25 ஜனவரி 2023

சிறுகதை “பேப்பர் பையன்” - தினமணி கதிர் - 22.01.2023

 

               சிறுகதை                                                “பேப்பர் பையன்”      





பெல் அடிக்கலாமேப்பா…? – சங்கடத்தோடுதான் கேட்டேன்  அவனிடம்.

            அடிச்சேன் சார்….யாரும் கதவைத் திறக்கலை- என் முகத்தைப் பார்க்கத் தயங்கியவனாக அவன் சொன்னான். சொன்ன விதம் அது பொய்யில்லை என்பதை உணர்த்தியது எனக்கு.

உடனே திறக்காட்டி என்ன…திரும்ப ரெண்டுதரம் அடிக்க வேண்டிதானே? இல்லன்னா கதவைத் தட்டவேண்டிதானே…! –விருட்டுனு உடனே போயிடுவியா?  விடாமல் கேட்டேன்.

இருக்கும் குளிரில் விடிந்தும் விடியாத அந்தக் காலையில் சத்தமாய்க் கதவைத் தட்டினால், பக்கத்து வீட்டுக்காரர்கள் எழுந்து கொள்ளக் கூடும். கதவைத் திறந்து வெளியே வந்து அந்தச் சிறுவனைத் திட்டினாலும்  போச்சு….

அறிவில்ல…? எல்லாரும் தூங்கிட்டிருக்கைல இப்டித் தட தடன்னு கதவைத் தட்டுறியே? -கண்டிப்பாய் கேட்கத்தான் செய்வார்கள்.  அருகருகான வீடுகளில் சுமுக உறவா இருக்கிறது? பறவைகள் பலவிதம்…ஒவ்வொன்றும் ஒரு விதம்…!

தட்டினேன் சார்…லேசாத் தட்டுனேன்.  பக்கத்து வீட்டுல எழுந்துட்டாங்கன்னா? சத்தம் போடுவாங்கல்ல…? பயமாயிருந்திச்சு சார்….

அவனின் ஜாக்கிரதை உணர்வு புரிந்தது எனக்கு. பயமாயிருந்தது என்று வேறு சொல்கிறான்…சிறுவன்தானே…!

ரொம்பவும் பொறுப்பான பையனாய் அவனை நான் உணர்ந்திருந்தேன். இல்லையெனில் இந்த மார்கழிக் குளிரில் இப்படிப் பறந்து பறந்து வீடு வீடாக விடிகாலையில்  ஒரு நாள் தவறாமல் பேப்பர் போட முடியுமா? வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறான் அவன். இந்தக் காலத்திலும் இப்படியெல்லாமும் இருக்கிறார்கள்தானே…! ஊரும் உலகமும் இன்னும் முழுதும் கெட்டுவிடவில்லைதான்.

ஆறு மணிக்கு…..தவறினால் ஆறே காலுக்கு அல்லது தாமதமானால் ஆறரைக்கு என்று நம்பிக்கையாய்க் கதவைத் திறந்தால் கட்டாயம் கதவுக்கு வெளியில் செய்தித்தாள் கண்டிப்பாய்க் கிடக்கும்.  நம்பிக் கதவைத் திறந்து ஒரு நாள் கூட ஏமாந்ததில்லை. அவ்வளவு சின்சியர். அதுவும் இரண்டாவது மாடிக்கு வந்து போட்டுவிட்டுப் போகிறான். பல அடுக்ககங்களில் கீழே கார் பார்க்கிங்கிலேயே கிடப்பதை, வீசிவிட்டுப் போவதை, நடைப் பயிற்சியின் போது தவறாது கவனித்திருக்கிறேன் நான்.

அழுத்திச் சொன்னால் ஒரு நாள் ரெண்டு நாள் போடுவார்கள். பிறகு வழக்கம்போல் கீழேதான் எறிந்துவிட்டுப் போவார்கள். அது பத்துப் பேப்பராய்ப் பிரிந்து பறந்து கிடக்கும். இந்தப் பையன் அப்படியில்லை. மேலும் கீழே கேட்டைச் சரியாகச் சாத்தி, கொண்டி போட்டுவிட்டு வேறு போவான். ஒரு நாளும் திறந்து போட்டமேனிக்கு அவன் நகர்ந்து  நான் பார்த்ததில்லை. வரும், போகும் ஆளெல்லாம் இஷ்டத்துக்குத் திறந்து போட, தெரு நாய்கள் சகஜமாக உள்ளே வந்து கூட, அங்கங்கே அசிங்கம் பண்ணி வைக்க….ஏகப்பட்ட கூத்துக்கள் நடக்கிறது அடுக்ககங்களில்.

இவைகளாவது பரவாயில்லை.  பலவிதமான டெலிவரி என்று ஆட்கள் வந்து வந்து போகிறார்கள் தினமும்.  எல்லார் மனமும் ஒன்றாகவா இருக்கிறது. ச்சே…! நம்ம பிழைப்பும் ஒரு பிழைப்பா? என்று தோன்றுமோ என்னவோ… நின்று கொண்டிருக்கும் கார்களில் கீறலைப் போட்டுவிட்டு நகர்ந்து விடுகிறார்கள். டூ வீலர் சாவியை வைத்து அழுந்த வளைய வளையமாய் ஒரு நீண்ட இழுப்பு ….அவனவன் விதவிதமா காருகள வச்சிக்கிட்டு என்னமா அனுபவிக்கிறானுங்க…! நாம செத்துச் செத்துல்ல பிழைக்க வேண்டிர்க்கு…! – மனித மனங்கள் எங்கு எப்படி வேலை செய்யும் என்று யார் கண்டது? யாரென்று குறிப்பிட்டுக் கேட்பது? இப்படி ஏராளமான அனுபவங்கள். பார்த்தால் வயிறெரியும்…!அம்மாதிரி பிரகஸ்பதிகளுக்கு நடுவேதான் இம்மாதிரி நல்ல பசங்களும் இருக்கிறார்கள். உழைப்பே கதி என்று இளம் பிராயம் முதல் சம்பாதிக்க ஆரம்பித்து, வீட்டுக்கு உதவியாயும், படிப்புக்கு ஆதாரமாயும் சிறப்புற விளங்குகிறார்கள். இந்தப் பையன் தங்கக் கட்டி….!

ன்ன பாஸ்கரன்…நல்லாயிருக்கீங்களா….நான்தான் பேசறேன்…பத்தாவது தெரு அபார்ட்மென்ட்…செகன்ட் ஃப்ளோர்….நாளைக்கு “டெய்லி நியூஸ்“ பேப்பர் புது வருஷக் காலண்டரோட போடுறாங்களாமே….இருபது ரூபா போட்டிருக்காங்க….எனக்கு ஒண்ணு கொடுத்து விடுங்க…அவங்க காலண்டர் முழு விபரத்தோட இருக்கும். கண்டிப்பா எனக்கு வேணும். .வழக்கமான  தமிழ் இங்கிலீஷ் பேப்பரோட இது ஒண்ணையும் சேர்த்துக் கொடுத்து அனுப்புங்க….பையன்ட்ட பைசாவைக் கொடுத்திடுறேன்….

ஓ.கே.சார்…..கண்டிப்பா…!

சொன்னபடி டெய்லி நியூஸ் செய்தித்தாளும், புத்தாண்டு காலண்டரும் கிடைத்து விட்டது. மற்ற இரண்டு பேப்பர்களோடு இதுவும் கிடந்தது.  சரி…பைசா…. கொடுக்க வேண்டாமா? அவன்பாட்டுக்குப் போயிட்டானே? நாளைக்கு வாங்கிக்கலாம்னு போயிட்டானோ? எப்டி எழுப்புறதுன்னு சங்கடப்பட்டுட்டு நகர்ந்துட்டானோ? பாவம் சின்னப் பையன்…நாமதான் அவனப் பார்த்துக் கொடுக்கணும்….

ஒரு நாளாச்சு….ரெண்டு நாளாச்சு…மூணாவது நாளும் கடந்து போச்சு….காசு வாங்கினபாடில்ல…கொடுத்தபாடும் இல்ல….?

கண்ணுலயே ஆள் பட்டாத்தானே? வர்றதும் தெரில…பேப்பர் போடுறதும் தெரில…மாயமா மறைஞ்சிடுறானே….! ஜிவ்வு….ஜிவ்வுன்னுல்ல பறக்கிறான்…?

சார்….ஜி.பேல அனுப்பிடுங்க……

ஜி. பே நான் வச்சிக்கலையேங்க….? பையன்ட்ட சொல்லி அனுப்புங்க…கதவத் தட்டச் சொல்லுங்க…இல்லன்னா ரெண்டு மூணுதரம் பெல் அடிக்கச் சொல்லுங்க…

ஓ.கே. சார்…..சொல்லிவிடுறேன்….

ரெண்டு மாடி ஏறி வந்து அல்லது லிப்டில் வந்திறங்கி தவறாமல், சிரமம் பாராமல்  வீட்டுக் கதவருகில் கிரில்லில் செருகி விட்டுப் போகும் இந்தப் பையனுக்கு ரெண்டு நிமிஷம் நின்று பொறுமையாக இந்தப் பிசாத்துக் காசை வாங்கிக் கொண்டு போகத் தெரியலையே? சொன்னபடி ப்ராம்ப்டாக அந்தப் புதுவருஷக் காலண்டர் இணைப்புக் கொண்ட தினசரியைக் கொடுத்து விட்ட ஏஜென்ட்டுக்கு அதே வேகத்தில் அதற்கான பணத்தைக் கொடுக்க வேண்டாமா? அவன் என்ன நினைப்பான் என்னைப்பற்றி…! இந்தப் பயலால் நமக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் போலிருக்கிறதே…! பொடியன்கிறது சரியாத்தான் இருக்கு…!

தேவையில்லாமல் இதென்ன மன உளைச்சல்? வெறும் இருபது ரூபாய்தான்.  ஆனாலும் பணம் அன்பை முறிக்குமே…! வெறும் இருபதுதானே என்று சாருக்கு ஓசியாக் கொடுத்ததா இருக்கட்டும் என்று விட்டு விடுவானா? இப்டியே நாலு இடத்தில் விட்டால் அவன் பிழைப்பு என்னாவது?

அப்டியே மறந்திடும்னு சாரு நினைச்சிட்டாரோ…? இல்ல பையன்ட்டக் கொடுத்து, அவன் ஆட்டையைப் போட்டுட்டானா…? – எது வேணாலும் நினைக்கலாமே…! கரெக்டா காலண்டர் வர்ற பேப்பர் வேணும்னு கேட்டவருக்கு, சின்சியராக் காசைக் கொடுத்துவிடத் தெரிலயே…!  இந்தச் சின்னக் காச வாங்க எத்தனை தரம் ஞாபகப் படுத்தணும் அவருக்கு…? என்னென்னவோ தோன்றியது எனக்கு.

எதற்கு அநாவசியமாய் இந்தச் சந்தேகங்கள்? தேவையில்லாமல் நம்மால் அந்தச் சிறுவனுக்கு எதற்குக் கெட்ட பெயர்? ஓராண்டு என்பது கிடு கிடுவென்று ஓடிப் போகிறதே? அடுத்தாண்டு இம்மாதிரிக் கேட்டால் கடைல வாங்கிக்குங்க சார்…என்று சொன்னாலும் போச்சு…!  இருந்த இடத்தில் கொண்டு லட்டு மாதிரிக் கொடுத்ததற்கு இதுவா ரெஸ்பான்ஸ் ?

மனிதனுக்குள்ள பிரச்னைகளெல்லாம் பௌதீகத்தன்மை வாய்ந்தவை. இந்த மனசு போட்டுப் படுத்தும் பாடிருக்கிறதே…! இதற்குப் பேர்தான் இழுத்துக் கூட்டி  அனுபவிப்பதென்பதோ? ஒரு சின்ன விஷயம்…தேவையில்லாமல் உளட்டுகிறதே…! அநாவசிய மன உளைச்சல்…!

சர்வீசில் இருந்த காலத்திலெல்லாம் இம்மாதிரி எந்தச் சிக்கலிலும் மாட்டாமல், எதற்கும் சபலப்படாமல் இருந்து கழித்து வெளியேறியாயிற்று.  இந்த மீதி வாழ்க்கையில் இப்படியெல்லாமும் ஒன்றைச் சந்திக்க வேண்டுமா என்ன? தேவையா மனுஷனுக்கு? சில்லுண்டிப் பிரச்னைக்கெல்லாமா மண்டையப் பிச்சிக்கிறது?

ன்னைக்கு உனக்காக நான் இப்படிப் பழி கிடக்கலேன்னா இன்றைக்கும் உன்கிட்டே இந்தக் காசைக் கொடுத்திருக்க முடியாது…. நல்லவேளை….நீ என் கண்ணுல பட்டே….இந்தத் தெரு கடைசிவரைக்கும்தான் போயிருப்பே….நிச்சயம்  திரும்பி வருவேன்னு கீழே வந்து நின்னி்ட்டேயிருக்கேன் தெரியுமா? இல்லன்னா ஒரு மாசம் இழுத்திடும் போல்ருக்கு….

ஸாரி சார்…..என்னிக்காச்சும் வாங்கிக்கிடலாம்னு போயிட்டேன் சார்…..

அவன் பதில் எனக்கு அதிர்ச்சியூட்டியது. என்ன நினைச்சிட்டுப் பேசறான் இவன்? என்னிக்காச்சும் வாங்கிக்கிடலாம்னா என்ன அர்த்தம்? அப்டியே முதலாளியும் மறந்திடுவாரு….மெதுவா வாங்கிக்கிட்டா….இந்த இருபது ரூபாயவா ஞாபகம் வச்சிருக்கப் போறாருன்னு நினைச்சிட்டானோ…? பொறுப்பில்லாமப் பேசறான்…? எல்லாமும் கெடக்கட்டும்…இவன் முதலாளி என்னைப் பத்தி என்ன நினைப்பான்?

ஒரு நாள் கூடத் தவறாமல் பேப்பரை ரெண்டாவது மாடிக்குக் கொண்டு வந்து வாசல் கதவில் கொண்டியில் செருகி வைக்கும் அவனைச் சட்டென்று சந்தேகப்படுகிறோமே…! இந்தப் பையனா இப்படிப் பேசுகிறான்?

என்னப்பா சொல்ற நீ? என்னைக்காச்சும் வாங்கிக்கிடலாம்னா என்னா அர்த்தம்? இது எனக்கும் உங்க முதலாளிக்கும் இடையிலான டீல்ப்பா…? நீபாட்டுக்கு என்னத்தவோ சொல்ற? அவரு என்னப்பத்தி என்ன நினைப்பாரு…? தப்பா நினைக்க மாட்டாரு? சொன்னபடி காலண்டரை மறுநாளே கொடுத்தனுப்பிச்சவருக்கு அது போல பணமும் கொடுக்கணும்ல…? இஷ்டத்துக்கு டிலே பண்ணிட்டே போனா? கால் காசானாலும் கண்ணியம் வேணும்ப்பா….நீ சின்னப்பய…உனக்கு இதெல்லாம் எங்க தெரியப் போகுது…..! புரியாது…!  இந்தா பிடி பைசாவ…..உன் முதலாளிட்டக் கொண்டு கொடு…கணக்குத் தீர்ந்திச்சு…..புரியுதா…..மறக்காமக் கொண்டு என் பெயரச் சொல்லிக் கொடுத்திடு….தெரிஞ்சிதா…..? – படபடவென்று பொரிந்து தள்ளினேன் அவனிடம்.

எல்லாவற்றையும் நிதானமாய்க் கேட்டுக் கொண்டிருந்து விட்டு கடைசியாய்ச் சொன்னான் அவன்.

அன்னைக்கே என் கைக் காசைக்  கொடுத்திட்டேன் சார்……நீங்க டென்ஷனாகாதீங்க…. –லேசாகப் புன்னகைத்தது போல்கூட இருந்தது.

என்னய்யா சொல்ற…..? நின்னு சொல்லிட்டுப் போ..! சைக்கிளைத் திருப்பி விரட்டும் அவனை நோக்கிக் கத்தினேன் நான். சட்டென்று மனது குன்றிப் போனது.

.பெறவு உங்ககிட்ட வாங்கிக்கிடலாமுன்னு…நானே கொடுத்திட்டேன் சார்….ஒண்ணும் பிரச்னையில்ல…1 – பதில் வந்தது பளீரென்று.  புயலாய்ப் பறந்து கொண்டிருந்தான் அவன்.

வைத்த விழி மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றேன் நான். சிறு தொகை. அதனால் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்கிற வகையில் சிந்தித்திருப்பானோ? அவன் பெயரும் கெடாமல் அதே சமயம் என் பெயரும் கெடாமல்…காப்பாற்றி….இந்தப் பிஞ்சு உள்ளத்தில் எந்த மாதிரிப் போற்றத்தக்க நற்சிந்தனை இது! வியப்பாயிருந்தது எனக்கு.

அவன் பொறுப்பானவன்…! என் கணிப்பு சரிதான்…? நான் இஷ்டம்போல் நினைத்து மானாவாரியாகச் சந்தேகப்பட்டதுதான் தவறு…!  -நினைத்துக் கொண்டேன்.

மனதிற்குள் அவனுக்கு என் அன்பான நன்றியைச் சொல்லிக் கொண்டேன்.

                                                ----------------------------

 

 

 

16 ஜனவரி 2023

சிறுகதை “அதிகாரம்” - பதாகை இணைய இதழ் (15.01.2023)

 

சிறுகதை                            “அதிகாரம்”  (15.01.2023 - இணைய இதழ்)





      நீங்க கொஞ்சம்  போய்ட்டு வரலாமே....? - கேட்கும்போதே இவன் எங்கே சரி சொல்லப் போகிறான் என்கிற சந்தேகத்தோடேயே கிரிஜா கேட்டாள். அடுப்படி நோக்கிப் போய்க் கொண்டே, திரும்பிய வாக்கில் அவள் கேட்டதே அதற்கு சாட்சி. அவனுக்கு விருப்பமில்லாததை செய்ய வைக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும். அதைச் சொல்லிப் புண்ணியமில்லை என்கிற பக்குவம்தான் அவளுக்கு இன்னும் வரவில்லை.

      ஒண்ணு நினைச்சா பட்டுன்னு உடனே கேட்ருவியா? யோசிக்க மாட்டியா? - சரவணனின் இந்தக் கேள்வியை அவள் எத்தனையோ முறை எதிர்நோக்கியிருக்கிறாள். ஆனாலும் அவளுக்குக் கேட்காமல் இருக்க முடியவில்லை. பிடிக்காத கேள்வியைக் கேட்பது எப்படி அவனுக்குப் பிடிக்காதோ அது போல் தோன்றியதைக் கேட்காமல் இருப்பது இவளுக்குப் பிடிக்காது. எத்தனை முறை திட்டினாலும் உறைக்காது.

      போய்ட்டு வந்தா என்ன...குறைஞ்சா போவீங்க...ஒரு உதவிதானே....?

      இதை அந்தம்மாள் போன பிறகு  கேட்கிறாள். அந்த மட்டும் பாராட்டத்தான் வேண்டும். அது ஒன்றுதான் சொல்லிச் சொல்லி அவளுக்கு வந்திருக்கும் நிதானம்.

