02 ஜனவரி 2023

“காலத்தால் அழியாத கலைஞர்கள்” -சினிமா நகைச்சுவைக் கலைஞர்கள் கட்டுரை-ஜனவரி2023 சென்னை புத்தகக் கண்காட்சி வெளியீடு
 புத்தகம்-2 “காலத்தால் அழியாத கலைஞர்கள்”
---------------------------------பொருளடக்கம்
--------------------ஜனவரி 2023 சென்னை புத்தகக் கண்காட்சி
1) ஐயா தெரியாதய்யா...ராமாராவ்.... வெளியீடு
2 ) என்னத்த கன்னையா ---------------------------------------------------------
3) ஏ.கருணாநிதி
4) கே.சாய்ராம்
5) காகா ராதாகிருஷ்ணன்
6) காளி என்.ரத்னம்
7) கே.சாரங்கபாணி
😎 குலதெய்வம் ராஜகோபால்
9) டி.ஆர்.ராமச்சந்திரன்
10) கள்ளபார்ட் நடராஜன்
11) எம்.என்.ராஜம்
12) டி.ஆர்.ராஜகுமாரி
13) டி.எஸ்.துரைராஜ்
14) நடிப்புச் சுரங்கம் நாகேஷ்
15) வி.கே.ராமசாமி
16) டி.எஸ்.பாலையா

என்னுரை

 (காலத்தால் அழியாத கலைஞர்கள்-கட்டுரைத் தொகுப்பு)

       டந்த எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கும் “பேசும் புதிய சக்தி” என்ற தரமான  இலக்கிய மாத இதழில் இச் சினிமாக் கட்டுரைகளை எழுதியபோது எனக்குள் ஒரு புதிய உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

         தமிழ்த் திரையுலகில் குணச் சித்திரப் பாத்திரங்களை ஏற்று திறம்பட நடித்துப் புகழ் பெற்ற முதன்மையான கலைஞர்களைப் பற்றி ஏற்கனவே நான் “காட்சிப் பிழை” என்கிற சினிமா ஆய்விதழில் தொடர் கட்டுரைகள் எழுதி அது “நின்று ஒளிரும் சுடர்கள்” என்கிற தலைப்பிலே புத்தகமாக வந்து சிறப்புப் பெற்றது. அது ஒரு புகழ் பெற்ற நூல் என்பதற்கு அதன் அடுத்த பதிப்புகளே சான்று என்று கொள்ளலாம்.

 எந்தவொரு நடிகர் திறமையான நகைச்சுவைக் கலைஞராக விளங்குகிறாரோ அவர்கள் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் சிறந்து விளங்குவர். ஏன்…வில்லன் கதா பாத்திரங்களையும் அவர்களால் திறம்படச் செய்து புகழ் பெற முடியும். நகைச்சுவை என்பது எல்லோருக்கும் அப்படிச் சுலபமாகக் கைவந்து விடும் கலை அல்ல. ஒருவரின் இயல்பிலேயே நகைச்சுவை உணர்வு கலந்திருக்க வேண்டும். துன்பத்திலும் சிரிக்கும் தன்மை வேண்டும். சோகங்களை உள்ளடக்கும் திறன் வேண்டும். அவைதான் ஒரு கலைஞனை உருவாக்கும் குணச்சித்திரங்கள். உடம்பிலுள்ள எல்லா பாகங்களும் நடிக்கும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். அங்க அசைவுகள் கூட பார்ப்போருக்கு அடக்க முடியாத சிரிப்பை உண்டாக்குவதாக  இருக்க வேண்டும். நினைத்து நினைத்து சிரிக்கும் உணர்வை உண்டாக்க வேண்டும்.

          ஒரு நகைச்சுவைக் கலைஞனின் கண், வாய், மூக்கு, செவி, கைகள், கால்கள், தலை, குரல், சதை  அதன் அசைவுகள் மென்மை, கூர்மை இப்படி அனைத்து உடல் மொழியும், மனமொழியும் கலந்துதான் ஒரு கதாபாத்திரத்தை உச்சத்திற்குக் கொண்டு நிறுத்தமுடியும். மற்றெல்லாவற்றிலும் நகைச்சுவை நடிப்பு என்பதே கடினமானது என்று கூடச் சொல்லலாம்.

          அம்மாதிரியான மேன்மையான பயிற்சியில் திளைத்தவர்கள் தமிழ்த் திரையுலகில் அநேகர். அவர்களின் நாடக அனுபவங்கள் அங்கே பெற்ற கடினமான பயிற்சிகள், தண்டனைகள், ஏற்புகள்,  மறுப்புகள், அவர்களின் சொந்த வாழ்க்கை அனுபவங்கள், சோகங்கள், நஷ்டங்கள், விரக்திகள்   இப்படி எல்லாமும் சேர்த்து சேகரம் ஆகி ஈடு சொல்ல முடியாத, தவிர்க்க முடியாத முக்கிய   இடத்தில் சுயம்புவாய்  உருவாகி நின்ற கலைஞர்கள் தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை நடிகர்கள்.

  அவர்கள் குணச் சித்திரக் கதா பாத்திரத்திலும் தங்களை நிரூபித்திருக்கிறார்கள். வில்லனாகவும் மிளிர்ந்திருக்கிறார்கள். பல படங்களில் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் விடாது வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்கள். படமே வெற்றியடையாதிருந்திருப்பினும் அவர்களின் நடிப்பும், காட்சிகளும் நினைவு கூறத் தக்க விதத்தில் அமைந்திருந்ததை நாம் மறந்து விட முடியாது.  குறிப்பிட்டுச் சொல்ல நாகேஷ் என்ற ஒரு கலைஞர் போதாதா?  அவருக்கு மூத்தவர்களான நடிகர்களிடமிருந்து அவர் கற்றுக் கொண்டு தேர்ந்தது எத்தனையெத்தனை? அந்த அனுபவ முதிர்ச்சியான திரைக் கலைஞர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் நினைத்து நினைத்து ரசிக்க?

            இளம் வயதிலேயே வயது முதிர்ந்த வேடங்களையும் ஏற்று அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களுக்குப் பெருமை சேர்த்து படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாய் விளங்கியிருக்கிறார்கள். தவிர்க்க முடியாத இடத்தில் தங்களைத் தொடர்ந்து நிலை நிறுத்திக் கொண்டு வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார்கள்.

     அப்படியான அதி முக்கியக் கலைஞர்களைத் தேர்வு செய்து தொடர்ந்து எழுதிய கட்டுரைகள் இங்கே ஒரு தொகுப்பாக மலர்கிறது.  இத்தொகுப்பில் காட்சிப்பிழை இதழில் இடம் பெற்ற மூன்று கட்டுரைகளும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அவர்களைத் தவிர்த்து இப்புத்தகத்தை நிறைவு செய்து விட முடியாது என்கிற எண்ணமே இந்த முழுமைக்குக் காரணமாக அமைகிறது. அத்தோடு மூன்று பெண் கலைஞர்களின் திறமைக்குச் சான்றான பெயர் சொல்லும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் சேர்ந்து இதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்துகிறது.

      இக்கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு உதவிய பேசும் புதிய சக்தி ஆசிரியர் கவிதா ஜெயகாந்தன் அவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் என்னை உற்சாகப்படுத்தி ஊக்குவித்த அவ்விதழின் பொறுப்பாசிரியர் திரு எஸ்.செந்தில்குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

       தமிழ்த் திரையுலக மூத்த தலைமுறை ரசிகர்களும், இன்றைய இளைய தலைமுறைச் சகோதரர்களும், திரையுலக நண்பர்களும் மனமுவந்து இந்நூலை வரவேற்று ஆதரவளிப்பார்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.

                                                       

கருத்துகள் இல்லை: