30 ஜனவரி 2024

 

 

    சிறுகதை,                                  “மொட்ட..."         பிரசுரம்-பேசும் புதிய சக்தி    

      தெருக்கோடியில் 'மொட்டை' வருவது பாட்டி கண்ணில் பட்டுவிட்டது.  வழக்கமாய்ப் புருவத்திற்கு மேல் தடுப்பாக இடது கையை வைத்து தூரத்தில் வருபவர்களைப் பார்ப்பாள். ஆனால் மொட்டையை அடையாளம் கண்டு கொள்ள பாட்டிக்கு அது தேவைப்படவில்லை. காரணம் மொட்டைதான் பாட்டி மனதில் நிலைத்து நிற்கிறானே...? பார்த்தீர்களா....எனக்கும் “னே...“ என்று வந்து விட்டது. “ரே...” என்றுதான் நான் என் வயசுக்கு அவரைச் சொல்ல வேண்டும். அதுதான் மரியாதை. ஆனால் பாட்டி அவரை அப்படி விளித்து விளித்து எங்களுக்கும் அது மனதில் படிந்து போயிருப்பதால் அடிக்கடி நினைத்து நினைத்து அதைத் திருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. மொட்டை என்பது இட்ட பெயரா அல்லது பட்டப் பெயரா என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. பாட்டிதான் ஒரு நாள் மொட்டையின் பெயரைச் சொல்லி விளித்தாள். ஏ...மொட்ட...அவன் கணக்கத் தீர்த்திடு....என்று நம்பியார் பேசும் வசனம்தான் அப்பொழுதே எங்களுக்கு நினைவுக்கு வரும்.

      பாட்டிக்கு மொட்டையை அடியோடு பிடிக்காது. அவர் எங்கள் வீட்டில் அடியெடுத்து வைத்த நாள் முதல் அப்படித்தான். என்னதிது...யார் யாரையோ கூட்டிண்டு வர்ற? என்று சொல்லி முகம் சுளித்தாள். பாட்டிக்கு புது ஆள் யார்  வீட்டுக்கு வந்தாலும் பிடிக்காது என்பது பொது விதி.  அதற்கான காரணமெல்லாம் கேட்கக் கூடாது. பிடிக்காதென்றால் பிடிக்காதுதான்.  ஜெகந்நாதன்னு பேரை வச்சிண்டு பரப்பிரம்மம் ஜெகந்நாதம்னு எங்கயாச்சும் இருக்க வேண்டிதானே? இங்க வந்து ஏன் அடையறது?.

      அவளுக்குப் பிடிக்க வேண்டுமென்றால் புதிதாய் வீட்டுக்கு வருபவர்கள் யாரென்றாலும் கை நிறைய....ஊகூம்....பை நிறைய ஏதாச்சும் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அதுவும் அம்மாவிடம் கொடுக்காமல், பாட்டியைப் பொருட்படுத்தி...இந்தாங்கோ பாட்டி...என்று மரியாதையாய்க் குனி்ந்து வளைந்து கொடுத்து விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். அந்தக் கணத்தில் பாட்டி நன்றாக ஆசீர்வாதம்தான் பண்ணுவாள். அது மனதார வந்து விழுந்த ஆசியாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கு தொடர்ந்து கியாரண்டி இல்லை. அது நின்று நிலைக்க வேண்டுமானால், வீட்டுக்கு வரும்போதெல்லாம் ஏதேனும் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும். வெறுங் கையை வீசிக் கொண்டு வந்து நின்றால் துவம்சம்தான். அந்தக் கணத்தோடு முடிந்தது அவர் கதை. வெறுங்கை வெங்கடவா....ஆடவா பாடவா...ன்னு இவனை யார் வரச் சொன்னது? - காது கேட்கவே சொல்லி விடுவாள். தப்பித் தவறி அம்மா ஏதானும் அவருக்கென்று எடுத்து அல்லது ஒதுக்கி வைத்தால்....மொட்டைக்குமாச்சு...தட்டைக்குமாச்சு....அவனுக்கென்ன வேண்டிக் கெடக்கு...குழந்தேளுக்கு திருப்தியாக் கொடு...அது போதும்...என்று அம்மாவிடமே எரிந்து விழுவாள். இனிமே நா யாருக்குப் பயப்படணும்...என்று அடிக்கடி முனகுவாள். எதன் தாக்கமோ அப்படித்தான் வார்த்தைகள் வரும். நாங்கள் பாட்டி என்ன சொன்னாலும் பதில் பேச மாட்டோம். அம்மா உட்பட. அது அப்பாவின் மேல் உள்ள மரியாதை.

      கோபம் வந்தால் பாட்டியின் மூஞ்சி அப்படிக் கோணும். அதை, அந்தக் கணத்தை யாரேனும் சட்டென்று ஒரு மின்னல் வெட்டில் படம் பிடித்தால் தேவலை. அதைப் போலவே நிறைவாய்க் கொண்டு வந்து கொடுப்பவர்களைப் பார்த்து எங்கள் பாட்டி மனம் நிறைந்து சிரிக்கும் அந்தப் பொக்கை வாய்ச் சிரிப்பையும் கண் கொள்ளாக் காட்சியாகக் காணத்தான் வேண்டும். என்ன ஒரு கிழ மலர்ச்சி?

      உள்ளே என்ன இருக்கிறது என்று யாருக்குமே தெரியாதுதான். பாட்டிக்கும்தான். ஆனால் கொண்டு கொடுக்கும் சுமை கனமாய் இருந்தாலே போதும்.  பாட்டியின் மனது நிறைந்து போகும். ஏதோ...பெரிஸ்ஸாக் கொண்டு வந்திருக்கான்....என்று தானே திருப்தி கொண்டவளாய் மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டு ஆசீர்வதிப்பாள்.

