள்ளை முத்துராமனை நோக்கித் தடுப்பார் சிவா. வீட்டுக்குப் போய் பேசிக்கலாம் வா....- அவர் அம்மா இழுத்துக் கொண்டு போய்விடுவார்.

இந்தக் காட்சியை நான் சொன்ன பிறகு பார் மகளே பார் படத்தைப் போட்டுப் பாருங்கள் தயவுசெய்து. நீங்கள் வி.கே.ஆர். பக்கம் நின்று அழவில்லையென்றால், அந்த அவமானம் உங்களுக்கே நிகழ்ந்ததாகக் கருதவில்லையென்றால், நெஞ்சம் பதறவில்லையென்றால், ரெண்டு சொட்டுக் கண்ணீரேனும் சிந்தவிட்லையென்றால் நீங்கள் மனிதரேயில்லை. உணர்ச்சிகளற்ற ஜடம் என்று பொருள்.

போதுமா வி.கே.ஆர். புராணம். அவர் பிறந்தது, வளர்ந்தது, நாடகங்களில் பயின்றது, சினிமாவுக்குள் நுழைந்தது, பட்டங்கள் வாங்கியது அதெல்லாம் இங்கே எதற்கு? அது அறியத்தான் கணினி இருக்கிறதே...யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், எளிமையாகச் சொல்லி விடலாம். ஆனால் நல்ல நடிகர்கள் என்பவர்கள் எதற்காக நடித்தார்கள்? அவர்கள் பிழைப்பிற்காக மட்டுமா? அல்லவே? ஆத்மசாந்திக்காகவும், பின்னால் சிலராவது இப்படி நினைவு கூர்ந்து பேச மாட்டார்களா, நினைக்க மாட்டார்களா? என்ற ஆத்ம திருப்திக்காகவும்தானே? திரு வி.கே.ராமசாமி அவர்களை, அவரது அர்ப்பணிப்பான நடிப்பை, நேசித்த நடிப்பிற்காகவே வாழ்ந்து கழித்ததை, அந்த நடிப்பில் ஏற்படுத்திய முத்திரைகளுக்காக இன்னும் நம் மனதிலெல்லாம் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருப்பதை, இப்படிச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்?

-------------------------------------------------

மாத நாவல் வரிசையில் எனது “குலவிளக்கு“ – சனவரி 2014.

2014-01-04 13.49.57 2014-01-04 16.19.25

எமது அடுத்த நாவல் விரைவில்...