16 ஜனவரி 2023

சிறுகதை “அதிகாரம்” - பதாகை இணைய இதழ் (15.01.2023)

 

சிறுகதை                            “அதிகாரம்”  (15.01.2023 - இணைய இதழ்)





      நீங்க கொஞ்சம்  போய்ட்டு வரலாமே....? - கேட்கும்போதே இவன் எங்கே சரி சொல்லப் போகிறான் என்கிற சந்தேகத்தோடேயே கிரிஜா கேட்டாள். அடுப்படி நோக்கிப் போய்க் கொண்டே, திரும்பிய வாக்கில் அவள் கேட்டதே அதற்கு சாட்சி. அவனுக்கு விருப்பமில்லாததை செய்ய வைக்க முடியாது என்பது அவளுக்குத் தெரியும். அதைச் சொல்லிப் புண்ணியமில்லை என்கிற பக்குவம்தான் அவளுக்கு இன்னும் வரவில்லை.

      ஒண்ணு நினைச்சா பட்டுன்னு உடனே கேட்ருவியா? யோசிக்க மாட்டியா? - சரவணனின் இந்தக் கேள்வியை அவள் எத்தனையோ முறை எதிர்நோக்கியிருக்கிறாள். ஆனாலும் அவளுக்குக் கேட்காமல் இருக்க முடியவில்லை. பிடிக்காத கேள்வியைக் கேட்பது எப்படி அவனுக்குப் பிடிக்காதோ அது போல் தோன்றியதைக் கேட்காமல் இருப்பது இவளுக்குப் பிடிக்காது. எத்தனை முறை திட்டினாலும் உறைக்காது.

      போய்ட்டு வந்தா என்ன...குறைஞ்சா போவீங்க...ஒரு உதவிதானே....?

      இதை அந்தம்மாள் போன பிறகு  கேட்கிறாள். அந்த மட்டும் பாராட்டத்தான் வேண்டும். அது ஒன்றுதான் சொல்லிச் சொல்லி அவளுக்கு வந்திருக்கும் நிதானம்.

      எனக்குத் தெரியும்....எதுக்குப் போகணும்...எதுக்குப் போகக் கூடாதுன்னு...நீ எனக்குச் சொல்லித் தர்றியா? -திரும்பி நின்று அவளைப் பார்த்துச் சொன்ன போதும்  அவள் பார்வை சமையலறையை நோக்கித்தான் இருந்தது. ஒரு சின்ன அலட்சிய பாவம் எப்போதும் தொனிக்கும்.

      அப்புறம் அவங்க வந்து சொல்லிட்டுப் போனதுக்கு என்னதான் அர்த்தம்? நீங்க வரணும், வருவீங்கங்கிற நம்பிக்கைலதானே வலிய வந்து புலம்பிட்டுப்  போறாங்க...? ஒரு முடிவும் சொல்லாத உங்க மூஞ்சியப் பார்த்திட்டே போனா? பரிதாபமா இருக்குல்ல...! வீட்டுக்கு வந்தவங்கள இப்டியா அலட்சியப்படுத்தறது?

      இதென்னடா இது வம்பாப் போச்சு. மனுஷன் அமைதியா இருந்தாலும் அதுக்குப் பேரு அலட்சியமா? அதுக்கு... என்னை என்ன பண்ணச் சொல்ற? நானா என்ன விபரம்னு கேட்டேன்? ...அவங்களா வந்தாங்க...சொன்னாங்க...அதுக்காகவே போயாகணுமா...? வர்றத்துக்கு முன்னாடி  யோசிச்சிருக்கணும்...போய்ச் சொல்லலாமா வேண்டாமான்னு...? மத்தவங்களுக்கும் வேறே வேலை இருக்காதா?  அதை ஒதுக்கிட்டுப் போக முடியுமா? பொம்பளைங்க பூராவும் ஒரே மாதிரிதான் இருப்பீங்க போல்ருக்கு...! கொக்குக்கு ஒண்ணே மதின்னு.

      என்ன பெரிய்ய்ய வேலை? பாங்குக்குப் போறதுதானே...இன்னைக்கு இல்லாட்டி நாளைக்குப் போயிக்கிறது....கெட்டா போகுது...? இது அர்ஜன்ட் இல்லையா? -

      நம்ம சொந்த வேலையை விட அடுத்தவங்க வேலை உனக்கு அர்ஜென்டாப் போச்சா?- விடாமல் கேட்கிறாள். என்னைச் சம்மதிக்க வைப்பதுதான் அவள் நோக்கமாய் இருக்கும் போலிருக்கிறது. தினமும் நின்று மணிக்கணக்காய் கதை பேசும் சிநேகிதம். அதுக்கு பங்கம் வந்துவிடக் கூடாது. நான் சொன்னா அவர் கேட்பாரு என்று காட்டிக் கொள்ள வேண்டும். நான்தான் போய்ட்டு வாங்கன்னு அனுப்பி வச்சேன் என்று பெருமையடித்துக் கொள்ள வேண்டும். இதற்கு நான் உடன்பட வேண்டும்!

      குக்கரில் முதல் சத்தம் வந்தது. வழக்கத்துக்கும் மாறாக சத்தமும் நீளமும் அதிகமாய்த் தெரிந்தது.

      என்னா இது?....ரயில் இன்ஜின் கணக்கா...காலங்கார்த்தால....? தல வேதனையா இருக்கு...

      காலைல சமைக்காம வேறே எப்பச் சமைக்கிறதாம்? சாதம் வச்சிருக்கேன்...மூணு சத்தம் வரணும்....உங்களுக்கு டிஸ்டர்பா இருந்தா ரூமுக்குள்ள போயி கதவைச் சாத்திக்குங்க......-அவள் சொன்னதை நான் கேட்கப் போவதில்லை என்று உறுதி செய்து விட்டது புரிந்தது.

      றைக்குள் வந்து அமர்ந்தேன். ஜன்னல் வழி எதிர் வீடு தெரிந்தது. அந்த மாடியை நோக்கினேன். எந்தச் சலனமும் இல்லை. அந்தாள் இருக்கிறானா, இல்லையா? அவன் மனைவி, குழந்தைகள் இருக்கிறதா? சத்தமேயில்லையே? இப்டியா குகைக்குள்ள இருக்கிறமாதிரி இருப்பானுங்க?

      குடியிருப்பு ஆள் இருக்கும் இடமே தெரியவில்லை. இப்படி ஒரு ஆள் கிடைக்கணுமே...! சரியான அமுக்குளி. மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். எமப்பய.!!

      வசமா மாட்டினார்யா.... - வாய் என்னையறியாமல் முனகியது. பார்வை கீழ் வீட்டில் இருந்தது.

      போலீஸ் ஸ்டேஷன் போகணுமாமுல்ல...போலீஸ் ஸ்டேஷன்..? அவங்க காரியத்துக்காக நான் ஏன் போய் அந்த நரகத்த மிதிக்கணும்? எனக்கென்ன தலவிதியா? வேணும்னா சொந்தக்காரங்க எவனையாச்சும் வரச்சொல்லி, கூட்டிட்டுப் போக வேண்டிதானே...? இதுக்கெல்லாமா எதுத்த வீட்டு ஆளக் கூப்பிடுறது? எதோ கல்யாணம் காட்சின்னு கூப்டாலும் பரவால்ல....அதான் ஊர் பூராவும் உறவுக்காரவுங்க இருக்காங்கல்ல....வந்து போன மணியமாத்தான இருக்காங்க...அதுல ஒருத்தன் கூடவா வரமாட்டான்? தன் காரியத்தத் தான்தானே பார்த்துக்கணும்....வம்பு தும்புன்னா மட்டும் அடுத்தவன் வேணுமா?

      எதிர் வீ்ட்டு மாடிப் படியில் யாரோ இறங்கி வரும் சத்தம். மறைத்திருந்த ஜன்னல் திரை, ஃபேன் காற்றில் லேசு லேசாக விலகி விலகி அந்தக் காட்சியைப் பிரதிபலிக்கிறது. நான் பார்த்துக் கொண்டிருப்பது அங்கிருந்து நிச்சயம் தெரியாது. மாசிலாமணி சத்தம் கேட்டு வாசலுக்கு வருவது தெரிந்தது. அவர் வராண்டாவிற்கு வந்து நிற்க, அந்தாள் மாடிப்படியிலிருந்து இறங்கி வெளியேற சரியாயிருந்தது. இவரும் ஒன்றும் கேட்கவில்லை. அவனும் ஒன்றும் சொல்லவில்லை. குனிந்த தலை நிமிர்ந்தால்தானே...!

      பார்த்துக் கொண்டே நின்றார். அவன்பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தான்.

      ம்ம்...துணிஞ்சவனுக்குத் துக்கமில்ல.... !!.

      வீட்டுக்குள்ளிருந்து அந்தம்மாள் வந்தது. எதாச்சும் சொன்னாரா...? கேட்க...அவர் உதட்டைப் பிதுக்குவது தெரிந்தது. பேசுவது துல்லியமாய்க் கேட்டது. எங்கள் இரு வீட்டுக்கும் இடைப்பட்ட வீதியின் அகலம் வெறும் பதினைந்தடிதான்....

      நீ என்ன...திரும்பத் திரும்ப இப்டிக் கேட்டுக்கிட்டிருக்கே....அந்தாள்டெல்லாம் இனி பேசுறாப்ல இல்ல....அவன எப்டி வெளியேத்தணும்ன்னு எனக்குத் தெரியும்.....பொறுத்திருந்து பாரு...

      என்னத்தத் தெரியும்? சொல்லிட்டேதான் இருக்கீங்க..எதுவும் செய்றாப்ல இல்ல ஒரு .வருஷம் முடிஞ்சி போச்சு...அட்வான்சும் கழிச்சிட்டா... ஏழு  மாச வாடகை பாக்கி....தர்றேன்...தர்றேன்ங்கிறாரேயொழிய, எதுவும் வந்து சேர மாட்டேங்குது....தலையத் தொங்கவிட்டமேனிக்குப் போகவும், வரவும்னு இருந்தா...சரியாப் போச்சா...? இத்தன மாசம் நழுவ விட்டதே தப்பாப் போச்சு. தும்ப விட்டிட்டு வாலப் பிடிச்ச கதையா...இப்போ புலம்பி என்ன பண்ண...? ஏன் போலீசுக்குப் போகத் தயங்குறீங்க...? போய் எழுதிக் கொடுத்தா, வந்து சாமான் செட்டத் தூக்கி வெளில வீசிட்டுப் போறான்...நமக்கென்ன வந்தது? அந்தாளென்ன உறவா...? உறவுகளையே நெருங்க விடாத காலம் இது...இதுக்குப் போயி பயந்திட்டிருந்தீங்கன்னா...?

      யாருடி பயப்பட்டா...? நீபாட்டுக்கு எதையாச்சும் பேசாத...அவுங்க காதுல விழப் போகுது....

      மாடிக்கெல்லாம் நாம பேசறது கேட்காது....சும்மாச் சொல்லுங்க....

      எங்கூட வேல பார்த்தவங்க ரெண்டு பேர வரச் சொல்லியிருக்கேன். சேர்ந்து போயி புகார் கொடுக்கலாம்னு....கொஞ்சம் பொறு.....

      ஆம்மா....ரிடையர்ட் ஆகி பத்து வருஷம் ஆச்சு......கூப்டவுடனே வந்திடுவாங்களாக்கும்....அதெல்லாம் சர்வீஸ்ல இருக்கிற போதுதான்...இப்பல்லாம் யாரும் தல காட்ட மாட்டாங்க....

      என்ன சொல்றே நீ? அவுங்களுக்கு எத்தனையோ காரியம் செய்து கொடுத்திருக்கேன் நான்..எனக்கு ஒண்ணுன்னா விட்டுக் கொடுக்க மாட்டாங்க?...வர்றாங்களா இல்லையா பாரு...!

      அதெல்லாம் சங்கத்  தலைவர்ங்கிற முறைல அப்போ நீங்க செய்திருக்கலாம். அது சர்வீஸ்ல இருந்தபோது....இது சொந்த விஷயம்..சிவனேன்னு இருக்காம, .நாம ஏன் தலையக் கொடுத்துக்கிட்டுன்னுதான் நினைப்பாங்க....எதுத்த வீட்டுக்காரரே வரத் தயங்குறாரு.!

      இந்த வார்த்தைகள் துல்லியமாய் என் காதில் விழுந்தன. புரிஞ்சிதான் போயிருக்கு!!

      எதுக்கு அதுக்குள்ளேயும் அவர்ட்டப் போயிச் சொன்னே? நாந்தான் ஆளுகள வரச்சொல்லியிருக்கனே...! அப்புறம் என்ன அவசரம் உனக்கு?

      அப்டியே வந்தாலும் அடுத்தடுத்து ஒண்ணொண்ணுக்கும் அவுங்களக் கூப்பிட்டுக்கிட்டு இருக்க முடியுமா? எதுத்தாப்ல இருக்கிறவருக்குத்தானே முழு விபரமும் தெரியும்...போலீஸ் கேட்டா சொல்றதுக்கும் ஏதுவா இருக்குமுல்ல....?

      சரி...சாரு என்ன சொன்னாரு...? வர்றேன்னாரா...?-ஆர்வத்தோடு கேட்டார் மாசிலாமணி.

      கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னா சொன்னேன்...உங்க காதுல விழலியா...? தயங்குறாருன்னேன்ல...?

      சரி...பார்ப்போம்..... - சொல்லிவிட்டுச் சட்டென்று உள்ளே போய்விட்டார் மாசில். அந்தம்மாதான் நான் எங்கேனும் தென்படுகிறேனா என்று என் வீட்டைப் பார்வையால் துளைத்தது.. நான் நன்றாக அறைக்குள் என்னை உள்ளே அமுத்திக் கொண்டேன்.

      மனசு கேட்கவில்லைதான். ஆனாலும் போலீஸ் ஸ்டேஷன் போவதற்கு ஏனோ ஒரு தயக்கம். வெறுமே ஒரு புகார் எழுதிக் கொடுத்துவிட்டு வருவதுதான். அங்கே போனால் ஆயிரம் கேள்வியைக் கேட்பானோ, பதில் சொல்ல வேண்டியிருக்குமோ, சாட்சிக் கையெழுத்துப் போடச் சொல்வானோ என்றெல்லாம் நினைத்து மனம் சஞ்சலப்பட்டது. .நம்மால் முடிந்ததை வேறு என்ன செய்யலாம் என்றுதான் யோசனை போய்க் கொண்டிருந்தது எனக்கு. கூடப் போய் நிற்பதற்கே எனக்கு பயம்!

      மாலை வெளியே கிளம்பி வழக்கம்போல் நடைப் பயிற்சியில் கலந்திருந்தேன். இரண்டு தெருக்களைக் கடந்து கடைசியில் பூங்காவுள்ள அந்த நீண்ட வீதிக்குள் நுழைந்தபோது எதிர்ப்பட்ட பழைய வாட்ச்மேன் வீரணனைச் சட்டென்று நிறுத்தினேன். விஷயத்தைச் சொன்னேன்.

      இதெல்லாம் நம்ம ஏரியாவுல சர்வ சாதாரணம் சார்...அதனாலதான் யாருமே வீட்டை வாடகைக்கு விடத் தயங்குறாங்க....வெறுமே பூட்டிக் கிடந்தாலும் கிடக்கட்டும்னு போட்டுர்றாங்க...ஒண்ணுமில்ல சார்...விஷயம் இவ்வளவுதான்....நானும் இன்னொருத்தரும் வருவோம்...விறுவிறுன்னு வீட்டுக்குள்ள போய் சாமாஞ்செட்டெல்லாம் எடுத்து வெளியே வீசுவோம்....ஆளுகள வெரட்டி தடாலடியா வெளியேத்தி, வீட்டைப் பூட்டிச் சாவியக் கொண்டாந்து ஒப்படைச்சிடுவோம்...எல்லாம் அரை மணி...ஒரு மணில முடிஞ்சி போயிரும்...அதுக்கு நாங்க பொறுப்பு...ஆனா ஒண்ணு...போலீசு அது இதுன்னு அவுக போயிரக் கூடாது...அதுக்கு நீங்க பொறுப்பு ஏத்துக்கிறதுன்னா சொல்லுங்க...இப்பவே வர்றோம்...என்ன சொல்றீங்க...? என்றான்.

      கேட்கும்போதே பயங்கரமாய் இருக்கிறதே..சினிமாக் காட்சி போல!.இதற்கு அவர் எப்படி ஒத்துக் கொள்வார்...? அதெல்லாம் நமக்குப் பொருந்தாதுங்க என்றுதான் கண்டிப்பாகச் சொல்வார். சரி..யோசிச்சுச் சொல்றேன்... என்றேன் அவனிடம். எதிர்பார்த்த பதில்தான் போல.புன்னகையோடு நின்றான்.

      எந்த வீட்டச் சொல்றீங்க...நம்ம வூட்டுக்கு எதிர்த்தாப்ல இருக்கிற மாடியா...? அந்தாளு ஒரு பேமானிப்பயலாச்சே....! ஏற்கனவே நாலஞ்சு எடத்துல இப்டி இருந்திட்டுத்தான இங்க வந்திருக்கான்...எப்டி? சரியா விசாரிக்கலயா...? அவனக் கௌப்புறது கஷ்டமாச்சேங்க....! படு பேத்து மாத்துப் பண்றவனாச்சே...? – ஆள் ரொம்பப் பிரபலம் என்று புரிந்தது.

      மேலும் அவன் இப்படிச் சொன்னது எனக்குள் வயிற்றைக் கலக்கியது. ஐயோ பாவம்...மாசிலாமணி இதிலிருந்து எப்படி மீளப் போகிறார்? உள்ளுக்குள் பதட்டமாய்க் கேள்வி எழுந்தாலும் மனதின் ஒரு மூலையில் ஏதோ ஒரு சிறு மகிழ்ச்சி....

      பையன் காது குத்து ஃபங்ஷன்போது ஒரு நாளைக்கு அந்த மாடியக் கொடுங்க...விருந்தாளிங்கல்லாம் நிறைய வந்திட்டாங்க...ஒரு நைட்டு படுத்திருந்திட்டுப் போயிடுவாங்கன்னு கேட்டேன். அந்தாளு காது கொடுத்தாரா?  ஏகப்பட்ட சாமான் கெடக்கு....ஃபேன் சுத்தாது....பாத்ரூம் கொழா சரியில்ல, சுத்தம் பண்ணனும்... அது இதுன்னு என்னெல்லாம் சாக்குச் சொன்னாரு? ....வேணும்...நல்லா வேணும்.... - மனம் ஓலமிட்டது. 

      இரவு படுக்கையைப் போட்டபோதும் இதே சிந்தனை. தேவையில்லாமல் நான் ஏன் இதை அலட்டிக் கொள்ள வேண்டும். அது அவர் பாடு. நிம்மதியாய்த் தூங்கமாட்டாமல்? என்று எண்ணியவாறே புரண்டு கொண்டிருந்தேன்.

கண்ணயரும்முன் ஒரு யோசனை பளிச்சென்று தோன்றியது. அதே சமயம் அது சாத்தியமா என்றும் ஒரு எண்ணம் வந்தது.

      காலையில் எழுந்ததும் முதலில் அந்த யோசனையை கிரிஜாவிடம் சொன்னேன். கேட்டவுடன் அதிர்ந்தாள். இதென்ன அநியாயமாயிருக்கு...? வாடகை தராட்டாலும் காலி பண்ணுன்னு சொன்னாக் கூடப் பரவால்ல....கொஞ்சம் பணத்தையும் கொடுத்து அவன வெளியேத்தணும்ங்கிறது எப்படிச் சரியா இருக்க முடியும்? அவனுக்குப் பயந்து இதைச் செய்றாப்ல ஆயிடுமே...? பத்தாதுன்னு தலைல ஏறி உட்கார்ந்தான்னா....?

      சரி, தவறெல்லாம் இந்தக் காலத்துல பார்க்கக் கூடாது...ஆளக் கௌப்பணும்னா இதுதான் வழி. அவனாக் காலி பண்ணினாலும் இனிமே மீதமிருக்கிற மாசத்துக்கு அவன் வாடகை எதுவும் தரப் போறதில்ல...அதத் தெரிஞ்சிக்கோ...கையை விரிச்சிட்டுத்தான் போவான்...ஆனா அது எப்போங்கிறது யாருக்கும் தெரியாது. அதுவரைக்கும் விட்டு வைக்கவும் முடியாது. அதனால உடனடியா இது நடக்கணும்னா நான் சொன்னதுதான் வழி...ஆறு மாச வாடகையை அல்லது ஒரு இருபதாயிரமோ இருபத்தஞ்சாயிரமோ அந்தாள் கைல திணிச்சி, அப்பா...சாமி..போயிட்டுவான்னா ஒரு வேளை நகரலாம்......அதை சரியான ஒரு ஆளை வச்சு உட்கார்ந்து  பேசி, முடிவு பண்ணிச் செய்ய வேண்டியது அவுங்க பொறுப்பு....யோசனையா இதைச் சொல்லலாம்....இது ஒருவகையான பகடி இப்போ!

      நல்லாயிருக்கே...இதப் போயி நான் சொல்லணுமாக்கும் அவங்ககிட்ட...? ஏன் நீங்க போய்ச் சொல்றது?

      என்கிட்டதான் அவுங்க பேசவேயில்லயே...எல்லாத்தையும் உன்கிட்டதானே புலம்பிட்டுப் போனாங்க அன்னைக்கு...! என்னையும் மதிச்சுப்  பேசியிருந்தா நான் ஏதாச்சும் சொல்லியிருப்பேன்...

      நொண்டிக் கழுதைக்கு சறுக்கினது சாக்காக்கும்? நம்ப வீட்டுக்கு வந்ததே நம்பளை மதிச்சிதானே?  உங்கள மதிச்சதுனாலதான் நேரடியா உங்ககிட்டே சொல்லலை...அத முதல்ல புரிஞ்சிக்குங்க...இதுல என்னங்க இருக்கு...ஒரு உதவின்னு கேட்டு வர்றாங்க...இப்டியா எனக்கென்னன்னு இருக்கிறது? போய் உட்கார்ந்து பொறுப்பா ஏதாச்சும் நாலு வார்த்தை பேசிட்டு வாங்க...அவங்களுக்கு ஒரு சமாதானமாகவாவது இருக்கும்...ஒரு வேளை ஒத்துக்கிட்டாங்கன்னா?

      நீ நினைக்கிறமாதிரியே நான் புரிஞ்சிக்கணும்னு விதியா? ....நேரடியா என் முகத்தைப் பார்த்துச் சொன்னாத்தான் எங்கிட்ட சொன்னதா, என்னை மதிச்சு சொன்னதா நான் எடுத்துக்க முடியும்...உன் இஷ்டத்துக்கு என்ன வேணாலும் கற்பனை பண்ணிப்பே...நான் அதுக்குத் தலையாட்டணுமா...? - விடாமல் கேட்டான் சரவணன்.

      ஆனாலும் எதுத்த வீட்டுல இருக்கிறவரோட இவ்வளவு டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்றது நல்லா இல்லேங்க....அவ்வளவுதான் நான் சொல்லிட்டேன்....நமக்கும் நாலு பேர் வேணும்...நாளைக்கு நமக்கும் ஒரு ஆத்திரம் அவசரம்னு வரும்...அப்போ தெரியும் அந்தக் கஷ்டம்....

      உனக்கு என்ன தெரியும் அவரப்பத்தி...! சும்மா என்னத்தையாவது சொல்லாதே...நாம இங்க வீடு கட்டுறபோதுதான் எதுத்தாப்ல அவுங்களும் கட்டிட்டிருந்தாங்க...ஒரு நாளைக்கு மட்டும் கட்டடத்துக்கு தண்ணியடிக்கறதுக்கு  மோட்டார் போட்டு உதவுங்கன்னு கேட்டேன்....அப்போ நமக்கு ஜெட்டு மோட்டார் மாட்டியாகலை.....நூத்தம்பதடி ரப்பர் பைப் வச்சிருந்தான்...ஊருக்கே இழுக்கலாம் அதை....மாட்டேன்னுட்டாரு....கரன்ட் சார்ஜ் தர்றேன்னு கூடச் சொல்லிப் பார்த்தேன்....மறுத்திட்டாரு...அதெல்லாம் மறந்திடுமா என்ன? கிரஉறப் பிரவேசத்தும்போது நுழைஞ்சவ நீ....அதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் என்ன தெரியும் உனக்கு? தெனம் வந்து கெதியாக் கிடந்தவன் நானுல்ல...?  பட்ட பாடெல்லாம் எனக்குத் தானே...! நீபாட்டுக்குப் பேசுறியே...! சும்மாக் கெட....

      அதெல்லாம் என்னைக்கோ நடந்ததுங்க.... இன்னுமா நினைச்சிட்டிருக்கிறது? அப்டி அப்டியே விடணும்ங்க....வன்மமாவா வச்சிக்கிறது மனசுல...?

      தத்திப் பித்தி எப்டி வருதுன்னுதான் கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம்டீ....அதுக்குள்ளயும் என் உசிர ஏன் நீ வாங்குற...? என்னால போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போய் நிக்க முடியாது....அதெல்லாம் என்னைப் பொறுத்தவரை கேவலம்...அவ்வளவுதான்.....!

      சொல்லிக் கொண்டிருக்கும்போதே வெளியே கார் சத்தம் கேட்டது. யார் வந்திருக்கிறது என்கிற கேள்வியோடே சட்டையை மாட்டிக் கொண்டு அவசரமாய்  வாசலுக்குப் போய் நின்றேன். மாசிலாமணியும் அவர் மனைவியும் அந்தப் பக்கத்து வீட்டுக்காரரின் காரில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

      விடுவிடுவென்று  வீதிக்கு இறங்கிய கிரிஜாவை என்னால் தடுக்க முடியவில்லை.

      எங்கே....? கேட்டபடியே நெருங்கிய அவளிடம்...போலீஸ் ஸ்டேஷனுக்குப் போறோம்...ஒரு கம்ப்ளெய்ன்ட் கொடுக்கலாம்னு....என்றார்கள் மாசிலாமணியின் மனைவி.

      சாரும் வர்றாரா....? வரச் சொல்லுங்க....- என்றார் அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்.

      ஆமாம்...ஒரு நிமிஷம் இருங்க...என்ற கிரிஜா....பின்பக்கம் திரும்பியவாறே என்னங்க....கௌம்புங்க....கூடப் போயிட்டு வாங்க....என்றாள். அந்தக் குரலில் இருந்த அதிகாரம் என்னை நிலை குலையச் செய்தது. எதுக்கு இத்தனை சத்தமாய்ச் சொல்கிறாள்?

      மறுக்க முடியாமல் செருப்பை மாட்டிக் கொண்டு வீதியில் இறங்கி, காரை நோக்கி நடந்தேன். கேட் அருகே வந்து விட்ட கிரிஜாவுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னேன்...!.

      வந்து வச்சிக்கிறேன்....!

                              -------------------------------------------------------------------

     

     

 

...

     

 

     

     

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...