      அப்படித்தான் மொட்டை ஒரு முறை பாட்டிக்கு சீதனம் கொண்டு வந்தார். வாங்கிய போது பாட்டியின் கைகள் ஒரு அடி கீழே இறங்கியதை நான் கண்டேன். யப்பாடீ....என்ன கனம்டா....என்று சொல்லியவாறே,...என்னவோ...ஏதோ...என்று கூடப் பார்க்காமல், கேட்கவும் வாய் வராமல், அப்படியே மூலையில் கிடாசினாள் அதை.

      இருந்து, ரெண்டு தோசை சாப்டுப் போயேண்டா....என்று வழக்கமாய்ச் சொல்லும் பாட்டியும், அதைத்தானே தெனமும் முழுங்கிண்டிருக்கேன்...ஒரு வாய் காப்பி மட்டும் குடுங்கோ....என்று அம்மாவைப் பார்த்துக் கேட்டு வாங்கிக் குடித்து விட்டுப் போகும் மொட்டை... நா அப்புறமா வர்றேன்.....என்று உடனே நகர்ந்ததுதான் அன்றைய அதிசயம். அவருக்கே தெரிந்திருந்ததோ என்னவோ அதன் மதிப்பு? அல்லது உள்ளே இருக்கும் சரக்கை உடனே பாட்டி பார்க்க நேர்ந்தால் என்ன ஆகுமோ? என்ற பயமாகவும் இருந்திருக்கலாம்.   நிச்சயமாகச் சொல்கிறேன்....நாம் யாருமே ஊகிக்க முடியாது அதை. இதுவோ அல்லது அதுவோ....என்று தெரிவு செய்யக் கூடியதாகவும் சொல்லிப் பார்க்க முடியாது.

      பத்து விராகன் எடை என்பது ஒரு பலம். மூன்று தோலா - ஒரு பலம். எட்டுப் பலம் கொண்டது ஒரு சேர். நாற்பது பலம் ஒரு வீசை. இப்போது ஓரளவு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு வீசைப் புளி கொடப்பா....என்று அந்தக் கால ஆசாமிகள் கேட்டு வாங்கியிருப்பார்கள், நினைவிருக்கலாம். ஒரு வீசை, ஒரு படி, அரைப்படி, கால் படி என்பதெல்லாம் பழைய அறுபது எழுபதுகளின் அளவைகள்....பிறகுதான் இந்தக் கிலோ விவகாரமெல்லாம்.

      மொட்டை கொண்டு வந்தது வீசையா...அல்லது படிக் கணக்கா? என்றால் படிக் கணக்கு. ஆனாலும் பூனைப் பீயைப் பொட்டணம் கட்டிக் கொண்டு வந்தாப்போல.....என்று பாட்டி கொதித்தெழுந்தபோதுதான் எல்லாருக்குமே அது என்னவாய் இருக்கும் என்று ஓரளவு ஊகிக்க முடிந்தது. ஏனென்றால் அதுபோல் ஏற்கனவே ஒன்றிரண்டு முறை எங்கள் அப்பா மூலம் அது நடந்திருக்கிறது. ஓட்டலில் வீணாய்ப் போவானேன் என்று பொறுக்கிச் சேர்த்துச் சேமித்துத் தூக்கி வந்தது. கழுதை விஷ்டையானாலும் கை நிறைய....என்று.

      தன் பிள்ளை அப்படிக் கொண்டு வந்தால் அது கோடி பெரும்.  வறுமையின்பாற்பட்ட தற்காலிகத் தீர்வுக்கான காரண காரியம் அது. . வீணாய்ப் போவதை அப்படிக் காசாக்குவதில் என்ன தவறு? என்கிற அதி தீவிரத் தேவை இருந்த காலம் அது.

      அங்கேர்ந்து இதைச் சொமந்துண்டு வந்து கொடுத்துட்டுப் போறாம்பாரு...அவன் கையைக் கடுவாய் பிடுங்க....- என்று பாட்டி திறந்து பார்த்து விட்டு அப்படியே திண்ணை ஓரத்தில் சாய்த்து விட்டாள். சடக்கென்று திரும்பி கம்பி அழியைப் பற்றிக் கொண்டு மொட்டையை அடிக்க...ஸாரி....அழைக்கப் பாய்ந்தவள், கண்ணுக்குத் தெரியாத தூரத்திற்கு அந்தப் பறவை பறந்து விட்டதை எண்ணி முணு முணுவென்று முனகிக் கொண்டே குளிக்கப் போனாள். எள்ளும் கொள்ளும் வெடிக்குது? மொட்டைக்கும் சேர்த்து முழுக்குப் போட்டாளோ என்னவோ? ஆனால் அது நடக்கவில்லை. மொட்டை வருவது நிற்கவில்லை. வேறு கதி...பாவம்தான் யோசித்தால்.

      நமக்குன்னு  எல்லாமும் எப்டி வந்து சேருது பார்....அதை என் கையாலே தொட மாட்டேன்....நீயே என்னவோ பண்ணிக்கோ...பிச்சு.....என்று அம்மாவிடம் ஓதிவிட்டுப் போனாள் பாட்டி. பிச்சு என்பது பிச்சம்மாளின் சுருக்கம்.

