28 டிசம்பர் 2012

உஷாதீபனின் சிறுகதைத் தொகுதிகள் மற்றும் குறுநாவல் தொகுப்புகள்.

vojnmmnesamntppapvsntatvUntitled-1Uvvnp
1) உள்ளே வெளியே (முதல் சிறுகதைத் தொகுதி)  மீனாட்சி புத்தக நிலையம், தானப்ப முதலி தெரு, மதுரை-625 001. வெளியீடு.
2) பார்வைகள் (சிறுகதைத் தொகுதி) ராஜேஸ்வரி பதிப்பகம், தி.நகர், சென்னை-17
3) நேசம் (சிறுகதைத் தொகுதி) ராஜேஸ்வரி பதிப்பம், தி.நகர், சென்னை17.
4) வாழ்க்கை ஒரு ஜீவநதி(சிறுகதைத் தொகுதி) என்.சி.பி.எச்.சென்னை-98.
(திருப்பூர் தமிழ்ச்சங்கம், மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர்இணைந்து நடத்திய அமரர் ஜீவா, பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழாவில் பரிசு பெற்றது மற்றும் மதுரை லேடி பெருமாட்டி கல்லூரியில் பாடமாக வைக்கப்பெற்றது.)
5) நினைவுத் தடங்கள் (சிறுகதைத் தொகுதி)  என்.சி.பி.எச்,சென்னை-98. தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் 2011 ம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதி பரிசு பெற்றது.
6) புயலுக்குப் பின்னே அமைதி(குறுநாவல்)வானதிபதிப்பகம்,சென்னை-17
7) சில நெருடல்கள் (சிறுகதைத் தொகுதி) நிவேதிதா பதிப்பகம், சென்னை-17.
8)மழைக்கால மேகங்கள்(குறுநாவல்கள்) நிவேதிதாபதிப்பகம்,சென்னை17.
9) தனித்திருப்பவனின் அறை (சிறுகதைத் தொகுதி)நிவேதிதாபதிப்பகம், ,சென்னை17.
10) திரைவிலகல் (சிறுகதைத் தொகுதி) உதயக்கண்ணன், பெரம்பூர், சென்னை வெளியீடு. (திரு எஸ்.ஷா. அவர்களால் தொகுக்கப்பட்டது)
11) வெள்ளை நிறத்தொரு பூனை (சிறுகதைத் தொகுதி) ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை-17.
12) கதை அரங்கம்-6 (சிறந்த பல படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பு) மீனாட்சி புத்தக நிலையம், தானப்ப முதலி- தெரு, மதுரை 625 001.

குறிப்பு -


www.nilacharal.com சென்று இப்புத்தகங்களை E.Book ஆகவும் பெற்றுக்கொள்ளலாம். 

