நாவல் உஷாதீபன், (94426 84188)
“ஸம்ருதி“ – 36-பி கோவிந்தசாமி நகர் 8-வது தெரு, மடிப்பாக்கம்,
சென்னை-600 091.
குமுதம் “மாலைமதி” 16-10-2026 முதல் 31-10-2026 இதழ் பிரசுரம்
”கடலில் தவழும் அலைகள்”
-------------------------------------------------------------------------
அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்திருந்த மோகனுக்கு
ஏனோ என்றும்போல் அன்று வேலை ஓடவில்லை. தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த காற்றாடி
கூட இவன் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்பது போல் மெல்ல வட்டமடித்துக்
கொண்டிருந்தது. சுத்தமாக் காத்தே இல்லையே! யாரு ஸ்லோவாக்கினது? என்று கேட்டுக்கொண்டே எழுந்து சென்று ரெகுலேட்டரைத் திருகினான். அது தலையைத்
தலையை ஆட்டிக் கொண்டு மெதுவாய் வேகமெடுத்தது. குளிர்ந்த காற்று மெல்லக் கீழே இறங்கி சட்டைக்குள்
புகுந்து குளிர்வித்தது. அங்கிருந்தமேனிக்கே தலையைச் சாய்த்து வாசல்வரை பார்த்தான்.
மனம் ஒரு நிலையிலில்லை. எப்பொழுதும் ஏதாவது பிரச்னைகள் அலைபாய்ந்துகொண்டுதானிருக்கிறது.
மனித மனம் அமைதி காண்பதுதான் எப்போது? அன்றாட நிகழ்வுகளில் சற்றே சிக்கல்கள் உள்ளவற்றை
நாமே பிரச்னையாய் நினைத்துக் கொண்டால் எப்படி? தெளிந்த நீரோடையாகவேவா வாழ்க்கை இருக்கும்?
அவ்வப்போது அழுக்கும் கலங்கல்களும் கசடாய்ச் சேர்ந்துதானே வரும்? ஒதுக்கிவிட்டு நகரப்
பார்ப்பதுதான் விவேகம்!
நீண்ட
பட்டாசாலையாய்க் கிடந்த அந்த இடம் ஒரு காலத்தில் குதிரை லாயமாய் இருந்தது என்று சொன்னார்கள்.
அப்போது அந்த இடம் என்னமாதிரியாய்க் காட்சியளித்திருக்கும் என்று இவன் மனம் கற்பனை
செய்து கொண்டது. புல்லும் கொள்ளும் வாசனையாய் மூக்கைத் துளைப்பதுபோல் சமயங்களில் இவன்
உணருவதுண்டு. இப்போது அலுவலகமாய் உள்ளது. இவன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அடுத்தாற்போல்
ஒரு முற்றம். அங்கேதான் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும். மதியச் சாப்பாட்டை
முடித்த பணியாளர்கள் அங்கேதான் கை கழுவுவார்கள். தட்டுக்களை கழுவுவார்கள். பருக்கைகளும்,
காய்கறிச் சக்கைகளுமாய்க் கிடக்கும். அதை சாப்பிட்ட
தட்டிலிருக்கும்போதே தனியே திரட்டிக் குப்பைத்
தொட்டிக்குள் சேர்க்க வேண்டும் என்ற உணர்வு ஏன் எவருக்குமில்லை? நாம்தானே நம்மிடத்தைக்
கூடியவரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்?
வலது மூலையில் கழிவறை. ஆண்களும் பெண்களும் ஒரே வாசலில் நுழைவிடமுள்ள அவ்வழியே சென்று பிரிந்து கொள்ள வேண்டும். தினசரி
இவனைச் சங்கடப்படுத்துவது இதுவும், இவன் அமர்வுக்கு எதிரே பணியாளர்கள் சத்தமாய் வாய்
கொப்பளித்துக் காறித் துப்புவதும் மூக்குச் சிந்துவதுமான நடவடிக்கைகள். தன் பார்வைக்கு
அது படக்கூடாது என்று இவன் எதிரே இருந்த கம்பிக் கிராதியில் காலண்டர்களையும், பணிகள்
சம்பந்தமான வரைபடங்களையும் மாட்டி அந்த இடத்தை மறைத்திருந்தான். அப்படிச் சொல்வதை விட
தன்னை மறைத்துக் கொண்டிருந்தான் என்பதுதான் சரி. அவரவர் தன் காரியம் ஆனால் சரி என்றுதானே மனிதர்கள் இயங்குகிறார்கள்.
அசிங்கம், அநாகரீகம் யார் பார்க்கிறார்கள்? அந்த முற்றத்திற்குப் பிறகும் ஆபீஸ் அறைகள்
அமைந்திருப்பதுதான் குற்றம். இப்படித்தான் சொல்லிக் கொள்ள வேண்டும். அவனுக்கு அமைந்த
இடம் அது. கிடைத்த இடத்தில் தன்னை நெகிழ்த்திக் கொள்வதுதானே மனித இயல்பு?
தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன் மோகன்.
யாரும் அவனிடம் அவன் பிரிவு சம்பந்தமாக எந்தக் குறையும் சொல்லிவிடக் கூடாது. என்ன லேட்டு?
என்று வாய் தவறிக் கூடக் கேட்டு விடக் கூடாது. அது அதற்கென்று உள்ள நேரத்திற்கு முன்பே
முடிந்து விட வேண்டும். காலையில் பத்து மணியானால் கச்சிதமாக இருக்கையில் இருப்பான்.
மாலை ஐந்தே முக்கால் ஆனால் எழுந்து போய்க்கொண்டேயிருப்பான். இவன் இருப்பை வைத்து நேரத்தைக்
குறித்துக் கொள்ளலாம்தான். முதல் நாள் வேலை பாக்கி, அன்றைய புதிய வேலைகள் என்று எல்லாமும்
முடிக்கப்பட்டிருக்கும் அவனைப் பொறுத்தவரை. அப்படி முடிக்க முடியவில்லையா, யாரும் அவனுக்குச்
சொல்ல வேண்டியதில்லை, அவனே கூடுதல் நேரம் இருந்து அதை முடித்துவிட்டுத்தான் கிளம்புவான்.
இல்லையென்றால் ராத்திரி அவனுக்குத் தூக்கம் வராது. அவன் எழுந்து வெளியேறுவதைப் பார்த்துத்தான்
மணி ஆகி விட்டது என்று சொல்லிக் கொள்வார்கள்.
ஒரு
டீ அடிச்சிட்டு வந்து உட்காருவோம் என்று அதற்கு மேல் தங்கள் வேலையைத் துவக்குபவர்கள்தான்
அந்த அலுவலகத்தில் அதிகம். அது அவர்களின் பழக்கம்.
அவர்கள் பாடு. தனக்கு அது உதவாது. என் பாணி
இது என்று இருந்து கொண்டிருந்தான் மோகன். அலுவலகம் காலியாக இருக்கும் நேரம்
அவன் மட்டும் எத்தனையோ தடவைகள் தனியாக இயங்கிக் கொண்டிருந்திருக்கிறான். தனக்கான வேலையைச்
செய்து முடிக்காமல் அவன் மனது வேறு எதிலும் பிறழ்ந்ததில்லைதான். ஒருவகையில் அந்தக்
கட்டடத்தில் தனி ஒரு ஆளாய் அமர்ந்து வேலை செய்வது கூடச் சற்றுப் பயமான விஷயம்தான்.
நீண்டு கிடக்கும் பட்டாசாலை தாண்டி வாசல் கேட் வரை ஓகோ என்று கிடக்கும்….துளி சத்தம்
இருக்காது. வாட்ச்மேன் வாசலில் இருக்கிறானா அல்லது டீக்கடையில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறானா
தெரியாது. தானேதான் காவலோ என்று தோன்றும் மோகனுக்கு.
எந்நேரமும் போக்குவரத்தும், இரைச்சலும் குறைவில்லாது நீக்கமறப் பரவியிருக்கும் அங்கே..
அரசாங்கக் கட்டடம் என்பதால் வாடகை மிச்சம் என்கிற வகையில் அங்கே அந்த அலுவலகம் இயங்கிக்
கொண்டிருந்தது. ஆனாலும் நகருக்குள் இருக்கிறது ஆபீஸ் என்று எல்லோருக்குமே
ஒரு சந்தோஷமுண்டுதான். அலுவலகம் முடிந்து செல்கையில் அருகிலுள்ள சென்ட்ரல் மார்க்கெட்டில்
காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்கள். உதிரி மல்லிகை சீசன் என்றால் அள்ளி
அள்ளிக் கொடுப்பார்கள். விலை அவ்வளவு சல்லிசாய் இருக்கும். பெண் பணியாளர்கள் மதியம்
மூன்று மணியைப் போல் அங்கே சென்று கூடி விடுவார்கள். எங்கே அளந்து அளந்து போட்டுத்
தீர்ந்து போகுமோ என்கிற கவலையில் மடி நிறைய மல்லிகைகளைக் கட்டிக் கொண்டு வந்தால்தான்
பூரண திருப்தி. மறுநாள் அலுவலகம் முழுக்க மல்லிகை மணம் கம கமவென்று வீசிக்கொண்டேயிருக்கும்.
பெண் பணியாளர்கள் அதிகம் என்பதால் திரும்பின பக்கமெல்லாம் தலையை அலங்கரிக்கும் மல்லிகைப்
பந்து காண்க் கண்கொள்ளாக் காட்சியாய் இருக்கும்.
ஏன்
வந்து அரைமணியாகியும் இன்று வேலை ஓடவில்லை.
நாள் முழுக்க வெறுமே உட்கார்ந்திருந்தாலும் ஒன்றும் பாதிக்கப் போவதில்லைதான். ஏனென்றால்
அவன் பிரிவில் அவசரமாக இருந்தவற்றையெல்லாம் முடித்து விட்டான். புதிதாய் வந்தால்தான்
உண்டு. புதியவற்றிற்கு நாற்பத்தெட்டு மணி நேரம்
அவகாசம் உள்ளது. அதற்குள் முடித்துவிடலாம்தான். அலுவலரிடமிருந்து முக்கியமான ஒரு கோப்பில்
உத்தரவினை எதிர்பார்த்தது அவன் மனம். எதனாலும் அவனுக்கு லாபமோ நஷ்டமோ கிடையாது. அப்படியான
எதிர்பார்ப்பும் அவனிடம் இல்லை. விதி முறைப்படி எது உண்டோ அதை எழுதி அது ஓ.கே. ஆகும்போது
தான் மதிக்கப்படுவதாக ஒரு திருப்தி. நிறைவு. உண்மையில் தான் மதிக்கப்படுகிறோமா என்று
எதிர்பார்ப்பது கூடத் தவறுதான் என்று நினைப்பவன் இவன். விதிமுறைகள் மதிக்கப்படுகின்றனவா
என்பதே சரி. இவன் எழுதியது எந்தத் திருத்தமும் இன்றி ஆணையாகும்போது கிடைக்கும் நிறைவு
இருக்கிறதே அதற்கு ஈடேயில்லைதான்.
மோகன்
தன் பிரிவு வேலையை முடிப்பதற்குப் பிரயத்தனப் படுவதுபோல் மற்றவர் எவரும் அவ்வலுவலகத்தில்
இல்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம். அப்படித்தான் தோன்றியது இவனுக்கு. எதற்கும் அலட்டிக்கொள்வதாக
இல்லை என்பதுபோலான இருப்பில் பலரும் இருந்தனர். பிரிவுக்கு வந்திருக்கும் தபால்களுக்கு
மூன்று தினங்களுக்குள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்பது விதி. அதை யார் பொருட்படுத்துகிறார்கள்?
அது தன்போக்கில் எப்பொழுது நிகழ்கிறதோ அப்போதுதான். நான் மனுக்கொடுத்து ஒரு மாசத்துக்கும்
மேலாச்சே சார் என்று வந்து நிற்கும் பொது ஜனத்தைப் பார்க்கப் பரிதாபமாய் இருக்கும்.
அப்டியா…இன்னொன்ணு எழுதிக் கொடுத்திட்டுப் போங்க என்று அசால்ட்டாய்ச் சொல்பவர்களைக்
காணும் போது மோகனின் மனம் படாத பாடு படும். இதையெல்லாம் வரைமுறைப் படுத்தும் இடத்தில்
தான் இல்லையே என்று மனது ஏங்கும். பொதுமக்களுக்காகத்தானே அலுவலகங்கள். அவர்களது கோரிக்கைகளுக்குத்தானே
முன்னுரிமை. அதைக் காலம் கடத்துவதற்கும் ஒரு அளவில்லையா? மனசாட்சியற்ற மாக்கள் என்று
நினைத்துக் கொள்வான் இவன். எதையும் மெனக்கெட்டால்தான் செய்து முடிக்க முடியும்
என்ற எண்ணமுள்ளவன் இவன். இருக்கையில் இருந்தமேனிக்கே எதுவும் நடக்காது. எழுதி எழுதி
அடுத்தடுத்த பிரிவிற்கு அனுப்பிப் பெற வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் அது காலதாமதம்
ஆகும். சமயங்களில் பிரச்னையும் ஆகும். தன்னையும் பாதிக்கும். எதிர்ப் பிரிவினரையும்
பாதிக்கலாம். எதற்கு வம்பு? தன் பிரிவிற்குத் தேவையான விபரங்கள் மற்ற பிரிவுகளில் இருந்து
பெற வேண்டும் என்றிருந்தால் அப்பிரிவுக்குச் சென்று அவர்களின் வேலைக்குக் கேடு இல்லாமல்
அவர்களின் சாதகமான அனுமதியுடனே தனக்குத் தேவையானவைகளை அவனே எடுத்துக் கொண்டு வந்து
தன் பிரிவின் வேலையை அன்றன்றைக்கே முடித்து விடுவான். இதுதான் இவன் தன் சர்வீசில் கண்ட
உண்மை. இதைப் பலரும் செய்வதில்லை. அதனால்தான் வேலைகளும் தாமதமாகின்றன என்பதுதான் யதார்த்தம்.
.
குறிப்பாக
திங்கள்கிழமை நடக்கும் கூட்டத்திற்குச் செல்லுமுன் அவனிடம் நிலுவை என்று எதுவும் இருக்கக்
கூடாது. இதுவரை இருந்ததும் கிடையாது. அதனால்தான் அவனிடம் அந்தக் குறிப்பிட்ட பிரிவினை
ஒப்படைத்திருந்தார்கள். மனு நீதி நாள் அன்று கலெக்டர் வாங்கு வாங்கென்று வாங்கி விடுவாரே
என்ற பயம் எல்லாருக்கும் உண்டுதான். ஆனால் அதற்கும் அசராத சிலரும் அங்கே இருக்கத்தான்
செய்தார்கள். இருபத்திநாலு மணிநேரம், நாற்பத்திஎட்டு மணி நேரம் என்று அ வகாசம் நிர்ணயி்த்து
அனுப்பப்படுவார்கள். அந்தக் கெடுபிடி இல்லையென்றால் இங்கே எதுவுமே முடியாது என்றுதான்
தோன்றும். அதற்காக முடிந்தது, முடிந்தது என்று சொல்பவர்களுக்கு ஏதேனும் சிறப்புப் பாராட்டுக்
கிடைக்குமா என்றால் அதெல்லாம் இல்லைதான். அது அவரவர் கடமை. அதற்கென்ன சிறப்புப் பாராட்டு?
பத்தோடு பதினொன்று. அவ்வளவே. கடமையைச் செய்…அதற்குத்தானே உனக்குச் சம்பளம்? என்கிற
விதிதான் அங்கே ஸ்தாபிதம்.
திருச்சியில்
இருந்து மாறுதலில் வரும்போதே இவனைப் பற்றிய விபரங்கள் எல்லாமும் அந்த அலுவலகத்திற்குத்
தெரிந்திருந்தன. அப்பாடா! என்று மூச்சு விடுவதுபோல் தூக்கிக் கொடுத்து விட்டார்கள்.
தவறு, சுமத்தி விட்டார்கள் என்பதுதான் சரி. வேலைகளை, பொறுப்புகளைக் கை கழுவுவதுதானே
இன்று பெரிய சாமர்த்தியமாக இருக்கிறது. அதில் யார் திறமைசாலி என்பதுதான் இன்று மதிக்கப்படும்
விஷயம்.
திருச்சியில்
இருந்த அலுவலகத்தில் எதிலிருந்து கொஞ்ச நாளாவது விடுபடுவோம் என்று இவன் நினைத்துக்
கொண்டு சொந்த ஊருக்கு மாறுதலில் வந்தானோ அப்படி வந்த இடத்திலும் அதுவே அவன் தலையில்
விடிந்தது. இத்தனை நாள்தான் பாடாய்ப்பட்டு, ஓடாத் தேய்ஞ்சுட்டு வர்றேன். வந்த எடத்திலும்
இதுதானா? என்று அலுத்துக் கொண்டான். அங்கு தூக்கிய சுமையை இங்கும் தூக்கு என்று சுமத்தி
விட்டார்கள்.
அலுத்துக்
கொண்டான் என்றால் அவனுக்குள் என்று பொருள். எதையும் வாய்விட்டுச் சொல்ல மாட்டான். வந்த
இடத்தில் எதற்கு எடுத்த எடுப்பிலேயே கெட்ட பெயர்? ஆரம்பத்திலேயே முகம் சுளிப்பதை யாரும்
விரும்ப மாட்டார்கள். கொஞ்ச நாளைக்கு செய்து காண்பித்து விட்டு, பிறகு அதிகாரமாக, உரிமையோடு
கேட்க வேண்டும். அப்பொழுதுதான் தன் பேச்சு எடுபடும். புது இடத்தில் ஆரம்பத்திலேயே வாயைவிட்டால்
ஒன்று திமிர் பிடித்தவன் என்பார்கள் அல்லது வந்ததும் வராததுமா என்னங்க இப்டி? முதல்ல
கொடுக்கிறத வாங்கிட்டு சரின்னு வேலையப் பாருங்க என்று அட்வைஸ் பண்ணுவார்கள். உள்ளுர்ல
இருக்கணுமா வேணாமா? என்று மிரட்டுவதுபோல் பேசுவார்கள். என்னவோ இவர்கள் முயற்சி செய்து
வாங்கிக் கொடுத்தவர்கள் போல். அவனவன் பல்லாண்டுகளாக
வெளியூரில் குப்பை கொட்டி, முடி நரைத்துக் காலம் போன கடைசியில் உள்ளூருக்கு வந்து சேர்தல்
என்பதுதான் பெரும்பாலும் பலருக்கும் வாய்த்திருக்கிறது அங்கே. சற்றே முன்னதாகத் தப்பித்தவன்
தான் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தான் இவன்.
குறிப்பிட்ட
பிரிவை ஒப்படைத்தபோது, சரி சார்...இவ்வளவுதான்
அவன் சொன்னது. சிரித்த முகத்தோடு அவன் பெற்றுக் கொண்டதைப் பார்த்து, மேலாளர் ஆல் த பெஸ்ட் என்று கை குலுக்கினார். அப்படியே
இடிச்ச புளியாக வந்து உட்கார்ந்தவன்தான். இன்றுவரை எந்தக் குறையுமின்றித் தன் வேலைகளைப்
பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனைப் பொறுத்தவரை
ஒரே ஆறுதல் உள்ளுரில் இருக்கிறோம் என்பது. வீட்டுச் சாப்பாடு. சற்றுத் தாமதமானாலும்
வீட்டிற்குச் சென்று அம்மா கையால் சாப்பிடும் சுகமே தனி. மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்குச்
செல்லப் போகிறோம் என்கிற எண்ணமே ஒரு மகிழ்ச்சிதான்.
வெளியூரில்
இருந்துகொண்டு, தேடித் தேடிச் சென்று பல இடங்களில் சாப்பிட்டு சாப்பிட்டு எல்லாமும்
அலுத்து விட்டது அவனுக்கு. ஒரு கட்டத்தில் உணவு விடுதிகள், மெஸ்கள் என்று சாப்பாடே
அலுத்துப்போய் பழமாக வாங்கி வைத்துக் கொண்டு தின்று கொண்டிருந்தான்.
சற்று
வயிற்றுக் கோளாறு உள்ளவன் அவன். வெளியூரில் இருக்கையில் அறையில் மிளகுப்பொடி, சீரகப்
பொடி, கருவேப்பிலைப் பொடி என்று அம்மா செய்து கொடுத்தவைகளை வைத்துக் கொண்டிருந்தான்.
மதியச் சாப்பாட்டிற்கு பொட்டணம் போட்டு வைத்துக் கொள்வான். மெஸ் சாப்பாடெல்லாம் உதவாது
அவனுக்கு. சாம்பார் கொண்டுவந்தால் குறுக்கே கையைக் காண்பித்து மறுத்து விடுவான். இவன்
கொண்டு போன ஏதேனும் ஒரு பொடியைச் சாதத்தில் தூவிப் பிசைந்து சாப்பிட்டுக் கொள்வான். ஆசைக்குக் கூட நூடுல்ஸ், பீஸா, அது இது என்று எதையும்
தொட்டதில்லை அவன். அப்படி ஆசையாயிருந்தால் ஊருக்கு லீவில் செல்லுகையில் அம்மாவிடம் சொல்லி செய்யச் சொல்லுவான்.
இந்த
ஒரு கரண்டியத்தாம்மா அவன் எண்பது நூறுன்னு விலை போடறான்...அநியாயம்ல....என்பான் அம்மாவிடம்.
காசைக் கரியாக்குவது என்பது ஓட்டலில் சாப்பிடுவதுதான் என்று தோன்றிக்கொண்டேயிருக்கும்
அவனுக்கு.
அதனாலென்னடா
ராஜா...சின்ன வயசுதானே...ஆசையாத்தான் இருக்கும்... வேணும்போல இருந்தா வாங்கிச் சாப்பிடேன்...காசு
போனாப் போயிட்டுப் போகுது....அப்படிச் சிக்கனமா இருந்து யாருக்குக் காசு சேர்க்கப்
போறே....என்பாள் அம்மா.
மோகன்
அம்மாவுக்கு ஒரே ஆண் பிள்ளை. கல்யாணம் கழிந்து இனி குழந்தையே பிறக்காது என்று டாக்டர்
உறுதி செய்துவிட்ட பின்னர் பதினைந்தாண்டுகளுக்குப்பின் பிறந்தவன் அவன்.. சாண் பிள்ளையானாலும்
ஆண்பிள்ளை.
எனக்குக்
குழந்தை பாக்கியம் இல்லைன்னு எந்த டாக்டர் சொன்னது? அவர் யாரு இதை முடிவு பண்றதுக்கு?
நான் ஜெயிச்சுக் காட்டறேன் பாரு....என்று தொடர்ந்த சிகிச்சைகளின் மூலமாகவும், நல்ல
ஊட்டச் சத்து உணவுகளின் மூலமாகவும், அம்மாவைப் பல மடங்கு தேற்றி, தன்னையும் கவனமாகக்
கவனித்துக் கொண்டு கடைசியில் வெற்றி கண்டே விட்டார் நாகநாதன். மோகனின் தந்தை.
அதற்குப்
பின் அவர்களுக்கு மூன்று பெண்கள் பிறந்தது.. கடைசியாகக் கருத்தரித்திருந்தபோது அம்மாவுக்கு
வெட்கம் பிடுங்கித்தின்றது இன்னும் அவன் மனதில் அப்படியே இருக்கிறது. ஐம்பது வயதிலுமா?
என்று பலரும் மறைவாகக் கேலி செய்தார்கள். ஆனால் தங்கக் கட்டியாய் அம்மா ஒரு பெண் குழந்தையைப்
பெற்றெடுத்துத் தந்தாள். அதுதான் கடைசித் தங்கை கல்யாணி. அப்பா ஒரு சினிமா ரசிகர்.
பராசக்தி படத்தின் கல்யாணி பெயரை முதல் குழந்தைக்கே வைக்க வேண்டும் என்பது அவரின் அவா.
அம்மாதான் மறுத்து மறுத்து, இரண்டு குழந்தைகளைத் தாக்காட்டிவிட்டாள். மூன்றாவதுக்கு
அப்பா விடுவதாயில்லை. வைத்துத்தான் தீருவேன் என்று மருத்துவ மனையிலேயே பிறப்புச் சான்றிதழில்
அந்தப் பெயரை எழுதச் சொன்னது அப்பாதான். ஜெகதாம்பாள் பொண்ணு ஜெகத்தையே ஆளப் போகுது
பார் என்று சொல்லிக் கொள்வார்.
அதற்குப்பின் அவரின் கவனம் முழுதும் மாறிப்போனது.
மூன்று பெண்டுகளுக்கும் திருமணம் செய்ய வேண்டுமே என்கிற பயம் பற்றிக்கொண்டது. செய்யும்
ஜவுளி வியாபாரம் பத்தாது என்று ஏற்கனவே தொட்டும் தொடாமலும் இருந்த அரசியலிலும் தீவிரமாகக்
காலடி பதித்தார். இன்று நகரில் அவர் ஒரு முக்கியப் புள்ளி. நிறையக் காரியங்கள் பலருக்கும்
செய்து கொடுத்தார். தன்னைப் படிப்படியாக வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டினார். நன்கொடை
என்று வருபவர்களுக்கு முகம் சுளிக்காமல் எடுத்துக் கொடுத்தார். கொடை வள்ளல் என்று அவரின்
பெயர் பிரபலமாயிற்று. அரசியல்வாதி சேர்க்கத்தான் பார்ப்பான். இவர் கொடுக்கத்தான் பார்க்கிறார்.
வெகுஜனப் பிரியர். மக்கள் மனசுல நீங்கா இடம் பிடிப்பார் நிச்சயம் என்று பலரும் பேசிக்கொண்டனர்.
வெளியாட்களுக்குக்
காரியம் செய்து கொடுப்பவருக்கு அவருக்கென்று ஒன்று வராதா என்ன? அப்படியான ஒரு வேலையைத்தான்
அவன் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று அன்று காலையில் மோகனிடம் கோரியிருந்தார் நாகநாதன்.
பலராலும் விரும்பப்படும் போட்டியிலான அந்தப் பிரிவு வேலைகள் லாப நோக்கின்றி செவ்வனே
இன்று இயங்குகின்றன. ஒரு புகார் இல்லை. கைநீட்டல் இல்லை. டிமான்ட் இல்லை. அது அதற்குரிய
நேரத்திற்குள் அந்தந்த வேலைகள் தன்னை முடித்துக் கொள்கின்றன. ஆனால் பணி சேரும் நாளன்று
தனக்கு அளிக்க இருந்த பிரிவுப் பணிகளை நினைத்துக் கொண்டான். அதற்குக் காரணம் அவனது
முந்தைய ஸ்டேஷனான திருச்சியில் அவன் நிகழ்த்தியிருந்த சாதனை.
பொறியியல்
பிரிவையே எடுத்துக்குங்களேன்…நீங்கதான் அதுல எக்ஸ்பர்ட் ஆச்சே? என்று அலுவலரே நேரடியாய்க்
கேட்டபோது அதிர்ந்து போனான் மோகன். சார்…என்ன சொல்றீங்க…புரியல…என்றான்.
என்னங்க…எவ்வளவு
பெரிய பிரச்னையை சால்வ் பண்ணிட்டு இங்க வந்திருக்கீங்க? திருச்சி பணிமனைல நடந்த விவகாரம்
டிபார்ட்மென்ட் பூராவும்தான் டாம் டாம் அடிச்சிட்டாங்களே? பிரமாதமா டீல் பண்ணியிருக்கீங்கன்னு
எல்லாரும் உங்க பேரைத்தான் சொன்னாங்க…அந்த ஆபீசுக்கே நீங்கதான் தலைமையாமே அப்போ? சொல்லப்போனா
உங்களுக்கு இந்த டிரான்ஸ்பர் கிடைச்சதே, உங்க அப்ளிகேஷனைக் கன்சிடர் பண்ணினதே அத வச்சித்தான்னு
சொல்றாங்க…எதுவும் தெரியாதமாதிரி கமுக்கமா இருக்கீங்க…? ரெண்டு நாள் டைம் எடுத்துக்குங்க…இந்த
ஆபீஸ்ல கஷ்டமான இந்த ஸ்கீம் செக் ஷன்லதான் நீங்க இருக்கணும்னு நான் பிரியப்படுறேன்.
அதுக்குத் தயாரா உங்க மனசை ரெடி பண்ணிக்குங்க… - சொல்லியவாறே சிரித்துக் கொண்டு கை
குலுக்கினார் அலுவலர். யதார்த்தமாய் அவர் கை குலுக்கியதின் பின்னணியில் பெரிய கதையே
இருக்குமோ என்று சந்தேகித்தான் இவன். சமூகமும் அரசாங்கமும் அரசியலும் பின்னிப் பிணைந்து
கிடக்கும் நிலையில் எதையும் எவரும் தனித்து முடிவெடுத்துச் செய்துவிட முடியாது என்கிற
நுணுக்கமான சிந்தனை ஜனநாயகப்பட்டுக் கிடந்தது அங்கே.
அலுவலருடனான்
அந்த நீண்ட உரையாடல் அவனைப் பின்னுக்குத் தள்ளி எங்கேயோ கொண்டு நிறுத்தி விட்டதுதான்.
யப்பா…என்னமாதிரி ஒரு அனுபவம்? அந்தப் பழைய நிகழ்வை எதிர்கொள்ளத் தன் மனம் எப்படிச்
சலனமில்லாமல் அப்படித் தயாரானது? தனக்கான பெற்றோர்களின் பிரார்த்தனையா? தனது சீரிய
வளர்ப்பின்பாற்பட்டு இயல்பாகவே தனக்குக் கிடைத்த மன உறுதியா? நேர்மையா? அன்று இரவு
படுக்கையில் நெடுநேரம் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த மோகனுக்கு அந்த நீண்ட மறக்க
இயலாத சாதனை நிகழ்வு காட்சி ரூபமாய் கண்ணுக்கு
முன்னால் விரிந்தது.
திருச்சி
நகரில் அவன் நிம்மதியில்லாமல் அலைந்த நாட்கள் அவை. அலுவலகப் பணிகள் தனி மனிதனின் நிம்மதியைக்
கெடுக்குமா என்றால் கெடுக்கும். ஆபீசுக்குள் நுழைந்து விட்டாலே அவன் தனி மனிதன் அல்லவே?
ஒரு குறிப்பிட்ட பிரிவின், சமூகத்தின் பிரதிநிதி
போல்தானே? அவர்களுக்காகத்தானே அவன்! அந்த உணர்வு எல்லாருக்குமா இருக்கிறது. அவனுக்கிருந்தது.
மனசாட்சியோடு பேசுபவனுக்கு இருக்கத்தானே செய்யும். வெறுமே சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்களுக்குத்தான்
பொருந்திய காலம் இது. அதீதக் கடமையுணர்வு என்றுமே மனிதனுக்கு ஆகாது. குடும்பத்திலும்
சரி, பணியாற்றும் இடங்களிலும் சரி…கொஞ்சம் பட்டும் படாமலும்தான் இருந்தாக வேண்டும்.
அப்பொழுதுதான் தீயவை நம்மை அண்டாது தப்பிக்கலாம். ஏன், சிறப்பான பணியாளன் என்ற நற்பெயரைக்
கூடத் தட்டிச் செல்லலாம். என்னால் ஏன் அப்படி இருக்க முடியவில்லை? மோகனின் இந்த தர்மச்
சிந்தனை அவனை தூக்கத்தைக் கலைத்துப் போட்டது. பின்னோக்கிப் பயணமான அவன் நினைவுகள் அந்த
நாட்களின் அன்றாடக் கலக்கத்தை அவன் கண் முன்னே கொண்டு வந்தது.
( 2 )
அந்தச்
செய்தி மோகனுக்கு அதிர்ச்சியாய்த்தான் இருந்தது.
அதிர்ச்சி, பணிமனையின் வாட்ச்மேனில்
ஒருவர் இறந்துவிட்டார் என்பதோடு மட்டுமல்ல. அவர் சார்ந்த இறுதிக் கடமைகளுக்காக… இறந்த
அவரை நினைத்தபோது மனதுக்கு வருத்தமாய்த்தான் இருந்தது. ரொம்பவும் முடியாமல் இருந்த
அவர் இன்னும் இரண்டாண்டுகள் எப்படித் தாக்குப் பிடிக்கப் போகிறார் என்று நினைத்திருந்த
வேளையில் இந்தச் சாவு நடந்திருந்தது. ஆனால் மனதில் தோன்றியதெல்லாம் அவருக்கான பணப்பலன்களை
அந்த அலுவலகத்தில் ஒழுங்காக, முறையாக வழங்க வேண்டுமே என்கிற கவலைதான். அந்த விதிமுறைகள்
விதி மீறல்கள் ஆகிவிடக் கூடாது.
இரண்டு
சம்சாரம் என்றார்கள் அந்தாளுக்கு. ஒன்று எடுப்பு…இன்னொன்று தொடுப்பு. தொடுப்பு எப்படி
சம்சாரம் ஆகும்? அது ஒன்றே ஒன்றுதானே தர்மப்படி? தர்மப்படியா எல்லாமும் நடக்கிறது.
தெரிந்தது நன்று. தெரியாதது ஒன்று. எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்…அது அவர்களின்
தனிப்பட்ட விருப்பம். ஆனால் பணியில் அவர் பெயருக்கு இருக்கும் ஆவணங்கள்தானே பேசும்..! சட்டப்படியான அடுத்த வாரிசு என்றால் அது அவரின்
தாலிகட்டிய முதல் மனைவிதானே…யார் பெயரை அவர் லீகல் உறர்…..என்று கொடுத்திருக்கிறாரோ,
எது கணக்காயரால் பதிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறதோ, எது அவர் பெயருக்கான
பதிவேட்டில் இடம் பெற்றிருக்கிறதோ அதன்படிதானே அவருக்கான பணப்பலன்கள் எல்லாம் போய்ச்
சேரும்? அதை முதலில் அவர்களுக்குச் சொல்லி வரைமுறை செய்தாக வேண்டும். அதில் ஏதும் தவறுகள்
நடந்து விடக் கூடாது.
இப்போது
எடுத்த எடுப்பில் அதைப்பற்றி வாயைத் திறக்கக் கூடாது. இறுதிக் காரியங்கள் அனைத்தும்
முடிந்த வேளையில் சமயம் பார்த்து அதை எப்படிச்
செய்ய வேண்டும் என்பதை அந்த அலுவலகத் தலைமைக்கு விளக்கியாக வேண்டும். பணிமனைத்
தொழிலாளர்கள் யாரும் குறுக்கே வராமல் பார்த்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். பலதையும்
சொல்லிக் கொண்டு வந்து நிற்பார்கள். எங்களுக்குத் தர வேண்டிய பணம் என்றும், அதை நீங்களே
பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்றும்…இல்லயென்றால் அது வராமலே போகும் அபாயம் உண்டு
என்றும் நெருக்குவார்கள். தங்களுக்குள் தனிப்பட்ட ழுறையில் நடந்த கடன் பரிமாற்றத்தை
அலுவலக ரீதியாக்கி வரிசை கட்டுவார்கள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதில் தீர்மானமாக
இருந்தான் மோகன். முன் அனுபவம் அப்போது மனதில் வந்து முட்டிக் கொண்டு நின்றது. தக்க
ஆணைகளைப் பிறப்பிக்க வழி செய்தான். குடும்பத்தாரையும்,
நெருங்கிய உறவினர்களையும் அழைக்கச் செய்து கூட்டம் ஏற்பாடு செய்து பொறுமையோடு விளக்கினான்.
கல்வியறிவு அற்றவர்கள்…ஆனால் சமூகப் பழக்க வழக்கங்களில் பக்குவமானவர்கள். விஷயத்தை
எடுத்து வைத்த முறைமையில் வாய் பொத்தி மனம் ஒன்றி ஒத்துக் கொண்டார்கள். மக்கள் அடிப்படையில் நல்லவர்கள். அவர்கயைள வழிநடத்தும்
தலைமைக்கு அந்த உணர்வு நூறு சதவிகிதம் வேண்டும். அப்போது இந்தச் சமூகம் படிப்படியாக
முன்னேறும் என்று புரிந்து கொண்டான் இவன். அத்தனை டென்ஷனிலும் மனதில் அந்த அலுவலகத்தினுடனான
பழைய நிகழ்வுகள் ஓடிக்கொண்டுதான் இருந்தன.
அங்கு
பணியாற்றிய அந்த கால கட்டத்தின் காட்சிகள், அதிலும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்வு அவன்
வாழ்வில் மறக்கவே முடியாதது. அது அந்தக் கணம்
மனதில் படமாய் விரிந்தது. அழியாத தடங்களாக அமைந்து விட்ட அந்த விபரீத அனுபவங்கள் அவனால் சாகும்வரை மறக்க முடியாதது.
ஏன்
அதையே நினைச்சிட்டிருக்க..? அதான் அந்த ஆபீசை விட்டு வெளியே வந்தாச்சில்ல…இனிமே அங்க
போகவா போற? விடு – அம்மா எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டாள்.
திரும்ப
இந்தப் பக்கம் வந்திராதீங்க…. – அந்தப் பணியாளர்கள் சொன்ன கடைசி வார்த்தைகள் இவை. அவன்
வெறுக்கப்பட்டு வெளியேறிய அலுவலகம் அது. அப்படித்தான் தோன்றியது. இத்தனைக்கும் இயன்ற
அளவு அவர்களுக்கு நல்லவைகளை, விதிப்படியான பலவற்றையும் தாமதமின்றி செய்து கொடுத்திருக்கிறான்
இவன். அவைகளைப் பற்றி யாரும் நினைக்கவேயில்லை. சார் முயற்சி எடுக்கலன்னா எங்களுக்கு இதெல்லாம் கிடைச்சிருக்காது…-என்று
ஒரேயொருவர் மட்டும் சொன்னார். அவர் ஓய்வு பெறும் வயதில் இருந்தார். அதனால் அந்தப் பாராட்டு
வந்ததோ என்று இவன் நினைத்துக் கொண்டான்.
உங்க
கடமையை நீங்க செய்தீங்க…அதுல உங்களுக்குத் திருப்திதானே…அவ்வளவுதான். அதுக்கு மேலே
அதுல வேறொண்ணுமில்லை. எவ்வளவு செய்தாலும் அவுங்களுக்குக் குறைகள் இருந்திட்டேதான் இருக்கும்.
இன்னும், இன்னும்னு எதையாவது சொல்லிட்டேதான் இருப்பாங்க…மனுவ எழுதி நீட்டிட்டேதான்
இருப்பாங்க…அந்த அலுவலக விதிகளுக்குட்பட்டு, துறை விதிகளுக்குட்பட்டுத்தானே செய்ய முடியும்.
மற்றதைப் பரிந்துரை வேணா செய்யலாம். நிறைவேற்ற முடியாதே…! அதுக்கு உத்தரவு வரணுமே…அதை
மேலிடம்தானே கொடுக்கணும். அதை வாங்கிக் கொடுக்கிறது உங்க கைலயா இருக்கு? தலைமை கைலதான்
இருக்கு. இவங்க அங்க போய் நிற்க வேண்டிதானே…? அங்க போனா நடக்காதுங்கிறது தெரியும்.
அதனால உங்கள முடுக்கிவிட்டுட்டே இருக்காங்க…இதுக்காக நீங்க நிம்மதியில்லாம அலைய முடியுமா?
விடுங்க…சர்வீஸ்ல இப்படி எத்தனையோ பார்க்க வேண்டியிருக்கும். இப்படியான சிக்கல்களெல்லாம்
இந்தப் பணிமனை ஆபீஸ்ல இருக்குன்னு தெரிஞ்சிதான் யாரும் இங்கே வரமாட்டேங்கிறாங்க…லீவுல
கூடத் தொடர்ந்து இருந்திடலாம்…ஆனா இங்க வந்து சிக்கக் கூடாதுங்கிறதுல உறுதியா இருக்காங்க…நீங்க
என்னைப் போடுங்கன்னு கேட்டு வந்தீங்க…உங்களால முடிஞ்சதை…விதிமுறைகளுக்குட்பட்டுச் செய்தீங்க…அதை
அவுங்க புரிஞ்சிக்கலை…அதுக்கு நாமென்ன பண்றது? லீவ் இட்…..!!
மேல்
அலுவலகத் தலைமையே தனக்குச் சமாதானம் சொன்ன போதும் இவன் மனது ஆறவில்லை. அந்த நிகழ்வு
கல்வெட்டுப் போல் மனதில் பதிந்திருந்தது.
அப்படி
ஒரு கேள்வி வரும் என்று எதிர்நோக்கித்தான் காத்திருந்தான் மோகன். அதற்கான பதிலையும்
மனதில் தயார் படுத்தி வைத்திருந்தான். எப்படிச் சொன்னால் இவர்களுக்கு சரி வரும் என்பது
அவன் மனதில் தீர்மானப்பட்டிருந்தது. எந்த லெவலுக்கு அவர்களின் கேள்வி இருக்கும் என்பதும்
அறிவான்தான். மொத்தத் துறையின் ஞானமே அந்த
அளவுதான், ஓரு சிலரைத் தவிர என்பதில் அவனுக்கு அதீத நம்பிக்கையிருந்தது. யாரும் ஸ்ட்ரெயின்
பண்ணி ஆழ உள் நுழைந்து வேலை பார்க்கும் திறனில்லாதவர்கள். மூளைச் சோம்பல் நிறைந்தவர்கள்.
சுருக்கமாய்க் சொன்னால் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவர்கள். அங்கே எப்படி அர்ப்பணிப்பு
உணர்வு பரிமளிக்கும்? தடி தடியாக ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் புத்தகங்கள் இருந்து என்ன
பயன்? யார் எடுத்துப் படிக்கிறார்கள் அதை. அலுவலக லைப்ரரியிலிருந்து ஒரு முறை கூட எவரும்
ஒன்றைத் தொட்டுக் கூடப் பார்த்ததில்லை என்றுதான் தோன்றியது. புத்தகங்கள் கருக்கழியாமல்
வைத்தது வைத்தமேனிக்கே பளபளக்கின்றன. தொட்டால் சுடுவது நெருப்பாகும். தொடாமல் சுடுவது
விதியாகும்…என்று அதது இருக்க வேண்டிய இடத்தில் அதுபாட்டுக்குத் தூங்கட்டும் என்று
விட்டு விட்டார்கள். அதை நோண்டியவன் இவன்தான்.
சின்ன
வயசிலிருந்தே கிராமப் பஞ்சாயத்து நூலகங்களுக்குச் சென்று தேடித் தேடிப் படித்துப் பழக்கப்பட்டவனுக்கு
அதே ரீதியில் துறை விதிகளை எடுத்துப் படிப்பது என்பது ஒன்றும் பெரிய மலைப்பாய் இல்லைதான்.
அறுபது வயசுவரை இருந்தாக வேண்டுமே..இதுதானே படியளக்கிறது இப்போது. பிறகு இவற்றைத் தெரிந்து
கொள்ளாமல் வேறு எதைத் தெரிந்து கொள்ள மெனக்கெடுவது? துறை விதிமுறைகள் தெரிந்தால் மதிப்பார்கள்.
இல்லையென்றால் ஸீரோ என்று ஒதுக்கி விடுவார்கள். மதிப்பற்றுத் திரிவதா பெருமை? பெரிய
எம்டன்யா அந்தாளு!-என்று அவ்வப்போது காதில் விழத்தான் செய்தன. மனதுக்குள் சிரித்துக்
கொண்டான். நீங்களெல்லாம் இப்படியே இருக்கும்வரை நான் எம்டன்தான் என்று உள்ளுக்குள்
பெருமிதம் கொண்டான்.
நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க…நான் பார்த்துக்கிறேன்…என்று
அலுவலருக்குச் சொல்லியிருந்தான். அப்படிச் சொன்னது நடந்ததை மறைப்பதற்காக அல்ல. அதை அதன் நியாயப்படி எதிர்நோக்குவதற்காக.
செய்து முடிப்பதற்காக. அவரை அந்த வார்த்தை எவ்வளவு நிம்மதிப்படுத்தியிருக்கும் என்று
மோகனுக்குத் தெரியும். தன் மீதான நம்பிக்கை. அதற்கு பங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்
தன்னுடைய தன்மை. செயல்பாட்டில் காட்டும் தீவிரம்.
பாவம்…அப்பாவி….பயந்து பயந்து அதிகாரியாயிருப்பவர்.
தப்பு செய்யத் தெரியாது. எதெல்லாம் சரி என்பதிலும் தெளிவில்லை. தன் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள்
தன்னை ஏமாற்ற மாட்டார்கள் என்கிற அதீத நல்லெண்ணம். நம்பிக்கை. நல்ல ஸ்டாஃப்…நிம்மதியான ஆபீஸ்…!
அறையில் தன் இருக்கைக்கு எதிரே மாலை மரியாதையோடு
தொங்கும் சாமி படங்கள். குங்குமம், சந்தனம் பதித்து, பத்தி ஏற்றி வைத்து நெற்றியிலும் துலங்க பய பக்தியோடு அமர்ந்திருக்கும்
காட்சி. பெருமாள்சாமி, பி.இ.,(மெக்) ஏஎம்ஐஇ.,
எம்.ஐ.எஸ்.ஏ.இ., ! நேம் போர்டு பளபளத்தது.
நீங்க கொஞ்சம் இங்கயே இருங்க…!. ஏதேனும் ஒரு
சந்தேகமோ, பயமோ அதில். முகத்தில் தீராத சோகம். இது சரியா? என்று தொக்கி நிற்கும் கேள்வி.
படிப்பிற்கும் பயத்திற்கும் ஏது சம்பந்தம்? எது பிழைப்போ…எது சோறு போடுகிறதோ…அதை நன்றாகக்
கற்க வேண்டாமா? மேலோட்டமாகவே ஓட்டிக் கழித்துவிடலாம் என்று காலத்துக்கும் பெஞ்சைத்
தேய்க்க முடியுமா? கிளார்க்குகள்தான் அப்படி என்றால் அலுவலருமா அப்படி வளைய வருவது? சீனியாரிட்டிப்படி பிரமோஷனில் வந்து விடுகிறார்கள்.
பட்டப்படிப்பிற்கும் பார்க்கும் பணிக்கும் எந்தச் சம்பந்தமுமில்லைதான். கொஞ்சம் கணக்கு,
கொஞ்சம் ஆங்கிலம், கொஞ்சம் தாய்மொழியான தமிழ். இவ்வளவுதானே? அதிகாரியாயாச்சு. அதற்குரிய
இருக்கையில் பந்தாவாய் அமர்ந்தாயிற்று. ஆனால் நிர்வாகம் தடுமாறுகிறதே?
என்ன
இப்டித் தொடர்ந்து அப்ளிகேஷன் கொடுத்திட்டே இருக்காங்க…? அசோசியேஷன் லெட்டர் பேடுல
வேறே எழுதிக் கோரிக்கையா வைக்கிறாங்க…? இன்டிவீஜூவல் அப்ளிகேஷனுக்கு ஆபீஸ்ல நடவடிக்கை
எடுப்பாங்கன்னு தெரியாதா? இந்த ஒர்க் ஷாப் ஸ்டாஃப்தானே அவுங்க…அவுங்களுக்குக் குறை
உண்டுன்னா தன் பேரைப் போட்டு எழுதிக் கொடுத்தா ஆச்சு….எதுக்கு இந்த சங்கத்துப் பெயர்லெல்லாம்
விண்ணப்பம்? பயமுறுத்துறாங்களா? நெருக்கடி
கொடுக்கிறாங்களா? இங்க எப்பயுமே இப்டித்தானா? – வந்து ஒரு ஆண்டு கூட இன்னும் முடியவில்லை.
அந்தச் சூழல் இன்னும் அவருக்குப் பொருந்தி வரவில்லை. முழு ஈடுபாட்டோடு இயங்க விடவில்லை.
எந்த நேரம் எவன் என்ன பிரச்னை பண்ணுவானோ என்கிற நடுக்கத்துடன் கூடிய பயம். சுற்றி நின்று
கெரோ பண்ணுவார்களோ?
பயப்படுகிறாரோ இல்லையோ…பயமுறுத்துகிறார்கள்
என்பதைப் புரிந்து கொண்டிருந்தார். அவரவர் கோரிக்கை விண்ணப்பமும், சங்க ரீதியிலான கேட்பும்
சேர்ந்து நெருக்கிப் பிடிக்கிறது. இவர்ட்டயாவது வாங்கிப்புடணும் எப்படியாவது! எவ்வளவு
செய்தாலும் தீராத குறைகள். வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக உழைக்காத மனநிலை. எப்போதும்
பலன்களைப் பெறுவதிலேயே கவனம். அதற்கு விதிமுறைகள் ஒத்துழைக்கிறதா என்று கூடப் பார்க்கப்
பொறுமையில்லாத கண்மூடித்தனமான வேகம். கடமையைச் செய்வதைவிடப் பணப் பலன்களைப் பெறுவதிலேயே
முனைப்பு.
ஒவ்வொரு மூணு மாசத்துக்கும் இப்டி எதையாச்சும்
கொடுத்திட்டேதான் சார் இருப்பாங்க…விதி முறைப்படி நாம அவுங்களுக்கு என்ன செய்ய முடியுமோ
அதைத்தானே செய்ய முடியும்…? அவுங்க அப்ளிகேஷனை நிறுத்தி வச்சாத்தானே தப்பு? அதைத்தான்
ஃபார்வேர்டு பண்ணிடுறமே…சென்னைல இருக்கிற துறைத் தலைமைதானே இதையெல்லாம் பரிசீலிக்கணும்?
லோக்கல்லயே இன்னும் ரெண்டு ஆபீஸ் மண்டகப்படி தாண்டணுமே…! பதில் வரட்டும்னு சொல்லுவோம்….இங்கேயிருந்து
நகண்டிருச்சுன்னு அவுங்களுக்கு சொல்லிட்டாப் போச்சு…! நாம இருத்தி வச்சாத்தானே சங்கடம்?
அது சொல்லலாம் …ஆனாலும் அவுங்க அதை நம்பத்
தயாரில்லை. நாமளே செய்ய வேண்டியதை, அநாவசியமா அங்க தள்ளி விடுறோம்னு நினைக்கிறாங்க…!
அது மட்டுமில்லே…நீங்க செய்றேன்னு வேறே சொன்னீங்களாம்…! அதையும் ஞாபகப்படுத்துறாங்க….!
– இப்படிச் சொல்லிவிட்டு அவனையே கூர்ந்து பார்த்தார் பெருமாள்சாமி.
என்னைக்
கேட்காமல் ஏன் இப்படியெல்லாம் வாக்குறுதி கொடுக்கிறீர்கள்? அவர்கள் கேட்பதெல்லாம் இந்த
அலுவலக அளவில் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா? -இந்தக் கேள்விகளெல்லாம்
அவரது பார்வையில் தொக்கி நிற்பதாக மோகன் உணர்ந்தான். அதிகார இருக்கையை எதிர்நோக்கி
நிற்கும் நானும் ஒரு பணியாளன். அப்படியிருக்கையில் நான் எப்படி வாக்குறுதி கொடுக்க
முடியும்? மொட்டையாக, மேம்போக்காக அவர்கள் சொல்வதை இவரும் அப்படியே நம்பினால்? பார்ப்போம்…முடிஞ்சதைச்
செய்வோம் என்பது எப்படி உறுதிமொழி ஆகும்?
அப்போ
நீங்க என்னை நம்பலயா சார்…? – எதிர்க்கேள்வி போட்டான். அப்போதுதான் அவரை சலனப்படுத்த
முடியும். நான் என்னமாதிரிப் பதில் சொல்லியிருப்பேன்னு உங்களுக்குத் தோணலையா?
அப்டிச்
சொல்லலை…எதுக்கு அநாவசியமா அவுங்ககிட்டே பேச்சுக் கொடுத்திட்டுன்னு சொல்றேன்….வாயக்
கிளறி எதையாச்சும் வாங்கிடுவாங்கல்ல….? – தள்ளியே நில்லுங்க என்று சொல்லாமல் சொல்கிறார்.
டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுங்க…! இதுதான் அதிகாரத்தின் கண்டுபிடிப்பு. ஒரேயடியாய்
அப்படி விலகி நிற்கவும் முடியாதே. நட்பு பாராட்டுவது மிக முக்கியம் என்று இவன் உணர்ந்தான்.
விண்ணப்பங்களை
ரிட்டர்ன் பண்ண முடியாது சார்….கூட்டமா வந்து முற்றுகையிடுவாங்க …வேலை செய்ய விடாமத்
தடுப்பாங்க….பிரச்னையாகும்…அதனாலதான் இங்கயிருந்து தள்ளிவிட்றது. இதுக்கு முன்னாடியும்
இதான் நடைமுறை. லோக்கல்லயே மத்த ரெண்டு பெரிய ஆபீசுக்கும் இது தெரியும். இவங்களுக்கு
வேறே வேலையில்ல…ன்னு அவுங்களும் கொஞ்ச நாள் வச்சிருந்து திருப்பிடுவாங்க….இதான் நடந்திட்டிருக்கு….இவங்க
பெரிய ஆபீஸ் வளாகத்துலயும் போய் நின்னு கோஷம் போடுவாங்க…முன்னறிவிப்பே இருக்காது….கோஷம்
போட்டுட்டு அவுங்களே கலைஞ்சு போயிடுவாங்கன்னு அங்கயும் கண்டுக்காம இருந்திடுவாங்க….!
பேப்பர்லல்லாம் செய்தி கொடுப்பாங்க. அது ஒரு நாள் மாலைச் செய்தி. அவ்வளவுதான். இதுவரை
வெறும் எதிர்ப்பு மட்டும்தான் காண்பிச்சிருக்காங்க. கூடிக் கலைதல் என்கிற நடைமுறை.
கூடிச் சிந்திக்கிறதெல்லாம் கிடையாது. சிந்திச்சாத்தான் சிக்கலே இல்லையே?
ஒரு
புன்னகை அவரிடம் மலர்ந்தாற்போல் இருந்தது.
ம்ம்ம்…தலவலிதான்….முடியாதுன்னு தெரிஞ்சும் இப்படி டார்ச்சர் கொடுக்கிறாங்களே? – முனகிக் கொண்டார். மனதிற்குள் சங்கடம் கொள்வதுபோல் தெரிந்தது. அலுவலக
நடைமுறையில் இப்படிப் பலவும் இருக்கத்தான் செய்யும். அதைத் தீர்க்கத்தானே நாம் இருக்கிறோம்
என்கிற உறுதி எல்லோருக்கும் அமைவதில்லையே? எந்தக் கலங்கலும் இல்லாமல் நிச்சலனமாய் ஆறு
எப்போதும் ஓடிக் கொண்டிருக்குமா? குப்பை கூளங்களையும் அழுக்குகளையும் ஒதுக்கிவிட்டுத்தான்
குளிக்க வேண்டியிருக்கும்!
உங்களுக்கு
நியாயமாக் கிடைக்க வேண்டியது உரிய காலத்துல கண்டிப்பாக் கிடைக்கும் அதுக்கு நான் பொறுப்பு…அதை
ஆபீசரிடம் விளக்கி அல்லது வாதாடி வாங்கிக் கொடுக்கிறேன். அதுல தாமதம் இருந்தாச் சொல்லுங்க….மற்றப்படி
இந்த அலுவலக அளவுல செய்ய முடியாததை ரெக்கமன்ட் பண்ணி வேணும்னா தலைமையகத்துக்கு அனுப்பலாம்.
அப்படி அனுப்பாம நிறுத்தி வச்சாச் சொல்லுங்க…ஏன் நிறுத்தினீங்கன்னு? – இதான் சார் நான்
அவுங்ககிட்டச் சொன்னது. உங்க சார்பா நான் இதச் சொன்னதுல என்ன சார் தப்பு? அதுக்கு எனக்கு
உரிமையில்லையா சார்? பிரச்னை உங்களுக்குத் தலைவலியா அமையக் கூடாதுன்னுதானே இதைச் செய்றது?
எதிர்த்தரப்பில்
அமைதி. உரிமை எடுத்துக் கொள்வது பிடிக்கவில்லையோ? தன்னிடம் பேசியதையே பிடிப்பாக வைத்துக்
கொண்டு அவர்களிடம் போய் என்ன வாக்குறுதி கொடுப்பது? அப்படியென்ன தன்னதிகாரம்? – என்று
நினைக்கிறாரோ? நான் என்ன அத்தனை யோசனையில்லாதவனா? நிதானம் என்கிற கொடியினை எப்போதும்
அறிவில் ஏந்தியிருப்பவன் தடுமாறுவதில்லைதான். ஆனால் கேள்விகளைத் தடுக்க முடிவதில்லையே?
கண்ண
மூடிட்டு அனுப்பிடுவீங்களா? நேர்ல அழைச்சு விளக்கிச் சொல்ல வேண்டிதானே? ம்பாங்க…அதுதான்
பெரிய ஆபீஸ் வழக்கம். சொல்லிட்டு கொஞ்ச நாள்ல அவுங்களும் ரிஜெக்ட் பண்ணிடுவாங்க….உங்க
ஆபீச உங்க கன்ட்ரோல்ல வச்சிக்க முடியாதான்னும் கேட்பாங்க…வெறும் ஆபீஸ் ஸ்டாஃப்வோட மட்டும்
ஒரு அலுவலகம் இயங்குறதுக்கும் ஐம்பது அறுபது தொழிலாளிங்களோட ஃபங்ஷன் பண்றதுக்கும் உள்ள
வித்தியாசத்த உணர மாட்டாங்க…பிராக்டிகல் டிஃபிகல்டீஸ் தெரிஞ்சிருந்தாலும் காட்டிக்க
மாட்டாங்க…இது பெரியண்ணன் நடைமுறை….நமக்கும் இதெல்லாம் தெரியும்தானே?
இவ்வளவையுமே
ஏன் இப்பவே வலியச் சொல்லணும்…? அதது வர்ற போது பார்த்துக்கலாமே…? –மேலிடத்துல கேட்டா
வேறே வழியில்ல…அனுப்பித்தான் ஆகணும்னுவோம்….நாம என்ன பண்றது?
ஏன்யா
தலவலிய உண்டாக்குற? – என்று கேட்கிறாரோ…? இவரே இப்படிச் சொன்னால்? அங்கு போனால் திருகுவலி
ஆரம்பிக்கலாம் என்கிற கவலையோ என்னவோ?
சார்…அப்ப
ஒண்ணு செய்ங்க…ஒரு டாய்லெட்டும், பாத்ரூமும் முன் பக்கத்துல வலது பக்கம் ஓரமாக் கட்டுறதுக்கு
ஏற்பாடு பண்ணுங்க…ஆபீஸ் ஸ்டாஃபும், நீங்களும் உபயோகப்படுத்திக்கிறதுக்கு….அதுக்குன்னு
பின்னாடி தொலைவாப் போக வேண்டியிருக்காது…அவுங்களையும் பார்க்க வேண்டி வராது. கேள்வி
கேட்க வேண்டி வராது….இப்டியே வந்து ஆபீஸ்ல உட்கார்ந்து வேலைகளைப் பார்த்திட்டு, இப்டியே
வெளியே போயிடலாம். அவுங்க மூஞ்சியப் பார்த்தாத்தானே பிரச்னை?
என்ன
சொல்றீங்க? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இல்லன்னா இதுக்குன்னு வந்து இங்கே
கூட்டம் போடுறதுக்கு அவுங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?
சம்பந்தம்
இல்லாமயா...சார்? நீங்க அதிகாரி….பின்னாடி பாத்ரூம் பக்கம் போகைல ஒதுங்கி மறைஞ்சு நின்னுக்குவாங்க…கண்ணுல
பட மாட்டாங்க…அது ஒரு மரியாதை….ஆனா இன்சார்ஜ் நான் அப்டியா? ஆபீஸ் ஸ்டாஃப்பும் போகைல,
வர்றைல…பிடிச்சிக்கிறாங்களே…அதுலயும் ஜூனியர் கிளார்க்குகள ஒண்ணும் கண்டுக்கிறதில்ல…என்னத்தான்
சுத்தி வளைச்சிடுறாங்க…! கேள்வி மேல கேள்வியாக் கேட்குறாங்க…அந்த நேரம் எவ்வளவு பொறுமை
தேவைப்படும்னு நீங்களே யோசியுங்க! எத்தனை நிதானத்தை நான் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்
தெரியுமா? இல்லைன்னா அடி விழும் சார்…அடி விழும்….நிலைமை பெரிய சிக்கலாயிடும்….
அதிகாரியின்
பார்வை கூர்மையாய்த் தன் மீது படிந்திருப்பதை உணர்ந்தான். தொடர்ந்தார்…அடி விழுமா?
என்ன சொல்கிறார் இவர்? அவ்வளவு மோசமானவர்களா தொழிலாளிகள்? அவர்களின் தேவைகளைக் கேட்பதில்
என்ன தவறிருக்க முடியும்? நாம அந்த இடத்துல இருந்தாலும் அவுங்கள மாதிரித்தானே இருப்போம்?
சார்..டீ
சாப்பிடுறீங்களா?ன்னுதான் ஆரம்பிப்பாங்க…நீங்க பதில் சொல்றதுக்குள்ளயும் , ஏய்…சாருக்கு
ஒரு வடை டீ சொல்லுப்பா…ன்னுடுவாங்க…வேண்டாம்னு நீங்க மறுக்கவும் முடியாது. இப்டி உட்காருங்க சார்…எங்க நழுவப் பார்க்குறீங்கன்னு
இழுத்து உட்கார்த்திடுவாங்க… ரொம்பப் பட்டவர்த்தனமாத்தான் பேச்சு இருக்கும். நகர்ந்தேன்னா
அடி விழும்ங்கிறத மறைபொருளாப் புரிய வைப்பாங்க…!
அவுங்க
கொடுக்கிற டீயையும் குடிச்சிக்கணும்…கேட்கிற கேள்விகளுக்கும் பொறுமையா பதில் சொல்லியாகணும்.
அந்த பதில் அவுங்களுக்கு சாதகமா இல்லாட்டாலும் பாதகமா இருக்கிறதாத் தெரியக் கூடாது.
அந்த மாதிரி ஒரு பதிலை, அந்த நேரம் சட்டுன்னு சொல்லத் தெரியணும்….அதுக்கு நிரம்ப நிதானமும்,
பொறுமையும் புத்திசாலித்தனமும் வேணும்….மலர்ந்த முகம்ங்கிறது படு முக்கியம்…! நட்பு
ரீதியாத்தான் பேச முடியும். முறைச்சிக்கிற ஜோலியே ஆகாது….இதுக்கெல்லாம் ஒரு பெரிய தந்திரம்
தேவை. அத நாம நம்ம புத்தில ஏத்திக்கணும்…
என்ன
பதில் சொல்வது என்று தெரியாமல் அவர் சிவனே என்று பார்த்துக் கொண்டிருப்பதாய் இவனுக்குத்
தோன்றியது. ஆனாலும் இருக்கும் நடைமுறைச் சிரமங்களைச் சொன்னால்தான் புரியும் என்று தொடர்ந்தான்.
அதிகாரி பெருமாள்சாமி கோப்பில் மூழ்கியிருப்பதைக்
கண்ணுற்றான். பல சமயங்களில் அதிலேயே விழுந்து உறங்கியும் விடுகிறார்.
ஆமா…உங்ககிட்டே
ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன். எல்லாரும் சொல்றாங்களே…நீங்க டிஸிப்பிளினரி கேஸ்கள்ல
பிரில்லியன்டாமே…! கரைச்சுக் குடிச்சவராமே…! அப்டியா? -சற்றே தன்னைக் குஷிப்படுத்திக்
கொண்டதுபோல் அவர் கேட்டது வித்தியாசமாய் இருந்தது இவனுக்கு.
இந்தக்
கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். இருந்தாலும் தன்னடக்கத்தோடு பதில் சொன்னான்
ஜாக்கிரதையோடு.
அப்டித்தான்
சார் சொல்லிப்பாங்க…அதெல்லாம் ஒண்ணுமில்லே….நானும் எல்லாரும் மாதிரிதான்….இதச் சொல்லி
இன்னும் என்னென்ன தலைல சுமத்துவாங்களோ? ரொம்ப ஜாக்கிரதையாய் இருக்கணும் இங்கே…! அந்த
ஃபைல்ஸ்களைத் தொட்டுட்டா பைல்ஸ் வர்றது நிச்சயம்….நினைத்து மனதுக்குள் சிரித்துக் கொண்டான் மோகன்.
அதான்
உங்களை இங்க போட்டாங்களாமே…! நல்லா டீல் பண்ணுவீங்கன்னு….அது சம்பந்தமா இந்த ஆபீசுக்கு
மாறுதலில் வந்ததும் நான் என் பொறுப்பிலே வாங்கி வச்ச ஃபைல்ஸெல்லாம் இதோ இந்த டிராயர்லதான்
வச்சிருக்கேன்….எப்ப வேணாலும் நீங்க எடுத்துப் பார்க்கலாம். இந்த ஃபைல்ஸ் சம்பந்தமான
விஷயங்கள் நம்ம ரெண்டு பேருக்கு மட்டுமே ரகசியம்…புரிஞ்சிதா? யார் யார் பேர்ல என்னென்ன
கேசிருக்குன்னு ஒரு ரவுன்ட் பார்த்திட்டேன்…உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்….இது நம்ம
கைவசம் இருந்தாத்தான் நமக்குப் பாதுகாப்பு. இது எதையும் சீக்கிரம் முடிக்கக் கூடாது.
நீட்டிக்கணும்…அதான் சாமர்த்தியம்….ஓகே.யா? அவங்க நம்மைத் தொல்லைப் படுத்துறது இதன்
மூலம் கொஞ்சமாவது குறையும்ங்கிறது என் அபிப்பிராயம்.
அப்படிப் பேசுவார் என்று கொஞ்சங் கூட எதிர்பார்க்கவில்லை.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். பயந்தவராத் தெரிஞ்சாலும் ஆளு வினயம்தான்…!
இதுக்குச் செலவழிக்கிற நேரத்தை அவுங்களுக்கு நல்லது செய்றது எப்படின்னு யோசிக்கலாமே…!
நாலுல ரெண்டு செஞ்சாலும் கொண்டாடுவாங்களே…! அந்த எண்ணம் ஏன் மேலிடங்களுக்கு வரமாட்டேங்குது?
எய்தவங்க மேலே…நாமதான் அம்பு…! தைக்காத அம்பு…! அவர்கள் மேல் பட்டுப் பட்டு ஒடிந்து
ஒடிந்து விழுகிறது. இடது கையால் ஏளனமாகத் தூக்கித் தூர வீசுகிறார்கள். எங்களுக்குத்
தேவை எங்க கோரிக்கைகளை நிறைவேற்றித் தர்றதுதான். தள்ளிப்போடுறதில்லை. சால்ஜாப்பு சொல்லுறதில்லை.
செய்து கொடுத்தே ஆகணும். பிடிவாதமாய்த்தான் நின்றார்கள்.
ரெண்டு நாளைக்கொருமுறை அந்தப் பணியாளர்களை எதிர்நோக்கும்
கஷ்டங்களை அலுவலருக்கு சுருக்கமாக விவரித்தாலும் அதன் முழுக் காட்சி கண் முன்னே அப்பொழுதே விரிந்து கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்தது.
உங்களுக்காகத்தான்
பழைய ஸ்டாக் ஃபைலையெல்லாம் எடுத்து நான் விடாது படிச்சிட்டேயிருக்கேன்…உங்க போஸ்டெல்லாம்
ஒரே சமயத்துல சாங்ஷன் பண்ணினதில்லே…அது தெரியுமா உங்களுக்கு…? படிப்படியா தேவை ஏற்பட
ஏற்பட உண்டானது. மொத்த மாநிலத்துக்குமில்லை. எங்கெங்கே தேவையிருக்கோ, அதுக்கேத்தாப்ல
எண்ணிக்கைல…உருவாகியிருக்கு. அது போல ஒவ்வொரு
போஸ்டின் நம்பரும் அப்பப்போ கூடியிருக்கு…குறைஞ்சிருக்கு….கூடின
போது கொண்டாடின நீங்க…குறைஞ்ச போது ஏன் குரல் கொடுக்கலை? அந்தப் போஸ்டுகளுக்கும் வேலையிருக்கு,
எடுக்காதீங்கன்னு ஏன் சொல்லலை? ஏன் அதை நிதானமா
முன் எடுத்து வைக்கல…எடுத்த எடுப்புல ஸ்டிரைக்…போராட்டம்னு உட்கார்ந்திருக்கீங்க…இந்த
ஒரு ஒர்க் ஷாப்புல மட்டும் ஸ்டிரைக் பண்ணினாப் போதுமா? தமிழ்நாடு பூராவும் எத்தனை ஒர்க்
ஷாப் இருக்கு நம்ம துறைல… மொத்தமும் போராட வேண்டாமா? எல்லாரும் சேர்ந்து கோரிக்கை வைக்க
வேண்டாமா? அப்பத்தானே நீங்க கேட்குற பணியாளர் குறைப்புங்கிறதை நிப்பாட்ட முடியும்?
இங்க வெவ்வேறே டெக்னிகல் போஸ்ட்ல இருக்கிற முப்பது நாற்பது பேர் மட்டும் சேர்ந்து வாசல்ல மறிச்சு உட்கார்ந்திருக்கிறீங்க…ஊருக்கு
வெளில முப்பது கி.மீ. தள்ளி அத்துவானமா இருக்கிற இந்தக் காட்டுல நீங்க பண்ற ஸ்டிரைக் எவனுக்குத் தெரியும்? யார் காதுக்குப் போகும்? பத்திரிகையாளர்களே
கிடையாது. சொல்லிவிட்டாத்தான் வருவாங்க. வெறுமே வருவாங்களா? அவுங்களை வேறு கவனிக்கணும்.
வெறும் கைல யார்தான் முழம் போட முடியும்? இந்த
ஆபீஸ் மூலமா செய்தி போனாத்தான் ஆச்சு. இல்லன்னா காத்தோட காத்தாப் பறந்து மறைஞ்சிடும்…அப்டியும்
இல்லன்னா டிஸ்டிரிக்ட் ஆபீசோட நின்னு போயிடும்.
அவங்கவுங்க தலைவலி அவுங்கவுங்களுக்கு. அப்டித்தானே பார்ப்பாங்க…அதையும் மீறி
நியாயத்தைக் கன்ஸிடர் பண்றவங்க யாரு இருக்காங்க?
போதாக்குறைக்கு
சி.எம். இந்தப் பக்கமா கார்ல போன போது மறிச்சு…உங்க கோரிக்கையை வேறு எழுதிக் கொடுத்திருக்கீங்க…சி.எம்.கிட்டயே நேரடியாக் கொடுத்திட்டோம்னு
ஆபீசை பயமுறுத்துறீங்க…இத மாதிரி எத்தனாயிரம் விண்ணப்பங்களை அவுங்க வாங்கியிருப்பாங்க…?
உங்க சிறு கும்பலக் கண்டு நிறுத்தி உங்க கோரிக்கைகளை வாங்கிட்டுப் போனது அவுங்க பெருந்தன்மை…அரசியல். வழி மறிச்சுக் கொடுத்ததே வெற்றின்னா
என்ன அர்த்தம்?
பார்த்து
செய்றேன்னு சி.எம். சொன்னாங்கன்னு பெருமைப் பட்டுக்கிறீங்க…அது சம்பிரதாயமான வார்த்தை.
பலருக்கும் சொல்றது. அப்படித்தான் சொல்ல முடியும். இந்தப் பக்கம் வாங்கி அந்தப் பக்கம்
கொடுத்திருப்பாங்க. அது எங்க போச்சோ…யார் கைல மாட்டிச்சோ…? அதுதான் ஜனநாயகம். அதுக்காக
போய்ச் சேர்ந்தவுடனே அந்த ஒர்க் ஷாப் ஒர்க்கர்ஸோட அப்ளிகேஷனை எடுங்கன்னா கேட்கப் போறாரு?
அது கடல்ல கரைச்ச பெருங்காயம்…
கிரேடு-2வுல
இருக்கிறவங்கள கிரேடு-1ஆ மாத்தணும்ங்கிறீங்க…டேரக்ட் அப்பாய்ன்மென்ட்டைத்தான் கிரேட்
1 க்குக் கொண்டு போக முடியும். ப்ரமோஷன் கொடுக்க முடியும். அப்படித்தான் ஆர்டர் இருக்கு.
கீழ்நிலைலருந்து படிப்படியா வந்தவுங்க…கிரேட்-2 வரைக்கும்தான் வர முடியும். வேறே சில
போஸ்ட்களுக்கு இந்த மாதிரி விதி இல்லைன்னு சுட்டிக் காண்பிக்கிறீங்க…அது போல உங்களுக்கும்
வேணும்னா அதுக்கு தனியா ஆணை வேணும். மேலிடத்துக்குத்தான்
விண்ணப்பிக்கணும்…இங்க செய்ய முடியாது. உங்க விண்ணப்பங்களை ஒருங்கிணைச்சு…பரிந்துரை
வேணும்னா செய்யலாம். அதுக்கு நான் கியாரன்ட்டி. அதை அனுப்ப முடியாதுன்னு ஆபீசர் சொன்னா,
எடுத்துச் சொல்லி நான் ஒப்புதல் வாங்கித் தர்றேன்….அதுதான் என்னால செய்ய முடியும்….
என்னா
சார்…இப்டி பல்டி அடிக்கிறீங்க…? உங்களுக்கு வேணும்ங்கிறதையெல்லாம் செய்து கொடுக்கத்தான்
நான் இங்கே வந்திருக்கேன்னு சொன்னீங்களே சார்…இப்போ இப்டிப் பேசுறீங்களே…?
இல்லைன்னு
சொல்லலையே…இந்த ஆபீஸோட விதிகளுக்குட்பட்டு உள்ளதைக் கண்டிப்பா, தாமதமில்லாமச் செய்து
கொடுப்பேன். அது உறுதி. அதுக்கே இதுக்கு முன்னாடி நீங்க திண்டாடினதெல்லாம் எனக்கும்
தெரியும். எல்லாத்தையும் விசாரிச்சு, மண்டைக்குள்ள
போட்டுக்கிட்டுத்தான் நான் இந்த ஆபீசுக்குள்ளயே நுழைஞ்சேன். அதை முதல்ல தெரிஞ்சிக்குங்க…என்
கைக்கு மீறினதை நான் எப்டிச் செய்றது? அதுக்கு நீங்க என்னை பிரஷர் பண்ணலாமா? அது சரியா?
அப்டியே குருட்டாம் போக்குல, பாஸைக் கன்வின்ஸ் பண்ணிச் செய்தாலும் அந்தப் ப்ரபோசல் துறைத் தலைமைக்கு அனுப்பப்பட்டு,
அங்கிருந்தும் ரெக்கமன்ட் ஆகி மேல போயி ஆர்டராகணுமே…! அப்பத்தானே செல்லுபடியாகும்?
நாமபாட்டுக்கு எடுத்தேன் கவிழ்த்தேன்னு தொட்டதெல்லாம்
ராசின்னு செய்துட முடியுமா? உங்களுக்கு நம்பிக்கை இருந்தாச் சொல்லுங்க…உங்க சார்பா
நான் சென்னை போயிட்டு வர்றேன். அங்க செக் ஷன்ல பார்த்து, அங்கிருந்து மேலே அனுப்பிட்டு
வந்து சேர்றேன். அவ்வளவுதான் என்னால செய்ய முடியும். அப்புறம் மினிஸ்டரப் பார்க்கிறது,
காரியம் சாதிக்கிறதுங்கிறதெல்லாம் உங்க கையிலதான். சம்மதம்னா சொல்லுங்க…என்னால உடல்
கஷ்டம்தான் பட முடியும். பணக் கஷ்டத்துக்கு நான் ஆளில்லை. கைக்காசைச் செலவு செய்திட்டுப்
போய்த்திரும்ப என்கிட்ட ஐவேஜூ இல்லை…நானும் உங்களமாதிரி மாதச் சம்பளக்காரன்தான்-சொல்லி
முடித்தான் மோகன். மனதிலிருந்ததையெல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டது போல் உணர்ந்தான்.
இந்த
ஆபீசுக்கு வந்து போறவுங்களெல்லாம் ஆரம்பத்துல மலையையே புரட்டிப்புடுவேன்னு சொல்லிட்டுத்தான்
வருவாங்க…போகப் போக தேஞ்சு மாஞ்சு தேவட்டையாப் போயிடுவாங்க…நீங்களும் அந்த ரகம்தான்ங்கிறது
எங்களுக்கு இப்பத்தான் புரியுது…..ஒரே குட்டை…ஒரே மட்டை…!
மன்னிக்கணும்…நான்
சொல்றதை நீங்க இன்னும் சரியாப் புரிஞ்சிக்கலைன்னு நினைக்கிறேன். புரிஞ்சிருந்தா என்
மேலே உங்களுக்குக் கோபமே வராது….சார் என்னங்க செய்வாரும்பீங்க….இல்ல..புரிஞ்சிருந்தும்
பிடிவாதம் பண்ணனும்னு நிக்கிறீங்களோ என்னவோ…?
பிடிவாதம்
என்ன சார் பிடிவாதம்…? பாம்பும் தேளும் நட்டுவாக்காளியும் ஓடுற இந்தக் காட்டுப் பகுதில
ஒர்க் ஷாப்புங்கிற பேர்ல இங்க வந்து கெதியாக் கெடக்கமே…எங்களச் சொல்லணும்…எத்தனவாட்டி
கிளார்க்குகள் டேபிளுக்குள்ளர்ந்து பாம்பு பிடிச்சுப் போட்ருக்கோம் தெரியுமா? அத்தனையும்
கண்ணாடி விரியன் சார். பயங்கர விஷமாக்கும். நடந்து வர்றைலயே அதத் தாண்டித்தான சார் வர வேண்டியிருக்கு?
டூ வீலர்ல வந்து பாருங்க…எத்தனை ஆக்சிடென்ட் நடக்குது தெரியுமா இந்த நெடுஞ்சாலைல…உயிரக்
கைல பிடிச்சிட்டு வந்து போறோம். அடிக்கடி பஸ் கிடையாது இந்த ஏரியாவுக்கு. அது எப்பப்ப
வரும்னும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட ரிமோட் ஏரியாவுல, இந்த கரட்டுப் பக்கத்துல
ஒர்க் ஷாப் அமைஞசிருக்கு. ஒரு டீ வேணும்னாலும் மூணு கிலோமீட்டர் போகணுமாக்கும். எங்களுக்காக
ஒரு கான்டீன் போடுங்கன்னும் சொல்லிப் பார்த்துட்டோம். நாங்களா ஒராளை ஏற்பாடு பண்ணிக்கிறோம்னாலும்
அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்கிறீங்க…இங்க ரெக்கார்டு ரூமுக்குப் போகவே ஏன் எல்லாரும்
பயப்படுறாங்க? நாங்க துணைக்குப் போயித்தானே ஃபைல்களையே எடுக்க முடியுது? எவனாச்சும்
இந்த டேஞ்சர் பிடிச்ச எடத்துல வேல பார்ப்பானா சார்? கொஞ்சமாவது நினைச்சுப் பார்க்குறீங்களா?
ஒரு நல்ல தண்ணி உண்டா இங்க தாகம் தணிக்க…?அத்துவானக் காடு. அந்த மலங்கரடுப் பக்கம்
போய்ப் பாருங்க…எத்தனை ராட்சசக் கழுகுகள் சுத்துதுன்னு தெரியும். எங்கருந்தாச்சும்
பன்னி, கழுதன்னு இழுத்திட்டு வந்து அல்லது பகுதி பகுதியாத் தூக்கிட்டு வந்து போட்டி
போட்டுத் தின்னுக்கிட்டிருக்கும். என்னைக்கு இந்தப் பக்கம் திரும்பிப்பார்க்குதோ? எங்க கோரிக்கைக்கு செவி சாய்க்கிறதுக்கு ஒரு ஜீவன்
இல்லே….! எத்தனையோ ராத்திரி நாங்க வீட்டுக்குக் கூடப் போனதில்லே. அவ்வளவு மெஷினரீஸ்
வரிசையா வந்து வெட்ட வெளில நிக்குது. ஷெட்டுகளா போட்டுக் குடுத்திருக்கீங்க? போன மழையின்
போது பார்த்திங்கல்ல கண்ணால…எத்தனை மெஷின்களை ஜரூரா ரிப்பேர் பண்ணி அனுப்பிச்சோம்னு…மத்த
மாவட்ட வண்டிக பூராவும் இங்கதான சார் வந்திச்சு. கலெக்டர் ஆபீசு ஜீப்பும், கார்களும்,ஃபயர்
இன்ஜின் வண்டிகளும் இங்கதான வரிச போட்டாங்க…எடமில்லேன்னு
வெளில ரோட்டோரமா நின்னு கெடக்கல?
அப்போ நாங்க மனசு வச்சிருந்தா…எங்க காரியத்தை நிறைவேற்றியிருக்க
முடியாதா? அது முறையில்லைன்னு விட்டுட்டோம்…அவ்வளவு வண்டிகளும் இங்கயே ஏன் வந்திச்சு? நாங்க நல்லா வேல பார்ப்போம்ங்கிற நம்பிக்கைலதான?
…அதுக்கெல்லாம் எங்களுக்கு அவார்டா கொடுத்தாங்க…அட…ஏதாச்சும் ஊக்கத்தொகை? எதுவுமில்லையே…தமிழ்நாட்டுலயே நம்ப ஒர்க் ஷாப்தான்
சார் நம்பர் ஒன்! அவ்வளவு ஒர்க் ஆர்டராகியிருக்கு…ஆனா
எங்க நிலைமை? விதிகளைத் தளர்த்தி கிரேடு-1 தான் கொடுத்தா என்னா சார் குடிமுழுகிடும்?
சம்பளம் என்ன அப்டியா உயர்ந்திடப் போவுது? ஒரு ஆயிரத்துக்குள்ள…கூடுமா? நாங்க ஸ்டேட்
பூராவும் என்ன ஒரு நூறு பேரு தேறுவோமா? அடஇருநூறுன்னே வச்சிக்குங்க…. கொடுத்தா
என்ன சார்…டிபார்ட்மென்டே கவுந்திடுமா…? இல்ல இழுத்து மூடிடப் போறாங்களா? அநியாயம் பண்றீங்களே சார்….நாங்களும் வருஷக் கணக்கா
தொண்டத் தண்ணி வத்தக் காள் காள்னு கத்திக்
கத்திப் பார்த்துட்டோம். எல்லாவிதமான ஸ்டிரைக்கும் பண்ணியாச்சு….மலையசைஞ்சாலும் அசயும்…உங்க
மனசு அசையாது போல்ருக்கே சார்…வயித்தெறிச்சல்….யாராச்சும் விஷத்தக் குடிச்சு உசிர விட்டாத்தான்
முழிச்சிக்குவீங்க போல்ருக்கு…! அதுவும் ஒருநாள் நடக்கத்தான் போகுது…அப்பத் தெரியும்
சேதி…!
மோகனுக்கு
மயக்கமாய்த்தான் வந்தது. அதீத இரக்கம் பிறந்தது. மனது கசிந்தது. அவர்களின் பிரஷர் தாங்காமல்
ஒரு பிரேரணையைத் தயார் செய்து, எப்படியோ அலுவலரைத் திருப்தி செய்து பரிந்துரைத்து அனுப்பத்தான்
செய்தான். மகிழ்ந்து கொண்டாடினர் எல்லோரும்
உள்ளூரிலேயே
ரெண்டு படியைத் தாண்டியாக வேண்டுமே…!
நான்
அனுப்பிச்சாச்சு…போய், பார்க்க வேண்டியவங்களப் பாருங்க…இனிமே என் பொறுப்பில்லே….- விலகிக்
கொண்டான். அதுவே பெரிய காரியமாய்ப் பட்டது அவர்களுக்கு. அப்படியும் விட்டால்தானே?
என்ன
சார் இப்டிக் கைவிரிச்சா எப்டி சார்…? நீங்கதான் அடுத்தடுத்த கட்டத்தத் தாண்டுறதுக்கு
ஒதவணும்…!எங்களுக்கு நீங்க செய்யாம வேறே யார் சார் செய்வாங்க….நாங்களும் போய்ப் பார்க்கிறோம்…இல்லைங்கலே…!
சர்வ
சாதாரணமாய்ச் சொல்லி விடுகிறார்கள். கண்ணையும் கருத்தையும் மூடிக்கொண்டுதான் பேசுகிறார்கள். ஆனால் இவன் வாங்கிய
திட்டுக்களை அவர்கள் அறிவார்களா?
ஏன்யா…கொஞ்ச
நாள்ல அட்மோ ஆகப் போகுற நீங்க…செய்ற காரியமா
இது? பேனல்ல உங்க நேம் சேர்ந்திருக்குல்ல? அவுங்க எதக் கொடுத்தாலும் கண்ணை மூடிட்டு அனுப்பிடுவீங்களா?
என்ன ஏதுன்னு பார்க்க மாட்டீங்களா? உங்க அளவுலயே சொல்லி அங்கயே நிறுத்த முடிலன்னா அப்புறம் எதுக்குய்யா
உமக்கு ஆபீஸ் கன்ட்ரோல் போஸ்ட்? அதுக்கொரு சம்பளம், அலவன்சு, வருஷா வருஷம் இன்கிரிமென்ட்….கண்டதையெல்லாம்
கண்ணை மூடிட்டு இங்க அனுப்பிட்டு, பெரிய லொள்ளு பண்றீங்களே….? இந்தத் தபாலுக்கு இந்த
ஆபீஸ்ல சீலே விழுகாது….இப்டியே கைல எடுத்துட்டுப் போயிற வேண்டிதான்…அவுங்களுக்கு நீங்க
என்ன பதில் சொல்லுவீங்களோ எனக்குத் தெரியாது…எதையாச்சும் சொல்லிச் சமாளிச்சிக்குங்க….கண்ட
ப்ரபோசலையெல்லாம் குருட்டாம் போக்குல ரெக்கமன்ட் பண்ண முடியாது. அப்புறம் மேலிடத்துல
எவன்யா பேச்சு வாங்குறது? ஃபோனப்போட்டு சீஃப் என்ன வாங்கு வாங்குவாருங்கிறது உங்களுக்குத்
தெரியுமா தெரியாதா? செக்ரட்டரி காதுவரைக்கும் போச்சோ…அப்புறம் என் சீட்டு கிழிஞ்சிது…என்
ப்ரமோஷன் நின்னு போகும்யா….அப்புறம் நான் உங்ககிட்டயா வந்து நிற்க முடியும்? திரும்பிப்
பார்க்கமாப் போயிரணும்….அவ்வளவுதான்….-பேச்சின் தன்மையே மாறியிருந்தது. ஏதோ தனியார்
நிறுவன நிர்வாகி, பெரு முதலாளி பேசுவது போலிருந்தது.
அதிகாரத்தின்
எந்த நிலையிலிருப்பவரும், எவரும், எதிலும் பிடி கொடுக்கத் தயாரில்லை. எல்லோரும் நழுவத்தான்
பார்க்கிறார்கள். பரிந்துரை செய்து, மாநில அளவிலான கூட்டத்திற்குச் செல்கையில் இதுபற்றிப்
பேசி ஒரு முடிவெடுத்து தலைமையிலிருந்தும் பிரேரணையை மேலனுப்பச் செய்யலாம். யாரும் முனைவதில்லை.
ஒருத்தருக்குக்
கொடுத்தா அப்புறம் எல்லாரும் கேட்பாங்க…மாநிலம் முழுக்கக் கொடி பிடிப்பாங்க…நாமளே பிரச்னையை
வளர்த்து விட்டதா ஆயிடும். அப்புறம் அசோசியேஷன்…ஸ்டிரைக்குன்னு கிளம்பிடுவாங்க…அதனால
எப்பயும் அடக்கித்தான் வாசிக்கணும். அதுக்குப் பழகனும் முதல்ல..
சொல்லியவாறே
அவர் கையால் தள்ளிவிட்ட அந்தப் பிரேரணை மோகனின் காலடியில் வந்து விழுந்தது. ரொம்பவும்
கேவலமாய் உணர்ந்தான் அந்தக் கணம். எடுக்கக்
குனிந்தபோது பதட்டத்தில் மேஜை நுனியில் தலையில் ஒரு இடியையும் வாங்கிக் கொண்டான். தான் செய்யாததை அது செய்து விட்டதாக அலுவலர் நினைத்துக்
கொண்டாரோ என்னவோ…எந்த ரியாக் ஷனும் இல்லை எதிர்த் தரப்பில். அரசியல்வாதிகளோடு பழகிப்
பழகி அதிகாரிகளும் இப்படி உணர்ச்சியற்று ஆகிப் போனார்களோ? அதென்ன வாய்யா…போய்யா… என்கிற
ரீதியிலான பேச்சு? அப்படிப் பேசினால்தான் அதிகாரம் தெறிக்கும் தொனி கிடைக்கிறதோ? மனசு
அப்போதுதான் ஆறுகிறதோ? பிரச்னையைத் தீர்க்க பெரிய ஆபீஸ் என்று வந்தால் அவர்கள் நம்மிடமே
திருப்பி விடுவதா அழகு? தீர்வு சொல்ல வேண்டாமா? இதுவா நிர்வாகம்?
அன்று
தலை குனிந்து வெளியேறியவன்தான். இன்று இதோ தனது பாஸின் எதிரே அவருக்கு சமாதானம் சொல்லிக்கொண்டு,
அவரைத் தைரியப்படுத்தி எதிரே குத்துக் கல்லாய் அமர்ந்திருக்கிறான் மோகன். புதிய தலைவலி
ஆரம்பித்திருந்தது இப்போது.
(
3 )
இடையில் கலைந்தது போலிருந்த மங்கிய நினைவுகள்
மீண்டும் உயிர் பெற்றுத் தொற்றிக் கொண்டன. ஒன்று முடிந்து இன்னொன்று என உடனே பிசாசு
போல் பிடித்துக் கொண்டதே! இதயம் பதட்டமாகவே இருந்த நாட்கள் அவை. ஆனால் பிரச்னைகளை எதிர்
நோக்குவதே தன் வாழ்வின் மையமாக ஆகி விட்டதை அந்த நேரம் உணர முடிந்ததுதான். புயல் மையம்
கொண்ட பதற்றமான பொழுதுகள் அவை.
மேஜைத்
தொலைபேசி அலற பதற்றத்துடன் அதை எடுக்கிறான். என்னவோ ஏதோ என்ற நடுக்கத்தில் எதிரே தனது
பாஸ் பார்த்துக் கொண்டிருப்பதை நோக்கியவாறே உறலோ என்கிறான் மோகன்.
நான்தான்யா
எஸ்.இ. பேசறேன்… எப்டிய்யா நடந்தது இது? எல்லாரும் என்ன செஞ்சிக்கிட்டிருந்தீங்க…?
தூங்கிட்டிருந்தீங்களா? – எடுத்த எடுப்பில் அந்த அர்த்தமில்லாத உளறலை எதிர்கொண்டான்..