      பிச்சம்மாள்னு பேரு வச்சிருக்காளே...அப்போ பாட்டி பிச்சையெடுத்தாளா? என்று பிற்காலத்தில் என் பையன்  தன் பாட்டியை நினைத்துக் கேட்டது இப்போதும் எனக்கு ஞாபகம் வந்து கொண்டுதான் இருக்கிறது. பிச்சையெடுத்த மாதிரிதான் வாழ்க்கை இருந்தது என்றாலும், வீடு வீடாய்ப் போய் அம்மா...பிச்சை போடுங்க...ன்னு கத்தினால்தான் பிச்சையா?

               மாமி....ஒரு கரண்டி காபிப் பொடி கடன் தாங்கோளேன்....மாமி...ஒரு ஆழாக்கு அரிசி தாங்கோளேன்..ரெண்டு ரூபா கடன் தாங்கோளேன்....மாமா சம்பளம் வந்தவுடனே தந்துடறேன்....என்று அண்டை அயல் என நாளொரு மேனியும், பொழுதொரு வீடுமாய்ப் போய் நின்றாலும் அதுவும் ஒருவகைப் பிச்சைதானே...! திருப்பிக் கொடுத்தது பாதி...கொடுக்காதது மீதி, போனால் போகட்டும்  என விட்டது சில...என்றுதானே அந்நாளைய காலட்சேபம் கழிந்தது.

      வாழ்க்கையில் வறுமை என்பது இருக்கலாம். வறுமையே வாழ்க்கையாக இருந்தால்? மனிதன் எந்தக் கஷ்டம் வேண்டுமானாலும் பட்டு விடலாம்...ஆனால் தரித்திரக் கஷ்டம் மட்டும் படவே கூடாது. அவளை அணைத்துக் கொண்டோமானால் அது லேசில் நம்மை விடாது என்பது எங்கள் குடும்பத்தின் தீர்க்கமான அடையாளம்.

      அதனால்தான் வாசலில் பலாப்பொடிக்காரன் வந்தபோது மொட்டை கொண்டு வந்த அந்த சீதனத்தை விலையாய்க் கொடுத்து அம்மா அதை வாங்க வேண்டியிருந்தது. ரெண்டு படிப் புளியங்கொட்டைக்குப் பலாப்பொடி எவ்வளவுதான் கிடைத்து விடும்? அவன் அதைக் கொடுத்ததே யதேஷ்டம். மனசுள்ள ஏழைப் பங்காளனுக்குத்தான் அந்த தாராளம் வரும். அதையும் விட்டாளா பாட்டி? பிடியாய் வந்து நிற்கத்தான் செய்தாள்...

      காயும் கனியும் கட்டியளக்கணும்....தெரிஞ்சிதா...? என்ன போடறே நீ....ஏமாத்தப் பார்க்காதே....! என்று அந்தக் அரைப்படி அளவையை வாங்கி கையை வளைத்து அணைத்துப் பிடித்து அளந்தாளே பார்க்கலாம். நிச்சயமாய்ச் சொல்லலாம். இப்படியும் அளக்க முடியும் என்பதை அந்தச் சிறு வியாபாரி அந்தக் கணத்தில்தான் தன் வாழ்நாளில் முதன் முதலாய்ப் புரிந்து கொண்டிருப்பான். அரைப்படிக்குக் கால்படி இலவசம் என்பதான அளவை அது.  அதற்குப் பிறகு படு ஜாக்கிரதையாய் அவன் வியாபாரம் தொடர்ந்திருக்கும் என்பது திண்ணம்.  

      யம்மாடீ....இது நமக்குக் கட்டுபடியாகாது பாட்டி....நீங்க துட்டு கொடுத்தே வாங்கிக்குங்க....என்று கோபப்பட்டு சல்லென்று புளியங்கொட்டைப் பையை எடுத்து அவன் விசிறிப் போட்ட போது.....

      நன்னாய் இருப்பாய் நீ....அப்டிச் சொல்லாதே...உன் குழந்தேளெல்லாம் உன்னை நன்னா வச்சுக் காப்பாத்துவா....குடுத்துட்டுப் போ....என்று நல்ல வார்த்தை சொல்லி...அடுத்து அவன் பதில் வரும் முன்னே அளந்து போட்ட பாத்திரத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு உள்ளே நகர்ந்து விட்டாள் பாட்டி....இருந்து பேச்சு வளர்ந்தால்தானே வம்பு?

      ம்மா....ஏன் அவனைத் திட்டிண்டே இருக்கே.....வந்தா வந்துட்டுப் போறான்...இங்கதான் அவனுக்குக் குளிக்க வசதியாயிருக்கு....அங்கே ஓட்டல்ல சதா பொம்பளேல்லாம் கொல்லைல உட்கார்ந்து பாத்திரம் தேய்ச்சிண்டிருப்பா....மறைவாக் குளிக்கிறதுக்கு அவனுக்கு ஒரு இடமில்லே..அந்தக் ஊனக் காலை வச்சிண்டு அவன் படுற அவஸ்தையிருக்கே...அதக் கண்கொண்டு பார்க்க முடியாது....நம்பாம்தான் அவனுக்கு வசதி, கெதி எல்லாம்.  கிணத்தடிலதான குளிக்கிறான்....பச்சைத் தண்ணிதானே... வெந்நீரா போட்டுத் தரச் சொல்றான்...பேசாம விடுவியா....?-ரெஸ்ட் டயத்துக்கு வந்திருந்தபோது அப்பா சொன்னார். அவருக்கு இரக்கம் ஜாஸ்தி.

      ஓட்டலில் உடன் வேலை பார்ப்போரை அரவணைத்துச் செல்லும் தயாள குணம். எல்லோரையும் தன் சகோதரனாய்ப் பார்க்கும் பாவம்....!

      ஆமாண்டா...இன்னும் அது ஒண்ணுதான் குறைச்சல்.......ஏன் போட்டுத் தந்தா என்னன்னு கேட்ப போலிருக்கு...உனக்குன்னு சிநேகம் வந்து வாய்க்கறது பார்....அதச் சொல்லணும்..... - பாட்டி அலுத்துக் கொண்டு வழுக்கைத் தலையை இழுத்துப் புடவைத் தலைப்பால் சுற்றி மறைத்து முடங்கிப் போனாள். ஆயுள் முழுக்கத் தன் கணவனிடம் அடிமையாய் இருந்து கழித்த வாழ்க்கை, இப்பொழுது எதைத் தொட்டாலும் எகிறத் துடித்தது. ரெண்டு ஆச்சட்டி வௌக்கை கை தவறி உடைச்சுட்டேன்னு  சோறு போடாமே நாள் பூரா வீதீல நிறுத்தி வச்சி கொடுமை பண்ணினவராக்கும் உன் தோப்பனார்.....! - பாட்டி மனதில் இன்னும் அணையாத கனல்....!

      பாட்டிக்கு ஏனோ மொட்டையின் மீது இரக்கம் பிறந்ததேயில்லை. ஒரு விபத்தில் மாட்டி, இடது காலின் உள்ளே நீண்ட கம்பி வைத்து ஆபரேஷன் பண்ணித் தைத்து, அந்த விறைப்பான காலை  அகட்டி அகட்டி...இழுத்து இழுத்து மொட்டை நடந்து வரும் காட்சி, பார்க்கும் எவரையும் இரக்கத்திற்குள்ளாக்கி விடும். அந்த ஓட்டலுக்கு வேலைக்கு வந்து, எங்கள் வீட்டிற்கு மொட்டை அறிமுகமாகி ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. எத்தனையோ முறை வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார். ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும்போதெல்லாம் அந்தக் காலின் மீதுதான் எங்கள் கவனம் போகும். பயமாய் இருக்கும்...இப்டியெல்லாமுமா உண்டு?  தூங்கும் நேரம் தவிர நாளின் மற்றைய பொழுதுகள் பூராவும் அவர் படும் அவஸ்தை காணச் சகியாது. வலிய ஒரு காட்சியை அனுபவிப்பது கொடும் வேதனையைத் தரும்.  இடது கால் நீ்ட்டியமணியமாய்த்தான் இருக்கும். அதை அவரால் மடக்க முடியாது. தூக்கத்தில் அந்தக் கால்கள் படும் அவஸ்தை, நடுக்கம், மனசு துவண்டு போகும். நம் எதிரிக்குக் கூட இப்படியெல்லாம் வரக் கூடாது என்று அஞ்சி மனது பிரார்த்திக்கும்.

       வயதில் பெரியவர்கள் யார் முன்னேயும் அருகில் அமராமல் சற்றுத் தள்ளித்தான் தரையில் தன் இருக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார் மொட்டை. கால் நீட்டினமேனிக்கு மரியாதைக் குறைவாய் ஆகிவிடக் கூடாது என்கிற கவனமுண்டு. அவருக்கு வசதி ஒரு நாற்காலியிலோ கட்டிலிலோ உட்காருவதுதான். பெரியவர்கள் தரையில் உட்கார்ந்திருக்கும்போது அது சாத்தியமா? பரவாயில்லை என்றாலும் கேட்க மாட்டார். அந்த மரியாதையெல்லாம் உண்டுதான்.  உயரமான இருக்கையில்தான் அவரால் சற்று சுலபமாக உன்னி எழ முடியும். மர நாற்காலிதான் சரி.  ப்ளாஸ்டிக் நாற்காலி என்றால் கவனம் தேவை.  இடது கையை ஊன்றி எழும் விசையில் நாற்காலி வழுக்கி நகர்ந்ததோ போச்சு....அப்படி ஒரு முறை எங்கள் வீட்டிலேயே தடாலடியாய் விழுந்து அதுவும் உடைந்து போனது. அவரும் ரெண்டு நாளைக்குப் படுத்த படுக்கையாகிப் போனார்.  நல்ல வேளை...பாட்டி அப்போது ஊரில் இல்லை.  தன் இன்னொரு பிள்ளையைப் பார்க்க மண்ணச்சநல்லூர் போயிருந்தாள். வருஷாந்திரப் பயணம்.

      அங்கே ஒரு பெரும் கூட்டம் உண்டு. ஒரே குடும்பமாய் ஏழெட்டு உறவு முறைகள் ஒன்று கூடி முப்பது எண்ணிக்கைக்கு மேல் ஒரு பெரிய வீட்டில் கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள். தினமும் பந்திச் சாப்பாடுதான் அங்கே. யாரோ சம்பாரிச்சுக் கொண்டு வர்றா...யார் யாரோ உட்கார்ந்து சாப்பிடுறாங்கங்கிற கதைதான்.  அங்கு பாட்டிக்கு வரவேற்பு அதிகம். ஏனென்றால் மாலாடு என்கிற ஒரு தின்பண்டத்தை பாட்டிதான் செய்வாள். பக்குவமாய்ப் பிடிக்க ஒரு பக்குவம் வேண்டும் அதற்கு. பொட்டுக் கடலை மாவு, ஜீனி, சுத்தமான பசு நெய்....என்று கலந்து உருண்டை உருண்டையாய்ப் பிடித்து வைக்கும் பண்டம் அது. மாவு எவ்வளவு வறுபட வேண்டும்....அதில் நெய்யை எந்தளவுக்கு ஊற்றி எந்தளவுக்கு அதைப் புரட்டி எடுக்க வேண்டும். எந்தப் பக்குவத்தில் அதை அடுப்பிலிருந்து இறக்க வேண்டும், எந்தக் கைச்சூட்டில் அதை உருண்டையாய்ப் பிடிக்க வேண்டும் என்று பாட்டிக்குத்தான் அத்துபடி. பிடித்தால் பிடித்த பிடியில் நிற்க வேண்டுமே...!