25 டிசம்பர் 2012

”அம்மாவின் கடைசிநாட்கள்…” சிறுகதை

கணையாழி இலக்கிய மாத இதழ் அக்டோபர் 2012 ல் வெளிவந்தது
ங்கு இருந்த நாட்களில் அம்மா சந்தோஷமாய்த்தான் இருந்தாள். மன நிறைவோடு என்று சொல்ல வேண்டும். இப்படிப் படுக்கையில் விழுந்து விட்டோமே என்கிற ஆதங்கம் பிடுங்கித் தின்றது. முகத்தில் நிரந்தரமாய்ப் படிந்துவிட்ட சோகம். அதே சமயம், மனம் கோணாமல், சுடு சொல் பேசாமல், முகம் சுளிக்காமல், செய்வதற்குத்தான் இவன் இருக்கிறானே என்கிற திருப்தி. நிறைவு.
அடுத்தவா மனசு சங்கடப்படுற மாதிரிதான் நீ என்னைக்கும் பேச மாட்டியே…யாரையும் எப்பவும் நீ அப்டிப் பேசினதில்லை…அதுதான் எனக்கு உங்கிட்டப் பிடிச்சது….அந்த நல்ல குணத்தை எத்தனை பேர் நினைச்சுப் பார்த்துப் புரிஞ்சிக்குவா…அதனால உங்கிட்ட இருக்கிறதுல எனக்கு எந்த மனக் குறையும் இல்லை…..
ஒவ்வொரு முறையும் அம்மா அழைக்கும்போதும், இதைச் செய், அதைச் செய் என்று சொல்லும்போதும், இவன் முகம் சுருங்குகிறதா என்று கவனிக்கிறாளோ என்று தோன்றியது. அம்மாவை வலது பக்கமாயும், பின் சற்று நேரம் கழித்து இடது பக்கமாயும் புரட்டி விடும்போதும், அவள் பார்வை இவன் முகத்தைப் பார்த்தே இருந்தது. ஏன் இந்தச் சந்தேகம் வந்தது என்று இவனுக்குத் தோன்றியது. எழுப்பி அமர வைக்க இவன்தான் வரவேண்டியிருந்தது. உட்கார்ந்ததும் சற்றுப் பொறுத்துத்தான் கைப்பிடியை விட வேண்டியிருந்தது. முதுகைத் தாங்கிக் கொஞ்ச நேரம் பிடித்துக் கொண்டிருந்தான். மூச்சு வாங்கியது அம்மாவுக்கு. வாயைத் திறந்து கொண்டு உற்உறா…உற்உறா….என்று திணறினாள். நெஞ்சு அடித்துக் கொண்டது. தலை நிற்க மாட்டாமல் ஆடியது. நிதானத்துக்கு வர சற்று நேரம் பிடித்தது.
ஆதரவுக்கு ஆள் இருக்கிறது எனும்போது ஆசுவாசத்தை, உடல் நோவை சற்று அதிகமாகவே வெளிப்படுத்தும் மனச் சமாதானம். அந்த வேதனையைப் பார்த்து இன்னும் இரண்டு வார்த்தை ஆறுதலாகக் கிடைத்தால் அதில் ஒரு நிறைவு.
இவ்வளவு பாடு தேவையா? கடவுள் என்னைக் கொண்டு போகப்படாதா? என்றாள்.
அது நம்ம கைலயா இருக்கு…அவராக் கூப்டும்போதுதானே போக முடியும்…நாம கூப்டா வருவாரா? அவர் எப்ப நினைச்சிருக்காரோ அப்பத்தான் கூப்டுவார்…
ஆனாலும் பகவானுக்கு எம்மேல கொஞ்சங்கூடக் கருணை இல்லை. எம்புட்டு ஸ்லோகம் படிச்சிருப்பேன். எத்தனை கோயில் போயிருப்பேன். எவ்வளவு வேண்டின்டிருப்பேன்…சதாசர்வகாலமும் அவன் நாமம்தான். ஜபம்தான்..எனக்கு இது வேணுமா? இன்னும் அவனுக்கு இரக்கம் வரலை போலிருக்கு…? எல்லாம் பட்டுத்தானே கழியணும்…மிச்சம் வைக்காமப் போகணுமே…அது என்னோட போறதா? உங்களையும் சேர்த்துக் கஷ்டப்படுத்தறது …என்னால எல்லார்க்கும் கஷ்டம்…
அப்பா இவ்வாறு படுக்கையில் விழுந்தபோது அவரைக் கொண்டு உடனடியாக ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ததும், அதன் தொடர்ச்சியான பராமரிப்பையும் கவனிப்பும், கண்கூடாகப் பார்த்தவள்தானே! அதே அக்கறை தன்னிடம் இருக்காது என்பதாக நினைக்கிறாளோ? இருக்குமா என்கிற சந்தேகத்தில்தான் நோக்குகிறாளோ? எதற்காக இப்படியெல்லாம் நினைப்பு வர வேண்டும்? ஏன் இந்தத் தடுமாற்றம்? தன் வயிற்றில் பிறந்த பிள்ளையிடமே ஏன் இப்படிக் கேள்விகள் முளைக்கின்றன?
வயதான காலத்தில் இப்படிச் சிரமங்களைக் கொடுக்கிறோமே என்கிற மனத் தாங்கலா? அந்த வருத்தமா? அதனால் உண்டான நோவில் வரும் வார்த்தைகளா?
கடவுள் என்னைக் கொண்டு போக மாட்டேங்கிறாரே, இப்டிப் படுக்கைல வீழ்த்துவார்னு நினைக்கவேயில்லை. நா ரொம்பப் பாவம் பண்ணியிருக்கேன்…அது உங்களையும் சேர்த்துக் கஷ்டப்படுத்தறது….அனுபவிங்கோ….என் வயித்துல பிறந்தவாதானே நீங்க…அனுபவிக்கத்தான் வேணும்….
அப்டியெல்லாம் ஒண்ணுமில்லை…நீயா ஏதாவது நினைச்சிக்காதே…எதையாவது கற்பனை பண்ணின்டே மனசைப் போட்டு உழட்டிக்காதே…கண்ணை மூடிண்டு ராம ராமா சொல்லு…அப்டியே தூங்கப் பாரு….
எங்க தூங்கறது…? அதான் ஒடம்பு ரணமா வலிக்கிறதே…நா வெறுமே படுத்திண்டிருக்கேன்னு நீ நினைக்கிறே…இந்த ரணத்தோட கொடுமையை அனுபவிச்சிண்டே கண்ணை மூடிக் கெடக்கேன். எவ்வளவுதான் பொறுத்துக்க முடியும்…எதுக்காக இத்தனை உடல் வேதனை? அதான் தாங்க முடியாத போது புலம்பறேன்…யார்ட்டப் புலம்புவேன் சொல்லு…உன்னண்டதான் முடியும்….
சொல்லு…சொல்லு…தாராளமாச் சொல்லு…அதை ஏன் புலம்பறதாச் சொல்றே…உன் பிள்ளைட்டச் சொல்லாம வேறே யார்ட்டச் சொல்லுவே…எங்க பிடிச்சி விடணும்னு சொல்லு…பிடிச்சி விடறேன்… என்று கொண்டே அம்மாவின் இடுப்பு எலும்புப் பகுதியில் அமுத்தி விட்டான் இவன்.
மெதுவா…மெதுவா….என்று அலறினாள் அம்மா. அந்த இடத்தில்தான் அடி பட்டிருக்கிறது என்றார் டாக்டர். வயது தொண்ணூற்றி மூன்று. எப்படிச் சேரும்? முயற்சி செய்து பார்ப்போம்…இந்த மருந்தை உறிஞ்சச் சொல்லுங்க…பதினாறு நாளைக்கு உறிஞ்சணும்…கால்சியம் டெஃபிஷியன்சி…சரியாகறதுக்குக் கொஞ்ச நாளாகும். வீட்டு அளவுல நடக்கிறமாதிரிப் பண்ணலாம். கூடவே இந்த மாத்திரைகளையும் சாப்பிடட்டும்.
நம்பிக்கையாகத்தான் சொல்லி விட்டுப் போனார். அவரைக் கூட்டிக் கொண்டு வந்து காண்பித்ததில் அத்தனை திருப்தி அம்மாவுக்கு.
என் பிள்ளையாட்டம் இருக்கேள். சித்த நன்னாப் பார்த்து, என்னை எழுப்பி உட்கார்த்திடுங்கோ…புண்ணியமாப் போகும்…. – டாக்டர் சிரித்துக் கொண்டார்.
இந்தக் காலத்துல வீட்டுக்கு யார் வருவா? கூட்டிக் கொண்டு போய்க் காண்பிக்கலாம்னாலும் முடியாதே…இப்டிப் படுத்த படுக்கையாயிட்டனே?
இதையெல்லாம் நினைச்சு நீ ஏன் கஷ்டப்படுறே….நானில்ல கூட்டிட்டு வர்றேன்… அந்த நம்பிக்கை வார்த்தைகளில் அம்மாவின் முகத்தில் அத்தனை திருப்தி. மனிதர்கள் வார்த்தைகளுக்காக எவ்வளவு ஏங்கிப் போகிறார்கள்? முதுமை பெருங் கொடுமை. அதில் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது இந்த ஆறுதலான வார்த்தைகள்தான். நாள் முழுதும் அருகிலேயே அமர்ந்திருப்பதும், அவர்கள் புலம்புவதைப் பொறுமையாகக் கேட்டு அதற்கு சமாதானமாக அரவணைத்துப் பேசுவதும் எவ்வளவு கவனமாய்ச் செய்ய வேண்டிய பணிகள்? வெறுமே வேளா வேளைக்குக் கொண்டு வந்து யந்திரம் போல் வைத்தல் ஆகுமா? ஒரு விடுதிக்கும் சொந்த வீட்டுக்கும் வித்தியாசம் வேண்டாமா?
எத்தனை பேர் இதைச் செவ்வனே நிறைவேற்றுகிறார்கள். பெற்ற பிள்ளைகளே வாயில் வந்ததைப் பேசி விடுகிறார்களே?
பேசாமக் கிடக்க மாட்டியா? மனசு அமைதியாவே இல்லையே உனக்கு? இந்த வயசுக்கு எவ்வளவு விலகல் இருக்கணும்? இருக்கா உனக்கு? இந்த வீடும் வாசலும்,உற்றாளும் மற்றாளும் எல்லாமும் வெறுத்துப் போயிருக்கணுமே? ஏன் இல்லை? இப்டிப் படுக்கைல கிடக்கிற போதும், பொண்ணையும், பிள்ளையையும்பத்தி நினைச்சிண்டு, கண்ணீர் விட்டிண்டு, என்ன பக்குவம் வந்திருக்கு உனக்கு? எல்லாரும் உன் கண் முன்னாடியே எப்பவும் நிற்க முடியுமா? வீடியோ கேமராதான் வைக்கணும்…எல்லாருக்கும் கல்யாணம் ஆகி, குழந்தை குட்டிகள்னு பெத்து, குடும்பமா இருக்கால்லியா? அதோட விடுவியா, இன்னும் அவாளைப்பத்தி நினைச்சிண்டிருக்கியே? இப்போ நீ படுக்கைல கிடக்கே…எல்லாராலேயும் வந்து பார்க்க முடிஞ்சிதா? ஆளுக்கு நாலு நாள், வேண்டாம் ரெண்டு நாள், அதுவும் வேண்டாம் ஒரு நாள், வந்து இருக்கலாம் இல்லியா? வந்தாளா? வரமுடியாது…அவாவாளுக்கு ஆயிரம் வேலை…உன்னையே நினைச்சிண்டிருக்க முடியுமா? அதான் ஃபோன்லயே விசாரிச்சிக்கிறா…! இப்போ நாந்தான் இருக்கேன் சதா உன்னைப் பத்தியே நினைச்சு உருகிண்டிருக்க முடியுமா? அதுதான் எல்லாம் பார்த்தாச்சே…இன்னும் எதுக்குத் தவதாயப்படறே…? பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஆகி, பெண்டுகளுக்கெல்லாம் கல்யாணமாகி, பேரன், பேத்திகளைப் பார்த்து, அதுகளுக்குக் கல்யாணமாகி அவாளோட குழந்தைகளைப் பார்த்து, இப்டியே போச்சுன்னா உன் பிள்ளைகளோட, பொண்களோட சாவையே நீ பார்க்க வேண்டி வந்துரும்…அத்தனை தலைமுறை தாண்டிடும் போலிருக்கு…நெடுங்காலம் உயிரோட இருக்கிறதோட கொடுமை இதுதான் பார்த்துக்கோ…
அப்பாடா, என்ன பேச்சு, என்ன பேச்சு…? எல்லாந்தான் தோணும்னாலும் அதை இப்டி வாய்விட்டுச் சொல்லணுமா? நல்லதாப் பேசப் படாதா? சுற்றிலும் துஷ்ட தேவதைகள் இருப்பா வீட்ல…? காதில கேட்டுண்டே இருக்குமாம்….நாம சொல்றதை திரும்பத் திரும்பச் சொல்லுமாம்…அப்டிச் சொன்னா அதுதான் நடக்கும்பா…ஆகையினால நல்லதே பேசுங்கோ….
அம்மாவின் புலம்பல்….
ஆமா, இதுலதான் வந்தது. பாரு, இந்த வயசுலயும் ஆசையை? யதார்த்தத்தைப் பார்ப்பியா…? என்னமோ துஷ்ட தேவதை அது இதுன்னுட்டு…? காலா காலத்துல போய்ச் சேர்ந்தோம்னா நிம்மதின்னு நினைக்கப் பாரு…அதுக்கு வேணா பிரார்த்தனை பண்ணு….யாருக்குத் தெம்பு இருக்கு இந்தக் காலத்துல? புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சேர்ந்து உழைக்கிற காலம் இது…ஆபீசிலயும், வீட்டுலயும்…எவனால முடியுது? உங்க காலத்துல நல்ல சாப்பாடு சாப்டேள்….தொண்ணூறு நூறுன்னு இருக்கேள்…இப்போ? எல்லாம் கலப்படம்? அறுபது தொட்டாலே இழுத்துக்கோ, பறிச்சிக்கோன்னு கிடக்கோம் நாங்க…எல்லாரும் வேலைக்குப் போறவா வேறே…எம்புட்டு வந்தாலும் பத்த மாட்டேங்கிறது….எல்லாத்துக்கும் ஆள் வச்சிக்க வேண்டிர்க்கு…அவாளுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு கொடுக்க வேண்டிர்க்கு…அப்பிடியும் கிராக்கியா இருக்கு…யாருக்குத் தெம்பு இருக்கு உடம்புல…ஒடிஞ்சி விழுந்துடுவா போலிருக்கு…இதுல ராத்திரி முழிப்பு, பகல் முழிப்புன்னு வித்தியாசமில்லாம யாரால கிடக்க முடியும்? விடாம யாரால செய்ய முடியும்? ஆஸ்பத்திரில கூட நர்சுன்னு ஒருத்தி இருந்தா டே ஷிப்ட, நைட் ஷிப்ட்னு மாத்தி மாத்திப் பார்க்கிறா….ஒரே ஆள் தொடர்ந்து இருந்தா அப்புறம் அவாளும் படுக்கைல விழுந்தா யார் பார்க்கிறது? இதைச் சொன்னா குத்தம்…தான் பார்த்திண்டா எது நியாயமோ அதுவே மத்தவாளுக்கு ஆகாது…மத்தவாளுக்கும் வயசாகும், ஒவ்வொருத்தரோட உடம்பு ஸ்திதி வெவ்வேற மாதிரியிருக்கும்ங்கிற பக்குவமெல்லாம் கிடையாது…- பிள்ளைகளின் பேச்சில் எல்லாமும் ஒரே விகிதமாகவா இருக்கும். சற்று மாறுபடத்தானே செய்யும்…இன்றைய தலைமுறையின் யதார்த்த, நிதர்சனப் போக்கு மூத்த தலைமுறைக்குப் புரியுமா?
எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டே படுக்கையில் சவமாய்க் கிடந்தாள் அம்மா. கண்களில் விடாமல் வழிந்து ஓடிக் கொண்டிருக்கும் நீர். கடந்து வந்த காலங்களின் அதீத நினைப்புகள்…சொல்லொணாத் துயரங்கள்…
அழாதே…உடம்பு அவாளுக்கும் முடியாதபோது, அலுத்துச் சலிச்சு வருமில்லியா…அப்போ ரெண்டு வார்த்தை வரத்தான் செய்யும்…உனக்குத் தெரியாதா, அதெல்லாம் பெரிசா எடுத்துக்காதே…நீ பார்க்காததா? பாட்டிக்கும், அப்பாவுக்கும் எவ்வளவு பார்த்திருக்கே…? உன் மனசு கஷ்டப்படக்கூடாதுதான்…நீ நொந்து ஏதாச்சும் நினைச்சுண்டா அது பலிச்சிடும்தான்…ஆனாலும் நீ அப்டி நினைக்க மாட்டே…உன் ஜனனமில்லையா எல்லாமும்,…எல்லாரையும் மன்னிச்சிடு…ஆசீர்வதி…அவ்வளவுதான்…
ஆனாலும் வார்த்தை பேசாதது நீதாண்டா….நான் நன்னாச் சொல்லுவேன்…அடுத்தவா மனசு புண்படுமேங்கிற எண்ணம் உனக்கு மட்டும்தான் உண்டு. அவாள்லாம் அப்டியில்லை…வாயில வந்ததைப் பேசிடுறா…எல்லாருக்கும் தோணறதுதான்…ஆனா இதையிதைப் பேசணும்னு ஒண்ணு இருக்கில்லியா…? மனசுல தோணறதையெல்லாம் அப்டிப் பேசிட முடியுமா? என்ன மனுஷா? எவ்வளவோ படிக்கிறா…அடுத்தவாளுக்கு உபதேசிக்கிறா…தனக்குங்கிறபோது மட்டும் இப்டி நடந்துக்கறா…எல்லாமும் ஏட்டுச் சுரைக்காய்…லோக அனுபவமங்கிறதே வேறே…இந்த உலகத்து மனுஷாளோட கலந்த அனுபவம் இருக்கே அதோட மகிமையே தனி…அப்பத்தான் பக்குவப்படும்…மனுஷாளுக்கு விவேகம்னு ஒண்ணு வேண்டாமா? பஞ்சு மனசுன்னு ஒண்ணு உண்டே… அந்த மென்மை உனக்கு மட்டும்தான் உண்டு. நீ வாய் திறந்து எதையும் சட்னு பேசிடமாட்டாய். அதுதான் சாட்சி…! ஏன்னா நீ என்னோட முழு ஆதங்கத்துல பிறந்தவன்…உங்கப்பா சின்னாளபட்டில கடை வச்சிருந்த போது ரெண்டு வருஷம் என்னைப் பிரிஞ்சிருந்தார். அங்க கடையை ஒரேயடியா இழுத்து மூடிட்டு உள்ளுரோட வந்து சேர்ந்தாரோல்லியோ அப்போதான் நீ பொறந்தே…ஆதங்கப்பட்டு, ஆதங்கப்பட்டு, என் மனசுல தேக்கி வச்சிருந்தனே நிறைய, துக்கத்தையும், கருணையையும், வேதனையையும்…அதோட மொத்த உரு நீதான்…எத்தனை பொறுமையும், நிதானமும் காத்திருப்பேன் தெரியுமா? அது பெரிய கதைடாப்பா…அதை இன்னைக்கு நினைச்சாலும் என் உடம்பு நடுங்குறது…அப்டி ஒரு மனுஷனை நான் இந்த ஜன்மத்துல பார்க்கலை…எவ்வளவு பெரிய மனசு அவுருக்கு….தெய்வமா வந்தார் நம்ம வீட்டுக்கு…
நீ என்னம்மா சொல்றே…? –
அம்மாவின் முகத்தில் புதிய ஒளி. பழைய நினைவோட்டங்களின் ஆதர்ஸம். கண்களில் சட்டென்று பெருக்கெடுக்கும் கண்ணீர்.
ஊரம்புட்டும் கடனாயிடுத்து…உங்கப்பாவால தீர்க்க முடியலை…என்னவோ பேருக்கு வியாபாரம் நடந்திண்டிருக்கு…கடையும் ஓடிண்டிருக்கு…ஆனா கடன் பெருகிண்டிருக்கு…உங்கப்பாவுக்கு என்ன செய்றதுன்னே தெரிலை…முழிச்சிண்டிருக்கார்…இந்தச் சமயத்துலதான் நா போய் அங்க உட்கார்ந்தேன்…
உன்னை யாரு இங்க வரச்சொன்னா…? யாரக் கேட்டு இங்க வந்தே?ன்னு சத்தம் போட்டார். சத்தம்னா அப்டியொரு பழி சத்தம்….உங்க பாட்டியானா முழிக்கிறா…அவாகிட்டே அழுது புரண்டுதான் என்னைக் கூட்டிண்டு போய் உங்கப்பா முன்னாடி நிப்பாட்டினா…ஏண்டா குழந்தே….உங்கப்பாவப் பாட்டி அப்டித்தான் கூப்பிடுவா…இப்டியா திரும்பிப் பார்க்காம இருப்பே..ஒரு பொம்மனாட்டி என்னதாண்டா பண்ணுவா…தனக்கு வாழ்வு இருக்குன்னு நினைப்பாளா, இல்லைன்னு அழுவாளா? நீ இல்லாம அவ படற துன்பம் என்னால சகிக்க முடிலப்பா…அதான் கொண்டாந்து விட்டுட்டேன்…இனிமே உன் பாடு அவ பாடு….
நாலுங்கெடக்க நடுவுல இப்டிக் கூட்டிக் கொண்டாந்து நிப்பாட்டினா நானும் என்னதான் செய்றது? நா என்ன செத்தா போயிட்டேன். இங்கதானே இருக்கேன்…
இங்கதான் இருக்கேங்கிறதே இங்க வந்தபின்னாடிதானே தெரியறது…மாசத்துக்கு ஒருதரமாவது ஊருக்கு எட்டிப் பார்க்க மாட்டியா? யார்ட்டச் சொல்லி எப்டித் தெரிஞ்சிக்கிறது? குடும்பம்னு ஒண்ணு இருக்குங்கிறதை நினைக்க மாட்டியா? இப்டியா குழந்தைகளை விட்டிட்டு கண்காணாம வந்து கிடக்கிறது? நாங்க என்ன நினைக்கிறது அப்புறம்?
படிக்கிற குழந்தைகளை இப்டி இழுத்திண்டு வந்து நின்னா என்ன அர்த்தம்…நாளைக்குப் பொழுது விடிஞ்சிதின்னா அதுகள் ஸ்கூலுக்குப் போக வேண்டாமா? இது நன்னாயிருக்கா?
ரெண்டு நாளைக்குப் போகாட்டா ஒண்ணும் குடி முழுகாது…நீ அங்க இருந்தாத்தான் எல்லாம் சரிப்படும்…இப்ப எங்களோட புறப்படு….போதும் நீ வியாபாரம் பார்த்ததெல்லாம்…
என்னது புறப்படறதா? நல்ல கதையா இருக்கே…இங்க கடன்காரால்லாம் கழுத்த நெரிச்சிண்டிருக்கா…அவாளையெல்லாம் விட்டிட்டு நா எப்டி வர்றது? என்னமாவது பண்ணி அத்தனையையும் செட்டில் பண்ணிட்டுதான் ஊர்ல காலடி வைப்பேன்….
அப்போ அதுவரை நாங்களும் இங்கதான் இருப்போம்….என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ…இப்போ என் நாட்டுப்பொண்ணுக்கு ஒரு பதிலைச் சொல்லு….அவ அழுகையையும் கதறலையும் என்னால கண்கொண்டு பார்க்க முடியலை….இல்லைன்னா சா தற்கொலை பண்ணின்டு சாக வேண்டிதான்…
ப்பா தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தார். தாயாரின் வார்த்தைகள் அவரை ஆட்டியெடுத்து விட்டன. துக்கத்தில் சிலையாய் அமர்ந்து கிடந்தார். வாசலிலானால் கடன்காரர்கள் வந்தமணியமாய் இருக்கிறார்கள். ஆளுக்கொரு லிஸ்டைக் கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து கிடக்கிறார்கள். கடனைத் தீர்த்தால்தான் இடத்தை விட்டு நகருவோம் என்கிறார்கள். ஒரு குந்துமணித் தங்கமில்லை அம்மாவிடமும். கழுத்தில் மஞ்சளை முடிந்து கட்டியிருக்கும் தாலி. பொழுதோ இருட்டி விட்டது. வந்தவர்கள் நகரவில்லை. மேற்கொண்டுதான் ஆட்கள் வருகிறார்கள். ஆளாளுக்குக் கையில் கிடைத்ததைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாலும் பத்தாது..தேறாது…
அன்று அந்தத் தேவரய்யா மட்டும் இல்லையானால் என்னவாகியிருக்கும்? கையெடுத்துக் கும்பிட்டுக் குலதெய்வமாய் வைத்த தெய்வம் அவர்.
அம்மணீ…நீ ஒண்ணும் அழாண்டாம்….கண்ணத் துடைச்சிக்கோ….எல்லாம் நா பார்த்துக்கிறேன்….ஏ புள்ளே….அவுகள்லாம் பசியாக் கிடக்காக பாரு….முதல்ல அவுக வவுத்த நிரப்புற வழியப்பாரு….போங்க..போங்க…வீட்டுக் குள்ளாற போங்க…எல்லாம் நல்லபடியா நடக்கும்….பசியாறுங்க முதல்ல…..
அன்று அது நடக்கவில்லையானால் குடும்பமேயல்லவா தற்கொலை செய்து கொண்டு மாய்ந்திருக்கும்…!
என்னாய்யா…எல்லாரும் ஓரெயடியா வந்து கழுத்தப் பிடிக்கிறீங்க…அவரென்ன தர மாட்டேன்னா சொன்னாரு….அவரத்தான் இத்தன்நாளாப் பார்க்கிறீங்கள்ல…உங்க முன்னாடிதான இருக்காரு…ஓடியா போயிட்டாரு…கொஞ்சங் கொஞ்சமாத் தர்றேன்னுதானே சொல்றாரு…ஒரு மனுஷன ஒரே சமயத்துல எல்லாரும் நெருக்கினீங்கன்னா அவன் என்னதான்யா பண்ணுவான்.….நா சொல்றேன்…யாரும் அவர்ட்ட இனிமே பேசப்படாது…என்னைத் தாண்டி யாரும் அவர்ட்ட நெருங்கப்படாது…தெரிஞ்சிதா…அவுங்கவுங்களுக்கு எவ்வளவு எவ்வளவுன்னு சொல்லுங்க…நா செட்டில் பண்றேன்……என் பொறுப்பு…..
தேவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டது அந்தக் கூட்டம். , சமாதானமாகி தங்கள் கணக்கைத் தீர்த்துக் கொண்டது. அந்த இரவு….மறக்க முடியாத இரவு அம்மாவுக்கு…..
ஒரு வில்வண்டியைப் பூட்டி, கையில் கொஞ்சம் பணத்தையும் செலவுக்குக் கொடுத்து, அம்மா, பாட்டி, அப்பா மூவரையும் இரவோடு இரவாக இரண்டு ஆட்களைப் பாதுகாப்புக்குச் சேர்த்து ஊருக்கு அனுப்பி வைத்தார் தேவர்…அந்த மகானை மறக்க இயலுமா…தினமும் முதல் கவளம் கையில் எடுக்கையில் அவரையல்லவா நினைத்து வணங்கியது அந்தக் குடும்பம்.
உங்கப்பா வச்சிருந்த அந்த சோத்துக் கடைல என்ன பண்ட பாத்திரம் இருந்ததுன்னு நினைக்கிறே? அது அத்தனையையும் வித்திருந்தாலும் அவர் பட்ட கடனை அடச்சிருக்க முடியுமா? நிச்சயம் முடியாதுதான்…திவாலாத்தானே நின்னார்…? ஆனா தெய்வமா வந்த அந்த மனுஷன் அன்னைக்கு எங்களப் பாதுகாத்தார். எந்தக் கடவுள் அனுப்பி வச்சாரோ தெரியாது. அன்னைக்கும் இன்னைக்கும் அவர்தான் நமக்குக் கடவுள்…இன்னைக்கு நீங்களெல்லாம் இப்டி நிக்கறேள்னா அதுக்கு அவர்தான் காரணமாக்கும்….
ஏம்மா, இப்போ அவரை உன்னால அடையாளம் காட்ட முடியுமா? அவரில்லாட்டாலும், வாரிசுகள் இருப்பால்லியா….அந்த அம்மணியோட வயித்துல ஜனிச்ச பிள்ளைகள் இருப்பா இல்லியா…அவாளைப் பார்த்தாலே புண்ணியமுண்டே….
கண்ணா நீ சொன்னதே போரும் எனக்கு….ஏதோ ஒரு ஜன்மத்துல அவுருக்கு நா பொண்ணாப் பொறந்திருக்கணும்…அதுனாலதான் அவரை என் அழுகை அன்னைக்கு அப்டி ஆட்டித்து….அந்தம்மா மடில படுத்துண்டு நா அழுத அழுகை என்னைப் பெத்த தாயார்ட்டக் கூட எனக்கு அந்த ஆறுதல் கிடைக்கலைன்னுதான் சொல்லுவேன்…..எல்லாத்துக்கும் உங்கப்பாவோட நேர்மையும், ஒழுக்கமும்தான் காரணம்…அய்யர்சாமி, அய்யர்சாமின்னு உசிரை விடுவார் அந்த மனுஷன்…பின்னாடி வீடுள்ள அவர், உங்கப்பா கடைலதான் கிடையாக் கிடப்பார்…ஒரு வார்த்தை சொல்ல மாட்டார் உங்கப்பா….அத்தனை மரியாதையான மனுஷன்…பெரிய ஆகிருதி ….காவல் தெய்வம் மாதிரி உட்கார்ந்திருப்பார்….அதுபோலவே நம்ம குடும்பத்துக்கும் தெய்வமா நின்னார்…..
எல்லாம் உன்னோட தாலி பாக்கியம் அம்மணீ…கவலப்படாமப் போன்னார்…அவர்தான் உங்கப்பாவை மீட்டுக் கொடுத்தார். சத்தியமான வாக்கு அது… அப்டிப்பட்டவாளயெல்லாம் இன்னைக்கும் நினைக்கலேன்னா நாமள்ளாம் என்ன மனுஷா…? எல்லாம் நீ கேட்கிறயேன்னு சொல்றேன்….எவ்வளவோ கடந்து வந்தாச்சுடா கண்ணா….இந்த நெஞ்சு தாங்கினது எம்புட்டோ துக்கம்…அத்தனையும் சொல்லி மாளாது….இந்த ஊரோட ஊரா உங்கப்பா வந்த பின்னாடிதான் நீ பொறந்தே…உங்கப்பாவை உள்ளுரோட கொண்டுவந்து நிறுத்தின பெருமை உன்னைத்தான் சேருமாக்கும்….நீ வயித்துல இருக்கிறதுலேர்ந்து உங்கப்பா எங்கயும் நகரலை…அப்டியே உள்ளுரோட இருக்க ஆரம்பிச்சிட்டார்….இங்கயே வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டார்…உன்னை நினைச்சிண்டேதான் சடையுடையார் கடைலர்ந்து ஓடி ஓடி வருவார்…வத்தலக்குண்டிலயே நாம நிலைச்சது உன்னாலதான்….
நான் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். வாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் எத்தனையெத்தனை சோதனைகளையும், கஷ்டங்களையும், வேதனைகளையும் கடந்து வந்த அனுபவசாலி அவள்…? அவளின் அனுபவ சாரத்தின் முன் நாமெல்லாம் எம்மாத்திரம்? வெறும் துரும்பாயிற்றே…? சிலிர்த்துப்போய் அமர்ந்திருக்கிறேன் நான்.
தொலைபேசி எடுக்க ஆளின்றித் தொடர்ந்து அலறுகிறது. என்னாச்சு? யாராச்சும் கேட்க வேண்டிதானே…? சொல்லிக் கொண்டே போய் எடுக்கிறேன். அம்மாவுக்கான அந்தச் செய்தியைத் தாங்கி வருகிறது அது.
நாந்தான் சொன்னனே அவனுக்கு மனசாகாதுன்னு…என்னவோ நீ கூட்டிண்டு போன்னு உங்கிட்ட சொல்லிட்டானேயொழிய அவனால நா இல்லாம இருக்க முடியாதாக்கும்….அவன் மனசு கேட்காது….எனக்குத் தெரியாதா எம்பிள்ளையோட அடி மனசு….என்னை நீயும் அவளும் நன்னாப் பார்த்துண்டேள்…எனக்கு ரொம்பத் திருப்தி. நிறைஞ்ச சந்தோஷம்…நீங்க நன்னா இருப்பேள்…நல்லதாப் போச்சு, பேசாம என்னை அங்க கொண்டு விட்ரு…அங்க இருந்தாத்தான் எனக்கும் சரி வரும். ஆயிரந்தான் ஆனாலும் மூத்தவன்ட்ட இருக்கிற திருப்தி வருமா? அங்க பிராணன் போறதைத்தான் எல்லாரும் விரும்புவா…அதுதான் உலக நியதி…..வண்டிக்கு ஏற்பாடு பண்ணிட்டான்லயோ? படுத்துண்டமேனிக்குப் போறதுதானே…நிம்மதியாப் போச்சு…நாம்பாட்டுக்குத் தூங்கிண்டே வர்றேன்…பொழுது விடிஞ்சா மெட்ராஸ் ஆச்சு….
அம்மாவின் முகத்தில் எத்தனை உற்சாகம். அதுவரை இருந்த சோர்வும், களைப்பும், வலியும், வேதனையும் எங்கே போயிற்று? விட்டால், தானே எழுந்து நடந்து விடுவாள் போலிருக்கிறதே…?
பொறு…பொறு…ராத்திரி எட்டுக்குத்தான் ஆம்புலன்ஸ் வருதாக்கும்…எல்லா ஃபெசிலிட்டீசோட அரேஞ்ஜ் பண்ணியிருக்கான்….ஏ.ஸியோட….கூடவே ஒரு நர்சும் வர்றாங்க…ராத்திரிப் பூராம் உன்னைப் பார்த்துக்க….எதுக்கும் பயப்பட வேண்டாம்….ஆனாலும் உனக்குக் கவனிப்பு ஜாஸ்திதான்…நாளைக்கு எங்க பாடெல்லாம் எப்டியோ..? நாங்கள்லாம் எப்டி சீரழியப் போறோமோ?
எதுக்கு அப்டிச் சொல்லிக்கணும்…எல்லாம் நன்னா இருப்பேள். என்னோட பேரன் பேத்திகளெல்லாம் உங்களைக் கூடவே இருந்து கண்ணும் கருத்துமாக் கவனிச்சிக்குவா…என் வாக்கு பலிக்கும்போதாவது என்னை நினைச்சிக்க மாட்டேளா..
எத்தனை பரந்த மனசு அம்மாவுக்கு. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே…..
அம்மாவின் முகத்தில்தான் என்னவொரு பெருமிதம்? தகவல் வந்ததும், என்னையே மறந்து விட்டாளே…?எப்படித் துள்ளுகிறாள்? எவ்வளவு மகிழ்ச்சி? என்னதான் ஆனாலும் மூத்தவன் இருக்க இளையவனுக்கு ஏது பெருமை? காலம் அப்படித்தானே கட்டமைக்கப்பட்டிருக்கிறது?
ஆனாலும் அம்மாவுடனான இந்த நாட்கள்…? அவை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை…! அம்மா இங்கே, என்னிடம் இருந்த அந்த சில நாட்களை என்னால் மறக்க முடியுமா? அவளின் ஆசிகள் இந்த வீடு பூராவும் பரவிக் கிடக்கிறது. மூலைக்கு மூலை நின்று ஒலிக்கிறது. அசரீரியாய் கனிந்த குரலோடு எங்களை வாழ்த்திக் கொண்டே இருக்கிறது. அடக்கவொண்ணாமல் கண்ணீர் துளிர்க்கிறது எனக்கு.

-----------------------------------------------------------------------
23 டிசம்பர் 2012

உஷாதீபனின் 'திரை விலகல்' - எழுத்தாளர் எம்.ஏ.சுசீலா அவர்களின் விமர்சனம்


 உஷாதீபனின் “திரைவிலகல்” சிறுகதைத் தொகுப்பு - எழுத்தாளர் திருமதி எம்.ஏ.சுசீலா அவர்களின் விமர்சனம்
சமகால சிறுகதைப்போக்கில் மேலை இலக்கியக் கோட்பாடுகளின் தாக்கத்தால் , பல புதிய மாற்றங்களும் , பல புதிய 'இஸ'ங்களின் பாதிப்பும் நேர்ந்திருந்தபோதும் - நவீனத்துவம் ,பின் நவீனத்துவம் ,மாய யதார்த்தவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும் - யதார்த்தவாதச் சிறுகதைகளுக்கான இடம் எப்போதும் போலவே மதிப்பிழக்காமல் இருந்துகொண்டுதான் இருக்கிறது . இதை மெய்ப்பிக்கும் வகையில் வெற்றிகரமான சிறுகதைகளின் தொகுப்பாக அண்மையில் வெளி வந்திருக்கிறது, எழுத்தாளர்திரு உஷாதீபன் அவர்களின் 'திரை விலகல்' என்னும் சிறுகதைத் தொகுப்பு.
திரு உஷாதீபன் , பல்லாண்டுக் காலமாகத் தமிழ்ச் சிறுகதைக் களத்தில் நின்று நிலை பெற்றிருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பு மேலாளராக மதுரையில் பணியாற்றும் இவர் , 'தீபம்' நா.பார்த்தசாரதியால் இலக்கியத் துறைக்கு ஈர்க்கப்பட்டவர்.கி.வெங்கடரமணி என்ற தன் இயற்பெயரை , மனைவியின் பெயரை முன் ஒட்டாக்கி , அத்துடன் தீபத்தையும் இணைத்து உஷா தீபன் எனப் புனைபெயராக்கிக் கொண்டவர்.உள்ளே வெளியே, பார்வைகள், நேசம் ,வாழ்க்கை ஒரு ஜீவ நதி , நினைவுத்தடங்கள்,,சில நெருடல்கள், தனித்திருப்பவனின் அறைஆகிய ஏழு சிறுகதைத் தொகுப்புக்களும் புயலுக்குப் பின்னே அமைதி , மழைக்கால மேகங்கள் முதலிய குறு நாவல் தொகுதிகளும் இவரது இலக்கியப் பங்களிப்புக்கள். இலக்கியச் சிந்தனை , திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் முதலிய பல அமைப்புக்களிடமிருந்து தமது படைப்புக்களுக்கான அங்கீகாரத்தையும் ,பரிசுகளையும் பெற்றிருப்பவர்.
clip_image001
18 சிறுகதைகளைஉள்ளடக்கியுள்ள இவரது புதிய தொகுப்பு 'திரை விலகல்' .பொதுவாக இவ்வாறான தொகுப்புக்களின் வழக்கமான தலைப்பிடும் போக்குக்கு முற்றிலும் மாறாகத் திரை விலகல் என்று ஒரு சிறுகதை இத் தொகுப்பில் எங்குமே இல்லை.நூல் முழுவதையும் வாசித்து முடித்தபிறகுதான் இப் பொதுத் தலைப்பு நூலின் எல்லாக் கதைகளுக்குமே பொருத்தமாக இருப்பதையும்,வாழ்வின் அற்பக் கணங்கள் தொடங்கி.......அபூர்வமான கணங்கள் வரை எல்லாத் தருணங்களிலுமே - ஏதோ ஒரு வகையில் மனிதர்கள் தங்களை மறைத்துக் கொண்டிருக்கும் மாயத் திரை விலகி வாழ்வியல் தரிசனங்களைப் பெறுவதை இத் தலைப்பு பூடகமாகச் சுட்டுகிறது என்பதையும் நம்மால் உள் வாங்கிக் கொள்ள முடிகிறது.
clip_image002
பாத்திரங்களைச் சிறப்பாக வார்க்கும் கலையில் இப் படைப்பாளி , கைதேர்ந்தவராக இருப்பதைப் பெரும்பான்மையான கதைகள் மிகச் சிறப்பாகப் புலப்படுத்துகின்றன. மிகப்பெரிய கிழியில் ஓவியம் தீட்டாமல் , நுணுக்கமான ஒரு சிறிய தந்தத் துணுக்கினுள் சிற்பம் வடிப்பதைப் போன்ற சிறுகதை ஊடகத்தில் சாதிப்பதற்கு அரியதான இவ்வியல்பு இவருக்கு எளிதாக வசப்பட்டிருப்பதை....
'திருட்டுமணி'யின் படிநிலை வளர்ச்சி கூறும் 'கல்லாமல் பாகம் படும்',
சுதந்திர ஜீவியாக வாழ்வை அமைத்துக்கொள்ள விரும்பும் வெங்கடாசலத்தின் மனநிலைப் படப் பிடிப்பான 'வெளி தேடும் பறவை',
தவணைக்கு அடிமையாகும் பலவீன மனிதரின் சித்திரமான 'திருவாளர் சாம்பமூர்த்தி',
வளையல்காரர் ஒருவரை அப்பட்டமாக மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் 'நிலைதிரும்பும் தேர்' ,
மனித உணர்ச்சிகளை மரக்கடித்துக் கொண்டு இயந்திரமாகிவிட்ட மனிதனைச் சித்திரிக்கும்'பூக்காமல் ஒரு மரம்'
ஆகிய படைப்புக்கள் அற்புதமாக முன் வைக்கின்றன.
மனிதம் - மனித நேயம் இவரது கதைகள் பலவற்றின் அடிநாதமாக உறைந்திருக்கிறது.
''உழைத்து , உருகி , செத்துச் சுண்ணாம்பாகி வீடு திரும்பிப் பிறகு உலை வைத்து அதற்குப்பின் உயிரை உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டியிரு''க்கும் அடி மட்டத் தொழிலாளிகளுக்காக இவரது பல படைப்புக்கள் உருகி ஓலமிடுகின்றன.
தெருவில் உப்பு விற்றுக் கொண்டு போகிறவனை வீட்டின் தேவை தெரியாமல் அழைத்து விடுகிறான் ஒரு கணவன். மனைவி அதை மறுதலித்து விடுவாளோ...,கடும் வெயிலில் உப்பு மூட்டைகளை சைக்கிளில் கட்டி எடுத்து வந்த அந்தத் தொழிலாளியின் பாடு வீணாய்ப் போய் விடுமோ என அவன் உள்ளம் படும் பாடு 'கடல் மல்லிகை' என்ற நல்ல சிறுகதையாக உருவெடுத்திருக்கிறது. அந்தக் கணவனை ஆச்சரியப்படுத்தும் வகையில் - அப்போதைக்கு உடனடித் தேவை இல்லாவிட்டாலும் கூட அவனிடம் உப்பு வாங்குவதன் வழி , ஆர்ப்பாட்டமின்றி ,மிக யதார்த்தமாகத் தன் இரக்க உணர்வை வெளிப்படுத்தி விடுகிறாள் அவன் மனைவி.
'நா' என்ற தலைப்பிலமையும் சிறுகதையிலும் கூடச் சலவைத் தொழிலாளியிடம் சீறிப் பாயும் மனிதமற்ற கணவனுக்கு மாற்றாகத் துணி கொண்டு வரும் சிறுவனை அன்போடு அரவணைப்பவளாக இருப்பது அவனது மனைவியே.செயற்கையான போலித்தனங்கள் அற்ற - இயல்பான அன்பும் ,நேயமும் பெண்களிடம் பொதிந்திருப்பதைப் போகிற போக்கில் இவரது கதைகள் படம் பிடித்துக் கொண்டு போவதைக் காண முடிகிறது.
முதுமை என்பது , நிராகரிப்புக்கும் ,நிர்த்தாட்சண்யமான விலக்கத்திற்கும் உரியதல்ல என்னும் அழுத்தமான இவரது சிந்தனை 'வெளி தேடும் பறவை', 'அப்பாவின் நினைவு தினம்' என இரு கதைகளில் அழுத்தமாகப் பதிவாகி இருக்கிறது. பாவண்ணன் எழுதிய 'முதுமையின் கோரிக்கை' என்ற கட்டுரையையும், நீல பத்மநாபனின் 'இலை உதிர் கால'த்தையும் இப் படைப்புக்கள் ஒரு கணம் மனக் கண்ணில் கொண்டுவந்து நிறுத்தி விடுகின்றன.
சிறுகதைக்கே சிறப்பான உத்தியாகச் சொல்லப்படும் 'இறுதிக் கட்டத் திருப்பம்' இவரது சில கதைகளில் - துருத்திக் கொண்டு நிற்காமல் , கதையின் போக்கிற்கேற்றபடி, அதன் அழகியல் குலையாமல் வெளிப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. 'சரஸ்வதியின் குழந்தைகள்' அதற்குச் சரியான ஒரு உதாரணம்.
நூலகத்திலும் , புத்தகக்கடையிலும் மதிக்கப்படுபவனாக இருக்கும் ஒருவன் புத்தகத் திருடனாக இருக்கக் கூடும் என்ற முடிச்சு சற்றும் எதிர் பாராதது. ஆனாலும் அவன் படிக்கும் புத்தகமே அவனுள் மன மாற்றத்தைச் சாதித்துத் திருடிய புத்தகத்தத் திருப்பி வைக்குமாறு அவனைத் தூண்டி விடுவது கதைப் போக்கோடு ஒத்த திருப்பமாகவே அமைந்திருக்கிறது.
'ஆகி வந்த வீடு' கதையிலும் இதே வகையான உத்தியைக் காண முடிகிறது.
நவீன உலகம் , கணத்துக்குக் கணம் பல மாற்றங்களுக்கு உள்ளாகிக்கொண்டே இருப்பது. அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாதவன் தேங்கிப் போய் விடுகிறான். ஊடகங்களின் பெருக்கம் அரசியல் மேடைப் பேச்சாளனை, அவன் தொழிலை..புகழைப் பாதிக்கிறது( 'தொண்டன்').
உலகமயமாதலால் பெருகும் பன்னாட்டு வணிகம் - அது சார்ந்த குளிரூட்டப்பட்ட கவர்ச்சியான அங்காடிகள், நடைபாதைத் தள்ளு வண்டியில் பழம் விற்கும் சராசரிச் சில்லறை வியாபாரியின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகின்றன.('மாற்றம்').இவை குறித்த சமூக விமரிசனங்களாகவும் இவரது கதைகள் உருப் பெற்றிருக்கின்றன.
உள்ளடக்கச் சிறப்பும், வடிவச் செம்மையும் வாய்க்கப் பெற்றுள்ள இந்தச் சிறுகதைகளுக்குப் படைப்பாளியின் மொழி ஆளுமை மேலும் வலுவும்,பொலிவும் சேர்க்கிறது. பெரும்பாலான கதைகள் பாத்திர நினைவோட்டமாக - எண்ணங்களின் அடுத்தடுத்த அடுக்குகளாக அமைந்திருப்பதை இவரது தனித்தன்மையாகக் குறிப்பிட முடிகிறது.
'யுகமாயினி', செம்மலர்', 'வார்த்தை'. 'உயிரெழுத்து','வடக்குவாசல்',உயிரோசை,திண்ணை(இணைய இதழ்கள்)ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ள இத் தொகுப்பை முழுமையாகப் படிப்பது நிறைவு தரும் ஒரு அனுபவம்.
''வீட்டுக்கு வீடு...அறைக்கு அறை எவ்வளவு திரைகள்?கணவன் ,மனைவி ,பிள்ளை என்று ஒவ்வொருவருக்கிடையிலும் எத்தனை திரைகள்?வாழ்க்கையே திரை மூடிய பூடகமாக அல்லவா இருக்கிறது?விலக்க முடியாத திரைகள் ! அவிழ்க்க முடியாத திரைகள் !''என்று தனது சிறுகதை ஒன்றில் உஷாதீபனே குறிப்பிட்டிருப்பதைப்போல,
அந்தத் திரைகளைச் சற்றே விலக்கி உண்மைகளைக் காணவும் காட்டவும் முயல்வதே அவரது நோக்கம் ; அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
'திரை விலகல்'- சிறுகதைத் தொகுப்பு,
உஷா தீபன்,
வெளியீடு; உதயகண்ணன்,10, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர்,சென்னை600011,
டிச.'08 - முதல் பதிப்பு,
பக்;168,
விலை; ரூ.60
bookudaya@rediffmail.com

06 நவம்பர் 2012

எஸ்.ரா.வின் "மழை மான்" (சுகமான வாசிப்பனுபவம்)


 

உஷாதீபன்

(உயிரோசை இணைய வார இதழ் – 05.11.2012 வெளியீடு)

clip_image001[4]

படைப்பாளி நேர்கோட்டில் சிந்தித்தால் படைப்புக்கள் வராது. பரிமளிக்காது.மாறுபட்டு சிந்திக்க வேண்டும் என்பது கருத்தாக இருக்கிறது.

மாறுபட்டு சிந்திக்கிறேன் என்று வக்கிரமாகச் சிந்தித்து படைப்புகளைக் கொடுப்பதும், படிப்பவர்களின் மனங்களைக் கெடுப்பதும், எதற்காக இதைப் படித்துத் தொலைத்தோம் என்று எண்ண வைப்பதும் நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புக்கள் வரிசையில் சிறுகதைகளின் பங்காக நிறைய இருந்து கொண்டிருக்கிறது.

மாறுபட்டுச் சிந்திக்க வேண்டும் என்றால் வக்கிரமாகத்தான் சிந்திக்க வேண்டுமா? நடைமுறை யதார்த்தத்திலிருந்து சற்றே விலகி வித்தியாசமாகச் சிந்தித்து, அந்த யதார்த்தத்தோடேயே கலந்து கலையழகு மிளிர, சுவைபட ஒரு படைப்பைக் கொடுக்க முடியாதா என்று யோசித்தோமானால் அப்படிக் கொடுக்கும் ஒரு சில படைப்பாளிகள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் நம்மிடையே. தொடர்ந்து அவர்கள் தங்கள் படைப்பை அவ்வாறுதான் அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களின் படைப்புக்களைப் படித்தால் மனம் நோகுவதில்லை. கசடு விழுவதில்லை. அழுக்கு ஏறுவதில்லை. மாறாக,இதமாக வருடிக்கொடுத்தது போன்ற உணர்வுதான் நமக்கு ஏற்படுகிறது.வாழ்க்கையின் மெல்லிய சோகங்களுக்கு அருமருந்தாக அமைகின்றது.

இந்த மக்களின் வாழ்க்கையோடு கலந்ததுதான் இலக்கியம். மக்களின் வாழ்க்கைதான் இலக்கியம். அதிலிருக்கும் அவலங்களை, அதை மீறி எழும் எழுச்சிகளை மட்டும் சொன்னால்தான் இலக்கியமா? அந்த மக்களின்,மனிதர்களின் மென்மையான உணர்வுகளை லேசாகத் தட்டிப் பார்ப்பதும்,அந்த உணர்வுகளின் எழுச்சியில் அவன் கொள்ளும் ஆறுதல்களைக் கலையம்சம் மிளிர வடித்தெடுப்பதும் கூட சிறந்த இலக்கிய முயற்சிகளாகப் பல சமயங்களில் அமைந்துதான் விடுகின்றன.

திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உயிர்மை அக்டோபர் 2012 இதழில் வெளிவந்த மழை மான் என்ற சிறுகதைதான் இங்கே பெருமைக்குரியதாகிறது.

தேவப்பிரகாஷ் என்ற அரசு ஊழியர் அப்படிப்பட்ட ஒரு மென்மையான மனிதராக இந்தக் கதை முழுவதும் இதமாக வலம் வருகிறார். பெயர் வைப்பது கூடத் தன்னின் பல கதைகளிலும், பிற படைப்பாளிகளின் படைப்புக்களிலும் ஏற்கனவே சொல்லப்பட்டதாக, வந்ததாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனம் இந்தப் படைப்பாளிக்கு. ஒரு படைப்பாளியின் வெற்றியே இம்மாதிரியான முயற்சியில்தான் இருக்கிறது. தேர்ந்த இயக்குநர்கள் தன்னின் முந்தைய படத்தில் இருந்த லொக்கேஷன்களை முற்றிலுமாகத் தவிர்த்து விடுவார்கள். சொல்லப் போகும் திரைக்கதைக்கான இடங்கள் பொருத்தமாக அமையும் வரை அவர்களின் மனம் ஓயாது. ஒரு புதிய படத்தைக் கொடுப்பதற்கான அடையாளங்களில் அது முக்கிய இடம் வகிக்கிறது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்தவர்களாயிருப்பார்கள். அதுபோல்தான் இந்தப் படைப்பாளியின் படைப்புகளும். ஏற்கனவே சொல்லப்பட்ட எந்தவொரு விஷயமும் மறந்தும் கூட, அவர்கள் அறியாமலே கூட, மற்ற படைப்புகளில் தலைகாட்டி விடுவதில்லை. அதனால்தான் படிக்கும் வாசகன் புத்துணர்ச்சியடைகிறான். சே! எங்கிருந்தப்பா கிடைக்குது இந்த மனுஷனுக்கு இப்படியாப்பட்ட விஷயங்களெல்லாம் என்று பிரமிக்கிறான். வளர்ந்து கொண்டிருக்கும் படைப்பாளி பொறாமையடைகிறான். அவரைப் போல் நாமும் எழுத வேண்டும் என்று உத்வேகமடைகிறான்.

இவர் ஒரு அரசு ஊழியர் இல்லை. வேறு எந்தப் பணிகளிலும் இல்லை.எழுத்தையே தவமாக, வாழ்க்கையாகக் கொண்டு வெற்றி கண்டவர்.எந்தவொரு பணியிலுமே அர்ப்பணிப்பு ஒன்றுதான் ஒருவனை உச்சத்திற்குக் கொண்டு போகும் என்பது சர்வ நிச்சயம். வாழ்க்கையையே எழுத்துக்காக அற்பணித்து, உச்சியில் சென்று ஜம்மென்று அமர்ந்து கொண்டவர் இவர்.இப்பொழுது அங்கிருந்துதான் எல்லோரையும் பார்க்கிறார். மனம்விட்டு இப்படிச் சொல்லித்தான் திருப்தி கொள்ள வேண்டும். பொறாமை கொள்ளாத ஒருவன் இப்படித்தான் நினைக்க முடியும். நினைக்க வேண்டும். அதுதானே முறை. அதுதானே அழகு. அதுதானே நிறைவு. வெற்றி கண்டவன் எங்கிருக்க வேண்டுமோ, அதுதானே நிகழும். அதை யாரும் தடுப்பதற்கில்லை.

எல்லா மக்களின் வாழ்க்கை நிலைகளும் இவருக்கு அத்துபடியாகியிருக்கிறது.பார்க்கும் பார்வையிலேயே புரிந்து கொள்ள முடிகிறது. எழுத்துக்கென்றே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த அந்த ஒப்படைப்பு இவருக்கு அதை சாத்தியமாக்கியிருக்கிறது. அரசு ஊழியரைப்பற்றி எல்லாரும்தான் எழுதியிருக்கிறார்கள். எத்தனையோ விஷயங்களைச் சொல்லித்தான் இருக்கிறார்கள். அரசு அலுவலகங்களையும், அதன் சூழ்நிலைகளையும் வர்ணித்திருக்கிறார்கள். அதிலிருந்தெல்லாம் சொல்லப்படாதது இந்த மனுஷனுக்கு எங்கிருந்து கிடைத்தது? நமக்குத் தோன்றும் விஷயங்களையே,யாருக்கும் தோன்றாதது போல் சொல்கிறாரே இவர்? அதனதன் இருப்பை அப்படி அப்படியே சொல்வதுதான் படைப்பா? இவர் சொல்வது போலல்லவா சொல்ல வேண்டும். ஒரு நல்ல படைப்பாளிக்கு அப்படியல்லவா சொல்லத் தெரியவேண்டும். சொல்லப்படும் விஷயங்கள் எல்லோர் கண்ணிலும் இதுநாள்வரை பட்டதுதான் என்றாலும், தொடர்ந்து பட்டுக் கொண்டிருப்பவைதான் என்றாலும், அவைகளைச் சொல்லவேண்டும் என்று ஏன் தோன்றவில்லை? சொன்னால் எப்படிச் சொல்வது என்று ஏன் தோன்றவில்லை? இப்படிச் சொன்னால்தான் சுவையாக, வித்தியாசமாக இருக்கும் என்று இப்போது இவர் முன்வைக்கிறாரே அது ஏன் நமக்குத் தோன்றவில்லை? அதுதானய்யா ரசனை. ஆழ்ந்த ரசனை. ஒரு சாதாரணன் பார்க்கும் பார்வைக்கும், ஒரு முதிர்ந்த படைப்பாளியின் பார்வைக்கும் காணும் மாறுபாடு என்பது அதுதானே…!

மொத்தம் முப்பத்தியெட்டுப் படிகள் இருக்கின்றன அந்த அலுவலகத்தில்.தேவபிரகாஷ் பலமுறை அப்படிகளை எண்ணியிருக்கிறார். அலுவலகத்திற்கு வந்த புதிதில் அப்படி எண்ணுவது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. ஆனால் இப்போது படிகள் இருப்பதே கண்ணிற்குத் தெரிவதில்லை. கால்கள் தானாகவே ஏறிப் போய் விடுகின்றன. ஒரு வேளை தன்னைப்போல் புதிதாக வேலைக்குச் சேர்ந்த எவராவது படிகளை எண்ணக்கூடும்.

மோகன்குமார் உட்கார்ந்திருக்கும் இடத்தின் அருகில் உள்ள ஜன்னலை ஒட்டி ஒரு வாதாமரமிருக்கிறது. ஆனால் அதன் இலைகள் அசைவதேயில்லை. தூசி படிந்து வெளிறிப்போன நிலையில் ஒரு நோயாளியைப் போல் அந்த மரம் நின்று கொண்டிருக்கிறது.