      எனக்குத் தெரியும்....எதுக்குப் போகணும்...எதுக்குப் போகக் கூடாதுன்னு...நீ எனக்குச் சொல்லித் தர்றியா? -திரும்பி நின்று அவளைப் பார்த்துச் சொன்ன போதும்  அவள் பார்வை சமையலறையை நோக்கித்தான் இருந்தது. ஒரு சின்ன அலட்சிய பாவம் எப்போதும் தொனிக்கும்.

      அப்புறம் அவங்க வந்து சொல்லிட்டுப் போனதுக்கு என்னதான் அர்த்தம்? நீங்க வரணும், வருவீங்கங்கிற நம்பிக்கைலதானே வலிய வந்து புலம்பிட்டுப்  போறாங்க...? ஒரு முடிவும் சொல்லாத உங்க மூஞ்சியப் பார்த்திட்டே போனா? பரிதாபமா இருக்குல்ல...! வீட்டுக்கு வந்தவங்கள இப்டியா அலட்சியப்படுத்தறது?

      இதென்னடா இது வம்பாப் போச்சு. மனுஷன் அமைதியா இருந்தாலும் அதுக்குப் பேரு அலட்சியமா? அதுக்கு... என்னை என்ன பண்ணச் சொல்ற? நானா என்ன விபரம்னு கேட்டேன்? ...அவங்களா வந்தாங்க...சொன்னாங்க...அதுக்காகவே போயாகணுமா...? வர்றத்துக்கு முன்னாடி  யோசிச்சிருக்கணும்...போய்ச் சொல்லலாமா வேண்டாமான்னு...? மத்தவங்களுக்கும் வேறே வேலை இருக்காதா?  அதை ஒதுக்கிட்டுப் போக முடியுமா? பொம்பளைங்க பூராவும் ஒரே மாதிரிதான் இருப்பீங்க போல்ருக்கு...! கொக்குக்கு ஒண்ணே மதின்னு.

      என்ன பெரிய்ய்ய வேலை? பாங்குக்குப் போறதுதானே...இன்னைக்கு இல்லாட்டி நாளைக்குப் போயிக்கிறது....கெட்டா போகுது...? இது அர்ஜன்ட் இல்லையா? -

      நம்ம சொந்த வேலையை விட அடுத்தவங்க வேலை உனக்கு அர்ஜென்டாப் போச்சா?- விடாமல் கேட்கிறாள். என்னைச் சம்மதிக்க வைப்பதுதான் அவள் நோக்கமாய் இருக்கும் போலிருக்கிறது. தினமும் நின்று மணிக்கணக்காய் கதை பேசும் சிநேகிதம். அதுக்கு பங்கம் வந்துவிடக் கூடாது. நான் சொன்னா அவர் கேட்பாரு என்று காட்டிக் கொள்ள வேண்டும். நான்தான் போய்ட்டு வாங்கன்னு அனுப்பி வச்சேன் என்று பெருமையடித்துக் கொள்ள வேண்டும். இதற்கு நான் உடன்பட வேண்டும்!

      குக்கரில் முதல் சத்தம் வந்தது. வழக்கத்துக்கும் மாறாக சத்தமும் நீளமும் அதிகமாய்த் தெரிந்தது.

      என்னா இது?....ரயில் இன்ஜின் கணக்கா...காலங்கார்த்தால....? தல வேதனையா இருக்கு...

      காலைல சமைக்காம வேறே எப்பச் சமைக்கிறதாம்? சாதம் வச்சிருக்கேன்...மூணு சத்தம் வரணும்....உங்களுக்கு டிஸ்டர்பா இருந்தா ரூமுக்குள்ள போயி கதவைச் சாத்திக்குங்க......-அவள் சொன்னதை நான் கேட்கப் போவதில்லை என்று உறுதி செய்து விட்டது புரிந்தது.

      றைக்குள் வந்து அமர்ந்தேன். ஜன்னல் வழி எதிர் வீடு தெரிந்தது. அந்த மாடியை நோக்கினேன். எந்தச் சலனமும் இல்லை. அந்தாள் இருக்கிறானா, இல்லையா? அவன் மனைவி, குழந்தைகள் இருக்கிறதா? சத்தமேயில்லையே? இப்டியா குகைக்குள்ள இருக்கிறமாதிரி இருப்பானுங்க?

      குடியிருப்பு ஆள் இருக்கும் இடமே தெரியவில்லை. இப்படி ஒரு ஆள் கிடைக்கணுமே...! சரியான அமுக்குளி. மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். எமப்பய.!!

      வசமா மாட்டினார்யா.... - வாய் என்னையறியாமல் முனகியது. பார்வை கீழ் வீட்டில் இருந்தது.

      போலீஸ் ஸ்டேஷன் போகணுமாமுல்ல...போலீஸ் ஸ்டேஷன்..? அவங்க காரியத்துக்காக நான் ஏன் போய் அந்த நரகத்த மிதிக்கணும்? எனக்கென்ன தலவிதியா? வேணும்னா சொந்தக்காரங்க எவனையாச்சும் வரச்சொல்லி, கூட்டிட்டுப் போக வேண்டிதானே...? இதுக்கெல்லாமா எதுத்த வீட்டு ஆளக் கூப்பிடுறது? எதோ கல்யாணம் காட்சின்னு கூப்டாலும் பரவால்ல....அதான் ஊர் பூராவும் உறவுக்காரவுங்க இருக்காங்கல்ல....வந்து போன மணியமாத்தான இருக்காங்க...அதுல ஒருத்தன் கூடவா வரமாட்டான்? தன் காரியத்தத் தான்தானே பார்த்துக்கணும்....வம்பு தும்புன்னா மட்டும் அடுத்தவன் வேணுமா?

      எதிர் வீ்ட்டு மாடிப் படியில் யாரோ இறங்கி வரும் சத்தம். மறைத்திருந்த ஜன்னல் திரை, ஃபேன் காற்றில் லேசு லேசாக விலகி விலகி அந்தக் காட்சியைப் பிரதிபலிக்கிறது. நான் பார்த்துக் கொண்டிருப்பது அங்கிருந்து நிச்சயம் தெரியாது. மாசிலாமணி சத்தம் கேட்டு வாசலுக்கு வருவது தெரிந்தது. அவர் வராண்டாவிற்கு வந்து நிற்க, அந்தாள் மாடிப்படியிலிருந்து இறங்கி வெளியேற சரியாயிருந்தது. இவரும் ஒன்றும் கேட்கவில்லை. அவனும் ஒன்றும் சொல்லவில்லை. குனிந்த தலை நிமிர்ந்தால்தானே...!

      பார்த்துக் கொண்டே நின்றார். அவன்பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தான்.

      ம்ம்...துணிஞ்சவனுக்குத் துக்கமில்ல.... !!.

      வீட்டுக்குள்ளிருந்து அந்தம்மாள் வந்தது. எதாச்சும் சொன்னாரா...? கேட்க...அவர் உதட்டைப் பிதுக்குவது தெரிந்தது. பேசுவது துல்லியமாய்க் கேட்டது. எங்கள் இரு வீட்டுக்கும் இடைப்பட்ட வீதியின் அகலம் வெறும் பதினைந்தடிதான்....

      நீ என்ன...திரும்பத் திரும்ப இப்டிக் கேட்டுக்கிட்டிருக்கே....அந்தாள்டெல்லாம் இனி பேசுறாப்ல இல்ல....அவன எப்டி வெளியேத்தணும்ன்னு எனக்குத் தெரியும்.....பொறுத்திருந்து பாரு...

      என்னத்தத் தெரியும்? சொல்லிட்டேதான் இருக்கீங்க..எதுவும் செய்றாப்ல இல்ல ஒரு .வருஷம் முடிஞ்சி போச்சு...அட்வான்சும் கழிச்சிட்டா... ஏழு  மாச வாடகை பாக்கி....தர்றேன்...தர்றேன்ங்கிறாரேயொழிய, எதுவும் வந்து சேர மாட்டேங்குது....தலையத் தொங்கவிட்டமேனிக்குப் போகவும், வரவும்னு இருந்தா...சரியாப் போச்சா...? இத்தன மாசம் நழுவ விட்டதே தப்பாப் போச்சு. தும்ப விட்டிட்டு வாலப் பிடிச்ச கதையா...இப்போ புலம்பி என்ன பண்ண...? ஏன் போலீசுக்குப் போகத் தயங்குறீங்க...? போய் எழுதிக் கொடுத்தா, வந்து சாமான் செட்டத் தூக்கி வெளில வீசிட்டுப் போறான்...நமக்கென்ன வந்தது? அந்தாளென்ன உறவா...? உறவுகளையே நெருங்க விடாத காலம் இது...இதுக்குப் போயி பயந்திட்டிருந்தீங்கன்னா...?

      யாருடி பயப்பட்டா...? நீபாட்டுக்கு எதையாச்சும் பேசாத...அவுங்க காதுல விழப் போகுது....

      மாடிக்கெல்லாம் நாம பேசறது கேட்காது....சும்மாச் சொல்லுங்க....

      எங்கூட வேல பார்த்தவங்க ரெண்டு பேர வரச் சொல்லியிருக்கேன். சேர்ந்து போயி புகார் கொடுக்கலாம்னு....கொஞ்சம் பொறு.....

      ஆம்மா....ரிடையர்ட் ஆகி பத்து வருஷம் ஆச்சு......கூப்டவுடனே வந்திடுவாங்களாக்கும்....அதெல்லாம் சர்வீஸ்ல இருக்கிற போதுதான்...இப்பல்லாம் யாரும் தல காட்ட மாட்டாங்க....

      என்ன சொல்றே நீ? அவுங்களுக்கு எத்தனையோ காரியம் செய்து கொடுத்திருக்கேன் நான்..எனக்கு ஒண்ணுன்னா விட்டுக் கொடுக்க மாட்டாங்க?...வர்றாங்களா இல்லையா பாரு...!