      மரகதம் பாட்டியிடம் அவர்களும் எத்தனையோ முறை கற்றுக் கொள்ளப் பார்த்தார்கள்தான். கற்றுக் கொடுத்தால், பிறகு, தான் அங்கே காலடி வைக்க முடியாதே என்று நினைத்தாளோ என்னவோ, காலம் பூராவும் டபாய்த்துக் கொண்டுதான் இருந்தாள். ஊர் போய்த் திரும்புகையில் இரண்டு பெரிய சம்படம் நிறைய எங்களுக்கும் அந்த மாலாடுப் பொக்கிஷத்தைத் தூக்க முடியாமல் தூக்கி வருவாள். ஓசிக்கு ஈயோட்ட முடியுமா?  போதாக் குறைக்கு வருஷம் பூராவும் பயன்படும் விதத்தில் பனை ஓலை விசிறிகளை (அது அந்த ஊரில் பிரபலமோ என்னவோ...) பத்திருபது என ஒன்றாய்ச் சேர்த்துக் கட்டிக் கிழித்துக் கொண்டு வந்து நிற்பாள். எங்கே போனாலும், எதைச் செய்தாலும் தலைச்சன் பிள்ளை இருக்கும் சந்நிதானத்திற்கு அம்மையநாயக்கனூர் ரயிலடி வந்து இறங்கி,  பஸ்ஸில் பாட்டி வீடு வந்து சேரும் போது, பெரிய சொத்து பத்தோடு காலடி வைப்பதாய் எண்ணி மனசு ஆறுதல் படும் அவளுக்கு.

      மூன்று ஆண், மூன்று பெண் என்று கூடிக் குதூகலமிடும் எங்கள் வீட்டில் பாட்டியின் மாலாடு வருகை எங்களை சொர்க்கத்திற்கே கொண்டு போய் நிறுத்தி விடும். வானரங்கள்...அதுக்குள்ளே தூக்கிண்டு ஓடறது பார்...! பத்து நாளைக்காவது வச்சிருந்து கொடு..கெட்டே போகாதாக்கும். .பாதி பாதியா உடைச்சுக் கொடு...அப்பத்தான் நீடிச்சி வரும்.  வருஷத்திற்கு ஒரு முறைதான் அம்மாதிரி சந்தோஷ சாகரத்தில் மிதக்கக் கிடைக்கும். முக்காலே மூணு வீசம் வறுமையிலும், பட்டினியிலும்தான் கழிந்தது எங்கள் வாழ்க்கை. ஆனால் வீட்டில் அது ஒரு குறையாய்ப் பட்டதேயில்லை யாருக்கும். பழகிப் போச்சு...வேறென்ன? ஒராள் ஓட்டல் சம்பாத்தியத்தில் எத்தனைக்குத்தான் முழம் போட முடியும்? ஊரெல்லாம் கடன்....பணமாயும், பொருளாயும்....என்னத்தைச் சொல்ல....?

      சும்மா இந்தப் பாட்டைப் பாடி என்ன செய்ய? மொட்டை வருவதை இதனால் நிறுத்த முடிந்ததா என்றால் இல்லையே? என்னா பாட்டி...தூக்கம் பலமோ? என அசட்டுப் பிசட்டு என்று கேட்கக் கூடாதவரிடம், கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டுக் கொண்டு வந்து நின்றால்? ஏற்கனவே பாட்டிக்குப் பிடிக்காது. பிறகென்ன சகஜ பாவம்? தெரிய வேண்டாமா?

      அத்தனை சகஜமா, சர்வ சுதந்திர பாத்தியதையாய்  இருக்கானாம் இந்த வீட்ல....? பேசிக் காட்டறான்....என்று தளர்ந்த தோளில் மோவாயை இடித்துக் கொண்டு மூஞ்சியையும் திருப்பிக் கொண்டு  பாட்டி இருக்கும் காட்சி, பார்ப்போருக்குச் சிரிப்பைத்தான் வரவழைக்கும்.

      போதாக்குறைக்கு மன்னி...மன்னி....என்று அழைத்துக் கொண்டு அடுப்படி வரை மொட்டை நுழையும் காட்சி பாட்டிக்கு அடியோடு பிடிப்பதில்லை. ஆனால் அம்மா என்றும் எதுவும் சொன்னதில்லை. வாங்கோ...உட்காருங்கோ....என்று சொல்வதோடு சரி...கொடுக்க ஏதாவது இருந்தால்தானே...பள்ளிக்குச் சென்றிருக்கும் பிள்ளைகள் மதியம் பசியோடு வந்து நிற்குமே...என்கிற கவனம். அதுகளை வயிற்றை நிரப்பி அனுப்பினாலே போதும்....அன்றைய கடமையும் முடிந்த மாதிரிதான்.

      ம்மாமி....இந்தாங்கோ...பிள்ளேள் கண்ணுல படாம வச்சிண்டு சாப்பிடுங்கோ...என்று நாள் தவறாமல் ஒரு பொட்டலத்தைக் கொண்டு வந்து அம்மா பாட்டியிடம் கொடுப்பதையும்....பாட்டி அதை ஒளித்து வைத்துக் கொண்டு பிய்த்துப் பிய்த்து வாயில் போட்டுக் கொள்வதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். அம்மா எங்கள் காது கேட்கவே (சற்று சத்தம் கம்மியாய்த்தான்)  அப்படிச் சொல்வதால், நாங்களும் பாட்டியிடம் போய்...“எனக்கு பாட்டீ....” என்று  ஓசிக்கு நின்றதில்லை. எங்களைப் பார்க்க நேரிட்டால் வாய் மெல்லுவதைக் கூட நிறுத்திக் கொண்டு கண்ணை மூடி ஜெபம் பண்ணுவது போல் பாவனை செய்வாள் பாட்டி

      பிச்சு...நீ நன்னாயிருக்கணும்....ஆத்தங்கரைல போய்க் குளிச்சிட்டுத் திரும்பும்போது சீவனே இல்லடியம்மா...எப்டி வாங்கினே...? ஏது துட்டு? ஏதுடியம்மா...நாள் தவறினாலும் என் பாடு தவறாமப் பண்றியே...? உன்னை எம்புட்டெல்லாம் திட்டியிருக்கேன்...ஏசியிருக்கேன்...நீ நன்ன்ன்னா இருக்கணும்...உன் குழந்தேளெல்லாம் படிச்சு வேலைக்குப் போயி உங்களை சந்தோஷமா வச்சிப்பா....நா சொல்றேன் பாரேன்...என் வார்த்தை பலிக்காமப் போகாதாக்கும்....-அம்மா கண்களில் நீர் தளும்ப அந்தத் தண்ணிக் காப்பியைச் சுடச்சுடக் கொண்டு வந்து பாட்டியிடம் நீட்டுவாள். யப்பாடீ.....ஈஸ்வரா.....! என்று பாட்டி அதைத் தொண்டைக் குழிக்குள் விடும் காட்சி நம்மை உருக்கி விடும். மொத்த வாழ்க்கையிலும் மறக்கவே முடியாத பல சோக நினைவலைகள் உண்டு இப்படி.

      எங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ....அம்மா பாட்டியைக் கவனிக்கத் தவறவே மாட்டாள். சந்தைக்குச் சரக்குப் போட்டு எடுத்துப் போகும் உதயமய்யர்-சாரதாம்பாள் குடும்பத்திற்கு மிகவும் கடமைப்பட்டவள் அம்மா. இவள் கேட்டு அவர்கள் இல்லையென்று ஒரு நாளும் சொன்னதேயில்லை. மூட்டை மூட்டையாய் சாக்கில்  அடுக்கி நிறுத்தி வியாபாரத்திற்குத் தயாராய் நிற்கும் பட்சணங்கள் நடுவே ஓரமாய் சுவரில் அம்மா கடனும் கோடு கோடாய் எழுதிக் கணக்கிடப்பட்டிருக்கும். அதுபாட்டுக்குச் சேர்ந்து கொண்டே போகும். அவர்கள் முறுக்கு சுற்றக் கூப்பிடும்  நாளில் அன்றைய  சேவைக் கட்டணத்தில்  இந்தக் கடன்  சிறிது சிறிதாய்க் கழியும். அம்மா முறுக்கு சுற்றப் போனாள் என்றால், எங்களுக்குள் மகிழ்ச்சி புகுந்து கொள்ளும். அன்று மாலை தின்பதற்குக் கிடைக்குமே...! பிச்சு மாமி...குழந்தேளுக்குக் கொண்டு போய்க் கொடுங்கோ...ஆசையாக் காத்திண்டிருக்கும்....- சாரதாம்பாள் மாமியின் கருணையே கருணை...!

      எத்தனை வீடுகளுக்கு கல்யாண முறுக்கு சுற்றப் போயிருக்கிறாள். அது கை வந்த கலை அம்மாவுக்கு.  பிச்சு மாமி...உங்க குழந்தேளை வரச் சொல்லி, நம்பாத்துல சாப்பிடச் சொல்லுங்கோ.....-இங்கிருந்து சாப்டுட்டு ஸ்கூலுக்குப் போகட்டும்.....காமு மாமி, நாகலட்சுமி மாமி என்று  எத்தனையோ விசேடங்களின்போது இப்படியான அழைப்பு உண்டுதான். ஆனால் அம்மா எங்களைக் கூட்டிப் போனதேயில்லை. கூட வேறு இரண்டு மாமிகளும் முறுக்கு சுற்ற வந்திருக்கிறார்கள்தானே...அவர்கள் வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறதுதானே...அவர்களை மட்டும் ஏன் சொல்லவில்லை? என் குழந்தைகள் மீது மட்டும் என்ன அத்தனை கரிசனம்? இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழத் தெரியாதா எங்களுக்கு? மாட்டவே மாட்டாள் அம்மா. அதுதான் எங்களுக்கு, எங்கள் வீட்டுக்கான மதிப்பு. மரியாதை. வறுமையிற் செம்மை.

      முடியாமல்தான் இருந்தோம் மூன்று வேளைக்கு. ஏன் இரண்டு வேளையே தாளம் போட்ட நாட்கள் எத்தனையோ! ஒரு வேளையும் இல்லாமற் போயிருக்கிறதுதான். ஆனால் அப்பா எங்களை மதிய உணவுக்கு அனுப்பியதேயில்லை. காமராஜ் கொடுத்த இலவசக் கல்வித் திட்டத்தை மட்டும் ஏற்றுக் கொண்டார்தான். இலவச சீருடை கூடப் பரவாயில்லை என்று வாங்கிக் கொள்ளச் சொன்னார். ஆனால் மதியச் சோற்றுக்கு வேண்டாம் என்று மறுத்தே விட்டார். அது கௌரவப் பிரச்னை ஆனது அப்பாவுக்கு. அப்படி விவேகமாய் வளர்ந்தவர்கள் நாங்கள்.

      மொட்டையைப் போன்று ஒருவர், நாங்களே தனது உறவு என்று வந்து நிற்கும்போது எப்படி அவரை மறுதலிப்போம்? எப்பயும் போல் ஓட்டலில் ரெஸ்ட் டயத்துக்கு வரவும், படுத்துத் தூங்கவும், ராத்திரிப் படுக்கைக்கு வரவும் போகவுமாகத்தான் கடைசி வரை இருந்தார் மொட்டை. பாட்டியும் சொல்லிச் சொல்லி அலுத்துத்தான் போனாள்.

      பொழுது விடிஞ்சு பொழுது போனா இவன் வந்து ஒண்டிக்கிறான். அந்தக் கக்கூஸ் பக்கம் ஒரு அவசரத்துக்குப் போக முடிலை. இவன் போய் அடைச்சிண்டுடறான்...என்ன கருமாந்திரம் இது? - அத்தனையும் சொல்லி அலுத்தாயிற்றுதான்.

      ஒரு கட்டத்தில் எல்லாம் குறைந்தும் போனது. இருந்தா இருந்துட்டுப் போறான். அந்த ஒரு ஜீவன் வந்து நீட்டி நிமிர்ந்துட்டுப் போறதுல வீடு தேய்ஞ்சா போகப் போறது? விட்டு விட்டாள் அடியோடு.

      காரண காரியமில்லாம ஏன் ஒருத்தரை வெறுக்கறே? அல்லது வெறுக்கிற மாதிரி நடந்துக்கிறே? அவனால உனக்கு என்ன துன்பம்? ஏதோ வரான், படுத்துக்கிறான்....போறான்....வேறே ஏதாச்சும் இடைஞ்சல் பண்ணினானா? அப்படீன்னா சொல்லு... இனிமே வராதேன்னு சொல்லி நிறுத்திப்புடறேன்....அண்ணா...அண்ணான்னு சொல்லிண்டு நம்பளையே சுத்திண்டு திரியறான்....இருந்துட்டுப் போகட்டுமே....நமக்கும் சிலபேர் இருக்கான்னு அவனுக்கும் வாழ்க்கைல ஒரு பிடிப்பு ஏற்படுமில்லையா...? இதெல்லாம் உனக்கு நான் சொல்லித்தான் தெரியணுமா? எவ்வளவு அனுபவங்களைச் சேமிச்சவ நீ...? வாழ்க்கைல எத்தனை கஷ்டங்களைத் தாண்டி வந்தவ ? எவ்வளவு துன்பங்களை எதிர் நீச்சல் போட்டுக் கடந்தவ நீ? இப்டி அவனை வெறுக்கிறது உனக்கே நல்லாயிருக்கா?  மனசு ஒப்புக்கிறதா? கொஞ்சம் யோசிச்சுப் பார்...புரியும்.... அப்புறம் உன் இஷ்டம்.....

      அப்பா அத்தோடு முடித்துக் கொண்டார். பாட்டியின் அமைதி நம்பிக்கையளித்தது. அவள் புடவைத் தலைப்பால் அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டதும், மூக்கைச் சிந்தியதும், நெஞ்சம் விம்மியதும் பார்க்க மிகவும் வேதனையாயிருந்தது. கடந்து வந்த இடர்பாடான பாதைகளை மனிதர்களால் ஆயுளுக்கும் மறக்கவே முடிவதில்லைதான்.

      ன்று பொழுது விடிந்த போது மொட்டை படுத்திருந்த இடம் காலியாயிருந்தது.

      என்னாச்சு....சொல்லாமப் போக மாட்டானே? என்றார் அப்பா. எனக்குத் தெரியாம ஏதாச்சும் திட்டினியா அவனை? என்று பாட்டியைக் கடிந்தார்.  காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அவர் ஓட்டலை அடைந்த போது அங்கும் மொட்டை வந்திருக்கவில்லை என்பது  மேலும் பயத்தை உண்டு பண்ணியது. சொந்த ஊருக்கு எதுவும் வண்டியைக் கட்டி விட்டாரோ? என்றெல்லாம் நினைத்தோம்.

      ஏதேனும் தற்கொலைக்கு முயன்றிருந்தால்? அப்படியும் பயம் வந்தது.  அன்றியும் கடந்த ரெண்டு  மூன்று நாட்களாகவே பாட்டி ஏதும் சொல்லவில்லையே அவரை? எப்பொழுதும் போல் வந்து போய்க் கொண்டுதானே இருந்தார்? நாங்கள் இப்படி யோசித்துக் கொண்டிருந்தோம்.

      ஒரு மாதம் மேல்  ஓடி விட்டது. எந்தத்  தகவலும் இல்லை. அவரை மறக்க ஆரம்பித்திருந்த நேரம். அப்பாதான் அடிக்கடி நினைவுபடுத்திப் பேசிக் கொண்டிருந்தார். ஓட்டல்ல கணக்குத் தீர்த்துத்தான் வாங்கிண்டு போயிருக்கான். ஏது கணக்கு? அப்பப்போ வாங்கினதுபோக மீதம்...அவ்வளவுதான். ஒரு வார்த்தை சொல்லாமப் போயிட்டானே...? என்ன பிரச்னையோ? அவா அவா மனசுல இருக்கிறது மற்றவாளுக்கு எப்படித் தெரியும்?

      ன்றுதான் அந்த அதிசயம் நடந்தது.

      வாசலில் வந்து நின்ற டாக்சியிலிருந்து இறங்கினார்கள் அவர்கள்.

      மரகதம் பாட்டி....பிச்சம்மாள் கிருஷ்ணய்யர் வீடு இதுதானே....? - கேட்டுக் கொண்டே உள்ளே  நுழைந்தார் அவர்.

      யாரது வந்திருக்கிறது? தெரிலயே...நேக்கு...குனிஞ்சு வாங்கோ.. நிலை இடிக்கப் போறது.....-சொல்லிக்கொண்டே உள்ளேயிருந்து தட்டுத் தடுமாறி  ஓடி வந்தாள் பாட்டி.

      என்னைத் தெரிலயா பாட்டி....நாந்தான் மணி......என்று சொல்லிக் கொண்டே சந்தோஷமாய் நெருங்கினார் அவர்.

      ஓ....நம்ப மரகதமணியா...? நொச்சியம் கிச்சா மாமா பிள்ளை மரகதமணிதானே?  மண்ணச்சநல்லூர் மணியன்தானே? ஓட்டல்லாம் நன்னா நடக்கிறதா?   வாடா...வாடா...வாடா....-மகிழ்ச்சி பொங்க வரவேற்றாள் மரகதம் பாட்டி.. வாயிலில் சிலர் நிற்பதைக் கவனித்துத் தயங்கினாள்....

      என்ன தயக்கம்.? .அதான் நா வந்திட்டனே....உள்ளே வாங்கோ....என்று பின்னால் திரும்பி வெளியே நின்றவர்களை அழைத்தார் அவர்.

      ஓ...ஊமப் பொண்ணு ஈஸ்வரியா..? அதுதானே உம்பேரு....?.....மாலையும் கழுத்துமா என்னடீ இது...திடு திப்னு.? பகவானே...எம்புட்டு அழகு இந்தப் பொண்ணு..? - கேட்டுக் கொண்டே நெருங்கி அந்தப் பெண்ணின் முகத்தை ஆதுரமாய் வழித்து முத்திக் கொண்டாள் பாட்டி. அமைதியாய் நின்ற மாப்பிள்ளையையும் உற்றுப் பார்த்தாள் மரகதம் பாட்டி. திறந்த வாய் அப்படியே நின்று போனது. யார்ரா இது.....? கேள்வி ஒலியாய் உருப்பெறாமல் ஒளியாய் ஊடுருவியது.

      அதிர்ந்து நின்றவளின் வற்றிய கண்களிலிருந்து சரம் சரமாய்க் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. நெஞ்சை இரு கைகளாலும்  பிடித்துக் கொண்டு அங்கே மாப்பிள்ளைக் கோலத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தார் மொட்டை.. என்கிற ஜெகந்நாதன்.

      திருச்சினாப்பள்ளி சர்வ மங்கள சமாஜத்திலேர்ந்து இவர் ஜாதகம் வந்தது. ஊர் பக்கத்துல லால்குடிதானாமே...? விசாரிச்சதுல ரொம்ப வேண்டியவாளாப் போய்ட்டா... அலமேலு ஜாதகத்தோட அப்டி ஒரு பொருத்தம்....நா பேசறேனே அது போறாதா? என்று  பார்த்த ஜோர்ல சம்மதம் தெரிவிச்சிட்டார் மாப்பிள்ளை.....அவளுக்கு வேளை வந்துடுத்துன்னு மற்ற எதையும் பொருட்படுத்தாமே ரெண்டு குடும்ப சம்மதத்தோட  சட்டுப் புட்டுன்னு கோயில்ல வச்சு சிம்பிளாக் கல்யாணத்தை முடிச்சிட்டேன்....உத்தமர் கோயில்லதான் எல்லாமும் நடந்தேறித்து. நேரா இங்கதான் கூட்டிண்டு வர்றேன் உங்ககிட்டே ஆசீர்வாதம் வாங்கணும்னு கடைசில பார்த்தா மாப்பிள்ளை உங்களுக்குத் தெரிஞ்சவராவே போயிட்டதுதான் இதுல ரொம்ப விசேஷம்.....விவரமெல்லாம் சொன்னார் - மனசுக்குப் பரம சந்தோஷமாயிடுத்து...- நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போனார் மரகதமணி.

      தம்பதிகள் மரகதம் பாட்டியின் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்க, அம்மாவும் நாங்களும் பின்னால் அமைதியாய் நிற்க, மனசார, ஆனந்தக் கண்ணீர் மல்க, உதடுகள் துடிக்க அனைத்து இஷ்ட தெய்வங்களையும், குல தெய்வத்தையும்  மனதில் நினைந்து வணங்கி பரிபூர்ணமாய் ஆசிர்வதித்த பாட்டி, “ஓடிப் போய் உங்க அப்பாவைக் கையோடு அழைச்சிண்டு வா..” .என்று என்னைப் பார்த்துச் சொல்ல....ஓட்டலை நோக்கி  சந்தோஷமாய் வேகமெடுத்தேன் நான்.

                                    ----------------------------------

 

                                   

     

 

       

     

 

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை             வி த்யாபதி அந்தத் தெ...