அரசு அலுவலகத்தின் ஊடாக ஒரு மரமாக இருப்பது துரதிருஷ்டவசமானது.யாரும் தண்ணீர் ஊற்ற மாட்டார்கள். மரத்தின்மீது பாக்கு போட்டு கோழையுடன் வழியும் எச்சிலைத் துப்பியிருப்பார்கள். மூன்றாவது மாடியில் வேலை செய்பவர்கள் சாப்பிட்டு மிச்சமாகித் தூக்கி எறியப்பட்ட உணவுகள் யாவும் மரத்தின் மேலாகத்தான் விழுந்திருக்கின்றன.

மனதில் பொறாமையின்றி, ஆழ்ந்து, அமிழ்ந்து ரசிக்கப் பழகிக்கொள்ளுங்கள்.எழுத்தின் அழகு நம்மை வசீகரிக்கும். ஓடிப்போய் அந்தப் படைப்பாளியை ஆவியைச் சேர்த்துக் கட்டிக் கொள்ளச் சொல்லும். அரசு அலுவலகமும்,மாடிக் கட்டடங்களும் நாம் கண்டதுதான். அந்தப் படிகளில் ஏறுவதும்,இறங்குவதும் என்ன முக்கிய நிகழ்வா என்று தோன்றலாம். தினம் தினம் ஏறி இறங்கியவர்களைக் கேளுங்கள். அவர்களில் ஒருவருக்காவது இவர் சொல்லும் அனுபவங்கள் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். வாழ்க்கையில் எல்லா மனிதர்களுமா ஜடமாக இருக்கிறார்கள்? ரசனையும், உணர்ச்சியும்,கொந்தளிப்பும், மகிழ்ச்சியும், வருத்தமும் இன்னும் பலவுமாக இருப்பவர்கள்தானே இந்த வாழ்க்கையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.அந்தப் படிகளில் ஏறி இறங்குவது ஆரம்பத்தில் கிளர்ச்சியூட்டுவதாக இருக்கும் ஒருவருக்கு, பின்னால் அது ஒன்றுமில்லாததாகிப் போகிறது. படிகள் இருப்பதே கண்ணுக்குத் தெரியாமல் போன அவருக்கு, கால்கள் இப்போது தானாகவே ஏறிப்போய் விடுகின்றன. சொல்லும் முறையில் ஒருவனின் இயந்திரத்தனமான வழக்கமான வருகையும், பழக்கமும் மனதில் நின்று விடுகின்றது அங்கே. அரசு அலுவலக வளாகங்களில் நிற்கும் மரம் தூசி படிந்து,வெளிறிப்போய் ஒரு நோயாளியைப் போல் நின்று கொண்டிருந்தது என்பதைச் சொல்லும்போது நாம் காலம் காலமாய்ப் பார்த்த காட்சிகள் நம் கண் முன்னே விரிகிறது.அதிலும் அரசு அலுவலகத்தின் ஊடாக ஒரு மரமாக நிற்பது துரதிருஷ்டமானது எனும்பொழுது அந்த மரமே உயிர்பெற்று நம்மிடம் வாயிழந்து வருந்துவது போலிருக்கிறது. படைப்புக் கண் கொண்டு பார்க்கும் ஒரு படைப்பாளிக்கு அதை எப்படிச் சொல்லத் தோன்றுகிறது பார்த்தீர்களா?அந்த மரமும், அதன் மீது துப்பப்பட்டிருக்கும் பாக்குப் போட்டு மென்ற கோழையும், எச்சிலும், உணவுத் துகள்களும், ஏதோவொரு வகையில் நம் மனதைச் சங்கடப்படுத்துகிறதுதானே? அந்த வளாகத்தின் கவனிப்பாரற்றுப் போன இயற்கையின் சாட்சி, அதன் அவலக் காட்சி, சே…! என்ன மனிதர்கள் என்ற வருத்தத்தை மனதில் ஏற்படுத்துகிறதுதானே? ஏற்படுத்த வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு ஆழ்ந்த ரசனை இல்லை என்று பொருள். கதை நிகழும் இடத்தின் சூழலை விவரிக்க முயலும்போது, தென்படும் யதார்த்தங்களை, இதற்கு முன் தன்னாலும், மற்றவர்களாலும் சொல்லப்படாத வகையில் எப்படிப் புதிதாக, அதேசமயம் யதார்த்தம் குன்றாமல் சொல்வது என்ற அந்த இடம்தான் படைப்பாளி நிற்கும் இடம்.

தேவப்பிரகாஷிற்கு உடனே ஒரு மானைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.

ஒரு சிறுகதையை எந்த இடத்தில் ஆரம்பிப்பது? எத்தனை முக்கியம் அது?ஒரு படைப்பாளி வெற்றி பெறும் இடம் அங்கிருந்துதானே? அலுவலகத்தில் பணி செய்யும் ஒருவன் திடீரென விபரீதமாக எதையாவது நினைத்துக் கொண்டால்? நகரில் எப்படி திடீரென்று மானைப் பார்ப்பது? மானைப் பார்க்க வேண்டும் என்று அர்த்தமில்லாமல் ஏன் நினைத்துக் கொள்கிறார்?இவருக்கென்ன கிறுக்கா? அதைப் பார்த்து என்ன செய்யவேண்டும் இப்போது?அன்றாட சாதாரண சராசரி வாழ்க்கையில் இது ஏன் இவருக்குத் தோன்றியது?-என்னென்னவோ கேள்விகள் விழுகின்றன நம் மனதில். அதுதானே நோக்கம்.அப்படி என்னதான் சொல்லப் போகிறார், அதையும்தான் பார்ப்போமே என்றுகூடப் பயணிக்கத் தயாராகி விடுகிறோம். காட்டுக்குத்தான் புறப்பட்டுச் செல்ல வேண்டும். அல்லது இருக்கும் இடம் மாநகரமாய் இருந்தால் மிருகக்காட்சி சாலையை நோக்கிச் செல்ல வேண்டும். தேவப்பிரகாஷ் என்ன செய்கிறார் பார்ப்போமே என்று கண்களை ஓடவிட்டு வரிகளை நகர்த்துகிறோம்.

உடனே கிளம்பிப் போய் மானைக் காட்டிவிட்டால் அப்புறம் கதை என்ன ஆவது?. அதிலென்ன சுவை? உள்ளே எப்படியெல்லாம் பயணம் நடைபெறுகிறது என்பதுதானே ஸ்வாரஸ்யம். ஒரு கதை சொல்லி தன் படைப்பை முழுமையான உள்ளடக்கமாக, சொல்ல வந்த விஷயத்தின் கட்டுக்கோப்பு குலையாத வகையில், படிக்கும் வாசகன் சிரமமின்றி உள் வாங்கும் விதமாய் அடுத்தடுத்ததான சம்பவக் கோர்வைகளை நெருக்கமாகக் கோர்த்துக்கொண்டே போனால்தானே கடைசிவரை கூடவே வருவான்.இடையில் எதுவும் இளகிப் போனாலோ, நீர்த்துப் போனாலோ,ம்ம்ம்….சரி…ஒண்ணுமில்ல….என்று விட்டுவிட்டு அடுத்ததற்குத் தாவி விடும் அபாயம் உள்ளதுதானே…! இங்கே அப்படியான பாதிப்பு எதுவும் நிகழாமல் உங்களைக் கை கோர்த்து உடன் அழைத்துச் செல்லும் மாயம்தான் நிகழ்கிறது.

முதலில் அவரைச் சொல்ல வேண்டும். பின் அவரிருக்கும் இடத்தை விவரிக்க வேண்டும். பிறகு மற்றவர்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். அதற்குப் பிறகு இந்த சம்பந்தங்களோடு கதையையும் விடாமல் கூட்டிச் சென்றாக வேண்டும். படைப்பாளியின் பொறுப்பு எத்தகையது?

நீங்கள் அரசு அலுவலகங்களை அன்றாடம் கண்ணுற்றிருக்கிறீர்களா? அதன் யதார்த்த நிலையை ஜீரணித்திருக்கிறீர்களா? ஜீரணிக்கவே முடியாத நிலையில் இருந்தால் நீங்கள் ஒரு அரசு அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அல்லது இருந்தவர் என்று பொருள். அதுதான் இது –

அந்த அலுவலகம் பரபரப்பாகச் செயல்பட்டு அவர் அறிந்ததேயில்லை. அது போலவே அலுவலகத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் ஒருநாளும் முழுமையாக வந்ததேயில்லை. தினமும் நாலைந்து காலி இருக்கைகள் கண்ணில் படுகின்றன. அதிலும் சுந்தரவதனி என்ற பெண் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விடுப்பில் இருக்கிறாள். அவளது இருக்கை அப்படியே இருக்கிறது. அந்த மேஜை மீது கோப்புகள் தூசி படிந்து கிடக்கின்றன.சுந்தரவதனிக்கு என்ன செய்கிறது, ஏன் ஒருவரும் அவள் வீடு தேடிப்போய் பார்த்து வந்ததேயில்லை.

"அலுவலகத்தில் சுந்தரவதனி எப்போதுமே தலைவலி தைலத்தை தேய்த்துக் கொண்டு கடுமையான முகத்தோடுதானிருப்பாள்."

உடம்பு சரியில்லாத அவளை ஆப்பிள் பழங்களை வாங்கிக் கொண்டு போய்ப் பார்க்கிறார் தேவபிரகாஷ். அவரை எதிர்பார்க்காத அவள் ஏதாச்சும் கடன் கிடன் வேணுமா? என்று கேட்கிறாள். வேவு பார்க்க வந்திருக்கிறாரோ என்று சந்தேகப்பட்டு இனிமே வர்றதுன்னா முன்னதாக போன் பண்ணிட்டு வாங்க என்று முகத்திலடித்தாற்போல் சொல்லி, கொண்டு வந்த ஆப்பிளை எடுத்துப் போகச் சொல்கிறாள். மனம் சங்கடப்பட்டு வெளியேறும் இவர், ஆத்திரத்தில் வீட்டிற்கு வெளியே இருக்கும் குப்பைத் தொட்டியில் அந்தப் பழங்களை வீசுகிறார்.

மனித உறவுகள் அர்த்தமற்றுப் போய்விட்டதாக வருத்தமுறுகிறார். மேலே சொல்லப்பட்டதுபோல் இப்படியுமா மனிதர்கள் இருப்பார்கள் என்று தோன்றக் கூடும். அரசு ஊழியர்களில் (அவர்களும் மனிதர்கள்தானே) பலரை நீங்கள் இப்படிப் பார்க்கலாம். அந்தப் பலரில் ஒருவரை அடையாளம் கண்டு எழுதியிருப்பதுதான் இங்கே அதிசயிக்கத்தக்கது.

அலுவலகத்தில் உள்ள யாருமே கண்டுகொள்ளவில்லையே என்று நினைத்து அதற்காகப் பிரயத்தனத்துடன் அலுவலரிடம் பொய் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றவருக்குக் கிடைக்கும் வரவேற்பு விரக்தி கொள்ள வைக்கும்தானே?

காரணமில்லாமல் ஒருவர் மற்றவரைப் பார்ப்பது கூட ஏன் இயலாமல் போயிற்று? பணம் தவிர வேறு எதுவுமே உலகில் முக்கியமானதில்லையா?ஏன் இப்படி மனக்குரலின் பேச்சைக் கேட்டு நாம் அவமானப்பட்டுப் போகிறோம்? இது என்ன நோய்? ஏன் நம் இயல்பு வாழ்க்கை இப்படி அர்த்தமற்றுப் போய்க் கொண்டிருக்கிறது?

என்று நினைத்து வேதனை கொள்கிறார். நியாயம்தானே? ஒரு மனிதனின் உடம்போடு ஒட்டிய சுயமும், வயது ஆக ஆக அவனுக்கு ஏற்படும் மன மாற்றங்களும், விலகலான எண்ணங்களும் தேவப்பிரகாஷின் பாத்திரமாக இக்கதையில் சமைக்கப்பட்டிருப்பது படிப்பவர் மனங்களில் பரிதாபத்தையும்,கருணையையும் ஏற்படுத்துகின்றன.

அலுவலகத்தில் அவருக்கு விருப்பமானவர்கள் என்றோ, நண்பர்கள் என்றோ யாருமேயில்லை. மதியச் சாப்பாட்டைக் கூட தனியாகத் தனது மேஜையில் வைத்தே சாப்பிட்டு முடித்து விடுவார். அலுவலகத்தில் மட்டுமில்லை. ஒரு கோடிப் பேருக்கும் மேலாக வசிக்கும் இந்த மாநகரில் கூட அவருக்கு நண்பர்கள் என்று எவருமில்லை. முகம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று இரண்டே பிரிவுதான். ஐம்பதாவது வயதில் நுழையும்வரை அவருக்கு ஒரு நாளும் இப்படியான உணர்வுகள் ஏற்பட்டதேயில்லை. இப்போதுதான் ஏதேதோ கொந்தளிப்புகள் மனதில் தோன்றுகின்றன. திடீரென ஒரு எண்ணம் அவரது மனதில் தோன்றத் துவங்கி முழுவதும் ஆக்ரமித்து விடுகிறது. வேறு எந்த வேலை செய்தாலும் மனது அடங்குவதில்லை. ஒரு குரல், அழுத்தமான ஒரு குரல் அந்த எண்ணத்தை நிறைவேற்றும்படி அவரை வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறது. அந்தக் குரலைக் கண்டு கொள்ளாமல் விடும்போது மனது வேறு எந்த வேலையிலும் கவனம் கொள்ள மறுப்பதோடு, உடலிலும் மெல்லிய படபடப்பு உருவாகிவிடுகிறது. இன்றைக்கும் அப்படியான ஒரு குழப்பமான எண்ணமாகவே மானைக் காண வேண்டும் என்று மனதில் உதயமானது.

திடீரென்று மானைப் பார்க்க வேண்டும் என்கிற விசித்திர எண்ணத்திற்கான உறுதி இங்கே ஸ்தாபிக்கப்படுகிறது.

உலகில் வேறு எந்த மனிதனும் இப்படித் தனது அலுவலகத்தைப் பாதியில் போட்டுவிட்டு மானைப் பார்க்கப் போக மாட்டான். தனக்கு ஏதோ நிகழ்ந்து விட்டது. தன்னை ஏதோ பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. என்றெல்லாம் நினைத்தவாறே கதையைப் பாங்காக நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர். கதை முழுக்கப் பொருத்தமான சம்பாஷனைகளோடும், மன வியாகூலங்களோடும் தேவப்பிரகாஷ் பாத்திரம் வடிக்கப்பட்டிருக்கும் விதம் வாசகனின் மனதைத் தொடர்ந்து நெருடிக் கொண்டேயிருக்கிறது. படித்து முடித்தபின்னரும் ஒரு சிறுகதைக்குள் இத்தனை விஷயங்களை உள்ளடக்க முடியுமா என்று எண்ணி வியந்து தொடர்ச்சியாக அவைகளை ஞாபகத்திற்குக் கொண்டு வர முடியாமல் திரும்பத் திரும்பப் படிக்கத் தோன்றுகிறது.

தேவப்பிரகாஷ் கடைசியில் மானைப் பார்த்தாரா? அதைப் பார்ப்பது என்று கிளம்பி என்னென்ன வகையிலெல்லாம் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டார்.அவரின் வருத்தமான மனநிலையின் அடியாழத்தில் மழைமான் ஒன்று பெரும் சிறகுகளுடன் பசுமையான வனத்தில் பறந்து கொண்டிருக்கும் காட்சி அவருக்குப் பெருத்த ஆறுதல் அளிப்பதுபோல் நீங்களும் மனதார உணர வேண்டுமானால் உயிர்மை மாத இதழின் அக்டோபர் 2012 இதழை வாங்கி நீங்கள் அவசியம் படித்துத்தான் ஆக வேண்டும்.

-------------------------------------------------------

11 செப்டம்பர் 2012

"சொல்லாதே யாரும் கேட்டால்"–குறுநாவல் பகுதி - 1

--------------------------------------------------------------------------------------------------------------
(உயிரோசை இணைய வார இதழ் – 03.09.2012 வெளியீடு)

-------------------------------------------------------------------------------------------------------------

படுக்கையில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் ராகவன்.அருகே மெயின் உறாலில் அப்பாவும் அம்மாவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தான் உறக்கமின்றி இருக்கிறோம் என்பது எவ்வகையிலும் அவர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது. குறிப்பாக அம்மாவுக்கு. அவள் தனது ஒவ்வொரு சிறு அசைவையும் கூட எடை போட்டு விடுவாள். தன் முகத்தை வைத்தே என்ன பிரச்னைஎன்று கேட்டு விடுவாள்.வந்து இரண்டு நாட்கள் ஆன இந்தப் பொழுதில் அவள் கேட்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்.அப்படியானால் தன் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லையா? அல்லது ரெண்டு நாள் போகட்டும். பிறகு சாவகாசமாய் கேட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறாளா? அல்லது அவன் பாடு, அவன் பெண்டாட்டி பாடு, நமக்கெதற்கு என்று விட்டு விட்டாளா? இருக்கலாம். அவளுக்கும் வயசாயிற்று. எத்தனையோ பிரச்சினைகளைச் சுமந்து, அனுபவித்து, கடந்து வந்தாயிற்று.பெண்டுகளுக்கும் பையன்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து அனுப்பி இப்பொழுதுதான் ஓய்ந்திருக்கிறாள். இன்னும் எதை அவள் இழுத்துப் போட்டுக் கொள்ள? மனமும் உடலும் விச்ராந்தியாய் இருக்க வேண்டிய நேரம். ஆறு, ஏழு என்று பெற்றவர்கள் பாடே இப்படித்தான். எல்லார்க்கும் எல்லாக் கடமைகளையும் செய்து முடிக்கையில் வயது அறுபதைத் தாண்டி விடுகிறது.எழுபதானவர்கள் கூட இருக்கத்தானே செய்கிறார்கள். பிறகு வாழ்க்கை ஆயாசமாய்ப் போய் விடுகிறது.
அப்பாவைப் பொறுத்தவரை கவலைப்படத் தேவையில்லை.அவருக்கு அம்மா அமைந்தது பெரிய பொக்கிஷம். அவள் சொல்வதைச் சரி சரி என்று கேட்டுக் கொண்டு அவர்பாட்டுக்குச் செய்து முடித்து விட்டுப் போய்க் கொண்டேயிருப்பார். அவள் எது செய்தாலும் அவருக்குச் சம்மதமே. திருமணம் ஆவதற்கு முன்பு மாதா மாதம் அப்பா தன் சம்பளப் பணத்தைத் தன் அம்மாவிடம் கொடுத்தார். திருமணத்திற்குப் பிறகு மனைவியிடம் கொடுக்கிறார்.அவ்வளவே. அதுவே ஒரு புருஷனுக்குப் பெரிய லட்சணமாயிற்றே!எத்தனை பேர்அப்படிச் செய்கிறார்கள்? இப்படி இருப்பதே போதும் என்று அம்மாவும் விட்டு விட்டாள் போலும்! அல்லது இப்படியான எதிர்பார்ப்பிலேயே அம்மாவும் வந்தாளோ என்னவோ? அம்மாவின்ஆளுமைக்கு அப்பா கட்டுப் பட்டுத்தான் போனார். எல்லாமும் கச்சிதமாய் உள்ளன. பின் ஏன் பிணக்கிக் கொள்ள வேண்டும்.அப்பா மறுப்புச் சொல்லியோ மாற்றம் சொல்லியோ இவன் பார்த்ததில்லை. எல்லாமும் அவன் பார்த்துப்பான் என்று மேலே கையைக் காண்பிப்பது போல அப்பாவுக்கு எல்லாமும் அவ பார்த்துப்பா. ஆதர்ச தம்பதிகள் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த மட்டுக்கும் இப்படி ஒருத்தி கிடைத்தாளே என்று நிம்மதியாய்க் கழித்திருக்கிறார் அப்பா. இன்றைய வயதில் ஏதேனும் பெரிய பிரச்சினைகள் என்று வந்தால் கூட அப்பாவுக்குச் சமாளிக்கத் தெரியுமோ என்னவோ? அதற்கான முன் அனுபவம் அவருக்கு இருக்கும் என்று தோன்றவில்லை. வாழ்க்கையில் பழுத்துக் கொட்டை போட்டவர்கள் எல்லாம் அனுபவசாலிகள் என்று சொல்லிவிடமுடியுமா?
பாத்ரூம் விளக்கு எரிந்தது. அம்மாதான். விளக்கைப் போட்டதும் சட்டென்று முழிப்பு வந்து ஒரு பார்வை பார்ப்போம் என்பதற்குக் கூட வழியில்லை. அப்படி உறங்கிக் கொண்டிருந்தார் அப்பா.ஏதேனும் திடீர் உடல் உபாதை என்றால்? அப்பாவுக்கும் அப்படித்தானே? சொன்னால் கேட்க மாட்டார்கள். எங்களுக்கு இந்த ஊர் போதும். நாங்க இங்கேயே இருந்து கழிச்சிடறோம் என்பார்கள்.நான்கு பசங்கள் இருந்தும் ஏன் இப்படித் தனியே இருந்து கஷ்டப்படவேண்டும். ஆளுக்கு மூன்று மாதமோ நான்கு மாதமோ என்று சந்தோஷமாக இருக்க வேண்டியதுதானே? என்னதான் அப்படிக் கௌரவமோ? அப்பாவுக்குக் கூட அப்படி ஒரு ஆசை இருக்கலாம். ஆனால் அம்மாவின் விருப்பத்தை மீறி அவர்அடியெடுத்து வைக்கத் தயாரில்லை. தள்ளியிருந்தாத்தான் மதிப்பு.கிட்டே வந்தா ஒருநா இல்லாட்டா ஒரு நா கசந்து போயிடும்.அப்டி ஒண்ணும் கதியில்லாம பகவான் எங்களை வைக்கலியே?உங்கப்பா பென்ஷன் போதும் எங்க ரெண்டு பேருக்கும். நாங்க இப்டியே கழிச்சிடுறோம். இதுதான் அம்மா வாயெடுத்தால் சொல்லும் வார்த்தைகள். நாளைக்கு நமக்கெல்லாம் இப்படி இருக்க முடியுமோ என்னவோ?
"ஏண்டா நானும் கவனிச்சிண்டேயிருக்கேன்…அதென்ன தூக்கமில்லாம அப்படிப் புரண்டுண்டேயிருக்க?" - பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டதும் அம்மா கேட்ட இந்தக் கேள்வியில் அதிர்ச்சியுற்றான் ராகவன். எவ்வளவு கவனம்? இவள் தூங்குகிறாள் என்று தான் நினைக்கப் போக இப்படிக் கவனித்திருக்கிறாளே?
"இல்லியே, நீ இப்போ லைட்டைப் போட்டதும்தான் முழிச்சிண்டேன்…."
"சும்மா சொல்லாதே….வந்ததுலேர்ந்து நானும் பார்த்துட்டேன் நீ சகஜமா இல்லை. திடீர்னு என்ன பயணம்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறே… சரி…சரி… தூங்கு, காலைல பேசிக்கலாம்…" -சொல்லிவிட்டு வந்து ஆயாசத்தோடு படுத்துக் கொண்டாள். அவள் சொன்னது கூடப் பெரிசாகத் தெரியவில்லை இவனுக்கு.அலுப்போடு அம்மா படுத்துக் கொண்டதுதான் மனதை அழுத்திற்று.
இப்படியானதொரு அலுப்போடும், அசதியோடும்தானே அவள் அங்கிருந்து புறப்பட்டு வந்தாள். அப்பாகூடத் தப்பித்துக்கொண்டு விட்டாரே? நான் இருந்து கொள்கிறேன்…நீ போயிட்டு வா என்று அம்மாவை மட்டும் அனுப்பி வைத்ததுதான் அதிசயம். ஒரு வேளை அப்பாவுக்குத் தெரிந்திருக்குமோ என் மனைவியின் லட்சணம்?அப்படித் தெரிந்திருந்தால் தன் ஆசை மனைவியிடம் சொல்லித் தடுக்காமல் இருக்க மாட்டாரே? போய்க் குட்டுப பட்டுண்டு வந்து சேராதே என்று ஒரு வார்த்தையேனும் சொல்லியிருக்கக் கூடுமே?பாவம் அம்மாவுக்குத்தான் ஒரு நப்பாசை. அப்படிக்கூடச் சொல்லக்கூடாது. தான்தானே வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனது? அதெல்லாம் சரிப்படாதுடா! என்ற ஒரே பேச்சில்தானே அம்மா மறுத்தாள். தன்னால்தான் அம்மாவுக்கு இந்த இழிவு.அதையும் தாங்கிக் கொண்டு இன்னும் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். எனக்கு அவார்இருக்கிற எடம்தாண்டா சொர்க்கம், என்னை அவர்ட்ட கொண்டு விட்டிடு…எத்தனை நாசூக்காக விலகிக் கொண்டாள். ( 2 ) "அம்மா ஏன் இப்படி அசந்து படுத்திருக்காங்க…கேட்டியா?"- மாலினியைப் பார்த்துக் கேட்ட கேள்வியில் ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது அவளிடமிருந்து."கேட்கல…" தான் அவளிடம் கேட்டதே தவறு. அவளென்ன கேட்பது? நானே கேட்டுக் கொள்கிறேன். ஆனாலும் அம்மாவுக்கு மனது அடித்துக் கொள்ளாதா? ஒரு வார்த்தை அவள் கேட்கவில்லையே என்று. சுமுகமாக இருக்க வேண்டுமென்றுதானே வந்திருக்கிறாள். நேரத்துக்கு சோறு போட்டால் போதும் என்று நினைக்கிறாளா? ஆறுதலாய்க் கேட்கும் நாலு வார்த்தைகள் மனதை ஆற்றுவது போல் வருமா? ராகவனுக்கு மாலினியைப் பார்க்கவே பிடிக்கவில்லை. பெண்கள் சக்தியின் சொரூபம் கருணையின் வடிவம் என்கிறார்கள். தாயாய்,மனைவியாய், சகோதரியாய், குல விளக்காய் தன்னை விஸ்வரூபித்துக் கொள்பவள் என்கிறார்கள். அந்த அடையாளங்களெல்லாம் இவளிடம் கிடையாதா? தன் தாயும் அவளுக்குத் தாய் போன்றவள்தானே? வைத்துப் போற்றப்பட வேண்டியவர்களை ஏன் நிறுத்தி ஒதுக்குகிறார்கள்? உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களுமே இப்படித்தான் இருப்பார்களா?நாளைக்கு இவர்களுக்கும் இப்படி ஒரு நிலை வரும் என்பது தெரிந்திருந்தும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? இன்றைய பொழுது இப்படி, நாளைய பொழுது அப்படியென்றால் அதையும் சந்திக்கக் தயார் என்பதாகத்தான் எல்லாரும் இருப்பார்களா? இது என்ன மனநிலை? பட்டுப் பட்டு அனுபவித்துத்தான் எல்லாரும் திருந்த வேண்டுமா? அனுபவப்பட்டவர்களின் வார்த்தைகளின் மதிப்பறிந்து, அதன்படி தங்கள் வாழ்க்கையினைச் செம்மைப் படுத்திக் கொள்ளக் கூடாதா?
"ஆரம்பத்துலயே எங்கம்மா சொன்னாங்க…வேலை பார்க்கிற பெண் வேண்டாம்டான்னு… நாந்தான் கேட்கல…"
"இப்பக் கூட ஒண்ணும் கெட்டுப் போகல…நீங்க உங்க இஷ்டப்படி இருந்துக்கலாம்…"
எத்தனை தைரியமாகப் பேசுகிறாள்? நமக்குத்தான் நாக்கு கூசுகிறது.என்ன சொல்கிறாள் இவள்? டைவர்ஸ் வாங்கிக் கொண்டாலும் அதற்கும் நான் தயார் என்கிறாளா? உண்மையிலேயே அவள் அப்படி விரும்புகிறாளா? அவள் விரும்பினாலும் அவள் தாய் தந்தை அதை விரும்புவார்களா? அவளின் சுதந்திரம்தான் எங்களுக்கு முக்கியம் என்பார்களோ? அவளின் சுதந்திரத்தை இப்போது யார் கெடுத்தது?அவளின் இஷ்டத்துக்குத்தானே இருக்கிறாள்? ஆனாலும் ஒரு பெண்ணுக்கு இப்படிப் பேச எத்தனை தில் வேண்டும்?
எல்லாம் தானும் வேலை பார்க்கிறோம் என்கிற தைரியம்தான்.வேலை பார்த்தால சம்பளம் வாங்கினால் எல்லா சுதந்திரமும் உண்டு என்று அர்த்தமா? குடும்பம் என்கிற அமைப்பிலே இருக்கிறபோது சில கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதுதானே பொருள். கணவனாகட்டும், மனைவியாகட்டும் எல்லாருக்கும் பொதுவானதுதானே அந்த விதிகள். அதனால்தானே இந்திய சமுதாயம் இன்றுவரை காப்பாற்றப்பட்டு வருகிறது?இதெல்லாம் இவள் அறியமாட்டாளா?
"உன்னோட க்ராஸ் சேலரி என்ன?" - தற்செயலாக ஒரு நாள் கேட்டான் ராகவன்.
"முப்பத்திரெண்டு…"
உங்களோடது என்று அவள் கேட்கவில்லை. தன்னை விட நிச்சயம் குறைவுதான் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கும். இருபது வருஷம் சர்வீஸை முடித்த தனக்கு இப்பொழுதுதான் இருபதைத் தாண்டியிருக்கிறது. தெரிந்துதானே கல்யாணம் பண்ணிக் கொண்டாள். ஒரு வேளை அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்பினாளோ என்னவோ. அப்பொழுதுதான் தன் இஷ்டப்படி தான் இருக்க முடியும் என்று உறுதிப்பட்டிருக்கலாம். ஆனாலும் இவனுக்கே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது.கொஞ்சமென்ன. அந்த விஷயம்தான் தன் மனதில் அடிக்கடி உதைத்துக்கொண்டேயிருக்கிறது. கல்யாணத்திற்கென்று பெண் பார்த்தபோது அத்தனை பெரிதாக இந்த விஷயம் தோன்றவில்லை.திருமணத்திற்குப் பிறகுதான் உதைக்கிறது. அவள் மத்திய அரசுப் பணியாளார் என்பது தெரியும்தான். கூடத்தான் இருக்கும் என்பதும் தெரியும்தான். ஆனால் இத்தனை வித்தியாசம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் ஆயிரமோ ரெண்டாயிரமோதானே வித்தியாசம் இருந்தது. பின் எப்படி இத்தனை விலகிப் போயிற்று. அவள் துறையில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்தன. திடீரென்று மெடிக்கல் அலவன்ஸ் அது இது என்று ஏதேதோ கொடுத்தார்கள். அதில் அவள் எங்கேயோ சென்று விட்டாள். அது கிடக்கட்டும். இத்தனை வித்தியாசத்திற்குப் பின்னால்தான் அவளிடம் இந்த மாற்றமா? முன்பிருந்தே அப்படித்தானே? "கொஞ்சம் வேகமாத்தான் போங்களேன்…இவ்வளவு ஸ்லோவாப் போனா நடந்து போற டைம் வந்துடும்…"
"இந்த பாரு, என் ஸ்பீடு இவ்வளவுதான்…நல்லா வேகமா மாப்பிள்ளை ஸ்கூட்டார் ஓட்டுவாரான்னு கேட்டு கன்ஃபார்ம் பண்ணிட்டு நிச்சயம் பண்ணிருக்க வேண்டிதுதானே?"
"என்ன பண்றது, தெரியாமப் போச்சு…நார்மல் ஸ்பீடு இருக்கும்னு நா எதிர்பார்த்தேன்…இது அதுக்கும் குறைவா இருக்கு…அட்ஜஸ்ட பண்ணிக்க வேண்டிதான்…"
"என்னோட ஸ்பீடு முப்பதுலேர்ந்து முப்பத்தஞ்சுதான்…அதுக்கு மேல போனா நிச்சயம் எவனாலயும் கன்ட்ரோல் பண்ண முடியாது.இங்க இருக்கிற டிராஃபிக்குக்கு அதுதான் விதிச்ச விதி.அதுனாலதான் இன்னைவரைக்கும் ஒரு ஆக்ஸிடென்ட் இல்லாம ஓட்டிட்டிருக்கேன். "
"அது சரி, ஓட்டுறது வேறே, உருட்டுறது வேறே…நீங்க ஓட்டுறீங்களா உருட்டுறீங்களான்னு உங்களுக்குத் தெரியாது.மத்தவங்களுக்குத்தான் தெரியும்…"
சாதாரணப் பேச்சுத்தானே என்று கூட அவள் விட்டுக் கொடுத்ததில்லை. தன் பங்குக் கருத்து என்று ஒன்றை நிலை நாட்டாமல் விடமாட்டாள். இவன்தான் அமைதியாக இருந்து மேற்கொண்டு பேச்சு வளராமல் அதை முடித்து வைப்பான். ஒரு வேளை இந்த மாதிரித் தணிந்து போவதே அவளுக்குப் ப்ளஸ்ஸாகி விட்டதோ என்னவோ? கணவன் மனைவிக்குள் என்ன ப்ளஸ் மைனஸ்?
எல்லா வீடுகளிலும் ஆண்கள் இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றியது ராகவனுக்கு.உறவுகளில் ஏற்படும் உரசல்களைப் புரிந்து கொண்டு அதன் வெம்மையை உணர்ந்து பெண்கள்தான் சிடுக்குகள் விழாமல் அவிழ்த்துக்செல்கிறார்கள் என்பதாகச் சொல்லப்படுகிறதே!அதனால்தான் இந்தக் குடும்ப அமைப்பே இன்றுவரை காப்பாற்றப் பட்டு வருகிறது என்று பெருமை பேசப் படுகிறதே! எத்தனை வீடுகளில் இப்படியான நிலைமை இருக்கிறது? யார் உணர்கிறார்கள்?
"மாலினி, நீ இப்டித் தனியா வந்திருக்கிறது கொஞ்சங்கூடச் சரியில்லைம்மா…அதுவும் மாப்பிளைக்குத் தெரிவிக்காம வந்திருக்கேங்கிற…என்னம்மா இது? உனக்கே மனசுக்குத் தோணலை?"
மாலினி அமைதி காத்தாள். சொல்வது சரிதான் என்று ஒப்புக் கொள்கிறாளா அல்லது சொல்வது பிடிக்கவில்லையா?
இரண்டு நாட்களாக இருந்த அமைதி இன்றுதான் கலைந்திருக்கிறது.அதுவும் சித்தப்பா மூலம். அப்பா கூட ஒன்றும் கேட்கவில்லை.அதற்காக அப்பாவுக்கு ஒப்புதல் என்று பொருள் கொள்ளலாமா?அம்மா பேசவேயில்லை. அது ஒன்றே போதும். அவளின் எதிர்ப்பின் அடையாளமாய். தரையில் உட்கார்ந்திருந்த மாலினி அப்படியே சித்தப்பாவின் மடியில் சாய்ந்து கொண்டாள். அவள் தலையை ஆதுரமாய்த் தடவிக் கொடுத்தார் அவர். உலகில் அன்பு ஒன்றுக்குத்தான் எல்லா சக்திகளும். அதை மிஞ்சிய விஷயம் எதுவுமில்லைதான். அது சித்தப்பாவுக்கு நன்றாகத் தெரிந்திருக்குமோ என்னவோ? எத்தனை ஆழமாக உட் புகுவதற்கு இந்தத் தலை வருடல்?
பிறந்ததிலிருந்து இருபது இருபத்திரெண்டு ஆண்டுகள் வரை தாய் தந்தை, உற்றார் உறவினர் சுற்றத்தாரோடு வாழ்ந்து விட்டு,திடீரென்று வேறொரு வீட்டிற்குப் போ என்று சொன்னால் உடனடியாக ஒரு பெண்ணால் அப்படிப்போய் எப்படி ஒன்றி விட முடியும்? மனம் அப்படியும் இப்படியுமாகத் தவிக்கத்தான் செய்கிறது.ஒரேயடியாக அறுத்துக் கொண்டும் வர முடியாதே? அப்படியல்லவா கட்டிப் போட்டு விடுகிறார்கள்? இந்தத் திருமண பந்தம் அப்படித்தானே மனிதர்களை முடக்கிப் போட்டு விடுகிறது!வாழ்வின் ஆதாரமே அதுதான் என்பது போலல்லவா கோலோச்சுகிறது? அதுவும் ஒரு பெண்ணுக்கு ஆளுமையே அதுதான் என்றிருக்கும்போது! அது ஏன் இப்படி இடையிடையில் கட்டறுத்துக் கொள்ளத் தவிக்கிறது? கட்டறுத்துக் கொள்ளவா அல்லது அம்மாதிரியான நிகழ்வுகளின் ஆரம்பக் கட்டத்தில் கால் வைத்து ஒருவருக்கொருவர் மானசீகமாய் மிரட்டிக் கொள்வதிலே ஒரு திருப்தியா?
தாய் தந்தையரின் குண விசேஷங்களிலிருந்து அத்தனை எளிதாய் விலகிப் போய் விட முடியுமா? அதுநாள்வரை தனது பிறந்தகத்தில் தன் பெற்றோரோடு தான் கண்ட வாழ்க்கை தனக்கு எதைக் கற்றுக் கொடுத்திருக்கிறது? எல்லாம் தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் இதில் ஏதோ சுவை இருக்கிறது.
மென்மையாகச் சிரித்துக் கொண்டார் சாம்பசிவம். "என்னம்மா,ஊருக்குப் போகணும்போல இருக்கா?"