இருபத்துநாலு மணி நேரமும் இங்கயேவா கிடக்கோம்…எப்டி நடந்ததுன்னு கேட்கிறதுக்கு? நடந்ததை
வேடிக்கை பார்த்ததுபோல் திரைப்படம் கணக்காய் காட்சிபோல் விரித்துச் சொல்ல வேண்டும் என்கிறாரா?
எப்போது
ஃபோன் எடுத்தாலும் வாய்யா…போய்யா…தான். ஏதோ வெளி ஆட்களைப் பேசுவது போல. பொது மக்களை
இப்படி அணுகினால் லேசில் விட மாட்டார்கள் என்பது தெரியும். அங்கு வாய் அடைத்துக் கொள்ளும்.
அதற்கு வேறு முகமூடி. பொய்ம்முகங்கள் அத்தனையும். மரியாதையாக விளித்தல் என்பதே கிடையாது.
சமீபமாய் தொனி இப்படி மாறியிருந்தது.
இதற்கே இவரை என்ன வேணாலும் செய்யலாம்…!
சார்…வணக்கம்.
நான் மானேஜர் பேசறேன்…அது பொங்கல் லீவுல நடந்திருக்கு சார். வரிசையா நாலஞ்சு நாள் லீவாப்
போச்சு....தகவல் தெரிஞ்சு உடனே எல்லாரும் வந்திட்டோம்…உடனே வேணுங்கிற நடவடிக்கை எடுத்தாச்சு…
சார்…..
என்னய்யா நடவடிக்கை எடுத்தீங்க பெரிஸ்ஸா? லட்ச ரூபா ஸ்பேர்
பார்ட்ஸ் திருடு போயிருக்கு…புல்டோசர் பிளேடுகளக்
காணலங்கிறாங்க…ஸ்டோர் ரூமைத் திறந்து எடுத்திருக்கானுங்க…இருந்த பேரிங் பூராவும் காணோம்ங்கிறாங்களேய்யா…இப்பத்தான
ரெண்டு நாளைக்கு முன்னாடி புது ஸ்டாக் வந்திச்சு….குறிப்பா திருடுனவங்களுக்கு அது மட்டும்
எப்டித் தெரிஞ்சிச்சு? கூட்டுக் களவாணிங்களா எல்லாரும்….ஸ்டோர் சூப்பிரன்ட் என்ன தூங்குறாரா?
மொத்தச் சாவியும் அவர்ட்டத்தான இருக்கும்? எப்டி உடைச்சாங்க…எதப் போட்டுத் திறந்தாங்க…?
இல்ல தண்ணியப் போட்டுட்டு மூடாமயே போயிட்டாரா? யார் யார் சம்பந்தப் பட்டிருக்காங்களோ
அத்தனை பேருக்கும் ரெக்கவரி ஆர்டர் போடுங்க…இரக்கம் பார்க்காதீங்க…! நாளைக்கு ஆடிட் வந்தா, ஏ.ஜி.வரைக்கும் போயிடும்
விஷயம்…ஜாக்கிரதை…!.
சார்….நான்
சொல்றதை தயவுசெய்து கொஞ்சம் பொறுமையாக் கேட்கணும்…உங்ககிட்டச் சொல்லாம வேறே யார்ட்டப்
போய் நாங்க அழ முடியும்? நடந்தது இதான் சார்…
எங்களக்
கட்டிப் போட்டுட்டு வேன்ல எடுத்திட்டுப் பறந்திட்டாங்கன்னு சொல்றாங்க சார்….வாட்ச்மேன்
பூதலிங்கம் உள்ளே மாடில ஆபீசர் ரூம் வாசல்ல படுத்திருந்திருக்கான்….அவனக் கேட்டா எனக்கு
ஒண்ணுமே தெரியாதுங்கிறான். காலைல எழுந்திரிச்சி வந்துதான் ரெண்டு பேரையும் கட்டவிழ்த்து
விட்டதாச் சொல்றான்…சார்…..சீனியர் மெக்கானிக்குகள் சார்…
காலைலவரைக்கும்
மரத்துல கட்டினமேனிக்கு இருந்திருக்கானுங்களா? எவனுமே வர்லயா அந்தப் பக்கம்? எவன்யா
நம்புவான் இதை? ராத்திரி ஷிப்ட் வாட்ச்மேன் என்னானான்?
….பூதலிங்கம்தான்
முதல் ஆளாப் பார்த்திருக்கான்…சார்….
அவுங்க
மூணு பேத்தையும் சஸ்பென்ட் பண்ணிட்டீங்களா?
எதுக்கு
சார்….திருட வந்தவங்ககிட்ட அடியையும் வாங்கிட்டு,
கட்டிப்போட்டுக் கிடந்தவங்களை எப்டி சார் சஸ்பென்ட் பண்றது? ரெண்டு நாளா நைட்
ட்யூட்டி பார்த்து நாளைக்கு வண்டிகளை டெலிவரி கொடுத்தாகணும்னு இருந்தது தப்பா சார்? அவுங்க போலீசுக்குப் போயிட்டாங்க சார்….புகார்
கொடுக்க…எங்க ஐயாவுக்கு எந்த பாதகமும் வரக்கூடாதுன்னு சொல்லி அழுவுறாங்க சார்…
அந்த
பூதலிங்கம் என்னய்யா பண்ணினான்? அவன் ஏன்யா அங்க தூங்கினான்? பதினோரு மணிக்கு அவன்
ஷிப்ட் முடிஞ்சிருச்சில்ல…ஊரப் பார்த்துப் போக வேண்டிதான….? ஸ்பாட்டுல இருந்தா அவனும்தானே
பொறுப்பு…?
கடைசி
வண்டிய நிறுத்தாமப் போயிட்டான்னு வந்து படுத்திட்டதாச் சொல்றான் சார்…பாவம் சார்…அவன்….அப்பாவி
…ஏதுமறியாதவன் சார்…அவன் கெட்ட நேரத்தப் பாருங்க….!
அதுக்காக?
பூதலிங்கத்த சஸ்பென்ட் பண்றதுக்கு பதிலா இப்டி சார்ஜ் மெமோ கொடுப்பீங்களா? இந்த ரூல்ஸெல்லாம்
உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? என்னமோ
பிரமாதமாச் சொன்னாங்க உங்களப்பத்தி?
அதிகாரி
புரிந்து கேட்கிறாரா அல்லது மேலிடத்தின் நொச்சுத் தாங்கமாட்டாமல் அந்த வற்புறுத்தலில்
கேட்கிறாரா? சற்றே தடுமாறினான் மோகன். பிறகு நிதானித்துக் கொண்டான்.
சஸ்பென்ட்
பண்ணனும்னு எங்கிருக்கு சார்? எதுலயும் அப்டி இல்லை…..அதனாலதான் சார்ஜஸ் போட்டு மெமோ
கொடுத்திருக்கேன்…..பஸ் கிடைக்காமப் போயி அங்கயே அவன் தங்கிட்டதுதான் இப்பத் தவறாப்
போச்சு….அதுக்கு அவனுக்கு சஸ்பென்ஷனா? என்ன சார் அநியாயமா இருக்கு? அவன் வாங்குற கொஞ்ச
சம்பளத்துக்கு, அதுலயும் பாதிய சப்சிஸ்டன்ஸ் அலவன்ஸ்ங்கிற பேர்ல நிறுத்திட்டா அப்புறம்
அவன் குடும்பம் என்னதான் சார் செய்யும்?அவன் வாழ்வாதாரம் என்னாவுறது?
வேறே வழியில்லாம அங்கயே படுத்திட்டது ஒரு பழியா?
எனக்குச் சந்தேகம் கட்டிப் போட்டுக் கிடந்தவங்க மேலதான்….புது ஸ்டாக் பேரிங் எல்லாத்தையும்
கடத்தி வித்துட்டா செமையான காசு…புல்டோசர் ஸ்பேர்சும் நல்ல விலை போகும். கனம்மா பணம் பார்க்கலாம்னு திட்டம். …லெவன் டூ செவன்… ராத்திரி
ஷிப்ட் லட்சுமணன் வந்து அவிங்களோட சேர்ந்து இந்தக் காரியத்தச் செய்திட்டு, அவுங்களையும்
கட்டிப் போட்டுட்டு எதுவும் தெரியாத மாதிரி
கமுக்கமா வெளியேறியிருக்கணும்… பயங்கரமான டிராமா சார் இது…! மேலேர்ந்து சொல்லச் சொல்லி
நாலு மொத்து மொத்தி, நோண்டி நொங்கெடுத்தா எல்லா உண்மையும் வெளிய வந்திரும்..அப்டி அப்டியே
கக்கிடுவானுங்க..….அதத்தான் சார் செய்யணும் உடனடியா…..! இல்லன்னா போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட்
கொடுத்திட வேண்டிதான். அவுங்க கவனிச்சிப்பாங்க…!பளிச்சென்று தீர்வை எட்டியிருந்தான்
மோகன். அந்தத் தீர்வில் எதிர்த்தரப்பிலும் திருப்தி வந்திருக்கும் போலிருக்கிறது. அமைதி.
நம்பிக்கையான
வேலையாட்கள்தான். ஆனால் இது நம்பும்படியாகவா இருக்கிறது? ஏன் புத்தி இப்படி வக்கரித்தது? இதுநாள் வரை இப்படி எதுவும் நடந்ததில்லையே? ஒர்க்
ஷாப் சரித்திரத்திலேயே இதுதான் முதல் தடவை…!
பூதலிங்கம் அவன் பொஞ்சாதியோடு வீட்டுக்கு
வந்து கதறியது அவர் கண் முன்னே நிழலாடியது. நாலு குழந்தைகள்….குய்யோ முறையோ என்று வந்து
கதறி நின்ற காட்சி இவரை உலுக்கியது. அக்கம் பக்கமெல்லாம் வேடிக்கை பார்த்தார்கள். நம்
மக்களுக்குத்தான் வேடிக்கை என்றால் கொண்டாட்டமாயிற்றே!!
நா
அவுங்களக் காலைலதான்யா பார்த்தேன். கடைசி பஸ் நிக்காமப் போயிட்டான். ஏற முடில. அப்டியே
வந்து படுத்தவன்தான். அடிச்சிப்போட்ட மாதிரித் தூங்கியிருக்கேன். குலசாமி ஒண்டிக்கருப்பு மேல சத்தியம்…எங்க ஆத்தா தலமேல சத்தியம்…அவிங்களக்
கட்டிப் போட்டுட்டு நழுவினது லட்சுமணன்தான்…தவறாம டூட்டிக்கு வந்திடுற அவன் அன்னைக்கு
மட்டும் எங்க போனான். ஏன் வெளில ஓடிட்டான்?
இருந்தா மாட்டிக்குவோம்னுதானே? மூணு பேரும்தான்யா கூட்டுக் களவாணிங்க….என்ன
நம்புங்கய்யா…..! எந்தக் கோயில்ல வேணாலும் சத்தியம் பண்றேன். சூடத்த அணைக்கிறேன்…!
இனிமே எனக்குப் பகல் ட்யூட்டியே கொடுங்கய்யா…ராத்திரி வேணாம்…முடியாதுன்னா என்னை எங்கயாச்சும்
மாத்தி விட்ருங்க…சம்மதம்…இந்த மாதிரி ஆளுகளோட இருக்கிறது என்னைக்குமே ஆபத்து…எனக்கு
வேணாம்யா…வேணவே வேணாம்…என் வேல போயிராமக் காப்பாத்துங்கய்யா…நீங்கதான் தெய்வம்…!
திருட்டு
நடந்த அந்த இரவு ஸ்பாட்டில் இருந்த வாட்ச்மேன் பூதலிங்கத்தை ஏன் சஸ்பென்ட் பண்ணவில்லை
என்ற குற்றச்சாட்டு இன்றும் மோகன் மேல் உண்டுதான். அப்படி எங்கயிருக்கு? ரூல்ஸ் இருந்தா
காண்பிங்க என்ற அவனின் திடமான எதிர்க் கேள்விக்கும் இன்றுவரை எந்த திசையிலிருந்தும்
பதிலில்லைதான். விதி முறைகள் புத்தகத்தில்தானே பத்திரமாக உறங்குகின்றன…அவற்றை மண்டையில்
ஏற்றினால்தானே? எதிரிகளின் பலவீனமே ஒருவனுக்கு பலம். ஆனாலும் அந்தக் கேள்வி அவன் மேல்
விழுந்த கறை. அதுபற்றிஅவன்
கவலைப்படவில்லை. தன் அடுத்த பதவி உயர்வு பாதிக்குமோ என்பது பற்றியும் பொருட்படுத்தவில்லை.
இதனிலும்
அதிசயம் அதற்குப்பின் அந்தத் தரம் -1 உயர்த்தி
வழங்கல் சர்ச்சை எழவேயில்லை என்பதுதான். ஏனிப்படி மௌனித்துப் போனார்கள்? காரணம் புரியவில்லைதான்.
விபரீத
அனுபவங்களினால் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லைதான். மோகனிடமிருந்து நீண்ட பெருமூச்சு கிளர்ந்தது.
( 4 )
எடுத்த
எடுப்பிலேயே மறுத்தான் மோகன். திருச்சி அனுபவம் அவனை மேலும் இறுக்கியிருந்தது. நாம்
சரியாய் இருந்தால் எவனும் நம்மை அசைக்க முடியாது. அவ்வளவுதான்.
முடியாதுப்பா...நீங்க
சொல்ற ஆளு ஒர்க் க்வாலிட்டி இல்லாத ஒப்பந்ததாரர்.
கடந்த மூணு வருஷமா அவர் மேல நிறையப் புகார். அதனால்
அவருக்கு எந்தக் கான்ட்ராக்டும் வழங்கக் கூடாதுன்னு
உத்தரவு... அதிர்ந்து போனார் நாகநாதன். தன் பையன் இத்தனை கரெக்டாகப் பேசுவது குறித்து
பிரமித்தார்.
நீ
ஒரு வார்த்தை போட்டு வை உங்க ஆபீசர்கிட்ட...அது போதும்....மத்ததை நான் பார்த்துக்கிறேன்.....
இந்த
மாதிரியான விஷயங்கள் எதுலயுமே நான் தலையிடுறதில்லப்பா...தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீங்க....என்ன
ரூல்ஸ் உண்டோ அதை நான் எழுதி வைப்பேன்...அதுக்கு மேல எதிலயும் நான் மூக்கை நுழைக்கிறதில்லை...நீங்க
நினைக்கிறமாதிரி ஒண்ணும் நான் நெருக்கமான ஆள் இல்லை....
ஏண்டா
உன்னை திருச்சியிலேர்ந்து சொந்த ஊருக்குக் கொண்டு வந்தது இதுக்குத்தானா? உனக்கு முதமுதல்ல வேலை கிடைக்க இந்தத் துறைதான் வேணும்னு உன்னை ஆப்ஷன் கொடுத்து
எழுதச் சொன்னனே...அது எதுக்காக? வெறுமே நாக்கு வழிக்கவா? அதிர்ஷ்ட வசமா அதுவே அமைஞ்சு
போக எல்லாம் நல்லபடியா வந்திட்டிருக்குன்னு பார்த்தா இதக் கூடச் செய்ய மாட்டேங்குற...
சம்பளம் போக மேற்கொண்டு வருமானத்தப் பார்க்கத் தெரியாத பையனா இருக்க...ஊர் உலகத்துல
எல்லாரும் உன்னை மாதிரியா இருக்காங்க? அஞ்சு வருஷம் வெளிய இருந்திருக்கியே....இதத்தான்
கத்துக்கிட்டியா? சரி போகட்டும்னு விட்டா இந்த மாதிரிச் சின்ன விஷயம் கூட உன்னால செய்ய
முடியாதா? உன்னை ஆபீசருக்கு வலது கைன்னு சொல்றாங்க எல்லாரும்...?
நா
வலதும் இல்ல...இடதும் இல்ல...உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்காங்க..அப்படிச்
சொன்னவர் தப்பான ஆளா இருப்பான்.?
அப்போ
நான் தப்பான ஆள் கூடப் பழகிறவன்ங்கிறியா?
எனக்கென்ன
தெரியும்? உங்க மனசாட்சிக்கே தெரியும்தானே?
நீ
இருக்கேங்கிற தைரியத்துல சொன்னா, என்னடா இப்படிப்
பேசற? எனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னுதானே தலையால தண்ணி குடிச்சு…உன்னை இங்க கொண்டாந்தேன்…அப்ப
மட்டும் எந்தக் கேள்வியும் இல்லாம கம்முன்னு இருந்திட்டு இப்போ உன் வேலையைக் காட்டுறியா?
இது யாரோட புத்திடா? உங்க அம்மா புத்தியா? அவதான் சொல்லித் தந்தாளா அப்பா சொல்றதைக்
கேட்காதேன்னு? நான் சம்பாதிக்கிற துட்டு மட்டும் வேணும். ஆனா என் காரியங்கள்ல உதவியா
இருக்க மாட்டீங்க…அப்படித்தானே,? தப்போ, தவறோ அது என்னோட போகட்டும்..நாம தப்பிச்சிக்குவோம்ங்கிற
பாதுகாப்பு போலிருக்கு…? அப்டித்தானே? எவ்வளவ
ஜாக்கிரதைடா உங்களுக்கெல்லாம்?
நிறுத்தாமல்
சொல்லிக் கொண்டிருந்த அப்பாவின் வார்த்தைகள் பெரிய புலப்பமாகவே தோன்றியது மோகனுக்கு.
நாளை ஏதாவது ஏடாகூடமாய் மாட்டிக் கொண்டால் என்கிற சிந்தனையிலேயே அவர் காரியங்களைச்
செய்து கொண்டு போவதாய்த் தோன்றியது. தவறுதான்…ஆனால் தவிர்க்க முடியாதது என்பதும், இந்த
உலகத்தில் எவன்தான் நேர்மையாய்ச் செயல்படுகிறான் என்பதும், பின்னால் என்ன வருதோ அதை
அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிற அசட்டுத் துணிச்சலும்தான் இன்றைய பலரின் செயல்பாடுகளாய் விஞ்சி நிற்பதாய்த்
தோன்றியது மோகனுக்கு.
.இதென்ன
வீட்டு வேலையா…ஆபீஸ்ப்பா…கவர்ன்மென்ட் ஆபீசாக்கும். என்ன ரூல்ஸ் உண்டோ அப்படித்தாம்ப்பா
செய்ய முடியும். அதுக்கு மேலே எதுவும் நடந்தா அதுல நான் இருக்க மாட்டேன்...இதுநாள்
வரைக்கும் திருச்சில நான் அப்படித்தான் இருந்திட்டு வந்திருக்கேன்...படு மோசமான சூழ்நிலைல
வேலை பார்த்திட்டுத்தான் வந்திருக்கேன்....அந்த மாதிரி எடத்துல என்னளவுல நான் எப்படியிருக்கணும்னு
கத்துக்கிட்டுத்தான் வந்திருக்கேன். எனக்கு நல்லாத் தெரியும். என்னால இந்த மாதிரித்
தப்பெல்லாம் செய்ய முடியாது. நீங்க சொல்றது
தப்பு. செய்யப்போறது தப்பு...அதுக்கு நான் ஆளுல்லப்பா...என்னை விட்ருங்க…
சொல்லி
விட்டு வெளியேறியவன்தான். இதோ அலுவலகம் வந்து வேலை ஓடாமல் பித்துப் பிடித்தவன் போல்
உட்கார்ந்திருக்கிறான். அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் அப்பா தன்னிடமே வந்து
நிற்பார் என்று கொஞ்சமும் இவன் எதிர்பார்க்கவேயில்லை. நிம்மதியாய் உள்ளுரில் வேலை பார்ப்போம்
என்று வந்தால் தன் தந்தையே தனக்கு வினையாய் வருவார் போலிருக்கிறதே! அவர் வழி எதுவோ
அப்படிச் செய்து கொண்டு போக வேண்டியதுதானே? நானா குறுக்கே நிற்கப் போகிறேன்? என்னைப்
போய் அதைச் செய், இதைச் செய்…என்றால்? விதிமுறைகளை நிறைவேற்றும் இடத்திலா நான் இருக்கிறேன்.
அதிகார மையம் என்பது எனக்கு மேலே! அங்குதான் இறுதித் தீர்ப்பு. ஆனால் அந்தத் தீர்ப்புக்கேற்றாற்போல்
அங்கு பழம் பழுக்க ஏதுவாய் இங்கு உன் கை வித்தையைக் காண்பி என்கிறார் அப்பா.
அதாவது
அறிவை மழுங்கச் செய். ரொம்பவும் சிந்திக்காதே. விதிமுறைகளெல்லாம் புத்தகத்தோடு நிற்கட்டும்.
அவை அதிலேயே உறங்கட்டும். சதா அதைச் சுட்டிக் காட்டி கொடி கட்டி எடுத்துக் கொடுக்காதே…புத்தகத்தில்
உள்ள எழுத்துக்கள் வேறு…நடைமுறை என்பது வேறு. காலத்திற்கேற்றாற்போல் நடைமுறைகள் மாறும்தான்.
அதுதான் உலகத்தோடு ஒட்ட ஒழுகல். அது அல்லாமல் உன் ஏட்டுப் படிப்பு பல கற்றும் கல்லாதவர்
என்றே நீ அறியப்படுவாய்…என்று சொல்லாமல் சொல்கிறார் அப்பா. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் நல்ல
விஷயங்களுக்கு என்று எடுத்துக் கொள்ளாமல் தப்பு செய்வதற்கு என்று புரிந்து கொண்டு தாறுமாறாய்ச்
செயல்பட்டால் அது எங்கே கொண்டு போய் விடும்?
நேரம்
கடந்து விட்டது. வழக்கமான வேகம் இல்லை இன்று. ஷன்டிங் பாசஞ்சர் போலாகி விட்டது. சுலபமான
சில கோப்புகளை மட்டும்தான் அட்டென்ட் செய்ய முடிந்தது. ஆழமாகப் படித்து நுணுக்கமாய்ச்
செய்ய வேண்டிய கோப்புகளைத்தான் முதலில் கையில் எடுப்பான் அவன். அப்படியே செய்து செய்து
அதுவே அவனுக்குப் பழக்கமாகிவிட்டது. கஷ்டமான ஃபைலா இருந்தா மோகன்ட்டக் கொடுங்க...அவர்
பார்த்துக்குவாரு என்று அலுவலர் அவனைப் பரிந்துரைக்க மற்ற பிரிவுகளின் கோப்புகள் இவன்
பார்வைக்கு வருமளவுக்கு மதிப்புமிக்கவனாகி விட்டவன் இவன். விதிமுறைகளுக்கென்று என்னென்ன
புத்தகங்கள் இருக்கிறதோ அத்தனையையும் கரைத்துக் குடித்தவன். மோகனின் கையில் எப்பொழுதுமே
ஒரு டைரி இருக்கும். அதில் நிறையக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும். எது தேவைப்பட்டாலும்
அதைத்தான் முதலில் புரட்டுவான். ஏறக்குறைய எல்லாமும் அவன் மனதிலேயே இருக்கும். விதிகளின்
எண்களை மட்டும் குறிப்பதற்காகப் புரட்டுவான். தன் மனதிலுள்ளது சரிதானா என்றும் ஒரு
முறை சரிபார்த்துக் கொள்வான். தன் வேலையின் மூலமாகத் தலை நிமிர்ந்தவன் அவன். தன்னை
மதிப்புமிக்க இடத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வெறியோடு முனைப்புக் காட்டியவன்.
இவனைப் போலவே விதிமுறைகள் பலவும் அறிந்த வேறு சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அவர்களிடமெல்லாம் இல்லாத கூடுதல் பலம் ஒன்று இவனுக்கு உண்டு. அதுதான் இவனது நேர்மை.
அதுதான் தன்னை இன்றுவரை பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்று நினைத்துக் கொள்வான். தங்கள்
திறமையை நல்லதற்குப் பயன்படுத்தாதவர்கள்தான் அதிகம். அதன் மூலமாக சுய லாபம் அடைய யத்தனிப்பவர்கள்தான்
பலர். ஆனால் தான் அப்படியில்லையே! அதற்காக அதைத் தம்பட்டம் அடித்துக் கொள்வதும் இல்லை.
நேர்மையாக இருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டவன் அதை விளம்பரப்படுத்த வேண்டும்
என்று என்றுமே நினைப்பதில்லை. அது அவர்களின் எளிமை. அந்தப் பக்குவம் அவனுக்குக் கை
வந்திருந்தது.
மோகன்…என்ன
பலமான யோசனை? டயமாகல்லியா? உங்களுக்கு சாப்பாடு வந்திருக்கு… - கையில் அவளுக்கான டிபன்
பாக்சோடு நந்தினி வந்து சொன்னபோதுதான் தன் நினைவுக்கு வந்தான் இவன்.
என்னது
சாப்பாடா? யார் கொடுத்து விட்டது?
அம்மாதான்யா
கொடுத்துவிட்டாங்க....உங்க பக்கத்து வீட்டு அய்யாவுக்கு நான்தான கேரியர் எடுத்திட்டு
வாரேன்...அடுத்தாப்ல இருக்கிற ஆபீசுல இருக்காருல்லங்கய்யா....இன்ஜினியரு... அவருக்குத்தான்....அப்டியே
இதையும் கொடுக்கச் சொல்லி உங்கம்மாதான் கொடுத்து விட்டாக....காலைல மறந்து வந்திட்டீகளாமுல்ல....
சொல்லி
விட்டுப் போய்க் கொண்டேயிருந்தாள் கூடைக்காரி. அவளை இன்றுதான் இவன் பார்க்கிறான். ஆனால்
அவனைப்பற்றி, அவன் இருக்கும் அலுவலகம் பற்றி அவள் தெரிந்து வைத்திருக்கிறாள். இதைத்தான்
விபரமான ஆளு என்று சொல்வார்களோ? எல்லோரும் எல்லாமாகவும்தான் இருக்கிறார்கள். ஆனால்
தான் மட்டும்தான் தானாகவே மட்டும் இருக்கிறோமோ என்று ஏனோ தோன்றியது அப்போது. அப்படி
இருப்பதில் என்ன தவறு என்ற கேள்வியும் கூடவே பிறந்தது அவனுக்கு.
அடுத்தடுத்த
கட்டடங்களில் மேலு்ம் சில அலுவலகங்கள் உண்டு. அங்கும் ஒரே பரபரப்புதான். எந்நேரமும்
ஒப்பந்ததாரர்களின் கூட்டம்தான். ஆட்கள் புடை சூழ அவர்கள் வந்து இறங்கும் தோரணையே பார்ப்பவர்களுக்குக்
கலவரத்தை உண்டு பண்ணும். எனக்கில்லாம வேறே யாருக்கும் கான்ட்ராக்டைக் கொடுத்திருவியா
நீ? என்று கேட்காமல் கேட்பது போலிருக்கும். லைசன்ஸ் பெற்றவர்களைப் போல் படு சுதந்திரமாக
அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைவதும் பலரையும் பெயர் சொல்லி சத்தமாய் அழைப்பதும், தோளில்
சத்தமுறத் தட்டுவதும், ஆபீஸ் நடு உறாலில் போய் அமர்ந்து கொண்டு பியூனைக் கூப்பிட்டு
உத்தரவிடுவதும்…இதுதான் இங்க நடைமுறை…இப்படித்தான் நீங்களெல்லாம் இருக்கணும், இருந்தாகணும்…
என்று சொல்லி அவர்களின் விருப்பத்தைக் கேட்காமலேயே வடை பஜ்ஜி, டீ என்று ஆர்டர் பண்ணுவதும்…யாரும்
விடுபடக்கூடாது…எல்லாருக்கும் சப்ளை பண்ணிரு…என்று பியூனுக்கு உத்தரவு போடுவதும், கையில்
பிளாஸ்கை எடுத்துக் கொண்டு அவன் ஓடுவதும்…கடைல நான் சொன்னேன்னு கெட்டில்ல வாங்கிட்டு
வாப்பா…என்று கத்துவதும், .எங்கிருந்து வந்தது இந்த நடைமுறைகளெல்லாம்? எப்படி உள்ளே
நுழைந்தது? என்ன அதிகாரத்தின் பேரில், யாருடைய உத்தரவின் பேரில் இப்படிப் பரவிக் கிடக்கிறது?
என்ன?
டிபன் பாக்சைத் திறந்திட்டு அதையே பார்த்திட்டிருக்கீங்க? அதுல ஏதாச்சும் படம் தெரியுதா?
– நந்தினி இவன் கையைப் பிடித்து உலுக்க…சரக்கென்று கையைப் பின்னால் இழுத்துக் கொண்டான் மோகன்.
என்னதிது…நீங்கபாட்டுக்கு..?
என்று அவள் கையைப் பிடித்ததைத் தான் விரும்பவில்லை என்பதை முகத்தைச் சுளித்து உணர்த்தினான்
மோகன். அங்கங்கே நாலைந்து பேராகச் சேர்ந்து சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களில்
யாரேனும் இதைப் பார்த்தால்? ஆபீசுக்கே தண்டோரா போட்டது போல் ஆகாதா? இதென்ன ஒரு பெண்ணுக்கு
இவ்வளவு துணிச்சல்? அந்தளவுக்கு நான் இதுவரை எதிலும், எங்கும் இடம் கொடுத்ததில்லையே?
தன் இருக்கையை விட்டு தன்னிடம் வந்து இங்கு அமர்ந்து தினசரி அவள் மதியச் சாப்பாட்டை
நடத்துவதிலேயே இவனுக்கு ஒப்புதல் இல்லைதான். பக்கத்து இருக்கைத் தோழியோடு முன்பே ஏற்பட்ட
பழக்கத்தில் வருகிறாள் என்றாலும் அவளின் இருக்கை இப்போது மாடிக்கு மாறிப் போனதே? அப்புறமும்
ஏன் இங்கு வந்து கொண்டிருக்கிறாள்? அங்கு போக வேண்டியதுதானே? இதை எப்படியாவது தடுக்க
வேண்டுமே? பலமான யோசனை போனது மோகனுக்கு..
அம்மாவின்
கைபாகத்தில் உருவான சாப்பாடு நான்கு அடுக்குக் கேரியரில் வந்து என்னை எப்போது திறக்கப்
போகிறாய் என்று கேட்பது போலிருந்தது. ஒரு அடுக்கை எடுத்து முன்னால் வைத்துக் கொண்டிருந்தவன்…மற்றதில்
என்னென்ன இருக்கிறது என்று பார்க்கவேயில்லையே? அதில் அவன் விரும்பிக் கேட்கும் பாகற்காய்
சிப்ஸ் பொரித்து வைத்திருப்பாளோ? சாப்பிடும்போது முழு கவனமும் அதில்தான் இருக்க வேண்டும்.
இன்று என்னடாவென்றால் எது எதுவோ வந்து உடம்பைத் தொற்றிக் கொண்டு பாடாய்ப் படுத்துகிறது.
ச்சே…! மனிதனுக்கு சிந்தனை என்பதே இருக்கக் கூடாது. அதுதான் நிம்மதி. அநாவசியமாய் மனதைப்
போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாமே?
அம்மா
பாவம். மனது மிகவும் வருந்தியிருப்பாள். சொந்த ஊருக்கு இப்பொழுதுதான் வந்திருக்கும்
பையனைப் போட்டு இப்படிப் படுத்துகிறாரே என்று நினைத்திருக்கலாம். அம்மாவால் அப்படி
வருத்தப்படத்தான் முடியும். எதுவும் சொல்ல ஏலாது. சொன்னால் காட்டுக் கத்துக் கத்துவார்
அப்பா. குழந்தைகளெல்லாம் பெரியவர்கள் ஆகும் முன்பு அம்மாவை அடித்திருக்கிறார். ஆனால்
இப்பொழுது அது இல்லை. இவனும், தங்கைகளும் வளர்ந்தாயிற்று. பிள்ளைகள் முன் மனைவியை அடிப்பது
தவறு என்று விட்டுவிட்டாரோ என்னவோ? வெறும் சத்தத்தோடு சரி. ஒன்றுக்குப் பாடாய்ப் பட்டு,
வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டி, இல்லாத விரதமெல்லாம் இருந்து, கோயிலில் உருண்டு
பிரண்டு, ஒரு ஆணைப் பெற்றதுதான் தாமதம், அடுத்தடுத்து மூன்று பெண் குட்டிகளைப் பெற்றுப்
போட்டதும், என்ன பயம் வந்து பிடித்துக்கொண்டதோ ஆளே மாறிப் போனார். சரி, அதற்காக நடவடிக்கைகளுமா
இப்படி மாறும்? வாழ்க்கையைக் கண்டு மிரண்டு விட்டாரோ என்றிருந்தது. சாதாரணமாய் அரசியலில்
இருந்து கொண்டிருந்த அப்பா எதற்கெடுத்தாலும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதுபோல் ஏன்
அப்படி முனையலானார்? எந்த நடவடிக்கைக்கும் பின்வாங்காமல் துணிந்தல்லவா செய்ய ஆரம்பித்து
விட்டார். பணம் சம்பாதிப்பதற்கு இது ஒன்றுதான் வழி. வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்தால்தான்
முடியும் என்று இந்த வழியை அப்பாவுக்கு அப்படி அறுதியிட்டுக் காண்பித்தது யார்? அல்லது
எது?
அப்பாவின்
அப்படியான முயற்சியிலல்லவோ தானே உள்ளுர் வந்தது. சீனியாரிட்டிப்படி தானே முதல் வரிசை என்றாலும், வேறு
ஊர்களிலிருந்து தனது சொந்த ஊருக்கு மாறுதல் கேட்டிருப்பவர் எவ்வளவு பேர் இருப்பார்கள்?
அப்படியானவைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத்தானே உள்ளுர் வந்தது. சரியாகப் பார்த்தால்
நியாயமான ஒன்றில்லைதான். என்ன செய்வது? இவனும் ஏங்கித்தான் போனான். தனிமை இவனை ரொம்பவும்
சங்கடப்படுத்தி ஏதோ வியாதிக்காரன் போலாக்கி விட்டது. குடும்பத்தில் அப்பா அம்மா, தங்கைகளோடு
ஒன்றுக்குள் ஒன்றாக வளர்ந்து ஓங்கியவன். அந்த நினைப்பே வியாதி போலாகிவிட்டது. அறையில்
தனிமையில் படுத்து உறங்க முடியவில்லை. சினிமாவாய்ப் பார்த்து அலுத்து விட்டது. உடம்பு
அசதிதான் மிச்சம். திருச்சியைச் சுற்றியுள்ள கோயில்களுக்கெல்லாம் போய்ப் போய் ஓய்ந்து
விட்டது. எத்தனை முறை சாமியை விழுந்து விழுந்து கும்பிட்டு என்ன பயன்? மாறுதல் வேண்டும்
விண்ணப்பம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை. அதற்கென்று ஒரு சீனியாரிட்டி உண்டா இல்லையா?
அப்படியிருந்திருந்தால் இந்நேரம் அது தனக்குக் கிடைத்திருக்க வேண்டுமே? பதிவேட்டில்
பதிவதேயில்லையா? ஒவ்வொருவராய் மாறுதல் ஆணை பிறப்பித்துப் பிறப்பித்து…தன் முறை இன்னும்
வரவேயில்லையா?
வரிசை
எண் போடாமல்…இடம் விட்டு இடம் விட்டு ஏன் பதிவேட்டில் பதிந்திருக்கிறார்கள்? ஒரு முறை
அலுவலகப் பயணமாகச் சென்னை சென்றபோது தலைமையத்தில் அவன் கேட்ட கேள்வி இது. அவர்கள் இவனை
முறைத்தார்கள். முறைப்பதிருக்கட்டும்…என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் என்று ஒற்றைக்
காலில் நின்றான் இவன்.
வரிசை
எண் காணல…இடம் விட்டு இடம் விட்டுப் பதிஞ்சிருக்கீங்க…ஏன்? வேறே யாராச்சும் வேண்டியவர்
வந்தால் இடைச் செருகல் பண்ணவா? அப்போ என் விண்ணப்பத்துல டேட் சீல் விழுந்திருக்குமே…அதுக்கு
என்ன மதிப்பு? அந்தத் தேதி பிரகாரம், வரிசைல என் விண்ணப்பமும் பதியப்பட்டிருக்க வேண்டாமா?
உங்க இஷ்டத்துக்குப் பதிவீங்களா? ஏதாச்சும் ரெக்கமன்டேஷன் வந்தா அவனை இடைல கொண்டு சேர்த்திடுவீங்க…அவன்தான்
முதல்லன்னு டிரான்ஸ்பர் கொடுத்துடுவீங்க…அப்படித்தானே? – பிடிபிடியென்று பிடித்துக்
கொண்டு விட்டான் மோகன். மாவட்டத்திலிருந்து தலைமையகத்துக்கு வந்து நின்று இத்தனை சத்தமாய்
இதுநாள் வரை எவனும் நின்று கேள்வி கேட்டதில்லை.
நீங்க
போங்க…உங்களுக்கு சீக்கிரமே ஆர்டர் வந்திரும்…என்று மொட்டையாய்ச் சொன்னார்கள். ஆர்டர்
எங்கே வந்தது. விண்ணப்பம்தான் காணாமல் போனது. ஏன் பதிவேடே காணாமல் போனது என்றுதான்
சொல்ல வேண்டும்.
மாதாந்திர
ரெவ்யூ மீட்டிங்குக்கு வரும்போதெல்லாம் பார்த்து என்ன பிரயோஜனம்?
இந்த
ரிஜிஸ்டர் இல்லீங்க…அது பழசு…நீங்க வேறே எதையோ காண்பிக்கிறீங்க…என்ற இவனை டிரான்ஸ்பர்
ரெக்வெஸ்ட்டுக்குன்னு எல்லா ஆபீஸ்லயும் ஒரேயொரு ரிஜிஸ்டர்தான் மெயின்டெய்ன் பண்ணுவாங்க…பத்து
ரிஜிஸ்டரா வச்சிருப்பாங்க…நீங்க போன வாட்டி வந்தப்போ என்னத்தைப் பார்த்தீங்க? எதைக்
காண்பிச்சாங்க உங்களுக்கு? எங்களுக்கே வேலை சொல்லித் தர்றீங்களா? என்று கத்தினார்கள்.
இது வேலைக்காகாது என்று வெறுத்துப் போன மோகன் பிறகுதான் அப்பாவின் இஷ்டத்திற்கு விட்டான்.
என்னவோ செய்து கொள்ளட்டும்…மாறுதல் வந்தால் சரி என்று இருந்து விட்டான். இங்கு நேர்வழிக்கு மதிப்பே இல்லை. எல்லாமும் குறுக்கு வழிதான். நாம்
நம்மளவில் சரியாக இருக்கலாம். மற்றவர்களை மாற்ற முடியாது. மாற்ற நினைக்கவும் கூடாது.
அவரவர் நேர்மையாக இருந்தால்தான் நல்லதும் நன்மையும் சாத்தியம் என்று மனதை இறுக்கிக் கொண்டான். சுயநலம்
என்று வரும்போது தானும் சற்றுக் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டி வந்துவிட்டதே என்ற குற்ற
உணர்ச்சி அவனை உறுத்தத்தான் செய்தது. அது மாறுதல் ஆணையைப் பார்த்தபோது அறவே மறந்து
விட்டது.
அப்பாடா!
சொந்த ஊர் வந்தாச்சு!! – எத்தனை சந்தோஷமான நாள் அது. அந்த ஞாயிற்றுக் கிழமை அம்மாவோடு கோயிலுக்குப் போனான்.
தங்கைகளோடு சினிமாவுக்குப் போய் வந்தான். கலகலவென்றும், சிரித்துக்கொண்டும், கும்மாளமிட்டுக்கொண்டும்,
சின்னச் சின்னச் சிணுங்கல்கள் செய்து கொண்டும், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும்,
அடிப்பதுபோல் பாவனை செய்து கொண்டும், அம்மாவிடம் போய் புகார் செய்து கொண்டும், அப்பா
இருந்தால் கப்சிப் என்று முடங்கிக் கொண்டும், அப்பாடீ...ஐந்தாண்டுகள் இதெல்லாம் அறவே
இல்லாமல் போயிற்றே? அந்த ஆண்டவனுக்கு நன்றி என்னை உள்ளுர் கொண்டுவந்து சேர்த்ததற்கு.
இவன்
அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்த அன்று அப்பா சொன்னார். ஆண்டவன் எங்க கொண்டு வந்தாரு.
எல்லாம் மனுஷ முயற்சிடா...மனுஷ யத்தனம். இல்லேன்னா ஒண்ணும் கதையாகாது. ஆம்பளைன்னு இருந்தா
ஆட்கள் நல்ல வெளிப் பழக்கம் வேணும். சும்மா குண்டுச் சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டினாப்
பத்தாது. ஆபீஸ்ல வேலை பார்க்கிறங்கிறதுக்காக உனக்கு எல்லாமும் தெரிஞ்சிடிச்சின்னு அர்த்தமா?
அதுதான் இல்ல. ஏட்டுச் சுரைக்காய் வேறே. உலக அனுபவமங்கிறது வேற...வீடு-ஆபீசு, வீடு-ஆபீசுன்னு
இருந்தா உலகம் கைக்குள்ள வராதப்பூ......
அப்பாவின்
உலகம் தனி. அது தனக்கு வேண்டாம் என்றுதான் தோன்றியது இவனுக்கு. ஜகதலப்பிரதாபன் என்கிற
பெயர் அடிக்கடி இவன் மனதில் ஏனோ தோன்றிக்கொண்டேயிருக்கும். புதுவிதமான பெயராக இருப்பதாலேயே
அது தன் மனதில் நின்று போனதோ என்று கூட எண்ணியிருக்கிறான். அந்தப் பெயர் இப்போது அப்பாவுக்குக்
கனகச்சிதமாகப் பொருந்தும் போலிருந்தது. ஆனால் வாய் விட்டுச் சொல்ல முடியுமா?
நந்தினி
அந்த அலுவலகத்தில் அவனிடம் அப்படி நெருக்கமாக நடந்து கொள்வது இவனுக்கு லஜ்ஜையாக இருந்தது.
தன்னைப் பற்றி யாரும் எதுவும் தவறாக நினைத்துவிடக் கூடாது என்பதுவே அவனின் எண்ணமாக
இருந்தது.
கற்பனை
போதும்…சாப்பிடுங்க… – சொல்லிக் கொண்டே நந்தினி எழுந்து கை கழுவப் போனாள். இந்தாங்க இதையும் நொறுக்கிட்டுப் போங்க…என்றவாறே
அம்மா கொடுத்து விட்ட பாகற்காய் சிப்சை அவளிடம் நீட்டினான் மோகன். மீண்டும் நந்தினி
அதற்காக
அமர்ந்தபோது கொல்லைப்புறம் பாத்ரூமுக்கு வந்த சிலரின் பார்வை இவர்கள் மேல் விழாமலில்லை.
( 5 )
நந்தினியைத்
தவிர்க்க முடியவில்லை மோகனால். திருச்சியில் அவளோடு எத்தனையோ நாட்களைக் கழித்திருந்தான்.
கோயில், ஓட்டல், சினிமா என்று சுற்றியிருக்கிறான். எதற்குமே அவள் மறுத்ததில்லைதான்.
கோயில் வேண்டாம் என்று என்றுமே அவள் சொன்னதில்லை. எங்க வேண்டுமானாலும் போவோம் என்றுதான்
ஒத்துழைத்தாள்.ஆனால் அவர்களுக்குள் ஒரு
கட்டுப்பாடு இருந்தது என்னவோ நிச்சயம். ஒரு ஆண் நண்பருடன் சுற்றினால் என்ன மாதிரியான
வழக்கமிருக்குமோ அதிலிருந்து இம்மியும் பிசகவில்லை அவன். அவளும் அவனது நியதியை மதித்தாள்.
உனக்கு மட்டும்தான் காரெக்டரா? எனக்கும் உண்டுதான். நானும் நல்ல குடும்பத்துலேர்ந்து
வந்தவதான்…என்று சொல்லாமல் சொன்னாள்.
அப்படியானா வீட்டுக்குத்
தெரியாம இப்படி ஒரு மூணாவது ஆண் மகனோடு சுற்றித் திரிவது சரியா? என்றும் ஒரு கேள்வி
விழுந்தது. நட்பு ரீதியாக வெளியே போவதும் வருவதும் என்ன தவறு? என்று மனம் சமாதானம்
செய்து கொண்டது.
இப்படி லீவ நாள்ல என்னோட திட்டமிட்டுக் கிளம்பிடுறியே…உங்க
வீட்டுல எதுவுமே கேட்கமாட்டாங்களா?.
ஆபீசுக்குப் போறதாத்தான் சொல்லிட்டு வருவேன்.
இல்லன்னா என்னோட படிச்ச தோழி சசி உறாஸ்டல்ல தங்கியிருக்கா…அவளைப் பார்க்கப் போறேன்னு
சொல்லிட்டுக் கிளம்பிடுவேன். அவளோட சுத்தினா யாருக்கு சந்தேகம் வரப் போகுது? எங்க வீட்டுல
நான் ஒருத்திதான் சம்பாதிக்குற ஆளு…அதனால் எனக்கு சுதந்திரம் உண்டு…
அதான் இப்படி அவுத்து விட்டுட்டாங்க போல்ருக்கு…வீட்டுக்கே
படியளக்கிற சாமில்ல…எப்படிக் கேள்வி கேட்க முடியும்? ஆமா…உங்க அப்பா என்ன செய்றாரு?
அதப்பத்திச் சொல்லவேயில்லையே? என்றான் மோகன்.
அது ஒரு ஷேர் மார்க்கெட் பைத்தியம். தினமும் காலைல
ஒன்பது மணிக்கு டிரேடிங் ஆபீஸ் போய் உட்கார்ந்திடும். இன்ட்ராடே ஷேர் எது எதுன்னு கண்ணுல
விளக்கெண்ணெய் விட்டுப் பார்த்துக்கிட்டு அங்கே ரெக்கமன்ட் பண்ற அஞ்சாறு ஷேர்களை அன்னக்கே
வாங்கி அன்னைக்கே விற்று ஐநூறு ரூபா காசாவது பார்க்காமத் திரும்பாது. ரிடையர்ட் ஆனதுலேர்ந்து
இதான் வேலை. கேட்டா வீட்டுல சும்மா உட்கார்ந்திருக்க முடியுமான்னு சொல்லுவார். சக்ஸஸ்ஃபுல்
டிரேடர்னு சொல்லிட முடியாது. என்னவோ ஓடுது.
காசக் கரியாக்காம இருந்தாச் சரின்னு நாங்களும் விட்டுட்டோம். வர்ற பென்ஷன் காசு
போதும்னு இருக்கணும். அதென்னவோ அப்படி ஒரு ஆசை. கணக்கு அலுவலரா இருந்தவர். சர்வீஸ்ல
இருக்கிறபோதே இந்த ஷேர் மார்க்கெட் பழக்கம் உண்டு. எதுல இறங்கினாலும் சின்சியரா முயற்சி
பண்ணுவார். வெற்றியடையாம விடமாட்டார். அப்படி அதுலயே இறங்கி ஒரு ஏழெட்டு லட்சம் வரைக்கும்
பார்த்திருக்கார். இல்லேன்னு சொல்ல முடியாது. பிறகு ஒரு கட்டத்துல சட்டுன்னு விட்டுட்டார்.
ஏம்ப்பா நிறுத்திட்டீங்கன்னு கேட்ட போது…எப்பவு்ம் காசையே விரட்டிட்டுத் திரியறதா ஒரு
ஃபீலிங்…காசு ஒண்ணுதான் வாழ்க்கையா? வேறே சந்தோஷமோ திருப்தியோ இந்த உலகத்துல எதுலயும்
இல்லையா? ன்னார்.
அப்போ
இவ்வளவு புஸ்தகங்களை வாங்கி அடுக்கியிருக்கீங்களே…அதயெல்லாம் படிக்கப் போறீங்களா?ன்னு
சாதாரணமாக் கேட்டேன். அம்மாதான் அடிக்கடி கேலி பண்ணுவாங்க…எதுக்கு இவ்வளவு புத்தகங்களை
வாங்கி வாங்கி அடுக்குறீங்க? உங்களுக்கோ படிக்க முடில. பெருமைக்கு வாங்கி சேர்க்கணுமா?
யாருக்கு என்ன லாபம்? ன்னுவாங்க.
இது
ஒண்ணுதான் என்னோட ஆசை. அதுக்குமா தடை போடுவ? நானென்ன இஷ்டத்துக்கு சினிமா போக, ஒட்டல்
போகன்னு பணத்தை விரயமாக்குறேனா? மாசங்கூடி நாலஞ்சு புஸ்தகம் வாங்குவேன். அது ஒண்ணுதான்
என்னோட செலவு. வேறே மருந்து மாத்திரைகள் கூடக் கிடையாது இன்னைவரைக்கும். ஏதோ ஆண்டவன்
புண்ணியம். என்னிக்கு என் உடம்பு கீழ விழுதோ..அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்…
வர்ற பென்சன்ல ஒரு ஐயாயிரம் கூடச் செலவு பண்றதில்ல நான். அத்தனையும் இந்தக் குடும்பத்துக்குத்தான்.
என்னோட ரிடையர்டு ஆனவங்க இந்த ஏரியாவுல நிறையப் பேர் இருக்காங்க…அவங்ககி ட்டல்லாம்
போய்க் கேட்டுப் பாரு…தெரியும்…எவ்வளவு மருந்து மாத்திரை சாப்பிடுறாங்கன்னு. கைல ஒரு
பைய வச்சிக்கிட்டு தினமும் பார்க் வருவாங்க…அதுல வேறே என்ன இருக்கும்னு நினைக்கிறே?
சுகர் கம்மியான டக்குன்னு எடுத்துப் போட்டுக்க சாக்லெட்டும், மருந்து மாத்திரைகளும்தான்
சரம் சரமா இருக்கும். கடவுள் அப்படி நம்மள வைக்கலியே?
உன்
பொண்ணுதான் சரியாக் கண்டு பிடிச்சிட்டா…அதத்தான் செய்யப் போறேன் இனிமே…ஒவ்வொரு புக்காப்
படிச்சி முடிக்கிறதுதான் இனி என்னோட வேலைன்னு அதுல இறங்கிட்டார். வெளில அடியெடுத்து
வைக்கிறதில்லை. எதுக்காகவும் போறதில்லை. ஒரு சாமான் வாங்கணும்னாக்கூட சலிச்சிக்குவார்.
எவ்வளவுதான் மொத்தமா வாங்கிப் போட்டாலும், பிறகும் அது வேணும், இது வேணும்னு கேட்டா
எப்படின்னுவார். அதனால் நாங்க அவர்ட்ட எதுவும் சொல்றதில்லை. பாவம்னு விட்டுட்டோம்.
நாம நம்ம அப்பாவுக்கு சலுகை செய்யாம வேறே யாரு செய்வாங்க?
நவீனத்
தமிழ் இலக்கியத்துல அதீத ஈடுபாடு உண்டு அப்பாவுக்கு. 1930 கள்லர்ந்து எழுதிட்டிருந்த கிளாஸிக் எழுத்தாளர்களோட புத்தகங்கள் பூராவும்
வாங்கி வச்சிருக்கார். அதை ஆத்தர்வைஸ் அடுக்கி விருப்பப்பட்ட எழுத்தாளரோட விருப்பப்பட்ட
புத்தகத்தை டக்கு டக்குன்னு எடுத்துப் படிக்க வசதியா…வீட்டுல அவரோட அறைல ஷெல்ப் போட்டு
செட்டு செட்டா அடுக்கி வச்சிருக்கார். அப்பப்போ உருவி உருவிப் படிக்கிறதைப் பார்க்கிறபோது
உண்மைலயே இவருக்கு இதுலதான் ஆத்மார்த்தமான விருப்பம்ங்கிறது நல்லாத் தெரியும். பணம்
சம்பாதிக்கிறதுல அத்தனை அக்கறை கிடையாதுங்கிறதுதான் உண்மை.
அப்போ
உங்க அப்பா எழுதுவாரா? – தற்செயலாய்த்தான் கேட்டான் மோகன்.
என்ன
இப்படிக் கேட்டுட்டீங்க…? இதுலர்ந்து ஒண்ணு தெரியுது…உங்களுககு இந்த ஃபீல்டுல இன்ட்ரஸ்ட்
கிடையாதுன்னு. அது ஒண்ணும் தவறில்லைதான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட். எங்கப்பா
நிறையப் புஸ்தகம் படிக்கிறவரா இருக்கிறதுனாலதான் எங்களுக்கும் அந்தப் பழக்கம் படிஞ்சிடுத்துன்னு
சொல்லணும். நான், என் ரெண்டு தங்கைகள், ஒரு
தம்பின்னு எல்லாரும் வீட்டுல ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்து படிச்சிட்டுத்தான் கிடப்போம்.
எங்க வீடே அமைதியா இருக்கும் எப்போதும். பின் டிராப் சைலன்ஸ். வெளிலர்ந்து பார்க்குறவங்களுக்கு வீட்டுக்குள்ள
ஆட்கள் இருக்காங்களா இல்லையான்னு சந்தேகம் வரும். அந்த அளவுக்கு ஒரு அமைதி நிலவும்.
யாரும் அதிகமா டி.வி.பார்க்கிறதில்ல. சீரியல்கள்னாவே பிடிக்காது. ஏதாச்சும் பழைய
பிளாக் அன்ட் ஒயிட் படம் போட்டாங்கன்னா எல்லாரும் உட்கார்ந்து பார்ப்போம். அவ்வளவுதான்.
அடிதடி, வெட்டு குத்து, ரத்தம் பீய்ச்சி அடிக்கிறது இந்த விவகாரங்களே பிடிக்காது. தேவையில்லாம
அதுகளைப் பார்த்து மனசையும் உடம்பையும் கெடுத்துக்கிட்டுன்னு யாரும் நெருங்கிறதில்லை.
எங்களுடைய பொழுதுபோக்கு அம்சம்ங்கிறதே அமைதியா, தனித்தனியா உட்கார்ந்து புஸ்தகம் படிக்கிறதுதான்.
அப்படித்தான் நாங்க பழகியிருக்கோம்.
அப்போ லைப்ரரிக்குப் போகுறதுக்கு பதிலா உங்க வீட்டுக்கு வந்தாப்
போதும்னு சொல்லு…ஏதாச்சும் ஒரு நூலை எடுத்துக் கொடுத்து இதப் படிங்கன்னு உட்கார்த்திடுவீங்கதானே…?
சும்மா தமாஷூக்குக் கேட்டேன். தப்பா எடுத்துக்காதே…என்றான் மோகன்.
நந்தினி பெரிதாகச்
சிரித்தாள். லைப்ரரி போனா பணம் கட்டி டோக்கன் வாங்கிப் புத்தகம் எடுக்கணும். இங்கே
ஃப்ரீயாவே கிடைக்குமே…சிக்கனக்காரர்தான் நீங்க என்றாள்.
அப்டியில்லையே…அங்கன்னா டைம் லிமிட் உண்டு. இங்க அது கிடையாதே…
எடுத்திட்டுப் போய் சாவகாசமாப் படிச்சிட்டுக் கொடுக்கலாமே….என்றான் மோகன்.
சாவகாசமால்லாம் கொடுக்க முடியாது. எங்கப்பா யாருக்கும் வெளில
தன் புஸ்தகங்களைக் கொடுக்கிறதை விரும்ப மாட்டார். உங்களுக்கு வேணும்னா சலுகை பண்ணலாம்.
ஆனா பதினஞ்சு நாள்ல திருப்பிக் கொடுக்க வேண்டிர்க்கும். நோ ரென்யூவல்…- சொல்லிவிட்டுச்
சிரித்தாள் நந்தினி. மேலும் தொடர்ந்தாள்.
அப்படி வெளில நண்பர்களுக்கு ஒவ்வொண்ணாக் கொடுத்து நிறைய இழந்துட்டார்.
சிலர் திருப்பித் தரவேயில்லை. மணி மணியான புத்தகங்கள். படுபாவி…ஆட்டையப் போட்டுட்டான்…என்று
திட்டித் தீர்த்தார் அப்பா. அம்மாதிரி நண்பர்களுடைய நட்பையே துண்டித்துக் கொண்டு விட்டார்.
எதெது தொலைந்ததோ அதையெல்லாம் திரும்பக் காசு போட்டு வாங்கி வைத்தார். அதில்தான் அம்மாவோடு
சண்டை பெரிதாயிற்று. உனக்குத் தெரியாதுடி பு்த்தகங்களோட மகிமைன்னு கோபப்படுவார்.
புத்தகங்கள் மனுஷனப் பெரிய விவேகியா மாத்துது. அவனோட சளசளப்பைப்
போக்குது. அவனை அமைதியானவனா ஆக்குது. ரொம்பப் பக்குவமானவனா ஒருவன் ஆகணும்னா நிறையப்
படிக்கணுமாக்கும். இந்தச் சின்ன வாழ்க்கைல நமக்குக் கிடைக்கிற அனுபவங்கள் ரொம்ப ரொம்பக்
குறைவு. நாம சந்திக்கிற மனுஷங்களும் கொஞ்சம். நம்மோட வாழ்வியல் எல்கை மிக மிகக் குறைவு.
அதனால நிறைய அனுபவப்பட்டவங்க எழுதி வச்சிருக்கிற புத்தகங்களை வாங்கிப் படிக்கும்போது
நாமளும் அந்தப் பக்குவத்தை எய்துறோம். ரொம்பவும் பொறுப்பான மனுஷனா இந்தச் சமூகத்துல
மாறுறோம். மிகச் சிறந்த விவேகியா ஆகிப்போறோம். இதுதான் உண்மை. உன் புருஷன் இப்படிப்
படிக்கிறவனா இருக்கானேன்னு நீ பெருமைப் படணுமாக்கும். வருத்தப்படக்கூடாது. சலிச்சிக்கக்கூடாது.
புரிஞ்சிக்கோ… என்று பெரிய லெக்சரே கொடுப்பார்
அப்பா. சுறுசுறுப்பானவர்ன்னா அது எங்கப்பாதான். அவர் பல தொழில்ல ஈடுபட்டிருக்கார்..புகுந்து
வெளில வந்திருக்கார். வேலை பார்த்தது சில வருடங்கள்தான். போதும்னு ஓய்வாகிட்டார். இந்தப்
புத்தகம் படிக்கிற பைத்தியமும், எழுதற கிறுக்கும்தான் அவரை நிலையில்லாமப் பண்ணிடுச்சு.
ஆனா அப்பப்ப பார்த்த வியாபாரத்துல கொஞ்சமேனும் காசு பார்த்தவர்தான். – சொல்லி முடித்தாள் நந்தினி. அவள் தன் குடும்பத்தின்
மீதும் குடும்பத்தினர் மீதும் கொண்டிருக்கும் மதிப்பும் மரியாதையும் மோகனைப் பிரமிக்க
வைத்தது. அந்தக் கணம்தான் அவள் மீது ஒரு அக்கறை விழுந்தது அவனுக்கு. அது முற்றிப் பழுக்கும்முன்தான்
அவன் தன் சொந்த ஊர் வந்துவிட்டானே? – நினைவுகளிலிருந்து மீண்டான் மோகன். எதையும் மறக்காமல்
எப்படித் தன்னால் இத்தனை கோர்வையாகப் பழசை நினைத்துப் பார்க்க முடிகிறது? என்று ஆச்சரியமாய்
இருந்தது அவனுக்கு.
( 6 )
என்னா
நாகு...என்னாச்சு விஷயம்...? – கான்ட்ராக்டர் பிச்சாண்டியின் குரல் கேட்டு அதிர்ந்துதான்
போனார் நாகநாதன்.
கடையின்
முன்னால் வந்து இப்படியா எல்லோர் முன்னிலையிலும் பளீர் என்று கேட்பது? ரொம்பவும் நெருக்கமானவர்
என்பதைப் பலருக்கும் தெரிவிப்பதுபோல் சத்தமாய்த் தன் பெயரைச் சுருக்கி பிச்சாண்டி கத்தியது
இவரைத் துணுக்குறச் செய்தது. விவஸ்தை என்பதெல்லாம் ஏது இந்தாளுக்கு? எல்லாத்தையும்தான்
உதிர்த்தவனாச்சே…? – நினைத்தவாறே பட்டென்று
எழுந்து வந்தார் வெளியே. உள்ளே நுழைய எத்தனித்த ஆளை அப்படியே இடதுபுறமாகத் தள்ளிக்கொண்டு
போனார். இவன் காலடி கடைக்குள் பட வேண்டாம் என்று அவர் மனது சொல்லியது. ஆமை நுழைந்தது
போல் இவன் நுழைந்து வைத்தானானால் பிறகு இருக்கும்
வியாபாரமும் படுத்துவிடும். வியாபாரம் வேறு. அரசியல் வேறு. இவனை வேறு வழியில்தான் இழுத்துப்
போட்டுக் கொள்ள வேண்டும். அதற்காகத்தானே இந்தப் பேச்சு வார்த்தையே...இல்லையெனில் இவனடிக்கும்
கொள்ளைக்கு இவனிடம் யார் நெருங்குவார்கள். அப்படிச் சேர்த்த காசை இப்படி வாங்கி நம்
ஜவுளிக்குள் முடக்கிவிட வேண்டியதுதான். நினைத்தவாறே படியிறங்கிய நாகநாதன் -
வாங்க...ஒரு
காபி சாப்டுட்டே பேசுவோம்...என்று கூறிக் கொண்டு பக்கத்து ஓட்டலுக்குள் நுழைந்தார்.
வண்டி
நிக்கிதுங்க வெளில...நா போயாகணும்..இதென்ன சாப்பாட்டு நேரத்துல காபி சாப்பிடக் கூப்டிட்டு
இருக்கீங்க...? இன்னும் நீங்க சாப்பிடலியா? மணி ரெண்டுக்கு மேலே ஆவப் போகுது?
சரி,
வாங்க...சாப்பிட்டிட்டே பேசுவோம்....-சகஜ பாவத்தோடுதான் அழைத்தார் நாகநாதன். ஆனால்
அந்த நெருக்கம் எதிர்த்தரப்பில் இல்லாததைச் சட்டென்று உணரவும் செய்தார்.
அதுக்கெல்லாம்
நேரமில்லீங்க...வீட்டுல ஆக்கி வச்சிருப்பாங்க....அப்புறம் அவ வேறே சத்தம் போடுவா...?
வெறும் காபியே சொல்லுங்க...
காபி
வந்தது. ஆனால் இருவருக்குமே அது ருசிக்கவில்லை. இருவர் மனதிலுமே ஒருவர் சார்ந்து ஒருவர்
எப்படிக் காரியத்தை முடித்துக் கொள்வது என்றல்லவா யோசனை போய்க்கொண்டிருக்கிறது. காரியார்த்தமாகத்தானே
சந்தித்தது! இருவருமே காரியக்காரர்கள் ஆயிற்றே?
நா
கௌம்பறேன்.....மருதூர் பள்ளிக்கூடம் வேலை நடந்திட்டிருக்கு...அதப்போயிப் பார்க்கோணும்....இன்னும்
ஒரு வாரம்தான் டயம் இருக்கு அதுக்கு. அதுக்குள்ள முடிச்சிக்கொடுத்தாகணும்...மினிஸ்டர்
தேதி கொடுத்திட்டாரு...
இவனிடம்
பள்ளிக்கூடம் கட்டக்கொடுத்த புண்ணியவாளன் எவனோ? அவன் தலைவிதி எப்படியோ? – நினைத்துக் கொண்டார் நாகநாதன். வெளிக்காட்டிக்கொள்ள முடியுமா?
இதற்கு முன் பள்ளி மேற்கூரை இடிந்த வழக்கில் ஒரு உயிர் போன நிலையில் அதை எப்படியோ சரிக்கட்டி
அந்தக் குடும்பத்திற்கு ஏதோ கொஞ்சம் கொடுத்து சரி பண்ணி…அடுத்தடுத்த ஒப்பந்தங்கள் தனக்கு
நின்று விடக் கூடாதே என்று கஜகர்ண வித்தையெல்லாம் செய்த ஆள் இந்தப் பிச்சாண்டி என்கிற
முன்கதையை நாகநாதன் அறியாமலில்லை. தெரிந்தேதான் அவனோடு கைகோர்த்திருந்தார். என்ன தைரியமோ?
என்று அவர் மனதே அவரை அடிக்கடி கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது.
அப்டியா....?
உங்களுக்கு ஏதாச்சும் வேல இருந்திட்டேயிருக்கும்....போயிட்டேயிருப்பீங்க...அப்ப அதப்
பாருங்க....
அதப்பாருங்கன்னா? இது முடிஞ்சிச்சா இல்லையா? முடியலைன்னா
சொல்லுங்க...நா வேற ரூட்ல பார்த்துக்கிறேன்...
அய்யய்ய....அதெல்லாம் எதுக்கு? நா முடிச்சித்
தரேன்.....அந்த ஆபீசுல இந்த வருஷம் நீங்க வேல பார்க்குறீங்க...போதுமா...? ஒரு வருஷம்
விட்ருச்சுங்கிறதுக்காக இப்படியா மனசு ஒடிஞ்சு போகுறது? போன வாட்டி இல்லன்னா இந்த வாட்டி…வந்துட்டுப்
போகுது…ஒரேயடியா நழுவியா போகுது,? அதெல்லாம்
பார்த்துக்கலாம்…கவலப்படாதீங்க…
அங்க நம்ம செக்யூரிட்டிப் பத்திரமெல்லாம் நெறையக்
கெடக்குங்க....அதல்லாம் வேறே வாங்கணும்....இந்தத் தடவக் கான்ட்ராக்டைப் போட்டுட்டேன்னா,
அதல்லாம் பைசல் பண்ணிப்புடுவேன்....
எப்டிப் பைசல் பண்ணுவீங்க...இந்த வேலைக்கு புதுசாத்தான
வாங்கிக் கொடுத்தாகணும்...? பழசயா காண்பிக்க முடியும்?
அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது....அது தொழில்
ரகசியம்....எதுக்கு அது? நா அங்க போக முடியாது. அதான் நம்ம ஆள் ஒருத்தர டம்மியாப் போட
வேலை செய்திருக்கேன்.....நாந்தான்னு எப்டியோ புரிஞ்சிக்கிட்டாங்க போலிருக்கு...சரி
கெடக்கட்டும் நேரடியாவே மோதிப் பார்த்துருவமேன்னு இறங்கிட்டேன்....இப்ப என்ன சொல்றான்
உங்க பையன்...முடியும்ங்கிறானா முடியாதுங்கிறானா? ரெண்டுல ஒண்ணு எனக்குத் தெரிஞ்சாகணும்…
என்னா நீங்க இவ்வளவு அவசரப்படுறீங்க... என் பையன்
இப்பத்தான டிரான்ஸ்பர்ல வந்திருக்கான்...அவனப் போயி நெருக்க முடியுமா? செய்யி...செய்யின்னு...வந்திருக்கிற
எடத்துல அவனை ஸ்திரப்படுத்திக்க வேணாமா? எடுத்த எடுப்புல தடாலடியா இறங்கினான்னா…அவன்
கதை கந்தலாகிடுமாக்கும்…
அப்போ உங்களால கதையாகாதுன்னு தெரியுது... சரி,
நாளைக்கு வரைக்கும் உங்களுக்கு டைம் தர்றேன்....ஏன்னா நா மருதூர்லருந்து நாளக்கழிச்சிதான்
வருவேன்...அதுக்குள்ள முடிச்சி வையுங்க...இல்லன்னா நா என் ரூட்ல பார்த்துக்கிறேன்...
– சொல்லிவிட்டு அந்த ஓட்டலை விட்டு வெளியேறிய பிச்சாண்டி நேரே தன் காரை நோக்கி நடந்தான்.
இப்படி வெடுக்கென்று அவன் பேசிப் பா ர்த்ததில்லை நாகநாதன். இந்த முறை குரல் சற்று உயர்ந்துதான்
உள்ளது. உணர முடிந்தது அவரால். சாதாரணமா இருந்த பய…இன்னைக்கு எல்லா ஃபிராடுத்தனத்தையும்
கத்துக்கிட்டான். நிமுந்து பேசுறான்.எல்லாம் காலக் கொடுமை…பார்ப்போம்..பார்ப்போம்…எத்தனை
நாளைக்கு ஓடுதுன்னு… என்று தனக்குள் முனகிக் கொண்டார் நாகநாதன்.
அவன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்.
காரில் பவனி வரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறான். அவன் சைக்கிளில் சென்றதையும், கால்
கடுக்க நின்று காத்திருந்து பஸ்ஸில் போனதையும்
பார்த்திருக்கிறார் இவர். பிறகு ஒரு நாள் புல்லட்டில் பறந்தான். இன்று அவன் கையில்
ஒரு கார். அதற்கு எவன் தலையில் மிளகாய் அரைத்தானோ? எந்தக் குடும்பத்தைக் கெடுத்தானோ?
எவனுக்கு மொங்கான் போட்டானோ? எல்லாம் காலக் கொடுமை. இன்று இவன் நம்மை மிரட்டுகிறான்.
நான் உருவாக்கிய ஆள். இன்று என்னிடமே வார்த்தைகளை அளக்காமல் பேசுகிறான். வீச்சும் விறைப்புமாய்
என் முன்னாலேயே நடை போடுகிறான். போகட்டும்.
மனதைச் சமாதானம் செய்து கொண்டார் நாகநாதன்.
அந்தக்
கான்ட்ராக்டை முடித்துக் கொடுத்தால் அதைச் சாக்கு வைத்து பிச்சாண்டியையும் ஒரு பாகஸ்தராகப்
போட்டு தன் ஜவுளித் தொழிலை விரிவு படுத்தலாம் என்கிற ஐடியாவில் இருந்தார் அவர். ஊருக்கே
பெரிய கடையாகத் தன் கடையை பிரம்மாண்டப்படுத்தத் தான் போட்டிருந்த திட்டம் எங்கே நடக்காமல்
போகுமோ என்று அவர் மனதுக்குள் அவநம்பிக்கை லேசாகத் துளிர் விட்டது. இவனைச் சமாதானப்படுத்தி
இழுத்து வட்டத்துக்குள்ள போடுவோம்னா…முறைக்கிறானே? என்று யோசனை போனது.
இந்த
விஷயத்தில் பையனைத் தொந்தரவு செய்வது சற்று சங்கடமாகத்தான் இருந்தது அவருக்கு. அவன்
அம்மா கூடவே இருந்து வளர்ந்து விட்டான். நல்ல விஷயங்கள் நிறையப் படிந்து போனவன். அத்தனை
எளிதாக மாற்றி விட முடியுமா? அப்படி ஏதும் ஏடா கூடமாகச் செய்து அவன் வேலைக்கு ஏதாவது
ஆபத்து என்று வந்து விட்டால்? அதுவும் பயமாக இருந்தது அவருக்கு. திரும்பவும் வெளியூர்
என்று மாற்றி விட்டால் கதை கந்தலாகப் போகும். இந்த மாறுதலுக்குச் செலவு செய்ததே பெரிது.
அது அவனுக்குத் தெரியாது. தெரியவும் வேண்டாம். தெரிந்தால் ஒரு வேளை வருத்தப்படலாம்.
ஆனால் ஏனோ தன்னை இந்த விஷயத்தில் சுதந்திரமாக அவன் விட்டு விட்டதுபோல் உணர்ந்தார்.
எங்கே போனாய், யாரைப் பார்த்தாய், என்னவாயிற்று என்று ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லையே?
பாவம்…நல்ல பையன். அப்ளிகேஷனைக் கொடுத்து விட்டு சீனியாரிட்டிப்படி அது வந்துவிடும்
என்று நம்பிக் கொண்டிருந்த பையன். அது கானல்நீர் என்று தெரிந்தபின்தானே அவன் வாய் அடைத்துப்
போனது? அதுவே அவனின் சம்மதத்தை இவருக்கு உணர்த்தியதே!
இதற்கு
முன் ஒரு மினிஸ்டரின் பையனுக்கு அவரது தோட்டத்தில் ஆழ்குழாய்த் துளை போட வேண்டும் என்று
முயன்ற போதே அதற்கு பதிவு வரிசை உள்ளது, சட்டென்று அப்படி இயந்திரத்தைக் கொண்டு நிறுத்த
முடியாது என்று சொன்னவன் அவன். வரிசைப்படி அவர் இருபத்தியெட்டாவது இடத்தில் இருக்கிறார்,
அவர் முறை வரும்போதுதான் நடக்கும் என்று சொல்லி இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்று
பதில் அனுப்பியவன் அவன். அப்பொழுதே அவனை அலுவலகம் மாற்ற முடிவு செய்தார்கள். அன்று
அங்கிருந்த அலுவலரின் கடுமையான சிபாரிசின்பேரில் பாலன் தனக்கே வேண்டும் என்று சொல்லி
நிறுத்தி வைத்துக் கொண்டார் அவர். தனக்கு நம்பிக்கையான ஒரு ஆள் வேண்டும் என்று நேர்மை
தவறாத தன் பையனை உரிய அந்தஸ்தோடு நெருக்கமாக வைத்துக் கொண்டவர் முன்பிருந்த அதிகாரி.
. இப்படி படு ஸ்ட்ராங்காக உட்கார்ந்திருக்கும் தன் பையனிடம் போய் வில்லங்கமான விஷயங்களை
வைத்தால் எப்படி நடக்கும்? நல்ல விஷயங்களையே அது நூறு சதவிகிதம் சரிதானா என்று உறுதி
செய்து அலுவலரின் நம்பகத்தன்மைக்கு உகந்தவனாக இருப்பவன் அவன். அவனைக் கரைப்பது என்பது
என்ன அத்தனை சாதாரணமா? சுலபமா?
யோசித்துக்
கொண்டே கடைக்குள் நுழைந்தார் நாகநாதன்.
அய்யா...நாகர்கோயிலுக்கு
நாம அனுப்பிச்சிருந்த பண்டல் லாரி கவுந்திடுச்சாம்...டீசல் லீக்காகி வண்டி ஃபயர் ஆயிடுச்சு
போலிருக்கு. மொத்த ஜவுளி பண்டல்களுமே கருகிப்
போச்சுன்னு தகவலுங்க....இப்பத்தான் நம்ப திருநெல்வேலி ராசுப்பிள்ளை போன் பண்ணினாருங்கய்யா...அவர்தான்
ஸ்பாட்டுக்குப் போயி எல்லாமும் பார்த்து செய்திருக்காரு...டிரைவர் போலீஸ் ஸ்டேஷன்ல
இருக்காராம்.
நாகநாதனுக்குத்
தலை மூர்ச்சைக்கு வந்தது. தனக்கு நேரம் சரியில்லையோ என்று நினைக்க ஆரம்பித்தார். சரக்கு
போய்ச் சேர்ந்தால்தான் பழைய பாக்கியை முழுவதுமாக வாங்க முடியும். இப்பொழுதுதான் சூரத்தில்
மொத்த ஆர்டர் பண்ணி கொண்டு வந்து இறக்கியது. இன்னும் கோடவுனில் நிறைய சரக்குகள் இருக்கின்றன.
அவைகளும் அனுப்பப்பட வேண்டியது உள்ளது. ஆனாலும் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புக் கொண்ட
சரக்குகள் நாசம் என்றால்? என்னதான் இன்ஷ்யூர் என்றாலும், அதிகாரிகளின் முழு ஆய்வுக்குப்
பின் வந்து சேரும் காசு பாதி கூடத் தேறாதே? அது என்ன உடனேவா வந்து விடப் போகிறது? கேஸ்
முடியவே பல மாதங்கள் ஆகுமே? . முருகா...! தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து
விட்டார் நாகநாதன்.
சற்று
நேரத்தில் கிளம்பினார். சாயங்காலமா வாறேன்...என்று பொதுவாகச் சொல்லிவிட்டு வெளியே வந்து
வண்டியை எடுத்தார். இவர் மனோ வேகத்துக்கு அது ஸ்டார்ட் ஆனால்தானே....சனியன்...இது கூட
நம்மள மதிக்க மாட்டேங்குது....என்றவாறே ஓங்கி ஒரு உதை கொடுத்தார். சீறிக்கொண்டு பாய்ந்தது
வண்டி.
அது
சரி...யார் மேல் கோபத்தை வைத்துக் கொண்டு இது கூட நம்மளை மதிக்கமாட்டேங்குது என்று
சொன்னார் அவர்? யோசித்துக் கொண்டே போய்க்கொண்டிருந்தவர் அவரை அறியாமல் அவன் பையன் வேலை
பார்க்கும் ஆபீஸ் அருகில் அவர் வண்டி நின்றபோது எதற்கும் ஒரு பார்வை பார்த்து விட்டுப் போய்விடுவோமா என்று நினைத்தார். அவன் ஆபீசில் பலரையும்
அவர் நன்கறிவார். இதுவரை எத்தனையோ காரியங்களுக்கு என்று சென்று நிறைவேற்றிக் கொண்டவர்தான்.
ஆனால் தான் பார்த்து, பேசிப் பழகிய அலுவலகத்தில் இன்று தன் காரியத்திற்கு என்று தன்
மகனிடமே போய் நிற்க வேண்டுமே என்பதை நினைத்த போது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது அவருக்கு.
அவர் மனதில் தோன்றிய அவநம்பிக்கை தன்னைப் பலர் முன் அவமானகரமான இடத்தில் நிறுத்தி விடுமோ
என்பதாக அவர் அவரை அச்சப்பட வைத்தது என்பதுதான்
உண்மை.
நிறுத்தியது
வேறு ஒரு காரியத்திற்காக என்பதுபோல் பக்கத்துக் கடைக்குச் சென்று என்னவோ விசாரிப்பது
போல் தலையைத் திருப்பிக் கொண்டு நின்றார். தற்செயலாகத் திரும்பியபோது பக்கத்து டீக்கடையில்
இருந்து மோகனும், இன்னொருவரும், வருவதைக் கண்ணுற்ற அவர், யார் என்று கூர்ந்து நோக்கிய
போது அவரை அறியாமல் உடம்பில் மெல்லிய நடுக்கம் பரவுவதை உணர்ந்து அருகிலுள்ள கதவினைப்
பிடித்துக் கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டார் நாகநாதன்.
(7)
”கிளம்பிட்டீங்களா
மோகன்...நானும் உங்க கூட வரலாமா? ” – மெல்ல அருகில் வந்து சத்தமில்லாமல் நந்தினி கேட்ட
நாசூக்கிலிருந்தே யாருக்கும் இது தெரிந்து விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாய் இருக்கிறாள்
என்று புரிந்தது மோகனுக்கு. அன்று அவளின் நெருக்கம் சற்று அதிகமோ என்று தோன்றியது.
ஏன் அவன் அண்ணனை அங்கு வரச்சொன்னாள். அவர் ஏன் தன்னிடம் தனியாகப் பேச வேண்டுமென்றார்.
அப்படியானால் அவர்கள் வீட்டில் முடிவே செய்து விட்டார்களா? இவர்களாக ஏதாவது தாறுமாறாய்,
தன்னிச்சையாய் நினைத்துக் கொண்டால் எப்படி? அவரின் பேச்சின் ஜாடை அப்படித்தானே இருந்தது.
என் சிஸ்டரைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? என்று என்னிடம் ஏன் கேட்க வேண்டும்? அதற்கான
அவசியம் என்ன வந்தது? இதெல்லாம் என்ன முயற்சிகள்?
இங்க
பார் நந்தினி...தயவுசெய்து என்னை டிஸ்டர்ப் பண்ணாதே...உன்னை எனக்குத் திருச்சியிலிருந்தே
தெரியும்ங்கிறது இங்க எல்லாருக்கும் தெரியும்ங்கிறதுனாலதான் நான் இத்தனை சாதாரணமா உன்கிட்டே
பழகுறேன்...அதை வேறே ஏதுமாதிரியும் தயவுசெய்து அர்த்தப்படுத்திக்காதே...உங்க ப்ரதரை
மதிச்சுதான் நான் அவரோட ஸ்நாக்ஸ் எடுத்துக்கப் போனேன். அதுக்கும் வேறே ஏதும் அர்த்தமில்லை. தயவுசெய்து
புரிஞ்சிக்கோ...
நந்தினியின்
முகம் சட்டென்று சுருங்குவதை இவன் கண்ணுற்றான். அனாவசியமாய் அவள்தான் தன்னை இந்த நிலைக்குத்
தள்ளுகிறாள். திருச்சியில் இருக்கும்போதே தன்னைப்பற்றியும் தன் குடும்ப நிலை பற்றியும்
தெள்ளத் தெளிவாக அவளிடம் சொல்லியிருக்கிறான். மலைக்கோட்டைப் பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து
எத்தனையோ முறை மனம் விட்டுப் பேசியிருக்கிறார்கள். குறைந்தது இரண்டு தங்கைகளுக்காவது
திருமணம் செய்து விட்டுத்தான் தன் கல்யாணத்தைப் பற்றி தன்னால் யோசிக்க முடியும் என்று
உறுதிபடச் சொல்லியிருக்கிறான். அப்பொழுதெல்லாம் அப்பாவின் வருமானம் மட்டும் போதாது
என்பதாக அவன் எண்ணமிருந்தது. ஒரேயொரு ஜவுளிக்கடை ஓட்டத்தில் என்னத்தைப் பெரிதாகச் சேர்த்து
விட முடியும். குடும்பச் செலவுகளையும் பார்த்துக்கொண்டு, பெண்டுகளுக்கும் நகை நட்டுகளைச்
சேமிக்க வேண்டுமென்றால்? அப்பாவால் மட்டும் அது நிச்சயமாக இயலாது. தன்னின் தீவிர முயற்சியினால்
மட்டுமே இவை சாத்தியம் என்று மிகுந்த மன உறுதியோடு இருந்தான்.
பிரதி
மாதமும் வீட்டிற்குப் பணம் அனுப்பியதுபோக, மிகவும் சிக்கனமாய் இருந்து அங்கேயே ஒரு
வங்கிக் கணக்குத் திறந்து, சிறிது சிறிதாக ஒரு தொகையைச் சேர்த்து, மாறுதலில் சொந்த
ஊர் புறப்பட்டபோது உள்ளுருக்குக் கணக்கை மாற்றிக்கொண்டு, அப்பாவிடம் அந்தப் பாஸ் புத்தகத்தை
முதன் முறையாகக் காண்பித்த அன்று என்ன ஒரு மகிழ்ச்சி அவரிடம்? கண்கள் கலங்க அவர் நின்ற
காட்சி இன்னும் மனதில்.
சில
ஆயிரங்களைச் செலவழிச்சித்தான் உனக்கு இந்த மாறுதலை வாங்கியிருக்கேன். அதுவே என் மனசை
ரொம்ப உறுத்திட்டிருந்திச்சி. இப்போ நீ இதைக் காட்டின இந்த நிமிஷத்தில் என் மனசு நிறைஞ்சு
போயிடுச்சு...ஏன்னா உழைச்ச காசு வீண் போகக் கூடாது பாரு.... என்றார்.
அப்போ
ஏம்ப்பா பணமெல்லாம் கொடுத்து இந்த ஏற்பாடைப் பண்ணினீங்க...?அதுவா வரும்போது வந்திட்டுப்
போகுதுன்னு விடவேண்டிதானே? உங்க சேமிப்பும் உழைச்ச காசுதானே? அதுவும் வீண் போகக் கூடாதுல்ல?
என்றான் இவன்.
வாழ்க்கைல
சில சமயங்களில் சமரசங்களைச் செய்துக்கத்தான் வேண்டியிருக்கு....தவிர்க்க முடியாமத்தான்...அப்படிச்
செய்திட்டதுதான் இது...போனாப் போகுது....இப்போ நீ எங்ககூட இருக்கேல்ல...வீட்டைக் கவனிச்சிக்க
ஒரு ஆம்பிளைப்பிள்ளை என் கூடவே இருக்காங்கிற தைரியத்துல நான் இருப்பேனே...என்றார் நாகநாதன்.
அப்பாவின்
சுய முயற்சியில் பணம் விலை கொடுத்து வந்த அந்த மாறுதல் இன்றளவும் இவனுக்கு ஒப்புதல்
இல்லைதான். எவ்வளவு கொடுத்தார் என்பதையும், யாருக்குக் கொடுத்தார் போன்ற விபரங்களையும்
இன்றுவரை அப்பா சொன்னதில்லை. இவனும் கேட்டதில்லை. அதென்னவோ அந்த விபரத்தைக் கேட்க இவனுக்கு
அசிங்கமாய் இருந்தது. லஞ்சம் எப்படிக் கேட்கிறார்கள், எப்படிக் கொடுக்கிறார்கள்…ஆபீசில்
வைத்தா அல்லது வெளியிலா? அல்லது வீட்டிலா? அல்லது ஓட்டலில் வைத்தா அல்லது குறிப்பிட்ட
நபர் தங்கியிருக்கும் லாட்ஜில் வைத்தா? என்று பலவகையாய் நினைத்துப் பார்த்துக் கொண்டான்
மோகன்.
விஷ
விருட்சமாய்ப் பரவி விட்டது என்பதுதான் உண்மை. கருவேலஞ்செடியைக் கூட மொத்தமாய் வெட்டி
அடி வேரில் தீ வைத்து அழித்து விடுகிறார்கள். இந்தப் பாழாய்ப் போன லஞ்ச லாவண்யத்தை
எந்த வகைமையில் மொத்தமாய் அழித்து ஒழிப்பது? வெட்ட வெட்ட வளரும் விஷ விருட்சமாய்…முடிவேயில்லாத
நீட்சியாய்?
அதெல்லாம்
எதுக்கு உனக்கு? அது எம்பாடு...நீபாட்டுக்கு வேலையைப் பாரு...என்றுவிட்டார். இவனும்
விட்டுவிட்டான் அத்தோடு.
தனக்குச்
சற்று முன்னாலேயே மாறுதலில் இங்கு வந்துவிட்டவள் நந்தினி. அவளுக்கும் சொந்த ஊர் இதுதான்.
அவள் இதுபற்றியெல்லாம் கவலைப்படுபவள் அல்ல. இதைப் பொருட்படுத்துபவளும் அல்ல. காரியம்
சாதிக்கும் திறமையுள்ளவர்கள் அதற்கு என்னென்ன வழிமுறை உண்டோ அதையெல்லாம் முயன்றுதான்
பார்ப்பார்கள் என்கிற சித்தாந்தம் உள்ளவள். வெறும் சித்தாந்தமா அது? சமூகத்தை கெட்டுச்
சீரழித்த சித்தாந்தம். கேடுகெட்ட சித்தாந்தம். அதனால்தான் இன்று இந்தளவுக்கு இந்தப்
பாழாய்ப்போன சமூகம் கெட்டுச் சீரழிந்து கிடக்கிறது.
பேசாம
அந்தப்பொண்ணையே கட்டிக்கப்பா...உனக்கு சரியான ஜோடிதான்...சொல்லு, வேணும்னா இங்கயே முடிச்சி
விட்ருவோம்...என்றார்கள் நண்பர்கள்… சரியான ஜோடி என்று எதை வைத்துச் சொல்கிறார்கள்?
அதுவே இவனுக்குப் புரியாத புதிராய் இருந்தது. கொஞ்சம் தலையாட்டினால் போதும்போல…ஆளை
இழுத்துக் கொண்டு போய் ஒரு கோயில் வாசலில் நிறுத்தி கட்டுறா தாலியை என்று ஆளை அமுக்கி
விடுவார்கள் போலிருந்தது.
இதென்னடா
இது வம்பாப் போச்சுது…அவனவன் வேலைல சேர்ந்து சம்பாதிச்சு, வீட்டுக்குக் கொடுத்து, அப்பா
அம்மாவ உட்கார வச்சு சோறு போட்டு, தங்கச்சிகளுக்குக் கல்யாணத்தப் பண்ணிப் பார்ப்போம்னு
வந்தா…இவனுங்க இந்தச் சோலியாவே அலைவானுங்க போல்ருக்கே! என்று இவன் பிரமித்துப் போனான்.
எதுக்கு
மாறுதல்ல போறே...பேசாம இங்க திருச்சில சுப்ரமண்யபுரத்துல ஒரு ப்ளாட்ட வாங்கு...ஒரு
உறவுஸ் பில்டிங் லோனைப் போடு...வீட்டைக் கட்டு...கல்யாணத்தப் பண்ணு...இங்கயே செட்டிலாயிடு....என்று
தூண்டி விட்டார்கள். இவன்தான் அசையவில்லை. லேசாக இளநாக்கு அடித்திருந்தால் இழுத்துக்கொண்டு
போய் நிறுத்தி ஏதேனும் ஒரு கோயிலில் நிறுத்தி
நிச்சயம் தாலி கட்ட வைத்திருப்பார்கள் பாவிகள். கில்லாடிகள் அங்கிருந்த நண்பர்கள்.
ஆனாலும் கழுவும் மீனில் நழுவும் மீனாயிற்றே இவன். ஆள விடுங்க சாமி என்று ஓடியே வந்துவிட்டான்
சொந்த ஊருக்கு.
தப்பிச்சோம்,
பிழைச்சோம்னுதாம்மா வந்து சேர்ந்தேன். படு மோசமானவங்க அங்கிருந்த பசங்க…எவளாவது ஒருத்தியக்
கொண்டு வந்து நிறுத்தி தலைல கட்டிடுவானுங்க போலிருந்தது. ரூம்ல படுத்திருக்கைல நடுராத்திரிக்கு
வந்து கதவைத் தட்டுவானுங்களோங்கிற அளவுக்குப் பயம் எனக்கு. எங்கயுமே ஒருத்தன் தன்னை
அப்பாவியாய்க் காண்பிச்சிக்கக் கூடாதும்மா….நல்லவனா இருக்கிறது ரொம்பக் கஷ்டம் இந்த
உலகத்துல… அம்மாதிரி ஆட்களை ஐயோ பாவம் அப்பாவின்னு இந்த உலகம் விடாது. ஒதுங்கிப் போகாது.
அவனுக்கும் ஏதாச்சும் ஒரு கெடுதலப் பண்ணிட்டுத்தான் ஓயும். நம்மளச் சுத்தித் திரியறவனெல்லாம்
நல்லவன்னு நினைச்சு எவன்ட்டயும் வெளிப்படையாப் பழகிடக் கூடாதாக்கும். நம்மள எதுலயாவது
மாட்டி விட்டிடணும்னு அலையுறானுங்க… நாமெல்லாம் கஷ்டப்படுறோம்…இவன் மட்டும் சந்தோஷமா,
ஜாலியா இருக்கானே…என்ன அநியாயம்? ன்னு சதா புழுங்கிட்டே கிடப்பானுங்க போல்ருக்கு.
அம்மாவிடம்
புலம்பித் தவிக்க, அவள் விழுந்து விழுந்து சிரித்ததை அப்போதுதான் கண்டு ரசித்தான் மோகன்.
அப்படியாவது அவளைச் சந்தோஷப்படுத்த முடிந்ததே என்றிருந்தது மோகனுக்கு.
நீ
கிளம்பு நந்தினி...நான் கொஞ்சம் பொறுத்துத்தான் வரணும்...நாளைக்கு பட்ஜெட் மீட்டிங்...மானேஜர்
கூட நா பேச வேண்டிர்க்கு....என்றான் தலைகுனிந்தவாறே. தான் சொல்வது பொய் என்பது எங்கே
அவளைப் பார்த்துக்கொண்டே சொன்னால் தன் கண்களைப் பார்த்து அவள் கண்டுபிடித்துவிடுவாளோ
என்று பயந்தான். அவளின் கூர்மையான நாசியும் பார்வையும் இவனை என்னவோ செய்யத்தான் செய்தது. அதனால்தான் தானே
அவளைப் பொறுத்தவரை அத்தனை மிருதுவாக நடந்துகொள்கிறோமோ என்றுகூட நினைத்திருக்கிறான்.
ஏன் அவளின் செய்கைகள் எதற்கும் தனக்குக் கோபமே வர மாட்டேன் என்கிறது. அலுவலகத்தில்
பலரும் கவனிக்கும் நிலையில் கூட அதுபற்றிய சுரணை தன்னிடம் அதீதமாக இல்லையே, ஏன்? தன்னையறியாமல்
தன் மனம் அவளிடம் நாட்டம் கொண்டிருப்பதை உணர்ந்தான் மோகன். போச்சுடா…நானும் அவ்வளவுதானா?
என்று சலிப்பும் வந்தது.
ஒன்றும்
சொல்லாமல் திரும்பிப் போய்க் கொண்டிருந்தாள் நந்தினி. அவள் கண்கள் கலங்கியதை இவன் கவனிக்கவில்லை.
ஆனால் அவளின் தயங்கிய நடை அவனை என்னவோ செய்தது. திரும்ப அழைத்து சமாதானப்படுத்துவோமா
என்று சட்டென்று தோன்றியது. பிகு பண்ணினாள் என்றால்? அவள்பாட்டுக்கு சட்டென்று இடம்
பொருள் ஏவல் பார்க்காமல் தன்னை இறுக்கக் கட்டிக்கொண்டு , விடமாட்டேன் என்று பிணைந்திருந்தாள்
என்றால்? அவள் வலிய வலிய வந்து நிற்பதைப் பார்த்தால் அதையும் செய்தாலும் செய்வாள் என்று
தோன்றுகிறதே! பெண்களே சற்று அவசரப்பட்டவர்கள்தானோ? அவர்கள்தான் இறுக்கமாய் இருப்பார்கள்.
ஆண்கள்தான் முதலில் என்று காத்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான். இவ கொஞ்சம்
அவசரக்காரிதான் போல்ருக்கு…! தன் மனசு இணங்க…இணங்க…அதற்குத் தகுந்தாற்போல் தன் சிந்தனை
விரிகிறதோ என்றும் தோன்றியது மோகனுக்கு. இந்த மனசுதான் ஒரு மனுஷனை என்ன பாடு படுத்துகிறது?
ஒரு நிலையில் இருக்க விட மாட்டேனென்கிறதே?
சார்......உங்க
அப்பாரு நின்னாரே...பார்க்கலியா...உங்களப் பார்க்கத்தான் வந்திருப்பார் போலிருக்கு..?
என்றவாறே ஓடிவந்த பியூன் ராமலிங்கம், பக்கத்துக் கடைல நின்னாரு சார்...டீ வாங்கிட்டு
வர்றைல பார்த்தேனே...? என்றான்.
அப்பா
ஏன் இங்கு வந்தார்? யோசனையோடேயே எழுந்து வாசலை நோக்கி நடந்தான். ஆபீஸ் வாசல் நீளுவது
போலிருந்தது. எதற்காக இப்படி ஓடுகிறோம்? ஏன் இந்த அவசரம் என்று அவன் மனது கேள்வியை
எழுப்பியது.
இன்னுமா
நின்னிட்டிருக்காரு...அவரு போயிருப்பார் சார்...உங்களப் பார்க்க வந்தாரோ இல்ல வேறே
ஏதாச்சும் வேலயா வந்தாரோ...-பியூனின் வார்த்தைகளில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதை உணர முடிந்தது
இவனால். அவ்வப்போது அவனைக் கவனித்திருப்பார் அப்பா. எத்தனை முறை இந்த ஆபீசுக்கு வந்திருக்கிறார்.
எனக்கே தெரிந்தும், தெரியாமலும்…ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் உடும்புப் பிடியாய்
நின்று விடுவாரே...!
வாசலில்
சென்று பக்கத்து டீக்கடையை எட்டிப் பார்த்தான். காம்பவுன்ட் சுவற்றைத்தாண்டி இங்கிருந்து
பார்த்தாலே தெரியும் அந்தக்கடை வாசலில் அப்பா இல்லை. அத்தனை கூட்டத்திலும் அவரைத் துல்லியமாய்
அடையாளம் காண முடியும்தான். தடிமனான உயரமான ஆள் அப்பா. ஆஜானுபாகுவான தோற்றம். ஒரே சமயத்தில்
நாலைந்து பேரை அடித்து வீழ்த்த முடியும் அப்பாவால். அவரது ஆகிருதி அப்படி. ஆனால் அப்படி
எதற்குமான வம்பு தும்பிற்கும் போகாதவர். எதையும் அமைதியாகச் சிந்தித்துச் செயலாற்றுபவர்.
தடாலடி என்பது மிக மிகக் குறைவுதான். சகிக்க முடியாமல் ஒரு விஷயம் முற்றுகிறது என்றால்தான்
அந்த வழிமுறை. எதற்காக வந்திருப்பார், ஒரு வேளை அந்தக் கான்ட்ராக்ட் சம்பந்தமாய் இருக்குமோ?
வேறெதற்கு வரவேண்டும். அக்கோப்புதான் இன்னும் தன்னிடம் திரும்பவில்லையே? மறுபடி இருக்கைக்கு
வந்தவன், என்று அனுப்பினோம் என்று டைரியை எடுத்துப் புரட்டினான்.
சாதாரணமாய்
மூன்று நாட்களுக்குள் எந்தக் கோப்பும் மீண்டும் தன்னிடம் திரும்பி விடும்தான். இது
ஏன் தாமதமாகிறது? அலுவலகத்திற்குள் நுழைந்து
மேலாளரின் ட்ரேயில் ஒப்பமாகித் திரும்பியிருக்கிறதா என்று அலசினான். இல்லை. அலுவலரின்
அறைக்குச் சென்று அவரது ட்ரேயில் ஏதும் இருக்கிறதா என்று கண்ணுற்றான். வேறு சில கோப்புகள்தான்
இருந்தன. அதாவது அந்தக் குறிப்பிட்ட கோப்புக்குப்பின் அனுப்பிய கோப்புகள். அப்படியானால்
இது என்னவாயிற்று?
சார்,
எதைத் தேடுறீங்க? உங்க பைலத்தான? கையெழுத்தாகி வந்ததுல ஒண்ணை மட்டும் மானேஜர் எடுத்து
வச்சிருக்காரு...
எப்பப்பா
வந்திச்சு? – புரியாமல் கேட்டான்.
இன்னைக்குக்
காலைல நீங்க ஆபீஸ் வந்ததும் உங்க டேபிள்ல ஃபைல்ஸ் இருந்திச்சில்ல...அதோட வந்ததுதான்...ஒண்ணு
மட்டும் அங்கிருக்கு. நேத்து ராத்திரி கையெழுத்தானது...
மேலாளர்
தன்னிடம் சொல்லாதது வியப்பாயிருந்தது இவனுக்கு. இதற்கு முன் ஒரு முறை இப்படி ஆகியிருந்தபோது
அவர் சொன்னார்…
ஃபைனலா
என்னிக்குக் கையெழுத்தாகுதோ அன்னிக்கு வரும்...அதுவரை பென்டிங்தான்....எனக்கு டிஸ்கஸ்
போட்டிருந்தா அது முடியணும்...அப்புறம்தான் உங்ககிட்டே திரும்பும்…
மொட்டையாக
அவர் இப்படிச் சொன்னது இவனுக்கு வெறுப்பாக இருந்தது. தன்னோடு பேச முடியாத சில அவருடன்
விவாதிக்கப்படுகின்றன. இறுதியாகின்றன. ஆகட்டும். அதில் தவறில்லை. அது அலுவலரின் உரிமை.
ஆனால் தன்னால் எழுதப்பட்டதே அதில் இல்லாததும், புதிதாக எழுதப்பட்டோ, தட்டச்சு செய்யப்பட்டோ,
அல்லது கணினி அச்சிலோ தயாரானவைகள் உத்தரவாவதும், வெகு நாட்கள் கழித்து அவை தன் கைக்குக்
கிடைப்பதுவும், இந்த அலுவலகத்தின் புதிய அனுபவமாக இருந்தன அவனுக்கு. பல சமயங்களில்
கோப்புகள் மேலாளரிடமே இருந்து விடுகின்றன. அது அவருக்கும் அலுவலருக்கும் உள்ள டீல்.
குறிப்பிட்ட கோப்புகளைக் காணவில்லையே என்று விழுந்து விழுந்து இவன் தன் இருக்கையில்,
பீரோவில் தேடியிருக்கிறான். அவனுக்கே மறந்துதான் விடுகிறது சில சமயங்களில். நாட்கணக்காய்
அங்கேயே ஒன்று தங்கிவிட்டால்? மறந்து போக வாய்ப்பிருக்கிறதுதானே? இதற்காகவே ஒரு குறிப்பு
நோட்டு வைத்திருக்கிறான் இவன். என்னென்ன எண்ணுள்ள கோப்புகளை ஒப்புதலுக்கு அனுப்புகிறோம் எவை எவை
திரும்பியுள்ளன…வராதது எது? நாட்கணக்காய் வராதது,
மாதக் கணக்காய் கண்ணில் படாதது…என்று குறித்து வைப்பான். அதைக் காண்பித்து ஒரு முறை
கேட்ட போது மேலாளருக்குக் கடுங் கோபம் கொப்பளித்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டான்.
இனிமே இந்தக் கோப்பு இவர்ட்ட இருக்குன்னு எழுதி கையெழுத்து வாங்கணும் போல்ருக்கு…அப்பத்தான்
நம்பிக்கையா இருக்க முடியும்…இந்த ஆபீஸ் நிலைமை இந்த லட்சணத்துலதான் இருக்கு…என்று
சொல்லிக் கொண்டான்.
இவ்வளவு
லட்சணத்தில் அப்பா தன்னை அலுவலரின் வலது கை
என்கிறார். எந்தக் கிறுக்கன் சொன்னது அப்படி? சிரிப்புத்தான் வந்தது. இவர்களாகவே ஊகித்துக்
கொள்வார்களோ? மனதில் தோன்றுவதையெல்லாம் யாரிடமாவது சொல்லி வைப்பார்களோ? அப்படித்தான்
இந்தப் பொய்ச் செய்தி அப்பாவையும் எட்டியிருக்குமோ? எல்லாமே இங்கு அரசியல் ஆகி விட்டது.
நிர்வாகத்தில் அரசியல் புகுந்தால் விளங்கவா போகிறது? நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன? மேலே விழுந்து
பிடுங்காமல் இருந்தால் சரி என்றிருப்பவன் நான். என்னைப்போய் பீச்சாங்கை, நொட்டாங்கை
என்றுகொண்டு? அப்படியெல்லாம் கேள்விப்படுவதற்கே மனது வெட்கிப் போவதை எண்ணிக் கொண்டான்.
ரொம்பவும் கேவலமாய்ப் போயிற்று எல்லாமும் என்று தோன்றியது. அந்த மாதிரியெல்லாம் இருக்க
தன் மனம் என்றுமே விழைந்ததில்லை. அம்மாதிரிக் கீழ்த்தரமான நப்பாசையெல்லாம் இம்மியும்
இவனிடத்தில் இல்லை.
அப்பா
வந்து தன்னின் தேவையில்லாமலே விஷயத்தை முடித்துச் சென்றிருப்பாரோ என்று ஒரு சந்தேகம்
முளைத்தது. அலுவலகத்தின் கட்டக் கடைசியில் உட்கார்ந்திருக்கும் அவனுக்கு நுழைவாயிலில்
இருக்கும் அலுவலரின் அறையிலும் அதன் வெளியிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. என்ன
நடந்தால்தான் என்ன? இவனுக்கு இவனுண்டு, இவன் வேலையுண்டு. எண்ணங்களில், சுதந்திரமாய்த்
திரிபவன். தவறுகள் செய்ய வேண்டும் என்று இருப்பவர்கள்தான் மனசைக் குழப்பிக் கொள்ள வேண்டும். எது, என்ன, எங்கே,
எப்போ என்று குயுக்தியாய் சிந்திக்க வேண்டும். தனக்கு அதெல்லாம் இல்லையே? எது விதியோ,
எது முறையோ அதுதான் மோகன். மைன்ட் ஃப்ரீ பர்சன். தெளிந்த நீரோடையாய் இருக்கும் அவனுக்கென்ன
கவலை?
நினைத்தவாறே
கிளம்பி வீடு வந்து சேர்ந்தவனை உறாலுக்குள் நுழைந்தவுடன் நாகநாதனின் குரல் தடுத்து
நிறுத்தியது.
( 8 )
மோகன்...இன்னைக்கு
நா உன்னோட ஆபீசுக்கு வந்திருந்தேன் தெரியுமா...?
சற்றுத்
தயங்கியவன்....ம்ம்.....தெரியும்ப்பா...என்றான்.
யாரு
சொன்னா?
பியூன்தாம்ப்பா...
யாரு
ராமலிங்கமா? அவன் நம்ம பய ஆச்சே....!!.என்ன உரிமை பாருங்கள்…
அப்பா
எல்லோரையும் பழகி வைத்துக் கொண்டிருக்கிறார். இது தன் மாறுதலுக்காக முயன்ற நாட்களிலிருந்து
ஆரம்பித்த வேலை. உங்க ஆபீசுக்குப் போயிட்டு வந்தேன், போயிட்டு வந்தேன் என்று அடிக்கடி
போனில் சொல்லுவார். ஒரு காரியத்தை எடுத்தார் என்றால் முடிப்பதுவரை ஓய்வதில்லை. அப்படித்தான்
இன்று அரசியலிலும் கால் பதித்திருக்கிறாரோ! வெறும் ஜவுளி வியாபாரியாயிருந்தவர் இன்று
அரசியல் முக்கியப் புள்ளி. தன்னின் சிறு பிராயத்தில் உணவகம் வைத்து நடத்தியிருக்கிறார்
என்று அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஏதோ ஓரிரு முறை அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு
போய்வந்ததாகக் கூட லேசாக நினைவிருக்கிறது. இன்னொருவரும் அப்பாவின் பாகஸ்தராக இருந்ததாகவும்
செழிப்பாகத்தான் நடந்தது என்றும் அன்றெல்லாம் வீடு கொழித்தது என்றும் அம்மா உற்சாகமாகச்
சொன்ன நாட்களில் அம்மாவின் முகத்தில் பரவியிருக்கும் செழுமையைக் கவனித்திருக்கிறான்
இவன். பின் ஏன் தொழில் மாறிற்று. ஜவுளி எப்படிப் புகுந்தது? இரண்டுக்கும் சம்பந்தமேயில்லையே
என்றான். அது தாத்தாவின் தொழில் என்றும் அது அப்படியே ஒட்டிக் கொண்டது என்றும் மேலாகச்
சொல்லியிருக்கிறாள் அம்மா. பாகஸ்தர்கள் பிரியவேண்டியதாயிற்று என்பதால் தொழில் மாறிற்று
என்பதாக அறிந்திருந்தான்.
கொஞ்சம்
கொஞ்சமாகத் தன்னை எல்லாவற்றிலும் ஆழமாகப் பொருத்திக் கொள்கிறார் அப்பா. அது அவர் பிறவிக்
குணம். இன்னும் கூட அப்பாவுக்கு இந்த அரசியல்வாதி
வேஷம் பொருந்தவில்லைதான். இவனால் அவரை முழுதுமாக அப்படிப் பார்க்க முடியவில்லை. என்னவோ
வித்தியாசப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது அவரிடம். யாரு நம்ப ராமலிங்கம்தானே? என்கிற
பாணியில் அவர் சொன்னது கூட அத்தனை பொருத்தமில்லாமல் செயற்கையாயிருந்தது இவனுக்கு. அவருக்கு
ஒட்டுதல்தான் மனதளவில்.
அப்பா
எல்லாரையும் இப்படித்தான் சொல்லிக் கொள்கிறார். அவர்கள் காரியத்திற்கு ஏற்றாற்போல்
யாரையெல்லாம் மாற்றுகின்றார்களோ அவர்களெல்லாம் நம்ம பய, நம்ம ஆளு... முதலில் இந்தமாதிரிப்
பேச்சுக்களே தவறு என்று நினைத்தான் இவன். இப்படியான பேச்சுக்கள்தான் ஊழலுக்கே வழி வகுக்கின்றன.
எதையாவது செய்து, எல்லோரையும் விஷமாக்கி, தன் காரியங்களைச் சாதித்துக் கொள்வது. இதைத்தான்
இன்று சாமர்த்தியம் என்கிற பதத்தால் .பாராட்டுகிறார்கள். மாப்பிள்ளைப் பையனுக்கு மேல்
வரும்படி உண்டா? என்று கேட்பதுபோல. மேல் வரும்படி என்றாலே அது லஞ்சம்தானே? தவறுதானே?
என்கிற எண்ணமெல்லாம் கப்பலேறிப் பல வருடங்கள் ஆயிற்று. யாரும் எதற்கும் வெட்கப்படுவதில்லை.
ஊருக்கும் வெட்கமில்லை. உலகுக்கும் வெட்கமில்லை.
வந்துட்டு
ஏன் என் இடத்துக்கு வரல்லே...ன்னு கேட்கமாட்டியா? நீதான் கேட்கமாட்டியே....எனக்கு உங்கிட்ட
என்ன பேச்சு? உன் சீட்டுக்கு வந்து உன் வேலையைவேற கெடுக்கணுமான்னு தோணிச்சு. அதனால
வாசலோட முடிச்சிக்கிட்டேன்....உன் பாஸ் நல்லாப் பேசுறார்டா....மனுஷன் படு விபரமான ஆளு.....அதுதானே
நமக்கு வேணும்....அதிகாரிகள அவங்க இடத்துலயே உட்கார்த்தி வச்சு அவுங்க கௌரவத்துக்கு
இடஞ்சல் இல்லாம நம்ம காரியத்தை சாதிச்சுக்கப் பார்க்கணும். நானென்ன பண்றது? அந்தக்
காண்ட்ராக்டர் பய என்னைப் போட்டு நெருக்கிறான். என்னால முடியாதுன்னு சொன்னா நீ என்னய்யா
ஆளுன்னுடுவான்...அப்புறம் நமக்கு மேல, நமக்கு மேலன்னு போவானுங்க...அப்டி விட்ரக் கூடாதுல்ல...அப்புறம்
என்னதான் மதிப்பு இருக்கு? கொஞ்சம் கொஞ்சமா நம்ம சாமர்த்தியத்தைக் காண்பிச்சாதானே மதிப்பானுங்க...நம்மாலையும்
ரெண்டு காரியம் சாதிக்க முடியும்னு செய்து முடிச்சாத்தானே நாளைக்கு ஒரு ஆளு இருக்குன்னு
தேடி வருவானுங்க...? வெட்டி பந்தாப் பண்ணி பிரயோஜனமில்ல தம்பி…காரியத்துல காண்பிக்கணும்…அப்பத்தான்
மதிப்பானுங்க…போய் நிற்கிற இடத்துல மொத ஆளா சாதிக்க முடியும்…
அப்பாவின்
பேச்சு ஸ்டைலே மாறிப் போனது சமீப காலமாய்த்தான். வருவானுங்க, போவானுங்க என்றெல்லாம்
அவர் பேசிப் பார்த்ததேயில்லை இவன். அதுவும் வீட்டில் அம்மாவிடம் பேசும் போது அத்தனை
அமைதியாய் மதிப்பாய்ப் பேசுவார். அம்மாவையே அடிக்கடி வாடீ, போடீ, கிடக்குடீ, விடுறீ....என்று
ஏகவசனத்தில் அவர் இப்போது பேசுவதை உன்னிப்பாய் இவன் கவனித்திருந்தான். தான் திருச்சியில்
இருந்தபோது இருந்த அப்பா வேறு. இப்போது சொந்த ஊருக்கு வந்தபின்பு இருக்கும் அப்பா வேறு.
இன்னிக்கு
சனிக்கிழமையாச்சே…எண்ணெய் தேய்ச்சுக் குளிச்சியா? உடம்பு சூடாகியிருக்குமே…தவறாம எண்ணெய்
முழுக்குப் போடு…கண்ட கண்ட ஓட்டல்ல போய் சாப்பிடாதே…சுட்ட எண்ணெயவே திரும்பத் திரும்ப
யூஸ் பண்ணுவாங்க…ஜான்டிஸ் வருமாக்கும்…உயர்தரமான ஓட்டல்ல போய்ச் சாப்பிடு. இல்லன்னா…திருச்சில
மலைக் கோட்டைக்குப் பின்னால மனைப் பலகை மெஸ் ஒண்ணு இருக்கு. அங்க போ. ஒரு தரம் போயிட்டேன்னா
அப்புறம் விடமாட்டே… அசல் வீட்டுச் சாப்பாடு. தூரமாப் போகணுமேன்னு நினைக்காதே…புரிஞ்சிதா…உடம்பப்
பார்த்துக்கப்பா…கவனமாயிரு. தனியா இருக்கிறபோதுதான் ரொம்பக் கவனமாவும் கருத்தாவும்
இருக்கப் பழகிக்கணும். ஏன்னா நல்லது கெட்டது எடுத்துச் சொல்றதுக்கு ஆள் இருக்காதுல்ல.
நம்மள நாமளேதான் பாதுகாத்துக்கணும். புரிஞ்சிதா?
எப்படி
இருந்த அப்பா? தான் உள்ளூர் வந்ததும் அவரிடம்தான் எத்தனை மாற்றம்? நெருங்கவே முடியாத
இடத்திலல்லவா நிற்கிறார் இன்று! அவரிடம் எதை எப்படிப் பேசவது என்று தனக்கே தயக்கமாகிப்
போய் விட்டதே? இதைப் பேசலாமா, கூடாதா, எப்போது பேசலாம்…எப்படிப் பேசலாம் என்றெல்லாம்
யோசிக்க வைத்து விட்டாரே?
அப்பாவை
இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று தன்னால் கூற முடியாது. அந்த அளவுக்கான வயசும்
அனுபவமும் தனக்கிருப்பதாக இவன் நினைக்கவில்லை. இன்னும் தான் தன்னின் வேலை சார்ந்து
சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. மேலும் மேலும் உயர் பதவிக்குச் செல்ல நிறையப்
படிக்க வேண்டியுள்ளது.. எத்தனையோ தேர்வுகள் எழுத வேண்டியுள்ளது. காலம் பூராவும் இந்த
உத்தியோகத்திலேயே கழித்து விடுவோமா அல்லது கமிஷன் தேர்வுகள் எழுதி உயர் கிரேடுத் தேர்ச்சிக்கு
ஆஜராகி வெளியேறுவோமா என்றெல்லாம் யோசனைகள் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியெல்லாம்
முயற்சிகள் மேற்கொள்வதை அப்பா விரும்புவாரா மாட்டாரா என்பதில் ஒரு குழப்பமும் இருக்கத்தான்
செய்கிறது.
இந்த
வேலைக்கு வந்து அஞ்சு வருஷம் முடியப்போகுது. பேசாம இதுலயே மேல மேல போக முயற்சி செய்றதை
விட்டிட்டு இன்னும் வேறே எங்க போகப் போறே...இருக்கிறதை விட்டுட்டுப் பறக்குறதைப் பிடிக்க
முயற்சி செய்யாதே....இப்பத்தான் உள்ளூருக்கு வந்திருக்கே...இங்கயே நின்னு நிலைக்கப்
பாரு....அத விட்டிட்டு....
அப்பா
தடுப்பதைப் போலவே கற்பனை செய்து கொண்டான் இவன். நிச்சயம் அவருக்குத் தான் நினைப்பதெல்லாம்
பிடிக்காதுதான். கிடைத்த வேலையைக் காப்பாற்றிக் கொண்டு குடியும் குடித்தனமுமாய் அவர்
கண் முன் இருந்து கழிக்க வேண்டும். அதுதானே பெற்றோருக்குச் சம்மதமானதாய் இருக்கக் கூடும்?
என்னடா
நாம்பாட்டுக்குப் பேசிட்டே இருக்கேன்...நீபாட்டுக்கு எங்கயோ பார்த்திட்டு இருக்கே...எங்க
இருக்க நீ?
எங்கயும்
இல்லப்பா...இன்னைக்கு வேலை ஜாஸ்தி....அதான்....
டயர்டா
இருக்கா...? சீக்கிரம் சாப்டுட்டுப் படு...புஸ்தகம் படிக்க உட்காராதே...உடம்புதான்
முக்கியம்...ஜெகதா…அவனுக்குச் சோத்தப் போட்டு ஆள அமுக்கு…முதல்ல…பய படு பசியாக் கெடக்கான்…
என்ன
பாஷை இது? இதுவா தான் மதிக்கும் அப்பாவின் பேச்சு?
அப்பாவின்
பேச்சில் தன்பால் எங்கேனும் ஒரு மூலையில் கருணை ஒட்டிக்கொண்டே இருக்கும். அதை நன்றாக
உணர்ந்திருக்கிறான் இவன். ஆனால் இப்போதெல்லாம் அவரின் பாணியே மாறி விட்டதுதான்.
அவன்தான்
இந்தக் குடும்பத்துக்கு ராஜா...என்று இவன் காது படவே பலமுறை அம்மாவிடம் சொல்லுவதைக்
கேட்டிருக்கிறான். எனக்குப் பின்னால அவன்தான்டீ ஆளப் போறான். அதுக்கு வேணுங்கிறதச்
சேர்த்து அவன் கைல ஒப்படைச்சிட்டுக் கண்ண மூடணும் நான். அதுக்குத்தான் எப்படியெப்படியோ
பிரயத்தனம் பண்ணிட்டி ருக்கேன். பலிக்கும் போலவும் இருக்கு…பலிக்காது போலவும் அவநம்பிக்கை
வருது…அதுக்காக முயற்சிங்கிறதை விட்டுட முடியுமா?
அலுவலரைப் பார்த்துப் பேசியதாக அப்பா சொல்கிறார்.
அதுபற்றிக் கேட்போமா வேண்டாமா என்று யோசித்தான். தன்னைப் பார்க்கக் கூடாது என்றுதான்
நேரே அவரை மட்டும் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார். தன்னை இந்த விஷயத்தில் தொந்தரவு
செய்யக் கூடாது என்கிற எண்ணம் வந்திருக்கலாம். அல்லது நான் இதில் ஒத்துழைக்க மாட்டேன்
என்று தோன்றியிருக்கலாம். அல்லது இம்மாதிரியான காரியங்கள் எல்லாம் தன்னோடு போகட்டும்
என்ற நினைப்பிருக்கலாம். எதற்குக் கேட்டுக்கொண்டு அதில் தலையைக் கொடுத்தமாதிரி ஆக்கிக்
கொண்டு? அவரே பார்த்துக் கொள்ளட்டுமே!
அது
சரி மோகனா...உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் மட்டும் கேட்கணும்னு நினைச்சேன்...அப்பா
கேட்டா சொல்லுவியா...? பிரியமான அழைப்பில் அவன் மோகனா ஆகிவிடுவான்.
என்னப்பா
இப்டிக் கேட்குறீங்க...தாராளமா சொல்லுங்கப்பா...
புதுசாக்
கான்ட்ராக்ட் கிடைச்சா செக்யூரிட்டியெல்லாம் வாங்குவாங்கல்ல...?
ஆமாம்ப்பா....
அதுக்கு
என்ன செய்யணும்?
செய்ற
வேலைக்குத் தகுந்தமாதிரி போஸ்ட்டாபீஸ்ல பத்திரங்கள்
வாங்கிக் கொடுக்க வேண்டிர்க்கும்ப்பா...
அப்புறம்
அது திரும்ப எப்பக் கிடைக்கும்?
வேலையெல்லாம்
முடிச்சு, ரெண்டு வருஷத்துல ஆடிட்டெல்லாம் முடிஞ்சபின்னாடி திருப்பிக் கொடுத்திடுவாங்க...
அப்போ
அதுவரை...?
அதுதான்
செக்யூரிட்டி...குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் மேலே பணப்பிடித்தம் ஏதும் வந்திச்சின்னா?
ஒரு பிடி வேண்டாமா? ரெகவ்ரி இருந்தா, கட்டச் சொல்லுவாங்க...கட்டலைன்னா இந்தப் பத்திரங்களை
போஸ்டாபீஸ்ல சப்மிட் பண்ணி பணமாக்கி ரெகவ்ரியை நேர் செய்திடுவாங்க...ஆகையினால உடனே
மறுவருஷம் திரும்பப் பெற முடியாது. .
நிச்சயமாவா
சொல்றே?
இதுல
நிச்சயத்துக்கு என்னப்பா இருக்கு? ரூல்ஸ்னா ரூல்ஸ்தான். எல்லாத்துக்கும் ஒண்ணுதான்.
நாகநாதன்
அமைதியானார். பிறகு அன்று அப்படிச் சொன்னானே பிச்சாண்டி? உள்குத்து வேலைகள் ஏதாவது
நடக்குமோ? படு விஷப்பயலாச்சே அவன்...
ஒவ்வொரு
வருஷமும் புதுசா வேலை செய்றதுக்கு புதுசாத்தான் செக்யூரிட்டி கொடுத்தாகணும்...அது சரி,
யாருக்காகப்பா கேட்குறீங்க...?
இல்லல்ல...சும்மாத்தான்
கேட்டேன்....அந்தக் கான்ட்ராக்ட் கிடைச்சிதுன்னா என்ன செய்யணும்னு தெரிஞ்சிக்கணும்ல...அதுக்காகத்தான்...
அதுக்கு
நீங்க ஏம்ப்பா கவலைப்படுறீங்க...அது கான்ட்ராக்டர் பாடுல்ல...நீங்களா செய்யப் போறீங்க...?
இல்லல்ல...சும்மாத்தான்
கேட்டேன்....ஒரு விஷயத்துக்குள்ள போறம்னா…தலையோடு
கால் எல்லாத்தையும் உள் வாங்கிக்கணும். அப்பத்தான் நாம அதுல முழுமையா ஈடுபட முடியும்.
எவனும் நம்மள ஏமாத்திறவும் கூடாது பாரு…?
அப்பாவின்
பேச்சு புரியாமல் இருந்தது. எதற்காக இப்படித் திரும்பத் திரும்பக் கேட்கிறார்? யாருக்கோ
தகுதியில்லாத ஒருவருக்கு சிபாரிசுக்கு அலைகிறார். அவன் பயனடைய இவர் மெனக்கெடுகிறார்.