      அதெல்லாம் சங்கத்  தலைவர்ங்கிற முறைல அப்போ நீங்க செய்திருக்கலாம். அது சர்வீஸ்ல இருந்தபோது....இது சொந்த விஷயம்..சிவனேன்னு இருக்காம, .நாம ஏன் தலையக் கொடுத்துக்கிட்டுன்னுதான் நினைப்பாங்க....எதுத்த வீட்டுக்காரரே வரத் தயங்குறாரு.!

      இந்த வார்த்தைகள் துல்லியமாய் என் காதில் விழுந்தன. புரிஞ்சிதான் போயிருக்கு!!

      எதுக்கு அதுக்குள்ளேயும் அவர்ட்டப் போயிச் சொன்னே? நாந்தான் ஆளுகள வரச்சொல்லியிருக்கனே...! அப்புறம் என்ன அவசரம் உனக்கு?

      அப்டியே வந்தாலும் அடுத்தடுத்து ஒண்ணொண்ணுக்கும் அவுங்களக் கூப்பிட்டுக்கிட்டு இருக்க முடியுமா? எதுத்தாப்ல இருக்கிறவருக்குத்தானே முழு விபரமும் தெரியும்...போலீஸ் கேட்டா சொல்றதுக்கும் ஏதுவா இருக்குமுல்ல....?

      சரி...சாரு என்ன சொன்னாரு...? வர்றேன்னாரா...?-ஆர்வத்தோடு கேட்டார் மாசிலாமணி.

      கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னா சொன்னேன்...உங்க காதுல விழலியா...? தயங்குறாருன்னேன்ல...?

      சரி...பார்ப்போம்..... - சொல்லிவிட்டுச் சட்டென்று உள்ளே போய்விட்டார் மாசில். அந்தம்மாதான் நான் எங்கேனும் தென்படுகிறேனா என்று என் வீட்டைப் பார்வையால் துளைத்தது.. நான் நன்றாக அறைக்குள் என்னை உள்ளே அமுத்திக் கொண்டேன்.

      மனசு கேட்கவில்லைதான். ஆனாலும் போலீஸ் ஸ்டேஷன் போவதற்கு ஏனோ ஒரு தயக்கம். வெறுமே ஒரு புகார் எழுதிக் கொடுத்துவிட்டு வருவதுதான். அங்கே போனால் ஆயிரம் கேள்வியைக் கேட்பானோ, பதில் சொல்ல வேண்டியிருக்குமோ, சாட்சிக் கையெழுத்துப் போடச் சொல்வானோ என்றெல்லாம் நினைத்து மனம் சஞ்சலப்பட்டது. .நம்மால் முடிந்ததை வேறு என்ன செய்யலாம் என்றுதான் யோசனை போய்க் கொண்டிருந்தது எனக்கு. கூடப் போய் நிற்பதற்கே எனக்கு பயம்!

      மாலை வெளியே கிளம்பி வழக்கம்போல் நடைப் பயிற்சியில் கலந்திருந்தேன். இரண்டு தெருக்களைக் கடந்து கடைசியில் பூங்காவுள்ள அந்த நீண்ட வீதிக்குள் நுழைந்தபோது எதிர்ப்பட்ட பழைய வாட்ச்மேன் வீரணனைச் சட்டென்று நிறுத்தினேன். விஷயத்தைச் சொன்னேன்.

      இதெல்லாம் நம்ம ஏரியாவுல சர்வ சாதாரணம் சார்...அதனாலதான் யாருமே வீட்டை வாடகைக்கு விடத் தயங்குறாங்க....வெறுமே பூட்டிக் கிடந்தாலும் கிடக்கட்டும்னு போட்டுர்றாங்க...ஒண்ணுமில்ல சார்...விஷயம் இவ்வளவுதான்....நானும் இன்னொருத்தரும் வருவோம்...விறுவிறுன்னு வீட்டுக்குள்ள போய் சாமாஞ்செட்டெல்லாம் எடுத்து வெளியே வீசுவோம்....ஆளுகள வெரட்டி தடாலடியா வெளியேத்தி, வீட்டைப் பூட்டிச் சாவியக் கொண்டாந்து ஒப்படைச்சிடுவோம்...எல்லாம் அரை மணி...ஒரு மணில முடிஞ்சி போயிரும்...அதுக்கு நாங்க பொறுப்பு...ஆனா ஒண்ணு...போலீசு அது இதுன்னு அவுக போயிரக் கூடாது...அதுக்கு நீங்க பொறுப்பு ஏத்துக்கிறதுன்னா சொல்லுங்க...இப்பவே வர்றோம்...என்ன சொல்றீங்க...? என்றான்.

      கேட்கும்போதே பயங்கரமாய் இருக்கிறதே..சினிமாக் காட்சி போல!.இதற்கு அவர் எப்படி ஒத்துக் கொள்வார்...? அதெல்லாம் நமக்குப் பொருந்தாதுங்க என்றுதான் கண்டிப்பாகச் சொல்வார். சரி..யோசிச்சுச் சொல்றேன்... என்றேன் அவனிடம். எதிர்பார்த்த பதில்தான் போல.புன்னகையோடு நின்றான்.

      எந்த வீட்டச் சொல்றீங்க...நம்ம வூட்டுக்கு எதிர்த்தாப்ல இருக்கிற மாடியா...? அந்தாளு ஒரு பேமானிப்பயலாச்சே....! ஏற்கனவே நாலஞ்சு எடத்துல இப்டி இருந்திட்டுத்தான இங்க வந்திருக்கான்...எப்டி? சரியா விசாரிக்கலயா...? அவனக் கௌப்புறது கஷ்டமாச்சேங்க....! படு பேத்து மாத்துப் பண்றவனாச்சே...? – ஆள் ரொம்பப் பிரபலம் என்று புரிந்தது.

      மேலும் அவன் இப்படிச் சொன்னது எனக்குள் வயிற்றைக் கலக்கியது. ஐயோ பாவம்...மாசிலாமணி இதிலிருந்து எப்படி மீளப் போகிறார்? உள்ளுக்குள் பதட்டமாய்க் கேள்வி எழுந்தாலும் மனதின் ஒரு மூலையில் ஏதோ ஒரு சிறு மகிழ்ச்சி....

      பையன் காது குத்து ஃபங்ஷன்போது ஒரு நாளைக்கு அந்த மாடியக் கொடுங்க...விருந்தாளிங்கல்லாம் நிறைய வந்திட்டாங்க...ஒரு நைட்டு படுத்திருந்திட்டுப் போயிடுவாங்கன்னு கேட்டேன். அந்தாளு காது கொடுத்தாரா?  ஏகப்பட்ட சாமான் கெடக்கு....ஃபேன் சுத்தாது....பாத்ரூம் கொழா சரியில்ல, சுத்தம் பண்ணனும்... அது இதுன்னு என்னெல்லாம் சாக்குச் சொன்னாரு? ....வேணும்...நல்லா வேணும்.... - மனம் ஓலமிட்டது. 

      இரவு படுக்கையைப் போட்டபோதும் இதே சிந்தனை. தேவையில்லாமல் நான் ஏன் இதை அலட்டிக் கொள்ள வேண்டும். அது அவர் பாடு. நிம்மதியாய்த் தூங்கமாட்டாமல்? என்று எண்ணியவாறே புரண்டு கொண்டிருந்தேன்.

கண்ணயரும்முன் ஒரு யோசனை பளிச்சென்று தோன்றியது. அதே சமயம் அது சாத்தியமா என்றும் ஒரு எண்ணம் வந்தது.

      காலையில் எழுந்ததும் முதலில் அந்த யோசனையை கிரிஜாவிடம் சொன்னேன். கேட்டவுடன் அதிர்ந்தாள். இதென்ன அநியாயமாயிருக்கு...? வாடகை தராட்டாலும் காலி பண்ணுன்னு சொன்னாக் கூடப் பரவால்ல....கொஞ்சம் பணத்தையும் கொடுத்து அவன வெளியேத்தணும்ங்கிறது எப்படிச் சரியா இருக்க முடியும்? அவனுக்குப் பயந்து இதைச் செய்றாப்ல ஆயிடுமே...? பத்தாதுன்னு தலைல ஏறி உட்கார்ந்தான்னா....?

      சரி, தவறெல்லாம் இந்தக் காலத்துல பார்க்கக் கூடாது...ஆளக் கௌப்பணும்னா இதுதான் வழி. அவனாக் காலி பண்ணினாலும் இனிமே மீதமிருக்கிற மாசத்துக்கு அவன் வாடகை எதுவும் தரப் போறதில்ல...அதத் தெரிஞ்சிக்கோ...கையை விரிச்சிட்டுத்தான் போவான்...ஆனா அது எப்போங்கிறது யாருக்கும் தெரியாது. அதுவரைக்கும் விட்டு வைக்கவும் முடியாது. அதனால உடனடியா இது நடக்கணும்னா நான் சொன்னதுதான் வழி...ஆறு மாச வாடகையை அல்லது ஒரு இருபதாயிரமோ இருபத்தஞ்சாயிரமோ அந்தாள் கைல திணிச்சி, அப்பா...சாமி..போயிட்டுவான்னா ஒரு வேளை நகரலாம்......அதை சரியான ஒரு ஆளை வச்சு உட்கார்ந்து  பேசி, முடிவு பண்ணிச் செய்ய வேண்டியது அவுங்க பொறுப்பு....யோசனையா இதைச் சொல்லலாம்....இது ஒருவகையான பகடி இப்போ!

      நல்லாயிருக்கே...இதப் போயி நான் சொல்லணுமாக்கும் அவங்ககிட்ட...? ஏன் நீங்க போய்ச் சொல்றது?

      என்கிட்டதான் அவுங்க பேசவேயில்லயே...எல்லாத்தையும் உன்கிட்டதானே புலம்பிட்டுப் போனாங்க அன்னைக்கு...! என்னையும் மதிச்சுப்  பேசியிருந்தா நான் ஏதாச்சும் சொல்லியிருப்பேன்...

      நொண்டிக் கழுதைக்கு சறுக்கினது சாக்காக்கும்? நம்ப வீட்டுக்கு வந்ததே நம்பளை மதிச்சிதானே?  உங்கள மதிச்சதுனாலதான் நேரடியா உங்ககிட்டே சொல்லலை...அத முதல்ல புரிஞ்சிக்குங்க...இதுல என்னங்க இருக்கு...ஒரு உதவின்னு கேட்டு வர்றாங்க...இப்டியா எனக்கென்னன்னு இருக்கிறது? போய் உட்கார்ந்து பொறுப்பா ஏதாச்சும் நாலு வார்த்தை பேசிட்டு வாங்க...அவங்களுக்கு ஒரு சமாதானமாகவாவது இருக்கும்...ஒரு வேளை ஒத்துக்கிட்டாங்கன்னா?

      நீ நினைக்கிறமாதிரியே நான் புரிஞ்சிக்கணும்னு விதியா? ....நேரடியா என் முகத்தைப் பார்த்துச் சொன்னாத்தான் எங்கிட்ட சொன்னதா, என்னை மதிச்சு சொன்னதா நான் எடுத்துக்க முடியும்...உன் இஷ்டத்துக்கு என்ன வேணாலும் கற்பனை பண்ணிப்பே...நான் அதுக்குத் தலையாட்டணுமா...? - விடாமல் கேட்டான் சரவணன்.

      ஆனாலும் எதுத்த வீட்டுல இருக்கிறவரோட இவ்வளவு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்றது நல்லா இல்லேங்க....அவ்வளவுதான் நான் சொல்லிட்டேன்....நமக்கும் நாலு பேர் வேணும்...நாளைக்கு நமக்கும் ஒரு ஆத்திரம் அவசரம்னு வரும்...அப்போ தெரியும் அந்தக் கஷ்டம்....

      உனக்கு என்ன தெரியும் அவரப்பத்தி...! சும்மா என்னத்தையாவது சொல்லாதே...நாம இங்க வீடு கட்டுறபோதுதான் எதுத்தாப்ல அவுங்களும் கட்டிட்டிருந்தாங்க...ஒரு நாளைக்கு மட்டும் கட்டடத்துக்கு தண்ணியடிக்கறதுக்கு  மோட்டார் போட்டு உதவுங்கன்னு கேட்டேன்....அப்போ நமக்கு ஜெட்டு மோட்டார் மாட்டியாகலை.....நூத்தம்பதடி ரப்பர் பைப் வச்சிருந்தான்...ஊருக்கே இழுக்கலாம் அதை....மாட்டேன்னுட்டாரு....கரன்ட் சார்ஜ் தர்றேன்னு கூடச் சொல்லிப் பார்த்தேன்....மறுத்திட்டாரு...அதெல்லாம் மறந்திடுமா என்ன? கிரஉறப் பிரவேசத்தும்போது நுழைஞ்சவ நீ....அதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் என்ன தெரியும் உனக்கு? தெனம் வந்து கெதியாக் கிடந்தவன் நானுல்ல...?  பட்ட பாடெல்லாம் எனக்குத் தானே...! நீபாட்டுக்குப் பேசுறியே...! சும்மாக் கெட....

      அதெல்லாம் என்னைக்கோ நடந்ததுங்க.... இன்னுமா நினைச்சிட்டிருக்கிறது? அப்டி அப்டியே விடணும்ங்க....வன்மமாவா வச்சிக்கிறது மனசுல...?

      தத்திப் பித்தி எப்டி வருதுன்னுதான் கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம்டீ....அதுக்குள்ளயும் என் உசிர ஏன் நீ வாங்குற...? என்னால போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போய் நிக்க முடியாது....அதெல்லாம் என்னைப் பொறுத்தவரை கேவலம்...அவ்வளவுதான்.....!

      சொல்லிக் கொண்டிருக்கும்போதே வெளியே கார் சத்தம் கேட்டது. யார் வந்திருக்கிறது என்கிற கேள்வியோடே சட்டையை மாட்டிக் கொண்டு அவசரமாய்  வாசலுக்குப் போய் நின்றேன். மாசிலாமணியும் அவர் மனைவியும் அந்தப் பக்கத்து வீட்டுக்காரரின் காரில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

      விடுவிடுவென்று  வீதிக்கு இறங்கிய கிரிஜாவை என்னால் தடுக்க முடியவில்லை.

      எங்கே....? கேட்டபடியே நெருங்கிய அவளிடம்...போலீஸ் ஸ்டேஷனுக்குப் போறோம்...ஒரு கம்ப்ளெய்ன்ட் கொடுக்கலாம்னு....என்றார்கள் மாசிலாமணியின் மனைவி.

      சாரும் வர்றாரா....? வரச் சொல்லுங்க....- என்றார் அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்.

      ஆமாம்...ஒரு நிமிஷம் இருங்க...என்ற கிரிஜா....பின்பக்கம் திரும்பியவாறே என்னங்க....கௌம்புங்க....கூடப் போயிட்டு வாங்க....என்றாள். அந்தக் குரலில் இருந்த அதிகாரம் என்னை நிலை குலையச் செய்தது. எதுக்கு இத்தனை சத்தமாய்ச் சொல்கிறாள்?

      மறுக்க முடியாமல் செருப்பை மாட்டிக் கொண்டு வீதியில் இறங்கி, காரை நோக்கி நடந்தேன். கேட் அருகே வந்து விட்ட கிரிஜாவுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னேன்...!.

      வந்து வச்சிக்கிறேன்....!

                              -------------------------------------------------------------------

     

     

 

...

     

 

     

     

நன்னூல் பதிப்பக அதிபர் திரு. மணலி அப்துல் காதர் அவர்கள்

 அன்பிற்கும் பண்பிற்கும் பெருமைக்குமுரிய...விரிந்த தளங்களைக் கொண்ட...என் எழுத்துக்களை நூலாக்கி தொடர்ந்து ஆதரவு நல்கும் மதிப்பிற்குரிய சகோதரர் நன்னூல் பதிப்பக அதிபர் திரு. மணலி அப்துல் காதர் அவர்களின் அனைத்து முயற்சிகளும் பெரு வெற்றி கொள்ளட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நின்று வாழ்த்துகிறேன்.


மகாநடிகன்-சிறுகதை - வாசகசாலை இணைய இதழ் - 15.01.2023

 

சிறுகதை                                     ”மகா ந டி க ன்”                                                             ------------------------------             



      ஞ்சித்குமாருக்கு மனது ஒன்றவில்லை. வந்ததிலிருந்து தான் அங்கும் நடித்துக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது. அவனுடைய சிரிப்பும், பேச்சும் அவனுக்கே செயற்கையாய் இருந்தது. கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறுகிறோமோ என்று கூடத் தோன்றியது. தனது ஒவ்வொரு பதில் கண்டும் ஊடகவியலாளர் தொடர் கேள்வி கேட்கத் தயங்குவதிலிருந்து அது புரிந்தது.

      ஒன்றிலிருந்து ஒன்று பிறப்பதாகத்தான் பேட்டி அமைய வேண்டும். அதுதான் உண்மையான பேட்டிக்கு அழகு. அம்மாதிரியான கேள்விகளைக் கேட்பதும், அதற்கான தகுதியோடிருப்பதும் பேட்டியாளரின் சாமர்த்தியம். அதற்கு எவ்விதத் தயக்கமும் இல்லாமல் பேட்டி கொடுப்பவரின் பதில்கள் தெளிவாக அமைவது அதைவிடச் சாமர்த்தியம். ஆனால் ஒன்று அம்மாதிரிக் கேள்விகளும், பதில் வருவதின் எதிர்வினையான குறுக்குக் கேள்விகளும் அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும்தான் பொருந்தும். தனக்கு அந்த முறையைக் கடைப்பிடித்தால் பேட்டி எடுப்பவர் அத்தனை சிரமப்பட வேண்டியதில்லைதான். ஆனாலும் அதற்கும் ஒரு பயிற்சி வேண்டும்தான்.

      அல்லாமல் இம்மாதிரியான கேள்விகள்தான் கேட்கப்படும் என்று முன்னரே அறிவித்து, அவற்றை அப்பொழுதுதான் கேட்பதுபோல் கேட்டாலும் பார்வையாளர்களுக்கு அது வெட்ட வெளிச்சமாகி விடும் வாய்ப்பு உண்டு. தயாரிக்கப்பட்டவையில் ஒன்றுக்கொன்றான தொடர்பு பெரும்பாலும் இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் அது பேட்டி கொடுப்பவரை திருப்தி செய்யும் கேள்விகளாகவே அமையக் கூடும் அபாயம் உண்டு.

      எப்படி இருந்தால்தான் என்ன? இது தேவையா? என்று ஆரம்பத்திலேயே மனதுக்குத் தோன்றிவிட்டது ரஞ்சித்திற்கு. ஆனாலும் மறுக்க முடியவில்லை. மறுத்தால் ஊடகங்களின் ஆதரவு கிடைக்காது. குறிப்பாக ஒதுக்கப்படும் அபாயமுண்டு. அதனால் தன் தொழில் படிப்படியாகப் பாதிக்கப்படும். இதுதான் பிழைப்பு என்று வந்தாயிற்று. வாழ்க்கைக்கு ஆதாரமே இனி இவைதான் என்று காலம் கவனமாய்க் கழிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து பிறழ்ந்து விடக் கூடாது. தொழிலைக் கெடுத்துக் கொண்டதுபோல் ஆகிவிடக் கூடாது.

      யோசனையிலேயேதான் உட்கார்ந்திருக்கிறான். உடம்பு சரியில்லையா சார் என்று கரிசனையோடு கேட்கிறார் பேட்டியாளர். அதெல்லாம் ஒண்ணுமில்ல….என்கிறான் இவன். அப்போது காமிரா வேறு திசையில்.

      மனசுதான் சரியில்லை….என்று சொல்லலாம்தான். சொன்னால், ஏன்…என்னாச்சு? என்று அடுத்த கேள்வி வரும். பின் அதற்குப் பதில் சொல்ல வேணும். அந்த பதிலை அங்கு சொல்ல முடியாது. அது மனதுக்குள் தனக்கு மட்டுமே சொல்லிக் கொள்ளும் பதில். வெளியே சொன்னால் விபரீதம்தான். அப்படிச் சொல்வதற்கு இங்கே வந்திருக்கவே வேண்டாமே என்று ஆகி விடும். வந்த இடத்திலும் போலியாய்த்தான் உட்கார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் யதார்த்தமாய் இருப்பதுபோல் காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்களும் நானும் ஒண்ணுதான் என்பதைப்போல. அதுவே நடிப்புதான் என்று தோன்றுகிறது. மனதுக்கு நியாயமில்லை. அப்பொழுது அது நடிப்புதானே என்று நினைத்துக் கொள்கிறான்.

      இன்று ஏதோ கொஞ்சம் காசு சேர்ந்து விட்டது என்பதற்காக, காரில் வந்து போகிறோம் என்பதற்காக அவர்களை விட உசத்தி என்று ஆகி விடுமா? காசு சேர்ந்தால் உசத்தியா? கல்வியும், கேள்வியும்தானே செல்வங்கள்? அறிவு மெய்ப்படுவதுதானே வெளிச்சம். அதுதானே அழியாச் செல்வம்? என்னவோ வாழ்வாதாரம் கொஞ்சம் தாராளம் என்றால் எல்லாத்தரமும் உயர்ந்து விட்டது என்ற பொருளா?

      வேகத்தடை படத்துல அசுர வேகத்தைக் காண்பிச்சிருக்கீங்களே…? கேள்வி வந்து விழுந்தது அரங்கில். யார் கேட்டது என்று பார்த்தான். எதிரே இருந்த கூட்டத்தில் மேல் வரிசையில் ஒரு பையன் கையைத் தூக்கினான்.

      அது காமிராமேனோட, எடிட்டரோட திறமைங்க….சொல்லத்தான் நினைத்தான். வாய் நுனிவரை வந்து விட்டது. சொல்லாமல் நிறுத்தினான். பொய்மை தடுக்கிறது. மனசாட்சி நிறுத்துகிறது. சொல்லாதே…!

      டைரக்டரோட எதிர்பார்ப்பு அதுதானே…அதைப் பூர்த்தி செய்தாகணுமில்லையா? அதைவிட நீங்களெல்லாரும் அப்டித்தானே விரும்புறீங்க….உங்க விருப்பம்தான் என் விருப்பம். அதாவது உங்கள் விருப்பத்தைப் புரிந்து கொண்டு உங்கள் நேரத்தை, பணத்தை நீங்கள் மயங்கிய வேளையிலே பிடுங்கி, நான் என்னை உயர்த்திக் கொள்வது. உங்களை ஏமாற்றி நிற்பது…

      சொல்லி முடித்ததும், கையொலி  அரங்கத்தைப் பிளந்தது. உறாய்ய்ய்ய்…என்று பலரும் இருக்கையிலிருந்து எழுந்து குதித்தார்கள்.

      ரஞ்சித், பார்த்துங்க…விழுந்துடப் போறீங்க…என்று இங்கிருந்து கத்தினான். உண்மையான கரிசனத்தில் வந்த வார்த்தைகள் அவை.

      உண்மையிலேயே அந்த ஷாட் மெல்ல எடுத்ததுதான். ஆனால் அதற்கு முதல் காட்சியின் தொடர்ச்சியாக அந்த சீனில் அப்படி வந்துதான் குதித்தாக வேண்டும். அது தொழில் நுட்பக் கலைஞர்களின் கை வண்ணம். அது தன்னை உயரத்தில் கொண்டு வைக்கிறது.

      முத முதல்ல உறீரோயினை நீங்க சந்திக்கிற எடத்துல ஒரு மாதிரி உதட்டை மடக்கி நாக்கைச் சுழட்டுவீங்களே? அதக் கொஞ்சம் செய்து காண்பீங்களேன்….? யாரோ ஒரு பெண் ரசிகை கேட்டது. உடனே உற்உறா….என்று சத்தமெழுந்தது. ரஞ்சித்திற்கு வெட்கமாக இருந்தது. இதையெல்லாம் எதற்குக் கேட்கிறார்கள் என்று தோன்றியது. அது ஏதோ அந்த நேரத்திய காட்சிக்காக தான் செய்தது. அதையே நாலு படத்தில் செய்தால் அதுவும் அலுத்து விடும். பிறகு வேறு என்னமாதிரி செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். இதைக் கண்டு மயங்கியது போல் பேசுகிறதே இந்தப் பெண். பெற்றோர்கள் இது இப்படி இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் வயிற்றெரிச்சல் கொள்ள மாட்டார்களா? இதற்காகவா பெற்றோம் என்று நினைக்க மாட்டார்களா? இந்தப் பெண்ணைப் படிக்க பட்டணம் அனுப்பியது இந்தக் கண்றாவிக்காகவா என்று வேதனையடையமாட்டார்களா? அசட்டுப் பிசட்டு என்று இதென்ன கேள்வி?

      தன்னையே நான் காதலிப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுமோ? கைக்கிளையாக நினைத்துக் கொண்டிருக்குமோ? இப்படி எதையாவது நினைத்துக் கொண்டு, மயங்கிச் சரிந்து கொண்டிருந்தால் இதன் படிப்பு என்னாவது? பெற்றோர்கள் இதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை என்னாவது? நான் ஏற்கனவே  கல்யாணமானவன் என்பதாவது இதற்குத் தெரியுமா?யார் யாரையோ காதலிப்பது போல் படங்களில் நடிக்கும் நான் உண்மை வாழ்க்கையில் ஒரு மனைவியை அரணாகக் கொண்டிருப்பவன் என்பதாவது இதற்குப் புரியுமா? சத்தியமாக அவளுக்குத் துரோகம் செய்யாதவன் என்ற நேர்மை அறியுமா?

      இதை நினைத்தபோது இதே மாதிரி கடந்த தீபாவளிக்கு நடந்த இன்னொரு பேட்டியின் போது வேறொரு ரசிகை தன்னுடன் கை கோர்த்து ஆடியதும், மயங்கியதுபோல் நழுவி தன் மேல் வேண்டுமென்றே விழுந்ததும், தவிர்க்க முடியாமல் தான் அதைப் பிடித்துக் கீழே படுக்க வைத்ததும், அதைத் தொலைக்காட்சியில் நேரடியாகப் பார்த்துவிட்டு தன் மனைவி உண்மைலயே அந்தப் பொண்ணு மயங்கிருச்சா? இல்ல பாவலாவா என்று கேட்டதும், ச்சே…நா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல்ருக்கே….என்று சற்றுக் கலங்கிப் போனதும்….இப்போது அந்த மாதிரி ஏதும் நடந்து விட இடம்கொடுக்கக் கூடாது என்று ரஞ்சித்தின் மனம் அந்தக் கணத்தில் சுதாரித்தது. வெறுமே படத்தில் உதட்டைச் சுழித்ததற்கே இப்படியென்றால் நேரில் ஏதாவது அதீதமாக சேஷ்டைகள் செய்தால் எல்கை மீறி விடும் போலிருக்கிறதே….!

      அந்தக் காலத்திலும் நடிகர் நடிகைகளை ரசிகர்கள் விரும்பினார்கள்தான். ஆனால் இந்த அளவுக்கா? வெறியர்களாயிருந்தார்கள். அது அவர்களின் நடிப்பிற்காகவும், ஏற்றுக் கொண்ட பாத்திரங்களின் வாயிலாக அவர்களுக்கு ஏற்பட்டிருந்த இமேஜ் காரணமாகவும்தான். ஆனால் சொந்த வாழ்க்கையைச் சிதைத்துக் கொள்ளும் அளவுக்கு இப்படியா? இதனால் இந்த சமூகத்தில் எப்படிப்பட்ட பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளனவே? ஏன் வெறும் சினிமா என்று பார்க்க மாட்டேன் என்கிறார்கள்? வாசலோடு விட்டுவிட்டுப் போக வேண்டியதுதானே? அப்படியென்ன தேசத் தொண்டா ஆற்றுகிறார்கள் இங்கே? கச்சா பிலிமைப் புகைப்படங்கள் ஆக்குவதன் மூலமாக , டிஜிட்டலில் கேளிக்கை ஆக்குவதன் மூலமாக ஒரு வகையான வியாபாரம்தானே செய்கிறார்கள்? இதைப் போய் இத்தனை சீரியசாய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லையே? ஏன் இந்த இழிநிலை?

      நடிப்பு என்கிற தொழிலில் இப்படியெல்லாம் எதையாவது புதுசு புதுசாகச் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. அது இவர்களுக்குப் பிடித்ததாக ஆகி விடுகிறது. அதனால் தன் பிழைப்பில் மெருகு கூடுகிறது. இன்னும் கொஞ்ச காலம் தள்ளலாம்தான். ஓடுற மட்டும் ஓடட்டும். பிறகு பார்த்துக்கலாம்.

      உள் மனதுக்குள் இப்படியான எண்ணங்கள்தான் இருக்கின்றன. எதற்காக இப்படி வந்து பழி கிடக்கிறார்கள்? இவர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா? அவரவர் வீடுகளுக்கு என்று செய்ய வேண்டிய காரியங்களே இருக்காதா? அவரவர் கல்வி, வேலை என்று எதுவும் கிடையாதா? வேலை வெட்டி என்று எதுவுமில்லையாயினும், பொழுதை இப்படியா போக்க வேண்டும்? என் தொழில் இது, நான் பார்க்கிறேன். அதுபோல் அவர்கள் தொழிலை அவர்கள் பார்க்க வேண்டாமா?

      எங்க தொழிலே இன்னைக்கு உங்களை நேர்ல பார்க்கிறதுதான் சார்…

      அடக் கடவுளே…! ஏன்யா உங்க பொன்னான நேரத்தை இப்டி வேஸ்ட் பண்ணிட்டு இங்க வந்து இப்டி உட்கார்ந்து கிடக்கீங்க? இப்டியெல்லாம் நேரத்தை ஒதுக்கிட்டு வந்து ஒரு சினிமா நடிகனைப் பார்க்கிறதும், அவனோட பேசணும்னு ஆசைப்படுறதும், உங்களுக்கு வெட்கமா இல்லையா? இது என் தொழில், நான் பார்க்கிறேன்…அதுபோல் உங்க பிழைப்பை நீங்க பாருங்க…ஏன் உங்க காலத்தை விரயம் பண்ணுறீங்க…?

      இதை நினைத்தபோது இவனுக்கே சுருக்கென்றது. உன்னை யாரு இந்த டி.வி. நிகழ்ச்சிக்கு வரச் சொன்னது? என்னால முடியாது. நான் நடிகன். நடிக்கிறேன். படங்களைப் பார்க்கிறது மக்களோட பொழுதுபோக்கு. அதோட முடிஞ்ச போச்சு…அப்புறம் அவுங்கவுங்க சொந்த வேலையைப் பார்க்க வேண்டிதானே…எதுக்காக என்னைப் பார்க்க இங்க வரணும்? டி.வி.க்காரன் கூப்டபோதே நான் வரலைன்னு சொல்லியிருக்கணும்…ஏதோ வந்திட்டேன். இனிமே இப்டி வரமாட்டேன்…இதுதான் கடைசி….ரசிகர்கள்ங்கிற பேர்ல மக்களை, இளைஞர்களை ஏமாத்த நான் தயாரில்லை.

      பார்த்திட்டீங்கல்ல…போயிட்டு வாங்க…என்று சொல்லி எழுந்து விடலாமா என்று தோன்றியது ரஞ்சித்திற்கு. தொலைக்காட்சிகளுக்கு அவர்கள் பிழைப்பு ஓடியாக வேண்டும். இப்படி ஏதாவது வருஷத்திற்கும் செய்து கொண்டிருந்தால்தான் ஆயிற்று. அதற்கு நம்மையும் டிஸ்டர்ப் பண்ணுகிறார்கள். சும்மா இருக்க விட மாட்டேன் என்கிறார்கள். பிழைப்பிற்கு நடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அக்கடா என்று கிடப்போம் என்றால் விடுவதில்லை.

      சிறு வயதில் ஊரை விட்டு ஓடி வந்ததே நடிப்பதற்காகத்தான். ஊரில் இருந்த காலத்திலேயே நடிகனை ஓடிப் போய்ப் பார்ப்பது என்பது பிடிக்காது. ஆனாலும் நாமும் நடிகன் ஆக வேண்டும் என்கிற ஆசை மட்டும் மனதில் ஏனோ கொழுந்து விட்டு எறிந்துகொண்டேயிருந்தது. வந்து, நாய் பட்ட பாடு பட்டு எப்படியோ தப்பிக் கிப்பி நடிகனாகியாயிற்று. அத்தோடு விடுகிறார்களா? ரசிகர் மன்றம் வைக்கவா என்று வந்து நிற்கிறாரகள். தயவுசெய்து இதை மட்டும் கேட்காதீர்கள் என்று சொல்லியாயிற்று. எப்படித்தான் அந்தத் துணிச்சல் வந்ததோ? ரசிகர்கள்தாங்க உங்களை ஃபீல்டுல நிறுத்துறவங்க….அவுங்க இல்லன்னா நீங்க இல்ல….அவுங்கள வச்சிதான் நீங்க…ரசிகர் மன்றம் இருந்தாத்தான் ஊருக்கு ஊர் உங்க கட் அவுட்டுக்கு மாலை போட்டு, பாலாபிஷேகம் பண்ணி, கொடி, தோரணம் கட்டி, ஒண்ணுமில்லாத குப்பைப் படத்தக் கூட என்னவோ இருக்கு போலிருக்குங்கிற மாதிரி ஓட வச்சு, ஆளுகளத் தியேட்டருக்கு இழுத்திடுவாங்க…அடிச்சுப் பிடிச்சு அவுங்களோட முயற்சியினாலதான் வசூலாகும் படம். உங்க மார்க்கெட்டும் டவுனாகாம நட்டமா நிக்கும்….

      எல்லாஞ் சரிதான். என்னவோ என் மனசாட்சி ஒத்துக்கலை…யோசிப்போம்….. – சொல்லி அனுப்பியவன்தானே…..பிறகு யாரும் வரவில்லையே….படங்கள் நல்ல தரமாய்த் தானாகவே அமைந்து விடுகின்றன. அதனால் பிழைத்துக் கொண்டிருக்கிறது. தான் செய்தது சரியா, தவறா?

      தரமாய்த்தான் அமைந்து விடுகின்றனவா அல்லது என்னவோ ஒரு நேரத்திற்கு ஓடிக் கொண்டிருக்கின்றனவா? அந்தக் காலத்தில் ஊரில் அப்பாவிடம் அடி வாங்கிக் கொண்டேனும் திருட்டுத்தனமாய் விடாமல் ரெண்டாம் ஆட்டம் சினிமா போய்விட்டு வந்து படுத்துக் கொண்டு அந்த ராத்திரி ரெண்டு மணியிலும் கூடத் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு பார்த்த சினிமாவைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தோமே, அந்த மாதிரித் தூங்க விடாமல் தொந்தரவு செய்த படங்களா இன்றைய படங்கள்? அப்படிப் படங்களா என்னுடைய படங்கள்?

      மனிதச் சிந்தனையை, அவனுடைய குணாதிசயங்களை, ஒழுக்கத்தை, பண்பாட்டை மேன்மைப் படுத்தும் திரைப்படங்களாகவல்லவா அன்று வந்து கொண்டிருந்தன? தான் இது வரை அப்படி ஒரு படத்திலாவது நடித்திருக்கிறோமா? எந்தத் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு மனசைப் படாத பாடு படுத்தியதோ அதே மாதிரித் திரைப்படங்கள் ஒன்றாவது இன்று வருகின்றனவா? தான் இத்தனை புகழ் பெற்ற பின்பும் அம்மாதிரி ஒரு படத்திலாவது நடித்தாக வேண்டும் என்ற துணிச்சல் தனக்கு வருகிறதா? இன்று வரை தன் விருப்பத்திற்கு ஒரு படத்திலாவது நடித்திருக்கிறோமா?

      என்ன எக்ஸ்பிரஷன் காண்பிக்கிறேன் என்று என் படத்தை இப்படிப் பார்க்கிறார்கள்? எந்தக் காட்சியில் தத்ருபமாக நடித்திருக்கிறேன் என்று இப்படிப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்? இந்த சமுதாயத்திற்கான என்ன செய்தியை என் படங்கள் சொல்லுகின்றன என்று இப்படி ஓட வைக்கிறார்கள்? இன்னும் பத்து வருஷத்திற்கு நான் ஃபீல்டில் தாங்க வேண்டும் என்பது போலல்லவா வசூலை அள்ளிக் கொட்டுகிறார்கள்?

      நன்றாக மனசாட்சிப்படி யோசித்தால் இது இந்த சமூகத்திற்குச் செய்யும் பெரிய துரோகமல்லவா? திரைப்படம் என்பது இந்த மக்களிடம் எத்தனை எளிதாகப் போய்ச் சேரும் ஊடகம்? அவர்கள் மனதில் எத்தனை மகிழ்ச்சியாய் இடம் பிடிக்கும் ஒரு கருவி? அதை இப்படிக் கன்னா பின்னாவென்று பயன்படுத்தலாமா? எனக்குத் தொழில்தான் அது. ஆனாலும் அதிலும் கொஞ்சமேனும் ஒரு தொண்டு மனப்பான்மை வேண்டாமா? இப்படியா இளைய சமுதாயமும், சமூகமும், எண்ணங்களாலும், சிந்தனைகளாலும், கெடுவதற்கு வழி வகுப்பது?

      அவனவன் பாட்டை அவனவன்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். யார் இவர்களை வந்து பார்க்கச் சொன்னார்கள்? குப்பையாய்த்தான் படம் எடுக்கிறார்கள் என்று வராமல் இருக்க வேண்டிதானே? வந்து, காசையும் வீணாக்கி, நேரத்தையும் வீணாக்கி, உடலையும் கெடுத்துக் கொண்டு, எதற்காக இப்படி ஒரு நஷ்டத்தை வலிய எதிர் கொள்ள வேண்டும். குப்பையை எடுத்தால் பார்க்க மாட்டோம் என்று ஒட்டு மொத்தமாய் ஒதுக்கினால் எல்லாம் மாறிப் போகிறது. அப்பொழுதாவது என்னை வைத்து கொஞ்சம் நல்ல படமாய் எடுப்பார்கள் இல்லையா? நானும் என் ஆழ்மனதில் உள்ள ஆசைப்படி நடிக்க வந்ததின் அர்த்தத்தை நிலை நிறுத்தலாமில்லையா?

      இப்படி டி.வி. பேட்டி, பத்திரிகைப் பேட்டி, என்று என் நேரத்தையும் வீணாக்கி, அவர்கள் நேரத்தையும் வலிய வீணாக்கி இந்த சமுதாயத்தையும் அறிந்தோ அறியாமலோ கெடுத்துக் குட்டிச் சுவராக்கி ஏனிப்படி எல்லாமும் கெட்டவைகளாய் நடக்கின்றன இங்கே?

      என்று இவையெல்லாம் மாறும்? என்று மனிதர்கள் எல்லோரும் நற்சிந்தனையை மட்டும் அடிப்படையாய்க் கொண்டு வாழ்வார்கள்? என்று இந்த சமுதாயம் உருப்படும்?

      சார்….சார்…ரஞ்சித் சார்…..என்னாச்சு இன்னைக்கு உங்களுக்கு…முடிச்சிக்குவோம் சார்…வேறொரு நாளைக்குப் பார்த்துக்குவோம்…காமிரா சுற்றியுள்ள மேடையின் அமைப்பை படிப்படியாகக் காட்டிக் கொண்டே விலகுகிறது.

               ஏதோவொரு வகையில் தனது எதிர்ப்பை மௌனமாகவேனும் மனசளவிலேயும் பதிவு செய்து விட்டதான திருப்தியில் மெல்லிய புன்னகையோடு ஸாரி….என்றவாறே இருக்கையிலிருந்து எழுகிறான் ரஞ்சித்.

      ரசிகர்கள் கூட்டம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. லைவ் ரிலேயாகத் துவங்கிய நிகழ்ச்சி சட்டென்று மாற அவனது அப்போதைய வெளியீடான திரைப்படத்தின் ஒரு பாடலோடு  காட்சியாய் விரிகிறது.        -------------------------------------

 

 

      உஷாதீபன்                                                                             எஸ்2-இரண்டாம் தளம், ப்ளாட் எண்.171, 172                                         ராம் நகர் (தெற்கு) 12வது  பிரதான சாலை,                                   மேத்தாஸ் அக்சயம், ஸ்ருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில்       ,                    மடிப்பாக்கம், சென்னை-600 091.                                                    செல்-9442684188                                                                   ----------------------------------------------------------------                    

02 ஜனவரி 2023

“காலத்தால் அழியாத கலைஞர்கள்” -சினிமா நகைச்சுவைக் கலைஞர்கள் கட்டுரை-ஜனவரி2023 சென்னை புத்தகக் கண்காட்சி வெளியீடு




 



புத்தகம்-2 “காலத்தால் அழியாத கலைஞர்கள்”
---------------------------------பொருளடக்கம்
--------------------ஜனவரி 2023 சென்னை புத்தகக் கண்காட்சி
1) ஐயா தெரியாதய்யா...ராமாராவ்.... வெளியீடு
2 ) என்னத்த கன்னையா ---------------------------------------------------------
3) ஏ.கருணாநிதி
4) கே.சாய்ராம்
5) காகா ராதாகிருஷ்ணன்
6) காளி என்.ரத்னம்
7) கே.சாரங்கபாணி
😎 குலதெய்வம் ராஜகோபால்
9) டி.ஆர்.ராமச்சந்திரன்
10) கள்ளபார்ட் நடராஜன்
11) எம்.என்.ராஜம்
12) டி.ஆர்.ராஜகுமாரி
13) டி.எஸ்.துரைராஜ்
14) நடிப்புச் சுரங்கம் நாகேஷ்
15) வி.கே.ராமசாமி
16) டி.எஸ்.பாலையா

என்னுரை

 (காலத்தால் அழியாத கலைஞர்கள்-கட்டுரைத் தொகுப்பு)

       டந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கும் “பேசும் புதிய சக்தி” என்ற தரமான  இலக்கிய மாத இதழில் இச் சினிமாக் கட்டுரைகளை எழுதியபோது எனக்குள் ஒரு புதிய உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

         தமிழ்த் திரையுலகில் குணச் சித்திரப் பாத்திரங்களை ஏற்று திறம்பட நடித்துப் புகழ் பெற்ற முதன்மையான கலைஞர்களைப் பற்றி ஏற்கனவே நான் “காட்சிப் பிழை” என்கிற சினிமா ஆய்விதழில் தொடர் கட்டுரைகள் எழுதி அது “நின்று ஒளிரும் சுடர்கள்” என்கிற தலைப்பிலே புத்தகமாக வந்து சிறப்புப் பெற்றது. அது ஒரு புகழ் பெற்ற நூல் என்பதற்கு அதன் அடுத்த பதிப்புகளே சான்று என்று கொள்ளலாம்.

 எந்தவொரு நடிகர் திறமையான நகைச்சுவைக் கலைஞராக விளங்குகிறாரோ அவர்கள் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் சிறந்து விளங்குவர். ஏன்…வில்லன் கதா பாத்திரங்களையும் அவர்களால் திறம்படச் செய்து புகழ் பெற முடியும். நகைச்சுவை என்பது எல்லோருக்கும் அப்படிச் சுலபமாகக் கைவந்து விடும் கலை அல்ல. ஒருவரின் இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு கலந்திருக்க வேண்டும். துன்பத்திலும் சிரிக்கும் தன்மை வேண்டும். சோகங்களை உள்ளடக்கும் திறன் வேண்டும். அவைதான் ஒரு கலைஞனை உருவாக்கும் குணச்சித்திரங்கள். உடம்பிலுள்ள எல்லா பாகங்களும் நடிக்கும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். அங்க அசைவுகள் கூட பார்ப்போருக்கு அடக்க முடியாத சிரிப்பை உண்டாக்குவதாக  இருக்க வேண்டும். நினைத்து நினைத்து சிரிக்கும் உணர்வை உண்டாக்க வேண்டும்.

          ஒரு நகைச்சுவைக் கலைஞனின் கண், வாய், மூக்கு, செவி, கைகள், கால்கள், தலை, குரல், சதை  அதன் அசைவுகள் மென்மை, கூர்மை இப்படி அனைத்து உடல் மொழியும், மனமொழியும் கலந்துதான் ஒரு கதாபாத்திரத்தை உச்சத்திற்குக் கொண்டு நிறுத்தமுடியும். மற்றெல்லாவற்றிலும் நகைச்சுவை நடிப்பு என்பதே கடினமானது என்று கூடச் சொல்லலாம்.

          அம்மாதிரியான மேன்மையான பயிற்சியில் திளைத்தவர்கள் தமிழ்த் திரையுலகில் அநேகர். அவர்களின் நாடக அனுபவங்கள் அங்கே பெற்ற கடினமான பயிற்சிகள், தண்டனைகள், ஏற்புகள்,  மறுப்புகள், அவர்களின் சொந்த வாழ்க்கை அனுபவங்கள், சோகங்கள், நஷ்டங்கள், விரக்திகள்   இப்படி எல்லாமும் சேர்த்து சேகரம் ஆகி ஈடு சொல்ல முடியாத, தவிர்க்க முடியாத முக்கிய   இடத்தில் சுயம்புவாய்  உருவாகி நின்ற கலைஞர்கள் தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை நடிகர்கள்.

  அவர்கள் குணச் சித்திரக் கதா பாத்திரத்திலும் தங்களை நிரூபித்திருக்கிறார்கள். வில்லனாகவும் மிளிர்ந்திருக்கிறார்கள். பல படங்களில் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் விடாது வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்கள். படமே வெற்றியடையாதிருந்திருப்பினும் அவர்களின் நடிப்பும், காட்சிகளும் நினைவு கூறத் தக்க விதத்தில் அமைந்திருந்ததை நாம் மறந்து விட முடியாது.  குறிப்பிட்டுச் சொல்ல நாகேஷ் என்ற ஒரு கலைஞர் போதாதா?  அவருக்கு மூத்தவர்களான நடிகர்களிடமிருந்து அவர் கற்றுக் கொண்டு தேர்ந்தது எத்தனையெத்தனை? அந்த அனுபவ முதிர்ச்சியான திரைக் கலைஞர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் நினைத்து நினைத்து ரசிக்க?

            இளம் வயதிலேயே வயது முதிர்ந்த வேடங்களையும் ஏற்று அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களுக்குப் பெருமை சேர்த்து படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் விளங்கியிருக்கிறார்கள். தவிர்க்க முடியாத இடத்தில் தங்களைத் தொடர்ந்து நிலை நிறுத்திக் கொண்டு வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள்.

     அப்படியான அதி முக்கியக் கலைஞர்களைத் தேர்வு செய்து தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் இங்கே ஒரு தொகுப்பாக மலர்கிறது.  இத்தொகுப்பில் காட்சிப்பிழை இதழில் இடம் பெற்ற மூன்று கட்டுரைகளும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அவர்களைத் தவிர்த்து இப்புத்தகத்தை நிறைவு செய்து விட முடியாது என்கிற எண்ணமே இந்த முழுமைக்குக் காரணமாக அமைகிறது. அத்தோடு மூன்று பெண் கலைஞர்களின் திறமைக்குச் சான்றான பெயர் சொல்லும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் சேர்ந்து இதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்துகிறது.

      இக்கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு உதவிய பேசும் புதிய சக்தி ஆசிரியர் கவிதா ஜெயகாந்தன் அவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் என்னை உற்சாகப்படுத்தி ஊக்குவித்த அவ்விதழின் பொறுப்பாசிரியர் திரு எஸ்.செந்தில்குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

       தமிழ்த் திரையுலக மூத்த தலைமுறை ரசிகர்களும், இன்றைய இளைய தலைமுறைச் சகோதரர்களும், திரையுலக நண்பர்களும் மனமுவந்து இந்நூலை வரவேற்று ஆதரவளிப்பார்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.