இந்த மனுஷன் தன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்? தன் மனதில் ஓடும் எண்ண அலைகள் இவருக்கு எப்படித் தெரிகிறது? ஒரு வருடலில் அத்தனையையும் துல்லியமாகப் புரிந்து கொள்வாரோ? இதுதான் அனுபவம் என்பதோ?
"உடனே என்னை ஊருக்கு அனுப்பறதுலயே இருங்க…உங்க எல்லாரையும் பார்த்துட்டு, கொஞ்ச நாளைக்கு இருந்துட்டுப் போகலாம்னு வந்திருக்கேன் நான். நீங்க என்னடான்னா என்னை விரட்டுறீங்க?"
"நா ஏன்மா விரட்டுறேன் உன்னை. இது உன் வீடு. நானே ஓசிக்கு இருக்கிறவன். உன்னை நா அப்படிச் சொல்ல முடியுமா?"
அதிர்ந்தாள் மாலினி. "சித்தப்பா! என்ன சொல்றீங்க? நீங்கதான் எனக்கு எல்லாம். எங்க அப்பாவை விட உங்க மடிலதான நா நாள் பூராவும் கிடந்திருக்கேன். அப்புறம் எதுக்கு இப்டிப் பேசுறீங்க?"
"சும்மாச் சொன்னேம்மா…என்னதான் ஆனாலும் நா எனக்குன்னு ஒண்ணு இல்லாதவன்தானே! கல்யாணம் காட்சின்னு எதுவும் பார்க்காதவன். நீங்களே சதம்னு இருந்திட்டவன். அது எப்பவாவது தவறோன்னு மனசுக்குத் தோணும். அப்போ ஏதாச்சும் மனசு பிரண்டு இப்படி வார்த்தைகள் வரும். நீ ஒண்ணும் பெரிசா எடுத்துக்காதே!"
"சின்ன வயசுலர்ந்து நீங்கதான் எனக்கு எல்லாம். என்னைப் பள்ளிக்கூடத்துல கொண்டுவிட்டுக் கூட்டிவருவீங்களே தினமும்…அப்போயிருந்து உங்களத்தான் என் அப்பாவா நினைச்சிட்டிருக்கேன்…என் அப்பா கூட எனக்கு அப்புறந்தான்…"
"சரி, இப்போ இதை எதுக்குச் சொல்றே? என்ன செய்யணும் உனக்கு?அதைச் சொல்லு முதல்ல…"
"எனக்கு ஒண்ணும் செய்ய வேண்டாம்…என்னை எதுவும் கேட்காம இருந்தாப் போதும்…"
"அது எப்டிம்மா? திடீர்னு நீபாட்டுக்குத் தனியா வருவே…கேட்டா அவர் அவுங்க வீட்டுக்குப் போயிட்டார், நா இப்டி வந்துட்டேன்னு சொல்லுவே…என்ன எதுன்னு காரணமில்லாமே நீங்கபாட்டுக்கு இருப்பீங்க…இதுல ஏதாச்சும் பிரச்சினை இருக்குமோன்னு பெரியவங்களுக்குத் தோணுமாயில்லியா?"
"இந்தமாதிரி ஒவ்வொண்ணையும் தூண்டித் துருவுறதுதான் இந்தப் பெரியவங்க வேலையாப் போச்சு…வேறே போக்கிடம் இல்லாமே அக்கடான்னு கிடப்போம்னு இங்க வந்தா நீங்க என்னடான்னா இப்படிப் போட்டுத் தொணத்துறீங்க…"
"சரிம்மா…ஸாரிம்மா…போதுமா? உனக்கு எப்போ மனசு வருதோ அப்போ சொல்லு போதும். இப்போ சித்தப்பா உன்னை வற்புறுத்தலே…இதை இந்த வீட்ல நாந்தான் உன் கிட்டே கேட்டாகணும். நா இருக்கேன் எல்லாத்தையும் பார்த்துக்குவேன்ங்கிறதுதான் உன் அப்பா அம்மாவோட கணிப்பு.ஆகையினால நீ இன்னைக்கில்லாட்டாலும் இன்னும் ரெண்டு நாள் கழிச்சாவது விஷயத்தை என்கிட்டே சொல்லித்தான் ஆகணும்…சரிதானா? ஓ.கே. இப்போ உன் விருப்பம் போல இருக்கலாம் நீ…நான் கொஞ்சம் வெளில போயிட்டு வர்றேன்…"
"எங்கே சித்தப்பா…நானும் வரட்டுமா?"
"அய்யய்ய…இதுக்கெல்லாம் நீ வரக் கூடாதும்மா…இது அலைச்சல் வேல…"
"அது என்ன அப்படி அலைச்சலானது?"
"தெரியாதா உனக்கு? நமக்கு விமான நிலையம் பக்கம் ஒரு ப்ளாட் கிடக்கு தெரியுமோ? அதை விக்கச் சொல்றான் உங்கப்பன்…அதுக்காகத்தான் புறப்பட்டேன்….."
"விக்கப் போறீங்களா? அதுபாட்டுக்குக் கிடந்துட்டுப் போகுது…இன்னும் விலை ஏறுமில்லியா? எதுக்கு விக்கணும்?"
"எதுக்கு விக்கணுமா? உன் கல்யாணக் கடன்களை அடைக்க வேண்டாமா? கடன் கொடுத்தவங்க சும்மாவா இருப்பாங்க…?"
அதிர்ந்தாள் மாலினி!
"சார், ராகவன் சார் லீவு…அவர் இருந்தாத்தான் அந்த சீட்ல எதுவும் எடுக்க முடியும்…நாம தொட்டுக் கலைச்சு வச்சிட்டம்னா அப்புறம் வந்து அவார்சத்தம் போடுவாரு…" - தயங்கியவாறே கூறினார்கணக்காளார்வேதாசலம்.
"நல்லாயிருக்கே, அதுக்காக அவார்திரும்ப வர்றவரைக்கும் அந்த சீட்டு வேலைகளை அப்படியே போட்டு வைக்க முடியுமா? நான் சொல்றேன் எடுங்க…" – மேலாளர் சூரியமூர்த்தி சாவியை எடுத்து டேபிள் மேல் போட்டார். "எதை எடுக்கிறீங்களோ அதே இடத்தில திரும்ப வச்சிடுங்க…அவ்வளவுதான்..ஏன்னா அவார்தன்னோட வசத்துக்கு ஏத்தமாதிரி அடுக்கியிருப்பார் இல்லையா…" "ஆமா சார்…கொஞ்சம் கலைஞ்சாலும் அந்த மனுஷன் சத்தம் போடுவாரு…" "சர்தான்யா…நல்லா வேலை செய்றவங்க எல்லார்கிட்டயும் இருக்கிற குணம்தான் அது. அதை நாம மதிக்க வேண்டிதான். அதுக்காக அந்த சீட்ல வேலையை நிறுத்தி வைக்க முடியுமா? தந்தியும், ஃபேக்ஸூமா வந்திட்டிருக்கு…இந்த மாதிரிநேரத்துல லீவைப் போட்டுட்டுப் போயிட்டாரு…என்னைக்கு வர்றாராம்?" "ஒரு வாரம் போட்டிருக்காரு ஸார்…எக்ஸ்டன்ட் பண்ணினாலும் பண்ணுவேன்னாரு…" "எக்ஸ்டன்ஷனா? அது சரிதான்…அந்தாள் என்ன கிறுக்கனா? ஒரு மாதிரி எப்பவும் தனக்குத்தானே பேசிட்டேயிருக்காரு…ஏதாச்சும் பிரச்னையோ?" "அவார்வீட்ல ஒய்ஃப்போட எதோ இருக்கும் போலிருக்கு சார்…" "எப்டிச் சொல்றீங்க?" "இப்ப அவார்ஊர் போயிருக்கிறதே அப்டித்தான் ஸார்…அவுங்க அம்மாவக் கொண்டு வந்து வச்சிட்டு இப்ப சமீபத்துலதான் கொண்டு விட்டாரு…அப்பருந்து இப்டித்தான் ஸார்…ஒரு வாட்டி சொல்லியிருக்காரு…" "அட, எந்த வீட்லய்யா இல்லாம இருக்கு…எல்லாப் பொம்பளைங்களும் அப்டித்தான். அப்டி இருந்துதான் அவுகளும் மாமியாரா ஆகுறாங்க…அனுபவிக்கிறாங்க…" "இப்பல்லாம் அப்டியில்லை ஸார்…இப்பல்லாம் வேலை பார்க்கிற மாமியார்கள்தான். தான் உண்டு தன் பென்ஷன் உண்டுன்னு தனியாவே இருந்துடறாங்க…இல்லன்னா அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு சேவை விடுதில கொடுத்து தானும் அங்க வசதியா இருக்க ஆரம்பிச்சிடறாங்க…அதனால யாரும் யாரையும் மதிக்கிறதில்லை…உன் பணம் உன்னோட, என் பணம் என்னோடன்னுட்டு தன் பையன் நல்லாயிருந்தா சரின்னு விட்டுடறாங்க…டேக் இட் ஈஸி பாலிஸி வந்திடுச்சு ஸார்இப்போல்லாம்…"- வேதாசலம் ரொம்பவும் கேஷூவலாகச் சொன்னார். "அதப் போல இவரும் இருந்திட வேண்டிதான? ஏன் பொண்டாட்டிட்ட முரண்டிக்கிறாரு?" "அவுருக்கு அவுங்க அப்பா அம்மாவை வச்சிக்கணும்னு ஒரு ஆசை. அதுக்கு அவார்ஒய்ஃப் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகலாமில்ல ஸார்…" "சரிவிடுங்க…இந்தப் பேச்சு நமக்கெதுக்கு? அதுவும் ஆபீஸ் நேரத்துல?வேலையைப் பார்ப்போம்…அந்த பென்ஷன் ஃபைலை எடுங்க…இன்னிக்கு அதை டிஸ்போஸ் பண்ணிடணும்…அவர்ட்டயே சொல்லியிருந்தேன்…என்னவோ போட்டுட்டுப் போயிட்டாரு…எல்லா மனுஷனுக்கும் எல்லாச் சமயத்துலயும் மனசு ஒரே மாதிரியாவா இருக்கு? சொந்த வாழ்க்கை சரியா இருந்தாத்தான் ஆபீஸ் வேலைல கான்ஸன்டிரேட் பண்ண முடியும்…அது சத்தியமான விஷயம்…எத்தனபோர்மனசு நொந்து,குடிக்குப் பழகி, தானும் ஒழுங்கா இருக்காம, ஆபீஸையும் கெடுத்து எப்படியெல்லாமோ ஆயிடறாங்களே? அந்த மாதிரியெல்லாம் இவார்இல்லாம இருக்காரே அது மட்டும் சந்தோஷம்…." "இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா இவரும் அப்படி ஆனார்னா ஆச்சரியப்படுறதுக்கில்லை ஸார்…பல சமயங்கள்ல இவர் பேச்சு அப்படித்தான் இருக்கு…இவருக்கு மனசுல ஒரு காம்ப்ளெக்ஸ் இருக்கும் போலிருக்கு ஸார்…தன் பெண்டாட்டி தன்னை விட அதிகச் சம்பளம் வாங்குறான்னு…அது அடிக்கடி அவார்பேச்சுலோ;ந்து தெரியுது…" "இது கல்யாணத்துக்கு முன்னாடி தெரியலயாமா? எம்புட்டு இருந்தா என்னய்யா? இந்தக் குடும்பத்துல நாம ரெண்டு பேரும் பார்ட்னா;. நமக்காகவும் நம்ம குழந்தைகளுக்காகவும் எது சரியோ அதை விடாமச் செய்வோம்…"ன்னு பிரதிக்ஞை எடுத்தமாதிரி செய்திட்டுப் போயிட்N;டயிருக்க வேண்டிதானே?" "அங்கதான் சார் வருது பிரச்னையே! அவுங்களுக்குக் குழந்தைகளே இல்லை இன்னிவரைக்கும்!" "அதான் தெரியுமே…கல்யாணம் ஆகி ரெண்டு வருஷமோ என்னவோதானய்யா ஆகும்…மெதுவாப் பிறக்கட்டும்…இப்ப என்ன கெட்டுப் போகுது…" "அதுக்கில்ல ஸார்…அதுக்குள்ளேயும் இவுங்க காம்ப்ளக்ஸ் பிரச்னைல ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவாங்க போலிருக்கு…""இவருக்குத்தான் அதுன்னா அவுங்களுக்குமா?" "அவுங்களுக்கு நாமதான் அதிகமா வாங்குறோம்னு எண்ணமிருக்கும் போலிருக்கு…" "அப்படியிருந்தாலே விளங்காதே…""அதான் படக்குன்னு லீவைப் போட்டுட்டு இவார்கிளம்பி;ட்டார் போலிருக்கு…""அப்போ அந்தம்மா மட்டும் தனியா இருக்கா?""அது தெரில ஸார்…"- சொல்லிவிட்டு சூரியமூர்த்தியை ஒரு மாதிரியாகப் பார்த்தார் வேதாசலம்.
"நீ என்னய்யா சந்தேகமாப் பார்க்கிறே? நான் தேடிப் போகப்போறேன்னு நினைச்சிட்டியா?" வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டார் வேதாசலம். அலுவலகத்தில் சூரியமூர்த்தியின் பேச்சுக்களை அறிவார் அவர். பெண் பணியாளாகள் மத்தியில் அவார்ரெட்டை அர்த்தம் தொனிப்பது போல் பல சமயங்களில் பேசுவதும், சிலார்அதை ரசிப்பதும், சிலார்தாங்க மாட்டாமல் தலை குனிந்து கொள்வதும்….இந்த வயதில் இவருக்கு இது தேவையா?என்றுதான் தோன்றும் இவருக்கு. ஆனாலும் மேலாளரை ஒன்றும் சொல்ல முடியாது இவரால். ஏதாச்சும் லேசாகச் சொல்லப் போக மறுநாளைக்கு ஆபீஸ் வந்து டேபிளைப் பார்த்தால் மாறுதல் ஆணை இருக்கும் மேலே! அப்படி எத்தனையோ பேரை விரட்டியிருக்கிறார் அவர். அதை நினைத்தபோது மெலிதாக உடம்பு நடுங்கியது வேதாசலத்துக்கு. ஏன் ராகவனுக்கே அப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கிறதே! ( 5 )
"ராகவன், அந்த கான்ட்ராக்டர் ஃபைல் என்னாச்சு? ரெண்டு நாளாச் சொல்லிட்டிருக்கேன் வைக்க மாட்டேங்கிறீங்க…"-சூரியமூர்த்தி சூடாகத்தான் ஆரம்பித்தார். இன்னும் கேட்கவில்லையே மறந்து விட்டார் போலிருக்கிறது என்று நினைத்திருந்த ராகவனுக்கு திடுக்கென்றது. "இப்போ முதல்ல அதை மூவ் பண்ணுங்க…"- "சரிஸார்…" என்றுவிட்டு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான் அவன்.இப்படி வந்ததும் வராததுமாக சொல்லப்படும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. எதெல்லாம் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறதோ அப்படியான கோப்புகள்தான் இவருக்கு லட்டு போலும் என்று நினைத்துக் கொண்டான். சிக்கலான கோப்புகளை வைத்துக் கொண்டு அதில்தான் காசு பார்க்க முடியும். எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வேலை முடிக்கப்பட்டிருக்கிறது என்று சம்பந்தப்பட்டவருக்குத் தெரிய வேண்டும். அம்மாதிரியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதில் வல்லவர் அவர். இத்தனை ரிஸ்க் எடுத்து இந்தப் பணி என்னால் முடிக்கப்பட்டிருக்கிறது என்று புள்ளி வைத்து விடுவார். அங்கே மற்றவார்உழைப்பு எல்லாம் பஸ்பமாகி விடும். அப்படியான ஒன்றைத்தான் இப்பொழுது கேட்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் மனத்திரையில் எண்ணங்களை ஓட விட்டுக் கொண்டிருந்தான் ராகவன். இந்த ஆபீசுக்கு அவன் விரும்பித்தான் வந்தான். வந்த பொழுதினில் சூழல் நன்றாகத்தான் இருந்தது. ஆறு மாதங்கள் நன்றாக, நிம்மதியாகத்தான் ஓடியது.திருமணம் ஆகி தான் மாற்றலாகி வந்த இடம் நன்றாக அமைந்ததில் பெருத்த நிம்மதி இருந்தது இவனுக்கு. தன் மனைவியின் அதிர்ஷ்டம் என்பதாகக் கூட ஒரு எண்ணம் ஏற்பட்டு அவள் மீது அன்பு பெருகியது. ஆனால் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு இந்த மனுஷன் இங்கே வந்து உட்காருவார் என்று யார்கண்டது. வந்த பிறகுதான் தெரிந்தது அவார்இங்கே விட்டுப் போய் சரியாக ஆறு மாதம்தான் ஆகிறது, மீண்டும் வந்து விட்டார் என்று.சபதம் செய்து விட்டுப் போனாராம். சரியா ஸிக்ஸ் மந்த்ஸ்…திரும்ப வரலேன்னா என் பேரு சூரியமூர்த்தி இல்ல…இதற்கு முன் இருந்த அலுவலரிடம் சொல்லாமல் சொல்லிவிட்டுப் போன சபதமாம் இது. தன் செல்வாக்கு அவரை விட மேல் என்று நிலை நாட்டுவதில் அத்தனை வெறி.விருப்பு வெறுப்பற்று சமநிலையில் மக்களுக்கான பணிகளை செய்ய அமர்ந்திருக்கிறோம் இங்கே. மனித வக்கிரங்கள் எப்படியெல்லாம் நிர்வாகத்தைச் சீர் குலைக்கின்றன. நினைத்துப் பார்த்துக் கொள்வான் இவன். அவ்வளவுதான் முடியும். அதை வாய்விட்டுச் சொல்லக் கூட முடியாது. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது கூட சிக்கல்தான் இன்றைய நாளில். யோசனையிலேயே ஆழ்ந்து விட்டவன், அவார்சொன்ன கோப்பை எப்படி எழுதி வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான். மனதில் பல்வேறு விதமான தயக்கங்கள். வெறுமே அறிவுரைகள் கேட்டு கோப்பினை நகா;த்தி இவனுக்குப் பழக்கமில்லை. இது நான் எழுதுவது, இது பற்றி முழுமையாகச் சொல்ல எனக்குத் தெரியும் என்ற திமிர்இவனுக்கு எப்போதும் உண்டு. அந்தவகையில்தான் அதை எப்படி நகா;த்தலாம் என்பது இவனின் சிந்தனையாக இருந்தது.
பியூன் கபிலன் வந்து நின்றார். "சார், மானேஜார்உங்களக் கூப்பிடுறாரு, சீஃப் ரூம்ல இருக்காரு…அந்தக் கான்ட்ராக்டார்ஃபைலை எடுத்திட்டு வருவீகளாம்…" "இந்தாங்க…நீங்களே கொண்டு கொடுத்திடுங்க…கேட்டா இதோ வர்றாருன்னு சொல்லுங்க…" "அய்யய்யோ…நீங்கென்ன ஸார்…வம்புல மாட்டி விட்ருவீங்க போலிருக்கே…உங்களக் கொண்டுவரச் சொன்னார்னா நீங்க என்னக் கொண்டுகொடுங்கங்கிறீங்க…?" "கபிலு…ஒண்ணும் தெரியாத மாதிரிப் பேசக் கூடாது…எல்லாம் எனக்குத் தெரியும்…இதில நா எழுதினா அது வேறே மாதிரிப் போயிடும்…அவுருக்கு வேணுங்கிறதை அவரே எழுதிக்கட்டும்…நா எதுவும் கண்டுக்கலே…ஆனா அவுரு நினைக்கிற மாதிரி என்னால எழுத முடியாது…""இத அவருட்ட நீங்களே நோ;ல சொல்லிட வேண்டிதான ஸார்…என்னை ஏன் ஸார் உள்ளே இழுக்குறீங்க?" "யோவ், தெரியும்யா எல்லாம்…என்னமோ உனக்கும் ஒண்ணுமேயில்லாத மாதிரிப் பேசாத…எல்லாத்தையும் பார்த்திட்டுத்தான உட்கார்ந்திருக்கோம்…போய்யா…போய் சும்மாக் கொடு…அவருக்கே தெரியும்..நானே கொண்டு கொடுத்தாலும் நீங்க போங்கங்கப் போறாரு…இத யாரு கொடுத்தான்ன?"
"ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்திதான் ஸார்…" "நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறவனுக்கு அது ஒண்ணுதான்யா சொத்து…அதன் மூலமாக் கிடைக்கிற நஷ்டம் கூட அவனுக்குச் சுகம்தான்யா…" - வாயை மூடிக் கொண்டு கோப்பை எடுத்துக் கொண்டு போனார் கபிலன். முன்பே ஒரு முறை இந்தக் கோப்பு பற்றிப் பிரச்சினை வந்திருப்பதை நினைத்துக் கொண்டான் ராகவன்.அப்பொழுதே நீங்கள் நினைப்பது போல் என்னால் எழுதி வைக்க முடியாது அதற்கான ஆதாரமில்லாமல் எழுதுவது என்பது ஆகாது என்று மேலாளரிடம் முரண்டியிருக்கிறான். இத்தனை நாட்கள் அதனாலேயே நின்றிருந்த கோப்பு இன்று மீண்டும் உயிர்பெற்றிருக்கிறது. இதில் ராகவனுக்கு ஆச்சரியமாயிருந்த விஷயம் அலுவலரும் மேலாளரின் வார்த்தைகளைத் தட்டாமல் ஒப்புதல் அளிப்பதுதான். அது எப்படியோ நடந்து விடுகிறது. அந்த சாமர்த்தியம் இந்த சூரியமூர்த்திக்கு இருக்கத்தான் செய்கிறது.ஆனாலும் எது சரி என்று ஒன்று உண்டல்லவா? அதை மீறி ஏன் இப்படி நடந்து விடுகிறது? யோசித்து யோசித்து எப்படியோ போகட்டும், மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்று விட்டு விட்டான் அவனும். அப்படியான ஒரு நாளில்தான் திடீரென்று அவனும் ஒரு நாள் அந்த மாறுதலைச் சந்திக்க வேண்டியிருந்தது.
( தொடர்ச்சி  கீழே.......)
“சொல்லாதே யாரும் கேட்டால்” - குறுநாவல்–2 ம் பகுதி

 
 


சென்ற வார தொடர்ச்சி ... (உயிரோசை இணைய இதழ் - 10.09.2012 வெளியீடு)
------------------------------------------------------------------------------------------------------------

"என்னங்க இது அநியாயமா இருக்கு? நா இங்க வந்து ஒரு வருஷந்தான் ஆகுது…அதுக்குள்ள என்னை மாத்தினா என்னங்க அர்த்தம்? பொதுவான அவன் புலம்பலை எல்லோரும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் யாரும் பதில்தான் சொல்லவில்லை. யாரும் சாதகமாக வரமாட்டார்கள் என்பதை இவனும் அறிவான். ஆனாலும் இந்த அளவுக்கா பயந்தோளிகளாக இருப்பார்கள் என்று நினைத்துக் வெட்கப்பட்டான் இவன். அந்த முறை தப்பித்தது இவனின் கடுமையான எதிர்ப்பினால்தான். ஆணையை எடுத்துக் கொண்டு நேரே அலுவலரின் அறைக்கே போனான். தன் மீது என்ன குறை இருக்கிறது என்று வினவினான். தன் பிரிவுப் பணியில் தான் என்ன குற்றம் செய்தேன் என்று கேள்வி எழுப்பினான். அலுவலக நேரத்திலோ, விடுப்பு எடுப்பதிலோ, கூடுதல் வேலைகளைத் தாமதமின்றி முடிப்பதிலோ என்ன குறையைக் காண முடிந்தது என்றும், காரணமில்லாமல் அநாவசியமாக ஒருவனை மாற்றம் செய்வது அவனது கடமை உணர்வையே தாழ்த்தி எடை போடுவதற்கு சமம் என்று வெறி கொண்டவனைப் போல் அலுவலரிடம் வாதாடினான். தானா அப்படிப் பேசினோம் என்றும், எங்கிருந்து தனக்கு அம்மாதிரி ஒரு தைரியம் வந்தது என்றும் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். அன்று ராகவன் கொடுத்த அதிர்வு சூரியமூர்த்தியையே சற்றுக் கலங்கத்தான் வைத்து விட்டது. இந்த அளவுக்குப் பேசுபவன் என்னமும் செய்யத் துணிந்து விடுவான் என்பதாக நினைத்து பயந்து விட்டாரோ என்னவோ, அவரே சொல்லி அந்த மாறுதல் ஆணையைக் கான்ஸல் செய்து விட்டார் அன்றே! அதிலும் கூட தானே அவனுக்கு உதவியதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதுதான் அவார்செய்த பெரிய அரசியல்.
(6)
தனது மாறுதல் ஆணையை ரத்து செய்ததிலிருந்து அலுவலகத்தில் ராகவனுக்கு ஒரு மாpயாதை ஏற்பட்டிருந்தது என்னவோ உண்மைதான்.ஆனால் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவன் தன்னை ஒன்றும் அந்த அலுவலகத்தின் உறீரோவாக நினைத்துக் கொள்ளவில்லை. எப்பொழுதும் போலவே தன்னடக்கத்தோடு தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.ஆனால் அவனை வைத்து அலுவலகத்தில் மற்றவர்களுக்கு ஒரு தைரியம் வந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சும்மா ஒன்றும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யாரையும் ஒன்றும் தூக்கி அடிக்க முடியாது என்றெல்லாம் பேச்சு கிளம்பியிருந்தது. மனிதர்களில் அநேகமாக எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று தோன்றியது இவனுக்கு. பூனைக்கு யார் மணி கட்டுவது என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். யார் மூலமாகவாவது பாதுகாப்புக் கிடைக்காதா என்று நினைக்கிறார்களேயொழிய இது தவறு என்று நியாயமான விஷயங்களுக்குக் கூட நிமிர்ந்து நிற்பதில்லை. ஆனாலும் ராகவனுக்கு அவர்கள் மேல் எந்தக் கோபமும் எழவில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கைப் பிரச்னையும் ஒவ்வொரு மாதிரி இருக்கக் கூடும். இந்த வாழ்க்கை என்னும் ஓடம் பெரும்பாலும் மனிதர்களை அமிழ்த்தத்தானே பார்க்கிறது? அதில் அநாயாசமாக படகு விட்டுக் கொண்டு சுகமாகப் பயணிப்பவார் எத்தனை பேர்?ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள். எல்லாமும் உணர்ந்துதான் இருந்தான் ராகவன். அவனின் அந்த நல்ல குணமே அலுவலகத்தில் எல்லோரையும் அவனிடம் நெருங்கி வரச் செய்தது.வேதாசலம் ராகவனிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அவன் தன் வேலைகளில் கன கச்சிதமாக இருப்பது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.அவன் வெளியூரில் இருந்த பொழுதே அவனை அறிவார். அவர் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக இவனைப் பற்றிய செய்தி அவருக்குக் கிடைத்தது. அவனேயறியாமல் திருச்சிக்குச் சென்று அலுவலகப் பணியாக வந்தது போல் இருந்து, அவனைப் பார்த்து எடை போட்டு விட்டுத்தான் வந்தார். ஆனால் அவன் அமையாமல் போனது அவருக்குப் பெருத்த வருத்தமாகத்தான் போய்விட்டது. அதிகப் பொருத்தமில்லாததில் அவர் மனைவியின் கேள்விகளுக்கு அவரால் தக்க பதில் சொல்லி சமாதானப்படுத்த முடியவில்லை. ஆனாலும் இன்றுவரை ராகவன் தனக்கு மாப்பிள்ளையாக வராதது அவருக்கு வருத்தம்தான்.அதனாலேயே அவருக்கு அவன் மேல் என்றும் ஒரு கருணையான பார்வை இருந்து கொண்டேயிருந்தது.
இப்படித் திடீரென்று தன்னிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் லீவைப் போட்டு விட்டுப் போய்விட்டானே என்று நினைத்தாரேயொழிய, அதனால் அவனுக்கு எந்தக் கெட்ட பெயரும் வந்து விடக் கூடாது என்பதில் அவருக்கு அவரையறியாமலேயே ஒரு அக்கறை இருக்கத்தான் செய்தது. மனைவியுடன் பிணக்கிக் கொண்டுதான் பெற்றோரைத் தேடிப் போயிருக்கிறான் என்ற செய்தி அரசல் புரசலாக அவர் காதுக்கு எட்டிய போது அவர் மனம் சங்கடப்பட்டது.
இளம் தம்பதிகளிடையே திருமணமான புதிதில் முதல் ஓராண்டில் இம்மாதிரிப் பிரச்சினைகள் ஏற்படுவதும், பிணக்கிக்கொண்டு போவதும் வருவதுமாக இருப்பதும், பின்னர் ஒரு நிதானத்துக்கு வருவதும் சகஜம்தான் என்று நினைத்துக் கொண்டார். அவர் பெண்ணுக்கும் இம்மாதிரி அனுபவம் உண்டு என்பதையும் நினைக்கையில் இதுவும் அந்த வகையிலானதாகத்தான் இருக்கும் என்று எண்ணம் போனது அவருக்கு. ஆனாலும் ராகவனின் நேர்மையும், ஒழுக்கமும், கடமையுணர்வும், தன்னடக்கமும், பெரியோர்களை மதிக்கும் பாங்கும், எதையும் அவன் எப்படியும் நேர்வழியில் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையைத்தான் இவருக்குக் கொடுத்தது. திரும்பவும் அவன் தன் விடுப்பினை நீட்டித்தால்கூட தான் இருந்து அவன் பிரிவினையும் சேர்த்து சமாளித்துக் கொள்வது என்றும் அவன் நற்பெயருக்கு எவ்வகையிலும் களங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் சற்று கவனமாகவேதான் இருந்தார். அப்படி இருப்பதில் அவருக்கு என்னவோ ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். தான் அலுவலகப் பணிகளில,ர்சொந்த வாழ்க்கையில் எப்படி எப்படியோ இருந்து கொண்டாலும் ஒரு நல்லவன் சார்ந்து தன் நிலைகளைத் தளர்த்திக் கொள்வதில் ஏனோ அவருக்கு ஒரு ஆறுதல் இருந்தது.
( 7 )
ராகவனின் தந்தை கேசவமூர்த்தியும், மாலினியின் சித்தப்பா சாம்பசிவமும் அப்படி நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள நேரிடும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை. இருவருமே பஸ்ஸை விட்டு இறங்கியபோதுதான் அது நிகழ்ந்தது. "அடா, அடா, அடா…! என்ன ஒரு தற்செயல் பாருங்க…இப்படியுமா நிகழும்?"- மகிழ்ச்சி பொங்கச் சொல்லிக் கொண்டே வந்து கட்டிக் கொண்டார்சாம்பசிவம். பொது இடத்தில் அப்படியான ஒரு தழுவலை கேசவமூர்த்தி எதிர்பார்க்கவில்லை. நிதானத்துக்கு வர அவருக்கு சில நிமிடங்கள் பிடித்தன.
"நீங்க என்ன நினைக்கிறீங்க…இந்தப் பிரச்னையை அவுங்களேதான் தீர்த்துக்கணும்…நாம எடுத்துச் சொல்றது அவ்வளவு நல்லாயிருக்குமா?" இவர் எதைச் சொல்கிறார் என்று தெரியாமல் முழித்தார் கேசவமூர்த்தி. எடுத்த எடுப்பில் ஒருத்தார்எப்படி இப்படி ஆரம்பிக்கலாம். எதிராளிக்கும் தெரிந்திருக்கும் என்ற ஊகத்தில் இவரே முடிவு செய்து கொண்டு துவங்கி விடுவதா? அப்படியானால் தனக்குத் தெரியாது என்று காட்டிக் கொள்வதில் எதிராளிக்கும் ஒரு தயக்கம் வராதா?
"எல்லாம் சின்னஞ்சிறுசுகதானே, அப்டித்தான் இருக்கும்…" என்று பொதுவாக ஒன்றை சொல்லி வைத்தார் பதிலுக்கு. அதன் மூலமாக ஏதேனும் புரிந்து கொள்ள அடுத்த தகவல் வரும் என்பது அவர் எதிர்பார்ப்பாக இருந்தது."எதுவும் நானும் கேட்டுக்கல… இப்படியிருக்குமோங்கிற ஊகம்தான்…அப்படி ஒண்ணும் அவசரப் பட வேண்டியதில்லைன்னு வைங்க…ஆனாலும் ஒருத்தருக்கொருத்தர் வெளிப்படையாச் சொல்லிக்க முடியாம, பரஸ்பரம் ஒருத்தர்மேல ஒருத்தருக்கு இருக்கிற அன்பினாலயும் மரியாதையினாலயும் இது நிகழ்ந்திருக்கலாமில்லியா?" "சத்யம்…சத்யம்…." அப்படியே ஆமோதித்தார்கேசவமூர்த்தி. எதற்கு இப்படியெல்லாம் பேசிக் கொண்டு. நேரடியாக,வெளிப்படையாக என்ன என்பதைத் தெரிவித்து விட வேண்டியதுதானே?அவருக்குப் பெரிய அவஸ்தையாக இருந்தது. தன் சம்சாரம் கூட இருந்தால் தேவலாம் போலிருந்தது. பேசாமல் அவளைக் கையைக் காண்பித்து விட்டு விலகிக் கொள்ளலாமில்லையா? அவள் பார்த்துக் கொள்வாள்.எல்லாவற்றையும், எல்லாரையும், ரட்சிப்பவள் அவள்தான்.
"நீங்க கிளம்புங்க, நான் எல்லாம் பாங்கா சொல்லி அனுப்பறேன். ஒண்ணும் நினைச்சுக்க வேண்டாம். எல்லாம் சரியாயிடும்…." - சொல்லிவிட்டு எதிர்பார்த்த வண்டி வந்தவுடன் தாவி ஏறி அமர்ந்து டாடா காண்பித்து விட்டார்சாம்பசிவம். வந்ததிலிருந்து பூடகமாகவே பேசி, பூடகமாகவே விடைபெற்றுக் கொண்டு விட்டாரே என்று இருந்தது இவருக்கு. அப்படியென்றால் ராகவனுக்கும் அவன் மனைவிக்கும் என்ன பிரச்சினை? வெறுமே ஓய்விற்காக அவன் வரவில்லையா? ஓய்விற்காக வந்தவன் தன் மனையாளோடு வராமல் தனியாக வந்தது இப்படித்தானா? இப்பொழுதுதான் ஏதோ உரைப்பதுபோல் இருந்தது இவருக்கு. ஆனாலும் எல்லாம் தன் சகி பார்த்துக் கொள்வாள் என்கிற நம்பிக்கை அவரைப் பதட்டம் அடையச் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தன் பணிக்காலம் சார்ந்த சில பிரச்சினைகளுக்காக வந்த இடத்தில் இப்படியொரு செய்தி தன்னை எட்டியது தெய்வாதீனம்தான் என்று நினைத்து உடனே இதைத் தன் மனைவியிடம் சென்று சொல்லிவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது அவருக்கு. ஒரு வேளை அவளுக்கும் இப்படியான ஒன்று தெரியாமல் இருந்திருந்தால்? என்ற எண்ணம் அவரிடம் மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியது.
( 8 )
"எல்லாம் வேணுங்கிற அளவுக்கு நான் அவன்டச் சொல்லியிருக்கேன்…நீங்க கவலைப்படாம இருங்க…"எடுத்த எடுப்பில் தன் பாரியாள் இப்படிச் சொன்னதே பெருத்த ஆறுதலாய் இருந்தது கேசவமூர்த்திக்கு. மேற்கொண்டு கேட்க எதுவுமில்லை என்று நினைத்தார் அவர். படிக்கும் காலத்திலிருந்தே அவன் அம்மா பையன். எல்லாவற்றையும் அவளிடம்தான் பகிர்ந்து கொள்வான்.நியூஸ் பேப்பர் உண்டு தான் உண்டு என்று அமிழ்ந்து கிடப்பார் இவர்.பொதுவாகப் பையன்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள்.அவர்களுக்கு அப்பன்களைக் கண்டாலே ஏனோ பிடிப்பதில்லை. எதிரி போலப் பாவிக்கிறார்கள். சிவனே என்றுதான் இருக்கிறார்கள் என்றாலும் ஐயோ பாவம் என்றுகூட நினைப்பதில்லை. இத்தனைக்கும் தன் சம்பாத்தியத்தில்தான் தான் படித்து வருகிறோம் அதில்தான் இந்தக் குடும்பமே நடந்தேறுகிறது என்றாலும் அதெல்லாம் வாழ்வியல் கடமைகள் என்று நினைக்கிறார்கள் போலும்? ஏன் பெத்த? உன்ன எவன் பெத்துப் போடச் சொன்னான்? என்று கொச்சையாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். காலம் அப்படித்தான் மலிந்து கிடக்கிறது. எதை நினைத்து என்ன ஆகப் போகிறது? காலத்தால் எல்லாமும் மறக்கப்படும். மாற்றம் என்ற ஒன்றைத் தவிர இந்த உலகத்தில் எல்லாமும் மாறுதலுக்கு உட்பட்டதுதானே? இப்படியாக ஆறுதல் படுத்திக் கொள்வதும் ஒரு வகையிலான முதிர்ச்சியின் அடையாளம்தான் என்று நினைத்துக் கொண்டார். எல்லாவற்றையும் அமைதியாகக் கண்டு கண்டு தனக்குத் தன்னையறியாமல் அந்த முதிர்ச்சி வந்து விட்டதோ என்று தோன்றியது.ராகவன் கிளம்பிப் போய் ஒரு நாள் கழிந்து விட்டது. எதற்கு வந்தான் என்ன செய்தான் என்றுதான் நினைத்துக் கொண்டார் இவர். வந்து இருந்த நாட்களில் அம்மா அம்மா என்று அவள் மடியில்தான் கிடந்திருக்கிறான். இன்னமும் அவன் அவளுக்குக் குழந்தைதான். தனக்கும்தான். என்றாலும் அம்மாவிடம் இருக்கும் பிரியமும் பாசமும் தனிதான். கொடுத்து வைத்தவள்.
தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார் அவர். அவருக்கொன்றும் அவன் இப்படி இருப்பதில் பொறாமையெல்லாம் இல்லை. கண்காண நன்றாக இருந்தால் சரி என்பது ஒன்றே அவரது விருப்பமாக இருந்தது. அதற்கு பங்கம் வந்து விட்டதோ என்பதாக ஒரு மெல்லிய சோகம். அந்த நெருடலில்தான் இந்தச் சிறு பதட்டம். இருந்தாலும் மனைவியின் ஆதுரமான பதிலில் சமாதானமடைந்து விட்டார் கேசவமூர்த்தி. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! இதுவே அவர் எப்போதும் வேண்டுவதாக இருந்தது. வாசலில் சிந்தனா வயப்பட்டு அமர்ந்திருந்தவாpன் பார்வை தெருவில் திரும்பிற்று. மனையாள் லட்சுமி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். கோயிலுக்குச் சென்று வருகிறாள்.கையில் அர்ச்சனைக் கூடை. இந்தப் பெண்களுக்குத்தான் எத்தனை கடவுள் நம்பிக்கை? பிரார்த்தனையின் பலன்களை இவர்கள் எத்தனை தீர்க்கமாய் உணர்ந்திருக்கிறார்கள்? அதை மிஞ்சிய விஷயம் எதுவுமில்லை என்ற அசைக்க முடியாத இவர்களின் தீர்மானம் பக்தியின் மேல் இவர்களை எத்தனை ஆணித்தரமாய் அமர்த்தியிருக்கிறது? நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கேசவமூர்த்தி.
ராகவனின் மடியில் மாலினி கிடந்தாள். மெல்லிய சிரிப்பு வெளிப்பட்டது அவளிடமிருந்து. "என்ன," என்றான் ராகவன். "உங்களுக்குக் கிளம்பணும்னு தோணியிருக்கிற அதே நேரத்தில எனக்கும் …அதை நினைச்சேன்…" "ஒண்ணு சொல்லட்டுமா…எங்கிட்டச் சொல்லாம நீ உங்க வீட்டுக்குக் கிளம்பிப் போகலாமா?" எடுத்த எடுப்பில் இதைக் கேட்டிருக்க வேண்டாமோ என்றுதான் தோன்றியது.
"நீங்க மட்டும் உங்க ஊருக்குப் போய்ச் சேர்ந்துட்டு, "எங்க ஊருக்கு வந்திருக்கேன்…"னு போன்ல சொல்றீங்களே அது மட்டும் சரியா?" ";…ஆனாலும் இப்படி யாருக்கும் சொல்லாம வீட்டைப் பூட்டிட்டு போறது தப்புதானே…"மாலினியிடமிருந்து பதிலில்லை. "இப்டி ஒருத்தருக்கொருத்தர் பதிலுக்குப் பதில் செய்திட்டுப் போனா நல்லாவா இருக்கும்…சுத்தியிருக்கிறவங்களுக்குத் தெரிஞ்சா…சிரிக்க மாட்டாங்களா…அசிங்கமா நினைக்க மாட்டாங்க…?"
நீங்க நினைக்காம இருந்தா சரி…""தப்புன்னு தோணினதுனாலதானே உடனே புறப்பட்டு வந்தேன்…"
"எது? பிரிஞ்சிரிக்கிறதா? சொல்லாமப் போனதா?"
"ரெண்டுமேதான்…பெரியவங்களுக்கு இந்தப் பிரச்சினை போயிடுச்சின்னா பெரிசாயிடும்னு திடீர்னு மனசுல ஒரு பயம்….நாமளே தீர்த்துக்கிறதுதான் புத்திசாலித்தனம்னு தோணிச்சு…அதனால கிளம்பி வந்துட்டேன்…"
"நானும் அப்டித்தான்…" சுருக்கமாகச் சொன்னாள் மாலினி. எத்தனையோ எடத்துல கேள்விப் பட்டிருக்கோம்…கடைசில அது நமக்கே வந்திடுச்சு…நம்மள அறியாமலே நடந்து போச்சு…நல்லவேளை இதோட முடிஞ்சிச்சேன்னு தோணுது…" "இனிமே இந்தத் தற்காலிக ரகசியப் பிரிவுகூட நமக்கு நடுவுல இருக்கக் கூடாது…சரிதானா?"
"சரி…""நாம இன்னைக்கு சாயந்திரமே டாக்டர்ட்ட போறோம்…" "ஆரம்பிச்சிட்டீங்களா பழையபடியும்? உடனே வேதாளம் முருங்கை ஏறியாச்சாக்கும்…?" "நா என்னைச் சொல்லிக்கிறேன்…நீ சொல்றபடி நானும் செக்கப் பண்ணிக்கிறேன்…எங்கிட்டயும் ஏதாச்சும் குறை இருக்கலாமில்லியா?இருந்தா இம்ப்ரூவ் பண்ணிட்டுப் போறது?"
"அடேயப்பா…எவ்வளவு தாராளம்? இதத்தானே நான் முதல்லயே சொன்னேன்…? அத ஏன் உங்களால ஆக்டிவ்வா எடுத்துக்க முடியல? ஒரு வாரமாப் பேசாம இருந்து, பிறகு சொல்லிக்காம ஊருக்குப் போயி, திரும்பி வந்து, தேவையா?" "என்ன இருந்தாலும் நா ஆம்பிளை இல்லையா?" ‘ "அதக் கன்ஃபாம் பண்ணத்தானே போவோம்ன்னேன்…" "கழுத…கிண்டலா பண்றே…உன்ன பத்துப் பிள்ளை பெக்க வைக்கிறேன் பாரு…எங்கிட்டப் பட்டுட்டு போதும் போதும்னு அலறப் போற நீ…!"
---------------------------------நிறைவுற்றது-----------------------------------

06 செப்டம்பர் 2012

தி.ஜா.ரா.வின் ”அம்மா வந்தாள் ” படியுங்கள்

 
 
தி.ஜா.ரா.வின் அம்மா வந்தாள் மீண்டும் படித்தேன். அந்த அலங்காரம் கதாபாத்திரம் மறக்க முடியாதது.அப்புவின் நிலையில் நின்று தவித்தேன். என்னே ஒரு கலை நுட்பம்? அந்தத் தாயின் பிறழ்ச்சி ஏன் மனதுக்குக் குற்றமாகப் படவில்லை? அவள் மடியில் படுத்து அவளின் அன்பு வார்த்தைகளைக் கேட்க வேண்டும் என்று ஏன் உள் மனம் வேட்கை கொள்கிறது? படியுங்களய்யா...படியுங்கள். காலச்சுவடின் க்ளாசிக் வரிசையில் வந்திருக்கிறது புத்தகம். உடனே வாங்கிப் படியுங்கள். தி.ஜா.ரா.வின் எழுத்து வன்மையை உணருங்கள். உஷாதீபன்

க.நா.சு. வின் "வாழ்ந்தவர் கெட்டால்" (நாவல்)

நேற்று ஒரே மூச்சில் க.நா.சு.வின் ”வாழ்ந்தவர் கெட்டால்” என்கிற நாவலைப் படித்துமுடித்து விட்டேன். 
மதுரை புத்தகத் திருவிழாவில் வாங்கி வந்தது. நற்றிணைப் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே 
இந்தப் பதிப்பகம் வெளியிட்டுள்ள “அசுரகணம்” நாவலை (அதுவும் க.நா.சு எழுதியதுதான்) ப் படித்து 
உயிரோசை இணைய இதழில் ஒரு விமர்சனமும் எழுதியுள்ளேன். இப்போது இது. வெவ்வேறு விதமாக 
எழுதிப் பார்ப்பது க.நா.சு. வுக்குப் பிடித்த விஷயமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. அதிலும் நூறு 
பக்கத்திற்குள், அல்லது நூற்றி ஐம்பது என்று வைத்துக் கொள்ளலாம். இதை ஒரு சந்தர்ப்பத்தில் அவர் 
தி.ஜா.ரா.வுடன் அவர் பேசும்போதே சொல்லியிருக்கிறார். ஆனால் ஒன்று. என்ன எழுதப் போகிறோம் 
என்பதில் அதீதமான ஒரு தீர்மானம். அப்படித் தீர்மானம் இருப்பதனாலேயே அழுத்தமாக வந்து விழும் 
வார்த்தைகள், அநாவசியமாய் என்று ஒரு இடத்தில் கூடச் சொல்ல முடியாத அளவுக்கு மிக மிக 
அவசியமான உரையாடல்கள், இப்படியாக அவர் கதை சொல்லிக் கொண்டு செல்வதும், மிகச் சரியான 
இடங்களில் அத்தியாயங்களைப் பிரித்திருப்பதும், கதையில் வாசகன் படித்துச் செல்கையில் அதில் வரும் 
ஒரு கதாபாத்திரத்திற்கு ஏற்படும் ஐயம் எப்பொழுதுதான் தீரும் என்கிற எதிர்பார்ப்பில் கடைசிவரை நாம் 
சென்று விடுவதும், எல்லாஞ்சரிதான், இன்னும் அதுக்கு விடை கிடைக்கலியே...என்பதாக கதாபாத்திரம் 
நினைக்கும் கேள்வி வாசகன் மனதில் எழுந்து நிற்பதுவும், இந்த நாவலை ஒரு பொறுப்புமிக்க 
படைப்பாளியின் அடையாளமாகக் கொண்டு நிறுத்துகிறது. இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்கிற 
மிகச் சரியான இடத்தில் நாவல் முடிந்து போகிறது. இப்படியான ஒரு பலமான தீர்மானத்தில் எழுத 
உட்கார்ந்தோமானால் ஒரே மூச்சில் நாலு நாள் தொடர்ந்து உட்கார்ந்தாலும் பரவாயில்லை என்று ஒரு 
நூறு நூற்றைம்பது பக்க நாவலை எழுதி முடித்து விடலாம். அந்த நம்பிக்கை இந்த நாவலைப் படித்த 
போது எனக்கு எழுந்தது. படித்து அனுபவியுங்கள். அன்பன், உஷாதீபன்

05 செப்டம்பர் 2012

திரு சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களின் “கணியன் பூங்குன்றனார்” சிறுகதைபற்றி

-----------------------------------------------------------------------------------------------------------------------

 

    sureshkumar Indrajith

-(தீராநதி ஆகஸ்ட் 2012 இதழ் வெளியீடு– (ஒரு விலகி நின்ற வாசக பார்வை)

-----------------------------------------------------------------------------------------------------------------------

தாவது பிரச்னை என்று வந்தால் அது அவர்களுக்கும் எழுதிய எழுத்தாளருக்குமுள்ள பாடு என்று தீர்மானித்துத்தான் இந்தக் கதையைப் பிரசுரித்திருக்க வேண்டும். படித்தவுடனேயே சொல்லப்படுவது உண்மையாய் இருந்தாலும் யாரும் சொல்லத் தயங்குவதாயிற்றே, சொன்னது கிடையாதே என்றுதான் தோன்றுகிறது. நின்றால் குற்றம் நடந்தால் குற்றம் என்கின்ற காலகட்டத்தில் நிற்பதுவும், நடப்பதுவும் அவனவன் உரிமை, அதனை யாரும் தடுக்க இயலாது என்கிறவிதமாய் எழுதப்பட்டிருக்கிறது இந்தக் கதை.

ஆனாலும் இப்படி ஒரு கதையைப் போடுவதற்கு சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கும் ஒரு தார்மீக தைரியம் வேண்டும்தான். எழுத்தை எழுத்தாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, அதை யார் எழுதியுள்ளார்கள், அவரின் ஜாதி என்ன, குலம் என்ன, கோத்திரம் என்ன என்று பார்க்கக் கூடாது. ஆனால் அப்படிப் பார்க்கும் பார்வை அநேகமாய் இன்று பரவலாகிவிட்டது என்றுதான் தோன்றுகிறது. அதுதான் இன்றைய முற்போக்கு.

எழுத்து என்ன கருத்தைச் சொல்கிறது, அந்தப் படைப்பின் ஆழம் என்ன, சொல்ல வந்ததை சரியாகச் சொல்லியிருக்கிறதா, சிறந்த இலக்கியப் படைப்பாக அது அமைந்துள்ளதா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும். ஆனால் அப்படியான நடைமுறை தொலைந்து போய்விட்டது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. இலக்கியத்தில் ஜாதியைப் பார்ப்பவர்கள் எல்லாம் எந்த ஜாதிக்காரர்களை வெறுக்கிறார்களோ, தூஷணை செய்கிறார்களோ, செய்தார்களோ, அந்த ஜாதிக்காரர்களின் மேன்மையான எழுத்துக்களைப் படித்துப் படித்து வளர்ந்தவர்கள்தான். இன்றும் தங்களை மறந்து அவர்களின் படைப்புக்களைச் சிலாகித்து மகிழ்ந்து போகிறவர்கள்தான். வழிகாட்டியாக உணருபவர்கள்தான். இதை இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. அப்படி அவர்களை எடுத்து இயம்பவில்லையென்றால் தாங்கள் இலக்கியம் கற்றவர்களாக ஆகாது, தங்களைப்பற்றியதான மதிப்பீடு தாழ்ந்து போகும் என்று கவனமாய் இருப்பவர்கள் இவர்கள்.

இந்தக் கதையைப் போட்டிருக்கும் தீராநதி, கதையை மட்டும்தான் பார்த்திருக்கிறது, அதன் கருத்தில்தான் உள்ளோடிப்போய் பிரசுரம் செய்யத் துணிந்திருக்கிறது. ஆனால் இங்கே ஒரு கேள்வி விழுகிறது. இதே படைப்பை அந்தக் கதையின் ஓட்டுநராக வரும் கதாபாத்திரத்தின் ஜாதியைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் எழுதியிருப்பாரேயானால், அதாவது ஒரு பிராம்மணப் படைப்பாளி எழுதித் தொலைத்திருந்தால் இது பிரசுரம் செய்யப்பட்டிருக்குமா என்றும் தோன்றுகிறதுதான். எதிர் அணிக்காரர் எழுதுவதனாலேயே அதைப் போடலாம் என்கிற தைரியமான ஒரு பிடிப்பு கிடைத்துப் போகிறது.

இந்தப் படைப்பைப் படைத்த படைப்பாளிக்கும், இதைப் பிரசுரித்த தீராநதிக்கும் இந்தப் படைப்பினால் வெவ்வேறு விதமான, தாறுமாறான கேள்விகள் எழக் கூடும், கண்டனங்கள் வரக்கூடும் என்று நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனாலும் கேட்க வேண்டிய கேள்விதான் என்று தீர்மானித்துத்தான் வெளியிடப்பட்டிருக்கிறது. கதையைப் படித்து முடித்தபோதும் அவ்விதமான நிறைவே ஏற்படுகிறது. அந்த வகையில் படைப்பாளியையும், தீராநதியையும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

பிராமணரல்லாத பிற ஜாதியினரின் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கும் யதார்த்தத் திரைப்படக் காட்சிகள் இவைதான் என்பதுவே உண்மை. ஆனால் வெளியே வெளிப்படையாகச் சொல்லாமல் இருப்பதே ஏதோவொரு ஆறுதலைத் தந்து கொண்டிருந்திருக்கும் பலருக்கு. சொன்னால் சொல்லப்படுபவர்கள் மீண்டும் தலை தூக்கக் கூடும் என்கிற பயமாகவும் இருக்கலாமே…? அங்கேதான் பொய்மை ஆளுகிறது. மனசாட்சிக்கு அப்பால் விலகி நின்று படைப்புக்களைத் தரும் படைப்பாளி அவன் மனதிற்கே பொய்மையுடையவனாக ஆகின்றான். கண்ணால் காணக்கூடிய உண்மைகளை என் சத்திய எழுத்தின் அடையாளம் இவைகள்தான் என்று முன் வைக்க எவரும் தயாரில்லை. அங்கேதான் கோஷ்டிகளும், முற்போக்குகளும் இயங்கி வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

கணியன் பூங்குன்றனார் என்ற தலைப்பிலான தீராநதி ஆகஸ்ட் 2012 இதழில் வெளிவந்த திரு சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்கள் எழுதிய படைப்பைப் பற்றித்தான் இப்படி முன் விளக்கத்தோடு ஆரம்பித்தாக வேண்டியிருக்கிறது. இப்படியான கதைகளைக் கண்டு பல வருடங்கள் ஆகிறது. ரொம்ப நாளைக்கு முன் திரு ம.நா.ராமசாமி அவர்கள் எழுதிய அறுபத்தொன்பது விழுக்காடு என்று ஒரு குறுநாவல் படித்ததாக நினைவு. அது கணையாழியில் வந்தது. எந்த அளவுக்கு எதிர்வினை கண்டது அது? எதிர்வினையாற்றுவதை விட கண்டுகொள்ளாமல் இருந்து அதை பலவீனப்படுத்துவதே இன்றைய கமுக்கமான வித்தையாக இருக்கிறதோ என்கிறவகையிலும் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே தலைப்பிலேயே சூசகமாகச் சொல்லிவிடுகிறார் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதன் உட்பொருளாய். பிராம்மண ஜாதியிலான மனிதர்கள்பற்றிய நியாயமான கனிவான பார்வையும், அவர்களின் ஒழுக்கமும், கட்டுப்பாடும், உண்மையான உழைப்பும், பயந்த சுபாவமும், கரிசனத்தோடு நோக்கப்பட வேண்டிய ஒன்று என்பதாய் கதையோட்டத்தில் அங்கங்கே பொருத்தமாக சொல்லிச் செல்கிறார் கதாசிரியர். இந்த உலகம் அன்பு வலையினால் பின்னப்பட்டிருக்கிறது. மனிதனுக்கு மனிதன் அன்பு செலுத்தும்போது உலகம் ஒன்றுகூடிய இன்பமயமாகிறது. அந்த அன்பின் வழிப்பாடுதான் இந்தச் சிறுகதை.

ஒரு பையன் இருக்கான். சேகர்னு பேரு. அய்யரு…நல்லா பொறுமையா ஓட்டுவான். பயமில்லாமல் போயிட்டு வரலாம்…என்று அறிமுகப்படுத்தும்போதே ஏழைகளேயானாலும், பிராமணர்களின் ஒழுக்கமும், கட்டுப்பாடும், உழைப்பின்மீதான பக்தியும், கருத்தோடு அங்கே முன் வைக்கப்படுகிறது. இதனால் மற்ற யாரையும் குறைத்துச் சொல்கிறார் என்று விபரீத அர்த்தம் கொள்ளக்கூடாதுதான்.

ஜாதியே கூடாதுன்னுத்தானே பெரியார் சொன்னார்…பாப்பார ஜாதியை மட்டும் ஒழிச்சுக்கட்டு, மத்த ஜாதியை வச்சுக்கன்னா சொன்னார் என்று கேள்வி கேட்பதும், ஒங்க அப்பன் பெரிய சுயமரியாதைக்காரன்…நீ என்னடான்னா மரத்துக்குத் தேங்காய் உடைக்கிறே…வண்டியிலே பெட்ரோல் இருக்கா, பிரேக் சரியா இருக்கா, எல்லாம் கண்டிஷனா இருக்கான்னுதானே பார்க்கணும்….என்று ஊருக்கு நலமாய்ப் போய்ச் சேருவதற்கும், மரத்தின் அடையாளமாய் சீலைக்கார அம்மன் என்று தேங்காய் உடைத்து மரம் எப்படிக் கடவுளாகும் என்று பகுத்தறிவுக் கேள்வி எழுப்புவதும், பட்டுப் பட்டென்று உடைபடும் உண்மைகளாய் நிற்கின்றன. இறைவன் இருக்கின்றான் என்கிற தீர்க்கமான நம்பிக்கையின் அடிப்படையில் எதையும் கடவுளாய்ப் பார்க்க முடியும் என்கிற நியதி வேறு. எந்தவொரு ஜடப் பொருளையும் நேசிக்க முடியும் என்கிற நியாயம் உண்டுதான். ஆனால் பகுத்தறிவு பேசும் மக்கள் அங்கங்கே அவர்களின் தனிவழிப் பயணங்களில் எப்படி முரண்படுகிறார்கள் என்பதே இங்கு கருத்தாக நிற்கிறது.

இந்தக் கேள்விக்கான பதில் எதுவும் எதிர்த்தரப்பில் எழாமல் கதையை அடுத்த சம்பாஷனைக்குச் சட்டென்று நகர்த்தி விடுகிறார். இந்தச் சம்பாஷனையைக் கேட்ட சேகர் (ஓட்டுநர்) சாமி பாட்டுப் போடவா என்று கேட்க நினைத்து வாயடைத்துக் கொள்கிறான். அவனின் பழக்கமும், பயந்த சுபாவமும் அங்கே புள்ளியிடப்படுகிறது.

எங்கள் திராவிடப் பொன்னாடே….என்ற பாட்டும், அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா….என்ற பாட்டும் ஒலிக்கும்போது அதை மானசீகமாய் ரசிக்கிறான் சேகர். அந்தத் தெளிவான கணீர்க் குரலின் ரம்யம் அவனைக் கிறங்க வைக்கிறது. ஆனாலும் அவன் உள் மனத்தில் அந்தப் பாடல்கள் சங்கடங்களை ஏற்படுத்தியது என்று கூறுகிறார் ஆசிரியர். அது அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. காரணம் அந்த இசையின் மகத்துவம் அப்படி. இசை அதன் பொருள் மாறுபாட்டினால் சிதைந்து விடுவதில்லை. மேன்மையான இசையின் மூலம் எப்படிப்பட்ட கருத்துக்களையும் ஆழப் பதிக்க முடியும் என்பதற்கான அப்பட்டமான சான்றுதான் அந்தப் பாடல். அந்தப் பாடல் வெளிவந்த காலம் அது எந்த வேறுபாடுமின்றி எல்லாராலும் மனமுவந்து ரசிக்கப்பட்டது. இன்றும் அப்படியேதான் எல்லோர் மனதிலும் வியாபித்துக் கிடக்கிறது. அதை அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திலும், இன்றுவரையிலும், தேர்ந்த இசைக்கு எந்த வரையறையும் கிடையாது என்பதன் பொருளாய், குலம், கோத்திரம் வித்தியாசமின்றி ரசித்தவர்கள்தான் மிக அதிகம்.

சமூகம் ஒதுக்க ஒதுக்க எதற்கு இவர்களோடு வம்பு என்று ஒதுங்கிப் போனவர்கள் பிராம்மணர்கள். இருக்கும் காலச் சூழலுக்கேற்பத் தங்களை மாற்றிக் கொண்டு, தங்களுக்கான பாதை இவைகள்தான் என்று அறுதியிட்டுத் தேர்ந்தெடுத்துக் கொண்டு முன்னேறியவர்கள். எல்லாக் கால கட்டத்திலும் அந்த ஜாதியில் மிகவும் நலிந்த நிலையிலான ஏழைகளின் எண்ணிக்கை மிக அதிகமாய் இருந்திருக்கிறது. இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியான கொடிய வறுமை நிலையிலும், செம்மையாக வாழ வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டவர்களாய், அவையே அவர்களின் பிறப்பின் ஒழுக்க அடையாளங்களாய், தாங்கள் உண்டு, தங்கள் பிழைப்பு உண்டு என்று தேமேனென்று ஒதுங்கி இருப்பவர்கள் அந்தப் பிரிவினர்.

பாம்பையும், பாப்பானையும் கண்டால் பாம்பை விடு, பாப்பானை அடி என்றால் அவனைத்தான் அடிக்க முடியும். பாம்பை அடிக்க முடியாது. அதற்கான துணிவு கிடையாது என்பதை விட அவன் மேல் கொண்டுள்ள துவேஷம் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆச்சார பிராம்மணரின் குடுமியைக் கொத்தாகப் பிடித்து அறுக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது. மனிதர்கள் மாக்களாய் வெளிப்பட்ட காலம் அது. பின்பு அது படிப்படியாய் ஓட்டு அரசியலுக்குள் நுழைந்து ஒடுங்கி தன்னைத் தானே வெட்கமின்றி ஒளித்துக் கொண்டது.

ஒதுக்கி ஒதுக்கி எந்த வசதி வாய்ப்பும் இல்லாமல், எல்லாச் சலுகைகளும் அற்றுப் போய், இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள். என்று அவர்கள் மற்றவர்களின் வம்புக்கு வந்தார்கள்?

எவ்வளவோ வசைகளைக் காலம் பூராவும் காதாரக் கேட்டாலும், எந்த எதிர்வினையும் செய்யாமல் தாங்கள் உண்டு, தங்கள் பாடு உண்டு என்று இருப்பவர்கள். அவர்களைக் கருணையோடு நோக்காவிட்டாலும் பரவாயில்லை, தேவையில்லாமல் சீண்டாதீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறது இந்தக் கதை.

சிவந்த நிறமுடைய மனிதரின் நெற்றியில் மெல்லிய ஒற்றை நாமக்கோடு. நாமமும் போட்டுக்கிறாங்க…பெரியார் படத்தையும் வச்சுக்கிறாங்க என்று ஒரு இடத்தில் சொல்கிறார். சமூகத்தில் எத்தனையோ விதமான வியாபாரங்களை நாம் காண்கிறோம். விதவிதமான அரசியல் விளையாட்டுக்களைக் கண்ணுறுகிறோம். எல்லாவற்றிலும், பொய்மையும், புனை சுருட்டும் இருப்பது கண்களுக்கும் அறிவுக்கும் தெளிவாகவே புலப்படுகின்றன.

அம்மாதிரியான நடவடிக்கைகளையும், தேவையில்லாமலான பிராம்மண துவேஷத்தினையும், இக்கதை மெலிதாகக் கீறிப்பார்த்திருக்கிறது. சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களின் நேரடியாக சொல்லப்பட்ட அப்பட்டமான கதை இது. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டும் என்பது உண்மையானால் அவரின் இந்தச் சிறுகதை அந்த லட்சணங்களை உடையதாக இருக்கிறது என்று உறுதியாகக் கூறலாம்.

-----------------------------------------------