அரசியலில் பிரபலமாக வேண்டும் என்கிற எண்ணமுள்ள அப்பா இம்மாதிரி ஆட்களையெல்லாம் தவிர்க்க
வேண்டும் என்று ஏன் நினைக்க மாட்டேன் என்கிறார். இவர்கள்தான் அவரது பலமா? தவிர்க்க நினைத்து முடியவில்லையா? அல்லது எல்லோரையும்தான்
கை கோர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற தவறான கணிப்பா? அல்லது யாருடனும் சேர்ந்து
கொண்டாலும் நான் என் காரியத்தில் கண்ணாக இருப்பேன் என்கிற தன்னம்பிக்கையா? அப்பா ஏதேனும்
சிக்கலில் மாட்டிக் கொள்வாரோ என்பதாக இவனுக்குள் ஒரு எண்ணம் உதித்தது. என்னவோ நடக்கப்போகிறது
என்று மனது சொல்லிக் கொண்டேயிருந்தது.
குழப்பத்தோடேயே
படுக்கைக்குப் போனான் மோகன். உறாலில் அப்பா யாருக்கோ போன் பண்ணிப் பேசிக் கொண்டிருந்தார்.
வழக்கத்திற்கு மாறாக அவர் சத்தத்தைக் குறைத்துக் கொண்டு பேசுவது இவனை உறுத்தியது.இவன்
வந்தபோது சுவற்றைப் பார்த்து வேறு திரும்பிக் கொண்டார். இப்படியெல்லாம் வீட்டில் உள்ளவர்களை ஒதுக்கிவிட்டு,
அல்லது தான் மட்டும் ஒதுங்கி அவர் காரியங்கள் செய்து என்றுமே பார்த்ததில்லை. ஆனால்
இப்பொழுது ஒளிவு மறைவும், ரகசியங்களும் அப்பாவின் வாழ்க்கையில், நடவடிக்கைகளில் நிறையப்
புகுந்திருக்கின்றன. பேசும் வார்த்தைகள் குறைந்திருக்கின்றன. ஒதுக்கம் அதிகம் ஆகியிருக்கிறது.
தனிமையை அதிகம் விரும்புவதாகத் தெரிகிறது.
.
தன் வயதுக்கு ஒரு அளவுக்கு மேல் அவரிடம் பேச முடியாத நிலைமையும், அப்படிப் பேசாததனாலேயே
நிறைய விஷயங்கள் தெளிவு படாமல் போய்க்கொண்டிருப்பதையும், உள்ளுருக்கு வந்து விட்டதனால்
வீட்டுக் காரியங்களை முழுப் பொறுப்போடு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இயங்கிக்
கொண்டிருக்கும் தனக்கு இது புதுச் சங்கடமாக இருப்பதுபோலவும் நினைக்க ஆரம்பித்தான் மோகன்.
சிவனே என்று ஜவுளித் தொழிலை மட்டும் அவர் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாதா என்று ஒரு
ஏக்கம் எழுந்தது அவனுக்குள்.
எண்ணங்கள்
தந்த குழப்பங்களுக்கிடையில், மனம் ஒரு நிலையிலில்லாமல் உறாலில் படுத்திருக்கும் அம்மாவை
அந்த மங்கிய விளக்கொளியில் அமைதியாய் நோக்கினான். நடக்கும் எதுவும் தெரியாத அம்மா.
தெரிந்து கொள்ளவும் விரும்பாதவள். முயன்றாலும் சாத்தியமில்லைதான். கடவுள் மேல் பாரத்தைப்
போட்டுவிட்டுக் கிடந்தாள் அம்மா. அருகிலே தங்கைமார்கள்.
ராகினி, ரோகிணி, கல்யாணி. எல்லாவற்றிலும் ஏதோவோர் ரசனை இருக்கத்தான் செய்திருக்கிறது
அப்பாவுக்கு. எப்படி அழகாகக் கோர்வையாக இப்படியான பெயர்களைத் தேர்வு செய்தார்? குதிர் குதிராக மூவரும் எப்பொழுது எங்களுக்குக்
கல்யாணம் என்று கேட்காமல் கேட்பது போல் தோன்றியது இவனுக்கு. வரும் தையிலாவது பெரிய
தங்கைக்குத் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று ஒரு உறுதி பிறந்தது அப்போது. அதுநாள்
வரை சேமித்து வைத்திருக்கும் பொதுச் சேம நலநிதிப் பணம் எவ்வளவிருக்கும் என்று மனது
கணக்குப்போட்டது திடீரென்று. இனியும் தாமதிப்பது நல்லதல்ல என்பதுபோல் ஒரு வேகம் கிளர்ந்தது.
அந்த எண்ணத்தோடேயே, உறக்கம் வராமல் புரண்டுகொண்டேயிருக்கும் அப்பாவைப் பார்த்தவாறே
தன்னை மீறிக் கண்ணயர்ந்து போனான் மோகன்.
( 9 )
அன்று
ஆய்வுக் கூட்டம் இருக்கிறது என்ற நினைப்பே உடல் அயற்சியில் மறந்து போய் விட்டதை எண்ணியவாறே
பரபரப்பாக எழுந்த மோகன் வேகவேகமாகக் குளித்துவிட்டு அம்மா நீட்டிய டிபனை அள்ளி வாயில்
திணித்துக்கொண்டு, மதியச் சாப்பாடு வேணாம்மா என்றுவிட்டுப் பறந்தான் அலுவலகத்துக்கு.
எதற்காக
இப்படிச் சொல்லிவிட்டுப் போகிறான் என்பது புரியாமல் அவன் செல்வதையே பார்த்துக்கொண்டு
நின்ற ஜெகதாம்பாள் அவனுக்கு முன்னால் எழுந்து ஓட்டமாய் ஓடிய தன் கணவனை நினைத்துக் கொண்டாள்.
இவன்தான்
காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டதுபோல் ஓடுகிறான் என்றால் அவர் அதற்கு முன்னால் கிளம்பிவிட்டாரே!
அப்படி என்னதான் வேலையோ இருவருக்கும்? ஒன்றும் புரியாமல் நல்லதே நடக்க வேண்டும் தெய்வமே!
என்று கடவுளை வேண்ட ஆரம்பித்தாள்.
இவன்
ஆபீசுக்குள் அடியெடுத்து வைத்த போது கூட்டம் ஏற்கனவே ஆரம்பித்திருந்தது.
தேவையான
கோப்புகளையெல்லாம் முதல் நாள் மாலையே அலுவலரின் அறைக்கு அனுப்பிவிட்டான். ஒரே ஒரு அட்டவணை
மட்டும் தயார் செய்ய வேண்டியிருந்தது. அதையும் தயாரித்து முடித்துவிட்டு காலையில் பிரின்ட்
எடுத்துக்கொள்வோம் என்று கிளம்பியிருந்தான்.
இப்போது
அதன் ஒரு நகல் அவனின் டேபிளில் வைக்கப்பட்டிருந்தது. எப்போதும் கூட்டத்திற்கு இவனும்
ஆஜராவது வழக்கம். அன்று மாறுதலாக மேலாளர் உள்ளே அமர்ந்திருப்பதாகச் சொன்னார்கள். நடப்பது
ஆய்வுக் கூட்டம்தானா என்று சந்தேகம் வந்தது. தன்னை அழைக்காததே நல்லது என்றும் தோன்றியது.
உங்களை
இங்கே வெயிட் பண்ணச் சொன்னாங்க சார் ....என்று வந்து சொன்னான் பியூன் ராமலிங்கம்.
உள்ளே
யார் யார் இருக்காங்க என்றான் இவன்.
மினிஸ்டர்
பி.ஏ. வந்திருக்காரு சார்...நீங்க பார்க்கலையா? எட்டு மணிக்கெல்லாம் வந்துட்டாங்கல்ல...என்றான்
பதிலுக்கு.
கசகசவென்று
சத்தம் பெரிதாக இருந்தது வாசலில். கட்டடத்திற்கு
வெளியே மூன்று நான்கு கார்கள் புதிதாக பூதம்
பூதமாய் நின்றன. அவற்றுக்கு நடுவே அந்த ஆள்
பிச்சாண்டியின் காரும் நிற்பதை அதன் எண்ணை வைத்துக் கண்டு கொண்டான் இவன். இந்த ஓட்டைக்
காரைக் கொண்டு நிறுத்தலேன்னா என்ன கேடு? என்று தோன்றியது. ஐயோ பாவம் என்று பரிதாப நோக்கில்
கான்ட்ராக்டை வாங்கப் போடும் நாடகமோ இது?
அந்த
அலுவலகத்திற்கு வந்து முதன் முறையாக அவன் போய் அமராமல் அந்தக் கூட்டம் நடக்கிறது என்று
தோன்றியது இவனுக்கு. எத்தனை விஐபிக்கள் இருந்தாலும் அவனை அழைத்து அருகில் அமர வைத்துக்
கொள்ளும் அலுவலர் இன்று தன்னைக் கண்டு கொள்ளாததும், தான் தயாரித்து வைத்திருந்த கோப்பில்
முன்னதாகவே செய்துகொள்ளும் ஒரு டிஸ்கஷனும் இல்லாமல் போனதும் இவனை என்னென்னவோ நினைக்க
வைத்தன. பரபரப்பாய்ச் சிலர் உள்ளே போவதும் வருவதுமாய் இருந்தார்கள். மாவட்டத்திற்கான
மொத்தத் திட்டப் பணிகளுக்குரிய ஒப்பந்தங்கள் அன்று முடிக்கப்பட்டாக வேண்டும். வெவ்வேறு
ஒப்ப்நததாரர்களுக்கு இன்னின்ன சதவிகிதம் என்று பிரித்தளிக்கப்பட்டாக வேண்டும். அதற்குரிய
செக்யூரிட்டிப் பத்திரங்களைக் கணக்கிட்டு அவரவருக்கு இவ்வளவு என்று தபால் அலுவலகம்
சென்று ஐந்தாண்டுப் பத்திரங்களை வாங்கி வரச் செய்ய வேண்டும். அதற்குப்பின்தான் ஒப்பந்த
ஆணைகளும், ஒர்க் ஆர்டர்களும் வழங்கப்பட வேண்டும். இனி ஒரு மாதத்திற்கு அங்கு இங்கு
என எங்கும் நகர முடியாதுதான். நினைத்துக் கொண்டான் மோகன்.
லீவு
நாள்லதாம்மா கல்யாணப் பாத்திரங்களைப் போய் வாங்க முடியும். அவசரப்படாதே….படிப்படியாச்
செய்வோம்…விலை குறைஞ்ச கடையா, மொத்த வியாபாரக் கடையாப் பார்த்துப் பேசி வாங்கணும்.
முடிஞ்சா அப்பாவையும் கூட்டிட்டுத்தான் போகணும். இன்னிக்கு அவர் இருக்கிற பிஸில வருவாரோ
மாட்டாரோ? அவர் வந்தாருன்னா…ஆளப் பார்த்திட்டு…கொஞ்சம் விலை குறைச்சுக் கொடுப்பாங்க…கறாராப்
பேச மாட்டாங்க…பேரம் பேசாம வாங்கினோம்னா…கன்னா பின்னான்னு செலவு எகிறிடும்…அதுல ஜாக்கிரதையா
இருக்கணும். அதனாலதான் சொல்றேன்…அப்பாவும் வரட்டும்னு… அவர் தோதுக்கு நாள் குறிப்போம்.
கச்சிதமாச் செய்வோம்… - பொறுப்பாய்ச் சொன்னான் அம்மாவிடம். அப்பாவையும் கூட்டிப் போக
வேண்டும் என்று மோகன் சொன்னது ஜெகதாம்பாளை மிகவும் திருப்திப் படுத்தியது. ஏதோ நீங்களாப்
பார்த்து நல்லபடியாச் செய்தா சரிதாம்ப்பா…என்றாள் பொதுவாக.
கூட்டம் முடிந்து எல்லோரும் கிளம்பியபோது மணி இரண்டைத் தாண்டியிருந்த்து.
ஒவ்வொருவராக
வெளியே வர ஆரம்பித்திருந்தார்கள். கேட்டுக்கு வெளியே நிற்கும் கார்கள் தனித்தனியே சீறிக்கொண்டு
கிளம்ப ஆரம்பித்திருந்தன. படிப்படியாக ஆட்கள் அதிகமாகி வெள்ளை வேட்டியும், சட்டையுமாக
நிறையப்பேர் வாயில் பகுதிகளில் தென்பட்டுக்
கலைய ஆரம்பித்தார்கள். வெளியே சாலைகளில் எங்கெங்கோ நின்றவர்கள் எல்லாம்
ஒன்று கூடி விட்டாற்போலிருந்தது. அந்தக் கூட்டமே தனிதான் என்று நினைத்துக் கொண்டான்
இவன்.
கொத்துக்
கொத்தாகப் பலரும் வெளியேறியதும், அந்த அலுவலகமே ஒரு திடீர் அமைதிக்குத் தயார் ஆனது.
யப்பாடா…ஓய்ஞ்சிதுப்பா….என்று தோன்றியது.
எல்லாரும்
போய்ச் சேர்ந்த பின்னர் கடைசியாக பியூன் ராமலிங்கம் பின் தொடர அலுவலர் வெளியே வந்து
நேர் திசையில் உள்ளே நோக்கினார். தன்னைத்தான் தேடுகிறார் போலும் என்கிற எதிர்பார்ப்பில்
வாயிலுக்கு விரைந்தான் மோகன்.
அந்த
ஃபைலை எடுத்திட்டு வா...என்றார்.. ராமலிங்கம் வேகமாய்ச் சென்று எடுத்து வந்து நீட்டினான்.
மோகன்,
இதை வாங்கிக்குங்க....அதுல இருக்கிற நோட் ஆர்டர்படி ஒரு உத்தரவை உடனே தயார் பண்ணிடுங்க...இன்னைக்கு
சாயங்காலமே பார்ட்டிக்குக் கொடுத்தாகணும்....
சரி
என்று இவன் கையை நீட்டியபோது, திடீரென்று மானேஜர் குறுக்கே வந்தார்.
எல்லாம்
ரெடி சார்....ஏற்கனவே தயார் பண்ணி டெஸ்பாட்ச் ஸ்டேஜ்ல வச்சிருக்கேன்...நீங்க சொன்னா
அனுப்பிட வேண்டிதான்...
அப்டியா....ஓ.கே.,
ஓ.கே., கொண்டாங்க கையெழுத்துப் போட்டுட்டே கிளம்பறேன்...என்றவாறே மீண்டும் தன் அறைக்குள்
நுழைந்தார். மோகன் அப்படியே நின்று கொண்டிருந்தான். மானேஜர் உள்ளே ஓடினார். அங்கேயே
நிற்பதா, உள்ளே போவதா, அல்லது தன் இருக்கைக்குப் போவதா என்று தெரியாமல் லேசாக ஸ்தம்பித்தான்.
அதுநாள்வரையிலான தனக்கான இடம் விலகிச் சென்று விட்டதோ என்று நினைக்க வைத்தது அந்தச்
சூழல்.
எல்லாமும்
இன்னைக்கே ஸ்பீடு போஸ்டுல போயிடணும்...ரிசீவ் ஆனதுக்கு அக்னாலெட்ஜ்மென்ட் ஒவ்வொருத்தருக்கும்
வந்திருக்குதான்னு கவனமாப் பார்க்கணும். வரல்லைன்னா ஃபோன் பண்ணிக் கேட்டு வாங்கிடணும்.
மறந்திடாதீங்க…எனக்கு வரலைன்னு பின்னாடி யாரும் புகார் சொல்லக் கூடாது கவனம்…என்றவாறே
மானேஜரை நோக்கிச் சொல்லிக் கொண்டு மீண்டும் வெளியே வந்து காறில் ஏறினார்.
ஓ.கே.
சார்., எல்லாமும் இன்னைக்கே போயிடும்....- சொல்லிக்கொண்டே ஓடிப் போய்க் கார் கதவருகில்
நின்று போய் ஒரு சல்யூட் அடித்து விட்டு கார் கதவையும் சாத்திவிட்டு உள்ளே வந்தார் மானேஜர்.
நீங்க
போங்க…வேலை முடிஞ்சதும் ஃபைலைக் கொடுத்தனுப்பறேன்...என்று
மோகனைப் பார்த்துச் சொல்லிக்கொண்டே தன் இடத்திற்குப் போனார்.
மோகன்
அமைதியாக வந்து தன் இருக்கையில் அமர்ந்தான். கொஞ்ச நேரத்தில் அந்தக் கோப்பு வந்தது
அவனிடம்.
வச்சிட்டுப்
போ...என்றவாறே குனிந்த நிலையில் ஏதோ ஒரு பதிவேட்டில் சில பதிவுகளைச் செய்து கொண்டிருந்தான்.
வந்திருந்த
கோப்பினைத் திறந்து பார்க்க மனசே இல்லை. பார்த்து என்ன ஆகப்போகிறது? என்றிருந்தது.
மதியம்
வெளியில் போய் மனசில்லாமல் என்னத்தையோ சாப்பிட்டுவிட்டு வந்திருந்தான். அன்று எதிர்பார்த்ததுபோல்
கூடைக்காரியிடம் அம்மா சாப்பாடு கொடுத்து விடாதது சங்கடமாயிருந்தது.சே! என்று அலுத்துக்
கொண்டான். கொடுத்துவிடுவாள் என்கிற எதிர்பார்ப்பில்தான்
காலையில் அப்படி ஓடி வந்தது என்று சொல்லியது மனம். இடையில் ஒரு ஃபோன் பண்ணியாவது தெரிவித்திருக்கலாம். எதுவுமே சொல்லவில்லையென்றால் அம்மாதான் என்ன செய்வாள்?
கிளம்பும்போதுதான்
அந்த இன்னொரு கோப்பைப் பார்த்தான் மோகன்.அது அன்றைய கூட்டத்திற்காகத் தான் அனுப்பிய
கோப்பாக இருந்தது. அந்தக் கூட்டம்தான் நடக்கவேயில்லையே? அனுப்பியதுபோலவே திரும்பியிருந்தது
அது.
இவன்
எதிர்பார்த்திருந்த அந்த முன் கோப்பு இன்னும் வரவில்லை. என்னவோ ஆகட்டும் நமக்கென்ன என்று நினைத்தான்.டேபிளில்
இருந்தவைகளை எடுத்து பீரோவில் அடுக்கிப் பூட்டி, மேஜையைச் சுத்தமாக்கி விட்டுக் கிளம்பினான்.
வாசல்
படி இறங்கிய போது மனம் அந்தப் பாட்டு வரிகளை முனகியது.
என்னதான்
நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில்
நீதி மறையட்டுமே
தன்னாலே
வெளிவரும் தயங்காதே...
இவனுக்காகவே
வீசுவதுபோல் எங்கோ பெய்த மழையின் எதிரொலியாகக் குளுமையான காற்று மெல்ல இவனை வந்து தழுவ,
அந்த சுகத்தை இதமாக அனுபவித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான் மோகன்.
அப்பாதான்
எதிர்கொண்டார்.
டேய்...!ஆர்டர்
பார்த்தியா....வாங்கிட்டேனாக்கும்...இன்னைக்கும் உன்னைத் தொந்தரவு பண்ணலை...சரிதானே...?
நான் வந்திருக்கிறதே உனக்குத் தெரிஞ்சிருக்காதே? மினிஸ்டர் பி.ஏ. கூடல்ல இருந்தேன்....என்றவாறே
நீட்டினார் இவனிடம். இவன் வீடு வருவதற்குள் ஆர்டர் அப்பா கைக்குப் போய்விட்டது. அடேங்கப்பா…என்னவொரு
வேகம்? அவர் முகத்தில் இருந்த பெருமை இவனுக்கு
ஆச்சரியத்தைக் கொடுத்தது. அது அப்பாவின் பெயரிலேயே இருந்ததும், அடியில் அவர் ஒப்பந்ததாரராகப்
பதிவு செய்திருந்த சான்றிதழின் நகலுமாய் அவனை அதிர வைத்தது. அப்பா எல்லாவற்றிற்கும்
களத்தில் இறங்கிவிட்டார் என்று தோன்றியது. இனி அவரைப் பிடிக்க முடியாது. எங்குபோய்
அதுவே முடிகிறதோ அதுதான் இறுதி. இந்த உலகத்தில் யாரையும் யார் சொல்லியும் திருத்த முடியாது.
அவரவரே அனுபவப்பட்டு மீண்டு வரவேண்டியதுதான்.
அந்தப்
பிச்சாண்டிக்காக நான் வேலை செய்யப் போறேன்....எனக்காக அவன் ஒண்ணு செய்து தரப் போறான்....இதுதான்
எங்களுக்குள்ள ஒப்பந்தம்....இந்த உலகத்துல ஒண்ணைக் கொடுத்துத்தான் ஒண்ணை வாங்கணும்.
எதுவுமே கொடுக்காம நமக்கு எதுவும் கிடைக்காது. அப்படிக் கிடைச்சாலும் அது நிலைக்காது.
இன்னும் கொஞ்ச நாள்ல பாரு...டவுன்லயே நம்ம கடையை அடிச்சிக்க எதுவுமில்லேன்னு ஆயிடும்...ஜனம்
பூராவும் அங்க வந்துதான் விழப்போவுது – படு குஷியாகச் சொன்னார் நாகநாதன்.
அப்பா
சொல்வதை அமைதியாய் நின்று கேட்டுக் கொண்டான் இவன். அப்பாவிடம் எது நிலைக்கப் போகிறதோ,
எது கழன்று ஓடப் போகிறதோ தெரியவில்லை இவனுக்கு. அம்மா பாவம், அவளால் எதுவுமே சொல்ல
முடியாது. எல்லாவற்றையும் வெறுமே பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடியும். தன்னால் மட்டும்
முடியுமா? அதுவும் சாத்தியமில்லை. ஆவது ஆகித்தான் ஓயும். முடிந்தவரை குடும்பத்தைப்
பாதுகாக்க முயற்சிக்க வேண்டியதுதான். அதுதான் தன்னின் கடமை. பெற்றோருக்குத் தான் செய்யும்
நன்றிக் கடன். நிதானமான தன் எண்ண ஓட்டங்களை நினைத்து அவனுக்கே பிரமிப்பாய் இருந்தது.
ஆனாலும் அந்த அதிர்ச்சியிலிருந்து அவன் மீள்வதற்குள், எதிர்பாராத இன்னொரு வெடி குண்டும்
மோகனை நோக்கி வேகமாய் வந்தது.
உனக்கு
ஒண்ணு அன்னைக்கே சொல்லணும்னு நினைச்சேன்...இப்பத்தான் சரியான வேளை..அதையும் சொல்லிப்புடறேன்.
இந்தக் குடும்பத்தைப் பொறுப்பா நீ கொண்டு செலுத்தணும்னுதான் இதைச் சொல்றேன். உன் மேல
எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால கவனமாக் கேளு. .உன் ஆபீசுல வேலை பார்க்குதே நந்தினின்னு
ஒரு பொண்ணு..எனக்கு எப்படித் தெரியும்னு பார்க்காதே...தெரியும்...அவ்வளவுதான்.....அதோட
அண்ணன் கூட நீ அன்னைக்கு டீக்கடைலருந்து வர்றதை நான் பார்த்தேன். அவனோடல்லாம் சகவாசம்
வச்சிக்காதே....அது எதுவாயிருந்தாலும் இன்னியோட விட்டிடு...எதைப்பத்தியும் நான் கேட்கலை..கேட்க
விரும்பலை....அவங்கப்பனோட ஒரு ஷார்ட் பீரியட் பார்ட்னரா இருந்து என்னோட சாப்பாட்டுத் தொழில்ல மண்ணைப்
போட்டவன் அந்தத் துரோகி. பல தொழில் மன்னன் அந்தாளு. பெருத்த நஷ்டத்தை அடைஞ்சவன் நான்...ஏமாற்றப்பட்டவன்...அதுக்கு
அவனோட மகனும் ஒரு முக்கிய காரணம்.பையனைக் கையைக் காட்டி ஏமாற வச்சிட்டான். அப்பன் பங்குச்
சந்தைல சம்பாரிச்ச காசை இதுல போட்டுப் புரட்டினான். அந்த சூதாட்டத்துல மாட்டினவன் நான்.
அவனை நம்பி முடக்கினேன். ஒரு கட்டத்துல வீழ்ச்சியாச்சு. பிறகு எழுந்திரிக்கவே முடியல.
போனது போனதுதான்னு ஆயிடுச்சு. உங்களுக்கெல்லாம் என் தொழில் ரகசியம் தெரியாம ஓட்டினேன்.
நானே குகைக்குக்ள போனேன். நானே தப்பிச்சு வெளில வந்திட்டேன். ஒரு வகைல அதுதான் என்னை
உசுப்பி விட்டதுன்னு சொல்லணும்... என்னை நம்பிக்கை மோசம் பண்ணினவன் அவன். அதுக்குப்
பெறகு வாழ்க்கைல காலூன்றுறதுக்கு நான் பெரும்பாடு பட்டுப் போனேன்.எத்தனையோ இழிவு? எவ்வளவோ
அவமானங்கள்? எனக்குத்தான் தெரியும் அந்த வலி! என் கூட நின்னு எல்லாத்தையும் சுமந்த
உன் அம்மாவுக்கு ஓரளவுக்குத் தெரியும். இன்னைக்கு அவன் எனக்குக் கீழதான்...அன்றைக்கு
மனசுல வச்ச வன்மம் இதுதான்...அதுல ஜெயிச்சுட்டுத்தான் ஓய்ஞ்சேன்..இப்போ உன் மூலமா திரும்பக்
கைகோர்க்கணும்னு எதிர்பார்க்கிறான்னு நினைக்கிறேன். வஞ்சகன். அது வேண்டாம்...மறந்திடு...இன்னையோட
மறந்திடு...எதுவும் இருந்திச்சுன்னா உதறிடு...முழுசா விட்டு உதறிடு....சொல்லிட்டேன்...நீ
படிச்ச பையன்...உனக்கு இதுக்கு மேல சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன்...
நிதானமாக,
அழுத்தமாகப் பொழிந்துவிட்டு, அவன் முகத்தைக் கூடப் பார்க்காமல் கொல்லைப் புறம் நோக்கிச்
சென்று விட்டார் நாகநாதன். வெகு நாட்களுக்குப் பிறகு அவன் பார்த்த கண்டிப்பு. அப்படியே
அதிர்ந்து போய் நின்றான் மோகன். உடம்பில் மெல்லிய நடுக்கும் பரவியிருப்பதை அவனால் தவிர்க்க
முடியவில்லை. எல்லாமும் தெரிந்திருக்கிறது அப்பாவுக்கு. அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது.
அன்று நந்தினி சொன்ன நீண்ட கதை கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அதுவும்
இதுவும் ஒன்று சேர்ந்திருக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. பிரமிப்பாயிருந்தது.
அப்பாவிடம் இன்னும் தெளிவாக அறிய என்று தனியே
பேச வேண்டியதில்லை. அவரின் தீர்மானமான இந்த விளக்கம் போதுமானது. இவனுக்கு மொத்தமும்
புரிந்தது போலிருந்தது. ஜெகதலப்பிரதாபன், ஜெகதலப்பிரதாபன்....வாய் முனகியது இவனுக்கு.
அப்பா
என்கிற பேரலைக்கு முன் இந்தக் குடும்பத்தின் சிற்றலைகள் எம்மாத்திரம்? சிற்றலைகள் வரலாம்
போகலாம்…அனுமதியுண்டுதான். ஆனால் பின்னால் வரும் பேரலையின் உள்ளே ஐக்கியமாகிவிட வேண்டும்.
அல்லது காணாமல் போக வேண்டும். தான் ஐக்கியமாகிவிட்டேனா
அல்லது காணாமல் போனேனா? இருப்பதுபோல் இருந்து, தோன்றுவதுபோல் தோன்றி, மறைவதுபோல் மறைவதுதான்
வாழ்க்கையின் ரகசியமா? அது எல்லோருக்கும் ஒன்றுபோல் அமைவதில்லையா? தனக்கென்று ஒரு குடும்பம்
அமைந்து தனித்து அனுபவங்களைச் சேகரம் பண்ணும்போது தானும் பேரலையாக மாறிவிடுவோமோ? கேள்விகள் கேள்விகளாகவே ஸ்தம்பித்து நிற்கின்றன.
வாழ்க்கையில் விடை காண முடியாதவை எத்தனையோ…! எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டுவிட்டால் அல்லது எல்லாமும்
நிறைவேறி விட்டால் இந்த வாழ்க்கைதான் சுவாரஸ்யமற்றுப் போகுமே…! நல்லதும் கெட்டதும்,
தீர்வும் ஏமாற்றமும் கலந்ததுதானே இவ்வாழ்க்கை? வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்தான்
எத்தனையெத்தனை?
அண்ணனுக்கு
ஏற்பட்ட இந்த எதிர்பாராத அதிர்வைக் கண்டு பதறிய தங்கைகள் மூவரும் அவனுக்கு ஆறுதல் சொல்வதுபோல்
அருகில் வந்தபோது எந்தச் சலனமும் இல்லாதவனாய், தன்னை வெகுவாய் நிதானப்படுத்திக் கொண்டு, தான் மகிழ்ச்சியாகவே இருப்பதுவாய் அவர்களை நேர் பார்வையில் நோக்கிச் சிரிக்க முயன்றான்
மோகன். உங்களுக்கு நானிருக்கிறேன், பயப்படவேண்டாம் என்று சொல்லாமல் சொன்னான். வலியச் சிரிக்க முயன்றவன் ஏனோ அப்படி ஏதும் அந்தக் கணத்தில் இயலாமல்
அமைதியான, அழகான, கருணை பொழியும் ஆதுரமான நந்தினியின் அழகு முகம், அன்பு முகம், ஆசை
முகம் மனக்கண் முன் தோன்ற, அடக்க முடியாமல் அவனையும் மீறி அவன் கண்கள் கலங்கிப் போனபோது தங்கைமார்கள் மூவரும் இன்னும்
அருகே நெருங்கி வந்து அவன் கைகளை ஆதுரத்தோடு பற்றிக்கொண்டார்கள்.
-------------------------------------------------
உஷாதீபன், “ஸம்ருதி“ இல்லம், 36-பி கோவிந்தசாமி நகர் 8-வது தெரு, மடிப்பாக்கம்,
சென்னை-91 (94426 84188)

