சிறுகதை “பேப்பர் பையன்”
பெல் அடிக்கலாமேப்பா…? – சங்கடத்தோடுதான்
கேட்டேன் அவனிடம்.
அடிச்சேன் சார்….யாரும் கதவைத் திறக்கலை-
என் முகத்தைப் பார்க்கத் தயங்கியவனாக அவன் சொன்னான். சொன்ன விதம் அது பொய்யில்லை என்பதை
உணர்த்தியது எனக்கு.
உடனே திறக்காட்டி என்ன…திரும்ப
ரெண்டுதரம் அடிக்க வேண்டிதானே? இல்லன்னா கதவைத் தட்டவேண்டிதானே…! –விருட்டுனு உடனே
போயிடுவியா? விடாமல் கேட்டேன்.
இருக்கும் குளிரில் விடிந்தும் விடியாத
அந்தக் காலையில் சத்தமாய்க் கதவைத் தட்டினால், பக்கத்து வீட்டுக்காரர்கள் எழுந்து கொள்ளக்
கூடும். கதவைத் திறந்து வெளியே வந்து அந்தச் சிறுவனைத் திட்டினாலும் போச்சு….
அறிவில்ல…? எல்லாரும் தூங்கிட்டிருக்கைல
இப்டித் தட தடன்னு கதவைத் தட்டுறியே? -கண்டிப்பாய் கேட்கத்தான் செய்வார்கள். அருகருகான வீடுகளில் சுமுக உறவா இருக்கிறது? பறவைகள்
பலவிதம்…ஒவ்வொன்றும் ஒரு விதம்…!
தட்டினேன் சார்…லேசாத் தட்டுனேன். பக்கத்து வீட்டுல எழுந்துட்டாங்கன்னா? சத்தம் போடுவாங்கல்ல…?
பயமாயிருந்திச்சு சார்….
அவனின் ஜாக்கிரதை உணர்வு புரிந்தது எனக்கு.
பயமாயிருந்தது என்று வேறு சொல்கிறான்…சிறுவன்தானே…!
ரொம்பவும் பொறுப்பான பையனாய் அவனை நான்
உணர்ந்திருந்தேன். இல்லையெனில் இந்த மார்கழிக் குளிரில் இப்படிப் பறந்து பறந்து வீடு
வீடாக விடிகாலையில் ஒரு நாள் தவறாமல் பேப்பர்
போட முடியுமா? வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறான் அவன். இந்தக் காலத்திலும் இப்படியெல்லாமும்
இருக்கிறார்கள்தானே…! ஊரும் உலகமும் இன்னும் முழுதும் கெட்டுவிடவில்லைதான்.
ஆறு மணிக்கு…..தவறினால் ஆறே காலுக்கு
அல்லது தாமதமானால் ஆறரைக்கு என்று நம்பிக்கையாய்க் கதவைத் திறந்தால் கட்டாயம் கதவுக்கு
வெளியில் செய்தித்தாள் கண்டிப்பாய்க் கிடக்கும்.
நம்பிக் கதவைத் திறந்து ஒரு நாள் கூட ஏமாந்ததில்லை. அவ்வளவு சின்சியர். அதுவும்
இரண்டாவது மாடிக்கு வந்து போட்டுவிட்டுப் போகிறான். பல அடுக்ககங்களில் கீழே கார் பார்க்கிங்கிலேயே
கிடப்பதை, வீசிவிட்டுப் போவதை, நடைப் பயிற்சியின் போது தவறாது கவனித்திருக்கிறேன் நான்.
அழுத்திச் சொன்னால் ஒரு நாள் ரெண்டு நாள்
போடுவார்கள். பிறகு வழக்கம்போல் கீழேதான் எறிந்துவிட்டுப் போவார்கள். அது பத்துப் பேப்பராய்ப்
பிரிந்து பறந்து கிடக்கும். இந்தப் பையன் அப்படியில்லை. மேலும் கீழே கேட்டைச் சரியாகச்
சாத்தி, கொண்டி போட்டுவிட்டு வேறு போவான். ஒரு நாளும் திறந்து போட்டமேனிக்கு அவன் நகர்ந்து
நான் பார்த்ததில்லை. வரும், போகும் ஆளெல்லாம்
இஷ்டத்துக்குத் திறந்து போட, தெரு நாய்கள் சகஜமாக உள்ளே வந்து கூட, அங்கங்கே அசிங்கம்
பண்ணி வைக்க….ஏகப்பட்ட கூத்துக்கள் நடக்கிறது அடுக்ககங்களில்.
இவைகளாவது பரவாயில்லை. பலவிதமான டெலிவரி என்று ஆட்கள் வந்து வந்து போகிறார்கள்
தினமும். எல்லார் மனமும் ஒன்றாகவா இருக்கிறது.
ச்சே…! நம்ம பிழைப்பும் ஒரு பிழைப்பா? என்று தோன்றுமோ என்னவோ… நின்று கொண்டிருக்கும்
கார்களில் கீறலைப் போட்டுவிட்டு நகர்ந்து விடுகிறார்கள். டூ வீலர் சாவியை வைத்து அழுந்த
வளைய வளையமாய் ஒரு நீண்ட இழுப்பு ….அவனவன் விதவிதமா காருகள வச்சிக்கிட்டு என்னமா அனுபவிக்கிறானுங்க…!
நாம செத்துச் செத்துல்ல பிழைக்க வேண்டிர்க்கு…! – மனித மனங்கள் எங்கு எப்படி வேலை செய்யும்
என்று யார் கண்டது? யாரென்று குறிப்பிட்டுக் கேட்பது? இப்படி ஏராளமான அனுபவங்கள். பார்த்தால்
வயிறெரியும்…!அம்மாதிரி பிரகஸ்பதிகளுக்கு நடுவேதான் இம்மாதிரி நல்ல பசங்களும் இருக்கிறார்கள்.
உழைப்பே கதி என்று இளம் பிராயம் முதல் சம்பாதிக்க ஆரம்பித்து, வீட்டுக்கு உதவியாயும்,
படிப்புக்கு ஆதாரமாயும் சிறப்புற விளங்குகிறார்கள். இந்தப் பையன் தங்கக் கட்டி….!
என்ன பாஸ்கரன்…நல்லாயிருக்கீங்களா….நான்தான்
பேசறேன்…பத்தாவது தெரு அபார்ட்மென்ட்…செகன்ட் ஃப்ளோர்….நாளைக்கு “டெய்லி நியூஸ்“ பேப்பர்
புது வருஷக் காலண்டரோட போடுறாங்களாமே….இருபது ரூபா போட்டிருக்காங்க….எனக்கு ஒண்ணு கொடுத்து
விடுங்க…அவங்க காலண்டர் முழு விபரத்தோட இருக்கும். கண்டிப்பா எனக்கு வேணும். .வழக்கமான தமிழ் இங்கிலீஷ் பேப்பரோட இது ஒண்ணையும் சேர்த்துக்
கொடுத்து அனுப்புங்க….பையன்ட்ட பைசாவைக் கொடுத்திடுறேன்….
ஓ.கே.சார்…..கண்டிப்பா…!
சொன்னபடி டெய்லி நியூஸ் செய்தித்தாளும்,
புத்தாண்டு காலண்டரும் கிடைத்து விட்டது. மற்ற இரண்டு பேப்பர்களோடு இதுவும் கிடந்தது. சரி…பைசா…. கொடுக்க வேண்டாமா? அவன்பாட்டுக்குப்
போயிட்டானே? நாளைக்கு வாங்கிக்கலாம்னு போயிட்டானோ? எப்டி எழுப்புறதுன்னு சங்கடப்பட்டுட்டு
நகர்ந்துட்டானோ? பாவம் சின்னப் பையன்…நாமதான் அவனப் பார்த்துக் கொடுக்கணும்….
ஒரு நாளாச்சு….ரெண்டு நாளாச்சு…மூணாவது
நாளும் கடந்து போச்சு….காசு வாங்கினபாடில்ல…கொடுத்தபாடும் இல்ல….?
கண்ணுலயே ஆள் பட்டாத்தானே? வர்றதும் தெரில…பேப்பர்
போடுறதும் தெரில…மாயமா மறைஞ்சிடுறானே….! ஜிவ்வு….ஜிவ்வுன்னுல்ல பறக்கிறான்…?
சார்….ஜி.பேல அனுப்பிடுங்க……
ஜி. பே நான் வச்சிக்கலையேங்க….? பையன்ட்ட
சொல்லி அனுப்புங்க…கதவத் தட்டச் சொல்லுங்க…இல்லன்னா ரெண்டு மூணுதரம் பெல் அடிக்கச்
சொல்லுங்க…
ஓ.கே. சார்…..சொல்லிவிடுறேன்….
ரெண்டு மாடி ஏறி வந்து அல்லது லிப்டில்
வந்திறங்கி தவறாமல், சிரமம் பாராமல் வீட்டுக்
கதவருகில் கிரில்லில் செருகி விட்டுப் போகும் இந்தப் பையனுக்கு ரெண்டு நிமிஷம் நின்று
பொறுமையாக இந்தப் பிசாத்துக் காசை வாங்கிக் கொண்டு போகத் தெரியலையே? சொன்னபடி ப்ராம்ப்டாக
அந்தப் புதுவருஷக் காலண்டர் இணைப்புக் கொண்ட தினசரியைக் கொடுத்து விட்ட ஏஜென்ட்டுக்கு
அதே வேகத்தில் அதற்கான பணத்தைக் கொடுக்க வேண்டாமா? அவன் என்ன நினைப்பான் என்னைப்பற்றி…!
இந்தப் பயலால் நமக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் போலிருக்கிறதே…! பொடியன்கிறது
சரியாத்தான் இருக்கு…!
தேவையில்லாமல் இதென்ன மன உளைச்சல்? வெறும்
இருபது ரூபாய்தான். ஆனாலும் பணம் அன்பை முறிக்குமே…!
வெறும் இருபதுதானே என்று சாருக்கு ஓசியாக் கொடுத்ததா இருக்கட்டும் என்று விட்டு விடுவானா?
இப்டியே நாலு இடத்தில் விட்டால் அவன் பிழைப்பு என்னாவது?
அப்டியே மறந்திடும்னு சாரு நினைச்சிட்டாரோ…?
இல்ல பையன்ட்டக் கொடுத்து, அவன் ஆட்டையைப் போட்டுட்டானா…? – எது வேணாலும் நினைக்கலாமே…!
கரெக்டா காலண்டர் வர்ற பேப்பர் வேணும்னு கேட்டவருக்கு, சின்சியராக் காசைக் கொடுத்துவிடத்
தெரிலயே…! இந்தச் சின்னக் காச வாங்க எத்தனை
தரம் ஞாபகப் படுத்தணும் அவருக்கு…? என்னென்னவோ தோன்றியது எனக்கு.
எதற்கு அநாவசியமாய் இந்தச் சந்தேகங்கள்?
தேவையில்லாமல் நம்மால் அந்தச் சிறுவனுக்கு எதற்குக் கெட்ட பெயர்? ஓராண்டு என்பது கிடு
கிடுவென்று ஓடிப் போகிறதே? அடுத்தாண்டு இம்மாதிரிக் கேட்டால் கடைல வாங்கிக்குங்க சார்…என்று
சொன்னாலும் போச்சு…! இருந்த இடத்தில் கொண்டு
லட்டு மாதிரிக் கொடுத்ததற்கு இதுவா ரெஸ்பான்ஸ் ?
மனிதனுக்குள்ள பிரச்னைகளெல்லாம் பௌதீகத்தன்மை
வாய்ந்தவை. இந்த மனசு போட்டுப் படுத்தும் பாடிருக்கிறதே…! இதற்குப் பேர்தான் இழுத்துக்
கூட்டி அனுபவிப்பதென்பதோ? ஒரு சின்ன விஷயம்…தேவையில்லாமல்
உளட்டுகிறதே…! அநாவசிய மன உளைச்சல்…!
சர்வீசில் இருந்த காலத்திலெல்லாம் இம்மாதிரி
எந்தச் சிக்கலிலும் மாட்டாமல், எதற்கும் சபலப்படாமல் இருந்து கழித்து வெளியேறியாயிற்று. இந்த மீதி வாழ்க்கையில் இப்படியெல்லாமும் ஒன்றைச்
சந்திக்க வேண்டுமா என்ன? தேவையா மனுஷனுக்கு? சில்லுண்டிப் பிரச்னைக்கெல்லாமா மண்டையப்
பிச்சிக்கிறது?
இன்னைக்கு உனக்காக நான் இப்படிப் பழி கிடக்கலேன்னா
இன்றைக்கும் உன்கிட்டே இந்தக் காசைக் கொடுத்திருக்க முடியாது…. நல்லவேளை….நீ என் கண்ணுல
பட்டே….இந்தத் தெரு கடைசிவரைக்கும்தான் போயிருப்பே….நிச்சயம் திரும்பி வருவேன்னு கீழே வந்து நின்னி்ட்டேயிருக்கேன்
தெரியுமா? இல்லன்னா ஒரு மாசம் இழுத்திடும் போல்ருக்கு….
ஸாரி சார்…..என்னிக்காச்சும் வாங்கிக்கிடலாம்னு
போயிட்டேன் சார்…..
அவன் பதில் எனக்கு அதிர்ச்சியூட்டியது.
என்ன நினைச்சிட்டுப் பேசறான் இவன்? என்னிக்காச்சும் வாங்கிக்கிடலாம்னா என்ன அர்த்தம்?
அப்டியே முதலாளியும் மறந்திடுவாரு….மெதுவா வாங்கிக்கிட்டா….இந்த இருபது ரூபாயவா ஞாபகம்
வச்சிருக்கப் போறாருன்னு நினைச்சிட்டானோ…? பொறுப்பில்லாமப் பேசறான்…? எல்லாமும் கெடக்கட்டும்…இவன்
முதலாளி என்னைப் பத்தி என்ன நினைப்பான்?
ஒரு நாள் கூடத் தவறாமல் பேப்பரை ரெண்டாவது
மாடிக்குக் கொண்டு வந்து வாசல் கதவில் கொண்டியில் செருகி வைக்கும் அவனைச் சட்டென்று
சந்தேகப்படுகிறோமே…! இந்தப் பையனா இப்படிப் பேசுகிறான்?
என்னப்பா சொல்ற நீ? என்னைக்காச்சும் வாங்கிக்கிடலாம்னா
என்னா அர்த்தம்? இது எனக்கும் உங்க முதலாளிக்கும் இடையிலான டீல்ப்பா…? நீபாட்டுக்கு
என்னத்தவோ சொல்ற? அவரு என்னப்பத்தி என்ன நினைப்பாரு…? தப்பா நினைக்க மாட்டாரு? சொன்னபடி
காலண்டரை மறுநாளே கொடுத்தனுப்பிச்சவருக்கு அது போல பணமும் கொடுக்கணும்ல…? இஷ்டத்துக்கு
டிலே பண்ணிட்டே போனா? கால் காசானாலும் கண்ணியம் வேணும்ப்பா….நீ சின்னப்பய…உனக்கு இதெல்லாம்
எங்க தெரியப் போகுது…..! புரியாது…! இந்தா
பிடி பைசாவ…..உன் முதலாளிட்டக் கொண்டு கொடு…கணக்குத் தீர்ந்திச்சு…..புரியுதா…..மறக்காமக்
கொண்டு என் பெயரச் சொல்லிக் கொடுத்திடு….தெரிஞ்சிதா…..? – படபடவென்று பொரிந்து தள்ளினேன்
அவனிடம்.
எல்லாவற்றையும் நிதானமாய்க் கேட்டுக்
கொண்டிருந்து விட்டு கடைசியாய்ச் சொன்னான் அவன்.
அன்னைக்கே என் கைக் காசைக் கொடுத்திட்டேன் சார்……நீங்க டென்ஷனாகாதீங்க…. –லேசாகப்
புன்னகைத்தது போல்கூட இருந்தது.
என்னய்யா சொல்ற…..? நின்னு சொல்லிட்டுப்
போ..! சைக்கிளைத் திருப்பி விரட்டும் அவனை நோக்கிக் கத்தினேன் நான். சட்டென்று மனது
குன்றிப் போனது.
.பெறவு உங்ககிட்ட வாங்கிக்கிடலாமுன்னு…நானே
கொடுத்திட்டேன் சார்….ஒண்ணும் பிரச்னையில்ல…1 – பதில் வந்தது பளீரென்று. புயலாய்ப் பறந்து கொண்டிருந்தான் அவன்.
வைத்த விழி மாறாமல் அவனையே பார்த்துக்
கொண்டு நின்றேன் நான். சிறு தொகை. அதனால் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்கிற வகையில்
சிந்தித்திருப்பானோ? அவன் பெயரும் கெடாமல் அதே சமயம் என் பெயரும் கெடாமல்…காப்பாற்றி….இந்தப்
பிஞ்சு உள்ளத்தில் எந்த மாதிரிப் போற்றத்தக்க நற்சிந்தனை இது! வியப்பாயிருந்தது எனக்கு.
அவன் பொறுப்பானவன்…! என் கணிப்பு சரிதான்…?
நான் இஷ்டம்போல் நினைத்து மானாவாரியாகச் சந்தேகப்பட்டதுதான் தவறு…! -நினைத்துக் கொண்டேன்.
மனதிற்குள் அவனுக்கு என் அன்பான நன்றியைச்
சொல்லிக் கொண்டேன்.
----------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக