சிறுகதை “சகதர்மிணி” பிரசுரம்-அமுதசுரபி
எப்பொழுதும் போல் நிச்சலனமாய் இருந்தாள் அகல்யா. அப்பப்போ செய்யும்
காரியங்களில்தான் அவள் கவனம். இந்த வயதிலும் எப்படி அவளால் இத்தனை ஒருமித்த கவனத்தோடு
காரியமாற்ற முடிகிறது என்று இவருக்கு ஆச்சரியமாய் இருந்தது. நடந்தவை, கடந்தவை என்று
எதையும் அவள் மனதில் போட்டுக் கொள்வதில்லை. அதற்காக அவள் இளம் பிராய அனுபவங்கள், குடும்ப
அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் மறந்து போனாள் என்று சொல்வதற்கில்லை. அநியாய ஞாபக
சக்தி அவளுக்கு. +2 கணக்கை இப்பொழுது கொடுத்தாலும் உடனே போட்டு விடை கண்டு பிடித்து நீட்டி விடும் சாமர்த்தியம்.
பக்கத்து வீட்டுப் பையன் அப்படித்தான் வந்து கேட்டு வாங்கிக் கொண்டு போனான். அதில்
அவளுக்கு அத்தனை பெருமை. புத்தி இப்பொழுதும் அவளுக்கு அத்தனை ஷாா்ப்...!
தனக்குத்தான் அத்தனையும்
மறந்து மண்ணடித்துப் போய்விட்டது என்று தோன்றியது சபேசனுக்கு. படிக்கிற காலத்திலேயே
பாதிதான் ஞாபகம் வரும். எக்ஸாம் உறாலில் அமர்ந்திருக்கையில்
எந்தவொரு கேள்விக்கும் முழுதாய் விடை எழுதியதாய் நினைவில்லை. எத்தனையோ முறை முயன்றுதான்
பார்த்தார். படித்தவைகளை முழுசாய் நினைவுக்குக் கொண்டுவரவே முடியவில்லை அவரால். ஐம்பது
சதவிகித மார்க் எடுத்துத்தான் பாஸ் பண்ணினார். பின்னாடி படிந்த அவரின் உழைப்புதான்
அசுரத்தனமானது. அதனால்தான் அரசாங்க வேலையைப் பிடிக்க முடிந்தது. படித்த படிப்பிற்கும்
பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமில்லைதான். கொஞ்சம் கணக்கு, கொஞ்சம் தமிழ், கொஞ்சம்
ஆங்கிலம் தெரிந்தால் போதுமே! அதிக பட்சம் இருநூற்றைம்பது, முன்னூறு வார்த்தைகள் பயன்படுத்துவோமா
இந்த வேலையில்? அவ்வளவுதானே நம்ம இங்கிலீஷ்...என்று அடிக்கடி அலுவலகத்தில் சொல்லிக்
கொண்டிருப்பார்.
வீட்டில் அவளுக்காகத்தான்
இங்கிலீஷ் பேப்பர் வாங்கிப் போட்டார். தமிழ் தினசரி இவருக்கு. அந்த இங்கிலீஷ் பேப்பரை
அப்படித் தொட்டுக் கூடப் பார்த்ததில்லை இவர். ஜாதிப் பிரஷ்டம். அது என்னவோ சின்ன வயசிலிருந்தே
அந்த இன்ட்ரஸ்ட் இல்லாமல் போனது. ஆனால் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறார்.
ரீகல் டாக்கீஸே அவரைப் போன்றவர்களுக்காகத்தான் கட்டி விட்டிருக்கிறான்.பென்உறர், மெக்கன்னாஸ்
கோல்ட், லாஸ்ட் இன் தி டெஸர்ட், ஃபைவ் மேன்
ஆர்மி...என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
அதற்காக ஆபீசில் வேலை செய்ய முடியாமல் போனதா என்ன?
அந்த இங்கிலீஷ் தனி. அதுக்கு கூர்ந்த அவதானிப்பும், அக்கறையான உழைப்பும் போதும். கைவந்து
பெரிய ஸ்காலர் ஆகி விடலாம். சூப்பிரன்ட் பார்க்காம எந்த ஃபைலும் வரக்கூடாது, நானா உங்க
இங்கிலீஷைத் திருத்திட்டு உட்கார்ந்திரக்கிறது? அவர் கைவச்சாத்தான் டிராஃப்ட் அப்ரூவ்
ஆகும்....அலுவலர் கண்டிஷனாகச் சொல்லி விடுவார்.
அகல்யா தனக்காக ஆங்கிலத்தில் பேசுவதைச் சுருக்கிக்
கொண்டு விட்டாளோ என்று தோன்றியது. அவள் வேலையே அப்படித்தான். அதுவும் சென்னை போன்ற
பெரு நகரங்களில் டெலிபோனில் வேலை பார்க்கும்போது ஆங்கிலம்தான் பிரதானம். படு ஃப்ளூயன்ட்டாக
இருக்கும் அகல்யாவின் இங்கிலீஷ். பிரமிப்பாய் இருக்கும் இவருக்கு. அவ்வப்போது இவரும்
அவிழ்த்து விடுவார். கோபம் வரும்போதுதான் இவருக்கு இங்கிலீஷ் வரும். டு வாட் ஐ ஸே...!
தான் பிறந்த ஊரில்
ஒருவர் இருந்தது நினைவுக்கு வந்தது. அந்த ஊரிலேயே சென்னை சென்று சில காலம் வேலை பார்த்துத்
திரும்பியது அவர் ஒருவர்தான். பேசும்போதெல்லாம் ஒன்று சொல்வார். படு பந்தாவாய் இருக்கும்.
வென் ஐ வாஸ் இன் மெட்ராஸ்....என்று அவர் துவக்கும்போதே...ஆரம்பிச்சிட்டான்யா....என்று
முனகுவார்கள். அதற்கு மேல் இங்கிலீஷ் வராது அவரிடத்தில். அவருக்கான பட்டப் பெயராகவே
அது நிலைத்துப் போனது.
மொழி ஒரு காரணிதானே.
பரஸ்பரப் பரிமாற்றத்திற்கான கருவி அவ்வளவே...என்று தத்துவம் பேசி சமாளித்தார். இவருக்குப்
புரிந்து கொள்ள முடியும். சரசரவெனப் பேச வராது.
பழகிட்டா வந்துடும் என்று சாதாரணமாய்த்தான் சொன்னாள். அதற்காக அவள் ஒன்றும் கர்வம்
கொண்டவளாய்த் தெரியவில்லை. ஆங்கிலம் பேசத்
தெரியாத கணவன் அமைந்து விட்டானே என்று குறைபட்டுக் கொள்ளவில்லை. கொஞ்சம் கொஞ்சம் பேசறேளே
நீங்களும் என்றாள். அப்டியா? என்றிருந்தது இவருக்கு. அது ஒரு பிரச்னையாகவே அவள் நினைக்கவில்லைதான்.அவனோடும்,
பிறரோடும் சேர்ந்திருக்கும் பொழுதுகளில் அவள் என்றும் ஆங்கிலம் உபயோகித்ததில்லை. அது
ஒரு பண்பாட்டின் அடையாளம்தானே! தனக்குத்தான்
போட்டு மண்டையைக் குடைகிறது. அவள் பாண்டித்யத்தை இவர் அழிக்க விரும்பவில்லை. விழுந்து
விழுந்து வரி விடாமல் இங்கிலீஷ் பேப்பரை மேய்வதில் இவருக்கு என்றும் பொறாமை இருந்ததில்லை.
அப்படி என்னதான் படிக்கிற மூணு நாலு மணிநேரமா? என்று சமயங்களில் கடிந்து கொள்வார்.
எழுத்தெல்லாம் அழிஞ்சிடப் போகுது என்று கேலி செய்வார்.
அது ஒன்றுதான் அவளுக்குப்
பிடித்தது. மற்றப்படி சினிமா..டிராமா.....ஊறீம்....அந்த ஜோலியே ஆஉறாது. கோயிலுக்கா?
உற்சாகமாய்க் கிளம்புவாள். முணுமுணு என்று என்னத்தையோ மந்திரத்தை முனகிக் கொண்டேயிருப்பாள். சுற்றிச் சுற்றி வருவாள்.
எத்தனை சுத்துதான் சுத்துவா? ஆச்சா...இல்லையா? என்று பொறுமை கழறுவார். இவரைப் பொறுத்தவரை
ஒரே கும்பிடு. பெரிய்ய்ய கும்பிடு...போட்டுவிட்டு வந்து அக்கடா என்று அமர்ந்து விடுவார்.
சுற்றி மறைந்தவள் திரும்பவும் தெரிகிறாளா என்பதை மட்டும் ஒவ்வொரு சுற்றுக்கும் கண்காணித்துக்
கொள்வார். அவளோ இவர் இருக்கும் திசையையே திரும்பிப்
பார்க்க மாட்டாள். இன்னிக்குக் கோயிலுக்கு வந்ததுக்கு ஏதாச்சும் வரத்தை வாங்காமப் போறதில்ல....என்று
பிரதிக்ஞை செய்து கொண்டதுபோல் இருக்கும்.....அடிப் பிரதட்சிணம் என்று சமயங்களில் ஆரம்பித்து
விடுவாள். உலகமே வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும்போது இவள் அளந்து அளந்து எட்டு வைத்துக்
கொண்டிருப்பாள். அவள் நம்பிக்கைகளை யாரும் அசைத்துக் கூடப் பார்க்க முடியாது.
அம்மா அப்பாவைத்
தவிர வேறு எந்தத் தெய்வமும் பெரிதாய்த் தோன்றியதில்லை இவருக்கு. கண் கண்ட தெய்வங்கள்
அவர்கள்தான். கோயிலுக்குச் சென்றால் அங்குள்ள சிற்பங்கள்தான் இவர் கண்ணையும் கருத்தையும்
கவரும். ஸ்வாமி அலங்காரத்தை ரசிப்பார். கண்ணைத் திறந்து கும்பிடுங்க....மூடாதீங்க....என்று
மானசீகமாக எல்லோருக்கும் சொல்வார். அர்ச்சனை முடிந்து தட்டு வந்தவுடன் அந்த வாழைப்
பழத்தை உரிப்பார். தேங்காயைத் தரையில் தட்டி உடைப்பார். ஒரு மூடி அர்ச்சகருக்குக் கொடுத்திடு...அப்பத்தான்
புண்ணியம் என்று கவனமாய்ச் சொல்வார்....!
தமிழ்ப் பேப்பரையே இவர் மேலாகத்தான்
புரட்டுவார். தலைப்புதான் பார்ப்பார். உள்ளே புகுந்து என்றும் படித்ததில்லை. அது என்னவோ
உலக நடப்புகளெல்லாம் தப்புத் தப்பாய் செல்வதாகவே ஒரு கருத்து ஊன்றிப் போனது இவரிடம்.
மக்கள் நலனுக்கான தன்னலமற்ற தியாக சீலர் என்று எவரும் இன்று இல்லை என்ற முடிவில் அரசியலும்
நாட்டு நடப்பும் வெறுத்தே போனது.
அகல்யாவைப் பார்த்துக்
கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. அன்று கண்ட மேனி அழியாமல்....என்பதில்தான் வித்தியாசம்.
செய்யும் வேலைகளில் இன்றும் கொஞ்சம் கூடச் சுணக்கம் இல்லை. ஒரே மாதிரி சீரான வேகத்தோடு
இயங்குகிறாள். எட்டரைக்குள்ள சமையல் முடிச்சிருவா என்று நினைத்துக் கொள்வார். அதேபோல்
கரெக்டாக அதே நேரத்துக்குக் குளிக்கக் கிளம்புவாள். ஆரம்பத்தில் விடிகாலையில் குளித்து
விட்டுத்தான் அடுப்பையே மூட்டுவாள். போகப் போக அது முடியாமல் போனது. வேலைக்குப் போற
இடங்கள்ல அப்படித்தான்....விடு...விடு...என்றார் இவர். என்னவோ அவளுக்கு இவர் சலுகை
செய்வது போல. விசேட நாட்களுக்கு மட்டும்தான் குளித்து சமையல் மற்றும் லீவு நாட்களில்.
அவள் செய்யும் பாயாசம்
மற்றும் வடை நைவேத்தியத்திற்காகவே விசேட நாட்கள் அடிக்கடி வராதா என்று மனது ஏங்கும்..
அன்றெல்லாம் மண்டை வெல்லம் உடைத்துக் கொடுக்க, ஏலக்காய் உரித்துப் பொடிக்க என்று காத்திருந்து
செய்து கொடுப்பார். எப்பொழுதடா பூஜை முடியும் என்று நாக்கைத் தீட்டிக் கொண்டு காத்திருப்பார்.
ஆரம்பத்தில் அவள்தான் பூஜை செய்தாள். பிறகு இவரைச் செய்யச் சொன்னாள். ஏதாச்சும் ஸ்லோகங்கள்
படிச்சிக்குங்கோ...தெரிய வேண்டாமா...வயசாறதில்லையா? என்றாள்.
நான் என்னத்தக் கண்டேன்...ஆத்தக்
கண்டேனா...அழகரச் சேவிச்சேனா...என்றார் இவர். வறுமையும் பசியும்தான் எங்களுக்கு ஸ்லோகம்.
அது நிரந்தரமா இருக்கைல வேறே என்ன மைன்ட்ல வரும்? பசித்திருப்பவனிடம் கடவுளைப் பற்றிப்
பேசாதே..முதலில் அவன் பசியைப் போக்கு....என்றார் விவேகானந்தர். ஆனால் அவள் சொன்னது ஒரு பக்கம் உறுத்தத்தான் செய்தது.
சின்ன வயதில் அம்மா சொல்லிக் கொடுத்தது கொஞ்சம் கொஞ்சம் நினைவிலிருந்தது. கஜானனம் பூத
கணாதி சேவிதம்...கவித்த ஜம்பு பலசார பட்சிதம்.....-அட...வருதே...! என்று அவருக்கு அவரே
ஆச்சரியப்பட்டுக் கொண்டு சொல்லிப் பார்த்தார். ஆயுர்தேஉறி...தனந்தேஉறி...வித்யாந்தேஉறி...மஉறஸ்வரி...சமஸ்தம்
அகிலாந்தேஉறி....தேஉறிமே பரமேஸ்வரி.....அதுக்குத்தான் சின்னப்புள்ளைலயே மண்டைல ஏத்தணும்ங்கிறது....!
இப்ப புதுசாப் படின்னா எப்டி ஏறும்? சினிமாவும், பாட்டும்தான் ஞாபகத்துல இருக்கு...தனக்குத்தானே
நொந்து கொண்டார்.
எந்தப் பழைய சினிமாப்
பாட்டுக் கேட்டாலும் அது இந்தப் படம் என்று டக்கென்று சொல்லி விடுவார். இசையில் கொஞ்சம்
ஈடுபாடு உண்டு. பல்வேறு பாடகர்களின் விதவிதமான குரல்களை ஆழ்ந்து ரசிப்பார்.சி.எஸ்.ஜெயராமனின்
குரலில் அப்படி ஒரு மோகம். அவர் பாடல் பூராவும் பதிந்து வைத்திருக்கிறார். அன்பாலே
தேடி என் அறிவுச் செல்வம் தங்கம்....அம்புவியின் மீது நான்.... என்று அனுபவித்து நாக்கைக்
குழைத்து இவரும் பாடுவார். யாராவது பாடச் சொன்னால் வராது. அவராகத் தன் ரசனையில் பாடும்பொழுது
கேட்டுக் கொள்ள வேண்டும். ஓவியம் கலைந்ததென்று...ஓவியர்கள் வெறுப்பதில்லை.....உருக்குலைந்த
கோட்டையினை சரித்திரம் மறப்பதில்லை....என்று டி.எம்.எஸ்.ஸின் சோகக் குரல் அப்படியே
சுருதி பிசகாமல் வழியும் இவரிடம்....!
க்ளாசிகல் பேஸ்டு
சாங்....எது எது என்று குறித்து வைத்துக் கொண்டிருந்தார். அவற்றில் ஒரே ராகத்தில் உள்ள
வெவ்வேறு படங்களின் பாடல்களைப் பொருத்திப் பார்ப்பார். அதற்குரிய பிரபலமான கர்நாடக
சங்கீதப் பாடலையும் கேட்டு ரசிப்பார். இன்றும் ஓரிரு வரிகள்தான் குறிப்பிட்ட ராகத்தில்
சினிமாப் பாட்டில் நுழைகின்றன..அது போல்...இது போல்...என்பதாய்த் தோன்றும் இவருக்கு. கர்ணன் படப் பாடல்கள் அத்தனையும்
க்ளாஸிகல் பேஸ்டு சாங்க்ஸ் என்று சொல்லி ராகங்கள் அத்தனையையும் மனப்பாடமாக வைத்திருந்தார்.
தினமும் காலையில்
வாக்கிங் போகும்போது காதில் ஏர்.ஃபோனைச் செருகிக் கொண்டு தியான ஸ்லோகத்தைக் கேட்டுக்
கொண்டே போனார். அது மிகவும் நீளமாக, குறைந்தது பதினைந்து நிமிடத்துக்கு மேல் ஓடுவதாய்த்தான்
இருந்தது. விடாப்பிடியாய் தினமும் கேட்டார்.
ரெண்டு ரெண்டு வரியாய்ச் சொல்லிப் பார்த்தார். மனப்பாடம் ஆகிவிட்டது. சம்ஸ்கிருதம் என்பதால் உச்சரிப்பு
ஸ்பஷ்டமாய் இருக்க வேண்டும் எனத் திருத்தமாய்ச் சொல்லிச் சொல்லிப் பழகினார். “நாங்க பழக வந்திருக்கோம்“
என்று சினிமாக் காட்சியும் இடை இடையில் வந்து மோதத்தான் செய்தது. ஒதுக்கி விட்டுத்தான்
சொல்லிப் பழகினார். ஓம்....சுக்லாம் பரதரம் விஷ்ணும்...சசி வர்ணம் சதுர்புஜம்....என்று
ஆரம்பித்துச் சொல்ல ஆரம்பித்தார்.
தனிமையில் இருந்து
எதையும் செய்தாரென்றால் சபேசன் தன்னை ஒரு நடிகர்திலகம் என்று மனதிற்குள் வரித்துக்
கொள்வார். எது செய்தாலும் சிவாஜியின் அடையாளம் அவரிடம் படிந்திருக்கும். சரஸ்வதிசபதத்தில்...சரஸ்வதிதேவியின்முன்அமர்ந்துஅம்...மா.....அப்....பா....ஓசை...ஒலி...சப்தம்...நாதம்...எழுத்து...சொல்....என்று
மெல்ல மெல்லப் பேசி...அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி....என்று உணர்ச்சி
பொங்கப் பாடுவாரே அது போல் படிக்கும் தியான
ஸ்லோகத்தை சம்மணமிட்டுக் கொண்டு வார்த்தை வார்த்தையாய்ச்
சொல்லிப் பார்த்தார் சபேசன். அப்படியே மனதில் நின்று விட்டது. நம்மகிட்டயும் கொஞ்சம்
பவர் இருக்கத்தான் செய்யுது...என்று நினைத்துக் கொண்டார்.
அந்த வருட நவராத்திரி
கடைசி நாளான சரஸ்வதி பூஜையின்போது ஸ்வாமி முன்னால் அமர்ந்து தியான ஸ்லோகத்தைக் கருத்தாக
உச்சரித்தார். மொத்த ஸ்லோகத்திலும் ஒரு இடத்தில் கூட உச்சரிப்பு தவறி விடக் கூடாது
என்பதற்காகக் கண்களை மூடிக் கொண்டு சொன்னது கவனத்தை ஒருங்கிணைத்து லயிக்க வைத்தது.
அது முதல் விசேட நாள் பூஜைகளை வீட்டில் அவர்தான் செய்து வருகிறார். அதில் அகல்யாவுக்கு
அவ்வளவு பெருமை. இன்னிக்கு நல்ல நேரம் எப்பன்னு பார்த்து வச்சிக்குங்கோ...அதுக்குள்ளேயும்
சமையலை முடிச்சு, பூஜை நைவேத்யங்களைப் பண்ணி கொண்டு வச்சிடுறேன். வேணுங்கிற வெத்தல, பாக்கு பழம், சூடம், உதிரிப்
புஷ்பம் எல்லாம் தயாராய் எடுத்து வச்சிக்குங்கோ...சுவாமி
படங்களுக்குப் பொட்டு வச்சு...பூ வைங்கோ.... என்று அக்கறையாய் அவள் சொல்வதும் பூஜைக்
காரியங்களில் முழுமையாக ஈடுபடுவதும், அவரையும் அம்மாதிரி சுப காரியங்களில் லயிக்க வைத்து
விட்டது. ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி....! என்று தானே அப்பொழுதுதான் அரிச்சுவடி
அறிந்ததுபோல் உணர்ந்தார்.
அப்டி இப்டின்னு
என்னையும் ஒரு பண்டாரம் மாதிரி ஆக்கிட்டியேடீ....என்று சமயங்களில் தமாஷாக அலுத்துக்
கொள்வதும் உண்டுதான். உள்ளூர ஒரு சந்தோஷமும் திருப்தியும். பஞ்சகட்சமும், வஸ்திரமும்
உங்களுக்கு எவ்வளவு பொருத்தமா இருக்கு? வியட்நாம் வீடு பிரஸ்டிஜ் பத்மநாபய்யர் போல...!
என்று அவள் சொன்னது கிர்ர்ரென்று இவர் தலைக்கு ஏறி விட்டது. அதற்குப் பின் அவளோடு ஒத்துழைப்பதில்
முழு மூச்சாக ஈடுபட்டார் சபேசன். அதில்தான் மீதி வாழ் நாளின் திருப்தி அடங்கியிருப்பதாய்த்
தெரிந்தது.
என்றுமே அவளை வீட்டுக் காரியங்களில்,
சமையலில் ஒத்தையாய் விட்டதில்லை இவர். காய்கறிகளைக்
கரெக்டாக நறுக்கிக் கொடுத்து விடுவார். தேவையான பாத்திரங்கள் சில பற்றில் கிடந்தால்,
அதைத் தேய்த்து வைத்து விடுவார். எதெது உடனுக்குடன் தேவை என்பது அவருக்கும் தெரியும்.
அந்தந்தப் பாத்திரங்களைத் தேய்த்து, கைக்கெட்டுவதுபோல் அடுக்கி விடுவார். தடங்கலில்லாமல்
பாத்திரங்கள் கைக்கு வந்தால்தான் சமையல் விறுவிறுப்படையும் என்பது அவருக்கும் தெரியும்.
தேங்காய் கீற்றுவது, மிக்ஸியில் போடுவது, சிறு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மேடையில்
கைவாகாக வைப்பது என்று அவள் பதற்றத்தைக் குறைக்க முயல்வார். அவள் ஒன்றும் பதறியதாகத்
தெரியவில்லைதான். இவருக்குத்தான் அப்படித் தோன்றும். நீங்க போய் பேப்பர் படிங்கோ...நான்
பார்த்துக்கிறேன்...என்று அவள் சொன்னால் சற்று வருத்தப்பட்டுக் கொள்வார். ஏன்...நான்
நிக்கிறது பிடிக்கலையா? என்று கூடக் கேட்டிருக்கிறார். நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணுவேனோன்னு
நினைக்கிறியா? அட ஏண்டி...இந்த வயசுல...? என்று கேட்டு விலகி விடுவார். வேலைக்கு நடுவில்
அவளைப் பார்க்கையில் கொஞ்சம் சபலம் தட்டத்தான் செய்யும். அதைத்தான் புரிந்து அவள் இப்படிச்
சொல்கிறாள் என்பதை இவர் உணர்ந்து கொண்டார்.
அகல்யாவிடம் ஒரே
ஒரு குறை. குழம்பு, ரசம், கூட்டு, கறி என்று எதிலும் உப்புத் தெரியாது. தேவைக்கும்
மிகக் குறைவாகவேதான் இருக்கும்.. ப்பி.பி மாத்திரை சாப்பிடுவதால் உப்புக் குறைச்சலாய்ச்
சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற டாக்டரின் ஆலோசனைப் படி அவள் கை அந்த அளவுக்குத்தான்
நீண்டது. அவளை விட அஞ்சு வயசு பெரியவனாச்சே...என்று இவரும் அந்த ருசிக்குப் பழகிக்
கொண்டார். எதனாலேயும் அவள் வேகம் குறைந்ததேயில்லை. சீரான செயல் அது. பதற்றமில்லாதது.
நியமங்களை நிறைவேற்றுவதில் அவளுக்கிருந்த நிதானம் போற்றுதற்குரியது.
தன்னிடம்தான் சோர்வு தென்படுகிறது. பல சமயங்களில் கவனம் சிதறிப் போகிறது.
எதுவும் செய்யாமல் முகட்டைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது என்பது இப்போது
சர்வ சகஜமாகியிருக்கிறது. அவரால் இளம் பிராய அனுபவங்களிலிருந்து மீளவே முடியவில்லை.
அப்பாவும் அம்மாவும் பட்ட கஷ்டங்கள் இப்போதும் நினைவில் வந்து கொண்டேயிருக்கின்றன.
அரிசிக் கடைக்கும், பலசரக்குக் கடைக்கும் பையைத் தூக்கிக் கொண்டு அலைந்ததும், கடன்
தர மறுத்து வெறும் கையோடு திரும்பியதும் அவரின் நினைவிலிருந்து அழிக்க முடியாத சித்திரங்களாகி
விட்டன. அம்மா மூஞ்சி அடிக்கடி கண் முன் வந்து (மறந்தால்தானே நினைப்பதற்கு!) அவரைக்
கலங்கடித்துக்கொண்டுதான் இருக்கிறது. வாடகை வீட்டு ஓனர் ராமண்ணா இல்லத்தைத் தாண்டிச்
செல்லும்போது அவர் திண்ணையில் உட்கார்ந்திருப்பாரோ என்று மனம் பயம் கொள்ளும். வாய்
திறந்து கேட்டு விடுவாரோ என்றும் தோன்றும். ஆனால் அதிலும் ஒரு ஒழுங்கு இருந்தது. அப்பாவிடம்தான்
அவர் வாடகை பாக்கியைக் கேட்பார். இவர்களை லட்சியம் செய்ய மாட்டார். தரேண்ணா...கொஞ்சம்
பொறுத்துக்குங்கோ...இது அப்பாவின் பதில். அந்த வார்த்தைதான் அவருக்குத் தேவை.
அப்பா கொண்டு வரும் கொஞ்சூண்டு சம்பளப் பணத்தில் எப்படிக் கஷ்டப்பட்டுக்
குடும்பம் நடத்தியவள் அம்மா. இந்தத் துட்டை வச்சிண்டு நான் எத்தனைக்குத்தான் முழம்
போடுவேன்...என்று அவள் அலுத்துக் கொண்டது உண்மைதான். ஆனால் அதைத் தாண்டி அவள் இம்மி
கூடச் சென்றதில்லை. கமலா மாமியாத்து சாம்பார்...சுட வச்சிருக்கேன்...நன்னாயிருக்கும்
சாப்பிடு...என்று ஊற்றிய சாம்பாரில்தான் அவர்கள் முதன் முதலில் பருப்பைப் பார்த்தது.
மாமி...சாம்பார் கொஞ்சம் மிஞ்சிடுத்து....எடுத்துப்பேளா....ஊசாம நன்னாயிருக்கா பாருங்கோ...வீணாப்
போகுமேன்னுதான்....என்று தயங்கித் தயங்கி கமலா மாமி கேட்க...அதனாலென்ன மாமி...குடுங்கோ...கொண்டு
போறேன்...என்று வாங்கி வருவாள். கடன் வாங்கும் குடும்பம்தானே என்று கீழாய் நினைத்ததில்லை
அவர்கள். அந்தக் காலம் வேறு. ஒரு குடும்பம் கஷ்டப்பட்டு எப்படி முன்னேறுகிறது என்பதைக்
கண் கொண்டு பார்த்துப் பாராட்டினார்கள். சரிக்குச் சமமாய் நினைத்தார்கள். காசு மட்டும்
வைத்திருப்பவர்கள் உயர்ந்தவர்கள் ஆகி விட மாட்டார்கள் என்று மனிதனை மனிதன் மதித்த காலம்.
கப்பலோட்டிய தமிழன் படத்தில் பாரதியின் துணைவியாய் வரும் செல்லம்மாதான்
இவர் மனதில் தோன்றும். பக்கத்தாத்துலர்ந்து கடன் வாங்கி வச்சிருந்தேன். அம்புட்டு அரிசியையும்
இப்டிக் குருவிகளுக்குப் போட்டுட்டேளே...! எனும் அந்தக் குரல் இவருக்கு அச்சு அசலாக
அம்மாவை ஞாபகப்படுத்தும்.
காமாலை இறக்கப்போனேன். பெரியாத்துல குடுத்தா...இந்தாடீ ருக்கு....இந்த
மாவை எடுத்துக்கோ...குழந்தேளுக்கு இட்லி வார்த்துக் குடு....ரொம்ப நாளாச்சு இட்லியக்
கண்ணால பார்த்து....என்று தன் விருப்பத்தையும் சேர்த்தே சொல்வாள் பாட்டி. மந்திரித்து மந்திரித்து மஞ்சக் காமாலை இறக்குவாள்.
ஒரு சின்னக் குடம் நிறைய மஞ்சள் கரைத்த தண்ணியை மந்திரம் சொல்லி உரு ஏற்றி, காமாலை
வந்தவர்களுக்குத் தெளித்து, உடம்போடு தடவி, தரையில் இறக்கி, தட்டோடு கவிழ்த்து வைத்து
விட்டு வருவாள். அஞ்சு, ஒன்பது என்று நாள் கணக்கு உண்டு. அதிக பட்சம் பதினாலு. ஒட்ட
இறங்கி விடும் காமாலை. என்ன அதிசயமோ? பாட்டி வைத்தியம் பிரபலம். அந்த மந்திரித்த மஞ்சள்
தண்ணி தட்டில் மெல்ல மெல்ல இறங்க இறங்க...காமாலை காணாமல் போகும். படிப்படியாக இப்படிப்
பலருக்கும் வைத்தியம் பார்த்து...தன் உடம்பை உருக்கிக் கொண்டாள் மரகதம் பாட்டி.
காமாலை இறக்கி இறக்கி...உங்க
உடம்புல வாங்கிக்கிறேளே பாட்டி....நாளைக்கு நீங்க படுக்கைல விழுந்தேள்னா நாங்க என்ன
பண்ணுவோம்...எங்க பாடு திண்டாட்டமாப் போயிடுமே...என்று அக்ரஉறாரமே வருந்தியதுதான்.
அதுபோலவே பாட்டியும் ஒரு நாள் போய்ச் சேர்ந்தாள். ஊரே துக்கம் விசாரித்தது. நாலு அக்ரஉறாரமும்
வந்து அஞ்சலி செலுத்தியது பாட்டிக்கு. காமாலையில் பிழைத்தவர்கள் காடு வரை வந்தார்கள்.
தகனம் முடியும்வரை நின்றார்கள்.
பாட்டீ...என் பேரன் மூணு நாளாக் கண்ணே திறக்காம இருக்கான்...என்னன்னு
வந்து பாருங்கோளேன்...என்று வீட்டு வாசலில் வந்து அழாக் குறையாய் நின்றவர்கள் அநேகம்.
ஒண்ணுத்துக்கும் கவைலைப்படாதே...நா இருக்கேன்....நா வந்து உன் பேரனை எழுப்பித் தரேன்...இதோ
புறப்டாச்சு....என்று ஓடுவாள் மரகதம் பாட்டி. அவர்கள் எல்லோரும் கொடுத்த காசிலும்,
கடனிலும், ஆதரவிலும்தான் குடும்பம் ஓடியது. . ஆனால் எந்தக் காலத்திலும் நெறி பிறழ்ந்ததில்லை.
அந்த ஒழுக்கமும் சீலமும்தான் இன்றும் முன் நின்று காப்பாற்றுகிறது.
இந்தப் பூர்வ கதையெல்லாம்
அவள் அறிய மாட்டாள். ஆனால் பையன் எப்படி? என்று அவர்கள் விசாரித்த விதம்தான் அநேகம்.
எல்லாத் துறைகளும் ஒருங்கிணைந்த கூட்டத்திற்குச் சென்ற இடத்திலெல்லாம் அலுவலரிடம் தன்
பெயரைச் சொல்லி பையன் எப்படி? பொறுப்பானவனா? ஒழுக்கமானவனா? நன்றாய் வேலை பார்ப்பானா?
தீய பழக்கங்கள் இல்லாதவனா? என்றெல்லாம் விசாரித்ததும், குறைந்தது பத்துப் பதினைந்து
பேர் வந்து தனக்குத் தெரிந்தும் தெரியாமலும்
கேட்டுப்போனதும் என்ன சபேசன்.....ஏன் இவ்வளவு பயந்து பயந்து விசாரிக்கிறாங்க...?
சென்னைலர்ந்து ஆள் வந்த மணியமாத்தான் இருக்கு....என்று அலுவலர் அவரிடம் கேட்டதும்....இன்றும்
மறக்க முடியாதவை. அவள் சகோதரிக்கு நிகழ்ந்த மண முறிவுதான் அவர்களை இந்த அளவுக்குத்
தீவிரமாய் விசாரிக்க வைத்திருக்கிறது என்பது பின்னால்தான் தெரிந்தது. தப்பில்லை என்று
தோன்றியது.
தனது முப்பத்தைந்தாவது வயதில் அகல்யா தன்னிடம்
வந்து சேர்ந்ததை சபேசன் நினைத்துக் கொண்டார். அன்று முதல் அவள் தனக்காகவும், அந்த வீட்டுக்காகவும்தான்
காரியமாற்றுகிறாள். பிறந்து, வளர்ந்து, ஓடியாடி, படித்து, ஊர்சுற்றி, வேலைக்குப் போய்
பல்லாண்டுகளாய் தனக்குப் பழகிய பிரதேசத்தை, நகரத்தை விட்டு அவருக்காக அவள் வந்து விட்டாள். ஏன்...நீங்க
இங்க மாறுதல் வாங்கிட்டு வந்திடுங்களேன்...என்று ஒரு வார்த்தை அவள் வீட்டில் யாரும் கேட்கவில்லை. வீடெல்லாம் பார்த்து
அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணியாச்சு....சாமான் செட் எல்லாம் வாங்கிப் போட்டாச்சு....அப்படியே
நுழைஞ்சு தீபம் ஏத்தி சாமி கும்பிட்டுட்டு சமையல் வேலையை ஆரம்பிக்க வேண்டிதான்....என்றார் சபேசன்.
மனதுக்குள் அவ்வளவு உற்சாகம். ஆனால் அவளிடம் அந்தத் துள்ளல் என்பது இல்லை. அந்தச் சின்ன
வயசில் அவ்வளவு அடக்க ஒடுக்கம். ரொம்பவும்
நிதானமாக செயல்பட்டாள். மிகுந்த பொறுப்போடு வளர்க்கப்பட்ட பெண்ணாகத் தெரிந்தது.
சபேசன்....உங்க ஒய்ஃப்பிட்ட
ஒரு ஃபேமிலி லுக் இருக்கு...அது ரொம்ப லட்சணம்...என்றார் வெங்கடாத்திரி. அலுவலகப் பொறியாளர்.
பாசமானவர். இஷ்டமாய் ஒவ்வொன்றும் விசாரிப்பார். குடும்ப விவகாரங்களில் ரொம்ப ஈடுபாடு.
ஆனால் அவருக்கு அமைந்ததுதான் சரியில்லை. ஒருவேளை அந்த பாதிப்பேதான் இந்த ஈடுபாட்டைக்
கொண்டு வந்திருக்கிறதோ என்னவோ?.
ஊரை விட்டுத் தள்ளிக் குடியிருந்தார். விமான நிலையம் தெரியுமா? அந்தப்
பக்கம் என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார். அம்புட்டு தூரத்திலயா வீடு கட்டினீங்க...?
என்று இவர் கேட்க...அது என் மாமனார் வாங்கிப் போட்டிருந்த இடம். எடுத்துக்குங்கன்னார்.
லோனப் போட்டு மள மளன்னு ஏத்திட்டேன்....இப்பத்தான்
கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகிட்டிருக்கு....என்று சொன்னார். அவர் பகுதியில்தான் ஒரு கொலை
விழுந்தது ஒரு முறை. அதுவும் ஒரு வார்டு கவுன்சிலர் பெண்ணை வெட்டிச் சாய்த்து விட்டார்கள். வீட்டுக்கு வீடு தண்ணீருக்கு வசதி செய்ததால் தங்கள்
லாரித் தண்ணி பிழைப்புப் போச்சு என்று பெண்ணென்றும் பார்க்காமல் இந்தக் கொலை பாதகத்தைச்
செய்து விட்டார்கள் பாவிகள். அது ஊருக்குள்ள நடந்தது...நான் தள்ளியில்ல இருக்கேன்...என்பார்
வெங்கடாத்திரி. அவர் பகுதி கொலை அவரைச் சிறிதும் பாதித்ததாகத் தெரியவில்லை. ஒரு முறை
இதுபற்றிக் கேட்டபோது....நானே என்னிக்குக் கொலை செய்யப் போறனோ தெரில....என்று சொன்னார்.
அவர் தைரியம் பற்றித் தெரியாதா?.
அப்படீன்னா உங்க ஒய்ஃப் தனியா இருப்பாங்களே...பயமில்லையா? என்றால்
அதெல்லாம் ஒரு பயமுமில்லை. அவளப் பார்த்து யாரும் பயப்படாம இருந்தாப் பத்தாதா? என்பார்
பதிலுக்கு. அவருக்கும் மனைவிக்கும் ஏழாம் பொருத்தம். அவர் மாடியில்...அந்தம்மா கீழே.
சாப்பிடும் நேரத்துக்குப் படியிறங்கி வருவார். மேஜையில் எல்லாம் வைக்கப்பட்டிருக்கும்.எடுத்துப்
போட்டுக் கொண்டு சாப்பாடு முடித்து திரும்பவும் மேலேறி விடுவார். ஒரு பையன்...அவனும்
மரைன் இஞ்சினியர். ஆறு மாசத்திற்கொரு முறை வந்து இருக்கீங்களா என்று எட்டிப் பார்த்து
விட்டுப் போவான். கப்பலிலேயே கழிந்தது அவன் காலம். அதிலேயே ஒரு பெண்ணையும் பிடித்துக்
கொண்டு விட்டான். வல் மேரேஜ். ஸாரி...ஸாரி...லவ்
மேரேஜ்...ஃபாஷனாக அப்படிச் சொல்லிக்கொண்டுதானே இப்போதெல்லாம் அலைகிறார்கள். அப்பனும்
ஆத்தாளும் இந்த லட்சணத்துல இருந்தா...பிள்ளைக என்ன செய்யும்? அது தன் வழியப் பார்த்திட்டுத்தானே
போகும்....? போய்ட்டான்.....!
அகல்யா குடும்பக் குத்து விளக்கு. பூஜை ரூம் எதற்கு....தினமும்
அவளைக் கும்பிடலாம் என்று தோன்றும். ஒரு வயதுக்கு மேல் மனைவி கடவுளுக்கு சமானமாகிவிடுகிறாள்தானே?
அவருக்கு எப்போதோ இது தோன்றி விட்டது. வகிடெடுத்துத்
தலைவாரிக் கொள்வது, பொட்டு வைத்துக் கொள்வது, வகிடு ஆரம்பிக்கும் இடத்தில் பளிச்சென்று
தெரிவதுபோல் குங்குமம் பதித்துக் கொள்வது, சீராக
திரேகம் மறைத்துப் பாங்காய்ப் புடவை உடுத்திக் கொள்வது என்று அவளது ஒவ்வொரு
அசைவையும், செயலையும் கூர்ந்து கவனித்தார் இவர். ஒரே ஒரு முழம் மல்லிகைப் பூ. அதற்கு
மேல் வைக்கப் பிடிக்காது அவளுக்கு. வளையமாகப் போட்டுக் கொண்டு முன் பக்கம் தொங்கவிடுதல்
என்பதெல்லாம் அறவே இல்லை. மெட்ரோபாலிட்டன்
சிட்டியில் இருந்து வந்தவள் என்கிற அடையாளம் ஏதுமில்லை அவளிடம். இந்த மடிப்பைக் கொஞ்சம் சரி பண்ணி விடுங்களேன் என்பாள்
சமயங்களில். புடவை முன் மடிப்பு நான்காய் விலகி நிற்கும். அவற்றை ஒன்று சேர்த்து அயர்ன்
பண்ணியது போல் இழுத்து விடுவார். இவர் சரி பண்ணியபிறகு செருகிக் கொள்வாள். அப்படியே
வாரி அணைத்துக் கொள்ளலாம் போலிருக்கும் அந்த நிமிடம். மனுஷன நிம்மதியில்லாம அடிக்கிறதே
இந்தப் பொம்பளைங்கதானே...!
எல்லோரோடும் சகஜமாகப் பழகுதலும், சிரித்து மகிழ்தலும், ஒன்றாக எதிர்த்
தரப்பு சென்ட்ரல் எக்ஸைஸ் கேன்டீனுக்குப் போவதும் வருவதும் என்று கலந்துகட்டித்தான்
இருந்தாள். ஆனாலும் தனக்கான ஒரு தனித்தன்மையை, ஒரிஜினாலிட்டியை விட்டுக் கொடுக்காமல்
பராமரிக்கும் திறன் அவளிடம் இருந்ததுதான். அஞ்சே முக்கால் ஆபீசுக்கு...அஞ்சு மணிக்கே
பலரும் இறங்கிப் போவதைப் பார்த்திருக்கிறார். இவர் அவளுக்குப் ஃபோன் பண்ணுவார். நில்லுங்கோ...வரேன்...என்று
சொல்வாளே தவிர ஒரு நாள் கூட அலுவலக நேரம் முன்பாக அவள் கீழே இறங்கியதில்லை. மற்ற பெண்கள்
அத்தனை பேரும் போயிருப்பார்கள். இவள் ஆறு மணி போலத்தான் சாவகாசமாய் வருவாள். எந்தச்
சலனத்திற்கும் ஆட்படாத திடமான மனசு....போனாப் போகட்டும்...அப்டியெல்லாம் வர முடியாது...இதுதான்
அவள் பதில். வேலையில் அத்தனை சின்சியர். அடேங்கப்பா...!
இந்தப் பாத்திரங்களெல்லாம் போறாது...ஒவ்வொரு காரியத்துக்கும்
என்னென்ன வேணும்னு நினைச்சுப் பார்த்து வாங்கணும்....என்று அவள் அக்காள் சொன்னபோது
சரி என்று மூவரும் கிளம்பினார்கள். தங்கைக்கு தனிக் குடித்தனம் அமைத்துக் கொடுப்பதில் அக்காவின் அக்கறை இவனை ஆச்சரியப்படுத்தியது. பாத்திரக்
கடையில் நுழைந்து வகைக்கு மூணு நாலு என்று அவர்கள் வாங்கியபோது வாயை மூடிக்கொண்டு வேடிக்கைதான்
பார்த்தார். பாதிப் பாத்திரக் கடை வீட்டுக்கு வந்து விட்டது.
தடங்கலில்லாம கரண்டி, அடுக்கு, வட்டை, டம்ளர்னு இருந்தாத்தான் சுணக்கமில்லாம
வேலை செய்ய முடியும்...பால் காய்ச்சிர ஏனம்னா அதுல நாலு இருக்கணும். குறைஞ்சது மூணாச்சும்.
அதனால இதெல்லாம் ஜாஸ்தின்னு நினைக்காதீங்கோ...பற்றுப் பாத்திரம் அதிகம் விழுந்தா வேலைக்காரி
வச்சிண்டு தேய்ச்சிக்கலாம். நீங்க ரொம்பச் சிக்கனம்தான்...எனக்குத் தெரியும். ஆனாலும்
அகத்துக் காரியங்கள்ல அதைக் காட்டப்பிடாது. சுங்கம் பிடிக்கப்படாது. தாராளமா இருக்கப் பழகிக்கணும்...சரியா...?
இவர் எதையும் குத்தமாக
எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் வீட்டின் தேவைகளை அவர் நன்கறிவார். எங்கப்பா அம்மாவோட
சேர்ந்திருந்த வாழ்க்கைல நான் கற்றுக் கொள்ளாததா? என்று நினைத்துக் கொள்வார்.
ஒரு மாசம் வரை இருந்துவிட்டு அகல்யாவின் அக்கா கிளம்பிப் போயாயிற்று.
சின்னஞ்சிறுசுக...நான் எத்தனை நாளைக்கு ஒண்டின்டு இருக்கிறது...? தோன்றியிருக்கலாம்.
இதுவரைக்கும் அவ எங்கள விட்டிட்டு இருந்ததேயில்லை. இப்பத்தான் தனியா விட்டுட்டுப் போறேன். என் தங்கையைக் கண்கலங்காம,
சந்தோஷமா வச்சிப்பேள்னு நினைக்கிறேன்....உங்க மேல எங்களுக்கு நல்ல நம்பிக்கை உண்டுதான்....இருந்தாலும்
ஒரு பேச்சுக்கு, மனச் சமாதானத்துக்குச் சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்கோ... என்று
வீட்டிலும், பிறகு ரயிலடியிலும் நீலாக்கா சொன்னதும், இவள் வண்டி நகர நகர சொரியச் சொரிய
அழுததும், கொஞ்ச தூரம் ஓடிப் போய்க் குனிந்து பார்த்து டாடா சொன்னதும், கை காண்பித்ததும்,
ரொம்பவும் கலங்கடித்தது.
அவளும் ஓட்டி விட்டாள் முப்பதாண்டுகளை.
ஒரு பையனுக்குக் கல்யாணம் முடித்து அவனும் இப்போது சென்னையில் குடித்தனம். அவனோடவே
போய் இருந்திடுவோமே என்று சொந்தமாக சென்னையில் ஒரு அடுக்கக வீடு வாங்கும் யோசனையை அவள்தான்
முன் வைத்தாள். அந்தப் பெண்ணும் அம்மா...நீங்க ரெண்டு பேரும் எங்களோடவே வந்திடுங்கோளேன்...எதுக்குத்தனியா
இருக்கணும் என்கிறது. எல்லாம் காலம் கொடுத்த கொடை. பெற்றோர்கள் ஆசீர்வாதம்...
வேலைக்குப் போன பிறகு வீட்டுச் சாப்பாடுங்கிறதே அவனுக்கு இல்லாமப்
போச்சு. படிக்கிறதுக்குன்னு காலேஜ் போய் உறாஸ்டல்ல இருந்து உடம்பைக் கெடுத்துண்டுட்டான்.
அப்புறம் வேலைக்குப் போயாச்சு...கல்யாணமும் பண்ணியாச்சு....என் கையால சமைச்சுப் போட்டு
அவன் சாப்பிட்டதா எனக்கு அறவே ஞாபகம் இல்லை....அந்தப்
பொண்ணும் நம்ம பெண்ணாட்டம் சொல்றது...வந்திடுங்கோன்னு...அவாளோட போய் மீதிக் காலத்தை
அவாளுக்குன்னு இருந்து செய்து கழிச்சிட்டுப் போவோமே...என்ன நஷ்டம்? குறைஞ்சா போறோம்?
எப்படிச் சிந்திக்கிறாள்? சரியாய் வருமா?
கேட்டு விட்டாள். அவளின் இஷ்டம் புரிந்து போனது இவருக்கு. அதை மீறி
இதுநாள் வரை எதுவுமே செய்ததில்லையே...பின் இதை மட்டும் எப்படி மறுப்பது? ஏன் மறுக்க
வேண்டும்?
கடைசி காலத்தில் கொஞ்சம் தனியாய் இருக்க வேண்டும் என்கிற ஆசை உண்டுதான்
அவருக்கு. ஏதோ கோயில் குளம்னு போனோம், ஒரு கச்சேரிக்குப் போனோம். சினிமாவுக்குப் போனோம்
(அவ எங்கே வரப்போறா) .அப்டியே கிளம்பி ஒரு ஓட்டல்ல போய் உட்கார்ந்து நாலு இட்லியை முழுங்கினோம்.(அவளுக்கு
சப்பாத்தி குருமாதான் இஷ்டம்).நிம்மதியா வீடு வந்து சேர்ந்தோம்னு இருக்குமே...அந்தச்
சின்ன ஆசை கூட நிறைவேறாதோ? அதையும் விட்டுக் கொடுத்திற வேண்டிதானா? இவ்வளவு ஆவலாகச்
சொல்கிறாளே? அவளோட இந்தக் கடைசி கால விருப்பத்தை மறுக்கணுமா? தேவையில்லாம முறுக்கிக்கணுமா?
அப்டி முறுக்கிண்டு நின்னு அதனால என்னதான் லாபம்? போடா சொக்கான்னு தனியா விட்டிட்டுப் போய்ட்டான்னா? அப்புறம் ஒத்த மரத்துக் குரங்கு கணக்கால்ல
நிக்கணும்? அவ மனசு கோணாம இதையும்தான் செய்திட்டுப்
போவோமே? என்ன கெட்டுப் போறது? முடிவு செய்து
கொண்டார் சபேசன்.
நான் என்னோட ஐட்டமெல்லாம்
இந்த சூட்கேஸ்ல அடைச்சாச்சு... இனிமே நீங்கதான் உங்களோடத ரெடி பண்ணிக்கணும்....என்று
வந்து நின்றாள் அகல்யா.
முதலில் அவளைக் கொண்டுபோய்
பையனோடு சேர்த்து வைத்து விட்டுத் திரும்பி வந்து அடுத்த ரௌன்ட்ல சாமான்களை பேக் பண்ணி
அனுப்பும் வழியைப் பார்ப்போம் என்று முடிவு செய்து கொண்டார் சபேசன்.
--------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக